லோகமாதேவியின் பதிவுகள்

Month: August 2022 (Page 1 of 2)

கமலா!

கமலா  ஆரஞ்சு பழங்களை  நாம் சுவைத்திருப்போம், கமலா என்னும் பெயரில் நமக்கு தெரிந்தவர்களும் நிச்சயம் இருப்பார்கள்.   Mallotus philippensis என்னும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒரு தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் தாவரச்சாயமான பிரகாசமான பொன்மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த  கமலா நிறத்தில் இருப்பதால் அந்த வகை ஆரஞ்சு கனிகளுக்கு அப்பெயர் வந்தது. நல்ல சிவப்பாக பிறக்கும் இந்திய பெண் குழந்தைகளுக்கு அப்படியே கமலாவென்று  முன்னர் பெயரிடப்பட்டது. 

காலப்போக்கில் கமலா என்பது ஒரு தாவரச்சாயம் என்பதே மறந்து போய் வழக்கமான பெண்பெயர்களில் ஒன்றாக கமலா ஆகிவிட்டிருந்தது கமலா ஆரஞ்சு என்பதன் பெயர்க்காரணம் தெரியாமலேயே பலநூறு ஆரஞ்சுப்பழங்கள்  சுவைக்கப்படுகின்றன.

கமலா மரமான இது நெல்லிக்காய் மரங்களின் குடும்பமான யுபோர்பியேசியை சேர்ந்தவை.  இவற்றின் சிவந்த கனிகளின் வெளிப்புறம் குங்குமம் பூசியது போல படிந்திருக்கும் மேல்பூச்சிலிருந்து எடுக்கப்படும் சாயமே கம்பளி, பட்டு, பருத்தி போன்ற நூலிழைகளை மஞ்சள் ஆரஞ்சு நிறமேற்றும் இயற்கை கமலாச்சாயம்

இம்மரம் கமலா, கபிலம் செந்தூரம், ரோஹிணி, செந்தூரி, கங்கை,  குங்குமமரம், குரங்கு மஞ்சநாறி, செங்காலி என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.  பிலிப்பைன்ஸில் இது (banato) பனடோ என அழைக்கப்படுகிறது. 

இந்த செம்பழங்களில் குரங்குகள் முகத்தை தேய்துக்கொள்ளுமென்பதால் இவற்றிற்கு குரங்கு முக மரம் என்று பெயர் வந்தது .இந்தியாவெங்கும் காணப்படும் இந்த மரங்களிலிருந்து கிடைக்கும் சிவப்பு கமலா சாயப்பொடியுடன் இரும்பை சேர்த்து அழகிய பச்சை சாயமும் உருவாக்கப்படுகின்றது

பிலிப்பைன்ஸ், இந்தியா, தாய்லாந்து, சீனா, இலங்கை ஆப்கானிஸ்தான், யேமன் உள்ளிட்ட பல நாடுகளில் மலைப்பாங்கான பகுதிகளிலும், பசுமை மாறா காடுகளின் ஓரங்களிலும்  காணப்படும் இவை ஒரு குறுமரமாகவோ அல்லது அடர்ந்த  புதர் போலவோ வளரும் இயல்பு கொண்டவை

.இவை 4 லிருந்து 10 மீ உயரமே வளரும். மரப்பட்டை சாம்பல் வண்ணத்தில் சொறசொறப்பாக காணப்படும். சிறு கிளைகளிலும், இளம் இலைகளிலும் ரோமங்கள் போன்ற வளரிகள் காணப்படும். பளபளப்பான பச்சையில் இருக்கும் முட்டைவடிவ இலைகள் கூர் நுனிகளுடன் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். .இலைவிளிம்பில் பற்கள் போன்ற அமைப்பும் இருக்கு

பிலிப்பைன்ஸில் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரையில்  மலரும் இவை பிற நாடுகளில் ஜூனிலிருந்து நவம்பர் வரையிலும் மலரும்.   ஒரே மரத்தில் ஆண் பெண் மலர்கள் தனித்தனியான கொத்துக்களாக மஞ்சள் பழுப்பு வண்ணங்களில் மலரும்.

கொத்தாக காய்த்திருக்கும் அடர் சிவப்பு நிற சிறு கனிகள்  5-7 மி மி அளவிலிருக்கும். கனியின் வெளிப்பகுதி  முழுவதும்  நுண்ணிய ஆரஞ்சு சிவப்பு குருணைகள்  பூசப்பட்டது போல் படிந்திருக்கும்.  இந்த அடர்சிவப்பு குருணைகளை ஆல்கஹாலில் கரைத்தெடுத்துத்தான் கமலாச்சாயம் தயாரிக்கப்படுகின்றது. ஒவ்வொரு  கனியிலும் மூன்று கருப்பு விதைகள் இருக்கும்.

இவற்றில் புரதம், பிசின், எண்ணெய்ச்சத்து,  நிறமிகள், ஆல்கலாய்டுகள் சப்போனின்கள், டேனின்கள், பீனால் ஆகியவை அடங்கி இருக்கின்றன. இவற்றில் இருக்கும் மலோடோயின் மற்றும் கமலின் ஆகியவை மிக முக்கியமான மருந்து பொருட்களை தயாரிக்க பயன்படுகிறது.  (mallotoin & kamalin).

கமலாவிலிருந்து  இயற்கைச்சாயம் மட்டுமல்லாது சமையல் எண்ணெயும், காகிதக்கூழும் மருந்துகளும், இயற்கை உரமும் கிடைக்கிறது.

கமலா மரத்தின் பாகங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை.  இம்மரத்திலிருந்து எடுக்கப்படும் மருந்துகள் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை குணமாக்கும். இதன்  வேர்கள் ரத்த புற்று நோய்க்கு மருந்தாகிறது. கட்டிகளை குணமாக்குவதில் கமலா மரம் மஞ்சளை காட்டிலும் அதிக வீரியத்துடன் செயல்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அரேபியர்கள் இம்மரத்தின் கமலாச்சாயத்தை தொழுநோயை குணமாக்க பயன்படுத்துகின்றனர். குடல் அழற்சி மற்றும் சீரணக்கோளாறுகளுக்கும் இம்மரத்தின் மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. மரப்பட்டைச் சாறு சரும நோய்களுக்கு எதிராக செயல்புரிகிறது. இந்த சிவப்பு சாயம் உணவுக்கு நிறமூட்டவும் பயனாகின்றது, குறிப்பாக பானங்களுக்கு நிறமூட்ட.

 இதிலிருந்து கிடைக்கும் ரோட்லரின் (Rottlerin) என்னும் மருந்துப்பொருள் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் அருமருந்தாக கருதப்படுகின்றது.

முடக்கு வாதம், ஆஸ்துமா, கல்லீரல் வீக்கம், குடற்புழு, தோல் அழற்சி போன்றவைகளுக்கு இம்மரத்தின் பாகங்கள் சிகிச்சை அளிக்க பயனாகின்றன

 இனி கமலா என்னும் பெயரைக்கேட்டாலும், கமலாக்களை  பார்த்தாலும், கமலா ஆரஞ்சுகளை சுவைக்கையிலும்  இந்த குங்கும மரங்களை நினைத்துக் கொள்ளலாம்

காயம்

1892 இல்  ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற காபூலி வாலா ( কাবুলিওয়ালা ) என்னும் வங்காள மொழிச் சிறுகதை வெளியானது. அஃப்கானிஸ்தானிலிருந்து  கல்கத்தாவிற்கு வருடா வருடம் பழங்கள் விற்பனை செய்ய வரும் ரஹ்மத் எனும் வியாபாரிக்கும்,  அவரது மகளை நினைவூட்டும் ஐந்து வயது  மினி என்னும் சிறுமிக்கும், மினியின் தந்தைக்கும் மினிக்குமான அன்பை சொல்லும் கதை இது.  காபூலில் இருந்து வந்த வியாபாரி ஆதலால் கதையின் தலைப்பு காபூலி வாலா என்று இருந்தது. இக்கதையை தழுவி திரைப்படங்களும்  உருவாயின.[1]

உண்மையில் இந்தியாவில் அதேபோன்றதொரு காபூலிவாலா கதை  மும்பையில் நடந்தது.

1890 ல் செருப்புக் கூட இல்லாத  கால்களுடன் ஒரு வியாபாரி உலர் பழங்கள், கட்டிப் பெருங்காயம் மற்றும் பேரீச்சைகளை மும்பையில் விற்பனை செய்ய  அஃப்கானிஸ்தானின் காபூலில் இருந்து குதிரையில்  வந்திருந்தார். அவரிடம் பெருங்காயத்தை வாங்கியவர் லால்ஜி  கோது (Laljee Godhoo) என்னும் ஒரு சிறு வியாபாரி. லால்ஜி அப்போது கிராம்பையும் கற்பூரத்தையும் சிறிய அளவில் விற்பனை செய்து கொண்டிருந்தார். பெருங்காயத்தின் நெடியை கவனித்த அவர்  மசாலா பொருளாக அதன் எதிர்கால விற்பனைக்கான சாத்தியங்களையும் மிகச் சரியாகக் கணித்தார். அதைக் கொண்டு வந்த காபூலிக்காரரிடம் அஃப்கானிஸ்தானில் பெருங்காயத்தின் பயன்பாட்டையும் கேட்டறிந்து கொண்டு அந்த வியாபாரத்தை இரண்டு வருடங்களில் சிறிய அளவில் துவங்கினார்.

அந்த பெருங்காயப் பிசின் நிறுவனம்தான் இன்று ஐந்துதலைமுறைகளாக இந்தியாவில் பெருங்காய விற்பனையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் L G  கூட்டுப் பெருங்காய நிறுவனம்

1894 ல்  லால்ஜியின் தெற்கு  மும்பை வீட்டில் ஒரு காலி அறையில்  தொடங்கப்பட்டு, பெருங்காய பிசினை கைகளால் உடைத்துத் தூளாக்கி மாவுடன் கலந்து விற்பனை செய்த எல் ஜி (LG) நிறுவனம் இப்போது  இந்தியாவில் 70  சதவீத விற்பனை பங்குகள் கொண்டிருக்கும் முன்னணி பிரபல பெருங்காய நிறுவனமாக இருக்கிறது.

அஃப்கானிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருங்காய பிசினுடன் கருவேலம் பிசின், கோதுமை மாவு ஆகியவற்றை கலந்து மதிப்புகூட்டி, நெடியை குறைத்து கூட்டுப்பெருங்காயமாக விற்பனை செய்யும் இந்த நிறுவனத்தின் நாகப்பட்டினக் கிளையை லால்ஜியின் மகன்  கிம்ஜி 1920 ல் துவங்கினார். [2] 

இப்போது  ஐந்தாவது தலைமுறையாக நிறுவனத்தின் பொறுப்பேற்றுக்கொண்டிருக்கும் லால்ஜியின் கொள்ளுப்பேரன் பிமல்  நிறுவனத்தை துவங்கிய  கொள்ளுப்பாட்டன் லால்ஜியின் புகைப்படம் கூட  தங்களிடமில்லை என்று வருந்துகிறார்.

1970 லிலும் 1980 லிலும் சென்னை, கும்பகோணம், மும்பை மற்றும் நாசிக்கில் LG  கிளைகள் விரிவடைந்தன. பிமலின் தந்தையான அஜித்  கிம்ஜி நிறுவனங்களை இயந்திரமயமாக்கினார் அப்போது நாளொன்றுக்கு 150  கிலோ பிசின் பிற பொருட்களுடன் கலக்கப்பட்டு மதிப்பு கூட்டப்பட்டது ’90களில் பிமல் நிறுவனத்தின் பொறுப்புகளை எடுத்துக் கொண்ட பிறகு 40 நிமிடங்களில், 1000 கிலோ  கூட்டுப்பெருங்காயம் தயராகிறது  

ஒவ்வொரு மாதமும்  பிமல் கஜகஸ்தானின்  மிகப்பெரிய நகரான அல்மாட்டிக்குச்  சென்று அறுவடையாகும் பிசினை  நேரடியாகப் பார்வையிட்டுப் பிறகு கொள்முதல் செய்கிறார். சூடானிலிருந்து நேரடியாக கருவேலம் பிசினையும் இறக்குமதி செய்யும் பிமல்  தற்போது LG கூட்டுப் பெருங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூபாய் நான்கு ஆயிரத்திலிருந்து, எட்டு ஆயிரம் வரை என்கிறார்.

எல் ஜி நிறுவனத்தின் பிரத்யேக வெள்ளை டப்பாக்களில் கிடைக்கும் இந்த  கூட்டு பெருங்காயம் இந்தியாவில் மிகப் புகழ்பெற்றது. விற்பனைப் போட்டியில் அத்துமீறல்களையும் போலிகளையும் சமாளிக்க இந்த நிறுவனம் அவர்களின் வெள்ளை டப்பாக்களில் கியூ.ஆர். பட்டைக் குறியீடு கொண்டிருக்கிறது.

 நான் சிறுமியாக இருக்கையில் மஞ்சள் நிற செவ்வக அட்டைப்பெட்டியில் வரும்  மந்தாரை இலையில் சுற்றப்பட்ட பெருங்காயத்தை பாட்டி அம்மிக்கல்லில் உடைத்து சிறு துண்டுகளாக்கி சேமித்து வைப்பதை பார்த்திருக்கிறேன். என் அம்மா காலத்தில் மந்தார இலை மெல்லிய பிளாஸ்டிக் உறையானது இப்போது நான் கட்டிப் பெருங்காயத்தையும் தூளாக்கப்பட்ட பெருங்காயத்தையும் உபயோகிக்கிறேன்

 சைவம் அசைவம் என்னும் பாகுபாடில்லாது அனைத்துவித உணவுகளிலும் இந்தியாவில் சேர்க்கப்படும், உணவுக்கு வெங்காயம் மற்றும் பூண்டின் எரிமணத்தை அளிக்கும் இந்த பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.  உலகப் பெருங்காய உற்பத்தியில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் உபயோகிக்கப்பட்டாலும் இந்தியா அஃப்கானிஸ்தான் மற்றும் இரானிலிருந்தே இத்தனை வருடங்களாக பெருங்காயத்தை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அஃப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு வருடா வருடம்  ₹942 கோடிக்கு  1200 டன் பெருங்காயம் இறக்குமதியாகிறது,.

உலக மசாலாக்களில் பெருங்காயம்  இடம்பெற்ற கதையும் பெருங்காயத்தின் சுவையைப்போலவே  வித்யாசமும் சுவாரஸ்யமுமானது. மனிதர்கள் நாவால் உணரும் உவர்ப்பு,  இனிப்பு, புளிப்பு, கசப்பு ஆகிய நான்கு அடிப்படை சுவைகளுடன் கூடுதலாக  ஐந்தாவதாக  உமாமி என்னும் சுவையை அறிவியல் உலகில் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்[1] . பெருங்காயத்தின் வேதிச்சேர்மானங்கள் வெங்காயம் மற்றும் பூண்டில் இருக்கும் சல்ஃபர் பொருட்களுக்கு இணையானவை என்பதால் வித்தியாசமான் நெடியுடன் கூடிய எரியும் அதன் சுவை உமாமி சுவை எனப்படுகின்றது

அலெக்சாண்டரின் படைகள் இமயமலையின் உப மலைத்தொடரான, வடமேற்கு பாகிஸ்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு அஃப்கானிஸ்தானுக்கும் இடையில்  இருக்கும் இந்துகுஷ் மலைத் தொடருக்கு 4ஆம் நூற்றாண்டில் வந்த போது அங்கு இயற்கையாக வளர்ந்திருந்த பெருங்காய மரங்களையும் அதிலிருந்து கிடைத்த பெருங்காயத்தையும் கண்டார்கள்.

பெருங்காயத்தை அவர்கள் சில்ஃபியம் என்னும் (silphium) தாவரத்துக்கிணையானதாக கருதினார்கள். சமைக்கப்படும் இறைச்சியை மிருதுவாக்கிய சில்ஃபியம்,  மருத்துவ உபயோகங்களும் கொண்டிருந்தது. மிக அதிகமான பயன்பாட்டினால் அப்போது அழியும் நிலையில் இருந்த  அந்த அரிய தாவரத்துக்கு  இணையாக நெடியுடன் கூடிய பிசினை அளித்த  பெருங்காய மரத்தின் நாற்றுகளை தங்களுடன் அலெக்ஸாண்டரின் படை வீரர்கள் எடுத்துச்சென்றர்கள் என்கிறது வரலாறு. 

சில்ஃபியம் பண்டைய கிரேக்கத்திலும் ரோமிலும் பாலுணர்வு ஊக்கியாக, கருத்தடை மாத்திரையாக, இறைச்சியை மிருதுவாக்க, நறுமணப் பொருளாக என்று பலதரப்பட்ட பயன்பாடுகளை கொண்டிருந்தது. கிரேக்கப் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்குமளவுக்கு சில்ஃபியத்தின் புழக்கம் இருந்தது. பண்டைய கிரேக்க நாணயங்களில் சில்ஃபியத்தின் தண்டுகள் சித்திரிக்கப்பட்டிருந்தன. எகிப்தில் சில்ஃபியம் செடிகளைக் குறிக்கவென்றே பிரத்யேக சித்திர எழுத்து இருந்தது. ரோமில் இவை கடவுளின் பரிசாகக் கருதப்பட்டன. இவற்றைக் குறித்த கவிதைகளும் பாடல்களும் அப்போது புழக்கத்தில் இருந்தன. 

இதன் தோற்றத்தை  தியோஃப்ராஸ்டஸ்  ‘கொழுத்த கருப்புத் தோலால் மூடப்பட்டிருக்கும் வேர்களையும் பொன்னிற இலைகளையும் சோம்பின் செடியினைப் போல வெற்றிடம் கொண்ட தண்டுகளையும்’ கொண்டிருந்ததாக விவரித்திருக்கிறார்

குறிப்பிட்ட மண் வகைகளில் மட்டுமே பயிரான சில்ஃபியம் அதன் தேவை அதிகமானபோது அதீத பயன்பட்டினால் அழியத்துவங்கியதென்றும் வரலாற்றாய்வாளர்கள் கருதுகிறார்கள்

கிரேக்க ரோமானிய உணவுகளில் சில்ஃபியம் உபயோகப்படுத்தப்பட்டிருந்ததை முதல் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட  ரோமானிய சமையல்கலை நூலான  Apicius  குறிப்பிடுகிறது

சில்ஃபியத்துக்கு இணையான பயன்பாடுகளைக் கொண்டிருந்ததால் அலெக்ஸாண்டரால் அறிமுகமான பெருங்காயம் யூரோப்பில் வெகுவிரைவாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

சீனாவில் Awei என்னும் பெயரில் பெருங்காயம் சுயி வம்சா ஆட்சியில் அறிமுகமானது (Sui dynasty 581-618). அறிமுகமான உடனேயே மருந்துப் பொருளாக உடனடிப் புழக்கத்துக்கு வந்த பெருங்காயம் சீனாவின் முதல் மருந்துப் பொருட்களுக்கான நூலில் (xinxiu bencao) இடம்பெற்றது. அதுவே பெருங்காயம் குறித்த முதல் எழுத்துக் குறிப்பு. சீனாவின் இயல்தாவரமான பைஸி என்றழைக்கப்பட்ட  (baizhi)  Angelica dahurica வைப் போலவே தோற்றமளிக்கும் இத்தாவரத்தின் வேர்களிலிருந்து கிடைக்கும் மிகுந்த நெடியுடைய மருந்து  மற்றும் மசாலாப்பொருள் என்று இது குறிப்பிடப்பட்டது. தீய சக்திகளிடமிருந்து பெருங்காயம் விடுவிக்கும் எனும் நம்பிக்கை அப்போது சீனாவில் பரவலாக இருந்தது. பெருங்காய வில்லைகள் பேய் பிடித்திருப்பதாக நம்பப்படும் நபரின் அருகில்  அவர் புகையைச் சுவாசிக்கும்படி நெருப்பிலிடப்பட்டன.

Hing-ing on history: Amid news that India will grow Ferula Asafoetida on home soil, retracing the spice's story

சீன மருத்துவர்களும் சவங்களிலிருந்து வெளியாகும் qi எனப்படும் தீய சக்தி பிடிக்காமல் இருக்க பெருங்காய  மாத்திரைகளை விழுங்கும்படி பரிந்துரைத்தார்கள்.

சன் சிமயா (sun simiao) என்னும் புகழ்பெற்ற சீன மருத்துவர் 581-682ல் முதன்முதலாக வயிற்றிலிருக்கும் சிறு சிறு கட்டிகளைக் கரைக்க பெருங்காயத்தைப் பயன்படுத்தினார். அவரது மருத்துவக் குறிப்புக்களில் பெருங்காயம் இந்தியாவைச் சேர்ந்தது என குறிப்பிட்டிருக்கிறார்.

கிபி 752ல் வாங் டோ (Wang tao) வின் மருத்துவக் குறிப்புக்களின் திரட்டு நூலான ’’இன்றியமையாதவைகளின் ரகசியங்கள்’’  என்னும் நூலிலும் பெருங்காயத்தின் தீய சக்திக்கெதிரான குணங்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 அழகிய தோற்றத்தில் உருமாறி வந்து இளம் பெண்களை மயக்கி உறவு கொள்ளும் விலங்குகளின் ஆவிகளைப் பெருங்காயம் விரட்டும் எனவும் பண்டைய சீனாவில் நம்பப்பட்டது

பின்னர்  xing que/ xingu  எனவும் சீன மொழியில் அழைக்கப்பட்டு மருந்தாகவும், மசாலா பொருளாகவும் பிரபலமாகியிருந்த பெருங்காயப்பிசின் ஒரு புத்தத் துறவி பிறரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாமென்னும் 5 பிசின்களில் ஒன்றாக புத்தமத கோட்பாடுகளில் குறிப்பிடப்பட்டது.

சீன பௌத்தத் துறவிகள் பயணங்களின் போது பெருங்காயம் குறித்த பல புதிய தகவல்களைச் சேகரித்து கொண்டிருந்தனர். சீன பௌத்த மடாலயங்களில் பெருங்காயம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அக்காலத்தில் 1 லியாங் அளவுள்ள பெருங்காயம் (1 லியாங் =91.3 அவுன்ஸ்) 7செம்புக்காசுகளுக்கு விற்பனையானது.

8 மற்றும் 9 ம் நூற்றாண்டுகளில் குடற்புழு நீக்கும் மருந்தாக பெருங்காயம் சீனா முழுவதும் அறியப்பட்டது.  மருத்துவ சிகிச்சைகளுக்கு இணையாக  நோயை உருவாக்குவதாக நம்பப்பட்ட பேய் பிசாசு பில்லி சூனியம் ஆகியவற்றை விரட்டவும்,  இவை தொடர்பான சடங்குகளிலும் பெருங்காயம் அதிகம் பயன்பட்டது.  

கிமு எட்டாம் நூற்றாண்டில்  பாபிலோனிய மன்னர் மர்டுக்-அப்லா-இடினா II  பட்டியலிட்டிருந்த தோட்டங்களிலிருந்து கிடைக்கும் பொருட்களில்  பெருங்காயமும் இருந்தது. .  அசீரிய மன்னர் அஷூர்பானிபாலின் நூலகத்தில் உள்ள மருத்துவத் தாவரங்களின் பட்டியலிலும் பெருங்காயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 மற்றும் 8 ம் நூற்றாண்டுகளில் உலகச் சந்தைகளில் பெருங்காயம்  வெகுவாக புழங்கியது. 

9 ஆம் நூற்றாண்டுக்கு பிறகு பட்டுப்பாதை வழியே இந்தியா மற்றும் அஃப்கானிஸ்தானிலிருந்து பெருங்காயமும்  அதனைக் குறித்த தகவல்களும் உலகின்  பல நாடுகளுக்கு சென்றன. பெருங்காயம் awei /xing que/ xingu என்று சீனாவிலும்  agi  என்று  ஜப்பானிலும்  awi என்று  கொரியாவிலும் a ngui என்று வியட்னாமிலும் அழைக்கப்பட்டது. பெருங்காயத்தைக் குறித்து எழுதிய யாரும் அந்த மரத்தை பார்த்திருக்கவில்லை செவிவழிச் செய்திகளின் பேரிலேயே பெருங்காய மரத்தையும், அதிலிருந்து எடுக்கப்படும் பிசினை குறித்தும் எழுதினார்கள்

கோவில்களிலும் சந்தைகளிலும் சேமித்து வைக்கப்பட்ட,. மருந்துப்பொருளாகவும், உணவுக்கு சுவை சேர்க்கும் மசாலாவாகவும் புகழ்பெற்றிருந்த பெருங்காயத்தின் தேவை அதிகரித்து அதன் விலை பல மடங்கு அதிகரித்தது. சோங் வம்சத்தில் ஒரு பெரிய கட்டி பெருங்காயமும்,  சீனப்பச்சைக்கல்லும் சீனப்பேரசருக்கு பரிசாக அளிக்கப்பட்டது. பெருங்காயத்தின் கள்ளச்சந்தை வணிகமும் பெருகியது 

10லிருந்து 12 நூற்றாண்டுகளில் அதிக அளவில் பெருங்காயம் சீனாவில் இறக்குமதியானது

மத்திய ஆசியா மற்றும் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு அறிமுகமான பெருங்காயம் அங்கு xingu என அழைக்கப்பட்டது. வினய என்னும்  பௌத்தத் துறவியின் ’’பத்துப் பாராயணங்கள்’’ என்னும் நூலில் இந்த சொல் முதன் முதலில் குறிப்பிடப்பட்டது 

ஒரு நூற்றாண்டு கழித்து தென்னிந்தியாவின் சோழர்கள் காலத்தில் சீன அரசருக்குப் பரிசாக, மிருதுவான துணி, காண்டாமிருகத்தின் பற்கள், கிராம்பு[2] , பன்னீர் மற்றும் பெருங்காயம் அளிக்கப்பட்டன.

16 ஆம் நூற்றாண்டில் பெருங்காயத்தின் பரவல் வேகம் பிடித்தது. அப்போது சீனாவில் Li Shizhen (!518-1593)  எழுதிய மருந்துப் பொருட்கள் குறித்த நூலான பென்சோ காங்மு (Bencao gangmu) வில் பெருங்காயம் குறித்த விளக்கமான குறிப்புகள் இருந்தன. இந்நூல் பல உலக மொழிகளில் மொழி மாற்றப்பட்டது.

 போர்த்துக்கீசிய மருத்துவரும் மருந்து மற்றும் மசாலாப்பொருட்களில் நிபுணருமாகிய  கார்சியா (garcia da orta) கோவாவில் மருத்துவம் பயின்றார். அவரது இந்திய அனுபவங்களை நூலாக்கியபோது இவரே முதன் முதலாக பெருங்காயத்தின் அரபி,  இந்தியப் பெயர்கள் உள்ளிட்ட பழமொழி வழங்கு பெயர்களை குறிப்பிட்டிருந்தார். பெருங்காயம் ஒரு மரத்தில் உண்டாக்கப்படும் வெட்டுக் காயத்திலிருந்து வடியும் பிசின் என்றும், தான் அந்த மரத்தை பார்த்ததில்லை எனவும் நேர்மையாக அதில் எழுதியிருந்தார். 

உலகெங்கும் பரவிக்கொண்டிருந்த பெருங்காயத்தின் புகழை கேள்விப்பட்ட ஜெர்மானிய மருத்துவர் எங்கல்ஃபெர்ட் கெம்ஃபர் (Englbert Kaempfer 1651-1716)  பெருங்காயப் பிசின் அறுவடை செய்யப்படுவதை நேரில் காண பெர்சியாவுக்கு சென்றார். அங்கிருந்து இந்தியா, ரஷ்யா, சயாம் மற்றும் ஜப்பானுக்கும் பயணித்த அவர் தனது பயண அனுபவங்களைத் தொகுத்து 1712ல் நூலாக்கியபோது (Amoenitatum exoticarum) 17 பக்கங்களை பெருங்காயத்துக்கென ஒதுக்கி இருந்தார். அவற்றில் பெருங்காய மரத்தின் சித்திரமும் பிசின் அறுவடை குறித்த விளக்கமும் இருந்தது.

அவரைத் தொடர்ந்து பல யூரோப்பிய இயற்கையாளர்கள் பெருங்காயத்தைக் குறித்து ஆய்வு செய்து கட்டுரைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களால் கொண்டு வரப்பட்ட பெருங்காய விதைகள் யூரோப்பிய தோட்டங்களில் விதைக்கப்பட்டன. 

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தாவரவியலாளர் ஜான் பால்ஃபோர் (john balfour 1808-1884) முழுத் தாவரத்தின் பூண்டு நெடி, மலர்களின் இனிப்பு நெடி, கனிகளின் பெருங்காய நெடி, இளம் தளிர்களின் குறைந்த நெடி, வேரின் கசப்பு நெடி ஆகியவற்றை தனித்தனியாக விவரித்துக் கட்டுரைகள் எழுதினார்

இந்த கட்டுரை பல மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு பல அறிஞர்களின் கவனத்திற்குச் சென்றது. ஜப்பானின் புகழ்பெற்ற தாவரவியலாளர்களும் மருத்துவர்களும் யூரோப்பிய பெருங்காயக் கட்டுரைகளைத் தேடிச் சேகரித்து, ஜப்பானிய மொழியில் மாற்றிப் பிரசுரித்தார்கள்.1815 ல் ’’டச்சு தாவரவியல் அறிதல்களின் சாராம்சம்’’ எனும் நூலில் மரம் உயிரோடு இருக்கையிலேயே தொடர்ந்து பிசின் எடுக்கப்பட்டது, பிசினின் நெடி தாள முடியாத அளவுக்கு இருந்தது ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன. கடும் நெடியினால் இது சாத்தானின் உணவு, சாத்தானின் சாணம் எனப் பல நாடுகளில் அழைக்கப்பட்டது.

பெருங்காயத்தின் புகழ் பரவிக் கொண்டிருக்கையிலேயே அதுகுறித்த பல வதந்திகளும் உருவாகின. பெருங்காய மரம் நச்சுத்தன்மை கொண்டது, அதனருகில் செல்லும் விலங்குகளும் நஞ்சூட்டப்படுகின்றன என்பது அதிலொன்று.

பலர் பெருங்காய மரத்தின் நெடியினால் நஞ்சூட்டப்பட்ட ஆடுகளின் இறைச்சியும் நஞ்சானதை எழுதினார்கள். அதே சமயத்தில் சந்தைகளில் கலப்படப் பெருங்காயம் விற்பனையாகிக் கொண்டிருந்தது  தரமான அசல் பெருங்காயத்தைக் கலப்படப் பெருங்காயத்தில் இருந்து பிரித்துக் காண்பது குறித்தும் கட்டுரைகள் வெளியாகிக் கொண்டிருந்தன

இந்தியாவில் பரவலான உபயோகத்திலிருக்கும் பெருங்காயம் இந்தியாவில் விளைவதில்லை என்பதை 1670 ல் கிழக்கிந்திய கம்பெனியின் மருத்துவரான ஜான் பிரியர் முதன்முதலில்  குறிப்பிட்டார்

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பலவகையான பெருங்காய மரங்களின்  வகைகள், பிசினின் வேறுபாடுகள் ஆகியவை தெளிவாக வரையறுக்கப்பட்டு,  கட்டுரைகள் வெளியாகின. 19 நூற்றாண்டில் ஜின்’னிற்கு  சுவையூட்டவும், சில நறுமண  திரவியங்களிலும் கூட பெருங்காயம் சேர்க்கப்பட்டது.

இந்தியாவில் முகலாய மன்னர்களின் காலத்தில் அறிமுகமான பல மசாலா பொருட்களில் பெருங்காயமும் ஒன்று. முகலாய அரசவைப் பாடகர்கள்  குரல் வளத்தின் பொருட்டு,  நெய் கலந்த பெருங்காயத்தை மென்றுவிட்டு நதி நீரில் நின்று சாதகம் செய்திருக்கின்றனர்.

This contains an image of:

பெருங்காயம் தோன்றிய நாட்டை விடவும், இந்தியாவில் இந்த நாட்டின் சொந்த மசாலாப் பொருளாகவே கருதப்படுகிறது.’Hing’ என்று பொதுவாக அழைக்கப்படும் பெருங்காயம் அஃப்கானிஸ்தான் மற்றும் தெற்கு ஈரானை சேர்ந்த ஃஃபெருலா அசாஃபோடிடா  (Ferula assa-foetida ) என்னும் மரத்தின்  நெடியுடன் கூடிய வேர் பிசினின் மதிப்பு கூட்டப்பட்ட மசாலாவாகும்.

’Ferula’ என்றால் கொண்டிருக்கும் என்றும் ’asa’ அன்றால் பிசின் என்றும் ’foetida’ என்றால் நாற்றமடிக்கும் என்றும் லத்தீன்  மற்றும் அரபிமொழிகளில் பொருள். ஃஃபெருலா பேரினத்தின் 60 சிற்றினங்களும் மத்தியா ஆசியா , ஐரோப்பா மற்றும் வட ஆப்பிரிக்காவில் இயற்கையாக விளைகின்றன 

ஃபெருலா பேரினத்தில், அஸஃபோடிடாவுடன் இன்னும் சில முக்கிய வேரிலிருந்து பிசினை அளிக்கும்.  Ferula asafoetida;  Ferula alliacea, Ferula rubricaulis, Ferula narthex மற்றும்  Ferula foetida. ஆகிய சிற்றினங்கள் இருக்கின்றன Ferula fukanensis மற்றும் Ferula sinkiangensis  ஆகியவை சீனாவில் மட்டுமே இருக்கும் பெருங்காய தாவரங்கள் .இவை அனைத்தும் ஒரே மாதிரியான வாழிடங்களில் தான் வளர்கின்றன.  

கேரட் குடும்பமான ஏபியேசியை சேர்ந்த பெருங்காய மரங்கள் 3 லிருந்து 5 அடி உயரம் வரைசிறிய மரம் போல வளரும். இதன் தண்டுகள் மென்மையாக இருக்கும். ஆண் பெண் மலர்கள் தனித்தனியே மலர் மஞ்சரிகளில் காணப்படும் இவை பல்லாண்டுத்தாவரங்கள்.பசுமஞ்சள் குடைகளாக காணப்படும் மலர்களை கொண்டிருக்கும் மலர்த் தண்டுகளிலும் பிசின் இருக்கும். முட்டை வடிவ சிவந்த தட்டையான கனிகளிலும் பால் வடியும். பருத்த சதைப்பற்றான வேர்களில் பிசின் அதிகம் இருக்கும் தாவரத்தின் அனைத்து பாகங்களும் கடும் நெடி கொண்டிருக்கும். அஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பெருங்காயம் விளையும் பிரதேசங்களில் இதன் இலைகளும் இளம் தண்டுகளும் உணவாக பயன்படுகின்றன. மலர்ஞ்சரிகளும், பிசின் வடிந்தபின்னர் வேர்கள் அரைக்கப்பட்ட மாவும் உணவில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன

4-5 வருடங்களான பெருங்காய மரத்தின் 12-லிருந்து 15 செ.மீ விட்டம் கொண்ட வேர்கள் மார்ச்-ஏப்ரல் மாதத்தில்  மலர்வதற்குச் சற்று முன்னர் மண்ணிலிருந்து வெளியே தெரியும்படி மண்ணைத் தோண்டி எடுத்து, தண்டுடன் ஒட்டியிருக்கும் வேரின் தலைப்பகுதி லேசாக சீவி விடப்படும். சீவிய காயத்தில் இருந்து பால் போன்ற திரவம் கசியத் துவங்குகையில் வெட்டிய காயம் குச்சிகள் மற்றும் மண்ணைக்கொண்டு மூடப்படும்.

சிலநாட்கள் கழித்து  வடிந்து உலர்ந்திருக்கும் பிசின் சுரண்டி எடுக்கப்பட்ட பின்னர் புதிதாக வேரில் காயம் உண்டாக்கப்பட்டு மீண்டும் மூடப்படும். சில சமயங்களில் வெட்டிய வேர்ச்சீவலும் பிசினுடன் சேர்த்து எடுத்து சேமிக்கப்படும். மீண்டும் மீண்டும் பிசின் வடிந்து 3 மாதங்களில் அரை கிலோவிலிருந்து 1 கிலோ வரை பிசின் வடிந்து தீரும் வரை வெட்டுக்கள் உண்டாக்கப்பட்டு, பிசின் தொடர்ந்து சேகரிக்கப்படும். இவ்வாறு காயங்கள் ஆழமாக உண்டாக்கப்பட்டு பிசின் சேகரிக்கப்படுவதால்தான் தமிழில் இது பெருங்காயம் எனப்படுகின்றது.

காயமான வேரிலிருந்து சாம்பல் வெள்ளை நிறத்தில் வடியும் பிசின் உலருகையில் மஞ்சளாகிப் பின்னர் சிவப்பிலும்,  இறுதியில் மண் நிறத்திலும் இருக்கும். உலர்ந்த வேர்ச்சீவல்களும் மலிவுவிலைப் பெருங்காயமாக விற்பனை செய்யப்படும்.

மரத்தின் வேரைக் காயப்படுத்தாமல் இயற்கையாகவே வடியும் பெருங்காயமே மிக அரியதும், தூயதும், முதல் தரமுமான பெருங்காயம் எனக் கருதப்படுகிறது இது நீர்த்துளி பெருங்காயம் எனப்படுகிறது இவ்வகை நாம் சாதாரணமாக புழங்கும் வகையை விட மிக மிருதுவாக இருக்கும்.

வடியும் வேர்ப்பிசின் வியாபாரிகள் மற்றும் அறுவடை செய்பவர்களால் கண்ணீர் என குறிப்பிடப்படும், முதல் கண்ணீர் துளிகள் இரண்டாம் கண்ணீர்துளிகள் என இவை குறிப்பிடப்பட்டு சேமிக்கப்படும். ’kokh’ எனப்படும் முதல் கண்ணீர் துளி  மிக குறைந்த அளவே கிடைக்கும். மிக அதிக நெடி கொண்டிருக்கும்.  இவையே பிறவற்றை காட்டிலும் அதிக விலையும் கொண்டிருக்கும். 

பெருங்காயத்தில் 40–64% பிசினும், 25% பசையும், 10–17% எண்ணையும், and 1.5–10%சாம்பலும் உள்ளன, அசரேனினோடேன்னல்கள் ‘A’ மற்றும் ‘B’, பெருலிக் அமிலம், அம்பெல்லிஃபெரோன் மற்றும் நான்கு வரையறுக்கப்படாத சேர்மங்களை  பெருங்காயப் பிசின் கொண்டுள்ளது

30 சதவீத பிசினுடன் வட இந்தியாவில் கோதுமை மாவு/தென்னிந்தியாவில் அரிசி மாவு/ மைதா மாவு மற்றும் கருவேலம் பிசின் ஆகியவை கலக்கபட்ட கூட்டுப்பெருங்காயமே நமக்கு சந்தைகளில் கிடைக்கிறது

அஃப்கானிஸ்தானில் காந்தாரி பெருங்காயம் முதல் தரமானது, ஹெராட் வகை இரண்டாம் தரம். இந்தியாவில் வெள்ளை காபூலி வகைக் காயமே மிகப்பிரபலம்.

தில்லியில் வருடத்துக்கு 630,000 கிலோ பெருங்காயம் விற்பனை செய்யும், பெருங்காயத்திலேயே பிறந்து வளர்ந்தவரென்று தன்னை சொல்லிக்கொள்ளும் மூன்றாம் தலைமுறை விற்பனையாளரான  அஞ்சய் பாட்டியா ’காபூலி ராஜா’ பெருங்காய  வகையே இங்கு சுடச்சுட விற்பனையாகும் பிசின் என்கிறார். மிக குறைவான விலையில் கிடைப்பது இனிப்புச் சுவையும் ஆரஞ்சின் மணமும்  கொண்டிருக்கும் ஹதா வகை

இந்தியாவில் பெருங்காயம் உற்பத்தி ஆவதில்லை என்றாலும் கடும் நெடி உடைய பெருங்காயத்தை சமையலுக்கு தகுந்தவாறு தயாராக்குவது இந்தியாவில்தான் நடைபெறுகிறது குறிப்பாக உத்தரப்பிரதேசத்தின்  ஹத்ராஸ்(Hathras) நகர் இதில் மிகவும் பிரசித்தி பெற்றது.

