லோகமாதேவியின் பதிவுகள்

Month: October 2021

கனவும் நினைவும்

சிறு வயதிலிருந்தே அல்லது நினைவு தெரியத்துவங்கி, கள்ளமற்ற சிறுமித்தனம் அகன்று குடும்ப நிகழ்வுகள், அப்பா என்பவரின் வன்முறைகளை எல்லாம் கவனித்து, அது உண்டாக்கிய  அச்ச உணர்வில் மனம் நிரம்பியிருந்த காலத்திலிருந்தே கனவுகள்  வருவதும் அவை அப்படியே நினைவில் இருப்பதும், மனதில் மறைந்திருக்கும் ஏராளமானவை கனவுகளாக வருகையில்,  ஒரு சில சமயங்களில் ஆழ்ந்த உறக்கத்தில்  ஆழ்மனம் விழித்துக்கொண்டு பூதாகரமாக எதிரில் அப்போது நிற்பவற்றை கண்டு அலறி விழிப்பதும், இன்று வரையிலும் வாடிக்கையாகி விட்டிருக்கிறது

 இதன் பொருட்டே வெளியாட்கள் யாருடனும் இரவு தங்குவதில்லை.  இளமையில் இருந்து  என்னை அச்சுறுத்தும் ஒரு தொடர் கனவென்றால் பொள்ளாச்சி கடைவீதிகளில் நான் அதிகம் புழங்கி இருக்கும் குறிப்பிட்ட சில தெருக்களில் மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்டு இருக்கும் ஒரு மாபெரும் கையொன்று குருதி வழிய என்னை துரத்திக் கொண்டு வருவதுதான். எத்தனையோ இரவுகளின் உறக்கத்தை,  தலை தெறிக்க கண்ணீருடன்  அந்த கைக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்கும்  அதே கனவு  சிதைத்திருக்கிறது.

துரத்திக்கொண்டிருந்த அந்த கையை பல வருடங்களுக்கு பின்னர் சரண் தருணின் பிஞ்சுக் கரங்கள்  விரட்டி விட்டிருக்கின்றன,

 எல்லாக் கனவுகளும் விழித்தெழுந்த பின்னரும் மறக்காமலிருப்பதால் கனவிலிருந்து முழுமையாக விலகாமலே, பல வருட பயிற்சியால் உள்ளம் விழித்து உடலை அன்றைய தினத்துக்கு தயார் செய்து விடுகையில்,, கனவுக்கும் நனவுக்குமான இடைப்பட்ட ஒரு வெளியில் சில கணங்கள் தடுமாறுவேன்.

கனவுகளில் நிறங்கள் தெரியாது அனைத்து கனவுகளும் கருப்பு வெள்ளைதான் என   வாசித்திருக்கிறேன் ஆனால் என் கனவுகள் எல்லாம் வண்ணமயமான வைகளே. செக்கச்சிவந்த குருதியும் பல வண்ண மலர்களும், பல நிறங்களில் உடையணிந்திருப்பவர்களும் நிறைந்திருக்கும் பிறிதொரு இணை உலகில் தான் நான் கனவுகளில் திகழ்கிறேன் எல்லா கனவுகளும் எனக்கு தரும் ஆச்சரியத்தை விட,கனவுகள் நிகழும் அந்த  முற்றிலும் புதிய, நான் இதுவரை அறிந்திருக்காத இடங்கள், வீடுகள், அறைகள், மரச்சாமன்கள் கழிப்பறைகள் ஆகியவையே எனக்கு ஆச்சரியத்தையும் திகைப்பையும் அளிப்பவை.கழிப்பறைகள், மிக அசுத்தமான கழிப்பறைகள் அடிக்கடி கனவுகளில் வருகிறது

ஒரு மங்கிய ஒளி நிறைந்திருக்கும் மாலைப்பொழுதில் அத்தனை துலங்கித்தெரியாத காட்சியில் கோவில் இருக்கும் ஒரு சந்தடி மிக்க கடைத் தெருவில் சைக்கிளில் கனகாம்பர சரம் விற்றுச்செல்லும் ஒருவர் அங்கே ஸ்தூல வடிவில் நிற்கும் என்னிடம் ஒரு கனகாம்பர மலர்ச்சரத்தை  கொடுப்பதை நானே மிக உயரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கனவு பல முறை வந்திருக்கிறது. அதைப்போல் ஒரு கோவில் தெருவை எங்கும் எப்போதும் நான் கண்டதே இல்லை.

 கனவுகளில் இறந்து போகும் உறவினர்கள் சிலர் கனவுக்கு அடுத்த நாட்களில் இறந்து போயிருக்கிறார்கள். இறந்த பலர் பின்னர் கனவுகளில் தொடர்ச்சியாக வந்து கொண்டும் இருக்கிறார்கள். 

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவர்கள் என் கனவுகளின் இத்தனை வகைகளை கேட்டால்  திகைத்துப்போய் விடுவார்கள் குடும்ப உறுப்பினர்களில் மகன்களும் அடிக்கடி  வருவதுண்டு

எனக்கு பெரும் அச்சத்தை  கொடுக்கும்  ஆழமான நீர் நிலைகள், கொந்தளிக்கும் கடல், வெள்ளம் பெருக்கெடுத்தோடும் ஆறுகளும் அவற்றின் நடுவே திசையறியாது செய்வதறியாது நின்றிருக்கும் நானும் பல கனவுகளில் வருவதுண்டு.

மிக உயரமான மலைச்சரிவுகளில் விளிம்புகளை பற்றிக் கொண்டபடி நடக்கும் சாகச ஆபத்து பயணங்களும்    கனவுகளில்உண்டு

பல தெய்வ சன்னதிகள் வருவதுண்டு. சில அம்மன் கோவில்கள் அடிக்கடி வரும் எனக்கு தெரிந்த கோவில்கள் என்றால் அங்கு   கனவிற்கு பிறகு நேரில் செல்வதுமுண்டு 

பல கோவில்கள் நான் அறிந்திருக்காதவை. சமீபத்தில்  வந்த கனவொன்றில் நானும் தருணும் பேருந்தில் பயணிக்கிறோம், வேட்டக்காரன்புதூரில் என் தாத்தாவின் வீட்டை பேருந்து கடைக்கையில் ‘’ தருண், தருண் இதுதான் எங்க வீடு’’ என்று உற்சாகமாக கூச்சலிடுகிறேன். தருண் மண்  நிறத்தில் முழுக்கை சட்டை போட்டுக்கொண்டு என் அருகில் அமர்ந்திருக்கிறான் அடுத்த காட்சி (ஆம் காட்சிதான்) நாங்கள் இருவரும் ஒரு பழங்காலத்து சிதிலமடைந்த தாழ்வான ஒட்டு வீட்டின் முன்பாக நிற்கிறோம்.

 அந்த வீட்டுக்கு முன்பெப்போதோ நான் வந்திருப்பதாகவும் அந்த இடம் என்னில் ஏதோ அதிர்வுகளை உண்டாக்குவதாகவும் தருணிடம் நான் சொல்லிக் கொண்டிருக்கையில் கதவு திறக்கிறது. அது ஒரு வீடல்ல ஒரு கோவில் , உள்ளே வெகு தூரத்தில் கரிய சிலையாக அம்மனும் அவளுக்கு பூசை செய்யும் ஒரு பெண்ணும் மங்கலாக தெரிகிறார்கள்

  காற்று அதிகம் இல்லாத இருட்டான அக்கருவறை எதிரே விபூதி சிதறிக்கிடக்கும் தரையும் கம்பிகளும் இருக்கும் இடத்தில் நான் நிற்கிறேன் தருணை திரும்பி பார்க்கையில் அவன் மேல்சட்டை இல்லாமல் இருக்கிறான்.

.எனக்கு முன்பாக இருபெண்கள் அங்கு வழிபட வந்திருக்கிறார்கள் கற்பூர ஆரத்தி தட்டை கொண்டு வுந்தால் அதில் வைக்க பணம் ஏதும் கொண்டு வரவில்லை என்று பதறி ’’தருண் உன்கிட்டே பணம் இருக்கா’’ என்று கேட்கிறேன் அவனும் பர்ஸ் கொண்டு வரவில்லை என்கிறான்

இரு பெண்களில் பின் கொசுவம் வைத்த புடவை அணிந்த ஒருத்தி மட்டும் குனிந்து நெற்றியில் விபூதியிட்டு கொண்டே என்னை கடந்து வெளியேறுகிறாள்  

நான் அங்கிருந்த விபூதி கொட்டப்பட்டு கிடந்த உண்டியலின் மீது வைத்திருந்த உலர்ந்த மருகு கட்டொன்றிலிருந்து கொஞ்சம் பிய்த்து எடுத்து என் தலை பின்னலில்,வைத்துக்கொள்கிறேன்

இந்த கனவில் வெகு தெளிவாக தெரிந்தது கோவில் நுழைவாயிலில் கதவின் நிலவுக்கு வெகு அருகே மேல்பகுதி சுவற்றில் செண்பக படித்துறை அம்மன் கோவில் என்று எழுதியிருந்த வாசகங்கள் தான்.

கங்காபுரம் வாசித்த அன்று ஒரு பெரும் வணிகவளாகம் போல, அல்லது அரண்மனை போலிருக்கும் ஓரிடத்தின் அகன்ற பெரும் படிக்கட்டுகளில் அமர்ந்து யாரிடமோ பேசிக்கொண்டிருகையில் அவ்வழியே வரும் ஒரு காரில் இருந்து செல்வச் செழிப்புள்ள பெரியகுடும்பத்தை சேர்ந்தவள் என்று  தோற்றத்திலேயே தெரியும்  இளம்பெண்ணொருத்தி வுந்து காரிலிருந்து இறங்கி ’’ஓசை எழுப்ப வேண்டாம் சித்தி வந்திருக்கிறார்கள்’’ என்றாள்.

 நான்அந்த கட்டிடத்துக்கு  உள்ளே செல்கையில் தூரத்தில் ஒரு திண்ணையில் கேரள முண்டைபோல் ஒரு தந்த நிற புடவையில் ஒரு மூதாட்டி அல்லது பேரரசி அமர்ந்திருக்கிறார்கள் ஒரு காலை மடித்தும் மற்றோரு காலை தொங்கவிட்டும். அவரது வெள்ளிநிற கூந்தல் அலையலையாக படிந்திருக்கிறது. சிவப்பில் குங்குமப்பொட்டு பெரிய வட்டமாக நெற்றியில்.

 என்னை நிமிர்ந்து பார்த்து ’வா’ என்று சைகை செய்கிறார்கள் கைகளால். அருகில் சென்று காலடியில் அமர்கிறேன் அவரது சுருக்கங்கள் நிறைந்த தூய பாதங்களையும் ஒரு விரலில் கம்பி போல அணிந்திருக்கும் மெட்டியையும் பார்க்கிறேன் அவரது மடியில் தலைவைத்து பொங்கிப் பொங்கி அழுது கொண்டிருந்தேன் நெடுநேரம்.

கனவுகளை  நடுராத்திரியில்  எழுதி குறித்துக் கொள்வதும் உண்டு இறந்துபோன ராஜமத்தை  மாமா பலமுறை வந்திருக்கிறார் சமைத்து போடச்சொல்லி, சமையலைறையில் தரையில் அமர்ந்து சாப்பிட்டார் அதுவும்  பொள்ளாச்சி பழைய வீட்டில்

அந்த வீடு. துரத்தும் அந்த  கைகளைப்போன்றே எத்தனை விலக்க முயன்றும் மனதில், நினைவில். கனவில் அப்பிக்கொண்டு போக மறுக்கிறது அங்கு நானிருந்த  காலங்களின் நினைவை எப்படியாவது நீக்க, அகற்ற, அழிக்க முயன்று கொண்டே இருக்கிறேன்

 துயர் நிறைந்த ,வலி நிறைந்த அப்பா என்பவரின் ஆணவமும் வன்முறையும் கேள்வி கேட்க ஆளில்லாததால் தலைவிரித்தாடிய காலங்களில் எந்த துணையுமில்லா சிறுமிகளான எங்களிருவருக்கும் நிகழ்ந்த வன்கொடுமைகள் அவை உண்டாக்கிய  மனச்சிதைவுகளை எல்லாம் எப்படியாவது மறக்க வேண்டும் நிராதரவான இருசிறுமிகளின் துயர்களும் வலிகளும் அவமானங்களும் பசியும் நிறைந்திருக்கும் வீடு அது

 அந்த வீட்டை நான் என் நினைவிலிருந்து அழிக்க முயன்றுகொண்டே இருக்கிறேன் ஆனால் கனவில் அடிக்கடி வருகிறது அவ்வீடு இப்போதும்  அந்த  வீட்டின் வாடகையை ஓட்டுநர் செந்தில் அப்பா என்பவருக்காக  வாங்கப்  போகையில் நான் வீட்டிலிருந்து வெகு தூரம் தள்ளி காரை நிறுத்தச்சொல்லி வீட்டு எதிர்ப்புறமாக அமர்ந்து கொள்ளுவேன் எனினும் என் அகம் அந்த வீட்டை அந்த வீட்டில் எனக்கு நிகழ்ந்தவற்றை எல்லாம் திரும்பி வெகு நெருக்கமாக பார்த்துக்கொண்டிருக்கும் அன்றைக்கெல்லாம் இரவில் அலறிக்கொண்டே தான் எழுவேன்.

சிலநாட்களுக்கு முன்னரும் கனவில் அதே வீட்டில் நானும் மகன்களும் இருக்கிறோம் சமீபத்தில் இறந்துபோன சரண் அப்பாவின் பெரியம்மா அதே கம்பீர  உடல்வாகுடன் அதே ஈரோட்டுப்பக்கம் கைம்பெண்கள் உடுத்தும் காவி புடவையும் வெள்ளை ரவிக்கையுமாக  கைகளில் சிறு துணி மூட்டையுடன் கணீர் குரலில் ’தேவி’ என்றழைத்து கொண்டு வருகிறார்

 நான் கல்லூரிக்கு புறபட்டுக்கொண்டிருக்கிறென் அவசரமாக. துறைத்தலைவரிடம் ஒரு மணி நேரம் தாமதமாக வருவதாக அலைபேசியில்  சொல்கிறேன்.  அந்த பெரியம்மா அந்த வீட்டில் இருக்கும் சிறு பால்கனி போன்ற வெளித் திண்ணையில் படுத்துக்கொள்வதாக சொல்லி ஒரு தலையணை கேட்கிறார் கொடுக்கிறேன் அப்போது நல்ல இளங்காற்று மழை மணத்துடன் வீசுகிறது. மறு நாள் லஷ்மமி சொல்லுகிறாள் பித்ருக்களுக்கு நீர்க்கடன் செய்யும் முக்கிய நாளான மாகாளய அமாவாசை அந்த முந்தின நாளென்று

. ஜெ சில முறை கனவில் வந்திருக்கிறார் ஒரு கனவில் அவருக்கு தாளமுடியாத முதுகு வலி. அருணாவும் சிலமுறை உடன் இருந்திருக்கிறார்

கல்லூரி முகப்பில் இருக்கும் ஒரு மகிழ மரத்தடியில் ஸ்டூலில் அமர்ந்திருக்கும் எனக்கு வேண்டிய, முகம் தெளிவில்லாத ஒருவர் எனக்காக காத்துக்கொண்டிருக்கும் கனவு அடிக்கடி வரும் வெள்ளைவேட்டி சட்டையில் இருக்கும் அவர் எனக்கு முன்பே வந்து என்னை கண்டதும் எழுந்து புன்னகைத்தபடி என்னை நோக்கி வருவார்.

அதே நபர் இந்த வேடசெந்தூர் வீட்டில் சிறப்பாக வீட்டிலிருப்போரால்  உபசரிக்கப்பட்டு,  இல்லாத ஒரு கதவு  வழியே வெளியே வந்த கனவும் வந்தது

அவர் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையில் வருவது வழக்கம்

நேற்றைய அல்லது இன்றைய அதிகாலை கனவு விரிவாக இருந்தது அதிகாலை வரை துண்டு துண்டாக மூன்று முறை கனவு நீண்டது.

பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி மூன்று பேர் அமரும் இருக்கையில் நடுவில் அமர்கிறேன் அடுத்த பகுதியில் எனக்கு முன்னால் என் பழைய மாணவியும் அவளது காதல் திருமணத்தில் நான் இடைபட வேண்டியிருந்த போது என்னுடன்  மிக நெருக்கமாக இருந்து பின்னர் ஒரு புள்ளியில் முற்றிலுமாக விலகிய சங்கீதா,  அவளது சிறு மகன், கணவர் ஆகியோர் அமர்ந்திருக்கிறார்கள். நான் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை என்னருகில் மூன்றாவதாக அமரும் பெண் ஒரு வெள்ளை மூட்டையை காலடியில் வைக்கிறாள் அதற்கருகில் என் வீட்டில் இருக்கும் பச்சை நிற வயர் கூடையில் என் பிரிய குட்டி லேப்டாப் வைக்கப்பட்டிருக்கிறது

அந்தப் பெண் விசித்திரமாக என்னிடம் ’’ஏன் உன் காதலனை உன்னால் கல்யாணம் செய்துகொள்ள முடியவில்லை’’ என்று விசாரணை போல் கேட்கிறாள்

வீடு திரும்பி, அது ஒரு புதிய வேறு வீடு, சாம்பவியிடம் இதை சொல்லி கொண்டிருக்கையில் லேப்டாப் பையை கொண்டு வந்தேனா இல்லையா என்று சந்தேகிக்கிறேன் சாம்பவி பதட்டமாக உள்ளே போய்,  அது பத்திரமாக இருப்பதை பார்த்து சொல்லுகிறாள்

பின்னர் மித்ரா வீட்டில் இருக்கிறேன்மிகப்புதிதான ஒரு இடமது மாடிஅறையில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒரு சு.ராவை  அல்லது மித்ரா மாமனாரை நினைவூட்டும் ஒரு வேட்டி சட்டையிலிருக்கும் முதியவரும் அவருக்கு எதிரில்  தரையில் சுவற்றில் முதுகை சாய்த்து அமர்ந்திருக்கும் நாகராஜுமாக இருக்கிறார்கள். நான் யாருடனும் பேசாமல் அங்கு தரையில் அமர்கிறேன் அந்த முதியவர் நாகராஜிடம் தனக்கு பிரியமான அந்த திண் பண்டம் எங்கே என்று கேட்கிறார் அந்த ’ப ’வில் தொடங்கும் பண்டத்தின் பெயர் எனக்கு மிக புதிதாக இருக்கிறது கனவிலும் அப்பெயர் மனதில் படியவில்லை அந்த பண்டம் வைக்கப்படும் சிறு பெட்டி என் முன்னால் இருக்கிறது அதை திறந்து பார்க்கிறேன் முந்திரி பருப்பின்  வடிவில் அதே அளவில் ஆனால்  அல்வாவின் அடர்சிவப்பில் மென்மையான, இனிப்பான  மூன்று துண்டங்கள்  இருக்கிறது அருகில் இருந்த சிறுமி தான் அதை வாங்கி வருவதாக சொல்லி ஓட்டமாக ஓடுகிறாள் .

நான் புறப்பட்டு ராஜமத்தையிடம் சொல்லிக்கொள்ள சமையலறைக்கு போகிறேன் அந்கு மித்ரா தலையில் ஷாம்பூ நுரையுடன் சமையலறையில் கண்ணீருடன் ஏதோ கடிதமொன்றை தேடிக்கொண்டிருக்கிறாள். அது மித்ரா என்பதை கேசம் ,குறைவாக  இருக்கும் அவளது தலையின் பின்புறத்தை கொண்டே  அடையாளம் காண்கிறேன்

அங்கு வேறு சிலரும் இருக்கிறார்கள் அனைவரும் எனக்கு முகம் காட்டாமல் முதுகை காண்பித்தபடி

வெளியில் இருட்டான ஒரு முற்றம் அங்கு நிற்கும் ராஜமத்தையிடம் விடை பெற்றுக் கொள்கிறேன் அந்த சிறுமியும் அருகில் இருக்கிறாள் அத்தை மித்ராவை  குறித்து என்னவோ இகழ்ச்சியாக சொல்லுகிறது 

என்னால் அங்கிருந்தே பிரதான சாலையை காண முடிகிறது நல்ல இருட்டு பேருந்துகளின் முகப்பு வெளிச்சமும், ஒலியும் சீறி சீறி சென்று கொண்டிருக்கிறது விரைந்து சாலையின் இருபுறமும் பார்த்தபடி கடக்கிறேன் சாலையின் ஒரு ஓரத்தில் பல ஆட்டோக்களும் அவற்றின் எதிரே ஆட்டோ டிரைவர்களும் நிற்பது மங்கலாக தெரிகிறது.

 நான் கடக்கையில் சாலையில் ஒரு வாகனம் கூட இல்லை எதிர்ப்புறம் சென்று நின்று கைப்பையிலிருந்து சில்லறை காசுகளை எடுக்க எத்தனிக்கையில் ஒரு ஒல்லியான   30 வயதிலிருக்கும் ஒரு பச்சை நிறபுடவைக்காரி என்னை அவசரப்படுத்தி ’’ஏறு  ஏறு’’ என்று அப்போது வந்து நிற்கும் ஒரு பேருந்தில் ஏற சொல்லிவிட்டு அவள் எனக்கு முன்பாக ஏறியும் விடுகிறாள் நான் பேருந்தின் முதற்படியில் காலை வைக்கையில் உள்ளிருந்து கண்டக்டர் ’’காந்திபுரம் காந்திபுரம்’’ என்று கூவும் சத்தம் கேட்கிறது உடனே நான் காலை பின்னால் எடுத்து விடுகிறேன் ’’நான் உக்கடமல்லவா போகனும் பொள்ளாச்சி போக’’  என்று மனதில் கனவில் நினைத்துக்கொள்கிறேன்

.

இறங்கி கைப்பையில் இருந்து  5 ரூபாய் நாணயமொன்றை கையில் எடுக்கையில் முன்பு வந்தவளை காட்டிலும் இளையவளாக  வட்டமுகம் கொண்ட இன்னுமொரு பச்சைப் புடவைக்காரி ’’இந்த பஸ்ஸில்ஏறு’’  ஏன்று கட்டளைபோல சொல்லிவிட்டு அப்போது வந்து நிற்கும் பஸ்ஸில் ஏறி விடுகிறாள் பஸ் உக்கடம் செல்லும் என்று எனக்கு எப்படியோ தோன்றி நானும் ஏறிக்கொள்கிறேன் 

அந்த பேருந்து மிக விசாலமாக உள்ளே ஒரு தடுப்புசுவருடன் இரு பகுதிகளாக பிரிந்திருக்கிறது எனக்கு முன்னே ரோஸ் கலரில் பத்திக் டிஸைன் போட்ட புடவையில் ஏறிய ஒரு பெண்ணிடம் கண்டக்டர் அந்த இன்னொரு பகுதியிலிருந்து, கிண்டலாக ’’பஸ் 2 மணிக்குதான் புறப்படும் இறங்குமா’’ என்கிறார்  அவர்கள் முன்பே பரிச்சயக்காரர்கள் போல,  அவள் சிரித்துக்கொண்டு ’’நானென்ன  சொல்லிட்டேன் இப்போ’’ என்கிறாள்

 நானும் உள்ளே வந்துஅங்கே உட்கார இருக்கைகளே இல்லாமல் நிற்க மட்டும் இடம் இருப்பதை  பார்க்கிறேன் மேலிருந்த கம்பியிலிருந்து கை பிடித்துக்கொள்ளும் கயிறுகள் ஏராளமாக தொங்குகின்றன. நிறைய  இளம்பெண்கள் நிற்கிறார்கள்

அத்தனை பேரும் சிவப்பில் உடை அணிந்திருக்கிறார்கள். சீருடை போலல்ல, விதம் விதமான சிவப்பு உடைகளில்.  என் எதிரே நின்ற ஒருத்திக்கு மிக சின்ன செப்பு உதடுகள் யாரையோ கோபமாக திட்டிக்கொண்டிருக்கிறாள். நான் அவளிடம் இந்த  பஸ் உக்கடம் போகுமா?  என்று கேட்டதை அவள் கவனிக்கவே இல்லை அவனருகில் இருந்த இன்னொருத்தி புன்னகையுடன் ’’உக்கடம் போகும் ‘’ என்கிறாள்.

