திருச்சியில் தங்கி இருந்த ரம்யாஸ் விடுதியில் complimentary breakfast இருந்தது. உப்பிட்டு வேகவைத்த நிலக்கடலை, ஆவியில் வேகவைத்த புரோக்கலி, ஸ்வீட் கார்ன், உள்ளிட்ட காய்கறிகள், பருத்திப்பால், கம்பு தோசை, முட்டை, பழங்கள், கூடவே வழக்கமான இட்லி, தோசை, பூரி,சந்தகை, ரொட்டி. கார்ன்ஃப்ளேக்ஸ், தேன், வெண்ணெய், சீஸ், பழச்சாறு, ஐஸ் கிரீம், காபி, டீ எனச் சத்தான, விரிவான மெனு.
7 மணிக்கு காலை உணவை முடித்து விட்டு தஞ்சைப் பெரிய கோவிலுக்குச் சென்றோம். திருச்சி- தஞ்சை நெடுஞ்சாலை நன்றாக இருந்தது அத்தனை போக்குவரத்தும் இல்லை. ஏறுவெயில் மிதமாகவே இருந்தது.
எங்களுக்கு முன்னால் ஒரு டெம்போவில், திறந்திருந்த பின்பகுதியில் காரைச்சட்டி, கடப்பாரை, மண்வெட்டிகளுடன் மஞ்சள் புடவைத்தலைப்பால் முக்காடிட்டுக்கொண்டிருந்த ஒரு ராஜாஸ்தானிப் பெண் பயணித்துக்கொண்டிருந்தார். சாய்ந்து அமர்ந்திருந்த அவர் முகம் கல்போல் இறுகி இருந்தது. அமைதியாக வானை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவர்மீது வெயில் விளையாடிக்கொண்டிருந்தது. அந்தச் சூரியனின் ஒளியின் வழி பயணித்து தான் விட்டுவிட்டுவந்த பாலைநிலத்தின் வீட்டை, உறவுகளை, மனிதர்களைக் குறித்தெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாரா?
முக்கால் மணி நேரத்தில் தஞ்சை சென்றுவிட்டோம். வெண்ணிலாவின் தோழியும் தஞ்சை பாரத் கல்லூரிகளின் தாளாளருமான புனிதா அவர்கள் கோவிலில் எங்களுக்கு உதவ ஒரு ஓதுவாரை ஏற்பாடு செய்திருந்தார்.
கோவிலுக்கு எதிரில் இருந்த கார் நிறுத்தத்தில் காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்றோம். ஏராளமான கல்லூரி, பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் வந்து இறங்கிக் கொண்டே இருந்தார்கள். மழலையர் பள்ளிக்குழந்தைகளும் கூட வரிசையாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு வந்தார்கள்.
’’….. செகண்ட் ஸ்டாண்டர்ட் எல்லாம் கீழே உட்காருங்க…..’’ என்று ஒரு ஒல்லிப்பிச்சி டீச்சர் அதட்டிக்கொண்டிருந்தார்.அன்று சனிப்பிரதோஷம் என்பதால் சிறப்பான பூஜைகள் நடந்து கொண்டிருந்தன.
இரண்டாம் நுழைவுவாயிலில் எங்களுக்காக ஓதுவார் காத்திருந்தார். எங்களுக்குத் தரிசனத்துக்கு உதவியபின்னர், சாஸ்திரா பல்கலைக்கழகத்தில் அன்று நடக்கவிருந்த திருமுறை ஒப்புவிக்கும் போட்டிகளின் நடுவராகச் செல்லவிருந்தார்.
நந்தியின் அருகிலிருந்து ’’….இப்படி வாங்க….’’ என்று சொல்லி ஒரு நான்கைந்து படிகள் மட்டும் கொண்ட சிறு வாயிலைக் கடந்து உள்ளே அழைத்துச் சென்றார்.
எங்கோ செல்லவிருக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு அவரைத்தொடர்ந்தேன். கருவறைக்கு மிக மிக அருகில் நின்றுகொண்டிருந்ததையும் 29 அடி கரியலிங்கம் தொட்டுவிடும் தூரத்தில் இருந்ததையும் புரிந்துகொள்ளவே சிறிது நேரமானது. முதலில் உணர்ந்தது ஒரு திடுக்கிடல் தான் அத்தனை பெரிய லிங்கம், அத்தனைஅருகில், அத்தனை விரைவில் பார்ப்பேனென்று நினைத்திருக்கவில்லை.
