லோகமாதேவியின் பதிவுகள்

Month: October 2020

ஞானகுரு தக்‌ஷிணாமூர்த்தி

சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகின்ற சிவபெருமானின்  அறுபத்து நான்கு வடிவங்கள் போக வடிவம்,யோக வடிவம், கோப வடிவம் (வேக வடிவம்) , பிற சிவ வடிவங்கள் என வகைப்படுத்தப் படுகின்றன.

இதில் போக வடிவங்கள்; உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர், மாதொருபாகர், யோக வடிவங்கள்; தக்‌ஷிணாமூர்த்தி, ஞான தக்‌ஷிணாமூர்த்தி, யோக தக்‌ஷிணாமூர்த்தி, வீணா தக்‌ஷிணாமூர்த்தி, சுகாசனர், கோப வடிவங்கள்: கங்காளர், வீரபத்திரர்,  திரிபுராந்தக மூர்த்தி, கஜயுக்த மூர்த்தி, காலந்தக மூர்த்தி

கேசிமுனிவர் எழுதிய அஷ்டாஷ்ட விக்ரக லீலை, மற்றும் ஈக்காடு ரத்தினமுதலியார் எழுதிய சிவபராக்கிரமம் ஆகிய நூல்களில் இந்த 64 வடிவங்களைக்குறித்தும் விவரிக்கபட்டிருக்கின்றது.

சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவையே ’மகேசுவர மூர்த்தங்கள்’. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாகயின. முதல் வடிவமான லிங்க மூர்த்தியிலிருந்து  முருகனிடம் பிரணவப் பொருளைக்   கேட்க மாணவனாக மாறிய வடிவமான  ’சிஷ்யபாவ மூர்த்தி’  வடிவம்  வரையிலான 64 வடிவங்களில் ஒன்றுதான் தென் திசைக்கடவுளான  தக்‌ஷிணாமூர்த்தி  வடிவம்.

தக்‌ஷிணாமூர்த்தி தெற்குமுகமாக அமர்ந்த அறிவே உருவமான ஜோதி, எல்லையற்ற கருணைக்கு இருப்பிடம், மகரிஷிகளின் அஞ்ஞானத்தைப் போக்குகின்ற ஆதி ஆசார்யர், தத்தவமஸி என்னும் மஹா வாக்கியத்தின் ஞானம் விளங்கச் செய்பவர், பிரணவரூபமான வித்யையை உபதேசித்து அவித்யையாகிற இருட்டைப் போக்குபவர், சந்திரக் கலைகளால் செய்யப்பட்டது போன்ற அவயங்களை உடையவரும், முத்துக் கூட்டங்களால் கட்டப்பட்டது போன்ற மூர்த்தியை உடையவரும், அறிவுக்கு எட்டாதவருமானவர்

தனது வலது முழங்காலில் வைக்கப்பட்ட இடது காலை உடையவரும் பாதங்களிலும் வயிற்றிலும் சேர்த்து கட்டப்பட்ட யோக பட்டத்தை உடையவரும், அபஸ்மாரத்தின் மீது வைக்கப்பட்ட காலை உடையவரும், ஸமாதிநிலையில் இருப்பவருமான இறைவன்,.

ஒரு கையில் சின்முத்திரையையும் ஒரு கையில் பரசுவை (கோடரியையும்) ஒரு கையால் மானையும் தரித்தவரும், தன் முழங்காலில் வைத்த கையை உடையவர், மன்மதனை எரித்த சாம்பலைப் பூசிக் கொண்டவரும், புலித்தோலைப் போர்த்திக் கொண்டவரும், வீணையையும் தரித்தவரும், விரிந்த ஜடாபாரத்தை உடையவரும், நாதப்ரம்மாநுபவத்தினால் மிக்க சந்தோஷமடைந்தவருமான யோகி.

தனது சரீர மணத்தினால் தாமரையின் மணத்தை வென்றவரும் , மந்த புத்தி உள்ளவர்களை அனுக்கிரகம் செய்பவரும், தெற்கு முகமாய் அமர்ந்திருப்பவரும்   ஆனந்தம் கொண்டவரும், பாலசந்திரனை சிரஸ்ஸில் தரித்தவரும்,  நான்கு பக்கங்களிலும் தொங்குகின்ற ஜடைகளால் , சந்திரன் போன்ற முகத்துடனும் விளங்குகிற பிரசன்ன மூர்த்தி

தக்‌ஷிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தக்‌ஷிணாமூர்த்தி.  தக்‌ஷிணாமூர்த்தியை  பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.

வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை  முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து மூர்த்தங்கள் பஞ்சகுண சிவமூர்த்திகள் என வகைப்படுத்தப்படும்.. இவற்றில் தக்‌ஷிணாமூர்த்தி சாந்த மூர்த்தி ஆவார்.

பிற நான்கு மூர்த்திகள்;

உக்ர மூர்த்தி – பைரவர்

வசீகர மூர்த்தி –  பிச்சாடனர்

ஆனந்த மூர்த்தி -நடராசர்

கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்

பூமியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக படைப்பின் கடவுளான  பிரம்மாவின் மனதால் படைக்கபட்ட நான்கு பிரம்ம  குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனப்படும் சனகாசி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும்,  திருமால்  இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.. சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார்.

பிரம்ம குமாரர்கள்

தட்சிணாமூர்த்தியாக, கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து, நான்மறைகளோடு ருக், யஜூர், சாமம், அதர்வணம்) ஆறு அங்கங்களையும் (சிக்ஷை (எழுத்திலக்கணம்), வியாகரணம் (சொல்லிலக்கணம்) , நிருக்தம் (நிகண்டு) , கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்) , ஜ்யோதிஷம் (சோதிடம்) )  அவர்களுக்கு போதித்தார்.  எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

ஞான தக்‌ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்‌ஷிணாமூர்த்தி, சக்தி தக்‌ஷிணாமூர்த்தி, மேதா தக்‌ஷிணாமூர்த்தி, யோக தக்‌ஷிணாமூர்த்தி, வீர தக்‌ஷிணாமூர்த்தி, லட்சுமி தக்‌ஷிணாமூர்த்தி, ராஜ தக்‌ஷிணாமூர்த்தி, பிரம்ம தக்‌ஷிணாமூர்த்தி,சுத்த தக்‌ஷிணாமூர்த்தி  என்று தக்‌ஷிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக  ஆகமங்கள் கூறுகின்றன.

நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ள தக்‌ஷிணாமூர்த்தியின் வலதுகால் ‘அபஸ்மரா’ (முயலகன்) என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமைந்திருக்கும். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் ,ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும், ஓலைச்சுவடியையும் வைத்துள்ளார்,   வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கடவுளை குறிக்கும் கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, ஆசைக்கான நடுவிரல், கர்மமாகிய மோதிரவிரல், மாயைக்கான சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும்  சின்முத்திரை  காட்டியருள்பவர்.

  மாயை மனிதனுக்கு ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்

தக்‌ஷிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான த‌க்‌ஷிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தக்‌ஷிணாமூர்த்தி. வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார்.

சிறப்பான  பத்து தக்‌ஷிணாமூர்த்திஆலயங்கள்

  • மிக அழகானது – பழனி பெரிய ஆவுடையார் கோயில்

  • தலை சாய்த்த கோலம் – திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)

  • சிற்ப அழகு – ஆலங்குடி

  • வீராசன நிலை – சென்னை திரிசூலம்

  • மிருதங்க தெட்சிணாமூர்த்தி – கழுகுமலை (தூத்துக்குடி)

  • யோகாசன மூர்த்தி – அனந்தபூர் (ஆந்திரா)

  • வீணா தெட்சிணாமூர்த்தி – நஞ்சன்கூடு (கர்நாடகா)

  • வியாக்யான தெட்சிணாமூர்த்தி – அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)

  • நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி – மயிலாடுதுறை வள்ளலார் கோயில்

  • நின்ற நிலையில் வீணையுடன் – திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்

குருவும் தக்‌ஷிணாமூர்த்தியும்

 குருவுக்கும் தக்‌ஷிணாமூர்த்திக்கும் உள்ள  வித்தியாசம் என்னவென்று அறிந்துகொள்ளுதல் அவசியமாகும்.  தக்‌ஷிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.

நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள்.  உரிய தானியம் கொண்டைக்கடலை. தக்‌ஷிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.  ஞானம் வேண்டி தக்‌ஷிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை. 

 ஞானத்தை போதிக்கும் குருவாக சனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தக்‌ஷிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக காட்சியளிக்கும் இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்

 தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ரஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.

ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தக்‌ஷிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.

கோரைப்புல்

 Sedge, nut grass, coco grass என்றெல்லாம் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற Cyperus rotundus என்னும் தாவர அறிவியல் பெயர் கொண்ட கோரைப்புல், 92 நாடுகளில் பரவி 52 வகையான உணவு மற்றும் உழவுப்பயிர்களுக்கு இடையூறு செய்யும் களைகளில் மிக முக்கியமானதாகும். ’one of the world’s worst weeds’. என்று குறிப்பிடப்படும்  மிகசுவாரஸ்யமான  களைச்செடியான இது சைப்பரசியே (Cyperaceae) குடும்பதைச் சேர்ந்தது.

புல்லினத்தைச்சேர்ந்த இக்கோரை தாவரவியலாளர்களால் ஹவாய் தீவுகளில் முதன் முறையாக 1850ல் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

பல்லாண்டுத்தாவரமான இதன் தாயகம் ஆப்பிரிக்கா, விரைவிலேயே இது தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிப்பெருகியது. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான அடர் பச்சை நிறத்தில் மூன்று வரிசைகளாக அடிப்பக்கம் இலையுறையுடன் கூடிய நீண்ட இலைகளையுடையது.   இளம்பச்சை நிறத் தண்டுகள்  முக்கோண வடிவிலிருக்கும்

 இவை பெருங்கோரை சிறுகோரை என்று இருவகைப்படும். சுமார் 150 செமீ வரைகூட பெருங்கோரை வகைகள் வளரும். சல்லிவேர்கள் மட்டும் இருக்கும் கிழங்குகளற்ற  இந்த பெருங்கோரை வகையைத்தான் வயல்களில் வளர்த்திப்பின் அதை பாயாகப் பின்னுவார்கள்

பெருங்கோரை

 மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலங்களிலும்  பயிர்களுக்கு இடையே களையாகவும் கோரை வளர்ந்திருக்கும்கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாகவும், உட்புறம் வெள்ளையாகவும் இருக்கும். இது மென் கசப்புத்தன்மையுடையது. ஆனாலும் விரும்பத்தக்க நறுமணத்துடனும் இருக்கும். இக்கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.

கோரையின் கிழங்குகள் மண்ணிற்கடியிலும் பக்கவாட்டிலும் எல்லா திசைகளிலுமாக வளர்ந்து ஒரு கிழங்குத்துண்டிலிருந்து சுமார் 600 செடிகள் வரை வளர்ந்து ஒரு குழுவாக அடர்ந்து காணப்படுவதால் Colonial  grass என்றே விவரிக்கப்படுகின்றன. கிழங்குகள் சதைப்பற்றுடன் தொடர் சங்கிலிகளை போன்ற வடிவங்களில்  இருக்கும்.  கிழங்குகளின் dormancy period அதிகமென்பதால் மண்ணிற்கடியிலேயே ஆழப் புதைந்திருந்தாலும்   7 வருடங்களுக்குப் பிறகும் முளைக்கும் திறனுள்ளவை. நல்ல வளமான மண்ணில் ஒரே வாரத்தில் 20 முதல் 30 லட்சம் கிழங்குகள் வளர்ந்து விடும். கோரை 20 முதல் 90 சதமானம் பயிர்களின் விளைச்சலை குறைத்துவிடும். கோரையை முற்றிலுமாக அழிக்க முடியாது அவ்வபோது கட்டுக்குள் கொண்டுவருவது மட்டுமே பெரும் முயற்சிகளுக்கு பின்னர் சாத்தியம்.

 2000 வருடங்களாகவே இக்களை உலகெங்கும் மிக வேகமாக பரவியிருக்கிறது ஆப்பிரிக்காவிலும் சீனாவிலும் உணவு மருந்து மற்றும் நறுமணத்தைலங்கள் தயாரிக்க இக்கோரை  பல நூற்றாண்டுகளாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன கசக்கும் சுவையுடைய கிழங்குகள் பஞ்ச காலதில் உணவாகப் பயன்பட்டிருக்கின்றன. கோரைக்கிழங்குகளை பன்றிகள் விரும்பித் தின்னும். பண்டைய இந்தியாவில் கோரையைக் கட்டுப்படுத்த பன்றிகளை வளர்த்திருக்கிறார்கள்.ஒரு பன்றி 5 கிலா வரையிலும் கிழங்குகளை அகழ்ந்தெடுத்து விடுவதால் கோரைகளை இவற்ற்றின் மூலம் பெரிதும் கட்டுக்குள் கொண்டு வரமுடிந்திருக்கின்றது

கோரையைப்பற்றிய முதல்குறிப்புக்கள் சீன மருத்துவ நூலில் முதன்முதலில் கிருஸ்துவுக்கு  500வருடங்களுக்கு முன்பு குறிப்பிடப்பட்டிருக்கிறது . 

மருத்துவப் பயனுடைய கோரைக்கிழங்குகள் பழந்தமிழ் இலக்கியங்களில் முத்தக்காசு எனக்குறிக்கப்பட்டுள்ளன. இதன் இலக்கியபெயர் எருவை, சேற்று நிலத்தில் சண்டையிட்டுக்கொள்ளும் எருமைகளின் காலில் மிதிபட்டு கோரைகள் மடியும் என்கிறது பெரும்பாணாற்றூப்படை

(கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை,விளைந்த செறுவில் தோன்றும் நாடன்,)

. கோரைப்புல்லில் பாவைகளை செய்யும் வழக்கமும் முன்பு இருந்திருப்பதை குறிப்பிடும் ஐங்குறுநூறு இதனை பைஞ்சாய் என்கிறது

பைஞ்சாய் பாவை ஈன்றனென் யானேஐங் 155/5 (நான் பஞ்சாய்க் கோரைப் பாவையாகிய பிள்ளையை ஏற்கனவே பெற்றுவிட்டேன்)

தலைவன்பள்ளத்து நீரில் வளரும் பைஞ்சாய்க் கோரைத் தண்டின் அடிப்பகுதியை ஒத்த ஒளிரும் பற்கள் பொருந்திய பவளம் போன்ற வாயினைக்கொண்டவன் எனிறாள் தலைவி   அகநானூற்றில்,

அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன

நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய்அகம் 62/1,2

கோரை புல் மூலம், பொதுமக்கள் உறங்க பயன்படுத்தும் பாய்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும். மேலும், கான்கீரிட் அமைக்கவும், திரைச்சீலை அமைக்கவும் கோரை புல் பயன்படுகிறது

 ஒருமுறை சாகுபடி செய்து விட்டால் , குறைந்த பட்சம் 20 ஆண்டு வரை, ஆறு மாதத்துக்கு, ஒருமுறை அறுவடை செய்யலாம். அதிகளவில் தண்ணீர், உரம் மற்றும் பராமரிப்பு செலவில்லாத கோரைப்புல், கரூர் அமராவதி மற்றும் காவிரியாற்று பகுதிகளில் அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. எல்லா வகையான காலநிலையிலும் கோரையை வளர்க்கலாம்.

சாயவனேஸ்வரர்

 நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சாய்க்காட்டில் கோச்செங்கட்சோழன் கட்டிய குயிலினும் இனிமொழியம்மை உடனுறை சாயாவனேஸ்வரர் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது கோரையாகும். இது ஒரு புல் வகையெனினும் தலமரமாகவே குறிக்கப்படுகின்றது.

