நாகரீகங்கள் ஆற்றங்கரைகளில் தொடங்கியதால் உலகின் பெரும்பான்மை இனக்குழுக்களின் வாழ்வில் நீருக்கென்று தனித்த பண்பாட்டு கூறுகள் உள்ளன. தமிழர்களின் வாழ்விலும் நீருக்கென்று பிரத்தியேக இடமுண்டு. குறிப்பாக, காவிரி, வைகை, தாமிரபரணி ஆற்றங்கரை நாகரீகங்கள் நதியை நாயகமாகக் கொண்ட வழிபாடுகளைக் கொண்டவை.
காவிரி பாயும் ஊர்களுக்கு ஆடிப் பதினெட்டு, கொண்டாட்டமான நாள். புதுப்புனல் வரும் நாள். சங்ககாலம் தொட்டு, காவிரியின் புதுப்புனல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பழமையான கொண்டாட்டம் என்று சொல்ல முடியாது. நதிதான் பழமை வாய்ந்தது. நாளும் வருவது புதுத் தண்ணீர். கோடைக்குப் பிறகு வரும் மழையில் பெருக்கெடுத்தோடுவது புத்தம் புதிய புனல். வழிபடும் மக்களும் வெவ்வேறானவர்கள். பிரார்த்தனைகள் வேறு. நதிநீரைப் போல் பரிசுத்தமான, என்றும் புதுமையான இயற்கையின் கூறு வேறொன்றில்லை.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் காவிரியின் புதுப்புனலை வர்ணிக்குமிடம் எழில் நிறைந்தது. ‘உழவர் ஓதை மதகு ஓதை; உடைநீர் ஓதை; தண்பதம் கொள் விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப நடந்தாய்; வாழி, காவேரி’ என்று காவிரியின் விவரணையில், ஓதை என்ற சொல்லின் நயத்தைக் கவனிக்க வேண்டும். நீர் எழுப்பும் சப்தங்கள் பலவிதம். ஓதை என்ற சொல் தரும் நயம் அதனினும் அற்புதம்.
இன்றும் தமிழகக் கிராமங்களில் காவிரி பாயும் இடங்கள் என்பதுடன் விவசாயம் சார்ந்த பண்டிகையாக ஆடிப்பெருக்கு பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. ஆறு, ஏரி, குளம் போன்ற நீராதாரங்கள் பெருக்கெடுத்தோடி வருவதைக் காணக் குடும்பம் குடும்பமாகச் செல்வது மரபு. பூக்களும் மகரந்தங்களுமாக நிறைந்து பொங்கிப் பெருகி வரும் புதுப்புனலைக் காண்பதும் வணங்குவதும், தொடர்ந்த வருடத்தின் நல்ல விளைச்சலுக்கும் வளம் பெருகுவதற்குமான மங்கல அடையாளமாக கருதப்படுகிறது.
ஆடிப் பதினெட்டாம் பெருக்கு கண்ட பின்னர் விதைப்பது என்பதும் பன்னெடுங்கால வழக்கம். அன்றைக்கு நீர் நிலைகளுக்கருகில் புதுமணத் தம்பதிகள் தாலி பெருக்கி கட்டுவதும் உண்டு,
ஆடிப் பதினெட்டு, புதுப்புனல் பார்ப்பது நல்லது என்ற பண்பாட்டு, இலக்கிய தொடர்ச்சியை நான் விரும்பி செய்வேன். இந்த ஆண்டும் நான் என் நண்பர்கள் உறவினர்களுடன் புதுப்புனல் காண ஆழியாறு அணைக்குச் சென்றிருந்தேன்.
பொள்ளாச்சியின் பெருமை, பொள்ளாச்சியின் குடிநீர் ஆதாரம் எனப்படும் ஆழியாறு அணை சமீபத்தில் அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளான வால்பாறை உள்ளிட்ட மேற்கு மலைத் தொடர்ச்சிப் பகுதிகளில் எல்லாம் நல்ல மழை இருந்ததால் வேகமாக நிரம்பி இருந்தது.
ஆடி மாதம் துவங்கியபோது அணையின் முழுக் கொள்ளளவு எட்டி ஆழியாற்றின் 11 மதகுகளும் திறந்து விடப்பட்டன. ஆடிப் பதினெட்டு அன்று ஆயிரக்கணக்கானோர் அதைக்காண அணைக்கு வந்திருந்தனர். வழக்கமாகவே விடுமுறை நாட்களிலும் வார இறுதிகளிலும் ஆழியாறு அணையில் நல்ல கூட்டம் இருக்கும், ஆடிப்பதினெட்டு அன்று வழக்கத்துக்கு மாறாக பெருங்கூட்டம். அன்று அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் பார்த்தது வெறும் குப்பை பெருக்கைத்தான்.
அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் பார்க்க ஆர்வமுடன் சென்றிருந்த எங்களுக்கு, சுற்றிலும் இருந்த காட்சிகளைப் பார்க்க, பார்க்க துக்கம் பொங்கியது. ஆழியாற்றின் அடிப்பகுதியில் சிற்றாறுகள் பொங்கிப் பெருகிக் கொண்டிருந்தன. ஆனால் அணைப்பகுதியில், அணையின் சுற்றுபுறங்களில், அணையின் உள் சுவற்றுப் பகுதிகளிலெல்லாம் பல டன் அளவில் பிளாஸ்டிக் கழிவுகளும், துணி மூட்டைகளும் மிதந்தன. அன்று அங்கு வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் பார்த்தது வெறும் குப்பை பெருக்கைத்தான்.
கடந்த ஏப்ரல் வரை பொள்ளாச்சியில் ஒரு சொட்டு மழையின்றி அசாதாரணமான வெப்பம் நிலவியது. அப்படியே மழையில்லாமல் அந்த வெப்பம் தொடர்ந்திருந்தால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் அடுத்த போக உற்பத்தி கேள்விக்குள்ளாகியிருக்கும்.
ஆனால் இயற்கை மனமிரங்கி நல்ல மழைப்பொழிவு கொடுத்ததால் அணைகள் நிரம்பி வழிந்தன. பதிலுக்கு நாம் பல டன் பிளாஸ்டிக் குப்பைகளை குடிநீர் ஆதாரமான ஓர் ஆணையில் கொட்டி, நம் பொறுப்பற்ற, குறைந்தபட்ச அக்கறையற்ற, அறமற்ற மனித இயல்பை வெளிக்காட்டியிருக்கிறோம். பல லட்சம் ஆண்டுகளாகத் தன் இயல்பை மாற்றிக்கொள்ளாத இயற்கைக்கு மனித குலம் செய்யும் மாபெரும் அநீதியைத் தடுக்க அதிகாரமற்று கையறு நிலையில் அன்று நின்றிருந்தேன்.
தண்ணீரிலும், அணையை ஒட்டிய பகுதியிலும் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளைப் பார்க்கப் பொறுக்காமல் அணையின் மேலேறிச் சென்றேன். செல்லும் பகுதிகளில் எல்லாம் கடந்த மழையில் கணம்புற்கள் இடுப்பளவுக்குச் செழித்து வளர்ந்திருந்தன. அதற்குள் எந்த விஷப்பூச்சிகள் இருந்தாலும் தெரியாத அளவுக்கு களைகளும் வளர்ந்திருக்கின்றன. அணைப்பகுதியின் பூங்கா என்று சொல்லப்படும் பகுதி உண்மையில் மாபெரும் திறந்த வெளி குப்பைத் தொட்டியாக இருந்தது. திரும்பும் எல்லா இடங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள், காலி மது பாட்டில்கள், உபயோகப்படுத்திய டயப்பர்கள், அழுகிய குப்பைகள் குவிந்து கிடந்தன.
அங்கிருக்கும் சிறு கால்வாயின் அருகில் செல்ல முடியாமல் கடும்நாற்றம் அடித்தது. மதகுகளைத் திறந்து விட வந்த பிரமுகர்கள் காரில் மேலே சென்று, மலர்தூவி வழிபட்டு புறப்பட்டு விட்டார்கள். திறந்துவிட்ட அந்த நீர்நிலையின் உண்மை நிலை என்ன என்பதை அவர்கள் படியேறிச் சென்றிருந்தால் பார்த்திருக்கலாம்.
அண்டை மாநிலத்தின் ஆற்று நீரை கேட்கிறோம், அது தரப்படாதபோது கோபம் கொள்ளும், தீர்ப்பாயங்கள் அமைக்கும்படி மேல் முறையீடு செய்யத் தொடர்ந்து வலியுறுத்தும் நாம் நமது சொந்த மாநிலத்தின் நீராதரங்களை எப்படிப் பார்த்துக் கொள்கிறோம்?
