லோகமாதேவியின் பதிவுகள்

Month: May 2021

Sandeep Aur Pinky Faraar –தலைமறைவான சந்தீப்பும் பிங்கியும்

இந்தியாவின் இருவேறுபட்ட வாழ்வியலில் இருக்கும், முற்றிலும் வேறுவேறு தளங்களில் இயங்கும் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து பயணிக்க வேண்டிய அசாதாரணமான ஒரு பயணத்தில்   ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அவநம்பிக்கை, வெறுப்பு சந்தேகங்கள் வழியே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஒரு அழகிய கதையை சொல்லும் இந்தி திரைப்படமான இது 19, மார்ச் 2021அன்றுதிரையரங்குகளிலும்,பின்னர் அமேஸான் பிரைமிலும் வெளியானது.

 தயாரிப்பு மற்றும் இயக்கம் திபாகர் பானர்ஜி. விநியோகம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். பரினிதி சோப்ராவும் அர்ஜுன் கபூரும் முக்கிய கதாபாத்திரங்களில். உடன் நீனா குப்தாவும் , ரகுவீர் யாதவும் இருக்கிறார்கள்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஹரியானா காவலதிகாரி பிங்கி எனப்படும் சத்யேந்த்ராவும் ஒரு கார்ப்பரேட் வங்கியின் உயர்மட்ட பொறுப்பிலிருக்கும் சந்தீப் வாலியாவும் முதன்முதலில் சந்தித்த சில மணி நேரங்களிலேயே, அவர்கள் மீதான கொலை முயற்சிகளினால் உயிருக்கு அஞ்சி தலைமறைவாகி விடுவதும், தப்பிக்க மேற்கொள்ளும் பயணங்களும் போராட்டங்களும் தான் கதை.

மிகச்சாதாரணமாக காரில் மூன்று இளைஞர்கள் இளமைக்கே உரிய அசட்டுத்தனங்களும், கொந்தளிப்பும் சிரிப்புமாக பயணிப்பதில் டைட்டில்   துவங்கி, அவர்களின் எதிர்பாரா படுகொலையில்  படம் வேகமெடுக்கிறது. அந்த இளைஞர்கள் கடந்து வரும் காரில் நாயகனும் நாயகியும் இருக்கின்றனர்.

துவக்கத்திலிருக்கும் வேகம் பின்னர் மட்டுப்பட்டாலும் காதல், கர்ப்பம், நம்பிக்கை துரோகம், ப்ளேக் மெயில் பொதுமக்களின் பணத்தை ஏமாற்றும் பரிவர்த்தன் வங்கியின் ஒரு திட்டம், வாடகைக் கொலையாளி, பரினிதியின் கர்பத்தில் இருக்கும் குழந்தை, காவலர்கள்  வலைவீசி இருவரையும் தேடுவது என  சுவாரஸ்யமான திருப்பங்கள் நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது,

கர்ப்பமாயிருக்கும், ஆபத்திலிருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யபட்ட  இளம்பெண் பாத்திரத்தில் பரினிதி அர்ஜுன் கபூரை விடவும் பிரமாதப்படுத்தி நடித்திருக்கிறார். அலட்சிய இளைஞனாக அறிமுகமாகி தனக்கே தெரியாமல் தான் பலிகடா ஆக்க பட்டிருப்பதில் வெறுப்பாகி பரினிதியையும் வெறுத்து , பின் ஒரு கட்டத்தில் அவரை காப்பாற்றும் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளும் பாத்திரத்தில் அர்ஜுன் கபூரும் சிறப்பாக பொருந்துகிறார்.

நீனா குப்தாவின் வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கி இருக்கும் காட்சிகள் அழகு. கடைசி அரைமணி நேரத்தில் நேபாளத்தை தாண்டும் முயற்சிகள் சஸ்பென்ஸ் நிறைந்தவை. குறிப்பாக வங்கி மேலாளரின் திடீர் வன்முறை பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

அந்த நீண்ட பாலத்தில் சுட்டுக்கொல்ல தயாராக காத்திருக்கும் காவலதிகரிகளும் அப்பாலத்தை கடக்க காத்திருக்கும் திருமண ஊர்வலத்தில் மறைந்திருக்கும் சந்தீபும், பிங்கியுமாக இறுதிக்காட்சி பரபரப்பு . வழக்கமான பாலிவுட் படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்த படம் பெரியவர்களுக்கானது.

My Octopus Teacher

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் பல பாடங்களை பலரிடமிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறான். ’’கஷ்டமான அனுபவங்கள்தான் சிறந்த பாடங்கள்’’ என்பது ஒரு முதுசொல்லும் கூட. அப்படி  ஒரு திரைப்பட தயாரிப்பாளரின், சொந்த வாழ்வின் சிக்கல்களுக்கு  அசாதாரண சூழலில் வசிக்கும்   ஒரு கடலுயிரி அளித்த தீர்வையும், அந்த உயிரியுடனான  நெருக்கமான உறவையும் குறித்த   ஆவணப்படமான My Octopus Teacher.  நெட்ப்ளிக்ஸில் 2020 செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது

கிரெய்க் என்கிற ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும்,கெல்ப் காட்டின், கடல் வாழ் உயிரியான ஒரு  ஆக்டோபஸுக்கும் இடையிலான கற்பனை செய்யமுடியாத, நம்பமுடியாத நட்பை விவரிக்கும் ஒரு இயற்கை ஆவணப்படமான இது,உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து, இந்த வருடத்தின் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருது,(Oscar 2021) ,சிறந்த திருத்தப்பட்ட ஆவணப்படத்திற்கான ஏசிஇ எடி விருது,(American Cinema Editors Award, USA 2021)  மற்றும் சிறந்த ஆவணப்படத்திற்கான பாஃப்டா விருது (BAFTA Awards 2021) ஆகியவற்றை பெற்றிருக்கிறது. மேலும் சிறந்த ஒளி இயக்கத்திற்கான  விருதான Critics’ Choice Documentary Awards 2020, சிறந்த ஆவணப்பட இயக்கத்திற்கான சர்வதேச விருதான Guangzhou International Documentary Film Festival (GZDOC) 2020, சிறந்த ஆவணப்பட விருதான Houston Film Critics Society Awards 2021,சர்வதேச சிறந்த ஆவணப்பட விருதான International Documentary Association 2020.  Millennium Docs Against Gravity 2020, மற்றும்  சிறந்தஆவணப்பட தயாரிப்பிற்கான விருதான PGA Awards  2021அகியவற்றை அள்ளிக்குவித்துள்ளது.

கெல்ப் காடு, அல்லது கிரேட் ஆப்பிரிக்க கடல் வனப்பகுதி என்பது,  பல்லுயிர் வாழ்வு செறிந்திருக்கும் கடல் நீருக்கடியில் இருக்கும் காடு. கெல்ப் எனப்படுவது கடல் பூண்டு எனப்படும் மண்ணில் ஊன்றப்பட்டிருக்கும் அடிப்பகுதியுடன், மிதந்து கொண்டிருக்கும் நீண்ட் ரிப்பன்களை போன்ற இலைகளைக் கொண்டிருக்கும்,மாநிற கடற்பாசிகளான (BROWN ALGA/Sea Weeds) கீழ்நிலை தாவரங்கள். கெல்ப் காடுகளான ஆப்பிரிக்க கடல் காடுகள் இயற்கை அதியங்களில் ஒன்றாகும்,  பல வகையான அபூர்வ உயிரினங்களின் வாழ்வு  இங்கு நிறைந்திருக்கும்  

52 வயதான க்ரெய்க், கடலுக்கு அருகில் தான் வளர்ந்தார்,தனது குழந்தை பருவத்தின் பல ஆண்டுகளை  அருகிலுள்ள பாறைக் குளங்களுக்குள் நீச்சலில் கழித்திருந்தார் எனவே கடல் அவருக்கு மிகவும் பரிச்சயமான வாழிடம்.  கெல்ப் காடுகள் குறித்த ஒரு ஆவணப்படம் எடுக்கும் பொருட்டு, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் துறையின் எமரிட்டஸ் பேராசிரியர் சார்லஸ் எல். கிரிஃபித்ஸின் வழிகாட்டுதலுடன், பல ஆண்டுகளாக இந்த கெல்ப் காட்டை  ஆராய்ந்து கொண்டிருந்த கிரெய்க் பின்னர், பேராசிரியரிடம்  பி.எச்.டி பட்டம் பெற்றிருந்த இளம் டாக்டர் ஜேன்ஸ் லேண்ட்ஷாஃப்பு’டன்  இணைந்து பணியாற்றத் தொடங்கினார், கெல்ப் காட்டின்  அனைத்து உயிரிகள்  மற்றும்  அவற்றின் நடத்தைகளை அடையாளம் காணவும், வகைப்படுத்தவுமான. மிகக்கடினமான தனித்துவமான பணியை  க்ரெய்க்  மேற்கொண்டிருந்தார்.   அவர் ஒவ்வொரு நாளும் அந்த அசாதாரண சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்தபடி, தான் பார்த்த அனைத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டிருந்தார். 

எதிர்பாராமல், க்ரெய்க்  2010 ஆம் ஆண்டில் கடலுக்கடியிலான இந்த கெல்ப் காட்டில் ஒரு ஆக்டோபஸை முதலில் சந்திக்கிறார். அதனை தினமும் கவனித்தபடி இருக்கையில் அதன் புத்திசாலித்தனத்தையும் சமயோசித புத்தியையும் அறிந்துகொண்டபோதுதான், ஆவணப்படுத்துதலில்  தனக்கு ஒரு  உணர்வுபூர்வமான கதையும் இருப்பதை உணர்கிறார்.

தன்னந்தனியே பல ஆண்டுகளாக,  நீரடி வாழ்வை ஆவணப்படுத்திக்கொண்டிருந்த க்ரெய்க் பின்னர் இந்த ஆக்டோபஸினை ஆவணப்படுத்துவதில், ​​விருது பெற்ற கேமரா ஆபரேட்டரும் கிரெய்கின் பழைய நண்பருமான ரோஜர் ஹாராக்ஸையும் இணைத்துக் கொண்டார். இருவரும் பலநாட்கள் நூற்றுக்கணக்கான மணி நேரங்கள் நீருக்கடியில் கழித்து,  பிபிசியின் ப்ளூ பிளானட் II க்கான ஒரு தொடரை உருவாக்கினர்.

2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அவரின் இந்த  ஆக்டோபஸுடனான அசாதாரண நீருக்கடியிலான அனுபவங்களை ஒரு ஆவணப்படமாக வடிவமைக்க சிறப்பு கடல் பாதுகாப்பு பத்திரிகையாளர், கதைசொல்லி மற்றும் இளம் திரைப்படத் தயாரிப்பாளருமான பிப்பா எர்லிச்  படமாக்குதலில் இணைந்தார். பின்னர் படத்தொகுப்பிலும் பிப்பா பெரிதும் உதவினார்.

