லோகமாதேவியின் பதிவுகள்

Category: திரைப்படம் (Page 2 of 6)

வலிமை

காவல் துறை சார்ந்த ஒரு முக்கிய நடவடிக்கைக்கு பிறகு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அஜித் மதுரை தெப்பக்குளத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுடன் ’’நாங்க வேற மாறி, வேற மாறி’’ என்று நடனமாடுகையிலேயே மீதி படத்தை யூகிக்க முடிகிறது. வலிமை வெளியாக வருடக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களை அஜித்  நிறைவுறச் செய்திருக்கிறாரா? உண்மையில் இது ’வேற மாறி’ படம்தானா?

 துவக்கம் வழக்கமான அஜித் படங்களைப் போலவே அந்நிய நாட்டில்தான். ஒரு காய்ந்த புதரிலிருந்து கொகெய்ன் இலைகள் பறிக்கப்பட்டு சுடச்சுட அங்கேயே அரைத்து பாலெடுத்து கலக்கி பொடியாக்கி பார்சல் செய்யப்பட்டு லாரியிலும் ஏற்றப்படுகிறது

அங்கிருந்து பாண்டிசேரி பின்னர் சென்னை என பல கைகள் மாறி அப்பாவி இளைஞர்களின் வாய்க்கும் மூக்குக்கும் வந்து சேர்கிறது. அஜித் முன்பே சொன்னதுபோல ’வேற மாறி’ காவல் அதிகாரி, உயிரடுப்பதில் விருப்பமில்லாதவர், கால் அல்லது கைக்கட்டு போடுகிறார். குற்றவாளிகள் போடும் ஸ்கெட்ச்சை முன்பே அறிந்து அந்த இடங்களுக்கெல்லாம் முன்னதாகவே போய்  அடி தூள் கிளப்புகிறார். நாயகி இல்லை. ஆனால் அறிமுகக்காட்சியில்  கொம்பும் சங்கும் துந்துபியும் முழங்க துர்க்கை பின்னணியில் எழுந்துவர, அஜித் காரின் டாப்பை திறந்து காட்சிதருவது போன்ற  மாமுலான காட்சிகளுண்டு.

இந்த காட்சிகளுக்கெல்லாம் அனைத்து சென்டர்களிலும் படம் ஓடவேண்டும் என்பதற்காக சமரசம் செய்து கொண்டிருக்கும் அஜித் நாயகி விஷயத்திலும் சமரசம் செய்து கொண்டிருக்கலாம். அசத்தலான காவல்துறை அதிகாரியின் வேற மாதிரி நடவடிக்கைகளை கண்டு பொதுமக்கள் ’’நீங்க வேற மாறி’’ என்று பாடி ஆட இவரும் இறங்கி கூட ஆடுவதில் மட்டும் ஏன் சமரசம் செய்து கொண்டார்? இதற்கு வழக்கமான நாயகி, அபத்த நகைச்சுவை, குத்து பாட்டு  என்றே படம் பண்ணி இருக்கலாமே? அரதப்பழசான குடும்ப செண்டிமெண்ட். தேவையில்லா குடிகார அண்ணன் காட்சிகள்.அஜித் கஷ்டப்பட்டு ஸ்டெப்ஸ் போட்டு  பாத்திரத்துக்கு பொருத்தமில்லாமல் நடனமாடுகிறார்

 அஜித் மீசையும் இல்லாமல்  மொழுமொழு முகத்தில் என்ன உணர்ச்சிகளை காண்பிக்கிறார் என்றும் அறிந்துகொள்ள வாய்ப்பில்லாமல் கருப்புக்கண்ணாடியும் போட்டுக்கொள்கிகிறார்.தமிழ் படத்தின் நாயகன் ஏன் தமிழ்நாட்டின்  ஆண்மகனை போல் இருக்கக் கூடாது?. தன்னை தல என்றும், அல்டிமேட் ஸ்டார் என்றும் அழைக்க வேண்டாம் அஜித் என்று அழைத்தால் போதும் என்று வேண்டி விரும்பி அஜித் கேட்டுக்கொள்ளும் போஸ்டர்கள் திரையரங்கங்களில் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த வித்தியாசமெல்லாம் படத்தில் காணோம்.

கிராஃபிட்டி, ஸ்கேன், ஹேக்கிங், பிளாக் செய்வது போன்ற காட்சிகள் புரிந்ததோ இல்லையோ அஜித் என்று பெயர் வருகையிலும் அஜித் தோன்றுகையிலும் அப்பாவி ரசிகர்கள் ஆராவாரம் கூரையை பிளக்கிறது.  அஜித் ரசிகர்களுக்கு நியாயம் செய்யாவிட்டாலும் அநியாயம் செய்யாமலாவது இருந்திருக்கலாம்’

 நாயகிக்கு பதில்பில்லாவை நினைவுட்டும் உடைகளில் இரு சக பெண் அலுவலர்கள்,, நகைச்சுவையும் வில்லனும் டூ இன் ஒன் கார்த்திகேயாவேதான். இளம் நெப்போலியனை நினைவுட்டும் முகச்சாயல். தனக்குத்தானே கெக்க பிக்கேவென்று அவ்வப்போது சிரித்துக்கொண்டு வெறும் வாய் சவடால் பேசிக்கொண்டு நகைச்சுவைக்கென்று தனி நடிகர் இல்லாத குறையை வெகுவாக தீர்க்கிறார். தமிழ்சினிமாவின் மாறாத  நூற்றாண்டு மரபுப்படி இறுதிக்காட்சியில் சட்டையை கிழித்து விட்டு திமிறும் தசைத்திரளை  காண்பிக்கிறார். நல்லவேளைக்கு அஜித் பதிலுக்கு சட்டையை கழற்றவில்லை என்பதில் ஆசுவாசப்பட்டுக்கொள்ளலாம்

நீதி போதிக்கும் வசனங்கள், தேவைக்கும் அதிகமான நீளத்தில் துரத்தல் காட்சிகள், தேவையற்ற கடத்தல் தொடர் கண்ணிகள் என்று நீண்டுகொண்டே போகிறது படம்.கடைசி காட்சியில் முத்தாய்ப்பாக என் ’’குடும்பத்தை ஒன்னும் பண்ணாதே’’ என்று வில்லனிடம் இறைஞ்சுகிறார் நாயகன் அஜித்

 வலிமையை எந்த காலத்தில் நினைத்தலும் உறுமிக்கொண்டு சீறிப்பாய்ந்த பைக்குகள் தான் நினைவில் வரும்.  ஏராளம் பைக்குகள் என்றால்  பைக் சண்டைகளோ தாராளம். 3 மணி நேரத்துக்கான படம் எப்போது முடியும் என கடிகரத்தை பார்க்காதவர்கள் இல்லை திரையரங்கில்.

இந்த படத்துக்கு  எதற்கு இத்தனை நேரம்? இந்த படத்திற்கு எதற்கு இத்தனை இத்தனை வருட காத்திருப்பு?

இறுதிகாட்சியில் அஜித்தின் அண்ணன் கையில் இருக்கும் ஜிபிஎஸ் உதவுவதை காட்டவா அத்தனை நீநீநீநீநீநீள குடிகார அண்ணன், அண்ணி சண்டை என்று காட்சிகள்?

கார்த்திகேயாவுடன் சுமித்ராம்மாவும் இன்னொரு வில்லியென்றுதான் சொல்லவேண்டும். துறைசார்ந்த  டார்ச்சர் போதாதென்று சுமித்ராம்மாவும் அவர் பங்குக்கு வீட்டில் சாப்பிட முடியாதென்று சொல்லி  அஜித்தை படுத்தி எடுத்து, படுத்துக் கொள்கிறார் கடைசியில் காதலியை சுட்ட குட்டியை மிதி மிதியென்று மிதித்துவிட்டு, சுமித்ராம்மாவையும் வில்லன் இரண்டு மிதி மிதிக்கையில்  நாம் அஜித்தாக இருந்து ஆசுவாசமடையலாம்  அத்தனைக்கு டார்ச்சர் அம்மா. இளம் சுமித்ராவாக  உமா வருவது இதமளித்தது

410 இன்ஜினியரிங் படித்த  மாணவர்கள் பிச்சை எடுக்கிறார்களா?? எங்கு இத்தனை துல்லியமான  புள்ளி விவரக்கணக்கு கிடைத்தது? வேலையில்லா பட்டதாரி, குடும்ப செண்டிமெண்ட், வேற மாதிரி காவலதிகாரி,  போதும் போதும் என்னும் அளவுக்கு  பைக் ரேஸ் என்று கலந்துகட்டி குழப்பி ஒரு படம் 2.55 மணி நேரத்துக்கு

வில்லனே சொல்வதுபோல ஒருத்தருக்கும் தொழில்நுட்ப காட்சிகள் விளங்கவில்லை. சர்வர், இடம் மாறிக்கொண்டே இருக்கும் தலைமையகம் அதை ஹேக் செய்வது, ஆயிரக்கணக்கான கணினி திரையின் முன் கூட்டமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகள் சிஸ்டம் கிராஷ் ஆனதும் ’ஓ’ என்று கத்திக்கொண்டு தலையில் கை வைத்துக் கொண்டு எழுந்து நிற்பதெல்லாம் எப்படி யோசித்திருப்பார்கள் திரைக்குழுவினர் என்று நாம் தனியாக ரூம் போட்டு  யோசிக்க வேண்டி இருக்கிறது

அஜித் பைக் பிரியர் என்பதால் படம் முழுக்க பைக் துரத்துகிறது. உண்மையிலேயே இதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் ஆகியோர் படம் பார்க்க செல்லாமல் இருப்பது உசிதம், அத்தனை வன்முறை காட்சிகள். கழுத்து செயின் பறிக்கபட்டு அத்தனை பெண்கள் சாலையில் விழுந்து இறக்கும் காட்சிகள்,  கார் ஓட்டுநர்களை கழுத்தில் செயின் கட்டி காருக்குள் இருந்து வெளியில் இழுத்துக் கொல்வது, பைக் சேஸிங் காட்சியில் உச்சம் தொடும் இசையுமாக ரத்த கொதிப்பு இருப்பவர்களும் பார்க்கக்கூடாத படம்

யாரையும் என்கவுண்டர் செய்யக் கூடாது குற்றவாளிகளை திருந்தவேண்டும் என்றெல்லாம் முதல் பாதியில் சொல்லும் ’’வேற மாறி அஜித்’ சர்வசாதாரணமாக பைக்கில் துரத்துபவர்களை  பஸ்ஸால் அடித்து தள்ளி விட்டு  போவதும், துரத்தி வரும் கார் மற்றும் பைக்குகளின் மீது குண்டுகளை எறிந்து தீப்பிழம்புகளில் புகுந்து வெளியே வருவதுமாக இரண்டாம் பாதியில். வேற வேற மாறி ஆகிவிடுகிறார் என்ன லாஜிக்கோ?

