கனி மரம்

ஆலிவ் மரக்காடுகளுக்குள் சென்றிருக்கிறீர்களா? காற்றில் மண் மணமும், மரங்களினடியில்  குளிர்ந்த நிழலும் கவிந்திருக்கும், வெள்ளியென மினுங்கும் ஆலிவ் இலைகள் உரசும் ஒலி ஒரு நாடன் பாடலைப்போல் காதில் கேட்கும், ஆலிவ் மரங்களை சிறிதளவாவது அறிந்து கொண்டிருப்பவர்களுக்கு, அந்த அனுபவம்,அந்த அற்புத மரங்கள் தோன்றிய கடந்தகாலத்துக்கே அழைத்துச் சென்றுவிடும்

6000 வருடங்களுக்கு முன்பிருந்தே மத்திய தரைக்கடல் பகுதியில் இருந்து வரும் ஆலிவ் மரங்கள், பல சாம்ராஜ்யங்களின், நாகரீகங்களின் எழுச்சிகளையும் வீழ்ச்சிகளையும், பற்பல கலாச்சாரங்களை சேர்ந்த பல கோடி மக்களின் வாழ்வையும் பார்த்து கொண்டிருப்பவை, 

ஆலிவ் மரங்களின் வரலாறு மனித குல வரலாற்றுடன் பின்னிப் பிணைந்திருப்பது. பண்டைய கிரேக்கத்தில் இருந்து ரோமாபுரி வரை, போனிஷியாவிலிருந்து பாலஸ்தீனம் வரை ஆலிவ், சமாதானத்தின் அமைதியின், வளமையின் குறியீடாக இருந்து வருகிறது

 அவற்றின் குறியீட்டு முக்கியத்துவங்களை கடந்தும் ஆலிவ் மரங்கள் அவற்றின் கனிகளால், ஆலிவ் எண்ணெயால் பல கலாச்சாரங்களின் சமையலறைகளில் இன்றியமையாத இடம் கொண்டிருக்கிறது. இன்று குக்கிராமங்களுக்கும் அறிமுகமாகி இருக்கும் பீட்ஸாக்களில் இருப்பது எங்கோ தொலைதூர நாடொன்றில் விளைந்த ஆலிவின் கனிகள் என்பதை எத்தனை இளைஞர்கள் அறிந்து உண்ணுகிறார்கள் ? 

கிரேக்க தொன்மங்களில் ஆலிவ் மரங்கள் அதிகம் பேசப்பட்டிருக்கின்றன அதில் முதன்மையானது எவ்வாறு ஆலிவ் மரங்கள் முதன் முதலில் உருவாகின என்பதுதான். அதனுடன் சேர்ந்தே ஏதென்ஸ் நகரத்துக்கு அப்பெயர் எப்படி வந்ததென்பதும் சொல்லப்பட்டிருக்கும்

மெய்ஞானத்தின் தெய்வமான ஏதினாவுக்கும் கடலின் தெய்வமாகிய பொசைடனுக்கும் நடந்த போட்டியில் உருவானதுதான் ஆலிவ் மரம் என்கிறது கிரேக்க  தொன்மம்.

ஆட்டிக்காவில்  புத்தம் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஒரு நகர் யாருக்கு சொந்தம், யார் அந்நகரின் பாதுகாவல் தெய்வம் என முடிவு செய்வதில் சிக்கல் உண்டாகியது, அந்நகரின் குடியேறவிருக்கும் மக்களின் தீர்ப்பே இறுதி எனவும்,  யார் வெல்கிறார்களோ அவர்களின் பெயராலேயே அந்த நகரும் அழைக்கப்படும் என்றும்  தீர்மானிக்கப்பட்டது. 

ஏதென்ஸ் என அப்போது பெயரிடப்பட்டிருக்காத அப்பெரு நகரம் யாருக்கானது என்னும் போட்டி ஏதீனாவுக்கும் பொஸைடனுக்கும் நடுவே நடந்தது. கிரேக்க கடவுளர்களின்  அரசரான ஜீயஸ் இதை ஏற்பாடு செய்திருந்தார். மன்னர் செக்ராப்ஸின் (Cecrops ) முன்னிலையில் இந்த போட்டி ஏற்பாடானது. 