 கிரெய்க் மற்றும் பிப்பா இருவருக்கும் ஆக்டோபஸின் கதையை ஒரு ஆக்டோபஸின் மனநிலையிலேயே சொல்லவேண்டும் என தோன்றியது, அப்போதுதான் அக்கதை உணர்வுபூர்வமாக இருக்கும்  என அவர்கள் நம்பினர். 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில்,  ஏறக்குறைய ஒரு வருட காலம் நடந்துகொண்டிருந்த படத்தொகுப்பினிடையே , கனடாவின் லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆக்டோபுஸ் உளவியலாளரும் ஆக்டோபஸ் நடத்தை வல்லுநருமான டாக்டர் ஜெனிஃபர் மாதர் கேப் டவுனுக்கு வந்து, சில முக்கியமான  அறிவியல் ஆலோசனைகளுடன் அவர்களுடன்  படத்தொகுப்பில் இணைந்தார்.

 கிரெய்க் படம்பிடித்திருந்த  சிக்கலான விலங்கு நடத்தைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள விரிவான அறிவியல் உள்ளீடு களும் தேவையாக இருந்தது.

ஒப்பீட்டளவில் பிற ஆவணப்படங்களை போலல்லாமல் கெல்ப் காடுகளின் அதீத குளிர் நீர், குறைந்த மற்றும் அடிக்கடி மாறுபடும் ஒளி, அறியா கடல் உயிரிகள் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என  இந்த படப்பிடிப்பு, படக்குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது.

அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர்ந்த, ஓரளவு ஆழமற்ற நீரில் பல ஆண்டுகளாக தினசரி டைவிங் செய்த அவர், ஸ்கூபா அல்லது  வெட் சூட்டு கள் எனப்படும் நீச்சல் ஆடைகளின்றி,  நீரின் குளிர்ச்சியை சமாளிக்க தனது உடலை பழக்கினார்..பிப்பாவும் தனது உடலை இந்த வழியில் பயிற்றுவித்தார்.

 எளிமையாக துவங்கும் படம், ஆக்டோபஸ் தன்னை ஷெல்களால் சுற்றிக் கொண்டு மாறுவேடமிட்டு கொள்ளும் போது ஆர்வத்தை தூண்டுகிறது. க்ரெய்க் ஆக்டோபஸை முதலில்  பார்க்கையில்  அது பயந்தபடி தன் உணர் நீட்சிகளை பின்னுக்கிழுத்துக்கொண்டு தப்பிக்க தயாராக ஜாக்கிரதையாக இருப்பது, பின்னர் அவரை மெல்ல மெல்ல பரிச்சயம் பண்ணிக்கொண்டு அவரது இருப்பை உணர்ந்தபடியே கடலுக்குள் தனது வழக்கமான வாழ்வை தொடருவது, க்ரெய்க் ஒருநாள் மெல்ல தன் விரலை நீட்டுகையில் அதுவும் தயங்கியபடி தன் கைநீட்சியொன்றினால் அவரைத் தொடுவது பின்னர் அவர் மீதே படுத்துக் கொள்வது அவருடனே நீந்துவது அவரை சுற்றிசுற்றி வருவது என அவர்களிருவருக்குமான உறவு அத்தனை பிரமிப்பூட்டும்படி இருக்கிறது. க்ரெய்க் ஆக்டோபஸை குறித்து பேசுகையில் பிரியமான ஒரு தோழியை குறித்து பேசும் உடல்மொழி தான் இருக்கிறது.

ஆவணப்படத்தில் பார்த்தபடி, கிரெய்க்கிற்கு   டாம் என்னும்  ஒரு மகன் இருக்கிறார்( முன்னாள் மனைவியுடனான வாழ்வில் பிறந்த மகன்). க்ரெய்க்  தற்போது இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரும், நிருபருமான  சென்னை பெண்ணுமான ஸ்வாதி தியாகராஜனை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஸ்வாதி,தென்னாப்பிரிக்காவின் கெல்ப் காடு மற்றும் கடல் வாழ்வைப் பாதுகாக்கும் அமைப்பான கடல் மாற்ற திட்டத்தின் முக்கிய உறுப்பினராக உள்ளார்(Sea change) 

காமிராவின் துல்லியம் வியப்பூட்டுகிறது. படம் பார்க்கையில் க்ரெய்க்குடன் நாமும் அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர் நீல நீரில் மூழ்கி, நீந்திச்செல்கிறோம்,நம்மை சுற்றிலும் வளர்ந்து நெருக்கும் கெல்பைக் கண்டு  திணறுகிறோம், க்ரெய்க் கடற்கரையில் வெறுங்காலுடன் நடந்து செல்லும்போது  காலடியில் நெருடும் வெள்ளை மணல் துகள்களை கூட உணர்கிறோம். 

 மூச்சுக்காற்றுக்கு ஆக்சிஜன் தொட்டிகளை கூட எடுத்துக் கொள்ளாமல், தனது தோற்றம் ஆக்டோபஸை எந்த விதத்திலும் அச்சுறுத்த கூடாதென்று கவனமாக இருக்கும் க்ரெய்க்கின் அர்ப்பணிப்பும், அந்த எளிய உயிரியின் மீதான அன்பும் ஆச்சரயபப்டவைக்கின்றது

 தனது புதிய நண்பரான அந்த பெண் ஆக்டோபஸினை நன்கு புரிந்துகொள்ள உதவுவதற்காக, தினமும், க்ரெய்க் வீட்டிற்கு திரும்பி விஞ்ஞான இதழ்களில் உள்ள கடல் உயிரினங்களை பற்றிய ஏராளமான கட்டுரைகளை படிக்கிறார். “மற்ற கடல் உயிரினங்களையும் அறிந்து கொள்ள அவள் எனக்குக் கற்றுக் கொடுத்தாள்”, என்று படத்தில் க்ரெய்க் பகிர்ந்து கொள்கிறார்.‘ஆக்டோபஸ்கள் இரவுநேர உயிரினங்கள்’ என்று படித்தறிந்த பிறகு, இரவிலும் நீரில் மூழ்கி, அவளது வேட்டையை கவனிக்கிறார்

   ஆக்டோபஸ்  தொடர்ந்து உடலெங்கும் வரிக்கோடுகளிட்டிருக்கும் பைஜாமா சுறா  என்னும்  வேட்டை விலங்குகளால் துரத்தப்படுவதை, பல தப்பித்தல்களுக்கு பிறகு அவற்றினால் ஆக்டோபஸ்  காயமுற்று நோய்வாய்ப்படுவதை , வேட்டைக்கும் செல்லமுடியாமல் உணவின்றி குகைக்குள்ளேயே பலநாட்கள் இருந்ததை பின்னர் வெட்டுப்பட்ட உணர்நீட்சி மீண்டும் புதிதாக முளைத்து புதிய வாழ்வை முன்புபோலவே துவங்குவதை எல்லாம் க்ரெய்க் கவனித்து ஆவணப்படுத்துகிறார்.

.தனது சொந்த வாழ்வின்சிக்கல்களிலிருந்தும், துயர்களிலிருந்தும்  மீண்டு வர இந்த ஆக்டோபஸ் வாழ்க்கைப்பாடம் தனக்கு உதவியாக இருந்ததை க்ரெய்க் உணர்கிறோம்..தங்கள் இருவரது வாழ்வும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக நம்பும் க்ரெய்க், அத்தனை சிறிய உயிரி தன்னை தற்காத்துக் கொண்டு ஆபத்திலிருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்ததை தனக்கான பாடமாகக் கொண்டு தானும் வாழ்வின் இயங்கியல் சிக்கல்களிலிருந்து மீள்கிறார்.

  ​​அத்தனை சுமுகமாயில்லாதிருந்த  தன் மகனுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்ட க்ரெய்க்  மகனுடன்,  டைவிங் செய்து, அவரையும் ஆக்டோபஸை சந்திக்க வைக்கிறார். 

சுமார் 320 வது நாட்கள், க்ரெய்க்கின் தொடர்ந்த ஆவணபடுத்துதலுக்கு பிறகு,அந்த  ஆக்டோபஸ் ஒரு ஆண் ஆக்டோபஸை சந்தித்து,  இனச்சேர்க்கை. நடைபெற்று கருவுருகின்றது

ஒரு ஆக்டோபஸின் வாழ்க்கைச் சுழற்சியில் பெண் ஆக்டோபஸ் உடலின் பெரும்பகுதி முட்டைகளை பராமரிக்கவும், பின்னர் குஞ்சு பொரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.மெல்ல மெல்ல தன் அடுத்த தலைமுறைக்கு தனதுடலை தியாகம் செய்துவிட்டு இரக்கமற்ற இந்த புவியின் விதிகளுக்கு தன்னை எந்த புகாருமின்றி  ஆக்டோபஸ் ஒப்புக்கொடுத்து மரணிப்பது பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறது , இறுதியில் ஒரு பைஜாமா சுறா வந்து அவளது உடலை எடுத்துச் செல்கையில் நாம் கண்ணீருடன் தான் அக்காட்சியை பார்க்க முடியும். 

இனி  இறைச்சி கடைகளில்  கூட்டமாக ஒன்றின் மீதொன்றாக கிடத்தப்பட்டிருக்கும், நிலைத்த விழிகளும் வெறித்த உடலுமாக கிடக்கும் கடலுயிரிகளை பார்க்கையிலெல்லாம் நமக்கு  இந்த ஆக்டோபஸ் நினைவுக்கு வரும்.குடும்பத்துடன், குறிப்பாய் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய முக்கியமான, அருமையான படம் இது

ஆக்கிரமிப்பு தாவரங்கள்

லந்தனா கமாரா

 ஒரு பிராந்தியத்தில் இயற்கையாக தோன்றியிராத, ஆனால் அவை அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பகுதியில் பல்கிப்பெருகி, இந்த புதிய வாழ்விடங்களில், பூர்வீக பல்லுயிர் பாதிப்பு, பொருளாதார இழப்புக்கள் , மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்துக்கு கேடு விளைவித்தல் போன்ற பல எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற தாவரங்களே  ஆக்கிரமிப்பு தாவரங்கள்.(Invasive plants).

  உணவுப் பொருட்கள், உரங்கள், வேளாண் இடுபொருட்கள் இறக்குமதியாகும் போது அவற்றுடன் கலந்து இப்படியான ஆக்கிரமிப்பு தாவரங்களின் விதைகள் தவறுதலாக ஒரு புதிய சூழலுக்கு அறிமுகமாகும்.. பல  சந்தர்ப்பங்களில், அலங்கார, மலர் வளர்ப்பு அல்லது விவசாய பயன்பாடுகளுக்கு வேண்டுமென்றே அறிமுகப்படுத்தப்பட்ட  தாவரங்களும் ஆக்கிரமிப்பு தாவரங்களாக மாறிவிடுவதுண்டு

 உதாரணமாக வெப்பமண்டல அமெரிக்க புதர் லந்தானா (Lantana camara லந்தனா கமாரா) 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் ஒரு அலங்கார தாவரமாக அறிமுகப்படுத்தப்பட்டது; இது இப்போது கிராமங்கள், விளைநிலங்கள், நகர்புறங்கள், அடர் காடுகள் உள்ளிட்ட பல்வேறு நிலப்பரப்புகளை ஆக்கிரமித்திருக்கிறது.

