லோகமாதேவியின் பதிவுகள்

Month: January 2018

காடும் காடுசார்ந்த வாழ்வும்

 

இன்று என் மாணவன் யானை சிவா அழைத்திருந்தான் இரவு உணவின் போது. அவன் எப்போதும் ஏதேனும் அந்தரங்கமாக, முக்கியமாக  இருந்தாலே ஒழிய என்னை அழைக்க மாட்டான் கேரளாவின் ஏதோ ஒரு காட்டில் பணியிலிருக்கிறான். எப்போதாவது அசர்ந்தப்பமாய் கூப்பிடுவான் பரவசமாய், கருநாகமொன்று அறைவாசலில் படமெடுத்தபடி நின்றதையோ குருவி ஒன்று சிறு கடலையைப்போல  முட்டையிட்டிருப்பதையோ, சிறுத்தையை மிக அருகிலென கண்டதையோ, யானையொன்று தன் குட்டிக்கு இருளில் பழுத்த மாம்பழத்தை ஊட்டிக்கொண்டிருந்ததோ, அன்றி கண்ணீருடன் மின்சார வேலியில் சிக்கி இறந்த கர்ப்பிணி யானையை பிரேதப்பரிசோதனை செய்கையில் அதன் வயிற்றில் உறங்குவது போலிருந்த 8 அம்சங்களுடனான ஆண்குட்டியைகுறித்தோ சொல்லிக்கொண்டிருப்பான்

இன்றும் அழைத்தான்  இரவுணவாக கஞ்சியும் துவையலும் சாப்பிட்டுவிட்டு. ஒரு மர சாய்வு நாற்காலியில் சாய்ந்து  அவனின் காட்டுக்குடியிருப்பிற்கு வெகுதூரம் தள்ளி அடர் காட்டை கவியும் இருளில் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்பதாகவும் கொஞ்சம் முன்பு அவனைத்தாண்டி ஒரு அன்னைப்பன்றி தன் ஏழு குட்டிகளுடன் கடந்து சென்று தள்ளி இருக்கும் ஒரு புதரருகில் அமைதியாய் அமர்ந்திருக்க, தலைக்கு மேலே முழுநிலா பாலெனெ பொழிந்துகொண்டும்,நட்சத்திரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கண்ணைச்சிமிட்டிக்கொண்டிருப்பதும் , மாலை அங்கிருக்கும் தோட்டத்திற்கு நீர் விட்டிருப்பதால்  பகலெல்லாம் வெயிலில் காய்ந்த் ஈரமண்ணிலிருந்து வரும் வெந்த வாசமும் தைமாதத்தின் கடும்பனி அந்த காட்டின் வெற்றுவெளியில் அவன்மீது இறங்கிக்கொண்டிருப்பதையும் கிறங்கிப்போய் சொல்லிக்கொண்டிருந்தான்.

காட்டின் சப்தங்கள் வெகுவாய் மாறிவிட்டதென்றான். மரங்களில் பெரும்பாலானவை இலைகளை உதிர்த்துவிட்டதால் மொட்டையாக எலும்புகளைப்போன்ற கிளைகளுடன் இருப்பதையும், சருகுகள் மெத்தைபோல கொட்டிக்கிடப்பதால் இரவின் ஓசைகள்  வெகுவாக மாறிவிட்டதையும்  மிகச்சிறிய நடமாட்டங்களும் துல்லியமாக கேட்கும் அளவிற்கு இப்போது இருப்பதையும் சொன்னான்

முன்பு போல பெரு விலங்குகள்  வருகையில் மட்டும் எச்சரிக்கையாய் இருக்காமல் இப்போது சிறு ஓசைகளுக்கும் புலன்கள் கூர்பெற்றுவிடுவதையும் இரவுகளே இப்போது வடிவம் மாறிவிட்டதென்றும் சொன்னான். அடர்ந்த இலைதழைப்புகள் ஓசையை வடிகட்டுமல்லவா அதுவுமில்லாமல் போகையில் இப்போது அவன் சொல்வது போலத்தான் இருக்கும் என்றெண்ணிக்கொண்டென்

காட்டில் வாழ்பவர்கள், பணிபுரிபவர்கள் பலரிருக்கலாம் எனினும் காட்டைக்கூர்ந்து கவனிப்பவர்கள்,  சிவாவைபோல அரிதானவர்கள், அதிலும் இவற்றையெல்லாம் ஆசிரியையிடம் தோழியிடம் சொல்வதுபோல பகிர்ந்துகொள்பவர்கள் மிக மிக அரிதல்லவா?

அவன் சொன்ன காட்சியை நினைத்துப்பார்த்துக்கொண்டேன், பெற்றோரும் மனைவியும் நாட்டிலிருக்க , இரவில் இருளில், நிலவும் பனியும் பொழிந்துகொண்டிருக்கையில், மென்வெளிச்சத்தில் ஏகாந்தமாய் சாய்வுநாற்காலியில்,  பன்றிக்குடும்பமொன்றின் அருகாமையை உணர்ந்தபடி காட்டின் ஓசைகளையும் இலைஉதிர்க்கும் மரங்களையும் ஈரக்காற்றையும் அனுபவித்துக்கொண்டு, அவனைப்புரிந்துகொண்ட அவனின்  ஆசிரியையிடம் இவற்றையெல்லாம் பகிர்ந்துகொள்ளும் பெரும் பேறல்லவா அவனுக்கு கிட்டி இருப்பது?

அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் இயற்கையுடன் இயைந்த வாழ்வொன்றில் இணைந்திருக்கும்படி

 

இலங்கை தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகள்

 

இலங்கைக்கு பலமுறை சென்று வந்த அந்த 6 வருடங்களில் என்னை பெரிதும் ஈர்த்தது அவ்விடத்து உணவுகளே. பெரும்பாலும் கேரளாவின் உணவுகளை ஒத்த சுவையான வகைகள் . அசங்க ராஜ பக்‌ஷவின் வீட்டில் சுவைத்த வட்டாலப்பமும், மண்சட்டிகளில் கட்டித்தயிரும், அவற்றுடன் கலந்துகொள்ள அளிக்கப்பட்ட மலைத்தேனும், நுவரேலியாவின் மாபெரும் பால்பண்ணையில் கிடைத்த மில்க் ஷேக்கும், ரம்புட்டன் பழங்களும், அசைவ உணவு விடுதிகளில் அனைவருமே ஒரே தட்டில் பல இறைச்சிகளாலான குழம்பை கூடி அமர்ந்து உண்பதுவுமாய்  சுவையான நினைவுகள் பல இருக்கின்றன.  எனவே ஒரு பன்னாட்டுக்கருத்தரங்கில் இந்த கட்டுரையை சமர்ப்பித்து உரையாற்றினேன்.

உலகத்தில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் பசி போக்கவும், உடல் வளர்ச்சிக்காகவும் உட்கொள்ளப்படும் உணவானது நாட்டுக்கு நாடு பல வித்தியாசமான வகையையும், சுவையையும் , தயாரிப்பு முறைகளையும் கொண்டிருக்கிறது,.
சில குறிப்பிட்ட உணவு வகைகள் மானுடங்களின் அடையாளங்களில் ஒன்றாகவே ஒன்றிப்போயிருக்கின்றன.. உணவின் தன்மையும், வகையும் மனிதர்களின் வித்தியாசப்படுத்தலில் ஒரு அங்கமாக திகழ்கின்றது என்று சொன்னால் மிகையாகாது..ஈழத் தமிழ் மக்களிடையே ஒரு அடையாளமாக அல்லது பன்னெடுங்காலமாக பாவனையிலிருப்பவையாக ஒரு சில உணவுகள் இருக்கின்றன. இந்த உணவு வகைகள் அவர்களது சம்பிரதாயங்களுடனோ அல்லது சமய வழிபாட்டுடனோ அல்லது கலாச்சாரத்துடனோ சம்மந்தப்பட்டவையாக தொடர்ந்து சந்ததி சந்ததியாக கடத்திவரும் விசயங்களில் ஒன்றாக இருக்கின்றன.
பச்சை இறைச்சியை வேட்டையாடி தின்ற அன்றைய மானுடத்தின் உணவு உட்கொள்ளலிருந்து இன்றைய சமைத்தல் முறை மூலம் உட்கொள்ளும் நவீன மாற்றங்கள் பல கண்ட பின்னாலும் நாம் எமது பாட்டி, பூட்டி காலத்தில் சமைக்கப்பட்ட அதே உணவுகளுடன் தான் அவர்களின் சந்ததியினருடன் பயணிக்கிறார்கள்

எத்தனையோ புது புது இடங்களுக்கு புலம் பெயர்ந்தாலும் அந்த நாட்டின் பருவ கால , சூழல் நிபந்தனைகளுக்குட்பட்டு அந்தந்த நாடுகளில் கிடைக்கும் உணவுகளுடன் வாழ்க்கையை செலுத்த வேண்டிய கட்டாய்த்திலிருப்பினும் கூட சொந்த ஊரின் சமையல் முறையை எப்பாடுபட்டாவது இருக்கும் ஊரின் சூழலுக்குள் அவர்கள்  கொண்டு வந்து விடுகிறார்கள். எத்தனையோ வகை வகையான புதிய புதிய சமையல் வகைகளை தெரிந்து கொண்டாலும்  பிறந்து வளர்ந்த ஊரில் சாப்பிட்டு வாழ்ந்த உணவு வகைகளையே பிராதானப்படுத்துகிறார்கள்..அப்படி ஈழத்தமிழர்களுடன் சந்ததி சந்ததியாக தொடர்ந்து வரும் பல வகையான உணவு வகைகளில்  பாரம்பரியம் மிக்க உணவுகள் பற்றிய தகவல்கள் இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தமிழர் உணவுப் பழக்கம் என்று கூறுவதனால்,இலங்கைத்தமிழர்  அனைவரும் ஒரே மாதிரியான உணவுப் பழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்று கூறுவதற்கில்லை. ஏனைய பல சமுதாயங்களின் உணவுப் பழக்கங்களைப் போலவே இவர்களது உணவுப் பழக்கமும், அச்சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே பல அடிப்படைகளில், வேறுபடுவதைக் காணலாம். ஆனாலும், இவை அனைத்தையும், ஒன்றாகவே இயங்குகின்ற முழுஇலங்கைச் சமுதாய அமைப்பின் கூறுகளாகப் பார்ப்பதன் மூலமே புரிந்து கொள்ளமுடியும்

இவற்றைவிட நாட்டின் புவியியல் அமைப்பு, வளங்கள், பல்வேறு வகையான வேளாண்மை உற்பத்திகளுக்கான வாய்ப்புக்கள், உணவுப்பொருள் தொடர்பான வணிகம் என்பனவும்,  நில உடைமை மற்றும் நிலப்பயன்பாட்டு நிலைமைகளும் உணவுப் பழக்கவழக்கங்களில் தாக்கங்களை உண்டாக்கும் காரணிகளாக இருக்கின்றன. இவற்றுடன், சமய நம்பிக்கைகளும் இன்னொரு முக்கிய காரணியாகும்

காலத்துக்குக் காலம் இந்நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின், வேளாண்மை மற்றும் வணிகம்  தொடர்பான கொள்கைகளும்  போர் முதலியவற்றினால், ஏற்றுமதி செய்யும் நாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யமுடியாதிருந்த நிலைமைகளும்கூட உள்ளூர் உணவுப் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கியுள்ளன.

