
அகரமுதல்வனின் வாட்ஸ்அப் நிலைத்தகவலில் ரத்தச்சிவப்பில் ஒரு குட்டி தாலியா மலரைப் பார்த்தேன். அத்தனை வசீகரமாக இருந்தது பார்க்க. color wheel -ல் பச்சைக்கு நேர் எதிரில் இருப்பது சிவப்பு என்பதால் பச்சை இலைகளுக்கிடையில் தெரிந்த அந்த மலர் அழகான அழகாயிருந்தது.
எனக்குத் தாலியாக்கள் மீதும் பிரியம்தான். பள்ளி கல்லூரிக் காலங்களில் வீட்டு வாசலில் காலை நேரத்தில் ஊட்டி ரோஜாவும் தாலியாக்களும் விற்கப்படும். நான் ஊட்டி ரோஜாக்களை விரும்பியதில்லை. அது ஒரு வாரம் வரை வாடாமலிருப்பதும் அடுத்தநாளில் இருந்தே இதழ்களில் விளிம்புகளில் கருப்புப் படிந்துவிடுவதும், கனமாக இருப்பதும் காரணமென்றாலும் முதன்மைக்காரணம் அது மலராமல் கூம்பியே இருப்பதுதான்.எனக்கு மலரென்றால் மலர்ந்திருக்க வேண்டும்.
தாலியா அப்படியல்ல குழந்தையொன்று சிரிப்பதைப் போல முழுக்க மலர்ந்திருக்கும் அதில் பல நிறங்கள் இருந்தாலும் நான் அதிகம் தேர்ந்தெடுப்பது வெள்ளையும் இளஞ்சிவப்பும்தான். மித்ராவின் கல்லூரித்தோழர் அமல்ராஜ் கம்பீரமாக ஒரு சைக்கிளில் பூக்களை விற்றுக்கொண்டு வருவார். கல்லூரிக்குச் செல்ல அரை மணி நேரம் முன்பு அவர் வீடு வீடாகப் பூக்களைச் சைக்கிளின் பின்னிருக்கும் கூடையில் வைத்துக்கொண்டு நிமிர்வுடன் வருவார். ஒருபோதும் அந்தச்செயலில் அவர் வருத்தமுற்றதும் தாழ்வாக உணர்ந்ததும் இல்லை. குளித்து நல்ல உடையணிந்து வரும் அவர் அப்படியே அதே உடையில் பின்னர் கல்லூரிக்கு குறித்த நேரத்தில் வந்துவிடுவார். பிற்பாடு அவர் உடற்பயிற்சி இயக்குனராகியதை அறிந்து கொண்டேன், அவரை, அவரது இளமைக்காலத்தை அவருடன் பொருளாதாரம் படித்த மித்ராவின் தங்கை நினைவு கூறுகிறாள் என்பதை அவர் கற்பனை கூடச் செய்திருக்க மாட்டார். தனக்கான செலவுகளுக்காகப் படிக்கையிலேயே ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்த அவர்மீது எனக்கு அப்போதும் இப்போதும் பெரும் மரியாதை உண்டு.

தாலியாவுக்கு வருகிறேன். அப்படி நான் தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொண்டுதான் கல்லூரிக்குச் செல்வது வழக்கம். அரிதாக டிசம்பர் பூச்சரமும் வைப்பதுண்டு. பின்னல் நல்ல அடர்த்தியாக இடைவரை நீண்டிருக்கும். (அந்த அடர்ந்த நீண்ட கூந்தலைத்தான் சரணுக்கும் தருணுக்குமாகப் பிரித்துக் கொடுத்துவிட்டேன்).மித்ராவுக்கு என்னைக் காட்டிலும் நீண்ட அடர்ந்த பின்னல். இப்போது தாலியாக்களை பின்னலில் வைத்துக்கொள்ளும் பெண்களைப் பார்ப்பதில்லை.ஏன் பூச்சரம் வைத்துக் கொள்பவர்களும் அதிகமில்லை.
அந்தப்புகைப்படத்தில் தாலியா அப்படி கொள்ளை அழகாக இருந்தது. அநேகமாக அகரமுதல்வன் அதை ஒரு மலை வாசஸ்தலத்தில் எடுத்திருக்கக்கூடும் ஏனெனில் உடனிருந்த புகைப்படத்தில் ஒரு ஆப்பிரிக்கன் லில்லியும் இருந்தது. இவையிரண்டுமே கடல்மட்டத்துக்கு 1000 அடி மேலே இருக்கும் பகுதிகளில் மட்டுமே செழிப்பாக வளரும்.
தாலியாக்கள் வெகுசுவாரஸ்யமான வரலாற்றைக் கொண்ட மலர்கள்.
மெக்ஸிகோவை பூர்வீகமாகக் கொண்ட இவை சூரியகாந்தியின் குடும்பமான அஸ்டரேசியைச் சேர்ந்தவை. தாலியா பேரினத்தில் சுமார் 50 சிற்றினங்களும் ஆயிரக்கணக்கான நிறங்களில் மலர்களும் இருக்கின்றன.
தாலியாக்கள் 14-லிலிருந்து 16-ம் நூற்றாண்டுவரை மீசோஅமெரிக்கப் பகுதியில் பெரும்பான்மையாக இருந்த பழங்குடி இனக்குழுக்களின் தொகுப்பான ஆஸ்டெக்குகளின் தாவரமாக மட்டுமே இருந்தது. ஸ்பானிஷ் படையெடுப்பின் பின்னரே தாலியாக்கள் ஐரோப்பாவிற்கு அறிமுகமாயின.

