சமீபத்தில் வெண்ணிலாவும் நானுமாகக் கோவையில் ஷாப்பிங் சென்றிருந்தோம். சென்னை சில்க்ஸில் வெண்ணிலா எனக்கு top & bottom ஒன்றே போலிருக்கும் சில உடைகளை வாங்கித்தந்தார். இரவுடையைப் போலல்லாமல் பயண உடையென்று சொல்லும்படியானது அது. தளர்வாகவும் வசதியாகவும் இருந்தது.
அப்படியொரு உடையை நான் அப்போதுதான் முதன்முதலில் பார்க்கிறேன். தூரத்திலிருந்த வெண்ணிலா கடைச்சிப்பந்தியிடம் கோஹார்ட் என்று அந்த உடையைக்குறிப்பிட்டதாக எனக்குக் காதில் விழுந்தது. அல்லது அப்படி நான் நினைத்துக்கொண்டேன்.
இன்று அந்த உடையை அணிந்துகொண்டிருந்தேன். மகன்களுடன் வழக்கமாக அன்றாடம் வீடியோ அழைப்பில் பேசுவதால் அந்த உடையைச் சுட்டிக்காட்டி தருணிடம் ….’’இது கோஹார்ட் வெண்ணிலா அத்தை வாங்கிக்கொடுத்தது நல்லாருக்கா….’’என்றேன். கோபமாக …’’அதுக்குப்பேரு கோஹார்ட் இல்லை co-ord மேலும் கீழுமாக மேட்சிங்காக இருப்பதால் “coordinate set” என்பதுதான் கோஆர்ட்….’’ என்றுவிட்டு…’’ஒரு டீச்சரா இருந்துட்டு நீ இப்படி தப்பா சொல்லலாமா ….’’? என்று கோபித்துக்கொண்டான்.
அந்த உடையைப் பற்றி நான் வசிக்கும் இந்தக்குக்கிராமத்தில் இன்னும் பேசப்பட்டிருக்காததாலும் எனக்குப் பெண்பிள்ளைகள் இல்லாததாலும் அந்தத் தவறைச்செய்துவிட்டேன் என்றுசொல்லி திருத்திக்கொண்டேன். ….’’எது புதுசா கேள்விப்பட்டாலும் அதைச்சொல்லறதுக்கு முன்னாடி முழுக்க தெரிஞ்சுக்கனுமில்ல…’’ என்று மேலும் ஒரு சின்ன அறிவுரையும் கொடுத்தான், ஏற்றுக்கொண்டேன்.
தருண் மிக இளமையிலிருந்தே பொதுவான உச்சரிப்பிலும் பெயர்களைச் சரியாகச் சொல்வதிலும் கவனம் கொண்டவன்.
சரண் ப்ரிகேஜி சென்ற, தருண் இன்னும் பள்ளிக்குச் சென்றிருக்காத காலத்தில் அப்பாவின் வீட்டில் ஒருவருடகாலம் வரை தங்கி இருக்கவேண்டிய கஷ்டமான சூழல் இருந்தது.
அப்போது அந்த மாடிப்போர்ஷனின் குறுகிய முன் வாசல் வராண்டாவின் கம்பிஅழியை பிடித்தபடி நின்றுகொண்டு தெருவை எந்நேரமும் வேடிக்கை பார்ப்பான் தருண். மாலையில் அவனது அண்ணன் சரண் வழக்கமாக வரும் ’சிவா ஆட்டோ’வின் சத்தம் கேட்டதும் நின்ற இடத்திலேயே மகிழ்ச்சிக் கும்மாளமிடுவான். அவன் வந்ததும் அண்ணனுக்குக் காலிலிருந்து ஷூக்களை கழட்டுவதும், சாக்ஸை உருவுவதும், பேக்கில் இருப்பவற்றை எடுத்துவைப்பதுமாக ராமனுக்கு லஷ்மணன் செய்த பணிவிடைகளை எல்லாம் பொருளற்றதாக்கிவிடும் சேவைகளை மனமுவந்து செய்வான்.
அப்படியொரு நாள் கம்பியைப் பிடித்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். நானும் அவனைக் கண்கொத்திப்பாம்பு போல (அச்சச்சோ பாம்பு கண்ணைக்கொத்தாதுன்னு உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன்னு இதுக்கும் சண்டைக்கு வருவானே பாம்புகளின் காவலன்!) பார்த்தபடி முன்னறையில் கையெட்டினால் அவனைப் பிடித்துவிடும் தொலைவில் இருந்தேன்.
அப்போது பொள்ளாச்சியில் பரோட்டா, இட்லி மாவு, சந்தகையெல்லாம் தெருவிலேயே கொண்டு வந்து கூவிக் கூவி விற்கத்தொடங்கி இருந்தார்கள்.
….’’புரோட்டா, புரோட்டா, புரோட்டா…..’’ என்று ஒரு இளைஞன் சைக்கிளில் விற்றுக்கொண்டு வந்தான். தருண் ஒரு கையால் கம்பியை இறுகப்பற்றிக்கொண்டு மற்றொரு குட்டிக்கையை அசைத்து …..’’மாமா, மாமா, இங்கே வாங்க ….’’என்றழைத்தான்.
நான் ஒருவேளை பரோட்டா வாங்க நினைக்கிறானோ என்னவோ என்று கவனித்துக்கொண்டிருந்தேன். அந்த இளைஞன் மகிழ்ந்து போய் வாசலில் ஒரு காலை ஊன்றிச் சைக்கிளை நிறுத்தி …’’தங்கம் புரோட்டா வேணுமா…’’? என்றான்.
குட்டித்தருண் ….’’இல்லை வேண்டாம் ஆனா நீங்க விக்கறது புரோட்டா இல்லை பரோட்டா….’’ என்றான். உண்மையிலேயே அந்த இளைஞன் பேயறைந்தது போலாகி அங்கிருந்து நகர்ந்தான். பிறகு வெகுநேரத்துக்கு அவன் குரலே கேட்கவில்லை.
