அந்த சிறையறையில் கூடியிருந்தவர்கள் அனைவரும் மெளனமாகவும் துக்கத்தை கட்டுப்படுத்தியபடியும் இருந்தனர். அப்போதுதான் குளித்து விட்டு புத்துணர்வுடன் வந்த, இன்னும் சற்று நேரத்தில் விஷமருந்தி இறக்கப்போகும் அந்த மரணதண்டனைக் கைதி மட்டும் முகமலர்ச்சியுடன் இருந்தார்.
சிறைக்காவலரின் ஆணை கிடைத்ததும். அன்றைய கொலைத்தண்டனையின் உதவியாளனாக இருந்த அடிமை சிறுவன் உள்ளே சென்று விஷமளிக்கும் பணியாளரை அழைத்துவந்தான். கைதி அவரை நேராக நிமிர்ந்துபார்த்து ‘’ நான் இப்போது என்ன செய்யவேண்டும்‘’ என எந்த தயக்கமும் பதட்டமுமின்றி கேட்டார். கையிலிருந்த விஷக்கோப்பையை காட்டி ‘’இதை முழுவதுமாக அருந்திவிட்டு மெல்ல நடந்துகொண்டிருங்கள், கால்கள் கனக்க துவங்கியதும் அமர்ந்துகொள்ளலாம்’’ என்று அவர் பதிலளித்தார்.
எந்த மாறுபாடும் இல்லாத அதே மலர்ந்த முகத்துடன் ‘’நான் இதை அருந்தும் முன்பு ஏதேனும் சொல்லலாமா அதற்கு அனுமதியுண்டா’’ என்று கைதி கேட்டபோது. ’’தேவையான நேரத்தை எடுத்து கொள்ளுங்கள்’’ என்று பதில் வந்தது,
கோப்பையை கையில் எடுத்துக்கொண்டு ‘’இப்பூமியில் இருந்த மகிழ்ச்சி கல்லறைக்கப்பாலும் தொடரட்டும் என்று வேண்டிக்கொள்ளுவோம் இதுவே என் பிரார்த்தனை இது நிறைவேறட்டும்’’ என்றவர் எந்த தயக்கமுமின்றி கோப்பையிலிருந்த ஹெம்லாக் நச்சுத்தாவரத்தின் சாறான அந்த விஷத்தை அருந்தினார்
அதுவரையிலும் கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டிருந்த அவரது நண்பர்களும் மாணவர்களும் அவர் கடைசித்துளி விஷத்தையும் அருந்தி முடித்தபோது கட்டுப்பாடுகளை இழந்து கதறி அழத்துவங்கினர்
ஒருசிலர் அழுதபடி அந்த அறையிலிருந்து வெளியேறினர், இன்னும் சிலர் முகத்தை துணியினால் மறைத்தபடி அத்தனை நல்ல மனிதரை என்றென்றைக்குமாக இழந்துவிடப் போவதை எண்ணி மீண்டும் மீண்டும் விம்மி அழத்துவங்கினர்.
’’என்ன இது, ஏன் இப்படி கண்ணீர் விடுகிறீர்கள்? இப்படி நடக்கக்கூடாதென்றுதான் பெண்களை முன்பே வெளியேறச் சொன்னேன் இப்போது நீங்களும் அழுதால் எப்படி?. மரணமென்பது அமைதியாக அல்லவா நிகழவேண்டும்? என்று அவர் சொன்னதும். அருகிலிருந்த அனைவரும் தங்களை சமநிலைப்படுத்திக்கொண்டு அமைதியானார்கள்.
அந்த அறையிலேயே மெல்ல நடந்துகொண்டிருந்தவர், கால்கள் கனத்து, குளிரத் துவங்கியதும் அங்கிருந்த பீட்த்தில் அமர்ந்தார். தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக்கொண்ட அவரை உதவியாள், முதுகை சாய்த்து மல்லாந்து படுக்க உதவினான்.
அவரது பாதங்களை தொட்டும் தேய்த்தும் அந்த தொடுகையை உணர முடிகின்றதா என உதவியாள் கேட்டபோது இல்லையென பதிலளித்தார். பின்னர் கணுக்காலுக்கு மேலே ஆடுசதையை மெல்ல கிள்ளியபோதும் அதை உணரமுடியவில்லை என்றவரின் முழங்காலுக்கு மேலும் குளிர துவங்கியதும் ’’இனி விஷம் நேராக இதயத்துக்கு சொன்று விடும்’’ என்றான் அந்த அடிமை சிறுவன்.
