முன்னொரு காலத்தில் ஹவாய் தீவின் வடமேற்குப் பகுதியான கோஹலாவிலிருந்து ஹவாயின் பெருநகரமான கோனாவிற்கு ஒரு மரப்படகில் மீனவர்கள் பயணித்துக் கொண்டிருந்தார்கள். படகில் மூட்டை மூட்டையாக உலர்ந்த சேம்புக்கிழங்குகள் வைக்கப்பட்டிருந்தன. கோனாவிலிருக்கும் உறவினர்களுக்குக் கொடுக்கவும், அங்கு சந்தைப்படுத்தவும் அந்தக் கிழங்குகளை மீனவர்கள் கொண்டு சென்றனர்.
அவர்களது படகை ஒரு மாபெரும் சுறா தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது. படகிலிருந்த மீனவர்கள் இதே சுறா கடந்த மாதப்பயணத்திலும் படகைத்தொடர்ந்ததை நினைவு கூர்ந்தர்கள். ஒரு மீனவர் கோபமாக சுறாவைப்பார்த்து ‘எதற்கு எங்களைப் பின்தொடர்ந்து வருகிறாய்? என்ன வேண்டும் உனக்கு? எங்களிடம் சேம்புக்கிழங்குகள் தான் இருக்கிறது இதோ எடுத்துக்கொள்’ என்று அதை நோக்கி ஒரு சேம்புக்கிழங்கு மூட்டையை வீசினார். சுறா அந்த மூட்டையை தன் மூக்கால் நகர்த்திக்கொண்டு கடற்கரையோரம் சென்றது. இப்படியே தொடர்ந்து அவர்கள் பயணிக்கையில் எல்லாம் நடந்துகொண்டிருந்தது, மீனவர்களுக்கு பெரும் மர்மமாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.
மீனவர்களில் ஒருவரான அகாய்க்கு இந்த மர்மத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த பயணத்தில் கிழங்கு மூட்டையை தள்ளிக்கொண்டு போன சுறாவை அகாய் ஒரு சிறு துடுப்புப் படகில் தொடர்ந்து சென்றான். கரையில் அந்த சுறாவுக்காகக் காத்திருந்த வயதான தம்பதியினரிடம் சுறா அந்த மூட்டையை சேர்ப்பிப்பதை அகாய் பார்த்தான். அவர்களிடம் விசாரித்தபோது வயதாவதால் வேலைக்குச் செல்ல முடியாமல் பட்டினி கிடந்த தங்களுக்கு அந்தச் சுறாதான் உணவுக்காகச் சேம்புக்கிழங்குகளைக் கொண்டு வந்து தந்ததாகவும், அதில் ’போய்’ கஞ்சி தயாரித்து உண்டு தாங்கள் உயிர்வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு கடவுள்தான் கிழங்குகளை அனுப்புவதாக நினைத்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.
சுறாவின் இந்தச்செயலால் மகிழ்ந்துபோன மீனவர்கள் அதன்பிறகு வழக்கமாகக் கொடுப்பதைக்காட்டிலும் அதிக அளவு கிழங்கு மூட்டைகளை சுறாவுக்கு தந்தனர். இந்த வழக்கம் அந்த வயதான தம்பதிகள் உயிருடன் இருந்தவரையில் தொடர்ந்தது. அவர்கள் இறந்த பின்னர் சுறாவும் கண்ணிற்கே தெரியாமல் மறைந்து விட்டது.
“The Shark That Came For Poi” என்னும் இந்தக்கதையை ஹவாய் மக்கள் தலைமுறைகளாக கேட்டும் சொல்லியும் வருகிறார்கள். இந்தப் பிரபலக் கதையே சேம்புக்கிழங்குக்கும் ஹவாய்க் கலாச்சாரத்துக்குமான ஆயிரமாண்டுகளைக் கடந்தும் தொடரும் உறவைச் சொல்லி விடுகிறது. இந்தக்கதையில் சொல்லப்பட்டிருப்பதைப் போலவே போய் மற்றும் சேம்புக்கிழங்கு ஹவாய்த்தீவில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனிதர்களை அன்பினால் ஒன்றிணைத்துக் கொண்டிருகிறது.
இன்றும் ஹவாய் மரபுகளைச் சிறப்புப்பாடமாகப் பயிலும் காமேஹமேஹா பள்ளி மாணவர்கள் சேம்புச்செடிகளை வளர்த்தி, அறுவடை செய்து, அதன் கிழங்குகளை வேகவைத்து, தொன்மையான முறையில் அவற்றைப் பொடித்து ’போய்’ உணவை தரக்கட்டுப்பாட்டுடன் தயாரிக்கக் கற்றுக்கொள்கிறார்கள். இந்தப்பள்ளி மாணவர்கள், சேம்பு பயிரிடுவதற்கு நிலத்தைத் தயார் செய்வது, ’போய்’ உணவுடன் உறவுகளை ஒன்றிணைப்பது, மேலும் போய் உணவைக் கொண்டு சிகிச்சையளிப்பதையும் கற்றுக்கொள்கிறார்கள்.
’போய்’ உணவு தொல் காலத்திலிருந்து இன்று வரையிலுமே நிலத்துக்கும் மனிதர்களுக்கும் கடவுளுக்குமான பாலமாக இருந்து வருகிறது. ’போய்’ சேம்பின் தரையடித் தண்டுக் கிழங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் போலினேசியாவின் மிக முக்கியமான பாரம்பரிய உணவு.
பசிபிக் கடற்தீவுகளில் வசிப்பதற்கான இடம்தேடிக் தேடல் பயணம் மேற்கொண்டிருந்த பாலிநேசிய மாலுமிகள் வளமான எரிமலைக் குழம்பு மண்ணிருந்த ஹவாய் தீவைச் செழிப்பான வாழிடமாக அடையாளம் கண்டார்கள். அவர்கள் கொண்டுவந்த சேம்பு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்குகளை உணவுக்காக அங்கே பயிரிட்டார்கள். அவர்களுடன் கோழி, பன்றி, நாய் மற்றும் வாழை, கரும்புப்பயிர்களும் அங்கே அறிமுகமாயின. அப்போதிலிருந்து சேம்பின் தரையடிக்கிழங்குகளை வேகவைத்து மாவாக்கி நீர் மட்டும் கலந்து சத்தான சுவையான ’போய்’ உணவை தயாரித்து உண்டார்கள். அகழ்வாய்வுகள் ஹவாய்த்தீவுகளில் ’போய்’ தயாரிப்பு ஹவாயில் மக்கள் வசிக்கத்தொடங்கிய 1000-1200 AD-யிலிருந்தே நடந்திருப்பதற்கான சான்றுகளை காட்டுகிறது.
ஆங்கிலத்தில் டாரோ (Taro) எனப்படும் சேம்பு பெரிய யானைக் காதுகளைப் போன்ற இதய வடிவ இலைகளைக் கொண்டிருக்கும் ஏரேசியே குடும்பத்தைச் சேர்ந்த சிறு செடி.
வெப்பமண்டல பசிபிக் கடல்சார் பகுதிகளின் மிக முக்கியமான உணவுத்தாவரம் சேம்பு. ஹவாயில் இதன் பெயர் Kalo, ஃபிஜித் தீவில் Dalo. இயற்கையாக வளருகையில் வெளிறிய பச்சைநிறத்தில் சதைப்பற்றான மஞ்சரிகளை அளிக்கும் சேம்பு, சாகுபடி செய்யப்படும்போது அரிதாகவே மஞ்சரியை உருவாக்கும். மஞ்சரி உருவாகும் போது இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவில் இலைகள் உருவாகும். இலைகள் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களைப் பொருத்தும் மரபணுக்கட்டமைப்பைப் பொருத்தும் வேறுபடும்.
இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுக்களும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.
அனைத்து விதமான மண் வகைகளிலும் வளரும் சேம்பு மிக அதிக நீர் தேவை கொண்ட தாவரம். இவை தனித்தும், வாழையுடன் ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது.
ஆசியாவைப் பூர்வீகமாக்கொண்ட சேம்பு, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் பசிபிக்பகுதிகளின் தீவுக்கூட்டங்களைச் சேர்ந்த சுமார் 500 மில்லியன் மக்களின் பிரதான உணவாக இருக்கிறது. மத்திய தரைக்கடலின் தெற்குப் பகுதிகளில் உருளைக்கிழங்கை விட மிக அதிக அளவில் சேம்பு உண்ணப்படுகிறது.
சேம்பு அதன் கிழங்குகளுக்காகப் பிரதானமாகப் பயிரிடப்படுகிறது. பயிரிட்ட 6-10 மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் சேம்பு ஒரு ஹெக்டேருக்கு 5-லிருந்து 10 டன் வரை விளைச்சல் தரும். சேம்பு பிரேஸில் பகுதிகளில் சேனைக்கிழங்கு (yam) என்று அழைக்கப்படுவதால் உலகின் பல நாடுகளில் சேனைக்கிழங்கும் சேம்பு கிழங்கும் ஒன்றென நினைக்கப்படுகிறது.
இயற்கையான வாழிடங்களில் உலகெங்கும் இருக்கும் உண்ணப்படும் கிழங்குகளைக்கொண்ட சேம்பின் காட்டு மூதாதைகள் மொத்தம் 12 எனக் கண்டறியப்பட்டிருக்கின்றன. அவற்றில் 6 வடகிழக்கு இந்தியாவில் இருக்கின்றன.
சேம்பு ஏரேசி குடும்பத்தின் 106 பேரினங்களில் ஒன்றான கோலகேஷியா பேரினத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் சுமார் 2500 சிற்றினங்கள் உள்ளன. உண்ணத்தகுந்த கிழங்குகளைக் கொண்டிருக்கும் அலகேஷியா, அமொர்போபேலஸ் மற்றும் சேந்தோசோமா ஆகிய தாவரங்களும் இந்தப் பேரினத்தைச் சேர்ந்தவையே. (Alocasia, Amorphophallus & Xanthosoma).
Colocasia esculenta என்னும் அறிவியல் பெயர் கொண்ட சேம்பு இதன் தரையடித் தண்டுக் கிழங்குக்காகவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகமெங்கிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தண்டுக் கிழங்குகளிருந்தும் நறுக்கப்பட்ட முற்றிய தண்டுகளிருந்தும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
பசிபிக் கடல்சார் பகுதிகளில் குறிப்பாக ஹவாய் நியூசிலாந்து மற்றும் இந்தோனேசியப் பகுதிகளில் சேம்பு வரலாற்றுக் காலத்திலிருந்தே பிரதான உணவாக இருந்து வருகிறது. சேம்பின் ஆயிரக்கணக்கான வகைகள் உலகெங்கிலும் இருந்தாலும் அதிகம் சாகுபடியாவது :
எடோ வகை எனப்படும்
(1) “eddoe” , Colocasia esculenta var. antiquorum (syn. Colocasia esculenta var. globulifera )
மற்றும் டஷீன் வகையான
(2) “dasheen” ,Colocasia esculenta var. esculenta. இவையிரண்டும் தான்.
தரையடிக்கிழங்கின் அளவு மற்றும் வடிவங்களின் கொண்டுதான் இந்த இரு வகைகளும் வேறுபடுத்தப் படுகின்றன. esculenta வகை பெரிய நடுக்கிழங்கையும் சிறிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும், antiquorum வகை சிறிய நடுக்கிழங்கையும் பெரிய பெரிய பக்கவாட்டுக் கிழங்குகளையும் கொண்டிருக்கும்.
இரண்டு வகைகளுக்கும் மரபணுக் கட்டமைபிலும் வேறுபாடுகள் இருப்பது தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
C. esculenta வகைச்சேம்புதான் ஆசியா மற்றும் ஆப்பிரிக்க பகுதிகளில் பயிராகிறது. சேம்பு உருளைவடிவக் கிழங்குகளும் மிக நீண்ட சதைப்பற்றான் இலைக்காம்பையும் கொண்டிருக்கும்
1.5 அடி உயரம் வரை வளரும் சேம்பில் மலர்கள் உருவாகும் போது இலைகளின், இலைக்காம்புகளின் நீளம் குறைந்து சிறிய அளவிலான இலைகள் உருவாகும். இலைகளின் நிறம் பச்சை, ஊதா நிறம் கலந்த பச்சையென வாழிடங்களளைப் பொருத்தும், மரபணுக்கட்டமைப்பைப்பொருத்தும் வேறுபடும்.
