லோகமாதேவியின் பதிவுகள்

Category: ஆளுமை (Page 1 of 2)

மண்ணில் விழுந்த கோதுமை மணி- நிகோலாய் வாவிலோவ்

நிகோலாய் வாவிலோவ்  மேற்கு உக்ரைனின்  செர்னிவ்சி நகரின் கோதுமை வயல்களிலிருந்து முற்றிய தானியங்களை நண்பர்களுடன் சேகரித்துக்கொண்டிருந்தார்.  அது  1940- ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி.  

கருப்பு ஓக் மரக்கட்டைகளை அந்நகரின் கருப்புக்களிமண்ணில் பிசைந்து நிறுத்தி உருவாக்கிய கோட்டைகள் நிறைந்திருந்ததால் கருப்பு நகரம் என்றழைக்கப்பட்ட செர்னிவ்சி நகரம் அப்போதுதான் ரஷ்ய நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டிருந்தது. 

நிகோலாய் சோவியத் ரஷ்யாவின்  புகழ்பெற்ற வேளாண் மற்றும் தாவர மரபியல் விஞ்ஞானி. அவருடன் புகழ்பெற்ற ரஷ்யத் தாவரவியலாளர்,  வகைப்பாட்டியலாளர் மற்றும் உருளைக்கிழங்குப்பயிர் வல்லுனரான  செர்கே (sergéi yuzepchuk), சாகுபடி செய்யப்படும் உணவுப்பயிர்களில் ஏராளமான  ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்த  ரஷ்யத் தாவரவியலாளர் பெக்த்ரிவ் (F.Kh. Bakhteev) மற்றும்  பயிர்ப்பெருக்க விஞ்ஞானியான கமிரெஸ் (A.Y.Kameraz) ஆகியோரும் தானியவிதைச் சேகரிப்பிலும் அங்கே விளைந்திருந்த உணவுப்பயிர்களை ஆவணப்படுத்துவதிலும் ஈடுபட்டிருந்தார்கள்.

பின்மதிய நேரத்தில் அவர்கள் அனைவரும் தானிய வயலின் நடுவில் இருக்கையில் தூரத்தில் ரஷ்ய ரகசியக் காவல்துறையினரின் “Black Maria”  என்னும் பெரிய காவல் ரோந்து வண்டி வருவதைப் பார்த்தார்கள். அந்த வண்டி ஏன் அங்கே வருகிறது என்று அவர்கள் அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே நேராக கோதுமைப்பயிர்களை நசுக்கி அழித்தபடி அந்த வண்டி அவர்களருகிலேயே வந்து நின்றது. 

ரஷ்யா முழுக்கவே NKVD  எனப்பட்ட ரஷ்ய ரகசிய காவல்துறையினரின் அடக்குமுறைக்குட்பட்டிருந்த ஸ்டாலின் ஆட்சிக்காலமது. அந்த  “Black Maria” வண்டி எந்த வீட்டின் முன்பு நின்றாலும் அந்த வீட்டினர் காணாமல் போவார்கள் அல்லது மற்றவர்கள் கண்முன்பாகவே சுட்டுக்கொல்லப்படுவார்கள் என்பதை அனைவருமே அறிந்திருந்தார்கள்.

வண்டியிலிருந்து சீருடை அணிந்திருக்காத நான்கு காவலர்கள் இறங்கி நிகோலாயின் அருகில் வந்து மிக அவசரமாக  விவசாய ஆராய்ச்சி குறித்த சந்திப்பொன்றிற்காக அவர் மாஸ்கோவிற்கு அழைக்கப்பட்டிருக்கிறார் எனவே உடனே புறப்பட வேண்டும் என்றார்கள்.

அவர்களிடம் ரஷ்ய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மிகக் கொடூரமான ராணுவ விசாரணைகளுக்குப் பெயர் பெற்றிருந்த NKVD  யின் துணைத்தலைவரான லெவ் ஷ்வார்ட்ஸ்மன்  (Lev Shvartzman) கொடுத்தனுப்பிய எண்-529 எனக் குறிப்பிடப்பட்ட  கைது ஆணை இருந்ததை அறியாத நிகோலாய், திகைத்து நின்றிருந்த நண்பர்களிடம்  விதைகள் சேகரித்து வைத்திருந்த பைகளைக் கொடுத்துவிட்டு சிறிது நாட்களில் திரும்பி வருவதாகக்கூறி திரும்பவே திரும்பாத பயணத்துக்காகக்  காரில் ஏறிச்சென்றார்.  

உக்ரைனிலிருந்து ஏறக்குறைய 1200 கி மீ  தொலைவை காரிலேயே கடந்த வாவிலோவ் நேராக மாஸ்கோவின்  லுபையாங்கா எனப்படும் (Lubyanka) அரசியல் கைதிகளுக்கான  கொடுஞ்சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு  அவரது பெல்ட், ஷூ லேஸ் உள்பட அனைத்தும் உருவப்பட்டு  நிர்வாணமாக்கப்பட்டு புகைப்படமெடுத்து கைதி உடை அளிக்கப்பட்டது.  

அரசுக்கெதிராக சதித்திட்டம் தீட்டியதற்காக அவரை கைது செய்திருப்பதாக அவரிடம் அப்போது தெரிவித்தார்கள். அங்கிருந்து ரஷ்யாவின் மிகக்கொடூரமான தண்டனைகள் அளிக்கப்படும்,  1771-லிருந்தே வன்முறைகளுக்குப்பெயர் போன சிறையான புடிர்க்கா (Butyrka) சிறைக்கு நிகோலாய் கொண்டு செல்லப்பட்டு  ஷ்வார்ட்ஸ்மேனால் 11 மாதங்கள் கடும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். சுமார் 400 கடுமையான விசாரணைகள் அவரிடம் நடத்தப்பட்டன. ஒவ்வொரு விசாரணையும் இரவில் தொடங்கி மறுநாள் பகல் வரை 13 மணிநேரம் நீண்டது விசாரிக்கும் காவலர்கள் இடைவெளியின்றி முறை வைத்துக்கொண்டு ஓய்வின்றி கொடுமை செய்து விசாரிக்கும் மாரத்தான் முறை அங்கு வழக்கமாகப் பின்பற்றப்பட்டது. 

இரவு முழுக்க உறக்கமில்லாமல் சித்திரவதை அனுபவித்து பகலில் 25 பேர் மட்டுமே இருக்க முடியும் இடத்தில் 100 கைதிகள் இருக்கும் அறைக்கு கொண்டு வரப்படும் அவர் எந்தக்காரணம் கொண்டும் உறங்காமலிருக்க மிகப்பிரகாசமான வெளிச்சம் அறையில் எப்போதும் பாய்ச்சப்பட்டது. அப்படியும் கண் அயர்ந்தால் சிறைக்கதவின் கம்பிகளில் கடும் ஓசை எழுப்பப்படும்.

மிக மிகக் குறைவான உணவு, கடும் சித்திரவதை, உறக்கமின்மை மற்றும் மன உளைச்சலை உண்டாக்கி செய்யாதவற்றை செய்ததாக ஒப்புக்கொள்ளச் செய்யப்படும் அந்த தண்டனைகளில் பெரும்பாலானோர் தாங்கள் சதித்திட்டம் தீட்டியதாக ஒத்துக்கொள்வார்கள். ஆனல் நிகோலாய் அப்படி ஒத்துக்கொள்ளவில்லை எனவே மேலும் மேலும் சித்திரவதைக்கு உள்ளானார். 

பிரிடிஷ் உளவாளியாக இருந்தாகவும் சோவியத் ஒன்றியத்தின் வேளாண்மையை அழிக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் ஒத்துக்கொள்வதாக அவரை பலவந்தப்படுத்திக் கையெழுத்து வாங்கப்பட்டது. பின்னர் அவரை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வதாகச்சொல்லி புடிர்க்கா கட்டிடத்தின் உள்ளேயே இருந்த ஒரு சிறிய அறையில்   ஜூலை 9, 1941 அன்று அவரது குற்றங்கள் பட்டியலிடப்பட்டு நிகோலாய்க்கு சுட்டுக்கொல்லப்பட்டு உயிரிழக்க வேண்டும் என  மரணதண்டனை விதிக்கப்பட்டது. 

நிகோலாய் மரணதண்டனைக் கைதிகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலவறைக்கு மாற்றப்பட்டார். அங்கே கற்பாறைகளாலான சுவர்களில் ஈரம் கசிந்து, கடும் குளிர் நிலவும். படுக்கவும் போர்த்திக்கொள்ளவும் எந்த வசதியும் இருக்காது. இரவில் ஒவ்வொரு கைதியாக சுட்டுக் கொல்லப்படுவதற்காக அழைத்துச்செல்லப்படுகையில் நிகோலாயும் அடுத்து தன்னையும் அழைக்கப் போகிறார்கள்  என்று ஒவ்வொரு இரவிலும் காத்திருந்தார். 

1941, அக்டோபரில் நாஜி ஜெர்மன் படைகள் மாஸ்கோவை நெருங்கியபோது சோவியத் ஒன்றிய அரசு திகிலடைந்து நிகோலாய் உள்ளிட்ட  மிக முக்கியமான அரசியல் குற்றவாளிகளை அங்கிருந்து வால்கா நதிக்கு கிழக்கில் வெகுதூரத்தில் இருந்த சரடோவ் சிறைக்கு மாற்றியது. சரடோவ் சிறையில் நிகோலாய் 1-ம் எண் அறையில் அடைக்கப்பட்டார். அங்கு  ஜூன் 1942 வரை மரணதண்டனைக் கைதிகளுக்கான அறையில் இருந்தார். 

அங்கு 18 மாதங்கள் அவருக்கு மிகக்கொடூரமான தண்டனைகள் அளிக்கப்பட்டன. மிகுந்த நெரிசலான அறையில் ஒருக்களித்துப் படுக்க மட்டும் இடம் இருந்த, எப்போதும் பிரகாசமான வெளிச்சம் நிறைந்திருந்த அறையில் இருந்தார் நிகோலாய். அறைவாசிகள் அனைவருக்கும் மலம் கழிக்க சில வாளிகளே இருந்ததால்  ஜன்னல்கள் இல்லாத அறையில் கடும் துர்நாற்றமும், டைபஸ் தொற்றும் நிமோனியாவும் பரவியது.  

அனைவருக்குமே மிகமிகக்குறைவான உணவு கொடுக்கப்பட்டது சரடொவ் சிறையின் கொலை ஆயுதம் பட்டினிதான். எனவே  கைதிகள் பலநாட்கள் பட்டினியில் இருந்தார்கள். நிகோலாய்க்கு உறைந்த முட்டைக்கோஸ் சீவல்கள் சில, வேகவைக்காத உலர் மாவு மற்றும் நீர்த்துப்போன, அழுகிய தக்காளியில் தயாரிக்கபட்ட சூப் ஆகியவை எப்போதாவது கொடுக்கப்பட்டது 

அந்த அறையிலும் தனது மூளை மரத்துப்போகாமல் இருக்க சககைதிகளுக்கு சுவற்றில் கைக்கு கிடைத்தவற்றைக் கொண்டு எழுதி வேளாண்மை மற்றும் தாவரவியலை நிகோலாய் கற்றுக்கொடுத்தார்.

பின்னர் வெளியில் இருந்து அவரது தம்பியினால் கொடுக்கப்பட்ட பெரும் அழுத்தத்தினால் நிகோலாயின் மரணதண்டனை 20 வருட கடுங்காவல் தண்டனையாக குறைக்கப்பட்டு, உடலும் மனமும் மிகத்தளர்ந்து, ஸ்கர்வி உள்ளிட்ட பல நோய்களுடன் அவதிப்பட்டுக்கொண்டிருந்த  எலும்புகூடாகியிருந்த நிகோலாய் லேபர் கேம்ப் சிறைக்கு மாற்றப்பட்டார்.  

இது எதுவுமே அறியாத லண்டன் ராயல் சொஸைட்டி நிகோலாய்க்கு அயல்நாட்டு உறுப்பினர் என்னும் மிக உயரிய விருதை அளித்துபோதுதான் வெளி உலகிற்கு அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருப்பது தெரிய வந்தது. நிகோலாயின் கைதை எதிர்த்து,உலகெங்கிலும் இருந்து பல விஞ்ஞானிகள் சோவியத் ஒன்றிய அரசுக்கு கண்டனக்கடிதங்களை தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்

என்ன செய்தார் நிகோலாய் அத்தனை சித்திரவதைகளுக்கும் மரணதண்டனை அளிக்கப்படுவதற்கும்?

நிகோலாய் ரஷ்ய மக்களின் பட்டினியைப்போக்கவும் பசியில்லா உலகமொன்றை உருவாக்கவும்  முனைந்தார். அரும்பாடுபட்டு ஐந்து கண்டங்களுக்கும் பயணம் செய்து உணவுப்பயிர்களின் விதைகளைச் சேமித்து விதை வங்கியை உருவாக்கினார். பஞ்சத்தையும் பசியையும் போக்க உழைத்த தாவரவியலாளரான அவருக்குத்தான் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சோவியத் யூனியனில் நிகோலாய் தாவரமரபியலாளராக பயிர்ப் பெருக்கவியலாளராக ஏராளமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டார். தாவரவியல் வரலாற்றில் இவரே பலவகையான உணவுப்பயிர்களைப் பாதுகாப்பதிலும் விதை சேகரிப்பிலும் பெரும் பங்காற்றியவர். தாவரவியல் துறை என்பதின் பொருளை உணவுத்தாவரங்களின் பயன்பாட்டின் அடிப்படையில்  விரிவாக்கியவரும் இவரே. தீராப்பயணியான இவர் ஐந்து கண்டங்களுக்கும் பயணித்து 64 நாடுகளில் உணவுத்தாவரங்களை ஆவணப்படுத்தி விதைகளைச் சேகரித்து விவசாயிகளை நேரில்  சந்தித்து உரையாடினார். உலகின் மிக முக்கியமான மரபணு   வங்கியையும் (Gene Bank) இவரே முதன் முதலில் உருவாக்கினார்.

உணவுத் தாவரங்களில் தான் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில் நிகோலாய் வாவிலோவ்  முதன் முதலாக ஒரு குறிப்பிட பயிர் எங்கே தோன்றியது அலல்து எங்கே சாகுபடி செய்யப்பட்டது என்று எட்டு உலகளாவிய  பயிர் உற்பத்தி மையங்களை வகைப்படுத்தினார்.(Centers of Crop Origin).

அவை: 

  •  தெற்கு ஆசிய மையம்: இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை உள்ளடக்கியது. இங்கு நெல், கரும்பு, மாம்பழம், எள், கத்தரிக்காய் மற்றும் எலுமிச்சை வகைகள் தோன்றின.
  • சீன மையம்: இது மிகப்பெரிய மற்றும் பழமையான மையமாகும். சோயா பீன்ஸ், முள்ளங்கி, பேரிக்காய் மற்றும் பிளம்ஸ் போன்றவை இங்கிருந்து பரவின.
  • மத்திய ஆசிய மையம்: வடமேற்கு இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகள் இதில் அடங்கும். கோதுமை, வெங்காயம், பூண்டு, பட்டாணி மற்றும் பாதாம் ஆகியவற்றின் பிறப்பிடம் இது.
  • அண்மை கிழக்கு மையம்: ஆசியா மைனர் மற்றும் ஈரான் பகுதிகள். பார்லி, ஓட்ஸ், திராட்சை, ஆப்பிள் மற்றும் பல பருப்பு வகைகள் இங்கு உருவாயின.
  • மத்திய தரைக்கடல் மையம்: ஐரோப்பாவின் தெற்குப் பகுதி. கடுகு, பீட்ரூட், முட்டைக்கோஸ், அஸ்பாரகஸ் மற்றும் ஆலிவ் போன்றவை இங்கிருந்து வந்தவை.
  • அபிசீனிய மையம்: தற்போதைய எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா பகுதிகள். காபி, சோளம், பார்லி மற்றும் ஆமணக்கு ஆகியவற்றின் தோற்ற மையமாகும்.
  • மத்திய அமெரிக்க மையம்: மெக்ஸிகோ மற்றும் கரீபியன் தீவுகள். மக்காச்சோளம், பருத்தி, கோகோ மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவை இங்கு முதன்முதலில் பயிரிடப்பட்டன.
  • தென் அமெரிக்க மையம்: பெரு மற்றும் பிரேசில் பகுதிகள். உருளைக்கிழங்கு, தக்காளி, புகையிலை, அன்னாசி மற்றும் ரப்பர் மரங்கள் இங்கிருந்து உலகம் முழுவதும் பரவின.

இதன் அடிப்படையில் ஒரு பயிர் எங்கு தோன்றியதோ, அங்குதான் அந்தப் பயிரின் காட்டு  மூதாதைகளும் (Wild varieties) அதிக மரபணு மாற்றங்களும் காணப்படும் என்பதை அறிந்துகொள்ள முடிந்தது. பூச்சிகள் மற்றும் நோய்களைத் தாங்கும் திறன் கொண்ட புதிய ரகங்களை உருவாக்க இந்த மையங்களில் உள்ள காட்டு மூதாதை ரகங்கள்தான் இன்று வரை பயன்படுகின்றன. இந்த மையங்களினால் தான் அழிந்து வரும் பாரம்பரியப் பயிர் வகைகளும் அடையாளம் கண்டு பாதுகாக்கப்படுகின்றன.

நிகோலாய் காட்டு மூதாதைகளுடன், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை கலப்பினம் செய்து புதிய, அதிக நோய் எதிர்ப்பு திறன் கொண்ட, அதிக விளைச்சல் கொடுக்கும்   பயிர் வகைகளை உருவாக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார்.

நிகோலாய் இவானோவிச் வாவிலோவ் 1887-ல் நவம்பர் 25 அன்று மாஸ்கோவின் புகழ்பெற்ற ஜவுளி வணிக குடும்பத்தில் பிறந்தார். குடும்பத்தின் 7 குழந்தைகளில் ஒருவரான இவருக்கு செர்ஜி ,என்னும் இளைய சகோதரர் இருந்தார். புகழ் பெற்ற இயற்பியலாளரான இவர் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் அறிவியல் அகாதமியின் தலைவராக இருந்தார். பிற்பாடு நிகோலாயின் மரணதண்டனையை கடுங்காவல் தண்டனையாக குறைக்கும் அளவுக்கு செல்வாக்கான பதவியில் இருந்தார்.

மிக இளம் வயதிலிருந்தே தாவரங்கள்  மீது ஈடுபாடு கொண்டிருந்த நிகோலாய். பல உலர் தாவரங்களைப் பாதுகாத்து வைத்திருந்தார். மாஸ்கோ விவசாயக் கல்வி நிறுவனத்தில் இளங்கலை படிப்பில் தாவர நோயியலும், இயங்கியலும் கற்றார். நத்தைகளால் உண்டாகும் தாவர நோய்களில் பல ஆய்வுகளைச் செய்தார்

முதுகலைப் படிப்பை பிரபல மண் விஞ்ஞானியான டிமிட்ரியிடம் (Dmitri Prianishnikov)  சேர்ந்து பயின்றார். 1911-லிருந்தே  நோயெதிர்ப்புக் கொண்டிருக்கும் விதைகளை சிறிய அளவில் சேகரிப்பதை வழக்கமாகக் கொண்ட நிகோலாய் இங்கிலாந்தில் 2 வருட படிப்பில் இருக்கையில்தான் ஜெனிடிக்ஸ் என்னும் சொல்லை உருவாக்கிய வில்லியம் பேட்சனுடன் (William Bateson) இணைந்து தாவர மரபியலில் பணியாற்றினார். தாவர மரபியல் துறையை தோற்றுவித்தவரான மெண்டலின் கோட்பாடுகளை பெரிதும் மதித்து பின்பற்றியவர்  பேட்சன்.

ரஷ்யப் புரட்சி நடந்த 1917-களில் நிகோலாய் ரஷ்யாவில் தாவர மரபணு வளங்களைச் சேகரித்து ஆராய்ச்சி செய்வதற்காக நிறுவப்பட்ட மிக முக்கியமான அமைப்பான பயன்பாட்டுத் தாவரவியல் பணியகத்தின் (Bureau for Applied Botany) துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.  அவரது தலைமையின் கீழ்  அந்நிறுவனம் உலகப்புகழ் பெற்றது. (தற்போது  N.I. Vavilov Institute of Plant Genetic Resources (VIR))

புரட்சி அமைப்பின் தலைவரான லெனின் கட்டளையால் சோவியத் ஒன்றியம் தாவர மரபியலில் உலகின் முன்னணியில்  இருக்க வேண்டும் என்பதற்காக நிகோலாய்க்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்கப்பட்டு அவர் ஏராளமான ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். 1924-ல் லெனினின் மறைவுக்குப் பிறகு  ஏறக்குறைய 20000 பணியாளர்களுடன் நாடெங்கிலும் நூற்றுக்கணக்கில் தாவர ஆய்வு மையங்களை  நிறுவி அவை  வெற்றிகரமாக  செயல்படுவதை நிகோலாய் உறுதிசெய்தார். 

நிகோலாயின் புகழ்பெற்ற விதைத் தேடல் பயணம் 1916-ல் வடக்கு ஈரனில் தொடங்கியது. அங்கிருந்து அவர் தாயகம் திரும்பியபோது அதுவரை ரஷ்யா அறிந்தே இருக்காத பல புதிய வகை கோதுமை மற்றும் புல்லரிசி விதைகளைக் கொண்டு வந்தார். பின்னர் அவர் தொடர்ந்து 1933 வரை அமெரிக்கா, சீனா, லத்தீன் அமெரிக்கா, மத்தியதரைக் கடல்நாடுகள் மற்றும் எதியோப்பியாவுக்கு விதைத் தேடல் பயணங்களை மேற்கொண்டார். 

நிகோலாய் அவரது தலைமையின் கீழ் அந்த நிறுவனம் இருக்கையில்   உலகின் முக்கிய உணவுப் பயிர்களின்  250,000  விதை மாதிரிகளைச் சேகரித்துச் சேமித்து வைத்து உலகையே வியப்பில் ஆழ்த்தினார். அந்தச் சேமிப்புக் கிடங்கில்தான் இரண்டாம் உலகப்போரின்போது 900 நாட்கள் கடும் போராட்டம்  நடந்து அவ்விதைகளைக் காப்பாற்ற பல தாவரவியலாளர்கள் பட்டினியில் உயிரிழந்தார்கள்.(https://logamadevi.in/3914)

1920-களின் இறுதி மற்றும் 1930-களின் தொடக்கத்தில் தனிநபர்களிடமிருந்த நிலங்களைப் பறித்து, அவற்றை அரசுக்குச் சொந்தமான பெரிய கூட்டுப்பண்ணைகளாக மாற்றும் கட்டாயக் கூட்டுப்பண்ணை என்னும்  தீவிரமான விவசாயக் கொள்கையை(Forced Collectivization)    ஸ்டாலின்  நடைமுறைப் படுத்தி , “ஐந்து கதிர்கள் சட்டம்” (Law of Five Ears of Grain)  என்பதைக் கொண்டு வந்தார். இதன்படி, ஒரு விவசாயி தனது சொந்தப் பண்ணையில் உதிர்ந்து கிடக்கும் ஐந்து தானியக் கதிர்களை எடுத்தால் கூட அவருக்கு மரண தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதை வசதியான விவசாயிகள் எதிர்த்தனர். ஆனால் அவர்கள் அதற்கு ஒத்துழைக்கும்படி கட்டாயப்படுத்தப்பட்ட போது   தானியங்களை அரசிடம் கொடுக்க விரும்பாமல் அவர்களே பயிர்களை அழித்து கால்நடைகளைக் கொன்றனர். 

இதனால் 1932-33 களில் கடும் பஞ்சம் ஏற்பட்டு, சுமார் 50 லிருந்து 80 லட்சம் மக்கள் உயிரிழந்தனர். உக்ரைனில் இதனால் ஏற்பட்ட பஞ்சம் ஒரு இனப்படுகொலையாகவே கருதப்படுகிறது. அங்கு மட்டும் சுமார் 39 லட்சம்  மக்கள்  பட்டினியால் இறந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 

ரஷ்யா வேளாண் அறிவியலில் மாற்றங்களைச் செய்து விளைச்சலை அதிகரித்து பஞ்சத்தைப்போக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த அந்தச்சமயத்தில் தான் ஸ்டாலின் ட்ரோஃபிம் லைசென்கோ (Trofim Lysenko) என்னும் வேளாண் விஞ்ஞானியின் போலி அறிவியல் கருத்துகளை நம்பி பல தவறுகளைச் செய்தார். 

ட்ரோஃபிம் நிகோலாயின் மீதிருந்த துறைசார்ந்த காழ்ப்பினால் மரபியல் பண்புகள் வழிவழியாக கடத்தப்படுகின்றன என்று மெண்டல், நிகோலாய் மற்றும் அனைத்து உலக மரபியலளர்களும் சொல்வது முழுக்கப் பொய் என்று ஸ்டாலினிடம் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டே இருந்தார். அதை ஸ்டாலினும் நம்பினார். பல மொழிகளை  நிக்கோலாய் அறிந்திருந்ததால் அவர் உளவாளியாக இருக்கலாம் என்னும் சந்தேக விதையையும் ஸ்டாலின் மனதில் ட்ரோஃபிம் விதைத்தார்,

இந்தப் பஞ்சத்தின் போது, பயிர்களின் மகசூலை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் விஞ்ஞானிகளை வற்புறுத்தினார். நிகோலாய்”புதிய ரகங்களை உருவாக்க பல ஆண்டுகள் முறையான ஆராய்ச்சி தேவை” என்று அறிவியல் பூர்வமாக கூறி, பஞ்சத்தை போக்க முழுவீச்சில் முனைந்தார்.

ஆனால் லிசென்கோ பயிர்கள் நாம் சொல்வதைக் கேட்கும், விளைச்சலை அதிகரிக்கும்படி அவைகளிடம் சொல்லி  “சில வாரங்களில் மாற்றத்தைக் கொண்டு வரலாம்” என்று ஸ்டாலினுக்குப் பொய் வாக்குறுதி அளித்தார்.

“விதைகளுக்குப் பயிற்சி அளித்தல்” என்பதுதான் லிசென்கோவின் மிகப்பெரிய பொய். குளிர்காலக் கோதுமை விதைகளை ஐஸ்கட்டிகள் மிதக்கும் தண்ணீரில் நனைத்து வைப்பதன் மூலம், அவற்றை வசந்த காலத்தில் விளையச் செய்ய முடியும் என்று  லிசென்கோ கூறினார். பயிர்களின் பண்புகளைச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றினால், அந்தப் பண்புகள் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும் என்றார் லிசென்கோ.

இது மரபியல் விதிகளுக்கு எதிரானது. இதனால் கோடிக்கணக்கான விதைகள் அழுகிப்போய் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

அத்தோடில்லாமல் லிசென்கோ “செடிகள் தங்களுக்குள் சண்டையிடாது” என்னும் ஒரு விசித்திரமான தத்துவத்தை முன்வைத்தார். ஒரே வகைச் செடிகளை மிக நெருக்கமாக நட்டால், அவை இடத்திற்காகவோ உணவிற்காகவோ சண்டையிடாது, மாறாக ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கும் என்று கூறினார். இதன் விளைவால் மிகவும் நெருக்கமாக நடப்பட்டு, சத்துப் பற்றாக்குறை ஏற்பட்டு பயிர்கள் அனைத்தும் கருகின.

நிகோலாய் போன்ற விஞ்ஞானிகள் ஒரு புதிய பயிர் ரகத்தை உருவாக்க 10 முதல் 12 ஆண்டுகள் ஆகும் என்று கூறினர். ஆனால் லிசென்கோ “தன்னால் வெறும் 2 அல்லது 3 ஆண்டுகளில் புரட்சிகரமான விளைச்சலைத் தர முடியும்” என்று ஸ்டாலினிடம் உறுதி அளித்தார்.

மேலும் மரபணுக்கள் (Genes) என்ற ஒன்று கிடையாது என்றும், குரோமோசோம்கள் பற்றிய ஆய்வுகள் தேவையற்றவை என்றும் வாதிட்டார்.”சரியான சூழ்நிலையை வழங்கினால், ஒரு கோதுமைச் செடியை பார்லியாக மாற்ற முடியும்” என்று கூட நம்ப முடியாத பொய்களைக் கூறினார்.

இந்தக் காலகட்டத்தில்தான் நிக்கோலாய் வாபிலோவ் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டார். விவசாய உற்பத்தி குறைந்ததற்கு வாவிலோவின் அறிவியல் முறைகள்தான் காரணம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

“மரபணுக்கள் என்று கண்ணுக்குத் தெரியாத ஒன்று இருக்க முடியாது; அது ஒரு கற்பனை” என்று லிசென்கோ வாதிட்டார். எனவே மெண்டலின் விதிகளைப் போதித்த பேராசிரியர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். மரபியல் தொடர்பான நூல்கள் நூலகங்களில் இருந்து நீக்கப்பட்டு, பல இடங்களில் எரிக்கப்பட்டன. மரபியல் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் “மெண்டலிஸ்ட்-வாவிலோவிஸ்ட்” என்று அழைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சார்லஸ் டார்வினின் “இயற்கைத் தேர்வு”  கொள்கையையும் லிசென்கோ ஏற்கவில்லை. டார்வின் சொன்னது போல உயிரினங்களுக்கு இடையே போட்டி இருக்கும் என்பதை லிசென்கோ மறுத்தார். “ஒரே இனத்தைச் சேர்ந்த செடிகள் தங்களுக்குள் போட்டியிடாது, அவை கம்யூனிசக் கொள்கைப்படி ஒத்துழைக்கும்” என்று ஒரு விசித்திரமான வாதத்தை ஸ்டாலினுக்கு பிடிக்கும்படி முன்வைத்தார்.

எனவே மெண்டல் மற்றும் மார்கன் (T.H. Morgan) போன்ற உலகப் புகழ்பெற்ற மரபியல் அறிஞர்களின் புத்தகங்கள் சோவியத் பல்கலைக்கழகங்களில் தடை செய்யப்பட்டு தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. வாவிலோவ் உட்பட சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உயிரியல் விஞ்ஞானிகள் சிறையிலிடப்பட்டனர், நாடு கடத்தப்பட்டனர் அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்டாலினுக்கு கம்யூனிச சித்தாந்தத்தின் மீது இருந்த அதீத பிடிவாதமும்”இயற்கையை மனிதன் நினைத்தபடி மாற்ற முடியும்” என்ற அவரது எண்ணத்திற்கும் லிசென்கோவின் பொய்கள் சாதகமாக இருந்தன.  லிசென்கோ சொன்ன எந்த ஒரு முறையும் நிலத்தில் பலன் தரவில்லை. சோவியத் யூனியனின் தானிய உற்பத்தி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

லிசென்கோவின் பொய்களை நம்பி ரஷ்யா தனது பாரம்பரிய விதை வங்கிகளை இழந்தது. 1960-களின் பிற்பகுதி வரை ரஷ்யாவின் விவசாயம் மீள முடியாத பாதிப்பைச் சந்தித்தது. இச்சமயத்தில்தான் உக்ரைனில் இருந்த நிகோலாய் பிரிடிஷ் உளவாளி என கருதப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஸ்டாலினின் பார்வையில், லிசென்கோ ஒரு “பாட்டாளி வர்க்க விஞ்ஞானி”. ஆனால் வாவிலோவ்  ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவர் மற்றும் வெளிநாடுகளில் கல்வி கற்றவர். இதனைப் பயன்படுத்திய லிசென்கோ, வாவிலோவை “மேற்கத்திய நாடுகளின் உளவாளி” என்று ஸ்டாலினிடம் போட்டுக் கொடுத்தார்.1930-களின் இறுதியில் நடந்த அறிவியல் மாநாடுகளில், வாவிலோவ் லிசென்கோவின் கருத்துக்களை ஆதாரங்களுடன் மறுத்தார். “நாங்கள் சிதை நெருப்பில் வேண்டுமானால் இறங்குவோம், ஆனால் எங்கள் அறிவியல் உண்மைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம்” என்று  துணிச்சலாகக் கூறினார்.