 அந்நகர மக்களுக்கு அரிய பரிசை அளிப்பவர் யாரோ அவருக்கே அந்த நகரம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. பொஸைடன் தனது திரிசூலத்தை  அக்ரோபொலிஸ் கற்கோட்டையின் பாறை ஒன்றில் வேகமாக ஊன்றி ஒரு பெரும் உப்பு நீரூற்றை உருவாகினார்.  கடலின் தெய்வமாகிய அவர் அந்த உப்பூநிரூற்றை தனது கடலின் சக்தியாக காட்டினார். அவ்வூற்று நீர் பீறிட்டுக்கொண்டு வந்து நிலத்தை ஈரமாக்கியபடி நகரினுள் பாய்ந்தது. ஏதீனா அந்த ஈரநிலத்தில் மண்டியிட்டு ஒரு சிறு நாற்றை  நட்டுவைத்தாள், சில நொடிகளில் அந்நாற்று  வெள்ளியென மினுங்கும் பச்சிலைகளும் கொத்துகொத்தான கனிகளுமாக  அமைதியின், வளமையின்,நம்பிக்கையின் குறியீடான ஒரு ஆலிவ் மரமாக முளைத்து எழுந்தது. மக்களுக்கு உப்புநீரூற்றைவிட ஆலிவ் மரங்களே பிடித்திருந்ததால் அந்நகரம் ஏதினாவுக்கானதாகி அன்றிலிருந்து ஏதென்ஸ் என அழைக்கப்பட்டது. ஏதீனாவே எப்போதைக்குமாக ஏதென்ஸின் தெய்வமாகவும் ஆனாள் .

 இன்று வரையிலும் ஏதென்ஸின் கலாச்சாரத்தில் இரண்டற கலந்திருக்கிறது ஆலிவ் மரங்கள். ஆலிவ் இலைகள் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களின் தலையில் கிரீடமென, ராணுவ தளபதிகளின் தலையில், அரசர்களின் மணிமகுடத்தில் மகுடமென சூட்டப்படுகிறது. ஆலிவ் மரக்கட்டைகள் வீடுகள், படகுகள் செய்யவும் ஆலிவ் எண்ணெய் உணவாகவும், விளக்குகளுக்கு எரிபொருளாகவும் உடலில் தடவிக் கொள்ளவும் பயனாகிறது. ஆலிவ் கனிகள் ஏராளமான உணவுகளில் சேர்க்கப்படுகிறது. பண்டைய ரோமானிய கிரேக்க  நாணயங்களில் ஆலிவ் இலைக் கொத்து பொறிக்கப்பட்டிருந்தது

 அக்ரோபொலிஸ் நகரின் மத்தியில் கோட்டைகளின் இடிபாடுகளுக்கிடையில் ஏதீனாவின் ஆலிவ் மரம்தான் இன்றும் இருக்கிறது என கருதப்படுகிறது,  பலநூறு  ஆண்டுகளாக அங்கேயே இருக்கும் அம்மரம் மிகப்பழமையாகும் போதெல்லாம் அதிலிருந்து ஒரு கிளை எடுக்கப்பட்டு புதிய மரம் அதிலிருந்து அதே இடத்தில் உருவாக்கப்படுகிறது.

 சுமார் 2500 வருடங்களாக அந்த ஆலிவ் மரம் ஏதென்ஸின் வளமை நம்பிக்கை அமைதி மற்றும் உயிர்த்தெழுதலின் குறியீடாக காலத்தை கடந்து நின்றுகொண்டிருக்கிறது. கனிகளும் அளிக்கிறது.

 கிமு 480 ல் பெர்சியன் படையெடுப்பின் போது ஏதென்ஸின் புனித கோட்டை தரைமட்டமாகப்பட்டு அந்த ஆலிவ் மரமும் நெருப்பிட்டு அழிக்கப்பட்டது . அழிந்த அந்த ஆலிவ் மரம் அன்றே மீண்டும் ஒரு அடி உயரம் வளர்ந்ததாகவும் அதிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாக்கப்பட்ட ஆலிவ் மரமே இன்று அதே புனிதமான ஏதீனா ஆலிவ்மரமாக நிற்கிறதென்றும் நம்பப்படுகிறது. பாதகமான சூழலிலும் முளைத்தெழும். அழித்தபின்னரும் உயிர்த்தெழும்   ஏதென்ஸ் மக்களின் இயல்பை குறிக்கும் மரமாக கருதப்படும் அந்த ஆலிவ் மரம்  கடவுளாகவும் வணங்கப்படுகிறது. 

