லோகமாதேவியின் பதிவுகள்

Month: November 2024

அயல் ஆக்ரமிப்புத்தாவரங்கள்!

சென்ற வருடம் தூரன்விருது விழாவிற்காக ஈரோடு வழக்கறிஞர் செந்தில் அவர்களுக்கு ச்சொந்தமான கல்யாண மண்டபத்திற்கு சென்றிருக்கையில் மண்டபத்துக்கு நேர்எதிரில் மிக அழகிய நடுத்தர உயரத்திலான ஒரு மரம் நின்றது. அதை முதன் முதலாக  அன்றுதான் பார்த்தேன். அது  Conocarpus lancifolius என்னும் சோமாலியாவை சேர்ந்த மரம். 

அதன் கனிகள் ஒரு கூம்பைப் போல அமைந்திருப்பதால் அதற்குக் கோனோகார்பஸ் என்று பேரினப்பெயர். கார்பஸ் என்றால் கனிகள் என்று பொருள் கோன் போலக் கனிகள் என்ற பொருளில் இருக்கும் இந்தப் பேரினத்தில் இரண்டே இரண்டு சிற்றினங்கள் தான் இருக்கின்றன. லேன்சிஃபோலியஸ் மற்றும் எரெக்டஸ். லேன்சிஃபோலியஸ் என்பது நீளமான கூர் நுனிகொண்ட இலைகளைக் குறிக்கிறது. எரெக்டஸ் என்றால் நேராக நிமிர்ந்து வளர்கின்ற என்று பொருள் இது சதுப்பு நிலங்களில் வளரும் பல தண்டுகளைக் கொண்ட அடர்த்தியான புதர்ச்செடி

கோனோகார்பஸ் லேன்சிஃபோலியஸ்  மரத்தை நேற்று பெங்களூரில் தருண் இன்னும் இரண்டுவருடம் படிப்பின் பொருட்டு இருக்கப்போகும் ஒரு அடுக்கத்தின் வாசலிலும் மேலும்   அதிக  இடங்களிலும்  பார்த்தேன் பெங்களூர் முழுக்க இதை அலங்கார செடியாக வளர்க்கிறார்கள். கற்பகம் பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கும் சேலம் பெங்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும் ஒரு உணவகத்தின் வாசலிலும்  ஏராளமான மரங்கள் நட்டு வளர்க்கப்படுகின்றன

இந்தக் கோனோகார்பஸ் போல மிக வேகமாக வளரும் அயல்நாட்டு தாவரங்கள் இயல் மரங்களுக்கும் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலை அளிப்பவை. இப்படித்தான் நமக்கு ஆகாயத்தாமரை பிரிடிஷ் இந்தியாவில் அறிமுகமானது இப்படித்தான் உண்ணிச்செடி என்னும் லண்டானா அறிமுகமாகி இப்போது அழிக்கவே முடியாத ஆக்கிரமிப்பு களையாகி விட்டிருக்கிறது இப்படியேதான் நெய்வேலி காட்டாமணக்கும், சீன கரிசலாங்கண்ணியும் இன்னும் பலவும் ஆக்கிரமிப்பு களைகளாகி விட்டிருகின்றன

ஈரோடு மலை தங்குமிடத்தில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் என் மாணவிகளுடன் நான் அங்கு அடிக்கடி செல்கிறேன். சில வருடங்களாக அந்தப் பிரதேசம் முழுக்க  மிக அதிகமாகp பல்கிப் பெருகி கொண்டிருகிறது சீமைக்கொன்றை எனப்படும் Senna siamea  மரம்.  இதன் இலைகளை விலங்குகள் உண்ணுவதில்லை என்பதை விஷ்ணுபுரம் குழுவில் இருக்கும் கால்நடை மருத்துவர்  பவித்ரா தெரிவித்தார்.  இதன் கனிகள் ஏராளமான விதைகளுடன் வெடித்து பரவிச் சூழலில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத பார்த்தீனியத்தை போல இதுவும் இன்னும் சில வருடங்களில் உருவெடுக்கப் போகிறது