பல ஸ்லீப்பர் செல்கள் தலைமையை நேரில் பார்த்ததில்லை பலர் கட்ட க்கடைசியில் தான் பார்க்கிறார்கள் ஆனால் அஜித் தம்பி குட்டி மட்டும் முதலிலேயே வில்லனால் கவனிக்கப்பட்டு ,அடுத்த காட்சியிலேயே வில்லனுடன் பைக்கில் ஊர் சுற்றுவது எப்படி என்று புரியவில்லை. குட்டி  வசனம் பேசுவதும் நடிப்பதும் செத்தவன் கையில் வெற்றிலை பாக்கு கொடுத்தது போலத்தான். வேலை இல்லாத விரக்தியாம், ஆனால்  காதல் மட்டும் செய்வாராம் குட்டி. 

பாராட்டும்படியானவைகள் என்றால் அருமையான நடனம் மற்றும் சண்டை காட்சிகளில் மெனக்கெட்டு இருப்பதுதான். திலீப் சுப்பராயன் ஹாலிவுட்டுக்கு நிகராக அமைத்திருக்கிறார் பல காட்சிகளை. அந்த மழையில் நடக்கும் சண்டை பிரமாதம். ஒளி இயக்கமும் பாராட்டுக்குரியது. செல்வம் என்னும் பாத்திரத்தில் நடித்தவர் தனித்துத் தெரிகிறார் நல்ல தேர்வு.வேற மாறி நடனக்காட்சியில் குழுவினரின் உடையலங்காரம் சிறப்பு.

உதிரிப்பூக்கள் விஜயன் சாயலில் இருக்கும் அஜித்தின்  குடிகார அண்ணனுக்கும், போலீஸ் கமிஷனருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமை வேறு குழப்புகிறது.  முதல் பாதிமுழுக்க அஜித்தின் அண்ணன் கமிஷனர் ஆனால்  பாவம் குடிகாரர், அஜித் துணை கமிஷனர் என்று நினைத்துக் கொண்டிருந்து, இரண்டாம் பாதியில் தான் தெளிந்தேன்

அப்பாவி(?).பைக் இளைஞர்களை கைது செய்திருக்கையில் காவல் நிலையத்துக்கு வெளியே கதறிக்கொண்டு காத்திருக்கும் அம்மாக்களும், அஜித்தின் போதனைகளில் உடனடியாக திருந்தி கதவை திறந்ததும்  கூட்டமாக ஓடி வந்து அவரவர் அம்மாக்களை கட்டிக்கொண்டு கதறும் திருந்திய குமரர்களுமாக   ஏகத்துக்கும் நெஞ்சை பிழிந்த்தெடுக்கிறார்கள்.கடைசிகாட்சியிலும் விடாமல் அறம் போதிக்கிறர்கள். வினோத் என்னதான் பிரச்சனை உங்களுக்கு?

மொத்தத்தில் புரியாத தொழில்நுட்பக் காட்சிகள், நீளமான நெஞ்சை பதறவைக்கும் பைக் துரத்தல்கள், அரைத்து புளித்து நொதித்துப்போன கொலம்பிய கொகெய்ன் கடத்தல் கதை, மெழுகு பொம்மைபோல அஜித் என்று தாறுமாறாக கட்டமைக்கப்பட்ட படம்.

புதுமாறியும் வேற மாறியும் எதுவுமில்லாமல் அதே பழைய மாறியான படம்தான் 

அண்ணாத்தே!

கலாநிதி மாறன் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் 2021 ல் வெளியானது ரஜினியின் ’’அண்ணாத்தே’’. கோவிட் தொற்று காலத்துக்கு பிறகு திரையரங்குகளில் திரையிடப்பட்டதாலும், தீபாவளி  ரிலீஸ் என்பதாலும் வழக்கமாக இருக்கும் அதீத எதிர்பார்ப்பை விட இந்த முறை மிக அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்களும் பொதுமக்களும் காத்திருந்தார்கள். முதல் சில நாட்களில் டிக்கட் விலை பல்லாயிரங்களில் இருந்தது.

ரஜினியுடன் நயன்தாரா, மீனா, குஷ்பு, பாண்டியராஜன், ஜகபதி பாபு,, லிவிங்ஸ்டன், கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ், சதீஷ், யோகி பாபு என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள். ஆனால் திரைக்கதை என்று எதுவும் இல்லை. பாசமலர் உள்ளிட்ட பல பழைய படங்களை, ரஜினியின் பழைய படங்கள், அண்ணன் தங்கை செண்டிமெண்டில் எடுக்கப்பட்ட அஜித் மற்றும் கார்த்தி ஆகியோர் படங்களை எல்லாம் எடுத்து கலக்கி கொடுக்கப்பட்ட திரைக்கதை நிறைவை கொடுக்காவிட்டால் போகிறது எரிச்சலை கொடுக்கிறது.

அலுப்பூட்டும் தொடர் நாடகம் பார்க்கும் உணர்வு முதல்பாதியிலேயெ வந்துவிடுகிறது. மிக தளர்ந்திருக்கும் ரஜினியும் அவருடன் காதல் காட்சிகளில் ஒட்டாமல் நடித்திருக்கும் நயன்தாராவும்,  படு பயங்கரமான ஒப்பனையில் கண்ணைப் பறிக்கும் நிறத்திலான ஆடைகளில் மீனா மற்றும் குஷ்புவும், சகிக்க முடியாத நகைச்சுவை என்னும் பேர் கொண்ட காட்சிகளில் லிவிங்ஸ்டனும் பாண்டியராஜனுமாக காட்சிக்கு காட்சி சொதப்பலும் எரிச்சலுமாக இருக்கிறது

அண்ணன் ரஜினி மீது அத்தனை உயிரை வைத்திருக்கும் தங்கை ஊர் நடுவே ’’உன் முடிவுதாண்ணா என் முடிவும், உன் விருப்பம் தாண்ணா என் விருப்பமும்’’ என்று நிஜமாகவே மைக் வைத்து சொல்லிவிட்டு, கல்யாணத்துக்கு முந்தின நாள் காதலனுடன் அண்ணனிடம் சொல்லிக் கொள்ளாமல் ஓடிப்போவதும், அதையும் மன்னிக்கும் பாசக்கார அண்ணன் திடீரென்று ஏழையாகும் தங்கைக்கு. அவளுக்கு தெரியாமல் உதவி, சிக்கலிலிருந்து மீட்பதுதான் படத்தின் கதையாம்.

 டைட்டில் காட்சியில் படம் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கானது, வன்முறை நிறைந்தது என்று காட்டுகிறார்கள். பார்வையாளர்கள் மீது காட்டப்பட்ட வன்முறைதான் அது என்பது பிறகே தெரிகிறது

எக்கச்சக்க உணர்ச்சி பொங்கல்கள் படம் முழுவதும். தங்கை, அண்ணன்,அண்ணனின் காதலி, பாட்டி  என ஒருவர் பாக்கி இல்லாமல் நெஞ்சை கசக்கி பிழிந்து கொண்டே இருக்கிறார்கள்.

ரஜினி நயனின் காதல் காட்சிகள் என்னும் பெயரில் ’’பட்டூ. காள்ஸ் என்னும் கொஞ்சல்கள் எல்லாம் தலைவலிக்க வைக்கும் அளவுக்கு செயற்கை.சூரி தனியே காமடி பண்ண முயற்சிக்கிறார் மொத்த படமும் பார்வையாளர்களை பார்த்து சிரிப்பதால் தனியே காமெடி எடுபடவில்லை.

  ரசிகர்களின் துவக்க கூச்சல்களும்  ஆரவாரங்களும் அடங்கிய பின்னர் அரங்கில் மயான அமைதி நிலவுகிறது. ரஜினி என்னும் பிம்பம் அவர் நடிக்க வந்தபோது பிறந்தே இருக்காத இன்றைய இளைஞர்களின் நெஞ்சில் உருவாக்கும் எழுச்சி அவர் இதுவரை நடித்த படங்களிலிருந்து உருவாகியதுதான். ரஜினி நடிக்கவேண்டும் என்பதில்லை ஒரு திரைப்படத்தில் அவரது புகைப்படமோ அவரது பெயரோ இடம் பெற்றிருந்தாலும் கூச்சலிட்டு அதை கொண்டாட லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்னும் போது திரைக்கதை தேர்வில் அவர் இன்னும் எத்தனை சிரத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்?

அண்ணன் தங்கை செண்டிமெண்ட்டில் புதிதாக  என்ன?  என்று ரஜினி  கதை சொல்ல படுகையில் ஏன் கேட்கவில்லை? படப்பிடிப்பில் அரைத்து, புளித்து , நொதித்து கள்ளாகிவிட்ட காட்சிகளே மீண்டும் மீண்டும் எடுக்கப்படுகையில்  கூட ‘’ஏன் இதையே  எடுக்கிறோம். புதிதாக ஒன்றும் இவற்றில் இல்லையே? என்று  ஏன்  அவர் கேட்கவில்லை, 

திரைக்கதை  அபத்தம், காட்சிகள் அபத்த களஞ்சியம் என்றால் பாடல்களும் இசையுமாவது கேட்கும்படியாக இருக்கலாம் அதுவும் இல்லை, இசை பாடல் இயக்கம், ஒப்பனை ,கதை என எதுவுமே உருப்படியாக இல்லை 

படத்துக்கான எதிர்வினைகளில் ரசிகர்கள் ஏமாற்றத்தை கோபமாகவும் அழுகையாகவும் வெளிப்படுத்தினார்கள். இயக்குனர் சிவாவை சகட்டுமேனிக்கு வசை பாடினார்கள்

ரஜினி தன் வயதுக்கேற்ற பாத்திரங்கள் இருக்கும்படி  சொல்லப்படும் கதைகளை கேட்க ஏன் முன்வருவதில்லை. கடைசி காட்சியில் தங்கையான கீர்த்தி சுரேஷிடம் ’’நீ வயசுக்கு வந்தப்போ கூட’’  என்று துவங்கி ரஜினி பேசும் வசனங்களெல்லாம் தணிக்கை செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இரண்டு பெண்களை பெற்ற ரஜினிக்கு சக்தி வாய்ந்த ஊடகத்தில் பேசும் இந்த வசனத்தை பற்றி ஆட்சேபமேதும் இல்லை என்பது கூடுதல் அதிர்ச்சியளிக்கிறது

தர்பார், கபாலி, காலாவிலிருந்தே திரைக்கதை என்ற  ஒன்றே இல்லை என்பதை ரஜினி இன்னும் கவனிக்கவில்லை. இளமையை இழந்து விட்ட பின்பு கதையில் கவனம் செலுத்த வேண்டியது தான் வெற்றிகரமாக இருந்த அதே துறையில் கண்ணியமாக  நீடித்திருக்க ஒரே வழி என்பதும் ரஜினிக்கு தெரியவில்லையா?

என் துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா?என்று ரஜினி முன்பு பாடலில் தெரிவித்திருக்கிறார். முதல் காட்சிகளிலிருந்து ஆயிரங்களும் நூறுமாக ரசிகர்கள் செலவு செய்திருக்கும் பணத்திற்கும் அதன்பொருட்டு அவர்கள் சிந்தி இருக்கும் ஒவ்வொரு சொட்டு வியர்வைக்கும் பதிலாக ரஜினி செய்திருப்பது வெறும் அநியாயம் மட்டுமே.

ஜெய்பீம்

ஜெய்பீம்

நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களில் சமீபத்தில் மிக அதிகம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட வெற்றிப்படமுமான ஜெய்பீம் வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நல்ல தமிழ்ப்படம்.

திரைப்படங்கள் கேளிக்கைக்கானவைகள் மட்டுமல்ல மக்களுக்கு பல முக்கிய விஷயங்களையும், சகமனிதர்களுக்கு நிகழும் அநீதிகளையும், சொல்லவும் இந்த சக்திவாய்ந்த ஊடகம் பயன்படுமென்பதை ஜெய்பீம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.

நீதிமன்ற வழக்கை அடிப்படையாக கொண்டு ஜோதிகாவை வைத்து  எடுத்த  ’பொன்மகள் வந்தாள்’ படத்திற்கான பிழையீடாக இந்த திரைப்படத்தை சூர்யா சொந்த தயாரிப்பில் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

நீண்ட வழக்கு விசாரணைகளை, சோர்வடைய வைக்காமல் பார்வையாளர்களையும் விசாரணையுடன் ஒன்றச்செய்யும் விதமாக அமைத்திருக்கிறார்கள். கதாபாத்திர தேர்வு, திரைக்கதை, பின்னணி இசை, ஒளி இயக்கம், படத்தொகுப்பு,  இயக்கம் ,சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே வெகு சிறப்பு

 நீதிமன்ற வழக்கை அடைப்படையாக கொண்டு வந்திருக்கும் முந்தைய திரைப்படங்களிலிருந்து ஜெய்பீம் வேறுபடுவது எடுத்துக்கொண்ட வழக்கில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது  இதில் பழங்குடியினப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதும், அந்த இனத்துக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதிலும்தான்.

  1995’ல் ஹேபியஸ் கார்பஸ் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிபிக்கபட்ட வழக்கொன்றை நீதியரசர் சந்துரு என்பவர் கையிலெடுத்து, அவ்வழக்கில் நீதியை பெரும் போராட்டத்துக்கு பின்னர் வாங்கிக்கொடுத்தார் அந்த உண்மை வழக்கையே ஜெய்பீம் ஆக்கி இருக்கிறார் சந்துருவாக நடித்திருக்கும்  சூர்யா.

அப்பாவியான ராஜாக்கண்ணு என்னும் பழங்குடியின இளைஞனொருவனை திருட்டு வழக்கில்  முறையின்றி கைதுசெய்து, பின்னர்  லாக்கப்பிலிருந்து அவன் தப்பி விட்டதாக சொன்ன காவல்துறைக்கெதிரே வழக்கு தொடர்ந்து, தன் கணவனை கண்டுபிடிக்க போராடிய கர்ப்பிணியான செங்கேணியின் கதை இது

.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து கொண்டிருப்பவர்களிடம் நேரிடையாக அவரவர் ஜாதியை கேட்டு அதன்படி அவர்களை  வரிசையில் நிற்க வைக்கும் காட்சியும், விடுதலையாகி வரப்போகும் கைதிகளுக்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் அவர்களின் எளிய பின்னணியை சேர்ந்த குடும்பத்தினரும், அவர்கள் கண்முன்னே கைதிகளுக்கு நடக்கும் கொடுமையுமாக தொடக்க காட்சியிலேயே  நம் மனதை கலங்கடிக்கிறார்கள்

எண்ணெய் காணாத தலைமுடியும், ஒட்டி உலர்ந்த தேகமுமாக இருக்கும் அவர்களின் மீது காட்டப்படும் அதிகார துஷ்பிரயோகமும் வன்முறையையும்  பார்வையாளர்களால் மறக்க முடியாத வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது

திரைப்படம் காட்டுவது உண்மையில் நடந்தவற்றில் மிக்குறைவு என்பதையும் நம்மால் உணரமுடிகின்றது.

சூர்யாவுடன் திரைக்கதையும் இணைநாயகனன்று சொல்லுமளவுக்கு கச்சிதமாக, சிறப்பாக  இருக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் நீதிமன்றமும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.கலை இயக்குனருக்கு தனித்த பாராட்டுக்கள்.

மணிகண்டனின் திரைவாழ்வில் என்றென்றைக்குமாக அவர் பேர் சொல்லப்போகும் முக்கியமான திரைப்படம் இது. மகேஷிண்டெ பிரதிகாரத்தில் குட்டிப்பெண்ணாக வந்த லிஜோமோளா செங்கேணியாக  இத்தனை சிறப்பாக நடித்திருப்பது என்றூ வியக்காமல் இருக்கமுடியவில்லை.

பிரகாஷ்ராஜ் மகுடத்தில் ஜெய்பீம் மேலுமொரு அருமணி. நிதானமான, கம்பீரமான  மனசாட்சியுடனிருக்கும் காவலதிகரியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்

 காவல்துறையின் அதிகார எல்லைகள், விசாரணைக்கொலைகள்,  சாதீய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளை குறித்து தமிழில் இத்தனை விரிவாக, இத்தனை சிறப்பாக முன்பு திரைப்படங்கள் வந்ததில்லை.

பாடல்கள் அனைத்துமே திணிக்கப்பட்டவைகளாக இல்லாமல் கதையுடன் காட்சியுடன் இணைந்து படத்துக்கு இன்னும் வலுசேர்க்கின்றன.
 

ஆவணப்படமாக மாறக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக இருந்தும் கதை சொல்லும் சாமார்த்தியத்தால் சுவாரஸ்யம் குறையாமல் இதை அழகிய திரைப்படமாக்கியதற்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். தொடக்க காட்சிகளுக்கு பிறகு திரைப்படம் பார்க்கும் உணர்வு காணமல் போய், கதாபாத்திரங்களின் உணர்வுகளும், இழப்பும் வலியும் துயரும் அச்சமும் எல்லாமுமே நமக்கே உண்டானதைப் போல படத்துடன்  ஒன்றிப் போகிறோம்.  பிரச்சாரநெடியும் இல்லாமல் கவனமாக படமாக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.

நகைச்சுவையும், பாட்டும்.நடனமும், மசாலாவுமான படங்களில் நடித்து தமிழ்திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகனாயிருக்கும் சூர்யா இந்த சந்துரு பாத்திரதை ஏற்று சிறப்பாக நடித்திருப்பதும், இந்த படத்தை சொந்த தயாரிப்பில் உருவாக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது..

 முதல் ஒருமணிநேர திரைக்கதை நம் மனதில் உண்டாக்கும் வலியும் தொந்தரவும் இனி எப்போதும் நீடித்திருக்கும், அத்தனைக்கு  அசலான காட்சிகள் அசலான நடிப்பு. அலறல் நிஜம் அடி நிஜம் துயரம் நிஜம் என்று மனதை கசக்கும் காட்சிகள். அதுவும் ராஜாக்கண்ணுவின் அக்காவுக்கு லாக்கப்பில் நடப்பதை பார்க்க மனோதைரியம் வேண்டும்.

 இரண்டாம் பாதியில் படம் இன்னும் வலுவாக, இன்னும் ஆழமாக செல்கின்றது. வாத பிரதிவாதங்களின் போது சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார். 2.45 நிமிடம் நீளமென்றாலும் தொய்வின்றி இருக்கை நுனியில் நம்மை கொண்டு வரும் பல காட்சிகளுடன் இருக்கிறது ஜெய் பீம். பழங்குடியினருக்கு கல்வியளிக்கும் ஆசிரியை பாத்திரமும் சிறப்பு

 ஷான் ரோல்டனின் இசை திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வையும் வலியையும் பார்வையாளர்களுக்கும் கடத்துவதில்  இசையும் முக்கியப்பங்காற்றுகிறது.

எந்த எந்த காரணங்களுக்காக தங்களை காவல்துறை கைது செய்தார்கள் என்பதை சிறுவர்களும், பெண்களும் வயதானவர்களுமாக பழங்குடியினர் விவரிக்கையில் நம்மால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியாது.

  இணையத்தில் ராஜாக்கண்ணுவின் வழக்கும், சந்துரு அவர்களின் விசாரணையும், தீர்ப்பும் பிற விவரங்களும் கிடைக்கிறது படத்தை பார்க்கும் முன்பு அவற்றை குறித்தும் அறிந்துகொள்வது படத்தை மனதுக்கு இன்னும் அணுக்கமாக்கும் சகமனிதர்களின் துயரை மிகச்சரியாக அறிந்துகொள்ளவும்  முடியும்.

செங்கேணியின் மகள் அல்லியாக வரும் சிறுமியின் இயல்பான நடிப்பும் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது. அத்தனை துயரங்களுக்கு இடையிலும் அல்லி எழுதப்படிக்க கற்றுக்கொள்ளுவதும் இறுதியில் சூர்யாவுக்கு இணையாக அவளும் நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாளிதழை வாசிப்பதும் காலம் மாறும் என்னும் நம்பிக்கையை விதைக்கும் காட்சிகள்.

அமேஸான் பிரைமில் இருக்கும் ஜெய்பீம் அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். லாக்கப் வன்முறைக்காட்சிகள் பெரியவர்களுக்கே மன நடுக்கத்தை தருமென்பதால் குழந்தைகளுடன் பார்க்க உகந்ததல்ல.

Richard Jewell-பழியும் பாவமும்

27 ஜூலை 1996 அன்று, ஜார்ஜியா மாகாணத்தின்  தலைநகரான அட்லாண்டாவில் கோடைக்கால விளையாட்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் பூங்காவில் நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த  குண்டுவெடிப்பில்  ஒரு நபர் கொல்லப்பட்டு 111 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பை அருகில் சென்று படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததுடன் இறப்பு எண்ணிக்கை இரண்டானது. அந்த குண்டு வைக்கப்பட்டிருந்த  சந்தேகத்திற்குரிய பையை அடையாளம் கண்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற உதவி வழிகாட்டிய  தன்னார்வலரும், அந்த விளையாட்டு போட்டிகளுக்கென பகுதிநேர பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவரும், காவல்துறையில் பணியாற்றும் லட்சியத்துடன் இருந்தவருமான பாதுகாவலர் ரிச்சர்ட் ஜுவல் ஒரே நாளில் பிரபலமாகி ஹீரோவாக மக்களால் கொண்டாடப்பட்டார். ஏறக்குறைய 100 பேருக்கு மேல் அவரால் அன்று உயிர் பிழைத்தனர்..

பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால்  ஜுவெல் பாராட்டப்பட்டார். அவரின் இந்த சாகசத்தை  ஒரு கதையாக எழுத அடுத்த நாளே ஒரு புத்தக ஒப்பந்தம் கூட வழங்கப்பட்டது. ஆனால் குண்டுவெடிப்பின் பின்னர் மூன்றாம் நாளில் FBI அலுவலர் ஒருவர் பத்திரிக்கை செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்ட ஒரு தவறான செய்தியால் எந்த ஆதாரமும்,  சாத்தியமான சந்தேகமும் இல்லாமல், குண்டுவெடிப்பு விசாரணையின் மையமாக ஜுவெல்  எதிர்பாராமல் குறிவைக்கப்பட்டார். இது அவரது வாழ்க்கையை ஒரு  நரகமாக்கியது

இந்த செய்தியும் இது தொடர்பாக நடந்த விசாரணைகளும் ஜுவெல்லின் தினசரி நடவடிக்கைகளும் சர்வதேச செய்தித்தாளான, தி டெய்லி டெலிகிராப் மூலம் தினமும் மக்களுக்கு சொல்லப்பட்டது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டிலிருந்து ஜுவெல் 8 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கபட்டு பகிரங்கமாக அவரிடம் காவல்துறையினர் மன்னிப்பு கேட்கப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் பெரிதும் கவன ஈர்ப்பை பெற்றது.  பிரபல இயக்குனர்   கிளின்ட் ஈஸ்ட்வுட், ஜுவல்லின்  இந்த வலிமிகுந்த, அநீதியான, அசாதாரண அனுபவத்தை சாம் ராக்வெல், கேத்தி பேட்ஸ், ஒலிவியா வைல்ட், ஜான் ஹாம் மற்றும் புதுமுகம் பால் வால்டர் ஹாஸர் ஆகியோரை கொண்டு சிறப்பான ஒரு திரைப்படமாக்கினார்

செய்தித்தாள் தலைப்புச் செய்தி ஒன்றை  ஈஸ்ட்வுட் எப்படி  நல்ல, வெற்றிகரமான திரைப்படமாக மாற்றினார் என்பதை 2019ல் வெளியாகி, தற்போது நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கும்  Richard Jewell படத்தில் காணலாம் 

இச்சம்பவம் குறித்து கெண்ட் அலெக்சாண்டர் மற்றும் கெவின் ஆகியோர் எழுதிய ’’The Suspect: An Olympic Bombing, the FBI, the Media, and Richard Jewell, the Man Caught in the Middle’’ நூலையும்,   சஞ்சிகைகளில் வெளியான பல கட்டுரைகளும் ஈஸ்ட்வுட்  கருத்தில் கொண்டே இப்படத்தை உருவாக்கினார். 1996 களில் நடப்பது போலவே காட்சிகளையும் அரங்குகளையும் சித்தரித்து  குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது

தயாரிப்பு செலவை காட்டிலும் பத்து மடங்கு வசூல் செய்த வெற்றிப் படமான இது 2019 ஆம் ஆண்டின் சிறந்த பத்துப்படங்களில் ஒன்றாக தேர்வானது..ஜுவெல்லின் தாயாக நடித்திருந்த கேத்தி பேட்ஸ் இதில் பெரிதும் பாராட்டப்பட்டார். பல விருதுகளை பெற்ற இப்படத்தின் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. மகனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கும் காட்சியில் கேத்தியின் மிகச் சிறந்த  நடிப்பை நாமும் பார்க்கலாம்

ஜார்ஜியாவின் முக்கிய நாளிதளொன்றின் நிருபரான கேத்தி ஸ்ரக்ஸ் (Kathy Scruggs) FBI அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்து பெற்றுக்கொண்ட தகவலே பொதுவெளிக்கு வந்தது என்னும் காட்சி பலரின் கண்டனக்குள்ளானது. கேத்தி ஸ்ரக்ஸ் 2001ல்  மருத்துவரொருவர் பரிந்துரைத்த அதீத மருந்துகளின் விளைவாக மரணம் அடைந்தார். 

தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஜுவெல்லுக்கு நேர்ந்த அநீதியை பேசும் படமான கேத்திக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பத்திரிக்கையாளர்கள் தரப்பில் எதிர்ப்பிருந்த்து. பெண் பத்திரிகையாளர்களை இத்திரைப்படம் அவமதிப்பதாகவும் பல பெண்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். எனினும் ஈஸ்ட்வுட் அவருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில், உண்மைக்கு புறம்பாக எந்த காட்சியும் இதில் இல்லை என்று குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.. 120 நிமிடங்கள் ஓடும் இப்படம் எந்த இடத்திலும் தொய்வின்றி ஈஸ்ட்வுட்டின் ஸ்டைலில் பரபரப்பாக, உணர்வுபூர்வமாக செல்கிறது. ஜுவெல் ஆக நடித்திருக்கும்  பால் வால்டெர் மிக சரியான மற்றும் பிரமாதமான தேர்வு அசல் ஜுவெலுக்கும் இவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையும் ஆசச்ர்யப்படவைக்கிறது.

ஜுவெல்லின் அப்பாவித்தனமும் எளிமையும் நிபந்தனைகளற்ற, அன்பும் பார்வையாளர்களை அவர் பக்கம் சாய வைத்துவிடும். அவருக்கும் அவர் சார்பாக வாதாடும் வக்கீல் சாம் ராக்வெல்’லுக்கும் இருக்கும் தோழமையும், சாம்’மின் புரிதலும் அன்பும், விசாரணையின் போதும் காவலதிகாரிகளின் தந்திரங்களை ஜுவெல் புரிந்துகொள்ளாமல் வெள்ளந்தியாக பதிலளிப்பதுமாக ஈஸ்ட்வுட்டின் இயக்கம் வழக்கம் போல் சிறப்பு

ரிச்சர்ட் ஜுவெல்  எப்படி பத்திரிக்கைகள் பரபரப்பான செய்திகளுக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் எளியவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுவதை, உண்மைச் செய்திகளை விட வதந்திகள் ஊடகங்கள் வழியாக வேகமாக பரவுவதை, அறமற்ற அதிகாரிகள் காவல் துறையிலும் இருப்பதை  எல்லாம் தெளிவாக சொல்லும் படம்

தான் பிரபலமாக வேண்டும் என்று ஜுவெல் அந்த குண்டை அங்கே வைத்துவிட்டு மக்களை காப்பாற்றுவது போல நாடகமாடினார் என்றே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் நிராபராதி என அறிவிக்கப்பட்டவுடன் அவர் புகழ் இருமடங்காகியது.

 எனினும் அந்த 8 மாதங்கள் அவருக்கு நேர்ந்த மன உளைச்சலை இந்த திரைப்படம் நமக்கு காட்டுகிறது.  ஜுவெல் பின்னர் அவர் விரும்பியபடியே காவல் துறையில் பணியாற்றினார் குண்டு வெடிப்பின் .  உண்மைக்குற்றவளி 6 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யபட்டார்.

 தனக்கேற்பட்ட அநீதிக்கு ஜுவெல் தொடர்ந்த மான நஷ்ட வழக்குகள் பலவற்றில் அவர் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு பெருந்தொகை பிழையீடாக பின்னர் வழங்கப்பட்டது. 33 வயதாக இருக்கையில் இந்த அநீதி ஜுவெல்லுக்கு நிகழ்ந்தது, அவர் விடுவிக்கபட்டு 10 ஆண்டுகள் கழித்து தனது 44 வது  வயதில் மாரடைப்பால் ஜுவெல் காலமானார். என்றும் அவர் மக்கள் மனதில் நாயகனாக நினைவில் இருக்கிறார்.

உண்மை சம்பவங்களை மேலும் அறிந்துகொள்ள:

https://www.telegraph.co.uk/films/richard-jewell/who-was-richard-jewell/

https://law.jrank.org/pages/8241/Libel-Slander-Richard-Jewell-Olympic-Park-Bombing.html

https://law.jrank.org/pages/8241/Libel-Slander-Richard-Jewell-Olympic-Park-Bombing.html

# Home

ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் # Home  ஒரு நல்ல நிறைவான, குடும்பத்தினர் அனைவரும் பார்க்கக் கூடிய  மலையாளத் திரைப்படம்..

இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாஷி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நேஸ்லென் கே. காஃபூர்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம் ரோஜின் தாமஸ், தயாரிப்பு ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் பேனரில் விஜய் பாபு,  இவரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை ராகுல் சுப்ரமணியன், ஒளி இயக்கம் நீல் டி’ சுன்ச்சா.

ஆலிவர் ட்விஸ்ட்டாக இந்திரன்ஸ் அவரின் அழகிய குடும்பமே கதைக்களம் மனைவி குட்டியம்மாவாக மஞ்சு பிள்ளை, ஒரு வெற்றிப்படம் கொடுத்து திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கிவிட்டு இரண்டாவது ஸ்கிரிப்டுக்காக முயன்று கொண்டிருக்கும் மூத்த மகன் ஆண்டனியாக ஸ்ரீநாத் பாஷி, எந்நேரமும் எதையாவது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டே இருக்கும் vlogger பதின்மவயது இளையவன் சார்லஸாக நேஸ்லென் கே. காஃபூர்

 இளையோரின்  உலகில் தானும் நுழைய முயன்று, இயலாமையும் தன்னிரக்கமுமாக வருந்தும் தந்தை ஒருவர், இளைய தலைமுறையினருடன் உருவாகி இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலாகிய இடைவெளியை நிரப்ப முயல்வதும், அதில் மகன்களுக்கும் தந்தைக்கும் ஏற்படும் உரசலும் முட்டலும் மோதலும் ,பின்னர் புரிதலுமே  கதை. 

ஆலிவர் என்னும் 60 வயது குடும்ப தலைவரொருவரின் கதை மட்டுமல்ல, இது நம்மில் பலரின் கதையும் தான். நம் வீடுகளிலுமே  புதிய திறன் பேசியை , மடிக் கணினியை இயக்கவும், கைப்பேசி வழியே வர்த்தகம் செய்வது குறித்தும் மகன்களிடமும் மகள்களிடமும் கேட்டறிந்து கொள்ளும் பெற்றோர்கள் அநேகம் பேர் இருப்போம்.

