லோகமாதேவியின் பதிவுகள்

Month: July 2021

மாலிக்

மலையாளத்தில் புகழ்பெற்ற டேக் ஆஃப் படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் மகேஷ் நாராயணன் இயக்கி, தொகுத்து, திரைக்கதை எழுதி 2021 ஜூலை 15ல் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் மாலிக்.

ஃபகத் ஃபாஸில், வினய் ஃபோர்ட் , திலீஷ் போத்தன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய பாத்திரங்களில். ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ் ஆகியோர் உடன் இருக்கின்றனர். ஒளி இயக்கம் சானு ஜான் வர்கீஸ், இசை கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் இசையால் மிக பிரபலமான சுஷின் ஸ்யாம்.

கேரளாவில் திருவனந்தபுரத்தில் கடலோர புறநகர்ப் பகுதியான பீமா பள்ளியில் (Beemapally)  தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படும் பெண்ணான சையதுன்னிசா பீமா பீவி, அவரது மகன் சையது சுஹாதா மஹீன் அபுபக்கர் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பீமா பள்ளி தர்கா மிக பிரபலமானது.

2009 ல் பொதுமக்களில் 42 பேர் படுகாயமுற்று 6 பேர் இறந்து, பல காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கமும் பணி மாறுதலும் செய்யப்பட  காரணமாயிருந்த பீமாபள்ளி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு ரமதபள்ளி என்னும் கிராமத்தை கட்டியெழுப்பி உருவானதுதான் மாலிக்.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மாப்பிள்ளா முஸ்லிம்களும் வசிக்கும் ரமத பள்ளி கடலோர கிராமத்தின் குற்ற உலகின் ராஜாவான அலிஇக்கா, அவரின் கிறிஸ்துவ காதல் மனைவி ரோஸ்லின், நடுத்தர வயது அலிஇக்காவான  ஃபகத் ஹஜ் புனித யாத்திரை கிளம்பும் நன்நாளில் கதை தொடங்கி விமானத்தில் நுழையும் போது  அவர் தடாவில் கைது செய்யப்படுவதிலிருந்து விரிந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது.

மகேஷ் நாராயணனின் விறுவிறுப்பான கதை சொல்லல்  படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது, ஆழமான, அட்டகாசமான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.

கொஞ்சம் நீளமான ஃப்ளேஷ்பேக். கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் எடவத்துறை கடலோரத்தை சேர்ந்த  சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் அலி, டேவிட், பீட்டர் என்னும் சிறுவர்கள் தாதா சந்திரனின் ஆளுகைக்கு கீழ் வந்து அவருக்காக  குற்றங்கள் செய்ய தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் சந்திரனிடமிருந்து பிரியும் அவர்கள் சந்திரனுக்கு எதிராக திரும்புவதுடன் தனியே  கள்ள கடத்தல  வியாபாரம் செய்ய தொடங்குகிறார்கள்.

சின்ன திருட்டுகளில் ஈடுபடும்  சிறுவன்   அலி, பின்னர் கடல் கடத்தலில் இறங்கி மெல்ல மெல்ல வளர்ந்து துணை ஆட்சியரின் நம்பிக்கைக்கு ஆளாகி குப்பைக்கூளங்களை அகற்றி அவ்விடத்தில் பள்ளி கூடம் அமைத்து நலப்பணிகளில் ஈடுபட்டு அலிஇக்கா என்னும் நாயகனாவதும், ஒற்றுமையாயிருந்த கிறிஸ்தவ முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அந்த விரோத நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும், துணைபோகும்  காவல்துறையும், இடையில் உண்டாகும் ஃபகத்தின் ரோஸ்லின் மீதான் காதலும் அவரைக் கொல்ல செய்யப்படும் முயற்சிகளும் அவருடனெயே இருந்து மெல்ல வளர்ந்து அரசியல்வாதியாகும் திலீஷ்போத்தனின் நயவஞ்சகமும், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கலவரமுமாக கதை வளர்கின்றது.

 குற்றப் பின்னணி, கடல் வணிகம், கள்ளக்கடத்தல் , எளிய மக்களின் நாயகன், அவர் மீதான கொலை முயற்சி, அவர் மகன் அநியாயமாக கொல்லப்படுவது, ஒற்றை மகள் என  கதை கமலின் நாயகனை கண்முன்னே கொண்டு வருகிறது.  இப்படியான திரைக்கதைகளில் இனி 70களின் காட் ஃபாதரும் 80 களின் நாயகனும் நினைவுக்கு வராமல் இருக்கும் சாத்தியமே இல்லை.

ஃபகத்தின் நடிப்பை குறித்து புதிதாக சொல்ல ஏதுமில்லை. மூன்றாவது முறையாக இயக்குநர் மகேஷுடன் இணைந்திருக்கும் ஃபகத் வழக்கம்போல அசத்தல். பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டிருக்கும் ஃபகத்தின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு மாலிக். 

திரைஉலகின் பொற்கதவுகளை திறந்து நுழைந்திருக்கும் 24 வயதே ஆகும் நிமிஷா சஜயனுக்காக  காத்திருக்கும் திரைக்களங்களையும் அவர் அடையப்போகும் உயரங்களையும் நம்மால் இப்போதே கணிக்கமுடிகின்றது. மகன் இறக்கும் காட்சியில் பள்ளிவாசலில் அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் கதறும் கதறலுடன் அவர்  வயதையும் அவரது நடிப்பனுபவங்களையும் எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது.  ஃபகத்துக்கு இணையாக நடித்து இருக்கிறார்.

வழக்கமாக ஆங்காங்கே தலைகாட்டும் திலீஷ் போத்தன்  இதில் படம் நெடுகிலும் வருகிறார், சிறப்பான நடிப்பையும் அளித்திருக்கிறார், காவலதிகாரியாக இந்திரன்ஸ். எந்த முகமாறுபாடுமின்றி அரசியல்வாதிகளின் ஆணைக்கு துணைபோகும், எந்த சிந்தனையுமின்றி சிறைக்குள்ளே  அநீதி இழைக்கும் காவலதிகாரிகளின் ஒட்டுமொத்த பிம்பமாக அவரை காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சிகளற்ற முகத்துடன்   பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வினய் ஃபோர்ட் மிக சிறப்பான,இயல்பான நடிப்பு.  

கூரான, கவனிக்க வைக்கும் வசனங்கள். குறிப்பாக திலீஷ் போத்தனிடமும், துணை ஆட்சியரிடமும் பேசுவதும் , வினயிடம்   கைகளை அகல விரித்தபடி அனைத்துலக மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தழுவ நிற்கும் ஏசு கிறிஸ்துவின் சிலையை காட்டியும்  ஃபகத் பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பானவை.

ஏறக்குறைய மூன்று மணி நேர படத்தின் நீளம்,பெரும்பாலும் யூகிக்க முடிகிற திரையோட்டம்,  நீளமான பிளாஷ்பேக் ஃபகத்தின் மகனின் இறப்பை சரியாக விளக்காமல் போனது, கமலின்  நாயகனையும், அனுராக் காஷ்யப்பின் சில படங்களையும் அதிகம்  நினைவூட்டுவது ஆகியவை இப்படத்தின் சறுக்கல்கள் எனக்கொண்டால், நல்ல இயக்கம், சிறப்பான திரைக்கதை  தற்கால அரசியல் மற்றும் சமூக அமைப்பு, அதன் பகடைக்காய்களாக மைனாரிட்டி மக்களின் பிரச்சனைகளை அரசியலாளர்கள் பயன்படுத்துவது குறித்த கதை, மற்றும் முக்கிய நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக  பாராட்டுக்கு உரிய படம்தான்

மாலிக் , நிச்சயம் பார்க்க வேண்டிய மலையாள நாயகன்

மூன்று சகோதரிகள்

 நியூயார்க்கின் வடக்கு பகுதியில் வாழ்ந்த 6 இனக்குழுக்களின் ( Cayuga,Mohawk, Oneida,Onondaga,Seneca and  Tuscarora.) கூட்டான பழங்குடியமைப்பு   இரா குயிஸ் (Iroquois)  வேட்டையாடிகளும், விவசாயிகளுமான  மக்களை கொண்டது. இவர்களனைவருக்குமான பொதுவான சட்டங்களும் வரையறைகளும் உள்ளன.

இப்பழங்குடியினரின் தொன்மங்களிலொன்று  இரட்டை ஆண்குழந்தைகளின் மகப்பேறில் இறந்த ஆகாயதேவதையின் உடலிலிருந்து மகன்களுக்கு உணவளிக்கும் பொருட்டு முளைத்த மக்காச்சோளம், பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் செடிகள், பின்னர்  அம்மக்களனைவருக்கும் உணவளித்ததென்கிறது.

 இணைபிரியாத மூன்று சகோதரிகள் பற்றிய இம்மக்களின் மற்றொரு தொன்மம்    டியோ-ஹா-கோ (Deo-ha-ko) என்றழைக்கப்படும் இச்சகோதரிகள்  இம்மூன்று பயிர்களையும் காப்பதாக சொல்லுகின்றது.

