லோகமாதேவியின் பதிவுகள்

Month: June 2021

ஜகமே தந்திரம் (Jagame Thanthiram)

கார்த்திக் சுப்பராஜ் எழுதி, இயக்கி ’வய் நாட் ஸ்டூடியோஸ்’ தயாரித்திருக்கும். ’ஜகமே தந்திரம்’ தனுஷின 40 ஆவது திரைப்படம். தனுஷுடன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், Game of thrones புகழ்  ஜேம்ஸ்  காஸ்மோ, மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், சரத் ரவி, வடிவுக்கரசி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை சந்தோஷ் நாராயணன்.ஒளி இயக்கம் ஸ்ரேயஸ் க்ருஷ்ணா, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன்.

கோவிட் பெருந்தொற்றால் திரையரங்குகளில்     வெளியிடமுடியாமல்  2021, ஜூன் 18’ல் நெட்ஃப்ளிக்ஸில்  17 மொழிகளில், 190 நாடுகளில்  வெளியானது ஜகமே தந்திரம்.

 லோக்கல் தாதாவான சுருளி என்னும் தனுஷ், கடல் தாண்டிய ஒரு பகைவிவகாரத்துக்கு லண்டன் செல்லும் ஒற்றை வரிக்கதையை திரைப்படமாக்கி இருக்கிறார்கள்.

 கல்யாணத்துக்கு பெண் கிடைக்காமல் போகுமளவிற்கு, மதுரையில் பரோட்டாக்கடை நடத்தும் சுருளியின் ரவுடித்தன்ங்கள் பிரபலமாகி இருக்கிறது. சுருளியின் ரவுடித்தனத்தை பார்க்கும் , லண்டன்  தாதா பீட்டரின் வலதுகையான ஜான் , லண்டனில் பீட்டருக்கு தொல்லையாக இருக்கும் சிவதாஸ் என்னும் தாதாவை ஒழித்துக்கட்ட  மிகப்பெரும் தொகையை கூலியாக பேசி சுருளியை லண்டனுக்கு வரவழைக்கிறார்., . அதை முடித்துக்கொடுத்து பணத்தை வாங்கிகொண்டு, வாழ்க்கையில் ரவுடித்தனத்தை விட்டொழிக்கலாமென்று சுருளியும் ஒத்துக்கொள்கிறான். சிறு மகன் தீரனின் அன்னையான,  இலங்கை பாடகி அடிலாவை  லண்டனில் சந்தித்து காதலாகிறான் சுருளி.

சொன்னபடியே சிவதாஸை கொல்ல பீட்டருக்கு சுருளி உதவமுடிந்ததா, சிவதாஸ் யார்? ஏன் லண்டனிலிருந்து மதுரைக்கு வந்து சுருளியை அழைத்துச்சென்றார்கள்? காதல் நிறைவேறியதா? என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

சின்ன குழந்தைகளுக்கு சொல்லப்படும் தாதா கதையைப்போல சொல்லப்ட்டிருக்கிறது கதை. படத்திற்கு துப்பாக்கி சண்டை என பெயரிட்டிருக்கலாமென்னும் அளவிற்கு  சுட்டுத்தள்ளுகிறார்கள் விதம் விதமான துப்பாக்கிகளில். தமிழ் சினிமாவின் சாபக்கேடான நாயக வழிபாட்டில் இளைஞரான கார்த்திக் சுப்பராஜும் நம்பிக்கை கொண்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.        ஒற்றை ஆளாக பலரை அடித்து துவம்சம் செய்வது, துப்பாக்கி குண்டுகள் மழையென பொழிந்தாலும்  நாயகனுக்கு ஒன்றும் ஆகாதது என வழக்கமான, தமிழ்சினிமா கடந்து வந்த முக்கால் நூற்றாண்டான பாதையிலேயே கார்த்திக்கும் செல்கிறார். 

