2015 லிருந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிலிருந்த “2.0’’ நவம்பர் 29, 2018 அன்று உலகெங்கிலும் தமிழ் , ஹிந்தி மற்றும் தெலுங்கு என் மூன்று மொழிகளில் வெளியானது. மிக அதிக தயாரிப்புச்செலவில் இது வரை வெளியாகியிருக்கும் , (ஆங்கிலமல்லாத) திரைப்படங்களின் வரிசையில் , ஒன்பதாவது இடத்திலிருக்கிறது , சுமார் 545 கோடி இந்திய ருபாய் மதிப்பில் தயாராகியுள்ள 2.0.
படப்பிடிப்பு முடிவடைந்து அதன் தொழிநுட்ப வேளைகளுக்காகவே பெரும் செலவும் அதிக காலமும் ஆகியிருக்கிறது. உலகெங்கிலும் இருந்து 30,000 தொழிநுட்பக்கலைஞர்கள் இதன் பிண்ணனியில் உழைத்திருக்கிறார்கள்.
ஜென்டில்மேனில் துவங்கிய சங்கரின் வழக்கமான சமூக அக்கறையுடனான படங்களின் வரிசையில்தான் வருகின்றது 2.0. சங்கரின் திரைப்படங்கள் எல்லாமே பிரமாண்டத்திற்கு பெயர்போனவை அதிலும் இது முப்பரிமாணமென்பதால் பிரம்மாண்டம் இன்னும் பலமடங்கு பெருகி பிரமிப்பளிக்கிறது. மனிதர்களைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் பறவைகளும், பறவைகளைவிட 10000 மடங்கு அதிகமாயிருக்கும் புழுபூச்சிகளுமாக நிறைந்திருக்கும் இவ்வுலகை ’’அலைபேசுதல்’’ என்னும் தொழில்நுட்பத்தை அளவிற்கு அதிகமாக உபயோகிப்பதால் நாம் அழித்துக்கொண்டிருப்பதைப் பற்றிப்பேசும் படம்
காற்றில் மிதந்து வரும் மென்சிறகொன்றினுடன் துவங்குகின்றது படம், வழக்கமான நாயக அறிமுகக்காட்சிகளின் ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல் மிகச்சாதாரணமாக முதல் காட்சியில் ஆய்வகத்துக்குள் வருகை தருகிறார் ரஜினி. அதே தோரணை அதே ஸ்டைல் ,அதே சுறுசுறுப்பு. அதே அட்டகாச சிரிப்பு.
முதல் பாகத்தின் நாயகி ஐஸ்வர்யாபச்சன் இதில் ஒன்றிரண்டு அலைபேசிவழி கொஞ்சல் வசனங்களுடன் ‘’ Cameo role ‘’ மட்டும் செய்திருக்கிறார். ரோபோ நாயகியாக , சிட்டியின் காதலியாக எமிஜாக்சன், அவர் உடலே உருவிவிட்டது போல இருப்பதால் ரோபோ பெண் பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். வசீகரனும், புது சிட்டியும் , பழைய சிட்டியும், குட்டி ரோபோ 3.0 வுமாக படம் சிறுவர்களை வழக்கமான ரஜினி படங்களைப்போலவே வசீகரிக்கின்றது.
எதிர்நாயகன் என்று சொல்லவே முடியாதபடிக்கு இணைநாயகனாக வருகிறார், பக்ஷிராஜாவான அக்ஷய்குமார். தீமையின் குறியீடாக அல்லாமல், நாயகனைக்காட்டிலும் சமூக அக்கறை அதிகம் கொண்டவராக. பறவைகளுக்காக, அவற்றின் பாதுகாப்புக்காக போராடும் பறவை ஆர்வலராக, அவற்றுக்காகவே உயிரையும் விடுபவராக, பறவையியலாளர் திரு.சலீம் அலி அவர்களைப்போலவே உருவ ஒற்றுமையுடன், சூழல் போராளியாக வரும் அக்ஷய்குமாரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது
திரைமொழி எந்த தொய்வுமில்லாமல் செல்பது படத்தின் பெரிய பிளஸ். ஜெயமோகனின், ஆழமும் அவருக்கே உரித்தான நுட்பமான பகடியும் கொண்ட வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம்.
மிகச்சிறியதோர் கதையை பிரம்மாண்டமும் தொழில்நுட்ப சாகசங்களுமமாக விரித்து நமக்கு அளிக்கிறார் சங்கர். ஒளிரும் திரையில் சிறகடிக்கும் சிட்டுக்குருவிகளுடன் கோடிக்கணக்கான அலைபேசிகள் சுழலாக வந்து ஆட்களை சுருட்டி விழுங்குவதும், அவை கன்டைனர் லாரியின் உள்ளிருந்து வெடித்து பீரிட்டு வருவதும், வயிற்றுச்சதை பிதுங்கி, கொப்பளித்து, கிழிந்து உள்ளிருந்து குருதிதோய்ந்த அலைபேசி வெளியே வருவதும், அலைபேசிகளெல்லாமே சேர்ந்து ஒரு ராட்சத பறவையாகி வருவதுமாக மிரட்டுகிறது படம்.
நெடுஞ்சாலையே ஒளிரும் அலைபேசிகளாலாவது, காடுகளின் மரங்கள் எல்லாமே அலைபேசியாகவே மாறி மிரட்டுவவதெல்லாம் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்கள். பிரம்மாண்டத்தினால் மட்டுமல்லாது தொழிநுட்ப காட்சிகளின் தரத்திலும் கதையின் பேசுபொருளினாலும் 2.0விற்கு தமிழ்படம் என்னும் பிம்பத்திலிருந்தும், ஏன் இந்தியத்தன்மை என்பதிலிருந்துமே ஒரு விலக்கம் இருப்பது போலிருக்கிறது. ஆனால் வழக்கமான இந்திய சினிமாவின் எந்த ஃபார்முலாவும் இதில் இல்லை என்பதே இதன் வெற்றியும் கூட.