இப்படி பல மாமாக்களை அவன் காவு கொடுத்திருக்கிறான். நல்ல கூட்ட நெரிசலான ஒரு பேருந்துப்பயணத்தில் நானும் சரணும் நின்றுகொண்டிருக்கையில், ஒரு ’மாமா’ தருணை வாங்கி மடியில் வைத்துக்கொண்டார். கொஞ்ச தூரம் கூட பேருந்து நகர்ந்திருக்கவில்லை ,அவர் மடியில் உட்கர்ந்தபடியே என்னைப்பிறாண்டத்தொடங்கினான்.
…’’ என்னடா…’’ என்றதும் ….’’அம்மா இந்த மாமா வாயில என்னமோ நாத்தம் அடிக்குது,நான் இறங்கி உன் கூடவே நின்னுக்கறேன்…’’ என்றான். அந்த ‘’மது’’ மாமா வெட்கி அவனை இருக்கையில் அமர வைத்துவிட்டு அவசரமாக அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார்.
நண்பர்களுடன் ஒரு முறை வால்பாறை சென்றிருக்கையில் கம்யூனிஸ்ட் பச்சைச் செடியைக் காண்பித்து…’’ இது யுபடோரியம் ஓடொரேட்டம்…’’ என்று நான் சொல்லிக்கொண்டிருக்கையில். டேராடூனில் காட்டியல் படித்துக்கொண்டிருந்த தருண் இடைமறித்து …’’இதுக்கு குரோமோலீனா ஓடோரேட்டானு பேரு மாத்தினதுகூட உனக்குத் தெரியலையா….’’ என்றான்.
அம்மாவை மிஞ்சிய மகன்.
அவன் பிறந்தபோது ஜாதகம் எழுதியவர், தருண் எழுத்து அல்லது சொல் தொடர்பான் ஏதோ ஒரு, அப்போது அவரால் கணித்துச்சொல்ல முடியாத ஒரு துறையில் மிகப்பிரபலமானவனாக வருவான் என்றார். காட்டியல் படித்து வணிக மேலாண்மையும் படிக்கும், காட்டிலாகா அதிகாரியாக வரவிரும்பும் தருணின் எதிர்காலம் எதிலென்று தெரியவில்லை.
ஆனால் அவனைக் கல்யாணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணை முன்பே பார்ப்பேனாயானால்…’’ கொஞ்சம் நல்லா பேசிப்பழகிட்டு அப்புறமா வீட்டுக்கு வாம்மா மின்னல்…’’ என்று சொல்லிவிட வேண்டும். சொல்லின் செல்வனாயிற்றே கல்யாணம் செய்துகொள்ளப்போகிறவன்.
சமீபத்தில் வெளியான தாரணா 18 மைல்கள் என்கிற, தனுஷ்கோடிக்கும் ஈழத்திற்கும் இடையில் இருக்கும் தூர அளவுகளைக் குறிக்கும் 16 நிமிடங்கள் ஓடும் பாடலைக்குறித்து அகரமுதல்வன் எழுதியிருக்கும் கட்டுரையின்
//புகையைப் போல் ஒழிந்த எங்கள் வாழ்வையும், நடுக்கடலில் மீன்களின் இரையாய் மிதந்த எங்களின் குழந்தைகளையும், ஒரு கொள்ளியைப் போல எரியுண்ட எங்களின் வாழும் ஆசைகளையும் தூக்கிச் சுமந்து வந்து நின்ற பாடல்//
//அது கடலில் தத்தளிக்கும் அகதிகளை மட்டுமல்ல, தரையில் அகப்பட்டு பத்துக்கு பத்து கூடாரங்களில் காலங்காலமாய் அவஸ்தைப்படும் துன்பகரமான ஒரு வரலாற்றுச் சாட்சியையும் முன்வைத்திருக்கிறது// என்னும் வரிகள் அளித்த துயர் மனதில் நிறைந்திருக்கையில் தான் கடலின் நீண்ட இதழை வாசிக்கத் துவங்கினேன்.
வாசிப்பின் முடிவில் போரின் குரூரங்களும், அகதி வாழ்வின் அவலங்களும், அகதிகள் சந்திக்கும் சவால்களுமாய் நிறைந்திருக்கும் இந்த நாவலின் வாசிப்பனுபவம், யாருக்கோ எங்கோ நடந்ததென்றில்லாமல் எனக்கே நிகழ்ந்ததுபோல் ஒரு அந்தரங்கமான துயரை உருவாக்கிவிட்டது.
ஸ்பெயின் உள்நாட்டுப்போரின் பால்புட்டி கட்டாய ராணுவச்சேர்ப்பில் சண்டையிட வந்த பதினைந்து வயதிருக்கும் ஒரு இளைஞன் மார்பில் காயம்பட்டு, திறந்த பெருங்காயத்தின் வழியே தெரியும் துடிக்கும் இதயத்துடன் சிகிச்சைக்கென வந்திருப்பதில் தொடங்குகிறது கதை.
காப்பாற்ற முடியாது எனக்கைவிடப்பட்ட அவனை மருத்துவர் விக்டர் தல்மாவ் காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இதயம் துடிப்பது நின்றுபோய், போரைக்குறித்த விக்டரின் நினைவுகளில் அழிக்கமுடியாத ஒன்றாகிறான் அவன்.
ஆனால் விக்டர் விரல்களால் அந்த இதயத்தை மெதுவாக அழுத்தி அவனை மீண்டும் உயிர்ப்பிக்கிறார் அதன் பிறகு விக்டரின் வாழ்வை நிர்ணயிக்கப்போகும் மருத்துவப்பணியில் இணைகிறார்.
