லோகமாதேவியின் பதிவுகள்

Month: January 2025

கேளாச்சங்கீதம்- ஜெ வின் சிறுகதை!

மீண்டும் je தளத்தில் ஒரு சிறுகதையின் மீள் வாசிப்பு. கேளாச்சங்கீதம்!

பரவசமும் பழைய நினைவுகளும் மகிழ்ச்சியுமாக வாசித்தேன். கதையில் நீலி அவுரிச்செடியும் வருவதால் கூடுதல் மகிழ்ச்சி. நீலியின் பல்வேறு மருத்துவப்பயன்களில் முதன்மையானது விஷம் முறிக்கும் அதன் தன்மைதான்.

நீலி என்பது Indigofera tinctoria என்னும் அவுரிச்செடி. காடுமேடெல்லாம் தரையில் அப்டர்ந்துவளரும் இதன் இலைகளை உலர்த்திக் கொள்ளை விலைக்கு தலைமுடிக்கான இயற்கைச்சாயமாக விற்கிறார்கள். நாமே எளிதாக நமது சுற்றுபுறத்தில் கிடைக்கும் இதை எடுத்து உலர்த்திப்பொடி செய்து உபயோகிக்கலாம்.

நான் இதன் நீலச்சாயம்குறித்தும் ஜீன்ஸ்துணிகளின் நீலநிறம் குறித்தும் விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்

கேளாச்சங்கீதம் வாசிக்கையில் நானே கதைசொல்லியாக, அணைஞ்சபெருமாளின் கூட வந்தவராக, கொச்சன் வைத்தியரிடம் கேள்விகள் கேட்டுக்கொண்டு இருந்தேனென்றும், இல்லையில்லை நான்தான் கணேசனென்றும் ஒரே சமயத்தில் தோன்றியது

கணேசனைப்போல,அன்பெனும், நேசமென்னும், காதலென்னும், பிரியமெனும் பிடியில் அகப்பட்டுக்கொண்டிருக்காதவர்கள், அந்த நஞ்சை அருந்தாதவர்கள்  இருக்கமுடியாதல்லவா? எவ்வளவு  விஷம் உள்ளே  போனதென்பதில்தான் வேறுபாடு இருக்க முடியும்

 “தேனுதான் தேனீயை ஒண்ணாச் சேந்து ஒற்றைக்கூடா வச்சிருக்குது. தேனீ தேனிலே பிறந்து வளருது. தேன் தேடி அலையுது. தேனிலே சாவுது… அந்த தேனுதான் இது. இது அமிர்த மதுரம். நோயா வரும். சாவா வரும். அப்பமும் இது மதுரம்தான்

நெஞ்சில் விஷம் நிறைந்து பூத்திருக்கிற, பெரும்பாறைகளை உச்சிமலையில் கட்டிவைத்திருக்கும் கொலைப்பகவதியின்  பூட்டில் சிக்கிக்கொண்டிருக்கும் கணேசனை பிரியமாக பார்த்துக்கொண்டிருந்தேன். அப்படி இனிய துயரில் இருப்பதும் ஒரு கொடுப்பினைதான்.லக்‌ஷ்மி மணிவண்ணன் சொல்லி இருப்பார் ஒரு கவிதையில்  தூய அன்பென்னும் துயர் என்று.

இப்படி ஒரு சம்பவம் என் வீட்டிலும் நடந்தது.  ஒரு பெண்ணின் பிரியத்தில் விழுந்த உறவுக்கார இளைஞர் ஒருவரை வீட்டுப் பெரியவர்கள் யாரோ  கைவிஷம் வைத்து விட்டதாக நம்பினார்கள். மருந்து வைப்பது என்று இங்கு சொல்வார்கள்

என் அப்பாவின் ஆசிரியரான ஒரு பெரியவரின்  குடும்பத்துக்கு சொந்தமான  இரட்டைக்குளம் பகவதி கோவிலில்  இதைக் கண்டுபிடிக்க முடியும் என்றுசொல்லப்பட்டது. சம்பந்தப்பட்டவரைத் தவிர மற்ற  எல்லோருமாக போனோம்.

