லோகமாதேவியின் பதிவுகள்

Month: February 2021

திருஷ்யம்- 2

2013 ல் வெளியான திருஷ்யம் படத்தின் அடுத்த பாகமான திருஷ்யம் -2 அதே ஜீத்து ஜோஸப் இயக்கத்தில் ஆசிர்வாத் சினிமாவின்  அந்தோனி பெரும்பாவூர் தயாரிப்பில்  பிப்ரவரி 19 ,2021’ல் அமேஸான் ப்ரைமில் வெளியானது.சதீஷ் குருப் ஒளி இயக்கம்.

முதல் பாகம் எடுக்கப்பட்ட அதே தொடுபுழாவில் பெரும்பாலான காட்சிகளும் , ஒருசில காட்சிகள் மட்டும் கொச்சியிலுமாக மொத்தம் 46 நாட்களில் படப்பிடிப்பு  முடிக்கப்பட்டது.

முதல் திருஷ்யத்தின் அதே மோகன்லால், மீனா, அன்சிபா ஹாஸன் மற்றும் எஸ்தர் அனில் கூட்டணி இதிலும் . 6 வருடங்களில், கொஞ்சம் வளர்ந்திருக்கும் மகள்களும் மாறியிருக்கும் வீட்டின் கட்டமைப்புமாக இரண்டாம் பாகத்திற்கு தேவையான மாற்றங்கள்இயல்பாக  அமைந்திருக்கிறது..

குடும்பத்தை காப்பாற்ற எந்த எல்லைக்கும், அது கொலையானாலும், கொலையை தடயமின்றி மறைப்பதானாலும் தயங்காத குடும்பத்தலைவனும் எந்த அச்சுறுத்தலும் மிரட்டலும் சித்திரவதையும் வந்தாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் குடும்பத்தினருமாக பிரமாதமான வெற்றிப்படமாக அமைந்து விட்டிருந்தது முதல் பாகம்.  மற்ற எதைக்காட்டிலும் குடும்ப நலனெனும் அறத்தில் விடாப்பிடியாக நிற்கும் தந்தையாக, கணவனாக மோகன்லாலெனும் அசல் கலைஞன் பிரமாதாப்படுத்தியிருந்த படமது.

மிக அழகாக, முழுமையாக முடிந்த , இனி  இரண்டாம் பாகமாக தொடர எந்த சாத்தியங்களும் இன்றி கச்சிதமாக, நேர்த்தியாக முடிக்கப்பட்ட ஒரு படத்தை, மிக சாமார்த்தியமாக,   புத்திசாலித்தனமாக, பிரமாதமாக இரண்டாம் பாகமாக எடுத்து அதை வெற்றிப்ப்படமாகவும் கொடுத்திருக்கிறார்கள்.

முதல் படத்திற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத,போலீஸாரால் துரத்தப்படும்   குறறவாளி ஜோஸ், ஓடிவருவதும், பின்னர் பிடிபடுவதும், பிடிபடும் முன்பு காவல் நிலையத்தில் சவத்தை புதைத்துவிட்டு திரும்பும், ஜார்ஜ்குட்டியை  ஒரு சிறிய இடைவெளி வழியாக அவன் பார்ப்பதுமாக பரபரப்பான துவக்கக்காட்சிகள்.

துயரமான சம்பவங்கள் நடந்து முடிந்து 6 வருடங்களாகியும்  அந்தக்குடும்பத்தினர் அந்த நினைவுகளிலிருந்து மீளமுடியாமலிருக்கின்றனர். எனினும் காலப்போக்கில் மெல்ல மெல்ல தேறிக்கொண்டும் வருகின்றனர். 12 ல் படிக்கும் இ்ளைய மகளும் படிப்பை முடித்து வீட்டில் திருமணத்திற்கு காத்திருக்கும் மூத்தவளும், சினிமாபித்து பிடித்திருக்கும் ஜார்ஜ் குட்டி திரையரங்கு உரிமையாளராகி இருப்பதும் ,அதன்பொருட்டு வாங்கிய கடனில் மீனாவுக்கு அதிருப்தி இருப்பதுமாக கதை சாதரணமாக நகருகின்றது. ஆனால்  டீக்கடையிலும் ஆட்டோ ஸ்டாண்டிலும் ஜார்ஜ் குட்டிதான் அக்கொலையை செய்திருக்ககூடுமென்றும், அவர் மகளும் செத்துப்போன அந்த பையனும் காதலித்து, நெருக்கமாக வீட்டிலிருக்கையில்  ஜார்ஜ்குட்டி பார்த்து பின்னர் கொலை நடந்ததாகவும் அரசல் புரசலாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள்

பழைய நினைவுகளினால் அஞ்சுவுக்கு அவ்வப்போது வலிப்பு வருகின்றது , வருந்தும் மீனா இரண்டு வருடங்களுக்கு முன்பாக பக்கத்தில் குடிவந்திருக்கும் சரிதாவுடன் மட்டும் நட்புடன்  கவலைகளை பகிர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கிறாள். முன்பு போல ஜார்ஜ்குட்டி நல்லவனென்று இப்போது ஊருக்குள் பேச்சில்லாததற்கு  பிறர் கண்களை உறுத்தும் அவர்களின் செல்வச்செழிப்பும் ஒரு காரணமாகிவிட்டிருக்கிறது.

வினய்சந்திரன் என்னும் ஒரு பெரிய தயாரிப்பாளரை அவ்வப்போது சந்தித்து, ஜார்ஜ்குட்டி,  தான் எடுக்கவிருக்கும் ஒரு திரைப்படம் குறித்தும், அதன் திரைக்கதையை குறித்தும் அடிக்கடி பேசிக்கொண்டிருக்கிறார்.அதை மீனா விரும்பாவிட்டாலும் தொடர்ந்து செய்கிறார்

6 வருடங்களாகியும், அந்த கேஸை முடிக்க முடியாமலானதாலும், செத்துப்போனது காவல் உயரதிகாரியின் மகனென்பதாலும் போலிஸும் ரகசியமாக  ஜார்ஜ் குட்டியை கண்காணித்துக்கொண்டேதான் இருக்கின்றது.

மகனின் உடல் பாகங்கள் கிடைத்தாலே ஆத்ம சாந்திக்கான பரிகார பூஜைகள் செய்ய முடியுமென்பதால் மீண்டும் ஜார்ஜை  அவனது தந்தை தேடி வருகிறார், மகளின் கல்யாணமுயற்சிகளுக்கு தடையாக ஊருக்குள் அவளைப்பற்றி உலவும் கட்டு்க்கதைகள் இருப்பதில்  மீனா மனமொடிந்திருக்கிறார், சரியாக இதே வேளையில் 6 வருடங்களுக்கு முன்பு கைதாகி சிறைத்தண்டனை அனுபவித்துவந்த  முதற்காட்சியின் ஜோஸ்  விடுதலையாவதுமாக கதை வேகமெடுக்கிறது.

மிக சிறப்பான இந்த அடிப்படை விஷயங்ளைக்கொண்டு மேலே கதையை பின்னிப்பின்னி சாமார்த்தியமாகவும் எந்த தொய்வுமின்றியும் கொண்டு செல்கிறார்கள்.

ஜோஸ் செய்த கொலையால் அவன் குடும்பவாழ்வு சிதைந்திருப்பது, அதற்கு பிழையீடாக அவனுக்கு பணம் தேவைப்படுவது, செத்துபோனவனின் உடல் இருக்கும்  இடம் குறித்து துப்புக்கொடுத்தால் பெருந்தொகை பரிசாக காவல்துறை அளிக்கும் என்றூ தெரிந்துகொண்ட ஜோஸ் அவனுக்கு தெரிந்த உண்மையை போலீஸில் சொல்ல முடிவெடுப்பதுமாக  இரண்டாம் பாதி பரபரப்பாக நகருகின்றது

ஜோஸ் உண்மையை சொன்னதும் போலீஸ் ஸ்டேஷன் தோண்டப்படுகிறது, DNA பரிசோதனைகளுக்குபின் ஜார்ஜ் குட்டியை இந்தமுறை எப்படியும்  பிடித்தே ஆகவேண்டுமென போலீஸ் முனைகிறது, குடும்பத்தை மீண்டும் காவலில் எடுது விசாரிக்கிறார்கள். மனைவியும் மகள்களும் அச்சத்தில் ஜார்ஜ்குட்டியின் திட்டங்களை சிதைக்கிறார்கள். படம்  பல திடீர் திருப்பங்களுடன் செல்கின்றது

வெளிப்படும் சிலரின் சுயரூபங்கள், போலீஸ் விரித்திருந்த கண்காணா வலையில் ஜார்ஜ்குட்டியின் மனைவியும் மகள்களும் விழுந்துவிடுவது என எதிர்பாரா இத்திருப்பங்களால் நாமும் திகைத்துப்போகிறொம்

 புதைத்த உடல் திரும்ப கிடைத்ததா?  ஜார்ஜ் குட்டியின் குற்றம் நிரூபிக்கப்பட்டதா? என்னவானது மீதிக்கதை என்று அவசியம் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். முதற்பாகத்தின் மிகச்சரியான தொடர்ச்சி என்பதால் அதைப்பார்க்காமல் இந்த பாகத்தைப் பார்கையில் கதை புரியாமலாகும் சாத்தியமிருக்கிறது. எனவே பார்க்காதவர்கள் இரண்டையும் சேர்த்துப்பார்ப்பது மிக நல்ல திரையனுபவமாக இருக்கும்

ஆர்ட் டைரக்டர் ’ராஜீவ் கோவிலகத்து’ மிகப்பிரமாதமாக  முன்பாகத்தின் அதே  தெரு, அதே டீக்கடை, போலீஸ் ஸ்டேஷன், கேபிள் டிவி அலுவலகெமென்று, அச்சுப்பிசகாமல் மீண்டும் செட் போட்டதற்கும், கோவிட் பரிந்துரைகளுக்கென ஒரு மேற்பார்வைக்குழுவொன்றை அமைத்து அதன் தலைமையில் மிகக்கட்டுப்பாட்டுடனும் தேவையான எல்லா பாதுகாப்புடனும் 56 நாட்களுக்கு கணக்கிட்ட முழுப்படப்பிடிப்பை  46 நாட்களிலேயே முடித்ததற்கும்,  தொடர்ந்து திருஷ்யம் 3 எடுக்கும் அளவுக்கு இந்த பாகத்தை வெற்றிகரமாக கொடுத்திரு்ப்பதற்கும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்

திருஷ்யம் 2 தெலுங்கில் வெங்கடேஷும், ஹிந்தியில் அஜய்தேவகனும் நடிக்க  தயாராகிக்கொண்டிருக்கிறது. தமிழில் கமல் சம்மதிக்க காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கேள்வி.

