ஜனவரி 2 ஆம் தேதி வகுப்புத்தோழரும் நண்பருமான வெங்கடாச்சலத்தின் தந்தை மறைந்து விட்டார் என்னும் செய்தி வந்தது. அவரின் தாயார் இறந்து 5 மாதங்களே ஆன நிலையில் இவரும் இறந்தது அதிர்ச்சியாக இருந்தது,
எனினும் இரு விஷயங்கள் நினைவுக்கு வந்தது, ஒன்று அவர் 86 அகவை நிறைந்து,நிறை வாழ்வு வாழ்ந்து,கனிந்து உதிர்ந்திருக்கிறார், மற்றொன்று சில வருடங்களாகவே படுத்தபடுக்கையில் இருந்தவர் என்பதால் அவருக்கும் இது ஒரு வகையில் விடுதலையே ,
வாழ்வென்பதே பெரும் வதை, அதிலும் அடுத்தவரின் உதவியிலே வாழ்வதென்பது மிகப்பெரும் வேதனை, இணை மறைந்த பின்னர் வாழ்வது இன்னும் வேதனையல்லவா ?
முதியவர்களில் பலர் இதுபோல இணையர் இறப்புக்கு பின்னர் ஒரு வருடகாலத்திலேயே மறைந்ததை பல இடங்களில் கண்டிருக்கிறேன். உயிரை பிடித்து வைத்துக்கொண்டிருப்பதற்கான ஒற்றைக்காரண்மும் இல்லையென்றானபின்னரும் வாழ்வதென்பது அசாதாரணம் தான்.
இரத்தம் கொப்பளிக்கும் இளமையில் காதலும் காமமும் தேவையும் கடமைகளும் வேர்களும் உறவுகளுமாய் இருக்கையில் யாரும், இணையைக்கண்டுகொள்வதோ அவரின் அந்தரங்கமான பல தேவைகளை பூர்த்தி செய்வதோ இல்லை மட்டுமன்றி மனதளவில் காலப்போக்கில் இருவருக்குமிடையில் தவிர்க்க முடியாமல் ஏற்படும் இடைவெளியை, விலக்கத்தை தவிர்க்கும் முயற்சியில் கூட ஈடுபடாமல் போவதும் சாதாரணமாக நடக்கின்றது.
எனினும் முதுமை வந்தபின்னரே பிள்ளைகள் தனித்தனிக் குடும்பங்களாகி விட்டபின்னர் கிடைக்கும் தனிமையில் மீண்டும் ஒரு இணக்கம் ஏற்படும் இருவருக்குமே, தேவைகள் வெகுவாய்க் குறைந்து வாழ்நாட்களை எண்ணிக்கொண்டும் வாழ்ந்த நாட்களை திரும்பிப்பார்த்துக்கொண்டும் வாழும் பொழுது இருவருக்குமிடையே அழகும் அறிவும் தேவையும் எந்த எதிர்ப்பார்ப்புகளுமின்றி புரிதலுடனான ஒரு பந்தம் பரஸ்பரம் ஏற்பட்டு விடும், கசப்புகள் மறக்கப்பட்டு கசடுகள் சுத்தமாக்கப்பட்டு, ஒரு புதிய தோழமையும் அன்புமாக இருக்கும் காலத்தில் ஒருவரின் இழப்பு மற்றொருவரை நிலைகுலையசெய்துவிடும், அதன் பிறகும் வாழ்வதென்பது சாத்தியமே இல்லை இயல்பாகவே பலர் இப்படி இறந்து போவதை நாமெல்லாருமே அறிந்திருக்கிறோமல்லவா?
அப்படித்தான் இவரும் மறைந்துவிட்டிருப்பாரெண்ணிக்கொண்டேன். அழகிய சிறிய ஊரில் தென்னந்தோப்பினுள் இருக்கும் வீடு அவர்களுடையது, அந்த சிறிய ஊரின் துவக்கத்திலேயே ஏறக்குறைய 150 வயதிருக்கும் ஒரு மாபெரும் ஆலமரம் பிரம்மாண்டமாக கிளைகளைப்பரப்பிக்கொண்டு ஓங்கி உயர்ந்து நின்றிருந்து ஏராளமாய் நிழல் தந்தபடி இருந்தது. ஆல் கதையை நினைத்துக்கொண்டேன் அதைபார்த்ததும்
உடலை நல்லடக்கம் செய்து விட்டபடியால் உறவினர்களின் வருகை குறைந்திருந்தது. நானும் மற்ற நண்பர்களுமாய் முன்னிரவு வரை அங்கிருந்தோம். வெகுநாட்களாய் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தவரின் மரணமென்பதால் துக்கத்தின் இழப்பிலிருந்து விரைவிலேயே மீண்டு வந்திருந்தனர் அனைவரும்,
வெங்கடாச்சலத்தின் மகள் மது என் மாணவி அவள் எங்கும் கண்ணில் படவில்லை என்று விசாரிக்கையில் அவள் பால் கறந்துகொண்டிருக்கிறாள் என்றனர். எனக்கு இது பெரு மகிழ்வைத்தந்தது . வயசுப்பெண்களை செல்லம் என்ற பெயரில் குட்டிச்சுவராக்கும் விஷயத்தை பல பெற்றோர் செய்து கொண்டிருக்கையில், நல்ல வசதியான குடும்பத்திலிருந்தும் கல்லூரியில் பட்டம் வாங்கியபின்னர் போட்டித்தேர்வுகளுக்காக தயாராகிக்கொண்டிருக்கும் அந்த இளம்பெண்
செய்து கொண்டிருந்த வேலை பலருக்கு அசாதாரணம் என்பது மட்டுமல்லாது மட்டுமல்ல அவள் அன்று வேலை செய்துகொண்டிருந்த சூழலும் மிக அசாதாரணமே அல்லவா?