 

இவை பரந்த அடிப்படையில், எல்லாப் பிரிவினரையும் பாதிக்கின்ற காரணிகளாக உள்ளன. அதே வேளை, சமூகப் பிரிவுகள் மட்டத்தில் காணப்படும் வேறுபாடுகளுக்கு அடிப்படையாகப் பின்வரும் காரணிகள் அமைகின்றன.

  • சமூக அமைப்பு
  • தொழில்
  • பொருளாதார நிலை
  • சமூக அந்தஸ்த்து
  • வாழிடச் சூழல்

அன்றாட உணவு வகைகள்

இலங்கைத்தமிழர்களின்  முதன்மை உணவு, ஏனைய ஆசிய நாடுகளில் இருப்பதைப் போல, அரிசிச் சோறு ஆகும்.. அரிசியே தொடர்ந்தும் விருப்பத்துக்குரிய உணவாக இருந்து வருகின்றது.

உலக யுத்தக்காலத்தில், அரிசிக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் நிலவிய தட்டுப்பாடு காரணமாக, அப்போதைய ஆங்கிலேய அரசு, கோதுமையை அறிமுகப்படுத்தியது. இது அரிசியின் முதன்மை நிலையை மாற்றாவிட்டாலும், பின்வந்த காலங்களின் இலங்கைத்தமிழர் உணவு முறைகளில் நிலையான தாக்கங்களை ஏற்படுத்தியது எனலாம்.  பாண் (bread), பிட்டு, இடியப்பம், தோசை என்று அழைக்கப்படும் கோதுமை உணவுகள்  முக்கிய இடம் பெற்றது அதன் பின்னரேயாகும். அது மட்டுமன்றி, சிற்றுண்டிகள் செய்வதில் பயன்பட்ட அரிசி மாவுக்கும், குரக்கன் முதலிய சிறு தானியங்களுக்கும், மாற்றாகக் கோதுமை மா (மாவு) பயன்படத் தொடங்கியது.

முதன்மை உணவுகள்

இன்றைய தமிழர்கள் இன்னும் அரிசியை தினசரி அல்லது பிரதான உணவாக பொதுவாக மூன்று நேரமும் உட் கொள்கிறார்கள். நெல்லை அவித்துக் (புழுக்கி) குற்றிப் பெறப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே அதிகம் விரும்புகிறார்கள். இதைத் தவிர, நெல்லை அவிக்கா. மல் குற்றும்போது கிடைக்கும், சிவப்புப் பச்சை அரிசி, வெள்ளைப் பச்சை அரிசி என்பவற்றிலும் சோறு ஆக்குவது உண்டு. தமிழ் நாட்டில் செய்வதுபோல, அரிசியிலிருந்து, புளியோதரை, சாம்பார்சாதம், தயிர்சாதம் என்னும் உணவு வகைகள் இங்கு பெரும்பாலும் செய்யப்படுவதில்லை.

சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடும் கறி வகைகள் மரக்கறி வகைகளாகவோ, மாமிச உணவு வகைகளாகவோ இருக்கலாம்.உதாரணமாக நடுத்தர வர்க்க மக்கள் அரிசியை மூலப்பொருளாகக் கொண்ட இட்லி,,தோசை,பிட்டு,இடியப்பம் அல்லது அப்பம் தினசரி காலை அல்லது மாலை உணவாக உட்கொள்கிறார்கள்.

.

அரிசி மாவு,தேங்காய்த் துருவல் கொண்டு பிட்டையும் ,அரிசி மாவினால் இடியப்பம்,அப்பம் தயாரிக்கிறார்கள்.இடியப்பமும் அப்பமும் இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இடைக்காலத்தில்,சமணம் போன்ற சமயங்களின் செல்வாக்கால் அசைவ உணவு அவ்வளவு பிரபலமாக இல்லாவிட்டாலும்,இன்று அப்படி ஒரு விலக்கப்பட்ட உணவாக தமிழர்கள் மத்தியில் பொதுவாக இல்லை.என்றாலும் விழாக் காலங்களிலும் விரதம் அல்லது நோன்பு காலங்களிலும் இது பொதுவாக தவிர்க்கப்படுகிறது

 

.       முன்னைய காலங்களில்,இரவில் மிஞ்சிய சோற்றை நீரில்,இரவின் குளிர்ச்சியில் ஊறவைத்து அதை காலையில் தயிருடன் கலந்து அல்லது தினைக்கஞ்சியை உண்பார்கள்.இந்த ஆரோக்கியமான காலை உணவு எல்லோராலும் வர்க்க வேறுபாடு இன்றி அன்று உண்ணப்பட்டது.இந்த நடைமுறை இன்று கிராமப்புறங்களில் கூட மறைந்து வருகிறது. ஆனால் இன்று இது காபி மற்றும் தேநீர்களால் மாற்றிடு செய்யப்பட்டுள்ளது இனிப்பு பானங்களில் பாயசம் இன்னும் விருந்துகளிலும் திருநாள்களிலும் பரிமாறப்படுகிறது.

 

. தமிழர்களின் பாரம்பரிய உணவு என்பது அவர்களின்  மூதாதையர்களால்,பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உணவு தொழில்மயமாக்கலுக்கு முன் உண்ணப்பட்டவையாகும்.  தமிழினத்தின்  அடையாளமாகக் கூட கருதப்படுகிறது.இந்த தொழில்மயமாக்கல் அதிகமாக 19ம் நுற்றாண்டு தொடக்கத்திலேயே பெரும்பாலும் ஆரம்பிக்கப்பட்டது.நகர புறங்களில் இன்று பெருமளவு துருப்பிடிக்காத உருக்கு இரும்பினால் செய்யப்பட்ட முள்கரண்டி,வெட்டும் கருவிகள் போன்ற சாப்பிடுவதற்கும் பரிமாறுவதற்குமான கருவிகள் மற்றும் பீங்கான் பாண்டங்கள் அல்லது மண் பாத்திரங்கள் பாவிக்கப்பட்டாலும், விழாக்காலங்களிலும் கொண்டாட்ட காலங்களிலும் வாழை இலையில் உணவு பரிமாறுவது இன்னும் வழமையாகவே உள்ளது.

.

கறிவகைகள்

சோற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காக காய்கறிகள், இலைவகைகள், மீன், மாமிசம் போன்றவற்றைப் பயன்படுத்தி ஆக்கப்படுபவை கறிகள் எனப்படுகின்றன. இக் கறிவகைகளைப் பலவகையாகப் பகுத்துக் காணமுடியும். இவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு.

  • பருப்புக் கடையல்: தோல் அகற்றப்பட்ட, பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு போன்றவற்றில் ஒன்றைக் குறைந்த நீரில் அவித்துத் தேங்காய்ப் பால், உப்பு மற்றும் சேர்மானங்களுடன், சிறிது நீர்ப்பற்றுள்ளதாகச் செய்யப்படும் கறி இது. சைவச் சாப்பாட்டில் இது முக்கிய இடம் வகிக்கும் ஒரு கறியாகும்.
  • குழம்பு: கத்தரிக்காய், வாழைக்காய், உருளைக்கிழங்கு,பூசனிக்காய், பாகற்காய் போன்ற காய், கிழங்கு வகைகளில் ஒன்றை முதன்மையாகச் சேர்த்து, தேங்காய்ப் பால், மிளகாய்த்தூள், பழப்புளி, உப்பு போன்ற சேர்மானங்களுடன் ஆக்கப்படுவது இது. மிளாகாய்த் தூளுக்குரிய சிவப்பு நிறத்தில், கூழ் போன்ற நிலையில் இருக்கும். உறைப்புச் சுவை கொண்டது.
  • வரட்டல் தூள் கறி (கூட்டுக்கறி): குழம்பு ஆக்குவதற்கான சேர்மானங்களே இதற்கும் பயன்படுகின்றன. ஆனால், கறி கூழ் நிலையில் இல்லாமல் மேலும் வரண்டு, பசை போன்ற கூட்டில் காய்கறிகள் சேர்ந்த நிலையில் இருக்கும். இதுவும் உறைப்புச் சுவை கொண்டதே.
  • பால் கறி (வெள்ளைக் கறி): இதுவும் ஒரு வரட்டல் நிலையிலேயே இருந்தாலும், இதற்கு மிளகாய்த்தூள் சேர்க்கப்படுவதில்லை.
  • கீரைக் கடையல்: கீரையை அவித்துத் தேங்காய்ப்பாலுடன் கடைந்து செய்யப்படும் இதற்குப் பெரும்பாலும் புளிக்காக எலுமிச்சம் பழச் சாறு சேர்ப்பார்கள்.
  • வறை: சேர்மானங்களை தேங்காய்ப் பூவுடன் சேர்த்து, சிறிதளவு எண்ணையுடன் சேர்த்து வறுப்பதன் மூலம் கிடைப்பது வறை ஆகும். இலை வகைகள், புடோல் போன்ற சில காய் வகைகள் போன்றவை வறை செய்வதற்குப் பயன்படுகின்றன. சுறா போன்ற அசைவ உணவுகளிலும் வறை செய்யப்படுவதுண்டு.
  • துவையல்: பருப்புப் போன்றவற்றைத் தேங்காய்ப்பூவுடனும், வேறு சேர்மானங்களுடனும் சேர்த்துத் துவைத்து ஆக்குவது துவையல்.
  • சம்பல்: தேங்காய்ப்பூ, புளி, உப்பு, வெங்காயம் என்பவற்றுடன், மிளகாய் அல்லது வேறேதாவது சேர்த்து அம்மியில் அரைப்பதன் மூலம் அல்லது உரலில் இட்டு இடிப்பதன் மூலம் சம்பல் செய்யப்படுகின்றது. மிளகாய் சேர்த்துச் செய்வது மிளாகய்ச் சம்பல். இஞ்சி சேர்க்கும்போது இஞ்சிச் சம்பல் எனப் பலவகைச் சம்பல்கள் பெறப்படுகின்றன. சிங்கள மொழியில் இதனைச் சம்போல என்பார்கள்.
  • பொரியல்:வாழைக்காய், மரவள்ளிக் கிழங்கு, உருளைக் கிழங்கு போன்றவற்றைச் சீவல்களாக்கி எண்ணெயில் நன்றாகப் பொரிப்பதன் மூலம் பொரியல்கள் பெறப்படுகின்றன. அசைவ உணவுகளான, மீன், இறைச்சி என்பவற்றிலும் பொரியல்கள் செய்யப்படுகின்றன.
  • சொதி: நீரினால் ஐதாக்கப்பட்ட தேங்காய்ப்பால், உப்பு, வெங்காயம் என்பவற்றைக் கொதிக்கவைத்து, அத்துடன் பழப்புளி அல்லது எலுமிச்சம் சாறு சேர்ப்பதன் மூலம் சொதி ஆக்கப்படுகின்றது.

