லோகமாதேவியின் பதிவுகள்

Month: August 2025

பாப்பாத்தி என்கிற பரமேஸ்வரி!

அந்துவன் கூட்டத்தில் பெண் பிறப்பதும் ஆனை குட்டி போடுவதும் ஒன்று என கொங்குப் பகுதியில்  பொதுவாக சொல்லப்படுவதுண்டு, அத்தனை அரிது அந்துவன்  குலத்தில் பெண்கள் பிறப்பது என்னும் பொருளில். ஆனால் அந்துவன் குலச் செல்வியான என் அம்மாவுடன் மேலும் இரு மூத்த சகோதரிகள் இருந்தனர். மூன்று பெண்களும் 7 சகோதரர்களுமாக 10 குழந்தைகள் கொண்ட பெருங்குடும்பத்தில் பரமேஸ்வரி என்னும் என் அம்மா பத்தாவது செல்லப் பெண்.

நிலபுலன்களுடன் ஓரளவு வசதியாக இருந்த குடும்பம், அம்மா பிறந்த பின்னர் மேலும் செல்வச் செழிப்பானதால் அம்மா கடைக்குட்டி செல்லமாக வளர்ந்தார். 

கடந்த மாதம் அம்மா மறைந்தைக் கேள்விப்பட்டு முதல் முறையாக எங்கள் வீட்டுக்கு வந்தார் அம்மாவின் அண்ணன். அவர் மட்டுமே சகோதரர்களில் உயிருடன் இருப்பவர் இப்போது. கடைசியாக 25 வயது இளம் பெண்ணாகப் பார்த்த தங்கையை, 55 வருடங்கள் கழித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் சவமாக பார்த்த  96 வயதான  அவர் மார்பிலறைந்துகொண்டு ”அய்யோ காஃபி குடிச்ச டம்ளரைக் கழுவக் கூடப் போட விடமாட்டோமே, அப்படிச் செல்லமா இருந்தாளே பாப்பாத்தி’’ என்று  கதறினார். 

எங்கள் குடும்பங்களில் அனைவருமே நிறம் மட்டுத்தான். அபூர்வமாகவே வெள்ளைத்தோல் கொண்டவர்களை காணமுடியும். கொங்குப்பகுதியில் நல்ல  நிறமுள்ள பெண்கள் என்றால் பிராமணப்பெண் என்னும் பொருளில் பாப்பாத்தி என பெயர் வந்துவிடும். பரமேஸ்வரியாகிய அம்மா நல்ல வெளுப்பு என்பதால்  பாப்பாத்தி என்று அழைக்கப்பட்டார்.

அப்படிக் கதறிய என் தாய் மாமனை நான் அன்றுதான் முதன் முதலாக பார்த்தேன். அந்தக் கண்ணீரால்  கரைக்க  முடியாத கடந்த காலமொன்று குளிர்ந்து விறைத்திருந்த அம்மாவின் உடலுக்கும் அவருக்கும் இடையில்  நின்றிருந்திருந்தது. இதன் பொருட்டே அவர் இன்னும் உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்தாரோ என்னவோ என்று துக்க வீட்டில்  பலரும் பேசிக்கொண்டனர்.

பத்துப் பேரில் மூத்தவரான ஞானம் பெரியம்மாவுக்கு 7 குழந்தைகள். அவருக்கு மூன்றாம் மகன் பிறக்கையில்தான் சில நாட்கள் இடைவெளியில் அம்மாவும்  பிறந்திருக்கிறார்கள்.

தாயும் மகளும் ஒன்றாகப் பிரசவிப்பதை, ஏதோ பழைய கதையைச்  சொல்லக் கேட்பதுபோல் அம்மா கதையாகச் சொல்லக் கேட்டிருப்போம்.  அம்மாவின் வாழ்க்கையே புனைவை மிஞ்சும் நிகழ்வுகளால் ஆனதுதான். அக்காள் மகன்  துரையும் அம்மாவும் ஒரு சிலநாட்கள் இடைவெளியில் பிறந்தவர்கள் என்பதால் துரை அண்ணன் அம்மாவை ’பாப்பி சித்தி’ என்று பெயர் சொல்லித்தான் அழைப்பார்

பெரியண்ண கவுண்டருக்கும், வெள்ளையம்மாளுக்கும் 1942 பிப்ரவரி 20 அன்று அம்மா பிறந்தார். மிகச் செல்லமாக எந்த வீட்டு வேலையும் செய்யாமல், ராணியைப் போலவே வளர்ந்திருக்கிறார்கள். அக்காலத்திய பெரும்பாலான குடும்பங்கள் போலவே அம்மாவின் குடும்பமும் சாதிப்பற்று மேலோங்கிய குடும்பமாக ஊரில் நல்ல  செல்வாக்குடன் இருந்திருக்கிறது.

அம்மா மட்டுமே சகோதர சகோதரிகள் அத்தனை பேரில் பள்ளி இறுதி முடித்து ஆசிரியர் பயிற்சிக்கு சென்றவர்.

அம்மாவின் அப்பா, நான் இப்போது வசிக்கும் இந்த குக்கிராமத்தில் ஒரு பெரிய அரிசி ஆலையில் கணக்கராக இருந்திருக்கிறார். அம்மாவின் ஒரு அண்ணன்  பெரும் பொருட்செலவில் இந்தியா முழுவதும் செல்லும் பெர்மிட்டுடன் ஒரு லாரி வாங்கிய போது குடும்பம் எதிர்பாராமல் நொடிக்கத் துவங்கியிருக்கிறது. ஆனால் மீண்டு விடலாம் என்னும் நம்பிக்கையுடன் இருந்திருக்கிறார்கள். லாரி அடிக்கடி பாம்பே சென்று வந்ததால் அந்த அண்ணன் பாம்பேக்காரர் என்று கிராமத்தவர்களால்  அழைக்கப்பட்டிருக்கிறார்.

அப்படி பாம்பே சென்ற  அவர் ஒருமுறை அங்கே பூரி என்னும் உணவைச் சுவைத்து விட்டு, அந்தப்  பதார்த்தத்தைச் செய்யும் முறையையும் கற்றுக் கொண்டு வந்திருக்கிறார். அம்மாவின் ஊரான வேட்டைக்காரன் புதூரில் அப்போது பூரி அறிமுகமாயிருக்கவில்லை. வீட்டு முற்றத்தில் விறகடுப்பு கூட்டி பலர் முன்னிலையில் பூரியை அண்ணன் செய்து காண்பித்ததை அம்மா கதைபோல நீட்டி நீட்டிச் சொல்லுவார்கள். எப்போது பூரி செய்தாலும் அம்மா விவரித்த அக்காட்சி மனதில் வரும்.

அம்மா இப்படி தன் நினைவுகளிலிருந்து பலநூறு சம்பவங்களை கதை போலச் சொல்லுவார். அக்கதைகளின்  கையை பிடித்துக் கொண்டு, தான் ஒருபோதும் திரும்பிச் செல்லவே முடியாத இடங்களுக்கு தன் நினைவில் சென்று கொண்டிருந்திருக்கிறார்  என்பது புரிய வெகுகாலமாயிற்று. ஒருபோதும் அக்கதைகள் என் அப்பாவின் முன்னிலையில் சொல்லப்பட்டதில்லை.

அதே கிராமத்தில் மாடுகள், குதிரை மற்றும் யானைகளை வியாபாரம் செய்துவந்த ஒருவரின் வீட்டில் தாயும் குட்டியுமாக யானைகள் வந்திருப்பதை வேடிக்கை பார்க்க 10 வயது சிறுமியாக அம்மா சென்றிருக்கிறார். அந்த பெரிய வீட்டின் முற்றத்தில் தாய் யானை, குட்டிக்கு  பாலூட்டி கொண்டிருந்திருக்கிறது. குட்டி பாலருந்துகையில் சிந்திய பால் ஒரு சிறு ஓடைபோல வாசலைத்தாண்டி ஓடிக்கொண்டிருந்ததாம். அதை சொல்லுகையில் எல்லாம்  அம்மா பத்து வயது சிறுமியாகவே மாறிவிட்டிருப்பார்

பாம்பே அண்ணன் வடநாட்டுப் பயணமொன்று சென்று வந்தபோது  ஒரு வைரக்கல்லையும் அக்காலத்தில் சாதாரணக் குடும்பத்தினர்  நினைத்துப் பார்க்கவே முடியாத தொகை கொடுத்து வாங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு அம்மாவின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் நொடித்துப் போயிருக்கிறது. அப்போது பலரும் சொன்னபடியும், நம்பியபடியும் அந்த வைரம் நீரோட்டம் சரியில்லாதது என்றும் அதனால்தான் குடும்பம் நொடித்துப் போனதென்றும் அம்மாவும் நம்பினார்.

அந்த வைரத்தை  யாருக்கும் விற்கவும் முடியாமல் பலவருடங்கள் கழித்து மிக மிகச் சாதாரண தொகை ஒன்றிற்கு கொடுத்திருக்கிறார்கள். அப்போது குடும்பம் மீண்டு வர முடியாத அளவிற்கு நொடித்து விட்டிருந்தது 

அம்மாவும் ஆசிரியப் பயிற்சி முடிந்து அரசு வேலையும் கிடைத்து ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையாகப்  பணியாற்றத் துவங்கி இருந்தார். வீட்டில் பொருளாதார நிலைமை மாறி இருந்தாலும் வழக்கம்போல செல்லப் பெண்ணாகவே இருந்தார்

இரண்டாவது அக்காவான மீனாட்சி ஒருமுறை அம்மா காபி குடித்த டம்ளரை எடுக்க மறுத்தபோது, கோபித்துக்கொண்டு அக்காவுடன் ஒரு வருடம் அம்மா பேசவே இல்லையாம். இப்போதும் மீனாட்சி பெரியம்மா ’’பிடிவாதக்காரிடி உங்கம்மா’’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போகும்.

இன்னொரு பெரியம்மாவான ஞானம் கடும் சுத்தக்காரர், நாங்கள் சிறுமிகளாய் இருக்கையில் அவர்  வீட்டுக்கு வந்தாலே அழத்துவங்கி விடுவோம். தலையில் பேன் பார்த்து, ஒட்ட நகம் வெட்டி, கொதிக்க கொதிக்க சுடுநீர் ஊற்றிக் குளிக்க வைத்து இம்சைப்படுத்துவார். உடலே சிவந்துபோய்  ஆவி பறக்கும்,  குளியலுக்கு பின்னர். அம்மா வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு  வந்து போய்க்கொண்டிருந்தது  அந்த இரண்டு பெரியம்மாக்கள் மட்டும்தான்.

அத்தனை செல்லமாய் வளர்ந்த அம்மாவுக்குத்தான், அவர் உயிருடன் இருக்கையிலேயே கடைசிக் காரியங்கள் செய்து, 16 ஆம் நாள் கருமாதியும் அவர் வீட்டில் செய்தார்கள்

 நொடித்துக்கொண்டு இருந்த குடும்பத்தில் இரு சகோதரிகளுக்கும், நாலு சகோதரர்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. ஒரு அண்ணன் சாமியாராகி விட்டிருந்தார். பாம்பே அண்ணனுக்கு திருமணம் தள்ளி தள்ளி போய்க் கொண்டிருந்திருக்கிறது. 

பக்கத்து கிராமமான பூச்சனாரியின் ஜமீன் குடும்பமொன்றில் 6 மகள்கள், அனைவருக்கும் வரன் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அந்த ஜமீன் குடும்பத்தில் முன்னெப்போதோ நிகழ்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண் தற்கொலையின் போது அக்குடும்பத்தில் இனி ஆண்வாரிசு தங்காது என்றும், பெண்கள் அனைவரும் விதவைகளாகவே இருப்பார்கள் என்றும்  சாபம் இருந்திருக்கிறது. அதனால் திருமணம்  தள்ளிப் போய்க்கொண்டிருந்த  பெண்களை அந்த ஜமீன்தார், சாதாரண குடும்பங்களுக்கே கொடுக்க  முனைந்தார், அதில் ஒரு பெண்ணான பச்சைநாயகியை அந்த பாம்பே அண்ணன் திருமணம் செய்துகொண்டார். 

பேரழகி அந்த அத்தை. அவரை  முதன் முதலில் பார்த்தபோதே அவர் வெள்ளுடையில் விதவையாகத்தான் இருந்தார். தன் கடைசி காலம் வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். பச்சை நாயகி அத்தையின் முதல் மகன் பிறந்த இரண்டாவது நாள் இறந்துபோனான்.  “பழனி முருகனாட்டம் நீள அகலமா இருந்தானே என் மகன், சுடுகாட்டுக்குக் கொண்டு போறப்போ அவனை கையில தூக்கிட்டு வாசல்வழியா நேரா போக முடியாம, கையை சாச்சுத்தானே கொண்டு போனாங்க’’  என்று அழுவார்கள் அடிக்கடி. 

மீண்டும் அத்தை நிறை கர்ப்பிணியாக இருக்கையில் பாம்பே அண்ணன் ஒரு விபத்தில் காலமானார்.  ஒரு பெண் குழந்தையுடன் அத்தையும் அவரின் ஐந்து சகோதரிகளுமே இளம் விதவைகளாத்தான் இருந்தார்கள்.. அவர்களின் ஆண் வாரிசுகளில் ஒரே ஒருவரைத் தவிர பிறர் அனைவருமே மர்மமான முறையில் அல்லது அகாலமாய் மரணித்தார்கள். அவர்களுக்குப் பிறந்த பெண்கள் நலமுடன் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறையிலும் ஆண் வாரிசுகள் தங்குவதில்லை. இந்த இணைய யுகத்தில் இது என் குடும்பத்தில் நடப்பதால் மட்டுமே என்னாலும் நம்ப முடிகிறது.

என் அம்மாவை அவர்களின் குடும்பமே மறந்து , கடைசிக் காரியங்கள் செய்து,  எங்கள் மகள் இறந்துவிட்டாள்  என்று புகைப்படத்துடன் நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து விட்டிருந்தனர்.  எனினும் பச்சை நாயகி அத்தை தூயவெண் பருத்திப் புடவையுடன் நெற்றி நிறைந்த திருநீறு துலங்க அடிக்கடி வீட்டுக்கு வருவார். 7 குழந்தைகளுடன் விதவையாக இருந்த ஞானம் பெரியம்மா, குழந்தைகளே இல்லாத மீனாட்சி பெரியம்மா, அப்பாவுக்குத் தெரியாமல் ரகசியமாய் எப்போதாவது அம்மாவுடன் பார்க்கப்போகும் பொள்ளாச்சி சுப்பிரமணிய சாமி கோவில் வாசலில் காவியுடுத்திப் பிச்சைக்காரர்களுடன் அமர்ந்திருக்கும் அம்மாவின் சாமியார் அண்ணன், பச்சைநாயகி அத்தை ஆகியோர் மட்டுமே எங்களுக்கு அம்மாவின் குடும்பத்தினருடனான கண்ணிகள்.

மீனாட்சிப் பெரியம்மா அம்மாவுக்கு வலுக்கட்டாயமாக  விஷம் அளித்துக் கொல்லப்பார்த்ததை மீனாட்சிப் பெரியம்மாவே சொல்லிச் சொல்லி பலமுறை அழுவார்கள். வஞ்சமெனும் கொடுந்தெய்வம் மனத்தில் குடியேறினால் செய்ய முடிந்த அனைத்தையும் அம்மாவின் குடும்பம் செய்திருக்கிறது.

அம்மாவுக்கு 25 வயதான போது குடும்பம் நொடித்திருந்தாலும் அரசு வேலையும், அழகும், அம்மாவுக்கு நல்ல வரன்களைக் கொணர்ந்து வந்திருந்திருக்கின்றன. எனினும் அம்மா வீட்டினர்  ஒரு அரசாங்க வேலையிலிருக்கும் மணமகனே உகந்தவரென்று அபிப்ராயப்பட்டதால் என் அப்பாவை சம்பந்தம் பேச விழைந்திருக்கின்றனர். அம்மாவுடன் ஒப்பிட்டால் பொருளாதார ரீதியாக  மிகப் பின்தங்கியவர்கள் அப்பாவின் குடும்பம்.

 இரு சகோதரிகள், இரு சகோதரர்களுடன் குடும்பத்தில் மூத்தவராக பல கடமைகள் கழுத்தை நெருக்கிக் கொண்டிருந்தாலும் சென்னையில் படித்து அரசுப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்ததால் அப்பாவுக்கு  அம்மாவைக் கொடுப்பதாக வெற்றிலை பாக்கு மாற்றி எளிமையாக இரு குடும்பத்தினர் கூடி திருமணம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மிக எளிமையாக  மூன்று மாதங்களில் நடந்து முடிந்திருக்க வேண்டிய அம்மாவின் திருமணம் எதிர்பாராமல் பெரும் சிக்கலை சந்தித்திருக்கிறது. யார் பக்கம் தவறென்று சொல்லவே முடியாதபடிக்கு    அம்மாவின் மொத்த வாழ்வையும் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டிருக்கிறது ஊழ்.

வெண்முரசில்  ’’மாமலைகளைப்போல உங்கள் நெஞ்சின்மேல் பெருந்துயரை தூக்கி வைக்கக்  காத்திருக்கிறது ஊழ்’’ என்று சொல்லப்பட்டிருக்கும். ஊழன்றி வேறெதெற்கு இத்தனை வல்லமை இருக்கும்?

அந்த திருமண உறுதிப்பாட்டின் போதுதான் அம்மவுக்கு தெரியவந்திருக்கிறது யானை பாலருந்தி ஓடையாய் பால் வழிந்தோடியது அப்பாவின் வீட்டு வாசலில் என்று. அத்தனை செல்வாக்கோடு இருந்த குடும்பம் என் தாத்தாவின் (அப்பாவின் அப்பா)  திருமணத்தைத் தாண்டிய பந்தமொன்றினால் சரிந்திருக்கிறது 

அந்தத் தொடர்பு என் தாத்தாவிற்கு அவரது இறுதிக்காலம்  வரைக்கும் இருந்தது.

நான் சிறுமியாக இருந்தபோது தாத்தாவுடன்  மிகப்பெரிய முற்றமும்,  விறகு எடைபோடும் தராசும், அடுக்கப்பட்டிருந்த விறகுக்குவியல்களுமாக இருந்த  ‘அந்த’  பெரிய ஓட்டு வீட்டுக்கு சென்றது எனக்கு தேசலாய் நினைவிருக்கிறது. 

அந்த மாபெரும் தராசுத்தட்டில் உட்கார வைக்கப்பட்டு சிறு துண்டு வெல்லம் எனக்கு அந்த   வெற்றிலையால் சிவந்த உதடுகளுடன் இருந்த அம்மாள் அளித்தார்கள். அன்று இரவு என்னைப் பாட்டி ’’அங்கே போவியா போவியா’’ என்று கண்ணீருடன் அடித்தார்கள். அந்த அடிகள் எனக்கானவை அல்ல என்பது புரியவும் பல வருடங்களானது.

பாட்டியின் பிறந்த வீட்டிலிருந்து அனுப்பப்படும் வருஷத்துக்கான நெல்மூட்டை வண்டியும் அந்த விறகுக் கடை வீட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. அப்போதைய வாயில்லாப் பூச்சி மனைவிகளில் ஒருவரான பாட்டி, வீட்டு செலவுகளுக்கென நிலக்கடலை உரிக்கவும் , வேப்பமுத்து பொறுக்கவும், வயல்களுக்குக் கூலி வேலைக்கும் போய்க் கொண்டிருந்தார்

அப்பா படித்து ஆசிரியராகி குடும்பம் நிமிரத்துவங்கி இருந்த நேரத்தில், இந்த  சம்பந்தமும், அம்மாவின் அரசுவேலையும் பெரும் நம்பிக்கை ஊட்டுவதாகவும், திருமண வயதில் இருந்த இரு அத்தைகளின் எதிர்காலத்திற்கான பிடிமானமாகவும் இருந்திருக்கிறது

நிச்சயதார்த்தம் முடிந்து சில வாரங்கள் கழித்து அம்மாவின் பள்ளியில் நடந்த ஒரு அரசு விழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்தவரும், கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவரும், பெரும் செல்வாக்கான பதவியும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய நிலங்களும் கொண்டிருந்த ஒருவர் அம்மாவை அந்த விழாவில் பார்த்திருக்கிறார்.

அம்மாவுக்குத் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்ட விவரம் தெரியாத அவர், அம்மாவின் அழகும் எளிமையும் பிடித்திருந்ததால் தன் குடும்பத்தினருடன் அன்றே அம்மா வீட்டுக்கு சென்று பெண் கேட்டிருக்கிறார் உடனடியாக திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

வேகமாக வீழ்ந்து கொண்டிருந்ததால் எதைப் பற்றிக்கொண்டாவது மேலே ஏறி மூச்சு விட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த அம்மாவின் குடும்பத்தினர் இந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ள விரும்பியிருக்கின்றனர். மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு பற்றிக்கொள்ள ஒரு மரத்துண்டு கிடைத்தால் போதும் என்றிருக்கையில் ஒரு சொகுசுக் கப்பலே  வந்தது போல, அவர்களுக்கு அனைத்தையும் கடந்து குடும்பம் நிமிர்தல் என்னும் ஒன்று மட்டுமே மிக முக்கியமானதாக தெரிந்திருக்கிறது.

அம்மாவுக்கு வெற்றிலை மாற்றி நிச்சயம் செய்துவிட்டதைச் சொன்னபோதும் மணமகன் வீட்டார் ’ வெறும் உறுதி செய்தலான அந்த நிகழ்வில் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை, பெண் வீட்டினருக்கு சம்மதமென்றால் உடன் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று  சொன்னபோது அறமென்னும் ஒன்றை அம்மாவின் குடும்பம் மறந்து விட்டிருக்கிறது.

புதிய சம்பந்தமொன்றிற்கு  சம்மதம் சொல்லப்பட்டது அம்மாவுக்கு மிகத் தாமதமாகவும், அப்பாவின் குடும்பத்திற்கு மிக மிகத் தாமதமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.  இது தெரிய வந்தபோது நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதிக்கு சரியாக ஒரு வாரம் இருந்திருக்கிறது

 இதை அம்மா திகைப்புடன் எதிர் கொண்டிருக்கிறார்கள்.  அப்பா குடும்பத்தினர் இதில் சீண்டப்பட்டவர்களாகவும், இழிவு படுத்தப்பட்டவர்களாகவும் உணர்ந்திருக்கின்றனர்.