சுதாரித்துக்கொண்டு வணங்கினோம். அங்கிருந்து பெரிய நாயகி அம்மன் சன்னதிக்கு சென்றோம், அம்மன் கைகளில் மருதாணி இலைக்கொத்தும், காலடியில் பல வண்ணங்களில் கண்ணாடி வளையல்களும் வைக்கப்பட்டிருந்தன. தரிசனம் முடிந்ததும் எனக்கு மருதாணிச்செடியின் சிறு கிளையைஅளித்தார்கள் சந்தோஷமாக வாங்கிக்கொண்டேன் (உலர்ந்து பாடமாகிவிட்டிருக்கும் அது என் கைப்பையிலேயே இருக்கிறது ) தாமரை மொக்குகளும் சாமந்திகளும் விபூதி பிரசாதமும் அடங்கிய சிறப்புப் பிரசாதப் பையும் கொடுக்கப்பட்டது.
ஓதுவாருக்கு விடைகொடுத்து அனுப்பி விட்டுப் பிரகாரம் முழுக்க 2 மணிநேரம் மெல்ல நடந்தும், உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டும் முழுக் கோவிலையும் சுற்றிப்பார்த்தோம்.
தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மை ஒன்று வராகி அம்மன் சன்னதிக்குச் செல்லும் வழியில் உடைந்து தலைகுப்புறக் கிடந்தது. அதன்மீது அணில்கள் ஓடிவிளையாடின. தஞ்சையின் அடையாளங்களில் ஒன்றான அந்தப் பெரிய பொம்மையை உடைந்தபின்னர் அப்புறப்படுத்தி இருக்கலாம் அமங்கலமாக, ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினந்தோறும் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் ஏன் உலகப்பாரம்பரியச்சின்னமான அந்தக்கோவிலில் அந்தச் சிலையை அப்படியே அலட்சியமாக விட்டு வைத்திருக்கிறார்கள்?
உள்ளேயே தொல்லியல் துறையின் கலைக்கூடம் இருந்தது,சிற்பமாக 108 கரணங்கள், பாதுகாக்கப்பட்ட வண்ணச்சித்திரங்கள், கோவில் சிற்பங்களின் புகைப்படத் தொகுப்பு ஆகியவை அங்கு இருந்தன. புணரமைக்கப்படுவதற்கு முன்னும் பின்னுமான கோவிலின் புகைப்படங்களும் இருந்தன. கோவிலின் நந்திகள் எல்லாமே அருகு சூடியிருந்தன.
ஏராளமான வடிவங்களில், அளவுகளில் லிங்கங்கள் இருந்தன. ஆவுடையின் நீளம் அகலம் உயரம் விரிவு அலங்காரம் என ஒவ்வொன்றிலும் வேறுபாடிருந்தது.
சச்சதுர லிங்கங்களும் இருந்தன. லிங்கங்கள் கம்பி அழிக்குள் பாதுகாக்கப்பட்டிருந்தன, பாதுகாப்புக்கு முன்னர் லிங்கங்கள் வைக்கபட்டிருக்கும் இடத்தின் எல்லா சுவர்களிலும் பல்வேறு பெயர்களில் காதல் சின்னங்கள், காதல் செய்திகள், அம்பு துளைத்த இதயங்கள் வரையப்பட்டிருந்தன. அனேகமாக இந்தியாவின் எல்லா மொழிகளிலும் காதல் கிறுக்கல்கள் இருந்தன. அச்சுவர்களில் அவை கிறுக்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மலரிதழ்களின் வண்ணங்களைத் தொட்டு வரையப்பட்ட அரிய சித்திரங்கள் இருந்தன. சேதமடைந்த, மங்கிய சித்திரங்களை அந்தக்கிறுக்கல்களுக்கிடையில் பார்த்தோம்.
தென்னையும் கரும்பும் பல சித்திரங்களில் இருந்தன. கொத்துக்கொத்தாக கனிகளோ அல்லது மலர்களோ இருந்த ஒரு குறுமரம் பல சித்திரங்களில் வரையப்பட்டிருந்தது.
லிங்கங்களுக்கு இணையாகவே சுற்றுப்பிரகாரத் தரையில் பல இடங்களில் வெற்றிவேல் பிரஸ் 1959 எனச் செதுக்கப்பட்டிருந்தது.
புற்றிலிருந்து அடுத்தடுத்து வந்துகொண்டிருக்கும் விரிந்த படம்கொண்டிருக்கும் பெரு நாகங்களை எதிர்த்துப்போரிடும், நீலநிற யானையானையைப் பிறையம்பால் வீழ்த்தமுற்படும் சித்திரங்கள் இருந்தன.