இந்தக் கோனோகார்பஸ் மரத்திலிருந்து கொஞ்சம் கோந்தும் பார்பிக்யூ அடுப்புகளுக்கான் கரிக்கட்டையும் கிடைக்கின்றது பார்க்க அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது.  அவ்வளவுதான், ஆனால் இதன் ஏராளமான மகரந்தங்கள் மனிதர்களுக்குச் சுவாசக்கோளாறுகளையும் மேலும் பல  ஒவ்வாமைகளையும் உண்டாக்குகின்றன. இவற்றின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுஆழம் வரைசென்று உறிஞ்சுகின்றன.    பல வளைகுடா நாடுகளிலும் குஜராத்திலும் இதன் ஆபத்தை உணர்ந்து இதை வெட்டி அகற்றி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவின்  பல பகுதிகளில் இதை வாங்கி நட்டுவைத்து நீரூற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 அரசு இது போன்ற அதீத வளர்ச்சி கொண்ட தாவரங்களை இறக்குமதி செய்வதை, அவற்றின் பரவலை,  வளர்ச்சி வேகத்தை எல்லாம் தாவரவியலாளர்களின் குழுவொன்றை அமைத்துக் கட்டாயம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்தாவரங்களின் பரவலை   சட்டபூர்வமாகத் தடுக்கும் குவாரண்டைன் இந்தியாவில் மிக மெத்தனமாகத் தான் நடக்கிறது. 

 இந்தியாவில் இந்த botanical illiteracy இப்போது மிக அதிகமாக இருக்கிறது. ஒரு மரம் வேகமாக வளரும் என்றால் அதை உடனே தருவித்து அலங்கார மரமாக வளர்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். அயல்மரங்களை  வளர்க்கும் முன்பாக அதன் தாவரவியல் பண்புகளை அறிந்துகொள்வது மிக மிக அவசியம்.கவலையளிக்கிறது இந்த மரங்களின் பரவல்.

சீமைக்கொன்றை என்னும் சென்னா சயாமியா, மஞ்சக்கொன்னை என்னும் சென்னா ஸ்பெக்டாபிலிஸ் இரண்டுமே இந்தியாவின் அயல் ஆக்ரமிப்பு மரங்கள். மலர் மஞ்சரிகள் அமைந்திருக்கும் விதத்தில் மட்டும் மிகச் சிறிய வேறுபாட்டைக் கொண்டிருக்கும் இம்மரங்கள் இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை. இரண்டுமே இயல்மரங்களுக்கான அச்சுறுத்தல்தான்

சென்னா ஸ்பெக்டாபிலிஸ்  வயநாட்டுக்கு 1986-ல் கேரள வனத்துறையால் பிற்பாடு வருந்தப்போகிறோம் என்பதை அறியாமல் நிழல் மரங்களாக  அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் விதைகள் தருவிக்கப்பட்டு, முளைத்த நாற்றுக்கள் வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலும், அருகிலிருந்த  வனச்சரகங்களின் சாலையோரங்களிலும் நடப்பட்டன.

அப்போது கேரள வனத்துறையினருக்கு தெரிந்திருக்கவில்லை அவர்கள் வளர்த்திக்கொண்டிருந்தது அமெரிக்காவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு மரத்தைத்தான் என்று.  அப்போதே அது ஆசியா, ஆப்பிரிகா, ஆஸ்திரேலியாவில் ஆக்ரமிப்பு மரமாக அறியப்பட்டிருந்தது.

கேரள வனத்துறை இதன் ஆக்கிரமிப்பு ஆபத்தை உணர்ந்தபோது, ஆக்ரமிப்புத் தாவரங்கள் அதற்குள் என்னவெல்லாம் செய்திருக்குமோ அதை அந்த மரம் செய்திருந்தது.

அறிமுகமாகிய 25 வருடங்கள் கழித்து, 2011ல் பல்கிப்பெருகியிருந்த இந்தச் சென்னா மரம்  கேரளக்காடுகளின் ஆக்கிரமிப்பு மரமாக அறியப்பட்டது.

கர்நாடகமும் 2000-ங்களில் லண்டானா ஆக்ரமிப்பு புதர்களைக் கட்டுப்படுத்தும் என எண்ணி பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோளே தேசியப்பூங்காக்களில் சென்னா மரங்களை அறிமுகப்படுத்தினார்கள்.

2020-ல்  முதுமலைப் பகுதிகளில் சென்னா அடர்த்தியாக வளர்ந்து இயல் மரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பது கண்டறியப்பட்டது.

