அய்யப்பன் கோவில் அருகில் இருந்த அந்த வாடகை வீட்டில் கழிந்த என் பால்யம் என்றென்றைக்கும் மறக்கவியலாததாகி விட்டிருக்கிறது. இன்றும்கூட மனது பாரமாகும் நாட்களில் அந்த தெருவுக்கு போய் இப்போது அடையாளம் தெரியமலாகிவிட்டிருந்தாலும அந்த முன்னறையின் பச்சைவண்ணமடித்த கம்பிகளுடனான ஜன்னல் மட்டும் அப்படியே இருக்கும் வீட்டை பார்த்துவிட்டு வருவதுண்டு. அந்த ஜன்னல் என் பால்யத்துக்குள் நான் நுழையும் வாசலாகி விட்டிருக்கிறது.
அந்த வீட்டில் நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் வரைதான் இருந்திருக்கிறேன், அம்மா தம்பி விஜியை வயிற்றில் கொண்டிருந்ததால்..3ம் வகுப்புக்கு வேட்டைக்காரன் புதூரிலும், பின்னர் ராஜா ராமண்ணா நகர் சொந்த வீடு கட்டப்பட்ட பின்பு அம்மாவுடன் தாராபுரம் போய் செயின்ட் அலொஷியஸில் 4 ம் வகுப்பும் படித்தேன்
ஆனால் அந்த வெங்கடேசா காலனி வீட்டின் அமைப்பு அப்படியே நினைவில் இருக்கிறது. இரண்டு அறையும் பின்னால் கரி படிந்த விறகடுப்பு டன் கூடிய சமையலறையும்,துவைக்கும் கல்லுடன் கூடிய , கீழே அமர்ந்து , பாத்திரம் கழுவும் இடத்துடன் பின் கதவுடன் முடியும் பெரிய பின் முற்றமும், பின் கதவை திறந்து கொஞ்சம் நடந்தால் தனியே வரிசையாக கட்டப்பட்டிருக்கும் எடுப்பு பொதுக்கழிவறைகளுமாக 3 குடித்தனங்கள் ஒரே காம்பவுண்டில்.
இதில் நாங்களும் கமலா அத்தை ராமு மாமா குடும்பம் பக்கம் பக்கமாக இரட்டை வீடுகளில். குருவாயூரப்பன் வீடு மட்டும் எங்கள் இருவரின் வீட்டுக்கு பின்னால் பக்கவாட்டில் திரும்பி கோபித்து கொண்டதுபோல் அமைந்திருந்க்கும். அவன் யாருடனும் அதிகம் ஒட்ட்டியதில்லை. வீட்டு பெரியவர்களும் அப்படியே. வீட்டு மதில் சுவரும் அடுத்திருந்த ஐயப்பன் கோவில் மதிலும் ஒன்றே. அந்த பால ஐயப்பனும் எங்கள் களித் தோழன்தான்.
எனக்கு எப்படி இது நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை எனினும் துல்லியமாக என்னால் நினைவு கூற முடிந்த ஒரு நினைவென்றால் முன்னறையின் வாசல் நிலையில் அம்மா என்னை மடியில் அமர்த்திக்கொண்டு அமர்ந்திருக்கிறார் அறையின் கோடியில் பச்சை இரும்பு மடக்கு நாற்காலியில் அப்பா அமர்ந்து முன்னால் இருந்த மர ஸ்டூலில் சின்ன முகம் பார்க்கும் கண்ணாடி,ஒரு டம்ளரில் தண்ணீர், சோப்பு நுரையுடன் ஷேவிங் பிரஷ் சகிதம் முகச்சவரம் செய்து கொண்டிருக்கிறார். நான் அம்மாவின் ரவிக்கைக்குள் இருந்து முலையை எடுத்து அதன் காம்பை திருகி கொண்டிருப்பதை அம்மா புன்னகையுடன் அப்பாவிடம் சுட்டி காண்பிக்கிறார், திரும்பி பார்க்கும் அப்பா மறுமொழி ஏதும் சொல்லாமல் புன்னைகையைபோல எதோ செய்கிறார்.