ஆக்கிரமிப்பு  தாவர இனங்கள் குறுகிய வாழ்க்கைச் சுழற்சிகளைக் கொண்டுள்ளன, இனப்பெருக்கத்தில் அதிக கவனம் கொண்டு,மிக அதிக அளவில் விதைகளை உற்பத்தி செய்து, வேகமாக முளைத்து,அதிகமாக  பரவுகின்றன..மேலும் பல ஆக்கிரமிப்பு தாவரங்கள் ‘பினோடிபிக் பிளாஸ்டிசிட்டி’  Phenotypic plasticity  எனப்படும் ஆக்கிரமித்திருக்கும் புதிய  வாழ்விடங்களுக்கேற்ப மாறும் திறனையும் கொண்டிருக்கின்றன.. பெரும்பாலும், மனிதர்களாலும், சாலைப் போக்குவரத்து, மற்றும் கால்நடை மேய்ச்சல் ஆகியவற்றினால் ஆக்கிரமிப்பு தாவரங்கள்  பல்கிப் பெருகுகின்றன.

 .2015 ஆம் ஆண்டில் மேற்குத் தொடர்ச்சி மலையின் வால்பாறை பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் ,  குரோமோலேனா ஓடோராட்டா, லந்தானா மற்றும்  தோட மரமாக அறிமுகமான குடை மரம் எனப்படும் மீசோப்சிஸ் எமினி (Siam weed Chromolaena odorata, lantana and umbrella tree Maesopsis eminii) ஆகியவற்றினால்  அச்சூழலின் இயல் தாவரங்களுக்கு உண்டாகியிருக்கும் குறிப்பிடத்தக்க இடையூறுகள் கண்டறியபட்டது. இது சமீபத்திய ஒரு முக்கிய உதாரணம்

குடை மரம்

2017 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு  ஆய்வு இந்தியாவில் மட்டும் சுமார் . 200 க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனங்கள்  உள்ளதால், உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக்கிரமிப்பு தாவரங்களைக் கொண்ட பிராந்தியங்களில் ஒன்றாக இந்தியாவையும் சுட்டுகின்றது. முன்னர் குறிப்பிட்ட லந்தானாவுடன், பார்த்தீனியம், சியாம் களை, மெக்ஸிகன் பிசாசு (ஏகெரடினா அடினோஃபோரா-Ageratina adenophora ) மற்றும் கருவேலம் (புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா- Prosopis juliflora) ஆகியவை இந்தியாவின் மிகவும் மோசமான ஆக்கிரமிப்புகளில் சில. வெங்காயத்தாமரை (ஐக்கோர்னியா கிராசிப்ஸ்- Eichhornia crassipes) பல உள்நாட்டு நீர் நிலைகளை முற்றிலும் ஆக்கிரமித்துள்ளது., பொன்னாங்கண்ணி கீரை போலவே இருக்கும்  அலிகேட்டர் களையான  (ஆல்டர்னான்திரா பிலாக்ஸீராய்டெஸ்-Alternanthera philoxeroides) இந்தியாவில் நீர்வாழ் மற்றும் நிலப்பரப்பு வாழ்விடங்களை  வெகுவாக ஆக்கிரமித்திருக்கிறது. இவற்றில் மிக குறிப்பிட்டு சொல்லும்படியான உலகளாவிய இடையூறுகளை கொடுத்துக் கொண்டிருப்பது பார்த்தீனியம் களைச்செடி

உலகளவில், ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிரில்லியன் டாலர்கள் செலவிடப்படுகிறது. சில ஆக்கிரமிப்பு களைகள் உள்ளூர்  பொருளாதாரத்தை எதிர்மறையாகவும் பாதிக்கலாம்.  

இக்களைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் வழங்கக்கூடும் என்றாலும், விவசாயத்தில் விளைச்சலைக் குறைக்கின்றன, . சில ஆழமான வேரூன்றிய ஆக்கிரமிப்பு களைகள் மண்ணிலிருந்து  ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொள்ளுகின்றன. இன்னும் சில பயிர்களை தாக்கும் பூச்சி இனங்களுக்கு உணவுகளை வழங்குகின்றன.

அலிகேட்டர் களை

  மேய்ச்சல் நிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட பல களைகள் பூர்வீக தீவன தாவரங்களுடன் போட்டியிடுகின்றன, மேய்ச்சல் நிலங்களில் ஆக்கிரமிப்பு களைகளிலிருந்து தீவன இழப்பு அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.  மகரந்தச் சேர்க்கை களில் இடையூறு மற்றும் பழ உற்பத்தியில் இழப்பு ஆகியவையும் இவற்றின் ஆக்கிரமிப்பால் எற்படுகின்றன.

 காலநிலை மாற்றங்களுக்கும் காரணமாக இருக்கும் இந்த ஆக்கிரமிப்பு தாவர  இனங்களால் உண்டாகி இருக்கும்  சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் பெரும்பாலும் சர்வதேச அளவில் இல்லாமல் உள்நாட்டு அளவில் தான் கவனிக்கப்படுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த சர்வதேச அளவிலான ஒருங்கிணைந்த செயல் திட்டம் கொண்டு வரப்பட்டால் இவற்றை மெல்ல மெல்ல குறைக்கவும் அழிக்கவும் முடியும்

வெங்காய தாமரை

“காகித மலர் – ழ்ஜான் பாரெ”

ழ்ஜான் பாரெ[1]

இன்றிலிருந்து ஏறத்தாழ  250 வருடங்களுக்கு முன்னர் பிப்ரவரி 1, 1766 அன்று  பாரிஸின்  ரோஷ்ஃபோர் துறைமுகத்திலிருந்து பூடேஸ் என்னும் கடற்படை கப்பலும்[2] அதற்கு தேவையான எரிபொருள்கள் மற்றும் உணவுகளுடன் இன்னொமொரு சிறிய கப்பலான இட்வாலும்[3]  இணைந்து  ஒரு புதிய தேடல் பயணத்தை துவங்கின.

102 அடி நீளமும் 33 அடி அகலமும் கொண்ட இட்வால், 480 டன் எடை கொள்ளும்; எட்டு அதிகாரிகள் மற்றும் 108 பணியாளர்கள் அதிலிருந்தனர்.

பூடேஸ் மிக உயரமான பெரிய  விரைவுக் கப்பல், அதை துறைமுகங்களில் நிறுத்துகையில்,  கட்டிவைக்கவே  25 மைல்களுக்கு மேல் கயிறு தேவைப்பட்டது. 

அப்போது ஃப்ரான்ஸின் கடற்படை கப்பல் பயணங்களில் பெண்கள் பயணிக்க சட்டப்படி தடை இருந்ததால், இரண்டு கப்பல்களிலும் சேர்த்து  400 ஆண்கள் மட்டும் இருந்தனர். .இந்த பயணத்தின் தளபதி , ஒரு சிறந்த விஞ்ஞானி, கணிதவியலாளர், சிப்பாய், மீகாமன், இராஜதந்திரி மற்றும் ஃப்ரான்ஸின் அரசரான பதினைந்தாம் லூயியின் நண்பருமான ’’லூயி ஆன்ட்வான் டு பூகென்வீயெல்.’’[4]

 “இண்டீஸ் மற்றும் அமெரிக்காவின் மேற்கு கடற்கரைகளுக்கு இடையில் உள்ள நிலங்களை‘ ஆராயுங்கள், நமது சேகரிப்புக்களும் கண்டுபிடிப்புகளும்  மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும்  மேலும் ஃப்ரான்சுக்கு பயனுள்ளதாக இருக்கும் எதையும் கையகப்படுத்த வேண்டும்,’’  இதுவே பூகென்வீல்ல கப்பல் பயணிகளுக்கும் பணியாளர்களுக்கும் பயணத்தின் துவக்கத்தில் சொன்னது.

இந்த பயணத்திற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, (1756─1763) ல் நடந்த பிரெஞ்சு-(அமெரிக்க)இந்தியப் போரில், ஃப்ரான்ஸ் வட அமெரிக்காவில் தனது நிலப்பரப்பை இழந்திருந்தது. இங்கிலாந்துடன் நடந்த போர்களின் போது இழந்த பெருமைகளை மீண்டும் பெற  விரும்பிய ஃப்ரான்ஸ், உலகெங்கிலும் பயணம் செய்வதற்காகத் துவக்கிய பல கடற்பயணங்களில் இதுவே முதலாவது. தென் பசிஃபிக் பகுதியில் காலனித்துவ புறக்காவல் நிலையங்களை நிறுவுவதும் இப்பயணத்தின் ஒரு ரகசிய குறிக்கோளாக இருந்தது.

18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கடல் பயணங்களை மேற்கொள்வது என்பது மிகவும் ஆபத்தானதாகவே இருந்தது.  சென்று சேரவேண்டிய இடத்தை அடைவதில்  நிலவிய  நிச்சயமற்ற தன்மையும், உணவுப் பற்றாக்குறை, விபத்து, நோய் மற்றும் கடல்கொள்ளை ஆகியவற்றின் அச்சுறுத்தல்களும்  எப்போதும் இருந்தன.

கடற்படை கப்பல் பூடேஸ்

13ஆம் நூற்றாண்டில் இருந்துதான் புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடல்சார்வியல், வானிலை ஆய்வு ஆகியவற்றிற்கான முன்னெடுப்புக்களுக்காகக் கடற்பயணங்கள்  அதிக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டன.

அறிவியல் ஆய்வின் புதிய சகாப்தம் 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான்  தொடங்கியது,  அறிவியல் சங்கங்களை நிறுவி, இயற்கை வரலாற்றாசிரியர்கள்,  பத்திரிகைகளில் வெளியிட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள்  பெரும் புகழை பெறத் துவங்கியிருந்த காலமும் அதுதான். என்வே உலகின் ஆராயப்படாத பகுதிகளின் தாவரங்களையும் விலங்குகளையும் கண்டுபிடித்து ஆய்வு செய்ய பிற நாடுகளைப் போலவே  ஃப்ரான்ஸும் விழைந்தது.

பயணத்தின் மற்றொரு குறிக்கோள், ஃப்ரெஞ்சு தோட்டங்களுக்கான உணவுப் பயிர்கள், மருந்துகள் மற்றும் அழகிய மலர்ச்செடிகளை கண்டுபிடிப்பதாகும். ஏனெனில் தோட்டக்கலை அப்போது வெகு பிரபலமாக இருந்தது.