தாவரவியலில் களை ,என்பது a right plant in a wring place . இத்தனை செழித்து வளரும், மருத்துவப்பயன்களுள்ள இக்கோரையை கிழங்குகளின் மருத்துவ பயன்களுக்காக தனியே சாகுபடி செய்கிறார்கள் ஆயுர்வேதத்தில் பல முக்கியமான மருந்துகள் இதிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் முஸ்தக் அல்லது முத்தா என்றழைக்கப்படும் இக்கிழங்கில் எண்ணிலடங்கா வேதிச்சேர்மானங்கள் உள்ளதால் பல  வகையான நோய்களுக்கு இதிலிருந்து  மருந்துகள் பெறப்படுகின்றன

கோரைக்கிழங்கிலும் தாவரத்திலுமுள்ள முக்கிய வேதிப்பொருட்கள்:

Cyperene terpene, flavonoids,sitosterol, ascorbic acid , cyperene. Alpha-cyperone, Alpha-rotunol, Beta-cyperone, Beta-pinene, Beta-rotunol, Beta-selinene, Calcium, Camphene, Copaene, Cyperene, Cyperenone, Cyperol, Cyperolone Cyperotundone Dcopadiene, D-epoxyguaiene, D-fructose, D-glucose, Flavonoids, Gamma-cymene, Isocyperol, Isokobusone, Kobusone, Limonene, Linoleic-acid, Linolenic-acid, Magnesium, Manganese, C. rotunduskone, Myristic-acid, Oleanolic-acid, Oleanolic-acid-3-oneohesperidoside, Oleic-acid, P-cymol, Patchoulenone, Pectin, Polyphenols, Rotundene, Rotundenol, Rotundone, Selinatriene, Sitosterol, Stearic-acid, Sugeonol, Sugetriol.

 களையென கருதப்படும் ஆனால் இத்தனை வேதிப்பொருட்கள் கொண்டிருக்கும் கோரை என்னும் மூலிகை  தோல்நோய்களை குணப்படுத்துகிறது. வியர்வை நாற்றத்தை போக்குகிறது. தோலுக்கு மென்மை, பொலிவு கொடுக்கிறது. மூட்டுவலி, தசைவலி, வயிற்றுக் கோளாறு குணமாக உதவுகிறது. சீன, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளிலும் இது  அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

புத்தம்புதுகாலை

அக்டோபர் 16,2020 அன்று நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான தமிழ்ப்படம் ‘புத்தம் புது காலை’’, சுதா கொங்காரா, கெளதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் , ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் என ஐந்து இயக்குநர்களின், 5 குறும்படங்களின் தொகுப்பு படமாகும் (Anthology/package film).

5 இயக்குநர்கள்

 ஜெயராம், ஜெயராமின் மகன் காளிதாஸ், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷிணி, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், பாபிசிம்ஹா, குருசரண், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் இந்த தொகுப்புப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர். ஐந்து படங்களுமே கோவிட் தொற்றின் வீடடங்கு காலத்தில் படம்பிடிக்கப்பட்டவை, அனைத்து படங்களுமே வைரஸ் வீடடங்கு பல குடும்பங்களில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களையும், அதன்பேரில் முகிழ்க்கும்  காதலை, புதிய துவக்கத்தை, தோழமையை,  நம்பிக்கையை  பேசுகின்றன.

புத்தம் புதுகாலையை துவங்கிவைப்பது’ ஜெயராம் மற்றும் ஊர்வசியின் ’’இளமை இதோ இதோ’’. மிக நல்ல தொடக்கம். இளமை இறங்கு முகத்திலிருக்கும், தத்தமது துணையை இழந்திருக்கும் ஆனாலும் மீதமிருக்கும் வாழ்நாளை தகுந்த, நேசமிக்க துணையுடன் வாழ நினைப்பவர்களாக மிகசிறப்பாக நடித்திருக்கிறார்கள் ஊர்வசி மற்றும் ஜெயராம் இருவருமே.   மனைவியை இழந்த ஜெயராமும் கணவனை இழந்த ஊர்வசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஜெயராமின் வீட்டில் அவரை சந்திக்க ஊர்வசி வந்திருக்கையில்  வைரஸ் தொற்றினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊர்வசி ஜெயராமுடனேயே 21 நாட்கள் தங்கும்படி ஆகின்றது. அவர்கள் பரஸ்பரம்  ஒரு துணை மட்டுமல்ல நல்ல தோழமையும்  புரிதலும் உள்ளவர்களாகவும் இருப்பதை அந்த சில நாட்களில் உணருகின்றனர்.

இருவரின் மனதிலிருக்கும் இளமையான உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்திருப்பதும் ஜெயராமின் இளம் வடிவமாக அவர் மகன் காளிதாஸே இருப்பதும் மிகப்புதுமை. ஊர்வசியின் இளமை வடிவமாக லிஸியின் மகள் கல்யாணி. மிகபொருத்தமான தேர்வு. காளிதாஸ் கண்களிலும் சிரிப்பிலும் அப்படியே அம்மா பார்வதியைக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சாக்லெட் ஹீரோ காளிதாஸ் தான் இனி. மணிரத்தினத்திடன் உதவியாளராக இருந்த சுதா இயக்கத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

படத்தொகுப்பும் இசையும்  ’’பேபி’’ பாடலுமாக அருமையான துவக்கமாக அமைந்துவிட்டிருக்கிறது  இளமை இதோ இதோ. வாய்ஸ் ஓவர், மாதவன்

இரண்டாவதாக ’அவரும் நானும்-அவளும் நானும்’ வைரஸ் தொற்றுக்காலத்தில் தனிமையில் இருக்கும் தாத்தாவை கவனிக்கவென்று வந்திருக்கும்  மகள் வயிற்றுப்பேத்தியின் பார்வையிலும், காதல் திருமணம் செய்துகொண்டதால் மகளிடமிருந்து விலகிவிட்ட தந்தையாக, பேத்தியுடன் தங்குவதை எதிர்பார்த்து காத்திருக்கும் தாத்தாவின் பார்வையிலுமாக ஒரு அழகுக்கதைக்களம்.

மகளை பேத்தியில் கண்டு மகிழும் தாத்தாவாக MS பாஸ்கர், அம்மாவையும், அம்மாவின் காதலையும் அங்கீகரிக்காத தாத்தாவின் மீதான மனவிலக்கத்துடனேயே உள்ளே வரும் பேத்தியாக ரிதுவர்மா.

MS Baskar and Ritu

மிகச்சிறப்பாக  இயல்பாக நடித்திருக்கிறார் பாஸ்கர். முதலில் இருந்த தயக்கத்தையும் விலக்கத்தையும் மெல்ல மெல்ல கடந்தும் மறந்தும், தாத்தாவின் கோணத்தை புரிந்து மனமிரங்கும் பேத்தியாக ரிதுவும் மிகபிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார். ரிது களங்கமற்ற இளமையில் பூரிக்கும் அழகுடன் தூய வெள்ளுடைகளில் வருகையில் அவரது வசீகரதோற்றம் நெஞ்சை அள்ளுகின்றது. சமையலறைக்காட்சி ஒன்றில் ஒற்றைக்கல் மூக்குத்தி பளீரிட தெரியும் ரிதுவின் க்ளோஸப் காட்சியிலிருந்து மனதை திருப்பவே முடியாது. நீர்த்துளி வடிவ கண்ணாடியில் ரிதுவின் முகம் தெரியும் ஒரு காட்சியும் கவனத்தை ஈர்க்கிறது.

 நல்ல கதை நல்ல பாத்திரத்தேர்வு அந்த ’கண்ணா’ பாடலும் அழகு. இருவேறு தலைமுறையினரானாலும்  அவர்களுக்கிடையேயான இடைவெளியை ரத்த உறவும் புரிதலும் நிறைத்து விடுகிறதென்பதை அலங்காரங்கள் ஏதுமில்லாமல் நிதானமாய் சொல்லி இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும் இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன். பி சி ஸ்ரீராமின் காமிரா வழியே ரிதுவையும் அந்த மிக அழகிய பசுமை சூழ்ந்த  வீட்டையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

 அடுத்து வரும் காஃபீ எனி ஒன்? (coffee any one?)  இயக்கம் சுஹாசினி,  திரைக்கதை மணிரத்னம் மற்றும் சுஹாசினி. அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் சுஹாசினி என்று சகோதரிகள் மூவருமே நடித்திருக்கிறார்கள். சுஹாசினியின் அம்மாவாக நடித்திருப்பவர் கோமளம் சாருஹாசன், சுஹாசினியின் அம்மாவேதான்.  ஒரு குடும்பப்படம்.

விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவது அன்புக்கு நான் அடிமை ஓட்டுநர் கணேசன். வெகுநாட்களுக்கு பின்னர் அனுஹாசன் திரையில். முதன்முறையாக இயல்பான நடிப்பில் ஸ்ருதிஹாசன். மிக எளிய கதை. கோமாவில் இருக்கும் அம்மாவை பார்க்க வரும் இரு சகோதரிகள், வராத இன்னுமொரு செல்லத்தங்கை. அம்மாவை மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பராமரிக்கும் அப்பாவை கோபித்துக்கொள்ளுகிறார்கள் மகள்கள். ஆனால் அம்மாவின் உடல்நிலையில் மாற்றம் முன்னேற்றம் எல்லாம் தெரிவதுதான் கதை.

சுஹாசினியும் அவரது அம்மாவும்

சுஹாசினியும் அனுவும் நாடகத்தனமாக   வெகு செயற்கையாக நடித்திருக்கின்றனர். காத்தாடி ராமமூர்த்தி மிகசிறப்பான நடிப்பு, பொருத்தமான தேர்வும் கூட. கோமாவில் இருந்த அம்மா மெல்ல மெல்ல குணமடைவதாக காட்டியிருக்கலாம். கண்விழித்து உடனே சமையலறையில் கணவர் கொடுக்கும் காபியை குடிப்பதெல்லாம் அதிசயம்தான். படத்தின் தலைப்பாக மெடிகல் மிராக்கிள் என்று வைத்திருக்கலாம்.

 ஸ்ருதி ஹாசன் அதிக இடைவெளியில் பெற்றோரின் வயதான காலத்தில் பிறந்தவரென்பது ஓகே அத்தோடு நிறுத்தி இருக்கலாம். தேவையில்லாமல் அனுஹாசனின் கர்ப்பம் உறுதியானதை சேர்த்திருப்பது ஓவர்டோஸ்

ஐந்தில் ஒரு கதை என்னும் போது குறைந்த நேரத்தில் சுருக்கமாக சிறப்பாக கதையை சொல்ல முயற்சிக்காமல் குழப்பியடித்திருப்பது  திரைத்துரையில் ஆழக்கால் பதித்த குடும்பத்தினர் என்பதுதான் வருத்தம். அறிமுக இயக்குநர்கள் படமென்றால் இது  குறையாக சொல்லவேண்டி இருந்திருக்காது. இந்தப்படத்திற்கு இந்த பிரபலங்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இந்த சின்னக்கதைக்கும் மிகபிரபலமான இயக்குநர் கதாசிரியர்  என்பதால் இயல்பாகவே பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பிருக்கும். ஆனால் அதற்கு பொருத்தமான விஷயங்களுடன் இந்த மூன்றாவது பகுதி இல்லையென்பது ஏமாற்றமே!

நான்காவதாக Reunion. ஆண்டிரியா, குருசரண் மற்றும் லீலா சாம்சன் ஆகியோரின்  கதை.  திரைக்கதை, இயக்கம் மற்றும் ஒளி இயக்கம் ராஜீவ் மேனன். பள்ளித்தோழனின் பெயரை வீட்டு மதில் சுவற்றில் பார்த்துவிட்டு தன் இருசக்கர வாகனம் பழுதானதால் வீட்டுக்குள்ளே வரும் ஆண்டிரியா  வைரஸ் தொற்றாலும் வீட்டங்கு உத்தரவாலும் அங்கேயே தங்கவேண்டி வருவதும் மெல்ல மெல்ல தோழனுடன் காதலரும்புவதும் கதை

ஆண்ட்ரியாவும் குருசரணும்

ஐந்து படங்களிலும் கிளாமர் இல்லையென்ற குறை வந்துவிடக்கூடாதென்றே ஆண்ட்ரியாவை சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கின்றது. கவர்ச்சியாக வசீகர உடைகளில் வருகிறார் ஆண்ட்ரியா. நண்பன் மருத்துவரென்பதும் வைரஸ்தொற்று இருக்கலாமெனும் சந்தேகத்தின் பேரில் அவர் மாடியிலும் ஆண்ட்ரியாவும் லீலா சாம்சனும் கீழ்தளத்திலும் தங்கியிருப்பதும் பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பவர்களுக்குள் நெருக்கம் வருவதெல்லாம் சரிதான்  ஆண்டிரியாவின் போதைப்பழக்கத்தை தேவையில்லாமல் வலிந்து  உள்ளே திணித்திருக்கிறார்கள்

மன அழுத்தம், பணிச்சுமை, போதைப்பழக்கம் என்றெல்லாம் தேவையில்லாமல் குழப்பாமல் பள்ளித்தோழமை மெல்ல மெல்ல காதலாக மிளிரத்துவங்குவதை மட்டும் அழகாக சொல்லி இருக்கலாம். மிக நன்றாக துவங்கி மோசமாக முடிந்திருக்கும் படம் இது. லீலா சாம்சன் சரண்யா பொன்வண்ணனைப்போலவே அக்மார்க் அம்மா வேடத்துக்கு மிகப்பொருத்தம்.  ஆண்ட்ரியாவும் குருசரணும் சேர்ந்திருக்கும் அந்த நிஜ பள்ளிப்புகைப்படம் எதிர்பாரா இனிய அதிர்ச்சியை இறுதியில் அளிக்கின்றது

இறுதிப்படம் பாபி சிம்ஹா நடித்திருக்கும் ’மிராக்கிள்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. புதிய இயக்குநர்கள்  யாரேனும் எடுத்திருந்தாலும் அதன் தரம் இப்படித்தான் இருந்திருக்கும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்று சொல்லும்படியான ஒருகாட்சி கூட படத்தில் இல்லை. அற்புதத்தை நம்பும் இரு இளைஞர்களுக்கு அது நடக்காமல் போவதும், அற்புதம் நிகழுமென்னும் நம்பிக்கையின்றி சாகத்துணிந்த ஒருவருக்கு அற்புதம் நடப்பதுமான எதிர்பாராமையின் கதை

.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா என்னும் மிகத்திறமையான, வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் நடிகரைத்தவிர சொல்லிகொள்ளும் படியாக எதுவுமே இல்லை படத்தில்.

ஐந்து படங்களும் ஒரு  பொன்மஞ்சள் நிற மலரின் ஐந்து இதழ்களாக காட்டி ஒவ்வொரு படம் முடியும் போதும் அம்மலரிதழ்களில் ஒவ்வொன்றாக வண்ணத்தில் நிறைப்பது மிக அழகு

ஐந்தில் முதலிரண்டும் சிறப்பு, பிறகு வரும் மூன்றும் பார்க்கலாம் ரகம் அவ்வளவுதான்

ஐந்து கதைக்களங்களும் முற்றிலும் வேறானவை. பிரபல பாடல்களின் முதல்வரிகளையே பொதுத்தலைப்பாகவும் கதைகளின் தலைப்புக்களில் சிலவற்றிலும் பயன்படுத்தி இருப்பதும் கவனிக்கத்தகக்து.

FEFSI யின் ஊரடங்கு காலத்துக்கான விதிகளை முழுமையாக  பின்பற்றி படத்தை எடுத்தமைக்காகவும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்

புழுங்கல் அரிசி-Parboiled Rice

நெல்  (rice) என்பது  ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத்  தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின்  அரிசி என்னும் உணவாகிறது. உலகில்  சோளம்,  கோதுமைக்கு  அடுத்து அதிகம் பயிரிடப்படும் தானியம் நெல்லாகும்.