ஆச்சர்யமாக இருக்கிறது ஏனெனில் ஒரு வேளை அம்மா எனக்கு 2 வயது வரை முலைகொடுத்திருப்பினும் அந்த நினைவுகள் இன்னும் அழியாமல் இருப்பது விநோதம்தான்.
அந்த வீட்டில் தான் அப்பா கலைக்களஞ்சியம் என்னும் ஒரு கெட்டி அட்டை போட்ட வண்ண புத்தகம் கொண்டு வந்து தந்தார்.கனத்த அதன் அட்டையை திறந்ததும் உள்ளே ஒருகாகித செந்தாமரை மலர் விரியும் அமைப்பு இருக்கும். மனம் அப்போது அப்படி பொங்கி ததும்பும்.என் சின்னஞ்சிறு கரங்களில் மீள மீள அச்செந்தாமரை மலர்ந்தபடியே இருந்தது. அட்லஸ் வழியே உலகை முதன் முதலில் பார்த்ததும் அதில்தான். அது அளித்த பரவசம் பின்னர் வேறெதிலும் கிடைத்ததில்லை..
நேரம் கிடைக்கையில் எல்லாம் அந்த முழு உலக வரைபடத்தையும் பின்னர் அடுத்தடுத்த பக்கங்களில் தனித்தனி கண்டங்களையும் அவற்றின் வழவழப்பையும் தொட்டுத்தொட்டு பார்த்தபடியே இருப்பேன். அங்கெல்லாம் சென்று வந்தது போலவே பெரும் பரவசமளித்த அனுபவம் அது. அப்பா அப்போது பார்த்து வந்த ஆசிரியப்பணியுடன் கூடுதலாக நூலக பாதுதுகாப்பும் அவர் பொறுப்பில் இருந்ததால் அதைக் கொண்டு வந்திருந்தார்..என் வாழ்வின் முதல் நூல் பரிச்சயமது.கமலா அத்தையின் மகன் ராமுவும் நாங்களும் ஏக வயது எனவே எல்லா விளையாட்டுகளிலும் அவனுமிருப்பான். அவனுடனும் கலைக்களஞ்சியத்தை வாசிப்போம் அல்லது பார்ப்போம்.
கமலா அத்தையின் வீட்டு கூடத்தில் டைனிங் டேபிளுடன் இணைக்கப்பட்டிருந்த காப்பிக்கொட்டை அரைக்கும் சிறு இயந்திரம் இருக்கும், அதில் அவ்வப்போது காபிக்கொட்டைகளை வறுத்தரைத்து அத்தை போடும் பில்டர் காபி கமகமக்கும்., அத்தையின் கீழுதட்டின் சின்ன சதைத் திரட்டு அளிக்கும் கவர்ச்சியாலேயே நான் அவர்பால் பெரிதும் ஈர்க்கப் பட்டிருந்தேன்.
பிரபாவுக்கென அத்தை தயிர்சாதத்தில் மாம்பழத்தை பிசைந்து ஊட்டுவார். வாசனை அபாரமாயிருக்கும். ஒருமுறை அத்தையின் உறவினரான கிளியுடன் விளையாடுகையில் , ஆம் அவள் பெயரே கிளிதான், மூன்று வரிசையில் இருந்த சிவப்பு சி்மெண்ட் பூசப்பட்டு கோடுகள் இடப்பட்டிருக்கும் வீட்டு வாசற் படிகளில் தடுக்கி விழுந்து மித்ரா நாக்கை துண்டித்துக்கொண்டாள், அப்பா அவளை தூக்கிக்கொண்டு அடுத்த தெரு தாமஸ் டாக்டர் வீட்டுக்கு ஓடி நாக்கை தைப்பதற்குள் அவரது வெள்ளை வேட்டி முழுக்க சிவப்பானது, பலமுறை அதே தாமஸ் டாகடரிடம் சின்ன சின்ன விஷக்கடிகளுக்கு சிகிச்சை பெற்றிருக்கிறோம். மித்ராவால் அவளது நுனி நாக்கை இப்போதும் முழுதாக மடிக்க முடியும்
வீட்டு வாசலில் எப்போதுமிருக்கும் கனகாம்பர பூச்செடிகள். அம்மா மாலையில் அவற்றை தொடுத்து தலையில் வைத்துக்கொள்வார்.பெரிய பெண்ணானதும் அப்படி நானும் வைத்துக்கொள்ளனுமென்று ரகசியமாக மனதில் நினைத்துக் கொள்வேன்.
