லோகமாதேவியின் பதிவுகள்

Month: October 2024

அபயாம்பாள் என்னும் நூர்ஜஹான்!

துறை சார்ந்த ஒரு நிகழ்வில்  உயிரி உரங்களுக்கான சந்தைச்சூழலைக் குறித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் தொடர்ந்த அழைப்புகள் அப்பாவிடமிருந்து.  அலைபேசியுடன் என் மனமும் அதிர்ந்துகொண்டே இருந்தது. நிச்சயம் துக்கச் செய்தியாகத்தான் இருக்கும் என யூகித்தேன். அதற்குள் தம்பியிடமிருந்து குறுஞ்செய்தி ’’ஊட்டி அத்தை  இன்று (20/8/2024) காலை 7 மணிக்கு தவறிவிட்டார்கள்’’ என்று.

கண்ணீரை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை. உரையை முடித்துவிட்டு அரங்கிலிருந்து வெளியே சென்று தம்பியை  அழைத்துப்  பேசினேன். அத்தையை பார்த்து பல  வருடங்கள் ஆகியிருந்தன.

அம்மாவைக் காட்டிலும் எங்கள் மூவர் மீதும் அன்பாக இருந்த ஊட்டி அத்தை சில வருடங்களாகவே படுக்கைதான். தலைநடுக்க  நோய் வந்திருந்தது. மறதியும் இருந்தது. பேச்சு குளறுவதால் சைகையில் தான் தொடர்பு கொள்வதல்லாமே. அத்தைக்கு இறப்பு நிச்சயம்  விடுதலைதான்.

ஊட்டி மாமா என்றழைக்கப்பட்ட சவுக்கத் அலி மாமா கொரோனா முடிந்த ஒரு ஜூனில் தவறினார். அவரும் இடுப்புக்கு கீழ் அசைவின்றி சில வருடங்கள் கிடையில் இருந்துதான் சென்றார்.

மாமா அத்தை இருவருமே எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். அவர்கள் மாமா அத்தை ஆனதே ஒரு கதைதான்.

60-களின் இறுதியில் திருமணத்துக்கு முன்பு அப்பா உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சிக்கல்விக்காக சென்னை YMCA வில் இருந்தார். அப்போது அந்த கிராமத்தில் இருந்து சென்னை சென்ற சாமான்யர்களில் அப்பாதான் முதல் நபர். அதுவே அப்போது அவருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தாக இருந்தது.

அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர் திரு சவுக்கத் அலி என்னும் மிக உயரமும் தாட்டியுமான ஒரு இஸ்லாமியர். அப்பாவுக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. அவரும் இளையவர் அப்போது. இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அப்பா படிப்பை முடிக்கும் சமயத்தில்  சவுக்கத் அலி  அவர்கள் இந்திராணி என்னும் கிருஸ்துவ பெண்ணொருத்தியை காதல் மணம் புரிந்து கொண்டார்.

இந்திராணி (அத்தை) வீட்டில்  மட்டும் பலத்த எதிர்ப்பு. புதுமணத்தம்பதிகள் வேட்டைக்காரன் புதூருக்கு வந்து தங்கிச் சென்றிருக்கின்றனர். அப்பாவுக்கு அரசுப்பணி கிடைத்து,அப்பா அம்மாவின் புரட்சிகரமான திருமணம் நடந்தபோது அதற்கும் அவர்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். இந்திராணிஅத்தைக்கு ஒரு மகள் பிறந்த சில மாதங்களில் அம்மாவுக்கும் மித்ரா பிறந்திருக்கிறாள்.

அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் இந்திராணி அத்தைக்கு கணுக்கால் வரை அடர்த்தியான கூந்தலாம்.. ’’சீவக்கட்டை மாதிரியிருக்கும்  அத்தையோட சடை. துணி துவைக்கற கல்லில் பிரிச்சுப்போட்டு ரெண்டு மூணு பேரா சேர்ந்து அலசுவோம், பேனுன்னா பேனு அத்தனை பேன் ஊறும், அலசிக் காய வச்சு  தணலும் சாம்பிராணியுமா புகை போட்டு   முடிக்கறதுக்குள்ள ஒரு நாளாயிரும்’’ என்பார்கள்.  மாமாவுக்கு இந்திராணி அத்தையின் கூந்தலின் மீது பித்திருந்ததாம்.

நான் பார்த்ததில்லை அந்த அத்தையை. நான் பிறக்கும் முன்பே மாமா அவரை மணவிலக்கு செய்துவிட்டார். அதுவும் வேட்டைக்காரன் புதூரில் வைத்துத்தான் நடந்திருக்கிறது.

மாமாவுக்கு சென்னை YMCA-விலிருந்து பொள்ளாச்சியில் இப்போது நானிருக்கும் இதே கல்லூரியில் உடற்பயிற்சி இயக்குநராக அரசுப்பணி கிடைத்திருக்கிறது. எனவே  மாமா கல்லூரி உரிமையாளரின் விருந்தினர் மாளிகையிலும் அத்தை வேட்டைக்காரன்புதூரிலும் சில காலம் இருந்திருக்கிறார்கள்.  

இன்னும் இந்தக் கல்லூரியின் ஒரு அரங்கில் கல்லூரி நிர்வாகக் குழுவினருடன் சவுக்கத் அலி  மாமாவும் கோட்டும் சூட்டுமாக கம்பீரமாக நிற்கும் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கிறது.

பிறகு மாமாவுக்கு ஊட்டி லவ்டேலில் இருக்கும்  பிரபலமான லாரன்ஸ் பள்ளியில் பணி கிடைத்த போது அவர் மட்டும அங்கே சென்றிருக்கிறார். இந்திராணி அத்தை சென்னையில் இருந்திருக்கிறார். 

லாரன்ஸ் பள்ளி  அப்போதிலிருந்தே மிகச் செலவு பிடிக்கும் ஒன்று. அங்கே 5-ம் வகுப்பில் சேர குன்னூரில் இருக்கும் சாந்தி விஜய் என்னும் ஒரு feeding school-ல் படித்திருக்க வேண்டும். அல்லது மிகப்புகழ் பெற்றவர்களின், செல்வந்தர்கள், அரசியல் வாதிகளின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். 

நான் 5-ம் வகுப்பிலிருந்து 6-க்கு சென்றபோது என் மாமா மகன் 5-ல். தோல்வியடைந்திருந்தான். அவனை அப்போதே 1 லட்ச ரூபாய் கட்டணம் கட்டி எல்லாருமாக ஒரு ஜீப்பில் லவ்டேல் கொண்டுபோய் சவுக்கத் அலி  மாமாவின் சிபாரிசில் லாரன்ஸ் பள்ளியில் சேர்த்துவிட்டு ’’படிக்க மாட்டேன் என்னையும் கூட்டிட்டு போங்க’’ என்று அவன் கதறக்கதற விட்டுவிட்டு ஊர் திரும்பினோம். நாங்கள் பொள்ளாச்சி வருவதற்குள் அந்த மாமா மகன் பல பேருந்துகள் மாறி எங்களுக்கு முன்னால் வீட்டுவாசலில் உட்கர்ந்திருந்தது ஒரு கிளைக்கதை

அங்கே மாமா நல்ல செல்வாக்குடன் இருந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்த  ஒரு செல்வச்செழிப்பான அய்யங்கார் வீட்டுப்பெண் அபயாம்பாள்.

மாமா உடற்பயிற்சி ஆசிரியர், அங்கே அன்றாடம் குதிரை ஏற்றப் பயிற்சி, நீச்சல், பேண்ட் வாத்திய பயிற்சி என்று இருக்கும். மும்பையில் சில காலம் வாழ்ந்த அத்தைக்கு  ஷம்மி கபூர் பிடித்தமான நடிகர். மாமா கொஞ்சம் ஷம்மி கபூரும் நிறைய  ஜெமினி கணேசனுமாக கலந்து செய்தது போலிருப்பார். தவறாமல் உடற்பயிற்சி செய்து கட்டான உடலும் மிடுக்கான தோற்றமும் கொண்டவரும் கூட.

மூன்று பேருக்கான அசைவ உணவை ஒருவராக உண்பார். தீவிர அசைவ உணவுப்பிரியர். நாய்களென்றால் மட்டும் மிகவும் பயப்படுவார்.அத்தனை திடகாத்திரமான, சராசரிக்கும் கூடுதலான உயரமும், பருமனுமாக இருக்கும் மாமா நாய்களுக்கு பயப்படுவது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் காலையில் உடற்பயிற்சி முடித்து  சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் அவர் எழுந்ததும் கண்கள் ரத்தச்சிவப்பாயிருப்பதைப் பார்க்க நானும் மித்ராவும் காத்துக்கொண்டிருப்போம்.

அபயம் அத்தைக்கு ஷம்மி கபூரின் சாயலில் இருந்த நீச்சலும் உடற்பயிற்சியும் சொல்லிக் கொடுத்த மாமாவின் மேல் தீராக்காதல் உண்டாகி இருக்கிறது.  ஒரு சிறுமகளும், வீட்டாரை எதிர்த்துக்கொண்டு இவரை நம்பி வந்த  காதல் மனைவியும் இருந்த மாமாவும் அத்தையை விரும்பியது தான் ஆச்சரியம். 

இந்திராணி அத்தைக்கு விஷயம் தெரிந்து பெரும் பிரச்சனை உருவான போது மாமாவும் அத்தையும் வேட்டைக்காரன்புதூர் வந்தார்கள். ஊர்த்தலைவராக இருந்த என் அப்பாருவின் முன்பாக அத்தையை தலாக் செய்தார் மாமா. 

அந்த அநீதியை நினைக்க நினைக்க இப்போதும் எனக்கு ஆறவே இல்லை. ஆண்களின் உலகுதான் இது அப்போதும் இப்போதும் எப்போதும்.

இந்திராணி அத்தையையும் கைக்குழந்தையாக இருந்த மகளையும் கோவை ரயில் நிலையத்தில் அப்பாதான் கொண்டு போய் சென்னைக்கு நீலகிரி விரைவு ரயிலேற்றிவிட்டு வந்திருக்கிறார்.

எட்டாவது படிக்கையில்  தை மாதம் பொங்கலுக்கு வீடு  வெள்ளையடிக்கும் போது பழைய பொருட்கள் இருந்த ஒரு டிரங்குப் பெட்டியில் பொடிப்பொடியான கையெழுத்தில் இந்திராணி அத்தை சென்னையிலிருந்து அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை நானும் மித்ராவும் ரகசியமாகப்  படித்தோம் ’’ அவருக்கு இன்னொருத்தியை பிடித்திருந்தது, கல்யாணம் பண்ணிக்கொண்டார், ஆனால் கைக்குழந்தையுடன் தன்னந்தனியே ரயிலேறி திக்குத்தெரியாத எதிர்காலத்திற்கு செல்ல  நான் என்ன தப்பு செய்தேன் என்று  மட்டும் அந்த இரும்பு இதயம் கொண்ட மனிதரிடம் கேட்டுச்சொல்லுங்கள் அண்ணா’’ என்று எழுதியிருந்தார்கள்..

