ஆரோக்கிய பச்சை

தமிழக-கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு மலைமுடியான அகஸ்திய மலையில் பல்ப்பு புஷ்பாங்கதன்1 தன் குழுவினரோடு  மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தார். அது 1987ன்  டிசம்பர் மாதம். புஷ்பாங்கதன் கேரளா, ஜவஹர்லால் நேரு வெப்பமண்டல தாவரவியல் பூங்கா மற்றும் ஆய்வு நிறுவனத்தின்(JNTBGRI-Jawaharlal Nehru Tropical Botanic Garden and Research Institute) அப்போதைய இயக்குநர். அகஸ்திய மலைதான் காணி2 பழங்குடியினரின் வசிப்பிடம். அவருடன் அனைத்திந்திய ஒருங்கிணைந்த இன உயிரியல் ஆராய்ச்சித் திட்டத்தை (All India Co-ordinated Research Project on Ethnobiology-AICRPE) சேர்ந்த ஆய்வாளர்களும் இருந்தனர். பழங்குடி தாவரவியல் ஆய்வுக்காக அக்குழு மலையேறிக்கொண்டிருந்தது

 அந்த மலையின் பழங்குடிகளான  மல்லன் மற்றும் குட்டிமாத்தன் காணிகளும்  வழிகாட்டிக்கொண்டு அவர்களுடன்  வந்தனர். 

மார்ச் 2016 ல் யுனெஸ்கோ புதிதாக பட்டியலிட்டிருக்கும் 20 உயிர்க்கோள காப்பகங்களில் (Biosphere reserves ) அகஸ்திய மலையும் இருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1868 மீ உயரத்தில் இருக்கும் அகஸ்திய மலை அடர்ந்த புதர்க்காடுகள், மரக்கூட்டங்கள் செங்குத்தான பாறைச்சரிவுகள், பள்ளத்தாக்குகள், பல துண்டிக்கப்பட்ட சிகரங்கள் ஆகியவற்றை கொண்டது.  கூம்பு வடிவத்தை கொண்டிருக்கும் இம்மலையின்  பாறைகளில் தொற்றி ஏற வேண்டி இருந்ததால் புஷ்பாங்கதனும் பிறரும் மலையேற்றத்தின் நடுவில் களைப்பும் சோர்வுமடைந்தனர். மர நிழல்களிலும் பாறை மறைவுகளிலும் பலமுறை அமர்ந்து நீரருந்தி ஒய்வெடுத்துக் கொண்டனர். ஆனால் உடன் வந்த காணிகள் ஒருமுறைகூட சோர்வடையாதது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது .பழங்குடியினர் அவ்வப்போது மடியில் கட்டிக்கொண்டிருந்த கருமையான சிறிய பழங்களை  எடுத்து உண்பதை  அவர்கள் கண்டார்கள்

குழுவினர் மிகக்களைத்துப் போனபோது மலையேற்றம் தடைப்பட்டது. அப்போது அவர்களுக்கும் அக்கனிகள் பழங்குடியினரால் வழங்கப்பட்டன அவற்றை உண்டதும் குழுவினருக்கு களைப்பும், பசியும், சோர்வும் போன இடம் தெரியாமல் புத்துணர்வும் உற்சாகமும் அடைந்தனர். 

பழங்குடியினர்  பயன்படுத்தும் தாவரங்கள் குறித்த ஆய்வுக்காகத்தான் அந்த மலையேற்றம் நடந்துகொண்டிருந்தது. எனவே வழிபடப்போன தெய்வம் கூடவே வந்ததைப்போல மகிழ்ந்த ஆய்வுக்குழுவினர் எத்தனை முறை கேட்டும் காணிகள் அப்பழங்கள் குறித்த மேலதிக விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். 

காணிகள்3 மேற்கு தொடர்ச்சி மலையின் மூலிகைகளை ஆரோக்கியத்திற்காகவும், பல்வேறு சிகிச்சைகளுக்காகவும் பயன்படுத்தும் பாரம்பரியத்தை கொண்டவர்கள். காடுகளில் இவர்கள் அறியாத தாவரங்களோ விலங்கினங்களோ உயிரினங்களோ இல்லை. இவர்களில்  பிளாத்தி எனப்படும் பழங்குடி மருத்துவர்கள் பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக, தலைமுறைகளாக கடத்தப்பட்ட மருத்துவ அறிவை கொண்டிருப்பவர்கள்

காணிகளின் தொல்மரபுப்படி பிளாத்திகளே மூலிகைகளின் பயன்பாட்டை குறித்து பிறரிடம் பகிர்ந்து கொள்ள உரிமை உள்ளவர்கள்.

