
மமானியை தேடி பொலிவிய வனக்காவலர்கள் காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். அயலவர் ஒருவருக்கு மமானி உதவுவதை வெறுத்த இன்கா இனத்தின் இளைஞர்கள் அவனை காவலர்களுக்கு காட்டிக் கொடுத்திருந்தார்கள்.
அதை அறியாத மமானி தனக்குள்ளேயே பேசிக்கொண்டு காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான். அவன் அதிர்ஷ்டத்தின் மீது அவனுக்கு சில வருடங்களாகவே அவநம்பிக்கை வந்துவிட்டது. மரப்பட்டைகளையும் விதைகளையும் சேகரிப்பது அவன் குலத்தொழிலாக இருந்தும் இத்தனை வருடங்களாக அவன் எஜமானுக்கு தேவையான அந்த மரத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அம்மரத்தை நன்றாகவே அடையாளம் தெரியும். இலைகளின் அடிப்புறம் சிவப்பாகவும் மேற்புறம் பளபளக்கும் பச்சை நிறத்திலும் இருக்கும். அவற்றின் பட்டை மிக கசக்கும் அதைத்தான் எஜமானர் சார்லஸ் லெட்ஜரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். கசக்கும் பட்டையை கொண்டிருக்கும் குயினா என்றழைக்கப்படும் எல்லா மரங்களும் ஒன்று போலவே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகளும், கனத்த மரப்பட்டையும் கொண்டிருக்கும் ஒன்றைத்தான் அவன் தேடிக்கொண்டிருந்தான்.
ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.
காட்டின் உயரமான ஒரு குன்றின் மீதிருந்து உரக்க கத்தி்னான் மமானி. ‘’அபூ, எங்கள் மலைத் தெய்வமே! உனக்குப் பிரியமான கொக்கோ இலைகளையும் சோளத்தையும் எத்தனை முறை படைத்து வழிபட்டேன்? நீ நிறைவுறவில்லையா? நான் துரதிர்ஷ்டக்காரன் தானா ? எஜமான் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துவிடப் போகிறதா?
கோன்! காற்றுக்கும் மழைக்குமான தெய்வமான நீயுமா என் மீது இரங்கவில்லை? உனக்கும் பல நூறு பிராரத்தனைப் பாடல்களை பாடினேனே! எத்தனை கரிய பறவைகளை உனக்கென பலி கொடுத்தேன்? எத்தனை தலைமுறைகளாக நாங்கள் பட்டை சேகரிக்கிறோம்? ஏன் இப்போது கனியமாட்டேனென்கிறீர்கள்?’’
’’ சரி நான் காத்திருக்கிறேன் நீங்கள் இறங்கி வருவீர்கள் என்று எனக்கு தெரியும். இது எனக்கான காலம். 22 வருடங்களாக என் நான்கு மகன்களை கூட பார்க்காமல் எஜமானருடன்தானே இந்த காட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கு பலனில்லாமல் போகாது. எத்தனையோ மக்களின் உயிரைக் காப்பாற்றத்தானே இதை தேடுகிறேன் என்று உனக்கு தெரியாமலா இருக்கும்? என் அபூ! எஜமானர் சார்லஸ்க்கு எத்தனையோ விதைகளையும், பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்து தந்திருக்கிறேன், இந்த ஒன்றை மட்டும் ஏன் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறாய்?’’
மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.
அவன் உள்ளுணர்வு சொன்னது சரிதான் அவன் அந்த மரத்தை பார்த்தே விட்டான். ஒரு மலைச்சரிவில் மலர்ந்து நின்றிருந்தது அது. குழல் போல சிவப்பில் மலர்கொத்துக்களும், கனத்த பட்டையுமாக அங்கே நிற்பது அதேதான்,
மலைத்தெய்வங்களே! மனமிரங்கி விட்டீர்கள் என்று கூவியபடி கண்ணீருடன் மமானி அங்கே சென்றபோது மரத்தடியில் ஏராளமான விதைகளும் சிதறிக் கிடந்தன. காட்டின் மறுபுறத்திலிருந்து அங்கு வந்து கொண்டிருக்கும் அவன் எஜமானர் அத்தனை வருடங்களாக இதைத்தான் தேடினார். விதைகளை சேகரித்து மண்ணில் பிசைந்து பல உருண்டைகளாக உருட்டி தண்டுகள் சூலாயுதம் போல கிளைத்திருக்கும் தாரா மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்து விட்டு மமானி சார்ல்ஸுக்கு கொடுத்த சங்கேத குரல் சார்ல்ஸ் லெட்ஜெருக்கும் அங்கே காவலிருந்த பொலிவியா காவலர்களுக்கும் ஒரே சமயத்தில் கேட்டது.
மமானிக்கு நினைவு அடிக்கடி தப்பிக்கொண்டே இருந்தது நினைவு வரும் போதெல்லாம் வலியும் தெரிந்தது. நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் கண்ணில் வழிந்து யார் அடிக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. உயிரே போனாலும் எஜமானரின் பெயரை சொல்லப்போவதில்லை என்பதில் மமானி உறுதியாக இருந்தான்.
எத்தனை நாளாயிருக்கும் காட்டில் பிடிபட்டு இங்கே வந்து என்றும் அவனுக்கு நினைவில் இல்லை. எஜமானருக்கு அந்த விதைகளை கொடுப்பதற்குள் பிடித்துவிட்டார்களே என்பதுதான் அவனுக்கு வருத்தம், ஆனால் தாரா மரப்பொந்துக்குள் இருப்பவற்றை அவர் நிச்சயம் எடுத்துக்கொள்வார் என்று நம்பிக்கை இருந்தது.
பெரு மற்றும் அதன் அண்டை நாடுகளில் வளரும் சின்கோனா மரங்களின் பட்டைகளையும் விதைகளையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது.
மலேரியா சிகிச்சைக்காக பல நாடுகளில் இருந்தும் அவற்றை திருடிச் செல்ல பலர் அக்காட்டுக்குள் ஊடுருவுவதால் அங்கு பலத்த காவல் இருந்தது. மமானி யாருக்கு உதவி செய்தான் என்பதை அறியத்தான் அவனை காவலர்கள் சித்திரவதை செய்தனர். ஆனால் 20 நாட்களாக அடித்தும் மமானியிடமிருந்து எந்த விவரமும் கிடைக்கவில்லை.
குகைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மமானியால் நடக்க முடியவில்லை. உடலெங்கும் எலும்பு முறிவும், ரத்தக்காயங்களுமாக மெல்ல தவழந்து தன் வீட்டை நோக்கி நகர முயன்ற மமானியின் கண்கள் குருதியிழப்பால் உயிரிழக்குமுன்னர் கடைசியாக ஒருமுறை தாரா மரம் இருக்கும் திசையை பார்த்தன.
1818 ல் லண்டனில் பிறந்த சார்லஸ் லெட்ஜர், அல்பாகாவின் ரோம விற்பனையின் பொருட்டு தனது 18வது வயதில் (1836ல்) பெருவிற்கு சென்றார் .1852 ல் ஆஸ்திரேலியாவில் அல்பாகாக்களை அறிமுகம் செய்ய அவர் சிட்னிக்கு பயணித்தார். அப்போது அல்பாகாக்களை பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல சட்டப்படி தடை இருந்தது. இருந்தும் தென்னமெரிக்காவிற்கு திரும்பிய லெட்ஜர் பல நூறு அல்பாகாக்களை பெருவின் பழங்குடியினரின் உதவியுடன் சிட்னிக்கு 1859 ல் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு அல்பாகா வர்த்தகம் செழிப்பாக நடந்தது.
1864ல் தென்னமரிக்கா திரும்பிய அவர் அப்போது பலரும் ஈடுபட்டிருந்த சின்கோனா பட்டைகளை தேடும் முயற்சியில் கவனம் செலுத்தினார். முன்பே நெருக்கமாக இருந்த மானுவல் இன்க்ரா மமானி (Manuel Incra Mamani) என்னும் பொலிவிய பட்டை மற்றும் விதை வேட்டையாடும் (காஸ்கரில்லெரோ) இன்கா பழங்குடியின பணியாளுடன் பொலிவியா மற்றும் அதன் அருகிலிருந்த காடுகளில் சின்கோனா விதைகளையும் பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்துக்கொண்டிருந்தார்.

