
மழை போலவே வெயில் பொழியும் கடுங்கோடை தொடங்கி விட்டது. கல்லூரி பின் மதியம் 3 மணிக்கு முடிவதால் முதுகில் வெயில் அறைய அறையத்தான் தினமும் வீட்டுக்குப் புறப்படுகிறேன். எனினும் புகாரொன்றுமில்லை. மழைக்காலங்களைப்போலவே எனக்குக் கோடைக்காலமும் பிரியம்தான்.

சாலையெங்கும் வண்ணங்கள் நிறைந்திருக்கிறது. நீலவாகையான ஜகரண்டாக்கள் மலைப்பகுதியில்லை என்றாலும் பொள்ளாச்சியிலும் வீடுகளின் முன்பாக ஊதாமலர்களுடன் மலர்ந்து நிற்கின்றன. நெடுஞ்சாலை எங்கிலும் தீக்கொன்றைகளின் செக்கசெவேலென்னும் மலர்தல் கண்ணை நிறைக்கின்றது. இடையிடையே பொன் மலர்ந்தது போல சரக்கொன்றைகள் ஒரு இலைகூட இல்லாமல் மஞ்சளான மஞ்சளாக ஒயிலாக நிற்கின்றன.

அடர்மஞ்சளில் சிறு மலர்கள் நிறைந்திருக்கும் பெருங்கொன்றைகளும், ஒரு இலைக்கு ஒரு மலர் என நிறைந்து ததும்பியபடி மிக அழகிய கிளையமைப்பில் வான் நோக்கி மலர்ந்து நிற்கும் செம்பட்டு வாகைகளும் வரிசையாக நிற்கும் சாலைகளில் பின்மதியப்பயணம் என்பது ஒரு அருள் தான்.

காபிப்பொடி வண்ணத்தில் புல்லிக்கிண்ணங்களும், தூயவெள்ளையில் இதழ்களுமாக புங்கனும் போட்டிபோட்டுக்கொண்டு கூட மலர்ந்திருக்கிறது தூரத்தில் இருந்து பார்க்கையில் இதழிதழாக தரையெங்கும் கொட்டிக்கிடக்கும் புங்கை மலர்கள், இறைந்துகிடக்கும் பொரிபோல இருப்பதால் இதைப் பொரிப்புங்கை என்போம் இங்கு.

அப்படியேதான் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கின்றது வேம்பும். கல்லூரிக்குள் நுழைகையிலேயே எடுத்துச் சாப்பிட்டு விடலாம் போல வேம்பின் மணம் நிறைந்திருக்கிறது. நான் நினைப்பதுண்டு கோடையில் மட்டும் வேம்பின் தாவர அறிவியல் பெயரான Azadirachta indica வின் இண்டிகாவை எடுத்துவிட்டு Azadirachta edulis (எடுலிஸ்- உண்ணத்தகுந்தது) என்று தற்காலிகமாக மாற்றிக்கொள்ளலாம் என்று.

வீட்டிலும் கோடைக்கொண்டாட்டம்தான். இன்னும் ஜகரண்டா மலரவில்லை வீட்டில். ஆனால் நுண்மணிகளைபோல பசுமஞ்சளில் மலர்சொரிகிறது சொர்க்கமரம், சந்தனம் மஞ்சள் அடர் ஊதா என மூன்று நிறங்களில் அலமண்டா , ஆரஞ்சு காம்புகளுடன் கவிழ்ந்து கிடக்கிறது அதிகாலியில் பின்வாசலெங்கும் பவளமல்லிகை.

இளஞ்சிவப்பு வெள்ளை நீலம் என மூவண்ணத்தில் ருயெல்லியா, பலவண்ண ஜினியா,

மரம் முழுக்க கை அகலத்துக்கு சதைப்பற்றான இதழ்களுடன் பாரிஜாதம், குருதிநிறப் பந்துகளாக தெட்சி, பல நிறங்களில் செம்பருத்தி, வெள்ளைச்சிறுகுடைகளாக சாம்பங்காய் மலர்கள், அமரில்லிகள் என வீடும் வண்ணங்களிலும் நறுமணங்களிலும் நிறைந்திருக்கிறது.