இப்போது சென்னாவின் ஆக்ரமிப்பு கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் மிகப்பெரிய  சிக்கலாகி இருக்கிறது. இவற்றைத்தவிர அஸ்ஸாமில் மட்டும் ஒரு சில இடங்களில் இதன் ஆக்கிரமிப்பு கண்டறியபட்டிருக்கிறது

2012-லிருந்து வயநாடு பகுதியில் இதன் ஆக்ரமிப்பை ஆய்வு செய்து வரும் திரு வினயன்  “344.44 km², பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்தில் 2013-14-ல்  16 km² –ல் பரவியிருந்த  சென்னா, 2019-ல்  89 km² பரப்பளவை ஆக்கிரமித்திருந்தது. தற்போது இதன் ஆக்கிரமிப்பு இந்தச் சரணாலயத்தின் 35% பரப்பளவில் சுமார் 123.86 km-ல் பெருகியிருக்கிறது “என்கிறார். இதன் பரவிப்பெருகும் வேகம் அச்சுறுத்துகிறது.

வயநாடு சரணாலயத்தில், மலர்ந்து அழிந்த மூங்கில்களின் இடத்திலெல்லாம்   மீண்டும் அவை வளர்வதற்குள் சென்னா பரவி மூங்கில்களின் வாழிடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறது.

காடுகளிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் விதைகள் பரவின. இந்த மரங்களின் மஞ்சள் நிற மலர்களுக்காகவும் நிழலுக்காகவும் இவற்றின் ஆபத்து தெரியாமல் பல இடங்களில் இவை அலங்கார மரங்களாக வளர்க்கப்பட்டன.

வினயனின் ஆய்வுக்குழு சென்னாவின் பரவலில் யானைகளின் பங்கு மிக அதிகமென்கிறது. ஒரு யானைச்சாணக்குவியலில் மட்டும் சுமர் 2000 சென்னா விதைகள் இருப்பதை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

ஆக்கிரமிப்பு மரங்களின் இயல்புகளான, விரைந்து வளர்வது, குறுகிய வாழ்க்கைச் சுழற்சி, ஏராளமான விதைகளை உருவாக்குவது, வெட்டிய அடித்தண்டிலிருந்தும் முளைத்து வளர்வது, வேரிலிருந்தும் தண்டிலிருந்தும் இனப்பெருக்கம் செய்வது ஆகிய இயல்புகளை இந்த இரு மரங்களுமே கொண்டிருக்கின்றன.

கர்நாடகத்திலும்  கேரளாவிலும் இந்தச் சென்னா மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டும், ரசாயனங்களை உபயோகித்தும் மரப்பட்டையை உரித்து உலரச்செய்தும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இன்னும் இதன் ஆக்கிரமிப்பு குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. நான் அந்தியூர் வனப்பகுதிக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்தபோது அதிகம் தென்பட்டிருக்காத சீமைக்கொன்றை இப்போது மலைப்பகுதி முழுக்க எங்கெங்கிலும் இருக்கிறது

வெள்ளிமலை ஆசிரியர் நவநீதன் இந்த மரங்களின் ஆக்கிரமிப்பை குறித்து சொன்னதும் அவருடன் சீமைக்கொன்றையின் ஆக்கிரமிப்பை அந்த மலைப்பகுதியில் நேரில் ஆய்வுசெய்தேன்.சென்னை கோவை   உடுமலை என நான் செல்லும் நகரங்களில் எல்லாம் இவை பல்கிப்பெருகிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.

கோனொசார்பஸ்,சென்னா போன்ற விரைந்து வளரும் இயல்புகொண்ட அயல் மரங்களை உறுதியாக நாம் அறிமுகம் செய்வதும் வளர்த்துவதும் தடை செய்யப்படவேண்டும்

கத்தாரில் இருக்கும் விஷ்ணுபுரம் குழும நண்பர் பழனி அழைத்திருந்தார். துபாய், கத்தார் முழுக்க நர்சரிகளில் ரெய்டு நடத்தி இந்த கோனோகார்பஸ் மரங்கள் முழுக்க அழிக்கப்பட்டதை தெரிவித்தார்

அப்படியான ஒரு தீவிரக்கட்டுப்பாட்டு முன்னெடுப்பு இந்தச் சீமைக்கொன்றை மற்றும் கோனோகார்பஸ் மரங்களுக்கு இங்கும் உடனடித் தேவையாக இருக்கிறது.

