லோகமாதேவியின் பதிவுகள்

Month: March 2021 (Page 1 of 3)

மூங்கில் மிகை மலர்வு

PC Tharun

                                                                   காடு-1

பொங்கல் விடுமுறை 5 நாட்கள் என்று அறிவிக்கப்பட்டதும், கர்நாடகாவின் கபினி வனப்பகுதியின் ‘’Ghost’’ என அழைக்கப்படும் கருஞ்சிறுத்தையை காண வேண்டுமென பலநாட்களாக காத்துக்கொண்டிருக்கும்  கானுயிர் புகைப்படக்காரனான இளைய மகன் தருணின் பொருட்டும் அங்கிருக்கும் காட்டுமரங்களின் முதலைமரப்பட்டைகளையும் ( Crocodile bark ), அங்கு அதிகமாக வளரும் தந்தப்பாலை செடிகளையும் காணவேண்டி அங்கேயே செல்லலாமென  முடிவானது.  ஏமாற்றத்தை தவிர்க்க முன்கூட்டியே கானுலாக்களுக்கும், கபினியாற்றிலும், கழிமுகத்திலுமான படகுப்பயணங்களுக்கும் விண்ணப்பித்தோம். வைரஸ் தொற்றுக்காலமென்பதால் ரயில், பேருந்து பயணங்களை தவிர்த்து, அன்னூர்-சத்தியமங்கலம் வழி மைசூர் செல்ல வெறும் 200 கிமீதான் என்பதால்  காரிலேயே செல்ல திட்டமிட்டோம்.

புதனன்று போகிப்பண்டிகையென்பதால், எதிர்வரும் கோடைக்கால நோய்த்தொற்றுகளின் இயற்கைத்தடுப்புகளான வேம்பு மற்றும் மாவின் இலைகள், சிறுபீழை மற்றும் ஆவாரம் மலர்களாலான கொத்துக்களால்  வீடெங்கும் காப்புக்கட்டுதலை முடித்த பின்னர்,  பொள்ளாச்சியிலிருந்து அன்னூர் வழியே பயணத்தை துவங்கினோம். இந்த மாதம் முழுவதுமே  இடைவிடாத மழையானதால், அக்கம்பக்கம் அணைகள் நிரம்பி உபரிநீர் திறந்து விடப்பட்டு வயல்களும் தோப்புக்களும் நிரம்பி கடவு வழிந்தோடிக்கொண்டிருந்த சாலைகளில் குளிர் நிரம்பியிருந்தது.

அன்னூர் சத்தியமங்கலம் மலைப்பாதையின் 27 கொண்டை ஊசி வளைவுகளும் முன்பு போல் தொடர் சரக்கு லாரி போக்குவரத்தினால் இடைஞ்சல் வராதபடிக்கு நன்கு விரிவாக்கப்பட்டிருந்ததால் எளிதில் மலைஏறி இறங்கினோம்.

 சத்தியமங்கலம் மைசூரு செல்லும் வனச்சாலையின் 40 கிமீ தூரமுமே சாலையென்றே சொல்ல முடியாத வகையில் குண்டும் குழியும் கற்களுமாக இருந்தது. ஆனால் காட்டின் விளிம்பிலும், காடு முழுவதும், பல்லாயிரக்கணக்கான் மூங்கில்கள் பொன் போல் பூத்து நின்றதை பார்த்ததும் பயணத்தின் சிரமமெல்லாம் பெரிதாகப்படவில்லை. மூங்கில்கள் பூப்பது ஒரு அரிய நிகழ்வு அதுவும் ஒருவர் ஒருமுறை பார்ப்பதே அரிது. நான் இரண்டாம் முறையாக பார்க்கிறேன். 2016’ல் தாவர வகைப்பாட்டியல் பயிற்சியின் பொருட்டு சென்றிருக்கையில் கேரளாவின் அமைதிப்பள்ளத்தாக்கு, சைரந்திரி வனத்தில் மூங்கில்பூப்பை முதன்முதலாக பார்த்திருந்தேன்

மூங்கில் பூப்பதென்பது மூங்கில் அழிவதுதான். வாழ்நாளின் இறுதியில் முதலும் கடைசியுமாக ஒரே ஒரு முறை பூத்துக்காய்த்து அழியும் Monocarpic வகையை சேர்ந்த மூங்கில்கள்  இப்படி சொல்லி வைத்தாற்போல  ஒட்டுமொத்தமாக 48 லிருந்து 50 வருடங்கள் கழித்து பூத்து பின்னர் ஏராளமான மூங்கிலரிசி எனப்படும் விதைகளை உருவாக்கிவிட்டு மடிந்துவிடும்.

மூங்கிற்சாவு எனப்படும் இந்த நிகழ்வு பெரும் பஞ்சத்தையும் அழிவையும் கொண்டு வருமென்று இந்தியாவின் பலபாகங்களில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால்  ஏராளமான அளவில் உருவாகும் மூங்கிலரிசியை உண்ணும் எலி, பெருச்சாளி போன்ற கொறித்துண்ணும் விலங்குகள் பல்கிப்பெருகி பிறதானியங்களையும் உண்ணத்துவங்கி, உண்டான உணவுத்தட்டுப்பாட்டினால் இந்தியா சந்தித்திருந்த பல பெரும் பஞ்சங்கள் விட்டுச்சென்ற கோர நினைவுகளால் இப்படியொரு நம்பிக்கையும் அச்சமும் நிலைபெற்று விட்டது. மூங்கிலின் மிகுபூப்பிற்கும் (Gregarious flowering of Bamboo) தொடரும் பஞ்சத்திற்கும் தாவரவியல் அடிப்படையில் எந்த தொடர்புமில்லை

 புல் குடும்பத்தை சேர்ந்த தாவரமான மூங்கிலின் 1200 வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. இவற்றில்  24 பேரினங்களின் 138 சிற்றினங்கள் இந்தியாவில் வளருகின்றன. இதில் 3 மட்டுமே அயல் தாவரங்கள் மற்ற அனைத்துமே இயல் தாவரங்கள். உலகெங்கிலுமே மூங்கில் பூப்பென்பது அரிய நிகழ்வுதான்.

 இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் 53 சிற்றினங்களும், அருணாச்சலபிரதேசத்தில் 50 சிற்றினங்களுமாக, வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே இந்தியாவின் மொத்த மூங்கிலின் 50 சவீதத்திற்கும் மேற்பட்ட  வகைகள் விளைகின்றன. இப்பகுதிகளில்  இசைக்கருவிகள், காகிதங்கள், தொப்பிகள். ஆயுதங்கள், மேசை நாற்காலிகள், வீடுகளின் கட்டுமானப்பொருட்கள் உள்ளிட்ட அன்றாட வாழ்விற்கான 1500க்கும் மேற்பட்ட பொருட்கள் மூங்கிலினால்தான் செய்யப்படுகின்றன.

 மூங்கில் குருத்தும், மூங்கிலரிசியும்  அம்மக்களின் மிக விருப்பமான முக்கியமான உணவாகும். சாப் ஸ்டிக்ஸ் எனப்படும் உணவுக்குச்சிகளாகவும், எரிவிறகாவும் மூங்கிலே இங்கு  பயன்படுகின்றது. ஆசியாவின் மிக உயர்ந்த கட்டிடங்களின் கட்டுமானப்பணிகளில் இங்கு விளையும் உறுதியான, நீண்ட கணுவிடைவெளிகளும், வளையும் தன்மையும் கொண்டிருக்கும் நெடுமூங்கில்களே சாரம் கட்டப் பயன்படுகின்றன. மூங்கிலின் இலைகளும் கால்நடைத் தீவனமாக பயன்படுகின்றது.