 அந்த ஆலிவ் மரக்கிளைகளிருந்து உருவாக்காப்பட்ட 12 மரங்களும் ஒரு சரணாலயத்தில் வளர்கின்றன அவற்றிற்கு   moriai என்று பெயர். இச்சொல்லிற்கு ’’ஒரு பகுதி’’ என்று பொருள் அதாவது அவை ஏதென்ஸ் அரசின் ஒரு பகுதி, அதற்கு சொந்தமானது என்று பொருள். பண்டைய கிரேக்கத்தில் அம்மரங்கள் ஏதீனாவின் சொத்துக்களாக கருதப்பட்டு பாதுகாக்கப்பட்டன. இன்றும் ஏதென்ஸில் இருக்கும் ஆலிவ் மரங்களனைத்துமே ஏதீனா உருவாக்கிய மரத்தின் சந்ததிகள் என நம்பப்படுகிறது.

கிரேக்கத்தில் ஆலிவ் அறுவடை அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடிவடையும். குடும்பமாக நண்பர்களுடன் சேர்ந்து ஆலிவ் அறுவடை ஒரு கொண்டாட்டமாகவே அங்கு நிகழும். அறுவடை முடிந்த பின்னர் காய்ந்த ஆலிவ் மரக் குச்சிகளில் நெருப்புண்டாக்கி மகிழ்வதும் அங்கு வழக்கம். சில ஆலிவ் தோட்டங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் அந்த அறுவடையில் பங்குகொள்ளும் வாய்ப்பளிக்கிறார்கள். அவர்களே பறித்த ஆலிவ் கனிகளிலிருந்து , எண்ணெய் எடுத்து, கையோடு சில பாட்டில் ஆலிவ் எண்ணெயும் வீட்டுக்கு எடுத்து செல்லும் அந்த அனுபவத்துக்கு சுற்றுலாப் பயணிகள் போட்டி போடுகிறார்கள்.   

வரலாறு

இத்தாலியில் கிடைத்த ஆலிவின் புதைபடிவ எச்சங்கள் இவை 40 மில்லியன் வருடங்களுக்கு முன்பிருந்தே பூமியில் இருந்ததற்கான சான்றளிக்கின்றன

.கிரேக்க கோவில்களின் தீபங்களிலும் , ஒலிம்பிக் தீபத்திலும் ஆலிவ் எண்ணெயே உபயோகப்படுத்தப்பட்டது.

பிளைனி, ஹோரேஸ் மற்றும் தியோஃப்ராஸ்டஸ் ஆகியோரும் ஆலிவ் மரங்களை அவர்களின் நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள்

கிரேக்கத்தில் ஹோமரின் காலத்திலிருந்தே ஆலிவ் எண்ணெய் உடலில் தேய்த்து கொள்ளப்  பயன்பட்டது. கிமு 600களில் ரோமானியர்களின் முக்கிய பயிராக ஆலிவ் இருந்திருக்கிறது. ஆலிவ்களை  சித்தரிக்கும்  பல நூற்றாண்டுகளுக்கு முன்பான ஓவியங்கள் அகழ்வாய்வில்  கிடைத்திருக்கின்றன

விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் முதன் முதலில் குறிப்பிடப் பட்டிருக்கும் மரம் ஆலிவ் தான்.ஜெருசேலத்தின் ஆலிவ் மலைக்குன்றுகள் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

கிறிஸ்தவ தொன்மம் ஒன்று ஏசு கிறிஸ்துவின் சிலுவை ஆலிவ் மரங்களில் செய்யபபட்டதென்றும்  அதன்பிறகே குற்றவுணர்வில் அவை நிமிர்ந்து வளர்வதில்லை என்கிறது.

திருக்குரானில் ஆலிவ் மரங்களும் கனிகளும் எண்ணெயும் 7 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

முகமம்து நபி அவர்கள் புனிதமரமான ஆலிவின் எண்ணெயை தேய்த்து குளிப்பதை குறித்து சொல்லி இருக்கிறார். பல நாடுகளில் ரமலான் நோன்பில் பேரீச்சைகளுக்கு பதிலாக ஆலிவ் கனிகள் உண்ணப்படுகின்றன.

சாலமன் அரசர் உலகின் அனைத்து உயிரினங்களின் மொழியுமறிந்தவர். அனைத்துயிர்களின் பேரிலும் பேரன்பு கொண்டிருந்தவர், அவர் உயிரிழந்தபோது அனைத்து விலங்கு,பறவை, பூச்சி இனங்களும் கண்ணீர் விட்டழுதன ,உலகத்தின் மரங்களெல்லாம் இலைகளை கண்ணீரை போல் உதிர்த்து துக்கத்தை காட்டின.  ஆனால் ஆலிவ் மரங்கள் மட்டும் இலை உதிர்க்கவில்லை, பிற மரங்கள் அதை நன்றி கெட்ட மரமென்று ஏசின, அப்போது ஆலிவ் மரம் ’’சாலமன் அரசரின் மீதுள்ள எனதன்பை நான் இலைகளை உதிர்த்தல்ல ஏராளமான கனிகளை அளித்தே காட்டுவேன்’’ என்று சொல்லியதாம் இப்படி சிரிய நாட்டுப்புறக் கதைகளிலும் ஆலிவ் மரம் இருக்கிறது.