சீமைக்கொன்றையின் விதைகளிலும் இலைகளிலும் இருக்கும் நச்சுpபொருட்களால் பறவைகள்,  பன்றிகளுக்கு  ஆரோக்கியக்கேடுகளும் உண்டாகிறது.

நிழல் தருகிறது கரிக்கட்டை கிடைக்கிறது என்பதுதான் சீமைக்கொன்றையின் பயன்கள். இம்மரத்தை அறுக்கையில் உருவாகும் மரத்தூள் தீவிரமான தொண்டை கண் மற்றும் மூக்கு அழற்சியை உருவாக்குகிறது.

  சீமைக்கொன்றை ஆஸ்திரேலியாவிலும் ஆக்கிரமிப்பு மரமாகியிருக்கிறது.

இயல் மரங்கள் அழிந்துகொண்டிருப்பது அவற்றைச் சார்ந்துவாழும் , அவற்றில் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு பூச்சிஇனங்களையும் அழித்துவிடுகிறது.

குஜாராத் முழுக்கவும், வளைகுடா நாடுகளிலும் கோனோகார்பஸ் அழிக்கப்பட்டுவிட்டது ஆனால் கோவையில் பங்களூரில் பழனியில் நூற்றுக்கணக்கில் அவை வளர்க்கப்படுகின்றன என்றால் அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரவல் குறித்த இந்திய வனத்துறையின் செயல்பாடுகள் என்ன என்னும் கேள்வி எழுகிறது   

சீமைக்கொன்றையின் ஆக்கிரமிப்பு அபாயம் குறித்த ஏராளம் ஆய்வறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன.

டெக்கன் ஹெரால்ட் 2023 டிசம்பரில் சீமைக்கொன்றை மற்றும் பிற அயல் ஆக்கிரமிப்பு மரங்களால் இந்தியப்புல்வெளிகள் அழிந்துகொண்டு வருவதை குறித்த கட்டுரையை வெளியிட்டிருக்கிறது

இவற்றோடு மூடுதிரையைப்போலக்காடுகளுக்குள்சென்றுவிட்டிருக்கும்ஆக்ரமிப்புஏறுகொடிகளில் Mikania micrantha மிகமுக்கியமானது.மரங்களிலும்மின்கம்பங்களிலும் ஏறிக் காடுகளுக்குள் சென்றுமரங்களின் உச்சிவரை பரவியிருக்கும் இந்தக்கொடி மிகமோசமான ஆக்ரமிப்புக் களைச்செடியாக இருக்கிறதுஆங்கிலத்தில்இக்கொடியின்பெயர் mile-a-minute vine. 

குட்ஸூ என்னும் ஆக்ரமிப்பு ஏறுகொடி தென்கிழக்காசியா முழுக்க பெரும் சூழல் அச்சுறுத்தலைஉண்டாக்கிஇருக்கிறதுகுட்ஸுவைகுறித்தும் ஒருகட்டுரைஎழுதியிருக்கிறேன்https://logamadevi.in/3191

கரைமேலிருத்தலும் கடலில் பிழைத்தலும்!

ஆயுத பூஜை விடுமுறையில் சென்னை சென்றிருந்தேன். முன்பெல்லாம் வெளியூர்ப் பிரயாணங்கள் அதுவும் தனியே பிரயாணம் செய்வது என்பது அரிதிலும் அரிதாக இருந்தது. சென்றதேயில்லை எனலாம். கோவிட் பெருந்தொற்றின் ஒரு சில நன்மைகளில் ஒன்று என் இந்த ஆளுமை மாற்றம். முட்டுச்சந்துகள் திகைக்கவைத்தாலும் திரும்பிப்பார்க்க வைத்துவிடுகின்றன.

பல காலத்துக்குப்பிறகு கழுத்திலிருந்த கைகளை அகற்றிவிட்டு சுதந்திரமாக மூச்சுவிடுகிறேன். எனவே முன்பு கனவாக இருந்த சென்னை உள்ளிட்ட பலபிரயாணங்கள் இப்போது சர்வசாதாரணமாகி விட்டிருக்கின்றன. 

