பிரிடிஷ் விலங்கியலாளரும், சிம்பன்ஸிகளின் பாதுகாவலரும், மானிடவியலாளருமான ஜேன் குடால் தனது 91 –வது வயதில் நேற்று அக்டோபர் 1, 2025 அன்று லாஸ் ஏஞ்சலீஸில் ஒரு மரம் நடும் நிகழ்வுக்கான பயணத்திலிருக்கையில் இயற்கையாக மறைந்தார்.
அவரை நினைக்கையில், அவரது காணொளிகளையும் உரைகளையும் கேட்கையில், சிம்பன்ஸிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் எல்லாம் பேரன்னை என்றுதான் என் மனதில் தோன்றும். அன்னைமை அவரது உடல்மொழியில் அப்படி பொங்கிப்பிரவாகிக்கும். உலகில் சிம்பன்ஸிகளை குறித்த மிக நீண்ட கால, மிக விரிவான ஆய்வுகள் செய்த ஒரே ஒருவர் ஜேன்.
ethologist என்னும் ஒரு சொல்லையே அவரைக் குறித்து அறிந்துகொண்ட போதுதான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன். விலங்குகளை, அவற்றின் சமூக கட்டமைப்பை, அவற்றின் உயிர்வாழ்தல், தேவைகள், பரிணாம வளர்ச்சியை எல்லாம் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலேயே அறிந்துகொள்ளும் துறைதான் ethology.
ஜேன் 1960-களில் உலகளாவிய அளவில் இந்தத்துறையில் பிரபலமாயிருந்த ஒரு விலங்கியலாளராக இருந்தார். இவரது சிம்பன்ஸி ஆய்வுகள் விலங்குகள் பற்றிய உலகின் புரிதலையே அடியோடு மாற்றியது.மனிதர்களுக்கு மட்டும் உரியது என்று பலகாலமாக நம்பப்பட்ட பலவற்றை சிம்பன்ஸிகள் அறிந்து கொண்டிருப்பதையும், செய்வதையும் அவர் நிரூபித்தது அறிவியல் உலகில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.
நீர்நிலைகளுக்கு பெயர் பெற்ற லண்டனின் மிக புராதன, மிக மிக அழகிய நகரமான Hampstead –ல் பந்தயக்கார் ஓட்டுநரான (Morris-Goodall) அப்பாவுக்கும் எழுத்தாளரான (Margaret Myfanwe) அம்மாவுக்கும் பிறந்த ஜேன் அவரது குழந்தைப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த ஒரு சிம்பன்ஸி பொம்மையிலிருந்து தொடங்கிய தனது விலங்குகள் மீதான பேரன்பை வாழ்நாள் முழுக்க தொடர்ந்தவர்.
மனிதரல்லாத முதன்மை உயிரினங்களின் அறிவியலில் ( primatology) உலகளவில் இவரே முதன்மையானவர். சிம்பன்ஸிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஜேன் ‘’ மனிதர்களை விலங்கு உலகிலிருந்து பிரிக்கும் தெளிவான கோடு ஏதும் இல்லை’’ என்றார். 65 ஆண்டுகள் சிம்பன்ஸிகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜேன் காலப்போக்கில் மனிதர்களால் இயற்கை வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதன் ஆபத்தையும், அதற்கு தீர்வு மிக அவசரமாக தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்தும் காலநிலை செயற்பாட்டாளர் ஆகினார்.
1957 –ல் பள்ளிப்படிப்பை மட்டும் முடித்திருந்த ஜேன் கென்யாவின் விலங்குகளைக் குறித்து அறிய ஆர்வம் கொண்டிருந்தார் . கென்யா செல்ல தேவையான செலவுகளுக்காக ஒரு உணவகத்தில் பரிசாரகராக வேலைசெய்து பொருளீட்டினார். கென்யா சென்று தொல்லியலாளரும் புதைபடிம மனிதவியலாளருமான Dr.லூயி மற்றும் தொல்லியலாளரான அவரது மனைவி மேரியையும் சந்தித்தார். லூயி ஜேனை நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தினார். மனிதப்புதைபடிமங்களின் தேடலில் ஜேனின் பொறுமையையும் அவரது இயற்கை மீதான ஆர்வத்தையும் கண்ட லூயி ஜேனை தான்சானியாவின் கோம்பே காடுகளில் சிம்பன்ஸிகளைக் குறித்த ஆய்வில் ஈடுபடச் சொன்னார்.
1960 ஜுலை 14-ம் தேதி ஜேன் கோம்பே காடுகளுக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கு பணியாற்றுகையில்தான் சிம்பன்ஸிகளுடனான அவரது பரிச்சயமும் ஈடுபாடும் உண்டானது. லூயி தம்பதிகளுடன் இணைந்து ஜேன் சிம்பன்ஸிகளின் பாதுகாப்புக்கான ஒரு அமைப்பை அங்கு துவங்கினார்.
அந்த அமைப்பிலிருந்து ஆய்வுகளைச் செய்கையில் தான் சிம்பன்சிகள் அது நாள் வரை உலகம நினைத்திருந்ததுபோல் தாவரவுண்ணிகள் மட்டுமல்ல அவை இறைச்சி உண்பதையும், மழைநடனமிடுவதையும், படுபயங்கரமான போர்களில் ஈடுபடுவதையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக புற்றிலிருந்து கரையான்களை எடுத்து உண்பதற்கான கருவிகளை அவை தயாரிப்பதையும் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார்.
சிம்பன்ஸிகளைப் பற்றிய உலகின் பல தவறான அறிதல்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து உண்மையில் சிம்பன்ஸிகள் மனிதனுக்கு மிக மிக நெருங்கிய உயிரினங்கள் என்பதை ஜேன் தெரிவித்தார். 1963-ல் 29 வயதான ஜேனின் 7500 சொற்களையும், 37 பக்கங்களையும் கொண்ட சிம்பன்ஸிகளைக் குறித்த பல முதல் நிலைத்தகவல்களைக் கொண்ட ஆய்வறிக்கையை நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை வெளியிட்டது.
அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்த கோம்பே காடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்தான் அவரது காதல் கணவர் ஹியூகோ. அந்தக்கட்டுரை சிம்பன்ஸிகளின் வாழ்வை மட்டும் காட்டவில்லை கோம்பே காடுகளில் ஆய்வுகளின் போது ஜேனுக்கு உண்டான நோய்கள், உடல்நலகுறைவு, அதிலிருந்து அவர் மீண்டது, சிம்பன்ஸிகளை நெருங்குவதில் இருந்த சிக்கல்கள், தடைகள், காட்டிலிருந்த கொல்விலங்குகளால் உண்டான ஆபத்துகள் ஆகியவையும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை இன்றுவரையிலும் உலகின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
சிம்பன்ஸிகளின் இணைசேர்தல், கருவுறுதல், குட்டிகளை ஈனுதல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு புதிய பல உண்மைகளை ஜேன் தெரிவித்தார்.சிம்பன்ஸி அன்னைகள் நாலரை வருடத்திலிருந்து 6 வருடத்துக்கொருமுறைதான் கருத்தரித்து, ஒன்றிலிருந்து இரண்டு குட்டிகளை மட்டும் அளிப்பவை, முதல்முறை அன்னைகள் ஆண் சிம்பன்ஸிகளிடமிருந்து குட்டிகளை மறைத்து வைக்கின்றன, அனுபவம் வாய்ந்த அன்னைகளே ஆண் சிம்பன்ஸிகளுக்கு குட்டிகளைக் காட்டுகின்றன போன்ற புதிய தகவல்களை ஜேன் உலகிற்கு சொன்னார்.
தன் மகன் க்ரப்பை வளர்ப்பதற்கான பல படிப்பினைகளை சிம்பன்ஸிகளிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லும் ஜேனின் மீது அத்தனை பிரியமுண்டாகியது எனக்கு. க்ரப்புடன் அடர் காட்டில் ஆய்வுகளைச் செய்த ஜேன் அவனை காட்டுவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க கூண்டில் அடைத்து வைத்திருப்பார். அர்ப்பணிப்புடன் ஆய்வுகளைச் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருபபோம் எனினும் ஜேன் போல மகனை கூண்டில் வைத்துவிட்டு சிம்பன்ஸிகளை ஆய்வுசெய்யும் அர்ப்பணிப்பை நான் வேறெங்குமே கேள்விப்பட்டதில்லை.
அவரது கண்டுபிடிப்புக்களைப்பற்றி சொல்கையில் லூயி ’’சிம்பன்ஸிகளும் மனிதகளைப் போலத்தான் என்பதை ஒத்துக்கொள்ளும் முன்பு நாம் கருவி என்பதையும், ஏன் மனிதன் என்பதையுமே மறுவரையறை செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.ஜேனின் பங்களிப்பை, கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை உலகம் அவர் கல்விக்கூடத்துப் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகரிக்கும் என லூயி உணர்ந்திருந்தார் எனவே இளங்கலை படித்திருக்காத ஜேனை கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்.
அங்கு ஜேன் முனைவர் பட்டத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் செய்த The Behaviour of Free-living Chimpanzees in the Gombe Stream Reserve என்னும் தலைப்பிலான ஆய்வு விலங்குலகின் பல புதிய கதவுகளை உலகிற்கு திறந்துவைத்தது. இளங்கலை படிக்காமல் கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்ற வெகு சிலரில் ஜேனும் ஒருவர்
அடர் வனங்களில் பலவருடங்களை ஆய்வுக்காகச் செலவழித்த ஜேனின் முதல் கணவர் நேஷனல் ஜியோகிராஃபியின் முதன்மை வன உயிர்ப்புகைப்படக்கலைஞரும் ஜேனின் ஆய்வை படம்பிடிக்க வந்தவருமான ஹியூகோ வான்(Hugo van Lawick.) அவர்கள் காடுகளில் சந்தித்து காதல் கொண்டு 1964-ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது மகன் Grub என்று செல்லப்பெயர்கொண்ட Hugo Eric Louis van Lawick.
ஹுயூகோவுடன் 1974-ல் விவாகரத்தானபின்னர் இரண்டாவதாக 1975-ல் தான்சானிய அரசியல்வாதியும் தான்சானிய தேசியப் பூங்காவின் முன்னாள் இயக்குநருமான டெரெக்கை (Derek Bryceson ) மறுமணம் புரிந்து கொண்டார், டெரெக் 1980-ல் மறைந்தார்.
அதுவரை விலங்கியலாளர்களின் வழக்கமாயிருந்ததைப் போல விலங்குகளுக்கு எண்களை இடுவதில் விருப்பமில்லாத ஜேன் சிம்பன்ஸிகளுக்கு, டெஸ் , ஃப்ளோ, பிஃபி, டேவிட் போன்ற பெயர்களை வைத்தார்.1977-ல் அவரது பெயரிலேயே ஜேன்குடால் நிறுவனத்தை வாஷிங்டனில் துவங்கினார். அந்த அமைப்பு சூழல் பாதுகாப்பு, சூழல் ஆரோக்கியம் மற்றும் வாழிட அழிப்புக்கெதிரான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான உலகளவிய விரிந்த பிரச்சாரத்தையும் அது குறித்த கல்வியையும் ஆய்வையும் மேற்கொண்டிருந்தது.ஜேன் இந்த அமைப்பின் பொருட்டு வருடத்தின் 300 நாட்கள் அவரது இறுதிநாள் வரையிலுமே தொடர் பயணத்திலிருந்தார். இந்நிறுவனத்தின் 25 கிளைகள் உலகெங்கும் இயங்குகின்றன.
2014 –ல் நியூயார்க் டைம்ஸுக்களித்த நேர்காணலில் ‘’ சிம்பன்ஸிகளுக்காக ஒருவர் ஆண்டு முழுவதும் பயணம் செய்து, மிக முக்கிமான செயல்களைச் செய்கிறார் என்பது எனக்கு தொடர்ந்து வியப்பை அளிக்கிறது. அந்த ஒருவர் நான்தான்’’ என்றார்.
அதே நிறுவனத்தின் நீட்சியயாக 1991-ல் பள்ளிக்குழந்தைகளும் பங்களிக்கும் Roots & Shoots, என்னும் அமைப்பையும் சூழல் பாதுகாப்புக்காக உருவாக்கினார் ஜேன். துவக்கத்தில் 12 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களுடன் இருந்த அந்த அமைப்பு இப்போது 75 நாடுகளில் மிகத்தீவிரமான செயல்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
2025-ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர விருது உள்ளிட்ட மிக உயரிய ஏராளமான விருதுகளையும் ஜேன் பெற்றிருக்கிறார். விலங்குகள் குறித்த அவரது அவதானிப்புகளை பல நூல்களாக எழுதியிருக்கும் ஜேனின் மிகப்பிரபலமான நூல் Reason For Hope: A Spiritual Journey.
அவரது The Book of Hope: A Survival Guide for Trying Times, என்னும் மற்றொரு நூல் உலகின் மிக முக்கியமான 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.ஜேனின் In the Shadow of Man (1971). மற்றும் The Chimpanzees of Gombe: Patterns of Behavior (1986). ஆகிய இரு கட்டுரைகளும் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவை.
ஆப்பிரிக்க காடுகளில் ஜேன் நெருக்கமாகச் சந்தித்த மலேரியா, முதலைகள், விஷம் துப்பும் நாகப்பாம்புகள், கொல்விலங்குகள், ராட்சஷ விஷ மரவட்டைகள் ஆகியவற்றையும் சொல்லும் அவரது கட்டுரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை.அவரது விலங்குலகம் குறித்த பலநூறு ஆவணப்படங்களும், திரைப்படங்களும் ஜேனின் கண்கள் .வழியாக நமக்கு விலங்குலகைக் காட்டுபவை.
20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மிகப்பிரபலமான இயற்கை அறிவியலாளராக இருந்த ஜேன் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் துறையில் அவரைத்தொடர்ந்து பல பெண்களும் வர காரணமாயிருந்தார் என்பதுவும் அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று. அவர்களில் சிம்பன்ஸிகளின் ஆய்வில் பெரும்பங்காற்றிய பெண்களான Dian Fossey, Biruté Galdikas, Cheryl Knott மற்றும் Penny Patterson,ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
அவரது இறுதிப் பயணத்திட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் காடுகளின் நெருப்பு பிடிக்கும் எல்லைகளில் நெருப்புத் தடுப்பாக 5000 மரங்கள் நடும் நிகழ்வுதான். அவரது மரணத்திற்குப்பின்னர் இன்று நடப்பட்ட முதல் மரம் ஜேன் குடால் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.
ஜேன் மீது பெரும் அபிமானம் கொண்டிருக்கும் ஜாஜாவிடம் ஜேனின் மறைவு குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கையில் ஜேன் தனது பாட்டியின் சாயலில் இருப்பதாக சொன்னார் ஜாஜா. இயற்கை வளங்களைத் தொடர்ந்து சுரண்டுகிற, யானை வழித்தடங்களில் பெருநிருவனங்களை அமைக்கிற, பனைமரங்களை செங்கல் சூலைகளில் எரிக்கக்கொண்டு செல்கிற, அரசியல் ஆதாயங்களுக்காக பலநுறு மரங்களை வெட்டுகிறவர்களுகு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடைசி நொடி வரை. இயற்கையின் பாதுகாப்புக்காக உழைக்கும் ஜேன் போன்றவர்கள்தான் நமது சொந்தமாக இருக்கமுடியும். எனக்கும் ஜேன் பேரன்னையாகத்தான் தெரிகிறார்.
நம்பிக்கை மற்றும் மன உறுதிக்கான தூதராக ஜேன் உலகெங்கும் அறியப்பட்டார். அவரது முக்கியச் செய்தியாக ’’நம்பிக்கை கொள்வது என்பது நமது கையில், என் கையில், உங்கள் கையில் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சின்னஞ்சிறு மாற்றங்களைச் செய்யமுடியும்’’ எனச் சொன்ன ஜேன் அவரது வாழ்க்கையையே அந்த செய்திக்கான உதாரணமாக விட்டுச் சென்றிருக்கிறார்.ஜேனுக்கு அன்பும் அஞ்சலியும்
தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதி பல்லுயிரிய மையத்தில், அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர் டோன் என்கிற டோனோவன். (Dr. Donovan Kirkwood)
உலகின் அணுக முடியாத, மிகக் கடினமான சூழல்களில் வாழும் தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றை கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவும்,அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும், கடுமையான மற்றும் ஆபத்தான பணிகளைக் தாவரவியலாளர்கள் மேற்கொள்வது Extreme Botany எனப்படுகிறது.
அழிவின் விளிம்பில் உள்ள தென்னாப்பிரிக்காவின் அரிய தாவர இனங்களைக் மிக ஆபத்தான அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று கண்டறிந்து, சேகரித்து, ex situ conservation எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவற்றை வளர்த்து மீண்டும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களுக்கு மாற்றுவதை பல்லாண்டுகளாக டோன் செய்துவந்தார்.
தென்னாப்பிரிக்காவின் பழமையான பல்கலைக்கழகம் தாவரவியல் பூங்காவின் ஸ்டெல்லென்போஷ் பூங்காவின் பொறுப்பாளராக 2018-லிருந்து டோன் பணிபுரிந்து வந்தார். இந்தப் பூங்கா தென்னாப்பிரிக்காவின் இயல் தாவரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாவரங்களின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போன்ஸாய் சேகரிப்பு இங்கு மிகப் பிரபலம். ஒரு திறந்தவெளி ஆய்வகமாகவும் செயல்படுகிறது இந்த பூங்கா.
டோன் தேடிச்சென்ற தாவரம்
தென்னாப்பிரிக்காவின் ஓரிடத்தாவரமான Marasmodes undulata என்னும் சூரியகாந்திக் குடும்பம் தாவரமொன்று 1946-க்கு பிறகு 34 ஆண்டுகளாக எங்குமே தென்படவில்லை எனவே அது அழிந்துவிட்ட இனமாக கருதப்பட்டிருந்தது. 1980-ல் 300 தாவரங்கள் மீண்டும் தென்னாப்பிரிக்காவின் மலைக்காடுகளில் கண்டுபிடிக்கபட்டு பின்னர் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. எனினும் 2005-ல் அது வெறும் 20 மட்டும் இருந்தது செய்தியான போதுதான் நான் அதைக் குறித்து அறிந்துகொண்டேன்.
2017-ல் 17 ஆக இருந்தன அவை பிறகு அபாயகரமாக 2020ல் உலகில் மூன்றே மூன்று என்னும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில்தான் டோன் அந்த பூங்காவில் பணியேற்றுக்கொண்டார். உடனடியாக அதைக் காப்பாற்றும் முயற்சியில் டோன் ஈடுபட்டார். மூன்றுதான் இருந்தன என்பதால் இயற்கை வாழிடங்களிலிருந்து அவற்றை எடுப்பது அவற்றின் அழிவுக்கு கரணமாகலாம் எனவே லண்டன் கியூ விதை வங்கியிலிருந்த அதன் 90 விதைகளை தருவித்து அதை பல சவால்களுக்கிடையில் வெற்றிகரமாக நூற்றுக்கணக்கில் வளர்த்து, மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் அறிமுகப்படுத்தி டோன் அதைக் காப்பாற்றினார். இப்படி ஏராளமான தாவரங்களை டோன் அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.
இந்த Species recovery என்பது மிக மிகச் சவாலான ஒன்று. ஆனால் டோன் 1.7 ஹெ பரப்பளவு இருக்கும் இந்தச் சிறிய பூங்காவில் தென்னாப்பிரிக்காவின் அழிந்துகொண்டிருக்கிற, அபாயத்தின் விளிம்பிலிருக்கிற சிவப்புப்பட்டியலிடப்பட்ட தாவரங்களில் 40 சதவீதத்தை காப்பாற்றி அந்தப் பூங்காவில் வளர்த்திருதார். கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஒரு சிறு குழுவினருடன் தென்னாப்பிரிக்காவின் மிக ஆபத்தான, செங்குத்தான, கரடுமுரடான ஜோங்கெர்ஷோக் மலைத்தொடரில் தென்னாப்ரிக்கவின் கேப் பகுதிக்கு சொந்தமான, உலகில் ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த Penaea formosa என்னும் தாவரத்தை தேடி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 51 வயதான டோன், கால் இடறி மலையிலிருந்து விழுந்து இறந்தார்.
இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரைக்கும் அவர் உடல் கிடைத்ததாக தகவல்களில்லை. எப்பேர்ப்பட்ட இழப்பு .
He slipped, fell, and did not return.
இப்படி வாசித்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரிய தாவரங்களின் புகைப்படங்களையும். அவரது களப்பணியையும், அரிய தகவல்களையும் டோன் பகிரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின் தொடர்ந்த 1500 பேர்களில் நானும் ஒருத்தி.
பூபதி
டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு. இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு.
இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோனும் பூபதியும் எதை மிக முக்கியமானது எனக் கருதினார்களோ அதைச் செய்து கொண்டிருக்கையிலேயே உயிரிழந்தார்கள். இப்படித் தீவிரமான அர்ப்பணிப்புடன் உயிரினங்களை நேசிப்பவர்கள் உயிருடன் இருக்கும் போது உலகம் அவர்களை அறிந்து கொள்வதே இல்லை. டோனோவனின் இறப்பை செய்திகளில் அறிந்துகொண்ட அன்று நான் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கும் தாவரவியல் துறை மாணவர்களிடம் அவரைப்பற்றி கேட்ட்டேன். ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை. அவர் இருந்ததும் இறந்ததும் யாருக்குமே தெரியவில்லை.
டோன் தான் நேசித்த தென்னாப்பிரிக்க மண்ணில், அழிந்துகொண்டிருந்த ஒரு தாவரத்திற்கான தேடலில் மறைந்திருக்கிறார். தென்னாப்பிரிக்காவின் தாவரச் செல்வத்தின் எதிர்காலம், ஒவ்வொரு சிறு விதையாக, ஒவ்வொரு அங்குல மண்ணாக, இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும் என அவர் திடமாக நம்பினார்
டோனோவன் இந்தப் பூங்காவின் பொறுப்பேற்றுக்கொண்ட போது இப்படிச் சொன்னார்.
“Most of all, I just want to get people to fall hopelessly in love with plants and nature.”
அவர் வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருந்ததைத்தான் செய்தியாகச் சொல்லிச்சென்றிருக்கிறார்.
சீனாவின் யுனான் மாகாணத்தில் 1371-ல் இஸ்லாமியரான ஹாஜி மா’ வுக்கும் வென்’னுக்கும் பிறந்தார் மா ஹெ.
மா என்பது முகமது என்பதின் சீனப்பெயர். இளம் மா, கன்ஃபூஷியஸ், மென்சியஸ் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை விரும்பிப் படித்தான். அவனது தந்தையும் சகோதரர்களும் சென்று திரும்பிய மெக்காவின் ஹஜ் புனித யாத்திரைகளைக் குறித்தும் உலகநாடுகள் குறித்தும் ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்வான். மாவிற்கு உலகைச்சுற்றிப்பார்க்கவேண்டும் என்னும் பேராவல் இருந்தது.
