லோகமாதேவியின் பதிவுகள்

Month: March 2019

அருண்மொழி ஜெயமோகன் அவர்களின் பனைகளின் இந்தியா குறித்து!

 எப்பொழுதும் ஜெ அவர்களின்  தளத்தை அன்றன்றே பார்த்துவிடுவேன். இந்த வாரம் முழுதும் ஊர்த்திருவிழாவென்பதால் நானும் சரணும் அதில் மும்முரமாக இருந்ததில் சிலநாட்கள் பதிவுகளை வாசிக்காமல் விட்டுவிட்டேன் அதில்  அருணா அவர்களின் பனைமரச்சாலை பதிவும் சேர்ந்து தவறிவிட்டது.

இன்று அதிகாலையிலேயே பனைமரச்சாலை பற்றிய  அவரது விமர்சனத்தை வாசித்தேன். அது குறித்துச்சொல்லும் முன்னர்  அவரது எழுத்தைக்குறித்த என் பொதுவான அபிப்ராயத்தையும் சொல்லிவிடுகிறேன். ஜெ சாரின் எழுத்துக்களை ஆழ்ந்து  வாசிக்கையில் அவரது மொழி எப்படியோ பெரும் பாதிப்பை உண்டு பண்ணி எங்களின் அகமொழியையும் மேம்படுத்திவிடுகிறது. 10 வருடங்களுக்கு முன்பிருந்த தேவியின் எழுத்துக்களுக்கும் (கடிதங்களிலும் விமர்சனங்களிலும்தான் ): ) இப்போதைக்குமான எழுத்துக்களுக்கும் இருக்கும் பெரும் வித்தியாசத்தை யாராலும் சொல்லிவிட முடியும். சமீபத்தில் நான் gender knowledge குறித்து ஒரு உரையாற்றியதின் ஒலிப்பதிவினை  கேட்டபொழுது திகைப்பாயிருந்தது. பெரும்பாலும் ஜெ சாரின் கருத்துக்களை அப்படியேதான் பேசியிருந்திருக்கிறேன். காப்பி அடிக்கலை ஆனால்  என் மனதில் அப்படி அவர் சொன்ன, எழுதின கருத்துக்கள் வலுவாக பதிந்திருக்கின்றன. என் உரைகளைக்கேட்ட்பவர்களும், நான் எழுதுவதை தொடர்ந்து வாசிப்பவர்களும் ஜெவின் எழுத்துக்களை வாசிப்பதனால் செம்மைப்படுத்தபட்டிருக்கும் எனது மொழியினைக்குறித்து சொல்லிக்கொண்டேதான் இருக்கிறார்கள்.

பேசும்போதும் அப்படியே! சரணின் ஆசிரியர் ஒருவரிடம் இரண்டு நாட்கள் முன்பு பேசிக்கொண்டிருக்கையில் அவரது நண்பரின் மரணம் எப்படி தவிர்க்கமுடியாமலானதென்று அவர் வருத்தப்பட்டுக்கொண்டபோது சமாதானமாக நான் ’’வேறென்ன சார் ஊழ்தான்’’ என்றேன். அவர் அச்சொல்லை முதன்முறையாக கேட்கிறார் போல. அப்படியே திகைத்து ’’என்ன சொன்னீங்க’’ என்றார். நான் சுதாரித்துக்கொண்டு ஊழ் சார், fate, destiny அது , என்றேன். உடனிருந்த சரண் கண்களால் புன்னகைத்தான்

ஆனால்  அருணாவின் எழுத்துக்களில் அப்படி  ஜெவின் influence ஏதும் இல்லாமலிருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யத்தை அளிக்கின்றது. சீரான ஆழ்ந்த தெளிவான முற்றிலும் சாரிடமிருந்து வேறுபட்டிருக்கின்ற மொழி உங்களது.  எப்போதும் போலவே இதையும் எழுதி விடுதியிலிருக்கும் சரணிடம்  அலைபேசியில் வாசித்துக்காட்டினதும் ’’ எப்போவும் ஏன் ஜெ சாருடனேயே எல்லாருடையதும் ஒப்பிட்டு பார்க்கிறே?, இதை செய்யாதேன்னு சொல்லியிருக்கிறேனில்ல ’’ என்று  கடிந்துகொண்டான் இதைமட்டும் உங்களுக்கு எழுதவே கூடாதென்றும் கண்டிப்பாக சொன்னான்.

இதற்கு முன்னரும் அவர் எழுதினதை வாசித்து ரசித்திருக்கேன். சோர்பா, நீல ஜாடி இப்படி

இப்போது  இந்த பனைகளின் இந்தியா வாசிக்கையில் அவருடையதைப்போலவே எங்களுக்கும் ஒரு அழகிய பால்யம் வாய்த்திருந்ததை நினைவுகூர்ந்தேன், நானும் சங்கமித்ராவும் (அக்கா) வேட்டைக்காரன் புதூரில் இப்படி வேம்பு, பனை மா என மரங்களுடனும் ஆடு மாடுகளுடனும் ஆத்தாவீட்டில் மகிழ்ந்து வாழ்ந்திருந்தோம். வாழ்வின் துயர்கள் தொட்டிராத காலமென்பதால் மீள மீள நினைவுக்கு கொண்டு வந்து மகிழும் வெகுசில நினைவுகளில் அந்த கிராமத்து நினைவும்   எப்போதும் இருக்கும்.  வேப்ப முத்துக்கள் எனப்படும் வேம்பின் பழக்கொட்டைகளை, இலந்தை மற்றும்  சூரிப்பழங்களை சேகரிக்கவும்,  பனங்கூம்புகளை வேகவைத்து சாப்பிடவும்,   பிடிக்க முயற்சிக்கும் விரல்களுக்குள் அடங்காமல்  உயிருள்ளவைபோல நெளிந்து தளும்பும் நொங்குகளை பனையோலையில் வைத்து  முகமெங்கும் ஈஷிக்கொண்டு சாப்பிடவும்,  விரல்கள் புண்ணாகும் அளவிற்கு  நொங்குகளை நோண்டி எடுத்து சுவைத்தபின்னர் பனம்பழங்களில் வண்டி செய்து தெருவெல்லாம் தள்ளிக்கொண்டே விளையாடவும் தான் விடுமுறை முழுக்க செலவாகும். அருளப்பட்ட நாட்கள் அவை

 பனை வசீகரிக்கும் ஒரு மரமல்ல, அருணா சொல்லியிருப்பது போல அது ஒரு அமானுஷ்ய மரமென்னும்  எண்ணத்தைத்தான் உருவாக்கும் என்றாலும் எனக்கு அம்மரத்தின் மீது  விருப்பும் வெறுப்பும் ஏதுமிருந்ததில்லை காட்சனை , அவர் எழுத்துக்களை சந்திக்கும் வரையிலும்

 ஒரு தாவரவியலாளராக மட்டுமே பிற மரங்களைப்போலவே பனையைக்குறித்தும் கொஞ்சம் அறிந்திருந்தேன். ஆனால் தளத்தில் காட்சனைக்குறித்தும் பனைமரச்சாலை பயணத்தைக்குறித்தும் அறிந்துகொண்டபின்னர் காட்சனுக்கு எழுதிய நீண்ட கடிதமொன்றுக்கு பதிலாக அவர் அனுப்பிய கடிதத்தின் பின்னர் பனையை நான் மிக நெருக்கமாக அறிந்துகொண்டது மட்டுமன்றி நேசிக்கவும், வழிபடவும் செய்தேன் அவரளவிற்கே!

