கடந்த சில மாதங்களுக்கு முன்னால் விஷ்ணுபுரம் குழுமத்தில் தும்பி என்னும் சிறுவர் இதழில் வந்திருந்த உலகமே அழிந்துபோனபின் ஒற்றை மலரிருக்கும் ஒரு செடியை கண்டு பிடித்த சிறுவனும் சிறுமியுமாய் அதை வளர்த்து காடாக்கி மீண்டும் ஒரு உலகை படைக்கும் கதையொன்றினை குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அக்கதை மிகவும் பிடித்திருந்தது
நான் என் மகன்கள் இப்போது வளர்ந்து கல்லூரிக்கும் பள்ளி இறுதி வகுப்பிற்கும் சென்றுவிட்டபோதிலும் அவர்களின் பால்யத்திலிருந்து , இரவிலும் நேரமிருந்தால் பகலிலும் கூட இன்னுமே கதை சொல்லிக்கொண்டேயிருக்கும் ஒரு கதை சொல்லி.
அப்பொழுதே ஒரு நண்பரிடம் தொடர்பு எண்னை வாங்கி அந்த வாரமே தும்பியின் சந்தாதரர் ஆனேன்
பின்னர் தொடர்ந்த சில மாதங்களாகவே தும்பியை வாசிக்கிறேன். அழகுப் பதிவுகள் ,நான் சிறு வயதில் மிகப்பிரியமாக வாசிக்கும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸின் வெளியீடாக வரும் ரஷ்யமொழிக்கதைகளின் தமிழாக்கம் வரும் புத்தகங்களை அச்சாக அபடியே நினைவூட்டும் தாள்களும் சித்திரங்களும் வடிவமைப்புமாக இருக்கின்றது தும்பி.
தமிழிலும் ஆங்கிலத்திலும் இருப்பதால் வளரும் குழந்தைகளுக்கு இது மிக விருப்பமுள்ள ஒன்றாகவும் ஏக சம்யத்தில் இருவேறு மொழிகளில் சொற்களை விளையாட்டாக விரும்பிக் கற்றுக்கொள்ளும்படியாகவும் இருப்பது மிகவும் பிடித்திருந்தது. தும்பியின் சில பிரதிகளை சில மாதங்களாக வாசித்து அவற்றைக்குறித்து எழுதனும்னு நினைத்தாலும் எழுதியதில்லை எப்படியோ விட்டுப்போய்விட்டது ஆனால் இந்த இதழ் எழுதியே ஆகவேண்டும் என்னும் விருப்பத்தை பக்கத்துக்குப்பக்கம் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறது
ஜனவரி மாத தும்பி 22 முன்னட்டைப்படமும் வடிவமைப்பும் மிக அழகு. மேலிருந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்து சிரிக்கும் பெண்ணும், கீழே கோழிக்குஞ்சு தோளில் அமர்ந்திருக்க கிளர்ந்து சிரிக்கும் சிறுவனும் அதுவும் கருப்பு வெள்ளையில். Wonderful ! இதன் பொருட்டு முகம்மது மஹ்திக்கு பிரியத்துடன் கைகுலுக்கல்கள். முன்னட்டை துவங்கி, வசீகரிக்கும் உள்ளடக்கங்களுடன் பின்னட்டையில் கணேசனின் நிழல் கவிதை மற்றும் அந்த எளிய கோலச்சித்திரம் வரைக்குமே கண்னையும் மனசையும் நிறைத்தது தும்பி.
கருப்பு வெள்ளையிலும் வண்ணத்திலுமாய் இதழ் முழுக்க இருக்கும் பிரமாதமான புகைப்படங்களூக்கு கார்த்திகேயன் பங்காருவிற்கு அன்பும் நன்றியும்.