குழுவினர் பலமுறை வற்புறுத்திக்கேட்டு, அவர்களின் ஆராய்ச்சியின் நோக்கத்தை சொல்லி புரியவைத்த பின்னர், அந்த பழங்கள் குறித்தும் அது பெறப்பட்ட தாவரத்தைக் குறித்தும் தகவல்களை அறிந்துகொள்ள பிளாத்தியிடம் குழுவினரை அழைத்து செல்ல காணிகள் சம்மதித்தனர்.

பிளாத்தி அந்த மூலிகை ’ஆரோக்கிய பச்சை’ என்னும் தாவரம் என்பதை அவர்களுக்கு தெரிவித்தார். அம் மூலிகையின் அறிவியல் பெயர் Trichopus zeylanicus ssp. Travancoricus  என்பதை குழுவினர் அறிந்திருந்தும் அதன் மருத்துவப்பண்புகளை அன்றுதான் கண் கூடாக கண்டுகொண்டனர்

ஆரோக்கியபச்சையின் அசாதாரண மருத்துவ குணங்களை நேரிடையாக அனுபவித்து அறிந்திருந்த புஷ்பாங்கதன் அதனை முறையாக ஆய்வு செய்து அது பாதுகாப்பான மூலிகையென்னும் பட்சத்தில் அதனை வெற்றிகரமாக சந்தைப்படுத்தும் சாத்தியங்கள் குறித்து சிந்தித்தார்.

ஆரோக்கியபச்சையின் சில செடிகளை அங்கிருந்து ஆய்வுக்காக எடுத்துக்கொண்டு குழுவினர் மலையேற்றத்தை முடித்தனர்.

 முதல்கட்டமாக ஆரோக்கிய பச்சை இலைகள் மற்றும் பழங்களின் சோர்வு நீக்கும் பண்புகளை ஜம்முவின் பிராந்திய ஆய்வு நிறுவனம் உறுதி செய்தது (Regional research laboratory, Jammu) பின்னர் ஆரோக்கிய பச்சையில் பலகட்டங்களாக வேதிஆய்வுகள் புஷ்பாங்கதனின் ஆய்வுக்கூடத்தில் நடந்தன.சுமார் 8 வருடங்கள் நீடித்த அந்த மிக முக்கியமான ஆய்வுகளில் ஆரோக்கிய பச்சையின் பழங்கள் மட்டுமல்லாது அதன் இலைகளும் அதிமுக்கியமான மருத்துவப் பயன்பாடுகளை கொண்டிருப்பதை தெரியவந்தது. குறிப்பாக  சோர்வு மற்றும் மன அழுத்தம் நீக்குதல்  மற்றும் நோயெதிர்ப்பை தூண்டும் பண்புகள். 

ஆரோக்கிய பச்சை கட்டிகள் உருவாவதை தடுக்கவும், கட்டிகளுக்கு சிகிச்சையளிக்கவும், உடலின் இயற்கை பாதுகாப்பை அதிகரிக்கவும் பயன்படுகிறது என்பதையும்  ஆய்வுகள் திட்டவட்டமாக தெரிவித்தன

எட்டாவது வருடம்  புஷ்பாங்கதன் தலைமையிலான ஆய்வுக்குழு ஆரோக்கிய பச்சையின் மருத்துவ குணங்களுக்கு காரணமான  12 முக்கியமான வேதிப் பொருட்களை  பிரித்தெடுத்தது. இந்த வேதிப்பொருட்களுடன்  மேலும் மூன்று முக்கிய மூலிகைகள் சேர்க்கப்பட்டு ’ஜீவனி’ என்னும்  சத்து மருந்து உருவாக்கப்பட்டது.