மக்காச்சோளப் பயிர் பூமியில் விளைவிக்கப்பட்ட தானியப் பயிர்கள்களில் மிகப்பழமையானது.  பலவிதமான பழங்களை அளிக்கும் ஸ்குவாஷ் கொடியின் காய்களும் கனிகளும் பலநாட்களுக்கு சேமித்து வைக்கும் படியான கடினமான வெளித்தோலை கொண்டவை. கிமு 20 ஆம் நூற்றாண்டிலேயே மெசோ அமெரிக்கர்களால் பயிரிடப்பட்ட ஆரம்பகால பழக்கப்பட்ட பயிர்களில்  பீன்ஸ் செடியும் இருக்கிறது. புரதம் நிரம்பிய இதன் காய்களும் விதைகளும் இன்றுவரையிலும் உலகெங்கிலும் மிக முக்கியமான உணவு பொருளாக இருந்து வருகிறது,

இராகுயிஸ் மக்களே மூன்று சகோதரி பயிர்களென்னும் மக்காச்சோளம் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பழங்களை ஒன்றாக பயிரிடும் முறையை உருவாக்கியவர்கள். ஒன்றுக்கொன்று துணையாகவும், பயனுள்ளதாகவும் இவை மூன்றும் இருந்ததால் இவை சகோதரி பயிர்கள் என அவர்களால் அழைக்கப்பட்டன. இப்பயிரிடும் முறையை பிற பழங்குடி இனங்களும் கற்றுக்கொண்டு இம்முறையை பரவலாக்கினர்

பீன்ஸ் பயிர்கள் தென்அமெரிக்காவிலும்,மத்திய அமெரிக்காவில் ஸ்குவாஷ் பயிர்களும் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின. இவற்றிற்கு ஆயிரமாண்டுகளுக்கு பின்பே மக்காச்சோள பயிர் உருவானது என்பதால் இம்மூன்றும் எப்போதிலிருந்து ஒன்றாக பயிரிடப்பட்டன என்று துல்லியமான கணக்குகள் கிடைக்கவில்லை. எனினும் தொல்லியல் ஆதாரங்கள் இம்மூன்று பயிர்களும் சுமார் 3500 வருடங்களுக்கு  முன்பிருந்து துணை பயிர்களாக விளைவிக்கப்பட்டதற்கான  சான்றுகளை அளிக்கிறது.

பீன்ஸ் கொடி பற்றி படர மக்காச்சோள செடி  தனது உயர்ந்து வளரும் தண்டுகளை அளிக்கிறது, பீன்ஸ் கொடி தனது வேர் முடிச்சுக்களில் இருக்கும் பாக்டீரியாக்களால் நிலத்தின் நைட்ரஜன் சத்தை அதிகரிக்கிறது, பூசணிக்காய் குடும்பத்தை சேர்ந்த ஸ்குவாஷ் செடி நிலத்தில் பரவிப் படர்ந்து தனது அகலமான இலைகளால் நிலத்தை மூடி, ஈரத்தை வேர்களுக்கடியில் சேமித்து, களைகள் முளைக்கா வண்ணம் செய்கிறது.

30 செமீ உயரமும் 50 செமீ அகலமமும் கொண்ட தட்டையாக்கப்பட்ட மண் மேடுகளின் நடுவில்  ஏராளமான மக்காச்சோள விதைகள் விதைக்கப்பட்டு அவற்றிற்கு உரமாக மீன்களும் புதைக்கப்படுகின்றன. 15 செமீ உயரத்துக்கு மக்காச்சோள பயிர்கள் வளர்ந்ததும் அவற்றின் அடியில் பீன்ஸ் மற்றும் ஸ்குவாஷ் பயிர்களின் விதைகள் அடுத்தடுத்து விதைக்கபட்டு கொத்துக்கொத்தாக இம்மூன்று பயிர்களும் வளர்க்கப்படுகின்றன. இப்பயிரிடும் முறை பல்லாயிரக்கணக்கான வருடங்களாக எந்த மாற்றமுமின்றி  பின்பற்றப்படுவருகின்றது

வடஅமெரிக்காவின் வறட்சியான பகுதிகளில் மட்டும் நான்காவது சகோதரியாக ஸ்குவாஷ் மற்றும் பீன்ஸ் பயிர்களில் மகரந்த சேர்க்கை செய்யும் வண்டுகளை கவரும் மலர்கள் கொண்ட செடியான  Cleome serrulata வையும் பயிரிடுகிறார்கள். சிலநாடுகளில்  மூன்று சகோதரிப்பயிர்களுடன் , தோட்டத்தின் வடக்குப் பகுதியில் இச்செடிகளுக்கு நிழல் தராதவாறு சூரியகாந்தி செடிகளும் வளர்க்கப்படுகிறது.

Cleome serrulata

மக்காச்சோளம் வளருகையில் மண்ணின் நைட்ரஜன் சத்தை முழுவதுமாக உறிஞ்சி கொண்டுவிடும். மண்ணில் குறையும் நைட்ரஜனை பீன்ஸ் பயிர் மீண்டும் கொண்டு வரும், மண்ணில் இருக்கும் ஈரம் காய்ந்துவிடாமல்  தனது அகலமான் இலைளால் காபந்து செய்து  கூடவே வளரும் ஸ்குவாஷ் செடிகள் மக்காச்சோளம் உண்டாக்கும் மண் அரிப்பையும் தடுக்கின்றன. பயிர் சுழற்சியால் மட்டுமே சாத்தியமாகும்  இழந்த சத்துக்களை, மண்ணில் மீண்டும் நிறைக்கும் முறையை, பயிர் சுழற்சி இல்லாமலேயே மூன்று சகோதரி பயிர்கள் கொடுக்கின்றன

கூட்டு பயிரிடும் முறையான இது இன்றளவும் உலக நாடுகள் பலவற்றில் சிறு விவசாயிகள் பின்பற்றும் வெற்றிகரமான ஒரு விவசாய முறையாக இருக்கிறது. அமெரிக்காவில் மிக பரவலாக இருக்கும் இம்முறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு மூன்று சகோதரி பயிர்களின் சித்திரம் செதுக்கப்பட்டிருக்கும் அமெரிக்க  நாணயமொன்று 2009 ல் வெளியிடப்பட்டது.

அமெரிக்க பழங்குடியினரின் விவசாய முறையான இதிலிருந்து கிடைக்கும் மூன்று விளைபொருட்களில் மக்காச்சோளத்தில் இருந்து ஸ்டார்ச்சும், பீன்ஸில் இரருந்து புரதமும், ஸ்குவாஷ் பழங்களிலிருந்து வைட்டமின்களும் கிடைப்பதால் சரிவிகித உணவினால் உடலாரோக்கியமும் இக்கூட்டு விவசாயமுறையினால் மண்வளமும் மேம்படுகிறது. அமெரிக்க பழங்குடியினரின் இந்த முறைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்றும் அமெரிக்காவின் நன்றி தெரிவிக்கும் நாளில்  தயாரிக்கப்படும் சிறப்பான உணவுகளில் இம்மூன்று விளைபொருட்களும் கலந்து இருக்கும்.

நஞ்சை வாயிலே கொணர்ந்து! .’

அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன்  இருந்தார்.

சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று  விஷமளிக்கும் பணியாளரை அழைத்துவந்தான். கைதி அவரை நேராக நிமிர்ந்துபார்த்து ‘’ நான் இப்போது என்ன செய்யவேண்டும்‘’ என  எந்த தயக்கமும் பதட்டமுமின்றி கேட்டார். கையிலிருந்த விஷக்கோப்பையை காட்டி ‘’இதை  முழுவதுமாக அருந்திவிட்டு மெல்ல நடந்துகொண்டிருங்கள், கால்கள் கனக்க துவங்கியதும் அமர்ந்துகொள்ளலாம்’’ என்று அவர் பதிலளித்தார்.

எந்த மாறுபாடும் இல்லாத அதே மலர்ந்த முகத்துடன் ‘’நான் இதை அருந்தும் முன்பு ஏதேனும் சொல்லலாமா அதற்கு அனுமதியுண்டா’’ என்று கைதி கேட்டபோது. ’’தேவையான நேரத்தை எடுத்து கொள்ளுங்கள்’’ என்று பதில் வந்தது,

கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு ‘’இப்பூமியில் இருந்த மகிழ்ச்சி கல்லறைக்கப்பாலும் தொடரட்டும் என்று வேண்டிக்கொள்ளுவோம் இதுவே என் பிரார்த்தனை இது நிறைவேறட்டும்’’ என்றவர் எந்த தயக்கமுமின்றி கோப்பையிலிருந்த ஹெம்லாக் நச்சுத்தாவரத்தின் சாறான அந்த விஷத்தை அருந்தினார்

அதுவரையிலும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த அவரது நண்பர்களும் மாணவர்களும் அவர் கடைசித்துளி விஷத்தையும் அருந்தி முடித்தபோது கட்டுப்பாடுகளை  இழந்து கதறி அழத்துவங்கினர்

ஒருசிலர் அழுதபடி அந்த அறையிலிருந்து வெளியேறினர், இன்னும் சிலர் முகத்தை துணியினால் மறைத்தபடி அத்தனை நல்ல மனிதரை என்றென்றைக்குமாக இழந்துவிடப் போவதை எண்ணி மீண்டும் மீண்டும் விம்மி  அழத்துவங்கினர்.  

’’என்ன இது, ஏன் இப்படி கண்ணீர் விடுகிறீர்கள்?  இப்படி நடக்கக்கூடாதென்றுதான் பெண்களை முன்பே வெளியேறச் சொன்னேன் இப்போது நீங்களும் அழுதால் எப்படி?. மரணமென்பது அமைதியாக அல்லவா நிகழவேண்டும்? என்று அவர் சொன்னதும். அருகிலிருந்த அனைவரும் தங்களை சமநிலைப்படுத்திக்கொண்டு அமைதியானார்கள்.