அஸ்ஸாமிய மூங்கிலான Dendrocalamus tulda விலிருந்து செய்யப்படும் புல்லாங்குழல்தான் அங்கு கோவில் விழாக்களில் இசைக்கப்படுகின்றது. இக்குழலிசை துஷ்டசக்திகளை விரட்டுவதாக அங்கு நம்பிக்கை. நிலவுகின்றது

வடகிழக்கிந்தியாவில், மக்களின் வாழ்வுடன் இரண்டறக்கலந்துள்ள மூங்கில் பூப்பதென்பது பெரும் அபசகுனமென்றும், அழிவுக்கான அறிகுறியென்றும்  நெடுங்காலமாகவே நம்பிக்கை நிலவுகின்றது

மிசோரத்தின் மெலொகன்னா பாக்கிஃபெரா (Melocanna baccifera) என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட முள்ளி மூங்கிலிலிருந்தே (Muli Bamboo)  தொட்டில்களும், கிறிஸ்துவமதம் அதிகம் பரவியிருப்பதால் சவப்பெட்டிகளும் கூட  செய்ப்யபடுகின்றன.

tabasheer

இப்பகுதிகளில் வளரும் Phyllostachys bambusoides எனப்படும்  பிறிதொரு மூங்கில் வகையின் கணுக்களிலிருந்து சுரக்கும் மணலைப்போன்ற சொரசொரப்பான ஒரு வடிதலை சுரண்டி சேகரிக்கப்படும் தபஷீர் (tabasheer) உள்ளூர் மக்களால் பல நோய்களுக்கு  மருந்தாகவும், பாலுணர்வு ஊக்கியாகவும் (Aphrodisiac) பயன்பாட்டிலிருக்கின்றது. தரைமட்டத்தில் குறுக்கும் நெடுக்குமாக அமைக்கப்பட்டிருக்கும் மூங்கில் கழிகளை  அசைத்து, தாளத்திற்கேற்ப அவற்றின் இடைவெளிகளில், மூங்கில் தலையணியுடன் பாரம்பரிய உடையிலிருக்கும் மிசோர மக்கள் ஆடும் செரா (Cheraw) நடனம் உலகப்புகழ்பெற்றது

செரா நடனம்

அஸ்ஸாமிலும் மிசோரத்திலும் மூங்கிலை முழுநிலவன்றும், செவ்வாய் சனிக்கிழமைகளிலும் வெட்டுவது அமங்கலமென்று கருதப்படுகின்றது.

ஏழு சகோதரி மாநிலங்களெனப்படும் இம்மாநிலங்களின்பண்பாடு, சமூக மற்றும் அரசியல் தளங்களில் மூங்கில் மிக முக்கிய தாக்கமுண்டாக்கும் ஒரு தாவரமாக இருந்து வருகின்றது, குறிப்பாக மிசோரத்தில் இதன் முக்கியத்துவம் மிக அதிகம். மிசோரம் மாநிலத்தின்  மொத்த நிலப்பகுதியில் 49 சதவிகிதப் பகுதியில் மூங்கில் காடுகள்தான் உள்ளன.

மிசோ மொழியில் மூங்கில் பூப்பதை மௌடம்  என்கிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திய  ஒரு மெளடம் நிகழ்வினைத்தொடர்ந்து பெரும் பஞ்சமும் பல்லாயிரம் இறப்புக்களும் நிகழ்ந்துள்ளது.  அதன் பிறகு 1958 ல் மற்றுமொரு மெளடம் நிகழ்வும் தொடர்ந்த பெரும் பஞ்சமும் வந்திருக்கிறது. அக்காலத்தில், அஸ்ஸாமின் கீழ் இருந்த இப்பகுதி  மக்கள் மூங்கில் பூப்பு மற்றும் தொடர் பஞ்சத்துக்கான முன்கூட்டிய நிவாரணம் மற்றும் தடுப்பு ஏற்பாடுகளின் பொருட்டு அரசுக்கு விடுத்த கோரிக்கைகளையும், மூங்கில் பூப்பைக்குறித்த முன்னெச்சரிக்கையையும் மதிக்காத அரசை எதிர்த்து  மிசோரம் நாட்டு பஞ்ச முன்னணி என்ற பெயரில் தொடங்கப்பட்ட அமைப்புதான் பின்னர்  மிசோ தேசிய முன்னணி என்ற பிரிவினைப் போராளி அமைப்பாக உருமாறியது. அவ்வமைப்பில் முன்னணிப்போராளியாயிருந்த ’லால்தெங்கா’ தான் மிசோரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டபின் முதல்வரானார். அவருடன் போராளிக்குழுவில் முக்கிய பங்கு வகித்த’ சோரம்தெங்கா’வே  தற்போது மிசோரம்  முதலமைச்சராக உள்ளார். 

சோரம்தெங்காவின் தலைமையில் மிசோரத்தின் 2006-2007‘லான மூங்கில் பூப்பை ஒட்டி இந்திய இராணுவம் , கொன்ற எலிகளின் வாலுக்கு 2 ரூபாய்கள் என் அறிவித்தும், மூங்கில் பூக்கும் சமயத்தில் தானியங்களை பயிரிடாமல் எலிகள் உண்ணாத இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றைப் பயிரடும் பரிந்துரையை அளித்தும்   எலிப்பெருக்கத்தையும் அழிவையும் ஓரளவிற்கு கட்டுப்படுத்தியது.

இப்பகுதி மக்கள் மூங்கிலை சூடு பண்ணுகையில் கிடைக்கும் எளிதில் எரியும் தன்மையுடைய பிசினை விளக்கெரிக்கப் பயன்படுத்துகின்றனர். சிலிசிக் அமிலம் நிறைந்துள்ள மூங்கிலின் கெட்டியான கணுக்களை மட்டும் நறுக்கி துண்டுகளாக்கி, வறுத்துப்பொடித்து அதிலிருந்து காபியைப்போல ஒரு மணமுள்ள பானம் தயாரித்து அருந்துவதும் கிழக்கிந்திய மாநிலங்களில் பரவலாக உள்ள ஒரு உணவுப்பழக்கமாகும்.

மூங்கில் மிகுபூப்பு  லாவோஸ்,  மடகாஸ்கர்,  ஜப்பான்  மற்றும்  தென் அமெரிக்க நாடுகளிலும் நிகழ்கின்றது. சீனாவில் 1980ல்  பசானியா ஃபாங்கியானா (Bashania fangiana) என்னும் மூங்கில் இனத்தின் மிகுபூப்பினால், முதன்மை உணவாக மூங்கிலையே எடுத்துக்கொள்ளும்  பாண்டா  (Giant Panda) விலங்குகள் வெகுவாக பாதிக்கப்பட்டன.

 சீனா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவிலெல்லாம் மூங்கில் காடுகள் இருக்கின்றதென்றாலும் சீனாவின் மூங்கில் காடுகளே உலகில் மிகப்பெரியவை. ஆந்தோசயானின் நிறமிகள் அடர்ந்துள்ள கருப்பு மூங்கில் உள்ளிட்ட சுமார் 300 மூங்கில் சிற்றினங்கள் சீனாவில் விளைகின்றன. சீனா மட்டுமே ஆண்டுக்கு 57 பில்லியன் ஜோடிகள் உணவுக்குச்சிகளை (Chosticks) தயாரிக்கின்றது. இக்குசிகளில் குழந்தைகளுக்கானவை, தம்பதிகளுக்கான ஜோடிகள், ஒற்றை  மற்றும் மீள் உபயோகத்துக்கானவை என ஏராளமான வகைகள் உள்ளது.   