கை மணிக்கட்டுகளும் குளிர்ந்து விரைக்க துவங்கியபோது தன் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி ’’கிரிட்டோ, நான் அஸ்கிலிபியஸுக்கு ஒரு சேவலை நேர்ந்து கொண்டிருக்கிறேன், அதை மறக்காமல் நிறைவேற்றிவிடுகிறாயா’’ என்றார். ‘’நிச்சயம் செய்துவிடுகிறென் வேறு எதாவது சொல்ல வேண்டுமா’’ என்ற அவரது மாணவன் கிரிட்டோ கேட்ட கேள்விக்கு முழுவதும் குளிர்ந்துவிட்ட அவரிடமிருந்து பதில் வரவில்லை ,கண்கள் நிலைத்துவிட்டிருந்த்து.
கிரிட்டொ அவரது வாயையும் கண்களையும் மெல்ல மூடினான். அத்துடன் முடிந்தது ஆகச்சிறந்த மெய்யியலாளரும், மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்ந்தவரும், பகுத்தறிவாளருமான சாக்ரடிஸின் வாழ்வு.
சாக்ரட்டிஸ் மரண தண்டனை பெற்று நஞ்சருந்தி சாகும் தறுவாயில், நடந்த நிகழ்வுகளை அப்போது உடன் இருந்த அவரது நண்பனும் மாணவனுமாகிய பீடோ உரையாடல்கள் மூலம் எக்கிகிரேட்டஸ் என்பவருக்கு விளக்குவது போல பிளேட்டோவால் எழுதப்பட்ட நூலான ’பீடோ’வில் இவையனைத்தும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. ஹென்றி அரிஸ்டிபஸ் என்பவரால் 1160’ல் கிரேக்க மொழியிலிருந்து இலத்தின் மொழியிலும், பின்னர் ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் பல முக்கிய மொழிகளிலும் பலரால் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல் சாக்ரட்டீசின் மாணவர் பிளேட்டோவின் பெரும் படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகின்றது.
சிறுவனாக இருந்தபோதிலிருந்தே கேள்விகள் கேட்பதை வழக்கமாக கொண்டிருந்த சாக்ரட்டிஸினால் கேள்விகள் வழியாகவே பிறரின் சிந்தனைகளை தூண்டிவிடும் ’’சாக்ரட்டிஸ் தத்துவ முறை’’ உருவாகி இருந்தது. அவரது மரணத்துக்கு பிறகும் அவரது உடலைப் புதைப்பதா எரிப்பதா?, இறந்த பிறகு உயிரின் நிலை என்ன? எங்கு போகும்? போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.
சாக்ரட்டீஸ் (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15) பண்டைய கிரேக்கத்தின் ஏதென்ஸில் பிறந்த ஒரு அறிஞர், ஆசிரியர் மற்றும் மெய்யியலாளர். 469 அல்லது 470 இவற்றில் எந்த ஆண்டு இவர் பிறந்தார் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை கேள்விகளை கேட்டு சிந்தனையை தூண்டும் அவரது சாக்ரட்டிஸ் முறையானது, தர்க்கம் மற்றும் தத்துவத்தின் மேற்கத்திய அமைப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தது. மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளரும் இவரே..
சிற்பியான சோப்ரோனிஸ்கஸுக்கும் மருத்துவச்சியான ஃபீனாரீட்டேவுக்கும் பிறந்த சாக்ரடீஸ், அடிப்படை கிரேக்கக் கல்வியைப் பெற்ற பின்பு இளம் வயதிலேயே தனது தந்தையின் தொழிலை கற்றுக்கொண்டார். தனது வாழ்க்கையை தத்துவத்திற்கு அர்ப்பணிப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் சிற்பியாகவும் பணியாற்றினார்..
சாக்ரடீஸ்க்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி மிர்ட்டோவின் மூலம் இரண்டு மகன்கள். மிர்ட்டோவின் மரணத்துக்குப் பிறகு அவரைக்காட்டிலும் மிக இளையவரான ஸாந்திப்பி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். ஸாந்திப்பிக்கு பிறந்த மற்றொரு மகனுமாய் லாம்ப்ரோக்கிள்ஸ், சோஃப்ரோனிஸ்கஸ் மற்றும் மெனெக்செனஸ் (Lamprocles, Sophroniscus , Menexenus) ஆகிய மூன்று மகன்களுக்கு தந்தையான சாக்ரட்டிஸுக்கு .குடும்ப வாழ்வில் அக்கறை காட்டுவதை விட ஏதெனிய இளைஞர்களை நல்வழிப்படுத்துவதே முதன்மையாக இருந்திருக்கிறது. இதனால் கணவர் மீது ஸாந்திப்பிக்கு மனக்குறை இருந்திருக்கிறது.
