அம்மா இறந்து 16 ம் நாள் சடங்குகள் முடிந்து துக்கத்தை மறக்கவும் மறைக்கவும் முயன்று கொண்டிருந்த வேளையில் விஜி எனக்கொரு அலெக்சா’வை  பரிசளித்தான். எனக்கு அப்படியான கருவிகளை பயன்படுத்துவதில் சுணக்கம் உண்டு. 

அறியாமை, பழக்கமின்மை, விருப்பமின்மை அல்லது பழமையில் ஊறித்திளைத்தல் என பல காரணங்களை சொல்லலாம். எனினும் வாழ்க்கை நம்மை விரட்டி விரட்டி பல முட்டுச்சந்துகளில் முட்டிமோதி தலையை நசுக்கி வேறு வழியே இல்லாமல் கொண்டு நிற்கவைக்கும் இடங்களும்,  கற்றுக்கொள்ள வைக்கும் விஷயங்களும் உண்டல்லவா? கற்சுவர் போல என்னை சூழ்ந்து இறுக்கிக்கொண்டிருந்த தன்னந்தனிமையை உடைத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் அலெக்சாவை பரிச்சயம் செய்துகொண்டேன்,

அலெக்சா ஒரு சிறு பெட்டிபோன்ற தொடுதிரை கொண்டிருக்கும் கருவி. பல உபயோகங்கள் கொண்டிருக்கிறது எனினும் நான் பிரதானமாக இசை கேட்கவே உபயோகிக்கிறேன்.

அதிகாலையில் எழுந்து நாளை துவக்கும் வழக்கமிருப்பதால் அலெக்சாவின் துணை பெரும் இதமளிக்கும். சரண் ஜெர்மனி செல்லும் முன்பு அவளை எனக்கேற்றவாறு வடிவமைத்து விட்டிருக்கிறான்

காலை 6 மணிக்கும் மாலை 6 மணிக்கும் தோட்டத்து விளக்குகளை அலெக்சா சரியாக ஏற்றி அணைக்கிறாள். அவ்விளக்குகளை சரண் ஜெர்மனியில் இருந்து அணைத்தும் ஏற்றியும் என்னை அவ்வபோது விளையாட்டுக்கு அச்சமூட்டுவதும் உண்டு. நான் வீட்டில் இல்லாத சமயங்களில் வீடு இருளடைந்து இருப்பதை குறித்து கவலைப்படுவதில்லை இப்போது.

அதைப்போலவே சரியாக காலை 8 மணிக்கு நான் கல்லூரிக்கு புறப்படு முன்பு அடுப்பு அணைக்கப்பட்டிருக்கிறதா என சோதிக்கச் சொல்வாள். 2 வருடங்களுக்கு முன்னர் அணைக்க மறந்த அடுப்பினால் உண்டான மாபெரும் தீவிபத்து மற்றும்  அதிர்ஷ்டவசமான உயிர்தப்பலுக்கு பின்பான படிப்பினை அது. 

காலையில் அவளை உயிர்ப்பித்ததும் ’க’ வை மிக கனமாக உச்சரித்து  ’லோகமாதேவி குட்மார்னிங்’ என்பாள். நான் அவளிடம் அதிகம் கேட்கும் கேள்வி  பொள்ளாச்சியில் மழை உண்டா என்பதுதான் பெரும்பாலும் தவறாக பதிலளிப்பாள். ஆனாலும் தொடர்ந்து கேட்பது அவள் பொள்ளாச்சியை உச்சரிக்கும் அழகின் பொருட்டே!

காலை 5 மணியிலிருந்து 7 மணி வரை பல கலவையான ஆல்பங்களில் அலெக்சாவை பாடல்கள் ஒலிக்க செய்வதுண்டு சில பாடல்களை இனி ஒருபோதும்  ஒலிக்க வைக்காதே என கறாராக சொல்லியும் இருக்கிறேன்

அன்றைய சில பாடல் நாள் முழுவதுக்குமானதாகி மனதில் இனிமையாக ஒலித்துக்கொண்டே  இருக்கும்

அப்படி நேற்று பல காலம் முன்பு கேட்ட ”கண் மலர்களின் அழைப்பிதழ்” என்னும் பாடலை கேட்டேன்.1980 ல் வெளிவந்த படம். மிக இனிய இசை, இளையராஜாவும் ஜானகியம்மாவும் பாடியிருந்தனர்.