 ஜப்பானிலும் மூங்கில் மிக முக்கியமான தாவரம். பைனுடன் சேர்ந்து, மூங்கிலையும் ஜப்பானியர்கள் மகிழ்ச்சி மற்றும் தூய்மையின் அடையாளமாக கொண்டிருக்கின்றனர். புத்தாண்டுக்கு முன்னதாக வீடுகளின் நுழைவாயிலை பைன் மற்றும் மூங்கில் கிளைகளால் அலங்கரிப்பது, வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தருமென இவர்கள் நம்புகின்றனர்  ஜப்பானில் சாகனோ மூங்கில் காடுகளின் மூங்கில் தண்டுகளின் இடையே புகுந்து வரும் காற்றின் ஒலியை ஜப்பானிய அரசாங்கம் “பாதுகாக்கப்பட வேண்டிய ஜப்பானின் நூறு ஒலிகளில்” ஒன்றாக அங்கீகரித்திருக்கிறது.

( https://en.wikipedia.org/wiki/100_Soundscapes_of_Japan)

டேக்கினொக்கொ- (takenoko) எனப்படும் சுவையான சத்தான மூங்கில் குருத்துணவு  ஜபபானில் வெகு பிரபலம். தற்போது மூங்கில் குருத்து உணவுகள் தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட உணவகங்களில் கிடைக்கின்றது. ’’பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது’’ என்னும் நமது பழஞ்சொல்லுக்கு நிகராக ஜப்பானில் மூங்கில் காடுகளின் சலசலப்பை கொண்டு பழங்சொல்லொன்று, அதே பொருளில் புழக்கத்தில் இருக்கிறது..

மூங்கில் பூக்கும் காலத்தில் எலி பெருச்சாளி போன்ற விலங்குகளுக்கு இனப்பெருக்கத்திற்கான கூடுதல் தூண்டலுண்டாகுமென்பதும் இயற்கையின் மற்றுமொரு விநோதம்.

மகாபாரதத்தில் திரெளபதி ஜெயத்ரதனால் இழுத்துச்செல்லப்படுகையில் ’’மூங்கில் பூத்த பின்பு வரும் பஞ்சத்தில் உயிர்கள் அழிவது போல, நீ அழிவாய்’’  என்று சாபமிடுவாள். வெண்முரசிலும் ஃபல்குனையாக இருக்கும் அர்ஜுனனிடம் நாகர்களின் படைவல்லமையை சொல்லும் ஒரு எதிர்தரப்பு வீரன் அவர்கள் மூங்கில் பூக்கும் காலத்து எலிகள் போல பெருகிக்கொண்டே இருக்கிறார்கள் என்பான்.

பல்லாயிரம் கிலோமீட்டர்கள் தொலைவிலிருப்பினும் ஒரே இனத்தை சேர்ந்த எல்லா மூங்கில்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் எப்படி ஒரே சமயத்தில் ஒட்டுமொத்தமாக பூத்து, அழிகின்றதென்பதை தாவர அறிவியலாலும் விளக்க முடியவில்லை

புதுத்தளிர்களும் மலர்களும் உருவாகும் காலத்தை, அவை பழுத்து உதிரும் காலத்தை, பட்டாம்பூச்சிகளின் முதல் பறத்தலின் காலத்தை, வலசைப்பறவைகள் பயணம் துவங்கும் கணத்தை, என  சூழலுக்கும் உயிர்களின் வாழ்வுக்குமான தொடர்புகளின் அறிவியலான Phenology உலகெங்கிலுமான மூங்கில் பூப்பைக் குறித்து ஆய்வுகளை செய்தபடியே இருக்கிறது,  மூங்கில்களின் அடியில் இருக்கும் கிழங்குகளில் (Rhizome) தலைமுறைகளாக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பூக்கும் காலத்தைக் குறித்த கணக்குகள் சரியான நேரத்தில் அதே இனத்தைச்சேர்ந்த அனைத்து மூங்கில்களுக்கும் கடத்தப்படுகின்றன அல்லது  எப்படியோ அனுப்பப்படுகின்றன என்று மட்டுமே இப்போதைக்கு அனுமானிக்கப்பட்டிருக்கின்றது.

Rhizome

இப்படி குறிப்பிட்ட காலஇடைவெளியில் பல்லாயிரம் கிமீ தொலைவிலிருப்பினும்  மொத்தமாக பூக்கும் தாவரங்களான மூங்கில், குறிஞ்சி போன்றவை ‘Plietesials’ எனப்படுகின்றன. இத்தனை  துல்லியமான காலக்கணக்குகளை எவ்வாறு இவை நினைவில் வைத்திருக்கின்றன என்பதெல்லாம் மர்மம்தான். குறிஞ்சியில் 12 ஆண்டுகளுக்கொரு முறையும் 9 ஆண்டுகளுக்கொரு முறையும் மலரும் வகைகளுக்குள் எவ்வித குழப்பமுமில்லாமல் காலம் காலமாக மிகச்சரியாக  பூத்துக்கொண்டே இருப்பதும் தாவரவியலின் அதிசயங்களில் ஒன்று.

எல்லா மூங்கில் இனங்களும் 48-50 வருட இடைவெளியில் தான் பூக்குமென்பதில்லை.  ஜாவா வகையான Schizostachyum elegantissimum , மற்றும்,  Arundinaria wightiana மூங்கில்கள் மூன்று வருடஙகளுக்கொரு முறையும்,  Phyllostachys bambusoides , எனப்படும் சீன மூங்கில் 120 வருடங்களுக்கு ஒரு முறையும்,   Bambusa vulgaris  வகை 150 வருடங்களுக்கு ஒருமுறையும் மலர்ந்து அழியும். பூக்காமலே அழியும் மூங்கில் இனங்களும் உள்ளன

மூங்கிலின் 30’லிருந்து 40 அடி உயரம் வரை வளர்ந்திருக்கும் கிளைத்த, உலர்ந்த மஞ்சரிகளின் பொன்னிற மலர்களால் நிறைந்திருந்த, அந்தக்காட்டையும, வழியோரங்களிலும் பூத்து நிறைந்திருந்த மூங்கில்களையும் உடன்பயணித்த வாகனங்களில் வந்த ஒருவர் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. சாலையோரங்களிலேயெ சாதாரணமாக தென்பட்ட புள்ளிமான் கூட்டங்களையும், யானைகளையுமே வளைத்து வளைத்து படமெடுத்துக் கொண்டிருந்தார்கள். இனி இவ்வழியில் மற்றுமொரு மூங்கில் மிகுபூப்பை காண இன்னும் 50,60 வருடங்கள் ஆகுமே, இப்படி தவற விடுகிறார்களே இவ்வரிய நிகழ்வை என்று எனக்கு ஆதங்கமாக இருந்தது.

மூங்கில் மலர்கள்

பொதுவாகவே காட்டுயிர் என்றாலே அது பெரும்பாலானவர்களுக்கு விலங்குகள் மட்டும்தான் புலி, சிங்கம், மான், யானை ,கரடிதான். Wild life என்பது flora and fauna இரண்டும் தான் என்பதே பலருக்கும் தெரிவதில்லை

தாவரங்களைக்குறித்த அறிதலும் அபிமானமும் உலகெங்கிலுமே மிகக் குறைவாகவே இருக்கின்றதென்பது என் அபிப்பிராயம். மூங்கில்களைக்குறித்தும் அப்படித்தான். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாஸ்து மூங்கில் / அதிர்ஷ்ட மூங்கில் என அழைக்கப்பட்டு  சிறு கிண்ணங்களில் வளர்க்கப்படும் தாவரம்., மூங்கிலே அல்ல. சீனா மற்றும் தாய்வானில் வளர்க்கப்பட்டு உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அஸ்ப்ராகேசியே குடும்பத்தை சேர்ந்த டிரசீனாதான் மூங்கிலென்று விற்பனை செய்யப்படுகின்றது. . Dracaena sanderiana  என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட இவற்றின் கணுக்களும் கணு இடைவெளிகளும் மூங்கிலைப்போல இருப்பதால் இவை மூங்கிலென்று அழைக்கப்படுகின்றன.

lucky bamboo

மூங்கில்கள் இப்படி பூத்தபின்பு அம்மலர்களில் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று பெண் மலர்கள் கருவுற்று விதைகள் உண்டாகி அவை உதிர்ந்து பின்னர் புதிய மூங்கில்கள் உருவாகி, நிலைத்து வளர எப்படியும் 7லிருந்து 9ஆண்டுகள் ஆகிவிடும். அது வரையிலும் மூங்கில் குருத்துக்களையும் பசும் இலைகளையும் விரும்பியுண்ணும் அக்காட்டின் யானைகளும் காத்திருக்க வேண்டியதுதான்.