இரவு 11 மணிக்கு அடக்கம் முடிந்து திரும்பிய பின்னர் அவள் ஒரு தனியறையில் உறங்கிக்கொண்டிருந்தாலும் அது நியாயமென்றே நாமனைவரும் சொல்லி இருப்போம். அவள் ஓய்வெடுத்துக்கொள்ளாதது மட்டுமல்ல குளித்து, சுத்தமாக முறையாக உடையணிந்து 4 மாடுகளில் பால் கறந்துமுடித்து பின் என்னிடம் அமர்ந்து கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வேலை இருக்கிறதென்று சொல்லி மீண்டும் உள்ளேசென்றாள். பெண்ணை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று வெங்கடாச்சலத்திடமும் சொல்லி பாராட்டிவிட்டு வந்தேன்
. சில வருடங்களுக்கு முன்னர் ஒரு புதுமனைப்புகுவிழாவிற்கு காலையில் செல்ல முடியாத்தால் மாலை சென்றிருந்தேன் குடும்பத்தின் பெண்கள் அனைவரும் ஒருவர் பாக்கி இல்லாமல் நைட்டியில் கூடத்தில் படுத்து ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார்கள் புதிய வீட்டில் தீபம் கூட ஏற்றாமல் இருள் நிறைந்திருந்தது. இதற்குக் காரணமாய் விழித்துக்கொண்டிருந்த ஒரே ஒரு ஆண் சொன்னது அதிகாலையில் பூஜையின் பொருட்டடு எழுந்ததால் இப்போது உறங்குகிறர்கள் என்று
எனக்கு இதில் ஆட்சேபணை உண்டு ஒரே ஒரு நாள் கூட தூக்கத்தை தியாகம் செய்ய முடியாமல் என்ன குடும்பபபொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி குடும்பத்தை முன்னெ கொண்டு வருவார்கள் இவர்களெல்லாம்?
இந்த மதுவை யார் திருமணம் செய்து கொண்டாலும் அந்த குடும்பம் சிறப்பாகவும் மிக செழிப்பகவும் இருக்கும் சந்தேகமில்லாமல். இப்படிப்பட்ட பெண்ணைக்கல்யாணம் செய்துகொள்பவன் நிச்சயமாய் அதிர்ஷ்டசாலி
அதன் பிறகு வாசலில் அமர்ந்து தென்னைக்கூட்டங்களினின்றும் நல்ல குளிர்காற்று வீச நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் எதேச்சையாக பார்த்தேன் ஒரு சாய்வு நாற்காலியை, என் கனவு நாற்காலி அது உண்மையில்,
கைப்பிடி மிக நீண்டிருக்கும் கேரளாவில் அதிகம் மூத்தவர்கள் உபயோகிக்கும் அந்த மரநாற்காலி மீது எனக்கு கொள்ளைப்பிரியம். பேச்சு எதைப்பற்றியெல்லாமோ சென்று கொண்டிருந்தாலும் என் வாய்தான் அதில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததே ஒழிய கண்ணும் மனதும் நாற்காலியிலேயே இருந்தது, மானசீகமாய் பலமுறை அதில் அமர்ந்து ஜெயமோகன் அவர்களின் புத்தகங்களை வாசித்துக்கொண்டுமிருந்தேன்.
’’பந்தலிலே பாவக்காய், தொங்குதடி லோலாக்கு, போகையிலெ பார்த்துக்கலாம்’’ என்னும் பழைய நாடன் பாட்டொன்றொன்று இருக்கில்லையா நம் ஊரில்?
சும்மாவா சொல்லி இருக்காங்க அதையெல்லாம்? அந்த தோப்பிற்குள் செல்லும் போது பெரியவர் இறந்த துக்கத்துடனும் வெளியே வரும் போது என் பிரிய நாற்காலி இன்னும் எனக்கு கிடைக்காத துக்கத்துடனும் வந்தேன்
Leave a Reply