லோகமாதேவியின் பதிவுகள்

Category: தாவரங்கள் (Page 1 of 14)

காய்ச்சல் மரம்!

மமானியை தேடி பொலிவிய வனக்காவலர்கள் காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். அயலவர் ஒருவருக்கு மமானி உதவுவதை வெறுத்த இன்கா இனத்தின் இளைஞர்கள் அவனை காவலர்களுக்கு காட்டிக் கொடுத்திருந்தார்கள்.

அதை அறியாத மமானி தனக்குள்ளேயே பேசிக்கொண்டு காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான். அவன் அதிர்ஷ்டத்தின் மீது அவனுக்கு சில வருடங்களாகவே அவநம்பிக்கை வந்துவிட்டது. மரப்பட்டைகளையும் விதைகளையும் சேகரிப்பது அவன் குலத்தொழிலாக  இருந்தும் இத்தனை வருடங்களாக அவன் எஜமானுக்கு தேவையான அந்த மரத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அம்மரத்தை நன்றாகவே அடையாளம் தெரியும். இலைகளின் அடிப்புறம் சிவப்பாகவும் மேற்புறம் பளபளக்கும் பச்சை நிறத்திலும் இருக்கும். அவற்றின் பட்டை மிக கசக்கும் அதைத்தான் எஜமானர் சார்லஸ் லெட்ஜரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். கசக்கும் பட்டையை கொண்டிருக்கும் குயினா என்றழைக்கப்படும் எல்லா மரங்களும் ஒன்று போலவே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகளும், கனத்த மரப்பட்டையும் கொண்டிருக்கும் ஒன்றைத்தான் அவன் தேடிக்கொண்டிருந்தான்.

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.

காட்டின் உயரமான ஒரு குன்றின் மீதிருந்து உரக்க கத்தி்னான் மமானி. ‘’அபூ, எங்கள் மலைத் தெய்வமே! உனக்குப் பிரியமான கொக்கோ இலைகளையும் சோளத்தையும் எத்தனை முறை படைத்து வழிபட்டேன்? நீ நிறைவுறவில்லையா? நான் துரதிர்ஷ்டக்காரன் தானா ? எஜமான் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துவிடப் போகிறதா?

கோன்! காற்றுக்கும் மழைக்குமான தெய்வமான நீயுமா என் மீது இரங்கவில்லை? உனக்கும் பல நூறு பிராரத்தனைப் பாடல்களை பாடினேனே! எத்தனை கரிய பறவைகளை உனக்கென பலி கொடுத்தேன்? எத்தனை தலைமுறைகளாக நாங்கள் பட்டை சேகரிக்கிறோம்? ஏன் இப்போது கனியமாட்டேனென்கிறீர்கள்?’’

’’ சரி நான் காத்திருக்கிறேன் நீங்கள் இறங்கி வருவீர்கள் என்று எனக்கு தெரியும். இது எனக்கான காலம். 22 வருடங்களாக என் நான்கு மகன்களை கூட பார்க்காமல் எஜமானருடன்தானே இந்த காட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கு பலனில்லாமல் போகாது. எத்தனையோ மக்களின் உயிரைக் காப்பாற்றத்தானே இதை தேடுகிறேன் என்று உனக்கு தெரியாமலா இருக்கும்? என் அபூ! எஜமானர் சார்லஸ்க்கு எத்தனையோ விதைகளையும், பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்து தந்திருக்கிறேன், இந்த ஒன்றை மட்டும் ஏன் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறாய்?’’

மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

அவன் உள்ளுணர்வு சொன்னது சரிதான் அவன் அந்த மரத்தை பார்த்தே விட்டான். ஒரு மலைச்சரிவில் மலர்ந்து நின்றிருந்தது அது. குழல் போல சிவப்பில் மலர்கொத்துக்களும், கனத்த பட்டையுமாக அங்கே நிற்பது அதேதான்,

மலைத்தெய்வங்களே! மனமிரங்கி விட்டீர்கள் என்று கூவியபடி கண்ணீருடன் மமானி அங்கே சென்றபோது மரத்தடியில் ஏராளமான விதைகளும் சிதறிக் கிடந்தன. காட்டின் மறுபுறத்திலிருந்து அங்கு வந்து கொண்டிருக்கும் அவன் எஜமானர் அத்தனை வருடங்களாக இதைத்தான் தேடினார். விதைகளை சேகரித்து மண்ணில் பிசைந்து பல உருண்டைகளாக உருட்டி தண்டுகள் சூலாயுதம் போல கிளைத்திருக்கும் தாரா மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்து விட்டு மமானி சார்ல்ஸுக்கு கொடுத்த சங்கேத குரல் சார்ல்ஸ் லெட்ஜெருக்கும் அங்கே காவலிருந்த பொலிவியா காவலர்களுக்கும் ஒரே சமயத்தில் கேட்டது.

மமானிக்கு நினைவு அடிக்கடி தப்பிக்கொண்டே இருந்தது நினைவு வரும் போதெல்லாம் வலியும் தெரிந்தது. நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் கண்ணில் வழிந்து யார் அடிக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. உயிரே போனாலும் எஜமானரின் பெயரை சொல்லப்போவதில்லை என்பதில் மமானி உறுதியாக இருந்தான்.

எத்தனை நாளாயிருக்கும் காட்டில் பிடிபட்டு இங்கே வந்து என்றும் அவனுக்கு நினைவில் இல்லை. எஜமானருக்கு அந்த விதைகளை கொடுப்பதற்குள் பிடித்துவிட்டார்களே என்பதுதான் அவனுக்கு வருத்தம், ஆனால் தாரா மரப்பொந்துக்குள் இருப்பவற்றை அவர் நிச்சயம் எடுத்துக்கொள்வார் என்று நம்பிக்கை இருந்தது.

பெரு மற்றும் அதன் அண்டை நாடுகளில் வளரும் சின்கோனா மரங்களின் பட்டைகளையும் விதைகளையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது.

மலேரியா சிகிச்சைக்காக பல நாடுகளில் இருந்தும் அவற்றை திருடிச் செல்ல பலர் அக்காட்டுக்குள் ஊடுருவுவதால் அங்கு பலத்த காவல் இருந்தது. மமானி யாருக்கு உதவி செய்தான் என்பதை அறியத்தான் அவனை காவலர்கள் சித்திரவதை செய்தனர். ஆனால் 20 நாட்களாக அடித்தும் மமானியிடமிருந்து எந்த விவரமும் கிடைக்கவில்லை.

குகைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மமானியால் நடக்க முடியவில்லை. உடலெங்கும் எலும்பு முறிவும், ரத்தக்காயங்களுமாக மெல்ல தவழந்து தன் வீட்டை நோக்கி நகர முயன்ற மமானியின் கண்கள் குருதியிழப்பால் உயிரிழக்குமுன்னர் கடைசியாக ஒருமுறை தாரா மரம் இருக்கும் திசையை பார்த்தன.

1818 ல் லண்டனில் பிறந்த சார்லஸ் லெட்ஜர், அல்பாகாவின் ரோம விற்பனையின் பொருட்டு தனது 18வது வயதில் (1836ல்) பெருவிற்கு சென்றார் .1852 ல் ஆஸ்திரேலியாவில் அல்பாகாக்களை அறிமுகம் செய்ய அவர் சிட்னிக்கு பயணித்தார். அப்போது அல்பாகாக்களை பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல சட்டப்படி தடை இருந்தது. இருந்தும் தென்னமெரிக்காவிற்கு திரும்பிய லெட்ஜர் பல நூறு அல்பாகாக்களை பெருவின் பழங்குடியினரின் உதவியுடன் சிட்னிக்கு 1859 ல் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு அல்பாகா வர்த்தகம் செழிப்பாக நடந்தது.

1864ல் தென்னமரிக்கா திரும்பிய அவர் அப்போது பலரும் ஈடுபட்டிருந்த சின்கோனா பட்டைகளை தேடும் முயற்சியில் கவனம் செலுத்தினார். முன்பே நெருக்கமாக இருந்த மானுவல் இன்க்ரா மமானி (Manuel Incra Mamani) என்னும் பொலிவிய பட்டை மற்றும் விதை வேட்டையாடும் (காஸ்கரில்லெரோ) இன்கா பழங்குடியின பணியாளுடன் பொலிவியா மற்றும் அதன் அருகிலிருந்த காடுகளில் சின்கோனா விதைகளையும் பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்துக்கொண்டிருந்தார்.

அந்த தேடுதல் வேட்டையில் பிறரால் நுழைய முடியாத அடர் காட்டுப்பகுதிகளுக்குள் பல சிரமங்களுக்கிடையே அவர்கள் இருவரும் பயணித்து சின்கோனா விதைகளை சேகரித்தனர்

லெட்ஜரிடம் 1843 லிருந்து பணியாற்றிய மமானி சின்கோனாவின் 29 வகைகளை ஏராளமான ஆபத்துகளுக்கிடையில் கண்டறிந்தார். அயலவருக்கு உதவி செய்ததற்காக தன் இனத்தவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட மமானி யாருக்கு உதவி செய்தேன் என்று கடைசி வரை தெரிவிக்காததால் 1871 ல் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

மமானியின் இறப்பால் மனமுடைந்த லெட்ஜர் பிற்பாடு மமானியின் குடும்பத்தின் பொருளாதார தேவை உள்ளிட்ட முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார். மமானிக்கும் லெட்ஜருக்கும் மட்டும் தெரிந்த ரகசிய இடத்தில் சேர்த்து வைத்திருந்த சின்கோனா விதைகளை லண்டனில் இருக்கும் தனது சகோதரர் ஜார்ஜுக்கு அனுப்பி வைத்தார்.

ஜார்ஜ் அளித்த சின்கோனா விதைகளில் பிரிட்டிஷ் அரசு அத்தனை ஆர்வம் காட்டாததால் மீதமிருந்த விதைகளை டச்சு அரசிடம் கையளித்தார் ஜார்ஜ்.

டச்சுக்காரர்களுக்கு விதைகளின் அருமை தெரிந்ததால் அவற்றை பாதுகாத்து, விதைத்து மரங்களாக்கினர். இம்மரங்கள் பின்னர் லெட்ஜரின் பெயராலேயே Cinchona ledgeriana என்றழைக்கப்பட்டன. இவை 8 லிருந்து 13 சதவீதம் குயினைனை அளித்தன.

மலேரியா

மலேரியா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பழமையான நோய். மாசடைந்த காற்றினால் உருவாகும் காய்ச்சல் என துவக்க காலத்தில் கருதப்பட்டதால்’’அசுத்தமான காற்று’’ எனப்பொருள்படும் இத்தாலிய சொல்லால் இந்நோய் ’மலேரியா’ என அழைக்கப்பட்டது (“bad air” -mal’ aria).

அறிவியலாளர்கள் 30 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கல்மரப்பிசினில் (amber) பாதுகாக்கப்பட்டிருந்த, கொசுக்களில் மலேரியா ஒட்டுண்ணிகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

மலேரியா பிளாஸ்மோடியம் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, இந்த ஒட்டுண்ணியை கொண்டிருக்கும் பெண் அனோபிலஸ் கொசு மனிதர்களை கடிக்கும் போது நோய் அவர்களையும் பாதிக்கிறது. நோயுற்ற மனிதர்களின் உடலினுள் ஒட்டுண்ணி கல்லீரல் மற்றும் இரத்த சிவப்பணுக்களில் பெருகி காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகளாக ரோமானிய நகரங்களின் செல்வந்தர்கள் மலேரியா தாக்கும் பருவத்தில் குளிர்ந்த காலநிலை கொண்ட பிரதேசங்களுக்கு சென்று நோயிலிருந்து தப்பினர். ஏழைகள் நோய்த்தொற்றினால் காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் பாதிக்கப்பட்டனர்,ரோமாபுரி 17 ம் நூற்றாண்டின் மலேரியாவின் தலைமைப் பிரதேசமாக இருந்தது.

அக்காலங்களில் மருத்துவர்கள் மலேரியா சிகிச்சைகளாக நோயாளிகளுக்கு மண்டையோட்டில் துளையிடுதல், (trepanning,) குருதி நீக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புக்களை வெட்டி அகற்றுவது ஆகியவற்றுடன் ஆர்டிமிசியா, பெல்லடோனா ஆகிய மருந்துகளையும் பயன்படுத்தினர்

ஆண்டு முழுவதும் மலேரியா ஒட்டுண்ணி செழித்து வளர்ந்த ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி மக்களுக்கு மலேரியா ஒட்டுண்ணியிடமிருந்து பாதுகாக்கும் இரத்த சிவப்பணு பிறழ்வு நோயான, அரிவாள் செல் இரத்த சோகை உருவானது., இந்த பிறழ்வு நோய், அவர்களை மலேரியாவிலிருந்து பாதுகாத்தாலும் அதுவும் ஒரு முக்கிய நோயாக இருந்தது

டச்சு, போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர்கள் மலேரிய ஒட்டுண்ணிக்கும், உடலை வெகுவாக பலவீனப்படுத்தும் காய்ச்சலுக்கும் எதிரான நோய்த்தடுப்பு இல்லாதவர்களாதலால் மலேரியாவின் பேரழிவை அஞ்சி பல தசாப்தங்களாக ஐரோப்பியப் படைகளை ஆப்பிரிக்காவின் உட்புறத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தனர்.

ஆனால் மத்திய அமெரிக்காவில் ஸ்பெயின் படையெடுப்பாளர்களுடன் வந்த, இத்தாலிய பாதிரியார்கள் மலேரியா கொசுக்களைக் கொண்டு வந்து, அமேசோனிய படுகை மற்றும் ஆண்டிஸ் மலைப்பகுதிகளுக்கு நோயை அறிமுகப்படுத்தினர். அப்போதுதான், இன்கா பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் குய்னா-குய்னா அல்லது , காஸ்காரில்லா என்றழைக்கப்பட்ட பெருவியன் மரத்தின் பட்டைத்தூளை பயன்படுத்துவது தெரிய வந்தது அதுவே சின்கோனா மரப்பட்டை.

1860 களில் ஒன்றிணைந்த இத்தாலியின் முதல் பிரதமர் மலேரியாவில் 1861ல் உயிரிழந்த போதும் மலேரியா நோய் குறித்த அறிதல் மிக குறைவாகவே அங்கு இருந்து.

1878 ல் இத்தாலியின் மாபெரும் ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்த 2,200 பணியாளர்களில் 1455 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் இத்தாலி மலேரியாவின் தீவிரத்தை முதன் முதலாக அறிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை தொடங்கியது

1880 வரை மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணி கண்டறிய பட்டிருக்கவில்லை 1880ல் தான் பிரெஞ்ச் மருத்துவர் அல்ஃபோன்ஸ் (Alphonse Laveran) நோயாளியின் ரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணியை கண்டறிந்தார்

நாடு தழுவிய மலேரியா கட்டுப்பாடு மற்றும் கண்டறிதல் பரிசோதனைகள் பின்னர் வேகமாக நடந்து, முடிவில் இத்தாலியின் 8362 குடியிருப்பு பிரதேசங்களில் 3075 பகுதிகள் மலேரியாவினால் பீடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.

பெருவின் பழங்குடியினர் காய்ச்சலுக்கு பயன்படுத்தும் சின்கோனா மரப்பட்டைகளை குறித்து உலகம் அப்போது அறியத் துவங்கி இருந்ததால், இத்தாலி முழுவீச்சில் சின்கோனா மரப்பட்டைளை உபயோகப்படுத்தி மலேரியாவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை தொடங்கியது

19 ம் நூற்றாண்டில் மருத்துவர்கள் மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குருதி நீக்க சிகிச்சையை பயன்படுத்தியதால் ரத்தசோகையினால் நோயாளிகள் மிகவும் பலவீனமடைந்தார்கள். பலருக்கு உடல் உறுப்புக்கள் அகற்றப்படவேண்டி இருந்து. ஒரு சிலரே மலேரியாவுக்கு குயினைனை பயன்படுத்தினர். ஆனால் அதன் பக்க விளைவுகள் அதிகமென்பதால் ராணுவ மருத்துவர்கள் யான் ஆன்றி ஆண்டனி மற்றும் ஃப்ரான்கோயிஸ் ஆகியோர் (Jean Andre Antonini மற்றும் Francois Clement Maillot) காய்ச்சலுக்கு குயினைனை பயன்படுத்தக்கூடாது என்று வெகுவாக எதிர்த்தனர் . எனினும் குயினைனின் பயன்பாடு மலரியா காய்ச்சலை போலவே பெருகிக்கொண்டேதான் இருந்தது.

1840 களின் மத்தியில் தங்க கடற்கரையின் ஐரோப்பியர்கள் குயினைன் மாத்திரைப்புட்டியை படுக்கை அருகில் வைத்திருப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அக்காலங்களில் மலேரியா இறப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன்பிறகு பிரிட்டிஷ் ராணுவத்திலும் குயினைன் பயன்பாடு துவங்கியது.

1947 ல் அமெரிக்காவில் தொடங்கிய மலேரியா கட்டுப்பாட்டு முயற்சி 1950 வரை முழுமூச்சாக நடைபெற்று , 1951 ல் மலேரியா அமெரிக்காவில் முற்றிலும் ஒழிக்கப்பட்டது

2018ல் உலகெங்கும் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 405,000 ஆக இருந்தது. இதில் 67% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். தவிர்க்க முடிந்த நோயான மலேரியாவில் இத்தனை ஆயிரம் மக்கள் இறந்தது வேதனைக்குரியதுதான் என்றாலும் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான மரண எண்ணிக்கைதான்.

2019 ன் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை 2010ல் இருந்த 251 மில்லியன் மலேரிய நோயாளிகளைக் காட்டிலும் 2018 ல் குறைவாக 228 மில்லியன் மட்டும் இருந்ததை சுட்டிக்காட்டியது. தற்போது உலகின், 2.9% சதவீதத்தினர் மலேரியாவினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

சின்கோனாவின் வரலாறு

ஸ்பெயினின் மருத்துவரும் தாவரவியலாளருமான நிக்கோலஸ் (Nicolás Monardes) 1574ல் மரப்பட்டைப்பொடி ஒன்றின் காய்ச்சல் குணமாக்கும் பண்புகளை எழுதி வெளியிட்டிருந்தார் .மற்றொரு மருத்துவரான ஜுவான் (Juan Fragoso) அடையாளம் காண முடியாத ஒரு மரத்தின் பட்டைப் பொடி பல நோய்களை தீர்ப்பதாக 1600களில் குறிப்பிட்டிருந்தார்.

1638ல் இரண்டு நாணயங்களின் அளவிற்கு உருட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட தென்னமரிக்காவின் Loja பகுதியை சேர்ந்த மரமொன்றின் பட்டைப் பொடி நீரில் கலந்து குடிக்கையில் காய்ச்சலை குணமாக்குவதைக் குறித்து ஃப்ரே (Fray Antonio de La Calancha என்பவர் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் சின்கோனாவைப் பொறுத்தவரை முதல் விஞ்ஞானிகளாக கருதப்படுபவர்கள் 16 ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இயேசு சபையின் உறுப்பினர்களான Jesuits என்றழைக்கப்பட்ட அருட்பணியாளர்கள் தான். இவர்கள் அனைத்து கண்டங்களிலும் இறைப்பணியுடன் மருத்துவப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர். மனித குலத்துக்கு உபயோகப்படும் சாத்தியங்கள் கொண்ட எதுவாகினும் சோதித்து, சேகரித்து உலகின் பல பாகங்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்தார்கள் அவர்களால் கிடைக்கப் பெற்றவைகள் தான் டோலு என்னும் இருமல் நிவாரணி, நன்னாரி டானிக் மற்றும் கோகோ இலைகள்,

தென்னமரிக்க பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க அருந்திய மரப்பட்டைச்சாற்றை குறித்து கேள்விப்பட்ட Jesuits அவற்றை தேடி பயணித்தனர். பெரு, பொலிவியா பகுதிகளின் கெச்சுவா (Quechua) பழங்குடியினரால் ஒரு மரப்பட்டைச்சாறு தசை தளர்வுக்கும் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டது. மரப்பட்டையை பொடித்து இனிப்பு நீரில் அதை கலந்து கசப்பை குறைத்து அவர்கள் அருந்தினார்கள் அம்மரத்தை அவர்கள் காய்ச்சல் மரமென்று அழைத்தனர்.

வெனிசுவேலாவிலிருந்து பொலிவியா வரை பரவியிருந்த ஆண்டிஸ் மலைத்தொடரில் செறிந்து வளர்ந்திருந்த பசுமை மாறா அம்மரங்களின் விதைகளையும் பட்டைகளையும் பட்டைச்சாற்றையும் ஐரோப்பாவில் அருட்பணியாளர்கள் 1640களில் அறிமுகப்படுத்தினர்.

மெக்ஸிகோ மற்றும் பெருவின் நிலப்பரப்புகளில் ஆய்வுகளை செய்த கிருத்துவ போதகர் பார்னெபி (Barnabé de Cobo -1582–1657),தான் ஐரோப்பாவிற்கு சின்கோனா பட்டையை அறிமுகம் செய்தவர். பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து ஸ்பெயினுக்கும் பின்னர் ரோம் மற்றும் இத்தாலியின் பிற பாகங்களுக்கும் இவரே 1632 ல் சின்கோனாவை அறிமுகம் செய்தார் .1650களில் ஸ்பெயினுக்கு தொடர்ந்து சின்கோன மரப்படைகள் கப்பல்களில் அனுப்பி வைக்கபட்டுக்கொண்டிருந்தன.

இந்த அருட்பணியாளர்கள் 1640 ல் ஐரோப்பாவெங்கும் காய்ச்சல் மரத்தின் பட்டைப் பொடி வர்த்தகத்துக்கான வழிகளை உருவாக்கியதால். 1681ல் மலேரியாவிற்கான சிகிச்சையளிக்கும் மருத்துவ மரப்பட்டையாக சின்கோனா உலகெங்கும் அறியப்பட்டது.

1653ல் இத்தாலிய தாவரவியலாளர் பியட்ரோ (Pietro Castelli) மருத்துவம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கைப்பட எழுதி வெளியிட்ட நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுப் பிரசுரங்களில் ஒன்றில் சின்கோனா மரத்தைக் குறித்தும் மலேரியாவுக்கு எதிரான அதன் செயல்பாட்டையும் எழுதியிருந்தார். இதுவே சின்கோனா மரத்தைக்குறித்த முதல் இத்தாலிய ஆவணம்.

1677ல் பெருவியன் மருத்துவப் பொடி என்னும் பெயரில் சின்கோனா மரப்பட்டை பொடி அதிகாரபூர்வமாக லண்டன் பார்மகோபியாவில் (London Pharmacopoeia) “Cortex Peruanus” என்னும் பெயரில் பிரசுரமானது

Myroxylon peruiferum என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட பெருவியன் பால்ஸம் என்னும் மற்றொரு பிசின் மரத்தின் பட்டைகளும் சின்கோனாவின் பட்டைகளுடன் கலப்படம் செய்யப்பட்டது. அம்மரப்பட்டைக்கும் காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ பண்புகள் இருந்ததால் அம்மரமும் லண்டன் பார்மகோப்பியாவில் 1677ல் இடம்பெற்றது,

பிரஞ்ச் சின்கோனா தேடல் பயணத்தில் 1743ல் பெறப்பட்ட சின்கோனா விதைகள் மற்றும் நாற்றுக்கள் யாவும் ஒரு பெரும் கடற்புயலின்போது கடலில் மூழ்கின

சின்கோனா 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அரச குடும்பத்தினர்ர்களையும் குடிமக்களையும் சிகிச்சையளித்து காப்பாற்றுவதில் பங்களித்துடன் காலனித்துவம் மற்றும் போர்களுக்கும் காரணமாக இருந்தது.

எக்குவடோரின் தலைநகரான குயிடோவிற்கு (Quito) 1735ல் வருகைபுரிந்த வானியலாளர் சார்லஸ் (Charles Marie de la Condamine) இந்த மரத்தை முதல் முதலாக சரியாக விவரித்தார்.அவரால் அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்ட மரம் Cinchona officinalis,

1735,ல் பாரிஸின் அறியிவில் அமைப்பு தாவரவியலாளர் ஜோஸப் என்பவரை (Joseph de Jussieu) தென்னமெரிக்காவின் தாவரங்கள் குறித்து அறிய அனுப்பி வைத்தது அப்போது அவர் சின்கோனா மரத்தை பிரெஞ்ச் மொழியில் காய்ச்சல் மரம் என்று பொருள் படும் “l’arbre des Fièvres” என்று பெயரிட்டார்.

Jesuits எனப்பட்ட அருட்பணியாளர்களால இவை அறிமுகப்படுத்தபட்டதால், இந்த பட்டைப்பொடி பல நாடுகளில் ஜீசுட்ஸ் பட்டை அல்லது ஜீசுட்ஸ் பொடி (Jesuit’s bark Jesuit’s powder) என அழைக்கப்பட்டது

கிரானடா வைஸ்ராயின் பிரத்யேக மருத்துவரான ஜோஸ் (José Celestino Mutis) கொலம்பியாவின் சின்கோனா மரங்களை 1760 லிருந்து ஆய்வு செய்து ‘’El Arcano de la Quina’’ என்னும் நூலை சின்கோனா மரங்களின் சித்திரங்களுடன் 1793 ல் வெளியிட்டார்

அவர் வணிகரீதியான பலன் அளிக்கும் சின்கோனா வகைகளைக் கண்டறிய ஒரு திட்டத்தையும் முன்மொழிந்தார். அந்த திட்டம் 1783ல் அரசால் அனுமதிக்கப்பட்டு அவரது இறுதிக்காலமான 1808 வரை வெற்றிகரமாக நடந்தது.

கோவிட் பெருந்தொற்றுக்கான மருந்துகளுக்காக 2 வருடங்கள் முன்பு எப்படி நாம் அலைபாய்ந்து கொண்டிருந்தோமோ அதுபோலவே அன்று மலேரியாவுக்கான மருந்துகளுக்கு உலகம் காத்துக்கொண்டிருந்தது. .சின்கோனா கிடைத்தபோது வேறு எதைப்பற்றியும் கவலையில்லாமல் அவற்றை வெட்டி சாய்த்தது

பின்னர் 19 ம் நூற்றாண்டில் குயினைனின் தேவை பலமடங்கு அதிகமாகி பெரும் தட்டுப்பாடு உருவாகியது குயினைன் மரப்பட்டைச் சாறளித்து காய்ச்சலை குணமாக்குவது பாரம்பரிய மருத்துவ முறையாகத்தான் இருந்தது, எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அப்பட்டைப்பொடி ஐரோப்பாவின் மிக விலை உயர்ந்த மருந்து பொருளாகவே இருந்தது

டச்சு அரசு ஜாவாலிருந்து 1854ல் சின்கோனா நாற்றுக்களின் பட்டையையும் விதைகளையும் சேகரிக்க ஜஸ்டஸ் (Justus Hasskarl) என்பவரை அனுப்பியது

பிரபல பிரிட்டிஷ் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஸ்ப்ரூஸ் 1849 லிருந்து 1864 வரை 15 ஆண்டுகள் தென்னமெரிக்க காடுகளில் உதவிக்கு கியூ பூங்காவின் தோட்டக்காரர் ராபர்ட் கிராஸ் மற்றும் ஆங்கில புவியலாளரும் கள ஆய்வாளருமான கிளிமென்ஸ் மர்ஹாம் ஆகியோருடன் (Richard Spruce, Robert Cross & Clemens Markham) சின்கோனா விதைகள் நாற்றுக்கள் மற்றும் பட்டைகளை திருட்டுத்தனமாக சேகரித்தார். உதவிக்கு தென்னரிக்க பழங்குடியினரையும் உபயோகப்படுத்திக் கொண்டார்.

பெருவிற்கு இக்குழு வந்தபோது சின்கோனா மரங்கள் ஆயுதமேந்திய காவலாளிகளால் அல்லும் பகலும் பாதுகாக்கபட்டன. இத்தனை ஆபத்துக்கள் இருந்தும் மார்ஹம் பெரு அரசின் அனுமதி இல்லாமல், அவர்களுக்கு தெரியாமல் சின்கோனா விதைகளையும் நாற்றுக்களையும் சேகரித்து மேற்கிந்திய தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் அனுப்பினார்.

கிராஸ் மற்றும் ஸ்ப்ரூஸ் மட்டும் 100,000 சின்கோனா சுக்கி ரூப்ரா (Cinchona succirubra) வகையின் விதைகளையும் 637 நாற்றுக்களையும் சேகரித்தனர். ரகசியமாகவும் பத்திரமாகவும் இந்தியாவிற்கு அவற்றில் 463 நாற்றுக்கள் வந்தன. மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பட்ட அவற்றில் பெரும்பாலானவை துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரு சில நாற்றுக்கள் வளர்ந்தன.

17ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து 19 ம் நூற்றாண்டு வரை சின்கோனா பட்டைகள் உலகெங்கிலும் பயணித்தன.

1840 ல் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் ராணுவ வீரர்களுக்குமான மலேரியா சிகிச்சைகளுக்கு மட்டும் வருடத்திற்கு 700 டன் சின்கோனா மரப்பட்டை உபயோகிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டில்தான் ஐரோபியர்கள் அதீத சந்தைப்படுத்தலால் சின்கோனா மரங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.

எனவே அவரவர் நாடுகளில் சின்கோனா பயிரிடுவது மற்றும் இருக்கும் சின்கோனா மரங்களை பாதுகாப்பது ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருந்தனர். பிறகு சின்கோனா உலகின் பல பாகங்களிலும் பரவலாக வளர்க்கப்பட்டது. டச்சு மற்றும் பிரிட்டிஷார் சின்கோனா வளர ஏதுவானவை என தாவரவியலாளர்களால் அடையாளம் காட்டப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தனர். சின்கோனா விதைகள் வேறெங்கும் கொண்டு செல்லப் படுவதையும் தடை செய்தனர்.1852ல் டச்சு அரசு ஜஸ்டஸ் (Justus Charles Hasskarl) என்பவரை தென்கிழக்காசியாவில் சின்கோனாவை பயிரிட முனைந்த்தாக குற்றம் சாட்டி கைது செய்தது.

அச்சமயத்தில்தான் 1840களில் துவங்கி பல வருடங்கள் சார்லஸ் லெட்ஜர் மமானியின் உதவியுடன் ரகசியமாக பெருவின் காடுகளில் அதிக குயினைன் அளிக்கும் மரத்தை தேடிக்கொண்டிருந்தார்,

  • பொலிவியாவிலிருந்து பலரால் 1846ல் சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு உருவானவையே ஐரோப்பாவின் சின்கோனா வகையான C. Calisaya
  • பெருவிலிருந்து உலகின் பிற பாகங்களுக்கு அறிமுகமான மற்றொரு முக்கிய வகை சிவப்பு பட்டை கொண்ட Cinchona succirubra, (இப்போது C. pubescens– இதன் பட்டைச்சாறு காற்றில் கலக்கையில் சிவப்பு நிறமாக மாறும்)

கியூ பூங்காவில் சின்கோனாக்களுக்கென்றே பிரத்யேக பசுங்குடில்கள் உருவாககப்பட்டன. இந்தியாவில் நீலகிரி மற்றும் கொல்கத்தா தாவரவியல் பூங்காக்களில் இவை வளர்க்கப்பட்டன.

1880களில் நீலகிரியின் சின்கோனா தோட்டங்கள் தேயிலை தோட்டங்களாக மாறும்வரை இந்தியா மற்றும் டச்சு அரசுகளே சின்கோனா உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தன.

தென்னமெரிக்க சின்கோனா பட்டையின் முக்கிய ஆல்கலாய்டுகள் குயினைன் மற்றும் குயினைடின்((quinine & quinidine.) இரண்டும் மருத்துவத்துறையில் வெகுவாக பயன்பட்டு அவற்றின் தேவை உலகெங்கும் அதிகரித்தபோது மரங்களை பாதுகாக்கும் நடவடிகைகளும் கடுமையாகின.

பல நாடுகளுக்கும் அப்போது சின்கோனா மரப்பட்டை தேவைப்பட்டது எனவே அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இதன் பொருட்டு செலவழித்தன. 1857ல் பிரிடிஷ் இந்தியா வருடத்திற்கு சுமார் 7000 ரூபாய்கள் குயினைனுக்கு மட்டும் செலவளித்தது.

டச்சு , பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷாருக்கு முன்பாக ’’தங்களின் தேவைக்கேற்ற இயற்கை குயினைனை தாங்களே தயாரிப்பது, அல்லது குயினைனை வேதிப்பொருட்களிலிருந்து தயாரிப்பது ’’ ஆகிய இரண்டு வழிகள் மட்டும் இருந்தபோத,..1850ல் பிரெஞ்ச் மருந்து நிறுவனங்கள் ஜனவரி 1, 1851 க்குள் ரசாயன குயினைன் தயாரிப்பவர்களுக்கு 4000 பிராங்குகள் பரிசாக அளிக்கப்படும் என்றுகூட அறிவித்தார்கள் எனினும் 1944 வரை ரசாயன குயினைன் உருவாகி இருக்கவில்லை.

இந்தியாவில் சின்கோனா

பிரிட்டிஷ் இந்தியாவில் 1880களிலிருந்து சின்கோனா நீலகிரி மலையிலும் டார்ஜிலிங்கிலும் வளர்க்கப்பட்டது. கேரள மாநிலத்தின் மூணாரில் உள்ள மலைகளில் பிரிடிஷ் இந்தியாவின் அதிகாரிகள், பூஞ்சார் அரசரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த பூஞ்சார் பகுதி நிலத்தில் தேயிலை மற்றும் காபியுடன் சின்சோனா வளர்ந்தது.

இந்தியாவில் தற்போது சின்கோனா வணிக ரீதியாக பயிரிடப்படுவது டார்ஜிலிங்கில் மட்டுமே 1862 ல் தொடங்கப்பட்ட சின்கோனா மற்றும் பிற மருத்துவ தாவரங்களின் இயக்குநரகத்தின் (Directorate of Cinchona and Other Medicinal Plant (DCOMP)) 6900 ஏக்கரில் வளரும் சின்கோனா மரங்களிலிருந்து சுமார் 1,50,000 லிருந்து 2,00,000 கிலோ சின்கோனா மரப்பட்டை உருவாகிறது.

தாவரவியல் பண்புகள்

29 மீ உயரம் வரை வளரும், காபி பயிரின் குடும்பமான ரூபியேசியை சேர்ந்த சின்கோனா மரங்கள் பசுமை மாறா வகையை சேர்ந்தவை. எதிரடுக்கில் அமைந்திருக்கும் பளபளப்பான இலைகளையும் குழல் போன்ற வெண்மையும் இளம் சிவப்பும் கலந்த அழகிய சிறு மலர்களையும் கொண்டிருக்கும் கொத்துக்களாக காணப்படும் மலர்களின் இதழ்களில் மென்மயிர்களைப்போல வளரிகள் பரவியிருக்கும். சின்கோனா மரத்தின் கனி மிகச்சிறியது

7 லிருந்து 8 வருடம் வளர்ந்த சின்கோனா மரங்களிலிருந்து மரப்பட்டை எடுக்கையில் குயினைன் அளவு அதில் அதிகமிருக்கும். சின்கோனா

மரப்பட்டைகளில் குயினைன் மட்டுமல்லாது 35 வகையான பிற முக்கியமான ஆல்கலாய்டுகளும் கிடைக்கின்றன

கதைகள்

சின்கோனா மரப்பட்டையில் குயினைன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பல கதைகள் இருந்தன அவற்றில் பிரபலமானது 1928 ல் சி ஜே எஸ் தாம்ஸன் (C.J.S. Thompson) பிரிடிஷ் மருத்துவ சஞ்சிகையில் எழுதியது. காய்ச்சலில் அவதியுற்ற இந்தியர் ஒருவர் சின்கோனா மரம் முறிந்து வீழ்ந்து கிடந்த ஏரித் தண்ணீரை அருந்தி குணமான கதையை அதில் விவரித்திருந்தார்

ஐரோப்பிய குயினைன் கதையொன்று உலகெங்கிலும் பரவலாக இருந்த ஒன்று. அதுதான் உண்மை என இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு.

17 நூற்றாண்டில் ஸ்பெயினின் சின்கோன் பகுதியை சேர்ந்தவரும் count என்னும் நிலப்பிரபுவும், மன்னருக்கு அடுத்த நிலையில் இருந்தவரும் பெருவின் வைஸ்ராயுமான லூயியின் (Luis Jerónimo Fernández de Cabrera Bobadilla Cerda y Mendoza) மனைவி அன்னாதான் (Ana de Osorio (1599–1625) மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கையில் முதன்முதலில் குயினைன் அளிக்கப்பட்டு மலேரியாவிலிருந்து குணமானவர் என்னும் ஒரு புனைவு உலகெங்கும் பிரபலமாக இருந்தது. குணமான அவர் ஸ்பெயினுக்கு திரும்பிச் சென்ற போது தன்னுடன் சின்கோனா மரப்பட்டைகளை எடுத்துச்சென்று ஐரோப்பாவில் அவற்றை அறிமுகப்படுத்தினார் என்றது அந்தக்கதை. எனவே சின்கோன் பகுதியின் பிரபுவின் மனைவியாதலால் countess chinchon என அழைக்கப்பட்ட அவரின் பெயராலேயே அந்த மரமும் சின்கோனா மரம் என்று அழைக்கப்பட்டதாக கதை சொன்னது.

1859ல் இந்தியாவிற்கான சின்கோனா தேவையின் ரகசிய செயல்பாட்டாளராக இரண்டு வருடங்கள் தென்னமரிக்காவில் செயல்பட்ட க்ளிமென்ஸ் மர்ஹாம் தனது தென்னமரிக்க அனுபவங்களை நூலாக்கினார். , அவருக்கு பழங்குடியினர் செய்த உதவிகளை, அக்காட்டின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் கண்டுகொண்ட பழங்குடியினரின் அறிவையெல்லாம் அந்நூலில் விவரித்த, அவரே ’’சின்கோன் என்னும் பிரபுவின் மனைவி மலேரியாவால் நோயுற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்து உயிர் காத்த மரப்ட்படை அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு சின்கோனா மரம் என்னும் பெயர் பெற்றது’’ என்னும், இன்று வரையிலும் புழக்கத்தில் இருக்கும் புனைவை நூலில் எழுதி மேலும் பிரபலமாக்கியவர்.

வைஸ்ராய் லூயியின் அதிகாரபூர்வ நாட்குறிப்பு 1930 ல் கிடைத்த போது அவரது முதல் மனைவியான அனா இவர் வைஸ்ராயாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஸ்பெயினில் மறைந்து விட்டார் என்னும் உண்மை தெரிந்தது

கணவருடன் தென்னமரிக்காவிற்கு வந்த அவரது இரண்டாம் மனைவி பிரான்சிஸ்கா (Francisca Henríquez de Ribera) நல்ல உடலாரோக்கியத்துடன் இருந்தார். அவருக்கும் பட்டைச்சாறு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வைஸ்ராய்க்கும் பலமுறை கடும் காய்ச்சல் வந்திருக்கிறது எனினும் அவர் ஒருமுறைகூட சின்கோனா பட்டை பொடியை நிவாரணமாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மேலும் வைஸ்ராயின் இரண்டாம் மனைவியும் ஸ்பெயினுக்கு திரும்பிச்செல்லும் வழியில் உடல்நலக்குறைவால் கொலம்பியா துறைமுகத்திலேயே உயிரிழந்தார்.அவரும் ஸ்பெயினுக்கு செல்லவே இல்லை. எனவே பிரபுவின் மனைவிகள் மூலம் இந்தப்பொடி ஐரோப்பாவிற்கு அறிமுகமானது என்பது வலிந்து உருவக்காப்பட்ட புனைவுதான் என்பதை அவரின் நாட்குறிப்பு உறுதி செய்தது.

ஆனால் இக்கதை மிகப்பிரபலமானதாக அக்காலத்தில் இருந்ததால் 1742ல் தாவர வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் சின்கோன் அரசியின் பெயரால் சின்கோனா அஃபிஸினாலிஸ் என்று அம்மரத்துக்கு பெயரிட்டார். 

இந்த அறிவியல் பெயரில் chinchon என்பது தவறாக cinchon என்றிருப்பதால் 1874 ல் இது Chinchona. என சரியாக திருத்தப்பட வேண்டும் என்னும் வேண்டுகோள் பலரால் முன்வைக்கப்பட்டும் பெயர் இன்று வரை மாற்றப்படவில்லை.

கெச்சுவா பழங்குடியின மொழியில் குயினா (quina) என்றால் புனித மரப்பட்டை என்று பொருள். இது சில சமயம் பட்டைகளின் பட்டை எனும் பொருளில் quinquina என்றும் குறிப்பிடப்பட்டது. சின்கோனா மரப்பட்டை, பெருவிய பிசின் மரப்பட்டை இரண்டுமே குயினா என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே இதிலிருந்து ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டபோது அது குயினைன் என்று பெயரிடப்பட்டது.

கண்டுபிடிப்புக்கள்

ஆங்கிலேய மருத்துவரான தாமஸ் (Thomas Sydenham -1624–89) மிகத் திறமையாக சின்கோனா மரப்பட்டை சாற்றை சிகிச்சைகளுக்கு உபயோகித்து மலேரியா காய்ச்சலை பிற காய்ச்சல்களிலிருந்து வேறுபடுத்துவதை கண்டறிந்தவர்.

1790 ல் பிரெஞ்ச் வேதியியலாளர் ஆண்டனி (Antoine François de Fourcroy (1755–1809) சின்கோனா மரப்பட்டையிலிருந்து சிவப்பு நிறத்தில் ஒரு பிசினை பிரித்தெடுத்தார் அதில் ஆல்கலாய்டுகளைப் போன்ற குணங்கள் கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக அறிவித்தார் எனினும் அந்த செம்பிசின் மலேரியாவை குணமாக்கவில்லை.

1800 வரை சின்கோனா மரப்பட்டை கரைசலாக்கப்பட்டு குடிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. 1811ல் போர்த்துக்கீசிய கப்பற்படை அறுவை சிகிச்சை மருத்துவரான பெர்னார்டினோ (Bernardino Antonio Gomez) சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் ஆல்கலாய்டை பிரித்தெடுத்து “cinchonino.” என பெயரிட்டார்.

1820 ல், பிரான்ஸின் வேதியியலாளர்கள் பியரி மற்றும் ஜோசப் (Pierre Joseph Pelletier & Joseph Bienaim Caventou) ஆகியோர் cinchonino” என்பது “quinine” மற்றும் “cinchonine.” இரு முக்கிய ஆல்கலாய்டுகளின் கலவை என கண்டறிந்தார்கள்

சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைனை பிரித்தெடுக்கும் முறையையும் இவர்கள் கண்டறிந்தார்கள். இது நவீன மருந்துத் தொழிலின் தொடக்கம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.. அவர்கள் குயினைன் பிரித்தெடுக்க பாரிசில் ஒரு தொழிற்சாலையையும் நிறுவினர்,

அடுத்த முக்கிய திருப்பமாக 1833ல் ஹென்ரி மற்றும் டிலோண்டரால் குயினிடைன் (quinidine) பிரித்தெடுக்கப்பட்டது ( Henry and Delondre),

1844ல் சின்கோனிடைன் (cinchonidine) வின்க்கில் (Winckle) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1853 ல் இறுதியாக அது quinidine என பாஸ்டரால் பெயரிடபட்டது (Pasteur).