செல்வாக்கு மிக்க ஒரு குடும்பத்தினரின் தலையீடு, திருமணக்கனவில் இருந்த இரு இ்ளம் உள்ளங்களின் கணிப்புக்கு அப்பாற்பட்டதாக இருந்திருக்கிறது.

அப்போது திராவிட கட்சியிலும் கடவுள் மறுப்புக்கொள்கையிலும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அப்பா தனது நண்பர்களுடன் அம்மா வீட்டிற்குப் பேச்சு வார்த்தைக்குப் போன போது சிறுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்.

அம்மா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். பலமுறை வீட்டிலிருந்து வெளியேற முயன்று  கடுமையாக தண்டிக்கப்பட்டிருக்கிறார்.  அப்பா வழித்தாத்தா வறுமையில் இருந்தாலும் ஊரில் நல்ல செல்வாக்கு கொண்டவர். அவரும் இதில் தலையிட்டு உதவியதால், குறித்த நாளுககு முந்தைய இரவு தன் நண்பர்கள் உதவியுடன் அம்மாவை வீட்டிலிருந்து வெளியேறச் செய்து, தன் வீட்டு முற்றத்தில் எளிமையாக மாலைமாற்றி  தாலி கட்டி  அப்பா திருமணம் செய்துகொண்டார்.

விஷயம் தெரிந்து அந்தப் பெரிய வீட்டினர் எந்த மனவருத்தமும் இன்றி விலகிக்கொண்டனர். ஆனால் அம்மா வீட்டினர் இதில் அவமானப்பட்டு மிக மிகப் புண்பட்டுவிட்டனர். மறுநாளே அம்மாவை இறந்தவளாக அறிவித்து நாளிதழில் விளம்பரம் கொடுத்து வீட்டில் முறையாக நீத்தார் சடங்கும் செய்திருக்கிறார்கள்.

கட்டிய புடவையுடன் எளிமையாக அப்பாவின் வீட்டுக்கு வந்த அம்மாவுக்கு இடப்பட்ட முதல் கட்டளையே இனி பிறந்த வீட்டை நினைக்க கூடாது  அங்கு போகக்கூடாது என்பதுதான். அதை கடந்த மாதம் மாரடைப்பால், என் தோளில் சாய்ந்து உயிரை விட்ட  தனது 82 வது வயது வரை அம்மா கடைப்பிடித்தார்

தனது பெற்றோர் இறந்த செய்தி வந்தபோது  கூடத்து சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கதறி அழுதுகொண்டிருந்த அம்மாவின் சித்திரம் என் மனதில் அப்படியே பதிந்திருக்கிறது.

அந்தத் திருமணம் அப்பாவின் ஆணவத்தின், ஆண்மையின் வெற்றியாக அமைந்தது என்றாலும் ஒரு மிகப்பெரிய சம்பந்தத்தை உதறிவிட்டு  அவர்களுடன் இணை சொல்லவே முடியாத இடத்தில் இருந்த தன்னை பரமேஸ்வரி மணம் செய்து கொண்டது அப்பாவை எங்கோ காயப்படுத்தி இருக்கிறது.

வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் மூத்த மகனாக இருந்த அந்த ஆணின் உள்ளுறைந்திருந்த விலங்கொன்று அப்போதிலிருந்து விழித்துக்கொண்டது. அம்மா ஒருபோதும் அந்த இணை வைத்தலை மனத்திலும் கனவிலும் நினைத்து விடக்கூடாது என்பதை இத்தனை வருட தாம்பத்ய வாழ்வில் அப்பா என்கிற பெரும் வன்முறையாளர் கணம் கணமாக நினைத்துக் கொண்டே தான் இருந்தார். தன் எல்லாச்செயல்களிலும் அதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி அம்மாவை வதைத்துக்கொண்டே இருந்தார்.

அம்மா ஒரு  திருமண உறுதிப்பாட்டினை மீறக் கூடாது என்னும் எளிய அறத்தினால் இந்த கல்யாணத்துக்கு சம்மதித்திருக்க கூடும்.

ஆனால் கடைசிக்கணம்  வரைக்கும் ஒரு தென்னிந்தியப் பெண்ணிற்கு உரித்தான அனைத்து குடும்ப வன்முறைகளும், அநீதிகளும் இழைக்கப்பட்டு, உதறிவிட்டு வந்த அந்த உறவை நினைத்துவிடக்கூடாது என்பதற்காக மேலதிகமாக, சித்ரவதையும் செய்யப்பட்டார்.  அறத்தின் மீது நின்றமைக்காக அம்மா இழந்ததும் பெற்றதும் ஏராளம்

இதை ஒருபோதும் அப்பாவும் அம்மாவும் வெளிப்படையாகப்  பேசிக் கொண்டதில்லை எனினும்  அப்பாவின் உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த அந்தக் கனல் அவ்வப்போது தழலாடி எங்கள் அனைவரையும் பொசுக்கும்.

அப்பா செய்த அனைத்து இழிவுகளையும் மறு பேச்சின்றி ஏற்றுக்கொண்டு, அவரது எல்லாச் செயல்களுக்கும் மறுப்பேதும் தெரிவிக்காமல்  மெளன சாட்சியாக இருந்த அநீதியை அம்மா இறுதிவரை செய்தார். ஒரு போதும் அப்பாவை மீறி ஒரு சொல் அம்மா சொன்னதில்லை, நினைத்ததும் இல்லை

புகுந்த வீட்டின் நான்கு திருமணங்களையும் அம்மா சீரும் சிறப்புமாக நடத்தி வைத்தார். கழுத்தில், காதில், கைகளில் ஏதும் நகைகள் இன்றி வெறும் கழுத்தாக வந்த அம்மாவுக்கு அப்பா வாங்கிக்கொடுத்த  ஒரேொரு பீட்ரூட் கல் நெக்லஸ் பெரும் பிரியத்துக்குரியதாக இருந்தது

கண்ணை விழித்துக் கொண்டு பெரிய பெரிய அடர் சிவப்பு நிற உருண்டைக்கற்களுடன் இருக்கும் அந்த பழமையான நெக்லஸை அம்மா எனக்கு திருமணத்தின் போது கொடுத்திருக்கிறார்கள். அம்மாவின் கழுத்திலும் வீட்டு அலமாரியிலும் இருந்ததை விட அதிக காலம் அது வங்கியில் கடனாக வைக்கப்பட்டிருந்தது.

அம்மாவின் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகி அம்மாவின் பெற்றோர் இறந்து, நானும் அக்காவும், தம்பியுமாக மூன்று பிள்ளைகள் பிறந்த பின்னர் அம்மாவின் இரு சகோதரிகளும் மெல்ல மெல்ல வீட்டுக்கு வரத் தொடங்கினர்.

கல்யாண பிரச்சனைகளின் போது அம்மா வீட்டைவிட்டு வெளியேறத் தயாராகிவிட்டதை தெரிந்துகொண்டு வலுக்கட்டாயமாக விஷம் புகட்ட முனைந்த மீனாட்சி பெரியம்மாவும், மகளைப் போல வளர்த்த சின்னத்தங்கையை  கொல்ல உடந்தையாக இருந்த ஞானம் பெரியம்மாவும் சொல்லித்தான் எங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்தன. மீனாட்சி பெரியம்மா என் பாதுகாப்பில் இருக்கிறார்கள். சுத்தக்காரரான ஞானம் பெரியம்மா பல வருடங்களுக்கு முன்னர்  ஒரு வாரம் வெறும் நீர் மட்டும் அருந்தும் கடும் சஷ்டி விரதம் இருந்து, ஏழாம் நாள் சூர சம்ஹாரம் பார்த்துவிட்டு  வீடுதிரும்பி பச்சைத்தண்ணீரில் குளித்துவிட்டு புடவைக் கொசுவத்தை சொருகிக்கொண்டிருக்கையில் அப்படியே மாரடைத்து இறந்துபோனார். விழுந்து கிடந்த அவர் கைகளுக்கு வெகு அருகே விரதம் முடித்துவைக்க வேண்டிய முருகனின் தண்டு பிரசாதம் இருந்தது.

 பல கஷ்டப்பாடுகளுக்கிடையில் எங்களை  வளர்த்தெடுத்தாலும் அப்பாவின் அநீதிகளுக்கெல்லாம் மெளனமாக இருந்தே உடந்தையாக இருந்தார் என்னும் வருத்தம் அம்மாவின் மீது எங்கள் மூவருக்கும் உண்டு.

அம்மா கடைசி நாள் வரை தனக்கு தானே எல்லா வேலைகளையும் செய்து கொண்டார். விநாயக சதுர்த்திக்கு கொளுக்கட்டைகளை அவராகவே அன்று செய்தார்.  மறுநாள் செப்டம்பர்  முதல்நாள்அன்று இரவு 1 மணிக்கு மூச்சு விட சிரமாயிருக்கிறெதென்று சொன்ன அம்மாவை உடனே காரில்  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.

அவசரமாய் காரில் ஏற வந்த என்னை ’அந்தப் பக்கம் வந்து உடகாரு தேவி’’ என்றார் அம்மா. அதுவே அவரது வாழ்வில் கடைசியாக பேசிய வாக்கியம் என்பது அப்போது எனக்கும் அவருக்கும் தெரிந்திருக்கவில்லை. வயோதிகத்தினால் ஏற்பட்ட உடல் நலிவினால் அவ்வப்போது மூச்சுவிட சிரமப்படுவார்கள் அப்படியான ஒன்று தான் என அன்றும் நினைத்தேன்.

20 நிமிட  பயண தூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு  அப்பாவையும் அழைத்துக்கொண்டு என் மகன்  ஓட்ட, காரில் விரைகையில் கண்களை மூடிக்கொண்டு கார் கூரையிலிருக்கும்  சிறு கைப்பிடியை பிடித்துக்கொண்டே வந்த  அம்மாவுக்குள் நான்  பேசியவை எதுவும்  சென்று சேரவே இல்லை. 

மருத்துவமனையை நெருங்க 5 நிமிடங்கள் இருக்கையில் கைப்பிடியை விட்டுவிட்டு ஒரு கையால் என் இடது கையை இறுகப் பற்றிக் கொண்டு என் தோளில் சாய்ந்துவிட்டார்கள்.

அவ்வளவுதான். 82 வருட வாழ்வும் 55 வருட தாம்பத்யமும்  எண்ணிலடங்கா துயர்களும், வேதனைகளும், அனுபவங்களும், நினைவுகளும் நிறைவுற்றன. 

அம்மாவின் இறுதிச் சடங்குகளின் போது அவர்களை அலங்கரித்து எங்கோ தூர தேசத்துக்கு அனுப்புவது போல் தயார்படுத்துவதாக நான் நினைத்துக்கொண்டேன். உறுதியாக மின்மயானத்துக்கு வர மறுத்து விட்டேன். அம்மாவின் அலங்கரித்த தோற்றமே என் மனதின் கடைசி சித்திரமாக இருக்கட்டுமென்று.

சிதை ஏற்றுகையில் சொல்லப்பட்டிருக்கிறது முன்பு சுடுகாடாக இருந்த அங்குதான் அம்மாவின் அப்பாவினுடைய உடல்  சாம்பலாக்கப் பட்டிருக்கிறதென்று. இந்த விசித்திரமான வாழ்வு நம்மை அழைத்துச் செல்லும் இடங்களை ஒருபோதும் நம்மால் கணிக்கவே முடிவதில்லை.

 குழந்தையாக, கன்னியாக, மனைவியாக, அன்னையாக, முதியவளாக 82 நீண்ட வருடங்கள்  வாழ்ந்து மறைந்த அம்மாவை மூன்றாம் நாள் ஒரு சிறு மண் சட்டியில்  அஸ்தியாக எடுத்துக்கொண்டு பாரதப்புழா ஆற்றில் கரைத்துவிட்டு, கரையோரம் இருந்த நவ முகுந்தனை தரிசித்து விட்டு அம்மாவின் ஆன்மா சாந்திக்கென வேண்டிக்கொண்டு திரும்பினோம். திரும்பும் பயணத்தில் அனைவரின் மனதிலும் இனி அம்மா வெறும் நினைவாகவே எஞ்சுவார் என்பது  ஒரு பெரும் பாறை போல அழுத்திக் கொண்டிருந்தது. வாழ்வென்னும் வதையிலிருந்து விலக்குகையில் இறப்பு ஒரு விடுதலையாகத்தான் இருக்கும்.

பாதி தூரத்தைக் கடந்தபோது கார் ஓட்டிக் கொண்டிருந்த என் தம்பி என்னிடம்’’ நீ  கொஞ்ச நேரம் முன்னால் சாமி கும்பிடும் போது  அப்படியே அம்மாவின் சாயலில் இருந்தே’’ என்றான். நான் பெருமூச்சு விட்டுக் கொண்டேன் அம்மாவின் இடத்துக்கு காலம் என்னை நகர்த்தி விட்டிருக்கிறது

அம்மாவின் இறப்பு நிகழ்ந்த அந்த வாரம்  வீட்டிலிருந்த பெரு மரங்களைத் தறித்துக் கொண்டிருந்தோம். அம்மாவின் இறப்பு, மனத்திலும் வீட்டிலும் உருவாக்கி இருந்த வெறுமையை அத்தனை காலம் பசுமைப் பெருக்கினால்  வீட்டை மூழ்கடித்து கொண்டிருந்த மரங்களும் அவற்றின் நிழலும் குளுமையும் இல்லாதிருந்தமை மேலும்  அதிகரித்திருந்தது.

மிக எளிய இறப்பு அம்மாவுடையது.  ஒரு மலர் உதிர்வதைப்போல உதிர்ந்து விட்டார்கள்.  இப்போது தினம் அம்மாவை  நினைத்துக் கொள்கிறோம். மெல்ல மெல்ல  வாழ்வின் இயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கையில் அம்மாவை  மெல்ல மறக்கவும் தொடங்குவோம். பின்னர் வருடா வருடம் ஒரு சடங்கு போல நினைவுகூர்ந்து வழிபடுவோம். எனினும் என் தோளில் அம்மாவின் அந்த கடைசிச் சாய்தலின் எடை என் இறுதிக்கணம் வரைக்கும் இருக்கும். இவ்வுலகின் இரக்கமற்ற நெறிகளுக்கும் வஞ்சங்களுக்கும் இடமில்லா மூச்சுலகில் அம்மா அமைதி கொள்ளட்டும்.

48 நாட்கள் கடந்துவிட்டன அம்மா இல்லாமல்.  

தறிக்கப்பட்டு வெறுமை சூடி நின்ற மரக்கிளைகளில்  செம்புநிறத்  தளிர்கள் எழுந்திருக்கின்றன. சருகுகளை உதிரச்செய்யும் புடவியின் அதே நெறிதான் புதுத்தளிர்களையும் எழச் செய்கிறது.  

அம்மாவின் ஆசி எங்களுக்கு பரிபூரணமாகக் கிடைத்து,  உயிரொளிரும் தளிர்களும் மலர்களும் அவற்றின் குளுமையுமாக வீடு நிறையட்டும்.

ஆடலுடன் பாடலும் அய்யாரெட்டும்!

70-களில்  தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழிகளில் நடித்த எல். விஜயலக்ஷ்மியை நினைவிருக்கிறதா? இந்தப் பாடலைச் சொன்னால் உடனே நினைவுக்கு வருவார். மாறுவேடத்தில் முறுக்கு மீசை வைத்துக்கொண்டு பஞ்சாபி உடையில் இருக்கும் எம். ஜி. ஆருடன் ’’ஆடலுடன் பாடலைக்கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம் சுகம்’’ என்று பாங்கரா நடனமாடுவாரே அதே விஜயலக்ஷ்மிதான்.

பூனாவில் வசித்த தமிழ்பிராமணக் குடும்பத்துப் பெண்ணான விஜயலக்ஷ்மி, 5 வயதிலிருந்தே ,  இசை மற்றும் நாட்டியக்கலைஞரான தன் தாயிடமிருந்து நடனம் கற்றுக்கொண்டார். 9-வது வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த விஜயலக்ஷ்மி வழுவூர்  ராமையா பிள்ளையிடம்  நடனம் கற்றுக்கொண்டார். 

சென்னையில் விஜயலக்ஷ்மியின் அரங்கேற்றம் குமாரி கமலா உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்தது. பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. பல தென்னிந்திய மொழிகளில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல முன்னணிக் கதாநாயகர்களுடன் இணைந்து நடித்த விஜயலக்ஷ்மி இந்தப் பாடலினால் வெகுவாக பிரபலமானார். சுமார் பத்தாண்டுகள் தென்னிந்திய திரைஉலகில் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருந்தார் விஜயலக்ஷ்மி.

1969-ல் ஊட்டி வரை உறவு திரைப்படத்தில் இரு விஜயாக்களில் ஒருவராக கே ஆர் விஜயாவுடன் நடித்துக் கொண்டிருக்கையில் படப்பிடிப்புத் தளத்தில்  அவரது சகோதரனின் நண்பரும் பிலிப்பைன்ஸின் IRRI அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய வேளாண் விஞ்ஞானியுமான  சுரஜித் குமார் தத்தாவை (Surajit Kumar De Dutta ) சந்தித்தார் விஜயலக்‌ஷ்மி. 

காதல் வயப்பட்ட தத்தாவும் விஜயலக்ஷ்மியும் அந்த ஆண்டே திருமணம் செய்து கொண்டார்கள்.  ஊட்டி வரை உறவுதான் விஜயலக்ஷ்மியின் கடைசித் திரைப்படம், அதன்பிறகு அவர் நடிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் மிக முக்கியமான நெல் கண்டுபிடிப்பிற்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த கணவர் தத்தாவுடன்  அவரும் பிலிப்பைன்ஸ் சென்றார்.

தத்தா பணியாற்றிக் கொண்டிருந்தது பிலிப்பைன்ஸ் நாட்டின், லாகுனா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான   IRRI யில் .    IRRI பதினேழு நாடுகளில் 1,300 ஊழியர்கள் பணியாற்றும் கிளை அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

1960- களில் ஆசியாவில்  நிலவிய தானியப் பஞ்சத்தை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அரிசி இனங்களை வளர்க்கும் பசுமைப் புரட்சி இங்கு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் பல விஞ்ஞானிகளின் முயற்சியால் உருவான  நவீன நெல் ரகங்கள், விவசாயிகளுக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது, IRRI-ல் கண்டுபிடிக்கப்பட்ட  புதிய நெல் ரகங்கள் மூன்று மடங்கு  உற்பத்தியை அளித்தன.

இந்த ஆராய்ச்சியால் அரிசியை பிரதானமான உணவாகக் கொண்டிருந்த இந்தியா உள்ளிட்ட  பல நாடுகள்  அரிசி உற்பத்தியில் தன்னிறைவு பெற்றன. அந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தவர்தான்  சுரஜித் தத்தா. 

சுரஜித் குமார் தத்தா பசுமைப்புரட்சியில் மிக முக்கிய பங்காற்றியவர். ஆனால் அவரது பங்களிப்பு போதுமான அளவு உலகின் கவனத்துக்கு வரவில்லை.  

சுரஜித் தத்தா என்னும் இளம் வேளாண் விஞ்ஞானியான இவர்தான் IRRI-ல் தொடர்ந்து நடைபெற்ற வேளாண்மைச் சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்ட IR-8 எனப்படும் புதிய நெல் வகையின் ஆய்வுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருந்த விஞ்ஞானியாக இருந்தவர். 

உலகின் பல லட்சம் மக்களின் பிரதான உணவான அரிசி பல உலக நாடுகளில் விளைகிறது என்றாலும் மிக அதிகமாக விளைவது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் தான். 

1960-களில்  பல காரணங்களால் அரிசி  உற்பத்தி  உலகெங்கிலும் மிகக்குறைவாக  இருந்தது. நெற்பயிரின் உயரம் மிக அதிகமாக இருந்ததால் காற்றில் பயிர்கள் உடைந்து விழுந்தது, மிகக்குறைவான நெல்மணிகளை உருவாக்கிய ரகங்கள், உரங்கள் மண்ணில் சேர்க்கப்பட்டாலும் அவற்றை எடுத்துக்கொள்ளாத ரகங்கள் எனப்பல காரணங்களால் உலகளாவிய நெல்லுற்பத்தி கடும் வீழ்ச்சியில் இருந்த காலமது. 

எனவே வறுமை மற்றும் பட்டினியைக் குறைக்கவும், நெல் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் மற்றும் நெல் விவசாயத்தின் சுற்றுச் சூழலை மேம்படுத்துதலையும் நோக்கமாகக் கொண்டு பிலிப்பன்ஸில்  International Rice Research Institute என்கிற IRRI நிறுவனம் 1960-களில் ஆரம்பிக்கப்பட்டது. 

IRRI நிறுவனம் உலகளாவிய உணவுப் பாதுகாப்பு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் 15 விவசாய ஆராய்ச்சி மையங்களில் ஒன்று. ஆசியாவின் மிகப்பெரிய இலாபநோக்கமற்ற விவசாய ஆராய்ச்சி மையமாகவும் இருக்கிறது IRRI,

IRRI யின் கிளைகள் உருவாக்கப்பட்ட  நாடுகளில் தேசிய விவசாயக் கூட்டு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க அமைப்புகளை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. உலகெங்கிலும் இருந்த முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் IRRI-ல் இணைந்தனர். 

IRRI-ன் இயக்குநராக சாண்ட்லர் நியமிக்கப்பட்டார். அமெரிக்க தோட்டக்கலைத்துறை நிபுணரான சாண்ட்லரின் தலைமையின் நவீன நெல் கலப்பின உருவாக்கத்துக்கான குழுவொன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் சுரஜித் தத்தாவும் இருந்தார்,  உலகெங்கிலும் இருந்த   பல முக்கியமான வேளாண் விஞ்ஞானிகள் சாண்ட்லரின் தலைமையில் ஆயிரக்கணக்கான நெல் வகைகளைச் சேகரித்து பிலிப்பைன்ஸுக்கு அனுப்பி கலப்பின ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

IRRI விஞ்ஞானிகள் உயரம் குறைவான, உரங்களை எடுத்துக்கொண்டு உற்பத்தியை அதிகரிக்கும் கலப்பின High Yielding Variety  என்பதைக் குறிக்கும் HYV நெல் ரகங்களை உருவாக்கும் சோதனைகளைத் துவங்கினார்கள். 

