லோகமாதேவியின் பதிவுகள்

Month: December 2018

ஒரு இந்தியப்பயணம்- ஜெ

இந்த ஒருமாத செமெஸ்டர் விடுமுறையில் எந்த பிரயணமும் இல்லாமல் புத்ததகங்களாகப் படித்துக்கொண்டே இருக்கிறேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள்  எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு புத்தகமும் கையுமாக தென்னை மரத்தடியில் அமர்ந்து நாள் முழுதும் வாசிக்கும் அருமையை, சுகத்தை எந்த இடையூறுமின்றி இப்போதுதான் அனுபவிக்கிறேன்

இந்தியா என்னும் கனவிற்குள் ஒருதவம் போல  ஜெ பிரயணம் செய்த ’’இந்தியப்பயணத்தை’’ நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வழக்கமாக  அவரின் பயண அனுபவங்கள்  எனக்கு ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி இம்முறை இல்லாமல், என்னவோ நானே நீண்ட பயணமொன்றை போய் வந்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது.    பழகிப்போன செளகரியங்களிலிருந்து வெளியே வந்தால் எனக்கும் சாத்தியமான் ஒரு பயணம்தான்  இது என்றும் தோன்றியது. இதுவரை போகலைன்னாலும் இனி போகலாமென்னும் நம்பிக்கையும் வந்திருக்கின்றது

’’இந்தியா இன்னும் தீர்ந்துபோகவில்லை, எஞ்சி இருக்கின்றது’’, எனறு அவர் சொல்லியிருப்பதை எனக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன்

எப்படி அவருக்கு இப்பயணம் மறக்கமுடியாத ஒன்றோ அப்படியே இந்த பயண அனுபவத்தின் வாசிப்பு, எனக்கும் மறக்கமுடியாத ஒன்று. அன்றன்றைக்கான  நிகழ்வுகளை இரவு உறங்கப்போகும் முன்னர் சுடச்சுட எழுதியிருக்கிறாரென்பதால் உடன் நானும் பயணிக்கும் உணர்வுடனே வாசித்தேன்.  .

இருள் பிரியா நேரத்தில்  கவித்துவமாக துவங்கிய இந்த பிரயாணம் அத்தனை அழகாக   சென்றிருந்த அனைவரின் பார்வையிலும் இந்தியா என்னும் கனவினை எனக்கும் விரித்து விரித்து காட்டிக்கொண்டே செல்கிறது

சென்ற இடங்களையும் ஊர்களையும் மட்டும் சொல்லிச்செல்லாமல் அந்த நிலக்காட்சிகளை, அரசியலால் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை, உடைகளும் உணவும் மாறிக்கொண்டே வருவதை, விவசாயத்தை, தேனீர் கூட  அரைப்பங்கு கால்பங்காகி, அவுன்ஸ் கணக்கில் குறைந்ததை, தங்குமிட செளகரியங்கள் அசெளகரியங்களை, அறை வாடகைகள் உணவுக்கான செலவு, அங்கங்கு இருக்கும் சாதி அமைப்புக்களை,  நதிகளை, கால்நடைகளை, அவற்றின் வகைகளை அவ்வப்போது வரலாற்றை,  பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி பல இந்தியப்புராதன சின்னங்களை நாம் இழந்துகொண்டிருப்பதன் பொருட்டான அவரின் ஆதங்கத்தை, எல்லாம்   தொடர்ச்சியாக சுவாரஸ்யமாகவும் மனவருத்தத்துடனும், சொல்லிக்கொண்டேயிருப்பதால் ஒரு அழகிய நெடுங்கதையொன்றினை வாசிப்பதுபோல தொடர்ந்து வாசிக்க முடிந்தது.

திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது போல நிலப்பரப்பும் மக்களும், தட்பவெப்பமும் சம்பவங்களுமாய் மாறிக்கொண்டே வருகின்றது ஜெ வின் விவரிப்பில்

சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் போன்ற மிக நுட்பமான விஷயங்களுடன், சாப்பிடுகையில் ‘ஆ’ கேட்ட குட்டிப்பெண்னை, ஆங்கிலம் தெரிந்த ஒரே ஒருத்தரை, 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே கோவிலில் பூஜை செய்யும் சிறுவனை, கடந்து  சென்ற பேரழகிகளை, எரியும் சவங்களை, இப்படி ஏராளம் தகவல்களுடன்  பயணத்தை சொல்லுகிறார்

தீயாக கொட்டிய  வெயிலில்  வாடியும், பொழிந்த நிலவின் புலத்தில் நனைந்தும், நதிநீரில் திளைத்தும், தூசியிலும், பசியிலும்  களைத்தும், பல்லாயிரம் முகங்களைக்கண்டபடி எத்தனை எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன  அவர்களுக்கு   இந்த ஒரே பயணத்தில்?