கம்மர்சன்

இந்த கப்பல் பயணத்துக்குச் சில மாதங்கள் முன்பாக, ஃப்ரான்ஸில் பூங்காவொன்றின் பசுமை போர்த்தியிருந்த  நடைபாதையில் ஓங்குதாங்கான ஆகிருதியுடனிருந்த  தாவரவியலாளர் ஃபிலிபேர் கம்மர்சனிடம்[5] அவரது உதவியாளரா[6]ன ஒல்லியான உயரமான  ‘பாரெ’ ஆயிரமாவது முறையாக கேட்டார் ‘’நீங்கள் உறுதியாகத்தான் சொல்லுகிறீர்களா? பிடிபட்டால் இருவருமே சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருக்கிறீர்களா?’’

கம்மர்சன் பதிலுக்கு, ’’இல்லை, பிடிபட வாய்ப்பேயில்லை உன்னால் இதை திறம்பட செய்ய முடியும் எனக்ககாக செய்ய மாட்டாயா இதை?” என்றார். பாரெடிடமிருந்து சிறிதும் தயக்கமின்றி பதில் வந்தது’’ நிச்சயம், உங்களுக்காக நான் எதையும் செய்வேன்.’’

பின்னர் சில நாட்களிலேயே  கம்மர்சன் பாரெடிடம், “பிரெஞ்சு அரசால் அங்கீகரிக்கப்பட்ட தாவரவியலாளர்கள் என்ற வகையில், என்னுடையதுடன், உன் பெயரையும் உலகெங்கிலும் செல்லப்போகும் ஒரு பயணத்துடன் இணைத்திருக்கிறேன்,”  என்றார்

லூயி ஆண்ட்வான் டி பூகென்வீல்லி

“புகழ்பெற்ற லூயி ஆண்ட்வான் டி பூகென்வீல்லயின் தலைமையில் ஒரு பயணம்,” என்ற பாரெ புன்னகையுடன் கூறினார, “நிச்சயமாக  எனக்கிது ஒரு பெரிய மரியாதை, அத்தகைய பெரிய அட்மிரல் மற்றும் ஆராய்ச்சியாளருடன் இணைந்திருப்பதும், உங்களுடன் பயணிப்பதும்.”

ரோஷ்ஃபோர் துறைமுகத்தில் பூகென்வீல்லயின் தலைமையிலான தேடல் பயணத்தில் பாரெ மற்றும் கம்மர்சன் இணைந்தனர். கம்மர்சன் முதலிலும், கப்பல் புறப்படுவதற்கு சற்று முன்னர் கம்மர்சனுக்கு அறிமுகமற்றவர் போல பாரெடும் வந்து, அவருக்கு அந்தப் பயணத்தில் உதவியாளனாக இருக்க 3 ஆண்டுகளுக்கு ஒத்துக்கொண்டு கையெழுத்திட்டு பயணத்தில் இணைந்தார்.

அவர்கள்  இருவரும்  இட்வாலில் பயணம் செய்யும்படி ஏற்பாடானது. ஏனெனில், கம்மர்சன் கொண்டு வந்திருந்த   தாவரங்களை சேகரிக்கவும், உலரவைத்து பாடமாக்கவுமான ஏராளமான உபகரணங்கள் காரணம். இட்வால் கப்பலின் கேப்டன் ’ஃப்ரான்சுவா செனார்ட் டி லா கிராடாய்ஸ்’, கப்பலில் தனக்கான  கழிப்பறையுடன் இணைந்திருந்த பெரிய அறையை கம்மர்சன் மற்றும் அவரது புதிய “உதவியாளருக்கு” விட்டுக் கொடுத்தார்.

முதல் சில மாதப்  பயணத்தில் சொல்லிக்கொள்ளும்படியான சேகரிப்புக்களும், கண்டுபிடிப்புகளும் இன்றி பயணம் சாதாரணமாகவே இருந்தது, வழியில் பல இடங்களில் கப்பல் கரையணைந்து கொண்டே இருந்தது.

கப்பல் கரை சேரும்போதெல்லாம், நிலப்பரப்பில் கம்மர்சனும், பிற பயணிகளும் எளிதில் செல்ல முடியாத இடங்களுக்கு பாரெ துணிந்து சென்றார். அவர்களால் சுமக்க முடியாத பல சுமைகளை  எளிதாக அவர் எடுத்துச் சென்றார். கம்மர்சனுக்கு தேவையான அனைத்தையும் முன்னின்று அதிக அக்கறையுடன் செய்துவந்தார். பெரும்பாலான  கரையணைதல்களில்,  நோய்வாய்ப்பட்டிருந்த கம்மர்சனை ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லிவிட்டு பாரெ தானே தாவரங்களை ஆராய்ந்து, குறிப்பெடுத்து,  அவற்றை   உலர்த்தி, பாடமாக்கி, சேகரிப்பதைச் செய்தார்.

கப்பல் ரியோ த ஹனைரோ[7] சென்றபோது, அங்கிருந்த கடுமையான வன்முறை நிறைந்த சூழலில் இட்வால் கப்பலின் பாதிரி ஒருவர் கொல்லப்பட்டிருந்தார். அப்படியும் பாரெ அங்கிருந்து  முக்கியமான பல நூறு தாவரங்களை சேகரித்தார்

ஜூன் 21, 1767 இல்  தென் அமெரிக்காவின் ரியோ த ஹனைரோவின் எல்லையில் உள்ள கடற்கரையில், கம்மர்சன்  காலில் இருந்த ஆறாக்காயத்திற்கான பெரிய கட்டுடன் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, கடலை ஒட்டி வளர்ந்திருந்த  புதிய பல தாவரங்களை  கத்தரித்து மரக்கட்டைகளால் உருவாக்கப்பட்டிருந்த அழுத்தும் கருவிகளில் வைத்து பாதுகாத்து கொண்டிருந்த பாரெயைப் பார்த்துக்கொண்டிருந்தார்

திடீரென பாரெ  ஒரு கொடியை துண்டித்து கொண்டு வந்து உற்சாகமாய் ’’இங்கே பாருங்கள், இது எத்தனை அழகு,’’ என்று கூவினார்,

பாரெ கொண்டு வந்த பளபளக்கும் இலைகளை கொண்டிருந்த  நீண்ட உறுதியான  கொடியையும் அதன் பிரகாசமான காகிதங்களைப் போல இருந்த இளஞ்சிவப்பு மலர்களையும் சோதித்த கம்மர்சன் அசந்துபோனார்.

’’பாரெ, இம்மலர்கள் மிக அழகியவை’’என்ற கம்மர்சனிடம் ’’ இவை மலர்கள் அல்ல, பிரேக்ட் (Bract)  எனப்படும் மலரடிச் செதில்கள், உள்ளே சிறிய குச்சிகளைப் போல வெண்ணிறத்தில் இவற்றால் மறைக்கப்பட்டுள்ளவைதான் உண்மையில் மலர்கள்,‘’ என்றார் பாரெ.

இளஞ்சிவப்பு மலரடிச்செதில்களால் சுழபட்ட மூன்றூ போகன்வில்லா மலர்கள்

மாணவப் பருவத்தில் பேராசிரியர்கள் உரையாற்றும் போதே குறுக்கிட்டு, பிழைகளை சுட்டிக்காட்டும் அறிவும் துணிவும் கொண்டிருந்த, பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த கம்மர்சனை, அனுபவ அறிவால் பாரெ விஞ்சி நின்ற பல தருணங்களில் அதுவும் ஒன்று. வியந்து போய் ‘’ ஆம் உண்மைதான்,’’ என்ற கம்மர்சன்,  ’’இந்த புதிய தாவரத்திற்கு என்ன பெயரிடலாம்’’  என்ற போது சற்றும் தயக்கமின்றி ’’தேடல் குழுவின் தலைவரின் பெயரைத்தானே வைக்கவெண்டும்,’’ என்றார் பாரெ.

அப்படியே அந்த புதிய தாவரத்திற்கு  பூகென்வீலியா (Bougainvillea brasiliensis ) ப்ராஸிலியன்ஸிஸ்[8]. (இப்போது (Bougainvillea spectabilis) பூகென்வீலியா ஸ்பெக்டாபிலிஸ்)[9] என்று பெயரிடப்பட்டது.  ”இதை கண்டறிந்தவராக  நீங்களும் உலகெங்கிலும் அறியப்படுவீர்கள்,” என்ற பாரெடிடம்,  “இல்லை அன்பே, இதை நீயல்லவா கண்டறிந்தாய்? எனது கண்டுபிடிப்புகள் என இவ்வுலகம் இனி சொல்லப் போவதெல்லாம் நீ கண்டுபிடித்தவை தானே?’’  என்றார் துயருடன்.

தன் அடையாளத்தை மறைத்து ஆணென வேடமிட்டு அந்த கப்பலில் பயணித்த ழ்ஜான் பாரெ,  கம்மர்சனின் உதவியாளரும் காதலியுமாவார்.  திருமணம் செய்துகொண்டிருக்கவில்லையெனினும் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்திருந்தான், ஆனால் ஒரு வருடத்துக்குள் இறந்து போனான்.

கப்பல் புறப்பட்ட சில நாட்களிலேயே பாரெடைக் குறித்த பல சந்தேகங்களும் வதந்திகளும் உலவத்துவங்கியது. அவரின் மெல்லிய குரல், மீசையில்லா  முகம்,  மொழு மொழுவென்றிருந்த மோவாய், மறந்தும் பிறர் முன்னிலையில் உடைகளை மாற்றாதது, எப்போதும் கம்மர்சனின் அறையிலே தங்கியது என பற்பல விதங்களில் அவர் மீதான் சந்தேகங்களையும், புகார்களையும் பிற பயணிகளும், பணியாளர்களும்   குழுத்தலைவர் பூகென்வீல்லயிடம் சொல்லிக்கொண்டிருந்தார்கள். பூகென்வீல்லயோ அவற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாரெடின் துணிவையும் தாவர அறிவியலில் அவருக்கிருந்த ஆர்வத்தையும் கடின உழைப்பையும் அவரது முக்கிய சேகரிப்புகளையும், கண்டுபிடிப்புகளையும் வியந்து பாராட்டியவாறிருந்தார்.

கம்மர்சனும் அந்த புகார்களில்  தனக்கு ஆர்வம் இல்லாதது போலவே காட்டிக்கொண்டார்

தஹிடி தீவில் கரயணைந்த இடம்

1767, ஏப்ரலில் தஹிடி  தீவில் கப்பல் கரையணைந்த போது பாரெடும்[1] , [2] கம்மர்சனும் இறங்கி தீவுக்கு வந்தனர். அப்போது வழக்கத்திலிருந்தது போல ஆண் பயணிகளை நோக்கி ஓடிவந்த தீவுப்பெண்கள் அவர்களை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கையில் ஆண் வேடத்திலிருந்த பாரெடை நோக்கிய தீவின் ஆண்கள் வியப்புடன் ’’ஆ, ஒரு பெண் கப்பலில் வந்திருக்கிறார்,’’ என்றபடியே கூவிக்கொண்டு பெண்கள் தீவுக்கு வருகை தருகையில் செய்யப்படும் மரியாதைகளை செய்யத்  தொடங்கியபோதுதான்  பாரெடின்[3]  குட்டு வெளிப்பட்டது. கண்ணீருடன் தலைகுனிந்து நின்றிருந்த பாரெடை[4]  பூகென்வீல்ல மீண்டும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்.திரும்ப கப்பலுக்கு வரவழைக்கப் பட்ட பாரெடை[5]  பல வகையிலும் பிற பயணிகள் சித்ரவதை செய்ய முயன்றனர். அவரின் ஆடைகளை உருவவும் பல முறை முயற்சிகள் நடந்தன.

