லோகமாதேவியின் பதிவுகள்

Month: June 2023 (Page 1 of 2)

ஆலிவ், கனி மரம்.

கனி மரம்

ஆலிவ் மரக்காடுகளுக்குள் சென்றிருக்கிறீர்களா? காற்றில் மண் மணமும், மரங்களினடியில்  குளிர்ந்த நிழலும் கவிந்திருக்கும், வெள்ளியென மினுங்கும் ஆலிவ் இலைகள் உரசும் ஒலி ஒரு நாடன் பாடலைப்போல் காதில் கேட்கும், ஆலிவ் மரங்களை சிறிதளவாவது அறிந்து கொண்டிருப்பவர்களுக்கு, அந்த அனுபவம்,அந்த அற்புத மரங்கள் தோன்றிய கடந்தகாலத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்

6000 வருடங்களுக்கு முன்பிருந்தே மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் ஆலிவ் மரங்கள், பல சாம்ராஜ்யங்களின், நாகரீகங்களின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும், பற்பல கலாச்சாரங்களை சேர்ந்த பல கோடி மக்களின் வாழ்வையும் பார்த்து கொண்டிருப்பவை, 

ஆலிவ் மரங்களின் வரலாறு மனித குல வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பது. பண்டைய கிரேக்கத்தில் இருந்து ரோமாபுரி வரை, போனிஷியாவிலிருந்து பாலஸ்தீனம் வரை ஆலிவ், சமாதானத்தின் அமைதியின், வளமையின் குறியீடாக இருந்து வருகிறது

 அவற்றின் குறியீட்டு முக்கியத்துவங்களை கடந்தும் ஆலிவ் மரங்கள் அவற்றின் கனிகளால், ஆலிவ் எண்ணெயால் பல கலாச்சாரங்களின் சமையலறைகளில் இன்றியமையாத இடம் கொண்டிருக்கிறது. இன்று குக்கிராமங்களுக்கும் அறிமுகமாகி இருக்கும் பீட்ஸாக்களில் இருப்பது எங்கோ தொலைதூர நாடொன்றில் விளைந்த ஆலிவின் கனிகள் என்பதை எத்தனை இளைஞர்கள் அறிந்து உண்ணுகிறார்கள் ? 

கிரேக்க தொன்மங்களில் ஆலிவ் மரங்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன அதில் முதன்மையானது எவ்வாறு ஆலிவ் மரங்கள் முதன் முதலில் உருவாகின என்பதுதான். அதனுடன் சேர்ந்தே ஏதென்ஸ் நகரத்துக்கு அப்பெயர் எப்படி வந்ததென்பதும் சொல்லப்பட்டிருக்கும்

மெய்ஞானத்தின் தெய்வமான ஏதினாவுக்கும் கடலின் தெய்வமாகிய பொசைடனுக்கும் நடந்த போட்டியில் உருவானதுதான் ஆலிவ் மரம் என்கிறது கிரேக்க  தொன்மம்.

ஆட்டிக்காவில்  புத்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகர் யாருக்கு சொந்தம், யார் அந்நகரின் பாதுகாவல் தெய்வம் என முடிவு செய்வதில் சிக்கல் உண்டாகியது, அந்நகரின் குடியேறவிருக்கும் மக்களின் தீர்ப்பே இறுதி எனவும்,  யார் வெல்கிறார்களோ அவர்களின் பெயராலேயே அந்த நகரும் அழைக்கப்படும் என்றும்  தீர்மானிக்கப்பட்டது. 

ஏதென்ஸ் என அப்போது பெயரிடப்பட்டிருக்காத அப்பெரு நகரம் யாருக்கானது என்னும் போட்டி ஏதீனாவுக்கும் பொஸைடனுக்கும் நடுவே நடந்தது. கிரேக்க கடவுளர்களின்  அரசரான ஜீயஸ் இதை ஏற்பாடு செய்திருந்தார். மன்னர் செக்ராப்ஸின் (Cecrops ) முன்னிலையில் இந்த போட்டி ஏற்பாடானது. 

 அந்நகர மக்களுக்கு அரிய பரிசை அளிப்பவர் யாரோ அவருக்கே அந்த நகரம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. பொஸைடன் தனது திரிசூலத்தை  அக்ரோபொலிஸ் கற்கோட்டையின் பாறை ஒன்றில் வேகமாக ஊன்றி ஒரு பெரும் உப்பு நீரூற்றை உருவாகினார்.  கடலின் தெய்வமாகிய அவர் அந்த உப்பூநிரூற்றை தனது கடலின் சக்தியாக காட்டினார். அவ்வூற்று நீர் பீறிட்டுக்கொண்டு வந்து நிலத்தை ஈரமாக்கியபடி நகரினுள் பாய்ந்தது. ஏதீனா அந்த ஈரநிலத்தில் மண்டியிட்டு ஒரு சிறு நாற்றை  நட்டுவைத்தாள், சில நொடிகளில் அந்நாற்று  வெள்ளியென மினுங்கும் பச்சிலைகளும் கொத்துகொத்தான கனிகளுமாக  அமைதியின், வளமையின்,நம்பிக்கையின் குறியீடான ஒரு ஆலிவ் மரமாக முளைத்து எழுந்தது. மக்களுக்கு உப்புநீரூற்றைவிட ஆலிவ் மரங்களே பிடித்திருந்ததால் அந்நகரம் ஏதினாவுக்கானதாகி அன்றிலிருந்து ஏதென்ஸ் என அழைக்கப்பட்டது. ஏதீனாவே எப்போதைக்குமாக ஏதென்ஸின் தெய்வமாகவும் ஆனாள் .

 இன்று வரையிலும் ஏதென்ஸின் கலாச்சாரத்தில் இரண்டற கலந்திருக்கிறது ஆலிவ் மரங்கள். ஆலிவ் இலைகள் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் தலையில் கிரீடமென, ராணுவ தளபதிகளின் தலையில், அரசர்களின் மணிமகுடத்தில் மகுடமென சூட்டப்படுகிறது. ஆலிவ் மரக்கட்டைகள் வீடுகள், படகுகள் செய்யவும் ஆலிவ் எண்ணெய் உணவாகவும், விளக்குகளுக்கு எரிபொருளாகவும் உடலில் தடவிக் கொள்ளவும் பயனாகிறது. ஆலிவ் கனிகள் ஏராளமான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பண்டைய ரோமானிய கிரேக்க  நாணயங்களில் ஆலிவ் இலைக் கொத்து பொறிக்கப்பட்டிருந்தது

 அக்ரோபொலிஸ் நகரின் மத்தியில் கோட்டைகளின் இடிபாடுகளுக்கிடையில் ஏதீனாவின் ஆலிவ் மரம்தான் இன்றும் இருக்கிறது என கருதப்படுகிறது,  பலநூறு  ஆண்டுகளாக அங்கேயே இருக்கும் அம்மரம் மிகப்பழமையாகும் போதெல்லாம் அதிலிருந்து ஒரு கிளை எடுக்கப்பட்டு புதிய மரம் அதிலிருந்து அதே இடத்தில் உருவாக்கப்படுகிறது.

 சுமார் 2500 வருடங்களாக அந்த ஆலிவ் மரம் ஏதென்ஸின் வளமை நம்பிக்கை அமைதி மற்றும் உயிர்த்தெழுதலின் குறியீடாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது. கனிகளும் அளிக்கிறது.

 கிமு 480 ல் பெர்சியன் படையெடுப்பின் போது ஏதென்ஸின் புனித கோட்டை தரைமட்டமாகப்பட்டு அந்த ஆலிவ் மரமும் நெருப்பிட்டு அழிக்கப்பட்டது . அழிந்த அந்த ஆலிவ் மரம் அன்றே மீண்டும் ஒரு அடி உயரம் வளர்ந்ததாகவும் அதிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஆலிவ் மரமே இன்று அதே புனிதமான ஏதீனா ஆலிவ்மரமாக நிற்கிறதென்றும் நம்பப்படுகிறது. பாதகமான சூழலிலும் முளைத்தெழும். அழித்தபின்னரும் உயிர்த்தெழும்   ஏதென்ஸ் மக்களின் இயல்பை குறிக்கும் மரமாக கருதப்படும் அந்த ஆலிவ் மரம்  கடவுளாகவும் வணங்கப்படுகிறது. 

 அந்த ஆலிவ் மரக்கிளைகளிருந்து உருவாக்காப்பட்ட 12 மரங்களும் ஒரு சரணாலயத்தில் வளர்கின்றன அவற்றிற்கு   moriai என்று பெயர். இச்சொல்லிற்கு ’’ஒரு பகுதி’’ என்று பொருள் அதாவது அவை ஏதென்ஸ் அரசின் ஒரு பகுதி, அதற்கு சொந்தமானது என்று பொருள். பண்டைய கிரேக்கத்தில் அம்மரங்கள் ஏதீனாவின் சொத்துக்களாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இன்றும் ஏதென்ஸில் இருக்கும் ஆலிவ் மரங்களனைத்துமே ஏதீனா உருவாக்கிய மரத்தின் சந்ததிகள் என நம்பப்படுகிறது.

கிரேக்கத்தில் ஆலிவ் அறுவடை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும். குடும்பமாக நண்பர்களுடன் சேர்ந்து ஆலிவ் அறுவடை ஒரு கொண்டாட்டமாகவே அங்கு நிகழும். அறுவடை முடிந்த பின்னர் காய்ந்த ஆலிவ் மரக் குச்சிகளில் நெருப்புண்டாக்கி மகிழ்வதும் அங்கு வழக்கம். சில ஆலிவ் தோட்டங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் அந்த அறுவடையில் பங்குகொள்ளும் வாய்ப்பளிக்கிறார்கள். அவர்களே பறித்த ஆலிவ் கனிகளிலிருந்து , எண்ணெய் எடுத்து, கையோடு சில பாட்டில் ஆலிவ் எண்ணெயும் வீட்டுக்கு எடுத்து செல்லும் அந்த அனுபவத்துக்கு சுற்றுலாப் பயணிகள் போட்டி போடுகிறார்கள்.   

வரலாறு

இத்தாலியில் கிடைத்த ஆலிவின் புதைபடிவ எச்சங்கள் இவை 40 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே பூமியில் இருந்ததற்கான சான்றளிக்கின்றன

.கிரேக்க கோவில்களின் தீபங்களிலும் , ஒலிம்பிக் தீபத்திலும் ஆலிவ் எண்ணெயே உபயோகப்படுத்தப்பட்டது.

பிளைனி, ஹோரேஸ் மற்றும் தியோஃப்ராஸ்டஸ் ஆகியோரும் ஆலிவ் மரங்களை அவர்களின் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்

கிரேக்கத்தில் ஹோமரின் காலத்திலிருந்தே ஆலிவ் எண்ணெய் உடலில் தேய்த்து கொள்ளப்  பயன்பட்டது. கிமு 600களில் ரோமானியர்களின் முக்கிய பயிராக ஆலிவ் இருந்திருக்கிறது. ஆலிவ்களை  சித்தரிக்கும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஓவியங்கள் அகழ்வாய்வில்  கிடைத்திருக்கின்றன

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் குறிப்பிடப் பட்டிருக்கும் மரம் ஆலிவ் தான்.ஜெருசேலத்தின் ஆலிவ் மலைக்குன்றுகள் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கிறிஸ்தவ தொன்மம் ஒன்று ஏசு கிறிஸ்துவின் சிலுவை ஆலிவ் மரங்களில் செய்யபபட்டதென்றும்  அதன்பிறகே குற்றவுணர்வில் அவை நிமிர்ந்து வளர்வதில்லை என்கிறது.

திருக்குரானில் ஆலிவ் மரங்களும் கனிகளும் எண்ணெயும் 7 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

முகமம்து நபி அவர்கள் புனிதமரமான ஆலிவின் எண்ணெயை தேய்த்து குளிப்பதை குறித்து சொல்லி இருக்கிறார். பல நாடுகளில் ரமலான் நோன்பில் பேரீச்சைகளுக்கு பதிலாக ஆலிவ் கனிகள் உண்ணப்படுகின்றன.

சாலமன் அரசர் உலகின் அனைத்து உயிரினங்களின் மொழியுமறிந்தவர். அனைத்துயிர்களின் பேரிலும் பேரன்பு கொண்டிருந்தவர், அவர் உயிரிழந்தபோது அனைத்து விலங்கு,பறவை, பூச்சி இனங்களும் கண்ணீர் விட்டழுதன ,உலகத்தின் மரங்களெல்லாம் இலைகளை கண்ணீரை போல் உதிர்த்து துக்கத்தை காட்டின.  ஆனால் ஆலிவ் மரங்கள் மட்டும் இலை உதிர்க்கவில்லை, பிற மரங்கள் அதை நன்றி கெட்ட மரமென்று ஏசின, அப்போது ஆலிவ் மரம் ’’சாலமன் அரசரின் மீதுள்ள எனதன்பை நான் இலைகளை உதிர்த்தல்ல ஏராளமான கனிகளை அளித்தே காட்டுவேன்’’ என்று சொல்லியதாம் இப்படி சிரிய நாட்டுப்புறக் கதைகளிலும் ஆலிவ் மரம் இருக்கிறது.

மற்றொரு ஆலிவ் தொன்மம் சிறுவனாயிருந்த ஹெர்குலிஸ் ஒரு சிங்கத்தை ஆலிவ் மரக்கட்டையால் அடித்து கொன்றான் என்கிறது

பொ யு 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கணிக்கப்பட்ட, உறைந்த கிரேக்க எரிமலை குழம்புகளிலிருந்து  கிடைத்த ஒரு ஆலிவ் இலையில் நோய் உண்டாகி இருந்த வெள்ளை ஈ யும் படிவமாயிருந்தது. அதே வெள்ளை ஈயான  whitefly Aleurobus olivinus என்பது இன்றும் ஆலிவ் மரங்களில் அரிதாக உண்டாகும் நோய்க்கு காரணமாக இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த ’’தாவர – பூச்சி பரிணாம- இணை’’  அறிவியலில் மிக முக்கியமாக கவனிக்கப்படும் ஒன்று.

ஒடிஸியில், குரானில், விவிலியத்திலென பல முக்கிய இலக்கிய படைப்புகளில் தொன்று தொட்டு இடம்பெற்றிருக்கும் ஒரு கனிமரம் ஆலிவ்.

அமைதி, வளமை, செல்வம், வெற்றி ஆகியவற்றின் குறியீடாக, புனித மரமாக,  பல நாகரீகங்களில் இருந்து, இன்றும் அதே பொருளில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு மரம் ஆலிவ்.

 நோவாவின் படகுக்கு திரும்பிய புறா வாயில் கொண்டு வந்த ஆலிவ் சிறுகிளைதான் பூமியில் வாழ்வதற்கான சாத்தியத்தை அறிவித்தது.

  1782   ல் வெளியிடபட்ட அமெரிக்காவின் முதல் அதிகார பூர்வமான அரசு முத்திரையில் ஒரு கழுகு தன் கால்களில் ஆலிவின் சிறுகிளையை பற்றியிருக்கும் சித்திரம் அமைதியின் வலிமையை குறிப்பிட சித்தரிக்கபட்டது.

 1946ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் கொடியில் உலக வரைபடத்தில் இருபுறமும் ஆலிவ் கிளைகள் இருக்கின்றன.

மத்திய தரைக்கடல் பகுதி உணவுகளின் ‘Triad’’  எனப்படும் மூன்று’  முக்கிய இடுபொருட்களில் ரொட்டிக்கான கோதுமை, வைன் தயாரிப்புக்கான திராட்சைகளுடன் மூன்றாவதாக ஆலிவ் இருக்கின்றது..

பரவல்

.கிமு 16 ஆம் நூற்றாண்டில் பீனிசியர்கள் கிரேக்க தீவுகள் முழுவதும் ஆலிவ் சாகுபடியை தொடங்கினர், பின்னர் கிமு 14 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்க நிலப்பகுதிக்கு ஆலிவை அவர்கள் அறிமுகப்படுத்தினர், அங்கு அதன் சாகுபடி வெகுவாக.அதிகரித்தது . 

கிமு 4 ஆம் நூற்றாண்டில்  (கிரேக்க நாட்டின்) ஏதென்சின் அரசியல்வாதியும், சட்ட நிபுணரும், கவிஞரும்  நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவருமான  சோலோன் ஆலிவ் நடவு ஒழுங்குமுறை ஆணையை வெளியிட்டபோது உலகெங்கிலுமே ஆலிவ் சாகுபடி பெரும் முக்கியத்துவம் பெற்றது.  கிமு 6ம் நூற்ரண்டில்  சிசிலி வழியாக இத்தாலிக்கு நுழைந்த ஆலிவ்கள் பின்னர் உலகெங்கிலும் பரவின.

2007ல்தான் இண்டியாவில் ஆலிவ் வளர்ப்பு தொடங்கியது. முதன் முதலில் ராஜஸ்தான்  தார் பாலை நிலங்களில் ஆலிவ் சாகுபடியாகப்பட்டது.  

தமிழில் இடலி மரமென்றும்,  விரலிக்காய் எனவும் அழைக்கப்படும் ஆலிவ் இந்தியாவின் பல மாநிலங்களில் வளர்கிறது எனினும் இந்தியாவில் ஆலிவ் மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது

தாவரவியல்

ஐரோப்பிய ஆலிவ் என்று பொருள்படும்  Olea europaea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ஆலிவ் ஒருபசுமை மாறா குறுமரம் மற்றும் புதர் வகையைச் சேர்ந்தது. மல்லிகைப்பூவின் குடும்பமான ஓலியேசீ குடும்பத்தை சேர்ந்த இவற்றின் புதர் வகைகள் ஆங்கிலத்தில்  Olea europaea ‘Montra’, dwarf olive, அல்லது  little olive. என அழைக்கப்படுகின்றன

3 லிருந்து 12 மீ உயரம் வரை வளரும் இவை  ஏராளமான கிளைகள் கொண்டிருக்கும்.  எதிரெதிராக அமைந்திருக்கும் ஜோடி இலைகளின் மேற்பரப்பு அடர் பச்சையிலும் அடிப்பரப்பு வெள்ளிபோல மினுக்கமும் கொண்டிருக்கும். இதன் மரக்கட்டை மிகவும் உறுதியானது. மரத்தின் மேல் பாகம் பழமையாகி இற்றுப்போய்  மடிந்தால் வேர்களிலிருந்து மீண்டும் ஒரு புதிய மரம் உருவாகி வளரும்.

 ஆலிவ் மரங்கள் 4 வருடங்களில் மலர்களும் கனிகளும் அளிக்கத் துவங்குகின்றன. வசந்த காலத்தில் இலைக் கோணங்களிலிருந்து  சிறு வெண்மலர்களின் தளர்வான மலர் கொத்துக்கள் உருவாகும். மாமரங்களை போலவே ஆலிவ் மரங்களிலும் கனிகளை அளிக்கும் இருபால் மலர்களும், வெறும் மகரந்தங்களை மட்டும் கொண்டிருக்கும் ஆண்மலர்களும் ஒரே மஞ்சரியில் அமைந்திருக்கும் (Polygamous inflorescence). ஆலிவ் மலர்களின் மகரந்தம்  மனிதர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கும்.

காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் இம்மரங்கள் பொதுவாக  ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் கனியளிக்கும், சில மரங்கள் வருடா வருடம் கனியளிப்பதும் உண்டு. கனிகள் பீச், பிளம், மா போல ட்ரூப் வகையை சேர்ந்தவை, கனிகளின் மத்தியில் கடினமான உறைகொண்ட இருவிதைகள் இருக்கும்

பச்சை நிறத்தில் இருக்கும் கனி முதிர்கையில் கரிய நிறம் கொள்ளும் விதைகளில்  30- 40 % எண்ணெய் அடங்கி இருக்கும். சுமார் 7 கிலோ கனிகளிலிருந்து 1 லிட்டர் ஆலிவ் எண்ணெய் கிடைக்கும் 

ஆலிவ்கள்  விதைகள் மூலம் இனப்பெருக்கம்  செய்வதில்லை, இவற்றில் தண்டுகள், வேர்கள் அல்லது இலைகள் மூலமே இனப்பெருக்கமும் சாகுபடியும் நடைபெறுகிறது.

ஆலிவ்களில் ஆயிரக்கணக்கான கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, பொதுவில் உண்ணக்கூடிய கனிகள்  “table olives’’ எனப்படுகின்றன. உண்ணும் கனிகளுக்கெனவும் எண்ணெய்க்கெனவும் பிரத்யேக வகைகள் வளர்க்கப்படுகின்றன

உலகின் மொத்த ஆலிவ் உற்பத்தியில் 80% எண்ணெய் தயாரிப்பிலும், 20 சதவீதம் மட்டுமே உண்ணும் கனிகளுக்காகவும் பயன்படுகின்றன.

இதன் பல கலப்பின வகைகளில் இருப்பதிலேயே பெரிய ஆலிவ் மரம் டாங்கி ஆலிவ்  (“donkey olive” ) என்றும் ஆகச்சிறிய ஆலிவ்  மரம் புல்லட் மரம்  ( “bullet”) என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

 ஆலிவ் மரங்கள் கடற்கரையில் செழித்து வளர்பவை எனினும் இவை பாறை குன்றுகளிலும் வறள் நிலப்பகுதிகளிலும் நன்கு வளரும், அதிக காற்றையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது ஆலிவ். 

கனிகளின்  வகைகள்

சர்வதேச ஆலிவ் சபையான  International Olive Council (IOC)  உண்ணக்கூடிய ஆலிவ்களை  மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறது

  1. முற்றிலும் பழுத்திருக்காத கொஞ்சம் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும்  கசப்பு சுவை கொண்ட பச்சை ஆலிவ்கள்
  2. சிவப்பும் பழுப்பும் பச்சையும் கொண்டிருக்கும் பாதி பழுத்த ஆலிவ்கள்

     3. நன்கு கனிந்த கருப்பு ஆலிவ்கள்

கனிந்த ஆலிவின் கசப்பை நீக்க மரச்சாம்பலிலிருந்து கிடைக்கும் ‘’லெ’’ (lye) எனும் வேதிப்பொருள் உலகெங்கும் உபயோகிக்கப்படுகிறது.

ஆலிவ்களின் கசப்புக்கு காரணமான oleuropein என்னும் வேதிப்பொருளை  நீக்க உப்பு நீரில் அவை  நனைக்கப்பட்டு நொதிக்கச்செய்யாப்படுகிறது.  இதை அறிந்துதான் ஏதீனா உப்பூ நீரூற்றின் அருகே ஆலிவ் மரத்தை  உருவாக்கி இருக்கிறாள் போலிருக்கிறது.

இந்த ஆலிவ் நொதித்தல் உலகின் பலநாடுகளில் பலவிதமான முறைகளில் நிகழ்கிறது.

கனிகள் பலமுறை அழுத்தப்பட்டு சாறெடுத்தும், வேதிபொருட்கள் கலக்கப்பட்டும் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் ஆண்டுத்தோறும் 3 மில்லியன் டன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது 

உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி  செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன  

ஆயில்-Oil  என்னும் ஆங்கிலச் சொல்லின் வேர் இந்த ஆலிவ் என்னும் சொல்லிலிருந்தே வந்தன.  உலகின் மிக அதிகமாக சுவைத்து மகிழப்படும் கனியும் ஆலிவ்தான்,  

 ஆலிவ் மரங்களும் கற்பக விருட்சங்கள் தான் அவற்றில் பயனற்றவை என எந்தப் பகுதியும் இல்லை. கனிகள் உண்ணத்தகுந்தவை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உலகெங்கிலும் பலவிதமான பயன்பாட்டில் இருக்கிறது. 

கரிய ஆலிவ் கனிகளில் செம்பு இரும்பு உள்ளிட்ட பல சத்துக்களும் ஓலியிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.. எனினும் நன்கு பழுக்காத ஆலிவ் காய்களை உண்ணுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

 ஆலிவ் எண்ணெய் அழகு சாதன  பொருட்கள் தயாரிப்பிலும் வெகுவாக பயன்படுகிறது. ஆலிவின் மரக்கட்டைகள்  மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது. ஆலிவ் கனிகளும் எண்ணெயும் ஏராளமான மருத்துவ பலன்களும் கொண்டிருக்கின்றன.

