அதழ்

லோகமாதேவியின் பதிவுகள்

கோடைக்காலக்காற்றே!

 மழை போலவே வெயில் பொழியும் கடுங்கோடை தொடங்கி விட்டது. கல்லூரி பின் மதியம் 3 மணிக்கு முடிவதால் முதுகில் வெயில் அறைய அறையத்தான் தினமும் வீட்டுக்குப் புறப்படுகிறேன். எனினும் புகாரொன்றுமில்லை. மழைக்காலங்களைப்போலவே எனக்குக் கோடைக்காலமும் பிரியம்தான்.  

சாலையெங்கும் வண்ணங்கள் நிறைந்திருக்கிறது. நீலவாகையான ஜகரண்டாக்கள் மலைப்பகுதியில்லை என்றாலும் பொள்ளாச்சியிலும் வீடுகளின் முன்பாக ஊதாமலர்களுடன் மலர்ந்து நிற்கின்றன. நெடுஞ்சாலை எங்கிலும் தீக்கொன்றைகளின் செக்கசெவேலென்னும் மலர்தல் கண்ணை நிறைக்கின்றது. இடையிடையே பொன் மலர்ந்தது போல சரக்கொன்றைகள் ஒரு இலைகூட இல்லாமல் மஞ்சளான மஞ்சளாக ஒயிலாக நிற்கின்றன.

 

அடர்மஞ்சளில் சிறு மலர்கள் நிறைந்திருக்கும் பெருங்கொன்றைகளும், ஒரு இலைக்கு ஒரு மலர் என நிறைந்து ததும்பியபடி  மிக அழகிய கிளையமைப்பில் வான் நோக்கி மலர்ந்து நிற்கும்  செம்பட்டு வாகைகளும் வரிசையாக நிற்கும் சாலைகளில் பின்மதியப்பயணம் என்பது ஒரு அருள் தான்.

காபிப்பொடி வண்ணத்தில் புல்லிக்கிண்ணங்களும், தூயவெள்ளையில் இதழ்களுமாக புங்கனும் போட்டிபோட்டுக்கொண்டு கூட மலர்ந்திருக்கிறது தூரத்தில் இருந்து பார்க்கையில் இதழிதழாக தரையெங்கும் கொட்டிக்கிடக்கும் புங்கை மலர்கள், இறைந்துகிடக்கும் பொரிபோல இருப்பதால் இதைப் பொரிப்புங்கை என்போம் இங்கு. 

அப்படியேதான் மலர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கின்றது வேம்பும். கல்லூரிக்குள் நுழைகையிலேயே எடுத்துச் சாப்பிட்டு விடலாம் போல வேம்பின் மணம் நிறைந்திருக்கிறது. நான் நினைப்பதுண்டு கோடையில் மட்டும் வேம்பின் தாவர அறிவியல் பெயரான Azadirachta indica வின் இண்டிகாவை எடுத்துவிட்டு Azadirachta edulis (எடுலிஸ்- உண்ணத்தகுந்தது) என்று தற்காலிகமாக மாற்றிக்கொள்ளலாம் என்று.  

வீட்டிலும் கோடைக்கொண்டாட்டம்தான். இன்னும் ஜகரண்டா மலரவில்லை வீட்டில். ஆனால் நுண்மணிகளைபோல பசுமஞ்சளில் மலர்சொரிகிறது சொர்க்கமரம், சந்தனம் மஞ்சள் அடர் ஊதா என  மூன்று நிறங்களில்  அலமண்டா , ஆரஞ்சு காம்புகளுடன் கவிழ்ந்து கிடக்கிறது அதிகாலியில்  பின்வாசலெங்கும் பவளமல்லிகை.

இளஞ்சிவப்பு வெள்ளை நீலம் என மூவண்ணத்தில் ருயெல்லியா, பலவண்ண ஜினியா,

 மரம் முழுக்க கை அகலத்துக்கு சதைப்பற்றான இதழ்களுடன் பாரிஜாதம், குருதிநிறப் பந்துகளாக தெட்சி, பல நிறங்களில் செம்பருத்தி, வெள்ளைச்சிறுகுடைகளாக சாம்பங்காய் மலர்கள், அமரில்லிகள் என வீடும் வண்ணங்களிலும் நறுமணங்களிலும் நிறைந்திருக்கிறது.

கண்ணுக்கு மட்டுமல்ல நாக்குக்கும் கோடை விருந்தளிக்கிறது. கோடையில் கனியளிக்கும் பல அன்னை மரங்கள் வீட்டில் இருக்கின்றன. அருநெல்லிக்காய்களை பச்சைமிளகாய் கல்லுப்பு வைத்து அம்மியில் சதைத்துச் சாப்பிடுவது, பெரிய நெல்லிக்காய்களை ஆவியில் வேகவைத்து காரமிட்டு தாளிப்பது,

விளிம்பிக்காய்களில் ஏராளமாக ஊறுகாய் தயாரித்து வேண்டியவர்களுக்குக் கொடுப்பது,

மாமரம் காய்க்கொழுந்து விடத்துவங்கியதும் செம்பு நிறத் தளிரிலைகளில் புளியும் உப்பும் வைத்து சுருட்டிச் சாப்பிடுவது, மாமரம் எப்போது பூக்கும் எப்போது காய்க்கும் எப்போது கனியும் என பார்த்துக்கொண்டே இருப்பது,  முதல் ஆளாகக் காய்த்து திரண்டு விடும் நடுச்சாலையை வைக்கோலில் மூடி வைத்து வீடே மணக்கையில் எடுத்து சாறு கைகளில் வழிய வழியச் சாப்பிடுவது, குறுக்கே வெட்டினால் நட்சத்திர வடிவில் இருக்கும் ஸ்டார்கனிகளை தட்டு நிறைய காலை உணவில் சேர்த்துக்கொள்வது, 

கரும்புச்சக்கரை கலந்து பற்கள் கூசும் வரை சாப்பிடும் விளாம்பழங்கள்,

தமிழ்நாட்டில் அவ்வளவாகத் தெரியப்பட்டிருக்காத லோலோலிகா கனிகள் சொப்பிக்காய்த்து செங்கனிகளானதும் பறித்து  லேசாகப்பிளந்து முன்பே கலக்கப்பட்ட உப்பு மிளகாய்த்தூளை தூவி, தேங்காய் எண்ணெய்ச்சொட்டு விட்டு மூடி வாயிலிட்டு புளிப்பும் காரமும் எண்ணெய் மணமுமாக அதன் நுண்ணிய விதைகள் பற்களில் இடறச் சுவைப்பது, ஆப்பிள் செர்ரியின் குட்டிக்குட்டிபழங்களை புளிப்பாகச்சாப்பிடுவது,,,,,

வேப்பம்பூக்களைச்சேகரித்து வடகத்தில் சேர்த்துக்கொள்வது , ஆஹா எத்தனை கோடி இன்பம் கோடையிலும் வைக்கப்பட்டிருக்கிறது ? இப்படிச் சுவைக்கையில் எல்லாம் அடடா, இந்தச் சுவையெல்லாம் தெரிந்துகொள்ளாத கோடிப் பேர் இருக்கிறார்கள் என்னும் ஆதங்கம் உண்டாகும். 

வெண்முரசு வாசிக்கையிலும் இதைத்தான் நினைத்துக்கொள்வது. எத்தனை கோடிப்பேர் இந்த வாசிப்பனுபவத்தை அறியாமலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என.

இதோ சாளரம் வழியே வீசுகிறது வெம்மையும் வேம்பின் வாசனையும் நிறைந்த கோடைக்காற்று. 

சிவப்பும் அழகு சூடும் ருசி, கருப்பும் அழகு காந்தலும் ருசி என்பதுபோல கோடையும் தனி ருசிதான்.

நெஞ்சாங்கூட்டில்,

ஐரோப்பாவுக்கு மேற்படிப்புக்காகப் போனபின்பு சரண் இந்தியாவிற்கு வந்த சென்ற ஆண்டின் முதல் விடுமுறையின்போது சென்னைக்கு விஜய் ஆண்டனியின் இசைக்கச்சேரிக்கு என்னையும் அழைத்துச் சென்றிருந்தான். சரணுக்கு அதற்கு முன்பு  செலிபிரிட்டி க்ரஷ் என்று எதுவும் இருந்ததில்லை, முதலும் கடைசியுமாக விஜய் ஆண்டனிதான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஜெர்மனியிலிருக்கையிலேயே கச்சேரியின் தேதிகளைக் குறிப்பிட்டு சென்னை போகனும், போகனும், நீயும் வந்தே தீரனும் என்று சொல்லிக்கொண்டே இருந்தான். 

அவனுக்கு விஜய் ஆண்டனியின் பாடல்கள், இசை, அவரது குரல் எல்லாவற்றின் மீதும் பெரிய மரியாதையும் பிரியமும் இருக்கிறது. எப்போது கார் ஓட்டினாலும் விஜய் ஆண்டனி அவனுடன் இருப்பார். கூடவே உற்சாகமாக உரக்கப் பாடிக்கொண்டே வருவான். அவரது பாடல்களில் பிரத்யேக பொருளற்ற சில சங்கதிகள் வருமல்லவா அது அவனுக்கு மிகவும் பிடிக்கும். அதைத் தனியே சொல்லிச்சொல்லிச் சிலாகிப்பான். எனக்கு அத்தனை பிரியமில்லையென்றாலும் அவரின் நெஞ்சாங் கூட்டில்  போல சில பாடல்களின் மீது தனித்த பிரியமுண்டு.

இப்படி இசைக்கச்சேரிகளுக்கெல்லாம் நான் போனதில்லை. பொள்ளாச்சியின் ஒருகோடியில் ஒரு சிறு இருண்ட வீட்டில் பிறந்து அப்பாவின் ஆணவத்திற்கு அஞ்சியும் ஒளிந்தும் வளர்ந்து, எப்படியோ தப்பிப்பிழைத்து அன்னையாகவும் ஆசிரியையாவும் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு அதற்கான சாத்தியங்கள் வாழ்வில் இல்லாமல் இருந்தது. 

சிறுமியாக இருக்கையில் விடியற்காலை அப்பா ட்ரான்ஸிஸ்டரில் வைக்கும் பாடல்கள் பரிச்சயமானது. பதின்பருவத்தில் அத்தைகள்  இருவரும் பாக்கட் டிரான்சிஸ்டரில் கேட்கும் பாடல்களை நானும் அக்காவும் கேட்போம். அதுவும் வேட்டைக்காரன் புதூர்செல்லும்போது மட்டும்.

கல்லூரிக்காலத்தில் வீட்டில் டிவியும் மர்ஃபி வானொலியும் இருந்தது. இளையராஜா அறிமுகமென்றாலும் பாடல்களை உரக்கக்கேட்கவோ உடன் பாடிமகிழவோ வாய்ப்பிருக்கவில்லை.

ஒரு இருண்ட வாழ்வில் இருந்தோம் நான், அம்மா அக்கா மூவரும்.அப்பா வீட்டில் இல்லாதபோது இரவெல்லாம் வானொலியைத் திருகிக்கொண்டிருப்போம். ரஷ்ய ஒலிபரப்பு விடுதலைபுலிகள் ஒலிபரப்பெல்ளாஆம் சிலசமயம் கேட்கும். பரவசமடைந்து கொள்வோம்.

பின்னர் ஒரு பெரும் கதவு திறந்து முதுகலை படிக்கக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் போனபோது தனியே எனக்கென்று ஒரு வானொலிப்பெட்டி இருந்தது . அதில் எப்போதும் பாடல்கள் கேட்பதுண்டு சில இரவுகள் உறங்காமல்  கூடக் கேட்டிருக்கிறேன். எப்படியோ இந்துஸ்தானி இசையில் பிரியமாகி விட்டிருந்தது.  கூடவே கஜல்களும் ராஜி என்னும் தோழியால் அறிமுகமானது. பங்கஜ் உதாஸ் மீது பெரும் பிரேமை கொண்டிருந்தேன். ’’சிட்டி ஆயிஹே ,பதனுக்கு மிட்டி ஆயிஹே’’வை ஓராயிரம் முறை கேட்டதுண்டு. இளமைக்கனவுகளின் ஒரு பகுதியாகவே அப்போது கஜல் இசை இருந்தது.

அச்சமயம் வீட்டில் குடியிருந்த நாகமாணிக்கம் குடும்பத்தினரால் டேப் ரெக்கார்டர் அறிமுகமானது. பலமுறை முயன்றும் எங்களுக்கென ஒன்று அப்பாவிடம் சம்மதம் பெற்று  வாங்க முடியவில்லை. ஆனால் அவர்கள் வீட்டு டேப்ரெக்கார்டரை எங்களிடமே பெரும்பாலும் கொடுத்திருந்தனர். இசை கேட்டுக்கேட்டு மகிழ்ந்த காலமது.

முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்தபோது எனக்கு ஆராய்ச்சிக்கான   மாதாமாதம் கணிசமான உதவித்தொகையும் கிடைத்தது. எனவே ஒரு வாக்மேன் வாங்கினேன் அடிக்கடி ரயிலில் புதுதில்லி ஹைதராபாத், கோவா எனச் செல்லவேண்டி இருந்த போதெல்லம் அதில் தொடர்ச்சியாக இசைகேட்பேன்.

ஆனால் சரண் அழைத்துச் சென்றது போல் திறந்தவெளி அரங்கில் ஆயிரக்கணக்கானோருடன் இப்படியொரு இசை நிகழ்ச்சியைக் கேட்டதே இல்லை. இப்படி கேட்கக் கிடைக்குமென்று  நினைத்தது கூட இல்லை. ஆனால் சரண் வற்புறுத்தி அழைத்துச் சென்றான்.

நான், சரண், அகரமுதல்வன் மனைவி பிரபா மூவருமாகச் சென்றோம். நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம் இருந்தது அங்கே. பிரபாவின் ஆட்டோ வந்து சேர முடியாத அளவு சாலையிலும் இசை நிகழ்ச்சியால் நெரிசலாகியது.

இருக்கைகள் போடப்பட்டிருந்த இடத்துக்கு வெளியே பல்லாயிரம் இளைஞர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் நாங்களும்.   கட்டணத்திற்கேற்ப வண்ணப்பட்டைகள் கைகளில் கட்டப்பட்டன.  அங்கேயே குளிர்பானங்கள் தண்ணீர் பாட்டில்கள் நொறுக்கு தீனிகள் விற்கப்பட்டன. வேண்டியதை வாங்கிக்கொண்டோம்.

உள்ளே அவரவர் இருக்கைகளில் அமர்ந்தோம். மிக உயரமான மேடை   என்பதால் எல்லாருக்குமே மேடை நன்றாகத் தெரிந்தது ராட்ஷச ஸ்பீக்கர்கள் அங்கங்கே வைக்கப்பட்டிருந்தன. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் படி மஞ்சள் நிறத்தில் கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இருந்தன.

ஜொலிக்கும் பல வண்ணமின்விளக்குகளுடன் வண்ணமயமாகத் துவங்கியது நிகழ்வு. கூரையிலிருந்து தொங்கிக்கொண்டு விஜய் ஆண்டனி இறங்கியபோது கூட்டம் வெடித்து ஆர்ப்பரித்தது. 

அவர் எதன்பொருட்டோ மாகப என்னும் ஒரு தொலைக்காட்சி பிரபலத்தை அழைத்துவந்திருந்தார். மாகப நிச்சயமாக இடைச்செருகல் தான். விஜய் ஆண்டனிக்கு மாகபா போன்ற ஒருவர் தோள் கொடுக்க வேண்டியதில்லை. அடுத்தடுத்த பாடல்களைக்குறித்த அறிவிப்புகளுக்கு  எதிர்த்தரப்பில் ஒருவர் வேண்டி இருந்ததால் அவரை அழைத்திருக்கலாம். அசட்டுபிசட்டென்றேதான் அந்த நிகழ்விலும் அவர் பேசிக்கொண்டிருந்தார். நிகழ்வின் வீரியத்தை கொஞ்சம் குறைத்த பெருமை மாகாபவிற்கே.

ஒவ்வொரு பாடலுக்கும் அந்த வெளி அதிர்ந்தது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களின் கிளர்ந்தொளிரும் இளமைப்பெருக்கில் கலந்துகொண்டு உச்சகட்ட ஒலியில்  பாடல்களைக் கேட்டது பெரிய அனுபவமாக இருந்தது.சரண் எழுந்து நின்று மற்றவர்களைபோல் நடனமாடி கொண்டே கேட்டான். நானும் பிரபாவும் கூடவே பாடினோம். மச்சக்கண்ணி, புலி உறுமுது பாடல்களுக்கெல்லாம் கூட்டம் கட்டுக்கடங்காமல் வெறியாட்டம் போட்டது. அவ்வப்போது சிறு தூறலாக மழை பெய்தது.

பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பெரியதிரையில் தனது காதல் மனைவியையும் இளைய மகளையும் காட்டி விஜய் ஆண்டனி அறிமுகப்படுத்தினார்.

என்னைப்போலவே சில அன்னைகளும் வந்திருந்தனர் அவர்களும் மகள் மகனுடன் சேர்ந்து நடனமாடி ரசித்தனர். எனக்கு முன்பாக ஒரு இளைஞர் கூட்டமிருந்தது. ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் அல்லது நண்பர் குழாம். அவர்கள் ஆட்டமும் பாட்டமுமாக மகிழ்ந்திருந்தார்கள். என் இருக்கைக்கு நேர் முன்பு ஒரு இளைஞன். 22-லிருந்து 24-க்குள் வயதிருக்கும். ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தான் வெள்ளைச் சட்டையும் கால் சட்டையும், கன்னமெங்கும் செம்பருக்கள், அவன் நாற்காலி மேல்நின்று ஆடிக்கொண்டிருக்கையில் என் புடவையின் கீழ்நுனி அவன் நாற்கலிக்கடியில் சிக்கிக்கொண்டது. அவன் ஆட்டம்  ஆடிமுடித்து இறங்கிய பின்னரே புடவையை  விடுவித்தேன்.

ஆனால்  அவனின் அத்தனை கொந்தளிப்புக்களையும் ’’நூறு சாமிகள் இருந்தாலு’’ம் பாடல் பொங்கும் பாலில் நீர்தெளித்தது போல் அடங்கச்செய்தது.

பாடல் பாடப்பட்டுக்கொண்டிருக்கையில் அந்த இளைஞன் அமைதியாக நாற்காலியில் அமர்ந்து கொண்டான். கண்களில்இருந்து கண்ணீர் சரம்சரமாய் வழிந்தது. கண்ணாடியைக் கழற்றி பாக்கட்டில் வைத்துக்கொண்டு அழுகையை கட்டுப்படுத்தவோ கண்ணீரைத் துடைக்கவோ செய்யாமல் அப்படியே கண்ணீர் சொரிந்தபடி அந்தப் பாடலைக்கேட்டுக் கொண்டிருந்தான். அன்னையை இழந்த மகனாயிருக்கக்கூடும் என்று நினைத்தேன். அவனை அணைத்துக் கொள்ள விழைந்தேன்.  

அதன் பிறகான பாடல்களுக்கு அவனால் அப்படி ஆடவும் கூடவே பாடவும் முடியவில்லை. முறிந்துவீழ்ந்த மரம்போலிருந்தான். இறுதிப்பாடல்களின் போது  மழை பலமாகவேதொடங்கியது , ஆனால் கூட்டம் மழையை பொருட்படுத்தவே இல்லை.

நாங்கள் மூவரும் கூட்ட நெரிசலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க 2 பாடல்களை தியாகம் செய்துவிட்டு புறப்பட்டோம்.

 பெரும் திருவிழா முடிந்தது போலசாலை முழுக்க நெரிசலாக இருந்தது

தமிழ் விக்கியில் விஜய் ஆண்டனியின் கொள்ளுத்தாத்தாவான மாயுரத்தில் பணிபுரிந்த வேதநாயகம் பிள்ளையின் பக்கத்தை இறுதிசெய்தபோது குற்ற விசாரணைகளை மொழியாக்கம் செய்யும் சுவாரஸ்யமான பணியில் பிள்ளை இருந்ததை அறிந்தேன். 4 பெண்களை திருமணம் செய்துகொண்டிருக்கிறார் பிள்ளை.

https://tamil.wiki/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88

தமிழின் முதல் நாவலாகப் பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதியவர். தாது வருஷபஞ்சத்தில் ஆயிரக்கணக்கானவர்களுக்குக் கஞ்சித் தொட்டிஅமைத்து  பசியாற்றி இருக்கிறார் பிள்ளை.   தமிழ் இலக்கியத்துக்குப் பெரும் பங்காற்றி இருக்கும் இவரைக்குறித்து ஒரு கீர்த்தனை பாடப்பட்டிருக்கிறது

 இரவெல்லாம் காதுகளில் விஜய் ஆண்டனியின் குரலும் பாடலும் இசையும் கேட்டுக்கொண்டே   இருந்தது.

அத்தனை ஆயிரம்பேரின்  கொந்தளிப்பிலும் கூக்குரலிலும் உற்சாகத்திலுமல்ல, அந்த இளைஞனின் துயரத்தை மிக அந்தரங்கமாகத் தொட்டதில்தான் விஜய்ஆண்டனியின் வெற்றி இருக்கிறது. இதை என்றைக்காவது விஜய் ஆண்டனியிடம் சொல்லவேண்டும். சரணும் அவரைநேரில்  பார்க்கக் காத்திருக்கிறான். 

காய்ச்சல் மரம்!

மமானியை தேடி பொலிவிய வனக்காவலர்கள் காட்டுக்குள் அலைந்து கொண்டிருந்தார்கள். அயலவர் ஒருவருக்கு மமானி உதவுவதை வெறுத்த இன்கா இனத்தின் இளைஞர்கள் அவனை காவலர்களுக்கு காட்டிக் கொடுத்திருந்தார்கள்.

அதை அறியாத மமானி தனக்குள்ளேயே பேசிக்கொண்டு காட்டிற்குள் நடந்து கொண்டிருந்தான். அவன் அதிர்ஷ்டத்தின் மீது அவனுக்கு சில வருடங்களாகவே அவநம்பிக்கை வந்துவிட்டது. மரப்பட்டைகளையும் விதைகளையும் சேகரிப்பது அவன் குலத்தொழிலாக  இருந்தும் இத்தனை வருடங்களாக அவன் எஜமானுக்கு தேவையான அந்த மரத்தை தேடிக்கொண்டிருக்கிறான். அவனுக்கு அம்மரத்தை நன்றாகவே அடையாளம் தெரியும். இலைகளின் அடிப்புறம் சிவப்பாகவும் மேற்புறம் பளபளக்கும் பச்சை நிறத்திலும் இருக்கும். அவற்றின் பட்டை மிக கசக்கும் அதைத்தான் எஜமானர் சார்லஸ் லெட்ஜரும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். கசக்கும் பட்டையை கொண்டிருக்கும் குயினா என்றழைக்கப்படும் எல்லா மரங்களும் ஒன்று போலவே இருந்தாலும் நுட்பமான வேறுபாடுகளும், கனத்த மரப்பட்டையும் கொண்டிருக்கும் ஒன்றைத்தான் அவன் தேடிக்கொண்டிருந்தான்.

ஒவ்வொரு கோடையிலும் மினுங்கும் பச்சை இலைக்குவையுடன் தெரியும் ஒவ்வொரு மரத்தையும் தேடித்தேடி பார்ப்பான். மாமனி ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் பனி மூடிய மலை முகடுகளில் ஏறி அழகிய இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த மலர் கொத்துக்கள் தெரிகிறதா என்று தேடுவான். 28 மரவகைகள் கண்டறிந்தும் அவன் தேடிய ஒன்று கிடைக்கவில்லை இன்னும்.

காட்டின் உயரமான ஒரு குன்றின் மீதிருந்து உரக்க கத்தி்னான் மமானி. ‘’அபூ, எங்கள் மலைத் தெய்வமே! உனக்குப் பிரியமான கொக்கோ இலைகளையும் சோளத்தையும் எத்தனை முறை படைத்து வழிபட்டேன்? நீ நிறைவுறவில்லையா? நான் துரதிர்ஷ்டக்காரன் தானா ? எஜமான் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பொய்த்துவிடப் போகிறதா?

கோன்! காற்றுக்கும் மழைக்குமான தெய்வமான நீயுமா என் மீது இரங்கவில்லை? உனக்கும் பல நூறு பிராரத்தனைப் பாடல்களை பாடினேனே! எத்தனை கரிய பறவைகளை உனக்கென பலி கொடுத்தேன்? எத்தனை தலைமுறைகளாக நாங்கள் பட்டை சேகரிக்கிறோம்? ஏன் இப்போது கனியமாட்டேனென்கிறீர்கள்?’’

’’ சரி நான் காத்திருக்கிறேன் நீங்கள் இறங்கி வருவீர்கள் என்று எனக்கு தெரியும். இது எனக்கான காலம். 22 வருடங்களாக என் நான்கு மகன்களை கூட பார்க்காமல் எஜமானருடன்தானே இந்த காட்டில் சுற்றிக் கொண்டிருக்கிறேன். அதற்கு பலனில்லாமல் போகாது. எத்தனையோ மக்களின் உயிரைக் காப்பாற்றத்தானே இதை தேடுகிறேன் என்று உனக்கு தெரியாமலா இருக்கும்? என் அபூ! எஜமானர் சார்லஸ்க்கு எத்தனையோ விதைகளையும், பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்து தந்திருக்கிறேன், இந்த ஒன்றை மட்டும் ஏன் கண்ணில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கிறாய்?’’

மமானிக்கு அந்த வருடத்தின் வசந்தம் அதிர்ஷ்டத்தை கொண்டு வருமென்று நம்பிக்கை இருந்தது. தேடியதை கொடுத்தால் இன்னும் சில அல்பகாக்களை எஜமான் அவனுக்கு கொடுப்பாரென்பதால் மட்டும் அல்ல, அந்த மரத்தை காண்கையில் அவருக்கு உண்டாகும் மகிழ்ச்சிக்காகத்தான் அதைத் தேடுகிறான்.

அவன் உள்ளுணர்வு சொன்னது சரிதான் அவன் அந்த மரத்தை பார்த்தே விட்டான். ஒரு மலைச்சரிவில் மலர்ந்து நின்றிருந்தது அது. குழல் போல சிவப்பில் மலர்கொத்துக்களும், கனத்த பட்டையுமாக அங்கே நிற்பது அதேதான்,

மலைத்தெய்வங்களே! மனமிரங்கி விட்டீர்கள் என்று கூவியபடி கண்ணீருடன் மமானி அங்கே சென்றபோது மரத்தடியில் ஏராளமான விதைகளும் சிதறிக் கிடந்தன. காட்டின் மறுபுறத்திலிருந்து அங்கு வந்து கொண்டிருக்கும் அவன் எஜமானர் அத்தனை வருடங்களாக இதைத்தான் தேடினார். விதைகளை சேகரித்து மண்ணில் பிசைந்து பல உருண்டைகளாக உருட்டி தண்டுகள் சூலாயுதம் போல கிளைத்திருக்கும் தாரா மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்து விட்டு மமானி சார்ல்ஸுக்கு கொடுத்த சங்கேத குரல் சார்ல்ஸ் லெட்ஜெருக்கும் அங்கே காவலிருந்த பொலிவியா காவலர்களுக்கும் ஒரே சமயத்தில் கேட்டது.

மமானிக்கு நினைவு அடிக்கடி தப்பிக்கொண்டே இருந்தது நினைவு வரும் போதெல்லாம் வலியும் தெரிந்தது. நெற்றியிலிருந்து வழிந்த ரத்தம் கண்ணில் வழிந்து யார் அடிக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை. உயிரே போனாலும் எஜமானரின் பெயரை சொல்லப்போவதில்லை என்பதில் மமானி உறுதியாக இருந்தான்.

எத்தனை நாளாயிருக்கும் காட்டில் பிடிபட்டு இங்கே வந்து என்றும் அவனுக்கு நினைவில் இல்லை. எஜமானருக்கு அந்த விதைகளை கொடுப்பதற்குள் பிடித்துவிட்டார்களே என்பதுதான் அவனுக்கு வருத்தம், ஆனால் தாரா மரப்பொந்துக்குள் இருப்பவற்றை அவர் நிச்சயம் எடுத்துக்கொள்வார் என்று நம்பிக்கை இருந்தது.

பெரு மற்றும் அதன் அண்டை நாடுகளில் வளரும் சின்கோனா மரங்களின் பட்டைகளையும் விதைகளையும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த காலம் அது.

