இன்று ott யில் பறந்துபோ வெளியாகி இருந்தது. கடும் பணிச்சுமையில் இருக்கிறேன், கல்லூரியில் முதல் அகமதிப்பீட்டுக்கான தேர்வுகள் நெருங்குவதால் பாடங்களை முடிக்க வேண்டும், இப்போதும் மாணவர் சேர்க்கை நடக்கிறது,அதைப் பார்க்கவேண்டும். இந்தத்துறை சுவாரஸ்யமானதுதான் என்பதை தெரிவிக்க வாரா வாரம் ஏதேனும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது,வழக்கமான கட்டுரைகள் எழுதிச் சமயத்துக்கு அனுப்புவது, என்னவானாலும் தவறாமல் வாசிப்பது, புதிதாக ஏற்றுக்கொண்டிருக்கும் அரசுசார்ந்த எழுத்துப் பணி ஒன்று, வீட்டுவேலை, தோட்டவேலை, விளக்கேற்றுவது என்று அடுத்தடுத்த வேலைகளின் கவனத்தில். இரவு 11மணிக்கும் உறக்கம் வராமல் மனம் விழித்துக்கொண்டிருக்கிறது. நானே வலிய இணையத் தொடர்பை நிறுத்திவிட்டு உறங்கச்செல்கிறேன்.
இத்தனை இருந்தும் அகரமுதல்வன் உள்ளிட்ட பல நண்பர்கள் சிலாகித்திருந்ததால் இந்தப்படத்தை கொஞ்சநேரம் பார்க்க நினைத்தேன். ஆனால் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே என்னால் தொடரமுடியாமல் பழைய நினைவுகளின் எடையில் மூச்சுத்திணறயது.

படத்தை நிறுத்திவிட்டு வாசலில் துளசி மாடத்தில் காற்றில் துடிக்கும் தீபச்சுடரை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். அந்தக் குட்டிப்பையனை வீட்டைப்பூட்டி உள்ளே விட்டுவிட்டு அம்மாவும் அப்பாவும் வேலைக்குச்செல்லும் காட்சி எங்கள் வாழ்வில் நடந்ததை ஒப்பிட்டால் உண்மையில் வீரியம் குறைவானது. சரணையும் தருணையும் அப்படி எத்தனயோ காலம் வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டுப் போயிருக்கிறேன். பாவம்.
எல்லோராலும் கைவிடப்பட்டிருந்த நிர்க்கதியான காலமது.(இப்போதும் எங்கள் உலகில் நாங்கள் மூவர் மட்டும் தான் ஆனால் மகிழ்ந்திருக்கிறோம்) கல்லூரி விடுமுறைகளும் பள்ளி விடுமுறைகளும் வேறு வேறு மாதங்களில் இருக்குமென்பதால் அவர்கள் இருவரையும் வீட்டில் விட்டுவிட்டு கம்பி அழிபோட்ட வெளிகேட்டைப்பூட்டி சாவியை அவசரத்தேவைக்காக அவர்களிடமே கொடுத்துவிட்டு கல்லூரிக்குப்போவேன் .