மகன்களில் ஒருவனாகி விட்டிருக்கிற தீபக்கின் பெற்றோர்களும் சென்னை வரவிருந்ததால்  தோழி வெண்ணிலாவின் வீட்டில் பெரிய கூடுகையொன்று ஏற்பாடாகி இருந்தது. ரயிலடிக்கே இரண்டு கார்களில் வந்து  என்னை அழைத்துக்கொண்டார்கள். மறு நாளிலிருந்தே வந்தவாசியில் வெண்ணிலா வீடு, தோட்டம், அங்கொரு நண்பரின் பண்ணைவீட்டில் தாமசம் என்று உற்சாகமாகப் பயணித்தோம். 

2ம் நாள் கானாத்தூரில் இருந்த திரு ராஜேந்திரன் அவர்களுக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் தங்கல் என்று ஏற்பாடாகி இருந்தது.

கானாத்தூரை அடைகையில் பின் மாலையாகி விட்டிருந்தது. கடைவீதிகளில் நம் ஊர் பஜ்ஜிபோண்டாக்கடைகளைப் போலச்  செக்கச்செவேலென்று மீன் வறுவல்,  பெரிய பெரிய டேக்ஸாக்களில்  எண்ணெய் மிதக்கக் கொதிக்கும்  மீன்குழம்பும் அருகில் அலுமினிய இட்லிக்குண்டான்களில் ஆவிபறக்கும் இட்லிகளும்  தள்ளுவண்டிக்கடைகளில் விற்கப்பட்டது.

அந்தப்பண்ணை வீட்டை அடைகையில் கையெட்டும் தூரத்தில் இருந்த கடல் பெரும் திகைப்பை உண்டாக்கியது.  வீட்டின் முகப்பிலிருந்து பார்க்கையில் மாபெரும் கடல் தொட்டுவிடலாம் என்னும் அண்மையில் இருந்தது பெரும் அதிசயமாக இருந்தது.  அழகிய பெரும் விடுதி அது. அன்று வேறு எந்த விருந்தினர்களும் இல்லாததால் எல்லா அறைகளிலும் நாங்கள் விருப்பம்போலத் தங்கிக்கொண்டோம். 

மொட்டைமாடியிலிருந்து அருகிலிருந்த பல கரையோர விடுதிகளையும் வெள்ளியாய் மினுங்கும் விளிம்புகளுடன் அலைகள்  ஓயாமல் கரைமோதிக் கொண்டிருப்பதையும் நிலவொளியில் பார்த்துக்கொண்டிருந்தோம். 

அடுத்திருந்த மாபெரும் கடற்கரை வீடு  ஒரு பெரும் அரசியல்வாதியின், அரசியல்வாதி மகனுடையது. பகல்போல வெளிச்சம் அளித்த பலநூறு விளக்குகளும், காவலர்களுமாகத் திரைப்படக்காட்சியைப் போலிருந்தது அதைப்பார்க்கையில்.

 இரவு நெடுநேரம் வரை விடுதி முகப்பிலிருந்த நீள் செவ்வக நீச்சல்குளத்தில் விளையாடிக் களைத்து இரவுணவுண்டு உறங்கச் சென்றோம். அடுத்தநாள் காலையில் கதிரெழுகையைக்காண கடற்கரைக்குச் சென்றுவிட்டோம். ஆனால் கருமுகில்கள் வானை மூடி இருந்ததால் கதிரெழுகையை காணமுடியவில்லை. சுத்தமான கடற்கரையாக  குப்பை இல்லாமலிருந்தது மகிழ்வித்தது என்றாலும் ஒன்றிரண்டு சர்காஸம்  கடற்பாசிகளைத்தவிர ஏதுமில்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமளித்தது.  நாய்கள் பல அங்கே உலாவிக்கொண்டிருந்தன. பிரதேசத்துக்குப்புதிதாக இருந்த  எங்களைக்கவனமாக வேவு பார்த்துக் கொண்டிருந்தன அவற்றில் பெரிய நாய்கள். இளஞ்சிவப்புக்கிண்ணங்களாக பீச் மார்னிங் குளோரி எனப்படும் அடும்புக்கொடிகளின் மலர்கள் மணலெங்கும் தெரிந்தன.

தூரத்தில் இரவே கடலுக்குச்சென்ற படகுகள் நிழலுருவாகத்தெரிந்தன. ஒரு சிலவற்றில் தெரிந்த விளக்குகளும் மெல்ல அணைந்தன.  கடலில் சிப்பிகளை சங்குகளைச் சேகரித்தபடி சற்றுத்தொலைவு வரை நடந்தோம். ஒரே ஒரு நட்சத்திர மீனின் உடல் கிடைத்தது.

