
ஆலயங்களின் வடிவமைப்பு, அவை அமையவிருக்கும் நிலத்தை தேர்ந்தெடுக்கும் நியதிகள், விக்ரகங்களின் வடிவம், கட்டிட அமைப்பில் இருக்க வேண்டிய சமன்பாடுகள், மண்டபம், பிராகாரம், ஆகியவற்றிற்கான நீள, அகல, உயர விகிதங்கள், விமானங்களின் வகைகள், ஸ்தலவிருக்ஷங்கள், தீர்த்தங்களை உருவாக்குதல், உற்சவ விக்ரகங்களின் அளவுகள், அம்சங்கள், நித்யபூஜை விதிகள், உற்சவ முறைகள், அர்ச்சகர்கள், ஸ்தபதிகள் ஆகியோரின் தகுதிகள் போன்றவற்றையெல்லாம் நிர்ணயித்து நமக்கு வழிகாட்டுபவையே ஆகமங்கள் எனப்படும்.
தெய்வ வடிவங்களை அமைப்பதற்கும், தெய்வத்தின் இருப்பிடமான ஆலயங்களை நிர்மாணிப்பதற்கும் அவற்றில் நடத்தப்படும் நித்ய பூஜைகளுக்கும், மரபுகளுக்குமான முறையான விதிகளும், சட்டதிட்டங்களும், கட்டுப்பாடுகளையும் சொல்லும் இந்த ஆகமங்கள் சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள் (வைகானசம், பாஞ்சராத்ரம்) என இருவகைப்படும். கிராமதேவதைகளுக்கான ஆலயங்களை அமைப்பதற்கும், தனிப்பட்ட மனிதர்கள் தங்கள் குடும்ப நலனிற்காகவும், வேறு பலன்களுக்காகவும் மேற்கொள்ள வேண்டிய ஜபம், பூஜை, ஹோமம் ஆகியவற்றிற்கும் இந்த ஆகமங்களே வழிகாட்டுகின்றன.
சில்பசாஸ்திரம், வாஸ்து சாஸ்திரம், கட்டிடக்கலை ஆகியவையும் ஆகமங்களுக்குள்ளே அடக்கம். அவற்றையும் ஒருங்கிணைத்துத்தான் பெரும்பாலான ஆலயங்கள் பாரத நாட்டில் நிர்மாணிக்கப்பட்டன.
ஆலயம் புருஷாகாரம் என்கிறது இந்த ஆகமங்கள், அதாவது மனித உடலின் அமைப்பை போன்றதே ஆலயங்களின் அடிப்படை கட்டுமான அமைப்பும். ஒரு ஆலயமென்பது மனிதன் மேற்கே தலை வைத்து கிழக்கே கால் நீட்டி மல்லாந்து படுத்திருப்பதுபோல் கட்டப்படுகிறது.

உடம்பினை இருப்பிடமாகக் கொண்டு ஜீவாத்மா உறைவது போல, ஆலயத்தை இருப்பிடமாகக் கொண்டு பரமாத்மா விளங்குகிறார். தோல், குருதி, ஊன், எலும்பு, மஜ்ஜை, கொழுப்பு, சுக்கிலம் ஆகிய ஏழுவகைத் தாதுக்களால் மனித உடல் அமைந்திருப்பது போல, கருங்கல், வெண்கல், செங்கல், மணல், சாம்பல், நீர், சுண்ணாம்பு எனப்படும் ஏழு வகைப் பொருள்களால் ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
ஆலயத்தின் கர்ப்பக்கிகம் முகமாகவும், அர்த்த மண்டபம் கழுத்தாகவும், இருதோள்கள் துவார பாலகர் நிற்குமிடமாகவும், கொடி மரம் வரையுள்ள பாகம் உடம்பாகவும், கொடிமரம் முதுகுத்தண்டாகவும், பாதங்கள் வாயிற் கோபுரமாகவும் இருக்கின்றன. உடம்பில் உள்ள முதுகெலும்பு போன்றது கோவிலுக்கு கொடிமரம் என்று ஆகமங்கள் சொல்கின்றன. நம் முதுகுத் தண்டுவடத்தில் 32 எலும்பு வளையங்கள் உள்ளன. அது போலவே 32 வளையங்களுடன் கோவில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.