1381-ல் மா’விற்கு 11 வயதானபோது மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசர் ஹோங் வு’வின் ராணுவம் யுனான் பிரதேசத்தை தாக்கிக் கைப்பற்றியது. யுனானிலிருந்து மா உள்ளிட்ட ஏராளமான சிறுவர்கள் மிங் அரசவையில் அடிமைகளாகப் பணியற்ற பிடித்துச்செல்லப்பட்டார்கள்.
பண்டைய சீனத்தில் அரசரின் அந்தப்புரத்தில் இருந்த அவரது ஏராளமான மனைவியர் மற்றும் ஆசைநாயகிகளுக்கு பணிவிடைசெய்ய ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆணிலிகளைத்தான் அனுமதிப்பார்கள். ஆணிலிகளால் அந்தப்புரப் பெண்களுக்கு வாரிசு உண்டாகும் வாய்ப்பில்லை என்பதால் எதிர்காலத்தில் அரசரின் வாரிசுகளுக்கு போட்டியாக வேறு குழந்தைகள் உருவாகாமல் இருக்க இப்படிச் செய்யப்பட்டது. அப்படி மா’வும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு அந்தப்புரத்தில் பணியமர்த்தப்பட்டான்.
மா மிகக் கடினமாக உழைக்கும் சிறுவனாக இருந்தது பேரரசரின் கவனத்துக்கு வந்தது. அவர் மா’வுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆணையிட்டார். மா பிற்பாடு இளவரசர் ஜு டி-யின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மங்கோலியர்களுக்கெதிரான பல போர்களில் அவருடன் இருந்து அவரைப் பாதுகாத்தார். பின்னர் இளவரசர் ஜு டி மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசரான பின்னர், பதவி உயர்வு பெற்று ஜெங் என்னும் அரசவைப் பெயரிடப்பட்டு மா ஹெ ஆக இருந்தவர் ஜெங் ஹெ ஆனார். (“Zheng” He)
ஏராளமான அதிகாரங்கள் கொண்டிருந்த ஜெங் ஹெ அரண்மனைக் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுமானங்களில் புகழ்பெற்றவரானார். சீனாவின் மாபெரும் கப்பற்படையை அவர் உருவாக்கினார். ஒரே சமயத்தில் இணையாக பல கப்பல்கள் இணைந்து செல்லும் கப்பற்தொகுதிகளில் 7 மாபெரும் கடற்பயணங்களை 1405-லிருந்து 1433 வரை ஜெங் ஹெ ஒருங்கிணைத்தார். செல்வங்களைத் தேடிச்செல்லும் 62 பொக்கிஷக்கப்பல்கள் உள்ளிட்ட நான்கு அடுக்குகள் கொண்ட 208 மரக்கப்பல்களில் 27800 வீரர்கள், அறிஞர்கள் உடைமைகளுடன் அவரது கப்பற்படை புறப்பட்டது.
உலகின் மிக முக்கியமான பிரதேசங்களுக்கு சென்று திரும்பிய அக்கப்பல்களில் ஜெங் ஹெ உணவு, மசாலாப்பொருட்கள், உடை மேலும் பல வினோதப்பொருட்களை ஏராளமாகக்கொண்டு வந்து மன்னருக்கு அளித்தார். அவரது கடற்பயணங்களின் நோக்கம் போரோ, நாடுகளை கைப்பற்றுதலோ அல்லாமல் புதியபொருட்களை சேகரிப்பதும், வணிகமுமாக இருந்ததால் சென்ற அனைத்து இடங்களிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது. தென்கிழக்காசியாவுக்குச் சென்ற அவரது ஒரு கடற்பயணத்தில் தனித்தனித் தீவுகளில் இருந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மிக வினோதமான ஒரு உணவுப்பொருளைப் பரிசளித்தார்கள்.
அத்தீவுகளில் நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவுப்பொருளான அது பறவைகள் எச்சிலால் கட்டும் சிறு கிண்ணம் போன்ற உண்ணக்கூடிய கூடுகள்.
அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன. சின்ன உழவாரப்பறவைகள் (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின. மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின் புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.
அரண்மனைச்சமையல்காரர்கள் அந்தப் பறவைக் கூட்டை கண்ணாடிபோல மின்னும் சூப்பாக செய்துகொடுத்து அதன் சுவையில் மயங்கிய இளம் பேரரசர் அப்பறவைக்கூடு உணவை அரச குடும்பத்துக்கான பிரத்யேக உணவாக அறிவித்தார். அப்போதிலிருந்து பறவைக் கூடு சூப் செல்வச் செழிப்பு, ஆரோக்கியம், நீளாயுள் மற்றும் புத்தம்புதிய சுவையின் அடையாளமானது. சமூகத்தின் மேல்தட்டு மக்களும் அதை சுவைக்கத்தலைப்பட்டனர். இந்த பறவைக்கூடு ஆயுளை அதிகரித்து ஆற்றல் அளிக்கும் என்பதோடு பாலுணர்வைத் தூண்டும் என்னும் கதையும் சேர்த்துப்பரப்பி விடப்பட்டபோது அதற்கான தேவை மிக அதிகமாகியது.
ஆறு நூற்றாண்டுகள் கடந்தும் அந்த உணவின்மீதான விருப்பம் இன்றும் உலகெங்கிலும் தொடர்கிறது.
இந்தக்கூடுகளை உருவாக்கும் சின்ன உழவாரன்கள் தெற்காசியா, ஓசியானியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இந்திய சின்ன உழவாரன் (Aerodramus unicolor) இந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. கூட்டமாக குகைகளில் வாழும் இவை கூட்டமாக அதிகாலை வெளியே சென்று மாலை அந்தி சாய்கையில் கூடு திரும்பும் தினசரி ஒழுங்கைக்கொண்டவை.
தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளின் சுண்ணாம்புக்குகைகளில் இந்த சின்ன உழவாரன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.
உலகின் மிகப்பழமையான மழைக்காடுகளுக்கும் ஒராங்குட்டான் உள்ளிட்ட விதம் விதமான வன உயிரினங்களுக்கும் பெயர்பெற்ற உலகின் மூன்றாவது பெரிய தீவான தென்கிழக்காசியாவின் போர்னியோ தீவுகளில் மாபெரும் கோமந்தோங் சுண்ணாம்புக் குகைளின் உச்சியில் இந்தப்பறவைகள் ஏராளமான கூட்டை அமைக்கின்றன.
அபோடிடே பறவைக் குடும்பத்தைச்சேர்ந்த Aerodramus, Collocalia, Hydrochous மற்றும் Schoutedenapus ஆகிய பேரினத்தைசேர்ந்த சின்ன உழவாரன் பறவைகளின் கூடுகளே இப்படி உணவாகப்பயன்படுகிறது. இவற்றின் ஏராளமான சிற்றினங்களில் 6 சிற்றினங்களின் கூடுகளே உணவாகப்பயன்படுகின்றன.
இந்த உழவாரப்பறவைகள் 9 லிருந்து 16 செ மீ நீளமும் 8 லிருந்து 35 கிராம் எடையும் கொண்ட சிறு உடல் கொண்டவை. இவற்றின் இறகுகள் மங்கலான கருமை, மண் நிறம் அல்லது சாம்பல் நிறம் கொண்டிருக்கும். குறுகிய இறகுகளும் குட்டைக்கால்களும் கொண்டிருப்பதால் இவற்றால் வேகமாக பறக்கவும் குகைகளின் ஆபத்தான சரிவுகளில் அமர்ந்து கூடு கட்டவும் முடிகிறது.
சின்ன உழவாரன் பறவைகள் காற்றில் பறக்கையிலேயே பூச்சிகளைப் பிடித்து உண்பதோடு இணைசேர்வதையும் உறங்குவதையும் காற்றில் பறக்கையிலேயே செய்கின்றன. இனப்பெருக்கக்காலத்தில் முட்டையிடத்தான் குகைகளில் இடம் தேடி வருகின்றன இப்பறவைகள்
சின்ன உழவாரன்கள் ஒலியை எதிரொலிக்கச்செய்வதின் மூலம் இருண்ட குகைகளின் உட்புறச் சுவர்களை உணர்கின்றன( echolocation)
வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் மட்டும் வாழும் இவற்றின் இனப்பெருக்கக்காலம் 92-120 நாட்கள். கூடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் பிற சின்ன உழவாரன்களின் கூடுகளிலும் இவை முட்டையிடும் வழக்கம் கொண்டிருக்கின்றன.
அடுக்கடுக்காக எச்சில் இழைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஆண் பறவைகளால் இந்தக்கூடு கட்டப்படுகிறது. சுமார் 30 நாட்களில் எச்சில் உலர்ந்து கெட்டியானபின் கூடுகளுக்குள் பழைய இறகுகளைக்கொண்டு வந்து வைத்து முட்டைகளுக்கு மென்மையான படுக்கையை ஆணும் பெண்ணுமாக உருவாக்குகின்றன. கூடு தயாரானவுடன் பெண் பறவை இரண்டே இரண்டு வெண்ணிற முட்டைகளை கூட்டினுள் இடுகிறது. ஆண் பெண் இருபறவைகளும் நாளொன்றுக்கு ஒருவர் என்னும் சுழற்சி முறையில் முட்டைகளை அடைகாக்கும்.
குஞ்சுகள் வளர்ந்து பறந்தபின்னர் இந்தக்கூடுகள் கைவிடப்படுகின்றன. ஒரே கூட்டில் சின்ன உழவாரன்கள் மறுமுறை கூடுகட்டுவதில்லை.
கைவிடப்பட்ட கூடுகளே சேகரிக்கப்படுகின்றன. கூடுகள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் இருக்கும்.
உலகின் மிக விலைகொண்ட உணவுகளில் ஒன்றான இந்தப்பறவைக்கூடு சூப்புக்காக மிக அதிகமாக சேகரிக்கப்படுவதும் மதிப்பு மிக்கதும் (Aerodramus fuciphagus), என்னும் உழவாரன்களின் வெண்ணிறக் கூடுகள்தான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக்கூடுகள் கிலோவுக்கு 1500-லிருந்து 200 டாலர்கள் விலையென்றால், ரத்தக்கூடு என்றழைக்கப்படும் சிவப்புநிறக் கூடுகளின் விலை 10000 டாலர்களாக இருக்கிறது. பறவைக்கூடு சூப் ஒரு கிண்ணம் 100 டாலர்களிலிருந்து 500 டாலர்வரை இருக்கிறது.
இந்த பறவைக்கூடுகள் அமைந்திருக்கும் குகைச்சுவற்றில் இருக்கும் இரும்புச்சத்து கூடுகளின் புரதங்களுடன் வினை புரிந்து சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது
கருப்பு உழவாரன் எனப்படும் (Aerodramus maximus), மற்றும் இந்திய சின்ன உழவாரனான (Aerodramus unicolor). ஆகியவற்றின் கூடுகளும் பிரதானமாக சேகரிக்கப்படுகிறது.
இம்மூன்றைத்தவிர மற்ற சின்ன உழவாரங்களின் கூடுகளில் குச்சிகள் இலைகள் போன்ற தாவரபாகங்களும் இருப்பதால் அவை சேகரிக்கப்பட்டாலும் தரம் குறைவானதாக கருதப்படுகின்றன.
இந்தப் பறவைக்கூடுகளை சேகரிப்பவர்கள் “busyadors,” எனப்படுகின்றனர். கடற்பறவைகளின் எச்சங்களின் கடும்நெடி நிரம்பியிருக்கும், உழவாரன்கள் கூடுகட்டியிருக்கும் குகைப்பகுதியில் ஆயிரக்கணக்கான சிறகடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உழவாரப்பறவைகள் குகையின் கூரைச்சுவற்றில் பொன் சரிகைப்பட்டுப்போல மினுங்கும் பிறை நிலவின் வடிவத்தில் இருக்கும் கையகலக் கூடுகளை அமைக்கின்றன.
ஆசியாவின் மிக ஆபத்தான பணியாகக்கருதப்படும் இந்தப் பறவைக்கூடு சேகரிப்பில் பலநூறு பேர் உயிரைப்பணயமாக வைத்து தலைமுறைகளாக ஈடுபட்டுவருகின்றனர்.
ஒரு பறவைக்கூடு சுமார் 14 கிராம் எடைகொண்டிருக்கும் .எனவே ஒரு கிலோ அளவுக்குக்கூடுகளைச் சேகரிக்கப் பலமணிநேரம் அவர்கள் இந்த ஆபத்தான வேலையை செய்யவேண்டி இருக்கும்
பலநூறு அடி உயரமுள்ள கூரைகளில் இருக்கும் கூடுகளைச் சேகரிக்க மூங்கில் கழிகளிலும் ஏணிகளிலும் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளில் தொங்கியபடி அடிதப்பினால் மரணம் நிச்சயம் என்னும் நிலையில் வெள்ளைத்தங்கம் எனப்படும் இந்தகூடுகள் சேகரிக்கப்படுகின்றன.
சின்ன உழவாரன்களின் இனப்பெருக்கக்காலம் துவங்கியதும் கூடுகளைச்சேகரிப்போர் கடவுளுக்கு காணிக்கைச் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி தங்கள் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வேண்டுதல்களைச் செய்வார்கள்.
குகையின் சுவர்களையும் கூட்டையும் கைகளால் தொடுவது கடவுளுக்கு கோபம் உண்டாக்கும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் திரிசூலம் போல மூன்று முனைகள் கொண்ட ராடா எனப்படும் ஒரு தடியையும் கையோடு எடுத்துச்சென்று அதைக்கொண்டுதான் கூட்டைச் சுவற்றிலிருந்து உரித்து எடுக்கிறார்கள். சூலம் போன்ற ராடா தடி கடவுளாக உடனிருந்து அவர்களை காப்பாற்றும் எனவும் நம்புகிறார்கள்.
இத்தனை ஆபத்து இருந்தும் தவறமல் திரும்பத் திரும்ப இவர்கள் பறவைக்கூடுகளை உயிரைப் பணயம் வைத்து சேகரிப்பது பறவைக்கூடுகளுக்கிருக்கும் சந்தை மதிப்பினால்தான்.
சேகரித்த கூடுகளைச் சுத்தம் செய்வது அடுத்த கட்ட கடினமான பணி. கூடுகளை நீரில் ஊறவைத்து மிருதுவாக்கியபின்னர் ஊசிகளால் அதில் ஒட்டியிருக்கும் இறகுப்பிசிறுகளும் அசுத்தங்களும் பிரித்தெடுக்கப்படுகிறது.
பறவைக்கூட்டில் சுமார் 62% புரதம் 27% மாவுச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின்கள், சில கனிமங்கள் கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவை இருக்கிறது.
மிக அதிகவிலைக்கு விற்கப்படும் எல்லா உணவுப்பொருட்களையும் போலவே இதிலும் கலப்படங்களும் போலிகளும் இருக்கிறது. கடற்பாசிகள் சில பூஞ்சைக்காளான்கள் மற்றும் சில மரப்பிசின்களைச் சேர்த்து பறவைக்கூடு சூப் எனச்சொல்லி பிரபல உணவகங்களில் கூட ஏமாற்றுகிறார்கள்.
தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவின் கடற்கரையோரங்களில் கான்கிரீட் கட்டிடங்களின் மொட்டைமாடிகள் முழுக்க தகடுகளால் மூடி இருட்டாக்கி, பறவை நுழைய சிறு கீறல்கள் மட்டும் உண்டாக்கி பதிவு செய்யப்பட்ட பறவைக்குரலை எப்போதும் ஒலிக்கச்செய்து சின்ன உழவாரப்பறவைகளை அங்கு வந்து கூடுகள் கட்டச்செய்யப்படுகிறது. இந்த வீட்டுக்குகைகளில் கூடுகளை சேகரிப்பது, குகைகளில் சேகரிக்கும் ஆபத்தை இல்லாம்லாக்குகிறது.
வீட்டு உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது எனினும் அகற்றவே முடியாத பறவை எச்சங்களின் கடும் நெடியும் தொடர்ந்து கேட்கும் அவற்றின் குரலும் பெரும் தொந்தரவாகத்தான் அனைவருக்கும் இருக்கிறது.
பறவைகளால் வரும் நோய்கள் மக்களுக்கு இதனால் வெகுஎளிதில் பரவும் அபாயம் இருப்பதாக பறவையியலாளர்கள் தொடர்து எச்சரித்தவண்ன்ணம் இருக்கிறார்கள், ஆனால் குகைகளில் சேகரிக்கப்படும் கூடுகளுக்கு கிடைக்கும் அதே விலை, கட்டிடங்களில் எடுக்கப்படும் கூடுகளுக்கும் கிடைப்பதால் மேலும் பலர் இந்தக் கூடுகளை அவரவர் வீடுகளில் அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தப்பறவைக்கூடுகளின் தேவை மிக அதிகரித்திருப்பதால் முட்டைகள் இருக்கும், பறக்கமுடியாத இளம் குஞ்சுகள் பாதுகப்பாக இருக்கும் கூடுகளும் சேகரிக்கப்படுவதால் சின்ன உழவாரன்களின் எண்ணிக்கை அபாயகரமாக குறைந்து வருவதாகவும், கூடுகளைச் சேகரிப்போர் சந்திக்கும் ஆபத்துகள் மனித உரிமை மீறல்கள் எனவும் பறவைக்கூடு சூப்பின் பயன்களாகச் சொல்லப்படுபவைகளைக்காட்டிலும் தாவரசூப்களில் அதிக ப்பயன்கள் உள்ளது என்னும் கருத்துக்களும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன.
எச்சசரிக்கைகளும் கண்டனங்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தாலும் பறவைக்கூடு சேகரிப்பும் அதன்தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
மலேஷியாவில் மட்டும் சுமார் 60000 பேர் இநந்தப்பறவைக்கூடு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மலேசிய அரசு இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருப்போருக்கு கடனுதவிகளும் வழங்குகிறது.,
இத்தொழிலில் தலைமுறைகளாக ஈடுபட்டிருக்கும் மலேசியப்பழங்குடியினர் பத்து வருடங்களுக்கொருமுறை சீட்டுக்குலுக்கிப்போட்டு அடுத்த பத்து வருட ஒப்பந்ததாரரை முடிவு செய்கிறார்கள். இப்போது சீன முதலாளிகள் குகைகளை பெருந்தொகைக்கு ஏலம் எடுப்பதால் இதை நூற்றுக்கக்கான வருடங்களாக வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பழங்குடியினர் பாதிப்படைந்திருக்கிறார்கள். பெருந்தொகைக்கு குகைகள் ஏலம் எடுக்கப்படுகின்றன. ஏலம் எடுத்த முதலாளிகள் ஆயுதமேந்திய காவலர்களைக்ளைக்கொண்டு குகைகளைப் பாதுகாக்கின்றன்ர்.
பல லட்சங்கள் புழங்கும் இந்த பறவைக்கூடு தொழில் போட்டியில் கொல்லப்பட்டவர்கள், குகைகளில் தொங்கிக்கொண்டு கூடு சேகரிப்பில் இருக்கையில் உயிரிழப்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் வெளிஉலகிற்கு தெரிய வராமல் மறைக்கப்படுகிறது..
இந்தப் பறவைகூடு உணவு வீடுகளில் சூடுபடுத்தி அருந்தும் திரவ வடிவில் பாட்டில்களிலும், உலர் பொடியாகவும் இருவிதங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்தப்பட்ட கூடுகள் அப்படியேவும் விற்பனையாகின்றன.
உணவாக மட்டுமல்லாமல் இவற்றின் சருமத்தைப்பாதுகாக்கும் இயல்புகளால் அழகுசாதனப் பொருள் தயாரிப்பிலும் இக்கூடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு சுமார் 200 டன் பறவைக்கூடுகள் உலகின் பலபாகங்களிலும் உண்ணப்படுகிறது. இதில் ஹாங்காங்கின் அளவே மிக அதிகம்.
ஜின்செங் மற்றும் சர்க்கரை கலந்து எளிதாகத் தயாரிக்கப்படும் இந்த சூப் இளமையை தக்கவைத்து ஆற்றலை அதிகரித்து சருமப்பொலிவுக்கும் கண்பார்வை கூர்மைக்கும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.
இந்தோனேஷியா வருடத்திற்கு 2000 மெ டன் பறவைக்கூடுகளைச் சேகரித்து உலகின் முதல் இடத்திலும் தொடர்ந்து 600 டன் சேகரிக்கும் மலேசியாவும் மூன்றாம் இடத்தில் 400 டன் தாய்லாந்தும் இருக்கிண்றன.
இனி பறவைக்கூடு சூப்பை அருந்தும் வாய்ப்பு கிடைத்தால், மேசையில் நம் முன்பு கிண்ணத்தில் கண்ணாடி போல இருக்கும் அந்தத் திரவம் விலையுயர்ந்த ஒரு உணவு மட்டுமல்ல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜென் ஹெ பயணித்த பொக்கிஷ கப்பல்களின் மீது போதிய அலைகளின் ஓசை, உயிரைப்பணயம் வைத்து கயிற்றில் தொங்கிக்கொண்டு கூடுகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களின் நிழல், இதன் பட்டுப்போன்ற நூழிலைகள் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் நீட்டிக்கும் என் பேரரசர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இவை எல்லாம் கலந்த கலவைதான் அது என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்.
இரண்டடுக்குகளுடன் ஒரு மாபெரும் தீவைப்போலிருந்த HMS எண்டேவர் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் மிதமான வேகத்தில் தஹிதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இங்கிலாந்தின் பிளைமவுத் துறைமுகத்திலிருந்து கப்பல் புறப்பட்டு 12 நாட்கள் ஆகி இருந்தது.
HMS எண்டேவரில் கேப்டன் ஜேம்ஸ் குக்கின் அந்த முதல், அறிவியல் மற்றும் ஆய்வுகளுக்கான முக்கியமான பயணம் 1768 முதல் 1771 வரை திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணத்திற்கு வெளிப்படையான மற்றும் இரகசியமான நோக்கங்கள் இருந்தன. இந்தப்பயணத்துக்கான பல ரகசியக்கடல் வழிகளை குக் மட்டுமே அறிந்திருந்தார்.
இந்தப் பயணத்தின் அதிகாரப்பூர்வ நோக்கம் 1769-ம் ஆண்டு வீனஸ் கோள் சூரியனை கடந்து செல்லும் நிகழ்வை (transit of Venus) பசிபிக் கடலின் நடுவில் உள்ள தஹிதி தீவிலிருந்து பார்ப்பது. இந்த நிகழ்வைப் பூமியின் பல்வேறு இடங்களிலிருந்து ஒரே நேரத்தில் பார்ப்பதன் மூலம், பூமியிலிருந்து சூரியனுக்கான தூரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியும் என அறிவியலாளர்கள் நம்பினர்.
