லோகமாதேவியின் பதிவுகள்

Category: அனுபவம் (Page 2 of 12)

மும்பை -நற்செய்தி!

எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கமென்பது பள்ளிக்காலத்திலிருந்தே இருக்கிறது. கிறிஸ்துவத்துடனல்ல, கிறிஸ்துவுடன் மட்டும்தான். Son preference உள்ள குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்லாது பெண்குழந்தைகளை பாரமாகவும் பெரும் சுமையாகவும் நினைத்து பாரபட்சமாக நடத்தும் குடும்பத்தில் பிறந்ததால் நானும் மித்ராவும் பெரும்பாலும் உதாசீனப்படுத்தப்பட்டோம். வீட்டுவேலைகள் செய்ய எங்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள், அவ்வளவுதான். நல்ல உடை, போதுமான உணவு, கவனிப்பு, அன்பு, ஆதரவு எதுவுமில்லை.

அப்பாவைக் குறித்து பெரும் அச்சம் நிரம்பி இருந்த பால்யமாகையால், வீட்டிலிருந்து தப்பித்து பள்ளிக்குச்செல்வது பெரும் விடுதலையாக இருந்தது. வகுப்பறைகளில் நானே உருவாக்கிக்கொண்ட ஒரு கற்பனைக்குடும்ப வாழ்க்கையில் மூழ்கி இருப்பேன். அப்போதெல்லாம் அரசு இலவசமாகக் கொடுக்கும் நோட்டுப்புத்தகங்கள் தான். அதில் கடைசிப்பக்கத்தில் மனதில் துயர் நிரம்பி இருக்கையில்  அல்லது அவரது முறம் போன்ற கையால்  அடிவாங்கி  மூக்குச்சில்லுடைந்து ஈரக்கர்சீப்பை மூக்கில் வைத்துக்கொண்டு வரும் நாட்களில் என் கற்பனை அப்பாவுக்கு கடிதம் எழுதுவேன். அப்பாவுக்கு மட்டும்தான். அம்மா என்னிடம் அன்பாக இருந்ததில்லையெனினும், அப்பாவைப் போல அச்சுறுத்துதலும் மிரட்டலும் அம்மாவிடம் இல்லை. எனவே ஒரு அன்பான, அடிக்காத, கார்க் குண்டுகள் போட்ட துப்பாக்கியைக் காட்டி சுட்டுக்கொன்று விடுவதாய் மிரட்டும் அப்பாவுக்கு மாற்றாக மனதில் கற்பனை செய்து வைத்திருந்த அந்த அப்பாவுக்கு “ஏன் என்னை இங்கே கொண்டு வந்து விட்டீர்கள்? எப்போ வந்து கூட்டிப் போறீங்க? என்னால் இங்கே இருக்கவே முடியவில்லை” என்றும், பல சமயங்களில் ’ரொம்ப பசிக்குதுப்பா’ என்றும் கடிதம் எழுதுவேன்.

 கடிதம் எழுதி அந்த காகிதத்தை கிழித்து டெஸ்க்கிற்கு உள்ளே வைத்துவிடுவேன். அப்படி உள்ளே போட்டுவைத்த அந்த கடிதம் அந்த கற்பனை அப்பாவிடம் போய் சேர்ந்துவிடும் என்று எப்படியோ நம்பி, பதில் வருமென்று கூட காத்திருந்திருக்கிறேன்.  முற்றிலுமாக மனம் சிதைந்திருந்த நாட்கள் அவை . அப்படி கடிதம் எழுதுகையில் எல்லாம் சொட்டுச்சொட்டாக தாளில் விழும்படி கண்ணீருடன்தான் எழுதுவேன். இவையெல்லாம் 7, 8 வகுப்புகளின் போது.

 9-ல் படிக்கையில் ஒருநாள் மாலை பள்ளி விளையாட்டு மைதானத்தில் இருக்கையில், முறையாக அனுமதி பெற்ற கன்னியாஸ்திரீகள் சாம்பல் நிற அங்கியும், நீளமான சங்கிலியில் தொங்கும் சில்வர் சிலுவையுமாக வந்திருந்து, அழகிய சிறிய பைபிளை எங்களுக்கு இலவசமாகக் கொடுத்தார்கள். அத்தனை நல்ல உள்ளங்கை அளவிலான, விளிம்பில் ஆரஞ்சு வர்ணம் தீட்டிய, தோலட்டை போடப்பட்ட, மிக வசீகரமான என்னவோ  வாசனை அடிக்கும் ஒரு புத்தகத்தை இலவசமாகக் கொடுத்தது பெரிய விஷயமாக இருந்தது. அந்த பைபிளை பொக்கிஷமாக ஆனால் வகுப்பறையிலேயே வைத்துக்கொண்டேன்.

 வீட்டுக்குக்கொண்டு போனால் அடிவிழும் என்று எப்படியோ தெரிந்திருந்தது. அந்த பைபிளை மறுநாள் திறந்து பார்க்கையில், அதனுள்ளே கர்த்தரின் ஒரு வண்ணப்படம் இருந்தது. ஒரு கையை ஆசீர்வதிப்பதுபோல் உயர்த்தி, சிலுவை அணிந்து, பிடரி வரை புரண்ட பொன்னிற கூந்தலும், நீலக்கண்களும், தலைக்கு பின்னே வானிலிருந்து பாய்ந்த ஒளிவெள்ளமுமாய் இருந்த அவரது புகைப்படத்திற்குக் கீழே ‘’பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன்’’ என்று எழுதியிருந்தது. அந்த வாசகமும், அந்த புகைப்படமும், கருணை நிரம்பிய அந்த கண்களும் எனக்களித்த ஆசுவாசத்தையும்,  நம்பிக்கையையும்  சொல்லவே முடியாது.

முரட்டு மீசையும் அரிவாளும் அலட்டலும் கட்டுச்சேவல் சண்டையும் ஜாதிவெறியுமாக இருந்த குடும்பத்து ஆண்களுக்கு மாற்றாக, கருணை ததும்பும் புன்னகைக்கும் நம்பியூட்டும் கர்த்தரே பதின்மவயதில் நான் கண்ட முதல் ஆணழகன். அந்தக் கைகைளை மானசீகமாக பற்றிக்கொண்டேன்.

அந்தப் புகைப்படத்தை லட்சக்கணக்கானமுறை எடுத்துப் பார்த்திருப்பேன். அதன் பிறகு அந்த கற்பனை அப்பாவுக்கு கடிதங்கள் ஏதும் எழுதியதில்லை.  கர்த்தர் உடனிருக்கிறார் நான் தனியாக இல்லை எதற்கும் பயப்படவேண்டாம் என எப்படியோ ஒரு குழந்தைத்தனமான தைரியம் வந்துவிட்டிருந்தது..

பைபிளின் எழுத்துக்கள் பொடிப்பொடியாக இருந்ததால் சரியாக வாசிக்க முடியவில்லை. எனினும் அந்த புகைப்படம் எனக்கு மிக மிக நெருக்கமானதாக இருந்தது. பல வருடங்களுக்குப்  பின்பு11-ம் வகுப்பிற்கு பள்ளி மாறுகையில், அதை வீட்டிற்கு கொண்டு வந்து அப்பாவிற்குத் தெரியாமல் ஒளித்து வைத்தது மட்டும் நினைவில் இருக்கிறது.  பின்பு அது காணாமல் போனது.

அப்படி எனக்கும் கர்த்தருக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்தது. பிற்பாடு கல்லூரியில் பைபிள் வாசித்திருக்கிறேன். ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று பக்கத்து வீட்டு ஸேவியரின் மகள் பாரதியுடன் அவர்களது கத்தோலிக்க திருச்சபைக்குச் சென்று முழங்காலிட்டு அப்பமும் திராட்சைரசமும் பல் படாமல் விழுங்கி இருக்கிறேன். பசித்தவனுக்கு ரொட்டி தருவதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடு என்று சொன்ன ரேஷனலிஸ்டாக தேவனை வெகுவாகப் பிடித்திருந்தது. ஒரு சில பைபிள் வசனங்களும் மனதில் நினைவிலிருந்தது, அவ்வளவுதான்.

இப்போது இந்த மெதடிஸ்ட் திருச்சபைக்கு வந்தது ஒரு அற்புதம்தான். பல நாட்களாக நானும் காட்சனும் பைபிள் தாவரங்களைக் குறித்து பேசியிருக்கிறோம். எனினும் அதில் ஈடுபட்டு வாசிக்க எனக்குப் பொழுதே இல்லாமலிருந்தது. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு தாவரங்களின் உலகளாவிய பரவலைக் குறித்து, அதன் வரலாறுகளை வாசித்துக்கொண்டிருக்கையில், காற்றில், நீரில், பறவைகளால், விலங்குகளின் உடலில் ஒட்டிக்கொண்டு இப்படிப் பரவியது போலவே மனிதர்களாலும் தாவரங்கள் பரவியிருந்ததை வாசித்தேன்.

அதிலும் intentional, accidental என்று இரண்டு வகை. Accidental வகையில்,  மலையேற்றத்தில் ஈடுபடுபவர்களின்  உடல்களில், செருப்புகளில் ஒட்டிக்கொண்டும், சர்வதேச விளையாட்டு வீரர்களின் பைகளிலும், செருப்புகளில் ஒட்டும் விதைகள் வழியாகவும் பல தாவரங்கள் பரவியிருக்கின்றன.

ஆனால் intentional வகையில் 1492-க்கு பிறகு கொலம்பஸ் பல நாடுகளுக்கும் பல கண்டங்களுக்குமிடையே தாவரங்களைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியதனால், 1492 என்னும் வருடம்  Columbian exchange என்னும் பரவலில் மிக முக்கியமானதாக இருந்தது. நான் எழுதும் கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட எந்தப் பதிப்பாளர்களும் முன்வருவதில்லை. எனினும் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கிறேன். 1492 என்னும் தலைப்பில் தாவரப் பரவலைக் குறித்து விரிவாக ஒரு நூல் எழுத, மீண்டும் தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்தேன்.

என் குருதி என திராட்சை ரசத்தை தேவனே கடைசி விருந்தில் சொல்லியதால் உலகெங்கிலும் தேவாலயங்கள் திராட்சை ரசம் மட்டும்தான் அளிக்க நினைத்தன ஆனால் எல்லா நாடுகளிலும் திராட்சைக்கொடி வளரவில்லை. எனவே கிறிஸ்துவ மிஷனரிகள் திராட்சைக்கொடியின் நறுக்கிய தண்டுகளை கப்பல் பயணங்களில் கொண்டு சென்று பல்வேறு நாடுகளிலும் திராட்சை வளர்ப்பைத் துவங்கி  அது ‘Mission Grapes’ என்று அழைக்கப்பட்டதை அறிந்து, அதன்பின்னேயே பல மாதங்கள் சென்று தரவுகள் சேகரித்தேன்.

திராட்சைக்கொடி வளர்க்க காலநிலை ஏதுவாக இல்லாத நாடுகளில், திராட்சை ரசம் அளிக்க முடியாதபோது என்ன செய்வது என்னும் பிரச்சனைக்கு அளிக்கப்பட்ட பலவிதமான பரிந்துரைகளில், கெட்டியான திராட்சை சிரப் கொண்டு வந்து அதை நீரில் கலந்து அளிக்கலாம் என்னும் யோசனை, மெதடிஸ்ட் கிறிஸ்துவ பிரிவை உருவாக்கியவரான ஜான் வெஸ்லேயும் சொல்லியதை வாசித்தேன்.

மீண்டும் காட்சன் அழைத்தபோது நான் மும்பை வர விருப்பதாகச் சொல்லி, அங்கே ஒரு ஞாயிறு உரையாற்றுவதாக முடிவானது. ஜான் வெஸ்லே இரண்டு தாவரவியல் நூல்கள் எழுதியிருந்தார். மேலும், பல பழங்குடியினர் தாவரங்களை எப்படி, எதற்குப் பயன்படுத்தினார்கள் என்பதை அவரது 2,50,000 மைல் தூர குதிரைப் பயணத்தில் கவனித்து எழுதியதையும் அறிந்தேன். காட்சன் சார்ந்திருந்ததும் மெதடிஸ்ட் தேவாலயம் என்பது எனக்கு பெரும் ஆச்சரியமளித்தது.