மீசை, சிரிப்பு ,பாடல்கள் என்று ரஜினியை தனுஷ் நினைவூட்டிக்கொண்டே இருப்பது , முருகேசன் என்னும் பாத்திரம் ஆகியவை கவனிக்க வைக்கி றது. ’’ரகிட ரகிட’’ பாடல் மட்டும் பரவாயில்லை ரகம்

தயாரிப்பு தரப்புக்கும் தனுஷுக்கும்  இடையே நெட்ப்ளிக்ஸில் திரையிடுவது தொடர்பான  மோதலும், தொடர்ந்து விநியோகஸ்தர் தரப்பிலிருந்து ’வய் நாட்’   ஸ்டியோவிற்கு  ரெட்கார்ட் கொடுத்ததுமாக படம் வெளியாகுமுன்னேயே பிரச்சனைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாகி இருந்தது.

தனுஷின் நடிப்பு, ஒளிப்பதிவு ஆகியவை படத்தின் பலமென்றால் திரைக்கதையின் தொய்வு, சொதப்பலான படத்தொகுப்பு ஆகியவை படத்தின் மைனஸ். மிகப்பழைய, புளித்துப்போன கேங்ஸ்டர் கதையை மறுபடியும் சொல்லுகையில், அதுவும் கார்த்திக் சுப்புராஜ் போன்ற இளைஞர்கள் சொல்லுகையில் புதிதாக எதேனும் இருக்கவேண்டும். ஆனால் அப்படி ஏதும் இல்லாமல் படம் அதே பழைய பாணிதான். இரண்டாம் பாதியில் திரைப்படம் நத்தை வேகத்தில் செல்கிறது. புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வு, ஈழத்தமிழர்கள் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை தொடும் படம் நிச்சயம் வேறு ஒரு தளத்தில் இருந்திருக்க வேண்டும்.  

புலம் பெயர்ந்த மக்களின் கவிதையொன்றின்’’முருங்கைப்பூ உதிரும் முற்றம் இனி நமக்கில்லை கண்ணே’’ என்னும் ஒரு வரி நமக்கு அளிக்கும் உளச்சித்திரத்தை, மனத்துயரை  இந்த முழுநீள திரைப்படம் ஒரு சதவீதம் கூட கொடுக்க வில்லை.

 கார்த்திக் சுப்பராஜின் படு சுமாரான படமென்று இதை நிச்சயம் சொல்லலாம். மாமனாரின் பேட்ட’யை மருமகனை வைத்து எடுக்க நினைத்து தோல்வியடைந்த படமென்றும் சொல்லலாம்.

ரம்புட்டான்:(Rambutan)

தாவரவியல் பெயர்: ‘நெப்பேலியம் லப்பாசியம்’ (Nephelium Lappaceum)

ரம்புட்டான் நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழ மரத் தாவரம். ‘சாப்பின்டாசியே’ (Sapindaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இம்மரத்தில். ஆண், பெண் மரங்கள் தனித்தனியாகவும், ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே மரத்திலுமாகவும் காணப்படும். இது கிழக்கு ஆசியா (சீனா), தென்கிழக்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. ஆஸ்திரேலியா, நியூ கினி, ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகிறது.

13லிருந்து 15 ஆம் நூற்றாண்டு வரையில் இந்திய பெருங்கடல் வணிகத்தில் ஈடுபட்டிருந்த அரேபிய வணிகர்களால் இப்பழமரங்கள் உலகின் பல பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

75 வருடங்களுக்கு முன்பு இலைங்கையிலிருந்தும் மலேசியாவிலிருந்தும் இந்தியாவிற்கு அறிமுகமான இம்மரங்கள், முதலில் கேரளாவில் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்பட்டது. பின்னர் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவிற்கும் அறிமுகமானது.

 ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற  மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேல் பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. பழத்தின் தோலும், பழுப்பு நிற விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் லேசான புளிப்பு கலந்த இனிப்பான வெண்மையான  நுங்கு போன்ற வழுவழுப்பான, சாறு நிறைந்த சதைப் பகுதி மட்டுமே உண்ணத்தகுந்தது.. இது ஒரு குளுமையான பழம்


ஈரிலைத் தாவரமாகிய ரம்புட்டான் மரம் 12 முதல் 20 மீட்டர் வரை வளரும். மரத்தின் குறுக்களவு 60 செ.மீ. அளவிலும், பசுமை மாறா இலைகள் மாற்றொழுங்கானவையாக (Alternate ) 10 முதல் 30 செ.மீ. நீளம், 3 முதல் 11 சிற்றிலைகள் கொண்ட கூட்டிலையாகவும் இருக்கும். சிற்றிலைகள் 5 முதல் 15 செ.மீ. நீளமும், 3 முதல் 10 செ.மீ. அகலமும் கொண்டது. இந்த மரத்தை விதை மற்றும் ஒட்டுக்கன்று முறைகளில் வளர்க்கலாம். நடப்பட்ட 5 ஆண்டுகளுக்குள் பழம் கொடுக்கத் தொடங்கிவிடும்.


பழம் முழுமையாகப் பழுப்பதற்கு 90 முதல் 120 நாட்கள் வரை எடுத்துக்கொள்ளும். பிஞ்சாக இருக்கும்போது பச்சை நிறத்திலும், பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்திலும் இந்தப் பழம் இருக்கும். பழங்களின் உள்ளே சிறிய பழுப்பு நிற கொட்டை இருக்கும்.ரகங்களுக்கு ஏற்றார்போல இந்த மரம் மார்ச் மாதத்திலிருந்து மே வரை நறுமணம் மிக்க வெள்ளை கலந்த பச்சை நிறப்பூக்களையும், ஆண்டுக்கு இரண்டு முறை ஜூன் மற்றும் டிசம்பரில் 80 முதல் 200 கிலோ வரையிலான பழங்களையும் கொத்துக்கொத்தாகத் தரும். களிமண் அல்லது வண்டல் நிறைந்த வளமான மண்ணில் மிக நன்றாக வளரும்.

நிறைய மாவுச்சத்தும் புரதமும் நிறைந்த இந்தப் பழம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் அகியவற்றைக் குணமாக்கும். வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், செம்புச் சத்து (Copper), இரும்புச் சத்து, நார்ச்சத்து நிறைந்திருப்பதால், ரத்தசோகை, உடல் எடை குறைப்பு, சருமப் பளபளப்பு போன்றவற்றிற்கும் உதவும். இந்தப் பழத்தின் விதையிலிருந்து மஞ்சள் நிற எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சோப்பு, மெழுகுவத்திகள் தயாரிக்கவும் உதவுகிறது. ரம்புட்டான் பழங்களும் மரத்தின் பிற பாகங்களும் மலேசியாவிலும் இந்தோனேஷியாவிலும் பல நூறு ஆண்டுகளாக மருந்தாக உபயோகிக்கப்படுகிறது.

ரம்புட்டான்  பழங்கள் வாங்கும்போது புதிதாகவும், மேல்தோலின் நிறம் அடர்ந்த மஞ்சளுடன் கூடிய சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். . பழங்களின்  மேற்புறத்தில்  முடியானது விறைப்பாக இருக்க வேண்டும்.

சாதாரண வெப்பநிலையில் இரண்டு நாட்களும், குளிர்பதனப் பெட்டியில் ஒரு வாரம்வரையிலும் இப்பழத்தினை வைத்திருந்து பயன்படுத்தலாம். 200 க்கும் மேற்பட்ட வகைகளில் ரம்புட்டான் பழங்கள்  இருந்தாலும் அதிகம் சந்தைப்படுத்தப்பட்டிருப்பது சிவப்பு மற்றும் மஞ்சள் நிறப்பழங்களே.

நவம்பர் ஸ்டோரி

 குற்றத்திகில் வகையை சேர்ந்த  வலைத்தொடரான நவம்பர் ஸ்டோரி   தமிழ் , இந்தி,  தெலுங்கு மொழிகளில்  2021 மே 20  அன்று டிஸ்னி- ஹாட் ஸ்டாரில் வெளியானது. இயக்கம்  இந்திரா சுப்பிரமணியன், தயாரிப்பு விகடன் குழுமம்.