சத்தியமங்கலம் சாலையில் பழுத்துதிரும் பொன்மஞ்சள் இலைகளும் நெடிதுயர்ந்த மலர் மஞ்சரிகளுமாக இருந்த  மூங்கிலின் அடர்ந்த புதரொன்றினருகே ஒற்றைக்கொம்பன் யானையொன்று தலைகவிழ்ந்தபடி, அசையும் துதிக்கை நுனியை பார்த்தபடிக்கு வெகுநேரம் அசையாமல் நின்று கொண்டிருந்தது. என்ன நினைத்து கொண்டிருந்தன அல்லது என்ன பேசிக்கொண்டிருந்தன அப்பேருயிர்களிரண்டும்? இயற்கையின் பல்லுயிர்களுக்கிடையேயான பகிர்வாழ்வின் மர்மங்களும் ரகசியங்களும் மனிதர்களால் அறிந்துகொள்ளவே முடியாதவை. அறியாக்கரங்களால் வரையப்பட்ட ஒரு அழகிய ஓவியம் போலிருந்தது அக்காட்சி.

 ஒரு கையளவு சாலையில் உதிர்ந்துகிடந்த மூங்கில் நெல்மணிகளை மட்டும் சேகரித்துக்கொண்டேன். வீடு திரும்பியதும் அவற்றை உடைத்து வைக்கப்போகும் மூங்கிலரிசி பாயஸத்தில் இயற்கையின் அரிய சுவையும் பயணத்தின் இனிய சுவையும் கலந்திருக்கும்.

மூங்கில் அரிசி

இன்னும் 60 வருடங்கள் கழித்து என் மகன்கள் அவர்களின் பேரப்பிள்ளைகளுடன் இவ்வழியே வருகையில் மீண்டுமொரு மூங்கில் பூப்பை பார்க்கும்படி அருளப்படுவார்களாக என்றெண்ணியபடி  பயணத்தை தொடர்ந்தேன்!

பெருங்காயம்

பெருங்காயம்

மசாலாக்களின் உபயோகத்தில் மிகப்பிரபலமான இந்தியச் சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்றான  பெருங்காயம் ’ஃபெருலா’ -Ferula என்னும் தாவர பேரினத்தின் பல சிற்றினங்களிலிருந்து பெறப்படுகின்றது. Ferula assafoetida, F. foetida ,  F. narthex. ஆகிய மூன்று மரங்களிலிருந்தே உலகின் பெருமளவு பெருங்காயம் தயரிக்கப்படுகின்றது.  ஈரானில் Ferula suaveolens , Ferula persica  மற்றும் மத்திய ஆசியாவில்  Ferula galbaniflua ஆகியவையும் வளர்ந்து பயன் தருகின்றன.

இதன் ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida), Ferula asafoetida என்னும் இதன் தாவரப்பெயருக்கு கிரேக்க மொழியில் ’’நாற்றமடிக்கும் பசையை கொண்டிருக்கும் ’’ எனப்பொருள்.

இந்திய மொழிகளில் பெருங்காயத்தின் பெயர்கள்;

Hindi : Hing Bengali : Hing Gujarati : Hing Kannada : Hinger,Ingu Kashmiri : Yang, Sap Malayalam : Kayam Marathi : Hing Oriya : Hengu Punjabi : Hing Sanskrit : Badhika, Agudagandhu, Telugu : Inguva, Ingumo Urdu : Hing

 அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம், காயம் ஆகியவையும் பெருங்காயத்தின் பெயர்களே.

English : Devil’s dung, Persian : Angustha-Gandha, French : Ferule Asafoetida,  German : Stinkendes steckenkraut, Arabic : Tyib, Haltheeth, Sinhalese : Perumkayam

 இம்மரம் கேரட்டின், கொத்துமல்லியின், சோம்பின் குடும்பமான ‘ஏபியேசியே’வை சேர்ந்தது (Apiaceae). சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods) எனவும் இதற்கு பல்வேறு ஆங்கிலப் பெயர்கள் உள்ளன.

பெருங்காய மரங்கள்

பெருங்காயச் செடியின் தாயகம் ‘பெர்சியா’ (ஈரான்). 2 – 7 மீட்டர் உயரம் வரை செடியாகவும், குட்டை மரமாகவும் வளரும் இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம்.
இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சளிலும். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாகவும் இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு நிறச்சாறு இருக்கும். வேர்கள் கிழங்கை போல கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பற்றுடனும் இருக்கும். தாவரத்தின் எல்லா பாகங்களும் நலல் நெடியுடன் இருக்கும்.

செடி வளர்ந்த 4 ஆண்டுகளுப்பிறகே  வேரில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக,மார்ச்- ஏப்ரல் மாதங்களில், தண்டின் அடிப்பகுதியுடன் சேர்ந்த வேர்ப்பகுதியை நறுக்கி, அதை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போல கெட்டியாக  வடிந்திருக்கும் பெருங்காயப் பிசினைச் சுரண்டி எடுத்துவிட்டு,மீண்டும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள பிசினை சுரண்டி எடுப்பார்கள். இப்படியாக வேரை நறுக்க நறுக்க, வெளிப்படும் பிசினை முழுவதுமாக  தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் ஒரு செடியின் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசை கிடைக்கும்..
  6 ம் நூறாண்டிலேயெ கிழக்காசியாவிலிருந்து, இன்றைய லிபியாவுக்கு பெருங்காயம் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. பண்டைய ரோமானியர்கள் பெருங்காயத்தை மருந்துப்பொருளாக உபயோகித்திருக்கின்றனர்.

 Dr KT Achaya’ வின் ’’இந்திய உணவுகளின் வரலாறு’’ என்னும் நூல் மகாபாரதத்தில் ஊனுணவில் பெருங்காயம் கலக்கப்பட்டதை  குறிப்பிடுகிறது. மாவீரர் அலெக்ஸாண்டர் அவரது வெற்றிப் பயணப்பாதைகளில் பெருங்காயத்தை பல இடங்களுக்கு கொண்டு சென்றார் என்கிறது வரலாறு.

