லோகமாதேவியின் பதிவுகள்

இருபெருநகரங்களில் !

இரு பெருநகரங்களில்!

கல்லூரியில் கோடை விடுமுறை சுமார் 40 நாட்கள். பொதுவாக விடுமுறையிலும் தேர்வுப்பணி,  ஆய்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் ,  ஜூன் மாதம் புதிய மாணவர் சேர்க்கை என ஓடியே போய்விடும்.பத்து நாள் சேர்ந்தாற்போல வீட்டில் இருந்தாலே அதிசயம்தான். ஆனால் இந்தமுறை மேனகாவின் ஆய்வு முடிந்துவிட்டது. தேர்வுப்பணியை முதல்நாளே முடித்துவிட்டேன். விடைத்தாள் திருத்தும் பணிக்கும் மாணவர் சேர்க்கைக்கும் முதன்முறையாக என்னைக்காட்டிலும் இளைய, இன்னும் பல ஆண்டுகள் துறையில் பணியாற்றவிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். சொல்லப்போனால் இதுதான் 22 வருட ஆசிரியப்பணியில் முதல் விடுமுறை என்றும் சொல்லலாம்.

சமீப காலங்களில் மாணவர் சேர்க்கையும் பெரும் அயர்ச்சியளிக்கிறது. காமர்ஸ் கணினி துறைகளுக்கான நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் தாவரவியல் துறை என்னும் ஒன்று இருப்பதே அறியாதவர்களாக கல்லூரி நிறைந்திருப்பதை இப்போதெல்லாம் பார்க்க பெரும் துயரேற்படுகிறது. 

அழிந்து போகத்தான் போகிறது அடிப்படை அறிவியல் துறைகள் எல்லாம் என்றால் நடக்கட்டும். என்னால் ஆனவற்றை நான்  தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறேன் மேலும் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.

கல்லூரி கடைசி வேலைநாள் 24 ஏப்ரல் அடுத்த நாள் ரயிலேறி சென்னை வந்தேன்.  வீட்டில் முதல்தளம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒப்பந்த அடிப்படை என்பதால் என் இருப்பு அங்கு தேவைப்படவில்லை என்றாலும் வீடு முழுக்க கட்டுமானப் பொருட்கள் இறைந்துகிடக்க சிமெண்ட் பட்டு பல செடிகள் வாடியும் உயிரிழந்தும் போயிருக்கும் கடும் கோடையில் ஏறக்குறைய 1 மாதம் வீட்டை விட்டு போவது என்னும் கலக்கம் இருந்தது.  

தோட்டதுக்கு இரண்டு நாட்களுக்கொருமுறை நீரூற்ற ஒருவரையும் வராந்தாவில் இருக்கும் நிழல் விரும்பிகளுக்கு மாணிக்காவை நீருற்றவும் ஏற்பாடு செய்துவிட்டு வாசல் மேசையில் வைத்திருந்த இரண்டு போன்சாய் மரங்களையும் மாணிக்காவிடமே ஒப்படைத்து தினமும் நீர் ஸ்ப்ரே செய்து பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொண்டேன்

கோவை புறப்படுகையில் பால் பீச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்தில் கோழியை விட்டு புறப்படும் பொன்னுத்தாயைபோலவே கலங்கினேன்.

முதலில் சென்னை அங்கிருந்து பெங்களூர் அங்கிருந்து வெள்ளிமலை அங்கிருந்து குக்கூ காட்டுப்பள்ளி சென்று மே 28 வீடு திரும்ப உத்தேசம்.

சென்னையில் வேணுவை , அகரமுதல்வனின் மகன் அங்கணனை வெண்ணிலாவை  சந்திக்கவேண்டி இருந்தது. சென்னை மாம்பாக்கத்தில் ஒரு அடுக்ககத்தில் மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் ஒரு நாள்  தாவரவியல் பயிற்சிக்கு அழைத்திருந்தார்கள்.  மகன்கள் ’’இந்த வெயிலில் ஒரு நாள் பயிற்சிக்காக சென்னை வரை போறியா?’’ என்றார்கள். ’’ஆம்’’ என்றேன். செயலாக இருக்கும் வரைக்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தாவரவியலின் முக்கியத்துவத்தை இயற்கையை அறிதலை கற்றுக்கொடுக்கத்தான் போகிறேன்.  வெள்ளிமலை வகுப்புக்குப் பிறகு இப்போது பலருக்கு இயற்கையை அறிதலுக்கான விருப்பமிருக்கிறது.