அந்த தேடுதல் வேட்டையில் பிறரால் நுழைய முடியாத அடர் காட்டுப்பகுதிகளுக்குள் பல சிரமங்களுக்கிடையே அவர்கள் இருவரும் பயணித்து சின்கோனா விதைகளை சேகரித்தனர்
லெட்ஜரிடம் 1843 லிருந்து பணியாற்றிய மமானி சின்கோனாவின் 29 வகைகளை ஏராளமான ஆபத்துகளுக்கிடையில் கண்டறிந்தார். அயலவருக்கு உதவி செய்ததற்காக தன் இனத்தவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட மமானி யாருக்கு உதவி செய்தேன் என்று கடைசி வரை தெரிவிக்காததால் 1871 ல் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
மமானியின் இறப்பால் மனமுடைந்த லெட்ஜர் பிற்பாடு மமானியின் குடும்பத்தின் பொருளாதார தேவை உள்ளிட்ட முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார். மமானிக்கும் லெட்ஜருக்கும் மட்டும் தெரிந்த ரகசிய இடத்தில் சேர்த்து வைத்திருந்த சின்கோனா விதைகளை லண்டனில் இருக்கும் தனது சகோதரர் ஜார்ஜுக்கு அனுப்பி வைத்தார்.
ஜார்ஜ் அளித்த சின்கோனா விதைகளில் பிரிட்டிஷ் அரசு அத்தனை ஆர்வம் காட்டாததால் மீதமிருந்த விதைகளை டச்சு அரசிடம் கையளித்தார் ஜார்ஜ்.
டச்சுக்காரர்களுக்கு விதைகளின் அருமை தெரிந்ததால் அவற்றை பாதுகாத்து, விதைத்து மரங்களாக்கினர். இம்மரங்கள் பின்னர் லெட்ஜரின் பெயராலேயே Cinchona ledgeriana என்றழைக்கப்பட்டன. இவை 8 லிருந்து 13 சதவீதம் குயினைனை அளித்தன.
மலேரியா
மலேரியா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பழமையான நோய். மாசடைந்த காற்றினால் உருவாகும் காய்ச்சல் என துவக்க காலத்தில் கருதப்பட்டதால்’’அசுத்தமான காற்று’’ எனப்பொருள்படும் இத்தாலிய சொல்லால் இந்நோய் ’மலேரியா’ என அழைக்கப்பட்டது (“bad air” -mal’ aria).
அறிவியலாளர்கள் 30 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கல்மரப்பிசினில் (amber) பாதுகாக்கப்பட்டிருந்த, கொசுக்களில் மலேரியா ஒட்டுண்ணிகளை கண்டறிந்திருக்கிறார்கள்.
மலேரியா பிளாஸ்மோடியம் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, இந்த ஒட்டுண்ணியை கொண்டிருக்கும் பெண் அனோபிலஸ் கொசு மனிதர்களை கடிக்கும் போது நோய் அவர்களையும் பாதிக்கிறது. நோயுற்ற மனிதர்களின் உடலினுள் ஒட்டுண்ணி கல்லீரல் மற்றும் இரத்த சிவப்பணுக்களில் பெருகி காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
பல நூற்றாண்டுகளாக ரோமானிய நகரங்களின் செல்வந்தர்கள் மலேரியா தாக்கும் பருவத்தில் குளிர்ந்த காலநிலை கொண்ட பிரதேசங்களுக்கு சென்று நோயிலிருந்து தப்பினர். ஏழைகள் நோய்த்தொற்றினால் காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் பாதிக்கப்பட்டனர்,ரோமாபுரி 17 ம் நூற்றாண்டின் மலேரியாவின் தலைமைப் பிரதேசமாக இருந்தது.
அக்காலங்களில் மருத்துவர்கள் மலேரியா சிகிச்சைகளாக நோயாளிகளுக்கு மண்டையோட்டில் துளையிடுதல், (trepanning,) குருதி நீக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புக்களை வெட்டி அகற்றுவது ஆகியவற்றுடன் ஆர்டிமிசியா, பெல்லடோனா ஆகிய மருந்துகளையும் பயன்படுத்தினர்
ஆண்டு முழுவதும் மலேரியா ஒட்டுண்ணி செழித்து வளர்ந்த ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி மக்களுக்கு மலேரியா ஒட்டுண்ணியிடமிருந்து பாதுகாக்கும் இரத்த சிவப்பணு பிறழ்வு நோயான, அரிவாள் செல் இரத்த சோகை உருவானது., இந்த பிறழ்வு நோய், அவர்களை மலேரியாவிலிருந்து பாதுகாத்தாலும் அதுவும் ஒரு முக்கிய நோயாக இருந்தது
டச்சு, போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர்கள் மலேரிய ஒட்டுண்ணிக்கும், உடலை வெகுவாக பலவீனப்படுத்தும் காய்ச்சலுக்கும் எதிரான நோய்த்தடுப்பு இல்லாதவர்களாதலால் மலேரியாவின் பேரழிவை அஞ்சி பல தசாப்தங்களாக ஐரோப்பியப் படைகளை ஆப்பிரிக்காவின் உட்புறத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தனர்.
ஆனால் மத்திய அமெரிக்காவில் ஸ்பெயின் படையெடுப்பாளர்களுடன் வந்த, இத்தாலிய பாதிரியார்கள் மலேரியா கொசுக்களைக் கொண்டு வந்து, அமேசோனிய படுகை மற்றும் ஆண்டிஸ் மலைப்பகுதிகளுக்கு நோயை அறிமுகப்படுத்தினர். அப்போதுதான், இன்கா பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் குய்னா-குய்னா அல்லது , காஸ்காரில்லா என்றழைக்கப்பட்ட பெருவியன் மரத்தின் பட்டைத்தூளை பயன்படுத்துவது தெரிய வந்தது அதுவே சின்கோனா மரப்பட்டை.
1860 களில் ஒன்றிணைந்த இத்தாலியின் முதல் பிரதமர் மலேரியாவில் 1861ல் உயிரிழந்த போதும் மலேரியா நோய் குறித்த அறிதல் மிக குறைவாகவே அங்கு இருந்து.
1878 ல் இத்தாலியின் மாபெரும் ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்த 2,200 பணியாளர்களில் 1455 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் இத்தாலி மலேரியாவின் தீவிரத்தை முதன் முதலாக அறிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை தொடங்கியது
1880 வரை மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணி கண்டறிய பட்டிருக்கவில்லை 1880ல் தான் பிரெஞ்ச் மருத்துவர் அல்ஃபோன்ஸ் (Alphonse Laveran) நோயாளியின் ரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணியை கண்டறிந்தார்
நாடு தழுவிய மலேரியா கட்டுப்பாடு மற்றும் கண்டறிதல் பரிசோதனைகள் பின்னர் வேகமாக நடந்து, முடிவில் இத்தாலியின் 8362 குடியிருப்பு பிரதேசங்களில் 3075 பகுதிகள் மலேரியாவினால் பீடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.
பெருவின் பழங்குடியினர் காய்ச்சலுக்கு பயன்படுத்தும் சின்கோனா மரப்பட்டைகளை குறித்து உலகம் அப்போது அறியத் துவங்கி இருந்ததால், இத்தாலி முழுவீச்சில் சின்கோனா மரப்பட்டைளை உபயோகப்படுத்தி மலேரியாவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை தொடங்கியது
19 ம் நூற்றாண்டில் மருத்துவர்கள் மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குருதி நீக்க சிகிச்சையை பயன்படுத்தியதால் ரத்தசோகையினால் நோயாளிகள் மிகவும் பலவீனமடைந்தார்கள். பலருக்கு உடல் உறுப்புக்கள் அகற்றப்படவேண்டி இருந்து. ஒரு சிலரே மலேரியாவுக்கு குயினைனை பயன்படுத்தினர். ஆனால் அதன் பக்க விளைவுகள் அதிகமென்பதால் ராணுவ மருத்துவர்கள் யான் ஆன்றி ஆண்டனி மற்றும் ஃப்ரான்கோயிஸ் ஆகியோர் (Jean Andre Antonini மற்றும் Francois Clement Maillot) காய்ச்சலுக்கு குயினைனை பயன்படுத்தக்கூடாது என்று வெகுவாக எதிர்த்தனர் . எனினும் குயினைனின் பயன்பாடு மலரியா காய்ச்சலை போலவே பெருகிக்கொண்டேதான் இருந்தது.