அந்த  வயதில் காதலை, தலாக் என்னும் மணவிலக்கை குறித்த புரிதல் எல்லாம் இல்லாவிடினும் இரும்பு இதயும் கொண்ட மனிதரை நோக்கி கேட்கப்பட்ட அந்த கேள்வி என்னை பெரிதும் தொந்தரவுக்குள்ளாக்கியது

அந்த பதின்ம வயதிலிருந்துதான் மணவுறவு குறித்தான பெருங்குழப்பம்  எனக்கு தொடங்கியது.

பிறகு அபயம் அத்தையை மாமா வேட்டைக்காரன் புதூரிலேயே வைத்து திருமணம் செய்து கொண்டார். அத்தை வீட்டில்   பலத்த எதிர்ப்பு இருந்திருக்கிறது. திருப்பெரும்புதூரின் மிக ஆச்சாரமான  பிராமணக் குடும்பப் பெண் ஒருத்தி ஒரு இஸ்லாமியரை அதுவும் இரண்டாம் தாரமாக அதுவும் 25 வயது வித்தியாசத்தில் 70-களில் திருமணம் செய்துகொள்வது என்பது எத்தனை பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும். அத்தைக்கு காதல் கண்ணை, மனதை எல்லாம் மறைத்து விட்டது.

அம்மா இந்திராணி அத்தையுடன் கடிதத் தொடர்பில், இருந்தார், பிற்பாடு அந்த அத்தை மறுமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பிறந்தன. மூத்த  மகளின் திருமணத்துக்கு அம்மாவுக்கு அழைப்பிதழ் வந்தது அதன் பின்னர் இந்திராணி அத்தை தொடர்பிலிருந்து விலகிவிட்டிருந்தார்.

அம்மாவும் அபயம் அத்தையும் நெருக்கமான தோழிகளாக இருந்தார்கள். அபயம் அத்தைக்கும் நீண்ட கூந்தல். இப்போது நினைக்கையில்  வழக்கமாக பெண்களுக்கிருக்காத அந்த உயரமும், பருமனான உடலும்,  நீளக்கூந்தலுமாக யட்சி என்று நினைத்துக் கொள்கிறேன் அத்தையை.

அபயம் அத்தை பெயரை நூர்ஜஹான் என்று மாற்றிக்கொண்டார். நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல்தான் வெளியே செல்வார்.அவர் வேலை செய்யும் இடத்தில் நூரி மிஸ் என்றே அறியப்பட்டார்.அவரும் உடற்பயிற்சி ஆசிரியராக லவ்டேலில் பிற்பாடு இணைந்துகொண்டார். ஊட்டியில் இருந்ததால் அவர் எங்களின் ஊட்டி அத்தை ஆனார்.

பெரும்பாலான விடுமுறைகளில் நாங்கள்  லவ்டேல் செல்வோம் அல்லது மாமாவும் அத்தையும் பொள்ளாச்சிக்கு வந்து விடுவார்கள்

அவர்கள் வராத நாட்களிலும் ஊட்டியிலிருந்து பொள்ளாச்சி வரும் பேருந்தில் ஒரு கூடை நிறைய காலிஃப்ளவரும் கேரட்டும் முட்டைகோஸும்  பீட்ரூட்டுமாக சுமார் 10 கிலோ அளவுக்கு பச்சைப்பசேலென காய்கறிகள்  அவ்வப்போது அனுப்பி வைப்பார்கள். அப்பா ஆட்டோ பிடித்து  பேருந்து நிலையம் போய் அவற்றை  எடுத்துக் கொண்டு வருவது  நன்றாக நினைவிருக்கிறது.   சந்தையில் ஊட்டிக் காய்கறிகள் வாங்குவது ஒரு சிறப்பு அந்தஸ்தாக இருந்த காலம் அது.

.எனக்கும் மித்ராவுக்கும்  பூப்பு நன்னீராட்டிச் சடங்கு செய்ததும் ஊட்டி அத்தைதான். எங்கள் இருவரின் திருமணத்தின் போதும் சீர்வரிசைகளை விமரிசையாகச் செய்ததும் அபயமத்தைதான். 

அப்பா அம்மா லோன் வாங்கி பொள்ளாச்சி வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு சமயம்  கடும் நிதி நெருக்கடி வந்திருக்கிறது. மாமா உதவுவதாகச் சொல்லி இருக்கிறார் எனினும் பணம் வாங்க அப்பாவால் ஊட்டிக்குச் செல்ல முடியவில்லை. மாமா அப்போது எங்கோ வடக்கே ஒரு கூடுகைக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்பாவை  கோவை  ரயில் நிலையத்தில் சந்தித்து நகரும் ரயிலின் ஜன்னல்  வழியே   மாமா பணம் கொடுத்துச்சென்றார் அப்பா,ஊட்டி மாமா இருவரின் வாழ்விலும் இப்படியான உறவைக்காட்டிலும் நட்பில் இணைந்திருந்த தருணங்கள் நிறைந்திருந்தன.

அப்படிக் கட்டிய அந்த வீடு 2 வருடங்களுக்கு   முன்னர்  அம்மா இறப்பதற்கு சில வாரம் முன்பு ஒரு இஸ்லாமியருக்கு விற்கப்பட்டது.

அத்தையும் அம்மாவும் லவ்டேல் வீட்டில் சமைப்பதும், ஊட்டிக்கு இந்திச் சினிமாக்களுக்கு போவதும்,  வீட்டின் எதிரே இருந்த மாபெரும் புல்வெளியில் அமர்ந்து கதை பேசுவதுமாக  மகிழ்ந்திருப்பார்கள்.

வழக்கமாக நாங்கள்  கோடையில் ஊட்டி செல்லும் போதுதான் மலர்க்கண்காட்சியும் நடக்குமென்பதால் எப்போதும் தாவரவியல் பூங்காவிற்குச் சென்று முழுநாளும் இருப்பது, மாலை எஸ் பி பி, சைலஜா, ஜானகி அகியோரின் இசைக்கச்சேரிகளைச் கேட்பது, மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு சென்று புல்வெளியில் அமர்ந்து சாப்பிடுவது என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும். 

லவ்டேலில் அப்போதுதான் கோன் ஐஸ் கடை முதன்முதலாக வந்திருந்தது. அதுவும் லவ்டேல் வீட்டுக்கு பின்னால் இருந்த யூகலிப்டஸ்  மரக்கூட்டமொன்றின் அருகில். தனியே கூம்பு பிஸ்கட்டுகளையும் ஒரு சில்வர் பாத்திரம் நிறைய ஐஸ்கிரீமுமாக வாங்கிவந்து நாளெல்லாம் சாப்பிடுவோம். 

ஊட்டியில் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவோரக் கடைகள் போடுவார்கள், அப்படி ஒரு இளவெயில் பொழிந்துகொண்டிருந்த நாளில் அத்தையும் மாமாவும் எனக்கும் மித்ராவுக்கும்  ஸ்வெட்டெர் வாங்கித்தார்கள். 

 வான் நீலத்தில் பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்தது எனக்கு,  அடர் ஆரஞ்சில் பெரிய பாக்கெட்டுகள் வைத்தது மித்ராவுக்கு.   அப்போது பொள்ளாச்சியில் புழக்கத்துக்கு வந்திருக்காத தெர்மோ ஃப்ளாஸ்க் தண்ணீர் பாட்டில்கள் இரண்டும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.  அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு பொள்ளாச்சியிலிருந்து நேராக ஊட்டி செல்லும் பேருந்தில் தூங்கி  வழிந்து கொண்டே செல்லும் நாங்கள் இருவரும் பர்ளியாறு நிறுத்தத்தில் விழித்துக்கொள்வோம். அங்கிருந்து அத்தைக்கு  பிடித்த பிளம்ஸ் பழங்கள் தவறாமல் வாங்கிக்கொண்டுதான் மேலே செல்வோம்.

அத்தை  லாரன்ஸ் பள்ளியில் பெண்கள் விடுதியின் வார்டனாகவும் மாமா உடற்பயிற்சி இயக்குநராகவும் பிற்பாடு இருந்ததால் இருவருக்கும் இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முதல்தளத்தில் எதிர் எதிராக இருந்த அந்த  மரவீடுகளில்  ஒன்றை நாங்கள் வரும்போது மட்டும் உபயோகித்தோம்.

அத்தை மாமா இருவருக்கும் அங்கே விடுதியிலேயே உணவு கொடுக்கப்பட்டது. விருந்தினர்களுக்கும் அப்படித்தான். நானும் மித்ராவும் மதிய உணவை பெரிய கேரியரில் சென்று வாங்கி  வருவோம். கஸ்டர்ட், ஆம்லெட் உள்ளிட்ட முழுமையான உணவு கொடுப்பார்கள்.  சமையலறையில் சீருடையணிந்த பணியாளர்கள் முட்டையை எண்ணெயில் உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரிப்பதை  வாயைத்திறந்தபடிக்கு  கிராமத்துச் சிறுமிகளான நாங்கள் வேடிக்கை பார்ப்போம்.

மாலை வேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்படும். நாங்கள் அனைவரும் அமர்ந்திருக்க வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் பீங்கான் ஜாடியில் கொண்டு வந்த தேநீரையும் வாட்டிய ரொட்டித் துண்டுகளையும் பரிமாறுவார்கள். பீங்கான் கப்புக்களையும் தட்டுக்களையும்  அங்கேதான் முதன் முதலில் பார்த்தேன். நான் அங்கே போனால் சாப்பிடும் தூய வெள்ளையில் குழிவான பீங்கான் தட்டின் விளிம்பில் அடர் நீலக் கோடு இருக்கும். அந்தத்தட்டு இப்போது கூட கனவுகளில் அடிக்கடி வருகிறது.

லவ்டேலிலிருந்து திரும்ப பொள்ளாச்சி வந்தால் எனக்கு ஒரு நீண்ட கனவொன்றில் இருந்து விழித்துக் கொண்டது போலவே இருக்கும் அந்த விடுமுறை நினைவுகள்.