இலைப்பரப்பிலிருக்கும் வரிகள், புள்ளிகள் மற்றும் திட்டுகக்ளும் வகைகளைப் பொருத்து வேறுபடும்.
சேம்பின் உண்ணக்கூடிய பகுதியானது வெண்ணிற உட்பகுதியைக் கொண்ட தண்டடிக்கிழங்குதான் (underground stem) என்றாலும், நிலத்தடியில் இருப்பதால், சேம்புக்கிழங்கு வேர்க்காய்கறியாகவே கருதப்படுகிறது. சில வகைசேம்பில் கிழங்கின் உள்ளே ஊதா நிறம் காணப்படும். கிழங்கின் தோல் மண்ணிறத்திலிருக்கும்.
ஏரேசி (Araceae) குடும்பத்தின் பிற உண்ணக்கூடிய வேர்க்கிழங்குகளைத் தரும் தாவரங்களைப் போலவே சேம்பும் வேர்க்காய்கறிகளில் ஒன்றுதான் எனினும் இதன்கிழங்குகளில் இருக்கும் கால்சியம் ஆக்ஸலேட் குருணைகள் உண்டபின்னர் நாக்கில் நமைச்சலை உண்டாக்குவதாலும், இதில் நீரில் கரையும் ஊட்டச்சத்து எதிர்ப்பியான டேனின்கள் இருப்பதாலும் இந்தக்கிழங்கு பக்குவமாகச் சமைத்தபின்னரே உண்ணப்படும் காய்கறியாக இருக்கிறது.
ஆவியில் அல்லது நீரில் வேகவைத்த கிழங்குகளோடு விரியாத இளம் இலைகளும், நீண்ட சதைப்பற்றான இலைக்காம்பும் கீரையைப் போலச் சமைத்து உண்ணப்படுகிறது..
ஒருவருடப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது என்றாலும் சேம்பு ஒரு பல்லாண்டுப் பயிர். பிற வேர்க்காய்கறிகளைக் காட்டிலும் சேம்புக்கிழங்கு அதிகச் சத்துக்கள் கொண்டது
சேம்புக் கிழங்குகளின் மாவுச்சத்தின் அளவானது 12-லிருந்து 20 சதவீதம் வரை இருக்கும். சேம்புக்கிழங்கில் மாவுச்சத்துடன் ஏராளமான புரதம் வழவழப்பான பசைத்திரவமாக இருக்கிறது. நீரில் கரையும் தன்மை கொண்டிருக்கும் இந்த புரதங்கள்தான் சேம்பின் சுவைக்கு காரணமாகின்றன. சேம்பில் சாம்பல் சத்து, எண்ணெய்ச் சத்து, நார்ச்சத்து, சர்க்கரைச் சத்து, சோடியம், வைட்டமின் B, உள்ளிட்ட பல வைட்டமின்கள், கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் பலவகையான தாதுஉப்புக்கள் நிறைந்திருக்கிறது., ஹவாயில் குழந்தைகளின் முதல் திட உணவு எப்போதுமே ’போய்’தான்
இந்தக்கிழங்கு சமைத்தபின் மிகவும் மிருதுவாகிவிடுகிறது என்பதால் விரும்பத்தக்கஉணவாக இருக்கிறது.
ஹவாயில் kalo என்றழைக்கப்படும் சேம்பு ஹவாய் மக்களின் கடவுள்களுடனும் முன்னோர்களுடனும் தொடர்பிலிருக்கும் மிக முக்கியமான கலாச்சார அந்தஸ்து கொண்டிருக்கும் ஒரு உணவுத்தாவரம். ஹவாயில் சேம்புக் கிழக்கு பல மருத்துவ உபயோகங்களையும் கொண்டிருக்கிறது
சேம்பு ஹவாயின் கனகா மோலி (Kanaka Maoli) பழங்குடியினருடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. இப்பழங்குடியினர் சேம்பு மற்ற அனைத்து உணவுகளைக் காட்டிலும் வாழ்வதற்கு மிக அதிக சக்தியைக் கொடுப்பது என நம்புகிறார்கள்.
சேம்புக்கிழங்கிலிருந்துதான் பாலிநேசியாவின் பிரதான உணவான ’போய்’ (Poi) தயாரிக்கப்படுகிறது. ஹவாய் மக்களின் வாழ்வாதாரமாகவும் அடையாளமாகவும் சேம்பும், போய் உணவும் விளங்குகிறது.
போய் உணவு மக்களை ஒன்றிணைத்து, அதன் நெருங்கி அமைந்திருக்கும் இலைகளைபோல ஒஹானா (ohana) எனும் குடும்ப அமைப்பை உறுதிசெய்து, அமாக்குவா (aumakua) என்னும் மூதாதையரின் ஆசியைப் பெற்றுத்தருவதாக ஹவாய் மக்கள் நம்புகிறார்கள். எனவே அவர்களின் கலாச்சாரத்திலிருந்து பிரிக்கவே முடியாத உணவுப் பொருளாகச் சேம்புக்கிழங்கு இருக்கிறது.
ஹவாய்ப் பழங்குடியினரான கனகா மாலிகளின் தொன்மங்களில் வான் தந்தைக்கும் பூமித்தாய்க்கும் பிறந்த பெண் கருவுற்று, அவளது இறந்து பிறந்த முதல் குழந்தையாக சேம்பு கருதப்படுகிறது. இறந்து பிறந்த Haloa-naka என்னும் அந்த ஆண்குழந்தை மண்ணில் புதைக்கப்பட்டு அது சேம்புத்தாவரமாக வளர்ந்தது என்கிறது அவர்களின் தொன்மம். இரண்டாவதாகப்பிறந்து ஆரோக்கியமாக வளர்ந்த Hāloa தான் ஹவாயின் முதல் மனிதன் என ஹவாய் தொன்மங்கள் குறி[ப்பிடுகின்றன. சேம்புச்செடிக்கு ஹவாயில் Haloa என்றும் வழங்கு பெயருண்டு. Haloa என்றால் நீடித்திருக்கும் சுவாசம் என்று பொருள்.
இந்தத்தொன்மத்தினால்தான் சேம்புச்செடியும் அதன் கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் போய் உணவும் ஹவாய் கலாச்சாரத்தின் முக்கிய அங்கங்களாகி விட்டிருக்கிண்றன
போய் உணவு தயாரிப்பது மிக மிக எளிது. சேம்புக்கிழங்கு சுத்தமாக்கப்பட்டு நீராவியில் வேக வைக்கப்படுகிறது. பின்னர் தோல் நீக்கி சுத்தமாக்கப்பட்டு, மென்மையாகிவிட்டிருக்கும் கிழங்குகள் மரத்தொட்டி அல்லது கல்தொட்டிகளில் சிறிதளவு நீர் விட்டு பசையாக அரைக்கப்பட்டு சற்று இனிப்பாக இருக்கையில் அப்போதே உண்ணப்படுகின்றன அல்லது சிறிதுநாட்கள் நொதிக்க வைக்கபட்டு புளிப்புச்சுவையுடன் உண்ணப்படுகின்றன.
சாம்பல் கலந்த ஊதா நிறத்திலிருக்கும் போய் உணவு ஆழம் குறைவான தட்டையான சிறு கிண்ணங்களில் நறுக்கிய தக்காளி வெங்காயத் துண்டுகளுடன் பரிமாறப்படுகிறது. ஹவாய் மக்கள் போய் உணவை வெறும் நீரும் நிறைய அன்பும் சேர்த்துச் சமைக்கப்பட்ட சுவையான உணவு என்னும் பொருளில் அதை ‘ஓனோ’ என்பார்கள்.
பட்டமளிப்பு விழா, பிறந்தநாள், திருமணம் போன்ற நிகழ்வுகளில் போய் உணவு கட்டாயமாக இடம்பெறும் ஒரு முக்கிய உணவாக இருக்கிறது. கூழ் போலவோ அல்லது கஞ்சியாகவோ தயாரிக்கப்படும் போய் உணவு பன்றிக்கறி, சால்மன் மீன் கறி அல்லது கோழிக்கறி போன்ற உப்புசேர்க்கப்பட்ட உணவுகளுடனோ அல்லது தனியாகவோ உண்ணப்படுகிறது.
போய் உணவில் சேர்க்கப்படும் நீரின் அளவானது வேறுபடும். போய் உணவை எத்தனை விரல்களால் எடுத்து வாய்க்கருகில் கொண்டு செல்லமுடியும் என்பதைக் கொண்டு அதன் திரவ நிலை 3 விரல் போய், 2 விரல் போய் அல்லது 1 விரல் போய் என வகைப்படுத்தபப்டுகிறது.
சற்று கெட்டியான கூழ் போன்ற பதத்தில் இருக்கும் 1-விரல்போய் என்பது செல்வந்தர்களுக்கானதென்றும், நன்கு நீர்த்த 3- விரல்போய் என்பது ஏழைகளுக்கானதென்றும் பொதுவில் சொல்லப்படுகிறது.
ஹவாயில் 1970-களிலிருந்தே சுற்றுலாப்யணிகளுக்கென ’போய்’ தினமும் புத்தம் புதிதாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சேம்பு இலையில் பொதியப்பட்ட இமு எனப்படும் நிலத்தடி அடுப்பில் சமைக்கப்பட்ட பன்றி இறைச்சியுடன் ’போய்’ உணவைச் சுவைப்பதற்கென்றே உலகெங்கிலும் இருந்து ஹவாய்க்கு சுற்றுலாப்பயணியர் வருகைதருகிறார்கள்.
முதன் முதலில் போய் உணவைச்சுவைக்கும் வெளிநாட்டிஅன்ர் அதை போஸ்டர் ஒட்டும் பசைபோலிருப்பதாக கருதுவார்கள் என்றும் விருந்து முடியும்போது ஏராளமான போய்க் காலிக்கிண்ணங்கள் இருப்பது அங்கே வாடிக்கை எனவும் சொல்லப்படுகிறது.
ஹவாயில் Waiahole எனப்படும் உணவகம் இதற்குப் பிரபலமானது. சுற்றுலாப்பயணிகள் ’போய்’ உணவைச் சுவைக்க அங்கே வரிசையில் காத்திருப்பார்கள்.
இப்போது போய் புத்தம் புதிதாகத் தோண்டி எடுக்கப்பட்ட கிழங்குகளாகவும், கேக்குகள், தகடுகளாகச் சீவி வறுக்கப்பட்ட சிப்ஸ்கள் அல்லது தேங்காய்ப்பாலுடன் கலந்து அருந்தும் பானமாக, ரொட்டி அல்லது கஞ்சியாகவும் ஹவாயில் கிடைக்கிறது. உடனடி உணவாகவும் , ஒரு சிலநாட்கள் குளிர்பதனப் பெட்டியில் வைத்து உண்ணும் வகையிலும் போய் உணவு சந்தைப்படுத்தப்படுகிறது.
மருத்துவக் காரணங்களுக்காகவும் போய் அங்கு உண்ணப்படுகிறது. போய் உணவு சார்ந்த ஒவ்வாமைகளை குணப்படுத்துகிறது. ரத்தச் சர்க்கரை அளைவை, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும் உடலெடையைக் குறைக்கவும், நோயெதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கவும், சருமப் பொலிவிற்கும் போய் உணவு இங்கே வழக்கமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. குடல் புற்றுநோயெதிர்ப்புக்கும் போய் உணவு பரிந்துரைக்கப்படுகிறது.
முன்காலத்தில் வேகவைக்கப்பட்ட கிழங்கு தோலுரிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு கல் அல்லது மரப்பலகைகளில் இடிக்கப்பட்டு மாவாக்கப்பட்டது. இப்போது ப்ரெஷர் குக்கர்களில் வேகவைக்கப்பட்டு மிக்ஸியில் அரைத்து கூழாக்கபடுகிறது .