மலேரியா சிகிச்சைக்காக பல நாடுகளில் இருந்தும் அவற்றை திருடிச் செல்ல பலர் அக்காட்டுக்குள் ஊடுருவுவதால் அங்கு பலத்த காவல் இருந்தது. மமானி யாருக்கு உதவி செய்தான் என்பதை அறியத்தான் அவனை காவலர்கள் சித்திரவதை செய்தனர். ஆனால் 20 நாட்களாக அடித்தும் மமானியிடமிருந்து எந்த விவரமும் கிடைக்கவில்லை.

குகைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட மமானியால் நடக்க முடியவில்லை. உடலெங்கும் எலும்பு முறிவும், ரத்தக்காயங்களுமாக மெல்ல தவழந்து தன் வீட்டை நோக்கி நகர முயன்ற மமானியின் கண்கள் குருதியிழப்பால் உயிரிழக்குமுன்னர் கடைசியாக ஒருமுறை தாரா மரம் இருக்கும் திசையை பார்த்தன.

1818 ல் லண்டனில் பிறந்த சார்லஸ் லெட்ஜர், அல்பாகாவின் ரோம விற்பனையின் பொருட்டு தனது 18வது வயதில் (1836ல்) பெருவிற்கு சென்றார் .1852 ல் ஆஸ்திரேலியாவில் அல்பாகாக்களை அறிமுகம் செய்ய அவர் சிட்னிக்கு பயணித்தார். அப்போது அல்பாகாக்களை பிற நாடுகளுக்கு கொண்டு செல்ல சட்டப்படி தடை இருந்தது. இருந்தும் தென்னமெரிக்காவிற்கு திரும்பிய லெட்ஜர் பல நூறு அல்பாகாக்களை பெருவின் பழங்குடியினரின் உதவியுடன் சிட்னிக்கு 1859 ல் கொண்டு சென்றார். அங்கு அவருக்கு அல்பாகா வர்த்தகம் செழிப்பாக நடந்தது.

1864ல் தென்னமரிக்கா திரும்பிய அவர் அப்போது பலரும் ஈடுபட்டிருந்த சின்கோனா பட்டைகளை தேடும் முயற்சியில் கவனம் செலுத்தினார். முன்பே நெருக்கமாக இருந்த மானுவல் இன்க்ரா மமானி (Manuel Incra Mamani) என்னும் பொலிவிய பட்டை மற்றும் விதை வேட்டையாடும் (காஸ்கரில்லெரோ) இன்கா பழங்குடியின பணியாளுடன் பொலிவியா மற்றும் அதன் அருகிலிருந்த காடுகளில் சின்கோனா விதைகளையும் பட்டைகளையும் தேடித்தேடி சேகரித்துக்கொண்டிருந்தார்.

அந்த தேடுதல் வேட்டையில் பிறரால் நுழைய முடியாத அடர் காட்டுப்பகுதிகளுக்குள் பல சிரமங்களுக்கிடையே அவர்கள் இருவரும் பயணித்து சின்கோனா விதைகளை சேகரித்தனர்

லெட்ஜரிடம் 1843 லிருந்து பணியாற்றிய மமானி சின்கோனாவின் 29 வகைகளை ஏராளமான ஆபத்துகளுக்கிடையில் கண்டறிந்தார். அயலவருக்கு உதவி செய்ததற்காக தன் இனத்தவர்களின் எதிர்ப்பை சம்பாதித்துக்கொண்ட மமானி யாருக்கு உதவி செய்தேன் என்று கடைசி வரை தெரிவிக்காததால் 1871 ல் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.

மமானியின் இறப்பால் மனமுடைந்த லெட்ஜர் பிற்பாடு மமானியின் குடும்பத்தின் பொருளாதார தேவை உள்ளிட்ட முழுப்பொறுப்பையும் ஏற்றுகொண்டார். மமானிக்கும் லெட்ஜருக்கும் மட்டும் தெரிந்த ரகசிய இடத்தில் சேர்த்து வைத்திருந்த சின்கோனா விதைகளை லண்டனில் இருக்கும் தனது சகோதரர் ஜார்ஜுக்கு அனுப்பி வைத்தார்.

ஜார்ஜ் அளித்த சின்கோனா விதைகளில் பிரிட்டிஷ் அரசு அத்தனை ஆர்வம் காட்டாததால் மீதமிருந்த விதைகளை டச்சு அரசிடம் கையளித்தார் ஜார்ஜ்.

டச்சுக்காரர்களுக்கு விதைகளின் அருமை தெரிந்ததால் அவற்றை பாதுகாத்து, விதைத்து மரங்களாக்கினர். இம்மரங்கள் பின்னர் லெட்ஜரின் பெயராலேயே Cinchona ledgeriana என்றழைக்கப்பட்டன. இவை 8 லிருந்து 13 சதவீதம் குயினைனை அளித்தன.

மலேரியா

மலேரியா பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உலகில் இருந்து கொண்டிருக்கும் ஒரு பழமையான நோய். மாசடைந்த காற்றினால் உருவாகும் காய்ச்சல் என துவக்க காலத்தில் கருதப்பட்டதால்’’அசுத்தமான காற்று’’ எனப்பொருள்படும் இத்தாலிய சொல்லால் இந்நோய் ’மலேரியா’ என அழைக்கப்பட்டது (“bad air” -mal’ aria).

அறிவியலாளர்கள் 30 மில்லியன் வருடங்களுக்கு முன்பு கல்மரப்பிசினில் (amber) பாதுகாக்கப்பட்டிருந்த, கொசுக்களில் மலேரியா ஒட்டுண்ணிகளை கண்டறிந்திருக்கிறார்கள்.

மலேரியா பிளாஸ்மோடியம் என்ற நுண்ணிய ஒட்டுண்ணியால் ஏற்படுகிறது, இந்த ஒட்டுண்ணியை கொண்டிருக்கும் பெண் அனோபிலஸ் கொசு மனிதர்களை கடிக்கும் போது நோய் அவர்களையும் பாதிக்கிறது. நோயுற்ற மனிதர்களின் உடலினுள் ஒட்டுண்ணி கல்லீரல் மற்றும் இரத்த சிவப்பணுக்களில் பெருகி காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

பல நூற்றாண்டுகளாக ரோமானிய நகரங்களின் செல்வந்தர்கள் மலேரியா தாக்கும் பருவத்தில் குளிர்ந்த காலநிலை கொண்ட பிரதேசங்களுக்கு சென்று நோயிலிருந்து தப்பினர். ஏழைகள் நோய்த்தொற்றினால் காய்ச்சல் மற்றும் உடல் பலவீனத்தால் பாதிக்கப்பட்டனர்,ரோமாபுரி 17 ம் நூற்றாண்டின் மலேரியாவின் தலைமைப் பிரதேசமாக இருந்தது.

அக்காலங்களில் மருத்துவர்கள் மலேரியா சிகிச்சைகளாக நோயாளிகளுக்கு மண்டையோட்டில் துளையிடுதல், (trepanning,) குருதி நீக்கம் மற்றும் பாதிக்கப்பட்ட உடல் உறுப்புக்களை வெட்டி அகற்றுவது ஆகியவற்றுடன் ஆர்டிமிசியா, பெல்லடோனா ஆகிய மருந்துகளையும் பயன்படுத்தினர்

ஆண்டு முழுவதும் மலேரியா ஒட்டுண்ணி செழித்து வளர்ந்த ஆப்பிரிக்காவின் சஹாரா பகுதி மக்களுக்கு மலேரியா ஒட்டுண்ணியிடமிருந்து பாதுகாக்கும் இரத்த சிவப்பணு பிறழ்வு நோயான, அரிவாள் செல் இரத்த சோகை உருவானது., இந்த பிறழ்வு நோய், அவர்களை மலேரியாவிலிருந்து பாதுகாத்தாலும் அதுவும் ஒரு முக்கிய நோயாக இருந்தது

டச்சு, போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர்கள் மலேரிய ஒட்டுண்ணிக்கும், உடலை வெகுவாக பலவீனப்படுத்தும் காய்ச்சலுக்கும் எதிரான நோய்த்தடுப்பு இல்லாதவர்களாதலால் மலேரியாவின் பேரழிவை அஞ்சி பல தசாப்தங்களாக ஐரோப்பியப் படைகளை ஆப்பிரிக்காவின் உட்புறத்திலிருந்து விலக்கியே வைத்திருந்தனர்.

ஆனால் மத்திய அமெரிக்காவில் ஸ்பெயின் படையெடுப்பாளர்களுடன் வந்த, இத்தாலிய பாதிரியார்கள் மலேரியா கொசுக்களைக் கொண்டு வந்து, அமேசோனிய படுகை மற்றும் ஆண்டிஸ் மலைப்பகுதிகளுக்கு நோயை அறிமுகப்படுத்தினர். அப்போதுதான், இன்கா பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்கும் குய்னா-குய்னா அல்லது , காஸ்காரில்லா என்றழைக்கப்பட்ட பெருவியன் மரத்தின் பட்டைத்தூளை பயன்படுத்துவது தெரிய வந்தது அதுவே சின்கோனா மரப்பட்டை.

1860 களில் ஒன்றிணைந்த இத்தாலியின் முதல் பிரதமர் மலேரியாவில் 1861ல் உயிரிழந்த போதும் மலேரியா நோய் குறித்த அறிதல் மிக குறைவாகவே அங்கு இருந்து.

1878 ல் இத்தாலியின் மாபெரும் ரயில் பாதை பணியில் ஈடுபட்டிருந்த 2,200 பணியாளர்களில் 1455 பேருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்ட போதுதான் இத்தாலி மலேரியாவின் தீவிரத்தை முதன் முதலாக அறிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை தொடங்கியது

1880 வரை மலேரியாவை உருவாக்கும் ஒட்டுண்ணி கண்டறிய பட்டிருக்கவில்லை 1880ல் தான் பிரெஞ்ச் மருத்துவர் அல்ஃபோன்ஸ் (Alphonse Laveran) நோயாளியின் ரத்தத்தில் மலேரியா ஒட்டுண்ணியை கண்டறிந்தார்

நாடு தழுவிய மலேரியா கட்டுப்பாடு மற்றும் கண்டறிதல் பரிசோதனைகள் பின்னர் வேகமாக நடந்து, முடிவில் இத்தாலியின் 8362 குடியிருப்பு பிரதேசங்களில் 3075 பகுதிகள் மலேரியாவினால் பீடிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது.

பெருவின் பழங்குடியினர் காய்ச்சலுக்கு பயன்படுத்தும் சின்கோனா மரப்பட்டைகளை குறித்து உலகம் அப்போது அறியத் துவங்கி இருந்ததால், இத்தாலி முழுவீச்சில் சின்கோனா மரப்பட்டைளை உபயோகப்படுத்தி மலேரியாவை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகளை தொடங்கியது

19 ம் நூற்றாண்டில் மருத்துவர்கள் மலேரியா காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க குருதி நீக்க சிகிச்சையை பயன்படுத்தியதால் ரத்தசோகையினால் நோயாளிகள் மிகவும் பலவீனமடைந்தார்கள். பலருக்கு உடல் உறுப்புக்கள் அகற்றப்படவேண்டி இருந்து. ஒரு சிலரே மலேரியாவுக்கு குயினைனை பயன்படுத்தினர். ஆனால் அதன் பக்க விளைவுகள் அதிகமென்பதால் ராணுவ மருத்துவர்கள் யான் ஆன்றி ஆண்டனி மற்றும் ஃப்ரான்கோயிஸ் ஆகியோர் (Jean Andre Antonini மற்றும் Francois Clement Maillot) காய்ச்சலுக்கு குயினைனை பயன்படுத்தக்கூடாது என்று வெகுவாக எதிர்த்தனர் . எனினும் குயினைனின் பயன்பாடு மலரியா காய்ச்சலை போலவே பெருகிக்கொண்டேதான் இருந்தது.

1840 களின் மத்தியில் தங்க கடற்கரையின் ஐரோப்பியர்கள் குயினைன் மாத்திரைப்புட்டியை படுக்கை அருகில் வைத்திருப்பதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தனர். அக்காலங்களில் மலேரியா இறப்பு கணிசமாக குறைந்திருந்தது. அதன்பிறகு பிரிட்டிஷ் ராணுவத்திலும் குயினைன் பயன்பாடு துவங்கியது.

1947 ல் அமெரிக்காவில் தொடங்கிய மலேரியா கட்டுப்பாட்டு முயற்சி 1950 வரை முழுமூச்சாக நடைபெற்று , 1951 ல் மலேரியா அமெரிக்காவில் முற்றிலும் ஒழிக்கப்பட்டது

2018ல் உலகெங்கும் மலேரியாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 405,000 ஆக இருந்தது. இதில் 67% ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள். தவிர்க்க முடிந்த நோயான மலேரியாவில் இத்தனை ஆயிரம் மக்கள் இறந்தது வேதனைக்குரியதுதான் என்றாலும் கடந்த 20 வருடங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான மரண எண்ணிக்கைதான்.

2019 ன் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை 2010ல் இருந்த 251 மில்லியன் மலேரிய நோயாளிகளைக் காட்டிலும் 2018 ல் குறைவாக 228 மில்லியன் மட்டும் இருந்ததை சுட்டிக்காட்டியது. தற்போது உலகின், 2.9% சதவீதத்தினர் மலேரியாவினால் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

சின்கோனாவின் வரலாறு

ஸ்பெயினின் மருத்துவரும் தாவரவியலாளருமான நிக்கோலஸ் (Nicolás Monardes) 1574ல் மரப்பட்டைப்பொடி ஒன்றின் காய்ச்சல் குணமாக்கும் பண்புகளை எழுதி வெளியிட்டிருந்தார் .மற்றொரு மருத்துவரான ஜுவான் (Juan Fragoso) அடையாளம் காண முடியாத ஒரு மரத்தின் பட்டைப் பொடி பல நோய்களை தீர்ப்பதாக 1600களில் குறிப்பிட்டிருந்தார்.

1638ல் இரண்டு நாணயங்களின் அளவிற்கு உருட்டி எடுத்துக் கொள்ளப்பட்ட தென்னமரிக்காவின் Loja பகுதியை சேர்ந்த மரமொன்றின் பட்டைப் பொடி நீரில் கலந்து குடிக்கையில் காய்ச்சலை குணமாக்குவதைக் குறித்து ஃப்ரே (Fray Antonio de La Calancha என்பவர் குறிப்பிட்டிருந்தார்

ஆனால் சின்கோனாவைப் பொறுத்தவரை முதல் விஞ்ஞானிகளாக கருதப்படுபவர்கள் 16 ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இயேசு சபையின் உறுப்பினர்களான Jesuits என்றழைக்கப்பட்ட அருட்பணியாளர்கள் தான். இவர்கள் அனைத்து கண்டங்களிலும் இறைப்பணியுடன் மருத்துவப் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளையும் மேற்கொண்டிருந்தனர். மனித குலத்துக்கு உபயோகப்படும் சாத்தியங்கள் கொண்ட எதுவாகினும் சோதித்து, சேகரித்து உலகின் பல பாகங்களுக்கும் அவற்றை அறிமுகம் செய்தார்கள் அவர்களால் கிடைக்கப் பெற்றவைகள் தான் டோலு என்னும் இருமல் நிவாரணி, நன்னாரி டானிக் மற்றும் கோகோ இலைகள்,

தென்னமரிக்க பழங்குடியினர் காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க அருந்திய மரப்பட்டைச்சாற்றை குறித்து கேள்விப்பட்ட Jesuits அவற்றை தேடி பயணித்தனர். பெரு, பொலிவியா பகுதிகளின் கெச்சுவா (Quechua) பழங்குடியினரால் ஒரு மரப்பட்டைச்சாறு தசை தளர்வுக்கும் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்பட்டது. மரப்பட்டையை பொடித்து இனிப்பு நீரில் அதை கலந்து கசப்பை குறைத்து அவர்கள் அருந்தினார்கள் அம்மரத்தை அவர்கள் காய்ச்சல் மரமென்று அழைத்தனர்.

வெனிசுவேலாவிலிருந்து பொலிவியா வரை பரவியிருந்த ஆண்டிஸ் மலைத்தொடரில் செறிந்து வளர்ந்திருந்த பசுமை மாறா அம்மரங்களின் விதைகளையும் பட்டைகளையும் பட்டைச்சாற்றையும் ஐரோப்பாவில் அருட்பணியாளர்கள் 1640களில் அறிமுகப்படுத்தினர்.

மெக்ஸிகோ மற்றும் பெருவின் நிலப்பரப்புகளில் ஆய்வுகளை செய்த கிருத்துவ போதகர் பார்னெபி (Barnabé de Cobo -1582–1657),தான் ஐரோப்பாவிற்கு சின்கோனா பட்டையை அறிமுகம் செய்தவர். பெருவின் தலைநகர் லிமாவில் இருந்து ஸ்பெயினுக்கும் பின்னர் ரோம் மற்றும் இத்தாலியின் பிற பாகங்களுக்கும் இவரே 1632 ல் சின்கோனாவை அறிமுகம் செய்தார் .1650களில் ஸ்பெயினுக்கு தொடர்ந்து சின்கோன மரப்படைகள் கப்பல்களில் அனுப்பி வைக்கபட்டுக்கொண்டிருந்தன.

இந்த அருட்பணியாளர்கள் 1640 ல் ஐரோப்பாவெங்கும் காய்ச்சல் மரத்தின் பட்டைப் பொடி வர்த்தகத்துக்கான வழிகளை உருவாக்கியதால். 1681ல் மலேரியாவிற்கான சிகிச்சையளிக்கும் மருத்துவ மரப்பட்டையாக சின்கோனா உலகெங்கும் அறியப்பட்டது.

1653ல் இத்தாலிய தாவரவியலாளர் பியட்ரோ (Pietro Castelli) மருத்துவம் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவற்றிற்கான பதில்களையும் கைப்பட எழுதி வெளியிட்ட நூற்றுக்கணக்கான சிறு சிறு துண்டுப் பிரசுரங்களில் ஒன்றில் சின்கோனா மரத்தைக் குறித்தும் மலேரியாவுக்கு எதிரான அதன் செயல்பாட்டையும் எழுதியிருந்தார். இதுவே சின்கோனா மரத்தைக்குறித்த முதல் இத்தாலிய ஆவணம்.

1677ல் பெருவியன் மருத்துவப் பொடி என்னும் பெயரில் சின்கோனா மரப்பட்டை பொடி அதிகாரபூர்வமாக லண்டன் பார்மகோபியாவில் (London Pharmacopoeia) “Cortex Peruanus” என்னும் பெயரில் பிரசுரமானது

Myroxylon peruiferum என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட பெருவியன் பால்ஸம் என்னும் மற்றொரு பிசின் மரத்தின் பட்டைகளும் சின்கோனாவின் பட்டைகளுடன் கலப்படம் செய்யப்பட்டது. அம்மரப்பட்டைக்கும் காய்ச்சலை குணமாக்கும் மருத்துவ பண்புகள் இருந்ததால் அம்மரமும் லண்டன் பார்மகோப்பியாவில் 1677ல் இடம்பெற்றது,

பிரஞ்ச் சின்கோனா தேடல் பயணத்தில் 1743ல் பெறப்பட்ட சின்கோனா விதைகள் மற்றும் நாற்றுக்கள் யாவும் ஒரு பெரும் கடற்புயலின்போது கடலில் மூழ்கின

சின்கோனா 17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, அரச குடும்பத்தினர்ர்களையும் குடிமக்களையும் சிகிச்சையளித்து காப்பாற்றுவதில் பங்களித்துடன் காலனித்துவம் மற்றும் போர்களுக்கும் காரணமாக இருந்தது.

எக்குவடோரின் தலைநகரான குயிடோவிற்கு (Quito) 1735ல் வருகைபுரிந்த வானியலாளர் சார்லஸ் (Charles Marie de la Condamine) இந்த மரத்தை முதல் முதலாக சரியாக விவரித்தார்.அவரால் அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்பட்ட மரம் Cinchona officinalis,

1735,ல் பாரிஸின் அறியிவில் அமைப்பு தாவரவியலாளர் ஜோஸப் என்பவரை (Joseph de Jussieu) தென்னமெரிக்காவின் தாவரங்கள் குறித்து அறிய அனுப்பி வைத்தது அப்போது அவர் சின்கோனா மரத்தை பிரெஞ்ச் மொழியில் காய்ச்சல் மரம் என்று பொருள் படும் “l’arbre des Fièvres” என்று பெயரிட்டார்.

Jesuits எனப்பட்ட அருட்பணியாளர்களால இவை அறிமுகப்படுத்தபட்டதால், இந்த பட்டைப்பொடி பல நாடுகளில் ஜீசுட்ஸ் பட்டை அல்லது ஜீசுட்ஸ் பொடி (Jesuit’s bark Jesuit’s powder) என அழைக்கப்பட்டது

கிரானடா வைஸ்ராயின் பிரத்யேக மருத்துவரான ஜோஸ் (José Celestino Mutis) கொலம்பியாவின் சின்கோனா மரங்களை 1760 லிருந்து ஆய்வு செய்து ‘’El Arcano de la Quina’’ என்னும் நூலை சின்கோனா மரங்களின் சித்திரங்களுடன் 1793 ல் வெளியிட்டார்

அவர் வணிகரீதியான பலன் அளிக்கும் சின்கோனா வகைகளைக் கண்டறிய ஒரு திட்டத்தையும் முன்மொழிந்தார். அந்த திட்டம் 1783ல் அரசால் அனுமதிக்கப்பட்டு அவரது இறுதிக்காலமான 1808 வரை வெற்றிகரமாக நடந்தது.

கோவிட் பெருந்தொற்றுக்கான மருந்துகளுக்காக 2 வருடங்கள் முன்பு எப்படி நாம் அலைபாய்ந்து கொண்டிருந்தோமோ அதுபோலவே அன்று மலேரியாவுக்கான மருந்துகளுக்கு உலகம் காத்துக்கொண்டிருந்தது. .சின்கோனா கிடைத்தபோது வேறு எதைப்பற்றியும் கவலையில்லாமல் அவற்றை வெட்டி சாய்த்தது

பின்னர் 19 ம் நூற்றாண்டில் குயினைனின் தேவை பலமடங்கு அதிகமாகி பெரும் தட்டுப்பாடு உருவாகியது குயினைன் மரப்பட்டைச் சாறளித்து காய்ச்சலை குணமாக்குவது பாரம்பரிய மருத்துவ முறையாகத்தான் இருந்தது, எனினும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு அப்பட்டைப்பொடி ஐரோப்பாவின் மிக விலை உயர்ந்த மருந்து பொருளாகவே இருந்தது

டச்சு அரசு ஜாவாலிருந்து 1854ல் சின்கோனா நாற்றுக்களின் பட்டையையும் விதைகளையும் சேகரிக்க ஜஸ்டஸ் (Justus Hasskarl) என்பவரை அனுப்பியது

பிரபல பிரிட்டிஷ் தாவரவியலாளர் ரிச்சர்ட் ஸ்ப்ரூஸ் 1849 லிருந்து 1864 வரை 15 ஆண்டுகள் தென்னமெரிக்க காடுகளில் உதவிக்கு கியூ பூங்காவின் தோட்டக்காரர் ராபர்ட் கிராஸ் மற்றும் ஆங்கில புவியலாளரும் கள ஆய்வாளருமான கிளிமென்ஸ் மர்ஹாம் ஆகியோருடன் (Richard Spruce, Robert Cross & Clemens Markham) சின்கோனா விதைகள் நாற்றுக்கள் மற்றும் பட்டைகளை திருட்டுத்தனமாக சேகரித்தார். உதவிக்கு தென்னரிக்க பழங்குடியினரையும் உபயோகப்படுத்திக் கொண்டார்.

பெருவிற்கு இக்குழு வந்தபோது சின்கோனா மரங்கள் ஆயுதமேந்திய காவலாளிகளால் அல்லும் பகலும் பாதுகாக்கபட்டன. இத்தனை ஆபத்துக்கள் இருந்தும் மார்ஹம் பெரு அரசின் அனுமதி இல்லாமல், அவர்களுக்கு தெரியாமல் சின்கோனா விதைகளையும் நாற்றுக்களையும் சேகரித்து மேற்கிந்திய தீவுகளுக்கும் இந்தியாவிற்கும் அனுப்பினார்.

கிராஸ் மற்றும் ஸ்ப்ரூஸ் மட்டும் 100,000 சின்கோனா சுக்கி ரூப்ரா (Cinchona succirubra) வகையின் விதைகளையும் 637 நாற்றுக்களையும் சேகரித்தனர். ரகசியமாகவும் பத்திரமாகவும் இந்தியாவிற்கு அவற்றில் 463 நாற்றுக்கள் வந்தன. மேற்கிந்திய தீவுகளுக்கு அனுப்பட்ட அவற்றில் பெரும்பாலானவை துரதிர்ஷ்டவசமாக பிழைக்கவில்லை. ஆனால் இலங்கையிலும் இந்தியாவிலும் ஒரு சில நாற்றுக்கள் வளர்ந்தன.

17ம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து 19 ம் நூற்றாண்டு வரை சின்கோனா பட்டைகள் உலகெங்கிலும் பயணித்தன.

1840 ல் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் ராணுவ வீரர்களுக்குமான மலேரியா சிகிச்சைகளுக்கு மட்டும் வருடத்திற்கு 700 டன் சின்கோனா மரப்பட்டை உபயோகிக்கப்பட்டது 19ம் நூற்றாண்டில்தான் ஐரோபியர்கள் அதீத சந்தைப்படுத்தலால் சின்கோனா மரங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதை சுட்டிக்காட்டினார்கள்.

எனவே அவரவர் நாடுகளில் சின்கோனா பயிரிடுவது மற்றும் இருக்கும் சின்கோனா மரங்களை பாதுகாப்பது ஆகியவற்றில் ஒவ்வொரு நாடும் முனைப்பாக இருந்தனர். பிறகு சின்கோனா உலகின் பல பாகங்களிலும் பரவலாக வளர்க்கப்பட்டது. டச்சு மற்றும் பிரிட்டிஷார் சின்கோனா வளர ஏதுவானவை என தாவரவியலாளர்களால் அடையாளம் காட்டப்பட்ட பிரதேசங்களை பாதுகாத்தனர். சின்கோனா விதைகள் வேறெங்கும் கொண்டு செல்லப் படுவதையும் தடை செய்தனர்.1852ல் டச்சு அரசு ஜஸ்டஸ் (Justus Charles Hasskarl) என்பவரை தென்கிழக்காசியாவில் சின்கோனாவை பயிரிட முனைந்த்தாக குற்றம் சாட்டி கைது செய்தது.

அச்சமயத்தில்தான் 1840களில் துவங்கி பல வருடங்கள் சார்லஸ் லெட்ஜர் மமானியின் உதவியுடன் ரகசியமாக பெருவின் காடுகளில் அதிக குயினைன் அளிக்கும் மரத்தை தேடிக்கொண்டிருந்தார்,

  • பொலிவியாவிலிருந்து பலரால் 1846ல் சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு உருவானவையே ஐரோப்பாவின் சின்கோனா வகையான C. Calisaya
  • பெருவிலிருந்து உலகின் பிற பாகங்களுக்கு அறிமுகமான மற்றொரு முக்கிய வகை சிவப்பு பட்டை கொண்ட Cinchona succirubra, (இப்போது C. pubescens– இதன் பட்டைச்சாறு காற்றில் கலக்கையில் சிவப்பு நிறமாக மாறும்)

கியூ பூங்காவில் சின்கோனாக்களுக்கென்றே பிரத்யேக பசுங்குடில்கள் உருவாககப்பட்டன. இந்தியாவில் நீலகிரி மற்றும் கொல்கத்தா தாவரவியல் பூங்காக்களில் இவை வளர்க்கப்பட்டன.

1880களில் நீலகிரியின் சின்கோனா தோட்டங்கள் தேயிலை தோட்டங்களாக மாறும்வரை இந்தியா மற்றும் டச்சு அரசுகளே சின்கோனா உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் முன்னணியில் இருந்தன.

தென்னமெரிக்க சின்கோனா பட்டையின் முக்கிய ஆல்கலாய்டுகள் குயினைன் மற்றும் குயினைடின்((quinine & quinidine.) இரண்டும் மருத்துவத்துறையில் வெகுவாக பயன்பட்டு அவற்றின் தேவை உலகெங்கும் அதிகரித்தபோது மரங்களை பாதுகாக்கும் நடவடிகைகளும் கடுமையாகின.

பல நாடுகளுக்கும் அப்போது சின்கோனா மரப்பட்டை தேவைப்பட்டது எனவே அவை பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இதன் பொருட்டு செலவழித்தன. 1857ல் பிரிடிஷ் இந்தியா வருடத்திற்கு சுமார் 7000 ரூபாய்கள் குயினைனுக்கு மட்டும் செலவளித்தது.