அந்த அறையிலேயே மெல்ல நடந்துகொண்டிருந்தவர், கால்கள் கனத்து, குளிரத் துவங்கியதும்  அங்கிருந்த பீட்த்தில் அமர்ந்தார்.  தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக்கொண்ட அவரை உதவியாள், முதுகை சாய்த்து மல்லாந்து படுக்க உதவினான்.

 அவரது பாதங்களை தொட்டும் தேய்த்தும் அந்த தொடுகையை உணர முடிகின்றதா என உதவியாள் கேட்டபோது இல்லையென பதிலளித்தார். பின்னர் கணுக்காலுக்கு மேலே ஆடுசதையை மெல்ல கிள்ளியபோதும் அதை உணரமுடியவில்லை என்றவரின் முழங்காலுக்கு மேலும் குளிர துவங்கியதும் ’’இனி விஷம் நேராக இதயத்துக்கு சொன்று விடும்’’ என்றான்  அந்த அடிமை சிறுவன்.

 கை மணிக்கட்டுகளும் குளிர்ந்து விரைக்க துவங்கியபோது தன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி ’’கிரிட்டோ, நான் அஸ்கிலிபியஸுக்கு ஒரு சேவலை நேர்ந்து கொண்டிருக்கிறேன், அதை மறக்காமல் நிறைவேற்றிவிடுகிறாயா’’  என்றார். ‘’நிச்சயம் செய்துவிடுகிறென் வேறு எதாவது சொல்ல வேண்டுமா’’ என்ற அவரது மாணவன் கிரிட்டோ கேட்ட கேள்விக்கு முழுவதும் குளிர்ந்துவிட்ட அவரிடமிருந்து பதில் வரவில்லை ,கண்கள் நிலைத்துவிட்டிருந்த்து. 

 கிரிட்டொ  அவரது வாயையும் கண்களையும் மெல்ல மூடினான். அத்துடன்  முடிந்தது ஆகச்சிறந்த மெய்யியலாளரும், மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்ந்தவரும், பகுத்தறிவாளருமான  சாக்ரடிஸின் வாழ்வு.

சாக்ரட்டிஸ் மரண தண்டனை பெற்று நஞ்சருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளை அப்போது உடன் இருந்த அவரது நண்பனும் மாணவனுமாகிய பீடோ உரையாடல்கள் மூலம்  எக்கிகிரேட்டஸ் என்பவருக்கு விளக்குவது போல பிளேட்டோவால் எழுதப்பட்ட நூலான ’பீடோ’வில் இவையனைத்தும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.  ஹென்றி அரிஸ்டிபஸ் என்பவரால் 1160’ல் கிரேக்க மொழியிலிருந்து இலத்தின் மொழியிலும்,  பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய மொழிகளிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்ட  இந்நூல் சாக்ரட்டீசின் மாணவர் பிளேட்டோவின் பெரும் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.

சிறுவனாக இருந்தபோதிலிருந்தே கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்த சாக்ரட்டிஸினால் கேள்விகள் வழியாகவே பிறரின் சிந்தனைகளை தூண்டிவிடும் ’’சாக்ரட்டிஸ்  தத்துவ முறை’’ உருவாகி இருந்தது.   அவரது மரணத்துக்கு பிறகும் அவரது உடலைப் புதைப்பதா எரிப்பதா?, இறந்த பிறகு உயிரின் நிலை என்ன? எங்கு போகும்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.

சாக்ரட்டீஸ்   (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15)   பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸில் பிறந்த ஒரு அறிஞர், ஆசிரியர் மற்றும் மெய்யியலாளர். 469 அல்லது 470 இவற்றில் எந்த ஆண்டு இவர் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள்  கிடைக்கப்பெறவில்லை கேள்விகளை கேட்டு சிந்தனையை தூண்டும்  அவரது சாக்ரட்டிஸ் முறையானது, தர்க்கம் மற்றும் தத்துவத்தின் மேற்கத்திய அமைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளரும் இவரே..

 சிற்பியான சோப்ரோனிஸ்கஸுக்கும் மருத்துவச்சியான ஃபீனாரீட்டேவுக்கும்  பிறந்த சாக்ரடீஸ், அடிப்படை கிரேக்கக் கல்வியைப் பெற்ற பின்பு இளம் வயதிலேயே தனது தந்தையின் தொழிலை  கற்றுக்கொண்டார்.  தனது வாழ்க்கையை தத்துவத்திற்கு அர்ப்பணிப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் சிற்பியாகவும் பணியாற்றினார்..

 சாக்ரடீஸ்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மிர்ட்டோவின் மூலம் இரண்டு மகன்கள். மிர்ட்டோவின்  மரணத்துக்குப் பிறகு அவரைக்காட்டிலும் மிக இளையவரான ஸாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஸாந்திப்பிக்கு பிறந்த மற்றொரு மகனுமாய் லாம்ப்ரோக்கிள்ஸ், சோஃப்ரோனிஸ்கஸ் மற்றும் மெனெக்செனஸ் (Lamprocles, Sophroniscus , Menexenus) ஆகிய மூன்று மகன்களுக்கு தந்தையான சாக்ரட்டிஸுக்கு .குடும்ப வாழ்வில் அக்கறை  காட்டுவதை விட ஏதெனிய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மையாக  இருந்திருக்கிறது. இதனால் கணவர் மீது ஸாந்திப்பிக்கு மனக்குறை இருந்திருக்கிறது.

ஸாந்திப்பியுடன் சாக்ரட்டிஸ்

 ஏதென்ஸின் ஆண்கள் 18 லிருந்து 60 வயதுக்குள் எப்போது அழைத்தாலும் ராணுவத்தில் பணிபுரியவேண்டும் என்னும் சட்டமிருந்தது. சாக்ரடிஸும் முகமூடி அணிந்த கவச காலாட்படையான ஹாப்லிட்’ல் (hoplite) ல் பணிபுரிந்தார் 

Hoplite

பண்டைய கிரேக்கத்தில் மிகப்பெரிய ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்த ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவிற்கும் கிமு 431-405 வரை நடைபெற்ற பெலொபோனிஷிய போரில் ஈடுபட்டிருந்தபோது சாக்ரட்டிஸ், அல்சிபயடீஸ் என்னும் புகழ்பெற்ற  ஏதெனிய தளவபதியின் உயிரை போர்க்களத்தில்  காப்பாற்றினார் 

முடிந்தவரை அரசியல் ஈடுபாட்டைத் தவிர்த்துவந்த சாக்ரட்டிஸ், பெலொபோனிஷியப் போரின் முடிவைத் தொடர்ந்து  இருதரப்பிலிருந்தும் நண்பர்களை தேடிக்கொண்டார். கிமு 406’ல்  பண்டைய கிரேக்க ஜனநாயகமான டெமோக்ரேஷியாவின் (Demokratia) மூன்று கிளைகளில் ஒன்றான, எக்லீசியா சட்டமன்றத்தில் பணியாற்றும்படி  (Ekklesia) சாக்ரடிஸுக்கு அழைப்பு வந்தது.

அவர் அங்கு பணியாற்றுகையில், ஸ்பார்டாவிற்கு எதிரான போரில் இறந்தவர்களை மீட்கத் தவறியதற்காக ஏதென்ஸின் உயர்மட்ட ஜெனரல்களின் குழுவை குற்றம் சாட்டும் ஒரு சட்டவிரோத முன்மொழிவுக்கு சாக்ரடீஸ் தனி ஒருவராக எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் சாக்ரடீஸின் சட்டமன்ற சேவை முடிந்ததும் அந்த தளபதிகள் தூக்கிலிடப்பட்டனர்.

 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு,  ஏதெனியன் அரசு சாக்ரடீஸை  ’’குற்றத்தின் நிழல் கூட படிந்திருக்காத ’’ என்று பிளேட்டோவால் குறிப்பிடப்பட்ட மிக முக்கிய பிரமுகரும், நேர்மையாளருமான லியோனின் கைது மற்றும் மரணதண்டனையில் பங்கேற்குமாறு கட்டளையிட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார் இதன் பொருட்டு அவருக்கு அரசின் கட்டளைகளை அவமரியாதை செய்த குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் சாக்ரடீஸைத் தண்டிப்பதற்கு முன்னர் கொடுங்கோலர்கள் அதிகாரத்திலிருந்து இறங்கினர்,

தத்துவ சிந்தனைகளில் தீவிரமாக ஆழ்ந்த சாக்ரட்டிஸ் பலருடன் கலந்து உரையாட துவங்கினார். ஏதென்ஸின் மூலை முடுக்குகளிலும் தெருக்களிலும் அவரது உரைகளை கேட்கவும் விவாதங்களில் பங்கேற்கவுமாக எப்போதும்  இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. நண்பரும் நாடக ஆசிரியருமான அரிஸ்டோஃபேனியஸின் முகில் என்னும் நாடகமொன்றில் கோமாளி வேடமிட்டு  வேடிககை பேச்சுக்களை போலவே உயர்ந்த தத்துவங்களை கூறிய சாக்ரட்டிஸ்  மேலும்  புகழ்பெற்று பரவலாக அறியப்பட்டார். சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது ஏதென்ஸ் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது.