இந்த நிகழ்வை முடித்தபிறகு, தெற்கு நோக்கிப் பயணித்து, அப்போது நில வரைபடங்களில் இல்லாத, ‘டெரா ஆஸ்ட்ராலிஸ் இன்காக்னிட்டா’ (Terra Australis Incognita) என்று அழைக்கப்பட்ட பெரிய தெற்கு நிலப்பரப்பை குக் தேட வேண்டும் என்று பிரிட்டிஷ் அரசு அவரிடம் ரகசியமாகக் கூறியிருந்தது. அப்படி ஒரு நிலப்பரப்பைக் கண்டால், அதன் கடற்கரைகளை வரைபடமாக்கி, அங்குள்ள மக்களைப் பற்றி ஆய்வு செய்து, பொருத்தமான இடங்களை இங்கிலாந்திற்காக உரிமை கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
கப்பல் மறுநாளிலிருந்து வேகமெடுக்கும் என்னும் அறிவிப்பைத் தொடர்ந்து முந்தைய நாள் அவர்கள் புதிதாகக் கண்டடைந்த தீவு குறித்த விவரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்னும் சத்திய பிரமாணத்தை கப்பலில் இருந்த 95 பேரும் எடுத்துக் கொண்டார்கள். பிறகு மதிய உணவுக்காக அனைவரும் கூடினார்கள்.
வழக்கமாக உணவுண்ணும் கீழ்த்தளத்து உணவுக்கூடத்திலல்லாமல் கப்பலின் கமாண்டர் ஜேம்ஸ் குக் ஆணையிட்டபடி அன்று கப்பலின் மேல் தளத்தில் திறந்த வெளியில் மேசைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலுமிகளுக்கும் பிற அதிகாரிகளுக்குமான மேசைகள் நடுவிலும், அதைச்சுற்றி நீள் வட்ட வடிவில் மற்றவர்களுக்கான மேசைகளும் போடப்பட்டிருந்தன. அவரவருக்குத் தேவையான உணவை எடுத்துக்கொண்டு அமர்ந்த பின்னர் கமாண்டர் குக் தலைமை சமையைல்காரரை அழைத்து ’’அதைக் கொண்டு வந்து அதிகாரிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மட்டும் பரிமாறுங்கள்’’ என்று சொன்னதும் அழகிய சிறு தட்டுகளில் புளித்த முட்டைகோஸான ’சாவெர்கிராட்’ பரிமாறப்பட்டது.
குக் அதைச் சுவைத்துப் பார்த்து விட்டு உரத்த குரலில் ’’ஆஹா! என்ன அற்புதமான சுவை’’ என்று பாராட்டினார். அதைச் சாப்பிட்ட அனைவருமே அதன் சுவையையும் அதனால் உண்டாகவிருக்கும் உடல் நலனையும் வெகுவாகப் பாராட்டினர்.
மற்ற வீரர்களும் பயணிகளும் அதைக் கவனித்தும் கவனிக்காதது போல இருந்தனர். ஒருவாரத்தில் அந்தப் புளித்த முட்டைகோஸ் உணவான ’சாவெர்கிராட் அந்தக் கப்பலில் இருக்கும் உயரந்தஸ்து கொண்டவர்களுக்கானது என்பது கப்பல் முழுக்க பேசு பொருளானது.
சில நாட்களுக்குப் பிறகு ஒரு வீரர் மட்டும் குக்கிடம் எனக்கும் ’சாவெர்கிராட்டைத் தருவீர்களா என்று கேட்டார். குக் மிகவும் சலித்துக் கொள்வதுபோல் பாவனை செய்து ’’பொதுவாக இந்த ஆற்றல் அளிக்கும் உணவு உயரதிகாரிகளுக்கு மட்டும் தான் இருந்தாலும் நீ கேட்பதால் கொஞ்சம் தரச் சொல்கிறேன்’’ என்று அவனுக்கு அதைக் கொடுக்கச் சொன்னார். கப்பலில் அவனுடைய மரியாதை கிடு கிடுவென உயர்ந்தது. ’சாவெர்கிராட் உண்பது உயரதிகாரிகளுக்கிணையான அந்தஸ்தை அளிப்பது என்னும் எண்ணம் உருவாகி வளர்ந்து அனைவரும் அதைச் சாப்பிட விரும்பிக் குக்கிடம் வேண்டிக்கொண்டார்கள். பின்னர் ’சாவெர்கிராட் அனைவருக்கும் அன்றாடம் அளிக்கப்பட்டது.
அந்த மாபெரும் கப்பல் புறப்படுகையில் அதில் 8000 பவுண்டு ’சாவெர்கிராட்’ (sauerkraut) எனப்படும் நொதித்த முட்டைக்கோஸ் அடைக்கப்பட்டிருந்த பீப்பாய்கள் ஏற்றப்பட்டிருந்தன. பல காரணங்களால் அதைச் சாப்பிட விரும்பாத பிரிட்டிஷ் வீரர்களை, அதை விரும்பிச் சாப்பிட வைக்கத்தான் கமாண்டர் ஜேம்ஸ் குக் இந்த நாடகத்தை நடத்தினார்.
18 -ம் நூற்றாண்டு கடற்பயணிகளுக்கு நீண்ட கால கடற்பயணத்தில் சத்தான புதிய காய்கறி மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளின் பற்றாக்குறையால் ஸ்கர்வி எனப்படும் வைட்டமின் சி குறைபாட்டால் உண்டாகும் நோய்த் தொற்று தவிர்க்க முடியாததாக இருந்தது.
வைட்டமின் சி குறைபாடு நீண்ட நாட்களுக்கு நீடித்தால் இந்த நோய் வரும். பழங்காலத்தில், நீண்ட கடல் பயணங்களுக்குச் செல்லும் மாலுமிகளுக்கு இது ஒரு பொதுவான மற்றும் ஆபத்தான நோயாக இருந்தது. ஏனெனில், நெடுங்காலம் கடலில் பயணிக்கும் அவர்களின் உணவில் புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் இருக்காது.
மனித உடல் வைட்டமின் சி-யை தானாக உற்பத்தி செய்யாது. எனவே, வைட்டமின் சி-யை உணவின் மூலம் மட்டுமே பெற முடியும். வைட்டமின் சி, கொலாஜன் (collagen) என்ற புரதத்தை உற்பத்தி செய்ய மிகவும் முக்கியமானது. இந்தக் கொலாஜன் மனிதர்களின் தோல், ஈறுகள், இரத்த நாளங்கள் மற்றும் எலும்புகள் போன்ற இணைப்புத் திசுக்களுக்கு ஒரு முக்கியமான கட்டுமானப் பொருளாகும்.
வைட்டமின் சி குறைபாடு ஏற்படும் போது, கொலாஜன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்த திசுக்கள் பலவீனமடைகின்றன. இதுவே ஸ்கர்வி நோய்க்கு வழிவகுக்கிறது.
கண்கள் பிதுங்கி, சருமம் செதில் செதிலாக உரிந்து ரத்தம் கசிந்து, கேசம் வறண்டு போவது ஆகியவை ஸ்கர்வியின் விளைவுகள். நூற்றண்டுகளாகக் கடல் போரிலும். கப்பல் விபத்துகளிலும், கப்பலில் பரவும் பிற நோய்களிலும் இறந்தவர்களைக் காட்டிலும் ஸ்கர்வியினால் இறந்தவர்களே அதிகம்.
பல காலமாக மாலுமிகள் கப்பலில் திரியும் எலிகளைப் பிடித்துச் சாப்பிட்டு எலியின் உடம்பில் தானாகவே உருவாகி இருக்கும் வைட்டமின் சி யை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவியலாளர் மற்றும் வரைபட நிபுணரான ஜேம்ஸ் குக் ஸ்கர்விக்குத் தீர்வு காணத்தான் வைட்டமின் சி உள்ளிட்ட பல சத்துக்கள் அடங்கிய, நெடுநாட்களுக்கு சேமித்து வைக்கக்கூடிய ’சாவெர்கிராட்’ எனும் முட்டைக்கோஸ் உணவைக் கப்பலில் ஏராளமான பீப்பாய்களில் கொண்டு வந்திருந்தார்.
அந்தக் கடற்பயணத்தில் கேப்டன் குக்கிற்கு பிரச்சனையாக இருந்தது ஸ்கர்வி மட்டுமல்ல ’தார்கள்’ என அழைக்கப்பட்ட பிரிட்டிஷ் கடற்படை வீரர்கள் (தார்பாலின் துணிகளாலான ஆடைகளை இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அணிவதால் அவர்கள் அப்பெயரில் அழைக்கப்பட்டனர்) தாங்கள் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிடக் கூடாது என்பதில் மிகப் பிடிவாதமாக இருந்ததும் அவருக்குப் பெரும் தலைவலியாக இருந்தது.
பிரிட்டிஷ் வீரர்கள் அவர்களின் வழக்கமான உணவான செங்கல்லின் அளவு கொண்ட, மிகக்கடினமாக இருக்கும் பிஸ்கெட்டுக்களையும் உப்பிலிட்ட பன்றி இறைச்சியையும் மட்டுமே சாப்பிட்டார்கள்.
ஜெர்மெனி பாணியிலிருந்த முட்டைக்கோஸ் ஊறுகாயான ’சாவெர்கிராட்’டை சாப்பிடுவதில் அவர்களனைவருக்கும் விலக்கமும், புதிய உணவான அதைக் குறித்த சந்தேகமும் இருந்தது . அவர்களில் பலருக்கு ஸ்கர்வி தொற்று உருவாகி இருந்தாலும் அந்த விநோதமான, கடும் நெடிகொண்ட முட்டைக்கோஸை சாப்பிடுவதைக் காட்டிலும் ஸ்கர்வியின் பாதகங்களே பரவாயில்லை என்னும் மனநிலையில் இருந்தார்கள்.
நேரடியாக ’சாவெர்கிராட்’டை சாப்பிடச்சொல்லி ஆணையிட்டால் அவர்கள் மறுத்து ஒரு கிளர்ச்சியோ, எதிர்ப்போ கப்பலில் உண்டாவதற்கான சாத்தியங்களை அறிந்திருந்த கேப்டன் குக் இந்த உளவியல் நாடகத்தை நடத்தி அனைத்து வீரர்களும், ’சாவெர்கிராட்’டை சாப்பிடும்படி செய்தார்.
கட்டாயப்படுத்தியிருந்தால் தண்டனையாகிப் போயிருக்கும் விஷயத்தைக் குக் பெருமைக்குரியதொன்றாக மாற்றிவிட்டார். அந்தப்பயணம் முழுக்கவே ஸ்கர்வியை குணமாக்கும் வைட்டமின் சி கொண்டிருக்கும் அந்த உணவு அனைவருக்கும் அன்றாடம் வழங்கப்படுவதை குக் உறுதி செய்தார் அதன் விளைவு அற்புதமாக இருந்தது. மூன்றாண்டுகள் நீடித்த அந்த முதல் கடற்பயணத்தில் ஒரே ஒருவர் கூட ஸ்கர்வியினால் இறக்கவில்லை.
இதுமட்டுமல்லாது குக் கப்பலில் சுத்தம் பேணப்படுவதற்கும் மிகவும் முக்கியமளித்தார் போர்வை உள்ளிட்ட படுக்கையறைத் துணிகள் அவ்வப்போது வெயிலில் உலர்த்தப்படுவதை குக் கட்டாயமாக்கியிருந்தார்.
சாவெர்கிராட் மட்டுமல்லாமல் இறைச்சிப்பசையை கலந்து தயாரிக்கும் உடனடி சூப், பார்லிச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச் சாறு ஆகியவற்றையும் அன்றாட உணவில் இடம்பெறச்செய்திருந்தார். எந்தத் தீவில் கப்பல் நின்றாலும் அங்கிருந்து புத்தம் புதிய காய்கறிகள் கிழங்குகள், பழங்கள் மற்றும் இறைச்சியை முடிந்தவரை கப்பலில் ஏற்றிக்கொண்டார் குக்.
குக் தனது கப்பலில் இருந்தவர்களின் உடலாரோக்கியத்தை சாவெர்கிராட் அளித்துப் பாதுகாப்பது குறித்த ஒரு ஆய்வறிக்கையை லண்டன் ராயல் சொசைட்டிக்கு சமர்ப்பித்தார். நூற்றாண்டுகளாக இருந்து வந்த, பல லட்சம் மாலுமிகளின் உயிரைக் காவு வாங்கிய ஸ்கர்வி நோய்க்கு இந்த எளிய நொதித்த முட்டைகோஸைக் கொண்டு கேப்டன் குக் தீர்வு கண்டதற்காக அவருக்கு லண்டன் ராயல் சொசைட்டியின் அறிவியல் சாதனைகளுக்காக அளிக்கப்படும் பிரசித்தி பெற்ற ’கோப்லே பதக்கம்’ அளிக்கப்பட்டது. சார்லஸ் டார்வின் மற்றும் ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் ஆகியோரும் இந்த விருது பெற்றிருக்கிறார்கள்.
எனினும் ஸ்கர்வியை சாவெர்கிராட் குணப்படுத்தும் என்பதைக் கண்டுபிடித்தது கேப்டன் குக் அல்ல. நூற்றாண்டுகளாகவே ஸ்கர்விக்கான தீர்வுகளுக்கு ஆய்வுகள் நடந்தவண்ணமிருந்தன.
1622-ல் கடலாய்வாளர் ரிச்சர்ட் ஹாக்கின்ஸ் ’’ஸ்கர்வியை எலுமிச்சை குணப்படுத்தும், யாரேனும் இதை ஆராய்ந்து எழுதலாம்’’ என்று தெரிவித்திருந்தார்.
ஒரு நூற்றாண்டு கழித்து 1730-களில் அரசுக் கடற்படையில் மருத்துவ உதவியாளராகப் பணியாற்றிய ஜேம்ஸ் லிண்ட்’தான் ஸ்கர்விக்கு தீர்வளித்தார். 1742-ல் ஸ்கர்வியினால் பாதிக்கப்பட்டிருந்த 12 கடற்பயணிகளுக்கு தொடர்ந்து வைட்டமின் சி இருக்கும் உணவுகளைக் கொடுத்து அவர்கள் குணமானதை ஆதாரத்துடன் லிண்ட் நிறுவினார். 1753-ல் அவரது ஆய்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு லிண்ட் எழுதிய , A Treatise on the Scurvy, என்னும் நூல் வெளியானது என்றாலும் அந்த வழிமுறைகளை யாரும் பின்பற்றவில்லை. அதை ஜேம்ஸ் குக் முயற்சி செய்யவே மேலும் இருபதாண்டுகள் ஆயின.
கடற்பயண நோய்களுக்கான சிகிச்சை உணவுகளில் கேப்டன் குக் அறிமுகம் செய்த இந்தப் புளித்த முட்டைக்கோஸான சாவெர்கிராட் பின்னர் வெகுவாகப் பிரபலாமானது.
கேப்டன் குக் உண்மையில் இந்த சாவெர்கிராட் ஸ்கர்வியை குணப்படுத்தும் என்பதை அறிவியல் ஆய்வுகளின் அடிப்படையில் செய்திருக்கவில்லை. பயணிகளின் நல்வாழ்வில் அவருக்கிருந்த அக்கறையினால் தான் இதை அவர் செய்தார். அதன் பிறகு சாவெர்கிராட்டில் பல ஆய்வுகள் நடந்து அதன் பல பயன்கள் வெளிச்சத்துக்கு வந்தது. பிரிடிஷ் கடற்படையிலிருந்தே ஸ்கர்வி முற்றிலும் நீங்கியது
ஐரோப்பாவையும் அண்டோலியா தீபகற்பத்தையும் சேர்ந்ததுதான் முட்டைக்கோஸ் என்றாலும் ஜெர்மானிய மொழியில் புளித்த முட்டைக்கோஸ் என்று பொருள் படும் சாவெர்கிராட் (sauer -sour -kraut -cabbage)) ஐரோப்பிய உணவல்ல. இதன் வரலாறு சீனாவிலிருந்து தொடங்குகிறது.
2500 வருடங்களுக்கு முன்னர் சீனப்பெருஞ்சுவரை உருவாக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கடுங்குளிர் காலத்திலும் உணவைச் சேமிக்க முட்டைக்கோஸை உப்பிலிட்டு ஊறவைத்த ஊறுகாயைக் கண்டுபிடித்தார்கள். சீனாவுக்குள் ஊடுருவிய செங்கிஸ்கானின் படையில் இருந்த மங்கோலிய நாடோடிகள் இந்த ஊறுகாயை அரிசி மதுவிலிருந்து தயாரித்த வினிகரில் ஊற வைத்து மேலும் பல மாதங்களுக்கு முட்டைகோஸ் கெட்டுப் போகாமலிருக்கும் வழியைக் கண்டறிந்தார்கள்.
ரோமானியர்களும் மத்திய ஐரோப்பாவைச் சேர்ந்த ‘செல்ட்ஸ்’ (Celts) பழங்குடிச் சமூகத்தினரும் ஐரோப்பா முழுவதும் இந்தப் புளித்த முட்டைக்கோஸை அறிமுகம் செய்தார்கள். 13-ம் நூற்றாண்டில் மங்கோலிய சாம்ராஜ்யம் ஐரோப்பாவுக்குள் விரிந்த போது பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்ட பொருட்களில் அரிசி மதுவின் வினிகரில் ஊற வைத்த முட்டைக்கோஸ் ஊறுகாயும் இருந்தது.
அறிமுகமானதோடு கிழக்கு ஐரோப்பியர்களின் உணவிலும் இது முக்கிய இடம் பிடித்தது. இந்த முட்டைக்கோஸ் ஊறுகாயை ஊற வைக்க அரிசி மது வினிகர் ஐரோப்பாவில் அச்சமயத்தில் இல்லாததால் லேக்டிக் அமில நொதித்தலுக்கு அதை உட்படுத்தி மேலும் காரமானதாகக் கடும் நெடி கொண்டதாக அதை மேம்படுத்தி இப்போதிருக்கும் இந்த சாவெர்கிராட் வடிவம் ஐரோப்பாவில் கண்டறியப்பட்டது.
இந்த சாவெர்கிராட் இலையுதிர் காலத்தில்தான் ஐரோப்பாவில் தயாராகிறது. கோடைக்காலம் முடிகையில் முழுக்க அறுவடையாகி இருக்கும் முட்டைக்கோஸ்கள் சாவெர்கிராட் ஆகக் குறுகிய காலத்திலேயே தயாரிக்கப்பட்டு பின்னர் மாதக்கணக்கில் ஊறிக் கொண்டிருக்கும்.
ஐரோப்பியர்கள் காய்கறிகள் கிடைக்காத குளிர்காலத்திற்கான உணவாகவும், அந்தப் பருவம் முழுவதும் ஆற்றல் அளிக்கும் சுவையான உணவு தடையின்றி கிடைக்கவும் நொதித்தலுக்கு உட்படுத்தப்பட்ட, நீடித்த அலமாரிவாழ்வு கொண்டிருந்த இந்த சாவெர்கிராட்டையே பிரதானமாக நம்பி இருந்தார்கள். 1960-களிலிருந்து ஜெர்மனியின் பிரதான உணவாக ஆகிவிட்டிருக்கும் சாவெர்கிராட் அங்கு சூப்பர் உணவுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
உலகப்போரின்போது ஜெர்மானியப் போர்க்கப்பல்களில் சாவெர்கிராட் எப்போதும் நிறைத்துக் கொண்டு வரப்பட்டதால் ஜெர்மானிய வீரர்களின் செல்லப் பெயராகவே ’க்ராட்’ என்பது இருந்தது. சாவெர்கிராட் என்னும் ஜெர்மானியப் பெயரால் அமெரிக்க வீரர்கள் இதை விரும்பாமல் போகக் கூடுமென்பதால் முதலாம் உலகப்போரின்போது சாவெர்கிராட் அமெரிக்கர்களுக்கு ’லிபர்டி முட்டைக்கோஸ்’ என்னும் பெயரில் அளிக்கப்பட்டது.
ஐரோப்பியக் குடியேறிகளால் 18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவுக்கு அறிமுகமான இந்த சாவெர்கிராட் இப்போதுவரை அமெரிக்க உணவுகளில் மிக முக்கியமான இடம் பிடித்திருக்கிறது.
ஐயோவாவில் ’சாவெர்கிராட் நாள்’ பல நகரங்களில் வேறு வேறு நாட்களில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது அப்பலேச்சியன் மலைப்பகுதிகளின் முட்டைக்கோஸ் நடவு மற்றும் அறுவடை ஆகியவை ஜோதிடத்தின் அடிப்டையிலேயே நடக்கிறது. சாவெர்கிராட்டை தேய்பிறையில் தயாரித்தால் அது கெட்டுப் போய்விடும், வளர்பிறையில்தான் தயாரிக்க வேண்டும் என்னும் நம்பிக்கையும் அங்கு இருக்கிறது.
அப்பகுதி முழுவதும் முட்டைக்கோஸ் அறுவடை நாளில் நாம் தீபாவளிப் பலகாரம் செய்வது போல நூற்றுக்கணக்கானோர் சேர்ந்து சாவெர்கிராட்டைத் தயாரித்து அவரவர் வீடுகளுக்கு அவரவர் பங்கைக் கொண்டு செல்லும் வழக்கமும் இருக்கிறது. அதன் சுவையும் அதிலிருக்கும் சத்துக்களாலும் அமெரிக்க சூப்பர் உணவுகளின் பட்டியலிலும் முதலிடத்தில் இருப்பது இந்த சாவெர்கிராட் தான்.
பென்சில்வேனிய புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சாவெர்கிராட்டை பன்றி இறைச்சியுடன் உண்பது நெடுங்கால மரபாக இருக்கிறது. பால்டிமோர் பகுதியில் நன்றி தெரிவிக்கும் நாள் விருந்துகளிலும் சாவெர்கிராட் தவறாமல் இடம் பெறுகிறது
தயாரிக்கும் முறை
நல்ல அழுத்தமாகக் கடினமாக இருக்கும் பச்சை நிற புத்தம் புதிய முட்டைகோஸ்கள் தேர்வு செய்யப்படுகின்றன. ஒரு சிலர் ஊதா முட்டைக்கோஸையும் உபயோகப்படுத்துகிறார்கள்.
பின்னர் முட்டைக்கோஸ் நீள நீளமாக ஒரே அளவிலான பட்டைகளாகச் சீவப்படுகிறது. ஒரு கிலோ முட்டைகோஸுக்கு 2% என்னும் அளவில் (அயோடின் இல்லாத) உப்பு சேர்க்கப்படுகிறது. பின்னர் இந்தக் கலவை ஒரு அகலமான (உலோகமல்லாத) பாத்திரத்தில் கொட்டப்பட்டு சுமார் 15 நிமிடங்களுக்குக் கைகளால் பிசைந்து பிழியப்படுகிறது.