இன்னும் அந்தப்புத்தகம் எனக்கு கைக்கு கிடைக்கவில்லை என்றாலும் அது அத்தியாயங்களாக எழுதப்பட்டபோது அனேகமாக எல்லாப்பதிவுகளையும் பின்னிரவில் காட்சன் வலையேற்றும் வரை காத்திருந்து வாசித்திருக்கிறேன். முழுமையாக புத்தகமாக வாசிக்கும்  நிறைவு இனிமேல் தான் கிடைக்கும் என்றாலும் அருணா எழுதியிருப்பது அப்படி ஒரு முழுமையான புத்தக வாசிப்பின் நிறைவை உண்டாக்கியது. அழகாக பனையைக்குறித்த பின்தொடரும் நிழலின் குரல் மேற்கோளில் துவங்கி  அவரின் ன் இளமைக்கால பனை தொடர்பான நினைவுகளைச் சொல்லி, பின்னர் காட்சனின் பயணத்தை,  வழித்தடத்தை அவர் பார்வையில் பனையை, அவரின் மொழிவளத்தை, காட்சன் பனையில் கிருஸ்துவையும் தன்னையும் கண்டு கொள்ளும் இடங்களை அருணாவின் இன்னாள் வரையிலான   பனை குறித்தான பிம்பம் வாசிப்பின் பின்னர் எப்படி மாறியிருக்கிறதென்பதையெல்லாம் சொல்லி முடிக்கிறார்.

இடையே பனை குறித்த ஒரு நாட்டுப்புறக்கதையொன்றினையும் சொல்லியிருக்கிறார். அதை இது வரையிலும் எந்த வடிவிலும் நான் கேள்விப்பட்டதேயில்லை. ஆர்வமாக வாசித்தேன். எங்களூரில் கணவரின்றி குறைப்பட்டுபோன பெண்களுக்கு ஒரு முருங்கை மரமும் எருமையும் கொடுத்தால் போதும் ஒழுக்கமாக ஜீவித்துக்கொள்வாளென்று சொல்வதைத்தான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். எருமையும் பனையும்   முருங்கையும் நிச்சயம் அடித்தட்டு மக்களின் வாழவாதாரங்களில் மிக முக்கியமானவை

பனையில் காட்சனைப்போல ஏசுவைக்காண வாசிக்கும் அனைவராலும் இயலாதென்றாலும் பனை எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கான மிக முக்கியமான ஒரு மரமென்பதை கட்டாயம்  பனைமரச்சாலையை வாசிக்கும் அனைவருமே உணரமுடியும் .  இந்தப் பதிவில் காட்சன் எங்கு பயணத்தை துவங்கினார், நீண்ட அப்பயணத்தில் எங்கெங்கு தங்கினார், யாரையெல்லாம் சந்தித்தார், எப்படி பனையை ,பனையின் பாதையை, பனையை நம்பியிருக்கும் மக்களை தொடர்ந்தார், என்பதையெல்லாம் சுருங்க ஆனால் சுவாரஸ்யமாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கிறார் அருணா

காட்சனின் பதிவுகளை, அவரது இலட்சியத்தினை அவரது கனவுகளை கொஞ்சமும் அறியாதவர்களுக்கும் இப்புத்தகத்தை வாங்கும் ஆவலை உருவாக்கும் விதமாக பதிவு எழுதப்பட்டுள்ளது.

//  நம்பிக்கையும் சோர்வும் மாறி மாறி வரும் பயணம்// பனை சார்ந்த தொழிலாளர்கள் குறைந்துவருவதென்பது கடக்க முடியாத அகழியாக மாபெரும் சுவராக முன் நிற்கும் பிரச்சனை // அரசே  மதுக்கடைகளை ஏற்று நடத்தும் தமிழகத்தில் பனை சார்ந்த பிரச்சனைகள் அத்தனை சுலபத்தில் தீராது என்பதையெல்லாம் எளிமையாக ஆனால் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் அருணா

 உலகளாவிய பனைப்பயன்பாட்டின் கூறுகளை காட்சனின் பார்வையிலும்,    கிருத்துவ மதபோதகரான அவர் பனையின்  பிறசமயத்தொடர்புகளை தேடிச்செல்வதையும், அவரின் ரசனையை கலையுணர்வை இப்படி எல்லாவறையும் அழகாக தொட்டுத்தொட்டு எங்கள் முன்னால் தீற்றி  பனைமரச்சாலையைக்குறித்த ஒரு அழகிய  சித்திரத்தை விரிக்கிறார் அருணா

//போகிற வழியில் அவர் மயங்கி நிற்கும் கோட்டைகள் , கோவில்கள், தேவாலயங்கள், ஏரிகள், அஸ்தமனசூரியன் எரிந்தணையும் பனங்காடுகள் என முழுமையான ஒரு பயண அனுபவம் இந்நூல்// இதை ரொம்ப அழகா சொல்லியிருக்காங்க அருணா.

//பயணம்  நம்முள் நிகழ்த்துவது என்ன? மனதின் சுருள்கம்பி மெல்ல முறுக்கவிழ்கிறது. மனம் இலகுவாகிறது.நிலக்காட்சிகள் மாறத் தொடங்கும்போது வீடு, வாசல், சுற்றம் விலகிப் போக நாம் புதிய உலகிற்குள்நுழைகிறோம். அக்கணங்களில் நேற்று இல்லை, நாளை இல்லை, சஞ்சலங்கள் இல்லை. முதலில் ஒரு பரவசம்,உற்சாகம். பிறகு அதன் அலைகளடங்கி அதுவே ஆழ்நிலை தியானமாகிறது// இந்த பத்தியில் எனக்கு அத்தனை அறிமுகமில்லாத அருண்மொழி நங்கை என்பவரை மிக அணுக்கமாக அறிந்துகொண்டேனென்றே சொல்லலாம்

//பெண்கள்  கால் பதிக்க இயலா நிலவெளிகளில் அலைந்து திரிவது ஆண்களுக்கு மட்டுமேயான ஒரு வரம்இந்தியாவில். அதன் விடுதலையும்  அவர்களுக்கே இன்றுள்ளது.// இதையும் நான் மிக ரசித்தேன். இனி அருணாவின் எழுத்துக்களை அவர் பெயரைப்பார்க்கும் முன்னரே நான் அடையாளம்  கண்டுகொள்ளக்கூட முடியுமென்று  இவ்வரிகளை வாசிக்கையில் நம்பிக்கை வந்தது