நம்மில் அதிகம் பேர் முழுவதுமாக அறிந்திராத ஸ்பெயின் உள்நாட்டுப்போர், சிலியில் நடந்த ராணுவப்புரட்சி ஆகியவற்றை தனிப்பட்ட மனிதர்களின் கதைகளையும், காதலையும், விசித்திரமான உறவுகளையும் ஒரு பரந்த வரலாற்றுப் பின்னணியில் சொல்லும் இந்நூல் ஒரு மலரைப்போலவே மெல்ல மெல்ல விரிந்து தலைப்பை நினைவுட்டுகிறது.
1930-களின் பிற்பகுதியில் ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்தக் கதை, விக்டர் தல்மாவ் என்ற மருத்துவரின் வாழ்க்கையையும், அவனுக்கு மனைவியாக நடிக்கவேண்டிய கட்டாயத்திலிருக்கும் ரோஸர் என்னும் பியானோ கலைஞரின் கதையையும் பிரதானமாகச் சித்தரிக்கிறது. இந்தப் போரினால் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி மலைகள் வழியாகப் பயணிக்கின்றனர்.
தான் காதலித்த விக்டரின் சகோதரர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்ப்பிணியான ரோஸர், விக்டரின் பொறுப்பில் வந்து சேர்கிறார். இவர்கள் பிரான்ஸ் வழியாகச் சிலிக்கு பயணம் செய்து, பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர். அகதி வாழ்க்கையின் சவால்கள், அரசியல் நிகழ்வுகளின் தாக்கம், காதல் மற்றும் உறவுகள், போரின் விளைவுகள் ஆகியவற்றை இந்த இருவரின் தனிப்பட்டக் கதையை மையமாகக் கொண்டு, நாவல் விரிவாகப்பேசுகிறது
சொந்தநாட்டை விட்டுச்செல்லவேண்டி வந்த அவர்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைக்க சிலியில் அடைக்கலம் தேடுகின்றனர். ஆனாள் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் ஒருமுறை தங்கள் வாழ்வை இழக்கும் அபாயத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்தக்கதையில் மிக முக்கியமான இரண்டு கதைமாந்தர்களாக விக்டரும் ரோஸரும் இருக்கிறார்கள்.
விக்டர் தல்மாவ்:
ரோஸரை, அவளின் பாதுகாப்பிற்காகத் திருமணம் செய்துகொள்கிறார். துவக்கத்தில் இந்தத் திருமணம் ஒரு தேவையின், ஒரு கடமையின் அடிப்படையில் அமைந்தது. சிலியில் குடியேறிய பின் தனது மருத்துவப் படிப்பை முடித்து, சிறந்த இருதயநோய் நிபுணராகிவிடும் விக்டர் ஒருபோதும் தனது கடந்தகாலத்தை மறக்கவில்லை. சிலியில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், அவரை மீண்டும் அகதியாகப் பயணிக்க வைக்கிறது. இறுதியில், வாழ்க்கையின் முடிவில், அவர் தான் மேற்கொண்ட பயணங்களையும், தான் கடந்து வந்த காதலையும் உறவுகளையும் திரும்பிப் பார்க்கிறார்.
ரோஸர்:
ரோஸர் ஒரு திறமையான பியானோ கலைஞர். மிகவும் உறுதியானவள், சுதந்திரமானவள். அவள் வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்கிறாள். போரும் அகதி வாழ்க்கையும் அவளை உடைக்கவில்லை, மாறாக இன்னும் வலிமையாக்குகின்றது. எதைக்கண்டும் அஞ்சியிராத ரோஸராகவே அவர் நாவல் முழுவதும் வருகிறார்.
நாவலின் துவக்கத்தில், அவள் விக்டரின் சகோதரனான கியூலியமை காதலிக்கிறாள். அவர் போரில் இறந்துவிட, அவள் கர்ப்பிணியாகவும் விதவையாகவும் தனித்து விடப்படுகிறாள். உயிர் வாழ்வதற்காகவும், தனது குழந்தையின் பாதுகாப்பிற்காகவும் விக்டரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கிறாள்.
சிலியில் அவள் ஒரு பியானோ ஆசிரியையாகவும், கலைஞராகவும் தனது திறமையை வளர்த்துக்கொள்கிறாள். விக்டருடன் ஏற்பட்ட வெறும் தேவையின் பொருட்டான அவளது உறவு மெதுவாக ஒரு ஆழமான அன்பும், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுமுள்ள உறவாக மாறுகிறது. தனது இறுதி நாட்கள்வரை அவள் விக்டருக்கு ஒரு துணைவியாக இருக்கிறாள்
விக்டர் மற்றும் ரோஸரின் கதை இரண்டு வெவ்வேறு மனநிலைகளைக் கொண்ட மனிதர்கள், ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து, வாழ்க்கையின் கொந்தளிப்பான தருணங்களை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதைச்சொல்கிறது.
நாவலின் கதைக்களம் மூன்று முக்கிய வரலாற்று நிகழ்வுகளை மையமாகக் கொண்டது. ஒன்று, ஸ்பெயின் நாட்டில் நடந்த உள்நாட்டுப் போர். மற்றொன்று, சிலி நாட்டில் நடந்த இராணுவப்புரட்சி, மூன்றாவது வின்னிபெக் கப்பல் பயணம்.
எஸ்.எஸ். வின்னிபெக் கப்பல் பயணம் ஒரு வரலாற்று உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டது. சிலி நாட்டின் பிரபல கவிஞர் பாப்லோ நெரூடோ, பிரான்ஸில் இருந்த ஸ்பானிய அகதிகளுக்காக இந்த கப்பல் பயணத்தை ஏற்பாடு செய்தார்.