டச்சு , பிரெஞ்ச் மற்றும் பிரிட்டிஷாருக்கு முன்பாக ’’தங்களின் தேவைக்கேற்ற இயற்கை குயினைனை தாங்களே தயாரிப்பது, அல்லது குயினைனை வேதிப்பொருட்களிலிருந்து தயாரிப்பது ’’ ஆகிய இரண்டு வழிகள் மட்டும் இருந்தபோத,..1850ல் பிரெஞ்ச் மருந்து நிறுவனங்கள் ஜனவரி 1, 1851 க்குள் ரசாயன குயினைன் தயாரிப்பவர்களுக்கு 4000 பிராங்குகள் பரிசாக அளிக்கப்படும் என்றுகூட அறிவித்தார்கள் எனினும் 1944 வரை ரசாயன குயினைன் உருவாகி இருக்கவில்லை.

இந்தியாவில் சின்கோனா

பிரிட்டிஷ் இந்தியாவில் 1880களிலிருந்து சின்கோனா நீலகிரி மலையிலும் டார்ஜிலிங்கிலும் வளர்க்கப்பட்டது. கேரள மாநிலத்தின் மூணாரில் உள்ள மலைகளில் பிரிடிஷ் இந்தியாவின் அதிகாரிகள், பூஞ்சார் அரசரிடமிருந்து குத்தகைக்கு எடுத்த பூஞ்சார் பகுதி நிலத்தில் தேயிலை மற்றும் காபியுடன் சின்சோனா வளர்ந்தது.

இந்தியாவில் தற்போது சின்கோனா வணிக ரீதியாக பயிரிடப்படுவது டார்ஜிலிங்கில் மட்டுமே 1862 ல் தொடங்கப்பட்ட சின்கோனா மற்றும் பிற மருத்துவ தாவரங்களின் இயக்குநரகத்தின் (Directorate of Cinchona and Other Medicinal Plant (DCOMP)) 6900 ஏக்கரில் வளரும் சின்கோனா மரங்களிலிருந்து சுமார் 1,50,000 லிருந்து 2,00,000 கிலோ சின்கோனா மரப்பட்டை உருவாகிறது.

தாவரவியல் பண்புகள்

29 மீ உயரம் வரை வளரும், காபி பயிரின் குடும்பமான ரூபியேசியை சேர்ந்த சின்கோனா மரங்கள் பசுமை மாறா வகையை சேர்ந்தவை. எதிரடுக்கில் அமைந்திருக்கும் பளபளப்பான இலைகளையும் குழல் போன்ற வெண்மையும் இளம் சிவப்பும் கலந்த அழகிய சிறு மலர்களையும் கொண்டிருக்கும் கொத்துக்களாக காணப்படும் மலர்களின் இதழ்களில் மென்மயிர்களைப்போல வளரிகள் பரவியிருக்கும். சின்கோனா மரத்தின் கனி மிகச்சிறியது

7 லிருந்து 8 வருடம் வளர்ந்த சின்கோனா மரங்களிலிருந்து மரப்பட்டை எடுக்கையில் குயினைன் அளவு அதில் அதிகமிருக்கும். சின்கோனா

மரப்பட்டைகளில் குயினைன் மட்டுமல்லாது 35 வகையான பிற முக்கியமான ஆல்கலாய்டுகளும் கிடைக்கின்றன

கதைகள்

சின்கோனா மரப்பட்டையில் குயினைன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து பல கதைகள் இருந்தன அவற்றில் பிரபலமானது 1928 ல் சி ஜே எஸ் தாம்ஸன் (C.J.S. Thompson) பிரிடிஷ் மருத்துவ சஞ்சிகையில் எழுதியது. காய்ச்சலில் அவதியுற்ற இந்தியர் ஒருவர் சின்கோனா மரம் முறிந்து வீழ்ந்து கிடந்த ஏரித் தண்ணீரை அருந்தி குணமான கதையை அதில் விவரித்திருந்தார்

ஐரோப்பிய குயினைன் கதையொன்று உலகெங்கிலும் பரவலாக இருந்த ஒன்று. அதுதான் உண்மை என இன்னும் நம்பிக்கொண்டிருப்பவர்களும் உண்டு.

17 நூற்றாண்டில் ஸ்பெயினின் சின்கோன் பகுதியை சேர்ந்தவரும் count என்னும் நிலப்பிரபுவும், மன்னருக்கு அடுத்த நிலையில் இருந்தவரும் பெருவின் வைஸ்ராயுமான லூயியின் (Luis Jerónimo Fernández de Cabrera Bobadilla Cerda y Mendoza) மனைவி அன்னாதான் (Ana de Osorio (1599–1625) மலேரியாவால் பாதிக்கப்பட்டிருக்கையில் முதன்முதலில் குயினைன் அளிக்கப்பட்டு மலேரியாவிலிருந்து குணமானவர் என்னும் ஒரு புனைவு உலகெங்கும் பிரபலமாக இருந்தது. குணமான அவர் ஸ்பெயினுக்கு திரும்பிச் சென்ற போது தன்னுடன் சின்கோனா மரப்பட்டைகளை எடுத்துச்சென்று ஐரோப்பாவில் அவற்றை அறிமுகப்படுத்தினார் என்றது அந்தக்கதை. எனவே சின்கோன் பகுதியின் பிரபுவின் மனைவியாதலால் countess chinchon என அழைக்கப்பட்ட அவரின் பெயராலேயே அந்த மரமும் சின்கோனா மரம் என்று அழைக்கப்பட்டதாக கதை சொன்னது.

1859ல் இந்தியாவிற்கான சின்கோனா தேவையின் ரகசிய செயல்பாட்டாளராக இரண்டு வருடங்கள் தென்னமரிக்காவில் செயல்பட்ட க்ளிமென்ஸ் மர்ஹாம் தனது தென்னமரிக்க அனுபவங்களை நூலாக்கினார். , அவருக்கு பழங்குடியினர் செய்த உதவிகளை, அக்காட்டின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் கண்டுகொண்ட பழங்குடியினரின் அறிவையெல்லாம் அந்நூலில் விவரித்த, அவரே ’’சின்கோன் என்னும் பிரபுவின் மனைவி மலேரியாவால் நோயுற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்து உயிர் காத்த மரப்ட்படை அவரது பெயரிலேயே அழைக்கப்பட்டு சின்கோனா மரம் என்னும் பெயர் பெற்றது’’ என்னும், இன்று வரையிலும் புழக்கத்தில் இருக்கும் புனைவை நூலில் எழுதி மேலும் பிரபலமாக்கியவர்.

வைஸ்ராய் லூயியின் அதிகாரபூர்வ நாட்குறிப்பு 1930 ல் கிடைத்த போது அவரது முதல் மனைவியான அனா இவர் வைஸ்ராயாவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே ஸ்பெயினில் மறைந்து விட்டார் என்னும் உண்மை தெரிந்தது

கணவருடன் தென்னமரிக்காவிற்கு வந்த அவரது இரண்டாம் மனைவி பிரான்சிஸ்கா (Francisca Henríquez de Ribera) நல்ல உடலாரோக்கியத்துடன் இருந்தார். அவருக்கும் பட்டைச்சாறு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. வைஸ்ராய்க்கும் பலமுறை கடும் காய்ச்சல் வந்திருக்கிறது எனினும் அவர் ஒருமுறைகூட சின்கோனா பட்டை பொடியை நிவாரணமாக எடுத்துக் கொண்டிருக்கவில்லை. மேலும் வைஸ்ராயின் இரண்டாம் மனைவியும் ஸ்பெயினுக்கு திரும்பிச்செல்லும் வழியில் உடல்நலக்குறைவால் கொலம்பியா துறைமுகத்திலேயே உயிரிழந்தார்.அவரும் ஸ்பெயினுக்கு செல்லவே இல்லை. எனவே பிரபுவின் மனைவிகள் மூலம் இந்தப்பொடி ஐரோப்பாவிற்கு அறிமுகமானது என்பது வலிந்து உருவக்காப்பட்ட புனைவுதான் என்பதை அவரின் நாட்குறிப்பு உறுதி செய்தது.

ஆனால் இக்கதை மிகப்பிரபலமானதாக அக்காலத்தில் இருந்ததால் 1742ல் தாவர வகைப்பாட்டியலின் தந்தை லின்னேயஸ் சின்கோன் அரசியின் பெயரால் சின்கோனா அஃபிஸினாலிஸ் என்று அம்மரத்துக்கு பெயரிட்டார். 

இந்த அறிவியல் பெயரில் chinchon என்பது தவறாக cinchon என்றிருப்பதால் 1874 ல் இது Chinchona. என சரியாக திருத்தப்பட வேண்டும் என்னும் வேண்டுகோள் பலரால் முன்வைக்கப்பட்டும் பெயர் இன்று வரை மாற்றப்படவில்லை.

கெச்சுவா பழங்குடியின மொழியில் குயினா (quina) என்றால் புனித மரப்பட்டை என்று பொருள். இது சில சமயம் பட்டைகளின் பட்டை எனும் பொருளில் quinquina என்றும் குறிப்பிடப்பட்டது. சின்கோனா மரப்பட்டை, பெருவிய பிசின் மரப்பட்டை இரண்டுமே குயினா என்றே குறிப்பிடப்படுகிறது. எனவே இதிலிருந்து ஆல்கலாய்டு பிரித்தெடுக்கப்பட்டபோது அது குயினைன் என்று பெயரிடப்பட்டது.

கண்டுபிடிப்புக்கள்

ஆங்கிலேய மருத்துவரான தாமஸ் (Thomas Sydenham -1624–89) மிகத் திறமையாக சின்கோனா மரப்பட்டை சாற்றை சிகிச்சைகளுக்கு உபயோகித்து மலேரியா காய்ச்சலை பிற காய்ச்சல்களிலிருந்து வேறுபடுத்துவதை கண்டறிந்தவர்.

1790 ல் பிரெஞ்ச் வேதியியலாளர் ஆண்டனி (Antoine François de Fourcroy (1755–1809) சின்கோனா மரப்பட்டையிலிருந்து சிவப்பு நிறத்தில் ஒரு பிசினை பிரித்தெடுத்தார் அதில் ஆல்கலாய்டுகளைப் போன்ற குணங்கள் கொண்ட வேதிப்பொருட்கள் இருப்பதாக அறிவித்தார் எனினும் அந்த செம்பிசின் மலேரியாவை குணமாக்கவில்லை.

1800 வரை சின்கோனா மரப்பட்டை கரைசலாக்கப்பட்டு குடிக்கப் பட்டுக்கொண்டிருந்தது. 1811ல் போர்த்துக்கீசிய கப்பற்படை அறுவை சிகிச்சை மருத்துவரான பெர்னார்டினோ (Bernardino Antonio Gomez) சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் ஆல்கலாய்டை பிரித்தெடுத்து “cinchonino.” என பெயரிட்டார்.

1820 ல், பிரான்ஸின் வேதியியலாளர்கள் பியரி மற்றும் ஜோசப் (Pierre Joseph Pelletier & Joseph Bienaim Caventou) ஆகியோர் cinchonino” என்பது “quinine” மற்றும் “cinchonine.” இரு முக்கிய ஆல்கலாய்டுகளின் கலவை என கண்டறிந்தார்கள்

சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைனை பிரித்தெடுக்கும் முறையையும் இவர்கள் கண்டறிந்தார்கள். இது நவீன மருந்துத் தொழிலின் தொடக்கம் என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.. அவர்கள் குயினைன் பிரித்தெடுக்க பாரிசில் ஒரு தொழிற்சாலையையும் நிறுவினர்,

அடுத்த முக்கிய திருப்பமாக 1833ல் ஹென்ரி மற்றும் டிலோண்டரால் குயினிடைன் (quinidine) பிரித்தெடுக்கப்பட்டது ( Henry and Delondre),

1844ல் சின்கோனிடைன் (cinchonidine) வின்க்கில் (Winckle) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டு 1853 ல் இறுதியாக அது quinidine என பாஸ்டரால் பெயரிடபட்டது (Pasteur).

இதன் மூலக்கூறு வடிவம் 1854ல் ஸ்டெரெக்கரால் கண்டறியப்பட்டது( Strecker)

உலகின் முதல் செயற்கைச்சாயமான மாவீன் 5 (mauveine) வில்லியம் ஹென்ரியால் (William Henry Perkin) குயினைனை கண்டுபிடிக்கும் முயற்சியின் போது1856ல் கண்டறியபட்டது,

குயினைனின் ரசாயனத்தயாரிப்பு பல சிக்கல்களை தாண்டி 1944ல் சாத்திமாமயிற்று. பலர் இந்த முயற்சியில் இறங்கி படிப்படியாக முன்னேற்றம் கண்டனர்.

19 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா மரப்பட்டை மற்றும் குயினைன் வர்த்தகத்தில் டச்சு உலகின் ஆகப்பெரிய நாடாக இருந்து 1944 ல் ரசாயன குயினைன் தயாரிப்பு துவங்கும் வரை டச்சு அரசே குயினைன் சந்தையில் கோலோச்சியது

ஹோமியோபதி என்னும் மருத்துவ முறையும் சின்கோனா பட்டையின் மருத்துவ பண்புகளை சோதிக்கும் முயற்சியில் தான் உருவானது. ஹோமியோபதியை தோற்றுவித்தவர். சாமுவேல் ஹானிமன்(1755-1843)

மருத்துவரான இவர் அக்காலத்தின் மருத்துவ ஆய்வு முறையின் மீது கடும் அதிருப்தி கொண்டிருந்தார். இரத்தம் சுத்திகரிக்க நோயாளி மீது அட்டையை விட்டு உறிஞ்ச செய்வது, இருதயத்தின் இரத்தக் குழாய்களை வெட்டி இரத்தத்தை வடியவிடுவது போன்ற கொடிய சிகிச்சையால் பலர் கொல்லப்பட்டனர்.

இவற்றால் டாக்டர் ஹானிமென் மருத்துவ தொழிலை விட்டு விட்டார். பல ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவர் .1796 ல் வில்லியம் கல்லன் என்பவரின் மருத்துவ நூலை ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழி மாற்றிக் கொண்டிருக்கையில் பெருவின் மரப்பட்டை காய்ச்சலை குணமாக்குவது குறித்து எழுதி இருப்பதை கண்டார். அதை பரிசோதித்து பார்க்கையில் தான் ’’ஒத்தது ஒத்ததை குணமாக்கும்’’ என்னும் விதியின் அடிப்படையிலான சிகிச்சை முறையான ஹோமியோபதி 15 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அவரால் உருவாக்கப்பட்டது.

யுனானி மருத்துவ முறையை தோற்றுவித்தவரான காலனின் குருதி நீக்கச் சிகிச்சையும் குயினைனின் வெற்றிக்கு பிறகுதான் நிறுத்தப்பட்டது

தொற்று நோய்க்கு சிகிச்சையளிப்பதற்கு பயன்பட்ட முதல் இயற்கை இரசாயன கலவை குயினைன் தான் இன்று, குயினைன் மருத்துவ நோக்கங்களுக்காக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இது மலேரியாவைத் தடுக்கப் பயன்படுவதில்லை, மாறாக நோய்க்கு காரணமான உயிரினமான பிளாஸ்மோடியம் ஃபால்சிபாரத்தின் ஹீமோகுளோபினை கரைத்து வளர்சிதைமாற்றம் செய்யும் திறனில் குயினைன் குறுக்கிடுகிறது.

சிகிச்சை வரலாறு

சின்கோனாவின் எந்த வகை மரத்தின் பட்டை வீரியமிக்கது, பட்டைபொடியில் செய்யப்படும் போலி மலேரிய மருந்துகள், குயினைனின் பக்க விளைவுகள் இவை அனைத்தும் சேர்ந்து சின்கோனாவை மலேரியாவுக்கான தீர்வாக மட்டும் இல்லாமல் பெரும் கேள்விக்குறியாகவே ஆக்கி இருந்தது,

இம்மருந்தை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சிலருக்கு கொப்புளங்கள் உண்டாகின சிலருக்கு உதடுகள் எரிந்து புண்னாகின இன்னும் சிலருக்கு காதுகளில் விசித்திரமான ஓலிகள் கேட்டன பலருக்கு காது செவிடாகி, கண்பார்வையும் குறைந்தது .

.ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சையில் பயன்பட்டு வரும் ஆர்டிமிசின் என்னும் தாவரமருந்தும் மலேரியாவுக்கு எதிரானதுதான். இதுவும் குயினைனுக்கு மாற்றாக பயன்படுத்த பட்டது

மலேரியாவினால் இறப்பு அதிகமாகிக்கொண்டே இருந்தாலும் சின்கோனா மரப்பட்டைகளை சிகிச்சைக்கு எடுத்துக்கொள்ள பலரும் தயங்கினார்கள் ஆங்கிலேய மருந்தாளுநர் ராபர்ட் டால்போர்தான் (Robert Talbor) 17 ம் நூற்றாண்டின் இறுதியில் சின்கோனா பட்டையின் உபயோகங்களை எளியவர்களுக்கும் புரியும்படி விளக்கினார். அப்படியும் பலருக்கு சின்கோனாவை சிகிச்சைக்கு எடுதுக்கொள்ள பெரும் மனத்தடை இருந்ததால், 1670களில் சின்கோனாவைவிட சிறந்தது என்னும் பெயரில் அதே சின்கோனா என வெளிப்படையாக தெரிவிக்காமல் ஒரு ரகசிய மருந்து என சொல்லி சின்கோனா பட்டைச்சாற்றினால் பலரை குணமாக்கினார்.

இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸ் மற்றும் அவரது இளம் மகன் பதினாலாம் லூயிஸ் ஆகியோரையும் டால்போர் வெற்றிகரமாக சின்கோனா மரப்பட்டையை சிகிச்சையாக அளித்து மலேரியாவிலிருந்து மீட்டார்

டால்போர் சின்கோனா மரப்பட்டை கஷாயாங்களின் பலவித தயாரிப்பு முறைகளை இளவரசர் லூயிஸ்க்கு தனது இறப்புக்கு பின்னரே அவை வெளியிடப்படவேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் எழுதிக் கொடுத்திருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அவர் எழுதிய சின்கோனாவை குறித்த அனைத்தும் அடங்கிய நூலான ” Le remede Anglais pour la guerison des fievres. 1682 ல் பிரான்ஸ் மன்னரால் வெளியிடப்பட்டது. தொடர்ந்து அதன் ஆங்கில வடிவம் ‘Talbor’s wonderful secret for curing of agues and fevers. வெளியானது இவ்விரண்டு நூல்களும் மக்கள் மத்தியில் அதுவரை இருந்த குயினைன் குறித்த சித்திரத்தை அடியோடு மாற்றியது

சின்கோனா மரப்பட்டையின் விலை 25 லிருந்து 100 ஃப்ரேங்க்குகள் உடனடியாக உயர்ந்தது. ’’இறை நம்பிக்கையும் பிரார்த்தனையும் செய்யாத அற்புதங்களை கப்பல்களில் வந்து கொண்டிருக்கும் சின்கோனா மரப்பட்டைகள் செய்யும்’’ என்பது அப்போது பிரபலமான ஒரு வாசகமாக புழக்கத்தில் இருந்தது

1866 லிருந்து 68 வரை தென்னிந்தியாவின்’ மெட்ராஸ் சின்கோனா’ கமிஷனால் பெருமளவில் சின்கோனா பட்டைகளின் காய்ச்சல் குணமாக்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது. 2472 மலேரியா நோயாளிகளில் சோதனை நடத்தி அவர்களில் 846 பேருக்கு குயினைனும்,664பேருக்கு குயினிடைனும், 559 பேருக்கு சின்கோனைனும் 403 பேருக்கு சின்கோனிடைனும் அளிக்கப்பட்டது. இவர்களில் 2445 நோயாளிகள் குணமடைந்தனர் 27 பேர் மட்டும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.

குணமாக்கும் இயல்புக்கு சமமாகவே நச்சுத்தன்மையும் கொண்டிருக்கும் ஆல்கலாய்டுகளான குயினைன் மற்றும் குயினைடைன் ஆகியவை மிக அதிகமாக மலேரியா சிகிச்சையில் உபயோகப்படுத்தப்பட்டன.

முதல் உலகப்போரின் போது குயினைன் மட்டுமே மலேரியாவிற்கான ஒரே சிகிச்சையாக இருந்தது ரொனால்ட் ரோஸ்.(Ronald Ross) கொசுக்களின் மூலம் மலேரியா பரவுதலை கண்டறிந்த பின்னர் குயினைன் உபயோகம் பல மடங்கு அதிகரித்தது

உலகப்போர் மருத்துவ முகாம்களில்தான் ரத்தத்தில் இருந்த மலேரிய ஒட்டுண்ணிகளுக்கெதிராக குயினைன் வீரியமிக்க மருந்தாக செயல்பட்டாலும், ஈரலை தாக்கும் மலேரியா ஒட்டுண்ணிகளுக்கெதிராக அவை வேலை செய்வதில்லை என்பது கண்டறியப்பட்டது. அது எதனால் என்றும் அப்போது அறிந்து கொள்ள முடியவில்லை.

1917 ல் சர் வில்லியம் ஆஸ்லர் மலேரியாவை குயினைன் கொண்டு குணப்படுத்த முடியாதவர்கள் மருத்துவத்துறையை விட்டு விலகிவிடலாம் என்று அறிவிக்கும் அளவுக்கு மலேரியாவுக்கு எதிராக குயினன் 1920 வரை வெற்றிகரமாக செயல்பட்டது. 1920ல் மலேரியா சிகிச்சையில் குளோரொகுயின் அறிமுகமானபோது குயினைனின் பயன்பாடு ஏறக்குறைய நின்றுபோனது.

ஒட்டுண்ணிகளால் குளோரோகுயினுக்கான உயிர்ம எதிர்ப்பு (resistance) உருவானபோது மீண்டும் குயினைன் தனது இடத்தை பிடித்துக் கொண்டது

மலேரியா சிகிச்சைகள் வெற்றிகளைத் தந்தாலும், சின்கோனா ஆல்கலாய்டுகளின் பயன்பாடு உயிருக்கு ஆபத்தான எதிர்விளைவுகளையும் உருவாக்கி இரு முனைகளும் கூர் கொண்ட கத்தியை போலிருந்தது.

சிகிச்சை முறைகள்

கசப்புச் சுவையுடன் சிறிது எலுமிச்சை நறுமணம் கொண்டிருக்கும் குயினைன் பட்டைப்பொடி. பெரும்பாலும் நீரில் கரைத்து அருந்தப்படும் இவை மாத்திரைகளாகவும் தயாரிக்கப்பட்டன.

பிரிட்டிஷ் அதிகாரிகள் சோடா மற்றும் சர்க்கரையில் குயினைன் பொடியை கரைத்து தயாரித்த டானிக்கை அருந்தினர். இந்தக் கலவையை உருவாக்கிய எராமஸ் (Erasmus Bond) 1858ல் அதற்கு காப்புரிமை பெற்றார். பல மருந்து நிறுவனங்கள் 1860 களில் இந்த டானிக் விற்பனையில் மும்முரமாக ஈடுபட்டன. 1880 களில் பிரிட்டிஷ் இந்தியாவின் செயல்பாட்டாளர்களாயிருந்த சில நைஜீரியர்கள் இந்த டானிக்குடன் சிறிதளவு ஜின்னையும் கலந்தனர். சிறிது போதையும் அளித்த இந்த மலேரிய டானிக் ஒரு நூற்றாண்டு காலம் மக்களிடையே வெகுவாக புழங்கியது

மலேரியா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் போது, ​​குயினின் மாத்திரை வடிவில் கொடுக்கப்படுகிறது. குயினின் நீர் அல்லது டானிக் நீர் வடிவிலும் விற்கப்படுகிறது, இது ஜின் மற்றும் ஓட்கா போன்ற மது வகைகளுடன் ஒரு பிரபலமான கலவையாக உலகம் முழுவதும் அருந்தப்படுகிறது. குயினின் கலந்த பானங்களில் “Q” என்ற எழுத்து குறிக்கப்பட்டிருக்கும்.

1889லிருந்து புரோமோ குயினைன் (Bromo Quinine) என்னும் பெயரில் சந்தைப்படுத்தப்பட்ட குயினைன் 1960 வரை விற்பனையானது. குயினைன் கோகெயின் மற்றும் ஹெராயின் போன்ற போதை மருந்துகளில் கலப்படம் செய்யப்படுகிறது

செயற்கை குயினைன் தயாரிப்பு மிகுந்த செலவு பிடித்த ஒன்றாக இருந்தது. தொடர்ந்து chloroquine, primaquine, proguanil, மற்றும் artemisinin ஆகியவை மலேரியாவிற்கு எதிராக செயல்படுவதை நிரூபிக்க முடிந்ததென்றாலும் இன்னும் இயற்கை குயினைனுக்கு இணையான பாதுகாப்பான ஒன்றை கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தொடர்கின்றன. மொத்த குயினைன் உற்பத்தியில் 40 சதவீதம் மருத்துவத்துறையிலும் 60சதவீதம் உணவுத் தொழிற்சாலைகளிலும் பயன்படுகின்றது

அதன் செயல்திறன் முதன்முதலில் ஆவணப்படுத்தப்பட்ட 400 ஆண்டுகளுக்குப் பிறகும் குயினின் ஒரு முக்கியமான மலேரியா எதிர்ப்பு மருந்தாகவே உள்ளது. இருப்பினும், 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, மலேரியாவிற்கான முதல்-வரிசை சிகிச்சையாக உலக சுகாதார அமைப்பால் (WHO) குயினின் பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் குறைவான பக்கவிளைவுகளுடன் குயினைனுக்கு இணையாக பலனளிக்கும் பிற மருந்துகள் உள்ளன. எனெவே ஆர்ட்டெமிசினின் இல்லாதபோது மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கின்றது. மூட்டுவலி மற்றும் காக்காய்வலிப்புக்கு சிகிச்சையளிக்கவும் குயினின் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது chloroquine மற்றும் Atabrine இரண்டும்தான் மலேரியா சிகிச்சையில் பயன்படுகின்றன. இம்மருந்துகளுக்கான எதிர்ப்புத்தன்மையை மலேரியா ஒட்டுண்ணிகள் உலகின் சில பகுதிகளில் உருவாக்கி உள்ளன. வியட்நாமில் அப்படியான எதிர்ப்புத்திறன் கொண்ட ஒட்டுண்ணிகள் இருப்பதால் அங்கு மலேரியாவுக்கு சிகிச்சையளிக்க இயற்கை குயினைன் உபயோகபடுத்தப்படுகிறது.

குயினின் இன்று

குயினின் இன்றும் தென் அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்றாலும், உலக குயினைன் சந்தையின் பெரும்பகுதி தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவால் வழங்கப்படுகிறது. தென் அமெரிக்க நாடுகளின் இயற்கை வளங்கள் அதிகமாக இருந்தாலும் உலக மருந்து சந்தையில் போட்டியிட முடியாமல் ஒதுங்கி இருக்கிறது

இயற்கையாக கிடைக்கும் குயினைன் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் பன்னாட்டு நிறுவனங்களால் காப்புரிமை பெற்றவையாதலால் அவை உற்பத்தியாகும் நாடுகளுக்கும், அவற்றின் பயன்பாடுகளை முதலில் உருவாக்கிய பழங்குடிச் சமூகங்களுக்கும் எந்த நன்மையும் கிடைப்பது இல்லை என்பதற்கு குயினைன் வர்த்தகமும் மற்றுமோர் எடுத்துக்காட்டு.

லெட்ஜர்

1890 ல் தனது இறுதிக் காலத்தில் வறுமையில் வாடிய லெட்ஜருக்கு உதவ கிளிமென்ஸ் மர்ஹான் பெரிதும் முயன்றார் இந்திய மற்றும் டச்சு அரசுகள் ஆரம்பத்தில் அவரின் வேண்டுகோளை பரிசீலிக்கவில்லை. எனினும் 1897ல் டச்சு அரசு லெட்ஜெருக்கு வருடத்திற்கு 100 டாலர் உதவித்தொகை அளிக்க ஒத்துக்கொண்டது. உதவித்தொகை கிடைத்த 9 வருடங்கள் கழித்து 1906 ல் தனது 87 வது வயதில் 1906ல் லெட்ஜெர் உயிரிழந்தார்

இந்தியாவிலும் ஜவாவிலும் வளரும் ஆயிரக்கணக்கான சின்கோனா மரங்கள் லெட்ஜெரினால் தருவிக்கப்பட்ட விதைகளிலிருந்து உருவனாவை.
1900த்தில் உலகின் மொத்த குயின்னைன் உற்பத்தியில் ⅔ பங்கு ஜாவாவில் இருந்து கிடைத்தது. இத்தனை வருடங்கள்,கழித்தும் லெட்ஜர் வகை சின்கோனாக்களே அதிக குயினைன் அளிக்கின்றன.