எனக்கும் ஒற்றைப்பனையை காண்கையில் துக்கமாக  இருக்கும்  இவ்வுலகு தாட்சண்யமின்றி கைவிடப்பட்டவைகளில் அதுவும் ஒன்றெனத் தோன்றும். புகைப்படங்கள் இல்லையென்னும் குறையையும் புகைப்படங்கள் நம்முடன் மிக அதிகமாக உரையாடுகின்றன என்பதையும் அருணா சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இறுதியாக  அருணா   அவருக்குள் செய்துகொண்டதைபோலவே   பனைமரச்சாலையை  வாசித்து முடித்த அனைவருக்கும் இனி அவரவர் மனதில் அதுவரை இருந்த  பனைசார்ந்த பிம்பங்களை மீட்டுருவாக்கம் செய்யவேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டிருக்கும்

அருணாவிற்க்கு பனை தூய  கருப்பட்டியின்  இனிப்பாக,  பனங்கற்கண்டின்  படிக ஒளியாக, அக்கானியின்சுவையாக, நுங்கின் குளிர்ச்சியாக  வளர்ந்திருக்கிறது. எனக்கு பனை என்பது தாவரவியல் பாடங்களில் ஒன்றாக  மாணவர்களுக்கு சொல்லித்தர வேண்டிய மரங்களில் ஒன்றாக  மட்டுமல்ல,  வானளாவி நின்றுகொண்டு எளிய மானுடத்தை, அவற்றின் கீழ்மைகளை  குனிந்தபடி  புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கும் இறையின் வடிவமும் கூட

காட்சனின் பனைப்பயணத்தைக்குறித்த  ஒரு அழகிய அறிமுகத்துடன் அதில்  அவருடன் பயணிக்கவும் பலருக்கு விருப்பத்தை உண்டாக்கியிருக்கும் பதிவு இது

அருணாவிற்கு நன்றி

தும்பி ஜனவரி 2019 இதழ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விஷ்ணுபுரம் குழுமத்தில் தும்பி என்னும் சிறுவர் இதழில் வந்திருந்த  உலகமே அழிந்துபோனபின் ஒற்றை மலரிருக்கும் ஒரு செடியை கண்டு பிடித்த சிறுவனும் சிறுமியுமாய் அதை வளர்த்து காடாக்கி மீண்டும் ஒரு உலகை படைக்கும் கதையொன்றினை குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அக்கதை மிகவும் பிடித்திருந்தது

நான் என் மகன்கள் இப்போது வளர்ந்து கல்லூரிக்கும் பள்ளி இறுதி வகுப்பிற்கும் சென்றுவிட்டபோதிலும் அவர்களின் பால்யத்திலிருந்து , இரவிலும் நேரமிருந்தால் பகலிலும் கூட இன்னுமே கதை சொல்லிக்கொண்டேயிருக்கும் ஒரு கதை சொல்லி.

அப்பொழுதே ஒரு நண்பரிடம் தொடர்பு எண்னை வாங்கி  அந்த வாரமே தும்பியின் சந்தாதரர் ஆனேன்

 பின்னர் தொடர்ந்த சில மாதங்களாகவே தும்பியை வாசிக்கிறேன். அழகுப் பதிவுகள் ,நான் சிறு வயதில் மிகப்பிரியமாக வாசிக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடாக வரும் ரஷ்யமொழிக்கதைகளின் தமிழாக்கம் வரும் புத்தகங்களை அச்சாக அபடியே நினைவூட்டும் தாள்களும் சித்திரங்களும் வடிவமைப்புமாக இருக்கின்றது தும்பி.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இருப்பதால் வளரும்  குழந்தைகளுக்கு இது மிக விருப்பமுள்ள ஒன்றாகவும்  ஏக சம்யத்தில் இருவேறு மொழிகளில்   சொற்களை விளையாட்டாக விரும்பிக் கற்றுக்கொள்ளும்படியாகவும் இருப்பது மிகவும் பிடித்திருந்தது. தும்பியின்  சில பிரதிகளை சில மாதங்களாக வாசித்து அவற்றைக்குறித்து எழுதனும்னு நினைத்தாலும் எழுதியதில்லை எப்படியோ விட்டுப்போய்விட்டது ஆனால் இந்த இதழ் எழுதியே ஆகவேண்டும் என்னும் விருப்பத்தை பக்கத்துக்குப்பக்கம் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது

ஜனவரி மாத தும்பி 22  முன்னட்டைப்படமும் வடிவமைப்பும் மிக அழகு. மேலிருந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரிக்கும் பெண்ணும், கீழே கோழிக்குஞ்சு தோளில் அமர்ந்திருக்க கிளர்ந்து சிரிக்கும் சிறுவனும் அதுவும்  கருப்பு வெள்ளையில். Wonderful !  இதன் பொருட்டு முகம்மது மஹ்திக்கு பிரியத்துடன் கைகுலுக்கல்கள். முன்னட்டை துவங்கி, வசீகரிக்கும் உள்ளடக்கங்களுடன் பின்னட்டையில் கணேசனின் நிழல் கவிதை மற்றும் அந்த எளிய கோலச்சித்திரம்   வரைக்குமே கண்னையும் மனசையும் நிறைத்தது தும்பி.

கருப்பு வெள்ளையிலும் வண்ணத்திலுமாய் இதழ் முழுக்க இருக்கும் பிரமாதமான புகைப்படங்களூக்கு கார்த்திகேயன் பங்காருவிற்கு அன்பும் நன்றியும்.

தண்ணீரை சிதறடித்து விளையாடியபடி குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தயும் அதை உயரத்தில் அமர்ந்தபடிக்கு  வேடிக்கை பார்க்கும் யாரோவின்  சின்னஞ்சிறு பாதங்களும், உடை நனையாமல் தூக்கிப்பிடித்தபடி ஓடிவரும், தோழியின் தோள்களை கட்டிக்கொண்டு சிரிக்கும், குடைக்குள் மூக்கை சுருக்கிக்கொண்டும் கன்னக்குழியுடனும் மலர்ந்து சிரிக்கும், கடற்கரை மணலில் கால்பாடாமல் எம்பிக்குதிக்கும் சிறு துணிப்பையில் எதையோ ஆர்வமாக எடுக்கும் , அதை எட்டிபார்க்கும், பள்ளிக்கைப்பிடிச்சுவற்றில்  கூட்டமாக பூப்பூத்ததுபோல் அமர்ந்திருக்கும் சிறுமிகளும்.  கலங்கிய நீரில் வெங்காயத்தாமரைகளுடன் சேர்ந்து குளிக்கும்,  பலூன் விட்டுக்கொண்டு மகிழ்ந்துகொண்டும், கோவில் மணியை அடிக்க தோழியையோ சகோதரியையொ தூக்கிக்கொண்டிருக்கும், மாட்டுக்கொம்பினிடைவெளியில் தெரியும் குதிநீச்சலுக்கு தயாராகி இருக்கும் நனைந்த சிறுவர்களுமாய்  காமிரா சிறுவர்களின் உற்சாக உலகினை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது. அனைத்துப் புகைப்படங்களும்  அற்புதம்

