
கல்லூரி திறக்க இன்னும் சில நாட்களே இருக்கின்றன. தருண் வேலையில் சேர இன்னும் ஒரு மாதமாகும். நினைத்துக்கொண்டாற்போல நேற்று ’’..அம்மா நாளைக்கு டாப்ஸ்லிப் போலாமா?..’’ என்றான். உடனே சரி என்றேன். வெகுநாட்களாகிறது அங்கு சென்று, தருண் காட்டியல் படிக்கையில் 6 மாதம் அங்கே பயிற்சியில் இருந்தான். அப்போது அவனை அழைத்துவரச் சென்றதுதான்.
இன்று அதிகாலை புறப்பட்டோம். ’’…சாப்பாடு செய்றது, பேக் பண்றதுங்கற வேலையே வேண்டாம் நேராப் போறோம் என்ன கிடைக்கிறதோ சாப்பிடறோம் ஓகேவா..’’ என்றான். சரி என்றேன். ’’…சில சமயம் நூடுல்ஸ்தான் கிடைக்கும்..’’ என்று என் முகத்தைக் கூர்ந்து பார்த்தான். ’’…என்னவானாலும் சாப்பிடுகிறேன் வா..’’ என்றேன்.
எனவே காலை நான் ஒரு காபி மட்டும் தருண் சர்க்கரையோ பாலோ எடுத்துக்கொள்வதில்லை எனவே அவன் ஊறவைத்த சில பாதம் பருப்புகள்.
6 மணிக்கெல்லாம் ஆனைமலை போய்விட்டோம். அங்கே ஒரு டீக்கடையில் தருண் பன்னும் டீயும், நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். போண்டாவுக்கும் வடைக்கும் இடைப்பட்ட ஒரு சாதனம் இருந்தது. சூடாக உள்ளங்கையில் அடங்காத அளவில், கடலைமாவில் பெரிது பெரிதாக வெங்காயம் வெட்டிபோட்டு உருட்டி எண்ணெயில் பொறித்தது பசித்தால் சாப்பிட அதை வாங்கிக்கொண்டோம்.

கடையில் நல்ல கூட்டம். உள்ளே சில பென்ச்சுகளில் வயர் கூடையில் தண்ணீர் பாட்டிலும் தூக்குவாளியும் இடுப்பில் வெற்றிலை புகையிலை பாக்கு சகிதம் சுருக்குப்பையுமாகப் பின்கொசுவப் பெண்கள் அமர்ந்து வடை சாப்பிட்டார்கள். நான் சுய்யம் இருக்கும் என எதிர்பார்த்தேன். எனக்கு இப்படியான கிராமப்புற டீக்கடைகளில் விற்கும் மெல்லிய இனிப்புடனிருக்கும் சுய்யம் பிரியம், ஆனால் அது அங்கு இல்லை.
’’கட்டன்2 , 4 பால் டீ, 2 காபி, .” என்று மாஸ்டர் பரபரப்பாக இயங்கினார். யாருக்கு கட்டன் என அவர் கண்ணாடி டம்ளரை நீட்டுகையில் ஒரு குரல் “அட, போட்டுட்டியா… நான் பால் டீ குடிக்கலாம்னு நினைச்சேன்” என்றது. மாஸ்டர் கடுப்பாகி, “ஆமா, டீ போடச்சொல்லுவே போட்டுக்கொடுத்தா வேற கேப்பே!… நானென்ன உன் பொண்டாட்டியா?” என்றார்.
இருவரும் புன்னகைத்துக்கொண்டே காருக்கு வந்தோம். ஆறேமுக்காலுக்கெல்லாம் டாப்ஸ்லிப் செக்போஸ்டுக்கு வந்துவிட்டோம். எனினும் 7 மணி பஸ் வந்தபின் , அந்த பஸ்ஸுக்கு பின்னால்தான் தனியார் வாகனங்களை அனுப்புவார்கள் என்று முன்பே தெரியுமாதலால் அமைதியாகக் காத்திருந்தோம். எங்களுக்கு முன்பு ஒரு கார் இருந்தது. பின்னாலும் சில கார்கள் வந்து சேர்ந்துகொண்டன. மிகச் சரியாக 7 மணிக்கு பஸ்ஸின் ஹார்ன் ஒலி கேட்டது. 7.03-க்கு பஸ் செக் போஸ்டுக்கு வந்ததும் அனைவரையும் பஸ்ஸுக்குப் பின்னே அனுமதித்தார்கள். நல்ல இளமழையில் நீண்ட சாலையில் தொடர்ந்த கார்களை முன்னே செல்லவிட்டு அமைதியாகப் பயணித்தோம்.