கண்ணுக்கு மட்டுமல்ல நாக்குக்கும் கோடை விருந்தளிக்கிறது. கோடையில் கனியளிக்கும் பல அன்னை மரங்கள் வீட்டில் இருக்கின்றன. அருநெல்லிக்காய்களை பச்சைமிளகாய் கல்லுப்பு வைத்து அம்மியில் சதைத்துச் சாப்பிடுவது, பெரிய நெல்லிக்காய்களை ஆவியில் வேகவைத்து காரமிட்டு தாளிப்பது,

விளிம்பிக்காய்களில் ஏராளமாக ஊறுகாய் தயாரித்து வேண்டியவர்களுக்குக் கொடுப்பது,

மாமரம் காய்க்கொழுந்து விடத்துவங்கியதும் செம்பு நிறத் தளிரிலைகளில் புளியும் உப்பும் வைத்து சுருட்டிச் சாப்பிடுவது, மாமரம் எப்போது பூக்கும் எப்போது காய்க்கும் எப்போது கனியும் என பார்த்துக்கொண்டே இருப்பது, முதல் ஆளாகக் காய்த்து திரண்டு விடும் நடுச்சாலையை வைக்கோலில் மூடி வைத்து வீடே மணக்கையில் எடுத்து சாறு கைகளில் வழிய வழியச் சாப்பிடுவது, குறுக்கே வெட்டினால் நட்சத்திர வடிவில் இருக்கும் ஸ்டார்கனிகளை தட்டு நிறைய காலை உணவில் சேர்த்துக்கொள்வது,
கரும்புச்சக்கரை கலந்து பற்கள் கூசும் வரை சாப்பிடும் விளாம்பழங்கள்,


தமிழ்நாட்டில் அவ்வளவாகத் தெரியப்பட்டிருக்காத லோலோலிகா கனிகள் சொப்பிக்காய்த்து செங்கனிகளானதும் பறித்து லேசாகப்பிளந்து முன்பே கலக்கப்பட்ட உப்பு மிளகாய்த்தூளை தூவி, தேங்காய் எண்ணெய்ச்சொட்டு விட்டு மூடி வாயிலிட்டு புளிப்பும் காரமும் எண்ணெய் மணமுமாக அதன் நுண்ணிய விதைகள் பற்களில் இடறச் சுவைப்பது, ஆப்பிள் செர்ரியின் குட்டிக்குட்டிபழங்களை புளிப்பாகச்சாப்பிடுவது,,,,,

வேப்பம்பூக்களைச்சேகரித்து வடகத்தில் சேர்த்துக்கொள்வது , ஆஹா எத்தனை கோடி இன்பம் கோடையிலும் வைக்கப்பட்டிருக்கிறது ? இப்படிச் சுவைக்கையில் எல்லாம் அடடா, இந்தச் சுவையெல்லாம் தெரிந்துகொள்ளாத கோடிப் பேர் இருக்கிறார்கள் என்னும் ஆதங்கம் உண்டாகும்.


வெண்முரசு வாசிக்கையிலும் இதைத்தான் நினைத்துக்கொள்வது. எத்தனை கோடிப்பேர் இந்த வாசிப்பனுபவத்தை அறியாமலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என.
இதோ சாளரம் வழியே வீசுகிறது வெம்மையும் வேம்பின் வாசனையும் நிறைந்த கோடைக்காற்று.
சிவப்பும் அழகு சூடும் ருசி, கருப்பும் அழகு காந்தலும் ருசி என்பதுபோல கோடையும் தனி ருசிதான்.
அன்புள்ள பேராசிரியை அவர்களுக்கு,
உங்களின் கட்டுரைகளை தொடர்ச்சியாக வாசித்து வருகையில் தாவரவியல் படிக்காமல் போய்விட்டேனே என ஏக்கமாக இருக்கிறது. அறிவியல் செய்திகளை இப்படி அழகுறவும் சொல்ல முடியும் என்பது வியப்பளிக்கிறது. அதன் பின்னே உள்ள உங்கள் உழைப்புக்கு என் வணக்கங்கள். நீங்கள் இந்த கட்டுரையில் குறிப்பிட்டது போல பல ருசிகளை அறியாமலேதான் வாழ்ந்து வந்திருக்கின்றேன். தாவரவியல் ருசி அறியச்செய்து வரும் உங்களுக்கு நன்றிகள்.