ஏதென்ஸின் ஆண்கள் 18 லிருந்து 60 வயதுக்குள் எப்போது அழைத்தாலும் ராணுவத்தில் பணிபுரியவேண்டும் என்னும் சட்டமிருந்தது. சாக்ரடிஸும் முகமூடி அணிந்த கவச காலாட்படையான ஹாப்லிட்’ல் (hoplite) ல் பணிபுரிந்தார்
பண்டைய கிரேக்கத்தில் மிகப்பெரிய ஆட்சிமாற்றத்தை கொண்டு வந்த ஏதென்ஸுக்கும் ஸ்பார்ட்டாவிற்கும் கிமு 431-405 வரை நடைபெற்ற பெலொபோனிஷிய போரில் ஈடுபட்டிருந்தபோது சாக்ரட்டிஸ், அல்சிபயடீஸ் என்னும் புகழ்பெற்ற ஏதெனிய தளவபதியின் உயிரை போர்க்களத்தில் காப்பாற்றினார்
முடிந்தவரை அரசியல் ஈடுபாட்டைத் தவிர்த்துவந்த சாக்ரட்டிஸ், பெலொபோனிஷியப் போரின் முடிவைத் தொடர்ந்து இருதரப்பிலிருந்தும் நண்பர்களை தேடிக்கொண்டார். கிமு 406’ல் பண்டைய கிரேக்க ஜனநாயகமான டெமோக்ரேஷியாவின் (Demokratia) மூன்று கிளைகளில் ஒன்றான, எக்லீசியா சட்டமன்றத்தில் பணியாற்றும்படி (Ekklesia) சாக்ரடிஸுக்கு அழைப்பு வந்தது.
அவர் அங்கு பணியாற்றுகையில், ஸ்பார்டாவிற்கு எதிரான போரில் இறந்தவர்களை மீட்கத் தவறியதற்காக ஏதென்ஸின் உயர்மட்ட ஜெனரல்களின் குழுவை குற்றம் சாட்டும் ஒரு சட்டவிரோத முன்மொழிவுக்கு சாக்ரடீஸ் தனி ஒருவராக எதிர்ப்பு தெரிவித்தார். எனினும் சாக்ரடீஸின் சட்டமன்ற சேவை முடிந்ததும் அந்த தளபதிகள் தூக்கிலிடப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஏதெனியன் அரசு சாக்ரடீஸை ’’குற்றத்தின் நிழல் கூட படிந்திருக்காத ’’ என்று பிளேட்டோவால் குறிப்பிடப்பட்ட மிக முக்கிய பிரமுகரும், நேர்மையாளருமான லியோனின் கைது மற்றும் மரணதண்டனையில் பங்கேற்குமாறு கட்டளையிட்டபோது, அவர் மறுத்துவிட்டார் இதன் பொருட்டு அவருக்கு அரசின் கட்டளைகளை அவமரியாதை செய்த குற்றம் சுமத்தப்பட்டது. எனினும் சாக்ரடீஸைத் தண்டிப்பதற்கு முன்னர் கொடுங்கோலர்கள் அதிகாரத்திலிருந்து இறங்கினர்,
தத்துவ சிந்தனைகளில் தீவிரமாக ஆழ்ந்த சாக்ரட்டிஸ் பலருடன் கலந்து உரையாட துவங்கினார். ஏதென்ஸின் மூலை முடுக்குகளிலும் தெருக்களிலும் அவரது உரைகளை கேட்கவும் விவாதங்களில் பங்கேற்கவுமாக எப்போதும் இளைஞர்கள் கூட்டம் சூழ்ந்திருந்தது. நண்பரும் நாடக ஆசிரியருமான அரிஸ்டோஃபேனியஸின் முகில் என்னும் நாடகமொன்றில் கோமாளி வேடமிட்டு வேடிககை பேச்சுக்களை போலவே உயர்ந்த தத்துவங்களை கூறிய சாக்ரட்டிஸ் மேலும் புகழ்பெற்று பரவலாக அறியப்பட்டார். சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது ஏதென்ஸ் ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது.
399’அம் ஆண்டில் ஏதெனிய கடவுள்களை மதிக்கத் தவறியதற்காகவும், ஓரினச்சேர்க்கையாளரென்றும், இளைஞர்களைத் தூண்டி விடுவதாகவும், மத எதிர்ப்பைக் கிளப்பி விடுவதாகவும், தவறான வழிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதாகவும், இளைஞர்கள் மனதை கலைத்து, அதன் வழியாக ஏதென்ஸ் அரசுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் 70 வயதாயிருந்த சாக்ரடீஸ் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணையின் பின்னால் அரசியல் சூழ்ச்சிகள் இருந்ததாக பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்.