அப்படிச்செய்கையில் முட்டைக்கோஸ் செல்களின் சுவர் உடைந்து அதன் சாறு வெளியே வருகிறது. இப்போது இந்தக் கலவை பாதி திரவ நிலையில் இருக்கும்.
பீங்கான் அல்லது கண்ணாடி பாட்டிலில் இந்தக் கலவையைக்கொட்டி கைகளால் இடைவெளி இல்லாமல் நன்றாக அழுத்தி நிறைக்க வேண்டும். இப்படி அழுத்துகையில் முட்டைகோஸ் துண்டுகள் பாட்டிலின் அடியிலும் அதிலிருந்து வெளியே வந்த சாறு மேலே அதனை மூடியும் இருக்கும்படி நிறைக்க வேண்டும்
சாற்றில் மூழ்காமல் ஒரே ஒரு முட்டைக்கோஸ் துண்டு வெளியே தெரிந்தாலும் அதில் பூஞ்சைக்காளான் தொற்று உண்டாகி விடும். எனவே முட்டைக்கோஸ் முழுமையாகச் சாற்றில் மூழ்கும் வரை பொறுமையாக இந்தச் செயல் செய்யப்படுகிறது.
ஜாடி அல்லது பாட்டிலின் வாயைச் சுத்தமான மெல்லிய துணியால் கட்டி நொதித்தலின் போது உள்ளிருந்து வெளியாகும் வாயு வெளியேற வசதியாக இறுக்கமாக இல்லாமல் சற்றுத் திறந்திருக்கும்படி மூடப்படும்இந்த பாட்டில் நல்ல காற்று இருக்கும், இருட்டான, குளிர்ந்த இடத்தில் 15-24°C வெப்பநிலை இருக்கும்படி வைக்கப்படுகிறது.
மற்ற நொதித்தலுக்கு தேவைப்படுவதைப் போல இதற்கு starter culture எனப்படும் நொதித்தலைத் துவக்கும் நுண்ணுயிர்கள் தேவையில்லை முட்டைகோஸிலேயே இந்த நொதித்தலுக்குத் தேவையான நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இந்த நொதிக்கச் செய்யும் பாக்டீரியாக்கள்தான் முட்டைகோஸின் மாவுச்சத்தை லாக்டிக் அமிலமாக மாற்றி சாவெர்கிராட்டின் பிரத்யேக புளிப்புச் சுவையை அளிக்கிறது
இந்த முட்டைக்கோஸ் உப்புக் கலவையில் நொதித்தல் நடந்து முடிய 3 நாட்களிலிருந்து பல வாரங்களாகும். இந்தக் காலத்தில் நன்கு நொதித்தல் நடந்து கொண்டிருப்பதன் அறிகுறிகளான கலவையின் மீது வெண்ணிறத் திரை உருவாதல், குமிழிகளும் நுரையும் வெளியேறுதல் ஆகியவை நடைபெறும். இளஞ்சிவப்பு நிற அழுக்கு உருவாகி மிதக்கையில் அது உடனே அகற்றப்படுகிறது.
தேவையான அளவு நொதித்தல் நடந்ததை உறுதிப்படுத்திய பின்னர் பாட்டில் நன்கு இறுக்கமாக மூடப்பட்டு குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படுகிறது. குறைந்த வெப்பநிலையில் சாவெர்கிராட் சேமிக்கப்படுகையில் நொதித்தல் மேலும் நடக்காமல் தேவையான அளவில் அதன் சுவையும் மணமும் தங்கி நிற்கும்.
இதன் நன்மைகள்
நொதித்தலில் லேக்டோபேசில்லஸ் உள்ளிட்ட ஏராளமான நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உருவாவதால் இதை ஒரு Probiotics ஆக உபயோகிக்கலாம். நோயெதிர்ப்பு திறனை அதிகப்படுத்தவும், ஜீரணசக்தியை மேம்படுத்தவும் இது வெகுவாக உதவுகிறது. இதில் வைட்டமின் சி மற்றும் கே, இரும்புச்சத்து மற்றும் மாங்கனீஸ் சத்து நிறைந்திருக்கிறது.
நாம் உண்ணும் பிற உணவுகளில் இருக்கும் ஊட்டச்சத்துக்களை உடல் விரைவாக உறிஞ்சிக்கொள்ள இதிலிருக்கும் நுண்ணுயிரிகள் உதவுகின்றன. முட்டைக்கோஸில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நொதித்தலின்போது மேலும் மேம்படுத்தப்படுவதால் புற்றுநோய் எதிர்ப்பு உள்ளிட்ட பல நலன்களும் கிடைக்கின்றன
கொரியாவில் முட்டைகோஸ், முள்ளங்கி, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து நொதிக்கச் செய்த கிம்சி-(Kimchi)
முட்டைகோஸ், கேரட், வெங்காயம், ஓரிகேனோ, ஜலபினோ ஆகியவை கலந்து நொதிக்கச் செய்து pupusas எனப்படும் சோளமாவும் பாலடைக்கட்டியும் கலந்த ஒரு உணவுடன் சேர்ந்து உண்ணப்படும் எல் சால்வடோரின் கர்டிடோ-(Curtido)
சீனாவின் கடுகு முட்டைக்கோஸை உப்புச்சேர்த்து நொதிக்கச் செய்து கிடைக்கும் சுவான் காய் -(Suan Cai)
முட்டைக்கோஸுடன் இறைச்சி, உருளைக்கிழங்கு சேர்த்து நொதிக்கச் செய்து சாஸுடன் கலந்து உண்ணப்படும் ஃப்ரான்ஸின் சவுர் க்ரேட்- (Choucroute)
என இந்த சாவெர்கிராட் பல நாடுகளில் சிற்சில வேறுபாடுகளுடன் வேறு வேறு பெயர்களில் பயன்பாட்டில் இருக்கிறது.
சாவெர்கிராட்டை பாஸ்டுரைஸ் செய்யாமல் உண்ணும் போதுதான் இதன் பலன்கள் கிடைக்கிறது. பாஸ்டுரைஸ் செய்யும்போது கொடுக்கப்படும் வெப்பம் இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அழித்துவிடுகிறது.
சாவெர்கிராட் பல நாடுகளின் முக்கிய உணவாகியிருப்பதற்கு முக்கிய காரணமாயிருந்த ஜேம்ஸ் குக் அவரது இரண்டாம் கடற்பயணத்தில் 98 பீப்பாய்களில் 36000 பவுண்ட் சாவெர்கிராட்டை எடுத்துச் சென்றார்.
துரதிர்ஷ்டவசமாகக் குக்கின் இறுதிப்பயணமுமாகி விட்டிருந்த மூன்றாவது பயணத்திலும் சாவெர்கிராட் ஏராளமாக எடுத்துச்செல்லப்பட்டது. குக்கின் HMS ரிசல்யூஷன், HMS டிஸ்கவரி ஆகிய இரண்டு பெருங்கப்பல்களில் பல்லாண்டுகளுக்கு திட்டமிடப்பட்டிருந்தது அந்த மூன்றாம் கடற்பயணம். 1779-ல் பழுதுகாரணமாக மாதக்கணக்கில் ஹவாய் தீவுகளிலேயே இரு கப்பல்களும் நிலை கொண்டிருந்தன.
ஹவாய் பழங்குடியினர் கேப்டன் குக்கின் குழுவினரை மரியாதையாக வரவேற்று உபசரித்தார்கள் என்றாலும் மாதக்கணக்காக பெருந்திரளான கப்பற்பயணிகளுக்கு உணவளிக்க வேண்டி இருந்ததும், கடற்பயணிகளால் பழங்குடியினப் பெண்களுக்கு பால்வினை நோய்கள் உருவாகி இருந்ததும் அவர்களைக் கோபம் கொள்ளச்செய்திருந்தது.
எனவே முதலில் கப்பலுக்குத் தேவையான எரிபொருளை அளிக்க ஹவாய் பழங்குடியினர் மறுத்தார்கள். குக்கின் குழுவினர் பலவந்தமாக பல மரங்களை வெட்டி எடுத்துக் கொண்டதும், மயானங்களில் இருந்த வேலிகளையும், ஹவாய் பழங்குடியினச்சமூகத்தின் தொல்மரபில் முக்கியமானவைகளாகக் கருதப்பட்ட மரச்சிற்பங்களை உடைத்து எரிவிறகாகக் கொண்டு சென்றதும் அவர்களை ஆத்திரமூட்டியது.
எனவே பழங்குடியினர் மாதக்கணக்காக நின்றுகொண்டிருந்த கப்பலிலிருந்து இரவில் சில பொருட்களைத் திருடினால் பாதுகாப்பின்மை காரணமாகக் கப்பல்கள் அங்கிருந்து புறப்படும் என நம்பினார்கள். 1779 பிப்ரவரி 13 அன்று இரவு டிஸ்கவரி கப்பலிலிருந்து ஒரு நீள் படகு ஹவாய் பழங்குடியினரால் திருடப்பட்டது.
கோபமடைந்த குக் முந்தைய பயணங்களில் செய்தது போலவே பழங்குடியினத் தலைவரைச் சிறைப்பிடித்து பதிலுக்குத் திருடப்பட்ட கப்பலைப் பெறும் திட்டத்தில் இறங்கினார். ஒரு சிறு குழுவினருடன் குக் பழங்குடியினத் தலைவரை கைது செய்துகொண்டு வர தீவுக்கு சென்றார். ஏற்கனவே கொந்தளித்துக் கொண்டிருந்த அவர்கள், தலைவர் கைதியாக பிடிக்கப்பட்டபோது பொறுமை இழந்தார்கள்
1779 பிப்ரவரி 14 அன்று பணயக்கைதியாக குக்கினால் பிடிக்கபட்ட பழங்குடியினத் தலைவர் குக்குடன் கப்பலுக்கு வரமறுத்து கடற்கரையில் அமர்ந்து கொண்டதும், ஏறத்தாழ 3000 ஹவாய் பழங்குடியினர் கப்பலைச் சூறையாடி அங்கிருந்த ஆயுதங்களுடனும் கட்டாரியும் அம்பும் வில்லுமாகக் குக்கின் சிறு குழுவைச் சூழ்ந்து கொண்டார்கள் தற்காப்புக்காக குக் துப்பாக்கியில் கூட்டதைப் பார்த்துச்சுட்டபோது ஒரு பழங்குடியினத்தவர் கொல்லப்பட்டார்.
அதன்பின்னர் கூட்டம் கட்டுக்கடங்காத வன்முறையில் இறங்கியது. நிலைமை கைமீறி விட்டதை உணந்த குக் அவசரமாகக் கப்பலுக்குத் திரும்ப முயற்சித்தார் ஆனால் வெறிகொண்ட கும்பல் அவரைப் பின்பக்கமிருந்து கத்தியால் பலமுறை குத்தியும் தலையில் கட்டையாலடித்தும் கொலை செய்தது. அவருடன் மேலும் நான்கு கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மூன்று கடற்பயணங்களிலும் பல தீவுகளில் பழங்குடியினருடன் சுமுகமான உறவைப்பேணி வந்த, கடற்பயணிகளின் ஆரோக்கியத்தைக் குறித்துப் பெரிதும் கவனம் கொண்டிருந்த பேரறிஞரான குக் கலாச்சாரப் புரிதலின்மையால் கொல்லப்பட்டது பெரும் சோகம்
கொல்லப்பட்ட எதிரிகளில் மிக உயரிய இடத்தில் இருப்பவர்களின் இறப்புக்குக் கொடுக்கப்படும் மரியாதையாக ஹவாய் பழங்குடியினத்தவரால் குக்கின் உடல் பல பாகங்களாக துண்டு போடப்பட்டு உரிய சடங்குகள் செய்யப்பட்டு ஹவாய்த் தீவில் புதைக்கப்பட்டது. பிற்பாடு கப்பலின் பிற அதிகரிகள் வேண்டிக்கொண்டதற்கிணங்கி சில எலும்புகள், துண்டாக்கப்பட்ட ஒரு கை ஆகியவை அவர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடலில் கழித்து, கடற்பயணியரின் ஆரோக்கியத்துக்காகப் பாடுபட்ட கேப்டன் ஜேம்ஸ் குக்கின் உடலின் மிச்சங்கள் பிப்ரவரி 22 அன்று உரிய மரியாதையுடன் கடலுக்கே அளிக்கப்பட்டது
கேப்டன் குக்கின் பயணங்களின் குறிப்பிடத்தக்க வெற்றிக்குக் காரணம், அவரது குழுவினரின் சிறந்த ஆரோக்கியமே. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது, ஸ்கர்வி நோயைத் தடுக்க சாவெர்கிராட் உள்ளிட்ட சமச்சீரான உணவை அவர் கட்டாயப்படுத்தியதே ஆகும்.
அவரது வாழ்க்கை ஒரு கலாச்சார மோதலில் முடிவடைந்தாலும், பசிபிக் கடலில் அவர் மேற்கொண்ட விரிவான பயணங்களும், அவர் வரைந்த பல புதிய தீவுகள் மற்றும் நிலப்பரப்புகளின் துல்லியமான வரைபடங்களும் மிகவும் முக்கியமானவை.
மனித இயல்புகளை நன்கு உணர்ந்திருந்ததால், உளவியல் ரீதியாக தனது குழுவினரை ஸ்கர்வி நோயிலிருந்து காப்பாற்றிய ஜேம்ஸ் குக், அறிமுகமில்லாத புதிய நிலப்பரப்பு மனிதர்களின் செயல்களை கணிக்கத் தவறியதால் கொல்லப்பட்டது அவரது வாழ்க்கையின் ஒரு பெரிய முரண்பாடு.
மனிதன் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும் எவ்வளவு மகத்தானாவனாக இருந்தாலும் ஊழின் இரக்கமற்ற விதிகளுக்கு முன் மண்டியிட்டுப் பணியத்தான் வேண்டும் என்பதற்கு கேப்டன் ஜேம்ஸ் குக்கின் வாழ்வும் ஒரு உதாரணம்.
அந்த 6400 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரஜனீஷ்புரத்திலிருந்து சிறு பெட்டிகளில் பழுப்புத் திரவத்தை எடுத்துக்கொண்டு ரகசியமாக ஒரு சிறு குழு புறப்பட்டது.
அது 1984-ன் செப்டம்பர் மாதம். டாலஸ் நகரின் பிரபலமான அந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கூடும் உணவகங்களுக்குச் சென்ற அந்தக் குழு மிகச்சாதாரணமாக யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடிக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சாலட்களை தாங்களே தேர்வு செய்து தட்டுக்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும் ’சாலட் பார்’ பகுதிக்குச் சென்றார்கள். அங்கிருந்த காய்கறித்துண்டுகளில், தாங்கள் கொண்டுவந்திருந்த ’சல்சா’ என அவர்களால் குறிப்பிடப்பட்ட பழுப்புத் திரவத்தை யாருக்கும் தெரியாமல் கலந்தார்கள். செப்டம்பர் 9-லிருந்து 19-ம் தேதி வரையிலும் பின்னர் அக்டோபர் மாதம் 10-ம் தேதியிலுமாக பத்து உணவகங்களில் இதைச்செய்தார்கள்.
உணவகங்களின் கதவுக் குமிழ்களில் தடவப்பட்ட அந்தத் திரவம், குடிநீர்த்தொட்டிகளிலும் கலக்கப்பட்டது. சில நாட்களிலேயே டாலஸ் நகரிலிருந்த ஆயிரக்கணக்கோருக்கு காய்ச்சல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அது ஒரு சிறு நகரமென்பதால் மருத்துவமனை வசதிகள் போதாமல் நகரமே பதற்றத்துக்குள்ளானது. அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு பலர் விரைந்தார்கள். பல நாட்களாக இந்தச் சதி நடந்ததால் தொடர்ந்து நோயுற்று 700-க்குமதிகமானோர் ஆபத்தான நிலையிலும் 45 பேர் மிக ஆபத்தான நிலையிலும் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.
காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளிலும் உணவுக் கூடத்தின் தொழிலாளர்களிடம் நடந்த விசாரணையிலும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவினால் உணவு நஞ்சாகும் சால்மோனெல்லோசிஸினால் தான் நோயுண்டானது என்பதைக் கண்டுபிடித்தார்களே தவிர எப்படி அது உண்டானது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வு சில உணவகங்களில் போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் அதனால் சால்மோனல்லோசிஸ் உண்டாயிருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தக் காரணமும் சந்தேகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
காரணம் தெரியாவிட்டாலும் அடுத்து நவம்பரில் அந்த மாகாணத்துக்கான தேர்தல் வரவிருந்ததால் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். சாலட்களில் சால்மொனெல்லா கிருமி இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது என்றாலும் எப்படி அத்தனை உணவகங்களிலும் தொடர்ச்சியாக அது இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.
Salmonella typhimurium (Salmonella enterica serovar Typhimurium ) என்னும் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியா அந்த விளைவுகளை உண்டாக்கியது, யாரும் மரணம் அடையவில்லை என்றாலும் நகரெங்கும் பெரும் அச்சம் நிலவியது. அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய உயிராயுதத் தாக்குதல் நடந்தது முதலும் கடைசியுமாக அதுதான்.
அமெரிக்காவின் CDC (நோய் தடுப்பு அமைப்பு) அதை சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவினால் உருவானது என்று சொன்னாலும் 751 பேர் ஒரே சமயத்தில் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே ரஜனீஷ் ஆசிரமத்தின் எல்லாமுமாக இருந்த மா ஆனந்த ஷீலாவின் மீது கடும்கோபத்திலிருந்த டாலஸ் மக்கள் நவம்பர் தேர்தலில் ஷீலாவுக்கு வேண்டிய ரஜனீஷ் ஆசிரமவாசிகள் போட்டியிட்டதால் இது ஒருவேளை அவரது சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனாலும் அதற்குச் சான்றாக எதுவுமே அவர்களிடம் இல்லை.
1980- களில் ஆண்டிலோப் என்னும் பெயரில் இருந்த அந்நகரத்தில் ரஜனீஷ் ஆசிரமத்துக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு வசித்த அவரின் சீடர்கள் புதிய ஓட்டுரிமையும் பெற்றார்கள். 1984-ல் ஒரு அதிகாரபூர்வ வாக்கெடுப்பு நடத்தி உள்ளூர்வாசிகளைவிட ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்ததால் அந்நகர் ரஜனீஷ்புரம் என்று அழைக்கப்படுமென்று முடிவானது.
தேர்தலுக்கு முன்பு ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் ‘’ sharing home’’ திட்டத்தை துவங்கிய மா ஷீலா பல பேருந்துகளில் (ஓட்டுரிமை கொண்ட) ஆயிரக்கணக்கான வீடிழந்தோரை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்துவர முயன்றார். ஆனால் தேர்தல் கமிஷன் அந்தத் திட்டத்தை முறியடித்தது.
நவம்பரில் தேர்தலும் வந்தது. ரஜனீஷ்புரத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக டாலஸ் நகரின் அனைத்து மக்களும் வரலாறு கண்டிராத அளவுக்கு திரண்டு வந்து ஓட்டுப்போட்டார்கள். ரஜனீஷ் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் சீடர்களாக இருந்தாலும் அவர்களில் அமெரிக்க பிரஜைகள் வெகு சிலரே என்பதால் அவர்களால் ஓட்டுப்போடமுடியாமல் டாலஸ் நகரவாசிகளே வெற்றிபெற்றார்கள்.
அம்மாகாணத்தின் பெரும்பாலான ஓட்டு டாலஸ் நகர வாசிகளுடையதுதான் எனவேதான் டாலஸைக் குறிவைத்து அந்த உயிரித்தாக்குதல் நடந்தது. டாலஸின் ஓட்டுப் போடும் வயதுள்ள கணிசமானோரை நோயாளிகளாக்கிவிட்டால், ஆசிரமத்தில் ஓட்டுப்போடும் தகுதியிலிருந்த சிறுகூட்டத்தினரை தங்களுக்குச் சாதகமாக ஓட்டுப்போடச்செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் அந்த சதி நடத்தப்பட்டது.
ஒரு வருடம் வரை காரணம் தெரியாமல் வெறும் சந்தேகமாக மட்டும் இருந்த விஷயம் ஆசிரமத்துக்குள் உண்டான அதிகார மோதல் மற்றும் உட்பூசலினால் மா ஆனந்த ஷீலா தன் ஆதரவாளர்களுடன் ஐரோப்பாவுக்கு சென்ற பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
1985-ல் ரஜனீஷ் ஆசிரமத்தின் மா ஆனந்த ஷீலா அந்த சால்மோனல்லோசிஸ் தொற்றை உருவாக்கியவர் என்று ரஜனீஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பல காலமாக மெளனமாகவே இருந்த பகவான் ரஜனீஷ் அமைதியை உடைத்து பேசத்தொடங்கினார். அளவற்ற அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருந்த மா ஆனந்த ஷீலாதான் உணவில் சால்மோனெல்லா பாக்டீரிய நஞ்சைக்கலந்த குற்றச்செயலைச் செய்தார் என்றும் தனது பிரத்யேக மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்றும் ரஜனீஷ் தெரிவித்தார்.
FBI-யின் தொடர்ந்த குற்றப்புலனாய்வு விசாரணையில் மா ஆனந்த ஷீலாவும் அங்கே செவிலியாக இருந்த மா ஆனந்த பூஜாவும் இந்த சதிக்கு முக்கியமான காரணமாயிருந்தார்கள். ஒரு மருந்துக் கடையிலிருந்து சால்மோனெல்லா பாக்டீரியாவைச் சிறிதளவு வாங்கிய அவர்கள் ஆசிரமத்திலிருந்த ஒரு ஆய்வகத்தில் அதை ஏராளமாக வளர்த்து சாலட்களில் கலந்தார்கள் என்பது தெரிய வந்தது.
ரஜனீஷ்புரத்தின் ஆசிரமத்துக்குள்ளேயெ இருந்த மிக வசதியான ஆய்வகமும் அதில் சாலட்களில் இருந்த அதே சால்மொனெல்லா கிருமிகள் வளர்த்தப்பட்டதும் கண்டுப்பிடிக்கபட்டது. ஆசிரமவாசிகளின் நேரடி சாட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்த மா ஆனந்த ஷீலா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையில் ஷீலா குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தை காரணமாக 29 மாதங்களில் விடுதலை செய்யப்பட்ட ஷீலா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.
அந்த ஆசிரமவாசிகள் மேலும் பல குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தது குற்றப்புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்ததால் மீண்டும் அந்நகரம் ஆண்டிலோப் என்றே பெயரிடப்பட்டது.
1949-ல் குஜராத்தில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் 6-வது குழந்தையாக பிறந்த ஷீலா அம்பாலால் பட்டேல் தனது 18-ம் வயதில் நியூ ஜெர்ஸிக்கு பட்டப்படிப்பிற்கென வந்தார்.1968-ல் பகவான் ரஜனீஷை சந்தித்த அவர் ரஜனீஷ் இயக்தத்தினால் பெரிதும் கவரப்பட்டு அப்போதே அதில் இணைந்துகொண்டார்.