ஊட்டிக்கு சில சமயம் மாமா எங்களை  பேருந்தில் கூட்டிச்செல்வார்,  பொள்ளாச்சியிலிருந்து   லவ்டேல் போய்ச்சேர பின்னிரவாகி விட்டிருக்கும். அத்தை எங்களுக்கென வாசலிலேயே காத்துக் கொண்டிருப்பார்கள். வந்த உடனே சாப்பிட தவறாமல் அசைவம் சமைத்திருப்பார்கள்.

 வாழ்நாளில் ஒருமுறை கூட அசைவம்  சாப்பிடாவிட்டாலும் இறைச்சிக் கடைகளுக்குப் போய் வாங்கிவருவது சுத்தம் செய்து சமைப்பதிலெல்லாம்  அத்தைக்கு ஒருபோதும் ஆட்சேபணை இருந்ததில்லை. அத்தை, மாமாவை  மட்டும் விரும்பவில்லை, மாமாவின் விருப்பு வெறுப்புகளை அவரது உற்றார் உறவினரையும் விரும்பினார் அதுதானே உண்மையில் காதல் என்பது!

லவ்டேல் குளிரில் இடைவரை அடர்ந்திருந்த எங்கள் கூந்தலை பிரித்து அண்டாக்களில் சுடுநீர் கொதிக்க வைத்து அரப்புத்தேய்த்து தலைமுடி அலசிக் குளிக்க வைத்த அத்தையின் அன்பை என்னவென்று சொல்வது? அத்தைக்கு குழந்தைப் பேறு இல்லை என்பதைக் குறித்து வருந்தியதே இல்லை அல்லது எங்களுக்கு அவர் வருத்தத்தை  காட்டியதில்லை.

மிக அருமையான கள்ளிச்சொட்டுப் போன்ற பால்  லாரன்ஸ் பள்ளியில் கிடைக்கும். அவர்களுக்கென்று மாட்டுப்பண்ணை  இருந்தது. வாரா வாரம் ஆசிரியர்களுக்கு கோழி முட்டைகளும் பெரிய பெட்டிகளில் கொண்டுவந்து கொடுப்பார்கள். அத்தை  சூடான பாலில் இரண்டு முட்டைகளை ஊற்றி அடித்து எங்களை கட்டாயப்படுத்தி குடிக்கச்செய்து பிறகு மாடிப்படிகளில் பத்துமுறை ஏறி இறங்க சொல்வார்கள். ஒரு நாளைக்கு இத்தனை செம்பு தண்ணீர் அருந்தியே ஆகவேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவார்கள்.

  லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் நிறைய சினிமாப் படப்பிடிப்புகள் நடக்கும் அங்கேதான் நான் கமல் ஸ்ரீதேவி ஆகியோரையும் ஹேமாமாலினி உள்ளிட்ட நிறைய பாலிவுட் நட்சத்திரங்களையும் பார்த்தது.

அத்தையும் அம்மாவும் ஊட்டிக்கு அமிதாப்பின் டான் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்த ஒரு நாளில் வீட்டில் நானும் மித்ராவும்  மட்டும் இருந்தோம்.  மாலை 6 மணி இருக்கும், அழைப்பு மணி ஒலித்தது கதவை திறந்தால் மிக உயரமான ஒருவரும் உடன் நல்ல கட்டுமஸ்தாக ரோஸ் கலரில் ஒருவருமாக நின்றனர். கையை உருட்டி பந்து போல செய்த அந்த உயரமானவர் ’’ஃபுட் பால் ?’’ என்று கேட்டார்.

மாமா உடற்பயிற்சி ஆசிரியராதலால் வீட்டில் நிறைய பந்துகள் இருக்கும் அதிலொன்றைக் கொடுத்தேன். அந்த உயரமானவர் என் தலையை செல்லமாக தட்டிவிட்டுச் சென்றார். இரவு வீடு திரும்பிய அத்தையிடம் வந்தது அமிதாப் பச்சனும், தர்மேந்திராவும் என்று சொல்லியிருக்கிறார்கள் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள். அத்தை நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்து ‘’உள்ளே கூப்பிடலையாடி?’’ என்று கேட்டது நினைவிருக்கிறது.

அத்தைக்கு ஷம்மி கபூரை, சசிகபூரை பிடிக்கும் அத்தை சொல்லச்சொல்லக்   கேட்டு எனக்கும் சசி கபூரை பிடித்திருந்தது.   சசிகபூர், ஜெனிபர் அமரக்காதலை ஓரிரவில்  மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில் அத்தை சொல்லக்கேட்டதிலிருந்து அவர் மீது பெரும் பித்து உண்டாகி சசி கபூர் படங்களாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

அத்தை  என் தம்பி பிறந்த போது  அவனை முறைப்படி தத்தெடுத்துக்கொள்ள விரும்பினார். அம்மாவும் அத்தையும் தோழிகள் என்றாலும் தோழமைக்கும அன்னைமைக்கும் நடந்த போட்டியில அன்னைமைதான்  வென்றது. அம்மாவால் அதற்குச் சம்மதிக்க முடியவில்லை.

அத்தை மாமாவின் மண வாழ்வு எப்படி இருந்தது என எனக்கு இளம் வயதில் தெரியவில்லை. அப்போது மாமா என நாங்கள் அழைப்பவர் ஒரு இஸ்லாமியர் என்பதும் அத்தை ஒரு பிராமணப்பெண் என்பதும் தெரியாத வயதில் இருந்தோம்.

ஆனால்  நான் கல்லூரியில் படிக்கையில் அத்தையும் மாமாவும் சென்னைக்கு வந்துவிட்டிருந்தனர். மாமாவுக்கு  கிண்டி IITயில் பணி, அத்தை அதே வளாகத்தில் இருந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியை. அப்போதெல்லாம் மாலையில் கிண்டி IIT வளாகத்திலிருந்த ஒரு திறந்தவெளி அரங்கில் நாடகமோ இசைக் கச்சேரியோ வார இறுதிகளில் நடக்கும். கிரேஸி மோகன், சோ வையெல்லாம் நான் அங்கே தான் நேரில் பார்த்தேன். மான்கள் திரியும் மயில்கள் விளையாடும் மாவும் பலாவும் செறிந்து காய்த்துக் கொண்டிருந்த அடர்வன வளாகம் அது. 

அப்போதெல்லாம் அத்தை என்னுடன் மனம்விட்டுப் பேசி இருக்கிறார்கள்.

இளமை வேகத்தில் கல்யாணம் செய்து  கொண்டதையும்  வயதுவித்தியாசம் பெரும் பூதமாக இருவருக்குமிடையில் இருந்ததையும் சொல்லி வேதனைப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்தை சேதப்படுத்தி தான் வாழவந்த குற்ற உணர்விலிருந்து அத்தையால் இறுதிவரை விடுபடமுடியவில்லை. மாமாவின் மணஉறவு தாண்டிய தொடர்புகள் குறித்து அத்தைக்கு தெரியவந்தும் அதே வாசல்வழியே வந்தவராதலால் அவர் அதில் ஏதும் செய்ய முடியாதவராக இருந்தார்.

IIT வளாகத்தில் நாடகம் முடிந்த ஒரு  ஞாயிறு மாலையில்  ஒழிந்துகிடந்த அரங்கத்தின்  கடைசி  வரிசையில் அமர்ந்து அத்தை என்னிடம் சொன்னவற்றை   பகிரவும் மறக்கவும் முடியவில்லை.

மகன் சரணை கைக்குழந்தையாக  எடுத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கையில் அத்தையும் மாமாவும் பணி ஓய்வு பெற்று வேளச்சேரியில் வாழ்ந்து வந்தார்கள்.

அங்கே அப்போது பெரும் தண்ணீர்ப்பஞ்சம். நள்ளிரவில் சைரன் ஒலித்துக்கொண்டு தண்ணீர் லாரி வரும். நானும் அத்தையும் குடங்களில் பிடித்து வைத்துவிட்டு நனைந்த உடைகளை மாற்றிக்கொண்டு பின்னர் அதிகாலையில் உறங்கச் செல்வோம்.

அத்தை அப்போது ஏராளமான தெருநாய்களை  வளர்க்க துவங்கி இருந்தார்கள்.  மாமாவுக்கு நாய்கள் என்றால் பெரும் ஒவ்வாமை இருந்தது. அத்தை வளர்த்தவற்றில் பல நாய்களுக்கு சொறி நோய் இருந்தது. அடிக்கடி கால்நடை மருத்துவர் வீட்டுக்கு வருவதும் அத்தை நாய்களுக்கு மருந்து கொடுப்பதுமாக வீடு வேறு ஒரு  வடிவம் கொண்டு இருந்தது . எதன் பிழையீடாக அதைச்செய்தார் என்று அத்தைக்கு மட்டும்தான் தெரியும்.

30-கும் மேற்பட்ட நாய்கள் வீடெங்கும் திரிந்த அந்த வீட்டில்   மாமா ஒரு அறைக்குள் முடங்கிக்கொண்டோ அல்லது வெளியெ சென்று விட்டு  உணவு நேரத்துக்கு  மட்டும் வீடு  வருவதையோ  வழக்கமாக கொண்டிருந்தார்.மாமாவும் அத்தையும் சரியாகப் பேசிக்கொள்வதில்லை என்பதையும் கவனித்தேன்.மாமா சைவ உணவும் விரும்பிச்சாப்பிட்டார்.   கொங்கு சமையலை நான் செய்து கொடுத்த ஒரு நாளில் பாசிப்பயறு கடைசலை நெய் விட்டு ருசித்துச்சாப்பிட்ட மாமா அதன் பெயரென்ன என்னவென்று சில முறை என்னிடம் கேட்டுக்கொண்டார். மனதாரா பாராட்டவும் செய்தார்.

வெறும் நெற்றியுடன் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு வந்ததும் முகம் கழுவி பெரிதாக வட்டக் குங்குமமிட்டு கொண்டிருந்த அத்தை, பாவனைகளும் முகமூடிகளும் போதுமென்று முடிவு செய்து, வீட்டில் சிறு பூஜை அறையில்  மாலையில் ஸ்வாமிக்கு விளக்கேற்றி பூஜை செய்தார். எப்போதும் நன்றாக நெற்றிக்கு  பெரிதாக சிவப்புக்குங்குமத்தில் பொட்டுவைத்துக்கொண்டார். 

மாமா மறைந்த பின்னர் அத்தையின் அண்ணன் குடும்பத்தினர் அத்தையுடன் வந்து இருந்தார்கள்.

