லோகமாதேவியின் பதிவுகள்

மரங்களின் மறைவாழ்வு- நூல் விமர்சனம்- கடலூர் சீனு!

தனது தேவைக்கும் அதிகமானவற்றை எடுத்துக்கொண்டு, பதிலுக்கு தன்னிடமிருந்து எதையும் அளிக்காத உயிரினம், தான் வளரத் தேவையானவற்றை அழித்து, தன்னையும் அழித்துக் கொள்ளும்.

_ பீட்டர் வோலிபென் _

ஆலமரங்களை வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்த விஷயம். அதற்குள் நுழைந்து சுற்றி வருவது, ஆற்றங்கரை ஓர ஆலம் எனில் விழுதுகளில் ஊஞ்சல் ஆடி நீருக்குள் விழுவது, ஆல மரங்கள் சூழ்ந்த தோப்புக்குள் இருக்கும் அய்யனார் கோயில்கள் காண்பது, சாலை நடுவே நிற்கும் ஆல மரத்தின் விழுதுகள் வாகனங்கள் போகும் வண்ணம் யாரும் வெட்டாமலேயே குறிப்பிட்ட உயரத்தில் நின்று கொள்வது, ஆரோவில் தியான கோளத்தின் முன்னே கனிந்த யோகி என அமர்ந்திருக்கும் ஆலம், ஓசூர் அருகே ஆயிரம் கால் மண்டபம் போல விழுதுகள் நிறைந்து நிழல் பெருக்கி நிற்கும் ஆலம் என காணக் காண கண் நிறைத்து அகம் குளிர வைக்கும் அனுபவம் அளிப்பது ஆலம். 

இந்தியகண்ட நிலப்பரப்பு தோன்றிய காலத்தில் தோன்றிய மரம். இந்தியாவை தாயகம் கொண்ட மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த மரம் என்றெல்லாம் சிறுவயது பாடத்தில் படித்திருக்கிறேன். அங்கே துவங்கி ஆலமரங்களை காணும்போதெல்லாம் பிரும்மாண்டமான ஒரு பூர்வீக கூட்டுக்குடும்ப வீட்டுக்குள் செல்வதை போல உணர்வு. ஆல மரங்கள் குறித்த என் அனுபவத்தை அடியோடு பெயர்த்து எறிந்தது சமீபத்தில் தமிழக கேரள எல்லையில் நான் சென்ற கானுலா ஒன்றில் காட்டுக்குள் வைத்து நான் கண்ட ஆலமரம்.

காட்டுக்குள் அதன் வாழிடத்தில் அது அத்தனை உயிர்ப்போடும் உக்கிரத்தோடும் இருந்தது. கண்ட கணமே அடி வயிற்றில் பீதி கிளர்த்தும் காட்டுத்தனம். ஆம் காட்டுத்தனம் என்றால் என்ன என்பதை முதன் முதலாக தூலமாக கண்முன்னால் கண்டேன். உயிர்த்திருப்பேன் எனும் காட்டுத்தனம். வளர்வேன் எனும் காட்டுத்தனம். இருப்பேன் எனும் காட்டுத்தனம். பெரு வாழ்வு எனும் காட்டுத்தனம். மீண்டு நெடு நாள் ஆகியும் காட்டில் நான் கண்ட அந்த ஆலத்தில் இருப்பது எது? மனிதர்களுடன் பழகிய எல்லைக்குள் வாழும் ஆலத்தில் இல்லாமல் போனது எது என்ற வினா என்னைத் தொடர்ந்தது. 

பார்ப்பதற்கு அவை ஒன்றுபோலவே இருந்தாலும் ஊருக்குள்ளும் காட்டுக்குள்ளும் என இரண்டு நிலங்களிலும் அவை கொண்ட மாற்றங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு வழிகாட்டியாக எனக்கு கிடைத்த நூலே மரங்களின் காதலரும், ஜெர்மனியின் ஹிம்மெல் பகுதியில் உள்ள வணிக காடுகளின் பராமரிப்பாளருமான பீட்டர் வோலிபென் எழுதிய மரங்களின் மறைவாழ்வு எனும் நூல்.