நான் வெஸ்லேவின் நூல்களைக் கொஞ்சமாகக் குறிப்பிட்டுவிட்டு, கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொள்வது மண்ணில் விதையை நடுவதுபோல் என்று துவங்கி, வேர்பிடித்து வளர்ந்து, மலர்ந்து, கனியளித்து அறுவடை செய்வது என்று என் உரையைத் தயாரித்தேன். பின்பு பைபிள் சொல்லும் 7 தாவரங்களை , Consider the lilies மற்றும் I am the vine, you are the branches, குருத்தோலை ஞாயிறுக்கு ஏன் பேரீச்சையின் குருத்தோலை மட்டும்,என்று தொடர்ந்து, கர்த்தர் எப்படி இந்த பூமியென்னும் தோட்டத்திற்குத் தோட்டக்காரராகவும், தாவரவியலாளராகவும் இருக்கிறார் என்பது போன்ற உரையைத் தயாரித்திருந்தேன்.  The duel role of christ as a gardener and botanist என்னும் அந்தத்தயாரிப்பைத்தான் கருணையின்றி சரண் முற்றிலும் மாற்றச் சொல்லிவிட்டான்.

சனியன்று நள்ளிரவு வரை அமர்ந்து  ஜான் வெஸ்லேயின் இறையியல் எப்படி தாவரங்களை அறிவதன் மூலம் படைத்தவனின் அற்புதங்களை அறியச் சொல்கிறது என்று புதிதாகத் தயாரித்தேன். உண்மையிலே முதல் உரை நான் தயாரித்தது, இரண்டாவது உரை நான் உணர்ந்து பேசியது. எனவே தேவாலயத்திற்குச் செல்கையில் மிகுந்த மனநிறைவுடன் சென்றேன்

மும்பைக்கியா!

மறுநாள் நான்காவது சனிக்கிழமை சரணுக்கு விடுமுறை, காலை 10 மணிக்கு மேல் எழுந்து வந்து நான் சமைத்திருந்த அடையை வெண்ணெய் வைத்துச் சாப்பிட்டான். மதியமும் உப்புப்பருப்பு, கோஸ் கறி, ரசம், புதினா துவையல், குழல் வடகம் என்று விரிவாகச் சாப்பிட்டு ஓய்வெடுத்தோம். மாலை ஒரு மாலுக்குப் போய் சும்மா சுற்றிப் பார்த்துவிட்டுச் செருப்பு, ஷூ வாங்கிவிட்டு ஹல்திராமில் சோலே பட்டுராவும் பனீர் தோசையும் சாப்பிட்டோம்.

வீடு வந்து இரவு மீண்டும் புறப்பட்டு மும்பை IKEA சென்றோம். போகும் போதே இரவு 9 மணி, 11 வரை இருக்கும் என்று நினைத்தோம். ஆனால் 10 மணிக்கெல்லாம் அடைத்துவிடுவோம் என ஒருத்தி ஸ்பீக்கரில் கொஞ்சிக் கெஞ்சிக்கொண்டிருந்தாள். சரணுக்கு வேண்டிய ஒரு சிலவற்றை வாங்கினோம். பாய் போலவே ஆனால் ஜமக்காளம் போலக் கெட்டியில்லாமல் மெஷினில் துவைக்கும் ஒரு தரை விரிப்பு வாங்கினோம். எனக்கென்னவோ பெங்களூரு ஐகியா அளவுக்கு மும்பை ஐகியா இல்லை எனத் தோன்றியது. அதைச் சொன்னால் சரண் சண்டைக்கு வருவான், எனவே சொல்லவில்லை.

மாலிலும் சரி ஐகியாவிலும் சரி பெண்கள் அத்தனை அழகிகளாகக் கண்ணில் படவே இல்லை. எல்லோரும் கூடுதல் வெளுப்பு, மேலும் வெளுப்பாக்க வெள்ளை மேக்கப் அதுவும் திகட்டத் திகட்டப் போட்டு அவர்களின் இளமையின் இயற்கையான அழகை மேக்கப்பால் முழுக்க மறைத்திருந்தார்கள். ரத்தச் சிவப்பில் லிப்ஸ்டிக் தவறாமல் எல்லோரும் போட்டுக்கொண்டிருந்தார்கள். எல்லோரையும் கூட்டிப்போய் ஒரு குழாயடியில் உட்கார வைத்து தேய்த்து கழுவிவிடலாம் போல ஆத்திரமாக் இருந்தது. எதற்காகஅழகை மறைக்கும் மேக்கப்? எனக்குப்புரியவேயில்லை. அழகை துலக்கிகாட்டும் மேக்கப்பை அளவாகப் போட்டால் என்னவாம்? ரூபம் செம்மை செய்னுதானே சொல்லி இருக்கு?

சாலையைக் கூட்டிக்கொண்டிருந்த பெண் ஒருவர் பாதியில் பெருக்குவதை நிறுத்திச் சுரிதார் பாக்கெட்டில் இருந்து லிப்ஸ்டிக் எடுத்துத் தடவிக்கொண்டதைப் பார்த்தேன். பெண்கள் எல்லோரும் உடலைக் காட்டும் நவீன உடைதான், ஆனாலும் உடல் வாகுக்கேற்ப உடையை பெரும்பாலும் யாரும் போடவில்லை. ஒரே ஒருத்தி, நல்ல வறுத்த கோதுமை நிறத்தில், உயரமாக, வட்ட முகத்தில் அளவாக மேக்கப் போட்டுக்கொண்டு மிகப்பொருத்தமான நவநாகரீக உடையில் காதலனுடன் சிரித்துப் பேசியபடி கடந்து சென்றாள். அவள் கொண்டையில் செருகி இருந்த பன்பின் (Bun pin) வசீகரமாயிருந்தது.

மால் நுழைவு வாயிலில் நடக்க முடியாதவர்கள் உபயோகித்துக்கொள்ள நிறையச் சக்கர நாற்காலிகளும் குழந்தைகளை அமர வைத்துத் தள்ளிச் செல்லும் பிராம்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நான் இதை இங்கெல்லாம் பார்த்ததாகவே நினைவில்லை. நல்ல யோசனை, நிச்சயம் உபயோகமாக இருக்கும், பலர் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்றபடி வடக்கிலும் தெற்கிலும் எல்லா மால்களும் ஒரே ஜாடையில் தான் இருக்கின்றன.

டாக்ஸி ஓட்டுநர்கள் கடிந்துகொள்வதில்லை, எங்குமே அமைதியாகக் காத்திருக்கிறார்கள், புக் செய்தவர்கள் வரும் வரை அது வீட்டு வாசலானாலும் மால், கடை வீதியானாலும். ஆட்டோக்காரர்களுமே அப்படித்தான்; எரிச்சலோ சிடுசிடுப்போ இல்லவே இல்லை. முக்கியமாகக் காரில், ஆட்டோவில் பாட்டுப் போடுவதில்லை, அமைதியாக ஓட்டுகிறார்கள். நானும் ஆம்புலன்ஸ் ஒலியை அங்கு இருந்தபோது கேட்கவே இல்லை.

டேராடூனில் ஒருமுறை அதிகாலைக் குளிரில் எழுந்து முசோரிக்குச் சென்றோம். டாக்ஸி டிரைவர் குடிபோதை விலகாமல் செக்கச்சிவந்த கண்களும் கலைந்த தலையுமாக மிக மிகச் சத்தமாக “நீ இத்தனை சுந்தரமாக இருந்தால் நான் என்ன செய்வேன், என்ன செய்வேன்” (மே க்யா கரூ, க்யா கரூ) என்று ஆணும் பெண்ணும் மாற்றி மாற்றிப் பாடும் பாடலைத் தூக்கத்தை விரட்டவோ என்னவோ கேட்டுக்கொண்டும், கூடவே பாடிக்கொண்டும், தலையை அவ்வப்போது பலமாக ஆட்டிக்கொண்டும் கலவரமாக மலைப்பாதையில் வண்டி ஓட்டினார். அன்று நான் வேண்டாத தெய்வமில்லை.

மும்பையில் மிக அமைதியாகப் பொறுமையாக ஓட்டுகிறார்கள். சாலையெங்கும் காவிச்சாமியர்களின் போட்டோ இருந்தது எல்லா போஸ்டர்களிலும் பிழிந்து பிழிந்து கொடியில் துணி காயப்போட்டதைப்போல எதையோ எழுதி இருந்தார்கள்.

எனக்கு மும்பை பிடிக்கவில்லை. முதல் காரணம் அத்தனை தூசும் மாசும்; அடுக்ககங்களும் பிடிக்கவில்லை. அடுத்த முக்கிய காரணம் மகனும் அவனுடன் இருப்பவர்களும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது அறவே புரியாமல் இருப்பதை மிக மிகத் தாழ்வாக உணர்ந்தேன். அனுமானிக்கவும் முடியவில்லை. பெங்களூருவில் கன்னடம் கொஞ்சம் சமாளித்துக்கொண்டேன், ‘எஷ்டு’, ‘சாக்கு’, ‘பேக்கு’! பஞ்சதந்திரம் படத்தில் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால் ஹிந்தி சுத்தம். பாலிவுட் சினிமாக்களும் பாடல்களும் புரிகிறதே என்பதும் விந்தைதான்.

ஐகியாவில் சரணுக்கு ஒரு காற்றைத் தூய்மையாக்கும் கருவி வாங்கினோம், 6 ஆயிரம் ரூபாய். எல்லோரும் அவரவர் வீடுகளில் இதை பெரும்பாலும் வைத்திருக்கிறார்கள். என்ன கொடுமை இது? அறிவியல் புனைவுக் கதைகளில் எதிர்காலத்தில் முதுகில் ஆக்சிஜன் சிலிண்டர் மாட்டிக்கொள்வது என்று படிப்போமே, அதேதான் இதுவும். சனிக்கிழமை அந்தக்கருவியை மின்சாரத்தில் இணைத்து ஓடவிட்டுவிட்டுத் தூங்கினோம். அன்று சரண் தொண்டை கறகறப்பு இல்லாமல் உறங்கினான். இன்னொன்று வாங்கிக்கூடத்திலும் வைத்துக்கொள்ளச் சொன்னேன்.

மறுநாள் நகரின் காற்று மாசுக்கான காரணங்களை சரண் சொல்லிக்கொண்டிருந்தான். நகரெங்கும் ராட்ஷச கட்டுமானங்கள் தொடர்ந்து நடக்கின்றன. அதிலும் லோதா, கோத்ரெஜ், ஓபராய் போன்ற பெரு நிறுவனங்கள் அசுர வேகத்தில் ஆயிரக்கணக்கில் அடுக்ககங்களைக் கட்டுகின்றன.ஆனால் தூசி வெளியே பரவாமல் இருக்கச் சுற்றிலும் போர்த்தப்பட வேண்டிய பச்சைத் துணியைச் சும்மா கண் துடைப்புக்காக ஆளுயரத்திற்குக் கட்டிவிட்டு 25, 30 மாடிகளைக் கட்டுகிறார்கள். நகரமே புழுதிக்காடாக இருக்கிறது. கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்துவிட்டுத் கட்டிடத்தைக் கட்டிக்கொண்டே இருக்கிறார்கள். வந்து 2 மாதங்கள் கூட ஆகவில்லை சரண் இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டிருக்கிறான் என்பது ஆச்சர்யமளித்தது.

கட்டி முடிக்கப்படும் அடுக்ககங்களின் சிறு மாதிரி அடுக்ககங்கள் ஆங்காங்கே இருக்கின்றன. அதைப் போய்ப் பார்த்துப் பிடித்திருந்தால் வீட்டை புக் செய்து அட்வான்ஸ் கொடுக்கிறார்கள்.

ஞாயிறன்று காலை வெளியே மாசு குறைவாக, அந்த அலையாத்திக் காட்டின் மறு எல்லையில் மாபெரும் கட்டிடங்களோடு ஒரு நகரம் தெளிவாகத் தெரிந்தது. ’’..அதுதான் மும்பை, நாம இருக்கிறது நவி மும்பை..’’ என்றான் சரண். எப்படி அன்று மட்டும் தூசி குறைவாக இருக்கிறது என்று தேடிப் பார்த்தான். அன்று யாரோ ஒரு வெளிநாட்டு அதிபர் மும்பை வருகிறார், எனவே 1000 மெகா கட்டுமானங்களை அரசு அன்று மட்டும் நிறுத்தி இருந்தது. அன்று காற்று மாசு 85 இருந்தது. என்ன அநியாயம்! ஒரே ஒரு நாள் வரும் வெளிநாட்டவர்களுக்காக நிறுத்தி வைக்கப்படும் பணிகள் முறையாக நடந்தால் அங்கே வாழ்பவர்களுக்கு எத்தனை நன்றாக இருக்கும்? அறத்தின் பேரில் இருப்பவர்கள் பெரிய இடங்களில் இல்லவே இல்லை என்பதுதான் நம் அனைவரின் பிரச்சினையும்.