திரைக்கதை நாயகனின் பார்வையில் நகர்வதாலும், அந்தகொலையின் நியாயம் நமக்கு விளக்கப்பட்டிருப்பதாலும் பார்வையாளர்களாகிய  நாமும் ஜார்ஜ்குட்டி செய்த கொலை மறைக்கப்படவேண்டுமெனவே விரும்புவது உறுத்தலான விஷயமாக இருக்கிறது  உலக நியதிக்கெதிரானதல்லவா இது? மகனை இழந்த எதிர்தரப்பின் நியாயமென்று ஒன்று இருக்கிறதே!ஒருவேளை இனி வரப்போகும் திருஷ்யம்- 3 ல் இந்த உறுத்தலுக்கும் தீர்வு இருக்குமாயிருக்கும்

சக்ரா,

சக்ரா

M.S ஆனந்தனின் (அறிமுக) இயக்கம் மற்றும் திரைக்கதையில் 2021 பிரவரி 19 அன்று உலகெங்கிலும் பலமொழிகளில் வெளியான தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படம்   ‘சக்ரா’. விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கெஸான்ட்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில், தயாரிப்பு விஷால்

ரோபோ ஷங்கர் , நீலிமா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, வெகுகாலத்துக்கு பிறகு கே ஆர் விஜயாம்மா ஆகியோரும் இருக்கிறார்கள்.

2018ல் வெளியான விஷாலின் இரும்புத்திரை திரைப்படத்தின்  (ஒருவிதத்தில் ) தொடர்ச்சிதான் சக்ராவாம்..

சுதந்திர தினத்தன்று நகரில் தொடர்ந்து 50 வீடுகளில் நடக்கும் தொடர்கொள்ளைகள் என்னும் ஒரே புள்ளியை ஜவ்வாக இழுத்து முழுநீள திரைப்படமாக்கி  1.30 மணி நேரத்திற்கு பாடாய்படுத்தி எடுக்கிறார்கள்

 ஆச்சரயமாக இருக்கின்றது, உலகசினிமா சென்று கொண்டிருக்கும் பாதையைக்குறித்தும்,  வெள்ளித்திரை என்னும் சக்திவாய்ந்த ஊடகத்தில் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்றும் கொஞ்சமும் அறிதல் இல்லாமல், சினிமாவிற்கான அடிப்படை சிரத்தைகூட இல்லாமல்  இந்தக்காலத்திலும் இத்தனை போட்டி நிறைந்த தொழிலில் சக்ராவை எடுத்திருப்பதை நினைக்கையில்.

கதை (?) இதுதான். முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் 49 வீடுகளில் சுதந்திர தினத்தன்று  பெரும்பாலான காவலதிகாரிகள் முக்கியஸ்தர்களுடன் கொடியேற்றும் விழாக்களுக்கு பாதுகாப்புப்பணிக்கு சென்றிருக்கையில் தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். 50 ஆவது வீடு ராணுவத்தில் பணியாற்றும் நாயகன் விஷாலின் பாட்டி வீடென்பதை நாயகனி்ன் காதலியும் காவலதிகாரியுமான ஷ்ரத்தா தெரிந்து கொள்கிறார்.

கொள்ளை போனவற்றில் ராணுவதிகாரியாக இருந்து இறந்த, விஷாலின் அப்பா வாங்கிய அசோக சக்ரா பதக்கமும் இருந்ததால் அதை எப்படியும் மீட்டெடுக்க உறுதிபூண்ட நாயகன் தன் காதலியின்  துறையான காவல்துறையில் இஷ்டம் போல புகுந்து விளையாடி குற்றவாளிகளை, அது சைபர் க்ரைமென்பதால் கையும் கம்யூட்டருமாக பிடிக்கிறார்.

துவக்கத்தில் கொள்ளை நடந்த ஒவ்வொரு வீடாக சாவகாசமாக  காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கொட்டாவியுடன் அடுத்து கதை எப்போது நகரும் என்று காத்திருக்கையில் நாயகன் வந்து விசாரிக்கிறேன் பேர்வழி என்று காலொடிந்த நத்தையின் வேகத்தில் படத்தை நகர்த்துகிறார். இந்த கதைக்கு இரண்டு நாயகிகள் வேறு.

ஷ்ரத்தா கொஞ்சம் நல்லபெயருடன் முன்னுக்கு வந்துகொண்டிருந்தார், சக்ரா அவருக்கு திருஷ்டிப்படம்

ப்ளம்பர், டயல் ஃபார் ஹெல்ப், விதவை மனைவி, வேலைக்காரப்பெண், எப்போதோ இறந்துபோனவரின் அலைபேசி,  கம்ப்யூட்டரில் சேமித்த தகவல்களை திருடி திருட்டு, ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே குறி, விஷாலுக்கு விடுக்கப்படும் மர்ம தொலைபேசி சவால் என்று கதை இலக்கில்லாமல் நூலறுந்த, வாலறுந்த பட்டமாக எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது.

விசாரணையின் முக்கிய பாயிண்டுகளை விஷால் போர்டிலெல்லாம் எழுதி துப்பறிகிறார். கடைசியில் அந்த முக்கிய குற்றவாளி அப்படியொன்றும் திறமையான கம்ப்யூட்டர் திருட்டையெலலாம் செய்யவில்லை சாதா   திருட்டுதான் செய்கிறார்.

அப்பாவின் பதக்கத்திற்கும் விஷாலுக்குமான உணர்வுபூர்வமான பந்தமேதும் சொல்லப்படவே இல்லை. வில்லியின் ஃப்ளாஷ் பேக் கதை எல்லாம் மனதில் ஒட்டவேயில்லை. அம்மாவை  குடிகார அப்பா கொலைசெய்யும், சித்தி கொடுமை செய்யும் அரதப்பழசான முன்கதையெல்லாம் எரிச்சலூட்டுகிறது. கட்டக்கடைசியிலாவது எதாவது உருப்படியாக காட்டுவார்களென்றால் அதுவும் இல்லை. முடிவல்ல தொடக்கமென்று வில்லி குரலில் சொல்லி பயப்படுத்துகிறார்கள் , இனியும் தொடருமா என்று கலக்கமாக இருக்கிறது.

உயரிய ராணுவ விருதான அசோக சக்கரா விருதினை மையமாக கொண்டே சக்ரா எனதலைப்பாம்  சக்கரமென்றே வைத்திருக்கலாம் ,  கதை சுத்திச்சுத்தி   வந்துகொண்டே இருக்கிறது.

ஒரே சமயத்தில் இந்தப்படம்  ஆங்கிலம் உள்ளிட்ட இன்னும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பது, இந்தபடத்திற்கான காப்பி ரைட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால். விஷால் வாழ்வா சாவா என்னுமளவிற்கு பிரச்சனைகளை சந்தித்து, கோர்ட் கேஸ் என்று அலைந்து நஷ்டயீடு கொடுத்ததெல்லாம் வியப்பளிக்கிறது. இத்தனை துயரப்பின்னணிகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதியில்லாத,  திரைக்கதையாக்கம், திரையாக்கம், இயக்கம் மற்றும் நடிப்பு

மனதில் நிற்காவிட்டால் போகிறது காதில் கேட்பதுபோலக்கூட பாடல்கள் இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவா இசை? என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒளி இயக்கமும் கதைக்களங்களும் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ரோபோ ஷங்கர் போன ஜன்ம பழசான  நகைச்சுவையைத்தான் செய்கிறார்.  சிரிப்புக்கு பதிலாக கோபம் வருகிறது. வசனங்களும் இரும்புத்திரையிலி்ருந்து எடுத்து தூசு தட்டப்பட்டவைதான் புதிதாக ஒன்றுமே இல்லை. நாயகிக்கு வேலையே இல்லை  லாஜிக் என்பதே திரைக்கதையில் எங்கும் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. சிக்கலான காவல்துறை விவகாரமொன்றை, பெண்காவலதிகாரியின் ராணுவ காதலரே கடைசி வரை கையாளுகிறார்.

தேவையில்லாத காட்சிகளும் வீண்வசனங்களுமாய் நிறைந்திருக்கிறது படம்முழுக்கவே. அந்த ATM  விஷயமெல்லாம் திணி திணியென்று திணிக்கப்பட்டது. வில்லியைக்குறித்தும் அவரது கம்ப்யூட்டர் திருட்டுக்களைக் குறித்தும் பலமாக பில்டப் கொடுத்து விளக்கிக்கொண்டே இருக்கும் முதல்பாதி ரோதனையென்றால் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லமால் மொக்கை வாய்சவடால்களாக பேசிக்கொண்டு இருக்கும் இரண்டாம் பாதி வேதனை. அதுவும் அந்த செஸ் விளையாட்டு உரையாடல்களெல்லாம் போதுமடா சாமி என்று அலறவைக்கின்றது. வில்லியை வலைவீசிப் பிடிக்கும் காட்சிக்கு நல்லவேளையாக விஷாலே நமக்கு பதிலாக சிரித்து விடுகிறார். படத்தில் ஒரே நல்ல விஷயம்  காதல் காட்சிகளும் காதல் பாட்டுக்களும் இல்லையென்பதுதான்.  

சக்ராவை பார்த்ததற்கு பிழையீடாக, அர்ஜுன், சமந்தாவெல்லாம் இருக்கும் இரும்புத்திரையை இன்னொரு முறை பார்க்கலாம்

பலகை வேர்கள், Buttress Roots

  தாவரங்களின் வேர் (Root ) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு. ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு.

 பண்டைய கட்டிடங்களின் சுவர்களின் அருகில் அவற்றை ஆதரவாக தாங்கிப்பிடிக்க அமை்க்கப்படும் அமைப்புக்கள் Buttress எனப்படும். அதைப்போலவே  சிலவகை மரங்களின் பக்கவாட்டில் வளர்ந்திருக்கும் பலகைகளைபோன்ற அகன்ற பக்கவாட்டு வேர்களுக்கு ‘பட்ரஸ்’ வேர்கள் என்று பெயர் ( Buttress Roots)

வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில், ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரஸ் ரூட்ஸ்) எனப்படும்.

இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன.

மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் அவற்றின் வேர்கள் அதிக ஆழத்துக்கு செல்வதில்லை. எனவெ பெருமரங்கள் சரிந்துவிடாமலிருக்க உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அவற்றை தாங்கிப்பிடிக்கின்றன.

 பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும்.

அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது.

மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் இலவம் பஞ்சு, அத்தி, பலா மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்

பெங்களூரு லால் பார்க்கில் இலவம்பஞ்சு மரம் பலகை வேர்களுடன்

பாண்டிச்சேரி தாவரவியல் பூங்காவில் பலகை வேர்களுடனிருக்கும் பல மரங்களை காணலாம். பெங்களூரு லால் பாக்கிலும் பெரும் இலவம்பஞ்சு மரமொன்று பலகை வேர்களுடன் இருக்கும். தாவரவியல் அதிசயங்களில் இவையும் ஒன்று.

கிராம்பு


இந்தியச்சமையல் அதன் பலவகைகளிலான வறுத்தலும், பொடித்தலும், பொரித்தலும், அரைத்தலும் உள்ளடக்கிய மசாலாமணம் வீசும்  உணவு வகைகளுக்கு பிரபலமானது.  இந்தியசமமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலாப்பொருட்களுமே செரிமானத்தை தூண்டுவதிலிருந்து புறறுநோய்க்கு எதிராக செயல்பபடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பவை. இவற்றில் கிராம்பு மிக அதிகமாக அசைவ உணவு வகைகளில் உபயோகப்படுத்தபடும் ஒன்று.

ஆங்கிலப் பெயர்: ‘கிளாவ்’ (Clove)
தாவரவியல் பெயர்: ‘சிசிஜியம் அரோமாடிகம்’ (Syzygium Aromaticum)
தாவரக் குடும்பம்: ‘மிர்டேசியே’ (Myrtaceae)
வேறு பெயர்: லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க் கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்

சமையலில் நறுமணப் பொருளாகவும், சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் 2,000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாயகம் இந்தோனேசியாவின் மலுகா தீவுகள். மரமாக வளரும் இந்தத் தாவரத்தின் நறுமணம் உள்ள உலர்ந்த, விரியாத மலர் மொட்டுகளே கிராம்பு எனப்படுகிறது.
கிரேக்க மொழியில் ‘கிளாவஸ்’ (Clavus) என்றால் ஆணி என்று பொருள். கிராம்பு மொட்டுகள் துருவேறிய ஆணி போல இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

கிராம்பு மலர்கள்

கிராம்பு குட்டையான கிளைகளை உடைய பசுமை மாறா மரம். 8 முதல் 12 மீட்டர் உயரம் வரை அடர்ந்து வளரும். பளபளப்பான இலைகளும் அடர்சிவப்பில் மூன்று மலர்கள் உள்ள சிறுசிறு கொத்துகளும் கொண்டது.

மலர் மொட்டுகள், இளஞ்சிவப்பாய் 1.5 முதல் 2 செ.மீ. வரை நீளம் இருக்கும்போது, கைகளால் அறுவடை செய்யப்படும். பூக்கள் 9 மாதங்களில் முதிர்ந்து கனியாகும். மரத்திலிருந்து ஆண்டு முழுவதும் கிராம்பை அறுவடை செய்யலாம்.

கிராம்பு மொட்டுகளில் குவிந்து உருண்டையாக இருக்கும் 4 இதழ்களும், வெளியில் சிறிய முக்கோண வடிவிலிருக்கும் 4 அல்லிகளும் இருக்கும். மொட்டுகளை உலர்த்தி, அவை துருவின் நிறத்தை (Rust color) அடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றன.

மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் 72 முதல் 90 சதவீதம் இருக்கும் ‘யூஜினால்’ (Eugenol) என்னும் எண்ணெயே இதன் நறுமணத்திற்கும் மருத்துவக் குணங்களுக்கும் காரணம். இது தவிர, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, டி, ஏ, போன்றவையும் உள்ளன.மேங்கனீஸ் சத்து கிராம்பில் அதிகம் உள்ளது.

கிராம்பு எண்ணெயின் பயன்கள்

நறுமணத்தைக்கொண்டு நோய்களை குணமாக்கும் Aromatherapy  யில் கிராம்பு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.  மலர் மொட்டுகளிலிருந்தும், இலைகளிலிருந்தும் குச்சிகளிலிருந்தும் கிராம்பு எண்ணெய் எடுக்கப்படுகின்றது.

செரிமானக் கோளாறு, கிருமி, பூஞ்சைத்தொற்று போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. பல் மருத்துவத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும், துத்தநாகத்துடன் கலக்கப்பட்டு பற்குழிகளை நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. வாசனைத்திரவியங்களிலும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. கிராம்பு புற்றுநோய்கெதிராகவும், ஈரல் பாதுகாப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது.

கிராம்பு உற்பத்தியில் இந்தியா, மடகாஸ்கர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சிறந்து விளங்கினாலும் ஆண்டிற்கு சுமார் ஒரு லட்சம் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்து இந்தோனேசியாவே முதல் இடத்தில் உள்ளது. மடகாஸ்கர், தான்ஸானி்யா மற்றும் ஜான்ஸிபர் நாடுகளே கிராம்பு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன,

தேயிலையும் தேநீரும்,

மனிதன் அருந்தும் திரவ உணவுகளனைத்தும் பானங்கள் எனப்படுகின்றன. தாகம் தீர்க்கும் தண்ணீரிலிருந்து பால், பழச்சாறுகள், காப்பி, தேநீர் உள்ளிட்ட பலவகையான பானங்கள் அனைத்துக் கலாச்சாரங்களிலும் தொன்று தொட்டே புழக்கத்தில் இருந்து வருகின்றது. பானங்களில் மென்பானங்கள், சூடான பானங்கள் மற்றும் மது பானங்கள் என பலவகைகள் இருக்கின்றன.

 உலகின் மிக அதிகமக்களால் அருந்தப்படும் விருப்பபானங்களில் முதன்மையாக குடிநீரும் தொடர்ந்து தேநீரும், பின்னர் மூன்றாவதாக பியரும் இருக்கின்றது.

தேநீரென்பது உலர்த்தி, பொடித்து, பதப்படுத்திய (Camellia sinensis) கமெலியா  சினென்ஸிஸ் என்னும் தாவரத்தின் இலைகளை கொதிநீரில் இட்டு உண்டாக்கப்படுவது.

இதன் தாவரப்பெயரிலிருந்து இவை சீனாவை தாயகமாக கொண்டவை என அறிந்துகொள்ள முடியமென்றாலும் தேயிலையின் தாயகம் இந்தியாதானென்கின்றன ஆய்வுகள். அஸ்ஸாமின் காடுகளில் இயற்கையாக செறிந்து வளர்ந்திருந்த Thea assamica  என்னும் தாவரத்தின் விதைகள், இந்தியாவிற்கு வந்துசென்ற சீனப்பயணிகளால் எடுத்துச்செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டு பின்னர் அதுவே கமெலியா சினென்ஸிஸ் ஆனது என்பதே தாவரவியல் அடிப்படையிலான வரலாற்று உண்மை

தேயிலைச்செடிகளில் இரண்டு முக்கியவகைகளே உலகெங்கும் பெருமளவில் பயிராகின்றது ;

Camellia sinensis என்னும் சிறிய இலைகளை கொண்ட சீன வகை

Leavea of Assamica and Sinensis

Camellia assamica  என்னும் சற்றே பெரிய இலைகளை கொண்ட இந்திய வகை

தேயிலைச்செடிகள் நல்ல உயரமான மரமாக வளரும் இயல்புடையவை. ஆனால் இவற்றிலிருந்து தளிரிலைகளை தொடர்ந்து அறுவடை செய்வதன் பொருட்டு,இவற்றை குறிப்பிட்ட இடைவெளிகளில் குட்டையாக கத்தரித்துக்கொண்டே இருப்பதால் இவை புதர்களைப்போல தோன்றுகின்றன.

தேயிலைகளின் ஒரு இலையரும்பு மற்றும் அதனடியிலிருக்கும் இரண்டு தளிரிலைகள் மட்டுமே அறுவடை செய்யப்படுகின்றன. இந்த இலையரும்பும் இருஇலைகளுமான பகுதி Golden flush எனப்படும். இவை மூன்று வருடங்களான தேயிலைச்செடிகளிலிருந்து நூறு ஆண்டுகள் வரை 7 லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து ஆண்டு முழுவதும் அறுவடை செய்யப்படும். இந்த இடைவெளி ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு தேயிலை ரகத்துக்கும்  மாறுபடும்

Golden Flush உடன் மேலும் இரண்டு கீழடுக்கு இலைகளும் சேர்ந்த 5 இலைகள் அடங்கிய பகுதி flush எனப்படும் இவையும் பல நாடுகளில் அறுவடை செய்யப்படுகின்றது.

அறுவடை செய்யப்பட்ட இலைகள் உலர்த்தப்பட்டு,  அவற்றில் ஆக்ஸிஜனேற்றம் நடைபெரும் வகையில்  காயப்படுத்தப்பட்டு, குறிப்பிட்ட வெப்பத்தில் உலர்த்தப்பட்டு, நொதிக்கவைக்கப்பட்டு ,பின்னர்  1500க்கும் மேற்பட்ட பலவகைகளில் தேயிலைகள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

ஆக்ஸிஜனேற்றத்தை பொருத்தே தேயிலைக்ளின் தரம் வேறுபடுகின்றது.  (உண்ணப்படாத வாழைப்பழங்கள் ஒருசிலநாட்களில் கருத்துப்போவது ஆக்ஸிஜனேற்றத்தால்தான்).  

100 சதவீதம் முழுமையான ஆக்ஸிஜனேற்றம் செய்யப்பட்டவை

Black Tea

நாம் அனைவரும் சாதரணமாக அருந்தும் ’Black tea’ எனப்படும் கருப்புத்தேயிலை. 50 சதவிதம் மட்டுமே ஆக்ஸிஜனெற்றம் நடந்தால் கிடைப்பது.  ’Oolong tea; எனப்படும் ஊலாங் தேயிலை, பசுந்தேனீர் ’Green tea’ எனப்படுவது ஆக்ஸிஜனேற்றதுக்கே உட்படுத்தப்படாத உலர்ந்த தேயிலைகளிலிந்து தயாரிக்கப்படுவது.

இம்மூன்று வகைகள் அல்லாது இன்னும் நூற்றுக்கணக்கான ரகங்களில் தேயிலை உலகெங்கிலும். சந்தைப்படுத்தப்பட்டிருக்கின்றது.

பசுந்தேநீரை உலரவைக்கையில் சிறு சிறு வட்டங்களாக சுருண்டு கொள்ளும் ரகம் அதன் தோற்றத்தினால்  ’Gunpowder tea’. எனப்படுகின்றது.