வணிக பயன்பாட்டின் பொருட்டு காடுகளை வளர்த்து, மரங்களை வெட்டி ஏற்றுமதி செய்யும் முன்னணி தேசம் ஜெர்மன். அதன் வணிக காடு ஒன்றின் பராமரிப்பாளர் பீட்டர். கசாப்பு கடைக்காரர் தான் வெட்டும் ஆட்டுடன் என்ன வகையான உணர்வு தொடர்ப்பு கொண்டிருப்பாரோ, அந்த வகையான தொடர்பு மட்டுமே தன்னை சூழ்ந்த மரங்களுடன் கொண்டிருந்தவர். மெல்ல மெல்ல அவர் கவனம் குவிகிறது. எங்கிருந்தோ இங்கே வந்து இந்த மரங்களை ஆவலுடன் பார்க்கும் வெளியாட்டுகளை அதிசயமாக பார்க்க துவங்கி, அவர்களின் கண்கள் வழியே தான் இருக்கும் காட்டை பார்க்க முயல்கிறார் பீட்டர். மெல்ல மெல்ல அவரது அறிதல் விரிதல் அடைகிறது. புதியதொரு வாழ்க்கைப்புலம் மனிதர்களுக்கு இணையான ஒன்று அவருக்கு காட்சி அளிக்கிறது. அந்த அறிதலைக் கொண்டு அவர் எழுதிய நூலே மரங்களின் மறைவாழ்வு நூல்.

நூல் முதன்மையாக, பழக்கி எடுத்த மரத்தொகுதி, காட்டில்  இயல்பான வாழிடம் கொண்ட மரங்கள், இவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசங்களை அந்த நிலத்துக்கு சொந்தமான பீச், பைன், ஓக், ஸ்ப்ரூக் மரங்களை வைத்துப் பேசினாலும், அடிப்படையில் இந்த நூல் உலகின் எந்த நிலபரப்புக்கும் அதன் காடுகள் குறித்த அறிதலுக்கும் பொதுவானது. 

அங்கே வாழ்ந்து, அறிவியலின் துணை கொண்டு, கானகம் சார்ந்து தான் அறிந்தவற்றை பொது வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும் வண்ணம் பீட்டர் எழுதிய பாப்புலர் சயின்ஸ் வகைமை நூல் இது என்றாலும், இந்த நூலை வாசித்து முடிக்கையில் இந்த நூல் வழியே எழுந்த sub text வியக்க வைத்தது. பண்பாட்டு மானுடவியல் போலவே இந்த நூலை கொண்டு பண்பாட்டுத் தாவரவியல் என்ற புதிய துறையை தோற்றுவித்துவிடலாம் என்பதை போல ஒரு எண்ணம் எழுந்தது. 

உதாரணமாக பண்பாட்டு மானுடவியல், உலகில் எத்தனை நூறு வேறுபட்ட கலாச்சாரம் இருந்தாலும், நாம் மானுடர்கள் என்ற வகையில் அத்தனை வேறுபட்ட கலாச்சாரத்திலும் ஒரு போதும் மாறாத ஏழு அடிப்படை அம்சங்கள் இருக்கும். அது பரிணாமவிதிக்கு உட்பட்டும் நமது மரபணுவின் இயல்போடும் இணைந்து இருக்கும். 1, வணங்குதல். 2, குடும்ப உறவு.3, சமூக உறவு. 4, வேலை பகிர்மாணம். 5, பேரிடர் மேலாண்மை (போர்கள் இத்தியாதி உட்பட பல இதில் வரும்) 6, சக்தி உறவுகள் வளங்கள் இவற்றின் பகிர்வு. 7, தன்னை பேணல். இவையே அவை என்று சொல்கிறது.