 இந்த தலைமுறை பிறந்து வளர்ந்ததே தொழில்நுட்ப அதீத  வளர்ச்சி காலத்தில்தான் எனவே அதில் அவர்கள் மூழ்கி திளைத்து முத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். சில்லறை காசுகளை  எண்ணி எண்ணி செலவழித்தவர்களான   சென்ற தலைமுறையை  சேர்ந்தவர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் கையிலிருக்கும் சிறு பெட்டி போன்ற  கருவியில் வர்த்தகம் செய்வதும், உணவை வரவழைப்பதுமாக உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டதை அறியாமலேயே மண் மறைந்தவர்கள். நாமோ இந்த தலைமுறையினரின் தொழில்நுட்பம் சார்ந்த, சிக்கல்கள் அற்றது போல தோன்றும் வாழ்க்கையை  பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.வேடிக்கை பார்த்துக் கொண்டும், மெல்ல மெல்ல  கற்றுக்கொண்டு இருக்கும் தலைமுறையினருக்கும், இமைக்கணத்தில் உலகை தொடர்பு கொள்ளும் இளைய தலைமுறைக்குமான உரசல்களை தான்  அழகிய கதையாக்கி இருக்கிறார்கள்.

ஸ்ரீநாத் பாஷி வழக்கம் போல சிறப்பான நடிப்பு,திரைத்துறையின் சவால்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அவர் பணப் பிரச்சனையிலும் இருக்கிறார். இரண்டாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க வேண்டிய காலக்கெடு கழுத்தை நெருக்குகையில் எப்படியும் எழுதிவிட வேண்டும் என சொந்த ஊருக்கு வருகிறார்.

வீட்டு வேலைகளில் எந்நேரமும் மூழ்கி இருந்தாலும் கணவனின் மனதை அறிந்திருக்கும், கணவனுக்கும் மகன்களுக்கும் இடையில் உண்டாகி இருக்கும் இடைவெளியை குறித்த கவலையுடன் குட்டியம்மா, மிக வயதான முழுநாளும் பிறரின் உதவியை நாட வேண்டி இருக்கும் தள்ளாத  ஆலிவரின் தந்தை, சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் இருக்கும் மூத்த மகன், சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையான இளையவன், இருவரின் அணுக்கமும் கிடைக்கப்பெற  தந்தையான ஆலிவரின் உணர்வுபூர்வமான போராட்டம் நம்மை கதைக்குள் கொண்டுவந்துவிடுகிறது.

 இந்திரன்ஸ் அநாயசமாக நடிக்கிறார்.அதிகம் வசனங்கள் பேசாமல் நுணுக்கமான முக பாவனைகள், உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் என, எளிதில் அவரது மனவோட்டத்தை திரையில் கொண்டு வந்துவிடுகிறார். ஆலிவர் புண் படும்போதெல்லாம் பார்வையாளர்களும் புண்பட்டு விடுகிறோம். அப்பாவியாக அவர் முகநூல் பக்கத்தை பற்றி கேட்டுக்கொள்ளுவதும், உயிர்த் தோழனிடம் தன் மனக்குமுறல்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதும், இரவில் மனைவியிடம் மட்டும் தன் அந்தரங்க துயரை ஒரு சில சொற்களில் சொல்லுவதுமாக அசத்தி இருக்கிறார். பண்பட்ட முதிர்ந்த நடிப்பு இந்திரன்ஸுடையது. பலநூறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்திருந்தாலும் இந்த திரைப்படம் இவரது திரைப்பயண அனுபவத்தில் அவருக்கும், நமக்கும்  கிடைத்திருக்கும் ஒரு அருமணி.

திறன்பேசியை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்கன்வே சிக்கலில் இருக்கும் மகனின் வாழ்வில் பெரும் இக்கட்டொன்றை கொண்டு வந்துவிடும் தந்தை, அது உண்டாக்கும் விரிசல், காதலியின் மனக்கசப்பு, தந்தையின் துயர், என்று குழப்பமில்லாமல் திரைக்கதை போகிறது. தயாரிப்பாளர் விஜய் பாபு மனநல மருத்துவராக வருகிறார் அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம்.

 அசாதாரணமான அந்த பிளாஷ்பேக் கதை இல்லாவிட்டாலும் இந்த திரைக்கதை வெற்றி பெற்றிருக்கும். அந்த கதையைக் கொண்டு அமைத்திருக்கும் கிளைமேக்ஸ் தவிர்க்கப்பட்டிருக்கலாம். KPAC லலிதாம்மாவின் பாத்திரமும், அவர் இந்திரன்ஸின் வீட்டுக்கு வருவதுமாக அந்த வலுக்கட்டாயமாக இணைக்கபட்ட கடைசிப்பகுதி அழகிய இக்கதைக்கு திருஷ்டிப்பொட்டு போல அமைந்து விட்டது. 

குட்டியம்மாவும் இயல்பான நடிப்பு. அந்த மழை நாள் இரவில் ஒரே கூரையின் கீழ் சம்பந்தி வீட்டினரும் அமர்ந்திருக்கையில் உள்ளக் கொந்தளிப்பு தாங்கமுடியால அவர் உடைவது  சிறப்பு.,குடும்ப உறவுகளில் ஆண்டனிக்கும் அவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் பிரியாவுக்குமான் உறவும் சொல்லப்படுகின்றது.

ஆலிவரின் நண்பனாக வரும் ஜான் ஆண்டனியும் தயாரிப்பாளராக வரும் மணியன்பிள்ளை  ராஜுவும் நகைச்சுவைக்கு உதவுகிறார்கள்.

 தலைமுறை இடைவெளிகளை விரிவாக்கியிருக்கும் தொழிநுட்பங்களை மட்டுமல்லாது தொழில்நுட்பத்தின் மிகை பயன்பாடுகள் உருவாக்கி இருக்கும் உளச்சீர்கேடுகளையும், திறன்பேசிக்கு அடிமையாகி இருக்கும் இந்த தலைமுறையையும் இந்த திரைப்படம்   எளிமையாக, ஆனால் அழுத்தமாக சொல்லுகின்றது. திரைப்படம் துவங்கும் முன்னரே ’’தயவு செய்து இடையிடையே கைபேசியை பார்க்காதீர்கள்’’ என்னும் வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏனென்று படம் பார்க்க பார்க்க பார்வையாளர்களுக்கு புரிகின்றது.

 புதியவற்றை கற்றுக்கொள்ள விழையும் தந்தை ஒருவரின் கதைஎன்பதுடன் 160 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் பலம் கதையின் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாய அநியாயங்களை சரியாக எடுத்துக் காட்டி இருப்பதிலும் இருக்கிறது.

ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், நடனம், வீர தீர சாகசங்கள் செய்யும் நாயகன், பேரழகாக ஒரு நாயகி என்னும் மரபான பொழுதுபோக்கு திரைப்படங்களை விரும்புவோருக்கானது அல்ல இந்த படம். மாறி வரும் திரைச்சூழலில் இப்போதைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சிக்கல்களில் ஒன்றை எடுத்து விரித்து அழகாக காட்டும் திரைப்படம் இது.

மலர்கண்காட்சியிலிருக்கும் ஆயிரக்கணக்கான மலர்க்கூட்டங்கள் அழகுதானென்றாலும், மலைச்சரிவில்  காட்டுச்செடி ஒன்றில் மலர்ந்திருக்கும் ஒற்றைச் சிறு மலரும் அழகுதானே! அப்படி ஒரு எளிய அழகான உணர்வுபூர்வமான திரைப்படம் தான் # Home.

குடும்பம் என்பதற்கான வரைமுறைகள்  மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் மிக முக்கியமாகிவிடுகிறது.  அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது

மாலிக்

மலையாளத்தில் புகழ்பெற்ற டேக் ஆஃப் படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் மகேஷ் நாராயணன் இயக்கி, தொகுத்து, திரைக்கதை எழுதி 2021 ஜூலை 15ல் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் மாலிக்.

ஃபகத் ஃபாஸில், வினய் ஃபோர்ட் , திலீஷ் போத்தன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய பாத்திரங்களில். ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ் ஆகியோர் உடன் இருக்கின்றனர். ஒளி இயக்கம் சானு ஜான் வர்கீஸ், இசை கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் இசையால் மிக பிரபலமான சுஷின் ஸ்யாம்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கடலோர புறநகர்ப் பகுதியான பீமா பள்ளியில் (Beemapally)  தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படும் பெண்ணான சையதுன்னிசா பீமா பீவி, அவரது மகன் சையது சுஹாதா மஹீன் அபுபக்கர் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பீமா பள்ளி தர்கா மிக பிரபலமானது.

2009 ல் பொதுமக்களில் 42 பேர் படுகாயமுற்று 6 பேர் இறந்து, பல காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கமும் பணி மாறுதலும் செய்யப்பட  காரணமாயிருந்த பீமாபள்ளி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு ரமதபள்ளி என்னும் கிராமத்தை கட்டியெழுப்பி உருவானதுதான் மாலிக்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மாப்பிள்ளா முஸ்லிம்களும் வசிக்கும் ரமத பள்ளி கடலோர கிராமத்தின் குற்ற உலகின் ராஜாவான அலிஇக்கா, அவரின் கிறிஸ்துவ காதல் மனைவி ரோஸ்லின், நடுத்தர வயது அலிஇக்காவான  ஃபகத் ஹஜ் புனித யாத்திரை கிளம்பும் நன்நாளில் கதை தொடங்கி விமானத்தில் நுழையும் போது  அவர் தடாவில் கைது செய்யப்படுவதிலிருந்து விரிந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது.

மகேஷ் நாராயணனின் விறுவிறுப்பான கதை சொல்லல்  படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது, ஆழமான, அட்டகாசமான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.

கொஞ்சம் நீளமான ஃப்ளேஷ்பேக். கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் எடவத்துறை கடலோரத்தை சேர்ந்த  சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் அலி, டேவிட், பீட்டர் என்னும் சிறுவர்கள் தாதா சந்திரனின் ஆளுகைக்கு கீழ் வந்து அவருக்காக  குற்றங்கள் செய்ய தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் சந்திரனிடமிருந்து பிரியும் அவர்கள் சந்திரனுக்கு எதிராக திரும்புவதுடன் தனியே  கள்ள கடத்தல  வியாபாரம் செய்ய தொடங்குகிறார்கள்.

