சில நாட்களுக்கு முன்பு விஷ்ணுபுரம் குழுமம் நண்பர் சக்திவேல் என்னிடம் தாவரவியல் தொடர்பான ஒரு சந்தேகத்தை கேட்டார். 18 வருடங்கள் ஆகிவிட்டன நான் தாவரவியல் கற்பிக்கத் துவங்கி. திறமையான மாணவர்கள், தங்கப்பதக்கம் வாங்கியவர்கள், பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்கள் என்று பலர் இருந்திருக்கிறார்கள், இப்போதும் இருக்கிறார்கள், எனினும் இந்த சந்தேகத்தை ஒருவர் கூடக் கேட்டதில்லை.
பிற துறைகளை காட்டிலும் தாவரவியல் துறையில் இயற்கையோடு நெருக்கமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் எனினும் தாவரங்களுக்கு உயிர் இருக்கிறது என்பதையும் அவைகளையும் சக உயிரினங்களாக பார்க்க வேண்டும் என்பதையும் உணரும் தாவரவியலாளர்களை நான் சந்தித்ததில்லை. விதிவிலக்காக பனைப்பாதிரி காட்சன் மட்டும் இருக்கிறார் எனக்கு தெரிந்து. தாவரங்களை அப்படி சக உயிராக பாவித்துத் தான் சக்திவேல் என்னிடம் அந்த சந்தேகத்தை கேட்டார்.
தன் வீட்டு மனோரஞ்சித செடி இரவு முழுக்க விளக்கு ஒளியில் நனைந்து கொண்டிருப்பதை பார்த்துவிட்டு “ஒளிச்சேர்க்கைக்கு தாவரங்களுக்கு ஒளி அவசியம் ஆனால் இப்படி இரவிலும் அவற்றின் மீது இப்படி செயற்கை ஒளி விழுந்துகொண்டே இருந்தால், அவற்றிற்கு எந்த பாதிப்பும் இருக்காதா? நாம் உறங்க வேண்டிய இரவில் இப்படி வெளிச்சம் இருந்து கொண்டிருந்தால் எரிச்சலடைகிறோமே அப்படி அவற்றிற்கும் இருக்குமா” என்று சக்திவேல் கேட்டார். இந்த கேள்வியை கேட்கவும் அப்படி அவற்றின் கஷ்டங்களையும் நினைத்து பார்க்கவும் மனதில் கனிவு வேண்டும்.
பலருக்கு இல்லாத இதுதான் ’தாவரக் குருடு’, plant blindness எனப்படுகிறது. சாலை விபத்துகளின்போது அடிபட்டவர்களுக்கு உதவ, அவர்களுக்கு வருத்தப்பட, ஆம்புலன்ஸை அழைக்க, அவர்கள் குறித்து பேச என்று அநேகமாக பலர் இருக்கிறார்கள். ஒருமுறை இருசக்கர வாகன விபத்தொன்றில் குறுக்கே வந்த நாயும் அடிபட்டுவிட்டது. ஒரு இளைஞர் கடைசிக்கணத்தில் இருந்த அந்த நாய்க்கு தண்ணீர் புகட்டிக் கொண்டிருந்தார்.