இந்த வழக்கு ஏதென்ஸின் மையப்பகுதியில் நடந்தது, பார்வையாளர்கள் கூடியிருந்த அக்கூடத்தில் நீதிபதிகள். சாக்ரடீஸை குற்றம்சாட்டிய அம்மூவருக்கும் தங்கள் வழக்கை முன்வைக்க மூன்று மணிநேரம் ஒதுக்கினார்கள், அதன் பிறகு, சாக்ரட்டிஸ் தனது தரப்பினை விளக்கவும் மூன்று மணிநேரம் அளிக்கபட்டது. கிரேக்க நீதி மன்றங்களில் நேரக்கணக்கு நீர்க்கடிகாரங்களின் மூல்ம் கணக்கிடபப்ட்டது
அவர் மீது குற்றம் சாட்டியவர்கள் குற்றவாளிக்கு மரண தண்டனை அளிக்கும்படி வாதிட்டனர். சாக்ரடீஸுக்கு தனது தரப்பை சொல்ல வாய்ப்பு வழங்கப்பட்டபோது, தனக்கு தண்டனை அளிப்பதற்கு பதில் தனது செயல்களுக்கு வெகுமதி அளிக்க வேண்டும் என்ற கிண்டலான பரிந்துரையை வழங்கினார். சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலையே ஊட்டியது. இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், நீதிக்குழுவினரிடம் அவரது குற்றத்தின் பேரில் வாக்களிக்குமாறு கேட்கப்பட்டது.
மரணம், மன்னிப்பு என்ற இரண்டு பெட்டிகளில் வட்டுக்களை செலுத்தி வாக்களிக்கும் முறையில் நீதிக் குழுவின் 501 ஆண்களில் 220 பேர் சாக்ரடீஸை மன்னித்து விடுமாறும், 281 பேர் மரண தண்டனை அளிக்கவும் வாக்களித்தனர். குற்றம்சாட்டியவர்களும் சாக்ரடிஸும் அவரவர் தரப்பை தொகுத்து முன்வைத்த இறுதிக்கட்ட விசாரணையின்போது சாக்ரட்டிஸ் தனக்கு அபராதம் விதிக்கும்படியும், எதிர்தரப்பினர் மீண்டும் மரணதண்டனையையும் பரிந்துரைத்தனர். மீண்டும் வாக்கெடுப்பு நடத்தபட்டபோது, 300 வாக்குகள் மரணதண்டனையையும் 140 வாக்குகள் அபராதத்தையும் முன்மொழிந்ததால், குற்றவாளி என்று தீர்ப்பளிக்கபட்ட சாக்ரடீஸுக்கு நச்சு ஹெம்லாக் சாற்றை குடித்து இறக்கும் மரணதண்டனையை அந்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
டிலோஸ் என்னுமிடத்தில் ஏதென்ஸின் தெய்வங்களுக்கு திருவிழா நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் இந்த மரண தண்டனை அறிவிக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் நடக்கும் விளையாட்டுப் போட்டிகளின் தொடர்ச்சியாகத்தான் பின்னாளில் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது. பூசைக்குரிய புனிதப் பொருட்களுடன் ஏதென்ஸில் கிளம்பியிருந்த கப்பல் டிலோஸ் சென்று திரும்பி வரும் ஒரு மாத நோன்புக் காலத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் வழக்கம் இல்லாததால் மரணம் ஒரு மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டு, சாக்ரடீஸ் அருகிலுள்ள சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்,.
அந்த சமயத்தில் அவரது நண்பர்கள் சாக்ரட்டிஸை ஏதென்ஸிலிருந்து தப்பிக்கவைக்க காவலர்களுக்கு லஞ்சம் கொடுக்கவும் முயன்றார்கள் ஆனால் தான் அரசின் இந்த தீர்ப்பை மதிப்பதாகவும் இறுதிவரை சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாகவே இருக்க போவதாகவும் கூறிய சாக்ரட்டீஸ் அதற்கு உடன்படவில்லை. தனது கடைசி நாட்களிலும் அவரது உடல்மொழியிலும் நடவடிக்கைகளிலும், பேச்சிலும் எந்த அச்சமும் கலவரமும், கவலையும் இல்லாமல் இயல்பாகவும் மகிழ்வுடனும் அவர் இருந்ததாக பிளேட்டோ கூறுகிறார்.