இதன் மூலக்கூறு வடிவம் 1854ல் ஸ்டெரெக்கரால் கண்டறியப்பட்டது( Strecker)

உலகின் முதல் செயற்கைச்சாயமான மாவீன் 5 (mauveine) வில்லியம் ஹென்ரியால் (William Henry Perkin) குயினைனை கண்டுபிடிக்கும் முயற்சியின் போது1856ல் கண்டறியபட்டது,

குயினைனின் ரசாயனத்தயாரிப்பு பல சிக்கல்களை தாண்டி 1944ல் சாத்திமாமயிற்று. பலர் இந்த முயற்சியில் இறங்கி படிப்படியாக முன்னேற்றம் கண்டனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா மரப்பட்டை மற்றும் குயினைன் வர்த்தகத்தில் டச்சு உலகின் ஆகப்பெரிய நாடாக இருந்து 1944 ல் ரசாயன குயினைன் தயாரிப்பு துவங்கும் வரை டச்சு அரசே குயினைன் சந்தையில் கோலோச்சியது

ஹோமியோபதி என்னும் மருத்துவ முறையும் சின்கோனா பட்டையின் மருத்துவ பண்புகளை சோதிக்கும் முயற்சியில் தான் உருவானது. ஹோமியோபதியை தோற்றுவித்தவர். சாமுவேல் ஹானிமன்(1755-1843)

மருத்துவரான இவர் அக்காலத்தின் மருத்துவ ஆய்வு முறையின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தார். இரத்தம் சுத்திகரிக்க நோயாளி மீது அட்டையை விட்டு உறிஞ்ச செய்வது, இருதயத்தின் இரத்தக் குழாய்களை வெட்டி இரத்தத்தை வடியவிடுவது போன்ற கொடிய சிகிச்சையால் பலர் கொல்லப்பட்டனர்.

இவற்றால் டாக்டர் ஹானிமென் மருத்துவ தொழிலை விட்டு விட்டார். பல ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர் .1796 ல் வில்லியம் கல்லன் என்பவரின் மருத்துவ நூலை ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழி மாற்றிக் கொண்டிருக்கையில் பெருவின் மரப்பட்டை காய்ச்சலை குணமாக்குவது குறித்து எழுதி இருப்பதை கண்டார். அதை பரிசோதித்து பார்க்கையில் தான் ’’ஒத்தது ஒத்ததை குணமாக்கும்’’ என்னும் விதியின் அடிப்படையிலான சிகிச்சை முறையான ஹோமியோபதி 15 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டது.

யுனானி மருத்துவ முறையை தோற்றுவித்தவரான காலனின் குருதி நீக்கச் சிகிச்சையும் குயினைனின் வெற்றிக்கு பிறகுதான் நிறுத்தப்பட்டது

தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்பட்ட முதல் இயற்கை இரசாயன கலவை குயினைன் தான் இன்று, குயினைன் மருத்துவ நோக்கங்களுக்காக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இது மலேரியாவைத் தடுக்கப் பயன்படுவதில்லை, மாறாக நோய்க்கு காரணமான உயிரினமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தின் ஹீமோகுளோபினை கரைத்து வளர்சிதைமாற்றம் செய்யும் திறனில் குயினைன் குறுக்கிடுகிறது.

சிகிச்சை வரலாறு

சின்கோனாவின் எந்த வகை மரத்தின் பட்டை வீரியமிக்கது, பட்டைபொடியில் செய்யப்படும் போலி மலேரிய மருந்துகள், குயினைனின் பக்க விளைவுகள் இவை அனைத்தும் சேர்ந்து சின்கோனாவை மலேரியாவுக்கான தீர்வாக மட்டும் இல்லாமல் பெரும் கேள்விக்குறியாகவே ஆக்கி இருந்தது,

இம்மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சிலருக்கு கொப்புளங்கள் உண்டாகின சிலருக்கு உதடுகள் எரிந்து புண்னாகின இன்னும் சிலருக்கு காதுகளில் விசித்திரமான ஓலிகள் கேட்டன பலருக்கு காது செவிடாகி, கண்பார்வையும் குறைந்தது .

.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் பயன்பட்டு வரும் ஆர்டிமிசின் என்னும் தாவரமருந்தும் மலேரியாவுக்கு எதிரானதுதான். இதுவும் குயினைனுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டது

மலேரியாவினால் இறப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தாலும் சின்கோனா மரப்பட்டைகளை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள பலரும் தயங்கினார்கள் ஆங்கிலேய மருந்தாளுநர் ராபர்ட் டால்போர்தான் (Robert Talbor) 17 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா பட்டையின் உபயோகங்களை எளியவர்களுக்கும் புரியும்படி விளக்கினார். அப்படியும் பலருக்கு சின்கோனாவை சிகிச்சைக்கு எடுதுக்கொள்ள பெரும் மனத்தடை இருந்ததால், 1670களில் சின்கோனாவைவிட சிறந்தது என்னும் பெயரில் அதே சின்கோனா என வெளிப்படையாக தெரிவிக்காமல் ஒரு ரகசிய மருந்து என சொல்லி சின்கோனா பட்டைச்சாற்றினால் பலரை குணமாக்கினார்.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் மற்றும் அவரது இளம் மகன் பதினாலாம் லூயிஸ் ஆகியோரையும் டால்போர் வெற்றிகரமாக சின்கோனா மரப்பட்டையை சிகிச்சையாக அளித்து மலேரியாவிலிருந்து மீட்டார்

டால்போர் சின்கோனா மரப்பட்டை கஷாயாங்களின் பலவித தயாரிப்பு முறைகளை இளவரசர் லூயிஸ்க்கு தனது இறப்புக்கு பின்னரே அவை வெளியிடப்படவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் எழுதிக் கொடுத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவர் எழுதிய சின்கோனாவை குறித்த அனைத்தும் அடங்கிய நூலான ” Le remede Anglais pour la guerison des fievres. 1682 ல் பிரான்ஸ் மன்னரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதன் ஆங்கில வடிவம் ‘Talbor’s wonderful secret for curing of agues and fevers. வெளியானது இவ்விரண்டு நூல்களும் மக்கள் மத்தியில் அதுவரை இருந்த குயினைன் குறித்த சித்திரத்தை அடியோடு மாற்றியது

சின்கோனா மரப்பட்டையின் விலை 25 லிருந்து 100 ஃப்ரேங்க்குகள் உடனடியாக உயர்ந்தது. ’’இறை நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்யாத அற்புதங்களை கப்பல்களில் வந்து கொண்டிருக்கும் சின்கோனா மரப்பட்டைகள் செய்யும்’’ என்பது அப்போது பிரபலமான ஒரு வாசகமாக புழக்கத்தில் இருந்தது

1866 லிருந்து 68 வரை தென்னிந்தியாவின்’ மெட்ராஸ் சின்கோனா’ கமிஷனால் பெருமளவில் சின்கோனா பட்டைகளின் காய்ச்சல் குணமாக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது. 2472 மலேரியா நோயாளிகளில் சோதனை நடத்தி அவர்களில் 846 பேருக்கு குயினைனும்,664பேருக்கு குயினிடைனும், 559 பேருக்கு சின்கோனைனும் 403 பேருக்கு சின்கோனிடைனும் அளிக்கப்பட்டது. இவர்களில் 2445 நோயாளிகள் குணமடைந்தனர் 27 பேர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

குணமாக்கும் இயல்புக்கு சமமாகவே நச்சுத்தன்மையும் கொண்டிருக்கும் ஆல்கலாய்டுகளான குயினைன் மற்றும் குயினைடைன் ஆகியவை மிக அதிகமாக மலேரியா சிகிச்சையில் உபயோகப்படுத்தப்பட்டன.

முதல் உலகப்போரின் போது குயினைன் மட்டுமே மலேரியாவிற்கான ஒரே சிகிச்சையாக இருந்தது ரொனால்ட் ரோஸ்.(Ronald Ross) கொசுக்களின் மூலம் மலேரியா பரவுதலை கண்டறிந்த பின்னர் குயினைன் உபயோகம் பல மடங்கு அதிகரித்தது

உலகப்போர் மருத்துவ முகாம்களில்தான் ரத்தத்தில் இருந்த மலேரிய ஒட்டுண்ணிகளுக்கெதிராக குயினைன் வீரியமிக்க மருந்தாக செயல்பட்டாலும், ஈரலை தாக்கும் மலேரியா ஒட்டுண்ணிகளுக்கெதிராக அவை வேலை செய்வதில்லை என்பது கண்டறியப்பட்டது. அது எதனால் என்றும் அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை.

1917 ல் சர் வில்லியம் ஆஸ்லர் மலேரியாவை குயினைன் கொண்டு குணப்படுத்த முடியாதவர்கள் மருத்துவத்துறையை விட்டு விலகிவிடலாம் என்று அறிவிக்கும் அளவுக்கு மலேரியாவுக்கு எதிராக குயினன் 1920 வரை வெற்றிகரமாக செயல்பட்டது. 1920ல் மலேரியா சிகிச்சையில் குளோரொகுயின் அறிமுகமானபோது குயினைனின் பயன்பாடு ஏறக்குறைய நின்றுபோனது.

ஒட்டுண்ணிகளால் குளோரோகுயினுக்கான உயிர்ம எதிர்ப்பு (resistance) உருவானபோது மீண்டும் குயினைன் தனது இடத்தை பிடித்துக் கொண்டது

மலேரியா சிகிச்சைகள் வெற்றிகளைத் தந்தாலும், சின்கோனா ஆல்கலாய்டுகளின் பயன்பாடு உயிருக்கு ஆபத்தான எதிர்விளைவுகளையும் உருவாக்கி இரு முனைகளும் கூர் கொண்ட கத்தியை போலிருந்தது.

சிகிச்சை முறைகள்

கசப்புச் சுவையுடன் சிறிது எலுமிச்சை நறுமணம் கொண்டிருக்கும் குயினைன் பட்டைப்பொடி. பெரும்பாலும் நீரில் கரைத்து அருந்தப்படும் இவை மாத்திரைகளாகவும் தயாரிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் அதிகாரிகள் சோடா மற்றும் சர்க்கரையில் குயினைன் பொடியை கரைத்து தயாரித்த டானிக்கை அருந்தினர். இந்தக் கலவையை உருவாக்கிய எராமஸ் (Erasmus Bond) 1858ல் அதற்கு காப்புரிமை பெற்றார். பல மருந்து நிறுவனங்கள் 1860 களில் இந்த டானிக் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டன. 1880 களில் பிரிட்டிஷ் இந்தியாவின் செயல்பாட்டாளர்களாயிருந்த சில நைஜீரியர்கள் இந்த டானிக்குடன் சிறிதளவு ஜின்னையும் கலந்தனர். சிறிது போதையும் அளித்த இந்த மலேரிய டானிக் ஒரு நூற்றாண்டு காலம் மக்களிடையே வெகுவாக புழங்கியது

மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் போது, ​​குயினின் மாத்திரை வடிவில் கொடுக்கப்படுகிறது. குயினின் நீர் அல்லது டானிக் நீர் வடிவிலும் விற்கப்படுகிறது, இது ஜின் மற்றும் ஓட்கா போன்ற மது வகைகளுடன் ஒரு பிரபலமான கலவையாக உலகம் முழுவதும் அருந்தப்படுகிறது. குயினின் கலந்த பானங்களில் “Q” என்ற எழுத்து குறிக்கப்பட்டிருக்கும்.

1889லிருந்து புரோமோ குயினைன் (Bromo Quinine) என்னும் பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட குயினைன் 1960 வரை விற்பனையானது. குயினைன் கோகெயின் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளில் கலப்படம் செய்யப்படுகிறது

செயற்கை குயினைன் தயாரிப்பு மிகுந்த செலவு பிடித்த ஒன்றாக இருந்தது. தொடர்ந்து chloroquine, primaquine, proguanil, மற்றும் artemisinin ஆகியவை மலேரியாவிற்கு எதிராக செயல்படுவதை நிரூபிக்க முடிந்ததென்றாலும் இன்னும் இயற்கை குயினைனுக்கு இணையான பாதுகாப்பான ஒன்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்கின்றன. மொத்த குயினைன் உற்பத்தியில் 40 சதவீதம் மருத்துவத்துறையிலும் 60சதவீதம் உணவுத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது

அதன் செயல்திறன் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகும் குயினின் ஒரு முக்கியமான மலேரியா எதிர்ப்பு மருந்தாகவே உள்ளது. இருப்பினும், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேரியாவிற்கான முதல்-வரிசை சிகிச்சையாக உலக சுகாதார அமைப்பால் (WHO) குயினின் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் குறைவான பக்கவிளைவுகளுடன் குயினைனுக்கு இணையாக பலனளிக்கும் பிற மருந்துகள் உள்ளன. எனெவே ஆர்ட்டெமிசினின் இல்லாதபோது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கின்றது. மூட்டுவலி மற்றும் காக்காய்வலிப்புக்கு சிகிச்சையளிக்கவும் குயினின் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது chloroquine மற்றும் Atabrine இரண்டும்தான் மலேரியா சிகிச்சையில் பயன்படுகின்றன. இம்மருந்துகளுக்கான எதிர்ப்புத்தன்மையை மலேரியா ஒட்டுண்ணிகள் உலகின் சில பகுதிகளில் உருவாக்கி உள்ளன. வியட்நாமில் அப்படியான எதிர்ப்புத்திறன் கொண்ட ஒட்டுண்ணிகள் இருப்பதால் அங்கு மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க இயற்கை குயினைன் உபயோகபடுத்தப்படுகிறது.

குயினின் இன்று

குயினின் இன்றும் தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும், உலக குயினைன் சந்தையின் பெரும்பகுதி தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவால் வழங்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தாலும் உலக மருந்து சந்தையில் போட்டியிட முடியாமல் ஒதுங்கி இருக்கிறது

இயற்கையாக கிடைக்கும் குயினைன் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் பன்னாட்டு நிறுவனங்களால் காப்புரிமை பெற்றவையாதலால் அவை உற்பத்தியாகும் நாடுகளுக்கும், அவற்றின் பயன்பாடுகளை முதலில் உருவாக்கிய பழங்குடிச் சமூகங்களுக்கும் எந்த நன்மையும் கிடைப்பது இல்லை என்பதற்கு குயினைன் வர்த்தகமும் மற்றுமோர் எடுத்துக்காட்டு.

லெட்ஜர்

1890 ல் தனது இறுதிக் காலத்தில் வறுமையில் வாடிய லெட்ஜருக்கு உதவ கிளிமென்ஸ் மர்ஹான் பெரிதும் முயன்றார் இந்திய மற்றும் டச்சு அரசுகள் ஆரம்பத்தில் அவரின் வேண்டுகோளை பரிசீலிக்கவில்லை. எனினும் 1897ல் டச்சு அரசு லெட்ஜெருக்கு வருடத்திற்கு 100 டாலர் உதவித்தொகை அளிக்க ஒத்துக்கொண்டது. உதவித்தொகை கிடைத்த 9 வருடங்கள் கழித்து 1906 ல் தனது 87 வது வயதில் 1906ல் லெட்ஜெர் உயிரிழந்தார்

இந்தியாவிலும் ஜவாவிலும் வளரும் ஆயிரக்கணக்கான சின்கோனா மரங்கள் லெட்ஜெரினால் தருவிக்கப்பட்ட விதைகளிலிருந்து உருவனாவை.
1900த்தில் உலகின் மொத்த குயின்னைன் உற்பத்தியில் ⅔ பங்கு ஜாவாவில் இருந்து கிடைத்தது. இத்தனை வருடங்கள்,கழித்தும் லெட்ஜர் வகை சின்கோனாக்களே அதிக குயினைன் அளிக்கின்றன.

Gabriele Grammiccia, எழுதிய சார்ல்ஸ் லெட்ஜரின் வாழ்க்கை 5 என்னும் நுல் அவர் எத்தனை அசாதாரணமான மனிதர் என்பதை நமக்கு சொல்கிறது. 18 வயதில் அல்பகா ஆடுகளுடன் துவங்கிய லெட்ஜரின் வாழ்க்கையை அல்பகா ஆடுகளின் ரோமமும் சின்கோனா மரப்பட்டையுமே வடிவமைத்தது என்று சொல்லலாம்.

சிட்னியில் இருந்த லெட்ஜரின் கல்லறை (Rockwood Methodist Cemetery in Sydney) சிதிலமடைந்து அவரின் இரண்டாவது மனைவியின் சகோதர சகோதரிகளின் பெயர் மட்டும் அதில் மீதமிருந்தது. சமீபத்தில் அவரின் சுயசரிதை எழுதிய கிரேமிசியாவால் கல்லறை புதுப்பிக்கப்பட்டு சார்லஸ் லெட்ஜரின் பெயரும் அதன் கீழே உலகிற்கு குயினைன் அளித்தவர் என்றும் பொறிக்கப்பட்டது

தற்போது மலேரியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன, சின்கோனா இனத்தின் வரலாற்று ரீதியான அதிகப்படியான சுரண்டலால் அதன் 17 இனங்கள் பெருவில் அழிந்துவரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

1895ல் ஆய்வாளர்கள் ஆண்டஸ் மலைப்பகுதிகளில் 25000 சின்கோனா மரங்கள் இருந்ததை கணக்கிட்டிருந்தார்கள் இப்போது அதே நிலப்பரப்பில் இருக்கும் போடோகார்பஸ் தேசிய பூங்காவில் வெறும் 29 மரங்கள் மட்டுமே இருக்கின்றன,

பெருவின் தேசிய கொடியில் இம்மரம் பொறிக்கப்பட்டிருக்கிறது தென்னமரிக்க உள்ளூர் இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் சின்கோனா மரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. ’’ஆசிர்வதிக்கபட்ட விதைகள்’’ என்னும் பொருள் கொண்ட சூழல் அமைப்பான செமில்லா பெண்டிட்டா (Semilla Bendita) 2021 ல் பெரு தன்னாட்சி பெற்ற 200 வது ஆண்டை கொண்டாடும் விதமாக 2021 சின்கோனா விதைகளை நட்டுவைத்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது மேலும் இவ்வமைப்பு பல்துறை வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒருங்கிணைத்து சின்கோனா மரங்களின் மரபியல் வளரியல்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கிறது உள்ளூர்வாசிகளின் பங்களிப்பு இம்மரங்களின் பாதுகாப்பில் இருப்பதையும் இந்நிறுவனம் உறுதி செய்து கொள்கிறது

கியூ பூங்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு முக்கிய இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னமரிக்கவிலிருந்து கொண்டு வரப்பட்ட சின்கோனா மரப்பட்டைகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்துவந்த பாதைகளை ஆராய்ந்தோமானால் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கும் சாகசக்கதைகளையெல்லாம் மிஞ்சும் சாகசமும் மர்மமும் நிறைந்தவையாக அவை இருக்கும் .

குயினைன் கடந்துவந்த பாதை ஒரு மாபெரும் வலையென வரலாற்றில் விரிந்திருக்கிறது சின்கோனா மரப்பட்டை பெறப்பட்ட , தென்-அமெரிக்காவின் ஆண்டஸ் காடுகளிலிருந்து பிரிட்டிஷ் தாவரவியல் பூங்காவிற்கும், தென்னிந்தியாவின் காலனித்துவ தோட்டங்கள் முதல் இந்தோனேசியாவின் ஜாவா தீவு வரையிலும் உலகம் முழுவதும் குயினைனின் வரலாறு விரிந்துள்ளது..

மிக எளிதாக தாவர அடிப்படையிலான மருந்துகளை மாற்று மருத்துவம்’ என்று நினைத்து மக்கள் கடந்து விடுகிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தில் மருத்துவர்களால் தற்போது பரிந்துரைக்கப்படும் 7000 க்கும் மேற்பட்ட மருத்துவ கலவைகள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவை, ஆனால் மனித குல வரலாற்றில் குயினைன் உள்ளிட்ட பல முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் பொருட்டு நாம் தாவரங்களுக்கு என்றென்றைக்குமாக கடன் பட்டிருக்கிறோம். பல்லுயிர் பெருக்கமும் மனித ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செல்வதைத்தான் குயினைனின் இந்த கதை காட்டுகிறது.

மமானியைப்போல பல்லாயிரக்கணக்கான மனிதர்களை பலி கொண்டபின்னரே மலைத்தெய்வங்கள் நமக்கு பலவற்றை அருளியிருக்கின்றன மமானியின் பெயரில் அந்த சின்கோனா மரம் பெயரிடப்படவில்லை. அவர் வரலாற்றில் மறக்கப்பட்டவர். மறைக்கப்பட்டவர். ஆனால் வரலாற்றின் கண்களுக்கு தெரியாமல் பலியான பல்லாயிரக்கணக்கானோர் நம் உயிர்காக்கும் மருந்துகள் கடந்து வந்த பாதையில் குருதிப்பலி கொடுத்திருக்கிறார்கள்

கோவிட் தொற்றில் தப்பி பிழைத்திருக்கும் நமக்கு இனி மலேரியா வரவேண்டாம், சாதாரண காய்ச்சல் வந்தால் கூட நம் நலனுக்கென உயிரிழந்த மமானி, உயிருக்கு துணிந்து பல சாகசங்கள் செய்து அடுத்த தலைமுறைகளுக்கு தேவையானவற்றை அபாயங்களை பொருட்படுத்தாமல் கண்டறிந்தவர்கள், எந்த சொந்த நலனுக்காகவும் இன்றி மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கிருஸ்துவ அருட்பணியாளர்கள் என சிலரையாவது நினைத்துப்பார்க்கலாம்

*2021ல் மலேரியாவுக்கான அங்கீகரிக்கப்பட ஒரே தடுப்பு மருந்து Mosquirix. என்னும் சந்தைப் பெயரில் இருக்கும் RTS, S. உலக சுகாதார நிறுவனம் இதனை மலேரியா தொற்று இருக்கும் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பரிந்துரை இருக்கிறது

சந்தனம்

இந்தியாவை 17 முறை படையெடுத்து வந்த கஜினியை சேர்ந்த முகமது  நடத்தியதிலேயே  மாபெரும் கொள்ளையாக கருதப்படுவது 1026 ல் குஜராத்தில் சோம்நாத் கோயிலை தகர்த்த பின்னர் செய்த பெரும் கொள்ளைதான். சோம்நாத் கோயிலின் பிரம்மாண்டமான  மடக்கும் வசதிகொண்ட சந்தன கதவுகளும் கொள்ளையடித்த பொருட்களில் இருந்தன.

சந்தன மரத்தில் செய்யப்பட்ட நுணுக்கமான செதுக்கு  வேலைப்பாடுகள் கொண்டிருந்த அக்கதவுகள், நான்கு வருடங்களுக்கு பின்னர்  இறந்து போன கஜினி முகமதின் கல்லறை கோட்டையில் பொருத்தப்பட்டிருந்தன. 

அதிலிருந்து சுமார் 800 வருடங்களுக்கு பின்னர் எடின்பர்க் பிரபு வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் மிகப்பிரபலமான ’’கதவுகளின் பிரகடனத்தை’’ அறிவித்தார். அதன்படி ஒரு தனி சிப்பாய் படை ஆப்கானிஸ்தானுக்கு கஜினியின் கல்லறையிலிருந்து சந்தனக்கதவுகளை திரும்ப எடுத்துக் கொண்டு வர புறப்பட்டு சென்றது. 

கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட அக்கதவுகள் பெரும்  கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு 1842 ல்  கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அக்கதவுகளின் வேலைப்பாடுகள் இந்தியப்பாணியிலோ அல்லது பிரிடிஷ் பாணியிலோ இல்லாததை கண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்கையில் , சோம்நாத் கோவிலில் இருந்து கஜினி முகமதுவால் கொண்டு செல்லப்பட்டவையல்ல, அவை இரண்டும் போலி என தெரியவந்தது. 

அசல் கதவுகள் கருப்பு சந்தையில் எப்பொழுதோ கைமாறி இருக்கும் என யூகிக்கப் பட்டது. இன்று வரையிலும் அந்த போலிக் கதவுகள் தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைத்திருக்கும் ஆக்ரா கோட்டையின் மாபெரும் அறையொன்றில் புழுதிபடிந்து கிடக்கின்றன. 

அப்போது மட்டுமல்ல இன்று வரையிலும் அசல் சந்தன மரத்தில் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் மரச்சாமான்களும், கைவினைப் பொருட்களும், கடவுள் திருவுருவங்கள் உள்ளிட்ட பல விலையுயர்ந்த  பொருட்களும்,  புட்டிகளில் கிடைக்கும் சந்தன எண்ணையும் பெரும்பாலும்  போலியாகத்தான் இருக்கின்றன.  

சண்டாலேசி (Santalaceae) குடும்பத்தை சேர்ந்த  உலகின் மிக விலையுயர்ந்த மரங்களில் ஒன்றான Santalum album என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த (வெண்) சந்தன மரங்கள் உலகெங்கிலும் மிகுந்த மதிப்புக்குரியதாக  இருக்கின்றன.

சந்தன மரம் அடர்த்தி மிகுந்தவை நீடித்த நறுமணம் கொண்டவை என்பதால்  செதுக்கு வேலைகளுக்கும், சிற்பங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. காய்ச்சி  வடிகட்டுதல் மூலம் முதிர்ந்த சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய்   எடுக்கப்பட்டு நறுமண திரவியங்கள், சோப்புக்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வழிபாட்டு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக பல்லாண்டுகளாகப்  பயன்படுகிறது

சந்தன மரக்கட்டைகளும், சந்தனப்பொடியும் உலகின் முக்கிய மதங்களான இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் வெகுவாக பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமயம் சார்ந்த சடங்குகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இவை அதிகம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

உலகின் மிதமான மழைப்பொழிவும், அளவான வெப்பமும், நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் எல்லாம் சந்தன மரங்கள் செழித்து வளர்கின்றன. இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா பாலினேசியா, நியூசிலாந்து,  ஹவாய் ஆகிய நாடுகளில்  வணிக முக்கியத்துவம் கொண்ட சந்தன மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

இந்தியாவின் பல மாநிலங்களில் சந்தன மரங்கள் வளர்கின்றன எனினும் மிக அதிக எண்ணிக்கையில் இவை கர்நாடகத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

மணற்பாங்கான, வறண்ட நிலப்பகுதிகளிலும் இவை நன்கு வளரும். இவற்றை மலைப்பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் பாலைவனங்களிலும் கூட காணலாம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் இவை செழித்து வளர்கின்றன. வணிக ரீதியில் மிக முக்கியமான பசுமை மாறா சந்தனமரங்களின் 16 வகைகள் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன

உலகெங்கும் உள்ள சந்தன மரங்களின் பல வகைகளில் முதல் தரமென கருதப்படுவது இந்திய மரங்களே! இந்தியா முழுவதும் பரவலாக காணப்படும் இவை தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிக அதிகம் காணப்படுகின்றன.

இலங்கையிலும் பன்னெடுங்காலமாக சந்தன மரங்கள் வளர்கின்றன. இப்போதும் இலங்கையின் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்போது சந்தன மரங்களை வணிகப் பயிர்களாக வளர்க்கும் திட்டங்கள் இலங்கையில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

வரலாறு

சந்தனம் என்னும் தமிழ்ச்சொல் சதி (Cadi) எனப்படும் ’மகிழ்வு’  என்னும் பொருள் கொண்ட சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறப்பட்டது 

 இந்திய கலாச்சாரத்துடன் சந்தன நறுமணமும் கலந்திருக்கிறது ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் சந்தன மரங்களும், சந்தன விழுது பூசிக்கொள்வதும், சந்தன பாத்திரங்களில் நீர் அருந்துவதும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமாயணம் கரையோர சந்தன மரக்காடுகள் காதலனை தேடி ஓடும் காதலி போல தாமிரபரணியை சென்று சேருகிறது என்கிறது.

அரண்மனையில் இருக்கும் ராமனின் மேனியில் சந்தனம் பூசப்பட்டது  வால்மீகி ராமாயணத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பண்டைய இந்திய இலக்கியங்களில்  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சந்தனம் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிட பட்டிருக்கிறது.

இந்திய புராணங்களும், வேதங்களும்   மருத்துவத்திலும் அழகுப் பொருளாகவும் சந்தனத்தின் பயன்பாட்டை விவரிக்கின்றன.   ஜைன  மற்றும் பெளத்த மதங்களும் சந்தனத்தை உபயோகிப்பது குறித்து சொல்லுகின்றன.

சங்க இலக்கியங்களிலும் சாந்து பூசுதல் என்று  சந்தனம் பூசுதல் சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான முக்கிய பொருட்களில் பட்டும், சந்தனமும் முக்கியமானவைகளாக  இருந்திருக்கின்றன 

சிவனுக்குரிய வழிபாடுகளில் சந்தனம் முக்கியமானதென்று சொல்லும் வாமனபுராணம்,  லஷ்மிதேவி வசிக்கும் மரமாகவும் சந்தனமரத்தை குறிப்பிடுகிறது.

பண்டைய எகிப்தியர்கள் சந்தன மரங்களை பிற நாடுகளிலிருந்து தருவித்து, அதை மம்மிகளை பதப்படுத்துவது உள்ளிட்ட  பல்வேறு சடங்குகளிலும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுதி இருக்கின்றனர்.

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம் வனங்களின் மதிப்பு மிக்க மரமாக சந்தன மரத்தை குறிப்பிட்டிருக்கிறது, அர்த்த சாஸ்திரத்தில் வெண்மை, கருஞ்சிவப்பு, சிவப்பு, வெண்சிவப்பு, கருப்பு, பச்சை மற்றும் குங்குமப் பூவின் நிறம் கொண்ட பலவகையான சந்தனங்களையும் கெளடில்யர் விவரித்திருக்கிறார்,(Chapter 2.11 pp 43-72)

மருத்துவ தொல் நூல்களான சரக, சுஸ்ருத மற்றும் அஷ்டாங்க ஹிருதய சம்ஹிதைகளிலில்  சந்தன உபயோகத்தை குறித்த விரிவான விளக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, குறிப்பாக மனநலமின்மைக்கு தீர்வாக சந்தன விழுதின் பயன்பாடு சொல்லப்பட்டிருக்கிறது.

நான்காயிரம் வருடங்களாக இந்தியாவில் சந்தனம் பல்வேறு வடிவங்களில் உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மிகப்புனிதமான  வழிபாட்டுக்குரிய பொருளாக சந்தனம் கருதப்படுகிறது.

சரக சுஸ்ருத சம்ஹிதைகள் இதை ஸ்வேத சந்தனம் என்கின்றன. இதன் அறிவியல் பெயரில் இருக்கும் ஆல்பா என்பதும் வெண்மையென்றே பொருள்படுகிறது

கூர்ம ,மத்ஸ்ய, கந்த சிவ, தர்ம புராணங்களிலும் சந்தனம்  சொல்லப்பட்டிருக்கிறது.

வாமன புராணம் பிரம்மாவின் ரோமத்துவாரங்களிருந்து உருவான மரமாக இதை சொல்லுகிறது. அதில்  மணமிக்க சந்தனமரப்பொருட்களால் சிவனை வழிபடலாமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேத வியாசர் சந்தன மரங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய புராணங்களில் அறிவு, வளமை,புனிதம் ஆகியவற்றின் குறியீடாக காணப்படும் மரங்களில் சந்தனமும் இருக்கின்றது. 

பார்வதி தேவி   மஞ்சளும் சந்தனமும் கலந்து பிசைந்து  செய்த உருவமே பின்னர் விநாயனாயிற்று என்கிறது இந்து மத  தொன்மங்கள். 

5ம்  நூற்றாண்டின்  உருவான பஞ்சதந்திர கதைகளிலும்  சந்தன மரங்கள் இருக்கின்றன. ’தென்மலையில் பிறந்த சந்தனம்’ என்கிறார் இளங்கோவடிகள்.  

புத்தர் சந்தனம், மல்லிகை, தாமரை  மற்றும்  நந்தியாவட்டை மலர்களின் நறுமணத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்கிறார் .

புராணங்களில் தேவர்கள் உபயோகிக்கும் சந்தனம் ’ஹரிசந்தனம்’ என்றும் மானுடர்கள் கடவுள் திருவுருவங்களுக்கு படைத்தும் பூசியும் வழிபடும் சந்தனம் ’ஸ்ரீ சந்தனம்’ என்றும் சொல்லப்படுகின்றது.இந்து மத வழிபாடுகளில் மிக முக்கியமானவைகளாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் :

  • நறுமணமிக்கவை, 
  • நறுமணப் புகையை அளிப்பவை, 
  • மலர்கள் 
  • நைவேத்தியம் எனப்படும் தெய்வங்களுக்கான உணவு மற்றும் 
  • தீபச்சுடர் 

இவற்றில் நறுமணமிக்க என்னும் வகையில் மிக அதிகம் உபயோகிக்க படுவது சந்தனம்தான்

இஷ்வாகு குல அரசியான இந்துமதியின் சிதை விறகாக சந்தன மரக்கட்டைகள் இருந்ததாக கவி காளிதாசர்  ரகுவம்சத்தில் விவரிக்கிறார் .

நற்றிணையில் கோடைக்காலங்களில் பெண்களின் மார்பகங்களில் சந்தன விழுது பூசியது சொல்லப்பட்டிருக்கிறது 

பாகவத புராணமும் கிருஷ்ணனின் மேனியில் சந்தனம் பூசப்படுவதை சொல்கிறது. 

பண்டைய சீனாவில் அரசகுடும்பத்தினரின் குற்றங்களை தண்டிக்க சந்தனக்கட்டைகளில் கழுவேற்றுவது, சந்தனக்கட்டையால்  கபாலத்தை உடைப்ப்து போன்ற தண்டனைகள் இருந்தன இதுகுறித்த சந்தச்சாவு என்னும் பிரபல சீன மொழி நூல்  2001ல் வெளியானது,(sandalwood death- mo-yan) 

வளரியல்பு

6-10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய குறு மரங்களாகவும், பிற மரங்களை தழுவியும், பிற மரங்களுடன் பின்னிக்கொண்டும் வளரும்  சந்தன மரங்கள் 80 லிருந்து 100 வருடங்கள் வரை வாழும்.

ஒளிச்சேர்க்கை மூலமும் இவை பிற தாவரங்களைப்போல உணவு தயாரிக்கும் என்றாலும் வாகை, சீமை ஆவாரை, புங்கை   சவுக்கு,  கத்திச்சவுக்கு போன்ற  மரங்களுடன்  பாதி ஒட்டுண்ணி (hemiparasitic) வாழ்வில் இருக்கும் இவை பிற மரங்களிலிருந்து தனது குழல் போன்ற வேர்களினால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளும்.  

வறண்ட நிலப்பகுதிகளிலும் வளரும் சந்தனமரங்கள் அவற்றின் வகைகளை பொருத்து   15 லிருந்து 20 வருடங்களில் அறுவடை செய்யப்பட தயாராகும்..

தாவரவியல் பண்புகள்

மரப்பட்டை செம்பழுப்பு,  பழுப்பு அல்லது அடர் மண் நிறம் கொண்டிருக்கும். இலைகள் நீள் முட்டை வடிவில் கூர் நுனியுடன் மிருதுவாக இருக்கும், சிவப்பு நிறத்தில் 4 இதழ்களைக் கொண்ட, கொத்துக்களாக தோன்றும் சிறு மலர்கள் நறுமணமற்றவை. உருண்டையான சிறு  கனியில் ஒற்றை விதை இருக்கும்

பாதி ஒட்டுண்ணிகளான சந்தன  மரங்களை சாகுபடி செய்கையில் அவை சார்ந்து வளரும் மரங்களும் உடன் வளர்க்கப்படுகின்றன.

முதிர்ந்த மரங்களிலும் வேர்களிலும் சந்தன எண்ணெய் உருவாக சுமார் 20 லிருந்து 30 வருடங்கள் ஆகும்.  எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளும், பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் இயல்பு கொண்டவை இம்மரங்கள்.

முதிர்ந்த மரங்களின் வைரக்கட்டை எனப்படும் நடுப்பகுதியே பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சந்தன மரமெனப்படுவது. ஒவ்வொரு முதிர்ந்த மரங்களிலும் அதன் வைரக்கட்டையின் (heart wood) அளவும் வேறுபடும் எனவே அவற்றிலிருந்து கிடைக்கும் சந்தன எண்ணெயின் அளவும் வேறுபடும் 

முக்கிய வகைகள்

 சந்தன மரங்களின் பல வகைகளில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை மூன்று வகைகள்

  1.  இந்திய சந்தன மரமான   Satalum album. இது வெள்ளை அல்லது மஞ்சள் சந்தனத்தை அளிப்பது.
  2. ஆஸ்திரேலிய சந்தன மரமான  Santalum spicatum
  3.  ஹவாய் சந்தனமான Santalum paniculatum 
  • செம்மரக்கட்டை,செம்மரம்,ரக்த சந்தனம்,ரது ஹந்துன் அல்லது செஞ்சந்தனம் எனப்படுவது இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட Pterocarpus santalinus என்னும் மரம். இது தமிழில்  பிசனம், கணி, உதிரச் சந்தனம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையில் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் காணப்படும் இவை இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும்  வளர்கிறது

  • வெள்ளை சந்தன மரம் என்னும் வகையானது மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சிறப்பு மர வகை.  லட்சம் சந்தன மரங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வெண் சந்தன மரங்கள் மட்டுமே இருக்கும்.மிக அரிதான இம்மரத்தில் செய்யப்படும் கடவுள் சிலைகள் அரிதினும் அரியவையாக கருதப்படுகின்றன. 

இந்திய சந்தன மரங்கள்

5000 ஆண்டுகளாக உலகின் சந்தன மர வளர்ப்பிலும் சந்தன பயன்பாட்டிலும் இந்தியாவே முதன்மை இடத்தில் இருந்து வருகிறது.

 இந்திய  சந்தன மரம்  வணிக ரீதியாக ஆங்கிலத்தில் East Indian sandalwood என்றும் அதன் எண்ணெய்  East Indian sandalwood oil என்றும் அழைக்கப்படுகிறது மிக அதிக அளவில்   a-sotalol மற்றும் b-sotalol, ஆகியவற்றை கொண்டிருக்கும் மருத்துவ குணம் கொண்டிருக்கும் நறுமணம் கமழும் இந்திய சந்தன மரங்களே பிற சந்தன வகைகளை காட்டிலும் மிக உயர்ந்தது

கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இவை குறைந்த எண்ணிக்கையில் இயற்கையாக காடுகளிலும், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் காணப்படுகின்றன. 

ஒவ்வொரு சந்தன மரத்தையும் அரசுடையமாக்கி பாதுகாத்த  திப்புசுல்தான் இந்தியாவில் சந்தன மரங்களின் காவலனாக கருதப்படுகிறார் .திப்புசுல்தான் காலத்தில் சந்தனமரங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட  கடுமையான சட்டங்கள் 2000 த்தில்தான் சற்று தளர்த்த பட்டிருக்கிறது. 1792ல் திப்புவின் காலத்தில் அரமரமென்னும் அந்தஸ்தை சந்தன மரங்கள் பெற்றிருந்தன.

ஏராளமான சந்தன மரங்களை, சேகரித்து வைத்திருந்த  அவரது அரண்மனையை திப்பு சந்தனக்கோட்டை என்று குறிப்பிட்டார் 

திப்புவின் காலத்தில் ஆப்கானியர்கள், அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் சந்தன வாணிகத்தின் பொருட்டு தொடர்ந்து கர்நாடகத்திற்கு வந்து கொண்டிருந்தனர். 

 திப்பு வணிக ரீதியாக 18 சந்தன மர பொருட்களை அடையாளப்படுத்தி அவற்றிற்கு பெயர்களும் வைத்திருந்தார்.

இன்றளவிலுமே சந்தன எண்ணெயும் மரமும் மைசூருவில் பொன்னுக்கு நிகரகவே கருதப்படுகின்றன. குடகு  பகுதியில்  10000 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும்  600க்கும் மேற்பட்ட சந்தன வனங்கள் அனைத்தும் ’தேவர காடு’ தெய்வங்களின் வனம் என்று அழைக்கப்படுகிறது. சந்தன மரங்களை அறுவடை செய்யவும் வளர்க்கவும் அனுமதி வாங்கவேண்டி இருந்தாலும் இவற்றின் உலக சந்தை மதிப்பினால் கர்நாடக காடுகளிலிருந்து மட்டும் 500 டன் சந்தன மரக்கட்டைகள் வருடந்தோறும் திருடு போகின்றன.

ஆந்திராவிலும் வருடா வருடம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினசரி பூஜைகளுக்கும், திருமஞ்சன சேவைக்காகவும் சுமார்  அரை டன் சந்தனம் உபயோகிக்கப்படுகிறது 

திருக்கோயில் தேவைக்கென திருப்பதி தேவஸ்தானம் சொந்தமாக 100 ஹெக்டேரில் சந்தனமரக் காடுகளை வளர்த்து பாதுகாக்கிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு சந்தன மேனியன் என்றும் பெயருண்டு . 

ஸ்ரீ ரவிஷங்கரின்  Art of Living  அமைப்பும் ஏராளமான சந்தன மரங்களை வளர்த்து பாதுகாக்கிறது 

 இந்தியாவில் சிறந்த சந்தன மரங்கள் ஒரிஸாவில் வளர்கின்றன. உத்திரபிரதேச சந்தன மரங்கள் தரம் குறைந்தவையாக கருத படுகின்றன. 

சந்தன மரங்கள்  வேருடன் பிடுங்கி அறுவடை செய்யப்படுபவை. எனவே அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது புதிய சந்தன மரங்கள்  வளர்ந்து பலன்கொடுக்க பல வருடங்கள் ஆகுமென்பதால் இந்திய சந்தனமரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய சந்தன மரங்கள்

S.spicatum அலல்து Western Australian sandalwood ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் சந்தன மரம். 20 அடி உயரம் வரை வளரும் இவை 10 வருடங்களிலேயே பலனளிக்க துவங்குகிறது.  30 வருடங்களில் முழுமையாக முதிர்ந்துவிடும்.  உறக்கமின்மை, சரும நோய்கள், மனப் பிறழ்வுகள்  மன அழுத்தம்  ஆகியவற்றிற்கான சிகிச்சைக்களுக்காக இந்திய அரேபிய சீன பாரம்பரிய மருத்துவங்களில் இவற்றின் தேவை மிக அதிகமாகி, உலகளவில் ஆஸ்திரேலிய சந்தனத்திற்கு தட்டுப்பாடு 1900தில் உச்சத்தில் இருந்தது.