தொடர்ந்து நடந்த கலப்பினச் சோதனைகளில் இந்தோனேஷியாவின் நெட்டை நெல் ரகமான பீட்டாவையும் (Peta) சீனாவின் டீ ஜியோ வூ ஜென் (Dee Geo Woo Gen – DGWG)  என்னும் நடுத்தர உயரம் கொண்ட நெல் வகை ஒன்றையும் கலந்து ஒரு புதிய கலப்பின நெல் ரகத்தை உருவாக்கினார்கள்.

அந்த கலப்பின நெல் ரகம் பீட்டாவை விட உயரம் குறைவாகவும்,   DGWG-யை விட உறுதியாகவும், நேராக நிமிர்ந்தும் இருந்தது. அதன் இலைகள் மிக அதிகச் சூரிய ஒளியை பெறும்படி அமைந்திருந்தன எனவே அவற்றில் வழக்கமாக உருவாவதைக் காட்டிலும் மிக அதிகமான நெற்கதிர்கள் உருவாகின. 

இந்த சோதனையில் ஈடுபட்டிருந்தவர்களில் முதன்மையானவரான சுரஜித் தத்தா. இந்த மிக முக்கியமான, நெல் உற்பத்தி வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமைந்த ஆய்வின் முடிவை பல வேளாண் சஞ்சிகைகளிலும் IRRI-யின் சஞ்சிகைகளிலும்  வெளியிட்டார். அந்த நெல் ரகம் உரம் போடாமல்  ஒரு ஹெக்டேருக்கு 5 டன்னும் உரமிட்டால் 9.4 டன்னும் உற்பத்தியை அளித்தது என்பது உலகெங்கிலும் பெரும் ஆச்சர்யத்தை உண்டாகியது. அதற்கு முன்பு எந்த நெல் வகையும் எங்கும் 9.4 டன்/ஹெ உற்பத்தியை அளித்தது இல்லை. 

இந்த புதிய நெல் ரகம் IRRI-யில் நடைபெற்ற 38 கலப்பின சோதனைகளில் 8 ஆவது சோதனையில் உருவானது என்பதால் ஆய்வுக்கட்டுரைகளில் IR8-288-3  என்று குறிப்பிடப்பட்டது.  

அந்த   நவீன, அதிக விளைச்சல் தரும் நடுத்தர உயரம் கொண்ட நெல் ரகம் IR-8 என இறுதியாக IRRI-யினால் பெயரிடப்பட்டு  வெப்பமண்டலத்தின், பாசன வசதி கொண்ட தாழ் நிலங்களில் பயிர் செய்ய அறிமுகமானது.  

IR-8  நெல் ரகத்தின் ஒரு குறிப்பிட்ட   ஜீன்  (semidwarf-1 gene – Os01g0883800)  நெற்பயிரின் உயரத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கச்சாறான ஜிப்பரலினை ஒழுங்குபடுத்துவதால் அது நடுத்தர உயரம் கொண்டிருந்தது. அதன் விளைச்சல் ஒரு  ஹெக்டேருக்கு  6- லிருந்து 10 டன் வரை இருந்தது.

1966-ன் வறட்சி நிலவிய பருவத்தில் நைட்ரஜன் உரத்தை எடுத்துக்கொண்டு முன்னைக்காட்டிலும் மூன்று மடங்கு விளைச்சல் கொடுத்த IR-8 ஐக் குறித்து தத்தா மீண்டும் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார்.  

பிலிப்பைன்ஸில் 88 கிலோ நெல் விதைகள் விதைக்கப்பட்டு 71 டன் நெல் அறுவடை செய்யப்பட்டதை கேள்விப்பட்ட அப்போதைய பிலிப்பன்ஸ் பிரதமர்  மார்கோஸ் (Ferdinand Marcos)  IRRI  நிறுவனத்துக்கு 1966-ல் வருகை தந்து தத்தாவின் ஆய்வுகளைக் குறித்து தெரிந்துகொண்டு அவரை மனமாரப் பாராட்டியதோடு கையோடு தத்தாவிடிமிருந்து 2 கிலோ IR-8 நெல் விதைகளையும் பெற்றுக்கொண்டார்.

தனது ஆட்சிக்காலத்தில் பிலிப்பைன்ஸின் பஞ்சத்தைப் போக்குவதாக சபதமேற்ற மார்கோஸ் ’’Masagana 99’’ என்னும் பெயரிடப்பட்ட நெல்பயிரிடும் இயக்கத்தைத்தொடங்கி இந்த விதைகளை விவசாயிகளுக்கு  அளித்து 3 ஆண்டுகளில் பிலிபபைன்ஸை நெல் உற்பத்தியில் தன்னிறைவு அடையச்செய்தார்

 அதற்குப் பின்னர்தான்  நெல் ரகங்களைத்தேடி தாய்நாடு வந்த தத்தா தனது நண்பரின் தங்கை நடித்துக்கொண்டிருந்த படப்பிடிப்பு நடந்த ஊட்டிக்கு வந்து தன் காதல் மனைவி விஜயலக்ஷ்மியைச் சந்தித்தார். 

உலகளவில் பெரும் புரட்சியை உண்டாக்கிய ஒரு    IR-8 நெற் பயிர்   1970-களில்   இந்தியாவில் பட்டினியை, பசியைப் போக்கி பல உயிர்களைக் காப்பாற்றியது 

1950, 60- களில் இரண்டாம்  உலகப் போருக்குப் பின்னரான  காலமென்பதால் உருவான  உணவுப்பற்றாக் குறையோடு பெரும் வறட்சியும் பஞ்சமும் இந்தியாவில் உருவாகி இருந்தது. பிரிட்டிஷ் அரசு  புகுத்திய நவீன வேளாண் முறைகளோடு இந்தியாவின் பாரம்பரிய வேளாண் முறைகளும் கலந்திருந்த  காலகட்டமும் அதுதான்.

எனவே  இந்தியா பசுமைப்புரட்சியை 60-களில் தழுவிக்கொண்டு அரிசி மற்றும் கோதுமையின் விளைச்சலை அதிகரித்தது. பிலிப்பைன்ஸின் IR -8 நெல் விதைகள் இந்தியாவில் அறிமுகமானது. 

மேற்கு கோதாவரியைச் சேர்ந்த 29 வயது இளம் விவசாயி  நெக்கந்தி சுப்பாராவ்தான்  (Nekkanti Subba Rao) 1967-ல் இந்தியாவில் IR-8 பயிரிட்ட முதல் விவசாயி. IR-8  நெல் ரகத்தை தனது நிலத்தில் பயிரிட்டு அதன் அதீத விளைச்சலை மற்ற விவசாயிகளுக்கும் சுப்பாராவ் காண்பித்தார்,  

தனது நிலத்தில் IR8 ரகத்தை தொடர்ந்து பயிரிட்டதோடு சுப்பாராவ் சுற்றியிருந்த சுமார் 2000 ஏக்கர் நிலத்திலும் IR-8 பயிரிடுவதை,  அவற்றிற்கான பாசன  வசதியை,  உரமிடுப்படுவதை எல்லாம் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டும் இருந்தார்.  

சுப்பாராவுக்கு ஆந்திராவில் Mr.IR8 என்றும் அரிசி விற்பன்னர் என்றும் பெயர் வந்துவிட்டிருந்தது. இதே சுப்பாராவ்தான் வெள்ளத்தினால் பாதிக்கப்படாத Swarna-Sub1, என்னும் 1979-ல் கண்டுபிடிக்கப்பட்ட நெல் ரகத்தை IR-8 ஐப்போலவே பிரபலபடுத்தியவர்.  

தொடர்ந்து தமிழ்நாட்டிலும் IR-8 பரவலாகப் பயிரிடப்பட்டது. ஆந்திராவிலும் தமிழ்நாட்டிலும் IR-8ன் விளைச்சல் விவசாயிகள் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. அற்புத அரிசி IR-8 என்றே அதற்குப் பெயர் வந்துவிட்டிருந்தது. 

திருவண்ணாமலை விவசாயியான கணேசன்  IR-8 பயிரிட்டு அதன் அதீத விளைச்சலால் குடும்பம் நிமிர்ந்ததால் அப்போது பிறந்த தன்  மகனுக்கு ’அய்யாரெட்டு’ என்றே பெயரிட்டார். ஹெக்டேருக்கு 2 டன் நெல் விளைந்துகொண்டிருந்த அவரது நிலத்தில் IR-8 பயிரிட்டபோது 16 டன் /ஹெ கிடைத்தது.

இந்தியா மட்டுமல்லாது வியட்நாம், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் IR-8 உணவுப் பற்றாக் குறையைப் போக்கி உணவுப் பாதுகாப்பை  உறுதி செய்தது. 

பிலிப்பன்ஸ் தீவொன்றில் உரங்களிடாமல் பயிரிடும்போது ஹெக்டேருக்கு 7 டன்னும் உரங்களிட்டபோது 10 டன் விளைச்சலும் கிடைத்தது.  

மற்ற நெல் ரகங்கள் 150-170  நாட்களில் அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கையில் IR-8 ரகம் 105 – 130 நாட்களில் முதிர்ந்து அறுவடைக்கு தயாராகிறது.

IR- 8 பயிரிட்டு ஒரே ஒரு சாகுபடியில் லாபம் கிடைத்து ஹோண்டா பைக் வாங்க முடிந்ததால் வியட்நாமில் IR-8 க்கு ஹோண்டா அரிசி எனப்  பெயர் வந்திருந்தது.  

IR-8, அற்புத அரிசி எனப் பெயர்வந்தது   அதன் மிக உயர்வான தன்மைகளினால் அல்ல. IR-8 எளிதில் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகும் இயல்பு கொண்டிருந்த, தடிமனான, வேகவைத்த பிறகு மேலும் தடிமனாகவும் கடினமாகவும் சுண்ணாம்பு போலவும் ஆகிவிடுகிற அரிசியை அளிக்கும் நெற்பயிர்தான் என்றாலும் பஞ்சகாலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றி பட்டினியைப் போக்கியதால் அது அற்புத அரிசியாக இருந்தது.

எனவே IR-8 நெல் ரகம் மேம்படுத்தப்பட வேண்டி இருந்தது. IRRI-யின் தாவரப் பெருக்கத்துறையின் தலைவராக 1972-ல் பொறுப்பேற்றுக்கொண்ட இந்திய தாவரவியலாளரான குருதேவ் சிங் குஷ் இந்தப்பணியை முன்னெடுத்தார். 

IR-8 நெல் ரகத்தை மேலும் பல கலப்பின ஆய்வுகளுக்குள்ளாக்கி  IR-36, எனும்   நோயெதிர்ப்பு திறன் அதிகம் கொண்டிருக்கும், மெல்லிய, சுவையான அரிசியை அளிக்கும், IR-8 ரகத்தைக் காட்டிலும் விரைவிலேயே முதிர்ந்துவிடும் ரகத்தை குஷ் கண்டுபிடித்தார். 

IR-36, 80-களில் மிகப்பரவலாக சாகுபடியான ரகமாக இருந்தது. தொடர்ந்த ஐந்து ஆண்டுகளில் குஷ்  IR- 20 , மற்றும்  IR-50 ரகங்களையும் கண்டறிந்து விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தினார். அவரது பணிக்காலத்தில்  300-க்கும் மேற்பட்ட நவீன நெல் ரகங்கள் கண்டறியப்பட்டு ஆசியா,ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின்  நெல் பயிராகும் பிரதேசங்களுக்கு அறிமுகமானது,

குஷ் 1996-ல் அரிசி உற்பத்தியில் மிகச்சிறந்த சேவையாற்றியதற்காக அமெரிக்கப் பயிர்பெருக்க நிபுணரான  ஹென்றியுடன் (Dr. Henry Beachell) உலக உணவு விருதினைப் பகிர்ந்துகொண்டார். 

2016 நவம்பரில் IR-8-ன் 50-வது பிறந்த நாள் தலைநகர் தில்லியில் அரசியல் தலைவர்கள். வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளால் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 2021 நவம்பர் 28 அன்று IR-8 -ன் 55 வது பிறந்த நாளும் கொண்டாடப்பட்டது 

நியூயார்க்கில் 1981-ல் வெளியிடப்பட்ட  தத்தாவின் Principles and Practices of Rice Production என்னும் நூல் அரிசிச்சாகுபடியின் அகராதி என்றே கருதப்படுகிறது.

அதற்கு முன்பே தத்தா மேலும் இரண்டு முக்கியமான நூல்களை எழுதி யிருந்தார்.

 “Availability of Phosphorus and Utilization of Phosphate Fertilizers in Some Great Soil Groups of Hawaii”என்னும் நூல்  1963-லும்  “Availability of Phosphorus to Sugar Cane in Hawaii as Influenced by Various Phosphorus Fertilizers and Methods of Application” என்னும் நூல் 1965-லும் வெளியானது.

தத்தா 27 வருடங்கள் IRRI நிறுவனத்தில் முதன்மை விஞ்ஞானியாக  நெல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். 

தத்தாவிற்கு 1992-ல் இந்தியாவின் வேளாண் அறிவியல் பங்களிப்பிற்காகவும் பசுமைப்புரட்சியில் அவரது முக்கியப் பங்களிப்பிற்கும்  பெருமை மிக்க Norman Borlaug  விருது அளிக்கப்பட்டது.

2004-ல்  தத்தா பிலிப்பைன்ஸ் குடியரசுத் தலைவரால் கவுரவிக்கப்பட்டார்.

IRRI – பணிக்குபின்னர் தத்தா அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய வர்ஜீனியா பல தொழில்நுட்ப மாநிலப் பல்கலைக்கழகத்தின் (Virginia Polytechnic Institute and State University) சர்வதேச ஆராய்ச்சி, கல்வி மற்றும் மேம்பாட்டுக்கான நிறுவனமான OIRED-ல் இணைத்தலைவராக  20 வருடங்கள் பணியாற்றி அந்நிறுவனத்தின் நிதி நிலைமையை வெகுவாக மேம்படுத்தினார், (Office of International Research, Education, and Development). அதே பல்கலைக் கழகத்தில் விஜயலக்ஷ்மியும்  பணியிலிருந்தார்.

தத்தாவின் சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் அவருக்கு ஏராளமான விருதுகள் அளிக்கப்பட்டன. அமெரிக்காவின் சர்வதேச வேளாண் சேவைக்கான விருதைப்பெற்ற முதல் நபர் தத்தாதான். தற்போது ஓய்வு பெற்றிருக்கும் தத்தாவும் விஜயலஷ்மியும் கலிஃபோர்னியாவில் டேவிஸ் நகரில் வசிக்கிறார்கள். அவர்களது ஒரே மகன்    சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார்.

 அமெரிக்காவின் உலக அரிசி ஆராய்ச்சி அறக்கட்டளை விஜயலக்‌ஷ்மி மற்றும் தத்தா ஆகிய இருவரின் பெயரிலும் (SK and Vijji De Datta Award for Rice Research) சிறந்த அரிசி ஆராய்ச்சிக்கு  US$130,000 பரிசுத்தொகை அளிப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார்கள்.

’ஆடலுடன் பாடலைக்கேட்டு’  நடனத்தில் விஜயலக்ஷ்மி ஆடப்போவதாகத் தெரிந்துகொண்ட எம்ஜிஆர் அவரது நடனத்திறமையை முன்பே கேள்விப்பட்டிருந்ததால் 5 நாட்கள்  ஒத்திகை பார்த்த பின்னரே   படப்பிடிப்புக்கு வந்தார் என சொல்லப்படுகிறது. அத்தனை பிரபலமான நட்சத்திரமாக இருந்த அவர் கணவரின் வேளாண் ஆராய்சிக்கென தனது மிகப் பிரகாசமான எதிர்காலத்தை துறந்து பிலிப்பைன்ஸுக்குச் சென்றது சாதாரணத் தியாகமல்ல.

திருமணத்துக்குப் பிறகு மெட்ரிகுலேஷன் தனித்தேர்வு எழுதித் தேர்ச்சிபெற்ற விஜயலஷ்மி சென்னைப்பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வியில் வணிகவியல் பட்டம் பெற்றார். பின்னர்  பல ஆண்டுகள் ஆடிட்டராகப் பணியாற்றினார்

எல். விஜயலட்சுமி கலப்பின அரிசி வளர்ச்சியின் அறிவியல் ஆய்வுகளில் நேரடியாக ஈடுபடவில்லை என்றாலும் அவரது   மனப்பூர்வமான ஆதரவு   தத்தாவை தனது புதிய ஆய்வுகளை எந்த இடைஞ்சல்களுமின்றித்  தொடர அனுமதித்தது. அந்த வகையில்,IR-8 கண்டுபிடிப்பில் விஜயலக்ஷ்மியின் பங்களிப்பு   மறைமுகமானது ஆனால் மிகவும் முக்கியமானது.

தனது பொது வாழ்க்கையைத் துறந்து,   கல்வியைத் தொடர்ந்து, குடும்பப் பொறுப்புகளை நிர்வகித்ததன் மூலம், கணவர் தனது கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்த விஜயலக்ஷ்மி உதவினார். கணவருடன் பிலிப்பைன்ஸுக்கும் பின்னர் கண்டம் தாண்டியும் பயணித்தார்.  

ஒரு ஆணின் வெற்றிக்குபின்னால் இருக்கும் பெண்ணிற்கான மிகச்சிறந்த   உதாரணமாக விஜயலக்ஷ்மி இருக்கிறார்.

IRRI-யின் தொடர்ந்த ஆய்வுகளால் 1966-ல் 257 மில்லியன் டன்னாக இருந்த  உலக அரிசி உற்பத்தி 2010-த்தில் 686 மில்லியன் டன்னாக உயர்ந்தது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கானோர் பசியாறினார்கள். 

இந்திய மணவிழாக்களில் மஞ்சள் கலந்த பொன்னிற அரிசியை அக்ஷதையாக மணமக்களின் மீது  தூவுதல் என்பது நூற்றாண்டுகள் பழமையான இந்திய பண்பாட்டையும்  வரலாற்றையும்  கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த அக்‌ஷதைதான் மணமக்களின் வாழ்வில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான ஆசிகளை அளிக்கிறது.


இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க ஒரு புதிய அரிசி வகையை கண்டறிந்த காதல் கணவருடனான விஜயலக்ஷிமியின்  வாழ்க்கைக்கான ஆசீர்வாதம் லட்சோபலட்சம் பசித்த வயிறுகள் குளிர்ந்த போது அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும். இன்னும்  பல்லாண்டுகள் இதே பேரன்புடன் இவர்கள் வாழ்வு தொடரட்டும். இருவருக்கும் வணக்கங்களும் அன்பும்.

போய்!

முன்னொரு காலத்தில் ஹவாய் தீவின்  வடமேற்குப் பகுதியான கோஹலாவிலிருந்து  ஹவாயின் பெருநகரமான கோனாவிற்கு ஒரு மரப்படகில் மீனவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். படகில் மூட்டை மூட்டையாக உலர்ந்த சேம்புக்கிழங்குகள் வைக்கப்பட்டிருந்தன. கோனாவிலிருக்கும் உறவினர்களுக்குக் கொடுக்கவும், அங்கு சந்தைப்படுத்தவும் அந்தக் கிழங்குகளை மீனவர்கள் கொண்டு சென்றனர்.

அவர்களது படகை ஒரு மாபெரும் சுறா தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. படகிலிருந்த மீனவர்கள் இதே சுறா கடந்த மாதப்பயணத்திலும் படகைத்தொடர்ந்ததை நினைவு கூர்ந்தர்கள். ஒரு மீனவர் கோபமாக சுறாவைப்பார்த்து ‘எதற்கு எங்களைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன வேண்டும் உனக்கு? எங்களிடம் சேம்புக்கிழங்குகள் தான் இருக்கிறது இதோ எடுத்துக்கொள்’ என்று அதை நோக்கி ஒரு சேம்புக்கிழங்கு மூட்டையை வீசினார். சுறா அந்த மூட்டையை தன் மூக்கால் நகர்த்திக்கொண்டு கடற்கரையோரம் சென்றது. இப்படியே தொடர்ந்து அவர்கள் பயணிக்கையில் எல்லாம் நடந்துகொண்டிருந்தது,  மீனவர்களுக்கு பெரும் மர்மமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

மீனவர்களில் ஒருவரான அகாய்க்கு இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த பயணத்தில் கிழங்கு மூட்டையை தள்ளிக்கொண்டு போன சுறாவை அகாய் ஒரு சிறு துடுப்புப் படகில் தொடர்ந்து சென்றான். கரையில் அந்த சுறாவுக்காகக் காத்திருந்த வயதான தம்பதியினரிடம் சுறா அந்த மூட்டையை சேர்ப்பிப்பதை அகாய் பார்த்தான். அவர்களிடம் விசாரித்தபோது வயதாவதால் வேலைக்குச் செல்ல முடியாமல் பட்டினி கிடந்த தங்களுக்கு அந்தச் சுறாதான் உணவுக்காகச் சேம்புக்கிழங்குகளைக் கொண்டு வந்து தந்ததாகவும், அதில் ’போய்’ கஞ்சி தயாரித்து உண்டு தாங்கள் உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு கடவுள்தான் கிழங்குகளை அனுப்புவதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

சுறாவின் இந்தச்செயலால் மகிழ்ந்துபோன மீனவர்கள் அதன்பிறகு வழக்கமாகக் கொடுப்பதைக்காட்டிலும் அதிக அளவு கிழங்கு மூட்டைகளை சுறாவுக்கு தந்தனர். இந்த வழக்கம் அந்த வயதான தம்பதிகள் உயிருடன் இருந்தவரையில் தொடர்ந்தது. அவர்கள் இறந்த பின்னர் சுறாவும் கண்ணிற்கே தெரியாமல் மறைந்து விட்டது.

“The Shark That Came For Poi” என்னும் இந்தக்கதையை  ஹவாய் மக்கள் தலைமுறைகளாக கேட்டும் சொல்லியும் வருகிறார்கள். இந்தப் பிரபலக் கதையே சேம்புக்கிழங்குக்கும் ஹவாய்க் கலாச்சாரத்துக்குமான ஆயிரமாண்டுகளைக் கடந்தும் தொடரும் உறவைச் சொல்லி விடுகிறது. இந்தக்கதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போலவே போய் மற்றும் சேம்புக்கிழங்கு ஹவாய்த்தீவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக  மனிதர்களை அன்பினால் ஒன்றிணைத்துக் கொண்டிருகிறது.