Gabriele Grammiccia, எழுதிய சார்ல்ஸ் லெட்ஜரின் வாழ்க்கை 5 என்னும் நுல் அவர் எத்தனை அசாதாரணமான மனிதர் என்பதை நமக்கு சொல்கிறது. 18 வயதில் அல்பகா ஆடுகளுடன் துவங்கிய லெட்ஜரின் வாழ்க்கையை அல்பகா ஆடுகளின் ரோமமும் சின்கோனா மரப்பட்டையுமே வடிவமைத்தது என்று சொல்லலாம்.

சிட்னியில் இருந்த லெட்ஜரின் கல்லறை (Rockwood Methodist Cemetery in Sydney) சிதிலமடைந்து அவரின் இரண்டாவது மனைவியின் சகோதர சகோதரிகளின் பெயர் மட்டும் அதில் மீதமிருந்தது. சமீபத்தில் அவரின் சுயசரிதை எழுதிய கிரேமிசியாவால் கல்லறை புதுப்பிக்கப்பட்டு சார்லஸ் லெட்ஜரின் பெயரும் அதன் கீழே உலகிற்கு குயினைன் அளித்தவர் என்றும் பொறிக்கப்பட்டது

தற்போது மலேரியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்துகள் செயற்கை முறையில் தயாரிக்கப்படுகின்றன, சின்கோனா இனத்தின் வரலாற்று ரீதியான அதிகப்படியான சுரண்டலால் அதன் 17 இனங்கள் பெருவில் அழிந்துவரும் இனங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன,

1895ல் ஆய்வாளர்கள் ஆண்டஸ் மலைப்பகுதிகளில் 25000 சின்கோனா மரங்கள் இருந்ததை கணக்கிட்டிருந்தார்கள் இப்போது அதே நிலப்பரப்பில் இருக்கும் போடோகார்பஸ் தேசிய பூங்காவில் வெறும் 29 மரங்கள் மட்டுமே இருக்கின்றன,

பெருவின் தேசிய கொடியில் இம்மரம் பொறிக்கப்பட்டிருக்கிறது தென்னமரிக்க உள்ளூர் இயற்கை பாதுகாப்பு அமைப்புக்கள் சின்கோனா மரங்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றன. ’’ஆசிர்வதிக்கபட்ட விதைகள்’’ என்னும் பொருள் கொண்ட சூழல் அமைப்பான செமில்லா பெண்டிட்டா (Semilla Bendita) 2021 ல் பெரு தன்னாட்சி பெற்ற 200 வது ஆண்டை கொண்டாடும் விதமாக 2021 சின்கோனா விதைகளை நட்டுவைத்து அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது மேலும் இவ்வமைப்பு பல்துறை வல்லுநர்கள் கலந்துகொள்ளும் கருத்தரங்குகளை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஒருங்கிணைத்து சின்கோனா மரங்களின் மரபியல் வளரியல்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களை முன்னெடுக்கிறது உள்ளூர்வாசிகளின் பங்களிப்பு இம்மரங்களின் பாதுகாப்பில் இருப்பதையும் இந்நிறுவனம் உறுதி செய்து கொள்கிறது

கியூ பூங்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு முக்கிய இடங்களில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தென்னமரிக்கவிலிருந்து கொண்டு வரப்பட்ட சின்கோனா மரப்பட்டைகள் காட்சிக்கு வைக்கப் பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் கடந்துவந்த பாதைகளை ஆராய்ந்தோமானால் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கும் சாகசக்கதைகளையெல்லாம் மிஞ்சும் சாகசமும் மர்மமும் நிறைந்தவையாக அவை இருக்கும் .

குயினைன் கடந்துவந்த பாதை ஒரு மாபெரும் வலையென வரலாற்றில் விரிந்திருக்கிறது சின்கோனா மரப்பட்டை பெறப்பட்ட , தென்-அமெரிக்காவின் ஆண்டஸ் காடுகளிலிருந்து பிரிட்டிஷ் தாவரவியல் பூங்காவிற்கும், தென்னிந்தியாவின் காலனித்துவ தோட்டங்கள் முதல் இந்தோனேசியாவின் ஜாவா தீவு வரையிலும் உலகம் முழுவதும் குயினைனின் வரலாறு விரிந்துள்ளது..

மிக எளிதாக தாவர அடிப்படையிலான மருந்துகளை மாற்று மருத்துவம்’ என்று நினைத்து மக்கள் கடந்து விடுகிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தில் மருத்துவர்களால் தற்போது பரிந்துரைக்கப்படும் 7000 க்கும் மேற்பட்ட மருத்துவ கலவைகள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவை, ஆனால் மனித குல வரலாற்றில் குயினைன் உள்ளிட்ட பல முக்கிய உயிர்காக்கும் மருந்துகளின் பொருட்டு நாம் தாவரங்களுக்கு என்றென்றைக்குமாக கடன் பட்டிருக்கிறோம். பல்லுயிர் பெருக்கமும் மனித ஆரோக்கியமும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக்கொண்டு செல்வதைத்தான் குயினைனின் இந்த கதை காட்டுகிறது.

மமானியைப்போல பல்லாயிரக்கணக்கான மனிதர்களை பலி கொண்டபின்னரே மலைத்தெய்வங்கள் நமக்கு பலவற்றை அருளியிருக்கின்றன மமானியின் பெயரில் அந்த சின்கோனா மரம் பெயரிடப்படவில்லை. அவர் வரலாற்றில் மறக்கப்பட்டவர். மறைக்கப்பட்டவர். ஆனால் வரலாற்றின் கண்களுக்கு தெரியாமல் பலியான பல்லாயிரக்கணக்கானோர் நம் உயிர்காக்கும் மருந்துகள் கடந்து வந்த பாதையில் குருதிப்பலி கொடுத்திருக்கிறார்கள்

கோவிட் தொற்றில் தப்பி பிழைத்திருக்கும் நமக்கு இனி மலேரியா வரவேண்டாம், சாதாரண காய்ச்சல் வந்தால் கூட நம் நலனுக்கென உயிரிழந்த மமானி, உயிருக்கு துணிந்து பல சாகசங்கள் செய்து அடுத்த தலைமுறைகளுக்கு தேவையானவற்றை அபாயங்களை பொருட்படுத்தாமல் கண்டறிந்தவர்கள், எந்த சொந்த நலனுக்காகவும் இன்றி மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த கிருஸ்துவ அருட்பணியாளர்கள் என சிலரையாவது நினைத்துப்பார்க்கலாம்

*2021ல் மலேரியாவுக்கான அங்கீகரிக்கப்பட ஒரே தடுப்பு மருந்து Mosquirix. என்னும் சந்தைப் பெயரில் இருக்கும் RTS, S. உலக சுகாதார நிறுவனம் இதனை மலேரியா தொற்று இருக்கும் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பரிந்துரை இருக்கிறது

சந்தனம்

இந்தியாவை 17 முறை படையெடுத்து வந்த கஜினியை சேர்ந்த முகமது  நடத்தியதிலேயே  மாபெரும் கொள்ளையாக கருதப்படுவது 1026 ல் குஜராத்தில் சோம்நாத் கோயிலை தகர்த்த பின்னர் செய்த பெரும் கொள்ளைதான். சோம்நாத் கோயிலின் பிரம்மாண்டமான  மடக்கும் வசதிகொண்ட சந்தன கதவுகளும் கொள்ளையடித்த பொருட்களில் இருந்தன.

சந்தன மரத்தில் செய்யப்பட்ட நுணுக்கமான செதுக்கு  வேலைப்பாடுகள் கொண்டிருந்த அக்கதவுகள், நான்கு வருடங்களுக்கு பின்னர்  இறந்து போன கஜினி முகமதின் கல்லறை கோட்டையில் பொருத்தப்பட்டிருந்தன. 

அதிலிருந்து சுமார் 800 வருடங்களுக்கு பின்னர் எடின்பர்க் பிரபு வரலாற்றில் பதியப்பட்டிருக்கும் மிகப்பிரபலமான ’’கதவுகளின் பிரகடனத்தை’’ அறிவித்தார். அதன்படி ஒரு தனி சிப்பாய் படை ஆப்கானிஸ்தானுக்கு கஜினியின் கல்லறையிலிருந்து சந்தனக்கதவுகளை திரும்ப எடுத்துக் கொண்டு வர புறப்பட்டு சென்றது. 

கல்லறையிலிருந்து பெயர்த்து எடுத்துக் கொண்டு வரப்பட்ட அக்கதவுகள் பெரும்  கொண்டாட்டத்துடன் ஊர்வலமாக ஆக்ரா கோட்டைக்கு 1842 ல்  கொண்டு செல்லப்பட்டன. ஆனால் அக்கதவுகளின் வேலைப்பாடுகள் இந்தியப்பாணியிலோ அல்லது பிரிடிஷ் பாணியிலோ இல்லாததை கண்ட பின்னர் ஆராய்ந்து பார்க்கையில் , சோம்நாத் கோவிலில் இருந்து கஜினி முகமதுவால் கொண்டு செல்லப்பட்டவையல்ல, அவை இரண்டும் போலி என தெரியவந்தது. 

அசல் கதவுகள் கருப்பு சந்தையில் எப்பொழுதோ கைமாறி இருக்கும் என யூகிக்கப் பட்டது. இன்று வரையிலும் அந்த போலிக் கதவுகள் தட்டுமுட்டு சாமான்களை போட்டு வைத்திருக்கும் ஆக்ரா கோட்டையின் மாபெரும் அறையொன்றில் புழுதிபடிந்து கிடக்கின்றன. 

அப்போது மட்டுமல்ல இன்று வரையிலும் அசல் சந்தன மரத்தில் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டு விற்பனை செய்யப்படும் மரச்சாமான்களும், கைவினைப் பொருட்களும், கடவுள் திருவுருவங்கள் உள்ளிட்ட பல விலையுயர்ந்த  பொருட்களும்,  புட்டிகளில் கிடைக்கும் சந்தன எண்ணையும் பெரும்பாலும்  போலியாகத்தான் இருக்கின்றன.  

சண்டாலேசி (Santalaceae) குடும்பத்தை சேர்ந்த  உலகின் மிக விலையுயர்ந்த மரங்களில் ஒன்றான Santalum album என்னும் அறிவியல் பெயர் கொண்ட இந்தியாவைச் சேர்ந்த (வெண்) சந்தன மரங்கள் உலகெங்கிலும் மிகுந்த மதிப்புக்குரியதாக  இருக்கின்றன.

சந்தன மரம் அடர்த்தி மிகுந்தவை நீடித்த நறுமணம் கொண்டவை என்பதால்  செதுக்கு வேலைகளுக்கும், சிற்பங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. காய்ச்சி  வடிகட்டுதல் மூலம் முதிர்ந்த சந்தன மரங்களிலிருந்து சந்தன எண்ணெய்   எடுக்கப்பட்டு நறுமண திரவியங்கள், சோப்புக்கள், மெழுகுவர்த்தி, ஊதுபத்தி, வழிபாட்டு பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்காக பல்லாண்டுகளாகப்  பயன்படுகிறது

சந்தன மரக்கட்டைகளும், சந்தனப்பொடியும் உலகின் முக்கிய மதங்களான இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாமிய மதங்களில் வெகுவாக பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமயம் சார்ந்த சடங்குகளிலும் பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இவை அதிகம் பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. 

உலகின் மிதமான மழைப்பொழிவும், அளவான வெப்பமும், நல்ல ஒளியும் இருக்கும் இடங்களில் எல்லாம் சந்தன மரங்கள் செழித்து வளர்கின்றன. இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா பாலினேசியா, நியூசிலாந்து,  ஹவாய் ஆகிய நாடுகளில்  வணிக முக்கியத்துவம் கொண்ட சந்தன மரங்கள் அதிகமாக காணப்படுகின்றன

இந்தியாவின் பல மாநிலங்களில் சந்தன மரங்கள் வளர்கின்றன எனினும் மிக அதிக எண்ணிக்கையில் இவை கர்நாடகத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. 

மணற்பாங்கான, வறண்ட நிலப்பகுதிகளிலும் இவை நன்கு வளரும். இவற்றை மலைப்பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் பாலைவனங்களிலும் கூட காணலாம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 8000 அடி உயரத்தில் இவை செழித்து வளர்கின்றன. வணிக ரீதியில் மிக முக்கியமான பசுமை மாறா சந்தனமரங்களின் 16 வகைகள் ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன

உலகெங்கும் உள்ள சந்தன மரங்களின் பல வகைகளில் முதல் தரமென கருதப்படுவது இந்திய மரங்களே! இந்தியா முழுவதும் பரவலாக காணப்படும் இவை தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மிக அதிகம் காணப்படுகின்றன.

இலங்கையிலும் பன்னெடுங்காலமாக சந்தன மரங்கள் வளர்கின்றன. இப்போதும் இலங்கையின் சில காட்டுப் பகுதிகளில் தானாக வளர்ந்த சந்தன மரங்களைக் காணலாம். தற்போது சந்தன மரங்களை வணிகப் பயிர்களாக வளர்க்கும் திட்டங்கள் இலங்கையில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

வரலாறு

சந்தனம் என்னும் தமிழ்ச்சொல் சதி (Cadi) எனப்படும் ’மகிழ்வு’  என்னும் பொருள் கொண்ட சமஸ்கிருத சொல்லிலிருந்து பெறப்பட்டது 

 இந்திய கலாச்சாரத்துடன் சந்தன நறுமணமும் கலந்திருக்கிறது ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் சந்தன மரங்களும், சந்தன விழுது பூசிக்கொள்வதும், சந்தன பாத்திரங்களில் நீர் அருந்துவதும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ராமாயணம் கரையோர சந்தன மரக்காடுகள் காதலனை தேடி ஓடும் காதலி போல தாமிரபரணியை சென்று சேருகிறது என்கிறது.

அரண்மனையில் இருக்கும் ராமனின் மேனியில் சந்தனம் பூசப்பட்டது  வால்மீகி ராமாயணத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

பண்டைய இந்திய இலக்கியங்களில்  சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சந்தனம் பயன்பாட்டில் இருந்து வருவது குறிப்பிட பட்டிருக்கிறது.

இந்திய புராணங்களும், வேதங்களும்   மருத்துவத்திலும் அழகுப் பொருளாகவும் சந்தனத்தின் பயன்பாட்டை விவரிக்கின்றன.   ஜைன  மற்றும் பெளத்த மதங்களும் சந்தனத்தை உபயோகிப்பது குறித்து சொல்லுகின்றன.

சங்க இலக்கியங்களிலும் சாந்து பூசுதல் என்று  சந்தனம் பூசுதல் சொல்லப்பட்டிருக்கிறது. பண்டைய இந்தியாவிலிருந்து ஏற்றுமதியான முக்கிய பொருட்களில் பட்டும், சந்தனமும் முக்கியமானவைகளாக  இருந்திருக்கின்றன 

சிவனுக்குரிய வழிபாடுகளில் சந்தனம் முக்கியமானதென்று சொல்லும் வாமனபுராணம்,  லஷ்மிதேவி வசிக்கும் மரமாகவும் சந்தனமரத்தை குறிப்பிடுகிறது.

பண்டைய எகிப்தியர்கள் சந்தன மரங்களை பிற நாடுகளிலிருந்து தருவித்து, அதை மம்மிகளை பதப்படுத்துவது உள்ளிட்ட  பல்வேறு சடங்குகளிலும் அழகு சாதன பொருட்களிலும் பயன்படுதி இருக்கின்றனர்.

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரம் வனங்களின் மதிப்பு மிக்க மரமாக சந்தன மரத்தை குறிப்பிட்டிருக்கிறது, அர்த்த சாஸ்திரத்தில் வெண்மை, கருஞ்சிவப்பு, சிவப்பு, வெண்சிவப்பு, கருப்பு, பச்சை மற்றும் குங்குமப் பூவின் நிறம் கொண்ட பலவகையான சந்தனங்களையும் கெளடில்யர் விவரித்திருக்கிறார்,(Chapter 2.11 pp 43-72)

மருத்துவ தொல் நூல்களான சரக, சுஸ்ருத மற்றும் அஷ்டாங்க ஹிருதய சம்ஹிதைகளிலில்  சந்தன உபயோகத்தை குறித்த விரிவான விளக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றது, குறிப்பாக மனநலமின்மைக்கு தீர்வாக சந்தன விழுதின் பயன்பாடு சொல்லப்பட்டிருக்கிறது.

நான்காயிரம் வருடங்களாக இந்தியாவில் சந்தனம் பல்வேறு வடிவங்களில் உபயோகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. இந்துக்களாலும் இஸ்லாமியர்களாலும் மிகப்புனிதமான  வழிபாட்டுக்குரிய பொருளாக சந்தனம் கருதப்படுகிறது.

சரக சுஸ்ருத சம்ஹிதைகள் இதை ஸ்வேத சந்தனம் என்கின்றன. இதன் அறிவியல் பெயரில் இருக்கும் ஆல்பா என்பதும் வெண்மையென்றே பொருள்படுகிறது

கூர்ம ,மத்ஸ்ய, கந்த சிவ, தர்ம புராணங்களிலும் சந்தனம்  சொல்லப்பட்டிருக்கிறது.

வாமன புராணம் பிரம்மாவின் ரோமத்துவாரங்களிருந்து உருவான மரமாக இதை சொல்லுகிறது. அதில்  மணமிக்க சந்தனமரப்பொருட்களால் சிவனை வழிபடலாமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வேத வியாசர் சந்தன மரங்கள் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

இந்திய புராணங்களில் அறிவு, வளமை,புனிதம் ஆகியவற்றின் குறியீடாக காணப்படும் மரங்களில் சந்தனமும் இருக்கின்றது. 

பார்வதி தேவி   மஞ்சளும் சந்தனமும் கலந்து பிசைந்து  செய்த உருவமே பின்னர் விநாயனாயிற்று என்கிறது இந்து மத  தொன்மங்கள். 

5ம்  நூற்றாண்டின்  உருவான பஞ்சதந்திர கதைகளிலும்  சந்தன மரங்கள் இருக்கின்றன. ’தென்மலையில் பிறந்த சந்தனம்’ என்கிறார் இளங்கோவடிகள்.  

புத்தர் சந்தனம், மல்லிகை, தாமரை  மற்றும்  நந்தியாவட்டை மலர்களின் நறுமணத்திற்கு இணையாக எதுவும் இல்லை என்கிறார் .

புராணங்களில் தேவர்கள் உபயோகிக்கும் சந்தனம் ’ஹரிசந்தனம்’ என்றும் மானுடர்கள் கடவுள் திருவுருவங்களுக்கு படைத்தும் பூசியும் வழிபடும் சந்தனம் ’ஸ்ரீ சந்தனம்’ என்றும் சொல்லப்படுகின்றது.இந்து மத வழிபாடுகளில் மிக முக்கியமானவைகளாக சொல்லப்படும் ஐந்து பொருட்கள் :

  • நறுமணமிக்கவை, 
  • நறுமணப் புகையை அளிப்பவை, 
  • மலர்கள் 
  • நைவேத்தியம் எனப்படும் தெய்வங்களுக்கான உணவு மற்றும் 
  • தீபச்சுடர் 

இவற்றில் நறுமணமிக்க என்னும் வகையில் மிக அதிகம் உபயோகிக்க படுவது சந்தனம்தான்

இஷ்வாகு குல அரசியான இந்துமதியின் சிதை விறகாக சந்தன மரக்கட்டைகள் இருந்ததாக கவி காளிதாசர்  ரகுவம்சத்தில் விவரிக்கிறார் .

நற்றிணையில் கோடைக்காலங்களில் பெண்களின் மார்பகங்களில் சந்தன விழுது பூசியது சொல்லப்பட்டிருக்கிறது 

பாகவத புராணமும் கிருஷ்ணனின் மேனியில் சந்தனம் பூசப்படுவதை சொல்கிறது. 

பண்டைய சீனாவில் அரசகுடும்பத்தினரின் குற்றங்களை தண்டிக்க சந்தனக்கட்டைகளில் கழுவேற்றுவது, சந்தனக்கட்டையால்  கபாலத்தை உடைப்ப்து போன்ற தண்டனைகள் இருந்தன இதுகுறித்த சந்தச்சாவு என்னும் பிரபல சீன மொழி நூல்  2001ல் வெளியானது,(sandalwood death- mo-yan) 

வளரியல்பு

6-10 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய குறு மரங்களாகவும், பிற மரங்களை தழுவியும், பிற மரங்களுடன் பின்னிக்கொண்டும் வளரும்  சந்தன மரங்கள் 80 லிருந்து 100 வருடங்கள் வரை வாழும்.

ஒளிச்சேர்க்கை மூலமும் இவை பிற தாவரங்களைப்போல உணவு தயாரிக்கும் என்றாலும் வாகை, சீமை ஆவாரை, புங்கை   சவுக்கு,  கத்திச்சவுக்கு போன்ற  மரங்களுடன்  பாதி ஒட்டுண்ணி (hemiparasitic) வாழ்வில் இருக்கும் இவை பிற மரங்களிலிருந்து தனது குழல் போன்ற வேர்களினால் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக்கொள்ளும்.  

வறண்ட நிலப்பகுதிகளிலும் வளரும் சந்தனமரங்கள் அவற்றின் வகைகளை பொருத்து   15 லிருந்து 20 வருடங்களில் அறுவடை செய்யப்பட தயாராகும்..

தாவரவியல் பண்புகள்

மரப்பட்டை செம்பழுப்பு,  பழுப்பு அல்லது அடர் மண் நிறம் கொண்டிருக்கும். இலைகள் நீள் முட்டை வடிவில் கூர் நுனியுடன் மிருதுவாக இருக்கும், சிவப்பு நிறத்தில் 4 இதழ்களைக் கொண்ட, கொத்துக்களாக தோன்றும் சிறு மலர்கள் நறுமணமற்றவை. உருண்டையான சிறு  கனியில் ஒற்றை விதை இருக்கும்

பாதி ஒட்டுண்ணிகளான சந்தன  மரங்களை சாகுபடி செய்கையில் அவை சார்ந்து வளரும் மரங்களும் உடன் வளர்க்கப்படுகின்றன.

முதிர்ந்த மரங்களிலும் வேர்களிலும் சந்தன எண்ணெய் உருவாக சுமார் 20 லிருந்து 30 வருடங்கள் ஆகும்.  எளிதில் நெருப்பு பற்றிக் கொள்ளும், பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகும் இயல்பு கொண்டவை இம்மரங்கள்.

முதிர்ந்த மரங்களின் வைரக்கட்டை எனப்படும் நடுப்பகுதியே பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சந்தன மரமெனப்படுவது. ஒவ்வொரு முதிர்ந்த மரங்களிலும் அதன் வைரக்கட்டையின் (heart wood) அளவும் வேறுபடும் எனவே அவற்றிலிருந்து கிடைக்கும் சந்தன எண்ணெயின் அளவும் வேறுபடும் 

முக்கிய வகைகள்

 சந்தன மரங்களின் பல வகைகளில் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவை மூன்று வகைகள்

  1.  இந்திய சந்தன மரமான   Satalum album. இது வெள்ளை அல்லது மஞ்சள் சந்தனத்தை அளிப்பது.
  2. ஆஸ்திரேலிய சந்தன மரமான  Santalum spicatum
  3.  ஹவாய் சந்தனமான Santalum paniculatum 
  • செம்மரக்கட்டை,செம்மரம்,ரக்த சந்தனம்,ரது ஹந்துன் அல்லது செஞ்சந்தனம் எனப்படுவது இவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்ட Pterocarpus santalinus என்னும் மரம். இது தமிழில்  பிசனம், கணி, உதிரச் சந்தனம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாடு-ஆந்திரப் பிரதேச எல்லையில் கடப்பா மற்றும் சித்தூர் மாவட்டங்களில் காணப்படும் இவை இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளிலும்  வளர்கிறது

  • வெள்ளை சந்தன மரம் என்னும் வகையானது மரபணு சோதனை மூலம் மட்டுமே கண்டுபிடிக்கப்படக் கூடிய சிறப்பு மர வகை.  லட்சம் சந்தன மரங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு வெண் சந்தன மரங்கள் மட்டுமே இருக்கும்.மிக அரிதான இம்மரத்தில் செய்யப்படும் கடவுள் சிலைகள் அரிதினும் அரியவையாக கருதப்படுகின்றன. 

இந்திய சந்தன மரங்கள்

5000 ஆண்டுகளாக உலகின் சந்தன மர வளர்ப்பிலும் சந்தன பயன்பாட்டிலும் இந்தியாவே முதன்மை இடத்தில் இருந்து வருகிறது.

 இந்திய  சந்தன மரம்  வணிக ரீதியாக ஆங்கிலத்தில் East Indian sandalwood என்றும் அதன் எண்ணெய்  East Indian sandalwood oil என்றும் அழைக்கப்படுகிறது மிக அதிக அளவில்   a-sotalol மற்றும் b-sotalol, ஆகியவற்றை கொண்டிருக்கும் மருத்துவ குணம் கொண்டிருக்கும் நறுமணம் கமழும் இந்திய சந்தன மரங்களே பிற சந்தன வகைகளை காட்டிலும் மிக உயர்ந்தது

கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இவை குறைந்த எண்ணிக்கையில் இயற்கையாக காடுகளிலும், பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் காணப்படுகின்றன. 

ஒவ்வொரு சந்தன மரத்தையும் அரசுடையமாக்கி பாதுகாத்த  திப்புசுல்தான் இந்தியாவில் சந்தன மரங்களின் காவலனாக கருதப்படுகிறார் .திப்புசுல்தான் காலத்தில் சந்தனமரங்களை பாதுகாக்க உருவாக்கப்பட்ட  கடுமையான சட்டங்கள் 2000 த்தில்தான் சற்று தளர்த்த பட்டிருக்கிறது. 1792ல் திப்புவின் காலத்தில் அரமரமென்னும் அந்தஸ்தை சந்தன மரங்கள் பெற்றிருந்தன.

ஏராளமான சந்தன மரங்களை, சேகரித்து வைத்திருந்த  அவரது அரண்மனையை திப்பு சந்தனக்கோட்டை என்று குறிப்பிட்டார் 

திப்புவின் காலத்தில் ஆப்கானியர்கள், அரேபியர்கள் மற்றும் துருக்கியர்கள் சந்தன வாணிகத்தின் பொருட்டு தொடர்ந்து கர்நாடகத்திற்கு வந்து கொண்டிருந்தனர். 

 திப்பு வணிக ரீதியாக 18 சந்தன மர பொருட்களை அடையாளப்படுத்தி அவற்றிற்கு பெயர்களும் வைத்திருந்தார்.

இன்றளவிலுமே சந்தன எண்ணெயும் மரமும் மைசூருவில் பொன்னுக்கு நிகரகவே கருதப்படுகின்றன. குடகு  பகுதியில்  10000 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும்  600க்கும் மேற்பட்ட சந்தன வனங்கள் அனைத்தும் ’தேவர காடு’ தெய்வங்களின் வனம் என்று அழைக்கப்படுகிறது. சந்தன மரங்களை அறுவடை செய்யவும் வளர்க்கவும் அனுமதி வாங்கவேண்டி இருந்தாலும் இவற்றின் உலக சந்தை மதிப்பினால் கர்நாடக காடுகளிலிருந்து மட்டும் 500 டன் சந்தன மரக்கட்டைகள் வருடந்தோறும் திருடு போகின்றன.

ஆந்திராவிலும் வருடா வருடம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு தினசரி பூஜைகளுக்கும், திருமஞ்சன சேவைக்காகவும் சுமார்  அரை டன் சந்தனம் உபயோகிக்கப்படுகிறது 

திருக்கோயில் தேவைக்கென திருப்பதி தேவஸ்தானம் சொந்தமாக 100 ஹெக்டேரில் சந்தனமரக் காடுகளை வளர்த்து பாதுகாக்கிறது. திருப்பதி ஏழுமலையானுக்கு சந்தன மேனியன் என்றும் பெயருண்டு . 

ஸ்ரீ ரவிஷங்கரின்  Art of Living  அமைப்பும் ஏராளமான சந்தன மரங்களை வளர்த்து பாதுகாக்கிறது 

 இந்தியாவில் சிறந்த சந்தன மரங்கள் ஒரிஸாவில் வளர்கின்றன. உத்திரபிரதேச சந்தன மரங்கள் தரம் குறைந்தவையாக கருத படுகின்றன. 