பெருங்காயக் கலப்படத்தை எளிதாகக் கண்டுபிடிக்கலாம் அசல் பெருங்காயம் நெருப்பில் கற்பூரம் போல பற்றி எரியும். போலிப் பெருங்காயம் எரியாது. அசல் பெருங்காயம் நீரில் கலந்து பால் போல நீர் மாறும். போலிப் பெருங்காயம் நீரின் அடியில் தங்கும்.

உணவுப் பயன்பாட்டுக்கிணையாக இப்பிசின் மருந்தாகவும் உலகெங்கிலும் பயன்படுகிறது. அஃப்கானிஸ்தானில் மனநோய்களுக்கும், இருமலுக்கும், ரத்தக்கொதிப்பிற்கும் பெருங்காயம் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

எகிப்தில் வலி நிவாரணியாகவும், குடற்புழு நீக்கவும், பெருங்காயம் பயன்படுகிறது. சவுதி அரேபியாவில் ஆஸ்துமாவிற்கும், பிரேஸிலில் பாலுணர்வை தூண்டவும் பெருங்காயத்தை பயன்படுத்துகின்றனர். மலேசியாவில் மாதவிலக்குப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பெருங்காயத்தை பயன்படுத்துகின்றனர்.

ஆயுர்வேத மற்றும்  பல பாரம்பரிய மருத்துவ முறைகள் பெருங்காயத்தை  வயிற்று உபாதைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்துகின்றனர். ஓபியத்தின் போதையை முறிக்கவும் பெருங்காயம் அளிக்கப்படும்.

 ஜமைக்காவில், ஆவிகள்  குழந்தையின் உச்சிப்பொட்டு வாயிலாக நுழைவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, குழந்தையின் முன்புறத் தலைப்பகுதியில் பெருங்காயப் பிசின் துண்டு,  துணியில் கட்டித் தொங்க விடப்பட்டிருக்கும். ஆப்பிரிக்காவ்ல் வூடூ வித்தைகளில் சாபமிடவும், சாபங்களிலிருந்தும், பேய் பிசாசு போன்றவைகளின் பிடியிலிருந்தும் விடுபடவும் பெருங்காயம் உபயோகிக்கப்படுகிறது. 

உலகில் வேறெங்கும் பெருங்காயம் பயிராவதில்லை. இயற்கையாக வறண்ட மலைப்பிரதேசங்களில் விளையும் இவற்றை  முதன் முதலில் பயிராக்கும் முயற்சியில் பெருங்காய இறக்குமதிக்கு மிக அதிக செலவு செய்து கொண்டிருக்கும் இந்தியாதான் ஈடுபட்டது. 

 இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம்  (ICAR) மற்றும் தேசிய தாவர மரபியல் வளப்பேழையகம் (NBPGR) 1963 மற்றும் 1989 ல்  ஈரானிலிருந்து பெருங்காய  விதைகளை தருவித்து இந்திய மலைப்பகுதிகளில் அவற்றை பயிராக்க செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.  இந்திய காலநிலை பெருங்காய மரங்கள் வளர ஏதுவானதாக  இல்லை ..

Heeng Cultivation

இமயமலையின், உயிர்வளத் தொழில்நுட்ப நிறுவனம் (HIBT- Himalayan institute of bioresource technology) மீண்டும் CSIR உடன் இணைந்து  2017 அக்டோபரில் இருந்து பெருங்காயத்தை சாகுபடி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

இமாசலப் பிரதேசத்தில் குவாரிங் கிராமத்தில் லாஹால் பள்ளத்தாக்கின் ( Kwaring village in Lahaul valley, Himachal Pradesh) வறண்ட குளிர்ப்பாலைகளில் பெருங்காய வளர்ச்சிக்கு ஏற்ற கால நிலை  நிலவுவதால் அங்கு இந்த சோதனை முயற்சி தொடங்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான ICAR ன் எல்லா ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளும் பின்பற்றப்பட்டு 6 தொகுதிகளாக விதைகள் ஈரானிலிருந்து தருவிக்கப்பட்டன.  (EC966538 with Import Permit-318/2018 and EC968466-70 with Import Permit-409/2018)  இவற்றைச் சாகுபடி செய்வதில் இருந்த மிகப்பெரிய சவாலென்பது விதைகளின் உறக்கநிலைதான்  பெருங்காய விதைகள் புதிய சூழலில் முளைக்கும் சாத்தியம் என்பது வெறும் ஒரு சதவீதம் தான் 

எனவே இந்த உறக்க நிலையில் இருந்து விதைகளை விடுவிக்க சில  முயற்சிகளை 2 மாதங்கள் செய்தபின்னரே அவை ஆய்வகங்களில் முளைக்கச் செய்யபட்டன

முளைவிட்ட முதல் பெருங்காய நாற்று IHBT’யின் இயக்குநர் திரு சஞ்சய் குமாரால்  லஹால் பள்ளத்தாக்கில்   அக்டோபர் 15, 2020 அன்று நடப்பட்டது..  இந்த பள்ளத்தாக்கில் 7 விவசாயிகளுக்கு சொந்தமான  4 நிலங்களில் இந்த பெருங்காய சாகுபடி இப்போது செய்யப்பட்டிருக்கிறது 

Asafoetida-heeng-foetida-growing-at-Kyzylkum-Desert-in-Uzbekistan-shut

 இவை வளர்ந்து பலன் கொடுக்கும் வரை வருடத்திற்கு ஒரு ஹெக்டருக்கு 3 லட்சம் செலவாகும் என்றும் ஐந்தாம் வருடத்திலிருந்து பத்துலட்சம் லாபம் வருமென்றும் யூகிக்கப்படுகிறது.  

பெருங்காயத்துடன் பாதாம், உலர் திராட்சை, அத்திப்பழம் மற்றும் பிஸ்தா பருப்பு ஆகியவையும் அஃப்கானிஸ்தானிலிருந்துதான் நமக்கு இறக்குமதியாகிறது. தாலிபான்களின் கட்டுக்குள் அஃப்கானிஸ்தான் வந்தபிறகு இவை அனைத்தின் சந்தை விலையும் அதிகமாகி  இருக்கிறது. முன்பு 1400 ரூபாய் களாக இருந்த அஃப்கான் பெருங்காயம் இப்போது 2000 ரூபாய்களாகி இருக்கிறது கொல்கத்தாவின் மொத்த வியாபாரச் சந்தையான பாரா பஜார் வணிகர்கள் இது தொடக்கம்தான், விலை இன்னும் அதிகமாகும் என யூகிக்கின்றனர். 

எனவே இந்தியாவில் பெருங்காய உற்பத்தி இமாசல் பிரதேசத்தின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாறுதலை அளிக்கும் என ஆவலுடன்  எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் இனிப் பெருங்காயம் உற்பத்தியாகும் என பலர் கொண்டாடிக் கொண்டிருக்கையில், இந்தியாவின் 22 பெருங்காய இறக்குமதி நிறுவனங்களில் ஒன்றான சேட்டன் தாஸ் லக்‌ஷ்மண் தாஸ் நிறுவனத்தின் சஞ்சய் பாட்டியா, அப்படிக் கொண்டாடும் அளவுக்கு ஒன்றுமில்லை என்கிறார். ’’இன்னும் சில வருடங்கள் கழித்தே வேரில் பிசின் தேவையான அளவுக்கு கிடைக்குமா என்று தெரியும், அப்படியே கிடைத்தாலும் வருடந்துக்கு ஒரு மரத்திலிருந்து 1கிலோ பிசினாவது கிடைக்கவில்லை எனில் அது இந்தியாவில் வளர்ந்தும் பிரயோஜனமில்லை, ஐந்து வருடங்கள் கழித்து கந்தஹாரின் தங்கத்தரம் வாய்ந்த காந்தாரி பெருங்காயத்தின் தரத்தில் இங்கும் கிடைத்தால் அப்போது கொண்டாடிக் கொள்ளலாம்’’ என்கிறார் இவர்.

உலகச் சந்தையில் தரமான பெருங்காயத்தை இந்தியா அளிக்குமா அல்லது ’’இந்தியக் காயமே அது பொய்யடா’’ என்று ஆகிவிடுமா வென்று   இன்னும் சில வருடங்கள்  பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

***

[1] காபூலிவாலா கதை திரைப்படமாக இந்தியிலும் வங்க மொழியிலும் வெளியாகி இருப்பதாகத் தெரிகிறது. வங்க மொழிப் படத்துக்கு இங்கிலிஷில் மொழிபெயர்த்த படக் குறிப்புகளுடன் திரைப்படத்தைப் பார்க்க முடியும். அதற்கான முகவரி: https://www.youtube.com/watch?v=9b5HQXgHgR4

[2] இந்த முகவரியில் உள்ள ஒரு படத்தைப் பார்க்கலாம். இது தமிழ்நாட்டில் துவக்கப்பட்ட கடை: https://www.laljeegodhoo.com/company-profile/


காபியின் கதை

17 ஆம் நூற்றாண்டில் (1670) கர்நாடகாவில்  (அப்போதைய மைசூர்) சிக்மகளூர்  பழங்குடியின கொள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. தொடர்ந்து நடந்த கொள்ளைகளில் உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் உண்டாகி கொண்டே இருந்ததால். அங்கிருந்த  மக்கள் அடிக்கடி கொள்ளையர்களுக்கு அஞ்சி இடம் மாறிக்கொண்டே  இருந்தனர். 

சிக்மகளூரைச்சேர்ந்த  பாபா புதான்  என்னும் சூஃபி துறவி ஒருவரும் அவரது சீடர்களும் அவ்வாறு கொள்ளையர்களிடமிருந்து விலகி விலகி சென்று கொண்டே இருந்த பயணத்தில்  கடைசியாக சந்திரகிரியின் ஒரு பெருங்குகையில்  குடிஅமைந்தார்கள். 

குகையிலிருக்கையில் பாபா மெக்கா புனிதப்பயணத்துக்கு புறப்பட்டார், அவரது ஆதரவாளர்கள் அனைவரும் சந்திரகிரி குகையிலேயே தங்கியிருந்தனர்.

புனித பயணத்தின் போது மெக்காவில்  அனைத்து பயணிகளுக்கும் அருந்த அடர் கருப்பு நிற பானமொன்று சூடாக அளிக்கப்பட்டது. அதன் சுவையில் மெய்மறந்த பாபா அதைக் குறித்து  விசாரித்தார். கஹ்வா (Qahwah) என்றழைக்கப்பட அப்பானம் சில வருடங்களாகவே மெக்கா வரும் பயணிகளுக்கு அளிக்கப்படுவதாகவும் மோகா துறைமுகத்திலிருந்து அவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆவதையும் கேட்டறிந்தார்.அவர் மெக்காவில் தங்கி இருந்த நாட்களிலெல்லாம் அவருக்கு அப்பானம் வழங்கப்பட்டது.

அது ஒரு புதர்ச்செடியின் கனிகளிலிருந்து எடுக்கப்படும் விதைகள் என்பதையும் அறிந்து கொண்ட  பாபா இந்தியாவிற்கு திரும்புகையில் அக்கொட்டைகளை கொண்டு போக விரும்பினார்

 மெக்காவிலிருந்து புறப்பட்டு ஏமானின் மோகா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த பாபா அங்கும் அதே பானத்தை அருந்தினார். அங்கு ஏராளமான கப்பல்களில் வறுத்த காபி கொட்டைகள் ஏற்றுமதியாவதையும் கவனித்தார்.

அரேபியர்கள் காபி பயிரிடுதல் வேறெந்த  நாடுகளுக்கும் கிடைத்து  விடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்தார்கள்.  எனவே  அனைத்து காபிக் கொட்டைகளும் வறுக்கப்பட்ட பின்னரே ஏற்றுமதி செய்யப்பட்டன. மோகா துறைமுகம் அப்போது காபி ஏற்றுமதிக்கு மிக பிரபலமாக இருந்தது

அரேபியாவிலிருந்து பச்சைக் காபி கொட்டைகளை பிற நாடுகளுக்கு எடுத்துச்செல்வது சட்டப்படி அப்போது தடை செய்யப்பட்டிருந்தது. பாபா கடினமாக முயற்சி செய்து பச்சைக் காபிக்கொட்டைகள் சேகரிக்கப்படும் இடத்தை கண்டறிந்து அங்கிருந்து 7 பச்சைக் காபி கொட்டைகளை எடுத்துக்கொண்டார். 

மோகா துறைமுகத்திலிருந்து கப்பல்களில் சொந்த நாட்டுக்கு திரும்பும் பயணிகளை கடுமையாக சோதனை செய்வார்கள் என்பதால் அந்த 7 கொட்டைகளையும் தனது அடர்ந்த தாடிக்குள்  பொதிந்து மறைத்து வைத்துக்கொண்டு யாரிடமும் பிடிபடாமல் கர்நாடகத்தின் சந்திரகிரி குகைக்கு  வந்து சேர்ந்தார் பாபா.

 அந்த காபிக் கொட்டை விதைகள் ஏழும் அவர்கள் தங்கி இருந்த அதே மலைக் குகையை சுற்றி நட்டு வைக்கப்பட்டன. சந்திரகிரியின் சாதகமான காலநிலையில். அனைத்து விதைகளும் முளைத்து காபி பயிராக வளர்ந்தன,

அந்த காபி பயிர்களே இந்தியாவில் முதல் முதலாக பயிரிடப்பட்டவை. பாபா புதான்  கொண்டு வந்தது காபியின் இரு முக்கியமான சிற்றினங்களில் ஒன்றான அரேபிகா வகை. அவற்றிலிருந்து கிடைத்த பழங்களின் கொட்டைகளை பாபா மெக்காவில் தான் கேட்டறிந்த முறைப்படி  பக்குவப்படுத்தி வறுத்து அரைத்து பானமாக்கி உள்ளூர் மக்களுக்கு கொடுத்தார். காபி பானமும், பயிரும் அதன்பிறகு கர்நாடகாவில் பிரசித்தி பெற்றது

அந்த 7 காபி தாய் பயிர்களின் சந்ததிகள் தற்போது இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் விளையும் காபி பயிர்களில் கலந்திருக்கின்றன.

இப்போதும் கர்நாடக காபி வகைகளில் தாடி வைத்த துறவியின் சித்திரமும், 7 விதைகள் மற்றும் புதான் என்னும் பெயருள்ள காபியகங்களும் பிரபலமாக இருக்கிறது.

காபி ஏராளமாக பயிராகும் மேற்குத்தொடர்ச்சிமலையின் பகுதியான அந்தப்பகுதியே இப்போது பாபா புதான் குன்று என்று அழைக்கப்படுகிறது. பாபாவின் சமாதியும் அங்குதான் அமைந்துள்ளது

காபி கதைகள்

உலகின் மூன்று பிரபல பானங்களிலொன்றான காபி (தேநீருக்கும், தண்ணீருக்கு அடுத்தபடியாக) உருவான கதைகளும்,  காபி உலகெங்கும் பாபா புதானின் தாடிக்குள் ஒளிந்து  வந்ததுபோல் பல வழிகளில் பயணித்ததும் மிக சுவாரசியமானவை. பலநூறு கதைகள் காபி பானம் கண்டுபிடிக்கப்பட்டதை குறித்து  உலகெங்கிலும் இருக்கின்றன.

 ஒரு புதர்ச் செடியின் பழங்களில் இருக்கும் சிறு விதையானது உலகின் இரண்டாவது மிக அதிகமாக சந்தைப்படும் பொருளாக உருவாகி இருக்கிறது என்பதை காபியின் வரலாறு மூலம் அறிந்துகொள்கையில்  மிகவும் ஆச்சரியமூட்டும் .

மொராக்கோவை சேர்ந்த சூஃபி ஞானியான அக்பர் நூருதீன் அபு அல் ஹசன் (Ghothul Akbar Nooruddin Abu al-Hasan al-Shadhili) எதியோப்பியாவுக்கு பயணம் மேற் கொண்டிருக்கையில் ஒரு சில இடங்களில் பறவைகளின் விநோதமான செயல்களை  கண்டார், சாதாரணமாக இருக்கும் அந்த பறவைகள் ஒரு குறிப்பிட்ட வகை புதர்களின் ரத்தச் சிவப்பு பழங்களை  உண்ட பின்னர்,  மிகுந்த உற்சாகமடைந்து பரபரப்பாக இருப்பதை கவனித்த அக்பர் தானும் அப்பழங்களை உண்டார். அவருக்கும் பறவைகளைப் போலவே உற்சாக மிகுதியும் புத்துணர்வும் உண்டானது. அவர் அப்பழங்களின் கொட்டைகளிலிருந்து காபி உருவாக்கினார் என்பது ஒரு பிரபல காபிக்கதை.

மற்றுமொரு கதையில் அக்பரின் சீடரும், பிரார்த்தனைகள் மூலமே நோயாளிகளை குணப்படுத்தும் சக்தியும் கொண்டவரான  ஓமர் என்பவர் ஒருமுறை மோகாவிலிருந்து பாலைவனம் வழியே பயணிக்கிறார்.   குசாப் (Ousab). என்னுமிடத்தில் இருந்த கடும்பாலை குகையொன்றிற்கு வந்து சேர்ந்த அவர் பசியிலும் சோர்விலும் தாகத்திலும் களைத்திருந்தார். உயிர் பிழைக்க வேண்டி அங்கிருந்த புதர்ச்செடிகளின் கசக்கும் பழங்களை கொட்டையுடன் உண்டார்.அவை மிக கடினமாக இருந்ததால் நெருப்பு மூட்டி அவற்றை வறுத்தும் அவை கடினமாகவே இருந்திருக்கிறது. பிறகு அங்கிருந்த சிறிதளவு குடிநீரில் அவற்றை வேகவைத்து  கிடைத்த நல்ல மணமுள்ள பின்னாட்களில் காபி என்றழைக்கபட்ட  அந்த பானத்தை அருந்தினார்.அதன் பிறகு அவர் பல நாட்களுக்கு பசியின்றியும் புத்துணர்வுடனும் இருந்தார்.இதுவும் ஒரு புகழ் பெற்ற காபிக்கதைதான்

இவற்றில் மிக பிரபலமானதும் உலகெங்கிலும் பரவலானதுமான கதையென்றால் அது  மகிழ்ச்சியான ஆடுகளும் ஆட்டிடையனும்  கதைதான்.    எத்தியோப்பிய (அப்போதைய அபிஸீனியா) ஆட்டிடையனான கல்தி குறிப்பிட்ட சில புதர்ச்செடிகளின் பழங்களை உண்டபின் ஆடுகள் புதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை கவனித்தார். பழங்களை உண்டபின்னர் அவை உற்சாக மிகுதியில் நடனமிடுவதும் ஓடியாடுவதுமாக இருந்தன. சாதாரணமாக அவை அவ்வாறு செய்வதில்லை எனவே அந்த பழங்களில் என்னவோ புதுமையாக இருப்பதை  யூகித்தார்.

 அப்பழங்களை   உண்ட கல்திக்கும் அதே உணர்வுகள் தோன்றியதால் அவர் அக்கொட்டைகளிலிருந்து பானமொன்றை தயாரித்த்தார் அதுவே காபி.

இக்கதையின் நீட்சியாக கல்தி தனது கண்டுபிடிப்பை ஒரு துறவியிடம் பகிர்ந்து கொண்டதாகவும் இரவெல்லாம் விழித்திருக்க ஒரு வழியை தேடிக் கொண்டிருந்த அத்துறவி அப்பழக்கொட்டையிலிருந்து உருவான பானத்தை விழிப்புடன் இருக்க  மிகச்சரியான தீர்வாக கண்டுகொண்டாரென்றும், அவரிடமிருநதே காபி பானம்  உலகெங்கும் பிரபலமாகியது என்றும் ஒரு துணைக்கதை உண்டு.

இக்கதைகளின் தோற்றம் கி.பி. 9 ஆம் நூற்றாண்டிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றார்கள். 

இப்படியான கதைகளில் எதுவுமே 16ம் நூற்றாண்டுக்கு முன்பாக எழுத்து வடிவில்  இல்லை. எனவே இக்கதைகளில் உண்மையின் சதவீதம் எத்தனை என்பதும் கணிக்க முடியாது. எனினும்   காபி எத்தியோப்பியாவில் தான் தோன்றியது என்பது உண்மைதான்.இவை நடந்ததாக  சொல்லப்பட்ட காலத்திலிருந்து சுமார் 800 வருடங்கள் கழித்து தான் இக்கதைகள் எழுத்து வடிவில் கிடைத்தன்

1583ல் லியோனார்டு ராவுல்ஃப்(Leonhard Rauwolf) என்னும் ஜெர்மன் நாட்டு தாவரவியலாளர் 10 ஆண்டுகள் அண்மைக் கிழக்கு நாடுகளில் பயணம் செய்த திரும்பிய பின்பு வெளியிட்ட தன் பயணக்குறிப்புகளடங்கிய நூலில்  அவர் பயணித்த நாடுகளில் கரிய நிறத்தில் உள்ள காப்பியைக் காலையில் மக்கள் விரும்பி பருகுவது பற்றியும், அப்பானம் பல்வேறு வயிற்று நோய்களுக்குத் தடுப்பாக இருந்தது என்றும் எழுதினார்

“      A beverage as black as ink, useful against numerous illnesses, particularly those of the stomach. Its consumers take it in the morning, quite frankly, in a porcelain cup that is passed around and from which each one drinks a cupful. It is composed of water and the fruit from a bush called bunnu.’’

காபியின் பயணம்

எத்தியோப்பிய பழங்குடிகளே காபிக்கொட்டைகளை அரைத்து தூளாக்கி நீரில் கொதிக்க வைத்து உற்சாகம் அளிக்கும் பானத்தை  முதன் முதலாக தயாரித்து அருந்தி உலகிற்கும் அறிமுகப்படுத்தியவர்கள் .இந்த பானத்தை  அவர்கள்தான்  ’’தூக்கத்தை தடுக்கும்’’  என்னும் பொருளில்  “qahwa”  என்று அழைத்தர்கள். இதே சொல்லுக்கு’ கொட்டைகளில் இருந்து உருவாக்கப்படும் மது’ என்றும் பொருள் இருக்கிறது

செங்கடல் வழியே காபி கொட்டைகள் எத்தியோப்பியாவிலிருந்து முதன் முதலில் யேமனுக்கு மோகா துறைமுகம் வழியே 15 ம் நூற்றாண்டில் வந்து சேர்ந்தது.பல்லாயிரம் ஆண்டுகளாக காட்டுப்பயிராக இருந்த காபி 1400ல் இருந்து யேமனில் பயிராகத் துவங்கியது பின்னர் 1500களில் அங்கிருந்து பெர்சியா, எகிப்து, சிரியா மற்றும் துருக்கியில் பயிராக்கப்பட்டது 1526 ல் துருக்கி ஹங்கேரியில் போர் தொடுத்த போது ஐரோப்பாவுக்கும் அறிமுகமான காபிப் பயிர் அங்கிருந்து ஆஸ்திரியா, மால்டா மற்றும் இத்தாலிக்கும் சென்றது.  

 மோகாவில் முதன் முதலாக காபி இறக்குமதியானதால் அக்காலத்தில் இருந்து மோகா என்பதே காபி என்பதற்கு இணையான சொல்லாக இருந்தது.  

காபி குறித்த  முக்கியமான தடயங்களும் ஆவணங்களும் 15 ஆம் நூற்றாண்டின் மத்திய காலங்களில் தான் யேமனின் சூஃபி மடங்களில் இருந்து கிடைத்தன.யேமனில் காபி ஏராளமாக  பயிரிடப்பட்டது, யேமனிய சூஃபீக்கள் உற்சாக மனநிலையில் மந்திரங்களை உச்சரிக்க காபியை  தொடர்ந்து அருந்தினார்கள்

அங்கிருந்து பின்னர் காபி மெக்கா, மெதி்னா மற்றும் மாபெரும் நகரங்களான கெய்ரோ, டமாஸ்கஸ் மற்றும் கான்ஸ்டண்டினோபிலுக்கும் அறிமுகமானது.1414 ல் காபி  மெக்காவில்  வெகுவாக புழக்கத்தில் இருந்திருக்கிறது. 

1500 களில்   வட ஆப்பிரிக்காவிற்கு  அறிமுகமான காபி .அங்கு அரேபிய மது என்று அழைக்கப்பட்டு பிரத்யேக கடைகளில் விற்கப்பட்டு மேலும் பிரபலமடைந்தது. இந்த காபிக்கடைகள் அறிவாளிகள் கூடும் இடம் என்று அழைக்கப்பட்டது. 1500களில்  மது  என்று பொருள்படும் பெயரில் இருந்த குழப்பத்தால் மெக்காவில் காபி மத ரீதியான காரணங்களைக்காட்டி தடைசெயபட்ட பானம் என அறிவிக்கபட்டது. அதே காலகட்டத்தில் எகிப்திலும் எதியோப்பாவிலும் காபி தடைசெய்யபட்டது  

இந்த தடைக்கெதிராக தொடங்கிய   போராட்டங்கள் பெரும் வன்முறையில் முடிந்ததால் தடைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. 

கிழக்கே இந்தியா, இந்தோனேஷியாவிலும், மேற்கே இத்தாலி மற்றும் ஐரோப்பாவின் பிறபகுதிளுக்கும் காபி அறிமுகமாகி வேகமாக பிரபலமாகியது 

ஐரோப்பாவிற்கு காபி மால்டா தீவுகளில் 16 ஆம் நூற்றாண்டில்  அடிமை வர்த்தகத்தின்  வழியே (1565ல்)  நுழைந்தது. துருக்கிய இஸ்லாமிய அடிமைகள் மால்டா தீவுகளில் சிறைவைக்க பட்டபோது சிறையில் அவர்கள் தங்களுடன் கொண்டுவந்திருந்த காபிக்கொட்டைகளிலிருந்து  அவர்களின் பாரம்பரிய பானமான காபியை தயாரித்து அருந்தினார்கள். அவ்வழக்கம் பின்னர் சிறைக்கு வெளியேவும் பரவியது 

காபி தேவைப்படும் நாடுகள் அவற்றை ஏமனிலிருந்து  இறக்குமதி செய்தனர். ஏமனிய அரசு இதை மிகக்கவனமுடன் செய்தது எந்தக்காரணத்தை கொண்டும் காபி விற்பனயை பிற நாடுகள் செய்யாவணணம் பாதுகாத்தது. ஏற்றுமதி செய்யப்படும் கொட்டைகள் அனைத்துமே வறுக்கப்பட்டு முளைதிறன் இழந்தவைகளாக இருப்பதை மிக மிக கவனமுடன் சரிபார்த்த பின்னரே எற்றுமதி செய்யப்பட்டன. அப்போதுதன் பாபா புதான் அவற்றிலிருந்து 7 கொட்டைகளை இந்தியாவிற்கு கொண்டுவந்தார்.

பல்லாண்டுகள் கழித்து ஒரு டச்சு குடும்பத்தினரும் ஏமனிலிருந்து காபி கொட்டைகளை திருடி  ஹாலந்தில் பயிரிட முனைந்தனர். ஆனால் ஹாலந்தின் காலநிலையில் காபிக்கு தேவையான வெப்பம் கிடைக்கததால் காபி பயிர்  அப்போது அங்கு வளரவில்லை

இதே சமயத்தில் மிக சரியாக டச்சு கவர்னருக்கு இலங்கையிலிருந்து சில காபி கொட்டைகள் பரிசளிக்கப்பட்டன அதன் பிறகு காபி பயிரிடுதல் பலமுறை தோல்வியுற்றாலும் 1704ல் அங்கு காபி வெற்றிகரமாக பயிராகியது 

 1669ல் ஃப்ரான்ஸில் காபி அறிமுகமானது. அங்கும் காபி கடைகளில் ஆண்கள் கூடுவதும் நேரம் செலவழிப்பதும் வழக்கமானது. 1674ல் கணவர்கள் காபி கடைகளிலிருந்து வீட்டுக்கே வருவதில்லை என்னும் காரணததைக்காட்டி பெண்கள் காபி கடைகளை மூட பொதுநல வழக்கு தொடுக்கும் அளவுக்கு காபி கடைகளில் ஆண்கள் கூட்டம் இருந்தது. 18 ம் நூற்றாண்டில் 14 ம் லூயிஸ் மன்னருக்கு  ஆம்ஸ்டர்டாம்  மேயரால் காபி நாற்று பரிசளிக்கபட்டது. எனினும் அது நன்கு வளரவில்லை எனவே அது பிரத்யேக பசுமைக்குடிலில் வைத்து பாதுகாக்கப்பட்டது பின்னர் அந்த சிறு செடி பாரிஸின் ராயல் தாவரவியல் பூங்காவிற்கு இடம் மாற்றப்பட்டு  பாதுகாக்கப்பட்டது

 ஃப்ரன்ச்  கப்பற்படை தளபதியான  டி க்ளூ (Gabriel Mathieu de Clieu) பாரீ்ஸூக்கு வந்திருந்த போது அவர் அங்கிருந்த காபி செடியை (அனுமதியுடனோ  அல்லது இல்லாமலோ) எடுத்துச் சென்றிருக்கிறார்

This contains an image of:

அங்கிருந்து கரீபிய தீவுகளுக்கு கடல்வழி பயணித்த  டி க்ளூ அந்த நீண்ட பயணத்தில் அச்செடி வாடிவிடாமல்  பாதுகாக்க அரும்பாடு பட்டிருக்கிறார் அவருக்கென வழங்கபட்ட குடிநீரை செடிக்கு ஊற்றிவிட்டு பலநாட்கள் அவர் தாகத்தில் இருந்திருக்கிறார்

கரீபியன் தீவுகளுக்கு வந்து சேர்ந்த  டி க்ளூ பிறசெடிகளுடன் காபிச்செடியை ரகசியமாக கலந்து நட்டு வைத்தார். 3 வருடங்களில் கரீபியன் தீவுகளிலும் அதனை சுற்றியிருந்த பகுதிகளிலும் காபி பயிரிடுதல் பரவி இருந்தது.  

இப்போது காபிக்கு பிரபலமாயிருக்கும் பிரேஸிலுக்கு காபி வந்த கதையும் கொஞ்சம் வித்தியாசமும் ரம்மியமுமானதுதான்

1727ல் பிரேசிலின் ராணுவ அதிகாரியான ஃப்ரான்ஸிஸ்கோ  (Francisco de Melo Palheta) கியானாவுக்கு,  டச்சு மற்றும் ஃப்ரான்ஸூக்கு இடையேயான ஒரு பிரச்சினையை பேசித் தீர்த்துவைக்க அனுப்பப்பட்டிருந்தார். உண்மையில் ஃப்ரான்ஸிஸ்கோவின் நோக்கம் சண்டையை தீர்ப்பது மட்டுமல்ல காபி செடியை பிரேசிலுக்கு கொண்டுவருவதும்தான்.

ஃப்ரென்ச் கவர்னரிடம் ஃப்ரான்ஸிஸ்கோ காபிச்செடிகளை கேட்டபோது அவருக்கு அது மறுக்கப்பட்டது. ஃப்ரென்ச் கவர்னரின் மனைவிக்கு சில நாட்களில் நெருக்கமாகிக் விட்ட ஃப்ரான்ஸிஸ்கோ காதலியாகிவிட்டிருந்த அவரிடமிருந்து ரகசியமாக சில காபி செடிகளின் நாற்றுக்களை எளிதில் பெற்றுக்கொண்டார்

அப்படி மணவுறவுக்கு வெளியெயானதொரு பந்தத்தில்  பிரேஸிலுக்குள்  நுழைந்த காபிச்செடிகளிலிருந்து   1822லிருந்து காபி உற்பத்தி  துவங்கி 1852 லிருந்து இன்று வரைஉலகின் முன்னனி காபி உற்பத்தியாளராக பிரேஸிலே இருந்துவருகிறது

அட்லாண்டிக் கடலை கடந்த காபி அமெரிக்காவில் தேயிலைக்கு மாற்றாக புரட்சியாளர்களால்  1773 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹவாயில் 1825 ல் காபி பயிராக  துவங்கியது. அமெரிக்காவில் மிக மிக குறைந்த அளவே காபி பயிராகின்றது. எனினும்  உலகின் முன்னணி காபி இறக்குமதியாளராக இருப்பது  அமெரிக்காதான்.

19 ஆம் நூற்றாண்டில், காபி  உலகாளவில் புகழ்பெற்ற விருப்ப பானமாகிவிட்டிருந்தது. 

1932ல் பொருளாதார காரணங்களால் பிரேஸில் தனது விளையாட்டு வீர்களை லாஸ்  ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்கிற்கு அனுப்ப முடியாமல் போனபோது  வீரர்கள் பயணிக்கும் கப்பல் முழுக்க காபி கொட்டைகள் நிரப்பப்பட்டன கப்பல் கரையணையும் பகுதிகளிலெல்லாம் காபிக்கொட்டைகளை விற்பனை செய்தே அவர்கள் எந்த நிதி பற்றாக்குறையும் இன்றி லாஸ் ஏஞ்சல்ஸ் சென்று சேர்ந்தனர். 

காபியின் பெயர்

அரபு மொழிச் சொல்லான கஹ்வா  ஆட்டோமன் துருக்கி மொழியின் கஹ்வே (kahve) என்பதில் இருந்து பெறப்பட்டது.. இது இத்தாலிய மொழியில் caffè என்றும் பிரெஞ்ச்சு, போர்த்துகீசு, ஸ்பானிஷ் மொழிகளில் café  என்றும் வழங்கப்பட்டது.

முதன் முதலில் 16 ம் நூற்றாண்டின் துவக்கத்தில் coffee என்னும் பெயர் ஐரோப்பாவில் வழங்கத் தொடங்கினாலும், ஏறத்தாழ 1650 வாக்கில் தான் ஆங்கிலத்தில் cahve, kauhi, coffey மற்றும்  caufee என்றெல்லாம் அழைக்கப்பட்ட காபி இந்த காபி என்னும் இறுதி வடிவத்துக்கு வந்தது

ஐரோப்பாவில் காபியை Caffee என்னும் பெயரில் பரவலாக்கியவர்கள் இத்தாலியர்கள் அரபி மொழியின்  Qahwah  பீன்ஸ்களிலிருந்து கிடைக்கும் மது என்னும் பொருள் கொண்டது. 

இந்திய காபி

இந்தியாவில் காபி அருந்தப் பட்டதை குறித்த முதல் எழுத்து பூர்வமான ஆவணம் 1616 ல் ஜஹாங்கீர் அரசவையில்  ஜேம்ஸ் மன்னரின் தூதராக இருந்த சர் தாமஸ் என்பவரின் மதகுருவான எட்வர்ட் டெர்ரி என்பவரால் எழுதப்பட்டது

டெர்ரி அவரது நூலில் ’’பல இந்தியர்கள் தங்களின் மத கோட்பாடுகளின் படி மது அருந்துவதில்லை, எனினும் அவர்களில் பலர் மதுவைக் காட்டிலும் சுவையான கறுப்புக்கொட்டைகளை நீரில் கொதிக்க வைத்து தயாரிக்கப்படும் காபி எனும் பானத்தை விரும்பி அருந்துகிறார்கள் அந்த  பானம் ஆறிப்போனால் நீர்த்து, சுவை இழந்து விடுகிறது சூடாக அருந்துகையில் வெகுவாக புத்துணர்ச்சி அளிக்கிறது’’  என்று குறிப்பிட்டிருந்தார்.

டெர்ரியின் ஆவணத்துக்கு பிறகு சுமார் 200 ஆண்டு்கள் கழித்தே  1840 ல் பிரிட்டிஷ் இந்தியாவில் வணிகரீதியான காபி பயிரிடுதல் துவங்கியது.

19 ஆம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இந்தியா முழுவதும் ஏராளமான காபியகங்கள்/காபி பானமருந்தும் கடைகள் உருவாகின. இந்தியாவின் முதல் காபிக்கடை1827ல் கல்கத்தாவில் தொடங்கப்பட்ட பெங்கால் காபி கிளப். அதனை தொடர்ந்து மெட்ராஸ் காபி கிளப் 1832 லும் பெங்களூர் கிளப் 1863லும் தொடங்கப்பட்டன.

விக்டோரிய அரச விருந்துகளில் இரவுணவுக்குப் பிறகு காபி அருந்தும் சம்பிரதாயம் பரவலானபோது மக்களிடையேயும் காபி அருந்தும் பழக்கம் வேகமாக பரவியது

மொத்த காபி உற்பத்தியில், மிக தரமான காபியை உற்பத்தி செய்யும்  உலகநாடுகளில் 6 வது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 16 வகையான மிக தரமான காபி வகைகள்  இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 3 லட்சம்  காபி சாகுபடியாளர்கள் உள்ளனர்.

தென்னிந்தியாவில் கேரளா தமிழ்நாடு  மற்றும் கர்நாடகாவில் இந்தியாவின் பிற பகுதிகளை விட மிக அதிகம் காபி விளைகிறது 

தென்னிந்தியாவின் டிகிரி காப்பியின் பெயர் வந்த கதையும் சுவாரஸ்யமானதுதான் 

பாலின் அடர்த்தியையும் பாலில் கலந்துள்ள நீரையும் அளக்கும் லேக்டோ மீட்டர் அளவுகளுக்கு பிறகு தரம் பிரிக்கப்படும் முதல் தரமான பால் டிகிரி பால் என்றழைக்கப்பட்டது

அவ்வாறான முதல்தர டிகிரி பாலில் கலக்கப்பட்ட முதல் டிகாக்‌ஷனிலிருந்து பெறப்பட்ட  காபியே டிகிரி காப்பி.

இன்றைய காபி கடந்து வந்த பாதை

200 வருடங்களில் காபி சாகுபடியிலும் காபி கொட்டைகள் பக்குவ்படுத்தப்படுவதிலும் வறுத்தரைக்கும் வெப்பநிலையிலும் கொண்டுவரப்பட  புதிய உத்திகளும் மாற்றங்களுமாக காபி ஏராளமான மாற்றங்களை  அடைந்திருக்கிறது

1818ல் பாரிஸ்  உலோகவியலாளர் ஒருவரால் தயரிக்கப்பட்டது உலகின் முதல் காபி வடிகட்டும் இயந்திரம்.1865 ல் அதன் மேம்படுத்திய வடிவம் அமெரிக்காவில் கண்டறியபட்டு ஜேம்ஸ் நேசன் என்பவர் அதற்கு காப்புரிமையும் பெற்றார்

 1864 ல் நியூயார்க்கை சேர்ந்த  ஜேபெஸ் பர்ன்ஸ் என்பவரால் (Jabez Burns)   முதல் காபி கொட்டை வறுக்கும் இயந்திரம் உருவானது

 1871ல் ஜான் அர்பக்கில் (John Arbuckle) காபித் தூளை அளந்து, காகித கவர்களில் கொட்டி, சீல் வைத்து, முத்திரைத்தாள் ஒட்டும் தானியங்கி இயந்திரத்தை கண்டுபிடித்தார்

 1886 ல் ஜோயெல் சீக் (Joel Cheek) பிரபல  Maxwell House என்னும் பெயரில் புதிய காபி வகையை உருவாக்கினார். மேக்ஸ்வெல் உடனடி காபி தூள் (instant coffee) இரண்டாம் உலகப்போரின் போது குடிமக்களும் ராணுவ வீரர்களும் ஏராளமாக  அருந்திய பானமாக இருந்தது.