சமைக்காத சேம்புக்கிழங்கை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்பதை எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும்
பண்டைய ஹவாய் மக்களின் பிரதான உணவாக தானியங்களோ, பால்பொருட்களோ, இறைச்சியோ அல்லாது, சர்க்கரைவள்ளிக் கிழங்கு, சேம்புக் கிழங்கு, மீன், தேங்காய் ஆகியவையே அவர்களின் உணவாக இருந்தது.
உலகில் சுமார் 100 மில்லியனுக்குமதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும் ’போய்’ மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது.
உலகின் அதிகமாகப்பயிரடப்படுபவைகளில் 14 -வது பயிராக இருக்கும் சேம்பின் நோய் எதிர்ப்புச்சக்திகொண்ட வகைகளை இப்போது பயிரிடும் ஹவாய் விவசாயிகள், அமெரிக்கச் சந்தைகளில் சேம்புக்கு தொடர்ந்த தேவை இருப்பதை உறுதி செய்கிறார்கள்.
ஹவாய் மட்டுமல்லாமல் ஃபிஜி, சமோவா மற்றும் டோங்கா தீவுகளின் மிக முக்கியமான ஏற்றுமதி செய்யப்டும் தாவரப்பொருட்களில் ஒன்றாக சேம்புக்கிழங்குகள் இருக்கின்றன.
தலைமுறைகளாக போய் உணவு ஹவாய் மக்களின் ஆன்மாவுக்கும் உடலுக்கும் புத்துயுரூட்டிக்கொண்டிருக்கிறது.
ஹவாய் கலாச்சாரத்தில் சேம்புக்கிழங்குப் பயன்பாடு மற்றும் போய் உணவுத் தயாரிப்பு என்பது வெறும் விவசாயப்பலன்களுக்காக மாத்திரமல்ல, எரிமலைகுழ்மபு படிந்த அந்தத் தீவைச் செழிப்பாக்கி தலைமுறைகளின் வாழிடமாக மாற்றிய அவர்களின் முன்னோர்களின் மரபைக்காப்பற்றும் பொருட்டும் தான் தொடர்கிறது.
முதன்முதலாக பாலினேசியாவிலிருந்து ஹவாய்க்கு வந்த குடியேறிகள் அந்தத் தீவை அன்பிற்கான நிலம் என்று குறிப்பிட்டார்கள். சேம்பு விவசாயிகளின் பாதுகாப்பான கரங்கள், ஹவாய் கலாச்சாரத்தை கற்பிக்கும் ஆசிரியர்கள், துடிப்பான புதியதலைமுறை ஆகிய மூன்றும் இணைந்து சேம்பு மற்றும் போய் உணவைப் பாதுகாத்து ஹவாய் தீவு என்றென்றைக்குமே அன்புக்கான நிலமென்பதை அழியாத உண்மையாக்கிக்கொண்டிருகிறார்கள்.
இரவுகளில் பாடல் கேட்டுக்கொண்டோ கவிதைகள் வாசித்துக்கொண்டோ உறங்கச்செல்வது பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது.விருப்பமான கவிஞர்களின் கவிதை நூல்கள் படுக்கைக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும்.
பாடல்களில் அதிகம் ஹிந்தியும் மலையாளமும் இருக்கும். ஒரு நாளின் அலுப்பு சோர்வு எல்லாம் போக இப்படி பாடல்களின் இனிமையான நினைவுகளுடன் உறங்கச்செல்வது பெரும் ஆறுதலளிக்கும். நான் புழங்கும் உலகு அத்தனையொன்றும் பிரியமானதல்ல புகைச்சலும் அறியாமையும் சில்லறைச்சச்சரவுகளும் மலிந்த ஒரு உலகத்தில் தான் 5 மணி நேரமிருக்கிறேன். எனவே இந்தப்பழக்கத்தைத் தவறவிடுவதில்லை. அன்றாடம் அதிகாலை வாசிப்பையும் கட்டாயமாக, ஆனால் உள்ளார்ந்த ஆர்வத்துடன் பிரியத்துடன் தொடர்கிறேன்.
மலையாள மொழியின்மீது எனக்கு சாய்வு அதிகம். நேற்றிரவு ’’எல்லாரும் சொல்லனு’’ பாடலைக்கேட்டேன். என் பிரியத்துக்குரிய மலையாளப்பாடல்களில் இதுவும் உண்டு. 1954-ல் வெளியான நீலக்குயில் என்னும் திரைப்படத்தின் பாடல். பாடலை எழுதியது புல்லூட்டுப்பாடத்து பாஸ்கரன்மாஷே.
ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர். 250 திரைப்படங்ளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.இயக்குநரும் நடிகரும் கூட. கவிஞர் என்று சொல்ல வேண்டியதில்லை.இவரது 3000த்துக்குமதிகமான பாடல்களனைத்துமே நீள் கவிதைகள்தான்.நீலக்குயிலை இயக்கியதும் இவரே.இவரது தந்தையும் பெருங்கவிஞர்.
7ம் வகுப்பு படிக்கையிலிருந்தே கவிதைகள் எழுதிய இவர் துவக்கத்தில் கம்யுனிசப்பாடல்களை எழுதினார். இவரது முதல் சினிமாப்பிரவேசம் 1949- ல் வெளியான தமிழ்த்திரைப்படமான அபூர்வசகோதரர்களில் இருந்த பலமொழிப்பாடலொன்றின் மலையாளப் பகுதிகளை எழுதியதில் துவங்கியது.
2வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்படத்திற்கான அகில இந்திய தகுதிச் சான்றிதழை வென்று , இந்த விருதை வென்ற முதல் தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது நீலக்குயில். நீலக்குயில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்க விருதையும் பெற்று மலையாளச் சினிமாவின் முதல் அரசு அங்கீகாரம் பெற்ற படமாகியது.நீலக்குயிலில் பாஸ்கரன் மாஷே நடித்துமிருக்கிறார்.
கலாசித்ரா அகாதமியும் கேரள அரசும் இணந்து மலையாளச் சினிமாவில் பாஸ்கரன் மாஷேவின் பங்களிப்பை போற்றும் விதமாக இவரது மார்பளவு சிலையை திருவனந்தபுரத்தில் நிறுவி இருக்கிறது.
நீலக்குயிலில் கே. ராகவன் இசையமைத்து பி. பாஸ்கரன் எழுதிய ஒன்பது பாடல்கள் உள்ளன .இவை அனைத்தும் கேரள நாட்டுப்புற மரபுஇசை வகைகளில் மாப்பிளப்பட்டு , கோயித்துபட்டு என்னும் அறுவடைப் பாடல்,பாரம்பரிய பிரார்த்தனைப்பாடல்கள்ஆகியவற்றின் வடிவங்களில் அடங்குபவை.
வாழ்நாளின் இறுதியில்அல்ஸைமரினால் பாதிக்கப்பட்டிருந்த மாஷே மனிதர்களையும் அவரது பாடல்களையும் முற்றிலும் மறந்தார். இவரது இறுதிக்காலத்தில் இவரது பாடல்களை ஏராளமாகப் பாடிய S. ஜானகியம்மா இவர் முன்பாக அவரது பல பாடல்களைப்பாடியபோது அவரால் எதையும் நினைவுகூற முடியவில்லை. 83 வயதில் இறந்தார் மாஷே.
1954-ல் தலித் பெண்ணுக்கும் உயர் சாதி பள்ளிக்கூட ஆசிரியருக்குமான காதலைச்சொன்ன படம் நீலக்குயில். இந்த நீலக்குயிலின் ’’எல்லாரும் சொல்லனு” எளிய மொழியில் எழுதப்பட்ட மிக அழகிய கவிதை
மிஸ் குமாரியும் சத்யனும் வெகு இயல்பான உடல்மொழியுடன் நடித்திருக்கும் பாடல்காட்சி. கொய்யாக்காயை கடித்துக்கொண்டும் மேலே தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டும் பாடும் காதல்பாடலை நான் இதற்கு முன்பும் பிறகும் கேட்டது இல்லை. ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் முழுப்பாடலையும் பாடிவிட்டு இறுதிக்காட்சியில் ‘கல்லானு, கருங்கல்லானு’ என்று சொல்லப்பட்ட சத்யனின் நெஞ்சில் தன் இருகைகளையும் வைத்துக்கொள்வார் குமாரி. ஜானம்மாடேவிட்டின் குரலில் நீலக்குயில் கொஞ்சுகிறது.
’’எல்லாரும் சொல்கிறார்கள்
உங்கள் இதயம் கல் என்று,
அதுவும் பெரும்
கருங்கல்லென்று’
ஆனால் நானதைத்
தொட்டுப்பார்த்தபோது
எனக்கது
ஒரு கரும்பின் துண்டாகத்தான் இருந்தது.
நாட்டார் எல்லாரும்
உன் இதயம் காடு
அதுவும் கொடும்காடு என்றார்கள்,
ஆனால்
அதில் நுழைந்த போது
நான் பார்த்தது
ஒரு நீலக்குயிலின் கூட்டை ,
சின்னஞ்சிறியதோர் கூட்டை.
என்ன பார்க்கிறாய் நிலவே?
ஏன் எங்களை மேலிருந்து பார்க்கிறாய் ?
நான் மேலே உன்னிடம் வரப்போவதில்லை
என் மணவாளன்
இங்கே கீழே அல்லவா இருக்கிறான்?
பூச்செண்டு வாங்கனும்
கல்யாண முண்டு வாங்கி உடுத்தனும்
பூக்கள் அமைத்த பொன்தாலியை
கழுத்தில் கட்டனும்
நானொன்றும்
விளையாட்டுக்குச்சொல்லவில்லை
நல்ல சுவையான துளிர் வெற்றிலையை
மென்று தின்று
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்
ஆம்
என் உதடுகளை
ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்’’
எத்தனை நேரடியான காதல் சொல்லல் இல்லையா?
இடையில் அந்த அய்யா என்னும் விளி அவன் மீது அவளுக்கிருக்கும் மரியாதை கலந்த அன்பைக்காட்டுகிறது.
முதலில் நேரடியாக அவன் இதயத்துக்குள் தான் நுழைந்ததைச் சொல்லும் அவள், அவன் எத்தனைஇனியவன் என்கிறாள் கரும்பைச்சொல்லி.
பின்னர் நிலவிடம் சொல்லுவது போல் தன் மணவாளன் அவனே என்கிறாள். பிறகு கல்யாணத்துக்கு தயார், முண்டும் தாலியும் கெட்டனும் என்பவள் மேலும் துணிந்து உதடுகளை சிவப்பாக்கிக்கொள்வதையும் சொல்கிறாள்.
ஊழின் இரக்கமற்ற விதி இந்தப்பாடலைக் கூட பாஸ்கரன் மாஷே மறக்கும்படி செய்துவிட்டது
வெள்ளிமலை தாவரவியல் குழுவினர் இன்று வரை தொடர்பில் இருக்கிறார்கள். நானே அதிகாலையில் எழுந்து நாளைத்துவங்கும் ஒருத்தி என்றால் அதில் சிலர் நான் எழும்போதே எனக்கென ஏதேனும் தகவலோ கேள்வியோ புகைப்படமோ வைத்திருப்பார்கள். ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களுடன் இணைந்து நானும் புதிதுபுதுதாகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இன்று காலை பெங்களூர் பிரியா நிறைந்து பூத்திருந்த எள் வயலின் புகைப்படம் அனுப்பி எள்ளின் வகைகளைக்குறித்து கேட்டிருந்தார். நான் அதன் கருப்பு வெள்ளைபிரவுன் சிவப்பு வகைகளையும் அதன் ஆங்கிலப்பெயரான Sesame , தாவர அறிவியல் பெயரான Sesamum indicum (Sesamum indicum subsp. indicum)என்பதையெல்லாம் காரில் கல்லூரிக்கு வருகையில் சொல்லிக்கொண்டிருந்தேன்.
அறிவியல் பெயரிலிருந்து வந்த இதன் sesame என்னும் ஆங்கிலப்பெயருக்குப்பின்னால் ஒருசுவாரஸ்யம் இருக்கிறது.