சின்ன திருட்டுகளில் ஈடுபடும்  சிறுவன்   அலி, பின்னர் கடல் கடத்தலில் இறங்கி மெல்ல மெல்ல வளர்ந்து துணை ஆட்சியரின் நம்பிக்கைக்கு ஆளாகி குப்பைக்கூளங்களை அகற்றி அவ்விடத்தில் பள்ளி கூடம் அமைத்து நலப்பணிகளில் ஈடுபட்டு அலிஇக்கா என்னும் நாயகனாவதும், ஒற்றுமையாயிருந்த கிறிஸ்தவ முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அந்த விரோத நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும், துணைபோகும்  காவல்துறையும், இடையில் உண்டாகும் ஃபகத்தின் ரோஸ்லின் மீதான் காதலும் அவரைக் கொல்ல செய்யப்படும் முயற்சிகளும் அவருடனெயே இருந்து மெல்ல வளர்ந்து அரசியல்வாதியாகும் திலீஷ்போத்தனின் நயவஞ்சகமும், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கலவரமுமாக கதை வளர்கின்றது.

 குற்றப் பின்னணி, கடல் வணிகம், கள்ளக்கடத்தல் , எளிய மக்களின் நாயகன், அவர் மீதான கொலை முயற்சி, அவர் மகன் அநியாயமாக கொல்லப்படுவது, ஒற்றை மகள் என  கதை கமலின் நாயகனை கண்முன்னே கொண்டு வருகிறது.  இப்படியான திரைக்கதைகளில் இனி 70களின் காட் ஃபாதரும் 80 களின் நாயகனும் நினைவுக்கு வராமல் இருக்கும் சாத்தியமே இல்லை.

ஃபகத்தின் நடிப்பை குறித்து புதிதாக சொல்ல ஏதுமில்லை. மூன்றாவது முறையாக இயக்குநர் மகேஷுடன் இணைந்திருக்கும் ஃபகத் வழக்கம்போல அசத்தல். பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டிருக்கும் ஃபகத்தின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு மாலிக். 

திரைஉலகின் பொற்கதவுகளை திறந்து நுழைந்திருக்கும் 24 வயதே ஆகும் நிமிஷா சஜயனுக்காக  காத்திருக்கும் திரைக்களங்களையும் அவர் அடையப்போகும் உயரங்களையும் நம்மால் இப்போதே கணிக்கமுடிகின்றது. மகன் இறக்கும் காட்சியில் பள்ளிவாசலில் அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் கதறும் கதறலுடன் அவர்  வயதையும் அவரது நடிப்பனுபவங்களையும் எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.  ஃபகத்துக்கு இணையாக நடித்து இருக்கிறார்.

வழக்கமாக ஆங்காங்கே தலைகாட்டும் திலீஷ் போத்தன்  இதில் படம் நெடுகிலும் வருகிறார், சிறப்பான நடிப்பையும் அளித்திருக்கிறார், காவலதிகாரியாக இந்திரன்ஸ். எந்த முகமாறுபாடுமின்றி அரசியல்வாதிகளின் ஆணைக்கு துணைபோகும், எந்த சிந்தனையுமின்றி சிறைக்குள்ளே  அநீதி இழைக்கும் காவலதிகாரிகளின் ஒட்டுமொத்த பிம்பமாக அவரை காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சிகளற்ற முகத்துடன்   பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வினய் ஃபோர்ட் மிக சிறப்பான,இயல்பான நடிப்பு.  

கூரான, கவனிக்க வைக்கும் வசனங்கள். குறிப்பாக திலீஷ் போத்தனிடமும், துணை ஆட்சியரிடமும் பேசுவதும் , வினயிடம்   கைகளை அகல விரித்தபடி அனைத்துலக மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தழுவ நிற்கும் ஏசு கிறிஸ்துவின் சிலையை காட்டியும்  ஃபகத் பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பானவை.

ஏறக்குறைய மூன்று மணி நேர படத்தின் நீளம்,பெரும்பாலும் யூகிக்க முடிகிற திரையோட்டம்,  நீளமான பிளாஷ்பேக் ஃபகத்தின் மகனின் இறப்பை சரியாக விளக்காமல் போனது, கமலின்  நாயகனையும், அனுராக் காஷ்யப்பின் சில படங்களையும் அதிகம்  நினைவூட்டுவது ஆகியவை இப்படத்தின் சறுக்கல்கள் எனக்கொண்டால், நல்ல இயக்கம், சிறப்பான திரைக்கதை  தற்கால அரசியல் மற்றும் சமூக அமைப்பு, அதன் பகடைக்காய்களாக மைனாரிட்டி மக்களின் பிரச்சனைகளை அரசியலாளர்கள் பயன்படுத்துவது குறித்த கதை, மற்றும் முக்கிய நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக  பாராட்டுக்கு உரிய படம்தான்

மாலிக் , நிச்சயம் பார்க்க வேண்டிய மலையாள நாயகன்

Luca-லூக்கா

கடற்கரைக்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் வரும் ஒரு சிறுவனுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் புதிய நட்புகளும், புது புது உணவுகளும் ஸ்கூட்டர் சாகச  பயணங்களுமாய் மகிழ்ச்சியில் திளைக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் கிடக்கின்றது. அவ்வனுபவங்களும்  அம் மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் அவன்  மனிதனல்ல ஆழ் கடலின் அடியில் இருக்கும்  ஓருலகின் உயிரினம் என்னும் ரகசியமும்தான் கதை.

1950 களில் நடக்கும் கதைக்களத்தில், வெகுநாட்களுக்கு பிறகு சாகசங்களும் மாயங்களும் உணர்வெழுச்சிகளுமாய் ஒரு குழந்தைகளுக்கான திரைப்படம். 

இத்தாலியின் ஒரு அழகான நகருக்கு அருகில் இருக்கும் கடலில், மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வெறுக்கப்படும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.அவற்றை அந்நகர மக்கள் வெறுக்கிறார்கள், அஞ்சுகிறார்கள் எப்போது அவை கண்ணில் பட்டாலும் வேட்டையாடி கொல்லவும் காத்திருக்கிறார்கள். அந்த உயிரினங்களும் மனிதர்களை அஞ்சி வெறுக்கின்றன. நீலம் பச்சை என பல நிறங்களில் மீன்களை போல் செதில்களுடனும் வாலுடனும் இருக்கும் அவர்களும் கடலுக்கு அடியில் மிக அழகிய உலகில், வீடுகளில்  குடும்பம் குடும்பமாக வாழ்கிறார்கள். அவ்வுயிர்கள் நீரிலிருந்து வெளியே வந்தால் மனிதர்களின் உடலை அடைந்துவிடுவார்கள்.இவ்வுலகில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன் லூக்கா.

லூக்காவிற்கு கடற்கரைக்கு சென்று கடலுக்கு வெளியே இருக்கும் உலகை காணும் ஆசை பல நாட்களாக இருக்கிறது ஆனால் லூக்காவின் அம்மாவோ அங்கு செல்ல கூடாது என்று கடுமையாக  எச்சரித்திருக்கிறார், அவனை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.

அதே உலகைச் சேர்ந்த ஆனால் அவ்வப்போது கடலை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் தீவில் வசிக்கும் கதையின் மற்றொரு நாயகனான ஆல்பெர்ட்டோவும் லூக்காவும் சந்திக்கும் புள்ளியிலிருந்து கதை கொண்டாட்டமாக நகர்கின்றது. ஆல்பர்டோ லூக்காவை மனிதர்களின் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறான். ஆல்பெர்ட்டொ திருடிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ஏராளமான பொருட்களுடன் இருக்கும் ஒரு வெஸ்பா ஸ்கூட்டியின் படம் இரண்டு சிறுவர்களையும் கற்பனையில் பறக்க வைக்கிறது

லூக்காவின் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் இத்தாலியின் போர்டரோஸோ என்னும் அழகிய நகருக்கு செல்வது,   மனிதர்களை போல இருந்தாலும் நீரில் நனைந்தால் கடல்வாழ் உயிரிகளாக அவர்கள் மாறிவிடும் அபாயம், அவர்களுக்கு ஏற்படும் புதுப்புது நட்புக்கள், எதிரிகள், வெஸ்பா ஸ்கூட்டர் பரிசாக கிடைக்கவிருக்கும் ஒரு  போட்டி என்று கதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது

இரு சிறுவர்களுக்கும் குலியா என்னும் தோழி கிடைக்கிறாள். அவர்கள் அனாதை சிறுவர்கள் என்றெண்ணி தனது வீட்டில் தங்க இடம் கொடுக்கும் குலியாவுடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகளை திகட்ட திகட்ட பார்க்கலாம். 

லூக்காவை தேடிக்கொண்டு அவன் பெற்றோர்களான டேனியெல்லாவும் லொரென்ஸோவும் அதே நகருக்கு வருவதும்,  நூடுல்ஸ் சாப்பிடும், நீந்தும், மற்றும் சைக்கிள் ஓட்டும் மூன்று போட்டிகள் கொண்ட அந்த  ட்ரை எத்தெலான் போட்டிக்கு இவர்கள் தயாராவது, அவர்களுக்கு அந்நகரில் பெரும் தொல்லை கொடுக்கும் வில்லன் என  கதை சுவாரஸ்யம்.

அத்தனை போக்கிரித்தனங்கள் செய்யும் ஆல்பெர்டோ வின் துயர பின்னணியும், லூக்காவும் அவனும் பிரியும் காட்சியும், இது குழந்தைகளுக்கான   அனிமேஷன்  படம்  என்பதை  மறக்கவைத்து  நம்மையும் துயரிலாழ்த்திவிடும்.வானில் தெரியும் விண் ’’மீன்’’களும் என்ன பொருளென்றே தெரியாமல் ஆல்பெர்ட்டொ அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகளும், குட்டிச் சுட்டிகளின் முகபாவனைகளும் கொள்ளை அழகு. 

அந்த நகரில் கடல் உயிரினங்களை கொல்ல காத்திருக்கும் மனிதர்களுக்கிடையில், தேடி கண்டுபிடித்து ஆழ்கடல் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மனிதர்களாக மாறி வந்திருக்கும் பெற்றோர்களின் கண்களில் இருந்து தப்பி, கடல் உயிரினங்களை கொல்ல எப்போதும் ஆயுதங்களுடன் இருக்கும் குலியாவின் அப்பாவுடன் அதே வீட்டில்  இருந்துகொண்டு, போட்டியில் இவர்கள் கலந்து கொள்வதை எப்படியாவது தடுத்து  நிறுத்த முயற்சி செய்யும் இன்னொரு பொறாமைக்கார சிறுவனின் திட்டங்களை எதிர்கொண்டு எப்படி மூவரும் போட்டிக்கு செல்கிறார்கள். இறுதிச்சுற்றில் மழை வந்தபோது என்னவானது, கொல்லக்காத்திருக்கும் மனிதர்களிடமிருந்து தப்பினார்களா, அவர்கள் இருவரின் கனவான வெஸ்பா கிடைத்ததா என்பதையெல்லாம் திரையில் பார்க்கையில் கிடைக்கும் குதூகலத்தை  வாசிப்பில் இழந்துவிடக்கூடாது

நம்மால் வெறுத்து,ஒதுக்கப்பட்டவர்களின் தரப்பையும் சொல்லும் இக்கதை தோழமை, அன்பு,  சாகசம் வீரம்,  விடாமுயற்சி என்று பல கலவையான உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது

அனிமேஷன் படத்தை  இத்தனை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கும் படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். இறுதிச்சுற்றில் தாண்ட வேண்டிய வெற்றிக்கோடு,   மனிதர்களாக மாறும் சில காட்சிகள், சூரிய வெளிச்சத்தில் நிழல்களின் கோணம், ரயில் வரும் திசை உள்ளிட்ட பல காட்சிப் பிழைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்த வேண்டாமென்னும் அளவிற்கு படத்தின் கதை உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன

இயக்குநருடன் கதையையும்,திரைக்கதையையும் மேலும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.லூக்காவிற்கு ஜேகப்  ட்ரெம்ப்ளேவும்,ஜேக் டிலன் கிரேஸர் ஆல்பெர்டோ விற்கும், எம்மா பெர்மன் குலியாவிற்கும் குரல் கொடுத்திருக்கின்றனர்.