 ஆசியாவில்தான் நெல் சாகுபடி முதன்முதலாக  கி.மு 4500க்கு முன்பாகவே பல நாடுகளில் ஒரே சமயத்தில் துவங்கியதாகக் கருதப்படுகிறது. Oryza rufipogan  என்னும் அறிவியல் பெயருடைய காட்டு நெல்லினத்திலிருந்து ஆசிய நெல் (Oryza sativa), ஆப்பிரிக்க நெல் (Oryza glaberimma) என இரு இன நெற்பயிர்கள் உருவாக்கபட்டு பயிரிடப்பட்டன.

 இந்தியாவில் Oryza sativa var. indica வும், சீனாவில் Oryza sativa var. japonica வும் சாகுபடி செய்யப்பட்டன.

சங்கப்பாடல்களில்  வேகவைத்தபிறகு கட்டைவிரல் தடிமனில் இருந்த ஒரு வகை நெல் உள்ளிட்ட பல நெல்வகைகளை பற்றிய 45 குறிப்புக்கள் உள்ளன. இந்தியாவில் மட்டுமே 2 லட்சம் பாரம்பரிய நெல் வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வந்திருக்கிறது. தற்போது நாம் அவற்றில் பெரும்பாலானவற்றை இழந்துவிட்டிருக்கிறோம்

பாஸ்மதி அரிசி

நெல் ரகங்கள் அவற்றிலிருந்து கிடைக்கும் அரிசியின் வடிவத்தாலும், குணத்தினாலும் வகைப்படுத்தப்படுகின்றன.  இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பல்வேறு சாதாரண அரிசி வகைகளுடன்  நீளமான, மணமுடைய ‘பாஸ்மதி’ அரிசி, நீளமான, சன்னமான ‘பாட்னா’ அரிசி, குட்டையான ‘மசூரி’ அரிசி ஆகிய ரகங்களும் அதிகம் பயிரிடப்படுகின்றன.  தென்னிந்தியாவில், சுவையுள்ள சன்ன ரக ‘பொன்னி’ அரிசி பிரபலமானது

மட்டை அரிசி

 நெல்லின் உண்ணமுடியாத   Hull/Husk எனப்படும் உமி மட்டும் நீக்கப்பட்டதே மட்டைஅரிசி  (Brown rice)  மட்டை அரிசியின் மேலடுக்கான Bran எனப்படும் தவிடும் நீக்கப்பட்டதே  பச்சரிசி (White rice)  புழுங்கல் அரிசி (Par boiled Rice) எனப்படுவது உமி நீக்கும் முன்பாகவே நீராவியில் வேகவைத்து தயரிக்கப்படும் ஒரு வகையாகும்

 

நெல்லை அறுவடை செய்து, உலர்த்தியபிறகு, அதன் உமி மற்றும் தவிட்டு அடுக்குகள் நீக்கப்பட்டு வேக வைக்காமல், நேரடியாக ஆலையில் அரைப்பதால்  கிடைப்பதே  “பச்சரிசி” எனப்படுகிறது.  நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பிற அரிசி ரகங்களைக்காட்டிலும் இந்த ரகத்தையே அதிகம் விரும்பி உபயோகிப்பார்கள்.

பச்சரிசி

           நீரில் ஊறவைத்த நெல்லை,  நீராவியிலோ அலல்து கொதிநீரிலோ வேகவைத்து, உலர்த்தி, ஆலையில் அரைக்கப்படுவதே   ‘புழுங்கல்’ அரிசி . கடின நெல் இரகங்களே இதற்கு உகந்தவை. புழுங்கல் அரிசி ஆலையில் தீட்டப்படும்போது, சத்துக்களை இழப்பதில்லை; எளிதில் செரிமாணம் ஆகக்கூடியது. ஆனால், உமியுடன் சேர்த்து வேக வைக்கப்பட்டதால், ஒரு விதமான வாசம் உடையதாய் இருக்கும்.

அரிசியை இப்படி அவித்து அல்லது புழுங்க வைத்து அதன் தரம் மற்றும் சுவையை மேம்படுத்தும் கலை பன்னெடுங்காலமாகவே  பிரதான உணவாக அரிசி இருக்கும் பல நாடுகளில் இருந்து வருகின்றது. 

புழுங்கல் அரிசி தயாரிப்பில் முக்கியமானவை;

  • ஊறவைத்தல்-(Soaking)  அறுவடை செய்த நெல்லை   வெதுவவெதுப்பான நீரில் ஊறவைக்கையில் அதன் ஈரப்பதம் அதிகரிக்கின்றது
  • நீராவியில் வேகவைத்தல்-(Steaming) நீராவியில் வேக வைக்கையில் நெல்லின் கார்போஹைட்ரேட்டுக்கள் பசை போலாகின்றது. மேலும் நீராவியின் வெப்பத்தில் நெல்லிலிருக்கும் நுண்கிருமிகளும் நீக்கப்படுகின்றன
  • உலரவைத்தல்; (Drying)   ஆலைகளுக்கு கொண்டுசெல்லும் முன்பாக நீராவியில் வேகவைத்த நெல் நன்கு உலரவைக்கப்டும்

 அவித்தல் அல்லது புழுங்குதல் முறையின் மூலம், வெளிப்புற உமி, தவிட்டின் வைட்டமின்கள், உமியில் உள்ள ஆண்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மையுள்ள எண்ணெய் ஆகிய அனைத்தும் அரிசி மணிக்குள் திணிக்கப்படுவதால், புழுங்கலரிசியின் ஊட்டச்சத்து பச்சரிசியை விட மிக அதிகமாகின்றது.

 அவித்த அரிசி லேசான பழுப்பு நிறத்தில்,  உமி நீக்க ஆலைகளில் அரைபடுகையில் உடையாமல் உறுதியுடனும் இருக்கும்.

    வேகவைக்கும் போது பச்சரிசியிலிருக்கும் மாவுச்சத்துக்கள் பசைபோலாகி (Gleatinised)   தயாமின் எனும் வைட்டமின்   மற்றும் அமைலோஸ் சத்துக்களும் பச்சரிசிலிருந்ததை விட  அதிகரிக்கின்றது. பச்சரிசியை விட புழுங்கல் அரிசி குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம் உள்ளவர்களுக்கு மிகவும் உகந்தது

தென்னிந்தியாவில் பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே அதிகம் உபயோகத்திலிருக்கிறது. தீட்டப்பட்ட வெள்ளையரிசியை விட தீட்டப்படாத  புழுங்கல் அரிசியில்  உடலின் ஆற்றலுக்கு தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. ஆனால் மெக்னீஷியம், ஜின்க் போன்ற நுண்சத்துக்கள் பிற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் புழுங்கல் அரிசியில் குறைவு

உலகில் உற்பத்தியாகும் சுமார் 50% நெல்  வேகவைக்கப்படுகிறது. இந்த செயல்முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன,  அவை இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியான்மர், மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், நைஜீரியா, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ்.

புழுங்குதல் அன்னும் செயலினால் அரிசியின் நார்ச்சத்துக்களும் கால்சியம் பொட்டஷியம் மற்றும் விட்டமின்  B-6 ஆகியவற்றின் அளவு பிற அரிசி ரகங்களைக்காட்டிலும் அதிகரிக்கின்றது

இணைய வழி: கற்றலும் கற்பித்தலும்!

ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காக பழகிய கையும் மனமும், இதற்குப்பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது.  மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் கண்களைப்பார்த்துக்கொண்டு கற்பித்தலில் இருக்கும் மகிழ்வையும் நிறைவையும் 1998’லிருந்து அனுபவித்து கொண்டிருப்பவளாதலால், இப்படி கணினி முன்பாக அமர்ந்துகொண்டு தட்டச்சிய கட்டுரைகளையும் குறும்படங்களையும் காண்பித்து கற்பிப்பதில் இருக்கும் பொருளின்மையையும் நிறைவின்மையையும் ஒவ்வொருநாளும் உணர்கிறேன்.

என்னைப்போன்ற ஆசிரியர்களுக்கே இப்படியென்றால் நல்ல காலத்திலேயே வகுப்பறைக்கு வந்து கற்றுக்கொள்ள சுணங்கும் மாணவர்களுக்கு கேட்கவேண்டுமா என்ன?

இனிமேல் இணையவழிகற்றல்தான் என்று அறிவிப்பு வந்தபோது அத்தனை பயமாக இல்லை. கணினி உபயோகிக்கத் தெரியும் என்றாலும் அதன்வழியே கற்றுக்கொடுப்பது குறித்து அதுவரை சிந்தித்ததில்லையென்பதால் பெரிதாக ஒன்றும் நினைத்துக்கொள்ளவில்லை மேலும் அப்படியெல்லாம் ஒன்றும் இருக்காது, இதோ எல்லாம் சரியாகிவிடும், வழக்கம் போல கல்லூரிக்கு சென்று வகுப்பில் பாடமெடுக்கப்போகிறோம் என்று மனம் நம்பிக்கொண்டிருந்ததும் காரணமாக இருக்கலாம்

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல வைரஸ்தொற்று உலகளாவிய பெரும் ஆபத்தாகி, லட்சக்கணக்கானோர் இறந்ததும், மிகப்பெரிய ஆளுமைகளும் செல்வந்தர்களும், பிரபலங்களும் கூட தொற்றுக்கு ஆளாகி அவர்களில் சிலர் உயிரிழந்ததுமாக வயிற்றில், உப்பு, புளி, காரம் எல்லாம் சேர்த்து கரைத்தது போல கலவரமானது

பின்னர் ஒருநாளில் ஆன்லைனில் கற்பிப்பதை மறுநாளே துவங்க முதல்வரிடமிருந்து, (கல்லுரி முதல்வர்) தகவல் வந்தே வந்துவிட்டது

வீட்டில் மகன்களுக்கும் அப்படியே!

தட்டச்சுவதை எப்படியோ முன்பின்னாக செய்து பழகி இருந்தாலும் கணினியை எனக்கு அவ்வளவாக தெரியாது, கணினிக்கும் என்னை அத்தனை தெரியாது பாவம்

இனி நாங்கள் இருவருமாக நேர்ந்து கலந்து சேர்ந்து வேலை செய்வதன் சாத்தியங்கள் எனக்கு மிகதொலைதூரத்தில் தான் தெரிந்தது

நல்லவேலையாக சரண் வீட்டில் இருந்ததால் முதலில் நான் இணையவழி கற்பித்தலின் அடிப்படைகளை கற்றுக்கொண்டேன் கூகிள் மீட், ஜூம் மீட் எல்லாம் போய் டெஸ்ட் மீட் நடத்தி கொஞ்சம்  பரிச்சயப்படுத்திக்கொண்டேன் ஆ்ன்லைன் வகுப்புக்களை.

ஆனால் முதல்நாள் உண்மையாகவே கண்ணைக்கட்டி கம்ப்யூட்டர் முன்னால் விட்டது போலத்தான் இருந்தது

வகுப்பில் யாரையும் பார்த்துப்பேசமுடியாது என்னும் விஷயமே அப்போதுதான் உரைத்தது. அப்படி ஒரு கற்பித்தலைக்குறித்து சிந்தித்ததே இல்லையாதலால் அடுத்தஅடி எடுக்கவே முடியவில்லை. 

50/60 மாணவர்களின் மத்தியில் உயரமான மர மேடையில் நின்றபடியும் அவ்வப்போது இறங்கி அவர்கள் அமர்ந்திருக்கும் வரிசைகளுக்குள் நடந்து, சின்ன சின்ன கேள்விகளை கேட்டு பதில்பெற்றுக்கொண்டு, பலவண்ண உடைகளில்  கிளர்ந்து ஒளிரும் இளமையுடன் இருக்கும் மாணவர்களை கண்ணுக்கு கண் சந்தித்து பாடமெடுத்ததுக்கு மாற்றாக, நான் யாரை நோக்கி பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதே தெரியாமல், நான் பேசிக்கொண்டிருப்பதை யாரேனும் கவனிக்கிறார்களா இல்லையா என்றும் தெரியாமல்  40/50  நிமிடங்கள் பேசுவதென்பது பெரிய கொடுமையாக இருந்தது. வருகையை பதிந்துவிட்டு  சில விஷயங்களை மட்டும் தெரிவித்துவிட்டு முதல் நாள் வகுப்பை சுருக்கமாக முடித்தேன்.

பின்னர் வந்த நாட்களில் மெல்ல மெல்ல இம்முறைக்கு பழகினேன் ஆனால் முன்புபோல பாடம் கற்பித்தலில் இருக்கும் ஆர்வமும் நிறைவும் எள்ளளவும் இல்லை என்பதை உணர்ந்தேன் இனி அப்படியான நிறைவு ஏற்படவும் போவதில்லை என்னும் உண்மையும் புரிந்தது குறிப்பாக தாவரங்களின் சித்திரங்களை வரைந்து, கற்றுக்கொடுப்பதற்கான் சாத்தியமே இல்லையாதலால், ஒருநாள் கூட நிறைவுடன் வகுப்பை முடித்த உணர்வு வரவேயில்லை.

கல்லூரிக்கு அலைபேசியை கொண்டுவந்ததற்காக  முந்தின மாதங்களில் கண்டித்த அதே ஆசிரியர்கள் அலைபேசியிலும், கணினியிலும் பாடம் நடத்தி அதை மாணவர்கள் அலைபேசியில் கவனிக்கவேண்டி வந்தது துர்லபம்தான்.

அளிக்கப்பட்ட எல்லாவாய்ப்புக்களிலும் சந்து பொந்துகளை  கண்டுபிடித்து தப்பிக்கமுயலும் மாணவர்கள் இந்த இணைய வழியேயான கற்பித்தலிலும்  குறுக்கு வழிகளை கண்டறிந்து விட்டிருந்தார்கள். வருகையை உறுதிசெய்த மறுகணம் அலைபேசி அல்லது மடிக்கணினியில் நான் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் திரையை கீழிறக்கிவிட்டு வேறேதும் படங்களை பார்ப்பது, மாணவர்கள் மைக்கை அணைத்து வைத்திருக்க வேண்டுமென்பதால்  பாட்டுக் கேட்பது, போனில் நண்பர்களுடன் உரையாடுவது அல்லது போனை அங்கேயே விட்டுவிட்டு வேறெங்காவது போவது என்று ஏராளமான வழிகளில் அவர்களுக்கு முக்கியமென்று தோன்றுபவற்றை, இளமைக்கே உரிய அறியாமையுடன்  செய்ய அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டார்கள்.  வழக்கமான சின்சியர் சிகாமணிகள் மட்டும்   ”வகுப்பை” கவனித்துக்கொண்டிருப்பார்கள்.

வீட்டில் அனைவரும் எப்போதுமே இருந்து கொண்டிருப்பதால் சமையல் உள்ளிட்ட வழக்கமான வீட்டுவேலைகள் பலமடங்கு அதிகரித்துவிட்டிருக்கிறது. பாடங்களை முன்பு போல மனதிலிருந்தும் நினைவிலிருந்தும் எடுத்து  கரும்பலகையில் எழுதி, வரைந்து கற்றுத்தர வாய்ப்பில்லாததால் பக்கம் பக்கமாக தட்டச்சு செய்யும் வேலையும் சேர்ந்து உடல் ஓய்ந்துபோனது

எனக்கென அந்தரங்கமான வாசிக்கவும் எழுதவும் சிந்திக்கவும் தோழமைகளுடன் பேசவும், இரவுகளில் வானின் கீழ் அமர்ந்தபடி இசைகேட்பதும், பொழியும் நிலவில் மகன்களுக்கு கதை சொல்லுவதும். புன்னை மரத்தடியில் அமர்ந்து துளசிமாடப்பிறையில் காற்றில்  பதறும் தீபச்சுடரை பார்த்தபடிக்கு,  இருத்தலை மட்டும் உணர்ந்துகொண்டு அமர்ந்திருப்பதுமான பிரத்யேக சமயங்களும் முற்றிலுமாக இல்லாமல் ஆனது. .