கமலா அத்தை வீட்டு வாசலில் நின்ற சிவப்பு செம்பருத்தி மரங்களில், பூக்கள் பறிக்க வரும் ஐயப்பசாமி மாலை போட்ட என்னால் ஊமை மாமா என்றழைக்கப்பட்ட ஊமை பக்தர் ஒருவர் எல்லா வருடமும் தவறாமல் வந்து மலர்களை பறித்துசென்றுவிட்டு, கோவிலிலிருந்து திரும்புகையில் ஒருநாள் கூட தவறாமல் பொங்கலும் புளியோதரையுமாக பிரசாத தொன்னையை என் கையில் கொடுப்பார்.
அந்த தெருவில் தினமணிக்கதிர் பேப்பர் வாங்குவதால் கதிரக்கா என்றழைக்கப்டும் ஒரு பெண்ணின் வீடிருந்தது. அங்கே அநேகமாக தினமும் அந்த பேப்பரை நான் சென்று வாசிக்க வாங்கி வந்து பின்னர் திரும்ப கொடுப்பேன், அந்த கதிரக்காவின் குதிகால் வரை நீண்டிருக்கும் அடர்ந்த கூந்தலை அவரது அம்மா துணி துவைக்கும் கல்லில் பரத்தி வைத்து அரப்பிட்டு தேய்த்து கழுவுவார், கூடவே ’’ஆளைக்கொல்லும்டீ இத்தனை முடி’’ என்று கடிந்து கொள்வார்.
’’சீமெண்ணே ’’என்று கூவியபடி அவ்வபோது வாசலில் ஒற்றை மாட்டு வண்டி வரும். தகர டின்னில் மண்ணெண்ணெய் வாங்குவது வழக்கம் அப்போது., ஒருநாள் பிரபா உரக்க ’’எங்கம்மா இன்னிக்கு தீட்டு சீமெண்ண வேண்டாம்’’ என்று வீட்டு வாசலிலிருந்தே கத்த ராமு மாமா பின்னாலிருந்து காதை திருகி உள்ளே கூப்பிட்டு போனார். ‘’திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே சீமெண்ன நாராயணா ’’ என்று கோரஸாக அந்த வண்டி வருகையில் நாங்கள் மூவரும் பாடுவோம். கபாலத்தின் கடின ஓடே இல்லாமல் பிறந்த பிரபாவின் தங்கை ப்ரியாவை, வெகு பத்திரமாக கமலா அத்தை பார்த்துக் கொள்ளுவார்.5 வயதான பின்னரே அவளுக்கு சரியானது
அடுத்த தெருவில் பெரும் பணக்கார குடும்பமான சுஜியின் வீடிருந்தது. அதில் இருந்த நிலவறை பெரும் மர்மம் கலந்த வசீகரம் அளித்தது எனக்கு.