அவர் மீது பிரிட்டிஷ் உளவு நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்ததாகவும், சோவியத் விவசாயத்தைச் சீரழித்ததாகவும் பொய்க் குற்றச்சாட்டுகளை  லிசன்கோ சுமத்தினார். இறுதியில், 1943-ல் சரடோவ் சிறையில் பட்டினியால் வாவிலோ  உயிரிழந்தார்.

வாவிலோவின் குடும்பமும் பல ஆண்டுகள் இருட்டில் வைக்கப்பட்டிருந்தது. 1943-ல் வாவிலோவ்  இறந்த செய்திகூட அவர்களுக்குச்   சொல்லப்படவில்லை. அவர்கள் வாவிலோவ்  ஒரு “சிறப்பு முகாமில்” கடிதத் தொடர்பு இல்லாமல் அடைக்கப்பட்டிருப்பதாகவே நம்ப வைக்கப்பட்டனர். 1950-களுக்குப் பிறகுதான், அவர் பட்டினியால் இறந்தார் என்ற கொடூரமான உண்மை அவர்களுக்குத் தெரிய வந்தது.  

சகோதரனின் மரணத்தை அறியாத செர்ஜி 1945-ல் சோவியத் அறிவியல் அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதை ஏற்றுக்கொண்டார். அந்தப் பதவியை அவர் ஏற்றுக்கொண்டதற்குக் காரணமே, அதன் மூலம் கிடைக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்ணனைத் தேடலாம் அல்லது காப்பாற்றலாம் என்ற நம்பிக்கையில்தான்.

ஸ்டாலினின் அரசாங்கத்திடம் தனது அண்ணன் ஒரு தேசத்துரோகி அல்ல என்பதை விளக்கப் பல கடிதங்களை எழுதினார்.ஆனால் லிசன்கோ நிகோலாயின் மரணம் வெளியே தெரியாமல் தடுத்து அவர் தூரமான ஒரு இடத்தில் தனிமைச்சிறையில் இருப்பதாக பொய்களைப் பரப்பிக்கொண்டிருந்தார். நிகோலாயின் முதல் மனைவி, மகன், இரண்டாம் மனைவி, மகன் , மற்றும்  சகோதரனின் குடும்பம் முழுவீச்சில் அவரைக்குறித்து தகவல்களை தேடிக்கொண்டே இருந்தார்கள். சகோதரர் நிகோலாய் பட்டினியால் இறந்துவிட்டார் என்ற  உண்மையை கடைசிவரை அறியாமலேயே  செர்ஜி 1951-ல் இறந்துபோனார்.

நிகோலாயின் முதல் மனைவி எகடெரினா ஒரு விவசாயப் பொருளாதார நிபுணர். இவர்கள் 1912-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால் நிகோலாய்  தனது ஆராய்ச்சிப் பணிகளுக்காகவும்,விதை சேகரிப்புப்  பயணங்களுக்காகவும் எப்போதும் வீட்டை விட்டு வெளியே இருந்ததால், இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு 1926-ல் விவாகரத்து செய்துகொண்டனர்.

நிகோலாய் கைது செய்யப்பட்டபோது, எகடெரினாவும் பெரும் சிரமத்திற்குள்ளானார். பிரிந்து வாழ்ந்தாலும், நிகோலாயின் அறிவியல் முயற்சிகளின் மீதும் அவரது நேர்மையின் மீது அவர் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். நிகோலாயின் மறைவுக்குப் பிறகு, அவரது கௌரவத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளில் எகடெரினாவும் உறுதுணையாக இருந்தார். நிகோலாய் மற்றும் எகடெரினாவிற்கு 1918-ல் பிறந்தவர் ஒலெக். இவர் ஒரு மிகச்சிறந்த இயற்பியல் அறிஞர்.

தனது தந்தை கைது செய்யப்பட்டபோது ஒலெக் இளைஞராக இருந்தார். தந்தையின் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை அவர் உறுதியாக நம்பினார். தந்தையைக்குறித்த தகவல்களைத்  தீவிரமாகத் தேடிக்கொண்டிருந்த  ஒலெக் 1946-ல் காகசஸ் மலைப்பகுதியில்  மலையேற்றத்தின் போது மர்மமாக உயிரிழந்தார். தனது தந்தையின் மரணம் குறித்த உண்மைகளை அவர் தோண்டத் தொடங்கியதாலும், ஸ்டாலினின் ரகசிய போலீசாருக்கு எதிராகக் கேள்விகள் கேட்டதாலும், அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பல வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

இரண்டாம் மனைவி எலினா ஒரு திறமையான தாவரவியலாளர் மற்றும் வாபிலோவின் நீண்டகால ஆராய்ச்சி உதவியாளர். வாபிலோவ் கைது செய்யப்பட்டவுடன், எலினா  “மக்கள் எதிரியின் மனைவி” எனக் கருதப்பட்டு வேலையையும், சமூக அந்தஸ்தையும் இழந்தார். அரசாங்கம் நிகோலாயின் சொத்துக்களை முடக்கியதால், எலினா தனது மகனை வளர்க்க மிகவும் சிரமப்பட்டார்.   

நிகோலாய் கைது செய்யப்படும்போது அவரது மகன்  யூரி நிக்கோலாய் விச் வாவிலோவ் 12 வயதுச் சிறுவன். தனது தந்தை ஏன் அழைத்துச் செல்லப்பட்டார் என்று கூடத் தெரியாத நிலையில் அவர் வளர்ந்தார். ஆனாலும் யூரி தனது சித்தப்பா செர்ஜியின்  வழிகாட்டுதலில் ஒரு சிறந்த இயற்பியலாளராக வளர்ந்தார்.  

யூரி வாழ்நாள் முழுவதையும் தந்தையின் பெருமையை உலகிற்குச் சொல்லவும், தனது தந்தை ஒரு தேசத்துரோகி அல்ல என்பதை நிரூபிக்கவும், அவரது அறிவியல் சாதனைகளை ஆவணப்படுத்தவும் செலவழித்தார்.  ஸ்டாலின் மறைவுக்குப் பிறகு, யூரி ராணுவ ஆவணக் காப்பகங்களிலிருந்து தனது தந்தை தொடர்பான ரகசியக் கோப்புகளைத் தேடி எடுத்தார்.  அந்த ஆவணங்களில் இருந்தும் நிகோலாயுடன் சிறையில் இருந்தவர்களிடமிருந்தும்தான் உடலுறுப்புக்கள் பட்டினியால் செயலிழந்து நிமோனியா தொற்று உருவாகி  இதயம் நின்று மரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்த அவரது மரணச்சான்றிதழ் உள்ளிட்ட பல உண்மைகள் தெரிய வந்தன.  தனது தந்தையின் வாழ்க்கை வரலாறு, அவர் சந்தித்த சித்திரவதைகள் மற்றும் சிறையில் அவர் பட்டினியால் மறைந்தது குறித்த உண்மைகளை யூரி உலகிற்குச் சொன்னார்.

2018-ல் அவர் காலமாகும் வரை, வாபிலோவின் தியாகத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றார். யூரி வாபிலோவ் 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 90-வது வயதில் காலமாகும் வரை, தனது தந்தை உருவாக்கிய லெனின்கிராட் விதை வங்கியின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அறிவியலில் அரசியல் தலையீடு எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் உலகெங்கும் விரிவுரையாற்றினார்.

ஸ்டாலினின் மரணத்திற்குப் பிறகுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. 1953-ல் ஸ்டாலின் இறந்த பிறகு, சோவியத் யூனியனில் “டி-ஸ்டாலினேஷன்”  என்ற கொள்கை மாற்றத்தைக் கொண்டுவந்தார் நிகிதா குருக்ஷேவ், 1955-ல்  வாவிலோவ்  மீதான குற்றச்சாட்டுகளை ராணுவ நீதிமன்றம் மீண்டும் ஆய்வு செய்து, அவர் மீது சுமத்தப்பட்ட “உளவு பார்த்தல்” மற்றும் “சதி” போன்ற அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பொய்யாக உருவாக்கப்பட்டவை என்று  கூறியது.

1955-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், நிக்கோலாய் வாவிலோ முழுமையாகக் குற்றமற்றவர் என்று அறிவிக்கப்பட்டு, அவரது கௌரவம் மீட்டெடுக்கப்பட்டது. அவர் நிறுவிய விதை சேகரிப்பு நிறுவனத்திற்கு ‘வாபிலோவ்  நிறுவனம்’ (Vavilov Institute) என்று பெயர் சூட்டப்பட்டது.   

ட்ரோஃபிம் லிசென்கோவினால் உருவாக்கப்பட்ட போலி அறிவியல் கொள்கை லிசென்கோயிசம் (Lysenkoism) எனப்படுகிறது. இது தாவர/வேளாண் அறிவியல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயமாகவே இன்று வரை குறிப்பிடபப்டுகிறது.  

லிசென்கோவின் முறைகளைப் பின்பற்றி பயிரிடப்பட்ட கோடிக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாழாயின. இது சோவியத் யூனியனில் ஏற்பட்ட பெரும் பஞ்சத்திற்கு காரணமாக அமைந்தது.

சுமார் 3,000-க்கும் மேற்பட்ட உண்மையான மரபியல் விஞ்ஞானிகள் சிறையில் அடைக்கப்பட்டனர் அல்லது கொல்லப்பட்டனர். நிக்கோலாய் வாவிலோவ்  இவர்களில் முக்கியமானவர்.

மெண்டல் மற்றும் டார்வினின் புத்தகங்கள் எரிக்கப்பட்டன. சோவியத் யூனியன் உயிரியல் துறையில் சுமார் 50 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றது. 

ஸ்டாலினுக்குப் பிறகு லிசென்கோவின் செல்வாக்கு குறையத் தொடங்கியது. 1964-ல் சோவியத் அறிவியல் அகாதெமி அவரது கொள்கைகளை அதிகாரப்பூர்வமாக நிராகரித்தது. இன்று, “லிசென்கோயிசம்” என்ற சொல் “அரசியல் காரணங்களுக்காக அறிவியலைத் தவறாகப் பயன்படுத்துவதைக்” குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

மற்ற உலக நாடுகளில் டி.என்.ஏ (DNA) கண்டுபிடிப்பிற்குப்பிறகு நவீன மரபியல் துறை அசுர வேகத்தில் வளர்ந்தது. சோவியத் விஞ்ஞானிகள் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது தாங்கள் எவ்வளவு பின்தங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தனர்.  ஸ்டாலினுக்குப் பின் வந்த குருக்ஷேவ் தொடக்கத்தில் லிசென்கோவை ஆதரித்தாலும், இறுதியில் அவரது திட்டங்கள் தோல்வியடைந்ததால் அவரை ஓரங்கட்டினார். 1964-ல் லிசென்கோ தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

லிசென்கோ 1976-ல் இறக்கும் போது, ஒரு காலத்தில் அவர் கேலி செய்த “மரபியல்” (Genetics) சோவியத் யூனியனில் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. 

எங்கு புதைக்கப்பட்டார் என்று தெரிந்தால் அவரது கல்லறைக்கு மரியாதை செய்யப்படும் என்பதால் திட்டமிட்டு   கூட்டத்தோடு கூட்டமாய் புதைக்கப்பட்ட  நிகோலாய் வாவிலோவ் இன்று  ஒரு உலகளாவிய நாயகனாகக் கொண்டாடப்படுகிறார்; லிசென்கோ “அறிவியலுக்கு எதிரான அரசியலின்” அடையாளமாகப் பார்க்கப்படுகிறார்.

வாவிலோவ் பாதுகாத்த அந்த லெனின்கிராட் விதை வங்கி இன்று ரஷ்யாவில் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகிறது

உண்மையான அறிவியல் அறிஞரான நிகோலாய், உணவை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, இறுதியில் பசியால் சிறையில் இறந்தார்.போலி அறிவியலைப் பரப்பி லட்சக்கணக்கான மக்களின் பசிக்கும் இறப்பிற்கும் காரணமாக இருந்த லிசென்கோ தனது முதுமைக் காலம் வரை வசதியாக ஒரு மாதிரிப்பண்ணையில் அவர் நம்பிய போலிஅறிவியல் ஆய்வுகளைச்செய்துகொண்டு  இயற்கையாக இறந்தார்.

வேதகாமத்தில் “மண்ணில் விழுந்த கோதுமை மணி” என்னும் வரிகள் இருக்கிறது(. யோவான் 12-ம் அதிகாரம், 24-ம் வசனம்.)

“மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைத் தரும்.”

மண்ணில் விழுந்த கோதுமை மணி உவமைக்கு நிக்கோலாய் வாவிலோவை விடச் சிறந்த உதாரணம் அறிவியல் வரலாற்றில் வேறெங்கும் இருக்க முடியாது.  விதை சேகரிப்பில் ஈடுபட்டு பட்டினியில் மடிந்த, மண்ணில் விழுந்த ‘கோதுமை மணி’ யான நிகோலாய் இன்று உலகெங்கும் விளையும் ஒவ்வொரு கதிரிலும் வாழ்கிறார்!

ஆலிஸ் பால்

ஆலிஸ்பால், காளிஹி மருத்துவமனையின் மிக உயரமான கம்பிவேலிக்கு வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ளே கை, கால்களில் துணி சுற்றப்பட்டு, வெளி உலகைப் பொறுத்தவரையில் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட தொழுநோயாளிகள் ஒரு பெரிய கூண்டு வண்டிக்கு முன்பாக வரிசையில் நிற்கவைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் ‘உயிருடன் இருப்போரின் கல்லறை’ என்று அழைக்கப்பட்ட காலாபாப்பா (Kalaupapa) தீவுக்குக் கொண்டு செல்லப்படவிருந்தார்கள். பலர் கதறி அழுதபடி இருந்தார்கள் மேலும் சிலர் தலையைக்குனிந்தபடி கம்பி வேலிக்கு வெளியே நின்று கதறிக்கொண்டிருக்கும் குடும்பத்தினர் பார்க்காமல்  கண்ணீரை மறைத்துக்கொண்டு வண்டிக்குள் ஏறினார்கள்.

மணிக்கணக்காக அங்கே நின்று இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஆலிஸ், மாலை ஆகிவிட்டிருந்தாலும் வீட்டுக்குச் செல்லாமல் ஹவாய் பல்கலைக்கழகத்தில் அவள் பணிபுரிந்துகொண்டிருந்த வேதியியல் ஆய்வகத்திற்குச் சென்றாள். தொழுநோயாளிகளை அடைத்துவைக்கும் பெரும் கதவுகளையும் கம்பிமுள்வேலிகளையுமே அரசும் பிற மருத்துவர்களும் ஆய்வாளர்களும் உருவாக்கியிருந்த அந்தக்காலத்தில், ஆலிஸ் அந்தக் கதவுகளைத் திறக்கும் சாவியைக் கண்டுபிடிக்க முனைந்தாள்.

1915-களில் ஹவாய் தலைநகர் ஹோனலுலூவின் வீதிகளில் மருத்துவ வாகனங்களின் சைரன் தொடர்ந்து ஊளையிட்டுக்கொண்டே இருந்தது. அதைக் கேட்கையிலெல்லாம் வீடுகளில் மக்கள் குழந்தைகளை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கண்ணீருடன் ஒடுங்கி அமர்ந்திருந்தார்கள். அந்த வண்டிகளில் இருந்த ‘Bounty Hunters’ எனப்படும் அரசு சுகாதாரத்துறையின் கண்காணிப்புக் காவலர்கள், குணப்படுத்தவே முடியாது என அப்போது கருதப்பட்ட தொழுநோய் மக்களுக்கு மத்தியில் பரவாமல் இருக்க, நோய் அறிகுறி தென்படும் நபர்களைத் தேடிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஒரே ஒரு சிறு வெண்திட்டு சருமத்தில் தெரிந்தாலும் இரக்கமின்றி அவர்களை இழுத்துச் சென்றார்கள். சிறு குழந்தைகளும் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள். தொழுநோய் பாதிப்பிருந்தவர்கள், வெளிஉலகத்துடன் தொடர்பு கொள்ளவே முடியாத வகையில் கம்பிவேலி இடப்பட்டிருந்த காளிஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள்.

அப்போது தொழுநோய் ‘லெப்ரஸி’ என்றல்லாமல் ஹேன்சென் நோய் (Hansen’s Disease) என்று அழைக்கப்பட்டது. அந்த நோய் முன்வினைகளினாலும், செய்த பாவங்களினாலும், சுகாதாரம் அற்றோருக்கும் வரும் குணப்படுத்த முடியாத ஒன்று என்று பலகாலமாக உலகம் நம்பிக் கொண்டிருந்தபோது, நார்வீஜிய மருத்துவரான கெர்ஹர்ட் ஆன்சர் ஹேன்சென் (Gerhard Armauer Hansen), 1873-ல் தொழுநோய் ‘மைகோபாக்டீரியம் லெப்ரே’ (Mycobacterium leprae) என்னும் பாக்டீரியாவினால் உண்டாகிறது என்றும், அதைச் சிகிச்சையளித்துக் குணப்படுத்த முடியும் என்றும் அறிவித்தார்.

அந்த பாக்டீரியாவுக்கெதிரான சிகிச்சைகள் உலகெங்கிலும் பின்னர் முன்னெடுக்கபட்டாலும் எதுவும் வெற்றிபெறவில்லை. முறையான மருத்துவசிகிச்சைகள் இல்லாமல் தொழுநோய் குணப்படுத்தமுடியததாகவே இருந்தது.

மருத்துவ வரலாற்றில் 1915-ம் வருடம்  ஹவாயின் மாபெரும் தனிமைப்படுத்தலுக்கான காலமாகவே குறிப்பிடப்படுகிறது. தொழுநோயைக் குணப்படுத்த முடியாது என்று நம்பி, நோயுற்றவர்கள் குடும்பத்திலிருந்தும் சமூகத்திலிருந்தும் ஒதுக்கிப் பிரிக்கப்பட்டு, மனிதர்கள் எளிதில் வரமுடியாத காலாபாப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். செங்குத்தான பாறைகளால் இயற்கையாகவே அரண் அமைந்திருந்த, பெரும்பகுதி நீரால் சூழ்ந்தும், பெருநிலப்பரப்புடன் நிலத்தால் இணைக்கப்பட்டும் இருந்த இடம்தான் காலாபாப்பா.

கூண்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டவர்களை மீண்டும் கப்பலில் ஏற்றி காலாபாப்பாவுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். ஆனால் காலாபாப்பாவின் செங்குத்தான பாறைப்பகுதியில் கப்பல்கள் உடைந்து சேதமுறும் என்பதால், கப்பல்களைத் தொலைவிலேயே நிறுத்தி பயணிகளை மிகமிகக் குளிரான கொந்தளித்துக் கொண்டிருக்கும் கடல்நீரில் குதிக்கச் சொல்லுவார்கள். நீச்சல் தெரிந்தவர்களும், நீந்துமளவுக்கு உடலில் தெம்பு இருப்பவர்களும் கரைசேர்ந்து காலாபாப்பாவுக்குச் செல்வார்கள். பலவீனமானவர்கள் தங்களது புதிய தங்குமிடத்தைக் கண்ணால் பார்த்தபடியே கடலில் மூழ்கி மறைவார்கள். அந்த புதிய தங்குமிடத்தில் எந்த விதிகளும் கட்டுப்பாடுகளும் இருக்காது. மிகக்குறைந்த அளவு உணவும் எளிய குடிசைகளும் இருக்கும். அங்கே அவர்கள் ஒரு நோயுற்ற சமூகமாக வாழ்ந்து, தாங்கள் விட்டுவிட்டு வந்த குடும்பத்தை, உற்றார் உறவினர்களை நினைத்தபடி அங்கேயே மடிவார்கள்.

காலாபாப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட கணவன் அல்லது மனைவியின் ஹோனலுலூவில் இருக்கும் இணை, விவாகரத்தானவர்களாகச் சட்டப்படி கருதப்படுவார்கள். காலாபாப்பாவில் இருப்போரின் சொத்துக்களும் சட்டப்படி அவரது குடும்பத்தினரைச் சேரும். காலாபாப்பாவில் யாரேனும் கருவுற்று குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை உடனடியாகத் தாயிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டு காளிஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும்.

காலாபாப்பாவில் இருந்த நோயாளிகளுக்கு மருந்தோ மருத்துவமோ எதுவுமில்லை. சில மாதங்களுக்கு ஒருமுறை வருகை தரும் மருத்துவர்கள் ஒரு கண்ணாடிக் கதவுக்குப் பின் நின்றபடி அவர்களைப் பார்த்து சில களிம்புகளை அளிப்பார்கள். அதைத் தடவிக்கொள்ள பேண்டேஜ் துணிகள் இல்லாததால், தங்களின் பழைய உடைகளைக் கிழித்து புண்களின் மீது சுற்றிக்கொள்வார்கள். 

ஜெபம் செய்விக்கவும், இறுதிப் பிரார்த்தனைக்கும் அவ்வப்போது சில கிறிஸ்தவ பாதிரியார்கள் செல்வதுண்டு. அவர்களும் தொலைவிலிருந்தபடியே அவர்களைச் சந்திப்பார்கள். இவர்களில் மிக மிகக் கருணையோடும் அன்புடனும் இருந்த இருவர் இறைப்பணியாளர் டேமியன் மற்றும் சகோதரி மரியேன் கோப் (Father Damien and Mother Marianne Cope) மட்டுமே. அங்கு அனைவரும் சக மனிதர்கள் தசை அழுகி கொஞ்சம் கொஞ்சமாகக் கண்முன்னே இறப்பதைப் பார்த்தபடி நிசப்தமாகவே இருந்தார்கள். எப்போதும் அங்கே கேட்டுக்கொண்டிருந்தது சவப்பெட்டிகள் செய்யப்படுகையில் எழும் ஒலி மட்டும்தான்.

உலகமே சிகிச்சையில்லை என்று முடிவு செய்து புறக்கணித்த அவர்களைக் காப்பாற்றத்தான்  23 வயதே ஆன  வேதியியலாளரான ஆலிஸ்பால் முடிவு செய்தாள். 

ஆலிஸ் பால் ஜூலை 24, 1892-ல் சியாட்டிலில் அறிவியலில் ஆர்வம் கொண்டிருந்த, கல்வியறிவு கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார். ஆலிஸின் தந்தை ஒரு வழக்கறிஞர், பத்திரிகையாளர் மற்றும் புகைப்பட நிபுணர். ஆலிஸின் தாத்தா உலகப்புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர். ஆலிஸின் அன்னையும் ஒரு புகைப்படக் கலைஞர் தான், எனினும் அவர் குழந்தைகளை வளர்க்கும் பொருட்டு அந்தக்கலையிலிருந்து விலகியிருந்தார்.

ஆலிஸ் தன் தாத்தாவின் இருட்டு அறையில் சில்வர் நைட்ரேட்டும் சில அமிலங்களும் இணைந்து அழகிய புகைப்படங்கள் ஒரு மாயாஜாலம் போல உருவானதை ஆர்வமுடன் கவனித்து வளர்ந்தாள். மிக இளமையிலேயே ஆலிஸுக்கு ரசாயனங்களின் இயல்பும் வாசனையும் அத்துப்படியாகி இருந்தது. 

ஒடுங்கிய சிறிய உருவம் கொண்டிருந்த ஆலிஸ், கடுமையான ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டிருந்தார். சியாட்டிலிலேயே, அப்போது கறுப்பினப் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்த பாடங்களாகிய கணிதமும் அறிவியலையும் போராடிப் பெற்றுப் படித்து உயர்நிலைக் கல்வியை ஆலிஸ் முடித்தாள். பள்ளிக்காலத்தில் வகுப்பறைகளில் அமைதியாக கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தாலும், பள்ளி விழாக்களில் நாடகங்களில் ஆர்வமாக ஆலிஸ் பங்கெடுத்துக்கொண்டாள். எப்போதும் நகைச்சுவை உணர்வு நிரம்பியவராகவே ஆலிஸ் அவரது பள்ளித் தோழர்களால் நினைவுகூறப்பட்டார். பள்ளி இறுதிவிழா மலரில் ஆலிஸ், “நான் வேலை வேலை வேலையென்று தொடர்ந்து செய்துகொண்டே இருக்கிறேன், ஆனாலும் எதுவுமே செய்யாதது போலத்தான் இருக்கிறது” என்று எழுதியிருந்தார்.

மிக மிகப் புத்திசாலியான ஆலிஸ் கல்லூரிக்குச் செல்லாமல் நேரடியாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்திற்குச் சென்று, 1912-ல் மருந்தாக்க வேதியியலிலும், 1914-ல் மருந்தியல் துறையிலும் இரண்டு இளங்கலைப் பட்டங்கள் பெற்றார். 1914-ல் இளங்கலை மாணவியாக இருக்கையிலேயே ஆலிஸின் 11 பக்க மருந்தியல் கட்டுரை ஒன்று பிரபல அமெரிக்க வேதியியல் நிறுவனத்தின் சஞ்சிகையான Journal of the American Chemical Society-யில் வெளியானது. 1914-களில் ஒரு கறுப்பினப் பெண் இதையெல்லாம் செய்வார் என உலகம் கற்பனை கூடச் செய்திருக்கவில்லை.

பின்னர் ஆலிஸ் கடல் கடந்து ஹவாய் கல்லூரிக்கு (இப்போது ஹவாய் பல்கலைக்கழகம்) முதுகலை படிக்கச் சென்றாள். உயர்நிலைப்பள்ளி மதிப்பெண்களினால் அவளுக்கு இளங்கலை படிக்க உதவித்தொகை கிடைத்தது. 

ஆஸ்துமாவினால் ஆலிஸ் மற்றும் அவளின் தாத்தா இருவருமே அவதியுற்றதால் ஹவாயின் காலநிலை அவர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று ஆலிஸ் குழந்தையாக இருக்கையிலேயே ஹவாய்க்கு அவளது குடும்பம் இடம்பெயர்ந்திருந்தது. எனினும் அவளது தாத்தா சில ஆண்டுகளில் காலமானதால் மீண்டும் அவர்கள் சியாட்டிலுக்கே வந்தார்கள். பால்யகால நினைவுகளால் ஆலிஸுக்கு ஹவாயின் மீது தனிப்பிரியமிருந்தது.

1915-ல் ஹவாய் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க அமெரிக்கப் பெண் ஆனார் ஆலிஸ். ஆலிஸின் அதிபுத்திசாலித்தனத்தைப் பார்த்த ஹவாய் பல்கலைக்கழகம் அங்கேயே ஆலிஸுக்கு ஆசிரியையாகப் பணியாற்றவும் அனுமதி அளித்தது. 23 வயதில் ஹவாய் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கக் கறுப்பினப் பெண் என்னும் சாதனைக்கும் ஆலிஸ் உரித்தானாள்.

அந்தச் சமயத்தில்தான் ஹவாய் தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் மருத்துவரான டாக்டர் ஹாரி டி. ஹோல்மேன் (Dr. Harry T. Hollmann), இந்திய மற்றும் சீனப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் தொழுநோயைக் குணப்படுத்துவதாகச் சொல்லப்பட்ட, மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் Hydnocarpus wightianus என்னும்  மரவட்டை என அழைக்கப்பட்ட மூலிகைக் குறுமரமொன்றின் விதை எண்ணெயைக் குறித்து ஆய்வுகள் செய்துதரும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

‘மரவட்டை எண்ணெய்’ எனத் தமிழிலும், ‘Chaulmoogra’ என்று இந்தியிலும் அழைக்கப்பட்ட அந்த விதை எண்ணெயை இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் தொழுநோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்பட்டது. ஹவாயில் அந்த எண்ணெய் களிம்பு போலத் தொழுநோயாளிகளின் உடலில் பூசப்பட்டது. ஆனால் அந்த எண்ணெய்க்குச் சருமத்தை ஊடுருவிச் செல்லும் திறன் இல்லாததால், சருமத்தின் அடியடுக்கில் வாழ்ந்த ‘மைக்கோபாக்டீரியம் லெப்ரே’வை அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

பின்னர் மருத்துவர்கள் நோயாளிகளைப் பலவந்தப்படுத்தித் தினந்தோறும் அந்த எண்ணெயைக் குடிக்கச் சொன்னார்கள். கடுமையான நெடியும் கசப்பும் கொண்டிருந்த அந்த எண்ணெய் பல வயிற்று உபாதைகளையும் வாந்தியையும் உண்டாக்கியது. பல நோயாளிகள் இந்த எண்ணெய் கொடுக்கும் கஷ்டங்களுக்குத் தொழுநோயின் வேதனையே பரவாயில்லை என்று முடிவு செய்து அந்தச் சிகிச்சையை ஏற்க மறுத்தார்கள். 

மேலும் சில மருத்துவர்கள் அந்த எண்ணெயை ஊசியாக உடலுக்குள்ளே செலுத்தினார்கள். ஆனால் நீரில் கரையாத இயல்பு கொண்டிருந்த அந்த எண்ணெய், ஊசி குத்தப்பட்ட இடத்திலேயே தங்கி நின்று மிகுந்த வலியை அளித்து எண்ணெய்க் கொப்புளங்களை உருவாக்கியது.

இந்த எண்ணெய் மருந்தினை உடல் ஏற்றுக்கெள்ளும் வகையில் தயாரிப்பதைக் குறித்த ஆய்வுகள் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மும்முரமாக நடந்துகொண்டிருந்த போதுதான் ஆலிஸிடம் உதவி கேட்கப்பட்டது. காளிஹி மருத்துவமனையில் தொழுநோயாளிகளின் துயரமான நிலையையும் அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினரையும் நேரில் பார்த்து, காலாபாப்பாவின் கொடுமைகளைக் கேள்விப்பட்ட ஆலிஸ், அவர்களுக்கு எப்படியாவது உதவ நினைத்தாள். கற்பித்தலுக்கான நேரம் போக நள்ளிரவு வரையிலும், மிகச்சிறிய, மிகக்குறைந்த வசதிகள் கொண்ட, காற்றோட்டம் அவ்வளவாக இல்லாத அந்த ஆய்வகத்திலேயே ஆலிஸ் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

களிம்பாகத் தடவுவது, குடிப்பது மற்றும் ஊசி மருந்தாக்குவது ஆகிய, தோல்வியுற்ற அந்த மூன்று முறைகளையும்  ஆலிஸ் ஆராய்ந்தாள். அந்த விதை எண்ணெய் ‘ஹைட்ரோஃபோபிக்’ (Hydrophobic), அதாவது நீரை விலக்கும் இயல்பைக் கொண்டிருந்ததை அறிந்த ஆலிஸ், பிரச்சனை மனிதர்களின் உடலியங்கியலிலோ உயிரியலிலோ இல்லை, எண்ணெயின் வேதியியலில் இருப்பதை கண்டுபிடித்தாள். தொடர்ந்த பல்வேறு  ஆய்வுகளுக்குப் பின் அந்த விதை எண்ணெயில் இருந்த கொழுப்பு அமிலங்களை ஈதைல் எஸ்டர்களாக (Ethyl Esters) மாற்றி,  உலகைன் எந்த நாட்டிலும்  மிகப்பெரிய விஞ்ஞானிகளும் முயற்சி செய்துகூட  பார்த்திராத இரண்டு செய்முறைகளை ஆலிஸ் உருவாக்கினாள்.