 1900 ல் நெஸ்ட்லே நிறுவனம்   குளிர வைத்த அரைத்த காபி குழம்பை பதப்படுத்தி  உலர செய்து அதிலிருந்து  உடனடி காபியை  கண்டுபிடித்தது. இன்றும் நெஸ்ட்லே வின் இந்த தயாரிப்புத்தான் உலகளவில்  முன்னிலையில் இருக்கிறது 

பணி இடைவேளைகளில்  விரைவில் காபி அருந்திவிட்டு பணிக்கு திரும்ப செல்ல வசதியாக காபி தயாரிக்கும் நேரத்தை குறைப்பதற்கு லூயிகியால்  (Luigi Bezzera)  காபித்தூளில் நீரையும், நீரவியையும் கடும் அழுத்தத்தில் சல்லடை வழியே பீய்ச்சி அடித்து உருவாகும்  எஸ்பிரெசோ காபி இயந்திரம் 1901 ல் இத்தாலியில்  உருவாக்கப்பட்டது.. பின்னர் அது பலரால் படிப்படியாக மேம்படுத்தப்பட்டது 

1933.  Dr. Ernesto Illy முதல் தானியங்கி எஸ்ப்ரெசோ இயந்திரத்தை கண்டுபிடித்தார் அவரது கூற்றுப்படி நல்ல தரமான எஸ்ப்ரெசோ காபியின் நிறம்  நாக்கில் ஒட்டிக் கொள்ள வேண்டும் .இவரே எஸ்ப்ரெசோவின் தந்தை என கருதப்படுகிறார்

1908 ல் ஒரு ஜெர்மானிய பெண்மணி தனது மகனின் பழைய பள்ளி புத்தக காகிதங்களை உபயோகித்து எளிய  காகித காப்பி வடிகட்டியை உண்டாக்கினார்.அதற்கு காப்புரிமையும் பெறப்பட்டது

1960களில் காபி இன்னொரு புரட்சிகரமான மாற்றதுக்கு உள்ளானது அல்ஃப்ரெட் பீட் (Alfred Peet) எனும் டச்சு அமெரிக்கர் ஒருவர் ஹாலந்தில் காபி விற்பனை செய்து கொண்டிருந்த தனது   தந்தையிடமிருந்து காபி கொட்டையை வறுக்கும் கலையை அறிந்து கொண்டு. 1966ல் கலிஃபோர்னியாவில் பீட் காபி நிறுவனத்தை நண்பர்களுடன் இணைந்து உருவாக்கினார். மிக வெற்றிகரமாக செயல்பட்டுக்கொண்டிருந்த அந்த நிறுவனத்துக்கு பிறகு 1971 ல் பீட் சியாட்டிலில் ஒரு புதிய கிளையை துவங்கினர் அதுவே ஸ்டார்பக்ஸ் நிறுவனம்.( Starbucks.)

முதலில் வறுத்த காபி கொட்டைகள் மட்டும் இங்கு விற்பனை செய்யப்பட்டன.பின்னர் காபி பானமாகவும் விற்பனை செய்யப்பட்டது. 

1982 ல்  இத்தாலியின் ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் சென்று விதம் விதமான காபி தயாரிப்புக்களை குறித்து கற்றுத்தேர்ந்த, காபி பான விற்பனையில் தேர்ந்த அனுபவமும் கொண்டிருந்த ஹவர்ட் ஷ்யூல்ட்ஸ் (Howard Schultz), ஸ்டார் பக்ஸின் இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

கொள்கை ரீதியான சில கருத்து வேறுபாடுகளுக்கு பிறகு 1984ல் ஹவர்ட் அதிலிருந்து விலகி தனது சொந்த காபி நிறுவனமான Il Giornale வை  துவங்கி வெற்றிகரமாக நடத்தினார். ஹவர்ட் குறுகிய காலத்திலேயே ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தை சொந்தமாக  $3.8  மில்லியனுக்கு வாங்கி இத்தாலிய  கலவையுடன் மிகத்தரமான சுவையான  காபியை வழங்கினார். பின்னர் ஸ்டார்பக்ஸ் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு  பரந்து விரிந்து கிளை பரப்பி உலகெங்கும் காபியின் பேரலையை  உருவாக்கியது.  

உலகின் மிகப்பெரிய காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸின்  30,000 கிளைகள்  உலகெங்கும் மிக வெற்றிகரமாக செயல்படுகின்றன இதனை தொடர்ந்து இருப்பவை  Dunkin’ Donuts, Tim Hortons, Costa Coffee, மற்றும்  McCafe ஆகிய நான்கு நிறுவனங்கள்.

நான்கு மிகப்பெரிய காபிக்கொட்டைகளை வறுக்கும் நிறுவனங்கள்  Kraft, P&G, Sara Lee மற்றும்  Nestle. இவை நான்கும் உலகின் மொத்த காபி உற்பத்தியில் 50 சதவீதத்தை வாங்கிக்கொள்கிறார்கள் .

காபி பயிர்

600 பேரினங்களும் 13, 500 இனச்செடி வகைகளும் உள்ள ருபியேசி (Rubiaceae) குடும்பத்தைச் சேர்ந்த காபி பயிர்கள் பசுமை மாறா புதர்கள் அல்லது குறுமரங்களாக  10 லிருந்து 15 அடி உயரம் வரை வளரும். இவற்றின் எதிரடுக்கில் அமைந்திருக்கும் அகலமான அடர் பச்சை இலைகள்   பளபளப்பானவை,  வெளை நிற அழகிய மலர்கள் நல்ல நறுமணம் கொண்டிருக்கும் 

காப்பிச் செடியின் பேரினத்தில் 100 க்கும் அதிகமான சிற்றின வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு இனங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு,  காபி பானம் தயாரிக்க பயன்படுத்தப் படுகின்றன. இவ்விரண்டு இனங்களின் அறிவியல் பெயர்கள் காப்பியா அராபிக்கா (Coffea arabica) மற்றும் காபியா கன்னெஃபோரா (Coffea canephora) (காபியா ரொபஸ்ட்டா (Coffea robusta) என்பது இதன் இணைப்பெயர்). மேலும் சில காபி பயிர்வகைகள் இருப்பினும் வணிகரீதியான வெற்றிகரமான இருவகைகள்  அராபிகா மற்றும்  ரொபஸ்டா ஆகியவையே

This contains an image of: Roasted Coffee Beans Background

அராபிகா காபி என்பது”மலை காபி”  என்றும் அழைக்கப்படுகிறது. தென்மேற்கு அரேபியாவில் 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்பட்டு வரும்  இந்த வகையே காபியின் முதல் இனம் என்று நம்பப்படுகிறது. வணிக ரீதியாக வளர்க்கப்படும் மற்ற பெரிய காபி இனமான Coffea canephora வை (robusta) விட இது சிறந்த காபியை உற்பத்தி செய்கிறது  ரொபஸ்டா காபி வகைகளை விட அரேபிகாவில்  காஃபின் அளவும் குறைவுதான். 

This contains an image of: 5 Coffee, Tea and Spice Plant Images!

ரொபஸ்டா  மேற்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய காபி வகை. அங்கு கொனிலன் (Conillon) என்று அழைக்கப்படும் இப்பயிர் பெரும்பாலும் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசிலில் வளர்க்கப்படுகிறது,  

காபி செடியிலிருந்து முதிர்ந்த பழங்கள் இயற்கையான உலர்ந்த முறை மற்றும் ,கழுவிய ஈரமாக்கப்பட்ட முறை  ஆகிய  இரண்டு விதங்களில் பக்குவப்படுத்தப் படுகின்றன. 

This contains an image of: Coffee Powder Burst From Coffee Bean Stock Image - Image of dark, coffee: 93016485

சந்தைப்படுத்த பட்டிருக்கும் காபி பயிரின் நான்கு முக்கிய இனங்கள்  

  Arabica, Robusta, Excelsa, மற்றும் Liberica இவை நான்கும் உலகின் சந்தைப்படுத்தப்பட்டிருக்கும் காபியின் முக்கிய நான்கு வகைகள் . நான்குமே அவற்றிற்கான பிரத்யேக சுவையும் மணமும் கொண்டிருப்பவை

 அரேபிகா

இதுவே உலகின் மிக பிரபல காபி  வகை. உலகின் 60 சதவீத காபி அரேபிகா காபிதான்.  பால் கலக்காத கருப்பு காபிக்கேற்றது இந்த வகைதான். 

ரொபஸ்டா

அரேபிகாவிற்கு அடுத்ததாக  இருக்கும் ரொபஸ்டா உலகின் இரண்டாவது அதிக உற்பத்தியாகும் காபி இனம். பாலும் சர்க்கரையும் கலந்து உண்டாக்கப்படும் காபி வகைகளுக்கு ஏற்றது ரொபஸ்டா. 

லிபெரிகா

 லிபெரிகா காபிகொட்டைகள் கடினமானவை. பிற வகைகளை காட்டிலும் இவை அளவில் பெரியவை, மேலும் காபிக்கொட்டை வகைகளில் இவைதான் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை. இந்தோனேஷியாவில் இவ்வகை அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. இவற்றின் நறுமணமும் பிரத்தியேகமானது

எக்ஸெல்சா

 இவை வித்தியாசமான பழங்களின்  நறுமணம் கொண்ட கொட்டைகள்  Coffea liberica var. dewevrei என்னும் இவ்வகை 2006 ல் தான் சரியாக தாவரவியலாளர்களால் வகைப்படுத்தப்பட்டது  தென்கிழக்கு ஆசியாவில் மட்டும் விளையும் இவை மொத்த காபி உற்பத்தில் வெறும் 7 சதவீதம் தான்.

இவற்றுடன் இப்போது புதிதாக அட்ரினோ என்னும் மஞ்சள் பழங்களைக் கொண்டிருப்பது  மற்றும், பப்பா நியூ கினி காப்பியான ஜமைக்காவின் நீல மலைக்காப்பி ஆகிய இரு வகைகளும் பிரபலமடைந்திருக்கின்றன. 

கஃபின் ஆல்கலாய்டு

 காபி அருந்தப்படுவதற்கு அதிலிருக்கும் காஃபின் ஆல்கலாய்டு தான் காரணம் என்பது எத்தனைக்கு உண்மையோ அத்தனை உண்மை அதிக காஃபின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதுவும்.

 Friedlieb Ferdinand Runge, என்பவரால் 1819 ல் காபி கொட்டைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இந்த காஃபின் ஆஸ்பிரின்,  அசெட்டமினோஃபென் உள்ளிட்ட பல முக்கிய மருந்துகளின் செர்மானங்களில் ஒன்றாக இருக்கிறது

பச்சிளம் குழந்தைகளுக்கும், அறுவை சிக்கிசை செய்து கொண்டிருப்பவர்களுக்கும் காஃபின் ஒவ்வாமையை உருவாக்கும் பெரும்பாலான காஃபின் காபி கொட்டைகளிலிருந்தல்லாது செயற்கையாகவும் ஆய்வகங்களில் தயாரிக்கப்படுகிறது.

காஃபின் நீக்கம் (Decaffeination)

காபியின் சுவை மட்டும் இருந்தால் போதும் அதில் இருக்கும் காஃபின் வேண்டாம் என்பவர்களுக்காக  உருவானதுதான் காஃபின் இல்லாத காபி. சில வேதிச்செயல்களின் மூலம் காஃபின் நீக்கப்படுகிறது. 

விலையுயர்ந்த காபி வகைகள்

உலகின் மிக அதிகவிலையுள்ள காபி புனுகு பூனைகளுக்கு காபி பழத்தை உண்ணக்கொடுத்து அவற்றின் கழிவில் செரிமானமாகாமல் வந்திருக்கும் காபிக்கொட்டைகளிலிருந்து பெறப்படும் கோப்பி லூவாக் (Kopi Luwak)  காப்பிதான் .அதிக விலை கொண்ட தாவர உணவுகளின் பட்டியலில் இருக்கும்  கோப்பி லுவாக்கின் விலை  கிலோ 400 டாலர்கள். 

இதைப்போலவே காபி பிரியர்கள் அவசியம் சுவைத்து பார்க்கவேண்டிய ஒரு புதுமையான காபி கருப்பு தந்தக்காபி வகை(Black ivory coffee) இதில் பசும் புல்லின் வாசனையும் தானியங்கள், சாக்கலேட் மற்றும் காபியின் மென் கசப்புச்சுவை ஆகியவை கலந்திருக்கும் பிரெத்யேக நறுமணம் இருக்கும்

மேலும் இந்தக்காபி அருந்துவதன் மூலம் அளிக்கபப்டும் தொகையானது  ஆசிய தங்க முக்கோண யானை நிறுவனத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு நேரடியான உதவியாக சென்று சேரும்

மிகத் தூய அரேபிகா காபி கொட்டைகளும், அரிசிச்சோறு, வாழைப்பழம், புளி ஆகியவையும் கலக்கப்பட்டு யானைகளுக்கு உணவாக கொடுக்கப்படும். 12 லிருந்து 72 மணி நேரத்தில் யானையின் கழிவில் இருந்து செரிமானமாகாத காபிக்கொட்டைகள் பிரித்தெடுக்கப்paடுகின்றன.வறுத்து அரைக்கப்பட்டு தயாராகும் இக்காபி ஒரு  கிலோ இந்திய ரூபாய்களில்  இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகிறது. சுமார் 33 கிலோ காபிக்கொட்டைகளிலிருந்து ஒருகிலோ இவ்வகை காப்பி கிடைக்கிறது  

 தாய்லாந்தில் உருவாகும் இதுவே உலகின் அரிய வகை காபியுமாகும்  

காபி இப்போது 

21ஆம் நூற்றாண்டில் வாடிக்கையாளர்களின்  தொடர்ந்து மாறிவரும் தேவையை மனதில்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.  நறுமணத்தை பாதுகாக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சிறிய  பிளாஸ்டிக் காபி குளிகைகளில் அடர்காபி திரவம் அடைக்கப்பட்டு  விற்பனை செய்யப்படுகிறது

இவற்றை உடைத்து கொதிநீரிலோ அல்லது பாலிலோ கலந்தால் சுவையான நறுமணம் கொண்ட காபி தயாராகிவிடும்.  இந்த காபி குளிகைகள் இப்போது இணைய தளத்திலும் விற்பனையாகின்றன.  

இன்று காபி உலகின் இரண்டாவது அதிக சந்தைப்படுத்தப்படும் பொருள்,(முதலிடத்தில் கச்சா எண்ணை இருக்கிறது) . தற்போது  சுமார் 500 மில்லியன் மக்கள் உலக காபி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்கிறது உலக வங்கியின் புள்ளி விவரம்.

2020ல் உலக காபி வர்த்தகம் சுமார் 465.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டிருந்தது. இது  உலகின் அனைத்து விதமான காபி வகைகளின் ஒட்டு மொத்த  மற்றும் சில்லறை வணிகங்களை உள்ளடக்கிய மதிப்பு

காபி புத்துணர்ச்சி அளிப்பதோடு அதிலிருக்கும் முக்கிய சத்துக்களான வைட்டமின்களும் புரதங்களும் உடலுக்கு நன்மை அளிக்கின்றன. அதிக அளவில் அருந்துகையில் காபி தூக்கமின்மை பரபரப்பு ஆகியவற்றையும் உருவாக்கும்.அதிக  காபி ரத்த அழுத்தத்தையும் இதய துடிப்பையும் அதிகரிக்கும்.குழந்தைகளும் கர்ப்பிணிகளும் முதியவர்களும் அதிக காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும். அதிக அளவில் எடுத்துக் கொள்ளப்படும் மிக அதிக சர்க்கரை சேர்க்கப் பட்ட காபி  நிச்சயம் எல்லா வயதினருக்கும்  ஆபத்துதான்

உலகெங்கும் மிகப்பிரபலமான 30 வகைகாபிகளில் முதல் இடங்களில் இருப்பது பாலில்லாத கருப்பு காப்பி, பால் கலந்த காபி, க குளிர் காபி ,கேப்பசீனோ மற்றும் எஸ்பிரெசோ ஆகியவை.(பிரபல கேப்பசீனோ காபி கேப்பசின் துறவிகளின் துறவாடையின் அடர் மண் நிறத்தில் இருப்பதால் அப்பெயரை கொண்டுள்ளது)

உலகின் மிக அதிக காபி ஏற்றுமதி நாடுகள் பிரேஸில், வியட்னாம் இந்தோனேஷியா, கொலம்பியா, மற்றும் இந்தியா ஆகியவை. காபி உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு அதாவது 2.6  மில்லியன் டன் பச்சைக்காபிக்கொட்டைகள் பிரேசிலில் உற்பத்தி செய்யப்படுகின்றது

சென்ற வாரம் ஏற்காடு காபி தோட்டத்தில் அதிகாரியாக இருக்கும் மாணவி ஒருத்தியை பார்க்க சென்றிருந்த போது அங்கு  பலநூறு ஏக்கர்களில்  காபியா ரொபஸ்டா மற்றும் காபியா அராபிகா வகைகள் பயிராகிக்கொண்டிருந்தன. புதிய புதிய ஆய்வுகள் காபி பயிர்களில்  நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தும் பொருட்டு  அங்கு செய்யப்பட்டு   கொண்டிருக்கிருந்தன. அன்று காபித்தோட்டத்தின் சில்வர் ஓக் மரங்களினடியில்  அமர்ந்து  அருமையான  நறுமணம் மிக்க மிகச் சுவையான   காபியை அருந்துகையில்  சூஃபி துறவியின் தாடிக்குள் மறைந்துகொண்டு சுமார் 6500 கிமீ பயணித்து வந்த காபியின் பயணத்தை நினைத்துக் கொண்டேன்.

ஆரோக்கிய பச்சை

ஆரோக்கிய பச்சை

தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு மலைமுடியான அகஸ்திய மலையில் பல்ப்பு புஷ்பாங்கதன்1 தன் குழுவினரோடு  மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அது 1987ன்  டிசம்பர் மாதம். புஷ்பாங்கதன் கேரளா, ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆய்வு நிறுவனத்தின்(JNTBGRI-Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) அப்போதைய இயக்குநர். அகஸ்திய மலைதான் காணி2 பழங்குடியினரின் வசிப்பிடம். அவருடன் அனைத்திந்திய ஒருங்கிணைந்த இன உயிரியல் ஆராய்ச்சித் திட்டத்தை (All India Co-ordinated Research Project on Ethnobiology-AICRPE) சேர்ந்த ஆய்வாளர்களும் இருந்தனர். பழங்குடி தாவரவியல் ஆய்வுக்காக அக்குழு மலையேறிக்கொண்டிருந்தது

 அந்த மலையின் பழங்குடிகளான  மல்லன் மற்றும் குட்டிமாத்தன் காணிகளும்  வழிகாட்டிக்கொண்டு அவர்களுடன்  வந்தனர். 

மார்ச் 2016 ல் யுனெஸ்கோ புதிதாக பட்டியலிட்டிருக்கும் 20 உயிர்க்கோள காப்பகங்களில் (Biosphere reserves ) அகஸ்திய மலையும் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1868 மீ உயரத்தில் இருக்கும் அகஸ்திய மலை அடர்ந்த புதர்க்காடுகள், மரக்கூட்டங்கள் செங்குத்தான பாறைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், பல துண்டிக்கப்பட்ட சிகரங்கள் ஆகியவற்றை கொண்டது.  கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின்  பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை  எடுத்து உண்பதை  அவர்கள் கண்டார்கள்

குழுவினர் மிகக்களைத்துப் போனபோது மலையேற்றம் தடைப்பட்டது. அப்போது அவர்களுக்கும் அக்கனிகள் பழங்குடியினரால் வழங்கப்பட்டன அவற்றை உண்டதும் குழுவினருக்கு களைப்பும், பசியும், சோர்வும் போன இடம் தெரியாமல் புத்துணர்வும் உற்சாகமும் அடைந்தனர். 

பழங்குடியினர்  பயன்படுத்தும் தாவரங்கள் குறித்த ஆய்வுக்காகத்தான் அந்த மலையேற்றம் நடந்துகொண்டிருந்தது. எனவே வழிபடப்போன தெய்வம் கூடவே வந்ததைப்போல மகிழ்ந்த ஆய்வுக்குழுவினர் எத்தனை முறை கேட்டும் காணிகள் அப்பழங்கள் குறித்த மேலதிக விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். 

காணிகள்3 மேற்கு தொடர்ச்சி மலையின் மூலிகைகளை ஆரோக்கியத்திற்காகவும், பல்வேறு சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்தும் பாரம்பரியத்தை கொண்டவர்கள். காடுகளில் இவர்கள் அறியாத தாவரங்களோ விலங்கினங்களோ உயிரினங்களோ இல்லை. இவர்களில்  பிளாத்தி எனப்படும் பழங்குடி மருத்துவர்கள் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக, தலைமுறைகளாக கடத்தப்பட்ட மருத்துவ அறிவை கொண்டிருப்பவர்கள்

காணிகளின் தொல்மரபுப்படி பிளாத்திகளே மூலிகைகளின் பயன்பாட்டை குறித்து பிறரிடம் பகிர்ந்து கொள்ள உரிமை உள்ளவர்கள்.

குழுவினர் பலமுறை வற்புறுத்திக்கேட்டு, அவர்களின் ஆராய்ச்சியின் நோக்கத்தை சொல்லி புரியவைத்த பின்னர், அந்த பழங்கள் குறித்தும் அது பெறப்பட்ட தாவரத்தைக் குறித்தும் தகவல்களை அறிந்துகொள்ள பிளாத்தியிடம் குழுவினரை அழைத்து செல்ல காணிகள் சம்மதித்தனர்.

பிளாத்தி அந்த மூலிகை ’ஆரோக்கிய பச்சை’ என்னும் தாவரம் என்பதை அவர்களுக்கு தெரிவித்தார். அம் மூலிகையின் அறிவியல் பெயர் Trichopus zeylanicus ssp. Travancoricus  என்பதை குழுவினர் அறிந்திருந்தும் அதன் மருத்துவப்பண்புகளை அன்றுதான் கண் கூடாக கண்டுகொண்டனர்

ஆரோக்கியபச்சையின் அசாதாரண மருத்துவ குணங்களை நேரிடையாக அனுபவித்து அறிந்திருந்த புஷ்பாங்கதன் அதனை முறையாக ஆய்வு செய்து அது பாதுகாப்பான மூலிகையென்னும் பட்சத்தில் அதனை வெற்றிகரமாக சந்தைப்படுத்தும் சாத்தியங்கள் குறித்து சிந்தித்தார்.

ஆரோக்கியபச்சையின் சில செடிகளை அங்கிருந்து ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு குழுவினர் மலையேற்றத்தை முடித்தனர்.

 முதல்கட்டமாக ஆரோக்கிய பச்சை இலைகள் மற்றும் பழங்களின் சோர்வு நீக்கும் பண்புகளை ஜம்முவின் பிராந்திய ஆய்வு நிறுவனம் உறுதி செய்தது (Regional research laboratory, Jammu) பின்னர் ஆரோக்கிய பச்சையில் பலகட்டங்களாக வேதிஆய்வுகள் புஷ்பாங்கதனின் ஆய்வுக்கூடத்தில் நடந்தன.சுமார் 8 வருடங்கள் நீடித்த அந்த மிக முக்கியமான ஆய்வுகளில் ஆரோக்கிய பச்சையின் பழங்கள் மட்டுமல்லாது அதன் இலைகளும் அதிமுக்கியமான மருத்துவப் பயன்பாடுகளை கொண்டிருப்பதை தெரியவந்தது. குறிப்பாக  சோர்வு மற்றும் மன அழுத்தம் நீக்குதல்  மற்றும் நோயெதிர்ப்பை தூண்டும் பண்புகள். 

ஆரோக்கிய பச்சை கட்டிகள் உருவாவதை தடுக்கவும், கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கவும், உடலின் இயற்கை பாதுகாப்பை அதிகரிக்கவும் பயன்படுகிறது என்பதையும்  ஆய்வுகள் திட்டவட்டமாக தெரிவித்தன

எட்டாவது வருடம்  புஷ்பாங்கதன் தலைமையிலான ஆய்வுக்குழு ஆரோக்கிய பச்சையின் மருத்துவ குணங்களுக்கு காரணமான  12 முக்கியமான வேதிப் பொருட்களை  பிரித்தெடுத்தது. இந்த வேதிப்பொருட்களுடன்  மேலும் மூன்று முக்கிய மூலிகைகள் சேர்க்கப்பட்டு ’ஜீவனி’ என்னும்  சத்து மருந்து உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திலும் (R&D) ஜீவனியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. நோயுற்றவர்கள்,, ஆரோக்கியமானவர்கள், மன அழுத்தம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், கடுமையான உடல் உழைப்பை கோரும் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் மற்றும் அசாதாரண சூழலில் பணிபுரிபவர்களுக்கு ஜீவனி அளிக்கப்பட்டு முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

சோதனைகளின் முடிவுகள் மிக வெற்றிகரமாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்தன. சீனாவின் ஜின்செங்கிற்கு இணையான மருத்துவப்பண்புகளை ஆரோக்கியபச்சையிலிருந்து தயாரிக்கபட்ட ஜீவனி கொண்டிருப்பதை இச்சோதனைகள் வழியே ஆய்வுக்குழு நிறுவியது.

 ஜீவனியின் சந்தைப்படுத்துதல் இந்திய மூலிகை மருந்துகளின் உலகளாவிய சந்தைப்படுத்துதலின் வாய்ப்புகளை மேலும் பிரகாசமாக்கும் என்பது அனுமானிக்கப்பட்டது.

திரு புஷ்பாங்கதன் குழுவினர் ஜீவனிக்கு அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு (Intellectual Property Protection) கிடைத்தால் மட்டுமே அதன் சந்தைப்படுத்தல் வெற்றிகரமாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். மேலும்  ஜீவனி உருவாக முழுமுதற் காரணமாயிருந்த காணி பழங்குடிகளுக்கும் இதன் சந்தை லாபத்தில் பங்கிருக்கவேண்டும் என்னும் நியாயத்தையும்  புஷ்பாங்கதன்  உணர்ந்திருந்தார்.

எனவே ஜீவனியை சந்தைப்படுத்தும் முன்பாக புஷ்பாங்கதன், இந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான  அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) ஒத்துழைப்புடன் 1994ல் ஜீவனிக்கு இந்திய காப்புரிமை அலுவலகத்தில், காப்புரிமை பெற முயற்சிகளை மேற்கொண்டார்.

 2007 ல் புஷ்பாங்கதன்  உத்தரபிரதேசத்தின் அமிட்டி மூலிகை மற்றும் உயிர் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். (Amity Institute for Herbal & Biotech Products Development -AIHBPD). அமிட்டியிலிருந்து ஜீவனிக்கான  காப்புரிமை விண்ணப்பத்தை புஷ்பாங்கதன் மீண்டும்  அனுப்பினார்.

காப்புரிமை விண்ணப்பத்திற்கான வரிசை எண் (No. 2319/DEL/2008)  2010ல்  அளிக்கபட்டது. எனினும்  ஜீவனிக்கு காப்புரிமை இன்னும் அளிக்கப்படவில்லை. 

JNTBGRI  ஒரு ஆய்வு நிறுவனமாதலால் அதன் தயரிப்புக்களை சந்தைப்படுத்த முடியாது எனவே  கோயம்பத்தூரின் ஆர்ய வைத்ய மருந்தகத்தில் (Arya Vaidya Pharmacy Ltd-AVP) இதற்கென உரிமம் பெற்று ஜீவனியை தயாரிக்க செய்ய முடிவானது.இந்த ஒப்பந்தத்தின் படி ஜீவனி விற்பனை லாபத்தில் 2 சதவீதம் ராயல்டி தொகை  JNTBGRI  க்கு என்று முடிவானது 1995ல் AVP, 7 வருட உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உரிமத்தொகையாக 50 ஆயிரம் டாலர்களை JNTBGRI க்கு அளித்தது. இந்த உரிமம்  தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது

ஜீவனி விற்பனை பரவலாக துவங்கி இருந்தபோது மற்றொரு சிக்கல் காட்டிலாகாவில் இருந்து வந்தது. காணிகளின் வாழ்விடம் காட்டிலாக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜீவனிக்காக அகஸ்திய மலையின் ஆரோக்கிய பச்சை செடிகள் அதிக அளவில் அழிக்கப்படுவதை காரணம் காட்டி,  முன் அனுமதி இன்றி காணிகளோ அல்லது  வெளியாட்களோ ஆரோக்கிய பச்சை செடிகளை  மலையிலிருந்து எடுக்க காட்டிலாகா தடை விதித்தது. அதன்பின்னர் ஜீவனி தயாரிப்பில் தொய்வு உண்டானது.

 பின்னர் புஷ்பாங்கதன் குழுவினர்  பல்லாண்டுத் தாவரமான ஆரோக்கிய பச்சையின் முழுத்தாவரமும் ஜீவனி தயாரிக்க தேவையில்லை, இலைகளும் கனிகளும் போதும், முழுத்தாவரத்தை  அழிக்காமல் தேவையான பாகங்களை மட்டும் அறுவடை செய்யலாம் என்று அறிவித்தனர்.. 

அக்டோபர் 2997ல் October 1997, வனத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து (ITDP), ஆரோக்கியபச்சையை சாகுபடி செய்யும் பொருட்டு தேவைப்படும் விதைகளுக்கான விலையையும் ஜீவனிக்காக தேவைப்படும் இலைகளுக்கான விலையையும் காணிகளுக்கு வழங்கும் திட்டத்தை புஷ்பாங்கதன் முன்மொழிந்தார். இது ஒரு நிலையான தீர்வாக மட்டுமல்லாது காணிகளுக்கு மேலதிக வருமானம் கிடைக்கவும் வழிகாட்டியது,

 ஜீவனி தயாரிப்பிற்கு  AVP க்கு    மாதாமாதம் சுமார் 50 டன் இலைகளை JNTBGRI  அளிக்கவேண்டி இருந்தது. எனவே அகஸ்திய மலையின் உற்பத்தியை மட்டும் நம்பி இருக்க முடியாது என்னும் உண்மையை அனைவரும் உணர்ந்தனர். 1994-1996ல் ஆரோக்கிய பச்சையை சாகுபடி செய்யும் முயற்சிகள் துவங்கின. 50 காணி குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் அளிக்கப்பட்டு ஆரோக்கிய பச்சையை சாகுபடி செய்ய ஊக்குவிக்கபட்டனர். .

இம்முயற்சி வெற்றிகரமாக நடந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான காணி பழங்குடியினர் ஆரோக்கிய பச்சை சாகுபடியில் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கப்பெற்றதுடன் அம்மூலிகையின் சாகுபடி மற்றும் முறையான அறுவடை குறித்த பயிற்சியும் பெற்றதால்,  AVP  நிறுவனத்திற்கு ஆரோக்கிய பச்சை இலைகள் தடையின்றி தொடர்ந்து  கிடைத்து வந்தன.

மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லாயிரம்  மூலிகைகளின் மருத்துவ குணங்கள் குறித்த பாரம்பரிய அறிவு தலைமுறைகளாக காணி பழங்குடியினத்தவர்களிடம் இருந்துவந்தது .காணிகளின் உதவி இல்லாமல் ஜீவனி தயாரிப்பு சாத்தியமாயிருக்காது.

காப்புரிமை நேரடியாக காணிகளை தொடர்பு படுத்தவில்லை எனினும் புஷ்பாங்கதன் குழுவினர் இந்த தயாரிப்பில்  காணிகளின்  குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஒருபோதும் மறந்துவிடவில்லை

மேலும் தலைமுறைகளாக மூலிகை குறித்த அறிதல்களை கொண்டிருக்கும் பிளாத்திகளின் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்த புஷ்பாஙதன் குழுவினர் ஜீவனியின் சந்தைப்படுத்துதலின் லாபத்தில் காணிகளுக்கும் பங்கிருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.

 1997 நவம்பரில்  9 காணிபழங்குடியினர் உறுப்பினர்களாக இருக்கும்’ கேரள காணி சமுதாய ஷேம  அறக்கட்டளை; நிறுவப்பட்டு ஆரோக்கிய பச்சை குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்த குட்டிமாத்தன் மற்றும் மல்லன் ஆகியோர் அந்த அறக்கட்டளைக்கு தலைவர் மற்றும் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டனர். இந்த அறக்கட்டளையின் குறிக்கோள்களாக காணி பழங்குடியினரின் நல மேம்பாடு, காணி மக்களின் பாரம்பரிய மூலிகை அறிவுகுறித்த பல்லுயிர்பதிவை (Bio diversity register) உருவாக்குவது, மற்றும் உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவையே 

இவ்வறக்கட்டளைக்கு ஒரு சில காணி இனத்தவர்களின் எதிர்ப்பிருந்தாலும் முதல் தவணையாக மார்ச் 1999ல்  ஜீவனியின் லாபத்தில்  12500 டாலர்கள் காணிகளுக்கு வழங்கப்பட்டபோது இவ்வறக்கட்டளையின் முக்கியத்துவத்தை அவர்கள் அனைவரும் உணர்ந்தார்கள்.

அத்தொகையில் காணிகளின் வாழ்விடங்களில்  முதன்முதலாக  தொலைபேசி வசதியும், கர்ப்பகால மற்றும் விபத்துக்காப்பீடுகளும்   உருவாக்கப்பட்டன 

 காணிகளுக்கும் JNTBGRI க்கும் இடையிலான இந்த லாபத்தை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தம் உலகெங்கிலும் பழங்குடிகளின் அறிவை பயன்படுத்தும் எல்லா திட்டங்களுக்கும், ஆய்வுகளுக்குமான மாதிரி ஒப்பந்தமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் பல்லுயிர் பாதுகாப்பில் ஈடுபடும் அமைப்புக்களுக்கு அளிக்கும் உயரிய  Equator விருது 2002ல்  வழங்கபட்டது. 

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவையும் .( United Nations Environment Program and the World Trade Organization) பழங்குடியினருடன் லாபத்தை பகிரும் இந்த ஒப்பந்தத்தை பழங்குடியினரின் அறிவை முறையாக பயன்படுத்துவதற்கான  உலகளாவிய அளவிலான முன்மாதிரி ஒப்பந்தம்  என்று புகழ்ந்தன.

ஜீவனியின் அற்புத பலன்கள் உலகெங்கும் அறியப்பட்டிருந்தாலும் இதன் காப்புரிமை சிக்கல்கள் மற்றும் காப்புரிமை பெற செலவழிக்க வேண்டியிருந்த அதிக தொகை காரணமாக  AVP ஜீவனியின் சர்வதேச சந்தையை  எட்ட முடியாமல் இருந்தது

ஆனால் 1999ல் நியூயார்க்கின்  Nutrisciences Innovations என்னும் நிறுவனம் ஜீவனிக்கான அமெரிக்க காப்புரிமையும் பிரெத்யேக விற்பனை முத்திரையும் கோரி விண்ணபித்ததோடல்லாமல் ஜீவனியை அங்கு விற்பனையும் செய்யத்துவங்கியது. இந்த விஷயம் JNTBGRI க்கு எட்டியதும் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்னும் நடைபெறுகிறது எனினும் Nutrisciences  நிறுவனம் ஜீவனி விற்பனையை 2001ல்  நிறுத்தியதொடு முத்திரை கோரிய விண்ணப்பத்தையும்  திரும்பப்பெற்றுக்கொண்டது.

 2000த்தில் நியுயர்க்கின் Great Earth  நிறுவனமும் ஜீவனி விற்பனைக்கு முயன்றது. ஒரு ஆற்றல் பானமாக ஜீவனியை “Jeevani Jolt 1000”  என்னும் பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தியது

இது  JNTBGRI  ன் கவனத்துக்கு வந்தாலும்  United States Patent and Trademark Office (USPTO) அமெரிக்க காப்புரிமை மற்றும் முத்திரை அலுவலத்தில் JNTBGRI ஜீவனிக்கான முத்திரையை அவர்கள் பதிவு செய்திருக்கவில்லையாதலால் பானமாக இதனை தயாரிப்பதை தடைசெய்யமுடியவில்லை.  எனவே வட அமெரிக்க முழுவதும் ஜீவனி ஆற்றல் பானம் பரவலாக பிரபலமாகியது

இந்த  விற்பனை வெற்றியை பார்த்து மேலும் பல அமெரிக்க மருந்து நிறுவனங்கள் ஜீவனியை தயாரிக்க முனைந்தனர்.

 சர்வதேச சந்தைபடுத்தலின் சிக்கல்கள் இன்னும் நீடிக்கிறதென்றாலும் ஜீவனியின் விற்பனை JNTBGRI, AVP மற்றும் காணி பழங்குடியினருக்கு  சந்தேகமில்லாமல் பெரும் வெற்றியை அளித்தது. 

 காணிகளின் வாழ்வில் மிக குறிப்பிடத்தக்க பொருளாதார ரீதியான மாற்றங்களை ஜீவனி உருவாக்கியது

தற்போது உரிமத்தொகை 2 லிருந்து 4 சதவீதமாய் இருப்பதால் மேலும் பல முன்னேற்றங்களுக்கு இது வழிவகுத்திருக்கிறது

ஜீவனியில் ஆரோக்கியபச்சையுடன் அஸ்வகந்தா எனப்படும் அமுக்கரா கிழங்கு (ashwaganda – Withania somnifera), குருமிளகு (pepper Piiper nigrum) மற்றும் விஷ்னு கிரந்தி (Evolvulus alsinoides) ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  ஆரோக்கிய பச்சை பாலுணர்வை தூண்டும், ஈரலை பாதுகாக்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், நுண்ணியிர்களை கொல்லும் பண்புகளையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னணி மூலிகை தயாரிப்பு நிறுவனமாகிய  AVP யின் வெற்றிகரமான மூலிகை தயாரிப்பாக ஜீவனி இருக்கிறது. குருணைகளாக கிடைக்கும் ஜீவனியை அரை தேக்கரண்டி சூடான நீரிலோ அல்லது பாலிலோ கலந்து அருந்தலாம். இணைய வர்த்தகத்திலும் ஜீவனை கிடைக்கிறது.75 கிராம் 160 ரூபாய் விலை. 

JNTBGRI  1979ல் கேரளத்தில் துவங்கப்பட்டது.300 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான மூலிகைகளும் அரிய வகைத்தாவரங்களும் இங்கு இருக்கின்றன. இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் தாவர பாதுகாப்பு மற்றும் அவற்றின் முறையான பயன்பாடு ஆகியவையே. எனினும் ஆரோக்கிய பச்சை கண்டுபிடிப்பிற்கு இங்கு மூலிகை மருந்துகளுக்கான ஆய்வுகளுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சொரியாசிஸ் எனப்படும் கடும் தோல் அழற்சி நோய்க்கான களிம்பு இங்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இந்நோய்க்கான Psoriasis என்னும் சொல்லை அப்படியே வரிசை மாற்றி மருந்துக்களிம்பின் பெயரை “Sisairosp” என்று வைத்திருப்பது சுவாரஸ்யம்.

இயற்கை எனும் கடவுள் நமக்களித்திருக்கும் எண்ணற்ற மருந்துகளை பார்வையிடுவது போல JNTBGRI வளாகத்தில் மூலிகை தோட்டத்தை பார்த்தவாறு ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரியின் கரிய அழகுச்சிலை அமைந்திருக்கிறது.. 

  1. https://en.wikipedia.org/wiki/Palpu_Pushpangadan
  1. 2.  https://ta.wikipedia.org › wiki › காணிக்காரர்
  2. 2017ல்  திருவனந்தபுரத்தில் மட்டும் காணப்படும் ஒரு மர நண்டு கண்டுபிடிக்கபட்டது. அதற்கு Kani maranjandu என்று காணிகளின் பெயரிடப்பட்டிருக்கிறது.  காணிபழங்குடிகளின் பெயரை அறிவியல் பெயரில் கொண்டிருக்கும் ஒரே ஒரு உயிரினம் இதுமட்டும்தான்.
  • ஆரோக்கிய பச்சை குறித்த மேலதிக தகவல்களுக்கு; chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://lead-journal.org/content/07001.pdf

அலையாத்தி தாவரங்கள்

 நிலத்தாவரங்களில் சதாவரிக்கிழங்கு மற்றும் பீட்ரூட் (asparagus and beets) போன்ற ஒரு சிலவற்றை தவிர பிற தாவரங்கள் கடல்நீரின் உப்பின் அளவில் பத்தில் ஒரு பங்கைக்கூட தாங்கிக்கொண்டு வளரமுடியாது. ஆனால் எப்போதும் மிக அதிக அளவில் உப்பு இருக்கும் நிலத்திலும் செழித்து வளரும் மிகச்சிறிய எண்ணிக்கையிலான சில குறிப்பிட்ட வகை தாவரங்கள்  உள்ளன..