அடுத்துக் கரைசேர்ந்த நியூ அயர்லாந்தில் (இன்றைய பாபுவா நியூ கினி),  இது குறித்து விசாரணை நடந்தது.  பூகென்வீல்ல தன் முன் அப்போதும் ஆண் உடையில் நின்றிருந்த பாரெடிடம்[6]  ’’எப்படி பெண்களுக்கு மறுக்கப்பட்டிருக்கும் கப்பல் பயணத்தை நீ அடையாளத்தை மறைத்து மேற்கொள்ளலாம்?’’ என்று வினவினார்

’’உடல்நலிவுற்றிருந்த  கம்மர்சனுக்கு ஒரு உதவியாளர் தேவைப்பட்டது, எனக்கும் தாவரங்களுக்கான தேடலே  வாழ்வின் ஆகச்சிறந்த கனவென்பதால் இதற்கு துணிந்தேன்,’’ என்றார் பாரெ. உண்மையில் பூகென்வீல்லவுக்கு பாரெ எப்படி அத்தனை காலம் அந்த கப்பலில் தாக்குப்பிடித்தார்  என்பதே அதிசயமாக இருந்தது. தான் பல தொல்லைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அவற்றை சகித்து கொண்டதாகவும்,  எல்லை மீறிப்போகையில்  உதவிக்காக ஒரு கைத்துப்பாக்கியையும் வைத்திருந்ததையும்  பாரெ அப்போது தெரியப்படுத்தினார்.

’’ஏன் இத்தனை ஆபத்துக்களை சந்தித்து இந்த பயணத்தில்  இணைந்தாய்?” என்ற கேள்விக்கு, ’’ஏன் செய்யக்கூடாது? என்றே பதில் கேள்வி கேட்ட பாரெ, ’’ஒரு பெண் அறிவியலில் ஆர்வம் கொள்ளக்கூடாதா,  ஆய்வுகள் செய்யக்கூடாதா புதியவற்றைக் கண்டுபிடிக்க கூடாதா, ஆண்கள்தான் இவற்றையெல்லாம்  செய்ய முடியும் என்பதற்கு  மாற்றாக இனி என்னை இவ்வுலகம் எடுத்துக்காட்டாக சொல்லட்டுமே,’’ என்றார்.

பூகென்வீல்லவுக்கு  தாவரங்களின் தேடலுக்காக தன் உயிரையும் துச்சமென மதித்து கடற் பயணத்தை மேற்கொண்ட பாரெ[7] மீது பெரும் மரியாதையும் அன்பும் உண்டானது. ழ்ஜானுக்கு தண்டனை ஏதும் தரகூடாதென்றே அவர் பரிந்துரைத்தார்.

18 மாதங்கள் அந்த கப்பலில் தனது மார்பகங்கள் வெளியே தெரிந்துவிடாமலிருக்க  பட்டையான லினென் துணிகளால் இறுக்க கட்டிக்கொண்டு, ஆண்கள்  தூக்கும் எடையை காட்டிலும் அதிக எடையைச் சுமந்தபடி பனியிலும், வெயிலும், மழையிலும், கல்லிலும், முள்ளிலும் அலைந்து பல்லாயிரக்கணக்கான புதிய பல தாவரங்களை கண்டுபிடித்த ழ்ஜான் பாரெக்கு அப்பயணம் துவங்கியபோது 26 வயதுதான்.

இந்த கடற்பயணத்தில் கம்மர்சன் பதப்படுத்திய ஒரு தாவரம்

ழ்ஜான் பாரெ ஜூலை 27, 1740 அன்று ஃப்ரான்சின் பர்கண்டி ஃப்ராந்தியத்தில் ’லா காமெல்’ கிராமத்தில் பிறந்தார்[10]. ஞானஸ்நானம் குறித்த அவரது பதிவில்  ஜீன் பாரெ மற்றும் ஜீன் போச்சார்ட் ஆகியோரின் மகளென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒன்றரை வயதில் தாயையும் 15 வயதில் தந்தையையும் இழந்த ழ்ஜான் கல்வி பெறவில்லை என்பதை அவரது தந்தையின் இறப்பு சான்றிதழில் அவரது கையெழுத்து இல்லாததை வைத்து முடிவு செய்யும் வரலாற்றாய்வாளர்கள், பின்னர்  கம்மர்சனே ஜேனுக்கு கல்வியளித்திருக்கலாமென்றும் யூகிக்கின்றனர். எளிய விவசாய குடும்பத்தில்  கல்வியறிவற்ற பெற்றோருக்கு மகளாக பிறந்த ழ்ஜான் அதற்கு முன்பு தனது ஊரிலிருந்து 20 மைலுக்கு மேல் வெளியே பயணித்ததில்லை.

பிரசவத்தில் ஒரு மகனைப் பெற்றெடுத்துவிட்டு  மனைவி இறந்து போன பின்னர், அடிக்கடி உடல் நலிவுற்றுக் கொண்டிருந்த  தாவரவியலாளர் கம்மர்சனுக்கு உதவியாளரான ழ்ஜான் குறுகிய காலத்திலேயே, தனது தாவர வகைப்பாட்டியல் ஆர்வத்தினால், அவரின் காதலியுமாகி ஒரு மகனுக்கும் தாயாகியிருந்தார்.. பாரிஸிலிருந்து கப்பல் புறப்படுமுன்பே கம்மர்சன் தனது முக்கிய சொத்துக்களை ழ்ஜானின் பெயருக்கு உயிலெழுதியும் வைத்து விட்டிருந்தார். கம்மர்சனுக்கும் ழ்ஜானுக்கும் பிறந்த மகன் அப்போதே வளர்ப்புத் தாயிடம் கொடுக்கப்பட்டவன், ஒரு வயதாகுமுன் இறந்து போனான். திருமணம் ஆகாத பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை, அன்றைய ஃப்ரான்ஸில் மோசமானது.

விவசாய பின்னணி கொண்டவராதலால் ழ்ஜானுக்கு கம்மர்சனிடம் உதவியாளராக சேரும் முன்பே ஏராளமான மூலிகைகள், பிற தாவரங்கள் குறித்த நல்ல அனுபவ அறிவிருந்தது. நோயாளியான கம்மர்சனின் மீதிருந்த அன்புக்கு இணையாக தாவரங்கள் மீதும் அன்பு கொண்டிருந்ததால் அவரை இப்பயணத்தில் பிரிய முடியாத ழ்ஜானும் கம்மர்சனுமாகப்[8]  போட்ட இந்த திட்டத்தால் தான் அந்த பயணம் சாத்தியமானது,  அந்த சாகசப் பயணத்தில் இருந்து கிடைத்ததுதான் உலகெங்கிலும்[9]  காணப்படும் பல வண்ண பிரகாசமான மலர்களுடன் கூடிய  அலங்கார செடியான தமிழில் காகிதப்பூச்செடி என அழைக்கப்படும் பூகென்வீலியா.

அங்கிருந்து மொரிஷியசுக்கு சென்ற கப்பல்களிரண்டும் காற்று திசை மாறும் பொருட்டு  நீண்ட நாட்கள் அங்கு காத்திருக்க  வேண்டியிருந்தது. மொரிஷியசில்  கவர்னராக இருந்த, தாவரவியலாளர் பியரி கம்மர்சனின் நெருங்கிய நண்பராதலால்,  அவரும் ழ்ஜானும் தேடல் குழுவில் இருந்து விலகி மொரீஷியசில் தங்குவதாக தீர்மானித்தனர். மொரிஷியஸ் தாவரவியல் பூங்காவின் பொறுப்பை கம்மர்சன் ஏற்றுக்கொண்டார்.

பூகென்வீல்லயும்  இதற்கு சம்மதித்ததால் அவர்களை அங்கேயே விட்டுவிட்டு இரண்டு கப்பல்களும் மொரிஷியஸை விட்டு புறப்பட்டன. அதன் பின்னர் உணவு மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் சிக்கல்களை சந்தித்த கப்பல்களிரண்டிலும் எலிகளும் காவல் நாய்களும் கூட உணவாக்கப்பட்டன, பலர் நோயால் இறந்து போனார்கள். பல சோதனைகளை கடந்து  உயிருடன் இருந்த  பிற பயணிகளுடன் கப்பல்கள் இரண்டும் தட்டுத்தடுமாறி டச்சு ஈஸ்ட் இண்டீஸில்  1769ல்  கரைசேர்ந்து அந்த தேடல் பயணத்தை நிறைவு செய்தன.

மொரிஷியஸில் இருந்து கம்மர்சனுடன் 1770–1772-ல் மடகாஸ்கருக்கும், இன்னும் சில தீவுகளுக்கும் சென்ற ழ்ஜான்மேலும் பல புதிய தாவரங்களைக் கண்டறிந்தார். 1772 வாக்கில் உடல்நிலை மேலும் நலிவுற்று  மார்ச் 1773 இல்  தனது நாற்பத்தைந்தாவது வயதில், அந்த பயணத்தின் கண்டறிதல்களை வெளியிடாமலேயே கம்மர்சன்  இறந்தார்.

அவரது மரணத்திற்குப் பிறகு ழ்ஜான் மொரிஷியஸில் ஒரு மதுபான விடுதி நடத்தினார்.  1774 ஜனவரி 27 ஆம் தேதி, முன்னாள் ஃப்ரான்ஸ் இராணுவ சார்ஜென்ட் ஜீன் டு பெர்னாட்டை மணந்து, அவருடன் ஃப்ரான்சுக்கு திரும்பினார், 22 மாதங்கள் கடற் பயணத்தில் 6000 தாவரங்கள் உள்ளிட்ட  ழ்ஜான் கண்டுபிடித்த பல முக்கிய கண்டுபிடிப்புகளின் பொருட்டு, பூகென்வீல்லயின் பெருமுயற்சியால்  அந்த பயணத்திற்குப் பத்து வருடங்கள் கழித்து அவருக்கு ஃப்ரான்ஸ்  கடற்படை அமைச்சகத்திலிருந்து   ஓய்வூதியம் கிடைக்கப் பெற்றது. முதன் முதலாக தனது கண்டுபிடிப்புக்களுக்கு அரசு ஒய்வூதியம் பெற்ற பெண்ணும் ழ்ஜான்தான்.