பெண்கள் உள்ளிட்ட பலர் கரையின் உயரமான பகுதிகளில் கூட்டமாகக் காத்திருப்பதை பிறகுதான் கவனித்தேன்.

படகுகள் கரைதிரும்பக் காத்திருக்கிறார்கள் என்பதை யூகித்தேன்.கடற்கரை வாழ்வென்பதன் அறிமுகமே எனக்கதுவரை இல்லை எனவே ஆர்வமாகப் படகுகளுக்காக நானும் காத்திருந்தேன். மணற்பரப்பெங்கும் துளித்துளியாய் குஞ்சு நண்டுகள் அலைந்தன.

முதலில் ஒரு நடுத்தர நீளமுள்ள துடுப்பிடும் படகு வந்தது. இருவர் மட்டும் இருந்த அந்தப் படகின் மத்தியில் இரண்டு தலையணை அளவிற்கான சிறு நீல வலைப்பொதி இருந்தது. வேகமாக வந்து கரையின் பாதியில் மணலில் செருகி நிறுத்தப்பட்டது படகு. தொடர்ந்து அதே அளவிலும் மேலும் சிறியபடகுகளும் வந்தன.பெரும்பாலும் ஒருவர் அல்லது  இருவரே இருந்தார்கள். ஒரு சில படகுகளை, படகிலிருந்தவர்கள் வீசிய கயிற்றைப் பிடித்திழுத்து கரையில் நிறுத்த நாங்களும் உற்சாகமாக உதவினோம். 

சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு பின்பகுதியில்  கனத்த சங்கிலியில்  பெரிய கொக்கி இணைக்கப்பட்ட ஒரு ட்ராக்டர் வந்து எல்லாப்படகுகளையும் கரையின் ஓரமாக ஒழுங்காக இழுத்து நிறுத்தியது,  அதற்குக் கட்டணமாக ஒரு படகுக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டது.அந்தந்த நிலப்பரப்புகளில், அவற்றிற்கு ஏற்பப் பிழைக்கும் வழிகளும் உருவாகின்றன.  நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகின் பெயர் தருண் என்றிருந்தது.

ஒரு மீன்பிடி படகின் அருகில் சென்று அவர் படகிலிருந்த பொன்வண்ணம் பூசியதுபோல்  இரண்டு உள்ளங்கை அகலமாயிருந்த மஞ்சப்பாறை மீன்களில்.சிலவற்றை கேட்டுவாங்கி கைகளில் வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்து யார், எந்த ஊர் என்றேல்லாம் விசாரித்துக் கொண்டார். 

அவர் வரும் வழியிலேயே வலையைப் பிரித்து விட்டிருந்தார். 4 கிலோ அளவுக்கு மஞ்சப்பாறையும் 3 கிலோ வஞ்சிரமீன்களுமே கிடைத்திருந்தது.  சந்தையில் ஐந்தாயிரம் கிடைக்கலாம் அன்று என்றார் அவர். இரவு மூன்று மணிக்குப் போய்விட்டு அதிகாலை திரும்பும் படகுகள் அவையெல்லாம் என்பதையும் அவரிடமிருந்து அறிந்துகொண்டேன்.  அன்று என்ன, எத்தனை, எங்கு, எப்படி கிடைக்கும் என்ற எந்த அறிதலுமே இல்லாமல் அன்றாடம் கடலுக்குள் மனிதர்களை வலைவிரித்திழுக்கும் கடலைக்காட்டிலும் பெரியதோர் சூதுக்களம் இருக்கிறதா என்ன?

அதிகாலை மூன்று  மணிக்கு நாளைத் துவங்குவதென்னும் ஒரு வாழ்க்கையை, அதுவும் கனத்த இருட்டில், எல்லையின்றி பரந்துவிரிந்து, பலத்த அலைகள் எழும்பிக்கொண்டிருக்கும், பெரிதாக ஓசையிடும் கடலுக்குள் செல்லும் வாழ்க்கையப் பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  

மற்றொரு சிறு படகில் தன்னந்தனியே ஒருவர் கரை திரும்பினார். அவரது படகை அனைவருமாக இழுத்துக் கரையேற்றினோம்.  படகில் வலைமூட்டை கொஞ்சம் பெரிதாக இருந்தது. அவர் வலையைப்பிரித்துக் கரையில் கொட்டினார். துள்ளத்துடிக்க மத்தி, அயிலை, செந்நண்டுகளும் மேலும் சிறு பூச்சிகளும் விழுந்தன.  கூடவே பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைய இருந்தன. அவரருகிலேயே நின்றுகொண்டேன். அவரிடமிருந்துதான் அன்று கடலில்  என்ன மீன் எந்தப்பகுதியில் எந்நேரம் கிடைக்கும் எனத் தெரிந்து மீனின் அளவுக்கேற்ப வலைகள் எடுத்துச்செல்லப்படும் என்பதைத் தெரிந்துகொண்டேன். 