பிரான்ஸில், விக்டர் மற்றும் ரோஸர் இருவரும் அகதி முகாம்களில் மோசமான சூழ்நிலைகளை எதிர்கொள்கிறார்கள். முகாம்கள் கூட்ட நெரிசல், பசி, மற்றும் நோய்களால் நிரம்பி வழிகின்றன. இந்தச் சவால்களுக்கு மத்தியிலும், விக்டர் நோயாளிகளுக்கு உதவுகிறார். அதே நேரத்தில் ரோஸருக்கு மகன் மார்சல் பிறக்கிறான். உயிர் பிழைக்க வேண்டும் என்ற அவர்களின் பொதுவான எண்ணம் அவர்களை ஒன்றிணைக்கிறது. இந்தத் துன்பங்களுக்கு மத்தியில், சிலிக்குக் குடிபெயரும் வாய்ப்பு பற்றி அவர்கள் கேள்விப்படுகிறார்கள். இது ஒரு புதிய தொடக்கத்திற்கான நம்பிக்கையின் அடையாளமாக அவர்களுக்குத் தெரிகிறது.
பிரான்ஸ் அகதி முகாம்களில் அவதிப்பட்ட சுமார் 2,200 ஸ்பானிய அகதிகளைக் காப்பாற்ற பாப்லோ நெரூடோ ஒரு கப்பலை ஏற்பாடு செய்கிறார். இந்தக் கப்பல் பயணம், அகதிகள் சிலியில் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான நம்பிக்கையை அளித்தது. நாவலில் விக்டரும், ரோஸரும் இந்தக் கப்பலில் பயணிக்கும் அகதிகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். சிலிக்கு செல்வதற்கான விக்டரின் கோரிக்கைப்பத்திரத்தில் முத்திரையைப் பதிக்கையில் ரோஸரின் இசைப்புலமையை கேள்விப்பட்டு , அத்தனை இக்கட்டிலும் பாப்லோ ’’எங்களுக்குப் பியானோ கலைஞர்கள் தேவை’’ என்று சொல்லுவது, நெருக்கடி மிகுந்த சாலையில் நடக்கையில் திடீரென நம் முன் விழும் ஒரு மலர் அளிக்கும் ஆசுவாசத்தை அளிக்கிறது.
போரின் பயங்கரங்களிலிருந்து அவர்களை விடுவித்து ஒரு நிச்சயமற்ற, ஆனால் நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்லும் நம்பிக்கையின் சின்னமாகிறது அந்தக்கப்பல், போரின் அழிவுக்குப் பிறகு ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கும் கவிஞர் பாப்லோ நெரூடாவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கப்பல் பயணம், வெறும் அகதிகளின் நகர்வு அல்ல, நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களையும் கனவுகளையும் சுமந்து செல்லும் ஒரு நம்பிக்கையாகவே இருக்கிறது.
வின்னிபெக் கப்பலில் அகதிகள் ஒன்றாகப் பயணிக்கும்போது, அவர்கள் ஒரு புதிய சமூகமாக உருவாகிறார்கள். இந்தச் சமூகத்தை உருவாக்குவதில் நெரூடாவின் பங்கு மறைமுகமானது. ஆனால், அவர் உருவாக்கிய இந்த வாய்ப்புதான் அகதிகள் தங்கள் கடந்த கால துயரங்களைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஆதரவளித்து, எதிர்காலத்திற்கான கனவுகளைப் பார்க்க உதவுகிறது
அந்தக்கப்பல் பயணத்தில் புலம்பெயர்ந்தவர்களுக்கான பிரத்யேகப்பாடல், கப்பலில் கூட்டு இசை நிகழ்ச்சி நடப்பது, ரோஸரின் துணிகளை மற்றவர்கள் துவைத்துக்கொடுக்க முன்வருவது, சீட்டாட்டம் எனப் புலம்பெயர்தலின் துயரத்தை மறக்க ஏராளமான கேளிக்கைகள் நிறைந்திருக்கையில் பாப்லோ, சிலி ஒரு சொர்க்கபூமியல்ல என்பதை அறிவிக்கும் இடம் இடம் மிக முக்கியமானது.
கப்பல் பயணத்தில் நடக்கும் பல சம்பவங்களில் மிக உணர்வுபூர்வமான ஒன்று ஆக்னஸ் அமெரிக்கா வின்னிபெக் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை பிறப்பதுதான். மரணத்தை அனைத்து வித வடிவங்களிலும் பார்த்திருந்த விக்டருக்கு அந்தக் குழந்தைப்பிறப்பின்போது முதன்முதலாகக் காணும் உயிரின் தோற்றம் உண்டாக்கும் உணர்வெழுச்சி வாசிப்பவர்களுக்கும் உருவாகிவிடுகிறது.
விக்டரும் ரோஸரும், ரோஸரின் மகனுடன் சிலியில் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொண்ட பின்னர், அங்கு நடந்த இராணுவப் புரட்சி அவர்களின் வாழ்க்கையில் மற்றொரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்தப் புரட்சி, அந்தப் புதிய தாயகத்திலும் அகதிகளாக வாழ வேண்டிய அவலநிலையை விக்டருக்கும் ரோஸருக்கும் ஏற்படுத்தியது.
சிலியில் அவர்களின் வாழ்வு புதிய சூழலுக்கு ஏற்ப மாறுவது பற்றியதாகவே பெரும்பாலும் இருக்கிறது. விக்டர் மற்றும் ரோஸருக்கு புதிய வாழ்க்கையொன்று அமைந்துவிடுகையில், விக்டர் ஒஃபீலியாவுடன் காதலில் ஈடுபடுகிறார். தீவிரமான அவர்களின் காதல் விக்டர்-ரோஸர் திருமணத்தினால் சிக்கலாகிறது. இன்னொருவருடன் திருமணம் நிச்சயமான ஒஃபீலியா, தனது கடமைக்கும் விருப்பங்களுக்கும் இடையே முடிவெடுக்க முடியாமல் திண்டாடுகிறார். இவர்களின் ரகசிய சந்திப்புகள், விக்டர் மற்றும் ரோஸர் கஷ்டப்பட்டு உருவாக்கிய வாழ்க்கையை உடைத்துவிடும் அபாயத்தை உருவாக்குகின்றன.