உதாரணமாக வட அமெரிக்காவின் சதுப்பு நில உப்புப்புல்லான  ஸ்பார்டினாவின் வேர்கள் எப்போதும் கடல்நீரிலேயே அமிழ்ந்திருக்கும், (Spartina alterniflora

இவ்வாறு உப்பு அதிகமுள்ள கடல் முகத்துவாரங்கள்,, அலையாத்திக்காடுகள் சதுப்பு நிலங்கள்  கடலோரப் பகுதிகள் உப்புப் பாலை நிலங்கள் போன்ற சூழல்களில் வளரும் தாவரங்கள்  உவரி நிலத்தாவரங்கள் அல்லது ஹேலோஃபைட்ஸ் (Halophytes) எனப்படுகின்றன உவரி நிலங்கள் சதுப்புநிலமாக இருக்கையில் அங்கு வளர்பவை சதுப்பு நிலத் தாவரங்கள் /அலையாத்தி தாவரங்கள் அல்லது உப்புத் தாவரங்கள் என அழைக்கப்படும்.

பூமியின் மொத்த தாவரங்களில் இரண்டு சதவீதமே உப்புத்தாவரங்கள்.  இவ்வகைத்தாவரங்கள் மிக அதிக உப்பை தாங்கும் தகவமைப்புகள் கொண்டுள்ளமையாலும்,  அச்சூழலின் பாதகங்களுக்கு  இயற்கையாகவே எதிர்ப்புச்சக்தியையும் கொண்டுள்ளதாலும் அவற்றிற்கு அச்சுழலில் போட்டித்தாவரங்கள் இருக்காது எனவே அவை  அங்கு செழித்து வளரும்

 உவர்நிலத் தாவரங்கள் இருப்பது 16ம் நூற்றாண்டில் தான்  கண்டறியப்பட்டது. 1563..ல் ஜெர்மானிய பழங்குடி இனத்தை சேர்ந்த தாவரவியலாளர் ரெம்பெர்ட் டோடென்ஸ் (Rembert Dodoens) Plantago maritima  என்னும் உப்புச்சூழலில் வாழும் தாவரத்தை குறித்து முதன் முதலில் தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டார்.

பின்னர் 1576 ல் பிரெஞ்சு தாவரவியலாளரும் முதன்முதலாக ஒருவித்திலை மற்றும் இருவித்திலை தாவரங்களுக்கிடையேயான வேறுபாடுகளை விவரித்தவருமான  லொபெலியஸ் (Lobelius) சலிகோமியா  (Salicomia) என்னும் கடலோர உப்புத்தாவரமொன்றை குறிப்பிட்டார். அயர்லாந்த்தின் தாவரவியலாளரான ஸ்லோன் 1695ல் (Sloane) அவிசென்னியா சதுப்பு நிலத்தவரத்தையும அதன் சிறப்பு வளரியல்புகளையும் விவரித்தார்.

தனது 15 ம் வயதிலேயே மலைகள் உருவாவது குறித்த கருதுகோள்களை முன்வைத்த தாவரவியலாளர் பீட்டர் சிமன் பல்லாஸ் (Peter Simon Pallas) .1809 ல்  இவ்வகையான் தாவரங்களுக்கு ஹேலோஃபைட்டுகள்  என்று பெயரிட்டார்,

சதுப்புநிலங்களில் அதிக உப்பு மட்டுமல்லாது சல்ஃபேட்டுக்களும் கார்பனேட்டுக்களும் , பைகார்பனேட்டுக்களும்  அதிக அளவில் இருக்கும் மண்ணின் pH அளவும் மிக அதிகமாக இருக்கும் அத்துடன்  சீர்குலைந்த காற்றோட்டம்   கொண்ட மோசமான மண் அமைப்பும்  அவ்வாழிடங்களில் காணப்படும்

தகவமைப்புக்கள்  

எளிதில் நீரை  உறிஞ்சிக் கொள்ளும் வசதியற்ற நிலங்களில் வளரும் இவை பாலை நில தாவரங்களுக்கான  தகவமைப்புக்களையும் கொண்டிருக்கும் 

சதுப்பு நிலங்களில் சீரற்ற காற்றோட்டம் இருக்குமாதலால் பூமிக்கு மேல் வளரும் நுண் துளைகளை கொண்டிருக்கும் Pneumatophores எனப்படும்.  காற்று அல்லது  சுவாச வேர்களை  இத்தாவரங்கள் உருவாக்கிக்கொண்டு   அவற்றின் மூலம்  சுவாசிக்கும்

சதுப்புநிலங்களின் தளர்வான மண்ணில்  இவை வேரூன்றி உறுதியாக நிற்க முடியாததால் சாதாரண வேர்களுடன் கூடுதலாக  பொய்க்கால் மற்றும் முட்டு வேர்களையும்  கொண்டிருக்கும் (stilt & prop roots)    எடுத்துக்காட்டாக பொய்க்கால் வேர்களை கொண்டிருக்கும்  ரைசோஃபோராவை சொல்லலாம் ( Rhizophora mucronata ).

சில சமயங்களில் இந்த தாவரங்களின் மிக அகலமான உறுதியான  துணைவேர்கள் தண்டின் அடிப்பகுதியில் இருந்து உருவாகி  இவற்றை தாங்கி நிற்கும் இத்தகைய அகன்ற வேர்கள் பலகை வேர்கள் அல்லது உதைப்பு வேர்கள் எனப்படும்   (Root buttresses)

 இவற்றின் இலைகள் தடித்து முழுமையாக சதைப்பற்றுடன் சிறிய அளவில் இருக்கும். கடற்கரையோர உவர்நிலத்தாவரங்களின் இலைகள் பெரும்பாலும் பளபளப்பாக இருக்கும் இலைகளின் மேற்பரப்பில் வளரிகள்  (trichomes) எனப்படும் நுண்முட்கள் போன்ற வளர்ச்சிகள் காணப்படும். நீரடியில் மூழ்கி இருக்கும் உவர்நிலத்தாவரங்களின் இலைகள் மெல்லியதாக காணப்படும்

இவற்றின் கனிகளும் விதைகளும் எடையற்று இருக்கும் கனியின் வெளிச்சுவற்றில் காற்றுத்துளைகளும் காற்றறைகளும் காணப்படும் எனவே  நீரில் மிதந்தபடி இருக்கும் இவற்றின் விதைகள் கனிகள் மற்றும் முளைத்த இளம் நாற்றுகள் நீரோட்டத்தில் கலந்து புதிய சூழல்களை அடைந்து அங்கு வளரும்

  பொதுவாக அனைத்து உவரிநில தாவரங்களிலும் காணப்படும் தகவமைப்பென்பது அவற்றில் இருக்கும் உப்புச்சுரப்பிகள்தான் இவை தாவர உடலில் சேரும் உப்பை சேகரித்து பின்னர் இலைகள் அல்லது தண்டின் வெளிப்புறம் வழியாக  வெளியேற்றிவிடும்

சில உவர்நிலத்தாவரங்களின் இலைகளின் வெளிப்பகுதியில் நுண் பைகள் அமைந்திருக்கும் இவற்றில் வெளியேறும் உப்பு  சேகரமாகி பின்னர் சூழலில் கலந்துவிடும் இன்னும் சில தாவரங்களோ உறிஞ்சி எடுத்துக் கொண்ட அத்தனை உப்பினாலும் எந்த பாதிப்புமின்றி இருக்கும்

கடற்கரையோரம் வளரும் உவர் நிலத் தாவரங்களில் விவிபேரி  (vivipary) எனப்படும் கனி மரத்தில் இருக்கையிலேயே அதன் விதைகளிலிருந்து நாற்றுகள் முளைவிடுவது நிகழும். விதையின் கரு கனியிலிருந்தே தான் வளரத்தேவையான உணவையும் நீரையும் எடுத்துக்கொள்ளும்.. பின்னர் நன்கு வளர்ந்து கூரான உறுதியான கத்தி போன்ற கூம்பு வேர்களுடன்  கனியிலிருந்து விடுபட்டு நிலத்தில் குத்திட்டு  விழுந்து அங்கு ஊன்றி வளர தொடங்கும்.

வகைகள்

இந்த வகை தாவரங்கள் சதைப்பற்றானவை, சதைப்பற்றில்லாதவை மற்றும் சதுப்பு நிலத்தில் வாழ்பவை கடல்நீரில் வளர்ப்பவை என பல வகைப்படும்

 பயன்கள்

இயற்கையாக உப்புத் தன்மைக்கு ஏற்ற வளரியல்பை கொண்டிருக்கும்  இத்தாவரங்கள்  பாதகமான சூழலில் வளரும் தாவரங்களின் அழுத்த சகிப்புத்தன்மையை (stress tolerance) புரிந்துகொள்வதற்கான மாதிரித்தாவரங்களாக  கருதப்படுகின்றன.

இவை பெருமளவில் மண்ணரிப்பை தடுப்பதுடன்,  கடல் நீர் நன்னீர் நிலைகளில் கடக்காவண்ணம் உயிர்வேலியாக காத்து நிற்கின்றன இத்தாவரங்கள் கரையோர சூழலை காத்து   சூழல் சமனிலையையும் பாதுகாக்கின்றன.

 இவற்றில் சில தாவரங்கள் கால்நடை தீவனங்களாக பயன்படுகின்றன. சிலவற்றில் இருந்து உயிரி எரிபொருளும் கிடைக்கின்றன

Suaeda monoica என்னும் தாவரத்தின் சதைப்பற்றான இலைகளை பல பறவைகள் உணவாக கொள்கின்றன. சோமாலியாவிலும் கென்யாவிலும் இவற்றை ஒட்டகங்களும் ஆடுகளும் உண்கின்றன

suaeda monoica

 

 பலநூறு நீர்வாழ் பறவைகளுக்கும் உயிர்களுக்கும் இவை புகலிடங்களாகவும் வாழிடங்களாகவும் இருக்கின்றன. சமீபத்திய ஆய்வுகளில் இவற்றின் மருத்துவப்பயன்பாடுகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

உவர் நிலத்தாவரங்களில் கடினமான தண்டுகளை கொண்ட குறு மரங்களும், மரங்களும் கண்டல் தாவரங்கள் அல்லது அலையாத்தி தாவரங்கள் (Mangroves) என அழைக்கப்படுகின்றன. இவை செறிந்து வளர்ந்திருக்கும் காடுகள் கண்டல் அல்லது அலையாத்தி காடுகள் எனப்படும்.(Mangrove forests)

உப்பு, வெப்பம், அலை, சேறு என்று எவ்விதமான பாதகங்கள் இருக்கும் நிலப்பரப்பாக இருந்தாலும், அலையாத்தி காடுகள்  எளிதில் வளர்ந்துவிடும். பெரும்பாலும் ஆறுகள், கழிமுகங்களின் இடைப்பட்ட பகுதிகளிலேயே இக்காடுகள் உருவாகும். 

தமிழ்நாட்டில் 44.83 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அலையாத்தி காடுகள் உள்ளன . கங்கையாற்று படுகையில் உள்ள சுந்தரவனக் காடே உலகின் மிகப்பெரிய அலையாத்திக் காடு. தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் என்ற ஊரில் உள்ள அலையாத்திக் காடு உலகிலேயே இரண்டாவது பெரியது. .கோடியக்கரையை அடுத்துள்ள முத்துப்பேட்டை கண்டல்கள் தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை. சென்னையை ஒட்டியுள்ள பள்ளிக்கரணையும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும். குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் கடற்கரைகளிலும் அந்தமான்-நிக்கோபார் தீவுகளிலும் சதுப்பு நிலக்காடுகள் காணப்படுகின்றன

முத்துப்பேட்டை

 உலக அளவில் 112  நாடுகளில் அலையாத்திக்காடுகள் உள்ளன.  இவற்றின் சூழல் முக்கியத்துவம் அறிந்து தற்போது இவை இல்லாத நாடுகளிலும் செயற்கை அலையாத்திக்காடுகள் உருவாக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன.

கார்வரும் கடலைப்பயிரும்

தென்னமெரிக்காவில் தோன்றியது என கருதப்படும் நிலக்கடலைப் பயிர் ஆப்பிரிக்காவிற்கு செல்லும் வழியில் ஐரோப்பிய இயற்கையாளர்களால் ஸ்பெயினுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு அடிமைகளை கொண்டு சென்ற கப்பல்கள் வழியே உலகின் பிற பாகங்களுக்கு கடலைப்பயிர் அறிமுகமானது.

1800களில் அமெரிக்காவின் முதன்மை பயிர்களில் ஒன்றாக நிலக்கடலை இருந்தது. அச்சமயத்தில்தான் கடலை மனிதரான கார்வர் லோவா விவசாய கல்லூரியில் முதுகலை தாவரவியல் படித்துக்கொண்டிருந்தார். 

கார்வர்   அடிமைகளாக விற்கபட்ட அவரது பெற்றோர்களுக்கு பிறந்து அவரை தத்தெடுத்த நல்ல மனம் கொண்ட உரிமையாளர்களால் வளர்க்கப்பட்டவர் கருப்பினத்தவர்களுக்கு பள்ளிகளில் அனுமதி மறுக்கப்பட்ட அக்காலத்தில் பல சிரமங்களுக்கிடையே தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

1888ல் கார்வருக்கு அயோவா (Indianola, Iowa). சிம்ஸன் கல்லூரியில் கலை துறையில் அனுமதி கிடைத்து. அக்கல்லூரியின் முதல் கருப்பின மாணவர்  கார்வர்தான்

கார்வரின் ஆசிரியை எட்டா புட் அவரது அசாதாரணமான  அறிவை கண்டு, லாவா மாநில விவசாய கல்லூரியில் அவரை தாவரவியல் படிப்பை தொடர சொல்லி அறிவுறுத்தினார்.

.அயோவா விவசாயக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட முதல் கருப்பின  மாணவரும் இவரே.   பட்டப்பிடிப்பில் அவர் சமர்பித்த  ’’மனிதனால் மாற்றப்பட்ட தாவரங்கள்’’ என்னும் ஆய்வேடு அவருக்கு அங்கேயே 1894ல் பட்ட மேற்படிப்பு படிக்க வாய்ப்பளித்தது. கார்வரின் தாவரங்கள் குறித்த அறிவினால் அவர் அங்கு மிகவும் பிரபலமாக இருந்தார். அருகிலிருந்த வயல்களில் உருவாகும் தாவர நோய்களுக்கு சிகிச்சை அளித்து அவைகளை காப்பாற்றியதால் அனைவரும் கார்வரை தாவர டாக்டர் என்று அழைத்தார்கள்.

மேற்படிப்பின் போது லூயிஸ்  என்னும் கனிவான பேராசிரியரின் வழிகாட்டுதலில் கார்வெர் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியலில் பல ஆய்வுகளை செய்தார். 1896ல் முதுகலை பட்டம் வாங்கும் முன்பே கார்வெர் ஒரு சிறந்த தாவரவியலாளராக அங்கிருந்தோரால் அறியப்பட்டார்.அயோவா மாநில கல்லூரியின் முதல் கருப்பின பேராசிரியரும் ஆனார் கார்வர்.

1896, ல் டஸ்கெகீ  நிறுவனத்தில் இணைந்த கார்வெர் தன் இறுதிக்காலம் வரை அங்கேயே பணியாற்றினார். (இப்போது Tuskegee University),முதன்முறையாக  அமெரிக்காவின் கிழக்கு மாகாணங்களில்  பயிர் சுழற்சி முறையை அறிமுகப்படுத்தி பருத்திக்கு மாற்றாக நிலக்கடலை பயிரிட கார்வரே கற்றுக்கொடுத்தார் பயிற்சுழற்சி முறையில் அடுத்தடுத்து மாற்றுப் பயிர்கள் குறிப்பாக பயறு வகைகளை பயிரிடுகையில் அவற்றின் வேர் முடிச்சுகளில் இருக்கும் நுண்ணுயிரிகள் நிலத்தின் நைட்ரஜன் சத்துக்களை மேம்படுத்துவதால் நிலவளம் குறையாமலிருக்கும் என்பதை அங்கிருந்த விவசாயிகளுக்கு கற்றுக்கொடுத்து அவர்களின் விவசாய முறையை மாற்றினார்.. 

கார்வர் பருத்திக்கு மாற்றாக நிலக்கடலையுடன் சோயாபீன்ஸ், தட்டைபயிறு சர்க்கரைவள்ளிக்கிழங்குகள் ஆகியவற்றையும் பயிரிடும் முறையை அறிமுகம் செய்தார்.

பயிரிடுவதோடு மட்டுமல்லாது சத்தான பயிறு வகைகளை விவசாயிகள் உணவாக எடுத்துக் கொள்வதன் அவசியத்தையும் அவர் மக்களுக்கு புரிய வைத்தார்

வறுமையில் வாடிக் கொண்டிருந்த அப்பகுதி விவசாயிகளின்  சொந்த உணவுத்தேவைக்கும் வாழ்வாதாரத்திற்கும் கார்வர் காட்டிய பயிர் சுழற்சி வழி மிக உதவியாக இருந்தது அம்முறைகளை பின்பற்றி நல்ல மகசூல் கிடைத்து ஏராளமான நிலக்கடலையும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளும் கிடைத்தபோது அவற்றிலிருந்து பலநூறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களையும் கார்வர் கண்டறிந்தார். அங்கிருந்த பல கருப்பின விவசாயிகளுக்க தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் செய்யும் வழியையும் அவர் காட்டினார்.

கடலைப்பால், கடலைப்பாலடைக்கட்டி,நி லக்கடலை உலர்  மாவு, நிலக்கடலை விழுது, முகச்சவர கிரீம்கள், காகிதங்கள்,  சாயங்கள், குளியல் சோப், சரும அழகுப் பசைகள், மை,ஆகியவை நிலக்கடலையில் இருந்து அவர் உருவாக்கிய 300 பொருட்களில் சில

 நிலக்கடலையிலிருந்து சில நோய்களுக்கு மருந்துகளையும் அவர் உருவாக்கினார். சர்க்கரை வள்ளிக்கிழங்குகளிலிருந்து கார்வர் 73 வகையான சாயங்கள், கயறு, காலை உணவுக்குருணைகள், ஷுக்களுக்கு கருப்பு பாலிஷ், பட்டை ஒத்த நூலிழை ஆகியவற்றையும் உருவாக்கினார்

பல இடங்களுக்கு பயணித்து பயிர் சுழற்சி முறை, இயற்கை பூச்சிக்கொல்லி தயாரிப்பு நிலக்கடலையிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் செய்வது ஆகியவை குறித்து கற்றுக் கொடுத்தார்.  ஒரு பெரிய வேனை நகரும்  வகுப்பறையாகவும் ஆய்வகமுமாக அவரே வடிவமைத்து  இந்த கற்பித்தலுக்கு  பயன்படுத்தினார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதுடன் சூழல்பாதுகாப்பிலும் கார்வர் பெரும் ஆர்வம் கொண்டிருந்தார். இனவெறி உச்சத்திலிருந்த அந்தக்காலத்தில் கருப்பினத்தவர்களை கடந்தும் அவர் புகழ் பரவியது. அவரது சூழல் பங்களிப்புகளுக்கும், கண்டுபிடிப்புக்களுக்கும் வெள்ளையர்களால் பல விருதுகள் அளிக்கப்பட்டது.

1916ல் கார்வர் நிலக்கடலை சாகுபடி நுட்பங்கள் மற்றும் 105 கடலை உணவுகளுக்கான செய்முறை என்னும் செய்திமடலை பிரசுரித்தார்

அவரது ஆய்வு கூடத்தில் அவரும் அவரது மாணவர்களும் அலபாமாவின் களிமண்ணும், நிலக்கடலை எண்ணெயும் கலந்த இயற்கை சாயத்தை உபயோகித்து பல இயற்கை  காட்சிகளின்  ஓவியங்களும் வரைந்தார்கள். ஓவியங்கள் மட்டுமல்லாது கடலைத் தோலில் செய்யப்பட்ட கழுத்தணிகள், கோழியின் இறகில் செய்யபட்ட கலைப் பொருட்கள், இயற்கை நாரிழைகளில் பின்னப்பட்ட பொருட்கள், சாயமேற்றப்பட்ட விதைகள், சணல் பாயில் தையல் வேலைப்பாடுகள்  என அறிவியல் ஆய்வுகளுக்கு மத்தியிலும் அவர் இவற்றை செய்துகொண்டிருந்தார்.

அவரது ஓவியங்களுக்கு இயற்கை சாயங்களை உபயோகித்ததோடு உள்ளூர் விவசாயிகளின் எளிய வீடுகளை இயற்கை சாயங்களால் அழகுபடுத்தவும் கற்றுக்கொடுத்தார்.டஸ்கெகீ நிறுவனம் கருப்பினத்தவர்களின் விடிவுக்கான பொன் வாசல் என்றுமவர் கருதினார்.ஒரு தேவாலயம் முழுதாகவே களிமண்ணில் இருந்து அவர் உருவாக்கிய இயற்கை சாயத்தினால் வர்ணமடித்தார். 

மண் வள மேம்பாடு. இயற்கை உரத்தின் பயன்பாடு மற்றும் பயிர்சுழற்சி இம்மூன்றையும் அவர் மக்களிடம் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருந்தார் கருப்பின குழந்தைகளுக்கு ஓய்வு நேரங்களில் தாவரவியலும்,  விவசாயமும் இறையியலும் கற்றுக்கொடுத்தார், குப்பைகளை உரமாக்குவது,தாவர எரிபொருள் தயாரிப்பு ஆகியவற்றிலும் ஈடுபட்டிருந்தார்.  களைகள் என கருதப்பட்ட டேன்டேலியன் மலர்களை, பர்சிலேன் கீரைகளை சேகரிக்கவும், சமைக்காமல் உணவில் சேர்த்துக் கொள்ளவும் பயிற்றுவித்தார், 

விவசாயிகளை அவர்களின் நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வகத்துக்கு கொண்டு வரச்சொல்லி அவற்றிலிருந்த குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளையும் கால்நடைகளை முறையாக பராமரிக்கவும் கற்றுக்கொடுத்தார்.

   வேர்க்கடலை கண்டுபிடிப்புக்களையும் செய்முறைகளையும்  “பேராசிரியர் கார்வரின் ஆலோசனை” என்ற  செய்தித்தாள் பத்தியில் வெளியிட்டார். இத்தனை ஆய்வுகள், பயணங்கள் தேடல்களுக்கு மத்தியிலும் கார்வர் ஓவியங்கள் வரையவும் கம்பளி பின்னவும், அலங்கார தையல் கலையிலும் நேரம் செலவழித்தார். அவற்றை அவரது நண்பர்களுக்கு பரிசளித்தார். தன்னை சுற்றி இருந்த உலகை மிக பெருமையுடனும் அன்புடனும் கவனித்த கார்வருக்கு அன்பு செலுத்த பல்லாயிரம் காரணங்கள் இருந்தனவே ஒழிய புகார்களே இல்லை. கார்வர் திருமணம் செய்துகொள்ளவில்லை வாழ்நாள் முழுவதையுமே மண் வளத்தை காப்பாற்றவும் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மக்கள் தன்னிறைவுடன் வாழ உதவிசெய்யவுமே அர்ப்பணித்துக்கொண்டார். 

1920ல் கார்வர் அமெரிக்க நிலக்கடலை விவசாயிகள் சங்கத்தில் ஒரு உரை ஆற்றினார், பயிர் பாதுகாப்பு நிதி குறித்த அவரது வேண்டுகோள் ஏற்கப்பட்டு 1922ல் அந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.அதன் பிறகு  அனைவராலும் அன்புடன் கடலை மனிதர் என்றே அழைக்கப்பட்ட கார்வர் இனங்களுக்கிடையேயான ஒத்துழைப்புக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் கமிஷனின் பேச்சாளராகவும்  (Speaker for the United States Commission on Interracial Cooperation) தேர்ந்தெடுக்கப்பட்டு 1933வரை அப்பதவியிலிருந்தார். 

1935ல் அமெரிக்க விவசாய அமைச்சகத்தின் பூஞ்சையியல் மற்றும் தாவர நோயியல் துறையின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட கார்வர் பூஞ்சை தொற்றுக்களில் பல முக்கிய ஆய்வுகள் செய்து, ஏராளமான பூஞ்சைகளை கண்டறிந்தார். இரண்டு பூஞ்சைகளுக்கு கார்வரின் பெயரிடப்பட்டிருக்கிறது.(Metasphaeria carveri  Cercospora carveriana) 

மிகப்பழைய  கோட்டும் ஒட்டு போடப்பட்டிருந்த ஏப்ரனுமாக எளிய தோற்றத்தில் இப்போதும் நினைவு கூறப்படும் கார்வர் அசாதாரணமான வாழ்க்கைப் பின்னணி கொண்டவர்.  (George Washington Carver- (1860s – January 5, 1943)  ஜனவரி 5, 1943 ல் இறந்த கார்வர் தனது வாழ்நாள் சேமிப்பான 60ஆயிரம் டாலர்களையும் அவரது அனைத்து சேமிப்புகளையும் டஸ்கெகீ பல்கலைகழகத்துக்கு விட்டுச் சென்றார்.

1943 ல் அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட் ஜார்ஜ் கார்வரை கௌரவிக்கும் பொருட்டு அவர் பிறந்த ஊரான   டயமண்ட் நகரில்  நினைவுச்சின்னம் எழுப்ப நிதி ஒதுக்கினார் அமெரிக்க அதிபர அல்லாதவர்களுக்கான சிலைகளில் இவருடையதே முதல் சிலை. கார்வரின் பெயரில் அமெரிக்க தேசிய பூங்கா தொடங்கப்பட்டது அதில்தான்  9 அடி உயர சிறுவனாக கார்வரின் உருவச்சிலை அங்கு அழகாக அமைந்திருக்கிறது. 

 கார்வெர் இயறகை மனிதர்களுக்கு பயன்படும் கருவியல்ல, மனிதன் இயற்கையின் பிரிக்கமுடியா அங்கம் என்று நம்பினார்.  மண் வளமே மக்கள் வளமென்றும் உறுதியாக நம்பினார் கார்வெர்     

 பரவலாக நம்மபடுவது போல பீ நட் பட்டர் எனப்படும் கடலை விழுது கார்வெரால் உருவாகப்படவில்லை இன்கா பழங்குடியினர் அதை கி மு 950லேயெ கண்டுபிடித்திருந்தனர்,அதன் மேம்பட்ட வடிவத்தை 1895ல் ஜான் ஹார்விகெல்லாக் (Dr. John Harvey Kellogg), கண்டறிந்திருந்தார்

ஆர்டிசோக் மலரரும்பு- கூனை மலர்

கிரேக்க தொன்மவியலில் ஆகாயம்  இடி ஆகியவற்றின்  கடவுளான ஜீயஸ் தனது சகோதரர் பொசைடனைச் சந்திக்கச் சென்றபோது, சைனாரா என்ற அழகான பெண்ணைக் கண்டார். உடனடியாக அவள் மீது காதலில் விழுந்த அவர்அவளை ஒரு தேவதையாக்கி தன்னுடன் ஒலம்பஸ் மலைக்கு அழைத்துச் சென்றார். அங்கு மிகவும் தனிமையிலிருந்த சைனாரா ஜீயஸுக்கு தெரியாமல் தனது குடும்பத்தைப்  பார்க்க ரகசிய பயணங்களை மேற்கொண்டார். ஜீயஸ் இவற்றைக் கண்டுபிடித்தவுடன்  கோபமடைந்து, ஒலிம்பஸ் மலையில் இருந்து சைனாராவை  ஒரு கூனைப்பூவாக மாற்றி கீழே தள்ளிவிட்டார் என்று ஒரு கதை இருக்கிறது.

இக்கதையின் பேரில்தான் கூனைப்பூ என்னும் ஆர்டிசோக் (artichoke ) கின் அறிவியல் பெயரும் சைனாரா கார்டன்குலஸ் (Cynara cardunculus, variety scolymus)  என வைக்கபட்டது. மனிதர்களின் பழமையான உணவுகளில் கூனை மலர்களும் ஒன்று .இந்த சூரியகாந்தி குடும்பத்தை சேர்ந்த தாவரத்தின் சதைப்பற்றான உண்ணக்கூடிய மலரரும்புகள்தான் ஆர்டிசோக்குகள் . இவை உருண்டை அல்லது பிரெஞ்ச் ஆர்டிசோக்குகள், முள் முட்டைகோசு  ஆகிய பெயர்களிலும் பொதுவாக அழைக்கப்படுகின்றன.

 ஆங்கில சொல்லான artichoke  என்பது 16 ம் நூற்றாண்டில் ’கூரிய’ என்னும் பொருள் கொண்ட  (அரபிச்சொல்லின் வேர்களை கொண்ட)  இத்தாலிய சொல்லான articiocco என்பதிலிருந்து பெறப்பட்டது.

மத்திய தரைக்கடல் பகுதிக்கும் வட ஆப்பிரிகாவுக்கும் சொந்தமான இந்த தாவரங்கள் பழங்காலத்திலிருந்தே உணவாகப் பயன்பட்டுவருகின்றன. இத்தாலியில்  1400 ம் ஆண்டில் கூனைப்பூ உண்ணப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. அப்போது இதன்  தளிரிலைகளும் உண்ணப்பட்டன.

இவை பண்டைய கிரேக்கத்தில் மருந்தாகவும் உணவாகவும் பயன்பாட்டில் இருந்தன. பண்டைய ரோமானிய செல்வந்தர்கள் மட்டும் இவற்றை உணவில் விரும்பி உண்டார்கள் அக்காலத்தில் ரோமானிய குடிமக்களில் வறியவர்கள் கூனை மலர்களை உண்ணத் தடை இருந்தது.  பல நாடுகளில் கூனைமலர்கள் பாலுணர்வை தூண்டும் இயல்புடையதென்பதால் பெண்கள் அவற்றை உண்ணவும் தடை இருந்தது

15 ம் நூற்றாண்டில் இவை ஐரோப்பாவில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டன. டச்சு மக்களால் இங்கிலாந்துக்கு 1530 ல் ஆர்டிசோக்குகள் அறிமுகமாயின. 19 ம் நூற்றாண்டில்   அமெரிக்காவிற்கு பிரஞ்சு குடியேறிகளால் கொண்டு வரப்பட்ட இவை லூசியானாவில் முதலில் சாகுபடி செய்யபட்டன

7 அடி உயரம் கொண்ட  பல்லாண்டுத் தாவரங்களான கூனைச்செடிகள்  9 அடி சுற்றளவுக்கு பரந்து வளரும். ரோஜா மலர்களைப்போல சுற்றடுக்கில் அமைந்திருக்கும் அடர்பச்சை  இலைகள் 1 மீ  நீளம் .வரை வளரும் ஒவ்வொரு வருடமும் மலரும் காலம் முடிகையில் இலைகளும் வாடி உதிர்ந்து பின்னர் மீண்டும் புதிதாக தளிர்க்கும்

தாவரம் வளரத்துவங்கிய 6 வது மாதத்திலிருந்து மலர் அரும்புகளை அறுவடை செய்யலாம். ஒவ்வொரு  மலர்த்தண்டிலும்  1 லிருந்து 5 கூனைப்பூக்கள் உருவாகும்.  ஒரு வருடத்தில்  ஒரு தாவரத்தில் சுமார் 20 கூனைப்பூக்கள் உருவாகும்.

இச்செடிகளின் மலர்கள் மலர்ந்து விரியும் முன்னர்  மலரும்புகளின் கூர் நுனி கொண்ட தோல் போன்ற தடித்த  இதழ்களைப்போலிருக்கும்  மலரடிச்செதில்களின் (bracts) உள்ளிருக்கும் சதைப்பற்றான மாவுபோன்ற பொருள் உண்ணத்தகுந்தது. அரும்புகளின் இதயம் எனப்படும்  சதைப்பற்றான மையப்பகுதி மிகச்சுவையானது.

அறுவடை செய்யாத  அரும்புகள் அழகிய ஊதா நிற  மலர்களாக  மலரும். 8 வருடங்கள் வரை பலனளிக்கும் இவை விதைகளை உருவாக்கினாலும்  தாவரங்களிலிருந்து தோன்றும் பக்கச்செடிகளிலிருந்தும் வேர்த்துண்டுகளிலிருந்தும் இவற்றை எளிதாக வளர்க்கலாம்.

ஆர்டிசோக்குகளில்  பொட்டாஷியம், வைட்டமின் C , நார்ச்சத்து இரும்புச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

சிறிய அரும்புகள் அதிக சுவையுடன் இருக்கும். இவற்றை  முழுமையாக  நீரில் அல்லது  நீராவியில் வேகவைத்தும்,  சமைக்காமல் அப்படியே பச்சையாகவும் உண்ணலாம்

இவற்றில் பல நிற மலர்கள் இருந்தலும் மிக அதிகம் சாகுபடி செய்யபடுவது பசைநிற மலர்வகைகளே. உணவுப்பயிர்களாகவும் அலங்காரச்செடிகளாகவும் இவை வளர்க்கப்படுகின்றன.

உலகின் மிக அதிக ஆர்டிசோக் உற்பத்தியாளராக இத்தாலி, எகிப்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இருக்கின்றன.  பிரபல இத்தாலிய மதுவகையான சைனார் (Cynar) ஆர்டிசோக் மலர்ரும்புகளை நொதிக்கச்செய்து உருவாக்கப்படுகின்றது. 16 சதவீத ஆல்ஹகாலை கொண்டிருக்கும் இம்மது  உணவுக்கு முன்னர் பசியுணர்வை தூண்ட அருந்தும் மதுவகைகளில் மிக பிரபலமானது. (aperitif)

அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் இவை மிக அதிகம் சாகுபடி செய்யப்படுகின்றன. கலிஃபோர்னியாவின் மாண்டெரே (Monterey) பகுதி உலகின் ஆர்டிசோக் மையம் என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவில் மார்ச் 16 ஆர்டிசோக் நாளாக கொண்டாடப்படுகிறது கலிஃபோர்னியாவின் வருடா வருடம் நடைபெறும்அர்டிசோக் கொண்டாட்டங்களில் 59 வது கொண்டாட்டம் 1948ல்  நடைபெற்ற போது மர்லின் மன்றோ ஆர்டிசோக் அரசியாக பட்டமளித்து சிறப்பு செய்யப்பட்டார்

கார்டூன் எனபடும் இவற்றின் காட்டுமூதாதை (Cynara cardunculus) யின்  இளம் இலைகளும் மலரும்புகளும் தண்டுகளும் வேர்களும் கூட  உண்ணத்தகுந்தவை இவையும் இப்போது ஆர்டிசோக்குகளுடன் சாகுபடியாகின்றன.

 ஜெருசேலம் ஆர்ட்டிசோக் எனப்படுபவை இந்த கூனைப்பூக்கள் அல்ல. Helianthus tuberosus என்னும் தாவரத்தின் கிழங்குகள்தான் இந்த பெயரில் அழைக்கப்படுகின்றன.. வியட்நாமில் இதிலிருந்து தேநீர் தயாரித்து மருத்துவக் காரணங்களுக்காக அருந்தப்படுகிறது

  இவை சுவைக்காக, உடல்நலனுக்காக,, ஈரல் பாதுகாப்பு வயிற்றுக்கோளாறுகளுக்கான சிகிச்சைக்கு என பல்வேறு மருத்துவக் காரணங்களுக்காவும் உண்ணப்படுகின்றன. இவற்றின் இரு முக்கிய வேதிப்பொருட்கள் சையனாரின் மற்றும் சிலிமாரின்  (cynarin and silymarin)

ஆர்டிசோக் மலரரும்புகளை எளிதாக சமைத்து உண்ணுதலை கற்றுத்தரும் காணொளி: https://youtu.be/CPwEX4Q1QAs

ஃபெனி, முந்திரிக்கனிச்சாறு

Aani Ek is the new artisanal feni to come out of Goa

அறிவியல் ஆய்வுகளின் முன்னோடி என்று கருதப்படும் வில்லியம் டேம்ப்பியர். (William Dampier) 17/18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இளம் வயதில் பெற்றொரை இழந்த இவர் 16  வயதிலிருந்தே  கடல் சாகச பயணங்களை மேற்கொண்டவர். அவகேடோ, பார்பிக்யூ, பிரெட் ஃப்ரூட் கட்டமரான், சாப்ஸ்டிக்ஸ் (Avocado, Barbecue, Breadfruit, Cashew, Catamaran, Chopsticks ) போன்ற பல நூறு சொற்களை உலகிற்கு தனது கடற்பயண நூல்களில் முதன் முதலில் எழுதி அறிமுகப்படுத்திய இவர் ஒரு கடற்படை தலைவர் மாலுமி, இயற்கையாளர் மற்றும் உலகை மூன்று முறை கடல் வழி சுற்றி வந்த முதல் மனிதர் என்னும் பெருமைக்குரியவரும் கூட. 1697 ல் வெளியான இவரது A New Voyage Round the World  மிகப்பிரபலமான கடற்பயண நூல்.

வில்லியம்  தனது பயணங்களில் பல இனக்குழுக்களை சேர்ந்த மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வின் இயங்கியலை அறிந்துகொள்வதிலும் இயற்கையின் அம்சங்களை கூர்ந்து அவதானிப்பதிலும் பெருவிருப்பம் கொண்டிருந்தவர். அவரது கடல்பயண அனுபவங்களை பல நூல்களாக எழுதியிருக்கிறார். அப்படி ஒரு நூலில் போர்ச்சுக்கீசியர்கள் ஒரு மரத்தின் பெயரை காஜு என்று பெயரிட்டிருப்பதை செவிவழி கேட்டு அதை கேஷூ என்று தவறுதலாக குறிப்பிட்டுவிட்டார் என்கிறது வரலாறு அப்படி வில்லியம்ஸினால்  கேஷு என்று குறிப்பிடப்பட்டதுதான் நமது முந்திரி மரம்.

Anacardium occidentale  என்னும் அறிவியல் பெயருடைய பசுமை மாறா முந்திரி மரங்கள்  மத்திய மற்றும் வடகிழக்கு பிரேசிலை சேர்ந்தவை. ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு முன்பு அங்கிருந்த பழங்குடியினரால் இம்மரம் , மருந்து மற்றும் எரிபொருளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது

1558ல் ஃப்ரென்ச் இயற்கையாளர் திவெட்’டினால் (Thevet)  முந்திரியின் முதல் சித்திரம் வெளியானது 16ம் நூற்றாண்டின் மத்தியில் போர்ச்சுக்கீசியர்கள் பிரேசிலிலிருந்து முந்திரி மரக்கன்றுகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். 1703ல் வெளியான  வில்லியமின் ’’ஹாலந்துக்கான புதிய கடற்பயணம்’’ என்னும் நூலில்தான் முதன்முறையாக cashew என்று இம்மரத்தின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.1 பிரேசில் பழங்குடியினரின்  துபி (tupi) மொழியில்  முந்திரியை  கொட்டை என்னும் பொருள்படும் அகாஜு (acaju) என்று குறிப்பிடப்பட்டதை போர்ச்சுக்கீசியர்கள்  காஜு என்று அழைத்தார்கள்.

காட்டு முந்திரி மரங்கள்  பருமனான திருகிய  தண்டுடன் பத்து மீட்டருக்கும் மேலன உயரத்தில் வளர்பவை.  தற்போது முந்திரிக்கனிகள் அறுவடை செய்யப்படுவது தோட்டக்கலை துறையினரால் உருவாக்கப்பட்ட  குட்டையான ஒட்டுரகங்களிருந்தே!