எள் இந்தியாவுக்கு சொந்தமான பயிர்.மனிதர்கள் பயிரிட்ட முதல் எண்ணெய்பயிர் எள் தான். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எள் இந்தியாவில் பயிராகிறது. இந்து மதம் விஷ்ணுவின் வியர்வையிலிருந்து உருவான பயிர் என்று எள்ளைச்சொல்கிறது. தரிசு நிலங்களில் கூட எள் பயிராகும். பல மதங்களில் எள்ளும் எள் எண்ணெயும்புனிதமானதாகக் கருதப்படுகிறது.
பெடாலியேசியைச்சேர்ந்த (Pedaliaceae) எள்ளின் கனி எனப்படும் pods மிகச்சுவாரஸ்யமானது. பல நாகரீகங்களில் சத்துக்கள் அடங்கிய இதன் சிறு விதைகள் அந்த கனியிலிருந்து வெடித்து திறந்து வெளியாவதைப் புதையல் கிடைத்தது போல் எனக்கொள்வார்கள். எனவேதான் open sesame என்பது புதையல் இருக்கும் இடம் திறப்பதற்கான மந்திரச்சொல்லாக இருக்கிறது.
அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் குகையை திறக்க அலி ’’திறந்திடு சீசேம்’’ என்று சொல்வது இதனால்தான். பாபிலோனியாவில் பல மந்திர தந்திர வித்தைகளில் எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் உபயோகத்திலிருக்கிறது. யூதர்களின் மாயாவாத சடங்குகளில் எள் சொர்க்கத்தின் இன்னொரு பெயராகக் கருதப்படுகிறது. ஹீப்ரூ மொழியிலும் எள்ள்ளுக்கு கடவுள் என்னும் பொருள் இருக்கிறது
sesame என்னும் கிரேக்கச்சொல் பழமையான செமிடிக் மொழிகள் ஒன்றான, இப்போது புழக்கத்தில் இல்லாத பண்டைய மெசபடோமியர்களின் மொழியான அக்காடியனின் (Akkadian) தாவர எண்ணெய் என்னும் பொருள் கொண்ட் šamaššamu என்னும் சொல்லில் இருந்து உருவானது.
57% எண்ணெய் அளவு கொண்டிருக்கும் எள்ளின் பல பயன்களில் ஒன்று அதிலிருக்கும் லிக்னன்களான sesamin & sesamolin ஆகியவற்றின் ரத்தக்கொழுப்பைக்குறைக்கும் இயல்பு. இதன் தமிழ்ப்பெயரில் ஒன்றான திலம் என்பதிலிருந்துதான் ஆங்கிலப்பெயரான் til என்பது வந்திருக்க வேண்டும்.எள் தான் எண்ணெய்ப்பயிர்களின் ராணி.
நேற்று Dr செளமியா அவரது தோட்டதில் இருந்த எள் சக்களத்தி என்று சொல்லப்படும் எள் பயிரைப்போலவே இருக்கும் Cleome monophylla வின் புகைப்படத்தை அனுப்பி இருந்தாள். எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள் தாவரங்களில் !
கல்லூரியில் கோடை விடுமுறை சுமார் 40 நாட்கள். பொதுவாக விடுமுறையிலும் தேர்வுப்பணி, ஆய்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் , ஜூன் மாதம் புதிய மாணவர் சேர்க்கை என ஓடியே போய்விடும்.பத்து நாள் சேர்ந்தாற்போல வீட்டில் இருந்தாலே அதிசயம்தான். ஆனால் இந்தமுறை மேனகாவின் ஆய்வு முடிந்துவிட்டது. தேர்வுப்பணியை முதல்நாளே முடித்துவிட்டேன். விடைத்தாள் திருத்தும் பணிக்கும் மாணவர் சேர்க்கைக்கும் முதன்முறையாக என்னைக்காட்டிலும் இளைய, இன்னும் பல ஆண்டுகள் துறையில் பணியாற்றவிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டேன். சொல்லப்போனால் இதுதான் 22 வருட ஆசிரியப்பணியில் முதல் விடுமுறை என்றும் சொல்லலாம்.
சமீப காலங்களில் மாணவர் சேர்க்கையும் பெரும் அயர்ச்சியளிக்கிறது. காமர்ஸ் கணினி துறைகளுக்கான நீண்ட வரிசையில் காத்திருப்பவர்கள் தாவரவியல் துறை என்னும் ஒன்று இருப்பதே அறியாதவர்களாக கல்லூரி நிறைந்திருப்பதை இப்போதெல்லாம் பார்க்க பெரும் துயரேற்படுகிறது.
அழிந்து போகத்தான் போகிறது அடிப்படை அறிவியல் துறைகள் எல்லாம் என்றால் நடக்கட்டும். என்னால் ஆனவற்றை நான் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறேன் மேலும் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
கல்லூரி கடைசி வேலைநாள் 24 ஏப்ரல் அடுத்த நாள் ரயிலேறி சென்னை வந்தேன். வீட்டில் முதல்தளம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒப்பந்த அடிப்படை என்பதால் என் இருப்பு அங்கு தேவைப்படவில்லை என்றாலும் வீடு முழுக்க கட்டுமானப் பொருட்கள் இறைந்துகிடக்க சிமெண்ட் பட்டு பல செடிகள் வாடியும் உயிரிழந்தும் போயிருக்கும் கடும் கோடையில் ஏறக்குறைய 1 மாதம் வீட்டை விட்டு போவது என்னும் கலக்கம் இருந்தது.
தோட்டதுக்கு இரண்டு நாட்களுக்கொருமுறை நீரூற்ற ஒருவரையும் வராந்தாவில் இருக்கும் நிழல் விரும்பிகளுக்கு மாணிக்காவை நீருற்றவும் ஏற்பாடு செய்துவிட்டு வாசல் மேசையில் வைத்திருந்த இரண்டு போன்சாய் மரங்களையும் மாணிக்காவிடமே ஒப்படைத்து தினமும் நீர் ஸ்ப்ரே செய்து பாதுகாத்து வைக்கும் படி கேட்டுக் கொண்டேன்
கோவை புறப்படுகையில் பால் பீச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்தில் கோழியை விட்டு புறப்படும் பொன்னுத்தாயைபோலவே கலங்கினேன்.
முதலில் சென்னை அங்கிருந்து பெங்களூர் அங்கிருந்து வெள்ளிமலை அங்கிருந்து குக்கூ காட்டுப்பள்ளி சென்று மே 28 வீடு திரும்ப உத்தேசம்.
சென்னையில் வேணுவை , அகரமுதல்வனின் மகன் அங்கணனை வெண்ணிலாவை சந்திக்கவேண்டி இருந்தது. சென்னை மாம்பாக்கத்தில் ஒரு அடுக்ககத்தில் மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் ஒரு நாள் தாவரவியல் பயிற்சிக்கு அழைத்திருந்தார்கள். மகன்கள் ’’இந்த வெயிலில் ஒரு நாள் பயிற்சிக்காக சென்னை வரை போறியா?’’ என்றார்கள். ’’ஆம்’’ என்றேன். செயலாக இருக்கும் வரைக்கும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தாவரவியலின் முக்கியத்துவத்தை இயற்கையை அறிதலை கற்றுக்கொடுக்கத்தான் போகிறேன். வெள்ளிமலை வகுப்புக்குப் பிறகு இப்போது பலருக்கு இயற்கையை அறிதலுக்கான விருப்பமிருக்கிறது.
மதிய ரயிலாதலால் இரவு 10.30க்கு சென்னை வந்துசேர்ந்தேன். மீனாட்சி ரவீந்திரன் மற்றும் குக்கூ சத்யா எனக்காக ரயிலடியில் காத்திருந்தார்கள். மேலும் 35 கி மீ அந்நேரத்துக்கிருந்த வாகன நெரிசலில் நீந்தி பின்னிரவில் அந்த அடுக்ககம் வந்து சேர்ந்தேன். நல்ல அசதியும் கால்வலியும் இருந்தது. நான் கேட்டுக்கொண்டிருந்த படி தனியறை ஒதுக்கித்தந்திருந்தார்கள். குளித்து உடைமாற்றி உறங்க நள்ளிரவானது. 100 பேர் வரை பங்கேற்பார்கள் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்து 15 பேர் கூட தயாராக இல்லை . எனவே முதல்நாள் நான் ஓய்வெடுத்துக்கொண்டு அங்த பிரம்மாண்டமான அடுக்கத்தின் தாவரங்களைப்பார்த்தேன் அருகில் இருந்த பெரிய புகழ்பெற்ற பள்ளியில் அனுமதி வாங்கி அங்கும் வகுப்பை நடத்த திட்டமிட்டோம். பள்ளி வளாகத்தில் இருந்த ஆலமரத்தடிவகுப்புக்கென சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது.
ஒரு மாமரத்தில் பெயர்ப்பலகை இருந்தது. அருகில் சென்று பார்த்தேன். அறிவியல் பெயர் சரியாகவும் குடும்பம் தவறாக மால்வேசி என்றும் இருந்தது . அனகார்டியேசி என திருத்தச் சொன்னேன்.
இப்படி பல முக்கியமான இடங்களில் தவறாக பெயர்ப்பலகைகளைப் பார்க்கிறேன்.
வேதாரண்யம் சென்றிருந்த போது பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஸ்தல மரத்தின் அறிவியல் பெயர் தவறாக எழுதபட்டிருந்ததைப் பார்த்தேன் அதை திருத்த யாரிடம் சொல்வதென தெரியவில்லை தருணின் பெங்களூர் கிரைஸ்ட் பல்கலையில் கூட ஒரு மாபெரும் ட்ரீ ஃபெர்ன் மரம் சில்வர் ஓக் என தவறான பெயரிடப்பட்டு இருந்தது. மேட்டுப்பாளையம் பள்ளி ஒன்றிலும் பல மரங்கள் மிகத்தவறாக பெயரிடப் பட்டிருந்தன நான் அந்தபள்ளியின் தாளாளருக்கு புகைப்படங்களுடன் தகவல் சொல்லியும் எந்த பலனும் இல்லை.
வெயில் முதுகில் அறைந்துகொண்டிருந்தது. ஏராளம் விசிறி வாழைகளும் ப்ளுமீரியாக்களும் அங்கிருந்தன. காலை மதியம் மீனாட்சி வீட்டில் உணவு.அன்றைய அந்தி மிக இனியது. மறக்கமுடியாதது.என்றேனும் அதைக்குறித்தெழுதுவேனாயிருக்கும்.
மறுநாள் எப்படியோ 20 பங்கேற்பாளர்கள் வந்திருந்தனர். போர்டு ரூம் போலிருந்த ஒரு குளிரூட்டப்பட்ட அறையில் ஒரு துவக்க உரை அவர்களுக்கு தெரிந்த vegetable insult குறித்தும் பொதுவான தாவரவியல் குறித்தும் சில கேள்விகள் பின்னர் குழந்தைகளுக்கான ஒரு ppt பின்னர் அடுக்கக வளாகத்தில் களத்தாவரவியல். ஆலமரத்தடியில் 45 நிமிட வகுப்பு பின்னர் மரம் தழுவல் . குளிர்ச்சியாக லிச்சி குளிர்பானம் ஒன்றை குடித்த பின்னர் மீண்டும் அரங்கில் பெரியவர்களுக்கான ppt.
மதிய உணவு பின்னர் ஓய்வு . மாலை வெயில் தாழ botanical hunt 1 மணி நேரம். அதில் அனைவரும் ஆர்வமாக கலந்துகொண்டனர். பின்னர் அங்கிருந்த ஒரு அரைவட்ட வடிவ திறந்த வெளி அரங்கில் அமர்ந்து இருட்டும் வரை அன்றாட வாழ்வில் தாவரங்களைக் குறித்துப் பேசியும் விவாதித்தும்கொண்டிருந்தோம். எனக்கு நிறைவாக வகுப்பாக இருந்தது. மீனாட்சி ரவீந்திரன் தம்பதியினர் அவர்களின் சொந்தச்செலவில் இதை முன்னெடுத்துச்செய்தார்கள்.
மறுநாள் அதிகாலை அங்கிருந்து விடைபெற்று அகரமுதல்வன் வீட்டுக்கு சென்றேன். முழுநாளும் அங்கிருந்துவிட்டு அங்கிருந்து வெண்ணிலா வீடு. 3 நாட்கள் அங்கிருந்து விட்டு பெங்களூருக்கு வந்து சேர்ந்தேன்.