முன்பைக்காட்டிலும் அதிகாலையில் எழுந்து பின்னிரவு வரை விழித்திருந்து, மகன்களுடன் சேர்ந்து பேசுவதென்ன ஒன்றாக அமர்ந்து உணவுண்பதும் கூட இல்லாமல் போய் அவரவர்க்கு இடைவேளை இருக்கையில் தனித்தனியே அமர்ந்து சாப்பிடுவதும், ஒரே வீட்டில் தனித்தனி தீவுகளாக படுக்கையறையில், வாசல் திண்ணையில் , கூடத்தில் என்று அமர்ந்து கணினியை கட்டிக்கொண்டே நாள் முழுதும் கழிக்கிறோம்.

யெஸ்சார், யெஸ்மேம், ஏம் ஐ ஆடிபிள்? ஸ்கீரீன் தெரியுதா போன்ற வார்த்தைகளால் வீடு நிறையத்துவங்கி விட்டிருந்தது. இப்படி இரண்டாம் வருடம், மூன்றாம் வருடம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பெடுப்பதை குறித்து வருந்திக்கொண்டிருப்பதெல்லாம் வெறும் டிரைய்லர்தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் என்பதுபோல 2 மாதங்கள் கழித்து வந்து சேர்ந்தார்கள் கல்லூரிப்படிப்பென்பது கருப்பா சிவப்பாவென்று கூட   தெரிந்திருக்காத  பள்ளி வாசனை அப்படியெ மீதமிருக்கும்  முதலாம் ஆண்டு மாணவர்கள்.

 கல்லூரி வாழ்வே மிகப்புதிது,  கணினியிலும், அலைபேசியிலும் ஆசிரியர்களை சந்திப்பதும் அதிலேயே கற்றுக்கொள்ளுவதும் மிக மிகப் புதியது. பொள்ளாச்சி போன்ற 18 பட்டிகளால் சூழப்பட்டிருக்கும் கிராமும் இல்லாத நகரமும் இல்லாத ஒரு கலவையான ஊரில் , பெரும்பாலான மாணவர்கள் தமிழ்வழிக் கற்றலில் பள்ளிப்படிப்பை முடித்து ஆங்கில வழிக்கற்றல் குறித்த அச்சமும் பிரமிப்புமாக வந்திருக்கும் வேளையில் இணைய வழிக்கற்றல் இருதரப்புக்கும் ஏகப்பட்ட சேதாரங்களை உண்டாக்கியது.

வழக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்களின் வகுப்புக்கு முதல் நாளே சென்று ஒவ்வொருவராக, கைகுலுக்கி பெயர் கேட்டு ’’என்ன பூ  வச்சிருக்கே தலையில்,  அழகா இருக்கே? ஆஹா! அருண்மொழியா பேரு பிரமாதம், தமிழ்ச்செல்வின்னு நல்ல தமிழ்பேருகேட்டு எத்தனை நாளாச்சு, என்னது? நீயும் கோட்டூரா? நானும் அங்கேதான் பக்கத்தில், கார் ஒட்டுவியா சூப்பர், கவிதை பிரமாதம், என்ன இத்தனை உயரமா இருக்கே? ஏன் என் கண்ணையே நேரா பார்க்கமாட்டேங்கறே? நிமிர்ந்து பாரு, இப்படி  ஏதோ ஒன்றை புகழ்ந்தும் அணுக்கமாகவும் பேசி, துவக்க நாட்களிலேயே நான் அவர்களுக்கு மிக நெருக்கமான சொந்தமெனும் உணர்வை அளிக்கும், எதையும் பகிர்ந்து கொள்ளலாமென்று நம்பிக்கை அளிக்கும் ஒருத்தியாக மாறிவிட்டிருப்பேன். பின்னர்  3 வருடங்களும் என் பின்னால் அன்புடன் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.

எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது கொரோனா

முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரியில் உண்டாக்கி கொடுத்திருக்கும் வாட்ஸப் குழுமத்தில் இணையத் தெரிந்திருந்தது அவ்வளவே. நான் அதில் கொடுக்கும் வகுப்பிற்கான இணைப்பை திறந்து வகுப்பில் இணையத் தெரியவில்லை பலருக்கு. பகீரத பிரயத்தனம் எல்லாம் செய்து அவர்களுக்கு புரியவைத்து ஒருவழியாக  இணைந்த பின்னர் என்ன செய்வதென்று தெரியாமல்,  எனக்கு பதிலாக  present பொத்தானை அழுத்தி share the screen என்று வந்தபின்னால் நான் எதுவும் ஸ்லைட் போடமுடியாமலாகி அவர்களை கெஞ்சிக்கூத்தாடி அதை நிறுத்தச்சொல்லவேண்டி இருக்கும்

இன்னும் சிலருக்கு அவரவர் ஊர்களில் வீடுகளில் இணையவேகம் இருக்காது மரியானில் பார்வதி பாடுவது போல ’’வந்து வந்து’’ போய்க்கொண்டிருப்பார்கள். வந்தாலும்  ஆடியோவை உயிர்ப்பிக்க தெரியாமல் சைகைமொழியில் எனக்கு பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.

படாத பாடுபட்டு unmute செய்ய சொல்லிக்கொடுத்தால் அதுபெரும் ஆபத்தில் கொண்டுபோய் விடும். அவரவர் வீட்டு பின்னணி ஓசைகள் பலவிதமாயிருக்கும், கலவரமாகவுமிருக்கும்.  தொலைக்காட்சி ஓசை, சமையலறை ஓசை, விடாமல் நாய் குரைப்பதெல்லாம் ஆடியோ குறுக்கீடுகளென்றால் அவ்வப்போது வந்து கேமிராவில் குட்டித்தங்கை அல்லது தம்பி என்று குஞ்சுகுளுவான்கள் எட்டிபார்ப்பார்கள்,அல்லது யாரேனும் திறந்த முதுகுடன் இடுப்பில் துண்டு கட்டிக்கொண்டு காமிராவை கடந்து செல்வார்கள்

ஒருவழியாக 10 நாட்களில் அவர்கள் வகுப்பில் இணைவதை கற்றுக்கொண்டாலும் அவரவர் பெயர்களில் அலைபேசி வழியே யாருமே இணைந்திருக்காததால் ஒவ்வொருவரின் பெயர்களை எழுதிக்கொள்ள   மேலும் சில  சிலநாட்கள் ஆகியது

சொந்தப்பெயரைத்தவிர எல்லா விதமான பெயரகளிலும் மாணவர்கள் நுழைகையில் எனக்கு திகிலாக இருக்கும். மெர்சல் வெற்றி, தல ரசிகன், தளபதி வெறியன், proud Brahmin, ஹிந்து வெறியன், தலை தளபதி ரசிகன் என மாணவர்கள் ஒருபுறம் கொலைவெறிப்பெயர்களுடன் வருகையில், மாணவிகள் வாயாடி, வாயாடி பெத்தபுள்ளை, அப்பா செல்லம் புஜ்ஜிம்மா, தேனு, உனக்காவே நான், போன்ற பெயர்களில் வருவார்கள். ஓருத்தி வெத்திலைக்கொடியென்று பெயர் வைத்துக்கொண்டிருக்கிறாள் இன்னொருத்தனோ ’முடிஞ்சாகண்டுபிடி’ என்ற பெயரில்.

சரி பெயர்கள் தான் இப்படி, புகைப்படங்களாவது அவரவருடையதை வைத்துக்கொள்ளலாமல்லவா? நேரில் தான் பார்க்க முடியவில்லை தோற்றம் எப்படியிருக்குமென்று தெரிந்துகொள்ளலாமென்றால், பெரும்பாலான மாணவர்கள் விஜய் அல்லது அஜித் புகைப்படங்களையே வைத்திருக்கிறார்கள். எனக்கு விஜய்க்கும், அஜீத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் தாவரவியல் கற்றுக்கொடுக்க தயக்கமாக இருந்தது. எங்கள் கல்லூரி பாலக்காட்டுச்சாலையில் இருப்பதாலும் கேரளா அரைமணி நேரப்பயணத்தில் வந்துவிடுமென்பதாலும் நிறைய கேரளமாணவர்கள் கல்லூரியில் சேர்ந்து படிப்பார்கள். ஒருநாள் வகுப்பில் லாலேட்டன் காத்திருந்தார். எனக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. லாலேட்டனின் பெயர் வினீத்.

 மாணவிகள் ரோஜாப்பூ, நஸ்ரியா அல்லது தலைமுடி காற்றில் பறக்கும் அழகு போஸில் அவரவர் புகைப்படம் . இதுகொஞ்சம் தேவலையாகஇருந்தது.

மம்மூட்டியின் அழகனில் மொட்டைமாடியிலிருந்து குதித்துவிடுவதாக மிரட்டும் ஒரு குட்டிப்பையன் கடைசியில் ’’எனக்கு இறங்கத்தெரியலையே’’ என்பான் அதைப்போல ’’மேம் எனக்கு எப்படி என் பெயரையும் புகைப்படத்தையும் போனில் மாத்தறதுன்னு தெரியலைன்’’னு  ஒருத்தன் சொல்லியபோது நான் அவசரமாக பேச்சை மாற்றினேன் எனக்கும் தெரியாதே அதெல்லாம்!

இப்படி  ரத்தம் சிந்தி இணைய வழிக்கற்றலுக்கு  மாணவர்களை  தயாராக்கி, ஒருமாதத்தில் உள்ளே நுழைந்து வணக்கம் சொல்லவைத்ததே பெரும் சாதனையாக இருக்கையில்  துறைத்தலைவர், ’’மேம் பாடமெல்லலாம் சீக்கிரம் முடிச்சுருங்க, எப்போ வேணா தேர்வு இருக்கும்’ என்ற போது, சென்ற வருடம் பள்ளியில் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கையிலேயே மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு அங்கேயே விழுந்து செத்துப்போன கீதா மிஸ்ஸையும், பிரின்சிபால் அறையை விட்டு வெளியே வந்து தன் அறைக்கு வரும் வழியிலேயே நெஞ்சடைத்து செத்துப்போன உடுமலை கல்லூரி பேராசிரியரையும் நினைத்துக்கொண்டு, என் இருமகன்களும் தாயில்லாமல் வளரும்படி செய்து விடுமோ இந்த ஆன்லைன் வகுப்புக்கள் என்று விசனப்பட்டுக்கொண்டேன்

துவக்க நாட்களில் எல்லா மாணவர்களின் மைக்கையும் உயிர்பித்து வைக்க சொல்லி அவர்களிடம் பேசியபடியே பாடம் நடத்திக்கொண்டிருந்தேன். சிலநாட்களிலேயெ அவ்வழக்கத்தை நிறுத்த வேண்டிவந்துவிட்டது. மும்முரமாக பூஞ்சைக்காளானின் உணவுமுறைகளையோ அலல்து  பேக்டீரியாவில் எப்படி பாலினப்பெருக்கம் நடைபெறுகின்றது என்றோ மாய்ந்து மாய்ந்து விளக்குகையில் பின்னணியில் கேட்கும் ’’பிளாஸ்டிக் குடம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், கடைகீரேய்’’, போன்ற கூவல்களூம், ’’உறைக்கு செல்விக்காட்ட தயிர் வாங்கிட்டு வர’ச்சொல்லும் சிற்றேவல்களும்,  ’’டேய், மல்லித்தழைய மார்கெட்டுக்கு கொண்டு போகாம போனை நோண்டிகிட்டு இருக்கியா’’ போன்ற அதட்டல்கள் மட்டுமல்லாது  ’’இந்தம்மா என்னடா 9 மணிக்கு வகுப்புக்கு எட்டேமுக்காலுக்கே வந்துருது’’ என்று எனக்கான கண்டனங்களும் வந்துகொண்டிருந்ததால் ஒருநாளைக்கு சிலரைமட்டும் மைக்கை உயிர்பிக்க சொல்லிவிடுவேன் அவர்களிடமும் வீட்டில் பின்னணிச்சத்தம் இருந்தால் அணைத்துவிடும்படி முன்கூட்டியே வேண்டி விரும்பி கேட்டுக்கொள்ளுவேன்

அதற்கும் ஆபத்து வந்தது. ஒருநாள், ரேபிஸ் வைரஸுக்கும் ஹெச் ஐ வி வைரஸுக்குமான தோற்ற ஒற்றுமைகளை குறித்து  விளக்கிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு மாணவனிடமிருந்து ’’கதை வுடாதே அதெல்லாம் ஒண்ணும் கிடையாது’’ என்று சத்தமாக  எதிர்வினை வந்ததும் திகைத்துப்போனேன். ஆனால் வீடியோவில் என்னை 48 மாணவர்கள் பார்த்துக்கொண்டிருப்பதால் புன்னைகை தவழும் முகத்துடன் ‘’ தமிழ்செல்வன் மைக்கை அணைக்கறிங்களா ‘’ என்று ஆங்கிலத்தில் மென்மையாக கேட்டதும் அங்கிருப்பது சீமானோ என்று சந்தேகம் வரும்படியாக ’’ வாய்பில்லை ராஜா, வாய்ப்பே இல்லை’’ என்று பதில் வந்தது. என்னை கட்டுப்படுத்திக்கொண்டு  வகுப்பு ரெப்ரஸெண்ட்டேட்டிவை ‘’ செல்வம்’’ என்று ஒரு அதட்டல் போட்டதும் அவன் இவனைக்கூப்பிட்டு சொல்லியிருப்பான் போல, சற்று நேரத்தில் தமிழ்ச்செல்வன் லெஃப்ட் த மீட்டிங்!

சாயங்காலமாக தமிழ்ச்செல்வன் என்னை அழைத்து மைக் ஆன் செய்து  இருப்பதை மறந்து நண்பனிடம் அன்று நடக்கவிருந்த IPL  போட்டியைக் குறித்து பேசியதற்காக மன்னிப்பு தெரிவித்தான்.( பெயர்கள் மாற்றபட்டிருக்கின்றது)

கேள்வி கேட்டால் என்னையே ம்யூட் செய்வது, வேண்டுமென்றெ எதிரொலி கேட்பதுபோல  மைக்கை வாய்க்கு மிக அருகே கொண்டு போய் பேசி விட்டு’’ டவர் சரியில்லை மேம்’’ என்பதை மட்டும் தெள்ளத்தெளிவாக சொல்லுவது போன்ற வில்லத்தனங்களும் நடக்கின்றது.

  என்னவென்று சொல்லுவது, எப்படித்தான் கண்டிப்பது? எனக்கே இத்தனை அசெளகரியங்கள் இருக்கையில், நல்ல நாளில் வகுப்பறைக்கு வரும்போதே கற்றலின் அவசியத்தை சரிவர உணராத இளம்பருவத்தினரை,  அவர்களைக் கவரும் ஆயிரக்கணக்கான கேளிக்கைகள் சூழ்ந்திருக்கையில், கவர்ந்திழுக்கையில்  இணைய வழிக்கற்றலின் வழிக்கு திருப்புவது அத்தனை எளிதல்லவே!

ஓய்வும் நிறைவும் இல்லாமல் இப்படியே நாட்கள் செல்வது துயரளிக்கிறது. தேர்வுகளில் ஒருசிலரைத்தவிர அனேகமாக அனைவருமே போனில் இணையத்தை பயன்படுத்தி கேள்விகளை தட்டச்சி பதிலை காப்பியடிப்பது தெள்ளத்தெளிவாக தெரிந்தும் திருத்தி மதிப்பெண்கள் தரவேண்டி இருக்கிறது. நேரான பாதையில் செல்லும் தெளிவும், குறுக்கு வழிகளில் செல்லக்கூடாதென்னும் அறிவும், சுயஒழுக்கமும் தானாய் எல்லாருக்கும் வராத இளம்வயதில் இவர்களைச் சொல்லுவதிலும் குற்றமில்லை. விடைத்தாள்களை ஸ்கேன் செய்து ஆசிரியர்களுக்கு அனுப்பும் அவசரத்தில் ஒரு மாணவன் அவன் காப்பி அடித்த புத்தகப்பக்கத்தையும் அப்படியே ஸ்கேன் பண்ணி எனக்கு அனுப்பி இருந்தான். நொந்துகொண்டு அவனை கூப்பிட்டு கண்டித்தேன். அவன் செய்த தவறுக்கு தண்டனை தரும் காலமல்ல இது, என்றாலும் ஒரு ஆசிரியையாக அவன் தவறு செய்தது எனக்கு தெரிந்திருக்கிறது, என்பதையாவது அவனுக்கு தெரிவிக்க வேண்டுமல்லவா?