 தமன்னா மற்றும் பசுபதி முன்னணி பாத்திரத்தில். இவர்களுடன் GM குமார், விவேக் பிரசன்னா, நமிதா கிருஷ்ணமுர்த்தி, குழந்தை நட்சத்திரம்  ஜானி மற்றும் மைனா நந்தினி ஆகியோர் நடித்துள்ளனர். 

மொத்தம் ஏழு அத்தியாயங்கள். அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பிரபல குற்றக் கதை நாவலாசிரியர் அவருக்கு சொந்தமான, விற்பனைக்கிருக்கும் ஒரு பழைய வீட்டில், கொலையான ஒரு சடலத்துடன் இருக்கிறார். அவருக்கு நடந்தது எதுவும் நினைவில் இல்லை. அவரது மகளான அனு என்னும் தமன்னா அப்பாவை காப்பாற்றவும், கொலையை துப்பு துலக்கவும் தடயங்களை மறைக்கவும் முயற்சிப்பது தான் கதை

தமன்னா ஒரு ஹேக்கர். காவல்துறையின் எல்லா ஆவணங்களையும் கணினி மயமாக்குதலில் அவரும் நண்பரும் ஈடுபட்டிருக்கிறார்கள். அல்ஸைமர்ஸ் பிரச்சனையால் அவதிப்படும் அப்பாவை குணமாக பணத்தேவையில் இருப்பதால் அப்பாவின் விருப்பமின்றி சொந்த வீட்டை விற்கும் முயற்சியில் இருக்கிறார்,ஒரு ஜான் முன்னே போனால் இரண்டு முழம் சறுக்குக்கிறார்

 அப்பாவை காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்ல துணியும் மகளாக தமன்னா. பிற கதாபாத்திரங்களுடன் இணைந்து போக முடியாத நிறமும் உடல்வாகுமாக இருப்பது தமன்னாவுக்கு ப்ளஸா மைனஸா என்றூ பட்டிமன்றமே நடத்தலாம்,  இந்த 7 அத்தியாயங்களிலும் பெரிய வேறுபாடுகள் இல்லாமல்  ஒரே மாதிரி இறுக்கமாகவே முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்.

 கதாநாயகிக்கு பிரச்சனைகள் வரலாம்தான் அதற்காக இப்படியா? தமன்னாவை கதையில் எப்போதும், எல்லா திசைகளிலும் பிரச்சனைகள் சூழ்ந்துகொண்டு நெருக்குகிறது.  முழு தொடரையும் தமன்னாவை நம்பி, அவரை முதன்மைப்படுத்தியே கொண்டு போகும் உத்தேசம் இருந்தால் காதலன் ரோலும்  இல்லவே இல்லை.  தனித்தனி சரடுகளாக கதைகள் வந்து பின்னர் எல்லாம் இணைந்து கொள்கின்றன. 

-கருப்பு வெள்ளையில் கன்னியாஸ்த்ரீ வளர்க்கும் ஒரு தாயில்லா சிறுவன், அறுவை சிகிச்சை நிபுணராக வேண்டுமென்னும் அவன் கனவு, அவனுக்கிருக்கும் உளவியல் மற்றும் சமுதாய சிக்கல்கள்,

-தமன்னாவின் பணச்சுமை, ஹேக்கிங் செய்வதில் உண்டாகும் பிரச்சனை, அப்பாவினால் உண்டாகும் குழப்பங்கள், வீடு விற்பதில் பிரச்சனை, கொலையில் அப்பாவை சம்பந்தப்படுத்தும் நிகழ்வுகள், காவல்துறையின் சந்தேகம்

-மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பதின்ம வயது பெண், அவரை கடத்தும் 3 இளைஞர்கள், 

 -ஹேக்கிங்கில் வரும் பிரச்சனையும், கடத்தபட்ட இளம்பெண்ணும், காணாமல் போன ஹைதெராபாத் இளைஞர்களும், விற்காமலிருக்கும் தமன்னாவின் வீடும், துவக்கத்தில் நடக்கும் பேருந்து விபத்தும், அந்த பெயிண்ட் கொலையு்ம் சந்திக்கும் ஒருபுள்ளியில் கதை என்னவென்று நமக்கு ஒருவழியாக புரிந்து விடுகிறது