இந்த மரங்களின் மறைவாழ்வு நூலை வாசித்து முடிக்கும் போது மேற்கண்ட பண்பாட்டு மானுடவியல் பட்டியலில் உள்ள முதல் அம்சத்தை தவிர பிற ஆறு அம்சங்களும் கான்வாழ்வில் இருப்பதை அறியலாம். இந்த நூல் மனித ஆண் வீசி எறியும் பல லட்சம் விதை அணுக்களில் ஒன்று மட்டுமே பிறந்து வருவது போலத்தான், மரங்களும் விதைகளை வீச, அவை சரியான நிலத்தில் விழுந்து, பறவைகள் விலங்குகள் உண்டு பரவி, சரியான இடத்தில் விதைக்கப்பட்டு, சரியான மண், சரியான பருவ சூழல் என பலநூறு இயற்கையின் நிகழ்தகவு விளையாட்டுக்கு பிறகே  (தன் மகரந்த சேர்க்கை இன்றி அயல் மகரந்த சேர்க்கை மட்டுமே நிகழும் ஆச்சர்யம் இன்னும் ஆய்வு புலத்தில்தான் இருக்கிறது) அவை தனது வாரிசை உயிர்பிக்கின்றது என்பதை விரிவாக சித்தரித்து காட்டுகிறது. (குழந்தைகளை போன்ற) கன்றுகளை பிற வளர்ந்த மரங்கள் (பெற்றோர்கள் போல) எவ்விதம் பேணி வளர்க்கிறது என்பதை பேசுகிறது. உதாரணமாக கன்று செடிகளின் தளிர் இலைகளுக்கு தான் எவ்வளவு சூரிய ஒளி உட்கொள்ள வேண்டும் என்று தெரியாது. பிற வளர்ந்த மரங்களே இந்த கன்றுகளுக்கு எவ்வளவு ஒளி தேவையோ அவ்வளவு மட்டும் அளித்து வளர்க்கிறது. இப்படி இன்னும் பலவற்றை இந்த நூல் விரிவாக பேசுகிறது. 

மரங்கள் நிலத்துக்கு கீழே தனது வேர்கள் வழியே பூஞ்சைகளால் ஒரு பெரிய தொடர்பு வலைப்பின்னல் கொண்டு ஒரு சமூகமாக கொண்டும் கொடுத்தும் வாழ்வதை இந்த நூல் வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. உதாரணமாக மரங்களை பாதிக்கும் ரசாயனங்களை உண்டு பூஞ்சைகள் இந்த மரங்களை காப்பதும், நிலத்துக்கு கீழே வரும் பிற ஆபத்துக்களை தனது சக மரங்களுக்கு இந்த பூஞ்சைகள் வழியே தெரிவிப்பதும் உள்ளிட்ட பூஞ்சைகளுக்கும் மர வேர்களுக்குமான பல வகையான தொடர்பு பின்னல். நிலத்துக்கு மேலே குறிப்பிட்ட ரசாயனங்களை வெளியேற்றி சக மரங்களுடன் தொடர்பில் இருக்கிறது. ஆபத்துகளை தெரிவிப்பது, சூழ்ந்த காற்றில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பது உள்ளிட்ட பல காரியங்களை மரங்கள் ரசாயனங்கள் கொண்டு செய்கிறது. மனிதர்கள் சமூகமாக வாழ மொழி அளவுக்கே சங்கேதங்களுக்கும் இடம் உண்டு. மரங்கள் இந்த ரசாயனங்கள் வழியே சங்கேத மொழியில் பேசிக்கொள்கின்றன. மரங்கள் விலங்குகள் போல ஒலி எழுப்புவது உண்டா? ஆச்சர்யமாக ஆம் என்று அறிவியல் பூர்வமாக விளக்குகிறது இந்த நூல். அந்த ஒலி தொடர்பு கொள்வதற்கான ஒலியா என்பதன் மீது ஆய்வுகள் நடந்துகொண்டு இருக்கிறது என்பதையும் அது என்ன என்பதையும் இந்த நூல் சொல்கிறது.

வேலை பகிர்மாணம் என்று வருகையில் பலவீனமரங்கள் பலமான மரத்தை சார்ந்து வாழ்வதை, எல்லா மரங்களுக்கும் தேவையான புற ஆற்றல்களை எல்லா மரங்களும் கூடி இணைந்து (பலம் வாய்ந்தவை குறைவாகவும் பலம் குறைந்தவை நிறைய எனவும்) சமமாக எடுத்துக்கொள்வது குறித்து, நோயுற்ற மரங்களை மீட்க பிற மரங்கள் செய்யும் யத்தனம் இப்படி பலவற்றை நூலின் சில அத்தியாயங்கள் பேசுகிறது.