சந்தன மரங்கள்  வேருடன் பிடுங்கி அறுவடை செய்யப்படுபவை. எனவே அவற்றின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது புதிய சந்தன மரங்கள்  வளர்ந்து பலன்கொடுக்க பல வருடங்கள் ஆகுமென்பதால் இந்திய சந்தனமரம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

ஆஸ்திரேலிய சந்தன மரங்கள்

S.spicatum அலல்து Western Australian sandalwood ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படும் சந்தன மரம். 20 அடி உயரம் வரை வளரும் இவை 10 வருடங்களிலேயே பலனளிக்க துவங்குகிறது.  30 வருடங்களில் முழுமையாக முதிர்ந்துவிடும்.  உறக்கமின்மை, சரும நோய்கள், மனப் பிறழ்வுகள்  மன அழுத்தம்  ஆகியவற்றிற்கான சிகிச்சைக்களுக்காக இந்திய அரேபிய சீன பாரம்பரிய மருத்துவங்களில் இவற்றின் தேவை மிக அதிகமாகி, உலகளவில் ஆஸ்திரேலிய சந்தனத்திற்கு தட்டுப்பாடு 1900தில் உச்சத்தில் இருந்தது.

1788ல் சிட்னி வியாபாரிகள் சீனாவின் தேயிலைக்கு மாற்றாக  பண்டமாற்றாக அளிக்க ஒரு பொருளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆஸ்திரேலியப் பழங்குடியினரின் மருத்துவ மற்றும் சமயம் சார்ந்த  சந்தனப் பயன்பாடு அப்போதுதான் தெரியவந்தது.அதன் பிறகு வேருடன் மரங்கள் அறுவடை செய்யப்பட்டது

முதன் முதலாக 4 டன் ஆஸ்திரேலிய சந்தனமரங்கள் சிங்கப்பூருக்கு 1844ல் ஏற்றுமதியான போது உலகமே அதன் தரத்தையும் இன்றியமையாமையையும் உணர்ந்தது. அப்போது ஒரு டன் 20 டாலர் மதிப்பிருந்தது.

 ஆஸ்திரேலிய சந்தன மரங்களான Santalum Spicatum  சுமார் 9000 ஹெக்டேரில் வளர்க்கப்படுகின்றன

ஆஸ்திரேலியாவில் பல  சந்தன மர வகைகள் இருக்கின்றன எனினும் அவற்றில்  S.Spicatum மற்றும் S.Lanceolatum. ஆகிய இரு வகைகளே வணிக ரீதியாக முக்கியமானவை.

1800களின் ஆரம்பத்தில் இவ்விரண்டு வகைகளுமே அதிகம் சாகுபடி செய்யப்பட்டு ஏற்றுமதியாகி கொண்டிருந்தன. குறிப்பாக சீனாவுக்கும் ஐரோப்பாவிற்கும் மிக அதிக அளவில் இவை அனுப்பப்பட்டன. 19 ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவின் துறைமுகங்களில் இருந்து ஐரோப்பாவுக்கு மட்டுமே  வருடந்தோறும் சுமார் 14000 டன் சந்தனம் ஏற்றுமதியானது. அப்போதிலிருந்து உலகின் முன்னணி சந்தன மர ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியாவே இருக்கிறது. 

சந்தன மரங்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துவருவதை அறிந்தபின்னர் 1929ல் தான் இவற்றின் ஏற்றுமதிக்கும் அறுவடைக்கும்  சில கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய அரசு உண்டாக்கியது.1932ல் ஆஸ்திரேலிய சந்தனமரங்கள் பிரிடிஷ் பார்மகோபியாவில் இணைந்தது. ( British Pharmacopoeia).

ஆஸ்திரேலிய சந்தன மரங்கள்  Department of Protection and Wildlife (DPAW) கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவ்வமைப்பு முறையாக சந்தன மர விதைகளை, அறுவடை செய்யப்படும் மரங்களுக்கு இணையாக நட்டு வைப்பதால் நிலையாக  தொடர்ந்து சுமார் 2000 டன் சந்தன மரங்கள் இப்போது வருடந்தோறும் ஏற்றுமதியாகிறது 

 இந்திய சந்தன மரங்களில்  90 சதவீதம் இருக்கும் சாண்டலோல். (Santalol) ஆஸ்திரேலிய சந்தன மரங்களில் 40 சதவீதம் தான் இருக்கிறது. வேதிப்பொருள்களின் வகைகளிலும் அளவிலும் வேறுபாடுகள் இருந்தாலும் இந்திய சந்தன எண்ணெய்க்கும் ஆஸ்திரேலிய சந்தன எண்ணெய்க்கும் இருக்கும் மருத்துவ ஒற்றுமைகளும் அப்போதே கண்டறியப்பட்டிருந்தது

Santalum lanceolatum  டாஸ்மேனியா மற்றும் தெற்கு விக்டோரியாபகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வளர்கிறது. Santalum spicatum  மேற்கு ஆஸ்திரேலியாவிலும் தென்மேற்கு ஆஸ்திரெலியாவின் சில பகுதிகளிலும் மட்டும் காணப்படுகிறது

ஆஸ்திரேலியாவின்  S. acuminatum வகை சந்தன மரங்களின் பெரிய சிவப்புக் கனிகள் உண்ணக்கூடியவை.  சதைப்பற்றான இக்கனிகளிலிருந்து பழக்கூழ் தயாரிக்கப்படுகிறது. 

ஹவாய் சந்தன மரங்கள்

 1790 ல் கேப்டன் ஜான் கெண்ட்ரிக் ( Captain John Kendrick)   ஹவாய் தீவுகளில் எரிவிறகுக்காக அமெரிக்ககப்பலை கரை சேர்த்தார். காட்டுமரங்களை வெட்டிச் சேகரிக்கையில்தான் ஹவாயின்   நறுமணமிக்க சந்தன மரங்களை ஜான் கண்டறிந்தரர்.  அதுவரை ஹவாய் பழங்குடியினரால் சமயச் சடங்குகளில், மருத்துவ சிகிச்சையில் மட்டுமே உபயோக பட்டுக்கொண்டிருந்த சந்தனமரங்கள் இந்த கண்டு பிடித்தலுக்கு பிறகு அமெரிக்கர்களுக்கு முக்கியமான வாணிப பொருளாக மாறிப்போனது.

ஹவாயின் சந்தன வளத்தை சீனாவும் அறிந்தது. சீனாவின் அதீத சந்தன தேவைகளுக்கென பல சீன வியாபாரிகள் ஹவாய் வர துவங்கினர். சந்தன மரங்களுக்கு பதிலாக பட்டும் சீனக்களிமண்ணும் வாங்கிக்கொண்ட ஹவாய் மக்கள் அவற்றை அமெரிக்கர்களுக்கு கொடுத்து பெரும் பொருளீட்டினர். 

ஹவாய் விரைவிலேயே ’சந்தன மலைப்பகுதி’ என்று பொருள்படும்  “Tahn Heung Sahn,” என்ற பெயரில் அழைக்கப்படலானது.

 ஹவாயின் அரசர் முதலாம் காமேஹமேஹா (Kamehameha 1) காலத்தில்  பண்டைய ஆசிய அளவு முறையான் பிகல்களில் (picul) ஒருவன் தோளில் சுமக்க முடியும் என்னும் அளவான 133 பவுண்டு எடைகொண்ட சந்தனக்கட்டைகள் 8 டாலர்களுக்கு விலைபோனது. அப்போது மலையிலிருந்து சந்தனக்கட்டைகளை கொண்டு வர ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்படி மலைகளிருந்து சந்தன கட்டைகளை  தொடர்ந்து சுமந்து கொண்டு வரும் ஹவாய் மக்களின் முதுகு காப்புக் காய்த்திருந்தது. சந்தன மரங்களின் சுமையால் காய்த்துப்போன முதுகு கொண்டவர்களை Kua-leho என்னும் காய்த்துப்போன முதுகுடையவன் என்னும் பெயரால் அப்போது அழைக்கப்பட்டனர். 

வரலற்றில் இந்த ஹவாய் சந்தனமரங்கள் எல்லாம் ரத்தம் தோய்ந்தவை என்றே குறிபிடப்பட்டிருக்கிறது. காட்டுச்சூழலில் வனவிலங்குகளாலும் குளிரிலும் ஊட்டச்சத்தில்லாத உணவுகளாலும் பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் இரவில் பந்தங்களின் வெளிச்சத்தில் கூட சந்தனமரங்களை வெட்ட துணிந்திருக்கிறார்கள்.

1819-ல் சந்தன மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த போது விழித்துக் கொண்ட அரசர்  காமேஹமேஹா சுமைக்கூலியை விதித்து ஓரளவுக்கு ஏற்றுமதியை கட்டுக்குள் கொண்டு வந்தார் ஆனால் செய்து கொண்டிருந்த தொழில்களை எல்லாம் விட்டுவிட்டு சந்தன மர அறுவடைக்கே பெரும்பாலான மக்கள் சென்றதால் நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் இருந்தது.

அந்த வருடம் காமேஹமேஹா இறந்த பின்னர்  அவரது மகன் லிஹோலிஹோ (Liholiho) சுமைக்கூலி வரியை ரத்து செய்தார். 1820ல் ஹவாய் சந்தனம் ஏற்றுமதியின் உச்சத்தில் இருந்தது.

நாட்டின் பொருளாதாரத்திற்கென அமெரிக்கர்களிடம் கடன் பட்டிருந்த லிஹோ அரசர் அதைப்பற்றியெல்லாம் கவலையின்றி சந்தனமர லாபத்தில் ஏராளமான சொத்துகளையும் கப்பல்களையும் வாங்கி குவித்தார். லண்டனுக்கு சென்றிருக்கையில் உண்டான தொற்று நோயால் 1824ல் லிஹோ லிஹோ. இறந்தபின்னர் மூன்றாம் காமேஹமேஹா அரசரானார் அவர் முன்னால் அவரது முந்தைய அரசு அமெரிக்கர்களிடம் வாங்கி இருந்த கடன்  500,000 டாலர்களாக வளர்ந்து நின்றது. 

உண்மையாகவே கடன் கழுத்தை நெரித்ததால் அரசர் வேறு வழியின்றி செப்டெம்பர்  1, 1827. க்குள் ஒவ்வொரு குடிமகனும்i ஒரு பிகல் சந்தனக்கட்டைகள் அல்லது 4 ஸ்பேனிஷ் டாலர்களை அரசுக்கு செலுத்தியாக வேண்டும் என்று அறிவித்தார்

மீண்டும் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி தங்களின்  விவசாயம் உள்ளிட்ட  தொழில்களை நிறுத்திவிட்டு சந்தன மரங்களை வேட்டையாட துவங்கினர்.  அப்போது மட்டும் 13,000,000  பவுண்டு சந்தன மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்தன.. சந்தன மரங்களின் எண்ணிக்கை குறைய குறைய மேலும் மலை உச்சிகளுக்கு சென்று தேடத் துவங்கினர்  1840ல்  ஹவாயில் சந்தன மரங்கள் அரிதாகி சந்தன மர  வணிகம் முற்றிலும் நின்று போனது. பல தொழில்களும் முடங்கியதால் நாடு பெரும் வறுமையில் இருந்தது

மீண்டும் 1851மற்றும்1871 க்கு இடைப்பட்ட காலங்களில் தாவரவியலாளரும் தோட்டக்கலை நிபுணருமான விலியம் ஹில்லெப்ராண்டின்  (Dr. William Hillebrand) முயற்சியால்  ஹவாயில் மீண்டும் சந்தன மர சாகுபடி தீவிரப்படுத்தபட்டது. அவரது முதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தாலும் அவர் தொடர்ந்து அவற்றை சாகுபடி செய்ய முனைந்தார்  30 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹவாயில் மீண்டும் சந்தன மர வணிகம் துவங்கியது.

1930ல் நியூயார்க்கில் இந்திய சந்தனக் கட்டைகள் ஒரு டன் 500 டாலர்கள் என விற்கப்பட்டபோது அமெரிக்க அரசு ஹவாயில் இந்தியாவிலிருந்து வாங்கிய சந்தன மர விதைகளிலிருந்து உருவாக்கபட்ட  1500 நாற்றுக்களுடன் சந்தன மர சாகுபடியை துவங்கியது துணை மரங்களாக வளர்ந்த, கத்திச்சவுக்கு மரங்களிலிருந்து  ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு சந்தன மரங்கள் செழித்து  வளரத் துவங்கின. அப்போதைய நாளிதழ்கள்  ’’ஹவாயின் பழைய தங்கச்சுரங்கங்களான சந்தன மரங்கள் மீண்டும் வந்துவிட்டன’’ என்று எழுதின.

1992ல் Mark Hanson  என்பவர் தனது  கனவில் ஹவாய் தீவு தோன்றி தன் மலை உச்சியில் இருக்கும் சந்தன மர விதைகளை சேகரிக்கும்படி கேட்டுக்கொண்டதாக கூறினார்.  அவர் விதைகளை மலை உச்சிகளுக்கு சென்று  சேகரித்து மிக துரிதமாக நாற்றுக்களை வளர்க்க துவங்கினார். இரண்டு 2 வருடங்களுக்கு பின்னர் 40 சந்தன மரங்களும் 30 இயல் மரங்களும்  அவரால் ஹவாயில் வளர்ந்தன.

ஹவாய் மக்களால் சந்தன மனிதர் என்று பிரியத்துடன் அழைக்கப்பட்ட மார்க், 1994 ல் ஹவாய் மீள் காடமைப்பை (reforestation) துவங்கி இயல் மரங்கள் மற்றும் சந்தன மரங்களின் விதைகளை சேகரிப்பது அம்மரங்களை பாதுகாப்பது ஆகிய முயற்சிகளை பெரிய அளவில் துவங்கினார். நாற்றங்கால் பராமரிப்பில் ஹவாய் பள்ளிச்சிறுவர்களையும் ஈடுபடுத்தினார் வெகு விரைவிலேயே ஹவாய் பசுமை பெருக்கினால் நிறைய துவங்கியது.

மார்க் பிற நாடுகளுக்கும் சந்தன விதைகளையும் நாற்றுக்களையும் ஆயிரக்கணக்கில் பரிசளிக்கவும் செய்தார். 

உலக சந்தையிலிருந்து காணாமல் போயிருந்த “Iliahi” என்றழைக்கப்படும் Santalum paniculatum  என்னும் ஹவாய்  சந்தனமரங்கள் ஒரு தனி மனிதனின் முயற்சியால் மீண்டும் வெற்றிகரமாக ஹவாய் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தின.

பயன்கள் 

தோற்றத்தில் வெண்மையாகவும் அரைத்த விழுது இளமஞ்சள்  நிறத்திலும் இருப்பதே மிகச்சிறந்த சந்தனம்.  

பண்டைய தமிழகத்தில் சந்தானம் பல்வேறு வகைகளில் உபயோகிக்கப்பட்டது. மங்கல விழாக்களில் சந்தனம் பூசிக்கொள்வது வழக்கமாக இருந்தது.  செல்வந்தர்கள் வீட்டு திருமணங்களில் பெரிய மனிதர்களுக்கு  மார்பில் சந்தனம் பூசி, தாசிகள்  சன்மானம் பெற்றுக் கொள்வது பெரும் கெளரவமாக கருதப் பட்டிருக்கிறது. சந்தனத்தின் பாலுணர்வை தூண்டும் குணத்தினால் புதுமணத் தம்பதியருக்கு சந்தனம் பூசுதல் ஒரு சடங்காகவே நிகழ்ந்து வந்திருக்கிறது.

தலைமுடியை காணிக்கை அளிப்பவர்கள்  தலையில் சந்தனம் பூசிக்கொள்வதும், தெய்வ திருவுருக்களுக்கு அலங்காரங்கள் செய்வதில் சந்தனகாப்பு எனப்படும் அரைத்த சந்தன விழுதால் முழுவதும் பூசுவதும் அந்த காப்புச்சந்தனம் உலர்ந்தபின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுவதும் இன்றும் பல கோயில்களில் நடந்து வருகிறது.

 தாம்பூலம் தரித்துக்கொள்ளுகையில் சிறு துண்டு சந்தனம் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும்  இந்தியாவில்  இருந்திருக்கிறது சந்தனம் மரக்கட்டைகளாகவும், வில்லைகளாகவும் தூளாகவும் தைலமாகவும், செதுக்குச் சிற்பங்களாகவும் கிடைக்கின்றன.

.சந்தன மரத்தின் கட்டைகளிலிருந்து மட்டுமல்லாது  கனிகளின் விதையிலிருந்தும் மணமற்ற எண்ணெய் எடுக்கப்படுகிறது. இதில் இருக்கும் ஜிம்னேமிக் அமிலம் அழகுசாதன பொருட்களின் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதிக பாலிஃபீனால்கள் கொண்டிருக்கும் சந்தனத்தின்  இளம் இலைகளும் மருந்தாக  பல்வேறு சிகிச்சைகளில் பயன்படுகின்றன.

பாதுகாப்பான கொசு விரட்டிகளாகவும் சந்தன குச்சிகள் எரித்ஊ பயன்படுத்த படுகின்றன..

 வழிபாட்டில் ஸ்ரீகந்தம் என்று சந்தனம் அழைக்கப்படுகிறது.   இந்தியகோவில்களிலும் பெரும்பாலான இந்தியவீடுகளிலும் எப்போதும் சந்தனமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். 

இந்தியர்களின் வாழ்வில் நெற்றியில் சந்தனக்குறி தீற்றிக்கொள்வதிலிருந்து  சிதை விறகு வரை  சந்தனம்  இடம்பெற்றிருக்கிறது..1948ல் மகாத்மா காந்தியிலிருந்து 2018 ல் வாஜ்பாய் வரையிலும் சந்தன மரங்களில்தான் எரியூட்டப்பட்டார்கள். இந்தியாவில் சில குறிப்பிட்ட இனத்தவர்களின் சிதைவிறகுகளில் ஒரே ஒரு சந்தன விறகாவது வைக்கும் பழக்கம் இருக்கிறது.

நூற்றாண்டுகளாக இந்தியா மற்றும் அரேபிய வாசனை திரவங்களில்  சந்தன தைலம் பயன்பட்டு வருகிறது

 ஆயுர்வேத மருத்துவம்  பல சரும நோய்களுக்கு தீர்வாக சந்தன தைலத்தையும் குழைத்த சந்தனப் பொடியையும்  பரிந்துரைக்கிறது. 

புத்த மதத்தில் தியானம் செய்கையில் சந்தன ஊதுவத்திகளின் மணம்  தியானிப்பவர்களை பூமியில் இருப்பவர்கள் என்று உணர செய்கிறது  எனப்படுகிறது. 

சந்தன மரக்கட்டைகளை தூளாக்கி  காய்ச்சி  வடிகட்டுகையில் கிடைக்கும் சந்தன எண்ணெய் சந்தன மரங்களைக்காட்டிலும் மிக அதிகம் விரும்பப்படுகிறது.

நிலவுக்கும் நீருக்குமான மரமாக குறிப்பிடப்படும் சந்தனமரம் பாலுணர்வை தூண்டும்,  குளிர்ச்சி அளிக்கும் மற்றும் சருமநோய்களை  தீர்க்கும் மருந்தாக இருக்கிறது.

இந்து மத பக்தர்கள் சந்தனம் நெற்றியில் குறியிட்டு கொள்வது மரபு அதிலும் கிருஷ்ணனை வழிபடுகிறவர்கள் உடலில் சந்தனம் பூசிக் கொள்வது வழக்கம்.

 இந்தியாவில் மட்டும் சுமார் 500 மில்லியன் சந்தன ஊதுவத்திகள் நாள் தோறும் பயன்படுகிறது. பல நாடுகளில் சந்தன மரக்கட்டைகளில் தங்களது விருப்பங்களை எழுதி நெருப்பில் இட்டு எரித்தால் விருப்பங்கள் நிறைவேறும் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. வீட்டுத்தோட்டங்களில் சந்தனம் வளர்ப்பது தீய சக்திகளை விலக்கும் என்றும் இந்தியாவில் நம்பப்படுகிறது.

பர்மாவில் சந்தன நீரை ஒருவர் மீது தெளித்தால் அவரது பாவங்கள் கழுவப்பட்டு அவர் தூய்மையாக்கப்படுகிறார் என்னும் நம்பிக்கை நிலவுகிறது. 

செளராஷ்டிர சடங்குகளில் மனிதகுலத்தின் அனைத்து துயர்களுக்கும் தீர்வாக  யாக குண்டங்களில் சந்தனக்கட்டைகளை அவியாகுவது  வழக்கமாக இருக்கிறது.

கத்தோலிக்க தேவாலயங்களிலும், யூத மடங்களிலும் சந்தன ஊதுவத்திகள் பயன்படுத்தபடுகின்றன.

இருபுருவங்கள் இணையும் புள்ளியில் சந்தன குறியிட்டுக்கொள்ளுவது உடலின் அக்னியை தணிக்கும். 

இறந்தவர்களின் புகைப்படங்களுக்கு சந்தன மரச் சீவல்களால் உருவாக்கப்பட்ட  மாலை போடப்படும் வழக்கமும் இந்தியாவில் உண்டு.

உற்பத்தியும் தேவையும்

சந்தனத்திற்கு உலகெங்கிலும் வணிகம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் இருந்தபோதிலும், இந்தியாவில் சந்தன மர மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான திட்டங்கள் குறைவாகவே உள்ளன.

சந்தனத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் காரணமாக சந்தன மரங்களை பாதுகாக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது 

கடந்த 200 வருடங்களாக  உலகளாவிய சந்தனத்தின் தேவை மிக அதிகரித்திருக்கிறது  சந்தனமரத்தின் தேவை இந்தியா, சீனா, ஜப்பான் மற்றும் தாய்வானிலும் அமெரிக்காவில் மிக அதிகமாக இருக்கிறது.  உலகின் மொத்த சந்தனமர தேவையை காட்டிலும் நான்கில் ஒரு பங்குதான் உற்பத்தி ஆகிறது எனவே இதன் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது 

கடந்த 75 வருடங்களில் இந்திய சந்தன மர உற்பத்தி மெல்ல மெல்ல சரிந்து கொண்டே வருகிறது. 1940களில் ஆண்டுக்கு 4000 டன் உற்பத்தி செய்து கொண்டிருந்த இந்தியா இப்போது வெறும்  20-50 டன் மட்டுமே உற்பத்தி செய்கிறது.

உலகத்தின் பிற பகுதிகளிலிருந்து இந்திய சந்தனம் மற்றும் சந்தனப் பொருட்களுக்கான தேவை சுமார் 6000 டன் ஆக இருக்கையில் இந்திய உற்பத்தி தேவைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாத அளவில்தான் இருக்கிறது 

காட்டு சந்தனமர வகைகள் முழுவதும அழிந்துவிட்டிருக்கும் நிலையில் மிக மெதுவாக வளர்ந்து பலன் அளிக்கும் சாகுபடி செய்யப்படும் வகைகளும் அதிக அளவில் திருட்டு போவதால் இவை அழியும் அபாயத்தில் இருக்கின்றன. இந்திய சந்தன மரங்களுக்கு மாற்றாக அதிகம் உபயோகிக்கப்படுவதால் ஆஸ்திரேலிய சந்தன மரங்களும் இப்போது அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கின்றன. உலகின் கவனம் இப்போது விரைவில் வளரும் வகையான ஹவாய் மரங்களின் மீது திரும்பி இருக்கிறது.

சந்தன மணத்துக்கு காரணமான alpha-santalol மற்றும் beta-santalol இரண்டிற்கும் இணையான நறுமணத்தை அளிக்கும் செயற்கை வேதி பொருட்கள் இருப்பதால் சந்தனப் பொருட்களில் போலிகள் மிக அதிகமாக இருக்கின்றன

2014 ல் இந்தியாவில் 20,725 ஹெக்டேரில் சந்தன மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றன. இவை முதிர்ந்து அறுவடை செய்ய இன்னும் பல வருடங்கள் காத்திருக்க வேண்டும்

தேசிய மற்றும் சர்வதேச சந்தைகளில் மிக விலையுயர்ந்த பொருளாக கருதப்படும் சந்தன மரங்கள்IUCN Red Listல்  அழிந்துகொண்டிருக்கும் வகையில் ஆவணப்படுத்தபட்டிருக்கின்றன.அதிகரிக்கும் உலகத்தேவையின் அளவுகேற்ப அதை பாதுகாத்கும் முயற்சிகள் நடைபெறுவவதில்லை 

சட்டங்கள்

சமீப காலமாக ஆசியாவின் சந்தனத் தேவை மிக அதிகரித்து, சந்தன மரங்களை அழிவின் விளிம்பில் நிறுத்தி இருக்கிறது. அதன் பொருட்டே சந்தன மர வளர்ப்பு, அறுவடை ஆகியவற்றிற்கு  கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டிருக்கின்றன. இத்தனை காவலும் சட்டமும் இருந்தும் சந்தன திருட்டுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

 இந்தியாவெங்கிலும் குறிப்பிட்ட பருமன் உள்ள சந்தனமரங்கள் தனியாருக்கு சொந்தமான நிலங்களில் வளர்ந்தாலும் அவை அனைத்தும் அரசுக்கு சொந்தமென்றும் அவற்றை வனத்துறை அனுமதியின்றி வெட்டுவதும் விற்பதும் குற்றம் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

எனினும் சந்தன மரங்களை வளர்ப்பவர்கள் ஒரு போதும் தண்டிக்கப்படுவதில்லை. தனியார் நிலங்களில் வளர்க்கப்படும் சந்தன மரங்களை அறுவடை செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற வேண்டும். ஐந்தாண்டுகள் வளர்ந்த சந்தன மரங்களை கிராம நிர்வாக அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பு சந்தன மரத்தின் மூலம் வரும் வருமானத்தில் 25% அரசுக்கு வரியாகவும், 75% வளர்ப்பவர்களுக்கு வருமானமாகவும் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மொத்தத் தொகையும் வளர்ப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

பண்டைய இந்தியாவில் குறிப்பிட்ட  மரங்கள் தெய்வீக நம்பிக்கைகள், மதிப்புகள் மற்றும் மத முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தன, பல மர இனங்கள் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றில் முதன்மையான பங்கை கொண்டுள்ளன,  

ஆசியாவின் கீழைத்தேய மற்றும் தாவோயிக் மதங்கள் மரங்களுக்கு ஒரு புனிதமான இடத்தை அளித்தன.இந்திய சந்தனம் அதன் தனித்துவமான இயற்கை பண்புகள் காரணமாக தாவர உலகத்தின் அரிதான ஆபரணமாக ஜொலிக்கிறது.

ரவீந்திரநாத் தாகூர் வெறுப்பை விட அன்பே பெரிது என்பதை சொல்ல ’’வெட்டும் கோடாலியையும் மணக்க வைக்கும் சந்தன மரங்களை சொல்லலாம்’’ என்று கவித்துவமாக குறிப்பிட்டிருக்கிறார்.

 இந்தியாவில் மாநில எல்லைகள் மறுசீரமைக்கப்படும் முன்னரே  மைசூரு பல்கலைக்கழகத்தின் கன்னட, ஆங்கில துறைகளின் புகழ்பெற்ற  முன்னாள் பேராசிரியரான பி எம் ஸ்ரீகண்டையா (B. M. Srikantaiah) கன்னடத்தில் ஒரு பிரபல பாடலை எழுதி இருந்தார்.

’’பொன்னின் நாடு மைசூரு
சந்தனக்கோவிலும் மைசூரு
வீணையின் நாதமும் மைசூரு
கிருஷ்ணனின் நாடும் மைசூரு’’

 கர்நாடகத்தின் சந்தனப்பெருமையை சொல்லும் இந்த  நாட்டுப் பாடலை மொத்த இந்தியாவுக்குமே பொருத்திக்கொள்லாம்.

தெய்வத்திருவுருவங்களுக்கு சந்தனகாப்பு இடுவதின் முக்கியத்துவத்துக்கு இணையாக   அழிந்துவரும் சந்தனமரங்களை காப்பதிலும் கவனம் செலுத்தினால் மட்டுமே அடுத்த தலைமுறையினருக்கும் இயற்கையின் இந்த அரிய பொக்கிஷம் அளிக்கப்படும்.

சர்வதேசப்பெண்கள் தினம்!

சர்வதேச மகளிர் தினம் இன்று. இப்படியொரு தினத்தைப் பிரத்யேகமாகக் கொண்டாடுவதே  உலகில் பெண்களின் நிலை என்ன என்பதைக்காட்டுகிறது.

நான் பதின்ம வயதில் இருக்கையில் தொலைக்காட்சியில் HBO`வில் ஏதோ ஒரு ஆங்கிலப்படம். படத்தின் பெயர் நினைவிலில்லை ஆனால் ஒரு காட்சி மட்டும் அச்சடித்தது போல் நினைவிலிருக்கிறது. 