அந்த மருந்தின் அடர்த்தியைக் குறைத்து, மிக நீர்த்த, எளிதில் உடலில் செலுத்தக் கூடிய ஊசி மருந்தாக மாற்றினாள்.

அந்த எண்ணெயை  நீரில் கரையும் வடிவத்தில் மீண்டும் மாற்றி, உடல் எளிதில் அதை ஏற்றுக்கொண்டு ரத்தநாளங்களின் வழியே பயணித்து மைக்கோபாக்டீரியாவுடன் போரிட வகை செய்தாள்.

அந்தச் செய்முறைக்கு ‘ஆலிஸ் பால் செய்முறை’ (Ball Method) என்று பெயரிட்டாள். ஆலிஸ் பாலுக்கு முன்பாகத் தகுந்த வேதி வடிவமைப்பு இல்லாததாலேயே சிகிச்சைக்குப் பலனளிக்க முடியாமல் சிறப்பட்டிருந்த அந்த மருந்தை, பல நோயாளிகளின் ரத்தநாளங்கள் வழியே பயணப்படச் செய்யும் முறையைக்கண்டறிந்தாள் ஆலிஸ்.

மாபெரும் வெற்றியான இதன் செய்முறைகளையெல்லாம் வரிவரியாகத் தனது ஆய்வுக் குறிப்பேட்டில் எழுதி வைத்த ஆலிஸ், தொழுநோய் ஆய்வு மைய மருத்துவர்களுக்கு நோயாளிகளுக்கு அந்த மருந்தை கொண்டு சிகிச்சையளிக்கச் சொல்லி சிறிதளவு மருந்தினையும் தயாரித்துக் கொடுத்தாள். அந்த மருந்து ஒரு சிலருக்கு அளிக்கப்பட்டு அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட போது Dr. ஹாரி மேலும் மருந்துகள் தேவை என ஆலிஸிடம் கேட்டுக்கொண்டார். பெருமளவில் மருந்தைத்தயாரிக்க ஆய்வுமுடிவுகளை முறையாக அங்கீகரிக்கப்பட்ட சஞ்சிகைகளில் பிரசுரிக்க வேண்டி இருந்தது எனவே ஆலிஸ் அதில் மூழ்கி இருந்தாள்.

அச்சமயத்தில்தான் இரக்கமற்ற விதி ஆலிஸின் வாழ்வில் நுழைந்தது. வேதியியல் செய்முறை வகுப்பொன்றில் மாணவர்களுக்கு , எதிர்பாராமல் நச்சு வேதிப்பொருள் கசிகையில், முகக்கவசம் அணிவது எப்படி என்று கற்றுக்கொடுக்கையில் தவறுதலாக குளோரின் வாயுவை ஆலிஸ் சுவாசித்தாள்.

அதனால் இரண்டு நுரையீரல்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நோயுற்ற ஆலிஸ், ஆய்வை அப்படியே நிறுத்திவிட்டு விடுப்பு எடுத்துக்கொண்டு சியாட்டிலுக்குச் சென்றாள். அங்கே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் கடினமாகப் போராடியும் பயனின்றி, டிசம்பர் 31, 1916-ல் 24 வயதே ஆன ஆலிஸ் மரணமடைந்தாள்.

தொழுநோய் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு ஆலிஸ் மருந்தைக் கொடுத்துவிட்டிருந்தாலும், தனது ஆய்வு முடிவை அவள் பிரசுரிக்காமலிருந்தாள். அப்போதுதான் வந்தார் ஆர்தர் டீன் (Arthur Dean) எனும் அறமற்ற ஒருவர். ஆலிஸ் அங்கு பணிபுரிகையில் ஆர்தர் டீன் ஹவாய் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்தார். மிக மதிக்கப்பட்ட விஞ்ஞானியான அவர், பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளையும் ஆய்வகங்களையும் அவரது மொத்தக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ஆலிஸ் விட்டுச்சென்ற குறிப்புகளையும் மருந்து தயாரிப்பதற்கான சூத்திரத்தையும் தானே எடுத்துக்கொண்ட டீன், ஏராளமான ஊசி மருந்தைத் தயாரித்து காலாபாப்பாவில் இருக்கும் நோயாளிகளுக்கு அனுப்பி, காளிஹி மருத்துவமனைக்கும் அனுப்பினார். அந்தச் செய்முறைக்கே ஆலிஸ் பாலின் பெயரை நீக்கி ‘டீன் முறை’ எனப் பெயரிட்டுப் பெரும்புகழடைந்தார். 1919-1920 களில் இது தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகளையும் தனது பெயரிலேயே அவர் பிரசுரித்தார். உலகமே ஆயிரமாண்டுகளாக மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக இருந்த தொழுநோய்க்கு ஹவாய் பல்கலைக்கழகத் தலைவர் ஒற்றை ஆளாக மருந்தை கண்டுபிடித்துவிட்டார் என்று கொண்டாடியது.

காளிஹி மருத்துவமனையில் 78 நோயாளிகள் காலாபாப்பாவிற்குச் செல்லுமுன்பான காத்திருக்கும் பகுதிக்கு மாற்றப்பட்டார்கள். டாக்டர் ஹோல்மேன் அவர்களுக்கு ஆலிஸ் பால் முறையில் தயாரிக்கப்பட்ட ஊசி மருந்தினைச் செலுத்தினார். அவர்களிடம் நோய் அறிகுறிகளில் ஏதேனும் மாற்றம் நிகழ்ந்து நோய் குறையத் தொடங்கினால் மட்டுமே அவர்கள் காலாபாப்பாவுக்குச் செல்வது தடுக்கப்படும் என்றும், நோய் அப்படியே இருந்தாலோ மேலும் முற்றினாலோ அனைவரையும் போல காலாபாப்பாவுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ஒரு சில மாதங்களிலேயே நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றம் தெரியவந்தது. அவர்களின் உடலில் இருந்த தடித்த வலிமிகுந்த வெண்திட்டுப் புண்கள் உலர்ந்து சுருங்கி மறைந்தன. ஆலிஸின் மறைவுக்குப் பின்னரும் அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

1920-ல் மருத்துவர் குழு ஒன்று காளிஹி மருத்துவமனைக்கு வந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் இருந்த அந்த 78 நோயாளிகளைக் கவனமுடன் பரிசோதித்தார்கள். அவர்களுக்கு நோய் அறிகுறி எதுவும் இல்லை என்றும், மைக்கோபாக்டீரியம் லெப்ரே அவர்கள் உடலில் இல்லையென்றும் அந்தக்குழு திட்டவட்டமாக அறிவித்தது. பல்லாயிரம் பேர் அந்த கம்பிவேலிக்குள்ளேயே இருந்து வெளி உலகைக் காணாமல் மரணமடைந்திருந்த வேளையில், அந்த 78 பேர் முதன்முதலாக அந்த கம்பிவேலியைக் கடந்து தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள். அவர்களில் 1907-ல் பிடிக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட 9 வயது சிறுமி நைலிமாவும் இருந்தாள். அவளது பெயரைத்தவிர மற்றவர்களின் பெயரகளை அறிந்துகொள்ல முடியவில்லை.

மருத்துவ உலகின்  இந்த மிக முக்கியமான திருப்புமுனைச் செய்தி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் சஞ்சிகையான JAMA-வில் வெளியானது. பின்னர் உலகமே தொழுநோய் என்பது சிகிச்சையளித்துக் குணமாக முடிந்த ஒரு நோய் என்பதை அறிந்துகொண்டது.

1921-ல் மேலும் 94 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினார்கள். பின்னர் தொழுநோய் பாதிக்கப்பட்ட மக்கள் ‘காலாபாப்பாவுக்குப் பிடித்துச் செல்லப்படுவோம்’ என்னும் அச்சமின்றி, தங்களை மறைத்துக் கொள்ளாமல் ஆலிஸ் பால் முறையில் உருவாக்கப்பட்ட மருந்தை செலுத்திக் கொள்ள முன்வந்தார்கள்.

ஆனால் ஆலிஸின் பெயர் டீனால் முற்றிலுமாக மறைக்கபட்டது. 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலமான அப்போது தொழுநோய்க்கு மருந்து கண்டுபிடித்தது மாபெரும் மருத்துவச் சாதனையாகக் கருதப்பட்டு, ஹவாய் பல்கலைக்கழகத்துக்கும் டீனுக்கு தனிப்பட்ட முறையிலும் பெரும் நிதி உதவிகளும் புகழும் கிடைத்தன. 

ஆலிஸ் இதில் ஏதோ செய்துகொண்டிருந்தார் என்று ஓரளவுக்கு அறிந்திருந்தவர்கள் கூட, 24 வயதே ஆன கறுப்பினப் பெண்ணைக் காட்டிலும் அனுபவம் வாய்ந்த ஒரு வெள்ளைக்காரர் தான் அந்த கண்டுபிடிப்பைச் செய்திருக்க முடியும் என்று உடனே நம்பவும் செய்தார்கள்.

ஆலிஸிடம் முதலில் உதவி கேட்டிருந்த டாக்டர் ஹாரி ஹோல்மேன் இந்த ஆய்வுத் திருட்டை அறிந்து, 1922-ல் ஒரு ஆய்வறிக்கையாகவே ‘ஆலிஸ் பால் முறை’ எனப் பெயரிட்டு ஆலிஸின் எல்லா ஆய்வுகளையும் அதில் குறிப்பிட்டுப் பிரசுரம் செய்தார். எனினும் 84 ஆண்டுகளுக்குப் பல்கலைக்கழகத் தலைவராக இருந்த டீனின் செல்வாக்கினால் வரலாற்றில் ஆலிஸின் பெயர் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தது. பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்களில் டீன் பெயர் இடம்பெற்று, ஹவாய் பல்கலைக்கழகமாக மாறிய அந்த கல்லூரியின் ஒரு மாபெரும் அரங்கிற்கு டீன் பெயர் சூட்டப்பட்டது.

ஆலிஸின் பெயரை வெளிக்கொணர டாக்டர் ஹோல்மேன் செய்த முயற்சிகள் பயனற்றுப் போயின. 1970-80களில் காளிஹி மருத்துவமனையில் பணியாற்றிய ஓய்வுபெற்ற அதிகாரியும் ஆய்வாளருமான ஸ்டான் அலி (Stan Ali) மற்றும் ஹவாய் பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் கேத்ரின் தகாரா (Dr. Kathryn Takara), ஆகிய இருவருமே ஆலிஸின் உழைப்பையும் உண்மையையும் வெளிக்கொண்டு வந்தார்கள்.

கேதரின் ‘ஹவாயில் கறுப்பினப் பெண்கள்’ என்னும் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அவர் ஹவாயில் அதுவரை பட்டம்பெற்ற கறுப்பினப் பெண்களின் பட்டியலைப் பார்த்தபோது, முதல் கறுப்பினப் பெண்ணான ஆலிஸின் பெயரைப் பார்த்து ஆச்சரியமடைந்தார். ஸ்டான் அலி காளிஹி மருத்துவமனை ஆவணங்களிலும், கேத்ரின் ஹவாய் பல்கலைக்கழக ஆவணங்களிலும் தோண்டித் துருவி, ஆலிஸின் அசல் ஆய்வுகளுக்கான சான்றுகளை 2000-த்தில் தேடியெடுத்து உலகின் பார்வைக்குக்கொண்டு வந்தார்கள்.

ஆதாரங்களுடன் ஆலிஸின் அரும்பணி வெளிவந்தபோது உலகெங்கும் பெரும் அதிர்வலைகள் உண்டாகியது. ஹவாய்ப்பலகலைக்கழகம் சுதரித்துக்கொண்டு பல்கலைக்கழக அளவிலான விசாரணையை தீவிரமாக முன்னெடுத்து அனைதும் உண்மை என கண்டுகொண்டது. 

நடந்த தவறுகளுக்கு பிழையீடாக 2000-த்தில் ஹவாய் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த ஒரே ஒரு சௌல்மூக்ரா (Chaulmoogra) மரவட்டை மரத்துக்கு ஆலிஸின் பெயர் சூட்டப்பட்டது. அந்த மரத்தடியிலுள்ள ஒரு வெண்கலப் பலகையில், “ஆலிஸ் பால் சௌல்மூக்ரா எண்ணெயிலிருந்து ஈதைல் எஸ்டர்களைப் பிரித்தெடுத்தாள். அவளது பால் முறை தான், சல்ஃபோன் மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் வரை பல்லாண்டுகளாகத் தொழுநோய்க்கு மருந்தாக இருந்தது” என்று பொறிக்கப்பட்டது.

2022-ல்  ஹவாய் கவர்னர், லீப் வருட பிப்ரவரி 29 ‘ஆலிஸ் பால் நாளாக’ கொண்டாடப்படும் என்று (மற்ற வருடங்களில் பிப்ரவரி 28 அந்த நாள் கொண்டாடப்படுகிறது) அறிவித்தார். ஒவ்வொரு வருடமும் அந்த நாளில் பல்லாயிரக்கணக்கானோர் அந்த மரத்திற்கு ஹவாயின் பிரபல மலர் மாலைகளைச் சூட்டி மகிழ்கிறார்கள். 2007-ல் ஹவாய் பல்கலைக்கழகத்தின் மிக உயரிய விருதான ‘ரிஜெண்ட் பதக்க விருது’ ஆலிஸுக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஹவாய்க்கு ஒரு வசந்த காலத்தில் வந்த ஆலிஸ், நூற்றாண்டுகளாக மருத்துவர்களைக் குழப்பிய ஒரு மாபெரும் மருத்துவப் புதிரை அவிழ்த்துவிட்டு, அடுத்த குளிர்காலத்திற்குள்ளேயே உதிர்ந்துபோன ஒரு அரிய மலர்.

எண்களின் மாயக்காரி எடா லவ்லேஸ்!

படுக்கையில் நகர முடியாமல் கிடந்த எடா, வயிற்றில் சுண்டி இழுத்துக் கொண்டிருந்ததோடு, உடலெங்குமே பரவியிருந்த அதிகபட்ச வலியில் பற்களைக் கடித்துக்கொண்டிருந்தாள். அருகில் அமர்ந்திருந்த அன்னா இஸ்பெல்லாவை ஏறிட்டுப் பார்த்து, “அம்மா கொஞ்சமே கொஞ்சம் அபினைத் தா, பின்னர் நீ என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்; என்னால் வலியைத் தாங்க முடியவில்லை” என்றாள். முகத்தில் எந்த மாறுபாடுமின்றி, “நீ உன் பாவங்களுக்காக மன்னிப்பை எப்போது கேட்கிறாயோ, அப்போதுதான் உனக்கு வேண்டியது கிடைக்கும். எடா, நீ விரைவில் கர்த்தரைச் சந்திக்கவிருக்கிறாய், அப்போது நீ தூய்மையாக இருக்க வேண்டாமா? சொர்க்கத்தில் உனக்கு இடம் கிடைக்கவே நான் இவற்றைச் செய்கிறேன்” என்றாளஅன்னா.

லண்டனில் செயின்ட் ஜேம்ஸ் சதுக்கத்தில் அமைந்திருந்த அந்த பிரம்மாண்டமான மாளிகையில், எடா, அன்னாவின் அனுமதியின்றி யாருமே வர முடியாமலான வெறிச்சோடிக்கிடந்த  அவளது படுக்கையறை வாசலைப் பார்த்தபடி கண்ணீர் வழிந்த கண்களை மூடிக்கொண்டாள்.  

அன்னா இந்த வீட்டுக்கு வருவதற்கு முந்தைய நாள் வரை கர்ப்பப்பை புற்று நோயின் வலியைத்தாங்க மருத்துவர்கள் பரிந்துரைத்திருந்த அபினை எடா அன்றாடம் எடுத்துக்கொண்டிருந்தாள்.   நோய் முற்றி, எடா நடமாடமுடியாமல் படுக்கையில் இருக்கவேண்டி வந்து, அவளைப்பார்த்துக் கொள்ளவென்று அன்னா அங்கு வந்தபிறகு எல்லாம் அன்னாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. மகளின் உச்சவலியைக்காட்டிலும்  இளமையிலிருந்தே தனக்குள் உறைந்துபோன கிறிஸ்துவ நெறிகளுக்கே அன்னா முக்கியத்துவம் கொடுத்தாள். எடாவின் மரணத்தைச் சாக்காக வைத்தாவது  எடா தொலைத்ததாக அன்னா நம்பிய, குடும்ப கெளரவத்தை மீட்டெடுக்கவும் சொர்க்கத்தில் எடாவுக்கு இடம்கிடைப்பதை உறுதிசெய்யவும்  நினைத்தாள் அன்னா.

’’…அம்மா அம்மா…’’ என்று கெஞ்சும் எடாவின் வலி நிறைந்த குரலைப் புறக்கணித்து, அன்னா இஸபெல்லா என்னும் அந்தத்தாய் இறுகிய முகத்துடன் அறையிலிருந்து வெளியேறினாள். நோயுற்றிருந்த எடாவுக்கு வேண்டியதைச் செய்ய அங்கே  ஏராளமான பணியாளர்கள் இருந்தனர். லவ்லேஸ் குடும்பச் சீமாட்டி, கோமான் வில்லியமின் மனைவியான எடா, செல்வாக்குமிக்க பிரபுக்களின் குடும்பத்தில்தான் வாழ்க்கைப் பட்டிருந்தாள். புற்றுநோயின் வலியிலிருந்து தப்பிக்க அவளுக்குக் கஞ்சாவும் அபினும் வெகுவாக உதவின. முன்புபோலக் குதிரைப்பந்தயங்களில் ஈடுபடவும் அவளது நண்பர்களுடன் நேரம் செலவழிக்கவும் அவளால் முடியாமல் போனபோதும், வலியைத் தாங்கிக்கொள்ள அபின் கிடைத்துக்கொண்டிருந்தது. ஆனால், 1852 கோடையில் எடா நடமாட முடியாமல் போனதும், அன்னா இஸபெல்லா மகளின் வாழ்வைத் தன் கையில் எடுத்துக்கொண்டாள்.

கடுமையான  மதம் சார்ந்த ஒழுக்க நெறிகளால் இறுகிப்போன மனம் கொண்ட அன்னா, கணவனின் கிறுக்கு எடாவுக்கு வந்துவிடக் கூடாது என  இளமையிலிருந்தே மிகக் மிகக் கடுமையாக எடாவின் வாழ்வை கட்டமைத்தார்.  எடாவை வேவு பார்க்கவென்றே பல பணியாளர்களை அமர்த்தி, எடாவை ஒரு கணம் கூட சுயமாக வாழவிடாமல் தன் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயன்றாள் அன்னா.

பெருங்கவி பைரனின் காதல் மனைவியாகத் தான் பட்ட பாட்டைத் தன் மகள் படக் கூடாது என அன்னா நினைத்ததில் தவறில்லை; ஆனால் அதை அவள் நடைமுறைப்படுத்தியது மிகக் கடுமையாக எடாவைப் பாதித்தது. அன்னாவின் விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் எதிரானதாகவே தன் வாழ்வை எடா அமைத்துக்கொள்ள முயன்றாள்.

வில்லியம்ஸை மணமுடித்து தன் விருப்பம் போல எடா வாழ்ந்து கொண்டிருக்கையில்தான் அன்னா அவள் வாழ்வில் குறுக்கிட முடியாமலானது. 

ஆனால் புற்றுநோய் எடாவின் வாழ்வை முற்றிலுமாக மாற்றியமைத்தது.  எடா நோயுற்றதும் அன்னா எடாவின் மாளிகைக்கே வந்துவிட்டாள். கடவுளின் மீது விசுவாசம் கொண்டிருந்தவர்கள்  என அன்னா நம்பியவர்கள் மட்டுமே அன்னாவின் அனுமதியுடன் எடாவின் அறைக்கு பணி செய்ய வந்தார்கள். வலி தாங்க முடியாத  எடா அபினுக்காக எதையும் செய்யத் தயாரானபோது, நோயும் அவளை அழைத்துச் செல்லும் அளவுக்கு முற்றி இருந்தது. 

இறப்பு அணுகிக்கொண்டிருப்பதை அறிந்த எடா, வலியில்லாமலாவது மரணத்தைச் சந்திக்க முடிவுசெய்தாள்.  அம்மாவிடம் தான் பாவமன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாகச் சொன்னாள். “முதலில்  ஒரு மனைவியாக நீ செய்த எல்லாப் பாவங்களையும் கணவனிடம் சொல்லிவிடு, பிறகு மற்றவற்றைப் பார்க்கலாம்” என்றாள் அன்னா. கண்ணீருடன் ஒத்துக்கொண்ட எடா, அன்னா அளித்த அபினை உண்டு வலியைக் கட்டுப்படுத்திக்கொண்டு கணவனை வரச் சொன்னாள்.  

1835-ல் திருமணம் ஆனதிலிருந்து எடாவின் மீது பேரன்பு கொண்டிருந்த வில்லியம் கிங், அன்னாவின் வரவுக்குப் பிறகு எடாவைப் பார்ப்பது குறைந்திருந்தது. எடாவின் நோயை அவரும் அறிந்து துயருற்றிருந்தார். எடாவிடமிருந்து அழைப்பு வந்தபோது, அவருக்குத் தெரிந்திருக்கவில்லை எடா எத்தனை பெரிய அதிர்ச்சியை அவருக்கு அளிக்கப்போகிறாள் என்று.

படுக்கையின் ஓரத்தில் அமர்ந்து எடாவின் கையைப்பற்றிக் கொண்டிருந்த வில்லியமின்  கண்களை நேராகப் பார்த்து, குதிரைப்பந்தயத்தின் வெற்றியை கணிதவியலின்படி தீர்மானிக்க முடியும் என்று நம்பி தான் செய்த பிழையான கணக்கீடுகளால் உண்டாகிய பெரும் நஷ்டத்தையும், அதை மறைக்க லவ்லேஸ் குடும்பத்தின் பாரம்பரிய வைரங்களை அடகு வைத்ததையும் பதிலுக்கு போலி வைரங்களை அந்த இடத்தில் மாற்றியதையும் எடா சொன்னபோது வில்லியம் அதிர்ந்தார். 

ஆனால் அடுத்து எடா சொன்னதை அவர் கற்பனையிலும் நினைத்திருக்கவில்லை. குதிரைப்பந்தயக்காரரான ஜான் குரோஸுடன் தனக்கிருந்த  மணஉறவைத்தாண்டிய காதலையும் தெரிவித்த எடா, தனது பிற ஆண் நண்பர்களைக் குறித்தும் தெரிவித்துவிட்டு கண்களை மூடிக்கொண்டாள். திகைத்துப்போன வில்லியம், பாவமன்னிப்பை அளிக்கவும் மனமின்றி எடாவைப் பற்றியிருந்த தனது கைகளை என்றென்றைக்குமாக விலக்கிக்கொண்டு அந்த அறையிலிருந்து வெளியேறினார். ஒரே வீட்டிலிருந்தும் எடா மரணமடையும் வரை வில்லியம் மீண்டும் அவளைச் சந்திக்கவே இல்லை. பின்பு எடாவின் இறுதிநாட்கள் முழுக்கவே அன்னாவின் கட்டுப்பாட்டிற்கு வந்தது.

1852-ன்ஆகஸ்ட் மாதம், ஜன்னல் திரைகள் இழுத்து மூடப்பட்டிருந்த அந்த இருண்ட அறையில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், எலும்பும் தோலுமாகப் படுக்கையில் கிடந்த எடா புற்றுநோயின் வலியை மறக்க வைத்த அபினின் மயக்கத்தில் கண்கள் செருகி, மயக்கத்துக்கும் விழிப்புக்குமிடையில் ஊசலாடிக்கொண்டிருந்தாள். வாசலில் நின்றிருந்த அன்னா இஸபெல்லாவின் கடும் எதிர்ப்பையும் மீறி, எடாவின் நீண்ட கால நண்பர் சார்லஸ் டிக்கின்ஸ் உள்ளே நுழைந்தார். கையில் அவர் எழுதிய ‘டாம்பி அண்ட் சன்’ (Dombey and Son) நாவல் இருந்தது. மெல்ல எடாவின் அருகில் அமர்ந்த டிக்கின்ஸ், அவளது மெலிந்த கைகளைப் பற்றினார்.

முயன்று புன்னகைத்த எடா மெல்லிய குரலில் முணுமுணுத்தாள், “சார்லஸ், நல்லவேளை நீங்களாவது என்னைப்பார்க்க வந்தீர்கள். மரணம் என்பது எண்களைப் போன்றது என்று நினைக்கிறேன். உச்ச கட்ட வலியின் போதெல்லாம் எனக்கு சுவர்களில் எண்களின் மாயத்தோற்றம் தெரிகிறது. எண்களும் கணக்குகளும் தானே துல்லியமானதும், தவிர்க்க முடியாததும்? ஆனால் என் கணினி இயந்திரம் நெய்யப்போகும் அந்த எதிர்காலப் பூக்களைக் காண நான் இருக்க மாட்டேன் போலிருக்கிறது.”

டிக்கன்ஸ் அவளது கையை அழுத்திப் பிடித்து, “எடா, உங்கள் சிந்தனைகள் அழியாதவை. அவை காலத்தைக் கடந்தவை. இப்போது எண்களைப் பற்றி யோசிக்காதீர்கள். இதோ, உங்களுக்குப்பிரியமான  நீங்கள் கேட்டுக்கொண்ட பால் டாம்பியின் கதையை உங்களுக்காக வாசிக்கிறேன்,” என்றார்.

அவர் நாவலைத் திறந்து  எடாவுக்கு பிடித்தமான அந்த நாவலின் உருக்கமான மரணக் காட்சியை வாசிக்கத் தொடங்கினார்: “மெல்ல… மெல்ல அந்த நதி கடலை நோக்கிப் பாய்கிறது…”

எடா கண்களை மூடியபடி சொன்னாள், “சார்லஸ்… உங்கள்  குரல் என் வலியைக் குறைக்கின்றது. என் தந்தை  பைரன் கவிதைகளால் உலகை வென்றார், நான் எண்களால் உலகை மாற்ற முயன்றேன். ஆனால் இப்போது, அப்பாவுக்கும் மகளுக்குமான உறவுச்சிக்கலைச்  சொல்லும் இந்தக்கதையே எனக்குப் போதுமானதாக இருக்கிறது.”

டிக்கின்ஸ் தொடர்ந்து வாசித்தார். அந்த அறையில் டிக்கின்ஸின் கணீர் என்ற குரலும், எடாவின் தட்டுத்தடுமாறும் சுவாசமும் மட்டுமே எஞ்சியிருந்தது. அன்னாவின் கட்டுப்பாடுகளைத் தாண்டி, ஒரு மேதைக்கு இன்னொரு மேதை வழங்கிய இறுதி அஞ்சலி அது.

தொடர்ந்த நவம்பரில் எடாவின் மூச்சு மெல்ல மெல்லக் குறைந்து, இன்னும் சில நாட்களில் இறப்பது உறுதியானபோது, எடா அதுநாள் வரை தனக்கு அன்னா இழைத்த எல்லா அநீதிகளுக்கும் பதிலாகத் தனது மரணத்திற்குப் பின்னதான ஒரு விருப்பத்தை கடவுளின் பெயரால் தெரிவித்தாள். அதைச் செய்யாமல் இருக்கவே முடியாதென்பதால் அன்னா அதிர்ந்துபோனாள். 

மத நம்பிக்கைகளால் இறுகிக் குளிர்ந்திருந்த அன்னா, எடா பிறந்த 5-வது வாரமே பெருங்கவி பைரனைப் பிரிந்தார். அவர் மீது காதல் இருந்தபோதும் அவரது பைத்தியக்காரத்தனம் தன் மகளுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகப் பைரனின் உருவப்படத்தைக் கூட எடா பார்க்காதபடி ரகசியமாகக் காத்தார். பைரன் அவ்வப்போது எடாவுக்கு எழுதிய கடிதங்களில் மட்டுமே அவள் தன் தந்தையை அறிந்திருந்தாள். பைரனின் கிறுக்குத்தனம், கவி மனம், தங்கை முறையுடையவளோடு அவருக்கு இருந்த காதலுறவு, கணக்கற்ற காதலிகளுடனான தொடர்பு போன்ற ஒழுக்க மீறல்கள் பைரனின் ஒரே சட்டபூர்வ மகளான எடாவுக்கு  வந்துவிடக் கூடாது என்பதற்காகவே அன்னா எடாவை மிகமிகக் கடுமையாக வளர்த்தாள்.

தனது அரண்மனை போன்ற தாய்வீட்டில் கருப்புத் துணியால் மூடப்பட்டிருந்த தந்தையின் உருவப்படத்தை தனது 20 வயதில்தான் முதல்முறையாகப் பார்த்தாள் எடா.

தந்தையின் கவி மனம் மட்டுமல்ல, தாயின் கணிதப் புலமையையும் பல மடங்கு அதிகமாகக் கொண்டிருந்த எடா, தன் கடைசி விருப்பமாகத் தான் 36 வயது வரை பார்த்தே இராத தனது தந்தை பைரனின் கல்லறைக்கு அருகிலேயே தான் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு, நவம்பர் 27,  அன்று நிரந்தரமாகக் கண்களை மூடிக்கொண்டாள். 

எடா, டிசம்பர் 10, 1815-ல் லண்டனில் பிறந்தார். இவரது தந்தை புகழ்பெற்ற கவிஞர் லார்ட் பைரன், தாய் லேடி பைரன். அடா பிறந்த சில வாரத்திலேயே அவரது தாய் கணவரைப் பிரிந்தார். அடாவுக்கு 8 வயதாக இருந்தபோது பைரன் இறந்துபோனார். 

எடாமட்டும் தான் பெருங்கவி பைரனின் சட்டபூர்வமான ஒரே ஒரு மகள். பைரனுக்கு அவரது மாற்றாந்தாயின் மகளும் தங்கையுமான அகஸ்டாவுடன் காதல் உறவு இருந்தது. எனவே தன் காதல் மனைவி அன்னாவுக்குப் பிறந்த குழந்தைக்கு ‘அகஸ்டா எடா’ என்றே பெயரிட்டார் பைரன்.(அகஸ்டா அடா பைரன் (Augusta Ada Byron).திருமணத்திற்குப் பிறகு, அகஸ்டா அடா கிங், கவுண்டஸ் ஆஃப் லவ்லேஸ் (Augusta Ada King, Countess of Lovelace).

