கடற்கரைக்கு பெற்றோர்களுக்கு தெரியாமல் வரும் ஒரு சிறுவனுக்கு எதிர்பாராமல் கிடைக்கும் புதிய நட்புகளும், புது புது உணவுகளும் ஸ்கூட்டர் சாகச பயணங்களுமாய் மகிழ்ச்சியில் திளைக்கும் மறக்க முடியாத அனுபவங்கள் கிடக்கின்றது. அவ்வனுபவங்களும் அம் மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவிக்க முடியாமல் அவன் மனிதனல்ல ஆழ் கடலின் அடியில் இருக்கும் ஓருலகின் உயிரினம் என்னும் ரகசியமும்தான் கதை.
1950 களில் நடக்கும் கதைக்களத்தில், வெகுநாட்களுக்கு பிறகு சாகசங்களும் மாயங்களும் உணர்வெழுச்சிகளுமாய் ஒரு குழந்தைகளுக்கான திரைப்படம்.
இத்தாலியின் ஒரு அழகான நகருக்கு அருகில் இருக்கும் கடலில், மனிதர்கள் அல்லாத, மனிதர்களால் வெறுக்கப்படும் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.அவற்றை அந்நகர மக்கள் வெறுக்கிறார்கள், அஞ்சுகிறார்கள் எப்போது அவை கண்ணில் பட்டாலும் வேட்டையாடி கொல்லவும் காத்திருக்கிறார்கள். அந்த உயிரினங்களும் மனிதர்களை அஞ்சி வெறுக்கின்றன. நீலம் பச்சை என பல நிறங்களில் மீன்களை போல் செதில்களுடனும் வாலுடனும் இருக்கும் அவர்களும் கடலுக்கு அடியில் மிக அழகிய உலகில், வீடுகளில் குடும்பம் குடும்பமாக வாழ்கிறார்கள். அவ்வுயிர்கள் நீரிலிருந்து வெளியே வந்தால் மனிதர்களின் உடலை அடைந்துவிடுவார்கள்.இவ்வுலகில் ஒருவன் தான் இக்கதையின் நாயகன் லூக்கா.
லூக்காவிற்கு கடற்கரைக்கு சென்று கடலுக்கு வெளியே இருக்கும் உலகை காணும் ஆசை பல நாட்களாக இருக்கிறது ஆனால் லூக்காவின் அம்மாவோ அங்கு செல்ல கூடாது என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார், அவனை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்.
அதே உலகைச் சேர்ந்த ஆனால் அவ்வப்போது கடலை விட்டு வெளியேறி அருகில் இருக்கும் தீவில் வசிக்கும் கதையின் மற்றொரு நாயகனான ஆல்பெர்ட்டோவும் லூக்காவும் சந்திக்கும் புள்ளியிலிருந்து கதை கொண்டாட்டமாக நகர்கின்றது. ஆல்பர்டோ லூக்காவை மனிதர்களின் உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கிறான். ஆல்பெர்ட்டொ திருடிக்கொண்டு வந்து சேர்த்திருக்கும் ஏராளமான பொருட்களுடன் இருக்கும் ஒரு வெஸ்பா ஸ்கூட்டியின் படம் இரண்டு சிறுவர்களையும் கற்பனையில் பறக்க வைக்கிறது
லூக்காவின் வீட்டுக்கு தெரியாமல் இருவரும் இத்தாலியின் போர்டரோஸோ என்னும் அழகிய நகருக்கு செல்வது, மனிதர்களை போல இருந்தாலும் நீரில் நனைந்தால் கடல்வாழ் உயிரிகளாக அவர்கள் மாறிவிடும் அபாயம், அவர்களுக்கு ஏற்படும் புதுப்புது நட்புக்கள், எதிரிகள், வெஸ்பா ஸ்கூட்டர் பரிசாக கிடைக்கவிருக்கும் ஒரு போட்டி என்று கதை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது
இரு சிறுவர்களுக்கும் குலியா என்னும் தோழி கிடைக்கிறாள். அவர்கள் அனாதை சிறுவர்கள் என்றெண்ணி தனது வீட்டில் தங்க இடம் கொடுக்கும் குலியாவுடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டிகளை திகட்ட திகட்ட பார்க்கலாம்.