பின்னர் நான் ஏதோ ஒரு ரயில் நிலையத்திலிருந்து வெளியே வருகிறேன் தோளில்  ஒரு பையுடன்

ரயில்நிலைய வாசலில் மகாபாரத நாடகம் நடந்து நான் வரும் போது நிறைவுறுகின்றது கையில் புல்லாங்குழலும் முகத்தில் நீல ஒப்பனையிலுமாக கிருஷ்ணராக வேடமிட்டவரை வியந்து பார்த்துக் கொண்டிருக்கையில் இன்னொரு நடிகர் கைகளில் நிறைய கருப்புக்கயறுகளை கொண்டு வந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கிறார் நான் அவருக்கு மிக அருகில் இருக்கிறேன் அதிலொன்றை தருணுக்கு வாங்கிக்கொண்டு போய் அவன் கைகளில் கட்ட நினைக்கிறென் தருணைக்குறித்து கொஞ்ச நாட்களாகவே சுகக்கேடு எதோ வந்துவிடுமென்று இனம்புரியா அச்சத்தில் பீடிக்கபட்டிருபபதை கனவிலும் நினைத்துக்கொள்கிறேன்

அவர் எனக்கு இரண்டாவதாக கயிற்றை கொடுத்தாலும் நடந்த தள்ளுமுள்ளு களில் அக்கயிறு கீழே விழுந்து விடுகிறது மீண்டும் வெகுவாக முயற்சிக்கிறேன் நிறைய கயிறுகள் கீழே விழுகின்றன அவற்றிலொன்றை எடுக்கமுற்படுகையில் நான் எடுக்கும் அதே கயிற்றை இன்னுமொரு பச்சைப்புடவை மாமியும் எடுக்கிறார் நான் முந்திக்கொண்டு அதை எடுத்துக்கொள்கிறேன் மாமிக்கு அதை தரக்கூடாது எனக்கே வேண்டும் என்னும் வேகத்தில் இருக்கிறேன் ஆனால்  மாமி புன்னகையுடன் ’’பாக்கியம் உண்டாகட்டே’’ என்கிறாள்

பின்னர் தென்னம்பாளையம் சாலையில் செல்கிறேன் எனக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவர்,  வழியில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் ஒரு பைக்கை காண்பித்து, எதோ பேசியபடி கடக்கிறார்கள்.நானும் பார்க்கிறேன் யாருமற்று, கவிழ்ந்து கிடக்கும் ஒரு பைக்கின் அருகில் கருப்பு சட்டை பேண்டில் ஒரு இளைஞன் முகம் குப்புற கிடக்கும்படி அசைவின்றி கிடக்கிறான்.

அதன் பின்னர் எங்கோ ஏதோ ஒரு கூட்டம் நானும் அங்கிருக்கிறேன் ஏனோ கூட்டத்தின் பின்பகுதியில் படுத்துக்கொண்டிருக்கிறேன். ஒருவர்  வந்து என் உடை ஈரமாகி இருப்பதை சுட்டிக்காட்டுகிறார் குர்த்தி அணிந்திருக்கிறேன் அதை இழுத்து ஈரத்தை மறைக்கிறேன். அவர் அருகில் நின்று ’ஏன் பதட்டமா இருக்கே,  நிமம்தியா தூங்கு’’என்கிறார்  அவர் கைகளை எடுத்து என்   காதுக்க ருகில் வைத்துக்கொண்டதும் கிடைத்த  பாதுகாப்பு உணர்வில் ஆழ்ந்து உறங்குகிறேன். 

 எதோ ஒரு பிரபல வாரப்பத்திரிக்கையில் தாவர ’’அதிகாரம்’’ என்று நான் எழுதி இருக்கும் கட்டுரை பிரசுரமாகி இருக்கிறது ஆர்வமாக பிரித்துப் பார்க்கிறேன்

இந்த பல கட்டங்களாக, பல காட்சிகளாக நிகழ்ந்த கனவுகளுக்கிடையில் நான்  விழித்து தண்ணீர் குடித்து,  கனவுகளின் குறிப்புகளையும் எழுதிக்கொண்டேன்.

காலையில் எப்படி நிஜம் போலவே கனவு வந்தது என்றல்ல. இத்தனையும் கனவா நிஜமில்லையா? என்னும் திதைப்பே என் முன்னால் நின்றது

இரண்டாம் ஆதாம் – லின்னேயஸ்

தாவரங்களின் இருபெயரீட்டு  விதிகள், விமர்சனங்கள் மற்றும் புதிதாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட பல தாவரங்களின் பட்டியலுடன் லின்னேயஸின்  ””கிரிடிகா பொடானிகா”(Critica Botanica)  நூல் ஜூலை 1737 ல் வெளியான போது, லின்னேயஸின் ஆய்வுகளை, கடுமையாக,  வெளிப்படையாக விமர்சிப்பவரான  ஜோஹேன் சீகஸ் பெக் (johann siegesbeck)    மனமகிழ்ந்து போனார். சிலமாதங்களுக்கு முன்புதான் சீகஸ்பெக் மலர்களின் இனப்பெருக்க உறுப்புக்களின் அடிப்படையில் லின்னேயஸ் உருவாக்கிய தாவர  வகைப்பாட்டியலை மிக மோசமானதென்று வெளிப்படையாக கருத்து  தெரிவித்திருந்தார். 

ஆஸ்திரேலியாவை தாயகமாக கொண்ட  சிறு மஞ்சள் மலர்களைக் கொண்டிருக்கும், அதுவரை  பெயரிட்டு ஆவணப்படுத்தப்பட்டிருக்காத ஒரு சிறு  களைச்செடிக்கு தனது பெயரை  வைத்துSigesbeckia orientalis, என்று  லின்னேயஸ்  அந்நூலில்  பெயரிட்டிருந்தது அவரை வெகுவாக மகிழ்வித்தது.  சீகஸ்பெக்  லின்னேயஸுக்கு  நன்றி தெரிவித்து  கடிதம் எழுதினார். சில நாட்களில் லின்னேயஸிடமிருந்து பதிலுக்கு  ஒரு சிறு பொட்டலம் தபாலில் வந்தது. பொட்டலத்தின் மேல் Cuculus ingratus  என்று எழுதப்பட்டு உள்ளே  சிறு சிறு விதைகள் இருந்தன. புதிதாக பெயரிடப்பட்ட தாவரமொன்றின் விதைகளாக இருக்கலாமென்று எண்ணிய ஜோஹனும் அவற்றை வீட்டு தோட்டத்தில் விதைத்தார் அவை வளர்ந்த பின்னரே அவருக்கு தெரிந்தது தான் லின்னேயஸால் எப்படி அறிவியல்பூர்வமாக அவமதிகப்பட்டிருக்கிறோம் என்று.  

அந்த விதைகளிலிருந்து  வளர்ந்தது  அவரின் பெயரிடப்பட்டிருந்த  Sigesbeckia orientalis, எனப்படும்  மிகச்சிறிய, எந்த முக்கியதுவமும் இல்லாத மிகவும் நாற்றமடிக்கும் ஒரு களைச்செடிதான். லின்னேயஸின் வகைப்பாட்டியலின் அடிப்படையை வெளிப்படையாக விமர்சித்த தன்னை அவமதிக்கவே, அந்த நாற்றமடிக்கும் செடிக்கு தன் பெயரை வைத்தார் என்றும் அவரனுப்பிய பொட்டலத்தின் மேல் எழுதப்பட்டிருந்த  Cuculus ingratus   என்பது ””நன்றிகெட்ட குக்கூ”” என தன்னை சொன்னது என்பதையும் அவர் தாமதமாகவே தெரிந்துகொண்டார்

பின்னர் அவர் லின்னேயஸை இதுகுறித்து தொடர்பு கொள்ள எத்தனை முயன்றும், பலர் இதில் இடைபட்டும் லின்னேயஸ் அவரை சந்திக்கவில்லை மாறாக ””மிக நன்றிகெட்ட குக்கூ”” ingratissimus cuculus.என எழுதிய பொட்டலத்தில் மேலும் சில விதைகளை அவருக்கு  அனுப்பி வைத்தார்.  புகைந்து கொண்டிருந்த பகை அதன்பின்னர் தழலாட தொடங்கி   இரண்டு அறிஞர்களும் பின்னர் வாழ்நாளின் இறுதி வரை விரோதிகளாகவே இருந்தனர்.

இப்படி ஒரு விநோதமான அவமதிப்பை செய்த  லின்னேயஸ்தான்  நவீன தாவர வகைப்பாட்டியலின் தந்தை.ஒருபோதும் தன்னை விமர்சித்தவர்களை,  ஏமாற்றியவர்களை,  துரோகம் செய்தவர்களை, அவர் மன்னிக்கவே இல்லை.  அறிவியல் பெயர்களிலேயே அவர்களை  பழி வாங்கினார்.

லின்னேயஸின் சீடர்கள்1 என அறிவியல் வரலாற்றில் குறிப்பிடப்படும் அவரது  17 மாணவர்கள் மேற்கொண்ட ஆபத்தான சாகச பயணங்களின் பலனாக கிடைத்த பல தாவரங்களை கொண்டுதான் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் பல முக்கிய நூல்களை எழுதினார். அந்த 17 சீடர்களில் 7 மாணவர்கள் அத்தனை இளம்வயதில் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை செய்துவிட்டு, லின்னேயஸையும், அவரவர் குடும்பங்களையும் பார்க்காமலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தனர். வெற்றிகரமாக திரும்பியவர்களில் பலர் விசுவாசமாக  கண்டறிந்தவற்றையும் சேகரிப்புக்களையும் லின்னேயஸுக்கே சமர்பித்தனர். 

அதில் ஒருவரான டேனியல் ரோலேண்டர் (Daniel Rolander). லின்னேயஸின் வழிகாட்டுதலின் பேரில் தென்னமெரிக்காவை  அடுத்திருந்த ஒரு சிறிய நாட்டுக்கு தேடுதல் பயணம் மேற்கொண்டு ஏராளமான புதிய தாவரங்களையும் பூச்சி இனங்களையும் கண்டறிந்தார் ஆனால் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் நாடு திரும்ப சில வருடங்கள் தாமதமானது.

கோபமடைந்த லின்னேயஸ் டேனியலுக்கு செய்துவந்த எல்லா உதவிகளையும் நிறுத்தியதோடு அவருக்கிருந்த செல்வாக்கினால் பிறரும் டேனியலுக்கு உதவி செய்யாதபடி பார்த்துக்கொண்டார் டேனியலின் மன்றாட்டுகளுக்கும் சண்டைகளுக்கும் செவிசாய்க்காத லின்னேயஸ் அவர் எந்த வேலையிலும் சேர முடியாதபடியும் அவரது ஆய்வுக்கட்டுரைகள் எங்கும் பிரசுரம் ஆகாமலும் அவர், ஒரு வீடு வாங்கி தங்கக் கூட முடியாதபடியும் கவனமாக காய்களை நகர்த்தினார்.

மழைக்காடுகளில் அலைந்து திரிந்ததால் உடல்நிலை சீர்கெட்டு, மதுவடிமையும் ஆகிப்போன டேனியல் மனம் வெறுத்து,லின்னேயஸுக்கு தான் கொண்டு வந்த உலர் தாவரங்களையும் பூச்சி இனங்களையும்  தர மறுத்துவிட்டார். கோபமுற்ற லின்னேயஸ்  டேனியல் இல்லாத போது அவரது வீட்டுக் கதவை உடைத்து கிடைத்த சேகரிப்புக்களை எடுத்துக்கொண்டார். பின்னர்  ஒரு சின்னஞ்சிறு வண்டுக்கு Aphanus rolandriஅதாவது யாருக்குமே தெரியாத/யாருமற்ற ரோலேண்டர் என்ற பொருளில் பெயரிட்டு பழிதீர்த்து கொண்டார்.  அவரது ஆணைகளை சிரமேற்கொள்ளும் மாணவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்த லின்னேயஸ் சிறு மீறலையோ அல்லது மறுப்பையோ கூட சகித்து கொண்டதில்லை.

 கூரான முட்களை கொண்டிருக்கும் மரமொன்றிற்கு, தனக்கு வேண்டாதவரான பிரேஸில் தாவரவியலாளர் வில்லியம் பைசோ’வின் (Willem Piso) பெயரை வைத்து பைசோனியா( Pisonia) எனவும்,    மிக கம்பீரமான ஆனால் கண்ணுக்கே தெரியாத நுண் மலர்களைக் கொண்டிருக்கும் மரத்திற்கு தான் அவ்வளவாக மதிக்காத தாவரவியல் ஆய்வுகளை செய்த ஹெர்மண்டெஸின்(Francisco Hernández) பெயரால் ஹெர்மாண்டியா எனவும் (Hernandia), விரைவில் நிறமிழந்து மங்கிப்போகும் மலர்களுடைய  முசுக்கொட்டை இனத்தாவரத்திற்கு டோர்ஸ்டினியா (Dorstenia) என தியடோர் டோர்ஸ்டன் [Theodor] Dorsten.) என்னும் தன்னை விமர்சித்த  தாவரவியலாளர் பெயரையும் வைத்தார். .பைசோ, ஹெர்மாண்டஸ் மற்றும் டோர்ஸ்டன் ஆகியோர் இந்த பெயரிடலின் போது நல்லவேளையாக உயிருடன் இல்லை. அறிவியலை பிறரை சிறப்பிக்கவும் பழி தீர்க்கவும் ஒரு கருவியாக பயனபடுத்திய முதலும் கடைசியுமான அறிஞர் லின்னேயஸாகத்தான் இருக்கும்.

1735 ல் வெளியான  இயற்கை வகைப்பாடு (Systema Naturae)என்னும் பிரபல நூலில் லின்னேயஸ் மலர்களின் இனப்பெருக்க உறுப்புகளின் அமைப்பைகொண்டு தாவரங்களை  நூதன முறையில் வகைப்படுத்தி இருந்தார். உதாரணமாக மலர்களில் மகரந்தம் கொண்டிருக்கும் 8 ஆண் உறுப்புகளையும்,  சூலகத்தில் ஒரே ஒரு முட்டையை கொண்டிருக்கும் பெண் உறுப்பையும் கொண்டிருத்த தாவரங்களை   “Octandria Monogynia” என்னும் பிரிவின் கீழ் வகைப்படுத்தினார். கிரேக்க மொழியில் octo-எட்டு, andros -ஆண,  “Monogynia”  ஒரு பெண் என்று பொருள்படும்.

மேலும் இந்த இனப்பெருக்க இயல்புகளை வெளிப்படையாக மனிதர்களின் காதல் மற்றும் கலவியுடன் இணைத்து  // ஒரு மணப்பெண்ணின் அறையில் 8 மணமகன்கள் இலைகளே படுக்கை// என்றும்,பெண் ஜனன உறுப்புக்களை மலர்களின் இனப்பெருக்க  உறுப்புக்களுடன் அப்பட்டமாக ஒப்பிட்டும் விவரித்திருந்தார். இவற்றைத்தான் பல்வேறு தாவரவியலாளர்கள் கடுமையாக விமர்சித்தார்கள்.

விமர்சனம் செய்தவர்களை அவமதிக்க மட்டுமல்ல தனக்கு உதவியவர்களை, தன் பிரியத்துக்குரிய மாணவர்களை தான் மதிப்பவர்களை சிறப்பிக்கவும் அதே அறிவியலைத்தான் பயன்படுத்தினார் லின்னேயஸ். 1753 ல் இவரது முக்கிய நூலான ”சிற்றினத் தாவரங்கள்” (Species plantarum) வெளிவர உதவிய லாசோன் (Isaac Lawson). என்பவரின் பெயரை மருதாணிச்செடியின் பேரினமாக்கினார். மருதாணிச்செடியின் அறிவியல் பெயர்  லாசோனியா இனெர்மிஸ்.(Lawsonia inermis).

லின்னேயஸின் மாணவரும், அவரது வழிகாட்டுதலின் பேரில் வடஅமெரிக்க தாவரங்களை சேகரித்தவரும், ஃபின்னிஷ் ஆய்வாளர் மற்றும் தாவரவியலாளருமான  பீட்டர் கால்ம் (1716-1779- Peter Kalm) பெயரில் சில தாவரங்களை  பெயரிட்டார். ’பரந்த இலைகளுடன்’ என்று பொருள் படும் கால்மியா லத்தீஃபோலியா(Kalmia latifolia) என்று ஒரு தாவரத்திற்கும், அதன் மற்றொரு  குறுகிய இலைகளுடன் இருக்கும் சிற்றினத்திற்கு கால்மியா ஆங்ஸ்டிஃபோலியா (Kalmia angustifolia) என்றும் பெயரிட்டார். லின்னேயஸ் என்னும் பெயரிலும் பல தாவரங்கள் பெயரிடப்பட்டது.2

மனித இனத்தை “அறிவாளியாகிய மனிதன்” என்னும் பொருள்படும் ஹோமோ-சேபியன்ஸ் என்று 1758’ல் பெயரிட்டதும் இவரே.இயற்கை வகைப்பாட்டியல் (Systema naturae) நூலில்  லின்னேயஸ் ஹோமோ சேபியன்களை ஐந்து துணைக் குழுக்களாக பிரித்திருந்தார்: ஆஃபர், அமெரிக்கனஸ், ஆசியாடிகஸ், யூரோபியஸ் மற்றும் ஹோமோசேபியன் மான்ஸ்ட்ரோசஸ். இவற்றில் ஆஃபர், அமெரிக்க மற்றும் ஆசிய குழுக்கள் “தந்திரமான”, “பிடிவாதமான” அல்லது “பேராசை” கொண்டவர்களாக  வகைப்படுத்தப்படுகிறார்கள். மாறாக யுரோபியஸ் குழுவை “கண்டுபிடிப்பாளர்கள்”, “மென்மையானவர்கள்” மற்றும் “சட்டத்தை மதிப்பவர்கள் என்று வகைப்படுத்துகிறார் லின்னேயஸ். ஒரு தீவிர மத நம்பிக்கையாளராக இருந்த,மாபெரும் விஞ்ஞானியான லின்னேயஸ் இன பேதங்களில் ஆழமான நம்பிக்கை  கொண்டிருந்தது விந்தைதான். பழமை வாதத்தில் மூழ்கி இருந்த லின்னேயஸ் தன்னிடம் ஆய்வில் சேர ஒரு போதும் பெண்களுக்கு இடமளிக்கவில்லை பெண்கள் வீட்டுக் காரியங்களை பார்த்துக்கொண்டு சமையலை திறம்பட செய்தால் போதும் என்று நம்பினார். அவரது பெண்களுக்கே கூட அரைகுறையான  கல்வியையே அளித்தார்.

உயிரினங்களின் இருபெயரிடும் முறையை (Binomial nomenclature) கண்டறிந்தவரான லின்னேயஸின் பெயரும் ஒரு சுவாரஸ்யமான வரலாறை கொண்டுள்ளது.  

 லின்னேயஸ் மே 23 1707 ல் தெற்கு ஸ்வீடன் பகுதியில்- பிறந்தார் அவரது தந்தை நில்ஸ் (Nils Ingemarsson,) தேவாலயத்தில்  உயர் பதவியில் இருந்தார், மேலும் தாவரவியலில் அதீத ஆர்வமுடையவாராகவும் மரங்களை நேசிப்பவராகவும் இருந்தார். இளம் லின்’னையும் அவருடன் எப்போதும் தோட்டவேலைக்கும் செடிகொடிகளை பார்வையிடவும், ரசிக்கவும் உடனழைத்துச் சென்றார். ஆர்வமும் துடிப்பும் நிறைந்த சிறுவனான லின் தந்தையை ஊன்றி கவனிக்கும் வழக்கம் கொண்டிருந்தான்.

1700 க்கு முன், ஸ்வீடன் மக்கள் தங்கள் தந்தை யார் என்று தெரிவிக்கும் பெயர்களையே  பயன்படுத்தினார்கள், உதாரணமாக: கார்ல் நில்’லின்  மகன் நில்சன், அல்லது ஓலாஃப் ஸ்வென்னின் மகன் ஸ்வென்சன்.   பின்னர் பல ஐரோப்பியர்கள் தங்களுக்கு பிரியமான  லத்தீன் வார்த்தைகளில் இருந்து தேர்வு செய்த கடைசி பெயர்களை தங்கள் குடும்பபெயர்களாக வைத்துக் கொண்டனர்..

 நில்ஸ் இங்கமர்சன்,(Nils Ingemarsson,) இங்கமரின் மகன் என்று பொருள்படும் பெயரில் இருந்த லின்னேயஸின் தந்தை அவரது பல்கலைக்கழக சேர்க்கைக்கு,,  ஒரு துணைப்பெயர் அவசியமானபோது, லத்தீன் மொழியில், தங்களுக்கு சொந்தமான  இடத்தில் வளர்ந்த ஒரு மிகப் பெரிய எலுமிச்சை மரமான ’’லிண்டன்’’ மரத்தை கெளரவிக்க தனது குடும்பத்திற்கான பெயராக மரத்தின் ‘லின்’ என்னும் பெயரை சேர்த்துக்கொண்டார். ஸ்வீடிஷ் மொழியில்ல்   Linnæus, என்பது linden மரத்தை குறிக்கிறது. 

தாவரங்கள் பற்றிய அறிதலையும், விருப்பத்தையும்  தந்தையிடமிருந்து பெற்றார் லின்.. ஐந்து வயது லின்’னிற்கு,  நில்ஸ் தோட்டத்தின் ஒரு சிறு பகுதியை  சொந்தமாக அவனுக்கு விருப்பமான தாவரங்களை வளர்க்கவென்று அளித்தார். அதுவே லின்னேயஸுக்கு தாவரங்களை குறித்து விளக்கமாக அறிந்துகொள்ள ஒரு தொடக்கமாக அமைந்தது. லின்’னிற்கென்றே பிரத்யேகமாக  ஒரு ஆசிரியரை அவருக்கு 7 வயதாக இருக்கையில் நில்ஸ் ஏற்பாடு செய்தார். இறையியலும், லத்தீன் மொழியும், தாவரவியலும் அவருக்கு  கற்பிக்கபட்டது.