Gun powder Tea

White tea, என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மிகக்குறைந்த நேரம் மட்டுமே ஆக்ஸிஜனேற்றம் செய்கையில் கிடைபப்து. இது மிகவும்  மென்மையான் மணத்தையே கொண்டிருக்கும். வெள்ளை தேயிலை சீனாவுக்கு வெளியே அரிதாகவே கிடைக்கும்

 Yellow tea மஞ்சள் தேயிலையென்பது மூடிவைக்கப்பட்ட இலைகளில் ஆக்சிஜனேற்றம் துவங்கப்பட்டு, பச்சையம் மஞ்சளாக ஆனவுடன் நிறுத்தப்பட்டு பதப்படுத்தப்படுவது

Twig tea, குச்சி தேநீர் அல்லது குக்கிச்சா தேநீரென்பது (Kukicha tea) தேயிலைச்செடியின்  இலைகளுக்கு பதிலாக  குச்சிகளையும் தண்டுகளையும் மட்டுமே பதப்படுத்தி  பொடித்து தயரிக்கப்படும் தேநீராகும். இவ்வகைத்தேநீர் ஜப்பானில் மட்டுமே கிடைக்கும். குச்சிகளையும் கிளைகளையும் மூன்று வருடங்களுக்கு மேலான தேயிலைச்செடிகளிலிருந்து மட்டுமே எடுப்பதனால் இத்தேநீருக்கு மூன்றுவருட தேநீரென்றும் ஒரு பெயருண்டு. (Three year Tea ) .இதில் காஃபின் துளியும் இLலையென்பதால் உறக்கமிழப்பு, பக்கவிளைவுகள் என எந்தகவலையும் இல்லாமல் எப்போதுவேண்டுமானாலும் எத்தனைகோப்பைகள் வேண்டுமானாலும் அருந்தலாம்.

பதப்படுத்தப்பட்ட தேயிலைச்செடியின் குச்சிகள்

காப்பியிலும் கொக்கோ பீன்ஸ்களிலும் இருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தேநீரிலும் இருக்கின்றது. 250 மிலி அளவுள்ள ஒருகோப்பை தேநீரில் காஃபினின் அளவானது;

Black tea-  45-65 மில்லி கிராம்

Green, white and ooloog teas: 25- 45  மில்லி கிராம்

 தேநீரின் காஃபின் அளவானது தேயிலைதூளின் அளவு, நீரின் கொதிநிலை, தேயிலைத்தூள் கொதிக்கும் நேரம் ஆகியவற்றைப்பொருத்து மாறுபடும். பொதுவாக அதிகநேரம் கொதிக்க வைக்கையில் காஃபினின் அளவும அதிகமாகும்.

ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத, தரமான தேயிலைகளிலிருந்து உண்டாக்ப்பட்ட தேநீரை அருந்துவது இதயத்தை பாதுகாத்து, புற்றுநோய்க்கு எதிரக செயலபட்டு, உடலெடையை குறைத்து ரத்தத்தின் கொழுப்பையும் கட்டுப்படுத்துகின்றது

தேயிலைச்செடி வளரும் மண்ணில் இருக்கும் அலுமினியம் இலைகளிலும் இருக்கிறதென்றாலும் தினசரி சில கோப்பைகள் தேநீர் அருந்துகையில் இவை உடலாரோக்கியத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்குவதிலை. நாளொன்றூக்கு 30 கோப்பைகளுக்கு மேல் தேநீர் அருந்தும் போதுதான் இந்த அலுமினிய உலோகம் நஞ்சாகி ஆரோக்கியகேட்டை உண்டாக்கும் வாய்ப்பு இருக்கிறது.

 பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்காத ஆர்கானிக் தேயிலைகளும் இப்போது சந்தைப்படுத்தப்  பட்டிருக்கின்றன.

Bubble Tea

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வகையான் தேநீர் பிரபலமாக இருக்கும் இந்தியாவில் பால் கலக்காத கருப்புத்தேநீரும் பால் கலந்த தேநீரும் பிரபலம். தைவானில் மரவள்ளிக்கிழங்கு மாவிலிருந்து செய்யப்படும் சிறு சிறு உருண்டைகளை தேநீரில் போட்டு தரப்படும் குமிழித்தேநீர் (Bubble tea) மிகபிரபலம். கீரைக்குழம்பைபோல பசுங்குழம்பாக அருந்தபடும் மாச்சா தேநீர் ஜப்பானின் பாரம்பரியத்துடன் கலந்துள்ள மிக்கியமான ஒன்று.

மாச்சா

எல்லா வகையான தேயிலைகளிலும் ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உள்ளன என்றாலும் தேயிலையின் வகைகளைப்பொருத்து இவற்றின் அளவு மாறுபடும். பொதுவாக பசும் தேயிலை மற்றும் வெள்ளைத்தேயிலையில் Epigallocatechin or ECGC எனப்படும் மிக முக்கியமான, ஆன்டிஆக்சிடன்ட்டுகள்  அதிகம் நிறைந்துள்ளது.. இவை இதயப்பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிசெய்கின்றன

தென்னாப்பிரிக்காவில் வளரும் சிவப்புத்தேயிலைச் செடிகளிலிருந்து எடுக்கப்பட்டு ஆக்ஸிஜனேற்றமே செய்யப்டாத தேயிலைகளிலிருந்து கிடைப்பதே   Rooibos tea எனப்படும் செந்தேநீர்

Pu’er Tea

சீனாவின் யுனான் மாகாணத்தின் பிரத்யேக வகையான pu’er tea எனப்படுவது தேயிலைகளை நுண்ணுயிர்களால் நொதித்தலுக்கு உள்ளாக்கி பின்னர் ஆக்ஸிஜனேற்றமும் செய்யப்பட்டு கட்டிகளாக விற்பனை செய்யப்படும் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஒரு தேயிலை வகையாகும். இது முதியவர்களின் நோய் பிரச்சனைகளுக்கு  அருமருந்தாக கருதப்படுகின்றது

ஊதா தேயிலை எனப்படுவது  உலகின் மிக சமீபத்திய புதிய தேயிலை வரவாகும்

கென்யாவின் ஊதா தேயிலைச்செடிகள்

கென்யாவில்  கடல் மட்டதுக்குமேல் 7500அடி உயரங்களில் மட்டுமே வளர்க்கப்படும் கலப்பின தேயிலைச்செடிகளிலிருந்தே இவை கிடைக்கின்றது. நேரடியான சூரிய ஒளிபடும்படி வளர்க்கப்படும் இந்த செடிகளின் இலைகளில் நீல நிறமியான ஆந்தோசையானினின் அளவு பல ம்டங்கு அதிகரித்து இந்த ஊதா நிறம் வருகின்றது. இவை பல நுண்சத்துக்களும் மருத்துவப்பயன்களும் கொண்டவை. உடலெடையை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், புற்றுநோயை தடுக்கவும் இந்த ஊதா தேநீர் பெருமளவில் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

தேயிலைத்தூளின் விலை சில நூறு ரூபாய்களிலிருந்து சில ஆயிரம்வரை வேறுபடுகின்றது  எனினும் தங்கத்தைக்காட்டிலும் 30 மடங்கு அதிகமான விலையுள்ள தேயிலையும் சந்தையில் உள்ளது

சீனாவின் தாது உப்புக்கள் நிறைந்திருக்கும், குறிப்பாக இரும்புச்சத்து நிறைந்த ’வூயி’ மலைப்பகுதியின் 1000 வருடங்களைக்கடந்த 3 தாய் தேயிலைச்செடிகளிலிருந்து  கிடைக்கும் ’’டா ஹாங் பாவ்’’  (Da Hong Pao) தேயிலையே உலகின் மிக விலையுயர்ந்த தேயிலை. இது கிராம் 1400 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகின்றது. பொதுவாக இத்தேயிலையில் உண்டாக்கப்படும் தேநீர் சீனாவிற்கு வருகைதரும் பிறநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றது. தாவரப்பொருட்களிலேயே விலையர்ந்ததும் இதுவே.

டா ஹாங் பாவ் தேயிலைச்செடிகள்

The great Indian kitchen

கேராளாவின் Neestream என்னும் மலையாளத்திரைப்படங்களுக்கான புதிய இணையதளத்தின் இவ்வருடத்தின்  முதல், புதிய வெளியீடாக ஜனவரி 15, 2021 அன்று வெளியிடப்பட்டது. ‘’ The Great Indian Kitchen. புதிய தளத்தின் பிரமாதமான வெளியீடு இந்த அழகிய குடும்பச்சித்திரம்.

இயக்குநர் ஜியோ பேபி, இசை சூரஜ் குரூப் மற்றும் மேத்யூஸ் புலிக்கன். நிமிஷா சுஜயன் மற்றும் சூரஜ் வெஞ்சிரமூடு பிரதான பாத்திரங்களில் (இரண்டாவது முறையாக ஜோடியாக.)ஒரு சில காட்சிகளைத்தவிர முழுப்படமுமே கோழிக்கோட்டில் ஒரே வீட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதே வீட்டில்தான் முன்பு 1993ல் மிதுனம் திரைப்படமாக்கபட்டது. பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே கோழிக்கோடு நாடக நடிகர்கள்

ஒரு கண்ணாடியையோ அல்லது கேமிராவையோ இந்தியவீடுகளில்,குறிப்பாக  தென்னிந்திய வீடுகளில்   வைத்தால்  தெரியவருவதைத்தான்  முழுப்படமும் காட்டுகிறது..

நாயகி நம்மைப்போல, அடுத்த வீட்டுபெண்ணைப்போல,  தோழியைப்போல நாம் அன்றாடம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான் பெண்களில் ஒருத்தியைப்போல இருப்பதும் படத்தின் பெரிய பலம். இது நம் கதை என அனைத்து இந்தியப்பெண்களும் விதிவிலக்கின்றி உணருவார்கள் திரையில் நிமிஷா சுஜயனை பார்க்கையில்.

நிமிஷா நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரி கலாரஞ்சனியை அதிகம் நினைவூட்டும் முகச்சாயலையும் உடல்மொழியையும் கொண்டிருக்கிறார்.       முழுப்படத்தின் ஆத்மாவே நிமிஷாதான். சூரஜின் நடிப்பு வழக்கம் போலவே பிரமாதம். உடலெடையை குறைத்து கச்சிதமாக இருக்கிறார். பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.இயல்பான சிறப்பான நடிப்பு.