சின்ன சின்னதா கதையில் வரும் லேன் மோர்லோவின் ஓவியங்கள் வெகு அருமை+அழகு. படம் பார்த்துக்கதை சொல்லுகையில் கேட்கும், பார்க்கும் குழந்தைகளூக்கு இக்கதை மறக்கமுடியாத ஒன்றாக மனதில் எப்போதைக்குமாய் இருக்கும்படிக்கான புகைப்படங்கள். தும்பிகளும் வண்ணத்துபூச்சிகளும் பறந்துகொண்டிருக்கும் நீர்நிலை, மரத்தடியில் படுத்துக்கொண்டு இடக்கையில் எழுதும் நீர்நாய்க்குட்டி. அதை கிளைமேலிருந்து பார்க்கும் ஒரு மீன்கொத்தி , தாவரவியல் இலக்கணம் பிழைக்காத ரெசீம் மஞ்சரிகளுடனான பூச்செடிகள், நீரில் மிதக்கும், பல்டி அடிக்கும் கரடிகள், வாஞ்சையுடன் மகனை தழுவிக்கொண்டிருக்கும் அம்மா நீர்நாய், வழுக்குப்பாறைகள் அதன் மேல் பச்சைத்தவளைகள், மீன்கள், நத்தைகள், நீர்க்குமிழிகள்,  டைஃபா, வேலிஸ்னேரியா போனற நீர்த்தாவரங்கள், கரைகளில் செறிந்து வளர்ந்து பூத்துமிருக்கும் சேம்புச்செடிகள் என அற்புதமான சித்திரங்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல  மூத்த வாசகர்களுக்குமே மிக இஷ்டமான ஒரு கதையாகிவிட்டது ,,

தாவரவியல் ஆசிரியையாக நான் பலமுறை பக்கங்களை திருப்பித்திருப்பி சித்திரஙகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இதை விட மேலாக  அச்சில் ஒரு கதையை சிறுவர்களுக்கு  வேறெப்படியும் சொல்லிவிடவே முடியாது,

யூமா வாசுகியின் பதிவும் அபாரம். பெற்றோர் அவசியம் இதை வாசித்திருக்கனும்

 இந்த பதிவு என் மனதிற்கு மிக நெருக்கமானதொன்று. என் மகன்கள் மிகச்சிறு வயதில் இருக்கையிலேயே மரமும் செடியும் பூக்களும் பறவைகளும், தவளைகளுமாக அவர்கள் வளரும்படி ஒரு குக்கிராமத்தில் வீடு கட்டியபோது உலகே என்னை எதிர்த்தது. படிப்பு பாழாகிவிடும்  ட்யூஷன் போக முடியாது என்றெல்லாம் எனக்கு  ஆலோசனைகளும் அச்சுறுத்தல்களும் வந்தவண்ணமே இருந்தன.

ஆனால் நான் அங்குதான் சென்றேன் என் மகன்களுடன். பதிவில் சொல்லியிருபதைபோலவே மகன்கள் இருவரும் கதைகேட்டுக்கொண்டு, மரம் செடிகொடிகளுடன் உரையாடிக்கொண்டு, பட்டாம்பூச்சிகளை துரத்தி விளையாடி, மயில்களை, முயல்களை அண்மையிலென அடிக்கடி பார்த்துக்கொண்டு, கைநீட்டினால் தொட்டுவிடலாம் போல நெருக்கத்திலிருக்கும் மலைத்தொடர்ச்சிகள் பிண்ணனியிலான இவ்வீட்டில் பல்லுயிர்ப்பெருக்கின் மத்தில் வளர்ந்தார்கள், பதின்மவயதுபிள்ளைகள் இருக்கும் வீட்டினர் சொல்லும் எந்த புகாரும் இதுவரை இந்த வீட்டில் வந்ததே இல்லை, ஆரோக்கியமாக மிகச்சிறந்து  படிப்பவர்களாக அவர்கள் வளர்ந்திருப்பது இயற்கையுடன் இணைந்த இவ்வாழ்வில் அவர்கள் வாழ்வறியும் திறன் பெற்றமையால்தான்.

 பெரிதுபடுத்தப்பட்ட  எங்களின் வீட்டைப்போலவே இருக்கும் இயற்கை எழிலுடனான ஒரு இடத்தில் இவ்வருடத்திலிருந்து  விடுதியில் தங்கி பள்ளி இறுதி படிக்கும் மகனிடம் நான் தொலைபேசுகையில் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்பதற்கு முன்னர் நூலக அலமாரியில் தங்கியிருக்கும் அணில் குட்டி போட்டுவிட்டதா என்றே கேட்கிறான். இன்னும் குட்டிகள் வரவில்லையென்றும்  ருத்ரமல்லியும்,  மாவும்,   கலாக்க்காய்ச்செடியும் பூக்கத்துவங்கிவிட்டதென்றும்  நானும் சொல்லி மகிழ்கிறேன்..

ஜான் சுந்தரின் கவிதையில் வகுப்பறை வாசலில் எப்போது வேண்டுமானாலும் பாப்பா அழைப்பாளென காத்திருக்கும் பிங்கி யானைக்குட்டி,  வாலாட்டும் டாமி, சிறகு நறுக்கப்பட்ட கிளியென எல்லாம் மனதில் நுழைந்து தங்கிவிட்டது. முதல் பகக்த்திலேயே முதியவரகளுக்கு பிரார்த்தனையும் பூனைக்குட்டிக்கு நன்றியும் சொல்லும் தும்பிக்கு குழந்தைகளின் தூய உள்ளத்தில் எத்தனை பிரியமான இடமிருக்கும்?

வழக்கமாக தும்பியை வாசித்தும் கதை சொல்லியும் முடித்தபின்னர் உறவினர்களின் குழந்தைகளுக்கு பிரதியை கொடுப்பதை வழமையாக்கியிருந்தேன். ஆனால் இந்த பிரதியை கொடுக்கவே மனசில்லை. வருத்தமாகத்தான் இருக்கின்றது  எனினும் வேறோன்றும் செய்வதற்கில்லை

thumbi.jpg

பேரன்பின் அபத்தங்களும் அழகும்!

peranbu-new-300x168
தேனப்பன் அவர்களின் தயாரிப்பில் ராம் எழுதி இயக்கி மலையாளத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா மற்றும் அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்றிருக்கிறார்கள். இசை யுவன் ஷங்கர் ராஜா. தேனி ஈஷ்வர் ஒளி இயக்குனர்
ரோட்டர்டாமிலும் ஷாங்காயிலும் நடைபெற்ற பன்னாட்டு திரைவிழாக்களில் முன்திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றபின்னர் பிப்ரவரி 1, 2019 அன்று திரையிடப்பட்ட பேரன்பு, நல்ல படம் , மிக மோசம், கலைப்படம், தேவையில்லாத பேசுபொருள் கொண்டது, மிக அழகிய பேசுபொருளைக்கொண்டது, over sentiment movie, பெரும்மன அழுத்தம் தரும் ஒன்று, வாழ்வின் இயங்கியலில் நடைபெற சாத்தியமே அற்ற ஒன்றை புனைந்து சொல்லுவது என பல்வேறு வகையிலான கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது,

மனைவியைப்பிரிந்து , மூளை வளர்ச்சியற்ற பதின்மவயது மகளுடன் வாழும் அமுதவன் என்னும் தந்தை, மகளின் எல்லாத்தேவைகளையுமே பேரன்புடன் நிறைவேற்ற முயற்சிப்பதை சொல்லும் இக்கதையை இயற்கை என்னும் தலைப்பில் பல அத்தியாயங்களாக பிரித்து பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.

குளிர்பிரதேசமொன்றின் ஏரியில் மகளுடன் பரிசலில் பயணிக்கும் தந்தையுடன் துவங்குகிறது இப்படம்
பச்சை போர்த்திய மலைகளும், செறிந்த பைன் மரக்கூட்டங்களுமான பிண்னனியில் அந்த சிற்றாற்றின் கரையில் அமைந்திருக்கும் மரவீடு மிக அழகு .
இது வழக்கமான திரைப்படம் இல்லை என்பதை பாப்பா மூளை வளர்ச்சியற்றவர்களுக்கே உரிய அசாதாரண முகமும் உடலுமாய் தோன்றுகையிலேயே உணரத்துவங்குகிறோம். அவளை பெண் துணையின்றி மம்மூட்டி கவனிக்கப் படும் சிரமங்களை பெற்றோர்களாகிய பார்வையாளார்கள் பதற்றத்துடனேதான் கவனிக்கமுடியும் அதுவும் ‘பாப்பா’’ பருவமடைந்தபின்னர் மனப்பதற்றம் கூடுகின்றது

பாப்பா பெரும்பாலும் தலையசைப்பிலும் சின்ன சின்ன சப்தங்களிலும், அழுகை மற்றும் அலறல் வழியேவும்தான் பிறரை தொடர்பு கொள்கிறாள். எனவே பலரை தன் அத்தைய இருப்பின் மூலம் சங்கடப்படுத்துகிறாள். பாட்டி வடிவுக்கரசிக்கு வசனங்களே தேவையில்லை உடல்மொழியிலேயே வெறுப்பை அப்பட்டமாக காட்டக்கூடிய நடிகை அவர். பாட்டியான அவரும் தம்பி மனைவியும் அக்கம்பக்கத்தினரும் பாப்பாவின் இருப்பை அத்தனை பகிரங்கமாக தீவிரமாக ஆட்சேபிப்பது நம்பும்படியாக இல்லை. மானுடம் இன்னும் அத்தனை கீழ்மையடைந்திருக்கவில்லை என்று ஆழ்மனம் நம்புகிறதோ என்னவோ! மம்மூட்டி அந்த மிகத்தனிமையிலான வீட்டுக்கு மகளுடன் வருவதை நியாயப்படுத்த அந்தனை தீவிர ஆட்சேபணை இருப்பதாக காட்டியிருக்கலாம்
ஆனால் அத்தனை கஷ்டபட்டு வந்த அவ்வீட்டில் வேலைகளுக்கும் பாப்பாவுக்குமான துணைக்குமாக பெண்களே கிடைப்பதில்லை என்பதுவும், ஒரே நாள் வேலைக்கு வந்த பெண் மம்முட்டி அழகனாக இருப்பதால் புருஷன் சந்தேகப்படுவதால் இனி வரலைன்னு சொல்வதும் சம்பளத்தைக் கூட கைகளில் வாங்காமல் தரையில் வைக்கச்சொல்லி எடுத்துக்கொள்வதும் மிகைக்கற்பனை . நன்றாகவும் இல்லை, நம்பும்படியும் இல்லை

அஞ்சலியின் பாத்திரமும் அப்படியே ஒரு சிறப்புக்குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பவர் அப்படி ஊர் பேர் தெரியாத பெண்னை உதவிக்கு வைத்துக்கொள்வதே நம்பமுடியாத போது சில நாட்களிலேயே அவரை திருமணமும் செய்துகொள்வதென்பது கொஞ்சமும் நம்பமுடியாதவை. படத்தின் பேசுபொருள் பாப்பாவிற்கான துணையா அன்றி மம்மூட்டிக்கான துணையா என கேள்வி வருகின்றது
பின்னர் அஞ்சலியை வெளியேற்றுவதற்கான காரணமும் வலுவற்றது. அக்காட்சிகள் மிகுந்த நாடகத்தன்மையுடன் இருந்தன. அந்த வீட்டை விலைக்கு கேட்கும் கும்பலும் அவர்களின் அச்சுறுத்தலும் கூட வலிந்து திணிக்கப்பட்டது என்பதை உணரமுடிகின்றது
மம்முட்டி அந்த வீட்டுக்கு வர காரணமாக பிறரின் வெறுப்பை சொன்னதுபோலவே அவர் அந்த மரவீட்டை விட்டுவிட்டு போகவும் வலுவற்ற காரணங்களே சொல்லபடுகின்றது.

மூன்றாந்தர விடுதியில் மகளுடன் அவர் தங்குவதும் அங்கு ஆணும் பெண்ணும் நெருக்கமாய் இருப்பதை பாப்பா பார்த்ததால் அந்த இரவு நேரத்தில் விடுதியை காலிசெய்துவிட்டு மகளுடன் அவர் தெருவில் அமர்ந்திருப்பதுமெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அபத்தங்கள். அதற்கு பதிலாக அவர் கதவடைத்துக்கொண்டு பத்திரமாக மகளுடன் அங்கிருந்து விட்டு காலை வெளியேறியிருக்கலாமே!
பின்னர் வருபவை அவற்றையெல்லாம் விட அபத்தங்கள். மகளின் பாலுறவுத்தேவையை அப்பா உணர்துகொள்வதும், அதை தீர்க்க ஒரு துணைக்காக முயற்சிப்பதெல்லாமே அபத்தங்களின் உச்சம். மகளுக்கு திருமணம் செய்துவைப்பதும், ஒரு ஆண் பாலியல் தொழிலாளியை தேடுவதும் ஒன்றென அவர் பேசுவதும் அப்படியே! வாழ்வின் எல்லா சிக்கலகளூக்கும் தீர்வு காண்பதென்பதே ஒருவகையில் அபத்தம் தான்.

பாப்பாவை விடுதியில் அப்படி அடிப்பதற்கான காரணமும், அதன்பிறகு அவளை மம்முட்டி பார்க்கவிடாமலிருப்பதும், தொலைக்காட்சியில் தெரியும் ஆணை பாப்பா முத்தமிடுவதுமெல்லாமே மிகு கற்பனைகள் .