பிளேட்டோ தனது Apology of Socrates * நூலில் விசாரணையின் போது தனது நற்பண்புகளையும், தான் குற்றமற்றவரென்பதையும் உணர்வுபூர்வமாக நடுவர் மன்றத்தின் முன் விவரித்த சாக்ரட்டீஸ், இறுதியில் அவர்களின் தீர்ப்பை அமைதியாக ஏற்றுக்கொண்டதை குறிப்பிடுகிறார். இந்த விசாரணையின் போதுதான். சாக்ரடீஸ் இப்போது புகழ்பெற்றிருக்கும் சொற்றொடரான “ஆய்வு செய்யப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது” என்று கூறினார்
ஏதென்ஸ் அரசியலில் பழைய கணக்குகளை தீர்க்கவும், தனிமனித மேம்பாட்டுக்கும், கைதிகளை கொல்லவும், தற்கொலைக்கும் அப்போது ஹெம்லாக் நஞ்சே பயன்படுத்தபட்டது. கேரட் குடும்பமான ஏபியேசியேவை சேர்ந்த ஹெம்லாக்கின் தாவர அறிவியல் பெயர் கோனியம் மேகுலாட்டம். (Common Hemlock; Conium maculatum). கோனியம் எனும் சொல்லுக்கு கிரேக்க மொழியில் தலைசுற்றல் என்று பொருள் இந்த செடியின் நஞ்சு உடலில் தோற்றுவிக்கும் விளைவுகளில் பிரதானமானதை இது குறிப்பிடுகின்றது மேகுலாட்டம் என்பது புள்ளிகள் என்ற பொருளில் செடியின் மீதுள்ள ஊதா புள்ளிகளை குறிப்பிடுகிறது.
நச்சு ஹெம்லாக் என்று அழைக்கப்படும் இத்தாவரம் வளர்ந்த இரண்டாம் வருடம் மலர்களை கொடுக்கும் பையென்னியல் (Biennial) வகையை சேர்ந்தது முதல் வருடத்தில் கொத்துமல்லியை போல் இருக்கும் இலைகள் மட்டுமே செழித்து வளரும், சதைப்பற்றான வேர்கள் பழுப்பு நிறத்தில் கேரட் வடிவில் இருக்கும். .உள்ளே வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் மேல் சிவப்பு கலந்த ஊதா நிறத்தில் புள்ளிகளும், தீற்றல்களும் காணப்படும். அந்த ஊதாநிறமே இச்செடியின் நச்சுத்தன்மையை சொல்லுவது போலிருக்கும்
இரண்டிலிருந்து மூன்று மீட்டர் உயரம் வரை வளரும் இச்செடியின் தட்டையான குடை போலிருக்கும் மஞ்சரியில் சிறு வெண் மலர்கள் செறிந்திருக்கும். ஒவ்வொரு செடியும், கடும் நஞ்சுள்ள நுண்விதைகளை ஏராளமாக உருவாக்கும் .
மத்திய தரைக்கடல் பகுதியில் தோன்றிய, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் நியூசிலாந்தில் பரவியிருக்கும் இச்செடி நீர்நிலைகளின் அருகிலும் சாலையோரங்களிலும் ,தரிசு நிலங்களிலும் சாதாரணமாக காணப்படும். இது மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் நஞ்சு.
எல்லா பாகங்களிலும் நஞ்சு நிறைந்திருக்கும் இந்த தாவரத்தின் எட்டு முக்கியமான ஆல்கலாய்டுகளில் கொனைன், சி-கொனிசைன், கொன்ஹைட்ரைன், சூடோகொன்ஹைட்ரின் மற்றும் என்-மெத்தில் கொனைன் ஆகிய ஐந்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. (coniine, c-coniceine, conhydrine, psuedoconhydrine and N-methylconiine.). புகையிலையின் நிகோட்டினுக்கு இணையான வேதிக்கட்டமைப்பை கொண்டிருக்கும் கொடிய நஞ்சான கொனைன் மிகச்சிறிய அளவிலேயே மத்திய நரம்பு மண்டலத்தை தாக்கி, சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் மூச்சுதிணறலில் மரணத்தை உண்டாக்கும் .
இவை வளரும் நாடுகளில் மிகச் சாதாரண களைச்செடிகளைப்போலவே காணப்படும் இவற்றை குறித்த அடிப்படை அறிதலாவது இருப்பது அவசியம். இலைகள் கசக்கப்படுகையில், ஒவ்வாமை அளிக்கும் நாற்றம் உண்டாகும். இவற்றை தொட்டாலோ, இதன் மகரந்ததுகள்களை நுகர்ந்தாலோ, இதன் வாசனையோ முகர்ந்தாலோ எந்த கெடுதலும் ஏற்படுவதில்லை. இவை கேரட் அல்லது பார்ஸ்லி என்று தவறாக அடையாளம் காணப்பட்டு உணவாக எடுத்துக்கொள்ளும் அசந்தர்ப்பங்களில் தான் ஆபத்தாகின்றது.