தண்ணீரை சிதறடித்து விளையாடியபடி குளிப்பாட்டப்பட்டுக்கொண்டிருக்கும் குழந்தயும் அதை உயரத்தில் அமர்ந்தபடிக்கு வேடிக்கை பார்க்கும் யாரோவின் சின்னஞ்சிறு பாதங்களும், உடை நனையாமல் தூக்கிப்பிடித்தபடி ஓடிவரும், தோழியின் தோள்களை கட்டிக்கொண்டு சிரிக்கும், குடைக்குள் மூக்கை சுருக்கிக்கொண்டும் கன்னக்குழியுடனும் மலர்ந்து சிரிக்கும், கடற்கரை மணலில் கால்பாடாமல் எம்பிக்குதிக்கும் சிறு துணிப்பையில் எதையோ ஆர்வமாக எடுக்கும் , அதை எட்டிபார்க்கும், பள்ளிக்கைப்பிடிச்சுவற்றில் கூட்டமாக பூப்பூத்ததுபோல் அமர்ந்திருக்கும் சிறுமிகளும். கலங்கிய நீரில் வெங்காயத்தாமரைகளுடன் சேர்ந்து குளிக்கும், பலூன் விட்டுக்கொண்டு மகிழ்ந்துகொண்டும், கோவில் மணியை அடிக்க தோழியையோ சகோதரியையொ தூக்கிக்கொண்டிருக்கும், மாட்டுக்கொம்பினிடைவெளியில் தெரியும் குதிநீச்சலுக்கு தயாராகி இருக்கும் நனைந்த சிறுவர்களுமாய் காமிரா சிறுவர்களின் உற்சாக உலகினை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது. அனைத்துப் புகைப்படங்களும் அற்புதம்
சின்ன சின்னதா கதையில் வரும் லேன் மோர்லோவின் ஓவியங்கள் வெகு அருமை+அழகு. படம் பார்த்துக்கதை சொல்லுகையில் கேட்கும், பார்க்கும் குழந்தைகளூக்கு இக்கதை மறக்கமுடியாத ஒன்றாக மனதில் எப்போதைக்குமாய் இருக்கும்படிக்கான புகைப்படங்கள். தும்பிகளும் வண்ணத்துபூச்சிகளும் பறந்துகொண்டிருக்கும் நீர்நிலை, மரத்தடியில் படுத்துக்கொண்டு இடக்கையில் எழுதும் நீர்நாய்க்குட்டி. அதை கிளைமேலிருந்து பார்க்கும் ஒரு மீன்கொத்தி , தாவரவியல் இலக்கணம் பிழைக்காத ரெசீம் மஞ்சரிகளுடனான பூச்செடிகள், நீரில் மிதக்கும், பல்டி அடிக்கும் கரடிகள், வாஞ்சையுடன் மகனை தழுவிக்கொண்டிருக்கும் அம்மா நீர்நாய், வழுக்குப்பாறைகள் அதன் மேல் பச்சைத்தவளைகள், மீன்கள், நத்தைகள், நீர்க்குமிழிகள், டைஃபா, வேலிஸ்னேரியா போனற நீர்த்தாவரங்கள், கரைகளில் செறிந்து வளர்ந்து பூத்துமிருக்கும் சேம்புச்செடிகள் என அற்புதமான சித்திரங்கள். சிறுவர்களுக்கு மட்டுமல்ல மூத்த வாசகர்களுக்குமே மிக இஷ்டமான ஒரு கதையாகிவிட்டது ,,
தாவரவியல் ஆசிரியையாக நான் பலமுறை பக்கங்களை திருப்பித்திருப்பி சித்திரஙகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். இதை விட மேலாக அச்சில் ஒரு கதையை சிறுவர்களுக்கு வேறெப்படியும் சொல்லிவிடவே முடியாது,
யூமா வாசுகியின் பதிவும் அபாரம். பெற்றோர் அவசியம் இதை வாசித்திருக்கனும்
இந்த பதிவு என் மனதிற்கு மிக நெருக்கமானதொன்று. என் மகன்கள் மிகச்சிறு வயதில் இருக்கையிலேயே மரமும் செடியும் பூக்களும் பறவைகளும், தவளைகளுமாக அவர்கள் வளரும்படி ஒரு குக்கிராமத்தில் வீடு கட்டியபோது உலகே என்னை எதிர்த்தது. படிப்பு பாழாகிவிடும் ட்யூஷன் போக முடியாது என்றெல்லாம் எனக்கு ஆலோசனைகளும் அச்சுறுத்தல்களும் வந்தவண்ணமே இருந்தன.