1788ல் சிட்னி வியாபாரிகள் சீனாவின் தேயிலைக்கு மாற்றாக  பண்டமாற்றாக அளிக்க ஒரு பொருளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் மருத்துவ மற்றும் சமயம் சார்ந்த  சந்தனப் பயன்பாடு அப்போதுதான் தெரியவந்தது.அதன் பிறகு வேருடன் மரங்கள் அறுவடை செய்யப்பட்டது

முதன் முதலாக 4 டன் ஆஸ்திரேலிய சந்தனமரங்கள் சிங்கப்பூருக்கு 1844ல் ஏற்றுமதியான போது உலகமே அதன் தரத்தையும் இன்றியமையாமையையும் உணர்ந்தது. அப்போது ஒரு டன் 20 டாலர் மதிப்பிருந்தது.

 ஆஸ்திரேலிய சந்தன மரங்களான Santalum Spicatum  சுமார் 9000 ஹெக்டேரில் வளர்க்கப்படுகின்றன

ஆஸ்திரேலியாவில் பல  சந்தன மர வகைகள் இருக்கின்றன எனினும் அவற்றில்  S.Spicatum மற்றும் S.Lanceolatum. ஆகிய இரு வகைகளே வணிக ரீதியாக முக்கியமானவை.

1800களின் ஆரம்பத்தில் இவ்விரண்டு வகைகளுமே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு ஏற்றுமதியாகி கொண்டிருந்தன. குறிப்பாக சீனாவுக்கும் ஐரோப்பாவிற்கும் மிக அதிக அளவில் இவை அனுப்பப்பட்டன. 19 ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் துறைமுகங்களில் இருந்து ஐரோப்பாவுக்கு மட்டுமே  வருடந்தோறும் சுமார் 14000 டன் சந்தனம் ஏற்றுமதியானது. அப்போதிலிருந்து உலகின் முன்னணி சந்தன மர ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியாவே இருக்கிறது. 

சந்தன மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துவருவதை அறிந்தபின்னர் 1929ல் தான் இவற்றின் ஏற்றுமதிக்கும் அறுவடைக்கும்  சில கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு உண்டாக்கியது.1932ல் ஆஸ்திரேலிய சந்தனமரங்கள் பிரிடிஷ் பார்மகோபியாவில் இணைந்தது. ( British Pharmacopoeia).

ஆஸ்திரேலிய சந்தன மரங்கள்  Department of Protection and Wildlife (DPAW) கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவ்வமைப்பு முறையாக சந்தன மர விதைகளை, அறுவடை செய்யப்படும் மரங்களுக்கு இணையாக நட்டு வைப்பதால் நிலையாக  தொடர்ந்து சுமார் 2000 டன் சந்தன மரங்கள் இப்போது வருடந்தோறும் ஏற்றுமதியாகிறது 

 இந்திய சந்தன மரங்களில்  90 சதவீதம் இருக்கும் சாண்டலோல். (Santalol) ஆஸ்திரேலிய சந்தன மரங்களில் 40 சதவீதம் தான் இருக்கிறது. வேதிப்பொருள்களின் வகைகளிலும் அளவிலும் வேறுபாடுகள் இருந்தாலும் இந்திய சந்தன எண்ணெய்க்கும் ஆஸ்திரேலிய சந்தன எண்ணெய்க்கும் இருக்கும் மருத்துவ ஒற்றுமைகளும் அப்போதே கண்டறியப்பட்டிருந்தது

Santalum lanceolatum  டாஸ்மேனியா மற்றும் தெற்கு விக்டோரியாபகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வளர்கிறது. Santalum spicatum  மேற்கு ஆஸ்திரேலியாவிலும் தென்மேற்கு ஆஸ்திரெலியாவின் சில பகுதிகளிலும் மட்டும் காணப்படுகிறது

ஆஸ்திரேலியாவின்  S. acuminatum வகை சந்தன மரங்களின் பெரிய சிவப்புக் கனிகள் உண்ணக்கூடியவை.  சதைப்பற்றான இக்கனிகளிலிருந்து பழக்கூழ் தயாரிக்கப்படுகிறது. 

ஹவாய் சந்தன மரங்கள்

 1790 ல் கேப்டன் ஜான் கெண்ட்ரிக் ( Captain John Kendrick)   ஹவாய் தீவுகளில் எரிவிறகுக்காக அமெரிக்ககப்பலை கரை சேர்த்தார். காட்டுமரங்களை வெட்டிச் சேகரிக்கையில்தான் ஹவாயின்   நறுமணமிக்க சந்தன மரங்களை ஜான் கண்டறிந்தரர்.  அதுவரை ஹவாய் பழங்குடியினரால் சமயச் சடங்குகளில், மருத்துவ சிகிச்சையில் மட்டுமே உபயோக பட்டுக்கொண்டிருந்த சந்தனமரங்கள் இந்த கண்டு பிடித்தலுக்கு பிறகு அமெரிக்கர்களுக்கு முக்கியமான வாணிப பொருளாக மாறிப்போனது.

ஹவாயின் சந்தன வளத்தை சீனாவும் அறிந்தது. சீனாவின் அதீத சந்தன தேவைகளுக்கென பல சீன வியாபாரிகள் ஹவாய் வர துவங்கினர். சந்தன மரங்களுக்கு பதிலாக பட்டும் சீனக்களிமண்ணும் வாங்கிக்கொண்ட ஹவாய் மக்கள் அவற்றை அமெரிக்கர்களுக்கு கொடுத்து பெரும் பொருளீட்டினர். 

ஹவாய் விரைவிலேயே ’சந்தன மலைப்பகுதி’ என்று பொருள்படும்  “Tahn Heung Sahn,” என்ற பெயரில் அழைக்கப்படலானது.

 ஹவாயின் அரசர் முதலாம் காமேஹமேஹா (Kamehameha 1) காலத்தில்  பண்டைய ஆசிய அளவு முறையான் பிகல்களில் (picul) ஒருவன் தோளில் சுமக்க முடியும் என்னும் அளவான 133 பவுண்டு எடைகொண்ட சந்தனக்கட்டைகள் 8 டாலர்களுக்கு விலைபோனது. அப்போது மலையிலிருந்து சந்தனக்கட்டைகளை கொண்டு வர ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்படி மலைகளிருந்து சந்தன கட்டைகளை  தொடர்ந்து சுமந்து கொண்டு வரும் ஹவாய் மக்களின் முதுகு காப்புக் காய்த்திருந்தது. சந்தன மரங்களின் சுமையால் காய்த்துப்போன முதுகு கொண்டவர்களை Kua-leho என்னும் காய்த்துப்போன முதுகுடையவன் என்னும் பெயரால் அப்போது அழைக்கப்பட்டனர். 

வரலற்றில் இந்த ஹவாய் சந்தனமரங்கள் எல்லாம் ரத்தம் தோய்ந்தவை என்றே குறிபிடப்பட்டிருக்கிறது. காட்டுச்சூழலில் வனவிலங்குகளாலும் குளிரிலும் ஊட்டச்சத்தில்லாத உணவுகளாலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் இரவில் பந்தங்களின் வெளிச்சத்தில் கூட சந்தனமரங்களை வெட்ட துணிந்திருக்கிறார்கள்.

1819-ல் சந்தன மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த போது விழித்துக் கொண்ட அரசர்  காமேஹமேஹா சுமைக்கூலியை விதித்து ஓரளவுக்கு ஏற்றுமதியை கட்டுக்குள் கொண்டு வந்தார் ஆனால் செய்து கொண்டிருந்த தொழில்களை எல்லாம் விட்டுவிட்டு சந்தன மர அறுவடைக்கே பெரும்பாலான மக்கள் சென்றதால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருந்தது.

அந்த வருடம் காமேஹமேஹா இறந்த பின்னர்  அவரது மகன் லிஹோலிஹோ (Liholiho) சுமைக்கூலி வரியை ரத்து செய்தார். 1820ல் ஹவாய் சந்தனம் ஏற்றுமதியின் உச்சத்தில் இருந்தது.

நாட்டின் பொருளாதாரத்திற்கென அமெரிக்கர்களிடம் கடன் பட்டிருந்த லிஹோ அரசர் அதைப்பற்றியெல்லாம் கவலையின்றி சந்தனமர லாபத்தில் ஏராளமான சொத்துகளையும் கப்பல்களையும் வாங்கி குவித்தார். லண்டனுக்கு சென்றிருக்கையில் உண்டான தொற்று நோயால் 1824ல் லிஹோ லிஹோ. இறந்தபின்னர் மூன்றாம் காமேஹமேஹா அரசரானார் அவர் முன்னால் அவரது முந்தைய அரசு அமெரிக்கர்களிடம் வாங்கி இருந்த கடன்  500,000 டாலர்களாக வளர்ந்து நின்றது. 

உண்மையாகவே கடன் கழுத்தை நெரித்ததால் அரசர் வேறு வழியின்றி செப்டெம்பர்  1, 1827. க்குள் ஒவ்வொரு குடிமகனும்i ஒரு பிகல் சந்தனக்கட்டைகள் அல்லது 4 ஸ்பேனிஷ் டாலர்களை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று அறிவித்தார்

மீண்டும் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி தங்களின்  விவசாயம் உள்ளிட்ட  தொழில்களை நிறுத்திவிட்டு சந்தன மரங்களை வேட்டையாட துவங்கினர்.  அப்போது மட்டும் 13,000,000  பவுண்டு சந்தன மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.. சந்தன மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய மேலும் மலை உச்சிகளுக்கு சென்று தேடத் துவங்கினர்  1840ல்  ஹவாயில் சந்தன மரங்கள் அரிதாகி சந்தன மர  வணிகம் முற்றிலும் நின்று போனது. பல தொழில்களும் முடங்கியதால் நாடு பெரும் வறுமையில் இருந்தது

மீண்டும் 1851மற்றும்1871 க்கு இடைப்பட்ட காலங்களில் தாவரவியலாளரும் தோட்டக்கலை நிபுணருமான விலியம் ஹில்லெப்ராண்டின்  (Dr. William Hillebrand) முயற்சியால்  ஹவாயில் மீண்டும் சந்தன மர சாகுபடி தீவிரப்படுத்தபட்டது. அவரது முதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் அவர் தொடர்ந்து அவற்றை சாகுபடி செய்ய முனைந்தார்  30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹவாயில் மீண்டும் சந்தன மர வணிகம் துவங்கியது.

1930ல் நியூயார்க்கில் இந்திய சந்தனக் கட்டைகள் ஒரு டன் 500 டாலர்கள் என விற்கப்பட்டபோது அமெரிக்க அரசு ஹவாயில் இந்தியாவிலிருந்து வாங்கிய சந்தன மர விதைகளிலிருந்து உருவாக்கபட்ட  1500 நாற்றுக்களுடன் சந்தன மர சாகுபடியை துவங்கியது துணை மரங்களாக வளர்ந்த, கத்திச்சவுக்கு மரங்களிலிருந்து  ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு சந்தன மரங்கள் செழித்து  வளரத் துவங்கின. அப்போதைய நாளிதழ்கள்  ’’ஹவாயின் பழைய தங்கச்சுரங்கங்களான சந்தன மரங்கள் மீண்டும் வந்துவிட்டன’’ என்று எழுதின.

1992ல் Mark Hanson  என்பவர் தனது  கனவில் ஹவாய் தீவு தோன்றி தன் மலை உச்சியில் இருக்கும் சந்தன மர விதைகளை சேகரிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறினார்.  அவர் விதைகளை மலை உச்சிகளுக்கு சென்று  சேகரித்து மிக துரிதமாக நாற்றுக்களை வளர்க்க துவங்கினார். இரண்டு 2 வருடங்களுக்கு பின்னர் 40 சந்தன மரங்களும் 30 இயல் மரங்களும்  அவரால் ஹவாயில் வளர்ந்தன.

ஹவாய் மக்களால் சந்தன மனிதர் என்று பிரியத்துடன் அழைக்கப்பட்ட மார்க், 1994 ல் ஹவாய் மீள் காடமைப்பை (reforestation) துவங்கி இயல் மரங்கள் மற்றும் சந்தன மரங்களின் விதைகளை சேகரிப்பது அம்மரங்களை பாதுகாப்பது ஆகிய முயற்சிகளை பெரிய அளவில் துவங்கினார். நாற்றங்கால் பராமரிப்பில் ஹவாய் பள்ளிச்சிறுவர்களையும் ஈடுபடுத்தினார் வெகு விரைவிலேயே ஹவாய் பசுமை பெருக்கினால் நிறைய துவங்கியது.

மார்க் பிற நாடுகளுக்கும் சந்தன விதைகளையும் நாற்றுக்களையும் ஆயிரக்கணக்கில் பரிசளிக்கவும் செய்தார். 

உலக சந்தையிலிருந்து காணாமல் போயிருந்த “Iliahi” என்றழைக்கப்படும் Santalum paniculatum  என்னும் ஹவாய்  சந்தனமரங்கள் ஒரு தனி மனிதனின் முயற்சியால் மீண்டும் வெற்றிகரமாக ஹவாய் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தின.

பயன்கள் 

தோற்றத்தில் வெண்மையாகவும் அரைத்த விழுது இளமஞ்சள்  நிறத்திலும் இருப்பதே மிகச்சிறந்த சந்தனம்.  

பண்டைய தமிழகத்தில் சந்தானம் பல்வேறு வகைகளில் உபயோகிக்கப்பட்டது. மங்கல விழாக்களில் சந்தனம் பூசிக்கொள்வது வழக்கமாக இருந்தது.  செல்வந்தர்கள் வீட்டு திருமணங்களில் பெரிய மனிதர்களுக்கு  மார்பில் சந்தனம் பூசி, தாசிகள்  சன்மானம் பெற்றுக் கொள்வது பெரும் கெளரவமாக கருதப் பட்டிருக்கிறது. சந்தனத்தின் பாலுணர்வை தூண்டும் குணத்தினால் புதுமணத் தம்பதியருக்கு சந்தனம் பூசுதல் ஒரு சடங்காகவே நிகழ்ந்து வந்திருக்கிறது.

தலைமுடியை காணிக்கை அளிப்பவர்கள்  தலையில் சந்தனம் பூசிக்கொள்வதும், தெய்வ திருவுருக்களுக்கு அலங்காரங்கள் செய்வதில் சந்தனகாப்பு எனப்படும் அரைத்த சந்தன விழுதால் முழுவதும் பூசுவதும் அந்த காப்புச்சந்தனம் உலர்ந்தபின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுவதும் இன்றும் பல கோயில்களில் நடந்து வருகிறது.

 தாம்பூலம் தரித்துக்கொள்ளுகையில் சிறு துண்டு சந்தனம் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும்  இந்தியாவில்  இருந்திருக்கிறது சந்தனம் மரக்கட்டைகளாகவும், வில்லைகளாகவும் தூளாகவும் தைலமாகவும், செதுக்குச் சிற்பங்களாகவும் கிடைக்கின்றன.

.சந்தன மரத்தின் கட்டைகளிலிருந்து மட்டுமல்லாது  கனிகளின் விதையிலிருந்தும் மணமற்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் இருக்கும் ஜிம்னேமிக் அமிலம் அழகுசாதன பொருட்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிக பாலிஃபீனால்கள் கொண்டிருக்கும் சந்தனத்தின்  இளம் இலைகளும் மருந்தாக  பல்வேறு சிகிச்சைகளில் பயன்படுகின்றன.

பாதுகாப்பான கொசு விரட்டிகளாகவும் சந்தன குச்சிகள் எரித்ஊ பயன்படுத்த படுகின்றன..

 வழிபாட்டில் ஸ்ரீகந்தம் என்று சந்தனம் அழைக்கப்படுகிறது.   இந்தியகோவில்களிலும் பெரும்பாலான இந்தியவீடுகளிலும் எப்போதும் சந்தனமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். 

இந்தியர்களின் வாழ்வில் நெற்றியில் சந்தனக்குறி தீற்றிக்கொள்வதிலிருந்து  சிதை விறகு வரை  சந்தனம்  இடம்பெற்றிருக்கிறது..1948ல் மகாத்மா காந்தியிலிருந்து 2018 ல் வாஜ்பாய் வரையிலும் சந்தன மரங்களில்தான் எரியூட்டப்பட்டார்கள். இந்தியாவில் சில குறிப்பிட்ட இனத்தவர்களின் சிதைவிறகுகளில் ஒரே ஒரு சந்தன விறகாவது வைக்கும் பழக்கம் இருக்கிறது.

நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் அரேபிய வாசனை திரவங்களில்  சந்தன தைலம் பயன்பட்டு வருகிறது

 ஆயுர்வேத மருத்துவம்  பல சரும நோய்களுக்கு தீர்வாக சந்தன தைலத்தையும் குழைத்த சந்தனப் பொடியையும்  பரிந்துரைக்கிறது. 

புத்த மதத்தில் தியானம் செய்கையில் சந்தன ஊதுவத்திகளின் மணம்  தியானிப்பவர்களை பூமியில் இருப்பவர்கள் என்று உணர செய்கிறது  எனப்படுகிறது. 

சந்தன மரக்கட்டைகளை தூளாக்கி  காய்ச்சி  வடிகட்டுகையில் கிடைக்கும் சந்தன எண்ணெய் சந்தன மரங்களைக்காட்டிலும் மிக அதிகம் விரும்பப்படுகிறது.

நிலவுக்கும் நீருக்குமான மரமாக குறிப்பிடப்படும் சந்தனமரம் பாலுணர்வை தூண்டும்,  குளிர்ச்சி அளிக்கும் மற்றும் சருமநோய்களை  தீர்க்கும் மருந்தாக இருக்கிறது.

இந்து மத பக்தர்கள் சந்தனம் நெற்றியில் குறியிட்டு கொள்வது மரபு அதிலும் கிருஷ்ணனை வழிபடுகிறவர்கள் உடலில் சந்தனம் பூசிக் கொள்வது வழக்கம்.

 இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் சந்தன ஊதுவத்திகள் நாள் தோறும் பயன்படுகிறது. பல நாடுகளில் சந்தன மரக்கட்டைகளில் தங்களது விருப்பங்களை எழுதி நெருப்பில் இட்டு எரித்தால் விருப்பங்கள் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. வீட்டுத்தோட்டங்களில் சந்தனம் வளர்ப்பது தீய சக்திகளை விலக்கும் என்றும் இந்தியாவில் நம்பப்படுகிறது.

பர்மாவில் சந்தன நீரை ஒருவர் மீது தெளித்தால் அவரது பாவங்கள் கழுவப்பட்டு அவர் தூய்மையாக்கப்படுகிறார் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. 

செளராஷ்டிர சடங்குகளில் மனிதகுலத்தின் அனைத்து துயர்களுக்கும் தீர்வாக  யாக குண்டங்களில் சந்தனக்கட்டைகளை அவியாகுவது  வழக்கமாக இருக்கிறது.

கத்தோலிக்க தேவாலயங்களிலும், யூத மடங்களிலும் சந்தன ஊதுவத்திகள் பயன்படுத்தபடுகின்றன.

இருபுருவங்கள் இணையும் புள்ளியில் சந்தன குறியிட்டுக்கொள்ளுவது உடலின் அக்னியை தணிக்கும். 

இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு சந்தன மரச் சீவல்களால் உருவாக்கப்பட்ட  மாலை போடப்படும் வழக்கமும் இந்தியாவில் உண்டு.

உற்பத்தியும் தேவையும்

சந்தனத்திற்கு உலகெங்கிலும் வணிகம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் இருந்தபோதிலும், இந்தியாவில் சந்தன மர மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான திட்டங்கள் குறைவாகவே உள்ளன.

சந்தனத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக சந்தன மரங்களை பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது 

கடந்த 200 வருடங்களாக  உலகளாவிய சந்தனத்தின் தேவை மிக அதிகரித்திருக்கிறது  சந்தனமரத்தின் தேவை இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானிலும் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது.  உலகின் மொத்த சந்தனமர தேவையை காட்டிலும் நான்கில் ஒரு பங்குதான் உற்பத்தி ஆகிறது எனவே இதன் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது 

கடந்த 75 வருடங்களில் இந்திய சந்தன மர உற்பத்தி மெல்ல மெல்ல சரிந்து கொண்டே வருகிறது. 1940களில் ஆண்டுக்கு 4000 டன் உற்பத்தி செய்து கொண்டிருந்த இந்தியா இப்போது வெறும்  20-50 டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

உலகத்தின் பிற பகுதிகளிலிருந்து இந்திய சந்தனம் மற்றும் சந்தனப் பொருட்களுக்கான தேவை சுமார் 6000 டன் ஆக இருக்கையில் இந்திய உற்பத்தி தேவைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத அளவில்தான் இருக்கிறது 

காட்டு சந்தனமர வகைகள் முழுவதும அழிந்துவிட்டிருக்கும் நிலையில் மிக மெதுவாக வளர்ந்து பலன் அளிக்கும் சாகுபடி செய்யப்படும் வகைகளும் அதிக அளவில் திருட்டு போவதால் இவை அழியும் அபாயத்தில் இருக்கின்றன. இந்திய சந்தன மரங்களுக்கு மாற்றாக அதிகம் உபயோகிக்கப்படுவதால் ஆஸ்திரேலிய சந்தன மரங்களும் இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. உலகின் கவனம் இப்போது விரைவில் வளரும் வகையான ஹவாய் மரங்களின் மீது திரும்பி இருக்கிறது.

சந்தன மணத்துக்கு காரணமான alpha-santalol மற்றும் beta-santalol இரண்டிற்கும் இணையான நறுமணத்தை அளிக்கும் செயற்கை வேதி பொருட்கள் இருப்பதால் சந்தனப் பொருட்களில் போலிகள் மிக அதிகமாக இருக்கின்றன

2014 ல் இந்தியாவில் 20,725 ஹெக்டேரில் சந்தன மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இவை முதிர்ந்து அறுவடை செய்ய இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்

தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் மிக விலையுயர்ந்த பொருளாக கருதப்படும் சந்தன மரங்கள்IUCN Red Listல்  அழிந்துகொண்டிருக்கும் வகையில் ஆவணப்படுத்தபட்டிருக்கின்றன.அதிகரிக்கும் உலகத்தேவையின் அளவுகேற்ப அதை பாதுகாத்கும் முயற்சிகள் நடைபெறுவவதில்லை 

சட்டங்கள்

சமீப காலமாக ஆசியாவின் சந்தனத் தேவை மிக அதிகரித்து, சந்தன மரங்களை அழிவின் விளிம்பில் நிறுத்தி இருக்கிறது. அதன் பொருட்டே சந்தன மர வளர்ப்பு, அறுவடை ஆகியவற்றிற்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டிருக்கின்றன. இத்தனை காவலும் சட்டமும் இருந்தும் சந்தன திருட்டுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

 இந்தியாவெங்கிலும் குறிப்பிட்ட பருமன் உள்ள சந்தனமரங்கள் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்தாலும் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமென்றும் அவற்றை வனத்துறை அனுமதியின்றி வெட்டுவதும் விற்பதும் குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனினும் சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பு சந்தன மரத்தின் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

பண்டைய இந்தியாவில் குறிப்பிட்ட  மரங்கள் தெய்வீக நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் மத முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன, பல மர இனங்கள் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் முதன்மையான பங்கை கொண்டுள்ளன,  

ஆசியாவின் கீழைத்தேய மற்றும் தாவோயிக் மதங்கள் மரங்களுக்கு ஒரு புனிதமான இடத்தை அளித்தன.இந்திய சந்தனம் அதன் தனித்துவமான இயற்கை பண்புகள் காரணமாக தாவர உலகத்தின் அரிதான ஆபரணமாக ஜொலிக்கிறது.

ரவீந்திரநாத் தாகூர் வெறுப்பை விட அன்பே பெரிது என்பதை சொல்ல ’’வெட்டும் கோடாலியையும் மணக்க வைக்கும் சந்தன மரங்களை சொல்லலாம்’’ என்று கவித்துவமாக குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்தியாவில் மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்படும் முன்னரே  மைசூரு பல்கலைக்கழகத்தின் கன்னட, ஆங்கில துறைகளின் புகழ்பெற்ற  முன்னாள் பேராசிரியரான பி எம் ஸ்ரீகண்டையா (B. M. Srikantaiah) கன்னடத்தில் ஒரு பிரபல பாடலை எழுதி இருந்தார்.

’’பொன்னின் நாடு மைசூரு
சந்தனக்கோவிலும் மைசூரு
வீணையின் நாதமும் மைசூரு
கிருஷ்ணனின் நாடும் மைசூரு’’

 கர்நாடகத்தின் சந்தனப்பெருமையை சொல்லும் இந்த  நாட்டுப் பாடலை மொத்த இந்தியாவுக்குமே பொருத்திக்கொள்லாம்.

தெய்வத்திருவுருவங்களுக்கு சந்தனகாப்பு இடுவதின் முக்கியத்துவத்துக்கு இணையாக   அழிந்துவரும் சந்தனமரங்களை காப்பதிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்த தலைமுறையினருக்கும் இயற்கையின் இந்த அரிய பொக்கிஷம் அளிக்கப்படும்.

தந்தைப்பெருமரம்-பாவோபாப்!

ஜெ சமீபத்தில் பாவோபாப் மரங்களைக் கர்நாடகத்தில் பார்த்ததை தொனமையின் தொடரில் என்னும் கட்டுரையில் எழுதியிருந்தார்.  நானும் சில வருடங்களுக்கு முன்னர் கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு முன்னால்   அதிலொன்று நிற்பதைப் பார்த்தேன். இந்தியாவில் பாவோபாப்  மரங்கள்  சுமார் 1000-தான் இருக்கின்றன, இவை அரிய மரங்கள் என்பதே பலருக்கும் தெரியாது. ஜெ அதில் மிகப்பெரியவற்றை,  பாதுகாக்கப் பட்டவற்றை நேரில் பார்த்ததும் புகைப்படங்களை பிரசுரித்திருப்பதும் மகிழ்ச்சி அளித்தது. நான் அந்தப் பதிவை மாணவர்களுடன் பகிர்ந்தேன்.

கர்நாடகத்தில் பவோபாப் மரங்களிருக்கும், ஜெ சென்ற அக்கிராமம் ‘பெரிய புளி மரம்-தொட்ட ஹுன்ஸி மரா’ என்றுதான்  பெயர் கொண்டிருக்கிறது. இவை புளிய மரத்தின் வகையல்ல எனினும் இவற்றின் பலமொழிப்பெயர்கள் புளிய மரம் என்றுதான் இருக்கின்றன. தமிழில் இதன் பெயர் பப்பரப்புளிய மரம்.

(நம்மூர்ப்புளியமரமும் இண்டிகா (Tamarindus indica) என்று பெயர்கொண்டிருந்தாலும் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டதல்ல ஆப்பிரிகாவைச்சேர்ந்த அம்மரம் ஆசியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது, இந்தியாவைச்சேர்ந்தது என்று சொல்லிக்கொள்கிறோம் இண்டிகா என்னும் சிற்றினப்பெயரைக்கொண்டு) .

பாவோபாப் மரத்தின் தாவர அறிவியல் பெயரான  Adansonia digitata என்பதில் பேரினப்பெயர்  Adansonia என்பது செனிகல் நாட்டிலேயே வசித்து அந்த நாட்டின் இயற்கை வரலாற்றை எழுதியவரான பிரஞ்சு தாவரவியலாளர்  மைக்கேல் ஆடன்சனை சிறப்பிக்கும் பொருட்டு வைக்கப்பட்டது. (Michel Adanson 91727- 1806),  digitata  என்பது விரல்களைப் போலிருக்கும் அதன் கிளைகளைக் குறிக்கிறது.

இதன் வழங்கு பெயரான பாவோபாப் என்பது ’பலவிதைகளின் தகப்பன்’ என்னும் பொருள் கொண்ட அரபி வேர்கொண்ட லத்தீனச்சொல்லான  baho-bab என்பதிலிருந்து பெறப்பட்டது.செம்பருத்தியின் குடும்பமான மால்வேசியின் துணைக்குடும்பத்தைச் சேர்ந்த  பாவோபாப் இலை உதிர்க்கும் மரவகையைச் சேர்ந்தது.

இந்த பாவோபாப் மரம் கண்டங்கள் பிரிவதற்கு முன்னரே தோன்றியிருக்கக்கூடும் எனினும் இதன் புதைபடிவங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறாததால் இதன் தோற்றம் குறித்தும் பூர்வீகம் குறித்தும் தெளிவாக எந்தத் தகவலும் இல்லை.

மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கா இதன் பூர்வீகமாக இருக்கலாம் அல்லது மடகாஸ்கரில் தோன்றி ஆப்பிரிக்காவுக்கு கடல் வழி வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் இரு கருத்துகள் தான் பரவலாக ஏற்கப்பட்டிருக்கிறது.

ஆடன்சோனியாவில் மொத்தம் 8 சிற்றினங்கள் உலகில் இருக்கின்றன. பல இணையதளங்களில் 9/10 சிற்றினங்கள் இருப்பதாக தவறான தகவல்கள் இருக்கிறது. இதன் இணைப்பெயர்களையும் தனிப்பெயராக கருதும் குழப்பத்தால் இந்த தவறு நேர்கிறது.

Adansonia digitata

Adansonia gibbosa as Adansonia gregori

Adansonia grandidieri

Adansonia madagascariensis

Adansonia perrieri

Adansonia rubrostipa as Adansonia fony

Adansonia suarezensis

Adansonia za

மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் ஆடன்சோனியாவின் 8 சிற்றினங்களில் 6 மடகாஸ்கரிலும், 1 ஆப்பிரிக்காவிலும்  1 ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது.

ஆப்பிரிக்கா முழுவதுமிருக்கும் Adansonia digitata அங்கிருந்துதான்  இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும். டிஜிடேட்டா பவோபாப் மரங்கள் இலங்கையிலும் இருக்கின்றன. Adansonia gregorii  ஆஸ்திரேலியாவிலும் பிற 6 சிற்றினங்கள் மடகாஸ்கரிலும் இருக்கின்றன.

அதிகபட்சமாக 30 மீ உயரமும் 50 மீ சுற்றளவும் கொண்டிருக்கும் பாவோபாப் மரங்கள் 32 ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கின்றன.

வறண்ட, உயிர் வாழச்சாத்தியமே இல்லாத ஆப்பிரிக்கப்பகுதிகளில் கம்பீரமான பெரும் தோற்றத்துடன் வளர்ந்து, உணவுக்காக சத்தும் சுவையும் மிக்க கனிகளையும், வறட்சிக்காலத்துக்காக சேமித்து வைத்திருக்கும் ஏராளமான நீரையும், மரப்பட்டையிலிருந்து  கயிறு, ஆடை போன்றவற்றிற்கான நாரும், பலவேறு சிகிச்சைகளுக்கான மருந்தும், வேர்களிலிருந்து சிவப்புச்சாயமும், இலைகளைக் கால்நடைத் தீவனமாகவும் அளிப்பதால்  வாழ்க்கை மரம் என அழைக்கப்பட்ட, பாவோபாப் மரங்களை ஒட்டியே ஆப்பிரிக்க பழங்குடியினரின் வாழிடங்கள் உருவாகின.

8 லிருந்து  20 வருடங்களில் பாவோபாப் மரங்கள் மலர்களைத் தோற்றுவிக்கும். இரவில் மலரும் இவற்றின் அழகிய பெரிய வெண்ணிற மலர்கள் இரவாடிகளான வவ்வால்,நாகாபிஸ், ரோஸ் வண்டு, அந்துப்பூச்சி ஆகியவற்றால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படுகிறது.

ஆப்பிரிக்கக் தொன்மமொன்று தனது கம்பீரமான தோற்றத்தினால் பெருமை கொண்ட பவோபாப் மரம் அகந்தை தலைக்கேறி கனியளிக்க மறந்துவிட்டதால் கடவுள் கோபித்துக்கொண்டு அதை பிடுங்கி தலைகீழாக நட்டார் என்கிறது. அதனால்தான் இம்மரம் வேர்கள் மேல்நோக்கி இருக்கும்படி தோற்றம் கொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

அதைப்போலவே மலரமுது நிரம்பிய இதன் வெண்ணிற மலர்களை யாரேனும் பறித்தால் அவர்கள் சிங்கத்தால் கொல்லப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள்.

பவோபாப் மரம் ஒரு கம்பீரமான ஆண், மரத்தடியில் நிற்கும் கன்னிப்பெண்களை மரத்துக்குள்ளே இழுத்துக்கொண்டு விடும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களின் அலறல் இரவுகளில் காடுகளுக்குள்ளிருந்து கேட்கும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்குழந்தைகளை பாவோபாப் மரப்பட்டையை ஊறவைத்த நீரில் குளிப்பாட்டும் வழக்கம் இருக்கிறது அப்படிச்செய்தால் அந்தக்குழந்தை பாவோபாப் மரம் போலவே கம்பீரமான உருவம் கொண்ட ஆண் மகனாக வளருவான் என நம்புகிறார்கள்

ஆப்பிரிக்கப் பழங்குடியினர் பாவோபாப் மரங்களின்  பல பாகங்களைச் சந்தைப் படுத்துகிறார்கள். 1 அடி நீளம் இருக்கும் இதன் கனிகள்  உதிராமல் மரத்திலேயே 6 மாதம் வரை இருந்து, உள்ளிருக்கும் சதைப் பகுதி முழுவதும் உலர்ந்து  அதன் பச்சையான வெல்வெட் போன்ற மேற்பகுதி   தேங்காய் கொப்பரை போல காய்ந்த பின்னர் அறுவடை செய்யப்படுகிறது.  விதைகளை (சருமப்பாதுகாப்பில் பயன்படும் ) எண்ணெய் எடுக்க அகற்றிவிட்டு கனியின் மேற்தோல் துருவப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. வைட்டமின் C, நார்ச்சத்து ஆன்டிஆக்ஸிடெண்ட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய இந்த பொடி 3-லிருந்து 4 வருடம்  வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தப்பொடி கிடைக்கிறது.

ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் நாட்டுமருத்துவத்திலும் பாவோபாப் மரங்களின் பல பாகங்கள் பலவிதமான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.இதன் விதைகளை காப்பிக்கொட்டைகளைப்போல வறுத்து சூடான பானம் தயாரித்து அருந்துகிறார்கள். மரப்பட்டையிலிருந்து காகிதம், ஆடைகள், கூடை, கயிறு உள்ளிட்ட பல பொருட்கள் உருவாகின்றன.  இலைகள் சமைக்கப்பட்டும் சமைக்காமலும் உண்ணப்படுகின்றன, மலர்களின் மகரந்தங்களிலிருந்து ஒரு பசை தயாரிக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஒரு சில பாவோபாப் மரங்களே இருக்கின்றன என பொதுவாகக் கருதப்படுகிறது, ஆனால் மாபெரும் கோட்டைகள், சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் ராணி ரூப்மதி ஆகியோரை நினைவுபடுத்தும் மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் நகரமான மாண்டுவில் ஏராளமான பாவோபாப் மரங்கள் இருப்பது பலருக்கு தெரியாது.

`மாண்டுவின் புளிய மரம்` என்ற அழைக்கப்படும் (Mandu ki Imli) இவை சாலையோரங்களிலும், விவசாய நிலங்கள், கோவில்கள்,புராதன கோட்டைகளில் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.  சுமார் ஆயிரம் பாவோபாப் மரங்கள் இங்கு இருக்கின்றன அவற்றை அப்பகுதியின் பில்லு பழங்குடியினர் பாதுகாக்கிறார்கள்.

பில்லு பழங்குடியினரின் வாழ்வாதாரமாக பாவோபாப் மரங்கள் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. பாவோபாப் கனிகள், பழச்சாறு, விதைகள் ஆகியவை இங்கு சந்தைகளில் ஏராளமாக  விற்கப்படுகிறது. இதன் நீர் தேக்கி வைக்கும் பண்பிற்காக முன்பு மாண்டுவை ஆண்ட சுல்தான்கள்  இதை ஆப்பிரிக்காவிலிருந்து தருவித்து அங்கு வளர்த்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

ஜெ அந்தப்  பயணக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல் இங்கும் கிருஷ்ணர் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்புகையில் இதன் விதைகளை கொண்டு வந்தார் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

ஹரிவம்ச புராணத்தில் சத்யபாமாவை மகிழ்விப்பதற்காக கிருஷ்ணர் பவோபாப் மரத்தைக் கொண்டு வந்தாரென்று குறிப்பிட்டிருப்பதாகவும் இங்கு சொல்கிறார்கள்.

இது 5000 வருடம் வரை உயிர்வாழும் என ஐரோப்பியப் பயண ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் என்றாலும் கார்பன் கணக்கீடுகள் இவை அதிகபட்சமாக 3000 வருடங்கள் வாழும் என்கிறது.

பல்லி, குரங்கு, பலவிதப் பறவைகள்,   வறட்சிக்காலத்தில் இதன் மரப்பட்டையை உரித்துண்ணும் யானைகள்,  மலரமுதை உண்ண வரும் அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் என  நூற்றுக்கணக்கான உயிர்களின் புகலிடமாக பாவோபாப் மரங்கள் இருக்கின்றன.

பல தண்டுகள் ஒன்றிணைந்து பாவோபாபின் பெரிய பருத்த அடிமரம் உருவாகிறது எனவே தண்டுகளுக்கிடையில் இருக்கும் இடைவெளிகள் பொந்துகளாக அமைந்துவிடுகின்றன. பாவோபாப் மரங்களின் தனித்தன்மையாக இந்த பொந்துகளைச் சொல்லலாம்.

பழங்குடியினர் நுற்றண்டுகளாக இந்த தந்தைமரத்துடன் இணைந்து அதைப்பாதுகாத்து அதனுடன் வாழ்வை இணைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால்  காலநிலை மாற்றம் பாவோபாப் மரங்களை அழிவுக்கு தள்ளி இருக்கிறது ஆப்பிரிகாவின் 13 மிகப்பழமையான மாபெரும் பாவோபாப் மரங்களில் 9 மரங்கள் கடந்த பத்தாண்டுகளில் அழிந்க்து விட்டிருக்கின்றன.

இவற்றின் 8 சிற்றினங்களில் A. suarezensis, A. grandidieri மற்றும் A. za,  A. perrieri ஆகியவை அழியும் ஆபத்தில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் A. digitata வை  2023-ல்   அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN  சிவப்புப்பட்டியலில் இணைத்திருக்கிறது.

ஹைதராபாதில்  200 ஏக்கரில் உருவாகும் அரிய வகை தாவரங்களுக்கான பிரத்யேக பூங்காவிற்காக மாண்டு பகுதியிலிருந்து 11 பாவோபாப் மரங்களை  வேரோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்ல 2022-ல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பில்லு பழங்குடியினர் சாலை மறியலிலும் பெரும் போராட்டங்களிலும் இறங்கினார்கள்.

`ஹைதராபாத் பூங்காவுக்கு பாவோபாப் மரங்கள் தேவைப்பட்டால் நாங்கள் முளைக்க வைத்திருக்கும் பாவோபாப் நாற்றுக்களைத் தருகிறோம், ஒருபோதும் வேரோடு மரங்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம்“ என போரட்டம் நடத்தினார்கள். அதன் பின்னர்தான் நவம்பர் 2022-ல்  பாவோபாப் கனிகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக தார் மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை முயற்சிக்கிறது.

புவிசார் குறியீடு கிடைத்தால் இம்மரங்களின் பாதுகாப்பு மேலும் உறுதியாகும். 2025 பிறந்துவிட்டிருந்தாலும் அரசு இதில் நத்தைவேகம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் தாவரவியலாளர்கள்.

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இவை  எப்படி வந்திருக்கக் கூடும் என்பதை அறிய  இந்திய பாவோபாப் மரங்களின் மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆய்வு முடிவுகளில்  மாண்டுவில் இருக்கும் பாவோபாப் மரங்களும் ஆப்பிரிக்காவின் ஆடன்சோனியா டிஜிடேட்டாவும் ஒரே சிற்றினம் தான்  என்பது  நிரூபணமாகியிருக்கிறது.

பாவோபாபின் பரவல் குறித்த  இதுபோன்ற பல ஆய்வுகள்  நடந்திருக்கின்றது. ஒரு சில ஆய்வுகள் இம்மரத்தின் பரவல் மனிதர்களால்தான் நடந்திருக்க முடியுமென்கின்றன.

கடல் நீரில் அமிழ்த்தி வைக்கப்பட்ட பாவோபாப் கனிகள் 6 மாதங்களுக்குப் பிறகும் முளைத்தன என்பதால் இவை கடல்நீரில் அடித்து வரப்பட்டு கடற்கரையோர பகுதிகளில் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே பண்டமாற்று, குறிப்பாக சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு, தட்டைப்பயறு, மொச்சை ஆகியவற்றிற்கு மாற்றாக பாவோபாப் கனிகள் இந்தியர்களால் வாங்கப்பட்டிருக்கும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இவற்றிற்கு மரபியல், தொல்தாவரவியல் மற்றும் தொல் இனவியல் நிரூபணங்களோ சான்றுகளோ இதுவரை இல்லை. எனவே பாவோபாப் மரங்கள் உலகெங்கும் எப்படிப் பரவின என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மாபெரும் பாவோபாப் மரத்தடியில் ஒரு மனிதர்கள் சிறு பூச்சிகளைப் போல் நிற்கும் புகைப்படம் மனிதன் எத்தனை எளியஉயிரி என்பதைக் காட்டுகிறது.

எங்கு தோன்றியது எப்படி உலகெங்கும் பரவியது என்று இன்று வரை அறிந்துகொள்ள முடியாத பாவோபாப் மரங்கள், தொன்மையின் தொடரில் கட்டுரையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருப்பதைப் போல காலமற்ற கனவுகளில் ஒன்றுதான்.

பேய்மிரட்டி!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய காரியம் . துக்கம் விசாரிக்க பொன்னாண்ட கவுண்டனூர் சென்றிருந்தேன். திரும்பி தொண்டாமுத்தூர் வழியே வரும்போது சாலையோரம் பேய்மிரட்டி என்கிற Anisomeles malabarica புதர்கள்அடர்த்தியாக வளர்ந்திருந்தன. காரை நிறுத்தி இறங்கினேன்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தச்செடியை மாணவர்களுக்கு கொடுக்க நீலகிரிசென்று பைக்காரா அணைக்காட்டுக்கருகில் இருந்து எடுத்து வருவோம். இப்போது வாய்க்கால் வரப்போரங்களில் எங்கும் காணமுடிகிறது.

தும்பைக்குடும்பத்தைச்சேர்ந்த இதன் இலைகள் வெகுட்டல் வாடை கொண்டவை. அதனாலேயே இதற்கு பேய்மிரட்டி, பேய் விரட்டி என்று பெயர். இது பெருந்தும்பை என்றும் அழைக்கப்படுகிறது.

மாந்த்ரீக பூஜைகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஒரு மருத்துவரின் அலுவலக அறையில் இதன் காய்ந்த குச்சிகள் ஒரு சிறு கட்டாக பூசைமாடத்தில் வைக்கப்பட்டிருந்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்,

பலர் இந்தச்செடியை தோட்டத்தில் வளர்த்தாலோ அல்லது இதன் காய்ந்த பாகங்களை வீட்டில் வைத்துக்கொண்டாலோ தீய சக்திகள் அண்டாது என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நான் வீட்டுத்தோட்டத்தில் இதை ஒரு மூலிகைத் தாவரமாகத்தான் வைத்திருக்கிறேன். தீய சக்திகள் அண்டாமலிருக்க மனிதர்களே இல்லாத தீவிலல்லவா வசிக்க வேண்டும்?