ஒரு சில காட்டுக்கோழிகள் மட்டுமே ஓடின. மயில்களின் அகவல் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது. கிளம்பும் போது ஒன்றும் சொல்லாமல் காட்டுக்குள் வந்தபின்னர், “….டேய் காட்டுக்கு வரும்போதுதான் நீ இப்படி மாம்பழக்கலர்ல புடவை கட்டிட்டு வருவியா?…’’ என்றான். நான் பதிலே சொல்லவில்லை. “போனை முதல்ல ஆஃப் பண்ணு, சத்தம் வந்ததோ…” என்று மிரட்டல் வேறு. துளிக்கூட சிக்னலே இல்லாத காட்டில் இதுவேற என்று நினைத்துக்கொண்டேன்.
பழங்குடியின செட்டில்மெண்ட்டில் நிறைய உலகக்கோப்பை கால்பந்து பேனர்கள் இருந்தன. சின்ன சின்ன கால்பந்து மைதானங்களும். இளளைஞர்கள் கால்பந்து வீரர்களின் சீருடையைப் போல டி ஷர்ட் அணிந்திருந்தார்கள்.
வன அலுவலகத்தின் முன்னால் கார் நின்றதும், எதிரே என் மாணவனும் மிகச்சிறந்த தாவர வகைப்பாட்டியல் நிபுணனுமாகிய பிரகாஷ் நின்றிருந்தான். அவன் காட்டில்தான் பணியில் இருக்கிறான் என்று தெரியும், ஆனால் அங்கு அவனை எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு பென்ச்சில் அமர்ந்து பிரகாஷும் நானும் தருணும், தருணுக்கு முன்பே பரிச்சயமாயிருந்த அலுவலர் விஷ்ணுவும் பேசிக்கொண்டிருந்தோம். லண்டானா (உண்ணிச்செடி) அழிப்பு மும்முரமாக இருப்பதால் ஒரு சில செடிகளே கண்ணில் பட்டன. மகிழ்ச்சியாக இருந்த “இதென்ன ருயெலியா சிம்ப்ளெக்ஸா? (Ruellia simplex அதை இளம் ஊதா மணி வடிவ மலர்களுடன் நித்யவனத்திலும் பார்த்திருந்தேன்) இது சாப்பிடுகிற காளானா? அட, பாம்புக்களா?” என்று நானும் பிரகாஷும் பரவசமாகப் பேசிக்கொண்டிருந்தோம்.

அனுமதி வாங்கிக்கொண்டு யானைக்கொட்டிலுக்குச் சென்றோம். நல்ல மழையில் யானைகள் வந்து அவற்றுக்குரிய இடங்களில் நின்று, அவரவர் பாகன்களால் உணவுக்கவளங்கள் ஊட்டப்பட்டன. மிக கம்பீரமாய் அக்காட்டின் முதிய யானை கஜராஜா கலீம் வந்தது. அதன் மேல் பாகன் அமர்ந்திருப்பதே மேலும் கம்பீரமாக இருந்தது. தூரத்தில் மதம் கொண்ட கபில்தேவ் தனியே கட்டிவைக்கப்பட்டிருந்தது. தலையை ஆவேசமாக ஆட்டிக்கொண்டு தேக்குக்காட்டுக்குள் தனித்திருந்தது கபில்தேவ்.

கலீம்
தேவி என்று ஒரு யானை இருந்தது அங்கே, அதையும் சின்னத்தம்பி யானையையும் வேறு முகாமிற்குக்கொண்டு சென்றுவிட்டார்கள். தேவி யானையைப் பார்க்க நினைத்திருந்தேன்.
கோழிக்கமுத்தியிலிருக்கும் குழந்தைகள் கலீமை “கலீம் தாத்தா” என்று அழைக்கிறார்கள், அது சந்தோஷமாக இருந்தது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் வண்டி ஓட்டுநர் தருணுக்குத் தெரிந்தவர். அந்த இளைஞனிடமும் பேசிக்கொண்டிருந்துவிட்டுத் திரும்புகையில் மணி 9 தான் ஆகியிருந்தது.
யானைக்கொட்டிலுக்கருகே ஒரு சிறுவன் அமர்ந்து செல்போனில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தான். எதிரே அடர்காடு இளமழை யானைகளும் குரங்குகளும் கண்னேதிரே ஆனால் அவனோ செல்போனில் விளையாடுகிறான் என்று ஆதங்கமாக இருந்தது.
த வெகவின் சுற்றுச்சூழல் அமைச்சர் தன்னை சுற்றுலாத்துறை அமைச்சர் என சொல்லிக்கொண்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக அந்த துறைக்கு என்னை அமைச்சராக்கினால் முதல் கையெழுத்து தமிழகக்காடுகளுக்குள் செல்போன் சிக்னல்களை துண்டிக்கும் கோப்பில்தான் போடுவேன்.

