திராட்சை, அத்தி மற்றும் மாதுளை ஆகிய மூன்றும் தான் மனிதனால் பயிரிடப்பட்ட முதல் மூன்று கனி வகைகள்  என கருதப்படுகிறது. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே நம் மூதாதையர்கள் உணவில் மாதுளை இருந்திருக்கிறது.

Punica granatum என்னும் அறிவியல் பெயர் கொண்ட மாதுளை ஆங்கிலத்தில் pomegranate எனப்படுகிறது. ஈரானுக்கு சொந்தமான இந்த தாவரம் 16/17ஆம் நூற்றாண்டில்  அரேபியா, இந்தியா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு அறிமுகமாகி சாகுபடி செய்யப்பட்டது. மருதாணியின் குடும்பமான லித்ரேசியை சேர்ந்த சிறு மர இனமான இது 5 லிருந்து 10 மீட்டர் உயரம் வரை வளரும்.மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் இருக்கின்றன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மாதுளைகள் சாகுபடி செய்யப் பட்டிருக்கலாம் என்று அகழாய்வு கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன.

Pomegranate என்னும் இதன் ஆங்கில பெயர் லத்தீன மொழியில்  ஆப்பிளை குறிக்கும் pōmum என்னும் சொல்லையும்  விதைகள் கொண்ட என்று பொருள் தரும்  grānātum  என்னும் சொல்லையும் இணைத்து பல விதைகள் கொண்டிருக்கும் ஆப்பிள் என்னும் பொருளில் வைக்கப்பட்டது. மாதுளை பல ஆண்டுகள் வாழும் தாவரம்.. ஃப்ரான்ஸில் 200 ஆண்டுகளையும் கடந்து வாழும் மாதுளை செடிகள் உண்டு.மாதுளைக்கு தமிழில் தாடிமம், பீசபுரம், மாதுளங்கம், மாதுளம் , கழுமுள்   எனவும் பெயர்களுண்டு.

 ஏராளமான கிளைகளைக் கொண்டிருக்கும் இத்தாவரத்தின் பளபளப்பான இலைகள் எதிரடுக்கில் அமைந்திருக்கும் . 3 லிருந்து 7 இதழ்களை கொண்டிருக்கும் அடர் ஆரஞ்சு நிற  அழகிய மலர்களுக்காகவே உருவாக்கப்பட்ட கனிகளை உருவாக்காத மலர் மாதுளைச் செடிகளும் உண்டு.

கடினமான கனியின் வெளி ஓட்டினுள் வெண்ணிற தோல் போன்ற உறையால் உருவாக்கப்பட்ட சமச்சீரற்ற அறைகளில் விதைகள் நிறைந்திருக்கும்.  ஒவ்வொரு விதையையும் சுற்றியிருக்கும் அடர் சிவப்பு நிற சதைப்பற்றான உரை சார்கோடெஸ்டா எனப்படும். (sarcotestas),ஒரு மாதுளம் கனியில் 400 லிருந்து 1500 விதைகள் வரை இருக்கும்.

அழகுக்காக தொட்டிகளிலும் பூங்காக்களிலும் வளர்க்கப்படும் நானா மாதுளை ரகம் உலகெங்கிலும் பிரசித்தி பெற்றது. (P. granatum var. nana). இந்த வகையில் இருந்து தான் மாதுளையின்  போன்ஸாய் மரங்களும் செய்யப்படுகிறது

யேமனில் மட்டுமே விளையும் சொசொட்ரான் மாதுளை (Punica protopunica) மிகச்சிறிய கனிகளையும் இளஞ்சிவப்பு மலர்களையும் கொண்டிருக்கும். நாக்கை புண்ணாக்கும் அளவிற்கு மிக புளிப்பான சாறும்,  கசக்கும் விதைகளையும் கொண்ட இக்கனியின் உள்ளிருக்கும் வெண்ணிற சதைப்பற்றான உறை மட்டுமே இங்கு உண்ணப்படுகிறது. இதன் பிற பாகங்கள் கால்நடை தீவனமாக பயன்படுகிறது.  பச்சைக் காய்களின் தோலை சிறிது நீரில் கசக்கி அந்த புளிப்பு நீரை பாலை தயிராக்க பயன்படுத்துகிறார்கள்.