சர்வதேச மகளிர் தினம் இன்று. இப்படியொரு தினத்தைப் பிரத்யேகமாகக் கொண்டாடுவதே உலகில் பெண்களின் நிலை என்ன என்பதைக்காட்டுகிறது.
நான் பதின்ம வயதில் இருக்கையில் தொலைக்காட்சியில் HBO`வில் ஏதோ ஒரு ஆங்கிலப்படம். படத்தின் பெயர் நினைவிலில்லை ஆனால் ஒரு காட்சி மட்டும் அச்சடித்தது போல் நினைவிலிருக்கிறது.
கணவன் கூடத்தில் அமர்ந்து நாளிதழ் வாசித்துக்கொண்டிருப்பான், குழந்தை கீழே விளையாடிக்கொண்டிருக்கும். மனைவி சமையலறலையில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பாள். கொஞ்சநேரத்தில் கணவன் உள்ளே வந்து மனைவியிடன் நெளிந்துகொண்டே “நீ தள்ளிக்கோ நான் பாத்திரம் தேய்க்கிறேன்“ என்பான். அவள் அவனை விசித்திரமாகப்பார்த்துக்கொண்டே “என்ன திடீர்னு வேண்டாம் நானே செய்யறேன்“ என்பாள் மீண்டும் கணவன் “இல்லை நீ வேணா போய்க் குழந்தையப் பார்த்துக்கோ, நான் இதைச்செய்யறேன்“ என்பான். மனைவி கையைக்கழுவிக்கொண்டு கூடத்துக்குச்செல்வாள்.அங்கு குழந்தை மலம் கழித்திருக்கும். கணவனை அருவருப்புடன் பார்த்தபடி குழந்தையை எடுக்கச்செல்வாள்,
இது அமெரிக்கா என்கிற வல்லரசில் பல ஆண்டுகள் முன்பு நடந்தைக்காட்டிய ஒரு திரைக்காட்சி. இன்னும் அப்படியேதான் அல்லது அதைக் காட்டிலும் கேவலமாகத்தான் இருக்கிறது பெண்களின் நிலைமை.
கல்லூரியில் அலுவலக நேரம் முடிந்தும் சில சமயம் கூட்டங்கள் நடக்கும். அப்போது பெண் பேராசிரியர்கள் அனைவருமே நிலைகொள்ளாமல்தான் இருப்போம், ஏனென்றால் மாலை குழந்தைகளைப் பள்ளியிலிருந்து அழைத்துவருவது. பால்காரரிடம் பால் வாங்குவது, வீட்டில் இருக்கும் பெரியவர்ளைக் கவனித்துக்கொள்வது, காலையில் ஊற வைத்த உளுந்து அரிசியை மாவாக்குவது, கூட்டிப்பெருக்கி, விளக்கேற்றி, என பல நூறு வேலைகள் எங்களுக்குக்காத்திருக்கும்.
ஆண்களோ எந்தக்கவலையுமின்றி மேலும் மேலும் தேவையற்றவைகளைப் பேசிக்கொண்டு காலம் தாழ்த்திக்கொண்டிருப்பார்கள் ஏனென்றால் எத்தனை தாமதமாகப்போனாலும் அவர்கள் உடைமாற்றிக்கொண்டதும் காபியோ தேநீரோ இரவுணவோ கொண்டு வந்துகொடுக்கப்படும் எனவே அவர்களுக்கு நேரம்குறித்த கவனம் இருப்பதே இல்லை.
மகன்கள் பள்ளியில் படிக்கையில் நானும் அப்படியான கூட்டங்களிலிருந்தோ, கல்லூரியின் கடைசி வகுப்பிலிருந்தோ அப்படியே கார் நிறுத்துமிடத்துக்கு பாய்ந்து செல்வேன். வகுப்பறைகளில் மின் விசிறி இருப்பதால் கைகள்,தலையெல்லாம் சாக்கட்டியின் தூள் படிந்திருக்கும் , அப்படியே பள்ளிக்குச்சென்று காத்திருக்கும் மகன்களை அழைத்துக்கொண்டு அவர்களின் அன்றைய நாளைக்குறித்துக் கேட்டுதெரிந்துகொண்டு வழியில் நிறுத்தி நிறுத்தி காய்கறியோ திண்பண்டங்களோ வேறுஏதாவதோ வாங்கிக்கொண்டு வீடு வருவேன்.
பெற்றோர் ஆசிரியக்கூட்டங்களுக்கு கல்லூரியில் விடுப்பெடுத்துக்கொண்டு போவது, ப்ராஜெக்ட்களுக்கு மெனக்கெடுவது, ஸ்போர்ட்ஸ்டே, ஆன்னுவல் டேக்களுக்கு தயார்ப்படுத்துவது, ஏதேனும் புகார்களென்றால் உடனே பள்ளிக்குப்போய் என்னவென்று கேட்டுச் சரிசெய்வது, பதின்மவயதில் மகன்களின் மனக்குழப்பத்துக்கு, பிரச்சனைகளுக்கெல்லாம் உடன்நிற்பது, வளரும் வயதுக்கு தேவையான உணவைச் சுவையாகச் சமைத்துக்கொடுப்பது, கூடவே கல்லூரிவேலை, சமையல், இல்பேணுதல், நல்லது கெட்டதுகளுக்குச் செல்வது விருந்தினர்களின் வருகையைச்சமாளிப்பது, என இப்போது நினைத்துப்பார்த்தால் மலைப்பாயிருகிறது. கூடவே மாதாந்திர விலக்குநாட்களின் சுமையும் இருக்கும்.
பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு, சன்மானம் தரவேண்டியதில்லை என்பதால் மாணவர்களின் பெற்றோர்களை(non financial contribution) பேசுவதற்கு அடிக்கடி அழைப்பார்கள். அப்படியும் பலமுறை சென்றிருக்கிறேன்.
ஆனால் பள்ளியின் விழாக்களுக்கு வீட்டுக்கு அழைப்பிதழ் வருகையில் பள்ளி அதுவரை பார்த்தே இருக்காத அப்பாவின் பெயரில் மட்டும்தான் அழைப்பிதழ் அனுப்பப்படும்.
இன்றும் இதே நிலைதான் தொடர்கிறது. முன்பு ஆண்கள் மட்டுமே சம்பாதித்துக்கொண்டிருந்த நாட்களில் உண்டி சுருங்குதல் பெண்டிருக்கும் ,உத்தியோகம் புருஷர்களுக்கும் லட்சணமாகச்சொல்லப்பட்டது. பெண்களும் வேலைக்குச்செல்லும் இப்போதும் அதுவே தொடருவது துயரளிக்கிறது என்றால், ஒட்டுண்ணிகளாகப் பெண்களை உறிஞ்சி சக்கையெனத் துப்பும் ஆண்களும் பெண்கள் தினத்துக்கு எந்த வெட்கமும் இல்லாமல் வாழ்த்துவது எரிச்சலூட்டுகிறது.
எனக்குத்தெரிந்த பல குடும்பங்களில் வாழ்வின் இயங்கியல் சார்ந்த பல நம்பிக்கைகள் தடைகள் சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்படுகின்றன, அன்னக்கை எனப்படும் சாதம் எடுக்கப் பயன்படுத்தப்படும் கரண்டியை நீர் நிரம்பிய ஒரு தட்டில் தான் வைக்கவேண்டும் அது ஒரு போதும் காய்ந்துவிடக்கூடது என்பதில் மிகக்கவனமாக இருக்கும் ஒரு குடும்பம் அவர்கள் வீட்டுப்பெண்களை குடும்பத்து ஆண்கள் பலர் முன்னிலையில் தாழ்வாகவும் இழிவாகவும் நடத்துவதை பொருட்டாகவே நினைப்பதில்லை. பெண்கள் அப்படித்தான் நடத்தப்படவேண்டும் என்று நம்புகிறார்கள் போல.
சமீபத்தில் ஒரு குடும்பத்தில் குலதெய்வ விழா எனக்கும் அழைப்பிருந்தது போயிருந்தேன். குலத்தின் ஆண்கள் 11 நாட்கள் கடும் விரதமிருந்து கைக்காப்புக் கட்டிக்கொண்டு எங்கோ தொலைவிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்திருந்தனர். தீர்த்தக்குடங்களை கோவில் வளாகத்தில் அடுக்கி வைக்கையில் ஒருகுடும்பத்துப்பெண் செய்த சிறு கவனக்குறைவிற்காக அவரது கணவர், அந்த விரதம் இருந்து விபூதிப்பட்டையும் குங்குமமும் காவிவேட்டியுமாக தெய்வீகமாக தோற்றமளித்தவர், ஒரு பச்சையான கெட்ட வார்த்தையைச்சொல்லித் திட்டினார். அவரது குலத்தைக் காப்பதாக அவர் நம்பும் அவர்களது குலதெய்வமும் ஒரு பெண்தான். அந்த அம்மன் சிலை முன்புதான் இது நடந்தது.
என் மாணவி ஒருத்தி எனக்குத்தெரிந்த ஒரு நிறுவனத்தில் வரவேற்பாளினியாக இருக்கிறாள். அவளையும் அவளது அம்மாவையும் அவளது குடிகாரத்தகப்பன் எப்போதும் சந்தேகப்பட்டு மிகக்கொடுமை செய்வான். சமீபத்தில் வேலைக்குப்புறப்பட்டுச்சென்ற அவளை முழுப்போதையில் துரத்தி வந்து பேருந்துக்குள் நுழைந்து தென்னைமட்டையால் அடித்திருக்கிறான். பெண்களை வெளி உலகின் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றுவதைப்போலவே குடும்பவன்முறையிலிருந்தும் காப்பாற்ற வேண்டி இருக்கிறது.இங்கெதற்கு பெண்கள் தினம்?
நான் முன்பிருந்த வீட்டருகில் பெண்களுக்காக இயங்கிய பெண்களால் நடத்தப்படும் காவல்நிலையம் இருக்கிறது. அங்கு அப்போது உதவிக்காவலராக இருந்த, குடும்ப வன்முறை கேஸ்களை எளிதாக ஹேண்டில் செய்யும், எஸ்தர் என்பவரை ஒருநாள், அவரது வேலைவெட்டி இல்லாமல் காவலர் குடியிருப்பில் குடித்துவிட்டு அலப்பறை செய்வதை மட்டுமே செய்துவந்த கணவன் ஸ்டேஷனுக்குள் நுழைந்து அடித்து அவரது கையை முறித்தான்.
காவலர் குடியிருப்புக்கருகில் வசித்த நான், எஸ்தரின் வீட்டுக்கு முன்பாக மனைவியை அடிக்கப்போன ஒருவனை எஸ்தர் காதோடு சேர்த்து அறைந்து அவன் தலைகுப்புற மண்ணில் விழுந்ததை ஒருமுறை பார்த்தேன்.
எத்தனை உயர்ந்த சமூக அந்தஸ்துள்ள பணியில் இருந்தாலும், குடும்பத்தினரால் இழிவு படுத்தப்படுவதை எந்தப்புகாரும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளவும் பெண்கள் நூற்றாண்டுகளாகப் பழக்கப்படுத்தப் பட்டிருக்கின்றனர்.
எங்கள் குடும்பத்திலேயே காதலித்ததற்காகக் கழுத்தில் சுருக்கு வைத்து கொல்லப்,பட்ட பெண்கள் இருந்தார்கள். பாம்பு கடித்ததாகச்சொல்லப்பட்டு வாசலில் மஞ்சள் நீரூற்றி ஈரமாகக் கிடத்தப்பட்டிருந்த அருக்காணி அத்தையின் மகளின் கழுத்தைச்சுற்றிலும் சிவப்பாக இருந்த கயிற்றின் தடம் ஒரு ரோஜா மாலையால் மறைக்கப்பட்ட போது நானும் அருகிலிருந்தேன்.
காதலை முறித்து வலுக்கட்டாயமாக வேறொருவருக்கு மணம் செய்துவைக்கப்பட்ட, முன்காதலையும் மறக்கமுடியாமல் கணவனுடன் மனதொன்றியும் வாழமுடியாமல் இருதலைக்கொள்ளியாய் அவஸ்தைப்படும் நூறு நூறு பெண்கள் எனக்குத்தெரிந்து இருக்கிறார்கள்.