லூக்காவை தேடிக்கொண்டு அவன் பெற்றோர்களான டேனியெல்லாவும் லொரென்ஸோவும் அதே நகருக்கு வருவதும், நூடுல்ஸ் சாப்பிடும், நீந்தும், மற்றும் சைக்கிள் ஓட்டும் மூன்று போட்டிகள் கொண்ட அந்த ட்ரை எத்தெலான் போட்டிக்கு இவர்கள் தயாராவது, அவர்களுக்கு அந்நகரில் பெரும் தொல்லை கொடுக்கும் வில்லன் என கதை சுவாரஸ்யம்.
அத்தனை போக்கிரித்தனங்கள் செய்யும் ஆல்பெர்டோ வின் துயர பின்னணியும், லூக்காவும் அவனும் பிரியும் காட்சியும், இது குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் என்பதை மறக்கவைத்து நம்மையும் துயரிலாழ்த்திவிடும்.வானில் தெரியும் விண் ’’மீன்’’களும் என்ன பொருளென்றே தெரியாமல் ஆல்பெர்ட்டொ அடிக்கடி சொல்லும் அந்த வார்த்தைகளும், குட்டிச் சுட்டிகளின் முகபாவனைகளும் கொள்ளை அழகு.
அந்த நகரில் கடல் உயிரினங்களை கொல்ல காத்திருக்கும் மனிதர்களுக்கிடையில், தேடி கண்டுபிடித்து ஆழ்கடல் வீட்டுக்கு அழைத்துச் செல்ல மனிதர்களாக மாறி வந்திருக்கும் பெற்றோர்களின் கண்களில் இருந்து தப்பி, கடல் உயிரினங்களை கொல்ல எப்போதும் ஆயுதங்களுடன் இருக்கும் குலியாவின் அப்பாவுடன் அதே வீட்டில் இருந்துகொண்டு, போட்டியில் இவர்கள் கலந்து கொள்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த முயற்சி செய்யும் இன்னொரு பொறாமைக்கார சிறுவனின் திட்டங்களை எதிர்கொண்டு எப்படி மூவரும் போட்டிக்கு செல்கிறார்கள். இறுதிச்சுற்றில் மழை வந்தபோது என்னவானது, கொல்லக்காத்திருக்கும் மனிதர்களிடமிருந்து தப்பினார்களா, அவர்கள் இருவரின் கனவான வெஸ்பா கிடைத்ததா என்பதையெல்லாம் திரையில் பார்க்கையில் கிடைக்கும் குதூகலத்தை வாசிப்பில் இழந்துவிடக்கூடாது
நம்மால் வெறுத்து,ஒதுக்கப்பட்டவர்களின் தரப்பையும் சொல்லும் இக்கதை தோழமை, அன்பு, சாகசம் வீரம், விடாமுயற்சி என்று பல கலவையான உணர்வுகளை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது
அனிமேஷன் படத்தை இத்தனை உணர்வுபூர்வமாக கொடுத்திருக்கும் படக்குழுவினரை பாராட்டியே ஆக வேண்டும். இறுதிச்சுற்றில் தாண்ட வேண்டிய வெற்றிக்கோடு, மனிதர்களாக மாறும் சில காட்சிகள், சூரிய வெளிச்சத்தில் நிழல்களின் கோணம், ரயில் வரும் திசை உள்ளிட்ட பல காட்சிப் பிழைகள் இருந்தாலும் அவற்றை பொருட்படுத்த வேண்டாமென்னும் அளவிற்கு படத்தின் கதை உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன
இயக்குநருடன் கதையையும்,திரைக்கதையையும் மேலும் சிலர் எழுதியிருக்கிறார்கள்.லூக்காவிற்கு ஜேகப் ட்ரெம்ப்ளேவும்,ஜேக் டிலன் கிரேஸர் ஆல்பெர்டோ விற்கும், எம்மா பெர்மன் குலியாவிற்கும் குரல் கொடுத்திருக்கின்றனர்.