எகிப்தின் 18 ஆவது அரச வம்சத்தை சேர்ந்த  1478 BC  ல் ஆட்சி புரிந்த அரசி    (Hatshepsut) ஹாட்ஷெஸ்ப்சுட்டின் மம்மி வைக்கப்பட்டிருந்த பிரமிடில் உலர்ந்த பெரிய மாதுளங்கனி இருந்தது. பண்டைய எகிப்தில் மாதுளை வளமையின் குறியீடாக கருதப்பட்டது.ஒவ்வொரு நாளும் குளியலுக்கு முன்னர் உண்ணும் ஒரு மாதுளை உங்கள் இளமையை தக்க வைக்கும் என்றொரு முதுமொழி உண்டு எகிப்தில்

கிபி 14 ஆம் நூற்றாண்டில் துருக்கியில் கப்பல் விபத்தொன்று நிகழ்ந்தது. அதன் உடைந்த பாகங்கள் ஆழ்கடல் நீச்சல் வீரர் ஒருவரால் 1982ல் கண்டறியப்பட்ட போது/ அக்கப்பலின் பல அறைகளில் இருந்த  யானைதந்தங்கள், நீர்யானையின் பற்கள், அருமணிகள் உள்ளிட்ட பலவேறு விலையுயர்ந்த பொருட்களுடன் பல சீசாக்களில் முழு மாதுளைகளும்  இருந்தன.

கறுப்பு மாதுளை

பண்டைய கிரேக்கத்தில் மாதுளைகள் வைனின் கடவுளான டையோனிசிஸின் (Dionysus)   குருதியிலிருந்து உருவானவை என்று நம்பப்பட்டது. அங்கு இது வளமை மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்பட்டது. புதிய வீடுகளுக்கு வருகை தரும் விருந்தினர்கள் அவசியம் முதல் பரிசாக மாதுளைகளையே அளிக்கும் வழக்கமும் இருந்து.பல பண்டைய நாகரிகங்களின் நாணயங்களிலும் மாதுளங்கனி சித்தரிக்கப்பட்டிருக்கிறது

பல பண்டைய நாகரீங்களில் மாதுளையைபோன்ற அணிகலன்கள் இருந்தன. வைரக்கற்கள் பதிக்கபட்ட கழுத்தணிகளும் காதணிகளும் அரசகுடும்பத்தினரின் பிரியத்துக்குரியவையாக இருந்திருக்கின்றன. அவற்றில் பல அகழ்வாய்வில் கிடைத்திருக்கின்றன.

யூதர்களில் ஒரு சாரார் ஏதேன் தோட்டத்தின் விலக்கப்பட்ட கனி ஆப்பிள் அல்ல மாதுளை தான்  என்று கருதுகிறார்கள்

பல ஐரோப்பிய தேவாலயங்களிலும் ஏசுவின் ஓவியங்களிலும் சிலைகளிலும் மாதுளையின் வடிவம் இடம்பெற்றிருக்கும். தேவாலயங்களின் திரைச்சீலைகளிலும் தையல்வேலைகளில் மாதுளைகளை காணமுடியும் லியானர்டோ டாவின்சியின் ஓவியங்களில் கன்னிமேரியும் குழந்தை ஏசுவும் கைகளில் மாதுளையை வைத்திருப்பார்கள்.  சில தேவாலயங்களின் இறப்பு சடங்குகளில் மாதுளை கலந்த உணவுகள்  பிரத்யேகமாக தயாரிக்கப்படுவதுண்டு.விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ‘’நாம் அதிகாலையில் தோட்டத்துக்கு சென்று மலர்ந்திருக்கும் மாதுளைகளை காணலாம் ‘’ என்னும் வரி இருக்கிறது.பாதிரிகளின் உடைகளில் மாதுளையின் உருவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் 

மூன்று முறை குரானிலும் இக்கனி குறிப்பிடப்பட்டிருக்கிறது கடவுளுக்கு விசுவாசமயிருப்பவர்களுக்கான கனியான மாதுளையின் ஏதோ ஒரு விதை நேரடியாக சொர்க்கத்திலிருந்து வந்திருக்கும் என்கிறது இஸ்லாம்.

ஆர்மீனிய மணப்பெண் மாதுளையுடன்

ஆர்மீனியர்களின் கலாச்சாரத்திலும் மாதுளை மிக நெருங்கிய தொடர்புடையது. அங்கும் இது செல்வம், வளமை, மற்றும் குடும்ப வாழ்வின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆர்மீனிய திருமணங்களில் மணமகளுக்கு மணமகனால் தரப்படும் ஒரு மாதுளை சுவற்றில் வீசி எறியப்படும் அதிலிருந்து சிதறி விழும் முத்துக்கள் அவர்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் என கருதப்படும். ஆர்மீனியாவில் மாதுளைக்கென சிலையுண்டு.