ஞாயிறன்று மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் விவிலியம் காட்டும் தாவரவியலை குறித்து உரையாற்ற விருந்தேன்,. நான் மகாப்பெருமையாக அந்த உரைக்கு ஸ்லைட் போட்டுக்கொண்டு வந்து சரணிடம் காண்பித்தேன். ’’…எல்லாத்தையும் தூக்கிட்டு புதுசா போடனும் நீ எதுக்கு கிறிஸ்துவத்தைபத்தி பேசறே நீ தாவரவியலை மட்டும் தான் பேசனும். கிறைஸ்ட் என்று வரும் சொல்லைக்கூட நீ பயன்படுத்ததே கத்தி மேல் நடக்கறமாதிரி இது அறியாமையில் எதுவும் பேசி பிரச்சனை ஆயிரும்..’’ என்று சரண் கடுமையாக சனிக்கிழமை சொன்னான். பதட்டமாகி இரவெல்லாம் விழித்து மீண்டும் புதிதாக எல்லாம் தயாரித்தேன். ஞாயிறு காலை வெண் பொங்கல் சாப்பிட்டு விட்டு மும்பைக்கு இரண்டு மணி நேரப்பயணத்துக்கு டாக்ஸி பிடித்துப் புறப்பட்டோம். வழியெங்கும் எனக்கும் கிறிஸ்துவுக்குமான அணுக்கத்தை, என் பால்யத்தையெல்லாம் சரணிடம் சொல்லிக்கொண்டு வந்தேன்.

தொடரும்….

மும்பை- வயிறும் வாழ்வும்.

சரண் மார்புக்கு குறுக்கே ஒரு பை போட்டுக்கொண்டிருந்தது வித்தியாசமாக இருந்தது. “என்னடா இது பையோட?” என்றேன். “…. லேப்டாப் பேக் மீ..” என்றான். “அதை எதுக்கு ஏர்போர்ட் வரப்போ கொண்டு வந்தே? ஆபீஸிலேயே விட்டுட்டு வரவேண்டியதுதானே…?” “….அம்மா நீ வேலை செய்யற அரசுக்கல்லூரிக்கும் கார்ப்பரேட் செக்டாருக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லை, எனக்கு எப்பவுமே வேலை இருக்கும், உனக்கு சொன்னா புரியாது, வா வேகமா, கேப் காத்திருக்கு..” என்றான்.

“….வைஸ் பிரசிடெண்ட் மாதிரி இல்லாம தோளில் இந்த பேக்கோட உன்னை பார்த்தா சேல்ஸ் ரெப் மாதிரி இருக்குடா..”

“….என்னது சேல்ஸ் ரெப் பேக்கா? மீ இது மொகோபரா மீ..” என்றான். அந்த பிராண்ட் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்பதைக் காட்டிக்கொள்ளாமல் “..சரி வா போலாம்..” என்று ஏர்போர்ட் சாலையை குறுக்கில் அவன் கை பிடித்துக் கடந்தேன்.

பிரம்மாண்டமான விமான நிலையம் கடந்த அக்டோபரில்தான் மோடி ஜி திறந்து வைத்திருக்கிறார். இப்போதும் சில கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன. லண்டனைச் சேர்ந்த Zaha Hadid Architects-ன் தாமரை வடிவ கட்டிடம் என்பதால் எனக்கு கூடுதலாகவே அந்த இடத்தைப் பிடித்திருந்தது. விமான நிலையத்துக்கான மையச்சாலையில் இருசக்கர, மூன்று சக்கர வாகனங்களுக்கு நிரந்தரமாகவே அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இக்ஸோராக்களும் , டிரஸீனாக்களும், புத்தம் புதிதாய் வைக்கப்பட்டிருந்தன.

விமான நிலையத்திலிருந்தே அதிகபட்சமாக 800 ரூபாய்களுக்குள் எலிஃபண்டா குகை உள்ளிட்ட பல சுற்றுலாத்தலங்களுக்குச் செல்ல டாக்ஸி இயங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக அருகிலிருக்கும் கடல் பகுதிக்கு அங்கிருந்தே நேராகச் செல்ல வாட்டர் டாக்ஸி எனப்படும் மின்சார வாகனங்களும் இயங்குகின்றன. நவி மும்பை செல்லவிருந்ததால் முன்கூட்டியே இவற்றைத் தெரிந்துகொண்டு சென்றேன்.

சரளமாக சரண் டாக்ஸி ஓட்டுநரிடமும், நொச்சு நொச்சென்று வந்துகொண்டே இருந்த அலைபேசி அழைப்புகளுக்கும் ஹிந்தியில் பேசியது ஆச்சரியமளித்தது. “ஹிந்தி நஹி மாலும்” என்பது மட்டும்தான் எனக்கு ஹிந்தியில் தெரிந்த ஒரே வாக்கியம்.

வழியில் மதுரை பவனில் சாப்பிட்டுவிட்டுப் போகலாமென்றான். நான் கொலைப்பசியில் இருந்தேன். அங்கே போனோம். ஒரு மாபெரும் அடுக்ககம், அதில் இயங்கும் பல நூறு அலுவலகங்களில் மதுரை பவனும் ஒன்று. பல அலுவலகங்களுக்கும் சேர்த்து பொதுவாக ரொம்ப தூரத்தில் இருக்கும் ஒரு இடத்தில் கைகழுவிவிட்டு வரவேண்டும். சூட்கேஸை வெளியே வைத்துவிட்டு உள்ளே போனோம். 90-களின் தமிழ்சினிமாப் பாடல்கள் மெல்லிசாய் ஒலித்தது. தலைவாழை இலை போட்டு வரிசையாகத் தொடுகறிகள் பரிமாறினார்கள்.தமிழில் பேசினார்கள்

வடை,சுண்டல், அவியல், பொரியல், வெண்டைக்காய் தயிர்பச்சடி, கூட்டு, துவரன், அப்பளம் என்று தொடர்ந்து 15-க்கும் மேலான கறிகளை வைத்து இலையே நிரம்பிவிட்டது. மேலும் கொண்டு வந்ததை வேண்டாமென்று மறுத்தேன். அழகிய செம்புக் கிண்ணங்களில் குழம்பு, ரசமெல்லாம். பரவாயில்லாத சுவை. “ஒரு சாப்பாடு எத்தனை?” என்று கேட்டேன் சரணிடம். “அது எதுக்கு உனக்கு?” என்று அந்தக் கேள்வியை அப்படியே கடந்து சென்றான். விலையைச் சொன்னால் வேடசெந்தூர்காரிக்குச் சாப்பாடு நெஞ்சிலேயே நிற்கும் என்று தெரிந்திருக்கிறான்.

மீண்டும் டாக்ஸி பிடித்து வீடு வந்தோம். வழியிலும் சரண் அலுவலக வேலையை லேப்டாப்பைத் திறந்து மடியில் வைத்துப் பார்த்துக்கொண்டே வந்தான். “என்னடா இப்படி பிஸியா இருக்கே?” என்றேன். “வெளியில் பாத்தியா எத்தனை செடி கொடி மரம் எல்லாம்… அதைப் பார்த்துட்டே வருவியாம்… எனக்கு வேலை இருக்கு ப்ளீஸ் ரொம்ப கேள்வி கேட்காதே” என்றான்.

சரிதான் என்று வெளியே பார்த்துக்கொண்டு வந்தேன். எல்லாப் பக்கமும் அழகிய பசும் அடுக்குகளுடன் டெர்மினலியா மாண்டலி (Terminalia mantaly) வளர்க்கிறார்கள். இந்தியாவில் அதிகம் வளர்க்கப்படும் அலங்கார மரம் என்று கணக்கெடுத்தால் இதுதான் இருக்குமாயிருக்கும். காம்ப்ரிடேசியின் (Combretaceae) உறுப்பினர்கள் ரத்தம் போல் சிவந்த இலைகளுடன் நின்றிருந்தார்கள். பெருங்கொன்றை மலரத்தொடங்கி இருந்தது. ஒரு குறுங்காட்டைக் கடந்து சென்றோம்.

சரண் இருக்கும் இடத்திற்கு வந்தோம். உயர்ந்த அடுக்ககங்கள் எனக்களிக்கும் அதே பட்டாம்பூச்சி சிறகடிப்பு இப்போதும் நெஞ்சுக்குள் இருந்தது. வாசலில் அமர்ந்திருந்த 3 காவலர்கள் சரணைப் பார்த்துப் புன்னகைத்தது கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. லிஃப்டில் 16 அழுத்தி மேலே போனோம். லிஃப்ட் சுவர் முழுக்க பிளம்பர், எலெக்ட்ரிஷியன், வீட்டு வேலையாட்களின் எண்கள் எழுதப்பட்ட அட்டைகள் செருகப்பட்டிருந்தது.

சரண் இருக்கும் அடுக்ககத்தின் பெயர் ‘ராதே மோகன்’. எனக்கு இந்தப் பெயர் பிடித்திருந்தது. வீட்டு நுழைவாயிலில் கிரகப்பிரவேச சாமந்தி மலர்மாலை துவண்டு கிடந்தது. மலர்களுடன் இருந்த இலை என்னவென்று பார்த்தேன்; மாவிலையை இடையிடையே மடித்து வைத்துக் கட்டியிருந்தார்கள். அலங்காரமாக கண்ணாடி பதித்த ஒரு வெளிக்கதவு, அதைத் திறந்தால் 4 ஜோடி செருப்பு வைக்கும் அளவுக்கான ஒரு சதுரம், பின்னால் வீட்டுக் கதவு.

பெங்களூரு தருண் வீட்டைப் போலல்லாமல் இது கொஞ்சம் வசதியான, விசாலமான அறைகளுடன் இருந்தது. நான் நினைத்தது போலல்லாமல் வீடு சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது.ஹால், சமையலறை, பெட்ரூம் மூன்றிலும் கண்ணாடி பதித்த பால்கனி இருந்தது. பாத்ரூம் கதவை எனக்குத் திறக்க வரவில்லை. சரண் திறந்து காட்டினான். தான் இரவு 7 மணிக்குள் வந்துவிடுவதாகவும், அதுவரைக்கும் தயவுசெய்து வேலை செய்யாமல் ஏஸி போட்டுக்கொண்டு படுத்துத் தூங்குமாறும் சொல்லிவிட்டு போன் பேசிக்கொண்டே புறப்பட்டான்.

அப்படியெல்லாம் தூங்க முடியுமா என்ன? கொண்டு வந்திருந்த சூட்கேஸைத் திறந்து பொருட்களை எடுத்து அடுக்கி, சரண் துவைக்காமல் வைத்திருந்த துணிகளை மெஷினில் போட்டு எடுத்துப் பால்கனியைத் திறந்து காயப்போட்டேன். வெளியே ஒரு பெரும் அலையாத்திக்காடு விரிந்து கிடந்தது. அப்படியே திகைத்துப் போனேன். மாபெரும் காடு அது. காட்டிற்கு மறு எல்லையில் நீர்ப்பரப்பும் அதன்பிறகு ஒரே புகைமூட்டமாகவும் இருந்தது.

காட்டின் துவக்கத்தில் ஒரு பெரிய கிரிக்கெட் மைதானம், அப்போது அங்கே விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெரிய திரையிலும் விளையாட்டு ஒளிபரப்பானது. சிக்ஸர் அடிக்கப்படுகையிலெல்லாம் களேபரமாக ஒரு பாட்டுப் போட்டார்கள். சமீபத்தில் லப்பர் பந்தில் பார்த்தது போலவே, ஹாலைத் தாண்டி படுக்கையறை வரை பாட்டுச் சத்தமும் உரத்த உற்சாக வர்ணனையும் நிறைந்து வழிந்தது.

