சமீபத்தில் ஒரு நிகழ்வுக்காக வெளியூர் சென்றிருந்தேன், விஷ்ணுபுரம் அமைப்பல்லாத நிகழ்வுகளின் நேரமேலாண்மை குறித்து  முன்பே அறிந்திருப்பதால் கையோடு லக்ஷ்மி சரவணகுமாரின் பன்றிவேட்டையை எடுத்துச்சென்றிருந்தேன். யூகித்தபடியே குறித்த நேரத்துக்கு 2 மணி நேரம் தாண்டித்தான் விழா தொடங்கியது.

அதுவரை இசைக்கக்சேரி நடந்தது. நான் பன்றிவேட்டையை  பொறுமையாக அடிக்கோடிட்டு வாசித்து முடித்துப் பன்றி வேட்டை என்னும் தலைப்புக்குள் லக்‌ஷ்மி சரவணகுமார் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதும் பாடல்கள் இசைக்கப்பட்டன. 2 மணிநேரத்துக்குப்பின்னர்  அறிவிப்பாளர் வந்து   விழா `குறித்த நேரத்துக்கு` துவங்கவிருப்பதால் அரங்கிற்கு வெளியே இருப்பவர்கள் உள்ளே வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நான் திகைத்து `சீரியஸ்லி`? என்றது  `மன் கி பாத்` என்பதால் அவருக்குக் கேட்கவில்லை.

விழா துவங்கியது. எனக்கு வலது புறம் அமர்ந்திருந்த ஒரு பெண்மணியிடம் நல்ல அகடமிக் வாசனை வீசியது. 20 ஆண்டுகால பழக்கத்தில் அந்த வாசனை எனக்கு அத்துப்படி. அவர் என்னிடம் பன்றி வேட்டையைச் சுட்டிக்காட்டி“நீங்க இந்தப் புத்தகத்துக்குத்தான் விருது வாங்கறீங்களா?“ என்று கேட்டார். “இல்லைங்க என் நண்பரின் புத்தகம் இது. நான் எழுத்தாளர் இல்லை கட்டுரையாளர்தான் என் கட்டுரைத்தொகுப்புக்குத்தான் விருது“ என்றேன். “ தமிழ்த்துறையா ஆங்கிலத்துறையா?“ என்றார். “இரண்டும் இல்லை தாவாவியல் துறை“ என்றேன். குழப்பமானார்.

“பின்னே உங்க பேருக்கு முன்னாடி எழுத்தாளர்னு பத்திரிக்கையில் போட்ருக்காங்களே?“ என்றார். அவரை நன்றாக நிமிர்ந்து பார்த்தேன். ஆய்வு மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் தலைக்குக்குளித்து ஜிமிக்கியும் மல்லிகைப்பூவுமாக வருகையில் அவர்களைப்பார்க்கும் பெண் நெறியாளர்களின் (அந்தப்பட்டியலில் லோகமாதேவி இல்லை) கண்களில் தெரியும் அதே உக்கிரம் இருந்தது. அவரை மலையிறக்குவதற்காக “தவறுதலாபோட்டிருப்பாங்கம்மா“ என்றேன். அந்த அம்மா விகுதியும் அவரை எரிச்சலூட்டியதை அவரது உடல்மொழியிலிருந்து அறிந்தேன். பணிஓய்வு பெற்று 20 வருடமானவராதலால் அப்படி அழைக்கும் உரிமையை நானாக எடுத்துக்கொண்டிருந்தேன். 

அமர்ந்திருந்த நாற்காலி மிகச்சிறியதாக,  அசெளகரியமாக அமரும்பொருட்டு  பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது  என்பதால் முதுகு விண் விண் என்று தெறித்தது. எனக்கே அப்படி என்றால் விழாநாயகரும்  பேருடல்கொண்டவருமான …… சரி வேண்டாம் சாமி கண்ணைக்குத்தும்.

எனவே கையில் இருந்த பன்றிவேட்டையையும் போனையும் கட்டிப்பிடித்துக்கொண்டு  அமர்ந்திருந்தேன். “அப்ப இது என்னபுக்கு“ என்று மீண்டும் அவர் கேட்டதும் “இது என் நண்பர் எழுதினது“ என்றேன். “கொடுங்க“ என்றவர் நான் அதைக்கொடுக்க யத்தனிப்பதற்குள் கையிலிருந்து தட்டிப்பறித்தார். என் மனம் தின்னப்பழம் கொண்டு தருவானுக்குத் தாவியது.