1972-ல் தனது முதல் கணவருடன் இந்தியாவில் இருந்து ஓஷோவின் ஆன்மீக ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் 1980-ல் கணவரின் மறைவுக்கு பிறகு ஜான் செல்ஃபெர் என்னும் ரஜனீஷின் மற்றொரு சீடரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா திரும்பிய ஷீலாவை மா ஆனந்த ஷீலா எனப்பெயர் சூட்டி 1981-ல் தனது அந்தரங்கக் காரியதரிசியாக்கிக் கொண்டார் பகவான் ரஜனீஷ்.
மிகக்குறுகிய காலத்திலேயே ரஜனீஷ் இயக்கக்தின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக மாறிய ஷீலா ஓரிகானில் 64000 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ரஜனீஷ்புரம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார். ரஜனீஷின் மெளன காலத்தில் ஷீலாவே ரஜனீஷ்புரத்தின் ஒரே குரலாக இருந்ததோடு ரஜனீஷ் ஆசிரமத்தின் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
அவரது மூர்க்கமான குணத்தினாலும் நிலஅபகரிப்பு முயற்சிகளாலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட மோதலினால் விரைவில் அவர் அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணானார்.
இப்போது சுவிட்சர்லாந்தில் ஷீலா பிர்ன்ஸ்டீல் என்னும் பெயரில் இரு முதியோர் இல்லங்களை நிர்வகித்து வரும் அவரைக்குறித்து நெட்ஃபிளிக்ஸில் Searching for Sheela என்னும் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. ரஜனீஷ்புரவாழ்வு குறித்து My Own Rules என்னும் நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ரஜ்னீஷ் என்னும் ஓஷோவின் மீதிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலுமே தான் பலவற்றைச் செய்ததாகவும் செய்தவற்றைக் குறித்து எந்த வருத்தமுமில்லை என்றும் சொல்லும் ஷீலாவுக்கு சீடர்கள் இருக்கிறார்கள்.
சால்மோனெல்லோசிஸ் உணவு நஞ்சை உருவாக்கும் இந்த Salmonellatyphimurium பாக்டீரியாவின் பேரினப்பெயர் இந்த பாக்டீரியாவை 1884-ல் முதலில் கண்டுபிடித்த Daniel E. Salmon என்பவரைக் கெளரவிக்க வைக்கப்பட்டது.(டேனியல் சால்மனின் உதவியாளரான Theobald Smith தான் பன்றிக்காலராவைக் குறித்த ஆய்வில் சால்மொனெல்லாவை முதலில் கண்டுபிடித்தாரென்றாலும்,).
இந்தப் பேரினத்தின் மற்றொரு சிற்றினமான Salmonella typhi தான் டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் கிருமி.
Salmonella typhimurium விலங்குகள் வழியாகப் பரவி விலங்கு, பறவை இறைச்சி மற்றும் முட்டை உணவு வழியேவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தாவர உணவுகளாலும் சால்மோனல்லோசிஸை உருவாக்குகிறது.
சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.
1989-ல் லண்டனில் சால்மோனெல்லாவால் கெட்டுபோயிருந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனேஸ் இருந்த சாண்ட்விட்ச் வழியாக பரவிய S. Typhimurium DT4 என்னும் வகை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்றை உருவாக்கியது.
2005-ல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆரஞ்சு பழச் சாற்றில் இருந்து சால்மோனல்லோசிஸ் பரவி பெருந்தொற்றை உருவாக்கியது.
1987-ல் நார்வே மற்றும் ஃபின்லாந்தில் சாக்லேட்டுகளில் இருந்த சால்மோனெல்லா கிருமி 350 பேர் வரையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
2021-ல் ஃபின்லாந்தின் ஒரு குழந்தைகள் காப்பக விழாவில் மதிய உணவில் இருந்த லெட்யூஸ்களில் இருந்த சால்மொனெல்லாவினால் சுமார் 750-பேர் பாதிக்கப்பட்டனர்.
2021-ல் கனடாவில் சோயா பாலாடைக்கட்டியான டோஃபுவில் சால்மொனெல்லா இருந்ததால் ஒரு சிறு குழு நோய்வாய்பட்டதன் பின்பு சால்மோனெல்லா இறைச்சி உணவில் மட்டுமல்ல தாவர உணவுகளிலும் இருக்குமென்பது உறுதியாயிற்று.
2021-ல் பெல்ஜியத்தின் பிரபல சாக்லேட்டுகளில் சால்மொனெல்லா இருப்பது சாக்லேட்டுகள் விற்பனையாவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் உலகளாவிய பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
கடைசியாக 2023-ல் அமெரிக்காவில் பன்றிக் கொத்திறைச்சி மூலம் பரவிய சால்மொனெல்லா தொற்றுதான் மிகச்சமீபத்திய தொற்றுநிகழ்வு.
இன்று வரையிலும் உணவை நஞ்சாகும் பாக்டீரியாவாக சால்மோனெல்லா மிக குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டு பண்னும் கிருமியாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்த ஆய்வுகளில் சால்மோனெல்லா, பன்றி மற்றும் கொறித்துண்னிகளில் அதிகம் தங்கி இருப்பதும் அவற்றிலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
மனிதர்களுக்கு முறையாக, சுகாதாரமாக சமைக்கப்படாத உணவுகளிலிருந்தும், வளர்ப்புப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்தும் சால்மோனெல்லோசிஸ் பரவுகிறது.
உணவுத்தயாரிப்பு மற்றும் கையாளுவதில் சுகாதாரம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சால்மோனெல்லா பாக்டீரியா நமக்கு உணர்த்தியிருக்கிறது.
உணவைத்தயாரிக்கையிலும் கையாளுகையிலும் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, உடல்சுத்தம் பேணுவது, சமைக்கப்பட வேண்டிய பொருட்களை நன்கு கழுவிப்பயன்படுத்துவது மற்றும் சமைத்த சமைக்காத பொருட்களை தனித்தனியே பிரித்து வைப்பது, இறைச்சி உணவுகளை முறையாகச் சமைப்பது ஆகியவற்றினால் சால்மோனெல்லோசிஸை தவிர்க்கலாம்.
1975-ன் மிகக்குளிரான ஒரு மாலை அது. ஜப்பானியர்களின் பிரியத்துக்குகந்த கபுகி கலைஞரும் கபுகி பரம்பரையின் எட்டாவது தலைமுறையைச் சேர்ந்த வருமான ’பேண்டோ மிட்ஷுகோரோ’ டோக்கியோவின் “Living National Treasure,” என்னும் உணவகத்துக்குள் சென்றார். உணவகத்தில் இருந்த அனைவரும் அவரை பாரம்பரிய முறைப்படி எழுந்து குனிந்து வணங்கினார்கள்.
அவர் ஜப்பான் முழுவதும் பிரபலமான ஒரு கலைஞர். தனது 7வயதிலிருந்தே கபுகி கலையில் ஈடுபட்டிருப்பவர். கபூகி என்பது ஜப்பானிய பாரம்பரிய நடனமும் மேடை நாடகமும் இணைந்த ஒரு கலை. பகட்டான ஆடைகளும் ஆபரணங்களும் ஒப்பனைகளையும் கொண்ட அது இந்தியாவின் கதகளி, யஷகானக்கலைகளுக்கு இணையானது.
அந்த உணவகம் ஜப்பானில் தடை செய்யப்பட்டிருந்த, நஞ்சு நிறைந்த ஃபுகு மீனின் ஈரலில் செய்யபப்டும் fugu kimo, என்னும் உணவுக்குப் பிரசித்தி பெற்றது. அன்று மிட்ஷுகோரோ அவரது மேடைகளில் காண்பிக்கும் தைரியத்தை உணவுத்தேர்ந்தெடுப்பிலும் காட்ட நினைத்தாரோ என்னவோ ஒரு முறை ஃபுகுமீன் ஈரலை வாங்கி சுவைத்தவர் மீண்டும் அதையே கொண்டு வரச் சொன்னார்.
அது ஆபத்தை உண்டாக்குமென உணவக ஊழியர்கள் எச்சரித்த போது தனக்கு TTX எனப்படும் ஃபுகுமீனின் நஞ்சுக்கு எதிரான நோயெதிர்ப்பு இருப்பதாக சொன்னார். இரண்டாம் முறையும் சாப்பிட்டுவிட்டு மீண்டும் மீண்டும் கேட்டு நான்கு முறை ஃபுகுவின் ஈரல் உணவைச் சாப்பிட்டார்.
ஒரு தட்டில் இருந்த நஞ்சு பலரைக்கொல்லும் அளவுக்கு வீரியம் கொண்டது அவரோ நான்கு தட்டுக்கள் வாங்கி உண்டிருந்தார்.
ஃபுகு நஞ்சூட்டலின் துவக்க அறிகுறியாக அங்கேயே அவருக்கு நாக்கும் உதடுகளும் ஊசி குத்தியதைப்போல சிலிர்த்து முகம் லேசாக மரத்துப்போனது.
விடுதி அறைக்குத் திரும்பிய மிட்ஷுகோரோ முழு நினைவில் இருக்கையிலேயே தசைச்செயலிழப்பும் பக்கவாதமும் உண்டாகியது. பேசவும் கைகால்களை அசைக்கவும் முடியாமல் அத்தனை ஆயிரம் முறை மேடைகளில் நடித்து ஜப்பானியர்களின் மனம் கவர்ந்த அவர் அன்று உடலே சிறையாகி கைகால்கள் அசைவின்றி இருந்த 8 மணி நேரத்துக்குப்பின் உயிரிழந்தார்.
விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஈரலை அளித்த சமையல் கலைஞருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அவரது ஃபுகு சமைப்பதற்கான உரிமம் குறிப்பிட்ட வருடங்களுக்கு ரத்துசெய்யப்பட்டது. ஆனால் ஜப்பான் ஒரு மாபெரும் கலைஞரை அவர் மரணத்தைச் சுவைக்க விரும்பியதால் இழந்தது.
ஜப்பானில் அன்றிலிருந்து இன்றுவரை மிட்ஷுகோரோவின் மரணம் பெரும் எச்சரிக்கைப் பாடமாகவே அருக்கிறது. புதிய உணவுகளைத்தேடிச்செல்லும் சாகசக்காரர்களுக்கு மிட்சுகோரோவின் கதை எப்போதும் சொல்லப்படுகிறது
உலகெங்கிலும் உணவுக்கலாச்சாரம் என்பது சுவையான முரண்பாடுகளால் ஆனது. முறையாக சமைக்கப்படாத்தால், சரியான இடத்தில் சேமிக்கப்படாததால், கலப்படத்தால் என உணவு நஞ்சாகிறது. கிளாஸ்ட்ரிடியம் பொட்டுலினம் போல ஆபத்தான பாக்டீரியாக்கள் உணவிலிருந்து உயிரைக் கொல்வதுமுண்டு.
ஆனால் ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தே அந்த உணவுகளை விரும்பி உண்பது என்பதும் உலகில் இருக்கிறது.
மரவள்ளிக்கிழங்கிலிருக்கும் வேகவைத்தால் நீங்கும் சயனைடுக்கு இணையான நஞ்சு, உண்னும் காளானைப் போலவே இருக்கும் அமடாக்ஸின் நஞ்சைக் கொண்டிருக்கும் உலகின் மிக மோசமான் விஷக்காளானான டெத் கேப் காளான், ஆப்பிள் மற்றும் செர்ரி பழங்களின் நஞ்சு கொண்ட விதைகள், முழுமையாக பழுக்காவிட்டால் ஹைபோகிளைசின் A என்னும் நஞ்சைக்கொண்டிருக்கும் ஜமைக்காவின் தேசிய உணவான அக்கிப்பழம், பக்கவாதத்தை உண்டாக்கும் நஞ்சை ஈரலில் கொண்டிருக்கும் கிழக்கு ஜப்பான் கடலில் கிடைக்கும் மீனான கிம்ச்சிஜ்ஜி, கொரிய உணவுகளில் பிரபலமான, உயிருடன் இருக்கையிலேயே துண்டுகளாக்கப்பட்டு துள்ளத்துடிக்கச் சாப்பிடுகையில், தொண்டையில் ஒட்டிக்கொண்டு உயிரைப்போக்கும் ஆபத்தான சானாகிச் ஆக்டோபஸ் என இந்தப்பட்டியல் நீண்டது.
உலகம் முழுவதும், மிக நுணுக்கமான தயாரிப்பு இல்லாவிட்டால் உயிரைப் பறிக்கக்கூடிய உணவுகளும் உண்டு. அவற்றின் தனித்துவமான சுவைகளுக்காகவும் ஆபத்தை சந்திக்கும் சாகசத்துக்காகவும், மனிதர்கள் விரும்பி உண்ணும் அபாயகரமான உணவுக்கு எடுத்துக்காட்டுதான் ஜப்பானின் ஃபுகு (Fugu) மீன்.
கடலால் சூழப்பட்ட ஜப்பனில் பண்டைய காலத்திலிருந்தே கடலுணவுகளின் அனைத்துவிதங்களையும் அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஜப்பானில் கடல் உணவுகள் வெறும் உணவாக அல்ல, வாழ்க்கை முறையின் ஒரு அவசியமான பகுதியாகக் கருதப்படுகின்றன. சுமார் நான்கு பக்கங்களும் கடலால் சூழப்பட்ட இந்தத்தீவு நாடு, பசிபிக் பெருங்கடல், ஜப்பான் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் போன்ற வளமான நீர்நிலைகளில் இருந்து பல்வேறு வகையான மீன்கள் மற்றும் கடல் உயிரிகளைக் கொண்டிருக்கிறது. இந்தக்கடல் உயிரியல் வளங்கள் ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கும், வாழ்வாதாரத்திற்கும் மிக முக்கியமாக இருக்கிறது.
உலகெங்கிலும் இருக்கும் 350 வகையான கோளமீன்களில் 35 வகையான ஃபுகு (Fugu) மீன்கள் ஜப்பானிய கடல்களில் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை நச்சுமீன்களே. ஜப்பானில் மட்டுமே 22 வகையான ஃபுகு மீன்கள் உண்ணப்படுகின்றன, இவை மிக அதிகப் புரதம், மிகக்குறைந்த கலோரி, ஏராளமான நுண் தாதுக்களும் வைட்டமின்களும், அபாரமான சுவையும் கொண்டிருப்பவை.
அதிர்ஷ்டம் என்று பொருள் கொண்ட Fuku என்றும் வழங்கு பெயர் கொண்டிருக்கும் ஃபுகு மீன் ஜப்பனியர்களுக்கு அதிர்ஷடமீனாகவும் இருக்கிறது.
ஃபுகுவிற்கு pufferfish, porcupine fish, blowfish என்னும் ஆங்கிலப் பெயர்களுண்டு.
இது ஒரு விலையுயர்ந்த ,மிகச்சுவையான உணவாகக் கொண்டாடப்பட்டாலும், ஃபுகு மீனின் கல்லீரல் மற்றும் பிற உறுப்புகளில் டெட்ரோடோடாக்சின் என்ற சக்திவாய்ந்த நரம்பு நஞ்சு நிறைந்துள்ளது. சயனைடை விட 1200 மடங்கு அதிக நச்சுத்தன்மை கொண்ட இந்த விஷம், சரியான முறையில் அகற்றப்படாமல் மீனை உட்கொண்டால் சில நிமிடங்களில் உயிரிழப்பை ஏற்படுத்தும். இவ்வளவு கொடிய விஷம் இருந்தும், இதன் அபாரமான சுவையினால் ஃபுகு, உலகின் மிகவும் விரும்பப்படும், அதே சமயம் மிகவும் ஆபத்தான உணவுகளில் ஒன்றாகத் இருக்கிறது.
ஃபுகு எனப்படும் இந்த மீன் puffer fish எனப்படும் உடலை பலூன் போல் தேவைப்படுகையில் உப்பச்செய்யும் கோளமீன் வகையயைச் சேர்ந்தது. இதன் உடல் பாகங்களில் குறிப்பாக தோல் கண்கள் ஈரல் மற்றும் சினைப்பையில் tetrodotoxin என்னும் நரம்புகளை செயலிழக்க செய்யும் கடும் நஞ்சு இருக்கிறது. இந்த நஞ்சுக்கு இன்றைய தேதி வரை முறிமருந்தேதும் இல்லை.
இதை சாப்பிட்டவருக்கு பக்கவாதம் உண்டாகி பின்னர் மரணம் சம்பவிக்கும். நஞ்சு உடலிலிருந்து இயற்கையாக நீங்கும் வரை சிகிச்சையளிக்கப்பட்டால் மட்டுமே உயிர்பிழைக்க முடியும்.
ஜப்பானில் மிக அதிக அளவிலும், கொரியாவிலும் சீனத்திலும் ஓரளவுக்கும் இந்த மீன் உணவு பிரபலமாக இருக்கிறது. இம்மூன்று நாடுகளிலுமே ஃபுகு மீனை சமைக்கவும் கையாளவும் உரிமம் பெற்ற சமையல் நிபுணர்கள் மட்டுமே சமைக்க முடியும் என்னும் சட்ட ரீதியான கட்டுப்பாடு இருக்கிறது. ஃபுகு உணவை தயாரிக்க உணவகங்களும் உரிமம் பெற்றிருக்கவேண்டும்.
வரலாற்றுக்காலத்திலிருந்தே கிழக்காசியாவின் பிரபலமான உணவாக ஃபுகு இருந்து வருகிறது. ஜப்பானில் சுமார் 2300 ஆண்டுகளாக பிரபல உணவாக இருக்கும் ஃபுகு கொரியா மற்றும் சீனாவிலும் பண்டைய காலத்திலிருந்தே விரும்பி உண்ணப்படுகிறது.
ஜப்பானியக் கடற்கரைக் கிராமங்களில் நடந்த அகழ்வாய்வுகளில் 4000 வருடங்களுக்கு முன்பிருந்தே ஃபுகு உணவாக பயன்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றாக மீனின் எலும்புகள் கிடைத்திருக்கின்றன, ஜோமோன் வம்ச ஆட்சிக் காலத்தில் 2,300ஆண்டுகளுக்கு முன்னர் ஃபுகுவின் நஞ்சால் அதை உண்ணத் தடைச்சட்டம் இருந்திருக்கிறது.
அடிக்கடி பல பேரரசர்களின் காலத்தில் இம்மீனை உண்ணத் தடைச்சட்டம் கொண்டுவரப்படுவதும் பிற்பாடு அதன் சுவையில் மயங்கிய பேரரசர்கள் தடையை நீக்குவதும் ஜப்பபான் வரலாறெங்கும் காணப்படுகின்றது. மெஜ்ஜி வம்ச ஆட்சியில் (Meiji Era 1868– 1912), இளவரசர் ஹிரோபுமி ஃபுகுவின் சுவையில் மயங்கி ஒரு சில பிராந்தியங்களில் மட்டும் தடைச்சட்டங்களை நீக்கினார்.
இதைப்போலவே சீனாவிலும் கொரியாவிலும் கூட தடைச்சட்டங்கள் போடப்படுவது, விலக்கப்படுவது மீண்டும் யாராவது ஃபுகுவை உண்டு உயிரிழக்கையில் தடைச்சட்டம் இயற்றப்படுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது.சீனாவில் சோங் வம்ச ஆட்சியின் போது அரசு அங்கீகரித்த மூன்று சுவையான உணவுகளில் ஃபுகு மீனுணவும் இருந்தது.
கேப்டன் ஜேம்ஸ் குக்கின் இரண்டாம் கடற்பயணத்தின் போது அவரும் அவரது நண்பர் ஜோஹானும் காலிடோனியாவில் ஃபுகு மீன் ஈரலைச் சாப்பிட்டு ஏறக்குறைய மரணத்தின் வாயில் வரை சென்று மீண்டார்கள். இந்தத்தகவல் உலகெங்கும் ஃபுகுவின் பெயரை மேலும் பரிச்சயமாக்கியதே ஒழிய அதன்மீதான அச்சத்தை அதிகமாக்கவில்லை என்பதுதான் ஆச்சரியம்.
ஜப்பானில் டோக்குகவா (Tokugawa Shogunate-1603–1868), காலத்திலிருந்துதான் ஃபுகுவை நஞ்சு நீக்கி சமைக்கவும் உண்ணவுமான முறையான வழிமுறைகள் உருவாகின.
1888-ல் தான் முதல் ஃபுகு ஒழுங்குமுறை உணவகமான ஷன்பான்ரோ (Shunpanro_ ஷிமோனோசெக்கி நகரில் திறக்கப்பட்டது ஃபுகு உணவுண்பதில் ஒரு பெரும் திருப்பு முனையாகக் கருதப்பட்டது, இதே நகர்தான்,
ஃபுகு மீனின் உடலில் இந்த Tetrodotoxin நரம்பு நஞ்சு (TTX) உருவாவதில்லை. ஃபுகு மீனின் உணவுச்சங்கிலியில் இருக்கும் நஞ்சுதான் அதன் உடலில் சேமிக்கபப்டுகிறது. நீரில் இருக்கும் Vibrio, Pseudomonas, மற்றும் Shewanella ஆகிய பாக்டீர்ய பேரினங்களில் இந்த நஞ்சு காணப்டுகிறது. இந்த பாக்டீரியாக்களை மிதவை உயிரினங்கள் புழுக்கள் ஆகியவை உண்கின்றன.
இந்தச் சிற்றுயிர்களை உண்ணும் நத்தைகள், நட்சத்திர மீன்கள் மற்றும் சில மெல்லுடலிகளின் உடலில் இந்த நஞ்சு சேர்கிறது. அவற்றை உண்ணும் ஃபுகுவின் ஈரல், தோல், சினைப்பை, குடல், கண்கள் ஆகியவற்றில் இந்த நஞ்சு மிக அதிக அளவில் சேமிக்கப்படுகிறது. TTX நஞ்சு ஃபுகு மீன்களில் மட்டுமல்லாது நீல வளைய ஆக்டோபஸ்கள், சில வகை நண்டுகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் சிலவற்றிலும் இருக்கிறது.
இதன் பொருட்டுத்தான் ஜப்பானில் பண்ணைகளில் மிதவைக்கூண்டுகளில் ஃபுகு வளர்க்கப்படுகிறது. ஜப்பானின் ஃபுகு வல்லுநர்களில் ஒருவரும் கடல் நஞ்சு நிபுணருமான டமயோ நொகுச்சி 2000-திலிருந்து 2008- வரை 7000 பண்னை ஃபுகுமீன்களில் ஆய்வு செய்து அதில் ஒன்று கூட நஞ்சுகொண்ட மீனில்லை என்று நிரூபித்தார்.