பெருங்காய மலர்கள்

வேதியியலில் oleo gum resin  எனப்படும் பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. இவற்றுடன் வெங்காயம், பூண்டில் இருக்கும் சல்ஃபரும் மிக அதிக அளவில் இருக்கின்றது. (Resin (40–64%), gum (25%) and essential oil (10–17%)


ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது.  காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும். செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல், மாதவிலக்கு உண்டாக்குதல் போன்ற பல மருத்துவ குணங்களை உடையது. சமைக்காத பொழுது அதிக நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் நல்ல மணத்தையும், சுவையையும் உருவாக்குகிறது. வெங்கயமும் பூண்டும் உணவில் சேர்த்துக்கொள்ளாத இந்தியாவின் பிராமணர்கள், ஜைனர்கள் போன்ற சமயத்தினரும் பெருங்காயத்தை சேர்த்துக்கொள்கின்றனர்

இந்தியாவில் பெருங்காயம் விளைவதில்லை. எனவே . ஆப்கானிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து ஆண்டு தோறும் சுமார் 1200 டன் பெருங்காயத்தை சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்தியா இறக்குமதி செய்துகொண்டிருக்கிறது

தில்லியின் தாவர மரபணு வளங்களின் தேசிய பணியகத்தின் ( National Bureau of Plant Genetic Resources-NBPGR), முன்னெடுப்பில்  1963 லிருந்து 1989 வரையிலான காலத்தில் இந்தியாவில்  இறக்குமதி செய்யபட்ட பெருங்காய விதைகளிலிருந்து பெருங்காயம் பயிரிடும் முயற்சி துவங்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது

மீண்டும் 2017லிருந்து இமாலயப் பகுதிகளில் பெருங்காயத்தைப் பயிரிடும் முயற்சியில் சிஎஸ்ஐஆர் மற்றும்  இமாலய உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான ஐஹெச்பிடி (CSIR &Institute of Himalayan Bioresource,  IHBT), NBPGR உடன் இணைந்து  ஈடுபட்டுள்ளது.

ஈரானிலிருந்து தருவிக்கபட்ட 6 வகைகளிலான  பெருங்காய விதைகளை  நோய் தொற்று, வளர்ச்சி, உள்ளிட்ட பலவித சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தி கட்டுப்படுத்தப்ப்பட்ட சூழலில் அவற்றை முளைக்க வைத்து, இப்போது  800 பெருங்காய நாற்றுக்கள் இமாச்சலபிரதேசத்தின் லாஹெளல் –ஸ்பிடி பள்ளத்தாக்கில்   நடப்பட்டிருக்கின்றன.

கின்னாவுரில் பெருங்கய சாகுபடிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலம்

 கடல் மட்டத்திலிருந்து உயர்ந்திருக்கும் குலு, மணாலி மற்றும் கின்னாவுர் மாவட்டங்களிலும்  நாற்றுக்கள் சோதனை முயற்சியாக நடப்பட்டிருக்கின்றன. இவை வெற்றிகரமாக வளர்ந்தால், இன்னும் ஐந்து வருடங்களில் இந்தியாவில் பெருங்காய வளர்ப்பை பல்லாயிரம் ஏக்கர்களில் விரிவாக்கும் திட்டமும்  ICAR க்கு இருக்கிறது  

பெருங்காய விதைகள்

  பெருங்கயத்தின் விதை உறக்ககாலம் மிக நீளமென்பதாலும், 100ல் இரண்டு விதைகளே முளைக்கும் திறன் கொண்டிருப்பதாலும் இந்திய நிலங்களில் பெருங்காயத்தின் விரிவான சாகுபடி சவாலானதுதான் என்றாலும் இதில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக இதை செய்யமுடியுமென்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். லடாக் மற்றும் உத்ரகாண்டிலும் சாகுபடியை சோதிக்கும் முயற்சிகளும் தற்போது துவங்கியுள்ளது. லாகூர் சமவெளியில் உள்ள கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு பெருங்காயத்தைப் பயிரிடுவது குறித்த பயிற்சி முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றது.  .

 பெருங்காயத்தின் இரண்டு வகைகள் சந்தையில் கிடைக்கின்றது.பால் பெருங்காயம் எனப்படும் (Kabuli Sufaid- Milky white asafoetida) மற்றும் சிவப்பு பெருங்காயம்.(Lal Asafoetida).

பால் பெருங்காயம்

காந்தாரி பெருங்காயம் என அழைக்கப்படும் ஆஃப்கனிலிருந்து கிடைக்கும் பெருங்காயமே உலகின் மிக தரமான பெருங்காயமென கருதப்படுகின்றது

பொடித்த தூளாகவும், குருணைகளாகவும், வில்லைகளாகவும், கட்டியாகவும்  பெருங்காயம் சந்தையில் கிடைக்கின்றது. பெருங்காயப் பசையை நீராவியில் காய்ச்சி வடிகட்டி பெருங்காய எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

 ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ தனிப்பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய்.  அறுவடையான பெருங்காயப்பிசினை அப்படியே நாம் உணவில் சேர்க்க முடியாத அளவிற்கு அதன் காரமும் நெடியும் மிக அதிகமாக இருக்கும். எனவே கட்டியாக இருக்கும் பெருங்காயத்தை பொடித்து கருவேலம் பிசின், கோதுமைமாவு அல்லது அரிசி மாவு சேர்க்கப்பட்டு கூட்டுப் பெருங்காயம் என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது

ஆஃப்கான் பெருங்காயம்

 
 Ferula வின் galbaniflua என்னும் சிற்றினத்தின் பசை ஊதுவர்த்திக்கள் செய்ய்வதற்கு மட்டும் பயன்படுத்தப்படுகின்றது. உணவுபொருட்களில் மிக அதிகமாக கலப்படம் செய்யப்படுவது பெருங்காயப்பிசினில்தான். கோதுமைக்குப் பதிலாக  மைதாவையும்.  பெருங்காயத்தின் கழிவுகள், களிமண், செம்மண், டர்பன்டைன் ஆயிலின் கழிவுகள் போன்றவற்றையும் கருவேலம்பிசினுடன் கலந்து வாசனைக்காக பெருங்காய எஸென்ஸ் மட்டும் சிறிது சேர்க்கப்பட்ட,   5 சதவீதம் கூட அசல் பெருங்காயம் இல்லாத, உடலுக்கு கேடு விளைவிக்கும் போலிப்பெருங்காயம் கிராமப்புறங்களில் அதிகம் விற்பனையாகின்றது.  

நாம் உபயோகிக்கும் காயம் அசலா, போலியா என  எளிதாக வீட்டிலேயே கண்டு பிடிக்கலாம். தரமான கலப்படமில்லா பெருங்காயமானது, கசடுகள் இல்லாமல் நீரில் மூழுவதுமாக கரைந்து நீரை பால்நிறமாக்கிவிடும். சிறு துண்டு பெருங்காய கட்டியை நெருப்பில் காட்டி அது முழுவதும் எரிந்தால் அதுவும் தரமானதே.

சதுர தர்பூசணியும் ஐங்கோண ஆரஞ்சுகளும்

கோடையில் தாகத்தைத் தணிக்க இயற்கை அளித்துள்ள மிகப்பெரும் கொடை, தர்பூசணி (Watermelon – வாட்டர்மெலோன்).இது  ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரம். இந்தியா முழுவதும் பரவலாக விளைகிறது. இதன் வெளிப்புறத் தோல்பகுதி கடினமான சதைப்பற்றுள்ள பச்சையாகவும், உட்புறம் இனிப்பான சிவப்பு சதைப்பகுதி சாறுடனும் காணப்படும். தர்பூசணியில், இரும்புச்சத்து, வைட்டமின் சி, ஏ, பி6, பி1 ஆகியவற்றுடன் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் உள்ளன.
எதிலும் நம்மை ஆச்சரியப்பட வைக்கும் ஒரு நாடு ஜப்பான்!

