பொள்ளாச்சி தமிழிசைச்சங்கம், 48ஆவது ஆண்டுக்கான நிகழ்வுகளாக, தமிழ்நாடு அரசு கலை பண்பட்டுத்துறையுடன் இணைந்து 2018 நவம்பர் 19,20,21. மற்றும் 22 ஆகிய நான்கு நாட்களிலும் மேடை நாடகங்களை அரங்கேற்றியது.
கணினிப்பயன்பாடும், தொலைக்காட்சியும், இணையமும், வணிகத்திரைப்படங்களும் மக்களின் வாழ்வில் இணைபிரியா அங்கமாகி விட்ட இக்காலத்தில் அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான மேடை நாடகங்களை பொதுமக்களுக்கு கொண்டுவந்து சேர்த்து, அக்கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புத்துயிர் அளித்தது தமிழிசைச்சங்கத்தின் ஆகச்சிறந்த ஒரு சேவையாகும்
பள்ளிப்பருவத்தில் சோ, கிரேஸீ மோகன் எஸ்.வி சேகர் ஆகியோரின் நாடகங்களை பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் பல வருட இடைவெளிக்குப்பிறகு இன்று பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மகன்களுடன் இப்போதுதான் நாடகம் பார்க்கிறேன்.
துவக்க நாளான 19 ஆம் தேதி அன்று மாலை ‘’சாணக்ய சபதம்’’ என்னும் புராண நாடகம் அரங்கேறியது. நாடகச்செம்மல் அமரர் R.S மனோகரின் சகோதரரின் மகனான திரு சிவபிரசாத் அவர்கள் இயக்கி சாணக்யனாக நடித்துமிருந்தார். மதுரை திருமாறன் அவர்களின் எழுத்தில் வசனங்களும், R.S மனோகர் அவர்களின் சிறப்பம்சமான பிரம்மாண்ட அரங்க அமைப்புக்களுமாக நாடகம் மிகச்சிறப்பாக இருந்தது, சிறு பிழைகூட இல்லாமல் அத்தனை நடிகர்களும் நடித்ததும், துல்லியக்காட்சி அமைப்பும் அபாரமான உடைவடிவமைப்புமாய் கிரேக்க அலெக்ஸாண்டரும், செல்லுகஸ் நிகேடரும் ரோஷனாவும் சந்திரகுப்தனும் பிற வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கண்முன்னே வந்து, அக்கதை நடைபெற்ற அக்காலத்திலேயே நாம் இருப்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கியது.
இரண்டாம் நாளின் இசை நாடகம் ‘ சத்தியவான் சாவித்ரி’’ தமிழ் நாடக உலகின் முன்னோடியான தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயற்றியது. மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தினர் நடத்தினார்கள். ஒரு இசை நாடகத்தின் எல்லா அம்சங்களுடனும் அருமையான அன்னிகழ்வு இருந்தது,
மூன்றாம் நாளான 21 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து நாடகக்குழுவினரின் ’’வாலி வதம் மற்றும் சுக்ரீவன் பட்டாபிஷேகம்’’ அரங்கேறியது மிகப்பிரமாதமான அந்நிகழ்வில் அனைத்து நடிகர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டது. இரவு முழுவதும் நீளும் நாடகத்தை அன்றைய தேவைக்கேற்ப 2 மணிநேரமாக சுருக்கி அமைத்திருந்தனர்
பொருத்தமான ஒப்பனை, அழகிய வண்ண உடைகள், உரக்க வசனங்களை பேசுவது, அந்த பாத்திரமாகவே மாறி விடுவது என பார்வையளர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச்சென்றனர் நடிகர்கள். பள்ளியில் தமிழ்ப்பாடத்தில் வாலி வதமும் அதன்பின்னர் தாரை அழுதுபுலம்பும் படலமுமாக படித்து தாரை என்னும் ஒரு துயர பிம்பம் மனதில் இருந்தது. இத்தெருக்கூத்தில் தாரை அறிமுகப்படலத்தில் நடனமிட்டுக்கொண்டெ வருவதும், பளபளக்கும் அவரது உடையுமாக இன்னொரு மாறுபட்ட சித்திரம் மனதில் உருவாகி ஆழப்பதிந்தது
மேடையின் பக்கவாட்டில் காட்சி மாறும் இடைவெளிகளில் அனுமன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததும், இராவணன் தொடர் வசனங்களால் காய்ந்துபோன தொண்டைக்காக அடிக்கடி தேனீர் அருந்துவதும், லக்ஷ்மணராக நடித்த இளைஞர், வாட்ஸ் அப்பில் முழ்கி இருந்ததும் கவனிக்க முடிந்தது. ராவணன் பல முகங்களுடன் அந்தர் பல்டி அடிப்பதும், பேச்சு வழக்கில் வாலி ’அதொன்னும் problem இல்லை’ எனச்சொல்வதும், மேடையிலேயே மறைந்திருந்து வாலியை ஸ்ரீராமர் அம்பெய்து கொல்வதுமாக பல சுவாரஸ்யமான காட்சிகளும் காணக்கிடைத்தது