கணவன் கூடத்தில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருப்பான், குழந்தை கீழே விளையாடிக்கொண்டிருக்கும். மனைவி சமையலறலையில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பாள். கொஞ்சநேரத்தில் கணவன் உள்ளே வந்து மனைவியிடன்  நெளிந்துகொண்டே “நீ தள்ளிக்கோ நான் பாத்திரம் தேய்க்கிறேன்“ என்பான். அவள் அவனை விசித்திரமாகப்பார்த்துக்கொண்டே “என்ன திடீர்னு வேண்டாம் நானே செய்யறேன்“ என்பாள் மீண்டும் கணவன் “இல்லை நீ வேணா போய்க் குழந்தையப் பார்த்துக்கோ, நான் இதைச்செய்யறேன்“ என்பான்.  மனைவி கையைக்கழுவிக்கொண்டு கூடத்துக்குச்செல்வாள்.அங்கு குழந்தை மலம் கழித்திருக்கும். கணவனை அருவருப்புடன் பார்த்தபடி குழந்தையை எடுக்கச்செல்வாள்,

இது அமெரிக்கா என்கிற வல்லரசில் பல ஆண்டுகள் முன்பு நடந்தைக்காட்டிய ஒரு  திரைக்காட்சி. இன்னும் அப்படியேதான் அல்லது அதைக் காட்டிலும் கேவலமாகத்தான் இருக்கிறது பெண்களின் நிலைமை. 

கல்லூரியில் அலுவலக நேரம் முடிந்தும் சில சமயம் கூட்டங்கள் நடக்கும். அப்போது பெண் பேராசிரியர்கள் அனைவருமே நிலைகொள்ளாமல்தான் இருப்போம், ஏனென்றால் மாலை குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவது. பால்காரரிடம் பால் வாங்குவது, வீட்டில் இருக்கும் பெரியவர்ளைக் கவனித்துக்கொள்வது, காலையில் ஊற வைத்த உளுந்து அரிசியை மாவாக்குவது, கூட்டிப்பெருக்கி, விளக்கேற்றி, என பல நூறு வேலைகள் எங்களுக்குக்காத்திருக்கும்.

 ஆண்களோ எந்தக்கவலையுமின்றி மேலும் மேலும் தேவையற்றவைகளைப் பேசிக்கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டிருப்பார்கள் ஏனென்றால் எத்தனை தாமதமாகப்போனாலும் அவர்கள் உடைமாற்றிக்கொண்டதும் காபியோ தேநீரோ இரவுணவோ கொண்டு வந்துகொடுக்கப்படும் எனவே அவர்களுக்கு நேரம்குறித்த கவனம் இருப்பதே இல்லை.

மகன்கள் பள்ளியில் படிக்கையில் நானும் அப்படியான கூட்டங்களிலிருந்தோ, கல்லூரியின் கடைசி வகுப்பிலிருந்தோ அப்படியே கார் நிறுத்துமிடத்துக்கு பாய்ந்து செல்வேன். வகுப்பறைகளில் மின் விசிறி இருப்பதால்  கைகள்,தலையெல்லாம் சாக்கட்டியின் தூள் படிந்திருக்கும் , அப்படியே பள்ளிக்குச்சென்று காத்திருக்கும் மகன்களை அழைத்துக்கொண்டு அவர்களின் அன்றைய நாளைக்குறித்துக் கேட்டுதெரிந்துகொண்டு வழியில் நிறுத்தி நிறுத்தி காய்கறியோ திண்பண்டங்களோ வேறுஏதாவதோ  வாங்கிக்கொண்டு வீடு வருவேன். 

பெற்றோர் ஆசிரியக்கூட்டங்களுக்கு கல்லூரியில் விடுப்பெடுத்துக்கொண்டு போவது, ப்ராஜெக்ட்களுக்கு மெனக்கெடுவது, ஸ்போர்ட்ஸ்டே, ஆன்னுவல் டேக்களுக்கு தயார்ப்படுத்துவது, ஏதேனும் புகார்களென்றால் உடனே பள்ளிக்குப்போய் என்னவென்று  கேட்டுச் சரிசெய்வது, பதின்மவயதில் மகன்களின் மனக்குழப்பத்துக்கு, பிரச்சனைகளுக்கெல்லாம் உடன்நிற்பது,  வளரும் வயதுக்கு தேவையான உணவைச் சுவையாகச் சமைத்துக்கொடுப்பது, கூடவே கல்லூரிவேலை, சமையல், இல்பேணுதல், நல்லது கெட்டதுகளுக்குச் செல்வது விருந்தினர்களின் வருகையைச்சமாளிப்பது, என இப்போது நினைத்துப்பார்த்தால் மலைப்பாயிருகிறது.   கூடவே மாதாந்திர விலக்குநாட்களின் சுமையும் இருக்கும்.

பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு, சன்மானம் தரவேண்டியதில்லை என்பதால் மாணவர்களின் பெற்றோர்களை(non financial contribution) பேசுவதற்கு அடிக்கடி அழைப்பார்கள். அப்படியும் பலமுறை சென்றிருக்கிறேன்.

ஆனால் பள்ளியின் விழாக்களுக்கு வீட்டுக்கு அழைப்பிதழ் வருகையில் பள்ளி அதுவரை பார்த்தே இருக்காத அப்பாவின் பெயரில் மட்டும்தான் அழைப்பிதழ் அனுப்பப்படும்.

இன்றும் இதே நிலைதான் தொடர்கிறது. முன்பு  ஆண்கள் மட்டுமே சம்பாதித்துக்கொண்டிருந்த நாட்களில் உண்டி சுருங்குதல் பெண்டிருக்கும் ,உத்தியோகம் புருஷர்களுக்கும் லட்சணமாகச்சொல்லப்பட்டது. பெண்களும் வேலைக்குச்செல்லும் இப்போதும் அதுவே தொடருவது துயரளிக்கிறது என்றால்,  ஒட்டுண்ணிகளாகப் பெண்களை  உறிஞ்சி சக்கையெனத் துப்பும் ஆண்களும் பெண்கள் தினத்துக்கு  எந்த வெட்கமும் இல்லாமல் வாழ்த்துவது எரிச்சலூட்டுகிறது.

எனக்குத்தெரிந்த பல குடும்பங்களில் வாழ்வின் இயங்கியல் சார்ந்த பல நம்பிக்கைகள் தடைகள்  சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன, அன்னக்கை எனப்படும் சாதம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கரண்டியை நீர் நிரம்பிய ஒரு தட்டில் தான் வைக்கவேண்டும் அது ஒரு போதும் காய்ந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருக்கும் ஒரு குடும்பம் அவர்கள் வீட்டுப்பெண்களை குடும்பத்து ஆண்கள் பலர் முன்னிலையில் தாழ்வாகவும் இழிவாகவும் நடத்துவதை பொருட்டாகவே நினைப்பதில்லை. பெண்கள் அப்படித்தான் நடத்தப்படவேண்டும் என்று நம்புகிறார்கள் போல. 

சமீபத்தில் ஒரு குடும்பத்தில் குலதெய்வ விழா எனக்கும் அழைப்பிருந்தது போயிருந்தேன். குலத்தின் ஆண்கள் 11 நாட்கள் கடும் விரதமிருந்து கைக்காப்புக் கட்டிக்கொண்டு எங்கோ தொலைவிலிருந்து  தீர்த்தம் கொண்டு வந்திருந்தனர். தீர்த்தக்குடங்களை கோவில் வளாகத்தில் அடுக்கி வைக்கையில் ஒருகுடும்பத்துப்பெண் செய்த சிறு கவனக்குறைவிற்காக அவரது கணவர், அந்த விரதம் இருந்து விபூதிப்பட்டையும் குங்குமமும் காவிவேட்டியுமாக தெய்வீகமாக தோற்றமளித்தவர், ஒரு பச்சையான கெட்ட வார்த்தையைச்சொல்லித் திட்டினார்.  அவரது குலத்தைக் காப்பதாக அவர்  நம்பும் அவர்களது குலதெய்வமும் ஒரு பெண்தான்.  அந்த அம்மன் சிலை முன்புதான் இது நடந்தது. 

என் மாணவி ஒருத்தி  எனக்குத்தெரிந்த ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளினியாக இருக்கிறாள். அவளையும் அவளது அம்மாவையும் அவளது  குடிகாரத்தகப்பன் எப்போதும் சந்தேகப்பட்டு மிகக்கொடுமை செய்வான்.  சமீபத்தில் வேலைக்குப்புறப்பட்டுச்சென்ற அவளை  முழுப்போதையில் துரத்தி வந்து பேருந்துக்குள் நுழைந்து தென்னைமட்டையால் அடித்திருக்கிறான். பெண்களை வெளி உலகின் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றுவதைப்போலவே குடும்பவன்முறையிலிருந்தும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.இங்கெதற்கு பெண்கள் தினம்?

நான் முன்பிருந்த வீட்டருகில் பெண்களுக்காக இயங்கிய பெண்களால் நடத்தப்படும் காவல்நிலையம் இருக்கிறது. அங்கு அப்போது உதவிக்காவலராக இருந்த, குடும்ப வன்முறை கேஸ்களை எளிதாக ஹேண்டில் செய்யும், எஸ்தர் என்பவரை ஒருநாள், அவரது வேலைவெட்டி இல்லாமல் காவலர் குடியிருப்பில் குடித்துவிட்டு அலப்பறை செய்வதை மட்டுமே செய்துவந்த கணவன் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அடித்து அவரது கையை முறித்தான். 

 காவலர் குடியிருப்புக்கருகில் வசித்த நான், எஸ்தரின் வீட்டுக்கு முன்பாக மனைவியை அடிக்கப்போன ஒருவனை  எஸ்தர் காதோடு சேர்த்து அறைந்து அவன் தலைகுப்புற மண்ணில் விழுந்ததை ஒருமுறை பார்த்தேன்.

எத்தனை உயர்ந்த சமூக அந்தஸ்துள்ள பணியில் இருந்தாலும், குடும்பத்தினரால் இழிவு படுத்தப்படுவதை எந்தப்புகாரும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவும் பெண்கள் நூற்றாண்டுகளாகப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.

எங்கள் குடும்பத்திலேயே காதலித்ததற்காகக் கழுத்தில் சுருக்கு வைத்து கொல்லப்,பட்ட பெண்கள் இருந்தார்கள்.   பாம்பு கடித்ததாகச்சொல்லப்பட்டு வாசலில் மஞ்சள் நீரூற்றி ஈரமாகக் கிடத்தப்பட்டிருந்த அருக்காணி அத்தையின் மகளின் கழுத்தைச்சுற்றிலும் சிவப்பாக இருந்த கயிற்றின் தடம் ஒரு ரோஜா மாலையால் மறைக்கப்பட்ட போது நானும் அருகிலிருந்தேன்.

காதலை முறித்து  வலுக்கட்டாயமாக வேறொருவருக்கு மணம் செய்துவைக்கப்பட்ட, முன்காதலையும் மறக்கமுடியாமல் கணவனுடன் மனதொன்றியும் வாழமுடியாமல் இருதலைக்கொள்ளியாய் அவஸ்தைப்படும் நூறு நூறு பெண்கள்  எனக்குத்தெரிந்து இருக்கிறார்கள்.

காதலைச்சொல்லகூடத் துணிவில்லாமல் கழுத்தை நீட்டிக், குடும்பமென்னும் கற்பிதங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த பல நூறு பெண்களையும் நானறிவேன். 

கூடி இருப்பதால்தான் அது குடி என்றும் அதில் இயங்குவதுதான் குடித்தனம் என்றும் வகுக்கப்பட்டது. அப்படிக் கூடக் கூடி இருப்பதன் பாதகங்களை, சிரமங்களை, குடும்பச்சுமையை தோளில் ஏற்றிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக,  உடலில் இளமையும் கண்களில் கனவுகளும் நிரம்பி இருக்கும் மனைவிகளைத் தனியே இல்பேணவும், குழந்தைகளை வளர்க்கவும், வீட்டுப்பெரியவர்களை பராமரிக்கவும் பணித்துவிட்டு,  வெளிநாட்டிலும் வெளியூரிலும் பணம் சம்பாதிக்கப் பிரிந்துசென்று, அங்கேயே வாழ்ந்து, விடுமுறைக்கு விசிட்டிங் கணவர்களாக வந்துசெல்லும்,  மடியில் வந்து விழுந்த வாழ்வெனும்  கனியை ருசிக்கத்தெரியாத முழுமுட்டாள் கணவர்களும் பல நூறுபேர் இருக்கிறார்கள்.

  பேருந்து நிலையங்களில் இன்றும் இங்கெல்லாம் சாதரணமாகப் பார்க்கமுடியும் பேருந்தைவிட்டு வேட்டியை, லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டோ, பேண்ட் பாக்கட்டில் கைகளை விட்டுக்கொண்டோ இறங்கி, விரைந்து முன்னே  நடந்துசெல்லும் கணவர்களையும், இரண்டு கைகளிலும் பைகளையும் குழந்தைகளும் பிடித்துக்கொண்டு கணவன் சென்ற திசையில் ஓட்டமாக ஓடும் பெண்களையும்.

அரிதாகவே குழந்தைகளைத் தோளில் எடுத்துக்கொள்ளும், மனைவியுடன் இணையாக நடந்துசெல்லும் ஆண்களைப் பார்க்கமுடியும்.

பத்தாம் வகுப்புப்படிக்கும் தன் மகள் காலையில் வைத்துக்கொண்ட கனகாம்பரச்சரம் வாடியிருந்த பின்னலை  மாலை பள்ளி விட்டு வந்து இயல்பாக கொண்டைபோட்டுக்கொண்டதற்கு “விலைமகளே கொண்டையைப்பிரி“ என்று தெருவில் நின்று கூச்சலிட்ட ஒரு தகப்பனை நானறிவேன். விலைமகள்கள் கனகாம்பரம் வைத்துக்கொள்வார்களென்பது அந்த ஆணுக்குதெரிந்ததுபோல அந்தச் சிறுமிக்கு தெரிந்திருக்கவில்லை.

 நானும் எனது சகோதரியும் அம்மாவும் எதாவது ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் நாட்களில் வீட்டுக்கூடத்துக்கு கூட வர அனுமதிக்கப்பட்டதில்லை. எல்லா முடிவுகளையும் வெறும் ஆணாக மட்டுமே இருந்த அப்பா என்பவர் தான் எடுத்தார், நிறைவேற்றினார். அதில் பெரும்பாலான முடிவுகள் மகா கேவலமானவை. 

எனக்கும் அக்காவுக்கும் அப்போதைய பெருங்கனவென்பது எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது செத்துப் போகவேண்டுமென்பதுதான். இரண்டுக்குமே துணிவில்லை என்பதால் இன்றும் உயிரோடு இருக்கிறோம்.  ஒரு போதும் சொன்னதில்லை என்றாலும்  50 வருட மணவாழ்வில் ஒரு தென்னிந்தியப் பெண்ணுக்கு சாதாரணமாக இழைக்கபப்டும் அனைத்து அநீதிகளையும் தாங்கிக்கொண்டு 82 வது வயதில் செத்துப்போன  என் அம்மாவுக்கும் அதுதான் கனவாக இருந்திருக்கும்.

சிண்டெரெல்லா  ஒருபோதும் ஒரு இளவரசனுக்காக காத்துக்கொண்டிருக்கவில்லை அவளுக்கு நல்ல உடை  அணிந்துகொண்டு  ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு வெளியே செல்லவேண்டுமென்பதுதான் கனவாக இருந்தது.இளவரசன் தான் ஒரு மணப்பெண்ணுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.

நான் பதின்மவயதில் எப்படி இருந்தேனென்று எனக்குத்தெரியவே தெரியாது ஒரே ஒரு புகைப்படம் கூட எடுக்கப்பட்டதில்லை, எடுக்க அனுமதிக்கப்பட்டதும் இல்லை. இன்று அதற்குப் பிழையீடாகத்தான் ஆயிரமாயிரம் புகைப்படங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்கிறேன்.

 சமூக ஊடகங்களிலும் பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். 

சிம்பு முன்பு ஏதோ ஒரு பாடலில் பெண்ணை இழிவு படுத்தும் ஒரு சொல்லை பீப் ஒலியால் மறைத்ததற்கு பெண்கள் அமைப்புக்கள் கொடி பிடித்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்த அமைப்புகள் ஒருபோதும் “புல்வெளியாகிறேன் இப்பொழுது என்னை ஆடுதான் மேய்வது எப்பொழுது“ போன்ற  வெளிப்படையான  ஆயிரமாயிரம் பாடல்வரிகளுக்கெல்லம் ஏன் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை?

இப்போது ஒரு அரசியல் நகைச்சுவையாளர், விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் என்று பெயர் வைப்பதுபோல சற்றும் பொருத்தமில்லாத பெயரை வைத்துக்கொண்டிருக்கும் அவர், தனது முன்காதலியை விலைமகள் என்று சமூக ஊடகங்களில் பேட்டிகொடுக்கையில்  அதைப்  பெண்கள் ஆண்கள் என யாரும் எதிர்க்காதது மட்டுமல்ல, அவருக்குப் பின்னே கும்பலாக நின்று கேலியாகச்சிரிக்கும் கூட்டத்தினரும் அதிர்ச்சி அளிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும்  வீட்டில் அன்னை மனைவி மகள் சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.

உண்மையில் ஆண்கள் மகிழ்ந்துகொள்ள வேண்டும்  இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இழிவு படுத்தப்பட்டும் பழிவாங்கப் புறப்படாமல் பெண்கள் சமஉரிமை மட்டும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு.

கல்லுரியில் இன்று படிகளில் ஏறி என் அறைக்கு வருகையில்  எனக்கெதிரே கிளர்ந்தொளிரும் இளமையுடன் ரோஜ நிற ஈறுகள் தெரியச் சிரித்தபடி என்னைக்க்டக்கும் மாணவிகளைப் பார்க்கையில் கலக்கமாக இருக்கிறது இவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்னும் பதைப்பு எனக்குள் நிரந்தரமாக இருக்கிறது.

இதோ எனக்கு அடுத்த வகுப்பு  stress physiology,  ரெஃபெர் செய்ய ஒரு புத்தகத்தை  எடுத்தேன். Biological clock  என்பதற்கு உதாரணமாக  //sleeping and awakening in man are caused by biological clock// என்றிருக்கிறது. ஏன் அது human என்று குறிப்பிடப்படவில்லை?  

1863-ல் வெளியான  தாமஸ் ஹென்றியின் Evidence as to Man’s Place in Nature. என்னும் நூலில்  “March of Progress” என்னும் பிரபலமான தலைப்பில் வெளியான பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து மனிதகுலம் உருவானதைச் சித்தரிக்கும் படத்திலும் குரங்கிலிருந்து ஒரு ஆண் தான் உருவாகிறான் பெண்ணல்ல.   2025-லும் அறிவியல் புத்தகத்தில் ஆண் தான் இருக்கிறான்.  

பெண்கள் இல்லவே இல்லையா இந்த உலகில்?பிறகென்ன பெண்கள் தினமும் கொண்டாட்டமும்? shame!

தந்தைப்பெருமரம்-பாவோபாப்!

ஜெ சமீபத்தில் பாவோபாப் மரங்களைக் கர்நாடகத்தில் பார்த்ததை தொனமையின் தொடரில் என்னும் கட்டுரையில் எழுதியிருந்தார்.  நானும் சில வருடங்களுக்கு முன்னர் கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தில் இருக்கும் அருங்காட்சியகத்துக்கு முன்னால்   அதிலொன்று நிற்பதைப் பார்த்தேன். இந்தியாவில் பாவோபாப்  மரங்கள்  சுமார் 1000-தான் இருக்கின்றன, இவை அரிய மரங்கள் என்பதே பலருக்கும் தெரியாது. ஜெ அதில் மிகப்பெரியவற்றை,  பாதுகாக்கப் பட்டவற்றை நேரில் பார்த்ததும் புகைப்படங்களை பிரசுரித்திருப்பதும் மகிழ்ச்சி அளித்தது. நான் அந்தப் பதிவை மாணவர்களுடன் பகிர்ந்தேன்.

கர்நாடகத்தில் பவோபாப் மரங்களிருக்கும், ஜெ சென்ற அக்கிராமம் ‘பெரிய புளி மரம்-தொட்ட ஹுன்ஸி மரா’ என்றுதான்  பெயர் கொண்டிருக்கிறது. இவை புளிய மரத்தின் வகையல்ல எனினும் இவற்றின் பலமொழிப்பெயர்கள் புளிய மரம் என்றுதான் இருக்கின்றன. தமிழில் இதன் பெயர் பப்பரப்புளிய மரம்.

(நம்மூர்ப்புளியமரமும் இண்டிகா (Tamarindus indica) என்று பெயர்கொண்டிருந்தாலும் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்டதல்ல ஆப்பிரிகாவைச்சேர்ந்த அம்மரம் ஆசியாவில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது, இந்தியாவைச்சேர்ந்தது என்று சொல்லிக்கொள்கிறோம் இண்டிகா என்னும் சிற்றினப்பெயரைக்கொண்டு) .

பாவோபாப் மரத்தின் தாவர அறிவியல் பெயரான  Adansonia digitata என்பதில் பேரினப்பெயர்  Adansonia என்பது செனிகல் நாட்டிலேயே வசித்து அந்த நாட்டின் இயற்கை வரலாற்றை எழுதியவரான பிரஞ்சு தாவரவியலாளர்  மைக்கேல் ஆடன்சனை சிறப்பிக்கும் பொருட்டு வைக்கப்பட்டது. (Michel Adanson 91727- 1806),  digitata  என்பது விரல்களைப் போலிருக்கும் அதன் கிளைகளைக் குறிக்கிறது.

இதன் வழங்கு பெயரான பாவோபாப் என்பது ’பலவிதைகளின் தகப்பன்’ என்னும் பொருள் கொண்ட அரபி வேர்கொண்ட லத்தீனச்சொல்லான  baho-bab என்பதிலிருந்து பெறப்பட்டது.செம்பருத்தியின் குடும்பமான மால்வேசியின் துணைக்குடும்பத்தைச் சேர்ந்த  பாவோபாப் இலை உதிர்க்கும் மரவகையைச் சேர்ந்தது.

இந்த பாவோபாப் மரம் கண்டங்கள் பிரிவதற்கு முன்னரே தோன்றியிருக்கக்கூடும் எனினும் இதன் புதைபடிவங்கள் ஏதும் இதுவரை கிடைக்கப்பெறாததால் இதன் தோற்றம் குறித்தும் பூர்வீகம் குறித்தும் தெளிவாக எந்தத் தகவலும் இல்லை.

மடகாஸ்கர் அல்லது ஆப்பிரிக்கா இதன் பூர்வீகமாக இருக்கலாம் அல்லது மடகாஸ்கரில் தோன்றி ஆப்பிரிக்காவுக்கு கடல் வழி வந்து சேர்ந்திருக்கலாம் என்னும் இரு கருத்துகள் தான் பரவலாக ஏற்கப்பட்டிருக்கிறது.

ஆடன்சோனியாவில் மொத்தம் 8 சிற்றினங்கள் உலகில் இருக்கின்றன. பல இணையதளங்களில் 9/10 சிற்றினங்கள் இருப்பதாக தவறான தகவல்கள் இருக்கிறது. இதன் இணைப்பெயர்களையும் தனிப்பெயராக கருதும் குழப்பத்தால் இந்த தவறு நேர்கிறது.

Adansonia digitata

Adansonia gibbosa as Adansonia gregori

Adansonia grandidieri

Adansonia madagascariensis

Adansonia perrieri

Adansonia rubrostipa as Adansonia fony

Adansonia suarezensis

Adansonia za

மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் ஆடன்சோனியாவின் 8 சிற்றினங்களில் 6 மடகாஸ்கரிலும், 1 ஆப்பிரிக்காவிலும்  1 ஆஸ்திரேலியாவிலும் காணப்படுகிறது.

ஆப்பிரிக்கா முழுவதுமிருக்கும் Adansonia digitata அங்கிருந்துதான்  இந்தியாவுக்கு வந்திருக்கக்கூடும். டிஜிடேட்டா பவோபாப் மரங்கள் இலங்கையிலும் இருக்கின்றன. Adansonia gregorii  ஆஸ்திரேலியாவிலும் பிற 6 சிற்றினங்கள் மடகாஸ்கரிலும் இருக்கின்றன.

அதிகபட்சமாக 30 மீ உயரமும் 50 மீ சுற்றளவும் கொண்டிருக்கும் பாவோபாப் மரங்கள் 32 ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கின்றன.

வறண்ட, உயிர் வாழச்சாத்தியமே இல்லாத ஆப்பிரிக்கப்பகுதிகளில் கம்பீரமான பெரும் தோற்றத்துடன் வளர்ந்து, உணவுக்காக சத்தும் சுவையும் மிக்க கனிகளையும், வறட்சிக்காலத்துக்காக சேமித்து வைத்திருக்கும் ஏராளமான நீரையும், மரப்பட்டையிலிருந்து  கயிறு, ஆடை போன்றவற்றிற்கான நாரும், பலவேறு சிகிச்சைகளுக்கான மருந்தும், வேர்களிலிருந்து சிவப்புச்சாயமும், இலைகளைக் கால்நடைத் தீவனமாகவும் அளிப்பதால்  வாழ்க்கை மரம் என அழைக்கப்பட்ட, பாவோபாப் மரங்களை ஒட்டியே ஆப்பிரிக்க பழங்குடியினரின் வாழிடங்கள் உருவாகின.

8 லிருந்து  20 வருடங்களில் பாவோபாப் மரங்கள் மலர்களைத் தோற்றுவிக்கும். இரவில் மலரும் இவற்றின் அழகிய பெரிய வெண்ணிற மலர்கள் இரவாடிகளான வவ்வால்,நாகாபிஸ், ரோஸ் வண்டு, அந்துப்பூச்சி ஆகியவற்றால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படுகிறது.

ஆப்பிரிக்கக் தொன்மமொன்று தனது கம்பீரமான தோற்றத்தினால் பெருமை கொண்ட பவோபாப் மரம் அகந்தை தலைக்கேறி கனியளிக்க மறந்துவிட்டதால் கடவுள் கோபித்துக்கொண்டு அதை பிடுங்கி தலைகீழாக நட்டார் என்கிறது. அதனால்தான் இம்மரம் வேர்கள் மேல்நோக்கி இருக்கும்படி தோற்றம் கொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள்.

அதைப்போலவே மலரமுது நிரம்பிய இதன் வெண்ணிற மலர்களை யாரேனும் பறித்தால் அவர்கள் சிங்கத்தால் கொல்லப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள்.

பவோபாப் மரம் ஒரு கம்பீரமான ஆண், மரத்தடியில் நிற்கும் கன்னிப்பெண்களை மரத்துக்குள்ளே இழுத்துக்கொண்டு விடும், உள்ளே சிக்கிக் கொண்டிருக்கும் பெண்களின் அலறல் இரவுகளில் காடுகளுக்குள்ளிருந்து கேட்கும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது.

பல ஆப்பிரிக்க நாடுகளில் ஆண்குழந்தைகளை பாவோபாப் மரப்பட்டையை ஊறவைத்த நீரில் குளிப்பாட்டும் வழக்கம் இருக்கிறது அப்படிச்செய்தால் அந்தக்குழந்தை பாவோபாப் மரம் போலவே கம்பீரமான உருவம் கொண்ட ஆண் மகனாக வளருவான் என நம்புகிறார்கள்

ஆப்பிரிக்கப் பழங்குடியினர் பாவோபாப் மரங்களின்  பல பாகங்களைச் சந்தைப் படுத்துகிறார்கள். 1 அடி நீளம் இருக்கும் இதன் கனிகள்  உதிராமல் மரத்திலேயே 6 மாதம் வரை இருந்து, உள்ளிருக்கும் சதைப் பகுதி முழுவதும் உலர்ந்து  அதன் பச்சையான வெல்வெட் போன்ற மேற்பகுதி   தேங்காய் கொப்பரை போல காய்ந்த பின்னர் அறுவடை செய்யப்படுகிறது.  விதைகளை (சருமப்பாதுகாப்பில் பயன்படும் ) எண்ணெய் எடுக்க அகற்றிவிட்டு கனியின் மேற்தோல் துருவப்பட்டு பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது. வைட்டமின் C, நார்ச்சத்து ஆன்டிஆக்ஸிடெண்ட் உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய இந்த பொடி 3-லிருந்து 4 வருடம்  வரை கெட்டுப் போகாமல் அப்படியே இருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் இந்தப்பொடி கிடைக்கிறது.