மேரி நிம்மி,பாபு என்னும் ஒரு கிறிஸ்தவ குடும்பமும் நட்பிலிருந்தார்கள். அவர்கள் வீட்டிலிருக்கும் இப்போது’’ பெயிண்டர் பிரஷ் குரோட்டன்’’ என நான் தெரிந்து கொண்டிருக்கும் பலவண்ணச் சிதறல்கள் இருக்கும் இலைகளுடனான குரொட்டன் செடியும் நிலவறை அளித்த அதே ஈர்ப்பை அளிக்கும் எனக்கு.,
அம்மா பணிபுரிந்த பெண்களுக்கான அரசு விடுதி வீட்டின் நேரெதிர் கட்டிடத்தில் இருந்தது, அங்கு நான் அம்மாவுக்கு தெரியாமல் ஹாஸ்டல் பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிட்ட கஞ்சியும் கொள்ளுத்துவையலும்,அதன் பொருட்டு வாங்கிய அடிகளுமாக நிறைந்திருந்த காலமது. அங்கிருந்த ஒரு சிறு பப்பாளி மரத்தின் உச்சி வரை நான் ஏறி விளையாடுவேன். தங்கம்மாவும் நாகம்மாவும் இறங்கச் சொல்லி கூச்சலிடுவார்கள்.ஹாஸ்டலின் வேப்ப மரத்தின் பாதி நிம்மி வீட்டில் நிற்கும்.
ஹாஸ்டல் சமையல்கார நாகம்மா என்னை மடியில் படுக்க வைத்து சொல்லிய கதைகள் ஏராளம் பெரும்பாலுமவை அவரின் சொந்த வாழ்வின் கதைகள் என்பதை இப்போது உணர்கிறேன் அப்பா அம்மா எனக்கு கதைகள் சொல்லியதே இல்லை ஆனால் நாகம்மாவே என் உலகில் கதைகளை புகுத்தியவர் அவை அனைத்துமே துயரக்கதைகளானாலுமே.
மிக இளம் வயதிலேயே குறை பட்டுபோன நாகம்மாவின் கறை படிந்திருக்கும் வெள்ளைச்சேலையின் வாசம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது,, கால்களை நீட்டி என்னை படுக்க வைத்து நாகம்மா அடிக்கடி ’’கிங்கிங் கிங்கிங் காணலையே, எங்கயும் காணலியே, எங்கயும் காணலியே வாழமரத்தடியே மாமியார் வீடிருக்க’’ என்று துவங்கும் பூ வங்கி வரச்சென்ற தன் கணவனான ஆண் தவளை ஒரு பஸ் சக்கரத்தில் நசுங்கி செத்துப் போனது தெரியாமல் போனவர காணோமே என்று கண்ணீருடன் தேடும் பெண் தவளையின் பாடலை பாடுவார்., எப்போது அதை பாடினாலும் சொட்டு சொட்டாக நாகம்மா கண்களில் இருந்து வழியும் கண்ணீரின் வெம்மையை இப்போது சக ஹிருதயளாக உணர்கிறேன்,
நாகம்மா தன் ஒரே ஆசையாக கருப்பு செருப்புக்களை போட்டுக் கொள்ள விரும்பினார் என்னிடம் விளையாட்டாக எப்போது நான் வேலைக்கு போனாலும் சம்பளத்தில் செருப்பு வாங்கி தர வேண்டும் என்று சொல்லுவார். ஆய்வு மாணவிக்காக அளிக்கபட்ட சலுகைக்கட்டணம் வாங்கிய முதல் மாதமே நாகம்மாவிற்க்கு செருப்புக்கள் வாங்கினேன். ஆனால் போது அவர் அவற்றை அறிந்துகொள்ள முடியாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒரு மூலை கட்டிலில் படுத்திருந்தார். பின்னர் சில நாட்களில் மறைந்துவிட்டார்.
கருப்பு செருப்புகளும், தவளைகளும், வெள்ளைச்சீலையும் எப்போதும் எனக்கு நாகம்மாவை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது
இன்னொரு உதவியாளர் தங்கம்மாவும் என்னை வளர்த்தவரில் ஒருவர். நாகம்மா என் செவிக்குணவளித்தார். தங்கம்மா வயிற்றுக்கு.