லிங்கங்களைக் கழுவி அழுக்கை ஸ்பாஞ்ச் துணியால் துடைத்துப் பக்கட்டில் பிழிந்துகொண்டிருந்தார் ஒரு பெண்மணி. பிச்சாண்டவர் சன்னிதிக்கு வழிகாட்டிய ஒரு முதியவள் ’’…..மனசில் நினச்சதை நடத்திக்கொடுப்பார்….’’ என்று சொன்னார். அது தெய்வ வாக்கு என எண்ணிக்கொண்டு உள்ளே சென்று வணங்கினோம்.
கருவூரார் சன்னிதிக்கும் சென்று வணங்கினோம்.சிற்பங்களையும் ஓவியங்களையும் ஒருநாளில் பார்த்து ரசித்துவிடமுடியாது. கலையின் உச்சகட்ட வெளிப்பாடு அந்த கோவில் முழுவதுமே.
நீள் பிரகாரங்களில் இருட்டில் சின்னச்சின்னதாக பல தெய்வங்களுக்கு சன்னதிகள். எமன் சன்னிதி பூட்டப்பட்டு பூட்டில் ஒரு மலர்ச்சரம் செருகப்பட்டிருந்தது.
பல சன்னிதிகளில் காலியாக இருட்டு மட்டுமே இருந்தது. ஒரு சிறு லிங்க சன்னதியின் வாசலில் எதிரெதிராக அமர்ந்து மும்முரமாக வாய்விட்டுப் பாடங்களை ஒருத்தி சொல்லிக்கொடுக்க ஒருத்தி கேட்டுக்கொண்டிருந்தாள், இயற்பியல் படித்துக்கொண்டிருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது சுற்றுலா வந்த இடத்தில் ஆசிரியருக்குத் தெரியாமல் ஓரிடத்தில அமர்ந்து படிக்கும் மாணவிகள்!!!! ஏலியன்களாக இருக்கக்கூடும்.
வெள்ளியில் பெரிதாக யானை, காளை, மயில் செய்யப்பட்டு கம்பிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் கண்களாக உருண்டையான கண்ணாடிக்குண்டுகள் பதிக்கப்பட்டிருந்தது, உற்றுப்பார்க்கையில் அதில் நான் சிறிதாகத் தெரிந்தேன் ? யாரை யார் பார்த்துக்கொண்டிருந்தோம்?
கோவிலின் ஆழ்கிணறு ஒன்று பாழ்கிணறாக ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்கள், கவர்கள், குப்பைகள் நிறைந்து இருந்தது.அதையும் எல்லாருமாக எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தோம்.
அந்தக்கோவில் உலகபாரம்பரியச் சின்னமாதலால் ஏராளமான வெளிநாட்டினரும் இருந்தார்கள். அவர்களுடன் ஆங்கிலத்தில் கோவிலைப் பற்றி விளக்கிச்சொல்லிக்கொண்டிருந்தார்கள் கோவிலின் வழிகாட்டிகள். (ஆக்சுவலி அம்மன் இஸ் த அதர் நேம் ஆஃப் பார்வதி. யெஸ் யெஸ் சைனீஸ் ஸ்டேச்சூஸ் ஆர் ஆல்சோ ஹியர்)
ராஜராஜன் சிறுவனாக இருக்கையில் அவன் குளிக்கவென்று கட்டப்பட்ட கல்தொட்டி இருந்தது அதை மட்டும் தூக்கிக்கொண்டு வந்துவிடலாம் என்று ஆசையாக இருந்தது.
வெளிநாட்டினருக்கு கைகொடுக்கவும் அவர்களோடு நின்று புகைப்படமெடுத்துக் கொள்ளவும் கூட்டமாய் சிறுவர்கள் ஓடினார்கள். ஒருவர் தன் மனைவியுடன் கூட்டமாக இந்தியச்சிறுவர்கள் நின்று கொண்டிருந்ததை பெருமிதமாகப் புகைப்படமெடுத்துக் கொண்டிருந்தார். காவி வேட்டியுடன் சிலரும் அவர்களில் இருந்தார்கள். கோவிலின் இடிபாடுகளை பெருங்கற்களையெல்லாம் நல்லவேலையாக ஒரு பக்கம் போட்டுப் பூட்டி வைதிருந்தார்கள். சேதமடைந்த நம் வரலாறு அல்லவா அவை?
பிரகாரத்துக்குள்ளேயே இருந்த கடையில் தயிர்சாதம், அதிரசம், சந்தன விபூதி பேஸ்ட் வாங்கிக்கொண்டோம்.நிறையப் பெண்கள் தலையில் டிசம்பர் பூ சூடிக்கொண்டு எனக்குப் பொறாமையை உண்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
கோவில் விமானத்தை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ஆயிரமாண்டுகளுக்கு முன்பு இப்படி இதே இடத்தில் ராஜராஜசோழனுடன் நின்று அந்த லோகமாதேவி பார்த்திருப்பாளாயிருக்கும்.
Leave a Reply