கேரளாவில் ஒரு சின்னக் கிராமத்தில் கோவில். பெரியவருக்கு தள்ளாத வயது, ஆனாலும் கோவிலில்தான் இருந்தார். அவர் மகன் அங்கு பூசை செய்து கொண்டிருந்தார். தீர்த்தம் வழங்குகையில் எனக்கு மட்டும் செம்பிலிருந்த சிறு நந்தியாவட்டை மலர் கையில் விழுந்தது. ’’என்ன நட்சத்திரம் நீ’’ என்று அவர் என்னை அப்போது கேட்டது நினைவிருக்கிறது. பரணி என்றேன்

. …””நல்லாருப்பே. தேவி அருள் இருக்கு உனக்கு””….. என்றார்.

கோவில் பிரகாரத்தில் இருந்த சின்னச் சிலைக்கு பாலாபிஷேகம் செய்கையில் பாலின் நிறம் நீலமாக மாறினால் கைவிஷம் வைத்தது உறுதியாகும்.

வீட்டிலிருந்து பால் கொண்டு போயிருந்தோம் அது முருகன் சிலை என்றுதான் நினைவு பலவருடங்கள் ஆகிவிட்டன. எங்களுக்கு முன்பாக அதன் மீது வேறு சிலரும் வீட்டிலிருந்து கொண்டு வந்த பாலை ஊற்றினார்கள் வழிந்து அப்படியே  நிறம் மாறாமல் கீழே வந்தது. எங்களுக்கும் அப்படியேதான் வரும் என்று நினைத்திருந்தேன், கொஞ்சம் அசுவாரசியமாகக் கூட இருந்தேன் என்றும் சொல்லலாம். ஆனால் அந்த நின்ற கோலத்திலிருந்த சிறு கரிய சிலை மீதிருந்து   நாங்கள் கொண்டு வந்திருந்த பாலை ஊற்றுகையில நீலமாக கீழே வழிந்தது.

நம்பவே முடியாமல் திகைத்துபோய் பார்த்துக் கொண்டிருந்தேன் ’’அவரை அவர் வழியிலேயே விட்டுவிடுவதை தவிர வேறு வழியில்லை ’’என்று பெரியவர் சொன்னார். வாடகைக்காரில் போயிருந்தோம். வீடு திரும்பும் வரை சம்பந்தபட்டவரின் அம்மா ஒருவார்த்தை கூட பேசாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தார்.

கேளாச்ச்சங்கீதம் கேட்டவரை அப்படியேதான் விட்டுவிட்டோம் .

பேய்மிரட்டி!

இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய காரியம் . துக்கம் விசாரிக்க பொன்னாண்ட கவுண்டனூர் சென்றிருந்தேன். திரும்பி தொண்டாமுத்தூர் வழியே வரும்போது சாலையோரம் பேய்மிரட்டி என்கிற Anisomeles malabarica புதர்கள்அடர்த்தியாக வளர்ந்திருந்தன. காரை நிறுத்தி இறங்கினேன்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தச்செடியை மாணவர்களுக்கு கொடுக்க நீலகிரிசென்று பைக்காரா அணைக்காட்டுக்கருகில் இருந்து எடுத்து வருவோம். இப்போது வாய்க்கால் வரப்போரங்களில் எங்கும் காணமுடிகிறது.

தும்பைக்குடும்பத்தைச்சேர்ந்த இதன் இலைகள் வெகுட்டல் வாடை கொண்டவை. அதனாலேயே இதற்கு பேய்மிரட்டி, பேய் விரட்டி என்று பெயர். இது பெருந்தும்பை என்றும் அழைக்கப்படுகிறது.