பொள்ளாச்சியிலும் வேட்டைக்காரன் புதூரிலும் புடவையை  மடிப்பெடுக்காமல் ஒற்றையாய் தலைப்புப்போட்டுகொண்டு, குளிர் கண்ணாடியும் அணிந்துகொண்டிருக்கும் அத்தையை  எல்லோருமே கதாநாயகியை போல்தான் பார்த்தோம்.கணீரென்ற குரல் அத்தைக்கு,

அந்த அத்தை  இனி எங்களுக்கு இல்லை அத்தையை கடைசியாக 2009-ல் என்  புதுவீட்டுக் கிரகப்பிரவேசத்தில் பார்த்தது, பின்னர் பார்க்க்க கொடுத்து வைக்கவில்லை. நல்லவேளையாக அத்தையின் அந்தத் தோற்றம் மனதில் இருந்து குலைந்துபோகுமாறு நடுக்க நோய் வந்த பிறகு நான் பார்க்கவில்லை. கல்லூரியில் தேசிய தர அந்தஸ்திற்கு குழு வரவிருப்பதால் கடைசியாய் அத்தையின் முகம் பார்க்கக்கூட விடுப்பு எடுக்க முடியவில்லை. 

 சென்னையில் அன்று மாலை 3 மணிக்கு மின்மயானத்தில் அத்தை எரிந்து சாம்பலானார்கள்.   அத்தைக்கு பூரி  சாப்பிடப் பிடிக்கும் பூரி கொஞ்சம் முறுகலாக இருந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இனி எப்போது பூரி செய்தாலும் அத்தையின் நினைவில்லாமல் சாப்பிட முடியாது. அன்று மாலை வீட்டில் கூடுதலாக விளக்கேற்றினேன். 

சந்திக்கையிலெல்லாம் இறுகக் கட்டிக்கொள்ளும், எப்போது நான்  வந்தாலும் திரட்டுப்பால் செய்யும், அலட்சியமாக இருசக்கரவாகனம் இயக்கும் ஊட்டிஅத்தைக்கு என் அன்பும் கட்டிமுத்தமும்.

நிறைவு கொள்ளுங்கள் அத்தை.

கொகெய்னும் கிராக்கும்!

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் சென்னை பதிப்பில் பிப்ரவரி 22, அன்று  இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு விமானப்பயணி யிடம் இருந்து 2.7 கிலோ கொகெய்ன் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி வந்திருந்தது. கொகெய்னின் சந்தை மதிப்பு கிலோவுக்கு 10 கோடி என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் மதிப்பு சுமார் 27 கோடி. இதுவே சென்னை விமான நிலையத்தின் இந்த  2024ம் வருடத்தின் முதல் போதைப்பொருள் பறிமுதல். 

உலகெங்கிலும்  கொகெய்ன் பயன்பாட்டிற்கும் கடத்தலுக்கும் எதிரான சட்டங்கள் மிக இறுக்கமாகவே இருப்பினும் கொகெய்ன் கடத்தலும்  தொடர்ந்து பல வழிகளில் நடந்துகொண்டேதான் இருக்கிறது 

ஐக்கியநாடுகளின்  போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அமைப்பு (UNODC–United Nations Office on Drugs and Crime) தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தாலும் சர்வதேச அளவில் போதைத்தாவரங்கள் வளர்ககப்படுவது, போதைப்பொருள் தயாரிப்பு, விநியோகம்,  கள்ளச்சந்தை வணிகம் மற்றும் பயன்பாடு ஆகியவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது,

சர்வதேச கொகெய்ன் பறிமுதல்களில் 72% தென் மற்றும் மத்திய அமெரிக்காவில், மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் 15% மற்றும்  வட அமெரிக்காவில் 12 % நடக்கின்றது.

கொகெய்ன் அளிக்கும் கொக்கோ புதர் வளர்ப்பு கொலம்பியா (61%)  பெரு (26%) மற்றும்  பொலிவியாவில் (13%) மையம் கொண்டிருக்கிறது.

சர்வதேச போதைப்பொருள் பறிமுதல் புள்ளிவிவரங்கள் 2019 லிருந்து  ஐரோப்பிய கொகெய்ன் கள்ளச்சந்தை வணிகத்தின் முக்கியமான் விநியோக மையமாக ஆப்பிரிக்கா செயல்பட தொடங்கி இருப்பதை காட்டுகிறது  

2021ல் ஆப்பிரிக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் அளவு  இது வரையில் இல்லாத அளவில் உச்சத்தை தொட்டிருப்பது சர்வதேச கொகெய்ன் பயன்பாடு மற்றும் கொகெய்ன் வளர்ப்பு உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது.

கோவிட் பெருந்தொற்றின் போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததால் கொரியர்  மூலம் அனுப்புவது போன்ற  பல புதிய வழிகள் கொகெய்ன் கடத்தலுக்கு கண்டுபிடிக்கப்பட்டன. அந்த புதிய வழிகள் கோவிட் தொற்றுக்காலத்துக்கு பிறகு அபரிமிதமாக வளர்ந்திருக்கின்றன. மீன்பிடி படகுகள், சொகுசுகப்பல்களோடு நீர்மூழ்கி கப்பல்களிலும் கொகெய்ன் கடத்தல் இப்போது  நடைபெறுகிறது.

கடல்வழி கொகெய்ன் பரிமாற்றம் தற்போது மிக அதிகரித்திருக்கிறது துறைமுகங்களுக்கு அப்பால், துறைமுகங்களுக்கு வரும் வழியில், துறைமுகங்களில் ஏன் நடுக்கடலில் கூட நீர்மூழ்கி கப்பல்களின் உதவியுடன் கொகெய்ன் பரிமாற்றம் நடக்கிறது. இதை கப்பல் உரிமையாளர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.

சுங்க அதிகாரிகளிலிருந்து, சரக்கு வாகன ஓட்டுநர்கள், கடைமட்ட துறைமுக தொழிலாளிகள் வரை இதில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொகெய்ன் கடத்தல் நடப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது சவாலாகவே இருக்கிறது.

ஓபியத்துக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கும் போதைப்பொருள் கொகெய்ன் தான்.

பல ஆண்டுகளாகவே உலகமெங்கிலும் முக்கியமான போதைப்பொருளாக பரவலான உபயோகத்தில் இருக்கும் கொகெய்ன் வெள்ளை நிற மிருதுவான தூளாகவும், கிரேக் (crack) என்னும்  பொதுப்பெயரில் பலவிதமான கொகெய்ன் சேர்க்கப்பட்ட பொருட்களாகவும் சந்தைப்படுத்தப்படுகிறது. கொகெய்ன் நீரில் கரையும் ,  கிரேக் நீரில் கரையாது .

துகளாக கிடைக்கும் கொகெய்ன் அதிக போதையளிப்பதால் அதன் தேவையும் விலையும் மிக அதிகம் எனவே விற்பனை செய்பவர்களுக்கு லாபமும் அதிகம்.  கிரேக் போதையும் விலையும் குறைவு என்பதால் அது பெரும்பாலும்  ஸ்ட்ரீட் கொகெய்ன் என்னும் குறைந்த அளவிலும் பெயரிலும் விற்பனையாகிறது,

பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் அளவு அதிகரிப்பது சந்தைக்கு சென்று சேரும் கொகெய்ன் அளவை குறைக்கிறது என்றாலும் கொகெய்ன் உற்பத்தியை இது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை

6.2  மில்லியன் வருடாந்தர பயனாளிகளுடன் பிராந்திய அளவிலான மாபெரும் கொகெய்ன் சந்தை வடஅமெரிக்காவில் இருக்கிறது. கொகெய்ன் கருப்பு சந்தை, ஊழல், சுரண்டல் மற்றும் குற்றங்களையும் தொடர்ந்து  அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கொகெய்ன் பயன்பாடு தீவிரமான உடல்கோளாறுகளையும் இறப்பையும் உண்டாக்கிக் கொண்டு இருந்தாலும் அதன் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.

கொக்கோ புதரின் இலைகளிலிருந்து கிடைக்கும் கொகெயினின் மருத்துவப்பயன்பாடு  நெடிய வரலாறு கொண்டது, மருத்துவ பயன்பாட்டுக்கு  பின்னரே அது போதைப்பொருளானது.

இத்தாலிய கடலோடியான அமெரிகோ வெஸ்புச்சி (1451-1512) தனது கடற்பயண குறிப்புக்களில் முதன்முதலில் கொகெய்ன் குறித்து பதிவு செய்திருந்தார். இவரது பெயரிலிருந்துதான் அமெரிக்கா என்னும்  பதம் உருவானது. 

தொடர்ந்த 300 ஆண்டுகளுக்கு கொகெய்ன் மருந்தாகவே உபயோகிக்க பட்டுக்கொண்டிருந்தது.

1860-ல் ஆல்பர்ட் நிமேன் (Albert Niemann) கொக்கோ இலைகளிலிருந்து  கொகெய்னை பிரித்தெடுத்தார். 

இவரது மாணவர் வில்ஹெம் Wilhelm Lossen  1865ல் கொகெயினின் வேதியியல் வடிவதை கண்டறிந்தார்.

வில்ஹெமும் நீமேனும் இணைந்து  விலங்குகளில் கொகெய்னின் விளைவுகளை ஆய்வுகள் செய்தனர்.

பெருவியன் மருத்துவரான மோரினோ 1880ல் அவரது கொகெய்ன் குறித்த ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு மனிதர்களின் கொகெய்ன் பயன்பாடு மற்றும் விளைவுகள் குறித்த கவலையையும் வெளிப்படுத்தி இருந்தார். அந்த அறிக்கையின் இறுதியில் கொகெய்னை அறுவை சிகிச்சைகளில் மயக்கமூட்டியாக பயன்படுத்தலாம் என்னும் பரிந்துரையையும் அவர் பதிவு செய்திருந்தார்.

ஆஸ்திரிய உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்ட் தனது மன அழுத்தத்தை போக்க கொகெய்ன் பயன்படுத்தி அது வெற்றிகரமானதால், தனது சொந்த அனுபவத்தின் பேரில் கொகெய்னை மனஅழுத்தம், பாலியல் குறைபாடுகள் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம் என்று அறிவித்தார்.  

1884 ல் சிக்மண்ட் ஃப்ராய்ட்  ’’கொக்கோவை பற்றி’’ (Über Coca)  என்னும் ஒரு ஆய்வுக்கட்டுரையை பிரசுரித்தார். அதில் கொகெய்னின் மருத்துவ உபயோகங்கள் விவரிக்கப்பட்டிருந்தது. அவர் பலருக்கு கொகெய்னை பரிந்துரைத்ததுடன் கொகெய்ன் அதிகமானால் ஆபத்தொன்றுமில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார். ஆனால் அவர் பரிந்துரையின்படி மிக அதிக கொகெய்ன் எடுத்துகொண்ட அவரது நோயாளி ஒருவர் மரணம் அடைந்தார்.