அகஸ்டாவுடனும், மேலும் பலருடனும் பைரனுக்கு இருந்த உறவுகளையும் அவரது பைத்தியக்காரத்தனத்தையும் திருத்த முடியாது என்று அறிந்துகொண்ட அன்னா, எடா பிறந்து 5 வாரங்களானபோது பைரனை மணவிலக்கு செய்வதாக அறிவித்துவிட்டுத் தனது தாய்வீட்டிற்குப் பிரிந்து சென்றார். மாபெரும் கணித நிபுணரான அன்னா இஸபெல்லா, பைரனைப் போல எடா எந்தவிதத்திலும் வளரக் கூடாது என்பதில் மிகுந்த கண்டிப்பைக் காட்டினார். அன்னாவின் தாயும் எடாவின் பாட்டியுமானவரின் கடுமையான கண்காணிப்பில் எடா வளர்ந்தாள்.

தாயைப்போலவே எடாவுக்குக் கணிதம் இயல்பாகவே வந்தது; எனினும் அவளுக்குத் தனியே சிறப்புக் கணிதப் பாடம் எடுக்க ஆசிரியரை நியமித்திருந்தார் அன்னா. தனது 17-ம் வயதில் கணித ஆசிரியருடன் காதல்வயப்பட்ட எடா, தாயின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க அந்த ஆசிரியருடன் வீட்டிலிருந்து தப்பி ஓடினாள். ஆனால் காதலன் வீட்டில் அவர்களைக் கண்டுபிடித்து எடாவை மீண்டும் அன்னாவிடம் ஒப்படைத்தார்கள். அந்த நிகழ்வை அப்படியே மூடிமறைத்த அன்னா, மேலும் பலபடி எடாவைக் கடுமையாக வளர்க்க முயன்றார். தனது தாய்க்கு எடாவை  ஒருமையில் அது இது என்று குறிப்பிட்டு கடிதம் எழுதுமளவுக்கு எடாவின் ஒழுக்கக் குறைபாட்டில் அன்னாவுக்கு அதிருப்தி இருந்தது.

எடாவின் வயதொத்த பெண்கள் தையல் கலையில் ஈடுபட்டிருக்கையில்,பிறவி மேதையான எடா பறவைகள் பறப்பதைத் கூர்ந்து கவனித்துப் பறத்தலியல் (Flyology) என்னும் நூலைத் தனது பதின்மவயதில் எழுதினாள். பறவைகளின் உடல் அமைப்பு, எடை, இறகுகளின் அமைப்பு ஆகியவற்றைக் கூர்ந்து கவனித்து வரைபடங்கள் உண்டாக்கி, அவற்றைப்போலப் பட்டுத் துணி காகிதங்கள் மற்றும் கம்பிகளால் இறக்கைகளையும் செய்து கொண்டிருந்தாள் எடா. கணிதத்தில் நிபுணராகிய அன்னாவை விடவும் பல படிகள் முன்னேறி, “எண்களின் மாயக்காரி” எனக் கணிதவியலாளர் சார்லஸ் பாபேஜினால் செல்லப் பெயர் சூட்டுமளவுக்குக் கணிதத்தில் நிபுணத்துவம் கொண்டிருந்தாள் எடா.  பாபேஜ் மட்டுமல்லாது பல முன்னணி அறிவியலாளர்களுடன் எடாவுக்குத் தொடர்பு இருந்தது.

அக்காலத்தின் சிறந்த அறிவியலளர்களான மேரி சோமர்வில்லே மற்றும் அகஸ்டஸ் டி மார்கன் ஆகியோர் எடாவுக்குப் பாடம் கற்பித்தனர். குறிப்பாக மேரி சோமர்வில்லே எடாவுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார், அவருடன் அவர் விண்வெளி மற்றும் வானியல் குறித்து விவாதித்தார்.

எடா ஒரு உயர்குடிப் பெண் என்பதால்,  மேரி போன்ற பெண் அறிவியலாளர்களுடன் நட்பில் இருந்ததோடு அக்காலத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர்கள் பலருடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தார். மின்காந்தவியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடேயுடன் எடா அறிவியல் கருத்துக்களை விவாதித்தார். தந்தி கண்டுபிடிப்பாளரான சார்லஸ் வீட்ஸ்டோன், கலைக்கண்ணாடியைக் கண்டுபிடித்தவரான டேவிட் ப்ரூஸ்டர் ஆகியோருடன் எடாவுக்கு அறிமுகமும் நல்ல நட்பும் இருந்தது. எடா தனது தந்தை பைரனின் “கற்பனைத் திறனையும்” தாயின் “கணிதத்தையும்” இணைத்துத் தன்னுடைய அறிவியல் அணுகுமுறையை “கவித்துவ அறிவியல்” (Poetical Science) என்று அழைத்தார்.

எடாவுக்கு 17 வயது இருக்கும்போது, மேரி சோமர்வில்லே மூலம் கணினியியலின் தந்தை எனக்கருதப்படும் சார்லஸ் பாபேஜைச் சந்தித்தார். சில வருடங்கள் அவருடன் நல்ல அறிவார்ந்த நட்பிலிருந்த எடா, பாபேஜ் உருவாக்கிய கொஞ்சம் பெரிய கால்குலேட்டர் போன்ற கணக்கிடும் இயந்திரத்தைப் பார்த்தவுடன், அதன் நுட்பத்தை உடனடியாகப் புரிந்துகொண்டார். பாபேஜ் அந்த இயந்திரத்தை வெறும் எண்களைக் கணக்கிடும் கருவியாக மட்டுமே பார்த்தார். ஆனால் எடா, அந்த இயந்திரம் எண்களைத் தாண்டி இசை, ஓவியம் மற்றும் குறியீடுகளைக் கூடக் கையாளும் என்று கணித்தார். இதுதான் இன்றைய நவீன கணினிகளின் அடிப்படைத் தத்துவம்.

இப்போது உபயோகத்தில் இருக்கும் நவீன கணினிக்கு இணையான ‘அனலிட்டிகல் என்ஜின்’ என்ற ஒன்றை உருவாக்கும் திட்டத்தை வைத்திருந்த சார்லஸ் பாபேஜ் இத்தாலியில் உள்ள துரின் பல்கலைக்கழகத்தில் தனது அந்த அனலிட்டிக்கல் இயந்திரத்தைப் பற்றி 1842-ல் ஆங்கிலத்தில் சொற்பொழிவு ஆற்றினார்.   அவருக்கு இத்தாலிய மொழி தெரியாது. அரங்கிலிருந்த இத்தாலியர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது என்பதால் பாபேஜின் நண்பர் ஜியோவானி பிளானா அந்த உரையை உடனுக்குடன் இத்தாலிய மொழியில் மொழிபெயர்த்து விளக்கினார்.

அந்த உரையைத் தழுவி இத்தாலியப் பொறியாளர் லூய்கி மெனாப்ரியா, அனலிட்டிகல் என்ஜினின் செயல்பாடுகளைப் பற்றிப் பிரெஞ்சு மொழியில் ஒரு கட்டுரையை எழுதினார். அக்காலத்தில் ஐரோப்பாவின் அறிவியல் மொழியாகப் பிரெஞ்சு இருந்தது. 

பாபேஜின் நண்பர்கள் எடாவிடம் அந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்குமாறு கேட்டுக் கொண்டனர். எடா அதை மொழிபெயர்த்தது மட்டுமன்றி, அசல் கட்டுரையை விட மூன்று மடங்கு அதிகமான நீளத்திற்குத் தனது சொந்த “குறிப்புகளை” (Notes A to G) அதில் சேர்த்தார். அந்த ‘Note G’ பிரிவில்தான் “பெர்னோலி எண்களை” அந்த இயந்திரம் எப்படிக் கணக்கிட வேண்டும் என்பதற்கான வழிமுறையை எழுதினார். இதுவே உலகின் முதல் கணினி நிரல் (First Computer Program) எனக் கருதப்படுகிறது.

எடா தனது ‘குறிப்பு G’ பகுதியில், பெர்னோலி எண்களைக் கணக்கிடுவதற்கான ஒரு படிமுறை நிரலை (Algorithm) எழுதினார். பெர்னோலி எண்கள் என்பது எண் கோட்பாட்டில் (Number Theory) பயன்படுத்தப்படும் ஒரு வரிசைமுறை எண்கள். பாபேஜின் இயந்திரம் வெறும் கூட்டல், கழித்தலை மட்டும் செய்யாமல், ஒரு சங்கிலித் தொடர் போன்ற கட்டளைகளைப் பின்பற்றி எப்படி ஒரு சிக்கலான விடையைக் கண்டறியும் என்பதை உலகிற்கு நிரூபிக்க எடா விரும்பினார். 

எடா தனது நிரலை ஒரு அட்டவணை வடிவில் உருவாக்கினார். இன்றைய நவீன புரோகிராமிங்கில் பயன்படுத்தப்படும் பல அடிப்படை நுட்பங்களை அவர் அன்றே பயன்படுத்தியிருந்தார்: இயந்திரத்தின் தரவுகளைச் சேமிக்கும் இடங்களை மாறிகள் -Variables என்று குறிப்பிட்ட எடா அவற்றை $V_1, V_2, V_3$ எனப் பெயரிட்டு அழைத்தார். ஒரு குறிப்பிட்ட கணக்கை மீண்டும் மீண்டும் செய்ய ‘சுழற்சி’ (Loops) முறை தேவை என்பதை அவர் உணர்ந்து, அதைத் தனது நிரலில் சேர்த்தார். ஒரு விடை கிடைத்தால் அடுத்த கட்டத்திற்குச் செல்வது போன்ற தர்க்க ரீதியான முடிவுகளை எடுக்கும் முறையையும் அவர் விளக்கினார்.

இதற்கு முன்னால் யாரும் ஒரு இயந்திரம் தானாகவே ஒரு கணக்கைச் செய்வதற்குத் தேவையான “வழிமுறைகளை” எழுதியதில்லை. இயந்திரம் கணக்கிடும் என்பது மட்டுமே பாபேஜின் பார்வையாக இருந்தது, ஆனால் எடா இயந்திரத்திற்கு நாம் எப்படி கணக்கிட வேண்டும் என்று “கட்டளை” இடலாம் எனக் கருதினார். 

இந்தச் சிறிய வித்தியாசம்தான் மென்பொருள் (Software) என்ற துறையை உருவாக்கியது. எடா எழுதிய அந்த முதல் நிரலில் ஒரே ஒரு சிறிய பிழை (Bug) இருந்தது. அந்தப் பிழையை அவர் வேண்டுமென்றே செய்தாரா அல்லது தற்செயலாக நடந்ததா என்று இன்றும் விவாதிக்கப்படுகிறது. ஆனால், அந்தப் பிழையைத் தவிர்த்துப் பார்த்தால், அந்த நிரல் தர்க்கரீதியாக மிகச் சரியானது. அந்த இயந்திரம் ஒருவேளை அப்போதே உருவாக்கப்பட்டிருந்தால், எடாவின் நிரல் துல்லியமாக வேலை செய்திருக்கும் என்று நவீன விஞ்ஞானிகள் கணினி மூலம் சோதித்து உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒரு இயந்திரத்தால் எண்களைக் கையாள முடிந்து, அந்த எண்களை இசைக் குறிப்புகளாகவோ, ஓவியப் புள்ளிகளாகவோ மாற்றினால், கணினியால் தானாகவே இசையமைக்க முடியும் என்று எடா 1840-களிலேயே கணித்தார். இதுதான் இன்றைய Artificial Intelligence (AI) மற்றும் டிஜிட்டல் இசையின் தொடக்கப்புள்ளி. 

எடா ஒரு புகழ்பெற்ற உவமையைக் குறிப்பிட்டார்: “நெசவு இயந்திரம் எப்படி பூக்களை நெய்கிறதோ, அதேபோல் அனலிட்டிகல் என்ஜின் இயற்கணித வடிவங்களை (Algebraic patterns) நெய்யும்.” துணிகளில் எம்பிராய்டரி டிசைன் செய்ய அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘பஞ்ச் கார்டுகளை’ கணினிக்குத் தரவுகளை வழங்கப் பயன்படுத்தலாம் என்று அவர் விளக்கினார். “இயந்திரங்களுக்குச் சொந்தமாகச் சிந்திக்கும் திறன் கிடையாது; நாம் என்ன கட்டளை இடுகிறோமோ அதை மட்டுமே அவை செய்யும்.”என்றார் எடா. 

சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, நவீனக் கணினியின் தந்தை ஆலன் டூரிங் (Alan Turing), அடாவின் இந்தக் கருத்தை ஆராய்ந்து அதற்கு Lady Lovelace’s Objection என்று பெயரிட்டார். ஏனென்றால் அடா லவ்லேஸ் அந்த இயந்திரத்தை கொடுக்கப்படும் கட்டளைகளை மட்டும் செய்யும் ஒரு “கருவியாக” , ஒரு பணியாளாக மட்டுமே பார்த்தார்; அதற்குச் சொந்தமாகப் புதிய யோசனைகளை உருவாக்கும்  திறன் இல்லை என்றார். ஆனால், ஆலன் டூரிங் இயந்திரங்களுக்கு முறையான பயிற்சி அளித்தால் அவை மனிதனைப் போலச் “சிந்திக்கும் ஆற்றல்” பெற்று, புதிய முடிவுகளை எடுக்க முடியும் என்று நம்பினார். அடா இயந்திரத்தின் வரம்புகளை விளக்கியதை, டூரிங் தனது ‘சிந்திக்கும் இயந்திரம்’ என்ற கோட்பாட்டிற்கு எதிராக வந்த ஒரு தர்க்கரீதியான தடையாக (Objection) கருதினார்.

அடுத்த நூற்றாண்டு உலகமே கணினி மயமாகப் போவதை அறியாமலேயே உலகின் முதல் கணினி நிரலரான எடா லவ்லேஸ் அந்த அறையில் அன்று விடைபெற்றுக்கொண்டாள். எந்தத் தந்தையைப் பார்க்கக் கூடாது என்று அன்னா தடுத்தாளோ, அந்தத் தந்தை இறந்த 36-வது வயதிலேயே எடாவும் இறந்தாள். நேரில் சந்தித்திராத தந்தையின் கல்லறைக்கு அருகே தானும் அமைய விரும்பினாள் எடா.

நாட்டிங்ஹாம்ஷையரில் இருந்த புனித மேரி மக்தலீன் தேவாலயக் கல்லறைத் தோட்டத்தில், எளிய நிலவரையில் ஈரமான சுவர்களுடன் இருந்த பெருங்கவி பைரனின் கல்லறை திறக்கப்பட்டது. அவரது சவப்பெட்டியின் மீது போர்த்தப்பட்டிருந்த ஊதா வெல்வெட் துணி மங்கி வெளுத்திருந்தது. அந்த வெல்வெட் துணியின் மீது ஒரு வெண்கலத் தகடு வைக்கப்பட்டு, அதே குழியில் பைரனின் சவப்பெட்டிக்கு அருகிலேயே “நானும் பைரனின் குருதிதான்” என அறிவித்துவிட்டு இறந்த எடாவின் சவப்பெட்டியும் இறக்கி வைக்கப்பட்டது. ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூடத் துக்கத்தைக் காட்டிக்கொள்ளாமல் மனைவியின் சடங்கில் வில்லியம் கலந்துகொண்டார். 

தாய் அன்னா, எடாவின் அடக்கத்திற்கு வராமல்,  குதிரைப்பந்தயக்காரன் ஜான் குரோஸுக்கு பெருந்தொகையளித்து, எடா எழுதிய காதல்கடிதங்களை அவனிடமிருந்து வாங்கி லண்டன் சதுக்கத்தில் இருந்த அந்த மாபெரும் மாளிகையில், அவளது கடிதங்கள், கணிதக்குறிப்புகள், பறவைகளைக்குறித்த எடாவின் அவதானிப்புகள், குதிரைப்பந்தய கணக்கு வழக்குகள் மற்றும் நாட்குறிப்புகள் என எல்லாவற்றையும் தீயிலிட்டு எரித்து எடாவின் ஆன்மாவைத் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாள்.   எடாவின் சூதாட்டம், ஜான் குரோஸ் உடனான தொடர்பு மற்றும் தந்தையின் சாயல் தெரிந்த அனைத்துக் கடிதங்களையும் அவர் எரித்தார். அப்படி அழிப்பதன் மூலம் எடாவின் வாழ்வைத் தூய்மைப்படுத்தி அவளைச் சொர்க்கத்திற்கு அனுப்ப முடியும் என அன்னா நம்பினாள். 

அதிர்ஷ்டவசமாக, எடா மற்றும் பாபேஜ் பரிமாறிக்கொண்ட அனலிட்டிகல் என்ஜின் தொடர்பான முக்கியக் குறிப்புகள் பாபேஜிடம் இருந்தன. பாபேஜ் அவற்றை மிகவும் பத்திரமாக வைத்திருந்தார். ‘அனலிட்டிகல் என்ஜின்’ என்னும் கருவிக்காக எடா எழுதிய நிரல்களை, அவளின் சிந்தனை கணினி உலகில் உண்டாக்கிய தாக்கத்தை அன்னாவால் ஏதும் செய்ய முடியவில்லை.

விக்டோரியன் காலத்தில் பெண்கள் அறிவியல் அல்லது கணிதத் துறையில் ஈடுபடுவது அநாகரிகமாகக் கருதப்பட்டது. எனவே, அடா தனது கட்டுரையைத் தனது முழுப் பெயரில் வெளியிடாமல் “A.A.L.” என்ற இனிஷியலில் மட்டுமே வெளியிட்டார். இதனால் அந்த மேதை  எடாதான் என்று பலருக்குத் தெரியாமலேயே போனது. சார்லஸ் பாபேஜின்  அனலிட்டிக்கல் என்ஜின் திட்டம் நிதி நெருக்கடியால் முழுமையாக முடிக்கப்படவுமில்லை. மென்பொருள் இருந்தும் அதை இயக்க வன்பொருள் (Hardware) இல்லாததால், எடாவின் நிரல்கள் வெறும் காகிதத்தோடு நின்றுவிட்டன. 

பாபேஜ் இறந்த பிறகு, எடாவின் அந்தக் குறிப்புகள் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்றன. பல தசாப்தங்களாக இவை தூசு படிந்து கிடந்தன. எடாவின் மகள் ஆன் பிளண்ட் தனது தாயின் சில குறிப்புகளைப் பாதுகாத்தார். அவர் மூலமாகவே அடாவின் சில தனிப்பட்ட சிந்தனைகள் ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தன. 1953-ல் பி.வி. போடென் அடாவின் குறிப்புகளை மறுபதிப்பு செய்தபோதுதான் நவீன கணினி அறிவியலாளர்கள் வியந்து போனார்கள். மின்னணு கணினிகளே இல்லாத காலத்தில் அடா எழுதிய ‘சுழற்சிகள்’ மற்றும் ‘தர்க்கங்கள்’ அப்படியே நவீன நிரலாக்க மொழிகளோடு ஒத்துப்போவதைக் கண்டு உலகமே அதைத் திரும்பிப் பார்த்தது. இன்று அடாவின் அசல் குறிப்புகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பாட்லியன் நூலகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபரில் “அடா லவ்லேஸ் தினம்” கொண்டாடப்படுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கல்கள், அடாவின் சூதாட்டப் பழக்கம், கடன் சிக்கல்கள் மற்றும் அவரது மரணத்திற்குப் பிறகு அவரது தாய் எடாவின் ஆவணங்களை எரித்தது போன்றவை அவரது புகழை உலகறியாமல் செய்துவிட்டது. அடா ஒரு “விஞ்ஞானி” என்ற பிம்பத்தை விட பைரனின் கிறுக்குத்தனக்களும் ஒழுக்க மீறல்களும் கொண்ட மகள் என்ற பிம்பமே அன்னாவால் வரலாற்றில் முன்வைக்கப்பட்டது.

அடா லவ்லேஸ், லவ்லேஸ் கோமானின் குடும்பத்தைச் சேர்ந்த “சீமாட்டி” என்றாலும், அவரது நிதி நெருக்கடிக்கு பின்னால் பல காரணங்கள் இருந்தன. விக்டோரியன் காலத்தில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானவுடன் அவரது சொத்துக்கள் அனைத்தும் அவரது கணவருக்கே சொந்தமாகும். எடாவிடம் கணிசமான சொத்துக்கள் இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த அவர் வில்லியமிடம் அனுமதி பெற வேண்டியிருந்தது. எடா பல அறிவியல் சோதனைகளைச் செய்தார், விலையுயர்ந்த புத்தகங்களை வாங்கினார், அறிஞர்களை வரவழைத்து விவாதங்களை நடத்தினார். இவற்றிற்குப் பெரும் தொகை செலவானது. பாபேஜின் இயந்திரத்திற்கு நிதியுதவி செய்ய அவர் முயன்றதும் நிதி அழுத்தத்தைக் கொடுத்தது. ஒரு சீமாட்டியாக அவர் ஆடம்பரமான விருந்துகளை நடத்தவும், அவர் செய்ய வேண்டி இருந்த சமூகக் கடமைகளுக்கும் பணம் தேவைப்பட்டது. கடன் பழக்கம் வட்டியோடு சேர்ந்து வளர்ந்தது.

எடாவின் நிதி நெருக்கடிக்கு முக்கியமான காரணம் ஜான் குரோஸ். அவர் மூலமே எடாவுக்குச் சூதாட்டப் பழக்கம் அறிமுகமானது. குரோஸ் ஒரு ஊதாரி மற்றும் கடனாளி. எடா அவரிடம் கொண்ட நட்பின் காரணமாக குரோஸின் கடன்களையும் சேர்த்துச் சுமக்க வேண்டியிருந்தது. தனது சொந்தத் தேவைகளை விட, குரோஸ் மற்றும் அவரது குதிரைப்பந்தய முயற்சிகளுக்கு நிதி வழங்க எடா நிறைய கடன் வாங்கினாள். எடாவின் தாய் லேடி பைரன் பெரும் செல்வந்தர்; ஆனால் அவர் எடாவுக்கு வழங்கும் பணத்தைக் கடுமையாகக் கட்டுப்படுத்தினாள். அடா அந்தச் சுதந்திரத்தைப் பெற குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயன்றாள்.

1840-களின் இறுதியில், அடாவுக்குக் கடுமையான பண நெருக்கடி இருந்தது. அப்போது அவர் தனது கணித அறிவைப் பயன்படுத்தி குதிரைப் பந்தயங்களில் வெற்றி பெற ஒரு ‘கணித மாதிரியை’ உருவாக்க முடியும் என்று நம்பினாள். ஜான் குரோஸுடன் இணைந்து ஒரு ரகசியக் குழுவை உருவாக்கினாள். அவர்கள் ஒரு குறிப்பிட்ட குதிரை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைக் கணக்கிட ஒரு சிக்கலான சூத்திரத்தைப் பயன்படுத்தினர். அந்த குதிரைதான் வெற்றி பெறும் என நம்பி அதன் பெயரில் பெருந்தொகையைப் பந்தயத்தில் கட்டினர். எடா ஒரு சிறந்த கணிதவியலாளர், ஆனால் ஒரு விஷயத்தைக் கணக்கில் கொள்ளத் தவறினாள்: கணிதச் சமன்பாட்டில் குதிரையின் வேகத்தைக் கணக்கிட முடிந்தது, ஆனால் வானிலை மற்றும் ஜாக்கிகளின் சூழ்ச்சிகளைக் கணிக்க முடியவில்லை. எடா நிபுணத்துவம் கொண்டிருந்த, அவர் பெரிதும் நம்பிய எண்கள் அவளைக் கைவிட்டன.

எடாவின் கணிதச் சூத்திரம் காகிதத்தில் சரியாக இருந்தது, ஆனால் பந்தயக் களத்தில் அது தோற்றது. அவர் மீண்டும் மீண்டும் வெல்ல முயன்று பெரும் தொகையை இழந்தார். எடா இழந்த தொகை இன்றைய மதிப்பில் பல கோடி ரூபாய் இருக்கும். அவரது கணவர் வில்லியமுக்குத் தெரியாமல் வைர நகைகளை இரண்டு முறை அடகு வைத்தார். கணவருக்கு அது தெரியாமலிருக்க போலி வைரங்களை மாற்றி வைத்தார். இறுதியில் அவர் பெரும் கடனாளியாகவே இறந்தார். 

எடா லவ்லேஸ் ஒரு “அல்காரிதம்” மூலம் எதிர்காலத்தைக் கணிக்க முயன்றவர்களில் முதன்மையானவர். இன்று நாம் பயன்படுத்தும் பங்குச் சந்தை கணிப்புகள் மற்றும் AI தரவு பகுப்பாய்வு ஆகியவற்றின் முன்னோடி முயற்சி இதுதான்.

பாபேஜ் இறந்த பிறகு, அவரது கண்டுபிடிப்புகள் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. மின்சாரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே கணினி பற்றிச் சிந்தித்த இவர்களை உலகம் “பைத்தியக்காரர்கள்” என்று கருதி மறந்துவிட்டது. 

1940-களில் இரண்டாம் உலகப் போரின்போது, ஆலன் டூரிங் எடாவின் குறிப்புகளை மீண்டும் கண்டெடுத்தார். எடா எழுதிய நிரல்களை ஆராய்ந்த டூரிங், ஒரு இயந்திரத்தால் தர்க்கரீதியாகச் சிந்திக்க முடியும் என்ற எடாவின் கருத்தை உறுதிப்படுத்தினார். 1953-இல் பி.வி. போடென் எடாவின் கட்டுரைகளை மறுபதிப்பு செய்தபோதுதான், “உலகின் முதல் புரோகிராமர் ஒரு பெண்” என்பது உலகிற்குத் தெரியவந்தது. எடாவின் கண்டுபிடிப்புகள் அவர் காலத்திலேயே அங்கீகரிக்கப்பட்டிருந்தால், கணினித் துறை இன்னும் 50 ஆண்டுகள் முன்னதாகவே வளர்ந்திருக்கும்.

அடா லவ்லேஸிற்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் பைரன் கிங்-நோயல் ஒரு அமைதியான தனிமையை விரும்பும் மனிதராக இருந்தார். இராணுவத்தில் பணியாற்றினார், ஆனால் உடல்நிலை ஒத்துழைக்காமல் தனது 26-வது வயதிலேயே காலமானார். மகள் ஆன் பிளண்ட் எடாவின் குழந்தைகளிலேயே மிகவும் திறமையானவர். ஒரு சிறந்த இசைக்கலைஞர் மற்றும் ஓவியர். அரபுக் குதிரைகளின் இனத்தைப் பாதுகாப்பதில் இவர் உலகப்புகழ் பெற்றவர். தனது பாட்டி அன்னாவின் கடுமையான வளர்ப்பால், தனது தாயின் மேதைமையை விட அவரது மீறல்கள் குறித்தே அதிகம் கேள்விப்பட்டு வளர்ந்தார். இளைய மகன் ரால்ப் கிங்-நோயல் தனது குடும்ப வரலாற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். அவர் தனது தாத்தா பைரனுக்கும் பாட்டி அன்னாவுக்கும் இடையிலான மோதல்கள் குறித்துப் புத்தகம் எழுதினார். ஆயினும் அந்த நூல் குடும்ப கெளரவத்தை பாதுகாக்காமல் பழைய குப்பையை கிளருவதாகவே அமைந்தது.

எடா இறந்த பிறகு, இந்த மூன்று குழந்தைகளும் பாட்டி அன்னாவின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்தனர். எடா ஒரு “தவறான முன்மாதிரி” என்று அவர்களுக்கு தொடர்ந்து போதிக்கப்பட்டது. எடாவின் மேதமை, கணித நிபுணத்துவம் மற்றும் அறிவியல் சாதனைகளை விட, அவரது கட்டுப்பாடற்ற இயல்பும், பலரோடிருந்த காதலும் பற்றியே அதிகம் குழந்தைகளிடம் பேசப்பட்டது.  கடுமையான விதிகள் இருக்குமிடத்தில்  தவிர்க்கமுடியாமல் எழும் மீறல்கள் தான் எடாவின் வாழ்விலும் இருந்தது என்பதை அவர்கள் வளர்ந்த பிறகுதான் உணர்ந்தனர். குறிப்பாக மகள் ஆன் பிளண்ட், தனது தாயின் தனித்துவமான சிந்தனைகளையும் சிறப்புகளையும் தனது பிற்கால வாழ்க்கையில் உணர்ந்தார்.

எடாவும் பைரனும் இறந்ததிலும் வாழ்ந்ததிலும் இருந்த ஒற்றுமைகள் திகைப்பூட்டுவது. இருவருமே 36-வது வயதில் இறந்தார்கள். இருவருமே கடுமையான வலியை அனுபவித்தார்கள். இருவருமே மிகுந்த புத்திசாலிகளாக இருந்தும் உலகோரால் சரியாகப் புரிந்துகொள்ளப்படாமல் இருந்தார்கள். இருவருமே சமூகத்திற்கு எதிரான மீறல்களில் ஈடுபட்டிருந்தார்கள். பைரன் கவிதைகளிலும் எடா கணிதத்திலும் ஆழ்ந்திருந்தார்கள். நோட்டிங்ஹாம்ஷையரின் அந்த இருண்ட நிலவறையில், சமூகக் கட்டுப்பாடுகளும், வேவு பார்க்கும் ஆட்களும், விதிகளும் இல்லாத அந்த இடத்தில் இருவரும் இன்று அருகருகே துயில்கிறார்கள்.

ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51!

ரோஸலிண்ட் தனது ஸ்கர்ட் ஜிப்பை இன்றும் முழுமையாக  போட முடியாததை ஆச்சரியத்துடன் பார்த்தாள். போன மாதம் அமெரிக்கா புறப்படுகையிலும் அப்படியேதான் இருந்தது. வயிறு கொஞ்சம் பெருத்திருக்கிறதோ என்று அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

அமெரிக்காவில் இருந்த 3 வாரங்களுமே அடிவயிற்றில் அவ்வப்போது வலியும் இருந்தது. ஆனால் அங்கே சிறப்பு அழைப்பாளராகப் பல பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டி இருந்ததால் வலியைப் பொருட்படுத்தக் கூட அவளுக்கு நேரமில்லை. 1956-ம் ஆண்டின் கோடைக்காலம் தொடங்கியபோது அமெரிக்கா சென்ற ரோஸலிண்ட், கோடை முடியப் போகும் போது தான் லண்டனுக்கு திரும்பி இருந்தாள். 

ரோஸலிண்ட் TMV என்னும் புகையிலை மொசைக் நோயை உருவாக்கும் வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வின் உச்சகட்டத்தில் இருந்தார். அதன்பொருட்டு தான் அவர் அமெரிக்காவுக்கும் அழைக்கப்பட்டிருந்தார். ரோஸலிண்ட் பணியாற்றிய லண்டன் பல்கலைக்கழக ஆய்வு நிறுவனத்தில் அவரது ஆய்வு ஏறக்குறைய இறுதியை எட்டி இருந்தது. 