மற்றொரு ஆலிவ் தொன்மம் சிறுவனாயிருந்த ஹெர்குலிஸ் ஒரு சிங்கத்தை ஆலிவ் மரக்கட்டையால் அடித்து கொன்றான் என்கிறது

பொ யு 3700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என கணிக்கப்பட்ட, உறைந்த கிரேக்க எரிமலை குழம்புகளிலிருந்து  கிடைத்த ஒரு ஆலிவ் இலையில் நோய் உண்டாகி இருந்த வெள்ளை ஈ யும் படிவமாயிருந்தது. அதே வெள்ளை ஈயான  whitefly Aleurobus olivinus என்பது இன்றும் ஆலிவ் மரங்களில் அரிதாக உண்டாகும் நோய்க்கு காரணமாக இருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடரும் இந்த ’’தாவர – பூச்சி பரிணாம- இணை’’  அறிவியலில் மிக முக்கியமாக கவனிக்கப்படும் ஒன்று.

ஒடிஸியில், குரானில், விவிலியத்திலென பல முக்கிய இலக்கிய படைப்புகளில் தொன்று தொட்டு இடம்பெற்றிருக்கும் ஒரு கனிமரம் ஆலிவ்.

அமைதி, வளமை, செல்வம், வெற்றி ஆகியவற்றின் குறியீடாக, புனித மரமாக,  பல நாகரீகங்களில் இருந்து, இன்றும் அதே பொருளில் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் ஒரு மரம் ஆலிவ்.

 நோவாவின் படகுக்கு திரும்பிய புறா வாயில் கொண்டு வந்த ஆலிவ் சிறுகிளைதான் பூமியில் வாழ்வதற்கான சாத்தியத்தை அறிவித்தது.

  1782   ல் வெளியிடபட்ட அமெரிக்காவின் முதல் அதிகார பூர்வமான அரசு முத்திரையில் ஒரு கழுகு தன் கால்களில் ஆலிவின் சிறுகிளையை பற்றியிருக்கும் சித்திரம் அமைதியின் வலிமையை குறிப்பிட சித்தரிக்கபட்டது.

 1946ல் உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் கொடியில் உலக வரைபடத்தில் இருபுறமும் ஆலிவ் கிளைகள் இருக்கின்றன.

மத்திய தரைக்கடல் பகுதி உணவுகளின் ‘Triad’’  எனப்படும் மூன்று’  முக்கிய இடுபொருட்களில் ரொட்டிக்கான கோதுமை, வைன் தயாரிப்புக்கான திராட்சைகளுடன் மூன்றாவதாக ஆலிவ் இருக்கின்றது..

பரவல்

.கிமு 16 ஆம் நூற்றாண்டில் பீனிசியர்கள் கிரேக்க தீவுகள் முழுவதும் ஆலிவ் சாகுபடியை தொடங்கினர், பின்னர் கிமு 14 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கிரேக்க நிலப்பகுதிக்கு ஆலிவை அவர்கள் அறிமுகப்படுத்தினர், அங்கு அதன் சாகுபடி வெகுவாக.அதிகரித்தது . 

கிமு 4 ஆம் நூற்றாண்டில்  (கிரேக்க நாட்டின்) ஏதென்சின் அரசியல்வாதியும், சட்ட நிபுணரும், கவிஞரும்  நெருக்கடியான மற்றும் குழப்பமான நிலையில் இருந்த ஏதென்சில் சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் பல மாற்றங்கள் செய்தவருமான  சோலோன் ஆலிவ் நடவு ஒழுங்குமுறை ஆணையை வெளியிட்டபோது உலகெங்கிலுமே ஆலிவ் சாகுபடி பெரும் முக்கியத்துவம் பெற்றது.  கிமு 6ம் நூற்ரண்டில்  சிசிலி வழியாக இத்தாலிக்கு நுழைந்த ஆலிவ்கள் பின்னர் உலகெங்கிலும் பரவின.

2007ல்தான் இண்டியாவில் ஆலிவ் வளர்ப்பு தொடங்கியது. முதன் முதலில் ராஜஸ்தான்  தார் பாலை நிலங்களில் ஆலிவ் சாகுபடியாகப்பட்டது.  