 பள்ளி மற்றும் உயர்கல்வியிலும் அப்போது கிரேக்கம், ஹீப்ரூ, கணிதம் மற்றும் இறையியல் ஆகியவையே மிக முக்கிய பாடங்களாக கருதப்பட்டது ஆனால் லின்’னுக்கு தாவரவியலை தவிர  எதிலும் ஆர்வம் இல்லை. அவனது ஆசிரியர்களில் யாருமே லின்’னின் தாவரவியல் ஆர்வத்தை கவனத்தில் கொள்ளவுமில்லை.

லின்னேயஸின் தாயார், மகன் மருத்துவம் படிக்க வேண்டும் என்று விரும்பினார். அப்போது எல்லா ஸ்வீடன் நாட்டு மருத்துவ மாணவர்களும் ஸ்வீடனுக்கு வெளியே சென்றுதான் பட்டம் பெற வேண்டும் என்பதால் லின்’னும் நெதர்லாந்திற்கு சென்று மருத்துவப்படிப்பை முடித்தார்.மருத்துவப்படிப்பில்  மலேரியாவின் காரணங்களை ஆய்வு செய்திருந்தார். மருத்துவபடிப்பு முடிந்தபின்னரும் லின்னேயஸ் அங்கேயே மேலும் மூன்றுஆண்டுகள் தங்கி இருந்து பிரபல தாவரவியலாளர்களுடனும்,   பல்துறை அறிஞர்களிடமும் தொடர்பில் இருந்தார். அவரது பேராசிரியர்களில் ஒருவர் லின்னேயஸின் தாவரவியல் ஆர்வத்தை கவனித்து தன் தோட்டத்தில் அவரை வேலைசெய்யவும் அங்கிருந்த தாவரங்களை அறிந்து கொள்ளவும் அனுமதியளித்தார்

அங்குதான் லின்னேயஸ் மருத்துவரும் ,பேராசிரியருமான ஜான் ரோத்மேன் என்பவரை சந்தித்தார்.(Johan Stensson Rothman (1684–1763)) ரோத்மேன் லின்னேயஸுடன் இணைந்து அவரின் தாவரவியல் அறிவை பலமடங்காக்கினார்

 1730 ல் நூற்றுக்கணக்கானவர்கள் முன்னால் உரையாடும் மிக இளம் வயது பேச்சாளராகவும் இருந்தார் லின்னேயஸ். ஸ்வீடன் திரும்பிய லின்னேயஸ்  தலைநகர் ஸ்டாக்ஹோமில் மருத்துவராக தொழிலை துவங்கினார். சாராவை மணமுடித்தார் மருத்துவராக தன் பணியை மிக குறுகிய காலமே செய்தலின்னேயஸ் உப்சாலா   பல்கலைக்கழக பூங்காவின் தலைவராக  பணி மேற்கொண்டார்.

 25 வயதான லின்னேயஸ் 1732 ல் கடவுச்சீட்டும் ஸ்வீடிஷ் அரசின் பரிந்துரைக்கடிதமுமாக  ஊசியிலைக்காடுகள் செறிந்த லேப்லாந்துக்கு பயணித்தார். அங்கு  தங்கி இருந்து, அங்கிருக்கும் பழங்குடியினத்தவர்களான  ஸாமி மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த லின்னேயஸ்,  அவர்களின்  பாரம்பரிய உடைகள் மிது பெருவிருப்பம் கொண்டு அவற்றை பின்னர் விரும்பி அணிய துவங்கினார்.  இறுக்கமான ஸ்வீடிஷ் உடைகளை காட்டிலும் தளர்வான ஸாமி உடைகள் அவரை கவர்ந்தன. .அந்த நிலப்பரப்பு, அங்கு வாழ்ந்த மக்கள், அவர்களின் கலாச்சாரம், அப்பகுதியின் தாவர, விலங்கு வகைகள் குறித்து லின்னேயஸ்  எழுதிய ஆய்வுக் கட்டுரை, ஸ்வீடன் பாராளுமன்றத்தில் பரவலான கவனத்தையும் பாராட்டுக்களையும் பெற்றது. அந்த பயணத்திற்கு பிறகு அவர் பயணிப்பது குறைந்தது, அவர் சார்பாக உலகெங்கிலும் அவர் மாணவர்களே பிரயாணம் செய்தார்கள்.

மிக இளம் வயதிலிருந்தே மலர்களின் காதலனாக இருந்த லின்னெயஸுக்கு  மிகப்பிரியமான தாவரங்களில் ஒன்றாக இருந்த இரட்டையாக மலரும் மலர்களை தன் அடையாளமாகவே வைத்துக்கொண்டு அதற்கு தன்பெயரையே இணைத்து   லின்னேயா போரியலிஸ் (Linnaea borealis) என்று பெயரிட்டார். பெரும்பாலான புகைப்படங்களில் லாப்லாந்தின் ஸாமி மக்களின் பாரம்பரிய உடையில் லின்னேயஸ், அவரது தனிப்பட்ட சின்னமாக மாறிய இந்த இரட்டை மலர்களை கைகளில்  வைத்திருப்பார். 

.பின்னர் 1738 ல்ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி முழுமையாகஉருவாக காரணமாயிருந்த லின்னேயஸ் அதன் முதல்  தலைவராகவும் இருந்தார். அச்சமயத்தில்தான் ஸ்வீடிஷ் அகாடமியின் உதவியுடன் 17 மாணவர்களை உலகெங்கும் அனுப்பி தாவர வகைப்பாட்டியலை விரிவாக்கினார். பெரும் புகழும் செல்வமும் கொண்டவராக ஆன லின்னேயஸ்   மாணவர்களின் தேடல் பயணத்திலிருந்து மட்டுமே 5,900 தாவரங்களையும் 4,378 விலங்குகளையும்  கிடைக்கப்பெற்றார்.

.

உப்சாலா பல்கலைக்கழகத்தில் லின்னேயஸ் ஓலாஃப் செல்சியஸ் ( Olof Celsius ) என்னும் இறையியல் பேராசியரை சந்தித்து நட்பானார். இந்த ஒலோஃப் செல்சியஸ்  செல்சியஸ் வெப்பமானியை கண்டுபிடித்த ஆண்டர்ஸ் செல்சியஸின் (Anders Celsius) நெருங்கிய உறவினர். .ஓலாஃப் உப்சாலா பூங்காவின் அனைத்து தாவரங்களின் பெயர்களையும் லின்னேயஸ் அறிந்து வைத்திருப்பதை வியந்து பாராட்டினார். அதன்பிறகு லின்னேயஸ் உப்சாலா பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ளவும்,பல்கலைக்கழக நூலகத்தை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதித்தார்.

 அந்த சமயத்தில்தான் லின்னேயஸ் தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களை அடிப்படியாக கொண்டு அவற்றை  வகைப்படுத்துதல் குறித்த  ஆய்வுக் கட்டுரை எழுதி வெளியிட்டார். அக்கட்டுரையால் கவரப்பட்ட மற்றுமொரு பேராசிரியரான ஒலாஃப் ரூத்பெக் (Olof Rudbeck), லின்னேயஸை பேராசிரியராக தாவரவியல் துரையில் பணியமர்த்தினார். 

பத்து வருடங்கள் கழித்து 1748 ல் லின்னேயஸ்   தாவரவியல் தத்துவங்கள் (Philosophia Botanica)  என்னும் நூலில்  46 தாவரங்களை மலரும் காலங்களின் அடிப்படையில் வகைப்படுத்தி   horologium florae என்றழைக்கப்பட்ட மலர்க்கடிகாரத்தை3உருவாக்கினார்.

லின்னேயஸ் மும்முரமாக பல கண்டுபிடிப்புகளை செய்து கொண்டிருந்த அச்சமயத்தில் ஸ்வீடன் ரஷ்யாவுக்கு எதிரான போரிலும், நார்வே, டென்மார்க் மற்றும் ப்ரூஷியாவுடனான போர்களிலும் தோற்றிருந்தது. தோல்விகளால்  துவண்டு இருந்த.  ஸ்வீடன்,  லின்னேயஸினால் மீண்டும் புகழ்பெற்று தலை நிமிர துவங்கியது.

  1761 ல், ஸ்வீடன் அரசர் லின்னேயஸுக்கு  பிரபு பட்டம் வழங்கி கௌரவித்த பின்னர் லின்னேயஸ் கார்ல் வோன் லின் என (CARL VON LINNÉ) அழைக்கப்பட்டார் பட்டம் கிடைத்த பின்னர் லின்னேயஸ் உலக புகழ் பெற்றார். உலகெங்கிலும் இருந்து விஞ்ஞானிகளும் அரசகுடும்பத்தினரும் அவரை தொடர்பு கொண்டனர்.. ரஷ்ய பேரரசி இரண்டாம் கேத்தரீன் ரஷ்யாவிலிருந்து பல விதைகளை லின்னேயஸுக்கு அனுப்பிவைத்தார், ஆஸ்திரியாவின் லின்னேயஸ் என அழைக்கப்பட்ட தாவரவியலாளர் ஜோஹன் ஸ்கோபோலியஸ் (Johannes Antonius Scopolius)) லின்னேயஸுடன் தொடர்பில் இருந்தார்  தனது அனைத்து ஆய்வுகளையும் அவர் லின்னேயஸுடன்  பகிர்ந்துகொண்டார். உதாரணமாக லின்னேயஸ் அறிந்திருக்காத  olm என்னும் நீர்வாழ் உயிரி ஒன்றையும் dormouse எனப்படும் கொறித்துண்ணியொன்றையும் குறித்து எல்லா தகவல்களைம் விவரமாக லின்னெயஸுக்கு அனுப்பி இருக்கிறார்.. 

ஸ்கோபோலியஸின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த லின்னேயஸ் சொலனேசிய குடும்பத்தின் பேரினமொன்றிற்கு ஸ்கொபோலியா என்று பெயரிட்டார். .ஸ்கொபோலியா பேரினத்திலிருந்தே ஸ்கொபோலமைன் என்னும் மிக முக்கிய வேதிப்பொருள்  கிடைக்கிறது.  இவர்கள் இருவரும் ஒரு முறை கூட சந்தித்துக்கொண்டதே இல்லை . .

1764 ல்  ஸ்வீடன் பட்டத்து இளவரசர் அடால்ஃப் ஃப்ரெட்ரிக் லின்னேயஸுக்கு ஒரு ரக்கூனை செல்லப்பிராணியாக பரிசளித்தார் ஸுப் (‘Sjupp’) என பெயரிப்பட்டிருந்த அது லின்னேய்ஸின் ஆய்வுக்குறிப்புக்களில் இடம்பெரும் அளவிற்கு அவருக்கு நெருக்கமானதாக இருந்தது. பல்கலைக்கழகத்துக்கு தன்னுடன் அதை எடுத்து வருவார் லின்னேயஸ்.   ஒரு கட்டுரையில் ’’ஸுப் பிடிவதம் நிறைந்தது, அன்பானது, முட்டை, பழங்கள், இனிப்புகள், மீன், உலர் திராட்சை மற்றும் வினிகரில் தோய்த்த எதுவானாலும் விரும்பி உண்ணும்’’ என குறிப்பிடுகிறார் லின்னேயஸ். துரதிர்ஷ்டவசமாக ஸுப் ஒரு நாயால் கடித்து குதறப்பட்டு கொல்லபட்டது

உயிரின வகைப்பாட்டியலின் இருசொல் பெயரிடும் முறையின்  படிநிலைகள் உலகம், தொகுதி, வகுப்பு, துறை, குடும்பம், பேரினம், சிற்றினம் என வரிசையாக அமைக்கப்பட்டிருகிறது. இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களும் லின்னேயஸ் வகைப்பாட்டியலின் படிநிலைகளின்படி இறங்கு வரிசை அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.  இவ் வகைப்பாட்டின் கீழ்நிலை அலகு சிற்றினம்(Species) ஆகும்.

சர்வதேச தாவரவியல் விதிகளின் படி, தாவரங்களுக்கு பெயரிட்டவரை அறிவியல் பெயரின் பின்னால் சுருக்கமாக குறிப்பிட வேண்டும். லின்னேயஸ் பெயரிட்ட தாவரங்களின் பெயர்களின் பின்னால் எனL.என்ற தாவரவியலாளர் பெயர் சுருக்கக் குறியீடு (author citation) இருக்கும். உதரணமாக அரசமரத்தின் அறிவியல் பெயர் Ficus religiosa L. மிகப்பழைய வெளியீடுகளில்Linn. என்றிருக்கும்

லின்னேயஸ்  உயிரினங்களை பெயரிட்டு, வகைப்படுத்தி, அறிவியலை எளிமை படுத்துவதற்கு முன்பு, தாவரங்கள் வழக்கமாக பல பெயர்களுடன்  நீண்ட விளக்கமான லத்தீன் பெயர்களைக் கொண்டிருந்தன, இவற்றை கற்பதும் நினைவில் கொள்ளுவதும்  மிக கடினமாக இருந்தது. தாவரத்தை விவரிக்கும் தாவரவியலாளரின் விருப்பத்தின் அடிப்படையில் பெயர்கள் பலமுறை மாற்றப்பட்டன. ஒவ்வொரு தாவரத்திற்கும் உலகளாவிய பெயர்களும் இல்லை, எனவே உலகெங்கிலும்  தாவரங்களின் பெயர்கள் குறித்த  பெரும் குழப்பம் நிலவியது 

லின்னேயஸுக்கு முன்பு பலரும் உயிரினங்களை வகைப்படுத்த முனைந்தார்கள் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில். (கி மு. 384 – 322)   விலங்குகளை நடப்பன, ஊர்வன, நீந்துவன என்றும் முதுகெலும்பிகள், முதுகெலும்பற்றவைகளை குருதியுள்ளவை, குருதியற்றவைகளெனவும் எளிமையாக வகைப்படுத்தினார், தாவரங்களை, மரங்கள், புதர்கள், சிறு செடிகள் என வகைப்படுத்தினார்.  அவரால் வகைப்படுத்த முடியாதவற்றை பெயரற்றவைகளின் தொகுப்பு  என்னும் வகைக்குள் கொண்டு வந்தார். 

பாட்டனி என்னும் சொல்லை உருவாக்கியவரும் தாவரவியலின் தந்தை என்றறியப்படுபவருமான் தியோ ஃப்ரேஸ்டஸ் ((373–288 BC)) பல படிநிலைகளில் தாவரங்களை வகைப்படுத்த முயன்றிருக்கிறார். விதைகளிலிருந்து வந்தவை வேர்கள் இருந்து வந்தவை என எளிய வகைப்படுத்தல்கள்தான் அவையும்.

 ரோமானியர்கள் காலத்தில் வரலாற்றாய்வாளர்  பிளைனியும்   (Pliny the Elder, 23–79 BC)  தாவர விலங்குகளை வகைப்படுத்தி இருந்தார். மறுமலர்ச்சி காலத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் வெகுவாக பிரயாணங்களை மேற்கொண்டு பல்லாயிரம் புதிய தாவர, விலங்கு, பூச்சி இனங்களை கண்டறிந்தார்கள். அக்காலகட்டத்தில் புதிய உயிரினங்களை பெயரிடுவதிலும், வகைப்படுத்துவதிலும் மிக மும்முரமாக அறிஞர்கள் ஈடுபட்டிருந்தார்கள். 

பல சொற்களால் பெயரிடும் முறையின் சிக்கல்களைத் தவிர்க்க, 1623 ஆம் ஆண்டு, காஸ்பர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தினார். இம்முறையை செம்மையாக்கி,விதிகளை உருவாக்கி, பெரிதும் ஒழுங்கு படுத்தினார் லின்னேயஸ். அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டே சிற்றினத்தாவரங்கள்  நூலை  இயற்றினார்.

 லத்தீன் மொழியில் உயிரினங்கள் அனைத்துக்குமான உலகப்பொதுப் பெயரை இருபெயரீடு முறையில் உண்டாக்கும் லின்னேயஸ் முறையானது, அதற்கு முன்னர் இருந்த பலபெயரீட்டு முறையின் கடினங்கள், சிக்கல்கள், ஏதும் இல்லாமல் இரண்டே இரண்டு சொற்களில் அமைக்கப்பட்ட பெயர்கள் அறிவியலை ஒரு புதிய தளத்திற்கு எடுத்து சென்றது.லின்னேயஸின் இம்முறையில் ஒவ்வொரு தாவரமும் அந்த தாவரத்திற்கான பிரத்யேக பெயரைக் கொண்டிருந்ததால் அப்பெயர்களை நினைவில் வைத்துக் கொள்வதும்  வசதியாக இருந்தது.

  லின்னேயஸ்‘’என் அன்புக்குரிய தாவரவியலாளர்களான உங்களுக்கு, நான் வகுத்துள்ள  விதிகளை, என் விருப்பப்படி சமர்ப்பிக்கிறேன். அவை உங்களுக்கு தகுதியானதாக  தோன்றினால், பயன்படுத்துங்கள் இல்லையெனில்அதை காட்டிலும்   சிறந்த ஒன்றை  தயவு செய்து முன்வையுங்கள்’’என்றார்.  300 ஆண்டுகளுக்கு பின்னரும் உயிரின  வகைப்பாடு பல்வேறு தொழில்நுட்பங்கள் உதவியால் வெகுவாக முன்னேறி பெருமளவில் மாற்றங்களுக்கு உள்ளாகி இருப்பினும் லின்னேயஸின்  வகைப்படுத்தல் விதிகள் தான் சர்வதேச பெயரிடும் அமைப்பின் முதுகெலும்பாக இருக்கின்றது. 

உலகெங்கிலும் பின்பற்றப்படும் தாவர அறிவியல் பெயரிடும் முறையான அனைத்துலக பாசிகள், பூஞ்சைகள், தாவரங்களுக்கான பெயரிடல் நெறிமுறையும் (International Code of Nomenclature for algae, fungi, and plants -ICN)  , லின்னேயஸ் பெயரிடும் முறையை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றது.தாவர , விலங்கு, மனித, பூச்சியினங்களோடு, லின்னேயஸ் நறுமணங்களையும்,, மண் வகைகளையும், தாது உப்புக்களையும்  வகைப்படுத்தி இருக்கிறார்.

அவரது காலத்தில் தாவரவியல் துறையின் தவிர்க்கமுடியாத சக்தியாக விளங்கினார் லின்னேயஸ். உலகின் எந்த மூலையில் தாவரவியல் குறித்த சந்தேகங்கள் வந்தாலும் புதிய தாவரங்கள் கண்டறியப்பட்டாலும் நேரிலோ அல்லது கடிதம் வாயிலாகவோ லின்னேயஸை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்காமல் அடுத்த நகர்வு சாத்தியமில்லை  என்னுமளவுக்கு லின்னேயஸின் செல்வாக்கு இருந்தது.

 1735 ல்வெறும் 14 பக்கங்கள் கொண்ட சிறிய நூலாக பிரசுரரமானலின்னேயஸின்  முதல் இயற்கை வகைப்பாடு நூல, . 1766-1768 ல் மூன்று தொகுதிகளாக 12 வது தொகுப்பு வெளிவந்தபோது  2300 பக்கங்களை கொண்டிருந்தது. .லின்னேயஸ் அவரது வாழ்நாளில் மொத்தம்  7,700 தாவரங்களையும், 4.400 விலங்கினங்களையும், வகைப்படுத்தி பெயரிட்டிருந்தார்  

செவ்வாய் மற்றும்  சனிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான மாணர்களுடன்  லின்னேயஸ்  உப்சாலா பல்கலைகழகத்தில் நடத்திய தாவர அறிவியல் தேடல் மற்றும் பயிற்சி வகுப்புக்கள் மிக பிரபலமாயிருந்தது.

1750’ல்  உப்சாலாவை சுற்றியிருந்த ஹம்மர்பி, சாவ்ஜா மற்றும் எடிபி ஆகிய   (Hammarby, Sävja & Edeby)  ஆகிய மூன்று பண்ணைகளை லின்னேயஸ் வாங்கினார் அவையே அவரது குடும்பத்தின் கோடைவாசஸ்தலங்களாக  இருந்தன. 1766ல் நிகழ்ந்த தீ விபத்தில் உப்சாலாவின் சேகரிப்புக்களில் மூன்றில் ஒரு பங்கு எரிந்து போன பின்பு தனது ஹம்மர்பி பண்ணையின்குன்றின் பின்புறம் கருங்கற்களால் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கி தனது  சேகரிப்புக்களை அதில் பத்திரப்படுத்தினார் லின்னேயஸ்.. நோய்வாய்ப்பட்டிருந்த தனது இறுதிக் காலத்தில் அவர் ஹம்மர்பி  பண்ணை வீட்டில் தங்கி இருந்தார்.

சுவாசக்கோளாறு மற்றும் காய்ச்சலால் அவதியுற்ற லின்னேயஸுக்கு 1773 ல்  மாரடைப்பு ஏற்பட்டு, பக்கவாதம் உண்டானது. 1776 ல் இண்டாம் மாரடைப்பு   அவரை நினைவிழக்கச் செய்தது. டிசம்பர்  1777 ல் அடுத்த மாரடைப்பு அவரை மேலும் பலவீனமாக்கி ஜனவரி  பத்து, 1778ல் லின்னேயஸ் உயிரிழந்தார்.தன் உடலை ஹம்மர்பியில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்னும் லின்னேயஸின் விருப்பத்திற்கு மாறாக அவரது உடல் உப்சாலா தேவாலயத்தில் ஜனவரி 22ல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவுக்கு பின்னர் லின்னேயஸின் மகன் கார்ல் தந்தையின் சொத்துக்களுக்கும் சேகரிப்புக்களும் உரிமையாளரானார். ஜோசப் பேங்க்ஸ் (Joseph Banks) என்னும் பிரபல தாவரவியலாளர் லின்னேயஸின் சேகரிப்புகளை பெரும் பொருள்கொடுத்து வாங்க  முயன்றபோது கார்ல்  மறுத்துவிட்டார்.

ஆனால் எதிர்பாராவிதமாக 1783ல் கார்ல் இறந்தபோது ஸாரா லின்னேயஸ் ஜோஸபிடம் அவற்றை விற்க முயன்றார், ஆனால் ஜோஸப் அப்போது மனம் மாறி  அவற்றை வாங்க  மறுத்துவிட்டார்.பின்னர்  24 வயதான மருத்துவ மாணவர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் (James Edward Smith)லின்னேயஸ் சேகரிப்புக்களான 14,000 தாவரங்கள், 3,198 பூச்சி இனங்கள், 1,564 கிளிஞ்சல்கள், 3000 கடிதங்கள் மற்றும் 1600 நூல்களை ஸாராவிடமிருந்து வாங்கினார்.  அவையனைத்தும் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித் தோற்றுவித்த லண்டன் லின்னேயஸ் சொசைட்டியில்  பாதுகாக்கப்படுகின்றன.