தொடர்ந்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டத்திலும் (R&D) ஜீவனியில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. நோயுற்றவர்கள்,, ஆரோக்கியமானவர்கள், மன அழுத்தம் கொண்டவர்கள், விளையாட்டு வீரர்கள், கடுமையான உடல் உழைப்பை கோரும் பணிகளில் ஈடுபட்டு இருப்பவர்கள் மற்றும் அசாதாரண சூழலில் பணிபுரிபவர்களுக்கு ஜீவனி அளிக்கப்பட்டு முடிவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

சோதனைகளின் முடிவுகள் மிக வெற்றிகரமாகவும் நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்தன. சீனாவின் ஜின்செங்கிற்கு இணையான மருத்துவப்பண்புகளை ஆரோக்கியபச்சையிலிருந்து தயாரிக்கபட்ட ஜீவனி கொண்டிருப்பதை இச்சோதனைகள் வழியே ஆய்வுக்குழு நிறுவியது.

 ஜீவனியின் சந்தைப்படுத்துதல் இந்திய மூலிகை மருந்துகளின் உலகளாவிய சந்தைப்படுத்துதலின் வாய்ப்புகளை மேலும் பிரகாசமாக்கும் என்பது அனுமானிக்கப்பட்டது.

திரு புஷ்பாங்கதன் குழுவினர் ஜீவனிக்கு அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு (Intellectual Property Protection) கிடைத்தால் மட்டுமே அதன் சந்தைப்படுத்தல் வெற்றிகரமாக இருக்கும் என்பதை அறிந்திருந்தார்கள். மேலும்  ஜீவனி உருவாக முழுமுதற் காரணமாயிருந்த காணி பழங்குடிகளுக்கும் இதன் சந்தை லாபத்தில் பங்கிருக்கவேண்டும் என்னும் நியாயத்தையும்  புஷ்பாங்கதன்  உணர்ந்திருந்தார்.

எனவே ஜீவனியை சந்தைப்படுத்தும் முன்பாக புஷ்பாங்கதன், இந்தியாவின் முன்னணி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான  அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் (CSIR) ஒத்துழைப்புடன் 1994ல் ஜீவனிக்கு இந்திய காப்புரிமை அலுவலகத்தில், காப்புரிமை பெற முயற்சிகளை மேற்கொண்டார்.

 2007 ல் புஷ்பாங்கதன்  உத்தரபிரதேசத்தின் அமிட்டி மூலிகை மற்றும் உயிர் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனத்தின் பொது மேலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். (Amity Institute for Herbal & Biotech Products Development -AIHBPD). அமிட்டியிலிருந்து ஜீவனிக்கான  காப்புரிமை விண்ணப்பத்தை புஷ்பாங்கதன் மீண்டும்  அனுப்பினார்.

காப்புரிமை விண்ணப்பத்திற்கான வரிசை எண் (No. 2319/DEL/2008)  2010ல்  அளிக்கபட்டது. எனினும்  ஜீவனிக்கு காப்புரிமை இன்னும் அளிக்கப்படவில்லை. 

JNTBGRI  ஒரு ஆய்வு நிறுவனமாதலால் அதன் தயரிப்புக்களை சந்தைப்படுத்த முடியாது எனவே  கோயம்பத்தூரின் ஆர்ய வைத்ய மருந்தகத்தில் (Arya Vaidya Pharmacy Ltd-AVP) இதற்கென உரிமம் பெற்று ஜீவனியை தயாரிக்க செய்ய முடிவானது.இந்த ஒப்பந்தத்தின் படி ஜீவனி விற்பனை லாபத்தில் 2 சதவீதம் ராயல்டி தொகை  JNTBGRI  க்கு என்று முடிவானது 1995ல் AVP, 7 வருட உரிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உரிமத்தொகையாக 50 ஆயிரம் டாலர்களை JNTBGRI க்கு அளித்தது. இந்த உரிமம்  தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் வகையில் அமைந்திருந்தது

ஜீவனி விற்பனை பரவலாக துவங்கி இருந்தபோது மற்றொரு சிக்கல் காட்டிலாகாவில் இருந்து வந்தது. காணிகளின் வாழ்விடம் காட்டிலாக்காவின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஜீவனிக்காக அகஸ்திய மலையின் ஆரோக்கிய பச்சை செடிகள் அதிக அளவில் அழிக்கப்படுவதை காரணம் காட்டி,  முன் அனுமதி இன்றி காணிகளோ அல்லது  வெளியாட்களோ ஆரோக்கிய பச்சை செடிகளை  மலையிலிருந்து எடுக்க காட்டிலாகா தடை விதித்தது. அதன்பின்னர் ஜீவனி தயாரிப்பில் தொய்வு உண்டானது.