இன்றும் ஹவாய் மரபுகளைச் சிறப்புப்பாடமாகப் பயிலும் காமேஹமேஹா பள்ளி மாணவர்கள் சேம்புச்செடிகளை வளர்த்தி, அறுவடை செய்து, அதன் கிழங்குகளை வேகவைத்து, தொன்மையான முறையில் அவற்றைப் பொடித்து ’போய்’ உணவை தரக்கட்டுப்பாட்டுடன் தயாரிக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப்பள்ளி மாணவர்கள், சேம்பு பயிரிடுவதற்கு நிலத்தைத் தயார் செய்வது, ’போய்’ உணவுடன் உறவுகளை ஒன்றிணைப்பது, மேலும் போய் உணவைக் கொண்டு சிகிச்சையளிப்பதையும் கற்றுக்கொள்கிறார்கள். 

’போய்’ உணவு தொல் காலத்திலிருந்து இன்று வரையிலுமே நிலத்துக்கும் மனிதர்களுக்கும் கடவுளுக்குமான பாலமாக இருந்து வருகிறது. ’போய்’ சேம்பின் தரையடித் தண்டுக் கிழங்குகளிலிருந்து தயாரிக்கப்படும்  போலினேசியாவின் மிக முக்கியமான  பாரம்பரிய உணவு.

பசிபிக் கடற்தீவுகளில் வசிப்பதற்கான இடம்தேடிக் தேடல் பயணம் மேற்கொண்டிருந்த பாலிநேசிய மாலுமிகள்  வளமான எரிமலைக் குழம்பு மண்ணிருந்த ஹவாய் தீவைச் செழிப்பான வாழிடமாக அடையாளம் கண்டார்கள். அவர்கள் கொண்டுவந்த சேம்பு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை உணவுக்காக அங்கே பயிரிட்டார்கள். அவர்களுடன் கோழி, பன்றி, நாய் மற்றும் வாழை, கரும்புப்பயிர்களும் அங்கே அறிமுகமாயின. அப்போதிலிருந்து சேம்பின் தரையடிக்கிழங்குகளை வேகவைத்து  மாவாக்கி நீர் மட்டும் கலந்து  சத்தான சுவையான ’போய்’ உணவை தயாரித்து உண்டார்கள். அகழ்வாய்வுகள் ஹவாய்த்தீவுகளில்  ’போய்’ தயாரிப்பு  ஹவாயில் மக்கள் வசிக்கத்தொடங்கிய 1000-1200 AD-யிலிருந்தே நடந்திருப்பதற்கான சான்றுகளை  காட்டுகிறது.

ஆங்கிலத்தில் டாரோ (Taro) எனப்படும் சேம்பு பெரிய யானைக் காதுகளைப் போன்ற இதய வடிவ இலைகளைக் கொண்டிருக்கும் ஏரேசியே குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடி.

வெப்பமண்டல பசிபிக் கடல்சார் பகுதிகளின் மிக முக்கியமான உணவுத்தாவரம் சேம்பு.   ஹவாயில் இதன் பெயர்  Kalo, ஃபிஜித் தீவில் Dalo. இயற்கையாக வளருகையில் வெளிறிய பச்சைநிறத்தில் சதைப்பற்றான மஞ்சரிகளை அளிக்கும் சேம்பு, சாகுபடி செய்யப்படும்போது  அரிதாகவே மஞ்சரியை உருவாக்கும். மஞ்சரி உருவாகும் போது  இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவில் இலைகள் உருவாகும். இலைகள் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களைப் பொருத்தும் மரபணுக்கட்டமைப்பைப் பொருத்தும் வேறுபடும். 

இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுக்களும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.

அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் சேம்பு மிக அதிக நீர் தேவை கொண்ட தாவரம். இவை தனித்தும், வாழையுடன் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.

 ஆசியாவைப் பூர்வீகமாக்கொண்ட சேம்பு, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் பசிபிக்பகுதிகளின் தீவுக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 மில்லியன் மக்களின் பிரதான உணவாக இருக்கிறது. மத்திய தரைக்கடலின் தெற்குப் பகுதிகளில் உருளைக்கிழங்கை விட மிக அதிக அளவில் சேம்பு உண்ணப்படுகிறது.

சேம்பு அதன் கிழங்குகளுக்காகப் பிரதானமாகப் பயிரிடப்படுகிறது. பயிரிட்ட 6-10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் சேம்பு ஒரு ஹெக்டேருக்கு 5-லிருந்து 10 டன் வரை விளைச்சல் தரும்.  சேம்பு பிரேஸில் பகுதிகளில் சேனைக்கிழங்கு  (yam) என்று அழைக்கப்படுவதால் உலகின் பல நாடுகளில் சேனைக்கிழங்கும் சேம்பு கிழங்கும் ஒன்றென நினைக்கப்படுகிறது. 

இயற்கையான வாழிடங்களில் உலகெங்கும் இருக்கும் உண்ணப்படும் கிழங்குகளைக்கொண்ட சேம்பின் காட்டு மூதாதைகள் மொத்தம் 12 எனக் கண்டறியப்பட்டிருக்கின்றன.  அவற்றில் 6 வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்றன. 

சேம்பு ஏரேசி குடும்பத்தின் 106 பேரினங்களில் ஒன்றான கோலகேஷியா பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் சுமார் 2500 சிற்றினங்கள் உள்ளன. உண்ணத்தகுந்த கிழங்குகளைக் கொண்டிருக்கும் அலகேஷியா, அமொர்போபேலஸ் மற்றும் சேந்தோசோமா ஆகிய தாவரங்களும் இந்தப் பேரினத்தைச் சேர்ந்தவையே. (Alocasia, Amorphophallus & Xanthosoma).

Colocasia esculenta என்னும் அறிவியல் பெயர் கொண்ட சேம்பு இதன் தரையடித் தண்டுக் கிழங்குக்காகவே  ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகமெங்கிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தண்டுக் கிழங்குகளிருந்தும்  நறுக்கப்பட்ட முற்றிய தண்டுகளிருந்தும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பசிபிக் கடல்சார் பகுதிகளில் குறிப்பாக ஹவாய் நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியப் பகுதிகளில் சேம்பு வரலாற்றுக் காலத்திலிருந்தே பிரதான உணவாக இருந்து வருகிறது. சேம்பின் ஆயிரக்கணக்கான வகைகள் உலகெங்கிலும் இருந்தாலும்  அதிகம் சாகுபடியாவது : 

எடோ வகை எனப்படும்

 (1) “eddoe” , Colocasia esculenta var. antiquorum (syn. Colocasia esculenta var. globulifera )

மற்றும்  டஷீன் வகையான

 (2) “dasheen” ,Colocasia esculenta var. esculenta. இவையிரண்டும்  தான்.

தரையடிக்கிழங்கின் அளவு மற்றும் வடிவங்களின்  கொண்டுதான் இந்த இரு வகைகளும்  வேறுபடுத்தப் படுகின்றன.    esculenta வகை பெரிய நடுக்கிழங்கையும்  சிறிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும்,     antiquorum வகை சிறிய நடுக்கிழங்கையும் பெரிய பெரிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும். 

இரண்டு வகைகளுக்கும் மரபணுக் கட்டமைபிலும் வேறுபாடுகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.

C. esculenta வகைச்சேம்புதான் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில்  பயிராகிறது. சேம்பு உருளைவடிவக் கிழங்குகளும் மிக நீண்ட சதைப்பற்றான் இலைக்காம்பையும் கொண்டிருக்கும் 

1.5 அடி உயரம் வரை வளரும் சேம்பில் மலர்கள் உருவாகும் போது இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவிலான இலைகள் உருவாகும். இலைகளின் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களளைப் பொருத்தும், மரபணுக்கட்டமைப்பைப்பொருத்தும் வேறுபடும்.

இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுகக்ளும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.  

சேம்பின் உண்ணக்கூடிய பகுதியானது  வெண்ணிற உட்பகுதியைக் கொண்ட தண்டடிக்கிழங்குதான் (underground stem) என்றாலும், நிலத்தடியில் இருப்பதால், சேம்புக்கிழங்கு வேர்க்காய்கறியாகவே கருதப்படுகிறது. சில வகைசேம்பில் கிழங்கின் உள்ளே ஊதா நிறம் காணப்படும். கிழங்கின் தோல் மண்ணிறத்திலிருக்கும்.

ஏரேசி (Araceae) குடும்பத்தின் பிற உண்ணக்கூடிய வேர்க்கிழங்குகளைத் தரும் தாவரங்களைப் போலவே சேம்பும் வேர்க்காய்கறிகளில் ஒன்றுதான் எனினும் இதன்கிழங்குகளில் இருக்கும்  கால்சியம் ஆக்ஸலேட்  குருணைகள் உண்டபின்னர் நாக்கில் நமைச்சலை உண்டாக்குவதாலும், இதில்  நீரில் கரையும் ஊட்டச்சத்து எதிர்ப்பியான டேனின்கள் இருப்பதாலும் இந்தக்கிழங்கு  பக்குவமாகச் சமைத்தபின்னரே உண்ணப்படும் காய்கறியாக இருக்கிறது.

ஆவியில் அல்லது நீரில் வேகவைத்த கிழங்குகளோடு   விரியாத இளம் இலைகளும், நீண்ட சதைப்பற்றான இலைக்காம்பும் கீரையைப் போலச் சமைத்து உண்ணப்படுகிறது..  

ஒருவருடப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது என்றாலும் சேம்பு ஒரு பல்லாண்டுப் பயிர். பிற வேர்க்காய்கறிகளைக் காட்டிலும் சேம்புக்கிழங்கு அதிகச் சத்துக்கள் கொண்டது

சேம்புக் கிழங்குகளின் மாவுச்சத்தின் அளவானது 12-லிருந்து 20 சதவீதம் வரை இருக்கும். சேம்புக்கிழங்கில் மாவுச்சத்துடன் ஏராளமான புரதம் வழவழப்பான பசைத்திரவமாக  இருக்கிறது. நீரில் கரையும் தன்மை கொண்டிருக்கும் இந்த புரதங்கள்தான் சேம்பின் சுவைக்கு காரணமாகின்றன. சேம்பில்    சாம்பல் சத்து, எண்ணெய்ச் சத்து,  நார்ச்சத்து, சர்க்கரைச் சத்து, சோடியம்,  வைட்டமின் B, உள்ளிட்ட பல வைட்டமின்கள்,  கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் பலவகையான தாதுஉப்புக்கள் நிறைந்திருக்கிறது.,  ஹவாயில் குழந்தைகளின் முதல்  திட உணவு எப்போதுமே ’போய்’தான் 

இந்தக்கிழங்கு சமைத்தபின் மிகவும் மிருதுவாகிவிடுகிறது என்பதால் விரும்பத்தக்கஉணவாக இருக்கிறது. 

ஹவாயில்  kalo என்றழைக்கப்படும் சேம்பு ஹவாய் மக்களின் கடவுள்களுடனும் முன்னோர்களுடனும் தொடர்பிலிருக்கும் மிக முக்கியமான கலாச்சார அந்தஸ்து கொண்டிருக்கும்  ஒரு உணவுத்தாவரம். ஹவாயில் சேம்புக் கிழக்கு பல மருத்துவ உபயோகங்களையும் கொண்டிருக்கிறது 

சேம்பு ஹவாயின்  கனகா மோலி (Kanaka Maoli) பழங்குடியினருடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இப்பழங்குடியினர் சேம்பு மற்ற அனைத்து  உணவுகளைக் காட்டிலும் வாழ்வதற்கு மிக அதிக சக்தியைக் கொடுப்பது என நம்புகிறார்கள்.

சேம்புக்கிழங்கிலிருந்துதான் பாலிநேசியாவின் பிரதான உணவான ’போய்’ (Poi) தயாரிக்கப்படுகிறது. ஹவாய் மக்களின் வாழ்வாதாரமாகவும் அடையாளமாகவும் சேம்பும், போய் உணவும் விளங்குகிறது. 

போய் உணவு மக்களை ஒன்றிணைத்து, அதன் நெருங்கி அமைந்திருக்கும் இலைகளைபோல ஒஹானா (ohana) எனும் குடும்ப அமைப்பை உறுதிசெய்து,  அமாக்குவா (aumakua) என்னும் மூதாதையரின் ஆசியைப் பெற்றுத்தருவதாக ஹவாய் மக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்களின் கலாச்சாரத்திலிருந்து பிரிக்கவே முடியாத உணவுப் பொருளாகச் சேம்புக்கிழங்கு இருக்கிறது.

ஹவாய்ப் பழங்குடியினரான கனகா மாலிகளின் தொன்மங்களில் வான் தந்தைக்கும் பூமித்தாய்க்கும் பிறந்த பெண் கருவுற்று, அவளது  இறந்து பிறந்த முதல் குழந்தையாக சேம்பு கருதப்படுகிறது. இறந்து பிறந்த  Haloa-naka என்னும் அந்த ஆண்குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டு அது  சேம்புத்தாவரமாக வளர்ந்தது என்கிறது அவர்களின் தொன்மம். இரண்டாவதாகப்பிறந்து ஆரோக்கியமாக வளர்ந்த Hāloa தான் ஹவாயின் முதல்  மனிதன் என ஹவாய் தொன்மங்கள் குறி[ப்பிடுகின்றன. சேம்புச்செடிக்கு ஹவாயில் Haloa என்றும் வழங்கு பெயருண்டு. Haloa என்றால் நீடித்திருக்கும் சுவாசம் என்று பொருள்.

இந்தத்தொன்மத்தினால்தான் சேம்புச்செடியும் அதன் கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் போய் உணவும் ஹவாய் கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களாகி விட்டிருக்கிண்றன

போய் உணவு தயாரிப்பது மிக மிக எளிது. சேம்புக்கிழங்கு சுத்தமாக்கப்பட்டு நீராவியில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் தோல் நீக்கி சுத்தமாக்கப்பட்டு, மென்மையாகிவிட்டிருக்கும் கிழங்குகள் மரத்தொட்டி அல்லது  கல்தொட்டிகளில் சிறிதளவு நீர் விட்டு பசையாக அரைக்கப்பட்டு சற்று இனிப்பாக இருக்கையில் அப்போதே உண்ணப்படுகின்றன அல்லது சிறிதுநாட்கள் நொதிக்க வைக்கபட்டு  புளிப்புச்சுவையுடன் உண்ணப்படுகின்றன.

சாம்பல் கலந்த ஊதா நிறத்திலிருக்கும் போய் உணவு ஆழம் குறைவான தட்டையான சிறு கிண்ணங்களில் நறுக்கிய தக்காளி வெங்காயத் துண்டுகளுடன்  பரிமாறப்படுகிறது. ஹவாய் மக்கள் போய் உணவை வெறும் நீரும்  நிறைய அன்பும் சேர்த்துச் சமைக்கப்பட்ட சுவையான உணவு என்னும் பொருளில் அதை ‘ஓனோ’ என்பார்கள்.   

பட்டமளிப்பு விழா, பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் போய் உணவு கட்டாயமாக இடம்பெறும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. கூழ் போலவோ அல்லது கஞ்சியாகவோ தயாரிக்கப்படும் போய் உணவு பன்றிக்கறி, சால்மன் மீன் கறி அல்லது கோழிக்கறி போன்ற உப்புசேர்க்கப்பட்ட  உணவுகளுடனோ அல்லது தனியாகவோ  உண்ணப்படுகிறது.

போய் உணவில் சேர்க்கப்படும் நீரின் அளவானது வேறுபடும். போய் உணவை எத்தனை விரல்களால் எடுத்து வாய்க்கருகில் கொண்டு செல்லமுடியும் என்பதைக் கொண்டு அதன் திரவ நிலை 3 விரல் போய், 2 விரல் போய் அல்லது 1 விரல் போய் என வகைப்படுத்தபப்டுகிறது.

சற்று கெட்டியான கூழ் போன்ற பதத்தில் இருக்கும் 1-விரல்போய் என்பது செல்வந்தர்களுக்கானதென்றும், நன்கு நீர்த்த 3- விரல்போய் என்பது ஏழைகளுக்கானதென்றும் பொதுவில் சொல்லப்படுகிறது.  

  
ஹவாயில் 1970-களிலிருந்தே  சுற்றுலாப்யணிகளுக்கென ’போய்’ தினமும் புத்தம் புதிதாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேம்பு இலையில் பொதியப்பட்ட இமு எனப்படும் நிலத்தடி அடுப்பில் சமைக்கப்பட்ட  பன்றி இறைச்சியுடன் ’போய்’ உணவைச் சுவைப்பதற்கென்றே உலகெங்கிலும் இருந்து ஹவாய்க்கு சுற்றுலாப்பயணியர் வருகைதருகிறார்கள்.   

முதன் முதலில் போய் உணவைச்சுவைக்கும் வெளிநாட்டிஅன்ர் அதை போஸ்டர் ஒட்டும் பசைபோலிருப்பதாக கருதுவார்கள் என்றும்   விருந்து முடியும்போது ஏராளமான போய்க் காலிக்கிண்ணங்கள் இருப்பது அங்கே வாடிக்கை எனவும் சொல்லப்படுகிறது. 

ஹவாயில் Waiahole எனப்படும் உணவகம் இதற்குப் பிரபலமானது. சுற்றுலாப்பயணிகள் ’போய்’ உணவைச் சுவைக்க அங்கே வரிசையில் காத்திருப்பார்கள்.

இப்போது போய் புத்தம் புதிதாகத் தோண்டி எடுக்கப்பட்ட கிழங்குகளாகவும், கேக்குகள், தகடுகளாகச் சீவி வறுக்கப்பட்ட சிப்ஸ்கள் அல்லது தேங்காய்ப்பாலுடன் கலந்து அருந்தும் பானமாக, ரொட்டி அல்லது கஞ்சியாகவும் ஹவாயில் கிடைக்கிறது. உடனடி உணவாகவும் , ஒரு சிலநாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்து உண்ணும் வகையிலும் போய் உணவு சந்தைப்படுத்தப்படுகிறது.

மருத்துவக் காரணங்களுக்காகவும் போய் அங்கு உண்ணப்படுகிறது. போய் உணவு சார்ந்த ஒவ்வாமைகளை குணப்படுத்துகிறது. ரத்தச் சர்க்கரை அளைவை, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உடலெடையைக் குறைக்கவும், நோயெதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கவும், சருமப் பொலிவிற்கும் போய் உணவு இங்கே வழக்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.  குடல் புற்றுநோயெதிர்ப்புக்கும் போய் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

முன்காலத்தில் வேகவைக்கப்பட்ட கிழங்கு தோலுரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு கல் அல்லது மரப்பலகைகளில்  இடிக்கப்பட்டு  மாவாக்கப்பட்டது. இப்போது ப்ரெஷர் குக்கர்களில் வேகவைக்கப்பட்டு மிக்ஸியில் அரைத்து கூழாக்கபடுகிறது  .

சமைக்காத சேம்புக்கிழங்கை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்பதை  எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்

பண்டைய ஹவாய் மக்களின் பிரதான உணவாக தானியங்களோ, பால்பொருட்களோ, இறைச்சியோ அல்லாது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேம்புக் கிழங்கு, மீன், தேங்காய் ஆகியவையே அவர்களின் உணவாக இருந்தது. 

உலகில் சுமார் 100 மில்லியனுக்குமதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் ’போய்’ மிக முக்கியமான  உணவாக கருதப்படுகிறது.

உலகின் அதிகமாகப்பயிரடப்படுபவைகளில் 14 -வது பயிராக இருக்கும் சேம்பின் நோய் எதிர்ப்புச்சக்திகொண்ட வகைகளை இப்போது பயிரிடும் ஹவாய் விவசாயிகள், அமெரிக்கச் சந்தைகளில் சேம்புக்கு தொடர்ந்த தேவை இருப்பதை உறுதி செய்கிறார்கள். 

ஹவாய் மட்டுமல்லாமல்  ஃபிஜி, சமோவா மற்றும் டோங்கா தீவுகளின் மிக முக்கியமான ஏற்றுமதி செய்யப்டும் தாவரப்பொருட்களில் ஒன்றாக  சேம்புக்கிழங்குகள் இருக்கின்றன. 

 தலைமுறைகளாக போய் உணவு ஹவாய்  மக்களின் ஆன்மாவுக்கும் உடலுக்கும் புத்துயுரூட்டிக்கொண்டிருக்கிறது.  

ஹவாய் கலாச்சாரத்தில் சேம்புக்கிழங்குப் பயன்பாடு மற்றும் போய் உணவுத் தயாரிப்பு என்பது வெறும் விவசாயப்பலன்களுக்காக மாத்திரமல்ல, எரிமலைகுழ்மபு படிந்த அந்தத் தீவைச் செழிப்பாக்கி தலைமுறைகளின்  வாழிடமாக மாற்றிய அவர்களின் முன்னோர்களின் மரபைக்காப்பற்றும் பொருட்டும் தான் தொடர்கிறது.

முதன்முதலாக பாலினேசியாவிலிருந்து ஹவாய்க்கு வந்த குடியேறிகள் அந்தத் தீவை அன்பிற்கான நிலம் என்று குறிப்பிட்டார்கள்.  சேம்பு விவசாயிகளின் பாதுகாப்பான கரங்கள், ஹவாய் கலாச்சாரத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள், துடிப்பான புதியதலைமுறை ஆகிய மூன்றும் இணைந்து சேம்பு மற்றும் போய் உணவைப் பாதுகாத்து ஹவாய் தீவு என்றென்றைக்குமே அன்புக்கான நிலமென்பதை அழியாத உண்மையாக்கிக்கொண்டிருகிறார்கள்.

எஸ்கமோல் எறும்பு உணவு!

அகாவே (Agave) என்னும் சொல் கிரேக்க மொழியின் பிரம்மாண்டமான, கம்பீரமான, புனிதமான, பாராட்டத்தக்க என்னும் பொருள் கொண்ட ’அகாவ்’விலிருந்து வந்தது.  கள்ளிக்கற்றாழைத் தாவரங்களான இவை அமெரிக்காவின் வறள் நிலத்தாவரங்கள். அகாவே பயிர்கள் மெக்சிகோவின் கலாச்சாரத்துடனும் மெக்சிகோ மக்களின் அன்றாட வாழ்வுடனும் மிக நெருங்கிய தொடர்பில் இருப்பவை.