விகடரின் காதலால் ஒஃபீலியா கர்ப்பமுற்று ஒரு பெண்ணைப் பெற்றெடுக்கிறாள். குழந்தை இறந்து விட்டது என்று ஒஃபீலியாவிடம் பொய்சொல்லப்படுகிறது.
விக்டர் மற்றும் ஒஃபீலியாவின் காதலில் பிறந்த மகள் இங்கிரிட் ஒரு பாதிரியாரின் தந்திரத்தால் தாயிடமிருந்து பிரிக்கப்படுகிறாள். தனது பிறப்பைப் பற்றி அறிந்ததும், இங்கிரிட் தனது தந்தையைக் கண்டறியும் பயணத்தைத் தொடங்குகிறாள். கண்டுபிடிகிறாள். இது அவருக்கும், விக்டருக்கும் இடையிள் பல ஆண்டுகளாக இருந்த இடைவெளியை நிரப்பி அவர்களின் உறவை வலுப்படுத்துகிறது,
இங்கிரிட் தனது கணவர் மற்றும் குழந்தைகளையும் விக்டருக்கு அறிமுகப்படுத்துகிறார். அவர்கள் விக்டரை அன்புடன் வரவேற்கிறார்கள். இந்தப் புதிய தொடர்பு, இழப்பின் தனிமையை உணர்ந்த விக்டருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.
நாவலின் பேசுபொருள், போர்கள், அரசியல் மாற்றங்கள், மற்றும் புலம்பெயர்வு ஆகியவை தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கம்தான். கதைமாந்தர்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாகவும், குடியேறியவர்களாகவும், போரில் தப்பிப் பிழைத்தவர்களாகவும் வாழ நேரும் அனுபவங்கள் அவர்கள் பார்வைகளையும், மனித உறவுகளையும் எவ்வாறு மாற்றுகின்றன என்பதை நாவல் உணர்வுபூர்வமாகக் காட்டுகிறது.
இது ஒரு வரலாற்றுக் கதை மட்டுமல்ல; காதல், இழப்பு, தியாகம் இவற்றோடு உலகில் நடந்த பல அரசியல் கொந்தளிப்புகள், பண்பாட்டு மாற்றங்கள் மற்றும் அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் தனிப்பட்ட கதைகளையும் இந்த நாவல் விவரிக்கிறது.
கடலின் நீண்ட இதழ், போர், அகதி வாழ்க்கை, புலம்பெயர்தல் மற்றும் புதிய தாயகம் தேடுதல் போன்ற உலகளாவிய விஷயங்களை மையமாகக் கொண்டுள்ளது. இந்தத் தலைப்புகள் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானவை. குறிப்பாக, இன்று உலகம் முழுவதும் அகதிகள் நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், இந்த நாவலின் கதை வாசகர்களுக்கும் நெருக்கமான ஒரு கதையாக மாறுகிறது.
இந்த நாவலில் சொல்லப்படும் காதல் கதை, வழக்கமான காதல் கதைகளில் இருந்து வேறுபட்டது. இது போர்ச்சூழலில் அகதிவாழ்வில் பரஸ்பர ஆதரவின் அடிப்படையில் வளரும் ஒரு அன்பைக் காட்டுகிறது.
ஒரு மனிதனின் அடையாளம் என்பது அவனது சொந்த மண்ணுடன் எவ்வளவு தூரம் பிணைக்கப்பட்டுள்ளது என்ற கேள்வியை இந்த நாவல் எழுப்புகிறது.
விக்டரும் ரோஸரும் தங்கள் ஸ்பானிய அடையாளத்தை ஒருபோதும் மறப்பதில்லை, அதே சமயம் சிலியின் கலாச்சாரத்தையும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்கள் ஸ்பானியர்களாகவே இருக்க விரும்புகிறார்களா, அல்லது சிலியின் குடிமக்களாக மாறுகிறார்களா என்ற குழப்பம் தொடர்ந்து நீடிக்கிறது. இந்த உணர்வு, புலம்பெயர்ந்த பலருக்கு பொதுவாக ஏற்படும் ஒன்று. ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழாமல், தங்கள் சொந்த உணர்வுகளையும், நினைவுகளையும் மட்டுமே தங்களின் “வீடாக” கருதும் ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்
அரசியல் நிகழ்வுகள் தனிமனித வாழ்க்கையை எவ்வாறு நேரடியாகப் பாதிக்கின்றன என்பதையும். இந்த நாவல் காட்டுகிறது.