1840 களின் மத்தியில் தங்க கடற்கரையின் ஐரோப்பியர்கள் குயினைன் மாத்திரைப்புட்டியை படுக்கை அருகில் வைத்திருப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அக்காலங்களில் மலேரியா இறப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன்பிறகு பிரிட்டிஷ் ராணுவத்திலும் குயினைன் பயன்பாடு துவங்கியது.
1947 ல் அமெரிக்காவில் தொடங்கிய மலேரியா கட்டுப்பாட்டு முயற்சி 1950 வரை முழுமூச்சாக நடைபெற்று , 1951 ல் மலேரியா அமெரிக்காவில் முற்றிலும் ஒழிக்கப்பட்டது
2018ல் உலகெங்கும் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 405,000 ஆக இருந்தது. இதில் 67% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். தவிர்க்க முடிந்த நோயான மலேரியாவில் இத்தனை ஆயிரம் மக்கள் இறந்தது வேதனைக்குரியதுதான் என்றாலும் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான மரண எண்ணிக்கைதான்.
2019 ன் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை 2010ல் இருந்த 251 மில்லியன் மலேரிய நோயாளிகளைக் காட்டிலும் 2018 ல் குறைவாக 228 மில்லியன் மட்டும் இருந்ததை சுட்டிக்காட்டியது. தற்போது உலகின், 2.9% சதவீதத்தினர் மலேரியாவினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.
சின்கோனாவின் வரலாறு
ஸ்பெயினின் மருத்துவரும் தாவரவியலாளருமான நிக்கோலஸ் (Nicolás Monardes) 1574ல் மரப்பட்டைப்பொடி ஒன்றின் காய்ச்சல் குணமாக்கும் பண்புகளை எழுதி வெளியிட்டிருந்தார் .மற்றொரு மருத்துவரான ஜுவான் (Juan Fragoso) அடையாளம் காண முடியாத ஒரு மரத்தின் பட்டைப் பொடி பல நோய்களை தீர்ப்பதாக 1600களில் குறிப்பிட்டிருந்தார்.
1638ல் இரண்டு நாணயங்களின் அளவிற்கு உருட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட தென்னமரிக்காவின் Loja பகுதியை சேர்ந்த மரமொன்றின் பட்டைப் பொடி நீரில் கலந்து குடிக்கையில் காய்ச்சலை குணமாக்குவதைக் குறித்து ஃப்ரே (Fray Antonio de La Calancha என்பவர் குறிப்பிட்டிருந்தார்
ஆனால் சின்கோனாவைப் பொறுத்தவரை முதல் விஞ்ஞானிகளாக கருதப்படுபவர்கள் 16 ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இயேசு சபையின் உறுப்பினர்களான Jesuits என்றழைக்கப்பட்ட அருட்பணியாளர்கள் தான். இவர்கள் அனைத்து கண்டங்களிலும் இறைப்பணியுடன் மருத்துவப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர். மனித குலத்துக்கு உபயோகப்படும் சாத்தியங்கள் கொண்ட எதுவாகினும் சோதித்து, சேகரித்து உலகின் பல பாகங்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்தார்கள் அவர்களால் கிடைக்கப் பெற்றவைகள் தான் டோலு என்னும் இருமல் நிவாரணி, நன்னாரி டானிக் மற்றும் கோகோ இலைகள்,
தென்னமரிக்க பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க அருந்திய மரப்பட்டைச்சாற்றை குறித்து கேள்விப்பட்ட Jesuits அவற்றை தேடி பயணித்தனர். பெரு, பொலிவியா பகுதிகளின் கெச்சுவா (Quechua) பழங்குடியினரால் ஒரு மரப்பட்டைச்சாறு தசை தளர்வுக்கும் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டது. மரப்பட்டையை பொடித்து இனிப்பு நீரில் அதை கலந்து கசப்பை குறைத்து அவர்கள் அருந்தினார்கள் அம்மரத்தை அவர்கள் காய்ச்சல் மரமென்று அழைத்தனர்.
வெனிசுவேலாவிலிருந்து பொலிவியா வரை பரவியிருந்த ஆண்டிஸ் மலைத்தொடரில் செறிந்து வளர்ந்திருந்த பசுமை மாறா அம்மரங்களின் விதைகளையும் பட்டைகளையும் பட்டைச்சாற்றையும் ஐரோப்பாவில் அருட்பணியாளர்கள் 1640களில் அறிமுகப்படுத்தினர்.
மெக்ஸிகோ மற்றும் பெருவின் நிலப்பரப்புகளில் ஆய்வுகளை செய்த கிருத்துவ போதகர் பார்னெபி (Barnabé de Cobo -1582–1657),தான் ஐரோப்பாவிற்கு சின்கோனா பட்டையை அறிமுகம் செய்தவர். பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து ஸ்பெயினுக்கும் பின்னர் ரோம் மற்றும் இத்தாலியின் பிற பாகங்களுக்கும் இவரே 1632 ல் சின்கோனாவை அறிமுகம் செய்தார் .1650களில் ஸ்பெயினுக்கு தொடர்ந்து சின்கோன மரப்படைகள் கப்பல்களில் அனுப்பி வைக்கபட்டுக்கொண்டிருந்தன.
இந்த அருட்பணியாளர்கள் 1640 ல் ஐரோப்பாவெங்கும் காய்ச்சல் மரத்தின் பட்டைப் பொடி வர்த்தகத்துக்கான வழிகளை உருவாக்கியதால். 1681ல் மலேரியாவிற்கான சிகிச்சையளிக்கும் மருத்துவ மரப்பட்டையாக சின்கோனா உலகெங்கும் அறியப்பட்டது.
1653ல் இத்தாலிய தாவரவியலாளர் பியட்ரோ (Pietro Castelli) மருத்துவம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கைப்பட எழுதி வெளியிட்ட நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுப் பிரசுரங்களில் ஒன்றில் சின்கோனா மரத்தைக் குறித்தும் மலேரியாவுக்கு எதிரான அதன் செயல்பாட்டையும் எழுதியிருந்தார். இதுவே சின்கோனா மரத்தைக்குறித்த முதல் இத்தாலிய ஆவணம்.
1677ல் பெருவியன் மருத்துவப் பொடி என்னும் பெயரில் சின்கோனா மரப்பட்டை பொடி அதிகாரபூர்வமாக லண்டன் பார்மகோபியாவில் (London Pharmacopoeia) “Cortex Peruanus” என்னும் பெயரில் பிரசுரமானது
Myroxylon peruiferum என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட பெருவியன் பால்ஸம் என்னும் மற்றொரு பிசின் மரத்தின் பட்டைகளும் சின்கோனாவின் பட்டைகளுடன் கலப்படம் செய்யப்பட்டது. அம்மரப்பட்டைக்கும் காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ பண்புகள் இருந்ததால் அம்மரமும் லண்டன் பார்மகோப்பியாவில் 1677ல் இடம்பெற்றது,
பிரஞ்ச் சின்கோனா தேடல் பயணத்தில் 1743ல் பெறப்பட்ட சின்கோனா விதைகள் மற்றும் நாற்றுக்கள் யாவும் ஒரு பெரும் கடற்புயலின்போது கடலில் மூழ்கின
சின்கோனா 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அரச குடும்பத்தினர்ர்களையும் குடிமக்களையும் சிகிச்சையளித்து காப்பாற்றுவதில் பங்களித்துடன் காலனித்துவம் மற்றும் போர்களுக்கும் காரணமாக இருந்தது.
எக்குவடோரின் தலைநகரான குயிடோவிற்கு (Quito) 1735ல் வருகைபுரிந்த வானியலாளர் சார்லஸ் (Charles Marie de la Condamine) இந்த மரத்தை முதல் முதலாக சரியாக விவரித்தார்.அவரால் அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்ட மரம் Cinchona officinalis,
1735,ல் பாரிஸின் அறியிவில் அமைப்பு தாவரவியலாளர் ஜோஸப் என்பவரை (Joseph de Jussieu) தென்னமெரிக்காவின் தாவரங்கள் குறித்து அறிய அனுப்பி வைத்தது அப்போது அவர் சின்கோனா மரத்தை பிரெஞ்ச் மொழியில் காய்ச்சல் மரம் என்று பொருள் படும் “l’arbre des Fièvres” என்று பெயரிட்டார்.