ஒளி இயக்கம் டேவிட் ஜுவான் மற்றும் கிம் வயிட்,படத்தொகுப்பு கேத்ரின் மற்றும் ஜேஸன்.அனிமேஷன் மேற்பார்வை மைக் வெண்ட்ரூனி

வால்ட் டிஸ்னி மற்றும் பிக்ஸர் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் 1.30 மணி நேரம் ஓடும் இப்படம் பலநூறு தொழில்நுட்ப வல்லுநர்களின் அயராத உழைப்பால் உருவாகி இருக்கிறது. பிக்ஸரின் முந்தைய திரைப்படங்களின் பிரம்மாண்டங்களை  இதிலும் எதிர்பார்த்திருந்த  ரசிகர்கள் லூக்காவை யானைப்பசிக்கு அளிக்கப்பட்டிருக்கும்  கீரைத் தண்டு என்கிறார்கள். உலகெங்கிலும் திரையரங்குகளிலும், Disney +லும், 17 மற்றும் 18 ஜூன் 2021 ல் வெளியானது லூக்கா

  அதிகம் வெளி உலகிற்கு வர தயங்கிய, கூச்ச சுபாவம் கொண்டிருந்த தன்னை, தான் மூழ்கி இருந்த ஆழுலகிலிருந்து எடுத்து, வெளியே எறிந்து உலகை காட்டிய தனது பால்யகால நண்பன் ஆல்பெர்டோ வின் பெயரை இதில் லூக்காவின் நண்பனுக்கு வைத்திருக்கும் அறிமுக  இயக்குநர்  என்ரிக்கோ காகரோஸா ( ENRICO CACAROSA)  தான் இளமைபருவத்தை கழித்திருந்த நகரைத்தான் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இக்கதையின் கடல் உயிரிகளின் பாத்திர உருவாக்கம் இத்தாலிய தொன்மங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

பெரிய கண்களால் எல்லாவற்றையும் விழுங்கி விடுவது போல் பார்க்கும்  லூக்கோவும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்களை அனிமேஷனில் பார்த்து ரசிக்கையில், தங்கள் இளமைப்பருவத்தை திரும்பிப் பார்க்கும்   சென்ற தலைமுறையினருக்கு மட்டுமல்ல, எந்நேரமும் செல்போனும் லேப்டாப்புமாகவே இருக்கும் இந்த தலைமுறை குழந்தைகளுக்கும் ’’அடடா இதையெல்லாம் இழந்துவிட்டிருக்கிறொமே’’ என்று ஏக்கமுண்டாகும்

 நம் நெஞ்சில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் இளம் வயது தோழமையை சொல்லும் படமான லூக்காவின் அடுத்த பாகத்தையும் எடுக்கவிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி

உடல் ஊனம், வறுமை, ஓரினச்சேர்க்கை, நிறம், இனம், பொருளாதார நிலை என நம்மை விட எதிலாவது வேறுபட்டு இருப்பவர்கள் மீதான மனிதர்களின் வெறுப்பையும் விரோதத்தையும் சுட்டிக்காட்டும் படமாகவும் இதை காணலாம். அவரவர் வாழ்வென்பது அவரவர் தரப்பு நியாயங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை வளரும் தலைமுறையினராவது  இளமையிலேயே அறிந்து கொள்ளட்டும் .லூக்காவை போலவே புறப்பாடுகள் குறித்த கனவுகள் இல்லதவர்களே உலகில் இல்லை, அவர்களனைவருக்குமான படம் லூக்கா!

ஜகமே தந்திரம் (Jagame Thanthiram)

கார்த்திக் சுப்பராஜ் எழுதி, இயக்கி ’வய் நாட் ஸ்டூடியோஸ்’ தயாரித்திருக்கும். ’ஜகமே தந்திரம்’ தனுஷின 40 ஆவது திரைப்படம். தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், Game of thrones புகழ்  ஜேம்ஸ்  காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.ஒளி இயக்கம் ஸ்ரேயஸ் க்ருஷ்ணா, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன்.

கோவிட் பெருந்தொற்றால் திரையரங்குகளில்     வெளியிடமுடியாமல்  2021, ஜூன் 18’ல் நெட்ஃப்ளிக்ஸில்  17 மொழிகளில், 190 நாடுகளில்  வெளியானது ஜகமே தந்திரம்.

 லோக்கல் தாதாவான சுருளி என்னும் தனுஷ், கடல் தாண்டிய ஒரு பகைவிவகாரத்துக்கு லண்டன் செல்லும் ஒற்றை வரிக்கதையை திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.

 கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் போகுமளவிற்கு, மதுரையில் பரோட்டாக்கடை நடத்தும் சுருளியின் ரவுடித்தன்ங்கள் பிரபலமாகி இருக்கிறது. சுருளியின் ரவுடித்தனத்தை பார்க்கும் , லண்டன்  தாதா பீட்டரின் வலதுகையான ஜான் , லண்டனில் பீட்டருக்கு தொல்லையாக இருக்கும் சிவதாஸ் என்னும் தாதாவை ஒழித்துக்கட்ட  மிகப்பெரும் தொகையை கூலியாக பேசி சுருளியை லண்டனுக்கு வரவழைக்கிறார்., . அதை முடித்துக்கொடுத்து பணத்தை வாங்கிகொண்டு, வாழ்க்கையில் ரவுடித்தனத்தை விட்டொழிக்கலாமென்று சுருளியும் ஒத்துக்கொள்கிறான். சிறு மகன் தீரனின் அன்னையான,  இலங்கை பாடகி அடிலாவை  லண்டனில் சந்தித்து காதலாகிறான் சுருளி.

சொன்னபடியே சிவதாஸை கொல்ல பீட்டருக்கு சுருளி உதவமுடிந்ததா, சிவதாஸ் யார்? ஏன் லண்டனிலிருந்து மதுரைக்கு வந்து சுருளியை அழைத்துச்சென்றார்கள்? காதல் நிறைவேறியதா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

சின்ன குழந்தைகளுக்கு சொல்லப்படும் தாதா கதையைப்போல சொல்லப்ட்டிருக்கிறது கதை. படத்திற்கு துப்பாக்கி சண்டை என பெயரிட்டிருக்கலாமென்னும் அளவிற்கு  சுட்டுத்தள்ளுகிறார்கள் விதம் விதமான துப்பாக்கிகளில். தமிழ் சினிமாவின் சாபக்கேடான நாயக வழிபாட்டில் இளைஞரான கார்த்திக் சுப்பராஜும் நம்பிக்கை கொண்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.        ஒற்றை ஆளாக பலரை அடித்து துவம்சம் செய்வது, துப்பாக்கி குண்டுகள் மழையென பொழிந்தாலும்  நாயகனுக்கு ஒன்றும் ஆகாதது என வழக்கமான, தமிழ்சினிமா கடந்து வந்த முக்கால் நூற்றாண்டான பாதையிலேயே கார்த்திக்கும் செல்கிறார். 

மீசை, சிரிப்பு ,பாடல்கள் என்று ரஜினியை தனுஷ் நினைவூட்டிக்கொண்டே இருப்பது , முருகேசன் என்னும் பாத்திரம் ஆகியவை கவனிக்க வைக்கி றது. ’’ரகிட ரகிட’’ பாடல் மட்டும் பரவாயில்லை ரகம்

தயாரிப்பு தரப்புக்கும் தனுஷுக்கும்  இடையே நெட்ப்ளிக்ஸில் திரையிடுவது தொடர்பான  மோதலும், தொடர்ந்து விநியோகஸ்தர் தரப்பிலிருந்து ’வய் நாட்’   ஸ்டியோவிற்கு  ரெட்கார்ட் கொடுத்ததுமாக படம் வெளியாகுமுன்னேயே பிரச்சனைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி இருந்தது.

தனுஷின் நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பலமென்றால் திரைக்கதையின் தொய்வு, சொதப்பலான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் மைனஸ். மிகப்பழைய, புளித்துப்போன கேங்ஸ்டர் கதையை மறுபடியும் சொல்லுகையில், அதுவும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளைஞர்கள் சொல்லுகையில் புதிதாக எதேனும் இருக்கவேண்டும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் படம் அதே பழைய பாணிதான். இரண்டாம் பாதியில் திரைப்படம் நத்தை வேகத்தில் செல்கிறது. புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, ஈழத்தமிழர்கள் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை தொடும் படம் நிச்சயம் வேறு ஒரு தளத்தில் இருந்திருக்க வேண்டும்.  

புலம் பெயர்ந்த மக்களின் கவிதையொன்றின்’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ என்னும் ஒரு வரி நமக்கு அளிக்கும் உளச்சித்திரத்தை, மனத்துயரை  இந்த முழுநீள திரைப்படம் ஒரு சதவீதம் கூட கொடுக்க வில்லை.

 கார்த்திக் சுப்பராஜின் படு சுமாரான படமென்று இதை நிச்சயம் சொல்லலாம். மாமனாரின் பேட்ட’யை மருமகனை வைத்து எடுக்க நினைத்து தோல்வியடைந்த படமென்றும் சொல்லலாம்.

நவம்பர் ஸ்டோரி

 குற்றத்திகில் வகையை சேர்ந்த  வலைத்தொடரான நவம்பர் ஸ்டோரி   தமிழ் , இந்தி,  தெலுங்கு மொழிகளில்  2021 மே 20  அன்று டிஸ்னி- ஹாட் ஸ்டாரில் வெளியானது. இயக்கம்  இந்திரா சுப்பிரமணியன், தயாரிப்பு விகடன் குழுமம்.