  மாணவர்களின் சிறப்பம்சங்களென்ன என்று அறிந்துகொள்ள முடியவில்லை சோர்வுடன், பசியுடன், கவனச்சிதறலுடன் இருப்பவர்களை கண்டு வேண்டியதை செய்து அவர்களை ஊக்கப்படுத்தி கற்றலை தொடரச்செய்ய முடியவில்லை..

மொத்தத்தில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஆளுமை உருவாக்கக்கல்வி அல்லவென்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை ஜெ.சைதன்யா கிண்டு விடியாலாவில் சேர்ந்த அன்று மதியமே ’’ஒக்கார சொல்லிட்டாங்க, ஒக்கார சொல்லிட்டாங்க’ என்று கதறியபடி வீடு திரும்பியதைபோல லோகமாதேவிக்கும் இப்படி உட்கார்ந்து வகுப்பெடுப்பதில் கொஞ்சமும் பிரியமும் சம்மதமும் இல்லவே இல்லை.

இப்படியெல்லாம் இயந்திரங்களுடன்  வாழ்வை இணைக்கவேண்டியிருக்கும் என்று தெரியாமல் சாதாரண சோர்வுகளுக்கும் பணிச்சுமைகளுக்கெல்லாம் கூட ’’இயந்திரத்தனமான வாழ்க்கை’’ என்று முன்பு சொல்லிக்கொண்டிருந்ததை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

இந்த இணைய வழிக்கற்றலில் ஆசிரியைகள் இல்பேணுவதும், கல்லூரி/ பள்ளி கற்பித்தலை சரியாக நேரத்துக்கு செய்வதும்,  வீட்டிலேயே இருக்கும் குழந்தைகளை கவனிப்பதுமாக ஓய்வின்றி உழைப்பதையும் மிகுந்த மன அழுத்தத்திலும், உடல்சோர்விலும் இருப்பதையும் பார்க்கின்றேன். வழக்கம்போல எந்த தொற்றானாலும், வாழ்வில் எந்த மாற்றமானாலும் பெரும்பாலான ஆண்களுக்கு அவர்களின் எல்லாத்தேவைகளும் வழக்கம் போல பூர்த்தியாகி, அவர்களுக்கேயான ஓய்வு, உல்லாசம் போன்றவைகளுக்கான் நேரத்தில் மகிழ்ந்திருப்பதுமாத்தான் இருக்கிறார்கள்

கல்லூரியில் படிக்கும் மகனின்  இளம் ஆசிரியை ஒருவர் காலை 8.45க்கு  கலைந்த தலையும் சோர்ந்த கண்களுமாக நைட்டியிலேயே பாடம் சொல்லிக்கொடுக்க துவங்கியதை கரிசனத்துடன் தான் பார்த்தேன். இன்னொரு ஆசிரியை பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் பச்சிளம்குழந்தையின் வீறிடல் கேட்டதும் மன்னிப்பு கேட்டுக்கொண்டு வீடியோவை அணைத்துவிட்டு சில நிமிடங்களில் மீண்டும் வந்தமர்ந்தார். அவர் கண்களில் தெரிந்த சோர்வும்  குழப்பமும், தூக்கமின்மையும், அலுப்பும், ஒரு அன்னையாக எனக்கு துயரளித்தது.

என்னுடன் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் தான் கணினி முன்பு உட்கார்ந்தாலே அவளின் மாமியார் அதை தொலைக்காட்சிப்பெட்டியின் திரையென எண்ணிக்கொண்டு எந்நேரமும் சினிமா பார்ப்பதாக திட்டுகிறார் என்றார். இன்னொரு ஆசிரியையின் கணவர் அவர் பாடமெடுக்கையில் மட்டும் தனக்கு வேண்டிய உணவுகளை செய்துதரச் சொல்லி தொந்தரவு செய்வதை சொல்லி வருந்தினார்.

பல கணவர்களுக்கு ஆசிரியப்பணியிலிருக்கும் மனைவிகள் எப்படி என்ன வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்னும் அறிதல் இல்லை. எனவே, இப்போது அழகிய ஆங்கிலத்தில் கற்பிக்கின்ற,  கண்டிப்பாகவும் அறிவாளியாகவும், கம்பீரமான மதிக்கத்தக்க ஆளுமையாகவும் மனைவியை வீட்டில் பார்க்கையில் எங்கோ சீண்டப்படுகிறார்கள். வைரஸ் தொற்றுக்காலத்தில் அதிகரித்திருக்கும் குடும்ப வன்முறைகளில் பெரும்பாலானவை ஆசிரியைகளுக்கும் நடக்கின்றது.

அதிகாலை எழுந்து வீட்டுவேலைகளை முடித்து, வீட்டுப்பெரியவர்களுக்கு உதவி, குழந்தைகளை தயார் செய்து, பள்ளிக்கு அனுப்பிவிட்டு தானும் தயாராகி காலை உணவை தவிர்த்துவிட்டோ அல்லது நின்றபடியே அவசரமாக விழுங்கிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், களைத்து மாலை வந்து மீண்டும் விட்ட இடத்திலிருந்து வேலையை துவங்குபவர்கள், மாத இறுதியில் சம்பளப்பணத்தை சுளையாக தன்னிடம் தருகிறவர்கள் என்று இருந்தகாலம் போய் இப்போது இப்படியான கம்பீர ஆளுமை என்னும் ஒரு சித்திரத்தை கணவர்களால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. பல தோழிகளின் வீட்டில் இது நடந்து கொண்டிருக்கிறது இத்தனைக்கும் நானுள்ளிட்ட அவர்களனைவருமே எப்போதும் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்துகொண்டேதான் கற்பித்தலையும் செய்கின்றோம்.

நாளோ கிழமையோ வைரஸ் தொற்றுக்காலமோ, வீடடங்கு நேரமோ  எதுவானாலும்  வீட்டிலிருப்பவர்கள் பெண்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுவதும் அனுசரிப்பதும் அரிதினுமரிதாகவே நடககின்றது.  பெண்களை புரிந்துகொள்ளாத, மதிக்காத, அவர்களை இம்சிக்கிற, அடிமையாக நடத்துகிற  பல வீடுகளில்  கடந்த 9 நாட்களும் விதம் விதமான சுண்டல் இனிப்புக்களுடன் அக்கம் பக்கத்தினரை வரவழைத்து நவராத்திரியை  கொண்டாடினார்கள். பண்டிகைகள், விழாக்கள் சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாமே வாழ்வின் இயங்கியலை நமக்கு கற்றுத்தருவதன்பொருட்டு ஏற்படுத்தப்பட்டவையல்லவா? பக்திப்பைத்தியங்களும் படித்தமுட்டாள்களும் நிரம்பி இருக்கும் உலகமிது. ‘’படிப்பது ராமாயணம் இடிப்பது, பெருமாள் கோவில் ‘’ என்பார்களே, அதுதான்  இது.

மாற்றுக்கல்வி, சோற்றுக்கல்வி, புதிய கல்வி,  கலைக்கல்வி ,அறிவியல் கல்வி சமச்சீர்க்கல்வி என்று பலவற்றை பார்த்தோம். இனி  இந்த இணையக்கல்வியையும் உலகம் பழகிக்கொண்டு நிரந்தரமாக கல்விமுறையே இதற்கு தக்கபடி மாறிவிடுமா  அல்லது கொரோனாவை போலவே இதற்கு முன்பும்,  லட்சக்கணக்கானோர் இறப்புக்கு காரணமாயிருந்த  பிளேக். அம்மை போலியோ, போன்ற கொள்ளை நோய்களைப்போல இதுவும் வந்த சுவடை ஆழப்பதித்துவிட்டு காணாமல் போனபின்பு வழக்கம்போல கல்லூரிக்கு  பருத்திப்புடவையும் கண்ணாடியுமாக போய் வகுப்பெடுத்துக்கொண்டு, தாமதமாக வருபவர்களின், அரதப்பழசான ’’பஸ் லேட் மேம்’’ போன்ற பொய்களை சகித்துக்கொண்டு,  செல்லமாக கண்டித்து உள்ளே அனுமதித்துக்கொண்டு வகுப்பெடுக்கும் நாட்களும் விரைவில் வந்துவிடுமா? பிந்தையதின் சாத்தியங்களையே மனம் மிகவும் நம்புகின்றது);

 ஒரு கூடுகையின் பொருட்டு கல்லுரிக்கு சென்றவாரம் முறையான பாதுகாப்புடன் சென்றிருக்கையில் அடைக்கப்பட்டிருந்த வகுப்பறைகளும், என்னை மறந்துவிட்டு யார் என்று வினவிய காவலாளியும்,  தூசு படிந்திருந்த என் இருக்கையும் மனதை கனக்க வைத்து கண்ணை நிறைத்தது.

ஆசிரியமென்பது ஒரு பணியல்ல அது ஒரு வாழ்வுமுறை.. இந்த புதிய வாழ்வுமுறைக்குள் என்னால் என்னை முழுமையாக பொருத்திக்கொள்ளவே முடியவில்லையெனினும், இதுவரையிலும் எங்கு பிடுங்கி நடப்பட்டாலும் வேர்பிடித்து வளரும் இயல்புடையவளாகவே இருந்திருக்கிறேன். விரைவில்  இதற்கும் பழகிக்கொள்ளுவேன் என்றே நினைக்கிறேன்

Once a teacher always a learner ,அல்லவா. கற்றுக்கொண்டே இருப்பேன் கடைசிக்கணம் வரைக்கும்

சித்தி

குடும்பப் படங்களை, குறிப்பாக  பெண்களை மையப்படுத்திய படங்களை அளித்தவரும், 1960 ஆம் ஆண்டுகளின் மிக வெற்றிகரமான  இயக்குனர்களில் ஒருவராக இருந்தவருமான K.S கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் 1966ல் வெளிவந்த ’மாற்றாந்தாய்’ என்னும் பொருள்படும் ’சித்தி’ அதன் கதாபாத்திரத்தேர்வுக்கும் மிகச்சிறந்த திரைக்கதையமைப்புக்குமாக புகழ்பெற்றிருந்தது. 55 வருடங்களுக்குப் பிறகும்  சுவாரஸ்யம் குறையாமல் நம்மால் பார்க்கமுடியும் பல கருப்பு வெள்ளைப்படங்களில் சித்தி மிக முக்கியமானது.

இயக்குநர் KSG

மாற்றாந்தாய் என்றாலே கொடுமை செய்பவள் என்னும் ஆழமான நம்பிக்கை இன்றளவும் இருக்கும் சமூகத்தில், அப்போதே அப்படியில்லை,  மூத்தாள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவே எண்ணும் நல்ல பெண்களும் சித்திகளாய் இருப்பார்கள் என்று அழுத்தமாக, அழகாக, உணர்வுபூர்வமாக  சொன்ன படம் இது. சித்தியாக வரும் பத்மினியின் குண இயல்புகளை மிக அழகாக இதில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார்

வை மு கோதைநாயகியம்மாள்

விடுதலைப் போராட்ட வீராங்கனையும் பிரபல நாவலாசிரியையுமான நாவல் ராணி, கதா மோகினி என்றெல்லாம் புகழ்பெற்றிருந்த வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள் எழுதிய தயாநிதி என்னும் நாடகத்தை தழுவியே சித்தி எடுக்கப்பட்டது. ஹிந்தியில் Aurat,  மலையாளத்தில் ‘அச்சன்ட பார்யா’ தெலுங்கில் ‘பின்னி’ , கன்னடத்தில் ’சிக்கம்மா’ என இதே நாடகம் திரைப்படமாக  பல மொழிகளில் அப்போது எடுக்கப்பட்டது.

 திருமணத்திற்குப்பின்  அமெரிக்கா போய்விட்டு, பத்மினி திரும்பி வந்து நடித்த படம்தான் ‘சித்தி’ இந்த படம் ஆறு விருதுகளை அள்ளித் தந்தது. சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விருது வாங்கும்போது அவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஸ்ரீனிவாசன், வாழவேண்டிய வயதில் விஷக்காய்ச்சலால் இறந்துவிட்ட துக்கம் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. அதன் விளைவாக மகன் இறந்த நான்கு ஆண்டுகளில் (20.02.1960) சாவு இவரையும் அழைத்துக் கொண்டது

சித்தியில் இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள் கண்ணதாசன், உதவி பஞ்சுஅருணாசலம். ஒளி இயக்குநர் ஆர் சம்பத், படத்தொகுப்பு, ஆர் தேவராஜன். தயாரிப்பு சித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ். வசன ஒலிப்பதிவு பிரசன்ன குமார் ஏறக்குறைய 3 மணி நேரங்கள் நீளமுள்ள இந்த திரைப்படம் 1966 ஜனவரி 14 அன்று வெளிவந்தது.

தண்ணீர் சுடுவதென்ன, காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, சந்திப்போமா இன்று சந்திப்போமா, உள்ளிட்ட சித்தியின் 7 பாடல்களுமே மிகப்பிரபலமடைந்தவை .’’காலமிது’’ பாடல் எக்காலத்துக்குமானது.

மிக எளிய குடும்பக்கதை. மனைவியை இழந்த பெரியசாமி என்கிற எம் ஆர் ராதாவுக்கு இரண்டாம் மனைவியாக அவர் வயதில் பாதியே இருக்கும் மீனாட்சியாகிய பத்மினி, குடும்பத்தின் வறுமை, தம்பியின் மருத்துவக் கல்லூரிப்படிப்பு இவற்றின் பொருட்டு  ஜெமினியுடனான தன் காதலை துறந்து வாழ்க்கைப்படுகிறார். இறந்த மூத்தமனைவிக்கு  இருபதுகளில் இருக்கும் நாகேஷும், பதின்மவயதில் இருக்கும் விஜய நிர்மலா மற்றும் நண்டும் சிண்டுமாக  குழந்தைகள். பெரியசாமியின் அம்மாவுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லையெனினும் தள்ளாத வதில் கைக்குழந்தையுடன் போராடமுடியாமல் புது மருமகளை  வரவேற்கிறார்

ஒளிரும் கண்களும் செதுக்கியதுபோன்ற உடலுமாக பத்மினி மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார்.  ஒரு ஊமைத்தங்கை உள்ளிட்ட 7 உடன்பிறந்தவர்களின் பொருட்டு தன் வாழ்வை தியாகம் செய்துவிட்டு கண்ணீரை மாறாத புன்னகையால் மறைத்துக்கொண்டு அன்னையாகாமலே அன்னைமையால் நிறைந்து  மிளிரும் பாத்திரம் அவருக்கு

இப்படியான சவாலான பாத்திரங்களில் மிக அநாயசமாக நடிக்கும் பத்மினி இதிலும் அப்படியே நம் உள்ளங்களில் சித்தியாகவே நிறைந்துவிடுகிறார்.

6 குழந்தைகளின் தந்தையாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டு மிச்சமிருக்கும் இளமையையும் அனுபவிக்க துடிக்கும், ஆடம்பர வாழ்விலும் நாகரிக மோகத்திலும் மூழ்கி இருக்கும், கோட்டும் சூட்டுமான மிடுக்கான தோற்றத்தில் எம் ஆர் ராதாவும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வில்லனாகவும் நாயகனாகவும் அவரே தனிஆவர்த்தனம் செய்கிறார், ப்ரத்யேக கிண்டல் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சபாஷ் ரகம்.

இரு மாபெரும் நடிக மேதைகளாதலால் காட்சிக்கு காட்சி திரைப்படம் சுவாரஸ்யம் மிகுந்தபடியே இருக்கின்றது.