 கிரேக்க ஆலிவ் எண்ணெய் உலகின் முதல் தரமானது ஆனால் உலகின் முன்னணி ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பது ஸ்பெயின், இரண்டாவது இத்தாலி பின்னரே கிரேக்கம்.

புகழ்பெற்ற ஒரு ஆலிவ் மரம்

 இத்தாலிய மரபுகள், இயற்கை காட்சிகள்,, வரலாறு, கலைப் பாரம்பரியம், மீயுயர் பண்பாட்டில் தாக்கம் ஆகியவற்றிற்காக பெரிதும் அறியப்படுகின்ற டுஸ்கான்  (Tuscany ) பிரதேசத்தில்  15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயமான  சாண்டிஸிமா (Santissima Annunziata) வின் பின்புறம்    3500 வருட பழமையான Olivo della Strega, என்னும் பெயர் கொண்ட ஆலிவ் மரமொன்று கடந்த கால தொன்மங்களின் நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிக பழமையான உயிருள்ள ஆவணமென்று கருதப்படுகிறது. ஐரோப்பாவின் மிக பழமையான மரமும் இதுதான்.

மரத்தண்டும் கிளைகளும்   திருகிக் கொண்டிருக்கும் இந்த சூனியக்காரிகளின் ஆலிவ் மரம் என்று பெயர் கொண்ட மரத்திற்கு பின்னால் ஒரு மர்மம் கலந்த தொன்மம் இருக்கிறது.  

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு  பாகன் பழங்குடியினரின் கொண்டாட்டங்களின் ஓரிரவில் சூனியக்காரிகளும் பாதி குதிரை- பாதி மனிதன், பாதி மனிதன்- பாதி ஆடு என்னும் உடலமைப்பு கொண்டிருக்கும் உயிரினங்களும் இம் மரத்தின் கீழ் கூடி மகிழ்வார்கள். அவர்களில் மிக சக்திவாய்ந்த சூனியக்காரி என்று தேர்வு செய்யப்படுபவள் அன்றிரவு முழுக்க அம்மரத்தின் முன்னால் நடனம் ஆடுவது வழக்கம். நடனத்தின் உச்சத்தில் அம்மரத்தில் உறையும் தீய ஆவிகள் எழும்பி உடன் நடனமாடும், விடியும்போது நடனத்தில் ஈடுபட்ட  சூனியக்காரி ஒளிரும் கண்கள் கொண்ட ஒரு மாபெரும் பூனையாக  உருமாறி அம்மரத்துக்கு அடுத்த வருடம் வரை காவலிருப்பாள் என்கிறது அத்தொன்மம்.

 உபகதையொன்று அந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த ஒரு ராபின் பறவையை நோக்கி கல்லெறிந்த ஒரு சிறுவனை  காவலிருந்த சூனியக்காரி ஆலிவ் கனிகளை வீசியெறிந்து துரத்தினாள் என்கிறது. இக்கதையை கேட்காத இத்தாலிய சிறுவர்களே இல்லை எனலாம். 

சூனியக்காரிகள் ஆலிவ் மரத்தினருகில் கூட்டமாக நடனமிட்டு ஆவிகளை எழுப்பும் சித்திரம் அந்நாட்டு கலாச்சாரத்துடன் இணைந்து தலைமுறைகளாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது

 இத்தாலியின் பண்டைய கலாசாரத்தின் நீட்சியாக இன்றும் அங்கு நின்றிருக்கும் இம்மரத்தின் கார்பன் ஆய்வுகள் இவை 3500 வருடத்திற்கு முற்பட்டவை என்றும் இன்னும் 90 வருடங்களில், இம்மரம் உயிரிழக்கும் எனவும் தெரிவிக்கின்றது.   இப்போதும் சிறுகிளையொன்றில் சில ஆலிவ் கனிகளை வருடம்தோறும் அளிக்கும் இம்மரம் இத்தாலியின் புகழ்மிக்க சொத்தாக கருதப்படுகிறது. இத்தாலிய சுற்றுலாவின் மிக முக்கிய பகுதியாகவும் இது விளங்குகிறது. 

9 மீ சுற்றளவும் 10 மீ உயரமும் கொண்டிருக்கும் 3500 ஆண்டு பழமையான தெற்கு நோக்கிய இம்மரமும் அதனுடன் இணைந்து வளர்ந்திருக்கும் அதன் அடிப்பாகத்திலிருந்து தோன்றிய 200 வருட பழமையான ஒரு புதிய மரமுமாக இணைந்து திருகி நிற்கும் இந்த மரத்தை சுற்றிலும் வேலியிட்டு அரசு பாதுகாத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆலிவ் எண்ணெய் தயாரிப்பிற்கு இம்மரத்தின் பெயரால் ஒரு விருதும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலிவ் மரங்கள் சாதாரணமாக 500- 600  வருடங்கள் உயிர் வாழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளை தாண்டி வாழ்ந்து இன்னும் கனியளித்துக்கொண்டிருக்கும் பல ஆலிவ் மரங்களும் உலகெங்கிலும் உள்ளன.

கிரேக்கத்தில் ஆலிவ் அருங்காட்சியகமொன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான  பல ஆலிவ் மரங்கள் இருக்கும் காட்டினருகில் அமைந்திருக்கிறது. அங்கு ஆலிவ் மரக்காட்டு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுகிறது, ஆலிவ் மரங்களை எப்படி வளர்ப்பது, பாதுகாப்பது, அவற்றிலிருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரிப்பது ஆகியவையும், ஆலிவ் மரங்களுடன் இணைந்த கிரேக்க கலாச்சரா அம்சங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள்.

உலகெங்கிலும் எப்படி வைன் சுவைத்தல் என்பது ஒரு சடங்காக கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறதோ அப்படி கிரேக்கத்திலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினியில் ஆலிவ் எண்ணெய் சுவைத்தலும்  விமரிசையாக நடக்கிறது.பல நாகரீகங்களின் கலாச்சாரத்துடன் பிணைந்திருக்கும் திராட்சைக்கனியின் எதிர்த்தரப்பென்றால் அது நிச்சயம் ஆலிவ்தான்.  

ஆலிவ் கனி, எண்ணெய் மற்றும் சிறு கிளை ஆகியவை பல பண்பாடுகளின் குறியீடாக அமைந்திருக்கின்றன. நட்புறுதிக்கென நண்பர்கள் உலகெங்கிலும் கைமாற்றிக் கொள்வதும் ஆலிவ் கிளைகளைத்தான். மனிதர்களின் சரும நிறத்தில் ஒரு வகை ஆலிவ் நிறம் எனப்படுகிறது

பப்பாயி என்னும் புகழ்பெற்ற கார்டூன் கதாநாயகனின் மனைவியின் பெயர் ஆலிவ் ஆயில் என்பது அதை சிறுவயதில் பார்த்தவர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும்

 ஸ்பெயினின் புகழ்பெற்ற  கால்பந்தாட்ட  நிர்வாகியும், பிரீமியர் லீக் அர்சினால் குழுவின் தற்போதைய நிர்வாகியுமான மைக்கேல் அர்டேட், குழுவினருடன் நடக்கும் ஒவ்வொரு முக்கிய கூடுகைகளுகும் ஒரு சிறு ஆலிவ் மரக்கன்றை  அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டு எடுத்துச்செல்வதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.150 வருடங்கள் பழமையான  போன்ஸாய் மரமான அதை தன் குழுவின் குறியீடாக காட்டுகிறார் அவர்

2015 ன் ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டான டேனியல் கிரெய்க் தனது வழக்கமான பானத்துக்கு மாற்றாக ஆலிவ் கனிகள் அலங்கரிக்கும் மார்டினி அருந்துவதை கவனித்தீர்களா யாரேனும்?

 வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருப்பது  மட்டுமல்ல நம் ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியின் கலாச்சாரத்தின் அங்கமாகவும் ஆகிவிட்டிருக்கும் ஆலிவ்களை குறித்து  உலகமொழிகளில் பல அழகிய கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன, பெரும்பாலும் பிரிவுத்துயரை சொல்லி மீண்டும் சந்திக்கையில் ஆலிவ் மரங்களினடியில் முத்தமிட்டுக்கொள்வதை குறித்தானவைகளாக இருக்கும்.  

இனி எப்போதேனும் ஆலிவ் காடுகளுக்குள் செல்ல நேர்ந்தால் அவற்றின் காலம் கடந்த அழகை ஆராதிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள், அவை கடந்து வந்திருக்கும் காலத்தை, அவற்றை பேணிப்பாதுகாத்த நம் முன்னோர்களின் தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆலிவ் கனிகளின் வாசனையையும் சுவையையும் அனுபவியுங்கள். அதன் மூலம் இயற்கைக்கும், கலாச்சாரங்களுக்கும் மனிதனுக்குமான பிரிக்க முடியாத தொடர்பையும் நீங்கள் உணரலாம் 

சமர்ப்பணங்கள்

வாசிப்பிற்குள் நான் மிக இளமையிலேயே நுழைந்துவிட்டேன் என்றாலும் அப்போது அவை திருட்டுத்தனமான வாசிப்பென்பதால் அத்தனை மகிழ்ந்து வாசித்திருக்கவில்லை அப்பாவுக்கு பெண்கள் கதைப்புத்தகம் வாசிப்பதில் பெரும் ஆட்சேபணை இருந்தது, வாரப்பத்திரிகைகளுடன் என்னையோ அக்காவையோ பார்த்துவிட்டால் வீடு இரண்டுபடும். அவர் வீட்டில் இல்லாத சமயங்களில் அவசரமாக படிப்பதுண்டு.

அப்போது பெரும்பாலும் காதல் கதைகள் தான் வந்துகொண்டிருந்தன என்பதும் காதல் திருமணத்தின் எல்லா பாதகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்தவர் என்பதையும், இப்போது நினைக்கையில் அப்பாவின் அந்த மூர்க்கத்தை கொஞ்சமாகவேனும் புரிந்துகொள்ள முடிகின்றது

சுதந்திரமாக வாசிக்க தொடங்கியது நூலகம் சென்ற கல்லூரிக் காலங்களில் தான் அப்போதும் வீட்டுக்கு பின்னே இருந்த கல்லூரி என்பதால் அதிக நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. கோவை பல்கலைக்கழகத்தில் முதுநிலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காகச் சென்று விடுதியில் தங்கியிருந்தபோது தான் ஏராளம் வாசித்தேன். என்னை முழுக்கவே வாசிப்பு அப்போது மூடிக் கொண்டிருந்தது.

பல்கலைக்கழகத்துக்கு எதிரே   A-Z  என்று ஒரு இரவல் புத்தக நிலையம் இருந்து. அங்கே பெண்கள் கூட்டம் அலைமோதும் ரமணிசந்திரன் அங்கேதான் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தார். ஒரு வாரத்தில் திருப்பி கொடுக்கையில் புத்தகங்களில் குறிப்பிட்டிருக்கும் விலையில் 10 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படும். பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு பேருந்தில்  பயணித்த அந்த சில வருடங்களில் எப்போதும் என்னுடன் எண்டமூரியோ, சுஜாதாவோ, பாலகுமாரனோ, லா சா ரா வோ , தி ஜாவோ உடனிருந்தார்கள். அப்போதுதான் அ முத்துலிங்கம் அவர்களையும் அறிந்து கொண்டிருந்தேன்

அ.முவின் கதைகளின் மாந்தர்கள், கதைக்கரு, நிலக்காட்சிகள் என்ற அத்தனை சுவாரஸ்யங்களைக் காட்டிலும் அவரது தூய இனிய மொழி என்னை கவர்ந்தது. இலங்கை தமிழின் மீது எனக்கு எப்போதும் தனித்த பிரியம் உண்டு. மொழியின்பத்துக்காகவேதான் நான் பிரதானமாக அவரது கதைகளை வாசித்தேன்

என்  ஆய்வு நெறியாளருக்கு கோத்தகரி வனக்கல்லூரிக்கு மாற்றலானதும்  இரண்டு வருடங்கள் பொள்ளாச்சி- கோவை- மேட்டுப்பாளையம்- கோத்தகிரி என்று கூடுதலாக பயணங்களும் கூடுதல் வாசிப்புமாக இருந்தேன். அட்டையிலிருந்து அட்டை வரை நிதானமாக வாசித்த அச்சமயத்தில்  புத்தகங்களை யாருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பதும் விசித்திரமானவைகளை  குறித்து வைத்துக்கொள்வதும் வாடிக்கையாக இருந்தது.

தனக்கு பிரியமான சிவப்பு மதுவுக்கு, மனப்பிறழ்வு நோய்க்கு தானெடுத்துக் கொள்ளும் மருந்துக்கு, இறந்த தன் மனைவிக்கு போன்ற சமர்ப்பணங்கள் இருந்தன. தனது, ஏராளமான, நெருக்கமான காதலிகளுடனான  உறவைச் சொல்லிய நூலொன்று எழுதியவரின் மனைவிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது):. தன்னை முதன்முதலாக நூலகத்துக்கு அழைத்துச் சென்ற தனது அன்னைக்கு ஒரு நூல், தனக்கு பிரியமான முலாம்பழத்துக்கும் ஒருநூல் அர்ப்பணமாயிருந்தது.

2016 எனக்கு மிக முக்கியமான ஒரு ஆண்டு முதன் முதலாக வீட்டைவிட்டு, மகன்களை பிரிந்து  மற்றொரு இடத்தில் ஒரு மாதம் தங்கி இருந்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்த கொந்தளிப்பான காலமது.  ஒரு மாத கால துறை சார்ந்த பயிற்சியையும் அச்சமயத்தில் எடுத்துக் கொண்டிருந்தேன். பல்கலைக்கழக பேருந்தில் பயிற்சிக்கு செல்லுகையில் நட்பான பேராசிரியர் ஒருவர் எனக்கு அ. முவின் ‘’மகாராஜாவின் ரயில் வண்டி’’ தொகுப்பை வாசிக்கக் கொடுத்தார். நூலாகவோ அல்லது மின்னூல் வடிவிலோ அல்லாது நகலெடுத்த பக்கங்களை இணைத்து புத்தகமாக்கிய வடிவம் அது

நாள் முழுக்க நீண்ட பயிற்சியின் முடிவில் களைத்துப் போயிருந்த ஒரு நாள் இரவில் அதை பிரித்து வாசிக்கத் துவங்கினேன். மகாராஜாவின் ரயில் வண்டி என்னும் அந்த நூலை அ.மு  சமர்ப்பித்திருந்தது,  அவரால் உயிரிழந்த ஒரு பறவைக்கும் பிறக்காமல் போன அதன் சந்ததிக்கும். அவரே அது சமர்ப்பணமல்ல பிராயச்சித்தம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

அந்த ஒரு பத்தி என்னை கசிந்துருகச் செய்துவிட்டது. இளமையின் வேகத்தில் நண்பனுடன் சேர்ந்து விளையாட்டாக செய்யப்போன ஒரு காரியம் விபரீதமாக முடிந்து ‘பாம்’மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஒரு பாவமும் செய்திராத அந்த கொழுத்த பறவை உயிரிழந்ததை   சொல்லுகையில்:

//அந்தகாகம் ஒரு குற்றமும் செய்யவில்லை. அது செய்ததெல்லாம் அந்த நாட்டில் இருந்த அத்தனை காடுகளில், அந்த காடுகளில் இருந்த அத்தனை மரங்களில், அந்த மரங்களிலிருந்த அத்தனை ஓலைகளில், அந்த வளைந்த ஓலையை தேர்வு செய்து அங்கே தன் பாட்டுக்கு உட்கார்ந்திருந்துதான். இந்த புத்தகம் ஒருபாவமும் அறியாத அந்த பறவைக்கு,பிறக்காமல் போன அதன் சந்ததிகளுக்கு// என்று சொல்லி இருந்தார்.

 எத்தனை வாஞ்சையும், பரிவும், கருணையும், அறியாத செயலுக்கான குற்ற உணர்வும் கலந்த ஒரு சமர்ப்பணம்? இந்தவரிகளில் காணமுடிந்த அந்த மனதின் ஈரம் என்னால் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது. இதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும் அவ்விரவு முழுவதும் உறங்காமல், உறக்கம் வராமல் ஒரே மூச்சில் அத்தனை கதைகளையும் வாசித்து முடித்தேன்.  அத்தொகுப்பின்  75 கதைகளின் ஒவ்வொரு வரியும் அ.முவின் அந்த கனிவில் தோய்ந்தவைகளாகவே இருந்தன.

அப்போது எனக்கிருந்த பல சிக்கல்களிலிருந்து நான் எளிதில் அந்த தூய அன்பின் கையைப்பிடித்துக் கொண்டு கடந்தும்  வந்து விட்டிருந்தேன். இத்தனை நல்ல மனம் கொண்ட மனிதர்கள் இருக்கையில் நான் அஞ்சவும் நம்பிக்கையிழக்கவும் தேவையில்லை என்று ப் மனமார நம்பினேன்

 ’’ஓர் அவமானத்தை ஓர் இளவெயில் போக்க முடியுமானால், ஓர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால், ஒரு நோயை பூவின் நறுமணத்தால் சமன் செய்து கொள்ள முடியுமானால், வாழ்க்கையில் அஞ்சக்கூடியதாக ஏதுமில்லை..!!என்று சொல்லி இருப்பார் ஜெயமோகன்

அப்படி என் முன்பாக ஒரு பெரிய மலையைப் போல நின்றிருந்து அச்சமூட்டிய ஒரு சிக்கலை  அ. முவின் அந்த கனிவினால் திரைச்சீலையை தள்ளி விலக்குவதுபோல் எளிதில் கடந்து வந்துவிட்டேன். உலகம் அப்படியொன்றும் அன்பின்மையால் வரண்டு விடவில்லை என்று அந்த சமர்ப்பணம் எனக்கு சொல்லியது.

அவரின் பல படைப்புக்களை நான் வாசித்திருந்தும் இந்த குறிப்பிட்ட தொகுப்பு என் தனித்த பிரியத்துக்குரியதானது.

கோடைமழையில் அவரது சொந்த ஊரான கொக்குவில்லிலிருந்து புறப்படும் மஹாராஜாவின் ரயில் வண்டி ’எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலையில் நிற்கும்’ வரை நான் வண்டியை விட்டு இறங்கவேயில்லை.

அடிக்கடி இடையில் சுருட்டு, புகையிலை, சிகரெட் வாடை வந்து கொண்டிருந்தது,  மழை பெய்தது, வெயிலடித்தது, புழுதி பறந்தது அதிக ரிக்டர்  அளவிலான பூகம்பம் வந்தது, போர் தொடர்ந்தது, ஏதேதோ ஒழுங்கைகள் வழியாக பயணம் ஆப்பிரிக்காவிலும் கொக்குவில்லிலும் சோமாலியாவிலும், நைரோபியிலும் தொடர்ந்தது.  இடையே யாழ்தேவி கணக்காய்  நேரத்துக்கு கடந்து சென்றது. கச்சான் காற்றும் சோளக்காற்றுகளும் அடித்தன

ரயிலெங்கும் குட்டிக்கூரா மணந்தது, இடைக்கு கல்பெஞ்சும், கவண்மேந்தும் வருகின்றன,  நாடன் பாட்டுக்களும் பழமொழிகளும் சிறார்களின் விளையாட்டுப் பாட்டுக்களும் காதில் கேட்டது.

இரண்டு பூ பூக்கும் ஒரே மரமென்னவென்னும் விடுகதையும் போடுகிறார் அ.மு.

 நல்ல பசி நேரத்தில் மாங்காய் சம்பலும் ஆப்பிரிக்காவின் வ்வூவ்வூ களியும் மணமடித்து அவற்றை உண்ணவேண்டும் என்னும் ஆவலை உருவாக்கியது. ஆட்டுச்செவி பருவத்தில் இளசாக உடையாமல் இருந்த தேங்காயின் வழுக்காய் சச்சதுரமாக வெட்டிபோடப்பட்டு செய்த குழம்பும், கணவாயுடன் ஒரு சொட்டு மையும் முருங்கைப்பட்டையும் போட்டு வேகவைத்த மணத்தையெல்லம் கூட சமாளித்துவிடலாம், ஆனால் அந்த  ஆட்டுக்கறி பிரட்டல் இருக்கிறதே! வாய்நீர் ஊறாமல் அதை கடந்து வந்திருக்கும்  அசைவ உணவுக்காரர்கள் இருக்கவே முடியாது.

கோலாகலமான  மஞ்சவனப்பதி தேர் திருவிழாவை மட்டுமல்ல, மக்களை மக்கள் அடித்துக் கொள்ளும் இனவெறியில் சிந்தும் கண்ணீர்த்துளைகளையும் ரத்தத்தையும் கூட காண நேர்ந்தது

இந்த ரயில் வண்டி பிரயாணத்தில் என்னை கவர்ந்தது அல்லது என்னை பேரலையென அடித்துக் கொண்டு சென்றது உடன் வந்த பெண்மைப் பெருக்குத்தான். எத்தனை எத்தனை வகையில் பெண்கள்! துணிச்சல்காரிகளும், துயரமே உருவானவர்களும், வடிவானவர்களும், அன்பான அக்காக்களும், பச்சிளம் குழந்தைகளும், சிறுமிகளும், சிறு மகள்களும், காதலிகளும் அன்னைகளும், மனைவிகளுமாக வரும் அவர்களுக்கெல்லாம்தான் எத்தனை வகையில் இடர்பாடுகள், சிக்கல்கள் கலைடாஸ்கோப்பின் வர்ணஜாலம் போல அவர்களின் இயல்புகளின் வண்ணக்கோலம் கண்முன்னே விரிந்தது

மனதில் ஒருவனை வைத்துக்கொண்டு, இன்னொருவனை மணமுடித்த சாந்தினி,  காதல் துயரை உவந்து ஏற்றுக்கொள்ளும் அனுலா,  மனதிற்குள் ரகசியமாக ’கொண’ மாமாவை காதலிக்கும் ஒரு அக்கா, சோதிநாதன் மாஸ்ரரை தவிக்க வைக்கும்,  பல்லி வயிற்றில் முட்டை தெரிவது போல விரல்களில் ஓடும் ரத்தம் கூட தெரியும் நிறத்திலிருக்கும் இளமை பொங்கும் அலமேலு, தண்ணீருக்காக காதலை மறக்கும் சோமாலியாவின் மைமூன், திறமான நிச்சயத்துடன் வருவேனென்று சொன்னவனுக்காக காத்திருந்து மட்கும் ஹொன்ஸாகூல், என ஒவ்வொரு நிறுத்தத்திலும் காதல் கொண்ட, காதல் கொள்ள வைத்த பெண்கள் பயணத்தில் இணைகிறார்கள்

  துயரமே உருவான பெண்கள் பலரையும் காணமுடிகின்றது பிள்ளைப்பாசத்தில் கட்டுண்ட பார்வதி, இனக்கலவரத்தில் உயிர்பிழைக்க ஓடிவருகையில் இறந்துபோய் புதைக்கவும் இல்லமால் எரிக்கவும் இல்லாமல் அப்படியே வீதியோரத்தில் விடப்பட்ட தங்தம், சிறு ஜாடையில் அவளைப்போலவே இருக்கும்  அவள் மருமகள். பயணச்சீட்டுக்களாக மாறிவிட்ட வளையல்கள்  இல்லாத மூளிக்கைகளை அசைத்து பிளேனில் போகும் மகனுக்கு விடைகொடுக்கும் ஒரு அன்னை,

எங்கோ நாதியற்று கிடக்கும் மகனுக்கு வயலட் கலர் பென்சிலை நாக்கில் தொட்டுத்தொட்டு ’’இப்போதெல்லாம் தென்னையிலிருந்து தேங்காய்கள் விழுவதில்லை, வானத்திலிருந்து மழை விழுவதில்லை ஆகாயத்திலிருந்து குண்டுகள் தான் விழுகின்றன’’ என்று கடிதம் எழுதும் அன்னையொருத்தியின் சித்திரமும், வீட்டை துடைத்துப் பெருக்கி, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது போல வாஞ்சையுடன் பாத்திரம் அலம்பி, துணிகளை துவைத்து அப்படியும் நேரம் எஞ்சி இருக்குமானால் அடுப்புக்கரி அணைந்த இடத்தில் படுத்துக்கொள்ளும்  பதிமூன்றே வயதான வேலைக்கர சிறுமி பொன்னியையும்,  நினைத்தாலே கிலி பிடிக்கும்படியாக ஒரு பிறந்த நாள் பரிசைப்பெறும் பாரதிராஜா பார்த்தால் பொறாமைப்படும் படியாக ஒரு  நீள  வெள்ளைத் துகில் உடையை வைத்திருக்கும் பத்மாவதியும்  மனதை கனக்க செய்து விடுகிறார்கள். ரயில் பெட்டியிலிருந்து நான் இறங்கி இத்தனை காலமாகியும். அந்த கனம் இன்னும் நெஞ்சில் தான் அழுத்திக் கொண்டிருக்கிறது

 நகை சுற்றிவரும் மெல்லியதாள் போன்ற காகிதத்தில் இரண்டு பக்கமும் இங்க் தெரிய அந்நிய தேசத்திலிருக்கும் கணவனுக்கு கடிதம் எழுதும் ஒரு பாவப்பட்ட மனைவி, பாயை விரித்துப்போட்டு  இரு பக்கத்திலும்  இரண்டிரண்டாக படுத்திருக்கும் பிள்ளைகளுக்கு  சரிசமமாக தன்னை பிரித்துக் கொடுத்து நடுவாக படுத்துக்கொள்ளுமொருத்தி, தனக்கு விதிக்கப்பட்ட வறுமையை ரகஸ்யமாக அனுபவிக்க விரும்பும் பாத்திமா, நாலு பிள்ளைகளையும் இழுத்துக்கொண்டு போகும் தொக்கையான ஒரு மனுஷி என இவர்களின் துயரத்தில்  ரயில் வண்டி  தளும்புகிறது.