லின்னேயஸின் கொடிவழி, திருமணம் செய்து கொள்ளாமலேயே இறந்த  அவரது மகனின் இறப்புக்கு பிறகு அறுந்து விட்டது. லின்னேயஸ் பெயர் சொல்ல அவரது மகள்கள் வழி சந்ததியினர் மட்டும் இப்போது இருக்கிறார்கள்.

   1778. லின்னேயஸ் இறந்தபோது ஐரோப்பா முழுவதுமே பிரபலமானவராக இருந்தார்.  லின்னேயஸின் அனைத்து நூல்களுமே பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யபட்டன, போலி செய்யபட்டன, தழுவி எழுதப்பட்டன. 

ஏராளமான நூல்கள் எழுதிய லின்னேயஸின் மறைவுக்கு பின்னரும் அவரால் எழுதபட்ட நூல்கள் பலரால் வெளியிடபட்டன.4அவரின் இறுதிக்காலங்களில் எழுதப்பட்ட ’’இயற்கை பொருளாதாரம்’’ மற்றும் ’’இயற்கை அரசியல்’’ ஆகிய நூல்கள் மிக முக்கியமானவை அவரது மறைவுக்கு பின்னர் வெளியான ’’இறைமை கைம்மாறு’’ நூல் (Nemesis Divina) அவரது ஆழமான ஆன்மீக நம்பிக்கைகளை தெரிவித்தது .இந்நூலில் தன்னை எதிர்த்தவர்கள், தன்னிடம் சரியாக நடந்துகொள்ளாதவர்கள் என்று அவரால் கருதப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று விவரமாக குறிப்பிட்டிருக்கிறார். லின்னேயஸ் நம்பிய ஒழுக்க விதிகளின் நூல் என்று கூட இதை சொல்லலாம்.

 ஸ்வீடிஷ் தாவரவியலாளர், வகைப்பாட்டியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் மற்றும் கவிஞரான  லின்னேயஸின் பெரும்பான்மையான படைப்புக்கள் லத்தீன் மொழியில் இருந்தது. அவரது பெயரை லத்தீன் மொழியில் எழுதும் வழக்கமும் அவருக்கிருந்தது. லின்னேயஸ் உயிரியலை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச்சென்றவர்களில் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

 ’’ஏதேன் தோட்டத்துஆதாம் உலகின் முதல் உயிர்களை பெயரிட்டு அறிந்தான், நான் இரண்டாம் ஆதாம், உலகின் அனைத்து உயிர்களையும் வகைப்படுத்தி பெயரிட்டேன்’’என்று அறிவித்த லின்னேயஸ்  இயற்கை வகைப்பாடு  நூலின் முன்னட்டையில் இரண்டாம் ஆதாமாகவே தன்னை சித்தரித்திருந்தார்.  

 “கார்ல் லின்னேயஸ்”, “கரோலஸ் லின்னேயஸ்”, கார்ல் வொன் லின்னே, “கார்ல் லின்னே” போன்ற பல்வேறுபட்ட பெயர்களை கொண்டிருந்த, குடும்பப்பெயராக எலுமிச்சை மரத்தின் பெயரை கொண்டிருந்த , உலகின் உயிரினங்களை பெயரிட்டு வகைப்படுத்திய லின்னேயஸ் ”முதன்மையானதாவரவியலாளர் ’(Princeps Botanicorum)என்று அவர் விரும்பியபடியே பெயர் பொறிக்கப்பட்டிருக்கும் கல்லறையில் மகனுடன் உறங்குகிறார். 

  1. https://en.wikipedia.org/wiki/Apostles_of_Linnaeus\
  2. “Linnea”, Plants of the World Online, Royal Botanic Gardens, Kew
  3. https://en.wikipedia.org/wiki/Linnaeus’_flower_clock
  4. Carl Linnaeus bibliography – Wikipedia

இதுவரை கண்டறியப்பட்ட தாவரங்களின் அறிவியல் பெயர்களைஅறிந்துகொள்ள: International Plant Names Index (IPNI)

குன்றிமணி-கொல்லும் அழகு

Abrus precatorius, threaded seeds.

மாட்டிறைச்சிக்காக நடைபெறும் கால்நடை திருட்டு , மாட்டிறைச்சி உண்பது ஆகியவை நவீன இந்திய அரசியலில் சூடான விவாதங்களுக்கு உரியவை, எனினும் 1800’ல் இருந்து இந்தியாவில் நிகழ்ந்த கால்நடை திருட்டு மற்றும் கொலை குறித்த பழமையான வரலாறு மற்றும் அதன் பின்னால் இருந்த தாவர நஞ்சொன்றின் பங்கை குறித்து அநேகம் பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அப்போது கால்நடைகளை குறிப்பாக பசுக்களை கொல்ல இரண்டு வழிகளே அதிகம் பயன்பாட்டில் இருந்தன. ஒன்று மிக எளிதாக கிடைத்த ஆர்சனிக்கை, தீவனத்தில் அல்லது சர்க்கரையில் கலந்து கொடுப்பது. இரண்டாவது சுதாரி அல்லது சுயி (‘sutaris’ / ‘suis) ’எனப்படும் குன்றிமணி நஞ்சினால் உருவாக்கப்பட்ட ஒரு சிறு கூர் ஆயுதத்தினால் பசுவின் உடலில் காயப்படுத்துவது.

வங்காளத்திற்கான அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேஜர் ராம்ஸே 1881 இல் வெளியிட்ட, அவரது பணிக்கால விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ’’குற்ற விசாரணை தடயங்கள்’’ என்னும் நூலில், அவர் நடத்திய ஒரு விசாரணையில், கால்நடைகளைக் கொன்றதற்கும், ஆறு கொலை வழக்குகளுக்கும் தொடர்புடைய ஒரு கைதி தெரிவித்த சுதாரியைத் தயாரிப்பது மற்றும் பயன்படுத்துவது பற்றிய விவரங்களை விளக்கமாக எழுதியிருக்கிறார்.1 அந்த கைதிக்கு தண்டனையை குறைப்பதாக வாக்குறுதி அளித்து இந்த விவரங்கள் பெறப்பட்டன. குன்றிமணி விதைகளிலிருந்து சுதாரி செய்வதை அந்த கைதி நேரடியாக செய்து காட்டினான்.

மேல் தோல் நீக்கப்பட்ட 30 அல்லது 40 குன்றிமணி விதைகள் உடைக்கப்பட்டு, பத்து நிமிடங்களுக்கு நீரில் ஊறவைக்க படுகின்றன, பின்னர் அம்மியில் எருக்கம்பால் சேர்த்து, இவை மை போல அரைக்கப்பட்டு 6 கூர் நுனி கொண்ட ஒரு இன்ச் நீளமுள்ள சிறு கூம்புகளாக கைகளால் உருட்டப்பட்டு வெயிலில் காய வைக்கப்பட்டு கடினமாக்க படுகின்றன. நீர் உட்புகாமல் இருக்க ஒரு இரவு முழுவதும் விலங்கு கொழுப்பில் அமிழ்த்தி வைக்கப்பட்ட இவை உலோகங்களை விட கடினமானதாகின்றன. பின்னர் இவை கற்களில் தீட்டப்பட்டு மேலும் கூராக்கப் படுகின்றன.

.3 அல்லது 4 இத்தைகைய கூரான நச்சு முட்களை செருகி வைத்துக் கொள்ளும் அமைப்பில் இருக்கும் 3 இன்ச் அளவுள்ள மூங்கில் அல்லது மரத்தால் செய்யப்பட்ட கைப்பிடிகளில் இவை செருகப்பட்டு கொலை ஆயுதங்களாகின்றன. செருப்பு தைக்க பயன்படும் குத்தூசிகளைபோல் இருக்கும் இவற்றால் எந்த தடயமுமின்றி கால்நடைகளும் மனிதர்களும் அப்போது கொலை செய்யபட்டிருக்கின்றனர்.

மேஜர் ராம்ஸே அந்த கைதி உருவாக்கிய சுதாரியை சோதிக்க ஒரு பசுவை வரவழைத்தார் அந்த கைதி அப்பசுவின் கொம்புகளுக்கு அடியில், மூளையை தொடும்படி ஒரு முறையும், பசுவின் நாக்கிற்கு அடியில் இரண்டு முறையும், சுதாரி ஊசி நுனிகளால். மிக விசையுடன் குத்தி, கைப்பிடியை திருகி உடைந்த முள் பசுவின் உடலில் தங்கிவிடும்படி உருவி எடுத்தான். குத்தப்பட்ட எந்த காயமும், சுவடுமின்றி அந்த பசு 34 மணிநேரத்தில் இறந்தது. குத்திய இடத்தில் சீழ் முத்தொன்றை தவிர வேறெந்த அடையாளமும் இல்லை அப்பசுவின் உடலில்

இறந்த பசுவின் உடலில் இருக்கும் குன்றிமணியின் விஷம் ஆர்சனிக்கை கண்டுபிடிப்பதை காட்டிலும் கடினமானது.ஒரு வளர்ந்த பசுவை கொல்ல சுமார் 600 மில்லி கிராம் குன்றிமணி நஞ்சு போதுமானது. மேலும் விரைவாக பசுக்களை கொல்ல வேண்டி இருக்கையில் குன்றிமணி விழுதுடன் பாதரசம், ஊமத்தை இலைச்சாறு மற்றும் ஆர்சனிக்கும் சேர்க்கப்படும்.

அப்போது ஆர்சனிக் ’’அரிசி’’ என்னும் பெயரில் கடைகளில் வெளிப்படையாகவே விற்கப்பட்டிருக்கிறது. நன்கு விளைந்த சோள விதையை குடைந்து அதில் 2 அவுன்ஸ் ஆர்சனிக் நிரப்பப்பட்டு விதையின் வெளிப்புறத்தை மூடி இவை தீவனத்தில் கலக்கப்படும்

தோலுக்காக பசுக்களையும் எருதுகளையும் மட்டுமல்லாது மனிதர்களை கொல்லவும் குன்றிமணி விஷம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.முதன்முதலாக 1854ல் வடமேற்கு இந்தியாவில் முதல் குன்றிமணியால் கொல்லபட்ட பசுக்கொலை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது. அந்த விசாரணையின் போதுதான் பல உண்மைகள் தெரிய வந்தன

சுதாரிகளால் பசுக்கொலைகளை செய்தவர்கள் இந்திய பட்டியல் சாதிகளில் ஒரு பிரிவினரும், எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாதியை சேர்ந்தவர்களுமான, சாமர் எனப்படுபவர்கள் (Charmar).2 இவர்கள் வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாளத்தில் அதிகம் வாழ்பவர்கள்.

இவர்களில் பெரும்பான்மையோர் தோல் பொருள் தயாரிப்பாளர்கள். கொலையான பசுக்களின் உடலை அகற்றும் சாமர்களுக்கு அப்பசுவின் தோலும் இறைசியும் சொந்தமென்பதால் தோலை அகற்றி விற்பனை செய்துவிட்டு இறைச்சியை உண்ண எடுத்துக்கொள்வார்கள். நோயுற்ற மற்றும் நஞ்சூட்டப்பட்ட மாடுகளின் இறைச்சியை உண்ட இவர்களுக்கு அதனால் எந்த உடல் கோளாறுகளும் உண்டாகவில்லை என்பதை அவர்களுடன் இருந்து கவனித்த ஆய்வாளர்கள் ஆவணப்படுத்தி இருக்கிறார்கள்.

பிராமணர்களுக்கு இறந்த பசுக்களை தொடுவது பாவம் என்பதால் இயற்கையாக மரணிக்கும் எல்லா பசுக்களும் சாமர்களுக்கு அப்போது சொந்தமானது. அவர்கள் இறந்த அப்பசுவின் உடலை அப்புறப்படுத்திவிட்டு தோலை உரித்து பதனிட்டும், இறைச்சியை உணவாகவும் எடுத்துக்கொண்டனர்.

1850களில் இருந்து சாமர்கள் சட்டவிரோதமாக மாடுகளை குன்றிமணி நஞ்சு மற்றும் ஆர்சனிக் உபயோகித்து கொல்லத்துவங்கினர். சுதாரியால் குத்தபட்டு இறந்த பசுக்களின் உடலில் நஞ்சூட்டியதற்கான எந்த தடயமும் இருக்காது என்பதால், அவை இயற்கையாக இறந்ததாகவே நம்பபட்டது. அவற்றின் தோல் பெரும்பாலும் பாட்னா மற்றும் கல்கத்தாவை சேர்ந்த இஸ்லாமிய தோல் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த வியாபாரிகளும் மாடுகளை கொல்லுவதற்கு ஆர்சனிக்கையும் , குன்றிமணி விதைகளையும் அதிக அளவில் சாமர்களுக்கு கொடுப்பதும் வழக்கமாக இருந்தது

தோல் பதனிடும் தொழிற்சாலைகளும், தோல்பொருட்களின் தொழிற்சாலைகளும் விரிவுபடுத்தப்பட்ட 1870 களுக்கு பிறகு இந்த பசுக்கொலைகள் மிக அதிகமாகி சாமர்கள் பசுவைகொல்லும் பிரிவினராகவே அறியப்பட்டனர்..3

முறைப்படுத்தப்பட்ட குற்றமாகவே இக்கொலைகள் நடைபெற்றுவந்த 1880 மற்றும் 1890 களில் மட்டும் 7 மில்லியன் மாட்டுத்தோல்கள் கல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டிருந்தது. 1900-01 ல் மட்டும் சுமார் 113 மில்லியனுக்கு தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது.

பசுக்கொலைகளோடு மனிதர்களும் குன்றிமணி நஞ்சூட்டி கொல்லப்பட்டனர். 1880’ல் பெங்காலின் காவல்துறை ஆவணமொன்றில் 1871’ல் சுதாரியால் கொல்லப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு ஜோடி சுதாரிகளால் உடலின் பக்கவாட்டு பகுதியில் குத்தப்பட்டு இறந்தவரும், உறங்குகையில் சுதாரியால் குத்தப்பட்டு, சுதாரி நுனியை சதையை தோண்டி அகற்றிவிட்டாலும் 3 நாட்களுக்கு பிறகு உயிரிழந்த மற்றொருவரும், கன்னங்களில் சுதாரி குத்தப்பட்டதால் உயிரிழந்த இன்னொருவருமாக, இந்த கொலைகள் அந்த ஆவணத்தில் விளக்கமாக பதிவாகி இருக்கின்றன்.

குற்றவாளிகளான சாமர்கள் மிகுந்த வறுமையில் இக்கொலைகளை மிகக்குறைந்த கூலிக்காகவும், செய்திருப்பதும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது ஒரு கொலைக்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கூலி 16.5 ரூபாய்கள் தான்.

1865-69 வட இந்தியாவில் மட்டும், 1462 பசுக்கள் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தன. வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கொல்லப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 1900;ல் உச்சத்தை எட்டியது. அனைத்து கொலைகளையும் சாமர் இனத்தவர்களே செய்தனர்.

அக்கொலை விசாரணைகள், பல கைதுகளுக்கு பிறகு சாமர்கள் ஆர்சனிக் மற்றும் குன்றிமணிகளை வைத்திருப்பது குற்றம் என அறிவிக்கப்பட்டு அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். ஆயினும் பசுக்கொலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. 1899ல் பெங்காலில் 148 மாடுகள் இறந்ததை ஆராய்ந்த வேதியியல் ஆய்வாளர் இறந்தவைகளில் 75 சதவீதம் நஞ்சூட்டப்பட்டிருந்ததை தெரிவித்தார்.

இறந்த விலங்குகளின் மாமிசத்தை உண்பதாலும் அவற்றின் தோலை அகற்றி விற்பதாலும், அவர்களின் சுத்தமின்மை காரணமாக தீண்டத்தகாதவர்களாக உயர்குடியினரால் அக்காலத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட இனமாக இருந்த சாமர்கள் இப்பசுக்கொலை விசாரணைகளின் போது பல அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் சந்தித்தனர். காவல்துறையினரின் மிக இறுக்கமான கட்டுப்பாடுகளினாலேயே இப்பசுக்கொலைகள் மெல்ல மெல்ல குறைந்ததாக சொல்லப்படுகின்றது.

.ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் அமர் சித்ர கதா வில் வங்காளத்தில் உண்டான ஒரு பஞ்சத்தின் போது மக்களுக்கு வித்யாசாகரும் அவரது தோழர்களும் உணவு மற்றும் உணவு பொருட்களை விநியோகித்துக் கொண்டிருக்கையில் ஒரு சாமருக்கு எண்ணையை தரப்போன அவரது தோழர் மிகத் தொலைவில் நின்று அவருக்கு வழங்கியதை கண்டித்து, வித்யாசாகர் சாமரை தொட்டுத் தழுவி ’’இவரைத் தொட்டால் ஒன்றுமில்லை’’ என்று சொல்வது போல் ஒரு கதையில் சித்தரிக்கபட்டிருக்கிறது.

இந்திய தலித் பிரிவில் ஒரு துணை பிரிவான இவர்களின் பெயரான சார்மர் அல்லது சாமர் என்னும் சொல் ’’தோல் பதனிடுபவர்’’ என்று பொருள் கொண்ட சார்மகரா- ‘Charmakara’ என்னும் சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானது.

இந்திய தொன்மங்களில் சாமர்களின் தோற்றம் பற்றிய கதைகள் பல உண்டு. உயர்குடியில் பிறந்த, இறந்த பசுவின் உடலை வேறு வழியின்றி அகற்றிய இளைஞன் ஒருவனே முதல் சாமர் என்றும், இறந்த எருதின் உடலை தனியே அகற்ற முடியாத உயர்குடி இளைஞன் ஒருவனுக்கு சிவன் உதவிசெய்து, இறந்த பசுவின் உடலின் மீது சிறுநீர் கழிக்க சொல்லிய போது அந்த உடலிலிருந்து எழுந்து வந்தது முதல் சாமர் என்றும் கதைகள் உள்ளன

இமாச்சலபிரதேசம், டில்லி, ஹரியானா, பீகார், பஞ்சாப் உத்தரபிரதேசம் மற்றும் நேபாளில் இவர்களுக்கு ’’சாம்பார் போளி, சாம்பாரி மற்றும் சாம்ரி எனவும் பெயர்களுண்டு. செருப்பு தைப்பது, தோல் பதனிடுதல் மற்றும் விவசாய வேலைகளை செய்துவந்த இவர்களில் ஏராளமானோர் இந்திய ராணுவத்தில் பணி புரிந்திருக்கிறார்கள் என்கிறது வரலாறு.

சுமார் 90 மில்லியன் சார்மர்கள் இந்தியாவில் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்புகள் தெரிவிக்கின்றன. அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 16 சதவீதம் சாமர்கள். தற்போது அவர்களில் பலர் மிகப்பெரிய சமூக அந்தஸ்துடன் இருக்கிறார்கள்

இப்போது பஞ்சாப்பில் இவர்கள் இரு பிரிவினராக ஆதிதர்மிகள் மற்றும் ரவிதாஸர்கள் என்று பெரும் செல்வாக்குடைய இனத்தவர்களாக இருக்கிறார்கள். பல பஞ்சாபி சாமர்கள் ராணுவத்தில் உயர் பதவியில் இருக்கிறார்கள் பஞ்சாபின் சம்கிலா உள்ளிட்ட பல பிரபல பாடகர்களும் கவிஞர்களும் இந்த பிரிவை சேர்ந்தவர்கள் .

இந்திய ராணுவத்தின் மிக புகழ்பெற்ற, ஏராளமான விருதுகளை வழக்கமாக பெற்றுக்கொண்டிருக்கும் படைப்பிரிவான சீக்கிய காலாட்படை, பெரும்பாலும் சாமர் மற்றும் மஷாபி சீக்கியர்களை கொண்டுள்ளது.

முன்னாள் இந்திய துணை பிரதமர்- ஜகஜீவன் ராம், பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் கன்ஷிராம் மற்றும் நான்கு முறை உத்திரபிரதேச முதலவராக இருந்த மாயாவதி ஆகியோர் இந்த பிரிவை சேர்ந்தவர்கள்

உலகம் முழுவதும் தாவரத்திலிருந்து பெறப்படும் விஷத்தில் முதல் இடம் இந்த குன்றி மணிக்குத்தான்.4 ஒரு மனிதனைக் கொல்ல ஒரே ஒரு குன்றிமணி போதுமானது. குன்றிமணியின் பயன்களையும் நச்சுத்தன்மையையும் குறித்து உலகின் பல பாகங்களிலும் பல நூல்களிலும், ஆய்வறிக்கைகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு களைச்செடி போல எங்கும் படர்ந்து வளர்ந்து இருக்கும், பட்டாணி குடும்பமான ஃபேபேசியை சேர்ந்த குன்றிமணி உறுதியான நடுத்தண்டும், மெல்லிய கிளைத்தண்டுகளும், சிறிய இளம்பச்சை கூட்டிலைகளும், அவரை போன்ற காய்களுடன் மரங்களிலும், புதர்களிலும் பற்றி படர்ந்து வளரும் ஒரு பல்லாண்டு கொடித் தாவரம்.

குன்றிமணி செடியின் தாவர அறிவியல் பெயர் Abrus precatorius. கிரேக்க மொழியில் Abrus என்பது அழகிய மென்மையான என்னும் பொருளில் இச்செடியின் அழகிய இலைகளை குறிக்கின்றது, precatorius என்பது பிரார்த்தனைக்குரிய என்று பொருள்படும். குன்றிமணி விதைகள் ஜெபமாலைகள் செய்ய பெரிதும் பயன்பாட்டில் இருந்ததால் சிற்றினத்துக்கு இந்த பெயரிடப்பட்டது. ஆப்ரஸ் பேரினத்தில் 17 சிற்றினங்கள் இருப்பினும் உலகெங்கிலும் அழகிய விதைகளின் பொருட்டு பிரபலமாயிருப்பது குன்றிமணி எனப்படும் Abrus precatorius கொடிகளே! (Abrus precatorius L.)

ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இச்செடியின் விதைகளான குன்றிமணிகள் பல நூற்றாண்டுகளாக ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்பட்டன,.இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாவரம் ஒரு ஆக்கிரமிப்பு தாவரமாக ஹவாய், கரீபியன் தீவுகள், பாலினேஷியா மற்றும் அமெரிக்காவின் சில குறிப்பிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டது. ஃப்ளோரிடாவின் உயரமான மனிதர்களின் நடமாட்டமே இல்லாத ஊசியிலை மலைக்காடுகளில் கூட இவை பரவியுள்ளன

மிக ஆழத்தில் வேறூன்றி இருக்கும் குன்றிமணியின் உறுதியான வேர்கள் காட்டுத்தீயில் கூட அழியாது மாற்றடுக்கில் அமைந்திருக்கும் இறகுகளை போன்ற,மிதமான இனிப்பு சுவையுடன் இருக்கும், அழகிய கூட்டிலைகள் 8 லிருந்து 20 சிற்றிலை ஜோடிகளை கொண்டிருக்கும். 10லிருந்து 20 அடி நீளம் வளரும் இக்கொடித்தண்டுகள் முற்றிய பின்னர் நல்ல உறுதியானவைகளாக இருக்கும்.