 பின்னர் புஷ்பாங்கதன் குழுவினர்  பல்லாண்டுத் தாவரமான ஆரோக்கிய பச்சையின் முழுத்தாவரமும் ஜீவனி தயாரிக்க தேவையில்லை, இலைகளும் கனிகளும் போதும், முழுத்தாவரத்தை  அழிக்காமல் தேவையான பாகங்களை மட்டும் அறுவடை செய்யலாம் என்று அறிவித்தனர்.. 

அக்டோபர் 2997ல் October 1997, வனத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து (ITDP), ஆரோக்கியபச்சையை சாகுபடி செய்யும் பொருட்டு தேவைப்படும் விதைகளுக்கான விலையையும் ஜீவனிக்காக தேவைப்படும் இலைகளுக்கான விலையையும் காணிகளுக்கு வழங்கும் திட்டத்தை புஷ்பாங்கதன் முன்மொழிந்தார். இது ஒரு நிலையான தீர்வாக மட்டுமல்லாது காணிகளுக்கு மேலதிக வருமானம் கிடைக்கவும் வழிகாட்டியது,

 ஜீவனி தயாரிப்பிற்கு  AVP க்கு    மாதாமாதம் சுமார் 50 டன் இலைகளை JNTBGRI  அளிக்கவேண்டி இருந்தது. எனவே அகஸ்திய மலையின் உற்பத்தியை மட்டும் நம்பி இருக்க முடியாது என்னும் உண்மையை அனைவரும் உணர்ந்தனர். 1994-1996ல் ஆரோக்கிய பச்சையை சாகுபடி செய்யும் முயற்சிகள் துவங்கின. 50 காணி குடும்பங்களுக்கு தலா 4 ஆயிரம் அளிக்கப்பட்டு ஆரோக்கிய பச்சையை சாகுபடி செய்ய ஊக்குவிக்கபட்டனர். .

இம்முயற்சி வெற்றிகரமாக நடந்தது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான காணி பழங்குடியினர் ஆரோக்கிய பச்சை சாகுபடியில் வேலைவாய்ப்பும், வருமானமும் கிடைக்கப்பெற்றதுடன் அம்மூலிகையின் சாகுபடி மற்றும் முறையான அறுவடை குறித்த பயிற்சியும் பெற்றதால்,  AVP  நிறுவனத்திற்கு ஆரோக்கிய பச்சை இலைகள் தடையின்றி தொடர்ந்து  கிடைத்து வந்தன.

மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லாயிரம்  மூலிகைகளின் மருத்துவ குணங்கள் குறித்த பாரம்பரிய அறிவு தலைமுறைகளாக காணி பழங்குடியினத்தவர்களிடம் இருந்துவந்தது .காணிகளின் உதவி இல்லாமல் ஜீவனி தயாரிப்பு சாத்தியமாயிருக்காது.

காப்புரிமை நேரடியாக காணிகளை தொடர்பு படுத்தவில்லை எனினும் புஷ்பாங்கதன் குழுவினர் இந்த தயாரிப்பில்  காணிகளின்  குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஒருபோதும் மறந்துவிடவில்லை

மேலும் தலைமுறைகளாக மூலிகை குறித்த அறிதல்களை கொண்டிருக்கும் பிளாத்திகளின் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்த புஷ்பாஙதன் குழுவினர் ஜீவனியின் சந்தைப்படுத்துதலின் லாபத்தில் காணிகளுக்கும் பங்கிருக்கவேண்டும் என்று முடிவு செய்தனர்.

