பவளப் பாறைகளுக்கும், எரிமலைகளுக்கும் மழைக் காடுகளுக்கும் புகழ்பெற்ற இந்தியப் பெருங்கடல் தீவுகளில் ஒன்றான, மடகாஸ்கருக்கும், மொரிஷியசுக்கும் அருகிலிருந்த ரியூனியன் தீவில்1 இருந்த தனது பண்ணையில் அதன் உரிமையாளர் ஃபெரோல்,2 அடிமைச் சிறுவனான எட்மண்டுடன் தனது வழக்கமான காலை நடையில் இருந்தபோது, அந்த நாள் வரலாற்றில் மிக முக்கியமான நாளாக இருக்க போவதை அவரும் அறிந்திருக்கவில்லை.
எட்மண்டை அடிமையாக வைத்திருந்த அவரது சகோதரி அவனை இங்கு உதவிக்கு அளித்ததிலிருந்து அவருக்கு துணைவனும் நண்பனும். எட்மண்ட் தான். 12 வயதே ஆன சிறுவனாக இருந்தபோதிலும் பண்ணையின் தாவரங்களுடனான அவனது அணுக்கமும் அறிவும் ஃபெரோலை எப்போதும் ஆச்சரியப்படவைக்கும்.
அந்த மாபெரும் பண்ணையை சுற்றி வருகையில், 20 வருடங்களுக்கும் மேலாக வளர்ந்து வரும் ஒரு கொடியில் இரு பச்சை நிறக் காய்களை கண்டு அப்படியே மலைத்து நின்றவர் ’’இவை எப்போது காய்த்தன’’ என்று எட்மண்டிடம் கேட்டார். ’’நான் சில நாட்களுக்கு முன்பு கைகளால் இதன் மலர்களுக்கு மணம் செய்துவைத்தேன், எனவேதான் காய்கள் வர தொடங்கி இருக்கின்றன’’ என்ற எட்மண்டை அவர் அப்போது நம்பவில்லை. ஏனெனில் 20 வருடங்களாக காய்களை அளிக்காமல் மலர்களை மட்டும் அளித்து வந்த அந்த கொடி இப்போது காய்த்திருப்பது இந்த 12 வயது சிறுவனால் என்பதை அவரால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இவை நடந்தது 1841ல்..
ஐரோப்பா நூற்றுக் கணக்கான வருடங்களாய் முயற்சி செய்து தோல்வியுற்ற ஒரு விஷயத்தை ஒரு ஆப்பிரிக்க கருப்பின அடிமை சிறுவன் எப்படி இத்தனை சுலபமாக செய்யமுடியுமென்பதே அவரின் சந்தேகமாயிருந்தது. ஆனால் சில நாட்களில் மேலும் சில காய்கள் வந்தபோது எட்மண்டை ’’கைகளால் அம்மலர்களுக்கு எப்படி மணம் செய்து வைத்தாய்’’ ? என்று மீண்டும் செய்து காண்பிக்க சொன்னார் ஃபெரோல்.
ஒரு சிறு மூங்கில் குச்சியை கொண்டு அந்த மலர்களின் ஆண் (pollen bearing Anther), பெண் (Stigma) உறுப்புகளை பிரித்து தன்மகரந்தச் சேர்க்கையை தடுக்கும் (self pollination) ரோஸ்டெல்லம்3 எனப்படும் மெல்லிய சவ்வை மெல்ல விலக்கி, இனப்பெருக்க உறுப்புகளை ஒன்றோடொன்று சேர்த்து மென்மையாக தேய்த்து எட்மண்ட் அதை செய்து காட்டினான். ஃபெரோல் அன்றே பக்கத்து பண்ணையாளர்களை வரவழைத்து எட்மண்டின் அந்த எளிய செய்முறையை அவர்களையும் காணச்செய்தார். பின்னர் எட்மண்ட் அந்த தீவு முழுக்க பயணித்து, ’’வெனிலா கல்யாணம்’’ என அழைக்கப்பட்ட அந்த செய்முறையை பல அடிமைகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் செய்து காட்டி பயிற்சியளித்தான். 5 அன்று தொடங்கி இன்று வரையிலும் அம்மலர்களில் அப்படித்தான் மகரந்த சேர்க்கை செய்யப்படுகின்றது.
அந்த கொடி வெனிலா ஆர்கிட் கொடி. அதன் பிறகே மெக்சிகோவுக்கு வெளியேவும் அக்கொடிகளில் காய்கள் காய்த்தன.
அந்த சிறுவன் எட்மண்ட், ரியூனியன் (பர்பான்) தீவில் செயிண்ட் சுஸானா என்னும் சிறு நகரில் 1829 ல் பிறந்தான் 4. அடிமைப் பணியிலிருந்த அவன் தாய் மெலிசா மகப்பேறில் இறந்தாள் தந்தை யாரென எட்மண்ட்டுக்கு தெரியாது. மிகச்சில வருடங்களிலேயே அவன் எல்விர் சீமாட்டிக்கு அடிமையாக விற்கப்பட்டான். எல்விர், எட்மண்டை அவரது சகோதரனான ஃபெரோலுக்கு ஒருசில வருடங்களில் அளித்துவிட்டாள்.