வெள்ளையும் இளஞ்சிவப்பும் கலந்த சிறு மலர்கள் கொத்தாக மலரும்.3 செ மீ நீளமுள்ள காய்கள் 1 செ மீ அளவுள்ள 3 அல்லது 5 கடினமான பளபளப்பான அடர் சிவப்பில் கருப்பு மருவுடன் இருக்கும் அழகிய விதைகளை கொண்டிருக்கும். இவையே குன்றிமணி எனப்படுகின்றன.

குன்றிமணியின் பல்வேறு ஆங்கில பெயர்கள்; jequirity, Crab’s eye, rosary pea, paternoster pea, love pea, precatory bean, prayer bead, John Crow Bead, coral bead, red-bead vine, country licorice, Indian licorice, wild licorice, Jamaica wild licorice, Akar Saga, coondrimany, gidee gidee, Jumbie bead ratti/rettee/retty, goonjaa/gunja/goonja ,weather plant. & paternoster pea, குறுநறுங்கண்ணி, ஆவு, காகபீலி, குஞ்சி,குலாகஞ்சி குஞ்சிரம், குண்டுமணி, குந்துமணி, குன்றி, மணிச்சிகை,குன்னி குரு பவளக்குன்றி, நஞ்சி, நாய்க்கரந்தை, சிரீடம் உள்ளிட்ட பல பெயர்களால் அறியப்படும் குன்றி மணி நூற்றாண்டுகளாக சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் பல்வேறு சிகிச்சைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

இதன் வண்ணமயமான பளபளக்கும் மணிகளைப்போல இருக்கும் விதைகளால் இத்தாவரம் பரவலாக அறியப்படுகிறது .குன்றிமணி விரைவில் பல்கி பெருகும் இயல்புடையது.

குன்றிமணி விதைகளில் இருக்கும் ஆப்ரின் நஞ்சு (Abrin) 5 மனிதர்களையும், விலங்குகளையும் கொல்லும் தன்மையுடையது. ஆப்ரின் நஞ்சில் A B என இரு முக்கியமான புரதங்கள் உள்ளன. இவையே மனிதர்களின் உடலில் புரதம் உருவாகாமல் தடுத்து பிற மோசமான விளைவுகளை துரித படுத்துபவை. ஒரே ஒரு மூலக்கூறு ஆப்ரின் மனித உடலின் 1500 ரிபோசோம்களை ஒரு நொடியில் செயழிழக்க செய்துவிடும்.

ஆப்ரினின் நச்சுத்தன்மை ஆமணக்கு விதைகளில் இருக்கும் ரிசினின் நச்சுத்தன்மையை காட்டிலும் (Ricin) இருமடங்கு அதிகம் எனினும் இரண்டிற்குமான நஞ்சின் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். ஆமணக்கின் கனியை கடித்து மென்று விழுங்கினால் சிகிச்சைக்கு பிறகு பிழைப்பது ஓரளவுக்கு சாத்தியம் ஆனால் குன்றிமணியை கடித்து விழுங்கினால் உயிரிழப்பு நிச்சயம் உண்டாகும் கடிக்காமல் தவறுதலாக முழுதாக விழுங்கப்பட்ட குன்றிமணி எந்த நோய் அறிகுறியையும், ஆபத்தையும் விளைவிப்பதில்லை.ஆனால் இவ் விதையை எரிப்பதனால் ஏற்படும் புகையை சுவாசிப்பதால் கூட நரம்பு மண்டலம் தொடர்பான கடுமையான சில நோய்கள் உருவாகும்..மனிதர்களின் உயரிழப்புக்கு 0.1 மி கி அளவு ஆப்ரினே போதுமானதாக இருக்கிறது, குதிரைகளும் மனிதர்கள் அளவுக்கே குன்றிமணி நஞ்சினால் பாதிப்படைகின்றன.

.குன்றிமணியை கடித்து உண்டால் வாந்தி, கடும் காய்ச்சல், தொடர்ந்து அதிக அளவில் எச்சில் ஒழுகுதல், ஈரல் சேதம், சிறுநீரக செயழிழப்பு, கண்களில் ரத்தம் வடிதல் வலிப்பு, சிகிச்சை அளிக்காத பட்சத்தில் உயிரிழப்பு ஆகியவை உண்டாகும்.

முழு சிவப்பிலிருக்கும், கருப்பும் சிவப்புமான மணிகள் ஆபரணங்களில் அதிகமாக இணைக்கப்படுகின்றன. இவற்றை துளையிட்டு ஆபரணங்களாக்கும் தொழிலாளிகளுக்கும் இந்த நஞ்சினால் ஆபத்துகள் உண்டாவதாக ஆதரங்களற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரின் நஞ்சை குறித்த மிக முக்கியமான 256 ஆய்வறிக்கைகளில் ஒன்றில் கூட குன்றிமணியை தொழில் ரீதியாக கையாளுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை

முழு வெள்ளை, சிவப்பும் கருப்பும் கலந்தது, முழு சிவப்பு, முழு கருப்பு, பச்சை, நீலம் மஞ்சள் என இம் மணிகளில் பல வகைகள் உள்ளன.அனைத்து விதைகளும் கடும் நஞ்சுள்ளவை. மருத்துவர்கள் அளிப்பதை தவிர இத்தாவரத்தின் எந்த பாகங்களையும் சுயமாக முயன்று பார்ப்பதும், மருந்தாக உபயோகிப்பதும் பெரும் ஆபத்தை விளைவிக்கும்.

மருத்துவமனைகளில் குன்றிமணி நஞ்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஞ்சின் வீரியத்தை குறைக்க செயற்கை சுவாசம் அளித்து இரத்தை சுத்தம் செய்வது போன்ற சிகிச்சைகள் அளிக்கப்படும். குன்றிமணி நஞ்சுக்கு முறிமருந்து என்று ஏதும் இல்லை என்பதும் இதன் ஆபத்தை அதிகரிக்கிறது.

1877ல் வெளியான உதய் சந்த் தத்தின் ’’இந்துக்களின் மருந்துசரக்குகள்’’ (The Materia Medica of the Hindus) நூலில் குன்றிமணியின் விவரிப்பும் அதன் பாலுணர்வு தூண்டுதல் உள்ளிட்ட பல மருத்துவ குணங்களும் விரிவாக குறிப்பிடபட்டுள்ளது .

அமரசிம்மரின் பிரபல சமஸ்கிருத நூலான ”அமரோக்‌ஷா” வின் காடுகளிலிருந்து கிடைக்கும் மருந்து பொருட்கள் பற்றிய இரண்டாவது அத்தியாயத்தில் குன்றிமணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1889 ல் வெளியான ஆஸ்திரேலியாவின் முக்கிய தாவரங்கள் என்னும் நூலில் இத்தாவரத்தின் பாகங்களின் பல்வேறு மருத்துவ பயன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் 99 தாவரங்களில் குறுநறுங்கண்ணி எனப்படுவது குன்றிமணியே.இவை நாளடைவில் பிற விதைகளைப்போல சுருங்குவதில்லை என்பதால் தங்க நகைகளில் இவற்றை பதிப்பது பல நாடுகளில் வழக்கத்தில் இருக்கிறது.

.

மேற்கிந்திய தீவுகளில் குன்றிமணி பதிக்கப்பட்ட கைப்பட்டைகளை அணிந்துகொள்வது தீய ஆவிகளில் இருந்து காப்பாற்றும் என்னும் நம்பிக்கை உள்ளது.

இவ்விதைகள் எடையில் மிகவும் சீரானவை, நீர் ஊடுருவ முடியாத கடின விதையுறையின் காரணமாக வெவ்வேறு ஈரப்பத நிலைமைகளின் கீழ் கூட இவற்றில் ஈரம் புகுவதில்லை. குப்பையில் இருந்தாலும் குன்றி மணி சுருங்காது என்னும்பழஞ்சொல்லும் உண்டு;

குன்றிமணி விதைகள் தங்கத்தை துல்லியமாக அளவிட முன்பு பயன்பாட்டில் இருந்தது .இந்தியாவில் குன்றிமணியை கொண்டு அளவிடும் அளவைகளுக்கு ராட்டை என்று பெயர். தோராயமாக 130 மி கி எடை கொண்டிருக்கும் ஒரு குன்றிமணி 2 கோதுமை மணிகளின் எடைக்கும், 3 பார்லி மணிகளின் எடைக்கும் 4 அரிசிகளின் எடைக்கும் 18 கடுகுகளின் எடைக்கும் சமமானதாக இருக்கும்.

8 ராட்டை = 1 மாஷா

12 மாஷா = 1 டோலா (11.6 கிராம்)

மூன்றே முக்கால் குன்றி மணி எடை ஒரு பணவெடை.

முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை ஒரு விராகன் எடை.

இரண்டு குன்றி மணி எடை ஒரு உளுந்து எடை.

பத்து விராகன் எடை ஒரு பலம்.

இவ்வாறு பொன்னை அளவிடுதல் போன்ற நுட்பமான நிறுத்தல் அளவுகளுக்கு குன்றிமணி பயன்படுத்தப்பட்டதால் தான் குந்துமணித்தங்கம் என்னும் சொற்பிரயோகம் புழக்கத்தில் இன்னும் கூட இருக்கிறது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் நூல்களிலும் குன்றிமணி குறிப்பிடப்பட்டுள்ளது.

1915 ல் வெளியான பிரஜேந்திரநாத்தின் பண்டைய இந்துக்களின் நேர்மறை அறிவியல் என்னும் நூலில் (The Positive Sciences Of The Ancient Hindus) ஒரு பொற்கொல்லரிடம் பொன் பேசுவதாக வரும் இரு வரிகளில் ’’ நான் முதல் தரமான பொன் என் தரத்தை கருப்பு முகமுடைய மணிகளைக் கொண்டு அளவிட்டுக் கொள்ளலாம்’’என்றிருக்கிறது

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றிமணியை குறிக்கிறது. திருக்குறளில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரே விதை குன்றி மணிதான்.

“புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து’

குன்றிமணியின் சிவப்பு போல் வெளித்தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பார்கள் என்பது இதன் கருத்து.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ – என்னும் மற்றொரு குறள் குன்றினைப் போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில் ஈடுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள் என்கிறது.

திருப்புகழில்,

”குன்றி மணி போல்வ செங்கண் வரி போகி கொண்ட படம்
வீசு மணி கூர்வாய் கொண்ட மயிலேறி அன்று அசுரர் சேனை
கொன்ற குமரேச குருநாதா ”

– என்னும் பாடல் வரிகள். குண்றிமணி போல சிவந்த கண்களையும் கோடுகளையும் உடைய பாம்பு படத்தை வீசும்படி, தனது அழகிய கூர்மையான வாயில் அந்தப் பாம்பை கொத்திக் கொண்ட மயிலின் மீது ஏறி, அசுரர் சேனையைக் கொன்ற குமரேசனே என்கிறது.

முழு வெள்ளையில் இருக்கும் குன்றிமணிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் பாலுணர்வு ஊக்கியாக பயன்படுகிறது. குன்றிமணி கொடியின் இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர் காய்ச்சலுக்கும், இருமல் மற்றும் சளிக்கு மருந்தாகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகளில் விதைகள் கொதிநீரில் இடப்பட்டு நஞ்சு நீக்கிய பின்னர் சிகிச்சைக்கு பயன்படுத்த படுகிறது.

ஆயுர்வேதம் இத்தாவர பாகங்களை விலங்குகளால் உண்டான சிராய்ப்புகள், மற்றும் காயங்களுக்கு மருந்தாக உபயோகிக்கிறது. உள்மருந்தாக வெண்குஷ்டம், ஜன்னி மற்றும் வெறிநாய்க்கடிக்கும் ஆயுர்வேதம் குன்றிமணியிலிருந்து தயாரித்த மருந்தையே கொடுக்கிறது. ஆயுர்வேதம் தலைமுடி வளர்ச்சிக்கு குன்றிமணியை உபயோகப்படுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் இவ்விதைகள் பாலில் 3 மணி நேரம் வேக வைக்கப்பட்ட பின்னரே சிகிச்சையில் பயன்படுத்தப்படும்.

குன்றிமணி விதைகளை பாலில் வேகவைத்து பின்னர் உலர்த்துவது, ஆமணக்கு எண்ணெயில் குன்றிமணி பொடியை கலந்து நஞ்சை நீக்குவது போன்ற இதன் நஞ்சினை நீக்கும் பல்வேறு வழிகளை ”சுத்திசெய்தல்” என்னும் தலைப்பில் சித்தர்கள் விவரித்துள்ளனர்.

இந்தியா, பிரேசில், ஜமைக்கா போன்ற நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகள் குன்றிமணியை கண் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் ,தேனுடன் இலைச் சாற்றை கலந்து வீக்கங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்துகின்றன.

இந்தியாவில் பல மாநிலங்களில் குன்றிமணிகளை பூஜை அறையில் வைத்து பூசை செய்வது வழக்கம். குன்றிமணிகள் பதிக்கப்பட்ட ஆபரணங்களை அணிந்து கொள்வது தீய சக்திகள் நெருங்காது என்னும் நம்பிக்கை இந்தியாவின் பல பாகங்களில் இருக்கிறது

தென்னாப்பிரிக்காவின் ஜுலு மக்கள் குன்றிமணிகளை கொண்டு ஆபரணங்கள் செய்து பொருளீட்டுவதை முக்கிய தொழிலாகவே செய்கின்றனர்.

சுஷ்ருதர் குன்றிமணியின் மருத்துவ உபயோகங்களை குறிப்பிட்டிருப்பதால் மிகபழங்காலத்திலிருந்தே இது மருந்தாக பயன்பட்டு வந்திருக்கிறது என்பதை அறியலாம்

.இந்தியாவைப்போலவே, இலங்கையிலும் மரபு வழி நகைத்தொழில் செய்வோர் தங்கத்தின் நிறையை அளவிடுவதற்கு குன்றிமணிகளைப் பயன்படுத்துவது உண்டு. இலங்கை புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பாரம்பரிய விளையாட்டுக்கள் பலவற்றில் குன்றிமணி பயன்படுத்தப்படும். சீனாவில் இவ்விதை காதலின் சின்னமாக கருதப்படுகிறது.பல்லாங்குழி, தாயம் ஆகிய விளையாட்டுக்களிலும் குன்றிமணியை உபயொகிப்பது இன்றும் தமிழகத்தில் வழக்கமாக இருக்கிறது.

பிள்ளையார் சதுர்த்தியின் போது கைகளால் பிசைந்து வீடுகளில் செய்யப்படும் பிள்ளையாருக்கு கண்களாக குன்றிமணியை பதிப்பது இந்தியா முழுவதிலுமே பொதுவான வழக்கம். குன்றிமணிச் சம்பா என்று சற்றே தடிமனான செந்நிறமுடைய ஒரு சம்பா நெல் வகை தமிழகத்தில் இருந்தது.

கருப்பு குன்றிமணி ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. ராஜஸ்தானில் உள்ள மக்கள் முக்கியமான பூஜைகளை இந்த கருப்பு குன்றிமணி இல்லாமல் செய்யமாட்டார்கள். அங்கு காளியின் அம்சமாக கருப்பு குன்றிமணி கருதப்படுகிறது.

ராஜஸ்தானின் புகழ்பெற்ற நாட்டுபுறப்பாடலான சிர்மி பாடல் குன்றிமணியை குறித்தானது. திருமணமான பெண்ணொருத்தி தன்னை காண புகுந்த வீட்டுக்கு வரும் தன் தந்தையையும் சகோதரனையும் காண குன்றிமணி செடிகளின் மீது ஏறி நின்று பாடும் ”சிர்மி” அங்கு மிகவும் பிரபலமான நாட்டுப்புற பாடல். ராஜஸ்தானில் சிர்மி என்பது குன்றிமணியை குறிக்கும் சொல்

அரளி விதைகள், ஊமத்தை இலைகள், குன்றிமணிகள், ஆமணக்கு கொட்டைகள், செங்காந்தள் வேர் என கொடிய நஞ்சினை கொண்டிருக்கும் தாவரங்களை குழந்தைகள் தவறுதலாக கடித்தும் விழுங்கியும் உயிராபத்தை வரவழைத்துக் கொள்வது பல வளரும் நாடுகளில் மிக அதிகம் நிகழ்கிறது.

ஆச்சர்யபடும்படியாக இந்த தாவரம் மிக அதிகமாக காணப்படும் இலங்கையில் இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு கடந்த பத்து ஆண்டுகளில் 9 குழந்தைகள் மட்டுமே குன்றிமணியை கடித்ததால் மருத்துவமனைக்கு வந்தவர்கள். அதேபோல் குன்றிமணி அதிகம் விளையும் கேரளாவிலும் இதனால் பாதிப்படைபவர்கள் எண்ணிக்கை மிக குறைவாகவே இருக்கிறது.

கேரளா குருவாயூரில் குழந்தைகளுக்கு சோறூட்டும் அன்னபிரசன்னம் நிகழ்வில் குழந்தைகள் கைகளால் அளைவதற்கென்று உருளியில் நிறைக்கப்பட்டிருக்கும் சிவப்பு நிற மணிகள் மலையாளிகளால் சில சமயம் குன்னிக்குரு என்றழைக்கப் பட்டாலும் அவை குன்றிமணிகள் அல்ல Adenanthera pavonina என்னும் மஞ்சாடியின் விதைகள்

தாவர நஞ்சினால் உலகெங்கிலும் மிக அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே! குன்றிமணியின் ஆபத்துக்களில் முதலாவது இதை உட்கொண்ட பலமணி நேரம் கழித்தே அறிகுறிகள் தெரிவது, இரண்டாவது இதை உட்கொள்ளும் குழந்தைகள் பெரும்பாலும் வீட்டிலிருந்து தூரத்தில் இந்த தாவரம் வளர்ந்திருக்கும் இடங்களிலோ, விளையாடும் இடங்களிலோ அலல்து பள்ளியிலோ இருப்பதால் விஷயம் பெரியவர்களுக்கு தெரியவர நேரம் ஆகிவிடுகிறது மூன்றாவதும் மிக முக்கியமானதும் குன்றிமணி இத்தனை நஞ்சுள்ளதென்பது அநேகம் பேருக்கு தெரியாது என்பதுதான்.

குன்றிமணி நம் சுற்றுப்புறங்களில் மிகச் சாதாரணமாக தென்படும் ஒரு களைத்தாவரம். நம் கலாச்சாரத்தில் பல சடங்குகளில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாகவும் இருக்கும் இதன் அழகிய விதைகளை குழந்தைகள் அதிகம் கையாளும், பயன்படுத்தும் சாத்தியங்களும் அதிகமிருப்பதால் குன்றிமணியின் நச்சுத்தன்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே அதன் விபத்துகளை தவிர்க்க முடியும்.

பள்ளிக்கூடங்களில் சுற்றுபுறங்களில் எளிதாக காணப்படும் இதுபோன்ற நச்சுத் தாவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உரைகளை, நாடகங்கள் நிகழ்ச்சிகளை அவசியம் நடத்த வேண்டும். A for Apple, C for Carrot என்று கற்றுக் கொள்வதோடு நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களையும் பள்ளியில் அடிப்படை கல்வியிலேயே கற்பிக்க வேண்டும். இதன் மூலம் தாவரங்களை குறித்த முறையான அறிவும், ஆபத்துக்களை தவிர்க்கும் அறிதலும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே ஏற்படும்.

மேலும் தகவல்களுக்கு:

  1. Detective Footprints, Bengal, 1874-1881: With Bearings for a Future Course

Major h m ramsey dysp bengal.

2.Chamar – Wikipedia

History of Cattle Poisoning in British India – Telangana Mata

4. 10 Most Poisonous Plants in the World | Planet Deadly

5.Abrin – Wikipedia

சொல்வனம் தளத்தில்

நீலக்கற்றாழையும் டெக்கீலாவும்

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ (Jalisco) மலைப் பிரதேசமொன்றில், அட்டோடோனில்கோ நகரில், மிக வறிய குடும்பமொன்றின் தலைவர் திடீரென இறந்தபோது அன்னையையும் ஏழு சகோதர சகோதரிகளையும் காப்பாற்றும் பொறுப்பைக் குடும்பத்தின் மூன்றாவது மகனாக இருந்தாலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் இருந்த 15 வயதான ஹூலியோ ஏற்றுக்கொண்டான். (ஹூலியோ கொன்ஸாலெஸ் ஃப்ரௌஸ்டோ எஸ்ட்ராடா- Julio González-Frausto Estrada)1 தனது மாமாவின் கற்றாழை வயல்களிலும், வைன் திரவத்தைப் பழமையாக்கும் நிலவறைகளிலும் மிகக் கடுமையாக வேலைசெய்து ஹூலியோ பெற்ற வாரச் சம்பளமான ஒன்பது பேஸோக்கள் எட்டு நபர்களடங்கிய அவரது குடும்பத்தின் பசித்தீயை அணைக்கப் போதுமானதாக இல்லை.

மேலும் கடுமையாக உழைக்க வேண்டிய நிர்பந்தத்தில், தனிப்பட்ட முறையில் மெக்ஸிகோவில் அப்போது பிரபல பானமாக இருந்த கற்றாழை மதுவைச் சிறு மரப் பீப்பாய்களில் அடைத்து, அருகில் இருக்கும் நகரங்களுக்குக் குதிரையில் கொண்டுபோய் விற்கத் தொடங்கிய ஹூலியோவிற்கு ஒரு நாளைக்கு 9 பேஸோக்கள் கிடைத்தன. இந்தச் சிறு வணிக முயற்சியில் கற்றாழை மதுவிற்கு இருந்த தேவையும் அதன் சந்தைப்படுத்தலின் வெற்றிகரமான சாத்தியங்களும் அந்த சிறுவனுக்குத் தெளிவாக தெரிந்தன. எட்டு வயதிலிருந்தே மாமாவின் கற்றாழை வயல்களில் விவசாய வேலைகளில் உதவி இருந்த ஹூலியோ மெக்ஸிகோவின் நிலமும், மண்ணும், காலநிலையும் கற்றாழை வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவை என்பதையும் அறிந்திருந்தான்.

எப்படியும் முன்னுக்கு வரவேண்டும் என்னும் அனல் உள்ளே எரிந்து கொண்டிருக்கையில் அந்த நகரின் பெரும் செல்வந்தரிடம் கையில் ஒற்றை பேஸோகூட இல்லாத ஹூலியோ தனக்கு 20 ஆயிரம் பேஸோக்கள் கடனாக கொடுத்தால் தானொரு கற்றாழை வடிசாலையை வாங்க முடியுமென்று சொன்னான். அச்சிறுவனின் அசாதாரணமான துடிப்பும், வேகமும் அவனுக்கு இருபதாயிரம் பேஸோக்களை அவரிடமிருந்து பெற்றுக்கொடுத்தன. நீரூற்று என்னும் பொருள் கொண்ட ‘La Primavera’ (‘Spring’) வடிசாலையை ஹூலியோ சொந்தமாக வாங்கியபோது அவருக்கு வயது 14தான்.

அன்று ஹூலியோ விதைத்த அசல் டெக்கீலாவின் விதைதான் இப்போது மெக்ஸிகோவில் விருட்சமாகி இருக்கிறது.