இம்மரங்களின் நுண்ணிய நட்சத்திர வடிவத்திலிருக்கும், பூச்சிகளால் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் மலர்களில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும். இவை சார்ந்திருக்கும் அனகார்டியேசி குடும்பத்தின் மாமரத்திலும் இப்படித்தான் ஒரே பூங்கொத்தில் ஆண் பெண் மற்றும் இருபால் மலர்கள் கலந்திருக்கும் இதை தாவரஅறிவியல்  polygamous  என்கிறது. 

 இருபால் மலர்கள் கருவுற்றதும் சிறுநீரக வடிவிலான கொட்டை என்னும் கனி உருவாகும்.  மலர்களிலிருந்து கனி உருவாக சுமார் 55 லிருந்து 70 நாட்கள் தேவைப்படும். முந்திரிக்கொட்டை என்று அழைக்கப்படும் இவையே அம்மரத்தின் கனிகள். கொட்டை முழுவளர்ச்சி அடைந்த பின்னரே கனியெனப்படும் பகுதி முழுவளர்ச்சி அடையும். இக்கனியின் மேல்தோல் மிகமெல்லியதாக இருக்கும் நல்ல நறுமனத்தையும் கொண்டிருக்கும்

மலர்க்கொத்தின் காம்பானது  (peduncle) கனிக்கொட்டை உருவாகுகையில் விரிந்து சதைப்பற்றுடன் பிரகாசமான மஞ்சள் அரஞ்சு நிறத்தில் தலைகீழ் இதய வடிவில் வளரும். இதுவே பொதுவில் முந்திரிக்கனி அல்லது முந்திரிப்பழம் என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த சதைப்பற்றான மலர்க்காம்பு பழமென்று அழைக்கப்பட்டாலும்  இது பொய்ப்பழம் . அசல் பழமென்பது முந்திரியின் கொட்டைதான்

இம்மரத்தின் அறிவியல் பெயரான அனகார்டியம் என்பது இந்த சதைப்பற்றான  பழத்தின் தலைகீழ் இதயவடிவை குறிக்கின்றது ’அன’ என்றால் தலைகீழ் கார்டியம் என்றால் இதய வடிவம்

ஆக்ஸிடெண்டாலிஸ் என்னும் சிற்றினப்பெயர் ’மேற்கிலிருந்து’ என்று பொருள்படுகிறது. ‘cashew apple’ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது தலைகீழ் இதயவடிவிலிருக்கும்  இந்த போலி முந்திரிப்பழம்தான்.

 உலகெங்கிலும் மிக அதிகம் விரும்பி உண்ணப்படும் கொட்டைகளிலொன்றாக இருக்கும் முந்திரிக்கொட்டையின் உலக உற்பத்தி  2018ல் மட்டும் 6மில்லியன் டன். இதில் 70 சதவீதம் வியட்நாம் மற்றும் இந்தியாவில் உற்பத்தியானது.  2018 ல்  முந்திரிக்கனியின் 1.7 டன் மொத்த  உற்பத்தியில் பிரேசில் மட்டுமே 90 சதவீதம் பங்களித்திருந்தது

முந்திரி தொழிற்சாலைகளில் கொட்டையோடுகளின் எண்ணெய் உபரித்தயரிப்பாக  இருக்கிறது இதில் அனகார்டிக் அமிலம் ,கார்டோல் மற்றும் கார்டனோல் ஆகியவை அடங்கி இருப்பதால் இந்த எண்ணெய் பலநூறாண்டுகளாகவே மருந்தாகவும் மரச்சாமான்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்கவும் பயன்படுகிறது 

 முந்திரி கொட்டையின் இரட்டை அடுக்கு உறையில் இருக்கும் பிசின் வகையை சேர்ந்த அனகார்டிக் அமிலம் சரும அழற்சியை உண்டாக்கும். முந்திரி கொட்டையின் ஒவ்வாமை என்பது பெரும்பாலும் இந்த உறையின் இந்தெ வேதிச்சேர்மானங்களால் உண்டாகும் ஒவ்வாமையே. ஒவ்வாமை உண்டாக்கும் கொட்டைஉறயின் அமிலம் cashew nut shell liquid, CNSL) எனகுறிப்பிடப்படுகின்றது 

 ஐரோப்பியர்களால் முந்திரி பிரேசிலில் 1558 ல் கண்டறியப்பட்டபோது இந்த ஒவ்வாமையினால் இக்கொட்டைகள் உண்ண தகுந்தவையல்ல என்றே கருதப்பட்டது. ஆனால்  துபி பழக்குடியினர் குரங்குகள் கற்களைக்கொண்டு கொட்டையின் மேற்தோலை உடைத்தும், பாறைகளில் கொட்டைகளை தேய்த்தும் ஓட்டை அகற்றி விட்டு உண்பதை கண்டபின்பு அவர்களும் அதே முறையை பயன்படுத்தி உண்ண துவங்கினர்.  பின்னர் கொட்டைகளை வறுத்து ஓட்டை நீக்கி எப்படி அதன் ஒவ்வாமையை நீக்குவது என்பதை கண்டறிந்து அம்முறையை ஐரோபியர்களுக்கும் கற்றுக்கொடுத்தார்கள் 

கொட்டைகளை வறுத்து சுவையாக உண்ன முடிந்ததை கண்டுகொண்டபின்னர் அச்சுவையே போர்ச்சுக்கீசியர்களை முந்திரி மரக்கன்றுகளை கோவாவுக்கு 1560ல் கொண்டு வரச் செய்தது.புதிய சூழலிலும் கன்றுகள் செழித்து வளர்ந்தன

போர்த்துகீசியர்களால் 16 ம் நூற்றண்டில் முந்திரி இந்தியாவிற்கு அறிமுகமானதாக பொதுவாக சொல்லப்பட்டாலும் அதற்கு ஆயிரமாயிரமாண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் குறிப்பாக தமிழக்தில் முந்திரி இருந்ததற்கான சான்றுகளும் உள்ளன

. கி மு 200 – 300களில் பௌத்தக் கட்டிடக் கலையில் நிறுவப்பட்ட இந்தியாவின், மத்தியப் பிரதேச மாநிலத்தின் சத்னா மாவட்டத்தில், பர்குட் கிராமத்தில் உள்ள பர்குட் (Bharhut) ஸ்தூபிகளில் இரு சீதாப்பழங்களும் இரு முந்திரிப்பழங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

மேலும் திருச்சிராப்பள்ளியின் 2500 வருடங்களுக்கு முன்புகட்டபட்ட  கோவிலின் கல் தூண்களில் முந்திரிபழங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன.

வேதங்களில் குறிப்பிட்டிருக்கும்    கஜுதக்கா மற்றும் வ்ருத அருஸ்கரா (Kazutaka & Vritta Aruskara),  என்பதும் முந்திரிகளையே குறிக்கின்றது எகின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தியர்கள் முந்திரியின் சுவையையும் மருத்துவ குணங்களையும் சேர்த்து கண்டுகொண்ட பின்னர்  16 ம் நூற்றாண்டின் பிற்பாதியில் முந்திரி இந்தியாவில்  வேகமாக பிரபலமாகியது.

கிழக்காசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் அதே சமயத்தில் முந்திரி அறிமுகமானது, வறுத்த முந்திரியின் மணம் பரவி பல கலாச்சாரங்களிலும் முந்திரி முக்கிய இடம் பிடிக்க துவங்கியது. கடற்கரை மணலரிப்பை தடுக்கும் பொருட்டு ஹவாய், மடகாஸ்கர் இலங்கை உள்ளிட்ட  மேலும் பல நாடுகளிலும் அச்சமயத்தில் முந்திரி அறிமுமானது.

அமெரிக்கவிற்கு முந்திரி 1905ல் அறிமுகமானதாக வரலாறு குறிப்பிடுகிறது 1920 வரையிலும்  அங்கு அத்தனை பிரபலமாகி இருக்காத முந்திரி 1941ற்கு பிறகே பெரும்பான்மையான புழக்கத்திற்கு வந்திருக்கிறது 1941 க்கு பிறகு இந்தியாவிலிருந்து மட்டுமே அமெரிக்காவிற்கு வருடத்திற்கு சுமார் 20,000 டன்  முந்திரிக்கொட்டைகள் கடல் வழி ஏற்றுமதியானது    

வறுத்த முந்திரிக் கொட்டையின் சுவையை மகிழ்ந்தனுபவித்த போர்த்துகீசியர்கள் கோவாவில் பயிரான மரங்களிலிருந்து கொட்டைகளின் அறுவடைக்கு பின்னர் வீணாகும் ஏராளமான பழங்களை உபயோகப்படுத்தும் விதமாக கனிச்சாற்றிலிருந்து மதுவை உருவாக்கி அருந்தினர் . அந்த மரபு இன்னும் அங்கு  நானூறாண்டுகளாகவே நீடிக்கிறது 

 முந்திரிப்பழத்தின் சதையை கூழாக்கி நொதிக்க செய்து  கோவாவில் மட்டும் தயாரிக்கப்படும் மதுபானம் ஃபெனி அல்லது ஃபென்னி எனப்படுகின்றது.

 இரட்டை வடித்தல் மூலம் கிடைக்கும் 45 சதவீத்திற்கும்  அதிகமான  ஆல்கஹாலை கொண்டிருக்கும் ஃபெனி கோவாவின் அடையாளங்களிலொன்றாகவே  கருதப்படுகிறது 

முந்திரி கனிகளில் பிரக்டோஸ், குளுக்கோஸ், கனிமத்தாது உப்புக்கள், பல முக்கிய அமினோ அமிலங்கள், மற்றும் அதிக அளவு அஸ்கார்பிக் அமிலம் ஆகியவை உள்ளன

.ஃபெனியின் தோற்றம் குறித்த முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை 1740ல் போர்ச்சுக்கீசியர்கள் ஃபெனியிலிருந்து மதுபானம் உண்டாக்கும் முறையை கோவா நகர மக்களுக்கு கற்றுக்கொடுத்ததகவே பெரிதும் நம்பப்படுகிறது.

ஃபெனி உருவாக்கம்

கனியின் சதைப் பகுதி பாறை கற்களால் நசுக்கப்பட்டு கூழாக்கப்பட்டு சிறு மலைபோல குவிக்கப்படும். முன்பு கற்களால் செய்யப்பட்டுக்கொண்டிருந்த நசுக்குதல் இப்போது அழுத்தும் கருவியான    பிங்ரி’யினால் செய்யப்படுகின்றன.{pingre (cage.} . கால்களால் நசுக்கப்படும் முறையும் பயன்பாட்டில் இருக்கிறது.

கைகளால் பிசையப்பட்டு நூடி என்னும் காட்டுக்கொடியால் கட்டப்படும் (vine- nudi,) சதைக்கூழ் குன்றுகள்  ஒரு கனமான பாறைக்கல்லினால் இரவு முழுவதும் அழுத்தப்படுகிறது.

கனிகளை கொட்டி நசுக்கும் கற்களால் ஆன இந்த தரைப்பகுதி கோல்மி (collmi)  எனப்படும்.  இக்கூழ் குன்றிலிருந்து வடியும் சாறு  நீரோ   (neero)

நீரோ முந்திரிக்கனிச்சாறு நிலத்தில் ஆழமாக புதைக்கப்பட்டிருக்கும் குடம் போன்ற மண் அல்லது செப்பு பாத்திரங்களுக்குள் செலுத்தப்பட்டு. பல  நாட்கள் இயற்கையாக நொதிக்க செய்யப்படுகிறது.  நொதித்த திரவம் 3 நாட்களுக்கு பிறகு பான்ஸ் எனப்படும் செம்புக் கொதிகலன்களில்  ‘(bhanns ) இவை காய்ச்சி வடித்தலுக்கு உள்ளாகின்றன.

எந்த நுண்ணுயிர்களும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படாத ஃபெனி வடித்தல் பாட்டி எனப்படுகிறது (‘bhatti).  

ஒற்றை வடித்தலுக்கு பிறகு கிடைக்கும் 15 சதவீத ஆல்கஹால் கொண்ட பானம்  அரக் (urrac) எனப்படுகிறது.  

உர்ரக் மீண்டும் நீரோவுடன் கலக்கபட்டு 40-42 சதவீத ஆல்கஹால் இருக்கும் திரவமான   காஜுலோ (cazulo) கிடைக்கின்றது. காஜுலோ மீண்டும் உர்ரக்குடன் கலக்கப்பட்டு வடித்தலுக்கு உள்ளாகையில் 45 சதவீதத்திற்கும் அதிகமான ஆல்கஹால் கொண்டிருக்கும் ஃபெனி ஆகிறது. ஃபெனி நெடியுடைய மது

ஃபெனி என்பது  நுரையை குறிக்கும் சமஸ்கிருத சொல்லான ‘phena’விலிருந்து உருவானது.  குசுக்கப்பட்ட பாட்டிலிலிருந்து கோப்பைகளில் ஊற்றப்படுகையில் நுரைத்துப் பொங்கும் இம்மதுவின் இயல்பால் இப்பெயர் வைக்கப்பட்டது

கோவாவில் முந்திரியிலிருந்தும் இளநீரிலிருந்தும் ஃபென்னி தயாரிக்கப்படுகிறது. இளநீர் ஃபெனி மாட்டல்ஃபெனி எனப்படுகிறது. (Maddel fenny ) 2009ல் ஃபெனி புவிசார் குறியீடு பெற்றிருகிறது.2 கோவா அரசு ஃபெனிக்கு கலாச்சார அந்தஸ்தும்  அளித்திருக்கிறது3 .இந்திய மது வகைகளில் புவிசார் குறியீடு பெற ஒரே மது வகை ஃபெனியே. ஃபெனி கோவாவில் மட்டுமே உருவாக்கப்படுகின்றது  

கோவாவில் மட்டும் சுமார் 4000 வடிசாலிகள் ஃபெனிக்கென்றே இயங்குகின்றன. அவற்றிலிருந்து கிடைக்கும் ஃபெனியில் சுமர் 70 சதவீதம் கோவா மக்களுக்கே செலவாகிறது மீதியே சுற்றுலாப்பயணிகளுக்கு சந்தைப் படுத்தப்படுகிறது. வடிசாலிகளில் மட்டுமல்லாது பல குடும்பங்களில் அவர்களின் தனிப்பட்ட தேவைக்காக வீட்டிலேயே ஃபெனி உருவாக்கபடுகிறது. 

 கோவாவின் பிரத்யேக ஃபெனி அருந்தும் முறையென்பது ஃபெனியை தேங்காய் சிரட்டைகளில் ஊற்றி அருந்துவதுதான். ஃபெனி ஐஸ்கட்டிகள் கலந்தும், கலக்காமலும் அருந்தப்படுகிறது. அதனுடன் கடல் உணவுகள் பொருத்தமானதாக அமையும். ஒரு துண்டு எலுமிச்சை அல்லது உப்பு தூவப்பட்ட பச்சைமிள்காயுடனும் ஃபெனியை அருந்துபவர்களும் உண்டு 

கோவாவை சேர்ந்த நந்தன் குட்சத்கர்  ஃபெனி அருங்காட்சியகம்  ஒன்றை கோவாவின் அழகிய கடற்கரை கிராமமொன்றில் அமைந்திருக்கிறார். இங்கு ஃபெனியை குறித்த ஆயிரக்கணக்கான தகவல்களும் ஃபெனி சீசாக்களின் மாதிரிகளும் உள்ளன. நூற்றண்டுகள் பழமையான ஃபென்னியும் அங்குள்ளது

இந்தியாவின் முந்திரி தொழிற்சாலை துவக்கம் குறித்த ஆதாரபூர்வமான தகவல்கள் அதிகம் இல்லை எனினும் 1920களில் இலங்கையிலுருந்து கொல்லம் வந்த ரோச் விக்டோரியா (Roch Victoria) என்பவர் வணிக ரீதியான பெரும் முந்திரி தொழிற்சாலையை அங்கு உருவாக்கினார் என்பதற்கான ஆதாரங்கள் மட்டும் கிடைத்திருக்கின்றன 

கொல்லத்திலிருந்து அறுவடை செய்யப்பட்டு, வறுத்து  நச்சு நீக்கபட்ட  தரமான முந்திரிகள் அமெரிக்கவிற்கு ஏற்றுமதியாகி இருக்கின்றன 

 டான்ஸானியாவில்  உலர்ந்த முந்திரிக்கனிகளிலிருந்து சாறெடுத்து வடித்தலுக்கு உள்ளாக்கி உண்டாக்கப்படும் மிகக் கடும் மது வகை  கோங்கோ (gongo.) எனப்படுகிறது.

முந்திரிப்பழங்களிருந்து நொதித்தலுக்கும் வடித்தலுக்கும் உட்படுத்தப்படாத ஆல்கஹால் சிறிதும் இல்லாத  பானம் காஜுனா (Cajuína). ஆல்கஹாலுக்கு எதிரான நடவடிக்கையாக பிரேசிலின் ஒரு மருந்தாளுநரால் உருவாக்கப்பட்ட இந்த பானம் இப்போது பிரேசிலில் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது

முந்திரிக்கொட்டைகளை கனியிலிருந்து பிரித்து நச்சுநீக்கம் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு கொட்டையின் ஓட்டு எண்ணெயால் உடல் பாதிப்புகள் உருவாகின்றன மேலும் கனியிலிருந்து கொட்டைகளை பிரித்தெடுப்பது அதிக உடலுழைப்பை கோரும் பணி இதனாலேயே முந்திரி கொட்டைகள் விலை கூடியவைகளாக இருக்கின்றன

இந்தியாவின் முக்கிய முந்திரி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கோவா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா.. மொத்த உலக உற்பத்தியில் இந்தியா 23 சதவீதத்தை பங்களிக்கிறது

1 A voyage to New Holland, &c. in the year (1703). 

2.Certificate of Geographical Indication Registration for Feni

3.  “Goa government readies to brand ‘Feni’ as ‘heritage brew'”. Mid-Day. 23 January 2016. 

4. ஃபெனி உருவாக்கம் குறித்த காணொளி :https://youtu.be/vR1rMG7DEKw

நீலச்சிலுவை – கில்பர்ட் கெய்த் செஸ்டர்டன்

வனம் இதழில் வெளியான மொழியாக்கம்

விடியலின் வெள்ளி மினுங்கலுக்கும் கடலின் பச்சை பளபளப்புக்கும் இடையே அந்த படகு ஹார்விச் துறைமுகத்தை அடைந்து கூட்டமாய் மக்களை விடுவித்தது. அந்த கூட்டத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாதவர் போல் இருந்தார்  நாம் தொடர வேண்டிய நபர்.  அவருடைய விடுமுறைக்கானவை போலிருந்த உடைகளுக்கும், தீவிரமான முகபாவத்திற்குமான வேறுபாட்டைத் தவிர அவரை குறிப்பிட்டு கவனிக்க  வேறு எதுவுமில்லை.  வெள்ளை மேலங்கியும் அதற்கு  மேல் வெளுத்த சாம்பல் வண்ண ஜாக்கெட்டும், சாம்பல் நீல ரிப்பனை கொண்டிருந்த  வெள்ளி நிற வைக்கோல் தொப்பியுமாக அவரது உடையும் அதற்கு சற்றும் பொருத்தமில்லாத உத்தியோகபூர்வமான ,முகமுமாக இருந்தார்.

அவரது இருண்ட ஒடுங்கிய முகத்தில்  ஸ்பானியர் என கருத இடமளிக்கும்  கருப்பு தாடி இருந்தது. சோம்பேறிகளின் தீவிரத்துடன் அவர் சிகெரெட் புகைத்து கொண்டிருந்தார்.

அவரது சாம்பல் வண்ண ஜாக்கெட்டுக்குள் குண்டுகள் நிரப்பிய கைத்துப்பாக்கி இருப்பதும், அவரது  மேலங்கியில் காவல் துறையின் அடையாள அட்டை இருப்பதும், ஐரோப்பாவின் அதிபுத்திசாலித்தனத்தை அந்த வைக்கோல் தொப்பி மறைத்திருக்கிறது என்பதையும்  யாராலும் யூகித்திருக்க முடியாது.

ப்ருஸெல்ஸிலிருந்து லண்டனுக்கு அந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கைதொன்றை செய்யும் பொருட்டு பாரீஸ் காவல் துறையின் தலைவரும், உலகின் மிக பிரபலமான விசாரணை அதிகாரியுமான வேலெண்டீனே நேரில் வந்திருக்கிறார்.

மகா குற்றவாளி  ஃப்ளேம்போ இங்கிலாந்தில் இருந்தான்.  மூன்று நாடுகளின் காவல் துறைகளும்   அவனை கெண்ட்’லிருந்து புருஸ்ஸெல்ஸுக்கும், பின்னர் புருஸ்ஸெல்ஸிலிருந்து ஹாலந்தின் ஹூக் நகருக்கும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது லண்டனில் நடைபெற்றுக்கொண்டிருந்த நற்கருணை மாநாட்டின் கூட்டத்தையும், குழப்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவன் ஒரு கீழ்மட்ட உத்யோகஸ்தனை போலவோ அல்லது அந்த மாநாட்டுக்கு தொடர்புடைய செயலராகவோ  மாறு வேடத்தில் அங்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வேலண்டீனுக்கு அவனை குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. உண்மையில் ஃப்ளேம்போவை    யாராலுமே கணிக்க முடியாது.

உலகை கொந்தளிக்க செய்துகொண்டிருந்த  அவனால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் குற்றங்கள்  ரோலண்டின் மரணத்திற்கு பிறகு திடீரென்று நின்று போனபோது உலகமே அமைதியாக இருந்தது.

ஆனால் அவன்  செல்வாக்கின் உச்சத்திலிருக்கையில் (அதாவது   மோசமான பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டிருக்கையில்)  அவன் சர்வதேச அளவில் ஒரு பேரரசனை போல புகழுடன் இருந்தான். பெரும்பாலான காலைகளில், தினசரி நாளிதழ்களில் அவன் ஒரு அசாதாரணமான குற்றத்தின் விளைவுகளிலிருந்து தப்பிக்க   மற்றொரு குற்றத்தை செய்த செய்தி இடம் பெற்றிருக்கும்.

அவன்  பிரம்மாண்டமான அச்சமூட்டும் உடற்கட்டை கொண்டிருந்தான். அந்த உடற்கட்டுடன் அவன் ஒரு  நீதிபதியை  மன அமைதிக்கு வழிகாட்டுவதாக சொல்லி தலைகீழாக நிற்க வைத்தது, டிரெவோலி சாலையில் கைக்கொன்றாக இரு காவலர்களை தூக்கி கொண்டு ஓடியது போன்ற   செய்கைகள் பலதரப்பட்ட கதைகளாக நகரில் உலவியது.

ரத்தம் சிந்தவில்லை என்றாலும் இது போன்ற கண்ணியமற்ற செயல்களுக்கு அவனது அசாதாரண உடல்வலிமை காரணமாயிருந்ததை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இப்படி  வேடிக்கை கதைகள் அவனைக்குறித்து உலவினாலும்  அவனது  பெருங்கொள்ளைகள்  உண்மையில் மிக புத்திசாலித்தனமான நடத்தப்பட்டவை.  அவனது ஒவ்வொரு திருட்டுக்கும் தனித்தனியே கதைகளும் உருவாகின.

அவனது அனைத்து செயல்பாடுகளிலும்  இருந்த எளிமை பிரத்தியேகமானது. உதாரணமாக, ஒரு நள்ளிரவில் தெருக்களின் அடையாள பலகைகளின் எண்களை மாற்றி எழுதி  ஒரு பயணியை அவன் திசை திருப்பி சிக்க வைத்தான்.

ஃப்ளேம்போ லண்டனின்  தைரோலியன் பால் நிறுவனத்தை மாடுகளோ வண்டிகளோ பாலோ எதுவுமே இல்லாமல் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுடன்  நடத்தி வந்தான்.

மிக எளிதாக வீட்டு வாசல்களில் வைக்கப்பட்டிருக்கும் பிற பால்  நிறுவனங்களின் பால் கேன்களை எடுத்து அவனது  வாடிக்கையாளர்களுக்கு கொடுப்பது அத்தனை எளிதானதாயிருந்தது அவனுக்கு.

அவன் ஒரு இளம்பெண்ணுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த போதும் அவளின் அனைத்து கடித தொடர்புகளையும் துருவி துருவி ஆராய்ந்தும் ஃப்ளேம்போவை குறித்த ஒரு தகவல் கூட கிடைக்கவில்லை. ஏனெனில் புகைப்படம் எடுத்து நுண்ணோக்கியால் மட்டுமே பார்த்து வாசிக்க முடியும் அளவுக்கு மிக நுண்ணிய அளவில்  அவனது  கடித எழுத்துக்கள் இருந்தன.

நகர்த்தக்கூடிய தபால் பெட்டிகளை உருவாக்கி  புறநகர் சாலை முனைகளில் அவற்றை வைத்து அதை உபயோகப்படுதுபவர்களின்  தபால்களை திருடும் வழியையும் அவனே கண்டுபிடித்தான்.

அவன் பிரம்மாண்ட உடற்கட்டை கொண்டிருந்தாலும்  ஒரு வெட்டுக்கிளியை போல தாவி மரக்கூட்டங்களுக்கிடையே அவன் மறைந்து விடுவதை அனைவரும் அறிந்திருந்தனர். திறமைசாலியான வேலண்டீனுக்கு  ஃப்ளேம்போவை  தேட துவங்கியபோதே தெரிந்திருந்தது அவனை  இருக்குமிடத்தை கண்டுபிடிப்பதோடு அவரது  வேலை முடிந்துவிடாதென்று.

ஆனால் அவனை எப்படி கண்டுபிடிப்பது?. வேலண்டீனின் இதுகுறித்த  யோசனைகள்  முடிவடையாமல் இருந்தன. ஃப்ளேம்போவை குறித்த   இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் எந்த மாறு வேடத்திலும் மறைக்க  முடியாத  அவனது  அதீத உயரம் தான்.

இந்த தேடலில்  வேலண்டீன் உயரமான ஒரு ஆப்பிள் விற்கும் பெண்ணையோ, ஒரு உயரமன படைவீரனையோ அல்லது சுமரான உயரம்கொண்ட  ஒரு சீமாட்டியை பார்த்திருந்தால் கூட அவர்களை கைது செய்திருப்பார்.  ஆனால் அந்த ரயில் பயணத்தில் அப்படி வழக்கத்துக்கு மாறான உயரத்தில் அப்பயணத்தில் யாரையும்  வேலண்டீன் கண்டிருக்கவில்லை. அந்த இடத்தில் இருக்கும் ஒருவரை ஃப்ளேம்போ என சந்தேகப்படுவது ஒரு பூனையை ஒட்டகச்சிவிங்கி என சொல்வதை போலத்தான்.

இந்த படகு பயணத்தில்  வேலண்டீனுடன் வெறும் 6 பிரயாணிகளே இருந்தார்கள். கடைசி நிறுத்தம் வரை பயணித்த குள்ளமான ஒரு ரயில் நிலைய ஊழியர்,  இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஏறிய  சுமாரான குள்ளமாயிருந்த மூன்று தோட்டக்காரர்கள், எஸ்ஸெக்ஸ் கிராமத்திலிருந்து  ஏறிய  மிக குள்ளமான ஒரு விதவைப் பெண்மணி மற்றும் மிக மிகக்குள்ளமான ஒரு  ரோமன் கத்தோலிக்க பாதிரியார்.

கடைசியாக ஏறிய  அந்த பாதிரியாரை பார்த்ததும்  வேலண்டீன் ஏறக்குறைய சிரித்து விட்டார். கிழக்கு பகுதிக்கே உரிய  மந்தமான முகமும்,  வடக்கு கடலை போன்ற வெறுமையான கண்களும்  கொண்டிருந்த அவன் தூக்கமுடியாமல்  பல பழுப்பு காகித பெட்டகங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தான்.

அந்த நற்கருணை மாநாட்டிற்கு அந்த பாதிரியை போலவே மூடநம்பிக்கையுடன்  புற்றீசல்கள் போல பலரும் வந்து கொண்டிருந்தார்கள்.

கடவுள் நம்பிக்கை அற்றவரான வேலண்டீனுக்கு  பாதிரிகளை பிடிக்காது, சொல்லப்போனால் அவர்கள் மீது அவருக்கு கொஞ்சம் இரக்கம்  கூட  உண்டு.  இந்த குள்ளப்பாதிரியோ பார்ப்போர் அனைவரின் இரக்கத்திற்கும் உரியவனை போலிருந்தார்.

பயணச்சீட்டின்  எந்த முனையை பிடித்து கொள்வது என்று கூட  தெரிந்திருக்காத அவரிடம் அடிக்கடி கீழே விழுந்தபடி இருக்கும் மலிவான பெரிய  குடை ஒன்று இருந்தது

அவர் வெள்ளந்தியாக  பெட்டியிலிருந்த அனைவரிடமும் தன் கையில் உள்ள பழுப்பு  பெட்டகங்களொன்றில் இருக்கும்  அசல் வெள்ளியில் செய்யப்பட்டு, நீல அருமணிகள்  பதிக்கப்பட்டிருக்கும்  அரிய பொருளை தான் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சொல்லிக்கொண்டே இருந்தார் .

எஸ்ஸெக்ஸின் அப்பாவித்தனமும் துறவிக்கான எளிமையுமாக  இருந்த அந்தக் கலவை  டோடென்ஹேமில் இறங்கிச் சென்று, மீண்டும் திரும்பிவந்து , மறந்துவிட்ட குடையை எடுத்துக்கொண்டு திரும்பிச்செல்லும்  வரை வேலண்டீனுக்கு வேடிக்கையாகவே இருந்தது

அவர் அப்படி குடையை எடுக்க திரும்பி போது வேலண்டீனே   அந்த அரிய பொருளை குறித்து  அனைவரிடமும் சொல்லிக்கொண்டிருக்க  தேவையில்லை என்று அவரை எச்சரித்தார்.

பயணத்தின் போது வேலண்டீன் யாரிடம் பேசிக் கொண்டிருந்தாலும் செல்வந்தர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள் என்று 6 அடிக்கு  மேல் இருப்பவர்கள் மீது ஒரு கண் வைத்திருப்பார். ஏனெனில் ஃப்ளேம்போ அதற்கும்  4 இன்சுகள் அதிகமான உயரம் கொண்டவன்.

ரயிலிலிருந்து இறங்கி  லிவர் பூல் தெருவில் நடந்து கொண்டிருந்த அவர் குற்றவாளியை தான் இன்னும் நழுவ விடவில்லை என்று தானே தன் மனச்சாட்சியிடம்  சொல்லிக்கொண்டார். பின்னர் ஸ்காட்லாந்து யார்டுக்கு சென்று தனக்கு தேவைப்படும் போது அங்கிருந்து உதவிகள் கிடைப்பதை உறுதி செய்துகொண்டார் மீண்டுமொரு சிகரெட் புகைத்தபடி லண்டன் தெருக்களில் உலாவிக் கொண்டிருந்தார்.

விக்டோரியாவின் தெருக்களிலும் சதுக்கத்திலும் நடந்துகொண்டிருந்த அவர் திடீரென்று நின்றார். லண்டனுக்கே உரித்தான பழமையான அமைதியான அந்த சதுக்கம் அப்போது  தற்செயலாக அசைவற்று இருந்தது. அங்கிருந்த  உயரமான வீடுகள் ஒரே சமயத்தில் செல்வச் செழிப்புடனும் யாருமற்றும் இருப்பது போல் தோன்றின.

சதுக்கத்தின் மத்தியிலிருந்த புதர்ச் செடிகள் கைவிடப்பட்ட தீவைப்போல் காட்சியளித்தன. அவற்றின் நான்கு பக்கங்களில் ஒன்று பிறவற்றை காட்டிலும் சற்று உயரமாக மேடை போலிருந்தது. அங்கு அவ்விடத்துக்கு சற்றும் பொருத்தமில்லாதது போல   லண்டனின்  வியக்கத்தக்க  உணவகம்  ஒன்று சொஹோவிலிருந்து தவறுதலாக அங்கு வந்தது போல அமைந்திருந்தது.

குட்டையான செடிகளும் நீளநீளமான, மஞ்சள் மற்றும் வெள்ளை பட்டைகளுடன் அமைந்திருந்த  திரைமறைப்புக்களுடன் காரணம் சொல்ல முடியாத வசீகரத்துடன் இருந்தது அந்த உணவகம்.

லண்டனின் வழக்கமான சமமான கட்டிட அமைப்புகளுக்கு மாறாக  அது தெருவுக்கு மேலே விசேஷமாக உயர்ந்து நின்றது,  அதன் வாசற்படி,  முதல் மாடி ஜன்னல் வரை செல்லும் ஒரு  தீபாதுகாப்பு வழியை போல செங்குத்தாக அமைந்திருந்தது.. வேலண்டீன்  அந்த  மஞ்சள் வெள்ளை திரைமறைப்புக்களுக்கு  முன்பு நின்று சிகரெட் புகைத்தபடி அவற்றின் அதிக நீளத்தை அவதானித்தார்.

அற்புதங்களின்  வியக்கத்தக்க  விஷயம் என்பது அவை நிகழ்வதுதானே.  மேகங்கள் ஒன்றிணைந்து மனிதனின் கண்களை போல  வடிவு கொள்ளக்கூடும். ஒரு தேடல் பயணத்தின் போது வழியில் காணும் மரமொன்று கேள்விக்குறியை போல தோற்றமளிக்க கூடும்.

இவை இரண்டையுமே  நான் இந்த கடைசி இரு நாட்களில் கண்ணுற்றேன். நெப்போலியனுடன் நடந்த  போரில் வெற்றி பெற்ற, வெற்றி என்று பெயரிடப்பட்ட கப்பலில் இருந்த கடற்படை அதிகரியான நெல்சன்  வெற்றிக்கனியை சுவைப்பதற்குள் இறந்தார். வில்லியம்ஸ் என்னும் பெயருடைய ஒருவர் வில்லியம்சன் என்னும் ஒருவரை தற்செயலாக கொலை செய்ததும் அப்படித்தான் சிசுக்கொலையை போல தோன்றுகிறது.

சுருக்கமாக சொல்லப்போனால்  இப்படியான ஊழின் விளையாட்டுக்களை  வாழ்வை எந்த மாற்றமும் இன்றி எதிர்கொள்ளும் சாமான்யர்கள் எப்போதும்  கவனிக்க தவறுகிறார்கள் ஆனால் ’போ’  விதியின் முரண்பாட்டின் படி வாழ்வின் எதிர்பாராமையை எதிர்பார்ப்பதே அறிவு  .

அரிஸ்டடே வேலண்டீன் முழுக்க முழுக்க பிரெஞ்சுக்காரர். பிரெஞ்சு புத்திசாலித்தனம் என்பது மிகச் சிறப்பானதும் தனித்துவமானதும் கூட. அவர் வெறும் சிந்திக்கும் இயந்திரமல்ல. சிந்திக்கும்  இயந்திரம் என்பதே   நவீன ஊழ்வினைக் கொள்கையும், பொருள்வாதமும் இணைந்து  உருவாக்கிய ஒரு முட்டாள்தனமான சொற்றொடர்.

சிந்திக்க முடியாதென்பதனால்தான் ஒரு இயந்திரம் வெறும் இயந்திரமாக இருக்கிறது. ஆனால் இவர் ஒரு சிந்திக்கும் மனிதர். மிக எளிமையானவரும்  கூட.

அவருடைய பெரும் வெற்றிகள் அனைத்தும் மந்திர வித்தையால் அடையப்பட்டவை போல தோன்றினாலும் உண்மையில் அவை தர்க்கபூர்வமாக அடையப்பட்டவையும்  துல்லியமான சமயோஜித   சிந்தனையால் பெறப்பட்டவையும்தான்.

வெறும் முரண்பாட்டை குறித்த விவாதங்களை துவங்கியல்ல, மெய்யியலை சரியாக கையாண்டே பிரெஞ்சுகாரர்கள் உலகை பிரமிக்க வைக்கிறார்கள் .சொல்லப்போனால் பிரெஞ்சுக்காரர்கள் மெய்யியலை  அளவு கடந்தும் எடுத்துச்சொல்வார்கள், ஃப்ரெஞ்ச் புரட்சியில் நடந்தது போல.

ஆனால் வேலண்டீன் தர்க்கத்தை மட்டுமல்ல அதன் எல்லைகளையும்  உணர்ந்திருந்தார்.  மோட்டார்களை குறித்து எதுவுமே தெரியாத ஒருவனே பெட்ரோலை தவிர்த்துவிட்டு மோட்டாரை குறித்து பேசுவான்

தர்க்கங்களை பற்றி எதுவும் தெரியாத ஒரு மனிதன் மட்டுமே  தர்க்கங்களின் அடித்தளமாக இருக்கும் வலுவான, மறுக்க முடியாத அனுமானங்களை தவிர்த்துவிட்டு  தர்க்கத்தை குறித்து பேசுவான்.

ஆனால் வேலண்டீனுக்கு இங்கு வலுவான அனுமானங்கள் ஏதும் இல்லை. ஃப்ளேம்போ ஹார்விச்சில் காணாமலாகியிருந்தான். அப்படியே அவன் லண்டனில் இருந்திருந்தாலும்  அவன்  விம்பிள்டன் காமனின் உயரமான ஒரு நாடோடியில் இருந்து  ஹோட்டல் மெட்ரோபோலின் உயரமான அறிவிப்பாளர்  வரை  யாராகவும்  இருந்திருக்கும்  சாத்தியங்கள் இருக்கிறது.

இத்தகைய வெளிப்படையான அறிவின்மையை எதிர்கொள்ள வேலண்டீனுக்கு அவருக்கேயான பிரத்யேக  பார்வையும் வழிமுறையும் இருந்தது.

இத்தகைய  தர்க்கரீதியான   பாதையை பின்பற்ற முடியாத சந்தர்ப்பங்களில் ,அவர் எதிர்பாராததை  கணக்கிட்டு,  சாத்தியம் குறைவான பாதையை  கவனமாகவும் துணிச்சலாகவும்  தேர்ந்தெடுப்பார்.    வழக்கமாக காவலர்கள் தேடிச்செல்லும் இடங்களான வங்கிகள், காவல் நிலையங்கள் மற்றும்  சந்திப்புக்களுக்கான பிரத்யேக இடங்களை தவிர்த்து, அவற்றிற்கு மாறான இடங்களிலேயே தேடிச்செல்வார், ஒவ்வொரு காலியான வீட்டுக்கதவையும் தட்டுவார் முட்டுச்சந்துக்குள் திரும்புவார், குப்பை கூளங்கள் நிறைந்திருக்கும் சந்துகளுக்குள் தேடிப்போவார். நேரான பாதைகளை தவிர்த்து விட்டு சுற்று வழிகளில் பயணிப்பார்.

ஏனெனில் தேடப்படுபவனின்  கண்களுக்குப் படும் வாய்ப்புகளும் விசித்திரங்களும்  தேடுபவனின் கண்களிலும் தென்படலாமல்லவா?  ஒரே ஒரு சிறு துப்பு இருந்தால் கூட  இதுபோன்ற வழக்கத்துக்கு விரோதமான வழிகள்  மோசமானவைகள் என்று சொல்லி விடலாம், ஆனால் எந்த துப்பும் இல்லாத போது அதுவே சிறந்த வழியாகிவிடும் என்று. இந்த பைத்தியக்காரத்தனத்தை அவர் தர்க்கபூர்வமாகவும்  விளக்குவார்.

எங்காவது ஒரு மனிதன் தொடங்க வேண்டும், அந்த இடம்  மற்றொருவர் தனது தேடலை நிறுத்திய இடமாக இருப்பது இன்னும் சிறப்பு .