அழுகல் பழங்களையே திரும்ப திரும்ப  தலையில் கட்டியவர்களை, அறைவாடகையை உயர்த்தி ஏமாற்றியவர்களை,   உணவிற்கான தொகையை கூடுதலாக வாங்கியவர்களை என்று இவர்களைப்பற்றி சொல்லும் போதும் புகாராகவோ குற்றசாட்டாகவோ இல்லாமல் ,  வாழ்வின் இயங்கியலில்  அவர்களுக்கு ஏமாற்றுதல் ஒரு அங்கமாகிப் போயிருப்பதை ஆதங்கத்துடன்தான்  ஜெ சொல்லுகிறார்.

ஆணும் பெண்ணுமாய் பேசிக்கொண்டே  கூட்டம் கூட்டமாய் வெட்டவெளியில் மலம் கழிப்பது, மின்சாரமே இல்லாமல் இருளிலேயே இயல்பாக வாழ்க்கையை நடத்துவது, சேறு மிதிபடும் தரையுள்ள வீடுகள்  இவையெல்லாம்  இன்றைக்குமிருக்கும்  இதே இந்தியாவில்,  நானும், கதவைபூட்டிவிட்டு, இரவுடையை அணிந்துகொண்டு , குளியலறை இணைந்த படுக்கையறையில் கொசுவலைக்குள் பாதுகாப்பாக உறங்குவதும் , அனைத்து வசதிகளுடனான வாழ்வை வாழ்வதும் குற்ற உணர்வைத்தருகின்றது

ஜெ சென்றிருந்த இத்தனை ஊர்களில் நாக்பூருக்கும் காசிக்கும் மட்டுமே நான் சென்றிருக்கிறேன்

ஆராய்சி மாணவியாக இருந்த போது, நாக்பூருக்கு ஒரு கருத்தரங்கின் பொருட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தது போல குளிர்ந்த ரயில் பெட்டியில் நடுங்கிக்கொண்டே சென்று, ஸ்ரீகுந்த் எனப்படும் அங்கு மட்டுமே கிடைக்கும் எனச்சொல்லப்பட்ட ஒரு இனிப்பையும்,  ஆரஞ்சுகளையும் சுவைத்திருக்கிறேன். அங்கு விளையும் ஒரு குட்டி ஆரஞ்சுப்பழத்தின் சாகுபடி நுட்பங்களை அங்கேயெ சிலகாலம் தங்கியிருந்து தெரிந்துகொண்டு வந்த என் உறவினர் ஒருவர் அதை இங்கு அவர்   தோட்டத்தில்  வெற்றிகரமாக விளைவித்தார்

7ஆம் வகுப்பிலோ 8ஆம் வகுப்பிலோ படித்துக்கொண்டிருக்கும் போது  தலைமை ஆசிரியராக இருந்த அம்மா பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கையில் குடும்பத்தினர் இலவசமாக உடன்  பயணிக்கலாமென்னும் வசதியினால் நானும் அக்காவும் அவர்களுடன் காசிக்கு சென்றிருந்தோம். ஜெ விவரித்திருந்த எதுவுமே எனக்கு பார்த்ததாக நினைவிலில்லை எல்லா இடங்களையும் போலவே அங்கும்  சந்தடியும் நெரிசலுமாயிருந்தது. மறக்க முடியாத ஒன்றென்றால் எங்கோ, ஒரு அகல அகலமான படிக்கட்டில் வரிசையாக  உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு , ஒரு பச்சைப்புடவையை வித்தியாசமாக கட்டிக்கொண்டிருந்த, நெற்றியில் பெரியவட்டமாக குங்குமம் வைத்திருந்த, வெள்ளை வெளேரென்ற ஒரு அம்மாள் தங்கம் போல பளபளத்த ஒரு தூக்குச்சட்டியில் பிசைந்த தயிர்சாப்பாட்டையும் அவருக்கு பின்னால் ஒரு மாமா  எவர்சில்வர் பாத்திரத்தில் ஜிலேபியுமாக  கொடுத்துக்கொண்டே வந்தார்கள். என்னால நம்பமுடியாதபடிக்கு அதில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள், எட்டி பாத்திரத்தில்  என்ன இருக்கிறதென்று பார்த்துவிட்டு  வேண்டாமென்று  மறுத்துவிட்டார்கள்’