எனவே ஃபுகு பண்ணையாளர்கள் பண்னை மீன்களின் ஈரலை உணவாக அளிக்க உரிமம் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தாலும் பண்ணை மீன்களின் ஈரலில் நஞ்சில்லை என்பதற்கான போதுமான ஆய்வுகளும் ஆதாரங்களில்லை எனவே ஃபுகுவின் ஈரல் விற்கப்படுவதை அனுமதிக்க வாய்ப்பே இல்லை என்று மறுக்கிறது தேசிய ஃபுகு கூட்டமைப்பு. பண்ணைகளில் இருந்து கிடைக்கும் ஃபுகுவின் விலை 2023 நிலவரப்படி ஒரு கிலோ 50 அமெரிக்க டாலர்கள்.
ஜப்பானில் 1958-லிருந்து ஃபுகுவை சமைக்க உரிமம் வைத்திருப்பது கட்டாயமாகியது. ஃபுகு மீனின் நஞ்சு நீக்கி சமைப்பதற்கான மூன்று வருட பயிற்சியுடன் கூடிய கல்வியைக் கற்றவர்களுக்கு மட்டுமே ஃபுகு மீன் உணவை கையாள, சமைக்க, பிறருக்கு அளிக்க, உணவகங்களில் பணியாற்ற உரிமம் அளிக்கப்படுகிறது. செய்முறைத்தேர்வில் ஒருபகுதி ஃபுகுவின் நச்சுப்பாகங்களை நீக்கி சமைத்து அதை சமைத்தவரே சாப்பிட வேண்டும். 35 % மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே உரிமம் வழங்கப்படுகிறது.
கொரியாவிலும் ஃபுகுவிற்கென பிரத்யேகமான படிப்பை படித்து முடித்தால்தான் உரிமம் கிடைக்கும். அங்கு 60% மதிப்பெண்கள் கட்டாயம்.
சீனாவிலும் இதே கட்டுப்பாடுகள் உள்ளன என்றாலும் 2017-லிலிருந்து ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் ஃபுகு மீன்களின் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்து நாடுகளுக்கும் பொதுவாக fugu hiki எனப்படும் ஃபுகு மீனுக்கெனவே இருக்கும் மிகக்கூர்மையான கத்தியைப் பயன்படுத்துதல், அந்தக் கத்தியை பிற கத்திகளுடன் சேர்க்காமல் தனியே வைத்திருத்தல், நீக்கப்பட்ட நஞ்சு கொண்ட பாகங்களை தனியே பிரித்து வைத்து முறையாக அப்புறப்படுத்துதல் மற்றும் நஞ்சுள்ள பாகங்களை நீக்குவதை ஆவணப்படுத்துதல் ஆகியன பொதுவான விதிகளாக இருக்கின்றன
சீனாவில் ஃபுகுவை சமைப்பதற்கான உணவகங்களுக்கான உரிமம் 2003-லிருந்தும், வீடுகளுக்கு ஃபுகு வாங்கிக்கொள்வதற்கான் தனிப்பட்ட உரிமம் 2017-லிருந்தும் அளிக்கப்படுகிறது.
ஐரோப்பா மொத்தமாகவே ஃபுகு உபயோகத்தைச் சட்டப்படி தடை செய்திருக்கிறது விதிவிலக்காக சுவிட்ஸர்லாந்தில் மட்டும் தனிநபர் இறக்குமதிக்கான உரிமம் வழங்கப் பட்டிருக்கிறது
2003 நிலவரப்படி அமெரிக்காவில் 17 உணவகங்கள் மட்டுமே ஃபுகு மீன் உணவுகளைத் தயாரிக்கவும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் உரிமம் பெற்றிருக்கின்றன. இதில் நியூயார்க்கில் மட்டும் 12 உணவகங்கள் இருக்கின்றன. ஜப்பானைப் போலவே ஃபுகு சமைப்பதில் படித்துச் சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே இங்கும் சமையல் கலைஞர்களாக இருக்கிறார்கள்.
அக்டோபர் 2012-லிருந்து வேறெங்காவது உரிமம் பெற்ற சமையலற்கலைஞரால் நஞ்சு நீக்கப்பட்டு அனுப்பப்பட்ட ஃபுகுவை சமைத்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்கலாம் என்னும் அனுமதி ஜப்பானிய உணவகங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.
இத்தனை சட்டங்கள் ஒழுங்குமுறைகள் இருந்தும் ஜப்பானில் ஆண்டுக்கு 20 பேர் ஃபுகு நஞ்சூட்டலால் மரணமடைகின்றனர். இதற்கான காரணங்கள்:
அவர்களுக்கு ஃபுகு நஞ்சிற்கு உடலெதிர்புச்சக்தி இயற்கையாகவே இருக்கிறது என்று நம்புவது.
மிகத்தேர்ந்த, அனுபவம் வாய்ந்த சமையல் நிபுணரும் தவறு செய்வதற்கான சாத்தியமிருப்பதை நினைவில் கொள்ளாதது.
சரியாக ஃபுகு மீனை அடையாளம் காணத் தெரியாமல் நஞ்சற்றது என ஃபுகுவை எண்ணி சமைத்துச் சாப்பிடுவது.
சுத்தமாக முறையாக நஞ்சு கொண்ட பகுதிகளை நீக்காமலிருப்பது.
இறப்பவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஏனெனில் அவர்களுக்கு கடலில் கிடைக்கும் ஃபுகுவை வீட்டுக்குக் கொண்டு வந்து சமைத்துச் சாப்பிடுகையில் நஞ்சை முழுக்க நீக்கி இருக்க மாட்டார்கள்
ஃபுகுவை சட்டத்துக்கு புறம்பாக சுவைப்பது என்பது மரணத்தை சுவைப்பது போலத்தான் எனினும் ஜப்பானியர்களுக்கு ஃபுகுவின் மீதான மோகம் குறைந்தபாடில்லை எனவே கள்ளச்சந்தை ஃபுகு வணிகமும் ஜப்பானில் நீண்டகாலமாக இருக்கிறது.
உருகி நகரில் சட்டத்தின் கண்ணில் இருந்து மறைந்து அல்லது சட்டம் கண்டும் காணமலும் விட்டுவிடுவதால், ஃபுகு ஈரல் பல உணவகங்களில் கிடைக்கிறது. அவர்களின் மெனுவில் வெளிப்படையாக இது இருக்காது எனினும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதுதான் இந்த உணவகங்களின் கொள்கை.
2018-களின் துவக்கத்தில் கேமோகரி நகரின் மீன் சந்தையில் ஈரல் நீக்கப்பட்டிருக்காத ஐந்து ஃபுகு மீன் (yorito fugu) பொதிகள் விற்கப்பட்டது தெரியவந்தது. ஜப்பான் முழுவதும் இதைக்குறித்த எச்சரிக்கை சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளுக்கான அறிவிப்புக்களை அளிக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் வாயிலாக தொடர்ந்து வெளியானதில் ஐந்தில் 3 பொதிகள் திருமபக்கிடைத்தன.
ஃபுகு உணவு மிக அதிக விலைகொண்டதாக இருக்கக் காரணம் அதைத் தயாரிக்கும் வழிமுறைகளும் அதன் பிரத்யேக சுவையும்தான். ஒரு கிலோ ஃபுகு 7-லிருந்து 10 அமெரிக்க டாலர் வரை விலை கொண்டிருக்கிறது. ஃபுகு அப்படியே பச்சையாகவும், சமைத்தும், ஆவியில் வேகவைத்தும், வாட்டியும், புகைத்தும், வறுக்கப்பட்டும், பொறிக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. ஃபுகுவின் சதை மட்டுமல்லால் அதன் துடுப்புகளும் வாலும் விரும்பி உண்ணப்படுகிறது.
பலவகையான ஃபுகு உணவுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன.
ஃபுகுவில் செய்யப்படும் உணவுகளில் மிகபிரபலமானது டெஸ்ஸா ( Tessa) எனப்படும் ஷஷிமி.
ஷஷிமி என்பது சமைக்காமல் மீனை மிக லேசான, ஒரே அளவுள்ள சீவல்களாகச் செதுக்கி அப்படியே சோயா சாஸ் அல்லது வஸாபி அல்லது இஞ்சி ஊறுகாயுடன் சேர்த்து சாப்பிடுவது. மிக அழகாக மலரிதழ்களைப் போல தட்டில் அடுக்கி வைக்கப்பட்டு பரிமாறப்படும் ஷஷிமி, ஃபுகு மட்டுமல்லாது எல்லா வகை மீன்களிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது.
மில்ட் எனப்படுவடுது கிரில் செய்யப்பட்ட ஆண் ஃபுகுமீனின் விதைப்பை (மெல்லிய் சவ்வால் சூழப்பட்டிருக்கும் விந்து நீர்) இது ஃபுகு உணவில் மிக ஆடம்பரமானதும் மிக விலையுயர்ந்ததுமாகும்.
ஃபுகு காரா-அகே (Fugu Kara-age) என்பது எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஃபுகு.
ஃபுகு கிரெ ஸாகே (Hire-zake) . இது ஸாகே அரிசிமதுவுடன் இணைந்து உண்ணப்படும் ஃபுகுவின் துடுப்புப்பகுதி.
ஃபுகு சிரி எனப்படுவது (Fugu-chiri) -காய்கறிகளுடன் கலந்து உண்ணப்படும் ஃபுகு.
யுபிகி (yubiki) என்பது நஞ்சு மிக அதிகமாக இருக்கும் முட்களை நீக்கி விட்டு தோல் துண்டுகளை தோலில் இருக்கும் சாலடில் கலந்த உணவு.
ஜப்பானின் ஹாகுசான் நகரில் ஃபுகுவின் சினைமுட்டைகளை மூன்று வருடகாலம் உப்பிலிட்டு ஊறுகாயாக்கி நஞ்சு நீங்கியதும் உணவாகச் சமைத்துப்பறிமாறும் உணவகங்கள் இருக்கின்றன. அவற்றில் நஞ்சு முழுக்க நீங்கியதை பரிசோதித்த பின்னரே அது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. ஜப்பானில் இந்த உணவு வேறெங்கும் கிடைப்பதில்லை.
மிக மிக அதிக நஞ்சு கொண்ட ஃபுகுவான டோரா ஃபுகு (tora fugu) தான் ஃபுகு மீன்களிலேயே மிக அதிக விலை கொண்டது. ஃபுகுவின் துடுப்புக்களில் நஞ்சில்லை என்பதால் மிக அதிகம் உண்ணப்படுவது இந்தப்பகுதிதான்.
பல உணவகங்களில் நீரில் நீந்திக்கொண்டிருக்கும் புத்தம் புதிய ஃபுகுவை வாடிக்கையளர்கள் மேசையில் அமர்ந்த பின்ன்ர் தயாரித்துக் கொடுப்பதும் உண்டு.
ஜப்பானின் ஃபுகு மையமான ஷிமோனோசெக்கி நகரில் ஒவ்வொரு பிப்ரவரியிலும் ஃபுகு திருவிழா நடைபெறுகிறது. அதுவரையிலும் ஜப்பானியர்கள் உண்ட ஃபுகுவின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளுக்குப் பின்னர் ஏராளமான ஃபுகுமீன்கள் பிடிக்கப்பட்டு மீண்டும் கடலில் விடப்படுகின்றன. உலகிலேயே ஃபுகு அதிகமாகப்பிடிக்கப்பட்டு, நஞ்சு நீக்கப்படுவது இங்கு மட்டும்தான்.
இந்த ஃபுகு உணவு பருவகால உணவாகவும் இருக்கிறது.. பொதுவாக அக்டோபர் முதல் மார்ச் வரை கடலில் கிடைக்கும் இவை உணவகங்களில் தயாரிக்கப்படுகிறது; டிசம்பர் முதல் பிப்ரவரி வரை குளிர்காலத்தை எதிர்கொள்ள அதனைச் சேமிப்பதால், மீனில் கொழுப்பு அதிகமாக இருக்கும், இதனால் அந்த மாதங்களில் ஃபுகு மிகச் சுவையானதா இருக்கும் எனக் கருதப்படுகிறது. ஜப்பானிய உணவகங்கள் இந்தக்காலத்தில் ஃபுகு உணவை சிறப்பான மதிப்புடன் அணுகுகின்றன.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான வசந்தகாலம் ஃபுகு மீனின் இனப்பெருக்கக் காலமாகையால் அவற்றின் உடலில் அதிக நச்சுத்தன்மை இருக்கும் எனவே அந்தக் காலம் ஃபுகு உணவுகளை தயாரிக்க உகந்த பருவமாகக் கருதப்படுவதில்லை.
சீனாவிலும் ஜப்பானிலும் ஃபுகுவின் சுவைகுறித்து கவிதைகளும், சொலவடைகளும், வட்டார கிண்டல் வழக்குகளும், பழமொழிகளும் உள்ளன. அதில் பிரபலமானவை:
ஜப்பானில் ஏதேனும் ஒரு செயலைச்செய்ய விரும்பி அதன் ஆபத்துகளைக் குறித்து தயக்கம் கொண்டிருப்பவர்களை
’’’ஃபுகுவும் சாப்பிடனும் உயிரும் போகக்கூடாதாமா’’ என்று கேலி செய்வார்கள், ” (“Fugu wa kuitashi inochi wa oshishi” ).
நஞ்சுள்ள மீனைச்சாப்பிட்டால் பிழைக்க வழியே இல்லை என்பது ஜப்பானில் “Ataru to, ippatsu de shinu” — அதாவது’’ ஒரே குண்டு தான் உயிர் போய்விடும் என்று குறிப்பிடுவார்கள்.
ஜப்பான் குடும்பங்களில் தங்களது கொள்ளுப்பாட்டி, கொள்ளுப்பாட்டன் அல்லது ஏதாவது ஒரு முன்னோர் ஃபுகுவின் நஞ்சால் உயிரிழந்த துயரக்கதைகளும், ஃபுகுவின் நஞ்சிலிருந்து எப்படி மீண்டு வந்தார்கள் என்னும் வீரக்கதைகளும் வழிவழியாக சொல்லப்படுவதுண்டு. ஜப்பானில் ஃபுகு உண்டு தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு. 1690-களிலேயே ஜப்பானில் வசித்த ஜெர்மானிய மருத்துவர் எஞ்செல்பெர்ட் (Engelbert Kaempfer), இதை பதிவு செய்திருக்கிறார்.
ஜப்பானில் டோக்கியோவிலிருக்கும் டேகேஃபுகு (Takefuku) என்னும் உணவகமும் ஒஸாகாவிலிருக்கும் ஜுபோரயா (Zuboraya) என்னும் உணவகமும் ஃபுகு பீன் உணவுகளுக்கு உலகப்பிரசித்தி பெற்றவை.
ஃபுகுவின் பதப்படுத்தப்பட்ட உடலுக்குள் விளக்கெரித்து அலங்காரம் செய்வது, ஃபுகுவின் தோலில் கைப்பை பொம்மைகள் ஆகியவற்றைச் செய்வதெல்லாம் ஜப்பானில் பிரசித்தம். தூய வெண்ணிறத்தில் இருக்கும் ஃபுகுவின் சதைப்பகுதியில் மிக அழகிய சிற்பங்களையும் செய்கிறார்கள் ஜப்பானிய ஃபுகு சமையல் கலை வல்லுநர்கள். ஃபுகு
BBC யின் ஒரு ஆவணப்படம் கடலில் டால்ஃபின்கள் ஃபுகு மீன் கூட்டத்துக்கு வெகுஅருகில் நெடுநேரம் சுற்றித்திரிந்து அவற்றை வாயில் கவ்வி விளையாடி ஃபுகுவின் தோலில் இருக்கும் நஞ்சினால் லேசாக போதை ஏற்றிக் கொண்டு திரும்பிச்செல்வதைக் காட்டுகிறது.
ஆவணப்படத்தின் இணைப்பு
கடல் வாழ் உயிரினங்கள் இப்படி போதை ஏற்றிக்கொள்வது இதில்தான் முதன்முதலில் ஆவணப் படுத்தப்பட்டிருக்கிறது.
ஆபத்தானதும், மிக விலையுயர்ந்ததும், அந்தத் தீவுநாட்டின் கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்திருப்பதுமான ஜப்பானின் ஃபுகு உணவு, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருக்கும் மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் அந்த நிலப்பரப்பின் வளங்களையே முற்றிலும் சார்ந்திருப்பதையும், அதைக்கொண்டே அந்தச் சமூகத்தின் கலாச்சாரம் வடிவமைக்கப் பட்டிருப்பதையும் காட்டும் முக்கியமான உதாரணமாக இருக்கிறது.
நல்ல வெயில் இப்போதெல்லாம். இப்படி புரட்டாசியில் வெயிலடித்ததே இல்லை. பாம்புகள் வீட்டைச்சுற்றிலும் மண்ணுக்குள் இருக்க முடியாமல் வெளியே திரிகின்றன.
எப்போதும் தோட்டத்துக்குள்ளிருக்கும் அந்த பெரிய மஞ்சள் சாரை இன்று தண்ணீர்த்தொட்டிக்கருகில் தென்பட்டு திடுக்கிடவைத்தது. அதன் முழங்கை பருமனும் நெகுநெகுவென்னும் தேகமும் பொன்மஞ்சள் நிறமும் அதன் விரைவும் , நமக்குக் கண்ணில் அதிகம்படும் உடல்வடிவங்களிலிருந்து வெகுவாக அந்நியப்பட்டிருக்கும் உடல்வடிவமுமாக என்னதான் அவற்றைக்குறித்த அறிதலிருந்தாலும் திடீரெனப் பார்க்கையில் மனம் திடுக்கிட்டுவிடுகிறது. (இப்படியே என்னைக்குறித்து அந்தச்சாரையும் ’’இந்தம்மாவை தினம் பார்க்கிறோம் ஆனாலும் இன்னிக்கு நீலக்கலர் புடவையில் திடீர்னு குறுக்கே வந்ததும் பகீர்னுச்சு’’ என்று நினைத்திருக்கக்கூடும்)
பின்னர் ஆயிரங்களின் அன்னை திமுதிமுவென வளர்ந்திருக்கும் தொட்டியில் ஒரு க்க்க்க்குட்ட்ட்டிப் பச்சைக்கொடிப்பாம்பு. அதன் பெற்றோர்களையும் நானறிவேன். நம் வீட்டில்தான் ஜாகை. ஒருமுறை அவையிரண்டும் காதலின்பத்தில் மெய்மறந்து தென்னை மரத்திலிருந்து தொப் எனக் கீழே விழுந்து ஸ்தம்பித்து பின்னர் சுதாரித்துக்கொண்டு விரைந்தோடி இலைதழைப்புக்குள் மறைந்தன. அவற்றின்சாயல் (? ) இந்தகுட்டியில் எனக்குத் தெரிந்தது. என்னைபார்த்தும் பயப்படாமல் அங்கேயே அதன் குட்டியூண்டு நாக்கை நீட்டிக்கொண்டு இருந்தது.
நான் அதைப் புகைப்படம் எடுத்துக்கொண்டு வந்துவிட்டேன். அதன் அம்மாவிடம் அதற்கு இன்று நன்றாகக் கிடைத்திருக்கும். அபாயகரமான, கண்ணில் பட்டால் உயிராபத்தை உண்டாக்கும் மனிதர்களைக் கண்டால் ஓடிஒளிந்து கொள்ளும்படி அதற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தும் அது இப்படி கவனக்குறைவாக இருந்ததற்கு இன்னிக்கு உண்டு,
தென்னைமர ஓலைகள் பெருஞ்சத்தத்துடன் அவ்வப்போது விழுகின்றன, குரும்பைகளும் வெயில் தாங்காமல் உதிர்ந்து கொண்டிருக்கின்றன. மழை வருவதுபோல இடியெல்லாம் இடித்து, போக்குக்காட்டிவிட்டு ஏமாற்றிக்கொண்டிருக்கிறது.
காலை 9 மணி வெயிலில் ’அக்கா அக்கா’வென ஒரு தீனக்குரல் பின்வாசல் கதவுக்குவெளியே ஒரு கருத்த, ஏறு வெயிலில் தளர்ந்த 23/24 வயதிருக்கும் ஒருத்தி நின்றாள். கழுத்தில் எண்ணெய்ப் பிசுக்ககேறிய சரடு மட்டும் , கைகளில் கண்ணாடி வளை. அழுக்குச்சுரிதார். உடன் ஒரு 3 வயதுகூட நிரம்பி இருக்காத சிறுமகன். இன்னும் மொட்டை அடிக்கவில்லைபோல முடி பிடரிவரை நீண்டிருந்தது, உச்சியில் ஒரு குடுமி.
கையில் இருந்த வயர்க்கூடையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வண்ணத்திரவங்கள் இருந்தன. ’’அக்கா மகளிர் சுய உதவிக்குழுவிலிருந்து வரேங்க்கா, இது டைல்ஸ் வாஷ்பேசின் கறையெல்லாம் சுத்தமா எடுத்துரும் நான் வேணா எடுத்துக்காமிக்கறேன் அதுக்கு காசுவேண்டாம் பார்த்துட்டு பிடிச்சா வாங்குங்கக்கா’’ என்றாள்.
நான் அப்படியான பொருட்களை வாங்குவதில்லை. எனவே ’’வேண்டாம்மா’’ என்று சொல்லிவிட்டென் எனினும் அந்த வெயிலில் தலைக்கு வைக்கப்பட்டிருந்த எண்ணெய் முகத்தில் வழிய ஒரு பழைய சிறு செருப்புப்போட்டுக்கொண்டிருந்த, அம்மாவுடன் இன்று நாள் முழுவதும்,தெருத்தெருவாக அலையவிருக்கிற கூட நின்ற அந்தக்குழந்தையைப்பார்த்து மனம் கலங்கியது.
‘’ எவ்வளவும்மா’’? என்று கேட்டேன், அவள் 120 ரூபாய்க்கா என்று சொல்லச் சொல்லவே அந்தக் குழந்தையும், கேட்டுக்கேட்டுப் பழகி விட்டிருக்கும் போல மழலையில் ’’நூயிருபது’’ என்று மிழற்றியது. கண்ணீரை மறைத்தபடி அவசரமாக ஒரு பாட்டிலை வாங்கிக்கொண்டேன். மீண்டும் பணம் கொடுக்கச்செல்லுகையில் அந்தக்குழந்தையை கவனமாகப் பார்க்காமலிருந்தேன். சீக்கிரமே அவனை ஸ்கூலுக்கு கொண்டு விடும் காலத்தில் அந்தகுழந்தை இப்படி அலைய வேண்டி இருக்காது என்று என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டேன்.
வாழ்வென்னும் வதை.
அமேஸானில் நான் ஆர்டர் செய்திருந்த ஒன்று வந்திருப்பதாக ஒரு அழைப்பு வந்தது. ’’நான் வீட்டிலிருக்கிறேன் வீடு தெரியுமா’’வெனக் கேட்க ’’தெரியுங்க்கா’’ என்று பதில் வந்தது.