காட்சிகள் மிக மெதுவாக செல்வது, தமன்னாவின் உணர்ச்சிகள் அற்ற முகம், கடைசி அத்தியாயங்களை போட்டு குழப்பி அடித்திருப்பது, அத்தனை வேகமாக துப்புத் துலக்கும் அருள்ராஜ் கடைசியில் ஆளே எட்டிப்பார்க்காமலிருப்பது என பல ஓட்டைகள் இருக்கின்றன. தணிக்கை இல்லையென்பதால் பல காட்சிகள் ரத்தக்களறியாக இருக்கிறது குறிப்பாக போஸ்ட் மார்ட்டம் காட்சிகள் மிகவும் கஷ்டப்படுத்துகிறது. தமன்னாவின் அப்பா குமார்  கொஞ்சம் மிகை நடிப்பு, மைனா  நந்தினி அருமையான இயல்பான பாந்தமான நடிப்பு. காவலதிகாரியாக அருள் ராஜ்  பிரமாதமான தேர்வு, சிறப்பாக செய்திருக்கிரார்

ஏகப்பட்ட மர்மங்களை    ப்ளாஷ்பேக்கில் காட்டி பலவற்றை அப்படியே நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்.  தமன்னாவின் தங்கை குறித்தும், அம்மாவின் மரணம் குறித்தும் ஏன் அவருக்கு சொல்லப்படவில்லை என்று கதையில்  யாரும் மெனக்கெடவே இல்லை. எல்லா நிகழ்வுகளும் ஏன் நவம்பர்  16ல் நடக்கிறது என்பதற்கும் லாஜிக் இல்லை

ஆனா்லும் தமிழில் இப்படி ஒரு திகில் தொடரை ஒரளவுக்கு  சுவாரஸ்யமாக கொடுதிருப்பதற்கு  பாராட்டலாம். அருமையான வசனங்கள், இயல்பான காட்சியமைப்புகள்,  பசுபதியின் பிரமாதமான நடிப்பு, தமிழில் வரும் பிற தொடர்களை ஒப்பிடுகையில் காட்சியமைப்பு, இசை, ஒலி, காமிராக்கோணம், இயக்கம் எல்லாம் பிரமாதம். இவற்றிற்காகவே இந்த தொடரை பாரக்கலாம

பல முடிச்சுக்களை காட்டிவிட்டு கடைசியில்  பல மர்மங்களை சொல்லாமல் மர்மமாகவே நீடிக்க விட்டிருக்கிறார்கள். அத்தியாயங்களின் எண்ணிக்கையையும் தமன்னாவின் பிரச்சனைகளையும் கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் பேசப்பட்டிருக்கும் ஒரு தொடராக இருந்திருக்கும்.

மரண ஆப்பிள் மரம்

Hippomane mancinella tree

கரீபியன் தீவுகளை பிறப்பிடமாகக்கொண்ட நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியேவை  சேர்ந்த  manchineel tree  என்றழைக்கபடும் Hippomane mancinella என்னும் தாவர அறிவியல் பெயரைக்கொண்ட  மரம்தான் உலகின் நச்சுமரங்களில் மிக அதிகளவு நஞ்சை கொண்டது.

இதன் பேரினமான  hippomane என்பது  இதன் இலைகளை உண்ட குதிரைகளுக்கு  பித்து பிடித்ததால், கிரேக்க மொழியில் குதிரை -பித்து என்னும் பொருளில் hippo- mane வைக்கப்பட்டது. சிற்றினப்பெயரான mancinella என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறிய ஆப்பிள் எனறு பொருள் படும் இம்மரத்தின் பச்சை நிறப்பழங்களும் இலைகளும் ஆப்பிள் மரத்தை போலவே இருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது. விஷக்கொய்யா மரமென்றும் இதை அழைக்கிறார்கள்

இதன் தற்போதைய ஸ்பானிஷ் வழங்குபெயரான manzanilla de la muerte,  என்பது சிறு மரண ஆப்பிள் என்று பொருள் படும் (“little apple of death )

பால் வடியும் இம்மரத்தின்  தண்டு, பட்டை, இலை, மலர், கனி என அனைத்துபாகங்களிலும் இருக்கும், எண்ணற்ற் நச்சுப்பொருட்கள் இம்மரத்தின் பாலில் கலந்திருக்கும்.  