நீர் ஹெம்லாக் எனப்படும் மற்றோரு தாவர இனமான சிகுட்டா தாவரங்கள் (water hemlocks-Cicuta species) நச்சு ஹெம்லாக்கை போலவே இருந்தாலும் அவற்றின் இலைநரம்பமைப்பை கொண்டு அவற்றை வேறுபடுத்தலாம் நீர் ஹெம்லாக்குகளும் நஞ்சு நிறைந்தவையே.
சாக்ரட்டிஸ் நஞ்சூட்டி கொல்லப்பட்ட நிகழ்வு வரலாற்று ஆய்வாளர்களுக்கு எத்தனை முக்கியமானதோ, அதற்கு இணையாக இது மருத்துவ உலகிலும் சர்ச்சைக்குரியதாவே இருக்கின்றது
சாக்ரடிஸுக்கு அளிக்கபட்ட நஞ்சு ஹெம்லாக் தாவரத்தின் சாறு அல்லது அதன் இலைகளை காய்ச்சி எடுத்த பானமென்றுதான் பிளேட்டோவின் நூலிலிஉர்ந்து அறிந்துகொள்ள முடிகின்றது. பீடோ நூலில் சாக்ரட்டிஸின் மரணத்தருவாயை பற்றிய விளக்கங்களில் முதலில் அவரின் கால்கள் கனத்து, விரைத்து, குளிர்ந்துபோவதும், பின்னர் உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து தசை செயலிழப்பு மேல் நோக்கி செல்வதுமாக, மிகச்சரியாக ஹெம்லாக் நஞ்சின் விளைவுகள்தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்த நூல் சாக்ரடிஸின் மரணத்திற்கு சில மாதங்களுக்கு பின்னர் அப்போது 29 வயதாயிருந்த அவரது மாணவரான பிளேட்டொவினால் எழுதப்பட்டது.ஆனால் சாக்ரடிஸ் விஷமருந்தி மரணித்த போது பிளேட்டொ அவரருகில் இருக்கவில்லை அப்போது உடனிருந்த அவரது சகமாணவரான பீடோ மற்றூம் கிரிட்டோ ஆகியோரின் விவரணைகளை அடிப்படையாக கொண்டே பிளேட்டோ அந்நிகழ்வை எழுதினார்.
கிரேக்க மொழியில் எழுதப்பட்டு லத்தீன மொழியாக்கம் செய்யப்பட்ட அதன் சில பத்திகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டபோது , இறப்பின் போது நிகழந்தவையும் நஞ்சின் பெயரும் கிரேக்க மொழியின் உபயோகப்படுத்தப்பட்டிருந்த அதே சொற்களின் பொருளில் மொழியாக்கம் செய்யபட்ட்து.
விஷம் அளிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மரணம் சம்பவித்ததும், உயிரிழப்பிற்கு முந்திய கணம் வரை சாக்ரட்டிஸ் நினைவுடன் இருந்ததும், கைகளை அசைத்து முகத்தின் துணியை அகற்றியதும், பேசிக்கொண்டிருந்ததும் எல்லாம் ஹெம்லாக் நஞ்சின் இயல்புகளைத்தான் காட்டுகின்றது
ஆனால் சாக்ரட்டிஸுக்கு கடும் வலியோ, குமட்டலோ, வாயுமிழ்தலோ, வலிப்போ வந்ததாக பிளேட்டொ குறிப்பிட்டிருக்கவில்லை என்பதால், அவருக்கு அளிக்கப்பட்டது ஹெம்லாக் சாறாக இருக்க வாய்ப்பில்லை என்று ஒருதரப்பும் அப்போது கிரேக்க அரசியல் கொலைகளில் பலவற்றிற்கு காரணமாயிருந்த ஹெம்லாக்தான் சாக்ரட்டிஸுக்கும் அளிக்கபட்டிருக்கும் என்று இன்னொரு தரப்பும் விவாதித்தார்கள்.
சாக்ரட்டிஸுடன் அப்போது உடனிருந்தவர்கள் அவரது இறப்பை மிக கெளரவமாக உலகிற்கு காட்ட வேண்டி குமட்டல், வலி போன்ற அறிகுறிகளை பதிவுசெய்யாமல் இருந்திருக்கலாமென்றும், விரும்பத்தகாத விளைவுகளை ஹெம்லாக் உண்டாக்குமென்பதை அறிந்து அவருக்கு அந்நஞ்சுடன் அதிக அளவில் ஓபியம் கலந்திருக்கலாமென்றும் கருதப்பட்டது.