அட்டையைத் தடவிப்பார்த்தவர் “ஓ இதுவா நல்லாருக்கும் நான் 50 வருஷம் முன்னாடியே படிச்சுருக்கேன்  மறு பிரசுரமா?“என்றார். நான் “இல்லைங்க இது வர வெள்ளிக்கிழமைதான் வெளியாகுது;; என்றேன். “அப்ப உங்களுக்கு மட்டும் எப்படி கிடைச்சுது?“ என்றார். “எழுதினவர்  என் நண்பரென்பதால் எனக்கு முன்னாடியே அனுப்பி இருக்காரு“ என்றேன். மீண்டும் பின்னட்டையை தொட்டுத்தடவியவர் “இல்லை இதை நான் வாசிச்சுருக்கேன் அதே புக்தான்“ என்றார்.

அட்டையை வைத்து நூலைஎடைபோடாதே  என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டிருப்பதை சார்ந்திருந்த தமிழ்த்துறையினால் அவருக்கு ஒருவேளை தெரிந்துகொண்டிருக்க வாய்ப்பில்லை என்பதால் என் கோபத்தை காட்டிக்கொள்ளாமல் “இல்லைங்க இது சினிமாவா வரப்போற கதை அவர் சினிமாவில் இருக்காரு நிச்சயமா இதை நீங்க படிச்சிருக்க முடியாது“ என்றேன்.அகங்காரம் சீண்டப்பட்டவராக“இல்லை வாசிச்சுருக்கேன் ஒரு காட்டில் நடக்கற  பன்னி வேட்டையைப்பத்தித்தான கதை?“ என்றார்.

என்ன சாமர்த்தியம்!! பன்னி வேட்டை காட்டில் நடக்காமல் மும்பை தாஜ் ஹோட்டலிலா நடக்கும்?. சரிங்கம்மா என்று மட்டும் சொல்லிவிட்டு மறக்காமல் புத்தகத்தைத் திரும்ப வாங்கிக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். 

இடதுபக்கம் வந்தமர்ந்த ஒரு பெண் என்னைப்பார்த்து புன்னகைத்து “மேடம் நீங்க——– கல்லூரியின் கரஸ்பான்டென்டா? என்றார். அச்சச்சோ முகத்தில் அத்தனை கடுமையா தெரிகிறது என்று துணுக்குற்று முகத்தை சாந்தமாக்கிக்கொண்டு “இல்லைங்க நான் வெறும் பேராசிரியர்தான்“ என்றேன்.

வலது பக்க அம்மாள் மேடையின் அச்சுபிச்சு நகைச்சுவைக்கெல்லாம் மகிழ்ந்து சிரித்துக்கொண்டும் கூடக்கூட அங்கிருந்தே மேடையில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டுமிருந்தார்.

 எனக்கு மூச்சுலகில்  தேவனிடம் கேட்கவென்று பல கோரிக்கைகள் இருக்கின்றன. அதில் இன்னார் இன்னாராக இன்னாருக்கு ஆகவேண்டும்  என்னும் மறுபிறவிக்கான கோரிக்கைகள் தான் பிரதானமாக இருக்கும். எனக்குத்  தனிப்பட்டதாக- எங்கேனும் ஒரு மலைஉச்சியில் நீலமாக மலர்களைச் சொரிந்துகொண்டிருக்கும் ஜகரண்டா மரமாக,  தப்பிப்போனால் கணேஷ்பெரியசாமிக்கு மகளாகப் பிறக்கவேண்டும் என்னும் இரண்டுகோரிக்கைகள் தான் இருக்கிறது,

எனக்குத்தெரிந்த ஒருவர் அடுத்த பிறவியில் பின் வீட்டில் இருக்கும், தன் கணவரைச் சட்டைக்காலரோடு கழுத்தை சுவற்றோடு சேர்த்துப்பிடித்து அடி சாத்தும் ஒரு பெண்ணின் கணவராகி விடவேண்டும் என்னும் விருப்பம் என் மன்றாட்டுகளில் அடிக்கடி இடம்பெறுமொன்று.

என்னையே பூமர் என்று சொல்லும் சரணையும் தருணையும்  அடுத்த பிறவியில்  எப்படியாவது இந்த வலதுபக்க அம்மாளின் மகனாக்கிவிடுங்கள் தேவனே என்று  கண்ணீருடன் பிரார்த்தித்துக்கொண்டேன்,