கள்ளிக்கற்றாழைகளில் இருந்துதான் மெக்சிகோவில் பழங்காலத்திலிருந்து உணவு, மதுபானம், நூல் ஆகியவை தயாரிக்கப்பட்டது. இன்று டெக்கீலா, மெஸ்கால் போன்ற பானங்களும் இதிலிருந்துதான் தயாராகின்றன. மெக்சிகோவின் கலாச்சாரமும், பொருளாதாரமும் இந்தத் தாவரத்துடன் நேரடியாகத்தொடர்புடையது.

மெக்சிகோவில் டெக்கீலா தயாரிக்கும் நீலக்கற்றாழை 3,00,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. கள்ளிக்கற்றாழைகளின் 157 சிற்றினங்களில் 76 சதவிகிதம் மெக்சிகோவில் தான் இருக்கிறது. இந்த 76-ல் 71 சிற்றினங்கள் மெக்சிகோவுக்கு மட்டும் சொந்தமான வேறெங்கும் வளராத ஓரிடப்பயிர்கள்(Endemic plants). 25 வருடங்கள் வரி உயிர் வாழும் இவற்றை வவ்வால்களும் தேன்சிட்டுக்களும் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன.

மெஸ்கால் என்னும் மதுபானம் தயாரிக்க பல்வேறு வகை கற்றாழைகள் பயன்படுத்தப்படுகின்றன. மெஸ்கால் மாநிலங்களில் (ஒஷாகா, துராங்கோ, சான் லூயிஸ் போன்றவை) கூடுதலாக 1,00,000 ஹெக்டேருக்கும் மேல் இவ்வகைக்கற்றாழைகளின் சாகுபடி நடைபெறுகிறது.மொத்தத்தில், சுமார் 4,00,000–5,00,000 ஹெக்டேருக்கு மேல் மெக்சிக்கோவில் கற்றாழைச் சாகுபடி நடைபெறுகிறது. அவர்களின் அன்னைத்தெய்வம் மயாஹ்வெல்(Mayahuel) முலையூட்டிய மதுவே கற்றாழை மதுவான மெஸ்கால் என்னும் தொன்மம் மெக்சிகோவில் பிரபலம். மெஸ்கால் மதுவைக் குறித்த’’ அனைத்துத் துயர்களுக்கும் தீர்வு மெஸ்கால் அனைத்து மகிழ்வுகளுக்கும் அதுவேதான்‘’ என்னும் முதுசொல் அங்கு வெகுவாகப் புழக்கத்திலிருக்கிறதுமெக்சிகோ மக்களைப் போல உலகின் வேறெந்த பகுதி மக்களும் தாவரங்களுடன் இத்தனை நெருங்கிய தொடர்பில் இல்லை.

மாகேய் (Maguey) என்பது  அகாவே செடிகலான கள்ளிக் கற்றாழைகளை குறிக்கும் ஸ்பானிஷ் சொல். இந்த க்கற்றாழைகளின் இரண்டு வகைகள் டெக்கீலா அளிக்கும் Agave tequilana  மற்றும் மெஸ்கால் மது அளிக்கும் Agave americana, 

இவ்விரண்டு மட்டுமல்லாமல் மெக்சிகோவில் விளைந்த பல வகைக்கற்றாழைகள் மெக்சிகோ மக்களின் பலவிதமான தேவைகளுக்கு ஆதாரமாக இருந்தன. அகாவே அட்ரோவைரன்ஸ் (Agave atrovirens), என்னும் வகைக்கற்றாழை பல மருத்துவப்பயன்கள் கொண்டது

இந்தக் கள்ளிக்கற்றாழை மலர்மொட்டுகள் மெக்ஸிகோவில் விரும்பி உண்ணப்படுகின்றன. கற்றாழையின் மஞ்சரிக்காம்பும்  நறுக்கி உண்ணப்படுகிறது. அங்கு விரும்பி அருந்தப்படும் மலரமுதும் சிரப் போல ப்பாட்டில்களில் விற்பனையாகிறது. இந்தக் கற்றாழைச்செடிகளினடியில் வாழும் எறும்புகளின் முட்டைகளும் மெக்சிகோ மக்களின் மிகக் குறிப்பிடத்தக்க உணவாக இருக்கிறது,

மெக்சிகோவின் பழங்குடி இனத்தவர்களான் அஸ்டெக்குகளின் காலத்திலிருந்தே புரதத்தேவைக்காக பூச்சிகளை உண்ணும் வழக்கம் இருந்து வருகிறது.  உலகெங்கிலும் பயிர்களை சாகுபடி செய்யும் வளமான நிலப்பரப்பு இல்லாத, மிகுந்த வறட்சி நிலவும் பிரதேசத்து மக்கள் இப்படி பூச்சிகளை உண்பது வரலாற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 மெக்சிகோ ஐரோப்பாவின் பிடிக்குள் வந்தபின்னரும் தொடர்ந்த அந்த பழக்கம் இன்றும் கலாச்சார அடையாளத்தை இழக்காமல் இருக்கும் பொருட்டு தொடர்கிறது. வெட்டுக்கிளி, எஸ்கமோல் என்னும் எறும்பு முட்டை மற்றும் மேகுவே புழுக்கள் ஆகியவை மெக்சிகோ உணவு கலாச்சாரத்தில் மிக முக்கியமான இடம் கொண்டிருப்பவை. மெக்சிகோவில் மட்டும் சுமார் 400 உண்ணத்தகுந்த பூச்சிகள் அபரிமிதமாக இருக்கின்றன என்பதுவும் இந்த பூச்சி உண்ணுதலுக்கு முக்கியமான காரணம்.  மெக்சிகோவின் ஒஷாகா (Oaxaca) மாநிலம் இந்த பூச்சி உணவுகளுக்கு பெயர் பெற்றது.

எண்ணெயில் பொறிக்கப்பட்ட மொறுமொறுப்பான பூச்சிகள் மெக்சிகோவின் கடைதெருக்களில் மூட்டை மூட்டையாக விற்கப்படுகின்றன. ஓக் மரப்பூச்சியான ஜுமிலே, தேன் எறும்பு வகையொன்று, குளவி, தட்டான், வெல்வெட்  எறும்பு ஆகியவற்றின் முட்டைகள் போன்றவை அப்படியே சமைக்கப் படாமல் உண்னபடுகிறது

மெக்சிகோவின் பிரபல உணவுகளில் ஒன்றுதான் எஸ்கமோல் என்னும் எறும்பு முட்டை உணவு. இந்த எஸ்கமோல் கற்றாழைச்செடிகளின் அடியில் கூடுகட்டி வாழும் இரண்டு வகை எறும்புகளின் முட்டையில் செய்யப்படும் உலகப்புகழ்பெற்ற உணவு.

எஸ்கமோல் என்னும் சொல் ஆஸ்டெக்குகளின் நவாட்டி( Nahuatl.) மொழியில்  எறும்பைக்குறிக்கும் அஸ்ட்ல் (azatl), மற்றும் உணவைக்குறிக்கும் மோலி(molli) ஆகியவற்றிலிருந்து உருவாகியது.

இந்தக் குறிப்பிட்ட வகை எறும்பு முட்டைகளை உண்பது மெக்சிகோவில் 16-ம் நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்பேனியர்கள் ஆக்கிரமிக்கும் முன்பே இருந்தது.

அஸ்டெக் பழங்குடியினரின் சடங்குகள் விழாக்கள் பாடல்கள், நடனம், விருந்துகள் என எல்லாவற்றிலும் எஸ்கமோல் உணவு தவறாமல் இடம் பெற்றிருந்தது. 1503-1520-வரை அஸ்டெக்கின் மன்னராக இருந்த மோக்டெஸுமாவுக்கு (Moctezuma Xocoyotzin) சிறப்பு நிகழ்வுகளின் போதெல்லாம் எஸ்கமோல் உணவு  பரிசளிக்கப்பட்டதை பல வரலாற்றாய்வாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

16-ம் நூற்றாண்டில் ஸ்பெயினைச்சேர்ந்த இனவரைவியலாளரும் இறையியலாலருமான ஃப்ரே (Fray Bernardino de Sahagún) பல பழங்குடியினத்தவர்களுடன் இணைந்து எழுதிய “General History of the Things of New Spain”, என்னும் ஸ்பெயினின் ஆக்கிரமிப்புக்கு முன்பாக  அஸ்டெக்குகளின் வாழ்க்கை அவர்களின் உணவு , கலாச்சாரம் ஆகியவை விவரிக்கப்பட்ட நூலில் எஸ்கமோல் உள்ளிட்ட பல சிறப்பு உணவுகள் முதல் முறையாக விவரிக்கபட்டிருக்கின்றன.

ஃப்ரே  இந்த ஆய்வுக்காக 1545 லிருந்து அவர் மரணமடைந்த 1590 வரை தொடர்ந்து 50 ஆண்டுகள் ஈடுபட்டிருந்தார். 2500,பக்கங்கள் 12 தொகுதிகளாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் தொகுப்பில் சுமார் 2000 சித்திரங்களும் வரையப்பட்டிருந்தன.உணவு எப்படி அஸ்டெக்குகளின் கலாச்சாரத்துடன் இணைந்திருந்தது எனச்சொல்லும் இந்நூல் அஸ்டெக்குகள் கடவுள்களுக்கு   படைத்த உணவுகளையும் விவரிக்கிறது.

எஸ்கமோல் (escamoles) எனப்படும் இந்த இருவகை எறும்புகளின் முட்டைகள் மெக்சிகோ, லத்தீன அமெரிக்கா. ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பிரத்யேகமான உணவாக இருக்கிறது.  அகாவே  கற்றாழைகள், பாறைப்பிளவுகள் சப்பாத்திக்கள்ளி உள்ளிட்ட பிற கள்ளிச்செடிகள், சிதைந்த மரக்கட்டைகள் ஆகியவற்றில் இந்த எறும்புகள் கூடுகட்டும். Liometopum apiculatum மற்றும் Liometopum occidentale var. luctuosum ஆகிய இரண்டு எறும்புகளின் முட்டைகள் தான் எஸ்கமோல் உணவுக்காக சேகரிக்கப்படுபவை.

இந்த எறும்புகள் பிற எறும்புகளையும் சிறு பூச்சிகளையும் தான் உண்ணும் தாவரங்களை உண்பதில்லை என்பதால் இந்தக் கற்றாழைகளின் வேர்களை அவை சேதப்படுத்துவதில்லை. அகாவே மஞ்சரிகளின் மலரமுதினையும் இந்த எறும்புகள் விரும்பி உண்ணும்.

கற்றாழைச்செடிகளின் அடியில் சுமார் 2 அடி ஆழத்தில் இந்த எறும்புக்கூடு அமைந்திருக்கும்.  இந்த கூடுகளை எறும்புகள் மண்ணை உமிழ் நீருடன் சேர்ந்து பிசைந்து  ஸ்விஸ் சீஸ் போல ஆங்காங்கே துளைகள் கொண்ட  அட்டைப்பெட்டி போன்றதொரு அமைப்பாக உருவாக்கும். கூட்டினுள் 4 அல்லது 5  trabecula என்னும்  பெரிய அறைகள் நடுவில் இருக்கும்படி கட்டப்பட்டு அதில் முட்டைகள் சேமிக்கப்படும். 

 மாபெரும் கூடுகளான இவற்றில் இந்த அறைகளிலிருந்து தள்ளி 4 அல்லது 5 மீ  தொலைவில் பாதுகாப்பாக ராணி எறும்பு வாழும் அறை இருக்கும் ஒவ்வொரு அறையும் பிற அறைகளுடன் ஒரு குறுகிய திறப்பு வழியாக இணைக்கப்பட்டிருக்கும்.

ஒரு ராணி எறும்பு ஒரு நாளில் சுமார் 5000 முட்டையிடும். ராணி அல்லாத வேலைக்கார எறும்புகளும்  கருவில்லாத முட்டைகளிடும். புரதம் நிரம்பிய அவற்றைப் பிற எறும்புகள் உண்ணும். 

எறும்புக்காலனிகளில் சுமார் 40,000-த்திலிருந்து 60,000 வேலைக்கார எறும்புகள் இருக்கும். ஒவ்வொரு வருடமும் இந்த எறும்புக்கூடுகள் ஒவ்வொன்றும் சுமார் 3-லிருந்து 4 கிலோ முட்டைகளை உருவாக்கும். ஒரு பருவத்திற்கு 3 முதல் 5 முறை இவை முட்டையிடுகின்றன.

இந்த எறும்பு முட்டை சேகரிப்பது அத்தனை எளிய காரியமல்ல. Escamoleros  எனக்குறிப்பிடபப்டும் இந்த எறும்பு முட்டை சேகரிப்பவர்கள் கூட்டமாக வாகனங்களில் அந்தப்பாலை நிலத்துக்குச் செல்வார்கள் எறும்புக்கூடு இருக்கும் வயல்பகுதிகளுக்கு  வாகனங்கள் வரமுடியாதென்பதால் இறங்கி அகாவே கற்றாழை வயல்களுக்குள் நடந்து செல்வார்கள்.

 தூத்துக்குடியில் முத்தெடுக்க கடலுக்குள் செல்பவர்கள் தங்கள் மனைவியின் சகோதரன் கையில்  இடுப்புக்கயிற்றைக் கொடுத்து விட்டுத்தான் மூழ்குவார்கள். அப்படித்தான் இங்கும் மிக நம்பிக்கையான ஒருவருடன் இரண்டிரண்டு பேர்களாக பிரிந்து சென்று எறும்புக்கூடுகளைத் தேடிச் செல்வார்கள். பெரும்பாலும் இந்த ஜோடி வருடக்கணக்காக மாறாமலிருப்பதுண்டு. அப்பா மகன் ஜோடியையும் இங்கு சாதாரணமாகப் பார்க்கலாம்.

 ஒருவருக்கு 1-லிருந்து 5 எறும்புக்கூடுகள் வரை  சொந்தமாக வைத்திருப்பதும் உண்டு. எறும்பு முட்டைச் சேகரிப்பை அவர்கள் அறுவடை என்னும் பொருளில்  capar  என்று குறிப்பிடுகிறார்கள்

மிக ஆக்ரோஷமாகக் கடிக்கும் எறும்புகளிடமிருந்து தப்பிக்க உடலெங்கும் பன்றிக்கொழுப்பை பூசியபின்னர் தங்கள் பாதங்களைப் பிளாஸ்டிக் காகிதத்தால் சுற்றி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளும் இவர்கள் கற்றாழையின் வேருக்கடியில் செல்லும் எறும்பு வரிசையைப் பின்தொடர்ந்து கூட்டை கண்டுபிடிப்பார்கள். கரண்டி போன்ற ஒரு கம்பியால் மண்ணைத்தோண்டி கூட்டைப் பார்த்ததும் எறும்புக்கூட்டின் மேல்மண்ணை மண்வெட்டியால் மெல்லத்தட்டி உதிர்ப்பார்கள். ஒவ்வொரு செயலிலும் எறும்புகளைக் கொல்லக்கூடாது, முட்டைகளை சேதப்படுத்தக் கூடாது என்னும் கவனம் இருக்கும். கூட்டை திறந்தவுடன் கூட்டிலிருந்து கடுமையான நெடி கிளம்பும்.

எறும்புகள் உருவாக்கும் இந்த நெடி கெட்ட வாயு எனப்பொருள்படும்;  ’la pedorrilla’ என்ப்படுகிறது. இந்த எறும்புகளையுமிவர்கள் கெட்ட வாயு உண்டாக்குபவை என்று செல்லமாகக் குறிப்பிடுவார்கள்.( “the farty ant.”)

பிறகு கூட்டுக்குள் கையைவிட்டு trabecula வைத் தேடி குப்பைக்கூளங்களுடன் எறும்பு முட்டைகளை மெல்ல வெளியே எடுத்து ஒரு சல்லடையில் வைப்பார்கள். உடனிருக்கும் மற்றொருவர் சல்லடையால்  குப்பைகளிலிருந்து முட்டைகளைச் சலித்தெடுப்பார். சுமார் அரைக்கிலோ வரை ஒரு நாளைக்கு சேகரித்த பின்னர் எறும்புக்கூடுகள் மீண்டும் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும்.    70% முட்டைகளை மட்டுமே எடுத்துக் கொண்டு மற்றவற்றை சேதமில்லாமல்  கூட்டிலேயே விட்டுவிட்டு கூட்டைப் பழையபடி மூடிவிட்டு திரும்புவார்கள். எல்லா முட்டைகளையும் அறுவடை செய்தால் அடுத்த பருவத்தில் எறும்புகளும் முட்டைகளும் இருக்காது அல்லது எறும்புகள் மனிதர்கள் கண்டுபிடிக்க முடியாத இடங்களில் முட்டையிடத்துவங்கும் என்பதால் முட்டை அறுவடை மிகக்கவனமாக நடைபெறும்

முட்டைகளைஒரு வாளியில் எடுத்துக்கொண்டு அந்தி சாய்கையில் அனைவரும் வாகனங்களில் வீடுதிரும்புவார்கள்.

பிறகு குடும்பமாகக் குழந்தை குட்டிகளுடன் வாசலில் வட்டமாக அமர்ந்து இறந்த எறும்புகள் பிற குப்பைகளிலிருந்து  முட்டைகளைச் சுத்தப்படுத்தும் வேலை பின்னிரவு வரை ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும்

இடைத்தரகர்கள் மறுநாள் காலையில் வந்து கிலோவுக்கு 200 லிருந்து 300 பெசோக்கள் கொடுத்து முட்டைகளை விலைக்கு வாங்கிக் கொள்வார்கள்.  ஒரு பொது இடத்தில் வைத்து எடைபோட்டு விலையை உரக்க கூவிக்கூவிச்சொல்வார்கள் யாருடைய வாளியில் அதிக முட்டை இருந்தது, எந்த வாளி அதிக விலைக்குச்சென்றது என்பது  உரக்கச் சொல்லப்படும்போது பிறர் அன்றைய வெற்றியாளரைக்கட்டிக்கொண்டு வாழ்த்தி  க் கொண்டாடுவார்கள்.

அந்த வரள் நிலத்தின் முக்கியமான வருமானமாக இந்த எறும்பு முட்டை சேகரிப்பு இருக்கிறது.ஒரு குடும்பம் ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 கிலோ முட்டைகளைச் சேகரிக்கும்.  ஒரு வருடத்தில் சுமார் 8000 பெசொக்கள் இவர்களுக்கு இந்த  எஸ்கமோல் சேகரிப்பில் கிடைக்கும்.

இந்த எறும்பு முட்டைகள் பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இந்தச் சமயத்தில் மெக்சிகோவிற்கு இந்த உணவைச் சுவைக்க வென்றே பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள்  செல்வதுண்டு.

 தரகர்களால்  உணவகங்களுக்குச் கொண்டுசெல்லப்படும் முட்டைகள் அங்கு மிக அதிக விலைக்கு விற்கப்பட்டு குளிர் சாதனப்பெட்டிகளில் சேமிக்கப்படும்.

இந்த முட்டைகள் மிக லேசாகச் சுமார்  5 நிமிடம்வரை வெங்காயம், வெண்ணெய் மற்றும் மெக்சிகன் தேயிலையான epazote வின் நல்ல நெடிகொண்ட இலைகளுடன் சேர்ந்து சமைக்கப்படும்.

வறுத்த பொரியைப்போல தோற்றமளிக்கும், வெள்ளையிலிருந்து தந்தம் அல்லது பழுப்பு நிறமாகி இருக்கும் இந்தச் சமைத்த எறும்பு முட்டை உணவு லேசான இனிப்புடன் சீஸ் சுவையுடன் இருக்கும்.

எஸ்கமோல் தனி உணவாகவோ, இணை உணவாகவோ அல்லது தொடுகறியாகவோ கிடைக்கிறது.இது கிடைப்பது அரிது என்பதாலும் சேகரிப்பது மிகுந்த கடினமென்பதாலும் இந்த உணவின் விலை மிக அதிகமாக இருக்கிறது.

பரிமாறப்படும் எஸ்கமோல் உணவின் அளவு 10 லிருந்து 15 கிராம் தான் இருக்கும்.  உலகின் பல பாகங்களிலும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட உணவகங்களில் இந்த உணவின் விலை 15-லிருந்து 50 அமெரிக்க டாலர் வரை இருக்கிறது.

எஸ்கமோல் உணவுகளின் உலகப்பிரசித்தி காரணத்தால் இந்த எறும்புகள் இப்போது பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன,

மெக்ஸிகோவிலிருந்து 130 கி மீ தொலைவில்  மெஸ்குவிட்டல் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் தனியார் பண்ணையான Teotlacualli யில் பலதரப்பட்ட காய்கனிகளும் கீரைகளும் கூடவே எஸ்கமோல் எறும்புகளும்  வளர்கின்றன. இங்கு மெக்சிகோ மக்களின் விருப்பத்துக்குரிய பூச்சிகளும் உருவாக்கப்படுகின்றன

தனது தாய்மாமாவிடமிருந்து தன் 11 வது வயதில் எஸ்கமோல் முட்டைகளைச்சேகரிக்க கற்றுக்கொண்ட, கடந்த பத்தாண்டுகளாக எஸ்கமோல் முட்டைகளை உருவாக்கிவரும் அந்தப்பண்ணையின் உரிமையாளரான ஜோஸ் இந்த முட்டைகளைச் சேகரிப்பதற்கான பயிற்சி தலைமுறைகளாக மெக்சிகோ மக்களால் கற்றுக்கொள்ளப் படுகிறது என்கிறார்.

எஸ்கமோலைப்போலவெ  நீலக்கற்றாழையான Agave tequilana-வின் சதைப்பற்றான இலைகளில் ஒட்டி இருக்கும் meocuiles எனப்படும் பட்டாம்பூச்சிகளின் முட்டையயும் இங்கு பிரபல உணவுதான்    

அமெரிக்க இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் பூச்சியியலாளர் லூயிஸ் (Louis Sorkin) கடந்த ஐந்து வருடங்களில் பூச்சிகளை உண்பதில் மக்களின் விருப்பம் கணிசமாக உயர்ந்திருக்கிறது என்கிறார்.