காதலைச்சொல்லகூடத் துணிவில்லாமல் கழுத்தை நீட்டிக், குடும்பமென்னும் கற்பிதங்களுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்த பல நூறு பெண்களையும் நானறிவேன்.
கூடி இருப்பதால்தான் அது குடி என்றும் அதில் இயங்குவதுதான் குடித்தனம் என்றும் வகுக்கப்பட்டது. அப்படிக் கூடக் கூடி இருப்பதன் பாதகங்களை, சிரமங்களை, குடும்பச்சுமையை தோளில் ஏற்றிக்கொள்வதைத் தவிர்ப்பதற்காக, உடலில் இளமையும் கண்களில் கனவுகளும் நிரம்பி இருக்கும் மனைவிகளைத் தனியே இல்பேணவும், குழந்தைகளை வளர்க்கவும், வீட்டுப்பெரியவர்களை பராமரிக்கவும் பணித்துவிட்டு, வெளிநாட்டிலும் வெளியூரிலும் பணம் சம்பாதிக்கப் பிரிந்துசென்று, அங்கேயே வாழ்ந்து, விடுமுறைக்கு விசிட்டிங் கணவர்களாக வந்துசெல்லும், மடியில் வந்து விழுந்த வாழ்வெனும் கனியை ருசிக்கத்தெரியாத முழுமுட்டாள் கணவர்களும் பல நூறுபேர் இருக்கிறார்கள்.
பேருந்து நிலையங்களில் இன்றும் இங்கெல்லாம் சாதரணமாகப் பார்க்கமுடியும் பேருந்தைவிட்டு வேட்டியை, லுங்கியை மடித்துக்கட்டிக்கொண்டோ, பேண்ட் பாக்கட்டில் கைகளை விட்டுக்கொண்டோ இறங்கி, விரைந்து முன்னே நடந்துசெல்லும் கணவர்களையும், இரண்டு கைகளிலும் பைகளையும் குழந்தைகளும் பிடித்துக்கொண்டு கணவன் சென்ற திசையில் ஓட்டமாக ஓடும் பெண்களையும்.
அரிதாகவே குழந்தைகளைத் தோளில் எடுத்துக்கொள்ளும், மனைவியுடன் இணையாக நடந்துசெல்லும் ஆண்களைப் பார்க்கமுடியும்.
பத்தாம் வகுப்புப்படிக்கும் தன் மகள் காலையில் வைத்துக்கொண்ட கனகாம்பரச்சரம் வாடியிருந்த பின்னலை மாலை பள்ளி விட்டு வந்து இயல்பாக கொண்டைபோட்டுக்கொண்டதற்கு “விலைமகளே கொண்டையைப்பிரி“ என்று தெருவில் நின்று கூச்சலிட்ட ஒரு தகப்பனை நானறிவேன். விலைமகள்கள் கனகாம்பரம் வைத்துக்கொள்வார்களென்பது அந்த ஆணுக்குதெரிந்ததுபோல அந்தச் சிறுமிக்கு தெரிந்திருக்கவில்லை.
நானும் எனது சகோதரியும் அம்மாவும் எதாவது ஒரு முக்கிய முடிவு எடுக்கப்படும் நாட்களில் வீட்டுக்கூடத்துக்கு கூட வர அனுமதிக்கப்பட்டதில்லை. எல்லா முடிவுகளையும் வெறும் ஆணாக மட்டுமே இருந்த அப்பா என்பவர் தான் எடுத்தார், நிறைவேற்றினார். அதில் பெரும்பாலான முடிவுகள் மகா கேவலமானவை.
எனக்கும் அக்காவுக்கும் அப்போதைய பெருங்கனவென்பது எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது செத்துப் போகவேண்டுமென்பதுதான். இரண்டுக்குமே துணிவில்லை என்பதால் இன்றும் உயிரோடு இருக்கிறோம். ஒரு போதும் சொன்னதில்லை என்றாலும் 50 வருட மணவாழ்வில் ஒரு தென்னிந்தியப் பெண்ணுக்கு சாதாரணமாக இழைக்கபப்டும் அனைத்து அநீதிகளையும் தாங்கிக்கொண்டு 82 வது வயதில் செத்துப்போன என் அம்மாவுக்கும் அதுதான் கனவாக இருந்திருக்கும்.
சிண்டெரெல்லா ஒருபோதும் ஒரு இளவரசனுக்காக காத்துக்கொண்டிருக்கவில்லை அவளுக்கு நல்ல உடை அணிந்துகொண்டு ஏதேனும் ஒரு நிகழ்வுக்கு வெளியே செல்லவேண்டுமென்பதுதான் கனவாக இருந்தது.இளவரசன் தான் ஒரு மணப்பெண்ணுக்காகக் காத்துக்கொண்டிருந்தான்.
நான் பதின்மவயதில் எப்படி இருந்தேனென்று எனக்குத்தெரியவே தெரியாது ஒரே ஒரு புகைப்படம் கூட எடுக்கப்பட்டதில்லை, எடுக்க அனுமதிக்கப்பட்டதும் இல்லை. இன்று அதற்குப் பிழையீடாகத்தான் ஆயிரமாயிரம் புகைப்படங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்கிறேன்.
சமூக ஊடகங்களிலும் பெண்கள் தொடர்ந்து இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள்.
சிம்பு முன்பு ஏதோ ஒரு பாடலில் பெண்ணை இழிவு படுத்தும் ஒரு சொல்லை பீப் ஒலியால் மறைத்ததற்கு பெண்கள் அமைப்புக்கள் கொடி பிடித்து போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அந்த அமைப்புகள் ஒருபோதும் “புல்வெளியாகிறேன் இப்பொழுது என்னை ஆடுதான் மேய்வது எப்பொழுது“ போன்ற வெளிப்படையான ஆயிரமாயிரம் பாடல்வரிகளுக்கெல்லம் ஏன் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை?
இப்போது ஒரு அரசியல் நகைச்சுவையாளர், விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சம் என்று பெயர் வைப்பதுபோல சற்றும் பொருத்தமில்லாத பெயரை வைத்துக்கொண்டிருக்கும் அவர், தனது முன்காதலியை விலைமகள் என்று சமூக ஊடகங்களில் பேட்டிகொடுக்கையில் அதைப் பெண்கள் ஆண்கள் என யாரும் எதிர்க்காதது மட்டுமல்ல, அவருக்குப் பின்னே கும்பலாக நின்று கேலியாகச்சிரிக்கும் கூட்டத்தினரும் அதிர்ச்சி அளிக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் வீட்டில் அன்னை மனைவி மகள் சகோதரிகள் இருக்கிறார்கள் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
உண்மையில் ஆண்கள் மகிழ்ந்துகொள்ள வேண்டும் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் இழிவு படுத்தப்பட்டும் பழிவாங்கப் புறப்படாமல் பெண்கள் சமஉரிமை மட்டும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு.
கல்லுரியில் இன்று படிகளில் ஏறி என் அறைக்கு வருகையில் எனக்கெதிரே கிளர்ந்தொளிரும் இளமையுடன் ரோஜ நிற ஈறுகள் தெரியச் சிரித்தபடி என்னைக்க்டக்கும் மாணவிகளைப் பார்க்கையில் கலக்கமாக இருக்கிறது இவர்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்னும் பதைப்பு எனக்குள் நிரந்தரமாக இருக்கிறது.
இதோ எனக்கு அடுத்த வகுப்பு stress physiology, ரெஃபெர் செய்ய ஒரு புத்தகத்தை எடுத்தேன். Biological clock என்பதற்கு உதாரணமாக //sleeping and awakening in man are caused by biological clock// என்றிருக்கிறது. ஏன் அது human என்று குறிப்பிடப்படவில்லை?
1863-ல் வெளியான தாமஸ் ஹென்றியின் Evidence as to Man’s Place in Nature. என்னும் நூலில் “March of Progress” என்னும் பிரபலமான தலைப்பில் வெளியான பரிணாம வளர்ச்சியில் குரங்கிலிருந்து மனிதகுலம் உருவானதைச் சித்தரிக்கும் படத்திலும் குரங்கிலிருந்து ஒரு ஆண் தான் உருவாகிறான் பெண்ணல்ல. 2025-லும் அறிவியல் புத்தகத்தில் ஆண் தான் இருக்கிறான்.
பெண்கள் இல்லவே இல்லையா இந்த உலகில்?பிறகென்ன பெண்கள் தினமும் கொண்டாட்டமும்? shame!
நான் வாட்ஸாப்பில் அதிகம் தொடர்பிலிருப்பவள். குறிப்பாகத் தாவரவியல் தகவல்கள், தாவரங்களின் புகைப்படங்கள், ஜெயமோகன் அவர்களின் கருத்துகள் ஆகியவற்றை அதிகம் பகிர்வதுண்டு.அதிகாலை எழுந்ததும் முக்கியமான சிலருக்கு மட்டும் காலை வணக்கம் சொல்வது வழக்கம். எனக்கு வணக்கம் சொல்பவர்களுக்குப் பதில் சொல்லிவிடுவேன்.
மிக அழகிய தாவரங்கள், மலர்கள் அல்லது கனிகளுடன் தான் என் வாழ்த்துகள் இருக்கும். மிக அழகிய தகவல்கள் புகைப்படங்கள் அனுப்புபவர்களுக்கு பதிலுக்கு அழகிய இமோஜிக்களையும் அனுப்புவேன், அதிகம் பல நிறங்களில் இதய வடிவை பாராட்டாகவோ அன்பைத்தெரிவிப்பதற்கோ அல்லது மகிழ்ச்சி என்பதை உணர்த்தவோ அனுப்புவதும் உண்டு. பச்சை இதயம் அடிக்கடி என்னிடமிருந்து அனுப்பப்படும்.
வாட்ஸாப் புழங்கும் அளவுக்கு வந்திருப்பவர்களுக்கு இமோஜிக்களின் குறியீட்டு அர்த்தம் நாட்டு நடப்பு ஆகியவை ஓரளவுக்கேனும் தெரிந்திருக்கும் என்னும் ஒரு அடிப்படையான நம்பிக்கை எனக்கு இருக்கிறது.(இருந்தது)
தினமும் காலை வணக்கம் சொல்லும் ஒருவரில் ஒரு ஓய்வுபெற்ற பல்கலைக்கழகப் பெரியவரும் இருந்தார். அவரை நான் சந்தித்ததே இல்லை. அவருக்கு நடந்த ஒரு பாராட்டுவிழாவின் போது அவருக்கும் எனக்கும் பொதுவான ஒரு தோழி, நான் மிகவும் மதிப்பும் அன்பும் கொண்டிருப்பவர், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கச்சொல்லி அவரது தொடர்பு எண்ணை அனுப்பினார். வாழ்த்தினேன் அதன் பிறகு அவர் எனக்கு தினசரி காலை வணக்கம் அனுப்புவதும் நான் பதில் அனுப்புவதும் வழக்கமானது. ஒரு வருடத்க்கும் மேலாகிவிட்டிருக்கும் என்று நினைக்கிறேன். பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கிய போலி மலர்களின் படங்களை அனுப்புவார்.
கடந்த வாரம் அழகிய நிஜ மலர்களின் புகைப்படமொன்றை அனுப்பி இருந்தார். நான் பதிலுக்கு வணக்கமும் புகைப்படத்தில் இடம்பெற்றிருந்த மலர்களின் நிறங்களில் இரண்டு இதயவடிவங்களையும் அனுப்பியிருந்தேன்.
இதய வடிவங்களின் குறியீட்டு அர்த்தம் அவருக்கு முற்றிலும் வேறு போலிருக்கிறது. நான் அனுப்பிய இதய வடிவங்களின் தகவலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து யாருக்கோ புளகாங்கிதமாக லோகமாதேவி இதை எனக்கு அனுப்பி இருந்தார் என்னும் செய்தியை அனுப்ப நினைத்து, அவர் கெட்ட நேரம் அதை யாருக்கோவும் கூடவே எனக்கும் அனுப்பி விட்டார்.
