சதுஷஷ்தி மூர்த்திகள் என்று சமஸ்கிருத மொழியில் சொல்லப்படுகின்ற சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்கள் போக வடிவம்,யோக வடிவம், கோப வடிவம் (வேக வடிவம்) , பிற சிவ வடிவங்கள் என வகைப்படுத்தப் படுகின்றன.
இதில் போக வடிவங்கள்; உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர், மாதொருபாகர், யோக வடிவங்கள்; தக்ஷிணாமூர்த்தி, ஞான தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வீணா தக்ஷிணாமூர்த்தி, சுகாசனர், கோப வடிவங்கள்: கங்காளர், வீரபத்திரர், திரிபுராந்தக மூர்த்தி, கஜயுக்த மூர்த்தி, காலந்தக மூர்த்தி
கேசிமுனிவர் எழுதிய அஷ்டாஷ்ட விக்ரக லீலை, மற்றும் ஈக்காடு ரத்தினமுதலியார் எழுதிய சிவபராக்கிரமம் ஆகிய நூல்களில் இந்த 64 வடிவங்களைக்குறித்தும் விவரிக்கபட்டிருக்கின்றது.
சதாசிவ வடிவத்தின் ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோசாதம் போன்ற ஐந்து முகங்களிலிருந்து, முகத்திற்கு ஐந்தாக இருபத்தியைந்து வடிவங்கள் தோன்றின. இவையே ’மகேசுவர மூர்த்தங்கள்’. இந்த மகேசுவர மூர்த்தங்களுடன் வேறு சில வடிவங்களும் இணைந்து அறுபத்து நான்கு வடிவங்களாகயின. முதல் வடிவமான லிங்க மூர்த்தியிலிருந்து முருகனிடம் பிரணவப் பொருளைக் கேட்க மாணவனாக மாறிய வடிவமான ’சிஷ்யபாவ மூர்த்தி’ வடிவம் வரையிலான 64 வடிவங்களில் ஒன்றுதான் தென் திசைக்கடவுளான தக்ஷிணாமூர்த்தி வடிவம்.
தக்ஷிணாமூர்த்தி தெற்குமுகமாக அமர்ந்த அறிவே உருவமான ஜோதி, எல்லையற்ற கருணைக்கு இருப்பிடம், மகரிஷிகளின் அஞ்ஞானத்தைப் போக்குகின்ற ஆதி ஆசார்யர், தத்தவமஸி என்னும் மஹா வாக்கியத்தின் ஞானம் விளங்கச் செய்பவர், பிரணவரூபமான வித்யையை உபதேசித்து அவித்யையாகிற இருட்டைப் போக்குபவர், சந்திரக் கலைகளால் செய்யப்பட்டது போன்ற அவயங்களை உடையவரும், முத்துக் கூட்டங்களால் கட்டப்பட்டது போன்ற மூர்த்தியை உடையவரும், அறிவுக்கு எட்டாதவருமானவர்
தனது வலது முழங்காலில் வைக்கப்பட்ட இடது காலை உடையவரும் பாதங்களிலும் வயிற்றிலும் சேர்த்து கட்டப்பட்ட யோக பட்டத்தை உடையவரும், அபஸ்மாரத்தின் மீது வைக்கப்பட்ட காலை உடையவரும், ஸமாதிநிலையில் இருப்பவருமான இறைவன்,.
ஒரு கையில் சின்முத்திரையையும் ஒரு கையில் பரசுவை (கோடரியையும்) ஒரு கையால் மானையும் தரித்தவரும், தன் முழங்காலில் வைத்த கையை உடையவர், மன்மதனை எரித்த சாம்பலைப் பூசிக் கொண்டவரும், புலித்தோலைப் போர்த்திக் கொண்டவரும், வீணையையும் தரித்தவரும், விரிந்த ஜடாபாரத்தை உடையவரும், நாதப்ரம்மாநுபவத்தினால் மிக்க சந்தோஷமடைந்தவருமான யோகி.
தனது சரீர மணத்தினால் தாமரையின் மணத்தை வென்றவரும் , மந்த புத்தி உள்ளவர்களை அனுக்கிரகம் செய்பவரும், தெற்கு முகமாய் அமர்ந்திருப்பவரும் ஆனந்தம் கொண்டவரும், பாலசந்திரனை சிரஸ்ஸில் தரித்தவரும், நான்கு பக்கங்களிலும் தொங்குகின்ற ஜடைகளால் , சந்திரன் போன்ற முகத்துடனும் விளங்குகிற பிரசன்ன மூர்த்தி
தக்ஷிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து தன்னை வழிபடுபவர்க்கு ஞானத்தை வழங்கி அருள்பவர் தக்ஷிணாமூர்த்தி. தக்ஷிணாமூர்த்தியை பரமகுரு என்ற பெயரிலும் அழைக்கின்றார்கள்.
வக்கிரம், சாந்தம், வசீகரம், ஆனந்தம், கருணை முதலிய குணங்களை பஞ்ச குணம் என்கிறோம். இந்த குணங்களின் அடிப்படையில் சிவனது ஐந்து மூர்த்தங்கள் பஞ்சகுண சிவமூர்த்திகள் என வகைப்படுத்தப்படும்.. இவற்றில் தக்ஷிணாமூர்த்தி சாந்த மூர்த்தி ஆவார்.