தமிழில் இடலி மரமென்றும்,  விரலிக்காய் எனவும் அழைக்கப்படும் ஆலிவ் இந்தியாவின் பல மாநிலங்களில் வளர்கிறது எனினும் இந்தியாவில் ஆலிவ் மிக குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது

தாவரவியல்

ஐரோப்பிய ஆலிவ் என்று பொருள்படும்  Olea europaea என்னும் அறிவியல் பெயர் கொண்ட ஆலிவ் ஒருபசுமை மாறா குறுமரம் மற்றும் புதர் வகையைச் சேர்ந்தது. மல்லிகைப்பூவின் குடும்பமான ஓலியேசீ குடும்பத்தை சேர்ந்த இவற்றின் புதர் வகைகள் ஆங்கிலத்தில்  Olea europaea ‘Montra’, dwarf olive, அல்லது  little olive. என அழைக்கப்படுகின்றன

3 லிருந்து 12 மீ உயரம் வரை வளரும் இவை  ஏராளமான கிளைகள் கொண்டிருக்கும்.  எதிரெதிராக அமைந்திருக்கும் ஜோடி இலைகளின் மேற்பரப்பு அடர் பச்சையிலும் அடிப்பரப்பு வெள்ளிபோல மினுக்கமும் கொண்டிருக்கும். இதன் மரக்கட்டை மிகவும் உறுதியானது. மரத்தின் மேல் பாகம் பழமையாகி இற்றுப்போய்  மடிந்தால் வேர்களிலிருந்து மீண்டும் ஒரு புதிய மரம் உருவாகி வளரும்.

 ஆலிவ் மரங்கள் 4 வருடங்களில் மலர்களும் கனிகளும் அளிக்கத் துவங்குகின்றன. வசந்த காலத்தில் இலைக் கோணங்களிலிருந்து  சிறு வெண்மலர்களின் தளர்வான மலர் கொத்துக்கள் உருவாகும். மாமரங்களை போலவே ஆலிவ் மரங்களிலும் கனிகளை அளிக்கும் இருபால் மலர்களும், வெறும் மகரந்தங்களை மட்டும் கொண்டிருக்கும் ஆண்மலர்களும் ஒரே மஞ்சரியில் அமைந்திருக்கும் (Polygamous inflorescence). ஆலிவ் மலர்களின் மகரந்தம்  மனிதர்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கும்.

காற்றினால் மகரந்த சேர்க்கை நடைபெறும் இம்மரங்கள் பொதுவாக  ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் கனியளிக்கும், சில மரங்கள் வருடா வருடம் கனியளிப்பதும் உண்டு. கனிகள் பீச், பிளம், மா போல ட்ரூப் வகையை சேர்ந்தவை, கனிகளின் மத்தியில் கடினமான உறைகொண்ட இருவிதைகள் இருக்கும்

பச்சை நிறத்தில் இருக்கும் கனி முதிர்கையில் கரிய நிறம் கொள்ளும் விதைகளில்  30- 40 % எண்ணெய் அடங்கி இருக்கும். சுமார் 7 கிலோ கனிகளிலிருந்து 1 லிட்டர் ஆலிவ் எண்ணெய் கிடைக்கும் 

ஆலிவ்கள்  விதைகள் மூலம் இனப்பெருக்கம்  செய்வதில்லை, இவற்றில் தண்டுகள், வேர்கள் அல்லது இலைகள் மூலமே இனப்பெருக்கமும் சாகுபடியும் நடைபெறுகிறது.

ஆலிவ்களில் ஆயிரக்கணக்கான கலப்பின வகைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன, பொதுவில் உண்ணக்கூடிய கனிகள்  “table olives’’ எனப்படுகின்றன. உண்ணும் கனிகளுக்கெனவும் எண்ணெய்க்கெனவும் பிரத்யேக வகைகள் வளர்க்கப்படுகின்றன

உலகின் மொத்த ஆலிவ் உற்பத்தியில் 80% எண்ணெய் தயாரிப்பிலும், 20 சதவீதம் மட்டுமே உண்ணும் கனிகளுக்காகவும் பயன்படுகின்றன.

இதன் பல கலப்பின வகைகளில் இருப்பதிலேயே பெரிய ஆலிவ் மரம் டாங்கி ஆலிவ்  (“donkey olive” ) என்றும் ஆகச்சிறிய ஆலிவ்  மரம் புல்லட் மரம்  ( “bullet”) என்றும் பெயர் கொண்டிருக்கிறது.

 ஆலிவ் மரங்கள் கடற்கரையில் செழித்து வளர்பவை எனினும் இவை பாறை குன்றுகளிலும் வறள் நிலப்பகுதிகளிலும் நன்கு வளரும், அதிக காற்றையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது ஆலிவ். 