ஆனால் நம்மில் பெரும்பாலானோர் மரம் வெட்டப்படுகையில் அதை ஒரு பொருட்டாகக் கூட நினைப்பதில்லை. கோவை பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்தின் போது நூற்றுக்கணக்கான பெருமரங்கள் வெட்டப்பட்டன. அவறைவெட்டி அகற்றும் பொருட்டு பேருந்துகள் சற்று நேரம் நிறுத்தப்படுகையில் பலரும் வாழைப்பழம் போல அவை அறுக்கப்படுவதை வியப்புடன் வேடிக்கை பார்த்தார்கள். பலர் கைக்கடிகாரத்தை பார்த்து நேரமாவதற்கு சலித்துகொண்டர்கள். வெகு சிலரே “இருக்கற மரத்தையும் வெட்டிட்டா இனி எப்படி மழை வருமெ”ன்று பேசிக்கொண்டார்கள், அங்கு நடந்து கொண்டிருப்பது ஒரு படுகொலை என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனெனில் தாவரங்கள் அலறுவதில்லை, ரத்தம் சிந்தவில்லை. எனவே அவற்றை மக்கள் கண்டுகொள்ளவில்லை
சமீபத்தில் நான் ஒரு கல்லூரியில் உரையாற்றுகையில் ஒரு அடர் காட்டில் இரண்டு டைனோசர்கள் இருக்கும் புகைப்படத்தை காட்டி ’என்ன தெரிகிறது’? என்று கேட்டேன். பார்வையாளர்கள் பலர் டைனோசர் என்று கூறினார்கள். ஒருவர் கூட அந்த காட்டில் பச்சை பசேலென்று டைனோசர்களை சுற்றி இருந்த மரங்கள், புதர்கள் சிறு செடிகளை பார்க்கவும், கவனிக்கவும், சொல்லவும் இல்லை. நகருதல் இல்லாமல் ஓரிடத்தில் இருப்பதால் தாவரங்களை அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கிறார்கள்.
அவையும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன என்பதையெல்லாம் நம்மில் பலர் அறிவதில்லை.
சக்திவேலின் சந்தேகத்துக்கு அப்போதே மகிழ்வுடன் பதில்களை அனுப்பி வைத்தேன்.
இப்படியான மிகை ஒளி, காலம் தப்பிய ஒளி தாவரங்களின் மீது பொழிந்து கொண்டே இருப்பது ஒளிமாசு எனப்படுகின்றது.
தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகள் உண்டு.இது photoperiodism எனப்படும் ஒவ்வொரு தாவரங்களுக்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை long day plants என்றும் குறைந்த நாட்டமுடையவை short day plants என்றும் இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை day neutral plants என்றும் வகைப்படுத்தப்படுகின்றன
இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழபத்துக்குள்ளாகின்றன.
விஷ்ணுபுரம் குழுமத்தில் ஒரு மருத்துவர் இந்த non 24 வகை பிரச்சனை உள்ளவர். உயிரி கடிகார கணக்கு பிறழ்ந்துவிட்டிருப்பதால் உறங்குவதில் அவருக்கிருக்கும் பிரச்சனை குறித்து ஜெ தளத்தில் அவர் கோவிட் தொற்று காலத்துக்கு முன்பு கடிதங்கள் எழுதி இருக்கிறார்
அவருக்கிருப்பதைபோலவே பிரச்சனைகள் தாவரங்களுக்கும் உண்டாகின்றன.
ஒளியின் அலைநீளம், அளவு மற்றும் ஒளி விழும் கால அளவு ஆகியவை தாவரங்களுக்கு நேரடியான பாதிப்பை உண்டாக்கும். ஒளிநாட்ட கணக்குகள் நிறமிகள் உருவாக்கம், இலை உதிர்தல், இலைத்துளை திறந்து மூடுதல்,இலை மொட்டுக்கள் உருவாதல், மகரந்த சேர்க்கை, இனப்பெருக்கம் மற்றும் விதை உறக்கம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பில் இருப்பதால் மிகை ஒளி இவை அனைத்தையும் பாதிக்கும்.
இரவில் மலரும் நிஷாகந்தி போன்ற மலர்களும், அவற்றை மென்னொளியில் மகரந்த சேர்க்ககை செய்யவரும் இரவாடிகளான பூச்சிகளும் இதனால் பாதிப்படைகின்றன
ஒவ்வொரு உயிருக்கும் , ஒரு செல் நுண்ணுயிரியாகட்டும், தாவரங்கள், மனிதர்கள் என அனைத்து உயிர்களுக்குமே இரவு பகலால் அமையும் அன்றாட, பருவகால மற்றும் சூரிய சந்திர சுழற்சிகளுக்கு ஏற்ப உடலியக்கம் மற்றும் பிற செயல்பாடுகள் நிகழ்கின்றன. தாவரங்களுக்கு ஒளி, வெப்பம், மழை ஆகியவை சமிக்ஞைகள். அவற்றைக்கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல். ஆகியவற்றைக் காலக்கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.