கொடும் பனி, பாலை, தொடர் காற்று இப்படி பட்ட சூழலை தாங்கி மரங்கள் எவ்விதம் தங்கள் வடிவத்தை தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன, பருவ சுழற்சியை, சூழல் சீர்கேட்டை மரங்கள் எவ்விதம் எதிர்கொள்கின்றன என்பதை 14000 ஆண்டுகளாக பனி யுக முடிவில் இருந்து வாழும் மரம் ஒன்றை கொண்டு இந்த நூல் விளக்குகிறது. மின்னல்கள் காட்டுத்தீ இவற்றை மரங்கள் எவ்விதம் எதிர்கொண்டு மீள்கின்றன என்பதை வியப்பூட்டும் வண்ணம் விவரிக்கிறது. அதன் உச்சம் என்பது இந்த நூல் விவரிக்கும் பறவைகள் போலவே மரங்களும் வலசை போகும் என்ற அறிவியல்பூர்வமான நிலை. (அது எப்படி என்பதை வாசகர்கள் நூல் வாசித்து அறிந்து கொள்ளவும்).

ஒரே நிலத்தில் ஒரே மரங்கள் அருகருகே இருந்தாலும் அவை ஒவ்வொன்றும் அவற்றுக்கே உரிய தனித்தனி வளரியல்பை கொண்டிருக்கின்றன. மண்  முதல் விண் வரை பல்வேறு ஆற்றல்களோடு தொடர்பு கொண்டு, கொண்டும் கொடுத்தும் வாழும் ஒரு பிரும்மாண்டமான உயிர்வலை பின்னலில் ஒரு பகுதியாக மனிதர்கள் போலவே பிறந்து, வாழ்ந்து, முதுமை எய்தி மடிகின்றன. மண்ணுக்கு உரமாகி இன்னும் பல நூறு உயிர்களை வாழ வைக்கின்றன. காடுகள் கடல்களை போலவே மேகங்களை உற்பத்தி செய்கின்றன, காடுகள் நதிகள் வழியே கடல் வளம்பெறும் பலவற்றை அளிக்கின்றன, எல்லா மரங்கள் இருக்கும் காடுகளும் புவி உஷ்ணத்துக்கு பதில் அளிக்காது, முதிய மரங்கள் நிறைந்த காடுகள் மட்டுமே சூடாகும் பூமியை காக்க வழி கொண்டவை, இவையெல்லாம் எவ்விதம் என்பதை விரிவாக பேசும் இந்த நூல் இவை அனைத்தையும் அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறது. 

இந்த அறிவியல்பூர்வமான நூலின்படி மரங்களின் வேர்களும் இலைகளும் நினைவுகளை சேகரித்து வைத்துக் கொள்கின்றன. எனில் மரங்களின் மூளை முடிச்சு அல்லது நரம்பு அமைப்பு எது? கிட்டதட்ட மனிதர்கள் செய்யும் அனைத்தையும் மரங்களும் செய்கிறது என்று தெரியவரும்போது, மரங்களுக்கு நரம்பு மண்டலம் இல்லை ஆகவே அவற்றுக்கு வலி தெரியாது என்ற மானுட மைய்ய கருத்தோட்டம் ஆட்டம் காண்கிறது. வேர்கள் நீரை உறிஞ்சுகின்றன, இலைகள் அவற்றை தக்கவைத்துக்கொள்கின்றன, மிக நீண்ட தண்டு பகுதியில் நடப்பது என்ன? நீர் கீழே இருந்து மேலே எவ்விதம் போகிறது. இன்று வரை அது குறித்து மனிதர்கள் வசமிருப்பது அறிவியல் நோக்குக்கு அருகே வரும் ஊக உண்மை மட்டுமே. நிகர் உண்மை என்ன என்பது இன்று வரை ஆய்வுக்கு உரியதே. இப்படித்தான் தாவரவியல் சார்ந்த பல மர்மங்கள் அறிவு விளக்கம் பெறாமல் இருக்கிறது. அப்படி இருக்கையில் மரங்கள் இவ்விதம்தான் என்று மனிதர்கள் இடும் தீர்ப்புகள் எத்தனை ஆதிக்கம் கொண்டது. 