கபில்தேவ்
மணி 10 தான் ஆகி இருந்தது, தருண், “டேய் பரம்பிக்குளம் போலாமா?” என்றான். “சரி” என்றேன். உடனே கட்டணம் செலுத்தி கேரள எல்லைக்குள் சென்றோம். அங்கிருந்த ஒரு ஹோட்டலில் இட்லி சாப்பிட்டோம். சுவையான இட்லி, இரண்டு சட்னி சாம்பாருடன். நிறம் மட்டும்தான் இட்லிக்கு கொஞ்சம் மட்டும்.
உள்ளே சென்றதும் Safariக்கு அவர்களது வேனில்தான் போக வேண்டும் காருக்கு அனுமதியில்லை என்றார்கள். பின்னர் தலைக்கு 500 செலுத்தி, வேனில் எங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த எண் இருந்த இருக்கையில் அமர்ந்தோம். உடன் 13 ஆண்கள் ஒரு வேனில் வந்திருந்தார்கள்.

வேன் புறப்படக் காத்திருக்கையில் மரக்கூழுக்காக வெட்டப்பட்ட தேக்கின் அடிமரக் கட்டையிலிருந்து தளிர்கள்செழித்துத் துளிர்த்து நின்றிருந்தன. நுனியில் இருக்கும் செந்தளிரை எடுத்து அதன் சாற்றைக் கையில் மருதாணி போல வைத்துக்கொண்டேன். தருண், “சும்மா இருக்க மாட்டியா?” என்று அடிக்குரலில் உறுமினான். நான் அலட்டிக்கொள்ளாமல், “முதல்ல வீடியோ எடு” என்று அதட்டி அவனை எடுக்க வைத்தேன்.
13 ஆண்களுடன் , மேலும் ஒரு தம்பதியும், மகளுடன் வந்திருந்த ஒரு பெற்றோருமாக வேன் நிறைந்ததும் புறப்பட்டோம். காட்டெருது, கருமந்தி, ஏராளமான மயில், மான்கூட்டம் எல்லாம் பார்த்தோம்.

மீண்டும் மூங்கில் மலர்வைக் காணும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. அது பெரிய அதிர்ஷ்டம் எனக்கு, இது மூன்றாவது முறை. மலர்ந்து நாட்களாகியிருக்கும் போல, மூங்கிலின் கிளைத்த மஞ்சரிகள் காய்ந்து மூங்கில் தொகுப்புகள் எல்லாம் உடைந்து காய்ந்திருந்தன. ஒரு நன்கு விளைந்த மூங்கில் பிளந்து உடைந்து தொங்கிக்கொண்டிருந்தது. அதன் கணுவிடைவெளிக் குழியில் இருந்த கையளவு மழைநீரில் துண்டு வானம் இருந்தது.
கார் ஜன்னலுக்கருகே உடைந்து நீட்டிக்கொண்டிருந்த உலர்ந்த சில மூங்கில் மஞ்சரிகளை மட்டும் எடுத்துக்கொண்டேன்
கன்னிமரா தேக்குக்கு அழைத்துச் சென்றார்கள். வேனில் இருந்த ஒருவர் ’’.. போ மாமா ஏறி இறங்கி மரத்தைப் பார்க்கறதாவது நான் வரவில்லை…” என்று சீட்டில் படுத்துக்கொண்டார். அவர்கள் திருநெல்வேலிக்காரர்கள். “சித்தப்பு, அங்கே மூணு எருமையா கீது? இல்ல மாப்ள, நாலு கீது, நல்லாப் பாரு!” “யாராச்சும் ஏதாச்சும் பார்த்தா ஜோரா (சத்தமா) சொல்லுங்க, அதுக்குத்தான் நம்மை இட்டாந்திருக்காங்க” என்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
கொங்கு பெல்ட்டில் இந்த ஸ்லாங் கேட்க எனக்கு வேடிக்கையாக இருந்தது. நான் திருநெல்வேலி போய் பேசியிருந்தால் அவர்களுக்கும் வேடிக்கையாக இருந்திருக்கும். நான் அடியாண்டம் பெரணியையும், மரத்தில் பச்ச்சையும் வெள்ளையுமாகப் பிடித்திருக்கும் லைக்கன்களையும் போட்டோ எடுப்பதை அவர்களில் ஒருவர் மிக வித்தியாசமாகப் பார்த்துக்கொண்டிருந்தார். “கோட்டி பிடித்திருக்கிறதோ இந்த அம்மாவுக்கு” என நினைத்திருக்கக்கூடும். கோட்டிதான், பின்னல்லாதே!
கன்னிமராவின் உயரமும் பிரம்மாண்டமும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அருகில் சென்று தொட்டுக்கொண்டு போட்டோ எடுத்துக்கொண்டேன். தருணையும் “மரத்தைக் கட்டிக்கொள்” என்று சொன்னபோது, “போடா, டிபிக்கல் டூரிஸ்ட் பழக்கம் அது” என்றான். வற்புறுத்திப் போகச் சொன்னேன், வேண்டாவெறுப்பாகச் செய்தான்.