மேசை நாகரீகம் குறித்து விளையாட்டாக சொல்லுவது போல சொன்ன மனைவியை கடிந்துகொண்டு அவளை மன்னிப்பு  கேட்கச்சொல்லுவதும் ,அவள் மன்னிப்பை கேட்டவுடன்  அகமலர்வதையும் அத்தனை அசலாக காட்டுகிறார். சிதல்புற்றுபோல ஆணவக்கரையான்களால் பெருகி வளர்ந்திருக்கும் இந்திய ஆணாதிக்க சமுகத்தின் பிரதிநிதியாக பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார் சூரஜ்.

யானைப்பசியைப்போல ஆண்களின் இந்த வீங்கிய ஆணவத்திற்கு, கீரைக்கட்டுகளை தீனி போட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான்  பெண்களுக்கான விதி.

சாலு கே தாமஸின் ஒளி இயக்கத்துக்கு, தனித்த பராட்டுக்களையும் அன்பையும் தெரிவித்தாக வேண்டும். அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். துவக்க காட்சிகளில் நிமிஷாவின் நடன அசைவுகளின் போது அவர் முகத்தின் தெளிவை, மலர்வை, உறுதியை, கண்களின் ஒளியை அழகாக காட்டியவர், பின்னர்  அவரே யோசனையில் ஆழ்ந்திருக்கும் களைஇழந்த முகத்துடன் இயந்திரமாக பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பதை, கலவியின் போது அவரின் மனஓட்டங்களை, சமையலறையில் மீள மீள  வறுப்பதை, பொரிப்பதை, நறுக்குவதை, அரைப்பதை, பிறர் உண்ணுவதை என்று காட்சிகளை  அருமையாக காட்டியிருக்கிறார்.

பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு பெயரில்லை என்பதுவும் இத்திரைப்படத்தின் சிறப்பு. இது நம் கதை என்னும் உணர்வு பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே  இதனால் இன்னும் மேலோங்குகின்றது.

பள்ளிஆசிரியரான சூரஜ் நிமிஷாவை பெண்பார்க்கும் காட்சியில் திரைப்படம் துவங்கி சட் சட்டென்று காட்சிகள் மாறி, சூரஜ் தன் பெற்றோருடன் வசிக்கும்  வீட்டில் வாழ வருகிறார் நிமிஷா.

திடுக்கிடவைக்கும் திருப்பங்களோ, எதிர்பாரா சம்பவங்களோ, அவிழ்க்கப்படவேண்டிய மர்ம முடிச்சுகளோ இல்லாதது மட்டுமல்ல இதுபோல முன்பு வந்திருக்கும் பாலின சமத்துவம் குறித்தான திரைப்படங்களில் இருக்கும் வன்முறையும் இதிலில்லை. அன்பின் பெயரால், மரபின் பெயரால், சம்பிரதாயங்களின் பெயரால், சமூக கட்டுப்பாடுகளின் பெயரால், பெண்களுக்கு காலம் காலமாக அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருப்பதை சொல்லும் படமிது.

5 பாடல்களும், இடையிடையே சண்டைகளும் நடனங்களும் நிறைந்த வழக்கமான மரபான சினிமா இல்லை இது

துவக்கத்தில் முதல் அரைமணி நேரங்களுக்கு திரும்பத்திரும்ப காய்கறிகள் நறுக்கப்படுவது, நேந்திரம்பழங்கள் ஆவியிலடப்படுவது, இறைச்சி வெட்டப்படுவது, ஆப்பங்கள் ஊற்றப்படுவதென்று காண்பிக்கப்படுகையில் சிலருக்கு சலிப்புத்தட்டிவிடும். என்ன இது திரும்பத்திரும்ப இதையே காட்டுகிறார்களே என்று. அந்த சலிப்புத்தான்  இப்படம் எதிர்பார்க்கும் வெற்றி..  அரைமணி நேரத்துக்கு திரும்பத்திரும்ப பார்க்கையில் சலிப்புத்தட்டும் விஷயத்தைத்தான், வாழ்நாள் முழுக்க எந்த உதவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான பெண்கள் மீள மீள செய்துகொண்டிருப்பதை சொல்லும் படமிது.

வெளியிலிருந்து பார்க்கையில் மகிழ்ச்சியான இல்லமென்று தோன்றும் ஆனால் உள்ளே ஆண்களின் நாக்கு, உடல், ஆணவம் இவற்றின் தேவைகளுக்கென வீட்டுப்பெண்களின் இளமையும் நேரமும் ஆரோக்கியமும் லட்சியங்களும், முழுவாழ்வுமே சுரண்டி உறிஞ்சி எடுத்துக்கொள்ளப்படுவதை, திருமணம் என்னும்பெயரில் பெண்கள் மிச்சமின்றி காலடியில் இட்டு நசுக்கப்படுவதை இப்போது நம் இந்தியச் சமூகத்தில் நடந்துகொண்டிருப்பதை அப்பட்டமாக காட்டும் படமிது

தெளிவான திரைக்கதை. இயக்குநர் அழகாக கதையைக்கொண்டு போகிறார். பொருத்தமான மென்மையான இசை, சிறப்பான படத்தொகுப்பு, அற்புதமான ஒளிப்பதிவு என மிக நல்ல ஒரு அனுவத்தை தருகின்றது இத்திரைட்பம்

ஆண்களின் இதயத்திற்கு அவர்களின் வயிற்றின் வழியேதான் பெண்கள் செல்லவேண்டுமென்னும் பழஞ்சொல் புழக்கத்திலிருக்கும் நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களின் இதயத்திற்குள் ஆண்கள் நுழையும் வழிகுறித்து சொல்லப்பட்டதேயில்லை.

தினம் தினம்  இறைச்சியும் காய்கறிகளும் நறுக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. திரும்பதிரும்ப பரிமாறுதலும், எச்சிலெடுப்பதும், பாத்திரம் தேய்ப்பதும்,  துணி துவைப்பதும், வீடு கூட்டுவதும், மாடிப்படிகளிலிருந்து சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வரையிலும் துடைத்து சுத்தமாக்குவதும், விறகடுப்பில் அரிசிச்சோற்றை சமைப்பதும், அனைத்தையும் முடித்து, இரவில் வீட்டுக்கதவை தாளிடுவது வரை முடித்த பின்னர் காத்திருக்கும் கணவனின் உடல் பசிக்கும் இரையாவதுமாக அப்படியே ஒரு இந்திய சமூகத்தை காட்டியிருக்கிறார்கள்.

பெண்கள் இப்படி அடுப்படியிலும், துவைக்கும் கல்லிலும், எச்சிலெடுத்தும் வீணாய்போகையில் ஆண்கள் சீட்டு விளையாடிக்கொண்டும், அலைபேசியில்  வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும், யோகா செய்துகொண்டும் தன்னை, தன் நலனை, தன் தேவையை, தன் ஆரோக்கியத்தை, தன் சுவையை, தன் வாழ்வை பார்த்துக்கொள்ளுகிறார்கள். எந்த மிகைப்படுத்தலும் இல்லாத அப்பட்டமான படம்

அடைத்துக்கொண்டு ஒழுகும் சமையலறை சின்க்கை சரிசெய்ய ப்ளம்பரை வரச்சொல்லி பலமுறை நினைவூட்டியும் கடைசிவரை அது அப்படியேதான் இருக்கிறது. ஒரு காட்சியில் சமையலறை எச்சில் அடைத்துக்கொண்ட சின்க்கின் நாற்றம் தன் மீது அடிக்கின்றதா என நாயகி கணவனுடன் அந்தரங்கமாக  இருக்கும் நேரத்திலும் முகர்ந்து பார்த்துக்கொள்கிறாள். அது சின்க்கின் நாற்றம் மட்டுமல்ல, தேய்த்துக்கழுவினால் போய்விடுவதற்கு, அன்பின்மையின், புரிந்துகொள்ளாமையின், சுரண்டப்படுதலின், பகிர்தலற்ற வெற்று வாழ்வின் நாற்றம் அது, எத்தனை தேய்த்துக்கழுவினாலும் போகாதது.

ஒரே ஒரு காட்சியில் மட்டும் நிமிஷாவின் தோழி ஒருத்தி மாடிப்படிகளில் அமர்ந்திருக்கையில் கணவன் மனைவிக்கு  தேநீர் எடுத்துக்கொண்டு வருவதையும், அன்றிரவு அவர் சமைக்கபோவதாகவும் சொல்லும் காட்சியையும் வைத்திருக்கிறார்கள். விதிவிலக்கான ஆண்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்று காட்ட.

நிமிஷா நடனஆசிரியையாக வேலைக்கு போக விரும்புவதைக்குறித்துச் சொல்லுகையில்  சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கணவனும் மாமனாரும் ’’அதெல்லாம் குடும்பத்துக்கு சரிவராது’’ என்று மறுத்துவிட்டு, உடனே ’’இன்று கடலைக்கறி பிரமாதம்’’ என்கிறார்கள்.  அந்த பாராட்டு நிமிஷாவுக்கும் நமக்கும் சொல்லுவதென்னவென்றால் எங்களுக்கு பிடித்ததுபோல சமைப்பதற்கு பிறந்து வளர்ந்திருப்பவர்கள் பெண்கள் என்பதைத்தான்.

நிமிஷாவின் மாதவிலக்கு நாட்களில் வீட்டுக்கு வேலைக்கு வரும் ஒரு பெண் வீடு கூட்டி துடைக்கையில் தனக்குள்ளே மெதுவாக பாடிக்கொண்டிருக்கிறாள். இப்படி வேலைக்கு வெளியெ வருவது பெண்களின் சின்ன சின்ன மகிழ்வுகளை சுதந்திரங்களை அனுபவிக்க வழிகாட்டுகிறது என்பதை அந்தகாட்சி நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் வேலைக்கு போகும் பெண்களுக்கு இரட்டைப்பணிச்சுமைதான் இருந்தும் வேலைக்கு போக விரும்புவது வீட்டிலேயே இருக்கையில் அவர்களின் கழுத்தை நெறிக்கும் மானசீக விரல்களிலிருந்து தற்காலிகமாகவாவது தப்பித்து மூச்சுவிட்டுக்கொண்டு மீண்டும் மாலை அதனிடம் அகப்பட்டுக்கொள்ளும் பொருட்டுத்தான்

இரவில் சமையலறை வேலைக்கு உதவ வரும் மருமகளை மாமியார் தடுத்து படுக்கையறைக்கு போகக்சொல்லுகிறார். அவருக்கு தெரியும் அங்கு அவரின் மகனென்னும் ஆணுக்கு இவள் தேவைப்படுவாளென.