சில காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. அஞ்சலையின் தாய்மாமா கட்டிலிலும் மம்மூட்டி தரையிலும் படுத்துக்கொண்டிருக்கையில் அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது.. மம்முடியின் பின்னே எரியும் தழலின் நிழல் தாய்மாமவின் முகத்தில் தெரிவதும் அவரின் உணர்ச்சிகளை துல்லியமாக கட்டும் முகமும் அப்போது மம்முட்டி மிக இயல்பாக பேசும் வசனங்களும் அருமை.

அஞ்சலி மிக எளிய உடைகளில், குறைந்த ஒப்பனையில் அழகு மிளிர வருகிறார். கண்களும் உதடுகளும் பேசுகின்றன அவருக்கு. நள்ளிரவில் தேனீர் தயாரித்துக்கொடுக்கும் அந்த காட்சியில் தளர்ந்திருக்கும் மம்மூட்டியை அணைத்துக்கொண்டு ஆற்றுப்படுத்தவேண்டும் என்று அரங்கிலிருக்கும் அனைவருமே விரும்பியிருப்போம். அவரும் அதையே செய்கிறார்

பாப்பா பாப்பா என்று பதறுவதும் , தாயன்புடன் ஆடிப்பாடி கதை சொல்லி கவனித்துக்கொள்வதும், சேனிடரி நேப்கின்களைக்கூட மாற்ற உதவுதுமாக மம்முட்டி சிறப்பு குழந்தையொன்றின் அப்பாவாகவே மாறிப்போகிறார். அவரின் வயதை கொஞ்சமும் காட்டாத உடற்கட்டு உண்மையிலேயெ வியப்படைய வைக்கிறது. very much fit and smart for this age. பனிபொழியும் கதைக்களம், மூளை வளர்சியில்லாத பெண், மரவீடு என்று இப்படம் மூன்றாம் பிறையை அதிகம் நினவுக்கு கொண்டு வந்துகொண்டே இருக்கின்றது.

மகள் தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே இரவு காரில் காத்திருந்து அங்கிருந்து கொண்டே மகளின் கதறலை, வீறிடலை கேட்டுக்கொண்டு கலங்குமிடத்திலும் மம்மூட்டி அசத்துக்கிறார்.

இறுதியில் வரும் அந்த மாற்றுப்பாலினத்தவரான மீரா பாத்திரமும் மிக நன்று. மிக அருமையான நடிப்பு அவருடையது. ஆனால் அப்பாத்திரம் இக்கதையின் மையப்பேசுபொருளின் தீர்வாக காட்டப்படுவதே கதையின் இறுதி அபத்தம்.

திரைப்படத் தொகுப்பு மிகச்சரியாகவே இருப்பினும் கதையில் நிறைய குழப்பங்கள். மம்முட்டி மகளை கவனித்துக்கொள்ள துணை தேடுகிறார். ஆனால அவர் அஞ்சலியை மணம் புரிந்துகொள்கிறார். அஞ்சலிக்குப்பிறது வீட்டையும் விட்டுவிட்டு நகரத்துக்கு வந்து மகளுடன் சீரழிகிறார் பாலுணர்வுதூண்டல் உட்படஅவளின் எல்லாத்தேவைகளையும் தீர்க்க மெனக்கெடுகிறார். மகளை வெறுக்கும் மனிதர்களிடமிருந்து விலகி நீரில் இருவருமாக மூழ்கி உயிரைவிடவும் எடுக்கவும் துணிகிறார். பின்னர் ஒரு மாற்றுப்பாலினத்தவரை அவர் திருமணம் செய்துகொள்வதுடன் படம் நிறைவடைகின்றது.
மூளை வளர்ச்சியற்ற மகளின் பாலுணர்வுத்தேவைக்கு அப்பாவின் மாற்றுப்பாலினத்தவருடனான மறு திருமணம் எப்படி தீர்வாகும்?
மிக அழகாகத்துவங்கி , சுமாராக கொண்டுசெல்லப்பட்டு மிக மோசமாக முடிந்த படம் இது

சாதனாவின் நடிப்பு பிரமாதம் அப்படி தொடர்ந்து உதடுகளை கோணிக்கொண்டு நாக்கை வளைத்து துருத்தியபடி, கை விரல்களயும் மடக்கிக்கொண்டு பாதங்களையும் வளைத்தபடிக்கே அவர் படம் முழுக்க வரும் அத்தோற்றம் மனதைபிசைகிறது
ஒரு சிறப்பு பெண்குழந்தையை வளர்க்க மனைவி இல்லாத ஆணொருவன் எப்படி கஷ்டபடுகிறான், என்பதை இன்னும் நுட்பமாக அழகாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி இருக்கலாம். ஏன் பாலுணர்வு தேவையை மிக அடிப்படையாக தீர்க்க வேண்டிய ஒன்றென காட்டியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை

இயற்கையின் பன்முகங்களையும் பாரபட்சமுடன் அது உயிர்களை படைப்பதையும் குறித்து கோனார் நோட்ஸ் போடாத குறையாக அத்தியாயங்களாக பிரித்து விளக்காமல் பார்வையாளர்களே அதை புரிந்துகொள்ளும் படி கொண்டுபோயிருக்கலாம்
படம் முடியும் போது நாம் எத்தனை அருளப்பட்ட வாழ்விலிருக்கிறோம் என்னும் மகிழ்வைவிட கருணையின்றி படைக்கப்பட்டிருக்கும் உயிர்களின் மீதான பச்சாதாபமே மனதில் மேலோங்கி இருக்கும் என்பது இப்படத்தின் வெற்றியெனக்கொள்ளலாம்

லாலிபாப்பால் உதடுகளின் மேல் பாப்பா வருடிக்கொள்வது பனியை நம் மீதும் படரவிடும் துல்லியமான அழகிய ஒளிப்பதிவு. மாற்றுப்பாலினத்தவராகிய அஞ்சலி அமீரின் சிறப்பான நடிப்பு, மலையாளத் திரைஉலகின் நட்சத்திர அந்தஸ்தையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக நடித்திருக்கும் மம்முட்டி, நட்சத்திரங்களை எண்ணும் காட்சி, சிறப்பான ஒளிப்பதிவு என பாராட்டவும் பல அம்சங்கள் இருக்கின்றன இதில்.

எனினும் மூளை முடக்குவாதத்துடனிருக்கும் மகளை, மனைவியும் சகமனிதர்களின் பரிவும் புரிதலுமின்றியும் அன்புடன் கவனித்து வளர்க்கும் அப்பாவின் கதையாக இல்லாமல் அவளின் பாலுணர்வுதேவைகளுக்குமாக மெனக்கெடும் பேரன்புடனிருக்கும் அதிசய அப்பாவாக கதையைக்கொண்டு போனதுதான் பிழையாகிவிட்டது

 

Green Book

green book

GREEN BOOK

பீட்டர் ஃபாரெல்லியின் இயக்கத்தில் 2018’ல் வெளிவந்த 1960ல் நடைபெறும் கதைக்களத்துடனான Green Book என்னும் இந்த ஆங்கிலத்திரைப்படம் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஜாஸ் பியானோ இசைமேதையுமான திரு டான் ஷர்லி  (Don shirley)  மற்றும்  அவரின் கார் ஓட்டுனரும் பாதுகாவலருமாகிய இத்தாலிய அமெரிக்கரும்  பவுன்ஸரான டோனி வேலிலங்கா (Tony vellelonga) ஆகிய இருவரையும் குறித்தான ஒரு உண்மைக்கதையை சொல்கிறது.