ஹெம்லாக் தாவரத்தின் வளர்பருவங்களுக்கேற்றபடி, நஞ்சின் அளவிலும் இயல்பிலும் மாற்றமிருக்குமென்பதால், ஹெம்லாக் நஞ்சூட்டப்பட்ட எல்லா கொலைக்கைதிகளின் இறப்பு அறிகுறிகளும் ஒன்றெபோலிருக்காதெனவும் ஒரு வாதம் இருக்கிறது
சாக்ரடிஸின் வாழ்விலிருந்த அழகியலும் பெருமையும் அவரது மரணத்திலும் இருக்கவேண்டும் என அவரது மாணவர்களும் நலம் விரும்பிகளும் நினைத்து அவரது மரண நிகழ்வை புனிதப்படுத்தி விட்டார்கள், அவரது இறப்பு திரித்து சொல்லப்பட்டுவிட்டது, சில உண்மைகள் மறைக்கப்பட்டுவிட்டன என இரண்டாயிரமாண்டுகளுக்கு பின்னும் விவாதங்கள் நடந்துகொண்டே இருந்தன.
1970 ல்களில் பண்டைய சிந்தனைகள் மற்றும் தத்துவ ஆராய்ச்சியாளரான கிறிஸ்டோஃபர் கில்’லும் (Christopher Gil ) நோயியல் நிபுணரான வில்லியம் ஓபரும் பிளேட்டொ வேண்டுமென்றேதான் சில அறிகுறிகளை பதிவுசெய்வதை தவிர்த்துவிட்டு சாக்ரடிஸின் இறப்பை புனிதப்படுத்திருக்கிறார், ஹெம்லாக் நஞ்சு நிச்சயம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என உறுதியாக தெரிவித்தார்கள். 1, 2
மீண்டும் 1991’ல் இதே சர்ச்சை தலைதூக்கிய போது பிளேட்டோ அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லையென்றும் சாக்ரட்டிஸின் மரணம் ரகசியமாக நடக்கவில்லை, அவரருகில் அப்போது ஏராளமானோர் இருந்திருக்கின்றனர். எனவே பிளேட்டோ நேர்மையாகத்தான் பதிவுகளை எழுதியிருக்கிறார் என்று அப்போதும் விவாதங்கள் எழுந்தன.
பிளேட்டோ அவரது பதிவில் எங்குமே ஹெம்லாக் என்று குறிப்பிட்டிருக்கவில்லை கிரேக்க மொழியில்’’kôneion’’ மருந்து என்ற பொருளிலேயே கோப்பையில் இருந்த திரவத்தை அவர் குறிப்பிட்டிருக்கிறார். கிரேக்க மொழியின் kôneion லத்தீன மொழியாக்கத்தில் cicuta ’வாக மாறி பின்னர் ஆங்கிலத்தில் hemlock ஆகிவிட்டிருக்கலாமென்றும் கருதப்பட்ட்து
எந்த ஹெம்லாக், எத்தனை அளவில், எப்படி தயாரிக்கப்பட்டு அளிக்கப்பட்டதென்பதையெல்லாம் இன்றும் தாவரவியல், நோயியல், மெய்யியல், மொழியியல் என்று பல கோணங்களில் .விவாதத்திற்குரியவையாகி விட்டிருக்கின்றன.
ஹெம்லாக்கின் கொல்லும் தன்மை மற்றும் செயல்புரியும் வேகம் ஆகியவை ஓபியம் போன்ற மூலிகளுடன் கலக்கப்படுகையில அதிகரிப்பதாக தாவரவியல்துறையின் தந்தையான தியோஃப்ரேஸ்டஸ் குறிப்பிட்டிருக்க்கிறார். சிலமணிநேரங்களிலேயே மரணம் நிகழ்ந்த்தால் சாக்ரடிஸுக்கு நஞ்சினை தயாரித்தவர் இதை செய்திருக்கும் சாத்தியமும் இருக்கிறது.