அக்காட்சியில் படுக்கையறையில் இளம்பெண்ணின் உடல் ஆளப்படுவதும் சமையலறையில் இன்னுமொரு மூத்த பெண்ணின் உழைப்பு சுரண்டப்படுவதும் மாற்றி மாற்றி காண்பிக்கப்படும்.’’ 7 மணிக்கு மேல நீ இன்பலட்சுமி ’’பாடலை கூடங்களில் கேட்டு மகிழும் சமூகமல்லவா இது?

ஓயாத வீட்டுவேலைகளுக்குப்பிறகு உடலும் உள்ளமும் களைத்திருக்கும் பெண்களுக்கு, இன்பலட்சுமியாக இருக்கமுடியாமல், தாம்பத்ய உறவும், பாத்திரம் கழுவுவதைப்போல, எச்சில் எடுப்பதைப்போல, துணிதுவைப்பதைப்போல மற்றுமொரு வீட்டுவேலைகளிலொன்றாகி போய்விடுகின்றது என்பதையும் ஆண்கள் அன்றும் இன்றும் புரிந்துகொள்ளவேயில்லை

நெட்ஃப்லிக்ஸும் அமேஸான் பிரைமும் இப்படத்தை நிராகரித்ததற்கு காரணம் இதில் சொல்லப்பட்டிருக்கும் மத நம்பிக்கை தொடர்புடைய விஷயங்கள் என்கிறார்கள்  இந்தப்படம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கண்டிக்கவில்லை, மாறாக சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபு, குடும்ப வழக்கங்கள், காலம்காலமாக கடைப்பிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை விட,  வாழ வந்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமென்பதைத்தான் சொல்லுகின்றது.

அக்குடும்பத்தின் சந்ததியினரை உருவாக்குபவளை, கணவனுடன் இணைந்து இறுதி மூச்சு வரை வாழ்பவளை, புரிந்துகொள்ள, அவளின் தேவைகளை அறிந்துகொள்ள,  நிறைவேற்ற, ஆண்கள் முன்வரவேண்டுமெனவும் வீட்டுவேலைகளில் அவர்களின் பங்கும் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் சொல்லவேண்டியே அக்காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள்

இந்தப்படத்தை ஆண்கள் அவசியம் பார்க்கவேண்டுமென்றெல்லாம் பரிந்துரைக்க வேண்டியதில்லை. ஏனெனில் சிலமணிநேர திரைப்படத்தில் திருந்தும் சமூகமல்ல இந்தியச்சமூகம். முழுச்செவிடான சமூகத்தின் காதுகளில் இப்படியான சங்குகளை ஊதுவது வீண்.

காலம்காலமாக இப்படி அடுப்படியில் அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும் அனுபவித்துக்கொண்டெ இருப்பவர்களுக்கும், நமக்கு முன்னே இவ்வாறு தன் இளமை, வாழ்நாள், கனவு, ஆற்றலெல்லாவற்றையும் இப்படியே இழந்து மறைந்துபோனவர்களுக்கும் , இனிமேலும் தொடரவிருக்கும் இந்த அநீதிக்கு இரையாகப்போகும் இன்றைய சிறுமிகளும் எதிர்காலத்து பெண்களுக்குமான சமர்ப்பணமாக இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டு,பெண்கள் அவசியம் இதை பார்க்கவேண்டும்.

ஒரு காட்சியில் பல தலைமுறைகளை சேர்ந்த தம்பதியினரின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக மெதுவாக காமிரா காட்டிக்கொண்டிருக்கையில் பின்னணியில் தேங்காய் துருவும், தாளிக்கும், சமைக்கும் ஓசைகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதைப்போல கேட்டுக்கொண்டிருக்கும்.   

நிமிஷா என்னவானாள்? ஒழுகிக்கொண்டேயிருந்த  அந்த சமையலறைக்குழாய் சரிசெயயப்ட்டதா? நிமிஷா வேலைக்குப் போகிறாளா? அதே வீட்டின் அதே தேநீர்கோப்பையை கழுவிக்கொண்டிருக்கும் தங்கவளையல்கள் நிறைந்திருக்கும் அந்தக்கைகள் யாருடையவை?

Neestream ல் திரைப்படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

வஸாபியும் வாஷோகுவும்!

 தேநீர் விருந்துகள், ஹனமி செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள், ஹைகூ கவிதைகள், இகபானா மலரமைப்புக்கள், தனித்துவமான தோட்டங்கள், ஓரிகாமி காகிதவடிவங்கள் மற்றும் பாரம்பரிய கலைகளுக்காக ஜப்பான் உலகளவில்  வெகு பிரபலம்.

ஹனமி கொண்டாட்டம்
ஓரிகேமி காகித மலர்கள்

1950’களிலிருந்தே ஜப்பானின் பதிப்பகத் துறையில் முக்கிய பகுதியாகியிருக்கும், அனைத்து வயதுக்காரர்களுக்குமான மாங்கா வரைகதை வடிவம், நூற்றாண்டுகளின் பாரம்பரியம் கொண்ட சுமோ மல்யுத்தம், தோளோடு தோள் சேர்ந்து நிற்குமளவிற்கான நெரிசலில் இயங்கும், நின்றபடியே மதுவருந்தும் டேக்கினோமியா (Tachinomiya) பார்கள், வண்ணமயமான நடைபாதைக்கடைகள், அவற்றில் கிடைக்கும் பலவிதமான உணவுகள், அடுக்கிவைக்க வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட சதுர தர்பூசணிகள், இதய வடிவிலான தர்பூசணிகள், அறுகோண ஆரஞ்சுகள், புகழ்பெற்ற  அனிமே (Anime)   இயங்குபடங்கள், என்று ஜப்பான் அதன் வரலாறு, பாரம்பரியம், உணவு, கலாச்சாரம், தொழில்நுட்பம், மக்களின் சுறுசுறுப்பு, ஒழுங்கு மற்றும் பணிவு,  உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் உலகநாடுகள் அனைத்துமே வியந்து பார்க்கும் நாடாக இருக்கின்றது. ஜப்பானே, பிரபல மீனுணவுகளான சுஷி மற்றூம் சஷிமியின் பிறப்பிடமுமாகும்,  

பல சுற்றுலா பயணிகளுக்கு ஜப்பானிய உணவு வகைகள் மட்டுமே ஜப்பானுக்கு செல்லப்போதுமான காரணம்! அதிலும் பலருக்கு சுஷி’யை சுவைப்பது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.

 பல நூற்றாண்டுகளாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய உணவு முறை, புதிய புதிய தாவரப்பொருட்கள், கடல்வாழ்உயிரிகள் மற்றும் கடற்பாசிகளின்  சேர்மானம், பருவகால உணவுகள், சில எளிய ஆனால்  பிரத்யேக  சுவையை அளிக்கும் சுவையூட்டிகளும் இணைந்தது.

’’வாஷோகு’’ என்பது ஜப்பானிய உணவு, சமையல் மற்றும், ஒன்றுக்கொன்று மிகப்பொருத்தமாக சேர்ந்துகொண்டு சுவையளிக்கும் ஜப்பானிய உணவு வகைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.  Wa (வா)  என்பது ஜப்பானின் பாரம்பரியத்தையும் Shoku (ஷோகு) என்பது உணவையும் உணவு கலாச்சாரத்தையும்,  உண்ணுதலையும் சேர்த்தே குறிக்கின்றது. முதலில் கண்களால் உணவை உண்டபின்பே வாயினால் உண்ணவேண்டும் என்பது ஜப்பானியர்களின் பொதுவான கூற்று. அத்தனை வண்ணமயமாக, அழகாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படும். மிசெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்டிருக்கும் உணவகங்களை அதிகம் கொண்டிருக்கும் முதல் மூன்றுநாடுகளிலும்  ஜப்பான்  இருக்கிறது.

இறைச்சி உணவை பெரும்பாலும் தவிர்த்தே வந்த ஜப்பானியர்கள், பேரரசர்  மெய்ஜி தலைமையில் 1868’ல் நடைபெற்ற  ஜப்பானின் நவீனமயமாக்கலுக்கு பிறகே பாரம்பரிய உணவிலும் இறைச்சியை சேர்த்துக்கொண்டனர்.

ஜப்பானிய உணவில் பிரதானமான அரிசிச்சோற்றுடன், ஏராளமான  பக்க உணவுகள், தொடுகறிகள், மீன், “சுகேமோனோ”  எனப்படும், காய்கறி ஊறுகாய்கள், டோஃபூ, பாலாடைக்கட்டி, சோயா, காளான்கள், நூடுல்ஸ், என கலவையான, அதிகம் வேகவைக்கப்படாத, பெரிதும் பச்சையாகவே தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இருக்கும், முழுமையான ஜப்பானிய உணவு முறை எத்தனை ஆரோக்கியமானதென்பதை ஜப்பானியர்களின் நீளாயுளையும், உடற்கட்டையும் பார்த்தே அறிந்துகொள்ளலாம். ஜப்பானில். கொழுத்த உடலுடையவர்களை அரிதாகவே காணமுடியும் .

ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமைகொண்ட சிறப்பான பலசேர்மானங்களையும், விதம் விதமான உணவு வகைகளை உருவாக்கும் கலைகளையும் உள்ளடக்கிய இந்த வாஷோகு, 2013 ஆம் ஆண்டில்  யுனெஸ்கோவின் புலனாகா கலாச்சார பாரம்பரிய அந்தஸ்தை (UNESCO Intangible cultural heritage) பெற்றது, ஜப்பானில் இத்துடன் சேர்த்து 23 யுனெஸ்கோ அந்தஸ்துகள் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. உண்ணுதல் மட்டுமல்ல, வாஷோகு ஒரு சமையல் அனுபவமும் கூட .

ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சைநிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியை சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.

ஆனால் உருளைக்கிழங்குகளைப் போலவே விளையும் வஸாபிச்செடியின் சதைப்பற்றான, சத்துக்களும் பச்சையமும் நிறைந்துள்ள கிழங்குகளைப்போலிருக்கும், தண்டுப்பகுதியின் நீட்சிகளை (Stem tubers)  துருவி எடுக்கப்படுவதே வஸாபி. வஸாபிதான் சுஷி, சஷிமியுடனான மிகப்பொருத்தமான இணையுணவு. இதன் பிரத்யேக சுவை, வாசனை மற்றும் எரிவு உலகின் வேறெந்த தாவரப்பொருட்களுக்குமே இருக்காது, மேலும் இது மிக மிக புதிதாகவே பரிமாறப்படுமொன்று.