ஏதெனிய இளைஞர்களுடன் சாக்ரட்டிஸ்

399’அம் ஆண்டில் ஏதெனிய கடவுள்களை மதிக்கத் தவறியதற்காகவும், ஓரினச்சேர்க்கையாளரென்றும், இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும், இளைஞர்கள் மனதை கலைத்து, அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் 70 வயதாயிருந்த சாக்ரடீஸ் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாக  பெரும்பாலான  வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.

நீதிமன்றம்

 இந்த வழக்கு ஏதென்ஸின் மையப்பகுதியில் நடந்தது, பார்வையாளர்கள் கூடியிருந்த  அக்கூடத்தில் நீதிபதிகள். சாக்ரடீஸை குற்றம்சாட்டிய அம்மூவருக்கும்  தங்கள் வழக்கை முன்வைக்க மூன்று மணிநேரம் ஒதுக்கினார்கள், அதன் பிறகு, சாக்ரட்டிஸ் தனது தரப்பினை விளக்கவும் மூன்று மணிநேரம் அளிக்கபட்டது. கிரேக்க நீதி மன்றங்களில் நேரக்கணக்கு நீர்க்கடிகாரங்களின் மூல்ம் கணக்கிடபப்ட்டது

நீர்க்கடிகாரம்

 அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கும்படி  வாதிட்டனர். சாக்ரடீஸுக்கு தனது தரப்பை சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டபோது, தனக்கு தண்டனை அளிப்பதற்கு பதில் தனது  செயல்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்ற கிண்டலான பரிந்துரையை வழங்கினார்.  சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது.  இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிக்குழுவினரிடம்  அவரது குற்றத்தின் பேரில் வாக்களிக்குமாறு கேட்கப்பட்டது.

மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகளில் வட்டுக்களை செலுத்தி வாக்களிக்கும் முறையில் நீதிக் குழுவின் 501 ஆண்களில் 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர்.  குற்றம்சாட்டியவர்களும் சாக்ரடிஸும் அவரவர் தரப்பை தொகுத்து முன்வைத்த இறுதிக்கட்ட விசாரணையின்போது சாக்ரட்டிஸ் தனக்கு அபராதம் விதிக்கும்படியும், எதிர்தரப்பினர் மீண்டும் மரணதண்டனையையும் பரிந்துரைத்தனர். மீண்டும் வாக்கெடுப்பு நடத்தபட்டபோது, 300 வாக்குகள் மரணதண்டனையையும் 140 வாக்குகள் அபராதத்தையும் முன்மொழிந்ததால்,  குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட சாக்ரடீஸுக்கு நச்சு ஹெம்லாக் சாற்றை குடித்து இறக்கும்  மரணதண்டனையை அந்நீதிமன்றம் பரிந்துரைத்தது.

வாக்களிக்க பயன்படுத்தப்படும் வட்டுக்கள்

டிலோஸ் என்னுமிடத்தில் ஏதென்ஸின் தெய்வங்களுக்கு திருவிழா நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் இந்த மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. பூசைக்குரிய புனிதப் பொருட்களுடன் ஏதென்ஸில் கிளம்பியிருந்த கப்பல் டிலோஸ் சென்று திரும்பி வரும் ஒரு மாத நோன்புக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இல்லாததால் மரணம் ஒரு மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு, சாக்ரடீஸ் அருகிலுள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்,.

சாக்ரட்டிஸ் இருந்த சிறை

 அந்த சமயத்தில் அவரது நண்பர்கள் சாக்ரட்டிஸை  ஏதென்ஸிலிருந்து தப்பிக்கவைக்க   காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் முயன்றார்கள் ஆனால் தான்  அரசின் இந்த தீர்ப்பை மதிப்பதாகவும் இறுதிவரை சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாகவே இருக்க போவதாகவும் கூறிய  சாக்ரட்டீஸ் அதற்கு உடன்படவில்லை. தனது கடைசி நாட்களிலும் அவரது உடல்மொழியிலும் நடவடிக்கைகளிலும், பேச்சிலும் எந்த அச்சமும் கலவரமும், கவலையும் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்வுடனும் அவர் இருந்ததாக  பிளேட்டோ கூறுகிறார்.

பிளேட்டோ தனது  Apology of Socrates * நூலில்  விசாரணையின் போது தனது நற்பண்புகளையும், தான் குற்றமற்றவரென்பதையும் உணர்வுபூர்வமாக   நடுவர் மன்றத்தின் முன் விவரித்த சாக்ரட்டீஸ், இறுதியில் அவர்களின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகிறார். இந்த விசாரணையின் போதுதான். சாக்ரடீஸ் இப்போது புகழ்பெற்றிருக்கும் சொற்றொடரான “ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது” என்று கூறினார்

 ஏதென்ஸ் அரசியலில் பழைய கணக்குகளை தீர்க்கவும், தனிமனித மேம்பாட்டுக்கும், கைதிகளை கொல்லவும், தற்கொலைக்கும் அப்போது ஹெம்லாக் நஞ்சே பயன்படுத்தபட்டது.  கேரட் குடும்பமான ஏபியேசியேவை சேர்ந்த ஹெம்லாக்கின்  தாவர அறிவியல் பெயர் கோனியம் மேகுலாட்டம். (Common Hemlock; Conium maculatum). கோனியம் எனும் சொல்லுக்கு கிரேக்க மொழியில் தலைசுற்றல் என்று பொருள் இந்த செடியின் நஞ்சு உடலில் தோற்றுவிக்கும் விளைவுகளில் பிரதானமானதை  இது குறிப்பிடுகின்றது மேகுலாட்டம் என்பது புள்ளிகள் என்ற பொருளில் செடியின் மீதுள்ள ஊதா புள்ளிகளை குறிப்பிடுகிறது.

நச்சு ஹெம்லாக் என்று அழைக்கப்படும் இத்தாவரம்  வளர்ந்த இரண்டாம் வருடம் மலர்களை கொடுக்கும் பையென்னியல்  (Biennial)   வகையை சேர்ந்தது முதல் வருடத்தில்   கொத்துமல்லியை போல் இருக்கும் இலைகள் மட்டுமே செழித்து வளரும், சதைப்பற்றான வேர்கள் பழுப்பு நிறத்தில் கேரட் வடிவில் இருக்கும். .உள்ளே வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் மேல் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் புள்ளிகளும், தீற்றல்களும் காணப்படும். அந்த ஊதாநிறமே இச்செடியின் நச்சுத்தன்மையை சொல்லுவது போலிருக்கும்

 இரண்டிலிருந்து மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடியின்  தட்டையான குடை போலிருக்கும் மஞ்சரியில் சிறு வெண் மலர்கள் செறிந்திருக்கும்.  ஒவ்வொரு செடியும், கடும் நஞ்சுள்ள  நுண்விதைகளை ஏராளமாக உருவாக்கும் .

ஹெம்லாக் செடி

 மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் நியூசிலாந்தில்  பரவியிருக்கும் இச்செடி நீர்நிலைகளின் அருகிலும் சாலையோரங்களிலும் ,தரிசு நிலங்களிலும் சாதாரணமாக காணப்படும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நஞ்சு.

எல்லா பாகங்களிலும் நஞ்சு நிறைந்திருக்கும்  இந்த தாவரத்தின்  எட்டு முக்கியமான ஆல்கலாய்டுகளில்  கொனைன், சி-கொனிசைன், கொன்ஹைட்ரைன், சூடோகொன்ஹைட்ரின் மற்றும் என்-மெத்தில் கொனைன் ஆகிய ஐந்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. (coniine, c-coniceine, conhydrine, psuedoconhydrine and N-methylconiine.). புகையிலையின் நிகோட்டினுக்கு இணையான வேதிக்கட்டமைப்பை கொண்டிருக்கும் கொடிய நஞ்சான  கொனைன் மிகச்சிறிய அளவிலேயே மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி, சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில்   மூச்சுதிணறலில் மரணத்தை உண்டாக்கும் .

இவை வளரும் நாடுகளில் மிகச் சாதாரண   களைச்செடிகளைப்போலவே காணப்படும் இவற்றை குறித்த அடிப்படை அறிதலாவது இருப்பது அவசியம். இலைகள் கசக்கப்படுகையில், ஒவ்வாமை அளிக்கும் நாற்றம் உண்டாகும். இவற்றை  தொட்டாலோ, இதன் மகரந்ததுகள்களை நுகர்ந்தாலோ, இதன் வாசனையோ  முகர்ந்தாலோ எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இவை கேரட் அல்லது பார்ஸ்லி என்று தவறாக அடையாளம் காணப்பட்டு உணவாக எடுத்துக்கொள்ளும் அசந்தர்ப்பங்களில் தான் ஆபத்தாகின்றது.

நீர் ஹெம்லாக் எனப்படும் மற்றோரு தாவர இனமான சிகுட்டா தாவரங்கள்  (water hemlocks-Cicuta species) நச்சு ஹெம்லாக்கை போலவே இருந்தாலும் அவற்றின் இலைநரம்பமைப்பை கொண்டு அவற்றை வேறுபடுத்தலாம் நீர் ஹெம்லாக்குகளும் நஞ்சு நிறைந்தவையே. 