கடற்பயணத்தில்  உலகை முதன் முதலில் சுற்றி வந்த பெருமைக்குரிய தாவரவியலாளர் ழ்ஜான் பாரெ  1807 ஆகஸ்ட் 5 அன்று  தனது 67 ஆவது வயதில்  இறந்தார்.

ழ்ஜான் பாரேயின் சாகசப் பயணம் குறித்து உலகம் மூன்றே மூன்று பேர்களிடமிருந்துதான் தெரிந்து கொள்ள முடிந்தது. கம்மர்சனின் நாட்குறிப்புக்கள்  மற்றும் இட்வாலின்மருத்துவரான ஃப்ரான்சுவா வீவ்[11] எழுதியிருந்த  குறிப்புகள் பெருமளவில் அவரைக்[10]  குறித்து தெரிவித்தன.  பூகென்வீல்லயின் பயணத்தில் கலந்து கொண்டிருந்த   நாசாவ்-சீகனின் இளவரசர், பாரெடின் சாதனைகளைக் குறிப்பிட்டு. “அவளுடைய துணிச்சலுக்கான அனைத்துப் பெருமைகளையும் நான் அவளுக்கு கொடுக்க விரும்புகிறேன்,” என்று தனது நினைவுக் குறிப்புகளில் எழுதினார்.மேலும்  “அத்தகைய பயணத்தில் ஒருவர் நிச்சயமாக எதிர்பார்க்கக்கூடிய மன அழுத்தம், ஆபத்துகள் மற்றும் நடந்த அனைத்தையும் எதிர்கொள்ள அவள் துணிந்தாள். அவளது சாகசம், பிரபலமான பெண்களின் வரலாற்றில் சேர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

அப்போது கடற்பயணிகளின் உடையாக அறியப்பட்டிருந்த வரிக்கோடுகளிட்ட    உடையும் புரட்சியாளர்களுக்கான சிவப்பு தொப்பியும் கைகளில் தாவரங்களுமாக  இருக்கும் ழ்ஜானின் சித்திரம் கூட அவரைக்குறித்த வாய்வழிச்செய்திகளின் அடிப்படையில் அவரது மறைவுக்கு பின்னர் வரையப்பட்டதுதான்[11] ..

கம்மர்சனுடன் இணைந்து ழ்ஜான் பாரெ கண்டறிந்த  ஆயிரக்கணக்கான தென் அமெரிக்க தாவரங்கள் உலர் தாவரங்களாக (Herbaria) இன்றும் ஃப்ரான்ஸ் அருங்காட்சியகங்களில் பாதுகாப்பாக இருக்கின்றன.

1789 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஏ.எல். டி ஜூஸ்ஸோவின்  புகழ்பெற்ற ஜெனிரா பிளாண்டேரியத்தில், பூகென்வீல்லா பட்டியலிடப்பட்டபோது,  “Buginvilla” என்று தவறுதலாக எழுத்துப் பிழையுடன் வெளியிடப்பட்டது. 1930ல் க்யூ  ராயல் தாவரவியல் பூங்கா தொகுத்த புதிய தாவரங்களின் பட்டியல் வெளியாகி அது  சரி செய்யப்படும் வரை இந்த எழுத்துப்பிழை அப்படியே நிலைத்திருந்தது.

பூகென்வீலியாவின் இரண்டு இனங்கள் – பூகென்வீலியா. ஸ்பெக்டாபிலிஸ் மற்றும்  பூகென்வீலியா கிளாப்ரா – 19 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின. பின்னர்  யூரோப்பிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன; கியூ ராயல் தாவரவியல் பூங்காவிலிருந்து 1923 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்களின் பட்டியலில் பூகென்வீலியாவின் பெயரும் இருக்கிறது.

பூகென்வீலியா மேற்கு பிரேசிலிலிருந்து பெரு வரையிலும், தெற்கு ஆர்ஜென்டினாவையும் தென் அமெரிக்காவையும் தாயகமாகக் கொண்ட  பல்லாண்டு தாவரமாகும். நாலு மணிப்பூ எனப்படும் அந்திமந்தாரை, பவளமல்லி ஆகியவை அடங்கிய நைக்டஜினேசியே (Nyctaginaceae) குடும்பத்தை சேர்ந்த  பூகென்வீலியா 18 சிற்றினங்களை கொண்டது.  இப்போது 300க்கும் மேற்பட்ட உட்கலப்பு (inbreeding) வகைகள் உலகெங்கிலும் பரவியுள்ளன. வளர்ந்த முதல் வருடத்திலிருந்து, மூன்று ஆண்டுகளில் மலர்களை அளிக்க துவங்கும், பூகென்வீலியா  வறட்சியைத் தாங்கி வளரும் இயல்புடையது.

பசுமை மாறா பளபளப்பான இலைகளும், உறுதியான கொடித்தண்டும் கொக்கிகளை போன்ற கூர்முட்களையும் கொண்ட  பூகென்வீலியா கொடி 12-15 மீட்டர் நீளம் வரையிலும்  பற்றிப் படர்ந்து வளரும் இயல்புடையது, எனினும் இவற்றை தொடர்ந்து கத்தரித்து, குட்டையாக தொட்டிகளிலும், குறுமரங்களை போலவும் கூட வளர்க்க முடியும். பூகென்வீலியாக்களை  அரிதாகவே நோயும் பூச்சிகளும் தாக்கும். 

பூகென்வீலியாவின் மலரென்பது, மூன்று அல்லது ஆறு பிரகாசமான காகிதம் போன்ற மலரடி செதில்களால் சூழப்பட்டிருக்கும்  மூன்று குழல் போன்ற சிறிய வெண்ணிற மலர்களின் தொகுப்புதான். இதன் கனி மிகச்சிறியது, ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு இருக்கும். வெள்ளை ஆரஞ்சு சிவப்பு மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் மலரடி செதில்கள் இருக்கும்.

உலகின் எந்த பகுதியாக இருப்பினும் வீட்டை விட்டு வெளியே செல்பவர்கள் ஒரு பூகென்வீலியாவையாவது பார்த்துவிடலாம் என்னும் அளவிற்கு இந்தக் கொடி உலகெங்கும் பிரபலமான, பலரின் விருப்பத்துக்குரிய அலங்காரச் செடியாகி விட்டிருக்கிறது. தோல் அழற்சியை உண்டாக்கும் இதன் இலைச்சாற்றை உலகின் பல பழங்குடியினத்தவர்கள் மருத்துவ சிகிச்சையிலும் பயன்படுத்துகின்றனர்.

இனி இவற்றை அழகான பூக்கள் இருக்கும் ஒரு செடி என்று மட்டும் எளிதில்  கடந்து போகாமல் ழ்ஜான் பாரெடின் [12]  சாகச கடற் பிரயாணத்தின்  பொருட்டாவது நின்று ஒரு கணம் அதன் அழகை ஆராதித்து விட்டே செல்லவெண்டும்.

மலரடிச் செதில்களால் மறைக்கப்பட்டிருக்கும்  பூகென்வீலியா மலர் போலத்தான், 250 வருடங்களுக்கு  முன்னர் இப்போதுகூட பெண்கள் எண்ணிப்பார்க்க முடியாத  ஆபத்துக்களை துணிவுடன் சந்தித்து, பல  புதிய தாவரங்களை தனது காதலனின் பெயரில் பெருந்தன்மையுடன் உலகிற்கு தந்த ஜேனும் தாவரவியல் வரலாற்றில் மறைக்கப்பட்டிருக்கிறார்.

கம்மர்சனின் மறைவுக்கு பின்னர் அவரின் கண்டுபிடிப்புகள் பலரும் பிரசுரித்தனர். ஆனால் யாருமே ழ்ஜான் பாரெடைக் குறித்து ஒரு வார்த்தையையும் குறிப்பிடவில்லை பிரபல பரிணாமக் கொள்கையை அறிவித்தவரான ’ழ்ஜான் – பாட்டீஸ்ட் லமார்க்’ மட்டுமே ழ்ஜான் பாரெடின்[13]  பங்களிப்பையும் அவரது துணிச்சலையும் குறிப்பிட்டு எழுதிய ஒரே ஒருவர்.

சுமார் 70 தாவரங்கள் இப்போது கம்மர்சனின் பெயரில் இருக்கின்றன. தன் பெயரை,  நண்பர்கள், உறவினர்கள் பெயரை பல தாவரங்களுக்கு வைத்த கம்மர்சன்  காதலின் பொருட்டு உலகில் எந்த பெண்ணும் செய்ய துணிந்திராத  சாகசத்தை செய்தவளான  தன் காதலியின் பெயரை அடர் பச்சையில், ஒரே மரத்தில் பல வடிவங்களில் இலைகளையும், வெண்ணிற மலர்களையும் கொண்டிருந்த  ஒரே ஒரு மடகாஸ்கர் குறுமரத்திற்கு  மட்டும் Baretia Bonafidia என்று வைத்தார் ஆனால் துரதிர்ஷ்டவசமாக  கம்மர்சனின் அறிக்கை பாரிஸ் சென்று சேரும் முன்னே அந்த மரத்துக்கு மற்றொரு பெயர்  (Turraea) வைக்கப்பட்டுவிட்டது. பிரசுர முன்னோடி விதிகளின் படி பாரெடின்[14]  பெயரை அந்த மரத்துக்கு வைக்கமுடியாமலானது[12].

இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு 2012 ல் கண்டுபிடிக்கப்பட்ட உருளைகிழங்கு, தக்காளியின் குடும்பத்தை சேர்ந்த  ஒரு தாவரத்திற்கு மட்டுமே Solanum baretiae, என்று பாரெடின்[15]  பெயரிடப்பட்டிருக்கிறது.

2020ல் அவரது 280 வது பிறந்த நாளை  கூகில் டூடுல்  பூகென்வீலியா கொடிகளால் சூழப்பட்டிருக்கும் ழ்ஜானின் புகைப்படத்துடன் சிறப்பித்தது.

The 2010 ல் பாரெடின் சுயசரிதை The Discovery of Jeanne Baret, என்னும் பெயரில் க்லெனிஸ் ரிட்லி[13] யால் எழுதப்பட்டது ஆனால் அந்நூலில் பல கண்ணிகள் விட்டு போயிருப்பதாகவும் பல தகவல்கள் முன்னுக்கு பின்னாக இருப்பதாகவும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

பின்னர் கடந்த 2020 ல் வெளியான டானியெல் க்ளோட்[14] , எழுதிய நூலிலிருந்து ழ்ஜான் பாரெடின் வாழ்வைக் குறித்து நம்பகமான தகவல்கள் ஓரளவுக்கு உலகிற்கு தெரிய வந்திருக்கிறது[15].