வீட்டில் ஒரு லேண்ட் லைன் அப்போது இருந்தது வகுப்பு முடிந்ததும் அடித்துப்பிடித்து போன் செய்து இருவரிடமும் பேசிச் சண்டைகளைச் சமரசம் செய்து கொஞ்சி, கெஞ்சி அம்மா சீக்கிரமே வீடு வந்துவிடும் சத்தியங்களை அளித்து மாலை ஆட்டோவில் வந்திறங்கி ஓட்டமாக ஓடி வருவேன். சமயங்களில் சரணோ தருணோ அழைத்து ’’அம்மா எப்போ வருவே போரடிக்குது’’ என்பார்கள். கல்லூரியில் மாணவர்கள் முன்னிலையில் அழக்கூடாது என்பதற்காக மிகுந்த கஷ்டப்படவேண்டியிருக்கும் அப்போதெல்லாம்
மதிய உணவை விரிவாகச்சமைத்து கூடம் முழுவதும் நாளிதழ்களைப் பரப்பி அதில் தட்டு டம்ளரிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துவைத்துவிட்டுப் போயிருப்பேன். இருவருமாகச் சாப்பிட்டுவிட்டு குப்பையாகப் போட்டுவைத்திருப்பார்கள். மாலை அவற்றை அப்படியே சுற்றி எடுத்துத் தோட்டத்தில் இருக்கும் ஒரு ட்ரம்மில் நெருப்பு வைத்துவிட்டு வழக்கமான வீட்டுவேலைகளை மூவருமாகச் செய்வோம். இன்று இருவருமே கோலமிடுவதிலிருந்து சமைப்பதுவரை அதனால்தான் இஷ்டமாகச்செய்கிறார்கள்.

முக்கியமான அறுவை சிகிச்சைபிற்பாடு செய்யவேண்டி இருந்ததால் என் உடல்நிலையும் சரியில்லாமல் இருந்த அந்தகாலத்தில் எனக்குள் எதிர்மறை நினைவுகள் ஏதும் வந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருந்திருக்கிறேன். கூடவே மகன்களை எப்படியும் வளர்த்து ஆளாக்கவேண்டும் என்னும் உறுதியும் கொண்டிருந்தேன்.
வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை எனவே எங்களுக்குள் பேசிக்கொள்ள ஏராளமாக நேரம் கிடைத்தது. மாலையே இரவுணவை சமைத்து வைத்துவிட்டு மூவருமாகத் தெருமுனையில் புளிய மரத்தடியில் நின்றுகொள்வோம். இருட்டில் பளிச்சிடும் முகப்பு விளக்குகளோடு விரையும் வாகனங்களைப் பார்த்துக்கொண்டு யாருக்கு கார், யாருக்கு லாரி, யாருக்கு பஸ் என்னும் விளையாட்டு விளையாடுவோம்
நன்றாக இருட்டியபின்னர் வீடு திரும்புகையில் யாருடைய வாகனம் அதிக எண்ணிக்கையில் கடந்துசென்றதோ அவர் வெற்றியாளர் என்பதை நாங்களே அறிவித்துக்கொண்டு வெற்றிபெற்றவர்களுடன் மற்ற இருவரும் சேர்ந்து இனிப்பை எடுத்துக்கொள்வோம். எப்போதும் இனிப்பு இருக்கும் வீட்டில்.

மீண்டும் கதை சொல்லிக்கொண்டோ பாடல்கள் கேட்டுக்கொண்டோ மூவருமாக எதாவது பாடலைப்பாடிக்கொண்டோ சாப்பிடுவோம். இரவு வெகுநெரம் என் இரண்டு பக்கமும் படுத்திருக்கும் இருவருக்கும் தட்டிக்கொடுத்து கதைகள் சொல்லி உறங்க வைத்துவிட்டு பின்னர் எழுந்துவந்து கூடத்தில் இருந்து கல்லூரி வேலைகளைப்பார்ப்பேன். நிறைந்த இளமையில் வெறும் அன்னையாக மட்டும் இருக்க கற்றுக்கொண்டகாலமது.
உண்மையில் அவர்கள் சிறைப்பட்டதுபோலத்தான் இருந்தார்கள். ஒருநாள் தருண் அலமாரியின் தட்டுக்களைப்பிடித்து மேலே எறி முதுகு தரையில் படக் கீழே விழுந்துவிட்டான். சரண் பின் வீட்டிலிருக்கும் பெண்ணுக்குத் தகவல் சொல்லி அவள் வந்துபார்த்து எனக்குத் தகவல்வந்தபோது நான் வகுப்பில் இருந்தேன்.