அதிகம் ஒன்றும் நான் திடுக்கிடவில்லை எனினும் ஆண்களின் இந்த தன்னம்பிக்கை இருக்கிறதே அதை எண்ணி வியந்தேன். சங்ககாலப்பாடல்களில் வருமே அரசன் என்னும் ஆண் மகன் வழியில் வரக்கண்டு பேதை பெதும்பை பேரிளம் பெண்கள் என எல்லா வயதுப்பெண்களும் அவன் மீது மையல், காதல், காமம் இன்னபிறவெல்லாம் கொண்டு மேகலை நழுவி வளையல் கழன்று இம்சைப்படுவார்களல்லவா, அப்படி பெண்கள் யாராக இருந்தாலும் ஆண் என்னும் ஒரு தகுதி உடையவர்களை விரும்புவார்கள் ஏதேனும் வாய்ப்புக்கிடைத்தால் அவர்மீதுள்ள மையலை, தாங்கள் கோட்டைத் தாண்டிவரவிருக்கும் செய்தியை எப்படியாவது தெரிவிப்பார்கள் என்று நம்புகிறார்கள் அல்லவா அந்த திண்ணக்கம் தான் ஆச்சர்யப்படுத்துகிறது.
லோகமாதேவிக்கு அப்படி யாரையேனும் பிடிக்க வேண்டுமென்றால் ஆண் என்னும் ஒரு தகுதி மட்டும் போதாது என்பதுவும் அவருக்குத் தெரியவில்லை பாவம்
இந்த வகை ஆண்கள் எல்லம் தாங்கள் அமர்ந்திருக்கும் ஆணாதிக்க குதிரை, அகம்பாவக் குதிரையிலிருந்து முதலில் இறங்கி, பின்னர் அதை அவர்கள் ஓட்டிக்கொண்டிருக்கும் குண்டுச்சட்டிக்குள்ளிருந்து வெளியேறினால் மீட்புண்டு.
அந்தப் பெரியவருக்குக் கோபித்துக்கொள்ளாமல் இதயவடிவத்தை நான் அனுப்பும் பொருள் என்ன என்பதை விளக்கிவிட்டு அவரது எண்ணை தடைசெய்தேன்
திருச்சியில் தங்கி இருந்த ரம்யாஸ் விடுதியில் complimentary breakfast இருந்தது. உப்பிட்டு வேகவைத்த நிலக்கடலை, ஆவியில் வேகவைத்த புரோக்கலி, ஸ்வீட் கார்ன், உள்ளிட்ட காய்கறிகள், பருத்திப்பால், கம்பு தோசை, முட்டை, பழங்கள், கூடவே வழக்கமான இட்லி, தோசை, பூரி,சந்தகை, ரொட்டி. கார்ன்ஃப்ளேக்ஸ், தேன், வெண்ணெய், சீஸ், பழச்சாறு, ஐஸ் கிரீம், காபி, டீ எனச் சத்தான, விரிவான மெனு.
7 மணிக்கு காலை உணவை முடித்து விட்டு தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றோம். திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலை நன்றாக இருந்தது அத்தனை போக்குவரத்தும் இல்லை. ஏறுவெயில் மிதமாகவே இருந்தது.
எங்களுக்கு முன்னால் ஒரு டெம்போவில், திறந்திருந்த பின்பகுதியில் காரைச்சட்டி, கடப்பாரை, மண்வெட்டிகளுடன் மஞ்சள் புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டிருந்த ஒரு ராஜாஸ்தானிப் பெண் பயணித்துக்கொண்டிருந்தார். சாய்ந்து அமர்ந்திருந்த அவர் முகம் கல்போல் இறுகி இருந்தது. அமைதியாக வானை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவர்மீது வெயில் விளையாடிக்கொண்டிருந்தது. அந்தச் சூரியனின் ஒளியின் வழி பயணித்து தான் விட்டுவிட்டுவந்த பாலைநிலத்தின் வீட்டை, உறவுகளை, மனிதர்களைக் குறித்தெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாரா?
முக்கால் மணி நேரத்தில் தஞ்சை சென்றுவிட்டோம். வெண்ணிலாவின் தோழியும் தஞ்சை பாரத் கல்லூரிகளின் தாளாளருமான புனிதா அவர்கள் கோவிலில் எங்களுக்கு உதவ ஒரு ஓதுவாரை ஏற்பாடு செய்திருந்தார்.
கோவிலுக்கு எதிரில் இருந்த கார் நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் வந்து இறங்கிக் கொண்டே இருந்தார்கள். மழலையர் பள்ளிக்குழந்தைகளும் கூட வரிசையாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
’’….. செகண்ட் ஸ்டாண்டர்ட் எல்லாம் கீழே உட்காருங்க…..’’ என்று ஒரு ஒல்லிப்பிச்சி டீச்சர் அதட்டிக்கொண்டிருந்தார்.அன்று சனிப்பிரதோஷம் என்பதால் சிறப்பான பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.
இரண்டாம் நுழைவுவாயிலில் எங்களுக்காக ஓதுவார் காத்திருந்தார். எங்களுக்குத் தரிசனத்துக்கு உதவியபின்னர், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் அன்று நடக்கவிருந்த திருமுறை ஒப்புவிக்கும் போட்டிகளின் நடுவராகச் செல்லவிருந்தார்.
நந்தியின் அருகிலிருந்து ’’….இப்படி வாங்க….’’ என்று சொல்லி ஒரு நான்கைந்து படிகள் மட்டும் கொண்ட சிறு வாயிலைக் கடந்து உள்ளே அழைத்துச் சென்றார்.
எங்கோ செல்லவிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு அவரைத்தொடர்ந்தேன். கருவறைக்கு மிக மிக அருகில் நின்றுகொண்டிருந்ததையும் 29 அடி கரியலிங்கம் தொட்டுவிடும் தூரத்தில் இருந்ததையும் புரிந்துகொள்ளவே சிறிது நேரமானது. முதலில் உணர்ந்தது ஒரு திடுக்கிடல் தான் அத்தனை பெரிய லிங்கம், அத்தனைஅருகில், அத்தனை விரைவில் பார்ப்பேனென்று நினைத்திருக்கவில்லை.
சுதாரித்துக்கொண்டு வணங்கினோம். அங்கிருந்து பெரிய நாயகி அம்மன் சன்னதிக்கு சென்றோம், அம்மன் கைகளில் மருதாணி இலைக்கொத்தும், காலடியில் பல வண்ணங்களில் கண்ணாடி வளையல்களும் வைக்கப்பட்டிருந்தன. தரிசனம் முடிந்ததும் எனக்கு மருதாணிச்செடியின் சிறு கிளையைஅளித்தார்கள் சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன் (உலர்ந்து பாடமாகிவிட்டிருக்கும் அது என் கைப்பையிலேயே இருக்கிறது ) தாமரை மொக்குகளும் சாமந்திகளும் விபூதி பிரசாதமும் அடங்கிய சிறப்புப் பிரசாதப் பையும் கொடுக்கப்பட்டது.
ஓதுவாருக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டுப் பிரகாரம் முழுக்க 2 மணிநேரம் மெல்ல நடந்தும், உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டும் முழுக் கோவிலையும் சுற்றிப்பார்த்தோம்.
தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை ஒன்று வராகி அம்மன் சன்னதிக்குச் செல்லும் வழியில் உடைந்து தலைகுப்புறக் கிடந்தது. அதன்மீது அணில்கள் ஓடிவிளையாடின. தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றான அந்தப் பெரிய பொம்மையை உடைந்தபின்னர் அப்புறப்படுத்தி இருக்கலாம் அமங்கலமாக, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஏன் உலகப்பாரம்பரியச்சின்னமான அந்தக்கோவிலில் அந்தச் சிலையை அப்படியே அலட்சியமாக விட்டு வைத்திருக்கிறார்கள்?
உள்ளேயே தொல்லியல் துறையின் கலைக்கூடம் இருந்தது,சிற்பமாக 108 கரணங்கள், பாதுகாக்கப்பட்ட வண்ணச்சித்திரங்கள், கோவில் சிற்பங்களின் புகைப்படத் தொகுப்பு ஆகியவை அங்கு இருந்தன. புணரமைக்கப்படுவதற்கு முன்னும் பின்னுமான கோவிலின் புகைப்படங்களும் இருந்தன. கோவிலின் நந்திகள் எல்லாமே அருகு சூடியிருந்தன.
ஏராளமான வடிவங்களில், அளவுகளில் லிங்கங்கள் இருந்தன. ஆவுடையின் நீளம் அகலம் உயரம் விரிவு அலங்காரம் என ஒவ்வொன்றிலும் வேறுபாடிருந்தது.
சச்சதுர லிங்கங்களும் இருந்தன. லிங்கங்கள் கம்பி அழிக்குள் பாதுகாக்கப்பட்டிருந்தன, பாதுகாப்புக்கு முன்னர் லிங்கங்கள் வைக்கபட்டிருக்கும் இடத்தின் எல்லா சுவர்களிலும் பல்வேறு பெயர்களில் காதல் சின்னங்கள், காதல் செய்திகள், அம்பு துளைத்த இதயங்கள் வரையப்பட்டிருந்தன. அனேகமாக இந்தியாவின் எல்லா மொழிகளிலும் காதல் கிறுக்கல்கள் இருந்தன. அச்சுவர்களில் அவை கிறுக்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலரிதழ்களின் வண்ணங்களைத் தொட்டு வரையப்பட்ட அரிய சித்திரங்கள் இருந்தன. சேதமடைந்த, மங்கிய சித்திரங்களை அந்தக்கிறுக்கல்களுக்கிடையில் பார்த்தோம்.
தென்னையும் கரும்பும் பல சித்திரங்களில் இருந்தன. கொத்துக்கொத்தாக கனிகளோ அல்லது மலர்களோ இருந்த ஒரு குறுமரம் பல சித்திரங்களில் வரையப்பட்டிருந்தது.
லிங்கங்களுக்கு இணையாகவே சுற்றுப்பிரகாரத் தரையில் பல இடங்களில் வெற்றிவேல் பிரஸ் 1959 எனச் செதுக்கப்பட்டிருந்தது.
புற்றிலிருந்து அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் விரிந்த படம்கொண்டிருக்கும் பெரு நாகங்களை எதிர்த்துப்போரிடும், நீலநிற யானையானையைப் பிறையம்பால் வீழ்த்தமுற்படும் சித்திரங்கள் இருந்தன.
லிங்கங்களைக் கழுவி அழுக்கை ஸ்பாஞ்ச் துணியால் துடைத்துப் பக்கட்டில் பிழிந்துகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பிச்சாண்டவர் சன்னிதிக்கு வழிகாட்டிய ஒரு முதியவள் ’’…..மனசில் நினச்சதை நடத்திக்கொடுப்பார்….’’ என்று சொன்னார். அது தெய்வ வாக்கு என எண்ணிக்கொண்டு உள்ளே சென்று வணங்கினோம்.
கருவூரார் சன்னிதிக்கும் சென்று வணங்கினோம்.சிற்பங்களையும் ஓவியங்களையும் ஒருநாளில் பார்த்து ரசித்துவிடமுடியாது. கலையின் உச்சகட்ட வெளிப்பாடு அந்த கோவில் முழுவதுமே.
நீள் பிரகாரங்களில் இருட்டில் சின்னச்சின்னதாக பல தெய்வங்களுக்கு சன்னதிகள். எமன் சன்னிதி பூட்டப்பட்டு பூட்டில் ஒரு மலர்ச்சரம் செருகப்பட்டிருந்தது.
பல சன்னிதிகளில் காலியாக இருட்டு மட்டுமே இருந்தது. ஒரு சிறு லிங்க சன்னதியின் வாசலில் எதிரெதிராக அமர்ந்து மும்முரமாக வாய்விட்டுப் பாடங்களை ஒருத்தி சொல்லிக்கொடுக்க ஒருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள், இயற்பியல் படித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது சுற்றுலா வந்த இடத்தில் ஆசிரியருக்குத் தெரியாமல் ஓரிடத்தில அமர்ந்து படிக்கும் மாணவிகள்!!!! ஏலியன்களாக இருக்கக்கூடும்.