Jesuits எனப்பட்ட அருட்பணியாளர்களால இவை அறிமுகப்படுத்தபட்டதால், இந்த பட்டைப்பொடி பல நாடுகளில் ஜீசுட்ஸ் பட்டை அல்லது ஜீசுட்ஸ் பொடி (Jesuit’s bark Jesuit’s powder) என அழைக்கப்பட்டது
கிரானடா வைஸ்ராயின் பிரத்யேக மருத்துவரான ஜோஸ் (José Celestino Mutis) கொலம்பியாவின் சின்கோனா மரங்களை 1760 லிருந்து ஆய்வு செய்து ‘’El Arcano de la Quina’’ என்னும் நூலை சின்கோனா மரங்களின் சித்திரங்களுடன் 1793 ல் வெளியிட்டார்
அவர் வணிகரீதியான பலன் அளிக்கும் சின்கோனா வகைகளைக் கண்டறிய ஒரு திட்டத்தையும் முன்மொழிந்தார். அந்த திட்டம் 1783ல் அரசால் அனுமதிக்கப்பட்டு அவரது இறுதிக்காலமான 1808 வரை வெற்றிகரமாக நடந்தது.
கோவிட் பெருந்தொற்றுக்கான மருந்துகளுக்காக 2 வருடங்கள் முன்பு எப்படி நாம் அலைபாய்ந்து கொண்டிருந்தோமோ அதுபோலவே அன்று மலேரியாவுக்கான மருந்துகளுக்கு உலகம் காத்துக்கொண்டிருந்தது. .சின்கோனா கிடைத்தபோது வேறு எதைப்பற்றியும் கவலையில்லாமல் அவற்றை வெட்டி சாய்த்தது
பின்னர் 19 ம் நூற்றாண்டில் குயினைனின் தேவை பலமடங்கு அதிகமாகி பெரும் தட்டுப்பாடு உருவாகியது குயினைன் மரப்பட்டைச் சாறளித்து காய்ச்சலை குணமாக்குவது பாரம்பரிய மருத்துவ முறையாகத்தான் இருந்தது, எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அப்பட்டைப்பொடி ஐரோப்பாவின் மிக விலை உயர்ந்த மருந்து பொருளாகவே இருந்தது
டச்சு அரசு ஜாவாலிருந்து 1854ல் சின்கோனா நாற்றுக்களின் பட்டையையும் விதைகளையும் சேகரிக்க ஜஸ்டஸ் (Justus Hasskarl) என்பவரை அனுப்பியது
பிரபல பிரிட்டிஷ் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஸ்ப்ரூஸ் 1849 லிருந்து 1864 வரை 15 ஆண்டுகள் தென்னமெரிக்க காடுகளில் உதவிக்கு கியூ பூங்காவின் தோட்டக்காரர் ராபர்ட் கிராஸ் மற்றும் ஆங்கில புவியலாளரும் கள ஆய்வாளருமான கிளிமென்ஸ் மர்ஹாம் ஆகியோருடன் (Richard Spruce, Robert Cross & Clemens Markham) சின்கோனா விதைகள் நாற்றுக்கள் மற்றும் பட்டைகளை திருட்டுத்தனமாக சேகரித்தார். உதவிக்கு தென்னரிக்க பழங்குடியினரையும் உபயோகப்படுத்திக் கொண்டார்.
பெருவிற்கு இக்குழு வந்தபோது சின்கோனா மரங்கள் ஆயுதமேந்திய காவலாளிகளால் அல்லும் பகலும் பாதுகாக்கபட்டன. இத்தனை ஆபத்துக்கள் இருந்தும் மார்ஹம் பெரு அரசின் அனுமதி இல்லாமல், அவர்களுக்கு தெரியாமல் சின்கோனா விதைகளையும் நாற்றுக்களையும் சேகரித்து மேற்கிந்திய தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் அனுப்பினார்.
கிராஸ் மற்றும் ஸ்ப்ரூஸ் மட்டும் 100,000 சின்கோனா சுக்கி ரூப்ரா (Cinchona succirubra) வகையின் விதைகளையும் 637 நாற்றுக்களையும் சேகரித்தனர். ரகசியமாகவும் பத்திரமாகவும் இந்தியாவிற்கு அவற்றில் 463 நாற்றுக்கள் வந்தன. மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பட்ட அவற்றில் பெரும்பாலானவை துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரு சில நாற்றுக்கள் வளர்ந்தன.
17ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து 19 ம் நூற்றாண்டு வரை சின்கோனா பட்டைகள் உலகெங்கிலும் பயணித்தன.
1840 ல் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் ராணுவ வீரர்களுக்குமான மலேரியா சிகிச்சைகளுக்கு மட்டும் வருடத்திற்கு 700 டன் சின்கோனா மரப்பட்டை உபயோகிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டில்தான் ஐரோபியர்கள் அதீத சந்தைப்படுத்தலால் சின்கோனா மரங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.
எனவே அவரவர் நாடுகளில் சின்கோனா பயிரிடுவது மற்றும் இருக்கும் சின்கோனா மரங்களை பாதுகாப்பது ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருந்தனர். பிறகு சின்கோனா உலகின் பல பாகங்களிலும் பரவலாக வளர்க்கப்பட்டது. டச்சு மற்றும் பிரிட்டிஷார் சின்கோனா வளர ஏதுவானவை என தாவரவியலாளர்களால் அடையாளம் காட்டப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தனர். சின்கோனா விதைகள் வேறெங்கும் கொண்டு செல்லப் படுவதையும் தடை செய்தனர்.1852ல் டச்சு அரசு ஜஸ்டஸ் (Justus Charles Hasskarl) என்பவரை தென்கிழக்காசியாவில் சின்கோனாவை பயிரிட முனைந்த்தாக குற்றம் சாட்டி கைது செய்தது.
அச்சமயத்தில்தான் 1840களில் துவங்கி பல வருடங்கள் சார்லஸ் லெட்ஜர் மமானியின் உதவியுடன் ரகசியமாக பெருவின் காடுகளில் அதிக குயினைன் அளிக்கும் மரத்தை தேடிக்கொண்டிருந்தார்,
- பொலிவியாவிலிருந்து பலரால் 1846ல் சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு உருவானவையே ஐரோப்பாவின் சின்கோனா வகையான C. Calisaya
- பெருவிலிருந்து உலகின் பிற பாகங்களுக்கு அறிமுகமான மற்றொரு முக்கிய வகை சிவப்பு பட்டை கொண்ட Cinchona succirubra, (இப்போது C. pubescens– இதன் பட்டைச்சாறு காற்றில் கலக்கையில் சிவப்பு நிறமாக மாறும்)
கியூ பூங்காவில் சின்கோனாக்களுக்கென்றே பிரத்யேக பசுங்குடில்கள் உருவாககப்பட்டன. இந்தியாவில் நீலகிரி மற்றும் கொல்கத்தா தாவரவியல் பூங்காக்களில் இவை வளர்க்கப்பட்டன.
1880களில் நீலகிரியின் சின்கோனா தோட்டங்கள் தேயிலை தோட்டங்களாக மாறும்வரை இந்தியா மற்றும் டச்சு அரசுகளே சின்கோனா உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தன.
தென்னமெரிக்க சின்கோனா பட்டையின் முக்கிய ஆல்கலாய்டுகள் குயினைன் மற்றும் குயினைடின்((quinine & quinidine.) இரண்டும் மருத்துவத்துறையில் வெகுவாக பயன்பட்டு அவற்றின் தேவை உலகெங்கும் அதிகரித்தபோது மரங்களை பாதுகாக்கும் நடவடிகைகளும் கடுமையாகின.
பல நாடுகளுக்கும் அப்போது சின்கோனா மரப்பட்டை தேவைப்பட்டது எனவே அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இதன் பொருட்டு செலவழித்தன. 1857ல் பிரிடிஷ் இந்தியா வருடத்திற்கு சுமார் 7000 ரூபாய்கள் குயினைனுக்கு மட்டும் செலவளித்தது.