அப்போதுதான்  உயிரியல் ஆய்வில் மிக முக்கியமானதான DNA-வின் இரட்டைச்சுழல் அமைப்பைக் கண்டறிந்திருந்த ரோஸலிண்ட் அடுத்து TMV வைரஸின் வடிவமைப்பைக் கண்டறியும் ஆய்வில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது TMV கண்டுபிடிக்கப்பட்டு அது RNA மற்றும் புரதங்களால் ஆனது என்று மட்டும் அறியப்பட்டிருந்தது. ரோஸலிண்ட் புரதமும் RNA-வும் எப்படி அமைக்கப்பட்டுள்ளன என்று, தான் நிபுணத்துவம் கொண்டிருந்த X-ray Crystallography மூலம் கண்டறிந்து துல்லியமாக அதன் வடிவமைப்பைக் காட்டும் சில படங்களையும் எடுத்திருந்தார்.

TMV-யின் நடுவில் இருந்த RNA உள்ளீடற்ற ஒரு குழாய் என்றும், அதைச் சுற்றிலும் தனித்தனியே புரதங்கள் ஒரு உறை போலச் சூழ்ந்திருக்கின்றன என்பதையும், அனைத்து TMV வைரஸ்களும் ஒரே அளவில் இருந்ததையும் ரோஸலிண்ட் கண்டறிந்தார்.

அப்போதுதான் உருவாகியிருந்த Structural Virology துறையின்  மிக அடிப்படையான பல உண்மைகளை வெளிப்படுத்தும்  கண்டுபிடிப்பாக ரோஸலிண்டின் அந்தத் துல்லியமான தெளிவான புகையிலை வைரஸின் வடிவமைப்பு இருந்தது. அதைக் கொண்டே பிற வைரஸ்களின் வடிவமைப்பையும் மற்ற விஞ்ஞானிகள் அறிய முயன்றார்கள். இந்தக் கண்டுபிடிப்பின் பொருட்டு அமெரிக்காவுக்கு அழைக்கப்பட்ட ரோஸலிண்ட் உலகளவில் இந்தத் துறையின் முன்னணி விஞ்ஞானியாகப் போற்றப்பட்டார். 

அமெரிக்காவில் ஆய்வகங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் தொடர் உரையாற்றிய ரோஸலிண்டின் எக்ஸ்-ரே கிரிஸ்டலோகிராபி படங்களின் துல்லியத்தைப் பார்த்துப் பிற அமெரிக்க விஞ்ஞானிகள் வாயடைத்துப் போனார்கள். ரோஸலிண்டிற்கு அது ஒரு சுற்றுப்பயணம் மட்டுமல்ல, அந்த பயணத்தின் மூலம் உலகளாவிய ஒரு வைரஸ் வலைத்தொடர்பை விஞ்ஞானிகளிடையே அவர் உருவாக்க நினைத்திருந்தார். அமெரிக்காவின் முக்கிய விஞ்ஞானிகளான ரோம்லே வில்லியம்ஸ் மற்றும் பேரி கமோனர் ஆகியோருடன் நல்ல தொழில்ரீதியான தொடர்பை உருவாக்கிய பின்னரே ரோஸலிண்ட் லண்டன் திரும்பினார்.

இந்த வயிற்று வலி அவரைத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்ற விடாமல் செய்தது. ஆய்வகத்திலும் சில தோழர்கள் “அமெரிக்கா போய் குண்டாயிட்டியே இத்தனை சீக்கிரமா” என கிண்டல் பண்ணக்கூட தொடங்கிவிட்டார்கள். அடிவயிற்றின் அந்த வலி ரோஸலிண்டை அவள் ஆய்விலிருந்து தொடர்ந்து தொல்லை செய்தது. என்னவானாலும் இன்று மாலை தன் சிநேகிதியும் மருத்துவருமான மேர் (Mair Livingstone) என்கிற மேரியைப் பார்க்க முடிவு செய்தாள் ரோஸலிண்ட்.

டாக்டர் மேரியின் அறையில் விஷயத்தைச் சொன்ன ரோஸலிண்டைக் கிண்டலாகப் மேலும் கீழுமாகப் பார்த்த மேரி, “என்ன இது வயிறு மேடிட்டு இருக்கிறது? கர்ப்பமாக இருக்கிறாய் போலிருக்கிறதே?” என்றார். ரோஸலிண்ட் புன்னகைத்தபடியே, “கர்ப்பமாக இருந்தால் நன்றாகத்தான் இருக்கும் ஆனால் இல்லை, நீ என்னவென்று சரியாகப் பார்” என்றார். திரைக்குப் பின்னே ரோஸலிண்டை அழைத்துச்சென்று சோதித்த மேரியின் முகம் இறுகிக் கருத்துப்போனது. ரோஸலிண்டின் இரு சினைப்பைகளிலும் புற்றுநோய் உண்டாகி முற்றிப் பிற பாகங்களுக்கும் பரவி இருந்தது. ரோஸலிண்ட் அந்தச் செய்தியைத் திடமாகக் கேட்டுக்கொண்டார். 

ரோஸலிண்ட் டி.என்.ஏ-வின் கட்டமைப்பைக் கண்டறிய ஆயிரக்கணக்கான மணி நேரம் எக்ஸ்-ரே கதிர்வீச்சுகளுடன் பாதுகாப்பு உபகரணங்கள் அவ்வளவாக இல்லாத காலத்தில் மிக அதிகமாகப் பணியாற்றினார். நீண்ட கால கதிர்வீச்சு பாதிப்பு அவருக்கு புற்றுநோயை உருவாக்கி இருக்கலாம் என்றும், அவரது குடும்பத்தில் சிலருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், பரம்பரையாகத் தொடரும் மரபணு மாற்றங்களாலும் புற்று நோய் உருவாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

நோய் கண்டறியப்பட்டது செப்டம்பர் 1956-ல். அதன் பிறகான 18 மாதங்களுமே ரோஸலிண்டின் வாழ்க்கையில் பெரும் போராட்டக் காலமாகவே இருந்தது. அந்த மாதமே ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்து சினைப்பைகள் அகற்றப்பட்டன. அறுவை சிகிச்சை முடிந்ததுமே லண்டனில் இருந்த ஆய்வகத்துக்குச் சென்று தனது ஆய்வைத் தொடர்ந்தார் ரோஸலிண்ட். பின்னர் மீண்டும் பல சின்னச் சின்ன அறுவை சிகிச்சைகளும் அப்போதுதான் அறிமுகமாகி இருந்த சோதனை கீமோ தெரப்பிகளும் கதிர்வீச்சு சிகிச்சைகளும் அவருக்குத் தொடர்ந்து அளிக்கப்பட்டன. என்ன உடல்நிலையாக இருந்தாலும் ஆய்வகத்துக்குச் சென்று கொண்டே இருந்தார் ரோஸலிண்ட்.  ஒரு சில சமயங்களில் நண்பர்கள் அவரை தூக்கிக்கொண்டு போய்க்கூட ஆய்வகத்தில் சேர்த்தார்கள். அரிதாக நடமாட முடியாமல் போகும்போது மட்டும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வீட்டில் நேரம் செலவழித்தார். அப்போதும் அவரைச் சுற்றிலும் ஆய்வுக் குறிப்புகளும் வைரஸின் புகைப்படங்களுமே இருந்தன.

1957-ம் ஆண்டு ரோஸலிண்ட் உடல்நிலை மிக மோசமானது. ஆனால் அந்த ஆண்டுதான் அவர் மிக முக்கியமான ஆய்வுக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். அமெரிக்காவிலிருந்து அப்போது நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த தனது லண்டன் ஆய்வகத்திற்கு 10,000 டாலர் நிதித்தொகையும் வாங்கியிருந்தார். ரோஸலிண்டுடன் ஆரோன் க்ளக் ( Aaron Klug) மற்றும்  ஜான் ஃபின்ச் (John Finch) ஆகியோரும் வைரஸ் வடிவமைப்பு ஆய்வில் ஈடுபட்டிருந்தார்கள். புகையிலை வைரஸுடன், போலியோ வைரஸ் ஆய்வையும் கையிலெடுத்துக்கொண்ட ரோஸலிண்ட், 1958-ல் ஐரோப்பாவில் Brussels-ல் நிகழவிருந்த உலகளாவிய அறிவியல் கண்காட்சியில் புகையிலை வைரஸின் ஐந்து அடி உயர மாதிரி உருவத்தை உருவாக்கி, பொதுமக்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமி என்று மட்டும் அறிவியலாளர்களால் சொல்லப்பட்ட வைரஸின் அழகிய வடிவமைப்பைக் காட்ட மிகவும் முயன்று கொண்டிருந்தார்.

ஆனால் 1958-ல் ஆரம்பத்தில் அவரது நோய் மிகத் தீவிரமானது.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோஸலிண்ட் படுக்கையில் இருந்தபடியே ஆய்வுக்கான நிதி விண்ணப்பங்களையும் ஆய்வறிக்கைகளையும் அனுப்பிக் கொண்டிருந்தார். 

அத்தனை தீவிரமான ஈடுபாட்டுடன் பணியாற்றிய ரோஸலிண்டின் அறிவியல் சாதனைகள்தான் வரலாற்றில் வடிகட்டப்பட்டன.

1920 ஜூலை 25 அன்று லண்டன் நாட்டிங் ஹில் பகுதியில் , அரசியல் பலமும் செல்வச் செழிப்பும் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்தார் ரோஸலிண்ட். தந்தை எல்லிஸ் (Ellis Franklin) ஒரு வங்கியில் பங்குதாரராகவும், ஆண்கள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் இருந்தார். மக்களுக்குச் சேவை செய்வதைத் தன் முதல் கடமையாகக் கொண்டவர் எல்லிஸ். ரோஸலிண்டின் அம்மா மூரியலும் (Muriel Waley) மிகச் செல்வாக்கான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரும் சேவை மனப்பான்மை மிகுந்தவர். அவர்களது வீட்டில் போர் அகதிகளான இரண்டு யூதச்சிறுமிகள் ரோஸலிண்டுடனேயே  வளர்ந்தார்கள் 

மிகச் சிறிய குழந்தையாக இருக்கும் போதே ரோஸலிண்டடின் சிந்தனைத் திறன் மிக அதிகமாக இருப்பதை குடும்பத்தினர் கவனித்தார்கள். பொம்மைகளை வைத்து விளையாடுவது, கதைகள் கேட்பது ஆகியவற்றில் ரோஸலிண்ட் எந்த ஆர்வமும் காட்டவில்லை. புதிர்களை விடுவிப்பது மிகச் சிக்கலான கணித சூத்திரங்களை பல வடிவங்களில் எழுதி விடையைக் கொண்டுவருவது போன்றவற்றில்தான் ரோஸலிண்ட் ஆழ்ந்திருந்தாள். மேலும் கடவுள், மதம் ஆகிவற்றில் நம்பிக்கையற்றவராக இருந்தார். அவரது தாய் He என்று கடவுளைக் குறிப்பிடுகையில் எல்லாம் ’’..ஏன் she இல்லையா கடவுள்? எப்படி He என்று முடிவுக்கு வந்தாய்?…’’ என்று கேட்பாள்.

ரோஸலிண்டிற்கு 6 வயதாக இருக்கையில் அவரது அத்தை, “உனக்கு பொம்மைகள் வேண்டாம், கதைகளும் வேண்டாம், பிறகு என்னதான் வேண்டும்?” என்று கேட்டபோது, “எனக்குத் தேவை உண்மைகள்”(i need facts) என்றாள். அவர் தனது கணவரிடம் ரோஸலிண்டை ’alarmingly clever’  என்று ஒரு முறை குறிப்பிட்டார். தன்னை யாரும் ரோஸி என அழைப்பதை அனுமதிக்காமல், ரோஸலிண்ட்  என்றே முழுமையாக தான் அழைக்கப்படவேண்டும் என்று கண்டிப்பாக கூறுவாள்.

நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட மரச்சாமான்கள் செய்யும் தச்சுவேலை, தையல்கலை மற்றும் கயிற்றில்  மிகச் சிக்கலான முடிச்சுகள் போட்டு அவிழ்ப்பது ஆகிய கைவேலைகளையே மிகவும் விரும்பிச் செய்தாள் ரோஸலிண்ட். அவரது பள்ளிக்காலம் லண்டனின் St Paul’s Girls பள்ளியில் கழிந்தது. அங்கு மட்டும்தான் அக்காலத்தில் அறிவியலும் கணிதமும் ஆண்களின் பள்ளிக்கு இணையாகக் கற்றுக்கொடுக்கப்பட்டன. வேதியியல், இயற்பியல் மற்றும் லத்தீன மொழிப்பாடங்களில் யாரும் அருகே கூட வர முடியாத முன்னிலையில் இருந்த, 6 டிஸ்டிங்ஷன்களுடன் பள்ளிப்படிப்பை முடித்த ரோஸலிண்ட் தனது 15 வயதில் தான் ஒரு விஞ்ஞானி ஆகப்போவதாக முடிவெடுத்தாள் .ஃபிராங்க்ளின் குடும்பத்தினர் எல்லா விடுமுறைக்காலங்களிலும் ஆல்ப்ஸ் மற்றும் நார்வீஜிய மலைகளில் மலையேறுதலில் ஈடுபட்டார்கள். மலையேற்றத்தை மிகவும் விரும்பினார் ரோஸலிண்ட். 

1938-ல் ரோஸலிண்ட் கேம்பிரிட்ஜின் நியூஹாம் கல்லூரியில் முழு நிதி உதவியுடன் சிறப்புப் பாடமாக வேதியியலைக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் பட்டப்படிப்பில் சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் சமயம் அது. அங்கிருந்து ரோஸலிண்ட் வீட்டிற்கு எழுதிய கடிதங்களில் தான் கேஸ் மாஸ்க் (Gas mask) அணிந்துகொண்டு வகுப்புகளுக்குச் செல்வதைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறார். அவரது ஆசிரியர்கள் அவளின் அதீத புத்திசாலித்தனத்தையும்,  கற்பித்தலில் சிறு தவறு இருந்தால் கூட அதைக் கண்டுபிடித்து வாதிட்டுச் சரி செய்பவள் என்பதையும் நினைவு கூர்கின்றனர்.

1941-ல் மிகச்சிறப்பாக ரோஸலிண்ட் பட்டப்படிப்பை முடித்தார். ஆனாலும் கேம்பிரிட்ஜ் 1948 வரை பெண்களுக்குப் பட்டம் அளிப்பதில்லை என்னும் விதியில் இயங்கிக்கொண்டிருந்ததால் ரோஸலிண்ட் பட்டம் வாங்கவில்லை. . ஆண்களுக்கு ஒரு மாபெரும் விழாவில் சான்றிதழ் அளித்த பல்கலைக்கழகம் அதே வகுப்பில் அமர்ந்து அதே காலத்தை படிப்பில் கழித்து ஆண்கள் எழுதிய அதே தேர்வை எழுதிய பெண்களுக்கு ஒரு காகிதத்தில் ’இவர்கள் இந்தப்படிப்பை முடித்தார்கள்’ என்று எழுதி முத்திரை வைத்து வீட்டுக்கு தபாலில் அனுப்புவார்கள்.

பட்டம் பெற்ற சான்றிதழ் இல்லாமலேயே அதே கேம்பிரிட்ஜில் ரோஸலிண்ட் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார். நிலக்கரி மற்றும் கார்பனின் நுண் வடிவமைப்பில் முனைவர் பட்ட ஆய்வை 1945-ல்  முடித்தார். 

அவரது ஆய்வு முடிவுகள் போர்ச் சூழலில் gas mask உருவாக்குவதில் பெரும் பங்களிப்பாற்றின. முனைவர் என்னும் தகுதியுடன் ரோஸலிண்ட் 1947-ல் போர் ஓய்ந்த பின்னர் பாரிஸின் புகழ்பெற்ற  “Labo” ஆய்வகத்தில் கிரிஸ்டலோகிராபியில் நிபுணரான  ழாக் மெரிங்கிடம் (Jacques Mering) பணியாற்றினார். ழாக் மெரிங்  ரோசலிண்டுக்கு  X ray crystallography-ல் பயிற்சியளித்து பின்னாட்களில் அவர் DNA-வையும் வைரஸ்களையும் ‘பார்க்க’ உதவினார்.

ரோஸலிண்டுக்கு பாரிஸ் நாட்கள் பிடித்தமானவையாக இருந்தன. அந்த ஆய்வகத்தில் ஆண் பெண் வேறுபாடு இல்லாத சமத்துவம் நிலவியது. நீண்ட  மதிய உணவு இடைவேளை, அவ்வப்போது நிகழ்ந்த மிக அறிவார்ந்த உரையாடல்கள் மற்றும் பிரெஞ்சு கலாச்சாரம் ஆகியவை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. வெகு சீக்கிரமே சரளமாகப் பிரெஞ்சு பேசக் கற்றுக்கொண்ட ரோஸலிண்ட், கூடவே சமையற்கலையிலும் நிபுணரானார். உணவுச் சுவையாளர் என்றே அறியப்படும் அளவுக்குப் பல்வேறு உணவுகளில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். 

தாவரவியலிலும் ஆர்வம் கொண்டிருந்த ரோஸலிண்ட் தாவரங்களின் வடிவங்களை ஆர்வமுடன் கவனித்து பல விதமான தாவரங்களையும் அவரது பயணங்களில் சேகரித்தார். புகைப்படக்கலையிலும் சங்கீதத்திலும் அவர் மிகுந்த ஆர்வமும் நிபுணத்துவமும் கொண்டிருந்தார்.

பாரிஸில் இருந்த ஆய்வகத்தை அவர் தனது சொந்த வீடாகவே கருதினார். மெரிங்கை ஒரு ஆசிரியராக மட்டுமல்லாமல், தனது மிக நெருங்கிய நண்பராகவும் கருதினார். அவர் மீது ரோஸலிண்டிற்கு வழிகாட்டி எனும் அபிமானத்தைக் காட்டிலும் கூடுதல் அன்பு இருந்தது. எனினும் அவரிடம் அவர் அதை வெளிக்காட்டவே இல்லை.

பாரீஸிலிருந்து வீட்டுக்கு எழுதிய பல கடிதங்களில் ’’மெரிங் ஒரு மேதை, சிக்கலான விஷயங்களை மிக எளிமையாக விளக்கும் திறன் கொண்டவர்” என்று  ரோஸலிண்ட் வியந்து எழுதியுள்ளார்.  மெரிங்குடன் சேர்ந்து பாரிஸின் தெருக்களில் நடப்பதும், நீண்ட மதிய உணவு இடைவேளைகளில் அறிவியலைப் பற்றி விவாதிப்பதும் அவருக்குப் பிடித்தமான ஒன்றாக இருந்தது. 

ஆனால் மெரிங்  ஒரே நேரத்தில் பல பெண்களுடன் உறவில் இருந்தார்.  மெரிங்கின் இந்தத் தன்மையைக் கண்டு தான் மிகவும் வருத்தப்படுவதாக மற்றுமொரு கடிதத்தில் ரோஸலிண்ட்  குறிப்பிட்டுள்ளார். அவர் மெரிங்கை நேசித்தார், ஆனால் அந்த அன்பு  ஒருதலைக்காதலாகவே இருந்தது.

ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின் 1951-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரான்சில் இருந்த மிகச்சிறந்த ஆய்வகத்தை விட்டுவிட்டு, தனது சொந்த நாடான இங்கிலாந்தில் அறிவியல் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்பதற்காக  லண்டனில் உள்ள கிங்ஸ் காலேஜில் சேர்ந்தார்.

ஆண்கள் மட்டுமே அறிவியல் உலகில் கால்பதிக்கவும், சாதிக்கவும் முடியும் என்னும் அடிப்படையில் இயங்கிய அந்த ஆய்வகச்சூழல் அவருக்கு மிகவும் கடினமாக இருந்தது.  அங்கு அவருக்கு மெரிங் போன்ற ஒரு துணையும் கிடைக்கவில்லை, பாரிஸில் இருந்த அந்தச் சுதந்திரமும் இல்லை. 

அவர் லண்டனில் இருந்து மெரிங்கிற்குப் பல கடிதங்களை எழுதினார். அதில் அறிவியலைப் பற்றிப் பேசினாலும், அவற்றுக்கிடையே  பழைய நாட்களின் ஏக்கத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.  

 ரோஸலிண்ட் இறந்த செய்தி கேட்டபோது, மெரிங் மிகவும் உடைந்து போனார். “ரோஸலிண்ட்  ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, என் வாழ்வின் ஒரு பகுதி” என்று அவர் குறிப்பிட்டார். 

அவரது வாழ்வின் இறுதி ஆண்டுகளில், அமெரிக்க விஞ்ஞானியான டொனால்ட் காஸ்பருடன் அவருக்கு ஒரு நெருக்கமான நட்பு இருந்தது.  தனது புற்றுநோய் சிகிச்சைகளின் போது காஸ்பருடன்தான் ரோஸலிண்ட் அதிக நேரத்தைச் செலவிட்டார். இவர்களுக்கிடையேயான உறவு காதலாக மாறியிருக்கலாம்  ஆனால், அது முதிர்ச்சியடைவதற்குள் ரோஸலிண்டின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. 

அவர் கிங்ஸ் ஆய்வகத்தில் சேர்ந்தபோது,  லண்டன் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அவருக்கு எக்ஸ்-ரே விளிம்பு விலகல் (X-ray diffraction) முறையைப் பயன்படுத்தி டி.என்.ஏ (DNA) இழைகளின் அமைப்பை ஆய்வு செய்யும் ஆய்வை மேற்கொள்ளச் சொல்லியது. அந்த ஆய்வகத்தின் துணை இயக்குநர் ஜான் ராண்டால், டி.என்.ஏ ஆராய்ச்சியை முழுமையாக ரோஸலிண்டிடம் ஒப்படைத்திருந்தார்.

ஆனால்,ரோஸலிண்ட் அங்கு  பணியில் இணைந்த போது அங்கு ஏற்கனவே பணியாற்றி வந்த மாரிஸ் வில்கின்ஸ் (Maurice Wilkins), விடுமுறையில் சென்றிருந்தார். பாரீஸைப் போலல்லாமல் லண்டன் ஆய்வகம் ஆணகள் கோலோச்சும் இடமாக இருந்தது.  பிற்பாடு மாரிஸ் பணியில் சேர்ந்த போது, புதிதாக வந்திருந்த ரோஸலிண்ட் தனக்குக் கீழ் வேலை செய்யும் ஒரு உதவியாளர் மட்டுமே என்று தவறாக நினைத்தார்.  ஏனெனில் அக்காலத்தில் தனித்து அப்படியான ஒரு முக்கியமான ஆய்வில் பெண்கள் யாரும் ஈடுபட்டிருக்கவில்லை. 

இதுவே பிற்பாடு அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்தது. பாரிஸில் ரோஸலிண்டுக்குக் கிடைத்த அந்த சுதந்திரமும், மதிப்பும் லண்டனில்  கிடைக்கவில்லை. ரோஸலிண்ட் அங்கு வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே (1951-1953) பணியாற்றினார். ஆனால் அந்த குறுகிய காலத்தில் அவர் செய்த ஆய்வுகள்தான் உயிரியல் வரலாற்றையே மாற்றியமைத்தன. 

ரோஸலிண்ட் தனது DNA ஆய்வில்  டி.என்.ஏ இழைகள் உலர்ந்த நிலையில் ஒரு மாதிரியாகவும், ஈரப்பதமான நிலையில் வேறு மாதிரியாகவும் இரண்டு வகைகளில் இருப்பதை கண்டறிந்தார்  (A மற்றும் B). 

‘A’ வடிவம்: உலர்ந்த நிலை (Dry form). ‘B’ வடிவம்: ஈரப்பதமான நிலை (Wet/Hydrated form). இதை அவர் கண்டறிந்த பிறகுதான், டி.என்.ஏ-வின் உண்மையான அமைப்பைத் அவரால் துல்லியமாகப் படம்பிடிக்க முடிந்தது

டி.என்.ஏ இழையை எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் 100 மணி நேரம் ஊடுருவச் செய்து இந்த இரு இழைகளின் அமைப்பை. 1952-ம் ஆண்டு மே மாதம், ரோஸலிண்ட் புகைப்படம் எடுத்து போட்டோ 51 என்று பெயரிட்டார்.  

அந்தப் படத்தில் இருந்த ‘X’ வடிவம், டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் (Double Helix) என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது. பாஸ்பேட் முதுகெலும்புகள் (Phosphate backbones) இழையின் வெளிப்புறத்தில் இருப்பதையும் அவர் அந்தப்புகைப்படத்தின் மூலம் உறுதி செய்தார்.

ரோஸலிண்ட்  DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
1953-ம் ஆண்டு ஜனவரி மாதம் ரோஸ்லிண்ட் தனது முடிவுகளை ஆய்வுக்கட்டுரையாக வெளியிடத் தயாராகிக் கொண்டிருந்தபோது ஒருநாள் விடுமுறையில் இருந்தார். அன்று அவரிடம் மாணவராக இருந்த ரேமண்ட் கோஸ்லிங், தாங்கள் எடுத்த மிகத் தெளிவான Photo 51 புகைப்படத்தை மாரிஸ் வில்கின்ஸிடம்  ரோஸலிண்டின் அனுமதியின்றி காட்டினார். மாரிஸ் வில்கின்ஸ் அந்த ‘Photo 51’-ஐ அருகில் இருந்த ஆய்வகத்தில் அதே டி என் ஏ அமைப்பை கண்டுபிடிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் வாட்சனிடம் காட்டினார். அந்தப் படத்தை ஒரு வினாடி பார்த்த உடனேயே, “என் இதயம் படபடத்தது” என்று வாட்சன் பின்னாளில் தனது புத்தகத்தில் எழுதினார்.

வாட்சன் ஒரு எக்ஸ்-ரே நிபுணர் அல்ல, ஆனால் அந்தப் படத்தைப் பார்த்தவுடனேயே அதில் இருந்த ‘X’ வடிவம் டி.என்.ஏ ஒரு இரட்டைச் சுருள் என்பதை அவருக்கு உறுதிப்படுத்தியது. 

ஆனால் புகைப்படம் மட்டும் போதாது, அதை மாதிரியாக (Model) மாற்ற துல்லியமான அளவீடுகள் தேவை. இங்குதான் இரண்டாவது  அறிவுத்திருட்டு நடந்தது. ரோசாலிண்ட் தனது ஆய்வு முடிவுகளை ஒரு ரகசிய அறிக்கையாக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலிடம் சமர்ப்பித்திருந்தார்.அந்த அறிக்கையில் டி.என்.ஏ இழைகளுக்கு இடையே உள்ள தூரம், அதன் வேதியியல் சமநிலை போன்ற ரோஸலிண்டின் இரண்டு ஆண்டு உழைப்பின் மொத்தத் தரவுகளும் இருந்தன. அந்த மருத்துவ கவுன்சில் கமிட்டியில் இருந்த மேக்ஸ் பெரூட்ஸ் (Max Perutz), அந்த அறிக்கையை வாட்சன் மற்றும் கிரிக் கேட்டுக்கொண்டதற்காக அவர்களிடம் ரகசியமாக வழங்கினார். இதைப் பயன்படுத்தித்தான் வாட்சன் மற்றும் கிரிக் தங்களது டி.என்.ஏ மாதிரியை உருவாக்கினர்.

டின என் ஏ வின் வடிவமைப்புக் குறித்து 1953, ஏப்ரல் 25 அன்று ‘நேச்சர்’ (Nature) இதழில் மூன்று கட்டுரைகள் அடுத்தடுத்து வெளியாகின: முதலாவதாக, வாட்சன் மற்றும் கிரிக்கின் கட்டுரை (டி.என்.ஏ மாதிரியைக் கண்டறிந்ததாக). இரண்டாவதாக, வில்கின்ஸின் கட்டுரை. மூன்றாவதாக, ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் மற்றும் கோஸ்லிங்கின்  “Molecular Configuration in Sodium Thymonucleate” என்னும் கட்டுரை.   இந்தக்கட்டுரையில் தான் ரோஸலிண்டின் போட்டோ 51 பிரசுரமானது.

 வாட்சன் மற்றும் கிரிக் தங்கள் கட்டுரையில், ரோஸலிண்டின் தரவுகளைத் தாங்கள் பயன்படுத்தியதை வெளிப்படையாகச் சொல்லவில்லை. மாறாக, “வில்கின்ஸ் மற்றும் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் ஆகியோரின் பிரசுரிக்கப்படாத ஆய்வுமுடிவுகள் மூலம் தெரியவந்த பொதுவான அறிவுச் செய்திகளுக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்று மட்டும்  கட்டுரையின் அடிக்குறிப்பில் எழுதினார்கள்,  இந்த அடிக்குறிப்பில் மிகக்கவனமாக பிரசுரிக்கப்படாத  மற்றும் பொதுவான என்னும் இரு சொற்கள் பயனபடுத்தப்பட்டிருந்தன

“We are also indebted to Dr. R. E. Franklin and Dr. R. G. Gosling, for the knowledge of the general nature of the unpublished experimental results and ideas of the researchers at King’s College, London.”

இந்தக்கட்டுரைகளுக்குப்பிறகு உலகம் முழுவதும் டி என் ஏ வின் இரட்டைச்சுழல் அமைப்பை “வாட்சன் மற்றும் கிரிக் கண்டுபிடித்தனர், என்ற தவறான பிம்பம் உருவானது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, “The Double Helix” என்ற புத்தகத்தில் ரோஸலிண்டை மிகவும் ஏளனமாகச் சித்தரித்த ஜேம்ஸ் வாட்சன் அதே புத்தகத்தில் “அவருடைய தரவுகள் இல்லாமல் எங்களால் மாதிரியை உருவாக்கியிருக்க முடியாது” என்பதையும் ஒப்புக்கொண்டார்.  டி என் ஏ  இரட்டைச்சுழல் அமைபை கண்டுபிடித்தற்காக  நாட்சன் மற்றும் க்ரிக்குக்கு 1962-ல்நோபல் பரிசு வழங்கப்பட்டபோது ரோஸலிண்ட் இறந்து நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தது..

இந்த அறிவுத்திருட்டை ரோஸலிண்ட் பெரிதாக எடுதுக்கொள்லவே இல்ல டி என் ஏவின் அமைப்பை கூட்டாக கண்டுபிடித்தோம் என்றே அவர் எடுத்துக்கொண்டிருக்கக்கூடும் சொல்லப்போனால் அதன்பிற்கும் கூட க்ரிக்குடனும் அவரது மனைவி ஓடிலியுடனும் அவர் கொண்டிருந்த நட்பை தொடர்ந்தார் விடுமுறைக்கு அவர்களுடன் பயணம்கூட  மேற்கொண்டார்.

நேச்சர் இதழில் கட்டுரை பிரசுரமான பின்னர் டி என் ஏ சர்ச்சையைக் குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் அவர் இறப்பதற்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை, 1958-ல் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸில் நடைபெறவிருந்த உலகஅறிவியல் கண்காட்சிக்காக  புகையிலை மொசைக் வைரஸின் (TMV) பிரம்மாண்டமான 5 அடி உயர மாதிரியை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தார். மக்கள் வைரஸின் அமைப்பை எளிதாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதில் ரோஸலிண்ட் ஆர்வமாக  இருந்தார்.

1958-ம் ஆண்டின் தொடக்கத்தில் புற்றுநோய் அவரது உடல் முழுவதும் பரவியது. ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் உள்ள ராயல் மார்ஸ்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலும் ஆராய்ச்சி: மருத்துவமனைப் படுக்கையில் இருந்தபோது கூட, அவர் தனது ஆய்வுக் கட்டுரைகளைத் திருத்திக்கொண்டும், தனது குழுவினருக்கு ஆலோசனைகளை வழங்கிக்கொண்டும் இருந்தார். 