குளிருக்கென அடைத்த வாத்துச்சிறகுகள் பிய்ந்து வெளியே வந்திருக்கும் மோசமான  காலணிகளுடன்  தினமும் ரெய்கி சிகிச்சைக்கு செல்லும்  இரண்டு கிழமைகளுக்கு முன்னர் மோசம் போய் விட்ட பரமசோதியின் அக்கா மேல்கோடடை மறந்து வைத்துவிட்டுபோகிறாள்.

கஷ்டப்பாடுகள் கீழ்மையின் எல்லை வரைக்கும் துரத்தி வந்ததில் சொந்த மகளிடமே  வட்டிக்கு காசுகொடுக்க துணியும் வெயிலில் உலர்த்தியது போலிருக்கும் சின்னாயிக்கிழவியும் ரயிலில் இருந்தாள்.  

தனியாக எடுத்து வைத்த சாமி படையல் போல சிரிக்கிற இரண்டே இரண்டு பாவாடைகளும் அவையிரண்டுக்குமாக சேர்த்து ஒரே  ஒரு நாடாவையும் வைத்திருக்கும், மேலுதட்டில் வெண்டைக்காய் மயிர்போல  ரோமம் கொண்டிருக்கும்  அம்மா ஒருத்தி  கண்களை நிறைக்கிறாள் ,மூன்றாவது அம்மாவின் மகளான, மூக்குத்தியும் முகப்பருவும் போட்டிருந்த , ஒரே நாள்  மூளைக்காய்ச்சலில் செத்துப்போன அழகு அக்காவை மறக்கமுடியுமா?

துயரமே உருவானவர்களுக்கிடையில் துணிச்சல்காரிகளும் புதுமைப் பெண்களும் கூட  இருந்தார்கள்  ஒரு காவாலியின் அசிங்கமான செய்கையை பார்த்து திகைத்து பயந்து போகாமல் கண்களை நேராகப் பார்த்து ’’அடுத்த ஷோ எப்போ வரும். என் தங்கையும் பார்க்கனும்’’ என்ற ஒரு துணிச்சல்காரி, .ஒப்பாரிப்பாட்டிலும் வம்புச்சண்டை வளர்க்கும் உறவுப் பெண்கள், வீட்டுவேலைக்கு வந்து எஜமானியாகிவிடும்  ஆப்பிரிக்க கருப்பழகி அமீனாத்து, தமிழ் படங்களில் ’’ஏன் கேர்ல்ஸ் எல்லாம் குனிஞ்ச படியே போகினம்?’’என்று கேட்கும் வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த ஒரு சிறுமி.

ஆங்கிலம், ரஸ்யன், பிரெஞ்சு எல்லாம் சரளமாக பேசும், பச்சை கண்கொண்ட மூச்சை நிறுத்தும் அழகில்லாவிட்டாலும் வசீகரமாயிருந்த, ஒரு பார்ட்டியின் முடிவில் இரு மார்புகளையும் கழட்டி வீசியெறியும் அனா என்கிற அன்னலட்சுமி, இவர்களுடன்  நேர்கொண்ட பார்வையும், நிமிர்ந்த நன்னடையும், துணிவும் சாதுர்யமும் கொண்ட, கற்பெனும் புனிதப்போர்வயால் மூச்சுமுட்டும்படி  போர்த்தப்படாத பல ஆப்பிரிக்க பெண்களும் இருக்கிறார்கள்.

ஸ்வென்காவின் 17 பெண் கருச்சிசுக்களில் ஒன்றாக காத்திருந்த காமாட்சி இனி வரப்போகும் காலங்களின் இனவிருத்தி எப்படி இருக்கும் என்று கோடு காட்டி அச்சமூட்டினாள்

பேரம் படியாத போது அலறும் ’யூ லவ்  மீ’’ மீன்காரியும் அவள் முதுகில் ஒட்டிக்கொண்டிருக்கும் கரிக்குருவிக் குழந்தையையும்  இந்த பிரயாணத்திலல்லாது வேறெங்காவது காணக்கிடைக்குமா என்ன?

பலவிதமான மனைவிமார்களையும் பார்க்கமுடிந்தது இந்த ரயில் பிரயாணத்தில்.

வெளிநாட்டுக்கு போகும் கணவனுக்கென்று பார்த்துப் பார்த்து சூட்கேஸில் சாமான்கள் அடுக்கும் ’’வாங்கும் நோய்’’ கொண்டிருந்த பட்டியல் போடும் மனைவி, கொஸ்டோரிக்கன் போலவே இருந்த பிடிவாதக்காரியும் சீனனிடம் மார்பில் டிராகனை பச்சை குத்திக்கொண்டவளுமான  தங்கராசாவின் மனைவி பத்மாவதி,  

தனது மூன்று மாத குழந்தைக்கு முலைப்பாலை கறந்து போத்தல்களிலடைத்து டேகேரில் குழந்தையுடன் கொடுத்துவிட்டு வரும் ஜமைக்காவின் எஸ்தர், உள்ளத்தின் குரலை கேட்காமல், உடலின் கட்டளைகளை மட்டும் செவிமடுத்து மருகும் கமலி, பணிவிடை செய்யும் கணவன் மீதுள்ள பிரேமையை சந்தேகமாக மாற்றிக்கொண்ட கமலா, உருண்டை வீட்டில் பிரியமில்லாததால் கணவன் மீது மயிர் வளர்வது போல கண்ணுக்கு தெரியாத விரோதத்தை வளர்க்கும் மனைவி, இவர்களின் துக்கம்   வாசிப்பிற்கு பின்னர் என் துக்கமாகிவிட்டிருந்தது.

ஆப்பிரிக்க யானைத்தந்தத்தின் மீது  எத்தனைதான் ஆசையிருந்தும் பேருயிரொன்று அதன்பொருட்டு அழிந்ததை அறிந்ததும் அன்னை மனம் துடிக்க கிடைத்த தந்தத்தை ஏறெடுத்தும் பார்க்கமல் ஊர் திரும்பு இன்னொருத்தியும் இருந்தாள்

குடியுரிமைக்கு பிறகே தாய்மை என முடிவு செய்து பெண்மையையும்  தாய்மையையும் தவறவிடும் சங்கீதா மனம் கனிய வயதும் காலமும் தடையில்லை என் உணர்கிறாள், அதற்கு சாட்சியாக அவளருகில் கிடக்கிறது  பெண்குழந்தை அய்சாத்து

இத்தனை பேருடன் பச்சிளம் குழந்தைகளும் பருவப்பெண்களும் சிறுமிகளுமாக மகள்களும் நிறைய பேர் இருந்தனர். ரயிலில் 75 பெட்டிகளல்லவா?

தங்கைக்கு பிறகு தாமதமாக மலர்ந்த ராசாத்தி, தேநீர் போல கோபத்தில் சிவந்த , தூக்கி வைத்துக் கொள்ள யாருமில்லாமல் தானாகவே தூக்கி வைத்துக் கொள்ளும் 14 வயது பள்ளி மாணவியொருத்தி, ஒழுங்காய் சடை நுனியில் நீல ரிப்பன் கட்டிக்கொண்டு கிலுகிலுவென்று சிரித்துக்கொண்டு பள்ளி செல்லும் சிறுமிகள், பாய்பிரண்டின் பிறந்த நாளை  மறந்த  அப்பாவை கோபித்துக்கொள்ளும், அவருடனான தன் இளமைப்பருவத்தின் அபூர்வ தருணங்களையெல்லாம் மறந்தே மறந்து விட்ட மகளொருத்தி,

ராட்சத்தனமான கருப்பு புழு போல் நெளியும் மூன்று மாதமேயான தில்லைநாயகி, விருந்தாளிகளுக்கு  ஆட்டுப்பால் கொடுத்து உபசரிக்கும் வீட்டைச்சேர்ந்த,  கண் இமைகளில் வைரத்துண்டுகள் ஒட்டியிருக்குமோர்  சிறுமி, ஐஸ்கிரீம் கடையை கண்டால்  வெட்டுக்கிளியை கண்ட நாய் போல் அசைய மறுக்கும் ஒரு இளமகள், இவர்களுடன் வரும் நீளமான கண்கள், நீளமான விரல்கள் கொண்ட அம்மாவிற்கு பிரசவம் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண். முதலில் தெரிந்த கால்களை பிடித்து இழுத்ததால் நீளமான கால்களும் கொண்ட டோல்ரஸை சொல்லுகையில் ‘’தின்னவேண்டும் என்று பட்டது’’ என்கிரார் அ.மு. எனக்கும் அவளைப்பார்க்கையில் அப்படித்தான் இருந்தது.

பஞ்சலோகத்தில் செய்ததுபோல் ஒரு 4 வயது மகளும் இருக்கிறாள். அள்ளியெடுத்து மடியிலிருந்திக்கொள்ள மனம் விழைந்த நிமோனியாவால்  மூச்சுவிட சிரமப்படும்  லவங்கிக்குட்டி, ஏன் தனக்கு சூரிய கிரகணம் பிடிக்காது என்பதை சொல்லாமலே மறைந்த பஸ்மினா, இடுப்பில்  குடத்திலேயே அடித்த அப்பனுக்கு  சோறாக்கிப் போடும் பூரணி மற்றும் தன் பெரியப்பனை கொழுத்த ஆடாக்கி, கொள்ளியால் சுடும் விஜயாவின் மகளான குண்டுப்பெண் ஆகியோருமுண்டு.(பல சினிமாக்களில் போடுவார்களே இருதயம் பலவீனமானவர்கள் கர்ப்பிணிகள் அதை பார்க்க வேண்டாமென்று,  அப்படி ,மனைவி மக்களை பிரிந்து நினைவில் வாழும் பலவற்றுடன் போராடிக்கொண்டு பொருள் வயிற்றின் நீங்கியிருப்பவர்கள் இந்த கதையை படிக்க வேண்டாமென்று டிஸ்க்ளெய்மெர் போடவேணுமென்கிற அளவுக்கு மனதை கலைக்கும் கதையது)

மிக அழகான பெண்ணாக வருவதற்கு திட்டம் போட்டிருந்த டொன் தம்பதினரின் சிறு மகளுடன், சிறிய சிவப்பு உருண்டை வாயுடன் இருக்கும் ஒரு குட்டியும், பாஸ்மதி அரிசியைப்போல நாலே நாலு பற்களைக் கொண்டிருக்கும்,  திராட்சைகளை சுவைக்கும், ஜெயமோகனின் ’’இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’’ புத்தகத்தை  மட்டும் சரியாய் தூக்கிக்கொண்டு ஓடிப் போகும் 26 இன்ச் உசரமான வாசகி i think அப்சரா குட்டியும் வருகிறார்கள்.

நான் கண்னை விரித்துக்கொண்டு பார்த்த சுவாரஸ்யமான  பல பெண்களும் பயணத்தில் உண்டு. பிரான்ஸிஸ் தேவசகாயத்தின் சவக்குழியை பிரான்ஸிஸ் தேவ சகாயத்திடமே சுட்டிக்காட்டும் செங்கூந்தலும் வெள்ளுடையுமாக  கனவில் வருமொருத்தி. ரம்புட்டான் பழம் போல சிவந்த உதடுகளுடன் சரசக்கா, நட்ட நடு நிசியில் வாடிக்கையாளரிடம் இனிக்க இனிக்க பேசும்  17 வருடமும் ஒன்பது மாதமும் வயதான ஸேர்லி, ஸ்கர்ட் உடுத்திய பெண் படம் வரைந்த  கதவு கொண்ட கழிப்பறைக்குள் தன்  பணிச்சூழலின் அழுத்தமனைத்தும் மறந்து உற்சாகமாகிவிடும் மீனுக்குட்டி.

ஆஸ்பத்திரியின் சக்கர நாற்காலியின் உராய்வுக்கும் பிணம் தள்ளிக்கொண்டு போகும் சில்லு வைத்த கட்டிலின் கரகர ஓசைக்கும் நடுவெ பொருத்தமில்லாத இனிமையுடன் ஒலிக்கும் குரலைக்கொண்ட யவனம் நிறைந்த, தேனிக் கூட்டம் போல சிவந்த கூந்தல் கொண்டிருக்கும் வெளிநாட்டு டாக்டர் பெண்ணொருத்தியும் உண்டு.

புன்னகையை ஸ்டிக்கர் பொட்டு போல ஒட்டி வைத்திருக்கும்  வரவேற்பாளினியும், கந்த சஷ்டி விரதத்திற்கு இரவு பாலும் பழமும் மட்டும் சாப்பிடுகிற, அந்த பழம் ஒரு முழு பலாப்பழம் என்பதை மறைத்துவிடும் அன்னமக்காவும் புன்னகைக்க வைக்கிறார்கள்.

மலர்வதற்கு இரண்டு நாள் இருக்கும் மல்லிகை மொட்டுக்களை  தலையில் சூடிக்கொள்ளும், தன் வனப்பை தொற்று வியாதி போல பரப்பிவிடும் மகேஸ்வரி, தலைமயிர் அவ்வளவு குவியலாக அவ்வளவு பொன்னிறமாக இருந்த ஸோரா , ட்ராஃபிக் சிக்னலைப்போல மஞ்சள் முகமும் ரத்தச் சிவப்பு உதடுகளும், பச்சைக்கீற்று கண்களுமாக ஒரு சீனப்பெண் என்று எத்தனை எத்தனை வகைப்பெண்கள்

’ம்வாங்கியை’ களவு செய்யத்தூண்டும் அழகுடன் இருந்த எமிலி, போறனையில் இருந்து இறக்கிய பாண் போல மொரமொரவென்று இளஞ்சூடும், மணமுமாக  இருக்கும் துப்புரவுக்காரியொருத்தி, ஜெனிஃபர் என்ற பெயருள்ள நாயுடன் வரும் பெயரிடப்படாத ஒரு அழகி ,  பச்சைப்பாவாடையும் பட்டுரிப்பனுமாக, உப்பு என்று சொல்வதுபோல் உதடுகளை எப்போதும் குவித்து வைத்திருக்கும் விசாலமான கண்கள் கொண்ட விசாலாட்சி,  தானாக கனிந்த அறுத்த, கொழும்பான் மாம்பழம் போலவும், அரிய வண்ணத்துப்பூச்சியை போலவும் இருப்பவளான,  வேகமான  யாமினி, கிட்டார் வாசிக்கிற பூனைக்குட்டிக்கு அரிஸ்டாட்டில் என பெயர் வைத்திருந்த ரோஸ்லின், மர அலங்காரியாக வேலை செய்யும் அமண்டா ஆகியோரும் ரயிலை அவர்களின் பேரழகாலும் ததும்பும் இளமையாலும் நிறைக்கிறார்கள்

ஒரே கரண்ட் கம்பியில்  வேலை செய்யும் பல்புகள் போல மூன்று உடலும் ஓருயிருமாக இருக்கும் மூன்று ஸ்நேகிதிகள் அவர்களில் ஒருத்தி அமெரிக்காவின் நட்சத்திர உணவகத்தில் தட்டில் வைக்கபட்ட முட்டையை பார்த்துக்கொண்டிருக்கையில் காதலனால்  முத்தமிடப்படும் மித்  என்கிற மைதிலி,

மண்ணெண்ணெய் வாடை அடிக்கும், மூக்குத்தியில் அழுக்கு சேர்ந்திருக்கும் கருத்த மாமி,  நாவல் பழம் பொறுக்குகையில் கதாநாயக சிறுவனுக்கு ராமு மாட்டுடன் அறிமுகமாகும் வத்ஸலா,  உடும்புப்பிடி போல குணம் கொண்ட சரசக்கா ஆகியோருடன் வரலாற்றிலிருந்து எழுந்துவந்து இணைந்து கொள்கிறார்கள்  பொத்தா தேவியும் குந்தியும். ரோட்டின் கீழே இருந்து வென்ற் வழியாக அடிக்கும் வெப்பக்காற்றில்  மேலே எழும்பி பறக்கும் இடையாடையை இரண்டு கைகளால் அமத்திப் பிடிக்கும் மர்லின் மன்றோ கூட  பிரயாணத்தில் இருக்கிறாள்

சிரிப்பால் வீட்டை நிறைக்கிற, அண்ணாந்து தண்ணீர் குடிக்கையில் சிந்தும் தண்ணீர் கழுத்துக்குழியில் தங்கிவிடும் அளவுக்கு ஒல்லியான,   இன்னும் நிரப்பப்படாத பல அங்கங்களைக் கொண்ட, காதுவரை நீண்ட ஓயாது வேலை செய்யும் கண்களைக் கொண்ட கனகவல்லி,  வெங்காய சருகு போல மெல்லிய சருமம் கொண்ட ஸ்வீடனின் மார்த்தா, மறைக்கப்படாத  மார்பகங்களுடன் மீன்களும் துள்ள, கார்களை துரத்தி  வரும் மீன்காரப்பெண்கள், பிறகு நினைத்துப் பார்க்கையில் ஒரு சொற்பொழிவு போல தோன்றும்படியாக  இடுப்பை வெட்டி காண்பித்த ஆப்பிரிக்க அழகியென அநேகம்பேர் வருகிறார்கள்

கிராமத்து மனுஷியும் நான்கு ஆதார சுவைகளை கலந்து பத்தாயிரம் சுவைகளை கொண்ட உணவுகளையும், தோசையில் விழும் துளைகள் கூட எண்ணினால் ஒரே மாதிரியாக இருக்கும்படி சமைப்பவளுமான  ஒரு அம்மாவும், அவரை சமையலறைக்குள்ளேயே நுழையவிடாத, சமையல் வகுப்புக்களுக்கு போய் கற்றுக்கொண்ட சமையலை செய்து பார்க்கும் அவரது மருமகளும் கூட உண்டு.

மனிதர்கள் மட்டுமல்லாமல்  எல்லா பயணங்களிலும் நான் தவறவிடாமல்  ரசித்துப் பார்க்கக்கூடிய விதம் விதமான மரங்களும் மலர்களும் கனிகளும் இந்தப் பயணத்திலும் காணக்கிடைத்தன. அனிச்சம்பூ ,ஓக், அகேஸியா, கிளுவை மரங்களுடன், சதி செய்யும் முசுட்டை மரங்கள், கணப்பு அடுப்பில் புகையின்றி சிறிது மணத்துடன்  எரியும் விறகைத் தரும் பேர்ச் மரங்களை எல்லாம் ரயில் கடந்து சென்றது. ஐந்து வருடத்துக்கு ஒரு முறை காய்க்கும் ’மொற’ மரமொன்றையும் கண்டேன்

பயணத்தில் எதிர்பாராமல் திடீரென தலை காட்டும்  கவிதைகளைப் போல சின்னப்பெண்கள் தங்களை கடக்குமுன்பாக அனைத்துப் பூக்களையும் அவர்கள் முன் கொட்டும் மரங்களும்,  மஞ்சளாக வழவழப்பாக  பார்க்க லட்சணமாக இருக்கும் தண்ணீர் பாங்கான இடங்களில் வளரும் ஃபீவர் மரமும்,  மரெண்டா கீரைகளும், நிலம் தெரியமல் பூக்களை சொரிந்திருக்கும் ஜகரண்டா மரங்களையும் காண முடிந்தது.  கதிரைகள் செய்யப்படும் காஷ்மீரி வால்நட் மரமும், வானத்தில் பறந்து வந்த வாழையிலைகளும் ஆழ்குளிரிலிருந்து எழுப்பிய மாவிலைகளையும் கூட பார்த்தேன். தோறாஇலையும் குயினைன் மரப்பட்டைகளும் இருக்கின்றன. எங்கோ கமகமவென்று இலுப்பைப்பூ மணமுமடித்தது

பேயின் கைவிரல்களைப்போல் பரவி வளரும் ஐவி செடியும் வழியில் இருந்தது. இதுநாள் வரை மணிப்ளாண்ட் என்றே சொல்லியும் கேட்டும் வாசித்தும் பழக்கமாயிருந்த , முதன் முதலில் அ. மு வால் மணிச்செடி என்று அழைக்கபட்ட அந்த செடியை கண்டதும் அத்தனை பிரியம் உண்டாகி விட்டிருந்தது. பயணத்தில்  இப்படி பல புதிய அழகிய சொற்கள் இடையிடையே வந்து எட்டி பார்த்து சந்தோஷப்படுத்தும்.

அடடா பட்சிகள் உச்சியில் அமர்ந்திருக்கும் மிமோசா விருட்சங்கள்.முதலில் இலைகளை கொட்டும் பேர்ச் மரமும் இலைகளை கொட்டவே கொட்டாத மேப்பிள் மரமும், தோட்டத்தின் சிவப்பு வத்தகப்பழமரம்,  அக்லனீமா செடிகளும், தோலுரித்து வைத்த தோடம்பழங்களுமாய் பசுமைப்பெருக்கும் பயணத்தில்  கூடவே வந்தது

நம்மூர் தீக்கொன்றை மரத்தை அவர் தீச்சுவாலை மரம் என்கையில் அதற்கொரு ஆப்பிரிக்கத்தனம் வந்துவிட்டிருந்தது. வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட பரமசோதியின்  சாமான்களுடன் நிற்கிறது  ஒரு வாகைமரம்

இடிமுழக்க துண்டுகளை  கட்டி இழுப்பது போல் சத்தம் போடும் ஒரு மோட்டர் சைக்கிளும், கோபத்துடன் உறுமி எழுந்த சிங்கம் போல ஒரு ஓஸ்டின் காரும் ரயிலை கடந்து சென்றன. வழியில் மகரந்த துள்களை பரப்பி வைத்ததுபோல பரவிக்கிடந்த மணலைப்பார்க்க முடிந்தது. பிரயாணத்தின் ஓரிரவில் குழைத்து வைத்ததுபோல் கலங்கலாக தெரிந்தான் சந்திரன். யாரோ ராட்சஷன் அடித்து வீழ்த்தியது போல சிவந்திருக்கும் ஆகாயத்தையும் அந்தியொன்றில் கடந்தது ரயில்.