 பலநாட்டின் கொடிகளிலும் விளையாட்டு வீரர்களின்  உடைகளிலும் மாதுளை இடம்பெற்றிருக்கும். மாதுளை திருவிழாக்களும் பல நாடுகளில் நடைபெறுகிறது

பண்டைய பெர்சியாவில் மாதுளை செடிகள் கோவில்களில் வளர்க்கப்பட்டன. பசுமைமாறாத அதன் இலைகள் அழியாமைக்கு அடையாளமாக சொல்லப்பட்டன.

ஹன் வம்ச ஆட்சிக்காலத்தில் (206 BC–220 AD) சீனாவுக்கு மாதுளை அறிமுகமானது. அப்போதிலிருந்தே சீனகலாச்சாரத்தில் மாதுளைக்கு மிக முக்கிய இடமுண்டு.இன்றும் சீன வீடுகளின் முகப்பறையில் பிளந்த மாதுளங்கனியின் சித்திரம் இருக்கும்.1195ல் சீனாவில் உருவாக்கப்பட்ட போதிதர்மரின் ஆலயமெங்கும் மாதுளைச்செடிகள் நிறைந்திருக்கின்றன. மாதுளைக்கு சீன ஆப்பிள் என்றும் பெயருண்டு

ரோமானியர்களின் கலாச்சாரத்திலும் மாதுளைக்கு முக்கிய இடமுண்டு. பண்டைய ரோமில் திருமணமான பெண்கள்,மணமானவர்கள் என்னும் அடையாளத்தை காட்டும் விதமாக மாதுளைச்செடியின் சிறு குச்சிகளை தலைப்பின்னலில் செருகிக்கொள்ளுவார்கள்.

புத்த மதம் மூன்று புனித கனிகளாக எலுமிச்சை, பீச் மற்றும் மாதுளையை குறிப்பிடுகின்றது.பிம்பிசாரரின் அரண்மனைக்கு வருகை தந்திருந்த புத்தரை காண வந்த ஏராளமானோர் அவருக்கு விலை உயர்ந்த பல பரிசுகளை அளிக்க காத்திருக்கையில் வெகு தொலைவிலிருந்து வந்திருந்த ஒரு பெண் கொடுத்த ஒற்றை மாதுளையையே புத்தர் மிகுந்த மனமகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டாராம்,  

கிமு 485–465ல்  வீரத்தின் அடையாளமாக கருதப்பட்ட மாதுளைகளை ஈட்டி நுனிகளில் செருகிக்கொண்டு பெர்ஸிய வீரர்கள் கிரேக்கத்துக்கு போரிட சென்றார்கள் 

மாதுளைச்சாயமிட்ட நூலிழைகள்

ஈரானிலும் இந்தியாவிலும் மாதுளை  சமயங்களுடன் தொடர்புடைய வளமையின் குறியீடாக கருதப்படுகிறது. ஈரானிய அசைவ சமையல்களில் மாதுளை தவறாமல் இடம்பெறும். மாதுளியின் சாறை கம்பளிகளுக்கும் பட்டுக்கும் சாயமேற்றவும் அங்கு பயன்படுத்துகிறார்கள்.ஈரானில் இறைச்சியை மிருதுவாக்க மாதுளைச்சாற்றில் ஊற வைக்கும் வழக்கம் இருக்கிறது. ஈரானில் மட்டுமே விளையும் கறுப்பு மாதுளை பல மருத்துவ பயன்பாடுகள் கொண்டிருக்கிறது.

இஸ்ரேலிய நாடோடிப்பாடல்களில் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகளில் அத்திகளும் ஆலிவ்களும் மாதுளைகளும் செறிந்திருக்கும் வீட்டுத்தோட்டத்துக்கு திரும்புவதன் ஏக்கம் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருக்கும். இஸ்ரேலிய கவிதைகளில் காதலியின் கன்னங்கள்  பிளந்த மாதுளையுடன் ஒப்பிடப்பட்டிருக்கும்

பிறப்பு, இறப்பு, இனப்பெருக்கம், பாலுணர்வு, வளமை என பலவற்றின் குறியீடாக பல நாகரீகங்களில் மாதுளை இருந்திருக்கிறது. அறுவடைக்குப் பின்னும் பல நாட்கள் சேமித்து வைத்திருக்கக் கூடிய கனியாக பயணிகளால் பெரிதும் விரும்பப்பட்ட கனியாக மாதுளை இருந்தது, குறிப்பாக பாலை மற்றும் கடல் வழி பயணிகளுக்கு.

சீன திபெத்திய மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள் மாதுளையின் கனி, கனிச்சாறு,  கனியோடு, விதை, மலர்கள், வேர் பட்டை ஆகியவை பல நோய்களுக்கு மருந்தாக அளிக்கப்படுகின்றது.

கொரிய கலாச்சாரத்திலும் சொர்க்கத்தின் கனியாக மாதுளை குறிப்பிடபடுகிறது. பண்டைய ஜெர்மனியில் மணமகள் மாதுளை சித்தரிக்கப்பட்டிருக்கும் பீங்கான் பாத்திரங்களை வரதட்சணையாக கொண்டு வரும் வழக்கம் பரவலாக இருந்து.

இயற்கையிலேயே கனியில் ஒரு சிறு கிரீடம் இருந்ததாலோ என்னவோ பல அரசர்கள் மாதுளையை கொடிகளிலும், நாணயங்களிலும் சின்னமாக அமைத்து கொண்டிருந்தனர். கிரீடம் இருந்தும் சாமான்யர்களுக்குமான கனியாகவே இருந்தது மாதுளை. 

உலகெங்கிலும் மாதுளங்கனிகள் அவற்றில் நிரம்பி இருக்கும் சத்துக்களுக்காகவும் சுவைக்காகவும் விரும்பப்படுகின்றன. பெரும்பாலும் கனிரசமாக சுவைக்கப்படும் இவை சைவ அசைவ உணவு வகைகளிலும் சேர்க்கப்படுகின்றது. இந்தியாவின் சில பிரத்யேக சந்தைகளில் மட்டும் உணவில் சேர்க்கப்படுவதற்கென இவற்றின் உலர் விதைகள் கிடைக்கின்றன 

2 மாதங்கள் வரை மாதுளையை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கலாம். மாதுளையை ஃப்ரீஸரில் சிறிதுநேரம் வைத்திருந்து பின்னர் உரித்தால் சுலபமாக விதைகளை எடுக்கலாம். மாதுளையின் ஓட்டை கரண்டியால் மெல்ல தட்டி பின்னர் உரித்தாலும் விதைகள் எளிதில் வெளிவரும்.

மாதுளங்கனியின் ரத்தச் சிவப்புக்கென்றே  balaustine  என்று தனித்த ஒரு ஆங்கிலச் சொல்லுண்டு

அறிமுகமான நாடுகளில் எல்லாம் இதன் சுவையான சாறு நிரம்பிய சதைப்பற்றான தாகம் தீர்க்கும் கனிகளுக்காக  இவை பெரிதும் விரும்பப் பட்டன.உலகின் பல நாடுகளில் இவை இப்போது சாகுபடி செய்ய பட்டாலும் தெற்கு சீனாவும் ஆஃப்கானிஸ்தானும் மிக அதிக அளவில் மாதுளைகளை பயிராக்குகின்றன.

மாதுளையின் 500க்கு மேற்பட்ட கலப்பின வகைகள் தற்போது உலகெங்கிலும் சாகுபடியாகின்றன .மிக அதிகமாக இந்தியாவில்தான் மாதுளை விளைகிறது. உலகின் இரண்டாவது மிக அதிக மாதுளை விளைவிக்கும், ஏற்றுமதி செய்யும் நாடு ஈரான் .வருடா வருடம் இங்கு   மாதுளை திருவிழா வெகு விமரிசையாக  நடைபெறுகிறது.

உலகின் மிகசிறந்த மாதுளைகள் ஆஃப்கானில் விளைகின்றன. எனவே ஆஃப்கானிஸ்தான் மாதுளையின் நாடு என அழைக்கப்படுகிறது. உலகின் பிற நாடுகளைக் காட்டிலும் மிக அதிகமான ரகங்களில் மாதுளை செடிகள் ஆஃப்கானிஸ்தானில் உள்ளது.உலக சந்தையில் ஆஃப்கான் மாதுளைகளின் தேவையும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.