 1997 நவம்பரில்  9 காணிபழங்குடியினர் உறுப்பினர்களாக இருக்கும்’ கேரள காணி சமுதாய ஷேம  அறக்கட்டளை; நிறுவப்பட்டு ஆரோக்கிய பச்சை குறித்த முக்கிய தகவல்களை தெரிவித்த குட்டிமாத்தன் மற்றும் மல்லன் ஆகியோர் அந்த அறக்கட்டளைக்கு தலைவர் மற்றும் இணைத்தலைவராக நியமிக்கப்பட்டனர். இந்த அறக்கட்டளையின் குறிக்கோள்களாக காணி பழங்குடியினரின் நல மேம்பாடு, காணி மக்களின் பாரம்பரிய மூலிகை அறிவுகுறித்த பல்லுயிர்பதிவை (Bio diversity register) உருவாக்குவது, மற்றும் உயிரியல் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது ஆகியவையே 

இவ்வறக்கட்டளைக்கு ஒரு சில காணி இனத்தவர்களின் எதிர்ப்பிருந்தாலும் முதல் தவணையாக மார்ச் 1999ல்  ஜீவனியின் லாபத்தில்  12500 டாலர்கள் காணிகளுக்கு வழங்கப்பட்டபோது இவ்வறக்கட்டளையின் முக்கியத்துவத்தை அவர்கள் அனைவரும் உணர்ந்தார்கள்.

அத்தொகையில் காணிகளின் வாழ்விடங்களில்  முதன்முதலாக  தொலைபேசி வசதியும், கர்ப்பகால மற்றும் விபத்துக்காப்பீடுகளும்   உருவாக்கப்பட்டன 

 காணிகளுக்கும் JNTBGRI க்கும் இடையிலான இந்த லாபத்தை பகிர்ந்துகொள்ளும் ஒப்பந்தம் உலகெங்கிலும் பழங்குடிகளின் அறிவை பயன்படுத்தும் எல்லா திட்டங்களுக்கும், ஆய்வுகளுக்குமான மாதிரி ஒப்பந்தமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவின் பல்லுயிர் பாதுகாப்பில் ஈடுபடும் அமைப்புக்களுக்கு அளிக்கும் உயரிய  Equator விருது 2002ல்  வழங்கபட்டது. 

ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் உலக வர்த்தக அமைப்பு ஆகியவையும் .( United Nations Environment Program and the World Trade Organization) பழங்குடியினருடன் லாபத்தை பகிரும் இந்த ஒப்பந்தத்தை பழங்குடியினரின் அறிவை முறையாக பயன்படுத்துவதற்கான  உலகளாவிய அளவிலான முன்மாதிரி ஒப்பந்தம்  என்று புகழ்ந்தன.

ஜீவனியின் அற்புத பலன்கள் உலகெங்கும் அறியப்பட்டிருந்தாலும் இதன் காப்புரிமை சிக்கல்கள் மற்றும் காப்புரிமை பெற செலவழிக்க வேண்டியிருந்த அதிக தொகை காரணமாக  AVP ஜீவனியின் சர்வதேச சந்தையை  எட்ட முடியாமல் இருந்தது

ஆனால் 1999ல் நியூயார்க்கின்  Nutrisciences Innovations என்னும் நிறுவனம் ஜீவனிக்கான அமெரிக்க காப்புரிமையும் பிரெத்யேக விற்பனை முத்திரையும் கோரி விண்ணபித்ததோடல்லாமல் ஜீவனியை அங்கு விற்பனையும் செய்யத்துவங்கியது. இந்த விஷயம் JNTBGRI க்கு எட்டியதும் அந்நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு இன்னும் நடைபெறுகிறது எனினும் Nutrisciences  நிறுவனம் ஜீவனி விற்பனையை 2001ல்  நிறுத்தியதொடு முத்திரை கோரிய விண்ணப்பத்தையும்  திரும்பப்பெற்றுக்கொண்டது.

 2000த்தில் நியுயர்க்கின் Great Earth  நிறுவனமும் ஜீவனி விற்பனைக்கு முயன்றது. ஒரு ஆற்றல் பானமாக ஜீவனியை “Jeevani Jolt 1000”  என்னும் பெயரில் வெற்றிகரமாக சந்தைப்படுத்தியது

இது  JNTBGRI  ன் கவனத்துக்கு வந்தாலும்  United States Patent and Trademark Office (USPTO) அமெரிக்க காப்புரிமை மற்றும் முத்திரை அலுவலத்தில் JNTBGRI ஜீவனிக்கான முத்திரையை அவர்கள் பதிவு செய்திருக்கவில்லையாதலால் பானமாக இதனை தயாரிப்பதை தடைசெய்யமுடியவில்லை.  எனவே வட அமெரிக்க முழுவதும் ஜீவனி ஆற்றல் பானம் பரவலாக பிரபலமாகியது

இந்த  விற்பனை வெற்றியை பார்த்து மேலும் பல அமெரிக்க மருந்து நிறுவனங்கள் ஜீவனியை தயாரிக்க முனைந்தனர்.