குளித்து உடை மாற்றினேன். சரண் வந்துவிட்டான். “என்னடா சமைக்கட்டும்?” என்றேன். “சமைக்கறியா எதுக்கு? வா வா வடா பாவ், பானிபூரியெல்லாம் சாப்பிடலாம்” என்றான். இருவரும் வெயில் தணிந்ததும் நடந்து சென்றோம். நகரமே புழுதிக்காடாக இருந்தது. சரண் அடிக்கடி தொண்டையைக் கமறிக் கொண்டிருந்தான். காற்று மாசு எவ்வளவு என்று அடுக்ககங்களின் முன்பும் சாலைகளின் சந்திப்பிலும் டிஜிட்டல் பலகையில் காட்டப்படுகிறது. அன்று 214 இருந்தது. முந்த்ன நாள் 300 இருந்ததாம்.

கவலையாக இருந்தது.தூய காற்றும், பசுமையும், லைக்கன்களும் இருக்குமிடத்தில் நானும், 26 வயதே ஆன சரண் இத்தனை மாசு நிறைந்த இடத்தில் வசிப்பதும் குற்றவுணர்வை அளித்தது.

சரண் களைத்திருந்தான். நான் இல்லாமலிருந்தால் அவன் ஓய்வெடுத்திருப்பான். ஆனால் அவன் உற்சாகமாக பேசிக்கொண்டே வந்தான். ’’மீ இங்கே கடும் வறுமையிலும் அதீத மத நம்பிக்கையிலும் இருக்கறவங்களைப் பார்க்கிறேன். கடவுள் மீதும் மனிதம், அறம் மீதெல்லாம் நம்பிக்கை கொண்ட ஒருவனை இங்கே 3 மாசம் இருக்கச்சொன்னா அவன் நம்பிக்கையெல்லாம் அழிஞ்சு போயிரும்..’’ என்றான். சரண் சொன்னது கவலையளித்தது, அவன் இதையெல்லாம் கவனிப்பது மேலும் துயரளித்தது. பெருமூச்சுவிட்டுக்கொண்டேன்.

ஒரு பிரபல தெருமுனைக்கடையில் வடா பாவ் ஆர்டர் கொடுத்தான். பிளந்த பன்னில் உருளைக்கிழங்கு போண்டாவைத் திணித்து, கூடவே எண்ணெயில் பொரித்து உப்பில் பிரட்டிய பச்சை மிளகாய்களையும் தட்டில் வைத்துத் தருகிறார்கள். நான் உருளைக்கிழங்கைச் சாப்பிடுவதில்லை, எனவே போண்டாவை டிசெக்ட் பண்ணி கிழங்குத் திணிப்பை அகற்றி மிளகாயுடன் பன்னைச் சாப்பிட்டேன். ” இப்படிச் சாப்பிட்டா எப்படி உனக்கு பிடிக்கும்?” என்றான். “வடா பாவை எப்படிச் சாப்பிட்டாலும் எனக்குப் பிடிக்காதுடா” என்றேன்.

அடுத்து பானிபூரி. வரிசையாக நின்று சின்ன தட்டில் ஒன்றொன்றாக வாங்கி வாயில் போட்டுச் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்கள். அதிலும் உருளைக்கிழங்கு திணித்து வண்ண நீரூற்றிக் கொடுத்தார்கள். ஒன்றைச் சாப்பிட்டுவிட்டு வேண்டாமென்றேன். சரண் முகம் பாவமாகியது. “கடைசி பானிபூரி ஸ்பெஷலா நிறைய உள்ளே வச்சுக்கொடுப்பாங்க அதைச் சாப்பிடுறியா?” என்றான். மறுத்தேன். “தஹிபூரியாவது சாப்பிடு” என்று வாங்கிக் கொடுத்தான். அதிலும் என்னென்னவோ கலந்து காரசாரமாகக் கொடுத்தார்கள். எனக்குப் பிடிக்கவில்லை. “வீட்டுக்குப் போலாம்” என்றேன்.

நடந்தோம். “என்னடா இங்கே பொண்ணுங்க எல்லாம் அவ்வளவு அழகாவே இல்லை, பெங்களூருல எத்தனை பேர் இருக்காங்க?” என்றேன். “காலையில நேரா ஃப்ளைட் இருக்கு, வேணும்னா சொல்லு சின்னவன்ட்டெ அனுப்புறேன், இங்க இவ்வளவு அழகாத்தான் இருப்பாங்க என்ன செய்யறது?” என்றான்.

“சரி நாளைக்கு எங்காவது மால் போனா அங்கே பார்க்கலாம்” என்றேன். இன்னும் 3 நாள் என்னை வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகிறோம் என்னும் பயம் சரண் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

தொடரும்….

மும்பை!

பிப்ரவரியில் ஏற்பட்ட சிறு உடல்நலக்குறைவு காரணமாக, வேறு வழியின்றி மருத்துவ விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உருவானது. சிகிச்சைக்கு எடுத்துக்கொண்ட மருந்துகள் நல்ல உறக்கத்தைத் தந்ததால், வீட்டில் ஓய்வெடுத்தேன். விடுமுறையின் கடைசி நான்கு நாட்களை மும்பையில் உள்ள சரண் வீட்டுக்கு போகலாம் என நினைத்தேன். சரண் ஜனவரியில் மும்பை சரஸ்வத் இன்ஃபோ டெக்கில் பணியில் இணைந்தான் பிப்ரவரி முதல் வாரத்தில்தான் புதிய வீட்டிற்கு குடிபோயிருந்தான்.

பனைகாட்சனும் நீண்ட நாட்களாக அவர்களது மும்பை மெதடிஸ்ட் சர்ச்சில் ‘விவிலியத் தாவரங்கள்’ குறித்து உரையாற்றச் சொல்லி கேட்டுக் கொண்டிருந்தார். எனவே ஒரு வெள்ளிக்கிழமை காலை விமானத்தில் பயணம் உறுதியானது. எனக்கு எப்போதும் ரயில் பயணமும், விமானப் பயணமும் அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அதிலும் விமானப் பயணம் கடும் ஒவ்வாமை அளிப்பதுடன், அது இயற்கைக்கு மாறானது என்ற எண்ணம் இருப்பதால் எனக்கு எப்போதும் அச்சமூட்டுவதாகவே இருக்கும். தருண் டேராடூனில் படித்தபோது அவ்வப்போது சென்றதோடு சரி, கடந்த சில வருடங்களாக விமானப் பயணமே இல்லை. இப்போது வேறு வழியின்றி இண்டிகோ விமானத்தில் பயணம் . சரண் டிக்கட் போட்டான்.

சரணுக்குச் சில பொருட்கள் கொண்டு செல்ல வேண்டியிருந்தது, 15 கிலோதான் எடுத்துச் செல்ல முடியும் என்பதால், சாம்பவியும் நானுமாகச் சேர்ந்து எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து பேக் செய்தோம்.கைப்பை 7 கிலோ இருக்க வேண்டும். அதன் அளவுகளைச் சாம்பவி டேப் வைத்துத் துல்லியமாக அளந்து, “115 x 32 x 12 இந்த அளவில்தான் பை இருக்க வேண்டும் அத்தை, இல்லாவிட்டால் மேலே வைத்து மூட முடியாது என்பார்கள்; நீங்க தனியாகப் போறீங்க, தேவையில்லாமல் டென்ஷன் ஆவீங்க” என்று அக்கறையுடன் அனைத்தையும் செய்து கொடுத்தாள்.

சரியான நேரத்திற்கு விமான நிலையம் சென்றேன். டிஜியாத்ராவில் சாம்பவி முன்பே விபரங்களை ஏற்றியிருந்ததால், சிரமமில்லாமல் உள்ளே சென்று நுழைவு வாயிலின் அறிவிப்புக்காகக் காத்திருந்தேன். எனக்கு முன் ஒரு வட இந்தியக் குடும்பம் அமர்ந்திருந்தது. வயதான பெற்றோர், மகன், மருமகள் மற்றும் இரட்டை ஆண் குழந்தைகள். உடன் அவர்களின் பெண் இருந்தார்,

அந்த இரட்டையர்களில் ஒருவன், அவன் அம்மா அலுமினியம் ஃபாயிலில் சுற்றிக் கொண்டு வந்திருந்த எதையோ எடுத்துக் கொடுத்ததும் உடனடியாகக் கண்ணீர் மல்கினான். மற்றொருவன் சமத்தாக வாங்கிக் கொண்டான். அழுதவன் பிறகு தன் குட்டிப் பையிலிருந்து குர்குரேவை எடுத்துப் பொறுமையாக வயிறு நிறையச் சாப்பிட்டான். ஒரு பாப்கார்ன் வாங்கிக்கொண்டு அவர்கள் இருவரும் விளையாடுவதைப் பார்த்தபடி நேரத்தைக் கழித்தேன்.

பின்னர் 9-ம் எண் நுழைவு வாயில் வழியாக, சிரிப்போ முகமனோ காட்டாத பணிப்பெண்களைக் கடந்து என் இருக்கைக்குப்போனேன் ஜன்னலோரம் ஒரு மிலிட்டரிக்காரர் அமர்ந்திருந்தார். அவர் காலடியில் துணிக்கடைகளில் கொடுக்கும் கட்டைப்பையைத் திணறத் திணறத் திணித்து வைத்திருந்தார். எனக்கும் அவருக்குமிடையில் இருக்கை காலியாக இருந்தது. மற்றவர்களும் நல்ல பெரிய பெரிய சூட்கேஸ்களை வைத்திருந்ததைப் பார்த்தபோது, “சாம்பவி, பார்த்தியா அநியாயத்தை?” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டேன்.

விமானம் டேக் ஆஃப் ஆகும்போது எனக்கு எப்போதும் வயிற்றைக் கலக்கும். அச்சத்தில் கந்தசஷ்டி கவசம் சொல்லிக் கொண்டு கண்ணை மூடிக்கொள்வேன். ஆனால், இந்த முறை அருகில் ஆஜானுபாகனாக, கட்டுமஸ்தாக, தாட்டியாக, கம்பீரமாக சீருடையில் பெரிய மீசையுடன் கூடிய ஒரு ராணுவ வீரர் அமர்ந்திருந்தது எனக்குக் கொஞ்சம் நம்பிக்கையூட்டியது. விமானி மற்றும் துணை விமானி இருவருமே பெண்கள். அவர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது கவனிக்கத் தவறியதால், அவர்களுக்கு ‘லில்லி’ மற்றும் ‘ரோஸ்’ என்று நானே பெயர் வைத்துக் கொண்டேன்.

ஓடுதளத்தில் விமானம் தறிகெட்டு ஓடியபோது, மனதில் கவசம் சொல்லியபடியே ஒரு மாரல் சப்போர்டுக்காக திரும்பி அந்த ராணுவ வீரரைப் பார்த்தேன். அவர் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, முகம் அஷ்டகோணலாக மாறி, கையில் ஒரு ருத்ராட்ச மாலையை உருட்டியபடி ஏதோ ஜெபித்துக் கொண்டிருந்தார்! ’’…ஒன்னுமில்ல சார் பயப்படாதீங்க..’’ என்று மானசீகமாக அவருக்கு தைரியம் சொன்னேன்.

லில்லி விமானத்தை வெண்ணெய்க்கட்டியில் கத்தி இறங்குவது போல அழகாக நவி மும்பையில் தரையிறக்கினாள். பெண்களுக்கு பைக் காரெல்லாம் தான் சரியாக ஓட்டத்தெரிவதில்லை.

வெளியே காத்திருந்த சரண் ஆச்சரியத்துடன், “என்னம்மா, வீடியோ கால் கூட வரலை, நீயே தைரியமா வந்துட்டயே!” என்றான். நான் புன்னகையுடன், “ஒரு மிலிட்டரிக்காரர் ஹெல்ப் பண்ணினாருடா” என்றேன்.

தொடரும்….

    Unnaturals!

    பொள்ளாச்சியில் நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் சில கிளைகள் அங்கும் இங்கும் இருக்கின்றன. அழகு நிலையம் என்றால் ரிஷப்ஷனிலும், உள்ளே சேவை செய்யவும் இருக்கும், அடர்த்தியான உதட்டுச்சாயமும் இறுக்கமான ஜீன்ஸும் அணிந்த ஒன்றிரண்டு அழகிய இளம்பெண்கள் இருக்குமிடம் என்றும் சொல்லலாம். மெய்யான அழகுச்சேவையெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. கட்டணமும் பெரும்பாலும் பகல் கொள்ளைதான்.