19ஆம் நுற்றாண்டின் மருத்துவர்களும், விஞ்ஞானிகள் பலரும் ஹெம்லாக் நஞ்சின் வீரியத்தை பல்வேறு வழிகளில் சோதித்தார்கள். மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நோயாளிகளுக்கும் ஹெம்லாக் நஞ்சினை வேறு வேறு அளவுகளில் கொடுத்து விளைவுகளை கண்காணித்ததுடன், பல நச்சியலாளர்கள் தாங்களே அதை அருந்தி சோதித்ததும் நடந்திருக்கிறது . இவர்களிள் ஜான் ஹெர்லி (John Harley ) குறிப்பிட்டு சொல்லும்படியானவர். ஹெம்லாக் சாறை பல அளவுகளில் அருந்தி அதன் விளைவுகளை கவனித்து அவற்றை புத்தகமாகவே எழுதியிருக்கிறார். சாவின் விளிம்பு வரையிலும் சென்று மீண்டு ஹெம்லாக் நஞ்சினை குறித்து எழுதிய இவரின் கட்டுரைகள் மிக முக்கியமானவையாக் கருதப்படுகின்றன.3
ஆனால் துரதிர்ஷ்டவசமாக பலர் இறந்துமிருக்கிறார்கள். ஒரு ஸ்காட்டிஷ் தையல்காரரான கெள 1845’ல் ஹெம்லாக்கை பார்ஸ்லி என்று நினைத்து அதைக்கொண்டு உண்டாக்கிய ஒரு சாண்ட்விச்சை உண்ட 3 மணி நேரத்தில் உயிரிழந்தார். அவரை மரணத்துக்கு இட்டுச்சென்ற அறிகுறிகள் அனைத்துமே சாக்ரட்டிஸின் மரணத்தில் இருந்ததாக பிளேட்டோ எழுதியவைகளுடன் ஒத்துப்போனது. கெள’விற்கும் கடைசி வரை நினைவிருந்தது அவருக்கும் வலியோ, வாயுமிழ்தலோ, குமட்டலோ வலிப்போ இல்லை. கால்களிலிருந்து செயலின்மை துவங்கி உடலின் மேல்பாகங்களுக்கு பரவி பின்னர் மூச்சுத்திணறலால் மரணம் சம்பவித்தது
எடின்பர்க் மருத்துவமனையில் கெள உயிரிழந்தபோது அங்கு ஜான் ஹூக் பென்னெட் மருத்துவராக பணியிலிருந்தார். அப்போது பெரிய விவாத ப்பொருளாக இருந்த சாக்ரட்டிஸின் இறப்புடன் தொடர்புடைய கெள’வின் இறப்பின் அதிமுக்கியத்துவம் பென்னெட்டுக்கு தெரிந்தது. கெள’வின் இறப்பின் போது உடனிருந்தவர்கள், அந்த சாலையில் அப்போது பயணித்தவர்கள். அவரை மருத்துவமனையில் அனுமதித்தவர்கள் என அனைவரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டார். பின்னர் கெள’வின் பிரேதப்பரிசோதனையையும் அவரே நடத்தி கெள உட்கொண்டது கோனியம் மேகுலேட்டமென்னும் ஹெம்லாக்தான் என்பதையும் உறுதிசெய்தார்.பென்னெட் சாக்ரடிஸின் மரணத்தை கெள’வின் மரணத்துடன் ஒப்பிட்டு எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் மிக முக்கியமானதாக இன்றளவிலும் கருதப்படுகின்றது.4
தாவரவியல், நோயியல் மற்றும் மொழியியல் மர்மங்கள் விலகி சாக்ரடீஸின் மரணம் குறித்த பலநூற்றாண்டுகால , தொடர்ச்சியான சர்ச்சை இவ்வாறாக பண்டைய மற்றும் நவீன ஆய்வுகளுக்கும் விவாதங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையில் முன்னும் பின்னுமாக பயணித்து முடிவை எட்டியது.
பிளேட்டோ சொன்னது போலவே சாக்ரடீஸ் ஹெம்லாக் விஷமருந்தி, அமைதியாக இறந்தார். பிளேட்டோ அம்மரணத்தின் உண்மையை மருத்துவ துல்லியத்துடன்தான் பதிவுசெய்திருக்கிறார். ஏசு கிருஸ்துவுக்கு சிலுவையைப்போல, சாக்ரட்டிஸின் மரணத்துடன் ஹெம்லாக் நஞ்சு அழிவின்றி உடனிருந்து கொண்டிருக்கிறது.
வரலாற்றில், ஹெம்லாக் நஞ்சளித்து கொல்லப்பட்டவர்களில் ஏதென்ஸின் அரசியலாளரும், தளபதியும், பெலொபோனிஷிய போரின் இறுதிப்பகுதியில் பெரும்பஙகாற்றியவருமான திராமினிஸூம், நல்லவர் என்று செல்லப்பெயரிடப்பட்டிருந்த நேர்மையாளரும் புகழ்பெற்ற அரசியலாளருமான ஃபோசியானும் முக்கியமானவர்கள்.
1.Christopher Gill (’The Death of Socrates’, Classical Quarterly, 23, 1973, pp. 25-8)
2. William Ober (’Did Socrates Die of Hemlock Poisoning?’, New York State Journal of Medicine, 77.1, Feb., 1977, pp. 254-8)
3. Harley, J., The Old Vegetable Neurotics: Hemlock, Opium, Belladonna and Henbane, Macmillan, 1869)
4. Bennett, J. H., Clinical Lectures on the Principles and Practice of Medicine, Samuel & Wood, New York, 1860, pp. 413-8.
*.Apology of Socrates- கிரேக்க மொழியில் Apology என்பது மன்னிப்பென்றல்ல . ’’defence’’ என்னும் பொருள் கொண்டிருக்கிறது