இசை, இனவெறி மற்றும் அசாதாரண தோழமை ஆகியவற்றை மிக அழகாக சொல்லிச்செல்லும் படம் இது

திரைக்கதையை இயக்குனர் பீட்டர், பிரையன் பியூரி மற்றும் டோனி வேலிலங்காவின் மகனாகிய ’’நிக் வேலிலங்கா’’ வுடன் இணைந்து எழுதியுள்ளனர். நிக் தனது அப்பா மற்றும் டான் ஷர்லியுடனான நேர்காணல்கள் கடிதங்கள் நாட்குறிப்புகள் என பலவற்றின் உதவியுடன் திரைகதையை செம்மையாக்க பெரிதும் உதவியிருக்கிறார் கதைக்களம் 1960களில் நடைபெறுவதுபோல அழகாக  காட்சிப்படுத்தபட்டிருக்கின்றது எவ்விதப்பிழையுமின்றி

கருப்பினத்தவர்களை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் நகரை விட்டு வெளியேறச்சொல்லும்,வெள்ளையரல்லாதோர் உபயோகிக்கக்கூடாத பொதுஇடங்களின் பட்டியலை வைத்திருக்கும், இதற்கென பிரத்யேக சட்டங்களையும் விதிகளையும் வன்முறைகளையும் பின்பற்றும், வெள்ளையர்கள் மட்டும் வசிக்கும் அமெரிக்காவின் Sun down towns  எனப்படும்  தெற்கிலிருக்கும் நகரங்களுக்கு தொடர்ச்சியாக இசைக்கச்சேரிகள் செய்யவிருக்கும் வடக்குப்பகுதியைச் சேர்ந்த   உளவியலிலும் இசையிலும் டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கும் கருப்பின இசை மேதையொருவர், தனக்கு அங்கு ஏற்படக்கூடும் என அஞ்சும் தாழ்மைகளுக்கும், உள்ளாகக்கூடுமென்னும் அச்சுறுத்தல்களுக்கும்,  துணைக்கும், பாதுகாப்பிற்கும் காரோட்டுவதற்குமாக  பணத்தேவையிலிருக்கும் ஒரு வெள்ளையரை 8 வாரங்களுக்கு பணியிலமர்த்திக்கொள்ளுவதும் அந்த பயணமும், கலவையாக அங்கு நடைபெறும் சம்பவங்களும் அவர்களுக்கிடையே முகிழ்க்கும் அழகிய தோழமையும் நம்மை  திரைப்படத்துடன் ஒன்றச்செய்யும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது

கருப்பினத்தவர்கள் அந்நகரங்களில் எங்கெங்கு மட்டும் தங்கலாம், உணவு உண்ணலாமென்னும்  விவரங்களடங்கிய GREEN BOOK என்னும் பயணக்குறிப்பேட்டை/கையேட்டை டோனி உடன் கொண்டுசெல்வதால் இப்படத்திற்கு இந்தப்பெயர்.  1936 லிருந்து 67 வரையிலுமே  பயன்பாட்டிலிருந்த இந்த பயணக்குறிப்பேடு  சாலைவழிப்பயணங்களில் கருப்பினத்தவர்கள் அந்நகரங்களை பாதுகாப்பாக கடந்து செல்வதையும், அங்கு தங்குவதையும் ஓரளவிற்கேனும் சாத்தியமாக்கியிருக்கிறது

எப்போதும் உணவுண்ணுதலில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கும், ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும், வாழ்வை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும், பணத்திற்கான தேவை அதிகமாக இருக்கும்,   மனைவியும், இரு மகன்களும் சுற்றங்களுமாக நிரம்பிய வாழ்விலிருக்கும் வெள்ளையரான டோனிக்கும், உலகம் முழுதும் பிரபலமான பெரும் இசைமேதையான, தன்னந்தனிமையில் ஒரே ஒரு உதவியாளருடன், பகட்டான ஒரு வாழ்விலிருக்கும், வரவழைத்துக் கொண்ட மிடுக்கும் நிமிர்வுமாய்,  மிக சொற்பமாகவே பேசும்  கருப்பினத்தவரான ஷர்லியுமாய் தொடர்ந்து  பயணிப்பதும், மிக வேறுபட்ட பின்புலங்களைச் சேர்ந்த இவ்விருவரும் அந்த பயணத்தில் சந்திக்கும் எதிர்பாராமைகளும், அவை  மெல்ல மெல்ல ஷர்லியை மாற்றுவதும் அவர்களுக்கிடையே ஒரு பந்தம் உருவாவதும்  இப்படத்தில்  மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது

1927ல் ஃப்ளோரிடாவில்  வசதியான கருப்பினக்குடும்பத்தில் பிறந்த கருப்பினத்தவரான ஷர்லி, 1930ல் பிறந்த டோனி வேலிலங்காவை  பணியில் அமர்த்திக்கொண்டதும், எந்தப்பொருத்தமுமில்லாத இந்த இணையர் மேற்கொண்ட நெடிய சாலைப்பயணத்தில்  பரஸ்பரம் மற்றவரின் உலகை அவற்றின் பலவீனங்களுடன்  அறிந்துகொண்டு,  2013 ஆம் வருடம் இருவருமே இறந்து போகும் வரை உற்ற நண்பர்களாயிருந்ததும் இப்படத்திற்கு வலுவையும் ஆர்வத்தையும் சேர்க்கும் உண்மை பின்புலக் காரணங்கள்

அமெரிக்க நடிகரும்  2017 ல் ஆஸ்கர் வென்ற  முதல் இஸ்லாமிய நடிகருமான

(Mahershala Ali). மகிர்ஷாலா அலி, டான் ஷர்லியாகவும்,  அமெரிக்க நடிகர், எழுத்தாளர், கவிஞர், ஓவியர் அகாடமி விருது ,கோல்டன் குலோப் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் எனும் பல சிறப்புகளை உடைய   விகோ மோர்டென்சன் (Viggo Mortensen) டோனி லிப் வேலிலங்காவாகவும் பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர்

கிரிஸ்’ன் உறுத்தாத  இசையும்,  நெடும்பயணத்தை,  உணர்வெழுச்சிகளை உடல்மொழியின் மாற்றங்களை, இசைக்கும் விரல்களை, இழிவுபடுத்தப்படுகையில் புண்படும் நாயகனை, பொங்கும் தோழனை  அந்த சாலைகளை, பனியை, காவல் நிலையத்தை, விடுதிகளை, சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் மாபெரும் அரங்குகளை  துல்லியமாக காண்பிக்கும் சீயான் போர்ட்டரின் காமிராவும்,  தொய்வின்றி கதையை சொல்லிச்செல்லும் விட்டோவின் அருமையான படத்தொகுப்பும் நம்மையும் அவர்களுடனேயே பயணிக்க வைக்கிறது.