1884, ல் கண் மருத்துவரான கார்ல் கொல்லர் (Carl Koller) கண் அறுவை சிகிச்சைகளில் சொட்டுமருந்தாக கொகெய்னை அளித்தார். பின்னர் மருத்துவர்கள் உலகெங்கிலும் மயக்கமூட்டியாக கொகெய்னை பரவலாக உபயோகிக்க தலைப்பட்டனர்.

நரம்புகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் கொகெய்ன் ஊசிகளும் பிற்பாடு கண்டறியப்பட்டன. 

1896ல் கொக்கோ இலைச்சாறு கேச பராமரிப்பில் உதவுவதாக பல சுவரொட்டி விளம்பரங்கள் வந்தன.

மருத்துவ உபயோகங்களுக்கென மட்டும் பரவலாக அறியப்பட்டிருந்த கொகெய்னை 1863ல் இத்தாலிய வேதியியலாளர் ஏஞ்சலோ (Angelo Mariani)  வைனில் கொக்கோ இலைச்சாறு கலந்த இனிப்பு பானத்தை  Vin Mariani என்னும் பெயரில்  அறிமுகம் செய்து  பிரபலமாக்கினார். இதை  அப்படியே கொக்கோ கோலாவில் கலந்து புதிய பானமாக ஜான் பெம்பர்ட்டன் (John Pemberton)   1886ல் அறிமுகப்படுத்தினார்.  

 கொகெய்ன் இலைச்சாறும் கோலா கொட்டையின் சாறும் கலந்த கொக்கோ கோலா,  கோக், கஃபே கோலா, கோஸ் கோலா( Koke, Cafe-Cola, and Kos-Kola)  என்னும் பெயர்களில் விரைவில் புகழ்பெற்றது. அப்போது மருத்துவக் காரணங்களுக்காக கொகெய்ன்  தடையின்றி கிடைத்துக் கொண்டிருந்ததால் கொக்கோகோலாவில் அதை கலப்பது எளிதாக இருந்தது.

1850-லிருந்து 1900 வரையிலும் கொகெய்னும் ஓபியமும் கலந்த மந்திர மற்றும் மருத்துவ பானங்கள் சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களாலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டன.

கொகெய்னின் புகழை பரப்பியவர்களில் தாமஸ் எடிசனும் நடிகை சாரவும் குறிப்பிடத்தக்கவர்கள்.( Sarah Bernhardt)

சினிமாத்துறையிலிருந்து வந்த கொகெய்னுக்கான பரிந்துரைகள் விரைவில் லட்சக்கணக்கானவர்களை சென்று சேர்ந்தது. கூடவே கொகெய்ன் பயன்பாட்டின் ஆபத்துகளும்  வெளிப்படத்துவங்கின. 1903ல் பொதுமக்களின் அழுத்தம் மற்றும் எதிர்ப்பு காரணமாக கொக்கோகோலா நிறுவனம்  கொக்கோகோலா பானத்திலிருந்து கொகெய்னை முற்றிலும் நீக்கியது.

1904 க்கு பிறகு புதிய கொகோ இலைகளுக்கு பதிலாக கொகெய்ன் எடுத்த பிறகு எஞ்சி இருக்கும் மிச்சங்கள் சேர்க்கப்பட்டது.1929 லிருந்து கொக்கெயின் இல்லாத இலைச்சாறு சேர்க்கப்படுகிறது.

ஆனால் கொகெய்னின் கிளர்ச்சியூட்டும் இயல்புகளுக்கு பழக்கப்பட்டுப்போன மக்கள் கொகெய்ன் துகளை மூக்கு வழியாக உறிஞ்சி போதையேற்றிக்கொள்வதை  வழக்கமாக்கியிருந்தனர். 1905ல்  இது மிக பிரபலமானது. அடுத்த ஐந்து வருடங்களில்  மூக்குப்பகுதியின் சிதைவு பல மருத்துவமனைகளில்  தொடர்ந்து கண்டறியப்பட்டது

1912-ல் மட்டும் 5000 கொகெய்ன் மரணங்களை அறிவித்த அமெரிக்க அரசு 1922-ல் கொகெய்னை முற்றாக தடை செய்தது.

இங்கிலாந்தின் கியூ தோட்டங்களிலிருந்து இலங்கைக்கு 1870-லும் இந்தியாவிற்கு 1883-லும் கொக்கோ பயிர் அறிமுகமானது

இந்தியாவில் கொக்கோ புதர்கள் மிக குறைவாக வளர்கின்றன.  கொகெய்ன் பயன்பாட்டிற்கெதிரான சட்டங்கள் இந்தியாவிலும் மிக கடுமையாகவே இருக்கின்றது.

1970களில் கொகெய்ன் புகைத்தல் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது. உற்சாகம் அளிக்கும் கொகெய்னை இளைஞர்கள் பெருவாரியாக எடுத்துக்கொண்டார்கள். 1970-ல் கொலம்பிய போதைப்பொருள் வியாபாரிகள் அமெரிக்காவில் கொக்கெய்ன் கள்ளச்சந்தை வணிகத்திற்கான மாபெரும் வலையை உருவாக்கினார்கள்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கொகெய்ன் உபயோகித்த இளைஞர்களின் எண்ணிக்கை 1970-லிருந்து 1980-க்குள் பத்து மடங்கு பெருகியது.    பின்னர் செல்வந்தர்களுக்கான உயர்தர போதைப்பொருள் என்னும் இடத்திலிருந்து அடித்தட்டு மக்களுக்கானதாகவும் மாறி குற்றம், ஏழ்மை மற்றும் மரணத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த கொகெய்ன் அமெரிக்காவின் மிக ஆபத்தான போதைப்பொருளாகி இருந்தது.

மத்திய நரம்பு மண்டலத்தை சடுதியில் சென்று சேரும் உணர்வுகளை விரைவில் தூண்டக்கூடிய, மிக பழமையான இயற்கையான மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கொகெய்ன். கொகெய்னின் விளைவுகள் உடலில் 1 மணி நேரம் வரை இருக்கும்.

1990களில் கொலம்பிய கொகெய்ன் வியாபாரிகள் அமெரிக்கா ஆசியா  மற்றும் ஐரோப்பாவிற்கு கடல்வழியே பெருமளவு கொகெய்னை சந்தைப் படுத்தத் துவங்கினார்கள். 2008ல் கொகெய்ன் உலகின்  இரண்டாவது மிக அதிகமாக கடத்தப்படும் போதைப்பொருளாகி இருந்தது (மாரிவானாவுக்கு அடுத்து) இன்றைய தேதியில் கொலம்பியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாபெரும் கொகெய்ன் கள்ளச்சந்தை வணிக அமைப்புக்கள் மிகச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.

வடக்கு சிலே பகுதியின் அகழ்வாய்வுகளில் கிடைத்த கிமு 1000-த்தை சேர்ந்த மம்மிகளின் உடலில் கொக்கோ பயன்பாட்டின் அடையாளங்கள் இருந்தன. இதுபோன்ற பல அகழ்வாய்வுகள் ஆண்டிஸ் பழங்குடியினரின் கொக்கோ பயன்பாடு சுமார் 3000 வருட வரலாற்றை கொண்டிருப்பதை காட்டுகிறது

கிருஸ்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலைஉச்சியில் வாழ்ந்த இன்கா பழங்குடியினர் அச்சூழலின் சுவாசசிக்கல்களுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள லேசான இனிப்புச்சுவைகொண்ட கொக்கோ இலைகளை மெல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். கொக்கோ இலைகளை சுண்ணாம்புடன் சேர்த்து  மெல்லும்போது அவர்களின் இதயம் வேகமாக துடித்தது சுவாசமும் விரைவானது

வாரி, பெருவிய  மற்றும் பொலிவிய தொல்குடியினர் மதச்சடங்குகளின் போது மட்டும் கொக்கோ இலைகளை உபயோகித்தார்கள்.

பொலிவிய ஆண்டிஸ் பழங்குடியினரின் ஐமரா மொழியில் “Khoka” என்றால் மரம் என்று பொருள்.அதுவே இன்றைய நவீன கொக்கோவின் (Coca)  வேர்ச்சொல்.

அப்பழங்குடியினர் இந்த இலைகளுக்கு மந்திர பண்புகள் இருப்பதாகவும் நம்பினர். மரத்திலிருந்து கீழே விழும் கொக்கோ இலைகளின் வேகம் அவை வீழும் இடங்கள் ஆகியவற்றைக்கொண்டு ஆவிகளின் நடமாட்டத்தையும் அவர்கள் கணித்தனர்.

ஆண்டஸ் மலைப்பகுதியின் கொக்கோ இலைகள் அமேஸான் பகுதியின் கனிகள் மற்றும் தோலாடைகளுக்கும், பசிபிக் பகுதியின் சிப்பிகள் மற்றும் மீன்களுக்கும் பண்டமாற்றாக அளிக்கப்பட்டபோது  கொக்கோ இலைகளின் கிளர்ச்சியூட்டும் இயல்புகள் மேலும் பல இடங்களுக்கு பரவியது.

இன்கா பழங்குடியினர் கொக்கோவை  தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கையில் 1532ல் ஸ்பானிஷ் படையெடுப்பு நடந்து. பின்பு கொக்கோ சாகுபடியும் இன்கா பழங்குடியினருக்கு  தினக்கூலியுடன்  கொக்கோ இலைகள் கொடுப்பதும் பரவலாகியது.

19-ம் நூற்றாண்டை சேர்ந்த மனிதவியலாளரும் நரம்பியல் நிபுணரும் மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் உணவுப்பொருட்களை குறித்த ஆய்வில் இருந்தவருமான இத்தாலியை சேர்ந்த  மண்டிகாஸா (Mantegazza) தென்னமரிக்க பழங்குடியினரின் கொக்கோ பயன்பாட்டை  அவர்களுடனேயே பலவருடங்கள் தங்கி இருந்து ஆரய்ந்து தானுமதை உண்டு, பிரபலமான “On the hygienic and medicinal properties of coca and on nervous nourishment in general”என்னும் கட்டுரையை வெளியிட்டார்

அந்த கட்டுரையின் ஒரு பத்தியில் மண்டிகாஸா கொக்கோவின் அனுபவத்தை இப்படி சொல்லுகிறார்

“…God is unjust because he made man incapable of sustaining the effect of coca all life long. I would rather have a life span of ten years with coca than one of 10 000 000 000 000 000 000 000 centuries without coca.”

பொலிவியா, பெரு மற்றும் கொலம்பியாவில் கொக்கோ புதர்களிலிருந்து கொகெய்ன் அடர்காடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வகங்களில் பல வேதிமாற்றங்களுக்கு பின்னர் தயாராகிறது. அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ வழியே வரும் கொகெய்னில் 90% கொலம்பியாவிலிருந்துதான் வருகிறது.  