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் இது ஒரு காய்ச்சல் நிவாரணியாகவும், பசியுணர்வை தூண்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. (மருத்துவரின் அனுமதியும் பரிந்துரையுமில்லாமல் இதை நாமாக மருந்தாக எடுத்துக்கொள்ளவே கூடாது)

இதன் பசிய இலைகளின் கூர் நுனியை பஞ்சுத்திரியைப்போல அகல்விளக்குகளில் வைத்து எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். பச்சையின் சடசடப்பே இல்லாமல் திரியைபோலவே மணிக்கணக்கில் நின்றெரியும். இந்த சுடர் எரியும் வரைக்கும் கொசுபோன்ற பூச்சிகள் வருவதில்லை.

தொடர்ந்து பயன்படுத்தினால் ஆளையே கொல்லும் ஆல் அவுட் நச்சுத்திரவங்களைக் காட்டிலும் இப்படியான இயற்கைப் பூச்சி விரட்டிகளை நாம் எளிதில் பயன்படுத்தலாம்.

வீட்டில் இருப்பது ஒரே ஒரு சிறு செடி என்பதால் விளக்கெற்றவென்று இந்தப்புதர் கூட்டத்திலிருந்து இலைகளை எடுத்துக்கொள்ள நினைத்தேன். காரில் எப்போதும் காகிதக் கவர்களும் கத்தரி, கத்தி ஆகியவைகளும் இருக்கும். ஒரு கவரில் நானும் கார் ஓட்டுநருமாக பேய்மிரட்டி செடிகளை கத்தரித்துச் சேகரித்துக் கொண்டிருந்தோம்.

அந்த வழியே டி வி எஸ் 50-யில் குதிரை மசால்கட்டுகளுடன் வந்த ஒருவர் வண்டியை எங்களருகில் நிறுத்தினார். நீலத்தில் பொடிக்கட்டமிட்ட லுங்கியும் முழங்கைவரை சுருட்டிவிட்டிருந்த சிவப்பு முழுக்கைச்சட்டையுமாக இருந்தார். எங்களிடம்

….. ’’’’ இதை எதுக்கு பொறிக்கறீங்க? இது களைச்செடி, நாத்தமடிக்கும்’’’’……..

என்றார்.

…..’’’’ இந்த இலையை திரிமாதிரி அகல்விளக்கில் போட்டு ஏத்தினா எரியுங்க, கொசுவும் வராது, அதான் பறிக்கிறேன்’’’ ……… என்றேன்.

அசந்துபோனவர் ஒரு கெட்ட வார்த்தையைச்சொல்லி, வான் நோக்கி கைகைக்காட்டி

…..”” தக்காளி! என்னன்னவெல்லாம் குடுத்துருக்கான் பாருங்க நம்மளுக்கு!’’…. என்றபடி வண்டியை கிளப்பிக்கொண்டு போனார்.

அந்தக் கெட்டவார்த்தை இல்லாமல் நானும் அதைத்தான் எப்போதும் நினைக்கிறேன், என்ன என்னவெல்லாம் நமக்கென கொடுக்கப்பட்டிருக்கிறது? நாம் தான் அறிந்துகொள்வதில்லை அளிக்கப்பட்டவைகளின் அருமைகளை.

வருங்காலப் பாதுகாப்பில் விதை வங்கிகள்.

ஆள் நடமாட்டமே இல்லாத அந்த நகரத்தின் கைவிடப்பட்ட தெருவொன்றில்  பனியில் உறைந்த உடலொன்றை இழுத்துக்கொண்டு போகிறார்கள்  ஆலிஸாவும், மாக்ஸிமும்.  வழியெங்கும் ஏராளமான விறைத்த சடலங்கள் கிடக்கின்றன. அந்தப் பெரு நகரம் முழுவதும்  இடிந்து பாழாகிக் கிடக்கிறது. வருடங்களாக மின்சாரமும் உணவும் தடைப்பட்டிருந்ததால் மரணஓலம் எழுப்பக்கூட திராணி இல்லாமல் கடுங்குளிரில் விறைத்துப்போன மனிதர்கள் நகரெங்கும் அரைப்பிணங்களாக  அப்புறப்படுத்தப்படாத சடலங்களுக்கு மத்தியில் கிடக்கிறார்கள்.  

இரணடாம் உலகப்போரில் முற்றுகையிடப்பட்டு உலகின் பிற பாகங்களிலிருந்து  சுமர் 900 நாட்கள்  (1941 – 1944) முற்றிலும் துண்டிக்கப்பட்டு பட்டினியால் மெல்ல இறந்துகொண்டிருந்த லெனின்கிராட் நகரின் விதைவங்கியில் இருக்கும் விதைகளைக் காப்பாற்ற இரண்டு தாவரவியலாளர்கள்  போரடியஉண்மைக்கதையை சொல்லிய One man dies a million times  என்னும் ரஷ்யமொழித் திரைப்படத்தின் காட்சிகள்தான் இவை.

 சுற்றிலும் போர்ச்சூழ்கை, உறைபனியின் எலும்பை ஊடுருவும் குளிரோடு கடும் பட்டினியும் சேர்ந்துகொண்டிருந்தது.  நகரின் அனைவரின் பசியையும் போக்கி உயிர்பிழைக்கச்செய்யும் கடைசி வாய்ப்பாக   விதைவங்கியின் விதைகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. ஆனால் உலகின் முதல் விதைவங்கியான அதன் ஆய்வாளர்கள் பலரும் எதிர்கால உலகிற்கான அவ்விதைகளை தின்று உயிர்வாழ்வதை விடவும் உயிரை விடுவதையே தேர்ந்தெடுக்கிறார்கள். கடைசியாகப் பிழைத்திருந்த இருவரான அலிஸாவும் மாக்ஸிமும் பட்டினியால் உயிரிழந்துகொண்டிருக்கும் லிப்ஸ்டிக்கையும், தோல் தொப்பிகளையும், கம்பளி ஆடைகளையும் கூட தின்றுகொண்டிருந்த மனிதர்கள், பெரும்படையாக  விதை வங்கியை முற்றுகை இடும் எலிகள் மற்றும் விதை வங்கியை அபகரிக்க துடிக்கும் நாஸிகளிடமிருந்து விதைவங்கியை காப்பாற்றப் போராடியதுதான் அந்த உண்மைக்கதை. 

 ‘One man dies a million times’  2019-ல் வெளியாகவிருந்த இத்திரைப்படம் கோவிட் பெருந்தொற்றினால் இரண்டு வருடங்கள் கழித்து 2022-ல் வெளியானது. இந்தக் கதை சொல்லும் உண்மை மாந்தர்களின் தியாகத்தைக் கருத்தில் கொண்டு இது திரையரங்குகளில் மட்டுமே வெளியிடப்பட்டது வேறெந்த ஊடகம் வழியாகவும் இதைக் காண முடியாது. அமெரிக்க இயக்குநர் ஜெசிக்கா ஓரக்கினால் இயக்கப்பட்ட உலகின் முதல் விதைவங்கியை பற்றிய இந்தத் திரைப்படம் வரலாறு, அறிவியல், மனிதநேயம், காதல், இயற்கை ஆகியவற்றின் கலவை. நேற்றைக்கும் இன்றைக்கும் இடையில், நம்பிக்கைக்கும் நிராசைக்கும் இடையில்  ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்தத் திரைக்கதையை ஜெசிகா கருப்பு வெள்ளையில் காட்டி இருக்கிறார்.

ரஷ்யத் தாவரவியலாளர்கள் அலிஸாவுக்கும் மாக்ஸிமுக்கும் இடையிலான காதல், பட்டினிக்கும் போர்முற்றுகைக்கும் நிராசைக்கும் இடையிலும் முகிழ்க்கிறது. நிலைமை மோசமாக ஆக அவர்களுக்கிடையேயான  பிணைப்பு மேலும் இறுகுகிறது. குண்டு விழும் ஓசை கேட்கையிலெல்லாம் ஒருவரை ஒருவர் பற்றிக்கொள்வதும், அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் தோட்டத்தில் இருவருமாக நீண்ட நடைசெல்வதுமாக மிக அழகிய காட்சிகள்  வழியாகக் கதை நகர்கிறது.  

காலநிலை மாற்றம், அழிந்துவரும் பல்லுயிரியம், சிதைந்துக் கொண்டிருக்கும் சூழலமைப்புக்கள் போன்ற எதிர்கால சிக்கல்களைக்காட்டித் துவங்கும் படம் பின்னர் வரலாற்று காலத்துக்குத் திரும்பி விதைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.அவ்வப்போது குரலாக மட்டும் கேட்கும் போர்ச்சூழலில் எழுதப்பட ஒரு நாட்குறிப்பின் நம்பிக்கை ஊட்டும் வாசகங்களும் படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது.

இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அந்த N. I. Vavilov Institute of Plant Genetic Resources விதைவங்கி உலகின் எல்லா நாடுகளிலிருந்தும் தருவிக்கப்பட்ட  லட்சக்கணக்கான விதைகளைச் சேமித்துவைத்திருக்கிறது. இந்த விதைவங்கி உலகின் ஆகப்பெரிய விதைசேகரிப்பு மையங்களில் ஒன்றாக இருக்கிறது.  

Nikolai Ivanovich Vavilov

ரஷ்ய தாவரவியலாளர் வாவிலோவ் (Nikolai Ivanovich Vavilov) இதை உருவாக்கினார். உலகெங்கிலும் பயணித்து உணவுத்தாவர விதைகள் அனைத்தையும் சேகரித்த அவர் அரசியல் காரணங்களால் புரட்சியாளர் எனக் குற்றம் சாட்டப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டார்.  வாவிலோவின் மரணதண்டனை 20 ஆண்டு சிறைவாசமாகக் குறைக்கப்பட்டாலும், அவர் சிறையிலேயே இறந்தார். அவரது மரணச் சான்றிதழ் அவர் உடல் பலவீனத்தால் இறந்தார் என்று சொன்னாலும் அவர் கடுமையான சித்திரவதைகளுக்கும், பட்டினிக்கும் ஆளாகி சுண்ணாம்புக் காளவாயில் தூக்கி எறியப்பட்டு கொல்லப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. இப்போது மக்களால் கொண்டாடப்படும் ரஷ்ய நாயகர்களில் ஒருவர் வாவிலோவ்.

அந்தப் போர் முற்றுகையின்போது விதைவங்கிக்குள் இறந்துகிடந்த தாவரவியலாளர்  டிமிட்ரி இவனோவைச் (Dmitri Ivanov) சுற்றிலும் நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன.  மேசையில் அமர்ந்தபடியே உயிரிழந்த மற்றுமொரு தாவரவியலாளரின் கைகளில் நிலக்கடலைகள் இருந்தன. கண் முன்னே இருந்த ஏராளமான உணவை எதிர்கால சந்ததியினருக்கு விட்டுச்செல்ல மரணத்தைத் தேர்ந்தெடுத்த அவரின் உள்ள உறுதி மெய்சிலிர்க்க வைக்கிறது.

நம்மில் பெரும்பான்மையானோர் விதைகளை உண்டு உயிர்வாழ்பவர்கள்தான், இந்தப்படம் நம்மில் ஒரு சிலரையாவது பயிர்செய்வோராக, விதைகளைச் சேகரிப்பவராக, பயிர்களுக்கு நீர் பாய்ச்சுபவராக, பயிர்களைப் பரமரிப்பவர்களாக, களை எடுப்பவராக  மாற்றும் விதையை மனதில் ஊன்றும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே மனிதனுக்கு உணவு, மருந்து, நாரிழை சாயம் மற்றும் ஆபரணங்களுக்காக விதைகளுடன் நெருங்கிய உறவு இருந்தது. அப்போதிலிருந்தே மனிதன் விதைகளைச் சேகரிக்கவும், சேமிக்கவும் அவற்றிலிருந்து பயிர்களை உருவாக்கவும்  கற்றுக்கொண்டான்.

இப்போதும் உலகின் அனைத்துக்கலாச்சாரங்களிலும் விதைகளே பிரதான உணவாக இருக்கின்றன. உலகின் பசியாற்றுவதில் பாதிப்பங்கில் கோதுமை, நெல், பார்லி, ஓட்ஸ் ஆகிய தானிய வகை விதைகள் இருக்கின்றன, இவற்றுடன் பயறு வகை விதைகளும் சேர்ந்து நமது சரிவிகித உணவு ஆகிறது.  மனிதர்களின் 50 சதவிகித கலோரி, அரிசி, கோதுமை, மக்காச்சோள விதைகளில் இருந்துதான் கிடைக்கிறது. 

மனித நாகரிகங்கள் அனைத்துமே விதைகளை மையமாகக் கொண்டவைதான் என்பது மிகைப்படுத்தப்பட்டதல்ல.  உலக நாகரீகங்கள் அனைத்துமே தானியங்களும் பயறுவகைகளும் இருந்த, விளைந்த இடங்களை மையமாகக்கொண்டே உருவாகின. கோதுமை பார்லி பட்டாணி கொண்டைக்கடலை ஆகியவை மேற்கு ஆசியப்பகுதிகளின் வளமிக்க  காட்டுபயிர்களாக இருந்தன. சிறு தானியங்கள், அரிசி, சோயாபீன் ஆகியவை பண்டைய சீனாவில் சாகுபடியாகின

பீன்ஸ் உள்ளிட்ட பயறுவகைகளும் மக்காச்சோளமும் அன்றைய மீசோ அமெரிக்க பகுதியன இன்றைய மெக்சிகோவில் மாயன்களால் சாகுபடி செய்யப்பட்டது. ஆண்டீஸ் மலைப்பகுதியின் இன்கா பழங்குடியினரால் கீன்வா, நிலக்கடலை மற்றும் லிமா பீன்ஸ் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. சோளம், ஆப்பிரிக்க அரிசி, தட்டைப் பயறு மற்றும் நிலக்கடலை  ஆகியவை மேற்கு ஆப்பிரிக்காவில் பயிராகின.  

சிறார் கதைகளில் சொல்லப்படும் ஏழு கடல் ஏழுமலைதாண்டி வாழும் மந்திரவாதியைப் போல விதைகளும் பல மலைகள் கடல்களைத் தாண்டிப் பயணிப்பவை, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்பவை. பட்டாணிக்குடும்பத்தின் பவளபீன்ஸ்களும், ஹேம்பர்கர் பீன்ஸுகளும் கடல்நீரில் வருடக்கணக்காக இருந்தாலும் உயிருடன் இருப்பவை. அலைகளால் கரையொதுங்கிய அவை ஐரோப்பிய கரையோர நகரங்களில் வளர்ந்தன.  

கடந்த 30 கோடி வருடங்களாக விதைகள் அளவிலும், வடிவத்திலும் நிறங்களிலும்  பல மாற்றங்களை அடைந்துள்ளன.  வளமான மண்ணும் நல்ல தட்பவெப்பமும் இருக்கும் இடங்களில் மட்டுமல்ல துருவப்பகுதிகளிலும் பாலை நிலங்களிலும் கூட விதைத்தாவரங்கள் இருக்கின்றன. 

10,000 வருடங்களுக்கு முன்னர் விவசாயம் உருவானதிலிருந்து விதைகளே மனித வாழ்க்கையின் ஆதரங்களாக இருந்துவருகின்றன, நம் மூதாதையர்கள் மனித குலத்தின் பசியாற்றிய விதைகளில், எதிலிருந்து  நல்ல விளைச்சல் கிடைத்ததோ. எது நோய்த்தாக்குதலை எதிர்த்ததோ, எது காலநிலை மாற்றங்களைத் தாங்கிக்கொண்டதோ அவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து  சேமித்து வைத்துத் திரும்பத் திரும்பப் பயிரிட்டனர்.  அப்படி பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, கலப்பின முறைகளால் மேம்படுத்தப்பட்டு, சேமிக்கப்பட்டவிதைகள் தான் இன்று நாம் உபயோகிக்கும், உண்ணும் விதைகள். எளிய உதாரணமாக மக்காச்சோளத்தை சொல்லலாம், அமெரிக்க பழங்குடியினர் பண்டைய காலத்தில் பயிரிட்ட மக்காச்சோளத்திலிருந்து நீண்ட கதிரும், கொழுத்த விதைமணிகளும், அழுத்தமான நிறங்களும் கொண்டவற்றை மட்டுமே சேமித்து  பயிரிட்டனர்.

பல நாகரீகங்களின் தொன்மங்களிலும் விதை சேமிப்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது. அறிவின் கடவுள் அஹுரா பண்டைய பெர்சியாவின் மன்னரான யிமாவை ’வரா’ என்னும் நிலத்தடி வங்கியில் உலகின் ஒவ்வொரு தாவரத்திலிருந்தும்   குறைகளற்றவையாக, 300 குளிர்காலங்களை தாங்கியவையாக இரு விதைகளை எடுத்துச் சேமிக்கச்சொல்லியதாக உலகின் பழமை வாய்ந்த சமயங்களில் ஒன்றான ஜொராஷ்ட்ரிய தொன்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

நார்ஸ் தொன்மமும் இதற்கு இணையான  Odainsaker என்னும்  இயற்கைப் பேரழிவுகளின்போது பொது மக்களும் தாவரங்களும் பாதுகாப்பாக இருக்கும்  நிலத்தடி பூங்காவொன்றை  குறிப்பிடுகிறது. பஞ்சகாலம் வந்தால் தேவைப்படுமென்று ஜோசப் விதைகளைச் சேமித்ததைக் குறித்து புனித வேதகாமம் குறிப்பிடுகிறது.

மத்திய கிழக்குநாடுகளில் நடந்த அகழ்வாய்வுகளில் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகக் களி மண் பானைகளிலும் நிலத்தடி குழிகளிலும் சேமித்துவைக்கப்பட்ட விதைகளின் எச்சங்கள் கிடைத்திருக்கின்றன. எகிப்தின்பிரமிடுகளும் விதைகள் பல ஆண்டுகள் சேமிக்கப்படுவதற்கு தேவையான சீரான வெப்பநிலை கொண்ட உள்கட்டமைப்பினைக் கொண்டிருக்கின்றன.

உலகின் எல்லா கலாச்சாரங்களிலும் விதைகள் இன்றியமையாத பங்காற்றுகின்றன.  குறிப்பாக நெல் பல கலாச்சாரங்களின் மையப் பகுதியாக இருக்கிறது. 

எத்தனை பஞ்ச காலமானாலும் விதைநெல்லை உணவுக்குப் பயன்படுத்துவதில்லை என்பது தமிழர் மரபு.   விதை சேமிப்பென்பது உலக நாடுகளனைத்திலும் மிக முக்கியமான விவசாயவழிகளில் ஒன்றாக இருந்துவருகிறது.விருக்‌ஷ ஆயுர்வேதம், அர்த்தசாஸ்திரம் ஆகிய பண்டைய நூல்களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த பல வகையான விதை சேமிப்பு முறைகள் விளக்கமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

நிலத்தடியில் உருளை வடிவ குழி வெட்டி அதில் தானியங்கள் சேமிக்கும் வழக்கமும் இந்தியாவில் இருந்தது. தமிழகத்தின் தானியக்களஞ்சியங்கள், குதிர்கள்,  பத்தாயங்கள் ஆகியவையும் தானிய சேமிப்புக்கிடங்குகள் தான்.தஞ்சாவூரில் அன்றெல்லாம் திருமணத்தின்போது எந்த வீட்டில் குதிரும் பத்தாயமும் இருக்கிறதோ அங்குதான் எதிர்காலதிட்டமிடல் இருக்கும் என்று பெண் கொடுப்பார்கள். 

பாபநாசம் அருகே திருப்பாலத்துறையில் உள்ள பாலைவனநாதர் கோயிலில்  1640 -ல் கட்டப்பட்ட  மிகப்பெரிய தானியக் களஞ்சியம் இருக்கிறது. பூச்சிகள் அண்டாமல் நெல்லைப்பாதுகாக்க  அந்தக்காலத்திலேயே இப்படியொரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.   36 அடி உயரமும், 84 அடி சுற்றளவும் கொண்ட, 90 ஆயிரம் கிலோ தானியத்தைப் பல ஆண்டுகளுக்குச் சேமித்து வைக்க முடியும் அமைப்பான இதுவே ஆசியாவின் மிகப்பெரிய தானியக்களஞ்சியம். இன்றும் இந்தக் களஞ்சியம் எந்தச் சேதமுமின்றி இருக்கிறது.  

பண்டைய இந்தியாவில் விதைகளைச் செம்மண்ணில் பிசைந்து  பந்துகளாக உருட்டிவைத்துப் பாதுகாப்பது எளிய வழிமுறையாக இருந்தது. இன்றும் தமிழக கிராமங்களில் மண் கட்டிய பயறு வகைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தேடிச்சென்று விரும்பி வாங்குவோரும் உண்டு, அவற்றின் சுவையும் அபாரமாக இருக்கும்.

’சந்தகா’  (Sandaka) எனப்படும் 12  குவிண்டால் அளவு விதைகளைச் சேமித்து வைக்கும்  நான்கு கால்களும், பல அறைகளும் கொண்டிருக்கும் மரப்பெட்டிகள் இந்தியாவில் இருந்தன.

மிகப்பெரிய விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் ஏராளமான விதைகளைச் சேமித்து வைக்க ’கோத்தி’ (Kothi) எனப்படும் பெரிய சேமிப்பு அறைகள் இருந்தன. இவற்றில் சோளமும், நெல்லும் சேமிக்கப்பட்டன.இந்த அறையின் ஒரு மூலையிலிருந்து தானியங்களை எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும்.

’உத்ரானி’ (Utrani) எனப்படும் சுட்ட களிமண் பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்துப் பலவகையான தானியங்களும் விதைகளும் சேமிக்கப்பட்டன. ஹகேவு  (Hagevu)  எனப்படும் நிலத்தடிக் குழிகள் அமைக்கப்பட்டு அவற்றில் வைக்கோல் மற்றும் கற்களைச் சுற்றிலும் வைத்து, குழியின் வாய் பிசைந்த மண்ணால் மூடப்பட்டு சோளம்  சேமிக்கப்பட்டது.

சிறிய அளவுகளில் விதைகளைச் சேமித்து வைக்கச் சுரைக்குடுவைகளும் இந்தியாவெங்கும் பயன்பாட்டில் இருந்தன. சுரைக்குடுவையில் விதைகளை இட்டு அதன் வாயைச் சாணம் அல்லது மண்ணால் அடைத்து, அவை கூரையில் கட்டித்தொங்கவிடப்பட்டன.

மூங்கில் மற்றும் பனையோலைப்பெட்டிகளும் பண்டிய இந்தியாவின் விதை சேமிப்பில் பரவலாகப் பயன்பாட்டில் இருந்தன. விதைகளைச் சாம்பல், செம்மண், வேப்பெண்ணெய், மரத்தூள் ஆகியவற்றுடன் கலந்து சேமிக்கும் வழக்கம் இன்று வரையிலுமே இருக்கிறது. இன்றும் கிராமப்புறங்களில் தானியங்கள், பயறுவகை விதைகளைச் சேமிக்க அவற்றுடன் உலர்ந்த வேம்பு, தும்பை, புன்னை, புங்கை இலைகளைப் போட்டுவைக்கும் வழக்கம் இருக்கிறது 

இந்து மதக்கலாச்சாரத்தில் எந்த மங்கல நிகழ்வானாலும் நவதானியங்களின் பயன்பாடு இருக்கிறது, திருமண விழாக்களில் மஞ்சள் அரிசி தூவுவதும், கல்வி துவங்குகையில் நெல்லில் முதற் சொல் எழுதுவதுமாகப் பல கலாச்சாரங்களில் பொதுவான விதைகளின் மங்கலப்பயன்பாடுகள்  பலகாலமாக இருந்துவருகிறது.

தாவரவியலாளர்கள் உலகில் இதுவரை 370000 விதை கொண்டிருக்கும் தாவரங்கள் இருப்பதாகக் கணக்கிட்டிருக்கின்றனர்.  மேலும் ஆண்டுகொருமுறை புதிதாக 2000 வகைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. பல தாவர வகைகள் நமக்குத் தெரிந்தும் தெரியாமலும்  விரைவாக அழிந்துகொண்டுமிருக்கின்றன  சமீபத்திய புள்ளி விவரமொன்று ஐந்தில் ஒரு தாவரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்கிறது. 

1950-களில் சீனாவில் புழக்கத்தில் இருந்த அரிசி வகைகளில் இப்போது வெறும் 10 % தான் பயன்பாட்டில் இருக்கின்றன. அமெரிக்கா 1900- களில் இருந்த  அதன் 90% காய்கறி மற்றும் பழ ரகங்களை முற்றிலும் இழந்து விட்டிருக்கிறது.

உலகில் இதுவரை அடையாளம் காணப்பட்டிருக்கும் தாவர வகைகளில் சில நூறு வகைகளே மனிதர்களின் உணவுத்தாவரங்களாக இருக்கின்றன. அவற்றிலும் மனிதர்களின் உணவுக்கான 95%  பயன்பாட்டில் இப்போது இருப்பது 35 வகையான பயிர்கள் மட்டுமே. அவற்றிலும் வெகுசில உணவுப் பயிர்களே பயிராக்கப்பன்றன. அவையும் அழியும் அபாயத்தில் இருக்கின்றன. இயற்கை பேரழிவுகளும் பெருந்தொற்றுக்களும் போர் அபாயங்களும் சூழ்ந்திருக்கும் இக்காலத்தில் முன்பெப்போதும் விடவும் விதைப் பாதுகாப்பு மிக முக்கியமானதாகி விட்டிருக்கிறது.உலகெங்கிலும் 40% விதைகள் அழியும் அபாயத்தில் இருப்பதால் விதை சேமிப்பு என்பது மிக முக்கியமானதாகி விட்டிருக்கிறது. 

லெனின்கிராட் முற்றுகையைப்போலவே 2011-ல் சிரியா போரின்போது அங்கிருந்த பெரிய விதை வங்கி புரட்சியாளர்களால் சேதப்படுத்தப்பட்டது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இருந்த விதை வங்கிகள் முற்றிலும் போரில் அழிந்துவிட்டன, இந்த வங்கிகளின்  அழிந்த விதைகள் உலக விதை வங்கிகள் எதிலுமே சேமித்துவைக்க படவில்லை.  போர் மட்டுமல்ல பிலிபைன்ஸில் நடந்ததுபோல் இயற்கை பேரழிவுகளும் விதை வங்கிகளை அழித்திருக்கின்றது.  பிலிப்பைன் தேசிய ஜீன் வங்கியின் 45,000  வகை விதைகள் 2006 வெள்ளத்தில் பாதிக்கு மேல் சேதமாகின மீதம் இருந்தவை மீண்டும் 2012-ல்  எற்பட்ட தீவிபத்தில் அழிந்தன. எனவேதான் உலகெங்கிலும் விதை பாதுகாப்பு என்பது மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இன்று உலகளவில் சுமார் 1700 வகையான விதை வங்கிகள் செயல்பாட்டில் இருக்கின்றன.

 இந்த விதைவங்கிகள் பொதுவாக மூன்று வகைப்படுகின்றன 

  • விதை உதவி வங்கிகள் (Assistentialist seed banks) -இவற்றில் சிறு விவசாயிகளுக்குத் தேவையான அதிக விளைச்சல் அளிக்கும், பராமரிப்பு அதிகம் தேவைப்படாத, குறைந்த மூலதனம் தேவைப்படும்  குறுகியகாலப் பயிர்களின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டு தேவைப்படும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
  • உற்பத்தி வங்கிகள் (Productivist seed banks)- மிகப்பெரிய அளவில் விதைகள் இதில் சேகரிக்கப்படுகின்றன. அதிக நிலப்பரப்பில் நல்ல விளைச்சல் கொடுக்கும், நோயெதிர்ப்புச் சக்தி கொண்டிருக்கும் உணவுப்பயிர்களின் விதைகள் இங்கு சேமிக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு விதை மாதிரிகள்அளிக்கபடுகின்றது.’ 
  • பாதுகாப்பு வங்கிகள்(Preservationist seed banks)- இவற்றில்தான் உலகநாடுகளின் அனைத்து வகையான விதைகளும் நெடுங்காலத்துக்கு சேமிக்கப்படுகின்றன. 

விதைகளைச் சேமித்து வைப்பதோடு தேவைப்படுவோருக்கு  தொடர்ந்து அளிக்கும் வங்கி   seed library  எனப்படுகிறது. அமெரிக்காவில் இத்தகைய வங்கிகள் 500க்கும் மேல் செயல்படுகின்றன.seed bank எனப்படும் விதை வங்கி  விதைகளை, விதைகளின் மரபணுக்களைப் பலகாலத்துக்கு சேமித்து வைக்கிறது.  

ஐக்கிய இராச்சியத்தின் மில்லினியம் விதை வங்கி, ஆர்டிக் பகுதியின்  ஸ்வால்பாட் (Svalbard Global Seed Vault) ஆகியவை விதை பாதுகாப்பு வங்கிகளில்  குறிப்பிடத் தகுந்தவை.

நார்வீஜிய தீவொன்றில் பனிமலையின் அடியாழத்தில் ஸ்வால்பாட்  வங்கியின்பாதுகாப்புப்பெட்டகங்களில் உலகெங்கிலும் இருந்து சேகரிக்கப்பட்ட  லட்சக்கணக்கான விதைகள் சேமித்துவைக்கப் பட்டிருக்கின்றன.  ஸ்வால்பாட் உலகவிதை வங்கி   இயற்கைப் பேரழிவுகளால் உலகின் முக்கிய உணவுப்பயிர்களின் விதைகள் முற்றிலும் அழிந்துவிடாமல் பாதுகாக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. 2008-ல் இருந்து  இங்கு விதைகள் சேமிக்கப்படுகிறது.  இந்த வங்கியின் குண்டு துளைக்காத அணுஆயுத தாக்குதலிலும் பாதிப்படையாத சுவர்கள் 1 மீ தடிமன் கொண்டவை.

 2024-ன் கணக்கெடுப்பின்படி நிச்சயமற்ற எதிர்காலதிற்கான சேகரிப்பாகச் சுமார் 1,280,677   விதைகள் இந்த வங்கியில் பனிமலைக்கடியில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. இங்கு சேமித்து வைக்கப்பட்டிருப்பது விதைகள் மட்டுமல்ல 13000 வருடங்களுக்கு முன்பான உலக விவசாய வரலாறும்தான். இதுவே உலகின் மிகப்பெரிய விதை வங்கி.

மற்றுமொரு முக்கியமான விதை வங்கி Millennium Seed Bank. லண்டனில் செயல்படும் இந்த விதைவங்கி ஸ்வால்பாட் வங்கியைக் காட்டிலும் 100 மடங்கு பெரியது. ஆனால் இதன் சேமிப்பு அளவு ஸ்வால்பாட் வங்கியைக்காட்டிலும் குறைவு. இவ்விரண்டு வங்கிகளிலும் சேமிப்பிலிருக்கும் விதைகளின் முளைதிறன் ஒவ்வொரு பத்து வருடத்துக்கொருமுறை ஆய்வுக்குள்ளாக்கப்படுகிறது. முளைதிறன் இழந்தவை உடனடியாக மீண்டும் சேகரிக்கப்படுகின்றன. 

இவற்றைப் போல உலகெங்கிலும் இப்படி பெரிய மற்றும் சிறிய அளவிலான விதை வங்கிகள் செயல்படுகின்றன.இவற்றில் சில உணவுப் பயிர்களின் விதைகளையும் மற்றவை காட்டுத்தாவரங்களின் விதைகளையும் சேமிக்கின்றன.

 1986-ல் துவங்கபட்ட George Hulbert Seed Vault  என்னும்  New South Wales-ல் இருக்கும் விதைவங்கி   ஆஸ்திரேலிய நெல் ரகங்களின் விதைகளை மட்டும் சேமிக்கிறது, குறிப்பாகப் பசுமைப் புரட்சிக்கு முந்தைய நெல் ரகங்கள் இங்கு சேமிக்கப்படுகின்றன. 

இந்தியாவில் BBA எனப்படும்  (Beej Bachao Andolan — Save the Seeds movement)   விதைகளைச் சேகரிக்கும் இயக்கம் 1980-களில் விஜய் ஜர்தாரி என்பவரால் உத்தரகண்டில் தொடங்கப்பட்டது. இங்கு  நாட்டு விதைகள் சேமிக்கப்படுகின்றன. BBA-வின் முன்னெடுப்பில்  2010-ல் இந்திய விதை வங்கி லடாக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.   இதில் ஆப்ரிகாட், பார்லி, முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, நெல் மற்றும் கோதுமை உள்ளிட்ட சுமார் 200 வகை பயிர்களின் 10,000 விதைகள் சேமிக்கப் பட்டிருக்கின்றது.

Desert Legume Program (DELEP)  எனப்படும் பாலை நிலப்பயறு விதைகளுக்கான பிரத்யேக வங்கி உலகின் வறண்ட பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சுமார் 6 கண்டங்களின், 65 நாடுகளைச் சேர்ந்த,  1400 பயறு வகைச்சிற்றினங்களின்  3600 வகை  விதைகள் சேமிக்கப்பட்டிருக்கின்றன. 

உலகின் மாபெரும் விதை வங்கிகளில் ஒன்றான National Gene Bank of Plants,  1990-களில் உக்ரைனில் துவங்கபட்டது. 2022ல் ரஷ்யப்டையினரால் இந்த வங்கி பெருமளவில் சேதமுற்றாலும் அதன் முக்கியமான விதைகள் பல்லாயிரக்கணக்கில் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. 

பிரான்சின் ’INRAE Centre for Vegetable Germplasm’  எனப்படும் விதை வங்கியில்  கத்தரிக்காய், மிளகாய், தக்காளி, பூசணி மற்றும் கீரைச்செடிகளின் வகைகளின் 10,000 வகைகள் பாதுகாக்கபட்டிருக்கிறது 

பெல்ஜியத்தின் ’Meise Botanical Garden’  விதை வங்கியில் காட்டு பீன்ஸ், காட்டு வாழை உள்ளிட்ட  பெல்ஜியத்தின் பூர்விக தாவரங்களின் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.

இப்படி  மனிதர்களால் உருவாக்கப்படும் விதை வங்கிகள் மட்டுமல்லாமல் இயற்கையும் விதை வங்கிகளை உண்டாக்குகிறது. பல தாவரங்கள் வளரும் இடங்களிலேயே அவற்றின் விதைகளைச் சேமிக்கின்றன. ஒரு சில தாவரங்களின் சிறு விதைகள் மழை நீருடன் கலந்து நிலத்தின் நுண்ணிய இடைவெளிகள்மூலம் நிலத்தடிக்குச் செல்கின்றன. ஒரு சில விதைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு நிலத்தடியில் சேகரமாகின்றன. மேலும் சில அவற்றின் மிகச்சிறிய அளவினால் நிலத்தின் விரிசல்களில் நுழைந்து ஆழத்திற்கு செல்கின்றன்.

நிலவங்கிகளில் இருக்கும் விதைகளில்  Striga (witchweed) சிற்றினங்களின் விதைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. ஏனெனில் அவை அதிக எண்ணிக்கையில் விதைகளை உருவாக்குகின்றன. ஆக்கிரமிக்கும் இயல்புடைய  ஸ்ட்ரைகா சுமார் லட்சத்திலிருந்து 5 லட்சம்வரை விதைகளை உருவாக்கும்.

கலைக்கொல்லி உபயோகம் அதிகமாவதற்கு முன்பு வரை ஐரோப்பாவெங்கும் நிலவங்கிகளில்   Papaver rhoeas,  விதைகள் ஏராளமாகச் சேமிக்கபட்டிருந்தன.வட அமெரிக்காவுக்கு சொந்தமான  Androsace septentrionalisஎன்னும் தாவரத்தின் விதைகள் நிலதின்த்  மேலிருப்பதை விட நிலத்தடியில்தான்  அதிகளவில் இருக்கிறது. 

பல தாவரவியலாளர்கள்  அதிகம் அறியபட்டிருக்காத இந்த நிலவிதை வங்கிகளைக் குறித்து பல வருடங்கள் ஆய்வு செய்திருக்கிறார்கள்.இந்த ஆய்வு முடிவுகள் நிலவங்கியில் சேகரமாகி, பலகாலம்  நிலத்தடியில் முளைதிறன் அழியாமல் காத்திருக்கும் விதைகள் அளவில் சிறியவையாகவும்,விழுந்தவுடனே முளைப்பவை  தட்டையாகப் பெரிதாகவும் இருக்கின்றன என்கிறது

நில வங்கிக்குள் சேமித்து வைக்கப்படும் விதைகள் பொதுவாக 3 மில்லி கிராம் எடைக்கும் குறைவாக இருக்கின்றன, அவற்றிற்கு இறகுகள், கொக்கிகள், மயிரிழைகள் போன்ற  விதை மரவ உதவும் அமைப்புக்கள் எதுவும் இருப்பதில்லை என்றும் இந்த ஆய்வுகள் கூறுகின்றன. மண்புழுக்களும் எறும்புகளும் கூட நில வங்கியில் விதைகள் சேமிப்பதில் பெரும் உதவி செய்கின்றன. நிலத்தடியில் காத்திருப்பதால் இவ்விதைகள் மேய்ச்சல் விலங்குகள், இயற்கை சீற்றங்கள் ஆகியவற்றிலிருந்தும் பாதுகாக்கப்படுகின்றன.  நில வங்கியின் விதைகள் முளைப்பதை காலம்தான் முடிவு செய்கிறது. எப்போது அடிமண் மேலே வருகிறதோ அப்போதுதான் இவை முளைக்கின்றன.

தாவரங்களின் விதைகள் ஒவ்வொன்றும் தாய்மரத்திலிருந்து பிரிந்ததும் முளைப்பதில்லை ஒவ்வொரு விதையும் முளைப்பதற்கான காலம் வேறுபடும்.சில விதைகள் உடனே முளைத்துவிடும், ஒரு சில விதைகள் முளைப்பதற்கு முன் உறக்ககாலம் எடுத்துக்கொள்ளும். உரிய தருணம் வரும்போது அவை முளைத்தெழும். விதைகள் முளைக்கையில் ஒரு புதுத் தாவரம் உருவாவதில்லை, உண்மையில்  விதை என்பதே நுண்வடிவில் ஒரு தாவரம்தான். அது நீரிலோ, காற்றிலோ, பூச்சி அல்லது விலங்குகளாலோ மனிதச்செயல்படுகளாலோ சரியான நிலத்திற்கு எடுத்துச்செல்லபட்டு அங்கு  முளைக்கின்றன.

விதைமுளைதிறன் என்பது ஒரு விதை கனியிலிருந்து பிரிந்தபின்னர் எப்போது முளைக்கிறது என்பதை குறிக்கிறது.விதைகள் முளைக்குமுன்னே செல்லும் உறக்கநிலை தாவரவியலாளர்களின், சூழியலாளர்களின் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களில் ஒன்று.  விதைகளின் முளைதிறன் குறித்த சுவாரஸ்யமான ஆய்வுகள் உலகின் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. மிச்சிகனில் 1879ல் இந்த ஆய்வுகளை  ஜேம்ஸ் பேல்  James Beal என்பவர் துவங்கினார். 21 சிற்றினங்களின் 50 விதைகளை இவர் 20 பாட்டில்களில் அடைத்து நிலத்தில் புதைத்தார். ஐந்து வருடங்களுக்கொருமுறை ஒவ்வொரு சிற்றினத்தின் விதைகளும் மேலே எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் முளைக்கவைக்கப்பட்டன

அவரது காலத்திற்கு பின்னர் அவற்றை எடுத்து முளைக்க வைப்பதற்கான காலம் மிக நீண்டது.1980-ல் சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்த ஆய்வுகள் தொடர்ந்தபோது புதைக்கப்பட்டவற்றில்   moth mullein (Verbascum blattaria), common mullein (Verbascum thapsus) மற்றும்  common mallow (Malva neglecta) ஆகிய 3 சிற்றினங்களின் விதைகள் மட்டும் முளைத்தன. இப்படி பல நாடுகளில் ஆய்வுகள் பலகாலமாக நடந்து கொண்டிருக்கிறது.

வில்லோ மற்றும் பாப்லர் விதைகள் சரியான இடத்தில் விழுந்து ஒரு சில நாட்களில் முளைக்காவிட்டால் அழிந்துவிடும். மக்காச்சோளம், வெங்காயம் போன்றவற்றின் விதைகள் இரண்டு வருடங்கள் கூடத் தாக்குபிடிப்பவை .பீட்ரூட், கேரட், பூசணி, தர்பூசணி விதைகள்  5-லிருந்து 6 வருடங்கள் முளைதிறனை தக்க வைப்பவை. வெள்ளரிக்காய் விதைகள்; 10 வருடங்களுக்கு முளைதிறன் கொண்டிருப்பவை.  சக்ரவர்த்தினி கீரையின் (Chenopodium album) விதைகளும் சுமார் 40 ஆண்டுகளுக்கு முளைதிறனை தக்கவைத்துக்கொள்ளும் திறன் கொண்டவை.  

விதைகளின் முளைதிறன் பலகாரணிகளால் தீர்மானிக்கபடுகிறது.நிலத்தின் ஆழத்தில் புதையும் விதைகள் நெடுங்காலம் பாதுகாப்பாக இருப்பதுண்டு.  

பொதுவாகக் கடினமான மேலுறை கொண்டிருக்கும் விதைகளின் முளைதிறன் வெகுநாட்களுக்கு நீடித்திருக்கும், இதைப் பயறுவகை விதைகளிலும் தாமரை, காப்பி ஆகியவற்றிலும் காணலாம். 50 வருடங்களுக்கும் மேலான தாமரைவிதைகளை சாதரணமாக முளைக்கவைத்து தாமரைக்கொடி வளர்க்கப்படுகிறது.

 சீன ஏரிப் படுகையிலிருந்து எடுக்கப்பட்ட 1250 வருடங்களூக்கு முன்பான தாமரைவிதைகளை நட்டுவைத்து அவற்றில் பல முளைத்துக் கொடியாகி பலகொடிகளில் மலர்களும் மலர்ந்தன.  1940-ல் லண்டன் வரலாற்று அருங்காட்சியகம் நெருப்பில் சேதமுற்றபோது அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த விதைகளில் பலவிதைகள் நெருப்பின் வெப்பத்தினாலும், நெருப்பை அணைக்க ஊற்றப்பட்ட நீரினாலும் முளைத்தன. அப்படி முளைத்தவற்றில் சில விதைகள் 1793-ல் சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட சிலைவாகை (Albizia chinensis) மரத்தின் விதைகள்.