பகலில் ஒளி ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் அவற்றிற்கு இரவில் சுவாசிக்க வேண்டி இருக்கிறது.
காலை எழுந்து நாளை துவங்க அலாரம் வைத்துக்கொள்பவர்களும் அலாரம் ஒலி கேட்காமல் தூங்குபவர்களும் நம்மில் பலர் இருக்கையில், மாலை நான்கு மணிக்கே இலைகள் கூம்பி உறங்கும் தூங்கு வாகையை, மிகச்சரியாக மாலை 4 மணிக்கு மலரும் அந்தி மந்தாரையை, பெண் மலர்கள் கருவுற்றதை அறிந்து, மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் தென்னையின் ஆண் மலர்கள், இனி அவை இருந்தால் கனி உருவாக்கத்துக்கு செல்வாகும் ஆற்றல் தங்களுக்கும் பகிரப்பட்டு வீணாகும் என்று அனைத்தும் ஒரே சமயத்தில் உதிர்ந்து விடுவதையெல்லாம், கவனித்திருக்கும் சிலருக்கு மட்டுமாவது கொஞ்சம் தெரிந்திருக்கும் மிகை ஒளி மாசினால் தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளை குறித்து.
தாவரவியலில் Plant Biological Rhythms என்னும் மிக முக்கியமான உயிரியல் நிகழ்வில் மிகை ஒளியால் உண்டாகும் பாதிப்புகள் குறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடக்கவில்லை எனினும் கவனிப்புக்குள்ளாகி இருக்கிறது இந்த விஷயம்.நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று மெல்ல மெல்ல இந்த விஷயம் தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.
தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்.
ஒளி மாசு என்பது தேவையற்ற, பொருத்தமற்ற, அதிகப்படியான செயற்கை விளக்குகளின் ஒளிப்பொழிவை குறிக்கிறது.இரவு நேர அலங்கார விளக்குகளின் மிகையொளி, இரவுp போக்குவரத்தின் வாகன ஒளி. இரவின் நகர ஒளி (SkyGlow) ஆகியவை தாவரங்களுக்கு உண்டாக்கும் பிரச்சனைகள்தான் ஒளிமாசு.
எனினும் ஒளி போதாமல் இருக்கும், குளிர்காலங்களில் சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு இயற்கை ஒளிக்கு ஈடாக அளிக்கப்படும் செயற்கை ஒளி விளக்குகள் இந்த வகை மாசை உருவாக்குவதில்லை.
அது ஒரு சாகுபடி தொழில் நுட்பம். தாவரங்களை பிரியமான செல்லபிராணிகளை போல பழக்கி நமக்கு வேண்டியதை, வேண்டிய அளவில் எடுத்துக் கொள்ளும் வழிகளில் இதுவும் ஒன்று
தாவரங்களில் நடைபெறும் Photosynthesis, photoperiodism, photomorphogenesis, Phototropism ஆகியவற்றிற்கான வேறுபாட்டை அறிவதன் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்.
சூரிய ஒளியின் முழு நிறமாலை என்பது வானவில்லின் அனைத்து வண்ணங்களையும் கொண்டுள்ள சூரியனின் வெண்ணிற ஒளியைக் குறிக்கின்றது. சூரியன் அதன் வேறுபட்ட நிறங்களை பொருத்து, பல அளவிலான அலைநீளங்களில் கதிர்வீச்சை வெளியிடுகிறது, பூமியின் வளிமண்டலம் அதிலிருக்கும் புற ஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சுகளை தடுக்கிறது.