 சாக்ரட்டிஸ் நஞ்சூட்டி கொல்லப்பட்ட நிகழ்வு  வரலாற்று ஆய்வாளர்களுக்கு எத்தனை முக்கியமானதோ, அதற்கு இணையாக  இது மருத்துவ உலகிலும் சர்ச்சைக்குரியதாவே இருக்கின்றது

சாக்ரடிஸுக்கு அளிக்கபட்ட நஞ்சு ஹெம்லாக் தாவரத்தின் சாறு அல்லது அதன் இலைகளை காய்ச்சி எடுத்த பானமென்றுதான் பிளேட்டோவின்  நூலிலிஉர்ந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பீடோ  நூலில்  சாக்ரட்டிஸின் மரணத்தருவாயை பற்றிய விளக்கங்களில் முதலில் அவரின் கால்கள் கனத்து, விரைத்து, குளிர்ந்துபோவதும், பின்னர் உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து தசை செயலிழப்பு மேல் நோக்கி செல்வதுமாக, மிகச்சரியாக  ஹெம்லாக்  நஞ்சின் விளைவுகள்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.   

  இந்த நூல் சாக்ரடிஸின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு பின்னர் அப்போது 29 வயதாயிருந்த அவரது மாணவரான  பிளேட்டொவினால் எழுதப்பட்டது.ஆனால் சாக்ரடிஸ் விஷமருந்தி மரணித்த போது பிளேட்டொ அவரருகில் இருக்கவில்லை அப்போது உடனிருந்த அவரது சகமாணவரான பீடோ மற்றூம் கிரிட்டோ ஆகியோரின் விவரணைகளை அடிப்படையாக கொண்டே பிளேட்டோ அந்நிகழ்வை எழுதினார்.

 கிரேக்க மொழியில் எழுதப்பட்டு லத்தீன மொழியாக்கம் செய்யப்பட்ட  அதன் சில பத்திகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது , இறப்பின் போது நிகழந்தவையும் நஞ்சின் பெயரும் கிரேக்க மொழியின் உபயோகப்படுத்தப்பட்டிருந்த  அதே சொற்களின் பொருளில் மொழியாக்கம் செய்யபட்ட்து.

விஷம் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணம் சம்பவித்ததும், உயிரிழப்பிற்கு முந்திய கணம் வரை சாக்ரட்டிஸ் நினைவுடன் இருந்ததும், கைகளை அசைத்து முகத்தின் துணியை அகற்றியதும்,  பேசிக்கொண்டிருந்ததும் எல்லாம் ஹெம்லாக் நஞ்சின் இயல்புகளைத்தான் காட்டுகின்றது

 ஆனால்  சாக்ரட்டிஸுக்கு கடும் வலியோ, குமட்டலோ,  வாயுமிழ்தலோ, வலிப்போ வந்ததாக பிளேட்டொ  குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால், அவருக்கு அளிக்கப்பட்டது ஹெம்லாக் சாறாக இருக்க வாய்ப்பில்லை என்று ஒருதரப்பும் அப்போது கிரேக்க அரசியல் கொலைகளில் பலவற்றிற்கு காரணமாயிருந்த ஹெம்லாக்தான் சாக்ரட்டிஸுக்கும் அளிக்கபட்டிருக்கும் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தார்கள்.

  சாக்ரட்டிஸுடன் அப்போது உடனிருந்தவர்கள் அவரது இறப்பை மிக கெளரவமாக உலகிற்கு காட்ட வேண்டி குமட்டல், வலி போன்ற அறிகுறிகளை பதிவுசெய்யாமல் இருந்திருக்கலாமென்றும், விரும்பத்தகாத  விளைவுகளை ஹெம்லாக் உண்டாக்குமென்பதை அறிந்து அவருக்கு அந்நஞ்சுடன் அதிக அளவில் ஓபியம் கலந்திருக்கலாமென்றும் கருதப்பட்டது.

 ஹெம்லாக் தாவரத்தின்  வளர்பருவங்களுக்கேற்றபடி, நஞ்சின் அளவிலும் இயல்பிலும் மாற்றமிருக்குமென்பதால், ஹெம்லாக் நஞ்சூட்டப்பட்ட  எல்லா கொலைக்கைதிகளின் இறப்பு அறிகுறிகளும் ஒன்றெபோலிருக்காதெனவும் ஒரு வாதம் இருக்கிறது

சாக்ரடிஸின் வாழ்விலிருந்த அழகியலும் பெருமையும் அவரது மரணத்திலும் இருக்கவேண்டும் என அவரது மாணவர்களும் நலம் விரும்பிகளும் நினைத்து அவரது மரண நிகழ்வை புனிதப்படுத்தி விட்டார்கள், அவரது இறப்பு திரித்து சொல்லப்பட்டுவிட்டது, சில உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன  என  இரண்டாயிரமாண்டுகளுக்கு பின்னும் விவாதங்கள் நடந்துகொண்டே இருந்தன.

1970 ல்களில் பண்டைய சிந்தனைகள் மற்றும் தத்துவ ஆராய்ச்சியாளரான கிறிஸ்டோஃபர் கில்’லும்  (Christopher Gil ) நோயியல் நிபுணரான வில்லியம் ஓபரும் பிளேட்டொ   வேண்டுமென்றேதான் சில அறிகுறிகளை பதிவுசெய்வதை  தவிர்த்துவிட்டு சாக்ரடிஸின் இறப்பை புனிதப்படுத்திருக்கிறார், ஹெம்லாக் நஞ்சு நிச்சயம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என உறுதியாக தெரிவித்தார்கள். 1, 2

 மீண்டும் 1991’ல் இதே சர்ச்சை தலைதூக்கிய போது  பிளேட்டோ அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லையென்றும் சாக்ரட்டிஸின் மரணம் ரகசியமாக நடக்கவில்லை, அவரருகில் அப்போது ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். எனவே பிளேட்டோ  நேர்மையாகத்தான் பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று அப்போதும் விவாதங்கள் எழுந்தன.

பிளேட்டோ அவரது பதிவில் எங்குமே ஹெம்லாக் என்று குறிப்பிட்டிருக்கவில்லை கிரேக்க மொழியில்’’kôneion’’ மருந்து என்ற பொருளிலேயே கோப்பையில் இருந்த திரவத்தை  அவர் குறிப்பிட்டிருக்கிறார்.  கிரேக்க மொழியின்  kôneion லத்தீன மொழியாக்கத்தில்  cicuta ’வாக மாறி பின்னர் ஆங்கிலத்தில் hemlock ஆகிவிட்டிருக்கலாமென்றும் கருதப்பட்ட்து

எந்த ஹெம்லாக், எத்தனை அளவில், எப்படி தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதென்பதையெல்லாம் இன்றும் தாவரவியல், நோயியல், மெய்யியல், மொழியியல் என்று பல கோணங்களில் .விவாதத்திற்குரியவையாகி விட்டிருக்கின்றன.

 ஹெம்லாக்கின் கொல்லும் தன்மை மற்றும் செயல்புரியும் வேகம் ஆகியவை  ஓபியம் போன்ற மூலிகளுடன் கலக்கப்படுகையில அதிகரிப்பதாக  தாவரவியல்துறையின் தந்தையான தியோஃப்ரேஸ்டஸ் குறிப்பிட்டிருக்க்கிறார். சிலமணிநேரங்களிலேயே மரணம் நிகழ்ந்த்தால் சாக்ரடிஸுக்கு நஞ்சினை தயாரித்தவர் இதை செய்திருக்கும் சாத்தியமும் இருக்கிறது.

19ஆம் நுற்றாண்டின் மருத்துவர்களும், விஞ்ஞானிகள் பலரும் ஹெம்லாக் நஞ்சின் வீரியத்தை பல்வேறு வழிகளில் சோதித்தார்கள். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோயாளிகளுக்கும் ஹெம்லாக் நஞ்சினை வேறு வேறு அளவுகளில் கொடுத்து விளைவுகளை கண்காணித்ததுடன், பல நச்சியலாளர்கள் தாங்களே அதை அருந்தி சோதித்ததும் நடந்திருக்கிறது . இவர்களிள் ஜான் ஹெர்லி  (John Harley ) குறிப்பிட்டு சொல்லும்படியானவர். ஹெம்லாக் சாறை பல அளவுகளில் அருந்தி அதன் விளைவுகளை கவனித்து அவற்றை  புத்தகமாகவே எழுதியிருக்கிறார். சாவின் விளிம்பு வரையிலும் சென்று மீண்டு ஹெம்லாக் நஞ்சினை குறித்து எழுதிய இவரின் கட்டுரைகள் மிக முக்கியமானவையாக் கருதப்படுகின்றன.3

 ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் இறந்துமிருக்கிறார்கள். ஒரு ஸ்காட்டிஷ் தையல்காரரான கெள 1845’ல்  ஹெம்லாக்கை பார்ஸ்லி என்று நினைத்து அதைக்கொண்டு உண்டாக்கிய  ஒரு சாண்ட்விச்சை உண்ட 3 மணி நேரத்தில் உயிரிழந்தார். அவரை மரணத்துக்கு இட்டுச்சென்ற அறிகுறிகள் அனைத்துமே சாக்ரட்டிஸின் மரணத்தில் இருந்ததாக பிளேட்டோ எழுதியவைகளுடன் ஒத்துப்போனது. கெள’விற்கும் கடைசி வரை நினைவிருந்தது அவருக்கும் வலியோ, வாயுமிழ்தலோ, குமட்டலோ வலிப்போ இல்லை. கால்களிலிருந்து செயலின்மை துவங்கி  உடலின் மேல்பாகங்களுக்கு பரவி பின்னர் மூச்சுத்திணறலால் மரணம் சம்பவித்தது