ஆப்பிரிக்க பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் நாட்டுமருத்துவத்திலும் பாவோபாப் மரங்களின் பல பாகங்கள் பலவிதமான சிகிச்சைகளுக்கு பயன்படுகிறது.இதன் விதைகளை காப்பிக்கொட்டைகளைப்போல வறுத்து சூடான பானம் தயாரித்து அருந்துகிறார்கள். மரப்பட்டையிலிருந்து காகிதம், ஆடைகள், கூடை, கயிறு உள்ளிட்ட பல பொருட்கள் உருவாகின்றன.  இலைகள் சமைக்கப்பட்டும் சமைக்காமலும் உண்ணப்படுகின்றன, மலர்களின் மகரந்தங்களிலிருந்து ஒரு பசை தயாரிக்கப்படுகின்றது.

இந்தியாவில் ஒரு சில பாவோபாப் மரங்களே இருக்கின்றன என பொதுவாகக் கருதப்படுகிறது, ஆனால் மாபெரும் கோட்டைகள், சுல்தான்கள், மராட்டியர்கள், முகலாயர்கள் ராணி ரூப்மதி ஆகியோரை நினைவுபடுத்தும் மத்தியப்பிரதேசத்தின் தார் மாவட்டத்தின் நகரமான மாண்டுவில் ஏராளமான பாவோபாப் மரங்கள் இருப்பது பலருக்கு தெரியாது.

`மாண்டுவின் புளிய மரம்` என்ற அழைக்கப்படும் (Mandu ki Imli) இவை சாலையோரங்களிலும், விவசாய நிலங்கள், கோவில்கள்,புராதன கோட்டைகளில் எல்லாம் வளர்ந்திருக்கின்றன.  சுமார் ஆயிரம் பாவோபாப் மரங்கள் இங்கு இருக்கின்றன அவற்றை அப்பகுதியின் பில்லு பழங்குடியினர் பாதுகாக்கிறார்கள்.

பில்லு பழங்குடியினரின் வாழ்வாதாரமாக பாவோபாப் மரங்கள் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. பாவோபாப் கனிகள், பழச்சாறு, விதைகள் ஆகியவை இங்கு சந்தைகளில் ஏராளமாக  விற்கப்படுகிறது. இதன் நீர் தேக்கி வைக்கும் பண்பிற்காக முன்பு மாண்டுவை ஆண்ட சுல்தான்கள்  இதை ஆப்பிரிக்காவிலிருந்து தருவித்து அங்கு வளர்த்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது

ஜெ அந்தப்  பயணக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பதைப் போல் இங்கும் கிருஷ்ணர் ஆப்பிரிக்காவுக்கு சென்று திரும்புகையில் இதன் விதைகளை கொண்டு வந்தார் என்று பரவலாகச் சொல்லப்படுகிறது.

ஹரிவம்ச புராணத்தில் சத்யபாமாவை மகிழ்விப்பதற்காக கிருஷ்ணர் பவோபாப் மரத்தைக் கொண்டு வந்தாரென்று குறிப்பிட்டிருப்பதாகவும் இங்கு சொல்கிறார்கள்.

இது 5000 வருடம் வரை உயிர்வாழும் என ஐரோப்பியப் பயண ஆய்வாளர்கள் கருதுகிறார்கள் என்றாலும் கார்பன் கணக்கீடுகள் இவை அதிகபட்சமாக 3000 வருடங்கள் வாழும் என்கிறது.

பல்லி, குரங்கு, பலவிதப் பறவைகள்,   வறட்சிக்காலத்தில் இதன் மரப்பட்டையை உரித்துண்ணும் யானைகள்,  மலரமுதை உண்ண வரும் அந்துப்பூச்சிகள், வவ்வால்கள் என  நூற்றுக்கணக்கான உயிர்களின் புகலிடமாக பாவோபாப் மரங்கள் இருக்கின்றன.

பல தண்டுகள் ஒன்றிணைந்து பாவோபாபின் பெரிய பருத்த அடிமரம் உருவாகிறது எனவே தண்டுகளுக்கிடையில் இருக்கும் இடைவெளிகள் பொந்துகளாக அமைந்துவிடுகின்றன. பாவோபாப் மரங்களின் தனித்தன்மையாக இந்த பொந்துகளைச் சொல்லலாம்.

பழங்குடியினர் நுற்றண்டுகளாக இந்த தந்தைமரத்துடன் இணைந்து அதைப்பாதுகாத்து அதனுடன் வாழ்வை இணைத்துக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால்  காலநிலை மாற்றம் பாவோபாப் மரங்களை அழிவுக்கு தள்ளி இருக்கிறது ஆப்பிரிகாவின் 13 மிகப்பழமையான மாபெரும் பாவோபாப் மரங்களில் 9 மரங்கள் கடந்த பத்தாண்டுகளில் அழிந்க்து விட்டிருக்கின்றன.

இவற்றின் 8 சிற்றினங்களில் A. suarezensis, A. grandidieri மற்றும் A. za,  A. perrieri ஆகியவை அழியும் ஆபத்தில் இருக்கின்றன. ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் A. digitata வை  2023-ல்   அழிவின் விளிம்பில் இருப்பதாக IUCN  சிவப்புப்பட்டியலில் இணைத்திருக்கிறது.

ஹைதராபாதில்  200 ஏக்கரில் உருவாகும் அரிய வகை தாவரங்களுக்கான பிரத்யேக பூங்காவிற்காக மாண்டு பகுதியிலிருந்து 11 பாவோபாப் மரங்களை  வேரோடு பெயர்த்தெடுத்துக் கொண்டு செல்ல 2022-ல் முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது பில்லு பழங்குடியினர் சாலை மறியலிலும் பெரும் போராட்டங்களிலும் இறங்கினார்கள்.

`ஹைதராபாத் பூங்காவுக்கு பாவோபாப் மரங்கள் தேவைப்பட்டால் நாங்கள் முளைக்க வைத்திருக்கும் பாவோபாப் நாற்றுக்களைத் தருகிறோம், ஒருபோதும் வேரோடு மரங்களை எடுக்க அனுமதிக்க மாட்டோம்“ என போரட்டம் நடத்தினார்கள். அதன் பின்னர்தான் நவம்பர் 2022-ல்  பாவோபாப் கனிகளுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக தார் மாவட்டத்தின் தோட்டக்கலைத்துறை முயற்சிக்கிறது.

புவிசார் குறியீடு கிடைத்தால் இம்மரங்களின் பாதுகாப்பு மேலும் உறுதியாகும். 2025 பிறந்துவிட்டிருந்தாலும் அரசு இதில் நத்தைவேகம் காட்டுகிறது என்று குற்றம்சாட்டுகிறார்கள் தாவரவியலாளர்கள்.

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு இவை  எப்படி வந்திருக்கக் கூடும் என்பதை அறிய  இந்திய பாவோபாப் மரங்களின் மரபணு ஒப்பீட்டு ஆய்வுகள் நடந்திருக்கின்றன. ஆய்வு முடிவுகளில்  மாண்டுவில் இருக்கும் பாவோபாப் மரங்களும் ஆப்பிரிக்காவின் ஆடன்சோனியா டிஜிடேட்டாவும் ஒரே சிற்றினம் தான்  என்பது  நிரூபணமாகியிருக்கிறது.

பாவோபாபின் பரவல் குறித்த  இதுபோன்ற பல ஆய்வுகள்  நடந்திருக்கின்றது. ஒரு சில ஆய்வுகள் இம்மரத்தின் பரவல் மனிதர்களால்தான் நடந்திருக்க முடியுமென்கின்றன.

கடல் நீரில் அமிழ்த்தி வைக்கப்பட்ட பாவோபாப் கனிகள் 6 மாதங்களுக்குப் பிறகும் முளைத்தன என்பதால் இவை கடல்நீரில் அடித்து வரப்பட்டு கடற்கரையோர பகுதிகளில் பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஆப்பிரிக்காவிற்கும் இந்தியாவுக்கும் இடையே பண்டமாற்று, குறிப்பாக சோளம், கம்பு மற்றும் கேழ்வரகு, தட்டைப்பயறு, மொச்சை ஆகியவற்றிற்கு மாற்றாக பாவோபாப் கனிகள் இந்தியர்களால் வாங்கப்பட்டிருக்கும் என்றும் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் இவற்றிற்கு மரபியல், தொல்தாவரவியல் மற்றும் தொல் இனவியல் நிரூபணங்களோ சான்றுகளோ இதுவரை இல்லை. எனவே பாவோபாப் மரங்கள் உலகெங்கும் எப்படிப் பரவின என்பது பெரும் மர்மமாகவே இருக்கிறது. தென் ஆப்பிரிக்காவின் மாபெரும் பாவோபாப் மரத்தடியில் ஒரு மனிதர்கள் சிறு பூச்சிகளைப் போல் நிற்கும் புகைப்படம் மனிதன் எத்தனை எளியஉயிரி என்பதைக் காட்டுகிறது.

எங்கு தோன்றியது எப்படி உலகெங்கும் பரவியது என்று இன்று வரை அறிந்துகொள்ள முடியாத பாவோபாப் மரங்கள், தொன்மையின் தொடரில் கட்டுரையின் இறுதியில் ஜெ குறிப்பிட்டிருப்பதைப் போல காலமற்ற கனவுகளில் ஒன்றுதான்.

சீடையும் பீடையும்!

வீட்டில் நாங்கள் மூவருமே தினசரி காலண்டரில் தேதி கிழிக்கையில் அன்றைய ராசிபலன் பார்ப்போம். ஸ்கூல் வேனுக்குக்காத்திருக்கையில் அதைக்குறித்து விரிவாகப்பேசிக்கொள்வோம்.

எஃப் எம்ரேடியோவில் சிவல்புரி சிங்காரம் சொல்லும் ராசிபலன்களையும் கேட்டு அவர் அன்று என்ன நிறப்புடவை உடுத்தச்சொல்கிறாரோ அதைத் தேர்வு செய்து உடுத்துவதும் வழக்கம். இன்று கூடச் சிவல்புரியார் மேஷ ராசிக்கு பிரகாசமான மஞ்சள் என்றார். நான் மஞ்சளில் தான் கல்லூரி வந்தேன்.

காலண்டரில் இன்று என் ராசிக்கு பீடை என்றிருந்ததைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எழுந்தன

மகன்களின் பள்ளிக்கூட நாட்களில் சரணுக்குத்தமிழ் அவ்வளவாக வராது. அவன் அதிகம் திட்டு வாங்கியது அவனது தமிழாசிரியையிடம் தான். அவனுக்கு மட்டுமல்லாது பெற்றோர் சந்திப்பின்போது எனக்கும் மானாவாரியாகத் திட்டுக்கிடைக்கும்

(“நீங்களே டீச்சரா இருந்துட்டு இப்படி விட்டுருக்கீங்க?)

100 க்கு 11 என்றெல்லாம் வரலாற்றுச்சிறப்பு மிக்க மதிப்பெண்கள் வாங்கிய சரண், அந்த ஆசிரியை வேலையை விட்டுவிட்டு போனபின்பு சங்கீதா என்னும் ஒரு ஆசிரியை வந்தபின்னால் தமிழ்மகனாகி தமிழில் நல்ல மதிப்பெண்கள் பெறத்துவங்கினான்.

பின்னர் வெண்முரசு 26 நாவல் நிரைகளையும் வாசித்து நீலம் தொகுப்பை எப்போதும் மார்போடணைத்துக்கொண்டே இருப்பவனாகினான், ஜெ தளத்தில் நல்ல தமிழில் அவனது கடிதங்கள் எல்லாம் வரத்துவங்கின காலமும் வந்தது.

மகன்களின் பள்ளிக்காலத்தில் ஒருநாள் சரண் முதலில் சாமிகும்பிட வந்து காலண்டரில் தேதியைக் கிழிக்கையில் அவனுக்கான மீன ராசிக்கு பீடை என்று இருந்தது.

அவன் …….`தருணிடம் பீடைன்னா என்னடா……? என்றான்

தருணுக்கும் தமிழ் தகராறுதான். அவன் அண்ணனிடம்.

“… அது வந்து அம்மா செய்யுமே பலகாரம் ஒன்னு, குட்டியா பந்து மாதிரி கடிக்கவே முடியாம கெட்டியா இருக்குமே அதோட பேரு....“என்றான்.

நான் சமையலறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தென். சரண் மீண்டும் ….அதுவா ஆனா அதை ஏன் ராசி பலன்ல போட்டுருக்காங்க....என்றான்

தருண் ….“அப்படின்னா இன்னிக்கு உனக்கு ஸ்நேக்ஸ் அதான் கிடைக்கும்…..“ என்றான்.

பீடைக்கு என்ன பொருள் சொல்வதென்று தெரியாமல் நானும் இடைபடவில்லை அன்று

இப்போதும் இருவரையும் இந்த சீடை-பீடையை சொல்லிக்கிண்டல் செய்வேன்.

சரண் ஐந்தில் படிக்கையில் ஒருநால் நூலக அலமாரியைச் சுத்தம் செய்துகொண்டிருந்தோம் நான் ஸ்டூலில் ஏறி நின்று அடுக்கினேன் தருண் துடைத்துத்துடைத்துச் சரணிடம் தருவான்.சரண் புத்தகங்களின் பெயரச்சொல்லிச்சொல்லி என்னிடம் எடுத்துக்கொடுப்பான்

ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்த சரண் …இது வந்து சீக்கிரம் தொடு... என்றான்

நான் அதிர்ந்துபோய் .... ச்சீ அப்படி ஒரு புக்கே இல்லடா வீட்டில், கருமம் என்ன அது கொண்டு வா.... என்று வாங்கிப்பார்த்தேன்.

அந்தப் புத்தகத்தின் பெயர் சிகரம் தொடு.🙃

இன்றைய பீடை பலவற்றை நினைவுக்குக் கொண்டு வந்துவிடது

அந்தச் சீக்கிரம் தொடு சரண் இப்போது அர்த்தசாஸ்திரம் முழுமையாகப் படித்து முடித்து அதைத் தமிழில் கொண்டு வரலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறான்.

தருண் இசையின்

“நீ ஏன் அவ்வளவு தூரத்தில் இருக்கிறாய்

வந்து பார்க்கும் அளவுக்கு “

என்னும் காதல் கவிதையை எனக்கனுப்பிச் சிலாகிக்கிறான்

மகன்களுக்கு அன்பு!

இதயம் இதயம் இதயம்!

நான் வாட்ஸாப்பில் அதிகம் தொடர்பிலிருப்பவள். குறிப்பாகத் தாவரவியல் தகவல்கள், தாவரங்களின் புகைப்படங்கள், ஜெயமோகன் அவர்களின் கருத்துகள் ஆகியவற்றை அதிகம் பகிர்வதுண்டு.அதிகாலை எழுந்ததும் முக்கியமான சிலருக்கு மட்டும் காலை வணக்கம் சொல்வது வழக்கம். எனக்கு வணக்கம் சொல்பவர்களுக்குப் பதில் சொல்லிவிடுவேன்.

மிக அழகிய தாவரங்கள், மலர்கள் அல்லது கனிகளுடன் தான் என் வாழ்த்துகள் இருக்கும். மிக அழகிய தகவல்கள் புகைப்படங்கள் அனுப்புபவர்களுக்கு பதிலுக்கு அழகிய இமோஜிக்களையும் அனுப்புவேன், அதிகம் பல நிறங்களில் இதய வடிவை பாராட்டாகவோ அன்பைத்தெரிவிப்பதற்கோ அல்லது மகிழ்ச்சி என்பதை உணர்த்தவோ அனுப்புவதும் உண்டு. பச்சை இதயம் அடிக்கடி என்னிடமிருந்து அனுப்பப்படும்.

வாட்ஸாப் புழங்கும் அளவுக்கு வந்திருப்பவர்களுக்கு இமோஜிக்களின் குறியீட்டு அர்த்தம் நாட்டு நடப்பு ஆகியவை ஓரளவுக்கேனும் தெரிந்திருக்கும் என்னும் ஒரு அடிப்படையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(இருந்தது)

தினமும் காலை வணக்கம் சொல்லும் ஒருவரில் ஒரு ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பெரியவரும் இருந்தார். அவரை நான் சந்தித்ததே இல்லை. அவருக்கு நடந்த ஒரு பாராட்டுவிழாவின் போது அவருக்கும் எனக்கும் பொதுவான ஒரு தோழி, நான் மிகவும் மதிப்பும் அன்பும் கொண்டிருப்பவர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கச்சொல்லி அவரது தொடர்பு எண்ணை அனுப்பினார். வாழ்த்தினேன் அதன் பிறகு அவர் எனக்கு தினசரி காலை வணக்கம் அனுப்புவதும் நான் பதில் அனுப்புவதும் வழக்கமானது. ஒரு வருடத்க்கும் மேலாகிவிட்டிருக்கும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி மலர்களின் படங்களை அனுப்புவார்.

கடந்த வாரம் அழகிய நிஜ மலர்களின் புகைப்படமொன்றை அனுப்பி இருந்தார். நான் பதிலுக்கு வணக்கமும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த மலர்களின் நிறங்களில் இரண்டு இதயவடிவங்களையும் அனுப்பியிருந்தேன்.

இதய வடிவங்களின் குறியீட்டு அர்த்தம் அவருக்கு முற்றிலும் வேறு போலிருக்கிறது. நான் அனுப்பிய இதய வடிவங்களின் தகவலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து யாருக்கோ புளகாங்கிதமாக லோகமாதேவி இதை எனக்கு அனுப்பி இருந்தார் என்னும் செய்தியை அனுப்ப நினைத்து, அவர் கெட்ட நேரம் அதை யாருக்கோவும் கூடவே எனக்கும் அனுப்பி விட்டார்.

அதிகம் ஒன்றும் நான் திடுக்கிடவில்லை எனினும் ஆண்களின் இந்த தன்னம்பிக்கை இருக்கிறதே அதை எண்ணி வியந்தேன். சங்ககாலப்பாடல்களில் வருமே அரசன் என்னும் ஆண் மகன் வழியில் வரக்கண்டு பேதை பெதும்பை பேரிளம் பெண்கள் என எல்லா வயதுப்பெண்களும் அவன் மீது மையல், காதல், காமம் இன்னபிறவெல்லாம் கொண்டு மேகலை நழுவி வளையல் கழன்று இம்சைப்படுவார்களல்லவா, அப்படி பெண்கள் யாராக இருந்தாலும் ஆண் என்னும் ஒரு தகுதி உடையவர்களை விரும்புவார்கள் ஏதேனும் வாய்ப்புக்கிடைத்தால் அவர்மீதுள்ள மையலை, தாங்கள் கோட்டைத் தாண்டிவரவிருக்கும் செய்தியை எப்படியாவது தெரிவிப்பார்கள் என்று நம்புகிறார்கள் அல்லவா அந்த திண்ணக்கம் தான் ஆச்சர்யப்படுத்துகிறது.

லோகமாதேவிக்கு அப்படி யாரையேனும் பிடிக்க வேண்டுமென்றால் ஆண் என்னும் ஒரு தகுதி மட்டும் போதாது என்பதுவும் அவருக்குத் தெரியவில்லை பாவம்

இந்த வகை ஆண்கள் எல்லம் தாங்கள் அமர்ந்திருக்கும் ஆணாதிக்க குதிரை, அகம்பாவக் குதிரையிலிருந்து முதலில் இறங்கி, பின்னர் அதை அவர்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் குண்டுச்சட்டிக்குள்ளிருந்து வெளியேறினால் மீட்புண்டு.

அந்தப் பெரியவருக்குக் கோபித்துக்கொள்ளாமல் இதயவடிவத்தை நான் அனுப்பும் பொருள் என்ன என்பதை விளக்கிவிட்டு அவரது எண்ணை தடைசெய்தேன்

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ,அப்பா!

ஊசாத்து, 2- லோகமாதேவியும் லோகமாதேவியும்!

திருச்சியில் தங்கி இருந்த ரம்யாஸ் விடுதியில் complimentary breakfast இருந்தது. உப்பிட்டு வேகவைத்த நிலக்கடலை, ஆவியில் வேகவைத்த புரோக்கலி, ஸ்வீட் கார்ன், உள்ளிட்ட காய்கறிகள், பருத்திப்பால், கம்பு தோசை, முட்டை, பழங்கள், கூடவே வழக்கமான இட்லி, தோசை, பூரி,சந்தகை, ரொட்டி. கார்ன்ஃப்ளேக்ஸ், தேன், வெண்ணெய், சீஸ், பழச்சாறு, ஐஸ் கிரீம், காபி, டீ எனச் சத்தான,  விரிவான மெனு. 

7 மணிக்கு காலை உணவை முடித்து விட்டு தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றோம். திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலை நன்றாக இருந்தது அத்தனை போக்குவரத்தும் இல்லை. ஏறுவெயில் மிதமாகவே இருந்தது. 

எங்களுக்கு முன்னால் ஒரு டெம்போவில், திறந்திருந்த பின்பகுதியில் காரைச்சட்டி, கடப்பாரை, மண்வெட்டிகளுடன் மஞ்சள் புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டிருந்த ஒரு ராஜாஸ்தானிப் பெண் பயணித்துக்கொண்டிருந்தார். சாய்ந்து அமர்ந்திருந்த அவர் முகம் கல்போல் இறுகி இருந்தது. அமைதியாக வானை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவர்மீது   வெயில்  விளையாடிக்கொண்டிருந்தது. அந்தச் சூரியனின் ஒளியின் வழி பயணித்து தான் விட்டுவிட்டுவந்த பாலைநிலத்தின் வீட்டை, உறவுகளை, மனிதர்களைக் குறித்தெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாரா?

 முக்கால் மணி நேரத்தில் தஞ்சை சென்றுவிட்டோம். வெண்ணிலாவின் தோழியும் தஞ்சை பாரத் கல்லூரிகளின் தாளாளருமான புனிதா அவர்கள் கோவிலில் எங்களுக்கு  உதவ ஒரு ஓதுவாரை ஏற்பாடு செய்திருந்தார்.

கோவிலுக்கு எதிரில் இருந்த கார் நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் வந்து இறங்கிக் கொண்டே இருந்தார்கள். மழலையர் பள்ளிக்குழந்தைகளும் கூட வரிசையாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.

’’….. செகண்ட் ஸ்டாண்டர்ட் எல்லாம் கீழே உட்காருங்க…..’’ என்று ஒரு ஒல்லிப்பிச்சி டீச்சர் அதட்டிக்கொண்டிருந்தார்.அன்று சனிப்பிரதோஷம் என்பதால் சிறப்பான பூஜைகள் நடந்து கொண்டிருந்தன. 

இரண்டாம் நுழைவுவாயிலில் எங்களுக்காக ஓதுவார் காத்திருந்தார். எங்களுக்குத் தரிசனத்துக்கு உதவியபின்னர், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் அன்று நடக்கவிருந்த திருமுறை ஒப்புவிக்கும் போட்டிகளின் நடுவராகச் செல்லவிருந்தார். 

நந்தியின் அருகிலிருந்து ’’….இப்படி வாங்க….’’ என்று சொல்லி ஒரு நான்கைந்து படிகள் மட்டும் கொண்ட சிறு வாயிலைக் கடந்து உள்ளே அழைத்துச் சென்றார். 

எங்கோ செல்லவிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு அவரைத்தொடர்ந்தேன். கருவறைக்கு மிக மிக அருகில் நின்றுகொண்டிருந்ததையும் 29 அடி கரியலிங்கம் தொட்டுவிடும் தூரத்தில் இருந்ததையும் புரிந்துகொள்ளவே சிறிது நேரமானது. முதலில் உணர்ந்தது ஒரு திடுக்கிடல் தான் அத்தனை பெரிய லிங்கம், அத்தனைஅருகில், அத்தனை விரைவில் பார்ப்பேனென்று நினைத்திருக்கவில்லை.

சுதாரித்துக்கொண்டு வணங்கினோம். அங்கிருந்து  பெரிய நாயகி அம்மன் சன்னதிக்கு சென்றோம், அம்மன் கைகளில் மருதாணி இலைக்கொத்தும், காலடியில் பல வண்ணங்களில் கண்ணாடி வளையல்களும் வைக்கப்பட்டிருந்தன. தரிசனம் முடிந்ததும் எனக்கு   மருதாணிச்செடியின்  சிறு கிளையைஅளித்தார்கள் சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன் (உலர்ந்து பாடமாகிவிட்டிருக்கும் அது என் கைப்பையிலேயே இருக்கிறது ) தாமரை மொக்குகளும் சாமந்திகளும் விபூதி பிரசாதமும் அடங்கிய சிறப்புப் பிரசாதப் பையும் கொடுக்கப்பட்டது. 

ஓதுவாருக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டுப் பிரகாரம் முழுக்க 2 மணிநேரம் மெல்ல நடந்தும், உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டும் முழுக் கோவிலையும் சுற்றிப்பார்த்தோம். 

தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை ஒன்று வராகி அம்மன் சன்னதிக்குச் செல்லும் வழியில் உடைந்து தலைகுப்புறக் கிடந்தது. அதன்மீது அணில்கள் ஓடிவிளையாடின. தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றான அந்தப் பெரிய பொம்மையை உடைந்தபின்னர் அப்புறப்படுத்தி இருக்கலாம் அமங்கலமாக, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஏன்  உலகப்பாரம்பரியச்சின்னமான அந்தக்கோவிலில் அந்தச் சிலையை அப்படியே அலட்சியமாக விட்டு வைத்திருக்கிறார்கள்?  

உள்ளேயே தொல்லியல் துறையின் கலைக்கூடம் இருந்தது,சிற்பமாக 108 கரணங்கள், பாதுகாக்கப்பட்ட வண்ணச்சித்திரங்கள், கோவில் சிற்பங்களின் புகைப்படத் தொகுப்பு  ஆகியவை அங்கு இருந்தன. புணரமைக்கப்படுவதற்கு முன்னும் பின்னுமான கோவிலின் புகைப்படங்களும் இருந்தன.   கோவிலின் நந்திகள் எல்லாமே அருகு சூடியிருந்தன.

ஏராளமான வடிவங்களில், அளவுகளில் லிங்கங்கள் இருந்தன. ஆவுடையின் நீளம் அகலம் உயரம் விரிவு அலங்காரம் என ஒவ்வொன்றிலும் வேறுபாடிருந்தது.

 சச்சதுர லிங்கங்களும் இருந்தன. லிங்கங்கள் கம்பி அழிக்குள் பாதுகாக்கப்பட்டிருந்தன, பாதுகாப்புக்கு முன்னர் லிங்கங்கள் வைக்கபட்டிருக்கும் இடத்தின் எல்லா சுவர்களிலும் பல்வேறு பெயர்களில் காதல் சின்னங்கள், காதல் செய்திகள், அம்பு துளைத்த இதயங்கள் வரையப்பட்டிருந்தன. அனேகமாக இந்தியாவின் எல்லா மொழிகளிலும் காதல் கிறுக்கல்கள் இருந்தன. அச்சுவர்களில் அவை கிறுக்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலரிதழ்களின் வண்ணங்களைத் தொட்டு வரையப்பட்ட அரிய சித்திரங்கள் இருந்தன. சேதமடைந்த, மங்கிய சித்திரங்களை அந்தக்கிறுக்கல்களுக்கிடையில் பார்த்தோம். 

தென்னையும் கரும்பும் பல சித்திரங்களில் இருந்தன. கொத்துக்கொத்தாக கனிகளோ அல்லது மலர்களோ இருந்த ஒரு குறுமரம் பல சித்திரங்களில் வரையப்பட்டிருந்தது.

லிங்கங்களுக்கு இணையாகவே சுற்றுப்பிரகாரத் தரையில்  பல இடங்களில் வெற்றிவேல் பிரஸ் 1959  எனச் செதுக்கப்பட்டிருந்தது.

புற்றிலிருந்து அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் விரிந்த படம்கொண்டிருக்கும் பெரு  நாகங்களை எதிர்த்துப்போரிடும், நீலநிற யானையானையைப் பிறையம்பால் வீழ்த்தமுற்படும் சித்திரங்கள் இருந்தன.

லிங்கங்களைக் கழுவி அழுக்கை ஸ்பாஞ்ச் துணியால் துடைத்துப் பக்கட்டில் பிழிந்துகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பிச்சாண்டவர் சன்னிதிக்கு வழிகாட்டிய ஒரு முதியவள்  ’’…..மனசில் நினச்சதை நடத்திக்கொடுப்பார்….’’ என்று சொன்னார். அது தெய்வ வாக்கு என எண்ணிக்கொண்டு உள்ளே சென்று வணங்கினோம்.

கருவூரார் சன்னிதிக்கும் சென்று வணங்கினோம்.சிற்பங்களையும் ஓவியங்களையும் ஒருநாளில் பார்த்து ரசித்துவிடமுடியாது. கலையின் உச்சகட்ட வெளிப்பாடு அந்த கோவில் முழுவதுமே.