விநோதமாக மேலேறும் அந்த உணவகத்தின் படிகளிலோ, அல்லது  அந்த உணவகத்தின் அமைதியிலும் வசீகரத்திலுமோ ஏதோ ஒன்று  அந்த துப்பறிவாளரின் உள்ளுணர்வை தூண்டியது. தோராயமாக ஒரு முயற்சி செய்ய எண்ணி படிகளில் ஏறி மேலே சென்றவர், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து ஒரு கருப்புக் காப்பிக்கு சொன்னார்.

ஏறக்குறைய முற்பகலாகி விட்டிருந்தது.  அவர் காலையுணவும் உண்டிருக்கவில்லை மேசைகளில் சிதறிக்கிடந்த உணவின் மிச்சங்கள் அவருக்கு பசியை நினைவூட்டியதால் காப்பியுடன் பொறித்த முட்டையும் சொன்னார்.

காப்பியில் சர்க்கரையை இட்டு கலக்கியபடியே ஃப்ளேம்போ இதுவரை தப்பித்த விதங்களை   குறித்து எண்ணிக் கொண்டிருந்தார். வெறும் நகவெட்டிகளைக்கொண்டே தப்பித்திருந்தான் ஒருமுறை. இன்னொரு முறை வீட்டை தீயிட்டு கொளுத்தி தப்பித்தான்

முத்திரை வைக்கப்பட்டிருக்காத  தபால்தலைக்கு பணம் கொடுப்பதாக ஒருமுறையும்,  உலகை அழிக்க வரும் வால் நட்சத்திரம்  ஒன்றை மக்கள் தொலைநோக்கியில்  ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த போது  இன்னொரு முறையும் தப்பித்திருந்தான்.

அவர் தனது துப்பறியும் மூளை குற்றவாளியின் மூளைக்கு இணையானது என்று நம்பினார். அது உண்மையும் கூட. அப்படி ஒப்பிடுவதலிருக்கும்  பிழையையும் அவர்   அறிந்திருந்தார். குற்றவாளி ஒரு கலைஞன், துப்பறிவாளனோ வெறும் ஒரு விமர்சகன், இதை எண்ணிக்கொண்டே காப்பிப்கோப்பையை உதட்டுக்கு கொண்டுவந்து ஒரு வாய் பருகியவர் கோப்பையை வேகமாக  கீழிறக்கினார். சர்க்கரைக்கு பதில் அவர் உப்பை கலந்து விட்டார்

அந்த வெள்ளை நிற பொடி வைக்கப்பட்டிருந்த சீசாவை அவர்  பார்த்தார். உறுதியாக அது சர்க்கரைக்கானதுதான். எப்படி ஷேம்பெயின் பாட்டிலில் ஷாம்பெயின்தான் இருக்குமோ அப்படி சர்க்கரையை கொண்டிருக்க வேண்டிய சர்க்கரை சீசாதான் அது. அதில்  ஏன் உப்பை வைத்தார்கள்  என அவர் வியந்தார்.

வேறு ஏதேனும்   சீசாக்கள்  இருக்கிறதா என அவர் ஆராய்ந்தார். இருந்தன இரு உப்பு புட்டிகள் நிறைந்து காணப்பட்டன. அதில் எதேனும் விசேஷமாக இருக்கலாம் என்று அவர் அவற்றை சுவைத்து பார்த்தார்,  இனித்தது ஆம் அது உப்பல்ல,  சர்க்கரை

உப்பையும் சர்க்கரையையும் மாற்றி வைத்த  அந்த வித்தியாசமான ரசனைக்கான வேறு தடயங்களும் அங்கு  இருக்கிறதா என வேலண்டீன் அந்த உணவகத்தை புதிய ஆர்வத்துடன்  சுற்றி பார்த்தார்.

வெள்ளைத்தாள் ஒட்டப்பட்டிருந்த சுவரில்  வீசியெறியப்பட்ட ஏதோ ஒரு திரவத்தின் கறையை தவிர அந்த இடம் மிக சுத்தமாகவும் சாதாரணமாகவும் தான் இருந்தது. சிப்பந்தியை  வரவழைக்க அவர் மேசையிலிருந்த மணியை அடித்தார்

அந்த காலை வேலையில் தூக்க  கலக்கக்துடன், கலைந்த தலையுடன் வந்த  சிப்பந்தியிடம் அந்த சர்க்கரையை சுவத்துப் பாரத்து அந்த உணவகத்தின் தரத்துக்கு அது  ஏற்புடையதுதானா? என்று சொல்ல சொன்னார் அதைப்போன்ற எளிய நகைச்சுவைகளை விரும்பும் அந்த துப்பறிவாளர்.

ஒரு துளி வாயிலிட்டு சுவைத்த  அந்த சிப்பந்தி தூக்கம் விலகி அவசரமாக ஒரு கொட்டாவியை வெளியேற்றி சுதாரித்துக்கொண்டான்

’’இப்படித்தான் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு நாள் காலையிலும் வேடிக்கை செய்கிறீர்களா? என்று கேட்டார் வேலண்டீன்

சர்க்கரையையும் உப்பையும் மாற்றி வைப்பது உங்களுக்கு அலுக்கவில்லையா? என்று அவர் கேட்டதும் சிப்பந்தி விஷயத்தின் தீவிரத்தை புரிந்தவராக தடுமாறி அப்படியான எண்ணம் ஏதும அந்த உணவகத்துக்கு இல்லையென்றும் எப்படியோ இந்த தவறு நிகழ்ந்து விட்டிருக்கிறதென்றும் பணிவுடன் கூறினார்

சர்க்கரை சீசாவையும் உப்பு சீசாவையும் எடுத்து உற்றுப் பார்த்த சிப்பந்தியின் முகம் மேலும் மேலும் குழப்பமடைந்தது. ‘’மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று சொன்னபடி விரைந்து அங்கிருந்து விலகிய அவர் சில நொடிகளில் உணவகத்தின் உரிமையாளருடன் திரும்பி வந்தார். சர்க்கரை உப்பு சீசாக்களை ஆராய்ந்த உரிமையாளர் முகமும் குழம்பியது

அவவசரமாக  பலவற்றை சொல்ல முயன்ற  சிப்பந்தி  ’’நான்  நினைக்கிறேன் நான் நினைக்கிறேன் அந்த இரு பாதிரியார்கள்தான்’’ என்று திணறினார்.

’’என்ன அந்த இரு பாதிரிகள்?’’ என்றார் வேலண்டீன்.

’’அவர்கள்தான், அந்த பாதிரிகள்தான்  சூப்பை சுவரில் வீசி எறிந்தார்கள்’’ என்றார் சிப்பந்தி

’’சூப்பை சுவற்றில் எறிந்தார்களா?’’ என்ற வேலண்டீன் இது  வேறு ஏதாவதொன்றிற்கான இத்தாலிய படிமமாக இருக்குமோ என்று யோசித்தார்.

’ஆம்! ஆம்! ’’ என்று உணர்வு மேலிட சொல்லிய  அந்த சிப்பந்தி சுவற்றின் கறையை சுட்டிக்காட்டி ’’அங்கேதான்! அங்கேதான்! சூப்பை வீசினார்கள்.’’ என்றார்

வேலண்டீன் இப்போது உரிமையாளரை கேள்வியுடன் பார்த்தார். அவரும் ’’ஆம் உண்மைதான்  ஆனால் அதற்கும் சர்க்கரையும் உப்பும் இடம்மாறியதற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை.’’

’’இன்று அதிகாலையில் கடையை திறந்தவுடன் இரு பாதிரியார்கள் வந்து சூப் அருந்தினார்கள் இருவரும் மிக அமைதியாக மிக கெளரவமானவர்களாக தோன்றினார்கள்’’.

’’இருவரில் ஒருவர் பணத்தை செலுத்தி விட்டு வெளியேறினார் கொஞ்சம் நிதானமாக புறப்பட்ட மற்றொருவர் சில நொடிகள் தாமதமாக தனது பொருட்களை சேகரிக்க துவங்கினார். கடையை விட்டு வெளியேறும் முன்பு வேண்டுமென்றே அவர் பாதி அருந்தி வைத்திருந்த சூப் கப்பை எடுத்து சுவற்றில் வீசி எறிந்தார்’’.

’’நான்  பின்னாலிருக்கும் என் அறையில் இருந்தேன் இந்த சிப்பந்தியும் அங்கு தான் இருந்தார்.  சத்தம் கேட்டு ஓடி வந்த போது இங்கு யாருமே இல்லை!’’ பெரிய சேதமொன்றும் இல்லைதான் எனினும் அவர்களின் இந்த செய்கை குழப்பமேற்படுதியது.

’’அவர்களை பிடிக்க  ஓடிச்சென்று தெருவில் தேடினேன் ஆனால் அவர்கள் வெகு தூரம் சென்று விட்டிருந்தார்கள், அடுத்த தெருவில் திரும்பி அவர்கள் கார்ஸ்டேர்ஸ் தெருவை நோக்கி செல்வதை மட்டும் பார்க்க முடிந்தது’’ என்றார் உரிமையாளர்.

அவர் பேசி முடிக்கையில் வேலண்டீன்  கைகளில் தடியுடன் புறப்பட்டு விட்டிருந்தார்,   ஊழ் முதலில் சுட்டிக்காட்டும்  விநோதமான  வழியில் செல்வது என அவர் ஏற்கனவே முடிவு செய்திருந்தார்.. இந்த வழி போதுமான அளவுக்கு விநோதமாகத்தான் இருந்தது. அவசரமாக பணத்தை செலுத்திவிட்டு  கண்ணாடிக்கதவை  தனக்கு பின்னால் அறைந்து சாத்திவிட்டு விரைவில் அடுத்த தெருவுக்கு வந்தார்

இத்தனை பரபரப்பிலும் அவரது கண்பார்வை அதிர்ஷ்டவசமாக  துல்லியமாகவும் நிதானமாகவும் இருந்தது.. ஒரு கடையை தாண்டுகையில் அவரது கண்களில் மின்னல் போல எதோ ஒன்று பளீரிட்டது.  அவர் திரும்பி  அதை பார்க்க அங்கு வந்தார்

அது ஒரு பிரபல பச்சை காய்கறிகளும் பழங்களும் விற்கும் கடை. ஏராளமான பொருட்கள்  பெயரும் விலைப்பட்டியலும் வைக்கபட்ட அட்டைகளுடன் வெளியே விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

ஆரஞ்சுகளும் முந்திரிகளும் குவித்து வைக்கப்பட்டிருந்த ஒரு வரிசையில் முந்திரிக்கொட்டைகளின் குவியல் மீது இரண்டு ஆரஞ்சுகள் ஒரு பென்னி என்று தெளிவாக நீல சாக்கட்டியால்  எழுதப்பட்ட அட்டை சொருகி இருந்தது.

தரமான பிரேஸில்  முந்திரி கொட்டைகள்  ஒரு பவுண்ட்  4 டைம் என்னும் அட்டை ஆரஞ்சுகளின் மீது வைக்கப்பட்டிருந்தது. வேலண்டீனுக்கு இதே போன்ற நுட்பமான  வேடிக்கையை  முன்பே, மிக சமீபத்தில்  பார்த்திருப்பது  நினைவுக்கு வந்தது.

தெருவை அளப்பது போல மேலும் கீழுமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த சிவந்த முகம் கொண்ட பழக்கடைக்கரரை  அணுகிய வேலண்டீன்  அதை சுட்டிக்காட்டினார். பழக்கடைக்காரர் ஒன்றுமே சொல்லாமல் அட்டைகளை மட்டும் இடம் மாற்றி சரியாக வைத்தார்

ஒயிலாக கைத்தடியை ஊன்றி அதன் மீது சாய்ந்தபடி  கடையை நோட்டமிட்ட வேலண்டீன் கடைக்கரரிடம். ’’தொடர்பில்லாமல்  கேட்பேனாகில் மன்னியுங்கள் எனக்கு உளவியல்  ரீதியாக உங்களை ஒரு கேள்வி கேட்க வேண்டி இருக்கிறது“ என்றார்

எரிச்சலுடன்  பார்த்த, சிவந்த முகம் கொண்ட  கடைக்காரரிடம்  கைத்தடியை சுழற்றியபடியே ’’ஏன்? ஏன்? பாதிரிமார்கள் லண்டனுக்கு சுற்றுலா வந்ததுபோல பொருத்தமில்லாமல் விலை அட்டைகள் இடம் மாற்றி வைக்கப்பட்டிருந்தன?’’, என்று கேட்டார்

’’ஒருவேளை நான் கேட்பது உங்களுக்கு புரியவில்லை எனில் தெளிவாகவே கேட்கிறேன்  முந்திரிகளென குறிககப்பட்டிருக்கும் ஆரஞ்சுகளுக்கும் நெட்டையாகவும்,   குட்டையாகவும் இருந்த இரு பாதிரிகளுக்கும் என்ன தொடர்பு?’’ என்று கேட்டார்

நத்தையை போல  கண்கள் வெளியே தெறிக்கும் படி வெறித்துப் பார்த்த,     வேலண்டீன் மீது  பாயப் போவது போல் தோற்றமளித்த அந்த கடைக்காரர் கோபமாக  ’’இதில் உங்களுக்கு என்ன தொடர்பு என தெரியவில்லை, ஆனால் அவர்கள் உங்கள் நண்பர்கள் எனில் மீண்டும் என் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுத்தினால் பாதிரிகள் என்று கூட பார்க்காமல்  அவர்களை உதைத்து விடுவேன் என்று சொல்லுங்கள்’’ என்றார்

’’அப்படியா?’’  என்ற வேலண்டீன் ’’உங்கள் ஆப்பிள்களை அவர்கள் சேதப்படுதினார்களா?’’ என்றார் அனுதாபத்துடன்.

கோபம் தணிந்திருக்காத கடைக்காரர் ’’ஆம் ஆம் அவர்களில் ஒருவன் ஆப்பிள்களை  கொட்டி தெருவில் ஓடவிட்டான்  ஆப்பிள்களை பொறுக்க வேண்டி இருந்ததால்,அவர்களை பிடிக்காமல் விட்டுவிட்டேன்’’ என்றார்

’’அவர்கள் எந்த வழியே போனார்கள்?’’’ என்று கேட்டார் வேலண்டீன். வலது பக்கமாக இருக்கும் அந்த  இரண்டாவது தெருவில் மேலேஏறி பின்னர் அந்த சதுக்கத்தை கடந்து போனார்கள்’’ என்றார் கடைக்காரர்.

‘’நன்றி’’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மாயமானார் வேலண்டீன், இரண்டாம் சதுக்கத்தில் நின்றிருந்த காவலரிடம் ’’இது மிக அவசரம்,  நீங்கள் தொப்பியுடன் இருந்த இரு பாதிரிகளை பார்த்தீர்களா?’’ என்று கேட்டார்.

”அந்த காவலர் அவசரமாக தலையாட்டியபடி ’’ஆம்! பார்த்தேன் அவர்களில் ஒருவன் குடித்திருந்தான், போதையில் சாலையின் நடுவில் நின்று அவன்’’ என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே வேலண்டீன் விரைந்து குறுக்கிட்டு  ’’எந்த வழியாக போனார்கள்? ‘’ என்று கேட்டார்.

’’அவர்கள் ஹேம்ஸ்டீடு போகும் மஞ்சள் நிற பேருந்தில் சென்றார்கள்’’ என்றார் காவலர்.

வேலண்டீன் தனது அடையாள அட்டையை அவரிடம் காட்டி ’’உடனே இரு காவலர்களை என்னுடன் தேடலுக்கு வர சொல்லுங்கள்’’ என்றபடியே அந்த காவலர் பணிந்து வணங்கியதை கூட கவனிக்காமல் சாலையை கடந்து மறுபக்கம் விரைந்தார்.

ஒன்றரை  நிமிடங்களில்   எதிர்ச்சாலையின்  நடைபாதையில் வேலண்டீனுடன் ஒரு இன்ஸ்பெக்டரும் சாதாரண உடையில் இருந்த மற்றொரு காவலரும்  இணைந்து கொண்டார்கள்

அந்த இன்ஸ்பெக்டர் உரையாடலை துவக்கும் பொருட்டு ’’இப்போது என்ன?’’ என்று சொல்ல முற்படுவதற்குள் தன் கையில் இருந்த கைத்தடியினால் தூரத்தில் இருந்த பேருந்தை சுட்டிக்காட்டி ’’எல்லாவற்றையும் அந்த பேருந்தில் வைத்து சொல்கிறேன்’’ என்றார் வேலண்டீன்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி ஒரு வழியாக மூவரும் அந்த பேருந்தில் மேல்பக்க இருக்கைகளில் அமர்ந்ததும்,’’ இதைக்காட்டிலும் நான்கு மடங்கு வேகமாக நாம் டாக்ஸியில் சென்றிருக்கலாமே’’என்றார் இன்ஸ்பெக்டர்.

‘’ஆம்! ஆனால் அது நாம் போகுமிடம் தெரிந்திருந்தால்தானே’’ என்றார் வேலண்டீன்

’’நாம் இப்போது எங்குதான் செல்லவிருக்கிறோம்?’’ என்றார் அந்த இரண்டாமவர்.  அமைதியாக  இரண்டு நொடிகளுக்கு சிகெரெட் புகைத்த வேலண்டீன் சிகெரெட்டை அகற்றிவிட்டு  ’’ஒருவன் என்ன செய்கிறான் என்று பார்க்க அவனுக்கு முன்னால் செல்ல வேண்டும், ஆனால் ஒருவன் என்ன செய்வான் என்று யூகிக்க அவ்னை கவனமாக பின்தொடர வேண்டும்’’ என்றார்

’’அவன் விலகினால் நாமும் விலகி, அவன் நின்றால் நாமும்  நின்று, அவன் வேகத்துக்கு இணையாக நாம் செல்லவேண்டும்’’. ’’அப்போதுதான் அவன் காண்பவற்றை நாமும் கண்டு அவன் செய்பவற்றை நாமும் செய்யமுடியும்’’ இப்போது நாம் செய்யக்கூடியதெல்லாம் விந்தைகளை காணும் பொருட்டு நம் கண்களை திறந்து வைத்திருப்பதுதான்’’ என்றார் அவர்

’’எப்படியான விந்தைகளை?’’என்றார் இன்ஸ்பெக்டர் ’’எப்படிப் பட்டவைகளாக இருந்தாலும்’’ என்ற வேலெண்டீன் மீண்டும் அமைதியில் மூழ்கினார்

முடிவற்று சென்று கொண்டிருப்பது போல அந்த மஞ்சள் பேருந்து வடக்கு சாலையை நோக்கி மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. மேற்கொண்டு அந்த துப்பறிவாளர் விளக்கமேதும் அளிக்காததால்  உதவியாளர் இருவருக்கும் அவரின் நோக்கத்தின் மீதும் அந்த பயணத்தின் மீதும் ஐயம் எழுந்தது

கூடவே மதிய உணவிற்கான வேளையும் கடந்து விட்டதால் அவர்களுக்கு கடும் பசியும் உண்டாகி இருந்தது. வடக்கு லண்டன் சாலைகளில் பிரபஞ்சத்தின் எல்லைக்கே அழைத்துச் செல்வது போல் நீண்டு கொண்டிருந்த  அந்தப்பயணம், டஃப் நெல்  பூங்காவின் துவக்கத்திற்கு தான் வந்திருந்தது

லண்டன் கொஞ்சம் கொஞ்சமாக பின்னால்  மறைந்துபோய், கைவிடப்பட்ட கட்டிடங்களும், அழுக்கான சத்திரங்களும் தென்பட்டு லண்டன் முடிந்து விட்டதென்றும், பளபளக்கும் விஸ்தாரமான  சாலைகளும், பிரம்மாண்டமான விடுதிகளும் இடைப்பட்டு பேருந்து இன்னும் லண்டனில் தான் இருக்கிறது என்பதையும்  நினைவூட்டிக்கொண்டிருந்தன..

பேருந்துப்பயணம்  ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கும் 13 ஒழுங்கற்ற நகரங்களை கடந்து செல்வது போலிருந்தது. குளிர்காலத்தின் அந்தி நெருங்கிக்கொண்டிருந்த வீதிகளின் முகப்புக்கள் இருபுறமும் விரிந்து மறைவதை பார்த்தபடி பாரீஸ்காரரான அந்த துப்பறிவாளர் சிந்தனையில் ஆழ்ந்து அமைதியாக அமர்ந்திருந்தார்..

திடீரென வாலண்டீன் துள்ளி எழுந்து அவர்களின் தோள் மீது கையை ஊன்றிய்போது காவலர்கள் திடுக்கிட்டனர். ஓட்டுநரை நோக்கி வண்டியை நிறுத்தும்படி கத்தினார் அவர்.  கேம்டென் நகரத்தை தாண்டியபோது ஏறக்குறைய தூங்கியே விட்டிருந்த. காவலர்கள், படிகளில் அவருடன் அவசரமாக இறங்கி, எதற்காக இறங்கினோமென்று  அறியாமல் சுற்றும் முற்றும் குழப்பமாக பார்த்த போது வேலண்டீன் சாலையின் வலது புறம் இருந்த கட்டிடமொன்றின்  ஜன்னலை  வெற்றிகரமாக சுட்டிக்காட்டுவதை  கண்டார்கள்

அங்கிருந்த  உயர்குடியினருக்கான ஒரு உணவகத்தின் ஒரு பகுதியில் இருந்த,  மற்ற ஜன்னல்களை போலவே சித்திர வேலைப்பாடுகளை கொண்டிருந்த ஒரு ஜன்னல் கண்ணாடி பனிப்பாளத்தில் நட்சத்திரம் போல நடுவில்  பெரிதாக  உடைந்திருந்தது

கைத்தடியை வீசியபடி’’ உடைந்த ஜன்னலுடன் ஒரு கட்டிடம்,  ’’நாம் தேடி வந்தது கிடைத்து விட்டது’’ என்று கூவினர் வேலண்டீன்.

’’என்ன ஜன்னல்? என்ன கிடைத்துவிட்டது’’ என்றார் முதல் உதவியாளர். ‘’எந்த ஆதாரம்  அங்கு இருக்கிறது?  அவர்களுக்கும் இதற்கும் என்ன  தொடர்பு ?

பிரம்பு கைப்பிடியை உடைத்துவிடும் அளவுக்கு ஆவேசமானார் வேலண்டீன்.

’’ஆதாரமா!’’ அவர் அலறினார் ’’கடவுளே, கடவுளே இந்த மனிதன் ஆதாரத்தை தேடுகிறான். ஆம் கிடைத்திருப்பது ஆதாரமாக இருப்பதற்கான சாத்தியம்,  20ல் ஒன்றுதான். ஆனால்  நம்மால் வேறென்ன செய்ய முடியும்? இப்போது நம் முன்னே இருப்பது கிடைத்திருக்கும் இந்த  யூகத்தைதொடர்ந்து செல்வது அல்லது வீட்டுக்கு திரும்பி சென்று படுக்கையில் உறங்குவது என்னும் இரண்டே சாத்தியங்கள் தானே?  என்று சொல்லிக்கொண்டே வேலண்டீன் அதிரடியாக அந்த உணவகத்துக்குள் உதவியாளர்கள் தொடர நுழைந்தார்

உணவு மேசைகளில், சென்று அவர்கள் விரைவாக அமர்ந்து ஜன்னல் கண்ணாடி உடைந்து நட்சத்திரம் போல் விரிசலிட்டிருப்பதை உள்ளிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போதும் அந்த கண்ணாடியின் உடைசலிலிருந்து இவர்களுக்கு புதிதாக எதும் கிடைப்பதுபோல் தெரியவில்லை

’’உங்களது ஜன்னலொன்று உடைந்திருக்கிறதே!’’  என்றார் வேலண்டீன் உணவக சிப்பந்தியிடம் பில் தொகையை கொடுத்தவாறே.

தொகையை குனிந்து எண்ணிக்கொண்டிருந்த சிப்பந்தி, வேலண்டீன் கொடுத்த  தாராளமான சன்மானத்தின் பொருட்டு மெல்ல முதுகை நிமிர்த்தி  ’’ ஆமாம், மிக விசித்திரம் தான் சார்’’ என்றான்.

’’அப்படியா? அதுகுறித்து சொல்லுங்களேன்’’ என்று அதை கேட்பதில் பெரிதாக ஆர்வமில்லாதது போல கேட்டார்  வேலண்டீன்

’’மாநாட்டுக்காக ஊரெங்கும் வந்திருக்கும் கருப்பு உடை அணிந்திருக்கும் பாதிரிகளில்  இருவர் இங்கு   வந்திருந்தார்கள். இருவரும் எளிய உணவை  உண்டபின் ஒருவர் பில் தொகையை செலுத்திவிட்டு வெளியேறினார். மற்றொருவரும் சிறிது தாமதமாக வெளியேறும் முன்புதான் எனக்கு அவர்கள் கொடுக்க வேண்டிய தொகையை  காட்டிலும் மூன்று மடங்கு கொடுத்திருப்பதை பார்த்தேன்’’

’’இதோ பாருங்கள்! எனக்கு மூன்று மடங்கு அதிகமாக கொடுத்துவிட்டீர்கள்! ,என்று நான் உரக்க சொன்னதும்,  திரும்பி ’’அப்படியா? என்ற அவரிடம் நான் பில்  தொகையை காண்பிக்க முயன்றபோதுதான் குழப்பம் துவங்கியது’’ என்றான்

’’என்ன சொல்கிறீர்கள்?’’ என்றார்  வேலண்டீன்.

’’ஏழு பைபிள்களில் வேண்டுமானலும் நான் சத்தியம் செய்து சொல்வேன். நான் பில்லில் எழுதியது 4 ஸ்டெர்லிங்தான் ஆனால் அப்போது பில்லில் அச்சடித்தது போல 14 ஸ்டெர்லிங்குகள் என்று இருந்தது’’ என்றான் அவன்..

’’அப்படியா!’’ என்று கூவிய வேலண்டீன் ’’பிறகு’’ என்றார் ஆவலுடன்.’’கதவருகில் நின்ற அந்த பாதிரி என்னிடம் ’’ பில் தொகையில் குழப்பமேற்படுத்தியதற்கு மன்னித்துக்கொள்ளுங்கள்,, அந்த கூடுதல் தொகையை, இந்த ஜன்னலுக்காக எடுத்துக் கொள்ளுங்கள் ‘’ என்றான்

’’எந்த ஜன்னல்?’’ என்று நான் கேட்டபோது  ’’இதோ நான் இப்போது  உடைக்க போவது தான்’’ என்று சொல்லியபடியே கையிலிருந்த குடையால் ஜன்னலை ஓங்கி அடித்து கண்ணாடியை  உடைத்துவிட்டான்’’ என்றான்

கேட்டுக்கொண்டிருந்த மூவரும் வியப்பொலி எழுப்பினார்கள். அந்த காவலர் மூச்சொலியில் ’’நாம் பைத்தியக்காரர்களையா தேடி சென்று கொண்டிருக்கிறோம் ‘’ என்றார்.

உணர்வு மேலிட்டு அந்த சிப்பந்தி தொடர்ந்து சொல்லிக் கொண்டே போனான்.’’ஒரு நொடி எனக்கு எதுவும் புரியவில்லை, என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் வெளியேறி அந்த மூலையில் காத்திருந்த தன் நண்பனுடன்  சேர்ந்துகொண்டான்., நான் கம்பிகளை தாண்டி ஓடியும் அவர்களை  பிடிக்க முடியவில்லை.  இருவரும்  புல்லக் தெருவுக்குள் சென்றனர்’’ என்றான்

’’புல்லக் தெரு’’ என்று சொன்ன வேலண்டீன்,  பாதிரிகள் சென்ற அதே வேகத்தில் அந்த தெருவுக்கு சென்றார். கைக்கு கிடைத்தவற்றையெல்லாம் கொண்டு கட்டப்பட்டிருந்த நடைபாதைகளிலும், சுட்ட செங்கற்களாலான  குகைப்பாதைகளிலும்,  ஒரு சில விளக்குகளே இருந்த, ஜன்னல்களற்ற இருட்டு சாலைகளிலும் அவர்கள் பயணித்தார்கள்.

இருட்டிக்கொண்டே வந்ததால் லண்டனின் காவலர்களாகிய அவர்களுக்கே சென்று கொண்டிருக்கும் திசை சரியாக புலப்படவில்லை. அந்த இன்ஸ்பெக்டருக்கு  அந்த பாதை ஹேம்ப்ஸ்டட் ஹீத்தின் ஏதோ ஒரு இடத்தில் முடியும் என்று மட்டும் தெரிந்தது

ஒரு  பிரகாசமான சிறிய  மிட்டாய்க்கடையின் விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்த ஜன்னலொன்று சாலையின் இருட்டை துண்டித்தது வேலண்டீன் அந்த கடை முன்னால் நின்றார்

ஒரு கண தயக்கத்துக்கு பிறகு கடைக்குள் நுழைந்த வேலண்டீன் அங்கிருந்த வண்ணமயமான மிட்டாய்களுக்கு மத்தியில் நின்றுகொண்டு பதிமூன்று சாக்லேட் சுருட்டுக்களை வாங்கிக்கொண்டு, விசாரணையை எப்படி தொடங்குவது என்று யோசித்துக் கொண்டிருந்தார்

ஆனால் அதற்கு அவசியமேற்படவில்லை..

எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும் முகத்துடன் இருந்த அந்த கடைக்காரப் பெண், அதிகார தோற்றத்தில் இருக்கும் இவர் ஏன் இங்கு வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருக்கையிலேயே  கதவுக்கு பின்னால் சீருடையில் இருந்த  காவலரை பார்த்துவிட்டால். சுதாரித்துக் கொண்டு அவளாகவே ’’ஓ! அந்த பெட்டகத்துக்காக  வந்திருக்கிறீர்களா?’’ நான் அதை முன்பே அனுப்பிவிட்டேனே’’ என்றாள்

’’பெட்டகமா?’’ என்றார் வேலெண்டீன். இப்போது வியப்படைவது அவர் முறையாகிவிட்டது

’’அதுதான் அந்த பாதிரிகள் விட்டு சென்ற பெட்டகம்’’ என்றாள் அவள்

’கடவுளே ’தயவு செய்து என்ன நடந்ததென சொல்லுங்கள்’’ என்றார் வேலண்டீன் முதன் முறையாக  ஆவலை வெளிக்காட்டும் குரலில்

’’இரு பாதிரிகள் கடைக்கு  அரைமணி நேரத்துக்கு முன்பு வந்து பெப்பர்மிண்டுகள் வாங்கிவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்..  பிறகு ஹீத்தைநோக்கி அவர்கள் போன சில நொடிகளில் அவர்களில் ஒருவர் மட்டும் கடைக்கு வேகமாக திரும்பி வந்து ’’எதாவது பெட்டகத்தை நான் கடையில் விட்டுவிட்டு சென்றேனா?’’ என்று கேட்டார்

நான் எல்லா பக்கமும் பார்த்தபின்பு ’’அப்படி எதுவும் இல்லை’’யென சொன்னேன். ’’பரவாயில்லை, ஒருவேளை பெட்டகமேதும் உங்கள் கண்ணில் பட்டால், அதை இந்த முகவரிக்கு அனுப்பி விடுங்கள்’’ என்று சொல்லி முகவரியையும், அந்த  சிரமத்திற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு அவர் போய்விட்டார்’’.

’’நன்றாக பார்த்து விட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன், ஆனால் அவர் ஒரு பழுப்பு காகித பெட்டகமொன்றை விட்டுச்சென்றிருந்ததை பிறகுதான் பார்த்தேன் அதை அவர் கொடுத்திருந்த முகவரிக்கு அனுப்பி விட்டேன்.’’

’’அந்த விலாசம் எனக்கு இப்போது சரியாக நினைவிலில்லை ஆனால்  அது எங்கோ வெஸ்ட்மிஸ்டரில் இருக்கும் இடம்.  ஒருவேளை அது  முக்கியமான பொருளாக இருந்து அதன்பொருட்டுதான் காவலர்களாகிய நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் என்று நினைத்தேன்’’ என்றாள்

’’ ஆம், அதன்பொருட்டு தான்’’ என்ற வேலண்டீன் ’’இங்கிருந்து ஹேம்ப் ஸ்டட் ஹீத் எத்தனை தொலைவு?’’ என்று கேட்டார். ’’நேராக சென்றால் பதினைந்து நிமிடங்களில் போய் விடலாம்’’ என்றாள்.. கடையிலிருந்து பாய்ந்து வெளியே ஓடிய அவரை விருப்பமின்றி பெருநடையில் தொடர்ந்தார்கள் உதவியாளர்களும்

இருண்டிருந்த அந்த குறுகிய சாலையிருந்து வெளியே வந்து  பரந்த வானின் கீழ் நிற்கையில்தான் இன்னும் அத்தனை பொழுதாகிவிடவில்லை நல்ல வெளிச்சம் இன்னும் இருக்கிறதென்பது தெரிந்தது

தொலைவில் அடர்ந்திருந்த மரக்கூட்டங்களின் இருட்டில் மயில்பச்சைநிற வானத்தை அந்திச்சூரியன் சிவப்பக்கிக்கொண்டிருந்தது. ஒளிர்ந்த அந்திவானத்தில் ஒன்றிரண்டு நட்சத்திர பொட்டுக்களும் தென்பட்டன. பகற்பொழுதின் .சந்தடிகள் மெல்ல அடங்கி  அன்றைய தினத்தின் மிச்சம் ஹேம்ஸ்டெனின் பிரபல   வேல் ஆஃப் ஹெல்த் பூங்காவில்  அந்தியின் பொன்னிற ஒளியில் குளித்துக் கொண்டு  இருந்தது.  .

விடுமுறைக்காக அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் இன்னும் அங்கும் இங்குமாக பூங்காவில் இருந்தார்கள்.. சில ஜோடிகள் அங்கிருந்த பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். தொலைவில் ஒரு சிறுமி ஊஞ்சலில் உற்சாக கூச்சலுடன் விளையாடிக்கொண்டிருந்தாள்.

ஒரு சரிவில் நின்று கொண்டு பள்ளத்தாக்கின் குறுக்கே பார்த்துக்கொண்டிருந்த வேலண்டின் தான் தேடிக்கொண்டிருந்ததை கண்டார். தொலைவில்   கருப்பு உடைகளில் கலைந்து சென்று கொண்டிருந்தவர்களில்  அந்த இருட்டிலும் மிகத்தனித்து நெட்டையும் குட்டையுமாக இருந்த இரு கருப்பு உருவங்கள்  அவர் கண்களுக்கு தென்பட்டன.

அங்கிருந்து பார்க்கையில் அவர்கள் சிறு பூச்சிகளை போலத்தான் தெரிந்தார்கள் எனினும் வேலண்டீனுக்கு அதில் ஒருவன் மற்றவனை விட மிக சிறிதாக இருப்பது தெளிவாக தெரிந்தது

மற்றொருவன் அடையாளம் தெரியாமலிருக்கும் பொருட்டு  லேசாக குனிந்து கொண்டிருந்தாலும்  வேலண்டீனுக்கு அவன்  ஆறடிக்கு மேலும் உயரமாயிருந்ததை  பார்க்க முடிந்தது.

பொறுமையிழந்து கைத்தடியை சுழற்றியபடியே பல்லைக்கடித்தபடி அவர் முன்னோக்கி சென்றார். அவர்களுக்கிடையிலிருந்த தொலைவு குறைந்து அவ்விருவரின் உருவங்களும் உருப்பெருக்கியில் தெரிவதுபோல கொஞ்சம் கொஞ்சமாக துலங்கி தெரிய ஆரம்பித்த போது அவருக்கு மற்றுமொரு புதிய விஷயமும் தெரியவந்தது. திடுக்கிட செய்த அந்த உண்மையை  எப்படியோ அவர் எதிர்பார்த்துமிருந்தார்.

அந்த உயரமான பாதிரி யாரென்று தெரியாவிட்டாலும்,  சந்தேகமில்லாமல் அந்த குள்ளமானவரை அடையாளம் தெரிந்தது. அவன் அன்று  அவருடன் ஹார்விச் ரயில் பயணத்தில் அவருடன் பயணித்த, அவரால் பழுப்பு நிற காகித பெட்டகங்கள் குறிதது எச்சரிககபட்ட அதே எஸ்ஸெக்ஸ்  குளளப்பாதிரிதான்

இவ்வளவு தூரத்திற்கு வந்த பின்னால் எல்லாமே எல்லாவற்றுடனும் பொருந்தி சரியாக வந்தது

இன்று காலையில்  பாதிரியார் பிரெளன் எஸ்ஸெக்ஸிலிருந்து விலைமதிப்பற்ற   நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் ஒரு வெள்ளிச்சிலுவையை மாநாட்டிற்கு வந்திருக்கும் வெளிநாட்டு இறைப் பணியாளர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு கொண்டு வந்திருப்பதை அவர் தனது விசாரணையில் அறிந்திருந்தார்.

சந்தேகமில்லாமல் அது வெள்ளியில் நீலக்கற்கள் பதித்திருக்கும் சிலுவைதான். பாதிரியார் பிரெளனும் சந்தேகமில்லாமல்  ரயிலில் உடன்பயணித்த குள்ளமானவரேதான்

வேலண்டீன் கண்டுபிடித்ததை ஃப்ளேம்போவும் கண்டுபிடித்திருப்பதில் எந்தஆச்சரயமும் இல்லை. இப்போது ஃப்ளேம்போ எல்லாவற்றையும் அறிந்துவிட்டான். நீலச்சிலுவையை குறித்து  அறிந்துகொண்ட ஃப்ளேம்போ அதை திருடிச்செல்ல முயற்சித்ததிலும் ஏதும் ஆச்சரயமில்லை. வரலாற்றில் இயற்கையாக  இதுவரை அப்படித்தான் நடந்திருக்கிறது

ஃப்ளேம்போ அந்த குடையையும் காகித பெட்டகங்களையும் கொண்டிருந்த அப்பாவி பாதிரியை அப்படி தனியே திருட்டுக்கான நோக்கத்துடன் அழைத்து சென்றிருப்பதிலும் ஏதும் ஆச்சர்யமில்லை தான். அந்த பாதிரியை அப்படி  யாரும் எங்கு வேண்டுமானாலும் அழைத்து செல்ல முடியும்தான்

ஃப்ளேம்போவை போல தேர்ந்த நடிகனொருவன் பாதிரியின் வேஷத்தில் பாதிரியார் பிரெளனை ஹேம்ஸ்டெட் ஹீத் வரையிலும் அழைத்து வந்திருப்பதிலும் எந்த ஆச்சர்யமுமில்லை.. இதுவரையிலும் குற்றம் தெளிவாகவே தெரிந்தது.

அந்த  அப்பாவி  பாதிரி பிரெளனின் மீது அவருக்கு கனிவு உண்டானாலும் அப்படியான எளிய ஒருவனை ஏமாற்ற துணிந்த ஃப்ளேம்போவின் நாயகத்தன்மை  மீது அவருக்கிருந்த அபிப்பிராயம்   வெகுவாக குறைந்து விட்டிருந்தது.