1958, ஏப்ரல் 16 அன்று, தனது 37-வது வயதில் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் உயிரிழந்தார். அவர் இறந்த அடுத்த நாள், அவர் உருவாக்கிய வைரஸ் மாதிரி உலகக் கண்காட்சியில் திறந்து வைக்கப்பட்டது. அவர் இறக்கும் போது, டி.என்.ஏ கண்டுபிடிப்பில் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைப் பற்றி யாரிடமும் புகார் கூறவில்லை. அவரது உடல் வடமேற்கு லண்டனின்  வில்லஸ்டன் யூத கல்லறைத்தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

 அவரது கல்லறையில்:

IN MEMORY OF ROSALIND ELSIE FRANKLIN [Hebrew name] DEARLY LOVED ELDER DAUGHTER OF ELLIS AND MURIEL FRANKLIN 25TH JULY 1920 – 16TH APRIL 1958

SCIENTIST

HER RESEARCH AND DISCOVERIES ON VIRUSES REMAIN OF LASTING BENEFIT TO MANKIND

ரோஸலிண்ட் எல்சி ஃபிராங்க்ளின் நினைவாக!

எல்லிஸ் மற்றும் முரியல் ஃபிராங்க்ளின் அவர்களின் அன்பிற்குரிய மூத்த மகள்

 25 ஜூலை 1920 – 16 ஏப்ரல் 1958

அறிவியலாளர்

வைரஸ்கள் குறித்த அவரது ஆராய்ச்சியும் கண்டுபிடிப்புகளும் மனிதகுலத்திற்கு நீடித்த நன்மைகளை வழங்கக்கூடியவை.

  • என்று பொறிக்கப்பட்டது. 

கல்லறையில் அறிவியலாளர் என்று குறிப்பிடப்பட்டது  அந்தகாலத்தில் பெரும் கெளரவம் என்றாலும் வைரஸ்கள் குறித்த அவரது ஆய்வு குறிப்பிடப்பட்டிருக்கையில் ஏன் டி என் ஏ குறித்த எந்தத் தகவலும் அதில் இல்லை என்பது புதிராக இருக்கிறது.

ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் டி.என்.ஏ ஆய்வுக்குப் பிறகு பிர்க்பெக் (Birkbeck) கல்லூரியில் மேற்கொண்ட வைரஸ் ஆய்வுகள், அவரை உலகளாவிய புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. அங்கு அவருக்கு உதவியாளராகவும், மிக நெருக்கமான நண்பராகவும் இருந்தவர் ஆரோன் கிளக் (Aaron Klug). 

தனது இறுதி நாட்களில்,  ரோஸலிண்ட் போலியோ வைரஸின் கட்டமைப்பை ஆராயத் தொடங்கினார். இதுவே பிற்காலத்தில் அந்த வைரஸிற்கான தடுப்பு மருந்துகளை மேம்படுத்த உதவியது.

ஆரோன் கிளக், ரோஸலிண்டின் திறமையால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்தவர். ரோஸலிண்டின் மறைவிற்குப் பிறகு, அவர் விட்டுச் சென்ற பணிகளை அவர் பெற்றுத்தந்த அமெரிக்க நிதியுதவியுடன் தொடர்ந்து முன்னெடுத்தார். 1982-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு ஆரோன் கிளக்கிற்கு வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது நோபல் பரிசு உரையில், “ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின் மட்டும் உயிருடன் இருந்திருந்தால், இன்று அவர் தான் இந்த இடத்தில் நின்றிருப்பார்” என்று கூறினார்.  

வரலாறு சத்தமாகப் பேசுபவர்களையே கொண்டாடுகிறது; அதனால்தான் டி.என்.ஏ என்றாலே வாட்சன்-கிரிக் நினைவுக்கு வருகிறார்கள். ஆனால், அந்த இரட்டைச் சுருள் ஏணியின் ஒவ்வொரு படியையும் கண்டு பிடித்தவர் ரோஸலிண்ட் ஃபிராங்க்ளின். வாட்சனும் கிரிக்கும்  ‘Photo 51’  அளித்த அளவீடுகளின் அடிப்படையில் ஒரு மாதிரியை (Model) மட்டும்தான் உருவாக்கினார்கள். பிற்பாடு உண்மை தெரிந்ததும் ரோஸலிண்டிற்கு “wronged heroine”, the “dark lady of DNA” the “forgotten heroine” a “feminist icon”  the “Sylvia Plath ofindf molecular biology என்றெல்லாம் பெயர் சூட்டப்பட்டது,

எனவே, டி.என்.ஏ-வைக் கண்டறிந்தவர் ரோசாலிண்ட் ஃபிராங்க்ளின் என்று பள்ளிப் பாடங்களிலிருந்தே ஆவணப்படுத்த வேண்டும். அப்படிச்செய்தால் மட்டுமே வருங்கால சந்ததியினருக்கு உண்மை தெரியும். இதுதான் நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

சரண் 26!

சரணுக்கு இன்று 26-ஆவது பிறந்தநாள். நாட்கள் ஒன்றும் அத்தனை வேகமாகச் சென்றுவிடவில்லை; மிக மெதுவாகத்தான் நகர்ந்திருக்கிறது காலம். ஒன்பது மாதங்கள் முடிந்து, வான்வழிப் பயணத்திற்கான சட்டபூர்வ நாட்களும் கடந்த பின்னால், பொய்ச்சான்றிதழ் வாங்கித்தான் நிறைமாதக் கர்ப்பிணியாக அபுதாபியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தேன். கர்ப்பகாலம் முழுவதுமே கொந்தளிப்பான கால மாகத்தான் இருந்தது. வயிற்றில் இருப்பது பெண் என்று எப்படியோ நான் நம்பினேன்; ‘துர்கா’ எனப் பெயரும் இட்டிருந்தேன்.

ஏப்ரல் 4, 2000 அன்று சரண் ஆனைமலை அம்பராம்பாளையம் வசந்த் மருத்துவமனையில் பிறந்தான். கர்ப்பகாலத்தில் நான் நல்ல உணவைச் சாப்பிட்டிருக்கவில்லை என்கிற குற்றவுணர்வு, சரணுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும்போதெல்லாம் என்னைக் கஷ்டப்படுத்தும். புதிய தேசம், புரியாத பாஷை, மிகச் சிக்கலான தாம்பத்தியம், பொருளாதார ரீதியான சார்பு நிலை, கர்ப்பகாலச் சிக்கல்கள் என அனைத்திற்கும் மேலாக, வயிற்றில் இருக்கும் குழந்தையை யாரேனும் ஏதேனும் செய்துவிடுவார்களோ என்னும் அச்சம் என்னை நிரந்தரமாகப் பீடித்திருந்தது. ஊரிலிருந்து கொடுத்து அனுப்பப்பட்ட ஒரு பெரிய கண்ணாடி பாட்டில் நிறைய இருந்த குலோப் ஜாமூனை, அவ்வப்போது எடுத்து வாஷ் பேசினில் கரைத்துக் கரைத்துத் தீர்த்தேன். அதில் வயிற்றுக் குழந்தைக்கு ஆபத்தான ஏதோ இருக்குமென அஞ்சினேன்.

கடுமையான  வீட்டு வேலைகள்அப்போது இருந்தன; ஓய்வென்பதே ஒரு நிமிடம் கூட உடலுக்கு இல்லாத காலம். வீட்டில் ஒரே அறையில் குடித்தனம்; மற்றொரு படுக்கையறையும் சமையலறையும் உள்வாடகைக்கு விடப்பட்டிருந்தன. எனக்கென உறங்கும் நேரமோ, தனிமையோ, ஓய்வோ எதுவுமே இல்லாத, பெரும்பாலும் பசியுடன் இருந்த மாதங்கள் அவை. பிரசவத்திற்கு ஊருக்கு வருவதிலும் எனக்குப் பெரிய ஆர்வம் இருக்கவில்லை. ‘வாணலிக்குத் தப்பி அடுப்புக்கு வரும் கதை’தான் அதுவும் என்றாலும் வந்தேன்; எங்கும் போக இடமில்லாத நிலை அது.

வழக்கம்போல வீட்டிலும் அப்பா என்பவரின் வன்முறை. ஆனால், திருமணத்துக்குப்பிறகு  உடல்ரீதியான துன்புறுத்தல்  இல்லை; இருப்பினும் மனோரீதியான வன்முறை கட்டுக்கடங்காமல் இருந்தது. திருமணத்திற்கு முன்பிருந்தே வேலைக்குப் போய்ச் சம்பாதித்துக் கொண்டிருந்ததால், அப்போது கைகளில்  சுத்தமாகப் பணமில்லாமல் இருந்தது பெரும் சுமையாக இருந்தது. இரண்டு பக்கமும் மனித உணர்வு, உறவு, மனிதாபிமானம் ஆகிய எல்லாவற்றையும் விடப் பணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்த ஆட்களே இருந்தார்கள்.

எப்போதாவது மாலை காற்றாட நடைக்கையில் அப்பா என்பவரும் உடன் வருவார். முனிசிபல் ஆபீஸ் முனையில் இருக்கும் இளநீர்க்கடையில், அந்த அம்மாவிடம் இளநீர் வாங்கி குடித்துவிட்டு நான் பணம் கொடுப்பதை அப்பா உணர்ச்சியின்றிப் பார்த்துக்கொண்டிருப்பார்.  சரண் ஐரோப்பா செல்லும் முன்பு அந்த இளநீர்க்கார அம்மாவிடன் அவனை அழைத்துச்சென்று அவன் வயிற்றில் இருக்கையில் அவர்வெட்டித்தந்த இளநீரை அவன் குடித்திருக்கிறான் என்று சொன்னேன். அவரது கால்தொட்டு வணங்கிவிட்டுத்தான் புறப்பட்டான். அந்த அம்மா அவனுக்கு கண் நிறைந்து ஒரு இளநீர் வெட்டித்தந்தார்கள்.

கர்ப்ப காலத்தில் அம்மா என்னை எப்படி நடத்தினார் என்று சொல்ல இன்னும் மனது வரவில்லை. அன்னைமை குறித்த ஒரு மாயை உலகில்  இருக்கிறதல்லவா, அது அப்படியே இருக்கட்டும். 

நல்ல பசியில் ஒருவாய் அதிகமாகச் சாப்பிட்டால், உடனே அம்மா, ‘அதிகமா சாப்பிட்டா குழந்தை ஊறிப் பெரிசாகும், அப்புறம் சுகப்பிரசவம் ஆகாது; சிசேரியனுக்கெல்லாம் இங்கே பணமில்லை…’ என்பார்கள். இதை மட்டுமே என்னால் வெளியே சொல்ல முடியும். 

இளமையில் நல்ல புடவை உடுத்திக்கொண்டோ, தலைக்குக் குளித்து நீளமான அடர்த்தியான கூந்தலை ஆயிரங்கால் ஜடை பின்னிக்கொண்டோ, ஜிமிக்கி போட்டுக்கொண்டோ, தலை நிறையப் பூச் சூடிக்கொண்டோ கல்லூரிக்கோ பல்கலைக்கழகத்திற்கோ செல்கையில், அம்மாவின் கண்ணில் ஒரு கனல்புள்ளி தெரியும். கட்டாயமாக ஏதோ ஒன்று சுருக்கென்று சொல்வார்கள்; ஏதோ ஒரு குறை சொல்லியோ அல்லது அப்பா என்பவர் என்னை கடுமையாக பேசும்படியாக ஒரு சூழலை வேண்டுமென்றே  உண்டாக்கியோ என் முகம் வாடிப்போன பின்னரே நான் அங்கிருந்து இறங்கிச் செல்வதை பார்த்துக்கொண்டிருப்பார்கள்.. ‘காடு’ நாவலில் கிரியின் சம்பளத்தைக் கேட்டதும்  அவன் அப்பாவின் உணர்வுகளை ஜெ சொல்லியிருப்பார்; அப்போது நான் அம்மாவைத்தான் நினைத்துக்கொள்வேன். உண்மையிலேயே நான் வேறெங்கோ வேறு யாருக்கோதான் பிறந்திருக்கவேண்டும் எப்படியோ அந்த வீட்டுக்கு நான் கொண்டு வரப்பட்டிருக்கவேண்டும் என்று ஆழமாக இப்போதும் நம்புகிறேன்.

இன்றைக்கும் நான் எப்போதும் மிக விரிவாக, தேவைக்கும் அதிகமாகவே சமைப்பதற்கும், யார் வந்தாலும் திருப்தியாகச் சமைத்துப் போடுவதற்கும் அப்போதைய என் பசிதான் காரணம். பிரசவத்திற்குப் பிறகும் பத்திய உணவோ, வயிறு சுருங்கப் பிரத்யேக உணவோ, ஏன் பாலூட்டுவதற்கான உணவோ கூட எனக்கு அளிக்கப்படவில்லை. சரணுக்கு 21 நாட்களானபோது, நான் அவனைச் சரியாகப் பிடிக்கக்கூடத் தெரியாமல் ஷார்ஜா விமான நிலையத்தில் இறங்கியிருந்தேன். எனக்கு ஓய்வு வேண்டும், அறுவை சிகிச்சைக் காயங்கள் ஆற வேண்டும் என்றெல்லாம் என் தரப்பில் யோசிக்கக்கூட  யாரும் இல்லை.

என் வாழ்வைத் திரும்பிப் பார்க்கையில் எனக்கு மிக ஆச்சரியமாக இருப்பதெல்லாம், நான் இன்னும் உயிருடன் இருப்பதுதான். சரண் பிறந்தபோது, ‘ஆண் குழந்தை’ என்னும் டாக்டர் வசந்தின் குரல் என் காதில் விழுந்த பின்னரே நான் நினைவிழந்தேன். அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அவனும் சின்னவனும் உடனிருக்கிறார்கள் என்னும் ஒன்றே என் பிடிப்பாக இருக்கிறது.

அபுதாபியில் அவனுடன் பேசிக்கொண்டே இருப்பேன். அவனுக்கு நான் பேசுவது புரியாத மிகச்சிறு வயதிலிருந்தே என் கண்ணீரையும் குரலையும் அவன் கேட்டுத்தான் வளர்ந்தான். அவனுக்காகத்தான் இந்த கிராமத்து வீட்டைக் கட்டி இங்கு வசிக்க வந்தேன். அவனால்தான் இன்று நான் இருக்கிறேன்.

மிகச் சிக்கலான ஒரு காலகட்டத்தில், சரண் ஸ்கூல் வேனிலிருந்து கீழே இறங்கும்போது, தெருவின் எதிர்ப்பக்கத்தில் இருந்த எனக்கு அவனது பெரிய ஷூ அணிந்த கால்கள் தெரிந்தது அத்தனை நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. சரணுக்கும் தருணுக்கும் தெரியாது; அவர்கள் இருவரும் என் வாழ்வை எப்படியெல்லாம் நேராக்கி, நான் இன்று உயிருடன் இருக்க உதவியிருக்கிறார்கள் என்று.

 கண்பட்டதுபோல, தவிர்க்கவே முடியாமல் வேறு ஒரு தரப்பிலிருந்து உண்டான காரணத்தினால்  சரணுக்கு இப்போதிருக்கும் ஒரு சிறு துயர் மறைந்து, அவன் அதை மறந்து, குடும்பமும் குழந்தைகளுமாக என் கண்முன்னே வாழவேண்டும் அவன் ஒரு தொடக்கம்தான் பின்னாலேயே தருணும் சாம்பவியும் அவனைப்போலவே நலமாக இருப்பார்கள் . அது மட்டுமே இப்போது என் ஒரே ஒரே ஒரே ஆசை. தெய்வங்களே காத்துக்கொள்க! 

பிறந்தநாள் வாழ்த்துகள் சரண் குட்டி.

விவேகானந்தரும் விஜயகாந்தும்!

இன்று விவேகானந்தர் ஜெயந்தி கல்லூரியில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரையும், இளமையில் அவரைப் போலாக வேண்டும் என்று கனவுகொண்டிருந்த தருணையும் நினைத்துக்கொள்கிறேன்.

சரண், தருணை நான்தான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்துச்செல்வேன். அப்படியொரு மாலையில் 1-ம் வகுப்பிலிருந்த தருணின் வகுப்பாசிரியை கீதா மிஸ் என்னை அவசியம் சந்திக்க வேண்டும் எனத் தகவல் சொல்லி இருந்ததால் அவருக்காக ஆசிரியர் அறையில் காத்திருந்தேன். அவரது மேசை முழுக்க குழந்தைகள் வரைந்த படங்களும் திருத்தவேண்டிய தாள்களும் நிரம்பிக்கிடந்தன. களைத்துப்போய் தலையில் சாக்பீஸ் துகள்களுடன் வந்த அவர் கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக்கொண்டே எதிரில் இருந்த நாற்காலியில் அமரும்படிச் சொன்னார். வழக்கமாக அவரது முகத்தில் இருக்கும் புன்னகை அன்று இல்லை என்பதை கவனித்தேன்.

எடுத்த எடுப்பிலேயே ...வீட்டில் நிறைய டிவி பார்ப்பிங்களா... என்றார் ... இல்லைங்க எங்க வீட்டில் டிவியே இல்லையே!..என்றேன்

. ... அப்போ அடிக்கடி பசங்களை சினிமாக்கு கூட்டுட்டு போவீங்களா?.. என்றார்.

.. இல்லைங்க, எப்பவாவதுதான் போவோம்…“

என்னை நம்பாமல் முறைத்துப்பார்த்துவிட்டு“ ..அப்புறம் எப்படிங்க வகுப்பில் மாணவர்களை எல்லாரும் எதிர்காலத்தில் என்னவாகப் போறீங்கன்னு வரிசையாச் கேட்டு, ஒவ்வொருத்தருனும் டாக்டர், இஞ்சினீயர், கலெக்டர், கண்டக்டர்னு சொல்லிட்டிருக்கறப்போ தருண் எழுந்து விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொல்லறான்?, ஏன்னு நான் கேட்டா எங்கம்மாதான் அப்படி ஆகனும்னு சொன்னாங்கன்னு சொல்லறான், சின்னக்குழந்தைகளை இந்த வயசிலெயெ சினிமாவை நோக்கித் தள்ளறது சரியா ? அதுவும் நீங்களே ஒரு டீச்சரா இருந்துகிட்டு?... என்றார்.

அயர்ந்து போனேன். தருணுக்கு விஜயகாந்தைத் தெரியும் என்பதே எனக்குத்தெரியாது, அன்னையின் விழைவுகள் ஜீன் வழியாகக் கடத்தப்படுமென்பது உண்மையென்றால் அவன் பார்த்திபன் ஆக வேண்டும் என்றுதானே நியாயமாகச்சொல்லி இருக்க வேண்டும் ஆனால் எப்படி விஜயகாந்த்?

கீதா மிஸ்ஸிடம் அப்படி நான் எதுவும் சொன்னதில்லை என்று சத்தியம் செய்துவிட்டு அது சம்பந்தமாகத் தருணைக்கண்டிக்கிறேன், சினிமா மோகத்திலிருந்து அவனைத் திருப்பித் திருந்திய குமரனாக்கி நல்வழிப்படுத்துகிறேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு வீட்டுக்கு மகன்களை அழைத்துக்கொண்டு வந்தேன்.

தருணுக்கு எதிர்காலத்தில் ஒரு பன்றிகுட்டியாக வேண்டும் என்னும் ஒரு பெருவிருப்பம் இருந்ததுதான் எனக்குத்தெரியும், பள்ளியிலிருந்து வீடு செல்லும் வழியில் ஒரு சாக்கடையில் பன்றிக்குடும்பமொன்று இருந்தது, கட்டாயம் அங்கே காரை நிறுத்தி மனங்குளிர அவன் பன்றிகளைப் பார்த்து ரசித்தபின்னரே காரை எடுக்கமுடியும்.

கொஞ்சம் வளர்ந்து, நம்மைப்போல எளியமானுடர்கள் பிற்காலத்தில் பன்றிகளாக முடியாது என்று தருண் அறிந்துகொண்ட போது அவன் 3-ம் வகுப்பு முடித்து விட்டிருந்தான். அப்போதும் மனம் தளராமல் கண்ணாடி முன்பு நின்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மட்டும் பன்றிக்குட்டியைப்போல மாற்றிக்கொள்ளும் சாத்தியங்களைப்பற்றி யோசிப்பான்.

ஒரு ஞாயிறன்று உயரமாக தலையணைகளை அடுக்கி வைத்து அவற்றின் மேலிருந்து தரையில் குதிக்கும் பரிசோதனையொன்று நூழிழையில் பிசகிப்போய் தரையில் குப்புற விழுந்து உதடுகள் வீங்கி பத்துப்பதினைந்துநாட்கள் அசல் பன்றிக்குட்டியைப் போலவே முகம் இருந்ததை நொடிக்கொருதரம் கண்ணாடி முன்பு நின்று பார்த்துப்பார்த்துத் துயருற்றவன் பிறகு ஒருபோதும் பன்றிகுட்டிகளைப் பற்றிப் பேசவேயில்லை

இரவு சமைக்கையில் அதே யோசனையில் இருந்தேன் கொஞ்சநாள் முன்பு ரமணா திரைப்படத்தை லேப்டாப்பில் மகன்களுடன்பார்த்து, கல்லூரிப் பேராசிரியராரன விஜயகாந்த் குற்றங்களைத் தட்டிக்கேட்பதை, சண்டைக்காட்சிகளில் எதிராளியின் நெஞ்சுக்குநேரே அவர் கால்கள் உயர்ந்ததை எல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது அதனால் சொல்லி இருப்பானோ என்றூ ஒரு சம்சயமும் உண்டானது.

இரவு இருவருக்கும் கதைசொல்லித் தூங்கவைக்கையில் மெதுவாக“.. தருண், கீதா மிஸ் கிட்ட என்னடா சொன்னே?.. என்றேன்.

..அதுவா நான் பெரிசாகி விஜயகாந்த் ஆகப்போறேன்னு சொன்னேன், கீதா மிஸ் முறைச்சுப்பார்த்து இனிமே அப்படிச்சொன்னா அடிப்பேன்னாங்க..ஆனா நான் பயந்துக்கலை அவங்க அடிக்கவே மாட்டாங்கனு எனக்குத்தெரியும்..“ என்றான்.

``...எதுக்குடா அப்படிசொன்னே? உனக்கு விஜயகாந்த் பிடிக்குமா?..

..ஆமா பிடிக்கும் நீதான சொன்னே அவர் ரொம்ப நல்லவரு நமக்கு நிறைய நல்லது பண்ணி இருக்காருன்னு அதான் நான் சொன்னேன்..

..நானா, நான் எப்படா சொன்னேன்..?

... மீ மறந்துட்டியா நீயே? அந்த பெட்ருமில் அவர் போட்டோ கூட இருக்கே நீ அதைக்காமிச்சு சொல்லி இருக்கே, தலையில் துண்டு கட்டிட்டு, கையை இப்படி கட்டிட்டு நிப்பாரே அந்த விஜயகாந்த்,,, என்றான்.

..அடப்பாவி அவர் விஜயகாந்த் இல்லடா விவேகானந்தர்..

... ஹி ஹி ஆமா வி- ல ஆரம்பிச்சதால நான் மாத்திச் சொல்லிட்டேன் நாளைக்கு கீதா மிஸ்கிட்ட சொல்லிடறேன் நான் விவேகானந்தராகப் போறேன்னு.. என்றான்.

வேடசெந்தூ ர் வீடு கிரஹப்பிரவேசத்துக்கு வந்திருந்த என் ஆசிரியர் திரு ராஜகுமார் அவர்கள் விவேகானந்தரின் சட்டமிடப்பட்டிருந்த அந்தப் புகைப்படத்தைப் பரிசளித்திருந்தார் இன்றுமவர் அதே இடத்திலிருந்து சைடாக எங்களைப்பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கிறார், அந்தப் புகைப்படத்தைக்காட்டி அவரைக் குறித்து மகன்களிடம் பேசி இருக்கிறேன்.அதில் வந்த வினை அது. இதையெல்லாம் இன்னுமே வீட்டில் பேசிப்பேசி சிரித்து தருணை கோபமூட்டுவோம்.

சில வருடங்களுக்கு முன்பு இதே நாளில் என்னைத் தெரியாத்தனமாக விவேகானந்தரைக் குறித்து உரையற்றச் சொன்னார்கள். நானும் ஜெ வின் தளத்திலிருந்தும் விவேகானந்தரைக் குறித்த நூல்களிலிருந்தும் மிகத்தரமான ஒரு உரையைத் தயாரித்துகொண்டு போய் விவேகானந்தரின் பயணங்கள் என்னும் செறிவான உரையாற்றினேன்.

அதுவரை அரைத்தமாவே அரைக்கப்பட்ட அந்த அரங்கில அது மிகப்புதியதோர் எழுச்சி உரை (என்பதையும் நானே சொல்லிக்கொள்கிறேன்). மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரும் பேராசிரியர் பிரமை பிடித்ததுபோல் இருந்தார், வேறு வழியில்லாமல் என்னைப்பாராட்டி விட்டு, தான் அந்த உரையைப் பதிவு செய்திருப்பதாகவும், கல்லூரி நிர்வாகத்துக்கு அதைஅனுப்பி என்னைக்குறித்துச் சொல்லப்போவதாகவும் சொன்னார்.

அவர் பணி ஓய்வு பெற்று இரண்டு வருடங்களாகிது பாவம் அவரால் அதை இன்று வரை செய்ய முடியவில்லை என்பதையும் என்னை அதன்பிறகு நிர்வாக அங்கத்தினர் இடம்பெறும் முக்கிய விழாக்களில் உரையாற்ற அழைப்பதில்லை என்பதையும் இந்த நன்னாளிலே புன்னைகையுடன் நினைவு கூறுகிறேன்.

தருணுக்கு இன்னும் விவேகானந்தராகும் உத்தேசம் இருக்குமேயானால் அவனது ஏராளமான தோழிகள் அதற்கு அனுமதி தரவேண்டி இருக்கும் சிக்கலும் இப்போது இருக்கிறது என் பதை அவனுக்கு நினைவூட்ட வேண்டும்.

// இன்னும் இருந்துகொண்டிருக்கிறது அந்த அழகிய முகம். என்றும் மாறாத இளமையிலேயே அவரை நம் நினைவுகளில் நீடிக்கச் செய்த விதி பெரும் கருணைகொண்டது//- ஜெ

Dr.B ஜெயமோகன்

ஜெ தளத்தில் மதிப்புறு முனைவர் பட்டம் அவருக்கு வழங்க விருப்பதாக செய்தி வந்ததுமே  அவருக்கு ஒரு வாழ்த்துச்செய்தி மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு  தக்‌ஷசீலா பல்கலைக்கழகத்துக்குச் செல்லவேண்டும் என முடிவெடுத்தேன். ஜெ மீது இருக்கும் மரியாதை ஒரு பக்கம், முனைவர் பட்டத்தின் மீது இருக்கும் மரியாதை மறுபக்கம் என எனக்கு இந்த நிகழ்வு மிக முக்கியமானதாக இருந்தது. 

முனைவர் பட்டத்தின் மீதான வசீகரம் எனக்கு இன்னுமே குறையாமல் அப்படியே இருக்கிறது. பாரதியார் பல்கலைக்கழகத்துக்குச் சென்று முதுகலை தாவரவியல் படிப்பில் சேரும் போது முனைவர் பட்ட ஆய்வுகளைக் குறித்தெல்லாம் எதுவுமே தெரியாது. அங்கு சென்று அதைத் தெரிந்துகொண்டு அந்தபட்டத்தின் மீது பித்துப்பிடித்ததை ஒரு கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன். 

நான் முதுகலை வகுப்பில் சேர்ந்து ஒரு வாரத்திலேயே  tribal pulse -ல் ஆய்வு செய்த ராஜாராம் என்பவரின் முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித்த்தேர்வு நடந்தது.  எல்லா மாணவர்களும் வரவேண்டும் என்று சொல்லப்பட்டது, என்னவோ மீட்டிங் என நானும் போய் உட்கார்ந்திருந்தேன்,   அப்போது துணைவேந்தராக ஜெனிடிக் எஞ்சினீயரான மாரிமுத்து இருந்தார்.அவரும் அரங்கில் இருந்தார். ராஜாராம் அண்ணன் அவரது ஆய்வு முடிவுகளை வழங்கினார் நான் அசுவராஸ்யமாக கையில் என்னவோ சாப்பிடக் கொடுத்திருந்தார்கள் அதை பின் வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். 

திடீரென இனிமேல் ராஜா ராம் டாக்டர் ராஜாராம் என அழைக்கப்படுவார் என்று துணைவேந்தர் சொல்ல அனைவரும் பலமாக கைதட்டியதும் பித்துபிடித்தது போலானது. 12ம் வகுப்பு முடிந்ததும் டாக்டருக்கு படிக்க விரும்பினேன்.லட்சக்கணக்கில் செலவாகும் முடியவே முடியாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். பிறகு கால்நடை மருத்துவமாவது படிக்கக்கேட்டேன் விவசாயப் பல்கலைக்கழகத்தில் அந்தப்படிப்பு படிப்பவர்கள் காக்கி பேண்ட் ஷர்ட் போடவேண்டும். நம்ம குடும்பத்துப் பெண்கள் பேண்ட் ஷர்ட் போடுவதா என அதுவும் கைவிட்டுப் போனது. 

எனவே தாவரவியல் படித்தும் டாக்டர் ஆகலாம் என்பது அன்றிலிருந்து ஒரு ஜுரம் போல என்னைப் பிடித்துக்கொண்டது, பிறகு நான் தென்னை நார்க்கழிவில் ஆய்வு செய்து மூன்றே வருடங்களில் முனைவராகி டாக்டர் என்று பெயருக்கு முன்னால் போட்டுக்கொண்டது தனிக்கதை.  இந்தக்கல்லூரியில் வேலைக்குச்சேர்ந்த புதிதில் கையெழுத்திடுகையிலும்  பெயருக்கு முன்னால் dr என்று போட்டு அப்போது துறைத்தலைவராக இருந்த ss sir  லோகமாதேவி, இங்க வா என்ன  சைன் போடும்போதும் இப்படி  டாக்டர்னு போடுவியா என்று ஒரு நாள் கடிந்துகொண்டபோதுதான் அது தவறென்று தெரிந்தது.;)

எனினும் நான் ஊசி போடும் டாக்டராக இல்லாமலிருந்தது மிகத்தாழ்வாக எண்ணப்பட்ட கதையும் நடந்தது அதை எழுதிப்பிரசுரித்திருக்கிறேன்.(https://solvanam.com/2021/02/27/%e0%ae%9a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/)

 எனவே இந்த விழாவுக்குப் போவதென்று முடிவு செய்து கோவையிலிருக்கும் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கையில் ஒருவர் என்னை அழைத்துப்போவதாகவும் மற்றொருவர் உடன் இணைந்துகொள்வதகவும் சொன்னார்கள். நம்பினேன்.  