அலையாத்திக்காடுகளுக்கு அருகில் கடற்கரையோரங்களில் இவை பெரும்பாலும் காணப்படுவதால் இவற்றிறகு பீச் ஆப்பிள் மரம் என்றும் பெயருண்டு. சிவப்பும் சாம்பல் வணணமும் கலந்த நிறத்திலிருக்கும் மரப்பட்டைகளை கொண்டிருக்கும்  பசுமைமாறா இம்மரம், சுமார் 15 மீட்டர் உயரம் வரை வளரும். கூம்பு வடிவ மலர் மஞ்சரிகளில் சிறு மலர்கள்  இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் இலைகள் பளபளப்பான பச்சை நிறத்திலிருக்கும். பசுமஞ்சள் நிறக்கனிகள் தோற்றத்தில் ஆப்பிளை ஒத்திருக்கும். இதிலிருக்கும் கொடும் நஞ்சு தோலில் பட்ட உடனே கொப்புளங்களை உருவாக்கும்.

மழைக்கு இம்மரத்தடியில் ஒதுங்கினால் கூட உடல் முழுவதும் கொப்புளங்கள் உண்டாகும்.  கண்களில் இம்மரத்தின் பால்  பட்டால் பார்வையிழப்பும் உண்டாகும். மரத்தடியில் மழைகாலங்களில் நிற்கும் கார்களின் வண்ணம் உரிந்து வந்துவிடும். அறியாமல் இம்மரத்தின் கனிகளை உண்பவர்களுக்கு குடல் புண்ணும், இரத்தப்போக்கும், கைகால் வீக்கமும் உண்டாகின்றது.

கனிகள் முதலில் இனிப்பாகவும் பின்னர் குருமிளகின் காரத்தைப்போலவும் தொடர்ந்து நெருப்பு வைத்தது போன்ற எரிச்சலையும் உண்டாக்கி தொண்டையை இறுகச் செய்துவிடும். பின்னர் பாதிக்கப்பட்டவர்களால் எதையுமே விழுங்கமுடியாமலாகிவிடும்.மரக்கட்டைகளை தீயில் எரிக்கையில் வரும் புகையும் ஆரோக்கிய சீர்கெடுகளைஉண்டாக்கும்.

இம்மரத்தின் இலைகளில்  droxyphorbol-6-gamma-7-alpha-oxide, hippomanins, mancinellin,  sapogenin, phloracetophenone-2,4-dimethylether ஆகிய நச்சுப்பொருட்களும் கனிகளில்  i physostigmine  மற்றும் Phorbol போன்ற நஞ்களும் உள்ளன.

மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் பலமர்மங்களில் ஒன்றாக  இம்மரத்தின் விஷக்கனிகளை உண்டு அதிலேயே வாழ்கின்றன  கருப்பு பேரேந்திகளான (black-spined iguana- Ctenosaura similis)  எனும் விலங்கினங்கள்.

Juan Ponce de León

கரீபியத்தீவின் பழங்குடியினர் இம்மரத்தின் இலைகளைக்கொண்டு எதிரிகளின் நீர்நிலைகளை நஞ்சூட்டியிருக்கின்றனர். கொலம்பஸின் இரண்டாவது தேடல் பயணத்தில் கலந்துகொண்டவரும், ஃப்ளோரிடாவின்  முதல் அதிகரபூர்வமான் தேடல்பயணத்தை வழிநடத்தியவரும், கரீபியன் தீவின் (PUERTO RICO) புவேட்டோ ரீகோ’வின் முதல் கவர்னருமான ஜான் லியோன் (Juan Ponce de León), 1521ல் 200 பயணிகளுடன் இரு கப்பல்களில் ஃப்ளோரிடாவின் தென் பகுதியில் தேடல் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இவரை அங்கிருந்த பழங்குடியினர் இம்மரத்தின் பாலில் தோய்த்த அம்பில் தாக்கினர். அதன் நச்சுநுனி தொடையில் தைத்து ஜான் லியோன் மரணமடைந்தார். 