அதைப்போலவே முறிந்த காதலின் வலியில் விக்டர் இருந்த ஒருநாளில் அவனுக்கு அன்பால் சிகிச்சையளிக்க ரோஸர் முடிவு செய்வதும், அதே நாளில் ஒரு கணவனின் இயல்புடன் அவளைத் தன் கைகளில் விக்டர் ஏந்திக்கொள்வதும் இந்த நாவலின் அற்புதமான தருணங்களில் ஒன்று. விக்டருக்கும் ரோஸருக்குமிடையில் புரிதலும் இயல்பான அன்பும் முகிழ்க்கும் 11-ம் அத்தியாயம் மற்றவற்றிலிருந்து வேறுபட்டும் வாசிப்பனுபவதில் மிகுந்த மனநிறவைத் தருமொன்றாகவும் இருக்கிறது
இடையிடையே வரும் பூவரசம் பூக்களும், பெயரிடப்படாத, தேதி குறிப்பிட்டிருக்காத கல்லறைச் சிலுவையில் வைக்கும் வெள்ளைப்பூக்களும், மழையில் நனைந்த பாப்லர் மரங்களும் கதையோட்டத்தின் கொந்தளிப்பைக் கொஞ்சம் தணிக்கின்றன
இந்தக் கதையில் கடிதங்கள் முக்கியமான பங்காற்றுகின்றன. கடிதங்கள் கதைமாந்தர்களின் தொடர்புகளுக்கும், அவர்கள் நம்பிக்கையையும் தகவல்களையும் பரிமாறிக்கொள்வதற்கும், அவர்களின் துயர் நிரம்பிய வாழ்க்கையில் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்கும், முக்கியமான திருப்பங்களுக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இடையிடையே பாப்லோ நெரூடோவின்
//நான் இப்போது வாழும் நாடு மிகவும் மென்மையானது இலையுதிர்கால திராட்சையின் தோல் போல//
போன்ற கவிதைகள் இனம்புரியாத பதற்றத்தை மனதில் உருவாக்குகின்றன.
கதையின் முடிவில், விக்டரும் ரோஸரும் மீண்டும் தங்கள் சொந்த நாடான ஸ்பெயினுக்குத் திரும்புகிறார்கள். அவர்கள் திரும்பி வரும்போது, ஸ்பானிய சர்வாதிகாரி ஃபிராங்கோ இறந்துவிட்டதால், ஸ்பெயின் மீண்டும் ஜனநாயகம் ஆகிறது. தங்கள் வாழ்நாளில் இரண்டு கண்டங்களைக் கடந்து, இரண்டு பெரிய போர்களையும் அரசியல் மாற்றங்களையும் எதிர்கொண்டாலும், அவர்களின் அன்பு மற்றும் ஆதரவு அவர்களை வழிநடத்துகிறது.
மனைவி இறந்த பிறகு, விக்டர் தல்மாவ் சிலியில் அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். தனது கடந்த காலத்தையும், ரோஸருடன் பகிர்ந்து கொண்ட காதலையும் நினைத்துப் பார்க்கிறார்.
கடலின் நீண்ட இதழ் (A Long Petal of the Sea) நாவலில், போரின் சோகத்தையும், அகதி வாழ்க்கையின் துன்பங்களையும் தாண்டி, மனித உணர்வுகளின் அழகிய தருணங்கள் பல கவித்துவமாகப் சித்தரிக்கப்பட்டுள்ளன. நாவலில் போர், வன்முறை, மரணம் போன்ற கடுமையான யதார்த்தங்கள் இருந்தாலும், அதன் அடிநாதமாகக் காதல், நம்பிக்கை, மற்றும் மனித மன உறுதி ஆகியவை உள்ளன.
நெரூடா, சிலியின் நீண்ட, குறுகிய புவியியல் வடிவத்தினால் அந்நாட்டை “நீண்ட கடலின் இதழ்” (A long petal of the sea) என ஒரு கவிதையில் வர்ணித்தார். இதுவே இந்நாவலின் மிகப்பொருத்தமான தலைப்பாகவும் அமைந்துவிட்டது. அதே வேளையில், போர், இடம்பெயர்வு, மற்றும் கடினமான வாழ்க்கைச் சூழல்களுக்குப் பிறகு புதியதாக மலரும் வாழ்வையும் தலைப்பு குறிப்புணர்த்துகிறது. கடலின் நீண்ட இதழ் என்னும் தலைப்பே நாவலின் ஆன்மாவாக மாறி, கதைக்கு ஆழமான பொருளை அளிக்கிறது.
மூலக்கதையான ‘’A long petal of the sea-யின் ஆசிரியர் இசபெல் அலேந்தேவின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் அவரது குடும்ப வரலாறு ஆகியவை இந்த நாவலின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளன. குறிப்பாக, வின்னிபெக் கப்பலில் பணியாற்றிய அவரது வளர்ப்புத் தந்தையின் அனுபவங்கள் இந்தக் கதைக்களத்தை அலேந்தே உருவாக்க உத்வேகமளித்திருக்கக்கூடும். விக்டர் மற்றும் ரோஸரின் அகதி வாழ்க்கையை விவரிப்பதில் அவரது சொந்த அனுபவங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
அலேந்தேவின் எழுத்து எப்போதும் அவரது வாழ்க்கை அனுபவங்களில் வேரூன்றி உள்ளது. காதல், குடும்ப உறவுகள், மற்றும் பெண்களின் வலிமை ஆகியவை அவரது படைப்புகளில் மீண்டும் மீண்டும் தோன்றும் கருப்பொருள்கள். இந்த நாவலிலும், அவரது சொந்த அனுபவங்களான புலம்பெயர்வு, அரசியல் மாற்றங்கள், மற்றும் சிக்கலான மனித உறவுகள் ஆகியவை கதைக்களத்திற்கும் கதாபாத்திரங்களுக்கும் ஆழமான அடித்தளத்தை அளித்துள்ளன. இந்த நாவல் அவரது வாழ்க்கை வரலாற்றின் நேரடி விவரிப்பு இல்லையென்றாலும், அவரது அனுபவங்களால் உருவாக்கப்பட்ட ஓர் இலக்கியப் படைப்பாக விளங்குகிறது.
மூன்று பாகங்களையும் பதின்மூன்று அத்தியாயங்களையும் கொண்ட இந்த ஸ்பெயின் உள்நாட்டுப் போரின் வரலாற்றுக் களத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆழமான மனித உறவுகளை வெளிப்படுத்தும் நீண்ட புனைகதையின் மொழிபெயர்ப்பு, மூலப் படைப்பின் உணர்ச்சி ஆழத்தையும் கலாச்சார நுணுக்கங்களையும் பாதுகாத்து தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்லவேண்டிய ஒரு சவாலையும் மொழிபெயர்ப்பாளருக்கு அளித்திருக்கிறது. அதில் சுபஸ்ரீ பீமன் வெற்றி கண்டுள்ளார்.