அது அரசு வேலைக்குச் சேர்ந்த முதல் வருடம் எந்தக்காரணத்தைக்கொண்டும் விடுப்பு எடுக்கக்கூடாது கண்ணீருடன் முதல்வரிடம் அனுமதி வாங்கி ஓட்டமாகக் கல்லூரி வாசலுக்கு வந்தபோது நான் அறிமுகம் கூட அப்போது செய்துகொண்டிருக்காத ஹென்றி என்னும் கல்லூரியின் ஃப்ரெஞ்ச் பேராசிரியர் பைக்கில் கல்லூரிக்குள்ளே வந்துகொண்டிருந்தார் அவரிடம் விஷயத்தைச்சொல்லி என்னைப் பேருந்து நிறுத்ததில் கொண்டு விடும்படி கேட்டுக்கொண்டேன். மறுபேச்சில்லாமல் கொண்டு விட்டார். அன்று ஆட்டோவில் செல்லக் கையில் போதுமான பணம் இல்லை. அரசு வேலை கிடைத்து முதல் இரண்டரை வருடங்களுக்குச் சம்பளமே இல்லை எல்லாம் மொத்தமாகப் பிற்பாடு கொடுக்கப்பட்டது. அந்தக் கஷ்டப்பாட்டைச் சொன்னால் பெரியநாவலே எழுதவேண்டிவரும்.
பேருந்தில் அன்று நல்ல கூட்டம் கம்பியைப் பிடித்தபடி தாரைதாரையாகக் கண்ணீருடன் வீடுவந்தேன். தருண் கீழே படுக்கவைக்கப்பட்டிருந்தான். அந்த வீதியிலப்போது ஒரு கட்டிடம் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த மேசனிடம் சென்று அவசரமாக ஹாஸ்பிட்டல் போகவேண்டும் என்று உதவி கேட்டேன். உடனே ஒத்துக்கொண்டார்.

சரணை வீட்டில் தனியே விட்டுவிட்டு அவரது டிவிஎஸ் 50 வண்டியில் அவருக்குப்பின்னால் தருணைத் தோளில் போட்டுக்கொண்டு அம்பராம்பாளையம் சென்றேன், நல்லவேலை வசந்த் இருந்தார் முதுகெலும்புக்கு ஒன்றும் அடியில்லை என்று சொல்லி சிகிச்சை அளித்தார். இப்படி பலவிஷயங்கள் நடந்தன பள்ளி விடுமுறைக்காலத்தில்
சில சமயம் கல்லூரிக்கு அழைத்துச்சென்றுவிடுவேன், சரண் சமத்தாக லைப்ரரியில் படித்துக்கொண்டிருப்பான். தருண் கல்லூரிமுழுக்க அவனே தனியாகக் கையில் கிடைத்தவற்றை வைத்து விளையாடிக்கொள்வான். சில சமயம் வகுப்புக்கு முன்னிருந்த ஒரு மைதானத்தில் இருவரும் விளையாடுவார்கள் அவர்களை ஒரு கண் பார்த்துக்கொண்டே கரும்பலகையில் எழுதிக்கொண்டிருப்பேன்.
சரணுக்கு கடும் காய்ச்சல் இருந்த ஒரு நாள் எனக்குத் தேர்வுப்பணி. அவனை லைப்ரரி மேசையில் மருந்துகொடுத்துப்படுக்க வைத்து ஒரு துண்டில் போர்த்திவிட்டு நான் 3 மணி நேர தேர்வுப்பணிக்கு போனேன். லைப்ரரி ஜோதி பார்த்துக்கொண்டாள் நான் வரும்வரை.
பேருந்தில் கதையான கதைபேசிக்கொண்டு திரும்பவருவோம் மூவருமாக. கஷ்டப்பாடுதான் என்றாலும் எங்களுக்குள் இருந்த பிணைப்பு மிக உறுதியானதும் அந்தக்காலத்தில்தான்.