ஷஷிமியுடன் வஸாபி விழுது

சுஷியை சுவைத்திருப்பவர்கள் வஸாபியையும் சுவைத்திருக்கக்கூடும் ஆனால் அது அசல் வஸாபிதானா என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஜப்பானிலேயே 5 சதவீதம்தான் அசல் வஸாபி கிடைக்கின்றதென்றும், இப்போது வஸாபி என அளிக்கப்படுவதும் சுவைக்கப்படுவதும் வஸாபியல்ல, வஸாபியின் நிழல் அல்லது சாயல் என்கிறார்கள் தலைசிறந்த  ஜப்பானிய சமையல் கலை வல்லுநர்கள்.

போலி வஸாபி விழுதில், வஸாபி  இலை, இலைக்காம்பு, கடுகு மற்றும் வஸாபியின் தாவரக்குடும்பத்தை சேர்ந்த முள்ளங்கி வகையொன்று (Cochlearia armoracia ), பச்சைசாயம், மிகக்குறைந்த அளவில் வஸாபியின் மலர்கள்  ஆகியவைகள் கலக்கப்பட்டிருக்கும்.

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கடுகு ஆகியவற்றின் குடும்பமான பிராசிகேசியேவை (Brasicaceae) சேர்ந்த வஸாபியா ஜப்பானிகா, (Wasabia japonica,  இணை அறிவியல் பெயர் Eutrema japonica) செடிகள் மெதுவாக வளரும் இயல்புடைய, ஆண்டு முழுதும் பூக்கும்,  வெண்ணிற இருபால் மலர்களையும், தடிமனான அடித்தண்டும், நீளகாம்புகளுள்ள சிறுநீரக வடிவிலான பெரிய இலைகளையும் கொண்டவை.

 இதன் தாவர அறிவியல் பெயரின் பேரினப்பெயரான Wasabia’வின் பொருள் சரிவர எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. வஸாபி என்னும் ஜப்பானிய புழங்குபெயரின் லத்தீன் வடிவமாக வஸாபியாவே வைக்கப்பட்டது. சிற்றினமான japonica  ஜப்பானை பிறப்பிடமாக கொண்டதை குறிப்பிடுகின்றது. இதுபோலவே தாவர அறிவியல் பெயர்களின் சிற்றினங்களில் indica என்பது இந்தியாவை, sinensis என்பது சீனாவை, Canadensis  கனடாவை என்று அவற்றின் தாயகத்தை குறிப்பிடும் பெயர்களில் அமைந்திருக்கும் 

இக்குடும்பத்தின் அனைத்து தாவரங்களுமே விசேஷமான நொதியான மைரோசினேஸை, குளுகோசினோலேட்டுக்களை, அய்சோதயோனேட்டுக்களை  கொண்டிருக்கும்.  ((Myrosinase, Glucosinolates. Isothiocyanates). இச்செடிகளை அல்லது செடிகளின் பாகங்களை நறுக்கும் போதும், காயப்படுத்தும் போதும்  இவை ஒன்று கலந்து கசப்பும், எரிவும், மணமுமாக வெளிப்படுகின்றன.  முட்டைக்கோஸிலிருக்கும் அய்சோதயோனேட்டின் அளவை விட வஸாபியில் 3000 மடங்கு அதிகமென்பதால் இதன் சுவையும், மணமும், எரிவும் அலாதியாக இருக்கின்றது.

வளர்ந்த இச்செடியின் அடித்தண்டு சுமார் 18 லிருந்து 24 மாதங்களில், 12 லிருந்து 18 இன்ச் உயரமும் 40 மிமி அகலமும் வளர்ந்ததும் முழுச்செடியும் வேருடன் அறுவடை செய்யப்படும். இலைகள் நீக்கப்பட்ட அடித்தண்டுகளே வஸாபி கிழங்குகள். இவை மேலும் வளருமென்றாலும் இந்த அளவில் அடித்தண்டுகள் இருக்கையிலேயே வஸாபி விழுதின் பிரத்யேக சுவையும் எரிவும் மிகச்சரியாக இருக்கும்..

வஸாபி ஜப்பானில் எப்போதிலிருந்து, யாரால், எங்கு விளைவிக்கபட்டதென்பதை குறித்து ஜப்பானிலேயெ பலவிதமான வாய்வழிக்கதைகளும்  கருத்துக்களும் நிலவுகின்றது.

  பன்னெடுங்காலத்திற்கு முன்பு வேட்டைக்காரர்களாக இருந்த, மீனும், விலங்குகளும், கனிகளும் விதைகளும் கடலுணவுகளுமாக உண்டு கொண்டிருந்த ஜப்பானியர்கள் அப்போதே காடுகளில் இயற்கையாக கிடைத்த வஸாபி கிழங்குகளையும் உணவில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாமென்று பரவலாக நம்பப்படுகின்றது. சாமுராய் வீரர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக பரிசளிக்கப்பட்டன வஸாபி பண்ணைகள் என்றும் சொல்லப்படுகின்றது.

மியி மாகாணத்தில்  786ல் புத்த துறவியான  கோஹ்போ-டாய்ஷி ( Kohbou-Daishi) காடுகளில் வளர்ந்திருந்த வஸாபி செடிகளை கொண்டு வந்து கோயா மலைகளிலும் (Mount Koya) அதன் அடிவாரத்திலும் பயிரடச்செய்ததற்கான ஆவணங்களே வஸாபியைக்குறித்து கிடைத்திருக்கும் முதல் வரலாற்று சான்று. 794’ல் உருவான ஜப்பானிய  தாவரவியல் அகராதிகளிலும்  வஸாபி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  918’ல் ஃபுகானே நோ சுககிட்டோ (Fukane-no-Sukehito) தொகுத்தளித்த ஹோன்ஸோ வாம்யோ (Honzo Wamyo) எனப்படும் ஜப்பானின் மிகப்பழமையான மூலிகைஅகராதியில் மலைகளைக்குறிக்கும் சொல்லான ’யாமாய்’ என்று அழைக்கப்பட்ட, மலைகளில் மட்டும் வளர்ந்த  இந்த இச்செடியின் பெயர் பின்னர்  மருவி வஸாபி என அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இவை 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜப்பானில் இயற்கையான வாழிடங்களில் வளர்பவையென்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் எங்கிஷ்கி (Engishiki) எனப்படும் ஜப்பானிய அரசுக்கான சட்டதிட்டங்கள், சடங்குகள் குறித்தான பழமையான் நூலிலும்  வரிசெலுத்தியவர்கள் பணத்துக்கு பதிலாக வஸாபி கிழங்குகளை அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது .

931–938 ல் தொகுக்கபட்ட வாம்யோ ருயிஜுஷா (Wamyo Ruijusho)  எனப்படும் ஜப்பானின் முதல் அகராதியிலும் வஸாபியைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஜப்பான் வெற்றி பெற்ற பல போர்களுக்கு பிந்தைய உண்டாட்டுகளில் வஸாபியை உணவில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புக்கள் பல ஆவணங்களில் இருக்கின்றன.

ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த வஸாபி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து மருந்துப்பொருளாகவே இருந்து, பின்னர் படிப்படியாக உணவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 1338 லிருந்து  1573 வரைக்குமான காலத்தில், ஜப்பானின் அரசகுடும்பங்களில் மட்டும்  உணவில் சேர்க்கப்பட்டிருந்த வஸாபி,. 1596-1615க்கு இடைப்பட்ட காலத்திலிருந்துதான்  வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றது. 

 ஜப்பானிய சமையலில் கடுகைப்போல ஒரு மசாலாப்பொருளாக பயன்பாட்டிலிருந்த வஸாபி, பின்னர் மெல்ல மெல்ல சுஷி, பிற மீனுணவுகள்,  நூடுல்ஸ் மற்றும் சூப்பில் வாசனைக்காக சிறிதளவு சேர்க்கப்பட்டது

17ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜப்பானை ஒன்றிணைத்த மூவரில் ஒருவரான  லியாஷு டோகுகவா (Ieyasu Tokugawa)  வஸாபி பிரியராக இருந்திருக்கிறார் 

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வஸாபி பொதுமக்களுக்கும் கிடைத்திருக்கிறது. 1971  வரை பசையாக்கப்பட்ட வஸாபிதான் பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. 1973’ற்கு பிறகுதான் புத்தம் புதிய கிழங்குகளிலிருந்து வஸாபியை துருவி உண்ணும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

ஜப்பானில் பல்லாண்டுகளாகவே வஸாபி உணவிலும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும்,  20 ஆம் நூற்றாண்டில் சுஷி/சஷிமி உணவுகள் பிரபலமானதும் அதன் இணைஉணவான வஸாபியும் உலகளவில் மிகபிரபலமடைந்தது. சுஷி உணவுக்கும் வஸாபிக்குமான பொருத்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக ஜப்பானியர்கள் வேடிக்கையாக சொல்லுவதுண்டு. சுஷியின் பச்சை வாசனையை மறைக்க, பச்சை சுஷியின் கிருமிகளால் பாதிப்பு வராமலிருக்க பொருத்தமான  துணையுணவாக வஸாபி அதிகம் பயன்பாட்டுக்கு வந்தது

  20’ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் வஸாபியை தூளாக்கி சந்தைப்படுத்துதலும் துவங்கியது. இதன் சுவை புதிய வஸாபி விழுதைப்போல இருக்காதெனினும் இதையும் ஏராளமானோர் வீட்டு உபயோகத்திற்கென வாங்குவார்கள். தற்போது  (-196°C) உறை நிலையில் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்பட்டு வஸாபியின் சுவையும் நிறமும் மணமும் பாதுகாக்கப்படுகின்றது.

வஸாபி கிழங்கை துருவுதல் என்பது உண்மையில் தேய்த்தல்தான் இவற்றிற்கென இருக்கும் விசேஷ சுறாத்தோலினால் உருவாக்கப்பட்ட ஓரோஷி (oroshi) சதுரத்துருவான்களிலோ, அல்லது கருங்கல்லிலோ, உலோகத்துருவான்களிலோ  கிழங்குகள் வட்டசுழற்சியில்  தேய்ககப்பட்டு விழுதாக்கப்படும். வஸாபியின் சுவையும் மணமும் குணமும் அது துருவப்படும் விதத்தை பொருத்தும் மாறுபடுகிறது..

இதிலிருக்கும் எளிதில் ஆவியாகக்கூடிய வேதிச்சேர்மங்களின்  சுவையை அனுபவிக்கவேண்டி பாரம்பரியமான உணவகங்களில் வஸாபி, அவ்வப்போது புத்தம் புதிதாகவே விழுதாக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. சில உயர்தர உணவகங்களில் வஸாபியை வாடிக்கையாளர்களே துருவிக்கொள்ளவும் வசதியுண்டு. பரிமாறப்பட்ட 15 நிமிடங்களில் வஸாபியை சுவைக்காவிட்டால் அதன் அசல்சுவை மறைந்துவிடும்.