மரங்கள் சூழலால் கட்டுப்படுத்தபட்ட ஒன்றல்ல, அவற்றுக்கு தொடர்பு உண்டு, மொழி உண்டு, நினைவு உண்டு, காலம் உண்டு நேரம் உண்டு, புலன்கள் உண்டு, மகிழ்ச்சி உண்டு, சமூக வாழ்வு உண்டு, இளமை முதுமை நோய் உண்டு, இங்கே தங்கி வாழ, பெற்று பெறுக எல்லா விழைவும் உண்டு என்று நிறுவி உயிரியலுக்கும் தாவரவியலுக்கும் இடையே இருக்கும் கோட்டினை அறிவியல்பூர்வமாக அழிக்கும் இந்த நூல் மானுட வாழ்க்கை நாடகங்கள் அடங்கிய நாவல் ஒன்றை படிப்பது போல உணர்ச்சிகரமாகவும்,நாம் அறியாத ஒன்றை திரை விலக்கி காட்டும் போது அறிவுப்பூர்வமாகவும் துப்பறியும் நாவல் ஒன்றை வாசிப்பதை போல பரபரப்பாகவும், இருக்கிறது.  மோலியா கேக்லியானோ, மோனிகா கேக்கர்ஸ்லியானா, மோரிஸ் டோக்ரின் போன்ற தாவரவியல் விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் வெளிப்படுத்திய வியப்பூட்டும் கண்டடைதல்களை அடிப்படையாக கொண்டு 36 சுவாரசியமான அத்தியாயங்களாக கட்டமைக்கப்பட்ட இந்த நூலின் பின்னுரை சூசன் சிம்மர்ட். பூஞ்சைகள் வழியே மரங்கள் நிலத்தடியில் நிகழ்த்திய மர்ம வலைப்பின்னல் ரகசியங்களை முதன்முறையாக கண்டுபிடித்து உலகுக்கு வெளிப்படுத்தியவர். நூலின் துவக்கத்தில் அதன் அணிந்துரையில் இந்த நூலின் அறிதல்களை இந்திய வன சூழலுக்கு பொருத்திப்பார்க்கும் வகைமைகளை இந்திய சூழலியலாளர் பிரதீப் கிருஷன் பேசுகிறார். 

உபநிஷத் ரிஷி உத்தாலகர் தனது மகனை ஆலமர விதை ஒன்றை பிளந்து பார்க்க சொல்லி, உள்ளே என்ன இருக்கிறது என்று கேட்கிறார். அவன் ஏதும் இல்லை என்று சொல்ல. “ஸ்வேத கேது… அறிக… அதுவே நீ” என்று அப்த வாக்கியம் உரைக்கிறார். 

காணும் காரியம் யாவிலும் பின்னால் இருப்பது கண்களால் அறிய இயலாத சூக்கும காரணம். அப்படி கண்களால் அறிய இயலாத ஒன்றை பீட்டர் வோலிபென்  இந்த மரங்களின் மறைவாழ்வு நூல் கொண்டு திறந்து காட்டுவதன் வழியே மானுட ஞானம் மேலும் ஒரு அடி முன் நகரும் பரவசத்தை இந்த நூலின் வாசகர் ஒவ்வொருவரும் உணர முடியும். கம்பேஷன் என்பது ஆத்மீகமான ஒன்று மட்டுமே அல்ல,அறிவியல் பூர்வமாகவும் அதற்கு பாதை உண்டு என்பதை இந்த நூல் வழியே உணர முடியும். வாசிக்க இடர் இல்லாத சரளமான மொழியாக்கதை செய்திருக்கிறார் மொழிபெயர்பாளர் தாவரவியல் பேராசிரியர் லோகமாதேவி. ஒரு வெளிநாட்டு புத்தகத்தை கையில் வைத்திருப்பதை போல உணர்வு எழும் வகையிலான அட்டைப்படம், நூல் கட்டமைப்பு இவற்றுடன் காலச்சுவடு பதிப்பகம் அழகிய முறையில் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார்கள். நல்ல நூல்கள் வாசிக்க நேரும்போதெல்லாம் அதை பகிர்ந்து நான் சொல்லும் அதே சொல்தான் இந்த நூலுக்கும் சொல்வேன். தமிழ் அறிந்தோர் ஒவ்வொருவரும் தவறாது வாசித்திருக்கவேண்டிய நூல் இந்த மரங்களின் மறைவாழ்வு.

கடலூர் சீனு.

1 Comment

  1. binance

    Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