கொகெய்னை அளிக்கும் இரு தாவரங்களில் முதன்மையானது Erythroxylum coca. இது எரித்ராக்ஸைலேசி குடும்பத்தை சேர்ந்தது. (மற்றொன்று Erythroxylum novogranatense). இது வடமேற்கு மற்றும் தென்னமரிக்காவை தாயகமாக கொண்டது.  எரித்ராக்ஸைலான் பேரினத்தின் நான்கு சிற்றினங்கள் பல்வேறு ஆல்கலாய்டுகளுக்காக பயிரிடப்படுகின்றன அவற்றில் இவை இரண்டு மட்டும் கொகெய்ன் ஆல்கலாய்டுகளுக்காக வளர்க்கப்படுபவை.

அமெரிகோ (Amerigo Vespucci)  1499-ல் கொக்கோ புதரை விவரித்து தென்னமரிக்க பழங்குடியினர் மயக்கம் மற்றும் பசியை வெல்ல இதன் இலைகளை மெல்லுவதை அவரது கடற்பயணக்குறிப்பில் எழுதியிருந்ததே கொக்கோ செடியை குறித்த முதல் எழுத்து பூர்வ ஆதாரம்

2லிருந்து 3 மீ உயரம் வரை வளரும் கொக்கோ செடி அடர்ந்த புதர் வகை வளரியல்பை கொண்டது. நிமிர்ந்த தண்டுகளையும் நுனி குறுகிய பசிய முட்டை வடிவ மெல்லிய இலைகளையும் கொண்டிருக்கும். இலை நடுநரம்பின் இருபுறமும் சற்றே மேடிட்டிருக்கும் நரம்பமைப்பு கொக்கோ இலைகளுக்கான பிரத்யேக அடையாளம்.

சிறிய மஞ்சள் மலர்கள் குட்டையான காம்பு கொண்ட கொத்துக்களாக அமைந்திருக்கும். கனிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.அமிலத்தன்மை கொண்ட மண்ணில் இவை செழித்து வளரும்.

Erythroxylum பேரினத்தின் நூற்றுக்கணக்கான சிற்றினங்களில்  Erythroxylum coca , Erythroxylum novogratense  இரண்டில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் கொகெய்ன் ஆல்கலாய்டு இருக்கிறது. இவற்றின் உலர் கொக்கோ இலைகளில் 2% கொகெய்ன் இருக்கும். மேலும் 23 சிற்றினங்களில் மிக மிக குறைவான அளவில்  (0.001%.) கொகெய்ன் இருக்கிறது.

பலவகையான தாவரங்களில் இருக்கும் ஆல்கலாய்டுகளை நல்லதும் அல்லதுமாக பலவிதங்களில் மனிதகுலம்  உபயோகிக்கின்றது. குருமிளகில் பைப்ரின், கோகோ கனிகளில் தியோபுரோமின், காப்பிக்கொட்டை மற்றும் தேயிலையில் கேஃபின், கசகசா கனியில்  மார்பைன், புகையிலையில் நிக்கோட்டின் என பல  ஆல்கலாய்டுகள் வணிகரீதியாக முக்கியமானவை இவற்றில் கொகெய்ன் உலகநாடுகளின் பெரும் சவாலாகிவிட்டிருக்கிறது.

1970ன்  அமெரிக்க போதைப்பொருள் தடுப்புச்சட்டம் போதை உண்டாகும், அடிமைப்படுத்தும், மருந்துப் பொருளாகவும் பயன்படும் பொருட்களை ஐந்து வகையாக பிரித்து பட்டியலிட்டிருக்கிறது. அதில் பட்டியல் இரண்டில் (Schedule II) வரும் கொகெய்ன் அரிதாக மருத்துவ உபயோகங்கள் கொண்டிருக்கிறது.

கொகெய்னின் பிற புழங்கு பெயர்கள்

 beam, big C, blow, Carrie Nation, coke, girl, her, lady, leaf, nose candy, snow, snowbirds, stardust, white (வெள்ளைப்பொடிக்கு மட்டும்), basa, crack, electric kool-aid, flake, rock (crack cocaine), banano, bazooka, and tio (கொகெய்ன் சேர்க்கப்பட்ட  மாரிவானா சிகரெட்)

இந்தியா மற்றும் ஜாவாவிலும் கொக்கோ சாகுபடியாகிறது. ஓராண்டில் 4 அல்லது 5 முறை கொக்கோ புதரிலிருந்து இலைகளை அறுவடை செய்யலாம். இலைகள் உலர்த்தப்பட்டு பின்னரே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து  1000லிருந்து 2000 மீ உயரத்தில் மட்டும் வளர்க்கப்பட்ட கொக்கோ புதர்கள் இப்போது காடுகளின் கீழ்ப்பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.

பொலிவியா மற்றும் பெருவிலிருந்து கொக்கோ வளர்ப்பை அழிக்க ராணுவம் மற்றும் காவல் துறையை ஈடுபடுத்தி அமெரிக்கா ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. கொக்கோ இலைகளை உண்ணும் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன கொக்கோ நாற்றுகளில் நோய் உண்டாக்கும் கிருமிகளை குறித்த ஆய்வும் நடைபெறுகிறது.

கொலம்பிய கொக்கோ சாகுபடி ஆகும் பிரதேசங்களில் வான்வழியே பயிர்களை அழிக்கும் மருந்துகளை தெளிக்கும் நடவடிக்கையும் அம்மருந்துகள் பொதுமக்களின் நலனுக்கும் சூழலுக்கும் உருவாக்கும் கேடுகளை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

 எனினும் கொக்கோ சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அதைக்காட்டிலும் அல்லது அதே அளவுக்கு லாபம் அளிக்கும் மாற்றுப்பயிரொன்றை கண்டுபிடிக்கும் வரை இந்த சிக்கல் தீரது என்பதையும் அமெரிக்க அரசு உணர்ந்திருக்கிறது

அமெரிக்கா ஐரோப்பா  மட்டுமல்ல பல உலகநாடுகள் கொகெய்னுக்கு எதிராக நடத்துவது வெறும் கடினமான சட்டபூர்வ நடவடிக்கை மட்டுமல்ல போதைபொருளுக்கெதிரான் போர்தான் அது

அதீத மற்றும் தொடர்ந்த கொகெய்ன் பயன்பாடு மூக்கில் ரத்தம் வடிதல், பசியின்மை, சிறுநீரக கோளாறு,  வலிப்பு நோய், இதயக்கோளாறுகள் மற்றும் மரணத்தை உண்டாக்கும்.

இன்னும் அவ்வளவாக அறிமுகமாகியிருக்காத பிரதேசங்களிலும் தற்காலிக கிளர்ச்சியூட்டியான கொகெய்ன் பயன்பாடு இணைய உலகில் மும்முரமாக இயங்கும் இளைஞர்களுக்கு எளிதில் அறிமுகமாகும் ஆபத்து இருக்கிறது.

கொகெய்னுக்கெதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும் போது கொகெய்ன் கள்ளச்சந்தை வணிகமும் புதிய வழிகளையும், புதிய வடிவங்களையும் கண்டுகொள்கிறது 

கொலம்பிய காடுகளிலிருந்து அமெரிக்க வீதிகளுக்கு வரும் கொகெய்ன் பயணத்தை, கொகெய்ன் சந்தை, கொகெய்ன் புழங்கும் ரகசிய உலகின் வாழ்வு மற்றும் மரணம், கொகெய்ன் கடத்தலுக்காக துறைமுகங்களை கைப்பற்ற நடக்கும் கொகெய்ன் போர்களை பேசும். 2020ல் வெளியான டோபி மியூஸின்  முதல் நூலான ’கிலோ.(Kilo) கொகெய்ன் குறித்த நூல்களில் மிக முக்கியமானது.

பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் தொலைக்காட்சி இயக்குநரான டோபி மியூஸ்  ’’நாம் இப்போது கொகெய்னின் பொற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’’ என்று இந்த நூலில் குறிப்பிட்டிருப்பது  மிகுந்த கவலையளிக்கிறது.

கொக்கோ புதர் சாகுபடி , கொகெய்ன் வேதிமாற்றம், கள்ளச்சந்தை வணிகம், போதைப்பொருளாக அதன் பயன்பாடு ஆகியவை மிக மிக நீண்ட சங்கிலித் தொடரானாலானவை. அதன் கண்ணிகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை, மாபெரும் வலையொன்றினால் பிணைக்கப்பட்டவை.

மேலதிக தகவல்களுக்கு:

https://www.unodc.org/unodc/en/drug-trafficking/index.html
https://www.unodc.org/documents/wdr/WDR_2010/1.3_The_globa_cocaine_market.pdf
https://www.drugfreeworld.org/drugfacts/cocaine/a-short-history.html

ஆடிப் பதினெட்டும் அறமற்ற மக்களும்!

நாகரீகங்கள் ஆற்றங்கரைகளில் தொடங்கியதால் உலகின் பெரும்பான்மை இனக்குழுக்களின் வாழ்வில் நீருக்கென்று தனித்த பண்பாட்டு கூறுகள் உள்ளன. தமிழர்களின் வாழ்விலும் நீருக்கென்று பிரத்தியேக இடமுண்டு. குறிப்பாக, காவிரி, வைகை, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகங்கள் நதியை நாயகமாகக் கொண்ட வழிபாடுகளைக் கொண்டவை.

காவிரி பாயும் ஊர்களுக்கு ஆடிப் பதினெட்டு, கொண்டாட்டமான நாள். புதுப்புனல் வரும் நாள். சங்ககாலம் தொட்டு, காவிரியின் புதுப்புனல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பழமையான கொண்டாட்டம் என்று சொல்ல முடியாது. நதிதான் பழமை வாய்ந்தது. நாளும் வருவது புதுத் தண்ணீர். கோடைக்குப் பிறகு வரும் மழையில் பெருக்கெடுத்தோடுவது புத்தம் புதிய புனல். வழிபடும் மக்களும் வெவ்வேறானவர்கள். பிரார்த்தனைகள் வேறு. நதிநீரைப் போல் பரிசுத்தமான, என்றும் புதுமையான இயற்கையின் கூறு வேறொன்றில்லை.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காவிரியின் புதுப்புனலை வர்ணிக்குமிடம் எழில் நிறைந்தது. ‘உழவர் ஓதை மதகு ஓதை;  உடைநீர் ஓதை; தண்பதம் கொள் விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப நடந்தாய்; வாழி, காவேரி’ என்று காவிரியின் விவரணையில், ஓதை என்ற சொல்லின் நயத்தைக் கவனிக்க வேண்டும். நீர் எழுப்பும் சப்தங்கள் பலவிதம். ஓதை என்ற சொல் தரும் நயம் அதனினும் அற்புதம்.