ஒரு முழுமையான மதிய உணவு என்னும்போது மேலே குறிப்பிட்ட எல்லாவகை உணவுகளும் காணப்படுவதுண்டு. எனினும் அண்றாட உணவுகளில் பெரும்பாலானோர் இவ்வாறான முழுமையான உணவை உண்பதில்லை. விசேட நாட்களில் மட்டும் இவ்வாறு பல்வேறுபட்ட கறிகளுடன் உணவு ஆக்கப்படுவதுண்டு.

கறிகள் ஆக்குவதில்,தேங்காயை மிக அதிகமாகவே சேர்த்துக் கொள்கிறார்கள். அநேகமாக எல்லாக் கறிகளிலும், தேங்காய்ப்பூவோ, தேங்காய்ப் பாலோ சேர்த்துக்கொள்ளப்படுகிறது. மிளகாய்த்தூளின் பயன்பாடும், தமிழ் நாட்டுச் சமையலோடு ஒப்பிடும்போது அதிகமென்றே கூறலாம். தமிழ் நாட்டின் அதிகம் பயன்படும் சாம்பார்  இவர்களின் சமையலில் இடம்பெறுவதில்லை. இதற்குப் பதிலாக தேங்காய்ப் பால், மிளகாய்த் தூள் என்பவற்றுடன் மரக்கறி, மீன், இறைச்சி அல்லது பிற கடலுணவு வகை கலந்து சமைக்கப்படும் குழம்பு பயன்படுகிறது. தமிழ் நாட்டில் அதிகம் காணப்படாத இன்னொரு துணைக் கறி வகை சொதி. இது தேங்காய்ப் பாலில் செய்யப்படுகிறது. சோற்றுடன் சாப்பிடும்போது கடைசியாகச் சொதி ஊற்றிச் சாப்பிடுவது வழக்கம்..

துணை உணவு வகைகள்

காலைச் சாப்பாட்டிற்கும், சில சமயங்களில் இரவுச் சாப்பாட்டிற்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்ற உணவு வகைகள் துணை உணவு வகைகள் அல்லது சிற்றுண்டிகள் எனப்படலாம். இந்த விடயத்திலும் தமிழ் நாட்டுக்கும், இலங்கைத்தமிழருக்கும் இடையே வேறுபாடு காணப்படுகின்றது.

  • இடியப்பம்: இடியப்பம் முன்னர் அரிசி மாவில் மட்டுமே செய்யப்பட்டது. கோதுமை மாவின் அறிமுகத்தின் பின்னர், தனிக் கோதுமை மாவிலோ, அரிசியுடன் கலந்தோ இடியப்பம் அவிக்கும் வழக்கம் ஏற்பட்டது. கோதுமை மா மலிவான விலையில் கிடைத்ததும், கோதுமை கலந்த இடியப்பம் மென்மையாக இருந்ததும், கோதுமை இடியப்பம் பிரபலமாகக் காரணமாக அமைந்தது. இடியப்பம் பொதுவாகச் சொதி, சம்பல் ஆகியவற்றுடன் உண்ணப்படுகின்றது. எனினும், வேறு சைவ, அசைவக் கறி வகைகளுடனும் இடியப்பத்தை உண்பதுண்டு.

அத்துடன் மூங்கிலால் செய்யப்படும் பிட்டுக் குழலில் அல்லது பனையோலையினால் செய்யப்பட்ட கூம்பு வடிவான நீற்றுப் பெட்டியில் அவித்த அரிசி மாவு,தேங்காய்த் துருவல் கொண்ட பிட்டும்,வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் சுடப்படும் அரிசி மா அப்பமும் இலங்கை தமிழர்களிடம் பிரபலமானவை.மேலும் தேங்காய் பாலும் உறைப்பு கூடிய மிளகாய் தூளும் பெரும்பாலும் அங்கு சமையலுக்கு பாவிக்கப்படுவதுடன்,பல தரப்பட்ட ஊறுகாய் வடகத்துடன் இடியப்பம் உண்ணப்படுகின்றது..

 

  • பிட்டு: பிட்டு அரிசி மாவில் மட்டுமன்றி, குரக்கன் மா, ஒடியல் மா போன்றவற்றிலும், அவிக்கப்பட்டு வந்தது. இப்பொழுது, கோதுமை கலந்து அவிக்கப்படுவது உண்டு. பிட்டு எந்தக் கறியுடனும் உண்ணப்படக்கூடியது. பிட்டுக்குப் பால் சேர்த்துப் பால் பிட்டு எனவும், சீனி சேர்த்து சீனிப் பிட்டு எனவும் உண்பது உண்டு.
  • அப்பம்: ஒரு நாள் முன்னரே அரிசியை ஊறவைத்து இடித்து நீருடன் கலந்து புளிக்கவிட்டு அப்பம் சுடுவார்கள். வெறுமனே சுடப்படும் அப்பம் வெள்ளையப்பம் என்றும், சுடும்போது நடுவிலே தேங்காய்ப் பால் ஊற்றிச் சுடப்படும் அப்பம் பாலப்பம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • தோசை:  கிராமப் புறங்களிலே சுடப்படுகின்ற தோசை சிறிது வேறுபட்டது. தோசை மாவுக்குச் சிறிது மஞ்சள் சேர்த்துக் கடுகு, மிளகாயும் தாளித்துச் சேர்ப்பார்கள். தமிழ் நாட்டில் உள்ளது போல் நீர்த் தன்மை கொண்ட சட்னி இங்கு செய்யப்படுவதில்லை. ஆனால் தோசைக்காக வேறு வகையான சம்பல் தயாரிக்கப்படுகின்றது. செத்தல் மிளகாயைப் (காய்ந்த மிளகாய்) பொரித்து, அத்துடன், புளி, உப்பு, வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து உரலில் இட்டு இடித்துக்கொள்வார்கள். இது சிறிது வரண்டதாகவும், உதிர்கின்ற தன்மை கொண்டதாகவும் இருக்கும்.
  • அவித்த கிழங்கு வகைகள்: மரவள்ளிக் கிழங்கு இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவில் செய்கை பண்ணப்படும் கிழங்கு வகையாகும். கறியாகவும் சமைத்து உண்னப்படும் இக் கிழங்கை அவித்துக் காலை உணவாக உண்பது உண்டு. இக் கிழங்கு குறைந்த வருமான மட்டங்களில் உள்ளவர்களுக்கு மலிவாகக் கிடைக்ககூடிய ஒரு உணவாகும்.
  • பாண் (கோதுமை ரொட்டி): இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், ஆங்கிலேய ஆட்சியாளர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட, மேனாட்டு உணவு வகையான இது, இங்கிருக்கும் தமிழர்களால் பரவலாக உண்ணப்படுகின்ற உணவு வகைகளில் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. உண்ணுவதற்கான தயார் நிலையிலேயே வருவதாலும், அரச மானியங்கள் மூலமாகப் பாண் மலிவான விலையில் கிடைப்பதாலும் பலரும் இதை விரும்பி உண்கிறார்கள்.

பனம் பண்டங்கள்

பனம் பண்டங்கள் நீண்டகாலமாக இம் மக்களின், சிறப்பாகச் சமுதாயத்தின் மத்தியதர மற்றும் கீழ்த்தட்டு மக்களின் உணவுப் பழக்கங்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளன. எவரும் நட்டுப் பராமரித்து வளர்க்காத பனைகள் தாமாகவே வளர்ந்து பயன் தருவதன் மூலம், உணவுக்கான ஒரு மலிவான மூலமாக இருந்திருக்கிறது என்பது வெளிப்படை. பனையிலே உணவுப் பொருள்களுக்கான மூலங்களாக இருப்பவை பனம்பழமும், பனங்கிழங்கும் ஆகும். பனம்பழப் பிழிவை வெயிலில் காயவைப்பது மூலம் பனாட்டு ஆக்கி நீண்டகாலப் பயன்பாட்டுக்காக வைத்திருக்க முடிந்ததும், பனங்கிழங்கையும் அவ்வாறே காயவைத்து, ஒடியலாக்கி வருடக் கணக்கில் பயன்படுத்த முடிந்ததும் அவற்றின் உணவுப்பெறுமானத்தை மேலும் அதிகரித்தன.

  • ஒடியல் மாவிலிருந்து செய்யப்படும் உணவு வகைகள் பலவற்றை மக்கள் உணவாகப் பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில் பனம் பொருட்கள் முக்கிய உணவாகப் பயன்படுவது இல்லை. ஒடியல் மாவு, கடலுணவு வகைகள் போன்றவற்றைக் கலந்து செய்யப்படும் ஒரு வகைக் கூழ் இவர்களுக்கே உரிய தனித்துவமான ஒரு உணவு ஆகும். பெரிய பானைகளில் இக்கூழைக் காய்ச்சி, உறவினர்கள், அயலவர்கள் எனப் பலரும் ஒன்றாகக் கூடியிருந்து, பிலாவிலையைக் கோலிக்கொண்டு அதில் கூழை ஊற்றிக் குடிப்பர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இவர்களின் மனத்தில் நீங்காது இடம்பெறக்கூடிய ஒரு விடயம் இது எனலாம்.
  • கூழ்” என்பது மிக பிரதானமான உணவு எனலாம்.
    கூழ்களில் பல வகையான கூழ் வகைகள் இருந்தாலும் மிகப் பிரதானமாக இரண்டு விதமான கூழ் ஈழத்தில் முக்கிய இடத்தை கொண்டிருக்கின்றன.
    1 ) ஆடி மாதப் பிறப்பில் கோவில்களிலும், வீடுகளிலும் தயாரிக்கப்படும் ஆடிக்கூழ் .
    2) ஒடியல் கூழ்.