தெற்கு இஸ்ரேலின் மாஸுடா கோட்டை இடிபாடுகளில் (rubble of Masada) இருந்து அறிவியலாளர்கள் கண்டெடுத்த  2000 வருடங்கள் பழமையான ஒரு பேரீச்சை விதை வெற்றிகரமாகச் சமீபத்தில் முளைக்கச் செய்யப்பட்டது. இதுவே உலகின் பழமையான விதைகளில் முளைத்து வளர்ந்தவற்றில் முதன்மையானது . 1960-களில் ஜூடியான் பாலையில்  கிமு35-ல் கட்டப்பட்ட  மாஸுடா கோட்டையின் இடிபாடுகளில் அகழ்வாய்வில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு சீசாவில் சேமிக்கப்பட்டிருந்த ஏராளமான  பேரீச்சை விதைகள் கிடைத்தன. ஜூரிச் பல்கலைகழகதின் ரேடியோ கார்பன் கணக்கீடுகள் அவ்விதைகள் கிமு  155- 64 பொ யு காலத்தைச் சேர்ந்தவையென உறுதிப்படுத்தின. பின்னர் அவை 40 ஆண்டுகள்  இஸ்ரேலின் Bar-Ilan University-ல் பாதுகாக்கபட்டன.

அவற்றில் மூன்று விதைகளை  ஜெருசேலத்தின் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அங்கமாகிய  Louis L. Borick Natural Medicine Research Center  -ன் இயக்குநரும் இயற்கை மருந்துகளின் ஆய்வில் ஈடுபட்டிருந்தவருமாகிய சாரா சலோன் நட்டுவைத்தார் 

2000 ஆண்டுகளுக்குப் பிறகு   2008-ல் இந்த ஜுடியான் பேரீச்சை விதைகளில் ஒன்று  முளைத்தது.  முளைத்தெழுந்த அந்த பேரீச்சைக்கு  பைபிளில் வரும்  நெடுங்காலம் வாழ்ந்தவரான மெத்தூசலா என்னும் பெயர் வைக்கப்பட்டது.(உலகின் மிகப் பழமையான 4856 வயதான  பைன் மரமொன்றிற்கும் மெத்தூசலா என்றுதான் பெயர்)

சில வருடங்களுக்குப் பிறகு சாராவும் அவரது ஆய்வுக்குழுவினரும் தொட்டியில் வளர்ந்த அந்தப் பேரீச்சை மரத்தைக் குறித்தும் அதன் வயதை ரேடியோ கார்பன் கணகீட்டில் கண்டுபிடித்ததையும்   Science  இதழில் கட்டுரையாக வெளியிட்டார்கள். அத்தனை ஆண்டுகாலம் அவ்விதை முளைதிறனை தக்க வைத்திருந்தது பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது. பாலையில் கடும் வெப்பம் அதனைப் பாதுகாத்திருக்கலாமென யூகிக்கப் பட்டது

2008- இம்மரம் 12 நீண்ட கூட்டிலைகளுடன் ஒரு பெரிய தொட்டியில் 1.4 மீ உயரம் வளர்ந்திருந்தது, 2011 மார்ச்சில் மெத்தூசலா பேரீச்சை மலர்ந்தபின்னர் அது ஆண் மரம் எனத் தெரியவந்தது. 2011 நவம்பரில்  2.5மீ வளர்ந்திருந்த மெத்தூசலா தொட்டியிலிருந்து நிலத்துக்கு மாற்றப்பட்டது. 2015 மே மாதம் இது 3 மீ உயரம் அடைந்திருந்தது, இதன் மலர்களில் மகரந்தங்கள் உருவாகியிருந்தன. இம்மரத்தின் மகரந்தங்களைக்கொண்டு எகிதிய பேரீச்சை பெண்மரமொன்றை  அயல்மகரந்த சேர்க்கைக்கு உட்படுத்தத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் முன்பு கிடைத்த   ஜுடாயன் பாலைவிதைகளிலிருந்தே மீண்டும் 32விதைகள் முளைத்து வளர்ந்திருந்தன. அவற்றில் பிழைத்து நன்றாக வளர்ந்த 6 நாற்றுகளுக்கு ஆதாம், ஜோனா, யுரியல்,போவாஸ், ஜூடியா மற்றும் ஹென்னா எனப் பெயரிடப்பட்டது.  இவற்றில் பெண் மரங்களும் இருந்ததால் அவற்றில் வெற்றிகரமாக மெத்தூசலாவின் மகரந்தங்களைக் கொண்டு  2019–லிருந்து மகரந்த சேர்க்கை ஆய்வுகள் நடத்தப்பட்டது. 2021-ல் ஹன்னா ஏராளமான பேரீச்சைக்கனிகளை அளித்தது.

ஜூடியான் பாலைவனப்பகுதி  நெடுங்காலமாகவே தரமான பேரீச்சைகளுக்கு புகழ்பெற்றிருந்தது, ஆனால் அப்பகுதியின் பேரீச்சைமரங்கள் முற்றிலுமாக அழிந்து விட்டன. இந்த  மெத்தூசலா விதையில் மரபணு ஆய்வுகளிலும் அதன் தரத்தைக் குறித்த தகவல்களை அறிய உதவவில்லை.  இப்போது ஹன்னா அளித்திருக்கும் விதைகளில் பலவகையான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. 

இதே ஜூடியான் பாலைக்குகையொன்றிலிருந்து 1980-ல் 993-லிருந்து 1202-க்கு இடைப்பட்ட காலத்தைச்சேர்ந்ததாக இருக்கும் என யூகிக்கப்பட்ட சுமார் 10,00 வருடங்கள் பழமையான ஒரு விதை கண்டெடுக்கப்பட்டது. அது முளைதிறன் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவித்ததால் அது மெத்தூசலாவை முளைக்கச்செய்த சாரா சலோனினால் முளைக்கச்செய்யப்பட்டது. அப்படி முளைத்த அவ்விதை 14 ஆண்டுகள் வளர்ந்து மரமானது. ஷீபா எனப்பெயரிடப்பட்ட அம்மரம் பச்சைப்பசேலென்ற இலைகளுடன் 3 மீ உயரம் கொண்டிருக்கிறது.அதன் இலை, பிசின் மற்றும் மரக்கட்டையில் ஆய்வு செய்தபின்னர் அம்மரம் அழிந்துவிட்ட ஒன்று என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.

இம்மரம்  Commiphora பேரினத்தை சேர்ந்தது என்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்கள் இதில் மருத்துவப்பயன்கள் கொண்டிருக்கும் பல வேதிச் சேர்மங்கள் இருப்பதையும் கண்டறிந்திருக்கின்றனர். எனவே ஷீபா அதன் மருத்துவ உபயோகங்களுக்கென்று முன்பு வளர்க்கப்பட்டிருக்கக்கூடும் என யூகிக்கப்படுகிறது,  ஷீபா இனி மலர்ந்தால் மேலும் ஆய்வுகள் தொடரக்கூடும். 

2007-ல் செர்பியாவுக்கு சொந்தமான வெண்ணிற மலர்களை கொண்ட   Silene stenophylla என்னும் தாவரத்தின் 32,000 வருடத்திற்கு முந்தைய 600,000 உறைந்த கனிகள்  ரஷ்ய அறிவியலாளர்களால் செர்பிய நிலத்தடி உறைபனியின் 124 அடிக்கு கீழே பனியுக அணிலொன்றின்  70 பொந்துகளில் இருந்து  கண்டுபிடிக்கப்பட்டது.   விதைகள் முளைக்காமல் இருப்பதற்காக அணில்கள் அவற்றை  உடைத்திருந்தன எனினும் அவற்றில் உடைபடாமல் இருந்த 3 கனிகளில் இருந்த விதைகள்  2012-ல்  முளைக்கச்செய்யப்பட்டன. அந்த  விதைகள் முளைதிறனை இழந்துவிட்டிருந்தன என்றாலும் கனிகளின் சூலொட்டுத்திசுவிலிருந்து புதிய தாவரங்கள்  உருவாக்கப்பட்டன. 

இப்படி உறைபனி மற்றும் வெப்பத்தினால் உலர்வதை தாங்கிக்கொண்டு முளைதிறனை தக்க வைத்துக்கொள்ளும் விதைகள் Orthodox seeds  எனப்படுகின்றன.  வெப்பத்தையும் உறைபனியையும் தாக்குபிடிக்க முடியாமல் குறுகிய காலத்திலேயே முளைதிறனை இழப்பவை recalcitrant seeds எனப்படுகின்றன. 

 மிகப்பழமையான விதைகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகப் பல சமயம் கட்டுக்கதைகளும், தவறான தகவல்களும் கூட வந்ததுண்டு.

1954-ல்  கனடாவின் யுகான் (Yukon) பிரதேச பனிப்பாறைகளிலிருந்து 10,000 ஆண்டுகளுக்கு முன்பான  லுபின் விதைகள்  (Lupinus arcticus) எடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. அவ்விதைகள் 1966-ல் முளைக்க வைக்கப்பட்டன, ஆனால் கார்பன் கணக்கீடுகள் அவை  மிகப்பழைய முயல் பொந்துகளிலிருந்து எடுக்கப்பட்ட 10 வருடப்பழமையானவை என்பதைக் காட்டின.

2009 டிசம்பரில் துருக்கிய நாளிதழொன்றில் 4000 ஆண்டு பழமையான லெண்டில் விதை முளைக்கச்செய்யப்பட்டதாகச் செய்தி வந்தது.பின்னர் அது தவறான தகவல் எனத் தெரியவந்தது..

இதைப்போலவே எகிப்திய பிரமிடுகளிலிருந்து எடுக்கப்பட்ட  3000 ஆண்டு பழமையான  கோதுமை விதைகள் முளைத்ததாகப் பல கட்டுக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அந்தக் கோதுமை விதைகள் போலி ஆய்வாளர்களால் மிக அதிக விலைக்கு விற்கப்பட்டதும் நடந்தது. ஆனால் ராயல் அறிவியல் பூங்காவில் அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தி அவற்றில் முளைதிறன் முற்றிலும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. 

கான்கிரீட் தரையில் மிகச்சிறிய விரிசலிலிருந்து முளைத்து மலரளிக்கும் ஒரு சிறுசெடி,  பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முளைதிறனை தக்கவைத்துக்கொண்டு, இன்றைய சூழலில் முளைப்பவையென விதைகள் நமக்களிக்கும் ஆச்சர்யங்கள் ஏராளமானவை. இனி ஏதெனும் ஒரு கனியை உண்டு, விதைகளை அலட்சியமாகத் துப்புமுன்னர் அதனுள்ளிருக்கும் உயிர்ச்சக்தியை, வானை, ஒளியை காண்பதற்காக அது கொண்டிருக்கும் கனவையெல்லாம் எண்ணிப்பாருங்கள்.

விதைகள் வெறும் தாவர பாகங்கள் அல்ல அவை நமது மூதாதைகள், அவற்றிற்குள் வரலாறும் எண்ணற்ற கதைகளும் புதைந்திருக்கின்றன, இன்று நம் முன்னிருக்கும் விதைகள் எல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு நமது கலாச்சாரங்களுடன் இணைந்திருப்பவைதான். விதைகளின்பாதுகாப்பென்பது நமது  மூதாதையர்களின் நினைவுகளைப் பாதுகாப்பதுதான்.

மரவுரி

சமீபத்தில் யானைப்பலா மரங்களை குறித்து வாசித்துக் கொண்டிருந்தேன் buttress .roots என்னும் பலகை வேர்களை கொண்டிருக்கும் மரங்களை தேடத் துவங்கித்தான் யானைப்பலாவிற்கு வந்திருந்தேன். யானைப்பலாவின் மரப்பட்டையிலிருந்து எடுக்கப்படும் மரவுரியை இந்தோனேசிய மூரத் மற்றும் டயாக் பழங்குடியினர் வெகுவாக உபயோகப்படுத்துவதை வாசித்தபோது, பலகை வேர்களிலிருந்து விலகி மரவுரிக்குத் தேடல் சென்றுவிட்டது. Artocarpus Tamaran என்னும் இந்த யானைப்பலா மட்டுமல்லாது பலாவின் பல வகைகளில் இருந்தும் மரவுரி எடுக்கப்படுகிறது.

பிறகு பழங்குடியினரின் மரவுரி பயன்பாட்டைக்குறித்து விரிவாக வாசித்தேன். உகாண்டா பழங்குடியினரின் மரவுரிகளுக்கு 2005ல் யுனெஸ்கோவின் கலாச்சார அந்தஸ்தும் கிடைத்திருக்கிறது. அது தொடர்பான காணொளிகளையும் பார்க்கையில் வெண்முரசில் மரவுரி பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருப்பது நினைவுக்கு வந்தது. பண்டைய இந்தியாவில் பட்டு, கம்பளி, பருத்தி, மற்றும் லினன் துணிகள் பயன்பாட்டில் இருந்தன. மரவுரியும் அவற்றிற்கிணையாகவே பயன்பாட்டில் இருந்திருக்கிறது என்பதை வெண்முரசை மீள வாசிக்கையில் அறிய முடிந்தது.

வெண்முரசு வாசிப்புக்கு முன்பு வரை மரவுரி என்பது மரப்பட்டையின் நிறத்தில் உடுத்துக்கொள்ளும் ஆடை மட்டுமே என்று நினைத்திருந்தேன். ஆடையாகவும், போர்வையாகவும், பாயாகவும் இன்னும் பலவிதங்களிலும் மரவுரி பயன்பட்டதும் அவை பலவண்ணங்களில் சாயமேற்றப்பட்டிருந்ததையும் வெண்முரசின் இந்த மீள் வாசிப்பின் போதுதான் அறிந்துகொண்டேன்.

ஆடைகளுக்கென்றும், குதிரைகளின் உடலை உருவிவிடவென்றும், உடல் துவட்டிக்கொள்ளவும், போர்த்திக்கொள்ளவும், பாயாக, மெத்தையாக படுத்துக்கொள்ளவும், சிகிச்சையளிக்கையில் பஞ்சைப்போலவும், திரைச்சீலைகளாகவும் என பல மரவுரி பயன்பாடுகள் இருந்திருக்கின்றன.

மரவுரி உடை. பகுண்டாக்கள்

மரவுரி குவியல்களுக்கடியிலிருந்து விரைந்து மறைகிறது நாகமொன்று, வெய்யோன் மகனை கருவிலேயே அழிக்க வந்தவளை மரவுரிக்குள் மறைந்திருந்து தீண்டுகிறது மற்றுமொரு அரசநாகம், மரவுரிப்பொதிகள் வண்டிகளில் வருகின்றன, விடுதிகளில் பயணிகளுக்களிக்கவென்று மரவுரிப்பாய்கள் சேமித்து வைக்கப் பட்டிருக்கின்றன. அரசவாழ்வை துறந்து கானேகுகையிலும், நாடு நீங்குகையிலும் மரவுரியாடை அணிந்து கொள்ளப்படுகிறது. பிறந்த குழந்தைகள் மரவுரியில் சுற்றிக் கொண்டு வரப்படுகின்றன. வெண்முரசில் பற்பல இடங்களில் பலவித மரவுரி பயன்பாடுகள் உணர்வுபூர்வமான பல நிகழ்வுகளுடன் இடம்பெற்றிருக்கின்றது.

முதற்கனலில் புஷ்கரவனத்தில் இருந்து மரவுரியாடை அணிந்து புறப்படும் ஆஸ்திகன், ஜனமேஜயனின் வேளிவிச்சாலையில் வலப்பக்கம் வாழைப்பூ போல செந்நிற மரவுரியாடை அணிந்த முனிவர்கள் அமர்ந்திருப்பதை காண்பதிலிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் மரவுரி, இறுதியில் முதலா விண்ணில் இளவரசர் ப்ரீஷித் நீர்க்கலமொன்றில் எடுத்து வரப்படுவதை சொல்லும் அஸ்தினபுரியின் பெருவணிகன் மிருத்திகன் குளித்து விட்டு மரவுரியால் தலை துவட்டி கொள்ளுவது வரை வெண்முரசின் அனைத்து நூல்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது

அரச ஆடைகளை துறந்து மரவுரி அணிந்து நாடுவிட்டு செல்லும் உணர்வுபூர்வமான காட்சிகள் வெண்முரசில் பல இருக்கின்றன.

பிரயாகையில் கோசலத்தை இளையோனாகவே அரியணை அமர்ந்து ஆண்ட இக்ஷ்வாகு குலத்து மன்னன் பகீரதன், தந்தை இறந்து குரல்கள் கேட்க துவங்கிய பின்னர் ஒருநாள் காலை தன் அரசைத் துறந்து, தனது இளையோனை அரசனாக்கிவிட்டு மரவுரி அணிந்து தன்னந்தனியனாக காடேகுகிறான்.

நீர்க்கோலத்தில் சூதுக்களத்திற்கு பின்னர் நகர் நீங்குகையில் அணிகள் களையபட்டு அரச உடைகளும் நீக்கபட்டு இறுதிச் சிற்றாடையுடன் நிற்கும் புஷ்கரனுக்கு ஒரு முதியவரிடமிருந்து மரவுரியை வாங்கி அளிக்கிறான் சுதீரன்.

பல முக்கிய ஆளுமைகள் நாடு நீங்குகையில் மரவுரி அணிந்தே செல்கின்றனர். க்ருத்ஸமதர் தன் இரு துணைவியரையும் சென்னிசூடி வணங்கிவிட்டு. மரவுரி அணிந்து, இரந்துண்டு, நாட்டை நடந்து நீங்குகிறார். அம்மரவுரியையும் களைந்துவிட்டு காட்டுக்குள் நுழைகிறார்.

பிருஹத்ரதனும் அரசுப்பொறுப்பை தலைமை அமைச்சர் பத்மரிடம் அளித்துவிட்டு மரவுரி அணிந்து வெறும்கோல் ஒன்றை கைக்கொண்டு நகர்நீங்குகிறார்.

நீர்க்கோலத்தில் அரங்கு நீங்குகையில் தமயந்திக்கும் அவல் மகலுக்கும் மாலினி மரவுரியடையை அளிக்க உத்தரவிடுகிறாள். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வரும் தமயந்திக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருப்பாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருக்கும்.

புஷ்கரனும் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” எனும்போது. கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கி ஒரு வீரனிடம் கொடுத்து நளனுக்கு அளிக்கச் சொல்கிறார். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொள்கிறான்.

உத்தாலகரிடம் இறுதிக்கணத்தில் இருக்கும் அயோததௌம்யர் ’இளமையில் எந்தையும் ஆசிரியருமான அசிதர் அவருக்கு தூய காயத்ரியையும் மரவுரியையும் அளித்ததை சொல்லி தான் அதுவரை ஆடையென்றும் அணியென்றும் கொண்ட அப்போது எஞ்சியிருக்கும் அதையும் அகற்ற சொல்லுகிறார். அதன்பின்னரே விழிமூடி மறைகிறார். தேவாபி துறவு பூண்டு வனம் செல்கையில் மரவுரியை அணிந்துகொண்ட பின்பே புறப்படுகிறான்.

அரிஷ்டநேமி அர்ஜுனனுடன் புறப்படுகையில் கையில் வைத்திருக்கும் சிறிய மரவுரி மூட்டையை திருப்பி குகைக்குள் வீசிவிட்டு அவனிடம் திரும்பி புன்னகையுடன் “எத்தனை எளிய உயிர்கள் மனிதர்கள்! நான் நாடாளச் செல்கிறேன். இக்குகையிலிருந்து இந்த மரவுரியையும் திருவோட்டையும் கொப்பரையையும் கொண்டு செல்வதனால் என்ன பொருள்?” என்பார்

காண்டீபத்தில் மாலினி மரவுரிச் சுருள் ஒன்றைச் சுருட்டி கைகளில் எடுத்துக்கொண்டு காத்திருக்கும் ஊர்தியில் ஏறி நகர் நீங்குகிறாள்.வெண்முரசில் முதியவர்களும் முனிவர்களும் ஆடையென பெரும்பாலும் மரவுரியைத்தான் அணிந்திருக்கின்றனர்.

வெய்யோனில் கர்ணன் திருதிராஷ்டிரரின் இசைக்கூடத்தில் இசை கேட்டுக்கொண்டிருக்கும் இளைய கெளரவர்களை காணச்செல்லுகையில் வழியில் இடையில் செம்மரவுரி அணிந்த முனிவர் நின்றிருப்பார். அக்காட்சியில் அந்தியின் செவ்வொளி விழுந்து பொன்னுருகி நிறைந்த கலமென மாறியிருக்கும் திருதிராஷ்டிரரின் நீள்வட்ட இசைகூடத்தின் நடுவே இருந்த தடித்த மரவுரிமெத்தை.வெய்யொன் கர்ணனின் கனவிலும் மரவுரி உடுத்த கொழுத்த உடலுடன் ஒரு பார்வையற்ற முதியவர் வருவார்.

பன்னிரு படைக்களத்தில் ஜராசந்தனுக்கும் பீமனுக்குமான போர் இடைவேளையில் நடுவர்கள் இருபக்கமிருந்தும் ஓடிச்சென்று ஜராசந்தனையும் பீமனையும் பீடங்களில் அமரச்செய்து இன்னீர் அளித்து அவர்களின் உடல்வியர்வையை மரவுரியால் ஒற்றுகிறார்கள். இப்படி மரவுரித்துணி துண்டுபோல உடல் துடைக்கவும் வியர்வை ஒற்றவும் பயன்படுவது வெண்முரசில் பலமுறை குறிப்பிடப்பட்டிருக்கிறது

துரோணரும் இன்னும் பலரும் நீராடி முடித்து மரவுரியால் துவட்டிக்கொள்ளுகின்றனர். கிராதத்தில் சண்டனும் ஜைமினியும், சுமந்துவும் வைசம்பாயனனும் பைலனும் மரவுரி ஆடைகளை நனைத்து பிழிந்து காய வைக்கிறார்கள். திரௌபதி மரவுரியை முகத்தின்மேல் போட்டுக்கொண்டு துயில்கிறாள், இடையில் அணிந்த மரவுரியுடன் நீரில் இறங்கி குளிக்கிறாள்

நீர் கோலத்தில் பீமன் கரிய கம்பளி ஆடையால் உடலை மூடி மரவுரியை தலையில் சுற்றி கட்டி ஊர்களுக்குள் நுழைந்து கொடை அளிக்கும் படி கேட்கிறான்

இன்னும் சில அரிய நிகழ்வுகளின் போதும் மரவுரி இருக்கிறது மழைப்பாடலில் குழந்தை துரியனுக்கு காந்தாரி அளித்த முலைப்பால் பெருகி குளம்போல தரையில் தேங்கிக்கிடக்கையில் சுஸ்ரவையின் கண்ணில் படாமல் மறைக்க அதில் மரவுரி போட்டு மூடுகிறாள் சத்யசேனை.

களத்தில் பீஷ்மரின் அனைத்து மாணவர்களும் இறந்த பின்னர் அவருக்கு தேரோட்டும் பொருட்டு வரும் துண்டிகன் அவரை காண செல்லுகையில் பீஷ்மர் மரவுரியால் தன் உடலை துடைத்துக்கொண்டு மரப்பெட்டியில் இருந்து புதிய மரவுரியை உடுத்திக்கொள்கிறார். அதுவே அவரின் கடைசி மரவுரியாடை.

பிருதைக்கு கருக்கலைக்க வரும் கிழவி மரவுரிக்குள்ளிருந்த நாகத்தால் தீண்டப்படுகிறாள். வண்ணக்கடலில் பிருதையிடம் விடைபெறும் நாளில் துர்வாசர் “நீ இளம்பெண். இளவரசி. நானோ மரவுரி அணிந்த கிழவன். என்னுடன் விளையாடி நீ தோற்றுவிட்டாய்” என்கிறார். அதன் பிறகே பிருதைக்கு அந்த வரம் கிடைக்கிறது களிற்றியானை நிறையில் ராஜசூய வேள்விக்கான திசைக்குதிரைகளின் கொட்டிலை சுதமன் பார்வையிடச் செல்லுகையில் மரவுரி குவையினடியில் இருந்து சீறி எழுந்து படமெடுக்கிறது அரச நாகம்

பாரத்வாஜர் குருநிலையில் மரவுரியால் துரோணன் கண்களைக் கட்டிய பின்னரே அவனிடம் தர்ப்பை பீடத்திலிருந்து ஏதேனும் ஒரு தர்ப்பையை எடுக்கும்படி சொல்லப்படுகிறது.

அஸ்வத அருமணியை காணாது தேடுகையில் சித்தம் தடுமாறி இருக்கும் விதுரர், கையிலிருந்து அகல் சுடர் சரிந்து தரையில் பற்றிய நெருப்பின் மீது மரவுரியை எடுத்துப் போடுகிறார், அனல் அம்மரவுரியை உண்டு புகை எழுப்பும்.

அஸ்வத்தாமன் பிறந்த போது இன்கிழங்கு போல சிவந்த சிற்றுடல் கொண்டிருந்த குழந்தையை மரவுரியில் சுற்றி எடுத்துவந்து துரோணரிடம் காட்டுவார்கள்

மழைப்பாடலில் மாத்ரி மணம் புரிந்து வந்த முதல் நாளில் குஹ்யமானஸத்துக்கு செல்லுகையில் சத்யவதி கந்தர்வனின் சிலைப்பதிட்டை முன்னால் விரிக்கப்பட்டிருந்த மரவுரி இருக்கையில் அமர்கிறாள்.

வண்ணக்கடலில் ஓரிரவில் கிருதகட்டத்தின் முன்றிலில் மரவுரி போர்வைகளை போர்த்தியபடி கூடிய நிஷாதர்கள் நடுவே அமர்ந்து தன் குறுமுழவை இரு விரல்களால் மீட்டி மிருண்மயர் பாட்டுடன் கதை சொல்கிறார்.

இந்த அத்தியாயத்தில் தான் மரவுரி தயாரிப்பும் வணிகமும் விளக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. நிஷாத நாடு முழுக்க பெருந்தொழிலாக இருப்பது மரவுரியாடை அமைத்தலே. சர்மாவதியின் இருகரைகளிலும் நூற்றுக்கணக்கான சிற்றூர்களின் படித்துறைகளில் இருந்து படகுகள் மரவுரிப் பொதிகளை ஏற்றிக்கொண்டு செல்கின்றன என்கிறார் மிருண்மயர்

பன்னிருபடைக்களத்தின் சூதுக்களத்தின் நடுவே பலகைகளால் அமைக்கப்பட்ட வட்ட வடிவ ஆடுகளத்தின் மீதும் செந்நிற மரவுரி விரிக்கப்பட்டிருக்கிறது. அந்த அவைக்களம் முழுக்க தரைமேல் அழுத்தமான மரவுரி மெத்தை மூடியிருந்தது. அங்கு நுழைபவர்களும் மரவுரி காலணி அணிந்து மட்டுமே நுழைய வேண்டும் என்றும் வகுக்கப்பட்டிருந்தது.

சூதுக்கு முந்தைய நாள் துயில் நீத்திருந்த தருமர் ‘மரப்பட்டை கூரை குடிலும், நீர் வைக்க ஒரு கலம். உணவு சமைக்க பிறிதொரு கலம். மரவுரி பாய் ஒன்று. ஒரு மாற்றாடை உணவு திரட்ட கூர்முனை கொண்ட கழி ஒன்று. அதற்கப்பால் இப்புவியிலிருந்து அவர் பெறுவதற்கொன்றுமில்லை’ என்று நினைக்கிறார்..

நிஷதகுடியின் மூத்த இளவரசர் நளனுக்கும் அவர் இளவலும் அரசருமாகிய புஷ்கரனுக்கும் நடக்கும் நாற்களமாடலும் மரவுரி விரித்த மேடையில் போடப்பட்ட நாற்களப் பலகையில்தான் நடக்கிறது.

பல அரசவை கூடங்களில் அவைகளில் அரசகுடியினர் அமர்வதற்கான மேடை மரவுரி விரிக்கப்பட்டு அதன்மேல் அரியணையும், மயிலணையும், அணியணைகளும் போடப்பட்டு இருக்கும். செந்நிற மரவுரித் திரைச்சீலைகள் பல கூடங்களில் அசைந்து கொண்டிருந்தன.

மழைப்பாடலில் கௌந்தவனத்தின் முகவாயிலை வசுதேவன் கடக்கையில் அங்கிருந்த காவலர்கள் தோலாடைகளைக் கழற்றி வைத்துவிட்டு குளிருக்கு மரவுரி போர்த்தியபடி குவிந்து அமர்ந்திருக்கின்றனர். ஈர உடைகளை உதறியபடி குடிலுக்குள் நுழைந்த வசுதேவனுக்கு பிருதை உலர்ந்த மரவுரியாடை எடுத்துவந்து பீடத்தில் வைக்கிறாள்

நீர்க்கோலத்தில் விராடபுரியின் அரண்மணியில் தனக்கான தனியறைக்குள் நுழைந்ததும் பாஞ்சாலி பிரீதையிடம் அவளுடைய மரவுரிகளும் தலையணைகளும் எங்கே என்று கேட்கையில் சேடிப்பெண் ஒருத்தி அவற்றைக் கொண்டு வந்து சீராக விரித்து அமைக்கிறாள்

பயணவழியில் ஆளில்லா விடுதியொன்றில் இருந்த மூங்கில் பெட்டிகளிலிருந்து பீமன். மரவுரிகள் மற்றும் ஈச்சைப்பாய்களையும் எடுத்து தருமன் அமர விரிக்கிறான்.

பயணங்களில் விடுதிகளில் பலர் மரவுரி ஆடையணிந்தும் மரவுரி போர்த்தியும் அமர்ந்திருக்கின்றனர். அர்ஜுனனுக்கு வணிகனொருவன் வெள்ளியை வாங்கிக்கொண்டு அளித்த மரவுரியை சருகுகள் மீது விரித்து, வணிகர்கள் பேசிக் கொண்டிருப்பதையும் வெளியே மழை பெய்வதையும் கேட்டுக்கொண்டே அர்ஜுனன் படுத்துக்கொள்ளுகிறான். கர்ணன் சம்பாபுரிக்கு வந்த புதிதில் அவனைக்குறித்து குடிகள் பேசிக்கொள்வதை கேட்க ஒரு விடுதியில் கரிய மரவுரியால் உடலை போர்த்திக்கொண்டு அமர்ந்திருப்பான்.

காயங்களுக்கான சிகிச்சையில் இப்போது பயனாகும் பருத்திப்பஞ்சைபோல அப்போது மரவுரி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கார்கடலில் போர்க்களத்தில் காயம்பட்ட திருஷ்டத்துய்மனனின் காயங்கள் தேன் மெழுகிலும் கந்தக கலந்த நீரிலும் முக்கி எடுக்கப்பட்ட மரவுரியால் துடைத்து சுத்தம் செய்யப்படுகின்றன.

சிகிச்சையின் போது கவசங்கள் தசைகள் மீது வலுவுடன் அறையாமலிருக்கும் பொருட்டு உள்ளே அழுத்தப்பட்டு தகடுகளாக மாறிய மரவுரி சுருள்களை உரிய இடங்களில் வைத்து இறுக்கப்படுகின்றது.

பிரயாகையில் திரௌபதியும் மாயையும் அணிகளேதுமின்றி இடைசுற்றி எடுத்து மார்பில் போடப்பட்ட செந்நிற மரவுரி ஆடை மட்டும் அணிந்திருந்து அன்னைபூசனைக்கு செல்கிறார்கள். செந்நிறமான மரவுரி ஆடையின் மடிப்புகள் உலைய திரௌபதி இறங்கி தரையில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுகின்றன.

செந்நா வேங்கையில் மரவுரி மேலாடைகளும், கயிற்றுக்கட்டிலில் மரவுரியும் நார்த் தலையணையும் சொல்லப்பட்டிருக்கும்

பிரேமை மரவுரி மேலாடையை அணிந்திருப்பாள். சரத்வான் மரவுரி அணிந்து புலித்தோல் மேலாடை அணிந்திருப்பார். முதிய குலத்தலைவர்கள் மரவுரித் தலைப்பாகைகளுடன் இடையில் மரவுரி ஆடை மட்டும் சுற்றி நின்றிருப்பார்கள். இடையில் கைக்குழந்தை ஏந்திய மூதாய்ச்சியர் மரவுரியால் தோள்போர்த்து வந்தமர்ந்திருப்பார்கள்.

துரோணரும் கிருபியும் மணமான புதிதில் பயணிக்கையில் கிருபி தன் மரவுரியில் இருந்து மெல்லிய நூலை பிரித்தெடுத்து அதை ஒன்றுடனொன்று சேர்த்து முடிந்து நீளமாக்கி நாணலின் நுனியில் கட்டி அதில் இருவரும் தேன் சேகரிப்பார்கள்.

குருதிச்சாரலிலும் இப்படி ஓரிடம் வருகிறது. சகுனி விழிகளைத் தாழ்த்தி தாடியை நீவி கொண்டிருக்க கணிகர் தான் அமர்ந்திருந்த சேக்கையிலிருந்த மரவுரியின் ஒரு நூலை மெல்ல பிரித்து எடுத்துக் கொண்டிருப்பார்

பாஞ்சால இளவரசியின் மணத்தன்னேற்புக்கு மரவுரி ஆடையுடன் இருக்கும் நம்மை உள்ளே விடமாட்டார்கள் என்று இளையவர்கள் சொல்லுவார்கள். மணத்தன்னேற்பரங்கிலும் மரவுரி விரிக்கப்பட்ட பீடங்கள் போடப்பட்டிருக்கும். நிகழ்வைக் காண வந்தவர்கள் இப்போது பேருந்தில் இடம்பிடிக்க ஜன்னல் வழியே துண்டு போடுவதுபோல இருக்கைகளில் மரவுரி போட்டு இடம்பிடித்து அமர்கிறார்கள். மண முற்றத்திலும் செந்நிறத்தில் மரவுரிக் கம்பளம் விரிக்கப்பட்டு இருக்கும்

அன்னைவிழியில் காலபைரவியின் கருவறைக்குள் கருங்கல் பீடத்தில் மரத்தாலத்தில் மரவுரியில் வண்ணமிட்டு ஐந்து புரிகளாக பின்னப்பட்டிருக்கும் கேசம் இருக்கும். மரவுரிகளால் ஆன சேலைகளும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மரவுரி படுக்கையில் மரவுரி அணையில் தலை வைத்து இளைய யாதவர் மல்லாந்து துயின்றுகொண்டிருக்கிறார்.

தரையில் போடப்பட்ட மஞ்சப்பலகையில் மரவுரி விரித்து அதன்மேல் படுத்திருக்கும் துரோணரின் காலடியில் அமர்ந்து அஸ்வத்தாமன் காலடியில் அமர்ந்து அவர் கால்களை பிடித்துக் கொண்டிருப்பான்.

பூரிசிரவஸ் குதிரை மேல் இருந்த மூங்கில் படுக்கை கூடைக்குள் உடலை ஒடுக்கிச் சுருண்டு உறங்கும் பால்ஹிக பிதாமகரை பார்க்கையில் கருவறைத் தசைபோலவே இருந்த செந்நிறமான மரவுரி மெத்தையில் கருக்குழந்தை போல அவர் துயின்று கொண்டிருப்பதாக நினைக்கிறான்.

பாண்டவர்களும் திரெளபதியும் காத்யாயனர் குடிலில் அமர்ந்திருக்கையில் மாணவர்கள் ஒவ்வொருவராக மரவுரி அசையும் ஒலி மட்டும் கேட்க மெல்ல வந்து அவர்களுக்குரிய புல்லிருக்கைகளில் அமர்கின்றனர். மாணவர்களுக்குரியது மரவுரி என்பது பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கும். இப்போது பள்ளிச்சீருடை போல் அப்போதெல்லாம் எளிமையான மரவுரி இருந்திருக்கிறது.

பீதர் நாட்டிலிருந்து அஸ்தினபுரிக்கு கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு பளிங்குப் பாளத்திற்கு மேலும் கீழும் மரவுரி மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தன.

குருஷேத்திர போரில் மரவுரியின் பயன்பாடு பலமுறை சொல்லப்பட்டிருக்கிறது. கெளரவப்படைகளின் காவல் மாடத்தில் சிறுத்தையின் சிறுநீரில் நனைக்கப்பட்ட மரவுரிகள் தொங்குகின்றன. போர்க்களத்தில் மருத்துவ நிலைகளில் அனைத்துப் பலகைகளும் நிரம்ப, வெளியே திறந்தவெளியில் நிலத்தில் மரவுரிப்பாய்களை விரித்து புண்பட்டவர்கள் படுக்க வைக்கப்பட்டிருந்தனர்.

போர் ஓய்ந்து களம் அடங்கிக் கொண்டிருந்த ஒரு அந்திப்பொழுதில் சிகண்டியின் இரு மைந்தர்களுடன் சதானீகன் வருகையில் பாண்டவப்படைகளில் ஒருவன் யுதிஷ்டிரரைப் போல மரவுரி சூடி, தோளில் மரவுரியை சால்வையாக அணிந்து, உடைந்த வேலொன்றை தொடைகளால் கவ்வி அதை அசைத்து நடனமிடுகிறான்

மரவுரியை ஐந்து புரிக்கூந்தலாக தலையில் கட்டியிருந்த பிறிதொருவன் திரௌபதி போல இடை ஒசித்து கையில் மரவுரி சால்வை ஒன்றை மாலையாக கொண்டு வந்து, அதை அந்த வேலுக்கு அணிவித்து தொழுகிறான். வெடிச்சிரிப்புடன் பலர் கவசங்களையும் மரவுரிகளையும் வானில் தூக்கி எறிந்து கூச்சலிடுகின்றனர்.

அந்தக் களத்தில் எவருமே புத்தாடை அணிந்திருக்கவில்லை. மாமன்னர் யுதிஷ்டிரர்கூட மீண்டும் மீண்டும் போருக்கணிந்த, குருதி நனைந்து இறுகி மரக்கட்டை போலாகிவிட்ட மரவுரியையே அணிந்திருந்தார். ஒவ்வொரு உடலிலும் மரவுரியால் துடைத்து நீவி எடுத்த பின்னும் எஞ்சும் குருதி உலர்ந்த கரும்பசையாலான வரிகள் நிறைந்திருந்தன.

மருத்துவ நிலைகளை நோக்கித் தொடர்ந்து வண்டிகளில் தேன்மெழுகும் அரக்கும் மரவுரியும் சென்றுகொண்டிருந்தன. போரில் உயிரிழந்த வீரர்களை மரவுரி விரிப்பில் புரட்டிப் போட்டு தூக்கிச் செல்கின்றனர்.

கர்ணன் களம்பட்ட பின்னர் மரவுரி விரித்து அதன்மேல் கர்ணனின் உடலை சரித்து படுக்க வைக்கின்றனர்.

பல பழங்குடியினத்தவர்கள் இறப்பு சடங்குகளில் மரவுரி ஆடைகள் இடம்பெற்றிருக்கும். பல ஆண்டுகள் உடலை மரவுரி பாதுகாக்கும் என்பதால் புதைக்கப்படும் சவங்கள் மரவுரியால் சுற்றப்படும். எகிப்திலும் மம்மிகள் லினன் துணியால் பலமுறை சுற்றப்பட்டிருக்கின்றன. அத்துணிகள் இப்போதும் பெரிய சேதமில்லாமல் கிடைத்திருக்கின்றன.

ஃபல்குனை சித்ராங்கதனுக்கு சிகிச்சை அளிக்கையில் புதிய மரவுரி துணி நான்கு சுருள்கள் கேட்கிறாள். சிறுநீரில் நனைத்த அம்மரவுரியில் உருகும் மெழுகு விழுதை தோய்த்து காயத்துக்கு சிகிச்சை அளிக்கிறாள்

மேலும் பல இடங்களில் காயமடைந்தவர்களுக்கு புண் வாயில் கந்தகமும் மெழுகும் கலந்து அழுத்தி மரவுரியால் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சொல்வளர்காட்டில் அனைவரும் மரவுரியின் நிறத்திலேயே அமைந்த பருத்தியாடை அணிந்திருப்பது சொல்லப்பட்டிருக்கும். இப்போது பருத்தியில் தடிமனாக மரவுரியைபோல ஆடைகளை செய்கிறார்கள்.

1960களிலிருந்து பருத்தி மரவுரி எனும் பெயரில் மிக அடர்த்தியாக நெய்யப்பட்ட பருத்தி துணிகள் (cotton bark cloth) பயன்பாட்டில் இருக்கின்றன. இவைகள் மேசை மற்றும் படுக்கை விரிப்பிற்கும், திரைச்சீலைகளாவும் பயன்படுகிறது.

குடி மக்களும் அரசகுடியினரும் மரவுரி சேக்கையில் அமர்கிறார்கள் சேற்றுக் கலங்கல் மரவுரியில் வடிகட்டி அருந்தப்படுகிறது.

காவலர்கள் மரவுரி மூட்டையை பரண் வீடுகளில் அடுக்கி வைக்கின்றனர். காவலரண்களின் கீழே நெருப்பிட்டு எரிவெம்மையில் புகை சூழ மரவுரியும் கம்பளியும் போர்த்தி அமர்ந்து தாயமும் பகடையும் சொல்மாற்றும் விளையாடுகின்றனர்.

துச்சாதனன் கையில் ஒரு மரவுரிப்பை வைத்திருக்கிறான். போர் முடிந்து மைந்தர்களை இழந்து சவம் போலிருக்கும் தேவிகையை பூர்ணை கைபற்றி அழைத்துச் சென்று மரவுரியை குடில் சுவரிலிருந்து இழுத்துக்கட்டி சிறிய மறைப்பை உருவாக்கி சிறிய மூங்கில் பீடத்தில் அமர செய்வாள்.

குருதிச்சாரலில் கலங்கள் மரவுரிகளால் உறையிடப்படுகின்றன. செந்நிறமும் நீலநிறமும் ஏற்றப்பட்ட மரவுரிநார்கள் சொல்லப்படுகின்றன.

மாத்ரி நகர் நுழையும் காட்சியில் மரவுரி விரிப்பது கொங்கு திருமணங்களில் நடைபெறும் ஒரு சடங்கை நினைவூட்டியது. மணமக்கள் நடக்கும் வழியெங்கும் உபயோகப்படுத்திய ஆடைகளை ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் விரித்து போட்டுக்கொண்டே வருவார்கள், மணமக்கள் மிதித்து கடந்த துணிகளை மீண்டும் எடுத்து முன்னே விரிப்பார்கள்.

பத்து மங்கலங்களை ஏந்தியபடி மூன்று சேடியர் சென்றனர். சேடிகள் தரையில் விரித்த மரவுரிமேல் கால்களைத் தூக்கி வைத்து மாத்ரி நடந்தாள். அவளுக்குப்பின்னால் இரு சேடியர் அந்த மரவுரியை எடுத்து மீண்டும் விரித்தனர்

களிற்றியானை நிரையில் படகுகளில் நடப்பட்டிருந்த. மூங்கில்களில் முடையப்பட்ட மரவுரிப்பாய்கள் கட்டப்பட்டிருந்தன. மாவுரியின் இந்த பயன்பாடு மிகுந்த வியப்பளித்தது. முன்பு லினன் துணிகளில் இப்படி பாய்மரக் கப்பல்களின் பாய்கள் செய்யப்பட்டன.