பெரும் பண்ணை உரிமையாளரான ஃபெரோல், எட்மண்டின் தாவரங்களின் மீதான விருப்பத்தையும் அறிவையும் எப்போதும் மெச்சுபவர். எட்மண்ட் தனது ஓய்வு நேரங்களிலும் பண்ணையின் தாவரங்களுடன் இருப்பது வழக்கம். அந்த தீவில் 1819 லிருந்து வெனிலா செடிகள் வளர்க்கப்பட்டாலும், அவை காய்களை அளிக்காமல் மலர்களை மட்டும் அளித்த மலட்டுக் கொடிகளாகவே இருந்தன. தன்னை மகனைப்போல நடத்தும் எஜமானருக்கு அக்கொடி காய்களை அளிக்காததில் வருத்தமென்பதால் எட்மண்ட், அக்கொடியை அடிக்கடி கவனித்தவாறே இருந்தான்.
வெனிலாக் கொடிகள் காய்க்க துவங்கிய பின்னர் எட்மண்டின் புகழ் அந்த தீவெங்கும் பரவியது. அடிமைகளுக்கு குடும்பப்பெயர் வைத்துக்கொள்ளும் உரிமை இல்லாததால் வெறும் எட்மண்டாக இருந்த அந்த சிறுவனுக்கு, ஃபெரோல் லத்தீன் மொழியில் ’வெள்ளை’ என பொருள் படும் Albius என்ற பெயரை எட்மண்டுக்கு பின்னால் சேர்த்துக் கொள்ளும்படி பெயரிட்டார்.6 பின்னர் அவனை அடிமை வேலையிலிருந்தும் 1848’ல் விடுவித்தார்.
எட்மண்ட் ஆல்பியஸின் மீது பலருக்கு, குறிப்பாக பல தாவரவியலாளர்களுக்கு பொறாமை இருந்தது. ஜான் மிஷெல் க்ளாட் ரிச்சர்ட் 7 என்னும் பிரெஞ்ச் தாவரவியலாளர் தான் சில வருடங்களுக்கு முன்னர் எட்மண்டுக்கு இந்த மகரந்த சேர்க்கை முறையை கற்றுக் கொடுத்ததாக கூட கூறினார். ஆனால் அதை அவரால் நிரூபிக்க முடியவில்லை.
சுதந்திர வாழ்வுக்கு ஆயத்தமான எட்மண்டுக்கு, பொய் குற்றச்சாட்டில் திருட்டு வழக்கொன்றில் ஐந்து வருட சிறை தண்டனை கிடைத்தது. ஃபெரோல் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தண்டனையை மூன்று வருடங்களாக குறைத்தார்.
எட்மண்டுக்கு முன்பே 1836ல் பெல்ஜியம் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் பேராசிரியர் சார்லஸ் மோரியன்8 மற்றும் 1837 ல் பிரெஞ்ச் தோட்டக்கலையாளர் ஜோசஃப் ஹென்ரி நியூமேன்9 ஆகியோர், செயற்கையாக வெனிலா மலர்களை மகரந்த சேர்க்கை செய்யும் முறையை கண்டுபிடித்திருந்தனர், எனினும் மிக கடினமான, அதிக நேரம் பிடித்த அந்த முறைகள் வணிக ரீதியாக வெனிலாவை பயிரிடுவதற்கு உதவியாக இல்லாததால் அவை தோல்வியுற்றன. எட்மண்டின் இந்த எளிய முறைதான் விரைவாக அக்கொடிகளை பயிர்செய்து காய்களை பெற உதவியது.
தனது எஜமானர் ஃபெரோல், வெனிலா ஏற்றுமதி வணிகத்தில் கோடீஸ்வரரானதற்கும், கோடிகளில் புழங்கும் வெனிலா தொழிலுக்கும் காரணமாயிருந்த,எட்மண்ட் வறுமையில் வாடி தனது 51 வது வயதில், 1880 ல் இறந்த போது நாளிதழ்களில் ஒரு சிறு செய்தி மட்டுமே வந்தது. அவர் இறந்து நூறு வருடங்களுக்கு பின்னரே எட்மண்ட் பிறந்த ஊரில் வெனிலா மலர்கொடியின் ஒரு சிறு கிளையை கைகளில் வைத்திருக்கும் ஒரு சிலை அவருக்கு வைக்கப்பட்டது. அவர் பெயரில் ஒரு தெருவும் ஒரு பள்ளியும் கூட அங்கிருக்கின்றன.10
எட்மண்டின் கண்டுபிடிப்பு அங்கிருந்து சிஷெல்ஸ், மொரிஷியஸ், மற்றும் மடகாஸ்கர் தீவுகளுக்கும் பரவியது. 1880களில் ரியூனியனை சேர்ந்த வெனிலா பண்ணையாளர்கள் மடகாஸ்கரில் வெனிலாவை அறிமுகப்படுத்தினர். மிக சாதகமான தட்ப வெப்ப நிலை அங்கு நிலவியதால் அன்றிலிருந்து இன்று வரை மிக அதிக அளவில் வெனிலா உற்பத்தி மடகாஸ்கரில் தான் நடக்கின்றது.