கனிகளின்  வகைகள்

சர்வதேச ஆலிவ் சபையான  International Olive Council (IOC)  உண்ணக்கூடிய ஆலிவ்களை  மூன்றாக வகைப்படுத்தி இருக்கிறது

  1. முற்றிலும் பழுத்திருக்காத கொஞ்சம் மஞ்சள் நிறம் கொண்டிருக்கும்  கசப்பு சுவை கொண்ட பச்சை ஆலிவ்கள்
  2. சிவப்பும் பழுப்பும் பச்சையும் கொண்டிருக்கும் பாதி பழுத்த ஆலிவ்கள்

     3. நன்கு கனிந்த கருப்பு ஆலிவ்கள்

கனிந்த ஆலிவின் கசப்பை நீக்க மரச்சாம்பலிலிருந்து கிடைக்கும் ‘’லெ’’ (lye) எனும் வேதிப்பொருள் உலகெங்கும் உபயோகிக்கப்படுகிறது.

ஆலிவ்களின் கசப்புக்கு காரணமான oleuropein என்னும் வேதிப்பொருளை  நீக்க உப்பு நீரில் அவை  நனைக்கப்பட்டு நொதிக்கச்செய்யாப்படுகிறது.  இதை அறிந்துதான் ஏதீனா உப்பூ நீரூற்றின் அருகே ஆலிவ் மரத்தை  உருவாக்கி இருக்கிறாள் போலிருக்கிறது.

இந்த ஆலிவ் நொதித்தல் உலகின் பலநாடுகளில் பலவிதமான முறைகளில் நிகழ்கிறது.

கனிகள் பலமுறை அழுத்தப்பட்டு சாறெடுத்தும், வேதிபொருட்கள் கலக்கப்பட்டும் ஆலிவ் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. உலகெங்கிலும் ஆண்டுத்தோறும் 3 மில்லியன் டன் எண்ணெய் தயாரிக்கப்படுகிறது 

உலகின் மிக அதிகம் விளைவிக்கப்படும் கனிகளில் ஆப்பிள், வாழை, மா இவற்றுடன் ஆலிவ்களும் இருக்கின்றன. உலகில் எண்ணெய்க்காக சாகுபடி செய்யப்பட்ட கனிகளில் மிகபழமையாதும் ஆலிவ்தான். 7000 வருடங்களுக்கு முன்னர் மத்தியதரைக்கடல் பகுதியில் ஆலிவ் சாகுபடி  செய்யப்பட்டு எண்னெய் பிழிந்து எடுக்கபப்ட்டதற்கான சான்றுகள் உள்ளன  

ஆயில்-Oil  என்னும் ஆங்கிலச் சொல்லின் வேர் இந்த ஆலிவ் என்னும் சொல்லிலிருந்தே வந்தன.  உலகின் மிக அதிகமாக சுவைத்து மகிழப்படும் கனியும் ஆலிவ்தான்,  

 ஆலிவ் மரங்களும் கற்பக விருட்சங்கள் தான் அவற்றில் பயனற்றவை என எந்தப் பகுதியும் இல்லை. கனிகள் உண்ணத்தகுந்தவை, கனிகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உலகெங்கிலும் பலவிதமான பயன்பாட்டில் இருக்கிறது. 

கரிய ஆலிவ் கனிகளில் செம்பு இரும்பு உள்ளிட்ட பல சத்துக்களும் ஓலியிக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்திருக்கிறது.. எனினும் நன்கு பழுக்காத ஆலிவ் காய்களை உண்ணுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். 

 ஆலிவ் எண்ணெய் அழகு சாதன  பொருட்கள் தயாரிப்பிலும் வெகுவாக பயன்படுகிறது. ஆலிவின் மரக்கட்டைகள்  மரச்சாமான்கள் செய்ய பயன்படுகிறது. ஆலிவ் கனிகளும் எண்ணெயும் ஏராளமான மருத்துவ பலன்களும் கொண்டிருக்கின்றன.

 கிரேக்க ஆலிவ் எண்ணெய் உலகின் முதல் தரமானது ஆனால் உலகின் முன்னணி ஆலிவ் எண்ணெய் உற்பத்தியாளராக இருப்பது ஸ்பெயின், இரண்டாவது இத்தாலி பின்னரே கிரேக்கம்.