பிரயாணத்தில் கந்தபுராணமும், சிவபுராணமும்,சிலப்பதிகாரமும், ராமாயணமும் மகாபாரதமும் கூட கேட்கிறது. துரியோதனன் மனதை கெடுக்கிறது  ஒரு சடைக்கார சிறுக்கி நாய்

’’அம்மணத்துகு கோமணம் மேல்’’ போன்ற முதுமொழிகள் இடையிடையே வந்து விழுகின்றன. பேசிக்கொண்டிருப்பவர்களுக்கு நெருக்கமாக வந்து அணில்கள் பொறுக்கிச் சாப்பிடுகின்றன. அந்த செகரட்டரி பறவை தான் என்ன வினோதம், அப்படியொன்றை கேள்விப்பட்டது கூட இல்லையே!

அதைப்போலவே சாளரம் 2000 என்பது முதலில்  என்னவென்று மனசில் தைக்கவே இல்லை அத்துடன் சேர்ந்து நின்ற பில்கேட்ஸை பார்த்ததும்தான் அது விண்டோஸ் 2000 என்பது உரைத்தது . Veloy don என்கிற வேலாயுதமும் வருகிறார்.

 சாளரம் உள்ள கடித உறையும் அப்படித்தான் வியப்பூட்டிய மற்றொன்று.  அப்படியான கடித உறையை இதுவரை பலநூறு பயன்படுத்தி இருப்பேன் அதை கவனித்து இப்படி ஒரு பெயர் இருக்கலாமென்று ஒருபோதும் எண்ணியதில்லையே!

அ.முவுக்கே உரித்தான அங்கதங்களும் வேடிக்கையான மனிதர்களும்  குறைவில்லாமல் உண்டு  குறிப்பாக அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டிருப்பவைகள்.(கடைசி மூச்சில் இருந்த பேட்டரி) நாலு பியருக்கு மேல் நாப்பது வாட்டில் மூளை வேலை செய்கையில் மட்டும் அரசியல் பேசும் தம்பிராசா, சிவராத்திரி கந்த சஷ்டியையெல்லாம் தீவிரமாக சிந்திக்கும் மாரியோ இவர்களுடன் இடது கைப்பழக்கம் கொண்ட ஒரு கரப்பான் பூச்சியும் இருக்கிறது, ஆம் நிஜம்தான்.

கனடிய அரசுக்கு அனுப்பும் குரல் பதிவில் வசந்தம் வந்து, தோட்டத்தில் முதல் பூ பூத்ததையும்,  பெண்ணின் சடைபோல் பின்னப்பட்ட பிரெஞ்ச் ரொட்டியை பிய்த்து தின்றதையும், தட்டில் கிடந்தபடி  தன்னையே பார்த்துக் கொண்டிருந்த  வதக்கபட்ட பெரிய மீனை உண்ணமால் விட்டதையும் சொல்லும் ஒருவர் எத்தனை சுவாரஸ்யமான மனிதராயிருப்பார்?

மைமலான மழைநாளில்  காதலிக்கு முதல் முத்தம் பதிக்கும் காதலனும் ஸ்ட்ராபெரி ஜாம் வாசனையுடன் கொட்டாவி விடும் மனிதர்களையும் போல  அ.மு அவர் வாழ்க்கையில் சந்தித்த,  அறிந்துகொண்ட சுவாரஸ்யமானவர்களை உலகில் வேறு யாருமே சந்தித்திருக்க மாட்டார்கள்

ஒரு பிரயாணம் இப்படி ரசிக்கத்த விஷயங்களுடன் மட்டும் முடிந்து விடாதில்லையா?

தோலைச்சீவுகையில் பூரணமாக ஒத்துழைப்பு கொடுத்து  இறைச்சி வெட்டப்படுகையிலும் கண்களை அசைத்துக்கொண்டே இருந்த உடும்பையும், அந்நியமான ஊருக்கு வந்து அடிபட்டு செத்துப் போகிற பறவையொன்றையும், நிலவறையில் விறைத்துக்கிடப்பவரையும் அ.மு சொல்லிக்கேட்கையில் என்னையறியாமல் கண் நிறைந்து வழிந்தது.

தில்லை அம்பல பிள்ளையார் கோவில் கதையை கேட்டு முடித்ததும். கல் மனசுக்காரர் என்று அ. முவை மனதில்  மரியாதையுடன் கடிந்து கொண்டேன்.

இத்தனை சுவாரஸ்யமான பிரயாணமொன்றை இதுவரையிலும் நான் செய்ததில்லை இனிமேலும் செய்யப்போவதுமில்லை.. அ.மு இத்தொகுப்பில் உள்ளதை பெரிதாக்கவில்லை, இல்லாததை இட்டுக்கட்டவில்லை, ஏன் உள்ளது உள்ளபடிகூட சொல்லவில்லை நம்மை கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் கதைகளின் நடுவில் நிறுத்தி விடுகிறார். எல்லாக்கதைகளும் நம்மைச்சுற்றித்தான் நடக்கிறது நாம் கதைகளை  பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

கன்னத்து உப்பலில் கூர்பார்க்கப்படும் கல்லுப்பென்சிலும், பென்னம் பெரிய காரில் பொம்பளை பார்க்க வருபவர்களுமாக நிறைந்திருக்கும் கதைத்தொகுப்பை அ. முவல்லாது வேறு யாரால் அளிக்க முடியும்?

‘திரு அ முத்துலிங்கம் அவர்கள் இன்னுமோர் நூற்றாண்டு நல்ல தேக ஆரோக்கியத்துடனும் மகிழ்வுடனும் இருக்கட்டும். அவருக்கு என் வணக்கங்கள்

அன்புடன்

லோகமாதேவி.

-விஜயா பதிப்பகம் 2022ல் அ மு அவர்களுக்காக கொண்டு வந்த சிறப்பி நூலில் வெளியான எனது கட்டுரை

காடுகள் மலைகள் தேவன் கலைகள்

சமீபத்தில் நடிகர் சரத்பாபு மரணம் என்று செய்தி பரவியது.  இப்போது வளர்ந்த பிள்ளைகளுடன் இருக்கும் என் வயது பெண்களின் இளவயது கனவு நாயகன் அவர். செய்தி கேட்டு, பலர் மனமுடைந்து போனோம். சரத்பாபுவின் பல திரைப்படங்கள் சிறப்பானவை, அதிலும் ரஜினி, ஷோபாவுடன் அவர் நடித்த ’முள்ளும் மலரும்’ பலரின் தனித்த பிரியத்துக்குரியது.

இப்படத்தின் ’செந்தாழம்பூவில்’ பாடலை இன்று வரையிலும் மீள மீளக் கேட்காத என் தலைமுறையினர் இருக்க வாய்ப்பே இல்லை. இந்த செய்தி கேள்விப்பட்ட அன்று மீண்டும் ’செந்தாழம்பூவில்’ பாடலை கேட்க நினைத்தேன்.

ஒரு மலைப்பாதையில் வயல் வேலையிலிருந்து திரும்பும் அல்லது செல்லும்  ஷோபா உள்ளிட்ட இளம்பெண்களை ஜீப்பின் பின்புறம் அமரவைத்து சரத்பாபு என்னும் எஞ்சினீயர்,  காடுகள் பெருமரங்கள் தேயிலை தோட்டங்கள் வழியில் இடைபடும் செம்மறியாட்டு கூட்டங்களை ஜீப்பில் கடந்துசென்றபடி பாடும் பாட்டாக இத்தனை வருடங்களாக அது மனதில் பதிந்திருந்தது. பெரும்பாலும் பலநூறு முறை அப்பாடலை ஒலிவடிவில்தான் கேட்டிருக்கிறேன், 

அதைக் காட்சியாகப் பார்க்கும் அவகாசமற்ற,  பரபரப்பான பல வருடங்களுக்குப் பின்னர்,  இப்போது திரையில் பார்க்கையில்தான்  சரத்பாபுவுக்கும் ஷோபாவுக்குமான காம்பினேஷன் காட்சிகளே இல்லாமல்,  அவர்களிருவரும் தனித்தனியாக படமாக்கப்பட்டிருக்கும் அநீதி தெரியவந்தது.

சரத்பாபு  பக்கவாட்டு காமிராவை பார்த்து முறுவலிக்கிறார், ஷோபா காமிராக்காரரை  அல்லது பாலுமகேந்திராவை பார்த்து நாணுகிறார். தூரக்காட்சிகளில்  ஷோபா இல்லாமல் பல பெண்கள்  ஜீப்பில் அமர்ந்திருக்கிறார்கள்.என்னவோ ஏமாற்றமாக இருந்தது.

இப்பாடலை  இறுதிக்காட்சிகளில் காண்பிக்கப்படும் மலைப்பிரதேசங்களில் மட்டும் வளரும் யுலெக்ஸ் யுரோப்பியா என்னும் மஞ்சள் நிற மலர்களும் கூர் முட்களும் நிறைந்த ஒரு பயறு வகை குடும்பத்தை சேர்ந்த செடியை  சுட்டிக்காட்டும் பொருட்டு நான் மாணவர்களுக்கு பரிந்துரைப்பேன். கூடவே கற்றலை சுவாரஸ்யமாக்க ஷோபா என்னும் பேரழகியைக் குறித்தும் சொல்வதுண்டு. அந்த பாடல்  ஜீப் கடந்து வரும் சில்வர் ஓக் மரங்கள் நிறைந்த  தேயிலைத் தோட்டங்கள், பெருமரங்களின் நிழலில் நனைந்திருக்கும் காட்டுப்பாதை, மலைச்சரிவுகள், மலைமுகடுகள் என மிக அழகிய காட்சிப்புலம் கொண்டிருக்கும்.

 தாவரவியல் துறை சார்ந்த பிரேமை கொஞ்சம் கூடுதலாகவே இருப்பதால் எல்லாக் காட்சிகளிலும் கதை மாந்தர்கள், திரைக்கதையில் உண்டாகி இருக்கும் உணர்வெழுச்சி, அக்காட்சியின் முக்கியத்துவம் போன்ற பலவற்றையும் கடந்து திரையில் தெரியும் செடிகொடிகளின் மீதுதான் என் கவனம் முற்றாக குவிந்திருக்கும்.

தாவரங்கள் மீதான அதீத கவனத்தில் புடவையில், படுக்கை விரிப்பில் இருக்கும் மலர், கனி வடிவங்களை கூட கவனமாக பார்ப்பதுண்டு. ஜோதிகா ’’திருமண மலர்கள் தருவாயா’’ பாடலில் ’’வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே’’ என்னும்போது ’’அட, மாதுளை sun demanding செடியாயிற்றே அதைப்போய் ஜோ வீட்டுக்குள் வைத்து இம்சைபண்ணி, தினமொரு கனியைத் தருமாறு கூடுதல் கோரிக்கை வேறு வைக்கிறாரே’’ என்று கவலைப் பட்டிருக்கிறேன்.

 காதல் காட்சிகளில் கூட ’’அடடே இந்த  மால்வாவிஸ்கஸ் மலர்ச்செடிகள் பின்னால் இன்னும் கொஞ்ச நேரம் அவர்கள் காதல் மொழி பேசிக்கொண்டிருந்திருக்கலாம், செடியை பார்த்தே ரொம்ப நாளாச்சு,’’ என்று அங்கலாய்ப்பது,  காதலர்கள் பெயர் பொறித்திருக்கும்  மரப்பட்டைகளை கண்டவுடன் ’’இது முதலை மரப்பட்டை அப்படின்னா இது மருத மரம்தான்,’’ என்று கூவுவது, ’’என்னதிது  பாட்டில் தாமரைன்னு வருது,  இவங்க என்னமோ அல்லிக்குளத்தில் நீந்தறாங்களே,’’ என்று கொதிப்பது,  காதலன் அல்லது காதலிகள் பேசிக்கொண்டே, காதல் வேகத்தில் அமர்ந்திருக்கும் புல்வெளியின் புற்களை பிய்த்து கொண்டே இருக்கும் காட்சிகளில் ’’அடப்பாவமே இந்த ஜோய்ஸியா ஆஸ்திரேலியப் புல் வளருவதே பெரும்பாடு அதை ஏன் பிச்சுகிட்டுப் பேசறே’’  என்று  மானசீக கண்டிப்புக்களுமாகவே இருப்பேன்.

வெட்டப்படும் வாழைகளையும், வைக்கோல் படப்புக்கு வைக்கப்படும் நெருப்பும், தூக்கிப்போட்டு உடைக்கப்படும் தொட்டிச்செடிகளுமாக  Anti Botanical சண்டைக்காட்சிகளில்,  மனம்வெதும்புவது எப்போதும் நடக்கும்.

எலுமிச்சை, கேரட், மக்காச்சோள லாரிகளில் படுத்துப்புரளும் காதலர்களும், காய்கறி மார்க்கெட்டில் எல்லாத் தள்ளுவண்டிகளிலும் ஏறிமிதித்து துவம்சம் செய்யும் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளும் ஒரு தாவரவியலாளராகவும் ஒரு நல்ல இல்பேணுநராகவும் எனக்கு தாளமுடியாத வருத்தத்தை உண்டாக்குபவை.

 பல்வேறு நிலப்பரப்புக்கள், இயற்கை காட்சிகள், விலங்குகள், தாவரங்கள், நீர்நிலைகள் என பலவற்றுடன் இணைந்த  காதல், பாடல், சண்டை காட்சிகள் ஆகியவைதான்  கதைகளே இல்லாத பல  தென்னிந்திய திரைப்படங்களைத் தோள் தாங்கி நிமிர்த்திச் சில வாரங்கள் தாக்குப்பிடிக்கச் செய்திருக்கின்றன

காதலைச் சொல்லக்  கொடுப்பதிலிருந்து, மனம் சிதைந்த  தொடர் கொலையாளியால் கொல்லப்பட்ட பெண்களை  புதைத்த இடத்தில் நட்டு வைக்கும் குருதிச் சிவப்பு மலர்ச்செடிகள் வரை தமிழ் சினிமாவில் ரோஜா மலர்களின் தாக்கம் ஹாலிவுட் படங்களின் அளவுக்கே இருக்கிறது.

 அப்படியே மன்னன் மயங்கும் மல்லிகைகளும். 1974ல் வெளியான தீர்க்க சுமங்கலியில் ஏழுஸ்வரங்களின் நாயகி, சமீபத்தில் மறைந்த இசையரசி வாணி ஜெயராமின் குரலில் மணத்த அதே மல்லிகை கடந்த வருடத்தின் வெந்து தணியும் காட்டில்  ஒரு  நாயகனை பிரிந்த நாயகியின் தலையில் பிரிவுத் தாபத்தின் வெம்மையில்  வாடியது.

மல்லிகை என்றதும் கே ஆர் விஜயாவும் நினைவுக்கு வருகிறார், கிலோ கிலோவாக மல்லிகை  மலர்ச்சரம் சூடிவரும் அவரின் தலைக்கனத்தை அநேகமாக எல்லா பாடல்களிலும் வியப்பதுண்டு.

இதுபோலவே கருப்புவெள்ளைப்படமான கொடிமலரில், ’’மெளனமே பார்வையால் ஒரு பாட்டுப்பாடவேண்டும்’’ பாடலில் முத்துராமனும் விஜயகுமாரியும் செயற்கை குளம், செயற்கை தோட்டம் என அமைக்கப்பட்ட செட்டில்  இருப்பார்கள். விஜயகுமாரிக்கு கூந்தலில் குறைந்தபட்சமாக 4 கிலோ மல்லிகைச்சரமும், குழாயடியில் அமரவைத்து தேய்த்துக்கழுவி விடலாமென்னும் கொதியுருவாக்கும்  அதீத ஒப்பனையும் இருக்கும். கையில் ஒரு தாமரை மலரை நல்லவேளையாகக் கசக்காமல் முழுப்பாடலிலும் வைத்துக்கொண்டிருப்பார். அவர்களிருவரும் ஒரு மரத்தருகில் நின்றிருப்பார்கள், அம்மரத்தில் தாவர அறிவியல் அடிப்படையில்  சாத்தியமே இல்லாத  வகையில் மலர்கள் அமைக்கப்பட்டிருக்கும். 

 ’’ஆயிரம் தாமரை மொட்டுக்களே’’வில் ராதா மலர்ந்த தாமரை மலர்களின் மத்தியில் ட்ராலியில் பயணித்துக்கொண்டும், படுத்துக்கொண்டுமிருப்பார்.   நாயகனை காட்டிலும் நாயகியிடம் மிக நெருக்கமான இடம் பிடித்திருக்கும் தாமரைகள். குளக்கரையில் காதலிக்கும் அவர்களை சுற்றி பிடுங்கிப் போடப்பட்ட தாமரை இலைகளும், மலர்களும் சோர்ந்து கிடக்கும்.

காதலோவியம் பாடலிலும் ஏராளமாக இதழிதழாக பிய்த்துப் போடப்பட்ட மலர்கள் காதலர்கள் மீது பொழிந்துகொண்டே இருக்கும், காலடியிலும் மலர்கள் மிதிபடும்.

பல்வேறு மலர்களை காட்சிக்குள் கொண்டுவந்த புண்ணியத்தை பெரும்பாலும் பாரதிராஜா கட்டிக்கொண்டார்.

கல்லுக்குள் ஈரம் திரைப்படத்தில் அகலக்கண்களுடன் அருணா சலவை செய்த பாரதிராஜாவின் உடைகளை  எடுத்துக் கொண்டு வருவார். அறைக்குள் நுழையும் முன்னர் வாசலிலிருக்கும் ஒரு செடியின் சிறுமலர்க்கொத்தொன்றைப் பறித்து சலவை சட்டைகளின் மீது வைத்து அப்படியே மேசையில் வைத்துவிட்டு வந்துவிடுவார். கலைஞனான பாரதிராஜாவால் அம்மலர்களின் சுகந்தத்தை ரசிக்காமல் இருக்க முடியாதல்லவா, அவர் அருணா ஒளிந்திருந்து பார்ப்பது தெரியாமல் மலர்களை  நுகர்வார். அருணாவின்  இளமனதில் கிளைவிரித்து பெருமரமாகவிருக்கும் ஓர் காதல்விதையூன்றப்படுவதைக் காட்டும் அழகிய காட்சியது

ஆனால் மிகக் கோரமாக மலர்கள் தமிழ்சினிமாவில் மட்டுமல்லாமல்  இந்திய சினிமா முழுவதிலுமே காட்டப்பட்ட  இடமென்றால் அது முத்தக்காட்சிகளில் தான்.

காதலை உன்னதமாக காட்டிய திரைப்படங்களே அரிதினும் அரிதுதான் அக்காலத்தில். அப்போதைய சமூக கட்டுப்பாடுகள் அப்படி.

’’ஏரிக்கரை மேலே போறவளே பெண்மயிலே, நில்லுகொஞ்சம் நானும் வாரேன் சேர்ந்து பேசிப் போலாம் பெண்ணே’’ என்னும் பாடல் வெளியான போது மரபுகளில் ஊறித்திளைத்திருந்த வேறு ஒரு பாடலாசிரியர் இத்தனை வெளிப்படையாக காதலியை அழைக்கும் ஒரு பாடல் திரையில் காட்டப்படும் இந்த காலத்தில் நானும் திரைப்பாடலாசிரியர் என்று சொல்ல வெட்குவதாக அறிவிக்து  திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகியதை பிற்பாடு கேள்விப்பட்டிருக்கிறேன். அதன்பின்னர் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவன் மாம்பழத்துக்கு பதிலாக என் கன்னம் வேண்டுமென்றான் பாடல் வெளிவந்தபோது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

எனவே அத்தனை கட்டுப்பாடும் ஒழுக்க நெறிகள் என்னும் கற்பிதங்களும் நிறைந்திருந்த சமூகத்தில் முத்தக்காட்சிகள் காட்டப்படத் துவங்கியது பெரும் புரட்சியாகத்தான் இருந்திருக்கும்.

அப்போதைய இந்திய திரைப்படங்களில் காதல் இலைமறை காய் மறையாகவும்,  முத்தம் மலர்மறையாகவும் காட்டப்பட்டது. ஒரு பெருமலர் அல்லது மலர் நிறைந்த செடி, இவற்றில் ஏதேனும் ஒன்றின் பின்னர்  காதலனும் காதலியும், முகத்தை  அல்லது முழு உடல்களை  மறைத்துக் கொண்டபிறகு அவற்றை  வெகு வேகமாகவும் ஆபாசமாகவும் அசைத்து, அல்லது ஒன்றுடன் ஒன்று ஒட்டவும்முட்டவும் வைத்து  முத்தமிடப் பட்டதை பார்வையாளர்கள் யூகித்துக்கொள்ளுபடி காட்டினார்கள்.

இதைவிட கேவலமாக ஒரு முத்தத்தை  காட்டவே முடியாது .

பின்னர் கொஞ்சம் துணிவு வந்த காலத்தில் மலர்களின் தேவை மெல்லக் குறைந்து காதலி வெட்கப்பட்டு கொண்டே தன் உதட்டை துடைத்து கொள்ளும் நேரடிக்காட்சிகள் முத்தத்தை உணர்த்த வந்தன. மலர்களும் தப்பிப்பிழைத்தன. பின்னர்  ரகஸ்யமென்றோ உன்னதமென்றோ ஏதுமில்லா காதல்கள் மலிந்த திரைப்படங்கள் வந்தபோது  எல்லா உணர்வுகளுமே பரஸ்யமாக பட்டவர்த்தனமாக  காட்டப்பட்டன.

எம்ஜிஆர், லதாவின் ’’நீல நயனங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது’’ என்னும் பாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். மிக கவர்ச்சியான, உடலை ஒளிவு மறைவின்றி காட்டும் ஒரு சிங்கிள் பீஸ் உடையில் லதாவும், வழக்கம்போல அழுத்தமான நிறத்தில் கோட்டும் சூட்டுமாக கூடுதல் ஒப்பனையில் எம்ஜிஆரும் இருக்கும் அந்த பாடல்காட்சியை ஒலியை குறைத்துவிட்டு பார்த்தால்  முழுப்பாடலும் விரசமாக மட்டும்தான்  இருக்கும். லதாவின் ஒவ்வொரு அசைவும் ’’நான் அழகி என்னைப் பாருங்கள்’’ என்று எம்ஜிஆரை அழைத்துக்கொண்டே இருக்கும். வேடிக்கை என்னவென்றால் நடனம் என்னும் பெயரில் அந்த பாடலில் படுக்கை அறை காட்சிகள்தான் காட்டப்பட்டிருப்பதில் ஆச்சர்யம் எதுவுமில்லை.

பல தமிழ்ப்பாடல்கள் அப்படிதான்.  ஆனால் இதில் அத்தனை நெருக்கமான காதல் காட்சிகளின்போது அவர்களை  சுற்றிலும் தடித்தடியாய் பல ஆண்களும் நல்ல அழகிய அலங்காரங்களுடன் பல பெண்களுமாக நின்று கொண்டு இவர்களின் நெருக்கத்தை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததுதான் தாங்க முடியவில்லை.

அந்த நடன இயக்குநரின் கரங்களை  மானசீகமாக கண்களில் ஒற்றிக்கொள்ளலாம். அத்தனை ரசனையான அசைவுகள் லதாவுக்கு, எம்ஜிஆருக்குத்தான்  எப்போதும் நடன அசைவுகள் தேவையில்லையே.   அவருக்கு மிகப்பிடித்த, எப்போது வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம் என்னும் சாத்தியம் கொண்ட ஒரு உணவுப் பண்டத்தை போலவே பாடல் முழுவதும் லதாவை எம்ஜிஆர் பார்த்துக் கொண்டிருப்பார்.  காமிராக்கோணங்களை பற்றியெல்லாம் பொதுவில் பேசவே முடியாது.

’’நில்லு கொஞ்சம் நானும் வாரேன்’’ என்பதற்கே கோபித்துக்கொண்டவரை, இப்பாடலை பார்க்கும் போதெல்லாம் நினைத்துக்கொள்வது வழக்கம்.