தன் பொருட்டு அக்கா வாழ்வை தியாகம் செய்வதை தம்பி முத்துராமன் தடுக்க முயல்கிறார் இருந்தும் பத்மினி திருமணத்திற்கு சம்மதிக்கிறார்

பத்மினியின் முன்காதலன் ஜெமினி என்னவானார்? அவருக்கு அந்த பல லட்ச ரூபாய் சொத்து கிடைத்ததா? எம் ஆர் ராதா பத்மினியின் தியாகத்தை புரிந்துகொண்டாரா? வீட்டை விட்டு துரத்தப்பட்ட முத்துராமன் மருத்துவப்படிப்பை முடித்தாரா?, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதமிருக்கும் இரண்டாம் பாதியின் சுவாரஸ்யம்

அமைதியான பாத்திரத்தில் வழக்கம் போல முத்துராமன். தன்னால் பாழாய்ப்போன அக்காவின் வாழ்வுகுறித்தான குற்றவுணர்வும், எதிர்பாரா காதலுமாக தவிக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்

சிறிய ஆனால் முக்கியமான பாத்திரம் ஜெமினிக்கு. நாகேஷ் இருக்கிறார் நகைச்சுவை இல்லை. விகே ராம்சாமி  சுந்தராம்பாள் ஆகியோரும் உள்ளனர்

பத்மினிக்கும் குழந்தைகளுக்குமான புரிதலும் அன்பும் மிக சுவாரஸ்யம். கணவனின் ஆசைக்காக மாடித்தனியறையில் அந்தரங்கமாக இருக்கையில் தாயெனவே பத்மினியை நினைக்கும் கைக்குழந்தை வீறிட்டு அழுதபடி அவரைத்தேடி படியேறுகையில், அரைகுறையாக ஆடைகளை அள்ளிப்போர்த்திக் கொண்டு  பத்மினி  அறையிலிருந்து ஓடிவந்து குழந்தையை வாரி எடுத்துக்கொள்ளும் காட்சி, வீட்டில் நிம்மதியில்லையென மனைவியை எம் ஆர் ராதா, விடுதிக்கு அழைத்துவருகையில், பத்மினியை அதற்கு முன்னர் பார்த்திராத  நாகேஷ் அவரிடம் பேசும் காட்சி , மகளுடனான முத்துராமனின் காதலை அறிந்து எம் ஆர் ராதா அவரை அடித்து துரத்தும்போது, மிக அமைதியாக பத்மினி பேச ’’ என்னடி பெரிய கவர்னர் ஜெனெரல் மாதிரி பேசிட்டு போறே’’ என்று துவங்கி  கணவன் மனைவிக்குள் நடக்கும் உரையாடலும், எம் ஆர் ராதாவின் ஆக்ரோஷமும் அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களும், பத்மினியின் எதிர்வினைகளுமாய் இருக்கும் அந்தக்காட்சி இப்படி பல உணர்வு பூர்வமான நம்மை நெகிழவைக்கும் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு

 பத்மினி ,எம்.ஆர் ராதவுக்கு இணையாக நடித்திருபப்து கைக்குழந்தையான அந்த ராணிப்பாப்பா. பத்மினியைபோலவே ஆடுவதும், அவருடன் எபோதும் ஒட்டிக்கொண்டே இருப்பதும், கன்னத்தை பிடித்து முத்தமிடுவதுமாக அந்தகுழந்தை கண்ணையும் மனசையும் நிறைந்துவிடுகின்றாள். பார்த்துக்கொண்டிருப்பது திரைப்படம் என்பதே அக்குழந்தையினால் மறந்துபோகும் அளவுக்கு நெகிழ்ச்சியான காட்சிகள் அந்தக்குழந்தை வரும் காட்சிகளெல்லாம்.

பேபி ராணி

பொங்கல் பண்டிகை ரிலீசென்பதால் டைட்டிலிலேயே கரும்பும் வாழையும் தேங்காய் பழமும் பொங்கல் பானையும் மங்கல இசையுமாக படம் துவங்குகின்றது.

டைட்டிலில் எவர்சில்வர் பாத்திரங்கள் என்றெல்லாம் போடுவதை சுவாரஸ்யமாக பார்க்கலாம். இப்போது உலகத்திரைப்படங்கள் கைவிரல் நுனியில் ஒரு தட்டலில்  காணக்கிடைக்கும் காலத்தில் இப்படி பாத்திரங்கள் வாங்கியது முதற்கொண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு பழைய திரைப்படத்தை பார்க்கையில், நம் தமிழ் சினிமா கடந்து வந்த அந்த நீண்ட பாதை பெரும்பிரமிப்பை உண்டாக்குகின்றது. அப்போதும் இப்போதும் திரைத்துறையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குறித்த ஒரு சித்திரத்தை சித்தி நமக்களிக்கின்து.

குழந்தை பிறந்திருக்கும் அறையின் வாசலிலேயே ஜோதிடர் காத்திருப்பது, தனது அம்மாவுக்கே 3 பிரசவத்தை மகள் பத்மினி பார்ப்பது, அப்போதைய கூட்டுக்குடும்பத்தில் தண்ணீர் பில்டரின் அளவிலிருக்கும் பெரிய காபி ஃபில்டர், விஸ்தாரமான  சமையலறை, 8 பேர் 2 ரூபாயில் சாப்பிட முடியும் பொருளாதார நிலை, ஒரு பெண் ஹோட்டலுக்கு போவது என்பதே மற்றொரு பொருளில் சொல்லப்படுவது  என்பது போல  இப்போதைய தலைமுறை ஆச்சர்யத்துடன் ரசிக்க ஏராளமான விஷயங்களும் சித்தியில் உள்ளது.

உணர்வுபூர்வமாக அபிநயங்களுடன் நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புடன் பத்மினி பேசும் வசனங்களுக்காகவே பலமுறை சித்தியை பார்க்கலாம். அகலக்கண்களை மலர்த்தி மலர்த்தி அவர் பேசுவதே அத்தனை அழகு. ஆற்றில் குளித்துக்கொண்டே பத்மினியும் ஜெமினியும் பாடும் ஒரு டூயட்டும்  ஆச்சர்யமாக சித்தியில் உண்டு

  //ஏழைகள் வயசுக்கு தகுந்தபடி வாழக்கூட முடியாதே//, //அட்சதையா அத்தனைபேர் மேல போட்டாக்கூட பத்தாத அரிசியையா சமைக்க எடுத்துட்டு போறீங்க?// என்பது போன்ற ருசிகரமான வசனங்கள் திரைக்கதையை மேலும் செறிவாக்குகின்றது.

ஒரு பெண் நடத்தை தவறுவதும் ஒரு ஆண் தான் அளித்த வாக்குறுதியை தவறவிடுவதும் ஒன்றுதான் என்னும் கருத்தை சொல்லும் பொருட்டு  சில இறுதிக்காட்சிகள் வலிந்து சேர்க்கப்பட்டிருந்தாலும் அந்தகாலத்தில் அது அவசியமானதாயிருந்திருக்கும்.

பெரும்பாலான  அந்தக்காலத்து படங்களைப்போலவே சித்தியும் சுபமாகவே முடிகின்றது. காதலர்கள் ஒன்று சேர்வதும், எம் ஆர் ராதா மனம் திருந்துவதும் ஊமைத்தங்கையை லட்சாதிபதியாகிய ஜெமினி மணம் புரிந்து கொள்ளுவதுமாக, பண்டிகை நாளில் திரைப்படத்தை பர்த்துவிட்டு  நிறைவுடன் ரசிகர்கள்  வீடு திரும்பியிருப்பர்கள் என்பதை நாமும் அதே நிறைவுடன் உணருவோம்.

Fracture

பிரபல நடிகரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான  ஆண்டனி ஹாப்கின்ஸ் மற்றும்   ’லா லா லேண்ட்’ புகழ் ரையான் கோஸ்லிங் (Anthony Hopkins & Ryan Gosling) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ’த்ரில்லர்’ வகை ஆங்கிலத் திரைப்படமான Fracture, 2007ல் வெளியானது.  

மணவாழ்க்கையில் தனக்கு துரோகம் செய்த மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கும், நீதிமன்றத்தில் அவருக்கெதிராக வழக்காடும் வக்கீலுக்கும் இடையிலான  மனக்கணக்குகளும், பிரத்யேக சவால்களும், போராட்டமுமே கதை. இந்த வகைப்படங்களில் இது மிக விறுவிறுப்பான ஒன்றென சொல்லலாம். ஏப்ரல் 20, 2007ல் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,500 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

இயக்கம் Gregory Hoblit, கதை Daniel Pyne, திரைக்கதை Glenn Gers மற்றும் Daniel Pyne. இசை ஜெஃப் மற்றும் மைக்கேல், ஒளி இயக்கம் Kramer Morgenthau. படத்தொகுப்பு David Rosenbloom, தயாரிப்பு Charles Weinstock (Castle Rock Entertainment).  

பிரபல நடிகை Rosamund Pike மற்றும் David Russell Strathairn  ஆகியோரும் குறிப்பிட்டு சொல்லும்படியான  சிறிய பாத்திரங்களில் இருக்கின்றனர்.

செல்வந்தரும், அதிபுத்திசாலியும், துணிச்சல்காரருமான, சிறுவயதிலிருந்தே மிக நுட்பமானவரகவே அறியப்பட்ட  டெட் (ஆண்டனி) தன் மனைவி ஜோஸபினுக்கும் காவலதிகாரி ராப்’க்கும் இடையேயான  நெருக்கமான உறவை அறிந்து மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.  குற்றம் நடந்த இடத்திலேயே கைதும் செய்யப்படுகிறார். நீதிமன்றத்தில் இவருக்கெதிராக வழக்காடும் வில்லியிடம் (ரையான்) வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாதபடிக்கு சாமார்த்தியமாக  விளையாடுகிறார்.  குற்றத்தில் தொடர்புடைய துப்பாக்கியையும் காவல் துறையால் கண்டு பிடிக்க முடியவில்லை என்னும் போது இறுதி வெற்றி யாருக்கு, எப்படி என்பதே  கதை.

எல்லாம் சரியாக இருப்பதுபோல் வெளித்தோற்றமிருப்பினும்  hair line fracture எனப்படும்  வெளியில் தெரியவே தெரியாத  மிக மிக லேசான நுட்பமான விரிசல் உள்ளிருக்கும் சாத்தியங்கள் இருப்பதைப்போல, தங்களுக்குள்ளிருக்கும் பலவீனங்களை டெட் மற்றும் வில்லி  இருவரும் பரஸ்பரம் கண்டடையும் முயற்சியில் இறுதிக்காட்சி வரை ஈடுபட்டிருப்பதால் இத்திரைப்படத்திற்கு  fracture என்று பெயர்.

ஆண்டனியும் ரையானும் போட்டி போட்டுக்கொண்டு திரையை நிறைத்துவிடுகிறார்கள். இருவருமே முழுப்படத்தின் பெரும் பலம். இசை ஜாம்பவான்களின் புகைப்படங்கள் இருக்கும், மிக அழகிய மெல்லிய வெளிச்சமுள்ள அந்த வீடு,  சிறப்பான காமிரா கோணங்கள், மிக அழகாக கட்டமைக்கப்பட்ட காட்சிகள், புழுதி கிளப்பிக்கொண்டு டெட் செல்லும் அந்த பிரமாதமான porsche Carrera GT கார், மாறி மாறி குற்றவாளியும் வக்கீலுமாக ஒருவரை ஒருவர் வெல்ல செய்யும் முயற்சிகள்,  நேர்த்தியான, சுவாரஸ்யமான திரைக்கதை, கோமாவில் இருக்கும் ஜோஸபின்,  ஒரு தற்கொலை, மிக எதிர்பாரா இறுதிமுடிச்சு என காட்சிகள்  தொய்வின்றி செல்லுகிறது.

மணவுறவைத் தாண்டிய பந்தத்திலிருந்த, தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்வது, மனைவியின் காதலனையும் சிக்கலுக்குள்ளாக்குவது, எதிராக வாதாடுபவரையும் தோற்கடிப்பது, தன்னம்பிக்கையை எந்த நேரத்திலும் இழக்கமால் இருப்பது என டெட்’ ஆக ஆண்டனி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

எப்படியும் இந்த வழக்கின் உண்மையை கண்டுபிடிக்க முயல்வது, கோமாவிலிருக்கும் ஜோஸபினுக்கு புத்தகம் வாசித்து காண்பிப்பது, நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தோற்று திகைத்து நிற்பது, உயரதிகாரியுடன் மோதல் இருந்தாலும் அவருடன் நெருக்கமாகவும் இருப்பது, எதையாவது மென்றுகொண்டும், அருந்திக்கொண்டும், வசீகரமாக சிரித்துக்கொண்டும் ரையானும் வில்லியாக உள்ளம் கொள்ளை கொள்ளுகிறார்.

டெட்’டின் அந்த வன்மம் நிரம்பிய, எதிரிலிருப்பவர்களை எரிச்சலூட்டும் தந்திரமான சிரிப்பும், மிகத்தேர்ந்து அவர் பேசும் வசனங்களும் சிறப்பு அவற்றுக்காகவே படத்தை மீண்டுமொருமுறை பார்க்கலாம்

முதல் காட்சியிலேயே நம் கண்ணெதிரே மனைவியை சுட்டுக்கொன்றவன், கையும் களவுமாக பிடிபட்டதும், காவலதிகாரிகள் முன்பு  கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்து, கைதும் செய்யபட்ட  பின்னரும் open and shut case  என்ற வகையான இக்குற்றத்தில், திரைக்கதையில் பிறகென்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும் எனும் கேள்விக்கான பதிலே இத்திரைப்படம்.

Your wife? Is she OK?  ’’ I don’t think she is. I shot her.’’

’’I took both the bastards out with one f—-g bullet’’

’’Knowledge is pain’’ போன்ற மிக நுட்பமான வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. இத்திரைப்படத்தின் சற்றே மாறுபட்ட  கூடுதல் காட்சிகள் இருக்கும் ஒரு பிரதியும் DVD யில் கிடைக்கிறது.

கைக்கடிகாரம் தெளிவாக நேரம் காட்டுகையில் அதற்கு முற்றிலும் மாறான ஒரு நேரத்தை கதாபாத்திரம் குறிப்பிடுவது, தயாரிக்கும் போதே துப்பாக்கி சரியாக வெடிக்குமா என சோதிப்பது வழக்கமென்பதால், குற்றம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த துப்பாக்கி ஒருமுறை கூட சுடப்பட்டதல்ல என்பது போன்ற வாக்கு மூலம், மருத்துவமனையில் ஜோஸபினை உயிருடன் வைத்திருக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்புக்களை அகற்றுவது  குறித்தான நீதிமன்ற  தடையுத்தரவுடன் வந்திருக்கும் பிரபல வக்கீலை, அதை அதை அவரே குறிப்பிட்டும் கூட  உள்ளே செல்லவிடாமல் காவலதிகரிகளே தடுப்பது,  தொலைபேசியில் பதிவாகி இருக்கும் வாய்ஸ் செய்திகளின் எண்ணிக்கை குழப்பம், வில்லி  புத்தகத்தை தலைகீழாக வைத்துக்கொண்டிருப்பது, ஒரு சில continuity shot களில் இருக்கும்  குழப்பங்கள், ராப் தற்கொலை செய்துகொண்ட மாடிப்படியின் மேல்பகுதியில் ரத்தம் சுவற்றில் சிதறி இருக்கையில் கீழே உருண்டு விழுந்திருக்கும் சடலத்தின் அருகில் துப்பாக்கியும் எப்படியோ சரியாக வந்து சேர்ந்திருப்பது, சாத்தியமே இல்லாத ஒன்றாக துப்பாக்கியை டெட் சிறை அலுவலகத்தில் சமர்த்திருப்பது, போன்ற நுண்மையான தவறுகளை கண்டுகொள்ளாமலிருந்தால், வெள்ளிக்கிழமை மாலைக்கான மிகபொருத்தமான  திரைப்படம் இது.