அப்போது  நாங்கள் மிக வறுமையிலிருந்தோம். வயிறு நிறைய சாப்பிட்ட நினைவே இல்லாத காலமது .  அந்த தயிர்சோற்றையும் இனிப்பையும் அவர்கள் மறுத்தது எனக்கு பெரும் துக்கமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இப்போதும் அது ஏனென்று எனக்கு புரியவில்லை. அதற்கு முந்தைய கணம் வரைபுதிய இடம் அளித்த அச்சத்தினால், கூட்டத்தில் தொலைந்துவிடுவேன்னும் பயத்தில் யாராவது ஒருத்தரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டே வந்த நான், அதற்கப்புறம் தொலைந்து போகவேண்டுமென்று விரும்பினேன். என்னை கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரும் திரும்பிப்போன பின்னால், அங்கே பிச்சைக்காரியாக இருந்து சோற்றை வேண்டாமெனச்சொல்லாமல் அள்ளி அள்ளி உண்பதை கற்பனை செய்துகொண்டேயிருந்தேன. ஆனால் பத்திரமாக அதே பழைய வாழ்க்கைக்கு என்னை திரும்பக்கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்

காசி என்றால் இது மட்டுமே இன்னும் நினைவிலிருக்கிறது.

நிச்சயம் இந்த  எல்லா ஊர்களுக்கும் இதே வரிசைப்படி மகன்களுடன் கூடிய விரைவில் செல்லப்போகிறேன்.அருமையான இப்பயண அனுபவங்களுக்கான நன்றிகள் ஜெ விற்கு

 

இன்று இப்பதிவு ஜெ அவர்களின் தளத்தில் வெளியானதில் கூடுதல் மகிழ்ச்சி

https://www.jeyamohan.in/115216#.XA0UKmgzY2w

 

2015  லிருந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிலிருந்த  “2.0’’ நவம்பர் 29, 2018 அன்று உலகெங்கிலும் தமிழ் , ஹிந்தி மற்றும்  தெலுங்கு என் மூன்று மொழிகளில் வெளியானது.  மிக அதிக தயாரிப்புச்செலவில் இது வரை வெளியாகியிருக்கும் , (ஆங்கிலமல்லாத) திரைப்படங்களின் வரிசையில் , ஒன்பதாவது இடத்திலிருக்கிறது , சுமார் 545 கோடி இந்திய ருபாய் மதிப்பில் தயாராகியுள்ள 2.0.

படப்பிடிப்பு முடிவடைந்து அதன் தொழிநுட்ப வேளைகளுக்காகவே பெரும் செலவும் அதிக காலமும் ஆகியிருக்கிறது. உலகெங்கிலும் இருந்து  30,000 தொழிநுட்பக்கலைஞர்கள் இதன் பிண்ணனியில் உழைத்திருக்கிறார்கள்.

 ஜென்டில்மேனில் துவங்கிய சங்கரின் வழக்கமான சமூக அக்கறையுடனான  படங்களின் வரிசையில்தான் வருகின்றது 2.0. சங்கரின் திரைப்படங்கள் எல்லாமே பிரமாண்டத்திற்கு பெயர்போனவை அதிலும் இது முப்பரிமாணமென்பதால் பிரம்மாண்டம் இன்னும் பலமடங்கு பெருகி பிரமிப்பளிக்கிறது. மனிதர்களைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் பறவைகளும், பறவைகளைவிட 10000 மடங்கு அதிகமாயிருக்கும் புழுபூச்சிகளுமாக நிறைந்திருக்கும் இவ்வுலகை ’’அலைபேசுதல்’’ என்னும் தொழில்நுட்பத்தை அளவிற்கு அதிகமாக  உபயோகிப்பதால் நாம் அழித்துக்கொண்டிருப்பதைப் பற்றிப்பேசும் படம்

காற்றில் மிதந்து வரும் மென்சிறகொன்றினுடன் துவங்குகின்றது படம், வழக்கமான நாயக அறிமுகக்காட்சிகளின் ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல்  மிகச்சாதாரணமாக  முதல் காட்சியில் ஆய்வகத்துக்குள் வருகை தருகிறார் ரஜினி.  அதே தோரணை அதே ஸ்டைல் ,அதே சுறுசுறுப்பு. அதே அட்டகாச சிரிப்பு.