குளிக்கவைக்கபட்ட புரவிகளின் தோல் பளபளப்பாக ஆனபின்னர் மரவுரியை நீரில் தோய்த்து ஒருமுறை நீவித்துடைத்துவிட்டு மீண்டும் நாய்த்தோலால் நீவப்படுகிறது.

வெண்முரசில் மரவுரிகள் சில இடங்களில் உவமையாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இளைய யாதவர் நக்னஜித்தையை மணக்கும் பொருட்டு களிறுகளை வெல்லும் கள நிகழ்வின் போது வாடிவாசலில் இருந்து களம் புகுந்த முதல் காளையின் கழுத்துச் சதை மரவுரித் திரைச்சீலையின் அடிநெளிவுகளென உலைகிறது.

யுயுத்ஸுவின் புரவி சிறு இடைவெளிகளில் புகுந்து, வழி உருவாக்கி ஊடுருவி முன் செல்வதை மரவுரிக்குள் நுழைந்து செல்லும் ஊசிபோல ஊடுருவுவதாக அவன் எண்ணுகிரான்.

ஒற்றையடிப்பாதை கரிய காட்டுக்குள் கம்பளியை தைத்த மரவுரி சரடென ஊடுருவிச் சென்றது என இமைக்கணத்திலும் இப்படி ஒரு விவரிப்பு வருகிறது.

’மரவுரியில் ஓடிய தையல் நூல் என புதர்களை ஊடுருவிச் சென்ற சிறு பாதையின் ஓரம் நின்றிருந்த மரத்தின் பட்டையில் ஒரு செதுக்கடையாளத்தைக் காண்பது’ என்னும் மற்றொரு உவமையும் மிக அழகாக இருக்கும்.

உறங்குகையில் நனைந்த மரவுரி கோழிக்குஞ்சை என துயில் அவனை மூடி அழுத்திகொண்டது என்னும் ஒரு வரி உறங்குபவருக்கு அந்த உறக்கம் அப்போது எத்தனை தேவை, எத்தனை பாதுகாப்பை அது அளிக்கிறது என்பதை உணரச்செய்யும். அதைப்போலவே ‘இங்கு அரியணை அமர்ந்திருக்கிறேன். ஆனால் என் உள்ளம் குளிர்ந்து நீரிலூறிய மரவுரியென கிடக்கிறது’ என்னும் இன்னோரு வரியும் நீரிலூறிய மரவுரி அளிப்பது போன்ற பாதுகாப்புணர்வைச் சொல்லும்

பிரபாச க்ஷேத்திரத்தின் பெருநாணலின் நாரிலிருந்தும் மக்கள் மரவுரி ஆடைகளை நெய்து அணிகின்றனர்.

கிராதத்தில் தொல்வேதம் அசுரர்களிடமிருந்து வந்ததை சொல்லுகையில் ஜைமினி //மரப்பட்டை நூறாயிரம் முறை அறைவாங்கி நூறுநாள் நீரிலூறி சக்கை களைந்து ஒளிகொண்ட சரடென மட்டுமே எஞ்சும்போதுதான் அது மரவுரியாகிறது. வேள்விக்கு இனிய தேன் தேனீக்களின் மிச்சிலே. ஆனால் அது மலர்களில் ஊறியதென்பதே மெய்.// என்கிறான்.

மலைக்கு வருவதில் முதன்மையானதாகிய உப்பும் செல்வதில் முதன்மையானதாகிய மரவுரியும் மழைக்கு வீணாகிப்போகின்றவை என்னும் குறிப்பும் வெண்முரசில் வருகிறது

மனிதர்கள் முதன்முதலில் உருவாக்கிய இயற்கை இழை மரவுரிதான். ஆப்பிரிக்காவில் இவை முதன்முதலில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம். என்று கருதப்படுகிறது. குறிப்பிட்ட வகை மரங்களின் உள்மரப்பட்டையை நீளமாக உரித்தெடுத்து, கொதிநீரில் இட்டு, கட்டைகளால் அடித்து மென்மையாக்கி, பின்னர் ஆடை நெய்ய அவை பயன்படுத்தபட்டது. ஆப்பிரிக்க பழங்குடியினர் மரவுரிகளை திரைச்சீலைகள், இடையாடை, உள்ளாடை, மற்றும் சுவர் மறைப்புக்களாக பயன்படுத்தினர். கெட்டியான மரவுரிகள் படுக்கைகளாக பயன்பட்டன.

பழங்குடியினரின் சமயச் சடங்குகளில் மரவுரிகள் முக்கியமான இடம்பெற்றிருந்தன போர்னியோ தீவு கூட்டங்களின் பழங்குடியினர் ஒரு துண்டு மரவுரியை துக்க காரியங்களின் போது கைகளில் வைத்திருப்பார்கள். கொங்குப்பகுதி துக்க நிகழ்வுகளிலும் இம்முறை நெடுங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. துக்க வீடுகளில் கைகளில் ஒரு துண்டு வைத்திருப்பார்கள், அந்த துண்டைக் கைகளில் தொட்டுக்கொண்டு வணங்குவதே துக்க விசாரிப்பு இங்கெல்லாம். தொல்குடி சடங்குகளின் நீட்சிகளாகத்தான் பல சடங்குகள் இன்னும் நம்மிடையே நீடித்திருக்கின்றன.

தென்கிழக்காசியாவின் பழங்குடியினத்தவரகளின் பெண் குழந்தைகளுக்கான முதலுடையாக மரவுரி ஆடையே அணிவிக்கப்படும். உகாண்டாவின் பெரும்பாலான பழங்குடியினரின் இறப்பு சடங்குகளில் மரவுரி மிக முக்கியமான பொருளாக இருக்கிறது. அங்கு முதுவா எனப்படும் அத்தி வகை மரத்தின் பட்டைகளிலிருந்தே மரவுரி பெறப்படுகிறது (Mutuba -Ficus Natalensis). லத்தீன் மொழியில் நட்டாலன்ஸிஸ் என்றால் ‘அந்த பகுதிக்கு சொந்தமான’ என்று பொருள். இவற்றுடன் மரவுரிகள் அளிக்கும் ஏராளமான பிற மரங்களும் இருக்கின்றன. சாய அத்தி எனப்படும் Ficus Tinctoria, (தாவரவியலில் டிங்டோரியா என்னும் சிற்றினப் பெயரைக்கொண்ட அனைத்துமே சாயம் அளிப்பவை) காகித முசுக்கொட்டை மரமான (Paper Mulberry) Broussonetia Papyrifera ஆகியவற்றின் மரப்பட்டைகளும் மரவுரி நார்கள் அளிக்கின்றன. நியூசிலாந்தில் மாவோரி (Māori) பழங்குடியினரும் காகித முசுக்கொட்டை மரப்பட்டையிலிருந்தே மரவுரியை எடுக்கின்றனர்.

துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தது போல பலாவின் பலவகைகளும் (Artocarpus Altilis, Artocarpus Tamaran Artocarpus Mariannensis) மரவுரியை அளிக்கின்றன. பெரும்பாலான மரவுரி மரங்கள் மல்பெரி குடும்பமான மோரேசியை சேர்ந்தவை.

மரவுரிகள் டாபா, இங்கட்டு, ஆட்டே, உஹா மற்றும் ஹிபோ என்னும் பெயர்களில் அவை உருவாகும் மரங்களின் பெயருடன் இணைத்து அழைக்கப்படுகின்றன(Tapa, Ngatu, Aute, Uha, Hiapo). ஹிபோ என்பது காகித முசுக்கொட்டை மரங்களின் பெயர். மரவுரியை பொதுவாக ஒலுபுகோ என்கிறர்கள் (olubugo)

டாபா என்பது பட்டையான ஆடை என்னும் பொருள் கொண்ட சொல். (border or strip) அகலமான துணிகளை பட்டைகளை தைத்தும் ஒட்டியும் உருவாக்க தெரிந்து கொள்வதற்கு முன்பு நீளமான பட்டைகளாகவே மரவுரி துணிகள் உருவாக்கப்பட்டன அப்போது வழங்கிய பெயரே டாபா. தென்கிழக்கு சீனா மற்றும் வியட்நாமில் மரவுரி ஆடைகள் புழக்கத்தில் இருக்கிறது

ஹவாய் தீவில் மரவுரியாடைகள் காபா (kaapa) எனவும் ஃப்யூஜி தீவில் மாஸி எனவும் அழைக்கப்டுகின்றன (masi) டாபாவை அடித்து அகலமும் மிருதுவும் ஆக்கிய பின்னர் அவற்றை புகையிட்டு சாயமேற்றி அலங்கரிக்கப்படுகின்றது. மர அச்சுக்கள் மூலம் பல இயற்கை வடிவங்கள் அதில் தீட்டப்படுகின்றன. வடிவங்களில் அதிகமாக மரங்களும் மீன்களும் இருக்கும்.

அனைத்து இயற்கை வண்ணங்களும் உபயோகப்படுத்தப்படுகிறது என்றாலும் மிக அதிகமாக கருப்பும் மண் நிறமும் இருக்கும்.

இப்போது பழங்குடியினர் வசிக்கும் பல தீவுகளில் பருத்தியாடைகளும் கிடைக்கிறதென்றாலும் விழாக்களிலும் முக்கிய நிகழ்வுகளிலும் சமயச்சடங்குகளின் போதும் புல்லாடைகளும் மரவுரியாடைகளுமே பழங்குடியினரால் அணியப்படுகிறது. பலவிதமான முகமூடிகளை உருவாக்கவும் காகிதங்களாகவும், புனித பொருட்களை சுற்றிவைக்கவும் மரவுரி பயன்படுத்தப்படுகின்றது

பட்டையான டாபா துணிகளை தலையில் பழங்குடியினர்கள் வழக்கமாக கட்டிக்கொள்ளுகிறார்கள். திருமணமாகாத பெண்களும் துறவிகளும் அரசகுடியினருக்கும் தனித்தனியே பட்டைகள் இருக்கின்றன. பட்டைத்துணியின் குறுக்கே ஒரு வண்ணக்கோடு இருந்தால் அது மணமான பெண்களையும் வண்ணக்கோடு இல்லாத நெற்றி பட்டைகள் திருமணமாகாத பெண்களையும் குறிக்கும். விளையாட்டு வீரர்கள் மரவுரி துணிப்பட்டைகளை மார்பின் குறுக்கில் அணிந்துகொள்கிறார்கள்.

உகாண்டாவின் பகாண்டா பழங்குடியினர் (Baganda) உருவாக்கும் மரவுரியாடை மனிதகுலத்தின் மிகப்பழைய மரவுரியாக கருதப்படுகிறது. பல பண்டைய நாகரிகங்களில் பயன்பாட்டில் இருந்த மரவுரிகள் இப்போது தடயமின்றி அழிந்துவிட்டன. உகாண்டாவில் 18, 19 நூற்றாண்டுகளில் சரிந்திருந்த மரவுரித்தொழில் இப்போது கலாச்சார அந்தஸ்து அளிககப்டபின்னர் மிகவும் வேகமெடுத்திருக்கிறது

மழைக்காலங்களில் நனைந்திருக்கும் முதுபா மரங்களின்(Ficus Natalensis) பட்டைகள் உரித்தெடுத்துகொண்டு வரப்பட்டு கொதி நீரில் வேகவைத்து, பலமுறை அடித்து அவை அகலமாகி மண் நிறம் வந்தபின்பு உலர்த்தப்படுகிறது பட்டைகள் விரைவாக உலர்ந்து அவற்றின் இழுவைத்தன்மை இழந்துவிடாமல் மெதுவாக உலரும்படி கவனமாக பாதுகாக்க படுகிறது. மரத்தின் பட்டையை உரித்தபின்னர் வாழையிலைகளால் சுற்றிக்கட்டி மூடி மரத்தை நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்கின்றனர். ஒரு வருடத்திற்கு பிறகு அம்மரங்கள் மீண்டும் உரித்தெடுக்க பட்டையை அளிக்கின்றன.

ஆண்கள் இடையாடைகளும் பெண்கள் இடையாடையும் மேலாடையும் மரவுரியில் அணிகின்றனர். உயர்/அரச குடியினர் கருப்பு சாயமிட்ட ஆடைகளையும் பிறர் சாயமேற்றப்படாத ஆடைகளையும் அணிகின்றனர். உடையணியும் விதங்களிலும் இவர்களின் குடியை அடையாளம் காணமுடியும். ஆடைகளாக மட்டுமல்லாது கொசுவலைகளாக, பாய்களாக, திரைச்சீலைகள் மெத்தைகள் போர்வைகளாகவும் இவை பயன்படுகின்றன.

யுனெஸ்கோவின் கலாச்சார அந்தஸ்து பெற்றிருக்கும் உகாண்டா மரவுரியாடைகள் 1374 – 1404 வரை உகாண்டாவை ஆண்ட கிமிரா வம்சத்தினரால் அரசகுடும்பத்திற்கான ஆடைகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை.

இப்போது உகாண்டாவில் சுமார் 4 லட்சம் விவசாயிகள் இதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப்பயணிகள் உகாண்டாவின் மரவுரி கருத்தரங்குகளுக்கும், பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கின்றனர். மரவுரிப்பயன்பாட்டை அறிந்து கொள்ளுகையில் அப்போது மனிதர்களுகும் இயற்கைக்கும் இருந்த மிக நெருக்கமான தொடர்பும் தெரிய வருகிறது. இன்று பத்து செடிகளின் பெயரைக்கூட தெரிந்திருக்காத தலைமுறையினரை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது.

தீயின் எடையில் கோட்டைக்குள் நகுலன் நுழைந்து சம்வகையை முதன்முதலில் காணும் அத்தியாயத்தில் குருதி மழை போல் பொழியும். நனைந்த தரையின் ஈரத்தை. பெண்கள் மரவுரியை நீரில் நனைத்து தரையைத் துடைத்தபடியே வருவார்கள். ஈரம்பட்டதுமே புழுதி குருதியாக மாறி, வளைந்த குருதிக்கோடுகள் விரிந்து விரிந்து அலையாக மாறி கூடத்தை மூடும்.

அம்மையப்பத்திலும் கிளி சொன்ன கதையிலும் இதுபோலவே காட்சிகள் வரும்.

அம்மா எருமைக்குப் பால்கறக்கும் ஒலி போல தொரப்பை உரசிச் சீற கூட்டினாள். ஈரத்தரையில் ஈர்க்கின் நுனிகள் வரிவரியாக வரைந்து சென்றன. அனந்தன் ஓடிப்போய் அந்த வரிகள் மீது தன் கால்களை பதித்து தடம் வைத்தான். அங்கே நின்று பார்த்தபோது அரைவட்ட அடுக்குகளாக தொரப்பைத்தடம் பதிந்த முற்றம் கையால் வீசி வீசிச் சாணிமெழுகிய களமுற்றம்போல தெரிந்தது

கோழிக்கு அவ்வப்போது சற்று பிய்த்து வீசினேன். வாரியல்தடங்கள் வளையம்வளையமாகப் படிந்த மணல்விரிந்த முற்றத்தில் நெடுந்தொலைவுக்கு அதைத் தூக்கி வீசினேன்

பலகை வேர்கள் குறித்து தேடத்துவங்கி மரவுரிகளுக்குள் புகுந்து கிளிப்பேச்சு கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

இன்னும் இன்னும் என வெண்முரசு புதிது புதிதாக விரிந்து கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும். தீர்வதேயில்லை வெண்முரசு எனக்கு.

வெண்முரசில் சொல்லப்பட்டிருக்கும் மது வகைகள் குறித்து இப்போது வாசிக்க துவங்கி இருக்கிறேன் அதுவும் விரிந்து கொண்டே செல்கிறது.

மரப்பட்டை சேகரிக்கும் பகுண்டாக்கள்.

ஒளிமாசு

சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் குழுமம் நண்பர் சக்திவேல் என்னிடம் தாவரவியல் தொடர்பான ஒரு சந்தேகத்தை கேட்டார். 18 வருடங்கள் ஆகிவிட்டன நான் தாவரவியல் கற்பிக்கத் துவங்கி. திறமையான மாணவர்கள், தங்கப்பதக்கம் வாங்கியவர்கள், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்கள் என்று பலர் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள், எனினும் இந்த சந்தேகத்தை ஒருவர் கூடக் கேட்டதில்லை.

பிற துறைகளை காட்டிலும் தாவரவியல் துறையில் இயற்கையோடு நெருக்கமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் எனினும் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதையும் அவைகளையும் சக உயிரினங்களாக பார்க்க வேண்டும் என்பதையும் உணரும் தாவரவியலாளர்களை நான் சந்தித்ததில்லை. விதிவிலக்காக பனைப்பாதிரி காட்சன் மட்டும் இருக்கிறார் எனக்கு தெரிந்து. தாவரங்களை அப்படி சக உயிராக பாவித்துத் தான் சக்திவேல் என்னிடம் அந்த சந்தேகத்தை கேட்டார்.

தன் வீட்டு மனோரஞ்சித செடி இரவு முழுக்க விளக்கு ஒளியில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “ஒளிச்சேர்க்கைக்கு தாவரங்களுக்கு ஒளி அவசியம் ஆனால் இப்படி இரவிலும் அவற்றின் மீது இப்படி செயற்கை ஒளி விழுந்துகொண்டே இருந்தால், அவற்றிற்கு எந்த பாதிப்பும் இருக்காதா? நாம் உறங்க வேண்டிய இரவில் இப்படி வெளிச்சம் இருந்து கொண்டிருந்தால் எரிச்சலடைகிறோமே அப்படி அவற்றிற்கும் இருக்குமா” என்று சக்திவேல் கேட்டார். இந்த கேள்வியை கேட்கவும் அப்படி அவற்றின் கஷ்டங்களையும் நினைத்து பார்க்கவும் மனதில் கனிவு வேண்டும்.

பலருக்கு இல்லாத இதுதான் ’தாவரக் குருடு’, plant blindness எனப்படுகிறது. சாலை விபத்துகளின்போது அடிபட்டவர்களுக்கு உதவ, அவர்களுக்கு வருத்தப்பட, ஆம்புலன்ஸை அழைக்க, அவர்கள் குறித்து பேச என்று அநேகமாக பலர் இருக்கிறார்கள். ஒருமுறை இருசக்கர வாகன விபத்தொன்றில் குறுக்கே வந்த நாயும் அடிபட்டுவிட்டது. ஒரு இளைஞர் கடைசிக்கணத்தில் இருந்த அந்த நாய்க்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தார்.

ஆனால் நம்மில் பெரும்பாலானோர் மரம் வெட்டப்படுகையில் அதை ஒரு பொருட்டாகக் கூட நினைப்பதில்லை. கோவை பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தின் போது நூற்றுக்கணக்கான பெருமரங்கள் வெட்டப்பட்டன. அவறைவெட்டி அகற்றும் பொருட்டு பேருந்துகள் சற்று நேரம் நிறுத்தப்படுகையில் பலரும் வாழைப்பழம் போல அவை அறுக்கப்படுவதை வியப்புடன் வேடிக்கை பார்த்தார்கள். பலர் கைக்கடிகாரத்தை பார்த்து நேரமாவதற்கு சலித்துகொண்டர்கள். வெகு சிலரே “இருக்கற மரத்தையும் வெட்டிட்டா இனி எப்படி மழை வருமெ”ன்று பேசிக்கொண்டார்கள், அங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு படுகொலை என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் தாவரங்கள் அலறுவதில்லை, ரத்தம் சிந்தவில்லை. எனவே அவற்றை மக்கள் கண்டுகொள்ளவில்லை

சமீபத்தில் நான் ஒரு கல்லூரியில் உரையாற்றுகையில் ஒரு அடர் காட்டில் இரண்டு டைனோசர்கள் இருக்கும் புகைப்படத்தை காட்டி ’என்ன தெரிகிறது’? என்று கேட்டேன். பார்வையாளர்கள் பலர் டைனோசர் என்று கூறினார்கள். ஒருவர் கூட அந்த காட்டில் பச்சை பசேலென்று டைனோசர்களை சுற்றி இருந்த மரங்கள், புதர்கள் சிறு செடிகளை பார்க்கவும், கவனிக்கவும், சொல்லவும் இல்லை. நகருதல் இல்லாமல் ஓரிடத்தில் இருப்பதால் தாவரங்களை அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கிறார்கள்.

அவையும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன என்பதையெல்லாம் நம்மில் பலர் அறிவதில்லை.

சக்திவேலின் சந்தேகத்துக்கு அப்போதே மகிழ்வுடன் பதில்களை அனுப்பி வைத்தேன்.

இப்படியான மிகை ஒளி, காலம் தப்பிய ஒளி தாவரங்களின் மீது பொழிந்து கொண்டே இருப்பது ஒளிமாசு எனப்படுகின்றது.

தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகள் உண்டு.இது photoperiodism எனப்படும் ஒவ்வொரு தாவரங்களுக்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை long day plants என்றும் குறைந்த நாட்டமுடையவை short day plants என்றும் இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை day neutral plants என்றும் வகைப்படுத்தப்படுகின்றன

இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழபத்துக்குள்ளாகின்றன.

விஷ்ணுபுரம் குழுமத்தில் ஒரு மருத்துவர் இந்த non 24 வகை பிரச்சனை உள்ளவர். உயிரி கடிகார கணக்கு பிறழ்ந்துவிட்டிருப்பதால் உறங்குவதில் அவருக்கிருக்கும் பிரச்சனை குறித்து ஜெ தளத்தில் அவர் கோவிட் தொற்று காலத்துக்கு முன்பு கடிதங்கள் எழுதி இருக்கிறார்

அவருக்கிருப்பதைபோலவே பிரச்சனைகள் தாவரங்களுக்கும் உண்டாகின்றன.

ஒளியின் அலைநீளம், அளவு மற்றும் ஒளி விழும் கால அளவு ஆகியவை தாவரங்களுக்கு நேரடியான பாதிப்பை உண்டாக்கும். ஒளிநாட்ட கணக்குகள் நிறமிகள் உருவாக்கம், இலை உதிர்தல், இலைத்துளை திறந்து மூடுதல்,இலை மொட்டுக்கள் உருவாதல், மகரந்த சேர்க்கை, இனப்பெருக்கம் மற்றும் விதை உறக்கம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் மிகை ஒளி இவை அனைத்தையும் பாதிக்கும்.

இரவில் மலரும் நிஷாகந்தி போன்ற மலர்களும், அவற்றை மென்னொளியில் மகரந்த சேர்க்ககை செய்யவரும் இரவாடிகளான பூச்சிகளும் இதனால் பாதிப்படைகின்றன

ஒவ்வொரு உயிருக்கும் , ஒரு செல் நுண்ணுயிரியாகட்டும், தாவரங்கள், மனிதர்கள் என அனைத்து உயிர்களுக்குமே இரவு பகலால் அமையும் அன்றாட, பருவகால மற்றும் சூரிய சந்திர சுழற்சிகளுக்கு ஏற்ப உடலியக்கம் மற்றும் பிற செயல்பாடுகள் நிகழ்கின்றன. தாவரங்களுக்கு ஒளி, வெப்பம், மழை ஆகியவை சமிக்ஞைகள். அவற்றைக்கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல். ஆகியவற்றைக் காலக்கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.

பகலில் ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் அவற்றிற்கு இரவில் சுவாசிக்க வேண்டி இருக்கிறது.

காலை எழுந்து நாளை துவங்க அலாரம் வைத்துக்கொள்பவர்களும் அலாரம் ஒலி கேட்காமல் தூங்குபவர்களும் நம்மில் பலர் இருக்கையில், மாலை நான்கு மணிக்கே இலைகள் கூம்பி உறங்கும் தூங்கு வாகையை, மிகச்சரியாக மாலை 4 மணிக்கு மலரும் அந்தி மந்தாரையை, பெண் மலர்கள் கருவுற்றதை அறிந்து, மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் தென்னையின் ஆண் மலர்கள், இனி அவை இருந்தால் கனி உருவாக்கத்துக்கு செல்வாகும் ஆற்றல் தங்களுக்கும் பகிரப்பட்டு வீணாகும் என்று அனைத்தும் ஒரே சமயத்தில் உதிர்ந்து விடுவதையெல்லாம், கவனித்திருக்கும் சிலருக்கு மட்டுமாவது கொஞ்சம் தெரிந்திருக்கும் மிகை ஒளி மாசினால் தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறித்து.

தாவரவியலில் Plant Biological Rhythms என்னும் மிக முக்கியமான உயிரியல் நிகழ்வில் மிகை ஒளியால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடக்கவில்லை எனினும் கவனிப்புக்குள்ளாகி இருக்கிறது இந்த விஷயம்.நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று மெல்ல மெல்ல இந்த விஷயம் தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.

தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்.

ஒளி மாசு என்பது தேவையற்ற, பொருத்தமற்ற, அதிகப்படியான செயற்கை விளக்குகளின் ஒளிப்பொழிவை குறிக்கிறது.இரவு நேர அலங்கார விளக்குகளின் மிகையொளி, இரவுp போக்குவரத்தின் வாகன ஒளி. இரவின் நகர ஒளி (SkyGlow) ஆகியவை தாவரங்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகள்தான் ஒளிமாசு.

எனினும் ஒளி போதாமல் இருக்கும்,  குளிர்காலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இயற்கை ஒளிக்கு ஈடாக அளிக்கப்படும் செயற்கை ஒளி விளக்குகள் இந்த வகை மாசை உருவாக்குவதில்லை.

அது ஒரு சாகுபடி தொழில் நுட்பம்.  தாவரங்களை  பிரியமான செல்லபிராணிகளை போல பழக்கி நமக்கு வேண்டியதை, வேண்டிய அளவில் எடுத்துக் கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று

தாவரங்களில் நடைபெறும் Photosynthesis, photoperiodism, photomorphogenesis, Phototropism  ஆகியவற்றிற்கான வேறுபாட்டை அறிவதன் மூலம் இதை  புரிந்து கொள்ளலாம்.

சூரிய ஒளியின் முழு நிறமாலை என்பது வானவில்லின் அனைத்து வண்ணங்களையும் கொண்டுள்ள  சூரியனின் வெண்ணிற ஒளியைக் குறிக்கின்றது. சூரியன் அதன் வேறுபட்ட  நிறங்களை பொருத்து, பல அளவிலான அலைநீளங்களில் கதிர்வீச்சை வெளியிடுகிறது, பூமியின் வளிமண்டலம் அதிலிருக்கும் புற ஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சுகளை தடுக்கிறது.

பூமியின் உயிர்களை நிலைநிறுத்தும் முதன்மை ஆதாரம்  சூரிய  கதிர்வீச்சுதான் அதிலும் தாவாங்களுக்கு சூரிய ஆற்றல் பலவிதங்களில் அத்தியாவசியமானது.சூரியன் அதன் வேறுபட்ட  நிறங்களை பொருத்து, பல அளவிலான அலைநீளங்களில் கதிர்வீச்சை வெளியிடுகிறது, பூமியின் வளிமண்டலம் அதிலிருக்கும் புற ஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சுகளை தடுக்கிறது.

பூமியின் உயிர்களை நிலைநிறுத்தும் முதன்மை ஆதாரம்  சூரிய  கதிர்வீச்சுதான் அதிலும் தாவாங்களுக்கு சூரிய ஆற்றல் பலவிதங்களில் அத்தியாவசியமானது.

இதில்  Photosynthesis என்பது ஒளியாற்றலைக்கொண்டு அவை உணவை  தயாரித்து மாவுச்சத்தாக சேமித்து வைத்துக்கொள்வது.

Phototropism என்பது ஒளியை நோக்கி திரும்புதல் அல்லது வளர்தல். எளிய உதாரணமாக தென்னந்தோப்புகளில் மதில் ஓரமாக இருக்கும் மரங்கள் வெளியில்  வளைந்து வளர்ந்திருப்பதை பார்த்திருப்போம்.  உள் பகுதிகளில் ஒளிக்கான  போட்டி அதிகமாக இருப்பதால் அவை வெளியிலிருக்கும் ஒளியை நோக்கி வளரும், இந்த ’ஒளி நோக்கி வளருதலை; அடிப்படையாக கொண்டு தான் மியாவாக்கி காடு வளர்ப்பு முறை செயல்படுகிறது. மிகச்சிறிய நிலப்பகுதியில் நெருக்கமாக பல்வேறு உயரங்களில் வளரும் தாவரங்கள் வளருகையில்   அவை பக்கவாட்டில் வளர வாய்ப்பில்லாமல் மேல் நோக்கி ஒளியை தேடி வெகு வேகமாக வளர்கின்றன. 3 வருடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான  உயரத்தில் அங்கு தாவரங்களை காணமுடியும்.

Photoperiodism   என்பது  அந்த ஒளிமாசு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒளி நாட்ட காலக்கணக்கு. ஒவ்வொரு வகை தாவரத்திற்கும் குறிப்பிட்ட அளவு பகல் நேர சூரிய ஒளி தேவைப்படும், சூரிய ஒளிக்கதிரில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து  அதற்கேற்ப  தான் வாழ்வு சுழற்சியை அதாவது  மலரும் காலம், கனி அளிக்கும் காலம் போன்றவற்றை தீர்மானிக்கும்  தாவரங்களின் திறன்.

    அதைக் கொண்டுதான் short day plants, long day plants, day neutral plants என்று குறைந்த பகல் நேர ஒளி போதுமானவை, நீண்ட ஒளி நேரம் தேவைப்படுபவை,  இரண்டுக்கும் இடைப்பட்ட, ஒளிக்கால அளவை பொருட்படுத்தாமல் பூத்து காய்க்கும் (நெல், வெள்ளரி) போன்றவை என வேறுபடுகின்றன. இந்த ஒளிக்கால அளவில்  உண்டாகும்  வேறுபாடுகள்  நிழல் மரங்களை   நட்டு இயற்கையாகவும் சரி செய்யப்படுகின்றன.

    உதாரணமாக  இதைச் சொல்லலாம்.  சென்ற வாரம் நான் ஏற்காடு இந்திய காபி வாரியத்தின் காபி தோட்டங்களுக்கு சென்றிருந்தேன்.அங்கே வளரும் காபி செடிகளுக்கு 6 மணி நேர பகல் வெளிச்சம் போதுமானதாக இருக்கிறது எனவே காபிச்செடிகளுக்குள்ளும், தோட்ட விளிம்பிலும் சில்வர் ஓக் மற்றும் கல்யாண முருங்கை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். அவற்றில் உயரமாக கிளைகளதிகமாக இல்லாமல் வளரும் சில்வர் ஒக் மரங்கள் நிரந்தர நிழலுக்கும் அவ்வபோது கத்தரித்து விடப்படும் கல்யாண முருங்கை மரங்கள் தற்காலிக நிழல் அளிக்கவும் பயன்படுகின்றனஅவ்வாறு சரியான கோணத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு  நிழல் அளிக்கும்படியே  அவை வளர்க்கப்படுகின்றன.

    செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி செய்வதென்பது Photomorphogenesis என்பதை அடிப்படையாகக் கொண்டது. Photomorphogenesis என்பது ஒளிசார்ந்த உடல்வளர்ச்சி குறிப்பாக செல்கள் பிரிந்து  வளர்வதற்கு தாவரங்கள் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட நிறத்திலிருக்கும் ஒளிக்கற்றையின் நீளம் என்று கொள்ளலாம்.

      ஒளிக்கற்றையின் நிறம் மற்றும் நீளம் ஆகியவற்றில் இருக்கும் நுட்பமான மாறுபாட்டை புரிந்துகொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும். தாவரங்களுக்கு ஒளிச்சேர்க்கைக்கு பெரும்பாலும் சூரிய ஒளியின்  நீலம் மற்றும் சிவப்பு ஒளி தேவைப்படுகிறது, ஆனால் மலர்வதற்கு அகச்சிவப்பு ஒளி தேவைப்படுகிறது. இப்படி தண்டின் நீளம் அதிகமாக ,இலைகளின் பச்சை நிறம் அடர்த்தியாக என்று பிரத்தியேக தேவைகள் அவற்றிற்கு உள்ளது

      குளிர்காலங்களில் குறுகிய பகல் நேரமும் நீண்ட இரவு நேரமும் இருப்பதால் பகலின் போதாமையை இரவில் செயற்கை வெளிச்சம் கொண்டு ஈடுகட்டி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

      இயற்கை ஒளியில் உண்டாகும் எதிர்பாராமைகள், குளிர்காலங்களில் உண்டாகும் போதாமைகளினால் விவசாய பயிர்களின் மகசூல் பாதிக்கப்படுவது உலகெங்கிலும் ஏற்படும் ஒன்று. துவக்க காலங்களில் இந்த குறைபாட்டை களையத்தான் பசுமைகுடில்களில்  கட்டுப்படுத்தப்பட்ட  காலநிலைகளில் பயிர் வளர்ப்பு செய்யப்பட்டது.

      1860களில் செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்த ஆய்வுக் கட்டுரைகளை H.Mangon,E.Prilleux ஆகியோர் எழுதினர். எனினும் விரிவான வணிக ரீதியான பயிர் சாகுபடிக்கான செயற்கை வெளிச்ச பயன்பாடு 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தான் பயன்பாட்டுக்கு வந்தது.

      தற்போது கட்டுப்படுத்தப்பட சூழலில் குறிப்பிட்ட கால அளவுகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கை விளக்கொளியில்  பயிர் சாகுபடி என்பது மிக முக்கியமான தொழில் நுட்பமாகி விட்டிருக்கிறது

      1809-ல் sir Humphry Davy வளைந்த செயற்கை ஒளிரும் மின்வீச்சு விளக்கை இதற்கெனவே உருவாகினார் . 1879 ல் தாமஸ் எடிசன் மின்விளக்குகளுக்கு பிறகு பல வகையில் பயிர் சாகுபடிக்கு பொருத்தமான செயற்கை விளக்குகளின் பயன்பாடு குறித்து சோதனை முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன பல மாதிரி விளக்குகள்  உருவாக்கப்பட்டாலும் வணிகரீதியாக அவற்றை பயன்படுத்த  முடியாத அளவுக்கு செலவு பிடித்த தொழில்நுட்பங்களாயிருந்தன அவையனைத்துமே.

      ’1901 லிருந்து 1936 வரையில் நடந்த பல ஆய்வுகளுக்கு பின்னர் மெர்குரி வாயு விளக்குகள் இந்த வகை பயன்பாட்டுக்கு பொருத்தமானவை  என சொல்லப்பட்டது, எனினும் அவ்விளக்கொளி  தாவர ஒளிச்சேர்க்கைக்கு பாதகமாயிருந்தது.இறுதியாக LED விளக்குகள் இவ்வாறான கட்டுப்படுத்தப் பட்ட சூழலில் நடைபெறும் விவசாயத்திற்கு பொருத்தமானவை என்று கண்டறியப்பட்டது.1960களில் இவை  சந்தைப்படுத்தப்பட்டு  மேலும் பல தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்களுக்கு உள்ளாகி தற்போது ஆகச்சிறந்த சாகுபடிக்கான செயற்கை விளக்குகளாக  உபயோத்தில் இருக்கின்றன

      அதிக சிவப்பு, அகச்சிவப்பு மற்றும் குறைந்த நீலநிறக் கற்றைகளை கொண்டவை, அதிக நீலக்கற்றைகளும் குறைந்த அகச்சிவப்பு கற்றைகள் கொண்டவை என பிரத்யேகமாக  வடிவமைக்கப்பட்ட விளக்குகள் தற்போது கிடைக்கின்றன.  சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தேவைக்கேற்ப இவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன

      இவ்விளக்குகள் இயற்கை ஒளியுடன் கூடுதலாக துல்லியமாகக் காலக் கணக்குகள் கணக்கிடப்பட்டு அந்த நேரத்துக்கு மட்டுமே அளிக்கப்படுபவை.  ஒளியின் தீவிரம், ஒளிக்கற்றையின்  நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் தாவரத்துக்கும்  செயற்கை விளக்குகளுக்குமான இடைவெளி துல்லியமாக கணிக்கப்பட்டு விளக்குகள்  அமைக்கப்படுகின்றன.

      இந்த வகையான செயற்கை விளக்குகள் தேவைப்படும்போது ஒளியின் கோணத்தை மாற்றியமைக்க எதுவாக் திருகு கம்பங்களில் அமைக்கப்படும். தற்போது இளஞ்சிவப்பு LED விளக்குகள் தாவர வளர்ச்சிக்கு மிகவும் உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.

      இவ்வொளி தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை குளிர் நிரம்பிய,  சூரிய ஒளி மிகக்குறைவாக இருக்கும் காலத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்றன. இவற்றால் அந்த பயிர்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ  இதுவரை  ஆபத்துகள் ஏதும் கவனிக்கும்படி கண்டறியப்படவில்லை.

      சாகுபடி தொழில்நுட்பங்களில் ஒன்றான இதன் விளைவுகள்  இதுவரை பெரிதாக ஆய்வுக்கு உள்ளாகவில்லை. சூழல் வெப்பம் அதிகமாகின்றது என்பதை மட்டும் இப்போதைக்கு கருத்தில் கொண்டிருக்கிறார்கள்

      இந்த நிகழ்வில்  வேதியியல் மற்றும் இயற்பியல் நுட்பங்களும் இருக்கின்றன. இந்த இணைப்பில் இருக்கும் கட்டுரை  அவற்றை எளிமையாக விளக்குகிறது https://www.valoya.com/artificial-lighting-in-agriculture/

      செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்து மேலும் அறிய: https://www.agrivi.com/blog/farming-under-artificial-light-as-a-response-to-future-food-demands/

      அயல் ஆக்ரமிப்புத்தாவரங்கள்!

      சென்ற வருடம் தூரன்விருது விழாவிற்காக ஈரோடு வழக்கறிஞர் செந்தில் அவர்களுக்கு ச்சொந்தமான கல்யாண மண்டபத்திற்கு சென்றிருக்கையில் மண்டபத்துக்கு நேர்எதிரில் மிக அழகிய நடுத்தர உயரத்திலான ஒரு மரம் நின்றது. அதை முதன் முதலாக  அன்றுதான் பார்த்தேன். அது  Conocarpus lancifolius என்னும் சோமாலியாவை சேர்ந்த மரம். 

      அதன் கனிகள் ஒரு கூம்பைப் போல அமைந்திருப்பதால் அதற்குக் கோனோகார்பஸ் என்று பேரினப்பெயர். கார்பஸ் என்றால் கனிகள் என்று பொருள் கோன் போலக் கனிகள் என்ற பொருளில் இருக்கும் இந்தப் பேரினத்தில் இரண்டே இரண்டு சிற்றினங்கள் தான் இருக்கின்றன. லேன்சிஃபோலியஸ் மற்றும் எரெக்டஸ். லேன்சிஃபோலியஸ் என்பது நீளமான கூர் நுனிகொண்ட இலைகளைக் குறிக்கிறது. எரெக்டஸ் என்றால் நேராக நிமிர்ந்து வளர்கின்ற என்று பொருள் இது சதுப்பு நிலங்களில் வளரும் பல தண்டுகளைக் கொண்ட அடர்த்தியான புதர்ச்செடி

      கோனோகார்பஸ் லேன்சிஃபோலியஸ்  மரத்தை நேற்று பெங்களூரில் தருண் இன்னும் இரண்டுவருடம் படிப்பின் பொருட்டு இருக்கப்போகும் ஒரு அடுக்கத்தின் வாசலிலும் மேலும்   அதிக  இடங்களிலும்  பார்த்தேன் பெங்களூர் முழுக்க இதை அலங்கார செடியாக வளர்க்கிறார்கள். கற்பகம் பல்கலைக்கழகத்திலிருந்து துவங்கும் சேலம் பெங்களூர் பைபாஸ் சாலையில் இருக்கும் ஒரு உணவகத்தின் வாசலிலும்  ஏராளமான மரங்கள் நட்டு வளர்க்கப்படுகின்றன

      இந்தக் கோனோகார்பஸ் போல மிக வேகமாக வளரும் அயல்நாட்டு தாவரங்கள் இயல் மரங்களுக்கும் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தலை அளிப்பவை. இப்படித்தான் நமக்கு ஆகாயத்தாமரை பிரிடிஷ் இந்தியாவில் அறிமுகமானது இப்படித்தான் உண்ணிச்செடி என்னும் லண்டானா அறிமுகமாகி இப்போது அழிக்கவே முடியாத ஆக்கிரமிப்பு களையாகி விட்டிருக்கிறது இப்படியேதான் நெய்வேலி காட்டாமணக்கும், சீன கரிசலாங்கண்ணியும் இன்னும் பலவும் ஆக்கிரமிப்பு களைகளாகி விட்டிருகின்றன

      ஈரோடு மலை தங்குமிடத்தில் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் என் மாணவிகளுடன் நான் அங்கு அடிக்கடி செல்கிறேன். சில வருடங்களாக அந்தப் பிரதேசம் முழுக்க  மிக அதிகமாகp பல்கிப் பெருகி கொண்டிருகிறது சீமைக்கொன்றை எனப்படும் Senna siamea  மரம்.  இதன் இலைகளை விலங்குகள் உண்ணுவதில்லை என்பதை விஷ்ணுபுரம் குழுவில் இருக்கும் கால்நடை மருத்துவர்  பவித்ரா தெரிவித்தார்.  இதன் கனிகள் ஏராளமான விதைகளுடன் வெடித்து பரவிச் சூழலில் பெரும் அச்சுறுத்தலாக உருவாகிக் கொண்டிருக்கிறது. நம்மால் கட்டுப்படுத்த முடியாத பார்த்தீனியத்தை போல இதுவும் இன்னும் சில வருடங்களில் உருவெடுக்கப் போகிறது

      இந்தக் கோனோகார்பஸ் மரத்திலிருந்து கொஞ்சம் கோந்தும் பார்பிக்யூ அடுப்புகளுக்கான் கரிக்கட்டையும் கிடைக்கின்றது பார்க்க அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது.  அவ்வளவுதான், ஆனால் இதன் ஏராளமான மகரந்தங்கள் மனிதர்களுக்குச் சுவாசக்கோளாறுகளையும் மேலும் பல  ஒவ்வாமைகளையும் உண்டாக்குகின்றன. இவற்றின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுஆழம் வரைசென்று உறிஞ்சுகின்றன.    பல வளைகுடா நாடுகளிலும் குஜராத்திலும் இதன் ஆபத்தை உணர்ந்து இதை வெட்டி அகற்றி கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இந்தியாவின்  பல பகுதிகளில் இதை வாங்கி நட்டுவைத்து நீரூற்றி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

       அரசு இது போன்ற அதீத வளர்ச்சி கொண்ட தாவரங்களை இறக்குமதி செய்வதை, அவற்றின் பரவலை,  வளர்ச்சி வேகத்தை எல்லாம் தாவரவியலாளர்களின் குழுவொன்றை அமைத்துக் கட்டாயம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்தாவரங்களின் பரவலை   சட்டபூர்வமாகத் தடுக்கும் குவாரண்டைன் இந்தியாவில் மிக மெத்தனமாகத் தான் நடக்கிறது. 