கொஞ்ச நேரத்தில் மீண்டும் அழைப்பு நான் எடுக்க ’’அக்கா வாசலில் நிற்கிறேன்’’ என்றான் அவன். போனேன் வியர்த்து வழிந்தபடி பைக்கிலிருந்து இறங்கி கையிடுக்கில் ஹெல்மெட்டை வைத்துக்கொண்டு என்னிடம் பார்சலைக் கொடுத்தான் நன்றி சொல்லிவிட்டு நான் திரும்ப எத்தனிக்கையில் ’’அக்கா ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்கதானே’’? என்றான்.
திரும்பி நின்று நேராக அவனைப்பார்த்து ’’இல்லை சொல்லு’’ என்றேன்.
’’உங்கபோனில் வச்சிருக்கற அந்தப்பாட்டை நான் இதுவரைக்கும் கேட்டதே இல்லைக்கா, ரொம்ப ரொம்ப நல்லா இருந்துது அதான் மறுபடியும் கூப்பிட்டேன்’’ என்றான்
புன்னைகைத்து ‘’அப்படியா அந்தப் பொன் என்பேன் எனக்கு ரொம்பப்பிடிச்ச பாட்டு. நான் பிறக்கறதுக்கு முன்னாடி வந்த பாட்டு அது, இதேதான் ரொம்ப வருஷமா வச்சிருக்கேன்’’ என்றேன். மறுபடியும் தயங்கி ’’அக்கா, அது எந்தப்படத்திலன்னு சொன்னீங்கன்னா நானும் அதையே வச்சுக்குவேன்’’ என்றான்.
’’போலீஸ்காரன் மகள்’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன் பின்னாலிருந்து ’’அக்கா ரொம்ப நல்லா இருக்கு பாட்டு’’ என்று குரல் கேட்டது. தேங்ஸ் என்றேன்
நான் சீனுவை விஷ்ணுபுரம் அமைப்பை அறிந்துகொண்ட மிக ஆரம்பக்காலத்திலேயே அறிவேன். ஊட்டி ஃபெர்ன் ஹில் குருநித்யா ஆசிரம காவியமுகாமைக் குறித்த அவரது ஒரு பதிவில் ஊட்டியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு வீட்டில் அடைக்கப்பட்ட கதவொன்றை தலையால் முட்டியபடி கதறிக்கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணைக் குறித்து எழுதியதைத்தான் முதலில் வாசித்தேன். அதன்பின்னர் விஜயசூரியன் வீட்டில் மாதாமாதம் நடக்கும் வெண்முரசு விவாதக்கூட்டத்துக்கு பேருந்தில் 7 வது படித்துக்கொண்டிருந்த சரணையும் 5ல் இருந்த தருணையும் அழைத்துக்கொண்டு போய் கலந்துகொண்டம் நாட்கள் ஒன்றில் நேரில் சந்தித்தேன்.
சீனுவின் எல்லாக்கடிதங்களுமே உணர்வுபூர்வமானவை ஒரு வட இந்தியப்பெண் அவளது காதலனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்துதரும் வரைக்கும் காத்திருந்து வாங்கிப்போகும் ஒரு அரசு மருத்துவமனைக்காட்சியைக் குறித்து எழுதியிருந்த பதிவில் அவள் எழுந்துபோனபின்னர் அவள் அமர்ந்திருந்த பாறையில் அவளது காதலின் வெம்மை தகித்தது என்று எழுதியிருந்தார். நான் அதை வாசிக்கையில் என் மேசையில் வைக்கப்பட்டிருந்த ரெக்கார்ட் நோட்டுக்களின் சித்திரங்களை சரி பார்த்துக்கொண்டிருந்தேன். என்னையறியாமல் கண்ணிலிருந்து சொட்டுச்சொட்டாக வடிந்து ஒரு ரெக்கார்ட் நோட்டின் தாள் ஈரமானது. காணாமல் போன ஒரு சிறுமியைக் காப்பாற்றிய தள்ளுவண்டிக் கடைக்காரரைப்பற்றிய பதிவும் அப்படித்தான்.
எப்போதாவது வருடத்துக்கு ஒருமுறை விழாக்களில் சந்தித்துப் பேசிக்கொள்வோம். வாட்ஸாப்பில் அரிதாக தொடர்பிலிருப்போம். என்னை எப்போதும் அக்கா தங்கம் என்றழைக்கும் தம்பித்தங்கம் சீனு.
சரணுக்கு ரீமா சென்னை பிடிக்கும் என்றெழுதி இருந்த ஒரு குறிப்பிற்கு ’’ரசிகன்க்கா சரண்’’ என்று சீனு சொன்னது நினைவிருக்கிறது. நான் சீனுவின் எழுத்துக்களுக்கென்று ஒரு தனி இடம் வைத்திருக்கிறேன் என் இதயத்தில், ஆனால் ஒரு போதும் சீனுவிடன் சொன்னதில்லை.
இன்று சீனு என்னை அழைத்து மரங்களின் மறை வாழ்வு மொழியாக்க நூலைக் குறித்து ஒரு விமர்சனம் எழுதி இருப்பதாகவும் அதை என் இணையதளத்தில் பிரசுரித்து அதன் சுட்டியைத் தனக்கு அளிக்கும்படி கேட்டார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இது வரை எனது 13 நூல்கள் வெளிவந்திருக்கின்றன.யாரும் ஒரு நூலைக்குறித்தும் எதுவும் எழுதியதில்லை. எனக்கு பெரும்பாலான எழுத்தாளர்களும் ஏராளமான வாசகர்களும் ஸ்நேகிதம்தான்.ஆனாலும் ஸாகே குறித்து ஜெ விற்கு ஒரு சில கடிதங்கள் வந்ததைத்தவிர எனது எந்த நூலும் கண்டுகொள்ளப்படவேயில்லை. நான் அதைக்குறித்து வருந்தவுமில்லை.
தாவரவியல் துறையே கீழானது, பயனற்றது, வேண்டாதது, உலகியல் பொருளியல் வெற்றிக்கு உதவாதது என்னும் அபிப்பிராயம்தான் பொதுவில் எல்லாரிடமும் இருக்கிறது. இதில் நூலைவாசித்து விமர்சனம் எழுதும் அளவுக்கு ஒருத்தரும் மெனக்கெடவில்லை. தாவரவியலைக்குறித்து எழுதுபவளைக் குறித்தும் அப்படித்தான் எண்ணுவார்களாக இருக்கும். நான் என் நூல்களைக் வாசிக்கும்படி கூடக் கேட்டதில்லை யாரிடமும்.
தன்னறம் வெளியீடாக வந்த இரு நூல்களுக்கு ஜெ எழுதிய முன்னுரை பல்லாயிரம் அறிவியலாளர்கள் எழுதிய விமர்சனங்களுக்கும் மேலானது. அதைக் கனவில் எழுப்பிக் கேட்டால் கூடச் சொல் சொல்லாக ஒப்புவிப்பேன் மனப்பாடம் ஆகிவிட்டிருக்கிறது. பெரும் கெளரவம் அது எனக்கு.
ஆனால் நான் நூல் விமர்சனம் எழுதுவேன். எனக்கு , தெரிந்தவர்கள்,வேண்டப்பட்டவர்களுக்காக, எனக்கு வேண்டப்பட்ட விஷயங்களை என்னை பாதித்த விஷயங்களைப்பேசிய நூல்களுக்காக, என்னை எழுதச்சொல்லி கேட்பவர்களுக்காக என்று, நூலை வாசித்ததைக் காட்டிலும் அதிக நேரம் எடுத்துக்கொண்டு மனமுவந்து அன்புடன் எழுதுவேன். என் அன்பு ஒருபோதும் எதிரொலிக்காகக் செவி கூர்ந்ததில்லை.
எனவே இன்று சீனு நூல் விமர்சனம் எழுதியது அதுவும் மிக நன்றாக எழுதியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இந்தத்துறையும் துறைசார்ந்த நூல்களும் என்றைக்கேனும் பேசப்படும் என்னும் நம்பிக்கை இப்போது கொஞ்சம் துளிர்த்திருக்கிறது.
தனது தேவைக்கும் அதிகமானவற்றை எடுத்துக்கொண்டு, பதிலுக்கு தன்னிடமிருந்து எதையும் அளிக்காத உயிரினம், தான் வளரத் தேவையானவற்றை அழித்து, தன்னையும் அழித்துக் கொள்ளும்.
_ பீட்டர் வோலிபென் _
ஆலமரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்த விஷயம். அதற்குள் நுழைந்து சுற்றி வருவது, ஆற்றங்கரை ஓர ஆலம் எனில் விழுதுகளில் ஊஞ்சல் ஆடி நீருக்குள் விழுவது, ஆல மரங்கள் சூழ்ந்த தோப்புக்குள் இருக்கும் அய்யனார் கோயில்கள் காண்பது, சாலை நடுவே நிற்கும் ஆல மரத்தின் விழுதுகள் வாகனங்கள் போகும் வண்ணம் யாரும் வெட்டாமலேயே குறிப்பிட்ட உயரத்தில் நின்று கொள்வது, ஆரோவில் தியான கோளத்தின் முன்னே கனிந்த யோகி என அமர்ந்திருக்கும் ஆலம், ஓசூர் அருகே ஆயிரம் கால் மண்டபம் போல விழுதுகள் நிறைந்து நிழல் பெருக்கி நிற்கும் ஆலம் என காணக் காண கண் நிறைத்து அகம் குளிர வைக்கும் அனுபவம் அளிப்பது ஆலம்.
இந்தியகண்ட நிலப்பரப்பு தோன்றிய காலத்தில் தோன்றிய மரம். இந்தியாவை தாயகம் கொண்ட மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த மரம் என்றெல்லாம் சிறுவயது பாடத்தில் படித்திருக்கிறேன். அங்கே துவங்கி ஆலமரங்களை காணும்போதெல்லாம் பிரும்மாண்டமான ஒரு பூர்வீக கூட்டுக்குடும்ப வீட்டுக்குள் செல்வதை போல உணர்வு. ஆல மரங்கள் குறித்த என் அனுபவத்தை அடியோடு பெயர்த்து எறிந்தது சமீபத்தில் தமிழக கேரள எல்லையில் நான் சென்ற கானுலா ஒன்றில் காட்டுக்குள் வைத்து நான் கண்ட ஆலமரம்.
காட்டுக்குள் அதன் வாழிடத்தில் அது அத்தனை உயிர்ப்போடும் உக்கிரத்தோடும் இருந்தது. கண்ட கணமே அடி வயிற்றில் பீதி கிளர்த்தும் காட்டுத்தனம். ஆம் காட்டுத்தனம் என்றால் என்ன என்பதை முதன் முதலாக தூலமாக கண்முன்னால் கண்டேன். உயிர்த்திருப்பேன் எனும் காட்டுத்தனம். வளர்வேன் எனும் காட்டுத்தனம். இருப்பேன் எனும் காட்டுத்தனம். பெரு வாழ்வு எனும் காட்டுத்தனம். மீண்டு நெடு நாள் ஆகியும் காட்டில் நான் கண்ட அந்த ஆலத்தில் இருப்பது எது? மனிதர்களுடன் பழகிய எல்லைக்குள் வாழும் ஆலத்தில் இல்லாமல் போனது எது என்ற வினா என்னைத் தொடர்ந்தது.
பார்ப்பதற்கு அவை ஒன்றுபோலவே இருந்தாலும் ஊருக்குள்ளும் காட்டுக்குள்ளும் என இரண்டு நிலங்களிலும் அவை கொண்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாக எனக்கு கிடைத்த நூலே மரங்களின் காதலரும், ஜெர்மனியின் ஹிம்மெல் பகுதியில் உள்ள வணிக காடுகளின் பராமரிப்பாளருமான பீட்டர் வோலிபென் எழுதிய மரங்களின் மறைவாழ்வு எனும் நூல்.
வணிக பயன்பாட்டின் பொருட்டு காடுகளை வளர்த்து, மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் முன்னணி தேசம் ஜெர்மன். அதன் வணிக காடு ஒன்றின் பராமரிப்பாளர் பீட்டர். கசாப்பு கடைக்காரர் தான் வெட்டும் ஆட்டுடன் என்ன வகையான உணர்வு தொடர்ப்பு கொண்டிருப்பாரோ, அந்த வகையான தொடர்பு மட்டுமே தன்னை சூழ்ந்த மரங்களுடன் கொண்டிருந்தவர். மெல்ல மெல்ல அவர் கவனம் குவிகிறது. எங்கிருந்தோ இங்கே வந்து இந்த மரங்களை ஆவலுடன் பார்க்கும் வெளியாட்டுகளை அதிசயமாக பார்க்க துவங்கி, அவர்களின் கண்கள் வழியே தான் இருக்கும் காட்டை பார்க்க முயல்கிறார் பீட்டர். மெல்ல மெல்ல அவரது அறிதல் விரிதல் அடைகிறது. புதியதொரு வாழ்க்கைப்புலம் மனிதர்களுக்கு இணையான ஒன்று அவருக்கு காட்சி அளிக்கிறது. அந்த அறிதலைக் கொண்டு அவர் எழுதிய நூலே மரங்களின் மறைவாழ்வு நூல்.
நூல் முதன்மையாக, பழக்கி எடுத்த மரத்தொகுதி, காட்டில் இயல்பான வாழிடம் கொண்ட மரங்கள், இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை அந்த நிலத்துக்கு சொந்தமான பீச், பைன், ஓக், ஸ்ப்ரூக் மரங்களை வைத்துப் பேசினாலும், அடிப்படையில் இந்த நூல் உலகின் எந்த நிலபரப்புக்கும் அதன் காடுகள் குறித்த அறிதலுக்கும் பொதுவானது.
அங்கே வாழ்ந்து, அறிவியலின் துணை கொண்டு, கானகம் சார்ந்து தான் அறிந்தவற்றை பொது வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் பீட்டர் எழுதிய பாப்புலர் சயின்ஸ் வகைமை நூல் இது என்றாலும், இந்த நூலை வாசித்து முடிக்கையில் இந்த நூல் வழியே எழுந்த sub text வியக்க வைத்தது. பண்பாட்டு மானுடவியல் போலவே இந்த நூலை கொண்டு பண்பாட்டுத் தாவரவியல் என்ற புதிய துறையை தோற்றுவித்துவிடலாம் என்பதை போல ஒரு எண்ணம் எழுந்தது.
உதாரணமாக பண்பாட்டு மானுடவியல், உலகில் எத்தனை நூறு வேறுபட்ட கலாச்சாரம் இருந்தாலும், நாம் மானுடர்கள் என்ற வகையில் அத்தனை வேறுபட்ட கலாச்சாரத்திலும் ஒரு போதும் மாறாத ஏழு அடிப்படை அம்சங்கள் இருக்கும். அது பரிணாமவிதிக்கு உட்பட்டும் நமது மரபணுவின் இயல்போடும் இணைந்து இருக்கும். 1, வணங்குதல். 2, குடும்ப உறவு.3, சமூக உறவு. 4, வேலை பகிர்மாணம். 5, பேரிடர் மேலாண்மை (போர்கள் இத்தியாதி உட்பட பல இதில் வரும்) 6, சக்தி உறவுகள் வளங்கள் இவற்றின் பகிர்வு. 7, தன்னை பேணல். இவையே அவை என்று சொல்கிறது.
இந்த மரங்களின் மறைவாழ்வு நூலை வாசித்து முடிக்கும் போது மேற்கண்ட பண்பாட்டு மானுடவியல் பட்டியலில் உள்ள முதல் அம்சத்தை தவிர பிற ஆறு அம்சங்களும் கான்வாழ்வில் இருப்பதை அறியலாம். இந்த நூல் மனித ஆண் வீசி எறியும் பல லட்சம் விதை அணுக்களில் ஒன்று மட்டுமே பிறந்து வருவது போலத்தான், மரங்களும் விதைகளை வீச, அவை சரியான நிலத்தில் விழுந்து, பறவைகள் விலங்குகள் உண்டு பரவி, சரியான இடத்தில் விதைக்கப்பட்டு, சரியான மண், சரியான பருவ சூழல் என பலநூறு இயற்கையின் நிகழ்தகவு விளையாட்டுக்கு பிறகே (தன் மகரந்த சேர்க்கை இன்றி அயல் மகரந்த சேர்க்கை மட்டுமே நிகழும் ஆச்சர்யம் இன்னும் ஆய்வு புலத்தில்தான் இருக்கிறது) அவை தனது வாரிசை உயிர்பிக்கின்றது என்பதை விரிவாக சித்தரித்து காட்டுகிறது. (குழந்தைகளை போன்ற) கன்றுகளை பிற வளர்ந்த மரங்கள் (பெற்றோர்கள் போல) எவ்விதம் பேணி வளர்க்கிறது என்பதை பேசுகிறது. உதாரணமாக கன்று செடிகளின் தளிர் இலைகளுக்கு தான் எவ்வளவு சூரிய ஒளி உட்கொள்ள வேண்டும் என்று தெரியாது. பிற வளர்ந்த மரங்களே இந்த கன்றுகளுக்கு எவ்வளவு ஒளி தேவையோ அவ்வளவு மட்டும் அளித்து வளர்க்கிறது. இப்படி இன்னும் பலவற்றை இந்த நூல் விரிவாக பேசுகிறது.
மரங்கள் நிலத்துக்கு கீழே தனது வேர்கள் வழியே பூஞ்சைகளால் ஒரு பெரிய தொடர்பு வலைப்பின்னல் கொண்டு ஒரு சமூகமாக கொண்டும் கொடுத்தும் வாழ்வதை இந்த நூல் வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. உதாரணமாக மரங்களை பாதிக்கும் ரசாயனங்களை உண்டு பூஞ்சைகள் இந்த மரங்களை காப்பதும், நிலத்துக்கு கீழே வரும் பிற ஆபத்துக்களை தனது சக மரங்களுக்கு இந்த பூஞ்சைகள் வழியே தெரிவிப்பதும் உள்ளிட்ட பூஞ்சைகளுக்கும் மர வேர்களுக்குமான பல வகையான தொடர்பு பின்னல். நிலத்துக்கு மேலே குறிப்பிட்ட ரசாயனங்களை வெளியேற்றி சக மரங்களுடன் தொடர்பில் இருக்கிறது. ஆபத்துகளை தெரிவிப்பது, சூழ்ந்த காற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது உள்ளிட்ட பல காரியங்களை மரங்கள் ரசாயனங்கள் கொண்டு செய்கிறது. மனிதர்கள் சமூகமாக வாழ மொழி அளவுக்கே சங்கேதங்களுக்கும் இடம் உண்டு. மரங்கள் இந்த ரசாயனங்கள் வழியே சங்கேத மொழியில் பேசிக்கொள்கின்றன. மரங்கள் விலங்குகள் போல ஒலி எழுப்புவது உண்டா? ஆச்சர்யமாக ஆம் என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறது இந்த நூல். அந்த ஒலி தொடர்பு கொள்வதற்கான ஒலியா என்பதன் மீது ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்பதையும் அது என்ன என்பதையும் இந்த நூல் சொல்கிறது.
வேலை பகிர்மாணம் என்று வருகையில் பலவீனமரங்கள் பலமான மரத்தை சார்ந்து வாழ்வதை, எல்லா மரங்களுக்கும் தேவையான புற ஆற்றல்களை எல்லா மரங்களும் கூடி இணைந்து (பலம் வாய்ந்தவை குறைவாகவும் பலம் குறைந்தவை நிறைய எனவும்) சமமாக எடுத்துக்கொள்வது குறித்து, நோயுற்ற மரங்களை மீட்க பிற மரங்கள் செய்யும் யத்தனம் இப்படி பலவற்றை நூலின் சில அத்தியாயங்கள் பேசுகிறது.
கொடும் பனி, பாலை, தொடர் காற்று இப்படி பட்ட சூழலை தாங்கி மரங்கள் எவ்விதம் தங்கள் வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன, பருவ சுழற்சியை, சூழல் சீர்கேட்டை மரங்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பதை 14000 ஆண்டுகளாக பனி யுக முடிவில் இருந்து வாழும் மரம் ஒன்றை கொண்டு இந்த நூல் விளக்குகிறது. மின்னல்கள் காட்டுத்தீ இவற்றை மரங்கள் எவ்விதம் எதிர்கொண்டு மீள்கின்றன என்பதை வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. அதன் உச்சம் என்பது இந்த நூல் விவரிக்கும் பறவைகள் போலவே மரங்களும் வலசை போகும் என்ற அறிவியல்பூர்வமான நிலை. (அது எப்படி என்பதை வாசகர்கள் நூல் வாசித்து அறிந்து கொள்ளவும்).
ஒரே நிலத்தில் ஒரே மரங்கள் அருகருகே இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய தனித்தனி வளரியல்பை கொண்டிருக்கின்றன. மண் முதல் விண் வரை பல்வேறு ஆற்றல்களோடு தொடர்பு கொண்டு, கொண்டும் கொடுத்தும் வாழும் ஒரு பிரும்மாண்டமான உயிர்வலை பின்னலில் ஒரு பகுதியாக மனிதர்கள் போலவே பிறந்து, வாழ்ந்து, முதுமை எய்தி மடிகின்றன. மண்ணுக்கு உரமாகி இன்னும் பல நூறு உயிர்களை வாழ வைக்கின்றன. காடுகள் கடல்களை போலவே மேகங்களை உற்பத்தி செய்கின்றன, காடுகள் நதிகள் வழியே கடல் வளம்பெறும் பலவற்றை அளிக்கின்றன, எல்லா மரங்கள் இருக்கும் காடுகளும் புவி உஷ்ணத்துக்கு பதில் அளிக்காது, முதிய மரங்கள் நிறைந்த காடுகள் மட்டுமே சூடாகும் பூமியை காக்க வழி கொண்டவை, இவையெல்லாம் எவ்விதம் என்பதை விரிவாக பேசும் இந்த நூல் இவை அனைத்தையும் அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறது.
இந்த அறிவியல்பூர்வமான நூலின்படி மரங்களின் வேர்களும் இலைகளும் நினைவுகளை சேகரித்து வைத்துக் கொள்கின்றன. எனில் மரங்களின் மூளை முடிச்சு அல்லது நரம்பு அமைப்பு எது? கிட்டதட்ட மனிதர்கள் செய்யும் அனைத்தையும் மரங்களும் செய்கிறது என்று தெரியவரும்போது, மரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லை ஆகவே அவற்றுக்கு வலி தெரியாது என்ற மானுட மைய்ய கருத்தோட்டம் ஆட்டம் காண்கிறது. வேர்கள் நீரை உறிஞ்சுகின்றன, இலைகள் அவற்றை தக்கவைத்துக்கொள்கின்றன, மிக நீண்ட தண்டு பகுதியில் நடப்பது என்ன? நீர் கீழே இருந்து மேலே எவ்விதம் போகிறது. இன்று வரை அது குறித்து மனிதர்கள் வசமிருப்பது அறிவியல் நோக்குக்கு அருகே வரும் ஊக உண்மை மட்டுமே. நிகர் உண்மை என்ன என்பது இன்று வரை ஆய்வுக்கு உரியதே. இப்படித்தான் தாவரவியல் சார்ந்த பல மர்மங்கள் அறிவு விளக்கம் பெறாமல் இருக்கிறது. அப்படி இருக்கையில் மரங்கள் இவ்விதம்தான் என்று மனிதர்கள் இடும் தீர்ப்புகள் எத்தனை ஆதிக்கம் கொண்டது.