மூல நூலின் கவிதையின் சாயல் கொண்ட எழுத்துநடை, கதாபாத்திரங்களின் உணர்வுபூர்வமான இயல்புகள், ஆழமான உணர்வுப் பதிவுகள், மற்றும் வரலாற்று நிகழ்வுகளின் துல்லியமான விவரிப்புகள் ஆகிய அனைத்தும் மொழிபெயர்ப்பிலும் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன. சுபஸ்ரீக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
பொள்ளாச்சியில் இட்லி மாவை அரைத்தும் சந்தகையை பிழிந்தும் விற்பது சாதாரணமாகவும் மிக அதிகமாகவும் நடக்கும் ஒரு குடிசைத்தொழில். விருந்தினர்கள் வருகையின்போது அங்கு சென்று பிழிந்த சந்தகையை சூடாக வாங்கிக்கொள்வேன்.
மிகச்சுத்தமாகவும் சோடா உப்பு சேர்க்காமலும் தயாரிப்பார்கள் என்பதால் வழக்கமாகவே அங்கு நல்ல கூட்டம் நெரியும். சமீபத்தில் அந்தக் கடைக்காரரின் மகளுக்கு 100 சவரன் நகை கொடுத்துத் திருமணம் செய்துகொடுத்தார்கள். அத்தனை ஓட்டம் கடையில்.
அறக்கல்வி வகுப்புகளுக்காக ஈரோடு மற்றும் திருப்பூருக்குச்சென்று விட்டுக் களைத்துப்போய் திரும்பிய அன்று இட்லி மாவு வாங்கச்சென்றபோது கூட்டத்தில் காத்திருக்கும்படியானது. கொஞ்சம் தள்ளி ஒருவர் கையில் கார்ச்சாவியுடன் நின்றிருந்தார். வெள்ளைக் குட்டிக்காரொன்றும் சாலையோரம் நின்றது. அவரின் கீழுதட்டில் கொஞ்சமாக வைத்திருந்த ஆட்டுத்தாடி அல்லது பிரெஞ்சுத்தாடி எப்போதும் ஏன் எனக்குக் கடும் ஒவ்வாமையை உருவாக்குகிறது என்பது ஆய்வுக்குரியது.
இப்போதுமட்டுமல்ல எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அந்த ஒவ்வாமை இருக்கிறது என் கல்லூரித்தோழி ஷர்லி சொல்லுவாள்
’’ டீ நான் ஒரு கிறுக்கனை, முடவனை, குருடனை ஏன் ஒரு தொழுநோயாளியைக்கூட கல்யாணம் பண்ணிக்குவேன் ஆனா சுருட்டைமுடிக்காரனைமட்டும் பண்ணிக்கவே மாட்டேன்’’ என்று. எனக்கும் அப்படித்தான் இந்தக் குறுந்தாடிக்கரர்களைக் குறித்த அபிப்பிராயமிருந்தது. (அச்சச்சோ எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ மனக்குதிரை பாய்கிறதே.)
இதோ வருகிறேன்.
அவர் மனைவியிடம் அலைபேசியில் அழைத்துப்பேசிக்கொண்டிருந்தார் . பேசிக்கொண்டிருந்தது மனைவியிடம் தான் என்பது ’பைத்தியக்காரி’ என்னும் அவரது விளியில் இருந்து தெரிந்துகொண்டது.
சந்தகை வாங்கட்டுமா என்று கேட்டிருக்கிறார். பதிலுக்கு மனைவி இரவில் வழக்கம் போல அவர் சாப்பிடும் சாதமும் வேண்டுமா என்று கேட்டதற்குத்தான் அந்தப்பேச்சு. அத்தனை கடுமையாக அத்தனை உரக்க அத்தனை கோபமாக.
’’பைத்தியக்காரி மாதிரி உளறக்கூடாது சந்தகை வேணுமான்னு கேட்டா ஆமா இல்லைன்னு மட்டும்தான் சொல்லனும் நைட் சாப்பாடு வேணுமான்னெல்லாம் தேவையில்லாம பேசக்கூடாது’’ என்று கத்திக்கொண்டிருந்தார். காரெல்லாம் வைத்திருக்கிற, (குறுந்தாடிகூட) அவர் வெறும் 40 ரூபா சந்தகைக்காகப் பொது இடத்தில் எப்படி அத்தனை தரம் தாழ்ந்து நடந்துகொள்ளமுடிகிறது?
இதுவே அவருக்கு கல்யாணம் நிச்சயமான போதோ அல்லது கல்யாணமாகி கொஞ்ச நாளிலோ நடந்திருக்காது. சில வருடங்களானபின்னர் என்ன செய்தாலும் எத்தனை அநீதி இழைத்தாலும் எப்படி தாழ்வாக நடத்தினாலும் மனைவி வீட்டையோ மணவுறவையோ விட்டுவிட்டு போக வாய்ப்பே இல்லை அவள் உணவுக்கும் உடைக்கும் மற்ற எல்லவற்றிற்கும் முழுக்க முழுக்க தன்னைத்தான் சார்ந்திருக்கிறாள் அவளை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்பதை தெள்ளத்தெளிவாகப் புரிந்துகொண்ட பின்னரே இதுவெல்லாம் தொடங்குகிறது.