மனித உடலுக்கு முதுகெலும்பைப் போலக் கொடிமரத்துக்கு அதன் தண்டுப் பகுதி இன்றியமையாதது. முதுகெலும்பின் நடுத்தண்டு மூலாதாரத்திலிருந்து பிரம்மாந்திரம் வரை இருப்பதுபோல கொடிமரமும் மூலலிங்கத்தின் மட்டத்திலிருந்து ஸ்தூபியின் அளவு வரை இருக்கும். கொடிமரத்துக்கு வீணா தண்டம், மேரு தண்டம் என்னும் பெயர்களும் உண்டு. குண்டலினி சக்தி சுழுமுனை நாடி வழியாக எழுவது போல் கொடி மரத்தில் இடபக் கொடி ஏற்றப்படுகையில்தான் கோவில் விழாக்கள் துவங்குகின்றன.
கொடிமரம் இந்துக்கோவில்களில் பலிபிீடத்திற்கு அருகே, கருவறைக்கு முன் நிறுவப்பட்டிருக்கும். இதற்கு சமஸ்கிருதத்தில் துவஜஸ்தம்பம் என்று பெயர். த்வஜ- என்றால் கொடி, ஸ்த- ம்ப- என்றால் தூண். இதை நிறுவுவதற்கும், வணங்குவதற்கும், சமயச் சடங்குகளும், நியம நியதிகளுமுள்ளன.
மரத்தினால் செய்யப்பட்டு பித்தளை, செம்பு, வெள்ளி, பொன் போன்ற உலோகத்தகடுகள் வேயப்பட்டிருக்கும் கொடிமரங்கள் விருக்ஷ சாஸ்திரத்தின் அடிப்படையில் முதிர்ந்த உயரமான ஒற்றை மரத்தில் செய்யப்படுகின்றன. சந்தனம், தேவதாரு, செண்பகம், தேக்கு வில்வம், மகிழம் முதலிய மரங்களிலிருந்துதான் கொடி மரங்கள் தயாரிக்கப்படுகின்றன. வைரம் பாய்ந்த செண்பகம், வில்வம், மகிழம் போன்றவற்றிலிருந்து கொடிமரங்களை உண்டாக்குவது உத்தமம் , அதாவது அதிக பலன்களை இம்மரம் பக்தர்களுக்கு அளிக்கும், நன்கு விளைந்த பலா, மா ஆகியவற்றிலிருந்து கொடிமரங்கள் செய்வது மத்திமம், அதாவது குறைவான பலன்களை அளிக்கும், உறுதியான கமுகு பனை ஆகிய மரங்களிலிருந்து கொடிமரங்களை உருவாக்குவது அதமம், அதாவது மிக சொற்ப பலனையே தரும் என்கின்றது ஆகமங்கள். மரத்தின் மேலே வேயப்பட்டிருக்கும் உலோகப்பட்டைகள் கொடிமரத்தை இடி, மின்னல் மழை, வெயிலிலிருந்து காக்கும்,

கொடி மரம் ராஜகோபுரத்தை விட அதிக உயரமாக இருக்காதபடியும்,கருவறை விமானத்துக்கு நிகரான உயரத்துடன் இருக்கும்படியுமே அமைக்க்கப்படும். அதுபோல கருவறையில் இருந்தும், ராஜகோபுரத்தில் இருந்தும் எவ்வளவு தூரத்தில், எவ்வளவு உயரத்தில் கொடி மரம் அமைந்திருக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் உள்ளன. இது கோவிலுக்கு கோவில் மாறுபட்டாலும், கொடி மரத்தில் ஐந்தில் ஒரு பாகம் பூமிக்குள் இருக்கும்படிதான் எங்குமே நிறுவப்படும். பெரும்பாலான சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகிய மூன்றும் மூலவரை நோக்கியே அமைக்கப்படுகின்றன.
கொடி மரம், மும்மூர்த்திகளையும், அவர்களின் மூன்று தொழில்களையும் உணர்த்துகின்ற குறியீடாக திகழ்கிறது. அகலமாகவும், சதுரமாகவும் இருக்கும் பத்ரபீடம் எனப்படும் அடிப்பகுதி, படைப்பு தொழிலுக்கு உரியவரான பிரம்மாவையும், அதற்கு மேல் உள்ள எண்கோணப் பகுதியான விஷ்ணு பாகம் காத்தல் தொழிலுக்கு உரியவரான விஷ்ணுவையும், அதற்கு மேல் உள்ள நீண்ட ருத்ர பாகம், சம்ஹாரத் தொழிலை செய்யும் சிவபெருமானையும் குறிக்கும்.
கொடிமரத்தின் தண்டு எனப்படும் நீண்ட உருளை வடிவ உயர்ந்த தூணின் உச்சியில் மேகலை எனப்படும் மூன்று குறுக்குச் சட்டங்கள் கருவறை தெய்வத்தை நோக்கி இருக்கும்படி அமைந்திருக்கும். இதை ஏர் பலகை, திருஷ்டிப் பலகை என்றும் அழைப்பார்கள் இதில் சிறு சிறு மணிகளும் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஆலயத்துக்கு ஏற்ப இந்த அமைப்பு வேறுபட்டு காணப்படும். ஒரே பட்டையுடன் இருக்கும் கொடி மர அமைப்பை கருடஸ்தம்பம் என்று சொல்வார்கள்.
எல்லா கொடிமரங்களும் ஒரே மாதிரியான அமைப்பில் இருப்பதில்லை சிலவற்றில் தீபமேற்றும் பிறைகள் அமைந்திருக்கும். சில பீடங்களில் தாமரை மலர்கள் இதழ் விரித்திருக்கும் சிலவற்றில் சதுரபீடத்தின் நான்கு பக்கங்களிலும் புடைப்புச்சிறபங்களாக தெய்வங்கள் வீற்றிருப்பதும் உண்டு.
சில கொடிமரங்கள் கருங்கல்லிலும் கூட உருவாக்கப்படுகின்றன.ஆனால் நரம்போட்டமில்லாத விரிசலில்லாத உறுதியான ஒற்றைக்கல்லால் மட்டுமே உருவாகியிருக்கும். இப்படியான கல்கொடிமரங்களை அதிகம் கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் காணலாம். நார்கோண, அறுகோண, எண்கோண உருளைப்பகுதிகளும் உண்டு.
பிரபஞ்ச கதிர்களை கருவறை விமானக் கலசங்கள் ஈர்த்து கருவறையில் இருக்கும் மூலவர்மீது பாய்ச்சும். இந்த பிரபஞ்ச சக்தியை அப்படியே நேரடியாக ஏற்றுக் கொள்ளும் தன்மை சாதாரண மனிதர்களுக்கு இல்லை. இந்த கொடிமரமானது இந்த பிரபஞ்ச சக்தியை ஈர்த்து, பக்தர்களின் உடல் ஏற்றுக் கொள்ளும் தன்மைக்கு இந்த சக்தியைமாற்றி கருவறைக்கு முன்னின்று கடவுளை வணங்கும் பக்தர்கள் மீது பாய்ச்சும் எனப்படுகின்றது.
சைவ வைணவ கோவில்களின் கொடிமரங்களுக்குள் வேறுபாடுகளும் இருக்கும். சிவாலயங்களில் கொடிமரத்தின் உச்சியில் நந்தியும் வைணவாலயங்களில் சுதர்சன சக்கரமோ அல்லது ஹனுமான் உருவமோ பொறிக்கப்பட்டிருக்கும்.