உலகெங்கிலும் சுமார் 1900 பூச்சி வகைகளும் முட்டை வகைகளும் 60% மக்களால் உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது இந்தியக் கிராமங்களில் நூற்றாண்டுகளாக ஈசலை உண்ணும் வழக்கம் இருக்கிறது. நான் சிறுமியாக இருக்கையில் பொரியுடன் வறுத்த ஈசல் உருண்டைகளைப் பலமுறை சுவைத்திருக்கிறேன். மழைக்காலங்களில் கூடைகளில் ஈசலை விற்றுக்கொண்டு வருபவர்களையும் பார்த்திருக்கிறேன், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, சீனா, ஜப்பான், கம்போடியா, நெதர்லாந்து ஆகிய பல நாடுகளில் இந்த பூச்சி உணவு புழக்கத்தில்  இருக்கிறது.

நிச்சயமாக பூச்சி உணவுகள் வருங்கால சூப்பர் உணவுகளாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை அதிக புரதம், முக்கியமான அமினோ அமிலங்கள், ஒமேகா 3 கொழுப்பமிலம், குறைந்த கொழுப்புக் கொண்டிருக்கும் பூச்சிகள் நிச்சயம் நல்ல ஊட்டச்சத்து உணவாக இருக்கும். 2050-ல்  9 பில்லியனாகவிருக்கும் மக்கள் தொகைக்கு உணவளிப்பதில் விவசாயிகளுக்கு உண்டாகவிருக்கும் பெரும் அழுத்தத்தையும் இந்த பூச்சி உணவு குறைக்கும் வாய்ப்பிருக்கிறது.

இன்னும் இவற்றைச் சுவைக்காதவர்கள் முயன்று பார்க்கலாம்.

எச்சில் உணவு!

சீனாவின் யுனான் மாகாணத்தில் 1371-ல் இஸ்லாமியரான ஹாஜி மா’ வுக்கும் வென்’னுக்கும் பிறந்தார் மா ஹெ. 

மா என்பது முகமது என்பதின் சீனப்பெயர்.  இளம் மா, கன்ஃபூஷியஸ்,  மென்சியஸ் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை விரும்பிப் படித்தான். அவனது தந்தையும் சகோதரர்களும் சென்று திரும்பிய மெக்காவின் ஹஜ் புனித யாத்திரைகளைக் குறித்தும் உலகநாடுகள் குறித்தும் ஆர்வமாக கேட்டுத்தெரிந்து கொள்வான். மாவிற்கு உலகைச்சுற்றிப்பார்க்கவேண்டும் என்னும் பேராவல் இருந்தது.

1381-ல் மா’விற்கு 11 வயதானபோது மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசர் ஹோங் வு’வின் ராணுவம் யுனான் பிரதேசத்தை தாக்கிக் கைப்பற்றியது. யுனானிலிருந்து மா உள்ளிட்ட ஏராளமான சிறுவர்கள் மிங் அரசவையில் அடிமைகளாகப் பணியற்ற பிடித்துச்செல்லப்பட்டார்கள்.

பண்டைய சீனத்தில் அரசரின் அந்தப்புரத்தில் இருந்த அவரது ஏராளமான மனைவியர் மற்றும் ஆசைநாயகிகளுக்கு பணிவிடைசெய்ய ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஆணிலிகளைத்தான் அனுமதிப்பார்கள். ஆணிலிகளால் அந்தப்புரப் பெண்களுக்கு வாரிசு உண்டாகும் வாய்ப்பில்லை என்பதால் எதிர்காலத்தில் அரசரின் வாரிசுகளுக்கு போட்டியாக வேறு குழந்தைகள் உருவாகாமல் இருக்க இப்படிச் செய்யப்பட்டது.  அப்படி மா’வும் ஆண்மை நீக்கம் செய்யப்பட்டு அந்தப்புரத்தில் பணியமர்த்தப்பட்டான். 

மா மிகக் கடினமாக உழைக்கும் சிறுவனாக இருந்தது பேரரசரின் கவனத்துக்கு வந்தது. அவர் மா’வுக்கு ராணுவப் பயிற்சி அளிக்க ஆணையிட்டார். மா பிற்பாடு இளவரசர் ஜு டி-யின் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு மங்கோலியர்களுக்கெதிரான பல போர்களில் அவருடன் இருந்து அவரைப் பாதுகாத்தார். பின்னர்  இளவரசர் ஜு டி  மிங் சாம்ராஜ்யத்தின் பேரரசரான பின்னர், பதவி உயர்வு பெற்று ஜெங் என்னும் அரசவைப் பெயரிடப்பட்டு மா ஹெ ஆக இருந்தவர் ஜெங் ஹெ ஆனார். (“Zheng” He)

ஏராளமான அதிகாரங்கள் கொண்டிருந்த ஜெங் ஹெ அரண்மனைக் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டுமானங்களில் புகழ்பெற்றவரானார்.  சீனாவின் மாபெரும் கப்பற்படையை அவர் உருவாக்கினார். ஒரே சமயத்தில் இணையாக பல கப்பல்கள் இணைந்து செல்லும் கப்பற்தொகுதிகளில் 7 மாபெரும் கடற்பயணங்களை 1405-லிருந்து 1433 வரை ஜெங் ஹெ ஒருங்கிணைத்தார்.  செல்வங்களைத் தேடிச்செல்லும்  62  பொக்கிஷக்கப்பல்கள் உள்ளிட்ட நான்கு அடுக்குகள் கொண்ட 208  மரக்கப்பல்களில் 27800  வீரர்கள், அறிஞர்கள் உடைமைகளுடன் அவரது கப்பற்படை புறப்பட்டது.

உலகின் மிக முக்கியமான பிரதேசங்களுக்கு சென்று திரும்பிய அக்கப்பல்களில் ஜெங் ஹெ  உணவு, மசாலாப்பொருட்கள், உடை மேலும் பல வினோதப்பொருட்களை ஏராளமாகக்கொண்டு வந்து மன்னருக்கு அளித்தார். அவரது கடற்பயணங்களின் நோக்கம் போரோ, நாடுகளை கைப்பற்றுதலோ அல்லாமல் புதியபொருட்களை சேகரிப்பதும், வணிகமுமாக இருந்ததால் சென்ற அனைத்து இடங்களிலும் அவருக்கு வரவேற்பு இருந்தது.  தென்கிழக்காசியாவுக்குச் சென்ற அவரது  ஒரு கடற்பயணத்தில் தனித்தனித் தீவுகளில் இருந்த ஆட்சியாளர்கள் அவருக்கு மிக வினோதமான ஒரு உணவுப்பொருளைப் பரிசளித்தார்கள்.  

அத்தீவுகளில் நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்த ஒரு உணவுப்பொருளான அது பறவைகள் எச்சிலால் கட்டும் சிறு கிண்ணம் போன்ற உண்ணக்கூடிய கூடுகள்.

அக்கூடுகள் தீவின் சுண்ணாம்புக் குகையின் சுவர்களில் அமைக்கப்பட்டிருந்தன.  சின்ன உழவாரப்பறவைகள்  (swiftlets) முட்டையிட்டு குஞ்சுகள் வெளிவந்ததும் கைவிடப்பட்ட ஏராளமான கூடுகளைச்சேகரித்து உணவாக உண்பதை அத்தீவுவாசிகள் பலகாலமாக செய்துகொண்டிருந்தார்கள். அக்கூடுகள் சுவையாக இருந்ததோடு  உண்பவருக்கு நல்ல ஆற்றல் அளித்து அவர்களை இளமையாக வைத்திருக்கவும் உதவின.  மிகவும் அதிசயித்துப்போன ஜிங் ஹெ அந்தப்பறவைக்கூடுகளை  அப்போது பதவியேற்றிருந்த மிங் சாம்ராஜ்யத்தின்  புதிய இளம் பேரரசருக்குக் கொண்டு வந்தார்.

அரண்மனைச்சமையல்காரர்கள் அந்தப் பறவைக் கூட்டை கண்ணாடிபோல மின்னும் சூப்பாக செய்துகொடுத்து அதன் சுவையில் மயங்கிய  இளம்  பேரரசர் அப்பறவைக்கூடு உணவை அரச குடும்பத்துக்கான பிரத்யேக உணவாக அறிவித்தார். அப்போதிலிருந்து பறவைக் கூடு சூப்  செல்வச் செழிப்பு,  ஆரோக்கியம், நீளாயுள் மற்றும் புத்தம்புதிய சுவையின் அடையாளமானது. சமூகத்தின் மேல்தட்டு மக்களும் அதை சுவைக்கத்தலைப்பட்டனர்.   இந்த பறவைக்கூடு ஆயுளை அதிகரித்து ஆற்றல் அளிக்கும் என்பதோடு பாலுணர்வைத் தூண்டும் என்னும் கதையும் சேர்த்துப்பரப்பி விடப்பட்டபோது அதற்கான தேவை மிக அதிகமாகியது. 

ஆறு நூற்றாண்டுகள் கடந்தும் அந்த உணவின்மீதான விருப்பம் இன்றும் உலகெங்கிலும்  தொடர்கிறது.

இந்தக்கூடுகளை உருவாக்கும்  சின்ன உழவாரன்கள் தெற்காசியா, ஓசியானியா, வடகிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் வாழ்கின்றன. இந்திய சின்ன உழவாரன்  (Aerodramus unicolor) இந்தியா மற்றும் இலங்கையில் மட்டும் காணப்படுகிறது. கூட்டமாக குகைகளில் வாழும் இவை  கூட்டமாக அதிகாலை வெளியே சென்று மாலை அந்தி சாய்கையில் கூடு திரும்பும் தினசரி ஒழுங்கைக்கொண்டவை.  

தாய்லாந்து, வியட்நாம், போர்னியோ மற்றும் பிலிப்பைன்ஸ் பகுதிகளின் சுண்ணாம்புக்குகைகளில் இந்த சின்ன உழவாரன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.

உலகின் மிகப்பழமையான மழைக்காடுகளுக்கும் ஒராங்குட்டான் உள்ளிட்ட  விதம் விதமான வன உயிரினங்களுக்கும் பெயர்பெற்ற உலகின் மூன்றாவது பெரிய தீவான தென்கிழக்காசியாவின் போர்னியோ தீவுகளில் மாபெரும் கோமந்தோங் சுண்ணாம்புக் குகைளின் உச்சியில் இந்தப்பறவைகள்  ஏராளமான கூட்டை அமைக்கின்றன.

அபோடிடே பறவைக் குடும்பத்தைச்சேர்ந்த  Aerodramus, Collocalia, Hydrochous மற்றும் Schoutedenapus ஆகிய பேரினத்தைசேர்ந்த சின்ன உழவாரன் பறவைகளின் கூடுகளே இப்படி உணவாகப்பயன்படுகிறது. இவற்றின் ஏராளமான சிற்றினங்களில் 6 சிற்றினங்களின் கூடுகளே உணவாகப்பயன்படுகின்றன.

 இந்த உழவாரப்பறவைகள் 9 லிருந்து 16 செ மீ நீளமும் 8 லிருந்து 35 கிராம் எடையும் கொண்ட சிறு உடல் கொண்டவை. இவற்றின் இறகுகள் மங்கலான கருமை, மண் நிறம் அல்லது சாம்பல் நிறம் கொண்டிருக்கும். குறுகிய இறகுகளும் குட்டைக்கால்களும் கொண்டிருப்பதால் இவற்றால் வேகமாக பறக்கவும் குகைகளின் ஆபத்தான சரிவுகளில் அமர்ந்து கூடு கட்டவும் முடிகிறது.

சின்ன உழவாரன் பறவைகள் காற்றில் பறக்கையிலேயே பூச்சிகளைப் பிடித்து உண்பதோடு இணைசேர்வதையும் உறங்குவதையும் காற்றில் பறக்கையிலேயே செய்கின்றன. இனப்பெருக்கக்காலத்தில் முட்டையிடத்தான் குகைகளில் இடம் தேடி வருகின்றன இப்பறவைகள்

சின்ன உழவாரன்கள் ஒலியை எதிரொலிக்கச்செய்வதின் மூலம் இருண்ட  குகைகளின் உட்புறச் சுவர்களை உணர்கின்றன( echolocation) 

வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் மட்டும் வாழும் இவற்றின் இனப்பெருக்கக்காலம் 92-120 நாட்கள். கூடுகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் பிற சின்ன உழவாரன்களின் கூடுகளிலும் இவை முட்டையிடும் வழக்கம் கொண்டிருக்கின்றன.

 அடுக்கடுக்காக எச்சில் இழைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி ஆண் பறவைகளால் இந்தக்கூடு கட்டப்படுகிறது. சுமார் 30 நாட்களில் எச்சில் உலர்ந்து கெட்டியானபின் கூடுகளுக்குள் பழைய இறகுகளைக்கொண்டு வந்து வைத்து முட்டைகளுக்கு மென்மையான படுக்கையை  ஆணும் பெண்ணுமாக உருவாக்குகின்றன. கூடு தயாரானவுடன் பெண் பறவை இரண்டே இரண்டு வெண்ணிற முட்டைகளை கூட்டினுள் இடுகிறது. ஆண் பெண் இருபறவைகளும் நாளொன்றுக்கு ஒருவர் என்னும் சுழற்சி முறையில் முட்டைகளை அடைகாக்கும். 

குஞ்சுகள் வளர்ந்து பறந்தபின்னர் இந்தக்கூடுகள் கைவிடப்படுகின்றன. ஒரே கூட்டில் சின்ன உழவாரன்கள் மறுமுறை கூடுகட்டுவதில்லை.

கைவிடப்பட்ட கூடுகளே சேகரிக்கப்படுகின்றன. கூடுகள் வெள்ளை, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் இருக்கும்.  

உலகின் மிக விலைகொண்ட உணவுகளில் ஒன்றான இந்தப்பறவைக்கூடு சூப்புக்காக மிக அதிகமாக சேகரிக்கப்படுவதும் மதிப்பு மிக்கதும்  (Aerodramus fuciphagus),  என்னும்   உழவாரன்களின்  வெண்ணிறக் கூடுகள்தான். வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக்கூடுகள் கிலோவுக்கு 1500-லிருந்து 200 டாலர்கள் விலையென்றால், ரத்தக்கூடு என்றழைக்கப்படும் சிவப்புநிறக் கூடுகளின் விலை 10000 டாலர்களாக இருக்கிறது. பறவைக்கூடு சூப் ஒரு கிண்ணம் 100 டாலர்களிலிருந்து 500 டாலர்வரை இருக்கிறது.

இந்த பறவைக்கூடுகள் அமைந்திருக்கும் குகைச்சுவற்றில் இருக்கும் இரும்புச்சத்து கூடுகளின் புரதங்களுடன் வினை புரிந்து சிவப்பு நிறத்தை உருவாக்குகிறது

கருப்பு உழவாரன் எனப்படும்  (Aerodramus maximus), மற்றும் இந்திய சின்ன உழவாரனான (Aerodramus unicolor). ஆகியவற்றின் கூடுகளும் பிரதானமாக சேகரிக்கப்படுகிறது.

இம்மூன்றைத்தவிர மற்ற சின்ன உழவாரங்களின் கூடுகளில் குச்சிகள் இலைகள் போன்ற  தாவரபாகங்களும் இருப்பதால் அவை  சேகரிக்கப்பட்டாலும் தரம் குறைவானதாக கருதப்படுகின்றன. 

இந்தப் பறவைக்கூடுகளை சேகரிப்பவர்கள்  “busyadors,”  எனப்படுகின்றனர். கடற்பறவைகளின் எச்சங்களின் கடும்நெடி நிரம்பியிருக்கும், உழவாரன்கள் கூடுகட்டியிருக்கும் குகைப்பகுதியில்  ஆயிரக்கணக்கான சிறகடிப்புச் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். உழவாரப்பறவைகள் குகையின் கூரைச்சுவற்றில் பொன் சரிகைப்பட்டுப்போல மினுங்கும் பிறை நிலவின் வடிவத்தில் இருக்கும் கையகலக் கூடுகளை அமைக்கின்றன.

ஆசியாவின் மிக ஆபத்தான பணியாகக்கருதப்படும் இந்தப் பறவைக்கூடு சேகரிப்பில் பலநூறு பேர் உயிரைப்பணயமாக வைத்து  தலைமுறைகளாக ஈடுபட்டுவருகின்றனர்.

ஒரு பறவைக்கூடு சுமார் 14 கிராம்  எடைகொண்டிருக்கும் .எனவே ஒரு கிலோ அளவுக்குக்கூடுகளைச் சேகரிக்கப் பலமணிநேரம் அவர்கள் இந்த ஆபத்தான வேலையை செய்யவேண்டி இருக்கும் 

 பலநூறு அடி உயரமுள்ள கூரைகளில் இருக்கும் கூடுகளைச் சேகரிக்க மூங்கில் கழிகளிலும் ஏணிகளிலும் கட்டப்பட்டிருக்கும் கயிறுகளில் தொங்கியபடி அடிதப்பினால் மரணம் நிச்சயம் என்னும் நிலையில் வெள்ளைத்தங்கம் எனப்படும் இந்தகூடுகள் சேகரிக்கப்படுகின்றன.  

சின்ன உழவாரன்களின் இனப்பெருக்கக்காலம் துவங்கியதும் கூடுகளைச்சேகரிப்போர் கடவுளுக்கு காணிக்கைச் செலுத்தி நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி  தங்கள் உயிருக்கு பாதுகாப்பளிக்கும் வேண்டுதல்களைச் செய்வார்கள்.

குகையின் சுவர்களையும் கூட்டையும் கைகளால் தொடுவது கடவுளுக்கு கோபம் உண்டாக்கும் என்னும் நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இவர்கள் திரிசூலம் போல மூன்று முனைகள் கொண்ட  ராடா எனப்படும் ஒரு தடியையும் கையோடு எடுத்துச்சென்று அதைக்கொண்டுதான் கூட்டைச் சுவற்றிலிருந்து உரித்து எடுக்கிறார்கள். சூலம் போன்ற ராடா தடி கடவுளாக  உடனிருந்து அவர்களை காப்பாற்றும் எனவும் நம்புகிறார்கள். 

இத்தனை ஆபத்து இருந்தும் தவறமல் திரும்பத் திரும்ப இவர்கள் பறவைக்கூடுகளை உயிரைப் பணயம் வைத்து சேகரிப்பது பறவைக்கூடுகளுக்கிருக்கும் சந்தை மதிப்பினால்தான்.

சேகரித்த கூடுகளைச் சுத்தம் செய்வது அடுத்த கட்ட கடினமான பணி. கூடுகளை நீரில் ஊறவைத்து மிருதுவாக்கியபின்னர் ஊசிகளால் அதில் ஒட்டியிருக்கும் இறகுப்பிசிறுகளும் அசுத்தங்களும் பிரித்தெடுக்கப்படுகிறது.

பறவைக்கூட்டில் சுமார் 62% புரதம் 27% மாவுச்சத்து, கால்சியம் பாஸ்பரஸ் சோடியம் பொட்டாஷியம் மற்றும் வைட்டமின்கள், சில கனிமங்கள் கொழுப்பு இரும்புச்சத்து ஆகியவை இருக்கிறது.    

மிக அதிகவிலைக்கு விற்கப்படும் எல்லா உணவுப்பொருட்களையும் போலவே இதிலும் கலப்படங்களும் போலிகளும் இருக்கிறது. கடற்பாசிகள் சில பூஞ்சைக்காளான்கள் மற்றும் சில மரப்பிசின்களைச் சேர்த்து பறவைக்கூடு சூப் எனச்சொல்லி பிரபல உணவகங்களில் கூட ஏமாற்றுகிறார்கள்.

தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியாவின் கடற்கரையோரங்களில் கான்கிரீட் கட்டிடங்களின் மொட்டைமாடிகள் முழுக்க தகடுகளால் மூடி இருட்டாக்கி, பறவை நுழைய சிறு கீறல்கள் மட்டும் உண்டாக்கி பதிவு செய்யப்பட்ட பறவைக்குரலை எப்போதும்  ஒலிக்கச்செய்து சின்ன உழவாரப்பறவைகளை அங்கு வந்து கூடுகள் கட்டச்செய்யப்படுகிறது. இந்த வீட்டுக்குகைகளில் கூடுகளை சேகரிப்பது, குகைகளில் சேகரிக்கும் ஆபத்தை இல்லாம்லாக்குகிறது.

 வீட்டு உரிமையாளர்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கிறது எனினும் அகற்றவே முடியாத பறவை எச்சங்களின் கடும் நெடியும் தொடர்ந்து கேட்கும் அவற்றின் குரலும் பெரும் தொந்தரவாகத்தான் அனைவருக்கும் இருக்கிறது.

பறவைகளால் வரும் நோய்கள் மக்களுக்கு இதனால் வெகுஎளிதில் பரவும் அபாயம் இருப்பதாக பறவையியலாளர்கள் தொடர்து எச்சரித்தவண்ன்ணம் இருக்கிறார்கள்,  ஆனால் குகைகளில் சேகரிக்கப்படும் கூடுகளுக்கு கிடைக்கும் அதே விலை, கட்டிடங்களில் எடுக்கப்படும் கூடுகளுக்கும் கிடைப்பதால் மேலும் பலர் இந்தக் கூடுகளை அவரவர் வீடுகளில் அமைக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

இந்தப்பறவைக்கூடுகளின் தேவை மிக அதிகரித்திருப்பதால் முட்டைகள் இருக்கும்,  பறக்கமுடியாத இளம் குஞ்சுகள் பாதுகப்பாக இருக்கும் கூடுகளும் சேகரிக்கப்படுவதால் சின்ன உழவாரன்களின் எண்ணிக்கை அபாயகரமாக குறைந்து வருவதாகவும், கூடுகளைச் சேகரிப்போர் சந்திக்கும் ஆபத்துகள் மனித உரிமை மீறல்கள் எனவும் பறவைக்கூடு சூப்பின்  பயன்களாகச் சொல்லப்படுபவைகளைக்காட்டிலும்  தாவரசூப்களில் அதிக ப்பயன்கள் உள்ளது என்னும் கருத்துக்களும் தீவிரமாக முன்வைக்கப்படுகின்றன.