ஆனந்தரங்கம் பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு

செப்டம்பர் 18 லிருந்து 29 வரை 12 நாட்களாக அகநி வெளியீடு, ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் 12 தொகுப்புக்களாக வந்திருக்கும் நாட்குறிப்பை குறித்த இணைய வழி தொடர் அறிமுக ஆய்வரங்கத்தை நடத்தினார்கள். மாலை 7 மணிக்கு மேல் என்பதால் வகுப்புகளை முடித்துவிட்டு நானும் எல்லா நாட்களிலும் கலந்துகொண்டேன். நான்  முதன்முதலாக கலந்துகொண்ட/கேட்ட வரலாற்று உரைகள் இவையே. நான்காம் நாளிலேயே அகநிக்கு அனுப்பாணை பிறப்பித்து 12 தொகுதிகளையும் வாங்கிவிட்டேன் அத்தனை சிறப்பாக  இருந்தது அறிமுக ஆய்வரங்கமும், நாட்குறிப்பின் உள்ளடக்கமும்.

ஒவ்வொரு தொகுதியையும் ஒவ்வொரு ஆளுமைகள் என  டாக்டர் சுதா சேஷையன், திரு இந்து என். ராம்,  பேராசிரியர் கு.ஞான சம்பந்தன், கவிஞர்,சாம்ராஜ், (2 தொகுதிகள்), ஆய்வாளர் கடற்கரய் மத்தவிலாச அங்கதம், எழுத்தாளர் ஜோ டி குரூஸ், திரு.கோம்பை அன்வர், முனைவர் பக்தவச்சல பாரதி, திரு சீனிவாசன் நடராஜன், பேராசிரியர் இ. சுந்தர மூர்த்தி, எழுத்தாளர் ச. தமிழ்செல்வன் ஆகியோர் பேசினார்கள்.

ஒவ்வொரு ஆளுமையும் அவரவர் கோணத்திலிருந்து ஒவ்வொரு தொகுதியின் மிக முக்கியமான பகுதிகளை எடுத்துக்கூறினார்கள், குறிப்பாக ஜோடி குரூஸ் அவர்கள் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பிலிருந்த கடல்வணிகம் பற்றி கூறியது வெகு சிறப்பாக இருந்தது, அவர் குரல் ஆனந்தரங்கம்பிள்ளையின் குரலாகவே ஒலித்தது. ”வேகமாக வந்து துறையை பிடிச்சுட்டான். தீனி சேகரிக்க போன கப்பல்” போன்ற சொற்றொடர்களை அவர் கடல்வாழ்விலேயே இருந்தவராதலால்   மிகச் சிறப்பாக விளக்கினார். Ship chandling எனப்படும் கப்பல் நகர்கையிலேயே எரிபொருள், குடிநீர், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை சேகரிப்பதே தீனி சேகரித்தல் என பிள்ளையவர்களால் குறிப்பிடப்பட்டிருக்கிறது போன்ற பலவற்றை விளக்கினார். 12 பேச்சாளர்களுமே ஆனந்தரங்கம் பிள்ளை வாழ்ந்த காலமெனும் கடலுக்குள் எங்களை இழுத்துச்சென்ற அலைகள் என்றால் ஜோ டி குரூஸ்  பேரலையென வந்தார். கடல்வணிகம் குறித்து சொல்லுகையில் அவருடைய பாவனைகள் எல்லாம் அத்தனை அழகு.

ஜோ டி குரூஸ்

ஆனந்தரங்கம் பிள்ளை அவர் வாழ்ந்த காலத்தின் சூழலை ஆழ்ந்து கவனித்து அதிலே தன்னை உணர்வுபூர்வமாக பிணைத்துக்கொண்டு 25 நீண்ட வருடங்களை மிக விளக்கமாக பதிவு செய்திருப்பது ஆச்சர்யமளிக்கின்றது.  பேரேடுகளில் எழுதப்பட்ட இந்த நாட்குறிப்புகள், 1736ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதியில் ஆரம்பித்து, 1761. ஜனவரி 12  வரை எழுதப்பட்டிருக்கிறது.

அப்போது இந்தியர்களுக்கு நாட்குறிப்பெல்லாம் எழுதும் வழக்கம் இருந்திருக்காது. பிரெஞ்ச் ஆட்சியாளர்களின் அந்த வழக்கம் பிள்ளையையும் தொற்றிக்கொண்டிருக்க வேண்டும்.

கலகத்தாவில் ஒரு சிற்றறையில் நூற்றுக்கணக்கானவர்களை அடைத்து வைத்து மறுநாள் திறக்கையில், மூச்சுத்திணறியே பலர் உயிரிழந்த black hole tragedy, தண்டனையாக பலரை தூக்கிலிட்டது, கசையடி கொடுத்தது, காதுகளை அறுத்தது, மிகப்பெரும் ஆளுமைகள் தலை கொய்யப்பட்டது, கொள்ளை, கொலை, சூது, ஊழல், என பல உச்சதருணங்களை பதிவு செய்திருக்கிறார். .

என்னை மிகவும் கவர்ந்தது அவரது மொழிநடை. முன்னூறு வருஷங்களுக்கு முந்தைய பேச்சுவழக்கில்  எழுதியிருப்பதால் பின்தொடர ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகவும் பின்னர் பழகியும்  பிடித்தும் விடுகிறது. அவர் பன்மொழிப்புலமை கொண்டிருந்ததால் பல மொழிகளை அவராகவே கலந்தும் பிரயோகித்திருக்கிறார் உதாரணமாக அறிவித்தான் என்பதை ஆங்கிலத்தையும் தமிழையும் கலந்து ’டிக்ளரித்தான்’ என்கிறார். //’உட்டாவுட்டியா’ அங்கே போய் சேர்ந்துட்டான்// என்கிறார் வெகுவேகமாக என்பதை. பரபத்தியமென்பது கடன், பதிலாமி என்பது மானக்கேடு, நடுக்காம்பீறோ என்று நடு அறையை, இப்படி. இவர் உபயோகபடுத்தியிருக்கும் சொற்களைக் குறித்தே தனியாக விரிவான  மொழியியல் ஆய்வை துவங்கலாம்.

பல இடங்களில் கவித்துவமாகவும் , துணிச்சலாகவும் எழுதியிருக்கிறார்

//ஆனாலின்றைய தினம் பயந்தவர்களுக்குள்ளே வெள்ளைக்காரர் வெள்ளைக்காரச்சிகளுக்கு நம்முடைய தமிழர்கள் வெகு தைரியவான்களென்று நூறு தரம் சொல்லலாம்//

//அவர்களைப் பின் தொடர அனுப்பி வைக்கப்பட்ட உளவாளி அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவர்கள் பின் தொடர்வதனை உணர்ந்த ஒரு குதிரைக்காரன் அவனை நோக்கி வேகமாக வந்து வாளினால் தாக்க முயன்றான். உளவாளி தன் கையில் வைத்திருந்த தடியினால் ஓங்கி அடித்து குதிரைக்காரனின் வாளைத் தட்டி கீழே விழ வைத்துவிட்டு, உடனடியாக கடலூரின் செயிண்ட் டேவிட் கோட்டைக்குச் சென்று அங்கிருந்த கவர்னரிடம் இதனைக் குறித்துக் கூற, அவனுக்கு இரண்டடி அகல இடுப்புத் துணியும், ஏழு பகோடாப் பணமும், இருபது நாழி அரிசியும் பரிசாக வழங்கப்பட்டன//

//அதே நாளில் சிறிது நேரம் கழித்து ஐம்பதிலிருந்து அறுபதுவரையுள்ள மராத்தா குதிரைப்படையினர் பாகூருக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது//

 //பின்னர் நம்பியானும் இன்னும் நான்கு பிராமணர்களும் அவர்களது அக்ரஹாரத்திற்கும், பிற தெருக்களில் இருந்த ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று ‘ஈஸ்வரனுக்கு பூஜை புனஸ்காரங்கள் எதுவும் நடக்காது. ஈஸ்வரன், பராசக்தியின் மீது ஆணையாக நீங்கள் வீட்டில் ஒன்றும் சமைக்கவோ அல்லது சாப்பிடவோ கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

வியாழன், ஜூன் 11-1739, சித்தார்த்தி வருடம் ஆனி//

//செவாலியே டூமாஸ், பாண்டிச்சேரியின் கவர்னர் கீழ்க்கண்ட உத்தரவை இன்றைக்குப் பறையடித்து அறிவித்தார். ‘நகர எல்லைக்குள்ளோ அல்லது கடற்கரையிலோ அல்லது செயிண்ட் பால் சர்ச்சின் தெற்காக ஓடும் உப்பாற்றின் கரையிலோ அல்லது பொதுச் சாலையிலோ மலஜலம் கழிக்கக் கூடாது. இந்த உத்தரவை மீறும் எவரும் ஆறு பணம் அபராதம் செலுத்த வேண்டும். அதில் இரண்டு பணம் இந்தச் செயலைக் கையும், களவுமாகப் பிடிப்பவர்களுக்கும் மீதிப்பணம் கோர்ட்டின் நிதியிலும் சேர்க்கப்படும்.இந்த உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டு மனமுடைந்த பொதுமக்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது//.

இப்படி  ஒவ்வொரு சம்பவமாக ஒவ்வொரு பக்கங்களிலும் அவர் விளக்கமாக எழுதியிருக்கும் எல்லாமே வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது.. ஒரு கூட்டத்தில் கலவரமென்று எழுதுகையில் அந்த கூட்டத்திலிருந்த பலவகைப்பட்டவர்களையும் குறித்து தனித்தனியாக எழுதுகிறார். அக்கால சமூகத்தைப் பற்றிய மாபெரும் ஆவணம் இது.

ட்யூப்லெக்ஸும் மதாமும்  ஒரு கலியாணத்திற்கு வருகை தந்ததை, //அவர்கள் கலியாணப்பந்தலில் அமர்கையில், மாப்பிள்ளை பெண்ணை விசாரிக்க எழுந்திரிக்கையில், இனிப்பு சாப்பிடுகையில், மீண்டும் கலியாணத்திலிருந்து புறப்படுகையில் என்று 21 குண்டுகளை நான்கு முறை முழங்கியதையும் கல்யாணத்துக்கு வந்ததற்காக துரைக்கு ரூபாய் ஆயிரமும் மதாமுக்கு  நூறும் பன்னீரும் சர்க்கரையும், தாம்பூலமும் வைத்து கொடுக்கப்பட்டது// என்று எழுதியிருப்பதை  படிக்க அத்தனை சுவையாக இருக்கின்றது.

Wet mothers எனப்படும் பாலூட்டும் தாய்களை பற்றிய பதிவும் ஆச்சர்யமூட்டியது. பிரெஞ்சு குழந்தைகளின் நலனுக்கென தமிழ்ப்பெண்களை பாலூட்டவென அமர்த்தியிருக்கிறார்கள். இதை நான் முதன்முறையாக கேள்விப்படுகிறேன்.

சந்தா சாஹிப் செங்கல்லை  துணிபோட்டு மூடி குரான் என பொய் சத்தியம் செய்தது, ’’மூட்டை தூக்க வா கூலிதருகிறென் என்று சொல்லி உள்ளே வந்ததும் மொட்டையடித்து காலில் விலங்கு பூட்டி, ஏமாற்றியும் கடத்தியும் அடிமைகள் பிடிக்கப்பட்டது, காரைக்காலை கைப்பற்ற நடந்த போராட்டம், மன்னருக்கு பிரெஞ்சுகாரர்கள் வெகுமானங்கள் அனுப்பி வைத்தது, பீரங்கி குண்டுகள் போட்டது, எத்தனை குண்டுகள் என்ற எண்ணிக்கை, மிக நீளமான வால்நட்சத்திரம் தெரிந்தது, போரே செய்யாமல் எப்படி கிளைவ் வெற்றி பெற்று பெரிய புகழுக்குள்ளாகினாரென்பது, இப்படி அவர் பதிவு செய்திருக்கும் அனைத்திலிருந்தும் கிடைக்கும் சித்திரம் அப்படியே அந்த காலத்தை நம் கண்முன்னே கொண்டு வந்துவிடுகிறது. சாம்ராஜ் சொன்னதுபோல அன்றைக்கு இருந்த பிரஞ்சு அரசு இயந்திரத்தின் மிக முக்கியமான, பெரிய பல்சக்கரம் ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள்.

 முக்கியம் முக்கியமல்ல என்று பாகுபாடில்லாமல் அவரைச்சுற்றிலும் நிகழ்ந்த நுட்பமான பல்லாயிரம் தகவல்களை உண்மையாகவும் நேர்மையாகவும் பதிவு செய்திருக்கிறார். இத்தனை வருடங்கள் தொடர்ந்து எழுத அவருக்கிருந்த தைரியமும் ஒழுங்கும் வியப்பளிக்கின்றது.

நோட்டமிடுவது, போரிடுவது,  வரிவசூல், ஊழல், வெற்றி தோல்வி, அரசு நிர்வாகம் என விரிந்து விரிந்து அப்போதைய  அரசை, சமூகத்தை , பண்பாட்டை குறித்த பெரும் சித்திரத்தை கொடுக்கிறது இந்த நாட்குறிப்புக்கள்.

ஆனந்தரங்கம் பிள்ளை

அவரது குடும்பவிவரங்களையும் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லி இருக்கிறார் ஜோதிடம் பார்த்தது, எண்ணெய் தேய்த்துகுளித்தது, காலாற நடக்க நினத்தது, மூல நோய் இருந்தது, போன்ற மேலோட்டமான தகவல்கள் இருக்கின்றன. தம்பி மகனை எப்போதும் சிரஞ்சீவி எனவும், மாமனாரை மிக மிக மரியாதையாகவும் குறிப்பிடும் பிள்ளை தனக்கு ஆகாதவர்களை இஷ்டம்போல் வைதும் எழுதுகிறார். தனக்கு 22 வயதில் முதல் குழந்தை பிறந்ததையும் பின்னர் 38ஆவது வயதில் பிறந்த கடைசி மகனையும் பற்றி விவரங்களையும், அவர்கள் பிறந்தபோது பிறருக்கு அவர் மகிழ்ந்தளித்த வெகுமானங்களையும் சின்ன பொன்னாச்சி, நன்னாச்சி. அய்யாவு என குழந்தைகளின் பெயர்களையும், அவர்களின் ஜாதகக்குறிப்புக்களையும் கூட பதிந்திருக்கிறார்.

தனக்கு நிகராக அதிகாரத்தில் தன் தம்பி மகனை கொண்டு வர அவர் செய்யும் முயற்சிகள், அவரது மகள் இறந்துபோவது, தம்பி மகனை கூடவே வைத்திருந்து ஆவணங்களை எழுதச்சொல்லிக்கொடுப்பது, ஆகியவை நாட்குறிப்பிலிருந்து நமக்கு தெரிய வருகின்றது. பிள்ளையவர்களின் கடைசி மூன்று மாத குறிப்புக்களைக்கூட அவரது தம்பி மகனே எழுதியிருக்கலாமென கருத இடமுள்ளது. பிற செய்திகளுடன் ஒப்பிடுகையில் தனது சொந்த வாழ்வை  மிக விரிவாக பிள்ளையவர்கள் பதியவில்லை. தான் வாழ்ந்த அந்த சூழலையே தன் சொந்த வாழ்வைக்காட்டிலும் அக்கறையுடன் கவனித்திருக்கிறார்.

ஈரானிய ஜாதி என்கிற ஒரு சொற்பிரயோகம் ஜாதிகளைக்குறித்த இன்றைய அடையாளங்களுடன்  ஒப்பிடுகையில் மிக வித்தியாசமாக இருக்கின்றது. 98 சாதிகளைப்பற்றிய குறிப்புக்களும் பிள்ளையவர்களின் நாட்குறிப்பில் தெளிவாகவும் விவரமாகவும் பதிவாகி இருக்கிறது. திருமணங்களில் ஆயுதம் தாங்கிய வீரர்களை ஊர்வலத்தில் அணிவகுத்துவர வாடகைக்கு அமர்த்துவது குறிப்பிட்ட ஒரு சாதியின் தனிப்பட்ட உரிமையாக இருந்திருக்கிறது.