நவம்பர் விடுமுறைக்காலம் என்பதால் ஒத்துக்கொண்ட ஒரு நிகழ்வுக்காக இடையில் சென்னை செல்லவேண்டி இருந்தது சென்னையிலிருந்து வந்த அன்று கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி. மறுநாள் திண்டிவனம் செல்லவேண்டும். சென்னையிலிருந்தே  கோவை நண்பர்களிடம் பேசியபோது கட்டாயம் போகலாம் என்று சொன்னதால் அதைக்குறித்து கவலையில்லாமல் இருந்தேன், ஆனால் அன்று மாலையில், என்னை அழைத்துச் செல்வதாக சொன்னவர்  பல்கலைக்கழக நிகழ்வன்றே அவரது தொழில் சார்ந்த ஒரு மீட்டிங் இருப்பதால் அநேகமாக வர முடியாது என்றார். திகைப்பாக இருந்தது அப்படி கட்டக்கடைசியில் சொன்னால் நான் மாற்று ஏற்பாடுகள் கூட செய்யமுடியாது.

உடன் வருவதாகச்சொன்ன மற்றொருவர் நான் அழைத்துக்கேட்ட பின்னர் கேப்பிட்டல் லெட்டரில் NO என்று பதில் அனுப்பினார். 

அத்தனை தூரம் தனியே செல்வதும் தனியே அறை எடுத்துத்தங்குவதும் எளிதல்ல. ஒரே நாள் நிகழ்வுகளுக்கு நான் யாரையும் சார்ந்திருப்பதில்லை ஆனால் இது அப்படியல்ல எனவே நிஜமாகவே மனமுடைந்தேன். 

மாலை சரண் தருணிடம் வீடியோ அழைப்பில் பேசும் போது கண்கலங்கினேன். சரண் ’’உனக்கு தனியா போக என்ன கஷ்டம்? நான் ரூம் போட்டுத்தரேன்’’ என்றான், மகன்கள் ஒருபோதும் நான் மனக்கஷ்டப் படுவதை  அனுமதிப்பது இல்லை. கூடவே சரண் நான் கோவை நண்பர்களைக் குறித்து குறைப்பட்டுக் கொண்டபோது ’’யாரையும் குறையா சொல்லாத மீ, அவங்களுக்கு என்ன நெருக்கடியோ  விடு, நான் உன்னை எப்படியும் அனுப்பறேன் , பாண்டிச்சேரிக்கு போய் அங்கே தங்கிட்டு அங்கிருந்து 1மணி நேரத்தில் அந்தபல்கலைக்கழகம் இருக்கும் போயிட்டு வந்துரு செலவைப் பத்தியெல்லாம் கவலைப்படாதே உனக்கும்,  டிரைவருக்கும் தனித்தனியா நல்லரூம் போட்டுத்தறேன்’’ என்றான் சரணின் மனமுதிர்ச்சி எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும்,

 நான் தயங்கினேன், உடனே தருண் ’’ மீ நான் 3 நாள் லீவ் போடறேன் இன்னைக்கு நைட் கிளம்பி பஸ்ஸில்  பொள்ளாச்சி வரேன் காலியில் நேரத்திலயே புறப்படலாம் நான் உன் கூட வரேன் கவலைப்படாமல் வா ஜாலியா போயிட்டு வரலாம்’’ என்றான். தருண் எப்போதுமே சரணைப்போலவே படிப்பில் அக்கறை கொண்டவன் வருகை 100 சதவீதம் இருப்பதில் மிகக் கவனமாக இருப்பவன் ஆனாலும் 3 நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவே புறப்பட்டான். 

நானும் கல்லூரியில் விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து வெளியூரிலிருந்து வந்த பேராசிரியர்களுக்கெல்லாம் சன்மானத்தொகையை வாங்கிக் கொடுத்து அவர்களை அனுப்பவே பின்மாலையானது. பின்னர் கார் டயர் சோதித்து பெட்ரோல் டேங்க் நிரப்பி வீடுவந்து சேர்ந்து  கைக்குக்கிடைத்த உடைகளை அவசரமாக எடுத்து வைத்து உறங்கச் செல்லும்போது, டிரைவர் அழைத்து தனக்கு காய்ச்சலென்றும் பாண்டிச்சேரி வரமுடியாதென்றும் சொன்னான்.  அயர்ந்துபோனேன். எத்தனை தடங்கல்கள்

பிறகு 10, 15 ஆக்டிங் டிரைவர்களைக் கேட்டு அலுத்துப்போய் எப்படியோ ஒருவனைப்பிடித்தேன். தருண்  டிரைவர்  கிடைக்கலைன்னா நானே ஒட்டிட்டுவரேன் என்றான் எனினும் இரவெல்லாம் பயணித்து வந்து மீண்டும் 450கிமீ ஓட்டுவது எளிதல்ல என்பதால் ஒரு டிரைவரை அமர்த்திக்கொண்டேன். 

மறுநாள் காலை நல்ல மழை. 8 மணிக்குப் புறப்பட்டு அருமையான சாலையில் பொறுமையாகப்  பிடித்த பாடல்களைக்கேட்டபடி பயணித்து மதியம் 3 மணிக்கு பாண்டிச்சேரி வந்தோம். 

சரண் ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலும்  அறையும் மிக நன்றாக இருந்தது. நல்ல குளிர், மாலை கடற்கரைக்கு சென்றோம் நானும் தருணும்.  

பாண்டிச்சேரி அத்தனை ஜனத்திரள் இல்லாமல் இருந்தது டீக்கடைகளில் துணிக்கடைகளில் சாலைகளில் எங்குமே கூட்டமில்லை, 70-களில் சென்னை இருந்தது போல் என்று நினைத்துக்கொண்டேன். கடற்கரையிலும்  கூட்டமில்லை.

கடலைப்பார்த்தபடி ஒரு தம்பதி பெஞ்சில் அமர்ந்திருந்தார்கள். அந்தி சாய்ந்துகொண்டிருந்தது மேகமூட்டமாகவும் இருந்ததால் வானும் கடலும் இணைந்து அவர்களுக்கெதிரே கருநீலத்தில் ஒற்றைப்பெரும் பரப்பாய் விரிந்திருந்தது. தருண் அவர்களை பின்னாலிருந்து அழகாக ஒரு புகைப்படம் எடுத்தான்.  முகம் தெரியவில்லை என்றாலும் அவர்கள் அனுமதி இல்லாமல் எடுத்ததால் அவர்களிடம் நானும் அவனுமாகப்போய் அதைக்காட்டி அவர்கள்  வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி விட்டு புகைப்படத்தை அழித்துவிடுகிறோம் என்று சொன்னோம் இருவரும் ஒரே குரலாக போட்டோ எங்களுக்கு வேண்டாம்  அழித்துவிடுங்கள் என்றார்கள். 

எனக்கு ஒரே ஆச்சர்யம் ’’அத்தனை அழகான புகைப்படம் அது அதைப்போய் வேண்டாம்னு சொல்றாங்களே? என்னை யாராவது இப்படி எடுத்திருந்தா அதை ஃப்ரேம் போட்டு வீட்டில் மாட்டி இருப்பேன்’’ என்று புலம்பிக்கொண்டெ வந்தேன் தருண் மெதுவாக ’’இல்லம்மா ஒருவேளை அவங்க கணவன் மனைவியா இல்லாமல் கூட இருக்கலாமில்லையா ஏதோ நிம்மதியா உட்கார்ந்து பேசிட்டிருந்தாங்க நாம போட்டோ எடுத்திருக்கக்கூடாது விடு’’ என்றான்.  இந்த மனமுதிர்ச்சியும் ஆச்சர்யமாக இருந்தது.

கடற்கரையில்தான் விஷ்ணுபுரம் நண்பர்கள் ஒரு பெரும் கூட்டமாக பாண்டிச்சேரி வந்திருப்பதை தெரிந்துகொண்டேன், எல்லாருமே கடற்கரையில் இருந்தார்கள். ஜெ அத்தனை நேரம் அங்கே இருந்துவிட்டு அப்போதுதான் புறப்பட்டார் என்றார்கள்.

நடந்து, டீ குடித்து புகைப்படமெடுத்துக்கொண்டு பிரிந்தோம். 

கடற்கரை முழுக்க கற்பாறைகள் இருந்ததால் கடல்நீரில் கால் நனைக்க முடியவில்லை. கால் நனைக்காமல் பிறகென்ன கடல்? நான் ஆர்வமிழந்து திரும்பலாம் என்றேன். கடற்கரையெங்கும் கொகோலோபா யுவிஃபெரா என்னும் கடல் திராட்சை மரங்கள் நின்றன கூடவே தென்னையும் புன்னையும் பூவரசும் கொஞ்சமாக.

அறைக்கு வந்து ஐஸ் கட்டிபோல் சில்லிட்டிருந்த தரைக்குப் பயந்து கட்டிலிலேயே அமர்ந்துகொண்டு இரவுணவை வரவழைத்து சாப்பிட்டோம்.

மறுநாள் காலையில் மணக்குளம் விநாயகர் கோவில் போனோம். பிரபலமான கோயில் என்றார்கள். அல்லியும் தாமரையும் அருகும் கட்டுக்கட்டாக விற்றுக்கொண்டிருந்தார்கள். சேவித்துவிட்டு வெளியே வருகையில் கொஞ்சம் செவ்வல்லி மலர்களை வாங்கிக்கொண்டேன். கோவிலுக்கு உள்ளே போகையில் அல்லிகளைக் கொண்டுபோனவர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். 

வாசலில் வெண்பொங்கல் பிரசாதம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் தருணும் தங்கி இருந்த ஹோட்டலில் காம்ப்ளிமென்ட் காலை உணவை சாப்பிட்டிருந்தோம். அதிலும் இந்த வாரம் சொல்வனத்துக்கு ஜெ வும் அருணாவும் மேப்பிள் மரங்களுக்கிடையில் நின்றிருந்த புகைப்படங்களைப் பார்த்ததால் உணவு குறித்த தொடருக்கு அடுத்ததாக மேப்பிள் சிரப் பற்றி எழுதலாம் என்று முந்தினநாள் இரவுதான் தருணிடம் சொன்னேன். காலை உணவில் மேப்பிள் சிரப்பும் பேன்கேக்கும் வைத்திருந்தார்கள். நான் முதன்முதலாக அங்குதான் சுவைத்தேன் அதை.  எனவே பசிக்கவில்லை.

பொங்கலை தொன்னையில் நிறைத்து அடுக்கி வைத்திருந்தார்கள் அத்தனை வேண்டாம் ஆனால் கோயில் பிரசாதம் சாப்பிடவேண்டும் என்பதற்காக கொஞ்சமாக வாங்கிக் கொள்ளலாம் என்று அருகில் சென்றேன். 

பொங்கலைக் கொடுத்துக்கொண்டிருந்த இருவரில் ஒரு பெண் முகத்தை சிடுசிடுவென வைத்துக்கொண்டு ’’அந்தப்பக்கம் வாங்க’’ என்றார். நான் ’’எனக்கு அத்தனை வேண்டாம் எனவே காலித்தொன்னையை எடுத்துக்கொண்டு கொஞ்சமாக வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லி தொன்னையை எடுத்தேன் அவர் மீண்டும் நான் புரிந்துகொள்ளவில்லை என்று நினைத்து ’’அந்தப் பக்கம் வச்சிருக்கும்மா’’ என்றர் சிடுசிடுப்புடன் நான் பொறுமை இழக்காமல் எனக்கு அத்தனை வேண்டாம் என்று சொல்லி ஒரு ஸ்பூன் அளவு வாங்கிக் கொண்டேன். நானும் தருணுமாகச்சாப்பிட்டோம். சுவை அபாரமாக இருந்தது. உணவு அளிப்பவர்கள் கொஞ்சம் மனமுவந்து முகத்தில் சிரிப்பை கொண்டு வந்தாலென்ன? 

பின் அச்சுபிச்சு என்று என்னன்னவோ விற்கும் கடைகளுக்குச் சென்று சுற்றிப் பார்த்தோம். எங்கெங்கிலும் மதுபானக்கடைகள் இருந்தன வடிசாலைகளும் நிறைய. பெண்கள் எல்லோருமே பேரழகாக, மிகப்பொருத்தமாக அழகிய நவீன உடைகளில் இருந்தார்கள். தருணை விட நான்தான் பெண்களை அதிகமாக வேடிக்கை பார்த்தேன். தருண் பாண்டிச்சேரி போன்ற ஒரு இடத்திற்கு தனது  இளமையின் உச்சத்தில் அம்மாவுடன் வரவேண்டி இருந்த துயரை அவ்வப்போது சொல்லிச் சொல்லி வருந்தினான். ’’இன்னொரு நாள் நண்பர்கள் கூட வந்துக்கோடா இப்ப என்ன பெங்களூருவில் இருந்து பக்கம்தானே?’’ என்று சமாதானம் பண்ணினேன். 

முற்பகல் 11. 45-க்கு 5 கார்களில் பாண்டிச்சேரி நண்பர்கள் இணைந்து பல்கலைக்கழகம் செல்லலாம் என நண்பர் சிவாத்மா தெரிவித்திருந்தார். எனவே குறிப்பிட இடத்துக்கு வந்தோம். அங்கிருந்து எல்ல்லாருமாக பல்கலைக்கழகம் சென்றோம். மாபெரும் கட்டிடங்களால் ஆகி இருந்தது பல்கலைக்கழகம்.

வாசலிலிருந்தே ஜெ வுக்கான வாழ்த்துப்பதாகைகள் வரிசையாக இருந்தன. அகரமுதல்வன், அரங்கசாமி, சக்திகிருஷ்ணன், ஈரோடு கிருஷ்ணன், விஜயசூரியன்,ரேணு,  வேணு வேட்ராயன், குளித்தலை ஷண்முகம், மூர்த்தி, மணிமேகலை,  அஜிதன், தன்யா , சைது, நவீன், மானஸா, க்ருபா, செல்வேந்திரன், சிறில் அலெக்ஸ், குருதிப்பலி செந்தில் என எல்லாருமே இருந்தார்கள்;  

எல்லோருமே குடும்ப விழாவுக்கான மனநிலையில் இருந்தோம். நான் உள்ளே வரும்போது ஜெ வும் அருணாவும் மதிய உணவுக்காக அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் ஜெ வுக்கு வாழ்த்துச் சொன்னேன். தருண் அவருக்கு கைகுலுக்கி வாழ்த்தி தெரிவித்தான். 

எங்கள் அனைவருக்குமே உணவு தயாராக இருந்தது. சாப்பிட்டுவிட்டு நிகழ்வு அரங்கிற்கு வந்தோம். முந்தின நாளே அந்தப்பல்கலைக் கழகத்தைச்சேர்ந்த மகாகவி என்னும் ஒரு பெண் என்னை அழைத்துப் பேசி இருந்தாள். நாங்கள் அவசரமாக இடம்பிடித்து அமர்ந்து கொண்டோம்.விழா சிறப்பாக நடந்தது. ஜெ வரும்போதும் பேசும் போதும் அவரைக்குறித்து ஆவணப்படம் போடப்பட்டபோதும் பட்டம் அளிக்கப்பட்ட போதும் ரஜினி படத்துக்கு ரசிகர்கள் செய்வதுபோல் நாங்கள் கூச்சலிட்டு கைதட்டி கத்திக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். மாணவர்கள் கூட அமைதியாக இருந்தார்கள்.

ஜெ சுருக்கமாக ஆங்கிலத்தில் பேசினார். பி டி உஷாவும் இருந்தார் அவரும் சுருக்கமான உரைதான்.  விழா முடிந்து ஜெ வும் முக்கியஸ்தர்களும் உள்ளே சென்றார்கள். ஜெ கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு சென்றார்.

நானும் தருணும் இன்னும் சிலருமாக அவரைச்சந்திக்க அங்கே செல்லமுயன்றபோது ஒரு பெண் குறுக்கிட்டு தடுத்து ’’யாரைப் பார்க்கணும்? என்றாள் நான் ’ஜெ’ வை என்று சொன்னேன். அவரைப்பார்த்து ’’விஷ் பண்ணவா? என்றாள்.  ‘’ஆம்’’ என்றேன். ’’மேம் அவர் இப்போ கான்ஃபெரென்ஸ் ஹாலில் இருக்கார் அங்கெல்லாம்’’ என்று அவள் சொல்லத் துவங்கையிலேயே உள்ளிருந்து விஷ்ணுபுரம் நண்பர் ஒருவர் வேகமாக வெளியே வந்து என்னிடம் ’’ஜெ எல்லாரையும் உள்ளே வரச்சொல்லறார்’’ என்று கூவினார். திகைத்துப்பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பெண்னை சற்றே விலகி இரும் பிள்ளாய் என்று சொல்லிவிட்டு நானும் மற்றவர்களும் திமு திமுவென உள்ளே போய் ஜெ வை சூழ்ந்துகொண்டோம்

ஜெ உற்சாகமாக இருந்தார். முகம் கொள்ளாத சிரிப்பு வழக்கம் போல. அவருக்கு பொன்னாடை போர்த்துவதும் புகைப்படம் எடுப்பதும் வெடித்துச் சிரிப்பதுமாக டிபிகல் விஷ்ணுபுர கூடுகை அது. ’’எல்லாரையும்  உள்ளே வரச்சொல்லுங்க  எல்லாரையும் வரச்சொல்லுங்க’’ என்று  ஜெவும் மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருந்தார். 

அந்தப்பல்கலைக்கழகம் இப்படி ஒரு முக்கியஸ்தரைச் சுற்றி இந்தனை பேர்  கூட்டமாக நின்று கட்டித் தழுவிக் கொண்டாடுவதை அதுவரையிலும் பார்த்திருக்க மாட்டர்கள் இனியும்  பார்க்கப்போவதில்லை. அன்பெனும் பெரு வெளி அது.

பாண்டிச்சேரி நண்பர்கள் சார்பாக ஜெ வுக்கு ஒரு சாக்லேட் மாலை போடப்பட்டது. நான் முதன்முதலாக இப்படி சாக்லேட்டில் மாலை போடுவதைப் பார்க்கிறேன். அந்த மாலையை ஜெ கழற்றிய மறுநிமிடம் நண்பர்கள்  அதிலிருந்து சாக்லெட்டுகளை பிய்த்தெடுத்து சாப்பிட்டு எனக்கும் ஒன்று கொடுத்தார்கள்.கட்டற்ற அன்பும் பிரியமும் ஜெ’வை சூழ்ந்திருந்தது. 

நான் அவருக்கு பொன்னாடை அளித்தபோது ’’தருண் எங்கே’’ என்று கேட்டு அவனை வரச்சொல்லி இறுகத் தழுவிக்கொண்டார். எனக்கு பெருமிதத்தில் மூச்சடைத்தது.

பிறகு விடைபெற்றுக்கொண்டு அறைக்கு வந்தோம். சிவாத்மா இரவுணவை சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தார். ஆனால் தருண் அசைவம் சாப்பிட விரும்பினான்.  சிவாத்மாவுடன் அசைவம் சாப்பிடுவது அத்தனை சரியாக இருக்காது என்பதால் அவரிடம் சொல்லி விட்டு அகரமுதல்வன் பரிந்துரையின் பேரில் மன்னா மெஸ்ஸில் சாப்பிட்டோம். உணவு சுவையாக இருந்ததோடு பரிமாறிய பெண்களும் அத்தனை வாஞ்சையுடன் அருகிருந்து பார்த்துப்பார்த்து பரிமாறினார்கள். என்னவோ உறவினர்கள் வீட்டுக்கு போய்ச் சாப்பிட்டதுபோல் இருந்தது. 

தருணை அங்கிருந்தே பெங்களூரு அனுப்பி விட்டு  மறுநாள்  காலை புறப்பட்டு 3 மணிக்கு வீடுவந்தேன். என்னமோ நானே மீண்டும் ஒரு பெரிய பட்டம் வாங்கினதுபோல பூரித்திருந்தேன்.  

மாலா!

இன்று மாலதிக்கு பிறந்த நாள். அதிகாலையிலேயே வாழ்த்தினேன். என் நட்பு வட்டம் மிகமிகச்சிறியதும் குறுகியதும். கல்லூரியிலும் சரி வெளியிலும் சரி யாரிடமும் நெருங்கிப்பழகுவதில்லை ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயே அவர்களையும் நிறுத்தி நானும் கோட்டிற்கு வெளியே நின்று கொள்வதுதான் வழக்கம். அரிதாகவே நான் மிக நெருங்கி நட்பும் அன்பும் கொள்கிறேன்.

கல்லூரியில் மாலதியுடன் மட்டுமே நான் மிகுந்த பிரியமும் நட்பும் கொண்டிருந்தேன். வழக்கமாகவே நான் ஆசிரியர் அறையிலும் அமைதியாக என் வேலை, வகுப்பு. ஓய்வு நேரங்களில் வாசிப்பு என இருப்பேன். வம்பளப்பிலும் கலந்துகொள்வதில்லை. டீ காபி குடிக்க கேண்டீன் போவதே இல்லை. எப்போதாவது என்னைப்பார்க்க விருந்தினர்கள் வந்தால் அவர்களுடன் கேண்டீன் போய் காபி வாங்கிக்கொடுத்து நானும் குடிப்பதுண்டு இது வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு முறை நடக்கும்.

ஒருமுறை அப்படி திருமண அழைப்பிதழ் கொடுக்க வந்த ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு கேண்டீன் போய் காபிக்கு சொல்லிவிட்டு பேராசிரியர்களுக்கென்று இருக்கும் தனிப்பட்ட இடத்தில் அவருடன் அமர்ந்திருக்கையில் மேசையைத் துடைத்து சுத்தம் செய்யும் பணியாளர் ஒருவர் என்னை ‘’.. இங்கெல்லாம் உட்காரக்கூடாதும்மா இது டீச்சர்கள் உட்காரும் இடம்..’’ என்று அதட்டினார்.

பக்கத்து மேசையில் உணவருந்திக்கொண்டிருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் பதறி ’’…ஏய்.ஏய் என்னப்பா இவங்க இங்கே 20 வருஷமா இருக்காங்க . அவங்களைபோயி..’’என்று அவரைக் கண்டிக்க எழுந்தார். நான் சிரித்தபடி அவருக்கு என்னைத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று சமாதானம் செய்தேன். அந்த அளவில் தான் நான் கல்லூரி வளாகத்தில் புழங்குகிறேன்.

அப்படி வெகுகாலம் முன்பு எதற்கோ வரலாற்றுத்துறைப் பேராசிரியருடன் கேண்டீனுக்குபோயிருக்கையில் நல்ல கூட்டமென்பதால் ஒருமேசையில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாலதியின் எதிரே அதே மேசையில் அமரவேண்டி இருந்தது, மாலதியை வரலாற்றுத்துறைப் பேராசிரியர் அறிமுகம் செய்தார், ஹல்லோ சொல்லிக்கொண்டோம்.

மாலதி பணிபுரியும் ஆங்கிலத்துறையில் அன்று யாருக்கோ பிறந்த நாள் எனவே சக ஆசிரியர்களுக்குக் கேண்டீனில் மதிய உணவு ட்ரீட். மாலதிக்கு வகுப்பு இருந்ததால் தாமதமாகத் தனியாக வந்து உணவருந்திக்கொண்டிருந்தாள். மாலதி அழகாக நளினமாக சாப்பிட்டதைப் பார்த்தேன் கூடவே உணவை ரசித்தும் சாப்பிட்டாள்.

(ள் விகுதி நானும் மாலாவும் தோழிகள், இருவருக்கும் சமவயது மற்றும் அன்பினால்)

மிக அழகாகக் கைவிரல் நுனிமட்டும் சாப்பாட்டில் படும்படி மெதுவாக அவ்வபோது உதட்டைத் துடைத்துக்கொண்டு சாப்பிட்டுவிட்டு இறுதியாக ஒரு ஐஸ்கிரீமையும் சாப்பிட்டாள்.

எனக்குச் சாப்பாட்டை ரசித்துப் பிகுபண்ணிக்கொள்ளாமல் சாப்பிடுபவர்களைப் பிடிக்கும். ’’….சாப்பிடறீங்களா…’’ என்று யாரேனும் கேட்டால் உடனே சரி என்று சொல்லுபவளாதலால், அப்படி என்னைப்போலவே சரி என்பவர்களையும் பிடிக்கும். அந்தக்கணத்திலிருந்து நானும் மாலதியும் தோழிகளானோம். நாஞ்சில் நாடனை ,ஜெவை, சுந்தரராமசாமியைல்லாம் வாசிக்கும் ஒருவரை நான் கல்லூரியில் சந்திப்பேனென்று நினைத்திருக்கவே இல்லை.

சிலநாட்களில் இருவருக்கும் பொதுவான தோழியான (சுதந்திரா அம்மா) உமாவுடன் மாலதியின் வயலூர் தோட்டத்துக்கு போயிருந்தேன். முதுகலைப் பட்டதாரியான மாலதியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி அண்ணன் தென்னைமரங்களின் நிழலில் கயிற்றுக்கட்டிலைபோட்டுக்கொண்டு அமர்ந்து ஜெ வின் ஒரு நூலைப் படித்துக்கொண்டிருந்தார். அந்தக்காட்சி அப்படியே ஒரு புகைப்படம் போல என் மனதில் பதிந்திருக்கிறது. அவர்மீது அன்று கொஞ்சம் பொறாமையாகவும் இருந்தது. அபி நிலாவும் இனிய மதியும் சுதந்திராவும் வாய்கொள்ளாமல் அத்தை அத்தை என்றழைக்கும் மருமகள்களாகினர். சரணும் தருணும் அத்தை மாமாவென்று அவர்களுடன் ஒட்டிக்கொண்டார்கள்.

நாங்களிருவரும் கல்லூரியில் தினமும் பார்த்துக்கொள்வது, மாலதியின் தோட்டதுக்கு நாங்களும், இங்கே வீட்டுக்கு மாலதி குடும்பத்தினரும் அடிக்கடி சென்று வந்துகொண்டும் புத்தகங்களைப் பகிர்ந்துகொள்வதுமாக இருந்தோம். தாவரவியல் ஆசிரியர்கள் அறைக்கு நேர் கீழே மாலதியின் அறை இருந்தது. சில சமயம் நான் எனக்குக் கீழே மாலா இருப்பாள் என்று நினைத்துக்கொண்டு புன்னகைத்துக்கொள்வேன்.

மாலதி சுயநிதிப்பிரிவில் பணியாற்றியதால் 10-4pm அவளது பணிநேரம். எனக்கு 9-3pm. பெரும்பாலும் நான் 9 மணி வகுப்பிலிருப்பேன். புத்தம் புதிதாக மாணவர்களைச் சந்திப்பதிலும் அவர்கள் சோர்வடையும் முன்னரே உற்சாகமாகக் கற்பிப்பதிலும் நான் கவனமாக இருப்பேன், டைம்டேபிள் போடும்போதே சொல்லிவிடுவேன் எல்லா முதல் வகுப்பும் எனக்குக் கொடுக்கும்படி.

இன்றுவரையிலும் அது தொடர்கிறது. எனவே 10 மணிக்கு வகுப்பை முடித்துவிட்டு சாக்பீஸ் கறைபடிந்த கையும் எல்லா வகுப்பிலும் கரும்பலகைக்கு முன்பாக ஃபேன் இருப்பதால் சாக்கட்டித்தூள் படிந்த தலைமுடியுமாக நான் வருகையில் தாவரவியல் துறைக்குப் படியேறும் இடத்தில் மாலதி ’நீட்டாக’ புடவை உடுத்திக்கொண்டு நின்றிருப்பாள். கொஞ்ச நேரம் பேசிவிட்டே இருவரும் பிரிவோம்.

நானும் மாலதியும் சகோதரிகளா என்று கல்லூரியில் பலரும் கேட்கத்துவங்கினார்கள்.

மாலதியின் கைகளில் எனக்குக்கொடுக்கவென்று எதாவது கட்டாயம் இருக்கும். சின்னச்சின்ன டப்பாவில் அன்று காலைச் செய்த சிவப்பரிசிப்புட்டோ எனக்கு (இன்றுவரை செய்யத்தெரியாத) எண்ணெய்க் கத்தரிக்காய்க்குழம்போ, காட்டுக்கீரையோ, காயோ, கனியோ, புத்தகமோ தலைக்குவைத்துக் கொள்ள மலர்ச்சரமோ இருக்கும்.

வகுப்பில்லாதபோது ஆங்கிலத்துறைக்கெதிரில் இருக்கும் சின்னச் சிமெண்டுத்திட்டில் அமர்ந்து பேசுவோம். சில சமயம் நூலகத்தில் சந்திப்பதும் உண்டு. மாலதியின் அம்மா பிரமாதமாகச் சமைப்பவர்கள். சரண் தருணுக்கு பிடித்த பலகாரங்கள் செய்து கொடுத்தனுப்புவார்கள். எனக்குபிடித்த கோதுமை மாவில் சர்க்கரையும் கனிந்த வாழைப்பழமும் கலந்து செய்யும் பழப்பணியாரம் அடிக்கடி செய்து கொடுத்தனுப்புவார்கள். வாயில் கரையும் அது.

இன்று வரை மாலாவீட்டில் மிக்ஸி உபயோகப்படுத்துவதில்லை என்பதும் அவர்கள் வீட்டுணவின் அபாரமான சுவைக்குக்காரணம். ஆட்டி ஆட்டி மினுங்கும் பளபளப்பான ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் சமையலறைக்குபின்னால் இருக்கும் நேர்த்தியாகப்பராமரிக்கப்படும் தோட்டம், உருளியில் மிதக்கும் மலர்கள் என்று மாலதியின் வீடு அழகாக இருக்கும்.

கல்லூரியில் மாலதி என்னைப்போலவேதான், நேரத்துக்கு வருவதும் மிகுந்த ஈடுபாட்டுடன் வகுப்பெடுப்பதும் வாக்ஸ் பாப்புலை போன்ற கல்லூரி நேரம் முடிந்தபின்னர் செய்யும் வேலைகளையும் மனதார இழுத்துபோட்டுக்கொண்டு செய்வதுமாக எந்நேரமும் வேலையாகவே இருப்பாள்.

அரசுவேலை ஆங்கிலத்துறைக்கு வந்தபோது தான் விண்ணப்பிக்கவில்லை என்று மறுத்த மாலதியை நண்பர்கள் வற்புறுத்தி விண்ணப்பிக்கசெய்தோம்.

22 வருடங்களாக அயராது பணியாற்றிய, துறை சார் அறிவில் யாருக்கும் நிகர் கூடச் சொல்லமுடியாத, அந்த வேலைக்கான எல்லாத்தகுதிகளும் இருந்த, ஏராளமான வேலைகளைக் கல்லூரிக்கு அந்தச் சொற்பச் சம்பளத்தைப் பற்றி எண்ணாமல் செய்துகொடுத்த மாலதிக்கு அரசு வேலை கிடைக்கவில்லை. இத்தனைக்கும் ஆங்கிலத்துறையில் பல இடங்கள் அப்போது நிரப்பப்பட்டன, வெளியிலிருந்து கூட 3 பேர் தேர்வானர்கள். ஒரு தனி மனிதரின் காழ்ப்பால் மாலதிக்கு அரசுவேலை தரப்படவில்லை. அந்தக்காழ்ப்பு மாலதியின் செயலாற்றலால் தான் அவருக்குஉருவானது,

தீச்சொல்லிடும் உரிமை தெய்வங்களுத்தான் இருக்கிறது இல்லையா? சரி போகட்டும்.