ஜப்பானிலும் தர்பூசணிப்பழங்கள் கோடையில் மிக அதிகமாக விரும்பி உண்ணப்படுகின்றன. உருவில் பெரியதாய், உருண்டு வளர்ந்து குளிர்சாதனப்பெட்டியிலும், கடைகளிலும் நிறைய இடத்தை ஆக்கிரமித்து, இடப் பிரச்னை ஏற்படுத்தியதால், ஜப்பானிய விவசாயிகள் வித்தியாசமாக, சதுர வடிவில் அழகிய தர்பூசணியை பயிர் செய்கிறார்கள். டொமொயுகி ஓனோ (Tomoyuki Ono) என்னும் ஜப்பானியப் பெண்ணே 1978ல், முதன்முதலில் இதுபோன்ற சதுர வடிவப் பழங்களை உருவாக்கி சாதனை புரிந்தார். ஒருபுறம் திறந்திருக்கும் சதுர வடிவ கண்ணாடிப் பெட்டியில், தர்பூசணி சிறிய காயாக இருக்கும்போதே உள்ளே வைத்து எளிதாக சதுர வடிவில் விளைவிக்கிறார்கள். இது மட்டுமல்ல; பிரமிட், இதய வடிவ தர்பூசணிகளும் உருவாக்கப்படுகின்றன.


தற்போது விவசாய ஆராய்ச்சியாளர்கள், பல புதிய வகை தர்பூசணி ரகங்களையும் கண்டுபிடித்திருப்பதால், மஞ்சள், வெள்ளை நிறங்களிலும், சுவையான உட்சதை கொண்ட தர்பூசணி பழங்கள் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் சந்தைகளில் கிடைக்கின்றன.

2014க்குபிறகு இவற்றுடன் ஐங்கோண் ஆரஞ்சுகளையும் ஜப்பானில் விளைவிக்கிறார்கள். இவை அதிர்ஷ்டம் தரும் என்றும் பரவலாக நம்பிக்கை இருப்பதால் அதிகம் சந்தையில் புழங்கும் பழமாக இருக்கின்றது.  ஆரஞ்சுப்பழங்கள் சிறியதாக இருக்கையிலேயே ஐங்கோண் வடிவிலான சட்டங்களை அதன் மீது பொருத்திவிடுவதால் வளரும் மென்மையான கனி சட்டங்களின் வடிவினுள்ளே பொருந்தி ஐங்கோண வடிவிலேயே முதிர்ந்துவிடுகின்றது.

இந்த பழத்தை கையில் வைத்துக்கொண்டால் தேர்வில் வெற்றி பெறும் அதிர்ஷ்டத்தை வழங்குவதாகவும் நம்பிக்கை இருப்பதால் மாணவர்கள் மத்தியிலும் இது வெகு பிரபலம். இதன் ஜப்பானியப்பெயரான ‘Gokaku no Iyokan’ என்பதற்கு தேர்வில் வெற்றிபெறுவதற்கான இனிப்பு வாசனை என்று பொருள்.

இயற்கையான வடிவில் இருக்கும் பழங்களை விட இவ்வித புதுமையான வடிவிலிருப்பவை 5 மடங்கு விலையென்றாலும் புதுமையை விரும்பும் ஜப்பானியர்கள் போட்டி போட்டுக்கொண்டு இவற்றை வாங்குகிறார்கள். சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவரும் இப்பழங்கள் உள்ளூர் மக்களாலும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்க வசதியாக இருப்பதாலும், நண்பர்களுக்கு பரிசளிக்கவும் விலையைக்குறித்து கவலைப்படாமல் வாங்குகிறார்கள்.

இயற்கையின் அசெளகரியங்களை ஆபத்துகளையெல்லாம் தங்கள் விடாமுயற்சியாலும் அழகுணர்ச்சியாலும் வென்றுகொண்டே இருக்கிறார்கள் ஜப்பானியர்கள்.

இதய வடிவ தர்பூசணி

மயக்கும் சுவை, மணம்!

‘வெனிலா’ (Vanilla) என்றதும் சுவையும், மணமும் நிறைந்த ஐஸ்கிரீம் நமக்கு முதலில் நினைவுக்கு வரும். வெனிலா மெக்சிகோவைத் தாயகமாகக் கொண்டது. மரம், செடிகளில் பற்றிப் படர்ந்து கொடியாக வளரும்.
* 35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும்.
* தடிமனான பச்சை இலைகள், மாற்றடுக்கில் அமைந்திருக்கும்.
* மூன்று ஆண்டுகளில் பூக்கத் தொடங்கும்.
* ஒற்றை மலர்க்கொத்தில் 100 பூக்கள் வரை வெள்ளை, பச்சை கலந்த நிறத்தில் நறுமணத்துடன் மலரும்.
* 6 முதல் 9 மாதங்களில் பச்சை நிறக் காய்கள் உருவாகும்.
* காய்கள் இள மஞ்சள் நிறமாக மாறும்போது, அறுவடை செய்யப்படும்.
* நீண்ட சதைப்பற்றுள்ள, மணம் மிக்க காய்கள், சிறிய விதைகளைக் கொண்டிருக்கும்.

இனங்கள்
‘வெனிலா பிளானிஃபோலியா’ (Vanilla planifolia)
‘வெனிலா டாஹிடென்ஸிஸ்’ (Vanilla tahitensis)
‘வெனிலா பம்போனா’
(Vanilla pompona)
வெனிலா பூக்கள், மெக்சிகோவில் காணப்படும் ‘மெலிபோனா’ (Melipona) தேனீயால் மட்டுமே, இயற்கையாக மகரந்தச் சேர்க்கை செய்யப்படக்கூடியவை. இந்தத் தேனீ மெக்சிகோவிற்கு வெளியே உயிர் வாழாததால், வெனிலாப் பயிரை பிற இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது.
தாவரவியலாளர் ‘சார்லஸ் பிரான்கஸ் மோரன்’ என்பவர், 1836ஆம் ஆண்டு, வெனிலாவில் சுய மகரந்தச் சேர்க்கை பற்றி ஆய்வு செய்தார். கையால் மகரந்தச் சேர்க்கை செய்யும் எளிய முறை ஒன்று, 12 வயதான எட்மண்ட் ஆல்பியஸ் என்பவரால் 1841இல் உருவாக்கப்பட்டது. சீவப்பட்ட மூங்கில் சிம்பைப் பயன்படுத்தி, கட்டை விரலால் மகரந்தத்தை சூலகத்திற்கு மாற்றும் இந்த முறையே இப்போதும் பயன்பட்டு வருகிறது. இதன் மூலம் வெனிலா உலகளாவிய சாகுபடிப் பயிராக மாறியது.
வெனிலா காய்கள் அதன் நீளத்தைப் பொறுத்து தரம் பிரிக்கப்படுகின்றன. பச்சையாகவும், உலர வைக்கப்பட்டும் காய்கள் விற்பனை செய்யப்படுகின்றன. உலர் காய்களில் சராசரியாக 2.5 சதவீத வென்னிலின் இருக்கும். பச்சைக் காய்கள் ஒரு கிலோ விலை சுமார் ரூ.3,500; பதப்படுத்தப்பட்டவை கிலோ ரூ.22,500. வெனிலா காய்கள், பிரத்யேக வாசனையுள்ள மூலப்பொருட்கள் நிறைந்தவை. வெனிலாவின் சாறில் உள்ள வென்னிலின் என்ற வேதிப்பொருளே இதற்குக் காரணம்.
உலகில் குங்குமப் பூவிற்கு அடுத்து விலை உயர்ந்ததாக இருக்கும் வேளாண் பயிர் வெனிலா. இது, உணவு வகைகளிலும், அழகு சாதனத் தயாரிப்புகளிலும் அதிகம் பயன்படுகிறது. வெனிலாவில் இருந்து பெறப்படும் எசன்ஸ், ஐஸ்கிரீம், பிஸ்கட், குளிர்பானங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. வெனிலா எண்ணெய், வென்னிலின் ஆகியவை நறுமண சிகிச்சையிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

சூழல் சீர்கேடு: ‘புற்றுநோய் ரயில்’

பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால் போதுமானது. ஆனால், பஞ்சாப் மாநிலத்தின் மால்வா பகுதியில், அளவுக்கு அதிகமாக, சுமார் 30 முறை வரை மருந்து தெளிக்கப்படுகிறது. இதனால், அங்கு உள்ள இயற்கைச்சூழல் பாதிப்பு அடைகிறது. காற்றின் வழியாகவும், நிலத்தில் கலப்பதன் மூலமாகவும் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் நோய்கள் ஏற்படுகின்றன. இதனால்தான், மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது.
பாதுகாப்புச் சாதனங்கள் இல்லாமல் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது, பூச்சிக் கொல்லிகளைத் தெளித்தவுடன் வயல்களில் வேலை செய்வது, பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவது ஆகியவையே புற்றுநோய் ஏற்படக் காரணம்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீரில் உள்ள ஆச்சார்யா துளசி மண்டல புற்றுநோய் சிகிச்சை, ஆய்வு மையத்தில் இலவசப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு, இந்தியாவிலேயே முதன்முதலில் பசுமைப் புரட்சி தீவிரமாக மேற்கொள்ளப்பட்ட பஞ்சாபின் மால்வா பகுதியில் இருந்து அதிக கேன்சர் நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்கள் வரும் ‘பத்தீண்டா’ (Bhatinda) ரயில், இப்பகுதி மக்களால் ‘புற்றுநோய் ரயில்’ என்றே அழைக்கப்படுகிறது. கேன்சர் நோயாளிகள் முற்றிலும் இலவசமாக இந்த ரயிலில் பயணம் செய்கிறார்கள். சுமார் 350 கி.மீ. ரயிலில் பயணம் செய்து பிகானீரை வந்து அடைபவர்களில், மால்வா பருத்தி விவசாயிகள் 60 சதவீதம்.
ஐ.நா. அமைப்பு 1983ல் பூச்சிக்கொல்லிகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை முக்கியமானது. உலக அளவில், ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 40,000 பேர் வரை இறக்கின்றனர்.
பாதிக்கப்படுபவர்களில் பாதிப் பேரும், இறப்பவர்களில் முக்கால்வாசிப் பேரும் வளரும் நாடுகளில் வாழ்பவர்கள். அதேபோல், 2004-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவன ஆராய்ச்சியின்படி, ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் பேர் பூச்சிக்கொல்லிகளால் பாதிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 2.5 லட்சம் பேர் இறக்கின்றனர்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

பச்சை, புழுங்கல் என்பது என்ன?

பச்சரிசி (ரா ரைஸ் – Raw Rice)
நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைத்து அதன் உமி, தவிடு நீக்கப்படுவதால் கிடைக்கும் அரிசி.

புழுங்கல் அரிசி (பார்பாயில்டு ரைஸ் – Parboiled Rice)
நெல்லை நீரில் ஊறவைத்து, நீராவி அல்லது கொதிநீரில் வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைத்து உமி, தவிடு நீக்கப்படுவது.

பச்சரிசி
* வெள்ளை நிறத்தில் இருக்கும்.
* ஆலையில் நெல்லை அரைக்கும்போது எளிதில் உடைபடும் தன்மை உடையது.
* சமைப்பதற்காக வேகவைக்கும்போது அரிசியிலிருக்கும் மாவுச்சத்துகள் பசைபோலாகி (Gleatinised) விடும்.
* இதனால், ‘தயாமின்’ (Thiamine) எனும் வைட்டமின், அமைலோஸ் (Amylose) சத்துகள் அதிகரிக்கின்றன.

புழுங்கல் அரிசி
* லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.
* ஆலையில் அரைக்கும்போது எளிதில் உடையாது.
* ரத்தத்தில் சர்க்கரை அளவை உயர்த்தும் விகிதம் (Glysemic Index – கிளைசிமிக் இன்டெக்ஸ்) குறைவு. இரத்தத்தில் சர்க்கரை அதிகம் உள்ளவர்களுக்கு உகந்தது.
* வெளிப்புற உமி, தவிட்டு வைட்டமின்கள், உமியில் உள்ள நோய் எதிர்ப்புத் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசிக்குள் திணிக்கப்படுவதால், ஊட்டச்சத்து அதிகமாகிறது.

புழுங்கலரிசி உபயோகிக்கும் நாடுகள்
உலகில், மொத்த உற்பத்தியில் சுமார் 50 சதவீத நெல் வேகவைக்கப்படுகிறது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், இம்முறையை அதிகம் பின்பற்றும் நாடுகள்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

அல்லி ராணி!

அமேசான் நீர் அல்லி

ஆங்கிலப் பெயர்: ‘அமேசான் வாட்டர் லில்லி’ (Amazon Water Lily)
தாவரவியல் பெயர்: விக்டோரியா அமேசானிகா (Victoria amazonica)

அமேசான் நீர் அல்லி, ‘நிம்பேயேசியே’ (Nymphaeaceae) எனப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகில் இருக்கும் அல்லிகளில் மிகப்பெரியது இதுதான். இதன் தாயகம், தென் அமெரிக்கா. அமேசான் நதியில் காணப்படுகிறது. 40 முதல் 50 இலைகளுடன், 12 மீட்டர் அகலத்துக்கு வளரும். அருகில் வேறு தாவரங்களை வளர விடாது. மிக அகன்ற இலைகள் சூரிய ஒளியைத் தடுப்பதால், இதன் அடியில் நீர்ப்பாசிகள்கூட வளர்வதில்லை.
இலைகள் 3 மீட்டர் அகலம் கொண்டவை. வட்டவடிவிலான இலையின் ஓரங்கள் மடங்கி, பெரிய தட்டு போல இருக்கும். இலைகளின் அடிப்பகுதியில், கூரிய இளஞ்சிவப்பு நிற முட்கள் இருக்கும். இலைகளைத் தாங்கும் தண்டு உறுதியானது. 8 மீ. நீளம் உடையது. இந்த இலைகள், 30 கிலோ வரை எடை தாங்கும். குழந்தைகள் அமர்ந்தாலும் இலை நீரில் மூழ்காது.
இதன் மலர், 40 செ.மீ. நீளம் இருக்கும். இரவில் நறுமணத்துடன் பூக்கும். இரண்டு நாட்களில் வாடிவிடும். முதல் நாள் வெள்ளை நிறத்தில் இருக்கும். வண்டுகளால் மகரந்தச் சேர்க்கை முடிந்த அடுத்த நாளில் இளஞ்சிவப்பாக மாறிவிடும்.
பூக்களின் உள்ளிருக்கும் கதகதப்பால், வண்டுகள் இரவு முழுவதும் பூவுக்குள்ளேயே தங்கிவிடும். அடுத்த நாள், உடல் முழுதும் மகரந்தத்தை பூசியபடி, வேறு மலருக்குச் செல்லும்.
மாறிய பெயர்
இந்த அல்லியை, ‘டாடியாஸ் ஹீன்கி’ (Tadeas Haenke) என்பவர் 1801இல் கண்டறிந்தார். அப்போது, ‘யூர்யேல் அமேசானிகா’ (Euryale amazonica) எனப் பெயர் சூட்டினார். 1849இல் இம்மலர், ‘ஜோசப் பாக்ஸ்டன்’ (Joseph Paxton) என்பவரால் இங்கிலாந்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதன் முதல் மலர் விக்டோரியா மகாராணிக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
விக்டோரியா மகாராணியைக் கௌரவிக்கும் விதமாக, இதன் தாவரவியல் பெயர் ‘விக்டோரியா ரிஜியா’ (Victoria regia) என மாற்றப்பட்டது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