1942ல் வடிசாலையை வாங்கிய ஹூலியோ, 1951 லேயே மிகச்சிறந்த டெக்கீலா சந்தைப்படுத்தலுக்காகவும், டெக்கீலாவின் தரத்துக்காகவும் ’’டான்’’ என்னும் பட்டத்தை பெற்றார். அப்போதிலிருந்து அவர் பெயருக்கு முன்னால் 2012ல், அவரின் 87 ஆம் வயதில் நிறைவாழ்வு வாழ்ந்து இறக்கும்வரை ’டான்’ என்னும் அடைமொழி இருந்தது .

நீலக்கற்றாழை சாகுபடியிலும் ஈடுபட்டிருந்த ஹூலியோ வயலில் ஒவ்வொரு நீலக்கற்றாழைகளையையும் தன் கையாலேயே நடவு செய்தார். அதற்கு முன்னதாக மெக்ஸிகோ வயல்களில் நெருக்கமாக நடவுசெய்தது போலல்லாது வரிசையாக நடப்படும் கற்றழைகளுக்கிடையேயான இடைவெளியைக் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக்கினார். இடையூறின்றி நன்கு பரவி விரிந்து பெரிதாக வளரத் துவங்கிய கற்றாழைகள் நன்கு முதிரவும் அவகாசமளித்துப் பின்னரே அறுவடை செய்தார்.

வயலில் ஆகப்பெரியதாக இருந்த நீலக்கற்றாழையின் சதைப்பற்றான அன்னாசிப் பழம் போன்ற அடிப்பகுதியை அறுவடைசெய்து, 76 மணி நேரம் சுழற்சி முறையில் வேகவைத்த பிறகு நொதிக்கச் செய்து தான் உருவாக்கிய டெக்கீலா பானத்தை (Tequila Reposado) தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் மட்டுமே அளித்தார் ஹூலியோ. அந்த டெக்கீலா அதற்கு முன்னர் உலகம் கண்டிராத சுவையும், மணமும், குணமும் கொண்டிருந்தது.

அப்போதெல்லாம் மெக்ஸிகோவில் மதுபான விடுதிகளில் மேசையில் நடுவில் இருக்கும் டெக்கீலா பாட்டில்களின் உயரம் எதிரில் இருப்பவர்களை மறைத்துக் கொண்டு இருக்குமளவுக்கு இருந்தது. இதனால் டெக்கீலா அருந்துபவர்கள் பெரும்பாலும் பாட்டில்களை மேசைக்கடியில் வைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. ஹூலியோ டெக்கீலாவை நிரப்பும் பாட்டில்களின் வடிவமைப்பில் நூற்றாண்டுகளாக இருந்த மரபை உடைத்து, உயரமான பாட்டில்களுக்கு மாற்றாகச் சிறிய தட்டையான அழகிய வடிவங்களில் பாட்டில்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1985 ல் ஒரு குடும்ப விருந்தில் ஹூலியோ தனது சொந்தத் தயாரிப்பான டெக்கீலாவை, தட்டையான, சிறிய சதுர கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விருந்தினர்களுக்கு அளித்தார். அந்த டெக்கீலா அன்றைய விருந்தின் பேசுபொருளான அந்தக் கணத்தில் துவங்கியது வெற்றிகரமான டெக்கீலா சகாப்தம். விருந்தில் கலந்துகொண்ட பெரும் தொழிலதிபரொருவர் ஹூலியோவிடம் இரண்டு வெற்றுக் காசோலைகளை கொடுத்து ’’அதை எப்போது வேண்டுமானாலும் விரும்பிய தொகைக்கு பணமாக்கிக் கொள்ளலாம், ஆனால் தனக்கு ஒரு வருடத்துக்குள் 100 பீப்பாய்கள் அதே டெக்கீலா கொடுத்துவிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். ஹூலியோவின் சொந்த தயாரிப்பான டெக்கீலாவும், அழகிய சதுர பாட்டில்களும் பின்னர் வெகு வெகுவாகப் பிரபலமடைந்தன.

மது விடுதிகளிலும் வீடுகளிலும் மேசைகளில் ஹூலியோ உருவாக்கிய அழகிய பாட்டில்கள் வீற்றிருப்பது பெரும் கௌரவமென்று எண்ணுமளவிற்கு அவை புகழ் பெற்றபோது, அந்நகரின் மிகப்பெரிய வடிசாலையை அமைத்தார் ஹூலியோ. அடுத்த 40 வருடங்களுமே டெக்கீலாவின் தரக் கட்டுப்பாட்டிலும் நீலக்கற்றாழை விவசாயத்திலுமே தமது முழுக் கவனத்தையும் செலவழித்தார் டெக்கீலா வர்த்தகத்தின் ’’டான் ஹூலியோ.’’

ஹூலியோவின் 60 வருட அயராத உழைப்பில் அவரது வடிசாலை உலகின் ஆகச்சிறந்த டெக்கீலா உற்பத்தி நிறுவனமாக இப்போதும் நிமிர்ந்து நிற்கிறது இளைஞனாக அவர் தொடங்கிய ‘லா ப்ரீமவேரா’ (’La Primavera’), இன்றும் வெற்றிகரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. ஜான் ஹூலியோ என்ற அவரது பெயரில் இருக்கும் டெக்கீலா மெக்ஸிகோவின் அடையாளங்களில் முதன்மையானது.

மெக்ஸிகோவின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் நகரொன்றில் 16ஆம் நூற்றாண்டில் முதன் முதலாகத் தயாரிக்கப்பட்ட, மெக்ஸிகோவின் அடையாளங்களின் ஒன்றான டெக்கீலாவின் வரலாறும் சுவையானதுதான். 1666 வரை அதிகாரபூர்வமாக டெக்கீலா என்பது ஒரு நகரமாக நிறுவப்பட்டிருக்கவில்லை. அந்த நகரில்தான் முதல் முதலாக இந்த மதுபானம் தயாரிக்கப்பட்டது.

இந்த மது பானத்திற்கு, இரண்டு தெய்வங்களைக் கொண்டிருந்த மெக்ஸிகோவின் பழங்குடியினரான அஸ்டெக்குகள் ஏதேச்சையாக மின்னல் தாக்கிய கற்றாழைச் செடிகளிலிருந்து வடிந்த இனிப்பான திரவத்தைச் சுவைத்தார்கள். 1521ல் அந்த திரவத்தைப் புளிக்கவைத்து புல்கே (Pulque) என்னும் மதுவை அருந்திவந்தனர்.

ஆஸ்டெக்குகளின் தொன்மமொன்று கற்றாழை மதுபானங்களுக்கான பெண் தெய்வமான ‘மயாஹூவெல்’ (Mayahuel) தனது குழந்தைகளுக்கும், 400 முயல்களுக்கும் தனது ஏராளமான முலைகளால் டெக்கீலாவை அருந்தக் கொடுத்ததாக சொல்லுகிறது.

1519ல் மெக்ஸிகோவை ஆக்கிரமித்த ஸ்பெயின் தேசத்தினர், தாங்கள் கொண்டுவந்த பிராந்தியின் இருப்புக் குறையத் தொடங்கியபோது, மெக்ஸிகோவின் தாவரங்களிலிருந்து மது தயாரிக்க முனைந்தனர். அப்போது அவர்கள் கற்றாழைச் சாறைப் புளிக்கச்செய்து மெஸ்கால் (mezcal) என்னும் வைன் பானத்தை உருவாக்கினார்கள். மெக்ஸிகோவில் ஸ்பெயின் நாட்டினர் கற்றாழை மது உண்டாக்கியதற்கான ஆவணம் 1608ல் கிடைத்திருக்கிறது

17ஆம் நூற்றாண்டில் இந்தக் கற்றாழை மது தயாரிக்கப்பட்ட டெக்கீலா நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பிரபலமாகத் தொடங்கியது. 1750ல் முறையாக டெக்கீலா தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டது ஸௌஸா குடும்பத்தினர் (Don Cenobio Sauza) 2 சாதாரண பச்சைக் கற்றாழைகளைவிட நீலக்கற்றாழைகளிலிருந்து தரமான டெக்கீலாவை உண்டாக்கலாமென்று கண்டறிந்த பின்னர் டெக்கீலா தயாரிப்பில் பெரிய புரட்சி உண்டானது.

நீலக்கற்றாழை டெக்கீலா மெக்ஸிகோவில் உள்ள குவானஹுவாடோவில் 1800ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் முதல் முறையாகப் பெருமளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டது.

1873ல் ஸௌஸா டெக்கீலாவின் நிறுவனரும் 1884-1885ஆம் ஆண்டுகளிலிருந்து டெக்கீலா நகராட்சித் தலைவராகவும் இருந்த டான் செனோபியோ ஸௌஸோ மூன்று பீப்பாய்களிலும், ஆறு சீசாக்களிலுமாக மெஸ்கால் டெகீலாவை மெக்சிகோவின் எல்லயைத் தாண்டி அமெரிக்காவிற்கு எடுத்துச் சென்றதுதான் டெக்கிலாவின் முதல் ஏற்றுமதி. டான் சினோபியோ ஸௌஸாவே டெகீலாவின் தந்தை எனக் கருதப்படுகிறார். அதன்பின்னர் டெக்கீலா உருவாக்குவதை அவர்களின் முக்கியக் குடும்பத் தொழிலாகக் கொண்டார்கள்:

டான் செனோபியோவின் பேரனான டான் பிரான்சிஸ்கோ ஹாவியர் “நீலக்கற்றாழைகள் இல்லாத இடத்தில் டெக்கீலா இல்லை!” என்பதை வலியுறுத்தியதற்காக சர்வதேச கவனத்தைப் பெற்றார். உண்மையான டெக்கீலா ஹாலிஸ்கோ மாநிலத்தில் இருந்து மட்டுமே வரமுடியும் என்ற நடவடிக்கைக்கு இவருடைய முயற்சிகள்தான் முக்கிய காரணமாயிருந்தன.

டெக்கீலா நகரில் தயாரிக்கப்பட்ட நீலக்கற்றாழை மது டெக்கீலா என்ற பெயரிலேயே 1890களில் இருந்து அழைக்கப்படலாயிற்று.

1902ல் அதிகாரபூர்வமாக நீலக் கற்றாழை மது டெக்கீலா என்றும் பிற கற்றாழை மது வகைகள் மெஸ்கால் (Mezcal) என்றும் தெளிவான பெயர்களில் வேறுபடுத்தப்பட்டன.. இப்போதைய அசல் டெக்கீலா 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மெக்ஸிகோவின் குவானாஹுவாடோவில் உருவாக்கப்பட்டது.

1974ல் டெக்கீலா மெக்ஸிகோவின் அறிவுசார் சொத்து (Intellectual Property of Mexico) என மெக்ஸிகன் அரசு அறிவித்தது அப்போதிலிருந்து டெக்கீலா மெக்ஸிகோவில் மட்டுமே தயாரிக்கப்பட வேண்டும் என்னும் விதியும் உண்டானது. பிற நாடுகள் டெக்கீலா தயாரிப்பது சட்ட விரோத செயலாகும்.

1994ல் தோற்றுவிக்கப்பட்ட டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில் (TRC- Tequila Regulatory Council) டெக்கீலாவின் தரம் சுவை மணம் குறித்த ,தளர்வுகளற்ற கூடுதல் நியதிகளையும் உருவாக்கியது. இந்த குழுமத்தில் மெக்ஸிகன் அரசு, நீலக்கற்றாழை விவசாயிகள்,டெக்கீலா தயாரிப்பாளர்கள், மற்றும் சந்தைப் படுத்துபவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். 1377 டெக்கீலா வணிக முத்திரைகள் (பிராண்டுகள்) 137 தயாரிப்பாளர்களால் டெக்கீலா ஒழுங்குமுறை குழுமத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது

நூற்றாண்டுகளாக பிரபலமான, மெக்ஸிகோவின் அடையாளங்களில் ஒன்றான நீலக் கற்றாழை மதுவான டெக்கீலா இப்போதும் மெக்ஸிகோ நாட்டின் ஹாலிஸ்கோ மாநிலத்தின் லாஸ் ஆல்டோஸ் மேற்கு மலைத் தொடர்களில் வளரும் நீலக்கற்றாழையிலிருந்து மட்டும் பெறப்படுகிறது.

டெக்கீலா நகரைச் சுற்றியுள்ள பகுதியின் சிவப்பு எரிமலை மண் நீலக்கற்றாழையின் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது, அங்கே ஒவ்வொரு ஆண்டும் 300 மில்லியனுக்கும் மேற்பட்ட நீல கற்றாழைச் செடிகள் அறுவடை செய்யப்படுகின்றன. ஹாலிஸ்கோ மாநிலத்திலும், குவானாஹுவாடோ, மீச்சோகான், நய்யாரீத் மற்றும் டமாலிபாஸ் மாநிலங்களின் பகுதிகளில் மட்டுமே இவை தயாரிக்கப்பட வேண்டும் என்று மெக்ஸிகன் சட்டங்கள் குறிப்பிடுகின்றன

குவாடலஹாரா நகருக்கு வடமேற்கே உறங்கும் டெக்கீலா எரிமலையின் அடியிலிருக்கும் வறண்ட புழுதிக் காற்று வீசும் அந்த பள்ளத்தாக்கில் டெக்கீலா நகரம் அமைந்துள்ளது. மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த எரிமலை மண் நிறைந்த 35,019 ஹெக்டேர் பரப்பளவில் கூர் முள் கொண்ட இலைகளுடன் பல்லாயிரம் நீலக்கற்றாழைகள் வான் நோக்கி பச்சைப்பெருமலர்களாக விரிந்துள்ளன. இந்த வயல்கள் உலகப் பாரம்பரியக் களம் (World Heritage Site) என்னும் அந்தஸ்தை 2006 ல் பெற்றுள்ளன.

நீலக்கற்றாழை வயல்

நீலக்கற்றாழையின் தாவர அறிவியல் பெயர் Agave Tequilana- Weber variety Azul. இவற்றின் இலைகளின் நீலப்பச்சை நிறத்தினால் ’’நீலக்கற்றாழை’’ என கள்ளிகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவரான ஐரோப்பிய தாவரவியலாளர் வேபரினால் (Frédéric Albert Constantin Weber) பெயரிடப்பட்டது..பச்சை நிறத்தில் சதைப்பற்றான, முட்கள் நிறைந்த இலைகளுடன் இருந்தாலும் இவை கள்ளி வகைகள் அல்ல பெருங்கற்றாழை வகை தாவரங்களே.. இச்செடிகளுக்கு அஸ்டெக்குகளின் தெய்வமான மயாஹூவெல்லை குறிக்கும் ’’மாஹே’’ (Maguey) என்றொரு வழங்கு பெயரும் மெக்சிகோவில் உண்டு.

8 ல் இருந்து 14 வருட வாழ்வை கொண்டிருக்கும் இந்த நீலக்கற்றாழைகளின் பேரினத்தின் அகாவெ என்பது கிரேக்க மொழியில் ’’உன்னதமான’’ என்ற பொருள் கொண்டது. சிற்றினத்தின் பெயரான டெக்கீலானா மெக்ஸிகோவின் டெக்கீலா நகரை சேர்ந்த செடி என்பதைக் குறிக்கிறது. ஆஸ்டெக்குகளின் நௌவாட் (Nahuatl) மொழியில் டெக்கீலா ’’அஞ்சலிக்கான இடம்’’ என பொருள்படுகிறது.. அகாவே பேரினத்தின் 166 சிற்றினங்களில் 125 சிற்றினங்கள் மெக்ஸிகோவில் 1964 ல் இருந்து செழித்து வளர்கின்றன.

பொதுவாக 5 அடி உயரம் வரை வளரும் இக்கற்றாழைகள் மெக்ஸிகோவின் கனிம வளம் மிக்க மண்ணில் 6 லிருந்து 7 அடி வரை வளரும். விளிம்புகளில் அடர் நிறத்தில் கூரிய முட்களை கொண்டிருக்கும், வாள் போன்ற, சதைப்பற்றான, சாம்பல் நீலப்பச்சை இலைகள் மலரடுக்கில் 4 அடி நீளம் வரை வளரும். 8 லிருந்து 12 வருடங்களில், 7 அடி உயரம் வரை வளர்ந்த கற்றாழைகள் அறுவடைக்கு தயாராகிவிடும். மலைப்பகுதிகளில் வளரும் நீலக்கற்றாழைகள் 8 வருடங்களிலும், தாழ்நிலங்களில் வளருபவை 12 வருடங்களிலும் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகின்றன.

8 வருடங்களான நீலக்கற்றாழைகளின் இலை அடுக்குகளின் மத்தியிலிருந்து 20 அடி உயரமுள்ள கியோட்டே எனப்படும் (Quiote) மஞ்சரித்தண்டு உருவாகி கிளைத்த மஞ்சரிகளில் பச்சை நிற மலர் கொத்துகள் தோன்றுகின்றன. பாலில்லா இனப்பெருக்கம் செய்யும் அகேவின் மலர்கள் இரவில் மலரும். அவை, மெக்ஸிகோவின் நீள மூக்கு வௌவால்களால் (Leptonycteris nivalis) மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்டு, கனிகளும் விதைகளும் உருவாகின்றன. மஞ்சரி உருவான பின்பு இலை அடுக்குகள் ஒவ்வொன்றாக அழிந்து பக்கக்கன்றுகளிலிருந்து புதிய தாவரங்கள் வளர தொடங்கும்.

கற்றாழை கருக்களான ஹிஹ்வேலோ (Hijuelo) எனப்படும் இந்த சிறு பக்கச்செடிகள் வேர்க்கிழங்குகளிலிருந்தும் செடிகளின் அடிப்பகுதியிலிருந்தும் வளருகின்றன. இவை எலுமிச்சை, ஆரஞ்சு, மற்றும் திராட்சை கனிகளின் அளவுகளைக் கொண்டு அளவிடப்படுகின்றன. இரண்டாவது வருடத்தில் இருந்து தாய்ச் செடிகளின் பக்கவாட்டில் வளரும் இவை, ஐந்தாம் வருடத்திலிருந்து எடுக்கப்பட்டு, வரிசையாக நடப்படுகின்றன. நீலக்கற்றாழையின் விதைகள் சாகுபடிக்கு பயன்படுத்தப்படுவதில்லை

2.5 ஏக்கர்களில் சுமார் இரண்டாயிரத்தில் இருந்து நான்காயிரம் நீல கற்றாழைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. பிற பயிர்களைப் போலவே நீலக்கற்றாழைகளுக்கும் களையெடுத்தல் உள்ளிட்ட அனைத்து பயிர்பாதுகாப்புக்களும் தேவை. நீலக்கற்றாழைகளின் அறுவடை என்பது இலைகளின் அடிப்பகுதியில் இருக்கும் கற்றாழை இதயமான, பெருத்த, எடை கூடிய அன்னாசிப்பழத்தை போன்றிருக்கும் பீன்யாக்கள்தான். (piña). பீன்யா என்பது அன்னாசிப்பழத்தின் ஸ்பானிஷ் பெயர். மாவுச்சத்தும், சிறிதளவு சர்க்கரை சத்தும். நிரம்பிய புதிதாக அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்கள் உருளைக்கிழங்குகளை போல மெல்லிய நறுமணத்துடன் இருக்கும்.

இனப்பெருக்கத்தில் தனது ஆற்றலை நீலக்கற்றாழைகள் செலவழிக்க துவங்கினால் டெக்கீலாவின் தரம் குறைந்துவிடும், எனவே மலர் மஞ்சரிகள் உருவாகும் முன்பே பீன்யாக்கள் அறுவடை செய்யப்படுகின்றன. பீன்யாக்களில் சேமிக்கப்பட்டிருக்கும் இனிப்பு திரவமான அகுவாமியெலில் இருந்துதான் (aquamiel) டெக்கீலா தயரிக்கப்படுகின்றது. பீன்யாக்களின் அளவு பெரிதாகுதலும், . அடிப்பகுதியிலிருக்கும் பென்கா (Pencas) எனப்படும் இலைகள் வாடி உதிர்வதும் அறுவடைக்கான அறிகுறிகளாக கருதப்படுகின்றன.

ஹிமாடொர்கள் (Jimadors) எனப்படும் மெக்ஸிகோவின் விவசாயிகளில் ஒரு வகையினர், ஒவ்வொரு செடியிலிருந்தும், இருநூறுக்கும் மேற்பட்ட,கற்றாழையின் இலைகளை கோஆ (Coa) எனப்படும் நீண்ட கைப்பிடி உள்ள, துடுப்பு முனை போன்ற வட்டக் கத்தியால் ஒவ்வொன்றாக செதுக்கி, பீன்யாக்களை எடுப்பார்கள். மிகுந்த உடலுழைப்பை கோரும் செயல் என்பதால் ஹிமாடொர்கள் 5 லிருந்து 6 மணி நேரம் மட்டுமே வேலை அதுவும், சுழற்சி முறையில் செய்வார்கள்.

கற்றாழை சாகுபடி குறித்தும், உரிய நேரத்தில் அவற்றை அறுவடை செய்வது குறித்தும் தலைமுறை அறிவைக்கொண்டு இருக்கும் ஹிமாடொர்களின் வேலை. பீன்யாக்களைச் செதுக்குவது மட்டுமே. செதுக்கிய பீன்யாக்களை சேகரித்து, வண்டிகளில் தொழிற்சாலைகளுக்கு கொண்டு போவதை பிற பணியாளர்கள் செய்வார்கள்.

அதிகாலையிலிருந்து முன்பகல் வரை பணியாற்றும் ஒரு தேர்ந்த ஹிமாடொர் ஒரு நாளில் 100 பீன்யாக்களை செதுக்கி எடுப்பார். விஷ சிலந்திகள், நீலக்கற்றாழைகளின் நெருக்கமான இலையடுக்குகளுக்குள் மறைந்திருக்கும் நச்சுப் பாம்புகளின் ஆபத்துக்களோடு, மிகத் தேர்ந்த ஹிமாடொர்களுக்கு கூரான ’கோஆ’’வினால் கால் விரலை துண்டாக்கி கொள்ளும் ஆபத்தும் நேரிடுகிறது.

செதுக்குதலை திறம்பட செய்யாவிட்டால் பீன்யாக்களில் ஒட்டியிருக்கும் இலைகளின் அடிப்பகுதியின் மெழுகுப்பூச்சு டெக்கீலாவின் தரத்தை குறைத்துவிடும் சாத்தியம் இருப்பதால் மிகத்துல்லியமாக, இவை செதுக்கப்பட வேண்டும்.பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கும் டெக்கீலா தொழிலில் நூற்றாண்டுகளாக மாறாமல் இருப்பது ஹிமாடொர்களின் பணி மட்டுமே. ஹிமாடொர்கள் இல்லாவிட்டால் டெக்கீலா தொழிலே முடங்கிவிடும்.