மரங்கள் சூழலால் கட்டுப்படுத்தபட்ட ஒன்றல்ல, அவற்றுக்கு தொடர்பு உண்டு, மொழி உண்டு, நினைவு உண்டு, காலம் உண்டு நேரம் உண்டு, புலன்கள் உண்டு, மகிழ்ச்சி உண்டு, சமூக வாழ்வு உண்டு, இளமை முதுமை நோய் உண்டு, இங்கே தங்கி வாழ, பெற்று பெறுக எல்லா விழைவும் உண்டு என்று நிறுவி உயிரியலுக்கும் தாவரவியலுக்கும் இடையே இருக்கும் கோட்டினை அறிவியல்பூர்வமாக அழிக்கும் இந்த நூல் மானுட வாழ்க்கை நாடகங்கள் அடங்கிய நாவல் ஒன்றை படிப்பது போல உணர்ச்சிகரமாகவும்,நாம் அறியாத ஒன்றை திரை விலக்கி காட்டும் போது அறிவுப்பூர்வமாகவும் துப்பறியும் நாவல் ஒன்றை வாசிப்பதை போல பரபரப்பாகவும், இருக்கிறது. மோலியா கேக்லியானோ, மோனிகா கேக்கர்ஸ்லியானா, மோரிஸ் டோக்ரின் போன்ற தாவரவியல் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் வெளிப்படுத்திய வியப்பூட்டும் கண்டடைதல்களை அடிப்படையாக கொண்டு 36 சுவாரசியமான அத்தியாயங்களாக கட்டமைக்கப்பட்ட இந்த நூலின் பின்னுரை சூசன் சிம்மர்ட். பூஞ்சைகள் வழியே மரங்கள் நிலத்தடியில் நிகழ்த்திய மர்ம வலைப்பின்னல் ரகசியங்களை முதன்முறையாக கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர். நூலின் துவக்கத்தில் அதன் அணிந்துரையில் இந்த நூலின் அறிதல்களை இந்திய வன சூழலுக்கு பொருத்திப்பார்க்கும் வகைமைகளை இந்திய சூழலியலாளர் பிரதீப் கிருஷன் பேசுகிறார்.
உபநிஷத் ரிஷி உத்தாலகர் தனது மகனை ஆலமர விதை ஒன்றை பிளந்து பார்க்க சொல்லி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கிறார். அவன் ஏதும் இல்லை என்று சொல்ல. “ஸ்வேத கேது… அறிக… அதுவே நீ” என்று அப்த வாக்கியம் உரைக்கிறார்.
காணும் காரியம் யாவிலும் பின்னால் இருப்பது கண்களால் அறிய இயலாத சூக்கும காரணம். அப்படி கண்களால் அறிய இயலாத ஒன்றை பீட்டர் வோலிபென் இந்த மரங்களின் மறைவாழ்வு நூல் கொண்டு திறந்து காட்டுவதன் வழியே மானுட ஞானம் மேலும் ஒரு அடி முன் நகரும் பரவசத்தை இந்த நூலின் வாசகர் ஒவ்வொருவரும் உணர முடியும். கம்பேஷன் என்பது ஆத்மீகமான ஒன்று மட்டுமே அல்ல,அறிவியல் பூர்வமாகவும் அதற்கு பாதை உண்டு என்பதை இந்த நூல் வழியே உணர முடியும். வாசிக்க இடர் இல்லாத சரளமான மொழியாக்கதை செய்திருக்கிறார் மொழிபெயர்பாளர் தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி. ஒரு வெளிநாட்டு புத்தகத்தை கையில் வைத்திருப்பதை போல உணர்வு எழும் வகையிலான அட்டைப்படம், நூல் கட்டமைப்பு இவற்றுடன் காலச்சுவடு பதிப்பகம் அழகிய முறையில் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். நல்ல நூல்கள் வாசிக்க நேரும்போதெல்லாம் அதை பகிர்ந்து நான் சொல்லும் அதே சொல்தான் இந்த நூலுக்கும் சொல்வேன். தமிழ் அறிந்தோர் ஒவ்வொருவரும் தவறாது வாசித்திருக்கவேண்டிய நூல் இந்த மரங்களின் மறைவாழ்வு.
அந்த 6400 ஏக்கர் பரப்பளவில் இருந்த ரஜனீஷ்புரத்திலிருந்து சிறு பெட்டிகளில் பழுப்புத் திரவத்தை எடுத்துக்கொண்டு ரகசியமாக ஒரு சிறு குழு புறப்பட்டது.
அது 1984-ன் செப்டம்பர் மாதம். டாலஸ் நகரின் பிரபலமான அந்த பகுதி மக்கள் வழக்கமாகக் கூடும் உணவகங்களுக்குச் சென்ற அந்தக் குழு மிகச்சாதாரணமாக யாருக்கும் எந்தச்சந்தேகமும் வராதபடிக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சாலட்களை தாங்களே தேர்வு செய்து தட்டுக்களில் எடுத்துக் கொள்ளும் வசதி இருக்கும் ’சாலட் பார்’ பகுதிக்குச் சென்றார்கள். அங்கிருந்த காய்கறித்துண்டுகளில், தாங்கள் கொண்டுவந்திருந்த ’சல்சா’ என அவர்களால் குறிப்பிடப்பட்ட பழுப்புத் திரவத்தை யாருக்கும் தெரியாமல் கலந்தார்கள். செப்டம்பர் 9-லிருந்து 19-ம் தேதி வரையிலும் பின்னர் அக்டோபர் மாதம் 10-ம் தேதியிலுமாக பத்து உணவகங்களில் இதைச்செய்தார்கள்.
உணவகங்களின் கதவுக் குமிழ்களில் தடவப்பட்ட அந்தத் திரவம், குடிநீர்த்தொட்டிகளிலும் கலக்கப்பட்டது. சில நாட்களிலேயே டாலஸ் நகரிலிருந்த ஆயிரக்கணக்கோருக்கு காய்ச்சல், நடுக்கம், வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டது. அது ஒரு சிறு நகரமென்பதால் மருத்துவமனை வசதிகள் போதாமல் நகரமே பதற்றத்துக்குள்ளானது. அருகிலிருந்த மருத்துவமனைகளுக்கு பலர் விரைந்தார்கள். பல நாட்களாக இந்தச் சதி நடந்ததால் தொடர்ந்து நோயுற்று 700-க்குமதிகமானோர் ஆபத்தான நிலையிலும் 45 பேர் மிக ஆபத்தான நிலையிலும் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டார்கள்.
காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய ஆய்வுகளிலும் உணவுக் கூடத்தின் தொழிலாளர்களிடம் நடந்த விசாரணையிலும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை. சால்மோனெல்லா என்னும் பாக்டீரியாவினால் உணவு நஞ்சாகும் சால்மோனெல்லோசிஸினால் தான் நோயுண்டானது என்பதைக் கண்டுபிடித்தார்களே தவிர எப்படி அது உண்டானது என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
குளிர்சாதனப் பெட்டியின் குளிர்வு சில உணவகங்களில் போதுமான அளவு இல்லாமலிருந்தாலும் அதனால் சால்மோனல்லோசிஸ் உண்டாயிருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்தக் காரணமும் சந்தேகப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
காரணம் தெரியாவிட்டாலும் அடுத்து நவம்பரில் அந்த மாகாணத்துக்கான தேர்தல் வரவிருந்ததால் யாரோ வேண்டுமென்றே இதைச் செய்திருக்க கூடும் என உள்ளூர் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருந்தார்கள். சாலட்களில் சால்மொனெல்லா கிருமி இருப்பது ஆய்வக சோதனையில் உறுதியானது என்றாலும் எப்படி அத்தனை உணவகங்களிலும் தொடர்ச்சியாக அது இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறியது.
Salmonella typhimurium (Salmonella enterica serovar Typhimurium ) என்னும் உணவை நஞ்சாக்கும் பாக்டீரியா அந்த விளைவுகளை உண்டாக்கியது, யாரும் மரணம் அடையவில்லை என்றாலும் நகரெங்கும் பெரும் அச்சம் நிலவியது. அமெரிக்க வரலாற்றிலேயே ஆகப்பெரிய உயிராயுதத் தாக்குதல் நடந்தது முதலும் கடைசியுமாக அதுதான்.
அமெரிக்காவின் CDC (நோய் தடுப்பு அமைப்பு) அதை சுகாதாரமற்ற முறையில் தயாரித்த உணவினால் உருவானது என்று சொன்னாலும் 751 பேர் ஒரே சமயத்தில் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தது பெரும் சந்தேகத்தை எழுப்பியது. ஏற்கனவே ரஜனீஷ் ஆசிரமத்தின் எல்லாமுமாக இருந்த மா ஆனந்த ஷீலாவின் மீது கடும்கோபத்திலிருந்த டாலஸ் மக்கள் நவம்பர் தேர்தலில் ஷீலாவுக்கு வேண்டிய ரஜனீஷ் ஆசிரமவாசிகள் போட்டியிட்டதால் இது ஒருவேளை அவரது சதியாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். ஆனாலும் அதற்குச் சான்றாக எதுவுமே அவர்களிடம் இல்லை.
1980- களில் ஆண்டிலோப் என்னும் பெயரில் இருந்த அந்நகரத்தில் ரஜனீஷ் ஆசிரமத்துக்காக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு அங்கு வசித்த அவரின் சீடர்கள் புதிய ஓட்டுரிமையும் பெற்றார்கள். 1984-ல் ஒரு அதிகாரபூர்வ வாக்கெடுப்பு நடத்தி உள்ளூர்வாசிகளைவிட ஆசிரமவாசிகளின் எண்ணிக்கை கணிசமான அளவு இருந்ததால் அந்நகர் ரஜனீஷ்புரம் என்று அழைக்கப்படுமென்று முடிவானது.
தேர்தலுக்கு முன்பு ஆதரவற்றோருக்கு அடைக்கலம் தரும் ‘’ sharing home’’ திட்டத்தை துவங்கிய மா ஷீலா பல பேருந்துகளில் (ஓட்டுரிமை கொண்ட) ஆயிரக்கணக்கான வீடிழந்தோரை ரஜனீஷ்புரத்துக்கு அழைத்துவர முயன்றார். ஆனால் தேர்தல் கமிஷன் அந்தத் திட்டத்தை முறியடித்தது.
நவம்பரில் தேர்தலும் வந்தது. ரஜனீஷ்புரத்தின் சார்பாக போட்டியிட்ட வேட்பாளருக்கு எதிராக டாலஸ் நகரின் அனைத்து மக்களும் வரலாறு கண்டிராத அளவுக்கு திரண்டு வந்து ஓட்டுப்போட்டார்கள். ரஜனீஷ் ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கானோர் சீடர்களாக இருந்தாலும் அவர்களில் அமெரிக்க பிரஜைகள் வெகு சிலரே என்பதால் அவர்களால் ஓட்டுப்போடமுடியாமல் டாலஸ் நகரவாசிகளே வெற்றிபெற்றார்கள்.
அம்மாகாணத்தின் பெரும்பாலான ஓட்டு டாலஸ் நகர வாசிகளுடையதுதான் எனவேதான் டாலஸைக் குறிவைத்து அந்த உயிரித்தாக்குதல் நடந்தது. டாலஸின் ஓட்டுப் போடும் வயதுள்ள கணிசமானோரை நோயாளிகளாக்கிவிட்டால், ஆசிரமத்தில் ஓட்டுப்போடும் தகுதியிலிருந்த சிறுகூட்டத்தினரை தங்களுக்குச் சாதகமாக ஓட்டுப்போடச்செய்து வெற்றி பெறும் நோக்கத்தில் அந்த சதி நடத்தப்பட்டது.
ஒரு வருடம் வரை காரணம் தெரியாமல் வெறும் சந்தேகமாக மட்டும் இருந்த விஷயம் ஆசிரமத்துக்குள் உண்டான அதிகார மோதல் மற்றும் உட்பூசலினால் மா ஆனந்த ஷீலா தன் ஆதரவாளர்களுடன் ஐரோப்பாவுக்கு சென்ற பின்னர் வெளிச்சத்துக்கு வந்தது.
1985-ல் ரஜனீஷ் ஆசிரமத்தின் மா ஆனந்த ஷீலா அந்த சால்மோனல்லோசிஸ் தொற்றை உருவாக்கியவர் என்று ரஜனீஷ் பகிரங்கமாகத் தெரிவித்தார்.
பல காலமாக மெளனமாகவே இருந்த பகவான் ரஜனீஷ் அமைதியை உடைத்து பேசத்தொடங்கினார். அளவற்ற அதிகாரமும் செல்வாக்கும் கொண்டிருந்த மா ஆனந்த ஷீலாதான் உணவில் சால்மோனெல்லா பாக்டீரிய நஞ்சைக்கலந்த குற்றச்செயலைச் செய்தார் என்றும் தனது பிரத்யேக மருத்துவரைக் கொலை செய்ய முயன்றதும் அவர்தான் என்றும் ரஜனீஷ் தெரிவித்தார்.
FBI-யின் தொடர்ந்த குற்றப்புலனாய்வு விசாரணையில் மா ஆனந்த ஷீலாவும் அங்கே செவிலியாக இருந்த மா ஆனந்த பூஜாவும் இந்த சதிக்கு முக்கியமான காரணமாயிருந்தார்கள். ஒரு மருந்துக் கடையிலிருந்து சால்மோனெல்லா பாக்டீரியாவைச் சிறிதளவு வாங்கிய அவர்கள் ஆசிரமத்திலிருந்த ஒரு ஆய்வகத்தில் அதை ஏராளமாக வளர்த்து சாலட்களில் கலந்தார்கள் என்பது தெரிய வந்தது.
ரஜனீஷ்புரத்தின் ஆசிரமத்துக்குள்ளேயெ இருந்த மிக வசதியான ஆய்வகமும் அதில் சாலட்களில் இருந்த அதே சால்மொனெல்லா கிருமிகள் வளர்த்தப்பட்டதும் கண்டுப்பிடிக்கபட்டது. ஆசிரமவாசிகளின் நேரடி சாட்சிகளுக்குப் பிறகு ஐரோப்பாவில் இருந்த மா ஆனந்த ஷீலா கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு அழைத்து வரப்பட்டார்.
விசாரணையில் ஷீலா குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் நன்னடத்தை காரணமாக 29 மாதங்களில் விடுதலை செய்யப்பட்ட ஷீலா சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டார்.
அந்த ஆசிரமவாசிகள் மேலும் பல குற்றசெயல்களில் ஈடுபட்டிருந்தது குற்றப்புலனாய்வு விசாரணைகளில் தெரியவந்ததால் மீண்டும் அந்நகரம் ஆண்டிலோப் என்றே பெயரிடப்பட்டது.
1949-ல் குஜராத்தில் ஒரு செல்வாக்கான குடும்பத்தில் 6-வது குழந்தையாக பிறந்த ஷீலா அம்பாலால் பட்டேல் தனது 18-ம் வயதில் நியூ ஜெர்ஸிக்கு பட்டப்படிப்பிற்கென வந்தார்.1968-ல் பகவான் ரஜனீஷை சந்தித்த அவர் ரஜனீஷ் இயக்தத்தினால் பெரிதும் கவரப்பட்டு அப்போதே அதில் இணைந்துகொண்டார்.
1972-ல் தனது முதல் கணவருடன் இந்தியாவில் இருந்து ஓஷோவின் ஆன்மீக ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் 1980-ல் கணவரின் மறைவுக்கு பிறகு ஜான் செல்ஃபெர் என்னும் ரஜனீஷின் மற்றொரு சீடரை திருமணம் செய்துகொண்டார். அமெரிக்கா திரும்பிய ஷீலாவை மா ஆனந்த ஷீலா எனப்பெயர் சூட்டி 1981-ல் தனது அந்தரங்கக் காரியதரிசியாக்கிக் கொண்டார் பகவான் ரஜனீஷ்.
மிகக்குறுகிய காலத்திலேயே ரஜனீஷ் இயக்கக்தின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக மாறிய ஷீலா ஓரிகானில் 64000 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ரஜனீஷ்புரம் அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தார். ரஜனீஷின் மெளன காலத்தில் ஷீலாவே ரஜனீஷ்புரத்தின் ஒரே குரலாக இருந்ததோடு ரஜனீஷ் ஆசிரமத்தின் சர்வதேச அமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
அவரது மூர்க்கமான குணத்தினாலும் நிலஅபகரிப்பு முயற்சிகளாலும் தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றவும் அவர் முயன்றதாலும் உள்ளூர்வாசிகளுடன் ஏற்பட்ட மோதலினால் விரைவில் அவர் அமெரிக்கர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணானார்.
இப்போது சுவிட்சர்லாந்தில் ஷீலா பிர்ன்ஸ்டீல் என்னும் பெயரில் இரு முதியோர் இல்லங்களை நிர்வகித்து வரும் அவரைக்குறித்து நெட்ஃபிளிக்ஸில் Searching for Sheela என்னும் ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. ரஜனீஷ்புரவாழ்வு குறித்து My Own Rules என்னும் நினைவுக் குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
ரஜ்னீஷ் என்னும் ஓஷோவின் மீதிருந்த அன்பினாலும் அபிமானத்தினாலுமே தான் பலவற்றைச் செய்ததாகவும் செய்தவற்றைக் குறித்து எந்த வருத்தமுமில்லை என்றும் சொல்லும் ஷீலாவுக்கு சீடர்கள் இருக்கிறார்கள்.
சால்மோனெல்லோசிஸ் உணவு நஞ்சை உருவாக்கும் இந்த Salmonellatyphimurium பாக்டீரியாவின் பேரினப்பெயர் இந்த பாக்டீரியாவை 1884-ல் முதலில் கண்டுபிடித்த Daniel E. Salmon என்பவரைக் கெளரவிக்க வைக்கப்பட்டது.(டேனியல் சால்மனின் உதவியாளரான Theobald Smith தான் பன்றிக்காலராவைக் குறித்த ஆய்வில் சால்மொனெல்லாவை முதலில் கண்டுபிடித்தாரென்றாலும்,).
இந்தப் பேரினத்தின் மற்றொரு சிற்றினமான Salmonella typhi தான் டைபாய்டு காய்ச்சலுக்கு காரணமாக இருக்கும் கிருமி.
Salmonella typhimurium விலங்குகள் வழியாகப் பரவி விலங்கு, பறவை இறைச்சி மற்றும் முட்டை உணவு வழியேவும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட தாவர உணவுகளாலும் சால்மோனல்லோசிஸை உருவாக்குகிறது.
சால்மோனெல்லோசிஸ் உலகளாவிய பல தொற்றுகளை உணவு நஞ்சாதல் மூலம் உருவாக்கி இருக்கிறது. 1985-ல் இல்லினாய்ஸில் முறையாக பாஸ்டுரைஸ் செய்யப்படாத பாலினால் பரவிய சால்மொனெல்லோசிஸினால் 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டார்கள்.
1989-ல் லண்டனில் சால்மோனெல்லாவால் கெட்டுபோயிருந்த முட்டையிலிருந்து தயாரிக்கப்பட்ட மயோனேஸ் இருந்த சாண்ட்விட்ச் வழியாக பரவிய S. Typhimurium DT4 என்னும் வகை மிகப்பெரிய அளவில் நோய்த்தொற்றை உருவாக்கியது.
2005-ல் அமெரிக்காவின் பல மாகாணங்களில் ஆரஞ்சு பழச் சாற்றில் இருந்து சால்மோனல்லோசிஸ் பரவி பெருந்தொற்றை உருவாக்கியது.
1987-ல் நார்வே மற்றும் ஃபின்லாந்தில் சாக்லேட்டுகளில் இருந்த சால்மோனெல்லா கிருமி 350 பேர் வரையிலும் பெரும் பாதிப்பை உண்டாக்கியது.
2021-ல் ஃபின்லாந்தின் ஒரு குழந்தைகள் காப்பக விழாவில் மதிய உணவில் இருந்த லெட்யூஸ்களில் இருந்த சால்மொனெல்லாவினால் சுமார் 750-பேர் பாதிக்கப்பட்டனர்.
2021-ல் கனடாவில் சோயா பாலாடைக்கட்டியான டோஃபுவில் சால்மொனெல்லா இருந்ததால் ஒரு சிறு குழு நோய்வாய்பட்டதன் பின்பு சால்மோனெல்லா இறைச்சி உணவில் மட்டுமல்ல தாவர உணவுகளிலும் இருக்குமென்பது உறுதியாயிற்று.
2021-ல் பெல்ஜியத்தின் பிரபல சாக்லேட்டுகளில் சால்மொனெல்லா இருப்பது சாக்லேட்டுகள் விற்பனையாவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டதால் உலகளாவிய பெரும் ஆபத்து தவிர்க்கப்பட்டது.
கடைசியாக 2023-ல் அமெரிக்காவில் பன்றிக் கொத்திறைச்சி மூலம் பரவிய சால்மொனெல்லா தொற்றுதான் மிகச்சமீபத்திய தொற்றுநிகழ்வு.
இன்று வரையிலும் உணவை நஞ்சாகும் பாக்டீரியாவாக சால்மோனெல்லா மிக குறிப்பிடத்தக்க ஆபத்தை உண்டு பண்னும் கிருமியாகத்தான் இருக்கிறது.
தொடர்ந்த ஆய்வுகளில் சால்மோனெல்லா, பன்றி மற்றும் கொறித்துண்னிகளில் அதிகம் தங்கி இருப்பதும் அவற்றிலிருந்து பிற விலங்குகளுக்கு பரவுவதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
மனிதர்களுக்கு முறையாக, சுகாதாரமாக சமைக்கப்படாத உணவுகளிலிருந்தும், வளர்ப்புப்பிராணிகள் மற்றும் பிற விலங்குகளிலிருந்தும் சால்மோனெல்லோசிஸ் பரவுகிறது.
உணவுத்தயாரிப்பு மற்றும் கையாளுவதில் சுகாதாரம் பேணப்பட வேண்டியதன் அவசியத்தை சால்மோனெல்லா பாக்டீரியா நமக்கு உணர்த்தியிருக்கிறது.
உணவைத்தயாரிக்கையிலும் கையாளுகையிலும் அடிக்கடி கைகளை கழுவிக்கொள்வது, உடல்சுத்தம் பேணுவது, சமைக்கப்பட வேண்டிய பொருட்களை நன்கு கழுவிப்பயன்படுத்துவது மற்றும் சமைத்த சமைக்காத பொருட்களை தனித்தனியே பிரித்து வைப்பது, இறைச்சி உணவுகளை முறையாகச் சமைப்பது ஆகியவற்றினால் சால்மோனெல்லோசிஸை தவிர்க்கலாம்.