பூமியின் நுரையீரல்

உலகின் பெரிய மழைக்காடு அமேசான் மழைக்காடுகள். தென் அமெரிக்காவின் அமேசான் படுகையில் பரவிப்படர்ந்திருக்கிறது. இதன் பரப்பளவு 70 லட்சம் ச.கி.மீ.
இது பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகிய ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. பிரேசிலில் மட்டுமே 60 சதவீதக் காடுகள் உள்ளன. உலகிற்கு 20 சதவீதம் ஆக்சிஜனைக் கொடுக்கும் இந்த வனப்பகுதி, பூமியின் நுரையீரல் என்று அழைக்கப்படுகிறது. 350க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்களைச் சேர்ந்த, 9 லட்சம் பூர்வகுடி மக்கள் இங்கே வசிக்கிறார்கள்.
தங்கச்சுரங்கங்கள், விதிகளுக்குப்புறம்பாக விலங்குகளையும் மீன்களையும் வேட்டையாடுதல், சோயா, யூகலிப்டஸ் விவசாயத்திற்காகக் காடுகளை அழித்தல், இயற்கை வளங்களைச் சுரண்டுதல் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற காரணங்களால் அமேசான் காடு தற்போது அழிந்து வருகிறது. கடந்த 29 ஆண்டுகளில் 40 சதவீதம் அழிந்துவிட்ட அமேசான் காடுகளைப் பாதுகாப்பது மிக அவசியம் என்று சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சர்வதேச நிறுவனமான ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ (World Wide Fund for Nature – -WWF) இந்தக் காடுகளைக் காப்பாற்ற பெருமுயற்சி எடுத்து வருகிறது.

அமேசான் நதி – உலகின் இரண்டாவது நீளமான நதி 4,100 கி.மீ.

உலகில் வாழும் தாவரங்கள், உயிரின வகைகளில் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்கின்றன. இங்கு ஆண்டுதோறும் புதிய வகை உயிரினங்கள் கண்டறியப் படுகின்றன. 1999 முதல் 2015 வரையிலான காலத்தில் மட்டுமே இங்கு முன்பு அறியப்படாத 216 தாவரங்கள், 93 மீன்கள், 32 நில நீர் வாழிகள், 20 பாலூட்டிகள், 19 ஊர்வன மற்றும் ஒரு பறவை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.

25 லட்சம் – பூச்சி இனங்கள்
10,000 – தாவர இனங்கள்
2,000 – பறவை இனங்கள்

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

பூண்டுகளுக்குத் திருவிழா!

உலகின் மிகத்தரமான பூண்டு உற்பத்தி செய்யும் கலிஃபோர்னியாவின் கில்ராய் (Gilroy) நகரம் ‘உலகின் பூண்டுத் தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது. ‘கில்ராய் பூண்டுகள்’ உலகப் பிரசித்தம் பெற்றவை. பூண்டு சாகுபடிக்குத் தேவையான வளமான நிலமும் பொருத்தமான காலநிலையும் இருப்பதால் இங்கு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இங்கு நடைபெறும் பூண்டுத் திருவிழா, அமெரிக்காவில் நடக்கும் உணவுத் திருவிழாக்களிலேயே மிகப்பிரம்மாண்டமானதாகும். இசை நிகழ்ச்சி, பூண்டு அழகிப் போட்டி, பேச்சுப்போட்டி, சமையல் போட்டி, கைவினைப்பொருட்கள் விற்பனை, பூண்டு வகைகளின் கண்காட்சி, விற்பனை என பூண்டுத் திருவிழா பல்வேறு அம்சங்களுடன் களைகட்டும்.
பூண்டுத் திருவிழா 1979ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு கலந்த விதவிதமான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாகும். உலர்ந்த பூண்டுச்செடியின் இலைகளில் தயாரிக்கபட்ட இருக்கைகள், கைவினைப்பொருட்கள், பூண்டு வடிவக் கூடாரங்கள், பொம்மைகள், பூண்டு பலூன்கள் என எங்கெங்கிலும் பூண்டு மயம்தான்! அத்தனை பார்வையாளர்களுக்கும் இலவசமாக பூண்டு ஐஸ் கிரீம் வழங்கப்படும்.
திருவிழா நடக்கும்போது புகழ்பெற்ற சமையல் நிபுணர்கள், உணவு தயாரிக்கும் முறைகளை செய்து காட்டும் ‘தழல் சமையல்’ (Flame Cooking) இங்கு மிகப்பிரபலம். ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு கோடிப் பார்வையாளர்கள் உலகம் முழுவதிலிருந்து இதில் கலந்துகொள்கின்றனர், பார்வையாளர்களுக்கும் பூண்டுச் சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்படும். இவ்விழாவில் தயாரிக்கப்படும் உணவுகளுக்குத் தேவையான பொருட்கள் அந்தப் பகுதியில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களிலிருந்தே தயாரிக்கப்படும்.
நம் நாட்டிலும் இதுபோல ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம், பண்ருட்டி பலாப்பழம், காஷ்மீர் குங்குமப்பூ என பல சிறப்புகள் இருக்கிறதல்லவா? அவற்றிற்கும் நாம் இப்படித் திருவிழாக்கள் ஏற்பாடு செய்து அவற்றை உலகம் முழுவதும் பிரபலமாக்க முயற்சி செய்யலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கொல்லும் அழகு

சூரியப் பனித்துளி
ஆங்கிலப் பெயர்: ‘கேப் சன்டியூ’ (Cape Sundew)
தாவரவியல் பெயர்: ‘டிரோசெரா கேபன்சிஸ்’ (Drosera capensis)

ஊனுண்ணித் தாவரங்களில் மிக அழகானது ‘கேப் சன்டியூ’. பசுமைமாறாத பல்லாண்டுத் தாவரமான இது 15 செ.மீ. உயரம் வரை வளரும். மெல்லிய தண்டுகளையும், நன்கு வளர்ந்த வேர் அமைப்பையும் உடையது. தண்டில் இருந்து 4 செ.மீ. நீளமும், 1 செ.மீ. அகலமும் உள்ள இலைகள் காணப்படும். இலைகளின் மேற்பரப்பிலும் ஓரங்களிலும் மெல்லிய இழைகளாக சிறு காம்புகள் உள்ள ‘டிரிக்ஹோம்ஸ்’ (Trichomes) எனப்படும் குமிழ்போன்ற சுரப்பிகள் காணப்படும். இந்த குமிழ்ச் சுரப்பிகள் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் வண்ணங்களில் பனித்துளிகளைப்போல நெருக்கமாக இருக்கும். பூக்கும் தண்டுகளில் இருந்து இளஞ்சிவப்பு பூக்கள் பூக்கும். சிறிதுநேரத்திற்கே மலர்ந்திருக்கும் இந்தப் பூக்களில் பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும். வெடிகனியில் மிகச்சிறிய கருப்பு விதைகள் இருக்கும்.
இலைகளில் இருக்கும் குமிழ்ச்சுரப்பிகளில் நொதிகள் (Encymes – என்சைம்ஸ்) நிறைந்த பசையைச் சுரக்கும். இனிப்புச் சுவையும், வாசனையும் உள்ள இந்தப் பசையால் ஈர்க்கப்பட்டு அருகே செல்லும் பூச்சிகள் அங்கேயே ஒட்டிக்கொள்ளும். ஒட்டிய பூச்சிகளின் உடலில் உள்ள சத்துக்களை இந்தச் செடி மெதுவாக கிரகித்து, செரிமானம் செய்துவிடும். மேலும் அதிக பசையைச் சுரந்து பூச்சியின் சத்துக்களை செடியின் பிற பாகங்களுக்குக் கடத்திவிடுகிறது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா. இது அலங்காரச் செடியாகவும் உலகின் பல பகுதிகளில் வளர்க்கப்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

« Older posts

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