மாலதி மனமுடந்துவிடவில்லை நான்தான் பெருங்கோபமடைந்திருந்தேன். மாலா வழக்கம்போல வேலைகளில் மூழ்கி இருந்தாள் ஆனால் ஊழ் என்ற இரக்கமில்லாத ஒன்று இருக்கிறதல்லவா?

கிருஷ்ணமூர்த்தி அண்ணன் சுகவீனப்பட்டதும் மண் மறைந்ததும் எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது. புங்கைமரங்கள் பூத்து முடிந்திருந்த ஒருநாளில் அதனடியில் கண்ணீருடன் மாலா அதைப்பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்தது நினைவிருக்கிறது. மாலா அவரை அடிக்கடி அழைத்துக்கொண்டு சிசிகிச்சைக்கெனக் கேரளாசெல்லவேண்டி இருந்தது. கல்லூரி வேலை, மருத்துவச்செலவுகள், கல்யாண வயதிலிருந்த மருத்துவம் படித்துக்கொண்டிருந்த அபி, பள்ளி இறுதியிலிருந்த இனியா, வயதான அம்மா என எல்லாப்பொறுப்பையும் மாலா பார்த்துக்கொண்டாள். கொச்சிக்கு சிகிச்சைக்குச் சென்ற ஒருநாளில் வழியில் விற்றுக்கொண்டிருந்த சுவற்றில் பதிக்கும் பூந்தொட்டிகளிரண்டை எனக்கென வாங்கி வந்த மாலாவின் அன்பை என்னவென்று சொல்வது?

என் இன்ப துன்பங்கள் எல்லாவற்றிலும் எப்போதும் என்தரப்பில் என்னுடனிருந்த மாலா, அண்ணன் மறைந்த பின்னர் எந்தப் புகாரும் இல்லாமல் வேலையை ராஜி வைத்தாள். 25 வருட ஆசிரியப்பணியின் அனுபவம், முனைவர் பட்டம், கற்பித்தலில் இருந்த ஆர்வம் எல்லாவற்றையும் நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தை மகள்களை விவசாயத்தை முழுமனதுடன் ஏற்க மாலாவுக்கு இருந்த மனக்கட்டி லட்சக்கணக்கான பெண்களுக்கு இல்லை. இப்போது பல ஏக்கர்கள் விரிந்திருக்கும் தோட்டத்தை தான் ஒருத்தியாகபார்த்துக்கொள்கிறாள். காலை 6 மணிக்குத் தோட்டம் சென்றால் இரவுதான் வீடு திரும்புகிறாள்.

நானும் சிலநாட்கள் மாலாவுடன் தோப்பில் இருப்பதுண்டு. சரியாக நேரத்துக்குச் சாப்பிடாமல் விவசாய வேலைகளைப் புதிதாகக் கற்றுக்கொண்டு முழு விவசாயத்தையும் தானே சிறப்பாகச் செய்கிறாள்.

வர்ஜீனியா வுல்ஃபின் படைப்புக்களில் முனைவர் பட்டம் பெற்ற மாலா தன் துறைசார் அறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு தென்னை மரங்களுக்கு உரமிடுவதும், சாம்பு புற்களைக் களை எடுப்பவர்களை மேற்பார்வையிடுவது, மிளகாய் பறிக்க ஆட்களை ஏற்பாடுசெய்வதும், தோட்டப் பணியாளருக்குமாகச் சேர்த்து சமைத்து எடுத்துக்கொண்டு போவதுமாக முழுமையாக வேறொரு ஆளுமையாக மாறி இருக்கிறாள்.

நாங்கள் தினமும் பேசிக்கொள்வதில்லை. வாட்ஸ்ஸாப்பிலும் தொடர்பிலில்லை எப்போதாவது பேசிக்கொள்வோம் ஆனால் முந்தினநாள் விட்ட இடத்திலிருந்து பேசுவதுபோல் பேசிக்கொள்வோம். மாலதிக்குப்பின்னர் கல்லூரியில் எனக்கு யாருடனும் தோழமை இல்லை. அவளுக்கான இடம் நிரந்தரமாகக் காலியாகத்தான் இருக்கிறது. அதை மாலதியால் மட்டுமே நிரப்ப முடியும்.

மாலதி இன்று கார் ஓட்டக் கற்றுக்கொண்டிருக்கிறாள். மகள்களைப் பார்க்கச் செல்லவோ, உரம்வாங்கவோ, வங்கி வேலைகளோ, நல்லதுகெட்டதுக்கோ எங்கு வேண்டுமானாலும் மாலதி யாரையும் சார்ந்திராமல் தனியே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறாள். சுதந்திரா, அபி, இனியா, சரண், தருண் சாம்பவி ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக ஒன்றாக ஆரோக்கியமான நட்புடன் இருக்கிறார்கள்.நானும் மாலதியும் உமாவும் மூச்சுலகிலிருந்து இதைமட்டுமே பார்க்க விழைகிறோம்.

பெண்களை அழகாக்குவது அவர்கள் கொண்டிருக்கும் விடுதலையே. மாலா என்னும் பேரழகிக்கு அன்பும் கட்டிமுத்தங்களும்.

அஞ்சலி- ஜேன் குடால்

பிரிடிஷ் விலங்கியலாளரும், சிம்பன்ஸிகளின் பாதுகாவலரும், மானிடவியலாளருமான ஜேன் குடால் தனது 91 –வது வயதில் நேற்று  அக்டோபர் 1, 2025 அன்று லாஸ் ஏஞ்சலீஸில் ஒரு மரம் நடும் நிகழ்வுக்கான பயணத்திலிருக்கையில் இயற்கையாக மறைந்தார்.  

அவரை நினைக்கையில், அவரது காணொளிகளையும் உரைகளையும் கேட்கையில், சிம்பன்ஸிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்கையில் எல்லாம் பேரன்னை என்றுதான்  என் மனதில் தோன்றும். அன்னைமை அவரது உடல்மொழியில் அப்படி பொங்கிப்பிரவாகிக்கும். உலகில் சிம்பன்ஸிகளை குறித்த மிக நீண்ட கால, மிக விரிவான ஆய்வுகள் செய்த ஒரே ஒருவர் ஜேன்.

ethologist என்னும் ஒரு சொல்லையே அவரைக் குறித்து அறிந்துகொண்ட போதுதான் முதன்முதலாக தெரிந்து கொண்டேன். விலங்குகளை, அவற்றின் சமூக கட்டமைப்பை, அவற்றின் உயிர்வாழ்தல், தேவைகள்,  பரிணாம வளர்ச்சியை எல்லாம் அவற்றின் இயற்கையான வாழிடங்களிலேயே அறிந்துகொள்ளும் துறைதான் ethology. 

ஜேன் 1960-களில் உலகளாவிய அளவில் இந்தத்துறையில் பிரபலமாயிருந்த ஒரு விலங்கியலாளராக இருந்தார். இவரது சிம்பன்ஸி ஆய்வுகள்  விலங்குகள் பற்றிய உலகின் புரிதலையே அடியோடு மாற்றியது.மனிதர்களுக்கு மட்டும் உரியது என்று பலகாலமாக நம்பப்பட்ட பலவற்றை சிம்பன்ஸிகள் அறிந்து கொண்டிருப்பதையும், செய்வதையும் அவர் நிரூபித்தது அறிவியல் உலகில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.

நீர்நிலைகளுக்கு பெயர் பெற்ற லண்டனின் மிக புராதன, மிக மிக அழகிய நகரமான Hampstead –ல்  பந்தயக்கார் ஓட்டுநரான (Morris-Goodall) அப்பாவுக்கும் எழுத்தாளரான (Margaret Myfanwe) அம்மாவுக்கும் பிறந்த ஜேன் அவரது குழந்தைப்பருவத்தில் பரிசாகக் கிடைத்த  ஒரு சிம்பன்ஸி பொம்மையிலிருந்து  தொடங்கிய தனது விலங்குகள் மீதான பேரன்பை வாழ்நாள் முழுக்க தொடர்ந்தவர்.

மனிதரல்லாத முதன்மை உயிரினங்களின் அறிவியலில் ( primatology) உலகளவில் இவரே முதன்மையானவர். சிம்பன்ஸிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதை தன் வாழ்நாள் கடமையாகக் கொண்ட ஜேன் ‘’ மனிதர்களை விலங்கு உலகிலிருந்து பிரிக்கும் தெளிவான கோடு ஏதும் இல்லை’’ என்றார். 65 ஆண்டுகள்  சிம்பன்ஸிகளின் வாழிடங்களைப் பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த ஜேன் காலப்போக்கில் மனிதர்களால் இயற்கை வாழிடங்கள் தொடர்ந்து அழிக்கப்படுவதன் ஆபத்தையும், அதற்கு தீர்வு மிக அவசரமாக தேவைப்படுகிறது என்பதையும் வலியுறுத்தும் காலநிலை செயற்பாட்டாளர் ஆகினார்.

1957 –ல் பள்ளிப்படிப்பை மட்டும் முடித்திருந்த ஜேன் கென்யாவின் விலங்குகளைக்  குறித்து அறிய ஆர்வம் கொண்டிருந்தார் . கென்யா செல்ல தேவையான செலவுகளுக்காக ஒரு உணவகத்தில் பரிசாரகராக வேலைசெய்து பொருளீட்டினார். கென்யா சென்று  தொல்லியலாளரும் புதைபடிம மனிதவியலாளருமான Dr.லூயி  மற்றும் தொல்லியலாளரான அவரது மனைவி  மேரியையும் சந்தித்தார். லூயி ஜேனை நைரோபி தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளராகப் பணியமர்த்தினார்.  மனிதப்புதைபடிமங்களின் தேடலில் ஜேனின் பொறுமையையும் அவரது இயற்கை மீதான ஆர்வத்தையும் கண்ட லூயி   ஜேனை தான்சானியாவின் கோம்பே காடுகளில் சிம்பன்ஸிகளைக் குறித்த ஆய்வில் ஈடுபடச் சொன்னார். 

1960 ஜுலை 14-ம் தேதி ஜேன் கோம்பே காடுகளுக்குள் முதன்முதலில் நுழைந்தார். அங்கு பணியாற்றுகையில்தான் சிம்பன்ஸிகளுடனான அவரது பரிச்சயமும்  ஈடுபாடும் உண்டானது. லூயி தம்பதிகளுடன் இணைந்து ஜேன் சிம்பன்ஸிகளின் பாதுகாப்புக்கான ஒரு அமைப்பை அங்கு துவங்கினார்.

அந்த அமைப்பிலிருந்து ஆய்வுகளைச் செய்கையில் தான் சிம்பன்சிகள் அது நாள் வரை உலகம நினைத்திருந்ததுபோல் தாவரவுண்ணிகள் மட்டுமல்ல அவை இறைச்சி உண்பதையும், மழைநடனமிடுவதையும், படுபயங்கரமான போர்களில் ஈடுபடுவதையும், எல்லாவற்றையும் விட முக்கியமாக  புற்றிலிருந்து  கரையான்களை  எடுத்து உண்பதற்கான கருவிகளை அவை தயாரிப்பதையும் கண்டறிந்து உலகிற்குச் சொன்னார். 

சிம்பன்ஸிகளைப் பற்றிய உலகின் பல தவறான அறிதல்களையும் நம்பிக்கைகளையும் உடைத்து உண்மையில் சிம்பன்ஸிகள்  மனிதனுக்கு மிக மிக நெருங்கிய உயிரினங்கள் என்பதை ஜேன் தெரிவித்தார். 1963-ல் 29 வயதான ஜேனின்  7500 சொற்களையும், 37 பக்கங்களையும் கொண்ட சிம்பன்ஸிகளைக் குறித்த பல முதல் நிலைத்தகவல்களைக் கொண்ட ஆய்வறிக்கையை நேஷனல் ஜியோகிராஃபிக் சஞ்சிகை வெளியிட்டது.

அந்தக் கட்டுரையில்  இடம்பெற்றிருந்த  கோம்பே காடுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்தவர்தான் அவரது காதல் கணவர் ஹியூகோ. அந்தக்கட்டுரை சிம்பன்ஸிகளின் வாழ்வை மட்டும் காட்டவில்லை கோம்பே காடுகளில் ஆய்வுகளின் போது ஜேனுக்கு உண்டான நோய்கள், உடல்நலகுறைவு, அதிலிருந்து அவர் மீண்டது, சிம்பன்ஸிகளை நெருங்குவதில் இருந்த சிக்கல்கள், தடைகள், காட்டிலிருந்த கொல்விலங்குகளால் உண்டான ஆபத்துகள் ஆகியவையும் விவரிக்கப்பட்டிருந்தது. அந்தக்கட்டுரை  இன்றுவரையிலும் உலகின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வுக்கட்டுரைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சிம்பன்ஸிகளின் இணைசேர்தல், கருவுறுதல், குட்டிகளை ஈனுதல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை ஆய்வு செய்து உலகிற்கு புதிய பல உண்மைகளை ஜேன் தெரிவித்தார்.சிம்பன்ஸி அன்னைகள் நாலரை வருடத்திலிருந்து 6 வருடத்துக்கொருமுறைதான் கருத்தரித்து, ஒன்றிலிருந்து இரண்டு குட்டிகளை மட்டும் அளிப்பவை,  முதல்முறை அன்னைகள் ஆண் சிம்பன்ஸிகளிடமிருந்து குட்டிகளை மறைத்து வைக்கின்றன, அனுபவம் வாய்ந்த அன்னைகளே ஆண் சிம்பன்ஸிகளுக்கு குட்டிகளைக் காட்டுகின்றன போன்ற புதிய தகவல்களை ஜேன் உலகிற்கு சொன்னார்.

தன் மகன் க்ரப்பை வளர்ப்பதற்கான பல படிப்பினைகளை சிம்பன்ஸிகளிடமிருந்து கற்றுக்கொண்டதாகச் சொல்லும் ஜேனின் மீது அத்தனை பிரியமுண்டாகியது எனக்கு. க்ரப்புடன் அடர் காட்டில் ஆய்வுகளைச் செய்த ஜேன் அவனை காட்டுவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க கூண்டில் அடைத்து வைத்திருப்பார். அர்ப்பணிப்புடன் ஆய்வுகளைச் செய்பவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருபபோம் எனினும் ஜேன் போல மகனை கூண்டில் வைத்துவிட்டு சிம்பன்ஸிகளை ஆய்வுசெய்யும்  அர்ப்பணிப்பை நான் வேறெங்குமே கேள்விப்பட்டதில்லை.

அவரது கண்டுபிடிப்புக்களைப்பற்றி சொல்கையில்  லூயி  ’’சிம்பன்ஸிகளும் மனிதகளைப் போலத்தான் என்பதை  ஒத்துக்கொள்ளும் முன்பு நாம் கருவி என்பதையும், ஏன் மனிதன் என்பதையுமே மறுவரையறை செய்யவேண்டியது அவசியமாக இருக்கிறது’’ என்று குறிப்பிட்டார்.ஜேனின் பங்களிப்பை, கண்டுபிடிப்புக்களின் முக்கியத்துவத்தை உலகம் அவர் கல்விக்கூடத்துப் பட்டம் பெற்றிருந்தால் மட்டுமே அங்கீகரிக்கும் என லூயி உணர்ந்திருந்தார் எனவே இளங்கலை படித்திருக்காத ஜேனை கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் படிக்க ஏற்பாடு செய்தார்.

அங்கு ஜேன் முனைவர் பட்டத்திற்காக மிகக்குறுகிய காலத்தில் செய்த  The Behaviour of Free-living Chimpanzees in the Gombe Stream Reserve என்னும் தலைப்பிலான ஆய்வு விலங்குலகின் பல புதிய கதவுகளை உலகிற்கு திறந்துவைத்தது. இளங்கலை படிக்காமல் கேம்ப்ரிட்ஜில் முனைவர் பட்டம் பெற்ற வெகு சிலரில் ஜேனும் ஒருவர்

அடர் வனங்களில் பலவருடங்களை ஆய்வுக்காகச் செலவழித்த ஜேனின் முதல் கணவர் நேஷனல் ஜியோகிராஃபியின் முதன்மை வன உயிர்ப்புகைப்படக்கலைஞரும் ஜேனின் ஆய்வை படம்பிடிக்க வந்தவருமான   ஹியூகோ வான்(Hugo van Lawick.)   அவர்கள் காடுகளில் சந்தித்து காதல் கொண்டு 1964-ல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களது மகன் Grub என்று செல்லப்பெயர்கொண்ட Hugo Eric Louis van Lawick.

ஹுயூகோவுடன் 1974-ல்  விவாகரத்தானபின்னர் இரண்டாவதாக 1975-ல் தான்சானிய அரசியல்வாதியும் தான்சானிய தேசியப் பூங்காவின் முன்னாள் இயக்குநருமான டெரெக்கை (Derek Bryceson ) மறுமணம் புரிந்து கொண்டார், டெரெக் 1980-ல் மறைந்தார். 

அதுவரை  விலங்கியலாளர்களின் வழக்கமாயிருந்ததைப் போல விலங்குகளுக்கு எண்களை இடுவதில் விருப்பமில்லாத ஜேன் சிம்பன்ஸிகளுக்கு,   டெஸ் , ஃப்ளோ, பிஃபி, டேவிட் போன்ற  பெயர்களை வைத்தார்.1977-ல் அவரது பெயரிலேயே ஜேன்குடால்  நிறுவனத்தை வாஷிங்டனில் துவங்கினார். அந்த அமைப்பு சூழல் பாதுகாப்பு, சூழல் ஆரோக்கியம் மற்றும் வாழிட அழிப்புக்கெதிரான விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான உலகளவிய விரிந்த பிரச்சாரத்தையும் அது குறித்த கல்வியையும் ஆய்வையும் மேற்கொண்டிருந்தது.ஜேன் இந்த அமைப்பின் பொருட்டு வருடத்தின் 300 நாட்கள்  அவரது இறுதிநாள் வரையிலுமே தொடர் பயணத்திலிருந்தார்.  இந்நிறுவனத்தின் 25 கிளைகள் உலகெங்கும்  இயங்குகின்றன. 

2014 –ல்  நியூயார்க் டைம்ஸுக்களித்த நேர்காணலில் ‘’ சிம்பன்ஸிகளுக்காக ஒருவர் ஆண்டு முழுவதும் பயணம் செய்து, மிக முக்கிமான செயல்களைச் செய்கிறார் என்பது எனக்கு தொடர்ந்து வியப்பை அளிக்கிறது. அந்த ஒருவர் நான்தான்’’ என்றார்.

அதே நிறுவனத்தின் நீட்சியயாக  1991-ல் பள்ளிக்குழந்தைகளும் பங்களிக்கும் Roots & Shoots,  என்னும் அமைப்பையும் சூழல் பாதுகாப்புக்காக உருவாக்கினார் ஜேன். துவக்கத்தில் 12 பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களுடன்  இருந்த அந்த அமைப்பு  இப்போது 75 நாடுகளில் மிகத்தீவிரமான செயல்பாடுகளுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

2025-ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர விருது உள்ளிட்ட மிக உயரிய  ஏராளமான விருதுகளையும் ஜேன் பெற்றிருக்கிறார்.  விலங்குகள் குறித்த அவரது அவதானிப்புகளை பல நூல்களாக எழுதியிருக்கும் ஜேனின் மிகப்பிரபலமான நூல்  Reason For Hope: A Spiritual Journey.

அவரது The Book of Hope: A Survival Guide for Trying Times,  என்னும் மற்றொரு நூல் உலகின் மிக முக்கியமான 20 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.ஜேனின் In the Shadow of Man (1971).  மற்றும்   The Chimpanzees of Gombe: Patterns of Behavior (1986). ஆகிய இரு கட்டுரைகளும் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்தவை.

ஆப்பிரிக்க காடுகளில் ஜேன் நெருக்கமாகச் சந்தித்த  மலேரியா, முதலைகள், விஷம் துப்பும் நாகப்பாம்புகள், கொல்விலங்குகள், ராட்சஷ விஷ மரவட்டைகள் ஆகியவற்றையும் சொல்லும் அவரது கட்டுரைகள் உலகப் பிரசித்தி பெற்றவை.அவரது விலங்குலகம் குறித்த பலநூறு ஆவணப்படங்களும், திரைப்படங்களும் ஜேனின் கண்கள் .வழியாக நமக்கு விலங்குலகைக் காட்டுபவை.

20-ம் நூற்றாண்டின் மிக முக்கியமான மிகப்பிரபலமான இயற்கை அறிவியலாளராக இருந்த ஜேன் ஆண்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த இயற்கை அறிவியல் துறையில் அவரைத்தொடர்ந்து பல பெண்களும் வர காரணமாயிருந்தார் என்பதுவும் அவரது முக்கியப் பங்களிப்புகளில் ஒன்று. அவர்களில் சிம்பன்ஸிகளின் ஆய்வில் பெரும்பங்காற்றிய   பெண்களான Dian Fossey, Biruté Galdikas, Cheryl Knott மற்றும் Penny Patterson,ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

அவரது இறுதிப் பயணத்திட்டம் லாஸ் ஏஞ்சலீஸ் காடுகளின் நெருப்பு பிடிக்கும் எல்லைகளில் நெருப்புத் தடுப்பாக 5000 மரங்கள் நடும் நிகழ்வுதான். அவரது மரணத்திற்குப்பின்னர் இன்று நடப்பட்ட முதல் மரம் ஜேன் குடால் எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

ஜேன் மீது பெரும் அபிமானம் கொண்டிருக்கும் ஜாஜாவிடம்  ஜேனின் மறைவு குறித்து இன்று பேசிக்கொண்டிருக்கையில் ஜேன் தனது பாட்டியின் சாயலில் இருப்பதாக சொன்னார் ஜாஜா.  இயற்கை வளங்களைத்  தொடர்ந்து சுரண்டுகிற, யானை வழித்தடங்களில்  பெருநிருவனங்களை அமைக்கிற, பனைமரங்களை  செங்கல் சூலைகளில் எரிக்கக்கொண்டு செல்கிற, அரசியல் ஆதாயங்களுக்காக பலநுறு மரங்களை வெட்டுகிறவர்களுகு மத்தியில் அர்ப்பணிப்புடன் கடைசி நொடி வரை. இயற்கையின் பாதுகாப்புக்காக உழைக்கும் ஜேன் போன்றவர்கள்தான் நமது சொந்தமாக இருக்கமுடியும். எனக்கும் ஜேன் பேரன்னையாகத்தான் தெரிகிறார்.

நம்பிக்கை மற்றும் மன உறுதிக்கான தூதராக ஜேன் உலகெங்கும் அறியப்பட்டார். அவரது முக்கியச் செய்தியாக ’’நம்பிக்கை கொள்வது என்பது நமது கையில், என் கையில், உங்கள் கையில் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் அன்றாடம் சின்னஞ்சிறு மாற்றங்களைச் செய்யமுடியும்’’ எனச் சொன்ன ஜேன் அவரது வாழ்க்கையையே அந்த செய்திக்கான  உதாரணமாக விட்டுச் சென்றிருக்கிறார்.ஜேனுக்கு அன்பும் அஞ்சலியும்

அஞ்சலி-டோனோவன், பூபதி!

தென்னாப்பிரிக்காவின் கேப் பகுதி பல்லுயிரிய மையத்தில், அழிவின் விளிம்பில் இருக்கும் தாவரங்களைப் பாதுகாக்கும் பணியில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர் டோன் என்கிற டோனோவன். (Dr. Donovan Kirkwood)

உலகின்   அணுக முடியாத, மிகக்  கடினமான சூழல்களில் வாழும் தாவரங்கள் பற்றி அறிந்து கொள்ளவும், அவற்றை கைகளால் மகரந்தச் சேர்க்கை செய்யவும்,அவற்றை அழிவிலிருந்து பாதுகாக்கவும்,  கடுமையான மற்றும் ஆபத்தான பணிகளைக் தாவரவியலாளர்கள்  மேற்கொள்வது Extreme Botany எனப்படுகிறது.

அழிவின் விளிம்பில் உள்ள தென்னாப்பிரிக்காவின் அரிய தாவர இனங்களைக் மிக ஆபத்தான அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று கண்டறிந்து, சேகரித்து, ex situ conservation எனப்படும் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் அவற்றை வளர்த்து மீண்டும் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களுக்கு மாற்றுவதை பல்லாண்டுகளாக டோன் செய்துவந்தார்.

தென்னாப்பிரிக்காவின் பழமையான பல்கலைக்கழகம் தாவரவியல் பூங்காவின் ஸ்டெல்லென்போஷ் பூங்காவின் பொறுப்பாளராக 2018-லிருந்து டோன் பணிபுரிந்து வந்தார். இந்தப் பூங்கா தென்னாப்பிரிக்காவின் இயல்  தாவரங்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பல்வேறு தாவரங்களின் மிகப்பெரிய தொகுப்பைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக போன்ஸாய் சேகரிப்பு இங்கு மிகப் பிரபலம். ஒரு திறந்தவெளி ஆய்வகமாகவும் செயல்படுகிறது இந்த பூங்கா.

டோன் தேடிச்சென்ற தாவரம்

தென்னாப்பிரிக்காவின் ஓரிடத்தாவரமான Marasmodes undulata என்னும் சூரியகாந்திக் குடும்பம் தாவரமொன்று 1946-க்கு பிறகு 34 ஆண்டுகளாக எங்குமே தென்படவில்லை எனவே அது அழிந்துவிட்ட இனமாக கருதப்பட்டிருந்தது. 1980-ல் 300 தாவரங்கள் மீண்டும் தென்னாப்பிரிக்காவின் மலைக்காடுகளில் கண்டுபிடிக்கபட்டு பின்னர் கவனமாகப் பாதுகாக்கப்பட்டன. எனினும் 2005-ல் அது வெறும் 20 மட்டும் இருந்தது செய்தியான போதுதான் நான் அதைக் குறித்து அறிந்துகொண்டேன்.

2017-ல் 17 ஆக இருந்தன அவை பிறகு அபாயகரமாக 2020ல் உலகில் மூன்றே மூன்று என்னும் மிகக்குறைந்த எண்ணிக்கையில் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில்தான் டோன் அந்த பூங்காவில் பணியேற்றுக்கொண்டார். உடனடியாக அதைக் காப்பாற்றும் முயற்சியில் டோன் ஈடுபட்டார். மூன்றுதான் இருந்தன என்பதால் இயற்கை வாழிடங்களிலிருந்து அவற்றை எடுப்பது அவற்றின் அழிவுக்கு கரணமாகலாம் எனவே லண்டன் கியூ விதை வங்கியிலிருந்த அதன் 90 விதைகளை தருவித்து அதை பல சவால்களுக்கிடையில் வெற்றிகரமாக நூற்றுக்கணக்கில் வளர்த்து, மீண்டும் அவற்றின் இயற்கையான வாழிடத்தில் அறிமுகப்படுத்தி டோன் அதைக் காப்பாற்றினார். இப்படி ஏராளமான தாவரங்களை டோன் அழிவிலிருந்து பாதுகாத்திருக்கிறார்.

இந்த Species recovery என்பது மிக மிகச் சவாலான ஒன்று. ஆனால் டோன் 1.7 ஹெ பரப்பளவு இருக்கும் இந்தச் சிறிய பூங்காவில் தென்னாப்பிரிக்காவின் அழிந்துகொண்டிருக்கிற, அபாயத்தின் விளிம்பிலிருக்கிற சிவப்புப்பட்டியலிடப்பட்ட தாவரங்களில் 40 சதவீதத்தை காப்பாற்றி அந்தப் பூங்காவில் வளர்த்திருதார். கடந்த ஆகஸ்ட் 26 அன்று ஒரு சிறு குழுவினருடன் தென்னாப்பிரிக்காவின் மிக ஆபத்தான, செங்குத்தான, கரடுமுரடான ஜோங்கெர்ஷோக் மலைத்தொடரில் தென்னாப்ரிக்கவின் கேப் பகுதிக்கு சொந்தமான, உலகில் ஐம்பதுக்கும் குறைவான எண்ணிக்கையில் இருந்த Penaea formosa என்னும் தாவரத்தை தேடி மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த 51 வயதான டோன், கால் இடறி மலையிலிருந்து விழுந்து இறந்தார்.

இதை நான் எழுதிக்கொண்டிருக்கும் வரைக்கும் அவர் உடல் கிடைத்ததாக தகவல்களில்லை. எப்பேர்ப்பட்ட இழப்பு .  

He slipped, fell, and did not return. 

இப்படி வாசித்தபோது பெரும் அதிர்ச்சியடைந்தேன். அரிய தாவரங்களின் புகைப்படங்களையும். அவரது களப்பணியையும், அரிய தகவல்களையும் டோன் பகிரும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரைப் பின் தொடர்ந்த 1500  பேர்களில் நானும் ஒருத்தி.

பூபதி

டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு. இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோன் போல ஆபத்துக்களைச் சந்தித்து துணிச்சலாக அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களை அணுகமுடியாத அவற்றின் வாழ்விடங்களுக்குச் சென்று தேடிக்கண்டடைந்து பாதுகாப்பவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கின்றனர். அவர்களை அறிந்தவர்கள் அதைவிடக்குறைவு.

இவரைப்போலவே 2014-ல் மிக அரிய களப்பணி ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த தென்னிந்திய உயிரியலாளர் ஒருவரும் 51 வயதில் மலையில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.டோனும் பூபதியும் எதை மிக முக்கியமானது எனக் கருதினார்களோ அதைச் செய்து கொண்டிருக்கையிலேயே உயிரிழந்தார்கள். இப்படித் தீவிரமான அர்ப்பணிப்புடன் உயிரினங்களை நேசிப்பவர்கள் உயிருடன் இருக்கும் போது உலகம் அவர்களை அறிந்து கொள்வதே இல்லை. டோனோவனின் இறப்பை செய்திகளில் அறிந்துகொண்ட அன்று நான் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருக்கும் தாவரவியல் துறை மாணவர்களிடம் அவரைப்பற்றி கேட்ட்டேன். ஒருவருக்கும் அவரைத் தெரியவில்லை. அவர் இருந்ததும் இறந்ததும் யாருக்குமே தெரியவில்லை.

டோன் தான் நேசித்த தென்னாப்பிரிக்க மண்ணில், அழிந்துகொண்டிருந்த ஒரு தாவரத்திற்கான தேடலில் மறைந்திருக்கிறார்.  தென்னாப்பிரிக்காவின் தாவரச் செல்வத்தின் எதிர்காலம், ஒவ்வொரு சிறு விதையாக, ஒவ்வொரு அங்குல மண்ணாக, இப்படித்தான்  பாதுகாக்கப்படவேண்டும் என அவர் திடமாக நம்பினார்

 டோனோவன் இந்தப் பூங்காவின் பொறுப்பேற்றுக்கொண்ட போது   இப்படிச் சொன்னார். 

“Most of all, I just want to get people to fall hopelessly in love with plants and nature.”

அவர் வாழ்நாளெல்லாம் செய்து கொண்டிருந்ததைத்தான் செய்தியாகச் சொல்லிச்சென்றிருக்கிறார்.

டோனோவனுக்கும் பூபதிக்கும் எனது அஞ்சலிகள்

« Older posts

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