டச்சு , பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷாருக்கு முன்பாக ’’தங்களின் தேவைக்கேற்ற இயற்கை குயினைனை தாங்களே தயாரிப்பது, அல்லது குயினைனை வேதிப்பொருட்களிலிருந்து தயாரிப்பது ’’ ஆகிய இரண்டு வழிகள் மட்டும் இருந்தபோத,..1850ல் பிரெஞ்ச் மருந்து நிறுவனங்கள் ஜனவரி 1, 1851 க்குள் ரசாயன குயினைன் தயாரிப்பவர்களுக்கு 4000 பிராங்குகள் பரிசாக அளிக்கப்படும் என்றுகூட அறிவித்தார்கள் எனினும் 1944 வரை ரசாயன குயினைன் உருவாகி இருக்கவில்லை.
இந்தியாவில் சின்கோனா
பிரிட்டிஷ் இந்தியாவில் 1880களிலிருந்து சின்கோனா நீலகிரி மலையிலும் டார்ஜிலிங்கிலும் வளர்க்கப்பட்டது. கேரள மாநிலத்தின் மூணாரில் உள்ள மலைகளில் பிரிடிஷ் இந்தியாவின் அதிகாரிகள், பூஞ்சார் அரசரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த பூஞ்சார் பகுதி நிலத்தில் தேயிலை மற்றும் காபியுடன் சின்சோனா வளர்ந்தது.
இந்தியாவில் தற்போது சின்கோனா வணிக ரீதியாக பயிரிடப்படுவது டார்ஜிலிங்கில் மட்டுமே 1862 ல் தொடங்கப்பட்ட சின்கோனா மற்றும் பிற மருத்துவ தாவரங்களின் இயக்குநரகத்தின் (Directorate of Cinchona and Other Medicinal Plant (DCOMP)) 6900 ஏக்கரில் வளரும் சின்கோனா மரங்களிலிருந்து சுமார் 1,50,000 லிருந்து 2,00,000 கிலோ சின்கோனா மரப்பட்டை உருவாகிறது.
தாவரவியல் பண்புகள்
29 மீ உயரம் வரை வளரும், காபி பயிரின் குடும்பமான ரூபியேசியை சேர்ந்த சின்கோனா மரங்கள் பசுமை மாறா வகையை சேர்ந்தவை. எதிரடுக்கில் அமைந்திருக்கும் பளபளப்பான இலைகளையும் குழல் போன்ற வெண்மையும் இளம் சிவப்பும் கலந்த அழகிய சிறு மலர்களையும் கொண்டிருக்கும் கொத்துக்களாக காணப்படும் மலர்களின் இதழ்களில் மென்மயிர்களைப்போல வளரிகள் பரவியிருக்கும். சின்கோனா மரத்தின் கனி மிகச்சிறியது
7 லிருந்து 8 வருடம் வளர்ந்த சின்கோனா மரங்களிலிருந்து மரப்பட்டை எடுக்கையில் குயினைன் அளவு அதில் அதிகமிருக்கும். சின்கோனா
மரப்பட்டைகளில் குயினைன் மட்டுமல்லாது 35 வகையான பிற முக்கியமான ஆல்கலாய்டுகளும் கிடைக்கின்றன
கதைகள்
சின்கோனா மரப்பட்டையில் குயினைன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பல கதைகள் இருந்தன அவற்றில் பிரபலமானது 1928 ல் சி ஜே எஸ் தாம்ஸன் (C.J.S. Thompson) பிரிடிஷ் மருத்துவ சஞ்சிகையில் எழுதியது. காய்ச்சலில் அவதியுற்ற இந்தியர் ஒருவர் சின்கோனா மரம் முறிந்து வீழ்ந்து கிடந்த ஏரித் தண்ணீரை அருந்தி குணமான கதையை அதில் விவரித்திருந்தார்
ஐரோப்பிய குயினைன் கதையொன்று உலகெங்கிலும் பரவலாக இருந்த ஒன்று. அதுதான் உண்மை என இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு.
17 நூற்றாண்டில் ஸ்பெயினின் சின்கோன் பகுதியை சேர்ந்தவரும் count என்னும் நிலப்பிரபுவும், மன்னருக்கு அடுத்த நிலையில் இருந்தவரும் பெருவின் வைஸ்ராயுமான லூயியின் (Luis Jerónimo Fernández de Cabrera Bobadilla Cerda y Mendoza) மனைவி அன்னாதான் (Ana de Osorio (1599–1625) மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கையில் முதன்முதலில் குயினைன் அளிக்கப்பட்டு மலேரியாவிலிருந்து குணமானவர் என்னும் ஒரு புனைவு உலகெங்கும் பிரபலமாக இருந்தது. குணமான அவர் ஸ்பெயினுக்கு திரும்பிச் சென்ற போது தன்னுடன் சின்கோனா மரப்பட்டைகளை எடுத்துச்சென்று ஐரோப்பாவில் அவற்றை அறிமுகப்படுத்தினார் என்றது அந்தக்கதை. எனவே சின்கோன் பகுதியின் பிரபுவின் மனைவியாதலால் countess chinchon என அழைக்கப்பட்ட அவரின் பெயராலேயே அந்த மரமும் சின்கோனா மரம் என்று அழைக்கப்பட்டதாக கதை சொன்னது.
1859ல் இந்தியாவிற்கான சின்கோனா தேவையின் ரகசிய செயல்பாட்டாளராக இரண்டு வருடங்கள் தென்னமரிக்காவில் செயல்பட்ட க்ளிமென்ஸ் மர்ஹாம் தனது தென்னமரிக்க அனுபவங்களை நூலாக்கினார். , அவருக்கு பழங்குடியினர் செய்த உதவிகளை, அக்காட்டின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் கண்டுகொண்ட பழங்குடியினரின் அறிவையெல்லாம் அந்நூலில் விவரித்த, அவரே ’’சின்கோன் என்னும் பிரபுவின் மனைவி மலேரியாவால் நோயுற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்து உயிர் காத்த மரப்ட்படை அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு சின்கோனா மரம் என்னும் பெயர் பெற்றது’’ என்னும், இன்று வரையிலும் புழக்கத்தில் இருக்கும் புனைவை நூலில் எழுதி மேலும் பிரபலமாக்கியவர்.
வைஸ்ராய் லூயியின் அதிகாரபூர்வ நாட்குறிப்பு 1930 ல் கிடைத்த போது அவரது முதல் மனைவியான அனா இவர் வைஸ்ராயாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஸ்பெயினில் மறைந்து விட்டார் என்னும் உண்மை தெரிந்தது
கணவருடன் தென்னமரிக்காவிற்கு வந்த அவரது இரண்டாம் மனைவி பிரான்சிஸ்கா (Francisca Henríquez de Ribera) நல்ல உடலாரோக்கியத்துடன் இருந்தார். அவருக்கும் பட்டைச்சாறு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வைஸ்ராய்க்கும் பலமுறை கடும் காய்ச்சல் வந்திருக்கிறது எனினும் அவர் ஒருமுறைகூட சின்கோனா பட்டை பொடியை நிவாரணமாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மேலும் வைஸ்ராயின் இரண்டாம் மனைவியும் ஸ்பெயினுக்கு திரும்பிச்செல்லும் வழியில் உடல்நலக்குறைவால் கொலம்பியா துறைமுகத்திலேயே உயிரிழந்தார்.அவரும் ஸ்பெயினுக்கு செல்லவே இல்லை. எனவே பிரபுவின் மனைவிகள் மூலம் இந்தப்பொடி ஐரோப்பாவிற்கு அறிமுகமானது என்பது வலிந்து உருவக்காப்பட்ட புனைவுதான் என்பதை அவரின் நாட்குறிப்பு உறுதி செய்தது.
ஆனால் இக்கதை மிகப்பிரபலமானதாக அக்காலத்தில் இருந்ததால் 1742ல் தாவர வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் சின்கோன் அரசியின் பெயரால் சின்கோனா அஃபிஸினாலிஸ் என்று அம்மரத்துக்கு பெயரிட்டார்.
இந்த அறிவியல் பெயரில் chinchon என்பது தவறாக cinchon என்றிருப்பதால் 1874 ல் இது Chinchona. என சரியாக திருத்தப்பட வேண்டும் என்னும் வேண்டுகோள் பலரால் முன்வைக்கப்பட்டும் பெயர் இன்று வரை மாற்றப்படவில்லை.
கெச்சுவா பழங்குடியின மொழியில் குயினா (quina) என்றால் புனித மரப்பட்டை என்று பொருள். இது சில சமயம் பட்டைகளின் பட்டை எனும் பொருளில் quinquina என்றும் குறிப்பிடப்பட்டது. சின்கோனா மரப்பட்டை, பெருவிய பிசின் மரப்பட்டை இரண்டுமே குயினா என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே இதிலிருந்து ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டபோது அது குயினைன் என்று பெயரிடப்பட்டது.