 எடின்பர்க் மருத்துவமனையில் கெள உயிரிழந்தபோது அங்கு  ஜான் ஹூக் பென்னெட் மருத்துவராக பணியிலிருந்தார். அப்போது பெரிய விவாத ப்பொருளாக இருந்த சாக்ரட்டிஸின் இறப்புடன் தொடர்புடைய கெள’வின் இறப்பின் அதிமுக்கியத்துவம் பென்னெட்டுக்கு தெரிந்தது. கெள’வின் இறப்பின் போது  உடனிருந்தவர்கள், அந்த சாலையில் அப்போது  பயணித்தவர்கள்.  அவரை மருத்துவமனையில் அனுமதித்தவர்கள் என அனைவரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் கெள’வின் பிரேதப்பரிசோதனையையும் அவரே நடத்தி கெள உட்கொண்டது கோனியம் மேகுலேட்டமென்னும் ஹெம்லாக்தான் என்பதையும் உறுதிசெய்தார்.பென்னெட் சாக்ரடிஸின் மரணத்தை கெள’வின் மரணத்துடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக்கட்டுரைகள்  மிக முக்கியமானதாக இன்றளவிலும் கருதப்படுகின்றது.4

  தாவரவியல், நோயியல் மற்றும் மொழியியல் மர்மங்கள் விலகி சாக்ரடீஸின் மரணம் குறித்த பலநூற்றாண்டுகால , தொடர்ச்சியான சர்ச்சை இவ்வாறாக  பண்டைய மற்றும் நவீன ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணித்து முடிவை எட்டியது.

 பிளேட்டோ சொன்னது போலவே சாக்ரடீஸ் ஹெம்லாக் விஷமருந்தி,  அமைதியாக இறந்தார். பிளேட்டோ அம்மரணத்தின் உண்மையை மருத்துவ துல்லியத்துடன்தான் பதிவுசெய்திருக்கிறார். ஏசு கிருஸ்துவுக்கு சிலுவையைப்போல, சாக்ரட்டிஸின் மரணத்துடன் ஹெம்லாக் நஞ்சு அழிவின்றி உடனிருந்து கொண்டிருக்கிறது.

வரலாற்றில், ஹெம்லாக் நஞ்சளித்து கொல்லப்பட்டவர்களில் ஏதென்ஸின் அரசியலாளரும், தளபதியும், பெலொபோனிஷிய போரின் இறுதிப்பகுதியில் பெரும்பஙகாற்றியவருமான திராமினிஸூம், நல்லவர் என்று செல்லப்பெயரிடப்பட்டிருந்த  நேர்மையாளரும் புகழ்பெற்ற அரசியலாளருமான ஃபோசியானும்  முக்கியமானவர்கள்.

1.Christopher Gill (’The Death of Socrates’, Classical Quarterly, 23, 1973, pp. 25-8) 

2. William Ober (’Did Socrates Die of Hemlock Poisoning?’, New York State Journal of Medicine, 77.1, Feb., 1977, pp. 254-8) 

3. Harley, J., The Old Vegetable Neurotics: Hemlock, Opium, Belladonna and Henbane, Macmillan, 1869) 

4. Bennett, J. H., Clinical Lectures on the Principles and Practice of Medicine, Samuel & Wood, New York, 1860, pp. 413-8.

*.Apology of Socrates- கிரேக்க மொழியில் Apology என்பது மன்னிப்பென்றல்ல . ’’defence’’ என்னும் பொருள் கொண்டிருக்கிறது

Luca-லூக்கா

கடற்கரைக்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் வரும் ஒரு சிறுவனுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் புதிய நட்புகளும், புது புது உணவுகளும் ஸ்கூட்டர் சாகச  பயணங்களுமாய் மகிழ்ச்சியில் திளைக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் கிடக்கின்றது. அவ்வனுபவங்களும்  அம் மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் அவன்  மனிதனல்ல ஆழ் கடலின் அடியில் இருக்கும்  ஓருலகின் உயிரினம் என்னும் ரகசியமும்தான் கதை.

1950 களில் நடக்கும் கதைக்களத்தில், வெகுநாட்களுக்கு பிறகு சாகசங்களும் மாயங்களும் உணர்வெழுச்சிகளுமாய் ஒரு குழந்தைகளுக்கான திரைப்படம். 

இத்தாலியின் ஒரு அழகான நகருக்கு அருகில் இருக்கும் கடலில், மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வெறுக்கப்படும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.அவற்றை அந்நகர மக்கள் வெறுக்கிறார்கள், அஞ்சுகிறார்கள் எப்போது அவை கண்ணில் பட்டாலும் வேட்டையாடி கொல்லவும் காத்திருக்கிறார்கள். அந்த உயிரினங்களும் மனிதர்களை அஞ்சி வெறுக்கின்றன. நீலம் பச்சை என பல நிறங்களில் மீன்களை போல் செதில்களுடனும் வாலுடனும் இருக்கும் அவர்களும் கடலுக்கு அடியில் மிக அழகிய உலகில், வீடுகளில்  குடும்பம் குடும்பமாக வாழ்கிறார்கள். அவ்வுயிர்கள் நீரிலிருந்து வெளியே வந்தால் மனிதர்களின் உடலை அடைந்துவிடுவார்கள்.இவ்வுலகில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன் லூக்கா.

லூக்காவிற்கு கடற்கரைக்கு சென்று கடலுக்கு வெளியே இருக்கும் உலகை காணும் ஆசை பல நாட்களாக இருக்கிறது ஆனால் லூக்காவின் அம்மாவோ அங்கு செல்ல கூடாது என்று கடுமையாக  எச்சரித்திருக்கிறார், அவனை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.

அதே உலகைச் சேர்ந்த ஆனால் அவ்வப்போது கடலை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் தீவில் வசிக்கும் கதையின் மற்றொரு நாயகனான ஆல்பெர்ட்டோவும் லூக்காவும் சந்திக்கும் புள்ளியிலிருந்து கதை கொண்டாட்டமாக நகர்கின்றது. ஆல்பர்டோ லூக்காவை மனிதர்களின் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறான். ஆல்பெர்ட்டொ திருடிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ஏராளமான பொருட்களுடன் இருக்கும் ஒரு வெஸ்பா ஸ்கூட்டியின் படம் இரண்டு சிறுவர்களையும் கற்பனையில் பறக்க வைக்கிறது

லூக்காவின் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் இத்தாலியின் போர்டரோஸோ என்னும் அழகிய நகருக்கு செல்வது,   மனிதர்களை போல இருந்தாலும் நீரில் நனைந்தால் கடல்வாழ் உயிரிகளாக அவர்கள் மாறிவிடும் அபாயம், அவர்களுக்கு ஏற்படும் புதுப்புது நட்புக்கள், எதிரிகள், வெஸ்பா ஸ்கூட்டர் பரிசாக கிடைக்கவிருக்கும் ஒரு  போட்டி என்று கதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது

இரு சிறுவர்களுக்கும் குலியா என்னும் தோழி கிடைக்கிறாள். அவர்கள் அனாதை சிறுவர்கள் என்றெண்ணி தனது வீட்டில் தங்க இடம் கொடுக்கும் குலியாவுடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகளை திகட்ட திகட்ட பார்க்கலாம். 

லூக்காவை தேடிக்கொண்டு அவன் பெற்றோர்களான டேனியெல்லாவும் லொரென்ஸோவும் அதே நகருக்கு வருவதும்,  நூடுல்ஸ் சாப்பிடும், நீந்தும், மற்றும் சைக்கிள் ஓட்டும் மூன்று போட்டிகள் கொண்ட அந்த  ட்ரை எத்தெலான் போட்டிக்கு இவர்கள் தயாராவது, அவர்களுக்கு அந்நகரில் பெரும் தொல்லை கொடுக்கும் வில்லன் என  கதை சுவாரஸ்யம்.

அத்தனை போக்கிரித்தனங்கள் செய்யும் ஆல்பெர்டோ வின் துயர பின்னணியும், லூக்காவும் அவனும் பிரியும் காட்சியும், இது குழந்தைகளுக்கான   அனிமேஷன்  படம்  என்பதை  மறக்கவைத்து  நம்மையும் துயரிலாழ்த்திவிடும்.வானில் தெரியும் விண் ’’மீன்’’களும் என்ன பொருளென்றே தெரியாமல் ஆல்பெர்ட்டொ அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகளும், குட்டிச் சுட்டிகளின் முகபாவனைகளும் கொள்ளை அழகு. 