ஒளி இயக்கம் டேவிட் ஜுவான் மற்றும் கிம் வயிட்,படத்தொகுப்பு கேத்ரின் மற்றும் ஜேஸன்.அனிமேஷன் மேற்பார்வை மைக் வெண்ட்ரூனி
வால்ட் டிஸ்னி மற்றும் பிக்ஸர் நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பில் 1.30 மணி நேரம் ஓடும் இப்படம் பலநூறு தொழில்நுட்ப வல்லுநர்களின் அயராத உழைப்பால் உருவாகி இருக்கிறது. பிக்ஸரின் முந்தைய திரைப்படங்களின் பிரம்மாண்டங்களை இதிலும் எதிர்பார்த்திருந்த ரசிகர்கள் லூக்காவை யானைப்பசிக்கு அளிக்கப்பட்டிருக்கும் கீரைத் தண்டு என்கிறார்கள். உலகெங்கிலும் திரையரங்குகளிலும், Disney +லும், 17 மற்றும் 18 ஜூன் 2021 ல் வெளியானது லூக்கா
அதிகம் வெளி உலகிற்கு வர தயங்கிய, கூச்ச சுபாவம் கொண்டிருந்த தன்னை, தான் மூழ்கி இருந்த ஆழுலகிலிருந்து எடுத்து, வெளியே எறிந்து உலகை காட்டிய தனது பால்யகால நண்பன் ஆல்பெர்டோ வின் பெயரை இதில் லூக்காவின் நண்பனுக்கு வைத்திருக்கும் அறிமுக இயக்குநர் என்ரிக்கோ காகரோஸா ( ENRICO CACAROSA) தான் இளமைபருவத்தை கழித்திருந்த நகரைத்தான் இதில் காட்சிப்படுத்தியிருக்கிறார். இக்கதையின் கடல் உயிரிகளின் பாத்திர உருவாக்கம் இத்தாலிய தொன்மங்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
பெரிய கண்களால் எல்லாவற்றையும் விழுங்கி விடுவது போல் பார்க்கும் லூக்கோவும் நண்பர்களும் செய்யும் அட்டகாசங்களை அனிமேஷனில் பார்த்து ரசிக்கையில், தங்கள் இளமைப்பருவத்தை திரும்பிப் பார்க்கும் சென்ற தலைமுறையினருக்கு மட்டுமல்ல, எந்நேரமும் செல்போனும் லேப்டாப்புமாகவே இருக்கும் இந்த தலைமுறை குழந்தைகளுக்கும் ’’அடடா இதையெல்லாம் இழந்துவிட்டிருக்கிறொமே’’ என்று ஏக்கமுண்டாகும்
நம் நெஞ்சில் என்றென்றும் நீங்கா இடம் பெற்றிருக்கும் இளம் வயது தோழமையை சொல்லும் படமான லூக்காவின் அடுத்த பாகத்தையும் எடுக்கவிருப்பதாக இயக்குநர் தெரிவித்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி
உடல் ஊனம், வறுமை, ஓரினச்சேர்க்கை, நிறம், இனம், பொருளாதார நிலை என நம்மை விட எதிலாவது வேறுபட்டு இருப்பவர்கள் மீதான மனிதர்களின் வெறுப்பையும் விரோதத்தையும் சுட்டிக்காட்டும் படமாகவும் இதை காணலாம். அவரவர் வாழ்வென்பது அவரவர் தரப்பு நியாயங்களால் கட்டமைக்கப்பட்டது என்பதை வளரும் தலைமுறையினராவது இளமையிலேயே அறிந்து கொள்ளட்டும் .லூக்காவை போலவே புறப்பாடுகள் குறித்த கனவுகள் இல்லதவர்களே உலகில் இல்லை, அவர்களனைவருக்குமான படம் லூக்கா!