எனினும் ஏறக்குறைய வெற்றிக்கனியை பறிக்கவிருந்த இந்த சமயத்தில் வேலண்டீனுக்கு  சமீபத்தில் நடந்த சில விஷயங்களை கிடைத்தவற்றுடன் பொருத்திப் பார்க்க முடியாமல் இருந்தது

எஸ்ஸெக்ஸ் பாதிரியிடமிருந்து நீலச்சிலுவையை திருடுவதற்கும், சூப்பை சுவற்றில் வீசி எறிவதற்கும்  என்ன  தொடர்பு? எதன் பொருட்டு ஆரஞ்சுகள் முந்திரிகளென மாற்றி அழைக்கப்பட வேண்டும்? ஏன் முன்கூட்டியே பணம் கொடுத்துவிட்டு  ஜன்னல் கண்ணாடியை உடைக்க வேண்டும்

அவுர் தேடலின் முடிவுக்கு வந்துவிட்டார் ஆனால் அவரின் தேடல் கதையின் நடுவில் சில பக்கங்கள்தான்  காணாமல் போயிருந்தன.அரிதாக அவர் தோற்றிருந்த நேரங்களிலும் குற்றவாளியை தப்ப விட்டிருந்தாலும்  தடயங்களை  கண்டுபிடித்து இருப்பார். ஆனால் இந்த முறை            அவர் குற்றவாளியை நெருங்கியும் தடயங்களை  கண்டுபிடிக்க முடியவில்லை

அங்கிருந்த குன்றின் பசும் மடிப்புக்களின் குறுக்காக தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அவ்விருவரும் கருப்பு பூச்சிகளைப் போல மெல்ல நகர்ந்து கொண்டிருந்தார்கள்

உரையாடலில் மூழ்கியிருந்த அவர்களிருவரும் சென்று கொண்டிருக்கும் திசையைகூட கவனிக்கவில்லை. ஆனால் உறுதியாக அவர்கள் ஹீத்தின் அடர்ந்த  அமைதியான இடங்களை  நோக்கித்தான் சென்று கொண்டிருந்தார்கள்.

அவர்களை நெருங்க,  மான் வேட்டையாடுபவர்களைப்போல புல்தரையில் தவழ்வதும்,  மரக்கூட்டங்களுக்கிடையில் ஒளிந்து கொள்வது போன்ற கண்ணியக்குறைவான செயல்களிலும் இவரகள் ஈடுபட வேண்டி இருந்தது.

இத்தனை ரகசிய நடவடிக்கைகளுடன் மெதுவாக அவர்களை நெருங்கிய போது அவர்களின் உரையாடல் கூட லேசாக கெட்டது. முழுக்க  தெளிவாக இல்லையென்றாலும் தர்க்கம் எனும் சொல் அடிக்கடி  கீச்சுக் குரலில் உச்சரிக்கப்பட்டது   கேட்டது

அடர்ந்த மரக் கூட்டங்கள்  இடைப்பட்ட ஒரு பகுதியில் அவர்களை காவலர்கள் பார்வையிலிருந்து தவற விட்டனர்.பதட்டமான பத்து நிமிடங்களுக்கு அவர்கள் இருக்கும் சுவடே தெரியவில்லை பின்னர் அந்த அடர்ந்த பகுதியை தாண்டியதும்   கதிரணைந்து கொண்டிருந்த  சரிவில்  ஒரு அழகிய தனிமையான இடத்தில்   ஒரு மரத்தடியிலிருந்த   சேதமான பெஞ்சில் அவர்களிருவரும் அமர்ந்திருந்தது தெரிந்தது. இன்னும் தீவிரமான உரையாடலில் தான் அவர்களிருவரும்  இருந்தார்கள்.

இருட்டிக்கொண்டிருந்த தொடுவானில் பசுமஞ்சள் நிறம் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது ஆனால் தலைக்கு மேலிருந்த  மயில்பச்சை கார்நீலமாகி விட்டிருந்தது. தனித்து துலங்கிய நட்சத்திரங்கள் ஆபரணங்களை போல் பிரகாசித்தன.

உதவியாளர்களுக்கு சைகை காண்பித்துவிட்டு ஓசையற்று அந்த  பெருங்கிளைகள் கொண்ட மரத்தின் பின்னால் மறைந்து நின்றிருந்த வேலண்டீனுக்கு அந்த இரு புதிரான பாதிரிகளும் பேசிக்கொண்டிருந்தது முதல் முறையாக துல்லியமாக கேட்டது

ஒன்றரை நிமிடங்களுக்கு அவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டவருக்கு தான் ஹீத்தின் இருளுக்குள்  இரு காவலர்களை கூட்டிக்கொண்டு இவ்வளவு தூரம்  வந்த சிரமம் எல்லாம்  விழலுக்கு நீர் இறைத்தது போல வீணான வேலையோ என்று  பயங்கரமான   சந்தேகமே வந்துவிட்டது

ஏனெனில் அந்த ஒரு பாதிரிகளும் அசல் பாதிரிகளை போலவே பொறுமையாக இறையியலின்  நுண்மையான சாராம்சத்தை குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்

பாதிரி பிரெளன் தனது வட்ட முகத்தை, துலங்கிக்கொண்டிருந்த நட்சத்திரங்களை  நோக்கி வைத்துக்கொண்டு  பேசிக்கொண்டிருந்தான். மற்றவனோ தான் நட்சத்திரங்களை  பார்க்கவும் தகுதியற்றவன் என்பது போல  தலையை குனிந்தவாறு அமர்ந்திருந்தான்

கருப்பினத்தவர்களுக்கான ஸ்பானிய தேவாலயங்களிலோ அல்லது வெள்ளையர்களுக்கான இத்தாலியின் தேவாலயங்களிலோ கூட அத்தனை இறைமை ததும்பும் உரையை கேட்க முடியாது

முதலில் அவர் கேட்டது ’’இதுதான் மாசுபடுத்த முடியாத  சொர்க்கமென்று   இடைக்காலத்தில் அவர்கள்  சொன்னதெல்லாம்’’ என்று எஸ்ஸெக்ஸின்பாதிரி  பேசி முடித்த  வாக்கியத்தின் கடைசி பகுதியைத்தான். பின்னர் அவர்களின் உரையாடல்  தொடர்ந்தது

உயரமான பாதிரி தலையை ஆமோதிப்பது போல் அசைத்து ’’ஆம்  நவீன காப்பிரிகள் தர்க்க பூர்வமாக அனைத்தையும் அணுகுகிறார்கள்.எனினும் இத்தனை கோடி நட்சத்திரங்களையும் கோடானு கோடி உலகங்களையும் கொண்டிருக்கும் இந்த அற்புதமான பிரபஞ்சத்தில் எங்கேனும் எல்லா தர்க்கங்களும் பொருளற்றும் போகுமல்லவா’’ என்றான்

’’இல்லை ’’என்றார் பாதிரி பிரெளன்  ’’தர்க்கம் என்றைக்குமே, ,கடைசி தீர்ப்பு நாளன்று கூட  பொருளற்று போகாது’’ ’’எனக்கும் தெரியும் தேவாலயங்கள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவைகள் என மக்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது. ஆனால் இப்பூமியில் தேவாலயங்கள் மட்டும்தான் தர்க்கங்களை அவற்றிற்கு உரிய உயரிய இடத்தில் வைத்திருக்கின்றன. இதே தேவாலயங்கள் தான் இறைவனும் தர்க்கங்களால் கட்டுண்டவர் என்பதை உறுதிபட கூறுகின்றன’’என்றார்.

மற்றவன் நிமிர்ந்து  நட்சத்திரங்கள் தூவப்பட்டிருந்த வானை நோக்கி ’’யாரால் இவற்றையெல்லாம் அறிந்துகொள்ள முடியும் இந்த முடிவற்ற பிரபஞ்சத்தில்’’ என்றான்

’’பருவடிவில்  எல்லையற்றது தான் எனினும் சத்திய விதிகளில் இருந்து தப்பிக்கும் அளவுக்கு எல்லையற்றதல்ல  இப்பிரபஞ்சம்’’ என்றார் பிரெளன்.

மரத்துக்கு பின்னிருந்து தன் விரல் நகங்களை வேலண்டீன் கடித்து துப்பிக்கொண்டிருதார். மிகப் பிரமாதமான யூகத்தின் பேரில் தான் அழைத்து வந்த இரு காவல் உதவியாளர்களும் இந்த பாதிரிகள் நிதானமாக விரிவாக  விவாதித்துக்கொண்டிருக்கும் மெய்யியல் ரகசியங்களை கேட்டு, தன்னை ஏளனம் செய்யப்போவதை மனக்கண்களால் அவரால் காணவே  முடிந்தது.

பொறுமையிழந்து இவற்றை சிந்தித்து கொண்டிருந்ததில் உயரமானவன் சொன்ன அதே அளவுக்கான   விரிவான பதிலை கேட்க தவறிவிட்டிருந்த வேலண்டீன் இப்போது மீண்டும் பாதிரி பிரௌன் பேசுவதை கேட்டார்.

’’தர்க்கமும் நீதியும் எப்போதும் மிக மிக தொலைவிலும் தனிமையிலும் இருக்கும் நட்சத்திரங்களைக்கூட அணுகி விடுகின்றன. அந்த நட்சத்திரங்களை பாருங்கள் அவை ஒற்றை வைரங்களாகவும், நீலமணிகளாகவும் தெரியவில்லையா?’’

’’உதாரணமாக  தாவரவியல் அல்லது புவியியலை கூட கற்பனை செய்து கொள்ளலாம். பெரும் காடொன்றின் மரங்களின் பசும் இலைகளனைத்தும் மரகதங்களென்று எண்ணலாம்.. இந்த நிலவை கூட  நீலநிலவென்று எண்ணிப்பாருங்கள், ஒரு மாபெரும் நீலக்கல். இது போன்ற எந்த கற்பனாவாத மாற்றங்களாக இருப்பினும் அந்தந்த இடங்களுக்கான தர்க்கமும் நியாமமும் மாறா உண்மையென அங்கேயிருக்கும்.’’.

’’முத்து முகடுகள் கொண்ட அமுதக் கற்களினாலான  சமவெளியில்  கூட  திருடாதீர்கள் என்ற எச்சரிக்கைப் பலகை வைக்கப்பட்டிருக்கும்’’.

இவற்றை கேட்டுக்கொண்டிருந்த வேலண்டீன், தன் வாழ்வின் ஆகப்பெரிய தவறை நினைத்து வருந்தியபடி மெல்ல தான் மறைந்திருக்கும்  இடத்திலிருந்து அகன்று செல்ல முடிவெடுத்தார் .ஆனால் உயரமானவனின்  திடீர் அமைதியால்  அதைச் செய்யாமல் அவன் பேசும் வரை அங்கேயே காத்திருந்தார்

ஒருவழியாக அவன் பேசினான் தலை குனிந்தபடி கைகளை முழங்கால்களில் வைத்துக்கொண்டு ’’ஆனால் நான்  இன்னும் நம்புகிறேன். பிற உலகங்கள் நம் தக்ர்க நியாயங்களுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம். பரமண்டலத்தின் மர்மங்களை,நம்மால் புரிந்து கொள்ள முடியாது  வணங்க மட்டுமே முடியும்’’ என்றவன்., தலையை குனிந்தவாறே தனது நடவடிக்கைகளில் எந்த மாற்றமும் இன்றி ’’உன்னிடம் இருக்கும் நீலச்சிலுவையை என்னிடம் கொடுத்துவிடு. நாம் இங்கே  தன்னந்தனிமையில் இருக்கிறோம் நீ மறுத்தால் உன்னை துண்டு துண்டாக்கி விடுவேன்’’ என்றான்

குரலிலும் பாவனையிலும் எந்த மாற்றமுமின்றி சொல்லப்பட்டதால் அந்த  சொற்கள்  மிக பயங்கரமாக இருந்தன.

ஆனால் எந்த திகைப்பும் ஆச்சர்யமுமின்றி, அந்த சிலுவை பாதுகாப்பாளன் மெல்ல முகத்தை திருப்பினார்.  நட்சத்திரங்களை பார்த்துக்கொண்டிருந்த அந்த முகத்தில் இன்னும் கூட அதே முட்டாள்தனம் தான் நிறைந்திருந்தது

ஒருவேளை என்ன நடக்கிறது என அவருக்கு புரியவில்லையா அல்லது   என்ன நடக்கிறது என்று தெரிந்து  அச்சத்தினால் அப்படி அசையாமல் அமர்ந்திருக்கிறாரா?

’’ஆம்’’ என்றான் அந்த உயரமான பாதிரி அதே மெல்லிய குரலில், ’’ஆம் நான் தான் ஃப்ளேம்போ. கொடுக்கிறாயா அந்த நீலச்சிலுவையை என்னிடம்’’ என்றான்

’’இல்லை’’  என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னார் பாதிரி பிரெளன்

சட்டென்று தனது பாசாங்குகளை எல்லாம் தூக்கி எறிந்த  ஃப்ளேம்போ இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டு மெல்ல  சிரித்தான். ’’என்னது முடியாதா? என்னிடம் கொடுக்க மாட்டாயா அதை? இறுமாப்பு கொண்ட மதகுருவே, எளியவனே! ’’நீ ஏன் கொடுக்கமாட்டாய்  என்று நான் சொல்லட்டுமா?  அதைத்தான் நான் ஏற்கனவே என் சட்டை பாக்கெட்டில் வைத்திருக்கிறேனே’’ என்றான்

எஸ்ஸெக்ஸின்  பாதிரி அந்த இருளில்  பிரமித்தது போல் தெரிந்த முகத்துடன் ஆர்வமுடன்  கோழைத்தனமும் நாடகத்தனமுமான குரலில்  ’’என்னது உன்னிடம் இருக்கிறதா? உண்மையாகவா?’’ என்றார்

மகிழ்ச்சியில்  கூச்சலிட்ட ஃப்ளேம்போ  ’’ அடடா , நீ   நாடகத்தில் நடிக்கலாம். ’’ஆமாண்டா கூமுட்டை, நிச்சயமாக தான் சொல்கிறேன்  நான் உன்னிடமிருந்து நீல சிலுவையை எடுத்துக்கொண்டு போலி சிலுவை இருந்த பெட்டகத்தை மாற்றி வைத்து விட்டேன் நீ வைத்திருப்பது போலி, அசல் நீலச்சிலுவை என்னிடம் இருக்கிறது. அரதப்பழசான  திருட்டு வேலையடா இது’’ என்றான்

தலைமுடியை கைகளால் கோதிகொண்டே பாதிரியார் பிரெளன் புதிரான குரலில் ’’ஆம்  பழசுதான்,    நான் இதை முன்பே கேட்டிருக்கிறேன்’’ என்றார்.

திருட்டுவேலைகளில் பழம் தின்று கொட்டை போட்ட அனுபவசாலியான ஃப்ளேம்போ திடீர் ஆர்வத்துடன்  ஏறக்குறைய பாதிரியார் பிரெளன்   மீது சாய்ந்துகொண்டு ’’கேட்டிருக்கிறாயா?, எப்போது கேட்டாய்’’? என்றான்

’’அவன் பெயரை உன்னிடம் சொல்லமுடியாது. அவன்  என்னிடம் பாவமன்னிப்பு  கேட்க வந்தவன்.  இதே வித்தையை, காகித பழுப்பு பெட்டகங்களை இடம் மாற்றிவைக்கும் இதே வித்தையை செய்து 20 வருடங்கள் மிக செழிப்பாக வாழ்ந்தவன். உன் மீது சந்தேகம் வந்தவுடனேயே  அந்த பாவபப்ட்டவனைபோலவே நீயும்  செய்யப்போகிறாயே’’  என்றுதான்  நினைத்தேன்

’’என்னது என்னை சந்தேகித்தாயா?  என்றான் அந்த சட்ட விரோதி. ‘’ஹீத்தின் இந்த தனிமையான  இடத்திற்கு உன்னை அழைத்து வந்திருப்பதால் என்னை சந்தேகப் படும் அளவுக்கு அத்தனை கூர்மதி  கொண்டவனா நீ “

மறுத்து தலை ஆட்டியபடி ‘’ இல்லை இல்லை நாம் முதல்முதலாக பார்த்த போதே சந்தேகித்தேன்’’ ’’உன்னைப்போன்ற ஆட்கள்  கைகளில் மாட்டியிருக்கும் முட்கள் கொண்ட காப்பினால் வீங்கி இருக்கும் சட்டைக்கையே உங்களை காட்டிக்கொடுக்குமே’’ என்றார்

’’அடப்பாவிப்பயலே! உனக்கெப்படி முள்காப்பை பற்றியெல்லாம் தெரியும்’’? என்றான் ஃப்ளேம்போ

புருவத்தை உயர்த்தியபடி  ’’எல்லாம் சகவாச தோஷம்தான்’’ என்றார் பாதிரியார் பிரெளன் ’’ஹார்டில்பூலில் நான் உபகுருவாக பணிபுரிகையில் அங்கிருந்த மூன்று நபர்கள் இதுபோன்ற முள்காப்பை கைகளில் அணிந்திருந்தனர். எனவே உன்னை பார்த்ததுமே சந்தேகம் கொண்டு நீலச்சிலுவையின் பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டேன்’’

’’உன்னை கண்காணித்துக்கொண்டே இருந்தேன். நீ பெட்டகத்தை   மாற்றிய பின்னர்,  நீ பார்க்காத போது மீண்டும் அவற்றை இடம் மாற்றினேன் அசல் நீலச்சிலுவை இருக்கும் பெட்டகத்தை  அந்த மிட்டாய் கடையில் விட்டுவிட்டு வந்தேன்’’ என்றார்

’’என்னது விட்டுவிட்டு வந்தாயா’’? என்று அலறினான் ஃப்ளேம்போ. முதல்முறையாக அவன் குரலில் வெற்றியல்லாத ஒரு தொனி கலந்திருந்தது

அதே மாறுபடில்லாத குரலில் தொடர்ந்தார் பாதிரியார் பிரெளன்   ’’நான அந்த மிட்டாய்க்கடைக்கு முதலில் திரும்பசென்ற போது ஏதேனும்  பொட்டலமொன்றை  விட்டுவிட்டேனா?’’ என்று கேட்டு அப்படியேதும்  கிடைத்தால் அனுப்பிவைக்கும்படி ஒரு முகவரியை கொடுத்துவிட்டு வந்தேன். ஆனால் அப்போது அங்கு எதையும் விட்டுவிட்டு வரவில்லை என்று எனக்கு தெரியும்’’

’ மீண்டும்  அங்கு சென்று அசல் நீலச்சிலுவை இருந்த பெட்டகத்தை  அங்கே வைத்து விட்டு வந்தேன். அதன்பிறகு அவர்கள் என் பின்னால் தேடிக்கொண்டு வராமல் நான் கொடுத்திருந்த வெஸ்ட்மின்ஸ்டர் முகவரியில் இருக்கும் என் நண்பருக்கு அதை அனுப்புவார்கள்  என்று அறிந்திருந்தேன்.’’ என்றவர்

சற்றே சோகமாக ’’நான் இதையும் ஹார்டில் பூலின் திருடனிடமிருந்தே கற்றுக்கொண்டேன். அவன் ரயில்நிலையங்களில் திருடும் கைப்பைகளை இப்படித்தான் தபாலில் அனுப்புவான். இப்போது அவன் ஒரு மடாலயத்தில் இருக்கிறான்.  ஒரு பாதிரியாக  இருப்பதால் என்னிடம் இதுபோன்ற விஷயங்களை பாவ மன்னிப்பின் போது மக்கள் தெரியப்படுத்தி விடுகிறார்கள்’’   என்றார்

ஃப்ளேம்போ  சட்டைக்குள்ளிருந்து ஒரு பழுப்பு காகித பெட்டகத்தை  எடுத்து அதை அவசரமாக கிழித்தான். அதற்குள்ளே வெறும்  ஈயக்குச்சிகளே இருந்தன.

அவன் எழுந்துநின்று உரக்க கத்தினான். ’’நான் நம்பமாட்டேன் உன்னைப்போல ஒரு அடிமுட்டாள் இத்தனை சாமர்த்தியமாக இதைசெய்திருக்கவே முடியாது’’

’’அந்த நீலச்சிலுவையை  நீதான் வைத்திருக்கிறாய். ஒழுங்காக கொடுத்துவிடு, உன்னை என்னிடமிருந்து காப்பாற்ற இங்கு யாருமில்லை. நாமிருவரும் இங்கு தனியாக இருக்கிறோம். என்னால் உன்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியும்’’ என்றான்.

’’முடியாது’’   என்றார் பாதிரியார் பிரெளன்  எழுந்து நின்றபடி ’’ உன்னால் என்னிடமிருந்து அதை பலவந்தமாக எடுத்துக்கொள்ள முடியாது ஏனெனில் என்னிடம் அது இல்லை’’

இரண்டாவது ’’நாம் இங்கு தனியாகவும் இல்லை’’ என்றார்

அவரை  நோக்கி நகர எத்தனித்த ஃப்ளேம்போ இதைக்கேட்டதும் அப்படியே திகைத்து நின்று விட்டான்

’’மரங்களுக்கு பின்னால்’’ என்று சுட்டிக்காட்டிய அவர் சொன்னார் ’’அங்கே இரண்டு பலசாலிகளான  காவலர்களும், உலகின் மிகச்சிறந்த துப்பறிவாளர் ஒருவரும் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு எப்படி வந்தார்கள் என நீ கேட்கலாம், நான் தான் அவர்களை அழைத்து வந்தேன்  நான் எப்படி இதை செய்தேன் என  தெரிந்து கொள்ள  நீ விரும்பினால் அதை சொல்கிறேன். ஏனெனில் குற்றவாளிகளிடம் புழங்குகையில் இதுபோல பலவற்றை நாம் அறிந்துகொண்டிருக்க வேண்டும்’’

’’நீ ஒரு திருடன் தானா, என்று எனக்கு அத்தனை உறுதியாக தெரிந்திருக்கவில்லை.   ஒரு பாதிரியாகிய  என்னால் மற்றொரு பாதிரியை அப்படி திடீர் என்று குற்றம்சாட்டி விடமுடியாது. எனவே நீயாக உன்னை வெளிப்படுத்தும் தருணங்களை  உருவாக்கினேன்’’

’’பொதுவாக  உணவகங்களில் காப்பியில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு கலந்திருந்தால் அதை பெரிய பிரச்சனையாக்குவார்கள்,   ஆனால் அப்படி பிரச்சனை ஏதும் பண்ணாமல் அமைதியாக இருக்கவேண்டுமானால் அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கும். சர்க்கரையையும் உப்பையும்  நான்தான் மாற்றி வைத்தேன் ஆனால் நீ உப்பை சுவைத்த பின்னரும்  அமைதியாகவே இருந்தாய்’’

‘’பில் கட்டணம் அதிகமாக இருந்தால் யாராக இருந்தாலும் அதை ஆட்சேபிப்பார்கள். அப்படி ஆட்சேபிக்காமல் அந்த அதிக தொகையையும் ஒருவன் தருவானானால், அவன் தன்னை யாரும் கவனிக்க கூடாது என்று எண்ணுபவனாகத்தான் இருப்பான். உன்  பில் கட்டணத்தை  மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் படி  நான் தான் மாற்றினேன் அதையும் நீ  செலுத்தினாய்’’ .

அனைவருமே ஃப்ளேம்போ ஒரு புலியைப்போல தாவிக்குதித்து தப்பியோடி விடுவானென்றே எதிர்பார்த்தனர், ஆனால் அவன் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அப்படியே அமர்ந்திருந்தான். அவன் உண்மையில் இப்போது நடந்தவற்றை குறித்து அறிந்து கொள்ள பெரும் ஆர்வம் கொண்டிருந்தான்.

மீண்டும் தெளிவான குரலில் தொடர்ந்த பாதிரியார் பிரெளன்,  ’’சரி  தேடிக்கொண்டிருக்கும்  காவலர்களுக்கு  நீ எந்த தடயங்களையும் விட்டுவிட்டு வரவிடாவிட்டாலும் யாராவது ஒருவர் தடயங்களை உண்டாக்க வேண்டுமல்லவா? என்று கேட்டார்

நாமிருவரும்  சென்ற எல்லா இடங்களிலும், நாம் அங்கிருந்து சென்ற பின்னர் முழு நாளும் நம்மை பற்றியே அவர்கள் பேச வேண்டும் என்பது போல எதோ ஒரு காரியத்தை செய்துவிட்டு வந்தேன். ஆனால் அவை எல்லாம் பெரிய குற்றங்களொன்றுமில்லை,  ஒரு சுவற்றை பாழ்படுத்தினேன், ஆப்பிள்களை கொட்டினேன்,   ஜன்னல் கண்ணாடியை உடைத்தேன் ஆனால் நீலச்சிலுவயை காப்பாற்றிவிட்டேன் ஏனெனில் சிலுவை எப்போதும்  காப்பாற்றபப்டும்.

’’இப்போது நீலச்சிலுவை வெஸ்ட்மின்ஸ்டரில் பாதுகாப்பாக இருக்கும். நல்லவேளை,  நீ .கழுதை விசிலை உபயோகித்து  என்னை தடுத்துவிடுவாயோ என்று  கூட நான் நினைத்தேன்’’

’’எதைக் கொண்டு?’’ என்றான் ஃப்ளேம்போ

முகத்தை சுருக்கியபடி ’’நல்லவேளையாக நீ அவற்றை கேள்விப்பட்டிருக்க வில்லை’’ என்ற  பாதிரியார் பிரெளன்   அது ஒரு மோசமான விஷயம்  நீ அந்த விசிலடிப்பவனை காட்டிலும்  நல்லவன் என்று நான் அறிவேன்’’ என்றார்

’’ஒருவேளை உனக்கு அது தெரிந்திருந்தால்,  நான்  புள்ளி வித்தை வழிமுறையை உபயோகித்துக் கூட உன்னை பிடித்திருக்க  முடியாது ஏனெனில் .என் கால்களில் அத்தனை வலுவில்லை’’

’’புள்ளி வித்தை வழிமுறையா? எதைப்பற்றி சொல்லிகொண்டிருக்கிறீர்கள்?’’ என்றான் மற்றவன்

’’அட! புள்ளி வித்தை வழிமுறையாவது உனக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்’’  என்று ஆச்சரியப்பட்ட பாதிரியார் பிரெளன் .  நீ இன்னும் அத்தனை மோசமாக ஆகியிருக்கவில்லை போலிருக்கிறது என்றார்.

’’நீ எப்படி இந்த மோசமான வழிமுறைகளையெல்லாம் அறிந்து கொண்டாய்?’’  என்று கூச்சலிட்டான் ஃப்ளேம்போ

அவரது வட்டமான எளிய முகத்தில்  புன்னகையில் சாயல்  வந்து போனது ’’ஒரு எளிய பாதிரியாக  இருந்து தான் இவற்றை கற்றுக்கொணடிருந்திருப்பேனாக இருக்கும். ஆனால் உனக்கு தெரியவில்லையா? அன்றாடம்  மனிதர்களின்  பாவங்களை  கேட்பதை தவிர வேறேதும் செய்யாமல் இருப்பவனுக்கு மனிதர்களின் தீமையை குறித்து அனைத்தும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று?’’

’’மேலும் எனது இறைப்பணியின் மற்றொரு அனுபவத்தினாலும் நான் உன்னை சந்தேகித்தேன்’’

’’ அது என்னது ? ‘’ என்றான் அந்த திருடன் அதிர்ந்துபோய்

புன்னகையுடன் ’’நீ தர்க்கத்தை  சாடினாய், அது  முறையான இறையியலல்ல!’’ என்றார் பாதிரியார் பிரெளன்

பாதிரின் பிரெளன் தனது உடைமைகளை எடுக்க திரும்புகையில் மரங்களின் இருட்டிலிருந்து மூன்று காவலர்களும் வெளியே வந்தார்கள். நல்ல கலைஞனும் விளையாட்டு வீரனுமான ஃப்ளேம்போ இரண்டெட்டு பின் வைத்து தலை குனிந்து வேலண்டீனுக்கு  வணக்கம்  தெரிவித்தான்

துல்லியமான குரலில்.   ’’என்னை வணங்காதே,  நண்பா!’’  நாமிருவரும் நமது ஆசானாகிய இவரை வணங்குவோம்’’ என்ற வேலண்டின் பாதிரியார் பிரெளனை கைகாட்டினார்

இருவரும் தங்களது தொப்பிகளை கழற்றி கையில் வைத்துக் கொண்டு குனிந்து வணக்கம் சொல்லியபோது பாதிரியார் பிரெளன்  தனது குடையை  தேடிக்கொண்டிருந்தார்.

***

குறிப்பு :-

நீலச்சிலுவை லண்டனை சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தின் ஆங்கில எழுத்தாளர். இலக்கிய விமர்சகர், சிந்தனையாளர், நாடகாசிரியர் , பேச்சாளர், இதழியலாளர், மற்றும் இறையியலாளரான கில்பர்ட் கெய்த் செஸ்டர்டன் (Gilbert Keith Chesterton- May 29, 1874 – June 14, 1936) எழுதிய சிறுகதைகளில் ஒன்று. இது செப்டம்பர் 1910’ல் “The Storyteller”. என்ற இதழில் வெளியானது

 இந்த சிறு கதையில்தான் அவரது நெருங்கிய நண்பரான ஒரு பாதிரியின் சாயலில், துப்பறியும் பாதிரியாரான பிரெளன் என்னும் ஒரு கற்பனை கதாபாத்திரத்தை முதன் முதலில் உருவாக்கி இருந்தார்.. இக்கதைக்கு கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து இதே துப்பறியும் பாதிரியார் இடம்பெறும்  மேலும் பன்னிரண்டு கதைகளின் முதல் தொகுப்பான  ’’தி இன்னோசன்ஸ் ஆஃப் ஃபாதர் பிரவுன்” 1911’ல் வெளியிடப்பட்டது இந்த பாதிரியார் பாத்திரம் தொலைக்காட்சி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் இடம்பெறும் அளவுக்கு பிரபலமானது

இவர் துப்பறியும் கதைகளை மட்டுமல்லாது குற்றப்புலனாய்வை அடிப்படையாக கொண்ட கதைகளை எப்படி எழுதுவது என்று பல கட்டுரைகளும்  எழுதியிருக்கிறார்.

அவரின் செயலாளராக இருந்த எழுத்தாளரும் பாடலாசிரியருமான  ஃப்ரான்சிஸ்  ஆலிஸையே அவர் மணந்து கொண்டார். பிரான்ஸிசின் ’’பெத்லஹேம் இன்னும் எத்தனை தொலைவு’’ என்னும்  கவிதை மிக புகழ்பெற்றது

 செஸ்டர்டன் நல்ல கம்பீரமான ஆகிருதி கொண்டவர். 6 அடிக்கு மேல் உயரமும் நல்ல பருமனும், அதற்கேற்ற உடல் எடையும் கொண்டவர்.  உன்னத ஆடைகளின் பிரியரும் கூட.  எப்போதும் பெரிய தொப்பி அணிந்து,  வாயில் புகையும் சுருட்டுடன் காணப்படுவார்

 இவர் 80 நூல்கள் 2000 கவிதைகள் 200 சிறுகதைகள், 4000 கட்டுரைகள் மற்றும் ஏராளமான நாடகங்களை எழுதியிருக்கிறார். 1932 ல் இருந்து தனது இறுதிக்காலம் வரையிலும் சுமார் 40 பிரபல உரைகளை  BBC வானொலிக்கு அளித்திருந்தார்.

. இறை நம்பிக்கை இல்லாத குடும்பத்தை சேர்ந்த இவர் தனது 48 ஆவது வயதில் கத்தோலிக்க மதத்தை தழுவினார்.   ’’கத்தோலிக்க தேவாலாயங்களும்  மத மாற்றமும்’’ என்னும் இவரது நூல் மிக பிரபலமானது.

பிரெளன் பாதிரியின் புத்திகூர்மையை வாசகர்கள் மெச்சவேண்டும் என்ற கூடுதல் கவனத்தில், கதை சொல்லலில் சில நுண்மையான விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க மறந்துவிட்டார்,  பல அவிழ்க்கப்படாத முடிச்சுகளையும், நிரப்பபடாத இடைவெளிகளையும் கொண்டிருக்கிறது என்னும் விமர்சனமும் நீலச்சிலுவையின் மீது உண்டு.

தமிழில் :- லோகமாதேவி

இகபானா -மலர்வழி

This contains an image of: nordiclotus_20140908e

 உலகின் அனைத்து கலாச்சாரங்களிலும் மலர்களின், மலர் வடிவங்களின் தாக்கம் இருக்கிறது. பண்டைய எகிப்திய ரோமானிய மற்றும் கிரேக்க  நாகரிகங்கள் அனைத்திலுமே  மலர்கள் அலங்காரத்திற்காகவும், வழிபாட்டிலும், தனிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களுக்காகவும், பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகளிலும் பயன்படுத்தப்பட்டன.  

உலகெங்கிலும் இன்று மத எல்லைகளை கடந்த மலர்களின் பயன்பாடு இருக்கிறது. தெய்வங்களின் மலர் இருக்கைகள், கோவில்களின் கல்தூண்களின்  மலர்ச்செதுக்குகள், தென்னிந்திய கோலங்களின் மலர் வடிவங்கள், மலர்க்களங்கள்,  குகை ஓவியங்களின் மலர் வடிவங்கள் என பண்டைய நாகரிகங்களின் மலர்களின் பயன்பாட்டினை குறித்த பற்பல சான்றுகள் உள்ளன. எகிப்திய கல்லறைகளில் பெரும்பாலானவற்றில் மலர்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். கி.மு.2 முதல் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் பல்வேறு கட்டமாக உருவாக்கப்பட்ட பிரபல அஜந்தா குகை ஓவியங்களில் கைகளில் ஒற்றை மலரொன்றை ஏந்தியிருக்கும் இடை ஒசிந்த ஓவியம் உலக பிரசித்தி பெற்றது.

உலக  நாகரீகங்கள் அனைத்திலுமே மலர்களின் தாக்கம் இருக்கிறது எனினும் ஜப்பானிய கலாச்சாரத்தின் பிரிக்கமுடியாத ஒரு அங்கம் மலர் அமைப்புகளும் அவற்றின் பயன்பாடுகளும்.  மலர்ப் பயன்பாடுகளை தவிர்த்துவிட்டு ஜப்பானிய பண்பாட்டை அறிய முடியாது. ஹன கொத்தோபா என்பது (hana kotoba)  ஜப்பானிய ரகசிய மலர் மொழியை குறிக்கும் சொல். அதன்படி ஜப்பானிய மலர்களுக்கு அவற்றின் வண்ணம், அவற்றின் முட்களும், காம்பும், காம்பின் உயரம், மாலைகளில் இணைக்கப்பட்டிருக்கும் மலர்களின் கலவை ஆகியவற்றிற்கான தனித்தனியே சங்கேத அர்த்தங்கள் இருக்கின்றன 

’’விண்ணும் மண்ணும் மலர்களே

புத்தரும் பிற கடவுளரும் மலர்களே

மனிதனின்  இதயமும் ஆன்மாவும் மலர்களே’’!

பிரபல ஜப்பானிய  கடவுள் துதி ஒன்று இந்த வரிகளுடன் துவங்குகிறது,

எப்போதும் நமக்கு மறுபக்கத்தில்தான்  செழிப்பு இருக்கிறது என்பதை சொல்லும் சொல்லாட்சிகள், முதுமொழிகள் அநேகமாக உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் இருக்கின்றன ’’அக்கரைக்கு இக்கரை பச்சை என்னும் நமது பிரபல முதுமொழியை போல ஜப்பானில்  ’’அடுத்த வீட்டுக்காரனின் தோட்ட மலர்கள் அனைத்தும் சிவப்பு ’’ என்பார்கள். 

உலகின் அனைத்துக் கலாச்சாரங்களை காட்டிலும் ஜப்பானிய கலாச்சாரம் இயற்கையுடன் நெருங்கிய தொடர்பை கொண்டது. ஜப்பானிய ‘ஓரிகாமி’ என்னும் காகிதங்களின் மடிப்புகளில் வடிவங்களை உருவாக்கும் கலையில் ’காகிதம்’ என்னும் சொல்லுக்கான ஜப்பானிய சொல்லான ’காமி’ என்பதே கடவுளுக்குமான சொல். இயற்கையிலிருந்து உருவாகும் காகிதமும் கடவுளே அங்கு. ஜப்பானிய போன்ஸாய் கலையும் பிரபஞ்சத்தின் மீச்சிறு வடிவை  மரங்களில் உருவாக்குவதுதான்.   ’ஹனா’ என்றால் ஜப்பானிய மொழியில் மலர். (hanami)   ஹனாமி என்னும் ஜப்பானிய செர்ரி மலர்க்கொண்டாட்டம் உலக பிரசித்தி பெற்றது. ஜப்பானில் பல  பெண்களின் பெயரில்  ஹனா இருக்கும்  .

ஜப்பானிய கலைகளின் சிறப்புகளில் ஒன்று மிகக்குறைந்த அளவிலேயே பிற நாட்டுக்கலைகளின் சாயலை அவை  கொண்டிருப்பது. புத்த மதம் அங்கு தோன்றிய போது உருவான இகபானா மலர்க்கலை ஜப்பானின் சிறப்புகளில் ஒன்று. ஜப்பானிய  மூன்று முக்கிய நுண்கலைகளில் கொடொ (kōdō) என்னும் வாசனை பத்திகளின் வழிபாட்டு உபயோகம், சாடோ(chadō) என்னும் தேநீர்ச்சடங்கிற்கும் அடுத்தபடியாக இகபானா மலரமைப்பு இருக்கிறது   

ஜப்பானிய மொழியில் இக-பானா (Ikebana) என்பது  மலர்களை அமைப்பது என்று பொருள்படும். -ikeru  என்றால் அமைப்பது  -hana  என்பது  மலர்களை குறிக்கும்.  இச்சொல் ’மலர்களுக்கு உயிரளிக்கும் படி அமைப்பது’ என்னும் பொருளிலும் வழங்கப்படுகிறது

இகபானாவை பயில்பவர்கள் ’கடோகா’ என அழைக்கப்படுகின்றனர் இகபானா ’கடோ’ (kadō) என்றும் அழைக்கப்படுகின்றது. கடோ என்றால் ’மலர்களின் வழி’ எனப்பொருள்.  

This contains an image of: White Calla Lily Table Decoration

இகபானாவின் துவக்கம்.

அனைத்து பருவங்களிலும் மலர்களை ஆராதிப்பதென்னும் வழக்கம் பண்டைய ஜப்பானில் பிரபலமாக இருந்தது

ஹேயான் காலத்தை சேர்ந்த  (Heian-794–1185) பிரபல ஜப்பானிய வாகா கவிதைத் தொகுப்புக்களில் (Waka) மலர்கள் குறித்த எராளமான கவிதைகள் இருக்கின்றன. புத்தமதம் அங்கே உருவானபோது புத்தரை  மலர்ளை கொண்டு வழிபடுவது பொதுவான ஒரு கலாச்சாரமாக  உருவானது

 புத்தமதம் தோன்றிய இந்தியாவில் தாமரையே மிக அதிகம் புத்த வழிபாட்டில்  இருந்ததென்றாலும் ஜப்பானில் அந்தந்த பருவத்திற்கான மலர்களே வழிபாட்டுக்கென எடுத்துக்கொள்ளப்பட்டன. சீனாவின் புத்த துறவிகள் பலவகையான மலர் அமைப்புக்களை கொண்டு புத்தரை வழிபடும் பாணியை  ஜப்பானில் துவங்கினார்கள்

துவக்க காலங்களில் அவர்கள் எந்த குறிப்பிட்ட அர்த்தமும் இல்லாமல்  பொதுவாக மலர்களை ஆலயங்களில் புத்தர் முன்பாக  அமைத்து வழிபட்டனர்.

பின்னர் உருவான கூஜ் (kuge) எனப்படும் புத்தருக்கான பிரத்யேக மலர் வழிபாட்டில் மூன்று மலர்க்காம்புகள்  நீரிலிருந்து ஒன்றாக இணைந்து நிற்கும்படி அமைக்கப்பட்டிருந்தன. ஷின், சோ மற்றும் ஹைகாய் (shin, soe & hikae) எனப்பட்ட  அம்மூன்றும் சொர்க்கம், மனிதன். மற்றும் பூமியை குறித்தன.  