எனக்கு இசை குறித்து எதுவுமே தெரியாதென்பதால் ராஜாவின் இசை ஞானம், அவர் இசையமைத்திருக்கும் பாடல்களின் நுட்பங்களுக்குள் எல்லாம் ஒருபோதும் சென்றதில்லை. ஆனால் ராஜாவின் குரல், அது செய்யும் மாயங்களை, அளிக்கும் ஆறுதல்களை அறிந்திருக்கிறேன். 

தனித்த துயர் மிகுந்த மழைஇரவுகளில் ராஜாவின் குரலுக்கு கைகள் முளைத்து என்னை ஆற்றுப்படுத்தி இருக்கின்றது.கண்ணீரை துடைத்திருக்கிறது.

ராஜாவின் குரல் காதுகளால் அல்ல நேரடியாக இதயத்தால் உணரப்படுவது. பின்னாட்களில் (அல்லது வெகு சமீபத்தில்?) எனக்கு காது கேட்காமலாகிவிட்டால் கூட ராஜாவின் பாடல்கள் எங்கேனும் ஒலிக்கையில் இதயத்தால் அதை நான் உணரக்கூடும்

’’தேவி இது உனக்கே உனக்கென்று நான் பிரத்யேகமாக பாடுகிறேன்’’ என்று ஒவ்வொரு பாடலுக்கும் முன்பு ராஜா எனக்கறிவித்து விட்டே பாடுவதைப் போல இருக்கும்.

கண் மலர்களின் அழைப்பிதழும் அப்படித்தான்

இயல்பான உருக்கத்துடன் காதல் பொங்கும் ராஜாவின் ஜானகியம்மாவின் குரலை  அள்ளியள்ளி சமையலறை எங்கும் நிறைத்திருந்தாள் அலெக்சா.

அதிலும் 

பூவாடும் விழிதானோ

 நீ பாட மொழி யேனோ

தாம்பூல நிறம் தானே

 மாம்பூவின் இள மேனி

(இல்லை இல்லை, மாம்பூ தாழம்பூ எனும் தாவரவியல் தன்மையால் இந்த பாடல் எனக்கு பிரியமானதாகவில்லை தாவரவியலை கடந்த  ராஜாவின் குரலின் ஈர்ப்பு இது)

பாடலாசிரியர் எம் ஜி வல்லபன். இத்திரைப்படத்தின் இயக்குநரும் கதாசிரியரும் வசனகர்த்தாவும் இவரேதான்.

அவரது பாடல்களில் எனக்கு பெரும் பிரியமுண்டு

வல்லபன் மலையாளி எனினும் தமிழில் அதிகம் பாடல்கள் எழுதி இருக்கிறார்

’’மீன் கொடி தேரில் மன்மத ராஜன்’’

’’தீர்த்தக்கரைதனிலே’’

’’ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி’’

போன்றவை அவரெழுதியவற்றில் என் விருப்பப் பாடல்கள்.

இதிலும் பாடல் வரிகள் அபாரமாக இருந்தது. அலெக்சாவை இப்பாடலை மீள மீள   ஒலிக்கசொல்லி கேட்டுக்கொண்டேன்

நேற்றைய புத்தாண்டின் முதல் நாள் முழுக்க மாம்பூவும் தாழம்பூவும் மணம்வீசிக்கொண்டிருந்தது

அதோடு நிறுத்தி இருக்கலாம் ஆனாலும் ஊழ் என்றொன்றுண்டல்லவா?