வெனிலாவின் வேர்களை வரலாற்றில் தேடிச் சென்றால் மிக சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.
வெனிலாவின் வரலாறு மெக்ஸிகோவின் வளைகுடாப் பகுதியில் உள்ள மஸாண்ட்லா பள்ளத்தாக்கில் வாழ்ந்த டோடோனாக் பழங்குடிகளிலிருந்து துவங்குகின்றது. வெராக்ரூஸ் மாநிலத்தின் வடக்கிலும், பாபன்ட்லா நகரத்திலும் மெக்ஸிகோ வளைகுடாவின் கரையோரப் பகுதிகளையும் ஆக்கிரமித்திருந்த டோடோனாக்குகள், இயற்கையாக அங்கு விளைந்த வெனிலா கொடியின் காய்களை பயன்படுத்தி வந்தனர். அங்கு மட்டுமே வாழும் ஒரு வகையான வண்டுகள் மலர்களில் மகரந்தச் சேர்க்கை செய்ததால் வெனிலாக்காய்கள் அக்கொடிகளில் விளைந்தன. காய்கள் முற்றி கருப்பான பின்பு அவற்றை பானங்களில் பொடித்த கோக்கொ விதையுடன் சேர்த்து அருந்திய அப்பழங்குடியினர் காய்ந்த பின்னர் கருப்பு நிறத்திலிருந்த அந்த காய்களை கருப்பு மலர் என்னும் பொருளில் “tlilxochitl” என்றழைத்து அவற்றையே நாணயமாகவும் புழங்கினர். அரச குடியினருக்கும், அறிவாளிகளுக்கும், வீரர்களுக்குமான பானங்களில் அக்காய்களின் சாறு சேர்க்கப்பட்டது.
டோடோனாக் தொன்மமொன்று, டோடொனாக் அரசர் மூன்றாம் டெனிஸிடியின் மகளும் இளவரசியுமான ’ச்கோபோன்சிஸா’ ஒரு சாதாரண இளைஞன் மீது காதல்வயப்பட்டு அவனுடன் ஒரு நாள் அரண்மனையை விட்டு சென்றுவிட. காதலர்ளை திரும்ப அழைத்து வந்து அரசகுடியினர் தலைகொய்து கொன்ற இடத்தின் உலர்ந்த ரத்தத்திலிருந்து உயர வளர்ந்த ஒரு கொடி சில நாட்களில் நல்ல நறுமணம் வீசும் மலர்களை உருவாக்கியதாகவும் அதுவே வெனிலா என்றும் சொல்கிறது.
கொல்லப்பட்ட இளம் காதலர்களின் தூய ஆத்மாவே வெனிலாவின் நறுமணமாகிவிட்டதென்றும் அவர்கள் நம்புகிறார்கள். இன்றும் டொடோனாக்குகள் வெனிலா மலர்களை Caxixanath அதாவது மறைந்திருக்கும் மலர்கள் என்றே அழைக்கிறார்கள்.
அஸ்டெக்குகள் (Aztecs) பதினைந்தாம் நூற்றாண்டில் டோடோனாக்குகளுடன் போர்புரிய மெக்ஸிகோவின் மத்திய சமவெளிகளிலிருந்து ஊடுருவினர்,டொட்டோனாக் நிலத்தையும் மக்களையும் கைப்பற்றிய அஸ்டெக் பேரரசர் இட்ஸ்காட்ல் (1427-1440) கப்பமாக கிடைத்த பதப்படுத்திய வெனிலா காய்களையும் அவற்றின் சாறு கலந்த பானங்களையும் அருந்தி, அக்கொடிகளின் வளர்ப்பு முறை, காய்களை பதப்படுத்தும் முறை, ஆகியவற்றை அறிந்து கொண்டார், பின்னர் அவரது காலத்தில் “xocolatl.” என்னும் பெயரில் வெனிலா சாறுடன், கொக்கோ தூள் கலக்கப்பட்டு, உணவாகவும் பானமாகவும் பெருமளவில் உபயோகிக்கப்பட்டது.
1520ல் மெக்ஸிகோவை கைப்பற்றிய ஸ்பானிய போர்வீரரான ’ஹெர்னன் கோர்டிஸ்’ அஸ்டெக் அரசில் கால்பதித்தார். அழகிய மஞ்சள் நிற மலர்களை கொடுக்கும், அப்போது வெனிலா என்று பெயரிடப்பட்டிருக்காத அக்கொடியின் காய்களிலிருந்து சுவையான பானமொன்றை அருந்தி வந்த அஸ்டெக்குகள் கோர்டிஸை வரவேற்று அவருக்கு தங்ககிண்ணத்தில் ’xocolatl’ என்னும், வெனிலாச்சாறும், மக்காச்சோள மாவும், தேனும், கோக்கோ தூளும் கலந்த பானத்தை அளித்தனர். அந்த பானத்தின் சுவையில் மயங்கிய கோர்டிஸ், ஆஸ்டெக் மன்னரிடம் வெனிலா பானத்தின் ரகசியத்தை கேட்டறிந்தார். 11
நாடு திரும்புகையில் விலையுயர்ந்த அருமணிகள், தங்கக்கட்டிகளுடன் வெனிலா காய்களையும், கோக்கோ விதைகளையும் கோர்டிஸ் கொண்டு வந்தார், ஸ்பெயின் மக்கள் அக்காய்களுக்கு ஸ்பானிய மொழியில் வய்னா, (vaina) ‘’சிறு நெற்று’’ என்று பொருள் படும் ’வெனிலா’ என்று பெயரிட்டனர்.
80 வருடங்களுக்கு சாக்லேட்டில் கலந்து அருந்தும் பானமாகவே புழக்கத்தில் இருந்த வெனிலாவை கொண்டு இனிப்பூட்டப்பட்ட இறைச்சி உணவுகளுக்கு வாசனையூட்டலாமென்பதை 1602ல் முதலாம் எலிசபெத் மகாராணியின் தனி மருத்துவர் ஹ்யூ மோர்கன் கண்டறிந்தார்.
ஆனால் மெக்சிகோவுக்கு வெளியே வெனிலா கொடிகளை வளர்க்க முடிந்தாலும் அவற்றில் மகரந்த சேர்க்கை நடத்தும் கொடுக்குகளற்ற மெலிபோனா தேனீக்கள்12 மெக்ஸிகோவில் மட்டுமே இருந்ததாலும், தன்மகரந்த சேர்க்கை நடக்க வழி இல்லாத வகையில் அமைந்துள்ள மலர்களுடன் அக்கொடி பல நூற்றாண்டுகளுக்கு, பலரின் முயற்சிகளுக்கு பலனளிக்காமல் மலடாகவே இருந்தது. மெலிபோனா தேனீக்களை மெக்ஸிகோவிற்கு வெளியே வளர்க்க செய்யப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது.
தொடர்ந்த இரு நூற்றாண்டுகளுக்கு மெக்ஸிகோவே வெனிலா பயிரிடுவதில் ஏகபோக உரிமையுடன் இருந்தது. அங்கிருந்து உலகின் பல நாடுகளுக்கு தருவிக்கப்பட்ட வெனிலாவின் சுவை பலரின் விருப்பமாகிவிட்டிருந்தது.
வெனிலா சுவையின் மீது காதல் கொண்ட ஐரோப்பியர்கள் 1800களில் ஏராளமான வெனிலாக்காய்களை உயர்குடி விருந்துகளுக்கென பெரும் பொருட்செலவில் மெக்ஸிகோவிலிருந்து தருவித்தார்கள். எட்மண்ட்டின் மகரந்த சேர்க்கை முறைக்கு பின்னர் உலகின் பிற பாகங்களுக்கும் வெனிலாவின் நறுமணம் வேகமாக பரவியது.
ஐஸ்கிரீமில் வெனிலா சுவையை 1780 களில் அறிமுகபடுத்தியவராக ’தாமஸ் ஜெஃபெர்ஸன்’ அறியப்படுகிறார். அவர் பாரிஸில், அமெரிக்க தூதுவராக இருந்தபோது. அறிந்துகொண்ட வெனிலா சுவையூட்டும் ஒரு செய்முறையை நகலெடுத்து, நாடு திரும்புகையில் கொண்டு வந்திருந்தார், அதைக்கொண்டே அமெரிக்காவில் வெனிலா சுவையுடன் ஐஸ்கிரீம்கள் உருவாக துவங்கின. இப்போதும் அந்த செய்முறை நகல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகிறது.
வெனிலாவின் புகழ் உலகெங்கிலும் பரவி, கிட்டத்தட்ட ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒரு மசாலாப்பொருளாக, வாசனை திரவியமாக, ஒரு சக்திவாய்ந்த பாலுணர்வு ஊக்கியாக (Aphrodisiac) வெனிலா அப்போது பயன்படுத்தப்பட்டது,
பிரான்சில் திருமணத்தன்று இரவு மணமகன்கள் வெனிலா நறுமண மூட்டப்பட்ட பானங்களை அருந்துவது வழக்கத்தில் இருந்தது. 15 ஆம் லூயிஸின் மாலைகள் சாக்லேட் கலந்த வெனிலா பானங்களால் அழகானது. அவரின் காதலி, லூயிஸின் வெனிலா பிரியத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்.
ஆண்மைக் குறைபாட்டிற்கான மருந்தாக வெனிலா அப்போது மிக அதிகமாக பரிந்துரைக்கப்பட்டது. 1762 ல் ’’அனுபவங்களிலிருந்து’’ என்னும் தனது நூலில் ஜெர்மானிய மருத்துவர் பிஸர் ஜிம்மர்மேன் 13 ஆண்மை குறைபாடு உள்ள 342 நபர்களுக்கு வெனிலா அருந்த கொடுத்து அவர்கள் பல பெண்களின் மனங்கவர்ந்த காதலர்கள் ஆனதை குறிப்பிட்டிருக்கிறார்.
600 மூலிகைகள் குறித்து விளக்கும் 1859 ல் வெளியான அமெரிக்கன் டிஸ்பென்சேட்டரியில் அதன் ஆசிரியரான Dr. ஜான் கிங் ’’ நறுமணமுள்ள, மூளையை தூண்டுகின்ற, துக்கத்தை விலக்கி தசை செயல்பாட்டை அதிகரித்து, பாலுணர்வு ஊக்கியாகவும் செயல்புரியும்’’ என வெனிலாவை குறிப்பிடுகிறார். 14
19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அதிக விலைகொடுத்து வெனிலாவை வாங்கி அருந்த முடியாத பல காதலர்கள்,காதுகளுக்கு பின்னும், மணிக்கட்டிலும் வெனிலா சாறை கொஞ்சமாக தடவிக்கொண்டு காதலிகளை சந்திக்க சென்றார்கள்.
வெனிலாவை குறித்த முதல் குறிப்பும், சித்திரமும் 1552 ல் நவாட்டி மொழியில் ’மார்டின் டெ லா க்ரூஸி’ னால் எழுதப்பட்டு ’ஜுவான் படியானோ’வால் லத்தீனில் மொழிபெயர்க்கப்பட்டது ஆர்க்கிடுகளை பற்றிய முதல் பிரசுரமும் இதுதான். ஆங்கிலத்தில் வெனிலா முதலில் குறிப்பிடப்பட்டது 1764 ல் தாவரவியலாளர் ’பிலிப் மில்லர்’ ‘’தோட்டக்கலை அகராதி’’யில் இப்பயிரை குறிப்பிட்ட போதுதான். 15,16
எட்மண்ட் 1841ல் அந்தமகரந்த சேர்க்கையை கைகளால் செய்து காண்பித்த போது மெக்ஸிகோவில் மட்டுமே வருடத்துக்கு 2000க்கும் குறைவாக வெனிலா காய்கள் காத்துக்கொண்டிருந்தது. இப்போது மெக்சிகோ உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து வருடத்துக்கு ஐந்து மில்லியன் வெனிலா காய்கள் கிடைக்கின்றன.
பூக்கும் தாவர குடும்பங்களில் சூரிய காந்தி குடும்பத்துக்கு (Asteraceae) அடுத்து இரண்டாவது பெரிய குடும்பமான அலங்கார மலர் செடிகளுக்கு புகழ்பெற்ற, 763 பேரினங்களும் 28,000 சிற்றினக்களும் கொண்ட ஆர்க்கிடேசி குடும்பத்தை (Orchidaceae) சேர்ந்தது தான் இந்த வெனிலாவும். இந்த பெரிய தாவர குடும்பத்தில் உண்ணத்தகுந்த காய்களை கொடுப்பது வெனிலா மட்டும்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது.
உலகின் பல நாடுகளில் தற்போது பயிரிடப்படுவது வெனிலாவின் மூன்று சிற்றினங்கள் தான். மடகாஸ்கர் மற்றும் இந்தியபெருங்கடல் தீவுகளில் பயிராகும் வெனிலா ப்ளேனிஃபோலியா/இணைப்பெயர் வெனிலா ஃப்ரேக்ரன்ஸ் (Vanilla. planifolia -syn. V. fragrans), தென் பசிபிக் பகுதிகளில் பயிராகும் வெனிலா தஹிடியென்சிஸ், (Vanilla. tahitensis), வெஸ்ட் இண்டீஸ், மத்திய, மற்றும் தென் அமெரிக்காவில் பயிராகும் வெனிலா பொம்பானா (Vanilla pompona)
உலகின் பெரும்பாலான பிராந்தியங்களில் பயிராவது வெனிலா ப்ளேனிஃபோலியா வகைதான் இது ரியூனியன் தீவின் முந்தைய பெயருடன் இணைத்து பர்பான் வெனிலா என்றும் மடகாஸ்கர் வெனிலா என்றும் அழைக்கப்படுகிறது. மடகாஸ்கர் வெனிலாக்களே பிற அனைத்து வகைகளையும் விட தரமானவையாக கருதப்படுகின்றன.
ஆண்டு முழுவதும் பூத்துக் காய்க்கும் கொடியான இவை காம்புகளற்ற இலைகளையும், சதைப்பற்றான பச்சை தண்டுகளையும் கொண்டிருக்கும். தண்டுகளின் கணுக்களில் பற்று வேர்கள் இருக்கும். கொடியாக வளரும் இவை பற்றி படர்ந்து ஏறும் மரங்களுக்கு ட்யூட்டர் என்று பெயர். (tutor).நட்டு வைத்த மூன்றாவது வருடத்தில் இருந்து மலர்கள் உருவாகும் எனினும் ஏழாவது வருடத்திலிருந்தே அதிக மலர்கள் உருவாக தொடங்கும். மேலே ஏறிச்செல்லும் கொடியை, ஒரு ஆள் உயரத்துக்கு மடக்கி இறக்கி படர விடுவதாலும் மலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
35 மீட்டர் நீளம் வரை படர்ந்து வளரும் இக்கொடியில் ஒற்றை மலர்க்கொத்தில் 80 லிருந்து 100 வரை பெரிய அழகிய வெள்ளை மற்றும் பச்சை கலந்த நிறத்தில் மெழுகுபூசியது போன்றிருக்கும் இதழ்களுடன் மலர்கள் நல்ல நறுமணத்துடன் இருக்கும். மலர்ந்த 6 முதல் 9 மாதங்களில் காய்கள் உருவாகி அவை பச்சை நிறத்திலிருந்து இளமஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் அறுவடை செய்யப்படும்.
மலர்ந்த ஒரே நாளில் வெனிலா மலர்கள் வாடிவிடுமென்பதால் காலை 6 மணியிலிருந்து மதியம் 12 மணிக்குள் ஒவ்வொரு மலரிலும் கைகளால் மகரந்த சேர்க்கை செய்யப்படவேண்டும். எனவேதான் வெனிலா பயிரிடுவது கடும் மனித உழைப்பு தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது.
பிற ஆர்க்கிட் செடிகளின் விதைகளை போலவே வெனிலாவின் விதைகளும் அதன் வேரிலிருக்கும் பூஞ்சையில்லாமல் முளைக்காது எனவே வெனிலாக்கொடியின் தண்டு்களை வெட்டியே அவை பயிராக்கப்படுகின்றன.
ஒரு ஆரோக்கியமான கொடி வருடத்திற்கு 50 முதல் 100 காய்கள் வரை உற்பத்தி செய்கிறது; அறுவடைக்கு பிறகு அக்கொடி மீண்டும் 12 முதல் 14 ஆண்டுகளுக்கு உற்பத்தித்திறன் உள்ளதாக இருக்கிறது.
வெனிலாவின் வர்த்தக மதிப்பு காய்களின் நீளத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. 15 செ மீ நீளத்திற்கும் அதிகமாக இருந்தால் இது முதல்தர வகையிலும், 10 முதல் 15 செ மீ நீளமாக இருந்தால் இரண்டாவது தரமாகவும் 10 செ மீ க்கும் குறைவானவை மூன்றாவது தரமாகவும் கருதப்படுகின்றன. அறுவடை செய்யப்பட்ட பச்சைக்காய்கள் அப்படியே விற்கப்படலாம் அல்லது சிறந்த சந்தை விலையை பெறுவதற்கு உலர வைக்கப்படலாம். வெனிலா பச்சைக்காய்களின் விலை கிலோ ரூ 300-4000. பதப்படுத்தப்பட்டால், கிலோ ரூ 2200- 30,000 .
வெனிலாவை உலரவைப்பதற்கு ,காய்களை கொதிநீரிலிட்டு விதைகளின் பச்சையத்தை அழித்தல், வியர்ப்பூட்டுதல், மெதுவாக-உலரவைத்தல் மற்றும் தகுந்தமுறையில் பாதுகாத்தல் என நான்கு அடிப்படை நிலைகள் இருக்கின்றன: இவ்வாறு பதப்படுத்தப்பட்ட காய்கள் சேமிக்கப்பட்டு, தரப்படுத்தப்பட்டு, பாரஃபின் உறையில் கட்டாக சுற்றி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. ஒரு பவுண்டு பதப்படுத்தப்பட்ட வெனிலா காய் களை பெற ஐந்திலிருந்து ஆறு பவுண்டுகள் பச்சை வெனிலாக்காய்கள் தேவைப்படும் பதப்படுத்தப்பட்ட வெனிலாகாய்கள் சராசரியாக 2.5% வெனிலினைக் கொண்டிருக்கிறது.
கைகளால் மகரந்த சேர்க்கை செய்யப்பட வேண்டி இருப்பதால் மிக அதிக மனித உழைப்பு தேவைப்படும் பயிர்செய்கையான இதில் மற்றுமொரு சிக்கல், கால்சியம் ஆக்ஸலேட் குருணைகள் நிறைந்திருக்கும் வெனிலா தண்டின் சாறு, உடலில் பட்டால் உண்டாகும் சரும அழற்சி தான். வெனிலா தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த சரும அழற்சியும் பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகிறது.