மாந்த்ரீக பூஜைகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஒரு மருத்துவரின் அலுவலக அறையில் இதன் காய்ந்த குச்சிகள் ஒரு சிறு கட்டாக பூசைமாடத்தில் வைக்கப்பட்டிருந்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்,

பலர் இந்தச்செடியை தோட்டத்தில் வளர்த்தாலோ அல்லது இதன் காய்ந்த பாகங்களை வீட்டில் வைத்துக்கொண்டாலோ தீய சக்திகள் அண்டாது என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நான் வீட்டுத்தோட்டத்தில் இதை ஒரு மூலிகைத் தாவரமாகத்தான் வைத்திருக்கிறேன். தீய சக்திகள் அண்டாமலிருக்க மனிதர்களே இல்லாத தீவிலல்லவா வசிக்க வேண்டும்?

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் இது ஒரு காய்ச்சல் நிவாரணியாகவும், பசியுணர்வை தூண்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. (மருத்துவரின் அனுமதியும் பரிந்துரையுமில்லாமல் இதை நாமாக மருந்தாக எடுத்துக்கொள்ளவே கூடாது)

இதன் பசிய இலைகளின் கூர் நுனியை பஞ்சுத்திரியைப்போல அகல்விளக்குகளில் வைத்து எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். பச்சையின் சடசடப்பே இல்லாமல் திரியைபோலவே மணிக்கணக்கில் நின்றெரியும். இந்த சுடர் எரியும் வரைக்கும் கொசுபோன்ற பூச்சிகள் வருவதில்லை.

தொடர்ந்து பயன்படுத்தினால் ஆளையே கொல்லும் ஆல் அவுட் நச்சுத்திரவங்களைக் காட்டிலும் இப்படியான இயற்கைப் பூச்சி விரட்டிகளை நாம் எளிதில் பயன்படுத்தலாம்.

வீட்டில் இருப்பது ஒரே ஒரு சிறு செடி என்பதால் விளக்கெற்றவென்று இந்தப்புதர் கூட்டத்திலிருந்து இலைகளை எடுத்துக்கொள்ள நினைத்தேன். காரில் எப்போதும் காகிதக் கவர்களும் கத்தரி, கத்தி ஆகியவைகளும் இருக்கும். ஒரு கவரில் நானும் கார் ஓட்டுநருமாக பேய்மிரட்டி செடிகளை கத்தரித்துச் சேகரித்துக் கொண்டிருந்தோம்.

அந்த வழியே டி வி எஸ் 50-யில் குதிரை மசால்கட்டுகளுடன் வந்த ஒருவர் வண்டியை எங்களருகில் நிறுத்தினார். நீலத்தில் பொடிக்கட்டமிட்ட லுங்கியும் முழங்கைவரை சுருட்டிவிட்டிருந்த சிவப்பு முழுக்கைச்சட்டையுமாக இருந்தார். எங்களிடம்

….. ’’’’ இதை எதுக்கு பொறிக்கறீங்க? இது களைச்செடி, நாத்தமடிக்கும்’’’’……..

என்றார்.

…..’’’’ இந்த இலையை திரிமாதிரி அகல்விளக்கில் போட்டு ஏத்தினா எரியுங்க, கொசுவும் வராது, அதான் பறிக்கிறேன்’’’ ……… என்றேன்.

அசந்துபோனவர் ஒரு கெட்ட வார்த்தையைச்சொல்லி, வான் நோக்கி கைகைக்காட்டி

…..”” தக்காளி! என்னன்னவெல்லாம் குடுத்துருக்கான் பாருங்க நம்மளுக்கு!’’…. என்றபடி வண்டியை கிளப்பிக்கொண்டு போனார்.

அந்தக் கெட்டவார்த்தை இல்லாமல் நானும் அதைத்தான் எப்போதும் நினைக்கிறேன், என்ன என்னவெல்லாம் நமக்கென கொடுக்கப்பட்டிருக்கிறது? நாம் தான் அறிந்துகொள்வதில்லை அளிக்கப்பட்டவைகளின் அருமைகளை.

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