அலைக்கற்றை நீளம், அதிர்வலைகள் என கணினி தொடர்பான பல வசனங்களும் காட்சிகளுமே படத்தின் பேசுபொருள் என்றாலும் முடிந்த வரை எளிமைப்படுத்தி எல்லா தரப்பினருக்கும் புரியும் படியாகவே எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.
இசை ஏ ஆர் ரகுமான். மூன்றே பாடல்கள். ’புள்ளினங்காளில்’ நா. முத்துக்குமாரின் கவிதை மிளிர்கிறது. ’ராஜாளி’யில் இசை துடித்து துள்ளிச்செல்கிறது. ’’எந்திரலோகத்துச்சுந்தரியே’’ இளைஞர்களின் பிரியத்துக்குரிய பாடலாய் வெகுகாலத்திற்கு இருக்கும்..
3D தொழில்நுட்பத்திலேயே படம்பிடிக்கப்பட்ட முதல் இந்தியத்திரைப்படமான இதில் ஒளி இயக்குனர் நீரவ் ஷாவின் உழைப்பு பாராட்டத்தக்கது. படம் வெளியான முதல் வாரத்திலேயே மிக அதிக வசூலான முதல் இந்தியசினிமா என்னும் புகழுக்கும் உரித்தானதாகிவிட்டது 2.0. ரசுல் பூக்குட்டியின் புதிய 4D ஒலிக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கான இன்னோரு முக்கியக்காரணம். சண்டைகாட்சிகளில் நாயகனுக்கு எதிரில் இருப்பது தொழில்நுட்பஎதிரி என்பதால் ஸ்டண்ட் கோரியொகிராபர் Kenny Bates மெனக்கெட்டிருப்பது படத்தைப் பார்க்கையில் தெரிகின்றது. விஷுவல் எஃபெக்ட்ஸின் அதிகபட்ச சாத்தியங்கள் அனைத்துமே சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது
சிட்டி ரோபோ வரும் காட்சிகளில் , சிறுவர்களின் ஆராவாரமும் , மகிழ்ச்சிக்கூச்சலும், ரஜினி ரசிகர்களின் கைதட்டல்களும் விசிலுமாக அரங்கு நிறைந்து ததும்பி வழிந்தது. ரஜினி என்னும் ரோபோ பிம்பத்தை வைத்துக்கொண்டெ அவரின் காலத்திற்கு பின்னாலும் வெற்றிகரமாக ரஜினி படங்கள் தயாரிக்கலாம் என்னும் சாத்தியத்தை 2.0 உறுதிப்படுத்துகின்றது.
சிட்டி ரோபோவின் காதலியான நிலா ரோபோவுடனான, ரொமான்ஸ் காட்சிகளில் 20 வருடங்களுக்கு முன்னரான ரஜினியைப்பார்க்க முடிகின்றது. எனினும், நிலா ரோபோவின் மேல்சட்டையை முதுகுப்பக்கமாக திறக்க சிட்டி முயற்சிப்பதெல்லாம் தவிர்த்திருக்கலாம். வணிகத்திரைப்படங்களில் பெண்கள் ரோபோவாக வந்தாலுமே துகிலுரிக்கவேண்டிய அவலம் இந்திய சினிமாவின் சாபக்கேடுதான். சிட்டி என்னும் ஆண் ரோபோ உலகை காப்பாற்றுவார் நிலா என்னும் பெண் ரோபோ எடுபிடிவேலைகளுக்கு! பெண்கள் ரோபோவேவானாலும் பலகீன பாலினம்தானென்கிறதா 2.0 ?
தளர்ந்த நடையுடன் முதியவராக வரும் அக்ஷய்குமார் மரணத்திற்கு பின்னர் எப்படி சிட்டி என்னும் ரோபோவால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் அளவிற்கான தீவிரத்துடன் இருக்கும் ஒரு அதீத சக்தியானார் என்னும் விளக்கமுமில்லை
சிந்திக்க அறிந்துகொண்ட சிட்டிக்கு ஏற்படும் காதல், அதனாலான அகப்போராட்டம் போன்ற முதல் பகுதியில் சிட்டிக்கு இருந்த உணர்வெழுச்சிகளெல்லாம் இதில் இல்லை என்பதும் குறைதான். கலாபவன் ஷாஜன் சிட்டுக்குருவி லேகியத்தைப்பற்றி பேசும் வசனங்களும், அப்போதான அவரின் உடல்மொழியும் ஆபாச ரகம் . தவிர்த்திருக்கலாம்
வெறும் அறிவியல் புனைவென்றோ, பேண்டஸி படமென்றோ மட்டும் படத்தை பொதுவில் கொண்டு வந்துவிடமுடியாது. நாயகனான ரஜினியை மட்டுமே முழுக்க நம்பியது என்றும் சொல்ல முடியாதபடிக்கு ரஜினியின் எந்த மரபான ஃபார்முலாவுமே இதில் இல்லை. ஆனாலும், 2.0 வெறும் திரையனுபவமாக இருக்காமல் ஒரு கொண்டாட்டமாக இருக்குமென்பது உத்திரவாதம். ஜெயமோகன் அவர்களே சொன்னதுபோல 2.0 ஒரு தொழில்நுட்பக் களியாட்டம்தான் சந்தேகமில்லாமல்!
‘