 

பழவகைகள்

  • உள்ளூரில் விளையும் பல பழவகைகளையும் இலங்கைத் தமிழர் உணவாகக் கொள்ளுகின்றனர். மா, பலா, வாழை போன்றவை இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாகவே செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. தோடை போன்ற பழவகைகள் வன்னிப்பகுதியில் செய்கை பண்ணப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தப்பட்ட திராட்சையும் இங்கு வெற்றிகரமாக விளைவிக்கப்பட்டது.
  • தமிழ் நாட்டில் அதிகம் எலுமிச்சை ரசம்பயன்பாட்டில் இருப்பது போல இலங்கைத்தமிழர்களிடையெ அதிகமும் விளாம்பழ பழரசம் பயன்பாட்டில் உள்ளது

 

உணவுக்கான மூலப்பொருட்களும் சேர்மானங்களும்

  • அரிசி மற்றும் சிறுதானிய வகைகள் – அரிசி, குரக்கன், வரகு, சாமை, தினை
  • பருப்புவகை – பயறு, மசூர்ப்பருப்பு, துவரம்பருப்பு, உ:ளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு
  • காய்கறிகள் – கத்தரி, வெண்டி, பயற்றை, வாழைக்காய், அவரை, தக்காளி, முருங்கைக்காய்
  • அசைவ உணவுகள் – மீன், இறால், கணவாய், நண்டு, கோழி, ஆடு
  • கீரை வகைகள் – முளைக்கீரை, முங்கைக்கீரை, பசளிக்கீரை, வல்லாரை, அகத்திக்கீரை
  • எண்ணெய் வகை – நல்லெண்ணை, தேங்காய் எண்ணை
  • சுவையூட்டற் பொருட்கள் – உப்பு, பழப்புளி, மிளகாய், எலுமிச்சை, மாங்காய், தேங்காய்
  • இனிப்பூட்டற் பொருட்கள் – பனங்கட்டி, சர்க்கரை, சீனி<[3]
  • வாசனைப் பொருட்கள் – கடுகு, சீரகம், சோம்பு, கொத்தமல்லி, பெருங்காயம்

இலங்கையில் சைவ உணவு வகைகளை மரக்கறிச் சாப்பாடு என்றும், அசைவ உணவு வகைகளை மச்சச் சாப்பாடு என்றும் குறிப்பிடுவது வழக்கம். இங்குசர்க்கரை என்பது தமிழ்நாட்டில் வெல்லம் என்பதற்கு நிகரானது. அதுபோலத் தமிழ் நாட்டில் சர்க்கரை என்பதையே இலங்கையில் சீனி என்கிறார்கள்

 

கடல் உணவுகள்

இலங்கையில் தமிழர் பகுதிகள் நீண்ட கடற்கரையைக் கொண்டவை இதனால், மீன், சுறா, நண்டு, கணவாய், இறால், திருக்கை போன்ற பலவகைக் கடலுணவுகள் கிடைக்கின்றன.

இலங்கை தமிழர்கள் அதிகமாக மாமிச உணவுகளை விட கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய் ஆகியவற்றை விரும்பி சாப்பிடுவார்கள்.இந்த கடல் உணவுகளில் அதிகமாக ஆரோக்கிய சத்துக்கள் அடங்கியுள்ளன. மீன் குழம்பு என்று எடுத்துக்கொண்டால் தேங்காய்பால் விட்டு, மிளகாய் தூள் போதுமான அளவு சேர்த்து சமைத்து காரம் அதிகமாக விரும்பி சாப்பிடுகிறவர்கள், கூடவே இந்த கடல் உணவுகள் சமைக்கும்போது  அதிகமும் பூண்டு சேர்த்துக்கொள்ளுகிறார்கள்

மரபு வழியாக இலங்கைத் தமிழரின் முக்கிய உணவுகள் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. தினை, சாமை, குரக்கன், வரகு போன்ற சிறு தானிய வகைகளும் பயன்படுகின்றன எனினும் இலங்கைத் தமிழரின் உணவு பெரும்பாலும் தென்னிந்திய செல்வாக்குடன் கூடியது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் உணவுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. அத்துடன், இலங்கையை ஆண்ட ஐரோப்பியர்களின் செல்வாக்கும் உண்டு.

.

 

வளமான,செல்வம் மிக்க குடும்பத்தில் கூட நாளாந்த சாப்பாட்டில் பெரும் வேறுபாடு காணமுடியாது.ஆனால்,விருந்தினர்கள் அவர்கள் வீட்டில் வரும் பொழுது அல்லது திருமண வைபவம் நடைபெரும்பொழுது முற்றிலும் வேறுபாடாக,அங்கு இன்சுவை சாப்பாடு பரிமாறப்படும்.அது மட்டும் அல்ல, அங்கு பரிமாறப்படும் உணவு அவர்களின் செல்வ நிலையை காட்டுவதாகவும் இருக்கும். ஒரு விழா, சடங்கு என்பனை நடை பெரும்பொழுது,பாரம்பரிய முறைப்படி அனைவருக்கும் தலை வாழை இலையில் அறுசுவை உணவு பரிமாறப்படுகிறது. வாழை இலையில் உணவு பரிமாறல் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாகவும்,ஆகக் குறைந்தது கட்டாயம் 1500 ஆண்டுகளுக்கு முன்பே பரவலாக தமிழர் வாழ்விடங்களில் பாவிக்கப்பட்தாகவும் இருக்கலாம் எனவும் அறியப்படுகிறது

முடிவுரை.

நவீன மருத்துவத்தால் நம் ஆயுளை நீடிக்க முடிந்திருக்கிறதே தவிர, ஆரோக்கியமாக வாழவைக்க முடியவில்லை. நம் முன்னோர்களுக்கு உணவுதான் மருந்து. இதனால் நோய்நொடியில்லாமல் அவர்களால் ஆரோக்கியத்துடன் வாழ முடிந்திருக்கிறது. ஆனால், இப்போது மருந்துதான் உணவு. மூன்று வேளையும் சாப்பிடுகிறோமோ இல்லையோ, தவறாமல் மருந்துகளை உட்கொண்டு வருகிறோம். அடுக்களைகளில் சுவைச் சரக்குகளை வைப்பதற்கென முன்னர் அஞ்சறைப் பெட்டிகளை வைத்திருந்தோம். இப்போது, ஐந்து அறைகள் அல்ல, ஏராளமான அறைகளைக்கொண்ட மாத்திரைப் பெட்டிகளைத்தான் வைத்திருக்கிறோம். அதில் விதம் விதமான மாத்திரைகளை நிரப்பி வைத்திருக்கிறோம்.

தமிழர்களுக்கெனத் தனித்துவமான உணவுப் பண்பாடு உள்ளது. அந்த உணவுப் பண்பாட்டைக் கைவிட்டு, பாரம்பரிய உணவுகளில் இருந்து துரித உணவுகளுக்;கு நாம் பெருமளவுக்கு மாறிவிட்டோம். இதுதான், மருந்து மாத்திரைகளுடன் நாங்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பாரம்பரிய உணவுகளுக்கு நாம்மீளவும் திரும்ப வேண்டும் நமது அன்றாட உணவில் ஒருவேளை உணவாவது பாரம்பரிய உணவாக இருக்க வேண்டும்.

 

பெருமரம்

அறிவுறுத்திக்கொண்டே இருக்கிறாய்
அதிகம் நனைந்து விட வேண்டாம் உன்காதலில் என்று,
கட்டுப்படுத்திக்கொண்டுமிருக்கிறாய்
பேரன்பின் பிரியத்தில் நிலைமறக்க வேண்டியதில்லை என
மட்டுறுத்திகொண்டுமிருக்கிறாய்,
அன்பில் அலைக்கழிந்து  போக வேண்டமென்று
கட்டளைகூட இட்டிருக்கிறாய்
காத்திருப்பின் தவிப்பில் கரைந்து போக வேண்டியதில்லையென
நீ உணரவேயில்லை
நீ சொல்லிக்கொண்டிருப்பதெல்லாம்
ஈரமண்ணிற்குள்  விதைகளை மறைத்து வைப்பதற்கான
முயற்சிகள் என்பதை
முளைத்து, தழைத்து, இலையும் கிளையுமாய்
தலைவிரித்தாடிக்கொண்டிருக்கும் பெருமரமொன்றை
நீ எண்ணிகொண்டிருக்கிறாய் சின்னஞ்சிறு விதையென!