கடந்த செப்டம்பர் 2019 இல், 77 வயதான பிரிட்டிஷ் பெண் ஜீன் சாக்ரடீஸ்[16], உலகத்தை தனியாக  கடல்வழியே சுற்றிவந்த முதல்  வயதான பெண்ணாக அறியப்பட்டார். அவர் தான் சந்தித்த சவால்களையும் இடர்களையும் சொல்லித் தான் விடாமுயற்சியுடன் அவற்றை எதிர்கொண்டு பயணத்தை நிறைவு செய்ததாகச் சொன்னதை,  ழ்ஜான் உயிருடன் இருந்து கேட்டிருந்தால் புன்னகைத்திருப்பாளாயிருக்கும்.


பின்குறிப்புகள்:

[1] ழ்ஜான் பாரெ= Jeanne Baret (or) Jeanne Baré

[2] பூடேஸ் = frigate Boudeuse

[3] இட்வால்= Etoile

[4] லூயி ஆன்ட்வான் டி பூகென்வியெல = Louis Antoine de Bougainville

[5] ஃபிலிபேர் கம்மர்சன் =  Philibert Commerson

[7] ரியோ த ஹனைரோ= Rio de Janeiro

[8] பூகென்வீலியா ப்ராஸிலியென்ஸிஸ்= Bougainvillea brasiliensis

[9] பூகென்வீலியா ஸ்பெக்டாபிலிஸ்= Bougainvillea Spectabilis

[10] பார்க்க: https://en.wikipedia.org/wiki/Jeanne_Baret

[11] François Vivès = ஃப்ரான்சுவா வீவ்

[12] ழ்ஜான் பாரே பற்றியும் இன்னும் சில பெண் அறிவியலாளர் பற்றியும் எழுதப்பட்ட புத்தகங்கள் பற்றிய ஒரு கட்டுரையை இங்கே காணலாம்: https://sydneyreviewofbooks.com/review/danielle-clode-gabrielle-carey/

[13]  Glynis Ridley: The Discovery of Jeanne Baret: A Story of Science, the High Seas, and the First Woman to Circumnavigate the Globe; Hardcover, 288 pages

Published December 28th 2010 by Crown ; ISBN: 0307463524 (ISBN13: 9780307463524)

[14] In Search of the Woman who Sailed the World by Danielle Clode

Paperback, 352 pages

Published October 1st 2020 by Picador; ISBN: 1760784958 (ISBN13: 9781760784959)

[15] டானியெல் க்ளோட் நிகழ்த்தும் ஓர் உரை- ழ்ஜான் பாரேடின் உலகம் சுற்றும்  பயணம் பற்றியது இங்கே ஓர் விடியோவாகக் கிட்டும்: https://www.youtube.com/watch?v=fethpew18WM&list=PLH6AAKWGOLH2-KnHGl8jZC4m-YBw6d4gA&index=27

[16] Jeanne Socrates உடன் ஒரு பேட்டியை இங்கே காணலாம்: https://www.youtube.com/watch?v=lTGjhIWcJs8

(சொல்வனத்தில் வெளியான கட்டுரையின் மறுபதிவு)

சின்னஞ்சிறு வயதில் ,

அய்யப்பன் கோவில் அருகில் இருந்த அந்த வாடகை வீட்டில் கழிந்த என் பால்யம் என்றென்றைக்கும் மறக்கவியலாததாகி விட்டிருக்கிறது. இன்றும்கூட  மனது பாரமாகும் நாட்களில் அந்த தெருவுக்கு போய் இப்போது அடையாளம் தெரியமலாகிவிட்டிருந்தாலும அந்த முன்னறையின் பச்சைவண்ணமடித்த கம்பிகளுடனான ஜன்னல்  மட்டும் அப்படியே இருக்கும் வீட்டை பார்த்துவிட்டு வருவதுண்டு. அந்த ஜன்னல் என் பால்யத்துக்குள் நான் நுழையும் வாசலாகி விட்டிருக்கிறது.

அந்த வீட்டில் நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் வரைதான் இருந்திருக்கிறேன், அம்மா தம்பி விஜியை வயிற்றில் கொண்டிருந்ததால்..3ம் வகுப்புக்கு வேட்டைக்காரன் புதூரிலும், பின்னர்  ராஜா ராமண்ணா நகர்  சொந்த வீடு கட்டப்பட்ட பின்பு அம்மாவுடன் தாராபுரம் போய் செயின்ட் அலொஷியஸில் 4 ம் வகுப்பும் படித்தேன்

ஆனால் அந்த வெங்கடேசா காலனி வீட்டின் அமைப்பு  அப்படியே நினைவில் இருக்கிறது. இரண்டு அறையும் பின்னால் கரி படிந்த விறகடுப்பு டன் கூடிய சமையலறையும்,துவைக்கும் கல்லுடன் கூடிய , கீழே அமர்ந்து , பாத்திரம் கழுவும் இடத்துடன் பின் கதவுடன் முடியும் பெரிய பின் முற்றமும், பின் கதவை திறந்து கொஞ்சம் நடந்தால் தனியே வரிசையாக கட்டப்பட்டிருக்கும்  எடுப்பு பொதுக்கழிவறைகளுமாக 3 குடித்தனங்கள் ஒரே காம்பவுண்டில்.

 இதில் நாங்களும் கமலா அத்தை ராமு மாமா குடும்பம் பக்கம் பக்கமாக இரட்டை வீடுகளில். குருவாயூரப்பன் வீடு மட்டும் எங்கள் இருவரின் வீட்டுக்கு பின்னால் பக்கவாட்டில் திரும்பி கோபித்து கொண்டதுபோல் அமைந்திருந்க்கும். அவன் யாருடனும் அதிகம் ஒட்ட்டியதில்லை.  வீட்டு பெரியவர்களும் அப்படியே. வீட்டு மதில் சுவரும் அடுத்திருந்த ஐயப்பன் கோவில் மதிலும் ஒன்றே. அந்த பால ஐயப்பனும் எங்கள் களித் தோழன்தான்.

எனக்கு எப்படி இது நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை எனினும் துல்லியமாக என்னால் நினைவு கூற முடிந்த ஒரு நினைவென்றால் முன்னறையின் வாசல் நிலையில் அம்மா என்னை மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார் அறையின் கோடியில் பச்சை இரும்பு மடக்கு நாற்காலியில் அப்பா அமர்ந்து முன்னால் இருந்த மர ஸ்டூலில் சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு டம்ளரில் தண்ணீர், சோப்பு நுரையுடன் ஷேவிங் பிரஷ் சகிதம் முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறார். நான் அம்மாவின் ரவிக்கைக்குள் இருந்து முலையை எடுத்து அதன் காம்பை திருகி கொண்டிருப்பதை அம்மா புன்னகையுடன் அப்பாவிடம் சுட்டி காண்பிக்கிறார், திரும்பி பார்க்கும் அப்பா மறுமொழி ஏதும் சொல்லாமல் புன்னைகையைபோல எதோ செய்கிறார். 

ஆச்சர்யமாக இருக்கிறது ஏனெனில் ஒரு வேளை  அம்மா எனக்கு 2 வயது வரை முலைகொடுத்திருப்பினும் அந்த நினைவுகள் இன்னும் அழியாமல் இருப்பது விநோதம்தான்.

அந்த வீட்டில் தான் அப்பா கலைக்களஞ்சியம் என்னும் ஒரு கெட்டி அட்டை போட்ட வண்ண புத்தகம் கொண்டு வந்து தந்தார்.கனத்த அதன் அட்டையை திறந்ததும் உள்ளே ஒருகாகித செந்தாமரை மலர் விரியும் அமைப்பு இருக்கும். மனம் அப்போது அப்படி பொங்கி ததும்பும்.என்  சின்னஞ்சிறு கரங்களில் மீள மீள அச்செந்தாமரை மலர்ந்தபடியே இருந்தது.  அட்லஸ் வழியே உலகை முதன் முதலில் பார்த்ததும் அதில்தான். அது அளித்த பரவசம் பின்னர் வேறெதிலும் கிடைத்ததில்லை..

 நேரம் கிடைக்கையில் எல்லாம் அந்த முழு உலக வரைபடத்தையும் பின்னர் அடுத்தடுத்த பக்கங்களில் தனித்தனி கண்டங்களையும் அவற்றின் வழவழப்பையும் தொட்டுத்தொட்டு பார்த்தபடியே இருப்பேன். அங்கெல்லாம் சென்று வந்தது போலவே பெரும் பரவசமளித்த அனுபவம் அது. அப்பா அப்போது பார்த்து வந்த ஆசிரியப்பணியுடன் கூடுதலாக நூலக  பாதுதுகாப்பும் அவர் பொறுப்பில் இருந்ததால் அதைக் கொண்டு வந்திருந்தார்..என் வாழ்வின் முதல் நூல் பரிச்சயமது.கமலா அத்தையின் மகன் ராமுவும் நாங்களும் ஏக வயது எனவே எல்லா விளையாட்டுகளிலும் அவனுமிருப்பான். அவனுடனும் கலைக்களஞ்சியத்தை வாசிப்போம் அல்லது பார்ப்போம். 

கமலா அத்தையின் வீட்டு கூடத்தில் டைனிங் டேபிளுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பிக்கொட்டை அரைக்கும் சிறு இயந்திரம் இருக்கும், அதில் அவ்வப்போது காபிக்கொட்டைகளை வறுத்தரைத்து அத்தை போடும் பில்டர் காபி கமகமக்கும்., அத்தையின் கீழுதட்டின் சின்ன சதைத் திரட்டு அளிக்கும் கவர்ச்சியாலேயே நான் அவர்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தேன்.

 பிரபாவுக்கென அத்தை தயிர்சாதத்தில்  மாம்பழத்தை பிசைந்து ஊட்டுவார். வாசனை அபாரமாயிருக்கும்.  ஒருமுறை அத்தையின் உறவினரான கிளியுடன் விளையாடுகையில் , ஆம் அவள் பெயரே கிளிதான், மூன்று வரிசையில் இருந்த சிவப்பு சி்மெண்ட் பூசப்பட்டு கோடுகள் இடப்பட்டிருக்கும் வீட்டு வாசற் படிகளில் தடுக்கி விழுந்து மித்ரா நாக்கை துண்டித்துக்கொண்டாள், அப்பா அவளை தூக்கிக்கொண்டு அடுத்த தெரு தாமஸ் டாக்டர் வீட்டுக்கு ஓடி நாக்கை தைப்பதற்குள் அவரது வெள்ளை வேட்டி முழுக்க சிவப்பானது, பலமுறை அதே தாமஸ் டாகடரிடம் சின்ன சின்ன விஷக்கடிகளுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறோம். மித்ராவால் அவளது நுனி நாக்கை இப்போதும் முழுதாக மடிக்க முடியும்

வீட்டு வாசலில் எப்போதுமிருக்கும் கனகாம்பர பூச்செடிகள். அம்மா மாலையில் அவற்றை தொடுத்து தலையில் வைத்துக்கொள்வார்.பெரிய பெண்ணானதும் அப்படி நானும் வைத்துக்கொள்ளனுமென்று  ரகசியமாக  மனதில் நினைத்துக் கொள்வேன்.