கண்டுபிடிப்புக்கள்
ஆங்கிலேய மருத்துவரான தாமஸ் (Thomas Sydenham -1624–89) மிகத் திறமையாக சின்கோனா மரப்பட்டை சாற்றை சிகிச்சைகளுக்கு உபயோகித்து மலேரியா காய்ச்சலை பிற காய்ச்சல்களிலிருந்து வேறுபடுத்துவதை கண்டறிந்தவர்.
1790 ல் பிரெஞ்ச் வேதியியலாளர் ஆண்டனி (Antoine François de Fourcroy (1755–1809) சின்கோனா மரப்பட்டையிலிருந்து சிவப்பு நிறத்தில் ஒரு பிசினை பிரித்தெடுத்தார் அதில் ஆல்கலாய்டுகளைப் போன்ற குணங்கள் கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக அறிவித்தார் எனினும் அந்த செம்பிசின் மலேரியாவை குணமாக்கவில்லை.
1800 வரை சின்கோனா மரப்பட்டை கரைசலாக்கப்பட்டு குடிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. 1811ல் போர்த்துக்கீசிய கப்பற்படை அறுவை சிகிச்சை மருத்துவரான பெர்னார்டினோ (Bernardino Antonio Gomez) சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் ஆல்கலாய்டை பிரித்தெடுத்து “cinchonino.” என பெயரிட்டார்.
1820 ல், பிரான்ஸின் வேதியியலாளர்கள் பியரி மற்றும் ஜோசப் (Pierre Joseph Pelletier & Joseph Bienaim Caventou) ஆகியோர் cinchonino” என்பது “quinine” மற்றும் “cinchonine.” இரு முக்கிய ஆல்கலாய்டுகளின் கலவை என கண்டறிந்தார்கள்
சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைனை பிரித்தெடுக்கும் முறையையும் இவர்கள் கண்டறிந்தார்கள். இது நவீன மருந்துத் தொழிலின் தொடக்கம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.. அவர்கள் குயினைன் பிரித்தெடுக்க பாரிசில் ஒரு தொழிற்சாலையையும் நிறுவினர்,
அடுத்த முக்கிய திருப்பமாக 1833ல் ஹென்ரி மற்றும் டிலோண்டரால் குயினிடைன் (quinidine) பிரித்தெடுக்கப்பட்டது ( Henry and Delondre),
1844ல் சின்கோனிடைன் (cinchonidine) வின்க்கில் (Winckle) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1853 ல் இறுதியாக அது quinidine என பாஸ்டரால் பெயரிடபட்டது (Pasteur).
இதன் மூலக்கூறு வடிவம் 1854ல் ஸ்டெரெக்கரால் கண்டறியப்பட்டது( Strecker)
உலகின் முதல் செயற்கைச்சாயமான மாவீன் 5 (mauveine) வில்லியம் ஹென்ரியால் (William Henry Perkin) குயினைனை கண்டுபிடிக்கும் முயற்சியின் போது1856ல் கண்டறியபட்டது,
குயினைனின் ரசாயனத்தயாரிப்பு பல சிக்கல்களை தாண்டி 1944ல் சாத்திமாமயிற்று. பலர் இந்த முயற்சியில் இறங்கி படிப்படியாக முன்னேற்றம் கண்டனர்.
19 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா மரப்பட்டை மற்றும் குயினைன் வர்த்தகத்தில் டச்சு உலகின் ஆகப்பெரிய நாடாக இருந்து 1944 ல் ரசாயன குயினைன் தயாரிப்பு துவங்கும் வரை டச்சு அரசே குயினைன் சந்தையில் கோலோச்சியது
ஹோமியோபதி என்னும் மருத்துவ முறையும் சின்கோனா பட்டையின் மருத்துவ பண்புகளை சோதிக்கும் முயற்சியில் தான் உருவானது. ஹோமியோபதியை தோற்றுவித்தவர். சாமுவேல் ஹானிமன்(1755-1843)
மருத்துவரான இவர் அக்காலத்தின் மருத்துவ ஆய்வு முறையின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தார். இரத்தம் சுத்திகரிக்க நோயாளி மீது அட்டையை விட்டு உறிஞ்ச செய்வது, இருதயத்தின் இரத்தக் குழாய்களை வெட்டி இரத்தத்தை வடியவிடுவது போன்ற கொடிய சிகிச்சையால் பலர் கொல்லப்பட்டனர்.
இவற்றால் டாக்டர் ஹானிமென் மருத்துவ தொழிலை விட்டு விட்டார். பல ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர் .1796 ல் வில்லியம் கல்லன் என்பவரின் மருத்துவ நூலை ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழி மாற்றிக் கொண்டிருக்கையில் பெருவின் மரப்பட்டை காய்ச்சலை குணமாக்குவது குறித்து எழுதி இருப்பதை கண்டார். அதை பரிசோதித்து பார்க்கையில் தான் ’’ஒத்தது ஒத்ததை குணமாக்கும்’’ என்னும் விதியின் அடிப்படையிலான சிகிச்சை முறையான ஹோமியோபதி 15 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டது.
யுனானி மருத்துவ முறையை தோற்றுவித்தவரான காலனின் குருதி நீக்கச் சிகிச்சையும் குயினைனின் வெற்றிக்கு பிறகுதான் நிறுத்தப்பட்டது
தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்பட்ட முதல் இயற்கை இரசாயன கலவை குயினைன் தான் இன்று, குயினைன் மருத்துவ நோக்கங்களுக்காக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இது மலேரியாவைத் தடுக்கப் பயன்படுவதில்லை, மாறாக நோய்க்கு காரணமான உயிரினமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தின் ஹீமோகுளோபினை கரைத்து வளர்சிதைமாற்றம் செய்யும் திறனில் குயினைன் குறுக்கிடுகிறது.
சிகிச்சை வரலாறு
சின்கோனாவின் எந்த வகை மரத்தின் பட்டை வீரியமிக்கது, பட்டைபொடியில் செய்யப்படும் போலி மலேரிய மருந்துகள், குயினைனின் பக்க விளைவுகள் இவை அனைத்தும் சேர்ந்து சின்கோனாவை மலேரியாவுக்கான தீர்வாக மட்டும் இல்லாமல் பெரும் கேள்விக்குறியாகவே ஆக்கி இருந்தது,
இம்மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சிலருக்கு கொப்புளங்கள் உண்டாகின சிலருக்கு உதடுகள் எரிந்து புண்னாகின இன்னும் சிலருக்கு காதுகளில் விசித்திரமான ஓலிகள் கேட்டன பலருக்கு காது செவிடாகி, கண்பார்வையும் குறைந்தது .
.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் பயன்பட்டு வரும் ஆர்டிமிசின் என்னும் தாவரமருந்தும் மலேரியாவுக்கு எதிரானதுதான். இதுவும் குயினைனுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டது
மலேரியாவினால் இறப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தாலும் சின்கோனா மரப்பட்டைகளை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள பலரும் தயங்கினார்கள் ஆங்கிலேய மருந்தாளுநர் ராபர்ட் டால்போர்தான் (Robert Talbor) 17 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா பட்டையின் உபயோகங்களை எளியவர்களுக்கும் புரியும்படி விளக்கினார். அப்படியும் பலருக்கு சின்கோனாவை சிகிச்சைக்கு எடுதுக்கொள்ள பெரும் மனத்தடை இருந்ததால், 1670களில் சின்கோனாவைவிட சிறந்தது என்னும் பெயரில் அதே சின்கோனா என வெளிப்படையாக தெரிவிக்காமல் ஒரு ரகசிய மருந்து என சொல்லி சின்கோனா பட்டைச்சாற்றினால் பலரை குணமாக்கினார்.