எச்சசரிக்கைகளும் கண்டனங்களும் தொடர்ந்து இருந்து கொண்டிருந்தாலும் பறவைக்கூடு சேகரிப்பும் அதன்தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

 மலேஷியாவில் மட்டும் சுமார் 60000 பேர் இநந்தப்பறவைக்கூடு சேகரிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். மலேசிய அரசு இந்த ஆபத்தான பணியில் ஈடுபட்டிருப்போருக்கு கடனுதவிகளும் வழங்குகிறது., 

இத்தொழிலில் தலைமுறைகளாக ஈடுபட்டிருக்கும் மலேசியப்பழங்குடியினர் பத்து வருடங்களுக்கொருமுறை சீட்டுக்குலுக்கிப்போட்டு அடுத்த பத்து வருட ஒப்பந்ததாரரை முடிவு செய்கிறார்கள். இப்போது சீன முதலாளிகள் குகைகளை பெருந்தொகைக்கு ஏலம் எடுப்பதால் இதை நூற்றுக்கக்கான  வருடங்களாக வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த பழங்குடியினர் பாதிப்படைந்திருக்கிறார்கள். பெருந்தொகைக்கு குகைகள் ஏலம் எடுக்கப்படுகின்றன.  ஏலம் எடுத்த முதலாளிகள் ஆயுதமேந்திய காவலர்களைக்ளைக்கொண்டு குகைகளைப் பாதுகாக்கின்றன்ர்.

பல லட்சங்கள் புழங்கும் இந்த பறவைக்கூடு தொழில் போட்டியில் கொல்லப்பட்டவர்கள்,  குகைகளில் தொங்கிக்கொண்டு கூடு சேகரிப்பில் இருக்கையில் உயிரிழப்பவர்கள் ஆகியோரின் விவரங்கள் வெளிஉலகிற்கு தெரிய வராமல் மறைக்கப்படுகிறது..

இந்தப் பறவைகூடு உணவு வீடுகளில் சூடுபடுத்தி அருந்தும் திரவ வடிவில் பாட்டில்களிலும், உலர் பொடியாகவும் இருவிதங்களில் சந்தைப்படுத்தப்படுகிறது, சுத்தப்படுத்தப்பட்ட கூடுகள் அப்படியேவும் விற்பனையாகின்றன.

உணவாக மட்டுமல்லாமல் இவற்றின் சருமத்தைப்பாதுகாக்கும் இயல்புகளால் அழகுசாதனப் பொருள் தயாரிப்பிலும் இக்கூடுகள் பயன்படுத்தப்படுகின்றன. வருடத்திற்கு சுமார் 200 டன் பறவைக்கூடுகள் உலகின் பலபாகங்களிலும் உண்ணப்படுகிறது. இதில் ஹாங்காங்கின் அளவே மிக அதிகம்.

 ஜின்செங் மற்றும் சர்க்கரை கலந்து எளிதாகத்  தயாரிக்கப்படும் இந்த சூப் இளமையை தக்கவைத்து ஆற்றலை அதிகரித்து சருமப்பொலிவுக்கும் கண்பார்வை கூர்மைக்கும் உதவுகிறது என்று சொல்லப்படுகிறது.

இந்தோனேஷியா வருடத்திற்கு 2000 மெ டன் பறவைக்கூடுகளைச் சேகரித்து உலகின் முதல் இடத்திலும் தொடர்ந்து 600 டன் சேகரிக்கும் மலேசியாவும் மூன்றாம் இடத்தில் 400 டன்  தாய்லாந்தும் இருக்கிண்றன.

இனி பறவைக்கூடு சூப்பை அருந்தும் வாய்ப்பு கிடைத்தால், மேசையில் நம் முன்பு கிண்ணத்தில் கண்ணாடி போல இருக்கும் அந்தத் திரவம் விலையுயர்ந்த ஒரு உணவு மட்டுமல்ல, பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஜென் ஹெ பயணித்த பொக்கிஷ கப்பல்களின் மீது போதிய அலைகளின் ஓசை, உயிரைப்பணயம் வைத்து கயிற்றில் தொங்கிக்கொண்டு கூடுகளைச் சேகரிக்கும் தொழிலாளர்களின் நிழல், இதன் பட்டுப்போன்ற நூழிலைகள் ஆரோக்கியத்தையும் வாழ்நாளையும் நீட்டிக்கும் என் பேரரசர்கள் கொண்டிருந்த நம்பிக்கை இவை எல்லாம் கலந்த கலவைதான் அது என்பதை எண்ணிக்கொள்ளுங்கள்

நதியின் பிழையன்று!

சமீபத்தில் கோவை நீலாம்பூரில் நஞ்சில்லா விவசாயம் செய்யும் மாதிரிப்பண்னையொன்றைப் பார்வையிட மாணவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அந்தப்பண்ணை அத்தனை ஆர்வமூட்டுவதாக தென்னையும், கரும்பும், ஊடுபயிர்களுமாக இருந்தது.

நீலாம்பூருக்குஅருகில் வசிக்கும் நண்பரொருவருக்கும் நிலபுலன்கள் இருப்பதால் அவரையும் அந்தப்பண்ணைக்கு வரும்படி அழைப்பு விடுத்தேன். அவர் அங்கே வந்தபின்னர்தான் தெரிந்தது அந்த நிலமும் அதற்கருகிலிருந்த நிலமெல்லாமும் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு  அவர்கள் முன்னோருக்கு சொந்தமானதாக இருந்தவை என்று. 

அந்த நண்பர்  என்னிடம் வேடிக்கையாக ‘’ எங்க நிலத்தைப் பார்க்க வரச்சொல்லி எங்களையே கூப்பிட்டிருக்கீங்க’’ என்றார்.

அப்படித்தான் இருந்தது சி ஆர் இளங்கோவனின்  ‘’நதியின் பிழையன்று’’ நூலை வாசித்தபோது. கோவை  மாவட்டத்துகாரியான எனக்கு கோவையைக்குறித்து விளக்கமாகச் சொல்லிய நூல் இது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளின் வரலாற்றையும், பன்முகங்களையும், அவை எப்படி மெல்ல மெல்ல சிதைக்கப்ட்டிருக்கிறது என்பதையும் மிக உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த நூல் அழைத்துச் செல்லும் இடங்கள் எல்லாமே எனக்குத்தெரிந்தவை, நான் சென்றிருப்பவை, வாழ்ந்து கொண்டிருப்பவைதான் என்றாலும் இளங்கோவன் காட்டும் கசக்கும் உண்மைகள் நானறியாதவை.

இந்த நூல் வாசித்தபிறகு 17-ம் நூற்றாண்டில் தனது ஓவியங்களால் சூழியல் துறையை தோற்றுவித்த மரியா சிபில்லாவை அறிந்துகொண்டிருந்த எனக்கு நான் பிறந்து வளர்ந்த மாவட்டத்தின் சூழல் சீர்கேடுகளைக் குறித்து முழுமையாகத் தெரியாமலிருப்பதன்  குற்றவுணர்வு மனம் முழுக்க இப்போது உண்டாகியிருக்கிறது.

பிரமாதமான கதை கூறல் முறை.  கசக்கும் பல உண்மைகளை  புனைவு என்னும் தேன் கலந்து அளித்திருக்கிறார். ஆனாலும் கசக்கிறதுதான்.

கதை மாந்தர்களுக்குள் நடக்கும் உரையாடல்களாலும்,மிக விரிவான விளக்கங்களினாலும் நகரும் கதை இடையே அழைத்து வரப்படும் ஒரு பாட்டியினாலும், கதையில் இருக்கும் இரு பூதங்கள் தங்களுக்குள் உரையாடுகையிலும், ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் இரு பாறைகளின் மூலமும், ஜோடிப்பறவைகளின் உரையாடலிலும் மேலும் அணுக்கமாகிவிடுகிறது..

 இந்தக்கதைகூறும் முறை என்னை மிகவும் கவர்ந்தது. இளங்கோவன் மொழியும் மிக எளிமையாக மாசடையாத காலத்து நொய்யலைப் போல தங்குதடையின்றி வழிந்தோடுகிறது.

ரோமானியரான மார்கஸ் நொய்யலைப்பற்றி ஆய்வு செய்யவருவதிலிருந்து கதை ஆம்  நம் மாவட்டத்தின் கதைதான் தொடங்குகிறது. காலத்தில்  முன்னும் பின்னும் சென்று திரும்பும் கதையில் நாமும் இளங்கோவனுடன் நதிக்கரைகளிலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  எழுப்பப்பட்ட கோவில்களுக்கும்,  மச்சு வீடுகளுக்கும், ஜின்னிங் ஃபேக்டரிகளுக்கும் நடந்து செல்கிறோம்.

பல அத்தியாயங்களில்  இளங்கோவன் நம் வீட்டு கூடத்தில் அமர்ந்து நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கும் உணர்வை வாசிப்பனுபவம் உண்டாக்குகிறது.

நானறிந்த, நான் சந்தித்திருக்கும் சூழல் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் பல முக்கிய ஆளுமைகள்   பெயர் மாற்றப்பட்டு கதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். 

அவர்களின் பணியும் சூழல் பங்களிப்பும்  மகத்தானது. அவர்களை அவர்களாகவே குறிப்பிட்டிருக்கலாம். அதிமானுடக் கற்பனைக் கதாபத்திரங்களைக் கொண்டாடி  வழிபடும் இந்தத்தலைமுறையினர் அவர்களைக் குறித்து அறிந்து கொண்டிருப்பார்கள்.  எனினும் புனைவு என்னும்  வடிவத்தை முழுமையாக்க இப்படி செய்திருக்கிறார்  என்று தோன்றுகிறது.

நூலில் என்னை பிரதானமாகக் கவர்ந்தது இளங்கோவனின் நேர்மறைத்தன்மை. நொய்யல் மாசுபடுவதைச் சொல்லிக்கொண்டே இருக்கும் இடங்களில் எங்கும் யாரையும்  அவர் குறை சொல்லவில்லை.  கரையோரம் வீடு கட்டிக் குடியிருந்து கழிவுநீரை நதியில் கலந்தவர்களைச் சொல்லும்போதும் அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்கிறார். அரசையும் குறை சொல்வதில்லை, அரசு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்த பின்னரும்  கைமீறிப்போன விஷயத்தில் யாரைக் குறை சொல்வது என்னும் தொனிதான் பெரும்பாலும் இருக்கிறது. 

சூழல் மாசு குறித்த நூலோ கட்டுரையோ ஏன் தகவலாக இருந்தால் கூட எதோ ஒரு தரப்பை குறைசொல்லாமல், சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. சூழல் மீது மட்டுமல்ல மனிதர்கள் மீதான இளங்கோவனின் இந்தக் கனிவும் என்னை மிகவும் ஆச்சர்யமூட்டியது.

சூழல் மாசுகுறித்த அவரது ஆழ்ந்த கவலையில் யார் மீதும் எந்தக்குறையும் அவர் காணவில்லை, எல்லாம் காலத்தின் கோலம் என்பதை அவர் ஆத்மார்த்தமாகச் சொல்கிறார். இடையிடையே அநேகமாக எல்லாப் பக்கங்களிலும் பிறவாப்புளி,எறவாப்பனை  உள்ளிட்ட  ஏராளமான மரம் செடிகொடிகளின் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலை இந்தப்பிரதேசத்தின்  flora வின் ஆவணம் என்றும்  கருதலாம்.

கல்வெட்டுச்செய்திகள், திருவிளையாடற்புராண வரிகள், ஆய்வறிக்கைகளின் முக்கியப்பகுதிகள், தமிழக ஆணையக்குறிப்புகள், நீதிமன்றத்தீர்ப்புகள் , தலபுராணத்தகவல்கள், சிலப்பதிகாரம், வெகுகாலத்துக்கு முந்தைய முக்கியக் கண்டுப்பிடிப்புகள் என்று  ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்தில்  கொடுத்திருப்பது இந்தப்படைப்பை   மேலும் மேலும் செறிவானதும்   முக்கியமானதுமாக்கி விடுகிறது.

நதியின் மூலத்தை மட்டுமல்ல நதி பாழானதின் மூலத்தையும் தேடிப்பிடித்து நமக்குத் தருகிறார் இளங்கோவன். திருப்பூரில் வண்ணத்துணிகள் உருவாகக் காரணமாயிருந்தவரை  நான் இந்த நூலில்தான் அறிந்துகொண்டேன்.

 சாயக்கழிவுகளால் உண்டாகியிருக்கும் நதிநீர்  மாசுபட்டை ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வுடன் வாசித்தறிந்து கொள்ள முடிகிறது அத்தனைக்கு உண்மையாகவும் அப்பட்டமாகவும் சிக்கலை அணுகி இருக்கிறார் இளங்கோவன்.

 பல வருடங்களுக்கு முன்னர் திருப்பூர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருக்கையில் தலைக்குகுளிக்கவென்று 20 பிளாஸ்டிக் குடங்களில் ‘’நல்ல தண்ணி’’ குடம் ஐந்து ரூபாய் என்று வாங்கி சேமித்துவைத்து விட்டு தான் துவங்கவிருக்கும் புதிய பனியன் தொழிற்சாலை குறித்து உற்சாகமாக நண்பர் பேசிக்கொண்டிருந்ததையும் அவர்கள் வீட்டு  வாஷ்பேசினில் நான் குழாயை திறந்ததும் தேநீரின் நிறத்தில் வந்த ஆழ்குழாய் நீரையும் நினைவுகூர்ந்தேன். 

திருப்பூரின் ஒரு பெருமுதலாளியின் மூன்று குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே ஆஸ்துமா இருந்தது, திருப்பூரில் அவர்கள் இருந்தால் ஆரோக்கியக் கேடு மேலும் அதிகரிக்கும் என்பதால் அவர்கள்ஊட்டியில் ஒரு சர்வதேச உறைவிடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். திருப்பூரில் பின்னலாடை தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கானோரின் குடும்பத்துக் குழந்தைகளை   எங்கு சென்று படிக்கவைத்து அவர்கள் நலனை பாதுகாப்பது?

 யார் பிழை என்று சொல்வது இவற்றை?

சிங்காநல்லூரில் குளத்துக்குள் வரும் ரயில் ,அதன் வரலாறு, மீன்பிடிப்போரின் தெய்வமான  தூண்டில் கருப்பசாமி, பிளேக் மாரியம்மன் பிளாக் மாரியம்மனானது,அந்தக்காலத்திலேயே பவோ பாப் மரம் கோவையில் ஒரு தோட்டத்தில் நடப்பட்டது, தன்னிச்சையாக இளைஞர்கள் இந்த மாசுபாட்டை சரிசெய்ய அமைந்த தருணங்கள் என மிகச்சுவாரஸ்யமாக நூலுடன் பயணிக்க முடிகிறது. 

பலஇடங்களில் மிக கவித்துவமான விவரிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக மியாவாக்கி குறுங்காட்டைப்பற்றிய ஒரு விவரிப்பின் போது  மூங்கில் இலைகள் பொன்னிற மலரிதழ்கள் போல தரையெங்கும் சிதறிக்கிடந்தன என்கிறார்.  மூங்கிலின் பழுத்த இலைகள் மலரிதழைப் போலவேதான் இருக்கும். தங்கமாக மின்னும் செண்பகப்பூ, காணி நிலம் வேண்டும் என்னும் பாரதியின் பாடலை நினைவில் கிளர்த்தும் இடமும் அப்படித்தான்.

 நொய்யலில் மீன் பிடிப்பவர்களுக்கு சீவியர் என்னும் பெயரிருப்பதையும் அதன் காரணம் தெரியவில்லை என்பதையும் அறிந்து கொண்ட போது, மீன் முட்டைகளைக்குறிக்கும் Caviar என்னும் சொல்லுக்கும் இந்தப் பெயருக்கும் ஏதேனும் வேர்தொடர்பு இருக்குமோ எனத்தோன்றியது.

பிரச்சனைகளைச் சொல்லி இருக்கும் அதே அளவுக்கு பிரச்சனைகளைச் சீராக்க எடுக்கப்பட்டிருக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நதிநீர் மாசுபாட்டைச் சீரமைக்க  நாமனைவரும் ஒன்று சேர்ந்து தீவிரமாகச்  செயல்பட வேண்டி இருக்கும் அவசியத்தை  நேரடியாகச் சொல்லாமல்  சீர்கேட்டின் திவீரத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார்.

நூலின்  உள்ளடக்கத்தை முன்-பின்னட்டை புகைப்படம் மிக  வெளிப்படையாகச்  சொல்லிவிடுகிறது. அதிலும் புரண்டோடும் நதி முன்னட்டையிலும். மாசடைந்த சாக்கடைக்கோலம் பின்னட்டையிலும் இருப்பது இளங்கோவனின் நேர்மறை அணுகுமுறையின்  மற்றொரு சான்று. 

கைக்கடக்கமான சிறிய  160 பக்கங்கள் கொண்ட நூல். சிறப்பான   வடிவமைப்பு. மிகச்சில தட்டச்சுப்பிழைகள்தான்.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களையும் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் முக்கிய ஆளுமைகளைக்குறித்துப்பேசும், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த   நூல்கள் தான் கல்லூரியில் பாடத்திட்டத்திலோ அல்லது  non detailed நூல்களாகவோ இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம் .

அயல்நாட்டினர் எழுதிய ஆங்கிலக்காவியங்களும் தேவைதான் என்றாலும் முதல் தேவை நம் சொந்த மண்ணை அறிந்து கொள்வது தான்.என் துறை மாணவர்களுக்கு 100 பிரதிகள் வேண்டும்  இளங்கோவனிடம் கேட்டிருக்கிறேன்

திரு இளங்கோவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் அன்பும்!

சண்டே சொல்லு!

“Having too much on my plate”என்று சொல்லப்படும் நிலையில் இருக்கிறேன். பாதியிலிருக்கும் அக்டோபரில் முடித்தாக வேண்டிய ஒரு மொழியாக்கம், தமிழக மாவட்டங்களின் flora வை ஆவணப்படுத்தும் அரசுவேலை,வெளியாகிக்கொண்டிருக்கும் உணவு குறித்த தொடருக்கான கட்டுரைகளை எழுதுவது, அதற்கென வாசிப்பதும், தயாரிப்பதும்,காத்திருக்கும் ஒரு நூலறிமுகம், கல்லூரி வேலை, வீட்டு பராமரிப்பு, ஓணவெயில் காலமாதலால் தோட்டத்துக்கு நீரூற்றுதல், சமையல், பயணம், கடைவீதி ,விழாக்கள். இந்த வருட முடிவிற்குள் முடித்தாகவேண்டிய குடும்பச் சிக்கலொன்று,அதன்பொருட்டு நடக்கும் நாடகங்களை எதிர்கொள்வதும் சகித்துக்கொள்வதும், அடுத்து நடக்கவிருக்கும் அறக்கல்விக்கான வகுப்புக்களுக்கு (அரைத்த மாவையே அரைக்கக்கூடாது என்பதற்காக) கூடுதலான தகவல்களைச் சேகரிப்பது, என்று கண்ணைக்கட்டுகிறது.

நேற்று கல்லூரியில் தேர்வுப்பணி முடித்து அங்கிருந்து யான்அறக்கட்டளை துவங்கவிருக்கும் ஒரு முக்கிய நிகழ்சிக்கான முன்தயாரிப்புப் பேச்சுவார்த்தைக்கென கோவை சென்று விட்டு மாலை வீடு திரும்பி இரவு வெகுநேரம் எழுதிக்கொண்டிருந்து விட்டு பின்னிரவில்தான் உறங்கினேன்.

காலை 5 மணிக்கு வழக்கம்போல கண்ணைப்பிரிக்க முடியவில்லை. பள்ளியில் சேர்ந்த புதிதில் குட்டிச்சைது சொல்வதைப்போல இன்று வியாழன் என்று நினைவு வந்ததும் நானே மனதிற்குள் சண்டே சொல்லு சண்டே சொல்லு என அடம் பிடித்து ,உடனிருந்து தேற்ற யாருமில்லாததால் நானே சமாதானமாகி எழுந்து புறப்பட்டு, இதோ கல்லூரியில் இருக்கிறேன்.

இன்னும் இரண்டு நாட்களில் சண்டே சொல்லலாம்!

மலர்த்துளியும் ஈஸ்வரனும்!

இன்று tenuiflora விற்கும் parviflora விற்குமான வேறுபாட்டை அறிந்துகொள்ள அந்த இருவகைகளிலும் இருக்கும் மஞ்சரிகளை ஆராய்ந்துகொண்டிருந்தேன். இரண்டுமே மஞ்சரியின் சிறுமலர்களைத்தான் குறிக்கின்றன என்றாலும் நுட்பமான வேறுபாடு இருக்கிறது. துளசியுடையது tenuiflora  தெட்சியின் வகைகளில் ஒன்று  parviflora. இப்படி  தாவரப்பெயர்களின் etymologyயின் பின்னால் போவது எனக்கு விருப்பமானதொன்று. சொல்லப்போனால் இந்ததுறையில் எனக்கு ஈடுபாடு வந்ததே இந்தப்பெயர்களில் இருகும் வசீகரம்தான்.  

parviflora   என்பது நுண்மலர்களைக்குறிக்கிறது ஆனால் அதே பேரினத்தில் இருக்கும் பிற மலர்கள் அல்லது மஞ்சரிகளில் இருக்கும் floret களின் அளவைக்காட்டிலும் சிறியவைகளுக்கே அந்தப்பெயரை லின்னேயஸ் வைத்திருக்கிறார். comparitively smaller உதாரணமாக இக்ஸோரா பார்விஃப்ளோராவைச்சொல்லலாம். தெட்சியின் மஞ்சரிகளை உருவாக்கியிருக்கும் சிறு மலர்களின் அளவைக் காட்டிலும் சிறியதாக இருக்கும் பார்விஃப்ளோராவின் அளவு. 

லின்னேயஸ் பெயரிடுவதற்கு எத்தனை மெனக்கெட்டிருக்கிறார் என்று நினைக்கையில் வியப்பாயிருந்தது. இந்த இக்ஸோரா -Ixora என்னும் பெயரையே எடுத்துக்கொள்ளலாம். சிவனுக்கு பிரியமானது கோவில்களில் சிவனுக்கு பூஜைக்குபயன்படுத்துவது என்பதால் iswara என்பதை latinize செய்து ixora  என்னும் பேரினப்பெயரை வைத்திருக்கிறார். ஸ்வீடிஷ் உயிரியலாளரான லின்னேயஸுக்கெப்படி நம்  ஈஸ்வரனை தெரிந்தது? சுவாரஸ்யமான ஒரு வரலாறு இருக்கிறது இதன் பின்னே.