முதல் பாகத்தின் நாயகி ஐஸ்வர்யாபச்சன் இதில்  ஒன்றிரண்டு  அலைபேசிவழி கொஞ்சல் வசனங்களுடன் ‘’ Cameo role ‘’ மட்டும் செய்திருக்கிறார். ரோபோ நாயகியாக , சிட்டியின் காதலியாக எமிஜாக்சன், அவர் உடலே உருவிவிட்டது போல இருப்பதால் ரோபோ பெண் பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். வசீகரனும், புது சிட்டியும் , பழைய சிட்டியும், குட்டி ரோபோ 3.0 வுமாக  படம்  சிறுவர்களை வழக்கமான ரஜினி படங்களைப்போலவே  வசீகரிக்கின்றது.

எதிர்நாயகன் என்று சொல்லவே முடியாதபடிக்கு  இணைநாயகனாக வருகிறார், பக்‌ஷிராஜாவான அக்‌ஷய்குமார்.  தீமையின் குறியீடாக அல்லாமல், நாயகனைக்காட்டிலும் சமூக அக்கறை அதிகம் கொண்டவராக. பறவைகளுக்காக, அவற்றின் பாதுகாப்புக்காக போராடும் பறவை  ஆர்வலராக, அவற்றுக்காகவே உயிரையும் விடுபவராக, பறவையியலாளர் திரு.சலீம் அலி அவர்களைப்போலவே உருவ ஒற்றுமையுடன், சூழல் போராளியாக வரும் அக்‌ஷய்குமாரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது

திரைமொழி எந்த தொய்வுமில்லாமல் செல்பது படத்தின் பெரிய பிளஸ். ஜெயமோகனின், ஆழமும்  அவருக்கே உரித்தான நுட்பமான பகடியும் கொண்ட வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

மிகச்சிறியதோர் கதையை  பிரம்மாண்டமும் தொழில்நுட்ப சாகசங்களுமமாக விரித்து நமக்கு அளிக்கிறார் சங்கர்.  ஒளிரும் திரையில் சிறகடிக்கும் சிட்டுக்குருவிகளுடன் கோடிக்கணக்கான அலைபேசிகள்  சுழலாக வந்து ஆட்களை சுருட்டி  விழுங்குவதும்,   அவை கன்டைனர் லாரியின் உள்ளிருந்து வெடித்து பீரிட்டு வருவதும்,  வயிற்றுச்சதை பிதுங்கி, கொப்பளித்து,  கிழிந்து உள்ளிருந்து குருதிதோய்ந்த அலைபேசி வெளியே வருவதும், அலைபேசிகளெல்லாமே சேர்ந்து ஒரு ராட்சத பறவையாகி வருவதுமாக மிரட்டுகிறது படம்.

நெடுஞ்சாலையே  ஒளிரும் அலைபேசிகளாலாவது, காடுகளின் மரங்கள் எல்லாமே அலைபேசியாகவே மாறி மிரட்டுவவதெல்லாம் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்கள்.  பிரம்மாண்டத்தினால் மட்டுமல்லாது தொழிநுட்ப காட்சிகளின் தரத்திலும் கதையின் பேசுபொருளினாலும் 2.0விற்கு தமிழ்படம் என்னும் பிம்பத்திலிருந்தும், ஏன் இந்தியத்தன்மை என்பதிலிருந்துமே ஒரு விலக்கம் இருப்பது போலிருக்கிறது. ஆனால் வழக்கமான  இந்திய சினிமாவின் எந்த ஃபார்முலாவும் இதில் இல்லை என்பதே  இதன் வெற்றியும் கூட.

அலைக்கற்றை நீளம், அதிர்வலைகள் என கணினி தொடர்பான  பல வசனங்களும் காட்சிகளுமே படத்தின் பேசுபொருள் என்றாலும் முடிந்த வரை எளிமைப்படுத்தி எல்லா தரப்பினருக்கும் புரியும் படியாகவே எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

இசை ஏ ஆர் ரகுமான். மூன்றே பாடல்கள். ’புள்ளினங்காளில்’ நா. முத்துக்குமாரின்   கவிதை மிளிர்கிறது. ’ராஜாளி’யில் இசை துடித்து துள்ளிச்செல்கிறது. ’’எந்திரலோகத்துச்சுந்தரியே’’ இளைஞர்களின் பிரியத்துக்குரிய பாடலாய் வெகுகாலத்திற்கு இருக்கும்..

