
இந்தியச்சமையல் அதன் பலவகைகளிலான வறுத்தலும், பொடித்தலும், பொரித்தலும், அரைத்தலும் உள்ளடக்கிய மசாலாமணம் வீசும் உணவு வகைகளுக்கு பிரபலமானது. இந்தியசமமையலில் பயன்படுத்தப்படும் அனைத்து மசாலாப்பொருட்களுமே செரிமானத்தை தூண்டுவதிலிருந்து புறறுநோய்க்கு எதிராக செயல்பபடுவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவ குணங்களையும் கொண்டிருப்பவை. இவற்றில் கிராம்பு மிக அதிகமாக அசைவ உணவு வகைகளில் உபயோகப்படுத்தபடும் ஒன்று.
ஆங்கிலப் பெயர்: ‘கிளாவ்’ (Clove)
தாவரவியல் பெயர்: ‘சிசிஜியம் அரோமாடிகம்’ (Syzygium Aromaticum)
தாவரக் குடும்பம்: ‘மிர்டேசியே’ (Myrtaceae)
வேறு பெயர்: லவங்கம், அஞ்சுகம், உற்கடம், கருவாய்க் கிராம்பு, சோசம், திரளி, வராங்கம்
சமையலில் நறுமணப் பொருளாகவும், சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுவது கிராம்பு. இந்தியா, சீனா உள்ளிட்ட பல நாடுகளில் 2,000 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் தாயகம் இந்தோனேசியாவின் மலுகா தீவுகள். மரமாக வளரும் இந்தத் தாவரத்தின் நறுமணம் உள்ள உலர்ந்த, விரியாத மலர் மொட்டுகளே கிராம்பு எனப்படுகிறது.
கிரேக்க மொழியில் ‘கிளாவஸ்’ (Clavus) என்றால் ஆணி என்று பொருள். கிராம்பு மொட்டுகள் துருவேறிய ஆணி போல இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

கிராம்பு குட்டையான கிளைகளை உடைய பசுமை மாறா மரம். 8 முதல் 12 மீட்டர் உயரம் வரை அடர்ந்து வளரும். பளபளப்பான இலைகளும் அடர்சிவப்பில் மூன்று மலர்கள் உள்ள சிறுசிறு கொத்துகளும் கொண்டது.
மலர் மொட்டுகள், இளஞ்சிவப்பாய் 1.5 முதல் 2 செ.மீ. வரை நீளம் இருக்கும்போது, கைகளால் அறுவடை செய்யப்படும். பூக்கள் 9 மாதங்களில் முதிர்ந்து கனியாகும். மரத்திலிருந்து ஆண்டு முழுவதும் கிராம்பை அறுவடை செய்யலாம்.

கிராம்பு மொட்டுகளில் குவிந்து உருண்டையாக இருக்கும் 4 இதழ்களும், வெளியில் சிறிய முக்கோண வடிவிலிருக்கும் 4 அல்லிகளும் இருக்கும். மொட்டுகளை உலர்த்தி, அவை துருவின் நிறத்தை (Rust color) அடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றன.
மொட்டு, இலை, தண்டு போன்றவற்றில் 72 முதல் 90 சதவீதம் இருக்கும் ‘யூஜினால்’ (Eugenol) என்னும் எண்ணெயே இதன் நறுமணத்திற்கும் மருத்துவக் குணங்களுக்கும் காரணம். இது தவிர, கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, டி, ஏ, போன்றவையும் உள்ளன.மேங்கனீஸ் சத்து கிராம்பில் அதிகம் உள்ளது.
கிராம்பு எண்ணெயின் பயன்கள்
நறுமணத்தைக்கொண்டு நோய்களை குணமாக்கும் Aromatherapy யில் கிராம்பு எண்ணெய் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. மலர் மொட்டுகளிலிருந்தும், இலைகளிலிருந்தும் குச்சிகளிலிருந்தும் கிராம்பு எண்ணெய் எடுக்கப்படுகின்றது.
செரிமானக் கோளாறு, கிருமி, பூஞ்சைத்தொற்று போன்றவற்றிற்கு மருந்தாகப் பயன்படுகிறது. பல் மருத்துவத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும், துத்தநாகத்துடன் கலக்கப்பட்டு பற்குழிகளை நிரப்பவும் பயன்படுத்தப்படுகிறது. வாசனைத்திரவியங்களிலும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளது. கிராம்பு புற்றுநோய்கெதிராகவும், ஈரல் பாதுகாப்பிலும் பெரும்பங்கு வகிக்கிறது.
கிராம்பு உற்பத்தியில் இந்தியா, மடகாஸ்கர், இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் சிறந்து விளங்கினாலும் ஆண்டிற்கு சுமார் ஒரு லட்சம் டன்களுக்கு மேல் உற்பத்தி செய்து இந்தோனேசியாவே முதல் இடத்தில் உள்ளது. மடகாஸ்கர், தான்ஸானி்யா மற்றும் ஜான்ஸிபர் நாடுகளே கிராம்பு ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றன,
Leave a Reply