இன்றும் தமிழகக் கிராமங்களில் காவிரி பாயும் இடங்கள் என்பதுடன் விவசாயம் சார்ந்த பண்டிகையாக ஆடிப்பெருக்கு பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. ஆறு, ஏரி, குளம் போன்ற நீராதாரங்கள் பெருக்கெடுத்தோடி வருவதைக் காணக் குடும்பம் குடும்பமாகச் செல்வது மரபு. பூக்களும் மகரந்தங்களுமாக நிறைந்து பொங்கிப் பெருகி வரும் புதுப்புனலைக் காண்பதும் வணங்குவதும், தொடர்ந்த வருடத்தின் நல்ல விளைச்சலுக்கும்  வளம் பெருகுவதற்குமான  மங்கல அடையாளமாக  கருதப்படுகிறது.

ஆடிப் பதினெட்டாம் பெருக்கு கண்ட பின்னர் விதைப்பது என்பதும் பன்னெடுங்கால வழக்கம். அன்றைக்கு நீர் நிலைகளுக்கருகில்  புதுமணத் தம்பதிகள் தாலி பெருக்கி கட்டுவதும் உண்டு,

ஆடிப் பதினெட்டு, புதுப்புனல் பார்ப்பது நல்லது என்ற பண்பாட்டு, இலக்கிய தொடர்ச்சியை நான் விரும்பி செய்வேன். இந்த ஆண்டும் நான் என் நண்பர்கள் உறவினர்களுடன் புதுப்புனல் காண ஆழியாறு அணைக்குச் சென்றிருந்தேன்.

பொள்ளாச்சியின் பெருமை, பொள்ளாச்சியின் குடிநீர் ஆதாரம் எனப்படும் ஆழியாறு அணை சமீபத்தில் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான வால்பாறை உள்ளிட்ட மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகளில் எல்லாம் நல்ல மழை இருந்ததால் வேகமாக நிரம்பி இருந்தது.

ஆடி மாதம் துவங்கியபோது அணையின் முழுக் கொள்ளளவு எட்டி ஆழியாற்றின் 11 மதகுகளும் திறந்து விடப்பட்டன. ஆடிப் பதினெட்டு அன்று ஆயிரக்கணக்கானோர் அதைக்காண அணைக்கு வந்திருந்தனர்.  வழக்கமாகவே விடுமுறை நாட்களிலும் வார இறுதிகளிலும் ஆழியாறு அணையில் நல்ல கூட்டம் இருக்கும், ஆடிப்பதினெட்டு அன்று வழக்கத்துக்கு மாறாக பெருங்கூட்டம். அன்று அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் பார்த்தது வெறும் குப்பை பெருக்கைத்தான்.

அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பார்க்க ஆர்வமுடன் சென்றிருந்த எங்களுக்கு, சுற்றிலும் இருந்த காட்சிகளைப் பார்க்க, பார்க்க துக்கம் பொங்கியது. ஆழியாற்றின் அடிப்பகுதியில் சிற்றாறுகள் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தன. ஆனால் அணைப்பகுதியில், அணையின் சுற்றுபுறங்களில், அணையின் உள் சுவற்றுப் பகுதிகளிலெல்லாம் பல டன் அளவில் பிளாஸ்டிக் கழிவுகளும், துணி மூட்டைகளும் மிதந்தன. அன்று அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் பார்த்தது வெறும் குப்பை பெருக்கைத்தான்.

கடந்த ஏப்ரல் வரை பொள்ளாச்சியில்  ஒரு சொட்டு மழையின்றி அசாதாரணமான வெப்பம் நிலவியது. அப்படியே மழையில்லாமல் அந்த வெப்பம் தொடர்ந்திருந்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் அடுத்த போக உற்பத்தி கேள்விக்குள்ளாகியிருக்கும். 

ஆனால் இயற்கை மனமிரங்கி நல்ல மழைப்பொழிவு கொடுத்ததால் அணைகள் நிரம்பி வழிந்தன. பதிலுக்கு நாம் பல டன் பிளாஸ்டிக் குப்பைகளை குடிநீர் ஆதாரமான  ஓர் ஆணையில் கொட்டி, நம் பொறுப்பற்ற, குறைந்தபட்ச அக்கறையற்ற, அறமற்ற மனித இயல்பை வெளிக்காட்டியிருக்கிறோம். பல லட்சம் ஆண்டுகளாகத் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத இயற்கைக்கு மனித குலம் செய்யும் மாபெரும் அநீதியைத்  தடுக்க அதிகாரமற்று கையறு நிலையில் அன்று நின்றிருந்தேன்.

தண்ணீரிலும், அணையை ஒட்டிய பகுதியிலும் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளைப் பார்க்கப் பொறுக்காமல் அணையின் மேலேறிச் சென்றேன். செல்லும் பகுதிகளில் எல்லாம் கடந்த மழையில் கணம்புற்கள் இடுப்பளவுக்குச் செழித்து வளர்ந்திருந்தன. அதற்குள் எந்த விஷப்பூச்சிகள் இருந்தாலும் தெரியாத அளவுக்கு களைகளும் வளர்ந்திருக்கின்றன. அணைப்பகுதியின்  பூங்கா என்று சொல்லப்படும் பகுதி உண்மையில் மாபெரும் திறந்த வெளி குப்பைத் தொட்டியாக இருந்தது. திரும்பும் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள், காலி மது பாட்டில்கள், உபயோகப்படுத்திய டயப்பர்கள், அழுகிய குப்பைகள் குவிந்து கிடந்தன.

 அங்கிருக்கும்  சிறு கால்வாயின் அருகில் செல்ல முடியாமல் கடும்நாற்றம் அடித்தது. மதகுகளைத் திறந்து விட வந்த பிரமுகர்கள் காரில் மேலே சென்று, மலர்தூவி வழிபட்டு புறப்பட்டு விட்டார்கள். திறந்துவிட்ட அந்த நீர்நிலையின் உண்மை நிலை என்ன என்பதை  அவர்கள் படியேறிச் சென்றிருந்தால் பார்த்திருக்கலாம்.

அண்டை மாநிலத்தின் ஆற்று நீரை கேட்கிறோம், அது தரப்படாதபோது கோபம் கொள்ளும், தீர்ப்பாயங்கள் அமைக்கும்படி மேல் முறையீடு செய்யத் தொடர்ந்து வலியுறுத்தும் நாம் நமது சொந்த மாநிலத்தின் நீராதரங்களை எப்படிப் பார்த்துக் கொள்கிறோம்? 

 ஆழியாறு அணையில்  பூங்கா என்று சொல்லத்தக்க எந்த அம்சமுமே இல்லை. குழந்தைகள் விளையாடவென்று அமைக்கப்பட்டிருக்கும் இரும்புக்கம்பிகளால் உருவாக்கப்பட்டிருக்கும்  எல்லா அமைப்புமே பெயின்ட் பூச்சு இல்லாமல் உடைந்தும், வாய்பிளந்தும்  துருவேறியும் இருக்கின்றன. 

அணைக்கட்டுக்கு மேலேறிச் செல்லும் படிகளின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இரும்பு நிழல் தங்கல் உடைந்து சாய்ந்திருக்கிறது. அது விழுந்தால் உயிர்ப்பலி தவிர்க்கவே முடியாது.

உலகின் பல நாடுகளில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் கேரளத்தின் அமைதிப்பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றிருக்கையில் அங்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமல்ல கைப்பைகளையும் கடுமையாகச் சோதனை செய்து சாக்லேட்டை சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் காகிதத்தைப் பிரித்த பிறகுதான் உள்ளே அனுமதித்தார்கள்.

பிளாஸ்டிக் பொருட்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மட்காமல் அப்படியே நீர்நிலையிலேயே இருக்கும் என்பது பொள்ளாச்சியைச் சுற்றி இருக்கும் விவசாய மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அணையின் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர்க்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா என்ன?

ஆழியாறு அணை ஏராளமான மீன் வகைகள், பாசிகள், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணீர்ப்பாசிகள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்களின் வாழிடமாகவும் இருக்கிறது. அவற்றின் அழிவுக்கும் இந்தக் கட்டற்ற, கேட்பாரற்ற சூழல் மாசுபாடு காரணமாகி விடும்.

உடனடியாக இதற்கு தீர்வு காணமுடியும்.நுழைவுக்கட்டணத்தை அதிகப்படுத்தலாம்,  புற்களை வெட்டிச் செதுக்கி சுத்தம் செய்யலாம் ,உடைந்த இரும்பு அமைப்புகளை  மாற்றி புதியவற்றை அமைக்கலாம். தொடர்ந்து தூய்மைப்பணி மேற்கொண்டு அணையையும் பூங்காவையும் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் உள்ளே எடுத்துச்செல்லும்  பொருட்களை கடுமையாக சோதனை செய்து பிறகு அனுமதிக்கலாம்.

நீரின்றி அமையாது உலகு என்றெழுதிய கவிஞனின் தீர்க்கதரிசனத்தைப் படித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு தனிநபரும் வாழ்வில் குறைந்தபட்சமாவது நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.

பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம், பொதுவிடத் தூய்மை, பொதுவிட அழகு, பொதுவிடங்களின் வரலாறு காத்தல் போன்ற அரிய குணங்கள் அற்ற மனிதர்களாக நம் பொதுச் சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. வாழ்விலும் தாழ்விலும் இயற்கையையும் இனத்தின் பண்பாட்டையும் காக்க வேண்டிய உறுதியுடன் இருந்த தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சி, தனித் தீவு போன்ற வாழ்க்கை முறைகளினால் அறுபடும் தருவாயில் இருக்கிறது.

எனக்கு ஆழியாறு. எண்ணற்றவர்களுக்குத் தாமிரபரணி, காவிரி. நம் தலைப்பெழுத்தும் பெயரும் என்பது நம் நிகழ்கால அடையாளம். நம் பண்பாட்டுத் தொடர்ச்சியே நிரந்தர அடையாளம்.

பண்பாட்டின் வேர் நீர். நீரின் ஆதாரம் நதி. நதியைக் காப்பவை அதன் கரைகள். பண்பாட்டின் வேர் காத்தல் என்பதுதான் அசலான கொண்டாட்டம்.

பூக்கோலம்!