புகழ்பெற்ற ஒரு ஆலிவ் மரம்

 இத்தாலிய மரபுகள், இயற்கை காட்சிகள்,, வரலாறு, கலைப் பாரம்பரியம், மீயுயர் பண்பாட்டில் தாக்கம் ஆகியவற்றிற்காக பெரிதும் அறியப்படுகின்ற டுஸ்கான்  (Tuscany ) பிரதேசத்தில்  15 ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாலயமான  சாண்டிஸிமா (Santissima Annunziata) வின் பின்புறம்    3500 வருட பழமையான Olivo della Strega, என்னும் பெயர் கொண்ட ஆலிவ் மரமொன்று கடந்த கால தொன்மங்களின் நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது. இதுவே உலகின் மிக பழமையான உயிருள்ள ஆவணமென்று கருதப்படுகிறது. ஐரோப்பாவின் மிக பழமையான மரமும் இதுதான்.

மரத்தண்டும் கிளைகளும்   திருகிக் கொண்டிருக்கும் இந்த சூனியக்காரிகளின் ஆலிவ் மரம் என்று பெயர் கொண்ட மரத்திற்கு பின்னால் ஒரு மர்மம் கலந்த தொன்மம் இருக்கிறது.  

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு  பாகன் பழங்குடியினரின் கொண்டாட்டங்களின் ஓரிரவில் சூனியக்காரிகளும் பாதி குதிரை- பாதி மனிதன், பாதி மனிதன்- பாதி ஆடு என்னும் உடலமைப்பு கொண்டிருக்கும் உயிரினங்களும் இம் மரத்தின் கீழ் கூடி மகிழ்வார்கள். அவர்களில் மிக சக்திவாய்ந்த சூனியக்காரி என்று தேர்வு செய்யப்படுபவள் அன்றிரவு முழுக்க அம்மரத்தின் முன்னால் நடனம் ஆடுவது வழக்கம். நடனத்தின் உச்சத்தில் அம்மரத்தில் உறையும் தீய ஆவிகள் எழும்பி உடன் நடனமாடும், விடியும்போது நடனத்தில் ஈடுபட்ட  சூனியக்காரி ஒளிரும் கண்கள் கொண்ட ஒரு மாபெரும் பூனையாக  உருமாறி அம்மரத்துக்கு அடுத்த வருடம் வரை காவலிருப்பாள் என்கிறது அத்தொன்மம்.

 உபகதையொன்று அந்த மரக்கிளைகளில் அமர்ந்திருந்த ஒரு ராபின் பறவையை நோக்கி கல்லெறிந்த ஒரு சிறுவனை  காவலிருந்த சூனியக்காரி ஆலிவ் கனிகளை வீசியெறிந்து துரத்தினாள் என்கிறது. இக்கதையை கேட்காத இத்தாலிய சிறுவர்களே இல்லை எனலாம். 

சூனியக்காரிகள் ஆலிவ் மரத்தினருகில் கூட்டமாக நடனமிட்டு ஆவிகளை எழுப்பும் சித்திரம் அந்நாட்டு கலாச்சாரத்துடன் இணைந்து தலைமுறைகளாக மக்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறது

 இத்தாலியின் பண்டைய கலாசாரத்தின் நீட்சியாக இன்றும் அங்கு நின்றிருக்கும் இம்மரத்தின் கார்பன் ஆய்வுகள் இவை 3500 வருடத்திற்கு முற்பட்டவை என்றும் இன்னும் 90 வருடங்களில், இம்மரம் உயிரிழக்கும் எனவும் தெரிவிக்கின்றது.   இப்போதும் சிறுகிளையொன்றில் சில ஆலிவ் கனிகளை வருடம்தோறும் அளிக்கும் இம்மரம் இத்தாலியின் புகழ்மிக்க சொத்தாக கருதப்படுகிறது. இத்தாலிய சுற்றுலாவின் மிக முக்கிய பகுதியாகவும் இது விளங்குகிறது. 

9 மீ சுற்றளவும் 10 மீ உயரமும் கொண்டிருக்கும் 3500 ஆண்டு பழமையான தெற்கு நோக்கிய இம்மரமும் அதனுடன் இணைந்து வளர்ந்திருக்கும் அதன் அடிப்பாகத்திலிருந்து தோன்றிய 200 வருட பழமையான ஒரு புதிய மரமுமாக இணைந்து திருகி நிற்கும் இந்த மரத்தை சுற்றிலும் வேலியிட்டு அரசு பாதுகாத்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் சிறந்த ஆலிவ் எண்ணெய் தயாரிப்பிற்கு இம்மரத்தின் பெயரால் ஒரு விருதும் அளிக்கப்பட்டு வருகிறது.