வேன் காட்டுக்குள் செல்லும்போது புங்க மரத்தின் கிளைகள் ஜன்னலில் உரசி என் மடியில் ஒரு புங்கங்காய் பச்சைப்பதக்கம் போல் விழுந்தது. மிகுந்த மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக்கொண்டேன்.

வழியில் ஒரு சிறு ஆமை ரோட்டில் இருந்தது. வேனில் வந்த வன அலுவலர் வண்டியை நிறுத்தி, அதை எடுத்துப் பாதுகாப்பாக ஓரத்தில் விட்டார். 2 மணி நேரத்திற்கும் மேல் இருந்த வன உலா முடிந்ததும் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே வந்தோம்.
என் தோழி ஸ்ரீமா அங்கே டெண்ட் கேம்ப்பில் தங்குபவர்களுக்கான உணவகம் நடத்துகிறாள். மூன்று மகன்களுடன் இளம் விதவையாக அங்கே அவள் பல வருடங்களுக்கு முன்பு கேண்டீன் நடத்தத் துவங்கினாள். அவளது மூத்த மகன் விஷ்ணு என் மாணவன். இப்போது மணிப்பாலில் முனைவர் பட்ட ஆய்வில் இணையவிருக்கிறான் நானும் என் அமெரிக்கத் தோழி ஜாய் டேனியலும் முன்பு அங்கே சென்று அடிக்கடி தங்குவோம். அப்போதிலிருந்து ஸ்ரீமா நல்ல தோழி எனக்கு.

முதல் முறை பார்த்தபோது எலுமிச்சம்பழ மஞ்சளில் சுடிதார் போட்டுக்கொண்டு, அடுப்படியில் நின்று நின்று வியர்த்து மெருகேறிய முகமும் விரித்துவிட்ட கூந்தலுமாக ஒரு காட்டுப்பூவைப் போலிருந்தாள். அவளுக்குச் சொல்லாமல் சமையலறையின் வாசலில் நின்று, “ஸ்ரீமா!” என்று குரல் கொடுத்தேன். பார்த்துப் பத்து வருடங்களுக்கும் மேலே இருக்கும். எட்டிப்பார்த்தவளுக்கு முகமெல்லாம் பூரித்து, “அய்யோ மேடம், இது எந்தா ஒரு முன்னறிவிப்பில்லாதே?” என்று கட்டிக்கொண்டாள். இரண்டு பேருமாக மலையாளத்தில் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்ததை தருண் சிரித்துக்கொண்டு பார்த்திருந்தான்

பிறகு ஸ்ரீமா கட்டாயம் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தியதால், டெண்டில் தங்குபவர்களுடன் சேர்ந்து காட்டின் நடுவில் இருந்த வட்ட உணவகத்தில் சப்பாத்தி, பருப்பு, சிக்கன், தட்டைப்பயிறு கறி, வெண்டைக்காய் புளிக்குழம்பு, கோஸ் துவரன், சாம்பார், மோர், அப்பளம், பாயசம் எனச் சாப்பிட்டோம். அங்கிருந்தவர்களிடம் எல்லாம் “இது உண்ணியுட மாஷே” என்று பெருமையாக என்னை அறிமுகம் செய்துவைத்தாள்.
பின்பு விடைபெற்றுக்கொண்டு, மீண்டும் டெண்டில் தங்குவதைப் பற்றிப் பேசிக்கொண்டு தொட்டால்சிணுங்கியைத் தொட்டுப்பார்த்துக்கொண்டு பெரணிகளை சேகரித்துக்கொண்டு, உள்ளங்கையில் தேக்குக்கொழுந்தின் சிவப்பு அடிபட்டுகன்றியது போல் பிடித்திருக்க ஊர் திரும்பினோம். நீண்ட, நல்ல அனுபவங்கள் நிறைந்த நாள்.














