வெட்டியெடுக்கப்பட்ட பீன்யாக்களில் வெட்டுக்காயங்களைப்போல இருக்கும் சிவப்புத்திட்டுக்களின் எண்ணிக்கை 5 லிருந்து 7 என்றால் அவை மிகச்சரியாக முதிர்ந்திருக்கிறதென்றும், 7க்கும் அதிகமான திட்டுக்கள் இருப்பது தேவைக்கும் அதிகமாக முதிர்ந்து, அழுகிப்போகும் பீன்யாக்களை குறிப்பதாகவும் கணக்கு உண்டு, மிகச் சரியான பருவத்தில் அறுவடை செய்யப்பட்ட பீன்யாக்களிலிருந்து 6 மாதங்களுக்குள் டெக்கீலா எடுக்கப்படவேண்டும்

பீன்யாக்களின் பழுத்தல் அல்லது முதிர்தல் அதிலிருந்து எடுக்கப்படும் டெக்கீலாவின் தரத்துடனும் சுவையுடனும் நேரடியாக தொடர்புடையது. சில நிறுவனங்கள் நன்கு பழுத்தவைகளையும், பிறர் பழுத்தலின் துவக்க நிலையிலும் பீன்யாக்களை பயன்படுத்துகிறார்கள். கூடுதலாகப் பழுத்த சோப்ரே மதுரோ (Sobre maduro) எனப்படும் பீன்யாக்களின் அமிலச்சுவை டெக்கீலாவுக்கு வினிகரின் சுவையை அளித்து விடுகின்றது.

பொதுவாகத் தொழிற்சாலைகளில் டெக்கீலா தயாரிக்க பீன்யாக்களில் இயற்கையாக 21 சதவீத சர்க்கரை அளவு தேவை அதற்கு அதிகமாக 45 சதவீதம் வரையிலும் கூடுதலாக சர்க்கரை அளவை கொடுக்கும் கற்றாழைச் செடிகள் உண்டு.

பீன்யாக்களின் எடை 10 லிருந்து நூறு கிலோக்கள் வரையிலும் இருக்கும். அதிகபட்சமாக 180 கிலோ எடையில் பீன்யா அறுவடை செய்யப்பட்டிருக்கிறது..தோராயமாக 7 கிலோ பீன்யாக்களிலிருந்து ஒரு லிட்டர் டெக்கீலா கிடைக்கும்

பெரும்பாலான நீலக்கற்றாழை செடிகள் மேற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் வளர்க்கப்பட்டு, நாள் முழுவதும் பெரும்பாலான சூரிய ஒளியைப் பெற அனுமதிக்கப்படுகின்றன. இந்தச் செடிகள் உயரமான, அகன்ற, அதிக சாறு நிரம்பியதாக இருக்கின்றன. தாழ்நிலங்களில் வளர்க்கப்படும் டெக்கீலாக்கள் மிகுந்த மண் வாசனையை பெற்றிருக்கின்றன

அறுவடை செய்யப்பட்டு தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்ட பீன்யாக்கள் ஒரே அளவாக கோடாலிகளால் பிளக்கப்பட்டு சீராக வேக வைக்கப்படுகின்றன. பழமையான ஹோர்னோ (Horno) எனப்படும் நீராவி அடுப்புகளில் வேக வைக்கப்படுகையில் இவற்றில் இருக்கும் இனுலின் (inulin) மாவுச்சத்து சர்க்கரையாக மாற்றப்படுகின்றது..இந்த சர்க்கரையே நொதித்தலின் போது ஆல்கஹாலாகின்றது.

.இப்போது ஹோர்னோ நீராவி அடுப்புக்களுக்கு பதிலாக நவீன பிரஷர் குக்கர்களும் ஆட்டோக்ளேவ் களும் கூட உபயோகத்தில் இருக்கின்றன

24 லிருந்து 48 மணி நேரம் மெதுவாக வேக வைக்கப்பட்ட பீன்யாக்கள் அடர் பழுப்பு நிறம் அடைகின்றன. பின்னர் இவை 16 லிருந்து 48 மணி நேரம் குளிர்விக்கப்படுகிறன. குளிர்ந்த பீன்யாக்கள் கழுதைகள் அல்லது கோவேறு கழுதைகளால் இழுக்கப்படும் டாஓனா(Tahona) எனப்படும் வட்டக்கல் செக்குகளில் அரைக்கப்படுகின்றன.

தற்போது பல நவீன அரவை இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்திருந்தாலும் மெக்ஸிகோவின் 6 பிரபல டெக்கீலா நிறுவனங்கள் இன்னும் இந்த கல்செக்கைத்தான் பயன்படுத்துகின்றன. நீர் சேர்ந்து அரைக்கப்ட்ட பீன்யாக்களின் குழம்பு மாஸ்டோ (mosto) எனப்படுகிறது மாஸ்டோவிலிருந்து இனிப்பு திரவம் சக்கைகளிலிருந்து தனியே பிரித்தெடுக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அரைத்த விழுதில் நீர் தெளித்து சக்கை பிழிந்து எடுக்கப்பட்ட திரவம் நொதித்தலுக்கு உட்படுத்தப்படுகிறது. சக்கைகளும் பயன்படுத்தப்பட்ட நீரும் கழிவுப்பொருட்களாக வெளியேறுகின்றன.

அஹுவாமியெல் (Aguamiel) எனப்படும் இந்த நீலக்கற்றாழைச் சாற்றின் சர்க்கரை அளவு துல்லியமாக கணக்கிடப்பட்ட பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட காடிச் சத்துகள் (Yeast) சேர்ககப்பட்டு திறந்த அல்லது மூடிய மரத்தொட்டிகளில் 24 லிருந்து 96 மணி நேரம் நொதித்தல் நடைபெறும். முதல் காய்ச்சி வடிகட்டுதல் முறை டெஸ்ட்ரொஸாமியெண்ட்டோ(Destrozamiento) என்று அழைக்கப்படுகிறது. அதில் கிட்டும் திரவம் 20லிருந்து 25 சதவீத ஆல்கஹால் அளவைக் கொண்டிருக்கும், இந்தத் திரவம் ஒர்தினாரியோ என்று அறியப்படுகிறது. இரண்டாவது முறை காய்ச்சி வடிகட்டும் முறைக்கு ரெக்டிஃபிகாசியோன் என்று பெயர். இப்படி காய்ச்சி வடிகட்டப்பட்ட 55 லிருந்து 75 சதவீத ஆல்கஹால் இருக்கும். இதுதான் டெக்கீலா என்று அழைக்கப்படக் கூடியது. அரிதாக சில நிறுவனங்கள் மூன்றாவது காய்ச்சி வடிகட்டலுக்கும் போவதுண்டு.

முதல் வடிகட்டலில் தேவையற்ற பொருட்கள் நீக்கப்படுகின்றது. இரண்டாம் வடிகட்டலில் மேலும் தூய்மையாக்கப்படும் திரவத்திலிருந்து கிட்டுவது ’ப்ளான்கோ’ டெக்கீலா என்று விற்பனையாகிறது. இத்தனை காய்ச்சி வடிகட்டிய பின்னரும் நீலக்கற்றாழையின் பிரத்யேக நறுமணமும் மண்ணின் மணமும் டெக்கீலாவில் அப்படியே இருக்கும்

.இறுதியாக கிடைக்கும் 100 சதவீத ஆல்கஹால் அளவிற்கு நொதிக்க வைத்த கடுமையான டெக்கீலாவில் தண்ணீரைக் கலந்து தேவையான ஆல்கஹால் அளவு நிர்ணயிக்கப்படுகிறது,. வடிசாலிகளில் கிடைக்கும் டெக்கீலா அப்படியே பாட்டில்களில் நிரப்பப்பட்டு இளமையான டெக்கீலா வாக விற்பனைக்கு வரும் அல்லது ஓக் மர பீப்பாய்களில் நிரப்பப்பட்டு பழமையாக்குதலுக்கு உட்படுத்தப்படும்.

பழமையாக்குதல் நடைபெறும் பீப்பாய்கள் உருவாக்கப்பட்ட ஓக் மரத்தின் தன்மை, இதற்கு முன்னர் அதில் நிரப்பப்பட்டிருந்த பானத்தின் இயல்பு, பீப்பாயின் வெப்பம், ஈரப்பதம், உள்ளே நிரப்பத்துவங்குகையில் டெக்கீலாவின் துவக்க ஆல்கஹால் அளவு ஆகியவை டெக்கீலாவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கும். நெருப்பில் வாட்டி கருக்கிய ஓக் மரப்பட்டைகளை இணைத்து செய்யப்பட்ட பீப்பாய்களிலும் டெக்கீலா பழமையாக்கப்படும். இந்த வகை டெக்கீலா ‘ரெபொஸாடோ’ அல்லது ‘அன்யேஹோ’ என்று அறியப்படுகின்றன. [ரெபொஸாடோ =மென்மையான அல்லது அமைதியான; அன்யேஹோ= நன்கு பதப்பட்ட, முதிர்ந்த என்ற பொருள் தரும் சொற்கள்.)

பழமையாக்கப்பட்ட டெக்கீலாவில் ஓக், மரப்பட்டை சாறு, சர்க்கரை ஆகியவை பின்னர், பிரத்யேக நறுமணம் மற்றும் சுவையின் பொருட்டு சேர்க்கப்படுவது முண்டு

குறைந்தபட்ச ஆல்கஹால் அளவு 38 சதவீதமும் அதிகபட்சமாக 55 சதவீதமும் நிர்ணயிக்கப்பட்ட டெக்கீலா கரிச்சல்லடைகளில் வடிகட்டப்பட்டு உற்பத்தி நிலையத்திலேயே டெக்கீலா பாட்டில்களில் நிரப்பப்படவேண்டும் என்னும் சட்டத்தின்படி அங்கேயே விற்பனைக்கு தயாராகின்றன.

டெக்கீலாவில், 100 சதவீத ஆல்கஹால் அளவுடன் இருக்கும் அசல் டெக்கீலா மற்றும் மிக்ஸ்டோ எனப்படும் செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட 51 சதவீத ஆல்கஹால் அளவுள்ள மலிவான டெக்கீலா என இரண்டு அடிப்படை வகைகள் உள்ளன . இவ்விரண்டில் பழமையாக்குதலின் அடிப்படையில் பிற வகைகள் உருவாகின்றன.

வெள்ளை (பிளான்கோ), ப்ளாட்டினம் மற்றும் வெள்ளி டெக்கீலாக்கள் (ப்ளாட்டா), இரண்டு மாதங்கள் மட்டும் பழமையாக்கபட்டிருக்கும். இவை பழமையாக்கப்பட்டிருக்காதவை, இளமையானவை (Blanco, White, Plata, Platinum, or Silver)

மிக்ஸ்டோ வகையை சேர்ந்த பொன், ஓடோ அல்லது ஹோவென் டெக்கீலாக்கள் செயற்கையாக மணமும் நிறமுமேற்றப்பட்டவை, இளமையானவை (Gold, Oro, or Joven)

ரெபோஸாடோ டெக்கீலாக்கள் 2 மாதங்களிலிருந்து 1 வருடம் வரை பழமையாக்கப்பட்டவை .(Reposado )

அன்யேஹோ வகை டெக்கீலாக்கள் குறைந்த பட்சம் ஒரு வருடத்திலிருந்து மூன்று வருடங்கள் ஓக் மரப்பீப்பாய்களில் பழமையாக்கப்பட்டவை. அன்யேஹோ என்றால் லத்தீன மொழியில் ஒரு வருடம் பழமையான என்று பொருள்.

எக்ஸ்ட்ரா அன்யேஹோ டெக்கீலாக்கள் 2006 லிருந்து தயாரிக்கப்படுகின்றன இவை குறைந்தது மூன்று வருடங்களுக்கு 600 லிட்டர் மட்டுமே கொள்ளளவு கொண்ட ஓக் மரப் பீப்பாய்களில் வைத்து மித மிஞ்சி பழமையாக்கப்படுவது.

சில சமயம் டெகீலாவுடன் புதினா எலுமிச்சை ஆரஞ்சு மசாலா பொருட்கள் ஆகியவை சேர்க்கப்படும்

டெக்கீலாவை எவற்றுடன் கலக்கலாம், எவற்றுடன் கலக்கவே கூடாது டெக்கீலாவை எப்படி அருந்துவது. போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களை ’’டெக்கீலா சுவை சக்கரம்’’ என்னும் சித்திரத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். இந்த சித்திரம் டெக்கீலா விடுதிகளிலும் சுற்றுலா தளங்களிலும் கிடைக்கும்

பொதுவாக டெக்கீலா வைன் கோப்பைகளிலும் டம்ளர்களிலும் கூட அருந்தப்பட்டாலும் டெக்கீலாவுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட கோப்பைகளும் உள்ளன.

1924 லிருந்து டெக்கீலாவின் கற்றாழை மணத்தை போக்குவதற்காக உப்பும் எலுமிச்சை துண்டுகளும் பரப்பியிருக்கும் தட்டுக்களில் தலைகீழாக கவிழ்த்து வைக்கப்படிருக்கும் கண்ணாடிக்கோப்பைகளை எடுத்து விளிம்புகளில் ஒட்டியிருக்கும் உப்புத்தூளுடனும் எலுமிச்சை சாற்றுடனுமே டெக்கீலா அருந்தப்பட்டது. நவீன தொழில்நுட்ப மாற்றங்களினால் இப்போதைய டெக்கீலாக்கள் அனைவரும் விரும்பும் சுவையும் பிரெத்யேக மணமும் கொண்டிருக்கின்றன’

265 வருடங்களாக குடும்ப தொழிலாக நவீன கண்ணாடிக்கோப்பைகளை தயாரிக்கும் பிரபல ரீடல் நிறுவனம் (RIEDEL ) டெக்கீலாவின் சுவையையும் மணத்தையும் நாவிற்கு அசலாக அளிக்கும் பிரத்யேக டெக்கீலா கோப்பைகளை பத்து டாலர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது டெக்கீலா ஒழுங்குமுறை கவுன்சில் ரீடல் உருவாக்கிய இந்த உவர்ச்சர் டெக்கீலா கோப்பையை (Ouverture Tequila glass) 2002ஆம் ஆண்டில் “அதிகார பூர்வ டெக்கீலா கோப்பை” என்று அங்கீகரித்துள்ளது.

கூடுதல் சேர்மானங்கள் இல்லாத துல்லிய டெக்கீலா கவயீட்டோ (Caballito-ஸ்பானிஷ் மொழியில் “சிறிய குதிரை”) எனப்படும் குறுகலான கோப்பையில் நேர்த்தியாக பரிமாறப்படுகிறது, விளிம்புகளில் உப்பு அல்லது சர்க்கரை தடவப்பட்ட மார்கரீட்டா கோப்பைகள் இப்போதும் புழக்கத்தில் உள்ளன ( Margarita Glass)

2003 ஆம் ஆண்டில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முன்னர் மெக்ஸிகோவில் தயாரிக்கப்படும் டெக்கீலா அனைத்தும் மெக்ஸிகோவில்தான் புட்டிகளில் அடைக்கப்பட வேண்டும் என்பதைக் கோரும் முன்மொழிவை மெக்ஸிகோ வெளியிட்டது. .இந்தச் சட்டம் சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களை மீறுகின்றன என்றும் உலகம் முழுவதிலுமான வழக்கமான ஏற்றுமதி நடவடிக்கைகளோடு உடன்படவில்லை என்றும் அமெரிக்காவில் உள்ள மதுபான நிறுவனங்கள் கண்டனம் தெரிவித்தன. எனினும் 2006 ஆம் ஆண்டு ஜனவரி 17 ல், அமெரிக்காவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவிற்குள் அதிக அளவில் டெக்கீலா இறக்குமதியை அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.. இப்போது அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும், மெக்ஸிகோவின் மொத்த டெக்கீலா உற்பத்தியில் 75 சதவீதத்தை இறக்குமதி செய்கிறது. அமெரிக்காவில் ஜூலை 24 ஆம் தேதி டெக்கீலா தினமாக கொண்டாடப்படுகிறது

மெக்ஸிகோவில் மட்டுமே ஆண்டுக்கு 500 மில்லியன் கற்றாழைக்கள் சாகுபடி செய்யப்பட்டு, 500 மில்லியன் டாலர் .மதிப்புள்ள நூற்றுக்கணக்கான மில்லியன் லிட்டர்கள் டெக்கீலா ஆண்டுதோறும் தயாராகின்றது டெக்கீலா நகரில் மட்டுமே 20 டெக்கீலா வடிசாலைகள் அமைந்துள்ளன..

ஒவ்வொரு டெக்கீலா வடிசாலையும் அவர்களுக்கான் பிரத்யேக NOM எனப்படும் (Norma Oficial Mexicana) எண்ணை கொண்டிருக்கவேண்டும். இந்த எண்கள் அந்நிறுவனத்தின் எல்லா டெக்கீலா பாட்டில்களிலும் அச்சிடப்பட்டிருக்கவும் வேண்டும்

1997 லிருந்து டெக்கீலா நகரிலிருந்து சுற்றுலா பயணிகளை நீலக்கற்றாழை வயல்களுக்கும் வடிசாலைகளுக்கும் அழைத்துச்செல்ல அலங்கரிக்கப்பட டெக்கீலா விரைவு பேருந்துகளும் மெக்ஸிகோவில் உள்ளது..

2006 ம் வருடத்திலிருந்து மெக்ஸிகோவில் டெக்கீலா சுற்றுலா மிக பிரபலமாகி வருகிறது. மிகுந்த பொருட்செலவில் ஒரு சில நிறுவனங்கள் ஹெலிகாப்டரில் டெக்கீலா வடிசாலைக்க்கும், நீலக்கற்றாழை வயல்களுக்கும் அழைத்துச்செல்லும் சுற்றுலாக்ளுக்கும் நல்ல வரவேற்பிருக்கிறது. சுமாராக ஒரு நபருக்கு இவ்வகையான சுற்றுலாக்கள் இருபதாயிரம் டாலர்களை கட்டணமாக வசூலிக்கிறது

மண்டை ஓடுகளை போல, கள்ளிச்செடிகளைப் போல, கண்ணீர்த்துளிகளை போல, இதய வடிவில் என பல வடிவங்களில் 928 வகையான டெக்கீலாக்களின் .1799 பாட்டில்களை வைத்திருந்ததற்காக , Nuestros Dulces என்னும் மெக்ஸிகோவின் டெக்கீலாவும் இனிப்புகளும் விற்பனை செய்யும் சிறிய கடை 2014ல் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. தேசிய டெக்கீலா அருங்காட்சியகமும் டெக்கீலா நகரில் அமைந்திருக்கிறது

மெக்ஸிகோவில் தயாரிக்கப்பட்டது என்னும் வாசகமான “hecho en México” பாட்டில்களில் இருப்பவையே அசல் டெக்கீலாக்கள். சில குறிப்பிட்ட டெக்கீலா பிராண்டுகள் பலநூறு ஆண்டுகளாக குடும்ப தொழிலாக இருந்து வருகின்றன.

டெக்கீலாவை குறித்த ஒரு தவறான எண்ணம் அதில் புழுக்கள் இருக்கும் என்று நம்புவது. டெக்கீலாவில் புழுக்கள் இருக்காது கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகளுக்கு பிறகே டெக்கீலா சந்தைப்படுத்த படுகிறது. .ஒயாக்ஸகா மாநிலத்தில் இருந்து வரும் ஒரு சில மெஸ்கல்களில் மட்டுமே புழுக்கள் இருக்கும்.

2008 ஆம் ஆண்டில், மெக்ஸிகோவின் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் டெக்கீலாவிலிருந்து செயற்கை வைரங்களை உருவாக்கி இருக்கிறார்கள் டெக்கீலாவை ஆவியாக்குவதற்கான 800 டிகிரிகள் செல்சியசுக்கும் மேலாக (1,400 டிகிரி பாரன்ஹீட்) டெக்கீலா வெப்பபப்டுத்தப்படுகையில் அதன் உட்பொருட்கள் குளிர்ந்து ஒரு சமமான தூய அடுக்காக இரும்பு அல்லது சிலிக்கான் பாத்திரங்களில் வைரத்துகள்களாக படிகின்றன. 100–400 நானோ மீட்டர் விட்டம் கொண்டிருக்கும் இந்த வைரங்கள். ஆபரணங்களை உருவாக்க முடியாத அளவிற்கு நுண்ணியவை என்றாலும் இது செயற்கை வைரங்கள் தயாரிப்பில் மிக முக்கியமான முன்னெடுப்பு.

டெக்கீலாவின் வெற்றிகரமான அமெரிக்க சந்தையில் பல துறை பிரபலங்களும் ஈடுபட்டிருக்கிறார்கள். குறிப்பாக ஹாலிவுட் பிரபலங்கள் பலர் டெக்கீலா வடிசாலைகளுக்கும் நீலக்கற்றாழை வயல்களுக்கும் உரிமையாளர்களாக இருக்கிறார்கள். அமெரிக்க பிரபல நடிகரும், மல்யுத்தவீரரும். கட்டுமஸ்தான உடலுக்கு உலகெங்கிலும் புகழ்பெற்றவருமான டுவேன் ஜான்சன் (Dwayne Johnson) உரிமையாளராக இருக்கும் ’’மண் மணம் கொண்ட பானம்’’ என்னும் பொருள் கொண்ட டெரிமானா (Teremana) 3 டெக்கீலா நிறுவனமும், அங்கு தயாராகும் டெக்கீலாக்களும் மெக்ஸிகோவின் முதல் தரமான டெக்கீலாக்களாக கருதப்படுகின்றன .மெக்ஸிகோவில் டெக்கீலா வடிசாலைகளில் உருவாகும் கழிவுப்பொருளான வினேஸ் (vinasse) சக்கையை பிற நிறுவனங்கள் எரித்து சூழல் மாசை உருவாக்குகையில் டுவேன் அவற்றை மட்க செய்து உரமாக்கி தனது நீல கற்றாழை வயலில் உரமாக உபயோக்கிக்கிறார்.. வடிசாலையின் நீர்கழிவுகளும் மறு சுழற்சி செய்யப்பட்டு இவரது வயலுக்கே பாய்கிறது.

ரெட் ராக்கர் என்று அழைக்கப்படும் அமெரிக்க பாடகரும், பாடலாசிரியரும், இசையமைப்பாளரும், தொழிலதிபருமான ராய் காஜர் அமெரிக்க எழுத்தாளரும் தொலைக்காட்சி தயாரிப்பாளரும், தொடர் உணவகங்களின் உரிமையாளருமான ’கை ராம்சே ஃபியெரியுடன் (Guy Ramsay Fieri) இணைந்து 1991 லிருந்து 30 வருடங்களாக டெக்கீலா வர்த்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்.. இவர்களின் கேபோ-வாபோ(Cabo Wabo) வணிகமுத்திரைகொண்ட டெக்கீலாவான ’’மெஸ்கீலா’’ (Mezquila) தான் உலகின் முதல் டெக்கீலா- மெஸ்கால் கலவை,

2020ல் துவங்கப்பட்ட ஓண்டா (Onda) என்னும் உலோக கேன்களில் அடைக்கப்பட்டிருக்கும் டெக்கீலாக்களை தயரிக்கும் நிறுவனத்திற்கு பிரபல நடிகையும் மாடலுமான ஷேய் மிச்செலும் (Shay Mitchell) ஒரு பங்குதாரர்.