தொடர்ந்த கமாகுரா காலத்தில் மிட்ஷு குசோக்கு  (mitsu-gusoku)  எனப்படும் புகையும் வஸ்து, மெழுகுதிரி மற்றும் அழகாக அமைக்கப்பட்ட மலர்கள் இவைகளை கொண்டு வழிபடும் முறை உருவாகி வந்தது. 1392 வரை இம்முறை புழக்கத்தில் இருந்தது.  பின்வந்த காலங்களில் புத்த சமய திருநூல்கள் பலவும் மலர்களின் பெயர்கள் கொண்டு உருவாக்கப்பட்டன. முராமோச்சியின் (1336–1573),   காலத்தில்  ஆலயங்கள் மற்றும் மடாலயங்களின் உள் அலங்கார அமைப்புக்கள் உருவானபோது மலர்களின் பயன்பாடு அதிகரித்தது 

முதன்முதலில் நேர்த்தியும் ஒழுங்குமாக நியதிகளுக்குட்பட்ட ஒரு மலர்க்கலை தோன்றியது  14 ம் நூற்றாண்டில் ஜப்பானில் ஷின் நோ ஹனா (Shin- no- hana) என்னும் ’மையத்தில் மலர்களை அமைக்கும் கலை’ உருவான போதுதான்,  பைன் போன்ற ஊசியிலை மரங்களின் சிறு கிளையொன்றை கிண்ணங்களில் மையப்பகுதியில் நேராக நிற்கும்படி அமைத்து அதனைச் சுற்றிலும் 3 அல்லது 5 பருவகால மலர்களை அமைக்கும் எளிமையான  இந்த மலரமைப்புக்களை 14 ஆம் நூற்றாண்டு ஜப்பானிய ஓவியங்களில் காணமுடியும். இந்த கலையில் மரக்கிளைகள்  சேய்மையின் இயற்கைக் காட்சியையும் மலர்கள் அண்மை இயற்கை காட்சியையும் குறிப்புணர்த்தின

ஜப்பானிய ராணுவ தளபதிகளுக்கும் பெரும் செல்வந்தர்களுக்கும் கலை ஆர்வத்தில் உதவவென்றே பிரத்யேக உதவியாளர்களாக டோபோஷுக்கள் இருந்தனர். (Doboshu) இதில் ஒருசிலர் உருவாக்கிய மலர் அலங்கார வடிவங்களே தத்தேபானா என்னும் மலரமைப்புக்கலையின் முன்வடிவங்கள் (tatebana)

14ஆம் நூற்றாண்டில் சாமுராய்கள் தங்கள் செல்வாக்கையும் அதிகாரத்தையும் வெளிப்படையாக தெரிவிக்க நினைத்தார்கள் அப்போது  டோகொனோமா என்னும் (tokonoma)  சாமுராய்களின் கவச உடைகள், படைக்கலன்களை மலர்களுடன் இணைத்து காட்சிப்படுத்தும் வழக்கம் பிரபலமாக இருந்தது அப்போதைய மலரலங்காரங்கள் ’’நிற்கும் மலர்கள்’’ என்று பொருள்படும்  தத்தேபானா /தத்தேஹனா  (tatebana or tatehana)  எனப்பட்டன. இதுவே  இகபானாவின் தூய ஆதி வடிவம்

15ஆம் நூற்றாண்டு வரை மிக மெல்ல வளர்ந்த இக்கலை அந்நூற்றாண்டின் இறுதியில் மீண்டும் புத்துயிர் பெற்று புத்தம் புதிதாக  முகிழ்த்தது.  தேநீர் சடங்குகள் புகழ்பெற துவங்கிய 15 ம் நூற்றாண்டின் இறுதியில் இக்கலை மறுமலர்ச்சி அடைந்தது. தேநீர்  விருந்துகள் நிகழும் அரங்குகளின்  முகப்பு அறைகளில்  காக்கேமோனோ (kakemono) என்னும் சுருள்துணிச் சித்திரம் மட்டுமே தொங்க விடப்பட்டிருக்கும் அதனுடன் எளிய மலரமைப்பு ஒன்றும் வைக்கப்பட்டபோது தேநீர் சடங்குகளின் வசீகரம் மேலும் கூடியது.

1436-1490 வை சேர்ந்த அஷிகாகா (Ashikaga)வம்சத்தின் எட்டாவது ஷோகனான அஷிகாகா யோஷிமஸா(Ashikaga Yoshimasa)   சா நோ யூ (cha-no-you) என்னும் தேநீர் சடங்கையும் இகபானாவையும் இணைத்து சா-பானா என்னும் கலையாக  அழகுபடுத்தியவர்களில் முதன்மையானவர்  

This contains an image of:

 யோஷிமஸாவின் சமகாலத்தைய இயற்கை ஆர்வலர்கள் பலரும் இந்த மலரமைப்பின் மேம்படுத்துதலில் பெரும் பங்காற்றினார்கள்  

16 ம் நூற்றாண்டில்  (1477-1561)  வழிபாட்டு தலங்களிலும் தேநீர் விருந்துகளிலும் பயன்படுவதைக்காட்டிலும் மேலான ஒரு இடத்தை இகபானா மலர் அமைப்புக்கள் அடைந்தன.அச்சமயத்தில் இகபானா ரிக்கா (Rikka) என்றழைக்கப்பட்டது. அதிலிருந்து மாறுபட்ட  இகபானாவின் மற்றோர் வடிவமான நாஜெயிரிபானாவும்  (nageirebana)ஏக காலத்தில் தோன்றி பிரபலமடைந்தது. 

நூற்றாண்டுகளுக்கு இவ்விரண்டு வகை மலரமைப்புக்களும் புழக்கத்தில் இருந்தன. ரிக்கா அலங்காரமானதாகவும் நாஜெயிரி மிக எளிமையாக இயற்கையுடன் ஒத்திசைவு கொண்டதாகவும் அமைந்திருந்தது தொடர்ந்த காலங்களில் ரிக்காவுடன் போட்டியிட முடியாத நாஜெயிரி வடிவம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள போராட வேண்டி இருந்தது பின்னர் மெல்ல மெல்ல அது தனித்த மலரலங்காரக்கலையாக பிரபலமடைந்தது. 16 ம் நூற்றண்டின் இறுதியில் நாஜெயிரியின் எளிமையும் இயற்கையான அமைப்பும் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.  பின்னர் இகபானா ஜப்பானின் பாரம்பரியங்களில் குறிப்பிடத்தக்க கலையானது. ஆண்களும் பெண்களும் எல்லா வயதிலும் இகபானாவை கற்றுக்கொள்ள விழைந்தனர். பலநூறு பள்ளிகளும் இகபானாவுக்கென உருவாகத் துவங்கின

19 ம் நூற்றாண்டில் இகபானாவில் தேர்ச்சி பெறும் பெண்களுக்கு சிறந்த கணவர்கள் கிடைப்பார்கள் என்றும் அவர்கள் ஆகச்சிறந்த இல்பேணுநர்களாகவும் அன்னைகளாகவும் ஆவார்கள் என்றும் நம்பிக்கை இருந்தது

Explore Wabi-Sabi Ikebana's photos on Flickr. Wabi-Sabi Ikebana has uploaded 153 photos to Flickr.

இகபானா நூல்கள்

 கெனெயி (Kenei) காலமான 1206 லிருந்து  எடோ (Edo) காலமான 1660-1704 வரை இகபானா குறித்த ஏராளமான நூல்கள் வெளியாகின. அவற்றில் செண்டென்ஸ்போ (Sendensbo) மிக முக்கியமானதாக கருதப்படுகிறது இகபானாவின் அடிப்படை விதிகளை விளக்கும் அந்நூல்களில் அனைத்து வகையான  மலரமைப்புக்களுக்கும் சித்திரங்களும் இடம்பெற்றிருந்தன 

அதை தொடர்ந்து இகனோபு (lkenobu) எழுதிய  கண்டென்ஸ்போ (Kandensbo) என்னும் நூலும் இகபானா வளர்ச்சியில்  மிக முக்கியமானது. கண்டென்சோவில் இகபானாவின்  விதிகளும் குறிக்கோள்களும் தெளிவாக விவரிக்க பட்டிருந்தன அதன் பிறகு இகபானா மலர் அலங்காரம் வெகுவாக புகழ்பெற்றது. 

17ஆம் நூற்றாண்டில், மரப்பொருட்கள் மற்றும் உலோகப் பொருட்கள் மீது பளபளப்பான வண்ணப்பூச்சுகள் பூசும்  லாகர் (Lacquer) கலையில் தேர்ந்தவரான  கொரின்  (Korin) இகபானா வடிவில் பெரும் தாக்கத்தை உண்டாக்கினார். அவரது ஈடுபாட்டினால் இகபானா அமைப்புக்கள் வைக்கப்படும் கிண்ணங்கள் தட்டுக்கள் மற்றும் கொள்கலன்களில் பல அழகிய வடிவங்களும் வண்ணங்களும் உருவாக்கப்பட்டு, இகபானா அதன் அழகின் உச்சத்தில் இருந்தது. அந்த  காலகட்டத்தில் இகபானாவை பல்லாயிரக்கணக்கானோர் கற்றுத்தேர்ந்தனர் 

இகபானா வடிவம் முழுமையடைந்ததும் அப்போதுதான். 17ஆம் நூற்றண்டின் இறுதியில் இகபானாவின் இரு பிரபல வடிவங்களில் ஒன்றும், மிக அலங்கரமான மலர் அமைப்பு முறையுமான ரிக்காவின் மீதான விலக்கமும் உருவாகி இருந்தது. அப்போதிலிருந்து நாஜெயிரி  வகையே இகபானா அமைப்புக்களுக்கு பயன்படுகிறது. (இவ்விரு கலைகளையும் பயிற்றுவிக்கும் கலைஞர்களும், இவற்றை கற்க விரும்பும் மாணவர்களும்  இன்னும்  இருக்கிறார்கள்). இதன்பிறகு இகபானா கலை உச்சத்தை நோக்கி பயணிக்க துவங்கியது. 

18ஆம் நூற்றாண்டின் இறுதியில் ரிக்காவிற்கும் நாஜெயிரிக்கும் இடையேயான ஒரு கலப்பு வகையான செயிக்கா (Seika) உருவானது செயிக்கா என்றால் புத்தம் புதிய மலரென்று பொருள். செயிக்கா சமச்சீரற்ற முக்கோண  அமைப்பில் இருக்கும்.

Икебана / Ikebana - 13 Апреля 2016 - Блог - Икебана

ஜென் மற்றும் இகபானா

ஜென் மார்க்கத்திற்கும் இகபானாவுக்கும் இருக்கும் ஒற்றுமைகளாக; 

  1. சமநிலை, எளிமை மற்றும் ஒத்திசைவு
  2. இயற்கையுடனான  நெருக்கம் 
  3. பருவ காலத்தை அறிந்திருத்தல்
  4. அன்றாடங்களின்  எளிய அழகை ஆராதித்தல்
  5. மா (ma)  எனப்படும் காலி இடங்களை கண்டுகொண்டு அதையும் ஆராதித்தல். (இகெபானாவில் மலர்கள் அமைந்திராத வெற்று இடங்களும் உண்டு
  6. வேற்றுமை பாராட்டாதிருத்தல்
  7. தன்னை மறத்தல். (இகபானாவில் ஆழ்ந்து காலத்தை மறத்தலுக்கு இது இணையாக சொல்லப்படுகின்றது)
  8. எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்தல்
  9. இறையை உணர்தல் 
  10. ஆழ்ந்த அமைதியை உணர்தல்  -ஆகியவை சொல்லபடுகின்றன,

இகபானா  கலவைகள்

இகபானாவின் பல வடிவங்களுக்கும் பல வகையான அடிப்படை கலவைகள் உள்ளன

சொர்க்கம் (அல்லது மெய்மை)- மனிதன்- பூமி என்பது போல பூமி- காற்று- நீர், அன்னை- தந்தை- மகவு என பல கலவைகளும் உபயோகிக்க படுகின்றன

அடிப்படை விதிகள்

தென்மே (Tenmei) காலத்துக்கு பிறகு இகபானா தனது தூய வடிவத்திலிருந்து சற்றே மாறி செயற்கையான சில இணைவுகளுடன் உருவானது. அந்த வடிவம்தான் இப்போதைய சொர்க்கம், மனிதன் மற்றும் பூமி ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய இறுதி இகபானா வடிவம் 

இப்போதைய இகபானாவின் மூன்று  பள்ளிகளான  இகனோபு, என்ஷூ ரியூ மற்றும் மிஷோ ரியூ ,(Ike nobu, Enshiu- Ryu, Misho-Ryu) ஆகியவை  இந்த விதிகளையே பின்பற்றுகின்றன. இப்போதும் டோக்கியோ மற்றும் கியோட்டோவில்  இகபானாவின் பழைய தூய வடிவங்களை இன்னும்  கோ ரியூ, கோ ஷின் ரியூ (KO- Ryu, Ko Shin- Ryu)  என்னும் பெயர்களில் கற்றுக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள்.

இகபானாவின் பிற விதிகள்

மலரமைப்புக்கு தேவையான பொருட்களை தேர்ந்தெடுப்பதிலும், மலரமைப்பின் வடிவத்தை நிர்ணயிப்பதிலும்  இருளும்-ஒளியும், கடவுளும்-சாத்தானும், நல்லதும்-கெட்டதும் போன்ற இரு எதிரெதிரானவைகள் அவசியம் இருக்கவேண்டும்.

ஒரே வண்ண மலர்கள் அமைக்கப்படுவது  துரதிர்ஷ்டவசமானது என கருதப்படுகின்றது. சிவப்பின் நிறம் இறப்புடன் தொடர்புடையதால் பெரும்பாலும் இகபானாவுக்கு அவை விரும்பப்படுவதில்லை. மேலும் சிவப்பு நெருப்பின் நிறமாதாலாலும் ஜப்பானிய வீடுகள், எடையற்ற எளிதில் தீப்பிடிக்கும்படியான பொருட்களால் கட்டப்படுவதால் அவை இகபானாவில் உபயோகிப் படுவதில்லை

 அதுபோலவே ஒற்றைப்படை எண்ணிக்கையில் மலர்களை அமைப்பதும் துரதிர்ஷ்டம் என்று கருதப்படுகிறது.  அப்படி ஒற்றைப்படையில் இருக்கும் எதுவும் சமச்சீரான வடிவத்தை அமைக்காது என்பதால்  அவ்வகையான அமைப்புக்கள் இயற்கையின் அம்சமாக இருக்காது என ஜப்பானின் அனைத்து கலை வடிவங்களிலும்  ஒற்றைப்படை எண்ணிக்கை பெரும்பாலும் விலக்கப்பட்டிருக்கும்

கொள்கலன்கள்; அடுத்த முக்கிய விதி எந்த கொள்கலனில் மலர்கள் அமைக்கப்படுகின்றன என்பதில் இருக்கிறது. ஜப்பானிய இகபானா கொள்கலன்கள் அனைத்தும் திசைகாட்டியைப்போல் நான்கு திசைகளையும் குறிப்பவையாக கருதப்படுபவை தான். எந்த திசையில் எவற்றை அமைப்பது என்பதை குறித்த தளர்வற்ற விதிகள்  இகபானாவில் உள்ளது

இகபானாவின் கொள்கலன்களில் வாயகன்றவை, உயரமானவை மூங்கில் அல்லது உலோகத்தால் ஆனவை என பல வகைகள் இருக்கின்றன. பெரும்பாலான ஜப்பானியர்கள் இகபானாவை வெண்கல கிண்ணங்களில் அமைக்க விரும்புகிறார்கள் வெண்கல நிறமே பூமியின் நிறமென  அங்கு கருதப்படுகிறது. வெள்ளியும் விருப்பத்துக்குரியதாகவே இருக்கிறது. கொள்கலன்களில் மூன்றில் ஒரு பங்கு  நீர் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும்

இகபானா மலர்மொழி

இகபானாவின் எந்த அமைப்பானாலும் நாம் அவற்றின் மலர்மொழியை புரிந்துகொள்ளும்படியே அவை அமைக்கப்பட்டிருக்கும் 

முக்கிய நிகழ்வுகளிலும், மங்கல நிகழ்சிகளிலும் விருந்தாளிகளின் வருகையின் போதும் மட்டுமல்லாது வீட்டிலிருந்து பயணம் செல்லுகையிலும் பூட்டிய வீட்டில் இகபானா அமைக்கப்படும்.  மணமுடித்து  தேனிநிலவு செல்லும் தம்பதியர்களின் வீட்டில் நீடித்த, மகிழ்ச்சிகரமான இல்வாழ்க்கையின் குறியீடாக கருதப்படும் வில்லோ மரக்கிளைகள் கொண்ட  இகபானா அமைக்கப்பட்டிருக்கும்

நீண்ட பயணம் செல்வதற்கான இகபானா அமைப்பில் வளைந்து ஒரு வட்டம் போல் அமைக்கப்பட்டிருக்கும் இளந்தண்டுகள் பத்திரமாக பயணம் முடிந்து அவர்கள் வீடு திரும்புவதை குறிக்கும்

புதிய வீடுகளின் புகுமுக விழாவில் பரிசளிக்கப்படும் இகபானாக்களில் எப்போதுமே நீரைக் குறிக்கும் தூய வெண்ணிற மலர்கள் அமைந்திருக்கும். கட்டாயமாக வீடுகளில் சிவப்பு நிறம் உபயோகத்தில் இருக்கவே இருக்கக்கூடாது. புதிய சொத்துக்கள் வாங்கப்படுகையிலும் குழந்தைகளின் பிறப்பின்போதும் நீண்ட காலம் வாடாமலிருக்கும் சாமந்தி போன்ற மலர்கள் அமைக்கப்படவேண்டும்.

மங்கல நிகழ்வுகளுக்கென  இருப்பது போல் அமங்கல நிகழ்வுகளுக்கும் தனித்தனி விதிகள் உண்டு

இறப்பிற்கு உபயோகிக்கப்படும் மலர்வளையங்களில் வெண்ணிற மலர்களும் காய்ந்த குச்சிகளும், வாடிய இலைகளும் அமைக்கப்படவேண்டும்.

இகபானா பரிசளிக்க படுகையில் எப்போதும் அரும்புகள் மட்டுமே உபயோக்கிக்கவேண்டும்.. அப்போதுதான் பரிசு பெற்றுக் கொள்பவர்கள் அவற்றின் மலர்தலை கண்டு மகிழ முடியும்   

இகபானா அமைத்தல்

இகபானா உருவாக்கத்தின் முதல்படியாக குபாரி   (kubari) எனப்படும் ஆதாரமான குச்சி நிறுவப்படும். இந்த குச்சியின் வடிவம் ஒவ்வொரு பருவத்திற்கும் வேறுபடும், நுனியில் பிளவு படாதவை, இரண்டாக பிளவுபட்டது, மூன்று பிளவுகளை கொண்டவை என இவை வேறுபட்டிருக்கும்

நீரில் கென்ஸான் (kenzan)என்னும் ஊசிகள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு மெத்தை போன்ற அமைப்பை கொள்கலனில் வைத்து மலர்க்காம்புகள் ஊசிகளில் செருகி அமைக்கப்படும்

  • மலர்களை  தேர்ந்தெடுக்கையில் ஆதாரவிதியான சொர்க்கம்- மனிதன்- பூமி என்பதை அவை குறிக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.
  • அமைக்கப்பட இருக்கும் வடிவம் வெட்டி எடுத்த மலர்களை காட்டுவதாக இல்லாமல்  உயிருள்ள மலர்களை காட்டுவதாக இருக்க வேண்டும்
  • இகபானாவின் இறுதி வடிவம் அப்போதைய பருவத்தை குறிக்க வேண்டும்
  • எந்த நிகழ்வுக்கு இகபானா அமைக்கப்படுகின்றது என்பதை கருத்தில்கொண்டு மலர்களையும் உலர்ந்த இலைகளையும் அரும்புகளையும்  சரியான இடங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும்
  • மலர்த்தண்டுகளும், கிளைகளும் கொள்கலத்தின் நீர்மட்டத்துக்கு மேல் 4 இன்ச் உயரத்தில்  ஒன்றாக இணைத்த பின்னரே  அமைக்கப்படவேண்டும்’
  • கிளைகளும் இலைகளும் ஒன்றை ஒன்று ஒருபோதும் குறுக்கிடக்கூடாது
  • அமைக்கப்படும் மலர்களின்  பிரத்யேக இயல்பு மறைந்துவிடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கவேண்டும்
  • கிளைகளோ, மலர்களோ, இலைகளோ ஒருபோதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைந்துவிடக்கூடாது
  • சொர்க்கத்தை குறிப்பவை பிறவற்றை விட உயரமாகவும்  மலரமைப்பின் மத்தியிலும் இருக்க வேண்டும்
  • மனிதனுக்கான இரண்டாவது அமைப்பு சொர்க்கத்தின் நீளத்தைவிட பாதியைத்தான்  கொண்டிருக்கவேண்டும்
  • மூன்றாவதும் மிகசிறியதுமான பூமியை குறிப்பது, மனிதனுக்கு வைக்கப்பட்டிருக்கும் மலரின் உயரத்தில் பாதி இருக்க வேண்டும்
  • மலர்களை தேர்ந்தெடுக்கையில் நீண்ட மலர்க்காம்புள்ளவைகளையே தேர்ந்தெடுக்கவேண்டும். மேலும் ஒரே திசையில் இருக்கும் இரு கிளைகள் ஒரே நீளம் கொண்டவையாக இருக்க கூடாது. ஒன்றை ஒன்று மறைக்கும் இலைகளை இறுதியில் கத்தரித்து நீக்க வேண்டும்
  • மலர்களோ, இலைகளோ கிளைகளோ மற்றவற்றை முழுமையாகவோ அல்லது அவற்றின் விளிம்புகளையோ மறைக்கும் படி அமைந்திருக்க கூடாது, முழுமையாக அனைத்தையும் அமைத்தபின்னரெ தேவையற்றவை எவை என முடிவு செய்ய வேண்டும். இகபானா அமைப்பை மிக மிக பொறுமையுடன் செய்யவெண்டும்
  • அனைத்து இகபானா அமைப்புக்களிலும்  மனிதனை குறிக்கும் முழுமையாக மலர்ந்த மலர்களும்,  பூமியை குறிக்கும் அரும்புகளும்  சொர்க்கத்தை குறிக்கும் பாதி மலர்ந்த மலர்களும் கலந்திருக்க வேண்டும்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட முழுமையாக மலர்ந்த மலர்கள் இருப்பின் ஒன்றையடுத்து ஒன்று என உயரம் குறைவாக இருக்கும்படி அமைக்கவேண்டும்.
  • ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற மலர்கள் சரியான இடத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதும் மாறா விதிகளில் ஒன்று

கடுங்காற்று வீசும் மார்ச் மாதங்களில், இகபானா அமைப்புக்களின் தண்டுகள் காற்றில் வளைந்தவை போல அமைக்கப்பட்டிருக்கும். கோடைக்காலங்களில் அகலமான நீர்நிரம்பிய தட்டுக்களில் மலர்களும் இலைகளும் அமைக்கப்படும்.

பைன் மரங்கள் நீளாயுளுக்கும், சாமந்திகள் உயர்குடியினரை குறிக்கவும் தாமரை  உடல் மற்றும் உள்ளத்தின்  தூய்மையையும் பிற பருவ கால மலர்கள் அழகையும் வசீகரத்தையும் குறிக்கின்றன. இகபானாவின் மையப்பகுதி புத்தரை குறிப்பதாகவும் நம்பப்படுகிறது. அனைத்து மலர்களின் அருகிலும் இலைகள் இருக்க வேண்டும். 

கோடையில் பசும் இலைகள் மிக அதிகம் இருக்கும்படியும்,இலையுதிர் காலத்து அமைப்புகளில் பொன்மஞ்சள் நிறத்தில் பழுத்திருக்கும் இலைகள் ஆங்காங்கே இருக்கும்படியும் அமைந்திருக்கும் இதே விதிகளின் படி தொங்கும் ஜாடிகளிலும் இகபானா அமைக்கப்படுவதுண்டு

அரிதாக  பிரத்யேக காரணங்களின் பேரில் சிறப்பு நிகழ்வுகளுக்கென இலைகளின்றி மலர்கள் மட்டுமோ அல்லது மலர்களின்றி இலைகள் மட்டுமோ கொண்டும் இகபானா அமைக்கப்படும் 

இலைகளின் சுருளுக்குள் இருக்கும் சிறு பூச்சிகளுடனும், கிழிந்த இலைகளும், அழுகும் கனிகளும் கூட இகபானாவில் அமைக்கப்பட்டு இயற்கையின் அதே காட்சியை பிரதிபலிப்பதும் உண்டு

 இகபானாவின் பால் பேதங்கள்

ஜப்பனியர்கள் பாறைகளில், கற்களில், அருவிகளிலும் கூட பால் வேற்றுமையை காண்பவர்கள். மலர்களின் பருவங்களிலும் கூட இவ்வாறு பால் பேதம் உண்டு அரும்புகள் பெண், மலர்ந்தவை ஆண், மலர்ந்து வாடியவை மீண்டும் பெண் என ஜப்பானில் கருதப்படும்

இகபானா அமைப்புக்களில் இலைகளின் அடியில் இருக்கும் மலர்ந்த மலர்கள் பெண்மையை குறிப்பதாக கருதப்படும் இது (In)  இன் எனப்படும். எப்போதும் பெண்மைக்கு இடப்பக்கமே பூமி இருக்கவேண்டும்.  (yo) யோ எனப்படுவது ஆண்மையை குறிக்கும் இதற்கு வலப்பக்கம் பூமி இருக்க வேண்டும்.  இகபானாவில் இலைகளின் பின்புறம் ஆணென்றும் முன்புறம் பெண்ணென்றும் கருதப்படும். இரட்டை இலைகள் இணைந்து அமைந்திருக்கையில் கொள்கலனின் வெளிப்புறத்தை நோக்கி இருப்பது ஆண். உள்நோக்கி இருப்பது பெண்.

இப்படியான இகபானா மலரமைப்பின் இந்த பால் வேறுபாடுகளுக்கான  நியதிகள் ஜப்பானில் மட்டுமே முறையாக பேணப்படுகின்றன. ஜப்பானுக்கு வெளியேயான இகபானா அமைப்புக்களில் இவை தளர்த்த பட்டிருக்கும். 

மலர்கள் வாடாமலிருத்தல்

இகபானாவில் அதிமுக்கியமானது  அலங்காரமாக அமைக்கப்பட்டிருக்கும் மலர்கள் வாடாமல் நீண்ட நாட்களுக்கு இருப்பதற்கான ரகசிய வழிமுறைகள் தான். இகபானா ஆசிரியர்கள் பலரும் இதற்கான மருந்துக்கலவை என்ன என்பதை மிக ரகசியமாக வைத்துக்கொண்டு  கல்விகற்று முடித்து பட்டம் வாங்குகையில் மாணவர்களுக்கு தெரிவிப்பது உண்டு. எப்போதுமே  அந்த ரகசியங்களை  வெளிப்படுத்தாமல் மரணப்படுக்கையில் இருக்கையில் மாணவர்களுக்கு தெரிவிக்கும் ஆசிரியர்களும் உண்டு.

பலவகையான மூலிகை மருந்துகளும், அவற்றின் ரகசிய கலவைகளும் இகபானா மலர்கள் வாடாமலிருக்க உபயோகப்படுத்தபப்டுகின்றன.

மலர்கள் வாடாமல் இருக்க மலர்க்காம்பின் அடிப்புறத்தை வேகவைப்பது, எரிப்பது, நீராவியில் காட்டுவது, நசுக்குவது என பல்வேறு ரகசிய வழிமுறைகள் ஒவ்வொரு பள்ளியிலும் பிரத்யேகமாக கற்றுக்கொடுக்கப்படுகிறது. ரசாயன பொருட்களும் உபயோகப்படுத்தப்படுகின்றன என்றாலும் மலர்க்காம்புகளை நீருக்கடியில் வைத்து வெட்டுவது இவற்றில் அடிப்படையான ஒன்று. இதுவே இகபானா மலரமைப்புக்களை நெடுநாட்கள் வாடாமல் வைத்திருக்கிறது இம்முறை மிஸுகிரி (mizugiri)  எனப்படுகிறது

இகபானா பள்ளிகள்

 இகபானா கலைக்கான பள்ளிகள் சுமார் மூன்றாயிரத்துக்கும் அதிகமாக ஜப்பானில் மட்டும் உள்ளது. உலகின் பிறபாகங்களிலும் இகபானா பள்ளிகள் உள்ளன, இவற்றில் மிக பிரபலமானது இகனோபு பள்ளி, அடுத்தது ஷோகெட்ஷு பள்ளி

இகனோபு (I K E N O B U), 70 0 AD

 ஓனோ நோ இமோகோ (Ono- no- Imoko) வினால் 300 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இதுவே இகபானா பள்ளிகளில் மிக பழமையானதும் சிறப்பானதாகவும் ஜப்பானில் கருதப்படுகிறது இதன்  முதன்மை ஆசிரியர் எப்போதும் இகனோபு என்றே அழைக்கப்படுவார். இப்பள்ளியின் இப்போதைய ஆசிரியர் 45 ஆவது தலைமுறையை சேர்ந்தவர்

ஷோகெட்ஷு (SHOGE TSU  ) 1171 — 1231

இப்பள்ளியை உருவாக்கியவர்   மையோயி ஷோமின்  (Myoye Shomin).

இவற்றோடு பிரபலமாக இருக்கும் பிற பள்ளிகள்;

  1. ஹிகாஷியாமா பள்ளி  (HIGASHIYAMA )  1436- 1492 

இது  அஷிகாகா யோஷிமஸா வால் துவங்கப்பட்டது (Ashikaga Yoshimasa)

  • சென்கி கோ ரையூ (SENKE- KO – RYU) 1 5 2 0 .

பிரபல சென் நோ ரிக்யூவால் துவங்கப்பட்ட பள்ளி  ( Sen- no- Rikyu )

  • பிஷோ ரையூ (BIS HO- RYU)1545

கோட்டோ டாய்காக் உனோக் அமியால் துவங்கப்பட்ட  (Goto Daigak unok ami) இதுவே பிறவற்றைக்காட்டிலும் ஏராளமான கிளைகளை கொண்டிருப்பது

  • கோஷின் ரியூ  (Ko-SHIN- RYU) 1600 — 1624.

ஷின் டெட்சு சாய் துவங்கியது இப்பள்ளி (Shin- tetsu – sai)

இகபானா கற்றுக்கொள்பவர்களுக்கு முதலில் கண்களை இயற்கையின் நுண்மையான அழகுகளை காணும் பயிற்சி அளிக்கப்படும். மலர்களின் மெய்யான அழகை ஆராதிக்க துவங்குபவர்களே இகபானாவில் இறங்கமுடியும். 

கராத்தே பள்ளிகளின் கருப்பு பெல்ட்டை போலவே இகபானா கல்வியிலும் மதிப்பீட்டு முறைகள் உள்ளன.  இகபானா கல்வியில் உயர்ந்தபட்ச மதிப்பீடு என்பது க்யூ (kyu) எனப்படும்.  க்யூ அடைந்தவர்கள் வெகுகாலம் இகபானா கலையை பயிற்றுவிக்கும் தகுதி கொண்டவர்கள் ஆகிறார்கள். 

கத்தரிக்கோலை எப்படி பிடிப்பது, குச்சிகளை எப்படி உடைக்காமல் வளைப்பது ,மரபை உணர்த்தும் மலர்களை தெரிவு செய்வது, சரியான கிண்ணங்களை தேர்ந்தெடுப்பது போன்றவற்றிற்கான பயிற்சிகளே இகபானா கல்வியில் பாலபாடங்கள்.

இகபானா மலர்களையும் பிற பொருட்களையும் சூழலுடன்  பொருத்திப் பார்த்து அவற்றின் அழகை ஆராதிக்கவும் ஒவ்வொரு பருவத்திற்கான சிறப்புகளை உணரவும் கற்றுக்கொடுக்கிறது

பாணிகள்  

ரிக்கா; இயற்கையின் அழகை போற்றும் புத்த சமய வெளிப்பாடாக நிற்கும் பூக்கள் எனப்பொருள்படுகிறது ரிக்கா பாணி. ரிக்கா அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது என்னும் கருத்தை விளக்குவதுதான்.பிரபஞ்சத்தின் ஒரு துளியை அழகுற இயற்கையின் அங்கங்களை கொண்டு அமைப்பதே ரிக்காவின் அடிப்படை.இம்முறையில் மலர்கள் நேராக நிற்கும்ப டி அமைக்கப்படும்

நாஜெயிரி; இந்த பாணி ”அப்படியே வீசி எறிவது ” என்னும் பொருளில் இயற்கையின் ஒழுங்கற்றமையில் இருக்கும் நேர்த்தியை சொல்வது.

மொரிபானா; மொரிபானா ’மலர்களை அடுக்குவது’ என்று பொருள்படும் கலை இதில் சுய்பான் (suiban) எனப்படும் தட்டையான ஆழம் குறைவான அகலமான  நீர் கொள்கலன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. மேலும் மரபாக அதுவரை இகபானாவில் உபயோகப்படுத்தப்பட்டவகளை காட்டிலும் பல புதிய பொருட்களும் இணைந்தன. மொரிபானாவில் நிலக்காட்சிகளை பிரதிபலிக்கும் ஷாகேய்  (shakei) என்னும் அமைப்புக்களும் அதிலிருந்து உருவாகியது.

செயிக்கா (Seika) என்பது  மிக எளிய பாணி. இதில் மூன்று மலர்கள் மட்டும் உபயோகப்படுத்தப்படும்

சா பானா (cha-bana) என்பது தேநீர் சடங்குகளின் போது அமைக்கப்படும் பிரத்யேக இகபானா அமைப்புகள்

நவீன  இகபானா

ஏறக்குறைய 600 வருட பழமையான கலையான இகபானா இன்றும் சிறப்பாக ஜப்பானில்  திகழ்கிறது. பிரபல ஜப்பனிய கலை வடிவங்களான மாங்கா மற்றும் அனிமேவிலும்  இகபானா முக்கிய இடம் பெற்றிருக்கின்றது.

1957ல் இகபானா என்று ஒரு திரைப்படம் வெளியானது.  2017ல் வெளியான ’வாளும் மலரும்’ என்னும் திரைப்படம் 16 ம் நூற்றாண்டில் இகபானா உருவான வரலாற்றை சொல்கிறது. 

நவீன இகபானாவில் செயற்கை சாயங்களில் பல வடிவங்கள் இலைகள் மீது தீட்டப்படுகின்றன தண்டுகளும் கிளைகளும் வேண்டிய வடிவங்களில் கத்தரிக்கப்படுகின்றன. 

1912ல் இகபானாவின் முதல் நவீன பள்ளி அன்ஷின் ஒஹாராவினால் துவங்கப்பட்டது இவர் இரண்டு குறிப்பிடத்தக்க மாற்றங்களை இகபானாவில் புகுத்தினார். ஒன்று  மேற்கத்திய மலர்களை இகபானாவில் இணைத்துக் கொள்வது, இரண்டு  ஆழம் குறைவான வட்ட வடிவ கொள்கலன்களை உபயோகிப்பது. இந்த இரு மாற்றங்களினால் இகபானா  ஜப்பானின்  கூடுதல் பிரியத்துக்குரியதாகி விட்டிருக்கிறது 

சொகெட்ஸுபள்ளி (Sogetsu)  1927ல் சொஃபு டெஷிகாஹராவால் (Sofu Teshigahara) துவங்கபட்டபோது இகபானா சிற்பக் கலைக்கு நிகரான இடத்தை பெற்றது. இவரே அதுவரை இகபானாவில் இல்லாதிருந்த, ஆனால் இயற்கையின் அம்சங்களான தூசி, அழுக்கு, பாறைத்துண்டுகள் மற்றும் பாசிகளையும் இகபானாவின் அங்கங்களாக்கினார். சொகெட்ஸு பள்ளியின் இகபானா பாணி பிளாஸ்டிக், காகிதம் மற்றும் உலோகங்களையும் இணைத்துக் கொண்டது.

நவீன இகபானா ஆழம் குறைவான கிண்ணங்களில் அமைக்கப்படும் மொரிபானா பாணி மற்றும் உயரமான ஜாடிகளை கொண்ட பழைய நாஜெயிரி பாணி ஆகிய இரண்டு பிரிவுகளையும் கொண்டிருக்கிறது

தற்போது இகெனொபு, மொரிபானா(ஒஹாரா) மற்றும் சோகெட்ஸு ஆகிய மூன்று பாணிகளுமே ஜப்பானில் பிரசித்தம்.

20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் இகபானா சர்வதேசமயமானது எலென் கோர்டொன் ஏலென் (Ellen Gordon Allen) என்னும் ஜப்பானில் தங்கி இகபானா கலையை கற்றுக் கொண்ட அமெரிக்க பெண் ,1956ல்  ஜப்பானின் முக்கிய இகபானா பள்ளிகளை ஒன்றிணைத்து சர்வதேச இகபானா அமைப்பை நிறுவினார்  அவரது செயல்நோக்கம் இகபானா வின் மூலம் தோழமையை உருவாக்குவது-

தற்போது இகபானா கலையில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமான மையக்கருத்தென்பது தோழமையே. இகபானாவில் உபயோகப்படுத்தப்படும் பொருட்களுக்கிடையேயும்,  இக்கலையை கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கிடையேயும், ஆசிரியர்களுடனும் தோழமையை உருவாக்குவதே நவீன இகபானாவின் முதன்மை நோக்கமாக இருக்கிறது

ஜப்பானில் மட்டுமே சுமார் 15 மில்லியன் ஆர்வலர்கள் தற்போது இகபானாவை கற்று கொண்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலோர் பெண்கள்

ஜப்பானில் பிரபலமான இகபானா பள்ளி சோஹோ ஜி ஆலய வளாகத்திலிருக்கிறது. இங்கு ஆசிரியர்கள் மட்டுமே 60 ஆயிரம் பேர்.

இகபானா கண்காட்சிகளும் போட்டிகளும் வருடாவருடம் நடைபெறும். இதில் ஆகச்சிறந்த இகபானா கலைஞர்கள் போட்டியிடுவார்கள் 

இகபானா இப்போது ஜப்பானின் ஒவ்வொரு முக்கிய விழாக்களிலும் சிறப்பான இடம் பெற்றிருக்கிறது. மார்ச் 3ஆம் தேதியில் கொண்டாடப்படும் இளம்பெண்களுக்கான விழாவான ஹினா மாட்சுரியின் போது (Hina Matsuri) பீச் மரங்களின் சிறு மலர்க்கிளைகளுடன் மலர்களும் பொம்மைகளும் வைத்த இகபானா அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்படுகிறது

அதுபோலவே மார்ச் 5 அன்று கொண்டாடப்படும் ஆண்மைக்கான விழாவில் ஜப்பானிய ஐரிஸ் மலர்கள் இகபானாவில் அமைக்கப்பட்டிருக்கும். ஜூலை 7 அன்று நடைபெறும் டனபாடா (Tanabata) என்னும் நட்சத்திர விழாவில் இகபானாக்கள் மூங்கிலில் அமைக்கப்படும். செப்டம்பரில் ஜப்பானியர்கள் நிலாக்காயும் நிகழ்வான சுகிமி (tsukimi) நடைபெறுகையில் மக்கள் கூடுமிடங்களில்  அப்பருவத்தில் செழித்து வளரும் புல் வகையான  பம்பஸ் புற்கள் கலந்த இகபானா அமைப்புக்கள்   அமைக்கப்பட்டிருக்கும்

நிலவையோ கதிரையோ மழையையோ ஆராதிக்கவும் கவனிக்கவும் நேரமற்ற இப்போதைய விரைவு வாழ்க்கையில் இயற்கையையும், அன்றாடங்களின் அழகையும் கவனிக்கக் கற்றுத்தரும் இகபானாவை பயிலும் வாய்ப்பில்லையெனினும் இகபானா அலங்காரங்களை கவனித்துப் பார்க்கவாவது முயற்சிக்கலாம்.

இந்த வலைத்தளத்தில் இக்கலையை வீட்டிலிருந்தே கற்றுக்கொள்ள உதவும் காணொளிகள் உள்ளன’ ikebanahq.org.  

இகபானாவின் பல வடிவங்களைக்காண; Gallery – Ikebanalab

« Older posts

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