அந்த நகரில் கடல் உயிரினங்களை கொல்ல காத்திருக்கும் மனிதர்களுக்கிடையில், தேடி கண்டுபிடித்து ஆழ்கடல் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மனிதர்களாக மாறி வந்திருக்கும் பெற்றோர்களின் கண்களில் இருந்து தப்பி, கடல் உயிரினங்களை கொல்ல எப்போதும் ஆயுதங்களுடன் இருக்கும் குலியாவின் அப்பாவுடன் அதே வீட்டில்  இருந்துகொண்டு, போட்டியில் இவர்கள் கலந்து கொள்வதை எப்படியாவது தடுத்து  நிறுத்த முயற்சி செய்யும் இன்னொரு பொறாமைக்கார சிறுவனின் திட்டங்களை எதிர்கொண்டு எப்படி மூவரும் போட்டிக்கு செல்கிறார்கள். இறுதிச்சுற்றில் மழை வந்தபோது என்னவானது, கொல்லக்காத்திருக்கும் மனிதர்களிடமிருந்து தப்பினார்களா, அவர்கள் இருவரின் கனவான வெஸ்பா கிடைத்ததா என்பதையெல்லாம் திரையில் பார்க்கையில் கிடைக்கும் குதூகலத்தை  வாசிப்பில் இழந்துவிடக்கூடாது

நம்மால் வெறுத்து,ஒதுக்கப்பட்டவர்களின் தரப்பையும் சொல்லும் இக்கதை தோழமை, அன்பு,  சாகசம் வீரம்,  விடாமுயற்சி என்று பல கலவையான உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது

அனிமேஷன் படத்தை  இத்தனை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கும் படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். இறுதிச்சுற்றில் தாண்ட வேண்டிய வெற்றிக்கோடு,   மனிதர்களாக மாறும் சில காட்சிகள், சூரிய வெளிச்சத்தில் நிழல்களின் கோணம், ரயில் வரும் திசை உள்ளிட்ட பல காட்சிப் பிழைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்த வேண்டாமென்னும் அளவிற்கு படத்தின் கதை உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன

இயக்குநருடன் கதையையும்,திரைக்கதையையும் மேலும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.லூக்காவிற்கு ஜேகப்  ட்ரெம்ப்ளேவும்,ஜேக் டிலன் கிரேஸர் ஆல்பெர்டோ விற்கும், எம்மா பெர்மன் குலியாவிற்கும் குரல் கொடுத்திருக்கின்றனர்.

ஒளி இயக்கம் டேவிட் ஜுவான் மற்றும் கிம் வயிட்,படத்தொகுப்பு கேத்ரின் மற்றும் ஜேஸன்.அனிமேஷன் மேற்பார்வை மைக் வெண்ட்ரூனி

வால்ட் டிஸ்னி மற்றும் பிக்ஸர் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் 1.30 மணி நேரம் ஓடும் இப்படம் பலநூறு தொழில்நுட்ப வல்லுநர்களின் அயராத உழைப்பால் உருவாகி இருக்கிறது. பிக்ஸரின் முந்தைய திரைப்படங்களின் பிரம்மாண்டங்களை  இதிலும் எதிர்பார்த்திருந்த  ரசிகர்கள் லூக்காவை யானைப்பசிக்கு அளிக்கப்பட்டிருக்கும்  கீரைத் தண்டு என்கிறார்கள். உலகெங்கிலும் திரையரங்குகளிலும், Disney +லும், 17 மற்றும் 18 ஜூன் 2021 ல் வெளியானது லூக்கா

  அதிகம் வெளி உலகிற்கு வர தயங்கிய, கூச்ச சுபாவம் கொண்டிருந்த தன்னை, தான் மூழ்கி இருந்த ஆழுலகிலிருந்து எடுத்து, வெளியே எறிந்து உலகை காட்டிய தனது பால்யகால நண்பன் ஆல்பெர்டோ வின் பெயரை இதில் லூக்காவின் நண்பனுக்கு வைத்திருக்கும் அறிமுக  இயக்குநர்  என்ரிக்கோ காகரோஸா ( ENRICO CACAROSA)  தான் இளமைபருவத்தை கழித்திருந்த நகரைத்தான் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இக்கதையின் கடல் உயிரிகளின் பாத்திர உருவாக்கம் இத்தாலிய தொன்மங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.

பெரிய கண்களால் எல்லாவற்றையும் விழுங்கி விடுவது போல் பார்க்கும்  லூக்கோவும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்களை அனிமேஷனில் பார்த்து ரசிக்கையில், தங்கள் இளமைப்பருவத்தை திரும்பிப் பார்க்கும்   சென்ற தலைமுறையினருக்கு மட்டுமல்ல, எந்நேரமும் செல்போனும் லேப்டாப்புமாகவே இருக்கும் இந்த தலைமுறை குழந்தைகளுக்கும் ’’அடடா இதையெல்லாம் இழந்துவிட்டிருக்கிறொமே’’ என்று ஏக்கமுண்டாகும்

 நம் நெஞ்சில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் இளம் வயது தோழமையை சொல்லும் படமான லூக்காவின் அடுத்த பாகத்தையும் எடுக்கவிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி

உடல் ஊனம், வறுமை, ஓரினச்சேர்க்கை, நிறம், இனம், பொருளாதார நிலை என நம்மை விட எதிலாவது வேறுபட்டு இருப்பவர்கள் மீதான மனிதர்களின் வெறுப்பையும் விரோதத்தையும் சுட்டிக்காட்டும் படமாகவும் இதை காணலாம். அவரவர் வாழ்வென்பது அவரவர் தரப்பு நியாயங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை வளரும் தலைமுறையினராவது  இளமையிலேயே அறிந்து கொள்ளட்டும் .லூக்காவை போலவே புறப்பாடுகள் குறித்த கனவுகள் இல்லதவர்களே உலகில் இல்லை, அவர்களனைவருக்குமான படம் லூக்கா!

மரவளைய காலக்கணக்கீட்டியல்- Dendrochronology

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி  19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை, அமெரிக்காவின் பிரபல வானியல் நிபுணரான ஆண்ட்ரூ டக்ளஸ் (Andrew Ellicott Douglass,-1867-1962,) முதிர்ந்த மரங்களின் ஆண்டு வளையங்களையும், சூரிய சுழற்சி எனப்படும் 11 ஆண்டுகால சூரியனின் மாற்றத்தையும்  ஒப்பிட்டு ஆய்வு செய்து, மரங்களின் வயதை  கணக்கிடும் மரவளைய காலக்கணக்கீட்டு துறையை உருவாக்கினார்.

 ஆங்கிலத்தில் Dendrochronology எனப்படும் இந்த அளவீட்டின்படி  மரங்களின் வயதை கணக்கிடுவதன் மூலமாக  வரலாற்றின் காலநிலை மாற்றங்கள், சூழல் மாற்றங்கள், புராதனப்பொருட்களின் காலம் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியுமென்பது அறிவியலில் ஒரு  மிகப்பெரிய திறப்பாக அமைந்தது. பண்டைய கிரேக்க சொல்லான  dendron மரத்தையும், khronos என்பது காலத்தையும் குறிக்கின்றது.

டக்ளஸ்

 இளம் வானிலை ஆய்வாளராக அரிஸோனாவின் லோவெல் வானிலை ஆய்வுக்கூடத்தில் (Lowell Observatory) பணியாற்றிக்கொண்டிருந்த டக்ளஸுக்கு சூரியனை அறிந்துகொள்வதில் பெரும் ஆர்வமிருந்தது. குறிப்பாக சூரிய மேற்பரப்பில் காணப்படும் சூரிய புள்ளிகளின் எண்ணிக்கையில் உள்ள மாறுபாடுகளின் அடிப்படையில் அளவிடப்படும் சூரிய சுழற்சியின் மாறுபாடுகளை அவர் தீவிரமாக ஆராய்ந்துகொண்டிந்தார்.

அவ்வாய்வின் போதுதான் மரங்களின் ஆண்டுவளையங்களின் அளவிற்கும், அவை வாழுமிடத்தின் காலநிலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை அவர் முதன்முதலாக கண்டறிந்தார். அரிஸோனா பல்கலைக்கழகத்தில் ஒரு மர வளைய ஆய்வகத்தையும் உருவாக்கி,  மரங்களின் ஆண்டுவளையங்களின் அடுக்குகளைக்கொண்டு அவை கடந்துவந்த காலங்களை, அக்காலங்களின் முக்கிய நிகழ்வுகளை, இடர்பாடுகளையெல்லாம் கண்டறியும் இம்முறையையும் இவர் உருவாக்கினார். cross-dating எனப்படும் ஒரு மரத்தின் ஆண்டுவளையங்களை பிற மரங்களின் ஆண்டு வளையங்களுடன் ஒப்பிட்டு காலநிலையின் வரலாற்றை கணிக்கும் அடிப்படை ஆய்வு முறையையும் இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

மரவளையங்களை முதன் முதலில் கண்டறிந்தவர் தாவரவியலின் தந்தையான தியொஃப்ரேஸ்டஸ், லியோ நார்டோ டாவின்ஸி துவங்கி  மேலும் பலர்  மரவளையங்களை குறித்து  நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பதிவு செய்திருக்கின்றனர்.

ஒரு மரத்தின் உயரமானது அதன் வாழ்விடத்தின் மண் வளம், மண்ணின் நுண்ணுயிரிகள் மற்றும் கடல் மட்டதுக்கு மேலான அச்சூழலின் உயரம் ஆகியவறினால் நிர்ணயிக்கப்படுகின்ற்து. எனினும், மரங்களின் பருமனானது பெரும்பாலும் காலநிலை காரணிகளாலேயெ உண்டாகிறதென்பதால் மரங்களின் வயதை மரவளையங்களின் இயல்பைக்கொண்டு கணக்கிடுவது மிகச்சரியான கணக்கீட்டு முறையாக இருக்கின்றது 

நாம் சாதாரணமாக பயன்படுத்தும் மரம் அல்லது கட்டை என்ற சொல் முதிர்ந்த மரங்களின் நடுவிலிருக்கும் கழி எனப்படும்  xylem’ பகுதியை குறிக்கிறது. ஒரு மரத்தின் வளர்பருவத்தில், இரண்டாம் நிலை வளர்ச்சி பல ஆண்டுகளாக நடைபெறும்  பொழுது, வெளிறிய நிறத்திலிருக்கும் வெளிப்பகுதி சாற்றுக்கட்டை (Alburnum) அல்லது மென்கட்டை (early wood) எனவும். கருமையான நிறத்திலுள்ள மையப்பகுதி வைரக்கட்டை  (Duramen) அல்லது மென்கட்டை (late wood)  எனவும் அழைக்கப்படுகிறது இவையிரண்டிற்கும் முறையே Heart wood, sap wood என்றும் பெயருண்டு.