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் மற்றும் அவரது இளம் மகன் பதினாலாம் லூயிஸ் ஆகியோரையும் டால்போர் வெற்றிகரமாக சின்கோனா மரப்பட்டையை சிகிச்சையாக அளித்து மலேரியாவிலிருந்து மீட்டார்
டால்போர் சின்கோனா மரப்பட்டை கஷாயாங்களின் பலவித தயாரிப்பு முறைகளை இளவரசர் லூயிஸ்க்கு தனது இறப்புக்கு பின்னரே அவை வெளியிடப்படவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் எழுதிக் கொடுத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவர் எழுதிய சின்கோனாவை குறித்த அனைத்தும் அடங்கிய நூலான ” Le remede Anglais pour la guerison des fievres. 1682 ல் பிரான்ஸ் மன்னரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதன் ஆங்கில வடிவம் ‘Talbor’s wonderful secret for curing of agues and fevers. வெளியானது இவ்விரண்டு நூல்களும் மக்கள் மத்தியில் அதுவரை இருந்த குயினைன் குறித்த சித்திரத்தை அடியோடு மாற்றியது
சின்கோனா மரப்பட்டையின் விலை 25 லிருந்து 100 ஃப்ரேங்க்குகள் உடனடியாக உயர்ந்தது. ’’இறை நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்யாத அற்புதங்களை கப்பல்களில் வந்து கொண்டிருக்கும் சின்கோனா மரப்பட்டைகள் செய்யும்’’ என்பது அப்போது பிரபலமான ஒரு வாசகமாக புழக்கத்தில் இருந்தது
1866 லிருந்து 68 வரை தென்னிந்தியாவின்’ மெட்ராஸ் சின்கோனா’ கமிஷனால் பெருமளவில் சின்கோனா பட்டைகளின் காய்ச்சல் குணமாக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது. 2472 மலேரியா நோயாளிகளில் சோதனை நடத்தி அவர்களில் 846 பேருக்கு குயினைனும்,664பேருக்கு குயினிடைனும், 559 பேருக்கு சின்கோனைனும் 403 பேருக்கு சின்கோனிடைனும் அளிக்கப்பட்டது. இவர்களில் 2445 நோயாளிகள் குணமடைந்தனர் 27 பேர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
குணமாக்கும் இயல்புக்கு சமமாகவே நச்சுத்தன்மையும் கொண்டிருக்கும் ஆல்கலாய்டுகளான குயினைன் மற்றும் குயினைடைன் ஆகியவை மிக அதிகமாக மலேரியா சிகிச்சையில் உபயோகப்படுத்தப்பட்டன.
முதல் உலகப்போரின் போது குயினைன் மட்டுமே மலேரியாவிற்கான ஒரே சிகிச்சையாக இருந்தது ரொனால்ட் ரோஸ்.(Ronald Ross) கொசுக்களின் மூலம் மலேரியா பரவுதலை கண்டறிந்த பின்னர் குயினைன் உபயோகம் பல மடங்கு அதிகரித்தது
உலகப்போர் மருத்துவ முகாம்களில்தான் ரத்தத்தில் இருந்த மலேரிய ஒட்டுண்ணிகளுக்கெதிராக குயினைன் வீரியமிக்க மருந்தாக செயல்பட்டாலும், ஈரலை தாக்கும் மலேரியா ஒட்டுண்ணிகளுக்கெதிராக அவை வேலை செய்வதில்லை என்பது கண்டறியப்பட்டது. அது எதனால் என்றும் அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை.
1917 ல் சர் வில்லியம் ஆஸ்லர் மலேரியாவை குயினைன் கொண்டு குணப்படுத்த முடியாதவர்கள் மருத்துவத்துறையை விட்டு விலகிவிடலாம் என்று அறிவிக்கும் அளவுக்கு மலேரியாவுக்கு எதிராக குயினன் 1920 வரை வெற்றிகரமாக செயல்பட்டது. 1920ல் மலேரியா சிகிச்சையில் குளோரொகுயின் அறிமுகமானபோது குயினைனின் பயன்பாடு ஏறக்குறைய நின்றுபோனது.
ஒட்டுண்ணிகளால் குளோரோகுயினுக்கான உயிர்ம எதிர்ப்பு (resistance) உருவானபோது மீண்டும் குயினைன் தனது இடத்தை பிடித்துக் கொண்டது
மலேரியா சிகிச்சைகள் வெற்றிகளைத் தந்தாலும், சின்கோனா ஆல்கலாய்டுகளின் பயன்பாடு உயிருக்கு ஆபத்தான எதிர்விளைவுகளையும் உருவாக்கி இரு முனைகளும் கூர் கொண்ட கத்தியை போலிருந்தது.
சிகிச்சை முறைகள்
கசப்புச் சுவையுடன் சிறிது எலுமிச்சை நறுமணம் கொண்டிருக்கும் குயினைன் பட்டைப்பொடி. பெரும்பாலும் நீரில் கரைத்து அருந்தப்படும் இவை மாத்திரைகளாகவும் தயாரிக்கப்பட்டன.
பிரிட்டிஷ் அதிகாரிகள் சோடா மற்றும் சர்க்கரையில் குயினைன் பொடியை கரைத்து தயாரித்த டானிக்கை அருந்தினர். இந்தக் கலவையை உருவாக்கிய எராமஸ் (Erasmus Bond) 1858ல் அதற்கு காப்புரிமை பெற்றார். பல மருந்து நிறுவனங்கள் 1860 களில் இந்த டானிக் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டன. 1880 களில் பிரிட்டிஷ் இந்தியாவின் செயல்பாட்டாளர்களாயிருந்த சில நைஜீரியர்கள் இந்த டானிக்குடன் சிறிதளவு ஜின்னையும் கலந்தனர். சிறிது போதையும் அளித்த இந்த மலேரிய டானிக் ஒரு நூற்றாண்டு காலம் மக்களிடையே வெகுவாக புழங்கியது
மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் போது, குயினின் மாத்திரை வடிவில் கொடுக்கப்படுகிறது. குயினின் நீர் அல்லது டானிக் நீர் வடிவிலும் விற்கப்படுகிறது, இது ஜின் மற்றும் ஓட்கா போன்ற மது வகைகளுடன் ஒரு பிரபலமான கலவையாக உலகம் முழுவதும் அருந்தப்படுகிறது. குயினின் கலந்த பானங்களில் “Q” என்ற எழுத்து குறிக்கப்பட்டிருக்கும்.
1889லிருந்து புரோமோ குயினைன் (Bromo Quinine) என்னும் பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட குயினைன் 1960 வரை விற்பனையானது. குயினைன் கோகெயின் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளில் கலப்படம் செய்யப்படுகிறது
செயற்கை குயினைன் தயாரிப்பு மிகுந்த செலவு பிடித்த ஒன்றாக இருந்தது. தொடர்ந்து chloroquine, primaquine, proguanil, மற்றும் artemisinin ஆகியவை மலேரியாவிற்கு எதிராக செயல்படுவதை நிரூபிக்க முடிந்ததென்றாலும் இன்னும் இயற்கை குயினைனுக்கு இணையான பாதுகாப்பான ஒன்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்கின்றன. மொத்த குயினைன் உற்பத்தியில் 40 சதவீதம் மருத்துவத்துறையிலும் 60சதவீதம் உணவுத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது
அதன் செயல்திறன் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகும் குயினின் ஒரு முக்கியமான மலேரியா எதிர்ப்பு மருந்தாகவே உள்ளது. இருப்பினும், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேரியாவிற்கான முதல்-வரிசை சிகிச்சையாக உலக சுகாதார அமைப்பால் (WHO) குயினின் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் குறைவான பக்கவிளைவுகளுடன் குயினைனுக்கு இணையாக பலனளிக்கும் பிற மருந்துகள் உள்ளன. எனெவே ஆர்ட்டெமிசினின் இல்லாதபோது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கின்றது. மூட்டுவலி மற்றும் காக்காய்வலிப்புக்கு சிகிச்சையளிக்கவும் குயினின் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது chloroquine மற்றும் Atabrine இரண்டும்தான் மலேரியா சிகிச்சையில் பயன்படுகின்றன. இம்மருந்துகளுக்கான எதிர்ப்புத்தன்மையை மலேரியா ஒட்டுண்ணிகள் உலகின் சில பகுதிகளில் உருவாக்கி உள்ளன. வியட்நாமில் அப்படியான எதிர்ப்புத்திறன் கொண்ட ஒட்டுண்ணிகள் இருப்பதால் அங்கு மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க இயற்கை குயினைன் உபயோகபடுத்தப்படுகிறது.