பூமியின் உயிர்களை நிலைநிறுத்தும் முதன்மை ஆதாரம் சூரிய கதிர்வீச்சுதான் அதிலும் தாவாங்களுக்கு சூரிய ஆற்றல் பலவிதங்களில் அத்தியாவசியமானது.சூரியன் அதன் வேறுபட்ட நிறங்களை பொருத்து, பல அளவிலான அலைநீளங்களில் கதிர்வீச்சை வெளியிடுகிறது, பூமியின் வளிமண்டலம் அதிலிருக்கும் புற ஊதா (UV) மற்றும் அகச்சிவப்பு (IR) கதிர்வீச்சுகளை தடுக்கிறது.
பூமியின் உயிர்களை நிலைநிறுத்தும் முதன்மை ஆதாரம் சூரிய கதிர்வீச்சுதான் அதிலும் தாவாங்களுக்கு சூரிய ஆற்றல் பலவிதங்களில் அத்தியாவசியமானது.
இதில் Photosynthesis என்பது ஒளியாற்றலைக்கொண்டு அவை உணவை தயாரித்து மாவுச்சத்தாக சேமித்து வைத்துக்கொள்வது.
Phototropism என்பது ஒளியை நோக்கி திரும்புதல் அல்லது வளர்தல். எளிய உதாரணமாக தென்னந்தோப்புகளில் மதில் ஓரமாக இருக்கும் மரங்கள் வெளியில் வளைந்து வளர்ந்திருப்பதை பார்த்திருப்போம். உள் பகுதிகளில் ஒளிக்கான போட்டி அதிகமாக இருப்பதால் அவை வெளியிலிருக்கும் ஒளியை நோக்கி வளரும், இந்த ’ஒளி நோக்கி வளருதலை; அடிப்படையாக கொண்டு தான் மியாவாக்கி காடு வளர்ப்பு முறை செயல்படுகிறது. மிகச்சிறிய நிலப்பகுதியில் நெருக்கமாக பல்வேறு உயரங்களில் வளரும் தாவரங்கள் வளருகையில் அவை பக்கவாட்டில் வளர வாய்ப்பில்லாமல் மேல் நோக்கி ஒளியை தேடி வெகு வேகமாக வளர்கின்றன. 3 வருடங்களில் குறிப்பிட்டு சொல்லும்படியான உயரத்தில் அங்கு தாவரங்களை காணமுடியும்.
Photoperiodism என்பது அந்த ஒளிமாசு கட்டுரையில் குறிப்பிட்டிருந்த ஒளி நாட்ட காலக்கணக்கு. ஒவ்வொரு வகை தாவரத்திற்கும் குறிப்பிட்ட அளவு பகல் நேர சூரிய ஒளி தேவைப்படும், சூரிய ஒளிக்கதிரில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்து அதற்கேற்ப தான் வாழ்வு சுழற்சியை அதாவது மலரும் காலம், கனி அளிக்கும் காலம் போன்றவற்றை தீர்மானிக்கும் தாவரங்களின் திறன்.
அதைக் கொண்டுதான் short day plants, long day plants, day neutral plants என்று குறைந்த பகல் நேர ஒளி போதுமானவை, நீண்ட ஒளி நேரம் தேவைப்படுபவை, இரண்டுக்கும் இடைப்பட்ட, ஒளிக்கால அளவை பொருட்படுத்தாமல் பூத்து காய்க்கும் (நெல், வெள்ளரி) போன்றவை என வேறுபடுகின்றன. இந்த ஒளிக்கால அளவில் உண்டாகும் வேறுபாடுகள் நிழல் மரங்களை நட்டு இயற்கையாகவும் சரி செய்யப்படுகின்றன.