வெனிலாவின் சாறில் உள்ள வெனிலின் (4-ஹைட்ராக்ஸி-3-மெத்தாக்ஸி பென்ஸால்டிஹைட்) இதன் வாசனைப்பண்பு மற்றும் நறுமணத்திற்கு காரணமாகிறது. மற்றொரு சிறிய துணைப்பொருளான பைபரானல் (ஹெலியோடிராபின்). உள்ளிட்ட பலஉட்பொருட்கள் வெனிலாவின் வாசனைக்கு காரணமாகின்றன. வெனிலின் முதல்முறையாக 1858 ஆம் ஆண்டு கோப்லே என்பவரால் பிரித்தெடுக்கப்பட்டது.
வெனிலாவின் சாரம் (Essence) இரண்டு வடிவங்களில் கிடைக்கின்றது. வெனிலா விதைகளிலிருந்து கிடைக்கும் இயற்கை சாரம் மற்றும் போலி அல்லது செயற்கை வெனிலா சாரம். இயற்கை சாரத்தில் வெனிலின் உள்ளிட்ட பல நூறு வேதிச்செர்மானங்கள் அடங்கி இருக்கும். (vanillin, acetaldehyde, acetic acid, furfural, hexanoic acid, 4-hydroxybenzaldehyde, eugenol, methyl cinnamate, and isobutyric acid.) செயற்கை வெனிலா சாரத்தில் செயற்கை வெனிலின் எத்தனால் கரைசலில் கலந்திருக்கும்..
1874, ல் வெனிலினை போலவேயான மற்றொரு சாரம் பைன் மரப்பட்டை சாற்றிலிருந்து பிரித்தெடுக்கபட்டபோது, வெனிலினின் வர்த்தகத்தில் தற்காலிகமாக ஒரு பெரிய சரிவு ஏற்பட்டது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் ஆய்வகங்களில் கிராம்பின் யூஜீனாலிலிருந்தும், மரக்கூழ் மற்றும் மாட்டுசாணத்தில் இருக்கும் லிக்னின் ஆகியவற்றிலிருந்தும் செயற்கை வெனிலின் தயாரிக்க முடியுமென்பது கண்டறியப்பட்டது. பிரேசிலின் தெற்குப்பகுதில் இயற்கை வெனிலினுக்கு மாற்றாக Leptotes bicolor என்னும் தாவரத்திலிருந்து வெனிலினை போலவேயான சாரம் பிரிதெடுக்கப்பட்டு புழக்கத்திலிருக்கிறது.
வெனிலாவின் சாரம் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் மற்றும் வெனிலின் ஆகியவை தற்போது நறுமண சிகிச்சையிலும் (Aroma therapy) பயன்படுத்தப்படுகின்றன
கடந்த நூறு வருடங்களில் வெனிலா உலகின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படுகின்றது. வெனிலா பயிரிடுவதில் மடகாஸ்கரும் இந்தோனேஷியாவும் முன்னிலையில் இருக்கின்றன. மடகாஸ்கரில் சுமார் 80,000 விவசாயிகளின் வாழ்வாதாரமாக வெனிலாவே உள்லது. உலகின் மொத்த வெனிலா உற்பத்தியில் 60 சதவீதம் மடகாஸ்கரில் விளைகின்றது.
வெனிலா வணிகத்தில் புதிதாக உகாண்டா, இந்தியா, பப்புவா நியூ கினி, டோங்கா தீவுகள் ஆகியவையும் நுழைந்திருக்கின்றன என்றாலும் இவை இந்த வணிகத்தில் நிலைபெற இன்னும் பல ஆண்டுகளாகும். சீனாவும் யுனானில் வெனிலாவை பயிரிட்டு இருக்கிறது.
1990களிலிருந்து இந்தியாவில் சுமார் 24,000 ஹெக்டேர் நிலப்பரப்பில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெனிலா சாகுபடி செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஏற்ற பிரத்யேக நறுமணத்தையம் கொண்டிருப்பதால் வெனிலாவில் பலநூறு வகைகள் சந்தையில் கிடைக்கின்றன.
உலகின் மிக பிரபலமான வாசனை பொருளாகவும், விலை உயர்ந்த வாசனை பொருட்களில் குங்குமப்பூவுக்கு அடுத்த படியாகவும் இருக்கும் வெனிலா, கோகோ கோலா, பெப்ஸி, ஐஸ் கிரீம், பிஸ்கட், சாக்கலேட்டுகள் உள்ளிட்ட சுமார் 18,000 பொருட்களில் சேர்க்கப்படுகிறது. உலகிலேயே மிக அதிக வெனிலா உபயோகிப்பது கோகோ கோலா தான். அதிகம் வெனிலாவை விரும்பி உபயோகிக்கும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் தொடர்ந்து ஐரோப்பாவும் இருக்கின்றன.