ஆசிரியைக்கு ஒரு கடிதம்

அன்புள்ள மைதிலி  அவர்களுக்க
”அன்புள்ள” என்று ஒரு கடிதத்தை உங்களை அன்றி வேறு யாருக்கு எழுதுவதும் இத்தனை பொருத்தமானதாய் இருக்காது. அத்தனை அன்புள்ளவராக மாணவர்கள் அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருக்கிறீர்கள்.
சரண்,தருண் இந்த பள்ளியில் சேர்ந்ததில் இருந்தே அவர்களின் அன்பிற்கு உரியவராகவே இருக்கிறீர்கள் . அவர்களுக்கு மட்டுமன்றி இளம் மாணவர்கள் அனைவருக்குமே நீங்கள் பிரியமானவரே. ஏன் ஒரு நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தேன் அவர்கள் வீட்டு குழந்தை இதே பள்ளியில் 2ஆவதோ 3ஆவதோ படிக்கிறது. அந்த பெண்ணும் உங்களை குறித்தே பேசுகிறது.
நானும் உங்களை கவனித்திருக்கிறேன் மைதிலி. வயதில் உஙகளை விட மூத்தவள் அன்பதாலும் அன்புமிகுந்தும் உங்களை பெயரிட்டே அழைக்கிறேன் . மன்னிக்கவும் மேடைகளில் பள்ளி முதல்வராய் அமர்ந்திருந்தாலும் , பெற்றோர்களிடன்  அறையில் அமர்ந்த்து பேசும் போதும் , பள்ளி வளாகத்தில் எங்கேனும் சந்த்திக நேர்கையிலோ அன்றி மாணவர்களை வகுப்பறை தவிர்த்து வெளியில் காண்கையிலோ உங்களின் உடல்மொழி மிக நம்பிகை ஊட்டக்கூடியதாகவும், நமக்கு வேண்டிய ஒருவராகவும், அடுத்த வீட்டுப்பெண்போன்ற,இயல்பான ஒருவராகவுமே இருக்கிறீர்கள்.
உங்களின் ஆங்கிலப்புலமை குறித்தும் மாணவர்களோடான உங்களின் அணுக்கம் குறித்தும் நிறைய கேட்டிருக்கிறேன் எனினும் என்னை பொருத்தவரை உங்கள் இந்த இயல்பான அன்பு ததும்பும் உடழ்மொழியே அனைத்திற்கும் அடிப்படை என் எண்ணுகிறேன்.
சரண் இந்த புதிய பள்ளியில் ஏதேனும் பேசும்படி சொல்லப்பட்டபோது அவன் வாழ்வில் அன்றும் இன்றும் என்றும் அவன் மனம் கவர்ந்த ஆசிரியையாக உங்களையே சொன்னான். சொல்லுகையிலேயே அவன் கண்கள் பனிப்பதையும் நான் கண்டேன். உண்மையில் மைதிலி ஒரு தாயாகவும் ஒரு ஆசிரியையாகவும் அந்த கணம் நான் பொறாமைதான் அடைந்தேன்.என்னிடம் மிகுந்த இஷ்டமுள்ள மாணவர்கள் இருக்கிறார்கள் எனினும் இதனை தூரம் இல்லை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். உங்களிடமிருந்து நான் அதிகம் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லலாம்.
சரணின் பொதுத்தேர்விற்கு முன்னால் உங்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்குமான ஏதோ ஒரு கருத்து வேறுபாடின் காரணமாக நீங்கள் கடிந்து கொள்ளப்பட்டீர்களென்றும், கண்ணீர் சிந்தினீர்கள் என்றும் தெரிந்த அன்று இரவு நெடு நேரம் வரை எத்தனையோ தொலைபேசி அழைப்புகளில் இது குறித்தே பேசிய என் இரண்டு மகன்களையும் அவர்களின் நண்பர்களையும் கவனித்தேன், அது அன்றைக்கான அவர்களின் சொந்தத்துயரமானது, உஙகளுக்கானதல்ல நிச்சயம்
அவர்களுக்கு நீங்கள் கிடைத்தது ஒரு வரமெனில் உங்களுக்கும் இப்படியான கள்ளமில்லா உண்மை அன்புடனான மாணவர்களும் வரமே.
கோடை விடுமுறையில் நீண்ட நாட்கள் உங்களைப் பார்க்க முடியாத தருணின் கனவில் 3 முறை வந்த ஆசிரியர் நீங்களே. தேர்வு முடிவிற்குப்பின் அவன் அவன் தேர்ச்சி பெற்றதை அறிவிக்கும் கடிதத்தில் இருந்த உங்களின் கையெழுத்தை இரண்டு முறை மெல்ல தொட்டுப்பார்ப்பதை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். எத்தனை எத்தனை அன்பிருந்தால் இது நடக்கும்? ஒரு வேளை உங்களுக்கு இந்த நிர்வாகத்தில் ஏதேனும் சிறுகுறைகளிருப்பினும் கூட இந்த அன்பிற்கு முன்னால்  அவை உங்களால் பொருட்படுத்த அவசியமில்லதவையே
எனக்கும் உங்களை மிக இஷ்டம். எப்போது பார்த்தாலும் அழகிய சிரிபபுடன், இனிய குரலுடன், பளிச்சிடும் கண்களும் உற்சாகமாய் பேசுவீர்கள்.உங்கள் குழந்தையை ஒருமுறை பார்த்திருக்கிறேன். முன்பு  என் காரின் முன்னால் சில சமயம் நீங்கள் செல்கையில் எல்லாம் மகிழ்ச்சியில் கூச்சலிடும் என் மகன்கள் மூலம் உங்களைப்பற்றிய பெருமதிப்புடன்  இருக்கிறேன்.
ஆசிரியம் என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு வாழ்வு நெறியென்றே நானும் நீங்களும் நினைக்கிறோம் அதன் மூலமே இந்த இளம் உள்ளங்களில் என்றும் இருக்கிறீகள். இருப்பீர்கள்.  ஒரு ஆசிரியை வகுப்பறையில் நன்கு போதிப்பவர்மட்டுமல்ல. She or he should be good in all walks of their life.  மற்ற தொழில்களைவிட மிகுந்த சிறப்பானதோர் பணி இது, ஆசிரியரின் பால் ஈர்க்கப்பட்டு அப்படி தெய்வத்திற்கும் முன்பானதோர் இடம் பெற்று, கொடுக்கப்படிருக்கும் பணியை ஆத்மார்த்தமாக செய்பவர்களை அடையாளம் காட்டவேண்டுமெனில் அதற்கு உங்களைத்தவிர வேறு யாரையும் என்னால் இப்போதைக்கு உதாரணம் காட்ட இயலாது.
 Academic excellence  என்று சொல்லப்படும் பட்டங்களுடன் என்னுடன் பணிபுரிபவர்களில் பலர்  educated illiterates  ஆக இருப்பதை நான் கண்கூடாக காண்கிறேன். இந்த பள்ளியில் நீங்கள் மகிழ்வுடன் இருக்கிறீர்களா என்றறியேன் ஆயினும் நிறைவுடன் இருப்பீர்கள் என்றே நம்புகிறேன். மாணவர்களின் பிரியத்திற்குரியவள் என்னும் நிறைவில் பல இன்னல்களை நாம் மறக்கலாமல்லவா?
மிக அணுக்கமான ஒரு ஆசிரியரை பிரிந்த துயரில் இருக்கும் சரணைப்போன்ற பலரின் தவிப்பில் நீங்கள் எப்போதும்  உயிர்ப்புடன் இருக்கிறீர்கள் மைதிலி
அளிப்பதிலும் ஏற்பதிலும் இன்பமளிக்கும் இந்த ஆசிரியப்பணியில் நீங்களே அறியாத ஒரு இனிய தெய்வமொன்று உங்களுக்குள் குடியிருந்து உங்கள் மாணவர்களுக்கு காட்சிதருகிறது போலும். என் மகன்களின் வாழ்வில் மிக முக்கிய உளவியல் ரீதியான நல்ல மாற்றத்தை உண்டுபண்ணிய நீங்களே அவர்கள் இருவருக்கும் என்றென்றென்றைக்குமான மனமுவந்த ஆசிரியை. மாணவர்களின் வெற்றி ஆசிரியரின் வெற்றியே. சரண், தருண் எதிர்காலத்தில் என்னவாக இருந்தாலும் அந்த பெருமை அனைத்தும் உங்களுக்கே
வரும் டிசம்பரில் சரண் 1 மாத விடுமுறையில் வீட்டில் இருக்கயில் ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வருவீர்களானால் அது பெரும் கெளரவமாக இருக்கும் எங்களுக்கு
துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ என்றல்லவா சொல்லி இருக்கிறார்கள். இந்த நாளும் இனி வரும் எல்லா நாளும் உங்களின் அன்பினால் நலம் திகழட்டும் உங்களுக்கும் அனைவருக்கும்
அன்புடன்
லோகமாதேவி

உன் சமையலறையில்…

 

உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். உப்புச்சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று.  அதுவும் நான்கில் மூன்று பங்கு தண்ணீரை கொண்ட   பூமியில் உப்பு  ஒரு முக்கியமான அங்கமாகும். அமிலம் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும் உப்பு’ என்று வகைப்படுத்தப்படுகின்றது.

மனிதன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பை பயன்படுத்தி இருக்கிறான். இறந்தவர்களின் உடலை பாதுகாக்க முதன்முதலில் உப்பை பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்களே. நாம் உணவில் சேர்த்துக் கொள்வது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு. இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் அணுக்கள் இணைந்திருக்கும். நமக்கு கிடைக்கும் கனிமங்களில் மிக அதிக பயன்பாடுகளை உடையது உப்பு.

விதையும் இல்லாமல் மண்ணுமில்லாமல் கடலில் தோன்றும் இந்த ‘அதிசய விளைச்சலான உப்பு  ‘சமுத்திரமணி’, ‘நீர்ப்படிகம்’, ‘கடல் தங்கம்’, ‘பூமிகற்பம்’, ‘சமுத்திர ஸ்வர்ணம்’, ‘வருண புஷ்பம்’, ‘சமுத்திரக்கனி’, ‘ஜலமாணிக்கம்’ போற்றப்படுகிறது

சரித்திரம் முழுவதிலும், உப்பு  மதிப்பு  மிக்க பொருளாக இருந்து வந்ததால், அதற்காக போர்களும்கூட நடந்திருக்கின்றன. பதினாறாம் லூயி மன்னர் உப்பின்மீது உயர் வரியை சுமத்தியதே பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று,.  மத்திய ஆப்பிரிக்க பழங்குடியினர் சிலர் பாறைஉப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தினர். சம்பளம் என்பதற்கான ஆங்கில வார்த்தையாகியசாலரிஎன்பது  உப்பு என்று பொருள்படும் சால் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து,  பண்டைய ரோம வீரர்களுக்கு பணத்தோடு உப்பும் வழங்கப்பட்ட சம்பளத்தை குறிக்கிறது. கிரேக்கர்கள் உப்பை கொடுத்து அடிமைகளை வாங்கினர்; இதுவே, “அவன் உப்புக்கு விலைபெறாதவன்என்ற பழமொழி உருவாக வழிவகுத்தது . நமது நாட்டின் சுதந்திரப்போர் தீவிரம் அடைந்ததும் உப்பு சத்தியாகிரகத்திற்கு பின்புதான்

தற்போது நடைமுறையிலிருக்கும் கடல் நீரில் இருந்து உப்பு பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்கள்.  கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. பாத்திகளில் பாயச் செய்து காயவிடப்பட்ட கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியானபின் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். கடற்கரையை ஒட்டிய இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் எனபப்டும்.   பாத்திகளில் படியும் உப்பின் அசுத்தங்களை நீக்குவதற்காக அந்த உப்புக் கரைசலுடன் ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை செலுத்துவார்கள். பின்னர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் கழுவி, நன்கு உலர்த்துவார்கள். பின்னர்தான் சமையலில் சேர்க்கப்படும் உப்பு கிடைக்கிறது.

தற்போது  கடலில் கலக்கும் கழிவுகளால் கடல்நீர் மாசடைந்து இருப்பதால்  உப்பு உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது

உலகின் முக்கிய உப்பு உற்பத்தி நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவுடன், இந்தியாவும் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்வதோடு தற்போது உப்பின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 20 மில்லியன் டன் உப்பு உற்பத்தியில் 70% கடல் மூலம் நடைபெறுகிறது.  இதில் 59 லட்சம் டன்கள் உணவு பயன்பாட்டுக்காகவும், 107 லட்சம் டன்கள் தொழிற்துறை பயன்பாட்டுக்கும் உதவுகின்றன.

இந்தியாவில் நான்கு விதமான முறைகளில் உப்பு தயாரிக்கப்படுகிறது. கடல் நீர், ஏரி நீர், நிலம், பாறைகளில் இருந்து உப்பு பெறப்படுகிறது. குஜராத்தின் பல இடங்களிலும் , தமிழகம்,  கேரளத்தின் கோவளம்,   ஆந்திரா,மகாராஷ்டிரா,ஒரிசா மற்றும், மேற்கு வங்கத்திலும் கடலில் இருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. ஏரியில் இருந்து உப்பு தயாரிக்கும் முறையானது ராஜஸ்தானிலும், நிலப்பகுதியில் தோண்டியெடுக்கும் உப்பானது கட்ச் பகுதியிலும், பாறை உப்பு இமாச்சல் பிரதேசத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

உப்பின்  பிற வகைகள்

பாம்பூ உப்பு (bamboo salt) – கடல்  உப்பை மூங்கில் உருளைகளுக்குள் அடைத்து ,மண்ணிலிட்டு,வறுத்துத் தயாரிக்கிற ஒரு வகையான உப்பு இது. மூங்கில் எரிய ஆரம்பிக்கும் போது,உப்பு உருகும்.அப்போது மண்ணில் இருந்த தாதுக்களைக் கிரகித்துக் கொள்ளும்.அசாமில் இந்த வகையான உப்பு பிரபலம்!