ஆலிவ் மரங்கள் சாதாரணமாக 500- 600  வருடங்கள் உயிர் வாழும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளை தாண்டி வாழ்ந்து இன்னும் கனியளித்துக்கொண்டிருக்கும் பல ஆலிவ் மரங்களும் உலகெங்கிலும் உள்ளன.

கிரேக்கத்தில் ஆலிவ் அருங்காட்சியகமொன்றும் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான  பல ஆலிவ் மரங்கள் இருக்கும் காட்டினருகில் அமைந்திருக்கிறது. அங்கு ஆலிவ் மரக்காட்டு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுகிறது, ஆலிவ் மரங்களை எப்படி வளர்ப்பது, பாதுகாப்பது, அவற்றிலிருந்து மதிப்பு கூட்டிய பொருட்களை தயாரிப்பது ஆகியவையும், ஆலிவ் மரங்களுடன் இணைந்த கிரேக்க கலாச்சரா அம்சங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் அங்கு வருகிறார்கள்.

உலகெங்கிலும் எப்படி வைன் சுவைத்தல் என்பது ஒரு சடங்காக கொண்டாட்டமாக ஆகிவிட்டிருக்கிறதோ அப்படி கிரேக்கத்திலும் இத்தாலி மற்றும் ஸ்பெயினியில் ஆலிவ் எண்ணெய் சுவைத்தலும்  விமரிசையாக நடக்கிறது.பல நாகரீகங்களின் கலாச்சாரத்துடன் பிணைந்திருக்கும் திராட்சைக்கனியின் எதிர்த்தரப்பென்றால் அது நிச்சயம் ஆலிவ்தான்.  

ஆலிவ் கனி, எண்ணெய் மற்றும் சிறு கிளை ஆகியவை பல பண்பாடுகளின் குறியீடாக அமைந்திருக்கின்றன. நட்புறுதிக்கென நண்பர்கள் உலகெங்கிலும் கைமாற்றிக் கொள்வதும் ஆலிவ் கிளைகளைத்தான். மனிதர்களின் சரும நிறத்தில் ஒரு வகை ஆலிவ் நிறம் எனப்படுகிறது

பப்பாயி என்னும் புகழ்பெற்ற கார்டூன் கதாநாயகனின் மனைவியின் பெயர் ஆலிவ் ஆயில் என்பது அதை சிறுவயதில் பார்த்தவர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும்

 ஸ்பெயினின் புகழ்பெற்ற  கால்பந்தாட்ட  நிர்வாகியும், பிரீமியர் லீக் அர்சினால் குழுவின் தற்போதைய நிர்வாகியுமான மைக்கேல் அர்டேட், குழுவினருடன் நடக்கும் ஒவ்வொரு முக்கிய கூடுகைகளுகும் ஒரு சிறு ஆலிவ் மரக்கன்றை  அவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பொருட்டு எடுத்துச்செல்வதாக சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.150 வருடங்கள் பழமையான  போன்ஸாய் மரமான அதை தன் குழுவின் குறியீடாக காட்டுகிறார் அவர்

2015 ன் ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ் பாண்டான டேனியல் கிரெய்க் தனது வழக்கமான பானத்துக்கு மாற்றாக ஆலிவ் கனிகள் அலங்கரிக்கும் மார்டினி அருந்துவதை கவனித்தீர்களா யாரேனும்?

 வரலாற்றின் பக்கங்களில் இடம்பெற்றிருப்பது  மட்டுமல்ல நம் ஆரோக்கியத்தின் மகிழ்ச்சியின் கலாச்சாரத்தின் அங்கமாகவும் ஆகிவிட்டிருக்கும் ஆலிவ்களை குறித்து  உலகமொழிகளில் பல அழகிய கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன, பெரும்பாலும் பிரிவுத்துயரை சொல்லி மீண்டும் சந்திக்கையில் ஆலிவ் மரங்களினடியில் முத்தமிட்டுக்கொள்வதை குறித்தானவைகளாக இருக்கும்.  

இனி எப்போதேனும் ஆலிவ் காடுகளுக்குள் செல்ல நேர்ந்தால் அவற்றின் காலம் கடந்த அழகை ஆராதிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள், அவை கடந்து வந்திருக்கும் காலத்தை, அவற்றை பேணிப்பாதுகாத்த நம் முன்னோர்களின் தலைமுறைகளை எண்ணிப்பாருங்கள். ஆலிவ் கனிகளின் வாசனையையும் சுவையையும் அனுபவியுங்கள். அதன் மூலம் இயற்கைக்கும், கலாச்சாரங்களுக்கும் மனிதனுக்குமான பிரிக்க முடியாத தொடர்பையும் நீங்கள் உணரலாம்