வெனிலா பயிரிடும் பல நாடுகளில் சுற்றுலாப்பயணிகளுக்கு வெனிலா பயிரிடுதல், மலர்களை கைகளால் மகரந்த சேர்க்கை செய்தல், காய்களை அறுவடை செய்தல் மற்றும் பதப்படுத்துதல் ஆகிவற்றிற்கான நேரடி பயிற்சிகளும் ஏராளமான் வெனிலா சுவையுள்ள உணவுகளை சுவைக்கவுமான சிறப்பு சுற்றுலாக்கள் இருக்கின்றன. இவற்றில் மிக பிரபலமானதும் புகழ்பெற்றதும் கோஸ்டா ரிக்காவின் ’’வில்லா வெனிலா’’ சுற்றுலாக்களே.
அசல் வெனிலினின் விலையை விட செயற்கை வெனிலின் இருபது மடங்கு விலை குறைவென்பதால் நாம் வெனிலா சுவையென்று அருந்துவதும், உண்ணுவதும், நுகர்ந்து மகிழ்வதுமெல்லாம் 98 சதவீதம் போலிகளைத்தான். நமக்கு அசல் , இயற்கை வெனிலா கிடைப்பதற்கு வெறும் 1 சதவீதமே சாத்தியமிருக்கிறது..
வெனிலா பயிரிடுவதை விடவும் எளிதாக லாபம் கிடைக்குமென்பதால் மடகாஸ்கர் விவசாயிகள் ஆரஞ்சுதோட்டங்களுக்கும், எண்ணெய் வயல்களுக்கும் கவனத்தை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள்
உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானிகள் ஏற்கனவே செயற்கை வெனிலினை ஈஸ்டுகளின் உதவியால் பெறுவதையும் சாத்தியமாக்கி இருக்கிறார்கள்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து வெனிலின் தயாரிப்பதை தற்போது கண்டறிந்திருக்கிறார்கள். இனி மெல்ல மெல்ல இயற்கை வெனிலா மறக்கப்படவும் கூடும்.
ஃபெரோல் எத்தனை முயற்சித்தும் எட்மண்டுக்கு அரசிடமிருந்து எந்த பண உதவியும் இந்த மாபெரும் கண்டுபிடிப்புக்காக பெற்றுத்தர முடியவில்லை. எந்த பலனும் கிடைக்காமல் மறைந்துவிட்ட எட்மண்ட் ஆல்பியஸுக்கு நம்மில் பலரின் விருப்பமான வெனிலா நறுமணத்தை , சுவையை இனி எப்போது அனுபவித்தாலும் ஒரு நன்றியையாவது மனதுக்குள் சொல்லிக்கொள்ளலாம்.
- https://en.wikipedia.org/wiki/R%C3%A9union
- Ferréol Beaumont Bellier
- https://en.wikipedia.org/wiki/Rostellum
- https://en.wikipedia.org/wiki/Sainte-Suzanne,_R%C3%A9union
- https://en.wikipedia.org/wiki/Vanilla
- https://en.wikipedia.org/wiki/Edmond_Albius
- https://en.wikipedia.org/wiki/Jean_Michel_Claude_Richard
- https://en.wikipedia.org/wiki/Charles_Fran%C3%A7ois_Antoine_Morren
- https://es.wikipedia.org/wiki/Joseph_Henri_François_Neumann
- https://www.blackpast.org/african-american-history/edmond-albius-1829-1880/
- https://www.nationalgeographic.com/culture/article/plain-vanilla
- https://en.wikipedia.org/wiki/Melipona
- Bezaar Zimmermann, a German physician,
- https://en.wikipedia.org/wiki/King’s_American_Dispensatory
- Written in Nahuatl by Martín de la Cruz Martin de la Cruz -an, Indian who was baptised with this Christian name and translated to Latin by Juan Badiano in 1552.
- https://en.wikipedia.org/wiki/The_Gardeners_Dictionary
காணொளிகள்
- Why is Vanilla so expensive? https://www.youtube.com/watch?v=oguPMXcrOVY
- Meet those getting rich off vanilla in Madagascar- https://www.youtube.com/watch?v=OrAmGJv7kbw
- Vanilla & Vanillin, a long-standing story- https://www.youtube.com/watch?v=MXXRS2QEvBk
- The Enslaved Twelve Year Old Who Gave Us Our Love for Desserts – https://www.youtube.com/watch?v=H3LOPLGNcBc
சமீபத்திய செய்திகள்;
1. https://www.moneycontrol.com/news/environment/vanillin-uk-scientists-convert-plastic-waste-into-vanilla-flavours-7063791.html
2. https://slate.com/technology/2014/09/no-one-should-be-afraid-of-synthetic-biology-produced-vanilla.html