பிற நான்கு மூர்த்திகள்;
உக்ர மூர்த்தி – பைரவர்
வசீகர மூர்த்தி – பிச்சாடனர்
ஆனந்த மூர்த்தி -நடராசர்
கருணா மூர்த்தி – சோமஸ்கந்தர்
பூமியில் மக்கள் தொகை பெருக்கத்திற்காக படைப்பின் கடவுளான பிரம்மாவின் மனதால் படைக்கபட்ட நான்கு பிரம்ம குமாரர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் எனப்படும் சனகாசி முனிவர்கள் ஞானம் பெறுவதற்காக குருவினை நாடிச் சென்றார்கள். பிரம்மா படைப்பு தொழிலில் மூழ்கியதாலும், திருமால் இல்லறத்தில் ஈடுபடுவதாலும் அவர்களை விலக்கி வேறு குருவினை தேடிச் சென்றார்கள்.. சிவபெருமான் தானும் சக்தியுடன் இருப்பதை கண்டால் பிரம்ம குமாரர்கள் ஏமாற்றம் அடைந்துவிடுவார்கள் என்று பதினாறு வயது சிறுவனாக வடவிருட்சத்தின் கீழ் அமர்ந்து வரவேற்றார்.
தட்சிணாமூர்த்தியாக, கல் ஆல மரத்தின் கீழ் அமர்ந்து பிரம்ம குமாரர்களின் ஞானத்தினைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து, நான்மறைகளோடு ருக், யஜூர், சாமம், அதர்வணம்) ஆறு அங்கங்களையும் (சிக்ஷை (எழுத்திலக்கணம்), வியாகரணம் (சொல்லிலக்கணம்) , நிருக்தம் (நிகண்டு) , கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பாவிலக்கணம்) , ஜ்யோதிஷம் (சோதிடம்) ) அவர்களுக்கு போதித்தார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.
ஞான தக்ஷிணாமூர்த்தி, வியாக்யான தக்ஷிணாமூர்த்தி, சக்தி தக்ஷிணாமூர்த்தி, மேதா தக்ஷிணாமூர்த்தி, யோக தக்ஷிணாமூர்த்தி, வீர தக்ஷிணாமூர்த்தி, லட்சுமி தக்ஷிணாமூர்த்தி, ராஜ தக்ஷிணாமூர்த்தி, பிரம்ம தக்ஷிணாமூர்த்தி,சுத்த தக்ஷிணாமூர்த்தி என்று தக்ஷிணாமூர்த்தி பல வடிவங்களில் உள்ளதாக ஆகமங்கள் கூறுகின்றன.
நான்கு கைகள் கொண்டு ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்துள்ள தக்ஷிணாமூர்த்தியின் வலதுகால் ‘அபஸ்மரா’ (முயலகன்) என்ற அரக்கனை மிதித்த நிலையில் அமைந்திருக்கும். அபஸ்மரா அறியாமையை / இருளை குறிக்கின்றது. அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும் ,ஒரு பாம்பையும் பிடித்துள்ளார். அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பை கொண்டுள்ளார். அவருடைய கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும், ஓலைச்சுவடியையும் வைத்துள்ளார், வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கடவுளை குறிக்கும் கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, ஆசைக்கான நடுவிரல், கர்மமாகிய மோதிரவிரல், மாயைக்கான சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் சின்முத்திரை காட்டியருள்பவர்.
மாயை மனிதனுக்கு ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் மறந்துவிட்டு, இறைவனை வணங்கினால், இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதே இதன் பொருளாகும்
தக்ஷிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தக்ஷிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோயில்களில் விளங்குபவர் வியாக்யான தக்ஷிணாமூர்த்தி. வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார்.
சிறப்பான பத்து தக்ஷிணாமூர்த்திஆலயங்கள்
- மிக அழகானது – பழனி பெரிய ஆவுடையார் கோயில்
- தலை சாய்த்த கோலம் – திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)
- சிற்ப அழகு – ஆலங்குடி
- வீராசன நிலை – சென்னை திரிசூலம்
- மிருதங்க தெட்சிணாமூர்த்தி – கழுகுமலை (தூத்துக்குடி)
- யோகாசன மூர்த்தி – அனந்தபூர் (ஆந்திரா)
- வீணா தெட்சிணாமூர்த்தி – நஞ்சன்கூடு (கர்நாடகா)
- வியாக்யான தெட்சிணாமூர்த்தி – அகரம் கோவிந்தவாடி (காஞ்சிபுரம் அருகில்)
- நந்தியுடன் தெட்சிணாமூர்த்தி – மயிலாடுதுறை வள்ளலார் கோயில்
- நின்ற நிலையில் வீணையுடன் – திருத்தணி, நாகலாபுரம் வேதநாராயணர் கோயில்
குருவும் தக்ஷிணாமூர்த்தியும்
குருவுக்கும் தக்ஷிணாமூர்த்திக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று அறிந்துகொள்ளுதல் அவசியமாகும். தக்ஷிணாமூர்த்தி என்பதற்கு தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.
நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு. திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர். அதே போல வியாழனுக்கு உரிய நிறம் மஞ்சள். உரிய தானியம் கொண்டைக்கடலை. தக்ஷிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர். ஞானம் வேண்டி தக்ஷிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை. வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
ஞானத்தை போதிக்கும் குருவாக சனகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தக்ஷிணாமூர்த்தி. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக காட்சியளிக்கும் இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்
தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ரஹஸ்பதி. ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.
ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம். எந்த விதத்திலும் தக்ஷிணாமூர்த்தியோடு வியாழ (குரு) பகவானை சம்பந்தப்படுத்தி வேதத்திலோ, புராணங்களிலோ சொல்லப்படவில்லை.
Leave a Reply