பச்சைத்தங்கமெனப்படும் வஸாபி நாவில் பட்டதும் மூளையில் ஒரு மெல்லிய உதையை, நாசியில் உடனே ஒரு எரிச்சலை, பின்னரே நாவில் அதன் சுவையை உணருவீர்கள் என்கிறார்கள் ஜப்பானியர்கள். தேள் கொட்டியது போலவும் தீயில் சுட்டுக்கொண்டது போலவுமிருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

வஸாபியின் புகைகலந்த செவிகேட்காதவர்களுக்கான தீவிபத்து எச்சரிக்கை கருவியை வடிவமைத்த ஜப்பானிய தொழில்நுட்பத்திற்கு அசாதாரண அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான   Ig நோபல் பரிசு 2011ல்  கிடைத்தது. இதன் எரிச்சல் அத்தனை துரிதமாக மூளைக்கு செல்லும்.

 வஸாபியின் எரிவு, மிளகாயிலிருக்கும் கேப்ஸைஸினைபோல் நெடுநெரம் தங்கி இருக்காமல் விரைவில் நாக்கிலிருந்து நீங்கிவிடும்  வஸாபி விழுதை உண்ணுகையில் கண்களிலும் மூக்கிலும் நேரடியாக பட்டுவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். வஸாபி மிகசிறிதளவே உணவில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் இதன் சுவை மறைந்திருந்து மிக குறைவாக தென்படுமொன்றல்ல, முழு உணவையும் முன்னின்று வழிநடத்திச்செல்லும் சுவை கொண்டதென்கிறார்கள் ஜப்பானியர்கள். மிககுறைந்த அளவிலேயெ இவ்விழுது எடுத்துக்கொள்ளப்படுவதால்  இதன் பக்கவிளைவுகள் வெகு அரிதாகவே இருக்கும். வஸாபியை பொருத்தவரை குறைவே மிகுதி.

துருவிய அல்லது தேய்த்த வஸாபியின் மணமும் சுவையும் நிலைபெற இரண்டே இரண்டு நிமிடங்கள் காத்திருந்து பின்னர் இவை பரிமாறப்படும். கண்ணீல் நீரை நிறைத்து மூக்கை தூண்டி எரிச்சலடைய வைத்து எரிவை உடனடியாக மூளையில் உணரச்செய்யும் வஸாபியின் சுவையை வேறெந்தெ சுவையுடனும் ஒப்பிடவே முடியாது.

வஸாபி பண்ணை

ஜப்பானுக்கு செல்லாதவர்கள் ஜப்பான் முழுவதும் பச்சைப்பசேலெனெ செழித்து வளர்ந்திருக்கும் வஸாபிக்காடுகள் இருக்கும் என கற்பனை செய்து கொள்ளவேண்டாம். வஸாபி அத்தனை எளிதில் வளரும் தாவரமல்ல.. நேரடியான சூரியஒளிபடாத ஆற்றங்கரைகளிலும் மலைச்சரிவுகளிலும் வேர்கள் தூயநீரில் மூழ்கி இருக்கும்படியே இவை வளரும். சாதாரணமாக நம்வீட்டு தோட்டங்களில் எலுமிச்சை கறிவேப்பிலை வளர்பப்தைபோல வஸாபியை வளர்க்கமுடியாது. இவற்றை கட்டுப்படுத்திய சூழலில் பசுங்குடில்களில் வளர்க்கும் முயற்சிகள் அவ்வளவாக  வெற்றி பெறவில்லை. வஸாபி கிலோ 160லிருந்து 250 டாலர்கள் வரை விலை இருக்கும். மிககுறைந்த அளவில் விளைச்சலும், அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான உலகளாவிய தேவையும் கொண்டது வஸாபி.

டோக்கியோவின் ஷிஜுவோகாவில் பல நூற்றாண்டுகளாக இயற்கையான வாழிடங்களில் வஸாபி பயிரிடப்படுகின்றது. ஜப்பானில் வருடா வருடம் விளையும்  வஸாபி கிழங்குகளில் சரிபாதி இங்கிருந்துதான் கிடைக்கின்றது  

நீரோடைகளின் பாறைகளின் மீதடுக்கப்பட்ட சரளைக்கற்களின் மீது மணலைப்பரப்பி வஸாபியை  பயிரிடும் பழமையான முறை டட்டாமி இஷி (tatami ishi) எனப்படும். இம்முறையில் நீர் இயற்கையாகவே வடிகட்டப்படுவதால் வஸாபியின் சுவையும் தரமும் முதல் தரத்திலிருப்பதாக சொல்லப்படுகின்றது.

 ஜப்பானில் இயற்கையாக விளையும் வஸாபி ஹான் வஸாபி எனப்படும்.(Hon wasabi). விதைகள் மூலம் நிலத்தில் பயிராகும் வஸாபி ஹடக் வஸாபி எனப்படும் (Hatake-wasabi) “hatake” என்றால் நிலமென்று பொருள். நிலத்தில் வளர்க்கப்படும் செடிகளிலிருந்து கிடைக்கும் வஸாபிக்கிழங்குகளை விடநீரில் வேர்களை பதித்து நிலத்தில் இலைகளுடன் இருக்கும் சவா செடிகளே (sawa wasabi) தரமான  வஸாபிக்கிழங்குக்ளை கொடுக்கின்றன தரம்குறைவான் ஓக்கா வஸாபியும் அதிகம் பயிரிடப்படுகின்றது (oka wasabi ). ஜப்பானிய வஸாபியில் தருமா வகை( Daruma  ) அழகிய வசீகரிக்கும் இளம் பச்சையிலும், மசுமா வசாபி (Mazuma ) நல்ல எரிவுடனுமிருக்கும்.  

ஜப்பானில் உணவுகள் மிகப்பிரபலமென்றாலும் உணவுகளுக்கு நாம் பெருந்தொகையை செலவிட வேண்டியதில்லை, பெரும்பாலும் ஒரு  முழு பாரம்பரிய உணவுக்கு  5 முதல்  10 அமெரிக்க டாலர் வரைதான் செலவாகும். வஸாபி உணவுக்கட்டணம்  2 லிருந்து 5 டாலர் வரையே இருக்கும்

துணை உணவாக மட்டுமன்றி வஸாபியின் மருத்துவகுணங்களுக்காகவும்  ஜப்பானியர்கள்  வஸாபியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். வஸாபியின் வேதிப்பொருட்கள் ஜீரணத்தை துரிதப்படுத்தி வயிற்றுப்புண்களை ஆற்றுதல், புற்றுநோய்கெதிராக செயல்படுதல், பற்சிதைவை  தடுப்பது,  ரத்தக்கட்டிகளின் சிகிச்சைக்கு என பல்வேறு முக்கிய மருத்துவப்பயன்களையும் கொண்டிருக்கின்றது ஒவ்வாமை நோய்களுக்கும் ஆஸ்த்மாவுக்கும் கூட வஸாபி மருந்தாகின்றது. வஸாபி கிழங்குகளில் அதிக அளவில் வைட்டமின் C, முக்கிய தாது உப்புக்கள்,பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் சத்துக்களும் உள்ளது

உலகநாடுகள் பலவற்றிலும் உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்குகந்த  வஸாபி தேவைக்கேற்ற அளவுகளில் விளைவிக்கப்படாததால்தான் வஸாபி போலிகளும் சந்தையில் அதிகம் புழங்குகின்றது.

பசுங்குடில்களில் வஸாபி

எளிதில் நோய்வாய்ப்படுவது , மிகத்தூய நீர் தேவைப்படுவது, கிழங்குகள் முற்றி அறுவடை செய்ய ஏறத்தாழ 2 வருடங்கள் தேவைப்படுவது ஆகிய காரணங்களினால்தான் வஸாபி அதிகம் பயிராவதில்லை. 2013 ல்  ஜப்பானில் மட்டும் 17.000 டன் வஸாபி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டும் உலகளாவிய இதன் தேவை பலமடங்கு அதிகமாவே இருந்துவருகிறது

புவியியல் ரீதியாக, வசாபி சந்தை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உட்பட ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வஸாபி சந்தை 279.7 மில்லியன் அமெரிக்க டாலர்களக மதிப்பிடப்பட்டிருக்கிறது, 2027’ல் இது 590 மில்லியனாக உயருமென்றும் அனுமானிக்கப்படுகிறது

தற்போது வஸாபி சாகுபடி அமெரிக்கா, கனடா, தைவான், ஆகிய நாடுகளிலும் வேகம் பிடித்திருக்கிறது. நியூஸிலாந்தில் நீரியல் வளர்ப்பில் LED விளக்கொளியில் வஸாபி க்ளோன்களை வளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

வஸாபி கிழங்குகளாகவும், தூளாக்கப்பட்டும், விழுதாகவும், துருவியும் சந்தையில் கிடைக்கின்றது. ஜப்பானுக்கு செல்லுகையில் அசல் வஸாபியை சுவைக்கும் அனுபவத்தை  தவறவிடக்கூடாது. வஸாபி ஐஸ்கிரீம்களாகவும், பியரில், ஜின்னில், சோளப்பொறியில், நூடுல்ஸீல், சிற்றுண்டிகளில்  கலக்கப்பட்டும் ஜப்பானில் பரவலாக கிடைக்கின்றது. வஸாபி விழுது கலக்கப்பட்ட பழரசங்களும் உண்டு. இனிப்பும் காரமும் வஸாபி மணமுமாக இளம்பச்சைநிற கிட்கேட் சாக்லேட்டுக்கள் ஜப்பானில் வெகு பிரபலம். வஸாபியின் இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் வஸாபி  பொம்மைகளும் ஜப்பானிய குழந்தைகளுக்கு பிரியமானவை.

வஸாபி கிட் கேட்

எந்திரனில் நீலகண்ணழகி ஐஸ்வர்யாவை வைரமுத்து’’ செந்தேனில் வஸாபி ‘’ என்றிருப்பார். அப்படியொரு வித்தியாசமான சுவைதானிது

யூ ட்யூபில் வஸாபி சாகுபடியைக் குறித்தும், விழுதின் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் சுவை குறித்தும் ஏராளமான காணொளிகள் கிடைக்கின்றன . இவற்றில் தலைமுறைகளாக வஸாபி பயிரிடும் குடும்பத்தினரின் பண்ணையைக்குறித்த  உணர்வுபூர்வமான   காணொளி இந்த இணைப்பில் இருக்கின்றது.

 https://www.youtube .com/watch?v=fhlklE9wBSY

வஸாபி ஐஸ்கிரீம்

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