இவை மாறாத விதிகளல்ல, பல கோவில்களில் கருவறை தெய்வத்திற்கு உகந்த பல உருவங்களும், துணைதெய்வங்களும், வாகனங்களும் கொடியிலும், கொடிமரத்திலும், பீடத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும். உச்சியில் கலசங்கலும் வேலும் அமைந்திருக்கும் கொடிமரங்களும் உண்டு. கேரளகோவில்களில் கம்போடியக்கோயில்களில் தமிழகக்கோயில் கொடிமரங்களினின்றும் வேறுபட்ட உச்சிப்பகுதிகளைக்கொண்ட கொடி மரங்களை காணலாம்.

சிலபெருமாள்கோயில்களில் கருடனும், அம்பாள் ஆலயங்களில் சிம்மமும், முருகர் ஆலயத்தில் மயிலும், விநாயகர் ஆலயங்களில் மூஷிகமும், துர்கை ஆலயத்தில் சிம்மமும், சாஸ்தாவிற்கு குதிரையுமாக, கொடிமரத்தின் மேற்புறத்தில் கொடிச் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருக்கும்.
மூல விக்ரகம், உற்சவ விக்ரகங்களைப்போலவே ஒர் கோவிலின் சக்தி மையமாக கொடிமரமும் விளங்குகின்றது, அதனாலேயே கோவிலில் நுழையுமுன்னர் கொடிமரத்தை வணக்கிவிட்டு உள்ளே நுழைகிறோம்.
கொடிமரத்தை வணக்குவது, வலம் வருவதுமட்டுமல்ல, பார்ப்பதே புண்ணியமென்கின்றது சாஸ்திரங்கள். கருவறை குடிகொண்டிருக்கும் தெய்வங்களுக்கான சேவைகளில் பெரும்பாலானவை கொடிமரத்திற்கும் செய்யப்படுகின்றன. சில கோவில்களில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஆகாசதீபத்தை கொடிமரத்தில் ஏற்றும் வழக்கமும் உண்டு. கொடிமரமில்லா கோவில்களில் உற்சவங்களும் நடைபெறாது
ஒவ்வொரு சிவாலயத்திலும் ஐந்து வகையான லிங்கங்கள் இருப்பதாக ஐதீகம் 1. விமானம்- ஸ்தூல லிங்கம்; 2. கர்ப்பக்கிரகம்-சூக்ஷ்மலிங்கம்; 3. பலிபீடம்-அதிசூக்ஷ்மலிங்கம்; 4. கொடிமரம்-காரணலிங்கம்; 5. மூலலிங்கம்-மஹாகாரணலிங்கம்.
துவஜஸ்தம்பம் எனப்படும் கொடிமரத்தில் திருவிழாவின் முதல்நாள் கொடியேற்றுவது துவஜாரோகணம் என்றும், விழா முடிந்து கடைசி நாள் கொடியிறக்குவது துவஜாவரோகணம் என்றும் அழைக்கப்படுகிறது. கொடிமரத்தின் முன் ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்தல் வேண்டும். கொடிமரம்,நந்தி,பலிபீடம் இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது என்றும் சொல்லபடுகின்றது.