மிக நேர்த்தியான உயர்தர  உடைகளும், துல்லிய, இலக்கண சுத்தமான ஆங்கிலமும், மேட்டுக்குடியினருக்கே உரித்தான மேம்பட்ட நாகரீகமும் நாசூக்கும் கொண்டவராய்,  மேடையில் தனக்கு அளிக்கப்படும் கெளரவங்களுக்கு அடியில் கருப்பினத்தவர் என்னும் எள்ளலும் கேலியும் வெறுப்பும் மண்டிக்கிடப்பதை உணர்ந்தவராக , கச்சேரியின் இடையில் கழிப்பறையை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுகையிலும் உணவகங்களுக்குள் நுழைவொப்புதல் இல்லாதபோதும் சமநிலை இழக்காமல் இருப்பதுவுமாய் அலி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.  வெள்ளையர்களுக்கான   இறுதிக்கச்சேரியை ரத்து செய்துவிட்டு கருப்பின மக்களுக்கான் பிரத்யேக விடுதியில் அனைவருக்குமாய் தன் மேட்டுகுடித்தனங்களையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக இசையை ரசித்து துள்ளலாக மெல்லிய நடன அசைவுகளுடன் எந்த பாசாங்கும் இன்றி பியானோ வாசிப்பதும், தானும் தன் இசையும் உண்மையில் யாருக்கு சொந்தமென்பதை உணர்ந்திருப்பதை உடல்மொழியிலேயெ வெளிப்படுத்துவதுமாக அசத்துகிறார் அலி

டோனி படம் முழுதும் வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன்  எதிர்கொள்ளும் சாமான்யராகவே நடித்திருக்கிறார்

துவக்கக்காட்சியில் வீட்டில் வேலைக்கென வந்த இரு கருப்பினப்பணியாளர்கள் உபயோகித்த டம்ளர்களை அசூயையுடன் குப்பக்கூடையில் தூக்கிப்போடும் அவரே, பிற்பாடு ஷர்லியை  புண்படுத்தும் அதிகாரிகளை அடிப்பதும் , ஒருபால் உறவின் பொருட்டு கைது செய்யபட்ட ஷர்லியை  காவலர்களிடமிருந்து மீட்பதும் (அந்த அசந்தர்ப்பத்தின் பொருட்டு  மாடிப்படிகளின் மேலிருந்து மன்னிப்பு கேட்கும் ஷர்லியிடம், கீழே நின்றவாறு, வாழ்வின்  சிக்கலான  பல அடுக்குகளை கண்டிருக்கும் தனக்கு இதை புரிந்துகொள்ள முடிகின்றது என்று   அவர்  எளிதாக சொல்லுவதும் அப்போது ஷர்லியின் புன்னகையும், கவிதை).  அவரின் இசைமேதமையால் கவரப்பட்டு அவரை ஆராதிக்க துவங்குவதுமாக விகோவும் வேலிலங்காவாகவே மாறியிருக்கிறார். மனைவிக்கு மொக்கையாக கடிதமெழுதும் டோனிக்கு ஷர்லி கவித்துவமான கடிதங்களை எழுத உதவுவதும் பின்னர் டோனியே அப்படி எழுதமுற்படுவதுமாக அவர்களின் தோழமையை மிக அழகாக சொல்லும் காட்சிகள் பல இருக்கின்றன

பயணம் துவங்குகையில் டோனியின் அசுத்தமென்று நினைக்க வைக்கும் வழமைகளால் ஷர்லிக்கு ஒவ்வாமை எற்படுவதும் பின்னர் திரும்பும் பயணத்தில்  வேலிலங்காவை பின் இருக்கையில் தூங்கச்செய்து இவரே காரோட்டுவதும், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் குறுக்கிடுகையில் வழக்கத்துக்கு விரோதமாக  ஷர்லி  பேச முற்படுவதும், காவலரும் எதிர்பாராவிதமாக உதவுவதுமாய் காலம் மாறிக்கொண்டிருப்பதையும், இனவெறியிருட்டினூடே நம்பிக்கையின் ஒளிக்கீற்று புலப்படுவதையும்  பார்வையாளார்களும்  காண முடிகின்றது.

பல நுட்பமான செய்திகளை அழகாக போகிற போக்கில் சொல்லிச்செல்லும் இத்திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும்

2018 ஆம் வருடத்தின் மிகசிறந்த திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகருக்கான விருதை அலியும், உண்மைத்திரைக்கதைக்கான விருதை நிக் வேலிலங்காவும் பெற்று, இன்னும் பல விருதுகளையும் பெற்றிருக்கும் இத்திரைப்படம் வழக்கமான திரைப்படங்களினின்றும் மாறுபட்ட  படம் மட்டுமல்ல வரலாற்றின் கறுப்புப்பக்கங்களை குறித்து அறியாத  நமக்கெல்லாம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட  ஒரு பாடமும் கூட.

 நெடும்பயணமொன்றின் பிறகு அந்த இளநீலவண்ண 1962 மாடல் கெடிலாக் செடான் காரிலிருந்து இறங்கி, பனிபொழியும் கிருஸ்துமஸ் இரவில் நமக்கென வீட்டில் காத்திருப்பவர்களை காண,  தோழமையில் நிரம்பியிருக்கும் இதயத்துடன் செல்லும் உணர்வுடனேதான் திரையரங்கிலிருந்தும் வெளியேறுவோம்.

-____________________________________________________________________________________________

நீதிக்கு புறம்பாக பலரால் பொது இடத்தில் கொல்லப்படுதல், துன்புறுத்தபடுதல், எந்த சொத்துக்களையும் அவர்கள் வங்கும் உரிமையை  சட்டபூர்வமாக மறுத்தல், வெளிப்படையாக அவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று அறிவிக்கும் பலகைகளை உணவகங்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட  பல பொது இடங்களில் வைத்திருத்தல், நிறவேறுபாடுள்ளவர்களை நெருப்பிட்டு கொளுத்துதல், பலர் முன்னிலையில் தூக்கிடுதல், உயிர்போகும் வரையில் துன்புறுத்துதல் (Lynching)  இந்த  வதைகளை  புகைப்படமெடுத்து வாழ்த்து அட்டைகளாக வைத்துக்கொள்ளுதல் போல பல அநீதிகள் அந்தக்காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. சமூகவியலாளர்  James W. Loewen  2005’ ல்எழுதிய ’’Sundown Towns: A Hidden Dimension of American Racism , என்னும் புத்தகம் இவற்றையெல்லாம் விரிவாக பேசுகின்றது.

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