கோஷர் உப்பு ( kosher salt )-பூமிக்கடியில்  சேர்கிற உப்புப்படிவத்திலிருந்து  பெரிய பெரிய கட்டிகளாக பெறப்படும்.கடல் உப்பை விட இதில் தாதுக்கள் குறைவு.சாட் மசாலாவில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

மேசை உப்பு (table salt) -கடல் நீரிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு சுத்திகரிக்கப்பட்டு தேவையற்ற தாதுப்பொருட்களை நீக்கி, சில ரசாயனக்கள் சேர்க்கப்பட்டு மிகவும் சிறிய துகள்களாக்கப்படுகின்றது. விரைவில் கரையும்  மற்றும் மற்ற உணவுகளுடன் உடனே  கலக்கும் என்பதால்,சமையலுக்கு உகந்தது.

கோஷர் உப்பு (Koshar salt)-கடல் நீரிலிருந்து எடுக்கப்படுகிற சற்றே கரகரப்பான பெரிய துகள்கள் பிரமிட் வடிவிலிலுள்ள , அயோடின் அறவே இல்லாத இந்த உப்பு மிக மெதுவாகத்தான் கரையும்.

இன்பியூஸ்டு உப்பு – (Infused salt) கல் உப்புடன் வெனிலா,சாக்லெட்,காபி,மிளகாய்,சில வகை மூலிகைகளை உபயோகித்து பெறப்படுகிற, சுவையும், மணமும் அதிகமுள்ள்ள இந்த உப்பு .ஐஸ்கிரீம்,இனிப்பு, மற்றும் சூடான பானங்களில் சேர்க்கக் கூடியது.

குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் சோடா சாம்பல் ஆகியவற்றின் தயாரிப்பில் உப்பு முக்கியப் பயன்பாட்டுப் பொருள். மீன்களை கெடாமல் பாதுகாத்தல், காய்கறிகளைப் பதப்படுத்தல், இறைச்சிப் பதப்படுத்தல் மற்றும் காகிதத் தயாரிப்பு போன்ற தொழில்துறைப் பயன்பாடுகளிலும் உப்பின் முக்கியத்துவம் அதிகம்.

சுவையூட்டியாகவும் பதனப்படுத்தும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்ற உப்பு மனிதனின் உடம்பில் உள்ள திரவ நிலையினை சமப்படுத்துகிறது. எந்த வகை உப்பாயினும் அளவோடு பயன்படுத்துவதே நல்லது.

காப்புக்கட்டு

IMG_20180113_150904(1)me(8)

காலையில் இருந்தே காப்புக்கட்ட செடிகளை சேகரிக்கவும், வீட்டை சுத்தப்படுத்திகொண்டுமிருந்தோம். தோழியும் தங்கையுமான கிறிஸ்டி அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கையில் காப்புக்கட்டுவதைப்பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன் காப்பு? யாருக்கு கல்யாணம் என்றெல்லாம் கேட்டாள்

அவளுக்கு விளக்கினேன் கொங்குப்பகுதியில் போகி அன்று மாலை காப்புக்கட்டுதல் பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருகிறது

இனி வரும் சந்தததிகளுக்கு மட்டுமல்ல இன்றைய இளம் தலைமுறையினருக்கே இதுகுறித்து தெரியாமல் இருக்கிறது

பண்டிகையின்போது வீட்டைச் சுத்தம் செய்து, வெள்ளையடித்து, தேவையற்ற பொருட்களைக் கழித்து, வீடுகளில் ‘காப்புக்கட்டு’ எனும் மூலிகைக்காப்பான்களைக் கட்டி, தை மாதத்தை வரவேற்பதே  தமிழர்களின் தொன்று தொட்ட மரபு. இதன் மூலம் பண்டிகைகளின்போதும் பின்வரும் காலங்களிலும் வீட்டில் இருப்பவர்களின் உடல்நலம் கெடாமல் பார்த்துக்கொண்டனர். இத்தகைய ‘காப்பு’ கட்டுதலில் மூலிகைகளான மாவிலை, வேம்பு, ஆவாரம், சிறுபீளை, தும்பை, பிரண்டை, துளசி  ஆகியவற்றின் தண்டு, இலை, பூ ஆகியவை  இருக்கும்  எளிய தாவரங்களான இவை, மிகப்பெரும் பலன்களை உள்ளடக்கியுள்ளன என்பது பற்றி நம் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் தைத்திருநாளை வரவேற்க, தமிழர்கள் வீட்டில் ‘பூ’ காப்புக் கட்டிய பிறகே பொங்கல் கொண்டாட்டம் தொடர்கிறது.

.
இந்த மூலிகைத்தாவரங்கள் அனைத்திலும் ஒவ்வொரு துண்டு  இருக்கும் படி சின்னச்சின்ன கட்டுக்களாக (கடைகளில் விற்கும் கொத்தமல்லிகட்டுக்கள் போல) கட்டி வீட்டின் அறைகளின் 4 மூலைகளிலும் புஜை அறையிலும் ஜன்னல்களிலும் மொட்டை மாடியின்  மூலைகளிலும், கிணற்றுச்சுவர், அம்மிகல், ஆட்டுக்கல், என அனைத்து இடங்களிலும் செருகி வைப்பதே காப்புக்கட்டுதல் . அடுத்த ஆண்டு போகி வரையிலும் இவை உலர்ந்து அந்த இடத்திலேயெ இருக்கும்

முன்னாட்களில் குப்பைக்குழியில் கூட காப்புக்கட்டி வைத்தனர் விவசாயிகள். குப்பைக் குழி என்பது விவசாயிக்கு உரக்கிடங்கு அல்லவா?

குப்பைக்குழியில் சாணமும் சாம்பலும் தொழுவத்துக்கழிவுகளும் கொட்டப்பட்டு அவை மட்கி உரமாகி பின்னர் மண்ணில் இடுவதால் மண்ணின் வளத்திற்கும் விளைச்சலுக்கும் அடிப்படை என்னும் காரணத்தில் அங்கும் காப்புக்கட்டி வைக்கும் வழமை இருந்தது  மதுரையில் சில பகுதிகளில் மாடுகளுக்கும் கழுத்தில் இதுபோல காப்பு மாலை கட்டிப் போடும்வழக்கம் இருக்கிறது

சிறுபீளை

காப்புக்கட்டப்பயன்படுத்தும் அனைத்துத்தாவரங்களுமே வைரஸ் தொற்றுக்கு எதிராகவும், பல நோய்களை தீர்க்கும் குணங்களுடன் இருப்பவை அதிலும் இந்த சிறு பீளை நல்ல கிருமி நாசினி. பீளைப்பூவைச் சேகரித்து தலையணைக்குள் அடைத்து வைக்கும் பழக்கம் கூட முன்பிருந்தது தலையில் நீர்கோர்த்து பாரமாக இருக்கையில் இந்த தலையணையை தலைக்கு வைத்துப்படுத்துக்கொள்ளலாம்.. சிறந்த நிவாரணி இது. கோவையின் பீளமேடு இந்த செடி அங்கு செழித்து வளர்ந்ததால் வைக்கபப்ட்ட பெயர் வெண்மையாக பூத்துக்குலுங்கும் சிறுபீளை, தென் மாவட்டங்களில் ‘பொங்கல் பூ’ எனவும் அழைக்கப்படுகிறது

 ஆவாரை

சங்க காலத்தில மடல்-மா ஏறி வரும்போது பயன்படுத்தப்பட்ட இந்தப் பூ தைப்பொங்கலப்போது காப்புக்கட்டிலும் இருக்கிறது
பாக்டீரியா தொற்றுக்கு எதிரானது இந்தப்பூ கோவையில் ஆவாரம்பாளையம் என்றும் ஒரு ஊர் இருக்கிறது

 

மாவிலை

வீட்டில் வாக்தேவதை என்றொரு தேவதை நம்மைச் சுற்றிக் கொண்டே இருக்கும். நாம் எந்த வார்த்தை சொன்னாலும் அத்தேவதை அப்படியே ஆகட்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கும்.. நன்மை தரும் சுபவார்த்தைகளைச் சொன்னால் அவ்வீட்டில் வாக்தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசிர்வதிக்கும். அசுபமான கெடுவார்த்தைகளைச் சொன்னால் அதையும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிடும். ஆனால் மாவிலைத் தோரணம் கட்டியிருக்கும் வீட்டில் அசுபமான வார்த்தைகளைக் கேட்டால் மாவிலை காற்றில் அசைந்து அவ்வார்த்தையின் பலனை வெளியேற்றி விடும். இப்படி ஒரு ஐதீகம் இருக்கிறது நம் மரபில்

மாவிலை கரியமில வாய்வை உறிஞ்சிக்கொள்கிறது அழுகிப்போகாமல் காய்ந்து உலரும்ம் தன்மை கொண்டது  உலர்ந்தாலும் நல்ல நறுமணம் கொண்டது கிருமித்தொற்றுக்கு எதிரானது

வேம்பு

வேம்பு நமக்கெல்லாம் மிகவும் அறிமுகமான் மூலிகை  சிறந்த வைரஸ் எதிர்ப்பு குணம் உள்ளது. தைக்கு பிறகு    வரும் கடும் கோடையில் அம்மை போன்ற வைரஸ் தொற்றுக்கள் வருமென்பதால் முன்கூட்டியெ இவை வராமல் தடுக்க காப்புக்கட்டும் போது வேம்பின் இலைகளை கட்டுகிறோம். அதேபோல், காற்றில் பரவும் நோய்கள் எளிதில் பரவாமல் தடுக்க, கோயில் திருவிழாக்கள் தொடங்கும்போது ஊரின் பல்வேறு இடங்களிலும் வேப்பிலைகளைக் கட்டும் பழக்கம் இருக்கிறது

தும்பை இலை:

தும்பை இலையின் வாசம் இளைப்பு, தலைவலி, நீர்வேட்கை ஆகியவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகிறது..  இதுவும் anti viral குணங்கள் நிறைந்தது

பிரண்டை:

‘பிரண்டை’ என்பது தடித்த தசைப்பகுதி நிரம்பிய கொடிப்பகுதியாகும்.    இதுவும் பல கிருமித்தொற்றுக்களுக்கு எதிரானது

துளசி

அனைவரும் அறிந்த துளசியின் இலைகளில் எளிதில் காற்றில் பரவும் மூலிகை பொருட்கள் உள்ளன பச்சை இலை உடைய துளசி ஸ்ரீதுளசி அதே வேளையில்   ராம துளசி என்பது கருநீல நிறம்  கொண்டது. துளசி மாடத்தில் இவை இரண்டையும் சேர்த்துத்தான் வளர்க்க வேண்டும்