மரம் வளருகையில், இவ்விரண்டு கட்டைகளுமாக சேர்ந்து வளையங்களை உருவாக்கிக்கொண்டே இருக்கும். மரங்கள் ஒவ்வொரு ஆண்டும் பருவத்துக்கேற்றபடி வசந்த காலத்தில் வெளுத்த நிறத்திலிருக்கும் வளையங்களையும், இலையுதிர்காலத்தில் அடர்நிறத்தில் வளையங்களையும், குளிர்காலத்தில் மிகத்துல்லியமான  வளையங்களையும் உருவாக்குகின்றன.

இவ்வாறு பெருமரங்கள் வாழ்நாளில் கடந்துவந்த காலங்களை அவற்றின் வளையங்களிலிருந்து கணக்கிட்டு மரங்களின் வயது கணக்கிடப்படுகின்றது, ஈரப்பதம் மிக அதிகமாகவும், நீண்ட வளர்பருவமும் இருக்கையில் அகலமான ஆண்டு வளையங்களும், வறட்சியான வருடங்களில் மெலிதான வளையங்களும் உருவாகும்

 பொதுவாக மர வளையங்களின் இயல்பு மரங்களின் வாழிடங்களை பொருத்து மாறுபடும். மலையுச்சியில் வாழும் மரத்தின் அகலமான வளையம் வெப்பமான காலத்தையும், மெல்லிய வளையம் குளிர்நிரம்பிய காலத்தையும் காட்டுகின்றது 

 இறந்த மரங்களில் மட்டுமல்லாமல் உயிருடன் இருக்கும் மரங்களிலும் அவற்றை சேதப்படுத்தாமல் வளையங்கள் கணக்கிடப்படுகின்றன. ஒரு பென்சிலின் அளவுள்ள மரத்தின் உட்பகுதி, பிரத்யேகமாக இக்கணக்கீடுகளுக்கென்றே வடிவமைக்கப்பட்டிருக்கும்  increment borer   என்னும்,  சிறிய விட்டம் கொண்ட ஒரு எளிய உலோக துளைப்பானை, மரத்தின் நடுப்பகுதி வரை செலுத்தி நீண்ட உருளைகளாக சேகரிக்கப்படுகின்றது. இதனால் மரங்களில் உண்டாகும் சிறு காயம் இயற்கையாகவே  விரைவில் ஆறிவிடும். 

Incremental borer

இக்கணக்கீட்டில்,  இவ்வாறு எடுக்கப்பட்ட உட்பகுதி உருளை குச்சிகளின் வளையங்களை, அதே வாழிடத்தை சேர்ந்த இறந்த மற்றும் உயிருள்ள மரங்களின்  பலநூறு மாதிரி வளையங்களுடன் ஒப்பிடுவதன் மூலம் உயிருள்ள மரங்களின் வயது  கணக்கிடப்படுகிறது.  இறந்த மரங்களின் குறுக்கு வெட்டு பகுதியின் வளைய அளவுகளை ஒரு வரைபடத்தாளில் குறிப்பிட்டு  கணக்கிடுகையில், அம்மரத்தின்   ஒவ்வொரு வளையத்தையும், அவை எந்த ஆண்டு உருவானதென்று கணக்கிட முடியும், இது  crossdating முறை என்ப்படுகின்றது 

 புராதன மரப்பொருட்களின் வயதை கணக்கிடுவதற்கும், வரலாறு, தொல்லியல், கலை உள்ளிட்ட பல துறைகளிலும் இக்கணக்கீடு பெரிதும் உதவியாக இருக்கிறது.

இறந்த மரங்களின் வயது, அவை வாழ்ந்த காலத்தின் முக்கிய சூழல் நிகழ்வுகள், மரங்களுக்கு உண்டான இடர்பாடுகள் என பலவற்றை இக்கணக்கீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக  வளையங்கள்  மிக மெல்லியதாக அதிக இடைவெளியுடன் இருப்பது கடும் வறட்சியான காலத்தையும், மெல்லிய, அடுக்கடுக்கான, நெருக்கமாக அமைந்திருக்கும் ஏராளமான வளையங்கள் அம்மரம் வறட்சியிலிருந்து மீண்டு வந்ததையும் காட்டுகிறது.

வளையங்களின் நிறம் அளவு மட்டுமல்லாது, வேதியியல் சோதனைகளும், கதிரியக்க  கரிம காலக்கணக்கீட்டியல் எனப்படும் ரேடியோ கார்பன் டேட்டிங் (Radio Carbon Dating) முறைகளும் இணைந்து, இக்கணக்கீட்டு முறையின்  பயன்பாட்டை  மேலும் பல துறைகளில் முன்னெடுத்து செல்கின்றது. 

  கலிஃபோர்னியாவின்  மெதுசில்லா பகுதியின் பிரிஸ்டில் கோன் பைன்மரம் இம்முறையில் கணக்கிடப்பட்டபோதுதான், அது 4852 வருடங்களுக்கு முன்பிருந்தே வளர்ந்துவரும் உலகின் மிகப்பழமையான உயிருள்ள மரமென்று அறியப்பட்டது. 

 இத்துறையின் உட்பிரிவுகளான  காலநிலைமாற்றங்களை கணக்கிடும் Dendroclimatology  , சூழல் மாற்றங்களை ஆய்வு செய்யும்  Dendroecology, பனிப்பாறை  உருகிய வண்டல்கள், பனிப்பாறை விரிவாக்கம், அவற்றின் பின்வாங்கல் மற்றும் கீழிறங்கும் நிகழ்வுகளை குறித்த  ஆய்வுகளுக்கு இக்கணக்கீட்டினை பயன்படுத்தும் முறையான Dendroglaciology , தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளை சோதிக்கும்  Dendroarchaeology ஆகியவற்றில் மிக முக்கியமான ஆய்வுகள் நடைபெறுகின்றன.

 வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தின் புனரமைப்புத்துறையில் (Paleo environmental reconstruction) இக்கணக்கீடு மிகவும் நம்பத்தகுந்த துல்லியமான காலக்கணக்குகளை தெரிவிக்கிறது.

 நெருப்பிலிருந்து தப்பிய மரங்களின் தீத்தழும்புகளை சுற்றி புதிய வளையங்கள் உண்டாகி இருக்கும். இவற்றைக் கொண்டு அம்மரங்கள் வாழ்ந்த காலத்தின்  தீ விபத்துக்களை பற்றி அறிந்துகொள்ளலாம். இருபதாம் நூற்றாண்டின் இறுதிகளின்  எரிமலை வெடிப்புக்கள், பூகம்பங்கள், நிலச்சரிவுகள், பனிச்சரிவுகள், காட்டுத்தீ, பெருவெள்ளம், போன்ற  பல சூழல் முக்கியத்துவமுள்ள காரணிகளை ஆய்வுசெய்ய இம்முறை பெரிதும் பயன்பட்டது.. 

 மரத்தடயவியல் (Wood forensics) ஆய்வுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் இக்கணக்கிட்டினால் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று நம்பப்பட்டு வந்த, லண்டன் அருங்காட்சியகத்திலிருந்த ஸ்காட்லாந்தின் அரசி மேரியின் ஓவியத்தின் மரச்சட்டத்தின் வயதை கணக்கிட்டபோதுதான் அது 16 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததென்று கண்டுபிடிக்கப்பட்டது.

அகழ்வாய்வாளர்கள், பன்னெடுங்காலத்துக்கு முன்பு ஜெர்மனியில் விபத்துக்குள்ளாகி இருந்த ஒரு கப்பலின் மரக்கட்டைகளின் வளையங்களை கணக்கிட்டபோது அவை 1448-1449 ஆண்டுகளின் குளிர்காலத்தில்  வெட்டப்பட்ட மரங்கள் என தெரிய வந்தது. இப்படி பலநூறு முக்கிய கண்டுபிடிப்புகளுக்கு இத்துறை உதவி வருகின்றது.

1990’லிருந்து அமெரிக்காவில் இயங்கி வரும் சர்வதேச மரவளைய தகவல் வங்கி ( The International Tree-Ring Data Bank (ITRDB)) உலகெங்கிலும் இருக்கும் மரவளைய ஆய்வாளர்களுக்கு  தேவையான தகவல் உதவிகளை அளித்து வருகின்றது.

தாவர அறிவியலில், மரவளையங்களைக்கொண்டு காலங்களுக்கிடையில்  முன்னும் பின்னுமாக   பயணித்து   பல முக்கிய  கண்டுபிடிப்புக்களை அளிக்கும்  இத்துறை மிக முக்கியமானதும் சுவாரஸ்யமானதும் கூட. அறிவியல் தொழிநுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து இன்னும் பற்பல கண்டுபிடிப்புக்களுக்கான  சாத்தியஙகளையும் இத்துறை தற்போது அளித்திருக்கிறது.

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