குயினின் இன்று
குயினின் இன்றும் தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும், உலக குயினைன் சந்தையின் பெரும்பகுதி தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவால் வழங்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தாலும் உலக மருந்து சந்தையில் போட்டியிட முடியாமல் ஒதுங்கி இருக்கிறது
இயற்கையாக கிடைக்கும் குயினைன் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் பன்னாட்டு நிறுவனங்களால் காப்புரிமை பெற்றவையாதலால் அவை உற்பத்தியாகும் நாடுகளுக்கும், அவற்றின் பயன்பாடுகளை முதலில் உருவாக்கிய பழங்குடிச் சமூகங்களுக்கும் எந்த நன்மையும் கிடைப்பது இல்லை என்பதற்கு குயினைன் வர்த்தகமும் மற்றுமோர் எடுத்துக்காட்டு.
லெட்ஜர்

1890 ல் தனது இறுதிக் காலத்தில் வறுமையில் வாடிய லெட்ஜருக்கு உதவ கிளிமென்ஸ் மர்ஹான் பெரிதும் முயன்றார் இந்திய மற்றும் டச்சு அரசுகள் ஆரம்பத்தில் அவரின் வேண்டுகோளை பரிசீலிக்கவில்லை. எனினும் 1897ல் டச்சு அரசு லெட்ஜெருக்கு வருடத்திற்கு 100 டாலர் உதவித்தொகை அளிக்க ஒத்துக்கொண்டது. உதவித்தொகை கிடைத்த 9 வருடங்கள் கழித்து 1906 ல் தனது 87 வது வயதில் 1906ல் லெட்ஜெர் உயிரிழந்தார்
இந்தியாவிலும் ஜவாவிலும் வளரும் ஆயிரக்கணக்கான சின்கோனா மரங்கள் லெட்ஜெரினால் தருவிக்கப்பட்ட விதைகளிலிருந்து உருவனாவை.
1900த்தில் உலகின் மொத்த குயின்னைன் உற்பத்தியில் ⅔ பங்கு ஜாவாவில் இருந்து கிடைத்தது. இத்தனை வருடங்கள்,கழித்தும் லெட்ஜர் வகை சின்கோனாக்களே அதிக குயினைன் அளிக்கின்றன.
Gabriele Grammiccia, எழுதிய சார்ல்ஸ் லெட்ஜரின் வாழ்க்கை 5 என்னும் நுல் அவர் எத்தனை அசாதாரணமான மனிதர் என்பதை நமக்கு சொல்கிறது. 18 வயதில் அல்பகா ஆடுகளுடன் துவங்கிய லெட்ஜரின் வாழ்க்கையை அல்பகா ஆடுகளின் ரோமமும் சின்கோனா மரப்பட்டையுமே வடிவமைத்தது என்று சொல்லலாம்.
சிட்னியில் இருந்த லெட்ஜரின் கல்லறை (Rockwood Methodist Cemetery in Sydney) சிதிலமடைந்து அவரின் இரண்டாவது மனைவியின் சகோதர சகோதரிகளின் பெயர் மட்டும் அதில் மீதமிருந்தது. சமீபத்தில் அவரின் சுயசரிதை எழுதிய கிரேமிசியாவால் கல்லறை புதுப்பிக்கப்பட்டு சார்லஸ் லெட்ஜரின் பெயரும் அதன் கீழே உலகிற்கு குயினைன் அளித்தவர் என்றும் பொறிக்கப்பட்டது
தற்போது மலேரியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன, சின்கோனா இனத்தின் வரலாற்று ரீதியான அதிகப்படியான சுரண்டலால் அதன் 17 இனங்கள் பெருவில் அழிந்துவரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,
1895ல் ஆய்வாளர்கள் ஆண்டஸ் மலைப்பகுதிகளில் 25000 சின்கோனா மரங்கள் இருந்ததை கணக்கிட்டிருந்தார்கள் இப்போது அதே நிலப்பரப்பில் இருக்கும் போடோகார்பஸ் தேசிய பூங்காவில் வெறும் 29 மரங்கள் மட்டுமே இருக்கின்றன,
பெருவின் தேசிய கொடியில் இம்மரம் பொறிக்கப்பட்டிருக்கிறது தென்னமரிக்க உள்ளூர் இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் சின்கோனா மரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. ’’ஆசிர்வதிக்கபட்ட விதைகள்’’ என்னும் பொருள் கொண்ட சூழல் அமைப்பான செமில்லா பெண்டிட்டா (Semilla Bendita) 2021 ல் பெரு தன்னாட்சி பெற்ற 200 வது ஆண்டை கொண்டாடும் விதமாக 2021 சின்கோனா விதைகளை நட்டுவைத்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது மேலும் இவ்வமைப்பு பல்துறை வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒருங்கிணைத்து சின்கோனா மரங்களின் மரபியல் வளரியல்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கிறது உள்ளூர்வாசிகளின் பங்களிப்பு இம்மரங்களின் பாதுகாப்பில் இருப்பதையும் இந்நிறுவனம் உறுதி செய்து கொள்கிறது
கியூ பூங்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு முக்கிய இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னமரிக்கவிலிருந்து கொண்டு வரப்பட்ட சின்கோனா மரப்பட்டைகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்துவந்த பாதைகளை ஆராய்ந்தோமானால் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கும் சாகசக்கதைகளையெல்லாம் மிஞ்சும் சாகசமும் மர்மமும் நிறைந்தவையாக அவை இருக்கும் .
குயினைன் கடந்துவந்த பாதை ஒரு மாபெரும் வலையென வரலாற்றில் விரிந்திருக்கிறது சின்கோனா மரப்பட்டை பெறப்பட்ட , தென்-அமெரிக்காவின் ஆண்டஸ் காடுகளிலிருந்து பிரிட்டிஷ் தாவரவியல் பூங்காவிற்கும், தென்னிந்தியாவின் காலனித்துவ தோட்டங்கள் முதல் இந்தோனேசியாவின் ஜாவா தீவு வரையிலும் உலகம் முழுவதும் குயினைனின் வரலாறு விரிந்துள்ளது..
மிக எளிதாக தாவர அடிப்படையிலான மருந்துகளை மாற்று மருத்துவம்’ என்று நினைத்து மக்கள் கடந்து விடுகிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தில் மருத்துவர்களால் தற்போது பரிந்துரைக்கப்படும் 7000 க்கும் மேற்பட்ட மருத்துவ கலவைகள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவை, ஆனால் மனித குல வரலாற்றில் குயினைன் உள்ளிட்ட பல முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் பொருட்டு நாம் தாவரங்களுக்கு என்றென்றைக்குமாக கடன் பட்டிருக்கிறோம். பல்லுயிர் பெருக்கமும் மனித ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செல்வதைத்தான் குயினைனின் இந்த கதை காட்டுகிறது.
மமானியைப்போல பல்லாயிரக்கணக்கான மனிதர்களை பலி கொண்டபின்னரே மலைத்தெய்வங்கள் நமக்கு பலவற்றை அருளியிருக்கின்றன மமானியின் பெயரில் அந்த சின்கோனா மரம் பெயரிடப்படவில்லை. அவர் வரலாற்றில் மறக்கப்பட்டவர். மறைக்கப்பட்டவர். ஆனால் வரலாற்றின் கண்களுக்கு தெரியாமல் பலியான பல்லாயிரக்கணக்கானோர் நம் உயிர்காக்கும் மருந்துகள் கடந்து வந்த பாதையில் குருதிப்பலி கொடுத்திருக்கிறார்கள்
கோவிட் தொற்றில் தப்பி பிழைத்திருக்கும் நமக்கு இனி மலேரியா வரவேண்டாம், சாதாரண காய்ச்சல் வந்தால் கூட நம் நலனுக்கென உயிரிழந்த மமானி, உயிருக்கு துணிந்து பல சாகசங்கள் செய்து அடுத்த தலைமுறைகளுக்கு தேவையானவற்றை அபாயங்களை பொருட்படுத்தாமல் கண்டறிந்தவர்கள், எந்த சொந்த நலனுக்காகவும் இன்றி மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கிருஸ்துவ அருட்பணியாளர்கள் என சிலரையாவது நினைத்துப்பார்க்கலாம்
*2021ல் மலேரியாவுக்கான அங்கீகரிக்கப்பட ஒரே தடுப்பு மருந்து Mosquirix. என்னும் சந்தைப் பெயரில் இருக்கும் RTS, S. உலக சுகாதார நிறுவனம் இதனை மலேரியா தொற்று இருக்கும் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பரிந்துரை இருக்கிறது