கோவை காளப்பட்டியில் அப்போது பணிபுரிந்த ப்ரியா சில விடுமுறைகளில் உடன் வந்து இருந்து மகன்களை நான் வரும்வரை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறாள், அதை எந்நாளும் மறப்பதில்லை. திருமணத்துக்கு முந்தின இரவு காரில் ரோஜாப்பூக்கள் ஒட்டி இருக்கவில்லை என்னும் பிரச்ச்னை எழுந்தபோது அப்போது மணமாகி இருக்காத ப்ரியா நள்ளிரவு வரை டேப் கொண்டு ரோஜாக்களை ஒட்டிக்கொண்டிருந்தாள். அவளைத்தவிர வேறு யாரும் வந்திருந்து மகன்களைப் பார்த்துக்கொண்டதேயில்லை.
ஆனால் எல்லாக் கல்லூரி விடுமுறைகளிலும் வேன் வைத்துக்கொண்டு கூடக் கூட்டமாக வீட்டுக்கு விருந்தினர்கள் வந்திருக்கிறார்கள். முகம் சுளிக்காமல் அனைவரையும் பார்த்திருக்கிறேன் எங்களை யாரும் ஒருபோதும் விடுமுறைக்கு வரச்சொன்னதில்லை அதில் எங்களுக்குக் குறையொன்றுமில்லை நாங்கள் எங்களுக்குள்ளேயே இன்று வரை மகிழ்ந்துதான் இருக்கிறோம்.
எத்தனை முயன்றும் என்னிலிருந்து உதிர்க்கவேமுடியவில்லை இந்த நினைவுகளை. சரண் தருணுக்கு இந்த விஷயங்களெல்லாம் பிற்பாடு நினைவுக்கு வந்து துயருற்றுவிடக்கூடாது என்பதை இப்போதெல்லாம் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன்
மகன்கள் தனிமையில் இருந்துவிடக் கூடாது என்பதற்காக வார இறுதி விடுமுறைநாட்களிலும் அதிகாலையில் எழுந்து மதியத்துக்கும் சேர்த்து சமைத்து வைத்துவிட்டு குளித்து வீட்டுவேலைகளை முடித்து அவர்கள் தூங்கி எழுந்திருக்கும் போதிலிருந்து இரவு வரை வேறெந்த அறைக்கும்கூடப் போகாமல் உடனிருப்பதை இன்று வரையிலுமே தொடர்கிறேன்.அவர்கள் கல்யாணம் வரை நான் இதைச்செய்யலாம்.
இதோ வளர்ந்து வலிதாகி இருக்கிறார்கள். இலக்கியப்பரிச்சயமும் இயற்கைமீது அக்கறையும் கொண்ட, அறத்தின் பால் நிற்கும் இளைஞர்கள் இப்போது சரணும் தருணும்.அவர்கள் குடும்பமும் குழந்தைகளும் உறவினர்களுமாகச் கூடி இருந்து வாழ்வதைப்பார்க்கக் கொதி இருக்கிறது எனக்கு.
இந்த நல்லபடத்தை என்னால் பார்க்கமுடியாமல் போனது வருத்தமளிக்கிறது. யாராவது குழந்தைகளை வைத்துக்கொண்டு வேலைக்கும் போகும், உடனிருக்க மனிதர்களற்ற அன்னையைப்பற்றி படம் எடுக்கவிருந்தால் என்னைச்சந்திக்கலாம். மிக உணர்வுபூர்வமான கணணீர் வரவழைக்கும் காட்சிகளுக்கு நான் உத்திரவாதம்.
எங்க வீட்டுக்கு வாங்க mam எப்ப நேரம் கிடைதாலும்,, பேச்சுக்கு இல்ல mam வாங்க ,
என்னுடைய நினைவுகளை கிளர்த்திவிட்டீர்கள். நானுமே இப்படி குழந்தைகளை விட்டுச் சென்றவள்தான்