ஒரிசாவில் சித்திரை, வைகாசி மாதங்களில் துளசிச் செடியின் மேல் பந்தலிட்டு , மேலிருந்து   பந்தலின் துளை வழியே நீர் சொட்டு சொட்டாக அச்செடியின் மேல் விழும் வண்ணம் செய்து வழிபாடு செய்வார்கள். இதன் மூலம் அவர்கள் தாம் முன்னர் செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம் என நம்புகின்றனர். தாவ்ரங்களில் துளசிக்கும் கனிகளில் எலுமிச்சைக்கும் வேதங்கள் சொன்னால் விளங்கிக்கொள்ளும் சக்தி உள்ளது என்று கூட் சொல்வார்கள்

மார்கழிக் குளிர் முடிந்து தொடங்கும் தை வேனில் காலம் உடலில் உஷ்ணமான நோய்களை உண்டாக்கிவிட்டு விடும். இதையெல்லாம் கணித்தே, நம் முன்னோர்கள் போகியின்போது, ‘காப்புகட்டுதல்’எனும் சடங்கு வைத்து பொங்கலில் வீட்டில் இருக்கும் உயிர்களுக்கு நோய் அண்டாமல் வருமுன் காக்கும் யுக்தியைக் கையாண்டனர்

அறிவியல் பின்புலம் உள்ள நம் தமிழரின் மரபுகளை நாமும் மறக்காமல் அடுத்த தலைமுறைக்கும் கற்றுத்தர முயலவேண்டும்

கிறிஸ்டிக்கு நன்றி

அன்பு அறிவிப்பாளர்கள்

வானொலிக்கும் எனக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலான  நெருங்கிய தொடர்பும் அணுக்கமும் இருக்கிறது.. சிறுமியாக இருக்கையிலேயே என் கிராமத்தில் அப்போது பதின் பருவத்திலிருந்த என் இரண்டு அத்தைகளும் மாற்றி மாற்றி ஒரு சிறிய டிரான்சிஸ்டரை கேட்டுக்கொண்டிருக்கையில் நானும் என் சகோதரியும் அதை உடன் கேட்டுத்தான் வளர்ந்தோம். என் சித்தப்பா ஒருவரும் மாலை நேரங்களில் செய்திகள் கேட்கையில் என்னை மடியிலிருந்திக்கொள்ளுவார்

மிகக்கொஞ்சமாய் வரும் விளம்பரங்கள் (ஒரே சாரிடான் தலைவலி நீக்கி விடும்’)’, நிறைய திரைப்பாடல்கள், விவசாயிகளுக்கான நிகழ்ச்சிகள், அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் கம்பீரக்குரல் இவை எல்லாம் அப்போதுதான் என் வாழ்வில் அறிமுகமாயின.

பின் பொள்ளாச்சியில் அப்பா அம்மா வீட்டில் சற்றேறக்குறைய ஒரு தொலைக்காட்சிப்பெட்டி போல இருக்கும், நிறைய திருகு குமிழ்களுடனான கம்பீரமான, வீட்டில் ஒரு அங்கத்தினராகவே நடத்தப்பட்ட ஒரு மர்ஃபி ரேடியோ இருந்தது.மிகக்கண்டிப்பான ஆளுமையாக  அன்றிலிருந்து இன்று வரைக்கும் அறியப்படுகின்ற என் அப்பா, அதிகாலையிலேயே அதில் பக்திப்பாடல்கள் ஓலிக்கசெய்வார், ’எழுந்திரு’ என்று யாரும் சொல்லாமலேயே பக்திப்பாடல்களைக்கேட்டு ஒவ்வொருநாளும் விடிந்தது எங்களுக்கு இளம் பருவத்தில். வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டான  காலகட்டம் அது என்றாலும்  வானொலியுடனான அடுப்பம் கூடிகொண்டுதான் இருந்தது நாளுக்கு நாள்

அன்று கேட்ட அதே ஹரிவராசனம், எல்லாம் ஏசுமயம், ,தீனோரே நியாயமா மாறலாமா,, செல்லாத்தா செல்ல மாரியாத்தா எல்லாம் இன்றும் கேட்கையில் வாழ்வெனும்  மாயச்சங்கிலியில் என்னை  கடந்த காலத்துடன் இணைக்கும் கண்ணி இந்த வானொலி என நினைப்பேன். சின்னஞ்சிறுமியாய் நான் கேட்ட ஏசுதாஸ் ஜெயச்சந்திரன் ஹனீஃபா சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் குரல்களை இன்று தோள் விரிந்து தலை நிமிர்ந்த என் மகன்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் தினமும்.

காலமும் மாறி விட்டது அதற்கேற்ப வாழ்வு முறைகளும் பெருமளவில் மாறிவிட்டதென்றாலும், என் வாழ்வில் இன்று வரையிலும் எந்த மாற்றமுமின்றி இருக்கும் ஒரு விஷயம் இந்த வானொலியில் ஒலிக்கும் பல குரல்களும் அதனோடு எனக்கிருக்கும் மாறாப்பிரியமும் தான்

கல்லூரியிலும் பள்ளியிலும் படிக்கையிலும் இதுவே தொடர்ந்தது. மாலை வேளைகளில் இலங்கை வானொலியையும் இன்னும் பல நாடுகளின் ஒலிபரப்பையும் கூட அலைவரிசைகளை மாற்றி மாற்றி வைத்து பரவசமாகக்கேட்டுக்கொண்டிருப்போம்.

வானொலியுடன் ஒரு நெருங்கிய தொடர்பு எற்பட்டு நான்  முதுகலை படிக்க பல்கலைக்கழகத்திற்கு சென்று விடுதியில் தங்கிக்கொண்டிருக்கும் போதும் வானொலிப்பெட்டியொன்றை வாங்கி கூடவே கொண்டுசென்றேன் பெற்றோர்களைப்பிரிந்து பழக்கமில்லா சூழலில் இருக்கவேண்டிய நிர்பந்தத்திலும் வருடங்களாய் காதிலும் மனதிலும் ஒலித்துக்கொண்டிருந்த அதே குரல்கள் விடுதியிலும் ஒலிக்கையில் பெரும் உற்சாகம் உண்டாகும் அப்போதெல்லாம் ,

நான் தனிமையில் இல்லை அறிந்தவர்கள் உடனிருக்கிறார்கள் என்னும் உணர்வே மேலோங்கி இருந்தது  வானொலி கேட்கையிலெல்லாம்.

ஆரய்ச்சி மாணவியாக இருக்கையில் பின்னிரவுகளில் விடுதியின் மொட்டை மாடியில் தோழிகளுடன் அமர்ந்து வானொலியில்  ஹிந்துஸ்தானி இசையைக்கேட்டுக்கொண்டு இருந்த  பொற்கணங்கள் எல்லாம்  வாழ்வில் இன்றும் பசுமையாக நினைவிலிருக்கிறது

நேயர் விருப்பமும் நிகழ்சிகளுக்கு எதிர்வினைகளுமாய ஆர்வமாக கடிதம் எழுதிக்கொண்டிருந்த காலங்களும் உண்டு ஏன் இப்போதும் கல்லூரிக்கு செல்கையில் அறிவிப்பாளர்களுடன் குறிப்பிட்ட விஷயங்களைக்குறித்து அலைபேசியில் பேசிக்கொண்டுதானிருக்கிறேன்.  இப்போதும் இரவுகளில் ’’மயிலிறகில்’’ பிடித்த பாடல்களை கேட்டு என் பெயருடன் அப்பாடல்  ஒலிபரப்பாகையில்  மிகுந்த மகிழ்வடைந்துகொள்கிறேன்

பலவகைப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்துக்கொண்டுதானிருக்கின்றன அன்னையாக ஆசிரியையாக இல்லத்தரசியாக எனினும் நேயர் விருப்பம் போல ஒரு மகிழ்வான அங்கீகாரம் எனக்கு வேறு பெரிதாக ஏதும் இல்லை உண்மையிலேயே

இப்போதும் தினம் அதிகாலை எழுந்து வேலைகளைத்துவங்கும் முன்னர் வானொலி ஒலிக்கத்துவங்குகிறது வீட்டின் சமையலறையில். தனிமையில் பிள்ளைகள் உறங்குகையில் சமையலறயில் பணி செய்யும் உணர்வு எப்போதும் எழுந்ததே இல்லை எப்போதும் எப்போதுமென   அறிவிப்பாளர்கள், கேட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருக்குமாய் என்னும் பிரத்யேகமான தொனியில் உடன் இருந்துகொண்டே இருக்கிறார்கள் அல்லவா?

ஹலோ எஃப் எம்மில்  இருக்கும் ஜெயராம் குடும்ப உறுப்பினர் போல ஆகிவிட்டார். பல வருடங்களாக இப்படிப்பட்ட அறிவிப்பாளர்களின்  குரல் இப்படி உடனிருக்கிறது.

சமயத்தில் ’’ கொஞ்சம் அடுப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்,இதோ வந்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிடலாமென்னும் அளவிற்கு அறிவிப்பாளர்களின்  உடனிருப்பை குரல் மூலம் உணருகிறேன்

கடிகாரம் பார்த்துக்கொண்டு நாளைத்துவங்குதல் நின்றும் பல வருடங்களாகிவிட்டன. இப்போது அறிவிப்புகளும் அனேகமாய் பெரிய மாறுதல்கலில்லாத ஆயினும் சுவராஸ்யம் சற்றும் குறையாத  அன்றாட நிகழ்வுகளும் மனப்பாடமாகிவிட்டபடியால்,சுப்ரபாரதத்துடன் சமையல் துவங்கி சஷ்டிகவசம் முடிகையில் காலை உணவு தயாராக இருக்கும், ராசி பலன் கேட்டதும் குளியலறைக்குச்செல்லவேண்டும் இப்படி பழக்கப்படுத்திக்கொண்டாயிற்று வாழ்வையே வானொலிக்குத்தகுந்தபடி

அதிலும் இப்போது வருடங்களாக ஜெயராமின் குரல் மனதில் பதிந்து விட்டது . பிரார்த்தனை நேரங்களில் பரிவுடன், ஆன்மீக செய்திகளை கனிவுடன், நாட்டு நடப்புகளை தெளிவுடன், அவ்வப்போது சொந்த குடும்ப விஷயங்களை சொந்தமென்று உணர வைக்கும் தொனியில் கம்பீரமாக பிசிறின்றி தெளிவாக உச்சரிக்கும் அந்தக்  குரலின் தனித்தன்மை அப்படியே மனதில் பதிந்து விட்டிருக்கிறது

வெறும் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் அறிவிப்பவராக கடமையுடன் மட்டும் பணியாற்றாமல் அன்பையும் ஆர்வத்தையும் பிரியத்தையும் அக்கறையையும் கலந்து சொல்வதால் சொல்பவை மனதின் ஆழம் வரை சென்று தங்கியும் விடுகின்றது

ஒவ்வோரு நாளின் சிறப்பு. மாதங்களின் சிறப்பு என்று பார்த்துப்பார்த்து பல தகவல்களையும் செய்திகளையும் திரட்டிஅதிகாலை வேலையிலேயே  தொகுத்துச்சொல்லும் அவர்களின்  உழைப்பு கவனிக்கத்தக்கது மட்டுமல்ல பாரட்டப்படவேண்டியதும் கூட. இது சவாலான பணியும் கூட

அனேகமாக  என் எல்லா நாட்களுமே இவர்களின் குரலிலும் கருத்துக்களிலும் தான் துவங்குகிறது, ஜெயராம் உட்பட அனைது வானொலிஅறிவிப்பாளர்களுக்கும் தொடர்ந்து வரும் அவர்களின்  சிறப்பான பணிக்கு எனது அனைத்து பாராட்டுக்களும் நன்றியும்,

என் அப்பாவின் தலைமுறை கேட்டுக்கொண்டிருந்தது பின்னர் நானும் அக்காவும், இப்போது என் மகன்கள் கேட்கிறார்கள் நிச்சயம் நாளை அவர்களின் பிள்ளைகளுக்கும் இவ்வழக்கம் இருக்கும் தலைமுறைகளாக தொடர்கின்றது வானொலிக்கும் எங்களுக்குமான தொடர்பு

 

போகையிலே பார்த்துக்கலாம்!