1525-ல் மெக்ஸிகோவிற்கு வந்த ஸ்பேனியர்கள் இந்த அழகிய மலரைப் பார்த்தார்கள் 1570-களில் மெக்ஸிகோவிற்கு ஸ்பெயினின் இரண்டாம் பிலிப் மன்னரால் அனுப்பப்பட்ட அவரது தனிப்பட்ட மருத்துவர் ஃப்ரான்சிஸ்கோதான் முதன் முதலாகத் தாலியாக்களை எழுத்தில் விவரித்தவர். மன்னரால் அந்த ப்பிரதேசத்தின் இயற்கைப் பொருட்களைக் குறித்து விரிவாக அறிந்துகொண்டு வரும்படி பிரான்சிஸ்கோ ஆணையிடப்பட்டிருந்தார். அச்சமயத்தில் தாலியாவின் வகைகளில் சிலவற்றின் கிழங்குகளைப் பழங்குடியினர் உணவாகப் பயன்படுத்துவதையும் ஃப்ரான்சிஸ்கோ ஆவணபப்டுதினார்.
தண்டுகள் உள்ளே காலியாக இருப்பதைக்குறிக்கும் “water pipe”, “water pipe flower”, “hollow stem flower”, “cane flower” போன்ற பெயர்களில் தாலியாக்கள் அப்போது அஸ்டெக்குகளின் மொழியில் அழைக்கப்பட்டன. 7 வருடங்கள் மெக்சிகோவின் தாவரங்களை அறிந்து ஆராய்ந்து முடிவுகளை நான்கு தொகுதிகளாகப் பிரசுரித்த ஃப்ரான்சிஸ் மிக அழகிய சித்திரங்களையும் கைப்பட வரைந்திருந்தார்.
Nova Plantarum, Animalium et Mineralium Mexicanorum Historia, என்னும் அந்த நூல் 1578-ல் வெளியானது. அந்த நூலில் தாலியாவின் இரு சிற்றினங்களை பிரான்சிஸ்கோ விவரித்திருந்தார்.( Dahlia pinnata & Dahlia imperialis)1615-ல் அவை லத்தீன மொழியாக்கம் செய்யபட்டு இரு தொகுதிகளாக வெளியானது.
1787-ல் இரத்தச்சிவப்புச் சாயம் அளிக்கும் cochineal பூச்சிகளைத் திருடிவருவதற்காக மெக்சிகோவிற்கு அனுப்பபட்ட ஃப்ரெஞ்ச் தாவரவியலாளர் நிக்கோலஸ் (Nicolas-Joseph Thiéry de Menonville) இந்தப் பிரகாசமான மலர்களைக் குறித்தும் ஆவணப்படுத்தினார். நிகோலஸ் அவருக்குச் சொல்லி அனுபியப்டி cochineal பூச்சிகளி திருடவில்லை மாறாக அவற்றை மெக்ஸிகோ பழங்குடியினரிடமிருந்து விலைக்கு வாங்கி அவை வளரும் சப்பாத்திக்கள்ளி வகைகளைத் தாவரவியல் பூங்காவில் வளர்த்து அந்தபூச்சிகளை பெருகச்செய்து அதற்கான பாராட்டையும் பெற்றார். இன்றும் அந்தப்பூச்சிகள் அந்த சப்பாதிகள்ளிகளில் தன் வாழ்கின்றன. இவற்றினல் தான் அடர்சிவப்பு நிறம் “coccineus,” எனப்பெயர் பெற்றது. தாவரங்களின அறிவியல் பெயர்களில் காக்சினியா என்று இருப்பவைகளின் மலர்கள் எல்லாம் குருதிச்சிவப்பில் இருப்பதைப் பார்கக்லாம். அகரமுதல்வன் எடுத்த புகைப்படத்தில் இருப்பது Dahlia coccinea மலர்தான். ரத்தச்சிவப்பு தெட்சி மலரின் அறிவியல் பெயர் இக்ஸோரா காக்சீனியா.
பின்னர் பல வருடங்கள் தாலியாவின் நறுக்கப்பட்ட தண்டுகளும் விதைகளும் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு மெக்ஸிகோவிலிருந்து அனுப்பப்பட்டன. பின்னர் படிப்படியாக உலகநாடுகள் அனைத்திற்கும் தாலியா அறிமுகமானது. ஆயிரக்கணக்கான கலப்பின வகைகளும் உருவாகின.
தாலியா என்னும் இதன் பேரினப் பெயரிலேயே குழப்பம் நிலவியது. தாவர வகைப்பாட்டியலை நிறுவியவரான லின்னேயஸ் அவரின் மாணவரான Anders Dahl, என்பவரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியா என்னும் பேரினத்தை வைத்தார் என பரவலாக நம்பப்பட்டது. ஆனால் தாலியா ஐரோப்பாவுக்கு அறிமுகமான 1789-க்கு 11 வருடங்கள் முன்பே லின்னேயஸ் இறந்துவிட்டார். மேட்ரிட் தாவரவியல் பூங்காவின் இயக்குனரான Abbe Cavanilles, தான் Anders Dahl யின் பெயரைச் சிறப்பிக்கும் பொருட்டு தாலியாவுக்கு வைத்தார் என்பது பிற்பாடு அறியபட்டது.
1805-ல் ஜெர்மானிய தாவரவியலாளர் கார்ல் (Carl Ludwig Willdenow, asserting) தாலியாவை ஜார்ஜினா (Georgina) என்று பெயர் மாற்றம் செய்தார். 1810-ல் எழுத்துபூர்வமாக இம்மலர் மீண்டும் தாலியா எனக்குறிப்பட்டது.
கடல் மட்டதுக்கு மேல் 1,500 – 3,700 m உயரதில் செழித்து வளரும் தாலியாக்கள் பனிப்பொழிவற்ற உலகின் எல்லா பாகங்களிலும் வளருகின்றன.
தாலியாக்கள் பல வருடம் மலரளிக்கும் பெரினியல் வகையைச் சேர்ந்தவை. அவற்றின் மலர் எனச் சொல்லப்படுவது உண்மையில் மலர்த்தலை என்னும் மஞ்சரிதான். மலர்த்தலைகள் பிரகாசமான வண்ணங்களில் இருக்கும் பெரும்பாலும் தாலியாக்களில் மணம் இருக்காது. மகரந்தச்சேர்க்கைக்கு பூச்சிகளைக் கவர பிரகாசமான அதன் வண்ணங்களே போதுமென்பதால் நறுமணம் இருப்பதில்லை.