       இந்தியாவில் இந்த botanical illiteracy இப்போது மிக அதிகமாக இருக்கிறது. ஒரு மரம் வேகமாக வளரும் என்றால் அதை உடனே தருவித்து அலங்கார மரமாக வளர்க்கத் தொடங்கிவிடுகிறார்கள். அயல்மரங்களை  வளர்க்கும் முன்பாக அதன் தாவரவியல் பண்புகளை அறிந்துகொள்வது மிக மிக அவசியம்.கவலையளிக்கிறது இந்த மரங்களின் பரவல்.

      சீமைக்கொன்றை என்னும் சென்னா சயாமியா, மஞ்சக்கொன்னை என்னும் சென்னா ஸ்பெக்டாபிலிஸ் இரண்டுமே இந்தியாவின் அயல் ஆக்ரமிப்பு மரங்கள். மலர் மஞ்சரிகள் அமைந்திருக்கும் விதத்தில் மட்டும் மிகச் சிறிய வேறுபாட்டைக் கொண்டிருக்கும் இம்மரங்கள் இரண்டும் தோற்றத்தில் ஒரே மாதிரியானவை. இரண்டுமே இயல்மரங்களுக்கான அச்சுறுத்தல்தான்

      சென்னா ஸ்பெக்டாபிலிஸ்  வயநாட்டுக்கு 1986-ல் கேரள வனத்துறையால் பிற்பாடு வருந்தப்போகிறோம் என்பதை அறியாமல் நிழல் மரங்களாக  அறிமுகப்படுத்தப்பட்டது.

      இதன் விதைகள் தருவிக்கப்பட்டு, முளைத்த நாற்றுக்கள் வயநாடு வனவிலங்கு சரணாலயத்திலும், அருகிலிருந்த  வனச்சரகங்களின் சாலையோரங்களிலும் நடப்பட்டன.

      அப்போது கேரள வனத்துறையினருக்கு தெரிந்திருக்கவில்லை அவர்கள் வளர்த்திக்கொண்டிருந்தது அமெரிக்காவின் மிக மோசமான ஆக்கிரமிப்பு மரத்தைத்தான் என்று.  அப்போதே அது ஆசியா, ஆப்பிரிகா, ஆஸ்திரேலியாவில் ஆக்ரமிப்பு மரமாக அறியப்பட்டிருந்தது.

      கேரள வனத்துறை இதன் ஆக்கிரமிப்பு ஆபத்தை உணர்ந்தபோது, ஆக்ரமிப்புத் தாவரங்கள் அதற்குள் என்னவெல்லாம் செய்திருக்குமோ அதை அந்த மரம் செய்திருந்தது.

      அறிமுகமாகிய 25 வருடங்கள் கழித்து, 2011ல் பல்கிப்பெருகியிருந்த இந்தச் சென்னா மரம்  கேரளக்காடுகளின் ஆக்கிரமிப்பு மரமாக அறியப்பட்டது.

      கர்நாடகமும் 2000-ங்களில் லண்டானா ஆக்ரமிப்பு புதர்களைக் கட்டுப்படுத்தும் என எண்ணி பந்திப்பூர் மற்றும் நாகர்ஹோளே தேசியப்பூங்காக்களில் சென்னா மரங்களை அறிமுகப்படுத்தினார்கள்.

      2020-ல்  முதுமலைப் பகுதிகளில் சென்னா அடர்த்தியாக வளர்ந்து இயல் மரங்களின் வளர்ச்சியைப் பாதிப்பது கண்டறியப்பட்டது.

      இப்போது சென்னாவின் ஆக்ரமிப்பு கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களின் மிகப்பெரிய  சிக்கலாகி இருக்கிறது. இவற்றைத்தவிர அஸ்ஸாமில் மட்டும் ஒரு சில இடங்களில் இதன் ஆக்கிரமிப்பு கண்டறியபட்டிருக்கிறது

      2012-லிருந்து வயநாடு பகுதியில் இதன் ஆக்ரமிப்பை ஆய்வு செய்து வரும் திரு வினயன்  “344.44 km², பரப்பளவு கொண்ட இந்தச் சரணாலயத்தில் 2013-14-ல்  16 km² –ல் பரவியிருந்த  சென்னா, 2019-ல்  89 km² பரப்பளவை ஆக்கிரமித்திருந்தது. தற்போது இதன் ஆக்கிரமிப்பு இந்தச் சரணாலயத்தின் 35% பரப்பளவில் சுமார் 123.86 km-ல் பெருகியிருக்கிறது “என்கிறார். இதன் பரவிப்பெருகும் வேகம் அச்சுறுத்துகிறது.

      வயநாடு சரணாலயத்தில், மலர்ந்து அழிந்த மூங்கில்களின் இடத்திலெல்லாம்   மீண்டும் அவை வளர்வதற்குள் சென்னா பரவி மூங்கில்களின் வாழிடங்களையும் ஆக்கிரமித்திருக்கிறது.

      காடுகளிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கும் விதைகள் பரவின. இந்த மரங்களின் மஞ்சள் நிற மலர்களுக்காகவும் நிழலுக்காகவும் இவற்றின் ஆபத்து தெரியாமல் பல இடங்களில் இவை அலங்கார மரங்களாக வளர்க்கப்பட்டன.

      வினயனின் ஆய்வுக்குழு சென்னாவின் பரவலில் யானைகளின் பங்கு மிக அதிகமென்கிறது. ஒரு யானைச்சாணக்குவியலில் மட்டும் சுமர் 2000 சென்னா விதைகள் இருப்பதை அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

      ஆக்கிரமிப்பு மரங்களின் இயல்புகளான, விரைந்து வளர்வது, குறுகிய வாழ்க்கைச் சுழற்சி, ஏராளமான விதைகளை உருவாக்குவது, வெட்டிய அடித்தண்டிலிருந்தும் முளைத்து வளர்வது, வேரிலிருந்தும் தண்டிலிருந்தும் இனப்பெருக்கம் செய்வது ஆகிய இயல்புகளை இந்த இரு மரங்களுமே கொண்டிருக்கின்றன.

      கர்நாடகத்திலும்  கேரளாவிலும் இந்தச் சென்னா மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டும், ரசாயனங்களை உபயோகித்தும் மரப்பட்டையை உரித்து உலரச்செய்தும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

      தமிழ்நாட்டில் இன்னும் இதன் ஆக்கிரமிப்பு குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. நான் அந்தியூர் வனப்பகுதிக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு வந்தபோது அதிகம் தென்பட்டிருக்காத சீமைக்கொன்றை இப்போது மலைப்பகுதி முழுக்க எங்கெங்கிலும் இருக்கிறது

      வெள்ளிமலை ஆசிரியர் நவநீதன் இந்த மரங்களின் ஆக்கிரமிப்பை குறித்து சொன்னதும் அவருடன் சீமைக்கொன்றையின் ஆக்கிரமிப்பை அந்த மலைப்பகுதியில் நேரில் ஆய்வுசெய்தேன்.சென்னை கோவை   உடுமலை என நான் செல்லும் நகரங்களில் எல்லாம் இவை பல்கிப்பெருகிக்கொண்டிருப்பதை பார்க்கிறேன்.

      கோனொசார்பஸ்,சென்னா போன்ற விரைந்து வளரும் இயல்புகொண்ட அயல் மரங்களை உறுதியாக நாம் அறிமுகம் செய்வதும் வளர்த்துவதும் தடை செய்யப்படவேண்டும்

      கத்தாரில் இருக்கும் விஷ்ணுபுரம் குழும நண்பர் பழனி அழைத்திருந்தார். துபாய், கத்தார் முழுக்க நர்சரிகளில் ரெய்டு நடத்தி இந்த கோனோகார்பஸ் மரங்கள் முழுக்க அழிக்கப்பட்டதை தெரிவித்தார்

      அப்படியான ஒரு தீவிரக்கட்டுப்பாட்டு முன்னெடுப்பு இந்தச் சீமைக்கொன்றை மற்றும் கோனோகார்பஸ் மரங்களுக்கு இங்கும் உடனடித் தேவையாக இருக்கிறது.

      சீமைக்கொன்றையின் விதைகளிலும் இலைகளிலும் இருக்கும் நச்சுpபொருட்களால் பறவைகள்,  பன்றிகளுக்கு  ஆரோக்கியக்கேடுகளும் உண்டாகிறது.

      நிழல் தருகிறது கரிக்கட்டை கிடைக்கிறது என்பதுதான் சீமைக்கொன்றையின் பயன்கள். இம்மரத்தை அறுக்கையில் உருவாகும் மரத்தூள் தீவிரமான தொண்டை கண் மற்றும் மூக்கு அழற்சியை உருவாக்குகிறது.

        சீமைக்கொன்றை ஆஸ்திரேலியாவிலும் ஆக்கிரமிப்பு மரமாகியிருக்கிறது.

      இயல் மரங்கள் அழிந்துகொண்டிருப்பது அவற்றைச் சார்ந்துவாழும் , அவற்றில் மகரந்தச்சேர்க்கை செய்யும் சிறு பூச்சிஇனங்களையும் அழித்துவிடுகிறது.

      குஜாராத் முழுக்கவும், வளைகுடா நாடுகளிலும் கோனோகார்பஸ் அழிக்கப்பட்டுவிட்டது ஆனால் கோவையில் பங்களூரில் பழனியில் நூற்றுக்கணக்கில் அவை வளர்க்கப்படுகின்றன என்றால் அயல் ஆக்கிரமிப்பு தாவரங்களின் பரவல் குறித்த இந்திய வனத்துறையின் செயல்பாடுகள் என்ன என்னும் கேள்வி எழுகிறது   

      சீமைக்கொன்றையின் ஆக்கிரமிப்பு அபாயம் குறித்த ஏராளம் ஆய்வறிக்கைகள் வெளியாகி இருக்கின்றன.

      டெக்கன் ஹெரால்ட் 2023 டிசம்பரில் சீமைக்கொன்றை மற்றும் பிற அயல் ஆக்கிரமிப்பு மரங்களால் இந்தியப்புல்வெளிகள் அழிந்துகொண்டு வருவதை குறித்த கட்டுரையை வெளியிட்டிருக்கிறது

      இவற்றோடு மூடுதிரையைப்போலக்காடுகளுக்குள்சென்றுவிட்டிருக்கும்ஆக்ரமிப்புஏறுகொடிகளில் Mikania micrantha மிகமுக்கியமானது.மரங்களிலும்மின்கம்பங்களிலும் ஏறிக் காடுகளுக்குள் சென்றுமரங்களின் உச்சிவரை பரவியிருக்கும் இந்தக்கொடி மிகமோசமான ஆக்ரமிப்புக் களைச்செடியாக இருக்கிறதுஆங்கிலத்தில்இக்கொடியின்பெயர் mile-a-minute vine. 

      குட்ஸூ என்னும் ஆக்ரமிப்பு ஏறுகொடி தென்கிழக்காசியா முழுக்க பெரும் சூழல் அச்சுறுத்தலைஉண்டாக்கிஇருக்கிறதுகுட்ஸுவைகுறித்தும் ஒருகட்டுரைஎழுதியிருக்கிறேன்https://logamadevi.in/3191

      கொகெய்னும் கிராக்கும்!

      டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் சென்னை பதிப்பில் பிப்ரவரி 22, அன்று  இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு விமானப்பயணி யிடம் இருந்து 2.7 கிலோ கொகெய்ன் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி வந்திருந்தது. கொகெய்னின் சந்தை மதிப்பு கிலோவுக்கு 10 கோடி என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் மதிப்பு சுமார் 27 கோடி. இதுவே சென்னை விமான நிலையத்தின் இந்த  2024ம் வருடத்தின் முதல் போதைப்பொருள் பறிமுதல். 

      உலகெங்கிலும்  கொகெய்ன் பயன்பாட்டிற்கும் கடத்தலுக்கும் எதிரான சட்டங்கள் மிக இறுக்கமாகவே இருப்பினும் கொகெய்ன் கடத்தலும்  தொடர்ந்து பல வழிகளில் நடந்துகொண்டேதான் இருக்கிறது 

      ஐக்கியநாடுகளின்  போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அமைப்பு (UNODC–United Nations Office on Drugs and Crime) தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தாலும் சர்வதேச அளவில் போதைத்தாவரங்கள் வளர்ககப்படுவது, போதைப்பொருள் தயாரிப்பு, விநியோகம்,  கள்ளச்சந்தை வணிகம் மற்றும் பயன்பாடு ஆகியவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது,

      சர்வதேச கொகெய்ன் பறிமுதல்களில் 72% தென் மற்றும் மத்திய அமெரிக்காவில், மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் 15% மற்றும்  வட அமெரிக்காவில் 12 % நடக்கின்றது.

      கொகெய்ன் அளிக்கும் கொக்கோ புதர் வளர்ப்பு கொலம்பியா (61%)  பெரு (26%) மற்றும்  பொலிவியாவில் (13%) மையம் கொண்டிருக்கிறது.

      சர்வதேச போதைப்பொருள் பறிமுதல் புள்ளிவிவரங்கள் 2019 லிருந்து  ஐரோப்பிய கொகெய்ன் கள்ளச்சந்தை வணிகத்தின் முக்கியமான் விநியோக மையமாக ஆப்பிரிக்கா செயல்பட தொடங்கி இருப்பதை காட்டுகிறது  

      2021ல் ஆப்பிரிக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் அளவு  இது வரையில் இல்லாத அளவில் உச்சத்தை தொட்டிருப்பது சர்வதேச கொகெய்ன் பயன்பாடு மற்றும் கொகெய்ன் வளர்ப்பு உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது.

      கோவிட் பெருந்தொற்றின் போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததால் கொரியர்  மூலம் அனுப்புவது போன்ற  பல புதிய வழிகள் கொகெய்ன் கடத்தலுக்கு கண்டுபிடிக்கப்பட்டன. அந்த புதிய வழிகள் கோவிட் தொற்றுக்காலத்துக்கு பிறகு அபரிமிதமாக வளர்ந்திருக்கின்றன. மீன்பிடி படகுகள், சொகுசுகப்பல்களோடு நீர்மூழ்கி கப்பல்களிலும் கொகெய்ன் கடத்தல் இப்போது  நடைபெறுகிறது.

      கடல்வழி கொகெய்ன் பரிமாற்றம் தற்போது மிக அதிகரித்திருக்கிறது துறைமுகங்களுக்கு அப்பால், துறைமுகங்களுக்கு வரும் வழியில், துறைமுகங்களில் ஏன் நடுக்கடலில் கூட நீர்மூழ்கி கப்பல்களின் உதவியுடன் கொகெய்ன் பரிமாற்றம் நடக்கிறது. இதை கப்பல் உரிமையாளர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.

      சுங்க அதிகாரிகளிலிருந்து, சரக்கு வாகன ஓட்டுநர்கள், கடைமட்ட துறைமுக தொழிலாளிகள் வரை இதில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொகெய்ன் கடத்தல் நடப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது சவாலாகவே இருக்கிறது.

      ஓபியத்துக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கும் போதைப்பொருள் கொகெய்ன் தான்.

      பல ஆண்டுகளாகவே உலகமெங்கிலும் முக்கியமான போதைப்பொருளாக பரவலான உபயோகத்தில் இருக்கும் கொகெய்ன் வெள்ளை நிற மிருதுவான தூளாகவும், கிரேக் (crack) என்னும்  பொதுப்பெயரில் பலவிதமான கொகெய்ன் சேர்க்கப்பட்ட பொருட்களாகவும் சந்தைப்படுத்தப்படுகிறது. கொகெய்ன் நீரில் கரையும் ,  கிரேக் நீரில் கரையாது .

      துகளாக கிடைக்கும் கொகெய்ன் அதிக போதையளிப்பதால் அதன் தேவையும் விலையும் மிக அதிகம் எனவே விற்பனை செய்பவர்களுக்கு லாபமும் அதிகம்.  கிரேக் போதையும் விலையும் குறைவு என்பதால் அது பெரும்பாலும்  ஸ்ட்ரீட் கொகெய்ன் என்னும் குறைந்த அளவிலும் பெயரிலும் விற்பனையாகிறது,

      பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் அளவு அதிகரிப்பது சந்தைக்கு சென்று சேரும் கொகெய்ன் அளவை குறைக்கிறது என்றாலும் கொகெய்ன் உற்பத்தியை இது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை

      6.2  மில்லியன் வருடாந்தர பயனாளிகளுடன் பிராந்திய அளவிலான மாபெரும் கொகெய்ன் சந்தை வடஅமெரிக்காவில் இருக்கிறது. கொகெய்ன் கருப்பு சந்தை, ஊழல், சுரண்டல் மற்றும் குற்றங்களையும் தொடர்ந்து  அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கொகெய்ன் பயன்பாடு தீவிரமான உடல்கோளாறுகளையும் இறப்பையும் உண்டாக்கிக் கொண்டு இருந்தாலும் அதன் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.

      கொக்கோ புதரின் இலைகளிலிருந்து கிடைக்கும் கொகெயினின் மருத்துவப்பயன்பாடு  நெடிய வரலாறு கொண்டது, மருத்துவ பயன்பாட்டுக்கு  பின்னரே அது போதைப்பொருளானது.

      இத்தாலிய கடலோடியான அமெரிகோ வெஸ்புச்சி (1451-1512) தனது கடற்பயண குறிப்புக்களில் முதன்முதலில் கொகெய்ன் குறித்து பதிவு செய்திருந்தார். இவரது பெயரிலிருந்துதான் அமெரிக்கா என்னும்  பதம் உருவானது. 

      தொடர்ந்த 300 ஆண்டுகளுக்கு கொகெய்ன் மருந்தாகவே உபயோகிக்க பட்டுக்கொண்டிருந்தது.

      1860-ல் ஆல்பர்ட் நிமேன் (Albert Niemann) கொக்கோ இலைகளிலிருந்து  கொகெய்னை பிரித்தெடுத்தார். 

      இவரது மாணவர் வில்ஹெம் Wilhelm Lossen  1865ல் கொகெயினின் வேதியியல் வடிவதை கண்டறிந்தார்.

      வில்ஹெமும் நீமேனும் இணைந்து  விலங்குகளில் கொகெய்னின் விளைவுகளை ஆய்வுகள் செய்தனர்.

      பெருவியன் மருத்துவரான மோரினோ 1880ல் அவரது கொகெய்ன் குறித்த ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு மனிதர்களின் கொகெய்ன் பயன்பாடு மற்றும் விளைவுகள் குறித்த கவலையையும் வெளிப்படுத்தி இருந்தார். அந்த அறிக்கையின் இறுதியில் கொகெய்னை அறுவை சிகிச்சைகளில் மயக்கமூட்டியாக பயன்படுத்தலாம் என்னும் பரிந்துரையையும் அவர் பதிவு செய்திருந்தார்.

      ஆஸ்திரிய உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்ட் தனது மன அழுத்தத்தை போக்க கொகெய்ன் பயன்படுத்தி அது வெற்றிகரமானதால், தனது சொந்த அனுபவத்தின் பேரில் கொகெய்னை மனஅழுத்தம், பாலியல் குறைபாடுகள் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம் என்று அறிவித்தார்.  

      1884 ல் சிக்மண்ட் ஃப்ராய்ட்  ’’கொக்கோவை பற்றி’’ (Über Coca)  என்னும் ஒரு ஆய்வுக்கட்டுரையை பிரசுரித்தார். அதில் கொகெய்னின் மருத்துவ உபயோகங்கள் விவரிக்கப்பட்டிருந்தது. அவர் பலருக்கு கொகெய்னை பரிந்துரைத்ததுடன் கொகெய்ன் அதிகமானால் ஆபத்தொன்றுமில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார். ஆனால் அவர் பரிந்துரையின்படி மிக அதிக கொகெய்ன் எடுத்துகொண்ட அவரது நோயாளி ஒருவர் மரணம் அடைந்தார்.

      1884, ல் கண் மருத்துவரான கார்ல் கொல்லர் (Carl Koller) கண் அறுவை சிகிச்சைகளில் சொட்டுமருந்தாக கொகெய்னை அளித்தார். பின்னர் மருத்துவர்கள் உலகெங்கிலும் மயக்கமூட்டியாக கொகெய்னை பரவலாக உபயோகிக்க தலைப்பட்டனர்.

      நரம்புகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் கொகெய்ன் ஊசிகளும் பிற்பாடு கண்டறியப்பட்டன. 

      1896ல் கொக்கோ இலைச்சாறு கேச பராமரிப்பில் உதவுவதாக பல சுவரொட்டி விளம்பரங்கள் வந்தன.

      மருத்துவ உபயோகங்களுக்கென மட்டும் பரவலாக அறியப்பட்டிருந்த கொகெய்னை 1863ல் இத்தாலிய வேதியியலாளர் ஏஞ்சலோ (Angelo Mariani)  வைனில் கொக்கோ இலைச்சாறு கலந்த இனிப்பு பானத்தை  Vin Mariani என்னும் பெயரில்  அறிமுகம் செய்து  பிரபலமாக்கினார். இதை  அப்படியே கொக்கோ கோலாவில் கலந்து புதிய பானமாக ஜான் பெம்பர்ட்டன் (John Pemberton)   1886ல் அறிமுகப்படுத்தினார்.  

       கொகெய்ன் இலைச்சாறும் கோலா கொட்டையின் சாறும் கலந்த கொக்கோ கோலா,  கோக், கஃபே கோலா, கோஸ் கோலா( Koke, Cafe-Cola, and Kos-Kola)  என்னும் பெயர்களில் விரைவில் புகழ்பெற்றது. அப்போது மருத்துவக் காரணங்களுக்காக கொகெய்ன்  தடையின்றி கிடைத்துக் கொண்டிருந்ததால் கொக்கோகோலாவில் அதை கலப்பது எளிதாக இருந்தது.

      1850-லிருந்து 1900 வரையிலும் கொகெய்னும் ஓபியமும் கலந்த மந்திர மற்றும் மருத்துவ பானங்கள் சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களாலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டன.

      கொகெய்னின் புகழை பரப்பியவர்களில் தாமஸ் எடிசனும் நடிகை சாரவும் குறிப்பிடத்தக்கவர்கள்.( Sarah Bernhardt)

      சினிமாத்துறையிலிருந்து வந்த கொகெய்னுக்கான பரிந்துரைகள் விரைவில் லட்சக்கணக்கானவர்களை சென்று சேர்ந்தது. கூடவே கொகெய்ன் பயன்பாட்டின் ஆபத்துகளும்  வெளிப்படத்துவங்கின. 1903ல் பொதுமக்களின் அழுத்தம் மற்றும் எதிர்ப்பு காரணமாக கொக்கோகோலா நிறுவனம்  கொக்கோகோலா பானத்திலிருந்து கொகெய்னை முற்றிலும் நீக்கியது.

      1904 க்கு பிறகு புதிய கொகோ இலைகளுக்கு பதிலாக கொகெய்ன் எடுத்த பிறகு எஞ்சி இருக்கும் மிச்சங்கள் சேர்க்கப்பட்டது.1929 லிருந்து கொக்கெயின் இல்லாத இலைச்சாறு சேர்க்கப்படுகிறது.

      ஆனால் கொகெய்னின் கிளர்ச்சியூட்டும் இயல்புகளுக்கு பழக்கப்பட்டுப்போன மக்கள் கொகெய்ன் துகளை மூக்கு வழியாக உறிஞ்சி போதையேற்றிக்கொள்வதை  வழக்கமாக்கியிருந்தனர். 1905ல்  இது மிக பிரபலமானது. அடுத்த ஐந்து வருடங்களில்  மூக்குப்பகுதியின் சிதைவு பல மருத்துவமனைகளில்  தொடர்ந்து கண்டறியப்பட்டது

      1912-ல் மட்டும் 5000 கொகெய்ன் மரணங்களை அறிவித்த அமெரிக்க அரசு 1922-ல் கொகெய்னை முற்றாக தடை செய்தது.

      இங்கிலாந்தின் கியூ தோட்டங்களிலிருந்து இலங்கைக்கு 1870-லும் இந்தியாவிற்கு 1883-லும் கொக்கோ பயிர் அறிமுகமானது

      இந்தியாவில் கொக்கோ புதர்கள் மிக குறைவாக வளர்கின்றன.  கொகெய்ன் பயன்பாட்டிற்கெதிரான சட்டங்கள் இந்தியாவிலும் மிக கடுமையாகவே இருக்கின்றது.

      1970களில் கொகெய்ன் புகைத்தல் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது. உற்சாகம் அளிக்கும் கொகெய்னை இளைஞர்கள் பெருவாரியாக எடுத்துக்கொண்டார்கள். 1970-ல் கொலம்பிய போதைப்பொருள் வியாபாரிகள் அமெரிக்காவில் கொக்கெய்ன் கள்ளச்சந்தை வணிகத்திற்கான மாபெரும் வலையை உருவாக்கினார்கள்.

      அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கொகெய்ன் உபயோகித்த இளைஞர்களின் எண்ணிக்கை 1970-லிருந்து 1980-க்குள் பத்து மடங்கு பெருகியது.    பின்னர் செல்வந்தர்களுக்கான உயர்தர போதைப்பொருள் என்னும் இடத்திலிருந்து அடித்தட்டு மக்களுக்கானதாகவும் மாறி குற்றம், ஏழ்மை மற்றும் மரணத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த கொகெய்ன் அமெரிக்காவின் மிக ஆபத்தான போதைப்பொருளாகி இருந்தது.

      மத்திய நரம்பு மண்டலத்தை சடுதியில் சென்று சேரும் உணர்வுகளை விரைவில் தூண்டக்கூடிய, மிக பழமையான இயற்கையான மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கொகெய்ன். கொகெய்னின் விளைவுகள் உடலில் 1 மணி நேரம் வரை இருக்கும்.

      1990களில் கொலம்பிய கொகெய்ன் வியாபாரிகள் அமெரிக்கா ஆசியா  மற்றும் ஐரோப்பாவிற்கு கடல்வழியே பெருமளவு கொகெய்னை சந்தைப் படுத்தத் துவங்கினார்கள். 2008ல் கொகெய்ன் உலகின்  இரண்டாவது மிக அதிகமாக கடத்தப்படும் போதைப்பொருளாகி இருந்தது (மாரிவானாவுக்கு அடுத்து) இன்றைய தேதியில் கொலம்பியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாபெரும் கொகெய்ன் கள்ளச்சந்தை வணிக அமைப்புக்கள் மிகச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

      வடக்கு சிலே பகுதியின் அகழ்வாய்வுகளில் கிடைத்த கிமு 1000-த்தை சேர்ந்த மம்மிகளின் உடலில் கொக்கோ பயன்பாட்டின் அடையாளங்கள் இருந்தன. இதுபோன்ற பல அகழ்வாய்வுகள் ஆண்டிஸ் பழங்குடியினரின் கொக்கோ பயன்பாடு சுமார் 3000 வருட வரலாற்றை கொண்டிருப்பதை காட்டுகிறது

      கிருஸ்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலைஉச்சியில் வாழ்ந்த இன்கா பழங்குடியினர் அச்சூழலின் சுவாசசிக்கல்களுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள லேசான இனிப்புச்சுவைகொண்ட கொக்கோ இலைகளை மெல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். கொக்கோ இலைகளை சுண்ணாம்புடன் சேர்த்து  மெல்லும்போது அவர்களின் இதயம் வேகமாக துடித்தது சுவாசமும் விரைவானது

      வாரி, பெருவிய  மற்றும் பொலிவிய தொல்குடியினர் மதச்சடங்குகளின் போது மட்டும் கொக்கோ இலைகளை உபயோகித்தார்கள்.

      பொலிவிய ஆண்டிஸ் பழங்குடியினரின் ஐமரா மொழியில் “Khoka” என்றால் மரம் என்று பொருள்.அதுவே இன்றைய நவீன கொக்கோவின் (Coca)  வேர்ச்சொல்.

      அப்பழங்குடியினர் இந்த இலைகளுக்கு மந்திர பண்புகள் இருப்பதாகவும் நம்பினர். மரத்திலிருந்து கீழே விழும் கொக்கோ இலைகளின் வேகம் அவை வீழும் இடங்கள் ஆகியவற்றைக்கொண்டு ஆவிகளின் நடமாட்டத்தையும் அவர்கள் கணித்தனர்.

      ஆண்டஸ் மலைப்பகுதியின் கொக்கோ இலைகள் அமேஸான் பகுதியின் கனிகள் மற்றும் தோலாடைகளுக்கும், பசிபிக் பகுதியின் சிப்பிகள் மற்றும் மீன்களுக்கும் பண்டமாற்றாக அளிக்கப்பட்டபோது  கொக்கோ இலைகளின் கிளர்ச்சியூட்டும் இயல்புகள் மேலும் பல இடங்களுக்கு பரவியது.

      இன்கா பழங்குடியினர் கொக்கோவை  தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கையில் 1532ல் ஸ்பானிஷ் படையெடுப்பு நடந்து. பின்பு கொக்கோ சாகுபடியும் இன்கா பழங்குடியினருக்கு  தினக்கூலியுடன்  கொக்கோ இலைகள் கொடுப்பதும் பரவலாகியது.

      19-ம் நூற்றாண்டை சேர்ந்த மனிதவியலாளரும் நரம்பியல் நிபுணரும் மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் உணவுப்பொருட்களை குறித்த ஆய்வில் இருந்தவருமான இத்தாலியை சேர்ந்த  மண்டிகாஸா (Mantegazza) தென்னமரிக்க பழங்குடியினரின் கொக்கோ பயன்பாட்டை  அவர்களுடனேயே பலவருடங்கள் தங்கி இருந்து ஆரய்ந்து தானுமதை உண்டு, பிரபலமான “On the hygienic and medicinal properties of coca and on nervous nourishment in general”என்னும் கட்டுரையை வெளியிட்டார்

      அந்த கட்டுரையின் ஒரு பத்தியில் மண்டிகாஸா கொக்கோவின் அனுபவத்தை இப்படி சொல்லுகிறார்

      “…God is unjust because he made man incapable of sustaining the effect of coca all life long. I would rather have a life span of ten years with coca than one of 10 000 000 000 000 000 000 000 centuries without coca.”

      பொலிவியா, பெரு மற்றும் கொலம்பியாவில் கொக்கோ புதர்களிலிருந்து கொகெய்ன் அடர்காடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வகங்களில் பல வேதிமாற்றங்களுக்கு பின்னர் தயாராகிறது. அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ வழியே வரும் கொகெய்னில் 90% கொலம்பியாவிலிருந்துதான் வருகிறது.  

      கொகெய்னை அளிக்கும் இரு தாவரங்களில் முதன்மையானது Erythroxylum coca. இது எரித்ராக்ஸைலேசி குடும்பத்தை சேர்ந்தது. (மற்றொன்று Erythroxylum novogranatense). இது வடமேற்கு மற்றும் தென்னமரிக்காவை தாயகமாக கொண்டது.  எரித்ராக்ஸைலான் பேரினத்தின் நான்கு சிற்றினங்கள் பல்வேறு ஆல்கலாய்டுகளுக்காக பயிரிடப்படுகின்றன அவற்றில் இவை இரண்டு மட்டும் கொகெய்ன் ஆல்கலாய்டுகளுக்காக வளர்க்கப்படுபவை.

      அமெரிகோ (Amerigo Vespucci)  1499-ல் கொக்கோ புதரை விவரித்து தென்னமரிக்க பழங்குடியினர் மயக்கம் மற்றும் பசியை வெல்ல இதன் இலைகளை மெல்லுவதை அவரது கடற்பயணக்குறிப்பில் எழுதியிருந்ததே கொக்கோ செடியை குறித்த முதல் எழுத்து பூர்வ ஆதாரம்

      2லிருந்து 3 மீ உயரம் வரை வளரும் கொக்கோ செடி அடர்ந்த புதர் வகை வளரியல்பை கொண்டது. நிமிர்ந்த தண்டுகளையும் நுனி குறுகிய பசிய முட்டை வடிவ மெல்லிய இலைகளையும் கொண்டிருக்கும். இலை நடுநரம்பின் இருபுறமும் சற்றே மேடிட்டிருக்கும் நரம்பமைப்பு கொக்கோ இலைகளுக்கான பிரத்யேக அடையாளம்.

      சிறிய மஞ்சள் மலர்கள் குட்டையான காம்பு கொண்ட கொத்துக்களாக அமைந்திருக்கும். கனிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.அமிலத்தன்மை கொண்ட மண்ணில் இவை செழித்து வளரும்.

      Erythroxylum பேரினத்தின் நூற்றுக்கணக்கான சிற்றினங்களில்  Erythroxylum coca , Erythroxylum novogratense  இரண்டில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் கொகெய்ன் ஆல்கலாய்டு இருக்கிறது. இவற்றின் உலர் கொக்கோ இலைகளில் 2% கொகெய்ன் இருக்கும். மேலும் 23 சிற்றினங்களில் மிக மிக குறைவான அளவில்  (0.001%.) கொகெய்ன் இருக்கிறது.

      பலவகையான தாவரங்களில் இருக்கும் ஆல்கலாய்டுகளை நல்லதும் அல்லதுமாக பலவிதங்களில் மனிதகுலம்  உபயோகிக்கின்றது. குருமிளகில் பைப்ரின், கோகோ கனிகளில் தியோபுரோமின், காப்பிக்கொட்டை மற்றும் தேயிலையில் கேஃபின், கசகசா கனியில்  மார்பைன், புகையிலையில் நிக்கோட்டின் என பல  ஆல்கலாய்டுகள் வணிகரீதியாக முக்கியமானவை இவற்றில் கொகெய்ன் உலகநாடுகளின் பெரும் சவாலாகிவிட்டிருக்கிறது.

      1970ன்  அமெரிக்க போதைப்பொருள் தடுப்புச்சட்டம் போதை உண்டாகும், அடிமைப்படுத்தும், மருந்துப் பொருளாகவும் பயன்படும் பொருட்களை ஐந்து வகையாக பிரித்து பட்டியலிட்டிருக்கிறது. அதில் பட்டியல் இரண்டில் (Schedule II) வரும் கொகெய்ன் அரிதாக மருத்துவ உபயோகங்கள் கொண்டிருக்கிறது.

      கொகெய்னின் பிற புழங்கு பெயர்கள்

       beam, big C, blow, Carrie Nation, coke, girl, her, lady, leaf, nose candy, snow, snowbirds, stardust, white (வெள்ளைப்பொடிக்கு மட்டும்), basa, crack, electric kool-aid, flake, rock (crack cocaine), banano, bazooka, and tio (கொகெய்ன் சேர்க்கப்பட்ட  மாரிவானா சிகரெட்)

      இந்தியா மற்றும் ஜாவாவிலும் கொக்கோ சாகுபடியாகிறது. ஓராண்டில் 4 அல்லது 5 முறை கொக்கோ புதரிலிருந்து இலைகளை அறுவடை செய்யலாம். இலைகள் உலர்த்தப்பட்டு பின்னரே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து  1000லிருந்து 2000 மீ உயரத்தில் மட்டும் வளர்க்கப்பட்ட கொக்கோ புதர்கள் இப்போது காடுகளின் கீழ்ப்பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.

      பொலிவியா மற்றும் பெருவிலிருந்து கொக்கோ வளர்ப்பை அழிக்க ராணுவம் மற்றும் காவல் துறையை ஈடுபடுத்தி அமெரிக்கா ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. கொக்கோ இலைகளை உண்ணும் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன கொக்கோ நாற்றுகளில் நோய் உண்டாக்கும் கிருமிகளை குறித்த ஆய்வும் நடைபெறுகிறது.

      கொலம்பிய கொக்கோ சாகுபடி ஆகும் பிரதேசங்களில் வான்வழியே பயிர்களை அழிக்கும் மருந்துகளை தெளிக்கும் நடவடிக்கையும் அம்மருந்துகள் பொதுமக்களின் நலனுக்கும் சூழலுக்கும் உருவாக்கும் கேடுகளை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

       எனினும் கொக்கோ சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அதைக்காட்டிலும் அல்லது அதே அளவுக்கு லாபம் அளிக்கும் மாற்றுப்பயிரொன்றை கண்டுபிடிக்கும் வரை இந்த சிக்கல் தீரது என்பதையும் அமெரிக்க அரசு உணர்ந்திருக்கிறது

      அமெரிக்கா ஐரோப்பா  மட்டுமல்ல பல உலகநாடுகள் கொகெய்னுக்கு எதிராக நடத்துவது வெறும் கடினமான சட்டபூர்வ நடவடிக்கை மட்டுமல்ல போதைபொருளுக்கெதிரான் போர்தான் அது

      அதீத மற்றும் தொடர்ந்த கொகெய்ன் பயன்பாடு மூக்கில் ரத்தம் வடிதல், பசியின்மை, சிறுநீரக கோளாறு,  வலிப்பு நோய், இதயக்கோளாறுகள் மற்றும் மரணத்தை உண்டாக்கும்.

      இன்னும் அவ்வளவாக அறிமுகமாகியிருக்காத பிரதேசங்களிலும் தற்காலிக கிளர்ச்சியூட்டியான கொகெய்ன் பயன்பாடு இணைய உலகில் மும்முரமாக இயங்கும் இளைஞர்களுக்கு எளிதில் அறிமுகமாகும் ஆபத்து இருக்கிறது.

      கொகெய்னுக்கெதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும் போது கொகெய்ன் கள்ளச்சந்தை வணிகமும் புதிய வழிகளையும், புதிய வடிவங்களையும் கண்டுகொள்கிறது 

      கொலம்பிய காடுகளிலிருந்து அமெரிக்க வீதிகளுக்கு வரும் கொகெய்ன் பயணத்தை, கொகெய்ன் சந்தை, கொகெய்ன் புழங்கும் ரகசிய உலகின் வாழ்வு மற்றும் மரணம், கொகெய்ன் கடத்தலுக்காக துறைமுகங்களை கைப்பற்ற நடக்கும் கொகெய்ன் போர்களை பேசும். 2020ல் வெளியான டோபி மியூஸின்  முதல் நூலான ’கிலோ.(Kilo) கொகெய்ன் குறித்த நூல்களில் மிக முக்கியமானது.

      பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் தொலைக்காட்சி இயக்குநரான டோபி மியூஸ்  ’’நாம் இப்போது கொகெய்னின் பொற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’’ என்று இந்த நூலில் குறிப்பிட்டிருப்பது  மிகுந்த கவலையளிக்கிறது.

      கொக்கோ புதர் சாகுபடி , கொகெய்ன் வேதிமாற்றம், கள்ளச்சந்தை வணிகம், போதைப்பொருளாக அதன் பயன்பாடு ஆகியவை மிக மிக நீண்ட சங்கிலித் தொடரானாலானவை. அதன் கண்ணிகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை, மாபெரும் வலையொன்றினால் பிணைக்கப்பட்டவை.

      மேலதிக தகவல்களுக்கு:

      https://www.unodc.org/unodc/en/drug-trafficking/index.html
      https://www.unodc.org/documents/wdr/WDR_2010/1.3_The_globa_cocaine_market.pdf
      https://www.drugfreeworld.org/drugfacts/cocaine/a-short-history.html

      தாவரவியல் அகராதி-F

      F1 hybrid-A single cross; a plant breeding term for the result of a repeatable cross between two pure bred lines.

      F2 hybrid A plant breeding term for the result of a plant arising from a cross between two F1 hybrids; may also refer to self-pollination in a population of F1 hybrids.

      Faba -a bean, அவரை-(Vicia faba)

      Fabaceus-Consisting of beans-அவரையினம்

      Fabalia-Bean-stalks -அவரைக்காயின் காம்பு

      Faber-Bean grower- அவரை சாகுபடியாளர்.

      Fabiform -Shaped like a kidney bean- ராஜ்மா அவரை விதை வடிவம்(சிறுநீரக வடிவம்)

      Fabiformis-Bean-shaped- அவரை விதை வடிவம்

      Fabrefactus-Undeveloped, rough, coarse, primitive, rude, untilled, uncultivated- raw- முதிராத, சாகுபடி செய்யப்படாத, வளர்ச்சியடைந்திருக்காத.

      Fabric- Very thin, thread-like strands -இழைமம்

      Fabricatus-Constructed- கட்டமைக்கப்பட்ட,

      Faceted- With many plane surfaces- பல முகப்புக் கொண்டிருக்கிற, பல பட்டைகள் கொண்டிருக்கிற.

      Faeces-Bodily waste discharged-மலக்கழிவுகள்

      Faecula-  Dried lees of wine, argol, tartar (used as a condiment or medicine)- உலர்ந்த  வைன் வண்டல்.

      Faeculentia-Containing dirt, sediment, or waste matter-கசடை வண்டலை கழிவைக் கொண்டிருக்கிற.

      Faeculentus-full of, abounding in-ஏராளமான.

      Faenum-Any dried plant ,hay  faenum Graecum meaning “Greek hay” -உலர்ந்த தாவரம், வைக்கோல்.

      Faetidus-That has an ill smell, evil-smelling, stinking, fetid; foul; having a disagreeable smell of any kind, disgusting- கெடுமணம்  கொண்ட,துர்நாற்றம் கொண்ட, மலம் போல் நாறுகின்ற.

      Faetor- Bad / foul smell, stink- நாற்றம்

      Faetulentus-Foul-smelling -கெடுமணம் கொண்ட

      Faex-Sediment dregs of liquids- கரைசலின் வண்டல்

      Falcarius- Resembling or relating to a sickle –  கதிரறுவாள் வடிவத்தை ஒத்த.(Aongstroemia falcataria)

      Falcate- Sickle-shaped-கதிரறுவாள் வடிவம்.

      Falcate-Curved like the blade of a scythe-புல் அறிவாள் வடிவிலிருக்கிற,

      Falcatus-Sickle-shaped, curved as the blade of a sickle or scythe; “plane and curved, with parallel edges, like the blade of a reaper’s sickle; as the pod of Medicago falcata- சில தாவரங்களின் கனிகளின் நுனி வளைந்த கதிரறுவாள்  வடிவத்தை குறிக்கும் சொல்.

      Falces-A tool with a curved blade for cutting grain- தானியங்களை அறுக்கும் வளைந்த அரிவாள்.

      Falcicornis-With falcate or sickle-shaped horns , Bilabrella falcicornis; Oncidium falcicorne- ஆர்கிட் மலர்களின் அரிவாள் போன்ற அமைப்பை குறிக்கிறது.

      Falci-Curved- (as in a sickle) falciformis, sickle-shaped- கதிரருவாள் வடிவம்.

      Falconeri- As epithet-Hugh Falconer (1808 – 1865), Scottish doctor, geologist and Botanist in India from 1830 to 185.(The flower Rhododendron falconeri was named after Falconer by Joseph Dalton Hooker.) ஸ்காட்லாந்தை சேர்ந்த தாவரவியலாளர்.

      Fallow-Unploughed, “plowed land or a piece of it; land ordinarily used for crop production when allowed to lie idle either in a tilled or untilled condition during the whole or the greater portion of the growing season: the plowing or tilling of land without sowing it for a season;” to break up land “without seeding for the purpose of destroying weeds and conserving soil moisture” – தரிசு நிலம்; பயிரிடப்படாத நிலம்; பயிரிடா நிலம்

      Family-A taxonomic group of one or more genera with features, ancestry, or both in common. It is the term for the principal rank between order and genus-தாவரக்குடும்பம்.