கமலா அத்தை வீட்டு வாசலில் நின்ற சிவப்பு செம்பருத்தி மரங்களில், பூக்கள் பறிக்க வரும் ஐயப்பசாமி மாலை போட்ட  என்னால் ஊமை மாமா என்றழைக்கப்பட்ட ஊமை பக்தர் ஒருவர் எல்லா வருடமும் தவறாமல் வந்து மலர்களை பறித்துசென்றுவிட்டு, கோவிலிலிருந்து திரும்புகையில் ஒருநாள் கூட தவறாமல் பொங்கலும் புளியோதரையுமாக பிரசாத தொன்னையை என் கையில் கொடுப்பார்.

அந்த தெருவில் தினமணிக்கதிர் பேப்பர் வாங்குவதால் கதிரக்கா என்றழைக்கப்டும் ஒரு பெண்ணின் வீடிருந்தது. அங்கே அநேகமாக தினமும் அந்த பேப்பரை நான் சென்று வாசிக்க வாங்கி வந்து பின்னர் திரும்ப கொடுப்பேன், அந்த கதிரக்காவின் குதிகால் வரை நீண்டிருக்கும் அடர்ந்த கூந்தலை அவரது அம்மா துணி துவைக்கும் கல்லில் பரத்தி வைத்து அரப்பிட்டு தேய்த்து கழுவுவார், கூடவே ’’ஆளைக்கொல்லும்டீ  இத்தனை முடி’’ என்று கடிந்து கொள்வார்.

 ’’சீமெண்ணே ’’என்று கூவியபடி அவ்வபோது வாசலில் ஒற்றை மாட்டு வண்டி வரும்.  தகர டின்னில் மண்ணெண்ணெய் வாங்குவது வழக்கம் அப்போது., ஒருநாள் பிரபா உரக்க ’’எங்கம்மா இன்னிக்கு தீட்டு சீமெண்ண வேண்டாம்’’ என்று வீட்டு வாசலிலிருந்தே  கத்த ராமு மாமா பின்னாலிருந்து காதை திருகி உள்ளே கூப்பிட்டு போனார். ‘’திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே சீமெண்ன  நாராயணா ’’ என்று கோரஸாக அந்த வண்டி வருகையில் நாங்கள் மூவரும் பாடுவோம்.  கபாலத்தின் கடின ஓடே இல்லாமல் பிறந்த பிரபாவின் தங்கை ப்ரியாவை, வெகு பத்திரமாக கமலா அத்தை பார்த்துக் கொள்ளுவார்.5 வயதான பின்னரே அவளுக்கு சரியானது

அடுத்த தெருவில் பெரும் பணக்கார குடும்பமான சுஜியின் வீடிருந்தது. அதில் இருந்த நிலவறை பெரும் மர்மம் கலந்த வசீகரம் அளித்தது எனக்கு.

மேரி  நிம்மி,பாபு என்னும் ஒரு கிறிஸ்தவ குடும்பமும் நட்பிலிருந்தார்கள்.   அவர்கள் வீட்டிலிருக்கும் இப்போது’’ பெயிண்டர் பிரஷ் குரோட்டன்’’ என நான் தெரிந்து கொண்டிருக்கும் பலவண்ணச் சிதறல்கள் இருக்கும் இலைகளுடனான குரொட்டன் செடியும் நிலவறை அளித்த அதே ஈர்ப்பை அளிக்கும் எனக்கு., 

பெயிண்டர்ஸ் பிரஷ் குரோட்டன்

அம்மா பணிபுரிந்த பெண்களுக்கான அரசு விடுதி  வீட்டின் நேரெதிர் கட்டிடத்தில் இருந்தது, அங்கு நான் அம்மாவுக்கு தெரியாமல் ஹாஸ்டல் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்ட கஞ்சியும் கொள்ளுத்துவையலும்,அதன் பொருட்டு வாங்கிய  அடிகளுமாக நிறைந்திருந்த காலமது. அங்கிருந்த ஒரு சிறு பப்பாளி மரத்தின் உச்சி வரை நான் ஏறி விளையாடுவேன்.  தங்கம்மாவும் நாகம்மாவும் இறங்கச் சொல்லி கூச்சலிடுவார்கள்.ஹாஸ்டலின் வேப்ப மரத்தின் பாதி நிம்மி வீட்டில் நிற்கும். 

 ஹாஸ்டல் சமையல்கார நாகம்மா என்னை மடியில் படுக்க வைத்து சொல்லிய கதைகள் ஏராளம் பெரும்பாலுமவை அவரின் சொந்த வாழ்வின் கதைகள் என்பதை இப்போது உணர்கிறேன் அப்பா அம்மா எனக்கு கதைகள் சொல்லியதே இல்லை ஆனால் நாகம்மாவே என் உலகில் கதைகளை புகுத்தியவர் அவை அனைத்துமே  துயரக்கதைகளானாலுமே.

மிக இளம் வயதிலேயே குறை பட்டுபோன நாகம்மாவின்  கறை படிந்திருக்கும் வெள்ளைச்சேலையின் வாசம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,, கால்களை நீட்டி என்னை படுக்க வைத்து நாகம்மா அடிக்கடி ’’கிங்கிங் கிங்கிங் காணலையே, எங்கயும் காணலியே, எங்கயும் காணலியே வாழமரத்தடியே மாமியார் வீடிருக்க’’ என்று  துவங்கும் பூ வங்கி வரச்சென்ற  தன் கணவனான ஆண் தவளை ஒரு பஸ் சக்கரத்தில் நசுங்கி செத்துப் போனது தெரியாமல் போனவர காணோமே என்று கண்ணீருடன் தேடும் பெண் தவளையின் பாடலை பாடுவார்., எப்போது அதை பாடினாலும் சொட்டு சொட்டாக நாகம்மா கண்களில் இருந்து வழியும் கண்ணீரின் வெம்மையை இப்போது சக ஹிருதயளாக உணர்கிறேன்,

 நாகம்மா தன் ஒரே ஆசையாக கருப்பு செருப்புக்களை போட்டுக் கொள்ள விரும்பினார் என்னிடம் விளையாட்டாக எப்போது நான் வேலைக்கு போனாலும் சம்பளத்தில் செருப்பு  வாங்கி தர வேண்டும் என்று சொல்லுவார். ஆய்வு மாணவிக்காக அளிக்கபட்ட சலுகைக்கட்டணம் வாங்கிய முதல் மாதமே நாகம்மாவிற்க்கு செருப்புக்கள் வாங்கினேன். ஆனால் போது அவர் அவற்றை அறிந்துகொள்ள முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மூலை கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் சில நாட்களில் மறைந்துவிட்டார்.

கருப்பு செருப்புகளும், தவளைகளும், வெள்ளைச்சீலையும் எப்போதும் எனக்கு  நாகம்மாவை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது

 இன்னொரு உதவியாளர் தங்கம்மாவும் என்னை வளர்த்தவரில் ஒருவர். நாகம்மா என் செவிக்குணவளித்தார். தங்கம்மா  வயிற்றுக்கு.

எப்போது என்னை பார்த்தாலும் எனக்கென்று அம்மாவுக்கு தெரியாமல் நான் சாப்பிடும் ஒரு ரகசிய தின்பண்டம் வைத்திருந்து கொடுப்பார்.அதில் தங்கமையின் வியர்வையின் வாசம் இருக்கும். அன்பின் வாசமது

திலேப்பி மீன்களீன் சதையை கீறி அவற்றில் மசாலாவை திணிக்கும் மெலிந்த எலும்பு புடைத்திருக்கும் கரிய தங்கம்மாவின் கைவிரல்கள் வளர்த்த உடலிது.

 முதன் முதலாக  வீட்டுக்கு வாங்கிய ஒரு சின்ன நாய் குட்டியின் கழுத்தில் கயிறு கட்டி ஜன்னலுக்கு உள்ளிருந்து கிணற்றில் தண்ணீர் சேந்துவதுபோல  இழுத்து, அதை தூக்கிட்டு அறியாமல் நான் கொன்றேன். அது ஏன் அசையாமல் என்னிடம் விளையாடாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறதென்பதை முதுகில் நாலு விழுந்த பின்னே தெரிந்துகொண்டேன். எனக்கு தெரியவந்த முதல் மரணம் அது.

எதன் பொருட்டோ எப்போதுமே வீட்டின் சந்தில் நின்றுகொண்டிருந்தது  சிமெண்ட் தள்ளிக்கொண்டு போகும் சிறு வண்டியொன்றூ. அதனருகில் அமர்ந்து நிம்மியும் பிரபாவும் நாங்களும் பேசிய கதைகளில் பெரும்பாலும் ஒரு பெருங்காடிருக்கும் அதனுள் நுழைந்ததுமே கனிகள் செறிந்திருக்கும் பழமரங்களும் அண்டாக்களில் நிரம்பியிருக்கும் எலுமிச்சை சர்பத்துமாகவே இருக்கும். கேட்பாரற்ற அந்த உணவுகளை கற்பனைக்கதைகளில், அள்ளி அள்ளி புசிப்போம் அப்போ்து. 

அங்கமர்ந்துதான் அப்போது எங்களுக்கு தெரிந்த இரண்டு சிற்றுண்டிகளான வாழைப்பழத்துக்கு அடுத்ததான நறுக்கிய தக்காளி துண்டுகளில் சர்க்கரை தடவி சாப்பிடுவோம், அம்மாவுக்கு தெரியாமல் ஒரு துளி நீர் ஊற்றி வைத்த  சர்க்கரை டப்பாவில் மறுநாள்  கிடைக்கும் சிறு சர்க்கரை வில்லையளித்த குதூகலத்தை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் எந்த அடுக்கில் கைவைத்தாலும் மகன்களுக்கு கிடைக்கும் பட்டை சாக்லேட்டுகள் அளிக்கவே முடியாது.

 பள்ளியின் ,NCC  ஆபீசரான அப்பா சுவரில் தொங்க விட்டிருக்கும்  கார்க் குண்டுகள் சுடும் வெற்றுத் துப்பாக்கியை கொண்டு எங்களிருவரையும், அந்த அறியா வயதின் தவறுகளின் பொருட்டு  சுட்டுவிடுவதாக சொல்லி மிரட்டுவார். வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் வழிய சுவரோடு சுவராக பல்லியை போல அழுந்தியபடி அஞ்சி நின்ற இரு சிறுமிகளை நானே இப்போது அந்த பச்சை கம்பி ஜன்னல் வழியே பார்க்க முடிகிறது.

’’கண்ணீரும் கனவும்’’ என்று அருணா அவர்களின் இன்றைய பதிவை வாசித்ததும் எனக்கும்  பால்யத்தின் நினைவுகள் கொப்பளித்து கிளம்பியதால் அவற்றை எழுத தொடங்கியிருக்கிறேன். ஜன்னல் வழி பயணம் இன்னும் தொடரும்

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