இன்று மீண்டும் ஒரு கீழ்மையை அருகில் சந்திக்க வேண்டி வந்தது. வழக்கம்போல உதாசீனப்படுத்தி விட முடியாமல் இன்றென்னவோ அதிகம் சங்கடப்பட்டேன். இந்த நாற்காலிகள் படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா!சரண் ஒரு முறை என்னை the pale blue dot என்னும், பால்வெளியில் மிகச்சிறிய ஒரு புள்ளியாக நமது பூமி சுழன்று கொண்டிருப்பதைக் காட்டும் ஒரு ஆவணப்படம் பார்க்கச்சொன்னான்.  அந்தச் சிறு புள்ளிக்குள்தான் ,அதற்குள்தான்  பலரின் ஆணவம் இப்படி பேருருக்கொள்கிறது.  

ஏதேனும் ஒரு விதத்தில் சிறப்பான தகுதி கொண்டிருப்போர், பொதுவான அறிவோ, பொதுஅறிவோ    கொஞ்சமாவது கொண்டிருப்பவர்கள், எப்படியோ எதோ ஒரு தகுதியாவது கொண்டிருப்போரின் ஆணவத்தை நான் சகித்துக்கொள்ளப் பழகி விட்டிருக்கிறேன். 22 நீண்ட வருடங்களல்லவா ? 

ஆனால்அப்படி எதுவுமே இல்லாமல் கீழ்மையில் திளைப்பவர்கள், கீழ்மையை தங்களைச்சுற்றிலும் பரப்பிக்கொள்பவர்களின் ஆணவம் என்னைச்சீண்டுகையில் எரிச்சலாகிறேன்.

முன்பெல்லாம் கல்லூரி இப்படி இல்லை மெய்யாலுமே பெரிய மனிதர்கள் பொறுப்பான பதவிகளில் இருந்தார்கள். இளம் ஆசிரியர்களான எங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆசிரியம் என்பதை வாழ்வுநெறியாகக் கற்றுக்கொடுத்தார்கள்.இன்று அவற்றையெல்லாம் மீண்டும் நினைத்துக்கொண்டேன்

நான் திருமணத்திற்காக விடுப்பு எடுக்கக் கடிதம் எழுதிக்கொண்டு அப்போது முதல்வராக இருந்த திரு சுந்தரம் என்பவரைக் காணச்சென்றேன். அப்போதுதான் கல்லூரியில் இணைந்திருந்தேன்.  சம்பிரதாயமான கடிதங்கள் எழுதிப்பழகி இருக்கவில்லை. கடிதத்தில் ஒரு சொல்லில் tense தவறாக இருந்திருக்கிறது.

என்னை முதலில் அமரச்சொன்ன அவர் (முதல்வரின்) அறையின் மூலையில் அவரிடம் PhD ஆய்வு செய்துகொண்டிருந்த ,அமர்ந்து என்னவோ எழுதிக்கொண்டிருந்த இளைஞரை ’’கொஞ்சநேரம் வெளியே போப்பா’’என்று சொல்லி, அவர்  எழுந்து சென்று கதவை மூடியதும் என்னிடம் ’’லோகமாதேவி இந்த இடத்தில் இதுவல்ல இதுதான் வரனும்’’ என்று சொல்லிக் கடிதத்தைத் திருத்தினார், பின்னர்  ’’இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் கத்துக்குவீங்க இது ஒன்னும் பெரிய விஷயமல்ல இருந்தாலும் நீங்க தெரிஞ்சுக்கனும்னு சொல்லறேன்’’ என்றார்.பிறகு நான் கற்றுக்கொண்டேன்தான்.

இதைச் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்வில்  மிக வயோதிகராகிவிட்டிருந்த அவரிடமே சொன்னேன் அவருக்கு நினைவே இல்லை. புன்னகைத்தார் பதிலுக்கு.

அவர் நினைத்திருந்தால் அந்த இளைஞர் முன்னாலேயே என்னைக் கடிந்திருக்கலாம், கடிந்துகொள்ளாமல் அன்புடன் சொல்லுவதாக இருந்தாலும் அவர் முன்னிலையிலேயே சொல்லி இருக்கலாம்.

அப்போது நான் முனைவர் பட்டம் பெற்றிருந்தேன். இந்தக்கல்லூரியின் முனைவர் பட்டம் வைத்திருந்த முதல் பெண்பேராசிரியர் நான். சர்வதேச சஞ்சிகைகளில் வெளியாகி இருந்த என் ஆய்வுக்கட்டுரைகள் கல்லூரியின் பேசுபொருளாக இருந்தன.

அவர் என்னிடம் ‘’என்னம்மா PhD படிச்சிருக்கே ஒரு லெட்டர் கூட எழுதத்தெரியாதா’’? என்று கேட்பதற்கான எல்லா சாத்தியங்களும் அவர் முன்பாக இருந்தன. ஆனால் அவர் எத்தனை கவனமாக இருந்திருக்கிறார் அந்த நாற்காலியில், அந்தப்பதவியில்?

 பிறரை  எப்படி நடத்துவது என்பதை அவரிடமிருந்தும் நான் கற்றுக்கொண்டேன்.

இதைப் பல நூறு முறை நான் நினைத்துப்பார்ப்பதுண்டு, மகன்களுக்கும்  மீள மீளச்சொல்லி இருக்கிறேன்.

அப்படி  என்னை வழிநடத்திய துறைத்தலைவர்  திருசங்கரன்,  திருஷண்முக சுந்தரம் சார்,திரு வசந்தகுமார் திரு ரவீந்திர ராஜு, திரு மணியன், திருமதி நர்மதா பாய் என்று பலரை நான் மரியாதையுடன் நினைவில் வைத்திருக்கிறேன்.

கல்லூரியில் என்னை மரியாதைக் குறைவாக நடத்தியவர்கள், நடத்துபவர்கள், இனி நடத்தவிருப்பவர்களை எல்லாம் நான் ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்துகிறேன். ஒற்றைக்கையால் தூசியைப்போலத் தட்டி உதறுகிறேன் ஆனாலும் இப்படி சில சமயம் கண்ணில் தூசி விழுந்ததுபோல் சங்கடமாகி விடுகிறது.

 நான் எத்தனை எட்டி எட்டிச் என்றாலும் அலுவலக ரீதியாகச் சிலரை சிலசமயம்  நேரில் சந்திக்கவேண்டி வருகிறது அதுவும் துறைத்தலைவரான பிறகு இப்படி அதிகம் நடக்கிறது.

நாளை என் நெடுநாள் கனவான விதை வங்கி மற்றும் மூலிகைத்தோட்டத்தின் திறப்பு விழா. எனவே அதற்கான ஏற்பாடுகள். அடுத்துவரும் தேர்வுக்கான வினாத்தாள்களை அனைவரிடமும் கேட்டு வாங்கி தேர்வுக்கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்ப கடைசிநாள் என்பதால் அந்த வேலை. வழக்கமான வகுப்புகள் என்று ஏராளம் வேலைப்பளுவும்  இந்த மோசமான அனுபவத்தின் கூடச் சேர்ந்து விட்டது. 

மாணவர்கள் முன்பாக என அகத்தை பெரிதும் மறைத்துக்கொள்வேன்தான் என்றாலும் ஒரு சிலர் என்னை மிக அணுக்கமாக அறிந்துகொள்பவர்கள். என் ஆய்வு மாணவி மேனகா வந்து என்னவாயிற்று என்றாள் ’’இப்போவேண்டாம் பிறகு பேசலாம்’’ என் அவளை அனுப்பினேன், ’’சாப்பிட்டீங்களா’’? என்று கேட்டுவிட்டே என் அறையிலிருந்து அவள் சென்றாள். 

ஆய்வகத்தில் நாளை ஆயுதபூஜைக்கான ஏற்பாடுகளை முகமாறுதலின்றி கவனித்துவிட்டு நான் வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டேன். 

வீடு வரும் வழியில் இளம் தூறலாக மழை பெய்து கொண்டே இருந்தது பருவமழை துவங்கவிருக்கிறது. நல்ல குளிரும் ஆரம்பித்துவிட்டது.

வெண்முரசில் பாண்டவர்களை தண்டிக்க அந்த ஆயிரத்தவன் செய்யும் கீழ்மையான செயல்களைக் குறித்த அத்தியாயம் வாசித்தேன்.  அறிவின்மை முழங்கும் என்பதை மீள மீள வாசித்தேன். என்னால் அமைந்திருக்க முடியவில்லை சாக்கில் கட்டி வைத்த  பூனை போல உள்ளே என்னவோ நிமிண்டிக்கொண்டே இருந்தது.

நான் வீடு வந்தபோது எனக்கு வாட்ஸ் அப்பில் புவனா, காவ்யா என்னும் இரு மாணவிகள் என் அறை வாசலில் சிறிய மிக அழகிய பூக்கோலமிட்டு அதைப் புகைப்படம் எடுத்து ’’மேம்,உங்களுக்காக’’ என்றெழுதி அனுப்பி இருந்தார்கள்.அந்த  வண்ணமயமான மலர்க்கோலம் என்னை உண்மையிலேயே மலர்ச்சிகொள்ளச்செய்துவிட்டது.

நான் இந்தக் கல்லூரியிலிருந்து உடனடியாக வெளியேற ஆயிரக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன,  இன்னும் அதைச் செய்யாமல் இருக்க இந்தக் குழந்தைகளின் அன்பும் தாவரவியல் கற்றுக்கொடுப்பதில் எனக்கிருக்கும் பிரியமும்தான் காரணம். 

நிச்சயம் இந்த வேலைக்கான சம்பளம் ஒரு காரணமல்ல. இதற்குச்சற்றும் குறைவு இல்லாமல் அல்லது கூடுதலாகக்கூட நீட் பித்துப்பிடித்திருகும் இந்தக்காலத்தில்நான் அதற்கான சிறப்பு வகுப்புகள் எடுக்க முடியும், கட்டணத்தின் பேரில் தாவரவியல் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்து நடத்த முடியும், அப்படியொரு திட்டம்  கைவசம் வைத்திருக்கிறேன். தருண் படிப்பை முடிக்கக்காத்திருக்கிறேன். 

ஜெ சொல்லிய

‘’ ஓர் அவமானத்தை ஒரு இளவெயில் போக்க முடியுமானால்,

  ஒர் இழப்பை ஒரு மென்மழை மறக்கச் செய்ய முடியுமானால்,

   ஒரு நோயைப் பூவின் நறுமணத்தால் சமன் செய்துகொள்ள முடியுமென்றால்    

வாழ்க்கையில் அஞ்சத்தக்கதாக ஏதுமில்லை ‘’

என்னும் வரிகளை வாசித்தேன்

எத்தனை உண்மை!

அந்தக்கோலம் இன்றைக்கு நான் சந்தித்த கீழ்மையை சமன் செய்துவிட்டதோடு என்னை அந்தச் சங்கடத்திலிருந்து விடுவித்தும் விட்டது.

 அன்பு!

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