எப்போது என்னை பார்த்தாலும் எனக்கென்று அம்மாவுக்கு தெரியாமல் நான் சாப்பிடும் ஒரு ரகசிய தின்பண்டம் வைத்திருந்து கொடுப்பார்.அதில் தங்கமையின் வியர்வையின் வாசம் இருக்கும். அன்பின் வாசமது
திலேப்பி மீன்களீன் சதையை கீறி அவற்றில் மசாலாவை திணிக்கும் மெலிந்த எலும்பு புடைத்திருக்கும் கரிய தங்கம்மாவின் கைவிரல்கள் வளர்த்த உடலிது.
முதன் முதலாக வீட்டுக்கு வாங்கிய ஒரு சின்ன நாய் குட்டியின் கழுத்தில் கயிறு கட்டி ஜன்னலுக்கு உள்ளிருந்து கிணற்றில் தண்ணீர் சேந்துவதுபோல இழுத்து, அதை தூக்கிட்டு அறியாமல் நான் கொன்றேன். அது ஏன் அசையாமல் என்னிடம் விளையாடாமல் கண்ணை மூடிக்கொண்டிருக்கிறதென்பதை முதுகில் நாலு விழுந்த பின்னே தெரிந்துகொண்டேன். எனக்கு தெரியவந்த முதல் மரணம் அது.
எதன் பொருட்டோ எப்போதுமே வீட்டின் சந்தில் நின்றுகொண்டிருந்தது சிமெண்ட் தள்ளிக்கொண்டு போகும் சிறு வண்டியொன்றூ. அதனருகில் அமர்ந்து நிம்மியும் பிரபாவும் நாங்களும் பேசிய கதைகளில் பெரும்பாலும் ஒரு பெருங்காடிருக்கும் அதனுள் நுழைந்ததுமே கனிகள் செறிந்திருக்கும் பழமரங்களும் அண்டாக்களில் நிரம்பியிருக்கும் எலுமிச்சை சர்பத்துமாகவே இருக்கும். கேட்பாரற்ற அந்த உணவுகளை கற்பனைக்கதைகளில், அள்ளி அள்ளி புசிப்போம் அப்போ்து.
அங்கமர்ந்துதான் அப்போது எங்களுக்கு தெரிந்த இரண்டு சிற்றுண்டிகளான வாழைப்பழத்துக்கு அடுத்ததான நறுக்கிய தக்காளி துண்டுகளில் சர்க்கரை தடவி சாப்பிடுவோம், அம்மாவுக்கு தெரியாமல் ஒரு துளி நீர் ஊற்றி வைத்த சர்க்கரை டப்பாவில் மறுநாள் கிடைக்கும் சிறு சர்க்கரை வில்லையளித்த குதூகலத்தை இப்போது குளிர்சாதனப் பெட்டியில் எந்த அடுக்கில் கைவைத்தாலும் மகன்களுக்கு கிடைக்கும் பட்டை சாக்லேட்டுகள் அளிக்கவே முடியாது.
பள்ளியின் ,NCC ஆபீசரான அப்பா சுவரில் தொங்க விட்டிருக்கும் கார்க் குண்டுகள் சுடும் வெற்றுத் துப்பாக்கியை கொண்டு எங்களிருவரையும், அந்த அறியா வயதின் தவறுகளின் பொருட்டு சுட்டுவிடுவதாக சொல்லி மிரட்டுவார். வாயை பொத்திக்கொண்டு கண்ணீர் வழிய சுவரோடு சுவராக பல்லியை போல அழுந்தியபடி அஞ்சி நின்ற இரு சிறுமிகளை நானே இப்போது அந்த பச்சை கம்பி ஜன்னல் வழியே பார்க்க முடிகிறது.
’’கண்ணீரும் கனவும்’’ என்று அருணா அவர்களின் இன்றைய பதிவை வாசித்ததும் எனக்கும் பால்யத்தின் நினைவுகள் கொப்பளித்து கிளம்பியதால் அவற்றை எழுத தொடங்கியிருக்கிறேன். ஜன்னல் வழி பயணம் இன்னும் தொடரும்
Leave a Reply