காதலை, அத்தனை மறைவிலும், இத்தனை அப்பட்டமாகவும், இந்தியச் சினிமா எதிரெதிர் முனைகளில் நின்று காட்டி  கேவலப்பபடுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஒரு சில மலையாளப் படங்களைத் தவிர பிற மொழிப் படங்களில் காதல்  பல்வேறு வழிகளில் சிதைக்கப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

அழகிய உரையாடல்களில் எளிமையாக அழகாக, வார்த்தைகளில்  காதலை வெளிப்படுத்த முடியாதென்னும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருப்பவை  தமிழ் சினிமாக்கள். மீசை  மாதவனில் ’’பிணங்கல்லே’ என்னும் காவ்யாவின் கொஞ்சலில் தெரிவிக்கப்படும் காதலுக்கீடாக  தமிழில் எந்த காட்சியை சொல்லமுடியும்?

சந்ரோல்ஸ்வம் திரைப்படத்தில் முன்காதலியும் அப்போது விதவையும் ஆகிவிட்டிருக்கும் மீனாவுடன்  நான்கு கட்டுவீட்டின் நடுமுற்றத்தின் தாமரைக்குளத்தில் மழை பெய்து கொண்டிருக்கையில் பழைய நினைவுகளை பேசிக்கொண்டு மீனாவின் எதிர்காலம் குறித்து படிகளில் எதிரெதிரே அமர்ந்தபடி லாலேட்டனும் மீனாவும் உரையாடும், மழையின் ஸ்ரீ ராகத்தில் ஒரு துண்டு கீர்த்தனையை மீனா பாடிக்காட்டும் அக்காட்சி முழுக்கவே காதல் நிறைந்திருக்கும்.

 இப்படி பல உதாரணங்கள் காட்டலாம் வங்காள மற்றும் மலையாளப் படங்களில், அரிதாக பழைய இந்தி படங்களில். 

தமிழில் அதுபோன்ற  காட்சிகள் வணிக வெற்றியைத்தராதவை என்று முத்திரை குத்தப்பட்டிருக்கிறது போல. அப்படியான  காட்சிகளை  கமல்ஹாசனைத் தவிர பிறர் சிந்திப்பதில்லை, அல்லது அவர்களுக்கு அமைவதில்லை. 

 ‘சலங்கைஒலி’ படத்தில் காதலி ஜெயப்ரதாவை கணவருடன் ரயிலேற்றிவிடுகையில்  அவரைப் புகைப்படமெடுக்க முனைவார் கமலின் பாத்திரம். காமிரா வழியே காணும் அவரின் பேரழகை, அதை இழப்பதின் துயரைத் தாங்கமுடியாத கமலின் நடிப்பை, அவர் உடல்மொழியில் தெரியும் காதலைப் போலவெல்லாம்  காட்சிகளை அதற்கு முன்பும் பின்பும் தமிழில் யாரும் கொண்டு வந்ததில்லை. சமீபத்தில் மறைந்த புகழ் பெற்ற இயக்குநர் கே. விஸ்வநாத் இந்தக் காட்சிகளுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். 

 மலையாளப் படங்களுக்கு வரலாம் மீண்டும். கேரளாவின் பாரம்பரியமும் இயற்கை அழகும், நிலக்காட்சிகளும் இடம் பெறாத மலையாளப்படங்கள் அரிதினும் அரிது கப்பைக் கிழங்கு, மீன், கஞ்சி, தென்னை,வாழை, யானை,  சந்தனக் குறியிட்ட நெற்றிகள், அகலக் கண்களுக்கு மை எழுதிய நாயகிகள், முண்டும் துவர்த்தும் அம்பலமும், வாழையிலைப் பிரசாதமும், காடும் மலையும், மழையும், விவசாய பூமியும் இல்லாத மலையாளப்படங்களை தேடித்தான் பார்க்கவேண்டும்.

இப்படித் தங்களின் நிலத்தை, இனத்தை , மொழியை கலாச்சாரத்தை இயல்பாக பிரதிபலிக்கும் கலைகள் தான் காலத்தை கடந்தும் நிற்பவை.

தமிழிலும் கிராமியப்படங்களில் வயலும் வரப்பும் தோப்புமாக முழுக்க பொள்ளாச்சியை அதன் சுற்றுப்புறங்களை நம்பி எடுக்கப்பட்ட படங்கள் பலநூறிருக்கும். ஆனால் அனைத்திலும் பேசுபொருள் காதல் மட்டும்தான் என்பதுதான் ஆயாசமளிப்பது. அவற்றில் கதை என்று ஒன்று இருக்குமா என்னும் கேள்விக்கெல்லாம் போகவே வேண்டியதில்லை, ஆனால் கண்ணை நிறைக்கும் பசுஞ்சூழல் நிச்சயம் இருக்கும்.

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்புறங்களில் விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காமலிருப்பதற்கு சினிமா படப்பிடிப்புக்களும் காரணம். அதிகாலை டிராக்டர்களிலும், குட்டியானை எனப்படும் சிறு பார வண்டிகளிலும் பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் ஆட்களை  திரட்டிக்கொண்டு போவர்கள் crowd artists எனப்படும் இவர்களுக்கு ஒப்பனை தேவையில்லை, நடிப்பும் சொல்லித் தர வேண்டியதில்லை.

ஆலமரத்தடி பஞ்சாயத்தில் வெறுமனே குந்தி அமர்ந்திருக்க வேண்டும் கோழிப்பண்ணையில் நடக்க்கும் சண்டையின்போது  நாலா திசைகளிலும் சிதறி ஓடவேண்டும்,  செட்போடப்பட்டிருகும் காய்கறி மார்க்கெட்டில் குறுக்கும் மறுக்கும் நடக்கவேண்டும், காய் வாங்க வேண்டும், வயலில்  களை எடுக்கவோ, நெல்லறுக்கவோ வேண்டும். இப்படி சிக்கலில்லாத வேலைதான். 400 ரூபாய்களும், மதிய உணவும் தண்ணீர் பாட்டிலும் அளிக்கப்படுகிறது பிறெகெங்கே  விவசாய கூலிவேலைகளுக்கு ஆட்கள் வருவது?

அதுபோலவே  மழை, அணை ஏரி கடல் குளம் குளக்கரை ஆறு போன்ற நீர்நிலைகளும் தமிழ்சினிமாவில் வழக்கமாக  காட்டப்படுவதுண்டு

பத்தில் 8 தமிழ் படங்களில் ஆளியார் அணை தவறாமல் இடம் பெற்றிருக்கும். கோழி (சேவல்) கூவி விடியும் தேனீர்க்கடையில் புகைபோகும் பாய்லர்கள்,,  சமையலறையில் ஆவிபறக்கும் இட்லிப்பாத்திரங்களும் கதிரெழும் துவக்கக்காட்சிகளும் மலிந்துதான் கிடக்கின்றது.

எனினும் தமிழ்சினிமாவில் அரிதாகவே  காதலர்கள் சாலையை குறுக்கே பத்திரமாகக் கடந்து தர்பூசணி கீற்று வாங்கி சாப்பிடுகிறார்கள் அப்படியான இயல்பான் காட்சிகளுக்கு மறுபடி நாம் மலையாளப்படங்களுக்கு தான் போகவேண்டி இருக்கிறது. 

நாடோடிக்காற்று படத்தில் ஷோபனாவுக்கு  அம்மியில் தேங்காய் அரைத்துக்கொடுத்து, வாசலில் கோலம் போட்டு, அவர் காத்திருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கருகே இருக்கும் டீக்கடையில் லுங்கியை மடித்துக் கட்டிக்கொண்டு வர்க்கி தொட்டுக்கொண்டு டீ குடித்தபடி,  ஷோபனாவையும்,  டீ குடிக்க வற்புறுத்தி அழைத்து செல்லும் அழகிய காட்சிகள் கொண்ட பாடலான ’’வைசாக சந்தியே’’ பாடல் நான் பலநூறு முறை கண்டு ரசிக்கும் பிரியப்பட்ட பாடல்களில் பட்டியலில் ஒன்று.

 இயல்பான காட்சிகளில் தமிழ் சினிமாக்காரர்களுக்கிருக்கும் ஒவ்வாமை ஆச்சர்யமூட்டும். பொள்ளாச்சி கரும்பு காட்டில் காதல் சொல்லப்பட்டதும் , காதலர்கள் கோட்டும் சூட்டும் உடலை இறுக்கிப்பிடிக்கும் உடையுமாக சுவிட்ஸர்லாந்தில் டூயட் பாடுவது நல்ல ரசனைக்காரர்களுக்கு எத்தனை துயரளிக்கும் என அவர்களுக்கு ஒரு போதும் தெரிவதில்லை

பேருந்து நிறுத்தங்களும், ரயில்நிலையங்களும் இல்லாத தென்னிந்திய சினிமாவே இல்லையென்றே சொல்லலாம். தமிழ்சினிமாவில் பேருந்துநிறுத்தங்கள் என்னும் தலைப்பில் எளிதாக ஒரு முனைவர் பட்ட ஆய்வை செய்துவிடலாம், சுவாரஸ்யமாக இருக்கும்.

கமலின் பாபநாசம்  திரைப்படத்தின் கதையை மேலும் சுவாரஸ்யமாக்குவது  தென்னையும், காப்பியும், வாழையும் செறிந்து வளர்ந்திருக்கும் அந்த தோட்ட வீடு தான்  இல்லையா? ஜப்பானில் கல்யாணராமன் படத்தை நினைத்தாலே  செர்ரி மரங்களுக்கடியில்  ராதா பாடும்  ’’சின்னப்பூ சின்னப்பூ’’ பாடல் தான் நினைவுக்கு வரும்.

ரோசாப்பூ ரவிக்கைக்காரியில் தீபாவை காடுமலையெல்லாம் கூட்டிச்செல்லும் சிவச்சந்திரனின் புல்லட்டில் நாமுமல்லவா அமர்ந்திருப்போம்?

நிழல்கள் பாடலான  ’’இது ஒரு பொன்மாலைப் பொழுதில்’’ மரங்களடர்ந்த சாலையும் தீக்கொன்றைகளும், கடற்கரையும்,  புல்வெளியும், கதிரணைதலுமாக 80களின்  சென்னைச்சாலை அந்தியின் செவ்வொளியில் மூழ்கிக் கொண்டிருக்கும்.

தம்பிக்கு எந்த ஊரு படத்தின் பிரபல பாடலான ’’காதலின் தீபமொன்று’’  துவங்குகையில் பட்டைஉரித்திருக்கும் யூகலிப்டஸ் மரத்தில் சுமதி என்று பெயரெழுதி முத்தமிடும் ரஜினியை காட்டித்தான் துவங்கும், அந்தப் பாடலில் அவர்களுக்கிடையில்  உருவாகி இருக்கும் காதலை எண்ணியபடி ஓங்கி உயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின் காடுகளில் நடந்தபடி ரஜினி சென்று கொண்டிருப்பார். ரஜினியின் இயல்பான பாடல்களில் இதுவும் ஒன்று 

ஊட்டியின் யூகலிப்டஸ் காடுகளும் பொள்ளாச்சி அருகே இருக்கும் வனப்பகுதியான சர்க்கார்பதியின் முள்மரக்காடுகளும் பல காதலை சொல்லி இருக்கின்றன.

என் தனித்த பிரியத்துக்குரிய படமான பன்னீர்புஷ்பங்கள் திரைப்படத்திலும் ’’ஆனந்தராகம்’’ பாடலில் அந்த பள்ளியின் ஆரம் லில்லிகளும், பைன். யூகலிப்டஸ், சாம்பிராணி மரங்களுமாக திரையில் பச்சிலை வாசனையே அடிக்கும் 

அதிலேயே  ’’பூந்தளிராட’’  பாடல் லவ்டேலின் ரயில் நிலயத்தையும் தண்டவாள விளிம்பில் தடுமாறிக்கொண்டு நடந்துவரும் இளங்காதலர்களையும் புகைந்து கொண்டுவரும் ரயிலையும் பட்டையுரித்த   யூகலிப்ட்ஸ் மரங்களுக்கிடையில்  அழகாக காட்டும். 

பகத்ஃபாசிலின் மகேஷிண்ட ப்ரதிகாரம் படத்தின் துவக்க காட்சியிலேயே அவர் குளிக்கும் நதிநீரில் இரண்டு நட்சத்திர பழங்கள் மிதந்து வரும்.

அப்படியான வெகு இயல்பான இயற்கையுடன் நெருங்கிய காட்சிகள் அப்படங்களை அணுக்கமாக்கிவிடும்

உயரக்காட்சியில் படம் துவங்கும்போதே பாம்புபோல வளைந்து வளைந்து செல்லும் ஊட்டி, கொடைக்கானல், மூணாறு, கொல்லிமலை, கேரளா என்று மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியை காண்பித்து துவங்கும் எந்தப்படமானாலும் கதையையோ கதைமாந்தரையோ பற்றி கவலையின்றி முழுப்படத்தையும் அவை எடுக்கப்பட்ட கதைக்களத்திற்கெனவே பார்த்து ரசிப்பதுண்டு. சில காட்சிகளில் தெரியும் சில அரிய தாவரங்களை பார்த்து பரவசமடைவதும் வழக்கம்.பல திரைப்படங்களில் உள்ளறை அலங்காரங்களில்  அழகிய பசுஞ்செடிகள் பிரமாதமாக காட்டப்பட்டதுண்டு.

தமிழ்சினிமாவில் இயல்பான இயற்கை காட்சிகளும் காதில் கேட்கும்படியானதும், என்றும் மறக்கமுடியாத நல்ல இயற்கைகாட்சிகளுமாக பாரதிராஜா இளையராஜா கங்கைஅமரன் ஆகியோரின் கூட்டணிக்காலத்தில்  நமக்கு காணக்கிடைத்தது 

குறிப்பிட்ட நிலப்பரப்புக் காட்சிகளில் திரைப்படங்களை காட்டுவது உலகசினிமாக்களின் முக்கிய அம்சமாகும், இது கதைக்களத்திற்கு பார்ப்பவர்களை அணுக்கமாக்கி, கதையில் அவர்களையும் ஈடுபடுத்துவதின் மூலம் பார்வையாளர்களின் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் ஈர்க்கின்றது    

திரைப்படங்களின் அழகியல் மற்றும் கதைப்போக்கு  இவ்விரண்டிலும் பங்களிப்பதில் நிலப்பரப்பின் முக்கியத்துவம்  வெகுவாக இருக்கும் போதிலும், இந்திய சினிமாவில்  நிலக் காட்சி பிரதிநிதித்துவம் மற்றும் முக்கியத்துவம் பற்றி மிகக் குறைவாகவே அறியபட்டிருக்கிறது.

அடர் வனங்கள், பனிமூடிய மலைமுகடுகள், பாழ்நிலங்கள், பாலைவனபெருமணற்பரப்புக்கள், சந்தடியான நகரங்கள், இயற்கை எழில் நிறைந்த கிராமப்புறங்கள் கைவிடப்பட்ட பின்னி மில்ஆகியவற்றை திரையில் காண்பவருக்கும் அந்நிலப்பரப்புக்குமான அந்தரங்கமான நினைவுகளும் கதையோட்டத்துடன் கலந்து திரைப்படக்குழுவினர் எண்ணியிராத வடிவத்தில் ரசிகர்களிடம் அக்காட்சி சென்று சேரும். ரசிகர்களுக்கும் இயற்கைக்குமான தொடர்பை நினைவூட்டும் ஒரு ஊடகமாக இப்படியான காட்சிகள் அமைந்துவிடுகின்றன.

அவற்றின் மகத்தான குறியீட்டு மதிப்பினால், குறிப்பிட்ட நிலப்பரப்புக்காட்சிகள் கொண்ட படங்கள் அச்சினிமாவிற்கும் பார்வையாளர்களுக்கும் இடையிலான பரந்த உரையாடலின் ஒரு பகுதியாக மாறிவிடுகின்றன.

உதாரணமாக ஹாலிவுட் படமான ’The mountain between us’ என்பதை எடுதுக்கொள்ளலாம்.

துவக்கத்தில் சில காட்சிகளில் மட்டும் வரும் வால்டர் என்னும் விமான ஓட்டியும், இறுதிவரை பெயரிடப்படாத கோல்டன் ரெட்ரீவர்  நாயொன்றையும்  தவிர,  பரந்து விரிந்திருக்கும் பனிமலை முகடுகளுக்கு நடுவில் நாயக நாயகி இருவர் மட்டுமே கதைமுழுக்க வருகிறார்கள்.

பனிக்காற்றில் உலையும் பைன் மரங்களும்,  முகத்திலும் உடைகளிலும் ஒட்டியிருக்கும்   பனிப்பொருக்குகளும் , உலர்ந்த உதடுகளும், வழக்கமான ஒப்பனையின்றி வீங்கிய முகமும் ரத்தக்காயங்களுமாய்,   எப்போதுமாய் கொட்டிக்கொண்டிருக்கும் பனியும்,  அதில் கால் புதையப்புதைய இருவரும் நாட்கணக்காக நடப்பதுமாய்   வழமையான திரைக்காட்சிகளினின்றும் மிக வேறுபட்ட ஆனால்  அழகுக்காட்சிகள்.

 இவர்களிருவரும் சிக்கிக்கொண்டிருக்கும், முடிவற்றதுபோல தோற்றமளிக்கும் பனிமலையையல்ல இக்கதையும் அதன் தலைப்பும் பேசுவது,  அது ஒரு குறியீடுமட்டும்தான், வாழ்வு குறித்தான விழைவுகளும் அச்சங்களும் கவலைகளும் திட்டங்களுமாக இவர்கள் இருவருக்கும் இடையில்  உருவாகியிருந்த மாபெரும்  பனிமலையொன்றினைக்குறித்தும் அது மிக மெல்ல  அவர்களுக்குள் உருவாகும் காதலின் வெம்மையில்   கரைவதையுமே இத்திரைப்படம் பேசுகின்றது.

சில வருடங்களாகவே  சினிமா சுற்றுலா பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. ரஜினி பாறை, குணா குகை, குஷ்பூ குளம், தேவர் மகன் அரண்மனை வீடு, ஜியா ஜலே பாடலுக்கு பிறகு அதிரப்பள்ளி அருவி, குசேலனுக்கு பிறகு ஆலப்புழை, கடலோர கவிதைகளுக்கு பிறகு முட்டம் கடற்கரை என்று சொல்லிக்கொண்டே போகலாம் உதாரணங்களைக் கவனமாக கையாளப்படுகையில் நிலப்பரப்புகாட்சிகளை காட்டும் சினிமாக்கள்  நமது கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியங்களை அடுத்த தலைமுறைக்கு  கொண்டு செல்லவும் உதவுகிறது.இந்தியா கேட்டும், தாஜ்மகாலும்,   சார்மினார் சதுக்கமும் தலைமுறைகளாக நம் நினைவில் நின்றுகொண்டிருக்கிறதல்லவா?

பல்வேறு வகையான நிலப்பரப்பு மற்றும் வாழ்விடங்களை கொண்டிருக்கும் இந்தியா திரைப்படம் தயாரிக்கும் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும், சர்வதேச மற்றும் உள்நாட்டு சினிமாக்களை தயாரிப்பதற்கான ஒரு வசீகரமான  இடமாகவும்   இருக்கிறது.  

சினிமாக்கலையுடன் சினிமா அனுபவமும் மாறிக்கொண்டே இருக்கிறது. 70, 80களில் சினிமாவுக்கு செல்லுதல் என்பதே ஒரு பெரிய குடும்ப நிகழ்வாக, கூட்டு அனுபவமாக இருந்தது, அந்த சினிமாஅனுபவம் பலகாலங்களுக்கு நினைக்கப்படும் போற்றப்படும் ஒன்றாகவும் இருந்து. பின்னர் நகரங்களின் மல்டிப்ளெக்ஸுகள் வேறு விதமான அனுபவங்களை அளித்தன. 

கனிணி மயமாக்கல் இப்போது தொடுதிரைகளை நம் விரல்நுனிகளில் உயிர்ப்பித்து சினிமாவை  அந்தரங்க அனுபவமாக வீட்டறைகளுக்குள் கொண்டுவந்து விட்டிருக்கிறது. 

செந்தாழம்பூவில் காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்பது பல வருடங்கள் கழித்தே எனக்கு தெரியவந்திருக்கிறது. ஆனால் சினிமா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பங்களும் அத்துப்படியாயிருக்கும் இந்த தலைமுறையினரை லேசாக நினைத்துவிடக்கூடாது.

பிரம்மாண்ட வெள்ளித்திரை அனுபவம் மீச்சிறு தொடுதிரை அனுபவமாகிவிட்டிருக்கும் இக்காலத்தில் நிலப்பரப்புகளை, இயற்கையின் அம்சங்களை, கலச்சாரங்களை, மரபை சினிமா என்னும் மாபெரும்  சக்திவாய்ந்த ஊடகத்தின் மூலம்  அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பொறுப்பு சினிமாக்காரர்களின் தோளில்தான் இருக்கிறது. 

மாறிக்கொண்டு வரும் உலகை மனதில் கொண்டு  கண்ணியமாகவும் கவனமாகவும்,அதே சமயம் கொண்டாடும்படியும் சினிமாக்கள் உருவாக்கப்படவேண்டி இருக்கிறது.

இந்த கட்டுரையை வாசித்து முடித்ததும் உடனடியாக  ’’நீல நயனங்களில்’’பாடலை யூடூபில் பார்க்கச்செல்பவர்கள் அதற்கு பிழையீடாக மகேஷிண்ட பிரதிகாரத்தின் ’’இடுக்கி’’பாடலையோ அல்லது இக்கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் போதே   நம்மை விட்டுபிரிந்த சரத்பாபுவின் ’’செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றலை’’யோ சேர்த்துப் பார்க்கலாம். 

தாவரங்கள் காத்திருக்கின்றன

கோவிட் தொற்று காலத்தில் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நேரடியாக நடைபெறவில்லை. ஆன்லைன்  என்பதை அப்போதுதான் அறியத் துவங்கி இருந்த மாணவர்கள் தட்டுத்தடுமாறி கல்லூரியில் சேர முயன்று மிகுந்த சிரமங்களுக்கிடையில் கல்லூரிக்கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி கிடைத்த படிப்பில் சேர்ந்தார்கள்

கடந்த இருவருடங்ளுமே மிக குறைந்த அளவில்தான் தாவரவியல் துறைக்கும் பிற அடிப்படை அறிவியல் துறைகளான இயற்பியல் வேதியியல் ஆகியவற்றிற்கும். மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள்.

பள்ளி இறுதியிலும் நேரடி வகுப்புகள் நடந்திராதலால் இங்கு வந்து சேர்ந்த மாணவர்களுக்கு எந்த அடிப்படை கல்வியறிவும்  ஒழுக்கம் குறித்த உணர்வும் இல்லையென்பது வருந்தத்தக்க விஷயம் என்றால் அதை காட்டிலும் அதிர்ச்சியளித்தது ஆன்லைன் தேர்வுகளில் காப்பி அடித்து பழக்கம் ஆகிவிட்டிருக்கும் அவர்களுக்கு முறையான தேர்வெழுதும் பயிற்சிகளை அளிப்பதில் இருந்த சிக்கல்கள் தான். பெற்றோர்களுக்கும் அப்படி  அவரவர் குழந்தைகள் காப்பியடித்து  தேர்வெழுதியது பெரும்பாலும் தெரிந்திருந்தும் எவரும் கண்டித்திருக்கவில்லை என்பதால் ஆசிரியர்கள் அவர்களை திருத்தி சரியான வழிக்கு கொண்டு வர  திணறிக் கொண்டிருக்கிறோம்.