    மகன்கள் முடி வெட்டிக்கொள்ள அங்கே தான் செல்வது வழக்கம். கொள்ளைப்பணம் கொடுத்து பல மணி நேரம் செலவழித்து முடிவெட்டிக்கொண்டு வெளியே வந்தால் ஜெல் தடவி படிய வாரி முடி வெட்டியது போலவேதான் தெரியும். வீடு வந்து குளித்துத் தலை துவட்டினால் பழையபடி முடி காடாக திரண்டு கிடக்கும். மாயா மாயா எல்லாம் மாயாதான்!

    ஏற்கனவே நேச்சுரல்ஸில் கசப்பான அனுபவமொன்று இருந்தது. (கசப்பான அனுபவத்தை மனமுவந்து அளித்திராத நிறுவனங்களோ உறவுகளோ, மனிதர்களோ இருக்கிறார்களா என்ன?) சரண் தருண் பள்ளிக்காலத்தில் ஒரு கோடைவிடுமுறைக்கு முந்தைய , பள்ளியின் கடைசி தேர்வு நாளின் முடிவில் தருணுக்கு முடி வெட்ட அதே நேச்சுரல்ஸ்கு வந்தோம் . அவன் உள்ளே போய் நெடுநேரமானது.

    வரவேற்பில் (அபூர்வமாக இருக்கும்) ஒரு ஆணும் மற்றும் சிலரும் உள்ளே செல்வதும், வெளியே வந்து கூடிக்கூடி என்னைப் பார்த்தும் பார்க்காததுபோல எதையோ தாழ்ந்த குரலில் பேசுவதுமாக இருந்தார்கள். எனக்கு கிலி பிடித்துக்கொண்டது. தருணுக்கு முடி வெட்டுகையில் காயம் ஏதோ ஆகியிருக்குமோவென்று. சரண் ’’.. அப்படியெல்லாம் இருக்காதும்மா, கத்தியெல்லாம் இல்லை, மெஷினில் தான் வெட்டுவாங்க..’’ என்றான்.

    ஒருவழியாக இரண்டு பேர் என்னிடம் வந்து காத்திருக்கும் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கேட்காதபடி ’’…மன்னிக்கனும் மேம், உங்க மகனுக்கு முடி வெட்டினவர் புதுசு, தெரியாம பின்னந்தலையில் பெரிய சொட்டையை உருவாக்கி விட்டார், இந்த சேவைக்கு (?) நீங்கள் கட்டணம் தரவேண்டாம்..’’ என்றார்கள். நான் கடுமையாக ஒன்றும் சொல்லக்கூடாதென என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வெளியேறினேன். அந்த விடுமுறையில் நாங்கள் திட்டமிட்டிருந்த பயணத்தை தருணின் இந்தசிகை அலங்காரத்தால் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தோம்.

    பின்னரும் சென்ற வாரம் வரை நேச்சுரல்ஸ்க்கே ஏன் சென்றோமென்றால் பொள்ளாச்சியில் எரியும் கொள்ளிகளில் நேச்சுரல்ஸ் கொஞ்சம் நல்ல கொள்ளி எனவேதான் அதில் சுட்டுக்கொண்டோம்.

    நானும் அங்கே செல்வதுண்டு உறுப்பினர் அட்டைகூட இருந்தது. (கவனிக்கவும் past tense) அழகு சிகிச்சை, சேவைக்கெல்லாம் போவதில்லை. அவ்வப்போது புருவங்களைத் திருத்திக்கொள்வதும், தினமும் சாக்பீஸ் பிடித்தும், தேங்காய் உரித்தும், காய்கறி வெட்டியும் கைகள் காய்ந்துபோய், எப்போதும் தோட்டத்து மண்ணில் வேலைசெய்து பாதங்கள் வறண்டு போவதால் அடிக்கடி பெடிக்யூர் மெனிக்யூர் செய்துகொள்வதுண்டு.

    அரிதாகவே சருமப்பாதுகாப்புக்கு செல்வேன். கடந்த மாதம் கடும்பனியில் லவ்டேலிலும் வெள்ளிமலையிலும் இருந்து , வீட்டிலும் அதிகாலை நடைப்பயிற்சி சென்று, வழக்கமாக கருத்திருக்கும் முகம் இப்போது இருண்டுவிட்டிருந்தது. எனவே நேச்சுரல்ஸ் சென்று அவர்கள் காட்டிய விலைப்பட்டியலில் இருந்த எனக்குப்பிடிக்கவே பிடிக்காத கரீனா கபூரின் முகத்தைப் பார்ப்பதைத் தவிர்த்து,சரும pH யை சற்றுக் குறைத்து, சருமத்துளைகளின் அழுக்கை நீக்கி, cleansing செய்து, கொலாஜனை பூஸ்ட் செய்வதாகச்சொன்ன ஒருசிகிச்சையை கணிசமான தொகையொன்று போனாலும் பரவாயில்லை என்று தேர்வு செய்தேன்.

    நிச்சயமாக 1 மணி நேரத்தில் முடித்து விடுவேன் என்று வாக்குறுதி அளித்து இரண்டரை மணிநேரமெடுத்துக் கொண்ட அந்த சிகிச்சையில் என்னை பாடாய்ப்படுத்தி சருமத்தை பெரும் வன்முறைக்குள்ளாக்கினார்கள்.

    நான் ’’…மெதுவா பண்ணுங்கம்மா வலிக்குது….’’ என்று சொன்னபோது சருமம் தளர்ந்திருப்பதால் அப்படி வலிக்கிறது என்று அவள் சமாதானம் செய்ததைக்கூட மன்னித்து விட்டேன் (சருமம் நன்றாக இருந்தால் ஏன் நேச்சுரல்ஸ் வருகிறோம்?) நீங்க அடிக்கடி அரசன் ப்ளூ சோப் போட்டு முகம் கழுவினா நல்லது என்று அந்த சேவை (?????) செய்த பெண் சொன்னபோதுதான் தேவியின் கட்டுக்கள் தளர்ந்தன.

    அரசன் சோப் போட்டுக்கச் சொல்லும் பரிந்துரையை குக்கிராம தெருமுனை அழகு நிலையங்களில் கூட பரிந்துரைக்க மாட்டார்களே! இதற்கெதற்கு நேச்சுரல்ஸ்? என்று கடுமையாக எதிர்வினையாற்றிவிட்டு உறுப்பினர் அட்டையை ரிஷப்ஷன் டெஸ்கில் உடைத்துப்போடலாமேன்னும் முடிவை’’ மீ அதிகமா கோபப்படாதே ப்ளீஸ் ‘’ என்னும் சரணின் குரல் காதில் கேட்டதால் செய்யாமல் வீடு வந்து சேர்ந்தேன். வீடு வந்து அதை உடைத்துபோட்டேனென்று பாருங்கள்!

    இது பல மூடுவிழாக்களுக்கான காலம் போலிருக்கிறது. சகித்துக்கொண்டு தக்கவைத்துக் கொண்டிருப்பவற்றின் கதவுகளை ஒவ்வொன்றாக அறைந்து சாத்திப்பூட்டி சாவியை தலையைச்சுற்றித் தூர வீசிக்கொண்டிருக்கிறேன்.

    Highly unnatural!

    இளமைக்காலங்கள்!

    தேர்வுக்காலம் இப்போது கல்லூரியில்.வளாகமே மாணவர்களால் நிறைந்து வண்ணமயமாக இருக்கிறது. எனது துறைக்கருகில் பழுத்து வாடிய இலைகளை கொட்டிக் குவித்துக்கொண்டிருந்த புங்கை மரத்தடியில் என்னை இரு மாணவிகள் கைகோர்த்த படி கடந்து செல்கிறார்கள். ஒருத்தி மற்றவளிடம் ‘’.. சொல்லறதைச்சொல்லிட்டேண்டி, மாட்னேன்னு வைய்யி அவ்வளவுதான் பெரிய பிரச்சனையாயிரும் ..’ என்கிறாள். ஓங்கு தாங்காக பெருங்கூட்டுக்காரியாயிருந்த மற்றவள் கனவில் அழ்ந்த கண்களுடன்’’… என்னா ஆனாலும் சரிடிநான் பார்த்துக்கறேன்..’’ என்கிறாள். இந்த இளமை அளிக்கும் துணிச்சல் இருக்கிறதே!

    புதிய தொடர்!

    தாவரவியலில் இருந்து சற்றே விலகி உலகெங்கிலும் பிரபலமான உணவு வகைகளைக் குறித்த ஒரு தொடர் எழுதி அந்தக் கட்டுரைகளை ஸம்பா என்னும் தலைப்பில் நூலாக வெளியிட ஒரு பதிப்பகத்தில் கொடுத்திருக்கிறேன். அவர்கள் இன்னும் பதிலளிக்கவில்லை. அகநியில் ஒன்றும் பரிசீலனையில் இருக்கிறது. காலச்சுவடின் ’அலையிடைவெளியில்’ மொழியாக்க நூலும் வரவேண்டும்.

    ஸாகேவுக்குப்பிறகு பெல்லடோனா, கஞ்சா, கொகெய்ன், சோமக்கொடி என்று மேலும் சில போதைத்தாவரங்கள் குறித்த கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், அவற்றையும்  ஸாகே கட்டுரைகளுடன் இணைத்து மறுவெளியீடு செய்யவேண்டும். அறிவியலில் பெரும் பங்காற்றிய ஆளுமைகளைக் குறித்த கட்டுரைகளையும் தொகுத்து தயாராக வைத்திருக்கிறேன் நல்ல பதிப்பாளரிடம் கொடுக்கவேண்டும். அறிவியல் இலக்கியத்தை வெளியிட பெரும்பாலும் பதிப்பகத்தார் தயாராக இல்லை. எனக்கிதில் ஆச்சரியமோ வருத்தமோ இல்லை.தெரிந்த பழகிபோன விஷயம் தான்.

    ஒரு சில ஆளுமைகளின் தன்னம்பிக்கை நூல்கள் நூற்றுக்கணக்காக வெளியிடப்பட்டிருந்ததை இந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் பார்த்தேன் அவைதான் பொது வாசகர்களுக்கு போய்ச்சேர்கிறது போல. உரைநடையை மடக்கி மடக்கி எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டிருந்த நூல்களும் ஏராளம் இருந்தன.

    லின்னேயஸ் தன்னை இரண்டாம் ஆதாம் என்று கருதி அதை வெளிப்படையாகச் சொல்லவும் சொல்லி, தாவர வகைப்பாட்டியலைக்கொண்டு வந்தார், அவரது பெயரே அவரது குடும்பத்துக்கு சொந்தமான ஒரு மரத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது என்பதை, கார்வர் என்னும் கறுப்பினத்தவர் பயிர்சுழற்சி முறைகளை அறிமுகப்படுத்தி  பழமையான விவசாயமுறைகளின் பிழைகளை சரிசெய்ததை, இந்தியாவில் ஹெச் ஐ வி தொற்று இருப்பதை 80 களில் முதலில் கண்டறிந்த சுநீதியை நிர்மலாவை,டைபாய்டு மேரியை. சூழியலை டார்வினுக்கு பல நூற்றாண்டுகள் முன்னரே தனது இயற்கை வண்ண ஓவியங்களால் நிறுவிய, தன் சிறுமகளுடன் சுரினாம் பூச்சிகளைச் சேகரிக்க ஒரு   படகில் நீண்ட கடற்பயணம் மேற்கொண்ட  மரியா சிபில்லாவை,சாவா மூவா மருந்துக்கான தேடலில் சீஸ் கண்டுபிடிக்கப்பட்டதை,

    ஒரு கடற்பயணத்தில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட தளபதி ஒருவரால் பறவைக்கூடு சூப் கண்டுபிடிக்கப்பட்டதை, ரேபிஸ்க்கு லூயி எப்படி தடுப்பு மருந்து கண்டுபிடித்தாரென்பதை, வேக்சினேஷனை கண்டறிந்த ஜென்னரை அவரது காதல் கதையை, கண்வருக்கு உதவிசெய்யப் போய் அகார் அகாரை ஃபேனி ஹிஸ்ஸ கண்டறிந்ததை,, கங்கை நீர் எப்படி மாசடையாமல் இருக்கிறது என்று ஆய்வு செய்து அதற்குக் காரணமாக பாக்டீரியோ பாஜ் இருப்பதை கண்டறிந்து, காலரா பாதிப்பிலிருந்த இந்தியக்கிராமங்களுக்கு அந்த நீரைக்கொண்டு போய், காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்திருந்த, படிப்பறிவற்ற கிராமத்தவர்களிடன் கிணற்றுநீரில் அதைச்சேர்க்க மனறாடிய  ஆங்கிலேய அறிவியலாளரைப் பற்றியெல்லாம் எழுதபட்ட கட்டுரைகள் யாருக்கும் தேவையிருக்காதுதான். எனினும் இரண்டாம் ஆதாம் என்னும் தலைப்பிட்டு அவற்றைத் தொகுத்து வைத்திருக்கிறேன்.  