ஜனவரி 2 ஆம் தேதி வகுப்புத்தோழரும் நண்பருமான வெங்கடாச்சலத்தின் தந்தை மறைந்து விட்டார் என்னும் செய்தி வந்தது. அவரின் தாயார் இறந்து 5 மாதங்களே ஆன நிலையில் இவரும் இறந்தது அதிர்ச்சியாக இருந்தது,

எனினும் இரு விஷயங்கள் நினைவுக்கு வந்தது, ஒன்று அவர் 86 அகவை நிறைந்து,நிறை வாழ்வு வாழ்ந்து,கனிந்து உதிர்ந்திருக்கிறார், மற்றொன்று சில வருடங்களாகவே படுத்தபடுக்கையில் இருந்தவர் என்பதால் அவருக்கும் இது ஒரு வகையில் விடுதலையே ,

வாழ்வென்பதே பெரும் வதை, அதிலும் அடுத்தவரின் உதவியிலே வாழ்வதென்பது மிகப்பெரும் வேதனை, இணை மறைந்த பின்னர் வாழ்வது இன்னும் வேதனையல்லவா ?

முதியவர்களில் பலர் இதுபோல இணையர் இறப்புக்கு பின்னர் ஒரு வருடகாலத்திலேயே மறைந்ததை பல இடங்களில் கண்டிருக்கிறேன். உயிரை பிடித்து வைத்துக்கொண்டிருப்பதற்கான ஒற்றைக்காரண்மும்  இல்லையென்றானபின்னரும்  வாழ்வதென்பது அசாதாரணம் தான்.

இரத்தம் கொப்பளிக்கும்  இளமையில் காதலும் காமமும் தேவையும் கடமைகளும் வேர்களும் உறவுகளுமாய் இருக்கையில் யாரும், இணையைக்கண்டுகொள்வதோ அவரின் அந்தரங்கமான பல தேவைகளை பூர்த்தி செய்வதோ இல்லை மட்டுமன்றி மனதளவில் காலப்போக்கில் இருவருக்குமிடையில் தவிர்க்க முடியாமல் ஏற்படும் இடைவெளியை, விலக்கத்தை தவிர்க்கும் முயற்சியில்  கூட ஈடுபடாமல் போவதும் சாதாரணமாக நடக்கின்றது.

எனினும்  முதுமை வந்தபின்னரே பிள்ளைகள் தனித்தனிக் குடும்பங்களாகி விட்டபின்னர் கிடைக்கும் தனிமையில் மீண்டும் ஒரு இணக்கம் ஏற்படும் இருவருக்குமே, தேவைகள் வெகுவாய்க் குறைந்து வாழ்நாட்களை எண்ணிக்கொண்டும் வாழ்ந்த நாட்களை திரும்பிப்பார்த்துக்கொண்டும் வாழும் பொழுது இருவருக்குமிடையே அழகும் அறிவும் தேவையும் எந்த எதிர்ப்பார்ப்புகளுமின்றி  புரிதலுடனான ஒரு பந்தம் பரஸ்பரம் ஏற்பட்டு விடும், கசப்புகள் மறக்கப்பட்டு கசடுகள் சுத்தமாக்கப்பட்டு, ஒரு புதிய தோழமையும் அன்புமாக இருக்கும்  காலத்தில் ஒருவரின் இழப்பு மற்றொருவரை நிலைகுலையசெய்துவிடும், அதன் பிறகும் வாழ்வதென்பது சாத்தியமே இல்லை இயல்பாகவே பலர் இப்படி இறந்து போவதை நாமெல்லாருமே அறிந்திருக்கிறோமல்லவா?

அப்படித்தான் இவரும் மறைந்துவிட்டிருப்பாரெண்ணிக்கொண்டேன்.  அழகிய சிறிய ஊரில் தென்னந்தோப்பினுள் இருக்கும் வீடு அவர்களுடையது, அந்த சிறிய ஊரின் துவக்கத்திலேயே ஏறக்குறைய 150 வயதிருக்கும் ஒரு மாபெரும் ஆலமரம் பிரம்மாண்டமாக கிளைகளைப்பரப்பிக்கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றிருந்து ஏராளமாய் நிழல் தந்தபடி இருந்தது. ஆல் கதையை நினைத்துக்கொண்டேன் அதைபார்த்ததும்

உடலை நல்லடக்கம் செய்து விட்டபடியால் உறவினர்களின் வருகை குறைந்திருந்தது. நானும் மற்ற நண்பர்களுமாய் முன்னிரவு வரை அங்கிருந்தோம்.  வெகுநாட்களாய் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவரின் மரணமென்பதால் துக்கத்தின் இழப்பிலிருந்து விரைவிலேயே மீண்டு வந்திருந்தனர் அனைவரும்,

வெங்கடாச்சலத்தின் மகள் மது என் மாணவி  அவள்    எங்கும் கண்ணில் படவில்லை என்று  விசாரிக்கையில் அவள் பால் கறந்துகொண்டிருக்கிறாள் என்றனர். எனக்கு இது  பெரு மகிழ்வைத்தந்தது . வயசுப்பெண்களை செல்லம் என்ற பெயரில் குட்டிச்சுவராக்கும் விஷயத்தை பல பெற்றோர் செய்து கொண்டிருக்கையில், நல்ல வசதியான குடும்பத்திலிருந்தும் கல்லூரியில் பட்டம் வாங்கியபின்னர் போட்டித்தேர்வுகளுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் அந்த இளம்பெண்

செய்து கொண்டிருந்த  வேலை பலருக்கு அசாதாரணம் என்பது மட்டுமல்லாது  மட்டுமல்ல அவள் அன்று வேலை செய்துகொண்டிருந்த சூழலும் மிக அசாதாரணமே அல்லவா?

இரவு 11 மணிக்கு அடக்கம் முடிந்து திரும்பிய பின்னர் அவள் ஒரு தனியறையில் உறங்கிக்கொண்டிருந்தாலும் அது நியாயமென்றே நாமனைவரும் சொல்லி இருப்போம். அவள் ஓய்வெடுத்துக்கொள்ளாதது மட்டுமல்ல  குளித்து, சுத்தமாக முறையாக உடையணிந்து  4 மாடுகளில் பால் கறந்துமுடித்து பின் என்னிடம் அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வேலை இருக்கிறதென்று சொல்லி மீண்டும் உள்ளேசென்றாள். பெண்ணை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று வெங்கடாச்சலத்திடமும் சொல்லி பாராட்டிவிட்டு வந்தேன்

.            சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புதுமனைப்புகுவிழாவிற்கு காலையில் செல்ல முடியாத்தால் மாலை சென்றிருந்தேன் குடும்பத்தின் பெண்கள் அனைவரும் ஒருவர் பாக்கி இல்லாமல்  நைட்டியில் கூடத்தில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள் புதிய வீட்டில் தீபம் கூட ஏற்றாமல் இருள் நிறைந்திருந்தது.  இதற்குக் காரணமாய் விழித்துக்கொண்டிருந்த ஒரே ஒரு ஆண் சொன்னது அதிகாலையில்  பூஜையின் பொருட்டடு எழுந்ததால் இப்போது உறங்குகிறர்கள் என்று

எனக்கு இதில் ஆட்சேபணை உண்டு  ஒரே ஒரு நாள் கூட தூக்கத்தை தியாகம் செய்ய முடியாமல் என்ன குடும்பபபொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி குடும்பத்தை முன்னெ கொண்டு வருவார்கள் இவர்களெல்லாம்?

இந்த மதுவை யார் திருமணம் செய்து கொண்டாலும் அந்த குடும்பம் சிறப்பாகவும் மிக செழிப்பகவும் இருக்கும் சந்தேகமில்லாமல். இப்படிப்பட்ட பெண்ணைக்கல்யாணம் செய்துகொள்பவன் நிச்சயமாய் அதிர்ஷ்டசாலி

அதன் பிறகு வாசலில் அமர்ந்து தென்னைக்கூட்டங்களினின்றும் நல்ல குளிர்காற்று வீச நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக பார்த்தேன் ஒரு சாய்வு நாற்காலியை, என் கனவு நாற்காலி அது உண்மையில்,

கைப்பிடி மிக நீண்டிருக்கும் கேரளாவில் அதிகம் மூத்தவர்கள் உபயோகிக்கும் அந்த மரநாற்காலி மீது எனக்கு கொள்ளைப்பிரியம். பேச்சு எதைப்பற்றியெல்லாமோ சென்று கொண்டிருந்தாலும் என் வாய்தான் அதில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததே ஒழிய கண்ணும் மனதும் நாற்காலியிலேயே இருந்தது, மானசீகமாய் பலமுறை அதில் அமர்ந்து ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களை வாசித்துக்கொண்டுமிருந்தேன்.

’’பந்தலிலே பாவக்காய், தொங்குதடி லோலாக்கு, போகையிலெ பார்த்துக்கலாம்’’ என்னும் பழைய நாடன் பாட்டொன்றொன்று இருக்கில்லையா நம் ஊரில்?

சும்மாவா சொல்லி இருக்காங்க அதையெல்லாம்? அந்த தோப்பிற்குள் செல்லும் போது பெரியவர் இறந்த துக்கத்துடனும் வெளியே வரும் போது என் பிரிய நாற்காலி இன்னும் எனக்கு கிடைக்காத துக்கத்துடனும் வந்தேன்kasaiyaRa

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