ஆழியாறு அணையில் பூங்கா என்று சொல்லத்தக்க எந்த அம்சமுமே இல்லை. குழந்தைகள் விளையாடவென்று அமைக்கப்பட்டிருக்கும் இரும்புக்கம்பிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் எல்லா அமைப்புமே பெயின்ட் பூச்சு இல்லாமல் உடைந்தும், வாய்பிளந்தும் துருவேறியும் இருக்கின்றன.
அணைக்கட்டுக்கு மேலேறிச் செல்லும் படிகளின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் ஒரு இரும்பு நிழல் தங்கல் உடைந்து சாய்ந்திருக்கிறது. அது விழுந்தால் உயிர்ப்பலி தவிர்க்கவே முடியாது.
உலகின் பல நாடுகளில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பிளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதிக்கப்படுவதில்லை. சமீபத்தில் கேரளத்தின் அமைதிப்பள்ளத்தாக்குப் பகுதிக்குச் சென்றிருக்கையில் அங்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் மட்டுமல்ல கைப்பைகளையும் கடுமையாகச் சோதனை செய்து சாக்லேட்டை சுற்றி இருக்கும் பிளாஸ்டிக் காகிதத்தைப் பிரித்த பிறகுதான் உள்ளே அனுமதித்தார்கள்.
பிளாஸ்டிக் பொருட்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு மட்காமல் அப்படியே நீர்நிலையிலேயே இருக்கும் என்பது பொள்ளாச்சியைச் சுற்றி இருக்கும் விவசாய மக்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அணையின் பொறுப்பேற்றுக் கொண்டிருப்பவர்க்கும் அதிகாரிகளுக்கும் தெரியாதா என்ன?
ஆழியாறு அணை ஏராளமான மீன் வகைகள், பாசிகள், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நுண்ணீர்ப்பாசிகள் உள்ளிட்ட பல நீர்வாழ் உயிரினங்களின் வாழிடமாகவும் இருக்கிறது. அவற்றின் அழிவுக்கும் இந்தக் கட்டற்ற, கேட்பாரற்ற சூழல் மாசுபாடு காரணமாகி விடும்.
உடனடியாக இதற்கு தீர்வு காணமுடியும்.நுழைவுக்கட்டணத்தை அதிகப்படுத்தலாம், புற்களை வெட்டிச் செதுக்கி சுத்தம் செய்யலாம் ,உடைந்த இரும்பு அமைப்புகளை மாற்றி புதியவற்றை அமைக்கலாம். தொடர்ந்து தூய்மைப்பணி மேற்கொண்டு அணையையும் பூங்காவையும் தூய்மையாக வைத்துக் கொள்ளலாம். நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் உள்ளே எடுத்துச்செல்லும் பொருட்களை கடுமையாக சோதனை செய்து பிறகு அனுமதிக்கலாம்.
நீரின்றி அமையாது உலகு என்றெழுதிய கவிஞனின் தீர்க்கதரிசனத்தைப் படித்தால் மட்டும் போதாது. ஒவ்வொரு தனிநபரும் வாழ்வில் குறைந்தபட்சமாவது நடைமுறைப்படுத்த முயல வேண்டும்.
பொது ஒழுங்கு, பொதுச் சுகாதாரம், பொதுவிடத் தூய்மை, பொதுவிட அழகு, பொதுவிடங்களின் வரலாறு காத்தல் போன்ற அரிய குணங்கள் அற்ற மனிதர்களாக நம் பொதுச் சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. வாழ்விலும் தாழ்விலும் இயற்கையையும் இனத்தின் பண்பாட்டையும் காக்க வேண்டிய உறுதியுடன் இருந்த தமிழர்களின் பண்பாட்டுத் தொடர்ச்சி, தனித் தீவு போன்ற வாழ்க்கை முறைகளினால் அறுபடும் தருவாயில் இருக்கிறது.
எனக்கு ஆழியாறு. எண்ணற்றவர்களுக்குத் தாமிரபரணி, காவிரி. நம் தலைப்பெழுத்தும் பெயரும் என்பது நம் நிகழ்கால அடையாளம். நம் பண்பாட்டுத் தொடர்ச்சியே நிரந்தர அடையாளம்.
பண்பாட்டின் வேர் நீர். நீரின் ஆதாரம் நதி. நதியைக் காப்பவை அதன் கரைகள். பண்பாட்டின் வேர் காத்தல் என்பதுதான் அசலான கொண்டாட்டம்.