    கோடையில்லா ஆண்டைச்சொல்லி குப்பைமட்கான ஹ்யூமஸை விவரிக்கும் கட்டுரை, காடழித்தலை, தனிப்பயிர் விவசாயத்தின் பாதகங்களை, செர்ரி மலர்க் கொண்டாட்டங்களை, தாலியாவை,ஜப்பானியத் தேநீர் விருந்தை, லக்கி க்ளோவரை விவரிக்கும் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு லக்கி க்ளோவர் என்னும் பெயரிலேயே வெளியாக வேண்டி இருக்கிறது. 

    இதற்கிடையில் வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒரு புதிய தொடர் எழுத உத்தேசித்திருக்கும் என் மனக்கட்டியை என்னவென்பது?

    ஐந்து கண்டங்களிலும் தேடித்தேடி மக்கள் பஞ்சம் போக்கும் உணவுப்பயிர்களின் விதைகளைச் சேகரித்து, உளவாளி என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டு மாதக்கணக்காக பட்டினி போட்டுக் கொல்லப்பட்ட நிகலோவ், தொழுநோய்க்கான எளிய மூலிகை சிகிச்சையை கண்டறிந்து அந்த ஆய்வை மற்றொருவர் திருடக்கொடுத்து மிக இளம் வயதிலேயே இறந்து போன ஆலிஸ் பால், டி என் ஏ வின் இருசுழற்சி அமைப்பை முதலில் கண்டுபிடித்து, அதை வாட்சனும் க்ரிக்கும் தங்களுடையது என்று சொல்லி வெளியிட்டு அதற்காக நோபல் விருதும் வாங்கும்  முன்னரே ஒவேரியன் கேன்சர் வந்து மறைந்துபோன அதிபுத்திசாலிப் பெண்ணான ரோஸலிண்ட் என்று  பல ஆளுமைகளின்  பட்டியலை கைவசம் வைத்துக்கொண்டு எழுதத்துவங்குகிறேன். 

    கட்டுரைகளை   இணைய இதழ்கள் வரவேற்று வெளியிடுகின்றன எனினும் நூல்களை வெளியிடத்தான் யாருமில்லை. எனக்கு  இன்னும் 500 ஆண்டுகளுக்காவது தொடர்ந்து எழுதப் புதிய அறிவியல் விஷயங்கள் இருக்கின்றன. ஒருவேளை இவை எதுவுமே பிரசுரமாகாமலும் நூலாக வெளிவராமல் போனாலும் பாதகமில்லை என் இணையதளத்தில் அவற்றை தொடர்ந்து வெளியிடுவேன், கட்டுரைகளை ஆர்வமாக வாசிக்கும் சிலர் இருக்கிறார்கள், மகன் சரண் இணைய தளத்துக்கான கட்டணத்தை வருடா வருடம் கட்டிவிடுகிறான்.😌 

    எழுதுக என்னும்  ஜெ வின் கட்டளை எப்போதும் எனக்கு அசரீரி போல கேட்டுக்கொண்டே இருக்கிறது,  எனவே எழுதுகிறேன்.

    சாம்பல் பூசணி!

    மற்றுமோரு தினமணி நினைவு. என் முதல் சிறுகதை கல்லூரியில் படிக்கையில் தினமணிக்கதிரில் வெளியானது.

    3-ம் வகுப்பு முடிந்து வரும் பெரிய விடுமுறையில் வெங்கடேசா காலனி வீட்டிலிருந்து ராஜா ராமண்ணா நகர் சொந்த வீட்டுக்கு குடிவந்துவிட்டிருந்தோம். அந்த வீட்டிலிருந்துதான் இப்போதிருக்கும் இந்தக்கல்லூரிக்குச் சென்றதும்.

    அப்போதுதான் அந்த புறநகர் குடியிருப்பு உருவாகிக்கொண்டிருந்தது. தெருவின் எல்லையில் விவசாயநிலங்கள் இருந்தன.

    நான் அப்போது கல்லூரியில் 2 ம் வருடத்திலிருந்தேன். அங்கு வந்த நாளிலிருந்தே வீடிருந்த தெரு முடியும் பிரதான சாலையில் இருந்த பாபு என்னும் பன்றி மேய்ப்பவரின் குடும்பத்தை அறிவேன். கருத்த பெரிய உடலும் மிகப்பெரிய தொப்பையுமாய் இருப்பார் பாபு. ஏராளமான பன்றிகளும் குழந்தைகளும் அவருக்கு இருந்தது நினைவிருக்கிறது.

    பாபுவுக்கு மூன்று மனைவிகள். சனிக்கிழமைகளில் குடிசைக்கு முன்பாகஅவரை ஒரு கல்லில் அமரவைத்து மூவருமாக உடலெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுவார்கள் கொஞ்ச நேரத்தில் வாசலில் கல்லுக்கூட்டிய அடுப்பில் பெரிய அலுமினியப் பாத்திரத்தில் மசாலாவில் வேகும் பன்றிக்கறியின் வாசனை கமகமக்கும். இப்போது நினைத்துப்பார்த்தால் பாபு சொர்க்க வாழ்வு வாழ்ந்ததை உணரமுடிகிறது.

    பாபுவின் மகள்களும் மகன்களும் பல வயதிலும் இருந்தார்கள் ஒரு சிலர் என் வயதில் என் விளையாட்டுத்தோழர்களாக இருந்தார்கள் அம்மாவுக்குத்தெரியாமல் விளையாடவேண்டும் அவ்வளவுதான். சாயங்காலங்களில் சிறு தூக்குப்போசியுடன் வீடுவீடாகச்சென்று அக்குழந்தைகள் ’’..சாப்பாடுங்ங்ங்..’’ என்று ராகம் போடுவார்கள். வீடுகளில் மீந்தவற்றைக்கொடுத்தால் வாங்கிப்போவார்கள். வெகுநாட்கள் கழித்துத்தான் எனக்குத்தெரியும் அப்படி வாங்கியவற்றை அவர்கள் சாப்பிடுவதில்லை பன்றிகளுக்கு கரைத்து ஊற்றுவார்கள் என்பது. அதில் என் வயதிலிருந்த ஒருத்தி நான் இந்தக்கல்லூரியில் சேர்ந்த அன்றே அங்கே துப்புரவுப்பணியிலிருந்ததை அறிந்தேன். அங்கேயேதான் இன்றுமிருக்கிறாள். தி ஜா கதைகளின் நாயகியைபோல வாளிப்பானவள். அவளைக்குறித்து ஒரு சில நல்ல சிறுகதைகளை எழுதமுடியும் . அத்தனை சுவாரஸ்யமானவள்.

    கல்லூரியில் பேராசிரியப்பணியில் சேர்ந்தபிறகு ஒரு நாள் கோ ஆப்பரேட்டிவ் ஸ்டோருக்கு எதிரில் இருந்த நடுச்சோலை மாமரத்துக்குஅடியில்( இப்போது மாமரம் இருந்த இடத்தில் வகுப்பறைகள் இருக்கின்றன) நானும் அவளுமாய் நின்று சிரித்துப்பேசிக்கொண்டு நான் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு போயிருந்த கன்னிமாங்காய் ஊறுகாயை டிபன் பாக்ஸிலிருந்து எடுத்துச்சாப்பிட்டுக்கொண்டிருந்ததை அப்போதைய கல்லூரி முதல்வர் பார்த்து என்னை அழைத்து கன்மையாக வண்டித்தார் சீ வன்மையாகக்கண்டித்தார்.(’’… லோகமாதேவி,ஒரு ப்ரொஃபெஸர் என்ன இடத்தில் இருக்கனும்னு தெரியாதா உனக்கு?…’’)

    என் கல்லூரிக்காலத்தில் தெரு முடிந்த இடத்திலிருந்த , முள்கம்பி வேலியிட்ட நிலத்தில் சாம்பல்பூசணிகள் விளைந்திருந்தன. ஒரு ஞாயிறன்று பாபுவின் சிறுமகன்கள் இருவர் அந்த முள்கம்பிக்குள் நுழைந்து சட்டையணிந்திருக்காத உடலைக்கிழித்துக்கொண்டு ஒரு சில பூசணிக்காய்களைத் திருடி வந்து வீடுகளில் விற்றார்கள் அப்படி அடிக்கடி அவர்களும் மேலும் சிலரும் வயல்களில் விளைபவற்றை திருடிவிற்று சில்லறைக்காசுகளை வாங்கிச்செல்வது உண்டு.

    அன்று வாசலில் நாங்கள் தேங்காய் போட்டு எண்ணி எடுத்த்து வைத்துக்கொண்டிருந்தோம். அப்பாவுமிருந்தார் . ஆளுக்கொரு பூசணிக்காயுடன் சிறுவர்கள் இருவரும் அப்பாவிடம் வந்து ’’..சார் பூசணிக்காய் வேணுமா..’’ என்றார்கள்.

    அப்பா வழக்கமான உருட்டல் மிரட்டலுடன் ’’…ஏண்டா இந்த சின்ன வயசிலேயே திருடிப்பழகறீங்களா? நான் யார் தெரியுமா? போலீஸ், பிடிச்சு ஜெயில்ல போடட்டா? உங்கப்பன் பாபுவை வரச்சொல்லி இதைசொல்லட்டுமாடா?..’’ என்றதும் அவர்கள் பயந்துபோய் பூசணிக்காய்கள் இரண்டையும் வாசலிலேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடிப்போனார்கள். அப்பா சாவதானமாக அம்மாவிடம் ’’..பாப்பாத்தி பூசணிக்காயை எடுத்து உள்ளே வை..’’ என்றார்

    நான் அந்தசிறுவர்களின் தோளிலும் முதுகிலும் வரிவரியாக இருந்த ரத்தக்கீறல்களை பலநாட்கள் நினைத்துக்கொண்டே இருந்தேன். கல்லூரி நூலகத்தில் தினமணிக்கதிரில் இருந்த முகவரிக்கு என் கிறுக்கல் கையெழுத்தில் நடந்ததை அப்படியே ஒரு சின்னக்கதைபோல சாம்பல்பூசணி என்று தலைப்பிட்டு எழுதிப்போட்டேன். அடுத்த சிலவாரங்களிலேயே அது பிரசுரமாகி கல்லூரி முகவரிக்கு சன்மானமும் வந்தது.

    ஆனால் கதைப்புத்தகங்கள் வாசித்தாலே அப்பாவிடம் அடிகிடைக்கும் ஆம் கல்லூரிக்காலத்திலும் அடிப்பார். அவரது முறம்போன்ற கையால் அடிவாங்கி பலநாட்கள் எனக்கு மூக்குச்சில்லு உடைந்து ரத்தம் கொட்டும், இப்படி பத்திரிக்கையில் எழுதியதற்கு இன்னமும் அதிகமாக அடிகிடைக்கும் அதிலும் அவரை, அவர் செய்த தவறைக்குறிக்க சாம்பல் பூசணி என்று குறிப்பிட்டு எழுதியது தெரிந்தால் ரத்தக்களறிதான் என்பதால் பிரசுரம் குறித்து யாரிடமும் சொல்லவேஇல்லை.

    அந்த முதல் பிரசுரத்தை இன்று நினைக்கையில் அப்போதும் தலைப்பில் தாவரவியல் இருந்திருக்கிறது என்று சந்தோஷப்பட்டுக்கொள்கிறேன்.

    கதிரக்கா!

    இன்று தினமணியில் திரு அருள் செல்வன் அவர்களுக்கு அளித்த நேர்காணல் வெளியாகியிருக்கிறது. நான் நாளிதழ்கள் எதுவும் வாங்குவதில்லை .ஏதேனும் குறிப்பிட்ட செய்தி வாசிக்கவேண்டியிருந்தால் நூலகம் சென்று வாசிக்கிறேன். அதுவும் அரிதினும் அரிதாகத்தான். 