அதுவரை ஒரே மீன்வலையில் கிடைக்கும் எல்லா மீன்களையும் பிடித்து வருவார்கள் என்றே நம்பி இருந்தேன். அன்று அவர் எடுத்துச் சென்றது மத்தி போன்ற சிறு மீன்கள் மாட்டும் வலை. அன்று மீன்கள் அவ்வளவாகக் கிடைக்காத நாள் என்றார்.

 மீன்குவியலிலிருந்து சிறு தேள் போன்ற ஒரு பூச்சியை எடுத்துத் தூரப்போட்டார், மணற் பரப்பில்  சிறிதுநேரம் துடித்த பின் அது அடங்கியது. சாவகாசமாக மணலில் அமர்ந்து வலையில் சிக்கிக்கொண்டு வலையை இறுக்க கவ்விக்கொண்டிருந்த நண்டுகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கினார்.  மீன்கள் சமாதானமாக வலைக்குள் மாட்டியதும் உயிரைவிடும் என்றும் நண்டுகள் தான் வலையைச் சேதப்படுத்திச் செலவு உண்டாக்கும் என்றவர், உயிர்பயத்திலோ என்னவோ வலையை மிக இறுக்கப்பிடித்தபடி உயிருடன் இருந்த குஞ்சு நண்டொன்றின் உடலை இரண்டாகப்பிய்த்து வலையிலிருந்து வெளியே எடுத்தார். அதன் உடல் துண்டுகள் தனித்தனியே மணலில் கிடந்து துடித்து, கால்கள் காற்றைப்பற்றிக்கொள்ள எத்தனித்தன. அவசரமாகக் கண்களை விலக்கிக்கொண்டேன். 

 நல்ல பதமான கத்திகொண்டு செதுக்கியது போல ஒரு மீன் சீவல்  குவியலுக்குள் கிடந்தது அது என்ன என்று கேட்டேன்.அது நாக்கு மீன் என்றார். ஆம், நீளமான நாக்கைப்போலவே இருந்த அதன் உடலின் மத்தியில் நடுமுள் அப்படியே  கண்ணாடி போல வெளியே தெரிந்தது.  விசித்திரமாக சப்பைத் தலையின் நடுவில் இரு கருப்புப்பொட்டுக்களாகக் கண்கள் இருந்தன.

கையில் எடுத்துப்பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் அந்தமீன் ஒருமுறை துடித்ததும் அலறிக்கொண்டு  கீழே போட்டேன்.

 அவர் என்னைப் புன்னகையுடன் பார்த்து “இன்னும் சாவலைம்மா நேரமாகும்“ என்றார். அதன் பிறகு மீன்களை கையில் எடுக்கவே இல்லை. நெஞ்சு பதறியது. 

 இறுதியாக 8 பேருடன் ஒரு  இயந்திரப்படகு வந்தது. விசையுடன் வந்து அதுவே கரையேறி அமைதியாக நின்றது. வாஷிங் மெஷின் அளவில் ஒரு குளிர்ப்பெட்டி இருந்தது அதில், அவர்கள் முந்தின நாள்  கடலுக்குள்சென்று, அன்று காலை கரைக்குத் திரும்புகிறார்கள். அந்தப்படகைச்சுற்றி உடனே சிறுகூட்டம் கூடி, பல அளவுகளில் மீன்கள் வெளியே எடுக்கப்பட்டு சுடச்சுட விலைபேசப்பட்டது. 