பிரபல நடிகர் ஜார்ஜ் க்ளூனி அவர் மனைவி அமல் க்ளூனி, தொழிலதிபர் ரெண்டே கெர்பர் மற்றும் சூப்பர் மாடல் சிண்டி க்ராஃபோர்ட் ஆகியோர் இணைந்து 2013 ல் துவங்கிய டெக்கீலா நிறுவனத்தின் காஸ்மிகோஸ் (Casamigos) டெக்கீலாக்கள் வெகு பிரபலம். மிக மென்மையான இந்த டெக்கீலாக்களை உப்பும் எலுமிச்சை சாறும் சேர்க்காமல் அருந்தலாம். இந்த நிறுவனம் சுமார் 700 மிலியன் டாலர்களுக்கு 2017 இல் க்ளூனி, மற்றும் இதர பங்குதாரர்களால் விற்கப்பட்டிருக்கிறது.

’’வைன் மற்றும் பிற மதுபானங்களுக்கான சர்வதேச போட்டி” யில் 2020 ஆண்டுக்கான மிகச்சிறந்த டெக்கீலாவாக ஹாலிவுட் நடிகை கெண்டல் ஜென்னரின் (Kendall jenner) ‘’818 டெக்கீலா” அறிவிக்கப்பட்டிருக்கிறது.

டெக்கீலா பானத்தை குறித்தும், அதை அருந்தும் அனுபவங்களை குறித்தும் ஏராளமான புதுமொழிகளும், பாடல்களும் கவிதைகளும் மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவில் பிரபலமாக இருக்கிறது

உங்களுக்குள் இருக்கும் வெளித்தெரியாத திறமைகளை டெக்கீலா வெளிக்கொண்டு வரும்
வாழ்க்கை உங்களுக்கு எலுமிச்சைகளை கொடுத்தால் நீங்கள் அதனுடன் டெக்கீலாவையும் சேர்த்துக்கொள்ளுங்கள்
அனைவரையும் மகிழ்விக்க முயலாதீர்கள், நீங்கள் டெக்கீலா அல்லர்
இழந்த இளமையை மீட்டெடுக்க ஒரே வழி டெக்கீலா அருந்துவது
– ஆகியவை மிக அதிகமாகப் புழக்கத்தில் இருப்பவை.

டெக்கீலா குறித்த ஒரு பிரபல ஆங்கில பாடல் வரி ’’டெக்கீலா எனக்குள் சிறகடிக்கும் சிறு பறவை’’ என்கிறது. டெக்கிலாவின் சிறகடிப்பை இனி உணர்பவர்கள் டெக்கீலா பானம் கடந்து வந்திருக்கும் நீண்ட பாதையையும் நினைவில் கொள்ளலாம்.

மேல் தகவல்களுக்கு:

  1. The story of Don Julio Tequila – Master of Malt Blog
  2. Don Cenobio Sauza – Wikipedia
  3. Teremana Tequila 
  4. https://youtu.be/3ngId1AZ0TI
  5. http://uktequilaforum.co.uk/showthread.php?tid=258

சொல்வனம் தளத்தில்

தாவர நஞ்சு

பொதுவாக நஞ்சு, நச்சுத்தனமை என்றாலே நமக்கு  பாம்புகள் மற்றும்  தேள் போன்றவற்றின் நினைவுதான் வரும்.ஆனால்  இவை மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான தாவரங்கள், தங்களை உண்ண வரும் மேய்ச்சல் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க,  தற்காப்பிற்காக உடலில் சில கொடிய வகை விஷங்களை கொண்டுள்ளன. நச்சுத் தாவரங்களின்  பாகங்களை உண்டால் மட்டுமல்ல சிலவற்றை தொட்டாலே நஞ்சினால் நாம் பாதிக்கப்படுவோம். அப்படியான உலகின் மிக முக்கியமான நச்சு தாவரங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இவற்றில் பல தாவரங்கள் நம்மை சுற்றிலும் சாதாரணமாக காணப்படுபவை.எனவே இவற்றின் ஆபத்துகளை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்

1. அரளி-Nerium oleander

அரளி

கிழக்காசியாவை தாயகமாக கொண்ட பல நிற மலர்களுக்காக அறியப்படும் அலங்காரச் செடியும் பூஜைக்குரிய மலர்களுக்காக வளர்க்கப்படும் செடியுமான அரளியின் அனைத்து பாகங்களுமே, வேரிலிருந்து மலர்த்தேன் வரை நச்சுத்தன்மை கொண்டது

 இவற்றிலிருக்கும் நெரியோசைட் மற்றும் ஓல்டென்ட்ரின் (nerioside & oldendrin )  போன்ற  நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களே இதன் அபாய தன்மைக்கு காரணம். தாவரத்தை எரிக்கும் புகை கூட நச்சுத்தன்மை கொண்டது

 தாவர பாகங்களின்  புகையை நுகர்ந்தால் வயிற்றுப்போக்கு,  வாந்தி மற்றும் இதய துடிப்புகளில் மாறுபாடு ஆகியவற்றை உண்டாக்கும்..அரளிச்செடியின் இலைகளை அல்லது மலர்களை உண்டால் இதய துடிப்பும் ரத்த அழுத்தமும் குறைந்து,  கண் பார்வை மங்குதல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகி சிகிச்சை அளிக்காத போது உயிரிழப்பும் ஏற்படும்

2. மரண ஆப்பிள்-Hippomane mancinella 

மரண ஆப்பிள்-Hippomane mancinella

கரீபியன் தீவுகளை பிறப்பிடமாகக்கொண்ட நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை  சேர்ந்த  manchineel tree  என்றழைக்கபடும்  மரம்தான் உலகின் நச்சுமரங்களில் மிக அதிகளவு நஞ்சை கொண்டது.பால் வடியும் இம்மரத்தின்  தண்டு, பட்டை, இலை, மலர், கனி என அனைத்து பாகங்களிலும் இருக்கும், எண்ணற்ற நச்சுப்பொருட்கள் இம்மரத்தின் பாலில் கலந்திருக்கும்.  

கண்களில் இம்மரத்தின் பால்  பட்டால் பார்வையிழப்பு உண்டாகும். மரத்தடியில் மழைக்காலங்களில் நிற்கும் கார்களின் வண்ணம் உரிந்து வந்துவிடும். அறியாமல் இம்மரத்தின் கனிகளை உண்பவர்களுக்கு குடல் புண்ணும், இரத்தப்போக்கும், கைகால் வீக்கமும் உண்டாகின்றது.

3. நீர் ஹெம்லாக்-Conium maculatum

நீர் ஹெம்லாக்

 மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தாவரங்களில் ஒன்றான ஹெம்லாக் என்ற பெயர் கிரேக்க தத்துவத்தில் பரிச்சயமுள்ள அனைவருக்கும் சாக்ரடீஸின் நினைவை ஏற்படுத்தும். இந்த ஹெம்லாக் நஞ்சை அளித்தே சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டார். ஹெம்லாக்கில் உள்ள (cicutoxin and cicunol), சிகுடாக்சின் மற்றும் சிகுனால் ஆகிய நச்சுகள் வலிப்பு மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்தி நரம்பு மண்டலத்தை சேதப்படுதுகின்றன

  4. ஏஞ்சல் ட்ரம்பெட்-Brugmansia suaveolens

நம்மில் பலரும் இந்த அலங்கார செடிகளை பல இடங்களில் பார்த்திருப்போம்.  தென் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஏஞ்சல் ட்ரம்பெட்கள்  கவிழ்ந்து தொங்கும் நீண்ட பெரிய குழல் வடிவ அழகிய வெண்மலர்களை கொண்டிருப்ப்வை.  தாவர் பாகங்கள் அனைத்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. புதர்ச்செடிகளான இவற்றின் மலர்கள் பலவித வண்ணங்களில் இருக்கும்

இவற்றின் அனைத்து பகுதிகளிலும் ட்ரோப்பேன் அல்கலாய்டுகள் ஸ்கோபோலமைன் மற்றும் அட்ரோபைன் போன்ற நச்சுகள் ( tropane alkaloids scopolamine & atropine) உள்ளன. இவற்றை உட்கொள்ளல் வயிற்றுப்போக்கு, பக்கவாதம் மற்றும்  மரணத்தை ஏற்படுத்தும்

5. வெள்ளை பாம்பு வேர் செடி / நட்சத்திர பூச்செடி

நட்சத்திர பூச்செடி

நமில் பலரும் மலை வாசஸ்தலங்களுக்கு செல்லுகையில் வழியெங்கும் புதராக செறிந்து வளர்ந்திருக்கும் இந்த களைச்செடியை பார்த்திருப்போம்.பலரின் உயிரிழப்புக்கு இச்செடியின் நஞ்சுகள்  காரணமாக இருந்திருக்கிறது. இந்த செடியின் விஷம் தான் ஆபிரகாம் லிங்கன் தாயார் நான்சி ஹாங்க்ஸ் லிங்கனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததது.இதன் நச்சுத்தனமைக்கு ட்ரெமெட்டோம் (Tremetome) என்ற வேதிப்பொருளே காரணம் . தாவர பாகங்களை உண்டால் கடும் வாந்தி மற்றும் சித்தப்பிரமை  போன்றவை உண்டாகும் இதன் வேர்களை பாம்பு கடிக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுவதால், இந்த பெயர் இதற்கு ஏற்பட்டது.

6. பெல்லடோனா-Atropa bella-donna

 தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த இத் தாவரத்தின் அனைத்து பகுதிகளும் குறிப்பாக வேர் மற்றும் பழங்கள் நச்சுத்தன்மை கொண்டவை. தாவரத்தில் உள்ள முக்கிய நச்சுப் பொருட்கள் அட்ரோபைன், ஸ்கோபோலமைன் மற்றும் ஹியோஸ்சியமின். (atropine, scopolamine and hyoscyamine.)

இவை நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. நச்சுவிளைவுகள் வெளிப்பட பல நாட்கள் ஆகும்.அதிகரிக்கும் இதயத்துடிப்புகள், மங்கலான பார்வை மற்றும் சித்தப்பிரமை ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் உண்டாகும்

7. அகோனைட்-Aconitum napellus

 சாத்தானின் ஹெல்மெட் என்னும் அச்சுறுத்தும் பெயரில் அறியப்படும் இந்த  அகோனைட் ‘விஷங்களின் ராணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தை  தொடுதல் கூட  கடும் தீங்கு விளைவிக்கும் தாவரத்தின் நச்சுத்தன்மைக்கு  அகோனைடைன்  என்னும் நஞ்சே காரணமாகும்.(aconitine). நச்சு விளைவுகள் உடனடியாக உள்ளன, வயிற்றுப்போக்கு முதல் சுவாச பிரச்சினைகள் வரை இதன் ஆபத்துகள் இருக்கும் சிகிச்சை இல்லாதபோது, இது மரணத்தை விளைவிக்கும்.

8.  தற்கொலை மரம் –Cerbera odollam

தற்கொலை மரம்

  கேரளாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ஐம்பது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த மரம் தற்கொலை மரமென்றே அழைக்கப்படுகின்றது. அதிகம் தற்கொலைக்கும் கொலைக்கும் இந்த மரத்தின் பாகங்கள் பயன்படுவதால் இந்த பெயர் வந்தது. அரளியின் குடும்பத்தை சேர்ந்த இதன் விதைகளில் செர்பெரின் (cerberin ) என்ற வலுவான நஞ்சு உள்ளது, இது இதயத்தின் தாளத்தை சீர்குலைக்கிறது.  இதன் பரவலான  பயன்பாட்டிற்கு  காரணம் , அதன் சுவையை காரமான உணவைப் பயன்படுத்தி மறைக்க முடியும் என்பதுதான். உண்டவர்கள் பிழைப்பது அரிது.

9.குன்றிமணி-Abrus precatorius

குன்றி மணி

 குன்றி, குன்றி மணி, அலங்கார பட்டாணி என பல பெயர்களால் அறியப்படும் இந்த தாவரத்தின் விதைகளே குன்றிமணிகள்.  குன்றிமணியில் இருக்கும் ஆப்ரின் (Abrin) என்னும் நஞ்சு மிக கொடியது. இந்த நஞ்சுக்கு இன்னும் முறிமருந்து கண்டறியப்படவில்லை. இவற்றை கடித்து விழுங்கினால் உயிர்பிழைப்பது கடினம். தவறாக முழுதாக  விழுங்கினால் எந்த ஆபத்தும் இல்லை. சரியான சிகிச்சை சரியாக நேரத்தில் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த நஞ்சிலிருந்து பிழைக்க முடியும். 

 10. ஆமணக்கு-Ricinus communis

ஆமணக்கு

 உணவு மற்றும் மருந்துகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆமணக்கு  தாவரங்களின் உலகத்திலிருந்து மிகவும் சக்திவாய்ந்த விஷங்களில் ஒன்றையும் உற்பத்தி செய்கிறது. ஆமணக்கு  விதைகளில் காணப்படும் ரிசின் (Ricin) பாம்பு விஷம் மற்றும் சயனைடை விட ஆபத்தானது, இந்த நஞ்சினை உண்பது வாந்தி மற்றும்  வலிப்புக்ளை உண்டாக்கி இறுதியில் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது.

Richard Jewell-பழியும் பாவமும்

27 ஜூலை 1996 அன்று, ஜார்ஜியா மாகாணத்தின்  தலைநகரான அட்லாண்டாவில் கோடைக்கால விளையாட்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஒலிம்பிக் பூங்காவில் நடந்துகொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் நிகழ்ந்த  குண்டுவெடிப்பில்  ஒரு நபர் கொல்லப்பட்டு 111 பேர் காயமடைந்தனர். குண்டு வெடிப்பை அருகில் சென்று படம் பிடிக்க முயன்ற பத்திரிக்கையாளர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்ததுடன் இறப்பு எண்ணிக்கை இரண்டானது. அந்த குண்டு வைக்கப்பட்டிருந்த  சந்தேகத்திற்குரிய பையை அடையாளம் கண்டு மக்களை பாதுகாப்பாக வெளியேற உதவி வழிகாட்டிய  தன்னார்வலரும், அந்த விளையாட்டு போட்டிகளுக்கென பகுதிநேர பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவரும், காவல்துறையில் பணியாற்றும் லட்சியத்துடன் இருந்தவருமான பாதுகாவலர் ரிச்சர்ட் ஜுவல் ஒரே நாளில் பிரபலமாகி ஹீரோவாக மக்களால் கொண்டாடப்பட்டார். ஏறக்குறைய 100 பேருக்கு மேல் அவரால் அன்று உயிர் பிழைத்தனர்..

பொதுமக்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளால்  ஜுவெல் பாராட்டப்பட்டார். அவரின் இந்த சாகசத்தை  ஒரு கதையாக எழுத அடுத்த நாளே ஒரு புத்தக ஒப்பந்தம் கூட வழங்கப்பட்டது. ஆனால் குண்டுவெடிப்பின் பின்னர் மூன்றாம் நாளில் FBI அலுவலர் ஒருவர் பத்திரிக்கை செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்ட ஒரு தவறான செய்தியால் எந்த ஆதாரமும்,  சாத்தியமான சந்தேகமும் இல்லாமல், குண்டுவெடிப்பு விசாரணையின் மையமாக ஜுவெல்  எதிர்பாராமல் குறிவைக்கப்பட்டார். இது அவரது வாழ்க்கையை ஒரு  நரகமாக்கியது

இந்த செய்தியும் இது தொடர்பாக நடந்த விசாரணைகளும் ஜுவெல்லின் தினசரி நடவடிக்கைகளும் சர்வதேச செய்தித்தாளான, தி டெய்லி டெலிகிராப் மூலம் தினமும் மக்களுக்கு சொல்லப்பட்டது. முற்றிலும் உண்மைக்கு புறம்பான இந்த குற்றச்சாட்டிலிருந்து ஜுவெல் 8 மாதங்களுக்கு பின்னர் விடுவிக்கபட்டு பகிரங்கமாக அவரிடம் காவல்துறையினர் மன்னிப்பு கேட்கப்பட்ட விவரங்கள் பொதுவெளியில் பெரிதும் கவன ஈர்ப்பை பெற்றது.  பிரபல இயக்குனர்   கிளின்ட் ஈஸ்ட்வுட், ஜுவல்லின்  இந்த வலிமிகுந்த, அநீதியான, அசாதாரண அனுபவத்தை சாம் ராக்வெல், கேத்தி பேட்ஸ், ஒலிவியா வைல்ட், ஜான் ஹாம் மற்றும் புதுமுகம் பால் வால்டர் ஹாஸர் ஆகியோரை கொண்டு சிறப்பான ஒரு திரைப்படமாக்கினார்

செய்தித்தாள் தலைப்புச் செய்தி ஒன்றை  ஈஸ்ட்வுட் எப்படி  நல்ல, வெற்றிகரமான திரைப்படமாக மாற்றினார் என்பதை 2019ல் வெளியாகி, தற்போது நெட்பிளிக்ஸில் காணக்கிடைக்கும்  Richard Jewell படத்தில் காணலாம் 

இச்சம்பவம் குறித்து கெண்ட் அலெக்சாண்டர் மற்றும் கெவின் ஆகியோர் எழுதிய ’’The Suspect: An Olympic Bombing, the FBI, the Media, and Richard Jewell, the Man Caught in the Middle’’ நூலையும்,   சஞ்சிகைகளில் வெளியான பல கட்டுரைகளும் ஈஸ்ட்வுட்  கருத்தில் கொண்டே இப்படத்தை உருவாக்கினார். 1996 களில் நடப்பது போலவே காட்சிகளையும் அரங்குகளையும் சித்தரித்து  குண்டு வெடிப்பு நிகழ்ந்த அதே இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது

தயாரிப்பு செலவை காட்டிலும் பத்து மடங்கு வசூல் செய்த வெற்றிப் படமான இது 2019 ஆம் ஆண்டின் சிறந்த பத்துப்படங்களில் ஒன்றாக தேர்வானது..ஜுவெல்லின் தாயாக நடித்திருந்த கேத்தி பேட்ஸ் இதில் பெரிதும் பாராட்டப்பட்டார். பல விருதுகளை பெற்ற இப்படத்தின் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருதும் இவருக்கு அளிக்கப்பட்டது. மகனுக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுக்கும் காட்சியில் கேத்தியின் மிகச் சிறந்த  நடிப்பை நாமும் பார்க்கலாம்

ஜார்ஜியாவின் முக்கிய நாளிதளொன்றின் நிருபரான கேத்தி ஸ்ரக்ஸ் (Kathy Scruggs) FBI அதிகாரி ஒருவருடன் நெருக்கமாக இருந்து பெற்றுக்கொண்ட தகவலே பொதுவெளிக்கு வந்தது என்னும் காட்சி பலரின் கண்டனக்குள்ளானது. கேத்தி ஸ்ரக்ஸ் 2001ல்  மருத்துவரொருவர் பரிந்துரைத்த அதீத மருந்துகளின் விளைவாக மரணம் அடைந்தார். 

தவறாக குற்றம் சாட்டப்பட்ட ஜுவெல்லுக்கு நேர்ந்த அநீதியை பேசும் படமான கேத்திக்கு அநீதி இழைக்கப்பட்டதாக பத்திரிக்கையாளர்கள் தரப்பில் எதிர்ப்பிருந்த்து. பெண் பத்திரிகையாளர்களை இத்திரைப்படம் அவமதிப்பதாகவும் பல பெண்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர். எனினும் ஈஸ்ட்வுட் அவருக்கு கிடைத்த நம்பகமான தகவல்களின் அடிப்படையில், உண்மைக்கு புறம்பாக எந்த காட்சியும் இதில் இல்லை என்று குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்தார்.. 120 நிமிடங்கள் ஓடும் இப்படம் எந்த இடத்திலும் தொய்வின்றி ஈஸ்ட்வுட்டின் ஸ்டைலில் பரபரப்பாக, உணர்வுபூர்வமாக செல்கிறது. ஜுவெல் ஆக நடித்திருக்கும்  பால் வால்டெர் மிக சரியான மற்றும் பிரமாதமான தேர்வு அசல் ஜுவெலுக்கும் இவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையும் ஆசச்ர்யப்படவைக்கிறது.

ஜுவெல்லின் அப்பாவித்தனமும் எளிமையும் நிபந்தனைகளற்ற, அன்பும் பார்வையாளர்களை அவர் பக்கம் சாய வைத்துவிடும். அவருக்கும் அவர் சார்பாக வாதாடும் வக்கீல் சாம் ராக்வெல்’லுக்கும் இருக்கும் தோழமையும், சாம்’மின் புரிதலும் அன்பும், விசாரணையின் போதும் காவலதிகாரிகளின் தந்திரங்களை ஜுவெல் புரிந்துகொள்ளாமல் வெள்ளந்தியாக பதிலளிப்பதுமாக ஈஸ்ட்வுட்டின் இயக்கம் வழக்கம் போல் சிறப்பு

ரிச்சர்ட் ஜுவெல்  எப்படி பத்திரிக்கைகள் பரபரப்பான செய்திகளுக்காக உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கைகள் எளியவர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுவதை, உண்மைச் செய்திகளை விட வதந்திகள் ஊடகங்கள் வழியாக வேகமாக பரவுவதை, அறமற்ற அதிகாரிகள் காவல் துறையிலும் இருப்பதை  எல்லாம் தெளிவாக சொல்லும் படம்

தான் பிரபலமாக வேண்டும் என்று ஜுவெல் அந்த குண்டை அங்கே வைத்துவிட்டு மக்களை காப்பாற்றுவது போல நாடகமாடினார் என்றே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் உண்மையில் அவர் நிராபராதி என அறிவிக்கப்பட்டவுடன் அவர் புகழ் இருமடங்காகியது.

 எனினும் அந்த 8 மாதங்கள் அவருக்கு நேர்ந்த மன உளைச்சலை இந்த திரைப்படம் நமக்கு காட்டுகிறது.  ஜுவெல் பின்னர் அவர் விரும்பியபடியே காவல் துறையில் பணியாற்றினார் குண்டு வெடிப்பின் .  உண்மைக்குற்றவளி 6 வருடங்களுக்கு பின்னர் கைது செய்யபட்டார்.

 தனக்கேற்பட்ட அநீதிக்கு ஜுவெல் தொடர்ந்த மான நஷ்ட வழக்குகள் பலவற்றில் அவர் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு பெருந்தொகை பிழையீடாக பின்னர் வழங்கப்பட்டது. 33 வயதாக இருக்கையில் இந்த அநீதி ஜுவெல்லுக்கு நிகழ்ந்தது, அவர் விடுவிக்கபட்டு 10 ஆண்டுகள் கழித்து தனது 44 வது  வயதில் மாரடைப்பால் ஜுவெல் காலமானார். என்றும் அவர் மக்கள் மனதில் நாயகனாக நினைவில் இருக்கிறார்.

உண்மை சம்பவங்களை மேலும் அறிந்துகொள்ள:

https://www.telegraph.co.uk/films/richard-jewell/who-was-richard-jewell/

https://law.jrank.org/pages/8241/Libel-Slander-Richard-Jewell-Olympic-Park-Bombing.html

https://law.jrank.org/pages/8241/Libel-Slander-Richard-Jewell-Olympic-Park-Bombing.html

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