      Farina- Flour,’ ‘dust or powder of any kind;’ dry, flour-like powdery covering, “Blair’s term for pollen”  (in fungi) “the powdery material on a soredium -உலர்ந்த பொடி, துகள்

      Farinaceous-Powderiness -that is mealy- மாவுக்குரிய, மாப்போன்ற, உலர் பொடியாக்கப்பட்ட, புள்ளிகளுள்ள, வெளிறிய.

      Farinaceus- Mealy, floury, starchy, containing starchy matter; of a mealy texture or odor-மாவு கொண்டிருக்கிற, மாவுபோன்ற, மாவின் மணம் கொண்டிருக்கிற.

      Farina-Powdery, pale yellow, crystalline secretion consisting of flavonoids in Primula and other species- சில வகைத்தாவரங்களின் குருணைபோன்ற கசிவு.

       Farinose- Mealy-textured, often whitish or greyish- வெள்ளை அல்லது சாம்பல்   நிறம் பூசினாற்போல 

      Farinosus- Mealy, covered with farina, or starchy matter, pollinose; “covered with a white mealy substance, as the leaves of Primula farinosa”- மாவு போன்ற பொருளால் சூழப்பட்டிருக்கிற.

      Fascia-Bandage, band, girdle; a cross-band, as of color; the fascia (Diatoms)-குறுக்குப்பட்டை.

      Fasciarius- Band- or ribbon-shaped; “narrow; very long, with the two opposite margins parallel, as the leaves of the Seawrack-“banded, or band-shaped, narrow and long, with parallel margins -நாடாபோன்ற அமைப்பு.

      Fasciate- Teratologically grown together, as of several stems into one  often monstrous, an abnormal proliferation- பல தண்டுகள்/ கிளைகள் இணைந்து பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கும் அமைப்பு.

      Fasciatim- In bundles, a bundle of wood- கற்றையாக

      Fasciatus- Marked transversely with broad parallel stripes of color- அகலமான குறுக்குப்பட்டைகள்  கொண்டிருப்பது.

      Fascicle -A bundle arising from a common base- grouping of branches, flowers, pedicels, roots, hairs- ஒரு மையத்திலிருந்து உருவாகும் கற்றை. கிளைகள்/ மலர்கள், மலர்க்காம்புகள், வேர்கள் /தண்டுகளின்  ஒற்றைத்தொகுப்பு.

      Fascicularis- Relating to a fascicle or bundle.Cambium fasciculare, the fascicular cambium- கற்றையை குறிப்பிடும் சொல்.

      Fasciculatum-in the manner of a fascicle, fasciculately, i.e. in fascicles, in bundles, in bunches-கொத்தாக கற்றையாக.

      Fasciculatus- Growing in bundles or fascicles, as when several stems grow together or coalesce, also of branches, hairs, leaves, etc.; bundled or bunched together, as in the manner of branching in Sphagnum- கற்றையாக வளர்தல்.

      Fasciolaris-, fasciolatus, fasciated- Showing abnormal fusion of parts or organs, resulting in a flattened ribbon-like structure-தட்டையான நாடா போன்ற அமைப்பு.

      Fascis- A bundle of wood, twigs, straw, a fagot; a packet, parcel – குச்சிகளின் சிறு கட்டு,பொதி, வைக்கோல் பொதி, சுள்ளிக்கட்டு 

      Fashioned- Constructed- கட்டமைக்கபட்ட.

      Fastigiate – Broom-like appearance- துடைப்பம் போன்ற தோற்றம் கொண்டிருக்கிற.

      Fastigiatio-“When branches become more or less parallel with the main stem” -மையத்தண்டுக்கு இணையாக கிளைகள் வளர்ந்திருப்பது.

      Fastigiatum- With organs nearly parallel and pointing upward- இணையாக மேல்நோக்கி வளர்ந்திருப்பவற்றை குறிக்கும் சொல்.

      Fastigiatus- Parallel, clustered and erect, as the branches of Populus fastigiata, இணையாக குழுவாக நேராக வளர்ந்திருப்பவை.

      Fatiscens- Disintegrating, crumbling, disappearing, ‘to open in chinks or clefts, to gape or crack open, to fall apart, tumble to pieces; to grow weak, become exhausted, to droop, faint; விரைவில் உதிர்ந்துவிடுகிற, உடையும் தன்மை கொண்டிருக்கிற.

      Faucal- Pertaining to the throat of a perianth, the calyx or corolla- அதழ் அல்லது இதழ்களின் கழுத்துப்பகுதி.

      Fauces- The orifice or throat of a gamopetalous corolla or calyx; the part between the proper tube and the limb, the throat is referred to as the ‘fauces’ – குழல் வடிவ மலர்களின் கழுத்துப்பகுதி.

      Faux- Upper part of throat, ‘jaws, gullet, throat;’ in the singular it is the “orifice of calyx, or corolla, mouth, entrance;” “the orifice or throat of a gamopetalous corolla or calyx; the part between the proper tube and the limb” -குழல் வடிவ மலர்களின் மேற்பகுதி.

      Faveolate-Honeycombed; having regular, angled pits. Compare foveolate.

      Faveolatus- Faveolate, pitted, finely honeycombed- நுண்ணறைகள் கொண்டிருக்கிற, குழிகள் கொண்டிருக்கிற.

      Favularius- Finely honeycombed – நுண்ணறைகள் கொண்டிருக்கிற.

      Favulus- A little honey-comb-சிறு சிறு அறைகள் கொண்டிருக்கிற.

      Favus- Honey-comb- தேன் கூடு போன்ற.

      Fawn-color- Fawn-colored, light brown tinged with yellow-காவி கலந்த இளமஞ்சள் நிறம்.

      Feather-Having veins which proceed from a midrib at an acute angle,with veins all proceeding from the sides of a midrib- pinnatifid, pinnately cleft or lobed half the distance or more to the midrib, but not reaching the midrib; divided almost to the axis into lateral segments, something in the way of the side divisions of a feather- pinnatifidus- இறகு போன்ற.(இலை நரம்பமைப்பைக் குறிப்பது)

      Fecalis- Relating to, being, or involving feces – கழிவு, மலம் தொடர்பான.

      Fecatus- Made from the dregs or lees; (Vinum faecatum, wine pressed from the dregs)- வண்டலிலிருந்து உருவான.

      Fecula- Dried lees of wine, argol, tartar (used as a condiment or medicine)   dregs, sediment; lees; syn. Flocces- உலர்ந்த வைன் வண்டல்

      Feculentia- Starch or similar substance; thick with sediment,feculent, muddy, thick with sediment, abounding in dregs or sediment, thick, impure, feculent (of fluids) full of sediment, thick- அசுத்தமான வண்டலாக படிந்திருக்கிற.

      Feculentus- Full of sediment, thick- வண்டல் நிறைந்த.

      Fecundans-To make fertile or fruitful- வளமாக்குகிற,

      Fecundatio- The period during which the flower is open- மலர்கள் மலரும் காலம்.

      Fecundatus- Made fruitful, fertilized- கருவுற்றவை. 

      Fecundus- Fertile, rich; fertilizing, giving life- வளமானவை.

      Felicitas- Fruitful, fertile -வளமை.

      Felling- ‘Abruptly cutting or breaking off or away below, cutting through, cutting down, felling.’- வெட்டுப்படுகிற, வெட்டுகிற.

      Fell-The treeless rocky area above timberline, or in frigid zones dominated by low plants or by graminoids: மரவரைக்கு மேல் இருக்கும் மரங்களற்ற  கீழ்நிலைத்தாவரங்கள்,சிறு செடிகள்/ புற்கள்  மட்டும் இருக்கிற/ பாறைப்பகுதி.

      Felted-Having interlocked hairs to the extent of being matted- பின்னிப்பிணைந்த மென்மயிர்களின் பாய் போன்ற அமைப்பு.

      Female flower-(Pistillate flower), the flower which contains only the female reproduction part. It is the only collection of carpels and stamens (male reproductive part) that is absent. Such flowers are unisexual female flowers.-பெண் மலர் ஒருபால் மலர், மகரந்தங்கள் இல்லாத சூலகம்  கொண்டிருக்கும் மலர்.

      Fen- Low-lying wet land with grassy vegetation; usually is a transition zone between land and water. Synonyms. fenland, fenland, marsh, marsh, marshland- தாழ்ந்த சேற்று நிலம்’

      Fence-A line of wooden or metal posts joined by wood, wire, metal, etc. to divide  landor to keep in animals.-நிலத்தைப் பகுதிகளாகப் பிரிப்பதற்காக அல்லது விலங்குகளை உள்ளிட்டுக் காப்புச் செய்வதற்காக அமைக்கப்படும், மரம், கம்பி, உலோகம், முதலியவற்றால் இணைக்கப்பட்ட மர அல்லது உலோகக் கம்பங்களின் வரிசை; வேலி.

      Fenestra- Window, opening- திறப்பு, சாளரம்

      Fenestrate-Having translucent or transparent areas that let light through; this variously affects the behavior of animal visitors or permits photosynthesis in many arid-region plants that grow only to the soil surface. Also refers loosely to perforations, for which perforate is the more precise term- துளைகளும் திறப்பும் கொண்டிருக்கிற.

      Fenestratus- Windowed, provided with openings; with broad, window like openings, a more extreme condition than perforate: Pierced with holes, as the septum in some Cruciferae- சாளரங்களை ஒத்த திறப்பு அல்லது துளை கொண்டிருக்கிற.

      Fenestrella- a little opening or window.- சிறு திறப்பு, சிறிய வாயில்.

      Fenestrellatus- A little opening or window- சிறு திறப்பு

      Fenestrelliformis- In the shape of a little window; window-like, such as an opening- சிறு வாசல் போலிருக்கிற, சிறிய சாளரம் போன்ற வடிவம்

      Feneus- hay-like, like hay- வைக்கோல் போன்ற

      Fenney-   Muddy,dirty, filthy-கலங்கிய, சகதியான

      Fenny-  Loving or growing in marshes -சதுப்பு நிலத்தில் வாழ்கிற, சதுப்புப் பகுதிகளை விரும்புகிற.

      Fenum- Hay, grass cut and cured for fodder-தீவனத்திறகாக வெட்டப்பட்ட, பதப்படுத்தப்பட்டபுல் அல்லது வைக்கோல்

      Fere-nearly- Almost, for the most part, about, virtually; approximately; (but not in the sense of ‘usually’ or ‘mostly- ஏறக்குறைய, தோராயமாக

      Ferens-Carry, bear, bring- கொண்டிருக்கிற, அளிக்கிற, வைத்திருக்கிற.

      Ferreus-Iron, relating to iron- இரும்பு தொடர்பான, இரும்புக்குரிய, இரும்பு அடங்கிய.

      Ferruginescens- Becoming the color of rust, rusty-red.செந்துருவின் நிறமாகிற.(Bryoerythrophyllum ferruginascens )

      Ferrugineum- The rust-redcolor – செந்துரு நிறம்.(Rhododendron ferrugineum)

      Ferrugineus- The color of iron-rust, dark-red, rusty, light brown with a little mixture of red; the taste of iron- அடர் சிவப்பு நிறம், செந்துருவின் நிறம், சிவபு கலந்த பழுப்பு நிறம், இரும்பின் சுவை.

      Ferruginous-Ruddy or rust-colored- செந்துருவின் நிறம்.

      Ferrugo-iron rust-இரும்புத்துரு

      Ferrumequinum-A horseshoe- குதிரை லாட வடிவம்

      Ferrum-iron-இரும்பு.

      Fertile -Capable of producing fruit; of flowers when they produce seed, or of anthers containing pollen, Capable of bearing seeds or pollen, capable of producing offspring ; (of land) having nutrients capable of sustaining an abundant growth of plants- விதைகள் அல்லது மகரந்தங்களை கொண்டிருக்கிற,  வளமான, செழிப்பான, வளமான, இனப்பெருக்கமிக்க,   நிறைதிறமுடைய,   வளமிக்க.

      Fertilization- The union of male and female gametes during sexual reproduction, fertilization, impregnation- கருவுறுதல், கருச்சேர்க்கை, வளமாக்கல்,

      Fertilized-Made fruitful, fertilized- கருவுற்ற.

      Ferula- The thin or slender branch of a tree;சிறுகிளை- பிரம்பு, ஆணைக்கோல்

      Fervens-Be boiling hot- அதி வெப்பமான, சுடர் விட்டு ஒளிர்கிற

      Festinus-Haste, hurry, speed- விரைவான

      Fetens- having a bad smell, stinking, to stink, to smell badly, the whole herb strongly stinking, especially the root. கெடுமணம் கொண்டிருக்கிற(வேரைக்குறிப்பது).

      Fetid -An offensive odour- கெடுமணம்

      Fetid-stinking- நாற்றமடிக்கிற

      Fetidus-Disgusting; see stinking; see putrid; cf. graveolens,-entis   ‘strong-smelling.’Sterculia foetida; Thalictrum foetidum; Ticoria foetida- நாற்றமடிக்கிற.

      Fetor- an offensive smell, a stench; foulness, noisomeness- முடை, புழுங்கிய நாற்றம்.

      Fetulentus- Stinking- நாற்றமடிக்கிற.

      Fetus-Unborn, embryo- கரு, கருவில் இருக்கும் சிசு, முதிர்கரு

      Fex- Excrement, solid motions-கழிவு, கழிவுப்பொருள், எரு, சாணம், வண்டல், மண்டி.

      Fiber- A fiber, filament, நார், நாரிழை.

      Fiber cell- Slender cells, many times longer than they are wide, A type of cell that is found in sclerenchyma; it is much elongated, and dies soon after an extensive modification of its cell wall. The cell wall is usually thickly lignified but is sometimes gelatinous. நாரிழை.

      Fibered- Multifibris, with many fibers- நார் கொண்டிருக்கிற,

      Fibra- Sheathing leaf, bade (of grasses, etc.) One of the subdivisions of a plant’s root- புல்தாள் உறை, வேரின் சிறுகிளை.

      Fibrate- Fibrous.-நார்த்தன்மைய,நாருருவான

      Fibril- A very small fiber; the roots of Lichens; any kind of small thread-shaped root; also applied occasionally among Fungals to the stipe; the fine, fiber-like wall thickenings in hyaline cells and sometimes cortical cells of Sphagnum; (in fungi) “a minute fiber, thin and threadlike; see ‘fibrillose- நுண்ணிழை

      Fibriliformis-ஸ்haped like a fibril-இழை போன்ற தோற்றமுடைய.

      Fibrilliger-Fibril-bearing, forming fibrils-இழை உருவாக்கம், இழை கொண்டிருக்கிற.

      Fibrillose -Having small fibres- நுண்ணிழைகள் கொண்டிருக்கிற.

      Fibrillosus-Covered with firm thin fibers, hairy- இழைகளால் சூழப்பட்ட, தூவிகள் கொண்ட.

      Fibrillula-a very small fiber-மிக நுண்ணிய இழை

      Fibrillulosus- With very small fibers (fibrilules) -நுண்ணிழைகொண்டிருக்கிற.

      Fibrous roots – A branched root system, with all of the branches of about equal thickness- வேர்த்தூவிகள், சல்லிவேர், சிம்புவேர், வேரிழை

      Fibrous- நாரியல்பு,நார்த்தன்மையுள்ள,நார்ச்சத்து நிறைந்த,இழைம, நார்த்தன்மையுடைய,நாருடைய, சிம்புவேர்போன்ற,நார்போன்ற

      Ficulneus- Of the fig or fig tree-அத்தி மரத்தை குறிப்பது

      Ficus- Any of a genus (Ficus) of chiefly tropical trees, shrubs, and woody vines of the mulberry family that have deciduous or evergreen leaves- அத்தி.

      Fiddle-(of a leaf shape) Having rounded ends and a contracted center-சுருளி இலை, சுருள் இலை, நுனி இலைச்சுருள்.

      Fidus- Divided (usually within the outer third of the structure or organ)- பிளந்த, பிளவுற்ற.

      Fields-  An area of land on a farm, usually surrounded by fences or walls, used for growing crops or keeping animals in- சாகுபடிக்கான வயல்,நிலம், புலம், களம்,

      Filament- The stalk that supports the pollen bearing anther in the male reproductive organ (stamen) of a flower; a long strand of similar cells joined end to end, as found, for example, in certain bacteria, algae, and fungi- இழை, மகரந்தத்தாள்.

      Filamentous- Like a filament; thread-like- இழையுரு, நாருரு.

      Filbert-  small nut-bearing tree much grown in Europe. synonyms:  small nut-bearing tree much grown in Europe. synonyms: Corylus avellana, Corylus avellana grandis, cobnut. hazel, hazelnut, hazelnut tree., cobnut. hazel, hazelnut, hazelnut tree- பழுப்பு நீல நிறமுள்ள கொட்டைவகை, கொட்டைவகை தரும் மரம், உண் கொட்டை(Hazelnuts)

      Filiform -Thread-like, e.g. stamen filaments or leaf shapes.-  கயிற்றுவடிவம், நூல்போன்ற,சாட்டை அமைப்பு, இழையுரு.

      Filum- A threadlike structure; filament- கயறு போன்ற, நூல், இழை

      Fimbria- A natural prolongation or projection from a part of an organism either animal or plant.-மெல்லிழை,விளிம்பு மயி.ர்

      Fimbriae- Hair-like appendages,Slender, hair-like projection -விளிம்பிழை,விளிம்புக் கீற்று,இதழ் விளிம்பு

      Fimbriate- Fringed, usually with hairs- நுண்புற இழைகள், புற நுண் இழைகள், சீர்கொசுவமான,விளிம்பில் மயிரிழையுடைய.

      Fimbrillate- Bordered with a minute fringe- நுண் விளிம்பு கொண்டிருக்கிற.

      Fimbriolate- Having a border of hairs or filiform processes-விளிம்பில் மயிரடர்ந்த,

      Fimentum- A dungheap-சாணிக்குவியல்

      Fimetarius-  A dungheap fungus, on cattle dung-சாணத்தில் வளர்கின்ற, சாணப்பூஞ்சை.

      Fimus- Dung, compost, manure, excrement, muck-கால்நடைகளின் சாணம், குதிரைச்சாணம், மாட்டுச்சாணம், சாண எரு.

      Fine-  superior in kind, quality, or appearance : excellent-நேர்த்தி, உயர்ந்த, செம்மை, நயம்

      Fissilis-capable of or prone to being split or divided in the direction of the grain or along natural planes of cleavage-உடையும்/பிளவுறும் இயல்பு கொண்டிருக்கிற.

      Fission-The splitting of a unicellular organism into two or more separate daughter cells-  இரு பிளவு, பிளத்தல்.

      Fissiparous – (of an organism) reproducing by fission-பிளவுற்று இனம்பெருக்குகிற, பிளவுண்டாக்குகிற.

      Fissure -a split or crack; a line or opening of dehiscence- வெடிப்பு,பிளவு,பள்ளம்,மடிப்பு,பிளப்பு,மென்பிளவு

      Fissured-  a long narrow slit or groove that divides an organ into lobes-நீள் பிளவு.

      Fissus- cleft, split or divided half-way; separated; split- பிளவு, வெடிப்பு.

      Fistula-A tube-shaped cavity,a pipe, tube, such as a water pipe,( tubular vessels; a hollow reed-stalk, a reed, cane)- புழை.

      Fistulose-Hollow; usually applied to a tube-shaped cavity, as in a reed- உள்ளீடற்ற .

      Flabby – Not strong or robust; incapable of exertion or endurance- தளர்வான,சுருக்கம் விழுந்த.

      Flabellate-Fan-shaped, e.g. a flabellate (fan-shaped) leaf-விசிறி வடிவம்(இலை)

      Flabellatim – Shaped like a fan- விசிறி வடிவம்

      Flabellatus – Ffan-shaped colonies.  Lycopodium flabelliforme Fern. (fan-shaped)- விசிறி வடிவம்.

      Flaccid -Out of condition; not strong or robust; incapable of exertion or endurance- தளர்வு, மெலிந்த, தளர்தசை, மென்மையானது.

      Flagellaris – With flagella or whips.- கசையிழை கொண்டிருக்கிற.

      Flagellum- A lash-like appendage used for locomotion (e.g., in sperm cells and some bacteria and protozoa)-கசையிழை

      Flavedo -The colored outer layer of the rind of a citrus fruit-எலுமிச்சைக் குடும்பக்கனிகளின்   கடினமான வெளிப்புறம்.

      Flavescent – Yellowish- மஞ்சளாக மாறுகிற, மஞ்சள் சாயலுள்ள, சிறிது மஞ்சளான.

      Flax -Plant of the genus Linum that is cultivated for its seeds and for the fibers of its stem- ஆளி விதை-ஆளிச்செடி.(Linum usitatissimum)

      Flaxen – “made of flax” or “the color of flax.” Flax is a plant used to make a linen-like material also called flax, and flaxen originally described things made of this fabric. சணலாலான, சணல்சார்ந்த, சணல் போன்ற நிறமுடைய, இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான.

      Fleshy-Thick and pulpy -கொழுத்த,சதைப்பற்றுள்ள,சதைப்பிடிப்பான.

      Flexistyly- Depending on the degree of maturation of the stamens, the style moves up or down (cataflexistyle or (ana-)hyperflexisyle) – மகரந்தத் தாள்களின் முதிர்வுக்கேற்ப அசையும் சூல்நுனி.

      Flexuose- Bent alternately in different directions; zigzag- நெளிவரி வடிவம்.

      Flexuous -Curved or bent- வளைந்த, வளைவுகள் நிரம்பிய.

      Flinty – Very hard -கடினமான.

      Floccose- Bearing tufts of long and tangled hairs, Having a soft and wooly covering of hairs.- குஞ்சப் பூப்பு, குஞ்சம் கொண்டிருக்கிற, மென் மயிரடர்ந்த.

      Floccosus -Having or covered with tufts of soft woolly hairs that are often deciduous – குஞ்சம் போன்ற அடர்ந்த சிக்கலான மயிர்களால் சூழப்பட்ட

      Flocculent -Having a fluffy character or appearance-தூள்ம,திரைப்பிகள்.

      Flocculose – Finely floccose, full of small flocks or tufts of wool or soft hairs- மென் தூவிகள் நிறைந்த.

      Flocculus -A small loosely aggregated mass-கம்பளி மயிர்த்திரள் போன்ற சிறு பொருட்த்தொகுதி,

      Floccus -A small woolly tuft of hair- மெல்லிழைத்திரள்.

      Flock-Clump, cluster-குவியல், மயிர்க்குஞ்சம்.

      Flora -All the plants of a particular place or from a particular time in history-(ஒரு காலகட்டத்தில்) குறிப்பிட்ட நிலப்பரப்பைச்சேர்ந்த தாவரவர்க்கம், தாவர வளம்.

      Floral diagram- A graphic representation of the structure of a flower. It shows the number of floral organs, their arrangement and fusion. Different parts of the flower are represented by their respective symbols- மலர்ச்சித்திரம்.

      Floral envelope-The part of a flower that surrounds the stamens and pistil: the calyx and corolla (considered together) or the perianth (அல்லியும் புல்லியும் இணைந்த) அதழ் வட்டம்.

      Floral formula-A description of flower structure using numbers, letters, and various symbols-  எண்கள், குறியீடுகள் மற்றும் எழுத்துக்களால் மலரின் அமைப்பைச்சுட்டும் மலர்ச்சூத்திரம்.

      Floral leaves- Any of the modified leaves (as a sepal or petal) forming the perianth of a flower- அதழாக மாற்றமடைந்திருக்கும் மலரின் அல்லி அல்லது புல்லி.

      Floral tube -An imprecise term sometimes used as a synonym of hypanthium, corolla tube, or calyx tube- அல்லி அல்லது புல்லிக்குழாயை குறிப்பது.

      Floral-of, relating to, or depicting flowers; a floral display; a floral design.  of or relating to a flora; floral diversity -மலர்களுக்குரிய

      Florentia–Blossoming- மலர்தல்

      Florentinus -to blossom – மலர்தல்.

      Floret-A reduced flower; for example flowers in the Asteraceae (sunflower) or Poaceae (grass) families– a small flower. especially : one of the small flowers forming the head of a composite plant. A cluster of flower buds separated from a head especially when used as food, small flower, especially one of the small flowers that is part of a larger flower-கொத்துப்பூவின் கூறான சிறு மலர், சிறு மலர். மஞ்சரியின் சிறுமலர், மலர்ப்பிரிவு, குறும்பூ.

      Floricane -A flowering and fruiting stem or cane of a plant such as the bramble-மலர்க்காம்பு, கனிக்காம்பு

      Florid  -Very flowery in style- பூவளமிக்க, பூவொத்த, பூவனப்புடைய, பகட்டொளி வண்ணம் வாய்ந்த, செக்கச்சிவந்த மலர்களால் அணிசெய்யப்பட்ட, மலர்போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற,  

      Floridanus –  Floridanus – ஃப்ளோரிடாவைச் சேர்ந்த.

      Florifer -Bearing flowers, flowering,flower-bearing- மலர்களைத் தோற்றுவிக்கிற, மலர்வளத்துக்குரிய.

      Floriferous-(of a plant) producing many flowers-மிகையாக மலர்களை தோற்றுவிப்பது.

      Floriparus -Producing secondary or supplementary flowers rather than fruits-கனிகளைக்காட்டிலும் அதிக மலர்களைத் தோற்றுவிப்பது.

      Florist-A person who has a shop that sells flowers-மலர்பண்ணை வளர்ப்பவர், பூ விற்பவர், மலர் வகைகளை ஆராயும் மாணவர்.

      Floruit- the time when the person was known to be active, and an exact birth or death date isn’t known-பிறந்தநாளும் இறந்தநாளும் சரியாகத் தெரியாத போது குறிப்பிடப்படும் வாழ்வுக்காலம்.

      Florula – The flora of a small single environment- மிகச்சிறிய நிலப்பகுதியின் தாவர வகைகள்.

      Flosculus -Flowery ornament- மலரணி

      Flower -The reproductive structure of a plant; usually with sepals, petals, stamens and a pistil- மலர்

      Fluted- Furrowed or grooved- வடு, பள்ளம், தடம் கொண்டது.

      Fluxus -Flowing- ஒழுகுதல், வழிதல்.

      Fodina -A place from which a mineral is dug; mine, pit- கனிமங்கள் கிடைக்கும் சுரங்கம், குழி.

      Foecundus – Fertile, productive of offspring; fruitful- வளமான.

      Foedus Offensive, foul- நாற்றம்.

      Foenum – Feeding, food, nourishment, fodder-உணவு, தீவனம், சத்து.

      Foetidus -That has an ill smell, evil-smelling, stinking, fetid; foul; having a disagreeable smell of any kind-கெடுமணம் கொண்ட.

      Foetor -A distinctive odour that is offensively unpleasant- கெடுமணம்.

      Foetulentus -Stinking of dung, with the odor of dung- மலநாற்றம்.

      Foetus -The action of bearing of young; young, offspring, progeny- முதிர் கரு, முட்டையின் முதிர் கருமுனை, கரு.

      Foetutina – Dungheap, dunghill- சாணக்குத்தாரம், மலக்குவியல்.

      Foliaceous -Leaf-like in appearance- இலை போன்ற.

      Foliage- Leaves  main organ of photosynthesis and transpiration in higher plants- இலைத்தொகுதி, இலைகளின் திரள், இலைச்செறிவு.

      Foliaris – Relating to the leaf – இலை தொடர்பான

      Foliate-Preceded by a number to signify having a certain number of leaflets, e.g. 3-foliate means “having three leaflets- இலைகளின் எண்ணிக்கையை குறிக்கும் எண்களுக்கு பின்னொட்டாக வரும் சொல்.

      Foliatura -Provided with leaves, leaf-bearing, leafy.-இலைகொண்டிருக்கிற, இலைகளாலான.

      Foliatus  -Provided with leaves, leaf-bearing, leafy- இலை கொண்டிருக்கிற.

      Foliicolous -A growth habit of certain lichens, algae, and fungi that prefer to grow on the leaves of vascular plants- இலைகளின் மீது வளர்கின்ற லைக்கன்கள்,பாசிகள் மற்றும் பூஞ்சைகளை குறிப்பது.

      Foliolatus -Provided with leaflets-சிற்றிலை கொண்டிருக்கிற.

      Foliole -A small, leaf-like appendage on the front or back, each of the leaflike structures that together make up a compound leaf- சிற்றிலை  நீட்சி.

      Foliolum -Having or relating to leaflets- இலைகொண்டிருக்கிற, இலை தொடர்பான.

      Foliose- Leaf-like; flattened like a leaf- இலைவடிவம், தட்டையாக இலை போல,

      Foliosus – Leafy, full of leaves, many-leaved; covered closely with leaves- இலைச்செறிவு.

      Follicle- A fruit with one carpel containing few to several seeds, splits along one line of dehiscence at maturity, a dry unilocular fruit formed from one carpel, containing two or more seeds, A dry fruit formed from one carpel splitting along a single suture to which the seeds are attached- அடிப்புறமாக வெடிக்கும், (ஒருபுற) உலர் வெடிகனி (எருக்கின் கனி).

      Fontanus – Growing in or by springs or a spring of water; Pertaining to springs or fountains; growing in fast-running water -நீரூற்றுகளின் அருகில் வளர்கின்ற, ஓடும் நீரில் வளர்கின்ற.

      Fontinalis – A genus of submerged aquatic mosses belonging to the subclass Bryidae., நீர் வாழ் படுவப்பாசியின் வகை.

      Footstalk – A small supporting stalk in plants; a pedicel, peduncle, or pedicle.இலைக்காம்பு, மலர்க்காம்பு, மஞ்சரிக்காம்பு.

      Foot-the lower part of some plant structures, as of a developing moss sporophyte embedded in the parental tissue. a unit of length equal to one third of a yard or 12 inches.- அடிப்பகுதி, இணைப்புப்பகுதி,

      Foramen- An aperture through the integuments, allowing the passage of the pollen tubes to the nucleus- திறப்பு, புழை ஊடுசெல் வழி.

      Foraminatus –  Provided with foramina, with openings or aperatures- திறப்புகள் கொண்டிருக்கிற, 

      Foraminosus – Perforated by holes , full of holes-  துளை கொண்டிருக்கிற.

      Foraminula-  An opening, orifice, or short passage, as in the integument of the ovule of a plant.-சூலகத்தினுள் நுழையும் நுண்திறப்பு.(மகரந்தக்குழாய் கருவுறுதலின் போது நுழையும் வழி)

      Foraminulatus -Provided with or covered with foraminuli-பல வழிகள், திறப்புகள், வாயில்கள் கொண்டிருக்கிற, 

      Forb- A non-grass like herb- an herbaceous flowering plant that is not a graminoid, Any non-woody flowering plant that is not a grass, sedge, or rush- அகலிலை மூலிகை

      Forest- Vegetation dominated by trees with single trunks, including closely arranged trees with or without an understory of shrubs and herbs. கானகம், வனம், காடு.

      Forester -Someone trained in forestry- கானகப் பணியாளர்,கானக அலுவலர், வனப்பாதுகாவலர், வளர் மரங்களைக் கவனிப்பவர், காட்டில் வாழ்பவர், காட்டில் வாழ்வது, கானியல் வல்லுனர்.

      Forimicarius- The ant colony- எறும்புக்கூட்டம்.

      Fork- The act of branching out or dividing into branches- கிளை,அடிமரக்கவை.

      Forked-Divided into two more or less equal branches- இரண்டாகப்பிளவுற்ற.

      Forma (in common usage, form)- A taxonomic category subordinate to species and within the taxonomic hierarchy, below variety (varietas), and usually differentiated by a minor character- வகைப்பாட்டு வரிசையில் ஒரு படிநிலை.

      Formica – A genus of ants of the family Formicidae- எறும்புகளின் பேரினம்.

      Formicarianus -Those plants possessing saccharine fluids, thus attracting ants- எறும்புகளை கவரும் இனிப்புத் திரவத்தை சுரக்கும் தாவரங்கள்.

      Formicarium – An artificial ant nest arranged for observation or study of the activities of the insects-எறும்புகளை ஆராயும் பொருட்டு உருவக்கிய செயற்கைக்கூடு/ புற்று.

      Formicosus-f Full of ants-றும்புகளின் நிரை 

      Fornicatus – Arched, provided with small arched scale-like appendages in the corolla-tube- அல்லிக்குழலின் வளைந்த செதில் போன்ற நீட்சி

      Fornix – An arched bundle of white fiber-வளைவு,படலக்குழி.

      Fovea -A small pit or depression-area consisting of a small depression- சிறு குழி.

      Fovens – Nurturing,  surrounding, in a protective or nurturing sense- வளர்க்கிற,பாதுகாக்கிற.

      Foveola -The perithecium of certain Fungus – சில வகைப் பூஞ்சைகளின் குடுவை வடிவ கனியுறுப்பு.

      Foveolate -Having regular tiny pits. (Compare faveolate) – நுண் குழிகள் கொண்டிருக்கிற.

      Foveolatus -Minutely or slightly pitted; marked with small pitting, delicately pitted; dimpled- சிறு குழி, நுண் குழிவு

      Fovilla -One of the fine granules in the protoplasm of a pollen grain-மகரந்தத்தின் உள்ளிருக்கும் சிறு குருணை.

      Foxglove -Any plant of the genus Digitalis. especially : a common European biennial or perennial (D. purpurea) cultivated for its showy racemes of dotted white or purple tubular flowers and as a source of digitalis-கையுறை விரல்கள் போன்ற வடிவத்தில் இளஞ்சிவப்பு-ஊதா அல்லது வெள்ளையில் கூர்முனைகளைக் கொண்ட மலர்களை அளிக்கும்  தாவரம். இது டிஜிட்டாலிஸ் என்ற மருந்தின் ஆதாரம்.

      Frankincense – An aromatic gum resin obtained from various trees in the genus Boswellia. frankincense. Also called: olibanum-சாம்பிராணி. குங்கிலியம்.

      Fraxinetum – An association of ash-trees- பிராக்சினஸ் மரக்கூட்டம்

      Fraxinin – A principle existing in the bark of the ash-பிராக்சினஸ் மரப்பட்டையின் வேதிப்பொருள்.

      Fraxinus -The common ash (Fraxinus excelsior), of the Oleaceae family, is also called the “European ash”. Its name comes from the Greek word “phraxis “, which means “hedge” and the Latin word “fraxinus “, a word that means “lightning”, for when it grows in isolated conditions, this tree is reputed to attract lightning. பிராக்ஸினஸ் மரம்.

      Freckled- Freckles-  Flat, circular spots on the skin of a fruit that typically range in the size of the head of a nail and may be various colors. Freckles on fruits may be caused by infections by plant pathogens, or by physiological processes such as ripening or aging- நோய்வாய்ப்பட்ட (பப்பாளி போன்ற) கனிகளின் மேல் தோன்றும்  பல நிறங்களிலான சிறு வட்டத்திட்டுகள், புருடுகள். 

      Free central -(of placentation) Ovules attached to a free-standing column in the center of a unilocular ovary-தனிமைய சூலொட்டு.

      Free- Not united with other organs of the same type; not attached at one end- இணைந்திருக்காத.(மகரந்த தாள்களை, சூலகங்களை குறிப்பது)

      Frigescens – Becoming cold.

      Fringed-  With hairs or bristles on the margin- ஒரம் அல்லது விளிம்பில் தூவிகள் கொண்டிருப்பது.

      Fritillus -Checker-board or dice-box, referring to markings on perianth of some species- சில வகை தாவரங்களின் அதழ்களில் இருக்கும் வரிகள்.

      Frond -The leaf of a fern, cycad, or palm- பெரணியிலை.

      Frondescentia- The condition or period of unfolding of leaves- இலைகள் சுருளவிழும் கால அளவு. 

      Frondose – Bearing fronds : resembling a frond- பெரணியிலை போன்ற.

      Frondosus -Leafy, leaf-like, leaf-bearing, with well-developed leaves, full of leaves; closely and regularly branched in one plane, as in a fern frond.

      Frondula -Division of a pinnate frond- பெரணியிலையின் பகுதி

      Fruct -The combining form fruct– is used like a prefix meaning “fruit.” It is very rarely used in scientific terms, especially in botany-கனி என்பதைக் குறிக்கும் முன்னொட்டு

      Fructicolous -Living on fruit- கனியிலிருக்கிற.

      Fructifer – Fruit-bearing-கனி கொண்டிருக்கிற

      Fructification-Organs of fruiting (especially the reproductive parts of ferns and mosses- கீழ்நிலைத்தாவரங்களின் இனப்பெருக்க உறுப்புக்களின் தொகுதி.

      Fructus -Fruit- கனி

      Frugifer -Fruit-bearing- கனி கொண்டிருக்கிற கனியளிக்கிற,

      Frugiparens-an animal that thrives mostly on raw fruits or succulent fruit-like produce of plants such as roots, shoots, nuts and seeds. (Approximately 20% of mammalian herbivores eat fruit)- பழந்தின்னி உயிரி. 

      Frugiparus -Fruit-bearing- கனிகொண்டிருக்கிற,

      Fruit -A ripened ovary and associated structures- கனிந்த கருவுற்ற சூலகம்-( A seed-bearing structure, present in all angiosperms, formed from the mature ovary and sometimes associated floral parts upon fertilization).

      Fruiter- a tree producing fruit at a specified time or in a specified manner- கனி மரம்.

      Fruiterer- A person who deals in fruit.-பழமரம் வளர்ப்பவர்.

      Fruitstalk – The thin part of fruit that joins it to the plant or tree- கனிக்காம்பு.

      Frutectum -A place full of shrubs or bushes; shrubby association of species; a thicket- புதர்க்கூட்டம்

      Frutescens -Shrubby, somewhat or becoming shrubby or woody- புதர் போன்ற.

      Frutescent- Shrub-like (fruticose) or becoming shrub-like.

      Frutex -A plant or shrub with a woody stem-வன்மரத்தண்டு கொண்ட புதர்

      Fruticans -Shrubby” or “bushy -புதர் போன்ற.

      Fruticatus -Bushy, bristly, prickly- அடர்ந்த புதர்.

      Fruticetum -A collection of shrubs grown for ornament or study. வளர்க்கப்படும் புதர்க்கூட்டம்.

      Fruticose-Shrubby; having the branching character of a shrub.

      Fruticosus- having a shrubby often branched thallus that grows perpendicular to the substrate-அடர்ந்த புதர் போன்ற வளர்ச்சி.

      Fruticulosus-   Small shrub-சிறு புதர்ச்செடி.

      Fruticulus- A small shrub, shrublet- சிறு புதர்.

      Frux- Fruit,that part of a plant which consists of the ripened carpels and the parts adhering them-கனி

      Fugacious-  Plant parts that wither or fall off before the usual time, Disappearing, falling off, or withering. Compare persistent and caducous.நிலையற்ற- விரைந்தேடுகிற, எளிதில் மறைகிற, 

      Fugax- Short-lived; falling off, or perishing very rapidly- withering or falling off quickly- குறுகிய காலம் மட்டுமே இருக்கிற,விரைந்து வாடுகிற, விரைந்து உதிர்கிற.

      Fugitivus- Quickly disappearing; ‘evanescent,fugacious- fleeing away, fugitive, விரைந்து உதிர்கிற.

      Fulciens- Supporting, propping up, upholding; supporting or propping up anything; said of one organ which is placed beneath another- முட்டுக்கொடுக்கிற, தங்கிப்பிடிக்கிற.

      Fulcimen- Prop, support, pillar- முண்டு, முட்டு- ஆதாரக்கம்பம்.

      Fuliginosus-   Sooty or smoky, of the colour of soot; dull greyish-black or brown-புகைக்கரியின் நிறம்.

      Fuliginous-  Sooty; dusky-புகைக்கரி படிந்த, கருநிற, மங்கலான.

      Fuligo- A widely distributed genus of large slime molds with the sporangia gathered in an aethalium and the plasmodium commonly bright yellow- கோழைப்பூசணத்தின் பேரினம்.

      Fultus- Supported, upheld, propped up- முட்டுக்கொடுத்த.

      Fulvaster- Yellowish- மஞ்சள் நிறம்.

      Fulvescens- Yellowing, yellowish, tawny-மஞ்சள் நிறமான, பழுப்பு மஞ்சளான, தோல் பதனீட்டு நிறமான.

      Fulvus- Reddish-yellow-செம்மஞ்சள் நிறம்,

      Funarius- Relating to a rope- திருகிய கயறு போன்ற.

      Fundibulum- Funnel-shape – குழல் வடிவம்/புனல் வடிவம்.

      Fundus- The bottom of or part opposite the aperture of the internal surface of a hollow organ-அடிக்குழி.

      Funicle- The stalk that attaches an ovule or seed to the wall of the ovary-சூல்காம்பு.

      Funiculus-The stalk by which an ovule or seed is connected to the placenta in the ovary-சூல்காம்புள்ள.

      Funnel- An object that is wide at the top and narrow at the bottom, used for pouring liquid, powder, etc. into a small opening-மேற்பக்கம் அகன்று அடிப்பக்கம் குறுகலான, சிறிய திறப்புடைய கொள்கலங்களி்ல் திரவம், நுண்பொடி முதலியவற்றை ஊற்றுவதற்கு/கொட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்; புனல்.

      Funnel form- Having a form gradually widening from the base to the apex; funnel-shaped- புனல் வடிவம்.

      Funnel-shaped- A conical shape with a wider and a narrower opening at the two ends-புனல் வடிவான, ஊற்றுவாயினையுடைய,பெய்குழல், புகைவாயில்.

      Furca- An ingrowth of the thorax – கவடுள்ள கவை முள்போன்ற வளர்ச்சி. 

      Furcalis- Forked- பிளவுற்ற.

      Furcate -Forked, usually applied to a terminal division; with two long lobes – நுனிக்கிளைத்தல்,இரட்டைப்பிளவு.

      Furcatio- Something that is branched, the act or process of branching- கிளைத்தல்

      Furcatus- Branching like a fork,forked- கிளைத்த, பிளவுபட்ட.

      Furcellatus- Having a small forked notch at the apex- உச்சியில் பிளவுபட்ட முழைகொண்டிருக்கிற.

      Furcifer-Forked-பிளவுற்ற.

      Furciformis- Snow fungus, snow ear, silver ear fungus, white jelly mushroom-Tremella fuciformis என்னும் பனிப்பூஞ்சை

      Furfuraceus-Consisting of or covered with flaky particles-சொரசொரப்பான தோலுடைய, செதிளுடைய, பொடுகுபோன்ற, உமிபோன்ற செதிள்களால் மூடப்பட்ட.

      Fuscus-Dark, swarthy, dusky- கருமையான,இருண்ட,கரிய, கரு நிறம் கொண்ட.

      Fused-Joined together- இணைந்த.

      Fusiformis–Having a spindle-like shape that is wide in the middle and tapers at both ends-கதிர்க்கோல் வடிவான, இடைபெருத்து இருமுனைகளிலும் கூம்பியுள்ள.

      Fustis-A long stick, a knobbed stick, முழைகள் கொண்ட நீண்ட தடி, சிறு புடைப்புக்களையுடைய தடி.

      « Older posts

      © 2025 அதழ்

      Theme by Anders NorenUp ↑