இப்படித்தான் இங்கு லட்சக்கணக்கான குடும்பங்கள் ஒரே கூரையின் கீழ் வாழ்கிறார்கள். பரஸ்பர புரிதலும் மரியாதையும் அன்பும் காதலும் கத்தரிக்காயுமெல்லாம் இங்கு இல்லவே இல்லை. இதைப்பார்த்து வளரும் ஆண் பிள்ளைகள் அப்பாவைப்போலவே அம்மாவை நடத்தலாம் என்பதை கற்றுக்கொள்கிறார்கள் அவர்களின் மனைவியரையும் அப்படியேதான் நடத்த வேண்டும் என்பது அவ்ர்களின் ஆழ்மனதிலும் பதிந்து விடுகிறது.
பெண்பிள்ளைகளும் இதே கீழ்மை அவர்களுக்கும் பின்னர் நடக்கையில் அது எதிர்க்கப்படவேண்டிய கண்டிக்கப்படவேண்டியதொன்று என்பதைக் கூட அறியாமல் வழி வழியாக அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு அதே வாழ்க்கையிலுழன்று மாய்கிறார்கள். ஏனென்றால் அவர்களின் அம்மாவும் அத்தையும் அப்பத்தாவும் அக்காவும் அப்படியே வாழ்ந்ததை அவர்கள் பார்த்து வளர்ந்திருந்திருந்திருப்பார்கள்.
அந்த தாடிக்காகவும் அந்த நடத்தைக்காவும் பளாரென ஒரு அறையை மானசீகமாகக்கொடுத்துவிட்டு வந்தேன்.வேடிக்கை என்னவென்றால் மும்முரமாக மனைவியின் மீதான தன் ஆணவத்தைக்காட்டிக் கொண்டிருந்தவர் சந்தகை அப்போதுதான் அடுப்பில் இருந்தது அது தயாராக இன்னும் 1மணி நேரமாகும் என்று சொல்லபட்டதை காதிலேயே கேட்டுக்கொள்ளவில்லை.
துல்கரின் லோகாவை நான் இன்னும் பார்க்கவில்லை. பார்க்கமுடியவில்லை. பொள்ளாச்சியில் வெளியானதாகக்கூட தகவலில்லை. கோவைக்குத் தனியே சென்று பார்ப்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமே இல்லை. ஆனால் நீலியின் கதை என்றதும் அதைக்காண கொதியாகிவிட்டிருக்கிறது. ஜெ வின் பல கதைகளில் ,அவருடைய அம்மாவைபற்றிய பதிவுகளில் எல்லாம் வரும் நீலிகள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர்கள் பிரியத்துக்குரியவர்கள்.
இந்த வேடசெந்தூர் வீட்டின் பல மரங்களில் சமையலைறைக்கு வெளியே சமையலறை ஜன்னலிலிருந்து பார்த்தால் தெரிவது போலச் செண்பக மரமொன்றும் நிற்கிறது.
பலாச்சுளைகள் போலிருக்கும் அதன் பொன்னிற மலர்களை பறித்துச்சூடிக்கொண்ட காலமிருந்தது ,இப்போது அதன் உச்சி வெகு உயரத்துக்குபோய்விட்டதால் மலர்களைப்பார்க்கக்கூட முடிவதில்லை. ஆனால் என் இறப்பிற்குப்பிறகு அதில் தான் செண்பகமரத்து யட்சியாக வாழ(?) உத்தேசம்.
தருண் ‘’ இருந்துக்கோ ஆனா இறங்கி வந்து பயப்படுத்தக்கூடாது ’’ என்றிருக்கிறான்.
எனவே இந்த யட்சிக் கதையைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். சரண் கல்யாணியின் படங்களைப் பிரத்யேகக் காரணமொன்றினால் தவறவிடுவதில்லை. எனவே ஜெர்மெனியில் வெளியானதுமே அதைப்பார்த்துவிட்டு விடீயோ அழைப்பில் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தான். தியேட்டரில் அத்தனைசிரிப்பொலியாம்.
’’கல்யாணி வரும் காட்சிகளிலெல்லாம் யட்சிப்பாலைமரமும் அதன் மலர்களும் காட்டினாங்க யாரெல்லாம் கவனிச்சாங்களோ?’’ என்றான். மேலும் மகிழ்ச்சியடைந்தேன்.யட்சிப்பாலை என்னும் அல்ஸ்டோனியா ஸ்காலாரிஸ் என் பிரிய மரங்களில் ஒன்று அதைச் சரண் திரையில் கவனித்தது அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது. அம்மையுட மோன். யட்சிகள் அந்த மரத்தில் வாழ்வதைப்பற்றி நிறையப்பேசி இருக்கிறோம் நாங்கள்.
முன்பெல்லாம் இந்தியப்பல்கலைக்கழகங்களில் இதன் ஸ்காலாரிஸ் என்னும் சிற்றினப்பெயரே அறிவுடையவர்களுக்கான மரம் என்னும் பொருளில் வைக்கப்பட்டிருந்ததால் பட்டமளிப்பின்போது யட்சிப்பாலை என்னும் இந்த ஏழிலைப்பாலையின் சிறு கிளையொன்றையும் உடனளிப்பார்களாம்.
முனைவர் பட்ட ஆய்வின் துவக்க காலத்தில் தனி அழைப்பின் பேரில்புது தில்லியின் வன மற்றும் சூழல் அமைச்சகத்துக்குள்ளே அதன் இயக்குனரான திரு அட்ரியைக்காண 25 வயது இளம்பெண்ணாகத் தயக்கத்துடன் நுழைந்து, அந்தப்பிரம்மாண்டமான கட்டிடங்களுக்குள்ளே நீண்ட நடைபாதையின் இருபுறமும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு மூச்சடைக்கும்படியான நெடியுடன், கொத்துக்கொத்தாக மலர்களுடன் நின்றிருந்த ஏழிலைப்பாலைகளை முதன்முதலில் பார்த்ததை நினைத்துக்கொண்டேன். லோகா என்று படத்தின் பெயர் இருப்பதிலும் கூடுதல் மகிழ்ச்சி