மதிய ரயிலாதலால் இரவு 10.30க்கு சென்னை வந்துசேர்ந்தேன். மீனாட்சி ரவீந்திரன் மற்றும் குக்கூ சத்யா எனக்காக ரயிலடியில்  காத்திருந்தார்கள். மேலும் 35 கி மீ அந்நேரத்துக்கிருந்த வாகன நெரிசலில் நீந்தி பின்னிரவில் அந்த அடுக்ககம் வந்து சேர்ந்தேன். நல்ல அசதியும் கால்வலியும் இருந்தது. நான் கேட்டுக்கொண்டிருந்த படி தனியறை ஒதுக்கித்தந்திருந்தார்கள். குளித்து உடைமாற்றி உறங்க நள்ளிரவானது.  100 பேர் வரை பங்கேற்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்து 15 பேர் கூட தயாராக இல்லை . எனவே முதல்நாள் நான் ஓய்வெடுத்துக்கொண்டு அங்த பிரம்மாண்டமான அடுக்கத்தின் தாவரங்களைப்பார்த்தேன் அருகில் இருந்த பெரிய புகழ்பெற்ற பள்ளியில் அனுமதி வாங்கி அங்கும் வகுப்பை நடத்த திட்டமிட்டோம். பள்ளி வளாகத்தில் இருந்த ஆலமரத்தடிவகுப்புக்கென  சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. 

ஒரு மாமரத்தில் பெயர்ப்பலகை இருந்தது. அருகில் சென்று பார்த்தேன். அறிவியல் பெயர் சரியாகவும் குடும்பம் தவறாக மால்வேசி என்றும் இருந்தது . அனகார்டியேசி  என திருத்தச் சொன்னேன்.

இப்படி பல முக்கியமான இடங்களில் தவறாக பெயர்ப்பலகைகளைப் பார்க்கிறேன்.

வேதாரண்யம் சென்றிருந்த போது பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஸ்தல மரத்தின் அறிவியல் பெயர் தவறாக எழுதபட்டிருந்ததைப் பார்த்தேன் அதை திருத்த யாரிடம் சொல்வதென தெரியவில்லை தருணின் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலையில் கூட ஒரு மாபெரும் ட்ரீ ஃபெர்ன் மரம் சில்வர் ஓக் என தவறான பெயரிடப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் பள்ளி ஒன்றிலும் பல மரங்கள் மிகத்தவறாக பெயரிடப் பட்டிருந்தன நான் அந்தபள்ளியின் தாளாளருக்கு புகைப்படங்களுடன் தகவல் சொல்லியும் எந்த பலனும் இல்லை.

வெயில் முதுகில் அறைந்துகொண்டிருந்தது. ஏராளம் விசிறி வாழைகளும் ப்ளுமீரியாக்களும் அங்கிருந்தன. காலை மதியம் மீனாட்சி வீட்டில் உணவு.அன்றைய அந்தி மிக இனியது. மறக்கமுடியாதது.என்றேனும் அதைக்குறித்தெழுதுவேனாயிருக்கும்.

 மறுநாள் எப்படியோ 20 பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். போர்டு ரூம் போலிருந்த ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு துவக்க உரை அவர்களுக்கு தெரிந்த vegetable insult குறித்தும் பொதுவான தாவரவியல் குறித்தும்  சில கேள்விகள்  பின்னர் குழந்தைகளுக்கான ஒரு ppt பின்னர் அடுக்கக வளாகத்தில் களத்தாவரவியல். ஆலமரத்தடியில் 45 நிமிட வகுப்பு பின்னர் மரம் தழுவல் . குளிர்ச்சியாக லிச்சி குளிர்பானம் ஒன்றை குடித்த பின்னர் மீண்டும் அரங்கில் பெரியவர்களுக்கான ppt. 

மதிய உணவு பின்னர் ஓய்வு . மாலை வெயில் தாழ botanical hunt 1 மணி நேரம். அதில் அனைவரும் ஆர்வமாக கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்த ஒரு அரைவட்ட வடிவ திறந்த வெளி அரங்கில் அமர்ந்து இருட்டும் வரை அன்றாட வாழ்வில் தாவரங்களைக் குறித்துப் பேசியும் விவாதித்தும்கொண்டிருந்தோம். எனக்கு நிறைவாக வகுப்பாக இருந்தது. மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் அவர்களின் சொந்தச்செலவில் இதை முன்னெடுத்துச்செய்தார்கள்.

 மறுநாள்  அதிகாலை அங்கிருந்து விடைபெற்று அகரமுதல்வன் வீட்டுக்கு சென்றேன். முழுநாளும் அங்கிருந்துவிட்டு அங்கிருந்து வெண்ணிலா வீடு. 3 நாட்கள் அங்கிருந்து விட்டு பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன்.

………

1 Comment

  1. Code de parrainage Binance

    I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