வெள்ளியில் பெரிதாக யானை, காளை, மயில் செய்யப்பட்டு கம்பிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கண்களாக உருண்டையான கண்ணாடிக்குண்டுகள் பதிக்கப்பட்டிருந்தது, உற்றுப்பார்க்கையில் அதில் நான் சிறிதாகத் தெரிந்தேன் ? யாரை யார் பார்த்துக்கொண்டிருந்தோம்?
கோவிலின் ஆழ்கிணறு ஒன்று பாழ்கிணறாக ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், குப்பைகள் நிறைந்து இருந்தது.அதையும் எல்லாருமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தோம்.
அந்தக்கோவில் உலகபாரம்பரியச் சின்னமாதலால் ஏராளமான வெளிநாட்டினரும் இருந்தார்கள். அவர்களுடன் ஆங்கிலத்தில் கோவிலைப் பற்றி விளக்கிச்சொல்லிக்கொண்டிருந்தார்கள் கோவிலின் வழிகாட்டிகள். (ஆக்சுவலி அம்மன் இஸ் த அதர் நேம் ஆஃப் பார்வதி. யெஸ் யெஸ் சைனீஸ் ஸ்டேச்சூஸ் ஆர் ஆல்சோ ஹியர்)
ராஜராஜன் சிறுவனாக இருக்கையில் அவன் குளிக்கவென்று கட்டப்பட்ட கல்தொட்டி இருந்தது அதை மட்டும் தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று ஆசையாக இருந்தது.
வெளிநாட்டினருக்கு கைகொடுக்கவும் அவர்களோடு நின்று புகைப்படமெடுத்துக் கொள்ளவும் கூட்டமாய் சிறுவர்கள் ஓடினார்கள். ஒருவர் தன் மனைவியுடன் கூட்டமாக இந்தியச்சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததை பெருமிதமாகப் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தார். காவி வேட்டியுடன் சிலரும் அவர்களில் இருந்தார்கள். கோவிலின் இடிபாடுகளை பெருங்கற்களையெல்லாம் நல்லவேலையாக ஒரு பக்கம் போட்டுப் பூட்டி வைதிருந்தார்கள். சேதமடைந்த நம் வரலாறு அல்லவா அவை?
பிரகாரத்துக்குள்ளேயே இருந்த கடையில் தயிர்சாதம், அதிரசம், சந்தன விபூதி பேஸ்ட் வாங்கிக்கொண்டோம்.நிறையப் பெண்கள் தலையில் டிசம்பர் பூ சூடிக்கொண்டு எனக்குப் பொறாமையை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
கோவில் விமானத்தை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரமாண்டுகளுக்கு முன்பு இப்படி இதே இடத்தில் ராஜராஜசோழனுடன் நின்று அந்த லோகமாதேவி பார்த்திருப்பாளாயிருக்கும்.
சரண் தருண் இருவருமே சூழலை உற்றுக்கவனிப்பவர்கள் தான். தினமும் பள்ளிக்கதைகள் வேனிலிருந்து இறங்க இறங்கவே தொடங்கிவிடும், இரவு என்னிடம் நெடுநேரம் கதை கேட்பார்கள்.
என்னிடம் சொல்ல வேண்டும் என்பதற்காகவே பள்ளியில் நடப்பவற்றை கவனிப்பார்கள்.
dont talk in tamil என்பதை அரிச்சுவடியிலிருந்தே கடுமையாக வலியுறுத்தும் பள்ளிதான் அதுவும். தமிழ்ப்பாடமும் வேண்டா வெறுப்பாக வைத்திருந்தார்கள். எப்படியோ எதன்பொருட்டோ பள்ளியில் ஒரு நாள் ஏதோ விழாவுக்காக ஒரு சிறப்பு விருந்தினர் தமிழில் உரையாற்றியிருக்கிறார் அதுவும் கண்ணகியைக்குறித்து.
அன்று மாலை தருண் கயிற்றுக்கட்டிலில் மூவருமாக அமர்ந்திருக்கையில் அந்த உரையைக்குறித்துச் சொன்னான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது அப்போது தருண் 4-லிலோ ஐந்திலோதான் படித்துக்கொண்டிருந்தான். அவனுக்குக் கண்ணகியைக் குறித்து சொல்லப்பட்டது வியப்பும் சந்தோஷமும் அளித்தது.
…“ உனக்குப் புரிஞ்சுதாடா அவர் பேசினது?“… என்றேன்.
..நல்லா புரிஞ்சுதே. கோவலன் கெட்டவன், கண்ணகி பாவம் இல்லையா?…“ என்றான் எனக்கு நம்பவே முடியவில்லை.
ஈகை வான் கொடி அன்னாளான கண்ணகியை விட்டுவிட்டு மாதவியிடம் போன கோவலனை ,அறம் தவறிய மன்னனை, ஊர் விட்டு ஊர் செல்லவேண்டிய துயரத்தை எல்லாம் கண்ணகிக்கு ஊழ் அளித்ததை தருண் புரிந்துகொண்டிருக்கிறான் என்பது பெருமகிழ்வளித்தது.
…ஆமாண்டா ரொம்ப ரொம்ப பாவம் அவ… என்றேன்.
…..இந்தக்கோவலன் அந்த அத்தைக்கு ஏன் சாப்பாடே போடலை?.... என்ற கேள்வியில் திகைத்து, ...``கண்ணகிக்கு கோவலன் சாப்பாடு போடலியா யார் சொன்னாங்க அப்படின்னு?…. என்றேன்
….அந்த தாத்தா பேசினாரே அவர்தான் சொன்னாரு… என்றான்
…இல்ல இல்ல எதோ தப்பா புரிஞ்சுகிட்டிருக்கே தருண் சாப்பாடெல்லாம் நல்லாத்தான் கிடச்சுது அவளுக்கு ஆனா அவ பிரச்சனை வேறடா, அவளை விட்டுட்டு அந்த மாமா வேற ஒரு பொண்ணு கூட போயிட்டாரு, அதனால கஷ்டப்பட்டா அப்புறம் கோவலனை கொலைபண்ணிட்டாங்க அதனால் அவ பாவமாயிட்டா ,…. என்றேன்
…அதெல்லாம் தெரியும் அந்த இன்னோரு அத்தை பேரு மாதவி… “….என்றான் அப்போது 7-ல் படித்துக்கொண்டிருந்த சரண்
அதற்குச் சில மாதங்கள் முன்பு நாங்கள் மூவருமாக HBO வில் ஒரு ஆங்கிலப்படம் பார்த்துக்கொண்டிருந்தோம் . கிளைமாக்ஸில் ஒரு நிலத்தடி அறையில் மாட்டிக்கொண்ட நாயகனையும் நாயகியையும் வெள்ள நீர் உள்ளே கொஞ்சம் கொஞ்சமாகப் புகுந்து மூழ்கடிக்கிறது கழுத்தளவுக்கு நீர் வந்தபோது இருவரும் ஆவேசமாக முத்தமிட்டுக்கொள்கிறார்கள்,
அது இறுதி முத்தமாதலால் வெகுநேரம் நீடித்தது, சரண் சந்தேகமாக என்னிடம்
…அம்மா அந்த மாமாவும் அத்தையும் என்ன செய்யறாங்க?… என்றான்
நான்..“ அதுவா அந்த வெள்ளம் வந்துச்சில்ல அந்த தண்ணி நிறைய அத்தை வாயில போயிருச்சு, அதை மாமா எடுக்கறார்“…. என்றேன், வேறென்னத்தை சொல்வது.
எனவே கோவலன் மாதவியைத் தேடிப்போனதால் உண்டான extra maraital affair குறித்து சரணுக்கு தெரிந்திருந்ததில் ஆச்சர்யமில்லை.
ஆனால் கண்ணகிக்கு சாப்பாடே இல்லாமல் போனதை இளங்கோவடிகள் கூட குறிப்பிடவே இல்லையே?
மீண்டும் தருண் … சாப்பாடே இல்லாம கண்ணகி பட்டினியா இருந்தாங்க அவங்கள மாதிரி யாருமே பட்டினியா இருந்ததே இல்லையாமா … தாத்தா சொன்னாரே“…. என்றான்
எனக்கு விஷயம் புரிந்தது
வீட்டில் டேக்ஸா எடுத்துட்டுவா என்று சொன்னபோது அது என்னவென்று தெரியாமல் பேய் முழி முழித்துக்கொண்டு நின்ற. ….பன்னாடி எங்கேங்கம்மா?… என்று கிராமத்துப்பெண் ஒருத்தி கேட்க ,
….பன்னாடி வெளியூர்ல இருக்காரு.. என்று நான் பதில் சொன்னதுக்கு
…எதுக்கு அப்பாவ பன்னாடைன்னு அந்த அம்மாகிட்டெ திட்டினே… என்று கோபித்துக்கொண்ட தருணுக்கு “பார்தொழுது ஏத்தும் பத்தினி” என்றால் என்னவென்று தெரியாமலிருந்ததில் வியப்பொன்றும்மில்லை.
அவனுக்கு பத்தினித்தனத்தை எப்படி விளக்கிச்சொல்வதென்று தெரியவும் இல்லை.
முன்பு ஜெயா டிவியில் குஷ்பூ விதம்விதமான வடிவங்களில் ஜன்னல், கதவு, வாசல் ,வாசற்படி, மாடிப்படி, வராண்டா வெல்லாம் வைத்த ஜாக்கட் போட்டுக்கொண்டு ஜாக்பாட் நிகழ்ச்சியை நடத்தினார்.
அப்போது வீட்டில் டிவி இருந்தது. தருண் என்னுடன் அமர்ந்து ஜாக்பாட் பார்ப்பான். ஒருசில வாரங்களுக்குபிறகு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கையில் குஷ்புவைக்காட்டி
....``இந்த அத்தை பாவம்``.... என்றான்
கொளுக்மொழுக் என்று போஷாக்காக, புஷ்டியாக அழகாக இருக்கும் குஷ்புவைப் பார்த்தால் எப்படி இவனுக்குப் பாவமாக இருக்கிறதென்று தெரியவைல்லை.
ஏண்டா ? என்றேன்
…“பட்டுசாரி எல்லாம் நல்லதா வச்சுருக்குக்காங்க ஆனா ஜாக்கட்தான் எல்லாமே கிழிஞ்சுருக்கு“….என்றான்.):
கல்லூரியில் தாமிரநிற காய்களுடன் நின்றிருந்த பெருங்கொன்றை மரத்தடியில் காத்திருக்கையில் இரு மாணவிகள் என்னைக் கடந்து நடந்து சென்றார்கள்.நெருங்கிய தோழிகள்போல, இறுக்கமாகக் கைகோர்த்திருந்தார்கள்.
அதில் ஒருத்தி மற்றவளிடம் …”” நேத்து நைட் பத்தரை மணிக்குடி , எல்லாரும் டிவி பார்த்துகிட்டு இருக்கோம் எனக்குப் போன் வருது புது நம்பரிலிருந்து. அப்பா எடுத்து ஹலோங்கறாரு கட் ஆயிருச்சு அப்பா மறுபடியும் ட்ரை பண்ணினா சுவிட்ச் ஆஃப்னு வருது, நான் பேசாம டிவியையே பார்த்துக்கிட்டு இருந்தேன். அப்பா கொஞ்ச நேரம் பார்த்துட்டு விட்டுட்டாரு. நைட் நான் ட்ரூ காலர் போட்டுப் பார்த்தா அது நம்ம கிளாஸ் — டி……””
…””அடப்பாவி கூப்பிட்டவன் பேசவேண்டியதுதானே உங்கப்பாட்டெ தைரியமா?…”” என்றாள் அந்த மற்றொருத்தி.
….””ம்க்கும், பேசிட்டாலும், என்கிட்டே ரெக்கார்ட் நோட் கேட்கறதுக்கே ஒரு செமெஸ்டர் ஆயிருச்சே அவனுக்கு!..
…””இன்னிக்கு காலையில் கிளாஸில் என்ன பார்த்துட்டு ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி உட்கார்ந்திருக்கான் பார்த்தியா?…”” என்றாள் முதலாமவள். பின்னர் கிளு கிளுவென்று சிரித்தபடி என்னைக் கடந்துசென்றார்கள்.