ஒரு கவர்னர் // இவர்களை மோசம் பண்ணுவதை தவிர வேறு வழியில்லை, நம்பிக்கைகுகந்தமாதிரி நடந்துகொண்டு பின்னர் மோசம் பண்ணிவிடு’// எனச்சொல்லிய செய்திகளையும் அவர்  துணிச்சலாக எழுதியிருக்கிறார்

பிரெஞ்சு படையில் மராட்டியப்படைவீரர்கள் இருந்ததை பிள்ளையவர்களின் குறிப்பிலிருந்து தெரிந்துகொள்ள முடிகின்றது, வேதபுரீஸ்வரர் கோவிலை இடிக்கும் பதட்டமான காலகட்டத்தின் போது //நிறுத்தினால் நல்லது, நிறுத்தாவிட்டால் இன்னும் நல்லது// என்கிறார். சந்தாசாஹிப்பின் குடும்பங்களில் நடைபெற்ற திருமணங்களை பற்றிய  தகவல்களும் வாசிக்க மிக அருமையானவையாக இருந்தன.

மிக செல்வாக்கான, ஏறக்குறைய ஒரு மன்னரைப்போல சொந்தமாக கப்பலும், துணி மற்றும் சாராய வியாபாரங்களும், செய்துகொண்டிருந்த, பலல்க்கில் பவனி வந்த, கவர்னர் மாளிகைக்குள்ளேயே செருப்பணிந்துபோகும் உரிமை இருந்த, தங்கப்பூண்போட்ட கைத்தடி வைத்திருந்த, கவர்னர்களே பிள்ளையை எதிர்கொண்டு கட்டித்தழுவி வரவேற்பதும், விடைகொடுக்க வாசல்வரை வரும் கெளரவத்தையும் கொண்டிருந்த,  மிக முக்கியமான் பொறுப்புக்களிலிருந்த பிள்ளையவர்கள் மின்சாரமில்லாத அந்த காலத்திலும் நள்ளிரவு வரை அரசாங்ககாரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் அளவுக்கு பணிச்சுமையிலிருந்தும், இப்படித் தொடர்ந்து 25 வருடங்கள் நாட்குறிப்பை,  மிக மிக விவரமாக தெளிவாக அவரது செல்வாக்கான காலத்தை மட்டுமல்லாது  வாழ்வின் இறுதியில் அவரது பதவி பறிக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டு, கடனாளியாக நின்ற கடைசி நிமிஷம் வரையிலுமே  கைப்பட எழுதி பதிவுசெய்திருப்பதன் காரணத்தை யூகிக்கவே முடியவில்லை. இந்தப்பணிக்கென அவர் செலவிட்டிருக்கும் நேரத்தை குறித்து எண்ணுகையிலும் பிரமிப்பாக இருக்கிறது.

பிள்ளையவர்கள் சொல்லி இருக்கும் இரவில் நடந்த திருமணங்கள் குறித்து சொல்லுகையில் திரு கு,ஞானசம்பந்தம் சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நள்ளிரவில் பால் வடியும் மரங்களின் அடியில் நடைபெறும் திருமணங்களைக் குறித்தும் சொன்னார்.

  வீட்டுபெண்களை, கலவரங்களின் போது பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சாத்தியங்களிலிருந்து தப்புவிக்க வெடிமருந்துகொண்டு குடும்பத்தினரே கொல்லுவது, பேசிக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருப்பவனின் கழுத்தை வெட்டியவன், பின்னர் ஆயுதத்துடன் சரண்டைவது என்பதுபோன்ற  அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் ஏராளம் சொல்லப்பட்டிருக்கின்றன.

ஒரு விருந்தில் கைதிகளும் அழைக்கப்பட்டு ஒரே மேசையில் அமர்ந்து சமமாக சாப்பிட்டது, சந்தா சாஹிப் துரையிடம் பணம் கேட்பது, அக்கினி மாந்தியம் என்னும் நோய்க்கான மருந்தை ட்யூப்லெக்ஸ் பலருக்கு கொடுத்துவந்தது, ஒட்டு மாம்பழங்களின் சுவையும் அவற்றை உருவாக்கும்  முறையும், ரகசிய பயணங்கள், .ரகசிய கொள்ளைத்திட்டம் என பலதரப்பட்ட பதிவுகளை பார்க்கமுடிகின்றது நாட்குறிப்பில்.

ஏறக்குறைய ஆயிரம் கப்பல்களின் பெயர்களை, அந்தந்த கப்பல்களின் மாலுமிகளின் பெயர்களுடனும், கப்பல் வேலையாட்களின் பெயர்களுடனும் அவர் சொல்லி இருப்பது பிரமிப்பூட்டுகிறது. அதிகம் வெளியே சென்றிருக்காத பிள்ளை, இருந்த இடத்திலிருந்தபடிக்கே   சுமத்ரா தீவுகளில் நடந்தவற்றை, பிரான்ஸில் நடந்தவற்றையெல்லாம் நுட்பமாக, விஸ்தாரமாக எழுதி ஆச்சர்யபடுத்துகிறார். பிரெஞ்சு அதிகாரிகளின் பதவி வரிசைகளை  வரிசையாக சொல்லும் பிள்ளையின் நினைவாற்றலும் அறிவும் வியப்பளிக்கின்றது

 மதாமின் அம்மா  இறந்த போது கறுப்பு உடையுடன் நடந்த ஊர்வலம் ,இரவு முழுதும் வெடிகள் வெடித்தது என்பது போன்ற விவரணைகளை பிள்ளையின் மொழியில் வாசிக்கையில் எப்படி எல்லாம் அனுபவித்திருக்கிறார்கள் வாழ்வை என்ற எண்ணம் தவிர்க்கவே முடியாமல் ஏற்படுகிறது அதில் இன்னொரு முக்கியமான குறிப்பையும் பிள்ளை பதிவு செய்திருக்கிறார்.  இறந்துபோன அந்த அம்மாள் பிள்ளையிடம் தான் வாங்கிய கடனை வட்டியுடன் ஒரு பையில் போட்டு அவருக்கு திருப்பி கொடுக்கும்படியும், கடனை எதிலும் எழுதி வைத்துக்கொள்ளும் வழக்கமில்லாத பிள்ளையை சற்று கவனமாக இருக்கும்படியும் சொல்லச்சொல்லி தன் இளைய மகனிடம்  இறப்புக்கு முன்னர் சொல்லி இருக்கிறார்.  துபாஷியாக இருந்தவரின் மீது துரைகளுக்கு அன்பிருந்தது போக, துரையின்  மாமியாரான அந்த பிரெஞ்சு பெண்மணிக்கும் பிள்ளையின் மீதான இந்த கரிசனத்தை அறிந்துகொள்ளுகையில் பிள்ளையவர்களை குறித்த ஒரு பிரியம் நமக்கும் ஏற்பட்டுவிடுகிறது. கூடவே கடனை வட்டியுடன் திருப்பி கொடுத்திருக்கும் அந்த அம்மாளின் நேர்மையும் கவனிக்க வைக்கிறது.

நடந்த விஷயங்ளை அப்படியே எழுதியிருக்கும் பிள்ளை பல நிகழ்வுகளை குறித்த தனது யூகங்களையும், கருத்துக்களையும் வருத்தங்களையும் கூட  பதிந்திருக்கிறார்.  

பிராமணர்களுக்கு உணவளிக்க ஒரு கிராமமே தானமாக கேட்கப்படுகையில் எப்படி நாசுக்காக பதிலளிக்க வேணும் என பிள்ளையே துரைக்கு ஆலோசனை சொல்லுகிறார்

எந்தெந்த சாதிகளிலிருந்தெல்லாம் ஆட்களை படையில் சேர்க்கலாமென்னும் விவாதத்திலும் பிள்ளையே தேவையானவற்றை பரிந்துரைக்கிறார். பிள்ளையவர்களின் செல்வாக்கை இப்படி பல செய்திகளின் மூலம் நாம் புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆற்காடில் சின்னமை நோய் பரவி, ஆயிரக்கணக்கில் இறப்பு நிகழ்ந்ததை, அச்சமயத்தில் பல பெண்களுக்கு  அருள் வந்ததை, முதலில் இகழ்ச்சியாக பேசிய இஸ்லாமியர்களும் பின்னர் வீட்டு வாசலில் வேப்பிலைக்கொத்தை செருகி வைத்துக்கொண்டதை,  ஒரு ’அம்மன்’ தனக்கு நகைவேண்டுமெனக்கேட்டு அதை கொடுக்கவும் தயாரானதையெல்லாம் சொல்லும் பிள்ளை  ஒரு  அம்மனைக்குறித்து கிண்டலாக எழுதியிருக்கும் கடிதமொன்றை  புன்னகையுடனே தான் வாசிக்க முடியும்

அரசர் கொடுத்தனுப்பிய உணவை மறுத்த விருந்தினருக்கு  தண்டனையாக அரசர் முன்னிலையில் மீண்டும் முழுக்க சாப்பிட வைத்த நெருக்கடியான நிகழ்வை, பிச்சைக்காரர்களுக்கும், பைத்தியக்கார்களுக்கும் விடுதிகள் இருந்ததை, திருமணமாகாத பெண்களுக்கு நிதி உதவி செய்யும் திட்டமிருந்ததை  இப்படி ஒன்றுவிடாமல் பதிவுசெய்திருக்கிறார் பிள்ளை..  

இறுதிப்பகுதிகளில் கலவரம், சண்டை, கொள்ளை மக்களின் துன்பம் பிண்டாரிகள் என்கிற வடஇந்தியகொள்ளையர்கள் என்று பல முக்கியமானவற்றை குறித்தும்  எழுதியிருப்பவர், தான் முன்புபோல மதிக்கப்படாமல் போனதைக் குறித்த  புலம்பல்களை சொன்னாலும் வேலியே பயிரை மேயுதென்றும்  துணிந்து சொல்லுகிறார் சீதாராம ஜோசியரிடம் ஜோசியம் பார்த்துக்கொண்டது, பிரெஞ்சு கவர்னர்கள் கூட ஜோசியத்தை நம்பியது, 20 நாட்கள் இடைவெளியில் எல்லாம் ஜோசியம் பார்த்த செய்திகள், //படைவீரர்களும் ஜனங்களும் சோற்றுக்கும் கஞ்சிக்கும் வழியில்லாமலிருந்த காலத்தில்// கொள்ளையில் கிடைத்த நெல்மூட்டைகளை குறித்தும் பிள்ளை எழுதுகிறார்

  அவரது குடும்ப உறுப்பினரின் இறப்பு, தொடரும் கருமாந்திர காரியங்கள்,  ஊரில் கடைகளே இல்லாமல் போனது, அவரது உடல் நலிவுற்றது எனஅவரது வாழ்வையும், அதைப்போலவே  ஏறி இறங்கிய பிரெஞ்சு அரசையும் ஒருசேரச்சொல்லும் இந்த நாட்குறிப்பு பெரும்  வரலாற்றுப்பொக்கிஷம்

பிரெஞ்சுகாரர்களே குடும்பம் குடும்பமாக வேறிடம் தேடிப் போகையில்  பிள்ளை அங்கேயெ இருப்பதும். அத்தனை செல்வாக்குடன் இருந்த பிள்ளை பதவி இழந்து குற்றம், சாட்டப்பட்டு, கடன்பட்டு வீழ்ந்ததும் அவராலேயே எழுதப்பட்டிருப்பதும்  நெகிழ்ச்சியடைய செய்கிறது.  

12 நாட்களுமே பல அரசு அதிகாரிகளும், பேராசிரியர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் சென்னை,பாண்டிச்சேரி உள்ளிட்ட பல இடங்களிருந்தும், கென்யா, கலிஃபோர்னியா, இஸ்ரேல்,சிங்கபூரிலிருந்தும் எழுத்தாளர்களும் வாசகர்களும் கலந்து கொண்டார்கள். இறுதி நிகழ்வில் அய்யா கி ரா வந்து பேசி நிகழ்வை மறக்க முடியாத ஒன்றாக செய்தார். பிரெஞ்சுப்பெண்னை மணம் செய்திருக்கும் நீதியரசர் திரு தாவீது அன்னுசாமி, உடையார்பாளையம் ஜமீன் குடும்பம், ஆனந்தரங்கம் பிள்ளையின் குடும்பத்தினர்  என ஒவ்வொரு நாளும் முக்கியஸ்தர்களும் வந்து சிறப்பித்ததால் தினம் நிகழ்வு களைகட்டியபடியே இருந்தது.

அய்யா கி.ரா

அத்தனை தொகுதிகளையும் முழுக்க படிக்க பலகாலம் ஆகுமென்றாலும் இந்த தொகுப்புக்கள் அவசியம் வீட்டில் இருக்கவேண்டும் என்று முடிவெடுத்தே உடனே வாங்கினேன்..

 வாசிப்பென்பதே அரிதாக போயிருக்கும் இந்தக்காலத்தில் அகநி வெளியீடாக இந்த பெரும்படைப்பு வந்திருப்பதும் வியப்பளிக்கின்றது.  ஒவ்வொரு தொகுதியின் சாரமும் கூடவே  கொடுக்கப்பட்டிருப்பது மிக சிறப்பு. ஆங்காங்கே அடைப்புக்குறிக்குள் சில சொற்களுக்கான விளக்கங்களையும் கொடுத்திருப்பதால் வாசிப்பு மேலும் எளிதாகயிருக்கிறது. தொகுப்புக்களின் இறுதியில் பிள்ளையவர்கள் பயன்படுத்தியிருக்கும் பிறமொழிச்சொற்கள், அவற்றின் மூலச்சொல், பொருள் என பட்டியலிட்டிருப்பதும், சொல்லகராதியையும், பெயர்ச்சொல்லடைவையும் இணைத்திருப்பதும்  மிக பயனுள்ளதாக இருக்கிறது. செம்பதிப்புக்கான அனைத்து இலக்கணங்களையும் இத்தொகுப்பு நூல்கள் கொண்டிருக்கின்றன

பல அரசாங்க கடிதங்கள், கோட்டைகளைக்குறித்த விவரங்கள், ஆனந்தரங்கப்பிள்ளையின் வீடு, நாட்குறிப்பின் முகப்பு, பிள்ளை பயன்படுத்திய பொருட்கள், புகைப்படங்கள், அப்போது பாண்டிச்சேரியின் நுழைவுவாயிலாக  இருந்த  செயின்ட் லூயி கோட்டையின் முகப்பு  உள்ளிட்ட  மிக முக்கிய அரிய புகைப்படங்கள் 90 பக்கங்களிலான பின்ணிணைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

மொழிநடையை சிறிது எளிமைப்படுத்தியிருக்கிறார்கள் என்றாலும்  பிள்ளையவர்களின் செய்திகளில்  எந்த மாற்றமும் பிழைகளும்  வந்துவிடாமல் கவனமாக இருந்திருக்கிறார்கள். வரலாற்றை பாடபுத்தகங்களில், நாவலில், திரைப்படங்களில் இதுவரை அறிந்துகொண்டதற்கும் இப்படி 300 ஆண்டுகளுக்கு முன்பாக மிக முக்கிய ஆளுமை ஒருவர்  கைப்பட தமிழில் எழுதியதை வாசித்து அறிந்துகொள்வதற்குமான வேறுபாட்டை வாசித்தால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்

கவிஞரும் எழுத்தாளருமான முனைவர் வெண்ணிலா, முனைவர் திரு ராஜேந்திரன் இ.ஆ.ப ஆகியோர் முதன்மை பதிப்பாசிரியர்களாக இருந்து இப்பணியை செய்திருக்கிறார்கள்.. இவர்களுக்கும்,  பதிப்பாளர் திரு முருகேஷ், ந.மு. தமிழ்மணி மற்றும் துணைப்பதிப்பாசிரியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

© 2025 அதழ்

Theme by Anders NorenUp ↑