இங்கிலந்தின் புகழ்பெற்ற ராயல் ஹார்டிகல்சர் அமைப்பு 1969-ல் சர்வதேச தாலியா பெயர்களின் பதிவேட்டை உருவாக்கியது இந்தp பதிவேடு ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது.(The International Register of Dahlia Names) தாலியாக்களின் உருவாக்கத்திலும் அவற்றின் உலகளாவிய பரவலிலும் மிக முக்கியப்பங்காற்றியவ்ராக நியூயார்க்கின் ஜார்ஜ் தோர் பர்ன் (George C. Thorburn) அறியபப்டுகிறார்.
1963-ல் தாலியா மெக்சிகோவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது.
ஒற்றை அடுக்கு, பல அடுக்கு , மிகப்பெரியவை, மிகக்குட்டியான மினி வகைகள், நாடாபோன்ற இதழ்கொண்டவை, வெளியடுக்கு பெரிதாகவும் உள்ளடக்கு சிறியதாகவும் இருப்பவை பந்துபோன்ற பொம்பன் (Pompon) வகைகள் என இப்போது சுமார் 5700 வகை தாலியாக்கள் நீலத்தைத்தவிர மற்ற எல்லா நிறங்களிலும், நிறக்கலவைகளிலும் இருக்கின்றன.

எடின்பர்க் தோட்டக்கலைதுறை1846- ல் நீல நிற தாலியாக்களை உருவாக்குபவர்களுக்கு 2000 பவுண்டு பரிசு அறிவித்தது.அது இன்று வரை உருவாக்கபடவில்லை.
அதன் காரணம் தாவரவியலாளரல்லாதோருக்கு புரிந்துகொள்ளக் கடினமென்றாலும் எளிமையாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
நீல நிறம் உருவாக ஆந்தோசையானின் என்னும் நிறமி தேவை. தாலியாக்களில் ஆந்தோசையானின்கள் உள்ளன எனினும் தூய நீல நிறம் உருவாக delphinidin என்னும் ஆந்தோசையானின் ஒரு வகை நிறமியில் 6 ஹைட்ராக்சைல் தொகுப்புகள் இருந்தாக வேண்டும் ஆனால் இன்று வரையிலும் தாலியாக்களில் 5 ஹைட்ராக்சைல் தொகுப்புக்களே உருவாகி இருக்கின்றன.
பொதுவாகவே இயற்கையில் நீல நிற மலர்கள் மிக அரியவை . நூற்றாண்டுகளாகth தாவரப் பெருக்கவியலாளர்கள் முயற்சித்தும் இன்று வரை ட்யூலிப்களில் நீல நிற மலர்களைக் கொண்டு வர முடியவில்லை. இப்போது இருப்பவை எல்லாம் almost blue என்னும் வகையில் வருபவைதான். இயற்கையாக நீல நிறத்தில் ஹைட்ராஞ்சியா, கார்ன் மலர்கள், இமாலய பாப்பிகள் மற்றும் டெல்பீனியம் போன்ற ஒருசிலமலர்களே இருக்கின்றன.

பல நூற்றாண்டுகளைக் கடந்து வந்த தாலியா உலகின் மிக விரும்பப்படும் தோட்டமலராக இருக்கிறது.