இந்த வருட மாணவர் சேர்க்கை வழக்கம் போல நேரடியாக கடந்த ஒருவாரமாக நடந்தது. கோவிட் காலத்துக்கு பிறகு பட்டிதொட்டிகளிலெல்லாம் கம்ப்யூட்டர் என்னும் சொல் புழங்கி அனைவருக்கும் பரிச்சயமாகி விட்டிருக்கிறது மேலும் கணிப்பொறித் துறையில் எப்படியும் அறுபதாயிரத்துக்கு குறையாமல் சம்பளம் வரும் என்பதும் மட்டும் தெரிந்திருக்கிறது

சங்கரன் கையேடு

எனவே அடிப்படை அறிவியல் துறைகளில்  சேர்ந்து பயில மாணவர்கள்  தயாராகவே இல்லை பெற்றோர்களுக்கும் அப்படியான  துறைகள் இருப்பதும் அவற்றின்  முக்கியத்துவமும் தெரியவில்லை. 90 சதவீதம் கணினி அறிவியல் படிப்பைத்தான் நாடுகிறார்கள் அவர்களின் குழந்தைகள் பள்ளி இறுதியில் கணினி அறிவியல் படித்திருக்கவில்லையெனினும் எப்படியும் அந்த படிப்பில் கல்லூரியில் சேர முயற்சிக்கிறார்கள். கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் வேண்டும் என்று அடம் பிடித்த நான் ஒரு மாணவனின் தந்தையிடம் அவர் மகன் பள்ளிப்படிப்பில் கணினி அறிவியல் படித்திருக்காததால் இப்போது அதில் கல்லூரி படிப்பை தொடர முடியாது என்று அரை மணி நேரம் செலவழித்து விளக்கினேன். அவர் பதிலுக்கு ‘’பணம் எத்தனை செலவானாலும் பரவாயில்லை, எப்படியும் கம்ப்யூட்டர் சயின்ஸில் ஒரு சீட் வேணுங்க’’ என்றார்.

தாவரவியல் படிப்பின் முக்கியத்துவத்தை கடந்த  வாரத்தில் பலநூறு பெருக்கு நெஞ்சடைக்க, தொண்ட வரள விளக்கினேன் ஆனால் யாருக்கும் புரியவில்லை வேண்டா வெறுப்பாகவும், மிககுறைந்த மதிப்பெண்  பெற்று வேறெங்கும் இடம் கிடைக்காதவர்களுமாக வெகு  சிலரே இத்துறையில் சேர்ந்திருக்கிறார்கள். இதில்தான் சேர்ந்து படிக்க வேண்டும் என்று இரண்டே இரண்டு மாணவிகள் மட்டும்தான் வந்தார்கள்.

எமிலியின் ஒவியம்

என் மாணவிகள் பலர்  கோவையை சுற்றி இருக்கும் நகரங்களில் காஃபி வாரியத்திலும், இந்திய தாவரவியல் அளவாய்வு  அமைப்பு,  வனமரபியல்  மற்றும் கரும்பு ஆராய்ச்சி நிறுவனங்களில் நல்ல வேலைகளிலும், காட்டிலாகா அதிகாரிகளாகவும், நல்ல ஆராய்ச்சியாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் இருக்கிறார்கள். இனி அப்படியான அமைப்புக்களில் எதிர்காலங்களில் பணியாற்ற எத்தனை பேர் தகுதி கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது கேள்விக்குறிதான்,

கல்லூரிகளில் அடிப்படை அறிவியல் துறைகளின் எதிர்காலம் நிச்சயமற்றுப் போய்க்கொண்டிருக்கிறது. பள்ளிக்கல்வியின் போதே அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு அத்துறைகளின் மேதைகளை பற்றி, முக்கியத்துவத்தை பற்றியெல்லாம் கற்றுத்தரவேண்டும். அப்போதுதான் அப்படியான துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் உண்டாகும். இப்போதைய பெற்றோர்களும் மருத்துவம், பொறியியல் அடுத்தாக கணினி அறிவியல் இவற்றைத் தவிர தங்கள் குழந்தைகளுக்கு  வேறெதிலும் எதிர்காலம் இல்லையென்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இவற்றையெல்லாம் குறித்து கவலைப் பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் மட்டுமல்ல.

J S Gamble 1847-1925 ல் உருவாக்கிய  flora of madras presidency யின்  அனைத்து தொகுப்புகளும் மிக அரிய பொக்கிஷங்கள். கல்லூரியிலும் பல்கலைக்கழகத்திலும் நான் அவற்றை பலமுறை உதவிக்கென எடுத்து வாசித்திருக்கிறேன். அவற்றின் உதவிகொண்டு பல நூறு தாவரங்களை அடையாளம் கண்டிருக்கிறேன், அதைப்போலவே  1817-1911 ல்  Hooker உருவாக்கிய  Flora of British India தொகுப்புக்கள்,  பிலிப், ஃபைசன் 1915 ல்  உருவாக்கிய  பழனி கொடைக்கானல் மற்றும் ஊட்டி மலைப்பகுதிகளில் 6,500 அடி க்கு மேலான உயரத்திலிருக்கும் தாவரங்களை குறித்த அரிய நூலாகிய  flora of Nilgiri and pulny hill tops,   போன்ற நூல்களிலிருந்து பயனடைந்தவர்களே இப்போது இத்துறையில் பணியாற்றும் என்போன்ற ஆயிரக்கணக்கானோர். ஃபைசனின் இந்த நூலத்தொகுப்பு  1975க்குள் 15 பதிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிலிப் ஃபைசனின் நூல்

தமிழ் விக்கியில் இவர்களை குறித்த  பதிவுகள் இருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது.ஒரு பதிவை வாசிக்க துவங்கி ஒன்றிலிருந்து அதன் தொடர்புடைய மற்றொன்று என்று தொடர்ந்து வாசிப்பது பழக்கமாகிவிட்டிருக்கிறது  அனைத்தும் அரிய பதிவுகள்

இந்திய தாவரவியல் கழக (Indian Botanical Society) அமைப்பை உருவாக்கி, நடத்த உதவி, அந்த அமைப்பு சார்ந்து இந்திய தாவரவியல் இதழ் (Journal of the Indian Botanical Society) வெளியிடுவதிலும் முன்முயற்சி எடுத்த. ஃபைசனின்  பல மாணவர்களில் முதன்மையானவர்  மா.கிருஷ்ணன்.   

கிருஷ்ணன் தமிழில் சுற்றுச்சூழல் தொடர்பான படைப்புகளுக்கு முன்னோடி. மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமானவர். இவர் நீர்வண்ண ஓவியங்களை வரையும் பயிற்சியை பிலிப் ஃபைசனின் மனைவி டயானா ரூத் ஃபைசனிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறார். கொடைக்கானலில் ஃபைசனுடன் ஆய்வுக்குச் செல்கையில் புகழ்பெற்ற உயிரியலாளராரும், இந்திய இயற்கையியலின் முன்னோடிகளில் ஒருவருமானஆல்பர்ட் பெளர்ன்   மற்றும்  அவரது மனைவி எமிலி டிரீகிளேஷேர் ஆகியோருடனும் அவருக்கு  தொடர்பு உருவானது.

பௌர்ன்  நீர்வாழ் உயிர்களுக்கும் நீரின் ஆக்ஸிஜன் அளவுக்குமான உறவு பற்றிய முக்கியமான ஆய்வை செய்தவர். ஓவியரான அவர் மனைவி எமிலி இந்தியத் தாவரவியல் ஆய்வாளர்களில் முதல் தலைமுறையைச் சேர்ந்தவர்.ஃபைசனின் flora of kodaikanal நூலில் எமிலியின் தாவரவியல் சித்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.எந்த வசதியும் இல்லாத அந்தக்காலத்தில்   இத்துறையின் மீதான ஈடுபாட்டினாலும் அப்பணிகளின் எதிர்கால முக்கியத்துவத்தை அவர்கள் நன்கு உணர்ந்திருந்ததாலும்  இவற்றை  செய்து முடித்திருக்கிறார்கள் .

நான் இளங்கலை அறிவியல் படித்த அதே துறையில்தான் இப்போது பணிபுரிகிறேன். துறையின் ஆய்வகம் நோய் தொற்றுக் காலத்தில் ஏகத்துக்கும் சேதமடைந்திருந்தது. பல அரிய தாவர சேகரிப்புகள் பூஞ்சைத்தொற்றில் அழிந்திருந்தன. மேலும்  உலர் தாவரங்களில் பலவும் பூச்சி அரித்து வீணாகியிருந்தன. எனவே இரண்டு உதவியாளர்களுடன் பலநாட்கள் செலவழித்து  ஆய்வகத்தை  சமீபத்தில் சுத்தம் செய்தேன்  ஆய்வக அலமாரிகளில் ஒன்றில். மறைந்த என் ஆசிரியரும்  நன்னீரியலில் (Limnology) மிக முக்கியமான ஆய்வுகள்  பலவற்றை  செய்து பல புதிய பாசி வகைகளை கண்டறிந்தவரான திரு சங்கரன் 1972ல் இருந்து 1975 வரை தொடர்ச்சியாக திருமூர்த்திமலை, கொடைக்கானல், வால்பாறை அட்டகட்டி என பல மலைப்பிரெதேசங்களுக்கு பயணித்து அப்பகுதியின் தாவரங்களை பட்டியலிட்ட ஒரு சிறிய நோட்டுப் புத்தகம் குப்பையில்  கிடந்தது.

தான்  பயணித்த  இடங்கள்,  கடல்மட்டத்திலிருந்து அப்பகுதியின் உயரம், நேரம் ஆகியவற்றுடன் 477 தாவரங்களை  பட்டியலிட்டு சிலவற்றை கேள்விக்குறியிட்டும் சிலவற்றை அன்றைக்கு மேலதிகம் தேடி வாசிக்க வேண்டும் என்றும் குறிப்பு எழுதி இருக்கிறார், அவர் அந்த  முக்கியமான ஆய்வை எந்த காரணத்தினால் முடிக்காமல் விட்டிருக்கிறார் என்று  தெரியவில்லை. இந்த பட்டியல் தகவல்களுடன்  மேலும் சில வருட ஆய்வை தொடர்ந்தால் அம்மலைப்பகுதிகளின் flora வை ஃபைசனைப்போல  உருவாக்கிவிடலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தான் இல்லை. பொக்கிஷமாக இதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

ஏன் தாவரவியல் படிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மிக முக்கியமான இது போன்ற ஆய்வுகள் செய்த  ஃபைசன், எமிலி, மா,கிருஷ்ணன்  ஆகியோரின் விக்கி பதிவுகளை வாசித்தால் இத்துறையின் முக்கியத்துவம் புரிந்துவிடும். இவர்களை  தமிழ் விக்கி ஆவணப்படுத்தியது எத்தனை முக்கியம் என்பதுவும் புரியும்

மைத்ரி

அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.

நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த ஜெ அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டி ’வா நேரமாச்சு’ என்றபடியே கடந்து சென்றார். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணா ’இதை பிடிங்க’ என்று என்னிடம்  கைப்பையை  கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்து ’எதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். ஜெ திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்’ என்றதும் ’அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று  சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான்.  (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்

அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.

அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.

ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய  படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்தது.  ஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.

உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .

மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.

முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.

ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.

உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று  ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் என்னையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.

பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள்.  மறக்க முடியாத பயணம் எனக்கும்.

அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள்  கண்ணீர் விடச் செய்தன.

குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களை,  காதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில்  நிழலுருவாக  தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை  மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி  ஜெ தெரிந்தார்.

மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத  பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு  நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும்  அந்த சித்திரம்தான்  கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.

மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல  அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.

கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த  வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த  புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி 

இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.

அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு

நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே –

குருகு இதழில் வெளியான கட்டுரை

பல வருடங்களுக்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தின் மாபெரும் நூலகத்தில்  தியடோர் பாஸ்கரன் அவர்களின் ஆங்கிலக் கட்டுரை ஒன்றை முதன் முதலில் வாசித்தேன். கட்டுரையின் உள்ளடக்கம் இப்போது நினைவிலில்லை, திரைப்பட வரலாறு குறித்ததென்று தேசலாக நினைவு. ஆனால் அவரது அபாரமான மொழிநடையும் உன்னத ஆங்கிலமும் மனதில் பதிந்துவிட்டது.

ஒரு குக்கிராமத்திலிருந்து வந்து பல்கலைக்கழகத்தில் நகரத்து மாணவர்களுக்கிடையில் கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல ஆங்கிலம்  பேசத் தெரியாமல் திணறிக்கொண்டிருந்த காலம் அது. ஆங்கிலம் கற்கவென்றே ஆங்கிலக் கட்டுரைகளையும் நாளிதழ்களையும் தேடி வாசிக்க துவங்கிருந்தேன். அதன்பிறகு அவரது கட்டுரைகளை தேடத் துவங்கினேன் அதிகம் ஆங்கிலமும் ஒரு சில தமிழ் கட்டுரைகளும் பிற்பாடு கிடைத்தன.  அவரது இருமொழிப் புலமை குறித்தான பிரமிப்பு அன்றிலிருந்து இன்று வரை  தொடர்கிறது. அதன்பிறகு முனைவர் பட்ட ஆய்வு, திருமணம் என்று எதையும் வாசிக்க நேரமில்லாத நீண்ட காலம் கடந்துவிட்டிருந்தது.

அவரது தமிழ் கட்டுரைகள் வெகுஜன ஊடகங்களில் அடிக்கடி வரத் தொடங்கிய காலத்தில் நான் கல்லூரியில் பணியாற்ற துவங்கியிருந்தேன். அச்சமயத்தில் அவர் தீவிரமாக தமிழில் பல துறைகள் குறித்து எழுதிக்கொண்டிருந்தார். இன்றைக்கு போல தரச்சான்றிதழ் அந்தஸ்திற்காக மெனக்கெட வேண்டிய காலம் இல்லாததால் வகுப்புகளுக்கான இடைவெளிகளில் அப்போது நூலகத்திற்கு செல்ல நேரம் இருந்தது.

தேடித் தேடி அவரது எழுத்துக்களை வாசிக்க துவங்கியிருந்தேன். ஒரு முறை  இந்து தமிழ் நாளிதழில்  சென்னையின் காணாமல் போகும் நீர் நிலைகளை குறித்து வெளியான அவரது மிகச் சிறப்பான ஒரு  கட்டுரையை குறித்து  அவருக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். மின்னஞ்சல் முகவரியை தவறாக குறிப்பிட்டிருந்ததால் எனக்கே அது திரும்ப வந்து கொண்டிருந்தது. பின்னர் பொறுமையாக சரியாக அதை அவரது முகவரிக்கே forward செய்தேன். மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றதையும் முன்னர் அனுப்பியவற்றில் நான் ஓரெழுத்தை விட்டுவிட்டதால்தான் அவை திரும்பின என்பதையும் குறிப்பிட்டு பதில் அளித்திருந்தார்.

மனைவி திலகா பேரனுடன் பாஸ்கரன்- 2007

மிகச் சிறிய விஷயங்களிலும் கவனமும் கரிசனமும் கொண்டிருப்பவர் அவர் என்பதற்கான சான்று அதுவும். அத்தனை நுண்மையான பார்வை வாழ்வின் மீதும் சூழலின் மீதும் இருப்பதால்தான் அவரது எழுத்துக்கள் அத்தனை வலிமையாக  இருக்கிறது. இந்த நுண்மையான அவதானிப்பு வாழ்வின் எல்லா தளங்களிலுமே அவருக்கு இருக்கிறது. ஒரு புதிய நிலப்பரப்பில் தேநீர் அருந்த போகையிலும் கூட அவருக்கு அருகிலிருந்த மரத்தின் சலசலப்பை கவனிக்க முடிந்திருக்கிறது. அங்கிருந்த அரிய இனமான ஹுலக் வெள்ளைப் புருவக் குரங்கு எனப்படும் வாலில்லா குரங்கை கவனித்து அதை பதிவு செய்கிறார். சூழல் எழுத்தாளர்களுக்கு இருக்கவேண்டிய  மிக முக்கியமான இயல்பு அதுவென்பதை அவரிடமிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம். 

அத்தோடு மட்டுமல்லாது  அந்த அரிய உயிரினம் அஞ்சல் தலையில் இடம்பெற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கிறார். அரசு சில காரணங்களால் அப்போது அக்கோரிக்கையை பரிசீலிக்கவில்லை என்றாலும் இருபது ஆண்டுகள் கழித்து, காட்டுயிர் பாதுகாப்பின் அவசியம் உண்டான பின்னர்  ஓர் அஞ்சல் தலையில் அக்குரங்கு இடம்பெற்றது. அவரது கண்டுபிடிப்புக்களை இயற்கையின் அத்யாவசியமான அம்சங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அக்கறை அவருக்கு எப்போதும் இருக்கிறது.

வாலில்லா குரங்காகட்டும், அரிய ஆர்கிட் மலராகட்டும், கிளிகளாகட்டும், வாழ்வாதாரம் இழந்த இசை வெள்ளாளர்களாகட்டும் அனைத்து உயிர்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் கரிசனமே அவரது எழுத்துக்களில் முதன்மையாக தெரியும். கூடவே சரியில்லாத மொழி மாற்றத்துக்கும், குழப்பமான மொழிநடைக்கும் அவரது கண்டனங்களையும் முன்வைக்கிறார். அவரது கம்பீரமான முரட்டு மீசையும் புன்னகைக்கும் கண்களையும் போல சூழல் சார்ந்த பல கட்டுரைகளில் இருக்கும் கரிசனமும் கண்டிப்புமான இந்தக்கலவையும் இருக்கிறது.   

கொரோனா காலகட்டத்தில் மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார் தியடோர் பாஸ்கரன் அவர்களின் இணைய வழி கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்து. அதன் பிறகு ஜெயமோகன் அவர்கள் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தார். இரண்டிலும் அவர் மிக முக்கியமான சூழல் பாதுகாப்பு குறித்த உரையை வழங்கினார். தமிழக அளவில், இந்திய அளவில் என்று அவரது பிரபல்யத்தை சுருக்கிவிட முடியாது உலகளவில் அவர் ஒரு மிக முக்கியமான பல்துறை பேராளுமை என்பதை அக்கூடுகைகள் உணர்த்தின.

தியடோர் பாஸ்கரன் சுமார் 50 வருடங்களுக்கும் மேலாக தீவிரமாக இயங்கி வரும் துறைகளை கவனித்தாலே பெரும் பிரமிப்பு உண்டாகும். இந்திய திரைப்பட தணிக்கை, திரைப்பட வரலாறு, சூழலியல், காட்டுயிர் பேணல், திரைப்படம், இயற்கை, இந்திய அரசியல் என்று அனைத்துமே வேறுபட்டவை.  இப்போது சூழல் இலக்கியம், பசுமை இலக்கிய படைப்புக்கள் நிறைய இருக்கின்றன என்றாலும் தியடோர் பாஸ்கரன் அவர்களே தமிழ் சூழலிலக்கியத்தின் முன்னோடியும் பிதாமகரும் ஆவார். 

தியடோர் பாஸ்கரனின் தாத்தா தில்லைக்கண் ஒரு இந்து. இளமையிலேயே அவர் வீட்டை விட்டு ஓடிவந்து கரூரில் அலைந்து கொண்டிருக்கையில் ஒரு கிருஸ்துவ பாதிரியாரின் அரவணைப்பு கிடைத்திருக்கிறது. அவரது  பொறுப்பில் இருக்கையில் தான் அவர் கிருஸ்துவராக மதம் மாற்றப்பட்டார். தியடோர் பாஸ்கரனின் தாத்தா ஒரு தமிழறிஞரும் கூட. அவர் பல தமிழ் பாடல்கள் எழுதியிருக்கிறார். தனது 50-வது வயதில் அவற்றை வாசித்த தியடோர் பாஸ்கரன் தன்னை இம்மண்ணின் வேருடன் பிணைத்து வைத்திருப்பது தமிழ்தான், தன் முதன்மை அடையளமாக தமிழன் என்பதையே முன்வைப்பேன் என்கிறார்.

வேட்டையில் விருப்பம் கொண்டிருந்த அவரது தந்தை பிரபல வேட்டைக்காரரும் அமெரிக்க அதிபராக இருந்தவருமான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை தனது மகனுக்கும் வைத்தார். தந்தையுடன் வேட்டைக்கு சென்ற நாளொன்றில் ஆற்றுப்பாறையில் தன்னை நிற்க வைத்துவிட்டு துப்பாக்கியுடன் சற்றுத்தொலைவில் அவரது தந்தை காத்திருக்கையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு உண்டாகி இருக்கிறது. தன்னை கழுத்திலும் துப்பாக்கியை நீர்மட்டதுக்கு மேலும் வைத்துக்கொண்டு தன் தந்தை துணிச்சலாக ஆற்றைக்கடந்ததை தியடோர் பாஸ்கரன் நேர்காணலொன்றில் பகிர்ந்திருந்தார். வேட்டைக்காரரான தியடோர் ரூஸ்வெல்டின் பெயரை மகனுக்கு அவர் வைத்திருந்தால் என்னவோ அவரைப் போலவே இவரும் ஒரு இயற்கை விரும்பி ஆகிவிட்டிருக்கிறார். ஆசிரியர்களான தனது பெற்றோர்களை அந்த நேர்காணலில் நினைவுகூறும் தியடோர் பாஸ்கரன் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள கடுமையாக உழைத்த அவர்களைப்போல தான் எதிர்காலத்தில் அப்படி தேவைகளுக்காக உழைத்து வாழ்வை இழந்து விடக்கூடாது என்று  முடிவு செய்திருந்ததை பகிர்ந்துகொள்கிறார்.

சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் வரலாறு படிக்கையில் ஸ்காட்லாந்தை சேர்ந்த அவரது கணிதப் பேராசிரியர் கிப்பிள் கல்லூரியை சுற்றி இருக்கும் புதர்க்காட்டில் பறவைகளை காணச்செல்கையில் தியடோர் பாஸ்கரனும் உடன் செல்வது வழக்கம். அவரோடு பறவைகளை காத்திருந்து கண்டது, அவற்றின் பல வகைகளை இனம் கண்டுகொண்டது, அவற்றின் வாழிடத்தை அறிந்து கொண்டதுமாக அந்த அனுபவங்களே தன்னை இயற்கையுடன் இணைத்த புள்ளி என்கிறார் தியடோர் பாஸ்கரன். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் அன்றிலிருந்தே விடுதி மாணவர்களுக்கு தனித்தனி அறை என்பதால்  அவருக்கு வாசிக்கவும் எழுதவும் நல்ல சுதந்திரமும் தனிமையும் அங்கு கிடைத்து.

அவரது கல்லூரிக்காலத்தில் ஆங்கிலப் புலமை பெற்றவராக இருந்திருக்கிறார். அவரது கிராமத்திற்கு  ஜான் என்னும் பிரிட்டிஷ் இளைஞர் வந்தபோது, அவருடன் ஆங்கிலம் பேச வேறுயாரும் இல்லாததால் தியடோர் பாஸ்கரன் அவருடன் பேசிப் பழகி நெருக்கமானார். ஜான் தனது சேகரிப்பில் இருந்த ஷேக்ஸ்பியரின் பல படைப்புக்களின் ஒலிநாடாக்களை இவருக்களித்திருக்கிறார். அவற்றை ஆழ்ந்து கவனித்து கேட்ட தியடோர் பாஸ்கரனுக்கு இலக்கியமும் நாடகமும் இசையும் அறிமுகமானது. மேலும்  ஜான் அளித்த பெர்னாட்ஷா, ரஸ்ஸல் ஆகியோரின் நூல்களும் அவரின் ஆளுமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை உண்டாக்கின. அந்த வாசிப்பனுபவம் அவரது வாழ்வு குறித்தான அடிப்படையான தேடல்களுக்கு விடையளிக்கவில்லை எனினும் பல புதிய கதவுகள் அவருக்கு அப்போது திறந்தன. அச்சமயத்தில் இறையுணர்விலிருந்து தியடோர் பெருமளவில் விலகிவிட்டிருந்தார். அந்த கிராமத்தில் இருந்து பெளத்தம் குறித்த நூலை எழுதிக் கொண்டிருந்த ஜான் இப்போதும் நலமாக இருக்கிறார் என்று 2021-ல் தியடோர் பாஸ்கரன் ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்

இவரது பணிச்சூழல்களும் மிக வித்தியாசமானவை. வரலாறு படித்து பட்டம் வாங்கிய இவர் தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக பணி புரிந்தார். அப்போது பல ரகசிய, முக்கிய ஆவணங்கள் அவர் பொறுப்பில் அளிக்கப்பட்டிருந்தது. அவர் அவற்றை சரியாக படித்து, தொகுத்து எழுத வேண்டியிருந்தது. ராமநாதபுரம் திருநெல்வேலி மாவட்டங்கள் தொடர்புடையவைகளும், அங்கு நடந்த விடுதலைப் போராட்டம் சிதம்பரம் பிள்ளை, பாரதியார் ஆகியோரை குறித்தவைகள், ஆஷ்துரை கொலை வழக்கு போன்ற முக்கிய ஆவணங்களை எல்லாம் தியடோர் பாஸ்கரன் தொகுத்து எழுதினார். இரு வருட ஆவணக்காப்பக பணி முக்கிய ஆவணங்களை கையாள்வது தொகுத்தெழுதுவது ஆகியவற்றில் அவருக்கு நல்ல அனுபவத்தை அளித்தது. அந்த அனுபவங்கள் பின்னாட்களில் வரலாற்று பெரும்படைப்புக்களை எழுத அவருக்கு உதவியாக இருந்தன.