 தமன்னா மற்றும் பசுபதி முன்னணி பாத்திரத்தில். இவர்களுடன் GM குமார், விவேக் பிரசன்னா, நமிதா கிருஷ்ணமுர்த்தி, குழந்தை நட்சத்திரம்  ஜானி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். 

மொத்தம் ஏழு அத்தியாயங்கள். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபல குற்றக் கதை நாவலாசிரியர் அவருக்கு சொந்தமான, விற்பனைக்கிருக்கும் ஒரு பழைய வீட்டில், கொலையான ஒரு சடலத்துடன் இருக்கிறார். அவருக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. அவரது மகளான அனு என்னும் தமன்னா அப்பாவை காப்பாற்றவும், கொலையை துப்பு துலக்கவும் தடயங்களை மறைக்கவும் முயற்சிப்பது தான் கதை

தமன்னா ஒரு ஹேக்கர். காவல்துறையின் எல்லா ஆவணங்களையும் கணினி மயமாக்குதலில் அவரும் நண்பரும் ஈடுபட்டிருக்கிறார்கள். அல்ஸைமர்ஸ் பிரச்சனையால் அவதிப்படும் அப்பாவை குணமாக பணத்தேவையில் இருப்பதால் அப்பாவின் விருப்பமின்றி சொந்த வீட்டை விற்கும் முயற்சியில் இருக்கிறார்,ஒரு ஜான் முன்னே போனால் இரண்டு முழம் சறுக்குக்கிறார்

 அப்பாவை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல துணியும் மகளாக தமன்னா. பிற கதாபாத்திரங்களுடன் இணைந்து போக முடியாத நிறமும் உடல்வாகுமாக இருப்பது தமன்னாவுக்கு ப்ளஸா மைனஸா என்றூ பட்டிமன்றமே நடத்தலாம்,  இந்த 7 அத்தியாயங்களிலும் பெரிய வேறுபாடுகள் இல்லாமல்  ஒரே மாதிரி இறுக்கமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.

 கதாநாயகிக்கு பிரச்சனைகள் வரலாம்தான் அதற்காக இப்படியா? தமன்னாவை கதையில் எப்போதும், எல்லா திசைகளிலும் பிரச்சனைகள் சூழ்ந்துகொண்டு நெருக்குகிறது.  முழு தொடரையும் தமன்னாவை நம்பி, அவரை முதன்மைப்படுத்தியே கொண்டு போகும் உத்தேசம் இருந்தால் காதலன் ரோலும்  இல்லவே இல்லை.  தனித்தனி சரடுகளாக கதைகள் வந்து பின்னர் எல்லாம் இணைந்து கொள்கின்றன. 

-கருப்பு வெள்ளையில் கன்னியாஸ்த்ரீ வளர்க்கும் ஒரு தாயில்லா சிறுவன், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டுமென்னும் அவன் கனவு, அவனுக்கிருக்கும் உளவியல் மற்றும் சமுதாய சிக்கல்கள்,

-தமன்னாவின் பணச்சுமை, ஹேக்கிங் செய்வதில் உண்டாகும் பிரச்சனை, அப்பாவினால் உண்டாகும் குழப்பங்கள், வீடு விற்பதில் பிரச்சனை, கொலையில் அப்பாவை சம்பந்தப்படுத்தும் நிகழ்வுகள், காவல்துறையின் சந்தேகம்

-மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண், அவரை கடத்தும் 3 இளைஞர்கள், 

 -ஹேக்கிங்கில் வரும் பிரச்சனையும், கடத்தபட்ட இளம்பெண்ணும், காணாமல் போன ஹைதெராபாத் இளைஞர்களும், விற்காமலிருக்கும் தமன்னாவின் வீடும், துவக்கத்தில் நடக்கும் பேருந்து விபத்தும், அந்த பெயிண்ட் கொலையு்ம் சந்திக்கும் ஒருபுள்ளியில் கதை என்னவென்று நமக்கு ஒருவழியாக புரிந்து விடுகிறது

காட்சிகள் மிக மெதுவாக செல்வது, தமன்னாவின் உணர்ச்சிகள் அற்ற முகம், கடைசி அத்தியாயங்களை போட்டு குழப்பி அடித்திருப்பது, அத்தனை வேகமாக துப்புத் துலக்கும் அருள்ராஜ் கடைசியில் ஆளே எட்டிப்பார்க்காமலிருப்பது என பல ஓட்டைகள் இருக்கின்றன. தணிக்கை இல்லையென்பதால் பல காட்சிகள் ரத்தக்களறியாக இருக்கிறது குறிப்பாக போஸ்ட் மார்ட்டம் காட்சிகள் மிகவும் கஷ்டப்படுத்துகிறது. தமன்னாவின் அப்பா குமார்  கொஞ்சம் மிகை நடிப்பு, மைனா  நந்தினி அருமையான இயல்பான பாந்தமான நடிப்பு. காவலதிகாரியாக அருள் ராஜ்  பிரமாதமான தேர்வு, சிறப்பாக செய்திருக்கிரார்

ஏகப்பட்ட மர்மங்களை    ப்ளாஷ்பேக்கில் காட்டி பலவற்றை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.  தமன்னாவின் தங்கை குறித்தும், அம்மாவின் மரணம் குறித்தும் ஏன் அவருக்கு சொல்லப்படவில்லை என்று கதையில்  யாரும் மெனக்கெடவே இல்லை. எல்லா நிகழ்வுகளும் ஏன் நவம்பர்  16ல் நடக்கிறது என்பதற்கும் லாஜிக் இல்லை

ஆனா்லும் தமிழில் இப்படி ஒரு திகில் தொடரை ஒரளவுக்கு  சுவாரஸ்யமாக கொடுதிருப்பதற்கு  பாராட்டலாம். அருமையான வசனங்கள், இயல்பான காட்சியமைப்புகள்,  பசுபதியின் பிரமாதமான நடிப்பு, தமிழில் வரும் பிற தொடர்களை ஒப்பிடுகையில் காட்சியமைப்பு, இசை, ஒலி, காமிராக்கோணம், இயக்கம் எல்லாம் பிரமாதம். இவற்றிற்காகவே இந்த தொடரை பாரக்கலாம

பல முடிச்சுக்களை காட்டிவிட்டு கடைசியில்  பல மர்மங்களை சொல்லாமல் மர்மமாகவே நீடிக்க விட்டிருக்கிறார்கள். அத்தியாயங்களின் எண்ணிக்கையையும் தமன்னாவின் பிரச்சனைகளையும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் ஒரு தொடராக இருந்திருக்கும்.

Sandeep Aur Pinky Faraar –தலைமறைவான சந்தீப்பும் பிங்கியும்

இந்தியாவின் இருவேறுபட்ட வாழ்வியலில் இருக்கும், முற்றிலும் வேறுவேறு தளங்களில் இயங்கும் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து பயணிக்க வேண்டிய அசாதாரணமான ஒரு பயணத்தில்   ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அவநம்பிக்கை, வெறுப்பு சந்தேகங்கள் வழியே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஒரு அழகிய கதையை சொல்லும் இந்தி திரைப்படமான இது 19, மார்ச் 2021அன்றுதிரையரங்குகளிலும்,பின்னர் அமேஸான் பிரைமிலும் வெளியானது.

 தயாரிப்பு மற்றும் இயக்கம் திபாகர் பானர்ஜி. விநியோகம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். பரினிதி சோப்ராவும் அர்ஜுன் கபூரும் முக்கிய கதாபாத்திரங்களில். உடன் நீனா குப்தாவும் , ரகுவீர் யாதவும் இருக்கிறார்கள்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஹரியானா காவலதிகாரி பிங்கி எனப்படும் சத்யேந்த்ராவும் ஒரு கார்ப்பரேட் வங்கியின் உயர்மட்ட பொறுப்பிலிருக்கும் சந்தீப் வாலியாவும் முதன்முதலில் சந்தித்த சில மணி நேரங்களிலேயே, அவர்கள் மீதான கொலை முயற்சிகளினால் உயிருக்கு அஞ்சி தலைமறைவாகி விடுவதும், தப்பிக்க மேற்கொள்ளும் பயணங்களும் போராட்டங்களும் தான் கதை.

மிகச்சாதாரணமாக காரில் மூன்று இளைஞர்கள் இளமைக்கே உரிய அசட்டுத்தனங்களும், கொந்தளிப்பும் சிரிப்புமாக பயணிப்பதில் டைட்டில்   துவங்கி, அவர்களின் எதிர்பாரா படுகொலையில்  படம் வேகமெடுக்கிறது. அந்த இளைஞர்கள் கடந்து வரும் காரில் நாயகனும் நாயகியும் இருக்கின்றனர்.

துவக்கத்திலிருக்கும் வேகம் பின்னர் மட்டுப்பட்டாலும் காதல், கர்ப்பம், நம்பிக்கை துரோகம், ப்ளேக் மெயில் பொதுமக்களின் பணத்தை ஏமாற்றும் பரிவர்த்தன் வங்கியின் ஒரு திட்டம், வாடகைக் கொலையாளி, பரினிதியின் கர்பத்தில் இருக்கும் குழந்தை, காவலர்கள்  வலைவீசி இருவரையும் தேடுவது என  சுவாரஸ்யமான திருப்பங்கள் நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது,

கர்ப்பமாயிருக்கும், ஆபத்திலிருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யபட்ட  இளம்பெண் பாத்திரத்தில் பரினிதி அர்ஜுன் கபூரை விடவும் பிரமாதப்படுத்தி நடித்திருக்கிறார். அலட்சிய இளைஞனாக அறிமுகமாகி தனக்கே தெரியாமல் தான் பலிகடா ஆக்க பட்டிருப்பதில் வெறுப்பாகி பரினிதியையும் வெறுத்து , பின் ஒரு கட்டத்தில் அவரை காப்பாற்றும் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளும் பாத்திரத்தில் அர்ஜுன் கபூரும் சிறப்பாக பொருந்துகிறார்.

நீனா குப்தாவின் வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கி இருக்கும் காட்சிகள் அழகு. கடைசி அரைமணி நேரத்தில் நேபாளத்தை தாண்டும் முயற்சிகள் சஸ்பென்ஸ் நிறைந்தவை. குறிப்பாக வங்கி மேலாளரின் திடீர் வன்முறை பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

அந்த நீண்ட பாலத்தில் சுட்டுக்கொல்ல தயாராக காத்திருக்கும் காவலதிகரிகளும் அப்பாலத்தை கடக்க காத்திருக்கும் திருமண ஊர்வலத்தில் மறைந்திருக்கும் சந்தீபும், பிங்கியுமாக இறுதிக்காட்சி பரபரப்பு . வழக்கமான பாலிவுட் படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்த படம் பெரியவர்களுக்கானது.

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