உதாரணமாக இதைச் சொல்லலாம். சென்ற வாரம் நான் ஏற்காடு இந்திய காபி வாரியத்தின் காபி தோட்டங்களுக்கு சென்றிருந்தேன்.அங்கே வளரும் காபி செடிகளுக்கு 6 மணி நேர பகல் வெளிச்சம் போதுமானதாக இருக்கிறது எனவே காபிச்செடிகளுக்குள்ளும், தோட்ட விளிம்பிலும் சில்வர் ஓக் மற்றும் கல்யாண முருங்கை மரங்களை நட்டு வைத்திருக்கிறார்கள். அவற்றில் உயரமாக கிளைகளதிகமாக இல்லாமல் வளரும் சில்வர் ஒக் மரங்கள் நிரந்தர நிழலுக்கும் அவ்வபோது கத்தரித்து விடப்படும் கல்யாண முருங்கை மரங்கள் தற்காலிக நிழல் அளிக்கவும் பயன்படுகின்றனஅவ்வாறு சரியான கோணத்தில் குறிப்பிட்ட காலத்துக்கு நிழல் அளிக்கும்படியே அவை வளர்க்கப்படுகின்றன.
செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி செய்வதென்பது Photomorphogenesis என்பதை அடிப்படையாகக் கொண்டது. Photomorphogenesis என்பது ஒளிசார்ந்த உடல்வளர்ச்சி குறிப்பாக செல்கள் பிரிந்து வளர்வதற்கு தாவரங்கள் சார்ந்திருக்கும் குறிப்பிட்ட நிறத்திலிருக்கும் ஒளிக்கற்றையின் நீளம் என்று கொள்ளலாம்.
ஒளிக்கற்றையின் நிறம் மற்றும் நீளம் ஆகியவற்றில் இருக்கும் நுட்பமான மாறுபாட்டை புரிந்துகொண்டால் இதை புரிந்துகொள்ள முடியும். தாவரங்களுக்கு ஒளிச்சேர்க்கைக்கு பெரும்பாலும் சூரிய ஒளியின் நீலம் மற்றும் சிவப்பு ஒளி தேவைப்படுகிறது, ஆனால் மலர்வதற்கு அகச்சிவப்பு ஒளி தேவைப்படுகிறது. இப்படி தண்டின் நீளம் அதிகமாக ,இலைகளின் பச்சை நிறம் அடர்த்தியாக என்று பிரத்தியேக தேவைகள் அவற்றிற்கு உள்ளது
குளிர்காலங்களில் குறுகிய பகல் நேரமும் நீண்ட இரவு நேரமும் இருப்பதால் பகலின் போதாமையை இரவில் செயற்கை வெளிச்சம் கொண்டு ஈடுகட்டி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
இயற்கை ஒளியில் உண்டாகும் எதிர்பாராமைகள், குளிர்காலங்களில் உண்டாகும் போதாமைகளினால் விவசாய பயிர்களின் மகசூல் பாதிக்கப்படுவது உலகெங்கிலும் ஏற்படும் ஒன்று. துவக்க காலங்களில் இந்த குறைபாட்டை களையத்தான் பசுமைகுடில்களில் கட்டுப்படுத்தப்பட்ட காலநிலைகளில் பயிர் வளர்ப்பு செய்யப்பட்டது.
1860களில் செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்த ஆய்வுக் கட்டுரைகளை H.Mangon,E.Prilleux ஆகியோர் எழுதினர். எனினும் விரிவான வணிக ரீதியான பயிர் சாகுபடிக்கான செயற்கை வெளிச்ச பயன்பாடு 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் தான் பயன்பாட்டுக்கு வந்தது.
தற்போது கட்டுப்படுத்தப்பட சூழலில் குறிப்பிட்ட கால அளவுகளில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயற்கை விளக்கொளியில் பயிர் சாகுபடி என்பது மிக முக்கியமான தொழில் நுட்பமாகி விட்டிருக்கிறது
1809-ல் sir Humphry Davy வளைந்த செயற்கை ஒளிரும் மின்வீச்சு விளக்கை இதற்கெனவே உருவாகினார் . 1879 ல் தாமஸ் எடிசன் மின்விளக்குகளுக்கு பிறகு பல வகையில் பயிர் சாகுபடிக்கு பொருத்தமான செயற்கை விளக்குகளின் பயன்பாடு குறித்து சோதனை முயற்சிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டன பல மாதிரி விளக்குகள் உருவாக்கப்பட்டாலும் வணிகரீதியாக அவற்றை பயன்படுத்த முடியாத அளவுக்கு செலவு பிடித்த தொழில்நுட்பங்களாயிருந்தன அவையனைத்துமே.