3D   தொழில்நுட்பத்திலேயே படம்பிடிக்கப்பட்ட  முதல் இந்தியத்திரைப்படமான இதில் ஒளி இயக்குனர் நீரவ் ஷாவின்  உழைப்பு பாராட்டத்தக்கது. படம் வெளியான முதல் வாரத்திலேயே மிக அதிக வசூலான முதல் இந்தியசினிமா என்னும் புகழுக்கும் உரித்தானதாகிவிட்டது 2.0. ரசுல் பூக்குட்டியின்  புதிய 4D   ஒலிக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கான இன்னோரு முக்கியக்காரணம். சண்டைகாட்சிகளில் நாயகனுக்கு எதிரில் இருப்பது தொழில்நுட்பஎதிரி என்பதால்  ஸ்டண்ட் கோரியொகிராபர்  Kenny Bates மெனக்கெட்டிருப்பது படத்தைப் பார்க்கையில் தெரிகின்றது. விஷுவல் எஃபெக்ட்ஸின் அதிகபட்ச சாத்தியங்கள் அனைத்துமே சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது

சிட்டி ரோபோ வரும் காட்சிகளில் ,  சிறுவர்களின் ஆராவாரமும் , மகிழ்ச்சிக்கூச்சலும், ரஜினி ரசிகர்களின் கைதட்டல்களும் விசிலுமாக அரங்கு நிறைந்து ததும்பி வழிந்தது. ரஜினி என்னும் ரோபோ பிம்பத்தை வைத்துக்கொண்டெ அவரின் காலத்திற்கு பின்னாலும் வெற்றிகரமாக ரஜினி படங்கள் தயாரிக்கலாம்  என்னும் சாத்தியத்தை 2.0 உறுதிப்படுத்துகின்றது.

 சிட்டி ரோபோவின் காதலியான நிலா ரோபோவுடனான, ரொமான்ஸ் காட்சிகளில்  20 வருடங்களுக்கு முன்னரான ரஜினியைப்பார்க்க முடிகின்றது. எனினும், நிலா ரோபோவின் மேல்சட்டையை முதுகுப்பக்கமாக திறக்க சிட்டி முயற்சிப்பதெல்லாம் தவிர்த்திருக்கலாம். வணிகத்திரைப்படங்களில் பெண்கள்  ரோபோவாக வந்தாலுமே துகிலுரிக்கவேண்டிய அவலம் இந்திய சினிமாவின் சாபக்கேடுதான்.  சிட்டி என்னும் ஆண் ரோபோ உலகை காப்பாற்றுவார் நிலா என்னும் பெண் ரோபோ எடுபிடிவேலைகளுக்கு! பெண்கள் ரோபோவேவானாலும் பலகீன பாலினம்தானென்கிறதா 2.0 ?

  தளர்ந்த நடையுடன் முதியவராக  வரும் அக்‌ஷய்குமார் மரணத்திற்கு பின்னர்  எப்படி சிட்டி என்னும் ரோபோவால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் அளவிற்கான  தீவிரத்துடன் இருக்கும் ஒரு அதீத சக்தியானார் என்னும்  விளக்கமுமில்லை

சிந்திக்க அறிந்துகொண்ட சிட்டிக்கு ஏற்படும் காதல், அதனாலான  அகப்போராட்டம் போன்ற முதல் பகுதியில் சிட்டிக்கு இருந்த உணர்வெழுச்சிகளெல்லாம் இதில் இல்லை என்பதும் குறைதான். கலாபவன் ஷாஜன் சிட்டுக்குருவி லேகியத்தைப்பற்றி  பேசும்  வசனங்களும், அப்போதான அவரின் உடல்மொழியும்  ஆபாச ரகம் . தவிர்த்திருக்கலாம்

வெறும் அறிவியல் புனைவென்றோ, பேண்டஸி படமென்றோ மட்டும் படத்தை பொதுவில் கொண்டு வந்துவிடமுடியாது. நாயகனான ரஜினியை மட்டுமே முழுக்க  நம்பியது என்றும் சொல்ல முடியாதபடிக்கு ரஜினியின் எந்த மரபான ஃபார்முலாவுமே இதில் இல்லை.  ஆனாலும், 2.0 வெறும் திரையனுபவமாக இருக்காமல் ஒரு கொண்டாட்டமாக இருக்குமென்பது உத்திரவாதம்.  ஜெயமோகன் அவர்களே சொன்னதுபோல 2.0 ஒரு தொழில்நுட்பக் களியாட்டம்தான் சந்தேகமில்லாமல்!

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