நான்காம் நாளான 22அன்று ‘’ நிதர்சனம் ‘’ என்னும் சமூக நாடகம் மாலி அவர்களின் இயகக்த்தில் கே. எஸ் . என் . சுந்தர் அவர்களின் கதை வசனத்தில் நிகழ்ந்தது. வழக்கமான அறிவுரை சொல்லும் உத்தியை மேற்கொள்ளாமல் இக்காலத்துக்கு ஏற்றபடி பல அழகிய வசனங்களும், எதிர்பாரா முடிவுமாக இருந்தது நாடகம். சாதிய வித்தியாசங்கள், கலப்புத்திருமணம், இட ஒதுக்கீடு, ஆச்சாரம், மத நம்பிக்கைகள் என பல மிக முக்கியமான ஆனால் கவனத்துடன் அணுக வேண்டிய சமூக பிரச்சனைகளை சாதுர்யமாக கையாண்டு நாடகத்தை அழகாக நடத்தினார்கள். ஈஸ்வரன் IAS அவர்களின் தந்தையாக நடித்தவரின் நடிப்பும் வசன உச்சரிப்பும் பிரமாதம். இவரெல்லாம் வெள்ளித்திரையில் இருக்கவேண்டியவர். அவரின் உடல்மொழியும் அபாரம். லக்ஷ்மியாக நடித்த செளம்யா ராம் நாராயண் ஒவ்வொரு காட்சிக்கும் அழகிய பல வண்ணப்புடவைகளையும் பொருத்தமான அணிகலன்களையும் மாற்றிக்கொண்டு வந்து அரங்கிலிருந்த பெண்களின் பெருமூச்சுக்களுக்கு காரணமானார்
காதலை பேசுபொருளாககொண்ட அனைத்து நாடகங்களும், அது கல்யாணத்தில் முடியும் சுபம் எனும் முடிவுக்கே வரும் வழக்கத்திற்கு மாறாக இந்நாடகம் வாழ்வின் நிதர்சனம் என்னவென்பதை அழகாக உணர்த்தியது பாராட்டத்தக்கது
பார்வையாளர்கள் திரளாக வந்திருந்ததும், நிகழ்வு முடியும் வரை அரங்கிலிருந்து ரசித்ததும் , பல கைதட்டல்களுக்கு இடையில் நாடகங்கள் நிகழ்ந்ததும் இதுபோன்ற ஆதாரக்கலைகள் முற்றிலும் அழியாது, புத்துயிர் பெற்று மீள எழுந்து வரும் என்னும் நம்பிக்கையை தோற்றுவித்தது.
இசை நாடகம் மற்றும் தெருக்கூத்துக்கலைஞர்களின் உடைகள் நைந்திருந்ததும், ராவணனுக்கு 8 தலைகளே இருந்ததும் அதுவும் cardboard அட்டையில் செய்தவையென்பதும், அக்கலையும் கலைஞர்களின் வாழ்வும் நலிந்திருப்பதைக்காட்டும் குறியீடாகவே தோன்றியது. தெருக்கூத்து நடத்தியவர்கள் முப்பாட்டன் கால்த்திலிருந்து பல தலைமுறைகளாக இக்கலையை தொடர்வதும், நாடகத்தின அங்கத்தினர் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களே என்பதும் வியப்பிலும் வியப்பு. பொருளாதார மேம்பாட்டை பெரிதாக நினைக்காமல் உண்மையான கலையார்வத்துடனிருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்
பிண்ணனித்திரைச்சீலையை மாற்றியே அரங்கை சிறைச்சாலையாகவும் கோவிலாகவும் அந்தப்புரமாகவும் வீட்டுக்கூடமாக்வும் அழகாக மாற்றுவதும், நாடகத்துக்கு தேவையான் மிகை ஒப்பனையையும் மிக நடிப்பையும் தேவை அறிந்து அளவுடன் கொடுப்பதுமாக வெற்றிகரமாக நடந்தன அத்தனை நாடகங்களும்
நிகழ்வு முடிந்து அவர்கள் பாராட்டப்படுகையில் போர்த்தபட்ட அந்த எளிய பொன்னாடை அவர்களின் முகத்தில் தோற்றுவித்த உணர்வெழுச்சிகளை என்றென்றைக்கும் மறக்க முடியாது. நாடகத்தில் ’ரீடேக்’ என்பதே இல்லயென்பதால் கடும் பயிற்சியின் பின்னரே அவர்கள் அதை வெற்றிகரமாக செய்யமுடியும். எனவே இந்த நாடகங்களில் நடித்த அனைவருமே உண்மைக்கலைஞர்கள் . கேரளத்தைப்போல நாடகக்கலையை தமிழ்நாடு ஊக்குவிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டைப்பொய்யாக்க இனி இதுபோன்ற முயற்சிகள் தமிழகமெங்கும் நடைபெறவேண்டும்
பார்வையாளர்களில் கல்லூரியில் படிக்கும் என் மகனும் பள்ளிக்குழந்தைகளுமாக கலந்து கொண்டிருந்தது இன்னும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. இனி தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளைக்காண முதல் நாளே தமிழைசைச்சங்கத்தில் உறுப்பினராக சந்தா கட்டினேன். இப்பதிவினை படிக்கும் அனைவரையும் தொடர்ந்து நாடகங்கள் பார்க்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். இந்த விடுமுறையை தொடர் வாசிப்பிலும் நாடகங்கள் பார்ப்பதிலுமாக செலவழிக்கும் படி நான் அருளப்பட்டிருப்பதில் மகிழ்கிறேன்
Leave a Reply