’1901 லிருந்து 1936 வரையில் நடந்த பல ஆய்வுகளுக்கு பின்னர் மெர்குரி வாயு விளக்குகள் இந்த வகை பயன்பாட்டுக்கு பொருத்தமானவை என சொல்லப்பட்டது, எனினும் அவ்விளக்கொளி தாவர ஒளிச்சேர்க்கைக்கு பாதகமாயிருந்தது.இறுதியாக LED விளக்குகள் இவ்வாறான கட்டுப்படுத்தப் பட்ட சூழலில் நடைபெறும் விவசாயத்திற்கு பொருத்தமானவை என்று கண்டறியப்பட்டது.1960களில் இவை சந்தைப்படுத்தப்பட்டு மேலும் பல தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்களுக்கு உள்ளாகி தற்போது ஆகச்சிறந்த சாகுபடிக்கான செயற்கை விளக்குகளாக உபயோத்தில் இருக்கின்றன
அதிக சிவப்பு, அகச்சிவப்பு மற்றும் குறைந்த நீலநிறக் கற்றைகளை கொண்டவை, அதிக நீலக்கற்றைகளும் குறைந்த அகச்சிவப்பு கற்றைகள் கொண்டவை என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விளக்குகள் தற்போது கிடைக்கின்றன. சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தேவைக்கேற்ப இவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன
இவ்விளக்குகள் இயற்கை ஒளியுடன் கூடுதலாக துல்லியமாகக் காலக் கணக்குகள் கணக்கிடப்பட்டு அந்த நேரத்துக்கு மட்டுமே அளிக்கப்படுபவை. ஒளியின் தீவிரம், ஒளிக்கற்றையின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் தாவரத்துக்கும் செயற்கை விளக்குகளுக்குமான இடைவெளி துல்லியமாக கணிக்கப்பட்டு விளக்குகள் அமைக்கப்படுகின்றன.
இந்த வகையான செயற்கை விளக்குகள் தேவைப்படும்போது ஒளியின் கோணத்தை மாற்றியமைக்க எதுவாக் திருகு கம்பங்களில் அமைக்கப்படும். தற்போது இளஞ்சிவப்பு LED விளக்குகள் தாவர வளர்ச்சிக்கு மிகவும் உதவுவதாக கண்டறியப்பட்டிருக்கிறது.
இவ்வொளி தொடர்ந்து அளிக்கப்படுவதில்லை குளிர் நிரம்பிய, சூரிய ஒளி மிகக்குறைவாக இருக்கும் காலத்துக்கு மட்டும் அளிக்கப்படுகின்றன. இவற்றால் அந்த பயிர்களுக்கோ அல்லது மனிதர்களுக்கோ இதுவரை ஆபத்துகள் ஏதும் கவனிக்கும்படி கண்டறியப்படவில்லை.
சாகுபடி தொழில்நுட்பங்களில் ஒன்றான இதன் விளைவுகள் இதுவரை பெரிதாக ஆய்வுக்கு உள்ளாகவில்லை. சூழல் வெப்பம் அதிகமாகின்றது என்பதை மட்டும் இப்போதைக்கு கருத்தில் கொண்டிருக்கிறார்கள்
இந்த நிகழ்வில் வேதியியல் மற்றும் இயற்பியல் நுட்பங்களும் இருக்கின்றன. இந்த இணைப்பில் இருக்கும் கட்டுரை அவற்றை எளிமையாக விளக்குகிறது https://www.valoya.com/
செயற்கை ஒளியில் பயிர் சாகுபடி குறித்து மேலும் அறிய: https://www.agrivi.com/blog/