பல வருடங்களுக்கு முன்னர் திருச்சியில் (1967) அவர் இருக்கையில் அங்கிருக்கும் ஒரு ஏரிக்கு அரிய வகை பறவையினம் இமாலயத்திலிருந்து வரவிருப்பதாக ஒரு தகவல் கிடைக்கிறது. உடனே அவர் அதிகாலையில் புறப்பட்டு அங்கு செல்கிறார். அங்கிருந்த காவலாளி நடராஜனும் இவரும் அமர்ந்து அங்கு வரும் பறவைகளை அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்கிறார்கள். சற்று நேரத்தில் தொலைவிலிருந்து பறவை கூட்டமொன்றின் முழக்கம் கேட்டிருக்கிறது. அவர்கள் முன்னே பனித்திரையை கிழித்துக்கொண்டு வரித்தலை வாத்துகள் (Bar-headed Goose)  சாம்பல் நிற சிறகுகளை விரித்தபடி மெதுவாக ஏரியில் வந்து இறங்கி இருக்கின்றன. தியடோர் பாஸ்கரனுக்கு அது ஒரு மாயக்காட்சியை போல பரவசமளிக்கிறது. வெகுநேரம் அவற்றை பார்த்துவிட்டு திரும்பிய அவர்  ஏரிகளில் இனப்பெருக்கம் செய்து தெற்காசியாவிற்கு வலசை போகும் அப்பறவைகளை குறித்து வன அலுவலக ஆவணங்களில் தேடி வாசிக்கிறார். பின்னர் முதன் முதலில் 1967-ல் ஹிந்து பத்திரிகைக்கு அப்பறவையை குறித்த கட்டுரையை எழுதி அனுப்புகிறார். சில நாட்களிலேயே அக்கட்டுரை பிரசுரமானது. இக்கட்டுரையுடன் துவங்கி தொடர்ந்து ஹிந்து நாளிதழில் சூழல் இயற்கை காட்டுயிர் பறவைகள் என நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார் தியடோர் பாஸ்கரன்.

மற்றொரு சமயம் அவரது காதல் மனைவி திலகாவுடன் குஜராத்தில்  ஒரு பயணம் மேற்கொண்டிருக்கையில் வழியில் சாரஸ் பறவை இணையொன்றின் அழகிய நடனத்தை பார்த்து அதை புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். குஜராத்தில் அடிக்கடி சண்டையிட்டுக்கொள்ளும் இளம் தம்பதிகளை வாழ்நாளில் ஒரே இணையுடன் வாழ்ந்து மடியும் காதல்பறவைகளான சாரஸ் இணையை காண பெரியவர்கள் அழைத்து செல்லும் வழக்கம் இருந்திருக்கிறது. இந்த  பறவைகளின் நினைவாகத்தான்  சூழலியல் மற்றும் காட்டுயிர் பற்றி தான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை சாரஸின் நடனம் (The Dance of the Sarus) என்னும் பெயரில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தாரால்  வெளியிட்டார்.

குடிமைப் பணியில் தேர்ச்சி பெற்று இந்திய தபால் துறையில் சேர்ந்தார். தபால் துறை பணி அவருக்கு  மிகுந்த நிறைவை அளித்தது. அக்காலகட்டத்தில் பணி நிமித்தம் குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மஹராஷ்ட்ரா, மேகாலயா, டெல்லி என தொடர்ந்து பயணித்தது அங்கிருந்து பலதரப்பட்ட மக்களின் வாழ்வின் இயங்கியலையும் இந்தியாவை குறித்த அறிதலையும் அவருக்கு அளித்தது. அச்சமயத்தில் ராஜீவ்காந்தி வாரம் 6 நாட்கள் வேலை என்பதை 5 வேலைநாட்களாக மாற்றினார். வார இறுதியில் முழுக்க இரண்டு நாட்கள் அவருக்கு விரும்பியவற்றை செய்யவும் பயணிக்கவும் கிடைத்தபோது மேலும் படைப்பாற்றலுடன் செயல்பட்டார். தபால் சேவை ஆட்கள் அதிகம் தேவைப்படும் ஒரு இலாகா, எனவே அப்பணியில் இருக்கையில் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களுடன் தொடர்பு கொண்டிருந்தது, பல கிராமங்களுக்கு பயணித்தும் கிடைத்த நேரங்களில் எழுதியும் வாசித்தும் தனக்குள்ளிருக்கும் ஆளுமையை வெளிக்கொணர முடிந்தது.

தியடோர் பாஸ்கரன் வங்காள இயக்குநர் சித்தானந்த தாஸின் டான்ஸ் ஆஃப் சிவா என்ற ஆவணப்படத்தை குறித்து சிவ தாண்டவம் என்னும் கட்டுரையை கசடதபற இதழில் வெளியிட்டார். அக்கட்டுரைக்கு பிறகே அமெரிக்க வரலாற்று ஆய்வாளரான சார்லஸ் ஏ. ரையர்சன் அவரை தமிழ் திரைப்பட ஆய்வில் ஈடுபடும்படி ஊக்குவித்தார். இரண்டாண்டுகள் பணி விடுப்பு பெற்றுக்கொண்டு திரைப்பட பகுப்பாய்வு வகுப்பில் சேர்ந்து பல திரைத்துறை குறித்த பல விஷயங்களை அப்போது கற்றுக்கொண்டார். அங்கு அவரது ஆசிரியராயிருந்த  பி.கே. நாயர் தியடோர் பாஸ்கரனை புனே தேசிய திரைப்பட ஆவணக் காப்பகத்தின் மேலாண்மைக் குழுவில்  உறுப்பினராக்கினார். அங்கு இரண்டாண்டுகள் பல பழைய திரைப்படங்களை பார்த்த பாஸ்கரன் மீண்டும் தபால் பணியில் சேர்ந்தபோது கல்கத்தாவிற்கு பணிமாறுதல் பெற்றார். கல்கத்தாவிலும் திரைப்பட சங்கத்தில் உறுப்பினரானார்.

இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977-ல் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இக்கட்டுரையையும் மேலும் சில கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு  1981-ல் தி மெசேஜ் பியரர்ஸ் (The Message Bearers) என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தது. தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரிக்கும் பல அரிய தரவுகளை கொண்ட  இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் மிக அரியதும் மிக மிக முக்கியமானதும் கூட. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுகம் செய்த அவருடைய அடுத்த  நூல், தி ஐ ஆஃப் தி செர்பன்ட் (The Eye of the Serpent) சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை பெற்றது. தமிழ் சினிமா வரலாற்றை மிகச்சரியான வடிவத்தில் அடுத்த தலைமுறையினர் முன்னர் கொண்டு வந்து சேர்த்தவர் தியடோர் பாஸ்கரன். ஆங்கிலத்திலும் தமிழிலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல முக்கியமான  புத்தகங்கள் இவர் எழுதியுள்ளார்.

தியடோர் பாஸ்கரன் ஷில்லாங்கில் இருக்கையில் முரசொலி மாறன் ஒரு மாலை அவரை சந்தித்தபோது பொதுவாக சினிமா குறித்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த உரையாடலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் திரைப்படங்களை குறித்த ஆழமான அறிவை அடையாளம் கண்டுகொண்ட முரசொலி மாறன் அவரது வார இதழில் சினிமாவை குறித்து எழுதும்படி கேட்டுக்கொண்டதோல்லாமல் ஒவ்வொரு தொடருக்கும் 1000 ரூபாய்கள் சன்மானம் அளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படித்தான் சினிமா குறித்து இவர் எழுத துவங்கினார்.

ராஜீவ் காந்தியுடன் பாஸ்கரன்-1985

பணி நிமித்தம் மேகாலயாவிலிருந்த போது பங்களாதேஷ் விடுதலைப் போர்ச்சூழலில் தியடோர் பாஸ்கரன் தபால் தந்தி துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் சிறப்பு அதிகாரியாக பொறுப்பேற்றிருந்தார்.  அவருக்கு அப்போது 45 வயது. அப்போது அகர்தலாவில் முன்னணி படைப்பிரிவில் பணி புரிந்தார். அவர்களது  குடியிருப்புகளினருகே தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ள பதுங்கு குழிகள்  அமைக்கப்பட்டிருந்தன. எந்த சூழலிலும் தியடோர் பாஸ்கரன்  படைப்பிரிவுகளின் பல விதங்கள், அவை இயங்கும் விதம் ஆகியவற்றை கற்று கொண்டார் 

தேசிய டிஃபென்ஸ் கல்லூரியில் ஒரு வருட படிப்பை முடித்த அவருக்கு அந்த அமைச்சகத்தின் மூலம் பல உலக நாடுகளுக்கு பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஜெர்மனி, கென்யா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய அரசின் விருந்தாளியாக சென்று அங்கும் பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு நாட்டை குறித்து அறிந்து கொண்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக ஓய்வு பெற்றார். 

பணி ஓய்வு பெற்ற சில மாதங்களில் ரோஜா முத்தையா நூலகத்தில் இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு அளிக்கப்பட்டது.  மூன்று வருடங்கள் அந்த பணியில் இருந்தவர் மீண்டும் தனது  விருப்பத்திற்குகந்த இயற்கையை பேணுதல்,  காட்டுயிர்களை குறித்த கட்டுரைகள் எழுதுதல் ஆகியவற்றை தொடர்ந்தார். தற்பொழுது அந்த நூலகத்தின் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக உள்ள அவர் தனது நூல் சேகரிப்பு முழுவதையும் அந்த நூலகத்துக்கே அளித்துவிட்டார்.  

பாஸ்கரன் புகழ்பெற்ற விலங்கியலாளரான உல்லாஸ் காரந்தின் தி வே ஆஃப் தி டைகர் (The way of the Tiger) என்ற நூலை ”கானுறை வேங்கை” (2006) என்ற தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். சூழல் குறித்த அறிதலை அளிப்பவற்றுள் மிக முக்கியமான நூல் இது. தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து படைப்புகளும் இன்றியமையாதவை எனினும் சூழல் முக்கியத்துவம் கொண்ட ‘சோலை என்னும் வாழிடம், தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புள்ளெல்லாம், கானுறை வேங்கை, மழைக் காலமும் குயில் ஓசையும்’ ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.

அவரது படைப்புகளில் தரவுகள் மிக துல்லியமாக இருக்கும் புள்ளிவிவரங்கள், பெயர்கள், படங்கள் என்று அனைத்தும் மிகச் சரியாக அமைந்திருக்கும். கச்சிதமான வடிவமைப்பும், ஒழுங்கும் கொண்டிருக்கும் கட்டுரைகள் மிக சுவாரஸ்யமாக துவக்கி ஒரு சொல்லோ ஒரு வார்த்தையோ தேவையற்று  இடம்பெறாமல் உருவாகியிருக்கும். பசுமை இலக்கியத்தில் கட்டுரைகளை எழுதும் பயிற்சிகளுக்கு முன்னுதாரணமாக எக்காலத்திலும் சுட்டிக்காட்டப்படும் தகுதி கொண்டவை தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும். 

உயிர்மை இதழில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தியடோர் பாஸ்கரன் அவர்களின் சூழல் குறித்த கட்டுரைகள் வெளிவந்தன. ஒரு சிற்றிதழில் இத்தனை ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஒருவரின் கட்டுரைகள் வருவதிலிருந்தே அவற்றின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள முடியும். அக்கட்டுரைகளின் தொகுப்பே ’கையிலிருக்கும் பூமி’. சில கட்டுரைகளை கவித்துவமாக துவங்கப்பட்டிருக்கும். கிளிகளை பற்றிய  ஒரு  கட்டுரை இப்படி துவங்குகிறது: ”நீலவானப் பின்புலத்தில் பனித்திவலைகள் மிதந்து வருவதைப் போன்ற தோற்றம். இருநோக்கியில் பார்த்தபோது அது வெள்ளை நிறக்கிளிகளின் திரள் என்பது புலப்பட்டது”. 

நீர்நாய்களுக்காக ஆளியாறு அணையருகே காத்திருப்பது, டாப்ஸ்லிப்பில் புதைக்கப்பட்ட ’ஹியூகோ வுட்’ உயிலை தேடி செல்வது, ஒரு  புதிய கிராமத்தில் ஓநாய்களை காண இரவெல்லாம் கயிற்றுக்கட்டிலில் டார்ச் அடித்து பார்த்துக்கொண்டு காத்திருப்பது என்று இயற்கை குறித்த பேரார்வத்தினால் அவர் மேற்கொண்ட பயணங்கள் அனைத்தும் ஆர்வமூட்டுபவை. ஒநாய்களை பார்த்த அனுபவத்தை சொல்லுகையில்  ”அவை உணவின்றி மெலிந்திருக்கும் அல்சேஷன் நாய்களைப் போன்ற தோற்றத்துடன்” இருந்ததாக குறிப்பிடுகிறார். இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் நோய்களை குணமாக்கும் மருந்து எனும் நம்பிகைக்காகவும் கொல்லப்படும் விலங்குகள் குறித்த வருத்தமும் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஆட்கொல்லி புலியை குறித்த பதிவில் அறம் எனப்படுவது குறித்தும், இசை வெள்ளாளர்களின் வாழ்வாதாரம் தேவதாசி ஒழிப்பு சட்டத்தினால் பாதிக்கப்படுவது குறித்துமான தியடோர் பாஸ்கரனின் கருத்துக்கள் கரிசனமன்றி வேறில்லை. ஒரு கட்டுரையில் தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களின் சித்தரிப்பை குறித்த வருத்தத்தை முன்வைக்கிறார். ஓவியக்கலை போன்ற தொன்மையான அழகியல் பாரம்பரியம் அழிந்து போவதை குறித்து கவலைப்படுகிறார்.

சூழியல் தளத்தில் இவர் உருவாக்கிய பல புதிய தமிழ்ச்சொற்கள் தற்போது புழக்கத்தில் இருக்கிறது. மேலும் பல புதிய சொற்களின் தேவை இருக்கிறதென்றும் அவை உருவாக்காப்பட்டால்தான் மொழி வலுப்பெறும் என்று கருதுகிறார். இவர் உருவாக்கும் மூலச்சொற்கள், தமிழ் வழங்குபெயர்கள், சிறந்த மொழியாக்கங்கள் எல்லாம் தமிழ் இலக்கிய உலகில் மிக முக்கியமானவை. ஒரு உரையில் ’தேன்சிட்டுவை’ என்கிறார் நாம் ’தேன்சிட்டை’ என்பது தவறென்று அவர் சரியாக உச்சரிக்கையில் தான் தெரிகிறது. இயற்கையை எழுதுபவர்கள் ஒருபோதும் அரசியலை  தவிர்க்கமுடியாது, எனினும் இவரது கட்டுரைகள் அறிவியல் பூர்வமானவை மட்டுமல்ல அனுபவபூர்வமானவைகளும் கூட. 

மொழியாக்க கட்டுரைகளின் தரம் குறித்து சொல்லுகையில்: ”இயற்கை சார்ந்த நூல் ஒன்றை மொழிபெயர்க்கத் துணிபவருக்குப் புறச்சூழல், மரங்கள், காட்டுயிர் ஆகியவை பற்றிய பட்டறிவு அடிப்படை அளவிலாவது இருக்க வேண்டும். அது மட்டுமல்ல இயற்கை சார்ந்த கருதுகோள்களையும் தெரிந்துகொண்டிருக்க வேண்டும். இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாமல் அத்துறை சார்ந்த நூல்களில் கைவைக்கக் கூடாது.” என்கிறார்.

50-வது பிறந்தநாள், மேகதாட்டு, 1990

சங்க இலக்கிய தாவரங்கள், விலங்குகள் என்று பலர் தங்களது வலைப்பக்கத்திலும் முகநூல் பக்கங்களிலும் எழுதுகின்றனர் அவற்றில் 90 சதவீதம் எந்த கவனமும், உயிரினங்கள் குறித்த அடிப்படை அறிவும் இல்லாமல் எழுதப்படுபவை. பலர் முருக்க மரம் என்பதற்கு கல்யாண முருங்கையின் புகைப்படத்தை பலாச மரத்திற்கு பதிலாக  வைத்திருக்கிறார்கள். கஞ்சக்கொல்லை என்னும் துளசி வகை கஞ்சாச்செடி என்று சொல்லப்பட்டிருக்கிறது பல வலைப்பக்கங்களில். முக்கியமான சூழல் சார்ந்த விஷயத்தை  பிறருக்கு தெரிவிக்கையில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச அக்கறையும் கவனமும் இன்றி எழுதப்படும் கட்டுரைகள் மலிந்து கிடக்கும் இச்சூழலில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் கருத்துக்களும், கட்டுரைகளும் உரைகளும் நூல்களும் மிக முக்கியமானவை. அவரை போல ஆயிரக்கணக்கான மைல் பயணம் செய்வது, நூற்றுக்கணக்கான நூல்களை வாசிப்பது, பல்துறை ஆளுமைகளுடன் நட்பு கொள்வதெல்லாம் செய்ய முடியாவிட்டாலும், அவரது எழுத்துக்களை தொடர்ந்து வாசித்தாலே இதுபோன்ற பிழைகளை தவிர்க்கலாம். 

தியடோர் பாஸ்கரன் அவரது சகோதரரின் மறைவின் போதும் மகளின் காதல் திருமணத்தின் போது தேவாலயங்களும் மதகுருக்களும் காண்பித்த மற்றொரு முகத்தை கண்டு வருந்தினார். அப்போது ஜே. கிருஷ்ணமுர்த்தியின் எழுத்துக்களும் அறிமுகமானதால் தான் அதுவரை சார்ந்திருந்த மதத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். அதன் பிறகு ’’இந்தியாவில் ஒரு கிறிஸ்தவனாக இருப்பது என்பதென்ன’’ என்பதை குறித்த தொடர் கட்டுரைகள் எழுதினார். ஒரு பல்கலைக்கழகம் அந்த கட்டுரைகளுக்காக  அவருக்கு DD எனப்படும் doctrine of divinity என்னும் பட்டம் அளித்து சிறப்பித்தது.  

மா. கிருஷ்ணன், ஜே. கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் தியடோர் பாஸ்கரனின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தியவர் சுவாமி என்னும் ஜென் குரு ஒருவர். இப்போது கொடைக்கானல் மடமொன்றில் இருக்கும் சுவாமியின் பல பயிற்சி வகுப்புகளில் தியடோர் பாஸ்கரன் கலந்து கொண்டிருக்கிறார். ஜென் மதம் தன் அடிப்படை கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை, தன் வாழ்க்கையை பெருமளவில் மாற்றவும் இல்லை எனினும் வாழ்க்கை குறித்த கண்ணோட்டத்தை பெருமளவு மாற்றிவிட்டிருக்கிறது என்கிறார் இவர்.

50 வருடங்களாக கூரிய சூழல் எழுத்துக்களை எழுதி வரும் தியடோர் அவர்கள் சமீபத்திய ஒரு மேடை உரையில் வாசகர்கள் ஆர்வமுடன் வாசிப்பதே தன்னை மேலும் மேலும் எழுத தூண்டுகிறது என்கிறார் மிகுந்த பணிவுடன். அவரது பணி, பணிச்சூழல், பயணங்கள், அவர் எழுத்துக்களுக்கென அளிக்கும் கடும் உழைப்பு, அவரது தோழமைகள், அவரது வாசிப்பு, அவரது இத்தனை ஆண்டு கால அயராத எழுத்துப்பணி உள்ளிட பல பணிகள் ஒவ்வொன்றுமே சாதனைகள்தான். அவரது எழுத்துக்கள் வழியே நாம் காண்பது இயற்கையின் தரிசனத்தை தான்.

தியடோர் பாஸ்கரன் உலகக் காட்டுயிர் நிதியத்தின் இந்தியக் கிளையின் (WWF – India) அறங்காவலர் குழுவில் இடம் பெற்றிருந்த்தார். பெங்களூரு உயர் கல்விக்கான தேசிய ஆய்வுக் கழகத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.  தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கும் தியடோர் பாஸ்கரன். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராகவும் இருந்தார். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் தமிழ் சினிமாவை போதித்திருக்கிறார். இந்தியாவில், சர்வதேச கல்வி நிலையங்களில் முக்கிய தலைப்புக்களில் உரையாற்றியிருக்கிறார். இந்திய  தேசியத் திரைப்பட விருதுகள் தேர்வுக் குழுவில் நடுவராகவும் இருந்தார். 

தற்போது பெங்களூருவின் புறநகர் பகுதியில் இயற்கையின் அமைதியில் எப்போதும் பறவைகளின் குரல் கேட்டுக் கொண்டிருக்கும்  ஒரு வீட்டில் வசிக்கிறார். அன்று  ஏரியில், அமைதியான அதிகாலையில் இமாலயத்தில் இருந்து ஒரு தெய்வம் போல வந்து தியடோர் பாஸ்கரன் முன்பாக தரிசனம் தந்து அவர் அயராது எழுத காரணமாயிருந்த அந்த பறவைகளையும், அவற்றிற்கு பிறந்த, இனி பிறக்கப் போகும் பல தலைமுறைகளையும்  பணிந்து வணங்குகிறேன்.

 

கீரைகளின் அரசி- பரட்டைக்கீரை

நுண்சத்துக்களும் வைட்டமின்களும் நார்ச்சத்தும் நிறைந்து, குறைவான கலோரிகளே உள்ள பச்சைக்கீரைகள் நம் ஆரோக்கிய உணவில் மிக முக்கியமான இடம்பெற்றிருப்பவை. கீரைகளை உணவில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளுவது உடற்பருமனை குறைக்கவும், இதயப்பதுகாப்புக்கும் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் மிகவும் உதவும்

உலகின் சத்து நிறைந்த 100 உணவுகளின் பட்டியலில் முதல் பத்தில் இருக்கும் (Kale) கேல் எனப்படும் கீரை தற்போது உலகின் ஆரோக்கிய உணவுக்கான தேடலில் இருப்போரின் புதிய விருப்பக்கீரையாகி விட்டிருக்கிறது. முட்டைகோஸ். காலி ஃப்ளவர், பச்சைபூக்கோசு ஆகியவற்றின் அதே பிரேஸிக்கேசி குடும்பத்தை சேர்ந்தவை இக்கீரைகளும். இவற்றில் ஊதா, இளம் பச்சை, அடர்பச்சை, சிவப்பு, மண் நிறம், என பல நிறங்களும், இலைகள் சுருண்டவை, நேரானவை, மென்மையானவை என பல வகைகளும் உள்ளது. சுருண்ட கேசம்போன்ற இலைகளின் தோற்றத்தினாலேயே பரட்டைக்கீரை எனப்படுகின்ற இக்கீரை இதில் நிறைந்துள்ள சத்துக்களால் கீரைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது.  