ஆனால் நான் அங்குதான் சென்றேன் என் மகன்களுடன். பதிவில் சொல்லியிருபதைபோலவே மகன்கள் இருவரும் கதைகேட்டுக்கொண்டு, மரம் செடிகொடிகளுடன் உரையாடிக்கொண்டு, பட்டாம்பூச்சிகளை துரத்தி விளையாடி, மயில்களை, முயல்களை அண்மையிலென அடிக்கடி பார்த்துக்கொண்டு, கைநீட்டினால் தொட்டுவிடலாம் போல நெருக்கத்திலிருக்கும் மலைத்தொடர்ச்சிகள் பிண்ணனியிலான இவ்வீட்டில் பல்லுயிர்ப்பெருக்கின் மத்தில் வளர்ந்தார்கள், பதின்மவயதுபிள்ளைகள் இருக்கும் வீட்டினர் சொல்லும் எந்த புகாரும் இதுவரை இந்த வீட்டில் வந்ததே இல்லை, ஆரோக்கியமாக மிகச்சிறந்து படிப்பவர்களாக அவர்கள் வளர்ந்திருப்பது இயற்கையுடன் இணைந்த இவ்வாழ்வில் அவர்கள் வாழ்வறியும் திறன் பெற்றமையால்தான்.
பெரிதுபடுத்தப்பட்ட எங்களின் வீட்டைப்போலவே இருக்கும் இயற்கை எழிலுடனான ஒரு இடத்தில் இவ்வருடத்திலிருந்து விடுதியில் தங்கி பள்ளி இறுதி படிக்கும் மகனிடம் நான் தொலைபேசுகையில் நான் எப்படி இருக்கிறேன் என்று கேட்பதற்கு முன்னர் நூலக அலமாரியில் தங்கியிருக்கும் அணில் குட்டி போட்டுவிட்டதா என்றே கேட்கிறான். இன்னும் குட்டிகள் வரவில்லையென்றும் ருத்ரமல்லியும், மாவும், கலாக்க்காய்ச்செடியும் பூக்கத்துவங்கிவிட்டதென்றும் நானும் சொல்லி மகிழ்கிறேன்..
ஜான் சுந்தரின் கவிதையில் வகுப்பறை வாசலில் எப்போது வேண்டுமானாலும் பாப்பா அழைப்பாளென காத்திருக்கும் பிங்கி யானைக்குட்டி, வாலாட்டும் டாமி, சிறகு நறுக்கப்பட்ட கிளியென எல்லாம் மனதில் நுழைந்து தங்கிவிட்டது. முதல் பகக்த்திலேயே முதியவரகளுக்கு பிரார்த்தனையும் பூனைக்குட்டிக்கு நன்றியும் சொல்லும் தும்பிக்கு குழந்தைகளின் தூய உள்ளத்தில் எத்தனை பிரியமான இடமிருக்கும்?
வழக்கமாக தும்பியை வாசித்தும் கதை சொல்லியும் முடித்தபின்னர் உறவினர்களின் குழந்தைகளுக்கு பிரதியை கொடுப்பதை வழமையாக்கியிருந்தேன். ஆனால் இந்த பிரதியை கொடுக்கவே மனசில்லை. வருத்தமாகத்தான் இருக்கின்றது எனினும் வேறோன்றும் செய்வதற்கில்லை
Leave a Reply