    இப்போதெல்லாம் இந்து தமிழில் வெளியாகும்  நண்பர் ஸ்ரீராமின் வியாழக்கிழமை கட்டுரைகளுக்காகச்செல்கிறேன். நாளிதழ்களும் தொலைக்காட்சித்தொடர்பும் இல்லாத இயற்கையுடன் இணைந்த வாழ்வின் ஆடம்பரம் இது.

    முன்பு தினமலர் பட்டம் நாளிதழில் தொடர்ச்சியாகக்கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்ததற்குப்பிறகு அறவே  நாளிதழ்கள் வாசிப்பதில்லை. எல்லாச்சேதியும் யாருடனும் தொடர்பிலில்லாமல்  தனியறையில் கல்லூரியிலும், தன்னந்தனிமையில் வீட்டிலும் இருக்கையிலும் எனக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. 

     இன்று தினமணியில்  என்னைக்குறித்த பதிவை வாசிக்கையில் தினமணிக்கும் எனக்குமான தொடர்பு நினைவுக்கு வந்தது.

    நான் சிறுமியாக இருக்கையில் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அந்த வீடு அங்குலம் அங்குலமாக எனக்கு நினைவிருக்கிறது. வீட்டைஒட்டி இருக்கும் ஐய்யப்பன் கோயிலில் தான் பெரும்பாலும் இருப்பேன். விறகடுப்பு பம்ப் ஸ்டவ் திரிஸ்டவ் என்று படிப்படியாக மேலே வந்ததும் நினைவிலிருக்கிறது.  வாரா வாரம் செவ்வாய்க்கிழமை ஒரு ட்ரம் இணைக்கப்பட்ட தள்ளு வண்டியில் ’’….கிஷ்ணாயில்ல்ல்ல்ல்ல்ல்ல்…’’ என்று கூவி விற்றுக்கொண்டு ஒருவர் வருவார் அவரிடம் காத்திருந்து வாங்கிக்கொள்வது வழக்கம்.

    அந்த தெருவின் கோடியில் இருந்த கொஞ்சம் வசதியான ஒரு வீட்டில் மட்டும்தான் தினமணியும்  மாதாமாதம் ராணிமுத்துவும் வாங்குவார்கள். காலை 11 மணி வாக்கிலிருந்து அந்ததெருவே ஒவ்வொருவராக அவர்கள் வாசித்து முடித்த தினமணிப்பேப்பரை கடன்வாங்கி வாசித்து மாலை திருப்பிக்கொடுப்போம் பெரும்பாலும் நான் தான் போய் வாங்கிவருவேன். ஞாயிற்றுக்கிழமை இணைப்பான கதிர் பலர் வீட்டில் வாரக்கணக்காக இருக்கும் அதில் வரும் குறுக்கெழுத்துப்போட்டிகளை அம்மாமார்கள் சமையலறை வேலை முடிந்தபின்னர் குழுவாக அமர்ந்து போடுவார்கள். செல்போனும் தொலைக்காட்சியும் இல்லாத பொற்காலமது.

    அந்த வீட்டில் ஒரு அக்கா இருந்தார்கள் அவர்களின் பெயரே கதிரக்காதான் ஏனெனில் கதிர் புத்தகத்தை  கடன் கேட்ப்பவர்களுக்கு அவர்தான் எடுத்துக்கொடுப்பது வழக்கம். அவரது அசல் பெயர் எனக்கு நினைவிலில்லை. அந்தக்கதிரக்காவுக்கு கத்தரித்து விட்டபின்னரும் கணுக்கால்வரை நீண்ட பின்னல் இருக்கும்.  ஞாயிற்றுக்கிழமைகளில் அவரது வீட்டுக்கு ஓட்டமாய் ஓடிப்போய் அவரது யக்‌ஷிபோல விரிந்திருக்கும் நீண்ட தலைமுடியை துவைக்கும் கல்லில் பரப்பி கதிரக்காவின் அம்மா அரப்புபோட்டு அலசுவதை வேடிக்கைப்பார்ப்பேன். அதைக்குறித்து வீட்டுக்கு வந்து நான் கண்கள் விரிய’’.. எத்தனை நீளம் தெரியுமா ..’’என்று பேசுகையில் அம்மா ’’…ஆமா சீவக்கட்டையாட்டம் எதுக்கு ஒருத்திக்கு அத்தனை முடி’’அதிகமுடி ஆளைக்கொல்லும்டீ’ என்பார்கள்.

    பின்னர் ஒரு கூடையில் சாம்பிராணி போட்டு அக்காவின் முடியை அதில் விரித்துப்போட்டு உலர்த்துகையில் நானும் கூட ஒத்தாசை செய்வேன். கதிரக்காவின் கறுத்த களையான முகம் எனக்கும் அப்படியே நினைவில் இருக்கிறது. ஒருநாள் புளியை சர்க்கரையும் உப்பும் கலந்து உருட்டி ஈர்க்குச்சியில் செருகி அவருக்கும் எடுத்துக்கொண்டு எனக்கும் ஒன்று கதிரக்கா கொடுத்ததும் அதன் ருசியும் நினைவிருக்கிறது. கதிரக்காவுக்கு எப்போது கல்யாணம் ஆனது என்பதெல்லாம் எனக்கு நினைவிலில்லை நான் எப்போதிலிருந்து அந்த வீட்டுக்கு கதிரை தினமணியை வாங்கச்செல்வதையும் தலைமுடி அலசுவதை வேடிக்கை பார்ப்பதையும் நிறுத்தினேன் என்பது நினவிலில்லை. 

    ஆனால் கல்யாணம் ஆன சில நாட்களிலேயே அம்மாவீட்டுக்கு விருந்துக்கு வந்த கதிரக்கா, உடலெல்லாம் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துக்கொண்டு தெருவுக்கு வந்து சம்மணமிட்டு அமர்ந்து ஒரு சின்ன கதறலோ கூவலோ சத்தமோ இல்லாமல் எரிந்தழிந்துபோனதையும், அதற்கு முந்தின நாள் பொள்ளாச்சியின் மிகப்பிரபலமான மற்றொரு குடும்பத்து இளைஞரொருவர் விஷமருந்திச் செத்துப்போனதையும்  பிற்பாடு அம்மாவும் அத்தையுமாய் மாய்ந்துமாய்ந்து பேசிக்கொண்டிருக்கையில் கேட்டுத்தெரிந்துகொண்டேன். சண்முகம் என்னும் அந்த இளைஞரின் புகைப்படத்துடன் அஞ்சலிப் போஸ்டர்கள் பல இடங்களில் தெருவெல்லாம் ஒட்டப்பட்டிருந்தது.

    கற்றலும் கற்பித்தலும்!

    இன்று அஜிதனின் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவை எதிர்பார்த்திருந்த நாளில் தொடங்கி அவன் பள்ளிக்காலத்தைக் குறித்து ஜெ எழுதி இருந்த தேர்வு என்னும் பதிவை மீள வாசித்தேன்,(https://www.jeyamohan.in/488/#.VSOmPdyUf0d)

    மகன்களின் இளமைக்காலத்தையும் பள்ளிக்காலத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். மகன்களின் பள்ளிப்பருவத்திலும் கொந்தளிப்பான காலம்தான்.. கடும் பொருளாதார நெருக்கடி, ஆனாலும் மகிழ்ந்திருந்தோம். எப்போதும் கதை கேட்பதும், சொல்வதுமாகவே கழியும் மாலைநேரங்களும் விடுமுறைநாட்களும். 

    சிரிப்புச்சத்தம் கேட்டபடியே இருக்கும் வீட்டிலிருந்து .ரேடியோவில் பாடல்கள் கேட்டுக்கொண்டு வாசலில் மரத்தடியில் விறகடுப்புக்கூட்டி சமைப்போம் அடிக்கடி, மகன்களை அப்படி நட்புடன் நடத்தக்கூடாது என அப்பா என்னை கடுமையாக விமர்சிப்பார். முன்சகோதரி சங்கமித்ராவும் அதே எண்ணம் கொண்டிருந்தாள் எனினும் நேரடியாக தெரிவித்ததில்லை. 

    எனினும் இவர்களின் சகோதரனும் முன்சகோதரியின் மகனுமான சாந்தனுபரீக்‌ஷித் 11,12ம் வகுப்புகளுக்கு நாமக்கல்லில் ஒரு கோழிப்பண்ணைப் பள்ளியில் சூட்கேஸில் பெரும்பணத்துடன் வரிசையில் காத்து நின்று சேர்க்கப்பட்டபோது சங்கமித்ரா என்னிடம் எந்தக் கூச்சமும் இல்லாமல் நேரடியாக’’… தேவி நீ அவன் ஸ்கூல் முடிச்சு வரவரைக்கும் அவனைப்பார்க்க வேண்டாம்,பேசவேண்டாம் லெட்டெர் கூட எழுதிராதே…’’ என்றாள். அப்படியே செய்தேன். மகன்களை எந்த சீரியஸ்னெஸும் இல்லாமல் விளையாட்டுத்தனமாக வளர்க்கும் கிறுக்கு அம்மாவாகத்தான் நான் பார்க்கப்பட்டேன். (பார்க்கப்படுகிறேன்)

    அம்மாவின் புடவையைப் பிடித்துக்கொண்டே வளர்ந்த ஆண்கள் உருப்பட்டதில்லை என்னும் விமர்சனத்தை நான் பெரும்பாலும் மாதா மாதம் கேட்பேன். 

    பள்ளிக்கூடத்தில் பெரிய பிரச்சனை இல்லை என்றாலும் சரணுக்கு தமிழில் எழுதுவது பெரும் சிரமமாக இருந்தது தமிழ்ப்பாடமும் அவனுக்குப் புரியவில்லை. மதிப்பெண்கள் மிகக்குறைவாகவே வாங்கினான். ’’…..எனக்கு ழ ள ல ன ண இதெல்லாம் எங்கே எழுதனும்னு  தெரியலைம்மா யாரும் சொல்லிக்கொடுக்க மாட்டேங்கறாங்க…’’ என்பான் வீட்டில். 

    பள்ளியில் இருந்து அடிக்கடி என்னை வரச்சொல்லி அனுப்புவார்கள். ஜெ சொல்லியிருப்பது போலத்தான், முதலில் தடித்த கண்ணாடி போட்டுக்கொண்டு உக்கிரமாக இருக்கும் பிரின்சிபாலின் அறைக்கு முன்பாக அழகிய வரவேற்பாளினியால் அமரச்சொல்லப்படுவேன் பின்னர் உள்ளே சென்று மிகக்கடுமையாக சரணின் தமிழ் மார்க்கைக் குறித்து விமர்சனம் செய்து நான் கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்றும் தமிழாசிரியைப் பார்க்கனும் என்றும் அறிவுறுத்தப்படுவேன். மீண்டும் ஆசிரியர் அறைக்கு முன்னால் காத்திருத்தல் அந்த தமிழம்மா சரணை என்னவோ கூட்டுப், சரி வேண்டாம் அப்படி அவனைக் குற்றம் சொல்லி அதைக்காட்டிலும் கடுமையாக என்னையும் வசைபாடுவார்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு மகன்களை அழைத்துக்கொண்டு வீடு வருவேன்.

    அப்போது மாலைநேரத்தில் என்னிடம் சும்மா கூட இருக்கவென்று சித்தேஷ் என்று ஒரு சிறுவன் வருவான். அப்போது 8-லிலோ 9-லிலோ படித்துக்கொண்டிருந்த அவன் பிற்பாடு போட்டித்தேர்வுகள் எழுதவிருந்தான். அவன் அம்மா என்னை எப்படியோ தலையைச்சுற்றி மூக்கைத்தொடுவதுபோல தெரிந்துகொண்டு மாலைவேளைகளில்  என் செளகரியத்தை கேட்டுக்கொண்டு  என்னுடன் இருக்கவென்று காரில் அனுப்பி வைப்பார்.

      

    நான் அவனுடன் தாவரங்களையும் பொதுவான அறிவியலையும் பற்றிப்பேசிக்கொண்டெ வீட்டு வேலைகளைப் பார்ப்பேன். அவன் வாசிப்பில் ஆர்வமாக இருந்த சரணுக்கு ஹாரிபோர்ட்டர் வரிசை புத்தகங்கள் அனைத்தையும் மொத்தமாகப் பரிசளித்தான். அதில் தீவிரமாகியது சரணின் வாசிப்புப்பித்து. அவன் வாசிக்கும் வேகம் என்னைவிட பலமடங்கு அதிகம் என்னை இன்னும் ’’…..நிஜமாகவே வாசிச்சிங்களா இல்லை சும்மா மேலோட்டமா பார்த்தீங்களா…’’ என கேட்பவர்கள் உண்டு மிக விரைவாக வாசிப்பவள் நான்.

    சரண் என்னைக் காட்டிலும் வேகம். மாசக்கடைசிகளில் பொள்ளாச்சி எதிர்வெளியீடின் சின்ன புத்தகக்கடை  வழியாக அவனைக் கூட்டிக்கொண்டு போகவே தயங்குவேன் ஏதாவது புத்தகதை கட்டாயமாக  வாங்குவான். பள்ளியில் 5-ல் படித்துக்கொண்டிருந்த அவனது வகுப்பில் அப்போது மாலைநேரங்களில் ராமேஸ்வரத்திலிருந்து வரும் ஒரு ஆசிரியர் சில சிறப்பு வகுப்புகள் எடுத்தார், குறிப்பாக புதிய சொற்களை கற்றுக்கொண்டு வந்து எனக்கும் சொல்லிக்கொடுப்பான். எனக்கு நினைவிருக்கிறது biscuit என்னும் சொல்லுக்கு  twice baked, bi- scuit என்று பொருள் என்று அவன் சொல்லிக்கொடுத்தது.அறிதலில் பெரும் ஆர்வம் கொண்டிருந்தான். புதிய புத்தகம் வாங்காமல் இருக்கையில் வாசித்ததையே மீண்டும் மீண்டும் வாசிப்பான் ஆனால் ஆங்கிலம் மட்டுமே தான் எனவே ஆங்கிலம் வாசித்து வாசித்துத்தான் தமிழ் வரவில்லயோ என் சந்தேகமாக இருந்த எனக்கு,

    பேருந்துப்பயணங்களில் நின்றுகொண்டே கூட வாசிப்பான் கல்யணம் காட்சி என எங்கு அழைத்துச்சென்றாலும் ஒரு மூலையை கண்டுபிடித்து அமர்ந்து வாசித்துக்கொண்டிருப்பான்.

    நான் அவர்கள் இருவருக்கும் பாடம் சொல்லிக்கொடுத்ததே இல்லை ஆனால் உறவினர்களும் பள்ளியில் பிற பெற்றோர்களும் நான் ஸ்கேலும் கையுமாக மாலைவேளைகளில் ட்யூஷன் எடுப்பேன் என்று ஆணித்தரமாக நம்பினார்கள். நான் இருவரையும் எல்கேஜியிலிருந்து 12ம் வகுப்பு வரை எந்த ட்யூஷனுக்கும் அனுப்பாததற்கும் பலரால் வன்மையாக கண்டிக்கப் பட்டேன்.

    ’….ஒழுங்கா காலையிலயும் சாயங்காலமும் ட்யூஷன் அனுபினா 10த்லயும் 12த்லயும் ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்து தெருமுனைகளில் பள்ளிவாசலில் போஸ்டரில் போட்டோ வரும் புத்திசாலிப்பசங்களைக் கதை சொல்லிச்சொல்லி கெடுக்கிறேன்…’’ என்பது என்மீதான பொதுவான குற்றச்சாட்டாகவே இருந்தது. 

    ’’..சரண்  உன் போட்டோ பேனரில் ஸ்கூல் வாசலில் வரணுமாடா? ட்யூஷனுக்கெல்லாம் போறியா?…’’

     ’’….வேண்டாம்மா. இந்த வருஷம் ஃபர்ஸ்ட் வந்தவங்க பேனரை இப்போ ஸ்கூல் ஆயாம்மா எல்லாம் மழை வந்தா நனையாம இருக்க கிழிச்சு ஒரு கூரை மாதிரி கட்டி இருக்காங்க , இதுமாதிரியெல்லாம் போட்டோவும் பேனரும் எனக்கு வேண்டாம், ட்யூஷனுக்கே நான் போகமாட்டேன்..’’

     கதை கேட்டுத்தான் வளர்ந்தார்கள் இருவரும் . ஒரே ஒரு சிறப்பு வகுப்பிற்கு கூட  இருவருமே போனதில்லை.

    இந்த தமிழம்மா தொல்லையை சரி செய்யவேண்டி இருந்தது. நான் சமையலறையில்  வேலையில் இருக்கையில் இருவரையும் கூடவே தரையில் அமரச்சொல்லி நாளிதழ்களின் தலைப்புசெய்திகளை உரக்க வாசிக்கச் சொல்லுவேன் மாலையில் எஃப் எம் ரேடியோவில் ஒலிக்கும் பாடல்களின் முதல்வரியை அடுத்த பாடல் ஒலிக்கும் முன்பு எழுதிக்காண்பிக்கச் சொல்லுவேன்.

     அதை ஆர்வமாகச் செய்தார்கள். தருணுக்கும் தமிழ் தகராறு தான் எனினும் புகார் சொல்லும் அளவுக்கு அவன் மதிப்பெண்கள் இல்லை அவன் ஆங்கிலமும் வாசிக்கவில்லை. ஆனால் தமிழை தப்புத்தப்பாகப் புரிந்துகொள்வான், ஒரு கூட்டத்தில் தாத்தா ஒருவர் (பள்ளிக்கு வந்து உரையாற்றிய பெரியவர்) சொன்னதாக கண்ணகி பட்டினி கிடந்து கஷ்டப்பட்டாள் என்று தருண் வீட்டுக்கு வந்து சொல்வதும் அவ பட்டினி இல்லடா பத்தினி என்று நான் திருத்தி பத்தினின்னா என்னவென்று பதிலுக்கு அவன்  கேட்டு உரையாடல் உக்கிரமாகப் போகும் அவனுடன்.

    நல்லவேளையாக தமிழம்மா வேறு பள்ளிக்கு மாற்றலாகிப் போய் சரணுக்கு எந்தக்காரணத்தாலோ மிகவும் பிடித்துப்போன  சங்கீதா என்னும் ஒரு இளம் ஆசிரியை வந்தார் அதன்பிறகு சரண் தமிழில் விருப்பம் கொண்டு நல்ல மதிப்பெண்கள் வாங்கினான். வெண்முரசு தொடர்ந்து கேட்பதும் அவனும் மெல்ல மெல்ல வாசிப்பதுமாக சரணுக்கு அறிமுகமே ஜெ வின் மிகச்செறிவான மொழிதான். 

    பிற்பாடு அவன் ஜெ வுக்கு எழுதிய கடிதங்கள் அவரது தளத்தில் பிரசுரமாகின அவன் 7லிலும் தருண் 5லும் படிக்கையில் இருந்தே விஷ்ணுபுரம் கூட்டங்களுக்கு என்னுடன் வர துவங்கினார்கள்.மகன்களை படிப்பில் சோடை போன காரணத்தைச்சொல்லி ஒருபோதும் நான் கடிந்துகொண்டதே இல்லை.

    ஆனால் இருவருமே பாடத்தைத்தவிர மற்றவற்றில் ஆர்வமாக இருந்தார்கள். 7ம் வகுப்பில் சரணுக்கு ஒரு போட்டியில் வெற்றி பெற்றதற்காக ஆஸ்திரேலியாவின் வேல்ஸ் பல்கலைக்கழகம் state level best student award அளித்து அப்போது நான் வாங்கிய சம்பளத்தில் 4 – ல் ஒரு பங்கை விருதுத்தொகையாகவும் அளித்தார்கள். சென்னைக்கு மூவருமாக ரயிலில் சென்று, எங்கேயோ தங்கி, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் அந்த விருதை வாங்கினோம். ஒரு யோகா போட்டிக்கு தருணை வெளியூருக்கு அழைத்துசென்று நாள் முழுவதும் காத்திருந்து அலுத்துப்போய் போட்டி முடிந்ததும் முடிவுகளைக்கூட கேட்டுக்கொள்ளாமல் ஊருக்கு திரும்பிவிட்டேன் மறுநாள் பள்ளியில் முந்தைய நாளின் போட்டியில் மாநில அளவில் முதலிடத்துக்கான தங்கபதக்கத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு புழுதிபறக்க தருண் என்னைப்பார்த்ததும் ஓடிவந்தான். இப்படி பல போட்டிகள் பல வெற்றிகள் ஆனால் 9ம் வகுப்பு வரை பாடங்களில் இருவருமே சொல்லிக்கொளும் படியில்லைதான். அதைக்குறித்து மூவருமே கவலைப்பட்டதுமில்லை. இருவரும் வாங்கிய தங்கவெள்ளி வெண்கல பதக்கங்கள் குப்பையாக ஒரு பெட்டியில் போட்டு வைத்திருக்கிறோம்

     நல்லாசிரியர்கள் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை, நல்ல கல்விக்கூடம் வாசிப்புப்பழக்கம் இவையெல்லாம் இளமைப்பருவத்தில் எத்தனை முக்கியம் என்பதற்கு சரணும் தருணுமே உதாரணம். பள்ளிக்கூடம் ஒரு மாணவனை அடையாளப்படுத்துவதே அவனது மெய்யான அடையாளம் என்று நம்ப வேண்டியதில்லை என்பதற்கும்.

    தருணுக்கு மத்தகம் கதையின் கேசவன் குட்டி கற்பனை விளையாட்டுத் தோழனாக இருந்து ஒரு கட்டத்தில் தருண் தானே கேசவன் குட்டி யானை என நம்பத்தலைப்பட்டு நாலு காலில் நடந்து வீட்டில் என்னையும் சரணையும் முட்டித்தள்ளிக்கொண்டிருந்தான்.அதைக்குறித்து சரண் ஜெவிற்கு எழுதின தப்பும் தவறுமான கடிதம்தான் தளத்தில் முதன்முதலில் ஒரு சிறுவனின் கடிதம் என்று பிரசுரமானது. பின்னரே பலவருடங்கள் கழித்து நான் எழுதினேன். https://www.jeyamohan.in/18020/

    சரணின் அந்தக்கடிதத்துக்கு பதில் அளித்த ஜெ உங்கள் சகோதரர் சிறந்த காட்டிலாகா அதிகாரியாக ஆக வாழ்த்துக்கள் என்றிருந்தார்.

    தருண் யானை டாக்டரும் காடும் வாசித்து சொல்லக்கெட்டு காட்டியல் படிக்க விரும்பி இப்போது காட்டியலாளன் (அல்லது காட்டாளன்) ஆகியிருப்பதும் சரண் சின்மயா பள்ளியில் best outgoing student விருது கௌரவ் விருது என ஏகப்பட்ட விருது வாங்கியதும் வரலாறு.

    இப்போது 26 வயதாகும் சரண் 23 வயதிற்குள் அர்த்தசாஸ்திரம் முழுமையாக வாசித்து எனக்கும் அதன் சாரத்தை சொன்னான். காமசூத்ரா எனப்து ஒரு sex manual என்று  நினைத்திருந்த எனக்கு அது ஒரு தனி நூலல்ல  7 தொகுதிகளும்  பல அத்தியாயங்களுமாகச் சொல்லப்பட்ட art of living என்பதை அவனே விளக்கினான். பிரஜாபதி நந்திகேசர் உள்ளிட்ட பலர் அத்தியாயங்கள் எழுதி வாத்ஸ்யாயனர் அதை தொகுத்தார் என்பதையும் அவனிடமிருந்தே அறிந்தேன். அதன் பிறகு என் அறிதல்கள் எல்லாமே ஜெ அவருக்கு அடுத்தபடியாக சரண் ஆகிய இருவரிடமிருந்துதான். சில மாதங்களுக்கு முன் அரிஸ்டாட்டிலின்  Politiks (ஆம் k தான்) வாசித்து முடித்து அதைக்குறித்துப் பேசினோம். சமீபத்தில் அவன் பரிந்துரைத்த medical apartheid வாசித்து இன்னும் அந்த நூல் உருவாக்கிய குற்றவுணர்விலிருந்து மீளமுடியாமலிருக்கிறேன்.

    குழந்தைகளைக்குறித்து பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை, பள்ளிக்கூடங்களும் ஆசிரியர்களும் குழந்தைகளைக் குறித்து உருவாக்கும் பிம்பங்களை  நம்பாமல் இருந்தால் நல்ல இளமைப்பருவமும் அவர்களுக்கு மிக நல்ல எதிர்காலமும்  அமையும் என்று நான் நம்புகிறேன்..

    « Older posts Newer posts »

    © 2026 அதழ்

    Theme by Anders NorenUp ↑