  இதன் பூர்வீகம் ஐரோப்பா கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளாகும். புதராக வளரும் செடிகளின் நடுப்பகுதியில் காணப்படும் இலைகளைத் தவிர்த்து மற்றவை அறுவடை செய்யப்படுகிறது. சுமார் கி.பி நான்காம் நூற்றாண்டிலேயே கிரேக்க நாட்டில் இக்கீரையை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இவை பண்டைய ரோம் பகுதியிலும் அதிகம் காணப்பட்டிருக்கிறது.  இக்கீரையை கனடா நாட்டினருக்கு ரஷிய வணிகர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

19 ஆம் நூற்றாண்டிலேயே  உலகெங்கும் உணவில் அறிமுகபடுத்தும் பொருட்டு இவை சாகுபடி செய்யபட்டதென்றாலும் இப்போதுதான் இவை பெருமளவில் பயன்பாட்டில் இருக்கின்றன

இதன் பலவகைகளில் அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் வகைகளின் தாவர அறிவியல் பெயர்கள்

  • Brassica oleracea ssp. acephala group
  • Brassica oleracea var. sabellica-சுருண்ட இலைகளைக்கொண்டது
  • Brassica oleracea var. palmifolia
  • Brassica oleracea var. ramosa
  • Brassica oleracea var. costata
  • B. napus ssp. napus var. pabularia

உலகெங்கிலும் இப்போது இக்கீரை பரவலாக சந்தைப்படுத்தப்பட்டும் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட்டும் வருகின்றது

அதிகம் சந்தைகளில் கிடைக்கும் பரட்டைக்கீரையின் வகைகள்

  • சுருட்டையான இலைகளுல்லவை
  • அடர்ந்த புதர் போற இலைகளுள்ளவை
  • அகன்ற மிருதுவான இலைப்பரப்புளவை
  •  இறகுபோல அமைப்புள்ளவை

ஒரு கோப்பை பரட்டைக்கீரையில் விட்டமின் K, A, C, B1, B2, B3, B6, கால்சியம் மேங்கனீஸ், மெக்னீஷியம், காப்பர், பொட்டாஸியம், இரும்புச்சத்து, ஆகியவையும், லியூட்டின், பீட்டா கரோட்டின், புரதம் கார்போஹைட்ரேட்டுகளும் லினோலெனிக் அமிலமும் நிறைந்திருகின்றன. ஆண்டி ஆக்ஸிடண்ட்டுகளான  க்யூசெர்டின் மற்றும் கேம்ஃபிராலும் இதில் செறிந்து காணப்படுகின்றது.. ஈரல் செயலிழப்பு,  வைரஸ் தொற்று ஆகியவற்றுக்கு எதிராக இக்கீரை சிறப்பாக செயல்படுகின்றது.சல்ஃபரோபேன் நிறைந்துள்ளதால் இது புற்றுநோயை தடுக்கும்.

இக்கீரையில் ஒரு முழு ஆரஞ்சில் இருப்பதைக்காட்டிலும் அதிகமான் அளவில் வைட்டமின் C இருக்கிறது.  இது HDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்தி, LDL எனபடும் கெட்ட கொழுப்பை பெருமளவில் குறைக்கும். இரத்தம் உறைவதற்கு தேவையான வைட்டமின் K இதில் மிக அதிகம் உள்ளது. இதிலிருக்கும் அதிக மெக்னீஷியம் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது. கண்பார்வை குறைபாட்டை தடுக்கும் லூயிட்டினும் ஜியாஸேந்தினும் இதில் நிறந்து உள்ளன. நீர்ச்சத்தும் மிகுந்திருக்கின்றது

கீரைகளை நீரில் கொதிக்க வைத்து வேகவைக்கும்போது நுண்சத்துக்கள் பெருமளவில் அழிந்துவிடுவதால் நீராவியில் வேக வைத்து சாப்பிடலாம் அப்போது இதன் கொழுப்பை குறைக்கும் தன்மை மிக அதிகமாகிவிடுகிறது. சமைக்காமல் பச்சையாக சாலட்டுகளிலும், மைக்ரோவேவில் சமைத்தும் சாப்பிடுவது இன்னும் சிறப்பான பலன்களை அளிக்கும். 

சமைக்கையில் கெட்டியான தண்டுப்பகுதியையும், நார் நிறைந்து கடினமாக இருக்கும் நடு நரம்பையும் நீக்கிவிடுவது நல்லது

விதைகளிலிருந்து உருவாக்கப்படும் இக்கீரை மிக விரைவாக வளர்ந்துவிடும். உலகின் பல்வேறு நாடுகளிலும் இக்கீரை விரும்பப்பட்டாலும், இந்தியர்கள் கசப்பு சுவையுள்ள கீரைகளை விலக்கும் மனப்பான்மையுள்ளவர்களாகையால் இந்தியாவில் இதன் சாகுபடியும் பயன்பாடும் மிகக்குறைவாகவே இருக்கிறது.

 அமெரிக்காவில் இக்கீரையை அறிமுகப்படுத்திய பெருமை டேவிட் ஃபேர் சைல்ட் (David Fairchild) என்னும் தாவரவியலாளரையே சேரும்., அமெரிக்காவின் கலிஃபோர்னியா, ஜார்ஜியா, நியூ ஜெர்சி மற்றும் டெக்ஸாஸில் சுமார் 7500ஏக்கர்களிலான் பண்ணைகளில் இக்கீரைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. கேலின் உண்ணும் கீரை வகைகளோடு  அலங்காரச்செடி வகைகளும் அமெரிக்காவில் பரவலாக விரும்பப்படுகின்றது கீரைகளை தேர்வு செய்கையில் உறுதியான, உடையும் இலைகளும், ஈரமான நல்ல நிறத்தில் இருக்கும் தண்டும் இருப்பதாக பார்க்கவேண்டும்.

மாமரக்கிளியும் மயிலும் சிவகுமாரும்.

சமீபத்தில் நெடும்பயணமொன்று சென்றிருந்தேன். பயணத்தில் வழக்கம் போல யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கையில்  சுமித்ரா சிவகுமார் டூயட் பாடலான ‘’அடடட மாமரக்கிளியே’’ வும் பார்த்தேன். அந்த பாடல் முன்பே பலமுறை கேட்டிருக்கிறேன் எனினும் காட்சியாக பார்ப்பது அதுவே முதன் முறை.

முந்திரித்தோப்பென்று பின்புலத்தில் இருக்க பின்கொசுவ சேலையை கணுக்கால் தெரிய கவர்ச்சியாக  கட்டிக்கொண்டு ஏராளமான எனர்ஜியுடன் சுமித்ரா துள்ளிக்குதித்து ஆடிவருகையில் சிவக்குமார் ’’எனெக்கென்ன’’ என்னும் பாவனையில் மரத்தடியில் அசுவராஸ்யமாக கல்லைப் பொறுக்கி வீசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். 

பொதுவாகவே சிவகுமார் சாருக்கு காதல் காட்சிகள் டூயட்டுகள் என்றால் எட்டிக்காய்தான்.

காதலை முகத்தில், உடல்மொழியில் காண்பிப்பது என்பது அவருக்கு பெருவலிதான். அதுபோன்ற சமயங்களில் அவர் முகத்தில் பள்ளிக்கு இஷ்டமில்லாமல் புறப்படும் சிறுவனின் அல்லது PMS வேதனையில் இருக்கும் இளம் பெண்ணின் முகபாவனை இருக்கும்.(PMS ன்பொருளை கூகிள் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்).

சரி அவருக்குத்தான் பிரியமில்லையே, இந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்  அவரை விட்டுவிடலாமல்லவா? விடமாட்டார்கள் காதலியுடன் நெருக்கமாக காதலன் இல்லாவிட்டால் அது எப்படி காதல் டூயட் ஆகும்? தமிழ் சினிமாவுக்கென்று ஒரு மரபிருக்கிறதல்லவா? 

நெருக்கமாக போனால் சிவகுமாருக்கு இன்னும் சங்கடம் எனவே அவர் மையமாக காதலியின் கழுத்தோரம் கடிக்கப்போவது போல் பாசாங்கு செய்வார் அதுவே  சிவகுமாரின் அதிகபட்ச நெருக்கக் காட்சி, எனக்கென்னவோ அக்காட்சிகளெல்லாமே  ஆண் வேடமிட்டிருக்கும் வேம்பையர் வவ்வால்கள் இளம் பெண்களை மயக்கி கொஞ்சுவது போல போய் கழுத்தை கடித்து ரத்தம் குடித்துக் கொல்லுமே அதுதான் நினைவுக்கு வரும்,சிவகுமார் சாருக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர் வேம்பையர் பேட்!

சுமித்ரா தண்டை அணிந்த வெறுங்காலில் மணலில் புதையப் புதைய குதித்தாடி வந்து சிவகுமாரை  வம்படியாய் இழுத்துச்செல்கிறார். (தயாரிப்பு சுமித்ராவோ?)

வேறு ஏதோ ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு கிளியை அவுட் ஆஃப் ஃபோகஸில் பார்த்து ’’மாமரக்கிளியே’’ என்று துவக்கத்திலேயே தாவரவியல் தவறு செய்கிறார் சுமித்ரா.

மணலில் ஸ்டெப்ஸ் போடும் கஷ்டத்துடன் கூடுதல் கஷ்டமாக சிவகுமாரையும் இழுத்துச்செல்கிறார் அவரோ கையை  வெடுக்கென்று உதறி விலக்கி தப்பித்து தப்பித்து  வேறு திசையில் போகிறார்.//உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன் மாசக்கணக்கா பூசிக்குளிச்சேன்// என்னும் வரிகளில் மட்டும்  மஞ்சள் தெரிகிறதா என்று சுமித்ராவின் முகத்தை கொஞ்சமாக ஆராய்கிறார். 

‘’கிட்ட வாயேன், தொட்டுப்போயேன், உன்னை நான் தடுக்கலியே தடுக்கலியே ‘’ என்று ஹஸ்கியாக பாடிக்கொண்டே சுமி  அவரை இழுத்து முகத்துக்கருகில் வைத்துக் கொள்ளும் போது ‘’அப்படின்னா’’ என்னும் பாவனையுடன் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அந்த படத்தை பார்க்கவேண்டும். ஏன் இத்தனை காதலை, நேரடியான அழைப்பை இவர் உதாசீனம் செய்து வயிற்றுவலிக்காரரைபோல் உட்கார்ந்திருக்கிறார்?

சுமித்ரா கொஞ்சம் கூடுதல் புஷ்டியாக இருப்பதாலா ? சே சே இருக்காது அப்போதெல்லாம் அதுதானே அழகு தமிழ்சினிமாவில்.

கதையில் அவருக்கு வேலை கிடைக்காத விரக்தியா? கிராமத்து கதைக்களமாச்சே தோப்பும் துரவுமாக இருக்குமிடத்தில் வேலையென்ன அப்படி பிரச்சனை?  

அல்லது சுமித்ராவுக்கு பிளட் கேன்சரா? இல்லியே கமல் சாருக்கு பிளட் கேன்சர் வந்து ஸ்ரீதேவியை மறுக்கும் வாழ்வே மாயத்துக்கு பிறகுதானே தமிழ் சினிமாவுக்கே கேன்சர் வந்தது. இது அதற்கு முந்தினதாச்சே? மேலும் அப்போதுதான்  பிடுங்கின கிழங்கு போலிருக்கும் சுமித்ராவுக்கு கேன்சரா? வாய்ப்பேயில்லை

கடற்கரை லொகேஷனுக்கு மாறி மிகக் கவர்ச்சியான அசைவுகளுடன் ஆடும் சுமியை முற்றாக புறக்கணித்து ஒரு பெரும் பாறைமீது சாய்ந்து தேமேவென்று அமர்ந்திருக்கும் அவரை நோக்கி //அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சி’’ என்று வெட்கம் மேலிட சுமி பாடியதும் சிவகுமார் ‘’அதிர்ந்து என்னது? பரிசமா?போட்டாச்சா’’ என்று  திகைக்கிறார்

என்ன அநியாயக்கொடுமை ஒரு மனுஷனுக்கு இதைக் கூட சொல்ல  மாட்டீங்களா? என்று எனக்கும் கோபமாகத்தான் இருந்தது.

ஆனாலும் அடுத்தகாட்சியில் தமிழ் சினிமாவின் மரபுக்குட்பட்டு வேதனை வழியும் முகத்துடனேயே சுமித்ராவை அணைத்து கொஞ்சம்போல் வாசனை பார்த்துவிட்டு பின்னர் விலகிக்கொள்கிறார் என்னதான் கதாநாயகனுக்கு வேதனை இருக்கட்டும் படம் ஓடனுமே?

அடுத்த ஸ்டேன்சாவிலும் சுமியின் அத்தனை துள்ளலுக்கும் எதிர்வினையேது மில்லாமல் எதிலிருந்தோ தப்பிப்பதை குறித்த தீவிர ஆலோசனை செய்யும் பாவனையிலேயேதான் சிவகுமார் இருக்கிறார்.

கோரியோகிராபி யாரென்று தெரியவில்லை ஒரு சில நளினமான அசைவுகள் சுமித்ராவுக்கு இருந்திருக்கிறது எனினும் அவரது சதைத் திரட்சியை தாண்டி அவை வெளிப்பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.

அந்த சேலைக்கட்டு படம் முழுக்கவேவா அல்லது பாடலுக்கெனெ பிரத்யேக உடையலங்காரமா என்றும் தெரியவில்லை. சிட்டுக்குருவி என்னும் அப்படத்தை அவசியம் இந்த காரணங்களை அறிந்து கொள்ளும் பொருட்டாவது பார்க்க வேண்டும். ராஜாவின் இசை மட்டுமே மாபெரும் ஆறுதல் இப்பாடலில்,

சிவகுமாரின் காதல் கஷ்டங்களுக்கென ’’மயிலே மயிலே உன் தோகை எங்கே’’ பாடலையும் பார்க்கலாம். அதிலும் சுமித்ராதான் இவருடன். துவக்கத்திலேயே நீலத்தில் வெள்ளை பூப்போட்ட சட்டையும் பெல்பாட்டம் பேண்டுமாக மெல்ல அடிமேல் அடிவைத்து இரையை நெருங்கும் உச்சநிலை ஊனுண்ணியைபோல சுமித்ராவை நோக்கி வருவார். எப்படியும் சிவக்குமாரை முத்தம் கொடுக்க சொல்ல முடியாது எனவே நிழல்கள் முத்தமிடுகின்றன. காட்சி மாறி, காதல்பொங்க நின்றிருக்கும் சுமித்ராவை கண்டுகொள்ளாமல் பூத்திருக்கும் தீக்கொன்றைகளில் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மார்ச் பாஸ்ட் செய்வார்.

அடுத்த காட்சியில் டிபிகல் வேம்பையர் கழுத்துக்கடி இருக்கும். பொன்னுமூட்டை தூக்கியும், குடல் வாயில் வரும்படி தலைகீழாக தூக்கிசுற்றியும் சுமித்ராவை ஒருவழிபண்ணி பாடல் முடியும். சுமித்ராவின் மாராப்பை உருவும் காட்சியிலும் எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நடித்திருப்பார். வெள்ளைச்சட்டையில் வருகையில் அப்படியே பருத்திவீரன் கார்த்தி தெரிகிறார். ஜென்ஸியின் குரல் தேனாய் வழியும் பாடல்களில் இதுவுமொன்று

உடையாள், பெருந்தொற்றுக்கால வாசிப்பை குறித்து!

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் நுண்ணுயிர் மற்றும் தாவர அறிவியல் தகவல்களைக்குறித்து நான் எழுதவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். தினமும் 9-4 மணிவரை இருக்கும் ஆன்லைன் வகுப்புக்கள். அதைக்காட்டிலும் அதிகமாக சமயம் எடுத்துக்கொள்ளும் அவற்றிற்கான முன் தயாரிப்புக்கள் என்று நாள் முழுவதுமே இதிலேயே தீர்ந்து போய்விடுகின்றது. உடையாள் காட்டும் மகரந்தசேர்க்கை, விதை முளைத்தல் உள்ளிட்ட பல தாவரஅறிவியல் தகவல்கள், புறக்காரணிகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நுண்ணியிர்களின் வளர்ச்சி போன்ற மிகச்சரியான அறிவியல் தகவல்களை குறித்தெல்லாம் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்

 ஜெ சொல்லி இருப்பது போலவே பசைபோன்ற சுரப்புக்களினால் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு பேக்டீரியாக்கள் திண்டு போல, முடிச்சுபோல கொத்துக்களாக காணப்படு்ம். Stromatolites பாறைகள் எனப்படுபவை மிகச்சரியாக அப்படி பசையினால் பலகோடி வருடங்களுக்கு முன்பு ஒன்றாக திரண்டு அடுக்கடுக்கான பாறைகளைப்போல இறுகியிருக்கும் நீலப்பச்சை பேக்டீரியக்காலனிகள்தான். Stromatolites என்றாலே கிரேக்க மொழியில் அடுக்குப்பாறைகள் என்றுதான் பொருள்

இவற்றிலிருக்கும் பேக்டீரியாக்கள் மற்ற பேக்டீரியாக்களை போலல்லாமல் பச்சையம் கொண்டிருக்கும், சூரியஒளியைக்கொண்டு ஒளிச்சேர்க்கை மூலம் உணவை தாவரங்களைப்போலவே தயாரிக்கவும் செய்யும் (Photosynthetic cyanoBacteria) உடையாளில் சொல்லி இருப்பது போலவே இப்படிமப்பாறைகள் மிக மிகமெதுவாக வளர்ந்திருக்கின்றன, 1 மைக்ரான் தடிமன் வளரவே 2000 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.

மனிதஇனம் தோன்றும் முன்னரே உருவாகியிருந்த இவற்றினால்தான் அப்போது 1 சதவீதம் மட்டுமே இருந்த ஆக்சிஜன் 20 சதவீதமாக அதிகரித்து மனித இனம் உள்ளிட்ட பிற உயிர்கள் தோன்றவும் காரணமாக இருந்திருக்கின்றது. இப்போது இவை பெருமளவில் அழிந்துபோய்விட்டன. இப்படிமப்பாறைகளில் உயிருடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் பேக்டீரியாக்கள் இருப்பவை பஹாமா தீவுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் மட்டும்தான் இருக்கின்றன.

ஆஸ்திரேலியாவின் இந்த படிம பேக்டீரியாப்பாறைகள் இருக்கும் அதி உப்புநீர்நிலையான Hamelin Pool – பகுதி யுனஸ்கோவால் பாரம்பரியச் சின்னமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

இதைப்போலவே biofilms எனபப்டும் பேக்டீரியாக்களின் கூட்டத்தையும் நாம் கண்களால் காணமுடியும். உதாரணமாக அதிவெப்பத்திலும் உயிர்வாழும் thermophilic பேக்டீரியாகள் வெந்நீர் ஊற்றுக்களில் கூட்டம் கூட்டமாக காணப்படும். அமெரிக்காவின் Yellow stone மற்றும் Oregon னின் வெந்நீர் ஊற்றுக்களில் இப்படியான பேக்டீரியாக்களின் காலனிகள் அழுத்தமான மஞ்சள் பச்சை சிவப்பு என பல வண்ணங்களில் நீர்நிலைகளின் அடியிலும், கரைகளிலும் படிந்திருப்பதை பார்க்கலாம்.

உடையாளில் சொல்லி இருப்பதைப்போல ஒரு குறிப்பிட்ட சூழலில் இருக்கும் சத்துக்களை நுண்ணுயிரிகள் எடுத்துக்கொள்ள கையாளும் பல்வேறு வழிமுறைகளை ecological niche என்கிறது அறிவியல்.

ஆய்வகங்களிலும் பெட்ரி தட்டுக்களில் பேக்டீரி்யாக்கள் பல நிறங்களில் பல வடிவங்களில் திட்டுக்கள் போல் கூட்டமாக வளர்வதை சாதாரணமாக பார்க்கலாம்.

ஒளிச்சேர்க்கை செய்யும் திறனுள்ள பேக்டீரியாக்களைப் போலவே தன்னுடலில் இருக்கும் சில குறிப்பிட்ட காந்தத்தன்மையுடைய நுண்சத்துக்களை குட்டி காம்பஸ்களைபோல உபயோகித்து பூமியின் காந்தப்புலனை கண்டறிந்து அதில் போய் அப்பிக்கொள்ளும் magnetic bacteria’க்களும் கூட உள்ளன.

ஜனனி, ஜெனி போன்ற பெயர்களின் பொருளைக்குறித்தும் ஆவலாக வாசித்து குறிப்பெடுத்து வைத்தேன். எனக்கு இதில் தனித்த ஆர்வமுண்டு. சமீபத்தில் தாவரப்பெயர்களின் etymology குறித்தான உரையின் பொருட்டு கிரேக்க லத்தீன் தாவரப்பெயர்களில் மாறாத பொருளுள்ளவற்றை மட்டும், Alba என்றல் வெள்ளை nigrum என்றால் கருமை இப்படி, ஒரு நீண்ட பட்டியலாக தொகுத்து வைத்திருக்கிறேன்.

உடையாளில் ஜெ சொல்லிக்கொண்டு வரும் எல்லாமே நுண்ணுயிரியல் சொல்லும் உண்மைகள்தான். நான் இப்போது Bacteriology மற்றும் Virology பாடங்களைத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டிருக்கிறேன்

ஆய்வகங்களில் பேக்டிரியாக்களை வளர்க்கும் ஊடகத்தை தயாரிப்பதோ அல்லது நுண்ணுயிர்கள் வளரும் Micro environment குறித்தோ சொல்லுகையில் அவை எல்லாமே உடையாளில் இருப்பதை நினைத்துக்கொள்ளுகிறேன். தினமும் இந்த வகுப்பெடுக்கும் முன்பாக இன்னொரு முறை உடையாளை வாசித்துவிடுகிறேன்.

//மரத்தின் இலைகள் மிக அதிகமாக சூரிய ஒளியை பெறும்படி வடிவம் கொண்டவை. மரத்தின் இலைகளில் காற்று மிக அதிகமாகப் படும்// ஆம் இது தாவரவியலின் அற்புதங்களில் ஓன்று.

Phyllotaxy எனப்படும் தண்டுகளின் மீது இலைகள் எப்போதுமே சூரிய ஒளி படும்படியே அமைந்திருக்கும் இலையமைப்பை நான் மாணவர்களுக்கு நேரில் செடிகளை மரங்களை காட்டி கற்றுக்கொடுப்பேன். குப்பை மேனியின் இலையமைப்பை பார்த்தால் அத்தனை அழகாக இருக்கும் இலைக்காம்புகளின் நீளத்தை தேவைக்கேற்ப கூட்டியும் குறைத்தும் ஒரு பச்சைப்பூங்கொத்தைப்போல சூரியனை நோக்கியே எல்லா இலைகளையும் காட்டிக்கொண்டிருக்கும் அது.

பெருகவேண்டும் என்னும் துடிப்பான ’திருஷ்ணை’யை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். வைரஸின் திருஷ்ணையை குறித்து அறிகையில் ஆச்சர்யமாகவும் பயமாகவும் கூட இருக்கிறது. சாதாரண நுண்ணோக்கியால் கூட காணமுடியாத மிகச்சிறிய உயிரி்யான அதன் கொடூர புத்திசாலித்தனம் அச்சமூட்டுகிறது உண்மையில்.

கதையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருக்கும் தாவரங்களையும் விலங்குகளையும் இணைக்கும் கற்பனை வெகு சுவாரஸ்யம். Plantibodies என்பது அப்படியான தாவரங்களிலிருந்து நேரடியாக எதிர்ப்புசக்தியை நாம் பெற்றுக்கொள்ளும் ஒரு முயற்சிதான். ஒரு விறுவிறுப்பான் ஹாலிவுட் திரைப்படம் போலிருக்கிறது உடையாள்.

https://youtube.com/watch?v=EDkR2HIlEbc%3Ffeature%3Doembed

2019ல் வெளியான Fantastic Fungi என்னும் தாவரவியலாளர்களும் இ்ணைந்து தயாரித்திருக்கும் மிக நல்ல படத்தை முடிந்தால் பாருங்கள். பலகோடியாண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்கும் நுண்ணுயிரிகளான பூஞ்சைகளின் உலகை அத்தனை அழகாக காட்டியிருக்கிறார்கள். உடையாள் வாசிப்பவர்கள் இந்தப்படத்தை பார்ப்பது பொருத்தமாக இருக்குமென்று நினைக்கிறேன்.

Symbiont என்பதற்கு ’’ஒத்துயிர்’’ என்பது மிகச்சரியான சொல். மாணவர்களுக்கு இதை சொல்லிவிட்டேன்.

உடையாளைப்பற்றி எழுத இன்னும் ஏராளம் இருக்கின்றது

« Older posts

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