1669-லிருந்து 1676 வரை மலபாரில் கவர்னராகப்பணிபுரிந்த டச்சு ராணுவ அதிகாரி ஹெண்ட்ரிக் அட்ரியான் ரீட் அந்தப்பகுதியின் 740 தாவரங்களை விவரித்து எழுதிய நூல் hortus malabaricus. இந்த நூல் உருவாக்கத்தில் கேரளத்தின் மூலிகைவைத்தியரான இட்டி அச்சுதன் பெரும்பங்காற்றினார். 

ஈழவரான அச்சுதன் ஆயுர்வேதமருத்துவராக சேரத்தலாவில் இருந்தார். கொச்சி அரசரான வீர கேரள வர்மாதான் அச்சுதனை ஹெண்ட்ரிக் ரீடிக்கு அறிமுகம் செய்துவைத்தார். அச்சுதனின் பனையோலைச்சுவடிகளிலிருந்து பல தகவல்களை ரீடி எடுத்துக்கொண்டிருக்கிறார். மலையாளத்திலிருந்த அவற்றை ஆங்கிலத்தில் ஒரு குழுவாக பல பிராமணர்கள் மொழிபெயர்த்து உதவி இருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் பெயர்களும் அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.அச்ச்சுதன் ஒவ்வொரு தாவரத்திற்குமான அந்தபிரதேசத்தின் வழங்குபெயர்களை தெளிவாகத்  தெரிவித்திருக்கிறார். உண்மையில் இந்த நூல் ஒரு botanical treatise என்பதைக் காட்டிலும் ஒரு cultural storehouse என்றுதான் சொல்ல வேண்டும்.

இட்டி அச்சுதனின் ஓலைச்சுவடிகளில் பிற்பாடு பெரிய அளவில் ஆய்வுகள் நடந்தன.இட்டி அச்சுதனின் வாழ்க்கை வரலாற்றை A N Chithambaram  எழுதி அதைக் கேரள சாகித்ய அகாதமி வெளியிட்டது. மேலும் அச்சுதனைப்பற்றி அறிந்துகொள்ள N S Arunkumar எழுதிய ‘’Horthoos malabarikoos charithavum Sasthravum’’ என்னும் நூல் உதவுகிறது.

திருவனந்த புரம் TBGRI யில் ஹார்டஸ் மலபாரிகஸில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரங்களுக்கெனத்தனியே ஒரு தோட்டம் அமைக்கப்பட்டது.இணையத்தில் ஹார்டஸ் மலபாரிகஸின் ஸ்கேன் பிரதி முழுமையாகக்கிடைக்கிறது.அதை மேலோட்டமாக பார்த்தேன், ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருப்பது பழங்குடித்தாவரவியல் தொகுப்புத்தான்.

1753-ல் லின்னேயஸ் இருபெயரீட்டு முறையை அறிமுகபப்டுதியபோது ரீடியின் நூலில் இருந்து மலபார் பகுதியில் ஈஸ்வரன் கோவில்களில் பயனபடுத்தப்படும் மலர் என்னும் குறிப்பைக்கொண்டே  இக்ஸோரா பெயரிடப்பட்டது. 

பார்விஃப்ளோராவிலிருந்து மலபாருக்கு வந்துவிட்டேன்

அடுத்த டென்யூஃப்ளோரா என்பது துளசியின் திர்சஸ் வகை சிறப்பு மஞ்சரிகளிலிருப்பதைப் போன்ற நுண்ணிய,  வலிமையற்ற, மிக மெல்லிய மலர்களைக்குறிக்கிறது. எனக்கு ஜெ வின் மலர்த்துளி என்னும் சொல் நினைவுக்கு வந்தது. லின்னேயஸ் இப்போது இருந்திருந்தால் ஜெ விடம் ஆலோசனை கேட்டு மேலும் பல பொருத்தமான சொற்களில் பெயரிட்டிருப்பார். 

யானைப்புளி

இந்த ஹெண்ட்ரிக் ரீடியின் பெயரில் தான் ஆப்பிரிக்க கனவுக்கொடியும் மனம்மயக்கும், இல்பொருள் தோற்றம் உண்டாக்கும் இயல்புகளையுடையதுமான எண்டெடா ரீடி என்னும் யானைப்புளிக்கொடி பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படி தகவல்களுக்குள் தகவலாகத்தேடித்தேடிப் பயணிப்பது ஒரு போதை போலாகிவிட்டிருக்கிறது. 

இனி நான் டென்யூஃப்ளோராவை மலர்த்துளி என்றே குறிப்பிடப்போகிறேன்.

பறந்து போ!

இன்று ott யில் பறந்துபோ வெளியாகி இருந்தது. கடும் பணிச்சுமையில் இருக்கிறேன், கல்லூரியில் முதல் அகமதிப்பீட்டுக்கான தேர்வுகள் நெருங்குவதால் பாடங்களை முடிக்க வேண்டும், இப்போதும் மாணவர் சேர்க்கை நடக்கிறது,அதைப் பார்க்கவேண்டும். இந்தத்துறை சுவாரஸ்யமானதுதான் என்பதை தெரிவிக்க வாரா வாரம் ஏதேனும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது,வழக்கமான கட்டுரைகள் எழுதிச் சமயத்துக்கு அனுப்புவது, என்னவானாலும் தவறாமல் வாசிப்பது, புதிதாக ஏற்றுக்கொண்டிருக்கும் அரசுசார்ந்த எழுத்துப் பணி ஒன்று, வீட்டுவேலை, தோட்டவேலை, விளக்கேற்றுவது என்று அடுத்தடுத்த வேலைகளின் கவனத்தில். இரவு 11மணிக்கும் உறக்கம் வராமல் மனம் விழித்துக்கொண்டிருக்கிறது. நானே வலிய இணையத் தொடர்பை நிறுத்திவிட்டு உறங்கச்செல்கிறேன்.

இத்தனை இருந்தும் அகரமுதல்வன் உள்ளிட்ட பல நண்பர்கள் சிலாகித்திருந்ததால் இந்தப்படத்தை கொஞ்சநேரம் பார்க்க நினைத்தேன். ஆனால் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே என்னால் தொடரமுடியாமல் பழைய நினைவுகளின் எடையில் மூச்சுத்திணறயது.

படத்தை நிறுத்திவிட்டு வாசலில் துளசி மாடத்தில் காற்றில் துடிக்கும் தீபச்சுடரை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்தக் குட்டிப்பையனை வீட்டைப்பூட்டி உள்ளே விட்டுவிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குச்செல்லும் காட்சி எங்கள் வாழ்வில் நடந்ததை ஒப்பிட்டால் உண்மையில் வீரியம் குறைவானது. சரணையும் தருணையும் அப்படி எத்தனயோ காலம் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறேன். பாவம்.

எல்லோராலும் கைவிடப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது.(இப்போதும் எங்கள் உலகில் நாங்கள் மூவர் மட்டும் தான் ஆனால் மகிழ்ந்திருக்கிறோம்) கல்லூரி விடுமுறைகளும் பள்ளி விடுமுறைகளும் வேறு வேறு மாதங்களில் இருக்குமென்பதால் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு கம்பி அழிபோட்ட வெளிகேட்டைப்பூட்டி சாவியை அவசரத்தேவைக்காக அவர்களிடமே கொடுத்துவிட்டு கல்லூரிக்குப்போவேன் .

வீட்டில் ஒரு லேண்ட் லைன் அப்போது இருந்தது வகுப்பு முடிந்ததும் அடித்துப்பிடித்து போன் செய்து இருவரிடமும் பேசிச் சண்டைகளைச் சமரசம் செய்து கொஞ்சி, கெஞ்சி அம்மா சீக்கிரமே வீடு வந்துவிடும் சத்தியங்களை அளித்து மாலை ஆட்டோவில் வந்திறங்கி ஓட்டமாக ஓடி வருவேன். சமயங்களில் சரணோ தருணோ அழைத்து ’’அம்மா எப்போ வருவே போரடிக்குது’’ என்பார்கள். கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் அழக்கூடாது என்பதற்காக மிகுந்த கஷ்டப்படவேண்டியிருக்கும் அப்போதெல்லாம்

மதிய உணவை விரிவாகச்சமைத்து கூடம் முழுவதும் நாளிதழ்களைப் பரப்பி அதில் தட்டு டம்ளரிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டுப் போயிருப்பேன். இருவருமாகச் சாப்பிட்டுவிட்டு குப்பையாகப் போட்டுவைத்திருப்பார்கள். மாலை அவற்றை அப்படியே சுற்றி எடுத்துத் தோட்டத்தில் இருக்கும் ஒரு ட்ரம்மில் நெருப்பு வைத்துவிட்டு வழக்கமான வீட்டுவேலைகளை மூவருமாகச் செய்வோம். இன்று இருவருமே கோலமிடுவதிலிருந்து சமைப்பதுவரை அதனால்தான் இஷ்டமாகச்செய்கிறார்கள்.

முக்கியமான அறுவை சிகிச்சைபிற்பாடு செய்யவேண்டி இருந்ததால் என் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்த அந்தகாலத்தில் எனக்குள் எதிர்மறை நினைவுகள் ஏதும் வந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருந்திருக்கிறேன். கூடவே மகன்களை எப்படியும் வளர்த்து ஆளாக்கவேண்டும் என்னும் உறுதியும் கொண்டிருந்தேன்.

வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை எனவே எங்களுக்குள் பேசிக்கொள்ள ஏராளமாக நேரம் கிடைத்தது. மாலையே இரவுணவை சமைத்து வைத்துவிட்டு மூவருமாகத் தெருமுனையில் புளிய மரத்தடியில் நின்றுகொள்வோம். இருட்டில் பளிச்சிடும் முகப்பு விளக்குகளோடு விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டு யாருக்கு கார், யாருக்கு லாரி, யாருக்கு பஸ் என்னும் விளையாட்டு விளையாடுவோம்

நன்றாக இருட்டியபின்னர் வீடு திரும்புகையில் யாருடைய வாகனம் அதிக எண்ணிக்கையில் கடந்துசென்றதோ அவர் வெற்றியாளர் என்பதை நாங்களே அறிவித்துக்கொண்டு வெற்றிபெற்றவர்களுடன் மற்ற இருவரும் சேர்ந்து இனிப்பை எடுத்துக்கொள்வோம். எப்போதும் இனிப்பு இருக்கும் வீட்டில்.

மீண்டும் கதை சொல்லிக்கொண்டோ பாடல்கள் கேட்டுக்கொண்டோ மூவருமாக எதாவது பாடலைப்பாடிக்கொண்டோ சாப்பிடுவோம். இரவு வெகுநெரம் என் இரண்டு பக்கமும் படுத்திருக்கும் இருவருக்கும் தட்டிக்கொடுத்து கதைகள் சொல்லி உறங்க வைத்துவிட்டு பின்னர் எழுந்துவந்து கூடத்தில் இருந்து கல்லூரி வேலைகளைப்பார்ப்பேன். நிறைந்த இளமையில் வெறும் அன்னையாக மட்டும் இருக்க கற்றுக்கொண்டகாலமது.

உண்மையில் அவர்கள் சிறைப்பட்டதுபோலத்தான் இருந்தார்கள். ஒருநாள் தருண் அலமாரியின் தட்டுக்களைப்பிடித்து மேலே எறி முதுகு தரையில் படக் கீழே விழுந்துவிட்டான். சரண் பின் வீட்டிலிருக்கும் பெண்ணுக்குத் தகவல் சொல்லி அவள் வந்துபார்த்து எனக்குத் தகவல்வந்தபோது நான் வகுப்பில் இருந்தேன்.

அது அரசு வேலைக்குச் சேர்ந்த முதல் வருடம் எந்தக்காரணத்தைக்கொண்டும் விடுப்பு எடுக்கக்கூடாது கண்ணீருடன் முதல்வரிடம் அனுமதி வாங்கி ஓட்டமாகக் கல்லூரி வாசலுக்கு வந்தபோது நான் அறிமுகம் கூட அப்போது செய்துகொண்டிருக்காத ஹென்றி என்னும் கல்லூரியின் ஃப்ரெஞ்ச் பேராசிரியர் பைக்கில் கல்லூரிக்குள்ளே வந்துகொண்டிருந்தார் அவரிடம் விஷயத்தைச்சொல்லி என்னைப் பேருந்து நிறுத்ததில் கொண்டு விடும்படி கேட்டுக்கொண்டேன். மறுபேச்சில்லாமல் கொண்டு விட்டார். அன்று ஆட்டோவில் செல்லக் கையில் போதுமான பணம் இல்லை. அரசு வேலை கிடைத்து முதல் இரண்டரை வருடங்களுக்குச் சம்பளமே இல்லை எல்லாம் மொத்தமாகப் பிற்பாடு கொடுக்கப்பட்டது. அந்தக் கஷ்டப்பாட்டைச் சொன்னால் பெரியநாவலே எழுதவேண்டிவரும்.

பேருந்தில் அன்று நல்ல கூட்டம் கம்பியைப் பிடித்தபடி தாரைதாரையாகக் கண்ணீருடன் வீடுவந்தேன். தருண் கீழே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அந்த வீதியிலப்போது ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த மேசனிடம் சென்று அவசரமாக ஹாஸ்பிட்டல் போகவேண்டும் என்று உதவி கேட்டேன். உடனே ஒத்துக்கொண்டார்.

சரணை வீட்டில் தனியே விட்டுவிட்டு அவரது டிவிஎஸ் 50 வண்டியில் அவருக்குப்பின்னால் தருணைத் தோளில் போட்டுக்கொண்டு அம்பராம்பாளையம் சென்றேன், நல்லவேலை வசந்த் இருந்தார் முதுகெலும்புக்கு ஒன்றும் அடியில்லை என்று சொல்லி சிகிச்சை அளித்தார். இப்படி பலவிஷயங்கள் நடந்தன பள்ளி விடுமுறைக்காலத்தில்

சில சமயம் கல்லூரிக்கு அழைத்துச்சென்றுவிடுவேன், சரண் சமத்தாக லைப்ரரியில் படித்துக்கொண்டிருப்பான். தருண் கல்லூரிமுழுக்க அவனே தனியாகக் கையில் கிடைத்தவற்றை வைத்து விளையாடிக்கொள்வான். சில சமயம் வகுப்புக்கு முன்னிருந்த ஒரு மைதானத்தில் இருவரும் விளையாடுவார்கள் அவர்களை ஒரு கண் பார்த்துக்கொண்டே கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பேன்.

சரணுக்கு கடும் காய்ச்சல் இருந்த ஒரு நாள் எனக்குத் தேர்வுப்பணி. அவனை லைப்ரரி மேசையில் மருந்துகொடுத்துப்படுக்க வைத்து ஒரு துண்டில் போர்த்திவிட்டு நான் 3 மணி நேர தேர்வுப்பணிக்கு போனேன். லைப்ரரி ஜோதி பார்த்துக்கொண்டாள் நான் வரும்வரை.

பேருந்தில் கதையான கதைபேசிக்கொண்டு திரும்பவருவோம் மூவருமாக. கஷ்டப்பாடுதான் என்றாலும் எங்களுக்குள் இருந்த பிணைப்பு மிக உறுதியானதும் அந்தக்காலத்தில்தான்.

கோவை காளப்பட்டியில் அப்போது பணிபுரிந்த ப்ரியா சில விடுமுறைகளில் உடன் வந்து இருந்து மகன்களை நான் வரும்வரை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள், அதை எந்நாளும் மறப்பதில்லை. திருமணத்துக்கு முந்தின இரவு காரில் ரோஜாப்பூக்கள் ஒட்டி இருக்கவில்லை என்னும் பிரச்ச்னை எழுந்தபோது அப்போது மணமாகி இருக்காத ப்ரியா நள்ளிரவு வரை டேப் கொண்டு ரோஜாக்களை ஒட்டிக்கொண்டிருந்தாள். அவளைத்தவிர வேறு யாரும் வந்திருந்து மகன்களைப் பார்த்துக்கொண்டதேயில்லை.

ஆனால் எல்லாக் கல்லூரி விடுமுறைகளிலும் வேன் வைத்துக்கொண்டு கூடக் கூட்டமாக வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். முகம் சுளிக்காமல் அனைவரையும் பார்த்திருக்கிறேன் எங்களை யாரும் ஒருபோதும் விடுமுறைக்கு வரச்சொன்னதில்லை அதில் எங்களுக்குக் குறையொன்றுமில்லை நாங்கள் எங்களுக்குள்ளேயே இன்று வரை மகிழ்ந்துதான் இருக்கிறோம்.

எத்தனை முயன்றும் என்னிலிருந்து உதிர்க்கவேமுடியவில்லை இந்த நினைவுகளை. சரண் தருணுக்கு இந்த விஷயங்களெல்லாம் பிற்பாடு நினைவுக்கு வந்து துயருற்றுவிடக்கூடாது என்பதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்

மகன்கள் தனிமையில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக வார இறுதி விடுமுறைநாட்களிலும் அதிகாலையில் எழுந்து மதியத்துக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு குளித்து வீட்டுவேலைகளை முடித்து அவர்கள் தூங்கி எழுந்திருக்கும் போதிலிருந்து இரவு வரை வேறெந்த அறைக்கும்கூடப் போகாமல் உடனிருப்பதை இன்று வரையிலுமே தொடர்கிறேன்.அவர்கள் கல்யாணம் வரை நான் இதைச்செய்யலாம்.

இதோ வளர்ந்து வலிதாகி இருக்கிறார்கள். இலக்கியப்பரிச்சயமும் இயற்கைமீது அக்கறையும் கொண்ட, அறத்தின் பால் நிற்கும் இளைஞர்கள் இப்போது சரணும் தருணும்.அவர்கள் குடும்பமும் குழந்தைகளும் உறவினர்களுமாகச் கூடி இருந்து வாழ்வதைப்பார்க்கக் கொதி இருக்கிறது எனக்கு.

இந்த நல்லபடத்தை என்னால் பார்க்கமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது. யாராவது குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் போகும், உடனிருக்க மனிதர்களற்ற அன்னையைப்பற்றி படம் எடுக்கவிருந்தால் என்னைச்சந்திக்கலாம். மிக உணர்வுபூர்வமான கணணீர் வரவழைக்கும் காட்சிகளுக்கு நான் உத்திரவாதம்.

இளமைக்காலங்கள்!

இன்று காலை வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே கல்லூரிக்குச்சென்றுவிட்டேன். வெள்ளிக்கிழமைகளில் ஏதேனும் ஒரு சிறப்பு நிகழ்வு இருக்கும்படி இந்தப் பருவத்தைக் கழிக்கவேண்டும் எனத் துறையில் முடிவு. எந்நேரமும் வகுப்பெடுத்துக்கொண்டிருந்தால் மாணவர்கள் சலிப்படையக்கூடும் எனவே துறைசார்ந்த சிறு சிறு நிகழ்வுகளை வாரா வாரம் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன்

இன்று பருத்திப்பைகளை உபயோகிப்பது, ப்ளாஸ்டிக் பைகளைத் தவிர்ப்பது என்பது குறித்த விழிப்புணர்வு அளிக்கத் துறையில் அனைவரும் துணிப்பைகளை கொண்டு வந்தோம். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க சற்றுமுன்னதாகவே சென்றேன்.

வழியில் ஒரு வகுப்பறையின் முன்பு எனக்கு முன்னதாகவே வந்து எதிரெதிரே நின்று கொண்டிருந்தார்கள் ஒரு பெண்ணும் ஆணும். இன்று வெள்ளிக்கிழமையாதலால் அவள தலைக்குக்குளித்து இடைவரை யக்‌ஷி போல நீண்டிருந்த முடியில் சின்ன வண்ணத்துப்பூச்சியின் வடிவிலிருந்த கேட்ச் க்ளிப் மட்டும் போட்டிருந்தாள். கூந்தலின் நீர் சொட்டி அவளது இளஞ்சிவப்பு சுடிதாரின் கீழ்ப்புறம் ஈரமாகி இருந்தது.

அவனோ அவசரத்தில் புறப்பட்டிருப்பான் போல, கசங்கிய சட்டை, கலைந்த தலை. தூரத்திலேயே அவன் அவளிடம் ’’ஏய். சாரிடி. போன் அடிச்சது கேட்கலை,தூங்கிட்டேன் இதுக்குப்போய்க் கோவிச்சுப்பியா?’’…. என்று சொன்னது கேட்டது.

அவள் கண்களில் கனலும் கண்ணீருமாக, சில நோட்டுப்புத்தகங்களை மார்போடு சேர்த்து அணைத்துப்பிடித்துக்கொண்டு அவனைப்பார்க்காமல் எங்கேயோ பார்த்துக்கொண்டிருந்தாள். அழகாகப் பட்டையாக மையெழுதிய கண்கள்.

‘’ நான் என்ன சொன்னேன் இப்போ? இனிமே உன்னைக் கூப்பிடலைனுதானே சொன்னேன், அதுக்கெதுக்கு சாரிகேட்கற? போய் வேலையைப்பாரு’’…. என்கிறாள்.

இவன் மீண்டும் பாவமாக ’’சாரி சொல்லிட்டனில்லடி, நீ ராத்திரி 12 மணிக்குக் கூப்பிடுவேன்னு எனக்குத் தெரியலை தூங்கினது குத்தமா’’ என்கிறான். அவள் ’’அய்யோ குத்தமில்லை சாமி நல்லா போத்திட்டுத்தூங்கு. நான் தான் இனி கூப்பிடமாட்டனே’’…. என்கிறாள். இதைச்சொல்லுகையில் அவள் குரல் உடைகிறது.

நான் அவர்களைக் கடந்துவிட்டேன். ’’சரிடி, இனிமே நான் தூங்கவேமாட்டேன், நீ எப்போ கூப்பிட்டாலும் போன எடுக்கறேன்’’… அன்று அவனும், பதிலுக்குச் சீற்றத்துடன் ’’ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு கூப்பிட்டா நீ போனே எடுக்கலை எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா?’’… என அவள் மலை இறங்கி வந்ததையும் கடைசியாகக்கேட்டேன். புன்னகைத்துக்கொண்டே முதல் தளத்தில் இருக்கும் என் துறைக்கான படிகளில் ஏறினேன்.

அன்பு வளரட்டும்!

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