படகிலிருந்து இறங்கியவர்களில் இளைஞனாயிருந்தவன்  பால்காரர்களின் அலுமினியத் தூக்குப்போசி போலிருந்த ஒன்றை  எடுத்து,  கழுத்துப்பகுதியில் ஆழப்புதைந்திருந்த அதன் மூடியை கழற்றினான். நான் அதற்குள் குடிநீர் இருக்குமென யூகித்தேன் ஆனால் உள்ளிருந்த பல செல்போன்களில் அவனுடயதைத்தனியே எடுத்து உயிர்ப்பித்தான். நீர் புகாமலிருக்க செய்யப்பட்ட ஏற்பாடு போலிருக்கிறது. 

மீன்கள் வாங்கப்பட்டு கரைமேட்டில் இருந்த  மீன் சந்தை என்னும் ஒரு குறுகிய சாலையின் இருபக்கங்களிலும் சாக்குகளில் பரப்பி வைக்கப்பட்டு விற்பனையாகின.  மேகம் விலகி, கதிரெழுந்து காலை  சூடாகத்தொடங்கி இருந்தது. 

என்ன ஒரு வாழ்க்கை இவர்களுடையது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே அறைக்குத்திரும்பினேன். மாடிப்படிகள், அறையின் தரையெங்கும் மணல்தடங்கள்  தொடர்ந்து வந்தன. 

என்னிடம் ஒரு பட்டியல் இருக்கிறது அடுத்த பிறவியில் என்னவாக விரும்புகிறாய் என்று ஒரு வேளை கேட்கப்படுகையில் அப்போது அவசரமாக யோசித்து எதோ ஒன்றை சொல்லி விடக்கூடதென்று முன்பே யோசித்து பிடித்தமானவற்றை எழுதி வைத்திருக்கிறேன்.  

30க்கும் மேற்பட்ட விருப்பச்சாத்தியங்கள் இருக்கும் அதில் முதலிடத்தில் இருப்பது ஒரு  மலை உச்சியில் தனித்திருந்து  ஊதாவான ஊதாவாய் பூத்துக்குலுங்கும் ஒரு  ஜகரண்டா மரம், தொடர்ந்து கல்நகைகளை அணிந்துகொண்டு, விதையோ தேனோ சேகரிக்கப்போயிருக்கும் கணவனுக்காக குடிசையில் காத்துக்கொண்டிருகும் பழங்குடியினப்பெண் இருக்கிறாள், சமீபத்தில் தேங்காய் எண்ணெய் ஆட்டப்போனபோது, பழைய செக்கொன்றில் பொறுமையாக ஒருவருகொருவர் உதவிக்கொண்டு எண்ணெய் எடுத்துக்கொடுத்த முதிய தம்பதியினரில் ஒருவராக வேண்டும் என்பதை பட்டியலில் இணைத்துக்கொண்டிருந்தேன், 

ஒருமுறை ஆனைகட்டி சென்றபோது மலைப்பாதையில் இருந்த சாந்தி மெஸ்ஸில் சாப்பிட்டேன். பழங்காலத்து பளபளக்கும் பெஞ்சுகளில் அமர்ந்து விறகடுப்பில் புளித்த மாவு வேகும் மணத்தை அனுபவித்துக்கொண்டு உள்ளிருந்து கேட்ட `என் வானிலே` போன்ற அருமையான பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கையில் அடுத்த ஜென்மத்தில். அப்படியொரு மலைப்பாதைக்கடையில் இருந்து எப்போதோ வாகனங்களில் வருபவர்களுக்குத் தோசை சுட்டுக்கொடுத்து வாழவேண்டுமென்னும் விருப்பதை பட்டியலில் இணைத்தேன். 

எத்தனை முயன்றும் தனந்தனியே கடலுக்குள் துடுப்பிட்டுச்செல்லும் மீனவனாக என்னை கற்பனை செய்துகொள்ளவே முடியவில்லை. எனவே இப்போது  இறுதியாக பட்டியலில் இணைத்தது ஒரு மீனவப்பெண் வாழ்க்கையை. கருக்கிருட்டில் கடலுக்கு சென்று திரும்பும் மீனவனுக்காக, கரையில் விளையாடும் பிள்ளைகளையும்,  வெயிலில் காயும் மீன்களையும் பார்த்துக்கொண்டு, சந்தையில் எனக்கான இடத்துக்காகச் சண்டைபிடிக்கும்,  கழுத்தில் சங்குமாலையணிந்து வலையின் சிடுக்கு நீக்கிக்கொண்டிருக்கும்,  உடலெங்கும் மீன்வாடையடிக்கும் கரையில் காத்திருக்கும், ஒருத்தியாக.

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