நீள் பிரகாரங்களில் இருட்டில் சின்னச்சின்னதாக பல தெய்வங்களுக்கு சன்னதிகள். எமன் சன்னிதி பூட்டப்பட்டு பூட்டில் ஒரு மலர்ச்சரம் செருகப்பட்டிருந்தது.

பல சன்னிதிகளில்  காலியாக இருட்டு மட்டுமே இருந்தது. ஒரு சிறு லிங்க சன்னதியின் வாசலில் எதிரெதிராக அமர்ந்து மும்முரமாக வாய்விட்டுப் பாடங்களை ஒருத்தி சொல்லிக்கொடுக்க ஒருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள், இயற்பியல் படித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது சுற்றுலா வந்த இடத்தில் ஆசிரியருக்குத் தெரியாமல் ஓரிடத்தில அமர்ந்து படிக்கும் மாணவிகள்!!!! ஏலியன்களாக இருக்கக்கூடும்.

வெள்ளியில் பெரிதாக யானை, காளை, மயில் செய்யப்பட்டு கம்பிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கண்களாக உருண்டையான கண்ணாடிக்குண்டுகள் பதிக்கப்பட்டிருந்தது, உற்றுப்பார்க்கையில் அதில் நான் சிறிதாகத் தெரிந்தேன் ? யாரை யார் பார்த்துக்கொண்டிருந்தோம்?

கோவிலின் ஆழ்கிணறு ஒன்று பாழ்கிணறாக ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், குப்பைகள் நிறைந்து இருந்தது.அதையும் எல்லாருமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தோம்.

அந்தக்கோவில் உலகபாரம்பரியச் சின்னமாதலால் ஏராளமான வெளிநாட்டினரும் இருந்தார்கள். அவர்களுடன் ஆங்கிலத்தில் கோவிலைப் பற்றி விளக்கிச்சொல்லிக்கொண்டிருந்தார்கள் கோவிலின் வழிகாட்டிகள். (ஆக்சுவலி அம்மன் இஸ் த அதர் நேம் ஆஃப் பார்வதி.  யெஸ் யெஸ் சைனீஸ் ஸ்டேச்சூஸ் ஆர் ஆல்சோ ஹியர்)

ராஜராஜன் சிறுவனாக இருக்கையில் அவன் குளிக்கவென்று கட்டப்பட்ட கல்தொட்டி இருந்தது அதை மட்டும் தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று ஆசையாக இருந்தது.

வெளிநாட்டினருக்கு கைகொடுக்கவும் அவர்களோடு நின்று புகைப்படமெடுத்துக் கொள்ளவும் கூட்டமாய் சிறுவர்கள் ஓடினார்கள். ஒருவர் தன் மனைவியுடன் கூட்டமாக இந்தியச்சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததை பெருமிதமாகப் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தார். காவி வேட்டியுடன் சிலரும் அவர்களில் இருந்தார்கள். கோவிலின் இடிபாடுகளை பெருங்கற்களையெல்லாம் நல்லவேலையாக ஒரு பக்கம் போட்டுப் பூட்டி வைதிருந்தார்கள். சேதமடைந்த நம் வரலாறு அல்லவா அவை?

பிரகாரத்துக்குள்ளேயே இருந்த கடையில் தயிர்சாதம், அதிரசம், சந்தன விபூதி பேஸ்ட் வாங்கிக்கொண்டோம்.நிறையப் பெண்கள் தலையில் டிசம்பர் பூ சூடிக்கொண்டு எனக்குப் பொறாமையை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.

கோவில் விமானத்தை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரமாண்டுகளுக்கு முன்பு இப்படி இதே இடத்தில் ராஜராஜசோழனுடன் நின்று அந்த லோகமாதேவி பார்த்திருப்பாளாயிருக்கும்.

ஊசாத்து!(1)

ஒரு கருப்பு வெள்ளைப்படம். வெகுகாலம் முன்பு வந்தது. நான் பள்ளியில் படிக்கையில், வீட்டுக்கு தொலைக்காட்சி வந்த புதிதில் பார்த்தது. திரைப்படத்தின் பெயரோ நடிகர்களோ எதுவும் நினைவில் இல்லை, ராஜா ராணி படம் அதுவும் ஒரு அறிவியல் புனைவுக் கதை என்பது  தேசலாக நினைவிருக்கிறது. 

ஒரு கண்ணுக்குத் தெரியாத அரூபக் கதாபாத்திரம்  அந்தப்படத்தில் முக்கியமாக இருக்கும், அது எல்லோரையும் தொல்லை பண்ணிக் கொண்டிருக்கும்.  அதன் அட்டகாசம் நடக்கையில் எல்லாம் ஒருவர் ’’ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள்’’ என்பார். அந்த வசனத்தைத்தான் ஜனவரியில் இந்த வருடத்துக்கான என் பயணம் தொடங்கியதும் எண்ணிக்கொண்டேன். மகனுடன் மனமகிழ்ந்து நீண்ட பயணம், அலைச்சல், பலவித மனிதர்கள், தவிர்க்க முடியாமல் சில கசப்புகள் என்று மீண்டும் தொடங்கி விட்டிருக்கிறது ஒரு புதிய வருடம்.

ஜனவரி முதல் வாரமே  கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடும் போர்டில் கலந்துகொண்டு,  முற்பகலில் மீண்டும்  அங்கிருந்து பொள்ளாச்சி புறப்பட்டு,  வழியில்  அமுத சுரபியில் அன்றைய மதிய உணவை ( நான் தான் போணி ) சாப்பிட்டு, கல்லூரிக்கு வந்து, தாவரவியல் துறையில் நடந்துகொண்டிருந்த மூலிகை மருந்துகள் தயாரிப்பதற்கான ஒரு நாள் பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் கலந்துகொண்டு, நன்றி நவில்ந்து, விருந்தினருடன்  புகைப்படம் எடுத்துக்கொண்டு, மறுநாள்  கல்லூரியில் நடைபெற இருந்த பொங்கல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, அறைக்குச்சென்று  அவசரமாக தலைவாரிக் கொண்டு மார்கழி மகோத்ஸ்வத்தின் இறுதி விழாவில் ’ஆண்டாள் என்னும் பெருங்காதலி’ என்னும் தலைப்பில் உரையாற்றி, காரில் பாய்ந்து ஏறி வீடு வந்து, மறுநாள் திருச்சியில் அயல் ஆக்கிரமிப்புதாவரங்களை அகற்றுவதாக 12 ஆயிரம் பள்ளிகுழந்தைகள் ஒரே சமயத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்காக செல்லவேண்டி சூட்கேஸில் எல்லாம் எடுத்து வைத்து இரவுணவு தயாரித்து சரணுடன் சாப்பிட்டு, படுக்கப்போகையில் நள்ளிரவாகி இருந்தது. 

மனதுக்குள் ஆரம்பித்துவிட்டது அரூபத்தின் வேலைகள் என்றுதான் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. சரண் என் உரை மிக நன்றாக இருந்ததாக சொன்னதில் மகிழ்ந்தேன்.. வசிஷ்டர் வாயால்……….

அதிகாலை சரணும், நானும் திருச்சி நோக்கி உடுமலை வழியாக புறப்பட்டோம். வேடசந்தூரில் இருந்து முக்கோணம் செல்லும் வழி எனக்கு எப்போதும் பிரியமானது. முதன்முதலாக பழனியாண்டவர்க் கல்லூரிக்கு அந்த வழியில் பேருந்தில் செல்லும் போது வழியெல்லாம் சூரியகாந்தி பயிரிட்டிருந்தார்கள்.

 ஒரு குழந்தையின் முகம் போல பெரிதாக பிரகாசமான மஞ்சளில் மலர்களுடன் சாலையின் இருமருங்கிலும் உயரமாக, கம்பீரமாக நின்றிருந்த சூரியகாந்திச்செடிகள் வழியெங்கும் உடன்வந்த அந்தப்பயணம் ரம்மியமாக இருந்தது. அதன்பிறகு ஒரு போதும் சூரியகாந்தி அங்கு பயிரிடப்படவில்லை, அவரை, கரும்பு, வாழை என்றுதான் இருந்ததென்றாலும் அன்று மலர்ந்த சூரியகாந்தி மனசில் அப்படியே வாடாமல் நிலைத்து நின்றுவிட்டது.  எனவே அந்தச்சாலை வழியே பயணிப்பது எனக்கு மிகப்பிடித்தமானதொன்றாகி விட்டிருக்கிறது. வழியெல்லாம் எனக்கு மட்டும் அவரைச் செடியில், கரும்பில் எல்லாம் சூரியகாந்தி மலர்ந்திருந்தது.

குளித்தலையில் இருக்கும் விஷ்ணுபுரம் குழும  நண்பர்  ஷண்முகம் அவர்கள் வீட்டிற்கு மதிய உணவுக்கு அழைத்திருந்தார். எனவே குளித்தலை  வழியாகப் பயணித்தோம். 

மேக மூட்டமாக இருந்ததால் புதிதாக போடப்பட்ட பைபாஸ் சாலையில் மிக அருமையான பயணம். ஸ்பாட்டிஃபையில் குழுவாக இணைந்து கொள்ளும் வசதி இருந்தது எனவே பிடித்த பாடல்களை மாற்றி மாற்றி இருவருமாகக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

 நான் ’…..கங்கைக்கரைத்தோட்டம் கன்னிப்பெண்கள் கூட்டம்…..’ கேட்டால், சரண் ’…..ஹே யாரையும் இவ்வளவு அழகா பார்க்கலே, ஒன்னப்போல் எவளும் உசிர தாக்கலே…..’ கேட்பான்,  

நான் ’……நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா கண்ணா, அதை நீ பிறந்த பின்பு கூற இயலுமா கண்ணா….’ கேட்டால், அவன்’ மம்மட்டியானிலிருந்து’’….மலையுரு நாட்டாமை , மனச காட்டு பூட்டாம,உன்ன போல யாரும் இல்ல மாமா …..’’கேட்பான். 

டோல்கேட் பகுதிகளில் ஓய்வறைகள் நன்கு சுத்தமாக பராமரிக்கப்படுவது நெடுஞ்சாலைப் பயணத்தில் ஒரு சௌகரியம். 

ஒரு நெரிசலான சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்து விட்டிருந்தது பலருடன் நாங்களும்  வெகுநேரமாக காத்திருந்தோம். இருசக்கர வாகனத்தில் ஒரு இளம்பெண் இடுப்புவரை பறந்த கூந்தலுடன் முறையாக ஹெல்மெட் எல்லாம் போட்டுக்கொண்டு முன்னால் இருந்தாள். வார்செருப்பிட்டிருந்தாள், பாதங்களின் விளிம்பில் சுற்றிலும் மருதாணி வரம்பிட்டிருந்தது. அந்தப் பாதங்களால் சாலையை உதைத்து உதைத்து மெல்ல முன்னேறினாள்.  தினம் மாபெரும் கரிய சக்கரங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நெடுஞ்சாலைக்கு  மருதாணிக்கரையிட்ட அக்கால்களின் அந்த மெல்லிய உதை எத்தனை வசீகரமானதாக இருந்திருக்கும்?

ஸ்ரீ சஷ்டி நாட்டுக்கோழி விருந்து என்று ஒரு கடை பெயர்ப் பலகையைப்பார்த்தேன். வேற பேரே கிடைக்கலையா? 

திண்டுக்கல் மதுரைச்சாலையிலும் ஒரு வேடசெந்தூர் இருப்பதால் வேடசெந்தூரிலிருந்து வேடசெந்தூருக்குச் செல்லும் விசித்திரமன பயணத்திலிருந்தோம், வழியில் மைவாடி, மயிலாடி என்று அழகிய பெயர்களுடன் ஊர்கள் இருந்தன.

மதியம் 12 மணிக்கெல்லாம் குளித்தலை வந்துவிட்டோம். சரணுக்கு குணசீலம் பெருமாள் கோயிலுக்குப் போகவேண்டி இருந்தது.

கையில் வழிபாட்டுக்கு வாழையிலையில் சுற்றிய துளசியும், வாழைப்பழங்களுமாகவே வந்துவிட்ட ஷண்முகம் அவர்களுடன் நேரே  கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்திருந்த அந்த பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள்  கோயிலுக்கு சென்றோம். 

அன்று சொர்க்கவாசல் திறப்பு என்பதால் நல்ல கூட்டம்.. நடைசார்த்தும் முன்பு கடைசியாக உள்ளே அனுமதிக்கப்பட்டோம். 

இரவெல்லாம் விழித்திருந்ததில் களைத்திருந்த பட்டர்,சுருக்கமாக ஆனால் தெளிவாக செங்கோல் தாங்கி அர்ச்சாவதாரமாக மார்பில் திருமகளுடன்ன்  இருந்த பெருமாளைப் பற்றிச்சொல்லி ஹாரத்தி காட்டினார், வணங்கி வெளியே வந்து சர்க்கரைப்பொங்கல், துளசிப் பிரசாதம், தீர்த்தம் வாங்கிக் கொண்டு, வீட்டில் அவ்வப்போது  வேண்டுதலின்போது மஞ்சள் துணியில் முடிந்து வைத்திருந்த நாணயங்களை உண்டியலில் போட்டுவிட்டு வெளியே வந்தோம். கோயில் புனரமைக்கப்பட்டுக் கொண்டிருந்ததால் முழுமையாக கோயிலின் சித்திரம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் திருப்தியான தரிசனம்

மனநலம் பாதித்தவர்களுக்கான பிரத்யேக கோயில் இது. எனக்கு இனி எல்லாம் சரியாகிவிடும்.

கோயில் வாசலில் கூட்டமாக ஆடுகள் காத்திருந்து சர்க்கரைப் பொங்கலுக்கு முண்டியடித்தன. இரண்டு கொழுத்த ஆடுகளுக்கு பொங்கலை ஊட்டிவிட்டேன்.காருக்கடியிலும் இருந்த நாலைந்து ஆட்டுக்குட்டிகளை விரட்டிவிட்டு பயணித்தோம், 

வழியெல்லாம் ஷண்முகம் தலபுராணங்களை, வழிபாட்டு முறைகளை, திருத்தல மகிமைகளை, காவிரியின் மணல் கொள்ளையைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தார். நாளொன்றுக்கு 5000 லோடு மணல்  அள்ளப்பட்டது என்பதைக்கேட்கவே மலைப்பாக இருந்தது. 

 வழியெங்கும்  கிளையாறுகளும் கால்வாய்களும்  பெரிய பெரிய வாய்க்கால்களுமாக  நிரம்பித் ததும்பி ஓடிக்கொண்டிருந்தன. நீர்வளம் அப்பிரதேசத்தின் வாழ்வியலை முழுக்க முழுக்கத்  தீர்மானித்திருப்பதைக் கண்கூடாக பார்க்கமுடிந்தது. எங்கும்  நெல்லும், வாழையும் பயிராகின. 

நீர் நிறைந்து நின்ற  வயல்களில் பெருங்கோரைகள் ஆளுயரம் வளர்ந்து, பழுப்பில் மலர்க்கொத்துக்களுடன் நின்றன. வேறு பயிர்களுடன் வளர்கையில் அவை களைச்செடிகள் ஆனால் அவையே சாகுபடியாகி பலனுமளிக்கிறது. yes, weeds are right plants in the wrong place.

சாலையோரம் லாரியில் கோரைப்புல்கட்டுக்களை ஏற்றிக்கொண்டிருந்தவர்களிடம் பேசி எப்படி கோரையை பாய் பின்னுவதற்காக மெலிசாகக்கிழிப்பார்கள் என்று செய்து காண்பிக்கச்சொல்லிக் கேட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

மஞ்சக்கோரை என்று ஒரு ஊர்ப் பெயரை பார்த்தேன்,

அங்கிருந்து கோரைப்பாய்கள் விற்கும் கடைக்குச்சென்று பந்திப்பாய்கள் வாங்கினேன். 

 இங்கே கொங்குப்பகுதியில்  கோரைப்பாய்கள்கொண்டு வந்து விற்பவர்கள் நான்குமடங்கு விலைசொல்லுவது அப்போதுதான் தெரிந்தது.நல்ல நீளமானப் பந்திப்பாய் 60 ரூபாய் தான். பாயின் ஓரங்கள் ரெக்ஸின் வைத்தது. மெத்தை வைத்துத் தைத்தது,குழந்தைகளுக்கானது என்று பல விதங்களில் பாய்கள் நல்ல தரமானதாக இருந்தன.

கோரை தலவிருட்சமாக இருக்கும்  சாய்க்காட்டில் அருளும் சாயவனேஷ்வரர் கோயிலைக்குறித்து கோரைபற்றிய கட்டுரையில் முன்பு நான் எழுதியதை பற்றிக் காரில் பேசிக்கொண்டே பயணித்தோம். https://logamadevi.in/792

நீர்நிலைகள் அதிகம் இருந்ததால் கோழியிறைச்சிக் கடைகளுக்குப்பதில் ஏராளம் வாத்திறைச்சிக்கடைகளும். பன்றியிறைச்சிகடைகளும்  இருந்தன. வாழையிலை வாழைப்பழங்கள் சாலையோரங்களில் எங்கும் விற்கப்பட்டன.  வேகத்தடைகளில் எல்லாம் முளைத்த தேங்காய்க்குருத்தும் செக்கச்சிவந்த சதைப்பகுதியைக் கொண்டிருக்கும் கொய்யாக்காய்களும் விற்றார்கள்.

ஷண்முகம் அவர்களின் 15 ஏக்கர் விஸ்தீரணமான வாழைத்தோட்டத்துக்குப் போனோம். அந்தப்பிரதேசத்தின் சுவையான ஏலக்கி,  பூவன் போன்ற வாழைகள் தார் விட்டிருந்தன. சில மரங்களில் காய்கள் முதிர்ந்து மஞ்சள் பிடித்து திரண்டிருந்தன.  தூயமல்லி, பொன்னி, பாஸ்மதி என்று நெல்லும் பயிரிட்டிருந்தார்.

அந்தப்பகுதியில் எங்குமே வாழைத்தார் வெட்டியதும், கொங்குப்பகுதியில் செய்யப்படுவதுபோல வாழைமரத்தை அடியோடு வெட்டி தண்டை உரித்தெடுத்து வியாபாரம் செய்வதில்லை. அன்னைமரத்தை அடுத்த சந்ததி வளருகையில் உடன் நிற்க அப்படியே விட்டுவிடுகிறார்கள். மெல்ல அழிந்துகொண்டிருக்கும் அன்னையினருகாமையில் கன்றுகள் செழித்துவளர்கின்றன

புதிதாக இந்த முறையைக் கேள்விப்படுகிறேன்

வாழைக்காய் வியாபாரம் குறித்து வெற்றிகரமான வாழைவியாபாரியான ஷண்முகம்  சொல்லிக்கொண்டிருந்தார். வாழைக்கன்று ஒரு தோட்டத்தில் நட்டுவைக்கப்படுகையிலேயே அதன் விலையை நிர்ணயித்து, விளைந்தபின்னர்  வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படுகிறது. 12 மாதப் பயிரென்பதால் விளைச்சலின் போது, விலைவாசியின் நிலவரத்தைப்பொறுத்து  லாபமோ நஷ்டமோ அது ஒப்பந்தம் செய்தவர்களுக்குத்தான். ஷண்முகம் ‘….மூணு சீட்டுமாதிரிதாங்க…’ என்றார்.  நூற்றாண்டுகளுக்கு முன்பு ட்யூலிப் மேனியாவும் இப்படித்தான் நிகழ்ந்தது

விவசாயத்தைக்காட்டிலும் பெரும் சூதாட்டம் வேறு இருக்க முடியாது.. ஷண்முகம் இயற்கை விவசாயி எனப்து மகிழ்வளித்தது.

சண்முகம் ஒரு தகவல் சுரங்கம், வழியெங்கும் இருந்த கட்டிடங்கள் கோயில்கள் என்று பலவற்றைக் குறித்து விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்,

மாபெரும் கண்டெய்னர் லாரிகள் நாகப்பட்டினம்-திருச்சிச் சாலையில்  துறைமுகங்களுக்கு சென்றபடியே  இருந்தன. அங்கிருந்து  ரத்னகிரீஷ்வரர் மலைக்கோயில் அடிவாரம் வரை சென்று காரிலேயே கிரிவலம் வந்தோம். நேரம் 2 மணியைத் தாண்டி விட்டிருந்தது.

அந்த மலையில் இன்றும் மண்ணைக் கிளறினால் சிறிதும் பெரிதுமாக ரத்தினங்கள் கிடைக்கிறதாம், மழைக்காலங்களில் ஊர்மக்கள் குச்சியுடன் மலையில் அங்கும் இங்குமாக கிளறிக்கொண்டிருப்பதை பார்க்கலாம் என்றார் ஷண்முகம்.

மலையெங்கும் குரங்குக்கூட்டங்கள் . அங்கு மூன்று குரங்கு ’குரூப்’ இருப்பதாகச் சொன்னார். மலையின் கீழ்ப் பகுதியில் இருக்கும் கூட்டம் மற்றவற்றை அண்ட விடுவது இல்லையாம். குரங்குகளுக்கு அடிக்கடி வாழைப்பழங்கள் கொண்டு வந்து கொடுப்பதாகச்சொன்னார்.

குரங்குகள் ஆவலாக வாழைப்பழங்கள் உண்ணும் காணொளிகளையும் பார்த்தேன், 

மீண்டும் ஒரு கோவிலுக்குச்சென்று நடை சார்த்தும் சமயமாதலால் வெளியிலிருந்தே வணங்கிவிட்டு புறப்பட்டோம்.  பல நெல்வயல்களில் சமீபத்திய மழையினால் பொன்னாக விளைந்திருந்த நெற்ப்பயிர்கள் முழுக்கச் சாய்ந்திருந்தன. பலவயல்களில் அறுப்பு நடந்து கொண்டிருந்தது.

வழியெங்கும்  வெள்ளைவெளேரென்று நாரையிறகுபோல நாணல்கள் மென்பூக்குலைகளுடன் நீர்நிலைகளின் கரையோரம் கூட்டமாக நின்றன.

12 மணிக்குப்பிறகு நான் பசி தாங்க மாட்டேனென்பதால் சரண் திரும்பித் திரும்பி என் முகத்தைப் பார்த்துக் கொண்டே வண்டி ஓட்டினான். நான் பயண அனுபவங்களில் திளைத்து பசியை மறக்கடித்துக் கொண்டிருந்தேன்.

ஷண்முகம் அவர்களுக்கு அவரது சொந்த ஊரான தோகைமலையில்  இருந்து உறவினரின் தொலைபேசி அழைப்பு வந்தது.

அன்று மாலை ஊசாத்து இருப்தால் வந்துவிடும்படி கேட்டுக்கொண்டார் எதிர்முனையில் இருந்தவர்.

’…என்னது ஊசாத்து…?’ என்று விசாரித்தேன்,விளக்கினார்.

ஊர்ச்சாட்டுதல்தான் காலப்போக்கில் மருவி ’ஊசாத்து’ ஆயிருக்கிறது

கார்த்திகை தீபம் முடிந்ததும் மழை நிற்க வேண்டும் அதன்பிறகும் மழை தொடர்ந்தால் விவசாயம் பாதிப்பதோடு நீரினால் பரவும் நோய்களும் ஊருக்குள் பரவும் என்பதால்  மழைபோதும் என்பதற்காக நோன்பு சாட்டி ஊரின் நான்கு எல்லயிலும் ஆடு அறுத்து செய்யும் சடங்கு பலகாலமாக நடந்துவருகிறது.

ஆச்சர்யமாக கேட்டுக்கொண்டேன்.

மழை வேண்டி யாகம் செய்யும், மழையை நம்பியே வாழும் ஒரு பகுதியிலிருந்து மழை போதுமென்று வேண்டிக்கொள்ளும் நீர்வளமிக்க பகுதிக்கு வந்திருக்கிறேன்

நகருக்குள் செல்லும் வழியில் பல இடங்களில் ஷண்முகம் அவர்களுக்குச்சொந்தமான  பல வீடுகள், காம்ப்ளக்ஸ்கள், கடைகள் அலுவலகங்களைப் பார்த்தோம். நகருக்குள் அவரது பெரிய வீடு இருந்தது. கீழிருந்து பார்க்கையிலேயே  மேல்தளத்தில் இரு படுக்கையறைகளின் பால்கனிகள் உருமால்போல உருண்ட பெரிய வளைவுகளுடன் அலங்காரமாகத் தெர்ந்தன.

தேக்கும் ராஜஸ்தான் மார்பிளுமாக இழைத்து இழைத்துக் கட்டியிருக்கும் வீடு.

 அவரின் இருமகன்களையும்,மனைவியையும் அறிமுகம் செய்து கொண்டோம்

மாபெரும் உணவு மேசையில் கரும்பு, வாழைப்பழச் சீப்பு. மூங்கில் கூடைகளில் காய்கறிகள் எல்லாம் ஒருபக்கம் வைக்கப்பட்டிருந்தன. டிபிக்கல் வளமான விவசாயின் வீடு.

தலைவாழை இலையில் நல்ல ருசியான சைவ சாப்பாடு.  வாழைப்பூ வடை,மிளகாய் பஜ்ஜி, வாழைக்காய் வறுவல்  அவரைக்காய் பொரியல், கூட்டு, அப்பளம், பாயஸம் என்று விரிவான மெனு. 

புறப்படுகையில் கார் டிக்கியில் ஒரு ஏலக்கி வாழைத்தாரை வைத்துவிட்டு எங்களுடன் ஸ்ரீரங்கம் வந்தார் ஷண்முகம். 

ஸ்ரீரங்கத்திலும் சொர்க்கவாசல் திறபபாதலால் பெருங்கூட்ட நெரிசல் இருந்தது. சாலையே மக்கள் வெள்ளத்தால் நெரிந்தது. கோயில் காளைகளும்  சாலையெங்கும் திரிந்தன.

ஏராளமான சாலையோரக் கடைகளில் மலர்களும், பெரிய பெரிய கூடைகளில் கலவைக்காய்கறித் துண்டங்களும் விற்கப்பட்டன.

ஏகாதசி அன்று கலவைக் காய்ச்சமையல் செய்வார்களாம்.

ஊரெங்கும் ரங்க விலாஸ், ரங்க மாளிகை, ரங்கா டிபன் சென்டர், ரங்கா லாட்ஜ் என்று ரங்க மயம்.  

சிறுமழைதூறிக்கொண்டிருந்தது பக்தர்களின் வரிசை நீண்ண்ண்ண்ண்டிருந்தது.  கோவிலுக்குச்செல்லும் எல்லாச்சாலைகளும் பாதுகாப்புக்கருதி  அடைக்கப்பட்டிருந்தன.  கார் நிறுத்தத்திலிருந்து வெகுநேரமாக சுற்றிச்சுற்றி வந்துகொண்டிருந்தோம். அமைச்சர் சேகர்பாபு குடும்பத்துடன் வந்திருந்ததால் கூடுதல் கெடுபிடி.

 என்னால் நிச்சயம் அந்த நீண்ட வரிசையில் காத்திருக்க முடியாது எனவே வெளியிலிருந்து வணங்கிவிட்டு புறப்பட்டோம். அத்தனை நீண்ட் வரிசையில் நின்றிருந்தால் நிஜமாகவே சொர்க்க வாசலையோ நரகவாசலையோ திறந்து என்னை உள்ளே அனுமதித்திருப்பார்கள்,

 கோயில் அருகில் இருந்த ஒரு காபிக்கடையில் நல்ல டிகிரி காப்பி குடித்கோம், அருமையான கள்ளிச்சொட்டு டிகாக்சன் காப்பி . அங்கிருந்து கார் நிறுத்தத்திற்கு ஆட்டோவில்தான் போகவேண்டி இருந்தது.

பின்னர் நாங்கள் திருச்சியில் தங்கவிருந்த விடுதிக்கு எங்களைக்கொண்டு வந்துவிட்டுவிட்டுத்தான் ஷண்முகம் கிளம்பிச் சென்றார்

எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகச் சொன்ன அந்த விடுதியில் அறை எப்படியோ குழப்பத்தில் இல்லாமலாகி இருந்தது.  அங்கிருந்து மீண்டும்  சாலைப்போக்குவரத்து நெரிசலில் நீந்தி நீந்திப் பயணித்து இன்னொரு விடுதிக்குச்சென்று அங்கு பினாயில் வாடையடித்த அறையைப்பார்த்து வெறுத்துபோய்த் திரும்பி மீண்டும் சாலையிலேயே நெடுநேரம் காத்திருந்து மற்றொரு விடுதிக்கு வந்து சேர்ந்தபோது பாதங்களிரண்டும் பூரிபோல வீங்கி இருந்தது.களைத்திருந்தேன்.

தொடரும்

« Older posts

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