ஆனால் இம்மரத்தின் கனிகளை உலரவைத்தும், பாலை உறைய வைத்தும் அப்பழங்குடியினர் பல நோய்களுக்கு மருந்துகளை தயாரிக்கின்றனர். மரக்கட்டைகளை வெயிலில் உலர்த்தி அதன் பாலைநீக்கிவிட்டு விறகாகவும் உபயோகிக்கின்றனர்..

பிரபல கடற்பயணி ஜேம்ஸ் குக்கி’ன் கப்பலில் இருந்த மருத்துவர் தனது நாட்குறிப்பில்  கரிபியன் தீவில் விறகுக்காக மரங்களை வெட்டப்போன குழுவினர் மரத்தின் பால் கண்களில் பட்டு முழுக்குருடானதை குறிப்பிட்டுள்ளார்.

The Buccaneers of America’ வை எழுதிய அலெக்ஸாண்டர் (ALEXANDRE EXQUEMELIN , தான் கரீபியன் தீவிலிருக்கையில் கொசுக்கடியிலிருந்து தப்ப இம்மரத்தின் சிறு கிளையை ஒடித்து அதை விசிறியாக உபயோக்கித்த உடனேயே முகம் முழுவதும் கொப்புளங்களால் வீங்கி மூன்று நாட்களுக்கு கண் குருடானதை  எழுதியிருக்கிறார்.. நாட்குறிப்புகள் எழுதியவர்களில் மிகபிரபலமானவரான  NICOLES CRESSWELL லின் நாட்குறிப்பில் இம்மரத்தின்  ஒரு கனி 20 நபர்களை கொல்லும் நஞ்சை கொண்டிருந்தது  குறிப்பிடபட்டிருக்கிறது.

1865’ ல் பிரபலமாயிருந்த  L’AFRICAINE   என்னும் ஓபரா நாடகத்தின் கதா நாயகி இம்மரத்தின் மலர் மஞ்சரிகளை எரித்து அதன் புகையை நுகர்ந்து இறக்கிறாள். மரணதண்டனை கைதிகளை இம்மரத்தில் கட்டிவைத்ததும், கொல்ல வேண்டிய எதிரிக்கு இம்மரத்தின் இலைகளை சிகரெட் போல் சுருட்டி புகைக்க கொடுத்ததுமாக ஏராளமான வரலாற்றுக்குறிப்புகள் இம்மரத்தின் நஞ்சைக்குறித்து  சொல்லுகின்றன.

அமேஸான் ஸ்டுடியோவின் தொலைகாட்சிதொடரான  HOMECOMING (2018) ல், இம்மரம் இடம்பெற்றிருக்கிறது. உலகின் மிகக்கொடிய நஞ்சைக்கொண்ட மரமாக கின்னஸ்புத்தகமும் இதை குறிப்பிடுகிறது,

Flora of Florida வை எழுதிய Roger Hammer இம்மரத்தின் கனிகளை உண்டு இறந்த மாலுமிகளை பற்றி எழுதியிருக்கிறார்.கரீபிய கடற்கரைகளிலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தென் ஃப்ளோரிடாவிலும் அதிகம் காணப்படும் இம்மரங்களில் எச்சரிக்கை வாசகங்களும், பெரிதாக X குறியும்  எழுதிய பலகைகள் மாட்டப்பட்டு இதன் ஆபத்தை தெரிவிக்கின்றன..

இது மிகவும் ஆபத்தான மரம்தான் என்றாலும் இதைக்காட்டிலும் கொடிய நஞ்சைக் கொண்டுள்ள சிறு செடிகளும் ஃப்ளோரிடாவில் உள்ளன,  நீர் ஹெம்லாக் (Cicuta maculata). எனப்படும் நச்சுச்செடியின்  கால் அங்குல தண்டு ஒரு நபரை கொல்லப் போதுமானது, இது வட அமெரிக்க கண்டத்திலேயே மிகவும் கொடிய நஞ்சைகொண்டுள்ள செடியாகும்.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