 சர்வதேச சந்தைபடுத்தலின் சிக்கல்கள் இன்னும் நீடிக்கிறதென்றாலும் ஜீவனியின் விற்பனை JNTBGRI, AVP மற்றும் காணி பழங்குடியினருக்கு  சந்தேகமில்லாமல் பெரும் வெற்றியை அளித்தது. 

 காணிகளின் வாழ்வில் மிக குறிப்பிடத்தக்க பொருளாதார ரீதியான மாற்றங்களை ஜீவனி உருவாக்கியது

தற்போது உரிமத்தொகை 2 லிருந்து 4 சதவீதமாய் இருப்பதால் மேலும் பல முன்னேற்றங்களுக்கு இது வழிவகுத்திருக்கிறது

ஜீவனியில் ஆரோக்கியபச்சையுடன் அஸ்வகந்தா எனப்படும் அமுக்கரா கிழங்கு (ashwaganda – Withania somnifera), குருமிளகு (pepper Piiper nigrum) மற்றும் விஷ்னு கிரந்தி (Evolvulus alsinoides) ஆகியவையும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  ஆரோக்கிய பச்சை பாலுணர்வை தூண்டும், ஈரலை பாதுகாக்கும், ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும், நுண்ணியிர்களை கொல்லும் பண்புகளையும் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் முன்னணி மூலிகை தயாரிப்பு நிறுவனமாகிய  AVP யின் வெற்றிகரமான மூலிகை தயாரிப்பாக ஜீவனி இருக்கிறது. குருணைகளாக கிடைக்கும் ஜீவனியை அரை தேக்கரண்டி சூடான நீரிலோ அல்லது பாலிலோ கலந்து அருந்தலாம். இணைய வர்த்தகத்திலும் ஜீவனை கிடைக்கிறது.75 கிராம் 160 ரூபாய் விலை. 

JNTBGRI  1979ல் கேரளத்தில் துவங்கப்பட்டது.300 ஏக்கர் பரப்பளவில் ஆயிரக்கணக்கான மூலிகைகளும் அரிய வகைத்தாவரங்களும் இங்கு இருக்கின்றன. இந்நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் தாவர பாதுகாப்பு மற்றும் அவற்றின் முறையான பயன்பாடு ஆகியவையே. எனினும் ஆரோக்கிய பச்சை கண்டுபிடிப்பிற்கு இங்கு மூலிகை மருந்துகளுக்கான ஆய்வுகளுக்கு தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சொரியாசிஸ் எனப்படும் கடும் தோல் அழற்சி நோய்க்கான களிம்பு இங்கு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலத்தில் இந்நோய்க்கான Psoriasis என்னும் சொல்லை அப்படியே வரிசை மாற்றி மருந்துக்களிம்பின் பெயரை “Sisairosp” என்று வைத்திருப்பது சுவாரஸ்யம்.

இயற்கை எனும் கடவுள் நமக்களித்திருக்கும் எண்ணற்ற மருந்துகளை பார்வையிடுவது போல JNTBGRI வளாகத்தில் மூலிகை தோட்டத்தை பார்த்தவாறு ஆயுர்வேதத்தின் கடவுளான தன்வந்திரியின் கரிய அழகுச்சிலை அமைந்திருக்கிறது.. 

  1. https://en.wikipedia.org/wiki/Palpu_Pushpangadan
  1. 2.  https://ta.wikipedia.org › wiki › காணிக்காரர்
  2. 2017ல்  திருவனந்தபுரத்தில் மட்டும் காணப்படும் ஒரு மர நண்டு கண்டுபிடிக்கபட்டது. அதற்கு Kani maranjandu என்று காணிகளின் பெயரிடப்பட்டிருக்கிறது.  காணிபழங்குடிகளின் பெயரை அறிவியல் பெயரில் கொண்டிருக்கும் ஒரே ஒரு உயிரினம் இதுமட்டும்தான்.
  • ஆரோக்கிய பச்சை குறித்த மேலதிக தகவல்களுக்கு; chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://lead-journal.org/content/07001.pdf