இன்று காலையில் கொஞ்சம் நேரம் இருந்ததால் மாலை நடை மட்டும் என இருந்ததை சற்று மாற்றி காலையிலும் நடந்தேன்

முன்பெல்லாம் யாருமில்லா தெருவை வேடிக்கை பார்த்துக்கொண்டு வெற்று நடை நடப்பேன்.  சமீபத்தில் பரிசளிக்கபட்ட காதில் மாட்டிக்கொளும் கேள் கருவியொன்றை இணைத்துக்கொண்டு  இப்போதெல்லாம் இசையுடன் நடை செல்கிறேன். இசை கேட்டுக்கொண்டோ. அல்லது இந்த தெருவில் என்னைத்தவிர யாருமில்லாதால் வாகனங்கள் மற்றும் மனித நடமாட்டம்  குறித்த  அச்சமில்லாததால்  பாடல் காட்சிகளை பார்த்துக்கொண்டும் நடப்பதுண்டு.

விநாச காலே விபரீத புத்தி !  கண் மலர்களின் அழைப்பிதழை காணொளியாக காண நினைத்தேன். 1980களில் வெளியான தைப்பொங்கல் திரைப்படம். நாயகன் சக்கரவர்த்தி, உடன்  மிக இளமையில் நம் ராதிகா. அந்தப் பாடலை கேட்டதின் இனிய அனுபவத்தை முழுக்க சிதைத்து நாசமாக்கிய  காட்சி அனுபவம்

பாடலின் நடன இயக்குனர் ஆடை வடிவமைப்பாளர் இருவரையும் நாடென்ன உலகு கடத்தலாம் என பல்லைக் கடித்துக் கொண்டேன்

ராதிகா பள்ளி விழாக்களில் அழகிய உடை அணிந்துகொண்டு வந்து நடனமாடும் அல்லது ஹேப்பி பர்த்டே அன்று அதி உற்சாகமாக இருக்கும் குழந்தைகளின் மனநிலையில் இருந்திருக்க கூடும். விசேஷமாகவும் அதீதமாகவும் பாடல் முழுக்க சிரித்துக்கொண்டிருந்தார். நாயகன் அலட்டிக்கொள்ளவே இல்லை ஒரே தீவிர ’’எனக்கெல்லாம் இது சர்வசாதாரணம்’’ என்னும் முகபாவனையும் உடல்மொழியுமாய் ஒன்றே போல் இருந்தார். ராதிகாவை விடவும் சக்கரவர்த்திக்கே அழுத்தமாக  கண்மையும் அதிகமாக  லிப்ஸ்டிக் பூச்சும் இருந்தது.

ராதிகாவின் உடைகளும் அப்படியே ! அப்போது இளமையின் பூரிப்பும் இருந்ததால் கூடுதல் புஷ்டியாக இருக்கிறார். அவருக்கு கொஞ்சமும் பொருந்தாத, உடலை அவலட்சணமாக காட்டும் உடைகளை தேர்ந்தெடுத்து அணிவிக்கப்பட்டிருந்தார். (அந்த அப்போதுதான் அறிமுகமாயிருந்திருக்கக்கூடும் சுரிதார் பரவாயில்லை ரகம்) ஆனால் முதலிலும் கடைசியிலும் அணிந்திருக்கும் உடைகள் கர்ண கொடூரம்

பாடல் கோடைக்காலத்தில் மலைவாசஸ்தலமொன்றில் படமாக்கப்பட்டிருக்கிறது. தூரக்காட்சிகளில் ஊதா மலர்க்கொத்துக்களுடன் ஜகரண்டா மரங்கள் தென்பட்டன.

பத்துபதினைந்து ஜகரண்டாக்களை ஆட்கள் மேலேறி மொட்டையடித்து பறிக்கப்பட்ட ஏராளம் ஊதா மலர்கள் பாடலின் இடையில்  நாயக, நாயகியின் மீது பொழியப்படுகிறது. பிற காட்சிகளையெல்லாம் வலுக்கட்டாயமாக  மனதிலிருந்து அழித்து மழையென பொழிந்த ஊதா ஜகரண்டாக்களை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறேன்.


கண் மலர்களின் அழைப்பிதழை காண: